திருமுறை 1

திருஞானசம்பந்தர் இயற்றிய தேவாரம் (திருமுறை 1)
திரு சிவஞான சம்பந்தரின் திருவடிகளில் சமர்ப்பணம்
🌻🌻🌻🌷🌷🌷🌺🌺🌺🌸🌸🌸🌹🌹🌹🪷🪷🪷💐💐💐❤️🙏🏻👣🙇‍♂️🙇🏻‍♂️🙇‍♂️👣🙏🏻❤️💐💐💐🌹💐❤️🙏🪷🪷🪷🌹🌹🌹🌸🌸🌸🌺🌺🌺🌷🌷🌷🌻🌻🌻
1.முதல் திருமுறை - திருஞானசம்பந்தர் தேவாரம் பதிகம் : 1-132(1 - 1469)
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்

தலம் - பாடல்

உள்ளடக்கம்
பண் - நட்டபாடை
✴️0.திருஞான சம்பந்தர் வரலாறு
✴️01)திருப்பிரமபுரம்.1) தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி.
02)திருப்புகலூர்.12)குறி கலந்த இசை பாடலினான், நசையால், இவ் உலகு எல்லாம்.
03)திருவலிதாயம்.23)பத்தரோடு பலரும் பொலிய மலர் அங்கைப் புனல் தூவி.
04)திருப்புகலியும், திருவீழிமிழலையும்.34)மைம் மரு பூங்குழல் கற்றை துற்ற, வாள்நுதல் மான்விழி மங்கையோடும்.
05)கீழைத்திருக்காட்டுப்பள்ளி.45)செய் அருகே புனல் பாய, ஓங்கிச் செங்கயல் பாய,சில மலர்த்தேன்.
06)திருமருகலும், திருச்செங்காட்டங்குடியும்.55)அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடி பரவ.
07)திருநள்ளாறும், திருஆலவாயும்.65)பாடக மெல் அடிப் பாவையோடும், படு பிணக்காடு இடம் பற்றி நின்று.
08)திருஆவூர்ப் பசுபதீச்சுரம்.76)"புண்ணியர், பூதியர், பூத நாதர், புடைபடுவார் தம் மனத்தார், திங்கள்.
09)திருவேணுபுரம்.87)வண்டு ஆர் குழல் அரிவையொடு பிரியா வகை பாகம்.
10)திருஅண்ணாமலை.97)உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன்.
11)திருவீழிமிழலை.108)சடை ஆர் புனல் உடையான், ஒரு சரி கோவணம் உடையான்.
12)திருமுதுகுன்றம்.119)மத்தா வரை நிறுவி, கடல் கடைந்து, அவ் விடம் உண்ட.
13)திருவியலூர்.130)குரவம் கமழ் நறு மென் குழல் அரிவை அவள் வெருவ.
14)திருக்கொடுங்குன்றம்.141)வானில் பொலிவு எய்தும் மழை மேகம் கிழித்து ஓடி.
15)திருநெய்த்தானம்.152)மை ஆடிய கண்டன், மலை மகள் பாகம் அது உடையான்.
16)திருப்புள்ளமங்கைத் திருஆலந்துறை.163)பால் உந்து உறு திரள் ஆயின பரமன், பிரமன் தான்.

17)திருஇடும்பாவனம்.174)மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் மைந்தர்கள் மலர் தூய்.
18)திருநின்றியூர்.185)சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம், சுடு நீறு.
19)திருக்கழுமலம்-திருவிராகம்.195)பிறை அணி படர் சடை முடி இடைப் பெருகிய புனல் உடையவன்; நிறை.
20)திருவீழிமிழலை-திருவிராகம்.206)தட நிலவிய மலை நிறுவி, ஒரு தழல் உமிழ்தரு பட அரவுகொடு.
21)திருச்சிவபுரம்-திருவிராகம்.217)புவம், வளி, கனல், புனல், புவி, கலை, உரை மறை, திரிகுணம், அமர் நெறி.
22)திருமறைக்காடு-திருவிராகம்.228)சிலை தனை நடு இடை நிறுவி, ஒரு சினம் மலி அரவு அது கொடு, திவி.
பண் - தக்கராகம்
23)திருக்கோலக்கா.239)மடையில் வாளை பாய, மாதரார்.
24)சீகாழி.250)“பூஆர் கொன்றைப் புரிபுன் சடை ஈசா!.
25)திருச்செம்பொன்பள்ளி.261)மரு ஆர் குழலிமாது ஓர் பாகம் ஆய்.
26)திருப்புத்தூர்.272)வெங் கள் விம்மு வெறி ஆர் பொழில் சோலை.
27)திருப்புன்கூர்.283)முந்தி நின்ற வினைகள் அவை போகச்.
28)திருச்சோற்றுத்துறை.294)செப்பம் நெஞ்சே, நெறி கொள்! சிற்றின்பம்.
29)திருநறையூர்ச் சித்தீச்சுரம்.305)ஊர் உலாவு பலி கொண்டு, உலகு ஏத்த.
30)திருப்புகலி.316)விதி ஆய், விளைவு ஆய், விளைவின் பயன் ஆகி.
31)திருக்குரங்கணில்முட்டம்.327)விழுநீர், மழுவாள் படை, அண்ணல் விளங்கும்.
32)திருஇடைமருதூர்.338)ஓடே கலன்; உண்பதும் ஊர் இடு பிச்சை.
33)திருஅன்பில் ஆலந்துறை.349)கணை நீடு எரி, மால், அரவம், வரை வில்லா.
34)சீகாழி- தக்கராகம்.360)அடல் ஏறு அமரும் கொடி அண்ணல்.
35)திருவீழிமிழலை.371)அரை ஆர் விரி கோவண ஆடை.
36)திருஐயாறு.382)கலை ஆர் மதியோடு உர நீரும்.
37)திருப்பனையூர்.393)அரவச் சடை மேல் மதி, மத்தம்.
38)திருமயிலாடுதுறை.404)கரவு இன்றி நல்மாமலர் கொண்டே.
39)திருவேட்களம்.415)அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆர் அழல் அங்கை அமர்ந்து இலங்க.
40)திருவாழ்கொளிபுத்தூர்.426)பொடி உடை மார்பினர், போர் விடை ஏறி, பூதகணம் புடை சூழ.
41)திருப்பாம்புரம்.437)சீர் அணி திகழ் திருமார்பில் வெண்நூலர், திரிபுரம் எரிசெய்த செல்வர்.
42)திருப்பேணுபெருந்துறை.448)பைம் மா நாகம், பல்மலர்க் கொன்றை, பன்றி வெண் கொம்பு ஒன்று, பூண்டு.
43)திருக்கற்குடி.459)வடம் திகழ் மென் முலையாளைப் பாகம் அது ஆக மதித்து.
44)திருப்பாச்சிலாச்சிராமம்.470)துணி வளர் திங்கள் துளங்கி விளங்க,சுடர்ச்சடை சுற்றி முடித்து.
45)திருஆலங்காடு.481)துஞ்ச வருவாரும், தொழுவிப்பாரும், வழுவிப் போய்.
46)திருஅதிகைவீரட்டானம்.493)குண்டைக் குறள் பூதம் குழும, அனல் ஏந்தி.
பண் - பழந்தக்கராகம்
47)திருச்சிரபுரம்.504)பல் அடைந்த வெண் தலையில் பலி கொள்வது அன்றியும், போய்.
48)திருச்சேய்ஞலூர்.515)நூல் அடைந்த கொள்கையாலே நுன் அடி கூடுதற்கு.
49)திருநள்ளாறு.526)போகம் ஆர்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன் அகலம்.
50)திருவலிவலம்.537)ஒல்லை ஆறி, உள்ளம் ஒன்றி, கள்ளம் ஒழிந்து, வெய்ய.
51)திருச்சோபுரம்.548)வெங் கண் ஆனை ஈர் உரிவை போர்த்து, விளங்கும் மொழி.
52)திருநெடுங்களம்.559)“மறை உடையாய்! தோல் உடையாய்! வார்சடை மேல் வளரும்.
53)திருமுதுகுன்றம்.570)தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை சேர்
54)திருஓத்தூர்.580)பூத் தேர்ந்து ஆயன கொண்டு, நின் பொன் அடி.
55)திருமாற்பேறு.591)ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு, உமை....
56)திருப்பாற்றுறை.601)கார் ஆர் கொன்றை கலந்த முடியினர்.
57)திருவேற்காடு.612)ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்; இவன் ஒளி..
58)திருக்கரவீரம்.623)அரியும், நம் வினை உள்ளன ஆசு அற.
59)திருத்தூங்கானைமாடம்.634)ஒடுங்கும் பிணி, பிறவி, கேடு, என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழியத் தவம்.
60)திருத்தோணிபுரம்.645)வண் தரங்கப் புனல் கமல மது மாந்திப் பெடையினொடும்.
61)திருச்செங்காட்டங்குடி.656)நறை கொண்ட மலர் தூவி, விரை அளிப்ப, நாள் தோறும்.
62)திருக்கோளிலி.667)நாள் ஆய போகாமே, நஞ்சு அணியும் கண்டனுக்கே...
63)திருப்பிரமபுரம் - பல்பெயர்ப்பத்து.678)எரி ஆர் மழு ஒன்று ஏந்தி, அங்கை இடுதலையே கலனா.
64)திருப்பூவணம்.690)அறை ஆர் புனலும் மா மலரும் ஆடு அரவு ஆர் சடைமேல்.
பண் - தக்கேசி
65)காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சுரம்.701)அடையார் தம் புரங்கள் மூன்றும் ஆர் அழலில் அழுந்த.
66)திருச்சண்பைநகர்.712)பங்கம் ஏறு மதி சேர் சடையார், விடையார், பலவேதம்.
67)திருப்பழனம்.723)கண் மேல் கண்ணும், சடைமேல் பிறையும், உடையார்; காலனைப்.
68)திருக்கயிலாயம்.733)பொடி கொள் உருவர், புலியின் அதளர், புரிநூல் திகழ் மார்பில்.
✴️69)திருஅண்ணாமலை.743)பூ ஆர் மலர் கொண்டு அடியார் தொழுவார்; புகழ்வார், வானோர்கள்.
70)திருஈங்கோய்மலை.754)வானத்து உயர் தண்மதி தோய் சடைமேல் மத்தமலர் சூடி.
71)திருநறையூர்ச் சித்தீச்சுரம்.765)பிறை கொள் சடையர்; புலியின் உரியர்; பேழ்வாய் நாகத்தர்.
72)திருக்குடந்தைக்காரோணம்.776)வார் ஆர் கொங்கை மாது ஓர் பாகம் ஆக, வார்சடை.
73)திருக்கானூர்.787)வான் ஆர் சோதி மன்னு சென்னி, வன்னி புனக்கொன்றைத்.
74)திருப்புறவம்.798)நறவம் நிறை வண்டு அறை தார்க்கொன்றை நயந்து, நயனத்தால்.
பண் - குறிஞ்சி
75)திருவெங்குரு.809)காலை நல்மாமலர் கொண்டு அடி பரவி, கைதொழு மாணியைக் கறுத்த வெங்காலன்.
76)திருஇலம்பையங்கோட்டூர்.820)மலையினார் பருப்பதம், துருத்தி, மாற்பேறு, மாசு இலாச் சீர் மறைக்காடு, நெய்த் தானம்.
77)திருஅச்சிறுபாக்கம்.831)பொன் திரண்டன்ன புரிசடை புரள, பொருகடல் பவளமொடு அழல் நிறம் புரைய.
78)திருஇடைச்சுரம்.842)வரி வளர் அவிர் ஒளி அரவு அரை தாழ, வார் சடை முடிமிசை வளர்மதி சூடி.
79)திருக்கழுமலம்.853)அயில் உறு படையினர்; விடையினர்; முடிமேல் அரவமும் மதியமும் விரவிய அழகர்.
80)கோயில்.864)கற்றாங்கு எரி ஓம்பி, கலியை வாராமே.
81)சீகாழி.875)நல்லார், தீ மேவும் தொழிலார், நால்வேதஞ்.
82 திருவீழிமிழலை.882)இரும் பொன்மலை வில்லா, எரி அம்பா, நாணில்.
83)திருஅம்பர்மாகாளம்.893)அடையார் புரம் மூன்றும் அனல்வாய் விழ எய்து.
84)திருநாகைக்காரோணம்.904)புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல் பாய.

85)திருநல்லம்.915)“கல்லால் நிழல் மேய கறை சேர் கண்டா!” என்று.
86)திருநல்லூர்.926)கொட்டும் பறை சீரால் குழும, அனல் ஏந்தி.
87)திருவடுகூர்.937)சுடு கூர் எரிமாலை அணிவர்; சுடர் வேலர்.
88)திருஆப்பனூர்.948)முற்றும் சடை முடி மேல் முதிரா இளம்பிறையன்.
89)திருஎருக்கத்தம்புலியூர். 959)படை ஆர்தரு பூதப் பகடு ஆர் உரி போர்வை.
90)திருப்பிரமபுரம் - திருஇருக்குக் குறள். 969)அரனை உள்குவீர்! பிரமன் ஊருள் எம்.
91)திருஆரூர் - திருஇருக்குக்குறள்.981)சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப்.
92)திருவீழிமிழலை - திருஇருக்குக்குறள். 992)வாசி தீரவே, காசு நல்குவீர்!
93)திருமுதுகுன்றம் - திருஇருக்குக்குறள். 1003)நின்று மலர் தூவி, இன்று முதுகுன்றை
94)திருஆலவாய் - திருஇருக்குக்குறள்.1014)நீலமாமிடற்று ஆலவாயிலான்.
95)திருஇடைமருர் - திருஇருக்குக்குறள்.1025)தோடு ஓர் காதினன்; பாடு மறையினன்.
96)திருஅன்னியூர் - திருஇருக்குக்குறள். 1036)மன்னி ஊர் இறை; சென்னியார், பிறை.
97)திருப்புறவம்.1047)எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று எரிசெய்த.
98)திருச்சிராப்பள்ளி.1058)நன்று உடையானை, தீயது இலானை, நரை-வெள் ஏறு.
99)திருக்குற்றாலம்.1069)வம்பு ஆர் குன்றம், நீடு உயர் சாரல், வளர் வேங்கைக்.
100)திருப்பரங்குன்றம்.1080)நீடு அலர் சோதி வெண்பிறையோடு நிரை கொன்றை.
101)திருக்கண்ணார்கோயில்.1091)தண் ஆர் திங்கள், பொங்கு அரவம், தாழ்புனல், சூடி.
102)சீகாழி.1102)“உரவு ஆர் கலையின் கவிதைப் புலவர்க்கு ஒருநாளும்.
103)திருக்கழுக்குன்றம்.1112)தோடு உடையான் ஒரு காதில்-தூய குழை தாழ.

பண் - வியாழக்குறிஞ்சி
104)திருப்புகலி.1122)ஆடல் அரவு அசைத்தான், அருமாமறைதான் விரித்தான், கொன்றை....
105)திருஆரூர்.1133)பாடலன் நால்மறையன்; படி பட்ட கோலத்தன்; திங்கள்.
106)திருஊறல்.143)மாறு இல் அவுணர் அரணம் அவை மாய, ஓர் வெங்கணையால், அன்று.
107)திருக்கொடிமாடச்செங்குன்றூர்.1152)வெந்த வெண் நீறு அணிந்து, விரிநூல் திகழ் மார்பில் நல்ல.
108)திருப்பாதாளீச்சுரம்.1163)மின் இயல் செஞ்சடைமேல் விளங்கும் மதி மத்தமொடு நல்ல.
109)திருச்சிரபுரம்.1174)வார் உறு வனமுலை மங்கை பங்கன்.
110)திருஇடைமருதூர்.1185)மருந்து அவன், வானவர் தானவர்க்கும்.
111)திருக்கடைமுடி.1196)அருத்தனை, அறவனை, அமுதனை, நீர்
112)திருச்சிவபுரம்.1207)இன்குரல் இசை கெழும் யாழ் முரலத்.
113)திருவல்லம்.1218)எரித்தவன், முப்புரம் எரியில் மூழ்க;
114)திருமாற்பேறு.1228)குருந்து அவன், குருகு அவன், கூர்மை அவன்.
115)திருஇராமன்நந்தீச்சுரம்.1238)சங்கு ஒளிர் முன் கையர் தம் இடையே...
116)பொது - திருநீலகண்டம்.1249)“அவ் வினைக்கு இவ் வினை ஆம்” என்று சொல்லும் அஃது அறிவீர்!.
117)திருப்பிரமபுரம் - மொழிமாற்று.1259)காடு அது, அணிகலம் கார் அரவம், பதி; கால் அதனில்.
118)திருப்பருப்பதம். 1271)சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர அரைக்கு அசைத்தான்;
119)திருக்கள்ளில்.1282)முள்ளின் மேல் முது கூகை முரலும் சோலை.
120)திருஐயாறு - திருவிராகம்.1293)பணிந்தவர் அருவினை பற்று அறுத்து அருள்செயத்.

121)திருஇடைமருதூர் - திருவிராகம்.1304)நடை மரு திரிபுரம் எரியுண நகை செய்த.
122)திருஇடைமருதூர் - திருவிராகம்.1315)விரிதரு புலிஉரி விரவிய அரையினர்.
123)திருவலிவலம் - திருவிராகம்.1326)பூ இயல் புரிகுழல்; வரிசிலை நிகர் நுதல்.
124)திருவீழிமிழலை - திருவிராகம்.1337)அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர்.
125)திருச்சிவபுரம் - திருவிராகம்.1348)கலை மலி அகல் அல்குல் அரிவைதன் உருவினன்.
126)திருக்கழுமலம் - திருத் தாளச்சதி.1359)பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர், அப்.
127)திருப்பிரமபுரம் - ஏகபாதம்.1370)பிரம புரத்துறை பெம்மா னெம்மான்.
✴️128)திருப்பிரமபுரம் - திருஎழுகூற்றிருக்கை.சம்பந்தர் தேவாரம் முழுவதையும் பாராயணம் செய்த பலன் கிடைக்க.
பண் - மேகராகக்குறிஞ்சி
129)திருக்கழுமலம்.1383)"சே உயரும் திண் கொடியான் திருவடியே சரண்" என்று சிறந்த அன்பால்.
130)திருஐயாறு.1394)புலன் ஐந்தும் பொறி கலங்கி, நெறி மயங்கி, அறிவு அழிந்திட்டு, ஐம் மேல் உந்தி.
131)திருமுதுகுன்றம். 1405)மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும், எண்குணங்களும், விரும்பும் நால்வே- .
132)திருவீழிமிழலை.1416)ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து, அங்கு ஈர்-இருவர்க்கு இரங்கி நின்று.
133)திருக்கச்சி ஏகம்பம்.1427)வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின் விரிநூல் ஒருபால் பொருந்த.
134)திருப்பறியலூர் வீரட்டம்.1437)கருத்தன், கடவுள், கனல் ஏந்தி ஆடும்.
135)திருப்பராய்த்துறை. 1448)நீறு சேர்வது ஒர் மேனியர்,நேரிழை.
பண் - யாழ்மூரி
136)திருத்தருமபுரம் - யாழ்மூரி.1459)மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னது ஓர் நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர்.
1.முதல் திருமுறை - திருஞானசம்பந்தர் தேவாரம் பதிகம் : 1-132(1 - 1469)
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்

தலம் - பாடல் - பலன்

உள்ளடக்கம்

மேல்
பண் - நட்டபாடை
✴️0.திருஞான சம்பந்தர் வரலாறு
✴️1)திருப்பிரமபுரம்.1) தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி.இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்களின் பழவினைகள் தீர்தல் எளிதாகும்.
2)திருப்புகலூர்.12)குறி கலந்த இசை பாடலினான், நசையால், இவ் உலகு எல்லாம்.இத்திருப்பதிகத்தை, என்றும் இசையோடு பாடி வழிபடும் மாந்தர்கள் இறைவன் திருவடி நீழலை அடைந்து குற்றம் குறைபாடு அகன்று புகழோங்கிப் பொலிவெய்துவார்கள்.
3)திருவலிதாயம்.23)பத்தரோடு பலரும் பொலிய மலர் அங்கைப் புனல் தூவி.இத்திருப்பதிகத்தைச் சிறந்த தோத்திரமாகக் கொண்டு அமர்ந்திருந்து இசையோடு பாடவல்லார், குளிர்ந்த வானுலக வாழ்க்கையினும் உயர்வு பெறுவர்.
4)திருப்புகலியும், திருவீழிமிழலையும்.34)மைம் மரு பூங்குழல் கற்றை துற்ற, வாள்நுதல் மான்விழி மங்கையோடும்.பண்ணிறைந்த இப்பதிகத் திருப்பாடல்களை ஓதுபவர் நிலவுலகத்தோடு விண்ணுலகத்தையும் ஆளும் சிறப்புடையவராவர்.
5)கீழைத்திருக்காட்டுப்பள்ளி.45)செய் அருகே புனல் பாய, ஓங்கிச் செங்கயல் பாய,சில மலர்த்தேன்.மனத்திடைத் தரிக்க வல்லவர் புகழ் எய்துவர்.
6)திருமருகலும், திருச்செங்காட்டங்குடியும்.55)அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடி பரவ.பாடல்களைச் சொல்லித் துதிக்க வல்லார் வினைகள்,இல்லையாகும்.
7)திருநள்ளாறும், திருஆலவாயும்.65)பாடக மெல் அடிப் பாவையோடும், படு பிணக்காடு இடம் பற்றி நின்று.இனிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர், இமையவர் ஏத்தத் தேவருலகில் விளங்குவர்.
8)திருஆவூர்ப் பசுபதீச்சுரம்.76)"புண்ணியர், பூதியர், பூத நாதர், புடைபடுவார் தம் மனத்தார், திங்கள்.பாடல்களை இசையோடு பாடி ஆடி வணங்குபவர்கள்,வானகத்தைத் தமது உடைமையாகப் பெறுவர்.
9)திருவேணுபுரம்.87)வண்டு ஆர் குழல் அரிவையொடு பிரியா வகை பாகம்.ஞானசம்பந்தரின் துன்பந்தரல் இல்லாத இப்பதிகப் பாடல்களை இசையோடு பாடவல்லவர் துயர் நீங்குவர்; முடிவில் சிவகதியைப் பெறுவர்.
10)திருஅண்ணாமலை.97)உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன்.இத்திருப்பதிகத் தமிழை ஓதவல்லவர்களின் திருவடிகளை வணங்குதல் சிறந்த தவமாம்.
11)திருவீழிமிழலை.108)சடை ஆர் புனல் உடையான், ஒரு சரி கோவணம் உடையான்.பாடல்கள் பத்தினையும் யாழிசையில் பாட வல்லார்களும் சொல்லக் கேட்டார்களும் ஆகிய அனைவரும் ஊழாக அமைந்த வினைகள் நீங்கச் சிவப்பேறு எய்துவர்.
12)திருமுதுகுன்றம்.119)மத்தா வரை நிறுவி, கடல் கடைந்து, அவ் விடம் உண்ட.ஒப்பற்ற தமிழ்மாலைகளாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் இசையோடு பகர்ந்து வழிபடும் அடியவர்களைத் துன்பங்களும் அவற்றைத் தரும் பாவங்களும் அடையா.
13)திருவியலூர்.130)குரவம் கமழ் நறு மென் குழல் அரிவை அவள் வெருவ.துளக்கமில்லாத இத்தமிழ் மாலையைப் பாடிப் பரவித் தொழும் அடியவர், எக்காலத்தும் விளங்கும் புகழோடு உயரிய விண்ணுலகையும் தமதாக உடையவராவர்.
14)திருக்கொடுங்குன்றம்.141)வானில் பொலிவு எய்தும் மழை மேகம் கிழித்து ஓடி.தமிழ்மாலைகளை ஓதி வழிபட வல்லவர் தம்மிடமுள்ள குறைபாடுகள் நீங்கித்துன்பங்கள் அகன்று உலகம் போற்றும் புகழுடையோராவர்.
15)திருநெய்த்தானம்.152)மை ஆடிய கண்டன், மலை மகள் பாகம் அது உடையான்.ஒப்பற்ற பயன்கள் பலவற்றைத் தரும் பாடல்களாகிய இவற்றைக் கற்றுப் பலகாலும் பரவவல்லவர் சீலம் நிறைந்த செல்வன் அடியாகிய சிவகதியைச் சேர்வர்.
16)திருப்புள்ளமங்கைத் திருஆலந்துறை.163)பால் உந்து உறு திரள் ஆயின பரமன், பிரமன் தான்.சந்தம் நிறைந்த இத்திருப்பதிகப் பாடல்களை ஓதிப் பரவசமாய் ஆடத் தவம் கைகூடும்.

17)திருஇடும்பாவனம்.174)மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் மைந்தர்கள் மலர் தூய்இப்பாடல்களை ஓத, வினைகள் நீங்கும்,தானே.
18)திருநின்றியூர்.185)சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம், சுடு நீறு.இத்திருப்பதிகப் பாடல்களை உரைப்பதனால் குறைவின்றிப் புகழ் நிறையும்.
19)திருக்கழுமலம்-திருவிராகம்.195)பிறை அணி படர் சடை முடி இடைப் பெருகிய புனல் உடையவன்; நிறை.அன்பு பிணைந்த இப்பத்துப் பாடல்களையும் ஓதிமனம்பொருந்த வைக்கும் அன்பர்கள், நிறைந்த ஞானமும் நல்லூழும் உடையவராவர்
20)திருவீழிமிழலை-திருவிராகம்.206)தட நிலவிய மலை நிறுவி, ஒரு தழல் உமிழ்தரு பட அரவுகொடு.இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் மனமகிழ்வோடு பயில்பவர் அழகிய திருமகள், கலைமகள், சயமகள், அவர்க்கு இனமான புகழ் மகள் ஆகியோர் தம்பால் பொருந்த,பெரிய இவ்வுலகின்கண் இனிதாக வாழ்வர். 
21)திருச்சிவபுரம்-திருவிராகம்.217)புவம், வளி, கனல், புனல், புவி, கலை, உரை மறை, திரிகுணம், அமர் நெறி.சிறப்பு வாய்ந்த இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தினையும் ஓதி வழிபடுபவர் குலம், நிலம், நிறைந்த செல்வம், அழகிய வடிவம், ஒப்பற்ற கொடை வண்மை,மிக்க வெற்றித் திரு, இவ்வுலகிடை தொடர்ந்து வரும் சந்ததி, இறைவனடியார் என்ற பெருமிதம் ஆகியன தம்பால் விளங்க எல்லா நலங்களும் மிகப் பெறுவர்
22)திருமறைக்காடு-திருவிராகம்.228)சிலை தனை நடு இடை நிறுவி, ஒரு சினம் மலி அரவு அது கொடு, திவி.இசை மலிந்த இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர் உலகினில் அழகெய்துவர். 
பண் - தக்கராகம்
23)திருக்கோலக்கா.239)மடையில் வாளை பாய, மாதரார்.திருவருள் வலமாகக் கொண்ட இத்திருப்பதிகப் பாடல்களை ஓதி வழிபடவல்ல வாய்மையாளர், மலை போலும் திண்ணிய வினைகள் நீங்கப் பெற்றுச் சிறந்து வாழ்வர்
✴️24)சீகாழி.250)“பூஆர் கொன்றைப் புரிபுன் சடை ஈசா!.ஓதி உலகோர் போற்றத் துதிக்க வல்லவர், அழகிய வானகத்தில் இனிதாக இருப்பர்
25)திருச்செம்பொன்பள்ளி.261)மரு ஆர் குழலிமாது ஓர் பாகம் ஆய்.இப்பதிகப் பாடல்கள் பத்தையும் இசையோடு தமக்குவந்த அளவில் ஓதவல்லவர் ஓங்கி வாழ்வர்
26)திருப்புத்தூர்.272)வெங் கள் விம்மு வெறி ஆர் பொழில் சோலை.பத்துப் பாடல்களையும் வல்லவர்கட்குத் துன்பங்கள் நீங்கும். எக்காலத்தும் அவலம் அவர்களை அடையா
27)திருப்புன்கூர்.283)முந்தி நின்ற வினைகள் அவை போகச்.பாடல்கள் பத்தையும் பரவி வாழ்வீர்களாக
28)திருச்சோற்றுத்துறை.294)செப்பம் நெஞ்சே, நெறி கொள்! சிற்றின்பம்.திருச்சோற்றுத்துறையில் எழுந்தருளிய எம் முதல்வனை மனத்தால் தியானியுங்கள். சந்த இசையால் ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத்தைத் தமக்கு வந்தவாறு பாடி வழிபடுதலே அவ்விறைவற்கு நாம் செய்யும் வழிபாடாகும்
29)திருநறையூர்ச் சித்தீச்சுரம்.305)ஊர் உலாவு பலி கொண்டு, உலகு ஏத்த.இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடிப்பரவப் பாவங்கள் நீங்கும்
30)திருப்புகலி.316)விதி ஆய், விளைவு ஆய், விளைவின் பயன் ஆகி.அழகிய இப்பதிகமாலையைத் தமதாக்கி ஓதும் தொழில் வல்லவர் நல்லவர் ஆவர்
31)திருக்குரங்கணில்முட்டம்.327)விழுநீர், மழுவாள் படை, அண்ணல் விளங்கும்.சொல்மாலையாகிய இத்திருப்பதிகத்தைச் செவிக்கு இனிதாக ஓதி ஏத்த வல்லார்க்குப் பிறவா நெறியாகிய வீடு எளிதாகும். 
32)திருஇடைமருதூர்.338)ஓடே கலன்; உண்பதும் ஊர் இடு பிச்சை.பத்துப் பாடல்களையும் வல்லவர்கள் விண்ணோர் உலகில் வீற்றிருக்கும் சிறப்பைப் பெறுவார்கள். 
33)திருஅன்பில் ஆலந்துறை.349)கணை நீடு எரி, மால், அரவம், வரை வில்லா.இப்பத்துப் பாடல்களையும் இசையோடு பாட வல்லவர் மறுமையில் வானக இன்பங்களுக்கு உரியவர்கள் ஆவர். அவர்களுக்கு வீட்டின்பமும் எளிதாம்
34)சீகாழி- தக்கராகம்.360)அடல் ஏறு அமரும் கொடி அண்ணல்.சீகாழிப் பதியை உறுதியாக நினைந்தவர்களும்,ஞானசம்பந்தரின் பாடல்களில் வல்லவராய் ஓதி வழிபட்டவர்களும் விண்ணக இன்பங்களை அடைவர்
35)திருவீழிமிழலை.371)அரை ஆர் விரி கோவண ஆடை.இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர்கட்குக் கேடு இல்லை
36)திருஐயாறு.382)கலை ஆர் மதியோடு உர நீரும்.இத்தமிழ் வல்லவர்களின் துயர்கள் நீங்கும்

37)திருப்பனையூர்.393)அரவச் சடை மேல் மதி, மத்தம்.இப்பத்துப் பாடல்களையும் ஒவ்வோரூரிலும் இருந்துகொண்டு நினைவார் உயர்வெய்துவர். 
38)திருமயிலாடுதுறை.404)கரவு இன்றி நல்மாமலர் கொண்டே.இத்திருப்பதிகப் பாடல்களாகிய இவை பத்தும் உற்றுணர்வார்க்கு உயர்வைத் தரும்
39)திருவேட்களம்.415)அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆர் அழல் அங்கை அமர்ந்து இலங்க.பண்பொருந்திய இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர் பழி பாவம் இலராவர்
40)திருவாழ்கொளிபுத்தூர்.426)பொடி உடை மார்பினர், போர் விடை ஏறி, பூதகணம் புடை சூழ.பாடல்களை ஓத வல்லவர் துயர் கெடுதல் எளிதாம்
41)திருப்பாம்புரம்.437)சீர் அணி திகழ் திருமார்பில் வெண்நூலர், திரிபுரம் எரிசெய்த செல்வர்.இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஒதவல்லவர், புகழும் அழகும் மிகுந்தவராய்ச் செல்வத்தால் சிறந்து வாழ்ந்து முடிவில் சிவனடியை அடைவர்
42)திருப்பேணுபெருந்துறை.448)பைம் மா நாகம், பல்மலர்க் கொன்றை, பன்றி வெண் கொம்பு ஒன்று, பூண்டு.இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதுபவர், எல்லா நன்மைகளும் உடையவராய் மனம் ஒன்றி உலகில் நிலையான வாழ்வினைப் பெறுவர்
43)திருக்கற்குடி.459)வடம் திகழ் மென் முலையாளைப் பாகம் அது ஆக மதித்து.செந்தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர்கள். பொலிவுடன் கூடிய தேவர்களோடும் பொன்னுலகின்கண் பொலிவோராவர்
44)திருப்பாச்சிலாச்சிராமம்.470)துணி வளர் திங்கள் துளங்கி விளங்க,சுடர்ச்சடை சுற்றி முடித்து.நோய்தீர்க்கும் மேன்மை மிக்கதும் உள்ளத்தைக் குளிர்விப்பதுமான இத்தமிழ் மாலையால், ஏத்திப் பரவி வழிபடுவோரை வினைகள் சாரா
45)திருஆலங்காடு.481)துஞ்ச வருவாரும், தொழுவிப்பாரும், வழுவிப் போய். பாடல்களை வல்லவர்கள் சேர்ந்த இடங்களெல்லாம் புனிதமானவைகளாகப் பொருந்தப் பெறுவர்
46)திருஅதிகைவீரட்டானம்.493)குண்டைக் குறள் பூதம் குழும, அனல் ஏந்தி.வாழ்வுத் துணையாக நினைபவர் வினையிலராவர்
பண் - பழந்தக்கராகம்
47)திருச்சிரபுரம்.504)பல் அடைந்த வெண் தலையில் பலி கொள்வது அன்றியும், போய்,இப்பதிக வாசகங்களைத் தம் குற்றங்கள் நீங்கப் பாடவல்ல பக்தர்கள் இவ்வுலகில் அடியவர் கூட்டங்களோடு வாழும் தன்மையினால் வாழ்நாள் பெருகி வாழ்வர்
48)திருச்சேய்ஞலூர்.515)நூல் அடைந்த கொள்கையாலே நுன் அடி கூடுதற்கு.இன்னுரைகளை வாயினால் பாடி வழிபட வல்லவர் வானுலகு ஆள்வர்
49)திருநள்ளாறு.526)போகம் ஆர்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன் அகலம்.இத்திருப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர் பிராரத்த கன்ம வலிமை குறையப் பெற்று வானவர்களோடு தேவருலகில் வாழ்வர்
50)திருவலிவலம்.537)ஒல்லை ஆறி, உள்ளம் ஒன்றி, கள்ளம் ஒழிந்து, வெய்ய.இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர்,உண்மைத் தவமுடையோர் விரும்பும் நிலை பெற்ற, சோதி வடிவான ஈசனோடு மன்னியிருப்பர்
51)திருச்சோபுரம்.548)வெங் கண் ஆனை ஈர் உரிவை போர்த்து, விளங்கும் மொழி.அழகுமிக்க இத்தமிழ் மாலையை ஓதவல்லவர் வானுலகை அடைவர்
52)திருநெடுங்களம்.559)“மறை உடையாய்! தோல் உடையாய்! வார்சடை மேல் வளரும்.நன்மைப் பொருளால் ஆராய்ந்து உணரத்தக்க இப்பாடல்கள் பத்தையும் பாட வல்லவர்களின் பாவங்கள் விலகும். 

53)திருமுதுகுன்றம்.570)தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை சேர்நாள்தோறும், சென்று வணங்குவீராக.
54)திருஓத்தூர்.580)பூத் தேர்ந்து ஆயன கொண்டு, நின் பொன் அடி.இப்பாமாலையை விரும்பும் அன்பர்களின் வினைகள் அழியும்
55)திருமாற்பேறு.591)ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு, உமை....இத்திருப்பதிகத்தை ஓதினால் வினைகள் கெடும்
56)திருப்பாற்றுறை.601)கார் ஆர் கொன்றை கலந்த முடியினர்,இனிய தமிழ்ப் பாடல்களாகிய இப்பத்தையும் பாடிப் பரவுமின்
57)திருவேற்காடு.612)ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்; இவன் ஒளி..இப்பதிகச் செந்தமிழ் கொண்டு பாடிப் போற்றுவார்க்கு நன்மைகள் விளையும்
58)திருக்கரவீரம்.623)அரியும், நம் வினை உள்ளன ஆசு அற.இவற்றைப் பாடுவோர்க்குப் பாவம் இல்லை
59)திருத்தூங்கானைமாடம்.634)ஒடுங்கும் பிணி, பிறவி, கேடு, என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழியத் தவம்.பாடல்கள் பத்தையும் கற்றவரும், கேட்டவரும் விண்ணவர் உலகத்தை மேவி வாழ அப்பாடல்களே தவப்பயன்தரும்; வினைகள் மாயும்
60)திருத்தோணிபுரம்.645)வண் தரங்கப் புனல் கமல மது மாந்திப் பெடையினொடும்.புகழ் பொருந்திய இத்தமிழ்த் திருப்பதிகத்தை ஓதி நினைய வல்லவர் சிவலோகம் சேர்வர். 
61)திருச்செங்காட்டங்குடி.656)நறை கொண்ட மலர் தூவி, விரை அளிப்ப, நாள் தோறும்.வேதப் பொருள் நிறைந்த இத் திருப்பதிகத் தமிழ் மாலையை ஓதவல்லவர் வானுலகில் வாழ்வர். 
62)திருக்கோளிலி.667)நாள் ஆய போகாமே, நஞ்சு அணியும் கண்டனுக்கே...இத்தமிழ்ப் பதிகத்தால் இன்பம் பொருந்தப் பாட வல்லவர்கள் அப்பெருமானையே அடைவர். 
63)திருப்பிரமபுரம் - பல்பெயர்ப்பத்து.678)எரி ஆர் மழு ஒன்று ஏந்தி, அங்கை இடுதலையே கலனா,சீகாழி இறைவர்மேற் பாடிய பல் பெயர்ப்பத்து என்னும் இத்திருப்பதிகத்தை ஓதி வழிபட வல்லவர்களை இவ்வுலகில் துன்புறுத்தும் வினைகள் ஒருநாளும் வந்து அடையா. மறுமையில் அவர்கள் அமரருலகினை ஆள்வர். 
64)திருப்பூவணம்.690)அறை ஆர் புனலும் மா மலரும் ஆடு அரவு ஆர் சடைமேல்.இவ்விசைத் தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் ஓத வல்லவர் வாழ்வது வான் உலகமாகும்
பண் - தக்கேசி
✴️65)காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சுரம்.701)அடையார் தம் புரங்கள் மூன்றும் ஆர் அழலில் அழுந்த,இப்பதிகச் செழுந்தமிழை மனம் ஒன்றிச் சொல்லி வழிபடும் மக்கள், தீ வினையும், நோயும் இல்லாதவராய், அமைந்த ஒப்புடையவர் என்று கூறத் தேவர் உலகில் உயர்வோடு ஓங்கி வாழ்வர்
66)திருச்சண்பைநகர்.712)பங்கம் ஏறு மதி சேர் சடையார், விடையார், பலவேதம்.திருவடிகளைப்பரவும் அடியவர்களின் பாவங்களைத் தீர்த்தருளும் பதிகம்
67)திருப்பழனம்.723)கண் மேல் கண்ணும், சடைமேல் பிறையும், உடையார்; காலனைப்.இப்பதிகப் பாமாலை பத்தையும், இசையுடன் பாடவல்லவர் நல்லவர் ஆவார்
68)திருக்கயிலாயம்.733)பொடி கொள் உருவர், புலியின் அதளர், புரிநூல் திகழ் மார்பில்.திருப்பதிகத்தை ஓதும் அடியவர்பால் பிணிகள்வாரா. அவர்கள் வானோர் உலகில் மருவும் மனத்தினராவர்

✴️69)திருஅண்ணாமலை.743)பூ ஆர் மலர் கொண்டு அடியார் தொழுவார்; புகழ்வார், வானோர்கள்;இப்பதிகப் பாடல்கள் பத்தையும் கற்று வல்லவர் அனைவரும் வானோர் வணங்க நிலைபெற்று வாழ்வர். 
70)திருஈங்கோய்மலை.754)வானத்து உயர் தண்மதி தோய் சடைமேல் மத்தமலர் சூடி,இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்கள் கவலைகள் நீங்கப் பெறுவர்
71)திருநறையூர்ச் சித்தீச்சுரம்.765)பிறை கொள் சடையர்; புலியின் உரியர்; பேழ்வாய் நாகத்தர்;இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர்களின் பாவம் நாசமாம்
72)திருக்குடந்தைக்காரோணம்.776)வார் ஆர் கொங்கை மாது ஓர் பாகம் ஆக, வார்சடை,செஞ்சொல் மாலையாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் உரைப்பவர், இவ்வுலகில் மீளக் கருவுற்று இடர்ப்படும் பிறப்பினை எய்தாது கவலைகள் நீங்கப் பெறுவர்
73)திருக்கானூர்.787)வான் ஆர் சோதி மன்னு சென்னி, வன்னி புனக்கொன்றைத்.இப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடித்தொழுது முப்பொழுதும் தோத்திரங்களைச் சொல்லித் துதித்து நின்று அழுதும் சிரித்தும் அன்பு செய்பவர்கள் அல்லலை அறுப்பார்கள்
74)திருப்புறவம்.798)நறவம் நிறை வண்டு அறை தார்க்கொன்றை நயந்து, நயனத்தால்.இத்தமிழ் மாலையைப் பல நாள்களும் பாடி ஆடுவோர், மேலுலகத்தில் பிரியாது உறைவர். 
பண் - குறிஞ்சி
75)திருவெங்குரு.809)காலை நல்மாமலர் கொண்டு அடி பரவி, கைதொழு மாணியைக் கறுத்த வெங்காலன்,நன்மைகளைத் தரும் இப்பதிகப் பாடல்கள் பத்தையும், பண்ணிசையோடும், பக்தியோடும் பாடி ஆடிக் கூற வல்லவர்கள், தேவர்கள் விமானம் கொண்டுவர அதன்மிசை ஏறி, அகன்ற அத்தேவருலகை அடைந்து அரசு புரிந்து, அதன்கண் வீற்றிருப்பர். 
76)திருஇலம்பையங்கோட்டூர்.820)மலையினார் பருப்பதம், துருத்தி, மாற்பேறு, மாசு இலாச் சீர் மறைக்காடு, நெய்த் தானம்,இசையொடும் கூடிய பத்துப் பாடல்களையும் ஓத வல்லவர்கள் தம் கொடிய துயர்கள் ஓடிக்கெட விண்ணவரோடும் வீற்றிருந்து பின் விண்ணிலிருந்து விடுபட்டு வீடு பேற்றையும் இப்பிறப்பு ஒன்றாலேயே எளிதாகப் பெறுவார்கள்
77)திருஅச்சிறுபாக்கம்.831)பொன் திரண்டன்ன புரிசடை புரள, பொருகடல் பவளமொடு அழல் நிறம் புரைய,இப்பதிகத்தைக் கொண்டு அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் அன்புடை அடியவர் நீக்குதற்கரிய வினைகள் இலராவர். 
78)திருஇடைச்சுரம்.842)வரி வளர் அவிர் ஒளி அரவு அரை தாழ, வார் சடை முடிமிசை வளர்மதி சூடி, இப்பதிகப் பாடலை இசையோடு சொல்ல வல்லவர், பிணிகள் இன்றி வாழ்வர்
79)திருக்கழுமலம்.853)அயில் உறு படையினர்; விடையினர்; முடிமேல் அரவமும் மதியமும் விரவிய அழகர்; இப்பதிகப் பாடல்கள் பத்தையும், உண்மையோடு நினைந்து ஏத்த வல்லவரை, மெலிவைத் தரும் துன்பங்கள் சாரா. வினைகள் நீங்கும், விண்ணவரினும் மேம்பட்ட ஆற்றலை அவர்கள் பெறுவார்கள்
80)கோயில்.864)கற்றாங்கு எரி ஓம்பி, கலியை வாராமே... இத்தமிழ் மாலையாகிய திருப்பதிகத்தை. அழகுறப் பாட வல்லவர் நல்லவர் ஆவர்
81)சீகாழி.875)நல்லார், தீ மேவும் தொழிலார், நால்வேதஞ்-இத்திருப்பதிகத் தமிழில் வல்லவர்கள் கடல் சூழ்ந்த இவ்வுலகில் பாசங்களை நீக்கிப் பழியற்ற புகழோடு வாழ்வர். 
82 திருவீழிமிழலை.882)இரும் பொன்மலை வில்லா, எரி அம்பா, நாணில்,-இப்பதிகத்தைச் சொல்ல வல்லவர் நல்லவர் ஆவர்
83)திருஅம்பர்மாகாளம்.893)அடையார் புரம் மூன்றும் அனல்வாய் விழ எய்து,இத்திருப்பதிகப் பாடல்களை, விண்ணோர் தலைவனாகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள அம்பர் மாகாளத்தை விரும்பித் தொழுது உருகி உரை செய்பவர் உயர்ந்த வானோர் உலகத்தை அடைவார்கள்
84)திருநாகைக்காரோணம்.904)புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல் பாய.இத்தமிழ் மாலையைப் பாடிப் பரவுபவர் அனைவரும் அழியாத வடிவத்தோடு ஆரவாரம் மிக்க வானுலகை அடைவார்கள். 
85)திருநல்லம்.915)“கல்லால் நிழல் மேய கறை சேர் கண்டா!” என்று.கலை நலம் வாய்ந்த இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர் கவலைகள் நீங்கப் பெறுவர். 

86)திருநல்லூர்.926)கொட்டும் பறை சீரால் குழும, அனல் ஏந்தி, இத்திருப்பதிகத்தை நாள்தோறும் சொல்லித் துதிப்பவர் விண்ணும் மண்ணும் விளங்கும் புகழாளர் ஆவர். 
87)திருவடுகூர்.937)சுடு கூர் எரிமாலை அணிவர்; சுடர் வேலர்; இப்பதிகத் தமிழை ஓதி, அடிசேர்ஞானம் பெற்றார், திருவடிப்பேறு பெறுவர்
88)திருஆப்பனூர்.948)முற்றும் சடை முடி மேல் முதிரா இளம்பிறையன்,இத்திருப்பதிகப் பாடல்களை ஓதவல்லவர் நிலையான மெய்யறிவு பெறுவார்கள்
89)திருஎருக்கத்தம்புலியூர். 959)படை ஆர்தரு பூதப் பகடு ஆர் உரி போர்வைஇத்திருப்பதிகப் பாடல்களை ஓதுபவர்கள் உலகவர் ஏத்த வானகம் எய்துவர்
90)திருப்பிரமபுரம் - திருஇருக்குக் குறள். 969)அரனை உள்குவீர்! பிரமன் ஊருள் எம்.இத்திருப்பதிகப் பாடல்களை ஓதி, பெருமானைத் தொழும் மனத்தவர் ஆகுக
91)திருஆரூர் - திருஇருக்குக்குறள்.981)சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப்.பாடல்களைப் பாடி வழிபட வல்லவர் இன்பத்தினின்று நீங்கார்
92)திருவீழிமிழலை - திருஇருக்குக்குறள். 992)வாசி தீரவே, காசு நல்குவீர்!முத்திப் பேறு நல்கவும் ,சேமத்தை அருளவும் ,சிவப் பணி கொண்டு அருளவும், ஐயுறவைப் போக்கி அருளவும் சிவபெருமானிடம் வேண்டுதல்; வைக்கும்; பதிகம்.
93)திருமுதுகுன்றம் - திருஇருக்குக்குறள். 1003)நின்று மலர் தூவி, இன்று முதுகுன்றைஇப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர் எக்காலத்தும் உயர்வு பெறுவர்
94)திருஆலவாய் - திருஇருக்குக்குறள்.1014)நீலமாமிடற்று ஆலவாயிலான்.இனிய இத்தமிழ் மாலை நமக்கு வரும் வினைகளைப் போக்குவதாகும்
95)திருஇடைமருர் - திருஇருக்குக்குறள்.1025)தோடு ஓர் காதினன்; பாடு மறையினன்இத்தமிழ் மாலையை ஓதுபவர்க்குத் துன்புறுத்தியவினைகள் போகும்
96)திருஅன்னியூர் - திருஇருக்குக்குறள். 1036)மன்னி ஊர் இறை; சென்னியார், பிறை.... ஞானசம்பந்தன் ஆய்ந்து சொல்லிய பாடல்களைப் பாடி அன்னியூர் வேந்தனாகிய சிவபிரானைச் சேர்ந்து வாழ்வீர்களாக. 
97)திருப்புறவம்.1047)எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று எரிசெய்த.இப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடி ஏத்தவல்லவர்கட்கு, இடர் போகும்
98)திருச்சிராப்பள்ளி.1058)நன்று உடையானை, தீயது இலானை, நரை-வெள் ஏறு.நன்மைகள் மிக்க இப்பதிகப் பாடல்களை ஓதவல்லவர் வானுலகிற் சம்பந்தமுடையவராகத் தேவர்களோடு நிலைபெற்று வாழ்வர்
99)திருக்குற்றாலம்.1069)வம்பு ஆர் குன்றம், நீடு உயர் சாரல், வளர் வேங்கைக்.செங்காந்தள் மலர்களை ஈன்று அவற்றின் கொழுவிய முனையால் கை குவிக்கும் குற்றாலத்து இறைவர் மேல் பாடிய பாடல்கள் பத்தையும் பாடப் பாவம் நீங்கும்
100)திருப்பரங்குன்றம்.1080)நீடு அலர் சோதி வெண்பிறையோடு நிரை கொன்றை.பரங்குன்றிறைவர் மீது பாடிய தொடை நயம் மிக்க பாடல்கள் பத்தையும் ஓதி வழிபட வல்லவர் தம் துன்பம் நீங்கி விடமுண்ட கண்டனாகிய சிவபிரானின் அருள்பெறும் தகுதியில் மேம்பட்டவராவர்
101)திருக்கண்ணார்கோயில்.1091)தண் ஆர் திங்கள், பொங்கு அரவம், தாழ்புனல், சூடி,ஓசையோடு திகழும் இப்பதிகப் பாடல்கள் பத்தினாலும் போற்றி வழிபட வல்லவர்கள், தம் மேல் வரும் பழிகள் நீங்கப் பெறுவர்
102)சீகாழி.1102)“உரவு ஆர் கலையின் கவிதைப் புலவர்க்கு ஒருநாளும்.பாடல்களை பாட வல்லவர்கள் மேல் வரும் பழிகள் போகும்
103)திருக்கழுக்குன்றம்.1112)தோடு உடையான் ஒரு காதில்-தூய குழை தாழ. பத்துப் பாடல்களையும் பாடிப் போற்றுபவர் புண்ணியராய்த் தேவர்களோடு வானுலகம் புகுவர். 
பண் - வியாழக்குறிஞ்சி
104)திருப்புகலி.1122)ஆடல் அரவு அசைத்தான், அருமாமறைதான் விரித்தான், கொன்றை....இத்தமிழ் மாலையை நாவினால் ஓதி - வழிபட வல்லவர் மேம்பட்ட பிறவிப் பிணியை நீக்கிவிடுவர். 
105)திருஆரூர்.1133)பாடலன் நால்மறையன்; படி பட்ட கோலத்தன்; திங்கள்.இப்பதிகத்தைப் பொருந்தச் சொல்லுதல் கேட்டல் வல்லவர்கள் துன்பம் துடைப்பவர்களாவர்
106)திருஊறல்.143)மாறு இல் அவுணர் அரணம் அவை மாய, ஓர் வெங்கணையால், அன்று,இப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர் பரலோகத்திருப்பர்
107)திருக்கொடிமாடச்செங்குன்றூர்.1152)வெந்த வெண் நீறு அணிந்து, விரிநூல் திகழ் மார்பில் நல்ல.நலம் மிக்க, இப்பதிகப் பாடல்களை ஓத, வல்லவர்களின் வினைகள் நாசமாகும்

108)திருப்பாதாளீச்சுரம்.1163)மின் இயல் செஞ்சடைமேல் விளங்கும் மதி மத்தமொடு நல்ல.இன்னிசை பொருந்திய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர் அழகிய வானுலகின்கண் இருப்பர். 
109)திருச்சிரபுரம்.1174)வார் உறு வனமுலை மங்கை பங்கன்,இப்பதிகச் செந்தமிழ் பத்தையும் ஓத வல்லவர் செல்வத்துடன் புகழ் நிறைந்து ஒளியுடன் திகழ்வர். 
110)திருஇடைமருதூர்.1185)மருந்து அவன், வானவர் தானவர்க்கும். இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதி வழிபட வல்லவர் உலகில் நிறைந்து விளங்கும் புகழ்கள் அனைத்தையும் பெற்று ஓங்கி வாழ்வர்
111)திருக்கடைமுடி.1196)அருத்தனை, அறவனை, அமுதனை, நீர்இனிய தமிழாகிய இத்திருப்பதிகப் பாடல்களை ஓதி வழிபட இன்பம் ஆகும்
112)திருச்சிவபுரம்.1207)இன்குரல் இசை கெழும் யாழ் முரலத்.இப்பதிகத் தமிழை ஓத வல்லவர் புதுமைகள் பலவும் பெற்று முடிவில் சிவகதி சேர்வர். 
113)திருவல்லம்.1218)எரித்தவன், முப்புரம் எரியில் மூழ்க; குற்றமற்ற இச்செந்தமிழ்ப் பதிகத்தைக் கூற வல்லவர்கள் சிவபிரானுடைய அழகிய திருவடிகளை அடைவர். 
114)திருமாற்பேறு.1228)குருந்து அவன், குருகு அவன், கூர்மை அவன்,இனிய இத்திருப்பதிகப் பாடல்களைக் கொண்டு ஏத்தி வழிபட வல்லவர் எந்தையாகிய சிவபிரானின் கழலணிந்த திருவடிகளை எய்துவர்
115)திருஇராமன்நந்தீச்சுரம்.1238)சங்கு ஒளிர் முன் கையர் தம் இடையே... இராமனதீச்சரத்தில் எழுந்தருளியுள்ள இறைவனை சென்று வழிபடுக
116)பொது - திருநீலகண்டம்.1249)“அவ் வினைக்கு இவ் வினை ஆம்” என்று சொல்லும் அஃது அறிவீர்!இத்திருப்பதிகச் செந்தமிழ்ப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்களாயின், அவர்கள் இமையவர்கள் நிறைந்த வானுலகில் அவ்வானவர் கோனொடும் கூடி மகிழும் பதவியைப் பெற்று இன்புறுவர்
117)திருப்பிரமபுரம் - மொழிமாற்று.1259)காடு அது, அணிகலம் கார் அரவம், பதி; கால் அதனில்,-ஞானத்தமிழை நன்குணர்ந்து சொல்லவும் கேட்கவும் வல்லவர் பழமையான தேவர்களோடும் அமருலகம் சென்று சிவலோகத்தைப் பெறுவர்
118)திருப்பருப்பதம். 1271)சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர அரைக்கு அசைத்தான்;ஒளி பொருந்திய இத்திருப்பதிகப் பாமாலையைப் பலகாலும் எண்ணிப் பரவ, அதுவே தவமாகிப் பயன்தரும். 
119)திருக்கள்ளில்.1282)முள்ளின் மேல் முது கூகை முரலும் சோலை, நறுமணம் கமழும் மலர் அரும்புகள் நிறைந்த, முதிர்ந்த சடைமுடி உடையவனாகிய சிவபிரானது கள்ளிலைப் போற்றிப் பாடிய இத்திருப்பதிகத்தைப் பாடி ஏத்தினால், புகழோடு பேரின்பம் அடையலாம்
120)திருஐயாறு - திருவிராகம்.1293)பணிந்தவர் அருவினை பற்று அறுத்து அருள்செயத்.இன்தமிழால் இயன்ற கலைநலம் நிறைந்த இத்திருப்பதிகத்தைக் கற்று வல்லவராயினார் நன்மை மிக்க புகழாகிய நலத்தைப் பெறுவர்
121)திருஇடைமருதூர் - திருவிராகம்.1304)நடை மரு திரிபுரம் எரியுண நகை செய்த. விரிந்த பொழில்களால் சூழப்பட்ட இடைமருதீசனை இசையால் பரவிய சொல்லோவியமாகிய இத்திருப்பதிகத் தமிழைப் பாடிப் பரவ வல்லவர்தம் வினைகள் கெட்டொழிய அவர்கள் புகழோடும் விளங்கும் ஒளியோடும் திகழ்பவராவர்
122)திருஇடைமருதூர் - திருவிராகம்.1315)விரிதரு புலிஉரி விரவிய அரையினர்,விரிந்த பொழில்களால் சூழப்பட்ட இடைமருதில் விளங்கும் பெருமானைப் பரவிய இத்திருப்பதிகத்தின் பத்துப் பாடல்களையும் பயில வல்லவர் வினைகளும் இடர்களும் இலராவர். அகன்ற வீட்டுலகம் அவர்கட்குச் சொந்தமாகும். 
123)திருவலிவலம் - திருவிராகம்.1326)பூ இயல் புரிகுழல்; வரிசிலை நிகர் நுதல்;இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தும் உயர்வான வீடு பேறாகிய செல்வத்தை அளிக்கும்
124)திருவீழிமிழலை - திருவிராகம்.1337)அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர் இப்பதிகப் பாடல்கள் பத்தையும் பயின்று கற்று வல்லவர் உலகினில் சிறந்த அடியவராய் விளங்குவர். 

125)திருச்சிவபுரம் - திருவிராகம்.1348)கலை மலி அகல் அல்குல் அரிவைதன் உருவினன்,இவ்விசை மாலையை ஓதி வழிபடுபவர் வினைகள் முற்பட்டு நீங்க உயர்கதி பெறுவார்கள். 
126)திருக்கழுமலம் - திருத் தாளச்சதி.1359)பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர், அப்.தேனுக்கு நிகரான இப்பதிகப் பாடல்களை நல்ல கலைகளில் துறைபோய்த் தமக்குத் தாமே நிகராய் இருபத்தொரு பண்முறையினால் இயல்பாக வஞ்சனையின்றி மனம் பொருந்தப் பாடுபவர்களின் மார்பினில் தேவர்களால் போற்றப் பெறும் சிறப்புமிக்க பிறை போன்ற நெற்றியினை உடைய திருமகள் சேர்வாள்
127)திருப்பிரமபுரம் - ஏகபாதம்.1370)பிரம புரத்துறை பெம்மா னெம்மான்.உரை செய்வார் உயர்ந்தாரேயாதலால் இப்பாடலைஇடைவிடாமல் உரைசெய்வீராக
✴️128)திருப்பிரமபுரம் - திருஎழுகூற்றிருக்கை.சம்பந்தர் தேவாரம் முழுவதையும் பாராயணம் செய்த பலன் கிடைக்க.1382)ஓர் உரு ஆயினை; மான் ஆங்காரத்து.சம்பந்தர் தேவாரம் முழுவதையும் பாராயணம் செய்த பலன் கிடைக்க மிகமிகச் சக்தியுள்ளதான ஒரு சிவஸ்தோத்திரம்
பண் - மேகராகக்குறிஞ்சி
129)திருக்கழுமலம்.1383)"சே உயரும் திண் கொடியான் திருவடியே சரண்" என்று சிறந்த அன்பால்.ஓதுவார்களுக்குத் துணையாய் அமைந்த சொற்களையுடைய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர், திருமகள் கேள்வராய் இவ்வுலகம் முழுவதையும் அரசாண்டு சிவனடி கூடும் முயற்சியைச் செய்கின்றவராவர்
130)திருஐயாறு.1394)புலன் ஐந்தும் பொறி கலங்கி, நெறி மயங்கி, அறிவு அழிந்திட்டு, ஐம் மேல் உந்தி,பாடல்களாகிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதி, ஈசனடியை ஏத்துபவர்கள் புகழோடு தவநெறியின் பயனாக விளங்கும் அமரர் உலகத்தைத் தாழாமல் பெறுவர்
131)திருமுதுகுன்றம். 1405)மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும், எண்குணங்களும், விரும்பும் நால்வே- இப்பதிகப் பாடல்களைப் பொருந்தும் இசையோடு இயன்ற அளவில் பாடி வழிபடுபவர் உலகத்தை நெடுங்காலம் ஆள்வர்
132)திருவீழிமிழலை.1416)ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து, அங்கு ஈர்-இருவர்க்கு இரங்கி நின்று,இப்பதிகப் பாடல்கள் பத்தையும் போற்றி இன்னிசையோடு பாடவல்லவர்கள் பெரிதான இந்நிலவுலகில் ஈசன் என்று போற்றும் இயல்புடையோராவர்
133)திருக்கச்சி ஏகம்பம்.1427)வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின் விரிநூல் ஒருபால் பொருந்த,பத்துப் பாடல்களையும் ஓத வல்லவர் இவ்வுலகின்கண் சிறந்த புகழால் ஓங்கி விளங்கிப் பின் விண்ணவர்களோடும் சேர்ந்து வாழும் நிலையைப் பெறுவர்
134)திருப்பறியலூர் வீரட்டம்.1437)கருத்தன், கடவுள், கனல் ஏந்தி ஆடும். இப்பதிகப் பாடல்களை வல்லவர்கட்குப் பெரிய துன்பங்களும் பிறப்பும் நீங்கும்
135)திருப்பராய்த்துறை. 1448)நீறு சேர்வது ஒர் மேனியர்,நேரிழைஅழிவற்ற இச்செந்தமிழ்ப் பாடல்களை ஓதினால், ஓதின அவர்கட்கு எல்லாச் செல்வங்களும் உண்டாகும்
பண் - யாழ்மூரி
136)திருத்தருமபுரம் - யாழ்மூரி.1459)மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னது ஓர் நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர், சிவபிரானுடைய பிணைந்துள்ள இரண்டு திருவடிகளையும் போற்றி அன்பு செய்பவர், இனிய பெரிய நல்லுலகை எய்துவர், அடையத் தக்கனவாய போகங்களையும் பெறுவர். இடர் செய்யும் பிணி துயர் முதலியன நீங்கி என்றும் இன்பம் உறுவர்

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(1)
திருப்பிரமபுரம்

பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் கோபுரம் பெரியநாயகி சிவபாத இருதயர் திருக்குள தீர்த்தக் கரையில் ஞானப் பிள்ளையாரை இருத்திவிட்டு விரைந்து நீராடித் திரும்புகையில் கரையில் நின்றியிருந்த தன் மகன் கடைவாய் வழியாகப் பால் வழிந் திருப்பதைக் கண்ட அவர், தன் மகனார்க்கு யாரோ பால் அளித்துச் சென்றுள்ளார்கள் என்று எண்ணியவராய் ஞான போனகரை நோக்கிப் பிள்ளாய் நீ யார் அளித்த பால் அடிசிலை உண்டாய்? எச்சில் கலக்குமாறு உனக்கு இதனை அளித்தவர் யார்? காட்டுக என்று வெகுண்டு தரையில் கிடந்த கோல் ஒன்றைக் கையில் எடுத்து ஓச்சியவராய் வினவ,
சிறிய பெருந்தகையார் தம் உள்ளத்துள் எழுந்த உயர் ஞானத் திருமொழியால் தமிழ் என்னும் மொழியின் முதல் எழுத்தாகிய தகர மெய்யில் பிரணவத்தை உயிராய் இணைத்துத் தனக்குப் பாலளித்த உலகன்னை தன் அன்னை உமைஅம்மையின் தோடணிந்த திருச்செவியைச் சிறப்பிக்கும் முறையில் தோடுடைய செவியன் என்ற முதற்பெரும் பாடலால் தனக்குப் பாலளித்த கடவுளின் அடையாளங்களைச் சுட்டுதல்.
இறைவன்: பிரம்மபுரீசுவரர், தோணியப்பர், சட்டைநாதர்
இறைவி: பெரியநாயகி, திருநிலை நாயகி, ஸ்திர சுந்தரி
தல விருட்சம்: பாரிஜாதம், பவளமல்லி
பாடல் குறிப்பு : ஒரு நாள் காலையில் சிவபாத இருதயர் வேதவிதிப்படி நீராடுதற்குத் திருக்கோயி லுள்ளிருக்கும் பிரமதீர்த்தத்திற்குப் புறப்பட் டார். தந்தையார் வெளியில் செல்வதைக் கண்ட பிள்ளையார் தானும் உடன் வரவேண்டுமென்ற குறிப்போடு கால்களைக் கொட்டிக் கொண்டு அழுதார். தந்தையார் தன் மைந்தரைப் பார்த்து உன் செய்கை இதுவாயின் உடன் வருக எனக் கூறி அவரையும் உடனழைத்துக் கொண்டு சென்று பிரம தீர்த்தக் கரையில் பிள்ளையாரை இருத்திவிட்டு விரைந்து நீராடித் திரும்பும் எண்ணத்தோடு நீர்நிலையில் இறங்கினார். சில நிமிடங்கள் முழ்கியிருந்து செபித்தற்குரிய அகமர்ஷண மந்திரங் களைச் சொல்லிக் கொண்டு நீரில் மூழ்கினார். இந்நிலையில் கரையில் அமர்ந்திருந்த பிள்ளையார் தந்தை யாரைக் காணாமல் முற்பிறப்பின் நினைவு மேலிட்டவராய் திருத் தோணி மலைச் சிகரத்தைப் பார்த்துக் கண்மலர்கள் நீர் ததும்பக் கைமலர்களால் பிசைந்து வண்ணமலர்ச் செங்கனிவாய் மணியதரம் புடை துடிப்ப அம்மே அப்பா என அழைத்து அழுதருளினார். பிள்ளையின் அழுகுரல் கேட்ட நிலையில் தோணிபுரத்து இறைவர் இறைவியாருடன் விடைமீது அமர்ந்து குளக்கரைக்கு எழுந்தருளி னார். பெருமான் உமையம்மையை நோக்கி அழுகின்ற இப் பிள்ளைக்கு உன் முலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து ஊட்டுக எனப்பணித்தார். அம்மையாரும் அவ்வாறே தன் திருமுலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து சிவஞானமாகிய அமுதைக் குழைத்து அழுகின்ற குழந்தை கையில் கொடுத்து உண்ணச் செய்து அழுகை தீர்த்தருளினார்.
தேவர்க்கும் முனிவர்க்கும் கிடைக்காத பேரின்பம் பெற்ற நிலையில் பிள்ளையார் திருஞானசம்பந்தராய் அபரஞானம் பரஞானம் அனைத்தும் கைவரப் பெற்றார். அப்பொழுது நீரில் மூழ்கி நியமங்களை முடித்துக் கரை யேறிய சிவபாத இருதயர் சிவஞானத் திருவுருவாய்க் கரையில் நிற்கும் தம்மைந்தரைக் கண்டார். கடைவாய் வழியாகப் பால் வழிந் திருப்பதைக் கண்ட அவர், தன் மகனார்க்கு யாரோ பால் அளித்துச் சென்றுள்ளார்கள் என்று எண்ணியவராய் ஞான போனகரை நோக்கிப் பிள்ளாய் நீ யார் அளித்த பால் அடிசிலை உண்டாய்? எச்சில் கலக்குமாறு உனக்கு இதனை அளித்தவர் யார்? காட்டுக என்று வெகுண்டு தரையில் கிடந்த கோல் ஒன்றைக் கையில் எடுத்து ஓச்சியவ ராய் வினவினார். சிறிய பெருந்தகையார் தம் உள்ளத்துள் எழுந்த உயர் ஞானத் திருமொழியால் தமிழ் என்னும் மொழியின் முதல் எழுத்தாகிய தகர மெய்யில் பிரணவத்தை உயிராய் இணைத்துத் தனக்குப் பாலளித்த உமைஅம்மையின் தோடணிந்த திருச்செவியைச் சிறப்பிக்கும் முறையில் தோடுடைய செவியன் என்ற முதற்பெரும் பாடலால் தனக்குப் பாலளித்த கடவுளின் அடையாளங்களைச் சுட்டித் திருப் பதிகம் அருளிச்செய்தார்.


பாடல் கேட்க:
இத்தேனாரமுதத் திருப்பதிகத்தை குரலிசையோடு பாடித் துதிக்க :

♪ தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ
இசை: திருப்பிரமபுரம் - பண்: நட்டபாடை

கோவில் பற்றி மேலும் அறிந்துகொள்ள : Templeyatra.com : அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில்
Shaivam.org :திருக்காழி (சீர்காழி)
Aanmeegam.in :காசிக்கு இணையான சீர்காழி சட்டைநாதர் திருக்கோவில்
Temple.dinamalar.com:அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில்

(1)
தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி,

காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்-

ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த,

பீடு உடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!.

தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச் சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!

மேல்

(2)
முற்றல் ஆமை இள நாகமொடு ஏனமுளைக் கொம்பு அவை பூண்டு,

வற்றல் ஓடு கலனாப் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-

கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த,

பெற்றம் ஊர்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!.

வயது முதிர்ந்த ஆமையினது ஓட்டினையும், இளமையான நாகத்தையும், பன்றியினது முளை போன்ற பல்லையும் கோத்து மாலையாக அணிந்து, தசை வற்றிய பிரம கபாலத்தில் உண்பொருள் கேட்டு வந்து என் உள்ளம் கவர்ந்த கள்வன், கல்வி கேள்விகளிற் சிறந்த பெரியோர்கள் தன் திருவடிகளைக் கைகளால்தொழுது ஏத்த அவர்கட்கு அருளும் நிலையில் விடைமீது காட்சி வழங்கும் பிரமபுரத்தில் விளங்கும் பெருமானாகிய இவனல்லனோ!

மேல்

(3)
நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண்மதி சூடி,

ஏர் பரந்த இன வெள் வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்-

“ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது” என்னப்

பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!.

கங்கை நீர் நிரம்பி நிமிர்ந்த சிவந்த சடைமுடி மீது ஒரு கலையை உடைய நிலவைப் பொழியும் வெள்ளிய பிறைமதியைச்சூடி வந்து விரகமூட்டிக் கைகளில் அணிந்துள்ள ஓரினமான சங்கு வளையல்கள் கழன்று விழுமாறு செய்து, என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மகாப்பிரளய காலத்தில் ஊர்கள் மிக்க இவ்வுலகில் அழியாது நிலை பெற்ற ஒப்பற்ற ஊர் இது என்ற புகழைப் பெற்ற பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவனல்லனோ!

மேல்

(4)
விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி, விளங்கு தலை ஓட்டில்

உள் மகிழ்ந்து, பலி தேரிய வந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-

மண் மகிழ்ந்த அரவம், மலர்க் கொன்றை, மலிந்த வரைமார்பில்

பெண் மகிழ்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!.

வானவெளியில் மகிழ்ச்சிச் செருக்கோடு பறந்து திரிந்த மும்மதில்களையும் கணையொன்றினால் எய்து அழித்ததுமல்லாமல், விளங்கிய பிரமகபாலமாகிய தலையோட்டில் மனமகிழ்வோடு பலியேற்க வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் புற்றிடையே வாழும் பாம்பு, கொன்றை மலர் ஆகியவற்றால் நிறைந்தவரை போன்ற மார்பின் இடப்பாகத்தே உமையம்மையை மகிழ்வுடன் கொண்டருளியவனாய்ப் பிரமபுரத்தில் எழுந்தருளிய பெருமானாகிய இவன் அல்லனோ!

மேல்

(5)
“ஒருமை பெண்மை உடையன்! சடையன்! விடை ஊரும்(ம்) இவன்!” என்ன

அருமை ஆக உரை செய்ய அமர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-

“கருமை பெற்ற கடல் கொள்ள, மிதந்தது ஒர் காலம் இது” என்னப்

பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!.

ஒரு திருமேனியிலேயே உமையம்மைக்கு இடப்பாகத்தை அளித்தவன் என்றும், சடைமுடியை உடையவன் என்றும், விடையை ஊர்ந்து வருபவன் என்றும் அவனது அழகைத் தோழியர் கூற அவ்வுரைப் படியே வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், சர்வசங்கார காலத்தில் கரிய கடல் பொங்கி வந்து உலகைக் கொண்டபோது தோணிபுரமாய் மிதந்த பெருமை பெற்ற பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ.

மேல்

(6)
மறை கலந்த ஒலிபாடலொடு ஆடலர் ஆகி, மழு ஏந்தி,

இறை கலந்த இனவெள்வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்-

கறை கலந்த கடி ஆர் பொழில், நீடு உயர் சோலை, கதிர் சிந்தப்

பிறை கலந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!.

ஒலி வடிவினதான வேதத்தைப் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும், மழுவாயுதத்தைக் கையில் ஏந்திக் கொண்டும் வந்து எனது முன் கையில் உள்ள ஓரினமான வெள்ளிய வளையல்கள் கழன்று விழ என்னை மெலிவித்து உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், இருள் செறிந்த, மணமுடைய பொழில்களிடத்தும் நீண்டு வளர்ந்த மரங்களை உடைய சோலைகளிடத்தும் நிலவைப் பொழியும் பிறையைச் சூடியவனாய்ப் பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

மேல்

(7)
சடை முயங்கு புனலன், அனலன், எரி வீசிச் சதிர்வு எய்த,

உடை முயங்கும் அரவோடு உழிதந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-

கடல் முயங்கு கழி சூழ் குளிர்கானல் அம் பொன் அம் சிறகு அன்னம்

பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!.

சடையில் கலந்த கங்கையை உடையவனும், திருக்கரத்தில் அனலைஉடையவனும், ஆடையின் மேல் இறுகக் கட்டிய பாம்பினனுமாய் எரிவீசி நடனமாடித் திரிந்து வந்து என் உள்ளம் கவர்ந்த கள்வன், கடலைத் தழுவிய உப்பங்கழிகளால் சூழப் பெற்றதும், குளிர்ந்த கடற்கரைச் சோலைகளையுடையதும், தம்முடைய பெடைகளை முயங்கித் திரியும் அழகிய சிறகுகளோடு கூடிய அன்னங்களை உடையதும், ஆகிய பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

மேல்

(8)
வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த

உயர் இலங்கை அரையன் வலி செற்று, எனது உள்ளம் கவர் கள்வன்-

துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம்

பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!.

கயிலை மலையைப் பெயர்த்துத் தனது பெருவீரத்தை வெளிப்படுத்திய புகழால் உயர்ந்த இலங்கை மன்னன் இராவணனின் வியர்வை தோன்றும் மலை போன்ற தோள்களின் வலிமையை அழித்த எனது உள்ளம்கவர் கள்வன், துயர் விளங்கும் இவ்வுலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுதெல்லாம் அழியாது தன் பெயர் விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

மேல்

(9)
தாள் நுதல் செய்து, இறை காணிய, மாலொடு தண்தாமரை யானும்,

நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான், எனது உள்ளம் கவர் கள்வன்-

வாள்நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர் ஏத்த,

பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!.

திருமாலும், தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் நான்முகனும், தனது தாளையும் முடியையும் சிறிதே காணுதற் பொருட்டுப் பன்றியாயும் அன்னமாயும் தேடிச் செயலற, அண்ணாமலையாய் நிமிர்ந்தவனாய், என் உள்ளம் கவர் கள்வனாய் விளங்குபவன், ஒளி பொருந்திய நுதலையும் சிவந்த நிறத்தையும் உடைய மகளிர் முதலாக உலகோர் அனைவரும் துதிக்க விரும்புதலைச் செய்யும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

மேல்

(10)
புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற, நெறி நில்லா

ஒத்த சொல்ல, உலகம் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-

“மத்தயானை மறுக, உரி போர்த்தது ஒர்மாயம் இது!” என்ன,

பித்தர் போலும், பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!.

புண்ணியம் இன்மையால் புத்தர்களும் அறிவற்ற சமணர்களும் சைவத்தைப் புறங்கூறச் சான்றோர் வகுத்த நெறியில் நில்லாது, தமக்கு ஏற்புடையவாகத் தோன்றிய பிழைபட்ட கருத்துக்களைச் சொல்லித் திரிய, உலகனைத்தும் சென்று பலி தேர்ந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மதயானையை மருளுமாறு செய்து அதன் தோலை உரித்துப் போர்த்தது ஒரு மாயமான செயல் என்னுமாறு செய்து, பித்தனாய் விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

மேல்

(11)
அருநெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய,

பெரு நெறிய, பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை,

ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த

திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதுஆமே.

அருமையான நெறிகளை உலகிற்கு வழங்கும் வேதங்களில் வல்ல பிரமனால் படைக்கப்பட்டதும், அகன்ற மலர் வாவியில் தாமரைகளையுடையதும் ஆகிய பிரமபுரத்துள் மேவிய முத்தி நெறி சேர்க்கும் முதல்வனை, ஒருமைப்பாடு உடைய மனத்தைப் பிரியாதே பதித்து உணரும் ஞானசம்பந்தன் போற்றி உரைத்தருளிய திருநெறியாகிய அருநெறியை உடைய தமிழாம்( ஊழ்வினை தீர்வதற்குரிய மார்க்கங்கள் பல இருப்பினும், இத்திருப்பதிகத்தை ஓதுதலே எளிமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது).

இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்களின் பழவினைகள் தீர்தல் எளிதாகும்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(2)
திருப்புகலூர்

(12)
குறி கலந்த இசை பாடலினான், நசையால், இவ் உலகு எல்லாம்

நெறி கலந்தது ஒரு நீர்மையனாய், எருது ஏறி, பலி பேணி,

முறி கலந்தது ஒரு தோல் அரைமேல் உடையான் இடம் மொய்ம் மலரின்

பொறி கலந்த பொழில் சூழ்ந்து, அயலே புயல் ஆரும் புகலூரே.

சுரத்தானங்களைக் குறிக்கும் இசையமைதியோடு கூடிய பாடல்களைப் பாடுபவன். உயிர்கள் மீது கொண்ட பெருவிருப்பால் இவ்வுலகம் முழுவதும் வாழும் அவ்வுயிர்கள் தம்மை உணரும் நெறிகளை வகுத்து அவற்றுள் கலந்து நிற்பவன். எருதின்மிசை ஏறி வந்து மக்கள் இடும்பிச்சையை விரும்பி ஏற்பவன். இடையில் மான் தோலாடையை உடுத்துபவன். அவன் விரும்பி உறையும் இடம் செறிந்த மலர்கள்மீது புள்ளிகளை உடைய வண்டுகள் மொய்த்துத் தேனுண்ணும் வானளாவிய பொழில் சூழ்ந்த புகலூராகும்.

மேல்

(13)
காது இலங்கு குழையன், இழை சேர் திருமார்பன், ஒருபாகம்

மாது இலங்கு திருமேனியினான், கருமானின் உரி ஆடை

மீது இலங்க அணிந்தான், இமையோர் தொழ, மேவும் இடம் சோலைப்

போதில் அங்கு நசையால் வரிவண்டு இசை பாடும் புகலூரே.

காதில் விளங்கும் குழையை அணிந்தவன். பூணூல் அணிந்த அழகிய மார்பினன். இடப்பாகமாக உமையம்மை விளங்கும் திருமேனியன். யானையினது தோலை உரித்து மேல் ஆடையாக அணிந்தவன். அத்தகையோன் இமையவர் தொழமேவும் இடம், சோலைகளில் தேனுண்ணும் விருப்பினால் வரிவண்டுகள் இசைபாடும் புகலூராகும்.

மேல்

(14)
பண் நிலாவும் மறை பாடலினான், இறை சேரும் வளை அம் கைப்

பெண் நிலாவ உடையான், பெரியார் கழல் என்றும் தொழுது ஏத்த,

உள்-நிலாவி அவர் சிந்தை உள் நீங்கா ஒருவன், இடம் என்பர்

மண் நிலாவும் அடியார் குடிமைத் தொழில் மல்கும் புகலூரே.

இசையமைதி விளங்கும் வேத கீதங்களைப் பாடுபவன் - முன்கைகளில் வளையல்கள் விளங்கும் அழகிய கைகளை உடைய உமையம்மையைத் தனது தேவியாக உடையவன். தன் திருவடிகளை என்றும் தொழுது ஏத்தும் பெரியவர்களின் உள்ளத்தே விளங்குவதோடு அவர்களின் அடிமனத்தில் என்றும் நீங்காதிருப்பவன். அத்தகையோன் விரும்பி உறையுமிடம் நிலவுலகில் வாழும் அடியவர்கள் குடும்பத்துடன் வந்து பணி செய்யும் புகலூராகும்.

மேல்

(15)
நீரின் மல்கு சடையன், விடையன், அடையார் தம் அரண் மூன்றும்

சீரின் மல்கு மலையே சிலை ஆக முனிந்தான், உலகு உய்யக்

காரின் மல்கு கடல்நஞ்சம் அது உண்ட கடவுள், இடம் என்பர்

ஊரின் மல்கி வளர் செம்மையினால் உயர்வு எய்தும் புகலூரே.

கங்கை நீரால் நிறைவுற்ற சடைமுடியை உடையவன். விடையூர்தியன். முப்புரங்களையும் சிறப்புமிக்க மேருமலையை வில்லாகக் கொண்டு முனிந்தவன். உலக உயிர்கள் உய்யக் கருநிறமுடைய கடலிடையே தோன்றிய நஞ்சை அமுதமாக உண்ட கடவுள். அத்தகையோன் விரும்பி உறையுமிடம் ஒழுக்கத்தால் உயர்ந்த மக்கள் வாழ்ந்து சிறப்பெய்தும் புகலூராகும்.

மேல்

(16)
செய்ய மேனி வெளிய பொடிப் பூசுவர், சேரும் அடியார்மேல்

பைய நின்ற வினை பாற்றுவர், போற்றி இசைத்து என்றும் பணிவாரை

மெய்ய நின்ற பெருமான், உறையும் இடம் என்பர் அருள் பேணி,

பொய் இலாத மனத்தார் பிரியாது பொருந்தும் புகலூரே.

சிவந்த திருமேனியில் வெண்ணிறமான திருநீற்றைப் பூசுபவர். தம்மை வந்தடையும் அடியவர்களைத் தாக்க வரும் வினைகளை நீக்குபவர். என்றும் தம்மைப் பாடிப் பணிவார்க்கு உண்மையானவர். அவர் விரும்பி உறையும் இடம், அருளையே விரும்பிப் பொய்யில்லாத மனத்தவர் நீங்காது வாழும் புகலூர் என்பர்.

மேல்

(17)
கழலின் ஓசை, சிலம்பின் ஒலி, ஓசை கலிக்க, பயில் கானில்,

குழலின் ஓசை குறள்பாரிடம் போற்ற, குனித்தார் இடம் என்பர்

விழவின் ஓசை, அடியார் மிடைவு உற்று விரும்பிப் பொலிந்து எங்கும்

முழவின் ஓசை, முந் நீர் அயர்வு எய்த முழங்கும் புகலூரே.

இரண்டு திருவடிகளிலும், விளங்கும் வீரக் கழல் சிலம்பு ஆகியன ஒலிக்கவும், குழல் முதலிய இசைக்கருவிகள் முழங்கவும், குள்ளமான பூதகணங்கள் போற்றவும், பலகாலும் பழகிய இடமாக இடுகாட்டில் முற்றழிப்பு நடனம் புரியும் இறைவனுடைய இடம், திருவிழாக்களின் ஓசையும், அடியவர் மனமகிழ்வோடு எங்கும் முழக்கும் முழவோசையும் கடலோசையைத் தளரச் செய்யும் ஒலியைத் தரும் புகலூர் என்பர்.

மேல்

(18)
வெள்ளம் ஆர்ந்து மிளிர் செஞ்சடை தன் மேல் விளங்கும் மதி சூடி,

உள்ளம் ஆர்ந்த அடியார் தொழுது ஏத்த, உகக்கும் அருள் தந்து, எம்

கள்ளம் ஆர்ந்து கழியப் பழி தீர்த்த கடவுள் இடம் என்பர்

புள்ளை ஆர்ந்த வயலின் விளைவால் வளம் மல்கும் புகலூரே.

கங்கைநீர் அடங்கி விளங்கும் செஞ்சடைமேல் விளக்கமான பிறைமதியைச் சூடி, தம்மிடம் மனம் ஒன்றிய அடியவர் தொழுது ஏத்த அவர்கள் மனம் மகிழும் அருளைப் புரிந்து என்னைப் பற்றிய வினையையும் பழியையும் தீர்த்தருளிய கடவுள் உறையும் இடம், மீன் கொத்தி முதலிய பறவை இனங்கள் மீன்களைக் கவர வந்து தங்கும் வயல்களின் விளைவால் வளம் மல்கிய புகலூராகும்.

மேல்

(19)
தென் இலங்கை அரையன், வரை பற்றி எடுத்தான், முடி திண் தோள்,

தன் இலங்கு விரலால் நெரிவித்து, இசை கேட்டு, அன்று, அருள் செய்த

மின் இலங்கு சடையான் மடமா தொடு மேவும் இடம் என்பர்

பொன் இலங்கு மணி மாளிகை மேல் மதி தோயும் புகலூரே.

அழகிய இலங்கை அரசனாகிய இராவணன் கயிலை மலையை இரு கரங்களாலும் பற்றி எடுத்தபோது அவனுடைய தலைகள், திண்ணிய தோள்கள் ஆகியவற்றைத் தன் கால் விரலால் நெரித்துப் பின் அவன் சாமகானம் பாடக்கேட்டு அன்று அவனுக்கு அருள் செய்தவனாகிய தாழ்ந்த சடைமுடி உடைய பெருமான் தன் தேவியோடு மேவும் இடம், மதி தோயும் அழகிய மாளிகைகள் நிறைந்த புகலூராகும்.

மேல்

(20)
நாகம் வைத்த முடியான், அடி கை தொழுது ஏத்தும் அடியார்கள்

ஆகம் வைத்த பெருமான், பிரமனொடு மாலும் தொழுது ஏத்த

ஏகம் வைத்த எரி ஆய் மிக ஓங்கிய எம்மான், இடம்போலும்

போகம் வைத்த பொழிலின்(ன்) நிழலால் மது வாரும் புகலூரே.

பாம்பை முடிமிசை வைத்துள்ளவனும், தன் திருவடிகளைப் போற்றும் அடியார்கள், தம் மனத்தின்கண் வைத்துப் போற்றும் தலைவனும், பிரமனும், திருமாலும் தொழுதேத்த ஏகனாய் எரி வடிவில் மிக ஓங்கிய எம்மானுமாகிய இறைவனுக்கு மிக உகந்த இடம், பல்வகைப் பயன்களையும் தருவதோடு நிழலாற் சிறந்ததாய்த் தேன் நிறைந்து விளங்கும் பொழில் சூழ்ந்த புகலூராகும்.

மேல்

(21)
செய்தவத்தர் மிகு தேரர்கள், சாக்கியர், செப்பில் பொருள் அல்லாக்

கைதவத்தர், மொழியைத் தவிர்வார்கள் கடவுள் இடம் போலும்

கொய்து பத்தர் மலரும் புனலும் கொடு தூவி, துதி செய்து,

மெய் தவத்தின் முயல்வார் உயர் வானகம் எய்தும் புகலூரே.

எண்ணிக்கையில் மிக்கதேரர், சாக்கியர் சமணர்கள் ஆகியவர்களின் உண்மையல்லாத வஞ்சகம் நிறைந்த மொழிகளைக் கேளாதவராய், மிகுதியான தவத்தைச் செய்யும் மெய்யடியார் களின் தலைவராகிய சிவபிரானுக்கு மிக உகந்த இடம், அடியவர்கள் மலர் கொய்து வந்து தூவிப் புனலாட்டித் துதி செய்து தவநெறியில் முயன்று உயர் வானகத்தை எய்துதற்குரிய வழிபாடுகளை ஆற்றும் புகலூராகும்.

மேல்

(22)

புற்றில் வாழும் அரவம்(ம்) அரை ஆர்த்தவன் மேவும் புகலூரை,

கற்று நல்ல அவர் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் மாலை

பற்றி, என்றும் இசை பாடிய மாந்தர், பரமன் அடி சேர்ந்து,

குற்றம் இன்றி, குறைபாடு ஒழியா, புகழ் ஓங்கி, பொலிவாரே.

புற்றில் வாழும் பாம்புகளை இடையிலே கட்டியவனாகிய சிவபிரான் எழுந்தருளிய புகலூர்மீது இறைவனது பொருள் சேர் புகழைக் கற்று வல்லவர்கள் வாழும் சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய தமிழ்மாலையாகிய ,

இத்திருப்பதிகத்தை, என்றும் இசையோடு பாடி வழிபடும் மாந்தர்கள் இறைவன் திருவடி நீழலை அடைந்து குற்றம் குறைபாடு அகன்று புகழோங்கிப் பொலிவெய்துவார்கள்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(3)
திருவலிதாயம்

(23)
பத்தரோடு பலரும் பொலிய மலர் அங்கைப் புனல் தூவி,

ஒத்த சொல்லி, உலகத்தவர் தாம் தொழுது ஏத்த, உயர் சென்னி

மத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலி தாயம்,

சித்தம் வைத்த அடியார் அவர்மேல் அடையா, மற்று இடர், நோயே.

வலிதாயம் சித்தம் வைத்த அடியார்களை இடர் நோய் அடையா என வினை முடிபு கொள்க. சிவனடியார்கள், விளங்குகின்ற அழகிய மலர்களை அகங் கையில் ஏந்தி மந்திரத்தோடு நீர் வார்த்துப் பூசிக்க அவர்களோடு ஒரே இசையில் அம்மந்திரங்களைச் சொல்லி உலக மக்கள் தாமும் வெளிநின்று தொழுதேத்துமாறு ஊமத்தை மலரை முடிமிசைச் சூடிய பெருமான் பிரியாதுறையும் வலிதாயம் என்ற தலத்தைத் தம் சித்தத்தில் வைத்துள்ள அடியவர்கள் மேல் துன்பங்களோ நோய்களோ வந்தடைய மாட்டா.

மேல்

(24)

படை இலங்கு கரம் எட்டு உடையான், படிறு ஆகக் கனல் ஏந்திக்

கடை இலங்கு மனையில் பலி கொண்டு உணும் கள்வன், உறை கோயில்,

மடை இலங்கு பொழிலின் நிழல்வாய் மது வீசும் வலி தாயம்

அடைய நின்ற அடியார்க்கு அடையா, வினை அல்லல் துயர்தானே.

படைக் கலங்களை ஏந்திய எட்டுத் திருக்கரங்களை உடைய பெருமானும், பொய்யாகப் பலியேற்பது போலப் பிரம கபாலத்தைக் கையில் ஏந்தி வீடுகளின் வாயில்களிற் சென்று பலியேற்றுண்ணும் கள்வனும் ஆகிய பெருமான் உறையும் கோயிலை உடையதும், நீர்வரும் வழிகள் அடுத்துள்ள பொழில்களின் நீழலில் தேன்மணம் கமழ்வதுமாகிய வலிதாயத்தை அடைய எண்ணும் அடியவர்களை வினை அல்லல் துயர் ஆகியன வந்தடைய மாட்டா.

மேல்

(25)

ஐயன், நொய்யன், அணியன், பிணி இல்லவர் என்றும் தொழுது ஏத்த,

செய்யன், வெய்ய படை ஏந்த வல்லான், திருமாதோடு உறை கோயில்

வையம் வந்து பணிய, பிணி தீர்த்து உயர்கின்ற வலி தாயம்

உய்யும் வண்ணம் நினைமின்! நினைந்தால், வினை தீரும்; நலம் ஆமே.

வலிதாயத்தை உய்யும் வண்ணம் நினைமின்; நினைந்தால் பிணி தீரும், இன்பம் ஆம் என வினை முடிபு கொள்க. அழகன், நுண்ணியன், அருகிலிருப்பவன், செந்நிறமேனியன், நெடிய மழுவை ஏந்தும் ஆற்றலன். அவன் பாசங்கள் நீங்கிய அடியவர் எக்காலத்தும் வணங்கித் துதிக்குமாறு உமையம்மையோடு உறையும் கோயில் உலக மக்கள் அனைவரும் வந்து பணிய அவர்களின் பிணிகளைத் தீர்த்து உயரும் திருவலிதாயம் என்ற அத்தலத்தை நீர் உய்யும்வண்ணம் நினையுங்கள். நினைந்தால் வினைகள் தீரும். நலங்கள் உண்டாகும்.

மேல்

(26)

ஒற்றை ஏறு அது உடையான்; நடம் ஆடி, ஒரு பூதப்படை சூழ;

புற்றில் நாகம் அரை ஆர்த்து உழல்கின்ற எம்பெம்மான்; மடவாளோடு

உற்ற கோயில் உலகத்து ஒளி மல்கிட உள்கும் வலி தாயம்

பற்றி வாழும் அதுவே சரண் ஆவது, பாடும் அடியார்க்கே.

அடியவர்க்கு வலிதாயத்தைப் பற்றி வாழ்வதே சரண் என முடிபு காண்க. ஒற்றை விடையை உடையவன். சிறந்த பூதப்படைகள் சூழ்ந்துவர, புற்றில் வாழும் நாகங்களை இடையில் கட்டி நடனமாடி, உழலும் எம்பெருமான், உமையம்மையோடு உறையும் கோயில் உலகின்கண் ஒளி நிலைபெற்று வாழப் பலரும் நினைந்து போற்றும் வலிதாயமாகும். அடியவர்கட்கு அத்தலத்தைப் பற்றி வாழ்வதே அரணாம்.

மேல்

(27)

புந்தி ஒன்றி நினைவார் வினை ஆயின தீர, பொருள் ஆய

அந்தி அன்னது ஒரு பேர் ஒளியான் அமர் கோயில் அயல் எங்கும்

மந்தி வந்து கடுவனொடும் கூடி வணங்கும் வலி தாயம்

சிந்தியாத அவர் தம் அடும் வெந்துயர் தீர்தல் எளிது அன்றே.

வலிதாயம் கோயிலைச் சிந்தியாதவர் துயர் தீர்தல் எளிதன்று என முடிபு கொள்க. மனம் ஒன்றி நினைபவர் வினைகளைத் தீர்த்து அவர்க்குத் தியானப் பொருளாய்ச் செவ்வான் அன்ன பேரொளியோடு காட்சி தரும் இறைவன் எழுந்தருளியுள்ள கோயிலாய் அயலில் மந்தி ஆண்குரங்கோடு கூடி வந்து வணங்கும் சிறப்பை உடைய திருவலிதாயத்தைச் சிந்தியாத அவர்களைத் தாக்கும் கொடிய துன்பம், தீர்தல் எளிதன்று.

மேல்

(28)
ஊன் இயன்ற தலையில் பலி கொண்டு, உலகத்து உள்ளவர் ஏத்த,

கான் இயன்ற கரியின் உரி போர்த்து, உழல் கள்வன்; சடை தன் மேல்

வான் இயன்ற பிறை வைத்த எம் ஆதி; மகிழும் வலி தாயம்

தேன் இயன்ற நறு மா மலர் கொண்டு நின்று ஏத்த, தெளிவு ஆமே.

வலிதாயத்திறைவனை நறுமாமலர் கொண்டு நின்றேத்தத் தெளிவு ஆம் என வினை முடிபு கொள்க. ஊன் கழிந்த பிரமகபாலத்தில் பலி ஏற்று உலகத்தவர் பலரும் ஏத்தக்காட்டில் திரியும் களிற்றுயானையின் தோலை உரித்துப் போர்த்துத் திரியும் கள்வனும், சடையின்மேல் வானகத்துப் பிறைக்கு அடைக்கலம் அளித்துச் சூடிய எம் முதல்வனும் ஆகிய பெருமான், மகிழ்ந்துறையும் திருவலி தாயத்தைத் தேன் நிறைந்த நறுமலர் கொண்டு நின்று ஏத்தச் சிவஞானம் விளையும்.

மேல்

(29)
கண் நிறைந்த விழியின் அழலால் வரு காமன் உயிர் வீட்டி,

பெண் நிறைந்த ஒருபால் மகிழ்வு எய்திய பெம்மான் உறை கோயில்

மண் நிறைந்த புகழ் கொண்டு அடியார்கள் வணங்கும் வலிதாயத்து

உள் நிறைந்த பெருமான் கழல் ஏத்த, நம் உண்மைக் கதி ஆமே.

வலிதாய நாதன் கழலை ஏத்தினால் வீட்டின்பத்தை அடையலாம் என வினை முடிபு காண்க. நெற்றி விழியின் அழலால், தேவர் ஏவலால் வந்த காமனது உயிரை அழித்துத் தனது திருமேனியின் பெண்ணிறைந்த இடப் பாகத்தால் மகிழ்வெய்திய பெருமான் உறை கோயிலாய் நிலவுல கெங்கும் நிறைந்த புகழைக்கொண்ட, அடியவர்கள் வணங்கும் திருவலிதாயத்துள் நிறைந்து நிற்கும் பெருமான் திருவடிகளை வணங்கினால் வீடு பேறு அடையலாம்.

மேல்

(30)
கடலில் நஞ்சம் அமுது உண்டு, இமையோர் தொழுது ஏத்த, நடம் ஆடி,

அடல் இலங்கை அரையன் வலி செற்று அருள் அம்மான் அமர் கோயில்

மடல் இலங்கு கமுகின், பலவின், மது விம்மும் வலி தாயம்

உடல் இலங்கும் உயிர் உள்ளளவும் தொழ, உள்ளத்துயர் போமே.

உடலில் உயிர் உள்ள அளவும் தொழுவாரது மனத்துயரம் கெடும் என வினை முடிபு காண்க. திருப்பாற்கடலைக் கடைந்த போது எழுந்த நஞ்சினை அமுதமாக உண்டு தேவர்கள் தொழுது வாழ்த்த நடனம் ஆடி, வலிமை மிக்க இலங்கை மன்னனின் ஆற்றலை அழித்துப் பின் அவனுக்கு நல்லருள் புரிந்த இறைவன் எழுந்தருளிய கோயிலை உடையதும், மடல்கள் விளங்கும் கமுகு பலாமரம் ஆகியவற்றின் தேன் மிகுந்து காணப்படுவதுமாகிய திருவலிதாயத் தலத்தை நினைக்க மனத்துயர் கெடும்.

மேல்

(31)
பெரிய மேருவரையே சிலையா, மலைவு உற்றார் எயில் மூன்றும்

எரிய எய்த ஒருவன், இருவர்க்கு அறிவு ஒண்ணா வடிவு ஆகும்

எரி அது ஆகி உற ஓங்கியவன், வலிதாயம் தொழுது ஏத்த,

உரியர் ஆக உடையார் பெரியார் என உள்கும் உலகோரே.

வலிதாயத்தை வணங்குவாரைப் பெரியார் என உலகோர் உள்குவர் என முடிபு காண்க. தேவர்களோடு மாறுபட்ட திரிபுர அசுரர்களின் கோட்டைகள் மூன்றையும், மிகப் பெரிய மேருமலையை வில்லாகக் கொண்டு எரியும்படி அழித்த ஒருவனும், திருமால் பிரமன் ஆகிய இருவராலும் அறிய ஒண்ணாத அழல் வடிவாய் உயர்ந்தோங்கியவனும் ஆகிய சிவபிரானது திருவலிதாயத்தைத் தொழுது ஏத்தலைத் தமக்குரிய கடமையாகக் கொண்ட உலக மக்கள் பலரும் பெரியார் என நினைந்து போற்றப்படுவர்.

மேல்

(32)
ஆசி ஆர மொழியார் அமண் சாக்கியர் அல்லாதவர் கூடி

ஏசி, ஈரம் இலராய், மொழிசெய்தவர் சொல்லைப் பொருள் என்னேல்!

வாசி தீர அடியார்க்கு அருள்செய்து வளர்ந்தான் வலிதாயம்

பேசும் ஆர்வம் உடையார் அடியார் எனப் பேணும் பெரியோரே.

வலிதாயத்தின் புகழைப் பேசுபவர்க்கு யாம் அடியர் எனப் பெரியோர்கள் பேணுவர். மனமார வாழ்த்தும் இயல்பினரல்லாத சமணர் சாக்கியர் ஆகிய புறச்சமயிகள் கூடி இகழ்ந்தும் அன்பின்றியும் பேசும் சொற்களைப் பொருளாகக் கொள்ளாதீர். குற்றம் தீர, அடியவர்கட்கு அருள் செய்து புகழால் ஓங்கிய பெருமானது வலிதாயத்தின் புகழைப் பேசும் ஆர்வம் உடையவர்களே, அடியார்கள் என விரும்பப்படும் பெரியோர் ஆவர்.

மேல்

(33)
வண்டு வைகும் மணம் மல்கிய சோலை வளரும் வலிதாயத்து

அண்டவாணன் அடி உள்குதலால், அருள்மாலைத் தமிழ் ஆக,

கண்டல் வைகு கடல் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் பத்தும்

கொண்டு வைகி இசை பாட வல்லார் குளிர் வானத்து உயர் வாரே.

வலிதாய நாதன்மீது பாடிய இத்திருப்பதிகத்தை இசையோடு பாடுவார் குளிர் வானத்துயர்வார் என முடிபு காண்க. வண்டுகள் மொய்க்கும் மணம் நிறைந்த சோலைகள் வளரும் திருவலிதாயத்தில் விளங்கும் அனைத்துலக நாதனின் திருவடிகளைத் தியானிப்பதால், தாழைகள் வளரும் கடற்கரையை அடுத்துள்ள சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் தமிழ் மாலையாக அருளிச் செய்த,

இத்திருப்பதிகத்தைச் சிறந்த தோத்திரமாகக் கொண்டு அமர்ந்திருந்து இசையோடு பாடவல்லார், குளிர்ந்த வானுலக வாழ்க்கையினும் உயர்வு பெறுவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(4)
திருப்புகலியும், திருவீழிமிழலையும் (வினா உரை)

(34)
மைம் மரு பூங்குழல் கற்றை துற்ற, வாள்நுதல் மான்விழி மங்கையோடும்,

பொய்ம் மொழியா மறையோர்கள் ஏத்த, புகலி நிலாவிய புண்ணியனே!

எம் இறையே! இமையாத முக்கண் ஈச! என் நேச! இது என்கொல சொல்லாய்

மெய்ம்மொழி நால்மறையோர் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?.

கற்றையாகச் செறிந்து கருமை மருவி வளர்ந்த அழகிய கூந்தலையும், ஒளி சேர்ந்த நுதலையும், மான் விழி போன்ற விழியையும் உடைய உமையம்மையோடு, பொய் பேசாத அந்தணர்கள் ஏத்தப் புகலியில் விளங்கும் புண்ணியம் திரண்டனைய வடிவினனே, எம் தலைவனே! இமையாத முக்கண்களை உடைய எம் ஈசனே!, என்பால் அன்பு உடையவனே, வாய்மையே பேசும் நான்மறையை ஓதிய அந்தணர் வாழும் திருவீழிமிழலையில் திருமாலால் விண்ணிலிருந்து கொண்டுவந்து நிறுவப்பட்ட கோயிலில் விரும்பியுறைதற்குரிய காரணம் என்னையோ? சொல்வாயாக!

மேல்

(35)
கழல் மல்கு பந்தொடு அம்மானை முற்றில் கற்றவர், சிற்றிடைக் கன்னிமார்கள்,

பொழில் மல்கு கிள்ளையைச் சொல் பயிற்றும் புகலி நிலாவிய புண்ணியனே!

எழில் மலரோன் சிரம் ஏந்தி உண்டு ஓர் இன்பு உறு செல்வம் இது என் கொல் சொல்லாய்

மிழலையுள் வேதியர் ஏத்தி வாழ்த்த, விண் இழி கோயில் விரும்பியதே?.

மகளிர்க்குப் பொருந்திய கழங்கு, பந்து, அம்மானை, முற்றில் ஆகிய விளையாட்டுக்களைக் கற்ற சிற்றிடைக் கன்னிமார்கள், சோலைகளில் தங்கியுள்ள கிளிகட்குச் சொற்களைக் கற்றுக் கொடுத்துப் பேசச் செய்யும் திருப்புகலியில் விளங்கும் புண்ணியனே! அழகிய தாமரை மலரில் விளங்கும் பிரமனது தலையோட்டில் பலியேற்றுண்டு இன்புறும் செல்வனே! திருவீழிமிழலையில் வேதியர்கள் போற்றித் துதிக்க விண்ணிழி கோயிலை நீ விரும்பியதற்குக் காரணம் என்ன? சொல்வாயாக!

மேல்

(36)
கன்னியர் ஆடல் கலந்து, மிக்க கந்துக வாடை கலந்து, துங்கப்

பொன் இயல் மாடம் நெருங்கு செல்வப் புகலி நிலாவிய புண்ணியனே!

இன் இசை யாழ் மொழியாள் ஒருபாகத்து எம் இறையே! இது என் கொல் சொல்லாய்

மின் இயல் நுண் இடையார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?.

கன்னிப் பெண்கள் விளையாட்டை விரும்பிப் பந்தாடுதற்குரிய தெருக்களில் கூடியாட உயர்ந்த பொன்னிறமான அழகுடன் விளங்கும் மாடங்கள் நெருங்கும் செல்வப் புகலி நிலாவிய புண்ணியனே! யாழினது இனிய இசைபோலும் மொழி பேசும் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட எம் தலைவனே! மின்னல் போன்ற நுண்ணிய இடையினை உடைய அழகிய மகளிர் மருவும் திருவீழிமிழலையில் விண்ணிழி விமானத்தை நீ விரும்பியதற்குக் காரணம் என்னையோ? சொல்வாயாக!

மேல்

(37)
நாகபணம் திகழ் அல்குல் மல்கும் நன் நுதல் மான்விழி மங்கையோடும்

பூக வளம் பொழில் சூழ்ந்த அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே!

ஏக பெருந்தகை ஆய பெம்மான்! எம் இறையே! இது என்கொல் சொல்லாய்

மேகம் உரிஞ்சு எயில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?.

பாம்பின் படம் போன்று திகழும் அல்குலையும், அழகு மல்கும் நுதலையும், மான் விழி போன்ற விழியையும் உடைய பார்வதி அம்மையுடன் வளமான கமுகஞ்சோலைகள் சூழ்ந்து விளங்கும் அழகும் தண்மையும் உடைய சீகாழிப் பதியில் விளங்கும்புண்ணியனே! தன்னொப்பார் இன்றித் தானே முதலாய பெருமானே! எம் தலைவனே! மேகங்கள் தோயும் மதில்கள் சூழ்ந்த திருவீழிமிழலையில் விண்ணிழி விமானக் கோயிலை விரும்பியது ஏன்! சொல்வாயாக.

மேல்

(38)
சந்து அளறு ஏறு தடம் கொள் கொங்கைத் தையலொடும், தளராத வாய்மைப்

புந்தியின் நால் மறையோர்கள் ஏத்தும், புகலி நிலாவிய புண்ணியனே!

எம் தமை ஆள் உடை ஈச! எம்மான்! எம் இறையே! இது என்கொல் சொல்லாய்

வெந்த வெண் நீறு அணிவார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?.

சந்தனக் குழம்பு பூசிய பெரிதான தனங்களை உடைய உமையம்மையோடு, உண்மையில் தவறாத புத்தியினை உடைய நான்மறை அந்தணர்கள் போற்றும் புகலியில் விளங்கும் புண்ணியனே! எம்மை அநாதியாகவே ஆளாய்க் கொண்டுள்ள ஈசனே! எம் தலைவனே! எமக்குக் கடவுளே! வெந்த திருவெண்ணீற்றை அணிந்த அடியவர் வாழும் திருவீழிமிழலையுள் விண்ணிழி கோயிலை நீ விரும்புதற்குக் காரணம் என்னையோ? சொல்வாயாக!

மேல்

(39)
சங்கு, ஒலி இப்பி, சுறா, மகரம், தாங்கி நிரந்து, தரங்கம் மேல்மேல்

பொங்கு ஒலி நீர் சுமந்து ஓங்கு செம்மைப் புகலி நிலாவிய புண்ணியனே!

எங்கள் பிரான்! இமையோர்கள் பெம்மான்! எம் இறையே! இது என்கொல் சொல்லாய்

வெங்கதிர் தோய் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?.

ஒளி உடைய சங்கு, முத்துச் சிப்பிகள், சுறா, மகரம் ஆகிய மீன்கள், ஆகிய இவற்றைத் தாங்கி வரிசை வரிசையாய் வரும் கடல் அலைகளால் மேலும் மேலும் பொங்கும் ஒலியோடு கூடிய ஓதநீர் ஓங்கும் செம்மையான புகலியில் விளங்கும் புண்ணியனே! எங்கள் தலைவனே! இமையோர் பெருமானே! எம் கடவுளே! கதிரவன் தோயும் பொழில்களாற் சூழப்பெற்ற விண்ணிழி கோயிலை விரும்பியதற்குக் காரணம் என்னையோ! சொல்வாயாக!

மேல்

(40)
காமன் எரிப்பிழம்பு ஆக நோக்கி, காம்பு அன தோளியொடும் கலந்து,

பூ மரு நான்முகன் போல்வர் ஏத்த, புகலி நிலாவிய புண்ணியனே!

ஈமவனத்து எரி ஆட்டு உகந்த எம் பெருமான்! இது என்கொல் சொல்லாய்

வீ மரு தண் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?.

மன்மதன் தீப்பிழம்பாய் எரியுமாறுகண்ணால் நோக்கி, மூங்கில் போலும் தோளினையுடைய உமையம்மையோடும் கூடி, தாமரை மலரில் விளங்கும் நான்முகன் போல்வார் போற்றப் புகலியில் விளங்கும் புண்ணியனே! சுடுகாட்டில் எரியாடலை விரும்பும் எம்பெருமானே! மலர்கள் மருவிய குளிர்ந்த பொழில்களால் சூழப் பெற்ற திருவீழிமிழலையில் விண்ணிழி கோயிலை விரும்பியதற்குக் காரணம் என்னையோ! சொல்வாயாக!

மேல்

(41)
இலங்கையர் வேந்து எழில் வாய்த்த திண் தோள் இற்று அலற விரல் ஒற்றி, ஐந்து

புலம் களை கட்டவர் போற்ற, அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே!

இலங்கு எரி ஏந்தி நின்று எல்லி ஆடும் எம் இறையே! இது என்கொல் சொல்லாய்

விலங்கல் ஒண் மாளிகை சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?.

இலங்கையர் தலைவனாகிய இராவணன் அழகிய வலிய தோள்கள் ஒடிந்து, அலறுமாறு தன் கால் விரலால் சிறிது ஊன்றி, ஐம்புல இன்பங்களைக் கடந்தவர்களாகிய துறவியர் போற்ற, அழகிய தண்மையான புகலியில் விளங்கும் புண்ணியனே! விளங்கும் தீப்பிழம்பைக் கையில் ஏந்தி இரவில் இடுகாட்டில் ஆடும் எம் தலைவனே! மலை போன்ற ஒளி பொருந்திய மாளிகைகளால் சூழப் பெற்ற திருவீழிமிழலையில் விண்ணிழி கோயிலை விரும்பியதற்குக் காரணம் என்னையோ! சொல்வாயாக.

மேல்

(42)
செறி முளரித்தவிசு ஏறி ஆறும் செற்று அதில் வீற்றிருந் தானும், மற்றைப்

பொறி அரவத்து அணையானும், காணாப் புகலி நிலாவிய புண்ணியனே!

எறி மழுவோடு இளமான் கை இன்றி இருந்த பிரான்! இது என்கொல் சொல்லாய்

வெறி கமழ் பூம்பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?.

மணம் செறிந்த தாமரைத் தவிசில் அறுவகைக் குற்றங்களையும் விலக்கி ஏறி அதில் வீற்றிருக்கும் நான்முகனும், புள்ளிகளையுடைய பாம்பினைப் படுக்கையாகக் கொண்ட திருமாலும் காண இயலாதவனாய்ப் புகலியில் விளங்கும் புண்ணியனே! பகைவரைக் கொல்லும் மழுவாயுதத்தோடு இளமான் ஆகியன கையின்கண் இன்றி விளங்கும் பெருமானே! மணம் கமழும் அழகிய பொழில்களால் சூழப்பெற்ற திருவீழிமிழலையில் விண்ணிழி கோயிலை விரும்பியதற்குக் காரணம் என்னையோ! சொல்வாயாக.

மேல்

(43)
பத்தர் கணம் பணிந்து ஏத்த வாய்த்த பான்மை அது அன்றியும், பல் சமணும்

புத்தரும் நின்று அலர் தூற்ற, அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே!

எத்தவத் தோர்க்கும் இலக்கு ஆய் நின்ற எம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்

வித்தகர் வாழ் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?.

தன்னிடம் பத்திமையுடையோர் பணிந்து போற்றும் பான்மையோடுகூடச் சமணரும், புத்தரும் அலர் தூற்ற, அழகிய குளிர்ந்த புகலியின்கண் விளங்கும் புண்ணியனே! எவ்வகையான தவத்தை மேற்கொண்டோரும் அடைதற்குரிய இலக்காய் நின்ற எம்பெருமானே! சதுரப்பாடுடைய அறிஞர்கள் வாழும் பொழில்கள் சூழ்ந்த திருவீழிமிழலையில் விண்ணிழி கோயிலை விரும்பியதற்குக் காரணம் என்னையோ! சொல்வாயாக.

மேல்

(44)
"விண் இழி கோயில் விரும்பி மேவும் வித்தகம் என்கொல் இது!" என்று சொல்லி,

புண்ணியனை, புகலி நிலாவு பூங்கொடியோடு இருந்தானைப் போற்றி,

நண்ணிய கீர்த்தி நலம் கொள் கேள்வி நால்மறை ஞானசம்பந்தன் சொன்ன

பண் இயல் பாடல் வல்லார்கள் இந்தப் பாரொடு விண் பரிபாலகரே.

விண்ணிழி கோயில் விரும்பிய புண்ணியனைப் போற்றி ஞானசம்பந்தன் சொன்ன பாடல் வல்லார்கள் பாரொடு விண்ணகத்தையும் பரிபாலனம் புரிவர். புகலிப் பதியில் விளங்கும் புண்ணியனாய், அழகிய இளங்கொடி போன்ற உமையம்மையோடு விளங்குவானைத் துதித்துத் திருவீழிமிழலையில் விண்ணிழி கோயிலை விரும்பிய வித்தகம் என்னையோ சொல்லாய் என்று கேட்டுப் புகழால் மிக்கவனும் நலம்தரும் நூற்கேள்வி உடையவனும் நான்மறை வல்லவனும் ஆகிய ஞானசம்பந்தன் பாடிய ,

பண்ணிறைந்த இப்பதிகத் திருப்பாடல்களை ஓதுபவர் நிலவுலகத்தோடு விண்ணுலகத்தையும் ஆளும் சிறப்புடையவராவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(5)
கீழைத்திருக்காட்டுப்பள்ளி

(45)
செய் அருகே புனல் பாய, ஓங்கிச் செங்கயல் பாய, சில மலர்த்தேன்-

கை அருகே கனி வாழை ஈன்று கானல் எலாம் கமழ் காட்டுப்பள்ளி,

பை அருகே அழல் வாய ஐவாய்ப் பாம்பு அணையான் பணைத் தோளி பாகம்

மெய் அருகே உடையானை உள்கி, விண்டவர் ஏறுவர், மேல் உலகே.

வயலின்கண் நீர் பாய, அதனால் களித்த செங்கயல்மீன்கள் துள்ள, அதனால் சில மலர்களிலிருந்து தேன் சிந்துதலானும், கைக்கெட்டும் தூரத்தில் வாழை மரங்கள் கனிகளை ஈன்று முதிர்ந்ததனானும், காடெல்லாம் தேன் மணமும் வாழைப்பழ மணமும் கமழும் திருக்காட்டுப்பள்ளியுள், நச்சுப்பையினருகே அழலும் தன்மை உடைய ஐந்து வாயையும் கூரிய நச்சுப் பற்களையும் உடைய ஆதிசேடனை அணையாகக் கொண்ட திருமாலையும் உமையம்மையையும் தனது மெய்யின் இடப்பாகமாகக் கொண்டு (அரியர்த்தர், அர்த்தநாரீசுரர்) விளங்கும் இறைவன் மீது பற்றுக்கொண்டு ஏனைய பற்றுக்களை விட்டவர், வீட்டுலகை அடைவர்.

மேல்

(46)
திரைகள் எல்லா மலரும் சுமந்து, செழுமணி முத்தொடு பொன் வரன்றி,

கரைகள் எல்லாம் அணி சேர்ந்து உரிஞ்சி, காவிரி கால் பொரு காட்டுப் பள்ளி,

உரைகள் எல்லாம் உணர்வு எய்தி நல்ல உத்தமராய் உயர்ந்தார் உலகில்,

அரவம் எல்லாம் அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய, அல்லல் அறுக்கல் ஆமே.

காவிரியின் வாய்க்கால்கள் எல்லா மலர்களையும் சுமந்தும், செழுமையான மணிகள் முத்துக்கள் பொன் ஆகியவற்றை வாரிக் கொண்டும் வந்து இருகரைகளிலும் அழகு பொருந்த உராய்ந்து வளம் சேர்க்கும் திருக்காட்டுப்பள்ளியுள் பாம்புகளை இடையில் கட்டிய செல்வராய் எழுந்தருளியிருக்கும் சிவபிரானுக்கு, வேதம் முதலான மேம்பட்ட உரைகள் யாவற்றையும் உணர்ந்த நல்ல உத்தமராய்த் தொண்டு செய்யின் அல்லல் அறுக்கலாம்.

மேல்

(47)
தோல் உடையான்; வண்ணப் போர்வையினான்; சுண்ண வெண் நீறு துதைந்து, இலங்கு

நூல் உடையான்; இமையோர் பெருமான்; நுண் அறிவால் வழிபாடு செய்யும்

கால் உடையான்; கரிது ஆய கண்டன்; காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி

மேல் உடையான்; இமையாத முக்கண்; மின் இடையாளொடும் வேண்டினானே.

புலித்தோலை ஆடையாக உடுத்தவன். யானைத் தோலை அழகிய போர்வையாகப் போர்த்தவன். திருவெண்ணீறாகிய கண்ணத்தில் செறிந்து விளங்கும் பூணூலை மார்பகத்தே உடையவன். தேவர்கட்குத் தலைவன். பதிஞானத் தாலே அன்பர்கள் வழிபாடு செய்யும் திருவடிகளை உடையவன். கரிய கண்டத்தை உடையவன். பலராலும் விரும்பப் பெறும் திருக்காட்டுப்பள்ளியில் இமையாத மூன்றாவது கண்ணை நெற்றியில் உடைய அவ்விறைவன் மின்னல் போன்ற இடையினை உடைய உமையம்மையோடு விரும்பி எழுந்தருளியுள்ளான்.

மேல்

(48)
சலசல சந்து அகிலோடும் உந்தி, சந்தனமே கரை சார்த்தி, எங்கும்

பலபல வாய்த்தலை ஆர்த்து மண்டி, பாய்ந்து இழி காவிரிப்பாங்கரின்வாய்,

கலகல நின்று அதிரும் கழலான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி

சொல வல தொண்டர்கள் ஏத்த நின்ற சூலம் வல்லான் கழல் சொல்லுவோமே!.

சலசல என்னும் ஒலிக் குறிப்போடு சந்தனம் அகில் முதலியவற்றை அடித்துவந்து, சந்தனத்தைக் கரையில் சேர்த்துப் பற்பல வாய்க்கால்களின் தலைப்பில் ஆரவாரித்து ஓடிப் பாய்ந்து வயல்களில் இழிந்து வளம் சேர்க்கும் காவிரியின் தென்பாங்கரில் சலசல என்னும் ஓசையோடு அதிரும் கழல்களை அணிந்த இறைவனால் விரும்பப்படும் திருக்காட்டுப்பள்ளியை அடைந்து இறைவனது பொருள்சேர் புகழ் பேசும் தொண்டர்களால் துதிக்கப்படும் அச் சூல பாணியின் திருவடிப் பெருமையை நாமும் கூறித் தோத்திரிப்போம்.

மேல்

(49)
தளை அவிழ் தண் நிற நீலம், நெய்தல், தாமரை, செங்கழு நீரும், எல்லாம்

களை அவிழும் குழலார் கடிய, காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி,

துளை பயிலும் குழல், யாழ், முரல, துன்னிய இன் இசையால் துதைந்த

அளை பயில் பாம்பு அரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய, அல்லல் அறுக்கல் ஆமே.

கட்டவிழ்ந்த குளிர்ந்த நிறத்துடன்கூடிய நீலோற்பலம், நெய்தல், தாமரை, செங்கழுநீர் ஆகிய எல்லா மலர்களையும், அவிழ்ந்து, விழும் கூந்தலை உடைய உழத்தியர் களைகளாய்ப் பிடுங்கி எறியும் வளம் உடையதும், பலராலும் விரும்பப்படுவதும் ஆகிய திருக்காட்டுப்பள்ளியில் துளைகளால் ஓசை பயிலப் பெறும் புல்லாங்குழல் யாழ் ஆகியன இடைவிடாமல் ஒலிக்கும் இன்னிசை முழக்கோடு வளையினின்றும் பிரியாத பாம்புகளை இடையிற் கட்டி எழுந்தருளிய செல்வராகிய பெருமானுக்கு ஆளாய்த் தொண்டு. செய்யின் அல்லல் அறுக்கலாம்.

மேல்

(50)
முடி கையினால் தொடும் மோட்டு உழவர் முன்கைத் தருக்கைக் கரும்பு இன் கட்டிக்

கடிகையினால் எறி காட்டுப்பள்ளி காதலித்தான், கரிது ஆய கண்டன்,

பொடி அணி மேனியினானை உள்கி, போதொடு நீர் சுமந்து ஏத்தி, முன் நின்று,

அடி கையினால் தொழ வல்ல தொண்டர் அருவினையைத் துரந்து ஆட்செய்வாரே.

நாற்று முடியைக் கையால் பறிக்கும் வலிய உழவர்கள் தங்கள் முன்கைத் தினவை வெல்லக்கட்டியை உடைப்ப தால் போக்கிக் கொள்கின்ற திருக்காட்டுப்பள்ளியை விரும்பி உறை பவனும், கரிதான கண்டமுடையவனும், திருநீறணிந்த மேனியனும் ஆகிய பெருமானை நினைந்து அபிடேகநீர் மலர்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்று துதித்து முன்நின்று அவன் திருவடிகளைக் கையால் தொழ வல்ல தொண்டர்கள் நீக்குதற்கு அரிய வினைகளினின்றும் நீங்கி அவ்விறைவனுக்கு ஆட்செய்வர்.

மேல்

(51)
பிறை உடையான், பெரியோர்கள் பெம்மான், பெய் கழல் நாள்தொறும் பேணிஏத்த

மறை உடையான், மழுவாள் உடையான், வார்தரு மால் கடல் நஞ்சம் உண்ட

கறை உடையான், கனல் ஆடு கண்ணால் காமனைக் காய்ந்தவன், காட்டுப்பள்ளிக்

குறை உடையான், குறள் பூதச் செல்வன், குரை கழலே கைகள் கூப்பினோமே!.

தலையில் பிறையை அணிந்தவனும், பெரியோர்கள், தலைவனும், வேதங்களை அருளியவனும் மழுவாகிய வாளை உடையவனும், நீண்ட கரிய கடலிடையே தோன்றிய நஞ்சினை உண்ட கறைக் கண்டனும், கலை சேர்ந்த நுதல்விழியால் காமனைக் காய்ந்தவனும், அன்பர்களின் குறைகளைக் கேட்டறிபவனும், குறட்பூதச் செல்வனுமாகிய, திருக்காட்டுப் பள்ளியில் உள்ள இறைவன் திருவடிகளை நாள்தோறும் விரும்பி ஏத்தி அத்திரு வடிகளையே கை கூப்பினோம்.

மேல்

(52)
செற்றவர் தம் அரணம்(ம்) அவற்றைச் செவ் அழல் வாய் எரியூட்டி, நன்றும்

கற்றவர் தாம் தொழுது ஏத்த நின்றான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி

உற்றவர்தாம் உணர்வு எய்தி, நல்ல உம்பர் உள்ளார் தொழுது ஏத்த நின்ற

பெற்றமரும் பெருமானை அல்லால், பேசுவதும் மற்று ஓர் பேச்சு இலோமே!.

தேவர்க்குப் பகைவராய திரிபுரத்து அசுரர் தம் அரணங்களைச் செவ்வழலால் எரியூட்டி அழித்துப் பெருவீரத்தோடு கற்றவர்கள் தொழுதேத்த மேம்பட்டு, விளங்கும் இறைவனால் காதலிக்கப்படும் திருக்காட்டுப்பள்ளியை அடைந்து, மெய்யுணர்வு பெற்ற தேவர்கள் பலரும் தொழுது ஏத்தும், விடைமீது ஏறி அமரும் அப்பெருமான் புகழல்லால் மற்றோர் பேச்சைப் பேசுவதிலோம்.

மேல்

(53)
ஒண் துவர் ஆர் துகில் ஆடை மெய் போர்த்து, உச்சி கொளாமை உண்டே, உரைக்கும்

குண்டர்களோடு அரைக் கூறை இல்லார் கூறுவது ஆம்குணம் அல்லகண்டீர்;

அண்ட மறையவன் மாலும் காணா ஆதியினான், உறை காட்டுப்பள்ளி

வண்டு அமரும் மலர்க் கொன்றை மாலை வார் சடையான், கழல வாழ்த்துவோமே!.

நிறம் பொருந்திய காவியாடையை மேனியில் போர்த்து, உச்சிவேளையில் வயிறு கொள்ளாத அளவில் தின்று பொய் கூறும் உடல் பருத்த புத்தர், இடையில் உடையில்லாத திகம்பர சமணர் கூறுவன நற்பயனைத் தாராதன என்பதை அறிந்து கொள்ளுங்கள். உலகைப் படைத்த வேதாசாரியனான பிரமனும், மாலுங் காணாத முதல்வன் உறையும் திருக்காட்டுப்பள்ளிக்குச் சென்று வண்டு அமரும் மலர்க்கொன்றை புனைந்த வார் சடையோன் கழல்களை ஏத்தி வாழ்த்துவோம்.

மேல்

(54)
பொன் இயல் தாமரை, நீலம், நெய்தல், போதுகளால் பொலிவு எய்து பொய்கை,

கன்னியர் தாம் குடை காட்டுப்பள்ளிக் காதலனை, கடல் காழியர்கோன்-

துன்னிய இன் இசையால் துதைந்து சொல்லிய ஞானசம்பந்தன்-நல்ல

தன் இசையால் சொன்ன மாலைபத்தும் தாங்க வல்லார் புகழ் தாங்குவாரே.

திருமகள் வாழும் தாமரை, நீலம், நெய்தல் ஆகிய மலர்களால் பகலும் இரவும் பொலிவெய்தும் பொய்கைகளில் கன்னிப் பெண்கள் குடைந்தாடும் திருக்காட்டுப்பள்ளியை விரும்பும் இறைவனைக் கடல் சூழ்ந்த காழி மாநகர்த் தலைவனாகிய ஞானசம்பந்தன் பொருந்திய இன்னிசை கூட்டிச் சொன்னதும், தானே தன்னிச்சையால் பாடியவும் ஆகிய ,

இத் திருப்பதிகப் பாடல் மாலை பத்தையும் மனத்திடைத் தரிக்க வல்லவர் புகழ் எய்துவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(6)
திருமருகலும், திருச்செங்காட்டங்குடியும் (வினாஉரை)

(55)
அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடி பரவ,

மங்குல்மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்

செங்கயல் ஆர் புனல் செல்வம் மல்கு சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்

கங்குல் விளங்கு எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?.

நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓதும் நாவினராகிய அந்தணர்கள் நாள்தோறும் தன் திருவடிகளை வணங்க, வானமண்டலத்திலுள்ள சந்திரன் தவழ்ந்து செல்லுதற்கு இடமாய் உயர்ந்து விளங்கும் மாடவீதிகளை உடைய திருமருகலில் எழுந்தருளியுள்ள இறைவனே! செங்கயல்கள் நிறைந்த புனல் சூழ்ந்ததும், செல்வ வளம் நிறைந்ததுமான புகழார்ந்த திருச்செங்காட்டங்குடியில் எரியைக்கையில் ஏந்தி நள்ளிருளில் நட்டம் ஆடுதற்கு இடமாய்க் கணபதியீச்சரத்தைக் காமுறுதல் ஏன்? சொல்வாயாக.

மேல்

(56)
நெய் தவழ் மூ எரி காவல் ஓம்பும் நேர் புரிநூல் மறையாளர் ஏத்த,

மை தவழ் மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்

செய் தவ நால் மறையோர்கள் ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்

கை தவழ் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?.

அவியாக அளிக்கப் பெறும் நெய் தவழ்ந்து எரியும் முத்தீயைப் பாதுகாப்பாக ஓம்பி வரும் நேர்மையாளரும், முப்புரி நூல் அணிந்த வேத வித்துக்களும் ஆகிய அந்தணர் ஏத்த, கரிய மேகங்கள் தவழும் மாட வீடுகள் நிறைந்த வீதிகளை உடைய திருமருகலில் எழுந்தருளிய இறைவனே! தவங்கள் பலவும் செய்யும் நான்மறையோர் போற்றும் புகழ் பொருந்திய திருச்செங்காட்டங்குடியில், திருக்கரத்தில் மிக்க தீயை ஏந்தி ஆடுதற்கு இடமாய்க் கணபதி யீச்சரத்தைக் காமுறக் காரணம் என்ன? சொல்வாயாக.

மேல்

(57)
தோலொடு நூல் இழை சேர்ந்த மார்பர், தொகும் மறையோர்கள், வளர்த்த செந்தீ

மால்புகை போய் விம்மு மாட வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்

சேல் புல்கு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்

கால் புல்கு பைங் கழல் ஆர்க்க ஆடும் கணபதி யீச்சுரம் காமுறவே?.

மான் தோலோடு கூடிய முப்புரி நூல் அணிந்த மார்பினராய்த் திரளாய்நின்று வேதம் வல்ல அந்தணர்கள் வளர்த்த செந்தீயீலிருந்து எழுந்த கரிய புகை போய் மிகவும் மிகுதியாக வெளிப்படும் மாடங்களோடு கூடிய வீதிகளை உடைய திருமருகலில் விளங்கும் இறைவனே, சேல்கள் நிறைந்த குளிர்ந்த வயல்களை அடுத்த சோலைகளால் சூழப்பட்ட சிறப்புமிக்க திருச்செங்காட்டங் குடியில் காலில் கட்டிய கழல்கள் ஆர்க்க ஆடிக் கணபதியீச்சரத்தைக் காமுறுதற்குக் காரணம் என்ன? சொல்வாயாக.

மேல்

(58)
நா மரு கேள்வியர் வேள்வி ஓவா நால் மறையோர் வழிபாடு செய்ய,

மா மருவும் மணிக் கோயில் மேய மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்

தே மரு பூம் பொழில் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்

காமரு சீர் மகிழ்ந்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?.

நாவிற் பொருந்தியவாய்ப் பயிலப்பட்டுவரும் வேதங்களை ஓதி உணர்ந்தவர்களும், வேள்விகளை இடைவிடாமல்செய்து வருபவர்களுமாகிய நான்மறையாளர் வழிபடச் செல்வம் மருவிய மணிக்கோயிலை உடைய மருகலில் விளங்கும் மைந்தனே! தேன் நிறைந்த அழகிய பொழில்களால் சூழப்பெற்ற சிறப்புமிக்க செங்காட்டங்குடியில் விளங்குகின்ற அழகும் பெருமையும் மிக்க கணபதியீச்சரத்தைக் காமுற்று இராப்போதில் நடனம் ஆடுதற்குக் காரணம் யாது? சொல்வாயாக.

மேல்

(59)
பாடல் முழவும் விழவும் ஓவாப் பல் மறையோர் அவர்தாம் பரவ,

மாட நெடுங்கொடி விண் தடவு மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்

சேடகம் மா மலர்ச் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்

காடு அகமே இடம் ஆக ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?.

பாடலும் அதற்கிசைந்த முழவு ஒலியும், திருவிழாக்கள் ஒலியும், இடைவிடாமல் நிகழ்வதும் மாடவீடுகளில் கட்டிய கொடிகள் வானைத் தடவுவதும் ஆகிய சிறப்புக்களை உடைய திருமருகலில் வேதங்கள் பலவும் கற்ற அந்தணாளர் பரவ எழுந்தருளிய இறைவனே! உயரமான மணம் மிக்க மலர்ச் சோலைகளால் சூழப் பெற்ற சிறப்புமிக்க செங்காட்டங்குடியில், காட்டிடமே நாடக மாடுதற்கு இடமாக இருக்கவும், ஆடுதற்குரிய இடமாகக் கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் என்ன? சொல்வாயாக.

மேல்

(60)
புனை அழல் ஓம்பு கை அந்தணாளர் பொன் அடி நாள்தொறும் போற்றி இசைப்ப,

மனை கெழு மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்

சினை கெழு தண் வயல், சோலை, சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்

கனை வளர் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?.

கிரியைகள் பலவற்றாலும் அழகு செய்யப் பெற்ற முத்தீயை வளர்க்கும் கைகளை உடைய அந்தணர்கள், நாள்தோறும் தன் திருவடிகளைப் போற்ற, இல்லங்களும் விளங்கும் மாடங்களும் நிறைந்த வீதிகளை உடைய திருமருகலில் விளங்கும் இறைவனே! நெற்பயிர்கள் திளைத்து வளரும் தண் வயல்களையடுத்த சோலைகளால் சூழப்பெற்ற நீர் வளம் மிக்க செங்காட்டங்குடியில் எரியேந்திக் கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் என்ன? சொல்வாயாக.

மேல்

(61)
பூண் தங்கு மார்பின் இலங்கை வேந்தன் பொன் நெடுந்தோள் வரையால் அடர்த்து,

மாண் தங்கு நூல் மறையோர் பரவ, மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்

சேண் தங்கு மா மலர்ச் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்

காண் தங்கு தோள் பெயர்த்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?.

கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட அணிகலன்கள் பொருந்திய மார்பினை உடைய இலங்கை மன்னன் இராவணனின் அழகிய பெரிய தோள்களை அம்மலையாலேயே அடர்த்து, மாட்சிமை பொருந்திய நான்மறையோர் பரவத் திருமருகலில் எழுந்தருளி விளங்கும் இறைவனே! வானளாவிய மணமலர்ச் சோலைகளால் சூழப்பெற்ற சீர்மிக்க செங்காட்டங்குடியில் அழகிய உன் திருத்தோள்களை அசைத்து இரவில் நடமிடுதற்கு இடனாய்க் கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் யாதோ? சொல்வாயாக.

மேல்

(62)
அந்தமும் ஆதியும், நான்முகனும் அரவு அணையானும், அறிவு அரிய,

மந்திரவேதங்கள் ஓதும் நாவர் மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்

செந்தமிழோர்கள் பரவி ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்

கந்தம் அகில் புகையே கமழும் கணபதியீச்சுரம் காமுறவே?.

நான்முகனும் அரவணையானும் ஆதியாய முடியையும் அந்தமாகிய அடியையும் அறிதற்கு அரியவனாய், மந்திர வடிவான வேதங்களை ஓதும் நாவினரான அந்தணர் பரவி ஏத்தத் திருமருகலில் விளங்கும் இறைவனே! செந்தமிழ் வல்லோர் பரவித்துதிக்கும் சிறப்புமிக்க செங்காட்டங்குடியில் அகில் புகை மணமே கமழும் கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் யாதோ? சொல்வாயாக.

மேல்

(63)
இலை மருதே அழகு ஆக நாளும் இடு துவர்க்காயொடு சுக்குத் தின்னும்

நிலை அமண் தேரரை நீங்கி நின்று, நீதர் அல்லார் தொழும் மா மருகல்,

மலைமகள் தோள் புணர்வாய்! அருளாய் மாசு இல் செங்காட்டங்குடி அதனுள்

கலை மல்கு தோல் உடுத்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?.

மருத மரத்து இலையின் சாற்றினால் நிறமூட்டிய ஆடைகளை அணிந்த புத்தர், கடுக்காய், சுக்கு, இவற்றைத் தின்னும் சமணர் ஆகியோரை விடுத்து, சைவர்கள் தொழத் திருமருகலில் மலைமகளோடு உறையும் மைந்தனே! குற்றமற்ற செங்காட்டங்குடியில் மான் தோலை உடுத்தி நள்ளிருளில் ஆடுதற்கு இடனாய்க் கணபதியீச்சரத்தைக் காமுறுதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.

மேல்

(64)
நாலும் குலைக் கமுகு ஓங்கு காழி ஞானசம்பந்தன், நலம் திகழும்

மாலின் மதி தவழ் மாடம் ஓங்கு மருகலில் மற்று அதன்மேல் மொழிந்த,

சேலும் கயலும் திளைத்த கண்ணார் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்

சூலம் வல்லான் கழல் ஏத்து, பாடல் சொல்ல வல்லார் வினை இல்லை ஆமே.

தொங்குகின்ற குலைகளோடு பாக்கு மரங்கள் ஓங்கி வளரும் சீகாழிப் பதியினனாய ஞானசம்பந்தன், நலம் திகழ்வதும், மேகமும் பிறையும் தவழும் மாடங்கள் ஓங்கியதுமான திருமருகல் இறைவனையும், சேல் கயல் ஆகிய மீன் வகைகளை ஒத்த கண்களை உடைய மகளிர் வாழ்வதும் சிறப்பு மிக்கதும் ஆகிய செங்காட்டங் குடியில் முத்தலைச் சூலம் ஏந்தியவனாய் விளங்கும் பெருமானையும் புகழ்ந்து ஏத்திய,

பாடல்களைச் சொல்லித் துதிக்க வல்லார் வினைகள், இல்லையாகும்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(7)
திருநள்ளாறும், திருஆலவாயும் (வினாஉரை)

(65)
பாடக மெல் அடிப் பாவையோடும், படு பிணக்காடு இடம் பற்றி நின்று,

நாடகம் ஆடும், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்

சூடக முன்கை மடந்தைமார்கள் துணைவரொடும் தொழுது ஏத்தி வாழ்த்த,

ஆடகமாடம் நெருங்கு கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே?.

பாடகம் என்னும் அணிகலன் அணிந்த மென்மையான அடிகளை உடைய உமையம்மையோடு, பிணக்காடாகிய இடுகாட்டைப் பற்றி நின்று நாடகம் ஆடும் நள்ளாற்று நம் பெருமானே! நீகையில் வளையல் அணிந்த மகளிர் தம் துணைவர்களோடும் கூடி வந்து வழிபடுவதும், பொன் மாளிகைகள் நிறைந்ததுமான கூடல் ஆலவாயின்கண் விரும்பி உறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.

மேல்

(66)
திங்கள் அம்போதும் செழும்புனலும் செஞ்சடைமாட்டு அயல் வைத்து உகந்து,

நம் கண் மகிழும், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்

பொங்கு இளமென் முலையார்களோடும் புனமயில் ஆட, நிலா முளைக்கும்

அம் களகச் சுதை மாடக் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?.

பிறைமதி, அழகிய மலர்கள், வளமான கங்கை நதி ஆகியவற்றைத் தன் செஞ்சடையின் மேல் அருகருகே வைத்து மகிழ்ந்து நம் கண்கள் களிக்குமாறு நள்ளாற்றின்கண் எழுந்தருளிய நம் பெருமானே! நீ, பூரித்து எழும் மென்மையான இளைய தனங்களை உடைய மடந்தையரோடு கானகத்தில் வாழும் ஆண் மயில்கள் களித்தாட, பெருமை மிக்க தமிழ்ச் சங்கத்தினையும், நிலவொளி வெளிப்படுமாறு வெண்மையான சுண்ணாம்பினால் கட்டப்பட்ட மாடங்களையும் உடைய கூடல் ஆலவாயின்கண் விரும்பி உறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.

மேல்

(67)
தண் நறுமத்தமும் கூவிளமும் வெண் தலைமாலையும் தாங்கி, யார்க்கும்

நண்ணல் அரிய, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்

புண்ணியவாணரும் மா தவரும் புகுந்து உடன் ஏத்த, புனையிழையார்

அண்ணலின் பாடல் எடுக்கும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?.

குளிர்ந்த மணம் வீசும் ஊமத்தை மலர் வில்வம் ஆகியவற்றையும் வெண்மையான தலை மாலையையும் அணிந்து, திருவருள் இருந்தாலன்றி யாராலும் சென்று வழிபடற்கரிய நள்ளாற்றின்கண் எழுந்தருளிய நம் பெருமானே! நீ, புண்ணிய வாணரும் மாதவர்களும் வந்து ஏத்துவதும் அணிகலன்கள் புனைந்த மகளிர் இறைவனது புகழ் சேர்ந்த பாடல்களைப் பாடுவதுமான கூடல் ஆலவாயின்கண் விரும்பி உறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.

மேல்

(68)
பூவினில் வாசம், புனலில் பொற்பு, புது விரைச்சாந்தினில் நாற்றத்தோடு,

நாவினில் பாடல், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்

தேவர்கள், தானவர், சித்தர், விச்சாதரர், கணத்தோடும் சிறந்து பொங்கி,

ஆவினில் ஐந்து உகந்து ஆட்டும் கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே?.

பூக்களில் வாசனையாய், நீரில் தண்மையாய், புதிய சந்தனத்தில் மணமாய், நாவில் பாடலாய்க் கலந்து விளங்கும் நள்ளாற்று நம் பெருமானே! நீ, தேவர்களும், அசுரர்களும், சித்தர்களும், வித்யாதரர்களும் ஆகிய கூட்டத்தினரோடு சிறந்து விளங்குபவராய்ப் பசுவினிடம் தோன்றும் பஞ்சகவ்யங்களால் ஆட்டி வழிபடக் கூடல் ஆலவாயின்கண் விரும்பி உறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.

மேல்

(69)
செம்பொன் செய் மாலையும், வாசிகையும், திருந்து புகையும், அவியும், பாட்டும்,

நம்பும் பெருமை, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்

உம்பரும், நாகர் உலகம் தானும், ஒலி கடல் சூழ்ந்த உலகத்தோரும்,

அம்புதம் நால்களால் நீடும் கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே?.

செம்பொன்னால் செய்த மாலைகள், திருவாசி ஆகியவற்றுடன் மணப்புகை நிவேதனம் தோத்திரம் ஆகியவற்றை விரும்பி ஏற்கும் பெருமை உடைய, நள்ளாற்றில் விளங்கும் நம்பெருமானே! நீ, விண்ணவரும், நாகர் உலகத்தவரும், ஒலிக்கும் கடலால் சூழப்பட்ட மண்ணுலக மக்களும் ஏத்த, நான்கு மேகங்களால் சூழப்பட்ட கூடல் ஆலவாயின்கண் விரும்பி உறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.

மேல்

(70)
பாகமும் தேவியை வைத்துக்கொண்டு, பை விரி துத்திப் பரிய பேழ்வாய்

நாகமும் பூண்ட, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்

போகமும் நின்னை மனத்துவைத்துப் புண்ணியர் நண்ணும் புணர்வு பூண்ட

ஆகம் உடையவர் சேரும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?.

இடப்பாகமாக உமையம்மையை வைத்துக் கொண்டு, படமும் புள்ளிகளும் பெரிதாகப் பிளந்த வாயும் உடைய நாகத்தைப் பூண்டுள்ள நள்ளாறுடைய நம் பெருமானே! நீ, உன்னை மனத்தில் கொண்டு சிவபோகமும், புண்ணியர்களாம் அடியவர்கள் கூட்டுறவும் கொண்ட மேனியராகிய சான்றோர்கள் சேர்ந்துறையும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்து உறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.

மேல்

(71)
கோவண ஆடையும், நீற்றுப்பூச்சும், கொடுமழு ஏந்தலும், செஞ்சடையும்,

நாவணப் பாட்டும், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்

பூவண மேனி இளைய மாதர், பொன்னும் மணியும் கொழித்து எடுத்து,

ஆவண வீதியில் ஆடும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?.

வேதமாகிய கோவண ஆடையும் திருநீற்றுப் பூச்சும் கொடிய மழுவாயுதத்தை ஏந்தலும் சிவந்த சடையும் நாவில் பல்வேறு சந்தங்களில் பாடும் வேதப் பாட்டும் உடையவனாய் இலங்கும் நள்ளாற்றுள் எழுந்தருளிய நம் பெருமானே! நீ பூப்போலும்மெல்லிய மேனியை உடைய இளம் பெண்கள் பொன்மணி முதலியவற்றைக் கொழித்து எடுத்துக் கடைவீதியில் விளையாடும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்து விளங்கக் காரணம் யாதோ? சொல்வாயாக.

மேல்

(72)
இலங்கை இராவணன் வெற்பு எடுக்க, எழில் விரல் ஊன்றி, இசை விரும்பி,

நலம் கொளச் சேர்ந்த, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்

புலன்களைச் செற்று, பொறியை நீக்கி, புந்தியிலும் நினைச் சிந்தைசெய்யும்

அலங்கல் நல்லார்கள் அமரும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?.

இலங்கை மன்னன் இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தபோது, தனது அழகிய கால் விரலை ஊன்றி அடர்த்துப் பின் அவனது இசையை விரும்பிக்கேட்டு அவனுக்கு நன்மைகள் பலவும் பொருந்துமாறு உளங் கொண்ட நள்ளாறுடைய நம் பெருமானே! நீ, ஐம்புல இன்பங்களை வெறுத்து அவற்றைத் தரும் ஐம்பொறிகளை மடை மாற்றிப் புந்தியில் உன்னையே சிந்தனை செய்யும் தூய வாழ்க்கையையுடைய சிவஞானிகள் வாழும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்துறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.

மேல்

(73)
பணி உடை மாலும் மலரினோனும், பன்றியும் வென்றிப் பறவை ஆயும்,

நணுகல் அரிய, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்

மணி ஒலி சங்கு ஒலியோடு மற்றை மா முரசின் ஒலி என்றும் ஓவாது

அணி கிளர் வேந்தர் புகுதும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?.

பாம்பணையானாகிய திருமாலும் தாமரை மலரில் எழுந்தருளிய நான்முகனும் முறையே பன்றியாயும் பறவை இனங்களில் மேம்பட்ட அன்னமாயும், அடிமுடிகளை மாறித் தேடியும் நணுக முடியாத நள்ளாறுடைய நம் பெருமானே! நீ மணி ஒலியும், சங்கொலியும், சிறந்த முரசின் ஒலியும் என்றும் இடையறவின்றிக் கேட்கும் சிறப்பினதும் மேம்பட்ட வேந்தர்கள் புகுந்து வழிபடும் பெருமையதும் ஆகிய கூடல் ஆலவாயின்கண் எழுந்தருளி விளங்கக் காரணம் யாதோ? சொல்வாயாக.

மேல்

(74)
தடுக்கு உடைக் கையரும் சாக்கியரும், சாதியின் நீங்கிய அத் தவத்தர்

நடுக்கு உற நின்ற, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்

எடுக்கும் விழவும் நன்நாள் விழவும் இரும் பலி இன்பினோடு எத்திசையும்

அடுக்கும் பெருமை சேர் மாடக் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?.

ஓலைத் தடுக்கைக் கையில் ஏந்தித் திரியும் சமணர்களும் சாக்கியர்களும் மரபு நீங்கிய வீண் தவத்தராவர். அவர்கள் மெய்ந் நெறியாகிய சைவசமயத்தைக் கண்டு அச்சமயிகளின் வழிபடு கடவுளைக் கண்டு நடுக்கம் உறுமாறு திரு நள்ளாற்றுள் விளங்கும் நம் பெருமானே! நீ, நாள் விழாவும், சிறப்பு விழாவும் நன்கு நடைபெற, அவ்விழாவில் வழங்கும் பெருவிருந்தால் விளையும் மகிழ்வு எத்திசையும் பொருந்திப் பெருமை சேர்க்கும் மாடக் கூடல் ஆலவாயின் கண் மகிழ்ந்துறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.

மேல்

(75)
அன்பு உடையானை, அரனை, "கூடல் ஆலவாய் மேவியது என்கொல்?" என்று,

நன்பொனை, நாதனை, நள்ளாற்றானை, நயம் பெறப் போற்றி, நலம் குலாவும்

பொன் புடை சூழ்தரு மாடக் காழிப் பூசுரன்-ஞானசம்பந்தன்-சொன்ன

இன்பு உடைப் பாடல்கள்பத்தும் வல்லார், இமையவர் ஏத்த இருப்பர் தாமே.

எல்லா உயிர்களிடத்தும் அன்புடையவனாம், அரனைக் கூடல் ஆலவாயில் மேவியதற்குக் காரணம் யாதெனக் கேட்டுத் தூய பொன் போன்றவனாகவும், தலைவனாகவும் விளங்கும் திருநள்ளாற்று இறைவனை நயமாகப் போற்றி, நலம் பயக்கும் செம்பொன் நிறைந்த மாட வீடுகளால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் தோன்றிய பூசுரனாகிய ஞானசம்பந்தன் பாடிய ,

இனிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர், இமையவர் ஏத்தத் தேவருலகில் விளங்குவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(8)
திருஆவூர்ப் பசுபதீச்சுரம்

(76)
"புண்ணியர், பூதியர், பூத நாதர், புடைபடுவார் தம் மனத்தார், திங்கள்

கண்ணியர்!" என்று என்று காதலாளர் கைதொழுது ஏத்த, இருந்த ஊர் ஆம்

விண் உயர் மாளிகை மாட வீதி விரை கமழ் சோலை சுலாவி, எங்கும்

பண் இயல் பாடல் அறாத ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!.

அன்புடை அடியவர் புண்ணியம் திரண்டனைய வடிவினர் எனவும், நிறைந்த செல்வம் உடையவர் எனவும், பூதகணங்களின் தலைவர் எனவும், அருகில் வந்து பரவுவாரின் மனத்தார் எனவும், பிறைமதிக் கண்ணியர் எனவும் கைதொழுது போற்றச் சிவபிரான் எழுந்தருளிய ஊர் ஆகிய வானளாவ உயர்ந்த மாட மாளிகைகளோடு கூடியதும், மணம் கமழும் சோலைகளால் சூழப்பெற்றதும், எங்கும் பண்ணியலோடு கூடிய பாடல்கள் இடைவிடாது கேட்கப்படுவதும் ஆகிய ஆவூர்ப்பசுபதியீச்சரத்தை, நாவே தொழுது பாடுவாயாக.

மேல்

(77)
"முத்தியர், மூப்பு இலர், ஆப்பின் உள்ளார், முக்கணர், தக்கன் தன் வேள்வி சாடும்

அத்தியர்" என்று என்று அடியர் ஏத்தும் ஐயன் அணங்கொடு இருந்த ஊர் ஆம்

தொத்து இயலும் பொழில் பாடு வண்டு துதைந்து எங்கும் மதுப் பாய, கோயில்

பத்திமைப் பாடல் அறாத ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!.

அடியவர்கள், முத்திச் செல்வத்தை உடையவர் என்றும், மூப்புஇலர் என்றும், மாட்டுத் தறியில் விளங்குபவர் என்றும், முக்கண்ணர் என்றும், தம்மை இகழ்ந்து செய்த தக்கனின் வேள்வியை அழித்தவர் என்றும், போற்றித் துதிக்கும் தலைவராகிய சிவபிரான் உமையம்மையாரோடு எழுந்தருளிய ஊராகிய பொழில்களில் கொத்தாக மலர்ந்த பூக்களில் வண்டுகள் தோய்தலால் எங்கும் தூயதேன்துளிகள் பாய்வதும், கோயிலில் பத்தி பூண்ட அடியவர் பாடும் பாடல் இடைவிடாது கேட்பதுமாகிய ஆவூர்ப்பசுபதியீச்சரத்தை நாவே அதனைத் தொழுது பாடுவாயாக.

மேல்

(78)
பொங்கி வரும் புனல் சென்னி வைத்தார், போம் வழி வந்து இழிவு ஏற்றம் ஆனார்,

இங்கு உயர் ஞானத்தர், வானோர் ஏத்தும் இறையவர், என்றும் இருந்த ஊர் ஆம்

தெங்கு உயர் சோலை, சேர் ஆலை, சாலி திளைக்கும் விளை வயல், சேரும் பொய்கைப்

பங்கய மங்கை விரும்பும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!.

சினந்து வந்த கங்கையைத் தம் திருமுடியில் வைத்தவரும், பிறவி போதற்குரிய பிறப்பான மனிதப் பிறவி எடுத்து இழிவடைதற்கும் ஏற்றம் பெறுதற்கும் உரிய மக்களும் அவருள் இப்பிறப்பில் உயர்தற்குரிய சிவஞானத்தைப் பெற்றோரும் வானவரும் துதிக்கச் சிவபிரான் எழுந்தருளிய ஊர், உயரமாக, வளர்ந்த தென்னஞ் சோலைகளும், கரும்பாலைகளும், செந்நெற்பயிர்களும் திளைத்து விளைவுதரும் வயல்களை உடையதும், பொய்கைகள் சூழ்ந்ததும், திருமகள் விரும்புவதுமாகிய வளம்சான்ற ஆவூர்ப்பசுபதீயீச்சரமாகும். நாவே அதனைப் பாடுவாயாக.

மேல்

(79)
தேவி ஒருகூறினர், ஏறு அது ஏறும் செல்வினர், நல்குரவு என்னை நீக்கும்

ஆவியர், அந்தணர், அல்லல் தீர்க்கும் அப்பனார், அங்கே அமர்ந்த ஊராம்

பூ இயலும் பொழில் வாசம் வீச, புரிகுழலார் சுவடு ஒற்றி, முற்றப்

பா இயல் பாடல் அறாத ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!.

உமாதேவியை ஒரு பாதியாக உடையவர், இடபவாகனத்தில் ஏறி வருபவர். வறுமை புகுதாது என்னைக் காப்பவர். எனக்கு உயிர் போன்றவர். கருணையர், என்துயர் போக்குதலால் எனக்குத் தந்தையாக விளங்குபவர். அவர் எழுந்தருளிய ஊர், பூக்கள் நிறைந்த பொழில்களின் வாசனை வீசுவதும் சுருண்ட கூந்தலை உடைய மகளிர் காலாலே தாளமிட்டு ஆடித் தேர்ந்த இசையோடு பாடும் பாடல்கள் இடைவிடாது கேட்கப்படுவதுமான ஆவூர்ப்பசுபதி யீச்சரத்தை நாவே அதனைப் பாடுவாயாக.

மேல்

(80)
இந்து அணையும் சடையார், விடையார், இப் பிறப்பு என்னை அறுக்க வல்லார்,

வந்து அணைந்து இன் இசை பாடுவார் பால் மன்னினர், மன்னி இருந்த ஊர் ஆம்

கொந்து அணையும் குழலார் விழவில் கூட்டம் இடை இடை சேரும் வீதி,

பந்து அணையும் விரலார்தம் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!.

திங்கள் தங்கும் சடையினரும், விடையை ஊர்தியாக உடையவரும், என்னைப் பற்றிய இப்பிறவியின் வினையை நீக்கி முத்தியளிக்க வல்லவரும், தம்மை வந்தடைந்து இன்னிசையால் பாடி வழிபடுவாரிடம் மன்னியிருப்பவரும் ஆகிய சிவபிரான், நிலைபெற்று விளங்கும் ஊர், பூங்கொத்தணிந்த கூந்தலை உடைய மங்கல மகளிர் வாழ்வதும், திருவிழாக்களில் மக்கள் கூட்டம் இடையிடையே சேரும் அகன்ற வீதிகளை உடையதும், பந்தாடும் கைவிரல்களினராகிய இளம்பெண்கள் நிறைந்ததுமாகிய ஆவூர்ப்பசுபதியீச்சரத்தை நாவே அதனைப் பாடுவாயாக.

மேல்

(81)
குற்றம் அறுத்தார், குணத்தின் உள்ளார், கும்பிடுவார் தமக்கு அன்பு செய்வார்,

ஒற்றை விடையினர், நெற்றிக்கண்ணார், உறை பதி ஆகும் செறிகொள் மாடம்

சுற்றிய வாசலில் மாதர் விழாச் சொல் கவி பாட, நிதானம் நல்க,

பற்றிய கையினர், வாழும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!.

அடியவர் செய்யும் குற்றங்களை நீக்கியவரும், நற்குணங்களை உடையோரிடம் வாழ்பவரும், தம்மைக் கும்பிடுவார்க்கு அன்பு செய்பவரும், ஓர் எருதைத் தமக்கு ஊர்தியாகக் கொண்டவரும், பிறர்க்கில்லாத நெற்றிக் கண்ணை உடையவரும் ஆகிய சிவபிரான் உறையும் பதி, செறிந்த மாட வீடுகளைச் சார்ந்துள்ள வாசலில் விழாக் காலங்களில் பெண்கள் புகழ்ந்து கவி பாடக் கேட்டு அவ்வீடுகளில் வாழும் செல்வர்கள் பொற்காசுகள் வழங்க, அதனைப் பற்றிய கையினராய் மகளிர் மகிழ்ந்துறையும் ஆவூர்ப்பசுபதியீச்சரமாகும். நாவே அதனைத் தொழுது பாடுக.

மேல்

(82)
நீறு உடையார், நெடுமால் வணங்கும் நிமிர் சடையார், நினைவார் தம் உள்ளம்

கூறு உடையார், உடை கோவணத்தார், குவலயம் ஏத்த இருந்த ஊர் ஆம்

தாறு உடை வாழையில் கூழை மந்தி தகு கனி உண்டு மிண்டிட்டு, இனத்தைப்

பாறிடப் பாய்ந்து பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!.

திருவெண்ணீற்றை அணிந்தவரும், திருமாலால் வணங்கப் பெறுபவரும், நிமிர்த்துக் கட்டிய சடைமுடியுடையவரும், தம்மை நினைவார் உள்ளத்தில் குடி கொண்டிருப்பவரும், கோவண ஆடை தரித்தவரும் ஆகிய சிவபிரான், மண்ணுலக மக்கள் தம்மைப் புகழ்ந்து போற்ற எழுந்தருளிய ஊர், குள்ளமான மந்தி பழுத்துள்ள வாழைத் தாற்றில் உண்ணத் தகுதியான பழங்களை வயிறார உண்டு, எஞ்சியுள்ள பழங்களை உண்ணவரும் குரங்குகளை அஞ்சுமாறு பாய்ந்து விரட்டும் தோட்டங்களை உடைய ஆவூர்ப் பசுபதியீச்சரமாகும். நாவே அதனைப் பாடுவாயாக.

மேல்

(83)
வெண் தலை மாலை விரவிப் பூண்ட மெய் உடையார், விறல் ஆர் அரக்கன்

வண்டு அமர் முடி செற்று உகந்த மைந்தர், இடம் வளம் ஓங்கி, எங்கும்

கண்டவர், சிந்தைக் கருத்தின் மிக்கார், "கதி அருள்!" என்று கை ஆரக் கூப்பி,

பண்டு அலர் கொண்டு பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!.

வெண்மையான தலைகளை மாலையாகக் கோத்துப் பிற மாலைகளுடன் அணிந்துள்ள திருமேனியை உடையவரும், வண்டுகள் மொய்க்கும் மலர்களைச் சூடிய வலிய இராவணனின் முடியை நெரித்து மகிழ்ந்த வலியரும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள இடம், எங்கும் வளம் ஓங்கியதும், தரிசித்தவர்கள் சித்தத்தால் உயர்ந்தவர்களாய்த் தமக்குக் கதியருள் என்று கைகளைக் கூப்பிப் பழமைதொட்டுச் சிவபெருமானுக்கு உரியனவாகிய மலர்களைச் சாத்தி வழிபடும் இயல்பினதும் ஆகிய ஆவூர்ப்பசுபதியீச்சரமாகும். நாவே அதனைப் பாடுவாயாக.

மேல்

(84)
மாலும் அயனும் வணங்கி நேட, மற்று அவருக்கு எரி ஆகி நீண்ட,

சீலம் அறிவு அரிது ஆகி நின்ற, செம்மையினார் அவர் சேரும் ஊர் ஆம்

கோல விழாவின் அரங்கு அது ஏறி, கொடி இடை மாதர்கள் மைந்தரோடும்,

பால் எனவே மொழிந்து ஏத்தும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!.

திருமாலும் பிரமனும் வணங்கித் தேட, அவர்கட்குச் சோதிப் பிழம்பாய்நீண்டு தோன்றிய, அறிதற்கு அரியராய் விளங்கும் செம்மையராகிய சிவபிரான் எழுந்தருளிய ஊர், அழகிய விழாக் காலங்களில் கொடியிடைப் பெண்கள் அரங்கின்கண் ஏறி ஆடவர்களோடு கூடிப் பால்போன்று இனிக்கும் மொழிகளால் இறைவனை ஏத்தும் ஆவூர்ப் பசுபதியீச்சரமாகும். நாவே அதனைப் பாடுவாயாக.

மேல்

(85)
பின்னிய தாழ்சடையார், பிதற்றும் பேதையர் ஆம் சமண் சாக்கியர்கள்

தன் இயலும் உரை கொள்ளகில்லாச் சைவர், இடம் தளவு ஏறு சோலைத்

துன்னிய மாதரும் மைந்தர் தாமும் சுனை இடை மூழ்கி, தொடர்ந்த சிந்தைப்

பன்னிய பாடல் பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!.

பின்னித் தொங்கவிடப்பட்ட சடையை உடையவராய், அறிவின்மையோடு சமணர்கள் சாக்கியர்கள் ஆகியோர் தங்களைப் பற்றியும் தாங்கள் சார்ந்த மதங்களின் சிறப்புக்களைப் பற்றியும் கூற, அவற்றை ஏலாதவராய் விளங்கும் சைவன் விரும்பி உறையும் இடம், முல்லைக் கொடி படர்ந்த சோலைகளில் மாதரும் மைந்தரும் நெருங்கிச் சுனையில் மூழ்கிச் சிவபிரானை மனம் ஒன்றிப்பாடும் ஆவூர்ப் பசுபதியீச்சரமாகும். நாவே அதனைப் பாடுவாயாக.

மேல்

(86)
எண் திசையாரும் வணங்கி ஏத்தும் எம்பெருமானை, எழில் கொள் ஆவூர்ப்

பண்டு உரியார் சிலர் தொண்டர் போற்றும் பசுபதியீச்சுரத்து ஆதிதன்மேல்,

கண்டல்கள் மிண்டிய கானல் காழிக் கவுணியன்- ஞானசம்பந்தன்-சொன்ன

கொண்டு, இனிதா இசை பாடி ஆடிக் கூடுமவர் உடையார்கள், வானே.

எட்டுத் திசையில் உள்ளவர்களும் வணங்கிப் போற்றும் எம் தலைவரும், அழகிய ஆவூரில் பழ அடியார்களால்போற்றப் பெறுபவரும் ஆகிய பசுபதியீச்சரத்து இறைவர்மேல் தாழை மரங்கள் நிறைந்த கடற்கரைச் சோலைகளால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் கவுணியர் குடியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய,

பாடல்களை இசையோடு பாடி ஆடி வணங்குபவர்கள், வானகத்தைத் தமது உடைமையாகப் பெறுவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(9)
திருவேணுபுரம்

(87)
வண்டு ஆர் குழல் அரிவையொடு பிரியா வகை பாகம்

பெண்தான் மிக ஆனான், பிறைச் சென்னிப் பெருமான், ஊர்

தண் தாமரை மலராள் உறை தவள நெடுமாடம்

விண் தாங்குவ போலும் மிகு வேணுபுரம் அதுவே.

வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய பெண்ணாகிய உமையம்மை, தன்னிற் பிரியாதிருக்கத் தன் திருமேனியில் இடப்பாகத்தை அளித்து, அப்பாகம் முழுதும் பெண் வடிவானவனும், பிறையணிந்த திருமுடியை உடையவனும் ஆகிய பெருமானது ஊர், தாமரை மலரில் விளங்கும் திருமகள் வாழும் வெண்மையான

மேல்

(88)
படைப்பு, நிலை, இறுதி, பயன், பருமையொடு, நேர்மை,

கிடைப் பல்கணம் உடையான், கிறி தப்படையான், ஊர்

புடைப் பாளையின் கமுகினொடு புன்னை மலர் நாற்றம்

விடைத்தே வரு தென்றல் மிகு வேணுபுரம் அதுவே.

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் புரிவோனும், அவற்றின் முடிந்த பயனாய வீட்டின்ப வடிவாய் விளங்குவோனும், பருமை நுண்மை இவற்றிற்கோர் எல்லையாக இருப்பவனும், வேதங்களை ஓதும் கணங்களை உடையோனும், வஞ்சகமான பூதப்படைகளை உடையவனும் ஆகிய சிவபிரானது ஊர், பக்கங்களில் வெடித்து மலர்ந்திருக்கும் கமுகம் பாளையின் மணத்தோடு புன்னை மலர்களின் மணத்தைத் தாங்கி மெல்லெனப் பெருமிதத்தோடு வரும் தென்றல் காற்று மிகுந்து வீசும் வேணுபுரம் ஆகும்.

மேல்

(89)
கடம் தாங்கிய கரியை அவள் வெருவ உரி போர்த்து,

படம் தாங்கிய அரவக்குழைப் பரமேட்டிதன் பழ ஊர்

நடம் தாங்கிய நடையார், நல பவளத்துவர் வாய், மேல்

விடம் தாங்கிய கண்ணார், பயில் வேணுபுரம் அதுவே.

தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய மதநீர் ஒழுகும் யானையை அம்முனிவர்கள் வெருவுமாறு உரித்துப் போர்த்தவரும், படத்தோடு கூடிய பாம்பைக் குழையாக அணிந்தவரும் ஆகிய சிவபிரானது பழமையான ஊர், நடனத்துக்குரிய சதிகளோடு கூடிய நடையையும், அழகிய பவளம் போன்ற சிவந்த வாயினையும் மேலான விடத்தன்மையோடு கூடிய கண்களையும் உடைய அழகிய மகளிர் பலர் வாழும் வேணுபுரம் ஆகும்.

மேல்

(90)
தக்கன்தன சிரம் ஒன்றினை அரிவித்து, அவன் தனக்கு

மிக்க வரம் அருள் செய்த எம் விண்ணோர் பெருமான் ஊர்

பக்கம் பலமயில் ஆடிட, மேகம் முழவு அதிர,

மிக்க மது வண்டு ஆர் பொழில் வேணு புரம் அதுவே.

தக்கனது தலையை வீரபத்திரக் கடவுளைக் கொண்டு அரியச் செய்து, பிழையை உணர்ந்து அவன் வேண்டியபோது அவனுக்கு மிகுதியான வரங்கள் பலவற்றை அளித்தருளிய வானோர் தலைவனாகிய சிவபெருமானது ஊர், மேகங்கள் முழவாக ஒலிக்க, நாற்புறமும் மயில்கள் ஆடுவதும், மிகுதியான தேனை வண்டுகள் அருந்தும் வளமுடையதுமான பொழில்கள் சூழ்ந்த வேணுபுரமாகும்.

மேல்

(91)
நானாவித உருவான், நமை ஆள்வான், நணுகாதார்

வான் ஆர் திரி புரம் மூன்று எரியுண்ணச் சிலை தொட்டான்,

தேர் ஆர்ந்து எழு கதலிக்கனி உண்பான் திகழ் மந்தி

மேல் நோக்கி நின்று இரங்கும் பொழில் வேணுபுரம் அதுவே.

அன்போடு வழிபடும் நாம் எவ்வுருவில் நினைக்கின்றோமோ அவ்வுருவில்தோன்றி நம்மை ஆட்கொள்பவனும், தன்னை நணுகாதவராகிய அசுரர்களின் வானில் திரிந்த மூன்றுபுரங்கள் வெந்தழியுமாறு வில்லை வளைத்துக் கணை தொடுத்து எரியூட்டியவனும் ஆகிய சிவபிரானது ஊர், மரங்களில் அமர்ந்த மந்திகள் தேனின் சுவை பொருந்தியனவாய்ப் பழுத்துத் தோன்றிய வாழைப் பழங்களைக் கண்டு அவற்றை உண்ணுதற் பொருட்டு மேல் நோக்கியவாறே தாம் ஏறிப்பறிக்க இயலாத தம் நிலைக்கு வருந்தும் பொழில்கள் சூழ்ந்த வேணுபுரம் ஆகும். "வாழை மரத்தில் குரங்கு ஏறாதன்றோ".

மேல்

(92)
விண்ணோர்களும் மண்ணோர்களும் வெருவி மிக அஞ்ச,

கண் ஆர் சலம் மூடிக் கடல் ஓங்க, உயர்ந்தான் ஊர்

தண் ஆர் நறுங்கமலம் மலர் சாய, இள வாளை

விண் ஆர் குதிகொள்ளும் வியன் வேணுபுரம் அதுவே.

மண்ணுலக மக்களும் விண்ணகத்தேவரும் கண்டு நடுங்கி மிகவும் அஞ்சுமாறு நிலமெல்லாம் நிறைந்த நீர் மூடிக் கடல் ஊழி வெள்ளமாய் ஓங்க, அவ்வெள்ளத்திலும் அழியாது உயர்ந்து தோணியாய்த் தோன்றுமாறு செய்த சிவபிரானது ஊர், தண்ணிய மணம் கமழும் தாமரை மலர்கள் சாயுமாறு இளவாளை மீன்கள் வானிடை எழுந்து குதிக்கும் நீர்வளம் சான்ற பெரிய வேணுபுரம் ஆகும்.

மேல்

(93)
மலையான் மகள் அஞ்ச, வரை எடுத்த வலி அரக்கன்

தலை தோள் அவை நெரியச் சரண் உகிர் வைத்தவன் தன் ஊர்

கலை ஆறொடு சுருதித் தொகை கற்றோர் மிகு கூட்டம்

விலை ஆயின சொல்-தேர்தரு வேணுபுரம் அதுவே.

மலையரையன் மகளாகிய பார்வதி தேவி அஞ்சுமாறு கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த வலிமை சான்ற இராவணனின் தலைகள் தோள்கள் ஆகியவை நெரியுமாறு கால்விரலை ஊன்றிய சிவபிரானது ஊர், ஆறு அங்கங்களோடு வேதங்களின் தொகுதியைக் கற்றுணர்ந்தோர் தம்முள் கூடும் கூட்டத்தில் விலை மதிப்புடைய சொற்களைத் தேர்ந்து பேசும் கல்வி நலம் சான்றவர் வாழும் வேணுபுரம் ஆகும்.

மேல்

(94)
வயம் உண்ட அமாலும் அடி காணாது அலமாக்கும்,

பயன் ஆகிய பிரமன் படுதலை ஏந்திய பரன் ஊர்

கயம் மேவிய சங்கம் தரு கழி விட்டு, உயர் செந்நெல்

வியல் மேவி, வந்து உறங்கும் பொழில் வேணுபுரம் அதுவே.

உலகை உண்ட திருமாலும் தன் அடிகளைக் காணாது அலமருமாறு செய்தவனும், மக்கள் அடையத்தக்க பயன்களில் ஒன்றான பிரமலோகத்தை உடைய பிரமனது கிள்ளப்பட்ட தலையோட்டினை ஏந்தியவனுமாகிய சிவபிரானது ஊர்; ஆழ்ந்த நீர் நிலைகளில் வாழும் சங்குகள், கடல் தரும் உப்பங்கழியை விடுத்துச் செந்நெல் விளைந்த அகன்ற வயலில் வந்து உறங்கும் வேணுபுரமாகும்.

மேல்

(95)
மாசு ஏறிய உடலார் அமண்குழுக்களொடு தேரர்,

தேசு ஏறிய பாதம் வணங்காமைத் தெரியான் ஊர்

தூசு ஏறிய அல்குல் துடி இடையார், துணைமுலையார்,

வீசு ஏறிய புருவத்தவர், வேணுபுரம் அதுவே.

அழுக்கேறிய உடலினை உடையவர்களாகிய சமணர் கூட்டத்தினரோடு, புத்த மதத்தினராகிய தேரர்களும் ஒளி பொருந்திய திருவடிகளை வணங்காமையால் அவர்களால் அறியப் பெறாத சிவபிரானது ஊர்; அழகிய ஆடை தோயும் அல்குலையும், உடுக்கை போன்ற இடையையும், பருத்த தனங்களையும், ஆடவர் மேல் தம் குறிப்பு உணர்த்தி நெரியும் புருவங்களையும் உடைய அழகிய மகளிர் வாழும் வேணுபுரம் ஆகும்.

மேல்

(96)
வேதத்து ஒலியானும் மிகு வேணுபுரம் தன்னைப்

பாதத்தினில் மனம் வைத்து எழு பந்தன்தன பாடல்,

ஏதத்தினை இல்லா இவை பத்தும், இசை வல்லார்

கேதத்தினை இல்லார், சிவகெதியைப் பெறுவாரே.

ஞானசம்பந்தரின் ஏதம் இல்லாத இப்பத்துப் பாடல்களையும் இசையோடு பாடுவார் சிவகதி பெறுவார் என வினை முடிபு கொள்க. மங்கல ஒலிகள் பலவற்றோடு வேத ஒலியாலும் மிக்குத் தோன்றும் வேணுபுரத்துப் பெருமானின் பாதங்களை மனத்துட் கொண்டு பாடப்பெற்ற ,

ஞானசம்பந்தரின் துன்பந்தரல் இல்லாத இப்பதிகப் பாடல்களை இசையோடு பாடவல்லவர் துயர் நீங்குவர்; முடிவில் சிவகதியைப் பெறுவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(10)
திருஅண்ணாமலை

(97)
உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன்,

பெண் ஆகிய பெருமான், மலை திரு மா மணி திகழ,

மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலை முழவு அதிரும்

அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வணம் அறுமே.

உண்ணாமுலை என்னும் திருப்பெயருடைய உமையம்மையாரோடு உடனாக எழுந்தருளியவரும், தம் இடப்பாகம் முழுவதும் பெண்ணாகியவருமாகிய சிவபிரானது மலை, அடித்து வரும் அழகிய மணிகள் சுடர்விட மண்ணை நோக்கி வருவனவாகிய அருவிகள் பொருள் புரியாத மழலை ஒலியோடு கூடிய முழவு போல ஒலிக்கும் திருவண்ணாமலை யாகும். அதனைத் தொழுவார் வினைகள் தவறாது கெடும்.

மேல்

(98)
தேமாங்கனி கடுவன் கொள விடு கொம்பொடு தீண்டி,

தூ மா மழை துறுகல் மிசை சிறு நுண் துளி சிதற,

ஆமாம் பிணை அணையும் பொழில் அண்ணாமலை அண்ணல்

பூ மாங் கழல் புனை சேவடி நினைவார் வினை இலரே.

கிளைகளை வளைத்து இனிய மாங்கனிகளை உண்ட ஆண் குரங்குகள் விடுத்த அக்கொம்புகள் வேகமாகத் தீண்டப்படுதலால் தூய மழை மேகங்கள் மலைப் பாறைகளில் சிறிய நுண்ணியவான மழைத்துளிகளைச் சிதறுவதால் காட்டுப்பசுக்கள் மழை எனக் கருதி மரநிழலை அடையும் பொழில்களை உடைய அண்ணாமலை இறைவனின், அழகிய மலர் போன்றனவும் வீரக்கழல் அணிந்தனவுமான சிவந்த திருவடிகளை நினைவார் வினை இலராவர்.

மேல்

(99)
பீலிமயில் பெடையோடு உறை பொழில் சூழ் கழை முத்தம்

சூலி மணி தரைமேல் நிறை சொரியும் விரி சாரல்,

ஆலி மழை தவழும் பொழில் அண்ணாமலை அண்ணல்

காலன் வலி தொலை சேவடி தொழுவாரன புகழே.

தோகைகளோடு கூடிய ஆண்மயில்கள் பெண் மயில்களோடு உறையும் பொழில் சூழ்ந்ததும், மூங்கில்கள் சூல்கொண்டு உதிர்க்கும் முத்துக்கள் நிறைந்து சொரிவதும், விரிந்த மலைப் பகுதிகளில் நீர்த்துளிகளோடு கூடிய மழை மேகங்கள் தவழும் பொழில்களை உடையதுமாகிய அண்ணாமலை, இறைவனின், காலனது வலிமையைத் தகர்த்த சிவந்த திருவடிகளைத் தொழுவார் மேலன புகழ். (தொழுவார் புகழ் பெறுவர் என்பதாம்)

மேல்

(100)
உதிரும் மயிர் இடு வெண்தலை கலனா, உலகு எல்லாம்

எதிரும் பலி உணவு ஆகவும், எருது ஏறுவது அல்லால்,

முதிரும் சடை இளவெண் பிறை முடிமேல் கொள, அடி மேல்

அதிரும் கழல் அடிகட்கு இடம் அண்ணாமலை அதுவே.

உடலிலிருந்து பிரிக்கப்பட்ட மயிர் நீங்கிய பிரமனது வெண்மையான தலையோட்டை உண்கலனாக் கொண்டு உலகெலாம் திரிந்து ஏற்கும் பலியை உணவாகக் கொள்ளுதற்கு எருது ஏறி வருவதோடு முதிர்ந்த சடைமுடியின் மீது வெண்பிறையைச் சூடித் திருவடிகளில் அதிரும் வீரக் கழல்களோடு விளங்கும் சிவபிரானுக்குரிய இடம் திருவண்ணாமலையாகும்.

மேல்

(101)
மரவம், சிலை, தரளம், மிகு மணி, உந்து வெள் அருவி

அரவம் செய, முரவம் படும் அண்ணாமலை அண்ணல்

உரவம் சடை உலவும் புனல் உடன் ஆவதும் ஓரார்,

குரவம் கமழ் நறுமென்குழல் உமை புல்குதல் குணமே?.

வெண் கடம்பமரம், சிலை, முத்து, மிக்க மணிகள் ஆகியவற்றை உந்திவரும் வெண்மையான அருவிகள் பறைபோல ஆரவாரம் செய்யும் திருவண்ணாமலையில் விளங்கும் அண்ணலாகிய சிவபிரான், சடையில் பாம்பும் கங்கையும் உடனாயிருந்து உலவுவதை ஓராமல், குராமணம் கமழும் மென்மையான கூந்தலை உடைய உமையம்மையாரைத் தழுவுதல் நன்றோ?

மேல்

(102)
பெருகும் புனல் அண்ணாமலை, பிறை சேர், கடல் நஞ்சைப்

பருகும் தனை துணிவார், பொடி அணிவார், அது பருகிக்

கருகும் மிடறு உடையார், கமழ் சடையார், கழல் பரவி

உருகும் மனம் உடையார் தமக்கு உறு நோய் அடையாவே.

பெருகிவரும் அருவி நீரை உடைய திருவண்ணாமலையில் பிறைமதி தோன்றிய பாற்கடலிடைத் தோன்றிய நஞ்சை உட்கொள்ளும் அளவிற்குத் துணிபுடையவரும், அந் நஞ்சினை உண்டு கண்டம் கறுத்தவரும், திருவெண்ணீற்றை அணிந்தவரும், மணம் கமழும் சடைமுடியை உடையவரும் ஆகிய சிவபிரானின் திருவடிகளை வாழ்த்தி உருகும் மனம் உடையவர்கட்கு மிக்க நோய்கள் எவையும் வாரா.

மேல்

(103)
கரி காலன, குடர் கொள்வன, கழுது ஆடிய காட்டில்

நரி ஆடிய நகு வெண் தலை உதையுண்டவை உருள,

எரி ஆடிய இறைவர்க்கு இடம் இனவண்டு இசை முரல,

அரி ஆடிய கண்ணாளொடும் அண்ணாமலை அதுவே.

கரிந்த கால்களை உடையனவும், குடரைப் பிடுங்கி உண்பனவும் ஆகிய பேய்கள் ஆடும் இடுகாட்டில், நரிகள் உருட்டி விளையாடும் சிரிக்கும் வெண்டலை ஓடுகள் உதைக்கப்பட்டு உருள, கையில் எரி ஏந்தி ஆடும் சிவபெருமான், வண்டுக் கூட்டங்கள் இசைபாடச் செவ்வரி பரந்த கண்களை உடைய உமையம்மையோடு எழுந்தருளிய இடம், திருவண்ணாமலை.

மேல்

(104)
ஒளிறூ புலி அதள் ஆடையன், உமை அஞ்சுதல் பொருட்டால்,

பிளிறூ குரல் மதவாரணம் வதனம் பிடித்து உரித்து,

வெளிறூபட விளையாடிய விகிர்தன்; இராவணனை

அளறூபட அடர்த்தான்; இடம் அண்ணாமலை அதுவே.

ஒளி செய்யும் புலித்தோலை ஆடையாகக் கொண்டவனும், உமையம்மை அஞ்சுமாறு பிளிறும் குரலை உடைய மதம் பொருந்திய யானையின் தலையைப் பிடித்து அதன் தோலை உரித்து எளிதாக விளையாடிய விகிர்தனும், இராவணனை மலையின்கீழ் அகப்படுத்தி இரத்த வெள்ளத்தில் அடர்த்தவனும் ஆகிய சிவபெருமானது இடம் திருவண்ணாமலை.

மேல்

(105)
விளவு ஆர் கனி பட நூறிய கடல்வண்ணனும், வேதக்

கிளர் தாமரை மலர்மேல் உறை கேடு இல் புகழோனும்,

அளவா வணம் அழல் ஆகிய அண்ணாமலை அண்ணல்

தளராமுலை, முறுவல், உமை தலைவன் அடி சரணே!.

விள மரத்தின் கனியை உகுப்பது போல அம்மரவடிவாய் நின்ற அரக்கனை அழித்த கருங்கடல் வண்ணனாகிய திருமாலும், நீரில் கிளர்ந்து தோன்றிய தாமரை மலர்மேல் உறையும்குற்றம் அற்ற புகழாளனாகிய வேதாவும் அடிமுடிகளை அளவிட்டுக் காண இயலாதவாறு அழல் வடிவாய் நின்ற தலைவனும், தளராத தனபாரங்களையும் மலர்ந்த சிரிப்பையும் உடைய உமையம்மையின் கணவனும் ஆகிய சிவபிரானின் திருவடிகளே நமக்குக் காப்பு.

மேல்

(106)
வேர் வந்து உற, மாசு ஊர்தர, வெயில் நின்று உழல்வாரும்,

மார்வம் புதை மலி சீவரம் மறையா வருவாரும்,

ஆரம்பர்தம் உரை கொள்ளன்மின்! அண்ணாமலை அண்ணல்,

கூர் வெண் மழுப்படையான், நல கழல் சேர்வது குணமே!.

உடலில் வியர்வை தோன்றவும் அழுக்கேறவும் வெயிலில் நின்று உழல்வதைத் தவமாகக் கொள்வோராகிய சமணரும், மரவுரியால் மார்பை மிகவும் மறைத்து வருபவர் ஆகிய புத்தரும் போதிய பயிற்சியின்றித் தொடக்க நிலையில் உள்ளவர்கள் ஆதலின், அவர்களுடைய உரைகளைக் கொள்ளாதீர். திருவண்ணாமலையில் உறையும் தலைவனும் கூரிய வெண்மையான மழுவாயுதத்தைக் கைக் கொண்டவனும் ஆகிய சிவபெருமானது நன்மைதரும் திருவடிகளை அடைதலே மேலானகுணம்.

மேல்

(107)
வெம்பு உந்திய கதிரோன் ஒளி விலகும் விரிசாரல்,

அம்பு உந்தி மூ எயில் எய்தவன் அண்ணாமலை அதனை,

கொம்பு உந்துவ, குயில் ஆலுவ, குளிர் காழியுள் ஞான

சம்பந்தன தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவமே.

வெம்மை மிக்க கதிரவன் ஒளிபுகாதவாறு தடுக்கும் விரிந்த சாரலை உடையதும், அம்பைச் செலுத்தி முப்புரங்களை அழித்த சிவபிரான் எழுந்தருளியதுமான அண்ணாமலையைக் கொம்பு என்னும் வாத்தியங்களின் ஒலியைக் கேட்டு குயில்கள் எதிர் ஒலிக்கும் குளிர்ந்த காழிப் பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய,

இத்திருப்பதிகத் தமிழை ஓதவல்லவர்களின் திருவடிகளை வணங்குதல் சிறந்த தவமாம்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(11)
திருவீழிமிழலை

(108)
சடை ஆர் புனல் உடையான், ஒரு சரி கோவணம் உடையான்,

படை ஆர் மழு உடையான், பல பூதப்படை உடையான்,

மடமான் விழி உமைமாது இடம் உடையான், எனை உடையான்,

விடை ஆர் கொடி உடையான், இடம் வீழிமிழலையே.

சடைமுடியில் கங்கையைத் தரித்தவனும், இடையினின்று சரிந்து நழுவும் ஒப்பற்ற கோவண ஆடையை அணிந்தவனும், மழுப் படையை உடையவனும், பலவகையான பூதங்களைப் படையாகக் கொண்டவனும், மடமைத் தன்மை பொருந்திய மான்விழி போன்ற விழிகளை உடைய உமையம்மையாகிய பெண்ணை இடப்பாகத்தே கொண்டவனும், என்னை ஆளாக உடையவனும், விடைக் கொடி உடையவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் திருவீழிமிழலை.

மேல்

(109)
ஈறு ஆய், முதல் ஒன்று ஆய், இரு பெண் ஆண், குணம் மூன்று ஆய்,

மாறா மறை நான்கு ஆய், வரு பூதம் அவை ஐந்து ஆய்,

ஆறு ஆர் சுவை, ஏழ் ஓசையொடு எட்டுத்திசை தான் ஆய்,

வேறு ஆய், உடன் ஆனான், இடம் வீழிமிழலையே.

ஊழிக் காலத்தில் அனைத்தையும் ஒடுக்குவோனாய், ஒடுங்கிய உடலைத் தானொருவனே முதற்பொருளாய் நின்று தோற்றுவிப்பவனாய், சக்தி சிவம் என இருவகைப்பட்டவனாய், முக்குண வடிவினனாய், எக்காலத்தும் மாறுபடாத நான்மறை வடிவினனாய், ஐம்பெரும் பூதங்கள், ஆறுசுவை, ஏழு ஓசை, எட்டுத்திசை ஆகியவற்றில் நிறைந்தவனாய் உயிரோடு ஒன்றாகியும், வேறாகியும், உடனாகியும் விளங்கும் இறைவனது இடம் திருவீழிமிழலை.

மேல்

(110)
வம்மின், அடியீர், நாள்மலர் இட்டுத் தொழுது உய்ய!

உம் அன்பினொடு எம் அன்பு செய்து, ஈசன் உறை கோயில்

மும்மென்று இசை முரல் வண்டுகள் கெண்டித் திசை எங்கும்

விம்மும் பொழில் சூழ் தண்வயல் வீழிமிழலையே.

அன்றலர்ந்த மலர்களைச் சாத்தி வணங்கி உய்தி பெற அடியவர்களே வாருங்கள். உயர்ந்த உம் அன்போடு எம் அன்பையும் ஏற்றருளும் இறைவன் உறையும் கோயில், மும் என்ற ஒலிக்குறிப்போடு இசைபாடும் வண்டுகள் மலர்களைக் கிளறுவதால் திசையெங்கும் மணம் கமழும் பொழில்கள் சூழ்ந்ததும், தண்ணிய வயல்களைக் கொண்டதுமாகிய திருவீழிமிழலை.

மேல்

(111)
பண்ணும், பதம் ஏழும், பல ஓசைத் தமிழ் அவையும்,

உள் நின்றது ஒரு சுவையும், உறு தாளத்து ஒலி பலவும்,

மண்ணும், புனல், உயிரும், வரு காற்றும், சுடர் மூன்றும்,

விண்ணும், முழுது ஆனான் இடம் வீழிமிழலையே.

இசையும், அதற்கு அடிப்படையான ஏழு சுரங்களும் வல்லோசை, மெல்லோசை முதலியனவற்றையுடைய தமிழும் உள்ளத்துணர்வாகிய சுவையும், பொருந்திய தாள வேறு பாட்டு ஒலிகளும், மண், புனல், உயிர், காற்று, நெருப்பு, சூரியன், சந்திரன், விண் ஆகிய எண்வகை வடிவங்களும் ஆகிய இறைவனது இடம் திருவீழிமிழலை.

மேல்

(112)
ஆயாதன சமயம் பல அறியாதவன், நெறியின்

தாய் ஆனவன், உயிர் கட்கு முன் தலை ஆனவன், மறை முத்

தீ ஆனவன், சிவன், எம் இறை, செல்வத் திரு ஆரூர்

மேயான் அவன், உறையும் இடம் வீழிமிழலையே.

சுருதி, யுக்தி, அநுபவங்களால் ஆராய்ச்சி செய்யாத பல சமயங்களால் அறியப் பெறாதவன். அறநெறிகளின் தாயாய் விளங்குவோன். எல்லா உயிர்கட்கும் அநாதியாகவே தலைவன். வேத வேள்விகளில் முத்தீ வடிவினன். சிவன் எனும் திருப் பெயருடையவன். எங்கட்குத் தலைவன். செல்வம் நிறைந்த திருவாரூரில் எழுந்தருளியிருப்பவன். அத்தகையோன் உறையுமிடம் திருவீழிமிழலை.

மேல்

(113)
“கல்லால் நிழல் கீழாய்! இடர் காவாய்!” என வானோர்

எல்லாம் ஒரு தேர் ஆய், அயன் மறை பூட்டி நின்று உய்ப்ப,

வல்லாய் எரி காற்று ஈர்க்கு, அரி கோல், வாசுகி நாண், கல்

வில்லால், எயில் எய்தான் இடம் வீழிமிழலையே.

சிவபிரான் கல்லால மரநிழற்கீழ் யோகியாய் வீற்றிருந்த காலத்து அசுரர்களால் இடருழந்த வானோர் காவாய் என வேண்ட, சூரிய சந்திரராகிய சக்கரம் பூட்டிய பூமியைத் தேராகக் கொண்டு நான்முகன் வேதங்களாகிய தேரிற் பூட்டிய குதிரைகளைச் செலுத்த, அக்கினிதேவனை வலிய வாயாகவும், வாயுதேவனை இறகாகவும் கொண்ட திருமால் ஆகிய அம்பை வாசுகி என்னும் பாம்பினை நாணாகப் பூட்டி மேருமலையாகிய வில்லால் செலுத்தித் திரிபுரங்களை எய்து அழித்த சிவபிரானது இடம் திருவீழிமிழலை.

மேல்

(114)
கரத்தால் மலி சிரத்தான்; கரி உரித்து ஆயது ஒரு படத்தான்;

புரத்தார் பொடிபட, தன் அடி பணி மூவர்கட்கு ஓவா

வரத்தான் மிக அளித்தான்; இடம் வளர் புன்னை முத்து அரும்பி,

விரைத் தாது பொன் மணி ஈன்று, அணி வீழிமிழலையே.

பிரமகபாலம் பொருந்திய திருக்கரத்தினன். யானையை உரித்ததால் கிடைத்ததொரு மேற்போர்வையினன். முப்புர அசுரர் அழியத் தன்னடி பணிந்த அம்முப்புரத்தலைவர் மூவர்கட்கும் மிக்க வரங்களை அளித்தவன். அப்பெருமானது இடம், வளர்ந்தோங்கிய புன்னை மரங்கள் முத்துக்கள் போல் அரும்பி மலர்ந்து பொன் தாதுக்களை ஈன்று பச்சை மணிகளைப்போல் காய்த்து அழகு செய்கின்ற திருவீழிமிழலையாகும்.

மேல்

(115)
முன் நிற்பவர் இல்லா முரண் அரக்கன், வடகயிலை

தன்னைப் பிடித்து எடுத்தான், முடி தடந்தோள் இற ஊன்றி,

பின்னைப் பணிந்து ஏத்த, பெரு வாள் பேரொடும் கொடுத்த

மின்னின் பொலி சடையான் இடம் வீழிமிழலையே.

தன்னை எதிர்த்து நிற்பார் யாரும் இல்லாத வலிமை பெற்ற அரக்கனாகிய இராவணன் வடதிசையிலுள்ள கயிலாய மலையைப் பற்றித் தூக்கினான். அவன் தலைகள் தோள்கள் ஆகியன நெரிய ஊன்றி அதனால் இடருழந்த அவன் பின்னர்ப் பணிந்தேத்த அவனுக்குப் பெரிதாகிய வாள், இராவணன் என்ற பெயர் ஆகியனவற்றைக் கொடுத்தருளிய மின்னல் போலப் பொலியும் சடைமுடியை உடைய சிவபிரானது இடம் திருவீழிமிழலையாகும்.

மேல்

(116)
பண்டு ஏழ் உலகு உண்டான், அவை கண்டானும், முன் அறியா

ஒண் தீ உரு ஆனான் உறை கோயில் நிறை பொய்கை

வண் தாமரை மலர் மேல் மட அன்னம் நடை பயில,

வெண் தாமரை செந் தாது உதிர் வீழிமிழலையே.

முன்னொரு காலத்து ஏழுலகையும் தன் வயிற்றில் அடக்கிக்காட்டிய திருமாலும், அவ்வுலகங்களைப் படைத்தருளிய நான்முகனும் தன்னை அறியாதவாறு ஒளி பொருந்திய தீயுருவான சிவபிரான் உறையும் கோயில்; நீர் நிறைந்த பொய்கைகளில் பூத்த செழுமையான தாமரை மலர்மீது இள அன்னம் நடை பயில வெண் தாமரை சிவந்த தாதுக்களை உதிர்க்கும் திருவீழிமிழலையாகும். அன்னத்தின் நிறத்தால் செந்தாமரை வெண்தாமரை ஆயிற்று. அதன் கால்களின் செம்மையால் பொன்னிறத்தாதுக்கள் செந்தாதுக்கள் ஆயின.

மேல்

(117)
மசங்கல் சமண், மண்டைக் கையர், குண்டக் குணம் இலிகள்,

இசங்கும் பிறப்பு அறுத்தான் இடம் இருந்தேன் களித்து இரைத்து,

பசும் பொன்கிளி களி மஞ்ஞைகள் ஒளி கொண்டு எழு பகலோன்

விசும்பைப் பொலிவிக்கும் பொழில் வீழிமிழலையே.

மயக்க உணர்வுடையவரும், பிச்சை ஏற்கும் மண்டை என்னும் பாத்திரத்தைக் கையின்கண் ஏந்தியவரும், நற்குணங்கள் இல்லாதவர்களும் ஆகிய சமணர், புத்தர்கள் நிற்கத் தன்னை வழிபடும் அன்பர்கட்கு வினைவயத்தாற் பொருந்திய பிறப்பினைப் போக்கியவன் எழுந்தருளிய இடம், மிகுதியான தேனீக்கள் தேனை உண்டு களித்து ஒலி செய்யவும், பசுமை நிறமேனியும் பொன் நிறக்காலும் உடைய கிளிகளும், களிப்புற்ற மயில்களும் நிறைந்ததும் ஒளியோடு தோன்றும் கதிரவன் இருக்கும் வான மண்டலத்தை அழகுறுத்துவதும் ஆகிய பொழில் சூழ்ந்த திருவீழிமிழலையாகும்.

மேல்

(118)
வீழிமிழலை மேவிய விகிர்தன்தனை, விரை சேர்

காழி நகர் கலை ஞானசம்பந்தன் தமிழ்பத்தும்

யாழின் இசை வல்லார், சொலக் கேட்டார், அவர் எல்லாம்

ஊழின் மலி வினை போயிட, உயர்வான் அடைவாரே.

வீழிமிழலையுள் எழுந்தருளிய விகிர்தனாகிய இறைவனைப்பற்றி மணம் பொருந்திய சீகாழிப் பதியில் தோன்றிய கலைவல்ல ஞானசம்பந்தன் பாடியருளிய,

பாடல்கள் பத்தினையும் யாழிசையில் பாட வல்லார்களும் சொல்லக் கேட்டார்களும் ஆகிய அனைவரும் ஊழாக அமைந்த வினைகள் நீங்கச் சிவப்பேறு எய்துவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(12)
திருமுதுகுன்றம்

(119)
மத்தா வரை நிறுவி, கடல் கடைந்து, அவ் விடம் உண்ட

தொத்து ஆர்தரு மணி நீள் முடிச் சுடர் வண்ணனது இடம் ஆம்

கொத்து ஆர் மலர், குளிர் சந்து, அகில், ஒளிர் குங்குமம், கொண்டு

முத்தாறு வந்து அடி வீழ்தரு முதுகுன்று அடைவோமே.

மந்தர மலையை மத்தாக நட்டுக் கடலைக் கடைந்தபோது, கொடிது எனக் கூறப்பெறும் ஆலகால விடம் தோன்ற, அதனை உண்டவனும், பூங்கொத்துக்கள் சூடிய அழகிய நீண்ட சடை முடியினனும், எரி சுடர் வண்ணனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய இடம்; மலர்க் கொத்துக்கள் குளிர்ந்த சந்தனம் அகில் ஒளிதரும் குங்கும மரம் ஆகியவற்றை அலைக்கரங்களால் ஏந்திக் கொண்டு வந்து மணிமுத்தாறு அடிவீழ்ந்து வணங்கும் திருமுதுகுன்றமாகும். அதனை அடைவோம்.

மேல்

(120)
தழை ஆர் வடவிடவீதனில் தவமே புரி சைவன்,

இழை ஆர் இடை மடவாளொடும், இனிதா உறைவு இடம் ஆம்

மழை வான் இடை முழவ, எழில் வளை வாள் உகிர், எரி கண்,

முழை வாள் அரி குமிறும் உயர் முதுகுன்று அடைவோமே.

தழைகளுடன் கூடிய ஆலமர நீழலில் யோகியாய் வீற்றிருந்து தவம் செய்யும் சிவபிரான், போகியாய் நூலிழை போன்ற இடையினை உடைய உமையம்மையோடு மகிழ்ந்துறையும் இடம், மேகங்கள் வானின்கண் இடித்தலைக் கேட்டு யானையின் பிளிறல் எனக்கருதி அழகிதாய் வளைந்த ஒளி பொருந்தி விளங்கும் நகங்களையும் எரிபோலும் கண்களையும் உடையனவாய்க் குகைகளில் வாழும் சிங்கங்கள் கர்ச்சிக்கும் உயர்ந்த திருமுதுகுன்றமாகும். அதனை வழிபடச் செல்வோம்.

மேல்

(121)
விளையாதது ஒரு பரிசில் வரு பசு பாசவேதனை, ஒண்

தளை ஆயின தவிர, அருள் தலைவனது சார்பு ஆம்

களை ஆர்தரு கதிர் ஆயிரம் உடைய அவனோடு

முளை மா மதி தவழும் உயர் முதுகுன்று அடைவோமே.

உயிர்களுடன் அநாதியாகவே வருகின்ற வேதனைகளைத் தரும் பாசங்களாகிய ஒள்ளிய தளைகள் நீங்குமாறு அருள்புரிதற்கு எழுந்தருளிய சிவபிரானது இடம், ஒளி பொருந்திய கிரணங்கள் ஆயிரத்தைக் கொண்ட கதிரவனும் முளைத்தெழுந்து வளரும் சந்திரனும் தவழும் வானளாவிய மலையாகிய திருமுதுகுன்றமாகும். அதனை அடைவோம்.

மேல்

(122)
சுரர், மா தவர், தொகு கின்னரர் அவரோ, தொலைவு இல்லா

நரர் ஆன பல் முனிவர், தொழ இருந்தான் இடம் நலம் ஆர்

அரசார் வர அணி பொன்கலன் அவை கொண்டு பல் நாளும்

முரசு ஆல்வரு மண மொய்ம்பு உடை முதுகுன்று அடைவோமே.

தேவர்களும், சிறந்த தவத்தை மேற் கொண்டவர்களும், கின்னரி மீட்டி இசை பாடும் தேவ இனத்தவரான கின்னரரும், மக்களுலகில் வாழும் மாமுனிவர்களும் தொழுமாறு சிவபிரான் எழுந்தருளிய இடம், அழகிய அரசிளங்குமாரர்கள் வர அவர்களைப் பொன் அணிகலன்கள் கொண்ட வரவேற்கும் மணமுரசு பன்னாளும் ஒலித்தலை உடைய திருமுதுகுன்றமாகும். அதனை அடைவோம்.

மேல்

(123)
அறை ஆர் கழல் அந்தன்தனை, அயில் மூஇலை, அழகு ஆர்

கறை ஆர் நெடுவேலின்மிசை ஏற்றான் இடம் கருதில்,

மறை ஆயினபல சொல்லி, ஒண்மலர் சாந்து அவை கொண்டு,

முறையால் மிகும் முனிவர் தொழும் முதுகுன்று அடைவோமே.

ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த அந்தகாசுரனைக், கூரிய மூவிலை வடிவாய் அமைந்த குருதிக் கறைபடிந்த அழகிய நீண்ட வேலின் முனையில் குத்தி ஏந்திய சிவபெருமானது இடம் யாதெனில், முனிவர்கள் பலரும் வேதங்கள் பலவும் சொல்லி நறுமலர் சந்தனம்முதலான பொருள்களைக் கொண்டு முறைப்படி சார்த்தி வழிபடுகின்ற திருமுதுகுன்றமாகும். அதனை நாம் அடைவோம்.

மேல்

(124)
ஏ ஆர் சிலை எயினன் உரு ஆகி, எழில் விசயற்கு

ஓவாத இன் அருள் செய்த எம் ஒருவற்கு இடம் உலகில்

சாவாதவர், பிறவாதவர், தவமே மிக உடையார்,

மூவாத பல் முனிவர், தொழும் முதுகுன்று அடைவோமே.

அம்புகள் பூட்டிய வில்லை ஏந்திய வேட உருவந்தாங்கி வந்து போரிட்டு அழகிய அருச்சுனனுக்கு அருள்செய்த எம் சிவபெருமானுக்கு உகந்த இடம், சாவாமை பெற்றவர்களும், மீண்டும் பிறப்பு எய்தாதவர்களும், மிகுதியான தவத்தைப் புரிந்தவர்களும், மூப்பு எய்தாத முனிவர் பலரும் வந்து வணங்கும் திருமுதுகுன்றமாகும். நாமும் அதனைச் சென்றடைவோம்.

மேல்

(125)
தழல் சேர்தரு திருமேனியர், சசி சேர் சடை முடியர்,

மழ மால்விடை மிக ஏறிய மறையோன், உறை கோயில்

விழவோடு ஒலி மிகு மங்கையர், தகும் நாடகசாலை,

முழவோடு இசை நடம் முன் செயும் முதுகுன்று அடைவோமே.

தழலை ஒத்த சிவந்த திருமேனியரும், பிறைமதி அணிந்த சடைமுடியினரும், இளமையான திருமாலாகிய இடபத்தில் மிகவும் உகந்தேறி வருபவரும், வேதங்களை அருளியவருமாகிய சிவபிரான் எழுந்தருளிய கோயில், விழாக்களின் ஓசையோடு அழகு மிகு நங்கையர் தக்க நடனசாலைகளில் முழவோசையோடு பாடி நடனம் ஆடும் திருமுதுகுன்றம் ஆகும். அதனை நாமும் சென்றடைவோம்.

மேல்

(126)
செது வாய்மைகள் கருதி வரை எடுத்த திறல் அரக்கன்

கதுவாய்கள் பத்து அலறீயிடக் கண்டான் உறை கோயில்

மது வாய செங் காந்தள் மலர் நிறைய, குறைவு இல்லா

முதுவேய்கள் முத்து உதிரும் பொழில் முதுகுன்று அடைவோமே.

பொல்லா மொழிகளைக் கருதிக் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த வலிய இராவணனின் வடுவுள்ள வாய்கள் பத்தும் அலறும்படி கால்விரலால் ஊன்றி அடர்த்த சிவ பிரானது கோயில் விளங்குவதும், தேன் நிறைந்த இடம் உடைய செங்காந்தள் மலர்களாகிய கைகள் நிறையும்படி முதிய மூங்கில்கள் குறைவின்றி முத்துக்களை உதிர்க்கும் பொழில்களால் சூழப்பட்டதுமாகிய திருமுதுகுன்றை நாம் அடைவோம்.

மேல்

(127)
இயல் ஆடிய பிரமன் அரி இருவர்க்கு அறிவு அரிய,

செயல் ஆடிய தீ ஆர் உரு ஆகி எழு செல்வன்-

புயல் ஆடு வண்பொழில் சூழ் புனல் படப்பைத் தடத்து அருகே

முயல் ஓட, வெண் கயல் பாய் தரு முதுகுன்று அடைவோமே.

தற்பெருமை பேசிய பிரமன் திருமால் ஆகிய இருவராலும் அறிதற்கரிய திருவிளையாடல் செய்து எரியுருவில் எழுந்த செல்வனாகிய சிவபிரான் எழுந்தருளியதும், மேகங்கள் தோயும் வளமையான பொழில்கள், நீர்வளம் மிக்க நிலப்பரப்புகள், நீர் நிலைகட்கு அருகில் வரும் முயல்கள் ஓடுமாறு வெள்ளிய கயல் மீன்கள் துள்ளிப் பாயும் குளங்கள் இவற்றின் வளமுடையதும் ஆகிய திருமுதுகுன்றத்தை நாம் அடைவோம்.

மேல்

(128)
அருகரொடு புத்தர் அவர் அறியா அரன், மலையான்

மருகன், வரும் இடபக் கொடி உடையான், இடம் மலர் ஆர்

கருகு குழல் மடவார் கடிகுறிஞ்சி அது பாடி,

முருகனது பெருமை பகர் முதுகுன்று அடைவோமே.

சமணர்களாலும் புத்தர்களாலும் அறியப் பெறாத அரனும், இமவான் மருகனும், தோன்றும் இடபக் கொடி உடையோனும், ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம், மலர் சூடிய கரிய கூந்தலை உடைய இளம் பெண்கள் தெய்வத்தன்மை வாய்ந்த குறிஞ்சிப் பண்ணைப் பாடி முருகப் பெருமானின் பெருமைகளைப் பகரும் திருமுதுகுன்றமாகும். அதனை நாம் அடைவோம்.

மேல்

(129)
முகில் சேர்தரு முதுகுன்று உடையானை, மிகு தொல் சீர்

புகலிநகர் மறை ஞானசம்பந்தன், உரைசெய்த

நிகர் இல்லன தமிழ் மாலைகள் இசையோடு இவை பத்தும்

பகரும் அடியவர்கட்கு இடர், பாவம், அடையாவே.

மேகங்கள் வந்து தங்கும் திருமுதுகுன்றத்தில் விளங்கும் பெருமானைப் பழமையான மிக்க புகழையுடைய புகலி நகரில் தோன்றிய மறைவல்ல ஞானசம்பந்தன் உரைத்த ,

ஒப்பற்ற தமிழ்மாலைகளாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் இசையோடு பகர்ந்து வழிபடும் அடியவர்களைத் துன்பங்களும் அவற்றைத் தரும் பாவங்களும் அடையா.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(13)
திருவியலூர்

(130)
குரவம் கமழ் நறு மென் குழல் அரிவை அவள் வெருவ,

பொரு வெங்கரி பட வென்று, அதன் உரிவை உடல் அணிவோன்,

அரவும், அலைபுனலும், இளமதியும், நகுதலையும்,

விரவும் சடை அடிகட்கு இடம் விரி நீர் வியலூரே.

குரா மலரின் மணம் கமழ்வதும், இயற்கையிலேயே மணமுடையதுமான மென்மையான கூந்தலையுடைய உமையம்மை அஞ்ச, தன்னோடு பொருதற்கு வந்த சினவேழத்தைக் கொன்று, அதன் தோலைத் தன் திருமேனியில் போர்த்தவனும், அரவு, கங்கை, பிறை, வெண்தலை ஆகியவற்றை அணிந்த சடையை உடையவனுமாய சிவபிரானுக்குரிய இடம் நீர்வளம் மிக்க வியலூராகும்.

மேல்

(131)
ஏறு ஆர்தரும் ஒருவன், பல உருவன், நிலை ஆனான்,

ஆறு ஆர்தரு சடையன், அனல் உருவன், புரிவு உடையான்,

மாறார் புரம் எரியச் சிலை வளைவித்தவன், மடவாள்

வீறு ஆர்தர நின்றான், இடம் விரி நீர் வியலூரே.

எருதின்மேல் வருபவனும், பல்வேறு மூர்த்தங்களைக் கொண்டவனும், என்றும் நிலையானவனும், கங்கையாற்றைச் சடையில் நிறுத்தியவனும், அனல் போன்ற சிவந்த மேனியனும், அன்புடையவனும், பகைவராய் வந்த அசுரர்தம் முப்புரங்கள் எரியுமாறு வில்லை வளைத்தவனும், உமையம்மை பெருமிதம் கொள்ளப் பல்வகைச் சிறப்புக்களோடு நிற்பவனுமாய சிவபிரானுக்குரிய இடம் நீர் வளம் மிக்க வியலூராகும்.

மேல்

(132)
செம் மென் சடை அவை தாழ்வு உற, மடவார் மனை தோறும்,

“பெய்ம்மின், பலி!” என நின்று இசை பகர்வார் அவர் இடம் ஆம்

உம்மென்று எழும் அருவித்திரள் வரை பற்றிட, உறை மேல்

விம்மும் பொழில் கெழுவும், வயல் விரி நீர் வியலூரே.

சிவந்த மென்மையான சடை தாழத் தாருகாவன முனிவர்களின் மனைவியர் வாழ்ந்த இல்லங்கள்தோறும் சென்று உணவிடுங்கள் என்று இசை பாடியவனாய சிவபிரானது இடம், உம் என்ற ஒலிக் குறிப்போடு அருவிகள் குடகு மலை முகடுகளிலிருந்து காவிரியாய் வர அந்நீர் வளத்தால் புகழோடு செழித்து வளரும் பொழில்களையும் பொருந்திய வயல்களையும் உடைய நீர்வளம் மிக்க வியலூராகும்.

மேல்

(133)
அடைவு ஆகிய அடியார் தொழ, அலரோன் தலை அதனில்

மடவார் இடு பலி வந்து உணல் உடையான் அவன் இடம் ஆம்

கடை ஆர்தர அகில், ஆர் கழை முத்தம் நிரை சிந்தி,

மிடை ஆர் பொழில் புடை சூழ் தரு விரி நீர் வியலூரே.

அடியவர்கள் தத்தம் அடைவின்படி தொழப் பிரம கபாலத்தில் மகளிர் இட்ட உணவை உண்பவனாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம், பள்ளர்கள் வயல்களில் நிறையவும் நிறைந்த மூங்கில்கள் முத்துக்களை வரிசையாகச் சொரியவும் ஆற்றில் வரும் அகில் மரங்களைக் கொண்டதும் நெருங்கிய மரங்களைக் கொண்ட பொழில் சூழ்ந்ததுமாகிய நீர்வளம் மிக்க வியலூராகும்.

மேல்

(134)
எண் ஆர்தரு பயன் ஆய், அயன் அவனாய், மிகு கலை ஆய்,

பண் ஆர்தரு மறை ஆய், உயர் பொருள் ஆய், இறையவனாய்,

கண் ஆர்தரும் உரு ஆகிய கடவுள் இடம் எனல் ஆம்

விண்ணோரொடு மண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே.

தியானத்தின் பயனாய் இருப்பவனும், நான்முகனாய் உலகைப் படைப்போனும், எண்ணற்ற கலைகளாய்த் திகழ்வோனும் சந்த இசையோடு கூடிய வேதங்களாய் விளங்குவோனும், உலகில் மிக உயர்ந்த பொருளாய் இருப்போனும், எல்லோர்க்கும் தலைவனானவனும், கண்ணிறைந்த பேரழகுடையோனும் ஆகிய கடவுளது இடம் விண்ணவராகிய தேவர்களும் மண்ணவராகிய மக்களும் வந்து வணங்கும் நீர்வளம் நிரம்பிய வியலூர் ஆகும்.

மேல்

(135)
வசை வில்கொடு வரு வேடுவன் அவனாய், நிலை அறிவான்,

திசை உற்றவர் காண, செரு மலைவான் நிலையவனை

அசையப் பொருது, அசையா வணம் அவனுக்கு உயர் படைகள்

விசையற்கு அருள் செய்தான் இடம் விரி நீர் வியலூரே.

வளைந்த வில்லை ஏந்தி வேட்டுவ வடிவம் கொண்டு வந்து, தன்னை நோக்கித் தவம் இயற்றும் விசயனின் ஆற்றலை அறிதற்பொருட்டு எண்திசையிலுள்ளோரும் காண ஒரு காலில் நின்று தவம் செய்த அவன் வருந்தும்படி, அவனோடு செருமலைந்து அவனது ஆற்றலைப் பாராட்டி அவன் அழியாதவாறு அவனுக்குப் பாசுபதம் முதலிய படைக்கலங்களை அருளியவனாகிய சிவபிரானது இடம், நீர்வளம் மிக்க வியலூராகும்.

மேல்

(136)
“மான், ஆர் அரவு, உடையான்; இரவு, உடையான், பகல் நட்டம்;

ஊன் ஆர்தரும் உயிரான்; உயர்வு இசையான்; விளை பொருள்கள்

தான் ஆகிய தலைவன்;” என நினைவார் அவர் இடம் ஆம்

மேல் நாடிய விண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே.

தலைமையான அரவை அணிந்தவனும், தலையோட்டில் இரத்தல் தொழில் புரிகின்றவனும், பகலில் நட்டம் ஆடுபவனும், ஊனிடை உயிராய் விளங்குபவனும், உயரிய வீரம் உடையவனும், அனைத்து விளை பொருள்களாய் நிற்கும் தலைவன் என நினைத்தற்குரியவனுமாகிய சிவபிரானது இடம், புண்ணியப் பயனால் மேல் உலகை நாடிய விண்ணவர்களால் தொழப் பெறும் நீர்வளம் சான்ற வியலூராகும்.

மேல்

(137)
“பொருவார் எனக்கு எதிர் ஆர்!” எனப் பொருப்பை எடுத்தான் தன்

கரு மால் வரை கரம், தோள், உரம், கதிர் நீள் முடி, நெரிந்து,

சிரம் ஆயின கதற, செறி கழல் சேர் திருவடியின்

விரலால் அடர்வித்தான் இடம் விரி நீர் வியலூரே.

எனக்கெதிராகச் சண்டையிடுவார் யார் என்ற செருக்கால் கயிலை மலையை எடுத்த இராவணனின் வலிய பெரிய மலைபோலும் கைகள் தோள்கள் மார்பு ஆகியனவும் ஒளி பொருந்திய நீண்ட மகுடங்களுடன் கூடிய தலைகளும் நெரிதலால் அவன் கதறுமாறு, செறிந்த கழல்களுடன் கூடிய திருவடியின் விரலால் அடர்த்த சிவபிரானது இடம், நீர்வளம் மிக்க வியலூராகும்.

மேல்

(138)
வளம்பட்டு அலர் மலர் மேல் அயன், மாலும், ஒரு வகையால்

அளம்பட்டு அறிவு ஒண்ணா வகை அழல் ஆகிய அண்ணல்,

உளம்பட்டு எழு தழல் தூண் அதன் நடுவே ஓர் உருவம்

விளம்பட்டு அருள் செய்தான், இடம் விரி நீர் வியலூரே.

வளமையோடு அலர்ந்த தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும், திருமாலும் தமக்குள் முடி அடி காண்பவர் பெரியவர் என்ற ஒரு வகையான உடன்பாட்டால் அன்னமும் பன்றியுமாய்ருந்தி முயன்றும் அறிய வொண்ணாதவாறு அழலுருவாகி நின்ற அண்ணலும், அவ்விருவர்தம் முனைப்பு அடங்கி வேண்டத் தழல்வடிவான தூணின் நடுவே ஓருருவமாய் வெளிப்பட்டு அருள் செய்தவனுமாகிய சிவபிரானது இடம், நீர்வளம் மிக்க வியலூராகும்.

மேல்

(139)
தடுக்கால் உடல் மறைப்பார் அவர், தவர் சீவரம் மூடிப்

பிடக்கே உரை செய்வாரொடு, பேணார் நமர் பெரியோர்;

கடல் சேர்தரு விடம் உண்டு அமுது அமரர்க்கு அருள் செய்த

விடை சேர்தரு கொடியான் இடம் விரி நீர் வியலூரே.

ஓலைப் பாயால் உடலை மறைப்பவராகிய சமண முனிவர்களுடனும், பொன்னிற ஆடையால் உடலை மூடிப்பிடகம் என்னும் நூலைத் தம் மத வேதமாக உரைக்கும் புத்த மதத் தலைவர்கள் உடனும் நம் பெரியோர் நட்புக் கொள்ளார். கடலில் தோன்றிய நஞ்சைத் தான் உண்டு, அமுதை அமரர்க்களித்தருளிய விடைக் கொடியை உடைய சிவபிரானது இடம் நீர்வளமிக்க வியலூராகும். அதனைச் சென்று வழிபடுமின்.

மேல்

(140)
விளங்கும் பிறை சடை மேல் உடை விகிர்தன் வியலூரை,

தளம் கொண்டது ஒரு புகலித் தகு தமிழ் ஞானசம்பந்தன்

துளங்கு இல் தமிழ் பரவித் தொழும் அடியார் அவர், என்றும்

விளங்கும் புகழ் அதனோடு, உயர் விண்ணும் உடையாரே.

விளங்கும் பிறையைச் சடைமேலுடைய விகிர்தனாய சிவபிரானது வியலூரை, இடமகன்ற ஊராகிய புகலியில் தோன்றிய தக்க தமிழ் ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய,

துளக்கமில்லாத இத்தமிழ் மாலையைப் பாடிப் பரவித் தொழும் அடியவர், எக்காலத்தும் விளங்கும் புகழோடு உயரிய விண்ணுலகையும் தமதாக உடையவராவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(14)
திருக்கொடுங்குன்றம்

(141)
வானில் பொலிவு எய்தும் மழை மேகம் கிழித்து ஓடி,

கூனல் பிறை சேரும் குளிர் சாரல் கொடுங்குன்றம்

ஆனில் பொலி ஐந்தும் அமர்ந்து ஆடி, உலகு ஏத்த,

தேனின் பொலி மொழியாளொடும் மேயான் திரு நகரே.

வளைந்த பிறைமதி வானின்கண் விளங்கும் மழை மேகங்களைக் கிழித்து ஓடிச் சென்று சேரும் குளிர்ந்த சாரலை உடைய கொடுங்குன்றம், பசுவிடம் விளங்கும் பால் நெய் தயிர் கோமயம் கோசலம் ஆகிய ஐந்து பொருள்களையும் மகிழ்ந்தாடி உலகம் போற்றத் தேன்போலும் மொழியினைப் பேசும் உமையம்மையோடு சிவபிரான் மேவிய திருத்தலமாகும்.

மேல்

(142)
மயில் புல்கு தண் பெடையோடு உடன் ஆடும் வளர் சாரல்,

குயில் இன்இசை பாடும் குளிர் சோலை, கொடுங்குன்றம்

அயில் வேல் மலி நெடு வெஞ்சுடர் அனல் ஏந்தி நின்று ஆடி,

எயில் முன்பட எய்தான் அவன் மேய எழில் நகரே.

ஆண் மயில்கள் தண்ணிய தம் பெடைகளைத் தழுவித் தோகைவிரித்தாடும் விரிந்த சாரலையும், குயில்கள் இன்னிசைபாடும் குளிர்ந்த சோலைகளையும் உடைய கொடுங்குன்றம், கூரிய வேல்போலும் நெடிய வெம்மையான ஒளியோடு கூடிய அனலைக் கையில் ஏந்தி நின்றாடி முப்புரங்களைக் கணை தொடுத்து அழித்த சிவபிரான் எழுந்தருளிய திருத்தலமாகும்.

மேல்

(143)
மிளிரும் மணி பைம் பொன்னொடு விரை மாமலர் உந்தி,

குளிரும் புனல் பாயும் குளிர் சாரல் கொடுங்குன்றம்

கிளர் கங்கையொடு இள வெண்மதி கெழுவும் சடை தன் மேல்

வளர் கொன்றையும் மத மத்தமும் வைத்தான் வள நகரே.

அருவிகள், ஒளிவீசும் மணிகள், பசும்பொன், மணமுள்ள மலர்கள் ஆகியவற்றைத் தள்ளிக்கொண்டு வந்து நீரைச் சொரிதலால், குளிர்ந்துள்ள மலைச்சாரலை உடைய கொடுங்குன்றம், பொங்கி எழும் கங்கையோடு, வெள்ளிய பிறைமதி பொருந்திய சடை முடிமேல், மணம் வளரும் கொன்றை மலரையும் மதத்தை ஊட்டும் ஊமத்தை மலரையும் அணிந்துள்ள சிவபிரானது வளமையான நகராகும்.

மேல்

(144)
பரு மா மதகரியோடு அரி இழியும் விரிசாரல்,

குரு மா மணி பொன்னோடு இழி அருவிக் கொடுங்குன்றம்

பொரு மா எயில் வரைவில் தரு கணையின் பொடி செய்த

பெருமான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே.

பெரிய கரிய மத யானைகளும் சிங்கங்களும் இரைதேடவும், நீர் பருகவும் இறங்கிவரும் பெரிய மலைச்சாரலையும், நிறம் பொருந்திய பெரிய மணிகளைப் பொன்னோடு சொரியும் அருவிகளையும் உடைய கொடுங்குன்றம், தன்னோடு பொரவந்த பெரிய முப்புரக் கோட்டைகளை மலை வில்லில் தொடுத்த கணையால் பொடியாக்கிய சிவபிரான் உமையம்மையோடு எழுந்தருளிய பெருநகராகும்.

மேல்

(145)
மேகத்து இடி குரல் வந்து எழ, வெருவி வரை இழியும்

கூகைக்குலம் ஓடித் திரி சாரல் கொடுங்குன்றம்

நாகத்தொடும் இள வெண்பிறை சூடி நல மங்கை

பாகத்தவன் இமையோர் தொழ மேவும் பழ நகரே.

மேகத்திடம் இடிக்குரல் தோன்றக் கேட்டுக் கோட்டான் என்னும் பறவை இனங்கள் அஞ்சி மலையினின்றும் இறங்கி வந்து ஓடித் திரியும் மலைச்சாரலை உடைய கொடுங்குன்றம், நாகத்தோடு இளவெண்பிறையை முடியிற் சூடி அழகிய உமை நங்கையை ஒருபாகமாகக் கொண்டுள்ள சிவபிரான், தேவர்கள் தன்னை வணங்குமாறு எழுந்தருளும் பழமையான நகராகும்.

மேல்

(146)
கைம் மா மத கரியின் இனம் இடியின் குரல் அதிர,

கொய்ம் மா மலர்ச் சோலை புக மண்டும் கொடுங்குன்றம்

“அம்மான்!” என உள்கித் தொழுவார்கட்கு அருள் செய்யும்

பெம்மான் அவன், இமையோர் தொழ, மேவும் பெரு நகரே.

துதிக்கையை உடைய கரிய மதயானைகளின் கூட்டம் இடிக்குரல் அதிரக்கேட்டு அஞ்சிக் கொய்யத்தக்க மணமலர்களை உடைய சோலைகளில் புகுந்து ஒளிதற்குச் செறிந்து வரும் கொடுங்குன்றம், இவரே நம் தலைவர் என இடைவிடாது நினைந்து தொழும் அடியவர்கட்கு அருள் செய்யும் சிவபெருமான் விண்ணோர் தன்னைத் தொழ வீற்றிருந்தருளும் பெருநகராகும்.

மேல்

(147)
மரவத்தொடு மணமாதவி மௌவல் அது விண்ட

குரவத்தொடு விரவும் பொழில் சூழ் தண் கொடுங்குன்றம்

அரவத்தொடும் இள வெண்பிறை விரவும் மலர்க்கொன்றை

நிரவச் சடை முடி மேல் உடன் வைத்தான், நெடு நகரே.

கடம்பு, குருக்கத்தி, முல்லை ஆகியவற்றின் நாள் அரும்புகள் குரவமலர்களோடு விண்டு மணம் விரவும் பொழில் சூழ்ந்த தண்ணிய கொடுங்குன்றம், அரவு, வெள்ளிய இளம்பிறை, மணம் விரவும் கொன்றை மலர் ஆகியவற்றை நிரம்பத் தன் முடிமேல் அணிந்துள்ள சிவபிரானது நெடுநகராகும்.

மேல்

(148)
முட்டா முது கரியின் இனம் முது வேய்களை முனிந்து,

குட்டாச் சுனை அவை மண்டி நின்று ஆடும் கொடுங்குன்றம்

ஒட்டா அரக்கன் தன் முடி ஒருபஃது அவை உடனே

பிட்டான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே.

யானைக் கூட்டங்கள் யாரும் தடுப்பார் இன்றி முதிய மூங்கில்களை உண்டு வெறுத்துப் பிறரால் அகழப்படாது இயற்கையிலேயே ஆழமாக உள்ள சுனைகளில் இறங்கிநின்று நீராடும் கொடுங்குன்றம், தன்னோடு மனம் பொருந்தாது கயிலை மலையை எடுத்த அரக்கனாகிய இராவணனின் முடியணிந்த பத்துத் தலைகளையும் அடர்த்து ஒடித்தவனாகிய சிவபெருமான் உமையம்மையோடு மேவும் பெருநகராகும்.

மேல்

(149)
அறையும் அரி குரல் ஓசையை அஞ்சி, அடும் ஆனை

குறையும் மனம் ஆகி, முழை வைகும் கொடுங்குன்றம்

மறையும் அவை உடையான் என, நெடியான் என, இவர்கள்

இறையும் அறிவு ஒண்ணாதவன் மேய எழில் நகரே.

சிங்கத்தின் கர்ச்சனை ஓசையைக் கேட்டு அஞ்சிக் கொல்லும் தன்மையினவாகிய யானைகள் மன எழுச்சி குன்றி மலையிடையே உள்ள குகைப் பகுதிகளில் மறைந்து வைகும் கொடுங்குன்றம், வேதங்களுக்கு உரியவனாய நான்முகன் திருமால் ஆகிய இருவரும் சிறிதும் அறிய முடியாதவனாய் நின்ற சிவபிரான் மேவிய அழகிய நகராகும்.

மேல்

(150)
மத்தக்களிறு ஆளி வர அஞ்சி, மலை தன்னைக்

குத்திப் பெரு முழைதன் இடை வைகும் கொடுங்குன்றம்

புத்தரொடு பொல்லா மனச் சமணர் புறம் கூற,

பத்தர்க்கு அருள் செய்தான் அவன் மேய பழ நகரே.

மதம் பொருந்திய யானைகள் தம்மின் வலிய சிங்கம் வருதலைக் கண்டு அஞ்சி மலையைக் குத்திப் பெருமுழையாக்கி, அதனிடை வைகும் கொடுங்குன்றம், புத்தர்களும் பொல்லா மனமுடைய சமணர்களும் புறங்கூறத் தன் பக்தர்கட்கு அருள் செய்பவனாகிய சிவபிரான் மேவிய பழமையான நகராகும்.

மேல்

(151)
கூனல் பிறை சடைமேல் மிக உடையான் கொடுங்குன்றைக்

கானல் கழுமலமா நகர்த் தலைவன் நல கவுணி,

ஞானத்து உயர் சம்பந்தன நலம் கொள் தமிழ் வல்லார்,

ஊனத்தொடு துயர் தீர்ந்து, உலகு ஏத்தும் எழிலோரே.

வளைந்த பிறை மதியைச் சடைமுடிமீது அழகு மிகுமாறு அணிந்த சிவபிரானது திருக்கொடுங்குன்றைக் கடற்கரைச் சோலைகளால் சூழப்பட்ட கழுமலமாநகரின் தலைவனும் நல்ல கவுணியர் கோத்திரத்தில் தோன்றியவனுமாகிய ஞானசம்பந்தன் பாடிய,

தமிழ்மாலைகளை ஓதி வழிபட வல்லவர் தம்மிடமுள்ள குறைபாடுகள் நீங்கித்துன்பங்கள் அகன்று உலகம் போற்றும் புகழுடையோராவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(15)
திருநெய்த்தானம்

(152)
மை ஆடிய கண்டன், மலை மகள் பாகம் அது உடையான்,

கை ஆடிய கேடு இல் கரி உரி மூடிய ஒருவன்,

செய் ஆடிய குவளை மலர் நயனத்தவளோடும்

நெய் ஆடிய பெருமான், இடம் நெய்த்தானம் எனீரே!.

கருநிறம் அமைந்த கண்டத்தை உடையவனும், மலை மகளாகிய பார்வதியை இடப் பாகமாகக் கொண்டவனும், துதிக்கையோடு கூடியதாய்த் தன்னை எதிர்த்து வந்ததால் அழிவற்ற புகழ் பெற்ற யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்த, தன்னொப்பார் இல்லாத் தலைவனுமாகிய சிவபிரான் வயல்களில் முளைத்த குவளை மலர் போலும் கண்களை உடைய உமையம்மையோடும் நெய்யாடிய பெருமான் என்ற திருப்பெயரோடும் விளங்குமிடமாகிய நெய்த்தானம் என்ற திருப்பெயரைச் சொல்வீராக.

மேல்

(153)
பறையும், பழிபாவம்; படு துயரம்பல தீரும்;

பிறையும், புனல், அரவும், படு சடை எம்பெருமான் ஊர்

அறையும், புனல் வரு காவிரி அலை சேர் வடகரை மேல்,

நிறையும் புனை மடவார் பயில் நெய்த்தானம் எனீரே!.

காவிரி வடகரை மேல் உள்ள எம்பெருமான் ஊராகிய நெய்த்தானம் என்ற பெயரைச் சொல்லுமின் பழி பாவம் தீரும் என வினை முடிபு காண்க. ஆரவாரத்துடன் வரும் புனலின் அலைகள் சேரும் காவிரி வடகரையில் விளங்குவதும், பிறை கங்கை அரவம் ஆகியவற்றுடன் கூடிய சடைமுடியை உடைய எம்பெருமான் எழுந்தருளியதும், மனத்தைக் கற்பு நெறியில் நிறுத்தும் நிறை குணத்துடன் தம்மை ஒப்பனை செய்து கொள்ளும் மகளிர் பயில்வதுமாகிய நெய்த்தானம் என்ற ஊரின் பெயரைச் சொல்லுமின்; பழிநீங்கும், பாவங்கள் துன்பங்கள் அனைத்தும் தீரும்.

மேல்

(154)
பேய் ஆயின பாட, பெரு நடம் ஆடிய பெருமான்,

வேய் ஆயின தோளிக்கு ஒருபாகம் மிக உடையான்,

தாய் ஆகிய உலகங்களை நிலைபேறுசெய் தலைவன்,

நே ஆடிய பெருமான், இடம் நெய்த்தானம் எனீரே!.

ஊழிக் காலத்து, பேய்கள் பாட, மகா நடனம் ஆடிய பெருமானும், மூங்கில் போலத் திரண்ட தோள்களை உடைய உமை யம்மைக்குத் தனது திருமேனியின் ஒரு பாகத்தை வழங்கியவனும், அனைத்து உலகங்களிலும் வாழும் உயிர்களை நிலைபேறு செய்தருளும் தாய் போன்ற தலைவனும், அன்பர்களின் அன்பு நீரில் ஆடுபவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய நெய்த்தானம் என்ற திருப்பெயரைப் பலகாலும் சொல்வீராக.

மேல்

(155)
சுடு நீறு அணி அண்ணல், சுடர் சூலம் அனல் ஏந்தி,

நடு நள் இருள் நடம் ஆடிய நம்பன், உறைவு இடம் ஆம்

கடு வாள் இள அரவு ஆடு உமிழ் கடல் நஞ்சம் அது உண்டான்,

நெடுவாளைகள் குதிகொள் உயர் நெய்த்தானம் எனீரே!.

சுடப்பட்ட திருநீற்றை அணியும் தலைமையானவனும் ஒளி பொருந்திய சூலம் அனல் ஆகியவற்றைக் கைகளில் ஏந்தி இருள் செறிந்த இரவின் நடுயாமத்தே நடனம் ஆடும் நம்பனும், கொடிய ஒளி பொருந்திய இளைய வாசுகியாகிய பாம்பு உமிழ்ந்த நஞ்சோடு கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவனுமாகிய சிவபிரான் உறையும் இடமாகிய நீண்ட வாளை மீன்கள் துள்ளி விளையாடும் நீர்வளம் மிக்க நெய்த்தானம் என்ற ஊரின் பெயரைச் சொல்வீராக.

மேல்

(156)
நுகர் ஆரமொடு ஏலம் மணி செம்பொன் நுரை உந்தி,

பகரா வருபுனல் காவிரி பரவிப் பணிந்து ஏத்தும்,

நிகரால் மணல் இடு தண் கரை நிகழ்வு ஆய, நெய்த்தான-

நகரான் அடி ஏத்த, நமை நடலை அடையாவே.

நுகரத்தக்க பொருளாகிய சந்தனம், ஏலம், மணி, செம்பொன் ஆகியவற்றை நுரையோடு உந்தி விலை பகர்வது போல ஆரவாரித்து வரும் நீரை உடைய காவிரி பரவிப் பணிந்தேத்துவதும், ஒருவகையான மணல் சேர்க்கப்பெற்ற அவ்வாற்றின் தண்கரையில் விளங்குவதுமாகிய நெய்த்தானத்துக் கோயிலில் விளங்கும் சிவபிரான் திருவடிகளை ஏத்தத் துன்பங்கள் நம்மை அடையா.

மேல்

(157)
விடை ஆர் கொடி உடைய அணல், வீந்தார் வெளை எலும்பும்

உடையார், நறுமாலை சடை உடையார் அவர், மேய,

புடையே புனல் பாயும், வயல் பொழில் சூழ்ந்த, நெய்த்தானம்

அடையாதவர் என்றும் அமருலகம் அடையாரே.

இடபக் கொடியை உடைய அண்ணலும், மணம் கமழும் மாலைகளைச் சடைமேல் அணிந்தவனும் ஆகிய சிவபிரான் மேவியதும், அருகிலுள்ள கண்ணிகளிலும் வாய்க்கால்களிலும் வரும் நீர்பாயும் வயல்கள் பொழில்கள் சூழ்ந்ததும் ஆகிய நெய்த்தானம் என்னும் தலத்தை அடையாதவர் எக்காலத்தும் வீட்டுலகம் அடையார்.

மேல்

(158)
நிழல் ஆர் வயல் கமழ் சோலைகள் நிறைகின்ற நெய்த்தானத்து

அழல் ஆனவன், அனல் அங்கையில் ஏந்தி, அழகு ஆய

கழலான் அடி நாளும் கழலாதே, விடல் இன்றித்

தொழலார் அவர் நாளும் துயர் இன்றித் தொழுவாரே.

பயிர் செழித்து வளர்தலால் ஒளி நிறைந்த வயல்களும் மணம் கமழும் சோலைகளும் நிறைகின்ற நெய்த்தானத்தில், தழல் உருவில் விளங்குபவனும் அனலைத் தன் கையில் ஏந்தியவனும் அழகிய வீரக் கழல்களை அணிந்தவனும் ஆகிய சிவபிரானது திருவடிகளை நாள்தோறும் தவறாமலும் மறவாமலும் தொழுதலை உடைய அடியவர் எந்நாளும் துயரின்றி மற்றவர்களால் தொழத்தக்க நிலையினராவர்.

மேல்

(159)
அறை ஆர் கடல் இலங்கைக்கு இறை அணி சேர் கயிலாயம்

இறை ஆர முன் எடுத்தான், இருபது தோள் இற ஊன்றி,

நிறை ஆர் புனல் நெய்த்தானன் நன் நிகழ் சேவடி பரவ,

கறை ஆர் கதிர் வாள் ஈந்தவர் கழல் ஏத்துதல் கதியே.

அழகிய கயிலாய மலையைத் தன் இருபது முன் கரங்களாலும் பெயர்த்து எடுத்த ஓசை கெழுமிய கடல் சூழ்ந்த இலங்கைக்குரிய மன்னனாகிய இராவணன் இருபது தோள்களும் நெரியுமாறு காலை ஊன்றிப் பின் அவன் புனல் நிறைந்த நெய்த்தானப் பெருமானது விளங்கும் திருவடிகளைப் பரவ அவனுக்கு முயற்கறையை உடைய சந்திரனின் பெயரைப் பெற்ற சந்திரகாசம் என்ற வாளை ஈந்த அப்பெருமான் திருவடிகளை ஏத்துதலே, ஒருவற்கு அடையத்தக்க கதியாம்.

மேல்

(160)
கோலம் முடி நெடு மாலொடு, கொய் தாமரை யானும்,

சீலம் அறிவு அரிது ஆய் ஒளி திகழ்வு ஆய நெய்த்தானம்,

காலம் பெற, மலர் நீர் அவை தூவித் தொழுது ஏத்தும்

ஞாலம் புகழ் அடியார் உடல் உறு நோய் நலியாவே.

அழகிய முடியை உடைய திருமாலும், கொய்யத்தக்க தாமரைமலர் மேல் விளங்கும் நான்முகனும் தன் இயல்பை அறிதற்கியலாத நிலையில் ஒளிவடிவாய்த் திகழ்ந்த நெய்த்தானப் பெருமானை விடியற் பொழுதிலே நீராட்டி மலர் சூட்டித் தொழுதேத்தும் உலகு புகழ் அடியவரை உடலுறும் நோய்கள் நலியா.

மேல்

(161)
மத்தம் மலி சித்தத்து இறை மதி இல்லவர் சமணர்,

புத்தர் அவர், சொன்ன மொழி பொருளா நினையேன் மின்!

நித்தம் பயில் நிமலன் உறை நெய்த்தானம் அது ஏத்தும்

சித்தம் உடை அடியார் உடல் செறு நோய் அடையாவே.

சித்தத்தில் செருக்குடையவரும், சிறிதும் மதியில்லாதவரும் ஆகிய சமணர்களும், புத்தர்களும் கூறும் பொருளற்ற உரைகளை ஒரு பொருளாக நினையாதீர். நாள்தோறும் நாம் பழகி வழிபடுமாறு, குற்றமற்ற சிவபிரான் உறையும் நெய்த்தானத்தை வணங்கிப் போற்றும் சித்தத்தை உடைய அடியவர் உடலைத் துன்புறுத்தும் நோய்கள் அடையா.

மேல்

(162)
தலம் மல்கிய புனல் காழியுள் தமிழ் ஞானசம்பந்தன்

நிலம் மல்கிய புகழால் மிகும் நெய்த்தானனை நிகர் இல்

பலம் மல்கிய பாடல் இவை பத்தும் மிக வல்லார்,

சில மல்கிய செல்வன் அடி சேர்வர், சிவ கதியே.

தலங்களில் சிறந்த புனல் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் உலகெங்கும் பரவிய புகழால் மிக்க நெய்த்தானத்துப் பெருமான் மீது பாடிய,

ஒப்பற்ற பயன்கள் பலவற்றைத் தரும் பாடல்களாகிய இவற்றைக் கற்றுப் பலகாலும் பரவவல்லவர் சீலம் நிறைந்த செல்வன் அடியாகிய சிவகதியைச் சேர்வர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(16)
திருப்புள்ளமங்கைத் திருஆலந்துறை

(163)
பால் உந்து உறு திரள் ஆயின பரமன், பிரமன் தான்

போலும் திறலவர் வாழ்தரு பொழில் சூழ் புள மங்கை,

காலன் திறல் அறச் சாடிய கடவுள் இடம் கருதில்,

ஆலந்துறை தொழுவார் தமை அடையா, வினை தானே.

பாலினின்று மிதந்து வரும் வெண்ணெய்த் திரள் போல்பவரும், காலனது வலிமை முழுவதையும் அழித்தவரும், வேதப் புலமையில் நான்முகன் போன்ற அந்தணர் வாழும் பொழில்கள் சூழ்ந்த திருப்புள்ளமங்கையில் விளங்குபவரும் ஆகிய இறைவனை நினைந்து வழிபடுபவர்களை வினைகள் அடையா.

மேல்

(164)
மலையான் மகள் கணவன், மலி கடல் சூழ்தரு தன்மைப்

புலை ஆயின களைவான், இடம் பொழில் சூழ் புளமங்கை,

கலையால் மலி மறையோர் அவர் கருதித் தொழுது ஏத்த,

அலை ஆர் புனல் வரு காவிரி ஆலந்துறை அதுவே.

இமவான் மகளாகிய பார்வதி தேவியின் கணவனும் நீர் நிறைந்த கடல் சூழ்ந்த குளிர்ந்த இவ்வுலகில் உடலோடு பிறக்கும் பிறப்பைக் களைபவனும் ஆகிய சிவபெருமானது இடம், கலைகள் பலவற்றை அறிந்த அறிவால் நிறைந்த மறையவர்கள் மனத்தால் கருதிக் காயத்தால் தொழுது வாயால் ஏத்தி வழிபடுவதும், பொழில் சூழ்ந்ததும் அலைகளோடு கூடி நீர்பெருகி வரும் காவிரிக் கரையிலுள்ளதும் ஆகிய ஆலந்துறை என்னும் தலத்திலுள்ள புள்ள மங்கை என்னும் கோயிலாகும்.

மேல்

(165)
கறை ஆர் மிடறு உடையான், கமழ் கொன்றைச் சடை முடி மேல்

பொறை ஆர் தரு கங்கைப்புனல் உடையான், புளமங்கைச்

சிறை ஆர்தரு களி வண்டு அறை பொழில் சூழ் திரு ஆலந்

துறையான் அவன், நறை ஆர் கழல் தொழுமின், துதி செய்தே!.

விடக்கறை பொருந்திய கண்டத்தை உடையவனும், மணம் கமழும் கொன்றை மலர் அணிந்த சடைமுடியின்மீது சுமையாக அமைந்த கங்கையாற்றை அணிந்தவனுமாய சிவபிரானுக்குரியது, சிறகுகளுடன் கூடிய மதுவுண்ட வண்டுகள் ஒலிக்கும் பொழில்களால் சூழப்பட்ட ஆலந்துறையிலுள்ள புள்ளமங்கை என்னும் கோயிலாகும். அக்கோயிலுக்குச் சென்று அப்பெருமானது திருவடிகளைத் துதி செய்து தொழுவீராக.

மேல்

(166)
தணி ஆர் மதி அரவின்னொடு வைத்தான் இடம் மொய்த்து, எம்

பணி ஆயவன் அடியார் தொழுது ஏத்தும் புளமங்கை,

மணி ஆர்தரு கனகம் அவை வயிரத்திரளோடும்

அணி ஆர் மணல் அணை காவிரி ஆலந்துறை அதுவே.

தண்ணிய பிறைமதியைப் பாம்போடு முடிமிசை வைத்துள்ள சிவபெருமானது இடம், அடியவர்கள் எமது தொண்டுகளுக்குரியவன் எனத் தொழுது ஏத்துவதும், மணிகளோடு கூடிய பொன்னை வயிரக்குவைகளோடும், அழகிய மணலோடும் கொணர்ந்து சேர்க்கும் காவிரியின் தென்கரையிலுள்ளதுமான ஆலந்துறையில் அமைந்த புள்ளமங்கையாகும்.

மேல்

(167)
மெய்த் தன் உறும் வினை தீர் வகை தொழுமின்! செழு மலரின்

கொத்தின்னொடு சந்து ஆர் அகில் கொணர் காவிரிக் கரை மேல்,

பொத்தின் இடை ஆந்தை பல பாடும் புளமங்கை

அத்தன், நமை ஆள்வான், இடம் ஆலந்துறை அதுவே.

உயிர் உடலை அடுத்தற்குக் காரணமான வினைகள் நீங்கும் வகையில் பெருமானை நீவிர் வணங்குவீர்களாக. செழுமையான மலர்க் கொத்துக்களை உடைய சந்தனம், அகில் முதலியவற்றைக் கொண்டு வரும் காவிரியாற்றின் கரைமேல் உள்ளதும் பொந்துகளில் ஆந்தைகள் பல தங்கிப் பாடுவதும் ஆகிய ஆலந்துறையில் அமைந்த புள்ளமங்கை என்னும் கோயிலை இடமாகக் கொண்டுள்ள தலைவனாகிய சிவபெருமான் நம்மை ஆள்வான்.

மேல்

(168)
மன் ஆனவன், உலகிற்கு ஒரு மழை ஆனவன், பிழை இல்

பொன் ஆனவன், முதல் ஆனவன், பொழில் சூழ் புளமங்கை

என் ஆனவன், இசை ஆனவன், இள ஞாயிறின் சோதி

அன்னான் அவன், உறையும் இடம் ஆலந்துறை அதுவே.

உலகிற்குத் தான் ஒருவனே மன்னனாய் விளங்குபவனும், மழையாய்ப் பயிர்களை விளைவிப்பவனும், குற்றமற்ற பொன்னானவனும், உயிர்களுக்கு வாழ்முதலாக உள்ளவனும், எனக்குத் தலைவனாய் இசை வடிவாக விளங்குபவனும், இளஞாயிற்றின் ஒளியைப் போன்ற ஒளியினனுமாகிய சிவபெருமான் உறையும் இடம், ஆலந்துறையிலுள்ள புள்ளமங்கையாகும்.

மேல்

(169)
முடி ஆர் தரு சடைமேல் முளை இள வெண்மதி சூடி,

பொடி ஆடிய திருமேனியர், பொழில் சூழ் புளமங்கை,

கடி ஆர் மலர் புனல் கொண்டு தன் கழலே தொழுது ஏத்தும்

அடியார் தமக்கு இனியான், இடம் ஆலந்துறை அதுவே.

தலைமேல் விளங்கும் சடைமிசை முளை போன்ற இளம்பிறையைச் சூடி வெள்ளிய திருநீறு அணிந்த திருமேனியனாய், மணம் கமழும் மலர்களையும் நீரையும் கொண்டு தன் திருவடிகளை வணங்கி ஏத்தும் அடியார்களுக்கு இனியனாய் விளங்கும் சிவபெருமான் விரும்பி உறையும் இடம் பொழில் சூழ்ந்த ஆலந்துறையிலுள்ள புள்ளமங்கை என்னும் கோயிலாகும்.

மேல்

(170)
இலங்கை மனன் முடி தோள் இற, எழில் ஆர் திருவிரலால்

விலங்கல் இடை அடர்த்தான் இடம் வேதம் பயின்று ஏத்தி,

புலன்கள் தமை வென்றார் புகழவர் வாழ் புளமங்கை,

அலங்கல் மலி சடையான் இடம் ஆலந்துறை அதுவே.

இலங்கை மன்னனாகிய இராவணனின் தலைகளும், தோள்களும் நெரிய, எழுச்சி பொருந்திய அழகிய கால்விரலால் கயிலை மலையிடை அகப்படுத்தி அவனை அடர்த்த சிவபெருமானது இடம், வேதங்களை முறையாகக் கற்றறிந்து ஓதித் துதித்தலோடு புலன்களை வென்ற புகழுடைய அந்தணர் வாழ்வதும் மாலை அணிந்த சடைமுடி உடைய சிவபிரானுக்கு இடமாயிருப்பதும் ஆகிய ஆலந்துறையிலுள்ள புள்ளமங்கையாகும்.

மேல்

(171)
செறி ஆர்தரு வெள்ளைத் திரு நீற்றின் திருமுண்டப்

பொறி ஆர்தரு புரிநூல் வரை மார்பன் புளமங்கை,

வெறி ஆர்தரு கமலத்து அயன் மாலும், தனை நாடி

அறியா வகை நின்றான் இடம் ஆலந்துறை அதுவே.

வெண்மையான திருநீறு மூன்று பட்டைகளாய்ச் செறிய உத்தம இலக்கணம் ஆகிய மூன்று வரி பொருந்திய, முப்புரிநூல் அணிந்த மலை போன்ற திண்ணிய மார்பினை உடையவனும் மணம் கமழும் தாமரை மலர்மேல் உறையும் நான்முகன், திருமால் ஆகியோர் தன்னைத் தேடி அறியாவகை ஓங்கி நின்றவனுமாகிய சிவபெருமானுக்கு உரிய இடம், ஆலந்துறையிலுள்ள புள்ள மங்கையாகும்.

மேல்

(172)
நீதி அறியாத அமண்கையரொடு மண்டைப்

போதியவர் ஓது உரை கொள்ளார் புளமங்கை

ஆதி அவர் கோயில் திரு ஆலந்துறை தொழுமின்!

சாதி மிகு வானோர் தொழு தன்மை பெறல் ஆமே.

நீதி அறியாத அமணராகிய கீழ் மக்களும் பிச்சைப் பாத்திரத்தைக் கையில் ஏந்திப் போதிமரத்தடியில் உறையும் புத்த மதத்தினரும் கூறும் உரைகளை மெய்ம்மை எனக் கொள்ளாது எல்லாப் பொருள்கட்கும் ஆதியானவனாகிய ஆலந்துறைப் புள்ளமங்கைக் கோயிலில் உறையும் இறைவனைத் தொழுமின்; பல்வேறு பிரிவினராகிய தேவர்கள் தொழும் தன்மை பெறலாம்.

மேல்

(173)
பொந்தின் இடைத் தேன் ஊறிய பொழில் சூழ் புளமங்கை

அம் தண்புனல் வரு காவிரி ஆலந்துறை அரனைக்

கந்தம் மலி கமழ் காழியுள் கலை ஞானசம்பந்தன்

சந்தம் மலி பாடல் சொலி, ஆட, தவம் ஆமே.

மரப்பொந்துகளில் தேனீக்கள் சேகரித்த தேன் மிகுதியான அளவில் கிடைக்கும் பொழில்கள் சூழ்ந்ததும், அழகிய தண்மையான நீரைக் கொணர்ந்துதரும் காவிரிக்கரையில் உள்ளதும் ஆகிய ஆலந்துறைப் புள்ளமங்கை இறைவனை, மணம் நிறைந்து கமழும் காழிப் பதியில் தோன்றிய கலை நலம் உடைய ஞானசம்பந்தன் பாடிய,

சந்தம் நிறைந்த இத்திருப்பதிகப் பாடல்களை ஓதிப் பரவசமாய் ஆடத் தவம் கைகூடும்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(17)
திருஇடும்பாவனம்

(174)
மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் மைந்தர்கள் மலர் தூய்,

தனம் ஆர்தரு, சங்கக் கடல் வங்கத்திரள் உந்தி,

சினம் ஆர்தரு திறல் வாள் எயிற்று அரக்கன் மிகு, குன்றில்

இன மா தவர் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

மனத்தால் விரும்பப் பெற்ற மனைவியரோடு மகிழ்ச்சிமிக்க இளைஞர்களால் மலர்தூவி வழிபட்டுச் செல்வம் பெறுதற்குரியதாய் விளங்குவதும், சங்குகளை உடைய கடலில் உள்ள கப்பல்களை அலைகள் உந்தி வந்து சேர்ப்பிப்பதும் ஆகிய இடும்பாவனம், சினம் மிக்க வலிய ஒளிபொருந்திய பற்களை உடைய இடும்பன் என்னும் அரக்கனுக்குரிய வளம்மிக்க குன்றளூர் என்னும் ஊரில் முனிவர் குழாங்களால் வணங்கப் பெறும் சிவபிரானுக்குரிய இடம் ஆகும்.

மேல்

(175)
மலையார் தரு மடவாள் ஒரு பாகம் மகிழ்வு எய்தி,

நிலை ஆர்தரு நிமலன் வலி நிலவும் புகழ் ஒளி சேர்,

கலை ஆர்தரு புலவோர் அவர் காவல் மிகு, குன்றில்

இலை ஆர்தரு பொழில் சூழ்வரும் இடும்பாவனம் இதுவே.

இமவான் மகளாய் மலையிடைத் தோன்றி வளர்ந்த பார்வதி தேவியை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்து நிலையாக வீற்றிருந்தருளும் குற்றமற்ற சிவபிரானது வென்றி விளங்குவதும், புகழாகிய ஒளி மிக்க கலை வல்ல புலவர்கள் இடைவிடாது பயில்வதால் காவல்மிக்கு விளங்குவதுமான குன்றளூரை அடுத்துள்ள இலைகள் அடர்ந்த பொழில் சூழ்ந்த இடும்பாவனம் இதுவேயாகும்.

மேல்

(176)
சீலம் மிகு சித்தத்தவர் சிந்தித்து எழும் எந்தை,

ஞாலம் மிகு கடல் சூழ் தரும் உலகத்தவர் நலம் ஆர்,

கோலம் மிகு மலர் மென் முலை மடவார் மிகு, குன்றில்

ஏலம் கமழ் பொழில் சூழ் தரும் இடும்பாவனம் இதுவே.

தவ ஒழுக்கத்தால் மேம்பட்ட முனிவர்களால் சிந்தித்து வணங்கப்பெறும் எம் தந்தையாகிய சிவபிரான் எழுந்தருளிய தலம், நிலப்பரப்பினும் மிக்க பரப்புடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகச் சான்றோர்களும், நற்குணங்களும் அழகும் மலர்போலும் மென்மையான தனங்களும் உடைய பெண்களும் மிக்குள்ள குன்றளூரைச் சார்ந்த ஏல மணங்கமழும் பொழில் சூழ்ந்த இடும்பாவனம் எனப்படும் தலம் இதுவேயாகும்.

மேல்

(177)
பொழில் ஆர்தரு, குலை வாழைகள் எழில் ஆர் திகழ் போழ்தில்,

தொழிலால் மிகு தொண்டர் அவர் தொழுது ஆடிய முன்றில்,

குழல் ஆர்தரு மலர் மென் முலை மடவார் மிகு, குன்றில்

எழில் ஆர்தரும் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

குலைகள் தள்ளிய வாழைகள் செழித்துள்ள பொழில்கள் சூழப் பெற்றதும், அழகு திகழும் காலை மாலைப் பொழுதுகளில் பணி செய்வதால் சிறப்பு மிகுந்து விளங்கும் தொண்டர்கள் தொழுது ஆடி மகிழும் முன்றிலை உடையதும் மலர் சூடிய கூந்தலை உடைய மென்முலை மடவார் சூழ்ந்துள்ளதுமானகுன்றளூரை அடுத்துள்ள இடும்பாவனம் அழகுக்கு அழகு செய்யும் இறைவர்க்குரிய இடமாகும்.

மேல்

(178)
“பந்து ஆர் விரல் உமையாள் ஒரு பங்கா! கங்கை, முடிமேல்

செந்தாமரை மலர் மல்கிய செழு நீர் வயல் கரைமேல்,

கொந்து ஆர் மலர்ப்புன்னை, மகிழ், குரவம், கமழ் குன்றில்

எந்தாய்!” என, இருந்தான் இடம் இடும்பாவனம் இதுவே.

பந்தாடும் கை விரல்களை உடைய உமையவள் பங்கனே எனவும், கங்கை அணிந்த சடைமுடியோடு செந்தாமரை மலர்கள் நிறைந்த நீர் நிரம்பிய வளமான வயல்களின் கரைமேல் கொத்துக்களாக மலர்ந்த புன்னை, மகிழ், குரா ஆகியவற்றின் மணம் கமழ்கின்ற குன்றளூரில் எழுந்தருளிய எந்தாய் எனவும், போற்ற இருந்த இறைவனது இடம், இடும்பாவனம்

மேல்

(179)
நெறி நீர்மையர், நீள் வானவர், நினையும் நினைவு ஆகி,

அறி நீர்மையில் எய்தும் அவர்க்கு அறியும் அறிவு அருளி,

குறி நீர்மையர் குணம் ஆர்தரு மணம் ஆர்தரு குன்றில்,

எறி நீர் வயல் புடை சூழ்தரும் இடும்பாவனம் இதுவே.

தவ ஒழுக்கத்தால் சிறந்த முனிவர்கள், உயர்ந்த தேவர்கள் ஆகியோர் நினையும் நினைவுப் பொருளாகி, ஞானத்தால் தொழும் மேலான ஞானியர்கட்குத் தன்னை அறியும் அறிவை நல்கிச் சிவலிங்கம் முதலான குறிகளில் இருந்து அருள் புரிபவனாகிய சிவபெருமான் இடம், தூய சிந்தனையைத் தரும் மணம் கமழ்கின்ற குன்றளூரில் வரப்பை மோதும் நீர் நிரம்பிய வயல்கள் புடை சூழ்ந்து விளங்கும் இடும்பாவனமாகிய இத்தலமேயாகும்.

மேல்

(180)
நீறு ஏறிய திருமேனியர், நிலவும் உலகு எல்லாம்

பாறு ஏறிய படு வெண் தலை கையில் பலி வாங்கா,

கூறு ஏறிய மடவாள் ஒரு பாகம் மகிழ்வு எய்தி,

ஏறு ஏறிய இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

நீறணிந்த திருமேனியராய், விளங்கும் உலகெங்கணும் சென்று, பருந்து உண்ணவரும் தசையோடு கூடிய காய்ந்த பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி அன்பர்கள் இடும் உணவைப்பெற்று உமையம்மையைத் தன் மேனியின் ஒரு கூறாகிய இடப்பாகமாக ஏற்று மகிழ்ந்து விடைமீது வரும் சிவபெருமானுக்குரிய இடமாகிய இடும்பாவனம் இதுவேயாகும்.

மேல்

(181)
தேர் ஆர்தரு திகழ் வாள் எயிற்று அரக்கன், சிவன் மலையை

ஓராது எடுத்து ஆர்த்தான், முடி ஒருபஃது அவை நெரித்து,

கூர் ஆர்தரு கொலைவாளொடு குணம் நாமமும் கொடுத்த,

ஏர் ஆர்தரும், இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

வானவெளியில் தேர்மிசை ஏறிவந்த ஒளி பொருந்திய வாளையும் பற்களையும் உடைய அரக்கனாகிய இராவணன், சிவபிரான் எழுந்தருளிய கயிலை மலையின் சிறப்பை ஓராது, தன் தேர்தடைப்படுகிறது என்ற காரணத்திற்காக மலையைப் பெயர்த்துச் செருக்கால் ஆரவாரம் செய்ய, அவன் பத்துத் தலைமுடிகளையும் நெரித்தபின் அவன் வருந்திவேண்ட, கருணையோடு கூரிய கொலைவாள், பிற நன்மைகள், இராவணன் என்ற பெயர் ஆகியவற்றைக் கொடுத்தருளிய அழகனாகிய இறைவற்கு இடம் இடும்பாவனம்.

மேல்

(182)
பொருள் ஆர்தரும் மறையோர் புகழ் விருத்தர் பொலி மலி சீர்த்

தெருள் ஆர்தரு சிந்தையொடு சந்தம் மலர் பல தூய்,

மருள் ஆர்தரு மாயன் அயன் காணார் மயல் எய்த,

இருள் ஆர்தரு கண்டர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

தருக்கு மிகுந்த மாயனும் அயனும் காணாது மயங்கப் பொருள் நிறைந்த வேதங்களைக் கற்றுணர்ந்த அந்தணர்களால் புகழ்ந்து போற்றப் பெறும் பழமையானவரும், புகழ்மிக்க அம்மறையோர்களால் தெளிந்த சிந்தையோடு பல்வகை நிறங்களுடன் கூடிய மலர்களைத் தூவி வழிபடப் பெறுபவரும் ஆகிய அருள் நிறைந்த கண்டத்தை உடைய சிவபிரானுக்குரிய இடமாக விளங்கும் இடும்பாவனம், இதுவேயாகும்.

மேல்

(183)
தடுக்கை உடன் இடுக்கித் தலை பறித்துச் சமண் நடப்பார்,

உடுக்கைபல துவர்க்கூறைகள் உடம்பு இட்டு உழல்வாரும்,

மடுக்கள் மலர் வயல் சேர் செந்நெல் மலி நீர் மலர்க் கரைமேல்

இடுக் கண் பல களைவான் இடம் இடும்பாவனம் இதுவே.

பனை ஓலையால் செய்த தடுக்கைத் தம் கையில் இடுக்கிக்கொண்டு தலையிலுள்ள உரோமங்களைப் பறித்து முண்டிதமாக நடக்கும் சமணரும், உடுத்துவதற்குரிய காவியுடைகளை அணிந்து திரியும் புத்தரும் அறிய இயலாதவனாய், துன்பம் நீக்கி இன்பம் அருளும் இறைவனது இடம், தாமரை செங்கழுநீர் போன்ற மலர்களை உடைய மடுக்களும், செந்நெல் வயல்களும் சூழ்ந்த, நீர்மலர் மிக்க நீர்நிலைகளின் கரைமேல் விளங்கும் இடும்பாவனம் இதுவேயாகும்.

மேல்

(184)
கொடி ஆர் நெடுமாடக் குன்றளூரின் கரைக் கோல

இடி ஆர் கடல் அடி வீழ்தரும் இடும்பாவனத்து இறையை,

அடி ஆயும் அந்தணர் காழியுள் அணி ஞானசம்பந்தன்

படியால் சொன்ன பாடல் சொல, பறையும், வினைதானே.

கொடிகள் கட்டிய நீண்ட மாடங்களோடு கூடிய குன்றளூரில் கரைமீது இடியோசையோடு கூடிய அழகிய கடல் தன் அலைகளால் அடிவீழ்ந்து இறைஞ்சும் இடும்பாவனத்து இறைவனை, திருவடிகளையே சிந்தித்து ஆய்வு செய்யும் அந்தணர்கள் வாழும் காழிப் பதிக்கு அணியாய ஞானசம்பந்தன் முறையோடு அருளிய ,

இப்பாடல்களை ஓத, வினைகள் நீங்கும். தானே.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(18)
திருநின்றியூர்

(185)
சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம், சுடு நீறு;

பால் அம்மதி பவளச் சடை முடி மேலது பண்டைக்

காலன் வலி காலினொடு போக்கி, கடி கமழும்

நீல மலர்ப் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே.

முன்னொரு காலத்தில் காலனின் வலிமையைக் காலால் உதைத்துப் போக்கி, மணம் கமழும் நீல மலர்கள் மலர்ந்த பொய்கைகளை உடைய திருநின்றியூரில் நிலையாக எழுந்தருளியுள்ள இறைவற்குப் படைக்கலன் சூலம். சுண்ணப்பொடியும், சாந்தமும், திருநீறே. பால் போலும் வெண்மையான பிறைமதி அவரது செந்நிறச் சடைமுடியின் மேலது.

மேல்

(186)
அச்சம் இலர்; பாவம் இலர்; கேடும் இலர்; அடியார்,

நிச்சம் உறு நோயும் இலர் தாமும் நின்றியூரில்

நச்சம் மிடறு உடையார், நறுங்கொன்றை நயந்து ஆளும்

பச்சம் உடை அடிகள், திருப்பாதம் பணிவாரே.

நஞ்சை மிடற்றிலே நிறுத்தித் தேவர்களைக் காத்தருளியவரும், மணம் கமழும் கொன்றை மலர்களை விரும்பிச் சூடியவரும், தம்மை வழிபடும் அடியவர்களை ஆட்கொண்டருளும் அன்புடையவரும் ஆகிய நின்றியூரில் விளங்கும் இறைவரது பாதம் பணிவார் அச்சம், பாவம், கேடு, நாள்தோறும் வரும் நோய் ஆகியன இலராவர்.

மேல்

(187)
பறையின் ஒலி சங்கின் ஒலி பாங்கு ஆரவும், ஆர

அறையும் ஒலி எங்கும் அவை அறிவார் அவர் தன்மை;

நிறையும் புனல் சடை மேல் உடை அடிகள், நின்றியூரில்

உறையும் இறை, அல்லது எனது உள்ளம் உணராதே!.

பறையடிக்கும் ஒலி, சங்கு முழங்கும் முழக்கம், பக்கங்களிலெல்லாம் மிகவும் ஒலிக்கும் ஏனைய ஒலிகள் ஆகியவற்றில் இறைவனது நாத தத்துவத்தை அறிவோர் உணர்வர். நிறைந்த கங்கைப் புனலைச் சடைமிசை உடையவராய் நின்றியூரில் உறையும் அவ்விறைவரை அல்லது என் உள்ளம் பிறபொருள்களுள் ஒன்றனையும் உணராது.

மேல்

(188)
பூண்ட வரைமார்பில் புரிநூலன், விரி கொன்றை

ஈண்ட அதனோடு ஒரு பால் அம்மதி அதனைத்

தீண்டும் பொழில் சூழ்ந்த திரு நின்றி அது தன்னில்

ஆண்ட கழல் தொழல் அல்லது, அறியார் அவர் அறிவே!.

அணிகலன்களைப் பூண்ட மலைபோன்ற மார்பில் முப்புரி நூலை அணிந்து, விரிந்த கொன்றை மலர் மாலையையும் அதனோடும் பொருந்தப் பால் போன்ற வெண்மையான திங்களையும்சூடி, வானத்தைத் தீண்டும் பொழில்கள் சூழ்ந்த திருநின்றியூரில் எழுந்தருளி, நம்மை ஆண்டருளிய அவ்விறைவன் திருவடிகளைத் தொழுதல் அல்லது, அவன் இயல்புகளை அடியவர் எவரும் அறியார்.

மேல்

(189)
குழலின் இசை வண்டின் இசை கண்டு, குயில் கூவும்

நிழலின் எழில் தாழ்ந்த பொழில் சூழ்ந்த நின்றியூரில்,

அழலின் வலன் அங்கையது ஏந்தி, அனல் ஆடும்

கழலின் ஒலி ஆடும் புரி கடவுள் களைகணே.

குழலிசை வண்டிசை ஆகியவற்றைக் கேட்டுக் குயில்கள் கூவுவதும், நிழலின் அழகு தங்கியதுமாகிய பொழில்களால் சூழப்பட்ட நின்றியூரிடத்து அழலை வலத் திருக்கரத்தில் ஏந்தி அனலிடை நின்று கழல்களின் ஒலிகள் கேட்குமாறு ஆடும் இறைவன் நமக்குக் களைகண் ஆவான்.

மேல்

(190)
மூரல் முறுவல் வெண் நகை உடையாள் ஒரு பாகம்,

சாரல் மதி அதனோடு உடன் சலவம் சடை வைத்த

வீரன், மலி அழகு ஆர் பொழில் மிடையும் திரு நின்றி

யூரன், கழல் அல்லாது, எனது உள்ளம் உணராதே!.

புன்முறுவலைத் தரும் வெண்மையான பற்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, சடைமுடியில் சார்ந்துள்ள பிறைமதியோடு கங்கையை வைத்துள்ள வீரனும் அழகு மலிந்த பொழில்கள் செறிந்த திருநின்றியூரில் எழுந்தருளியவனுமாகிய சிவபிரான் திருவடிகளை அல்லாது எனது உள்ளம் வேறு ஒன்றையும் உணராது.

மேல்

(191)
பற்றி ஒரு தலை கையினில் ஏந்திப் பலி தேரும்

பெற்றி அது ஆகித் திரி தேவர் பெருமானார்,

சுற்றி ஒரு வேங்கை அதளோடும் பிறை சூடும்

நெற்றி ஒரு கண்ணார் நின்றியூரின் நிலையாரே.

பிரமனது தலைகளில் ஒன்றைப் பறித்து அதனைக் கையினில் ஏந்திப் பலிகேட்கும் இயல்பினராய்த் திரிகின்ற தேவர் தலைவரும் புலித்தோலை இடையில் சுற்றியிருப்பதோடு முடியில் பிறைமதியைச் சூடியவரும், நெற்றியில் ஒரு கண்ணை உடையவரும் ஆகிய பெருமானார் திருநின்றியூரின்கண் நிலையாக எழுந்தருளியுள்ளார்.

மேல்

(192)
நல்ல மலர் மேலானொடு ஞாலம் அது உண்டான்,

“அல்லர்” என, “ஆவர்” என, நின்றும் அறிவு அரிய

நெல்லின் பொழில் சூழ்ந்த நின்றியூரில் நிலை ஆர் எம்

செல்வர் அடி அல்லாது, என சிந்தை உணராதே!.

நல்ல தாமரை மலர்மேல் உறையும் நான்முகனோடு உலகைத் தன் வயிற்றகத்து அடக்கிக் காட்டிய திருமாலும், சிவபிரானே முழுமுதற் பொருள் ஆவர் எனவும் அல்லர் எனவும் கூறிக்கொண்டு தேடிக் காணுதற்கரியவராய் நின்றவரும் நெல்வயல்களால் சூழப்பட்ட நின்றியூரில் நிலையாக எழுந்தருளிய எம் செல்வருமாகிய சிவபிரான் திருவடிகளை அல்லது என் சிந்தை வேறொன்றையும் உணராது.

மேல்

(193)
நெறியில் வரு பேரா வகை நினையா நினைவு ஒன்றை

அறிவு இல் சமண் ஆதர் உரை கேட்டும் அயராதே,

நெறி இல்லவர் குறிகள் நினையாதே, நின்றியூரில்

மறி ஏந்திய கையான் அடி வாழ்த்தும் அது வாழ்த்தே!.

சமய நெறியில் பயில்வதால் பேராமலும் மறவாமலும் நினைக்கும் முழுமுதற்பொருளை அறியும் அறிவற்றசமணர்களாகிய நெறியற்ற கீழ்மக்களின் உரைகளைக் கேட்டு மயங்காமலும், தமக்கென்று உண்மை நெறியல்லாத புறச் சமயிகளின் அடையாளங்களைக் கருதாமலும் நின்றியூரில் மான் ஏந்திய கையனாய் விளங்கும் இறைவன் திருவடிகளை வாழ்த்துவதே வாழ்த்தாகும்.

மேல்

(194)
குன்றம் அது எடுத்தான் உடல் தோளும் நெரிவு ஆக

நின்று அங்கு ஒருவிரலால் உற வைத்தான் நின்றியூரை

நன்று ஆர்தரு புகலித் தமிழ் ஞானம் மிகு பந்தன்

குன்றாத் தமிழ் சொல்லக் குறைவு இன்றி நிறை புகழே.

கயிலைமலையை எடுத்த இராவணனின் உடல்தோள் ஆகியன நெரியத் தன் கால்விரல் ஒன்றால் ஊன்றியவனது நின்றியூர் மீது, நன்மைகளையே செய்யும் புகலிப் பதியில் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் உரைத்த திருவருள் நலம் குன்றாத,

இத்திருப்பதிகப் பாடல்களை உரைப்பதனால் குறைவின்றிப் புகழ் நிறையும்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(19)
திருக்கழுமலம் - (திருவிராகம்)
நட்டபாடை

(195)
பிறை அணி படர் சடை முடி இடைப் பெருகிய புனல் உடையவன்; நிறை

இறை அணி வளை, இணை முலையவள், இணைவனது எழில் உடை இட வகை

கறை அணி பொழில் நிறை வயல் அணி கழுமலம் அமர் கனல் உருவினன்;

நறை அணி மலர் நறுவிரை புல்கு நலம் மலி கழல் தொழல் மருவுமே!.

பிறை அணிந்த விரிந்த சடைமுடியின்கண் பெருகிவந்த கங்கையை உடைய இறைவனும், முன்கையில் அழகிய வளையலை அணிந்த உமையம்மையின் இரண்டு தனபாரங்களோடு இணைபவனும், அழகிய இடவகைகளில் ஒன்றான நிழல்மிக்க பொழில்கள் நிறைந்ததும் நெல் வயல்கள் அணி செய்வதுமாகிய திருக்கழுமலத்தில் எழுந்தருளியுள்ள அழல் போன்ற சிவந்த மேனியனுமாகிய சிவபிரானின் தேன்நிறைந்த மலர்களின் நறுமணம் செறிந்த அழகிய திருவடிகளைத் தொழுதல் செய்மின்கள்.

மேல்

(196)
பிணி படு கடல் பிறவிகள் அறல் எளிது; உளது அது பெருகிய திரை;

அணி படு கழுமலம் இனிது அமர் அனல் உருவினன், அவிர் சடை மிசை

தணிபடு கதிர் வளர் இளமதி புனைவனை, உமைதலைவனை, நிற

மணி படு கறைமிடறனை, நலம் மலி கழல் இணை தொழல் மருவுமே!.

இடைவிடாமல் நம்மைப் பிணிக்கும் கடல் போன்றபிறவிகள் நீங்குதல் எளிதாகும். அப்பிறவிக்கடல் மிகப் பெரிதாகிய துன்ப அலைகளை உடையது. ஆதலின் அழகிய கழுமலத்துள் இனிதாக அமர்கின்ற அழலுருவினனும் விரிந்த சடைமீது குளிர்ந்த கிரணங்களை உடைய பிறைமதியைச் சூடியவனும், உமையம்மையின் மணாளனும், நீலமணிபோலும் நிறத்தினை உடைய கறைக் கண்டனும் ஆகிய சிவபிரானின் நலம் நிறைந்த திருவடிகளைத் தொழுதல் செய்மின்.

மேல்

(197)
வரி உறு புலி அதள் உடையினன், வளர்பிறை ஒளி கிளர் கதிர் பொதி

விரி உறு சடை, விரை புழை பொழில் விழவு ஒலி மலி கழுமலம் அமர்

எரி உறு நிற இறைவனது அடி இரவொடு பகல் பரவுவர் தமது

எரி உறு வினை, செறிகதிர் முனை இருள் கெட, நனி நினைவு எய்துமதே.

கோடுகள் பொருந்திய புலியின் தோலை ஆடையாக உடுத்தவனாய், ஒளி மிக்குத் தோன்றும் கிரணங்களையுடைய வளர்பிறையை அணிந்த சடையை உடையவனாய், மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்ததும் திருவிழாக்களின் ஒலி நிறைந்ததும் ஆகியகழுமலத்துள் அழல் வண்ணனாய் விளங்கும் இறைவன் திருவடிகளை, இரவும் பகலும் பரவுகின்றவர்களின் வருத்துகின்ற வினைகள் மிக்க ஒளியை உடைய ஞாயிற்றின் முன் இருள் போலக் கெட்டொழியும். ஆதலால், அப்பெருமான் திருவடிகளை நன்றாக நினையுங்கள்.

மேல்

(198)
வினை கெட மன நினைவு அது முடிக எனின், நனி தொழுது எழு குலமதி

புனை கொடி இடை பொருள் தரு படு களிறினது உரி புதை உடலினன்,

மனை குடவயிறு உடையனசில வரு குறள் படை உடையவன், மலி

கனை கடல் அடை கழுமலம் அமர் கதிர் மதியினன், அதிர் கழல்களே!.

உயர்ந்த பிறை மதி, கொடி போன்ற இடையையுடைய கங்கை, மந்திரப்பொருளால் உண்டாக்கப்பட்டுத் தோன்றிய யானையின் தோல் இவற்றை உடைய உடலினனும், வீட்டுக் குடம் போலும் வயிற்றினை உடைய பூதங்கள் சிலவற்றின் படையை உடையவனும், ஆரவாரம் நிறைந்த கடற்கரையை அடுத்த கழுமலத்துள் ஞாயிறு திங்கள் ஆகியவற்றைக் கண்களாகக் கொண்டு அமர்ந்தவனுமாகிய சிவபெருமானின் ஒலிக்கும் கழற் சேவடிகளை, வினைகள் கெடவும் மனத்தில் நினைவது முடியவும் வேண்டின் நன்கு தொழுதெழுக.

மேல்

(199)
தலைமதி, புனல், விட அரவு, இவை தலைமையது ஒரு சடை இடை உடன்-

நிலை மருவ ஓர் இடம் அருளினன்; நிழல் மழுவினொடு அழல் கணையினன்;

மலை மருவிய சிலைதனில் மதில் எரியுண மனம் மருவினன்-நல

கலை மருவிய புறவு அணிதரு கழுமலம் இனிது அமர் தலைவனே.

நல்ல கலைமான்கள் பொருந்திய சிறுகாடுகள் புறத்தே அழகு பெறச் சூழ்ந்துள்ள கழுமலத்தில் இனிதாக எழுந்தருளிய இறைவன், ஒரு நாட்பிறை, கங்கை, நஞ்சு பொருந்திய பாம்பு ஆகியவற்றுக்குத் தன் தலைமையான சடைக் காட்டின் நடுவில் ஒன்றாக இருக்குமாறு இடம் அருளியவன். ஒளி பொருந்திய மழுவோடு அழல் வடிவான அம்பினை மேருமலையாகிய வில்லில் பூட்டி எய்தலால் திரிபுரங்கள் எரியுண்ணுமாறு மனத்தால் சிந்தித்தவன்.

மேல்

(200)
வரை பொருது இழி அருவிகள் பல பருகு ஒரு கடல் வரி மணல் இடை,

கரை பொரு திரை ஒலி கெழுமிய கழுமலம் அமர் கனல் உருவினன்;

அரை பொரு புலி அதள் உடையினன்; அடி இணை தொழ, அருவினை எனும்

உரை பொடி பட உறு துயர் கெட, உயர் உலகு எய்தல் ஒருதலைமையே.

மலைகளைப் பொருது இழிகின்ற அருவிகள் பலவற்றைப் பருகுகின்ற பெரிய கடலினை அடுத்துள்ள வரிகளாக அமைந்த மணற்பரப்பில் அமைந்ததும், கரையைப் பொரும் கடல் அலைகளின் ஓசை எப்போதும் கேட்கின்றதுமாகிய கழுமலத்துள் எழுந்தருளியுள்ளவனும், கனல் போலும் சிவந்த திருமேனியனும், இடையிலே கட்டிய புலித்தோலை உடையவனுமாகிய சிவபிரானின் இணை அடிகளைத்தொழின், போக்குதற்கு அரியனவாகிய வினைகள் என்னும் வார்த்தையும் பொடிபட, மிக்க துயர்கள் நீங்க உயர்ந்த உலகமாகிய வீட்டுலகத்தைப் பெறுதல் நிச்சயமாகும்.

மேல்

(201)
முதிர் உறு கதிர் வளர் இளமதி சடையனை, நற நிறை தலைதனில்;

உதிர் உறு மயிர் பிணை தவிர் தசை உடை புலி அதள் இடை; இருள் கடி

கதிர் உறு சுடர் ஒளி கெழுமிய கழுமலம் அமர் மழு மலி படை,

அதிர் உறு கழல், அடிகளது அடி தொழும் அறிவு அலது அறிவு அறியமே.

மலர்கள் சூடுவதால் தேன் நிறைந்துள்ள திருமுடியில் உலகிற் பயிர்களை முதிர்விக்கும் கிரணங்கள் வளர்கின்றமதியைச் சூடிய சடையை உடையவனாய், உதிரத்தக்க மயிர் பிணைந்து தசை தவிர்ந்துள்ள புலித்தோலை உடுத்த இடையை உடையவனாய், இருளை நீக்கும் கதிரவனின் சுடரொளி பொருந்திய மழுவாகிய படையை ஏந்திக் கழுமலத்துள் அமர்கின்ற பெருமானின் கழல்கள் அணிந்த திருவடிகளைத் தொழும் அறிவல்லது பிறவற்றை அறியும் அறிவை அறியோம்.

மேல்

(202)
கடல் என நிற நெடுமுடியவன் அடுதிறல் தெற, "அடி சரண்!" என,

அடல் நிறை படை அருளிய புகழ் அரவு அரையினன், அணி கிளர் பிறை,

விடம் நிறை மிடறு உடையவன், விரிசடையவன், விடை உடையவன், உமை

உடன் உறை பதி கடல் மறுகு உடை உயர் கழுமல வியல் நகர் அதே.

கடல் போன்ற கரிய நிறத்தினனும், நீண்ட முடியை அணிந்தவனும் ஆகிய இராவணனின் வலிமை கெடுமாறு செய்து பின் அவன் திருவடிகளே சரண் என வேண்ட அவனுக்கு வலிமை மிக்க வாட்படை அருளிய புகழுடையவனும், பாம்பை இடையில் கட்டியவனும், அழகுமிக்க பிறையை அணிந்தவனும், விடம் தங்கிய கண்டத்தை உடையவனும், விரித்த சடையை உடையவனும், விடை ஊர்தியனும் ஆகிய பெருமான் உமையம்மையோடு உறையும் பதி, கடல் அலைகளையுடைய உயர்ந்த கழுமலம் எனப்படும் பெரிய நகராகும்.

மேல்

(203)
கொழு மலர் உறை பதி உடையவன், நெடியவன், என இவர்களும், அவன்

விழுமையை அளவு அறிகிலர், இறை; விரை புணர் பொழில் அணி விழவு அமர்

கழுமலம் அமர் கனல் உருவினன் அடி இணை தொழுமவர் அருவினை

எழுமையும் இல, நில வகைதனில்; எளிது, இமையவர் வியன் உலகமே.

செழுமையான தாமரை மலரை உறையும் இடமாகக் கொண்ட பிரமன், திருமால் ஆகிய இவர்களும் சிவபெருமானது சிறப்பைச் சிறிதும் அறியார். அப்பெருமான், மணம் பொருந்திய பொழில்கள் சூழப் பெற்றதும் அழகிய விழாக்கள் பல நிகழ்வதுமாகிய கழுமலத்துள் எழுந்தருளிய அழல் உருவினன். அப்பெருமானுடைய திருவடி இணைகளைத் தொழுபவர்களின் நீங்குதற்கரிய வினைகள் இப்பூவுலகில் ஏழு பிறப்பின்கண்ணும் இலவாகும். இமையவர்களின் பெரிய உலகத்தை அடைதல் அவர்கட்கு எளிதாகும்.

மேல்

(204)
அமைவன துவர் இழுகிய துகில் அணி உடையினர், அமண் உருவர்கள்,

சமையமும், ஒரு பொருள் எனும் அவை, சல நெறியன, அற உரைகளும்;

இமையவர் தொழு கழுமலம் அமர் இறைவனது அடி பரவுவர் தமை

நமையல வினை; நலன் அடைதலில் உயர்நெறி நனி நணுகுவர்களே!.

தமக்குப் பொருந்துவனவாகிய மருதந்துவர் ஊட்டின ஆடையை அணிந்தவர்களாகிய புத்தர்களும், ஆடையற்ற சமணர்களும் ஒரு பொருள் எனக்கூறும் சமய நெறிகளும் அறவுரைகளும் ஆகிய அவை வஞ்சனை மார்க்கத்தை வகுப்பன என உணர்ந்து தேவர்களால் தொழப்படுகின்ற கழுமலத்துள் எழுந்தருளிய இறைவன் திருவடிகளைப் பரவுவார்களை வினைகள் வருத்தா. நலன் அடைதலின் உயர்நெறிகளை அவர்கள் அடைவார்கள்.

மேல்

(205)
பெருகிய தமிழ் விரகினன், மலி பெயரவன், உறை பிணர் திரையொடு

கருகிய நிற விரிகடல் அடை கழுமலம் உறைவு இடம் என நனி

பெருகிய சிவன் அடி பரவிய, பிணை மொழியன, ஒருபதும் உடன்-

மருவிய மனம் உடையவர் மதி உடையவர்; விதி உடையவர்களே.

பரந்துபட்ட நூல்களைக் கொண்டுள்ள தமிழ்மொழியை ஆழ உணர்ந்தவனும், மிக்க புகழாளனும் ஆகிய ஞானசம்பந்தன் நீர்த்துளிகளோடு மடங்கும் அலைகளுடன் கருமை நிறம் வாய்ந்த கடலின் கரையில் விளங்கும் கழுமலம் இறைவனது உறைவிடம் என மிகவும் புகழ் பரவிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றிப் பாடிய,

அன்பு பிணைந்த இப்பத்துப் பாடல்களையும் ஓதிமனம் பொருந்த வைக்கும் அன்பர்கள், நிறைந்த ஞானமும் நல்லூழும் உடையவராவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(20)
திருவீழிமிழலை - திருவிராகம் நட்டபாடை

(206)
தட நிலவிய மலை நிறுவி, ஒரு தழல் உமிழ்தரு பட அரவுகொடு,

அடல் அசுரரொடு அமரர்கள், அலைகடல் கடைவுழி எழும் மிகு சின

விடம் அடைதரும் மிடறு உடையவன்; விடைமிசை வருமவன்; உறை பதி

திடம் மலிதரு மறை முறை உணர் மறையவர் நிறை திரு மிழலையே.

பெரியதாகிய மந்தரமலையை மத்தாக நிறுத்தி அழல் போலும் கொடிய நஞ்சை உமிழும் படத்தோடு கூடிய வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக் கட்டி வலிய அசுரர்களோடு தேவர்கள் அலைகள் பொருந்திய திருப்பாற்கடலைக் கடைந்த விடத்துத் தோன்றிய உக்கிரமான ஆலகாலம் என்னும் நஞ்சு அடைந்த கண்டத்தை உடையவனும், விடையின்மீது வருபவனும் ஆகிய சிவபிரான் உறையும் தலம். நான்மறைகளை முறையாக ஓதி உணர்ந்த உறுதி வாய்ந்த மறையவர் நிறைந்துள்ள திருவீழிமிழலையாகும்.

மேல்

(207)
தரையொடு திவிதலம் நலிதரு தகு திறல் உறு சலதரனது

வரை அன தலை விசையொடு வரு திகிரியை அரி பெற அருளினன்;

உரை மலிதரு சுரநதி, மதி, பொதி சடையவன்; உறை பதி மிகு

திரை மலி கடல் மணல் அணிதரு பெறு திடர் வளர் திரு மிழலையே.

மண்ணுலகத்தோடு விண்ணுலகையும் நலிவுறுத்துகின்ற வலிமை பொருந்திய சலந்தராசுரனின் மலை போன்ற தலையை வேகமாக அறுத்து வீழ்த்திய சக்கராயுதத்தைத் திருமால் வேண்ட அவர்க்கு அருளியவனும், புகழால் மிக்க கங்கை நதி மதி ஆகியன பொதிந்த சடைமுடியை உடையவனுமாகிய சிவபெருமான் உறையும் தலம், பெரிய அலைகளை உடைய கடற்கரை, மணலால் அழகுபெறும் மணல் மேடுகள் நிறைந்த திருவீழிமிழலையாகும்.

மேல்

(208)
மலைமகள் தனை இகழ்வு அது செய்த மதி அறு சிறுமனவனது உயர்

தலையினொடு அழல் உருவன கரம் அற முனிவு செய்தவன் உறை பதி

கலை நிலவிய புலவர்கள் இடர் களைதரு கொடை பயில்பவர் மிகு,

சிலை மலி மதில் புடை தழுவிய, திகழ் பொழில் வளர், திரு மிழலையே.

மலைமகளாகிய பார்வதிதேவியை இகழ்ந்த அறிவற்ற அற்ப புத்தியையுடைய தக்கனுடைய தலையோடு அழலோனின் கை ஒன்றையும் அரிந்து, தன் சினத்தை வெளிப்படுத்திய சிவபிரான் உறையும் தலம், கலை ஞானம் நிரம்பிய புலவர்களின் வறுமைத்துன்பம் நீங்க நிறைந்த செல்வத்தை வழங்கும் கொடையாளர்கள்வாழ்வதும் பெரிய மதில்களால் சூழப் பெற்றதும் விளங்குகின்ற பொழில்கள் வளர்வதுமாய திருவீழிமிழலையாகும்.

மேல்

(209)
மருவலர் புரம் எரியினில் மடிதர ஒரு கணை செல நிறுவிய

பெரு வலியினன், நலம் மலிதரு கரன், உரம் மிகு பிணம் அமர் வன

இருள் இடை அடை உறவொடு நட விசை உறு பரன், இனிது உறை பதி

தெருவினில் வரு பெரு விழவு ஒலி மலிதர வளர் திரு மிழலையே.

பகைமை பாராட்டிய திரிபுராதிகளின் முப்புரங்களும் எரியில் அழியுமாறு கணை ஒன்றைச் செலுத்திய பெரு வலிபடைத்தவனும், நன்மைகள் நிறைந்த திருக்கரங்களை உடையவனும், வலிய பிணங்கள் நிறைந்த சுடுகாட்டில் நள்ளிருட்போதில் சென்று அங்குத் தன்னை வந்தடைந்த பேய்களோடு நடனமாடி இசை பாடுபவனுமாகிய பரமன் மகிழ்வோடு உறையும் பதி, தெருக்கள் தோறும் நிகழும் பெருவிழாக்களின் ஆரவாரம் நிறைந்து வளரும் திருவீழிமிழலையாகும்.

மேல்

(210)
அணி பெறு வட மர நிழலினில், அமர்வொடும் அடி இணை இருவர்கள்

பணிதர, அறநெறி மறையொடும் அருளிய பரன் உறைவு இடம் ஒளி

மணி பொருவு அரு மரகத நிலம் மலி புனல் அணை தரு வயல் அணி,

திணி பொழில் தரு மணம் மது நுகர் அறுபதம் முரல், திரு மிழலையே.

அழகிய கல்லால மரநிழலில் எழுந்தருளியிருந்து தம் திருவடி இணைகளைச் சனகர் சனந்தனர் ஆகிய இருவர் ஒருபுறமும், சனாதனர் சனற்குமாரர் ஆகிய இருவர் மறுபுறமும் பணிய அவர்கட்கு அறநெறியை வேதங்களோடும் அருளிச் செய்த சிவபிரான் உறையும் இடம், ஒளி பொருந்திய மணிகள் ஒப்பில்லாத மரகதம் ஆகியவற்றை அடித்துவரும் ஆற்றுநீர் நிலமெல்லாம் நிறைந்து வளங்களால் அணி செய்யப் பெறுவதும் செறிந்த பொழில்கள்தரும் மணத்தை நுகரும் வண்டுகள் முரல்வதுமான திருவீழிமிழலையாகும்.

மேல்

(211)
வசை அறு வலி வனசர உரு அது கொடு, நினைவு அருதவம் முயல்

விசையன திறல் மலைமகள் அறிவு உறு திறல் அமர் மிடல்கொடு செய்து,

அசைவு இல படை அருள் புரிதருமவன் உறை பதி அது மிகு தரு

திசையினில் மலர் குலவிய செறி பொழில் மலிதரு திரு மிழலையே.

குற்றமற்ற வலிய வேடர் உருவைக் கொண்டு, நினைதற்கும் அரிய கடுந்தவத்தைச் செய்யும் விசயனுடையவலிமையை உமையம்மைக்கு அறிவுறுத்தும் வகையில் அவனோடு வலிய போரைத் தன் வலிமை தோன்றச் செய்து அவ்விசயனுக்குத் தோல்வி எய்தாத பாசுபதக்கணையை வழங்கி அருள்புரிந்த சிவபிரான் உறையும் பதி, செறிந்த மரங்கள் திசைகள் எங்கும் மலர்கள் பூத்துக் குலாவும் செறிந்த பொழில்கள் நிறைந்துள்ள திருவீழிமிழலையாகும்.

மேல்

(212)
நலம் மலிதரு மறைமொழியொடு, நதி உறுபுனல், புகை, ஒளி முதல்,

மலர் அவைகொடு, வழிபடு திறல் மறையவன் உயிர் அது கொள வரு

சலம் மலிதரு மறலிதன் உயிர்கெட, உதைசெய்த அரன் உறை பதி

"திலகம் இது!" என உலகுகள் புகழ்தரு, பொழில் அணி, திரு மிழலையே.

நன்மைகள் பலவும் நிறைந்த வேத மந்திரங்களை ஓதி, ஆற்று நீர், மணப்புகை, தீபம், மலர்கள் ஆகியனவற்றைக் கொண்டு பூசை புரிந்து வழிபடும் மறையவனாகிய மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த வஞ்சகம் மிக்க இயமனின் உயிர் கெடுமாறு உதைத்தருளிய சிவபிரான் உறையும்பதி, உலக மக்கள் திலகம் எனப் புகழ்வதும் பொழில்கள் சூழ்ந்துள்ளதுமான திருவீழிமிழலையாகும்.

மேல்

(213)
அரன் உறைதரு கயிலையை நிலை குலைவு அது செய்த தசமுகனது

கரம் இருபதும் நெரிதர விரல் நிறுவிய கழல் அடி உடையவன்;

வரல் முறை உலகு அவை தரு, மலர் வளர், மறையவன் வழி வழுவிய

சிரம் அதுகொடு பலி திரிதரு சிவன்; உறை பதி திரு மிழலையே.

சிவபிரான் எழுந்தருளிய கயிலைமலையை நிலைகுலையச் செய்து அதனைப் பெயர்த்த பத்துத் தலைகளை உடைய இராவணனுடைய இருபது கரங்களும் நெரியுமாறு தன் கால்விரலை ஊன்றிய வீரக்கழல் அணிந்த திருவடிகளை உடையவனும், வரன் முறையால் உலகைப் படைக்கும் பூவின் நாயகனான பிரமன் வழி வழுவியதால் ஐந்தாயிருந்த அவன் சிரங்களில் ஒன்றைக் கிள்ளி எடுத்து அதன்கண் பலியேற்றுத் திரிபவனுமாகிய சிவபிரான் உறையும் பதி திருவீழிமிழலையாகும்.

மேல்

(214)
அயனொடும் எழில் அமர் மலர் மகள் மகிழ் கணன், அளவிடல் ஒழிய, ஒரு

பயம் உறு வகை தழல் நிகழ்வது ஒரு படி உரு அது வர, வரல்முறை,

"சய சய!" என மிகு துதிசெய, வெளி உருவிய அவன் உறை பதி

செயம் நிலவிய மதில் மதி அது தவழ்தர உயர் திரு மிழலையே.

நான்முகனும் அழகிய மலர்மகள் கேள்வனாகிய கண்ணனும் அளவிடமுடியாது அஞ்சி நிற்க, ஒரு சோதிப் பிழம்பாய்த் தோன்ற அவ்விருவரும் முறையாக சயசய எனப்போற்றித் துதிசெய்யுமாறு அண்டங்கடந்த அச்சிவபிரான் உறையும் பதி, வெற்றி விளங்கும் மதில்களில் மதி தோய்ந்து செல்லுமாறு உயர்ந்து தோன்றும் திருவீழிமிழலையாகும்.

மேல்

(215)
இகழ் உருவொடு பறி தலை கொடும் இழி தொழில் மலி சமண்விரகினர்,

திகழ் துவர் உடை உடல் பொதிபவர், கெட, அடியவர் மிக அருளிய

புகழ் உடை இறை உறை பதி புனல் அணி கடல் புடை தழுவிய புவி

திகழ் சுரர்தரு நிகர் கொடையினர் செறிவொடு திகழ் திரு மிழலையே.

பிறரால் இகழத்தக்க உருவோடும் உரோமங்களைப் பறித்தெடுத்தலால் முண்டிதமான தலையோடும் இழி தொழில் மிகுதியாகப் புரியும் சமணர்களாகிய தந்திரசாலிகளும், விளங்கும் மருதந்துவராடையை உடலில் போர்த்துத் திரியும் சாக்கியர்களும் அழிந்தொழியத் தன் அடியவர்களுக்கு மிகவும் அருள் புரிபவனும் புகழாளனுமாகிய இறைவன் உறையும் பதி நீர்வளம் மிக்கதும் கடலாற் சூழப்பட்ட இவ்வுலகில் விளங்கும் சுரர் தருவாகிய கற்பகம் போன்ற கொடையாளர் மிக்கு விளங்குவதுமாகிய திருவீழிமிழலையாகும்.

மேல்

(216)
சினம் மலி கரி உரிசெய்த சிவன் உறைதரு திரு மிழலையை, மிகு

தன மனர், சிரபுரநகர் இறை தமிழ்விரகனது உரை ஒருபதும்

மன மகிழ்வொடு பயில்பவர், எழில் மலர் மகள், கலை மகள், சய மகள்,

இனம் மலி புகழ்மகள், இசை தர, இரு நிலன் இடை இனிது அமர்வரே.

சினவேகத்தோடு வந்த யானையை உரித்துப் போர்த்த சிவபிரான் எழுந்தருளிய திருவீழிமிழலையை, மிக்க செல்வங்களால் நிறைந்த மனமகிழ்வுடையவர் வாழும் சிவபுரநகரின் மன்னனும் தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் உரைத்த ,

இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் மனமகிழ்வோடு பயில்பவர் அழகிய திருமகள், கலைமகள், சயமகள், அவர்க்கு இனமான புகழ் மகள் ஆகியோர் தம்பால் பொருந்த, பெரிய இவ்வுலகின்கண் இனிதாக வாழ்வர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(21)
திருச்சிவபுரம் - திருவிராகம் நட்டபாடை

(217)
புவம், வளி, கனல், புனல், புவி, கலை, உரை மறை, திரிகுணம், அமர் நெறி,

திவம் மலிதரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர் அவை, அவைதம

பவம் மலி தொழில் அது நினைவொடு, பதும நல்மலர் அது மருவிய

சிவனது சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிலைபெறுவரே.

விண், காற்று, தீ, நீர், மண் ஆகிய ஐம்பெரும் பூதங்களையும், எண்ணெண் கலைகளை உரைத்தருளும் வேதங்களையும், முக்குணங்களையும், விரும்பத்தக்க மார்க்கங்களையும், வானுலகில்வாழும் தேவர்கள் முதலியவர்களாய் விளங்கும் உயிர்களையும், தம்முடைய படைப் பாற்றல் நினைவோடு நல்ல தாமரை மலரில் விளங்கும் நான்முகனை அதிட்டித்து நின்று உலகைத் தோற்றுவித்தருளும் சிவபெருமானது சிவபுரத் தலத்தை நினைப்பவர் வளமையான இவ்வுலகில் நிலைபெற்று வாழ்வர்.

மேல்

(218)
மலை பல வளர் தரு புவி இடை மறை தரு வழி மலி மனிதர்கள்,

நிலை மலி சுரர் முதல் உலகுகள், நிலை பெறு வகை நினைவொடு மிகும்

அலை கடல் நடுவு அறிதுயில் அமர் அரி உருவு இயல் பரன் உறை பதி

சிலை மலி மதில் சிவபுரம் நினைபவர் திரு மகளொடு திகழ்வரே.

மலைகள் பல வளரும் இம்மண்ணுலகில் வேத விதிகளின் படி நடக்கும் மிகுதியான மக்கள், விண்ணில் நிலைபேறுடையவராய் வாழும் தேவர்கள் ஆகியோரும் மற்றுமுள்ள உலக உயிர்களும் நிலைபெற்று வாழ்தற்குரிய காத்தல் தொழில் நினைவோடு, மிகுந்துவரும் அலைகளை உடைய திருப்பாற்கடல் நடுவில் அறிதுயில் அமர்ந்துள்ள திருமாலை அதிட்டித்துநின்று காத்தல் தொழிலைச் செய்தருளும் சிவபிரான் உறையும் பதி, கற்களால் கட்டப்பட்ட மதில்கள் சூழ்ந்த சிவபுரமாகும். அதனை நினைப்பவர் திருமகளொடு திகழ்வர்.

மேல்

(219)
பழுது இல கடல் புடை தழுவிய படி முதலிய உலகுகள், மலி

குழுவிய சுரர், பிறர், மனிதர்கள், குலம் மலிதரும் உயிர் அவை அவை

முழுவதும் அழி வகை நினைவொடு முதல் உருவு இயல் பரன் உறை பதி

செழு மணி அணி சிவபுரநகர் தொழுமவர் புகழ் மிகும், உலகிலே.

பழுதுபடாத, கடலால் சூழப்பட்ட நிலவுலகம் முதலிய எல்லா உலகங்களையும், அவ்வுலகங்களில் நிறைவுடன் குழுமிவாழும் தேவர்கள் நரகர்கள் மற்றும் மனிதர்கள் ஏனையோர்ஆகிய அனைவர் உயிர்களையும் அழிக்கும் வகையான நினைவோடு உருத்திரனை அதிட்டித்து அவனுருவில் அழித்தலைச் செய்தருளும் சிவபிரான் உறையும் பதியாகிய செழுமையான மணிகள் அழகு செய்யும் சிவபுர நகரைத் தொழுவோரின் புகழ் உலகில் மிகும்.

மேல்

(220)
நறை மலிதரும் அளறொடு, முகை, நகு மலர், புகை, மிகு வளர் ஒளி,

நிறை புனல் கொடு, தனை நினைவொடு நியதமும் வழிபடும் அடியவர்

குறைவு இல பதம் அணை தர அருள் குணம் உடை இறை உறை வன பதி

சிறை புனல் அமர் சிவபுரம் அது நினைபவர் செயமகள் தலைவரே.

மணம் மிகுந்த சந்தனம், அரும்புகள், இதழ் விரிந்த மலர்கள், குங்கிலியம், சீதாரி முதலிய தூபம், ஒளி வளர் தீபங்கள், நிறைந்த நீர் ஆகியவற்றைக் கொண்டு நீராட்டியும், மலர் சூட்டியும் ஒளி காட்டியும் தன்னை நாள்தோறும் நினைவோடு வழிபடும் அடியவர், குறைவிலா நிறைவான சாமீபம் முதலான முத்திகளை அடைய அருள்செய்யும் குணம் உடைய இறைவன் உறையும் அழகிய பதி, நீர் நிலைகள் பலவற்றாலும் வளம் நிரம்பி விளங்கும் சிவபுரமாகும். அதனை நினைபவர் சயமகள் தலைவராவர்.

மேல்

(221)
சினம் மலி அறுபகை மிகு பொறி சிதை தரு வகை வளி நிறுவிய

மனன் உணர்வொடு மலர் மிசை எழுதரு பொருள் நியதமும் உணர்பவர்

தனது எழில் உரு அது கொடு அடை தகு பரன் உறைவது நகர் மதில்

கனம் மருவிய சிவபுரம் நினைபவர் கலைமகள் தர நிகழ்வரே.

காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் எனப்படும் ஆறு பகைகளையும் வென்று, மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளையும் அடக்கும் வகையில், காற்றை நிறுத்தியும் விடுத்தும் செய்யப்படும் பிராணாயாமத்தைப் புரிந்தும், தியானித்தலால் உள்ளத்தில் தோன்றியருளும் ஒளிப் பொருளாகிய சிவபெருமானை நாள்தோறும் உணர்பவராகிய யோகியர்கட்குத் தனது எழிலுருவாகிய சாரூபத்தைத் தந்தருளும் சிவபிரான் உறைந்தருளும் நகர், மேகந் தவழும் மதில்கள் சூழ்ந்த சிவபுரமாகும். அதனை நினைபவர், கலைமகள் தன் அருளைத் தரவாழ்வர்.

மேல்

(222)
சுருதிகள் பல நல முதல் கலை துகள் அறு வகை பயில்வொடு மிகு

உரு இயல் உலகு அவை புகழ்தர, வழி ஒழுகும் மெய் உறு பொறி ஒழி

அருதவம் முயல்பவர், தனது அடி அடை வகை நினை அரன் உறை பதி,

திரு வளர் சிவபுரம், நினைபவர் திகழ் குலன் நிலன் இடை நிகழுமே.

வேதங்களையும், பலவாகிய நன்மைகளைத் தரும் தலைமையான கலைகளையும், குற்றம் அறப்பயின்று, உலகியலில் பழிபாவங்களுக்கு அஞ்சித் தூய ஒழுக்க சீலராய் உலகம் புகழ விளங்கி உடலின்கண் உள்ள பொறிகள்வழி ஒழுகாது அரிய தவத்தை மேற்கொண்ட அடியவர்கள் தன் திருவடிகளை அடையும் வகை சங்கற்பிக்கும் சிவபிரான் உறையும் பதி திருவருள் தேங்கிய சிவபுரமாகும். அத்தலத்தை நினைவோர்தம் விளக்கமான குலம் உலகிடை நின்று நிகழும்.

மேல்

(223)
கதம் மிகு கரு உருவொடு உகிர் இடை வடவரை கணகண என,

மதம் மிகு நெடுமுகன் அமர் வளைமதி திகழ் எயிறு அதன் நுதிமிசை,

இதம் அமர் புவி அது நிறுவிய எழில் அரி வழி பட, அருள் செய்த

பதம் உடையவன் அமர் சிவபுரம் நினைபவர் நிலவுவர், படியிலே.

திருமால் வராக அவதாரத்தில் சினம்மிக்க கரிய உருவோடு, தனது நகங்களிடையே வடக்கின்கண் உள்ள மேருமலை கணகண என ஒலி செய்ய, மதம் மிக்க நீண்ட அவ்வராகத்தின் முகத்திற்பொருந்திய வளைந்த பிறை போன்ற எயிற்றின் முனைக்கண் பூமி இதமாக அமர்ந்து விளங்க, அப்பூமியை உலகின்கண் அவியாதுநிறுத்திக் காத்த அழகிய திருமால் வழிபட, அவர்க்கு அருள்புரிந்த திருவடிகளை உடையவனாகிய சிவபெருமான் எழுந்தருளிய சிவபுரத்தை நினைப்பவர் உலகிற் புகழோடு விளங்குவர்.

மேல்

(224)
அசைவு உறு தவ முயல்வினில், அயன் அருளினில், வரு வலிகொடு சிவன்

இசை கயிலையை எழுதரு வகை இருபது கரம் அவை நிறுவிய

நிசிசரன் முடி உடை தர, ஒரு விரல் பணி கொளுமவன் உறை பதி

திசை மலி சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிகழ்வு உடையரே.

உடல் வருத்தத்தைத் தரும் கடுமையான தவத்தைச் செய்து நான்முகன் அருளினால் வரமாகக் கிடைக்கப் பெற்ற வலிமையைக் கொண்டு சிவபிரான் எழுந்தருளிய கயிலைமலையை அது பெயரும்வகையில் இருபது கரங்களை அம்மலையின் கீழ்ச் செலுத்திய இராவணனின் பத்துத் தலைகளில் உள்ள முடிகள் சிதறுமாறு தனது ஒரு கால் விரலால் அடர்த்துத் தன் வலிமையை அவனுக்கு உணர்த்தி அவனைப் பணி கொண்டருளும் சிவபிரான் உறையும் பதி, எண் திசைகளிலும் புகழ் நிறைந்த சிவபுரமாகும். அத்தலத்தை நினைபவர் வளமான இவ்வுலகில் எஞ்ஞான்றும் வாழ்வர்.

மேல்

(225)
அடல் மலி படை அரி அயனொடும் அறிவு அரியது ஓர் அழல் மலிதரு

சுடர் உருவொடு நிகழ் தர, அவர் வெருவொடு துதி அது செய, எதிர்

விடம் மலி களம் நுதல் அமர் கண் அது உடை உரு வெளிபடுமவன் நகர்

திடம் மலி பொழில் எழில் சிவபுரம் நினைபவர் வழி புவி திகழுமே.

வலிமை மிக்க சக்கராயுதத்தைப் படைக்கலனாகக் கொண்ட திருமாலும் நான்முகனும் அறிதற்கரிய வகையில் அழல்மிக்க பேரொளிப் பிழம்பாய் வெளிப்பட்டருள அதனைக் கண்ட அவர்கள், அச்சங் கொண்டு துதி செய்த அளவில் அவர்கட்கு எதிரே விடம் பொருந்திய கண்டமும் நெற்றிக் கண்ணும் உடைய தனது உருவத்தோடு காட்சி நல்கிய சிவபிரான் எழுந்தருளிய தலம், உறுதியான மரங்கள் செறிந்த பொழில்கள்சூழ்ந்த எழில் பெற்ற சிவபுரமாகும். அதனை நினைபவரும் அவர் மரபினரும் உலகில் புகழோடு விளங்குவர்.

மேல்

(226)
"குணம் அறிவுகள் நிலை இல, பொருள் உரை மருவிய பொருள்களும் இல,

திணம்" எனுமவரொடு, செதுமதி மிகு சமணரும், மலி தமது கை

உணல் உடையவர், உணர்வு அரு பரன் உறை தரு பதி உலகினில் நல

கணம் மருவிய சிவபுரம் நினைபவர் எழில் உரு உடையவர்களே.

குணங்களும் அறிவும் நிலையில்லாதன எனவும், காணப்படும் உலகப் பொருள்களும், உரைக்கும் உரையால் உணர்த்தப்படும் ஏனைய பொருள்களும், அவ்வாறே அழிந்து தோன்றுமியல்பின. இது திண்ணம் எனவும், கணபங்க வாதம் புரியும் கேட்டிற்குக் காரணமான அறிவினராகிய புத்தர்களும், தமது கையில் நிறைந்த உணவை வாங்கி உண்ணும் சமணர்களும், உணர்தற்கரிய சிவபிரான் உறையும் பதி, இவ்வுலகில் நல்லவர்கள் திரளாய் வாழும் சிவபுரமாகும். அதனை நினைபவர் அழகிய உருவோடு விளங்குவர்.

மேல்

(227)
திகழ் சிவபுர நகர் மருவிய சிவன் அடி இணை பணி சிரபுர

நகர் இறை தமிழ் விரகனது உரை நலம் மலி ஒருபதும் நவில்பவர்,

நிகழ் குலம், நிலம், நிறை திரு, உரு, நிகர் இல கொடை, மிகு சய மகள்;

புகழ், புவி வளர் வழி, அடிமையின் மிகை புணர் தர, நலம் மிகுவரே.

இவ்வுலகில் புகழால் விளங்கும் சிவபுரநகரில் எழுந்தருளிய சிவபெருமானின் திருவடி இணைகளைப் பணிகின்ற சிரபுர நகர்த் தலைவனும், தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் பாடிய உரைச் ,

சிறப்பு வாய்ந்த இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தினையும் ஓதி வழிபடுபவர் குலம், நிலம், நிறைந்த செல்வம், அழகிய வடிவம், ஒப்பற்ற கொடை வண்மை, மிக்க வெற்றித் திரு, இவ்வுலகிடை தொடர்ந்து வரும் சந்ததி, இறைவனடியார் என்ற பெருமிதம் ஆகியன தம்பால் விளங்க எல்லா நலங்களும் மிகப் பெறுவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(22)
திருமறைக்காடு - திருவிராகம் நட்டபாடை

(228)
சிலை தனை நடு இடை நிறுவி, ஒரு சினம் மலி அரவு அது கொடு, திவி

தலம் மலி சுரர் அசுரர்கள், ஒலி சலசல கடல் கடைவுழி, மிகு

கொலை மலி விடம் எழ, அவர் உடல் குலை தர, அது நுகர்பவன்-எழில்

மலை மலி மதில் புடை தழுவிய மறைவனம் அமர் தரு பரமனே.

மந்தரமலையை மத்தாக நடுவே நிறுத்தி, சினம் மிக்க ஒப்பற்ற வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக் கொண்டு, விண்ணுலகில் வாழும் தேவர்களும் அசுரர்களும் சலசல என்னும் ஒலி தோன்றுமாறு திருப்பாற்கடலைக் கடைந்தகாலத்துக் கொல்லும் தன்மை வாய்ந்த ஆலகால விடம் அக்கடலில் தோன்ற, அதனால் தேவாசுரர்கள் அஞ்சி நடுங்கித் தன்னை நோக்கி ஓலமிட்ட அளவில் அந்நஞ்சை உண்டு அவர்களைக் காத்தருளியவன் அழகிய மலை போன்ற மதில்களால் சூழப்பட்ட மறைவனத்தில் எழுந்தருளிய பரமன் ஆவான்.

மேல்

(229)
கரம் முதலிய அவயவம் அவை கடுவிட அரவு அது கொடு வரு

வரல் முறை அணி தருமவன், அடல் வலி மிகு புலி அதள் உடையினன்-

இரவலர் துயர் கெடு வகை நினை, இமையவர் புரம் எழில் பெற வளர்,

மரம் நிகர் கொடை, மனிதர்கள் பயில் மறைவனம் அமர்தரு பரமனே.

கைகள் முதலிய அவயவங்களில், கொடிய விடம் பொருந்திய பாம்புகளைத் தொன்றுதொட்டுவரும் வரன் முறைப்படி, வளை கேயூரம் முதலியனவாக அணி செய்து கொள்பவனும், கொலைத் தொழிலில் வல்லமை மிக்க புலியைக் கொன்று அதன் தோலை ஆடையாக அணிந்தவனுமாகிய பெருமான், இரவலர்களின் வறுமைத் துயர் போக எல்லோரும் நினைக்கும் தேவருலகம் அழகு பெற வளரும் கற்பகமரம் போன்ற கொடையாளர்கள் வாழும் மறைவனம் அமர்பரமன் ஆவான்.

மேல்

(230)
இழை வளர் தரும் முலை மலைமகள் இனிது உறைதரும் எழில் உருவினன்;

முழையினில் மிகு துயில் உறும் அரி முசிவொடும் எழ, முளரியொடு எழு

கழை நுகர் தரு கரி இரி தரு கயிலையில் மலிபவன்-இருள் உறும்

மழை தவழ் தரு பொழில் நிலவிய மறைவனம் அமர் தரு பரமனே.

அணிகலன்கள் பொருந்திய தனங்களை உடைய மலைமகள் இடப்பாகமாக இனிதாக உறையும் அழகிய திருமேனியை உடையவனும், குகைகளில் நன்கு உறங்கும் சிங்கங்கள், பசி வருதலினாலே மூரி நிமிர்ந்து எழ, தாமரை மலர்களோடு வளர்ந்து செழித்த கரும்புகளை உண்ணும் யானையினங்கள் அஞ்சி ஓடுகின்ற கயிலைமலையில் எழுந்தருளியவனும் ஆகிய பெருமான் கரிய மழை மேகங்கள் தவழும் பொழில்களை உடைய மறைவனத்தில் அமரும் பரமனாவான்.

மேல்

(231)
நலம் மிகு திரு இதழி இன்மலர், நகு தலையொடு, கனகியின் முகை

பல, சுர நதி, பட அரவொடு, மதி பொதி சடைமுடியினன்-மிகு

தலம் நிலவிய மனிதர்களொடு தவம் முயல்தரும் முனிவர்கள் தம

மலம் அறு வகை மனம் நினைதரு மறைவனம் அமர் தரு பரமனே.

அணிவிப்பவர்க்கு நலம் மிகுவிக்கின்ற அழகிய கொன்றை மலர், கபாலம், ஊமத்தை, கங்கை நதி, பட அரவு, பிறை ஆகியனவற்றைச் சூடிய சடைமுடியினனாகிய பெருமான், பெரிதாய இவ்வுலகில் வாழும் மனிதர்கள், தவம் முயலும் முனிவர்கள்ஆகியோர் தன்னை வழிபட அவர்கள் மலம் அகன்று உய்யும் வகையை நினையும் மறைவனம் உறையும் பரமன் ஆவான்.

மேல்

(232)
கதி மலி களிறு அது பிளிறிட உரிசெய்த அதிகுணன்; உயர் பசு

பதி அதன்மிசை வரு பசு பதி பல கலை அவை முறை முறை உணர்

விதி அறிதரும் நெறி அமர் முனிகணனொடு மிகு தவம் முயல்தரும்

அதி நிபுணர்கள் வழிபட, வளர் மறைவனம் அமர் தரு பரமனே.

நடை அழகுடன் தன்னை எதிர்த்து வந்த களிறு அஞ்சிப் பிளிற, அதனை உரித்தருளிய மிக்க குணாளனும், உயர்ந்த பசுக்களின் நாயகனாகிய விடையின்மீது வரும் ஆருயிர்களின் தலைவனும் ஆகிய பெருமான், பல கலையும் முறையாகக் கற்று உணர்ந்தவர்களும், விதிகளாகத் தாம் கற்ற நெறிகளில் நிற்போரும் ஆகிய முனிவர் குழாங்களும், மிக்க தவத்தை மேற்கொண்டொழுகும் அதி நிபுணர்களும், தன்னை வழிபடுமாறு வளங்கள் பலவும் வளரும் மறைவனத்தில் அமர்ந்தருளும் பரமன் ஆவான்.

மேல்

(233)
கறை மலி திரிசிகை படை, அடல் கனல் மழு, எழுதர வெறி மறி,

முறை முறை ஒலி தமருகம், முடைதலை, முகிழ் மலி கணி, வட முகம்,

உறைதரு கரன்-உலகினில் உயர் ஒளி பெறு வகை நினைவொடு மலர்

மறையவன் மறைவழி வழிபடும் மறைவனம் அமர்தரு பரமனே.

குருதிக் கறைபடிந்த முத்தலைச் சூலம், வருத்தும் தழல் வடிவினதாகிய மழுவாயுதம், கையினின்று எழுவது போன்ற வெறித்த கண்களை உடைய மான், முறைமுறையாக ஒலி செயும் உடுக்கை, முடைநாறும் பிரம கபாலம், முகிழ் போலும் கூரிய கணிச்சி, வடவை முகத்தீ ஆகியன உறையும் திருக்கரங்களை உடையவனும், தாமரை மலரில் எழுந்தருளிய வேதாவாகிய நான்முகனால் உலகில் உயர்ந்த புகழோடு விளங்கும் நினைவோடு வேத விதிப்படி வழிபடப் பெறுபவனுமாகிய சிவபிரான் மறை வனத்தில் உறையும் பரமன் ஆவான்.

மேல்

(234)
இரு நிலன் அது புனல் இடை மடிதர, எரி புக, எரி அது மிகு

பெரு வளியினில் அவிதர, வளி கெட, வியன் இடை முழுவதும் கெட,

இருவர்கள் உடல் பொறையொடு திரி எழில் உரு உடையவன்-இனமலர்

மருவிய அறுபதம் இசை முரல் மறைவனம் அமர் தரு பரமனே.

பேரூழிக் காலத்தில் பெரிய இந்நிலமாகிய மண்புனலில் ஒடுங்க, நீர் எரியில் ஒடுங்க, எரி வளியில் ஒடுங்க, வளிஆகாயத்தில் ஒடுங்க, பரந்துபட்ட இவ்வுலகமும் உலகப் பொருள்களும் ஆகிய அனைத்தும் அழிய, அதுபோது பிரம விட்டுணுக்களது முழு எலும்புக் கூட்டை அணிந்து, தான் ஒருவனே தலைவன் எனத்திரியும் அழகுடையவன், வண்ண மலர்க் கூட்டங்களில் வண்டுகள் இசை முரலும் மறைவனம் அமரும் பரமன் ஆவான்.

மேல்

(235)
சனம் வெரு உற வரு தசமுகன் ஒருபது முடியொடும் இருபது

கனம் மருவிய புயம் நெரி வகை, கழல் அடியில் ஒரு விரல் நிறுவினன்-

"இனம் மலி கண நிசிசரன் மகிழ்வு உற அருள் செய்த கருணையன்" என

மன மகிழ்வொடு மறை முறை உணர் மறைவனம் அமர்தரு பரமனே.

மக்கள் அஞ்சுமாறு வருகின்ற இராவணனின் பத்துத் தலைகளோடு பெரிதாய இருபது தோள்களும் நெரியுமாறு வீரக்கழல் அணிந்த திருவடியில் உள்ளதொரு விரலை ஊன்றி அடர்த்தவன். அவன் பிழை உணர்ந்த அளவில் அரக்கர் கூட்டமுடைய அவ்இராவணன் மனம் மகிழ்வுறுமாறு பேர், வாழ்நாள், தேர், வாள் முதலியன அளித்தருளிய கருணையாளன் என நான்மறைகளை முறையாக உணர்ந்த வேதியர் மனமகிழ்வொடு புகழும் மறைவனத்தில் அமர்ந்தருளும் பரமன் ஆவான்.

மேல்

(236)
அணி மலர் மகள் தலைமகன், அயன், அறிவு அரியது ஒரு பரிசினில் எரி

திணி தரு திரள் உரு வளர்தர, அவர் வெரு உறலொடு துதி செய்து

பணிவு உற, வெளி உருவிய பரன் அவன்-நுரை மலி கடல் திரள் எழும்

மணி வளர் ஒளி வெயில் மிகுதரும் மறைவனம் அமர்தரு பரமனே.

அழகிய மலர்மகள் கேள்வனும், அயனும்அறிதற்கு அரியதொரு தன்மையில் அனல் செறிந்த பிழம்புருவத்தோடு தோன்ற அதனைக் கண்டு அவ்விருவரும் அஞ்சித் துதி செய்து பணிய, வானவெளியைக் கடந்த பேருருவத்தோடு காட்சி நல்கிய பரனாகிய அவன் நுரைமிக்க கடல் திரட்சியில் தோன்றும் மணிகளின் வளர் ஒளியினால் வெயிலொளி மிகுந்து தோன்றும் மறைவனத்தில் அமரும் பரமன் ஆவான்.

மேல்

(237)
இயல்வு அழிதர, விது செலவு உற, இனமயில் இறகு உறு தழையொடு

செயல் மருவிய சிறு கடம் முடி அடை கையர், தலை பறிசெய்து தவம்

முயல்பவர், துவர்படம் உடல் பொதிபவர், அறிவு அரு பரன் அவன்-அணி

வயலினில் வளை வளம் மருவிய மறைவனம் அமர்தரு பரமனே.

உலக இயல்பு கெடுமாறு நடை உடை பாவனைகளால் வேறுபடத் தோன்றிப் பல மயில்களின் தோகைகளைக் கொண்டு வழிகளை உயிரினங்களுக்கு ஊறு வாராதபடி தூய்மை செய்து நடத்தலைச் செய்து சிறிய குண்டிகை வைக்கப்பட்ட உறியை ஏந்திய கையராய்த் தலையைப் பறித்து முண்டிதமாக்கிக் கொண்டு தவம் முயலும் சமணர்களும், துவராடையால் உடலை மூடியவர்களாகிய புத்தர்களும் அறிதற்கரிய பரனாகிய அவன், அழகிய வயலில் சங்கீன்ற முத்துக்கள் நிறைந்துள்ள மறைவனத்தில் அமர்ந்துறையும் பரமன் ஆவான்.

மேல்

(238)
வசை அறு மலர்மகள் நிலவிய மறைவனம் அமர் பரமனை நினை

பசையொடு, மிகு கலைபல பயில் புலவர்கள் புகழ் வழி வளர்தரு

இசை அமர் கழுமல நகர் இறை, தமிழ்விரகனது உரை இயல் வல

இசை மலி தமிழ் ஒருபதும் வல அவர் உலகினில் எழில் பெறுவரே.

குற்றமற்ற திருமகள் நிலவும் மறைவனத்தில் அமர்ந்துள்ள பரமனை அன்போடு நினையும் மிகுந்த கலைகளில் வல்ல புலவர்களின் புகழோடு வளரும் கழுமலநகர்த் தலைவனும் தமிழ் விரகனும் ஆகிய ஞானசம்பந்தனுடைய இயற்றமிழிலும் மேம்பட்ட,

இசை மலிந்த இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர் உலகினில் அழகெய்துவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(23)
திருக்கோலக்கா - தக்கராகம்

(239)
மடையில் வாளை பாய, மாதரார்

குடையும் பொய்கைக் கோலக்கா உளான்

சடையும், பிறையும், சாம்பல் பூச்சும், கீள்

உடையும், கொண்ட உருவம் என்கொலோ?

நீரைத் தேக்கி வெளிவிடும் மடையில் வாளை மீன்கள் துள்ளிப் பாயுமாறு பெண்கள் கையால் குடைந்து நீராடும் பொய்கைகளை உடைய திருக்கோலக்காவில் எழுந்தருளியுள்ள இறைவன், சடைமுடியையும், அதன்கண் பிறையையும், திருமேனி முழுவதும் திருநீற்றுப் பூச்சையும் இடையில் ஆடையாகக் கீள் உடையையும் கொண்ட உருவம் உடையவனாய் இருப்பது ஏனோ?

மேல்

(240)
பெண்தான் பாகம் ஆக, பிறைச் சென்னி

கொண்டான், கோலக்காவு கோயிலாக்

கண்டான், பாதம் கையால் கூப்பவே,

உண்டான் நஞ்சை, உலகம் உய்யவே.

உமையம்மையைத் தன் திருமேனியில் இடப்பாதியாகக்கொண்டு, கலைகள் ஒன்றொன்றாகக் குறைந்து வந்த இளம் பிறையைச் சடைமுடி மீது ஏற்றுக் கொண்டவனாகிய சிவபிரான், கோலக்காவிலுள்ள கோயிலைத் தன் இருப்பிடமாகக் கொண்டவன். திருப்பாற்கடலில் நஞ்சு தோன்றியபோது காவாய் என அனைவரும் கைகூப்பி வணங்க உலகம் உய்யுமாறு அந்நஞ்சினை உண்டு அருளியவன்.

மேல்

(241)
பூண் நல் பொறி கொள் அரவம், புன்சடை,

கோணல் பிறையன், குழகன், கோலக்கா

மாணப் பாடி, மறை வல்லானையே

பேண, பறையும், பிணிகள் ஆனவே.

அழகிய புள்ளிகளை உடைய பாம்பை அணிகலனாகக் கொண்டு, சிவந்த சடையின்மேல் வளைந்த பிறைமதியைச் சூடிய, என்றும் மாறா இளமைத் தன்மை உடைய சிவபிரான் எழுந்தருளி விளங்கும் திருக்கோலக்காவை மாட்சிமை தங்கப் பாடி, வேதங்களை அருளிய அப்பெருமானைப் பேணித் தொழப் பிணிகளானவை நீங்கும்.

மேல்

(242)
தழுக் கொள் பாவம் தளர வேண்டுவீர்!

மழுக் கொள் செல்வன், மறி சேர் அம் கையான்,

குழுக் கொள் பூதப்படையான், கோலக்கா

இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே!.

பல்வேறு சமயங்களிலும் செய்த பாவங்கள் நீங்க வேண்டும் என்று விரும்புகின்றவர்களே! மழுவாயுதத்தைப் படைக்கலனாகக் கொண்ட செல்வனும், மானை ஏந்திய அழகிய கையை உடையவனும், பூதங்களின் குழுக்களை உடையவனும் ஆகிய சிவபிரானது கோலக்காவைத் தவறாமல் சென்று தரிசித்து வாருங்கள். நும் பாவங்கள் அகலும்.

மேல்

(243)
மயில் ஆர் சாயல் மாது ஓர் பாகமா,

எயிலார் சாய எரித்த எந்தை தன்

குயில் ஆர் சோலைக் கோலக்காவையே

பயிலா நிற்க, பறையும், பாவமே.

ஆண்மயில் போலும் கட்புலனாகிய மென்மையை உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவனும், அசுரர்களின் முப்புரங்கள் கெடுமாறு அவற்றை எரித்தவனும் ஆகிய எம் தந்தையாகிய சிவபிரானது, குயில்கள் நிறைந்து வாழும் சோலைகளை உடைய திருக்கோலக்காவைப் பலகாலும் நினைக்கப் பாவங்கள் நீங்கும்.

மேல்

(244)
வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்!.

கடி கொள் கொன்றை கலந்த சென்னியான்,

கொடி கொள் விழவு ஆர் கோலக்காவுள் எம்

அடிகள், பாதம் அடைந்து வாழ்மினே!.

ஒன்றிலிருந்து பிறிதொன்று கிளைக்கும் வினைப்பகையை நீக்கிக் கொள்ள விரும்புகின்றவர்களே! மணம் பொருந்திய கொன்றை மலர் விரவிய சென்னியை உடையோனும், கொடிகள் கட்டப்பெற்று விழாக்கள் பலவும் நிகழ்த்தப்பெறும் கோலக்காவில் விளங்கும் எம் தலைவனும் ஆகிய பெருமான் திருப்பாதங்களை அடைந்து வாழ்வீர்களாக.

மேல்

(245)
நிழல் ஆர் சோலை நீலவண்டு இனம்,

குழல் ஆர், பண் செய் கோலக்கா உளான்

கழலால் மொய்த்த பாதம் கைகளால்

தொழலார் பக்கல் துயரம் இல்லையே.

நிழல் செறிந்த சோலைகளில் நீல நிறம் பொருந்திய வண்டினங்கள் வேய்ங்குழல் போல இசை வழங்கும் திருக்கோலக்காவில் விளங்கும் சிவபிரானுடைய வீரக்கழல் செறிந்த திருவடிகளைக் கை கூப்பித் தொழுபவர் பக்கம் துயரம் வாராது.

மேல்

(246)
எறி ஆர் கடல் சூழ் இலங்கைக் கோன்தனை

முறை ஆர் தடக்கை அடர்த்த மூர்த்தி தன்

குறி ஆர் பண் செய் கோலக்காவையே

நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே.

அலைகள் எறியும் கடலால் சூழப்பட்ட இலங்கை மன்னனாகிய இராவணனை, அவன் நீண்ட கைகள் முரிதலைப் பொருந்துமாறு அடர்த்த சிவபிரானைச் சுரத்தானங்களைக் குறித்த பண்ணிசையால் கோலக்காவில் சிவாகம நெறிகளின்படி வழிபடுவார் வினைகள் நீங்கும்.

மேல்

(247)
நாற்றமலர்மேல் அயனும், நாகத்தில்

ஆற்றல் அணை மேலவனும், காண்கிலா,

கூற்றம் உதைத்த, குழகன்-கோலக்கா

ஏற்றன்-பாதம் ஏத்தி வாழ்மினே!.

மணம் பொருந்திய தாமரை மலர் மேல் விளங்கும் நான்முகனும், ஆற்றல் பொருந்திய ஆதிசேடனாகிய அணையில்உறங்கும் திருமாலும் காணுதற்கு இயலாத, இயமனை உதைத்த குழகன் ஆகிய கோலக்காவில் விளங்கும் ஆன்ஏற்றை வாகனமாகக் கொண்ட இறைவன் திருவடிகளைப் போற்றி வாழ்வீர்களாக.

மேல்

(248)
பெற்ற மாசு பிறக்கும் சமணரும்,

உற்ற துவர் தோய் உரு இலாளரும்,

குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்

பற்றிப் பரவ, பறையும், பாவமே.

நீராடாமல் தம் உடலிற் சேர்ந்த மாசுடன் தோன்றும் சமணரும், தம் உடலிற் பொருந்திய கல்லாடையால் தம் உருவை மறைத்துக் கொள்ளும் புத்தர்களும், குற்றமுடைய சமய நெறியை மேற்கொண்டவராவர். அவர்கள் தம் தெய்வம் என்று ஏற்றுக்கொள்ளாத கோலக்கா இறைவனைப் பற்றிப் போற்றப் பாவம் தீரும்.

மேல்

(249)
நலம் கொள் காழி ஞானசம்பந்தன்,

குலம் கொள் கோலக்கா உளானையே

வலம் கொள் பாடல் வல்ல வாய்மையார்,

உலம் கொள் வினை போய், ஓங்கி வாழ்வரே.

கோலக்காவைப்பற்றிய இப்பாடல் பத்தையும் வல்லவர் மலைபோன்ற தம்வினையும் மாள ஓங்கிவாழ்வார்கள் என்கின்றது. வலங்கொள்பாடல் - திருவருள் வன்மையைக்கொண்ட பாடல் அல்லது வலமாகக் கொண்ட பாடல் என்றுமாம். உலம் - மலை. குருவருள்: உலம் - மலை. மலையளவு பாவம் செய்திருப்பினும் நெறியாக இப்பதிகத்தை ஓதினால், மலையளவு வினைகளும் பொடியாக உயர்ந்த வாழ்வு பெறுவர். முடிவான பேரின்ப வாழ்வு பெறுவர் என்பதை உணர்த்துகின்றது. இயற்கை நலங்கள் யாவும் நிறைந்த சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், பண்பால் உயர்ந்த குலத்தினரைக் கொண்டுள்ள கோலக்காவில் விளங்கும் இறைவனைப் பாடிய,

திருவருள் வலமாகக் கொண்ட இத்திருப்பதிகப் பாடல்களை ஓதி வழிபடவல்ல வாய்மையாளர், மலை போலும் திண்ணிய வினைகள் நீங்கப் பெற்றுச் சிறந்து வாழ்வர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(24)
சீகாழி - தக்கராகம்

(250)
“ பூஆர் கொன்றைப் புரிபுன் சடை ஈசா!

காவாய்!” என நின்று ஏத்தும் காழியார்,

மேவார் புரம் மூன்று அட்டார் அவர்போல் ஆம்

பா ஆர் இன்சொல் பயிலும் பரமரே.

பாடல்களின் சொற்பொருளாய்க் கலந்து நிற்கும் பரமர், பக்தர்கள், "கொன்றைப் பூக்கள் பொருந்திய முறுக்கேறிய செஞ்சடை ஈசா காவாய்!" என நின்று துதித்துப் போற்றும் சீகாழிப் பதியினராவார். மனம் ஒன்றாத அசுரர்களின் மூன்று புரங்களை அழித்தவரும் அவரேயாவார்.

மேல்

(251)
“எந்தை!” என்று, அங்கு இமையோர் புகுந்து ஈண்டி,

கந்தமாலை கொடு சேர் காழியார்,

வெந்த நீற்றர், விமலர் அவர் போல் ஆம்

அந்தி நட்டம் ஆடும் அடிகளே.

அந்திக் காலத்தில் நடனம் ஆடும் அடிகளாகிய இறைவர், தேவர்கள் எந்தையே என அன்போடு அழைத்து ஆலயத்துட் புகுந்து குழுமி மணம்மிக்க மாலைகளை அணிவித்தற் பொருட்டுச் சேரும் சீகாழிப் பதியினராவார். அவரே நன்றாகச் சுட்டு எடுத்த திருநீற்றை அணிந்தவரும், குற்றம் அற்றவருமாவார்

மேல்

(252)
தேனை வென்ற மொழியாள் ஒருபாகம்,

கானமான் கைக் கொண்ட காழியார்,

வானம் ஓங்கு கோயிலவர் போல் ஆம்

ஆன இன்பம் ஆடும் அடிகளே.

முற்றிய இன்பத்தோடு ஆடுகின்ற சிவபிரான், இனிப்பில் தேனை வென்று விளங்கும் மொழிகளைப் பேசுகின்ற உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு காட்டில் திரியும் இயல்பினதாகிய மானைக் கையின்கண் ஏந்தி விளங்கும் காழிப் பதியினராவார். அவர் வானளாவ உயர்ந்த திருக்கோயிலில் விளங்குபவர் ஆவார்.

மேல்

(253)
மாணா வென்றிக் காலன் மடியவே

காணா மாணிக்கு அளித்த காழியார்,

நாண் ஆர் வாளி தொட்டார் அவர் போல் ஆம்

பேணார் புரங்கள் அட்ட பெருமானே.

தம்மைப் பேணி வழிபடாத அசுரர்களின் முப்புரங்களை அழித்த பெருமான், மாட்சிமையில்லாத வெற்றியை உடைய காலனை மடியுமாறு செய்து, தம்மையன்றி வேறொன்றையும் காணாத மார்க்கண்டேய முனிவருக்கு என்றும் பதினாறாண்டோடு விளங்கும் வரத்தை அளித்தருளிய காழிப் பதியினர் ஆவார். முப்புரங்களை அழித்தற்பொருட்டு நாணிற் பூட்டிய அம்பைத் தொடுத்த வருமாவார்.

மேல்

(254)
மாடே ஓதம் எறிய, வயல் செந்நெல்

காடு ஏறிச் சங்கு ஈனும் காழியார்,

வாடா மலராள் பங்கர் அவர்போல் ஆம்

ஏடார் புரம் மூன்று எரித்த இறைவரே.

குற்றம் பொருந்திய அசுரர்களின் புரங்கள் மூன்றையும் எரித்தருளிய இறைவர், அருகில் கடல் நீரின் அலைகள் எறிந்த சங்குகள் வயல்களில் விளைந்த செந்நெற் பயிர்களின் செறிவில் ஏறி முத்துக்களை ஈனும் சீகாழிப் பதியினர். அவர் வாடா மலர்களைச் சூடி விளங்கும் பார்வதி தேவியைத்தம் திருமேனியின் ஒரு பங்காக உடையவராவார்.

மேல்

(255)
கொங்கு செருந்தி கொன்றைமலர் கூடக்

கங்கை புனைந்த சடையார், காழியார்,

அம் கண் அரவம் ஆட்டுமவர் போல் ஆம்

செங்கண் அரக்கர் புரத்தை எரித்தாரே.

சிவந்த கண்களை உடைய அரக்கர் மூவரின் திரிபுரங்களை எரித்தவராகிய இறைவர், கோங்கு, செருந்தி, கொன்றை மலர் இவற்றுடன் கங்கையை அணிந்துள்ள சடைமுடியினர். அக்காழியர் தாம் அணிந்துள்ள பாம்புகளை அவ்விடத்தே தங்கி ஆட்டுபவராகவும் உள்ளார்.

மேல்

(256)
கொல்லை விடைமுன் பூதம் குனித்து ஆடும்

கல்லவடத்தை உகப்பார் காழியார்,

அல்ல இடத்தும் நடந்தார் அவர்போல் ஆம்

பல்ல இடத்தும் பயிலும் பரமரே.

எல்லா இடங்களிலும் நிறைந்து விளங்கும் பரமராகிய பெருமானார், முல்லை நிலத்துக்குரிய ஆன் ஏற்றை ஊர்ந்து அதன் முன்னே பூத கணங்கள் வளைந்து நெளிந்து ஆடிச்செல்லக் கல்லவடம் என்னும் பறையை விரும்புபவர். அக்காழியார் தம்மை அறிந்து போற்றுநர் அல்லாதார் இடங்களிலும் தோன்றி அருள் வழங்கும் இயல்பினர்.

மேல்

(257)
எடுத்த அரக்கன் நெரிய, விரல் ஊன்றி,

கடுத்து, முரிய அடர்த்தார், காழியார்;

எடுத்த பாடற்கு இரங்குமவர் போல் ஆம்

பொடிக் கொள் நீறு பூசும் புனிதரே.

பொடியாக அமைந்த திருநீற்றைப் பூசும் தூயவராகிய பெருமானார், கயிலைமலையை எடுத்த இராவணனின் முடிகள் நெரியுமாறு தம் கால் விரலை ஊன்றிச் சினந்து அவனது ஆற்றல் அழியுமாறு அடர்த்தவர். அக்காழியார் இராவணன் எடுத்த பாடலாகிய சாமகானத்துக்கு இரங்கி அருள் செய்தவராவார்.

மேல்

(258)
ஆற்றல் உடைய அரியும் பிரமனும்

தோற்றம் காணா வென்றிக் காழியார்,

ஏற்றம் ஏறு அங்கு ஏறுமவர் போல் ஆம்

கூற்றம் மறுகக் குமைத்த குழகரே.

வாழ்நாளைக் கூறுபடுத்திக் கணக்கிட்டு உயிர்கொள்ளும் இயமன் அஞ்சுமாறு அவனை உதைத்து, மார்க்கண்டேயர்க்கு அருள்செய்த குழகராகிய சிவபிரானார், ஆற்றல் உடைய திருமாலும் பிரமனும் தம் அடிமுடிகள் தோன்றுமிடங்களைக் காணாதவாறு வானுற ஓங்கிய வெற்றியை உடையவராய்க் காழிப்பதியில் எழுந்தருளியுள்ளார். அவர் மிக உயர்ந்த ஆன்ஏற்றில் ஏறி உலா வந்து அருள்பவராவார்.

மேல்

(259)
பெருக்கப் பிதற்றும் சமணர் சாக்கியர்

கரக்கும் உரையை விட்டார், காழியார்,

இருக்கின் மலிந்த இறைவர் அவர்போல் ஆம்

அருப்பின் முலையாள் பங்கத்து ஐயரே.

தாமரை அரும்பு போன்ற தனபாரங்களை உடைய உமையம்மையை ஒருபங்காகக் கொண்டுள்ள தலைவராகிய சிவபிரான், உண்மையின்றி மிகப் பிதற்றுகின்ற சமணர் சாக்கியர்களின் வஞ்சக உரைகளைக் கொள்ளாதவராய்க் காழியில் எழுந்தருளியுள்ளார். அவரே இருக்கு வேதத்தில் நிறைந்துள்ள இறைவரும் ஆவார்.

மேல்

(260)
கார் ஆர் வயல் சூழ் காழிக் கோன்தனைச்

சீர் ஆர் ஞானசம்பந்தன் சொன்ன

பாரார் புகழப் பரவ வல்லவர்

ஏர் ஆர் வானத்து இனிதா இருப்பரே.

நீர் வளத்தால் கருஞ்சேறுபட்டு விளங்கும் வயல்களால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் விளங்கும் கோமகனாகிய சிவபிரான்மீது, சிறப்புப் பொருந்திய ஞானசம்பந்தன் அருளிச்செய்த பாடல்களை,

ஓதி உலகோர் போற்றத் துதிக்க வல்லவர், அழகிய வானகத்தில் இனிதாக இருப்பர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(25)
திருச்செம்பொன்பள்ளி - தக்கராகம்

(261)
மரு ஆர் குழலிமாது ஓர் பாகம் ஆய்,

திரு ஆர் செம்பொன் பள்ளி மேவிய,

கரு ஆர் கண்டத்து, ஈசன் கழல்களை

மருவாதவர் மேல் மன்னும், பாவமே.

மணம் பொருந்திய கூந்தலை உடையவளாகிய பார்வதிதேவியை ஒரு பாகமாக உடையவராய்த் திருமகள் வாழும் செம்பொன்பள்ளி என வழங்கும் திருத்தலக் கோயிலில் எழுந்தருளிய, கருநீலம் பொருந்திய கண்டத்தை உடைய ஈசன் திருவடிகளை வணங்கி அவற்றைத் தம் மனத்தே பொருந்த வையாதவர்களைப் பாவங்கள் பற்றும்.

மேல்

(262)
வார் ஆர் கொங்கை மாது ஓர்பாகம் ஆய்,

சீர் ஆர் செம்பொன் பள்ளி மேவிய,

ஏர் ஆர் புரிபுன்சடை, எம் ஈசனைச்

சேராதவர் மேல் சேரும், வினைகளே.

கச்சணிந்த தனங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவராய், சிறப்புப் பொருந்திய செம்பொன் பள்ளியில் எழுந்தருளிய அழகிய முறுக்கேறிய சிவந்த சடைமுடியை உடைய எம் ஈசனாகிய சிவபிரானைச் சென்று வணங்கி இடைவிடாது மனத்தில் நினையாதவர்களிடம் வினைகள் சேரும்.

மேல்

(263)
வரை ஆர் சந்தோடு அகிலும் வரு பொன்னித்

திரை ஆர் செம்பொன் பள்ளி மேவிய,

நரை ஆர் விடை ஒன்று ஊரும், நம்பனை

உரையாதவர் மேல் ஒழியா, ஊனமே.

மலைகளில் செழித்து வளர்ந்த சந்தன மரங்களோடு, அகில் மரங்களையும் அடித்துக் கொண்டு வருகின்ற பொன்னி நதிக்கரையில் விளங்கும் செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய வெண்ணிறம் பொருந்திய விடை ஒன்றை ஊர்ந்து வருபவனாகிய சிவபெருமான் புகழை உரையாதவர்களைப் பற்றியுள்ள குற்றங்கள் ஒழியா.

மேல்

(264)
மழுவாள் ஏந்தி, மாது ஓர் பாகம் ஆய்,

செழு ஆர் செம்பொன் பள்ளி மேவிய,

எழில் ஆர் புரிபுன்சடை, எம் இறைவனைத்

தொழுவார் தம்மேல் துயரம் இல்லையே.

மழுவாகிய வாளை ஏந்தி உமையொரு பாகனாய் வளம் பொருந்திய செம்பொன் பள்ளியில் எழுந்தருளிய அழகு பொருந்திய முறுக்கேறிய சிவந்த சடைமுடியை உடைய எம் இறைவனைத் தொழுபவர்கட்குத் துயரம் இல்லை.

மேல்

(265)
மலையான் மகளோடு உடன் ஆய் மதில் எய்த

சிலை ஆர் செம்பொன் பள்ளியானையே

இலை ஆர் மலர் கொண்டு, எல்லி நண்பகல்,

நிலையா வணங்க, நில்லா, வினைகளே.

சிவந்த முகம் உடைய பெண் குரங்கு தனது ஆண் குரங்கோடு ஊடல் கொண்டு மூங்கில் புதரில் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளுதற்காகத் தனது குட்டியையும் ஏந்திக் கொண்டு கரிய மலை மீது ஏறும் சிராப்பள்ளியில் எழுந்தருளியவனும் கொடிய முகத்தோடு கூடிய யானையின் தோலைப் போர்த்துள்ள விகிர்தனும் ஆகிய நீ படத்தோடு கூடிய முகத்தினை உடைய நாகப்பாம்பை அதன் பகைப்பொருளாகிய பிறை மதியுடன் முடிமிசை அணிந்திருத்தல் பழிதரும் செயல் அன்றோ?

மேல்

(266)
அறை ஆர் புனலோடு அகிலும் வரு பொன்னிச்

சிறை ஆர் செம்பொன் பள்ளி மேவிய,

கறை ஆர் கண்டத்து, ஈசன் கழல்களை

நிறையால் வணங்க, நில்லா, வினைகளே.

பாறைகளிற் பொருந்திவரும் நீரில் அகில் மரங்களையும் அடித்துவரும் பொன்னியாற்றின் கரையில் அமைந்த செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய விடக்கறை பொருந்திய கண்டத்தை உடைய ஈசன் திருவடிகளை மன ஒருமைப்பாட்டோடு வணங்க வினைகள் நில்லா.

மேல்

(267)
பை ஆர் அரவு ஏர் அல்குலாளொடும்

செய் ஆர் செம்பொன் பள்ளி மேவிய,

கை ஆர் சூலம் ஏந்து, கடவுளை

மெய்யால் வணங்க, மேவா, வினைகளே.

அரவின் படம் போன்ற அழகிய அல்குலை உடைய உமையம்மையோடு வயல்கள் சூழ்ந்த செம்பொன்பள்ளியில் வீற்றிருக்கின்ற கையில் பொருந்திய சூலத்தை ஏந்தி விளங்கும் கடவுளை உடம்பால் வணங்க வினைகள் மேவா.

மேல்

(268)
வான் ஆர் திங்கள் வளர் புன் சடை வைத்து,

தேன் ஆர் செம்பொன் பள்ளி மேவிய,

ஊன் ஆர் தலையில் பலி கொண்டு உழல் வாழ்க்கை

ஆனான் கழலே அடைந்து வாழ்மினே!.

வானத்தில் விளங்கும் பிறை மதியை, வளர்ந்துள்ள சிவந்த தன் சடைமீது வைத்து, இனிமை பொருந்திய செம்பொன் பள்ளியில் எழுந்தருளியவனும், புலால் பொருந்திய பிரமனது தலையோட்டில் பலியேற்று உழல்வதையே தன் வாழ்வின் தொழிலாகக்கொண்டவனும் ஆகிய சிவபிரான் திருவடிகளையே அடைந்து வாழ்மின்.

மேல்

(269)
கார் ஆர் வண்ணன், கனகம் அனையானும்,

தேரார் செம்பொன் பள்ளி மேவிய,

நீர் ஆர் நிமிர்புன் சடை, எம் நிமலனை

ஓராதவர்மேல் ஒழியா, ஊனமே.

நீலமேகம் போன்ற நிறமுடையோனாகிய திருமாலும், பொன்னிறமேனியனாகிய பிரமனும், தேடிக் காணொணாதவனும் செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய கங்கை அணிந்த நிமிர்த்துக் கட்டிய சிவந்த சடைமுடியை உடையவனுமாகிய குற்றமற்ற எம் இறைவனை மனம் உருகித் தியானியாதவர் மேல் உளதாகும் குற்றங்கள் நீங்கா.

மேல்

(270)
“மாசு ஆர் உடம்பர், மண்டைத் தேரரும்,

பேசா வண்ணம் பேசித் திரியவே,

தேசு ஆர் செம்பொன் பள்ளி மேவிய

ஈசா!” என்ன, நில்லா, இடர்களே.

அழுக்கேறிய உடலினராகிய சமணரும், மண்டை என்னும் உண்கலத்தை ஏந்தித் திரிபவர்களாகிய புத்தரும் பேசக் கூடாதவைகளைப் பேசித் திரிய அன்பர்கள் "ஒளி பொருந்திய செம்பொன்பள்ளியில் மேவிய ஈசா!" என்று கூற அவர்களுடைய இடர்கள் பலவும் நில்லா.

மேல்

(271)
நறவு ஆர் புகலி ஞானசம்பந்தன்

செறு ஆர் செம்பொன் பள்ளி மேயானைப்

பெறும் ஆறு இசையால் பாடல் இவைபத்தும்

உறுமா சொல்ல, ஓங்கி வாழ்வரே.

தேன் நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட புகலிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் வயல்கள் சூழ்ந்த செம்பொன் பள்ளி இறைவன் அருளைப் பெறுமாறு பாடிய,

இப்பதிகப் பாடல்கள் பத்தையும் இசையோடு தமக்குவந்த அளவில் ஓதவல்லவர் ஓங்கி வாழ்வர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(26)
திருப்புத்தூர் - தக்கராகம்

(272)
வெங் கள் விம்மு வெறி ஆர் பொழில் சோலை

திங்களோடு திளைக்கும் திருப்புத்தூர்,

கங்கை தங்கும் முடியார் அவர்போலும்

எங்கள் உச்சி உறையும் இறையாரே.

விரும்பத்தக்க தேன் விம்மிச் சுரந்துள்ள, மணம் பொருந்திய சோலைகள் வானளாவ உயர்ந்து, அங்குத் தவழும் திங்களோடு பழகித் திளைக்கும் வளம் உடைய திருப்புத்தூரில் எழுந்தருளிய கங்கை தங்கிய சடைமுடியினராகிய பெருமானார் எங்கள் சிரங்களின்மேல் தங்கும் இறைவர் ஆவார்.

மேல்

(273)
வேனல் விம்மு வெறி ஆர் பொழில் சோலைத்

தேனும் வண்டும் திளைக்கும் திருப்புத்தூர்,

ஊனம் இன்றி உறைவார் அவர் போலும்

ஏனமுள்ளும் எயிறும் புனைவாரே.

தேவர்களின் வேண்டுகோளை ஏற்றுப் பன்றி வடிவமெடுத்த திருமால் உலகை அழிக்கத் தொடங்கிய காலத்து,அதனை அடக்கி, அதன் பல்லையும் கொம்பையும் பறித்துத் தன் மார்பில் அணிந்தவர், வேனிற் காலத்தில் வெளிப்படும் மணம் நிறைந்துள்ள பொழில்களிலும் சோலைகளிலும் வாழும் வண்டுகள் தேனை உண்டு திளைத்து ஒலி செய்யும் திருப்புத்தூரில் குறையின்றி உறையும் பெருமானார் ஆவர்.

மேல்

(274)
பாங்கு நல்ல வரிவண்டு இசை பாட,

தேம் கொள் கொன்றை திளைக்கும் திருப்புத்தூர்,

ஓங்கு கோயில் உறைவார் அவர்போலும்

தாங்கு திங்கள் தவழ் புன்சடையாரே.

தம்மை அடைக்கலமாக அடைந்த திங்கள் தவழும் செந்நிறச் சடைமுடியினை உடைய இறைவர், நல்ல வரிகளை உடைய வண்டுகள் பாங்கரிலிருந்து இசைபாடத் தேன் நிறைந்த கொன்றை மலர்கள் முடிமிசைத் திளைத்து விளங்கத் திருப்புத்தூரில் ஓங்கி உயர்ந்த கோயிலில் எழுந்தருளிய பெருமானார் ஆவார். கொன்றை - திருப்புத்தூர் தல விருட்சம்.

மேல்

(275)
நாற விண்ட நறுமாமலர் கவ்வி,

தேறல் வண்டு திளைக்கும் திருப்புத்தூர்,

ஊறல் வாழ்க்கை உடையார் அவர் போலும்

ஏறு கொண்ட கொடி எம் இறையாரே.

ஆன் ஏற்றுக் கொடியைத் தனதாகக் கொண்ட எம் இறைவர், மணம் வீசுமாறு மலர்ந்த சிறந்த நறுமலர்களைத் தம் வாயால்கவ்வி வண்டுகள் தேனை உண்டு திளைக்கும் திருப்புத்தூரில் பலகாலம் தங்கிய வாழ்க்கையினை உடையவர் ஆவார்.

மேல்

(276)
இசை விளங்கும் எழில் சூழ்ந்து, இயல்பு ஆகத்

திசை விளங்கும் பொழில் சூழ் திருப்புத்தூர்,

பசை விளங்கப் படித்தார் அவர் போலும்

வசை விளங்கும் வடி சேர் நுதலாரே.

கங்கையாகிய பெண் விளங்கும் அழகிய சென்னியினராகிய இறைவர், புகழால் விளக்கம் பெற்றதும், இயல்பாக அழகு சூழ்ந்து விளங்குவதும், நாற்றிசைகளிலும் பொழில்கள் சூழ்ந்ததுமான திருப்புத்தூரில், தம்மை வழிபடுவார்க்கு அன்பு வளருமாறு பழகும் பெருமானார் ஆவார்.

மேல்

(277)
வெண் நிறத்த விரையோடு அலர் உந்தி,

தெண் நிறத்த புனல் பாய் திருப்புத்தூர்,

ஒண் நிறத்த ஒளியார் அவர் போலும்

வெண் நிறத்த விடை சேர் கொடியாரே.

வெண்மை நிறமுடைய விடை உருவம் எழுதிய கொடியை உடைய இறைவர், வெள்ளிய நிறமுடையனவாய் மணம் பொருந்திய மலர்களை அடித்துக் கொண்டு தெளிந்த தன்மை உடையதாய்த் தண்ணீர் பாயும் திருப்புத்தூரில் எழுந்தருளிய ஒண்மை பொருந்திய ஒளியை உடைய பெருமானார் ஆவார்.

மேல்

(278)
நெய்தல், ஆம்பல், கழுநீர், மலர்ந்து எங்கும்

செய்கள் மல்கு சிவனார் திருப்புத்தூர்,

தையல் பாகம் மகிழ்ந்தார் அவர் போலும்

மையுண் நஞ்சம் மருவும் மிடற்றாரே.

கருமை பொருந்திய நஞ்சு மருவும் மிடற்றினராய் இறைவர், நெய்தல், ஆம்பல் செங்கழுநீர் ஆகிய மலர்கள் வயல்கள் எங்கும் மலர்ந்து நிறைந்து விளங்கும் திருப்புத்தூரில் எழுந்தருளிய உமையொரு பாகம் மகிழ்ந்த சிவனாராவார்.

மேல்

(279)
கருக்கம் எல்லாம் கமழும் பொழில் சோலைத்

திருக்கொள் செம்மை விழவு ஆர் திருப்புத்தூர்

இருக்க வல்ல இறைவர் அவர் போலும்

அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே.

இராவணனாகிய அரக்கனைக் கால்விரலால் தளர அடர்த்தவராகிய பெருமானார், மேகங்களிலும் பரவிக் கமழும் மனமுடைய பொழில்களாலும் சோலைகளாலும் சூழப்பெற்றதும், செல்வம் நிறைந்ததும், செம்மையாளர் வாழ்வதும், திருவிழாக்கள் பல நிகழ்வதுமாய திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்க வல்லவராய இறைவராவார்.

மேல்

(280)
மருவி எங்கும் வளரும் மடமஞ்ஞை

தெருவு தோறும் திளைக்கும் திருப்புத்தூர்ப்

பெருகி வாழும் பெருமான் அவன்போலும்

பிரமன் மாலும் அறியாப் பெரியோனே.

பிரமனும் திருமாலும் அறியமுடியாத பெரியோனாகிய இறைவன், எங்கும் பொருந்தியனவாய் வளரும் இளமயில்கள் தெருக்கள் தோறும் உலவிக் களிக்கும் திருப்புத்தூரில் பெருமை பெருகியவனாய் வாழும் பெருமானாவான்.

மேல்

(281)
கூறை போர்க்கும் தொழிலார், அமண், கூறல்

தேறல் வேண்டா; தெளிமின்! திருப்புத்தூர்,

ஆறும் நான்கும் அமர்ந்தார் அவர்போலும்

ஏறு கொண்ட கொடி எம் இறையாரே.

மேல் ஆடையைப் போர்த்துத் திரிதலைத் தொழிலாகக் கொண்ட பௌத்தர் சமணர் ஆகியவருடைய உரைகளை நம்பாதீர்கள். ஆனேறு எழுதிய கொடியினை உடையவராய்த் திருப்புத்தூரில் நான்கு வேதங்களாகவும், ஆறு அங்கங்களாகவும் விளங்கும் பெருமானாராகிய அவரைத் தெளிமின்.

மேல்

(282)
நல்ல கேள்வி ஞானசம்பந்தன்

செல்வர் சேடர் உறையும் திருப்புத்தூர்ச்

சொல்லல் பாடல் வல்லார் தமக்கு என்றும்

அல்லல் தீரும்; அவலம் அடையாவே.

நன்மை தரும் வேதங்களை உணர்ந்த ஞானசம்பந்தன், செல்வரும் உயர்ந்தவருமான சிவபெருமான் உறையும் திருப்புத்தூரை அடைந்து வழிபட்டுச் சொல்லிய,

பத்துப் பாடல்களையும் வல்லவர்கட்குத் துன்பங்கள் நீங்கும். எக்காலத்தும் அவலம் அவர்களை அடையா.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(27)
திருப்புன்கூர் - தக்கராகம்

(283)
முந்தி நின்ற வினைகள் அவை போகச்

சிந்தி, நெஞ்சே! சிவனார் திருப் புன்கூர்;

அந்தம் இல்லா அடிகள் அவர் போலும்

கந்தம் மல்கு கமழ் புன் சடையாரே.

நெஞ்சே! பல பிறவிகளிலும் செய்தனவாய சஞ்சித, ஆகாமிய வினைகளுள் பக்குவப்பட்டுப் பிராரத்த வினையாய்ப் புசிப்பிற்கு முற்பட்டு நின்ற வினைகள் பலவும் நீங்க, திருப்புன்கூரில் ஆதி அந்தம் இல்லாத தலைவராய், மணம் நிறைந்து கமழும் செந்நிறச் சடைமுடி உடையவராய் எழுந்தருளிய சிவபிரானாரைச் சிந்தனை செய்வாயாக.

மேல்

(284)
மூவர் ஆய முதல்வர், முறையாலே

தேவர் எல்லாம் வணங்கும் திருப் புன்கூர்

ஆவர், என்னும் அடிகள் அவர் போலும்

ஏவின் அல்லார் எயில் மூன்று எரித்தாரே.

பகைமை பூண்டவராய அசுரர்களின் மூன்று அரண்களைக் கணையொன்றால் எரித்தழித்த இறைவர், பிரமன், மால், உருத்திரன் ஆகிய மூவராயும், அவர்களுக்கு முதல்வராயும், தேவர்கள் எல்லோரும் முறையாக வந்து வணங்குபவராயும் விளங்கும் திருப்புன்கூரில் எழுந்தருளிய அடிகள் ஆவர்.

மேல்

(285)
பங்கயங்கள் மலரும் பழனத்துச்

செங்கயல்கள் திளைக்கும் திருப் புன்கூர்,

கங்கை தங்கு சடையார் அவர் போலும்

எங்கள் உச்சி உறையும் இறையாரே.

எங்கள் தலைகளின் மேல் தங்கி விளங்கும் இறைவர், தாமரை மலர்கள் மலரும் வயல்களில் சிவந்த கயல் மீன்கள் திளைத்து மகிழும் திருப்புன்கூரில் எழுந்தருளியுள்ள கங்கை தங்கிய சடை முடியினராகிய சிவபெருமானாராவர்.

மேல்

(286)
கரை உலாவு கதிர் மா மணிமுத்தம்

திரை உலாவு வயல் சூழ் திருப் புன்கூர்,

உரையின் நல்ல பெருமான் அவர் போலும்

விரையின் நல்ல மலர்ச் சேவடியாரே.

மணத்தால் மேம்பட்ட தாமரைமலர் போலும் சிவந்த திருவடிகளை உடைய இறைவர், ஒளி பொருந்திய சிறந்த மாணிக்கங்கள் கரைகளில் திகழ்வதும், முத்துக்கள் நீர்த் திரைகளில் உலாவுவதும் ஆகிய வளம்மிக்க வயல்கள் சூழ்ந்த திருப்புன்கூரில் எழுந்தருளிய புகழ்மிக்க நல்ல பெருமானாராவார்.

மேல்

(287)
பவழ வண்ணப் பரிசு ஆர் திருமேனி

திகழும் வண்ணம் உறையும் திருப் புன்கூர்

அழகர் என்னும் அடிகள் அவர் போலும்

புகழ நின்ற புரிபுன் சடையாரே.

உலகோர் புகழ நிலை பெற்ற, முறுக்கிய சிவந்த சடை முடியை உடைய இறைவர், பவளம் போலும் தமது திருமேனியின் செவ்வண்ணம் திகழுமாறு திருப்புன்கூரில் உறையும் அழகர் என்னும் அடிகளாவார்.

மேல்

(288)
தெரிந்து இலங்கு கழுநீர் வயல், செந்நெல்

திருந்த நின்ற வயல், சூழ் திருப் புன்கூர்ப்

பொருந்தி நின்ற அடிகள் அவர் போலும்

விரிந்து இலங்கு சடை வெண் பிறையாரே.

விரிந்து விளங்கும் சடைமுடியில் வெண்பிறை அணிந்த இறைவர், கண்களுக்குப் புலனாய் அழகோடு திகழும் செங்கழுநீர் மலர்ந்த வயல்களாலும், செந்நெற் கதிர்கள் அழகோடு நிறைந்து நிற்கும் வயல்களாலும் சூழப்பெற்ற திருப்புன்கூரில் எழுந்தருளியுள்ள அடிகள் ஆவார்.

மேல்

(289)
பாரும் விண்ணும் பரவித் தொழுது ஏத்தும்

தேர் கொள் வீதி விழவு ஆர் திருப் புன்கூர்,

ஆர நின்ற அடிகள் அவர் போலும்

கூரம் நின்ற எயில் மூன்று எரித்தாரே.

கொடியனவாய்த் தோன்றி இடர் விளைத்து நின்ற முப்புரங்களையும் எரித்தழித்த இறைவர், மண்ணக மக்களும் விண்ணகத் தேவரும் பரவித் தொழுதேத்துமாறு தேரோடும் திருவீதிகளை உடையதும், எந்நாளும் திருவிழாக்களால் சிறந்து திகழ்வதுமான திருப்புன்கூரில் பொருந்தி நின்ற அடிகளாவார்.

மேல்

(290)
மலை அதனார் உடைய மதில் மூன்றும்

சிலை அதனால் எரித்தார் திருப் புன்கூர்த்

தலைவர், வல்ல அரக்கன் தருக்கினை

மலை அதனால் அடர்த்து மகிழ்ந்தாரே.

வலிமை பொருந்திய இராவணன் செருக்கைப் போக்க, அவனைக் கயிலை மலையாலே அடர்த்துப்பின் அவன் வேண்ட மகிழ்ந்து அருள் வழங்கிய இறைவர், தேவர்களோடு சண்டையிட்டு அவர்களை அழிக்கும் குணம் உடையவராய அசுரர்களின் முப்புரங்களை வில்லால் எரித்தழித்தவராகிய திருப்புன்கூர்த் தலைவர் ஆவார்.

மேல்

(291)
நாட வல்ல மலரான், மாலும் ஆய்த்

தேட நின்றார், உறையும் திருப் புன்கூர்

ஆட வல்ல அடிகள் அவர் போலும்

பாடல் ஆடல் பயிலும் பரமரே.

பாடல் ஆடல் ஆகிய இரண்டிலும் வல்லவராய் அவற்றைப் பழகும் மேலான இறைவர், எதனையும் ஆராய்ந்தறிதலில் வல்ல நான்முகனும், திருமாலும், தேடி அறிய இயலாதவராய் ஓங்கி நின்றவர். அப்பெருமான் திருப்புன்கூரில் உறையும் ஆடல்வல்ல அடிகள் ஆவார்.

மேல்

(292)
குண்டு முற்றிக் கூறை இன்றியே

பிண்டம் உண்ணும் பிராந்தர் சொல் கொளேல்!

வண்டு பாட மலர் ஆர் திருப் புன்கூர்க்

கண்டு தொழுமின், கபாலிவேடமே!.

கீழாந்தன்மை மிகுந்து ஆடையின்றி வீதிகளில் வந்து பிச்சை கேட்டுப் பெற்று, அவ்வுணவை விழுங்கி வாழும் மயக்க அறிவினராகிய சமணர்கள் கூறும் சொற்களைக் கேளாதீர். தேனுண்ண வந்த வண்டுகள் பாடுமாறு மலர்கள் நிறைந்து விளங்கும் திருப்புன்கூர் சென்று அங்கு விளங்கும் கபாலியாகிய சிவபிரானின் வடிவத்தைக் கண்டு தொழுவீர்களாக.

மேல்

(293)
மாடம் மல்கு மதில் சூழ் காழி மன்,

சேடர் செல்வர் உறையும் திருப் புன்கூர்

நாட வல்ல ஞானசம்பந்தன்,

பாடல்பத்தும் பரவி வாழ்மினே!.

மாடவீடுகளால் நிறையப் பெற்றதும் மதில்கள் சூழ்ந்ததுமான சீகாழிப் பதிக்குத் தலைவனாய், எதையும் நாடி ஆராய்தலில் வல்ல ஞானசம்பந்தன், பெரியோர்களும் செல்வர்களும் வாழும் திருப்புன்கூர் இறைவர்மீது பாடிய,

பாடல்கள் பத்தையும் பரவி வாழ்வீர்களாக.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(28)
திருச்சோற்றுத்துறை - தக்கராகம்

(294)
செப்பம் நெஞ்சே, நெறி கொள்! சிற்றின்பம்

துப்பன் என்னாது, அருளே துணை ஆக,

ஒப்பர் ஒப்பர் பெருமான், ஒளி வெண் நீற்று

அப்பர், சோற்றுத்துறை சென்று அடைவோமே.

நெஞ்சே, முறையான சிற்றின்பத்தைத் தன் முனைப்போடு "யான் துய்ப்பேன் " என என்னாது, "அருளே துணையாக நுகர்வேன்" என்று கூற, இறைவர் அதனை ஏற்பர். அத்தகைய பெருமானார், ஒளி பொருந்திய திருவெண்ணீறு அணிந்த மேனியராய்த் தலைவராய் விளங்கும், திருச்சோற்றுத் துறையைச் சென்றடைவோம்.

மேல்

(295)
பாலும் நெய்யும் தயிரும் பயின்று ஆடி,

தோலும் நூலும் துதைந்த வரைமார்பர்,

மாலும் சோலை புடை சூழ் மடமஞ்ஞை

ஆலும் சோற்றுத்துறை சென்று அடைவோமே.

பாலையும் நெய்யையும் தயிரையும் விரும்பி யாடிப் புலித்தோலும் முப்புரி நூலும் பொருந்திய மலை போன்று விரிந்த மார்பினராய் விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய, மயக்கும் சோலைகளால் சூழப்பெற்ற, இள மயில்கள் ஆரவாரிக்கும் திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோம்.

மேல்

(296)
செய்யர், செய்யசடையர், விடை ஊர்வர்,

கை கொள் வேலர், கழலர், கரிகாடர்,

தையலாள் ஒரு பாகம் ஆய எம்

ஐயர், சோற்றுத்துறை சென்று அடைவோமே.

சிவந்த திருமேனியரும், செம்மை நிறமுடைய சடைமுடியினரும், விடையூர்ந்து வருபவரும், கையில் பற்றிய சூலத்தினரும், வீரக்கழல் அணிந்தவரும், இடுகாட்டில் விளங்குபவரும், உமையம்மையைத் தன்மேனியில் ஒரு கூறாகக் கொண்டவருமான எம் தலைவராய சிவபிரான் எழுந்தருளிய திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோம்.

மேல்

(297)
பிணி கொள் ஆக்கை ஒழிய, பிறப்பு உளீர்!

துணி கொள் போரார், துளங்கும் மழுவாளர்,

மணி கொள் கண்டர், மேய வார் பொழில்

அணி கொள் சோற்றுத்துறை சென்று அடைவோமே.

நோய்கட்கு இடமான இவ்வுடலுடன் பிறத்தல் ஒழியுமாறு இப்பிறப்பைப் பயன்படுத்த எண்ணும் அறிவுடையவர்களே, துணித்தலைச் செய்வதும், போர் செய்தற்கு உரியதுமான விளங்கும் மழுவாயுதத்தைக் கையில் ஏந்தியவரும், நீலமணி போன்ற கண்டத்தை உடையவருமான, சிவபெருமான் மேவிய நீண்ட பொழில்கள் சூழ்ந்த அழகிய திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோமாக.

மேல்

(298)
பிறையும் அரவும் புனலும் சடை வைத்து,

மறையும் ஓதி, மயானம் இடம் ஆக

உறையும் செல்வம் உடையார், காவிரி

அறையும் சோற்றுத்துறை சென்று அடைவோமே.

இளம் பிறையையும் பாம்பையும் கங்கையையும் சடையில் அணிந்து, நான்மறைகளை ஓதிக் கொண்டு, சுடுகாட்டைத் தமது இடமாகக் கொண்டு உறையும், வீடு பேறாகிய செல்வத்தை உடைய இறைவரின் காவிரி நீர் ஒலி செய்யும் திருச்சோற்றுத் துறையைச் சென்றடைவோம்.

மேல்

(299)
துடிகளோடு முழவம் விம்மவே,

பொடிகள் பூசி, புறங்காடு அரங்கு ஆக,

படி கொள் பாணி பாடல் பயின்று ஆடும்

அடிகள் சோற்றுத்துறை சென்று அடைவோமே.

உடுக்கைகள் பலவற்றோடு முழவங்கள் ஒலிக்கத் தம் மேனி மீது திருநீற்றுப் பொடி பூசி, புறங்காடாகிய சுடுகாட்டை அரங்காகக் கொண்டு, பொருத்தமான தாளச் சதிகளோடு பாடல்கள் பாடி ஆடும் அடிகள் எழுந்தருளிய திருச்சோற்றுத்துறையைச் சென்று அடைவோம்.

மேல்

(300)
சாடிக் காலன் மாள, தலைமாலை

சூடி, மிக்குச் சுவண்டு ஆய் வருவார், தாம்

பாடி ஆடிப் பரவுவார் உள்ளத்து

ஆடி, சோற்றுத்துறை சென்று அடைவோமே.

காலன் அழியுமாறு அவனைக் காலால் உதைத்துத் தலைமாலைகளை அணிந்து, பொருத்தம் உடையவராய் வருபவரும், பாடி ஆடிப் பரவுவார் உள்ளங்களில் மகிழ்வோடு நடனம் புரிபவருமான சிவபிரான் எழுந்தருளிய திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோம்.

மேல்

(301)
பெண் ஓர்பாகம் உடையார், பிறைச் சென்னிக்

கண் ஓர்பாகம் கலந்த நுதலினார்,

எண்ணாது அரக்கன் எடுக்க ஊன்றிய

அண்ணல், சோற்றுத்துறை சென்று அடைவோமே.

ஒருபாகமாக உமையம்மையை உடையவரும், பிறையணிந்த சென்னியரும், தமது திருமேனியில் ஒரு பாகமாக விளங்கும் நெற்றி விழியை உடையவரும், இராவணன் பின்விளையும் தீமையை எண்ணாது கயிலை மலையைப் பெயர்க்க, அவனது முனைப்பை அடக்கக் கால் விரலை ஊன்றிய தலைமைத் தன்மை உடையவருமாகிய சிவபிரானது திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோம்.

மேல்

(302)
தொழுவார் இருவர் துயரம் நீங்கவே

அழல் ஆய் ஓங்கி அருள்கள் செய்தவன்,

விழவு ஆர் மறுகில் விதியால் மிக்க எம்

எழில் ஆர் சோற்றுத்துறை சென்று அடைவோமே.

தம் செருக்கடங்கித் தம்மைத் தொழுத திருமால் பிரமன் ஆகிய இருவர்க்கும், அழலுருவாய் ஓங்கி நின்று அருள்களைச் செய்தவன், விரும்பி உறையும் விழாக்கள் நிகழும் வீதிகளில் வேத விதியோடு வாழும் மக்களை உடைய சோற்றுத்துறையைச் சென்றடைவோம்.

மேல்

(303)
கோது சாற்றித் திரிவார், அமண் குண்டர்,

ஓதும் ஓத்தை உணராது எழு, நெஞ்சே!

நீதி நின்று நினைவார் வேடம் ஆம்

ஆதி சோற்றுத்துறை சென்று அடைவோமே.

நெஞ்சே! குற்றங்களையே பலகாலும் சொல்லித் திரிபவராகிய சமண் குண்டர்கள் ஓதுகின்ற வேதத்தை அறிய முயலாது, சிவாகம நெறி நின்று, நினைப்பவர் கருதும் திருவுருவோடு வெளிப்பட்டருளும் முதல்வனாகிய சிவபிரானது சோற்றுத்துறையை நாம் சென்றடைவோம்.

மேல்

(304)
அம் தண் சோற்றுத்துறை எம் ஆதியைச்

சிந்தை செய்ம்மின், அடியர் ஆயினீர்!

சந்தம் பரவு ஞானசம்பந்தன்

வந்த ஆறே புனைதல் வழிபாடே.

அடியவர்களாக உள்ளவர்களே! அழகு தண்மை ஆகியவற்றோடு விளங்கும்,

திருச்சோற்றுத்துறையில் எழுந்தருளிய எம் முதல்வனை மனத்தால் தியானியுங்கள். சந்த இசையால் ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத்தைத் தமக்கு வந்தவாறு பாடி வழிபடுதலே அவ்விறைவற்கு நாம் செய்யும் வழிபாடாகும்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(29)
திருநறையூர்ச் சித்தீச்சுரம் - தக்கராகம்

(305)
ஊர் உலாவு பலி கொண்டு, உலகு ஏத்த,

நீர் உலாவும் நிமிர் புன் சடை அண்ணல்,

சீர் உலாவும் மறையோர் நறையூரில்,

சேரும் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே!.

நெஞ்சே! ஊர்கள்தோறும் உலாவுவதால் கிடைக்கும் உணவைப் பெற்று, உலகம் பரவக் கங்கை நீரைத் தன் திருமுடியில் ஏற்று, அக்கங்கை நீர் உலாவும் மேல்நோக்கின சிவந்த சடைமுடியினை உடையதலைமைத் தன்மை உடைய சிவபிரான் எழுந்தருளிய, சீருடைய மறையவர் வாழும் நகரான நறையூரில் விளங்கும் சித்தீச்சரத்தைச் சென்றடைவாயாக.

மேல்

(306)
காடும் நாடும் கலக்கப் பலி நண்ணி,

ஓடு கங்கை ஒளிர் புன் சடை தாழ,

வீடும் ஆக மறையோர் நறையூரில்,

நீடும் சித்தீச்சுரமே நினை நெஞ்சே!.

நெஞ்சே! காட்டின்கண் முனிவர் குடில்களிலும், நாட்டின்கண் இல்லறத்தார் வீடுகளிலும் விரும்பிப் பலியேற்று, ஓடி வரும் கங்கை தங்கிய ஒளிவீசும் சிவந்த சடைகள் தாழ, தம் உடல்களை விடுத்து, முத்திப்பேற்றை அடைய விரும்பும் அந்தணர் வாழும் நறையூரில், புகழால் நீடிய சித்தீச்சரத்தில் விளங்கும் பெருமானை நினைவாயாக.

மேல்

(307)
கல்வியாளர், கனகம் அழல் மேனி

புல்கு கங்கை புரி புன் சடையான் ஊர்,

மல்கு திங்கள் பொழில் சூழ், நறையூரில்

செல்வர் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே!.

நெஞ்சமே! பொன்னையும் தீயையும் ஒத்த திருமேனியராய், கங்கை தங்கும் முறுக்கேறிய சிவந்த சடையினை உடையவராய் விளங்கும் சிவபிரானது ஊர், கல்வியாளர் நிறைந்ததாய், திங்கள் தங்கும் பொழில்கள் சூழ்ந்ததாய் விளங்கும் நறையூராகும். அவ்வூரில் செல்வர் வணங்கும் சித்தீச்சரத்தைச் சென்றடைவாயாக.

மேல்

(308)
நீட வல்ல நிமிர் புன்சடை தாழ

ஆட வல்ல அடிகள் இடம் ஆகும்,

பாடல் வண்டு பயிலும், நறையூரில்

சேடர் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!.

நெஞ்சே! மேல்நோக்கிய நீண்டு வளரவல்ல செஞ்சடைகள் தாழுமாறு ஆடுதலில் வல்ல அடிகளாகிய சிவபிரானது இடம் ஆகிய பாடுதலில் வல்ல வண்டுகள் நிறைந்து வாழும் சோலைவளம் உடைய நறையூரில் பெரியோர் வணங்கித் துதிக்கும் சித்தீச்சரத்தைத் தெளிவாயாக.

மேல்

(309)
உம்பராலும் உலகின் அவராலும்

தம் பெருமை அளத்தற்கு அரியான் ஊர்,

நண்பு உலாவும் மறையோர், நறையூரில்

செம்பொன் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!.

நெஞ்சே! தேவர்களாலும், உலகிடை வாழும் மக்களாலும் தனது பெருமைகளை அளவிட்டுக் கூறுவதற்கு அரியவனாகிய சிவபிரானது ஊராய், நட்புத் தன்மையால் மேம்பட்ட மறையவர்கள் வாழும் திருநறையூரில் சிவபிரான் எழுந்தருளிய செம்பொன்மயமான சித்தீச்சரத்தையே தெளிவாயாக.

மேல்

(310)
கூர் உலாவு படையான், விடை ஏறி,

போர் உலாவு மழுவான், அனல் ஆடி,

பேர் உலாவு பெருமான், நறையூரில்

சேரும் சித்தீச்சுரமே இடம் ஆமே.

கூர்மைமிக்க சூலப்படையை உடையவனாய், விடை மீது ஏறிப் போருக்குப் பயன்படும் மழுவாயுதத்தை ஏந்தி, அனல்மிசை நின்றாடி, ஏழுலகிலும் தன் புகழ் விளங்க நிற்கும் சிவபெருமான் திருநறையூரில் விளங்கும் சித்தீச்சரமே நாம் வழிபடற்குரிய இடமாகும்.

மேல்

(311)
அன்றி நின்ற அவுணர் புரம் எய்த

வென்றி வில்லி விமலன்-விரும்பும் ஊர்,

மன்றில் வாச மணம் ஆர், நறையூரில்

சென்று சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!.

நெஞ்சே! தன்னோடு வேறுபட்டு நிற்கும் அவுணர்களின் முப்புரங்களையும் எய்தழித்த வெற்றியோடு கூடிய வில்லை உடைய குற்றமற்றவன் விரும்பும் ஊர் ஆகிய, மணம் நிலைபெற்று வீசும் பொது மன்றங்களை உடைய திருநறையூருக்குச் சென்று, அங்குப் பெருமான் எழுந்தருளிய சித்தீச்சரத்தைத் தெளிந்து வழிபடுக.

மேல்

(312)
அரக்கன் ஆண்மை அழிய வரைதன்னால்

நெருக்க ஊன்றும் விரலான் விரும்பும் ஊர்,

பரக்கும் கீர்த்தி உடையார், நறையூரில்

திருக்கொள் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!.

நெஞ்சே! இராவணனது வலிமை கெடுமாறு கயிலை மலையால் ஊன்றி அடர்த்த கால் விரலை உடைய சிவபிரான் விரும்புவது, பரவிய புகழாளர் வாழ்வது ஆகிய திருநறையூரில் விளங்கும் சிவபிரானது சித்தீச்சரத்தைத் தெளிவாயாக.

மேல்

(313)
ஆழியானும் அலரின் உறைவானும்

ஊழி நாடி உணரார் திரிந்து, மேல்

சூழும் நேட, எரி ஆம் ஒருவன் சீர்

நீழல் சித்தீச்சுரமே நினை நெஞ்சே!.

நெஞ்சே! சக்கராயுதத்தை உடைய திருமாலும், தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும், உணராதவனாய், ஓர் ஊழிக்காலம் அளவும் திரிந்து சுற்றும் முற்றும் மேலும் கீழுமாய்த் தேட எரியுருவாய் ஓங்கி நின்ற சிவபெருமானது சிறப்புமிக்க இடமாகிய திருநறையூர்ச் சித்தீச்சரத்தை நினைவாய்.

மேல்

(314)
மெய்யின் மாசர், விரி நுண் துகில் இலார்,

கையில் உண்டு கழறும் உரை கொள்ளேல்!

உய்ய வேண்டில், இறைவன் நறையூரில்

செய்யும் சித்தீச்சுரமே தவம் ஆமே.

உடம்பின்கண் அழுக்குடையவர்களும், விரித்துக் கட்டும் நுண்ணிய ஆடைகளை அணியாதவர்களும், கைகளில் பலி ஏற்று உண்டு திரிபவர்களுமாகிய சமணர்கள் இடித்துக் கூறும் உரைகளைக் கொள்ளாதீர். நீர் இப்பிறப்பில் உய்தி பெற விரும்பினால், சிவபிரான் எழுந்தருளிய திருநறையூரில் செய்தமைத்த சித்தீச்சரத்தைச் சென்று வழிபடுமின். அதுவே சிறந்த தவமாம்.

மேல்

(315)
மெய்த்து உலாவும் மறையோர் நறையூரில்

சித்தன் சித்தீச்சுரத்தை உயர் காழி

அத்தன் பாதம் அணி ஞானசம்பந்தன்

பத்தும் பாட, பறையும், பாவமே.

வாய்மையே பேசி வாழும் மறையவர் வாழும் திருநறையூரின்கண் சித்தன் என்ற திருநாமத்தோடு விளங்கும் சிவபெருமானது சித்தீச்சரத்தை, மேலான காழி மாநகரில் விளங்கும் சிவபிரானது திருப்பாதங்களைத் தனது திருமுடிக்கு அணியாகக் கொண்ட ஞானசம்பந்தன் பாடிய ,

இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடிப்பரவப் பாவங்கள் நீங்கும்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(30)
திருப்புகலி - தக்கராகம்

(316)
விதி ஆய், விளைவு ஆய், விளைவின் பயன் ஆகி,

கொதியா வரு கூற்றை உதைத்தவர் சேரும்

பதி ஆவது பங்கயம் நின்று அலர, தேன்

பொதி ஆர் பொழில் சூழ் புகலி நகர்தானே.

மார்க்கண்டேயருக்கு வயது பதினாறு என விதித்த விதியாகவும், அதன்காரணமாக வந்த மரணமாய், அவர் இறை வழிபாடு செய்ததன் காரணமாகத்தானே விதியின் பயனாய் வெளிப்பட்டுச் சினந்துவந்த கூற்றுவனை உதைத்தருளிய சிவபிரான் எழுந்தருளிய தலம், தாமரை மலர்கள் மலர்ந்த நீர்நிலைகளும், தேன்கூடுகள் நிறைந்த பொழில்களும் சூழ்ந்த புகலிநகராகும்.

மேல்

(317)
ஒன்னார் புரம் மூன்றும் எரித்த ஒருவன்

மின் ஆர் இடையாளொடும் கூடிய வேடம்

தன்னால் உறைவு ஆவது தண்கடல் சூழ்ந்த

பொன் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே.

பகைவராய் மாறிய அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்த சிவபிரான் மின்னல் போன்ற இடையினை உடைய உமையம்மையோடு கூடிய திருவுருவத்தோடு எழுந்தருளிய இடம், குளிர்ந்த கடல் ஒருபுறம் சூழ, பொன் போன்ற நெல்மணிகள் நிறைந்த வயல்களை உடைய புகலிநகராகும்

மேல்

(318)
வலி இல் மதி செஞ்சடை வைத்த மணாளன்,

புலியின் அதள் கொண்டு அரை ஆர்த்த புனிதன்,

மலியும் பதி மா மறையோர் நிறைந்து ஈண்டிப்

பொலியும் புனல் பூம் புகலி நகர்தானே.

கலைகளாகிய வலிமை குறைந்த பிறை மதியைச் செஞ்சடைமீது வைத்துள்ள மணாளனும், புலியின் தோலை இடையிற் கட்டிய புனிதனும் ஆகிய சிவபெருமான் விரும்பும் பதி மேம்பட்ட வேதியர் நிறைந்து செறிந்து பொலியும் நீர்வளம் சான்ற அழகிய புகலிநகராகும்.

மேல்

(319)
கயல் ஆர் தடங்கண்ணியொடும் எருது ஏறி

அயலார் கடையில் பலி கொண்ட அழகன்

இயலால் உறையும் இடம் எண் திசையோர்க்கும்

புயல் ஆர் கடல் பூம் புகலி நகர்தானே.

கயல்மீன் போன்ற பெரிய கண்களை உடைய உமையம்மையோடும் விடைமீது ஏறி, அயலார் இல்லங்களில் பலி கொண்டருளும் அழகனாகிய சிவபிரான் எண்திசையிலுள்ளாரும் செவிசாய்த்து இடி ஓசையைக் கேட்கும் கார் மேகங்கள் தங்கும் கடலை அடுத்துள்ள அழகிய புகலிநகராகும்.

மேல்

(320)
காது ஆர் கன பொன் குழை தோடு அது இலங்க,

தாது ஆர் மலர் தண் சடை ஏற முடித்து,

நாதான் உறையும் இடம் ஆவது நாளும்

போது ஆர் பொழில் பூம் புகலி நகர்தானே.

காதுகளில் அணிந்துள்ள கனவிய பொன்னால் இயன்ற குழை, தோடு ஆகியன இலங்க மகரந்தம் மருவிய மலர்களைத் தண்ணிய சடையின்கண் பொருந்தச்சூடி, எல்லா உயிர்கட்கும் நாதனாக விளங்கும் சிவபிரான் உறையுமிடம் நாள்தோறும் புதிய பூக்கள் நிறைந்து விளங்கும் பொழில்கள் சூழ்ந்த புகலிநகராகும்.

மேல்

(321)
வலம் ஆர் படை மான் மழு ஏந்திய மைந்தன்,

கலம் ஆர் கடல் நஞ்சு அமுது உண்ட கருத்தன்,

குலம் ஆர் பதி கொன்றைகள் பொன் சொரிய, தேன்

புலம் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே.

வெற்றி பொருந்திய சூலப்படை, மான் மழு, ஆகியவற்றை ஏந்திய வலிமையுடையோனும், மரக்கலங்கள் உலாவும் கடலிடைத் தோன்றிய நஞ்சினை அமுதாக உண்டவனும் ஆகிய சிவபிரான், அடியார் குழாத்தோடு உறையும் பதி, கொன்றை மலர்கள் பொன் போன்ற இதழ்களையும் மகரந்தங்களையும் சொரிய, தேன் நிலத்தில் பாயும் வயல்களை உடைய புகலி நகராகும்.

மேல்

(322)
கறுத்தான், கனலால் மதில் மூன்றையும் வேவ;

செறுத்தான், திகழும் கடல் நஞ்சு அமுது ஆக;

அறுத்தான், அயன்தன் சிரம் ஐந்திலும் ஒன்றை;

பொறுத்தான்; இடம் பூம் புகலி நகர்தானே.

மும்மதில்களும் கனலால் வெந்தழியுமாறு சினந்தவனும், கடலிடை விளங்கித் தோன்றிய நஞ்சை அமுதாக உண்டு கண்டத்தில் தரித்தவனும், பிரமனது ஐந்து தலைகளில் ஒன்றை அறுத்து அதனைக் கையில் தாங்கிய சிவபிரான் எழுந்தருளிய இடம் அழகிய புகலி நகராகும்.

மேல்

(323)
தொழிலால் மிகு தொண்டர்கள் தோத்திரம் சொல்ல,

எழில் ஆர் வரையால் அன்று அரக்கனைச் செற்ற

கழலான் உறையும் இடம் கண்டல்கள் மிண்டி,

பொழிலால் மலி பூம் புகலி நகர்தானே.

தாம் செய்யும் பணிகளால் மேம்பட்ட தொண்டர்கள் தோத்திரம் சொல்லிப் போற்ற, அழகிய கயிலைமலையால் முன்னொரு காலத்தில் இராவணனைச் செற்ற திருவடிகளை உடைய சிவபிரான் உறையும் இடம், தாழைமரங்கள் செறிந்து விளங்கும் பொழில்கள் சூழ்ந்த புகலி நகராகும்.

மேல்

(324)
மாண்டார் சுடலைப் பொடி பூசி, மயானத்து

ஈண்டா, நடம் ஆடிய ஏந்தல், தன் மேனி

நீண்டான் இருவர்க்கு எரி ஆய், அரவு ஆரம்

பூண்டான், நகர் பூம் புகலி நகர்தானே.

இறந்தவர்களை எரிக்கும் சுடலையில் விளையும் சாம்பலை உடலிற் பூசிக் கொண்டு, அம்மயானத்திலேயே தங்கி நடனமாடும் தலைவரும், திருமால் பிரமர் பொருட்டுத் தம் திருமேனியை அழலுருவாக்கி ஓங்கி நின்றவரும் பாம்பை மாலையாகத் தரித்தவருமான சிவபிரானது நகர் அழகிய புகலிப் பதியாகும்.

மேல்

(325)
உடையார் துகில் போர்த்து உழல்வார், சமண்கையர்,

அடையாதன சொல்லுவர் ஆதர்கள் ஓத்தைக்

கிடையாதவன் தன் நகர் நல் மலி பூகம்

புடை ஆர்தரு பூம் புகலி நகர்தானே.

கீழ் உடையோடு மெல்லிய ஆடையைப் போர்த்துத் திரியும் புத்தரும், சமணர்களும் ஆகிய கீழ்மக்கள் பொருந்தாதவற்றைக் கூறுவார்கள். அக்கீழோரின் ஓத்திற்கு அகப்படாதவன் சிவபிரான். அப்பெருமானது நன்னகர், நன்கு செறிந்த பாக்கு மரச்சோலைகள் சூழ்ந்த புகலிநகராகும்.

மேல்

(326)
இரைக்கும் புனல் செஞ்சடை வைத்த எம்மான் தன்-

புரைக்கும் பொழில் பூம் புகலி நகர் தன் மேல்

உரைக்கும் தமிழ் ஞானசம்பந்தன் ஒண் மாலை

வரைக்கும் தொழில் வல்லவர் நல்லவர் தாமே.

ஆரவாரிக்கும் கங்கை நீரைத் தமது சிவந்த சடைமீது வைத்த எம் தலைவனாகிய சிவபிரானின், உயர்ந்த சோலைகளால் சூழப்பட்ட அழகிய புகலிப் பதியைக் குறித்துத் தமிழ் ஞானசம்பந்தன் உரைத்த,

அழகிய இப்பதிகமாலையைத் தமதாக்கி ஓதும் தொழில் வல்லவர் நல்லவர் ஆவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(31)
திருக்குரங்கணில்முட்டம் - தக்கராகம்

(327)
விழுநீர், மழுவாள் படை, அண்ணல் விளங்கும்

கழுநீர் குவளை மலரக் கயல் பாயும்

கொழுநீர் வயல் சூழ்ந்த குரங்கணில் முட்டம்

தொழும் நீர்மையர் தீது உறு துன்பம் இலரே.

பெருமைக்குரிய கங்கையை முடிமிசை அணிந்தவரும், மழுவாட்படையைக் கையில் ஏந்தியவரும் ஆகிய சிவபிரான் உறைவது கழுநீர், குவளை ஆகியன மலர்ந்து, கயல்மீன்கள் துள்ளுமாறு விளங்கும் நீர் நிலைகளை உடையதும், செழுமையான வயல்களால் சூழப்பட்டதுமாகிய திருக்குரங்கணில்முட்டம் ஆகும். இத்தலத்தைத் தொழுபவர் தீமையால் வரும் துன்பம் இலராவர்.

மேல்

(328)
விடை சேர் கொடி அண்ணல் விளங்கு, உயர் மாடக்

கடை சேர், கரு மென் குளத்து ஓங்கிய காட்டில்

குடை ஆர் புனல் மல்கு, குரங்கணில் முட்டம்

உடையான்; எனை ஆள் உடை எந்தை பிரானே.

உயர்ந்து விளங்கும் மாடங்களின் கடை வாயிலைச் சேர்ந்துள்ள கரிய மெல்லிய காட்டிடையே அமைந்த குடைந்து ஆடுதற்குரிய நீர் நிலைகள் நிறைந்த குரங்கணில்முட்டத்தை உடையானும் விடைக்கொடி அண்ணலுமாகிய சிவபிரான் என்னை ஆளாக உடைய தலைவன் ஆவான்.

மேல்

(329)
சூலப்படையான், விடையான், சுடு நீற்றான்,

காலன் தனை ஆர் உயிர் வவ்விய காலன்-

கோலப் பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டத்து

ஏலம் கமழ் புன்சடை எந்தை பிரானே.

அழகிய சோலைகளால் சூழப்பெற்ற குரங்கணில் முட்டத்தில் எழுந்தருளிய மணம்கமழும் சடைமுடியை உடையோனாகிய எந்தைபிரான் சூலப்படையையும் விடை ஊர்தியையும் உடையவன். திருவெண்ணீறு பூசியவன். காலனின் உயிரை வவ்வியதால் காலகாலன் எனப்படுபவன்.

மேல்

(330)
வாடா விரி கொன்றை, வலத்து ஒரு காதில்-

தோடு ஆர் குழையான், நல பாலனம் நோக்கி,

கூடாதன செய்த குரங்கணில் முட்டம்

ஆடா வருவார் அவர் அன்பு உடையாரே.

வாடாது விரிந்துள்ள கொன்றை மாலையைச் சூடியவனும், வலக்காதில் குழையையும் இடக்காதில் தோட்டையும் அணிந்துள்ளவனும், நன்றாக அனைத்துயிர்களையும் காத்தலைத் திருவுளம் கொண்டு தேவர் எவரும் செய்ய முடியாத அரிய செயல்களைச் செய்பவனுமாகிய குரங்கணில்முட்டத்துள் திருநடனம் புரியும் இறைவன் எல்லோரிடத்தும் அன்புடையவன்.

மேல்

(331)
இறை ஆர் வளையாளை ஒரு பாகத்து அடக்கி,

கறை ஆர் மிடற்றான்; கரி கீறிய கையான்;

குறை ஆர் மதி சூடி குரங்கணில் முட்டத்து

உறைவான்; எமை ஆள் உடை ஒண் சுடரானே.

இறையார் வளையாள் என்னும் திருப்பெயர் கொண்ட உமையம்மையை ஒருபாகத்தே கொண்டவனும், நீலகண்டனும், யானையின் தோலை உரித்துப் போர்த்த கையினனும் ஆகிப் பிறைமதியை முடியில் சூடிக் குரங்கணில் முட்டத்தில் உறையும் இறைவன் எம்மை ஆளாக உடைய ஒண் சுடராவான்.

மேல்

(332)
பலவும் பயன் உள்ளன பற்றும் ஒழிந்தோம்

கலவம்மயில் காமுறு பேடையொடு ஆடிக்

குலவும் பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டம்

நிலவும் பெருமான் அடி நித்தல் நினைந்தே.

தோகைகளை உடைய ஆண் மயில்கள் தாம் விரும்பும் பெண் மயில்களோடு கூடிக் களித்தாடும் பொழில்களால் சூழப்பட்ட குரங்கணில்முட்டத்தில் உறையும் பெருமான் திருவடிகளை நாள்தோறும் நினைந்து உலகப் பொருள்கள் பலவற்றிலும் இருந்த பற்றொழிந்தோம்.

மேல்

(333)
மாடு ஆர் மலர்க்கொன்றை வளர்சடை வைத்து,

தோடு ஆர் குழைதான் ஒரு காதில் இலங்க,

கூடார் மதில் எய்து, குரங்கணில் முட்டத்து,

ஆடு ஆர் அரவம் அரை ஆர்த்து, அமர்வானே.

சிவபிரான் பொன்னையொத்த கொன்றை மலர் மாலையைச் சடைமீது அணிந்து, காதணியாகிய குழை ஒரு காதில் இலங்கத் திரிபுரத்தை எரித்தழித்து, ஆடும் பாம்பை இடையிலே வரிந்துகட்டிக் குரங்கணில்முட்டத்தில் எழுந்தருளியுள்ளான்.

மேல்

(334)
மை ஆர் நிற மேனி அரக்கர் தம் கோனை

உய்யா வகையால் அடர்த்து, இன் அருள் செய்த

கொய் ஆர் மலர் சூடி குரங்கணில் முட்டம்

கையால் தொழுவார் வினை காண்டல் அரிதே.

கரிய மேனியை உடைய அரக்கர் தலைவனாகிய இராவணனைப் பிழைக்க முடியாதபடி அடர்த்துப் பின் அவனுக்கு இனிய அருளை வழங்கியவனும், அடியவர் கொய்தணிவித்த மலர் மாலைகளுடன் குரங்கணில்முட்டத்தில் எழுந்தருளியுள்ளவனுமாகிய சிவபெருமானைக் கைகளால் தொழுபவர் வினைப்பயன்களைக் காணுதல் இலராவர்.

மேல்

(335)
வெறி ஆர் மலர்த் தாமரையானொடு மாலும்

அறியாது அசைந்து ஏத்த, ஓர் ஆர் அழல் ஆகும்

குறியால் நிமிர்ந்தான் தன் குரங்கணில் முட்டம்

நெறியால் தொழுவார் வினை நிற்ககிலாவே.

மணம் கமழும் தாமரை மலரில் உறையும் நான்முகனும், திருமாலும் அடிமுடி அறிய முடியாது வருந்தி வணங்க அழல் உருவாய் ஓங்கி நின்றருளிய சிவபிரான் விளங்கும் குரங்கணில் முட்டத்தை முறையாக வணங்குவார் வினைகள் இலராவர்.

மேல்

(336)
கழுவார், துவர் ஆடை கலந்து மெய் போர்க்கும்,

வழுவாச் சமண் சாக்கியர் வாக்கு அவை கொள்ளேல்!

குழு மின்சடை அண்ணல் குரங்கணில் முட்டத்து

எழில் வெண் பிறையான் அடி சேர்வது இயல்பே.

தோய்க்கப்பட்ட துவராடையை உடலிற் போர்த்துத் திரியும் புத்தர், தம்கொள்கையில் வழுவாத சமணர் ஆகியோர் உரைகளைக் கொள்ளாதீர். மின்னல்திரள் போலத்திரண்டு உள்ள சடைமுடியை உடையவனும், அழகிய வெண்பிறையை அணிந்தவனும் ஆகிய குரங்கணில் முட்டத்து இறைவன் திருவடிகளைச் சென்று வணங்குவதே நம் கடமையாகும்.

மேல்

(337)
கல் ஆர் மதில் காழியுள் ஞானசம்பந்தன்

கொல் ஆர் மழு ஏந்தி குரங்கணில் முட்டம்

சொல் ஆர் தமிழ் மாலை செவிக்கு இனிது ஆக

வல்லார்க்கு எளிது ஆம், பிறவா வகை வீடே.

கருங்கல்லால் இயன்ற மதில்களால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், கையில் கொல்லனது தொழில் நிறைந்த மழுவாயுதம் ஏந்திய குரங்கணில் முட்டத்து இறைவன்மீது பாடிய,

சொல்மாலையாகிய இத்திருப்பதிகத்தைச் செவிக்கு இனிதாக ஓதி ஏத்த வல்லார்க்குப் பிறவா நெறியாகிய வீடு எளிதாகும்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(32)
திருஇடைமருதூர் - தக்கராகம்

(338)
ஓடே கலன்; உண்பதும் ஊர் இடு பிச்சை;

காடே இடம் ஆவது; கல்லால் நிழல் கீழ்

வாடா முலை மங்கையும் தானும் மகிழ்ந்து,

ஈடா உறைகின்ற இடை மருது ஈதோ.

உண்ணும் பாத்திரம் பிரம கபாலமாகும். அவர் உண்ணும் உணவோ ஊர் மக்கள் இடும் பிச்சையாகும், அவர் வாழும் இடமோ இடுகாடாகும். அத்தகைய சிவபிரான் கல்லால மரநிழற்கீழ் நன்முலைநாயகியும் தானுமாய் மகிழ்ந்து பெருமையோடு விளங்கும் திருத்தலமாகிய இடைமருது இதுதானோ?

மேல்

(339)
தடம் கொண்டது ஒரு தாமரைப் பொன் முடி தன் மேல்

குடம் கொண்டு அடியார் குளிர் நீர் சுமந்து ஆட்ட,

படம் கொண்டது ஒரு பாம்பு அரை ஆர்த்த பரமன்

இடம் கொண்டு இருந்தான் தன் இடை மருது ஈதோ.

தடாகங்களிற் பறித்த பெரிய தாமரை மலரைச் சூடிய அழகிய திருமுடியில், அடியவர் குடங்களைக் கொண்டு குளிர்ந்த நீரைமுகந்து சுமந்து வந்து அபிடேகிக்குமாறு, படம் எடுத்தாடும் நல்லபாம்பை இடையிலே கட்டிய பரமன் தான் விரும்பிய இடமாகக் கொண்டுறையும் இடைமருது இதுதானோ?

மேல்

(340)
வெண் கோவணம் கொண்டு, ஒரு வெண் தலை ஏந்தி,

அம் கோல்வளையாளை ஒரு பாகம் அமர்ந்து,

பொங்கா வரு காவிரிக் கோலக் கரைமேல்,

எம் கோன் உறைகின்ற இடைமருது ஈதோ.

வெண்மையான கோவணத்தை அணிந்து ஒப்பற்ற வெள்ளிய பிரம கபாலத்தைக் கையில் ஏந்தி அழகியதாயத் திரண்ட வளையல்களை அணிந்த உமாதேவியை ஒருபாகமாக விரும்பி ஏற்று, பொங்கிவரும் காவிரி நதியின் அழகிய கரைமீது எம் தலைவனாயுள்ள சிவபிரான் எழுந்தருளிய இடைமருதூர் இதுதானோ?

மேல்

(341)
அந்தம் அறியாத அருங் கலம் உந்திக்

கந்தம் கமழ் காவிரிக் கோலக் கரை மேல்,

வெதபொடிப் பூசிய வேத முதல்வன்-

எந்தை உறைகின்ற இடைமருது ஈதோ.

அரிய அணிகலன்களைக் கரையில் வீசி மணம் கமழ்ந்துவரும் காவிரி நதியின் அழகிய கரைமீது திருவெண்ணீறு அணிந்தவனாய், முடிவறியாத வேத முதல்வனாய் விளங்கும் எம் தந்தையாகிய சிவபிரான் உறைகின்ற இடைமருதூர் இதுதானோ?

மேல்

(342)
வாசம் கமழ் மா மலர்ச் சோலையில் வண்டே

தேசம் புகுந்து ஈண்டி ஒரு செம்மை உடைத்து ஆய்,

பூசம் புகுந்து ஆடிப் பொலிந்து அழகு ஆய

ஈசன் உறைகின்ற இடைமருது ஈதோ.

மணம் கமழும் சிறந்த மலர்களை உடைய சோலைகளில் வண்டுகளைக் கொண்டதும், உலக மக்கள் பலரும் கூடிச் செம்மையாளராய்த் தைப்பூசத் திருநாளில் நீராடி வணங்குவதும், பொலிவும் அழகும் உடையவனாய் ஈசன் எழுந்தருளி விளங்குவதுமான இடைமருது என்னும் தலம் இதுதானோ?

மேல்

(343)
வன் புற்று இள நாகம் அசைத்து, அழகு ஆக

என்பில் பலமாலையும் பூண்டு, எருது ஏறி,

அன்பில் பிரியாதவளோடும் உடன் ஆய்

இன்பு உற்று இருந்தான் தன் இடைமருது ஈதோ.

வலிய புற்றுக்களில் வாழும் இளநாகங்களை இடையிலே அழகாகக் கட்டிக் கொண்டு, எலும்பால் இயன்ற மாலைகள் பலவற்றையும் அணிகலன்களாகப் பூண்டு, அன்பிற்பிரியாத உமையம்மையோடும் உடனாய் எருதேறிச் சிவபிரான் இன்புற்றுறையும் இடைமருது என்பது இதுதானோ?

மேல்

(344)
தேக்கும் திமிலும் பலவும் சுமந்து உந்தி,

போக்கிப் புறம், பூசல் அடிப்ப வருமால்

ஆர்க்கும் திரைக் காவிரிக் கோலக் கரைமேல்

ஏற்க இருந்தான் தன் இடைமருது ஈதோ.

தேக்கு, வேங்கை, பலா ஆகிய மரங்களைச் சுமந்து வந்து இருகரைகளிலும், அம்மரங்களை எடுத்து வீசி, ஆரவாரித்து வரும் அலைகளையுடையதாய காவிரி நதியின் அழகிய கரைமீது சிவபெருமான் பொருந்த உறையும் இடைமருது என்னும் தலம் இதுதானோ?

மேல்

(345)
பூ ஆர் குழலார் அகில்கொண்டு புகைப்ப,

ஓவாது அடியார் அடி உள் குளிர்ந்து ஏத்த,

ஆவா! அரக்கன் தனை ஆற்றல் அழித்த

ஏ ஆர் சிலையான் தன் இடை மருது ஈதோ.

மலர் சூடிய கூந்தலை உடைய மங்கல மகளிர் அகில் தூபம் இட, அடியவர் இடையீடின்றித் திருவடிகளை மனம் குளிர்ந்து ஏத்த, கண்டவர் ஆஆ என இரங்குமாறு இராவணனது ஆற்றலை அழித்த, அம்பு பொருத்தற்கேற்ற மலைவில்லைக் கையில் கொண்ட, சிவபெருமானின் இடைமருது என்னும் தலம் இதுதானோ?

மேல்

(346)
முற்றாதது ஒரு பால்மதி சூடும் முதல்வன்,

நல் தாமரையானொடு மால் நயந்து ஏத்த,

பொன்-தோளியும் தானும் பொலிந்து அழகு ஆக

எற்றே உறைகின்ற இடை மருது ஈதோ.

முற்றாத பால் போன்ற இளம்பிறையை முடிமிசைச் சூடிய முதல்வனாய், நல்ல தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும், திருமாலும் விரும்பித் தொழ, உமையம்மையும் தானுமாய்ச் சிவபிரான் அழகாகப் பொலிந்து உறைகின்ற இடைமருது என்னும் தலம் இதுதானோ?

மேல்

(347)
சிறு தேரரும் சில் சமணும் புறம் கூற,

நெறியே பல பத்தர்கள் கை தொழுது ஏத்த,

வெறியா வரு காவிரிக் கோலக் கரைமேல்

எறி ஆர் மழுவாளன் இடை மருது ஈதோ.

சிறுமதியாளராகிய தேரர்களும், சிற்றறிவினராகிய சமணர்களும், புறங்கூறித் திரிய, சிவபக்தர்கள் பலர் முறையாலே கைகளால் தொழுது துதிக்கப் பகைவரைக் கொன்றொழிக்கும் மழுவை ஏந்திய சிவபிரான் எழுந்தருளிய, மணம் கமழ்ந்துவரும் காவிரிநதியின் அழகிய கரைமேல் உள்ள இடைமருது என்னும் தலம் இதுதானோ?

மேல்

(348)
கண் ஆர் கமழ் காழியுள் ஞானசம்பந்தன்

எண் ஆர் புகழ் எந்தை இடைமருதின்மேல்

பண்ணோடு இசை பாடிய பத்தும் வல்லார்கள்

விண்ணோர் உலகத்தினில் வீற்றிருப்பாரே.

இடமகன்றதும் மணம் கமழ்வதுமான சீகாழிப் பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் எண்ணத்தில் நிறைந்துள்ள புகழை உடைய எம்பெருமானுடைய இடைமருது மீது பண்ணோடியன்ற இசையால் பாடிய,

பத்துப் பாடல்களையும் வல்லவர்கள் விண்ணோர் உலகில் வீற்றிருக்கும் சிறப்பைப் பெறுவார்கள்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(33)
திருஅன்பில் ஆலந்துறை - தக்கராகம்

(349)
கணை நீடு எரி, மால், அரவம், வரை வில்லா,

இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர்

பிணை மா மயிலும், குயில், சேர் மட அன்னம்,

அணையும் பொழில் அன்பில் ஆலந் துறையாரே.

நீண்டு எரிகின்ற தீயையும் திருமாலையும் அம்பாகக் கொண்டு பூட்டி வாசுகி என்னும் பாம்பை நாணாகக் கட்டிய மேருமலையை வில்லாக வளைத்து முப்புரங்களையும் எரித்த இறைவர், தத்தம் பெடைகளோடுகூடிய பெரிய மயில்களும், குயில்களும் சேர்ந்து வாழும் அன்னங்களும் உறையும் பொழில் சூழ்ந்த அன்பிலாலந்துறையார் ஆவார்.

மேல்

(350)
சடை ஆர் சதுரன், முதிரா மதி சூடி,

விடை ஆர் கொடி ஒன்று உடை எந்தை, விமலன்-

கிடை ஆர் ஒலி ஓத்து அரவத்து இசை கிள்ளை

அடை ஆர் பொழில் அன்பில் ஆலந்துறையாரே.

சடைமுடிகளோடு கூடிய சதுரப்பாடு உடையவராய் இளம்பிறையை முடிமிசைச் சூடி இடபக்கொடி ஒன்றை உடைய எந்தையாராகிய விமலர், வேதம் பயிலும் இளஞ்சிறார்கள் கூடியிருந்து ஓதும் வேத ஒலியைக் கேட்டு அவ்வோசையாலேயே அவற்றை இசைக்கின்ற கிளிகள் அடைதல் பொருந்திய சோலைகளால் சூழப்பட்ட அன்பிலாலந்துறை இறைவராவார்.

மேல்

(351)
ஊரும் அரவம் சடைமேல் உற வைத்து,

பாரும் பலி கொண்டு ஒலி பாடும் பரமர்

நீர் உண் கயலும், வயல் வாளை, வராலோடு

ஆரும் புனல் அன்பில் ஆலந்துறையாரே.

ஊர்ந்து செல்லும் பாம்பைச் சடைமுடிமேல் பொருந்த அணிந்து உலகம் முழுதும் சென்று பலியேற்று, இசை பாடி மகிழும் பரமராகிய பெருமானார், நீரின்வழி உணவுண்ணும் கயல் மீன்களை வயல்களிடத்துள்ள வாளை வரால் ஆகிய மீன்கள் உண்ணும் புனல்வளம் மிக்க அன்பிலாலந்துறையாராவார்.

மேல்

(352)
பிறையும் அரவும் உற வைத்த முடிமேல்

நறை உண்டு எழு வன்னியும் மன்னு சடையார்

மறையும் பலவேதியர் ஓத, ஒலி சென்று

அறையும் புனல் அன்பில் ஆலந்துறையாரே.

பிறைமதி, பாம்பு ஆகியவற்றைப் பகை நீக்கி ஒருங்கே பொருந்த வைத்த முடிமீது, நறுமணத்துடன் தோன்றும் வன்னித் தளிர்களும் மன்னிய சடையினர், வேதியர் பலர் வேதங்களை ஓத அவ்வொலி பல இடங்களிலும் ஒலிக்கும் நீர்வளம்மிக்க அன்பிலாலந்துறை இறைவராவார்.

மேல்

(353)
நீடும் புனல் கங்கையும் தங்க முடிமேல்,

கூடும் மலையாள் ஒருபாகம் அமர்ந்தார்

மாடு முழவம் அதிர, மட மாதர்

ஆடும் பதி அன்பில் ஆலந்துறையாரே.

முடிமேல் பெருகிவரும் நீரை உடைய கங்கை நதியையும் தங்குமாறு அணிந்து, ஒருபாகமாகத் தம்மைத் தழுவிய மலைமகளைக் கொண்டுள்ள பெருமானார், பல இடங்களிலும் முழவுகள் ஒலிக்க, இளம் பெண்கள் பலர் நடனங்கள் புரியும் அன்பிலாலந்துறை இறைவராவார்.

மேல்

(354)
நீறு ஆர் திருமேனியர், ஊனம் இலார்பால்

ஊறு ஆர் சுவை ஆகிய உம்பர் பெருமான்-

வேறு ஆர் அகிலும், மிகு சந்தனம், உந்தி

ஆறு ஆர் வயல் அன்பில் ஆலந்துறையாரே.

திருநீறு அணிந்த திருமேனியரும், குற்றம் அற்றவர்களின் உள்ளங்களில் பொருந்திய சுவையாக இனிப்பவருமாகிய தேவர் தலைவர், வேறாகப் பெயர்ந்து வரும் அகில் மரங்களையும் உயர்ந்த சந்தன மரங்களையும் அடித்துவரும் ஆற்று நீர் பாயும் வயல்களை உடைய அன்பிலாலந்துறை இறைவர் ஆவார்.

மேல்

(355)
செடி ஆர் தலையில் பலி கொண்டு இனிது உண்ட

படி ஆர் பரமன், பரமேட்டி தன் சீரை,

கடி ஆர் மலரும் புனல் தூவி நின்று, ஏத்தும்

அடியார் தொழும் அன்பில் ஆலந்துறையாரே.

முடை நாற்றமுடைய தலையோட்டில் பலியேற்று அதனை இனிதாக உண்டருளும் தன்மையினைக் கொண்ட பரமனாகிய பரம்பொருள், மணம் பொருந்திய மலர்களையும் நீரையும் தூவி நின்று தன்புகழைத் துதிக்கும் அடியவர்களால் தொழப்படும் அன்பிலாலந்துறை இறைவராவார்.

மேல்

(356)
விடத் தார் திகழும் மிடறன், நடம் ஆடி,

படத்து ஆர் அரவம் விரவும் சடை ஆதி,

கொடித்தேர் இலங்கைக் குலக்கோன் வரை ஆர

அடர்த்தார் அருள் அன்பில் ஆலந்துறையாரே.

ஆலகால விடக்கறை விளங்கும் கரிய கண்டத்தினரும், நடனமாடியும், படத்தோடு கூடிய அரவம் விரவும் சடையினை உடைய முதற்கடவுளும், கொடித் தேரைக் கொண்ட இலங்கையர் குலத் தலைவனாகிய இராவணனை மலையின்கீழ் அகப்படுத்தி அடர்த்தவரும் ஆகிய சிவபிரான், அன்பர்கள் அருள் பெறுதற்குரிய இடமாக விளங்கும் அன்பில் ஆலந்துறை என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளார்.

மேல்

(357)
வணங்கி மலர்மேல் அயனும், நெடுமாலும்,

பிணங்கி அறிகின்றிலர், மற்றும் பெருமை;

சுணங்கு முகத்து அம் முலையாள் ஒருபாகம்

அணங்கும் திகழ் அன்பில் ஆலந்துறையாரே.

தாமரை மலர்மேல் விளங்கும் அயனும் திருமாலும், சிவபிரானின் பெருமையை வணங்கி அறியாது, தம்முட் பிணங்கித் தேடி அறியாதவராயினர். அப்பெருமான், சுணங்கு பொருந்திய முகப்பினை உடைய அழகிய தனத்தவளாய உமையம்மையை ஒருபாகத்தே அணங்காகக் கொண்டுள்ள அன்பிலாலந்துறை இறைவராவார்.

மேல்

(358)
தறியார், துகில் போர்த்து உழல்வார், சமண்கையர்,

நெறியா உணரா நிலை கேடினர்; நித்தல்

வெறி ஆர் மலர் கொண்டு அடி வீழுமவரை

அறிவார் அவர் அன்பில் ஆலந்துறையாரே.

தறிபோல ஆடையின்றி உள்ள சமணர்கள், நெய்த ஆடையினை உடலில் போர்த்து உழலும் புத்தர்கள், பரம்பொருளை முறையாக உணராததோடு, நிலையான கேடுகளுக்கு உரியவர்களாய் உள்ளனர். அவர்களைச் சாராது நாள்தோறும் மணமலர்களைச் சூட்டித் தம் திருவடிகளில் வீழ்ந்து தொழும் அடியவர்களை நன்கறிந்தருளும் பெருமானார் அன்பிலாலந்துறை இறைவராவார்.

மேல்

(359)
அரவு ஆர் புனல் அன்பில் ஆலந்துறை தன் மேல்

கரவாதவர் காழியுள் ஞானசம்பந்தன்

பரவு ஆர் தமிழ் பத்து இசை பாட வல்லார் போய்

விரவு ஆகுவர், வான் இடை; வீடு எளிது ஆமே.

பாம்புகள் வாழும் நீர் வளம் உடைய அன்பில் ஆலந்துறை இறைவர்மேல் வஞ்சனையில்லாத மக்கள் வாழும் சீகாழிப் பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் பரவிப்பாடிய,

இப்பத்துப் பாடல்களையும் இசையோடு பாட வல்லவர் மறுமையில் வானக இன்பங்களுக்கு உரியவர்கள் ஆவர். அவர்களுக்கு வீட்டின்பமும் எளிதாம்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(34)
சீகாழி- தக்கராகம்

(360)
அடல் ஏறு அமரும் கொடி அண்ணல்

மடல் ஆர் குழலாளொடு மன்னும்,

கடல் ஆர் புடை சூழ் தரு, காழி

தொடர்வார் அவர் தூ நெறியாரே.

வலிமை பொருந்திய இடபம் பொறிக்கப்பட்ட கொடியைத்தனதாகக் கொண்ட தலைவனாகிய சிவபிரான், மலர் சூடிய கூந்தலை உடைய உமையம்மையோடு எழுந்தருளியிருப்பதும், கடலால் புடை சூழப்பட்டதுமான சீகாழிப் பதியை இடைவிடாது சென்று வழிபடுபவர் தூய நெறியில் நிற்பவராவர்

மேல்

(361)
திரை ஆர் புனல் சூடிய செல்வன்,

வரையார் மகளோடு மகிழ்ந்தான்,

கரை ஆர் புனல் சூழ்தரு, காழி

நிரை ஆர் மலர் தூவுமின், நின்றே!.

அலைகளோடு கூடிய கங்கையை முடிமிசைச் சூடிய செல்வனாகிய சிவபிரான் மலைமகளோடு மகிழ்ந்து எழுந்தருளியிருப்பதும், கரையை உடைய நீர்நிலைகளால் சூழப்பட்டதுமான சீகாழிப் பதியை வரிசையான பூக்களைக் கொண்டு நின்று தூவி வழிபடுமின்.

மேல்

(362)
இடி ஆர் குரல் ஏறு உடை எந்தை

துடி ஆர் இடையாளொடு துன்னும்,

கடி ஆர் பொழில் சூழ்தரு, காழி அடியார் அறியார், அவலமே.

இடியை ஒத்த குரலையுடைய இடபத்தைத் தனது வாகனமாகக் கொண்ட எம் தந்தையாகிய இறைவன், துடி போலும் இடையினை உடைய உமையம்மையோடு எழுந்தருளியிருப்பதும், மணம் பொருந்திய பொழில்களால் சூழப்பட்டதுமான சீகாழிப் பதியை வணங்கும் அடியவர்கள், துன்பத்தை அறியார்கள்.

மேல்

(363)
ஒளி ஆர் விடம் உண்ட ஒருவன்,

அளி ஆர் குழல் மங்கையொடு அன்பு ஆய்,

களி ஆர் பொழில் சூழ்தரு, காழி

எளிது ஆம், அது கண்டவர் இன்பே.

நீலநிற ஒளியோடு கூடிய ஆலகால விடத்தை உண்டருளிய ஒப்பற்றவனாகிய சிவபிரான், வண்டுகள் மணத்தைத் தேடி வந்து நாடும் கூந்தலை உடைய உமையம்மையோடு, அன்புடன் களிக்கும், பொழில்கள் சூழ்ந்த காழிப்பதியைக் கண்டவர்க்கு இன்பம் எளிதாம்.

மேல்

(364)
பனி ஆர் மலர் ஆர் தரு பாதன்,

முனி தான், உமையோடு முயங்கி,

கனி ஆர் பொழில் சூழ்தரு, காழி

இனிது ஆம், அது கண்டவர் ஈடே.

தண்மை பொருந்திய தாமரை மலர் போன்ற திருவடிகளை உடைய சிவபெருமான் உமையம்மையோடு கூடி உலகஉயிர்கட்குப் போகத்தைப் புரிந்தருளினும், தான் முனிவனாக விளங்குவோன். அத்தகையோன் எழுந்தருளியதும் கனிகள் குலுங்கும் பொழில்கள் சூழ்ந்ததுமான சீகாழிப் பதியைச் சென்று கண்டவர்க்குப் பெருமை எளிதாக வந்தமையும்.

மேல்

(365)
கொலை ஆர்தரு கூற்றம் உதைத்து

மலையான் மகளோடு மகிழ்ந்தான்,

கலையார் தொழுது ஏத்திய, காழி

தலையால் தொழுவார் தலையாரே.

கொலைத் தொழில் நிறைந்த எமனை உதைத்து அழித்து மலையரையன் மகளாகிய உமையம்மையோடு மகிழ்ந்து உறைபவனாகிய சிவபெருமான் விரும்புவதும், மெய்ஞ்ஞானியர் தொழுதேத்துவதுமாகிய சீகாழிப் பதியைத் தலையால் வணங்குவார் தலையாயவராவார்.

மேல்

(366)
திரு ஆர் சிலையால் எயில் எய்து,

உரு ஆர் உமையோடு உடன் ஆனான்,

கரு ஆர் பொழில் சூழ்தரு, காழி

மருவாதவர் வான் மருவாரே.

அழகிய வில்லால் மூவெயில்களை எய்தழித்து எழில் தவழும் உமையம்மையோடு உடனாய் விளங்கும் சிவபெருமான் எழுந்தருளியிருப்பதும், கருநிறம் பொருந்திய சோலைகளால் சூழப் பெற்றதுமான சீகாழிப் பதியை அடையாதவர் விண்ணுலக இன்பங்களை அடையாதவராவர்.

மேல்

(367)
அரக்கன் வலி ஒல்க அடர்த்து,

வரைக்கு மகளோடு மகிழ்ந்தான்,

சுரக்கும் புனல் சூழ்தரு, காழி

நிரக்கும் மலர் தூவும், நினைந்தே!.

இராவணனது வலிமை சுருங்குமாறு அவனைத் தளர்ச்சியெய்த அடர்த்து மலைமகளோடு மகிழ்ந்த சிவபிரான் விளங்குவதும் மேலும் மேலும் பெருகிவரும் நீர் சூழ்ந்ததுமான சீகாழிப் பதியை நினைந்து வரிசையான மலர்களைத் தூவுமின்.

மேல்

(368)
இருவர்க்கு எரி ஆகி நிமிர்ந்தான்

உருவில் பெரியாளொடு சேரும்,

கரு நல் பரவை கமழ், காழி

மருவ, பிரியும், வினை மாய்ந்தே.

திருமால் பிரமன் ஆகிய இருவர் பொருட்டு எரிஉருவாகி நிமிர்ந்த சிவபிரான் அழகிற்சிறந்த பெரியநாயகி அம்மையோடு எழுந்தருளியிருப்பதும் கரிய நல்ல கடலின் மணம் கமழ்வதுமான சீகாழிப் பதியை மனத்தால் நினைய நம் வினைகள் மாய்ந்து பிரியும்.

மேல்

(369)
சமண் சாக்கியர் தாம் அலர் தூற்ற,

அமைந்தான், உமையோடு உடன் அன்பு ஆய்;

கமழ்ந்து ஆர் பொழில் சூழ்தரு காழி

சுமந்தார், மலர் தூவுதல் தொண்டே.

சமணர்களும் சாக்கியர்களும் புறங்கூற, உமையம்மையோடு ஒருசேர அன்பாய்ச் சிவபிரான் எழுந்தருளியிருப்பதும், மணம் கமழ்ந்து நிறையும் பொழில்கள் சூழ்ந்ததுமான சீகாழிப் பதியைத் தம் மனத்தே தியானித்து, மலர் தூவித் தொழுதலே சிறந்த தொண்டாகும்.

மேல்

(370)
நலம் ஆகிய ஞானசம்பந்தன்

கலம் ஆர் கடல் சூழ் தரு காழி

நிலை ஆக நினைந்தவர் பாடல்

வலர் ஆனவர் வான் அடைவாரே.

நன்மையை மக்கட்கு நல்குவதும் மரக்கலங்களை உடைய கடலால் சூழப் பெற்றதுமான ,

சீகாழிப் பதியை உறுதியாக நினைந்தவர்களும், ஞானசம்பந்தரின் பாடல்களில் வல்லவராய் ஓதி வழிபட்டவர்களும் விண்ணக இன்பங்களை அடைவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(35)
திருவீழிமிழலை - தக்கராகம்

(371)
அரை ஆர் விரி கோவண ஆடை,

நரை ஆர் விடை ஊர்தி, நயந்தான்,

விரை ஆர் பொழில், வீழி மிழலை

உரையால் உணர்வார் உயர்வாரே.

இடையிற் கட்டிய விரிந்த கோவண ஆடையையும், வெண்மை நிறம் பொருந்திய விடை ஊர்தியையும் விரும்பி ஏற்றுக் கொண்ட சிவபிரான் உறைவதும், மணம் பொருந்திய பொழில்களால் சூழப்பட்டதுமாகிய திருவீழிமிழலையின் புகழை நூல்களால் உணர்வார் உயர்வடைவர்.

மேல்

(372)
புனைதல் புரி புன்சடை தன் மேல்

கனைதல் ஒரு கங்கை கரந்தான்,

வினை இல்லவர், வீழி மிழலை

நினைவு இல்லவர் நெஞ்சமும் நெஞ்சே?

மலரால் அலங்கரிக்கப்பட்ட முறுக்குக்களை உடைய சிவந்த சடைமுடி மீது ஆரவாரித்து வந்த ஒப்பற்ற கங்கை நதியை மறைத்து வைத்துள்ள சிவபிரான் உறையும், தீவினை இல்லாத மக்கள் வாழும் திருவீழிமிழலையை நினையாதவர் நெஞ்சமும் ஒரு நெஞ்சமோ?

மேல்

(373)
அழ வல்லவர், ஆடியும் பாடி

எழ வல்லவர், எந்தை அடிமேல்

விழ வல்லவர், வீழி மிழலை

தொழ வல்லவர், நல்லவர்; தொண்டே!.

அழவல்லவரும், ஆடியும் பாடியும் எழவல்லவரும் எந்தையாகிய இறைவன் திருவடிமேல் விழ வல்லவருமாய் அடியவர் நிறைந்துள்ள திருவீழிமிழலையைத் தொழ வல்லவரே நல்லவர். அவர் தொண்டே நற்றொண்டாம்.

மேல்

(374)
உரவம் புரி புன் சடை தன்மேல்

அரவம் அரை ஆர்த்த அழகன்,

விரவும் பொழில், வீழி மிழலை

பரவும்(ம்) அடியார் அடியாரே!.

வலிமையை வெளிப்படுத்தி நிற்கும் சிவந்த சடைமுடி மீதும் இடையிலும், பாம்பை அணிந்தும் கட்டியும் உள்ள அழகனாகிய சிவபிரான் எழுந்தருளியதும், பொழில்கள் விரவிச்சூழ்ந்ததுமான திருவீழிமிழலையைப் பரவித் துதிக்கும் அடியவரே அடியவராவர்.

மேல்

(375)
கரிது ஆகிய நஞ்சு அணி கண்டன்,

வரிது ஆகிய வண்டு அறை கொன்றை

விரி தார் பொழில், வீழி மிழலை

உரிதா நினைவார் உயர்வாரே.

கரியதாகிய நஞ்சினை உண்டு அதனை அணியாக நிறுத்திய நீலகண்டன் எழுந்தருளியதும், வரிகளை உடைய வண்டுகள் ஒலி செய்யும் கொன்றை மரங்கள் விரிந்த மாலைபோலக் கொத்தாக மலரும் சோலைகளால் சூழப்பெற்றதும் ஆகிய திருவீழிமிழலையைத் தமக்கு உரிய தலமாகக் கருதுவோர் சிறந்த அடியவராவர்.

மேல்

(376)
சடை ஆர் பிறையான், சரி பூதப்

படையான், கொடி மேலது ஒரு பைங்கண்

விடையான், உறை வீழி மிழலை

அடைவார் அடியார் அவர் தாமே.

சடைமிசைச்சூடிய பிறைமதியை உடையவனும், இயங்கும் பூதப் படைகளை உடையவனும், கொடிமேல் பசிய கண்களை உடைய ஒற்றை விடையேற்றை உடையவனுமாகிய சிவபெருமான் உறையும் திருவீழிமிழலையை அடைபவர்கள் சிறந்த அடியவர்கள் ஆவர். தாம், ஏ அசைநிலை.

மேல்

(377)
செறி ஆர் கழலும் சிலம்பு ஆர்க்க

நெறி ஆர் குழலாளொடு நின்றான்,

வெறி ஆர் பொழில், வீழி மிழலை

அறிவார் அவலம் அறியாரே.

கால்களிற் செறிந்த கழல், சிலம்பு ஆகிய அணிகள் ஆர்க்கச் சுருண்ட கூந்தலை உடைய உமையம்மையோடு நின்றருளும் சிவபிரான் எழுந்தருளியதும் மணம் கமழும் பொழிலகளால் சூழப்பெற்றதுமான திருவீழிழலையைத் தியானிப்பவர் அவலம் அறியார்.

மேல்

(378)
உளையா வலி ஒல்க, அரக்கன்,

வளையா விரல் ஊன்றிய மைந்தன்,

விளை ஆர் வயல், வீழி மிழலை

அளையா வருவார் அடியாரே.

மிக வருந்திக் கயிலை மலையைப் பெயர்த்த இராவணனது வலிமை கெடுமாறு தன் காலை வளைத்து விரலால் ஊன்றிய வலிமை வாய்ந்த சிவபிரான் எழுந்தருளியதும், விளைவு மிகுந்த வயல்களை உடையதுமான திருவீழிமிழலையை நினைந்து வருபவர் சிறந்த அடியவராவர்.

மேல்

(379)
மருள் செய்து இருவர் மயல் ஆக

அருள் செய்தவன், ஆர் அழல் ஆகி

வெருள் செய்தவன், வீழி மிழலை

தெருள் செய்தவர் தீவினை தேய்வே.

திருமால் பிரமன் ஆகிய இருவரும் அஞ்ஞானத்தினால் அடிமுடிகாணாது மயங்க, அரிய அழலுருவாய் வெளிப்பட்டு நின்று வெருட்டியவனும் பின் அவர்க்கு அருள் செய்தவனுமான சிவபிரான் எழுந்தருளிய திருவீழிமிழலையைச் சிறந்த தலம் என்று தெளிந்தவர்கள் தீவினைகள் தேய்தல் உறும்.

மேல்

(380)
துளங்கும் நெறியார் அவர் தொன்மை

வளம் கொள்ளன்மின், புல் அமண் தேரை!

விளங்கும் பொழில் வீழி மிழலை

உளம் கொள்பவர் தம் வினை ஓய்வே.

தடுமாற்றமுறும் கொள்கைகளை மேற்கொண்டுள்ள அற்பமானவராய அமணர் தேரர் ஆகியோரின் சமயத்தொன்மைச் சிறப்பைக் கருதாதீர். விளங்கும் பொழில்கள் சூழ்ந்த திருவீழிமிழலையை நினைபவர்களின் வினைகள் ஓய்தலுறும்.

மேல்

(381)
நளிர் காழியுள் ஞானசம்பந்தன்

குளிர் ஆர் சடையான் அடி கூற,

மிளிர் ஆர் பொழில், வீழி மிழலை

கிளர் பாடல் வல்லார்க்கு இலை, கேடே.

குளிர்ந்த காழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் தண்மையான சடைமுடியை உடைய சிவபிரானுடைய திருவடிப் பெருமைகளைக் கூறத் தொடங்கி விளக்கமான பொழில்கள் சூழ்ந்த திருவீழிமிழலைப் பெருமான் புகழ்கூறும் ,

இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர்கட்குக் கேடு இல்லை.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(36)
திருஐயாறு - தக்கராகம்

(382)
கலை ஆர் மதியோடு உர நீரும்

நிலை ஆர் சடையார் இடம் ஆகும்

மலை ஆரமும் மா மணி சந்தோடு

அலை ஆர் புனல் சேரும் ஐயாறே.

ஒரு கலைப் பிறைமதியோடு வலிய கங்கை நீரும் நிலையாகப் பொருந்திய சடையை உடைய சிவபிரானது இடம், மலையிலிருந்து கொணர்ந்த முத்துக்கள் சிறந்த மணிகள் சந்தனம் ஆகியவற்றை அள்ளி வரும் அலைகளை உடைய காவிரிபாயும் திருவையாறு ஆகும்.

மேல்

(383)
மதி ஒன்றிய கொன்றை வடத்தன்,

மதி ஒன்ற உதைத்தவர் வாழ்வு

மதியினொடு சேர் கொடி மாடம்

மதியம் பயில்கின்ற ஐயாறே.

பிறைமதி பொருந்திய சடையில் கொன்றை மாலையை அணிந்தவனும், தக்க யாகத்தில் வீரபத்திரரை ஏவிச் சந்திரனைக் காலால் பொருத்த உதைத்தவனுமான சிவபெருமான் வாழுமிடம், மதியோடு சேரும் கொடிகளைக் கொண்டதும் மதி தங்குமாறு உயர்ந்த மாடவீடுகளை உடையதுமான திருவையாறு ஆகும்.

மேல்

(384)
கொக்கின் இறகினொடு வன்னி

புக்க சடையார்க்கு இடம் ஆகும்

திக்கின் இசை தேவர் வணங்கும்

அக்கின் அரையாரது ஐயாறே.

கொக்கிறகு என்னும் மலரோடு வன்னிப் பச்சிலைகளும் பொருந்திய சடைமுடியை உடையவர்க்கு உரிய இடம், எண் திசைகளிலும் வாழும் தேவர்களால் வணங்கப் பெறுபவரும், சங்கு மணிகள் கட்டிய இடையினை உடையவருமான அப்பெருமானின் திருவையாறாகும்.

மேல்

(385)
சிறை கொண்ட புரம் அவை சிந்தக்

கறை கொண்டவர் காதல் செய் கோயில்

மறை கொண்ட நல் வானவர் தம்மில்

அறையும் ஒலி சேரும் ஐயாறே.

சிறகுகளோடு கூடிய முப்புரங்களும் அழியச் சினந்தவராகிய சிவபிரான் விரும்பும் கோயில், மக்கள் கண்களுக்குப் புலனாகாது மறைந்து இயங்கும் நல்ல தேவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் ஒலி நிறைந்துள்ள திருவையாறு ஆகும்.

மேல்

(386)
உமையாள் ஒரு பாகம் அது ஆகச்

சமைவார் அவர் சார்வு இடம் ஆகும்

அமையார் உடல் சோர்தரு முத்தம்

அமையா வரும் அம் தண் ஐயாறே.

உமையம்மை ஒருபாகத்தே விளங்கப் பொருந்தியவராகிய சிவபெருமான் சாரும் இடம், மலையிடையே உள்ள மூங்கில்கள் முத்துக்களைச் சொரிய அவை காவிரியாற்றில் பொருந்தி வரும் குளிர்ந்து திருவையாறாகும்.

மேல்

(387)
தலையின் தொடை மாலை அணிந்து

கலை கொண்டது ஒரு கையினர் சேர்வு ஆம்

நிலை கொண்ட மனத்தவர் நித்தம்

மலர் கொண்டு வணங்கும் ஐயாறே.

தலையோட்டினால் தொகுக்கப்பட்டுள்ள மாலையை அணிந்து மானைக் கையின்கண் கொண்டவராகிய சிவபிரானது இடம், இறைவன் திருவடிக்கண் நிலைத்த மனமுடையவராகிய அடியவர் நாள்தோறும் மலர்கொண்டு தூவி வழிபாடு செய்யும் திருவையாறாகும்.

மேல்

(388)
வரம் ஒன்றிய மா மலரோன் தன்

சிரம் ஒன்றை அறுத்தவர் சேர்வு ஆம்

வரை நின்று இழி வார் தரு பொன்னி

அரவம் கொடு சேரும் ஐயாறே.

வரங்கள் பல பெற்ற தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனின் தலைகளில் ஒன்றை அறுத்த சிவபிரானது இடம், மலை யினின்று இழிந்துபெருகி வரும் காவிரி நதி ஆரவாரித்து வரும் திருவையாறு ஆகும்.

மேல்

(389)
வரை ஒன்று அது எடுத்த அரக்கன்

சிரம் மங்க நெரித்தவர் சேர்வு ஆம்

விரையின் மலர் மேதகு பொன்னித்

திரை தன்னொடு சேரும் ஐயாறே.

கயிலை மலையைப் பெயர்த்த இராவணனின் சிரங்களும் பிறஅங்கங்களும் சிதறுமாறு நெரித்த சிவபிரான் எழுந்தருளிய இடம். மணம் பொருந்திய மலர்களைக் கொண்டு புண்ணிய நதியாகிய காவிரி அலைகளோடு கூடிப் பாய்ந்து வளம் சேர்க்கும் திருவையாறு ஆகும்.

மேல்

(390)
சங்கக் கயனும் அறியாமை

பொங்கும் சுடர் ஆனவர் கோயில்

கொங்கில் பொலியும் புனல் கொண்டு

அங்கிக்கு எதிர் காட்டும் ஐயாறே.

சங்கத்தைக் கையின்கண் கொண்ட திருமாலும் அறியாதவாறு பொங்கி எழும் சுடராகத் தோன்றிய சிவபிரான் உறையும் கோயில், காவிரி, மகரந்தம், தேன் ஆகியன பொலியும் நீரைக் கொண்டு வந்து, அழல் வடிவான இறைவன் திருமுன் அர்க்கியமாகக் காட்டும் திருவையாறாகும்.

மேல்

(391)
துவர் ஆடையர், தோல் உடையார்கள்,

கவர் வாய்மொழி காதல் செய்யாதே,

தவராசர்கள் தாமரையானோடு

அவர்தாம் அணை அம் தண் ஐயாறே.

துவராடை தரித்த புத்தர், ஆடையின்றித் தோலைக் காட்டும் சமணர் ஆகியவரின் மாறுபட்ட வாய்மொழிகளை விரும்பாது, தவத்தால் மேம்பட்டவர்கள், பிரமன் முதலிய தேவர்களோடு வந்தணைந்து வழிபடும் தலம் திருவையாறாகும். அதனைச் சென்று வழிபடுமின்.

மேல்

(392)
கலை ஆர் கலிக்காழியர் மன்னன்-

நலம் ஆர்தரு ஞானசம்பந்தன்-

அலை ஆர் புனல் சூழும் ஐயாற்றைச்

சொலும் மாலை வல்லார் துயர் வீடே.

கலைவல்லவர்களின் ஆரவாரம் மிக்க சீகாழிப் பதியில் உள்ளார்க்குத் தலைவனாகிய நன்மை அமைந்த ஞானசம்பந்தன் அலைகளை உடைய காவிரியால் சூழப்பட்ட திருவையாற்றைப் போற்றிப் பாடிய ,

இத்தமிழ் வல்லவர்களின் துயர்கள் நீங்கும்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(37)
திருப்பனையூர் - தக்கராகம்

(393)
அரவச் சடை மேல் மதி, மத்தம்,

விரவிப் பொலிகின்றவன் ஊர் ஆம்

நிரவிப் பல தொண்டர்கள் நாளும்

பரவிப் பொலியும் பனையூரே.

சடைமுடிமேல் அரவம், மதி, ஊமத்தம் மலர் ஆகியன கலந்து விளங்குமாறு அணிந்த சிவபெருமானது தலம் தொண்டர்கள் பலரும் கலந்து நாள்தோறும் வணங்கி மகிழ்வுறும் திருப்பனையூராகும்.

மேல்

(394)
எண் ஒன்றி நினைந்தவர் தம்பால்

உள் நின்று மகிழ்ந்தவன் ஊர் ஆம்

கள் நின்று எழு சோலையில் வண்டு

பண் நின்று ஒலி செய் பனையூரே.

மனம் ஒன்றி நினைந்த அடியார்களின் உள்ளத்துள்ளே இருந்து அவர்தம் வழிபாட்டை ஏற்று மகிழ்கின்ற சிவபெருமானது தலம், தேன் பொருந்திய மலர்களோடு உயர்ந்துள்ள சோலைகளில் வண்டுகள் பண்ணொன்றிய ஒலி செய்யும் பனையூராகும்.

மேல்

(395)
அலரும் எறி செஞ்சடை தன் மேல்

மலரும் பிறை ஒன்று உடையான் ஊர்

சிலர் என்றும் இருந்து அடி பேண,

பலரும் பரவும் பனையூரே.

விளங்கும் எரிபோலச் சிவந்த சடைமுடிமீது வளரும் பிறையொன்றை உடைய சிவபெருமானது ஊர், அடியவர்களில் சிலர் என்றும் இருந்து திருவடிகளைப் பரவிப் பூசனை செய்து போற்றவும், பலர் பலகாலும் வந்து பரவ விளங்கும் திருப்பனையூராகும்.

மேல்

(396)
இடி ஆர் கடல் நஞ்சு அமுது உண்டு

பொடி ஆடிய மேனியினான் ஊர்

அடியார் தொழ, மன்னவர் ஏத்த,

படியார் பணியும் பனையூரே.

கரைகளை மோதுதல் செய்யும் கடலிடைத் தோன்றிய நஞ்சை அமுதாக உண்டு, மேனி மீது திருநீற்றுப் பொடியை நிரம்பப் பூசிய சிவபெருமானது ஊர், அடியவர்கள் தொழ, மன்னவர்கள் ஏத்த உலகில் வாழும் பிற மக்கள் பணியும் திருப்பனையூராகும்.

மேல்

(397)
அறை ஆர் கழல் மேல் அரவு ஆட,

இறை ஆர் பலி தேர்ந்தவன் ஊர் ஆம்

பொறையார் மிகு சீர் விழ மல்க,

பறையார் ஒலிசெய் பனையூரே.

ஒலிக்கின்ற வீரக்கழல் மேல் அரவு ஆட முன்கைகளில் பலியேற்றுத் திரியும் பிட்சாடனராகிய சிவபெருமானது ஊர், மண்ணுலகில் சிறந்த புகழை உடைய திருவிழாக்கள் நிறையப் பறைகளின் ஒலி இடைவிடாது பயிலும் திருப்பனையூராகும்.

மேல்

(398)
அணியார் தொழ வல்லவர் ஏத்த,

மணி ஆர் மிடறு ஒன்று உடையான் ஊர்

தணி ஆர் மலர் கொண்டு இரு போதும்

பணிவார் பயிலும் பனையூரே.

தம்மைப் பூசனை செய்து தொழவல்ல அடியவர்கள் அண்மையில் இருப்பவராய், அருகிருந்து ஏத்துமாறு உள்ள நீலமணிபோலும் கண்டத்தை உடைய சிவபெருமானது ஊர், தன்னைப் பணியும் அடியவர் குளிர்ந்த மலர்களைக் கொண்டு இருபோதும் தூவி வழிபடும் இடமான திருப்பனையூராகும்.

மேல்

(399)
அடையாதவர் மூ எயில் சீறும்

விடையான், விறல் ஆர் கரியின் தோல்

உடையான் அவன், ஒண் பலபூதப்

படையான் அவன், ஊர் பனையூரே.

தன்னை வணங்காத பகைவர்களான அசுரர்களின் மூன்று அரண்களையும் அழித்த விடையூர்தியனும், வலிய யானையை உரித்து அதன் தோலை மேல் ஆடையாகக் கொண்டவனும் எண்ணற்ற பல பூதப் படைகளை உடையவனுமான சிவபெருமானது ஊர் திருப்பனையூராகும்.

மேல்

(400)
இலகும் முடிபத்து உடையானை

அல்லல் கண்டு அருள் செய்த எம் அண்ணல்,

உலகில் உயிர் நீர் நிலம் மற்றும்

பல கண்டவன், ஊர் பனையூரே.

விளங்கும் முடி பத்தை உடைய இராவணனை அடர்த்து அவன்படும் அல்லல் கண்டு அவனுக்கு அருள் செய்த எம் அண்ணலும், உலகின்கண் உயிர்கட்கு நீர் நிலம் முதலான பலவற்றையும் படைத்தளித்தவனும் ஆகிய சிவபெருமானது ஊர் திருப்பனையூர்.

மேல்

(401)
வரம் முன்னி மகிழ்ந்து எழுவீர்காள்!

சிரம் முன் அடி தாழ வணங்கும்

பிரமனொடு மால் அறியாத

பரமன் உறையும் பனையூரே!.

சிவபெருமானிடம் வரங்களைப்பெறுதலை எண்ணி மகிழ்வோடு புறப்பட்டு வரும் அடியவர்களே, அப்பெருமான் திருமுன் தலை தாழ்த்தி வணங்குங்கள்; எளிதில் நல்வரம் பெறலாம். பிரமனும் திருமாலும் அறியாத அப்பரமன் உறையும் ஊர் திருப்பனையூராகும்.

மேல்

(402)
அழி வல் அமணரொடு தேரர்

மொழி வல்லன சொல்லிய போதும்,

இழிவு இல்லது ஒரு செம்மையினான் ஊர்

பழி இல்லவர் சேர் பனையூரே.

அழிதலில் வல்ல அமணர்களும் பௌத்தர்களும் வாய்த்திறனால் புறங்கூறிய போதும் குறைவுறாத செம்மையாளனாகிய சிவபெருமானது ஊர் பழியற்றவர் சேரும் திருப்பனையூராகும்.

மேல்

(403)
பார் ஆர் விடையான் பனையூர் மேல்

சீர் ஆர் தமிழ் ஞானசம்பந்தன்

ஆராத சொல் மாலைகள் பத்தும்

ஊர் ஊர் நினைவார் உயர்வாரே.

மண்ணுலகிற் பொருந்தி வாழ்தற்கு ஏற்ற விடை ஊர்தியைக் கொண்ட சிவபெருமானது திருப்பனையூரின் மேல் புகழால் மிக்க தமிழ் ஞானசம்பந்தன் மென்மேலும் விருப்பத்தைத்தருவனவாகப் போற்றிப் பாடிய சொன்மாலைகளான,

இப்பத்துப் பாடல்களையும் ஒவ்வோரூரிலும் இருந்துகொண்டு நினைவார் உயர்வெய்துவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(38)
திருமயிலாடுதுறை - தக்கராகம்

(404)
கரவு இன்றி நல்மாமலர் கொண்டே

இரவும் பகலும் தொழுவார்கள்

சிரம் ஒன்றிய செஞ்சடையான் வாழ்

வர மா மயிலாடுதுறையே.

நெஞ்சிற் கரவின்றி மணம் மிக்க சிறந்த மலர்கள் பலவற்றையும் பறித்துக் கொண்டு வந்து இரவும் பகலும் தொழும் அடியார்களுக்கு, தலைமாலை பொருந்தும் செஞ்சடை உடைய சிவ பெருமான் வாழும் பதியாகிய மயிலாடுதுறை மேம்பட்ட தலமாகும். வள்ளன்மை யுடையான் உகந்தருளும் இடமுமாம்.

மேல்

(405)
உர வெங்கரியின் உரி போர்த்த

பரமன் உறையும் பதி என்பர்

குரவம், சுரபுன்னையும், வன்னி,

மருவும் மயிலாடுதுறையே.

வலிமை பொருந்திய கொடிய யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்த பரமன் உறையும் பதி, குராமரம், சுரபுன்னை வன்னி ஆகிய மரங்கள் செறிந்த திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும்.

மேல்

(406)
ஊனத்து இருள் நீங்கிட வேண்டில்,

ஞானப்பொருள் கொண்டு அடி பேணும்

தேன் ஒத்து இனியான் அமரும் சேர்வு

ஆன மயிலாடுதுறையே!.

இப்பிறப்பில் நமக்குள்ள குறைபாடாகிய ஆணவம் என்னும் இருள் நம்மை விட்டு நீங்க வேண்டில், ஞானப் பொருளாய் உள்ள சிவபெருமான் திருவடிகளை வணங்குங்கள். தேனை ஒத்து இனியனாய் விளங்கும் அப்பெருமான் தனக்குச் சேர்வான மயிலாடுதுறையில் விரும்பி உறைகிறான்.

மேல்

(407)
அஞ்சு ஒண் புலனும் அவை செற்ற

மஞ்சன் மயிலாடுதுறையை

நெஞ்சு ஒன்றி நினைந்து எழுவார்மேல்

துஞ்சும், பிணி ஆயினதானே.

ஐம்பொறிகளைப் பற்றும் ஒள்ளிய புலன்களாகிய அவைகளைக் கெடுத்த பெருவீரனாகிய சிவபெருமான் எழுந்தருளிய மயிலாடுதுறையை மனம் ஒன்றி நினைந்து வழிபட எழுவார் மேல்வரும் பிறவி முதலாகிய பிணிகள் அழிந்தொழியும்.

மேல்

(408)
தணி ஆர் மதி செஞ்சடையான்தன்

அணி ஆர்ந்தவருக்கு அருள், என்றும்

பிணி ஆயின தீர்த்து அருள் செய்யும்

மணியான், மயிலாடுதுறையே.

குளிர்ந்த பிறைமதியை அணிந்துள்ள சிவந்த சடைமுடியை உடையவனாகிய சிவபெருமானை அணுகியவருக்கு என்றும் அருள் உளதாம். பிணி முதலானவற்றைப் போக்கி அருள்புரியும் மணி போன்றவனாய் அப்பெருமான் மயிலாடுதுறையில் உள்ளான்.

மேல்

(409)
தொண்டர் இசை பாடியும் கூடிக்

கண்டு துதி செய்பவன் ஊர் ஆம்

பண்டும் பல வேதியர் ஓத,

வண்டு ஆர் மயிலாடுதுறையே.

தொண்டர்களாயுள்ளவர்கள் கூடி இசை பாடியும், தரிசித்தும் துதிக்கும் சிவபெருமானது ஊர் முற்காலத்தும் இக்காலத்தும் வேதியர்கள் வேதங்களை ஓதித் துதிக்க, வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் சூழ்ந்த மயிலாடுதுறையாகும்.

மேல்

(410)
அணங்கோடு ஒருபாகம் அமர்ந்து

இணங்கி அருள் செய்தவன் ஊர் ஆம்

நுணங்கும் புரிநூலர்கள் கூடி

வணங்கும் மயிலாடுதுறையே.

உமையம்மையை ஒரு பாகமாக விரும்பி ஏற்று வீற்றிருந்து அருள் புரிபவன் ஊர், முப்புரி நூல் துவளும் அந்தணர்கள் கூடி வணங்கும் திருமயிலாடுதுறை ஆகும்.

மேல்

(411)
சிரம் கையினில் ஏந்தி இரந்த

பரம் கொள் பரமேட்டி, வரையால்

அரங்க அரக்கன் வலி செற்ற,

வரம் கொள் மயிலாடுதுறையே.

பிரமகபாலத்தைக் கையில் ஏந்திப் பலர் இல்லங்களிலும் சென்று இரந்த மேன்மை கொண்டவன் சிவபிரான். கயிலை மலையால் இராவணனை நெரியுமாறு அடர்த்த நன்மையாளனாகிய அப்பெருமானை அடியவர் வணங்கி நன்மைகளைப் பெறும் தலம் திருமயிலாடுதுறை.

மேல்

(412)
ஞாலத்தை நுகர்ந்தவன் தானும்,

கோலத்து அயனும், அறியாத

சீலத்தவன் ஊர் சிலர் கூடி

மாலைத் தீர் மயிலாடுதுறையே.

உலகை விழுங்கித் தன் வயிற்றகத்தே வைத்தி திருமாலும், அழகிய நான்முகனும் அறியாத தூயவனாகிய சிவபெருமானது ஊர், அடியவர் ஒருங்கு கூடி வழிபட்டுத் தம் அறியாமை நீங்கப் பெறும் சிறப்புடைய திருமயிலாடுதுறை ஆகும்.

மேல்

(413)
நின்று உண் சமணும், நெடுந் தேரர்,

ஒன்று அறியாமை உயர்ந்த

வென்றி அருள் ஆனவன் ஊர் ஆம்

மன்றல் மயிலாடுதுறையே.

நின்றுண்பவர்களாகிய சமணர்களும் நெடிதுயர்ந்த புத்தர்களும் ஒரு சிறிதும் தன்னை அறியவாதவர்களாய் ஒழியத்தான் உயர்ந்த வெற்றி அருள் இவைகளைக் கொண்டுள்ள சிவபெருமானது ஊர் நறுமணம் கமழும் திருமயிலாடுதுறை ஆகும்.

மேல்

(414)
நயர் காழியுள் ஞானசம்பந்தன்

மயர் தீர் மயிலாடுதுறைமேல்

செயலால் உரை செய்தன பத்தும்

உயர்வு ஆம், இவை உற்று உணர்வார்க்கே.

ஞானத்தினால் மேம்பட்டவர் வாழும் சீகாழிப் பதியுள் வாழும் ஞானசம்பந்தன், தன்னை வழிபடுவாரின் மயக்கத்தைத் தீர்த்தருளும் மயிலாடுதுறை இறைவனைப் பற்றித் திருவருள் உணர்த்தும் செயலால் உரைத்தனவாகிய ,

இத்திருப்பதிகப் பாடல்களாகிய இவை பத்தும் உற்றுணர்வார்க்கு உயர்வைத் தரும்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(39)
திருவேட்களம் - தக்கராகம்

(415)
அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆர் அழல் அங்கை அமர்ந்து இலங்க;

மந்த முழவம் இயம்ப; மலைமகள் காண, நின்று ஆடி;

சந்தம் இலங்கு நகுதலை, கங்கை, தண்மதியம், அயலே ததும்ப;

வெந்த வெண் நீறு மெய் பூசும் வேட்கள நன் நகராரே.

உலகங்களைப் படைப்பவரும், இறுதி செய்பவருமாகிய, தலைமைத் தன்மையுடைய சிவபிரான் பிறரால் பொறுத்தற்கரிய தீகையின்கண் விளங்க, மெல்லென ஒலிக்கும் முழவம் இயம்ப, மலைமகளாகிய பார்வதிதேவி காணுமாறு திருநடம் புரிந்து, அழகு விளங்கும் கபாலமாலை, கங்கை, தண் பிறை ஆகியன தலையின்கண் விளங்க, வெந்த வெண்ணீறு மெய்யில் பூசியவராய்த் திருவேட்கள நன்னகரில் எழுந்தருளியுள்ளார்.

மேல்

(416)
சடைதனைத் தாழ்தலும் ஏற முடித்து, சங்க வெண்தோடு சரிந்து இலங்க,

புடைதனில் பாரிடம் சூழ, போதரும் ஆறு இவர் போல்வார்

உடைதனில் நால்விரல் கோவண ஆடை, உண்பதும் ஊர் இடு பிச்சை, வெள்ளை

விடை தனை ஊர்தி நயந்தார் வேட்கள நன் நகராரே.

திருவேட்கள நன்னகர் இறைவன், தாழ்ந்து தொங்கும் சடைமுடியை எடுத்துக் கட்டிச் சங்கால் இயன்ற வெள்ளிய தோடு காதிற் சரிந்து விளங்கவும், அருகில் பூதங்கள் சூழ்ந்து வரவும், போதருகின்றவர். அவர்தம் உடையோ நால்விரல் அகலமுடைய கோவண ஆடையாகும். அவர் உண்பதோ ஊரார் இடும் பிச்சையாகும். அவர் விரும்பி ஏறும் ஊர்தியோ வெண்ணிறமுடைய விடையாகும்.

மேல்

(417)
பூதமும் பல் கணமும் புடை சூழ, பூமியும் விண்ணும் உடன் பொருந்த,

சீதமும் வெம்மையும் ஆகி, சீரொடு நின்ற எம் செல்வர்

ஓதமும் கானலும் சூழ்தரு வேலை, உள்ளம் கலந்து இசையால் எழுந்த

வேதமும் வேள்வியும் ஓவா, வேட்கள நன் நகராரே.

கடல்நீர்ப் பெருக்கும் சோலையும் சூழ்ந்ததும், அந்தணர்கள் மனங்கலந்து பாடும் இசையால் எழுந்த வேத ஒலியும், அவர்கள் இயற்றும் வேள்விகளும் இடையறாது நிகழும் இயல்பினதும், ஆகிய திருவேட்கள நன்னகர் இறைவர், பூதங்களும் சிவகணங்களும் அருகில் சூழ்ந்து விளங்க, விண்ணும் மண்ணும் தம்பால் பொருந்தத் தண்மையும் வெம்மையும் ஆகிப் புகழோடு விளங்கும் எம் செல்வராவார்.

மேல்

(418)
அரை புல்கும் ஐந்தலை ஆடல் அரவம் அமைய வெண்கோவணத்தோடு அசைத்து,

வரை புல்கு மார்பில் ஓர் ஆமை வாங்கி அணிந்தவர் தாம்

திரை புல்கு தெண் கடல் தண் கழி ஓதம் தேன் நல் அம்கானலில் வண்டு பண்செய்ய,

விரை புல்கு பைம்பொழில் சூழ்ந்த வேட்கள நன் நகராரே.

இடையிற் பொருந்திய ஐந்து தலைகளை யுடையதாய், ஆடும் பாம்பை வெண்மையான கோவணத்தோடும் பொருந்தக்கட்டி, மலை போன்று அகன்ற மார்பின்கண் ஒப்பற்ற ஆமை ஓட்டை விரும்பி அணிந்தவராய் விளங்கும் சிவபெருமானார் அலைகளையுடைய தெளிந்த கடல்நீர் பெருகிவரும் உப்பங்கழிகளை உடையதும், வண்டுகள் இசைபாடும் தேன்பொருந்திய கடற்கரைச் சோலைகளை உடையதும், மணம் கமழும் பைம்பொழில் சூழ்ந்ததுமாகிய திருவேட்கள நன்னகரில் எழுந்தருளி உள்ளார்.

மேல்

(419)
பண் உறு வண்டு அறை கொன்றை அலங்கல், பால் புரை நீறு, வெண்நூல், கிடந்த

பெண் உறு மார்பினர்; பேணார் மும்மதில் எய்த பெருமான்;

கண் உறு நெற்றி கலந்த வெண் திங்கள் கண்ணியர்; விண்ணவர் கைதொழுது ஏத்தும்

வெண் நிற மால்விடை அண்ணல் வேட்கள நன் நகராரே.

திருவேட்கள நன்னகர் இறைவர், இசை பாடும் வண்டுகள் சூழ்ந்த கொன்றை மாலையை அணிந்தவராய், பால் போன்ற வெண்ணீறு பூசியவராய், முப்புரி நூலும் உமையம்மையும் பொருந்திய மார்பினராய்ப் பகைவர்களாகிய அசுரர்களின் மும்மதில்களையும் எய்து அழித்த தலைவராய், நெற்றிக் கண்ணராய், பிறைமதிக் கண்ணியராய் விண்ணவர் கைதொழுது ஏத்தும் வெண்மையான பெரிய விடை மீது ஊர்ந்து வருபவராய் விளங்கும் தலைவராவார்.

மேல்

(420)
கறி வளர் குன்றம் எடுத்தவன் காதல் கண் கவர் ஐங்கணையோன் உடலம்

பொறி வளர் ஆர் அழல் உண்ணப் பொங்கிய பூதபுராணர்,

மறி வளர் அம் கையர், மங்கை ஒரு பங்கர், மைஞ்ஞிறமான் உரி தோல் உடை ஆடை

வெறி வளர் கொன்றை அம்தாரார் வேட்கள நன்நகராரே.

திருவேட்கள நன்னகர் இறைவர், மிளகுக்கொடிகள் வளர்ந்து செறிந்த கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்த திருமாலின் அன்பு மகனும், அழகு மிக்கவனும், ஐங்கணை உடையவனுமாகிய மன்மதனின் உடல், பொறி பறக்கும் அரிய அழல் உண்ணும்படி சினந்த பழையோரும், மான் ஏந்திய கரத்தினரும், மங்கை பங்கரும், கருநிறமுடைய யானையின் தோலை உரித்து ஆடையாகப் போர்த்தவரும், மணங்கமழும் கொன்றை மாலையை அணிந்தவருமாவார்.

மேல்

(421)
மண் பொடிக்கொண்டு எரித்து ஓர் சுடலை, மாமலை வேந்தன் மகள் மகிழ,

நுண் பொடிச் சேர நின்று ஆடி, நொய்யன செய்யல் உகந்தார்,

கண் பொடி வெண் தலை ஓடு கை ஏந்திக் காலனைக் காலால் கடிந்து உகந்தார்,

வெண் பொடிச் சேர் திருமார்பர் வேட்கள நன்நகராரே.

திருவேட்கள நன்னகர் இறைவர் மண்ணும் பொடியாகுமாறு உலகை அழித்து, ஒப்பற்ற அச்சுடலையில் சிறப்புத் தன்மையை உடைய இமவான் மகளாகிய பார்வதி தேவி கண்டு மகிழ, சுடலையின் நுண்பொடிகள் தம் உடலிற் படிய, நின்று ஆடி, அத்திருக்கூத்து வாயிலாக நுட்பமான பஞ்ச கிருத்தியங்கள் செய்தலை உகந்தவரும், கண் பொடிந்து போன வெள்ளிய தலையோட்டினைக் கையில் ஏந்தியவரும், காலனைக் காலால் கடிந்துகந்தவரும் வெள்ளிய திருநீறு சேர்ந்த அழகிய மார்பினரும் ஆவார்.

மேல்

(422)
ஆழ் தரு மால் கடல் நஞ்சினை உண்டு ஆர் அமுதம் அமரர்க்கு அருளி,

சூழ் தரு பாம்பு அரை ஆர்த்து, சூலமோடு ஒண்மழு ஏந்தி,

தாழ் தரு புன்சடை ஒன்றினை வாங்கித் தண்மதியம் அயலே ததும்ப

வீழ் தரு கங்கை கரந்தார் வேட்கள நன்நகராரே.

திருவேட்கள நன்னகர் இறைவர், ஆழமான பெரிய கடலிடத்துத் தோன்றிய அமுதத்தைத் தேவர்க்கு அளித்தருளி நஞ்சினைத் தாம் உண்டவரும், சுற்றிக்கொள்ளும் இயல்பினதாய பாம்பினை இடையிற் கட்டி, சூலம், ஒளி பொருந்திய மழு ஆகியவற்றைக் கைகளில் ஏந்தியவரும், உலகையே அழிக்கும் ஆற்றலோடு பெருகி வந்த கங்கை நீரைத் தம் பிறை அயலில் விளங்கத் தலையிலிருந்து தொங்கும் மெல்லிய சடை ஒன்றினை எடுத்து அதன்கண் சுவறுமாறு செய்தவரும் ஆவார்.

மேல்

(423)
திரு ஒளி காணிய பேதுறுகின்ற திசைமுகனும், திசை மேல் அளந்த

கருவரை ஏந்திய மாலும், கைதொழ நின்றதும் அல்லால்,

அரு வரை ஒல்க எடுத்த அரக்கன் ஆடு ஏழில் தோள்கள் ஆழத்து அழுந்த

வெரு உற ஊன்றிய பெம்மான்-வேட்கள நன்நகராரே.

திருவேட்கள நன்னகர் இறைவர், அழகிய பேரொளிப் பிழம்பைக் காணும்பொருட்டு மயங்கிய நான்முகனும், எண்திசைகளையும் அளந்தவனாய்ப் பெரிதான கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்திய திருமாலும், அடிமுடி காண இயலாது கைதொழுது நிற்க, கயிலைமலை தளருமாறு அதனை எடுத்த இராவணனின் வெற்றியும் அழகு மிக்க தோள்களும் ஆழத் தழுந்தவும் அவன் அஞ்சி நடுங்கவும் தம் கால் விரலை ஊன்றிய பெருமான் ஆவார்.

மேல்

(424)
அத்தம் மண் தோய் துவரார், அமண்குண்டர், ஆதும் அல்லா உரையே உரைத்துப்

பொய்த்தவம் பேசுவது அல்லால் புறன் உரை யாதொன்றும் கொள்ளேல்;

முத்து அன வெண் முறுவல் உமை அஞ்ச, மூரி வல் ஆனையின் ஈர் உரி போர்த்த

வித்தகர், வேத முதல்வர் வேட்கள நன் நகராரே.

செந்நிறமான காவி மண் தோய்ந்த ஆடைகளை அணிந்த பௌத்தர்கள், சமண் குண்டர்கள் ஆகியோர் பொருளற்றவார்த்தைகளை உரைத்துப் பொய்த்தவம் பேசுவதோடு சைவத்தைப் புறனுரைத்துத் திரிவர். அவர்தம் உரை எதனையும் கொள்ளாதீர்.முத்துப் போன்ற வெண் முறுவல் உடைய உமையம்மை அஞ்சுமாறு வலிய யானையின் தோலை உரித்துப் போர்த்த வித்தகரும் வேத முதல் வருமாகிய வேட்கள நன்னகர் இறைவரை வணங்குமின்.

மேல்

(425)
விண் இயல் மாடம் விளங்கு ஒளி வீதி வெண்கொடி எங்கும் விரிந்து இலங்க,

நண்ணிய சீர் வளர் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன்

பெண்ணின் நல்லாள் ஒருபாகம் அமர்ந்து பேணிய வேட்களம் மேல் மொழிந்த

பண் இயல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவம் இலாரே.

விண்ணுற வோங்கிய மாட வீடுகளையும், வெண்மையான கொடிகள் எங்கும் விரிந்து விளங்கும் ஒளி தவழும் வீதிகளையும் உடையதும், பொருந்திய சீர்வளர்வதும் ஆகிய சீகாழிப்பதியுள் தோன்றிய நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன் பெண்ணில் நல்லவளான நல்ல நாயகியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று எழுந்தருளியுள்ள திருவேட்களத்து இறைவர்மீது பாடியருளிய,

பண்பொருந்திய இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர் பழி பாவம் இலராவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(40)
திருவாழ்கொளிபுத்தூர் - தக்கராகம்

(426)
பொடி உடை மார்பினர், போர் விடை ஏறி, பூதகணம் புடை சூழ,

கொடி உடை ஊர் திரிந்து ஐயம் கொண்டு, பலபல கூறி,

வடிவு உடை வாள் நெடுங்கண் உமை பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,

கடி கமழ் மா மலர் இட்டு, கறைமிடற்றான் அடி காண்போம்.

திருநீறு அணிந்த மார்பினராய், வீரம் மிக்க விடை மீது ஏறி, பூத கணங்கள் புடை சூழ்ந்து வர, கொடிகள் கட்டிய ஊர்களில் திரிந்து பற்பல வாசகங்களைக் கூறிப் பலியேற்று, அழகிய வாள் போன்ற நெடிய கண்களையுடைய உமையொரு பாகராகிய சிவபிரானார் எழுந்தருளிய வாழ்கொளிபுத்தூர் சென்று மணம் கமழும் சிறந்த மலர்களால் அருச்சித்து அக்கறைமிடற்றார் திருவடிகளைக் காண்போம்.

மேல்

(427)
அரை கெழு கோவண ஆடையின்மேல் ஓர் ஆடு அரவம் அசைத்து, ஐயம்

புரை கெழு வெண் தலை ஏந்தி, போர் விடை ஏறி, புகழ

வரை கெழு மங்கையது ஆகம் ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,

விரை கெழு மா மலர் தூவி, விரிசடையான் அடி சேர்வோம்.

இடையில் கட்டிய கோவண ஆடையின்மேல் ஆடும் அரவம் ஒன்றைக் கட்டிக் கொண்டு, துளை பொருந்திய வெண்தலையோட்டைக் கையில், ஏந்திப் பலியேற்று, சினம் பொருந்திய விடை மீது ஏறிப் பலரும் புகழ, இமவான் மகளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனாகிய சிவபிரான் எழுந்தருளிய திருவாழ்கொளிபுத்தூர் சென்று, மணம் கமழும் சிறந்த மலர்களைத் தூவி அவ்விரிசடையான் திருவடிகளைச் சேர்வோம்.

மேல்

(428)
“பூண் நெடுநாகம் அசைத்து, அனல் ஆடி, புன்தலை அங்கையில் ஏந்தி,

ஊண் இடு பிச்சை, ஊர் ஐயம் உண்டி” என்று பல கூறி,

வாள் நெடுங்கண் உமைமங்கை ஒர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,

தாள் நெடு மா மலர் இட்டு, தலைவனது தாள்நிழல் சார்வோம்.

நெடிய பாம்பை அணிகலனாகப் பூண்டு. அனலைக் கையின்கண் ஏந்தி, ஆடிக்கொண்டும், பிரமனது தலையோட்டை அழகிய கையொன்றில் ஏந்திப் பல ஊர்களிலும் திரிந்து மக்கள் உணவாகத் தரும் பிச்சையைத் தனக்கு உணவாக ஏற்றுப் பற்பலவாறு கூறிக்கொண்டும், வாள் போன்ற நீண்ட கண்களையுடைய உமையம்மையை ஒரு பாகமாக ஏற்று விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய திருவாழ்கொளிபுத்தூர் சென்று அப்பெருமான் திருவடிகளில் சிறந்த மலர்களைத் தூவித் தலைவனாக விளங்கும் அவன் தாள் நிழலைச் சார்வோம்.

மேல்

(429)
“தார் இடுகொன்றை, ஒர் வெண்மதி, கங்கை, தாழ்சடைமேல் அவை சூடி,

ஊர் இடு பிச்சை கொள் செல்வம் உண்டி” என்று பல கூறி,

வார் இடுமென்முலை மாது ஒரு பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,

கார் இடு மா மலர் தூவி, கறை மிடற்றான் அடி காண்போம்.

கொன்றை மாலையையும், வெண்மதியையும், கங்கையையும், தாழ்ந்து தொங்கும் சடைமுடியில் சூடி, ஊர் மக்கள் இடும் பிச்சையை ஏற்றுக்கொண்டு, அதுவே தனக்குச் செல்வம், உணவு என்று பலவாறு கூறிக்கொண்டு கச்சணிந்த மென்மையான தனங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட சிவபிரான் எழுந்தருளிய திருவாழ்கொளிபுத்தூர் சென்று, கார்காலத்தே மலரும் சிறந்த கொன்றை மலர்களைத் தூவிக் கறைமிடற்றானாகிய அப்பெருமான் திருவடிகளைக் காண்போம்.

மேல்

(430)
“கன மலர்க்கொன்றை அலங்கல் இலங்க, காதில் ஒர் வெண்குழையோடு

புன மலர்மாலை புனைந்து, ஊர் புகுதி” என்றே பல கூறி,

வனமுலை மாமலை மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,

இனமலர் ஏய்ந்தன தூவி, எம்பெருமான் அடி சேர்வோம்.

கார்காலத்து மலராகிய கொன்றை மலர்மாலை தன் திருமேனியில் விளங்க, ஒரு காதில் வெண்குழையணிந்து, முல்லை நிலத்து மலர்களால் தொடுக்கப்பெற்ற மாலைகளைச் சூடிப் பல ஊர்களுக்கும் சென்று பற்பல கூறிப் பலியேற்று அழகிய தனங்களையுடைய மலைமகளாகிய பார்வதியை ஒருபாகமாகக் கொண்ட எம்பிரான் எழுந்தருளிய திருவாழ்கொளிபுத்தூர் சென்று நமக்குக்கிட்டிய இனமான மலர்களைத் தூவி அவன் அடிகளைச் சேர்வோம்.

மேல்

(431)
“அளை வளர் நாகம் அசைத்து, அனல் ஆடி, அலர்மிசை அந்தணன் உச்சிக்

களை தலையில் பலி கொள்ளும் கருத்தனே! கள்வனே!” என்னா,

வளை ஒலி முன்கை மடந்தை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,

தளை அவிழ் மா மலர் தூவி, தலைவனது தாள் இணை சார்வோம்.

புற்றின்கண் வாழும்பாம்பினை இடையில் கட்டி, சுடுகாட்டில் ஆடி, தாமரை மலர் மேல் உறையும் பிரமனின் உச்சித் தலையைக் கொய்து, அத்தலையோட்டில் பலிகொள்ளும் தலைவனே, நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கள்வனே என்று, வளையல் ஒலிக்கும் முன் கையையுடைய பார்வதி தேவியை ஒருபாகமாகக் கொண்ட சிவபெருமான் உறையும் திருவாழ்கொளிபுத்தூர் சென்று, மொட்டவிழ்ந்த நறுமலர்களைத்தூவி அப்பெருமானின் தாளிணைகளைச் சார்வோம்.

மேல்

(432)
“அடர் செவி வேழத்தின் ஈர் உரி போர்த்து, அழிதலை அங்கையில் ஏந்தி,

உடல் இடு பிச்சையோடு ஐயம் உண்டி” என்று பல கூறி,

மடல் நெடு மா மலர்க்கண்ணி ஒர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,

தட மலர் ஆயின தூவி, தலைவனது தாள் நிழல் சார்வோம்.

பரந்த காதுகளையுடைய யானையைக் கொன்று, அதன் உதிரப் பசுமை கெடாத தோலை உரித்துப் போர்த்து, கிள்ளிய பிரமன் தலையோட்டைக் கையில் ஏந்தி, தாருகாவன முனிவர் மகளிர் தம் கைகளால் இட்ட பிச்சையோடு ஐயம், உண்டி, என்று பலகூறப்பலியேற்ற மடப்பம் வாய்ந்த நீண்ட நீல மலர் போன்ற கண்களையுடைய உமையொரு பாகனாக உள்ள திருவாழ்கொளிபுத்தூர் இறைவனை விரிந்த மலர்கள் பலவற்றால் அருச்சித்து அப்பெருமான் தாள்நிழலைச் சார்வோம்.

மேல்

(433)
“உயர்வரை ஒல்க எடுத்த அரக்கன் ஒளிர் கடகக் கை அடர்த்து,

அயல் இடு பிச்சையோடு ஐயம் ஆர்தலை” என்று அடி போற்றி,

வயல் விரி நீல நெடுங்கணி பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,

சய விரி மா மலர் தூவி, தாழ்சடையான் அடி சார்வோம்.

உயர்ந்த கயிலைமலையை அசையுமாறு பெயர்த்த இராவணனது ஒளி பொருந்திய கடகத்தோடு கூடிய தோள் வலிமையை அடர்த்தவனே என்றும், ஊர் மக்கள் இடும் பிச்சை, ஐயம் ஆகியவற்றை உண்ணும் தலைவனே என்றும், வயலின்கண் தோன்றி மலர்ந்த நீலமலர் போன்ற நீண்ட கண்களையுடைய உமையம்மை பாகனே என்றும் திருவாழ்கொளிபுத்தூர் இறைவனே, என்றும் வெற்றியோடு மலர்ந்த சிறந்த மலர்களைத் தூவி அத்தாழ் சடையான் அடிகளைச் சார்வோம்.

மேல்

(434)
“கரியவன் நான்முகன் கைதொழுது ஏத்த, காணலும் சாரலும் ஆகா

எரி உரு ஆகி, ஊர் ஐயம் இடு பலி உண்ணி” என்று ஏத்தி,

வரி அரவு அல்குல் மடந்தை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,

விரிமலர் ஆயின தூவி, விகிர்தனது சேவடி சேர்வோம்.

திருமாலும் நான்முகனும் கைகளால் தொழுதேத்திக் காணவும் சாரவும் இயலாத எரி உரு ஆகியவனே என்றும், பல ஊர்களிலும் திரிந்து ஐயம், பிச்சை ஆகியவற்றை உண்பவனே என்றும் போற்றிப் பொறிகளோடு கூடிய பாம்பின் படம் போன்ற அல்குலை உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவனாகிய வாழ்கொளிபுத்தூர் இறைவனை விரிந்த மலர்களைத் தூவி வழிபட்டு விகிர்தனாகிய அவன் சேவடிகளைச் சேர்வோம்.

மேல்

(435)
"குண்டு அமணர், துவர்க்கூறைகள் மெய்யில் கொள்கையினார், புறம் கூற,

வெண்தலையில் பலி கொண்டல் விரும்பினை" என்று விளம்பி,

வண்டு அமர் பூங்குழல் மங்கை ஒர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,

தொண்டர்கள் மா மலர் தூவ, தோன்றி நின்றான் அடி சேர்வோம்.

கொழுத்த அமணர்களும், துவராடைகள் போர்த்த புத்தர்களும், புறம் பேசுமாறு வெண்மையான தலையோட்டின்கண் பலியேற்றலை விரும்பியவனே என்று புகழ்ந்து போற்றி, வண்டுகள் மொய்க்கும் அழகிய கூந்தலையுடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவன் எழுந்தருளிய வாழ்கொளிபுத்தூர் சென்று அடியவர்கள் சிறந்த மலர்களைத் தூவி வழிபட அவர்கட்குக் காட்சி அளிப்பவனாகிய சிவனடிகளைச் சேர்வோம்.

மேல்

(436)
கல் உயர் மாக்கடல் நின்று முழங்கும் கரை பொரு காழி அ மூர்

நல் உயர் நால்மறை நாவின் நல் தமிழ் ஞானசம்பந்தன்

வல் உயர் சூலமும் வெண்மழுவாளும் வல்லவன் வாழ்கொளிபுத்தூர்,

சொல்லிய பாடல்கள் வல்லார் துயர் கெடுதல் எளிது ஆமே.

மலைபோல உயர்ந்து வரும் அலைகளை உடைய பெரிய கடல், பெரிய கரையோடு மோதி முழங்கும் காழிப்பழம்பதியில் தோன்றிய, உயர்ந்த நான்மறைகள் ஓதும் நாவினை உடைய நற்றமிழ் ஞானசம்பந்தன், வலிதாக உயர்ந்த சூலம், வெண்மையான மழு, வாள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதில் வல்லவனாகிய சிவபிரான் விளங்கும் வாழ்கொளிபுத்தூரைப் போற்றிச் சொல்லிய,

பாடல்களை ஓத வல்லவர் துயர் கெடுதல் எளிதாம்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(41)
திருப்பாம்புரம் - தக்கராகம்

(437)
சீர் அணி திகழ் திருமார்பில் வெண்நூலர், திரிபுரம் எரிசெய்த செல்வர்,

வார் அணி வனமுலை மங்கை ஓர் பங்கர், மான்மறி ஏந்திய மைந்தர்,

கார் அணி மணி திகழ் மிடறு உடை அண்ணல், கண்ணுதல், விண்ணவர் ஏத்தும்

பார் அணி திகழ் தரு நால்மறையாளர் பாம்புர நன்நகராரே.

விண்ணவர் போற்றும் திருப்பாம்புர நன்னகர் இறைவர் சிறந்த அணிகலன்கள் விளங்கும் அழகிய மார்பில் முப்புரி நூல் அணிந்தவர். திரிபுரங்களை எரித்த வீரச் செல்வர். கச்சணிந்த அழகிய தனங்களையுடைய உமையம்மையை ஒரு பாகமாகப் பொருந்திய நீலமணிபோலும் திகழ்கின்ற கண்டத்தையுடைய தலைவர். உலகில் அழகிய புகழோடு விளங்கும் மறைகளை அருளியவர். நெற்றிக்கண்ணர்.

மேல்

(438)
கொக்கு இறகோடு கூவிளம் மத்தம் கொன்றையொடு எருக்கு அணி சடையர்,

அக்கினொடு ஆமை பூண்டு அழகு ஆக அனல் அது ஆடும் எம் அடிகள்,

மிக்க நல் வேத வேள்வியுள் எங்கும் விண்ணவர் விரைமலர் தூவ,

பக்கம் பல் பூதம் பாடிட, வருவார் பாம்புர நன் நகராரே.

திருப்பாம்புர நன்னகர் இறைவர், கொக்கிறகு என்னும் மலர், வில்வம், ஊமத்தம்பூ, கொன்றை மலர், எருக்க மலர் ஆகியவற்றை அணிந்த சடைமுடியினர். சங்கு மணிகளோடு ஆமை ஓட்டைப் பூண்டு அழகாக அனலின்கண் ஆடும் எம் தலைவர். மிக்க நல்ல வேதவேள்விகளில் விண்ணோர்கள் மணம் கமழும் மலர்கள் தூவிப் போற்ற அருகில் பூதங்கள் பல பாடவும் வருபவர்.

மேல்

(439)
துன்னலின் ஆடை உடுத்து, அதன்மேல் ஓர் சூறை நல் அரவு அது சுற்றி,

பின்னுவார் சடைகள் தாழவிட்டு ஆடி, பித்தர் ஆய்த் திரியும் எம்பெருமான்,

மன்னு மா மலர்கள் விட, நாளும் மாமலையாட்டியும் தாமும்,

பன்னும் நால்மறைகள் பாடிட, வருவார் பாம்புர நன்நகராரே.

திருப்பாம்புர நன்னகர் இறைவர் தைத்த கோவண ஆடையை அணிந்து அதன் மேல் காற்றை உட்கொள்ளும் நல்ல பாம்பு ஒன்றைச் சுற்றிக் கொண்டு பின்னிய நீண்ட சடைகளைத் தாழ விட்டுக் கொண்டு, பித்தராய் ஆடித் திரியும் எமது பெருமான், அவர் மணம் நிறைந்த சிறந்த மலர்களைத் தூவி நாளும் நாம் வழிபட மலையரசன்

மேல்

(440)
துஞ்சு நாள் துறந்து தோற்றமும் இல்லாச் சுடர்விடு சோதி எம்பெருமான்,

நஞ்சு சேர் கண்டம் உடைய என் நாதர், நள் இருள் நடம் செயும் நம்பர்

மஞ்சு தோய் சோலை மா மயில் ஆட, மாடமாளிகை தன்மேல் ஏறி,

பஞ்சு சேர் மெல் அடிப் பாவையர் பயிலும் பாம்புர நன்நகராரே.

மேகங்கள் தோயும் சோலைகளில் சிறந்த மயில்கள் ஆடவும், மாடமாளிகைகளில் ஏறி, செம்பஞ்சு தோய்த்த சிவந்த மெல்லிய அடிகளை உடைய பெண்கள் பாடவும், ஆகச் சிறந்து விளங்கும் திருப்பாம்புர நன்னகர் இறைவர், இறக்கும் நாள் இல்லாதவராய், தோற்றமும் இல்லாதவராய், ஒளி பெற்று விளங்கும் சோதி வடிவினராய்த் திகழும் எம் பெருமான், விடம் பொருந்திய கண்டத்தை உடைய எம் தலைவர், நள்ளிருளில் நடனம் புரியும் கடவுளாவார்.

மேல்

(441)
நதி அதன் அயலே நகுதலை மாலை, நாள்மதி, சடைமிசை அணிந்து,

கதி அது ஆக, காளி முன் காண, கான் இடை நடம் செய்த கருத்தர்;

விதி அது வழுவா வேதியர் வேள்வி செய்தவர் ஓத்து ஒலி ஓவாப்

பதி அது ஆகப் பாவையும் தாமும் பாம்புர நன்நகராரே.

விதிமுறை வழுவா வேதியர்கள், வேள்விகள் பல செய்தலால், எழும் வேத ஒலி நீங்காதபதி அது என உமையம்மையும் தாமுமாய்த் திருப்பாம்புர நன்னகரில் விளங்கும் இறைவர், சடைமுடி மீது கங்கையின் அயலே சிரிக்கும் தலைமாலை, பிறை மதி ஆகியவற்றை அணிந்து நடனத்திற்குரிய சதி அதுவே என்னும்படி காளிமுன்னே இருந்து காண இடுகாட்டுள் நடனம் செய்த தலைவர் ஆவார்.

மேல்

(442)
ஓதி நன்கு உணர்வார்க்கு உணர்வு உடை ஒருவர்; ஒளி திகழ் உருவம் சேர் ஒருவர்;

மாதினை இடமா வைத்த எம் வள்ளல்; மான்மறி ஏந்திய மைந்தர்;

"ஆதி, நீ அருள்!" என்று அமரர்கள் பணிய, அலைகடல் கடைய, அன்று எழுந்த

பாதி வெண்பிறை சடை வைத்த எம் பரமர் பாம்புர நன்நகராரே.

திருப்பாம்புர நன்னகர் இறைவர், கல்வி கற்றுத் தெளிந்த அறிவுடையோரால் அறியப்படும் ஒருவராவார். ஒளியாக விளங்கும் சோதி உருவினராவார். உமையம்மையை இடப்பாகமாகக் கொண்ட எம் வள்ளலாவார். இளமான் மறியைக் கையில் ஏந்திய மைந்தராவார். திருப்பாற்கடலைக் கடைந்த பொழுது எழுந்த ஆலகாலவிடத்திற்கு அஞ்சிய தேவர்கள் ஆதியாக விளங்கும் தலைவனே, நீ எம்மைக் காத்தருள் என வேண்ட, நஞ்சினை உண்டும், கடலினின்றெழுந்த பிறைமதியைச் சடையிலே வைத்தும் அருள்புரிந்த எம்மேலான தலைவராவார்.

மேல்

(443)
மாலினுக்கு அன்று சக்கரம் ஈந்து, மலரவற்கு ஒரு முகம் ஒழித்து,

ஆலின் கீழ் அறம் ஓர் நால்வருக்கு அருளி, அனல் அது ஆடும் எம் அடிகள்;

காலனைக் காய்ந்து தம் கழல் அடியால், காமனைப் பொடிபட நோக்கி,

பாலனுக்கு அருள்கள் செய்த எம் அடிகள் பாம்புர நன்நகராரே.

திருப்பாம்புர நன்னகர் இறைவர் முன்பு திருமாலுக்குச் சக்கராயுதம் அளித்தவர். தாமரை மலர் மேல் உறையும் பிரமனது ஐந்தலைகளில் ஒன்றைக் கொய்தவர். சனகாதி நால்வருக்குக் கல்லாலின் கீழிருந்து அறம் அருளியவர். தீயில் நடனமாடுபவர். தமது கழலணிந்த திருவடியால் காலனைக் காய்ந்தவர். காமனைப் பொடிபட நோக்கியவர். உபமன்யு முனிவருக்குப் பாற்கடல் அளித்து அருள்கள் செய்த தலைவர் ஆவார்.

மேல்

(444)
விடைத்த வல் அரக்கன் வெற்பினை எடுக்க, மெல்லிய திருவிரல் ஊன்றி,

அடர்த்து அவன் தனக்கு அன்று அருள் செய்த அடிகள்; அனல் அது ஆடும் எம் அண்ணல்

மடக்கொடி அவர்கள் வருபுனல் ஆட, வந்து இழி அரிசிலின் கரைமேல்

படப்பையில் கொணர்ந்து பரு மணி சிதறும் பாம்புர நன்நகராரே.

இளங்கொடி போன்ற பெண்கள் நீராட வந்து இழியும் அரிசிலாறு தோட்டங்களில் சிதறிக் கிடக்கும் பெரிய மணிகளை அடித்து வந்து கரைமேல் சேர்க்கும் திருப்பாம்புர நன்னகர் இறைவர், செருக்குற்ற வலிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்து எடுத்த போது மெல்லிய திருவடி விரல் ஒன்றை ஊன்றி அவனை அடர்த்துப் பின் அவன் பிழையுணர்ந்து வருந்திப் போற்ற அருள் பல செய்த தலைவர் ஆவார்.

மேல்

(445)
கடி படு கமலத்து அயனொடு மாலும், காதலோடு அடிமுடி தேட,

செடி படு வினைகள் தீர்த்து அருள் செய்யும் தீவணர்; எம்முடைச் செல்வர்;

முடி உடை அமரர் முனிகணத்தவர்கள் முறை முறை அடி பணிந்து ஏத்த,

படி அது ஆகப் பாவையும் தாமும் பாம்புர நன்நகராரே.

முடி சூடிய அமரர்களும் முனிகணத்தவர்களும் முறையாகத் தம் திருவடிகளைப் பணிந்து ஏத்துதற்கு உரிய தகுதி வாய்ந்த இடமாகக் கொண்டு உமையம்மையும் தாமுமாய்த் திருப்பாம்புர நன்னகரில் விளங்கும் இறைவர் மணம் பொருந்திய தாமரை மலர் மேல் விளங்கும் பிரமனும் திருமாலும் அன்போடு அடிமுடி தேடத் தீவண்ணராய்க் கிளைத்த வினைகள் பலவற்றையும் தீர்த்து அருள் செய்பவராய் விளங்கும் எம் செல்வர் ஆவார்.

மேல்

(446)
குண்டர், சாக்கியரும், குணம் இலாதாரும், குற்றுவிட்டு உடுக்கையர் தாமும்,

கண்ட ஆறு உரைத்துக் கால் நிமிர்த்து உண்ணும் கையர்தாம் உள்ள ஆறு அறியார்;

வண்டு சேர் குழலி மலைமகள் நடுங்க வாரணம் உரிசெய்து போர்த்தார்;

பண்டு நாம் செய்த பாவங்கள் தீர்ப்பார் பாம்புர நன்நகராரே.

திருப்பாம்புர நன்னகர் இறைவர் குண்டர்களாகிய சமணர்களாலும் புத்தர்களாலும் மிகச் சிறிய ஆடையை அணிந்து, கண்டபடி பேசிக்கொண்டு நின்றுண்ணும் சமணத் துறவியராலும் உள்ளவாறு அறியப் பெறாதவர். வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய மலைமகளாகிய பார்வதி தேவி நடுங்க யானையை உரித்துப் போர்த்தவர். முற்பிறவிகளில் நாம் செய்த பாவங்களைத் தீர்ப்பவர்.

மேல்

(447)
பார் மலிந்து ஓங்கிப் பரு மதில் சூழ்ந்த பாம்புர நன் நகராரைக்

கார் மலிந்து அழகு ஆர் கழனி சூழ் மாடக் கழுமல முது பதிக் கவுணி

நார் மலிந்து ஓங்கும் நால் மறை ஞானசம்பந்தன்-செந்தமிழ் வல்லார்

சீர் மலிந்து அழகு ஆர் செல்வம் அது ஓங்கி, சிவன் அடி நண்ணுவர் தாமே.

உலகில் புகழ் நிறைந்து ஓங்கியதும்பெரிய மதில்களால் சூழப் பெற்றதுமான திருப்பாம்புர நன்னகர் இறைவனை, மழை வளத்தால் சிறந்து அழகியதாய் விளங்கும் வயல்கள் சூழப் பெற்றதும், மாட வீடுகளை உடையதுமான, கழுமலம் என்னும் பழம் பதியில் கவுணியர் கோத்திரத்தில், அன்பிற் சிறந்தவனாய்ப் புகழால் ஓங்கி விளங்கும் நான்மறைவல்ல ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய,

இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஒதவல்லவர், புகழும் அழகும் மிகுந்தவராய்ச் செல்வத்தால் சிறந்து வாழ்ந்து முடிவில் சிவனடியை அடைவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(42)
திருப்பேணுபெருந்துறை - தக்கராகம்

(448)
பைம் மா நாகம், பல்மலர்க் கொன்றை, பன்றி வெண் கொம்பு ஒன்று, பூண்டு,

செம்மாந்து, "ஐயம் பெய்க!" என்று சொல்லி, செய் தொழில் பேணியோர்; செல்வர்;

அம் மான் நோக்கு இயல், அம் தளிர்மேனி, அரிவை ஓர்பாகம் அமர்ந்த

பெம்மான்; நல்கிய தொல்புகழாளர் பேணு பெருந்துறையாரே.

திருப்பேணு பெருந்துறை இறைவர், படம் பொருந்திய பெரிய நாகம், பல மலர்களோடு இணைந்த கொன்றை மலர், வெண்மையான பன்றிக் கொம்பு ஆகியவற்றை அணிந்து செம்மாப்பு உடையவராய்ப் பலர் இல்லங்களுக்கும் சென்று ‘ஐயம் இடுக’என்று கேட்டு, ஐயம் இட்ட கடமையாளர்களுக்குச் செல்வமாய் இருப்பவர்; அழகிய மான்விழி போன்ற விழிகளையும், தளிர் போன்ற மேனியையும் உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட தலைவர்; நிலைத்த பழமையான புகழையுடையவர்.

மேல்

(449)
மூவரும் ஆகி, இருவரும் ஆகி, முதல்வனும் ஆய், நின்ற மூர்த்தி

பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி, பல்கணம் நின்று பணிய,

சாவம் அது ஆகிய மால்வரை கொண்டு தண் மதில் மூன்றும் எரித்த

தேவர்கள் தேவர், எம்பெருமானார் தீது இல் பெருந்துறையாரே.

குற்றமற்ற பேணு பெருந்துறையில் விளங்கும் எம் பெருமானார், அரி அயன் அரன் ஆகிய முத்தொழில் செய்யும் மூவருமாய், ஒடுங்கிய உலகை மீளத் தோற்றும் சிவன், சக்தி ஆகிய இருவருமாய், அனைவர்க்கும் தலைவருமாய் நின்ற மூர்த்தி ஆவார். நம் பாவங்கள் தீர நல்வினைகளை அளித்துப் பதினெண் கணங்களும் நின்று பணிய மேரு மலையை வில்லாகக் கொண்டு, மும்மதில்களையும் எரித்தழித்த தேவதேவராவார்.

மேல்

(450)
செய் பூங்கொன்றை, கூவிளமாலை, சென்னியுள் சேர் புனல், சேர்த்தி,

கொய்ங்கோதை மாது உமை பாகம் கூடி ஓர் பீடு உடை வேடர்

கை போல் நான்ற கனிகுலைவாழை காய்குலையின் கமுகு ஈன,

பெய் பூம்பாளை பாய்ந்து இழி தேறல் பில்கு பெருந்துறையாரே.

யானையின் கை போன்ற நீண்ட வாழைக் குலையில் பழுத்த பழங்களிலும், காய்த்த குலைகளிலும், கமுக மரங்களின் பூம்பாளைகளில் ஒழுகும் தேன் பாய்ந்து பெருகும் பெருந்துறை இறைவர், கொன்றைப்பூமாலை, கூவிளமாலை அணிந்த தலையில் கங்கையை ஏற்று, பூமாலை சூடிய உமையைத் தம் உடலின் ஒரு பாகமாகக் கொண்டு அதனால் ஒப்பற்ற அம்மையப்பர் என்ற பெருமையுடைய உருவினராவர்.

மேல்

(451)
நிலனொடு வானும் நீரொடு தீயும் வாயுவும் ஆகி, ஓர் ஐந்து

புலனொடு வென்று, பொய்ம்மைகள் தீர்ந்த புண்ணியர் வெண்பொடிப் பூசி,

நலனொடு தீங்கும் தான் அலது இன்றி, நன்கு எழு சிந்தையர் ஆகி,

மலனொடு மாசும் இல்லவர் வாழும் மல்கு பெருந்துறையாரே.

நிலம், வானம், நீர், தீ, காற்று ஆகிய ஐம்பூதங்களின் வடிவாய், ஐந்து புலங்களை வென்றவராய், பொய்ம்மைகள் இல்லாத புண்ணியராய் வாழும் இறைவர், திருவெண்ணீறு அணிந்து நன்மையும் தின்மையும் சிவனாலன்றி வருவதில்லை என்ற நல்லுள்ளங் கொள்பவராய், மல மாசுக்கள் தீர்ந்தவராய் வாழும் அடியவர்கள் நிறைந்த பேணு பெருந்துறையார் ஆவர்.

மேல்

(452)
பணிவு ஆய் உள்ள நன்கு எழு நாவின் பத்தர்கள் பத்திமை செய்ய,

துணியார் தங்கள் உள்ளம் இலாத சுமடர்கள் சோதிப்பரியார்;

அணி ஆர் நீலம் ஆகிய கண்டர் அரிசில் உரிஞ்சு கரைமேல்

மணி வாய் நீலம்வாய் கமழ் தேறல் மல்கு பெருந்துறையாரே.

அரிசிலாற்றின் அலைகள் மோதும் கரையில் அமைந்ததும், நீல மணி போலும் நிறம் அமைந்த குவளை மலர்களின் வாயிலிருந்து வெளிப்படும் தேன் கமழ்ந்து நிறைவதுமாகிய பேணு பெருந்துறை இறைவர். பணிவுடைய துதிப்பாடல்கள் பாடும் நன்மை தழுவிய நாவினையுடைய பக்தர்கள் அன்போடு வழிபட எளியர். துணிவற்றவர்களாய்த் தங்கள் மனம் பொருந்தாத அறியாமை உடையவர்களாய் உள்ளவர்கள் பகுத்தறிவதற்கு அரியவர். அழகிய நீல நிறம் பொருந்திய கண்டத்தை உடையவர்.

மேல்

(453)
எண்ணார் தங்கள் மும்மதில் வேவ ஏ வலம் காட்டிய எந்தை,

விண்ணோர் சாரத் தன் அருள் செய்த வித்தகர், வேத முதல்வர்,

பண் ஆர் பாடல் ஆடல் அறாத பசுபதி, ஈசன், ஓர் பாகம்

பெண் ஆண் ஆய வார்சடை அண்ணல் பேணு பெருந்துறையாரே.

திருப்பேணுபெருந்துறை இறைவர் தம்மை மதியாதவரான, அசுரர்களின் முப்புரங்கள் எரிந்தழியுமாறு வில் வன்மை காட்டிய எந்தையாராவர். தேவர்கள் வழிபட அவர்கட்கு தமது அருளை நல்கிய வித்தகராவர். வேதங்களின் தலைவராவர். இசை நலம் கெழுமிய பாடல்களோடு, ஆடி மகிழும் பசுபதியாய ஈசனும் ஆவர். ஒரு பாகம் பெண்ணுமாய், ஒரு பாகம் ஆணுமாய் விளங்கும் நீண்ட சடைமுடியுடைய தலைவராவர்.

மேல்

(454)
விழை ஆர் உள்ளம் நன்கு எழு நாவில் வினை கெட, வேதம் ஆறு அங்கம்

பிழையா வண்ணம் பண்ணிய ஆற்றல், பெரியோர் ஏத்தும் பெருமான்-

தழை ஆர் மாவின் தாழ் கனி உந்தித் தண் அரிசில் புடை சூழ்ந்த

குழை ஆர் சோலை மென் நடை அன்னம் கூடு பெருந்துறையாரே.

தழைத்த மாமரத்திலிருந்து உதிர்ந்த பழங்களை உருட்டிவரும் தண்ணிய அரிசிலாற்றின் கரையருகே சூழ்ந்து விளங்கும் தளிர்கள் நிறைந்த சோலைகளில் மெல்லிய நடையையுடைய அன்னங்கள்கூடி விளங்கும் திருப்பேணுபெருந்துறை இறைவர், விருப்பம் பொருந்திய உள்ளத்தோடு நன்மை அமைந்த நாவின்கண் தம் வினைகெட, நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் பிழையின்றி முன்னோர் ஓதிவரும் முறையில் பெரியோர் ஓதி ஏத்தும் பெருமானார் ஆவர்.

மேல்

(455)
பொன் அம் கானல் வெண் திரை சூழ்ந்த பொருகடல் வேலி இலங்கை

மன்னன் ஒல்க மால்வரை ஊன்றி, மா முரண் ஆகமும் தோளும்

முன் அவை வாட்டி, பின் அருள் செய்த மூஇலைவேல் உடை மூர்த்தி

அன்னம் கன்னிப்பேடையொடு ஆடி அணவு பெருந்துறையாரே.

ஆண் அன்னம் கன்னிமையுடைய பெண் அன்னத்தோடு ஆடியும், கூடியும் மகிழும் பேணு பெருந்துறை இறைவர், அழகிய கடற்கரைச் சோலைகளும், வெண்மையான கடல் அலைகளும் சூழ்ந்துள்ளதும், நாற்புறங்களிலும் கடலையே வேலியாக உடையதுமான இலங்கை மாநகர் மன்னனாகிய இராவணன் தளர்ச்சி அடையுமாறு பெரிய கயிலை மலையைக் கால் விரலால் ஊன்றி, அவனுடைய சிறந்த வலிமையுடைய, மார்பும், தோள்களும் வலிமை குன்றுமாறு செய்து பின் அவனுக்கு அருள்கள் பல செய்த மூவிலை வேலையுடைய மூர்த்தியாவார்.

மேல்

(456)
புள் வாய் போழ்ந்து மா நிலம் கீண்ட பொருகடல் வண்ணனும், பூவின்

உள் வாய் அல்லிமேல் உறைவானும், உணர்வு அரியான்; உமைகேள்வன்-

முள் வாய் தாளின் தாமரைமொட்டு இன்முகம் மலர, கயல் பாய,

கள் வாய் நீலம் கண்மலர் ஏய்க்கும் காமர் பெருந்துறையாரே.

முட்களையுடைய தண்டின்மேல் தாமரை மொட்டு இனிய முகம்போல் மலர, அதன்கண் கயல்மீன் பாயத் தேனையுடைய நீல மலர் கண்மலரை ஒத்துள்ளதால், இயற்கை, மாதர்களின் மலர்ந்த முகங்களைப் போலத் தோற்றந்தரும் பேணுபெருந்துறையில் உள்ள இறைவர், கொக்கு வடிவங் கொண்ட பகாசுரனின் வாயைப் பிளந்தும், நிலவுலகைத் தோண்டியும் விளங்கும் கடல் வண்ணனாகிய திருமாலும், தாமரை மலரின் அக இதழ்கள் மேல் உறையும் நான் முகனும் உணர்ந்து அறிதற்கரியவர்; உமையம்மையின் கணவர்.

மேல்

(457)
குண்டும் தேரும், கூறை களைந்தும் கூப்பிலர் செப்பிலர் ஆகி

மிண்டும் மிண்டர் மிண்டு அவை கண்டு மிண்டு செயாது விரும்பும்!

தண்டும் பாம்பும் வெண்தலை சூலம் தாங்கிய தேவர் தலைவர்

வண்டும் தேனும் வாழ் பொழில் சோலை மல்கு பெருந்துறையாரே.

இறைவரைக் குண்டர்களாகிய சமணர்களும், தேரர்களாகிய புத்தர்களும் தம் ஆடைகளைக் களைந்தும் பல்வகை விரதங்களை மேற்கொண்டும் கைகூப்பி வணங்காதவர்களாய்த் திருப்பெயர்களைக் கூறாதவர்களாய், வம்பு செய்யும் இயல்பினராய் வீண்தவம் புரிகின்றனர். அவர்களின் மாறான செய்கைகளைக் கண்டு அவற்றை மேற்கொள்ளாது சிவநெறியை விரும்புமின். யோக தண்டம், பாம்பு, தலைமாலை, சூலம் ஆகியவற்றை ஏந்திய தேவர் தலைவராகிய நம் இறைவர், வண்டுகளும், தேனும் நிறைந்து வாழும் பொழில்களும், சோலைகளும் நிறைந்த பேணுபெருந்துறையில் உள்ளார்.

மேல்

(458)
கடை ஆர் மாடம் நன்கு எழு வீதிக் கழுமல ஊரன்-கலந்து

நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன்-நல்ல பெருந்துறை மேய

படை ஆர் சூலம் வல்லவன் பாதம் பரவிய பத்து இவை வல்லார்

உடையார் ஆகி, உள்ளமும் ஒன்றி, உலகினில் மன்னுவர்தாமே.

வாயில்களையுடைய மாட வீடுகள் நன்கமைந்த வீதிகளையுடைய கழுமலம் என்னும் ஊரில் தோன்றியவனும், அன்பொடு கலந்து இன்சொல் நடையோடு பாடுபவனுமாகிய ஞானசம்பந்தன் நல்ல பேணுபெருந்துறை மேவிய வலிய சூலப்படையுடைய இறைவன் திருவடிகளைப் பரவிப் போற்றிய,

இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதுபவர், எல்லா நன்மைகளும் உடையவராய் மனம் ஒன்றி உலகில் நிலையான வாழ்வினைப் பெறுவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(43)
திருக்கற்குடி - தக்கராகம்

(459)
வடம் திகழ் மென் முலையாளைப் பாகம் அது ஆக மதித்து,

தடந் திரை சேர் புனல்மாதைத் தாழ்சடை வைத்த சதுரர்;

இடம் திகழ் முப்புரி நூலர்; துன்பமொடு இன்பம் அது எல்லாம்

கடந்தவர் காதலில் வாழும் கற்குடி மா மலையாரே.

திருக்கற்குடி மாமலையை விரும்பி அதன்கண் வாழும் இறைவர், முத்துவடம் விளங்கும் மெல்லிய தனங்களை உடைய உமையம்மையை மதித்து இடப்பாகமாகக் கொண்டு பெரிய அலைகள் வீசும் கங்கை நங்கையைத் தாழ்கின்ற சடைமிசை வைத்துள்ள சதுரப்பாடுடையவர்: திருமேனியின் இடப்பாகத்தே விளங்கும் முப்புரிநூலை அணிந்தவர். இன்ப துன்பங்களைக் கடந்தவர்.

மேல்

(460)
அங்கம் ஓர் ஆறொடு ஐவேள்வி ஆன அருமறை நான்கும்

பங்கம் இல் பாடலோடு ஆடல் பாணி பயின்ற படிறர்

சங்கம் அது ஆர் குறமாதர் தம் கையின் மைந்தர்கள் தாவிக்

கங்குலில் மா மதி பற்றும் கற்குடி மா மலையாரே.

சங்கு வளையல்கள் அணிந்த குறப் பெண்களின் கைகளில் விளங்கும் பிள்ளைகள் இரவு நேரத்தில் தாவிப்பெரிய மதியைக் கைகளால் பற்றும் திருக்கற்குடி மாமலை இறைவர் வேள்விகட்குரிய விதிகளை விளக்கி ஆறு அங்கங்களுடன் கூடிய, அரிய வேதங்கள் நான்காகிய குற்றமற்ற பாடல், ஆடல், தாளச் சதிகள் ஆகியவற்றைப் பழகியவர்.

மேல்

(461)
நீர் அகலம் தரு சென்னி நீடிய மத்தமும் வைத்து,

தாரகையின் ஒளி சூழ்ந்த தண்மதி சூடிய சைவர்

போர் அகலம் தரு வேடர் புனத்து இடை இட்ட விறகில்

கார் அகிலின் புகை விம்மும் கற்குடி மா மலையாரே.

போர் செய்தற்கு ஏற்ற அகலமான மார்பினைக் கொண்டுள்ள வேடர்கள் காடுகளிலிருந்து வெட்டிக் கொணர்ந்து எரிக்கும் விறகுகளில் கரிய அகிலின் புகை மணம் வீசும் திருக்கற்குடி மாமலை இறைவர் பரந்து விரிந்து வந்த கங்கை நீரை உடைய முடி மீது நீண்டு மலர்ந்த ஊமத்தை மலரை அணிந்து விண்மீன்களின் ஒளி சூழ்ந்து விளங்கும் குளிர்ந்த பிறை மதியைச் சூடிய சைவராவர். அம்மலையில் மரமானவை அகிலன்றிப் பிறிதில்லை என்பதாம்.

மேல்

(462)
“ஒருங்கு அளி, நீ இறைவா!” என்று உம்பர்கள் ஓலம் இடக் கண்டு,

இருங்களம் ஆர விடத்தை இன் அமுது உன்னிய ஈசர்

மருங்கு அளி ஆர் பிடி வாயில் வாழ் வெதிரின் முளை வாரி,

கருங்களியானை கொடுக்கும் கற்குடி மா மலையாரே.

மதம் கொண்ட கரிய களிறு அருகில் அன்பு காட்டி வரும் பெண் யானையின் வாயில், பசுமையோடு முளைத்து வரும் மூங்கில் முளைகளை வாரிக்கொடுத்து ஊட்டும் திருக்கற்குடி மாமலை இறைவர், தேவர்கள் பெருமானே, அனைவரையும் ஒருங்கு காத்தளிப்பாயாக என ஓலமிடுவதைக் கேட்டுப் பாற்கடலிடை எழுந்த நஞ்சைத் தமது மிடறு கருமைக்கு இடமாகுமாறு இனிய அமுதமாகக் கருதி உண்டு காத்த ஈசராவார்.

மேல்

(463)
போர் மலி திண் சிலை கொண்டு, பூதகணம் புடை சூழ,

பார் மலி வேடு உரு ஆகி, பண்டு ஒருவற்கு அருள் செய்தார்

ஏர் மலி கேழல் கிளைத்த இனொளி மா மணி எங்கும்

கார் மலி வேடர் குவிக்கும் கற்குடி மா மலையாரே.

அழகிய பன்றிகள் நிலத்தைக் கிளைத்தலால் வெளிப்பட்ட இனிய ஒளியோடு கூடிய சிறந்த மணிகளைக் கரிய நிறமுடைய வேடர்கள் பல இடங்களிலும் குவித்துள்ள திருக்கற்குடி மாமலை இறைவர், போர் செய்யத்தக்க வலிய வில்லைக் கையில் கொண்டு, பூத கணங்கள் புடை சூழ்ந்து வர மண்ணுலகில் தாமொரு வேடர் உருத் தாங்கி, முற்காலத்தில் அருச்சுனருக்கு அருள் செய்தவராவார்.

மேல்

(464)
உலந்தவர் என்பு அது அணிந்தே, ஊர் இடு பிச்சையர் ஆகி,

விலங்கல்வில் வெங்கனலாலே மூ எயில் வேவ முனிந்தார்

நலம் தரு சிந்தையர் ஆகி, நா மலி மாலையினாலே

கலந்தவர் காதலில் வாழும் கற்குடி மா மலையாரே.

நன்மை அமைந்த மனமுடையவராய் நாவினால் புகழும் சொல் மாலைகளாகிய தோத்திரங்களினாலே இறைவன் திருவருளில் கலந்த மெய்யடியார்கள் அன்போடு வாழும் திருக்கற்குடி மாமலை இறைவர், இறந்தவர்களின் எலும்பை அணிந்து, ஊர் மக்கள் இடும் பிச்சையை ஏற்கும் பிட்சாடனராய் மேருமலையாகிய வில்லிடைத் தோன்றிய கொடிய கனலால் முப்புரங்களும் வெந்தழியுமாறு முனிந்தவர்.

மேல்

(465)
மான் இடம் ஆர்தரு கையர், மா மழு ஆரும் வலத்தார்,

ஊன் இடை ஆர் தலை ஓட்டில் உண்கலன் ஆக உகந்தார்

தேன் இடை ஆர் தரு சந்தின் திண் சிறையால் தினை வித்தி,

கான் இடை வேடர் விளைக்கும் கற்குடி மா மலையாரே.

தேனடைகள் பொருந்திய சந்தன மரங்களுக்கிடையே வலிய கரைகளைக் கட்டி, தினைகளை விதைத்துக் கானகத்தில் வேடர்கள் தினைப்பயிர் விளைக்கும் திருக்கற்குடி மாமலை இறைவர் மானை இடக் கையிலும், மழுவை வலக் கையிலும் தரித்தவர். ஊன் பொருந்திய தலையோட்டை உண்கலனாக உகந்தவர்.

மேல்

(466)
வாள் அமர் வீரம் நினைந்த இராவணன் மாமலையின் கீழ்

தோள் அமர் வன்தலை குன்றத் தொல்விரல் ஊன்று துணைவர்

தாள் அமர் வேய் தலை பற்றித் தாழ் கரி விட்ட விசை போய்,

காளம் அது ஆர் முகில் கீறும் கற்குடி மா மலையாரே.

அடிமரத்தோடு கூடிய மூங்கிலினது தழையைப் பற்றி வளைத்து உண்ட களிறு, அதனை வேகமாக விடுதலால் அம்மூங்கில், விசையோடு சென்று, கரிய நிறம் பொருந்திய மேகங்களைக் கீறும், திருக்கற்குடி மாமலை இறைவர், வாட்போரில் வல்ல தனது பெருவீரத்தை நினைந்த இராவணனைப் பெருமை பொருந்திய கயிலை மலையின்கீழ் அவன் தோள்களும், வலிய தலைகளும் நெரியுமாறு தமது பழம்புகழ் வாய்ந்த கால் விரலால் ஊன்றிய துணைவராவார்.

மேல்

(467)
தண்டு அமர் தாமரையானும், தாவி இம் மண்ணை அளந்து

கொண்டவனும், அறிவு ஒண்ணாக் கொள்கையர்; வெள்விடை ஊர்வர்

வண்டு இசை ஆயின பாட, நீடிய வார் பொழில் நீழல்,

கண்டு அமர் மா மயில் ஆடும் கற்குடி மா மலையாரே.

வண்டுகள் இசை பாட, நீண்ட பொழிலின் நீழலைக் கண்டு மகிழும் சிறந்த மயில்கள் ஆடும் திருக்கற்குடி மாமலை இறைவர் குளிர்ந்த தாமரை மலர்மேல் உறையும் நான்முகனாலும் உயர்ந்த இவ்வுலகை அளந்த திருமாலாலும் அறிய ஒண்ணாத இயல்பினர். வெண்ணிறமான விடையை ஊர்ந்து வருபவர்.

மேல்

(468)
மூத் துவர் ஆடையினாரும், மூசு கடுப்பொடியாரும்,

நாத் துவர் பொய்ம்மொழியார்கள், நயம் இலரா மதி வைத்தார்;

ஏத்து உயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச, அவர் இடம் எல்லாம்

காத்தவர் காமரு சோலைக் கற்குடி மா மலையாரே.

காவியாடையணிந்த புத்தர்களும், கடுக்காய்ப் பொடியை நிரம்ப உண்ணும் சமணர்களும், நாவிற்கு வெறுப்பை உண்டாக்கும் பொய்ம்மொழி பேசுபவராய் நேயமற்ற அறிவுடையவராய் இருப்போராவர். அவர்களை விடுத்துத் தம்மை ஏத்தி வாழ்த்தி உயரும் பக்தர்களும், சித்தர்களும் வணங்க அவர்கட்கு வரும்

மேல்

(469)
காமரு வார் பொழில் சூழும் கற்குடி மா மலையாரை

நா மரு வண்புகழ்க் காழி நலம் திகழ் ஞானசம்பந்தன்

பா மரு செந்தமிழ் மாலை பத்து இவை பாட வல்லார்கள்

பூ மலி வானவரோடும் பொன்னுலகில் பொலிவாரே.

அழகிய நீண்ட பொழில்களால் சூழப்பட்ட திருக்கற்குடி மாமலை இறைவரை, நாவிற் பொருந்திய வண்புகழால் போற்றப்பெறும் சீகாழிப் பதியில் தோன்றிய நன்மையமைந்த ஞானசம்பந்தன் பாடிய ,

செந்தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர்கள். பொலிவுடன் கூடிய தேவர்களோடும் பொன்னுலகின்கண் பொலிவோராவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(44)
திருப்பாச்சிலாச்சிராமம் - தக்கராகம்

(470)
துணி வளர் திங்கள் துளங்கி விளங்க, சுடர்ச்சடை சுற்றி முடித்து,

பணி வளர் கொள்கையர், பாரிடம் சூழ, ஆர் இடமும் பலி தேர்வர்;

அணி வளர் கோலம் எலாம் செய்து, பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற

மணி வளர் கண்டரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே?.

முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லி மழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?

மேல்

(471)
கலை புனை மானுரி-தோல் உடை ஆடை; கனல் சுடரால் இவர் கண்கள்;

தலை அணி சென்னியர்; தார் அணி மார்பர்; தம் அடிகள் இவர் என்ன,

அலை புனல் பூம் பொழில் சூழ்ந்து அமர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற

இலை புனை வேலரோ, ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே?.

மான்தோலை இடையில் ஆடையாகப் புனைந்து, கனல், ஞாயிறு, திங்கள் ஆகியன கண்களாக விளங்கத் தலையோடு அணிந்த முடியினராய், மாலை அணிந்த மார்பினராய், உயிர்கட்குத் தலைவரிவர் என்று சொல்லத் தக்கவராய், நீர்வளம் நிரம்பிய பொழில்கள் சூழ்ந்த பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற இலை வடிவமான வேலை ஏந்திய இறைவர், இம்மழவன் மகளை வாடுமாறு இடர்செய்தல் இவர் பெருமைக்குப் பொருந்துவதாமோ?

மேல்

(472)
வெஞ்சுடர் ஆடுவர், துஞ்சு இருள்; மாலை வேண்டுவர்; பூண்பது வெண்நூல்;

நஞ்சு அடை கண்டர்; நெஞ்சு இடம் ஆக நண்ணுவர், நம்மை நயந்து;

மஞ்சு அடை மாளிகை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற

செஞ்சுடர் வண்ணரோ, பைந்தொடி வாடச் சிதை செய்வதோ இவர் சீரே?.

உலகமெல்லாம் அழிந்தொழியும் ஊழிக் காலத்து இருளில் கொடிய தீயில் நடனம் ஆடுபவரும், தலைமாலை முதலியவற்றை விரும்புபவரும், வெண்ணூல் பூண்பவரும், நஞ்சுடைய கண்டத்தவரும், அன்போடு தம்மை நினைத்த நம்மை விரும்பி நம் நெஞ்சை இடமாகக் கொண்டு எழுந்தருள்பவரும், மேகங்கள் தோயும் மாளிகைகள் சூழ்ந்த திருப்பாச்சிலாச்சிராமத்து எழுந்தருளிய செந்தீவண்ணரும் ஆகிய சிவபெருமான் பைந்தொடி அணிந்த மழவன் மகளாகிய இப்பெண்ணை வருத்துவது இவர் புகழுக்குப் பொருந்துவதோ?

மேல்

(473)
கன மலர்க்கொன்றை அலங்கல் இலங்க, கனல் தரு தூமதிக்கண்ணி

புன மலர் மாலை அணிந்து, அழகு ஆய புனிதர் கொல் ஆம் இவர் என்ன,

அனம் மலி வண்பொழில் சூழ் தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற

மனம் மலி மைந்தரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே?.

கார்காலத்தில் மலரும் கொன்றை மலரால் இயன்ற மாலை திருமேனியில் விளங்க, பிரிந்தவர்க்குக் கனலைத் தரும் தூய பிறைமதியைக் கண்ணியாகச் சூடி, வனங்களில் மலர்ந்த மலர்களால் ஆகிய மாலையைச் சூடி, அழகிய புனிதர் என்று சொல்லும்படி எழிலார்ந்த வண்பொழில்கள் சூழ்ந்த திருப்பாச்சிலாச்சிராமத்து அடியவருக்கு, மனநிறைவு தருபவராய் உறையும் சிவபெருமான், இம்மங்கையை வாடும்படி செய்து மயக்குறுத்துவது மாண்பாகுமோ?

மேல்

(474)
மாந்தர் தம் பால் நறுநெய் மகிழ்ந்து ஆடி, வளர்சடை மேல் புனல் வைத்து,

மோந்தை, முழா, குழல், தாளம், ஒர் வீணை, முதிர ஓர் வாய் மூரி பாடி,

ஆந்தைவிழிச் சிறு தத்தர்; பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற

சாந்து அணி மார்பரோ, தையலை வாடச் சதுர் செய்வதோ இவர் சார்வே?.

மண்ணுலகில் அடியவர்கள் ஆட்டும் பால் நறுநெய் ஆகியவற்றை விரும்பியாடி, வளர்ந்த சடைமுடிமேல் கங்கையைச் சூடி, மொந்தை, முழா, குழல், தாளம், வீணை ஆகியன முழங்க வாய்மூரி பாடி ஆந்தை போன்ற விழிகளையுடைய சிறு பூதங்கள் சூழ்ந்தவராய்த் திருப்பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற சந்தனக் கலவையை அணிந்த மார்பினையுடைய சிவபிரான் இத்தையலை வாடும்படி செய்து இப்பெண்ணிடம் தம் சதுரப்பாட்டைக் காட்டல் ஏற்புடையதோ?

மேல்

(475)
நீறு மெய் பூசி, நிறை சடை தாழ, நெற்றிக்கண்ணால் உற்று நோக்கி,

ஆறுஅது சூடி, ஆடு அரவு ஆட்டி, ஐவிரல் கோவண ஆடை

பால் தரு மேனியர்; தத்தர்; பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற

ஏறு அது ஏறியர்; ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே?.

திருநீற்றை உடல் முழுதும் பூசியவராய், நிறைந்த சடைகள் தாழ்ந்து விளங்க, தமது நெற்றி விழியால் மறக்கருணை காட்டிப் பாவம் போக்கி, கங்கையைத் தலையில் அணிந்து, ஆடுகின்ற பாம்பைக் கையில் எடுத்து விளையாடிக் கொண்டு, ஐவிரல் அளவுள்ள கோவண ஆடை அணிந்து, பால் போன்ற வெள்ளிய மேனியராய், பூத கணங்கள் தம்மைச் சூழ்ந்தவராய்த் திருபாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற விடை ஊர்தியராகிய சிவபிரான் இப்பெண்ணை வாடுமாறு செய்து இவளுக்கு இடர் செய்வது பெருமை தருவது ஒன்றா?

மேல்

(476)
பொங்கு இள நாகம், ஓர் ஏகவடத்தோடு, ஆமை, வெண்நூல், புனை கொன்றை,

கொங்கு இள மாலை, புனைந்து அழகு ஆய குழகர்கொல் ஆம் இவர் என்ன,

அங்கு இளமங்கை ஓர் பங்கினர்; பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற

சங்கு ஒளி வண்ணரோ, தாழ்குழல் வாடச் சதிர் செய்வதோ இவர் சார்வே?.

சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?

மேல்

(477)
ஏவலத்தால் விசயற்கு அருள்செய்து, இராவணன்தன்னை ஈடு அழித்து,

மூவரிலும் முதல் ஆய் நடு ஆய மூர்த்தியை அன்றி மொழியாள்;

யாவர்களும் பரவும் எழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற

தேவர்கள் தேவரோ, சேயிழை வாடச் சிதைசெய்வதோ இவர் சேர்வே?.

அம்பின் வலிமையால் விசயனோடு போரிட்டு வென்று அவனுக்குப் பாசுபதாஸ்திரம் வழங்கி, அருள் செய்தவரும் இராவணன் பெருவீரன் என்ற புகழை அழித்தவரும், மும்மூர்த்திகளுக்கும் தலைவராய் அவர்கட்கு நடுவே நின்று படைத்தல், காத்தல், அழித்தல் தொழிலைப் புரிபவராய் எல்லோராலும் துதிக்கப் பெறும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறையும் மகாதேவராய சிவபிரான் திருப்பெயரையன்றி வேறு வார்த்தைகள் பேசுவதறியாத இப்பெண்ணை வாடச் சிதைவு செய்தல் இவருடைய தொடர்புக்கு அழகிய செயல் ஆகுமோ?

மேல்

(478)
மேலது நான்முகன் எய்தியது இல்லை, கீழது சேவடி தன்னை

நீல் அது வண்ணனும் எய்தியது இல்லை, என இவர் நின்றதும் அல்லால்,

ஆல் அது மா மதி தோய் பொழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற

பால் அது வண்ணரோ, பைந்தொடி வாடப் பழி செய்வதோ இவர் பண்பே?.

மேலே உள்ள திருமுடியை நான்முகன் தேடிக் கண்டான் இல்லை: கீழே உள்ள திருவடியை நீல நிறத்தை உடைய திருமால் தேடி அடைந்ததுமில்லை என்று உலகம் புகழுமாறு ஓங்கி அழலுருவாய் நின்றவரும், பெரிய முழுமதியை ஆலமரங்கள் சென்று தோயும் பொழில்கள் சூழ்ந்த திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் பால் வண்ணருமாகிய சிவபிரான் இப்பைந்தொடியாள் வாடுமாறு வஞ்சித்தல் இவர் பண்புக்கு ஏற்ற செயல் ஆகுமோ?

மேல்

(479)
நாணொடு கூடிய சாயினரேனும் நகுவர், அவர் இருபோதும்;

ஊணொடு கூடிய உட்கும் தகையார் உரைகள் அவை கொள வேண்டா;

ஆணொடு பெண்வடிவு ஆயினர், பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற

பூண் நெடு மார்பரோ, பூங்கொடி வாடப் புனை செய்வதோ இவர் பொற்பே?.

நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித் திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச் சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ள வேண்டா. அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச் செய்து பழிப்புரை கொள்ளல் இவரது அழகுக்கு ஏற்ற செயலா?

மேல்

(480)
அகம் மலி அன்பொடு தொண்டர் வணங்க, ஆச்சிராமத்து உறைகின்ற

புகை மலி மாலை புனைந்து அழகு ஆய புனிதர் கொல் ஆம் இவர் என்ன,

நகை மலி தண்பொழில் சூழ்தரு காழி நல்-தமிழ் ஞானசம்பந்தன்

தகை மலி தண் தமிழ் கொண்டு இவை ஏத்த, சாரகிலா, வினைதானே.

உள்ளம் நிறைந்த அன்போடு தொண்டர்கள் வழிபட ஆச்சிராமம் என்னும் ஊரில் உறைகின்றவரும், அன்பர் காட்டும் நறுமணப்புகை நிறைந்த மாலைகளைச் சூடியவரும், அழகும் தூய்மையும் உடையவருமான சிவபெருமானை, மலர்ந்த தண்பொழில்கள் சூழ்ந்த சீகாழிப் பதியில் தோன்றிய நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய,

நோய்தீர்க்கும் மேன்மை மிக்கதும் உள்ளத்தைக் குளிர்விப்பதுமான இத்தமிழ் மாலையால், ஏத்திப் பரவி வழிபடுவோரை வினைகள் சாரா.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(45)
திருஆலங்காடு - தக்கராகம்

(481)
துஞ்ச வருவாரும், தொழுவிப்பாரும், வழுவிப் போய்

நெஞ்சம் புகுந்து என்னை நினைவிப்பாரும் முனை நட்பு ஆய்

வஞ்சப்படுத்து ஒருத்தி வாழ்நாள் கொள்ளும் வகை கேட்டு,

அஞ்சும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

உறங்கும்போது கனவிடை வருபவரும், தம்மைத் தொழுமாறு செய்பவரும், முனைப்புக் காலத்து மறைந்து, அன்பு செய்யும் காலத்து என் நெஞ்சம் புகுந்து நின்று, நினையுமாறு செய்பவரும் ஆகிய இறைவர், முற்பிறவியில் நட்பாய் இருப்பதுபோலக் காட்டித் தன்னை வஞ்சனை செய்து கொன்ற கணவனை மறுபிறப்பில் அடைந்து அவனது வாழ்நாளைக் கவர்ந்த பெண்ணின் செயலுக்குத் துணைபோன வேளாளர்கள் அஞ்சி உயிர்த்தியாகம் செய்த திருவாலங்காட்டில் உறையும் எம் அடிகளாவார்.

மேல்

(482)
கேடும் பிறவியும் ஆக்கினாரும், கேடு இலா

வீடுமாநெறி விளம்பினார், எம் விகிர்தனார்

காடும் சுடலையும் கைக்கொண்டு, எல்லிக் கணப்பேயோடு

ஆடும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

பிறப்பு இறப்புக்களை உயிர்கட்குத் தந்தருளியவரும், அழிவற்ற வீட்டு நெறியை அடைதற்குரிய நெறிகளை உயிர்கட்கு விளம்பியவரும் ஆகிய நம்மின் வேறுபட்ட இயல்பினராகிய சிவபிரான், இடுபாடு சுடலை ஆகியவற்றை இடமாகக் கொண்டு இராப்போதில் பேய்க்கணங்களோடு நடனமாடும் பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு எம் அடிகள் ஆவார்.

மேல்

(483)
கந்தம் கமழ் கொன்றைக் கண்ணி சூடி, கனல் ஆடி,

வெந்தபொடி-நீற்றை விளங்கப் பூசும் விகிர்தனார்

கொந்து அண் பொழில்-சோலை அரவின் தோன்றிக் கோடல் பூத்த,

அம் தண் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

மணம் கமழும் கொன்றை மலர் மாலை சூடிக் கனலிடை நின்று ஆடி சுடுகாட்டில் ‘வெந்த சாம்பலை உடல் முழுதும் விளங்கப் பூசும் வேறுபட்ட இயல்பினராகிய சிவபிரான், கொத்துக்கள் நிறைந்த பொழில்களிலும் சோலைகளிலும் பாம்பின் படம் போலக் காந்தள் மலர் மலரும் அழகிய குளிர்ந்த பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு எம் அடிகள் ஆவார்.

மேல்

(484)
பாலமதி சென்னி படரச் சூடி, பழி ஓராக்

காலன் உயிர் செற்ற காலன் ஆய கருத்தனார்

கோலம் பொழில்-சோலைப் பெடையோடு ஆடி மடமஞ்ஞை

ஆலும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

இளம்பிறையை முடிமீது பொருந்தச் சூடி, தனக்கு வரும் பழியை நினையாத காலனது உயிரைச் செற்ற காலகாலராய இறைவர் அழகிய பொழில்களிலும் சோலைகளிலும் இள மயில்கள்பெண் மயில்களோடு கூடிக் களித்து ஆரவாரிக்கும் பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு எம் அடிகள் ஆவார்.

மேல்

(485)
ஈர்க்கும் புனல் சூடி, இளவெண் திங்கள் முதிரவே

பார்க்கும் அரவம் பூண்டு ஆடி, வேடம் பயின்றாரும்

கார்க் கொள் கொடி முல்லை குருந்தம் ஏறி, கருந்தேன் மொய்த்து,

ஆர்க்கும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

ஈர்த்துச் செல்லுதலில் வலிய கங்கை நீரை முடிமிசைத் தாங்கி, இளம்பிறையை விழுங்க அதனது வளர்ச்சி பார்த்திருக்கும் பாம்பை அணிகலனாகப் பூண்டு, நடனம் ஆடிப் பல்வேறு வேடங்களில் தோன்றி அருள்புரிபவர், கார்காலத்தே மலரும் முல்லைக் கொடிகள் குருந்த மரங்களில் ஏறிப் படர அம்மலர்களில் உள்ள தேனை உண்ணவரும் கரிய வண்டுகள் மலரை மொய்த்து ஆரவாரிக்கும் பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு எம் அடிகள் ஆவார்.

மேல்

(486)
பறையும் சிறு குழலும் யாழும் தம் பயிற்றவே,

மறையும் பல பாடி, மயானத்து உறையும் மைந்தனார்,

பிறையும் பெரும்புனல் சேர் சடையினாரும் பேடைவண்டு

அறையும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

பறை, சிறுகுழல், யாழ் முதலிய கருவிகளைப் பூதங்கள் ஒலிக்க வேதங்களைப் பாடிக் கொண்டு மயானத்தில் உறையும் மைந்தராய், பிறை, பெருகி வரும் கங்கை ஆகியவற்றை அணிந்த சடை முடியினர் ஆகிய சிவபெருமான் பெடைகளோடு கூடிய ஆண் வண்டுகள் ஒலிக்கும்சோலைகள் சூழ்ந்த பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு எம் அடிகள் ஆவார்.

மேல்

(487)
நுணங்குமறை பாடி ஆடி வேடம் பயின்றாரும்,

இணங்கும் மலைமகளோடு இரு கூறு ஒன்று ஆய் இசைந்தாரும்

வணங்கும் சிறுத்தொண்டர் வைகல் ஏத்தும் வாழ்த்தும் கேட்டு,

அணங்கும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

நுட்பமான ஒலிக் கூறுகளை உடைய வேதங்களைப் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் பல்வேறு திருவுருவங்களைக் கொள்பவரும், தம்மோடு இணைந்த பார்வதி தேவியுடன் இருவேறு உருவுடைய ஓருருவாக இசைந்தவரும், ஆகிய பெருமானார் தம்மை வணங்கும் அடக்கமுடைய தொண்டர்கள் நாள்தோறும் பாடும் வாழ்த்துக்களைக் கேட்டு தெய்வத் தன்மை மிகுந்து தோன்றும் பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு எம் அடிகள் ஆவார்.

மேல்

(488)
கணையும் வரிசிலையும் எரியும் கூடிக் கவர்ந்து உண்ண,

இணை இல் எயில் மூன்றும் எரித்திட்டார், எம் இறைவனார்

பிணையும் சிறுமறியும் கலையும் எல்லாம் கங்குல் சேர்ந்து

அணையும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

அம்பு வில் நெருப்பு ஆகியன கூடிக் கவர்ந்து உண்ணுமாறு ஒப்பற்ற முப்புரங்களை எரித்தவராகிய எம் இறைவர், பெண் மான் ஆண்மான் அவற்றின் குட்டிகள் ஆகியன இரவிடைச் சென்றணையும் பழையனூரைச் சேர்ந்த ஆலங்காட்டு எம் அடிகள் ஆவார்.

மேல்

(489)
கவிழ மலை, தரளக் கடகக் கையால் எடுத்தான் தோள்

பவழ நுனிவிரலால் பைய ஊன்றிப் பரிந்தாரும்

தவழும் கொடிமுல்லை புறவம் சேர நறவம் பூத்து

அவிழும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

கயிலை மலை நிலை குலையுமாறு முத்துக்கள் பதித்த வீரக் கடகம் அணிந்த தன் கைகளால் எடுத்த இராவணனின் தோள் வலியைத் தம் பவழம் போன்ற கால்விரல் நுனியால் மெல்ல ஊன்றி அடர்த்துப் பின் அவனுக்கு இரங்கி அருள் புரிந்த சிவபிரானார். முல்லைக்கொடிகள் முல்லை நிலத்தின்கண் தவழ்ந்து படர நறவக் கொடிகள் மலர்களைப் பூத்து விரிந்து நிற்கும் பழையனூரைச் சேர்ந்த ஆலங்காட்டு எம் அடிகள் ஆவார்.

மேல்

(490)
பகலும் இரவும் சேர் பண்பினாரும், நண்பு ஓராது

இகலும் இருவர்க்கும் எரி ஆய்த் தோன்றி நிமிர்ந்தாரும்

புகலும் வழிபாடு வல்லார்க்கு என்றும் தீய போய்

அகலும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

பகல் இரவு போன்ற வெண்மை கருமை நிறங்களைக் கொண்ட நான்முகனும் திருமாலும் தங்களிடையே உள்ள உறவு முறையையும் கருதாது யார் தலைவர் என்பதில் மாறுபட்டு நிற்க அவ்விருவர்க்கும் இடையே எரியுருவாய்த் தோன்றி ஓங்கி நின்றவரும் ஆகம நூல்கள் புகலும் வழிபாடுகளில் தலை நிற்கும் அடியவர்க்குத் தீயன போக்கி அருள்புரிபவரும் ஆகிய பெருமான் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகள் ஆவார்.

மேல்

(491)
போழம்பல பேசிப் போது சாற்றித் திரிவாரும்,

வேழம் வரும் அளவும் வெயிலே துற்றித் திரிவாரும்,

கேழல் வினை போகக் கேட்பிப்பாரும்; கேடு இலா

ஆழ்வர் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

மாறுபட்ட சொற்களைப் பேசியும், காலத்துக்கு ஏற்றவாறு உண்மையல்லாதவைகளைச் சொல்லியும் திரியும் புறச்சமயத்தவரும், நன்மையல்லாதவற்றை உபதேசங்களாகக் கூறுபவரும், யானைத் தீ வரும் அளவும் வெயிலிடை உண்டு திரியும் மதவாதிகளுமாகிய புறச்சமயிகளைச் சாராது தம்மைச் சார்ந்த அடியவர்களைப் பற்றிய வினைகள் அகலுமாறு அவர்கட்கு உபதேசங்களைப் புரியச் செய்பவராகிய அழிவற்ற ஆளுமையுடையவர் ஆலங்காட்டு எம் அடிகள் ஆவார்.

மேல்

(492)
சாந்தம் கமழ் மறுகில் சண்பை ஞானசம்பந்தன்

ஆம் தண் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளை,

வேந்தன் அருளாலே, விரித்த, பாடல் இவை வல்லார்

சேர்ந்த இடம் எல்லாம் தீர்த்தம் ஆகச் சேர்வாரே.

சந்தனம் கமழும் திருவீதிகளை உடைய சண்பைப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் அழகிய தண்ணிய ஆலங்காட்டு வேந்தனாக விளங்கும் அவ்விறைவன் திருவருளாலே போற்றி விரித்தோதிய,

இத்திருப்பதிகப் பாடல்களை வல்லவர்கள் சேர்ந்த இடங்களெல்லாம் புனிதமானவைகளாகப் பொருந்தப் பெறுவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(46)
திருஅதிகைவீரட்டானம் - தக்கராகம்

(493)
குண்டைக் குறள் பூதம் குழும, அனல் ஏந்தி,

கெண்டை பிறழ் தெண் நீர்க் கெடில வடபக்கம்,

வண்டு மருள் பாட, வளர் பொன் விரி கொன்றை

விண்ட தொடையலான் ஆடும், வீரட்டானத்தே.

பருத்த குள்ளமான பூத கணங்கள் தன்னைச் சூழ்ந்து நிற்கக் கையில் அனலை ஏந்தியவனாய், வண்டுகள் மருளிந்தளப் பண்பாட, பொன் போன்று விரிந்து மலர்ந்த கொன்றை மலர் மாலை அணிந்தவனாய்ச் சிவபிரான் கெண்டை மீன்கள் பிறழ்ந்து விளையாடும் தெளிந்த நீரை உடைய கெடில நதியின் வடகரையில் உள்ள திருவதிகை வீரட்டானத்து ஆடுவான்.

மேல்

(494)
அரும்பும் குரும்பையும் அலைத்த மென் கொங்கைக்

கரும்பு இன்மொழியாளோடு உடன் கை அனல் வீசி,

சுரும்பு உண் விரிகொன்றைச் சுடர் பொன் சடை தாழ,

விரும்பும் அதிகையுள் ஆடும், வீரட்டானத்தே.

சிவபிரான் தாமரை அரும்பு, குரும்பை ஆகியவற்றை அழகால் வென்ற மென்மையான தனங்களையும், கரும்புபோன்ற இனிய மொழிகளையும் உடைய உமையம்மையோடு கூடிக் கையில் அனல் ஏந்தி வீசிக் கொண்டு, வண்டுகள் தேனுண்ணும் இதழ் விந்த கொன்றை மாலை அணிந்த ஒளி மயமான பொன் போன்ற சடைகள் தாழத் தன்னால் பெரிதும் விரும்பப்படும் அதிகை வீரட்டானத்து ஆடுவான்.

மேல்

(495)
ஆடல் அழல் நாகம் அரைக்கு இட்டு அசைத்து ஆட,

பாடல் மறை வல்லான் படுதம் பலி பெயர்வான்,

மாட முகட்டின் மேல் மதி தோய் அதிகையுள்,

வேடம் பல வல்லான் ஆடும், வீரட்டானத்தே.

வென்றியையும் அழல் போலும் கொடிய தன்மையையும் கொண்ட நாகத்தை இடையில் பொருந்தக் கட்டி ஆடுமாறு செய்து, பாடப்படும் வேதங்களில் வல்லவனாய், படுதம்‘ என்னும் கூத்தினை ஆடிக்கொண்டு, பலி தேடித் திரிபவனாய சிவபிரான் மதி தோய்ந்து செல்லுமாறு உயர்ந்த மாடவீடுகளை உடைய திருவதிகையிலுள்ள வீரட்டானத்தில் பல்வேறு கோலங்களைக் கொள்ளுதலில் வல்லவனாய் ஆடுவான்.

மேல்

(496)
எண்ணார் எயில் எய்தான்; இறைவன்; அனல் ஏந்தி;

மண் ஆர் முழவு அதிர, முதிரா மதி சூடி,

பண் ஆர் மறை பாட, பரமன்-அதிகையுள்,

விண்ணோர் பரவ, நின்று ஆடும், வீரட்டானத்தே.

பகைவரது திரிபுரங்களை எய்து அழித்த இறைவன் அனலைக் கையில் ஏந்தி மார்ச்சனை இடப்பட்ட முழவு முழங்க இளம் பிறையை முடியில் சூடிப் பண்ணமைப்புடைய வேதங்களை அந்தணர் ஓதத் திருவதிகை வீரட்டானத்தே தேவர்கள் போற்ற நின்று ஆடுவான்.

மேல்

(497)
கரிபுன்புறம் ஆய கழிந்தார் இடுகாட்டில்,

திரு நின்று ஒரு கையால், திரு ஆம் அதிகையுள்,

எரி ஏந்திய பெருமான், எரிபுன் சடை தாழ,

விரியும் புனல் சூடி, ஆடும், வீரட்டானத்தே.

கரிந்த புல்லிய ஊர்ப்புறமாய இறந்தவர்களை எரிக்கும் சுடுகாட்டில், ஒரு திருக்கரத்தில் எரி ஏந்தி ஆடும் பெருமான் திருமகள் நிலைபெற்ற திருவதிகையில் உள்ள வீரட்டானத்தில் எரி போன்று சிவந்த தன் சடைகள் தாழ்ந்து விரிய தலையில் கங்கை சூடி ஆடுவான்.

மேல்

(498)
துளங்கும் சுடர் அங்கைத் துதைய விளையாடி,

இளங்கொம்பு அன சாயல் உமையோடு இசை பாடி,

வளம் கொள் புனல் சூழ்ந்த வயல் ஆர் அதிகையுள்,

விளங்கும் பிறைசூடி ஆடும், வீரட்டானத்தே.

அசைந்து எரியும் அனலை அழகிய கையில் பொருந்த ஏந்தி விளையாடி, இளங்கொம்பு போன்ற உமையம்மையோடு இசை பாடி, வளமை உள்ள புனல் சூழ்ந்த வயல்களை உடைய திருவதிகையில் வீரட்டானத்தே முடிமிசை விளங்கும் பிறைசூடி ஆடுவான்.

மேல்

(499)
பாதம் பலர் ஏத்த, பரமன், பரமேட்டி

தம் புடை சூழ, புலித்தோல் உடை ஆக,

கீதம் உமை பாட, கெடில வடபக்கம்,

வேத முதல்வன் நின்று ஆடும், வீரட்டானத்தே.

பரம்பொருளாகிய பரமன் தன் திருவடிகளைப் பலரும் பரவி ஏத்தி வணங்கவும், பூத கணங்கள் புடை சூழவும், புலித்தோலை உடுத்து, உமையம்மை கீதம் பாடக் கெடில நதியின் வடகரையில் வேதமுதல்வனாய் வீரட்டானத்தே ஆடுவான்.

மேல்

(500)
கல் ஆர் வரை அரக்கன் தடந்தோள் கவின் வாட,

ஒல்லை அடர்த்து, அவனுக்கு அருள்செய்து, அதிகையுள்,

பல் ஆர் பகுவாய நகு வெண்தலை சூடி,

வில்லால் எயில் எய்தான் ஆடும், வீரட்டானத்தே.

கற்கள் பொருந்திய கயிலை மலையை எடுத்த இராவணனின் பெரிய தோள்களின் அழகு வாடுமாறு அடர்த்துப் பின் அவனுக்கு அருள் பல செய்தும், முப்புரங்களை வில்லால் எய்து, அழித்தும், தனது பெருவீரத்தைப் புலப்படுத்திய இறைவன் பற்கள் பொருந்திய பிளந்தவாயை உடைய வெள்ளிய தலைமாலையைச் சூடித்திருவதிகை வீரட்டானத்தே ஆடுவான்.

மேல்

(501)
நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானைக் காண்கிலார்;

பொடி ஆடு மார்பானை, புரிநூல் உடையானை,

கடி ஆர் கழு நீலம் மலரும் அதிகையுள்,

வெடி ஆர் தலை ஏந்தி, ஆடும், வீரட்டானத்தே.

பேருருக் கொண்ட திருமாலும், நான்முகனும் அழலுருவாய் ஓங்கி நிமிர்ந்தவனை, திருநீறணிந்த மார்பினனை, முப்புரி நூல் அணிந்தவனைக் காண்கிலார்: அப்பெருமான் மணம் கமழும் நீலப்பூக்கள் மலரும் திருவதிகையிலுள்ள வீரட்டானத்தே முடைநாற்றமுடைய தலை ஓட்டைக் கையில் ஏந்தி ஆடுகின்றான்.

மேல்

(502)
அரையோடு அலர் பிண்டி மருவிக் குண்டிகை

சுரை ஓடு உடன் ஏந்தி, உடை விட்டு உழல்வார்கள்

உரையோடு உரை ஒவ்வாது; உமையோடு உடன் ஆகி,

விரை தோய் அலர்தாரான் ஆடும், வீரட்டானத்தே.

அரச மரத்தையும் தழைத்த அசோக மரத்தையும் புனித மரங்களாகக் கொண்டு குண்டிகையாகச் சுரைக்குடுக்கையை ஏந்தித் திரியும் புத்தர்கள், ஆடையற்றுத் திரியும் சமணர்கள் ஆகியவர்களின் பொருந்தாத வார்த்தைகளைக் கேளாதரர். மணம் கமழும் மாலை அணிந்த சிவபிரான் உமையம்மையோடு உடனாய் அதிகை வீரட்டானத்தே ஆடுவான். அவனை வணங்குங்கள்.

மேல்

(503)
ஞாழல் கமழ் காழியுள் ஞானசம்பந்தன்,

வேழம் பொரு தெண் நீர் அதிகை வீரட்டானத்துச்

சூழும் கழலானைச் சொன்ன தமிழ்மாலை,

வாழும் துணை ஆக நினைவார் வினை இலாரே.

ஞாழற் செடிகளின் மலர்கள் மணம் கமழும் சீகாழியுள் தோன்றிய ஞானசம்பந்தன், நாணல்களால் கரைகள் அரிக்கப்படாமல் காக்கப்படும் தெளிந்த நீர்வளம் உடைய திருவதிகை வீரட்டானத்தில், ஆடும் கழல் அணிந்த அடிகளை உடைய சிவபிரானைப் போற்றிப் பாடிய இத்தமிழ் மாலையை,

வாழ்வுத் துணையாக நினைபவர் வினையிலராவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(47)
திருச்சிரபுரம் - பழந்தக்கராகம்

(504)
பல் அடைந்த வெண் தலையில் பலி கொள்வது அன்றியும், போய்,

வில் அடைந்த புருவ நல்லாள் மேனியில் வைத்தல் என்னே

சொல் அடைந்த தொல் மறையோடு அங்கம் கலைகள் எல்லாம்

செல் அடைந்த செல்வர் வாழும் சிரபுரம் மேயவனே?.

பொருள் பொதிந்த சொற்கள் நிரம்பிய பழமையான வேதங்களையும், அவற்றின் அங்கங்களையும், பிற கலைகளையும் கற்றுணர்ந்த செல்வர்கள் வாழும் சிரபுரம் என்னும் சீகாழிப் பதியுள் எழுந்தருளிய இறைவனே! பற்கள் பொருந்திய வெண்மையான தலையில் பல இடங்களுக்கும் போய்ப் பலியேற்பதோடு வில் போன்ற புருவத்தை உடைய உமையம்மையை உன் திருமேனியில் கொண்டுள்ள காரணம் யாதோ?

மேல்

(505)
கொல்லை முல்லை நகையினாள் ஓர் கூறு அது அன்றியும், போய்,

அல்லல் வாழ்க்கைப் பலி கொண்டு உண்ணும் ஆதரவு என்னைகொல் ஆம்

சொல்ல நீண்ட பெருமையாளர், தொல்கலை கற்று வல்லார்,

செல்ல நீண்ட செல்வம் மல்கு சிரபுரம் மேயவனே?.

சொல்லச் சொல்ல நீண்டு செல்லும் பெருமையாளரும், பழமையான கலைகளைக் கற்று வல்லவர்களுமாகிய அறிஞர்கள் வாழ்வதும், வழங்கத் தொலையாத செல்வ வளத்தை உடையதுமான சிரபுரம் மேவிய இறைவனே! முல்லை நிலத்தே தோன்றிய முல்லை யரும்பு போன்ற பற்களை உடைய உமையம்மை ஓர் கூற்றில் விளங்கவும் சென்று அல்லற்படுவோர் ஏற்கும் பலி உணவை ஏற்று உண்ணுதலில் விருப்பம் கொள்வது ஏனோ?

மேல்

(506)
நீர் அடைந்த சடையின்மேல் ஓர் நிகழ்மதி அன்றியும், போய்,

ஊர் அடைந்த ஏறு அது ஏறி உண் பலி கொள்வது என்னே

கார் அடைந்த சோலை சூழ்ந்து காமரம் வண்டு இசைப்ப,

சீர் அடைந்த செல்வம் ஓங்கு சிரபுரம் மேயவனே?.

வண்டுகள் சீகாமரம் என்னும் பண்ணைப் பாடி மகிழ்ந்துறைவதும், மேகங்கள் தவழும் சோலைகளால் சூழப்பெற்றதும், அறநெறியில் விளைந்த செல்வம் பெருகி விளங்குவதுமாகிய சிரபுரம் மேவிய இறைவனே! கங்கையை அணிந்த சடைமுடியின் மேல் விளங்கும் பிறைமதி ஒன்றை அணிந்து, பல ஊர்களையும் அடைதற்கு ஏதுவாய ஆனேற்றில் ஏறிச் சென்று, பலரிடமும் பலி கொள்வது ஏனோ?

மேல்

(507)
கை அடைந்த மானினோடு கார் அரவு அன்றியும், போய்,

மெய் அடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்தல் என்னே

கை அடைந்த களைகள் ஆகச் செங்கழுநீர் மலர்கள்

செய் அடைந்த வயல்கள் சூழ்ந்த சிரபுரம் மேயவனே?.

களையெடுப்போர் கைகளில், மிக அதிகமான களைகளாகச் செங்கழுநீர் மலர்கள் வந்தடையும் அழகிய வயல்களால் சூழப்பட்ட சிரபுரம் மேவிய இறைவனே! கைகளில் மான், கரிய பாம்பு ஆகியவற்றைக் கொண்டு உனது திருமேனியில் பெரு விருப்போடு உமையம்மையை இடப்பாகமாகக் கொண்டுள்ளது ஏனோ?

மேல்

(508)
புரம் எரித்த வெற்றியோடும் போர் மதயானை தன்னைக்

கரம் எடுத்துத் தோல் உரித்த காரணம் ஆவது என்னே

மரம் உரித்த தோல் உடுத்த மா தவர் தேவரோடும்

சிரம் எடுத்த கைகள் கூப்பும் சிரபுரம் மேயவனே?.

மரத்தை உரித்ததால் ஆன மரவுரி என்னும் ஆடையை அணிந்த முனிவர்களும் தேவர்களும் கைகளைத் தலைமிசைக் கூப்பி வணங்கும் சிரபுரம் மேவிய இறைவனே! திரிபுரங்களை எரித்தழித்த பெரு வீரத்தோடு போர் செய்ய வந்த மத யானையைக் கையால் தூக்கி அதன் தோலை உரித்துப் போர்த்த, காரணம் யாதோ?

மேல்

(509)
கண்ணு மூன்றும் உடையது அன்றி, கையினில் வெண்மழுவும்

பண்ணு மூன்று வீணையோடு பாம்பு உடன் வைத்தல் என்னே

எண்ணும் மூன்று கனலும் ஓம்பி, எழுமையும் விழுமியர் ஆய்,

திண்ணம் மூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே?.

ஆகவனீயம், காருகபத்தியம், தக்ஷிணாக்கினி என்று எண்ணப்படும் முத்தீயையும் வேட்பதுடன் எழு பிறப்பிலும் தூயவராய் உறுதிப்பாட்டுடன் தேவ யாகம், பிதிர் யாகம், இருடி யாகம் ஆகிய மூன்று வேள்விகளையும் புரியும் அந்தணாளர் வாழும் சிரபுரம் மேவிய இறைவனே; முக்கண்களை உடையவனாய்க் கைகளில் வெண் மழு, பண் மூன்றுடைய வீணை, பாம்பு ஆகியன கொண்டுள்ள காரணம் யாதோ?

மேல்

(510)
குறைபடாத வேட்கையோடு கோல்வளையாள் ஒருபால்

பொறை படாத இன்பமோடு புணர்தரும் மெய்ம்மை என்னே

இறை படாத மென்முலையார் மாளிகைமேல் இருந்து,

சிறை படாத பாடல் ஓங்கு சிரபுரம் மேயவனே?.

சிறிதும் சாயாத மெல்லிய தனங்களை உடைய இளமகளிர் மாளிகைகளின் மேல் இருந்து குற்றமற்ற பாடல்களைப் பாடும் மகிழ்ச்சி மிகுந்துள்ள சிரபுரம் மேவிய இறைவனே, குன்றாத வேட்கையோடு திரண்ட கை வளைகளை உடைய உமையம்மையை ஒரு பாகமாக அளவற்ற இன்பத்துடன் புணர்தற்குக் காரணம் என்னையோ.

மேல்

(511)
மலை எடுத்த வாள் அரக்கன் அஞ்ச, ஒருவிரலால்

நிலை எடுத்த கொள்கையானே! நின்மலனே! நினைவார்

துலை எடுத்த சொல் பயில்வார் மேதகு வீதிதோறும்

சிலை எடுத்த தோளினானே! சிரபுரம் மேயவனே!.

கயிலை மலையை எடுத்த வாள்வலி உடைய இராவணன் அஞ்சுமாறு கால் விரல் ஒன்றினால் அடர்த்துத் தன் நிலையை எடுத்துக் காட்டிய செயலைப் புரிந்தவனே, குற்றமற்றவனே, தன்னை நினைவாரும் இருவினையொப்புடன் தோத்திரிக்கும் அன்பர்களும் மேன்மை மிக்க வீதி தொறும் வாழ விசயனுக்காக வில்லைச் சுமந்த தோளினை உடையவனே! சிரபுரம் மேவியவனே!

மேல்

(512)
மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது

சாலும் அஞ்சப்பண்ணி நீண்ட தத்துவம் மேயது என்னே

நாலு வேதம் ஓதலார்கள் நம் துணை என்று இறைஞ்ச,

சேலு மேயும் கழனி சூழ்ந்த சிரபுரம் மேயவனே?.

நான்கு வேதங்களையும் ஓதும் அந்தணர்கள் நம் துணைவனே என்று போற்றி இறைஞ்சச் சேல் மீன்கள் மேயும் வயல்கள் சூழ்ந்த சிரபுரம் மேவிய இறைவனே! தாமே பெரியர் என வந்த திருமாலும் தாமரை மலரில் உறையும் நான்முகனும் இயலாது மிகவும் அஞ்சுமாறு செய்து மிக நீண்ட திருவுருவைக் கொண்டது ஏன்?

மேல்

(513)
புத்தரோடு சமணர் சொற்கள் புறன் உரை என்று இருக்கும்

பத்தர் வந்து பணிய வைத்த பான்மை அது என்னை கொல் ஆம்

மத்தயானை உரியும் போர்த்து மங்கையொடும் உடனே,

சித்தர் வந்து பணியும் செல்வச் சிரபுரம் மேயவனே?.

மதம் பொருந்திய யானையின் தோலைப் போர்த்து உமையம்மையாருடன் சித்தர்கள் பலரும் பணியச் செல்வச் சிரபுரநகரில் மேவிய இறைவனே! புத்தர்கள் சமணர்கள் ஆகியபுறச்சமயிகளின் வார்த்தைகள் புறனுரை என்று கருதும் பத்தர் வந்து பணியுமாறு செய்த பான்மையாதோ? உரியும் - உம்மை இசைநிறை.

மேல்

(514)
தெங்கம் நீண்ட சோலை சூழ்ந்த சிரபுரம் மேயவனை

அங்கம் நீண்ட மறைகள் வல்ல அணி கொள் சம்பந்தன் உரை

பங்கம் நீங்கப் பாட வல்ல பத்தர்கள் பார் இதன் மேல்

சங்கமோடு நீடி வாழ்வர், தன்மையினால் அவரே.

தென்னைகள் நீண்டு வளர்ந்து பயன்தரும் சோலைகள் சூழ்ந்த சிரபுரம் மேவிய இறைவனை ஆறு அங்கங்களுடன் விரிந்துள்ள வேதங்களை அறிந்துணர்ந்த அழகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய ,

இப்பதிக வாசகங்களைத் தம் குற்றங்கள் நீங்கப் பாடவல்ல பக்தர்கள் இவ்வுலகில் அடியவர் கூட்டங்களோடு வாழும் தன்மையினால் வாழ்நாள் பெருகி வாழ்வர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(48)
திருச்சேய்ஞலூர் - பழந்தக்கராகம்

(515)
நூல் அடைந்த கொள்கையாலே நுன் அடி கூடுதற்கு

மால் அடைந்த நால்வர் கேட்க, நல்கிய நல் அறத்தை,

ஆல் அடைந்த நீழல் மேவி, அருமறை சொன்னது என்னே

சேல் அடைந்த தண் கழனிச் சேய்ஞலூர் மேயவனே?.

சேல் மீன்கள் நிறைந்த குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட திருச்சேய்ஞலூரில் மேவிய இறைவனே! வேதம் முதலிய நூல்களில் விதிக்கப்பட்ட முறைகளினால் உன் திருவடிகளை அடைதற்கு முயன்றும் அஞ்ஞானம் நீங்காமையால் சனகாதி முனிவர்களாகிய நால்வர் உன்னை அடைந்து உண்மைப் பொருள் கேட்க, அவர்கள் தெளிவு பெறுமாறு கல்லால மரநிழலில் வீற்றிருந்து அருமறை நல்கிய நல்லறத்தை எவ்வாறு அவர்கட்கு உணர்த்தியருளினாய்? கூறுவாயாக.

மேல்

(516)
நீறு அடைந்த மேனியின் கண் நேரிழையாள் ஒருபால்

கூறு அடைந்த கொள்கை அன்றி, கோல வளர் சடைமேல்

ஆறு அடைந்த திங்கள் சூடி, அரவம் அணிந்தது என்னே

சேறு அடைந்த தண் கழனிச் சேய்ஞலூர் மேயவனே?.

சேறு மிகுந்த குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட திருச்சேய்ஞலூரில் எழுந்தருளிய இறைவனே! திருநீறணிந்த தன் திருமேனியின்கண் உமையம்மை ஒருபால் விளங்க அழகியதாய் நீண்டு வளர்ந்த சடைமேல் கங்கையையும் தன்னைச் சரணாக அடைந்த திங்களையும் சூடிப் பாம்பையும் அணிந்துள்ள காரணம் யாதோ?

மேல்

(517)
ஊன் அடைந்த வெண் தலையினோடு பலி திரிந்து,

கான் அடைந்த பேய்களோடு தம் கலந்து உடனே,

மான் அடைந்த நோக்கி காண, மகிழ்ந்து எரி ஆடல் என்னே

தேன் அடைந்த சோலை மல்கு சேய்ஞலூர் மேயவனே?.

வண்டுகள் நிறைந்த சோலைகள் செறிந்த திருச்சேய்ஞலூரில் எழுந்தருளிய இறைவனே! ஊன்பொருந்திய வெண்மையான தலையோட்டைக் கையில் ஏந்தி, உண் பலிக்குத் திரிந்து காட்டில் வாழும் பேய்களோடு பூதகணங்களும் கலந்து சூழ, மான் போன்ற கண்ணை உடைய உமையம்மை காண மகிழ்வோடு இடுகாட்டில் எரியாடுவது ஏன்?

மேல்

(518)
வீண் அடைந்த மும்மதிலும், வில் மலையா, அரவின்

நாண் அடைந்த வெஞ்சரத்தால், நல் எரியூட்டல் என்னே

பாண் அடைந்த வண்டு பாடும் பைம்பொழில் சூழ்ந்து அழகு ஆர்

சேண் அடைந்த மாடம் மல்கு சேய்ஞலூர் மேயவனே?.

பண்ணிசையோடு வண்டுகள் பாடும் பசுமையான பொழில் சூழ்ந்ததும், அழகியதாய் உயர்ந்த மாட வீடுகள் நிறைந்ததுமான திருச்சேய்ஞலூரில் எழுந்தருளிய இறைவனே! மும்மதில்களும் வீணடையுமாறு மலையை வில்லாகவும் அரவை அவ்வில்லின் நாணாகவும் கொண்டு கொடிய அம்பால் பெரிய எரியை அம்முப்புரங்களுக்கு ஊட்டியது ஏன்?

மேல்

(519)
பேய் அடைந்த காடு இடமாப் பேணுவது அன்றியும், போய்,

வேய் அடைந்த தோளி அஞ்ச, வேழம் உரித்தது என்னே

வாய் அடைந்த நால்மறை ஆறு அங்கமோடு ஐவேள்வித்

தீ அடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே?.

வாயினால் ஓதப்பெற்ற நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் கற்று, ஐவகை வேள்விகளை இயற்றி, தரப் பொருந்திய சிவந்த கையினராய் விளங்கும் அந்தணர் வாழும் சேய்ஞலூர் மேயவனே! சுடுகாட்டை இடமாகக் கொண்டு ஆடி உகப்பதோடு அன்றியும் சென்று மூங்கில் போன்ற தோளினை உடைய உமையம்மை அஞ்ச யானையை உரித்தது ஏனோ?

மேல்

(520)
காடு அடைந்த ஏனம் ஒன்றின் காரணம் ஆகி வந்து,

வேடு அடைந்த வேடன் ஆகி, விசயனொடு எய்தது என்னே

கோடு அடைந்த மால்களிற்றுக் கோச்செங்கணாற்கு அருள்செய்

சேடு அடைந்த செல்வர் வாழும் சேய்ஞலூர் மேயவனே?.

கோடுகளோடு கூடிய பெரிய யானைப் படைகளை உடைய கோச்செங்கட் சோழனுக்கு அருள் செய்தவனும், பெருமை பொருந்திய செல்வர்கள் வாழும் திருச்சேய்ஞலூரில் மேவியவனுமாகிய இறைவனே! வில்லடிபட்டுக் காட்டுள் சென்று பதுங்கிய பன்றி ஒன்றின் காரணமாக, தான் வேடன் உருத்தாங்கி வந்து அருச்சுனனோடு போர் புரிந்தது ஏனோ?

மேல்

(521)
பீர் அடைந்த பால் அது ஆட்ட, பேணாது, அவன் தாதை

வேர் அடைந்து பாய்ந்த தாளை வேர்த் தடிந்தான் தனக்குத்

தார் அடைந்த மாலை சூட்டித் தலைமை வகுத்தது என்னே

சீர் அடைந்த கோயில் மல்கு சேய்ஞலூர் மேயவனே?.

சிறப்புமிக்க மாடக் கோயிலாய் விளங்கும் திருச்சேய்ஞலூரில் விளங்கும் இறைவனே! பசுவின் முலைக்காம்பின் வழிச் சுரந்து நின்ற பாலைச் சண்டீசர் மணலால் தாபித்த இலிங்கத்துக்கு ஆட்டி வழிபட, அதனை விரும்பாது சினந்து பாற்குடத்தை இடறிய தன் தந்தையின் காலைத் தடிந்த சண்டீசரின் பக்தியை மெச்சி உன் தாரையும் மாலையையும் சூட்டி அவரைச் சிவகணங்களின் தலைவர் ஆக்கியது ஏனோ?

மேல்

(522)
மா அடைந்த தேர் அரக்கன் வலி தொலைவித்து அவன்தன்

நா அடைந்த பாடல் கேட்டு நயந்து, அருள் செய்தது என்னே

பூ அடைந்த நான்முகன் போல் பூசுரர் போற்றி செய்யும்

சே அடைந்த ஊர்தியானே, சேய்ஞலூர் மேயவனே?.

தாமரை மலரில் விளங்கும் நான்முகன் போன்ற அந்தணர்கள் போற்றும், விடையை ஊர்தியாகக் கொண்டவனே! திருச்சேய்ஞலூரில் மேவிய இறைவனே! குதிரைகள் பூட்டப்பட்ட தேரை உடைய இராவணனது வலிமையை அழித்து அவன் நாவினால் பாடிய பாடலைக் கேட்டு விரும்பி அவனுக்கு அருள்கள் பல செய்தது ஏனோ?

மேல்

(523)
கார் அடைந்த வண்ணனோடு கனகம் அனையானும்,

பார் இடந்தும் விண் பறந்தும் பாதம் முடி காணார்,

சீர் அடைந்து வந்து போற்ற, சென்று அருள் செய்தது என்னே

தேர் அடைந்த மா மறுகின் சேய்ஞலூர் மேயவனே?.

தேர் ஓடும் அழகிய வீதிகளை உடைய திருச்சேய்ஞலூர் மேவிய சிவனே! கருமை நிறம் பொருந்திய திருமால் பொன்வண்ணனாகிய பிரமன் ஆகியோர் உலகங்களை அகழ்ந்தும் பறந்தும் சென்று அடிமுடிகளைக் காணாராய்த் தம் தருக்கொழிந்து பின் அவர்கள் போற்ற அவர்பால் சென்று அருள் செய்தது ஏனோ?

மேல்

(524)
மாசு அடைந்த மேனியாரும், மனம் திரியாத கஞ்சி

நேசு அடைந்த ஊணினாரும், நேசம் இலாதது என்னே

வீசு அடைந்த தோகை ஆட, விரை கமழும் பொழில்வாய்,

தேசு அடைந்த வண்டு பாடும் சேய்ஞலூர் மேயவனே?.

வீசி ஆடுகின்ற தோகைகளை உடைய மயில்கள் ஆடுவதும், மணம் கமழும் பொழில்களில் ஒளி பொருந்திய வண்டுகள் பாடுவதும் செய்யும் திருச்சேய்ஞலூரில் மேவிய இறைவனே! அழுக்கேறிய உடலினரும், மனத்தில் வெறுப்பின்றிக் கஞ்சியை விரும்பி உணவாகக் கொள்வோரும் ஆகிய சமண புத்தர்கள் உன்பால் நேசம் இலாததற்குக் காரணம் யாதோ?

மேல்

(525)
சேய் அடைந்த சேய்ஞலூரில் செல்வன சீர் பரவி,

தோய் அடைந்த தண்வயல் சூழ் தோணி புரத் தலைவன்-

சாய் அடைந்த ஞானம் மல்கு சம்பந்தன்-இன் உரைகள்

வாய் அடைந்து பாட வல்லார் வான் உலகு ஆள்பவரே.

முருகப் பெருமான் வழிபட்ட சிறப்பினதாகிய திருச்சேய்ஞலூரில் விளங்கும் செல்வனாகிய சிவபிரானது புகழைப் போற்றி நீர்வளம் சான்ற, வளமையான வயல்களால் சூழப்பட்ட தோணிபுரத்தின் தலைவனும், நுட்பமான ஞானம் மிக்கவனுமாகிய சம்பந்தனுடைய ,

இன்னுரைகளை வாயினால் பாடி வழிபட வல்லவர் வானுலகு ஆள்வர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(49)
திருநள்ளாறு - பழந்தக்கராகம்

(526)
போகம் ஆர்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன் அகலம்

பாகம் ஆர்த்த பைங்கண் வெள் ஏற்று அண்ணல், பரமேட்டி,

ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின் மேல்

நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே.

இன்பத்துக்கு நிலைக்களனாயுள்ளனவும் அணிகலன்கள் பொருந்தியனவுமான தனங்களை உடைய உமையம்மையைத் தன்னோடு அழகிய திருமேனியின் இடப் பாகமாக ஒன்றாக இருக்கச் செய்தவனும், பசிய கண்களையும் வெண்மையான நிறத்தையும் உடைய ஆனேற்றைத் தனது ஊர்தியாகக் கொண்ட தலைவனும், மேலானவனும், திருமேனியின் மேல் போர்த்த தோலாடையுடையவனும், இடையிற் கட்டிய கோவண ஆடையின் மேல் நாகத்தைக் கச்சாக அணிந்தவனுமான நம் பெருமான் எழுந்தருளி இருக்கும் தலம் திருநள்ளாறு.

மேல்

(527)
தோடு உடைய காது உடையன், தோல் உடையன், தொலையாப்

பீடு உடைய போர் விடையன், பெண்ணும் ஓர்பால் உடையன்,

ஏடு உடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த

நாடு உடைய நம் பெருமான், மேயது நள்ளாறே.

அம்மை பாகத்தே உள்ள இடச் செவியில் தோடணிந்த காதினை உடையவனும் தோலை ஆடையாகக் கொண்டவனும், குன்றாப்புகழ் உடையதும் போர் செய்தலில் வல்லதுமான விடை ஊர்தியனும் மலைமகளை ஒரு பாகமாகக் கொண்டவனும், அடுக்குகளாக அமைந்த மேல் உலகங்களோடு ஏழ்கடலாலும் சூழப்பட்ட நாடு என்னும் இந்நிலவுலகமும் உடையவனுமாகிய, எம்பெருமான் விரும்பிய தலம் திருநள்ளாறு ஆகும்.

மேல்

(528)
ஆன் முறையால் ஆற்ற வெண் நீறு ஆடி, அணியிழை ஓர்

பால் முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்து ஏத்த,

மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை

நால் மறையான், நம்பெருமான், மேயது நள்ளாறே.

பசுவிடமிருந்து முறையாக எடுக்கப்பட்ட திரு வெண்ணீற்றை மேனி முழுதும் பூசி அழகிய அணிகலன்களைப் புனைந்த உமையம்மையை ஒரு பாகமாக வைத்துள்ள, தன் திருவடிகளைப் பக்தர்கள் பணிந்து போற்ற, இளமான், வெண்மையான மழு, சூலம் ஆகியவற்றை ஏந்திய கையினனாய் நான்மறைகளையும் அருளிய நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.

மேல்

(529)
புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து, அயலே

மல்க வல்ல கொன்றை மாலை மதியோடு உடன் சூடி,

பல்க வல்ல தொண்டர் தம் பொன்பாத நிழல் சேர,

நல்க வல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே.

பொருந்திய நீண்ட சடையின் மேல் கங்கையை அணிந்து, அதன் அருகில் கொன்றை மாலையையும் பிறைமதியையும் ஒருசேரச் சூடித் தன்னைச் சார்ந்து வாழும் தொண்டர்கட்குத் தனது திருவடி நிழலைச் சேரும் பேற்றை நல்கும் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.

மேல்

(530)
ஏறு தாங்கி, ஊர்தி பேணி, ஏர் கொள் இளமதியம்

ஆறு தாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம் சூடி,

நீறு தாங்கி நூல் கிடந்த மார்பில் நிரை கொன்றை

நாறு தாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே.

ஆன்ஏற்றைக் கொடியாகத் தாங்கியும் அதனையே ஊர்தியாக விரும்பி ஏற்றும் அழகிய இளம்பிறை கங்கை ஆகியன பொருந்திய சடைமுடியின்மேல் ஆடும் பாம்பைச் சூடியும் திருநீறு பூசிப் பூணூலோடு விளங்கும் மார்பில் கொன்றை மாலையின் மணம் கொண்டவனுமான நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.

மேல்

(531)
திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன்-இமையோர்கள்,

“எங்கள் உச்சி எம் இறைவன்!” என்று அடியே இறைஞ்ச,

தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம்

நங்கள் உச்சி நம்பெருமான்-மேயது நள்ளாறே.

திங்கள் திருமுடியின் உச்சி மீது விளங்கும் தேவனாய், தேவர்கள் எங்கள் உச்சியாய் உள்ள எம் பெருமானே! என்று அடிபரவவும், தலையால் தன்னை வணங்கும் அடியவர்களும் எங்கள் முடிமீது விளங்கும் நம் பெருமான் என்று போற்றவும் விளங்கும் சிவபிரான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.

மேல்

(532)
வெஞ்சுடர்த் தீ அங்கை ஏந்தி, விண் கொள் முழவு அதிர,

அஞ்சு இடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும், போய்,

செஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி, திகழ்தரு கண்டத்துள்ளே

நஞ்சு அடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே.

கொடிய ஒளி பொருந்திய நெருப்பைக் கையில் ஏந்தி விண்ணளவும் ஒலிக்கும் முழவு முழங்கப் பலரும் அஞ்சும் சுடுகாட்டில் ஆடல் பாடலுடன் ஓர் இளம்பிறையைச் சூடி, விளங்கும் கண்டத்தில் நஞ்சினை நிறுத்திய நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.

மேல்

(533)
சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத் தீ அம்பினால்

சுட்டு மாட்டி, சுண்ண வெண் நீறு ஆடுவது அன்றியும், போய்ப்

பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர் பால் மதியம் சூடி,

நட்டம் ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே.

பெருமை மிக்க முப்புரங்களையும் வரை சிலையில் பொருந்திய தீயாகிய அம்பினால் சுட்டு அழித்து, திருவெண்ணீற்றுப் பொடியில் திளைத்து ஆடி, பட்டம் என்னும் அணிகலன் கட்டியசென்னியின் மேல் பால் போலும் நிறமுடையதொரு பிறைமதியைச் சூடி நடனம் ஆடும் நம்பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.

மேல்

(534)
உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு, உடனே ஒடுக்கி,

“அண்ணல் ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம்

எண்ணல் ஆகா, உள் வினை” என்று எள்க வலித்து, இருவர்

நண்ணல் ஆகா நம்பெருமான் மேயது நள்ளாறே.

யாராலும் உண்ணமுடியாத நஞ்சினை உண்டு அதனைத் தம் கண்டத்தில் நிறுத்தியவரும், யாராலும் அணுக இயலாத தலைவரும் ஒளி பொருந்திய அழல் போன்ற திருவுருவினரும் அநாதியாகவே உள்ள வினையால் எண்ண இயலவில்லையே என மனம் வருந்திய திருமால் பிரமர்களால் நணுக முடியாதவருமான நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.

மேல்

(535)
மாசு மெய்யர், மண்டைத் தேரர், குண்டர் குணம் இலிகள்

பேசும் பேச்சை மெய் என்று எண்ணி, அந் நெறி செல்லன்மின்!

மூசு வண்டு ஆர் கொன்றை சூடி, மும்மதிலும் உடனே

நாசம் செய்த நம் பெருமான் மேயது நள்ளாறே.

அழுக்கேறிய உடலினராகிய சமணரும், கையில் மண்டை என்னும் உண்கலத்தை ஏந்தித் திரியும் புத்தர்களும் ஆகிய குண்டர்களும் நற்குணம் இல்லாதவர்கள். அவர்கள் பேசும் பேச்சை மெய்யென்று எண்ணி அவர்கள் சமயங்களைச் சாராதீரர். வண்டுகள் மொய்த்துப் பொருந்தும் கொன்றை மலர் மாலையைச் சூடி மும்மதில்களையும் ஒருசேர அழித்துத் தேவர்களைக் காத்தருளிய நம் பெருமான் மேவிய திருநள்ளாற்றைச் சென்று வழிபடுமின்.

மேல்

(536)
தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்,

நண்பு நல்லார் மல்கு காழி ஞானசம்பந்தன், நல்ல

பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார்

உண்பு நீங்கி, வானவரோடு உலகில் உறைவாரே.

நட்புக்கு ஏற்ற நல்லோர் வாழும் சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், குளிர்ந்த கங்கையையும் வெண்மையான பிறையையும் தாங்கிய தாழ்ந்த சடைமுடியை உடைய சிவபிரான் எழுந்தருளிய, நல்லியல்பு வாய்ந்தோர் வாழும் திருநள்ளாற்றைப் போற்றிப் பாடிய,

இத்திருப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர் பிராரத்த கன்ம வலிமை குறையப் பெற்று வானவர்களோடு தேவருலகில் வாழ்வர்.

 

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(50)
திருவலிவலம் - பழந்தக்கராகம்

(537)
ஒல்லை ஆறி, உள்ளம் ஒன்றி, கள்ளம் ஒழிந்து, வெய்ய

சொல்லை ஆறி, தூய்மை செய்து, காமவினை அகற்றி,

நல்ல ஆறே உன்தன் நாமம் நாவில் நவின்று ஏத்த,

வல்ல ஆறே வந்து நல்காய் வலிவலம் மேயவனே!.

வலிவலத்தில் மேவி விளங்கும் ஈசனே ! உலகப் பொருள்களின்மேல் பற்றுக் கொண்ட  பரபரப்பு எய்தி, மனமானது வேகத்தில் இயங்குவதைச் சாந்தப் படுமாறு செய்து, நின்பால் ஒன்றிப் பொருந்தி இருக்குமாறு நல்கிடுவாய். வஞ்சனை அற்றி நிலையும் பிறரிடம் கொடிய உரைகளை நவிலாதவாறும் தூய்மைப்படுத்திச் சுயவிருப்பின்மேல் செய்யப்படும் செயல்களை அகற்றுக.உன்னுடைய திருநாமத்தை எந்த நெறியில் நவில வேண்டுமோ அநத நன்னெறியில் நவிலுமாறு அருள்புரிவாய். என்னுடைய தரத்தின் அளவினை அறிந்து, எவ்வழியில் உரை செய்தால் யான் ஈடேற முடியுமோ அந்த நிலையை அறிந்து எனக்கு நல்கி அருள்புரிக.

மேல்

(538)
இயங்குகின்ற இரவி, திங்கள், மற்றும் நல்-தேவர் எல்லாம்,

பயங்களாலே பற்றி, நின்பால் சித்தம் தெளிகின்றிலர்;

தயங்கு சோதி! சாமவேதா! காமனைக் காய்ந்தவனே!

மயங்குகின்றேன்! வந்து நல்காய் வலிவலம் மேயவனே!.

வானவெளியில் இயங்குகின்ற ஞாயிறு, திங்கள் மற்றும் நல்ல தேவர்கள் எல்லோரும் அச்ச மேலீட்டினால் உன்னைப் பரம் பொருள் என்று தம் சித்தம் தெளியாதவராயுள்ளனர். விளங்கும் சோதி வடிவினனே, சாம வேதம் பாடி மகிழ்பவனே, காமனைக் காய்ந்தவனே, எவ்வாறு உன்னைத் தெளிவது என்று யானும் மயங்குகின்றேன். வந்து அருள்புரிவாயாக.

மேல்

(539)
பெண்டிர், மக்கள், சுற்றம், என்னும் பேதைப் பெருங்கடலை

விண்டு, பண்டே வாழ மாட்டேன்; வேதனை நோய் நலிய,

கண்டு கண்டே உன்தன் நாமம் காதலிக்கின்றது, உள்ளம்;-

வண்டு கெண்டிப் பாடும் சோலை வலிவலம் மேயவனே!.

வண்டுகள் தேனுண்ணற் பொருட்டு மலர்களைக் கிண்டி இசை பாடும் சோலைகள் சூழ்ந்த திருவலிவலத்துள் மேவிய இறைவனே, மனைவி மக்கள் சுற்றம் முதலான பாசப் பெருங்கடலை இளைய காலத்திலேயே கடந்து வாழ்ந்தேன் அல்லேன். வேதனை. நோய் ஆகியன நலிய உலகியற் பாசங்கள் துன்பம் தருவன என்பதைக் கண்டு உன் திருநாமம் சொல்வதொன்றே இன்பமாவது என்பதைக் கண்டு அதனை ஓத உள்ளம் விரும்புகிறது. அருள் புரிவாயாக.

மேல்

(540)
மெய்யர் ஆகிப் பொய்யை நீக்கி, வேதனையைத் துறந்து,

செய்யர் ஆனார் சிந்தையானே! தேவர் குலக்கொழுந்தே!

நைவன், நாயேன்; உன்தன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன்;

வையம் முன்னே வந்து நல்காய் வலிவலம் மேயவனே!.

பொய்மையை விலக்கி, உண்மையை மேற்கொண்டு பந்த பாசங்களாகிய வேதனைகளைத் துறந்து செம்மையான மனமுடையோராய் வாழும் அன்பர்களின் சிந்தையுள் இருப்பவனே, தேவர்களின் குலக்கொழுந்தே! நான் வருந்தி நிற்கிறேன். உன்றன் திருநாமத்தை நாள்தோறும் ஓதி வருகிறேன். வலிவலம் மேவிய இறைவனே. வையகத்தே பலரும் காண வந்து அருள்புரிவாயாக.

மேல்

(541)
துஞ்சும் போதும் துற்றும் போதும் சொல்லுவன், உன் திறமே;

தஞ்சம் இல்லாத் தேவர் வந்து, உன் தாள் இணைக்கீழ்ப் பணிய,

நஞ்சை உண்டாய்க்கு என் செய்கேனோ? நாளும் நினைந்து, அடியேன்,

“வஞ்சம் உண்டு” என்று அஞ்சுகின்றேன்-வலிவலம் மேயவனே!.

திருவலிவலம் மேவிய இறைவனே, உறங்கும்போதும் உண்ணும்போதும் உன்றன் புகழையே சொல்லுவேன். தேவர்கள் வேறு புகலிடம் இல்லாது உன்பால் வந்து உன் தாளிணைகளின் கீழ்ப் பணிய அவர்களைக் காத்தற்பொருட்டு நஞ்சை உண்ட உன் கருணையை நாளும் நினைதலையன்றி வேறு என் செய வல்லேன்? உன் அருள் பெறுதற்குத் தடையாக என்பால் வஞ்சம் உண்டென்று அஞ்சுகின்றேன். அதனைப் போக்கி எனக்கு அருள்.

மேல்

(542)
“புரிசடையாய்! புண்ணியனே! நண்ணலார் மூஎயிலும்

எரிய எய்தாய்! எம்பெருமான்!” என்று இமையோர் பரவும்

கரி உரியாய்! காலகாலா! நீலமணி மிடற்று

வரி அரவா! வந்து நல்காய் வலிவலம் மேயவனே!.

திருவலிவலம் மேவிய இறைவனே, முறுகிய சடையை உடையவனே, புண்ணிய வடிவினனே! பகைவர் தம் முப்புரங்களும் எரியுமாறு அம்பெய்தவனே என்று தேவர்கள்பரவும், யானையின் தோலை அணிந்தவனே, காலனுக்குக் காலனே! நீலமணி போலும் கண்டத்தையும் வரிந்து கட்டப் பெற்ற பாம்பினையும் உடையவனே! என்பால் வந்து அருள்புரிவாயாக.

மேல்

(543)
தாயும் நீயே! தந்தை நீயே! சங்கரனே! அடியேன்

ஆயும் நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது, உள்ளம்;

ஆயம் ஆய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார்;

மாயமே என்று அஞ்சுகின்றேன்-வலிவலம் மேயவனே!.

திருவலிவலம் மேவிய இறைவனே! சங்கரனே எனக்குத் தாயும் தந்தையும் நீயேயாவாய். அடியேன் உள்ளம் சிவஞானிகளால் ஆய்ந்துணரப்படும் நின்பால் அன்பு செய்ய விரும்புகின்றது. எனக்குப் படைத்தளிக்கப்பட்ட இவ்வுடலிடைப் பொருந்திய ஐம்பொறிகள் உன்னைப் பொருந்தவொட்டாமல் தடுக்கின்றன. இம்மாயத்தைக் கண்டு யான் அஞ்சுகின்றேன். அருள்புரிவாயாக.

மேல்

(544)
நீர் ஒடுங்கும் செஞ்சடையாய்! நின்னுடைய பொன்மலையை

வேரொடும் பீழ்ந்து ஏந்தல் உற்ற வேந்தன் இராவணனைத்

தேரொடும் போய் வீழ்ந்து அலற, திருவிரலால் அடர்த்த

வார் ஒடுங்கும் கொங்கை பங்கா! வலிவலம் மேயவனே!.

திருவலிவலம் மேவிய இறைவனே தருக்கி வந்த கங்கை செயல் இழந்து ஒடுங்கிய செஞ்சடையை உடையவனே, உன்னுடைய பொன்மயமான கயிலை மலையை வேரோடும் பிடுங்கி ஏந்தத்தொடங்கிய இலங்கை வேந்தன் இராவணனைத் தேரோடும் வீழ்ந்து அலறுமாறு உன் கால் திருவிரலால் அடர்த்தவனே, கச்சு அணிந்த பெருத்த தனங்களை உடைய உமைபங்கனே! வந்து நல்காய்.

மேல்

(545)
ஆதி ஆய நான்முகனும் மாலும் அறிவு அரிய

சோதியானே! நீதி இல்லேன் சொல்லுவன், நின் திறமே;

ஓதி நாளும் உன்னை ஏத்தும் என்னை வினை அவலம்

வாதியாமே வந்து நல்காய் வலிவலம் மேயவனே!.

திருவலிவலம் மேவிய இறைவனே! உலகங்களைப் படைத்துக் காத்தலில் ஆதியானவர்களாகிய நான்முகனும், திருமாலும் அறிதற்கரிய சோதிப் பிழம்பாய்த் தோன்றியவனே! யான் நீதியில்லாதேன் ஆயினும் உன் புகழையே சொல்லுகின்றேன். நாள்தோறும் உன்புகழையே ஓதி உன்னையே ஏத்தும் என்னை வினைகளும் அவற்றின் பயனாய துன்பங்களும் வந்து தாக்காமல் வந்து அருள் புரிவாயாக.

மேல்

(546)
பொதியிலானே! பூவணத்தாய்! பொன் திகழும் கயிலைப்

பதியிலானே! பத்தர் சித்தம் பற்று விடாதவனே!

விதி இலாதார் வெஞ்சமணர் சாக்கியர் என்று இவர்கள்

மதி இலாதார் என் செய்வாரோ? வலிவலம் மேயவனே!.

திருவலிவலம் மேவிய இறைவனே, பொதிய மலையைத் தனக்கு இடமாகக் கொண்டவனே, திருப்பூவணம் என்னும் தலத்தில் உறைபவனே, தன்பால் பக்தி செய்யும் அன்பர்களின் சித்தங்களில் எழுந்தருளி இருப்பவனே, கொடிய சமணர்களும் சாக்கியர்களும் உன்னை அடையும் புண்ணியம் இல்லாதவர்கள். அறிவற்ற அவர்கள் தங்கள் சமய நெறியில் என்ன பயனைக் காண்பார்களோ?.

மேல்

(547)
வன்னி, கொன்றை, மத்தம், சூடும் வலிவலம் மேயவனைப்

பொன்னி நாடன்-புகலி வேந்தன், ஞானசம்பந்தன்-சொன்ன

பன்னு பாடல் பத்தும் வல்லார் மெய்த்தவத்தோர் விரும்பும்

மன்னு சோதி ஈசனோடே மன்னி இருப்பாரே.

வன்னி கொன்றை மலர், ஊமத்தை மலர் ஆகியவற்றைச் சூடும் திருவலிவலம் மேவிய இறைவனைக் காவிரி நாட்டிலுள்ள புகலி என்னும் சரகாழிப் பதிக்கு வேந்தனாய ஞானசம்பந்தண் புகழ்ந்து ஓதியனவும் எக்காலத்தும் ஓதத்தக்கனவும் ஆகிய,

இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர், உண்மைத் தவமுடையோர் விரும்பும் நிலை பெற்ற, சோதி வடிவான ஈசனோடு மன்னியிருப்பர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(51)
திருச்சோபுரம் - பழந்தக்கராகம்

(548)
வெங் கண் ஆனை ஈர் உரிவை போர்த்து, விளங்கும் மொழி

மங்கை பாகம் வைத்து உகந்த மாண்பு அது என்னை கொல் ஆம்?

கங்கையோடு திங்கள் சூடி, கடி கமழும் கொன்றைத்

தொங்கலானே! தூய நீற்றாய்! சோபுரம் மேயவனே!.

கங்கை திங்கள் ஆகியவற்றை முடிமிசைச் சூடி மணம் கமழும் கொன்றை மலர் மாலையை அணிந்து தூய திருநீறு பூசித் திருச்சோபுரத்தில் விளங்கும் இறைவனே! கொடிய யானையை உரித்து அதன் தோலைப் போர்த்திய, விளக்கமான மொழிகளைப் பேசும் மலைமங்கையை இடப்பாகத்தே கொண்டு மகிழும் உனது செயலின் மாண்பு எத்தகையதோ?.

மேல்

(549)
விடை அமர்ந்து, வெண்மழு ஒன்று ஏந்தி, விரிந்து இலங்கு

சடை ஒடுங்க, தண் புனலைத் தாங்கியது என்னை கொள் ஆம்?

கடை உயர்ந்த மும்மதிலும் காய்ந்து அனலுள் அழுந்த,

தொடை நெகிழ்ந்த வெஞ்சிலையாய்! சோபுரம் மேயவனே!.

வாயில்களாற் சிறந்த முப்புரங்களும் அனலுள் அழுந்துமாறு சினத்தோடு அம்பு செலுத்திய கொடிய மலை வில்லை உடையவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! விடைமரது அமர்ந்து வெண்மையான மழு ஒன்றைக் கையில் ஏந்தி விரிந்து விளங்கும் சடையின்கண் ஒடுங்குமாறு குளிர்ந்த நீரைத் தடுத்துத் தாங்கி இருத்தற்குக் காரணம் என்னையோ?.

மேல்

(550)
தீயர் ஆய வல் அரக்கர் செந்தழலுள் அழுந்தச்

சாய எய்து, வானவரைத் தாங்கியது என்னை கொள் ஆம்?

பாயும் வெள்ளை ஏற்றை ஏறி, பாய் புலித்தோல் உடுத்த

தூய வெள்ளை நீற்றினானே! சோபுரம் மேயவனே!.

பாய்ந்து செல்லும் வெண்ணிறமான விடையேற்றின் மரது ஏறி, பாயும் புலியினது தோலை உடுத்துத் தூய வெண்ணீற்றை அணிந்துள்ளவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! கொடியவர்களாகிய வலிய அரக்கர் சிவந்த அழலுள் அழுந்துமாறு கணை எய்துதேவர்களை வாழ்வித்தது என்ன காரணம் பற்றியோ?

மேல்

(551)
பல் இல் ஓடு கையில் ஏந்தி, பல்கடையும் பலி தேர்ந்து,

அல்லல் வாழ்க்கை மேலது ஆன ஆதரவு என்னை கொல் ஆம்?

வில்லை வென்ற நுண் புருவ வேல் நெடுங்கண்ணியொடும்

தொல்லை ஊழி ஆகி நின்றாய்! சோபுரம் மேயவனே!.

வில்லை வென்ற வளைந்த நுண்புருவத்தையும், வேல் போன்ற நீண்ட கண்ணையும் உடைய உமையம்மையோடும், பழமையான பல ஊழிக்காலங்களாக நிற்பவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! பல் இல்லாத மண்டை யோட்டைக் கையிலேந்திப் பலர்இல்லங்களுக்கும் சென்று பலி ஏற்கும் அல்லல் பொருந்திய வாழ்க்கையின்மேல் நீ ஆதரவு காட்டுதற்குக் காரணம் என்னவோ?

மேல்

(552)
நாற்றம் மிக்க கொன்றை துன்று செஞ்சடைமேல் மதியம்

ஏற்றம் ஆக வைத்து உகந்த காரணம் என்னை கொல் ஆம்?

ஊற்றம் மிக்க காலன்தன்னை ஒல்க உதைத்து அருளி,

தோற்றம் ஈறும் ஆகி நின்றாய்! சோபுரம் மேயவனே!.

வலிமை பொருந்திய காலனை அழியுமாறு உதைத்தருளி, எல்லாப் பொருள்கட்கும் தோற்றமும் ஈறுமாகி நிற்பவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! மணம் மிக்க கொன்றை மலர்கள் நிறைந்த செஞ்சடையின்மேல் பிறைமதியை அழகு பெற வைத்து மகிழ்தற்குக் காரணம் என்னையோ?

மேல்

(553)
கொல் நவின்ற மூ இலைவேல், கூர் மழுவாள் படையன்,

பொன்னை வென்ற கொன்றைமாலை சூடும் பொற்பு என்னை கொல் ஆம்?

அன்னம் அன்ன மென் நடையாள் பாகம் அமர்ந்து, அரை சேர்

துன்ன வண்ண ஆடையினாய்! சோபுரம் மேயவனே!.

அன்னம் போன்ற மெல்லிய நடையினையுடைய உமையம்மையை ஒரு பாகமாகப் பொருந்தி, இடையில் அழகிய கோவண ஆடையை அணிந்தவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! கொல்லும் தொழில் பொருந்திய மூவிலை வேலையும் தூய மழுவாட் படையையும் உடையவனே! நிறத்தால் பொன்னை வென்ற கொன்றை மாலையை நீ விரும்பிச் சூடுதற்குரிய காரணம் என்னையோ?

மேல்

(554)
“குற்றம் இன்மை, உண்மை, நீ” என்று உன் அடியார் பணிவார்,

கற்றல் கேள்வி ஞானம் ஆன காரணம் என்னை கொல் ஆம்?

வற்றல் ஆமை வாள் அரவம் பூண்டு, அயன் வெண் தலையில்

துற்றல் ஆன கொள்கையானே! சோபுரம் மேயவனே!.

ஊன் வற்றிய ஆமை ஓட்டையும், ஒளி பொருந்திய பாம்பையும் அணிகலனாகப்பூண்டு, பிரமனின் வெண்மையான தலையோட்டில் பலியேற்று உண்ணும் கொள்கையனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! குணமும் குற்றமும் நீயே என்று பணியும் உன் அடியவர்கட்குத் தாங்கள் கற்ற கல்வியும், கேள்வியும், அதனால் விளையும் ஞானமுமாக நீயே விளங்குதற்குக் காரணம் என்னவோ?

மேல்

(555)
விலங்கல் ஒன்று வெஞ்சிலையாக் கொண்டு, விறல் அரக்கர்

குலங்கள் வாழும் ஊர் எரித்த கொள்கை இது என்னை கொல் ஆம்?

இலங்கை மன்னு வாள் அவுணர்கோனை எழில் விரலால்

துலங்க ஊன்றிவைத்து உகந்தாய்! சோபுரம் மேயவனே!.

இலங்கையில் நிலைபெற்று வாழும், வாட்போரில் வல்ல அவுணர் தலைவனாகிய இராவணனைத் தனது அழகிய கால் விரலால் நடுங்குமாறு ஊன்றிப் பின் அவன் வேண்ட மகிழ்ந்து அருள் புரிந்தவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! மேரு மலையைக் கொடியதொரு வில்லாகக் கொண்டு வலிமை பொருந்திய அரக்கர் குலங்கள் வாழ்கின்ற திரிபுரங்களாகிய ஊர்களை எரித்து அழித்தற்குக் காரணம் என்னவோ?.

மேல்

(556)
விடம் கொள் நாகம் மால்வரையைச் சுற்றி, விரிதிரை நீர்

கடைந்த நஞ்சை உண்டு உகந்த காரணம் என்னை கொல் ஆம்?

இடந்து மண்ணை உண்ட மாலும், இன் மலர்மேல் அயனும்,

தொடர்ந்து முன்னம் காணமாட்டாச் சோபுரம் மேயவனே!.

மண்ணுலகை அகழ்ந்து உண்ட திருமாலும், இனிய தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனும், முற்காலத்தே உன்னைத் தொடர்ந்து அடிமுடி காணமாட்டாராய் நின்றொழியத் திருச்சோபுரத்தில் மேவி விளங்கும் இறைவனே! தேவர்கள் விடத்தையுடைய வாசுகி என்னும் பாம்பை மந்தரம் என்னும் பெரிய மலையைச் சுற்றிக் கட்டி, விரிந்த அலைகளையுடைய கடல்நரரைக் கடைந்தபோது, அதனிடை எழுந்த நஞ்சை உண்டு மகிழ்தற்குக் காரணம் என்னையோ?

மேல்

(557)
புத்தரோடு புன்சமணர் பொய் யே த்து,

பித்தர் ஆகக் கண்டு உகந்த பெற்றிமை என்னை கொல் ஆம்?

மத்தயானை ஈர் உரிவை போர்த்து, வளர் சடைமேல்

துத்திநாகம் சூடினானே! சோபுரம் மேயவனே!.

மதம் பொருந்திய யானையை உரித்து அதன் தோலைப் போர்த்து, நீண்ட சடையின் மேல் புள்ளிகளையுடைய நாகப்பாம்பைச்சூடியவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! புத்தர்களும், சமணர்களும் பொய்யுரைகளையே பேசிப் பித்தராகத் திரிதலைக் கண்டு நீ மகிழ்தற்குக் காரணம் என்னையோ?.

மேல்

(558)
சோலை மிக்க தண்வயல் சூழ் சோபுரம் மேயவனை,

சீலம் மிக்க தொல்புகழ் ஆர் சிரபுரக் கோன்-நலத்தான்,

ஞாலம் மிக்க தண் தமிழான், ஞானசம்பந்தன்-சொன்ன

கோலம் மிக்க மாலை வல்லார் கூடுவர், வான் உலகே.

சோலைகள் மிகுந்ததும், குளிர்ந்தவயல்களால் சூழப்பட்டதுமான திருச்சோபுரம் மேவிய இறைவனைச் சீலத்தால் மிக்க, பழமையான புகழை உடைய அந்தணர்கள் வாழும் சிரபுரம் என்னும் சீகாழிப் பதியின் தலைவனும். நன்மைகளையே கருதுபவனும், உலகில் மேம்பட்ட தண் தமிழ் பாடியவனுமாகிய ஞானசம்பந்தன் பாடிய ,

அழகுமிக்க இத்தமிழ் மாலையை ஓதவல்லவர் வானுலகை அடைவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(52)
திருநெடுங்களம் - பழந்தக்கராகம்

(559)
“மறை உடையாய்! தோல் உடையாய்! வார்சடை மேல் வளரும்

பிறை உடையாய்! பிஞ்ஞகனே!” என்று உனைப் பேசின் அல்லால்,

குறை உடையார் குற்றம் ஓராய்! கொள்கையினால் உயர்ந்த

நிறை உடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!.

திருநெடுங்களம் மேவிய இறைவனே, வேதங்களைத் தனக்கு உடைமையாகக் கொண்டவனே, தோல் ஆடை உடுத்தவனே, நீண்ட சடை மேல் வளரும் இளம் பிறையைச் சூடியவனே, தலைக்கோலம் உடையவனே, என்று உன்னை வாழ்த்தினாலல்லது குறை உடையவர்களின் குற்றங்களை மனத்துக் கொள்ளாத நீ, மனத்தினால் உன்னையன்றி வேறு தெய்வத்தை நினையாத கொள்கையில் மேம்பட்ட நிறையுடைய அடியவர்களின் இடர்களை நீக்கி அருள்வாயாக.

மேல்

(560)
கனைத்து எழுந்த வெண்திரை சூழ் கடல் இடை நஞ்சு தன்னைத்

தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ! நின்னை

மனத்து அகத்தோர் பாடல் ஆடல் பேணி, இராப்பகலும்

நினைத்து எழுவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!.

திருநெடுங்களம் மேவிய இறைவனே, ஆரவாரித்து எழுந்த, வெண்மையான அலைகளால் சூழப்பட்ட கடல் நஞ்சினைத் தினையளவாகச் செய்து உண்டு கண்டத்தே நிறுத்திய மேம்பட்ட தேவனே, நின்னை மனத்தகத்தே நிறுவியவர்களின் ஆடல், பாடல்களை விரும்பி, இரவும் பகலும் நின்னையே நினைத்து எழும் அடியவர்களின் இடர்களை நீக்கி அருளுக.

மேல்

(561)
நின் அடியே வழிபடுவான், நிமலா! நினைக் கருத,

“என் அடியான் உயிரை வவ்வேல்!” என்று அடல் கூற்று உதைத்த

பொன் அடியே பரவி, நாளும் பூவொடு நீர் சுமக்கும்

நின் அடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!.

திருநெடுங்களம் மேவிய இறைவனே, குற்ற மற்றவனே, நின் திருவடிகளையே வழிபடும் மார்க்கண்டேயன் நின்னையே கருதிச் சரண் புக அவனைக் கொல்லவந்த வலிமைபொருந்திய கூற்றுவனைச் சினந்து, ‘என் அடியவன் உயிரைக் கவராதே’ என்று உதைத்தருளிய உன் பொன்னடிகளையே வழிபட்டு, நாள்தோறும் பூவும், நீரும் சுமந்து வழிபடும் உன் அடியவர்களின் இடர்களைக் களைந்தருள்வாயாக.

மேல்

(562)
மலை புரிந்த மன்னவன்தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய்!

அலை புரிந்த கங்கை தங்கும் அவிர் சடை ஆரூரா!

தலை புரிந்த பலி மகிழ்வாய்! தலைவ! நின் தாள் நிழல் கீழ்

நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!.

திருநெடுங்களம் மேவிய இறைவனே, இமவான்மகளாகிய பார்வதி தேவியைத் தன் திருமேனியின் ஓர் பாதியாகக் கொண்டு மகிழ்பவனே, அலைகள் வீசும் கங்கை நீரைத் தாங்கிய விரிந்த சடையினையுடைய திருவாரூர் இறைவனே, தலையோட்டை விரும்பி ஏந்தி அதன்கண் பலியேற்று மகிழ்பவனே, தலைவனே, நினது திருவடி நீழற்கீழ் நிற்றலையே விரும்பும் அடியவர்களின் இடர்களைப் போக்கி அருள்வாயாக.

மேல்

(563)
பாங்கின் நல்லார், படிமம் செய்வார், பாரிடமும் பலி சேர்

தூங்கி நல்லார் பாடலோடு தொழு கழலே வணங்கி,

தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ! நின் தாள் நிழல் கீழ்

நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!.

திருநெடுங்களம் மேவிய இறைவனே, குணங்களால் நல்லவர்களும், தவ வேடம் தாங்கியவர்களும் பாரிடை வாழும் மக்களும் பலருடைய இல்லங்களிலும் பலிதேரும் உனது செயல்களில் மனம் ஒன்றி நல்லோர் பாடும் பாடல்களோடு தொழத்தக்க உன் திருவடி வணங்கிக் கரை கடந்த அன்போடு தலைவனாகிய உனது திருவடிகளை நிழலை நீங்கி நில்லாதவர்களாகிய அடியவர்களின் இடர்களைக் களைந்தருள்வாயாக.

மேல்

(564)
விருத்தன் ஆகி, பாலன் ஆகி, வேதம் ஓர் நான்கு உணர்ந்து,

கருத்தன் ஆகி, கங்கையாளைக் கமழ் சடைமேல் கரந்தாய்!

அருத்தன் ஆய ஆதிதேவன் அடி இணையே பரவும்

நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!.

திருநெடுங்களம் மேவிய இறைவனே, மூத்த வேடந்தாங்கியும், இளமை வடிவங் கொண்டும், வேதங்கள் நான்கையும் நன்குணர்ந்த தலைவனாய் கங்கை நங்கையை மணம் கமழும் சடைமிசைக் கரந்துள்ள பெருமானே, கலை ஞானங்கள் மெய்ஞானங்களின் பொருளான முதற்கடவுளாய் உன் அடி இணைகளைப் பரவி ஆடியும் பாடியும் போற்றும் அடியவர்களின் இடர்களைப் போக்கியருள்வாயாக.

மேல்

(565)
கூறு கொண்டாய்! மூன்றும் ஒன்றாக் கூட்டி ஓர் வெங்கணையால்

மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே! கொடிமேல்

ஏறு கொண்டாய்! “சாந்தம் ஈது” என்று எம்பெருமான் அணிந்த

நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!.

திருநெடுங்களம் மேவிய இறைவனே, உமையம்மையைத் திருமேனியின் ஒரு கூறாகக் கொண்டவனே, அரி, எரி, காற்று ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கூட்டிய ஒப்பற்ற கொடிய அம்பினால் வேதவழக்கோடு பகை கொண்ட அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்த மன்னவனே, கொடி மீது இடபத்தை இலச்சினையாகக் கொண்டவனே, இதுவே மணம் பொருந்திய சந்தனமாகும் என்று எம்பெருமானே நீ அணிந்துள்ள திருநீற்றை விரும்பி அணியும் அடியவர்களின் இடரை நீக்கியருள்வாயாக.

மேல்

(566)
“குன்றின் உச்சிமேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை,

அன்றி நின்ற, அரக்கர் கோனை அரு வரைக்கீழ் அடர்த்தாய்!”

என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி, இராப்பகலும்,

நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!.

திருநெடுங்களம் மேவிய இறைவனே, மேருமலையின் சிகரங்கள் மூன்றில் ஒன்றாகிய குன்றின்மேல் விளங்குவதும் கொடிகள் கட்டப்பட்ட மதில்களால் சூழப்பட்டதுமான இலங்கை நகர் மன்னனும், உன்னோடு மாறுபட்டுக் கயிலை மலையைப் பெயர்த்தவனுமான அரக்கர் தலைவனாகிய இராவணனை அரிய அம்மலையின் கீழே அடர்த்தவனே! என்றெல்லாம் நல்ல தோத்திரங்களைக் கூறி இரவும் பகலும் உன்னையே ஏத்தி நின்று மனம் நையும் அடியவர்களின் இடர்களைப் போக்கியருளுவாயாக.

மேல்

(567)
வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும், விளங்கிய நான்முகனும்,

சூழ எங்கும் நேட, ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய்!”

கேழல் வெண் கொம்பு அணிந்த பெம்மான்! கேடு இலாப் பொன் அடியின்

நீழல் வாழ்வார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!.

திருநெடுங்களம் மேவிய இறைவனே, கஞ்சனால் ஏவப் பட்டுத் தன்னைக் கொல்ல வந்த குவலயாபீடம் என்ற யானையின் கொம்புகளை ஒடித்த திருமாலும், புகழ்பெற்ற நான்முகனும், தங்களைச் சூழ்ந்துள்ள இடமெங்கும் தேடுமாறு இருவருக்கும் இடையே சோதிப் பிழம்பாய்த் தோன்றி நின்றவனே, பன்றியினதுகொம்பை அணிகலனாக அணிந்த பெருமானே, அழிவற்ற உன் பொன் போன்ற திருவடி நீழலில் வாழும் அடியவர்களின் இடர்களைக் களைந்தருள்வாய்.

மேல்

(568)
வெஞ்சொல் தம் சொல் ஆக்கி நின்ற வேடம் இலாச் சமணும்,

தஞ்சம் இல்லாச் சாக்கியரும், தத்துவம் ஒன்று அறியார்;

துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின் அடியே

நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!.

கொடுஞ் சொற்களையே தம் சொற்களாக்கிக் கொண்டு தமது வேடத்திற்குப் பொருந்தாமல் ஒழுகும் சமணரும் நற்சார்பில்லாத புத்தர்களும் சைவசமயம் கூறும் உண்மைப் பொருளை ஒரு சிறிதும் உணராதவர்கள். அவர்களை விடுத்து, திருநெடுங்களம் மேவிய இறைவனே! அழியாப் புகழுடைய வேதங்களோடு, தோத்திரங்களால் நின்னைப் பரவி நின் திருவடிகளை நெஞ்சில் கொண்டு வாழும் அடியவர்களின் இடர்களைப் போக்கியருளுவாயாக.

மேல்

(569)
நீட வல்ல வார் சடையான் மேய நெடுங்களத்தைச்

சேடர் வாழும் மா மறுகின் சிரபுரக் கோன் நலத்தால்

நாட வல்ல பனுவல்மாலை, ஞானசம்பந்தன் சொன்ன

பாடல் பத்தும், பாட வல்லார் பாவம் பறையுமே.

மேலும் மேலும் நீண்டு வளரத்தக்க சடைமுடியை உடைய சிவபிரான் எழுந்தருளிய திருநெடுங்களத்தை, பெரியோர் பலர் வாழும் பெரிய வீதிகளை உடைய சிரபுரம் என்னும் சீகாழிப் பதியின் தலைவனாகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய,

நன்மைப் பொருளால் ஆராய்ந்து உணரத்தக்க இப்பாடல்கள் பத்தையும் பாட வல்லவர்களின் பாவங்கள் விலகும்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(53)
திருமுதுகுன்றம் - பழந்தக்கராகம்

(570)
தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை சேர்

நாவராயும், நண்ணு பாரும் விண் எரி கால் நீரும்

மேவர் ஆய, விரை மலரோன் செங்கண்மால் ஈசன் என்னும்

மூவர் ஆய, முதல் ஒருவன் மேயது முதுகுன்றே.

தேவர், அசுரர், சித்தர், செழுமையான வேதங்களை ஓதும் நாவினராகிய அந்தணர், நாம் வாழும் மண், விண், எரி, காற்று, நீர் ஆகிய ஐம்பூதங்கள், மணம் மிக்க தாமரை மலர் மேல் உறையும் நான் முகன், சிவந்த கண்களை உடைய திருமால், உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகள் ஆகிய எல்லாமாகவும் அவர்களின் தலைவராகவும் இருக்கின்ற சிவபிரான் எழுந்தருளியிருப்பது திருமுதுகுன்றத் தலமாகும்.

மேல்

(571)
பற்றும் ஆகி வான் உளோர்க்கு, பல் கதிரோன், மதி, பார்,

எற்று நீர், தீ, காலும், மேலைவிண், இயமானனோடு,

மற்று மாது ஓர் பல் உயிர் ஆய், மால் அயனும் மறைகள்

முற்றும் ஆகி, வேறும் ஆனான் மேயது முதுகுன்றே.

தேவர்கட்குப் பற்றுக் கோடாகியும், பல வண்ணக் கதிர்களை உடைய ஞாயிறு, திங்கள் மண், கரையை மோதும் நீர், தீ, காற்று, மேலே உள்ள ஆகாயம், உயிர் ஆகிய அட்ட மூர்த்தங்களாகியும் எல்லா உயிர்களாகியும் திருமால், பிரமன் வேதங்கள் முதலான அனைத்துமாகியும் இவற்றின் வேறானவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளியிருக்கும் தலம் திருமுதுகுன்றம் ஆகும்.

மேல்

(572)
வாரி, மாகம் வைகு திங்கள், வாள் அரவம், சூடி,

நாரி பாகம் நயந்து, பூமேல் நான்முகன்தன் தலையில்

சீரிது ஆகப் பலி கொள் செல்வன்; செற்றலும் தோன்றியது ஓர்

மூரி நாகத்து உரிவை போர்த்தான்; மேயது முதுகுன்றே.

கங்கை, வானகத்தே வைகும் திங்கள், ஒளி பொருந்திய பாம்பு ஆகியவற்றை முடிமிசைச் சூடி உமையம்மையை ஒரு பாகமாக விரும்பி ஏற்று, தாமரை மலரில் உறையும் பிரமனது தலைகளில் ஒன்றைக் கொய்து அத்தலையோட்டில் பலி ஏற்கச் செல்பவனும், தன்னைச் சினந்து வந்த வலிய யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்தியவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய தலம் திருமுதுகுன்றம்.

மேல்

(573)
பாடுவாருக்கு அருளும் எந்தை பனி முதுபௌவ முந்நீர்

நீடு பாரும் முழுதும் ஓடி அண்டர் நிலைகெடலும்,

நாடுதானும் ஊடும் ஓடி, ஞாலமும் நான்முகனும்

ஊடு காண, மூடும் வெள்ளத்து உயர்ந்தது முதுகுன்றே.

தன்னைப் பாடிப் பரவுவார்க்கு அருள் செய்யும் எந்தையாகிய சிவபிரான் எழுந்தருளிய தலம், குளிர்ந்த பழமையான கடல் நீண்ட மண் உலகிலும் தேவர் உலகிலும் பரவி, அவர்தம் இருப்பிடங்களை அழித்ததோடு நாடுகளிலும் அவற்றின் இடையிலும் ஓடி, ஞாலத்துள்ளாரும் நான்முகன் முதலிய தேவரும் உயிர் பிழைக்க வழி தேடும்படி, ஊழி வெள்ளமாய்ப் பெருகிய காலத்திலும் அழியாது உயர்ந்து நிற்பதாகிய, திருமுதுகுன்றமாகும்.

மேல்

(574)
வழங்கு திங்கள், வன்னி, மத்தம், மாசுணம், மீது அணவி,

செழுங் கல்வேந்தன் செல்வி காண, தேவர் திசை வணங்க,

தழங்கு மொந்தை, தக்கை, மிக்க பேய்க்கணம் பூதம் சூழ,

முழங்கு செந்தீ ஏந்தி ஆடி மேயது முதுகுன்றே.

வானத்தில் சஞ்சரிக்கும் திங்கள், வன்னியிலை ஊமத்தம் மலர், பாம்பு, ஆகியவற்றைத் திருமுடிமீது நெருக்கமாகச் சூடி, இமவான் மகளாகிய உமையவள் காணத் தேவர்கள் எல்லாத் திசைகளிலும் நின்று வணங்க, மொந்தை, தக்கை, ஆகியன அருகில் ஒலிக்க, பேய்க்கணங்கள் பூதங்கள் சூழ்ந்து விளங்க, முழங்கும் செந்தீயைக் கையில் ஏந்தி ஆடும் சிவபெருமான் மேவிய தலம் திருமுதுகுன்றமாகும்.

மேல்

(575)
சுழிந்த கங்கை, தோய்ந்த திங்கள், தொல் அரா, நல் இதழி,

சழிந்த சென்னி சைவவேடம் தான் நினைத்து, ஐம்புலனும்

அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு

மொழிந்த வாயான், முக்கண் ஆதி, மேயது முதுகுன்றே.

சுழிகளோடு கூடிய கங்கை, அதன்கண் தோய்ந்த திங்கள், பழமையான பாம்பு, நல்ல கொன்றை மலர் ஆகியன நெருங்கிய சென்னியை உடைய முக்கண் ஆதியாகிய சிவபிரானுடைய சைவவேடத்தை விருப்புற்று நினைத்து, ஐம்புலன்களும் மனமும் அழிந்த சிந்தையினராகிய சனகர் முதலிய அந்தணாளர்கட்கு அறம் பொருள் இன்பம் வீடு ஆகியவற்றை உபதேசித்த திருவாயினனாய் எழுந்தருளியிருப்பது திருமுதுகுன்றம் ஆகும். தாள் நினைத்து, தாள் இணைத்து என்பவும் பாடம்.

மேல்

(576)
மயங்கு மாயம் வல்லர் ஆகி, வானினொடு நீரும்

இயங்குவோருக்கு இறைவன் ஆய இராவணன் தோள் நெரித்த

புயங்க ராக மாநடத்தன், புணர் முலை மாது உமையாள்

முயங்கு மார்பன், முனிவர் ஏத்த மேயது முதுகுன்றே.

அறிவை மயங்கச் செய்யும் மாயத்தில் வல்லவராய் வான், நீர் ஆகியவற்றிலும் சஞ்சரிக்கும் இயல்பினராய அரக்கர் களுக்குத் தலைவனாகிய இராவணனின் தோளை நெரித்த வலிமையோடு பாம்பு நடனத்தில் விருப்புடையவனும், செறிந்த தனபாரங்களை உடைய உமையம்மையைத் தழுவிய மார்பினனும் ஆகிய சிவபிரான் முனிவர்கள் ஏத்த எழுந்தருளி விளங்கும் தலம் திருமுதுகுன்றமாகும்.

மேல்

(577)
ஞாலம் உண்ட மாலும் மற்றை நான்முகனும்(ம்) அறியாக்

கோலம் அண்டர் சிந்தைகொள்ளார் ஆயினும், கொய் மலரால்

ஏல இண்டை கட்டி, நாமம் இசைய எப்போதும் ஏத்தும்

மூல முண்ட நீற்றர் வாயான் மேயது முதுகுன்றே.

உலகங்களை உண்ட திருமாலும், நான்முகனும் அறிய முடியாத இறைவனது திருக்கோலத்தைத் தேவர்களும் அறியாதவர் ஆயினர். நாள்தோறும் கொய்த மலர்களைக் கொண்டு இண்டை முதலிய மாலைகள் தொடுத்துத் தன் திருப்பெயரையே எப்போதும் மனம் பொருந்தச் சொல்பவரும், மூலமலத்தை அழிக்கும் திருநீற்றை மெய்யிற் பூசுபவருமாகிய அடியவர்களின் வாயில், நாம மந்திரமாக உறைந்தருளுகின்ற அப்பெருமான் மேவிய தலம் திருமுதுகுன்றமாகும்.

மேல்

(578)
உறி கொள்கையர், சீவரத்தர், உண்டு உழல் மிண்டர் சொல்லை

நெறிகள் என்ன நினைவு உறாதே நித்தலும் கைதொழுமின்!

மறி கொள் கையன், வங்க முந்நீர் பொங்கு விடத்தை உண்ட

முறி கொள் மேனி மங்கை பங்கன்; மேயது முதுகுன்றே.

குண்டிகையை உறியில் கட்டித் தூக்கிய கையினரும், காவியாடையைத் தரித்தவரும், உண்டு உழல்பவரும் ஆகிய சமண புத்தர்கள் கூறுவனவற்றை நெறிகள் எனக் கருதாது, நாள்தோறும், சென்று வணங்குவீராக. மானை ஏந்திய கையினனும், கப்பல்கள் ஓடும் கடலிடைப் பொங்கி எழுந்த விடத்தை உண்டவனும், தளிர் போலும் மேனியளாகிய உமையம்மையை ஒருகூறாக உடையவனுமாகிய சிவபிரான் மேவியுள்ளது திருமுதுகுன்றமாகும். அத்திருத்தலத்தை வணங்குவீராக.

மேல்

(579)
மொய்த்து வானோர் பல்கணங்கள் வணங்கும் முதுகுன்றை,

பித்தர்வேடம் பெருமை என்னும் பிரமபுரத் தலைவன்.....

* * * * * * * .

தேவர் கணங்கள் பலவும் நிறைந்து செறிந்து வணங்கும் திருமுதுகுன்றத்திறைவனை, பித்தர் போலத் தன் வயம் இழந்து திரிவாரின் தவவேடம் பெருமை தருவதாகும் எனக் கருதும் பிரமபுரத்தலைவனான ஞானசம்பந்தன்

நாள்தோறும், சென்று வணங்குவீராக. வினைகள் அழியும்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(54)
திருஓத்தூர் - பழந்தக்கராகம்

(580)
பூத் தேர்ந்து ஆயன கொண்டு, நின் பொன் அடி

ஏத்தாதார் இல்லை, எண்ணுங்கால்

ஓத்தூர் மேய ஒளி மழுவாள் அங்கைக்

கூத்தீர்! உம குணங்களே.

திருஓத்தூரில் அழகிய கையில் ஒளி பொருந்திய மழுவாகிய வாளை ஏந்தியவராய் எழுந்தருளிய கூத்தரே, ஆராயுமிடத்து பூசைக்குரிய நறுமலர்களைத் தேர்ந்து பறித்தும் ஏனைய உபகரணங்களைச் சேகரித்துக் கொண்டு, உம் குணநலங்களைப் போற்றி பொன் போன்ற திருவடிகளை ஏத்தி, வணங்காதார் இல்லை.

மேல்

(581)
இடை ஈர் போகா இளமுலையாளை ஓர்

புடையீரே! புள்ளிமான் உரி

உடையீரே! உம்மை ஏத்துதும் ஓத்தூர்ச்

சடையீரே! உம தாளே.

திருஓத்தூரில் சடைமுடியோடு விளங்கும் இறைவரே, ஈர்க்கு இடையில் செல்லாத நெருக்கமான இளமுலைகளை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரே, புள்ளிமான் தோலை ஆடையாக உடுத்தியவரே, உம் திருவடிகளை நாங்கள் வணங்குகிறோம்.

மேல்

(582)
உள்வேர் போல நொடிமையினார் திறம்

கொள்வீர், அல்குல் ஓர் கோவணம்!

ஒள் வாழைக்கனி தேன் சொரி ஓத்தூர்க்

கள்வீரே! உம காதலே!.

ஒளிசிறந்த வாழைக் கனிகள் தேன் போன்ற சாற்றைச் சொரியும் திருவோத்தூரில் அரையிற் கோவணம் உடுத்தியவராய் விளங்கும் கள்வரே, உம் காதல் மிக நன்று. பொய் பேசும் இயல்பினராய் அடியார்களை நினைப்பவரைப் போலக் காட்டி அவரை ஏற்றுக் கொள்வீர்.

மேல்

(583)
தோட்டீரே! துத்தி ஐந்தலை நாகத்தை

ஆட்டீரே! அடியார் வினை

ஓட்டீரே! உம்மை ஏத்துதும் ஓத்தூர்

நாட்டீரே! அருள் நல்குமே!.

செங்காந்தட்பூவை அணிந்தவரே! படப்பொறிகளை உடைய ஐந்து தலை நாகத்தை ஆட்டுபவரே! அடியவர் வினைகளை ஓட்டுபவரே! திருவோத்தூர் நாட்டில் எழுந்தருளியவரே! உம்மைத் துதிக்கின்றோம்; அருள்புரிவீராக.

மேல்

(584)
குழை ஆர் காதீர்! கொடுமழுவாள் படை

உழை ஆள்வீர்! திரு ஓத்தூர்

பிழையா வண்ணங்கள் பாடி நின்று ஆடுவார்

அழையாமே அருள் நல்குமே!.

குழையணிந்த காதினை உடையவரே, கொடிய மழு என்னும் வாட்படையை ஒருபாலுள்ள கரத்தில் ஏந்தி ஆள்பவரே, திருவோத்தூரில் பிழை நேராதபடி வண்ணப் பாடல்கள் பல பாடி நின்று ஆடும் அடியார்க்கு அழையாமலே வந்து அருள் நல்குவீராக.

மேல்

(585)
மிக்கார் வந்து விரும்பிப் பலி இடத்

தக்கார் தம் மக்களீர் என்று

உட்காதார் உளரோ? திரு ஓத்தூர்

நக்கீரே! அருள் நல்குமே!.

திருவோத்தூரில் மகிழ்ந்து உறையும் இறைவரே, நீர் பலி கொள்ள வருங்காலத்து, உம் திருமுன் அன்பு மிக்கவராய் விரும்பி வந்து பலியிடுதற்குத் தம் மக்களுள் மகளிரை அனுப்புதற்கு அஞ்சாத தந்தை தாயர் உளரோ? எவ்வாறேனும் ஆக, அவர் தமக்கு அருள் நல்குவீராக.

மேல்

(586)
“தாது ஆர் கொன்றை தயங்கும் முடி உடை

நாதா!” என்று நலம் புகழ்ந்து

ஓதாதார் உளரோ? திரு ஓத்தூர்

ஆதீரே! அருள் நல்குமே!.

திருவோத்தூரில் முதற்பொருளாக விளங்குபவரே! மகரந்தம் பொருந்திய கொன்றை மலர் விளங்கும் திருமுடியை உடைய தலைவரே! என்றழைத்து உமது அழகினைப்புகழ்ந்து ஓதாதவர் உளரோ? அருள் நல்குவீராக.

மேல்

(587)
“என்தான் இம் மலை!” என்ற அரக்கனை

வென்றார் போலும், விரலினால்;

“ஒன்றார் மும்மதில் எய்தவன் ஓத்தூர்”

என்றார் மேல் வினை ஏகுமே.

இக்கயிலைமலை எம்மாத்திரம் என்று கூறிய இராவணனைக் கால்விரலால் வென்றவரும், தம்மோடு மனம் பொருந்தாத திரிபுரத்தசுரர்தம் மும்மதில்களைக் கணையால் எய்து அழித்தவருமாகிய சிவபிரானது திருவோத்தூர் என்று ஊர்ப் பெயரைச் சொன்ன அளவில் சொல்லிய அவர்மேல் உள்ள வினைகள் போகும்.

மேல்

(588)
நன்றா நால் மறையானொடு மாலும் ஆய்ச்

சென்றார் போலும், திசை எலாம்

ஒன்றாய்! உள் எரி ஆய் மிக, ஓத்தூர்

நின்றீரே! உமை நேடியே!.

திருவோத்தூரில் விளங்கும் இறைவரே! நல்லன செய்யும் நான்கு வேதங்களை ஓதுபவனாகிய பிரமன், திருமால் ஆகியோர் எரியுருவாய் நீர் ஒன்றுபட்டுத் தோன்றவும், அறியாராய் திசையனைத்தும் தேடித் திரிந்து எய்த்தனர் அவர்தம் அறிவுநிலையாதோ?

மேல்

(589)
கார் அமண், கலிங்கத் துவர் ஆடையர்

தேரர், சொல் அவை தேறன் மின்!

ஓர் அம்பால் எயில் எய்தவன் ஓத்தூர்ச்

சீரவன், கழல் சேர்மினே!.

கரிய நிறத்தவராகிய சமணர்களும், கலிங்க நாட்டுத்துவர் ஏற்றிய ஆடையை அணிந்த புத்தத் துறவியரும் கூறும் பொய் மொழிகளை நம்பாதீர். முப்புரங்களை ஓரம்பினால் எய்து அழித்தவனாகிய, திருவோத்தூரில் விளங்கும் சிறப்பு மிக்க சிவபிரானின் கழல்களைச் சேர்வீர்களாக.

மேல்

(590)
குரும்பை ஆண்பனை ஈன் குலை ஓத்தூர்

அரும்பு கொன்றை அடிகளை,

பெரும் புகலியுள் ஞானசம்பந்தன் சொல்

விரும்புவார் வினை வீடே.

திருவோத்தூரில், ஆண் பனைகள் குரும்பைக் குலைகளை ஈனும் அற்புதத்தைச் செய்தருளிய கொன்றை அரும்பும் சடைமுடி உடைய இறைவரைப் பெருமை மிக்க திருப்புகலி என்னும் பெயருடைய சீகாழிப் பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றியுரைத்த,

இப்பாமாலையை விரும்பும் அன்பர்களின் வினைகள் அழியும்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(55)
திருமாற்பேறு - பழந்தக்கராகம்

(591)
ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு, உமை

நீறு சேர் திருமேனியர்

சேறு சேர் வயல் தென் திருமாற் பேற்றில்

மாறு இலா மணிகண்டரே.

சேற்று வளம் நிறைந்த வயல்கள் சூழ்ந்த அழகிய திருமாற்பேற்றில் ஒப்பற்ற நீலமணி போன்ற கண்டத்தை உடைய இறைவர், கடலிடத்தே ஊறிப் பொருந்திவந்த நஞ்சினை உண்டு உமையம்மையோடு கூடியவராய்த் திருநரறு பூசிய திருமேனியராய் விளங்குகிறார்.

மேல்

(592)
தொடை ஆர் மா மலர் கொண்டு, இருபோது, உம்மை

அடைவார் ஆம், “அடிகள்!” என

மடை ஆர் நீர் மல்கு மன்னிய மாற்பேறு

உடையீரே! உமை உள்கியே.

வாய்க்கால் மடைகளில் நீர் நிறைந்து விளங்கும் நிலையான திருமாற்பேற்றைத் தமது இருப்பிடமாக உடையவரே, உம்மை நினைந்து சிறந்த மாலைகளைத் தொடுத்து ஏந்திய கையின ராய்க் காலை, மாலை இருபோதும் உம்மைத் தலைவராக எண்ணி அடியவர் அடைகின்றனர்.

மேல்

(593)
“பை ஆரும் அரவம் கொடு ஆட்டிய

கையான்” என்று வணங்குவர்

மை ஆர் நஞ்சு உண்டு மாற்பேற்று இருக்கின்ற

ஐயா! நின் அடியார்களே.

கருநிறம் பொருந்திய நஞ்சை உண்டு தேவர்களைக் காத்தருளிய நீலகண்டராய்த் திருமாற்பேற்றில் வீற்றிருக்கின்ற தலைவரே, உம் அடியவர்கள் படம் பொருந்திய பாம்பைப் பிடித்து ஆட்டும் கைகளை உடையவர் என்று உம்மை வணங்குவார்கள்.

மேல்

(594)
சால மா மலர் கொண்டு, “சரண்!” என்று,

மேலையார்கள் விரும்புவர்

மாலினார் வழிபாடு செய் மாற்பேற்று

நீலம் ஆர் கண்ட! நின்னையே.

திருமால் வழிபாடு செய்து அருள் பெற்றதால் திருமாற்பேறு என வழங்கும் இத்தலத்தில் விளங்கும் நீலநிறம் பொருந்திய கண்டத்தை உடையவரே, நும்மை மேன்மை மிக்க பெரியோர்கள் மிகுதியான நறுமலர்களைக்கொண்டு அர்ச்சித்து உம்மையே சரண் என்று விரும்பி வழிபடுவர்.

மேல்

(595)
“மாறு இலா மணியே!” என்று வானவர்

ஏறவே மிக ஏத்துவர்

கூறனே! குலவும் திரு மாற்பேற்றில்

நீறனே! என்றும் நின்னையே.

உமையம்மையை ஒரு கூற்றாகக் கொண்டவரே, விளங்கும் திருமாற்பேற்றில் வெண்ணீறு பூசி விளங்குபவரே, ஒப்பற்ற மாணிக்கமணியே என்று உம்மையே வானவர் மிகமிக ஏத்தி மகிழ்வர்.

மேல்

(596)
யாதார் இல்லை, ஒன்றும் நின் தன்மையை;

பரவாதார் இல்லை, நாள்களும்;

திரை ஆர் பாலியின் தென் கரை மாற்பேற்று

அரையானே! அருள் நல்கிடே!.

அலைகள் பொருந்திய பாலியாற்றின் தென்கரையில் விளங்கும் திருமாற்பேற்றில் விளங்கும் அரசனே, பொருந்திய நின் பெருந்தன்மையை வியந்து உரையாதார் இல்லை. நாள்தோறும் உன் பெருமைகளைப் பரவாதவர் இல்லை. அருள் நல்குவீராக.

மேல்

(597)
அரசு அளிக்கும் அரக்கன் அவன்தனை

கெடுத்து, அவன் ஒல்கிட

வரம் மிகுத்த எம் மாற்பேற்று அடிகளைப்

பரவிடக் கெடும், பாவமே.

இலங்கை நாட்டை ஆளும் இராவணனின் புகழை மங்கச் செய்து, பின் அவன் பிழை உணர்ந்து வேண்டிய அளவில் அவனுக்கு வரங்கள் பலவற்றையும் மிகுதியாக அளித்தருளிய எமது திரு மாற்பேற்று அடிகளைப் பரவப் பாவம் கெடும்.

மேல்

(598)
இருவர்தேவரும் தேடித் திரிந்து, இனி

ஒருவரால் அறிவு ஒண்ணிலன்,

மருவு நீள்கழல் மாற்பேற்று அடிகளைப்

பரவுவார் வினை பாறுமே.

திருமால் பிரமன் ஆகிய இருவரும் அடிமுடி காணத்தேடித் திரிந்தும் ஒருவராலும் அறிய ஒண்ணாத இயல்பினனாகிய, திருமாற்பேற்றுள் விளங்கும் சிவபிரானுடைய பெருமை விரிந்த திருவடிகளைப் பரவித் துதிப்பார் வினைகள் கெடும்.

மேல்

(599)
தூசு போர்த்து உழல்வார், கையில் துற்று உணும்

நீசர்தம் கொள்ளேலும்!

“தேசம் மல்கிய தென்திருமாற்பேற்றின்

ஈசன்” என்று எடுத்து ஏத்துமே!.

ஆடையை மேனிமேற் போர்த்து உழல்வோரும், கைகளில் உணவை ஏற்று உண்ணும் இழிந்தோருமாகிய புத்த, சமணர்களின் உரைகளை மெய்யெனக் கொள்ளாதீர். புகழ் பொருந்திய அழகிய திருமாற்பேற்றுள் விளங்கும் ஈசன் என்று பெருமானைப் புகழ்ந்து போற்றுமின்.

மேல்

(600)
மன்னி மாலொடு சோமன் பணி செயும்

மன்னும் மாற்பேற்று அடிகளை

மன்னு காழியுள் ஞானசம்பந்தன் சொல்

பன்னவே, வினை பாறுமே.

திருமாலும் சந்திரனும் தங்கியிருந்து பணிசெய்து வழிபட்ட நிலைபேறுடைய திருமாற்பேற்றுள் விளங்கும் இறைவனை நிலைத்த காழி மாநகருள் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய,

இத்திருப்பதிகத்தை ஓதினால் வினைகள் கெடும்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(56)
திருப்பாற்றுறை - பழந்தக்கராகம்

(601)
கார் ஆர் கொன்றை கலந்த முடியினர்,

சீர் ஆர் சிந்தை செலச் செய்தார்

பாரார் நாளும் பரவிய பாற்றுறை

யார், ஆர் ஆதி முதல்வரே.

உலக மக்கள் நாள்தோறும் வந்து வழிபட்டுப் போற்றும், ஆத்தி மலர் அணிந்த திருப்பாற்றுறையில் விளங்கும் ஆதிமுதல்வராகிய பெருமானார் கார்காலத்தே மலரும் கொன்றை மலர் மாலை சூடிய திருமுடியினராய் அன்பு கனிந்த நம் சிந்தையைத் தம்மிடமே செல்லச் செய்தார்.

மேல்

(602)
நல்லாரும் அவர்; தீயர் எனப்படும்

சொல்லார்; நல்மலர் சூடினார்;

பல் ஆர் வெண் தலைச் செல்வர் எம் பாற்றுறை

எல்லாரும் தொழும் ஈசரே.

பற்கள் பொருந்திய வெண்மையான தலையோட்டை அணிந்தவரும், எல்லாராலும் தொழப்படுபவருமாகிய எம் திருப்பாற்றுறைச் செல்வராகிய ஈசர், நல்லவருக்கு நல்லவராவர். தீயை ஏந்தியதால் தீயர் எனவும் படுவார். அவர் நல்ல மலரைச் சூடியவர்.

மேல்

(603)
விண் ஆர் திங்கள் விளங்கும் நுதலினர்,

எண்ணார் வந்து, என் எழில் கொண்டார்

பண் ஆர் வண்டு இனம் பாடல் செய் பாற்றுறை

யுள் நாள்நாளும் உறைவரே.

இயற்கையில் பண்ணிசை போல முரலும் வண்டினங்கள் பாடும் திருப்பாற்றுறையுள் எக்காலத்தும் உறைபவரும், விண்ணகத்தே தவழும் திங்கள் விளங்கும் திருமுடியினரும் ஆகிய இறைவர் என் இதயத்தில் இருப்பவராய் வந்து என் எழில்நலம் அனைத்தையும் கவர்ந்தார்.

மேல்

(604)
பூவும் திங்கள் புனைந்த முடியினர்,

ஏவின் அல்லார் எயில் எய்தார்

பாவம் தீர் புனல் மல்கிய பாற்றுறை,

ஓ! என் சிந்தை ஒருவரே.

மூழ்கியவருடைய பாவங்களைப் போக்கும் தீர்த்த நலம் உடைய திருப்பாற்றுறையுள் மலர்களையும் பிறைமதியையும் புனைந்த திருமுடியினராய்க் கணையொன்றால் பகைவராய் வந்தடைந்த அசுரர்களின் முப்புரங்களை அழித்த இறைவரே என் மனம் பிறவற்றில் செல்லாது ஓவுதல் செய்த ஒருவராவர்.

மேல்

(605)
மாகம் தோய் மதி சூடி, மகிழ்ந்து, எனது

ஆகம் பொன்நிறம் ஆக்கினார்

பாகம் பெண்ணும் உடையவர், பாற்றுறை

நாகம் பூண்ட நயவரே.

தம் திருமேனியின் ஒருபாதியாய்ப் பெண்ணைக் கொண்டுள்ளவரும், நாகத்தை அணிகலனாகப் பூண்டவரும் ஆகிய, திருப்பாற்றுறை இறைவர், வானகத்தே தோயும் பிறைமதியை முடியிற் சூடி மகிழ்ந்து வந்து எனது உடலைப் பொன்னிறமான பசலை பூக்கச் செய்தவராவார்.

மேல்

(606)
போது பொன் திகழ் கொன்றை புனை முடி

நாதர் வந்து, என் நலம் கொண்டார்

பாதம் தொண்டர் பரவிய பாற்றுறை

வேதம் ஓதும் விகிர்தரே.

தொண்டர்கள் தம் திருவடிகளைப் பரவத் திருப்பாற்றுறையுள் விளங்கும் வேதங்களை அருளிய விகிர்தரும், பொன்போல் திகழும் கொன்றை மலர்களைப் புனைந்த திருமுடியினை உடைய தலைவருமாகிய சிவபிரானாரே என்பால் வந்து என் அழகினைக் கவர்ந்தவராவார்.

மேல்

(607)
வாடல் வெண்தலை சூடினர், மால்விடை

கோடல் செய்த குறிப்பினார்

பாடல் வண்டு இனம் பண் செயும் பாற்றுறை

ஆடல் நாகம் அசைத்தாரே.

பாடல்கள் பலவற்றைப் பாடும் வண்டினங்கள் சிறந்த பண்களை மிழற்றும் திருப்பாற்றுறையுள், ஆடுதலில் வல்ல நாகப்பாம்பைத் திருமேனியில் பல இடங்களிலும் கட்டியுள்ள இறைவர், உலர்ந்த வெள்ளிய தலையோடுகளை மாலையாகச் சூடியவராவர். பெரிய இடபத்தின் மேல் ஏறி வந்து என் அழகைக் கவர்ந்து செல்லும் குறிப்பினர்.

மேல்

(608)
வெவ்வ மேனியராய், வெள்ளை நீற்றினர்;

எவ்வம் செய்து, என் எழில் கொண்டார்;

பவ்வநஞ்சு அடை கண்டர் எம் பாற்றுறை

மவ்வல் சூடிய மைந்தரே.

கடலிடைத் தோன்றிய நஞ்சடைந்த கண்டரும், முல்லை மலர் சூடிய மைந்தரும் ஆகிய எம் திருப்பாற்றுறை இறைவர் விரும்பத்தக்க திருமேனியராய், வெண்மையான திருவெண்ணீறு அணிந்தவராய் வந்து, என் எழிலைக் கொண்டு பின் பிரிவுத்துன்பம் தந்தவராவர்.

மேல்

(609)
ஏனம் அன்னமும் ஆனவருக்கு எரி

ஆன வண்ணத்து எம் அண்ணலார்

பானல் அம்மலர் விம்மிய பாற்றுறை

வான வெண்பிறை மைந்தரே.

நீலோற்பல மலர்கள் நிறைந்த நீர் நிலைகளோடு கூடிய திருப்பாற்றுறையுள் வானகத்தே விளங்கும் வெண்மையான பிறை மதியைச் சூடி எழுந்தருளியுள்ள மைந்தராகிய இறைவர், பன்றியும், அன்னமுமாய் அடிமுடி தேடிய திருமால், பிரமன் ஆகியோருக்கு அழலுருவமாய் ஓங்கி நின்ற அண்ணலார் ஆவார்.

மேல்

(610)
வெந்த நீற்றினர், வேலினர், நூலினர்,

வந்து என் நன் நலம் வௌவினார்

பைந் தண் மாதவி சூழ்தரு பாற்றுறை

மைந்தர்தாம் ஓர் மணாளரே.

பசுமையான குளிர்ந்த குருக்கத்திக் கொடிகள் சூழ்ந்துள்ள திருப்பாற்றுறையுள் எழுந்தருளியுள்ள மைந்தராகிய இறைவர், மேனி மீது வெந்த நீறு பூசியவராய், கையில் வேலேந்தியவராய், மார்பில் பூணூல் அணிந்தவராய் வந்து என் அழகினை வவ்விச் சென்றார். அவர் முன்னரே மலைமகளை மணந்த மணாளர் ஆவார்.

மேல்

(611)
பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய

பத்து-நூறு பெயரனை,

பத்தன் ஞானசம்பந்தனது இன் தமிழ்

பத்தும் பாடிப் பரவுமே!.

அடியவர்கள் நிறைந்துள்ள திருப்பாற்றுறையுள் எழுந்தருளிய ஆயிரம் திருநாமங்களையுடைய இறைவனை, பக்தனாகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய,

இனிய தமிழ்ப் பாடல்களாகிய இப்பத்தையும் பாடிப் பரவுமின்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(57)
திருவேற்காடு - பழந்தக்கராகம்

(612)
ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்; இவன் ஒளி

வெள்ளியான் உறை வேற்காடு

உள்ளியார் உயர்ந்தார்; இவ் உலகினில்

தெள்ளியார்; அவர் தேவரே.

மிகவும் சிறந்த மெய்ப்பொருளை அன்போடு எண்ணினால் அவ்வெண்ணம் நற்கதிக்கு வாயிலாம். அத்தகைய மெய்ப்பொருளாய் வெண்மையான ஒளி வடிவினனாய் திருவேற்காட்டில் எழுந்தருளியுள்ள இவ்விறைவனை நினைந்தவர்கள் இவ்வுலகினில் உயர்ந்தவர் ஆவர். அவனைக் கண்டு தெளிந்த அவர்கள் தேவர்களாவர்.

மேல்

(613)
ஆடல் நாகம் அசைத்து, அளவு இல்லது ஓர்

வேடம் கொண்டவன் வேற்காடு

பாடியும் பணிந்தார் இவ் உலகினில்

சேடர் ஆகிய செல்வரே.

ஆடுதற்குரிய பாம்பினை இடையிற் கட்டிய, அளவற்ற பல்வேறு வடிவங்களைக் கொண்டருளிய திருவேற்காட்டு இறைவனைப் பாடிப் பணிந்தவர்கள், இவ்வுலகினில் பெருமை பொருந்திய செல்வர்கள் ஆவர்.

மேல்

(614)
பூதம் பாடப் புறங்காட்டு இடை ஆடி,

வேதவித்தகன், வேற்காடு,

போதும் சாந்தும் புகையும் கொடுத்தவர்க்கு

ஏதம் எய்துதல் இல்லையே.

பூதகணங்கள் பாட, சுடுகாட்டின்கண் நடனம் ஆடி, வேதங்களை அருளிய வித்தகனாக விளங்கும் திருவேற்காட்டு இறைவற்கு மலர்களும், சந்தனமும், நறும்புகை தரும் பொருள்களும் கொடுத்தவர்களுக்குத் துன்பங்கள் வருதல் இல்லையாம்.

மேல்

(615)
ஆழ்கடல் எனக் கங்கை கரந்தவன்,

வீழ்சடையினன், வேற்காடு,

தாழ்வு உடை மனத்தால், பணிந்து ஏத்திட,

பாழ்படும், அவர் பாவமே.

ஆழமான கடல் என்று சொல்லத்தக்க கங்கை நதியை மறைத்துக்கொண்ட, விழுது போன்ற சடைமுடியினை உடைய திருவேற்காட்டு இறைவனைப் பணிவான மனத்தோடு வணங்கித்துதிப்பவர்களின் பாவங்கள் அழிந்தொழியும்.

மேல்

(616)
காட்டினானும், அயர்த்திடக் காலனை

வீட்டினான், உறை வேற்காடு

பாட்டினால் பணிந்து ஏத்திட வல்லவர்

ஓட்டினார், வினை ஒல்லையே.

மார்க்கண்டேயர், சிவனே முழுமுதல்வன் எனக் காட்டினாலும், அதனை உணராது மயங்கி அவர் உயிரைக் கவர வந்த அக்காலனை அழித்த சிவபிரான் உறையும் திருவேற்காட்டைப் பாடல்கள் பாடிப் பணிந்து வழிபட வல்லவர் தம் வினைகளை விரைவில் ஓட்டியவர் ஆவர்.

மேல்

(617)
தோலினால் உடை மேவ வல்லான், சுடர்

வேலினான், உறை வேற்காடு

நூலினால் பணிந்து ஏத்திட வல்லவர்,

மாலினார், வினை மாயுமே.

தான் கட்டியும் போர்த்தும் உள்ள ஆடைகளைத் தோலினால் அமைந்தனவாகக் கொண்டுள்ள இறைவன் ஒளி பொருந்திய வேலோடு உறையும் திருவேற்காட்டை, ஆகம நூல்களில் விதித்தவாறு வழிபட்டுத் துதிக்க வல்லவர்களாகிய ஆன்மாக்களைப் பற்றிய மயங்கச் செய்யும் வினைகள், மாய்ந்தொழியும்.

மேல்

(618)
மல்லல் மும்மதில் மாய்தர எய்தது ஓர்

வில்லினான் உறை வேற்காடு

சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்

செல்ல வல்லவர், தீர்க்கமே.

வளமை பொருந்திய முப்புரங்களும் அழிந்தொழியுமாறு கணை எய்த ஒப்பற்ற மேரு வில்லை ஏந்திய சிவபிரான் உறையும் திருவேற்காட்டைப் புகழ்ந்து சொல்ல வல்லவர்கள் சுருங்கா மனத்தினராவர். அங்குச் சென்று தரிசிக்க வல்லவர் நீண்ட ஆயுள் பெறுவர்.

மேல்

(619)
மூரல் வெண் மதி சூடும் முடி உடை

வீரன் மேவிய வேற்காடு

வாரம் ஆய் வழிபாடு நினைந்தவர்

சேர்வர், செய் கழல்; திண்ணமே.

மிக இளைய வெண்மையான பிறைமதியைச் சூடும் திருமுடியை உடைய வீரனாகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள திருவேற்காட்டை, அன்போடு வழிபட நினைந்தவர். அப்பெருமானின் சிவந்த திருவடிகளைத் திண்ணமாகச் சேர்வர்.

மேல்

(620)
பரக்கினார் படு வெண் தலையில் பலி

விரக்கினான் உறை வேற் காட்டூர்,

அரக்கன் ஆண்மை அடரப்பட்டான் இறை

நெருக்கினானை நினைமினே!.

பிரமனின் தலையோட்டில் பலியேற்கின்ற சமர்த்த னாகிய சிவபிரான் உறையும் திருவேற்காட்டில் அரக்கன் ஆகிய இராவணனின் ஆண்மையை அடர்த்துக் கால்விரலால் சிறிதே ஊன்றி நெருக்கிய அவனை நினைமின்கள்.

மேல்

(621)
மாறு இலா மலரானொடு மால் அவன்

வேறு அலான் உறை வேற்காடு

ஈறு இலா மொழியே மொழியா எழில்

கூறினார்க்கு இல்லை, குற்றமே.

ஒப்பற்ற தாமரை மலர் மேல் உறையும் நான்முகன், திருமால் ஆகியவர்களை வெற்றி கொள்வானாகிய சிவன் உறையும் திருவேற்காட்டு இறைவனைப் பற்றிய மொழியை ஈறிலா மொழியாக, அப்பெருமானுடைய அழகிய நலங்களைக் கூறுபவர்களுக்குக் குற்றமில்லை.

மேல்

(622)
விண்ட மாம்பொழில் சூழ் திரு வேற்காடு

கண்டு, நம்பன் கழல் பேணி,

சண்பை ஞானசம்பந்தன் செந்தமிழ்

கொண்டு பாட, குணம் ஆமே.

விரிந்த மலர்களையுடைய மாஞ்சோலைகள் சூழ்ந்த திருவேற்காட்டை அடைந்து, அங்கெழுந்தருளியுள்ள இறைவன் திருவடிகளைப் பரவி, சீகாழிப் பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் உரைத்த ,

இப்பதிகச் செந்தமிழ் கொண்டு பாடிப் போற்றுவார்க்கு நன்மைகள் விளையும்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(58)
திருக்கரவீரம் - பழந்தக்கராகம்

(623)
அரியும், நம் வினை உள்ளன ஆசு அற

வரி கொள் மாமணி போல் கண்டம்

கரியவன், திகழும் கரவீரத்து எம்

பெரியவன், கழல் பேணவே.

வரிகள் அமைந்த சிறந்த நீலமணி போலக் கண்டம் கறுத்தவனாய், விளங்கும் திருக்கரவீரத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானாகிய இறைவன் திருவடிகளைத் துதித்தால் நம் வினைகளாக உள்ளன யாவும் முற்றிலும் கழியும்.

மேல்

(624)
தங்குமோ, வினை தாழ்சடை மேலவன்,

திங்களோடு உடன்சூடிய

கங்கையான், திகழும் கரவீரத்து எம்

சங்கரன், கழல் சாரவே?.

தாழ்ந்து தொங்கும் சடைமுடிகளை உடைய உயர்ந்தோனாய் இளம்பிறையோடு கங்கையை உடனாகச் சூடிய, திருக் கரவீரத்தில் விளங்கும் சங்கரன் திருவடிகளை வழிபட்டால் நம்மைப் பற்றிய வினைகள் தங்கா.

மேல்

(625)
ஏதம் வந்து அடையா, இனி நல்லன

பூதம் பல்படை ஆக்கிய

காதலான், திகழும் கரவீரத்து எம்

நாதன், பாதம் நணுகவே.

நல்லனவாகிய பூத கணங்களைப் பல்வகைப் படைகளாக அமைத்துக் கொண்டுள்ள அன்பு வடிவினனும் விளங்கும் திருக்கரவீரத்தில் எழுந்தருளிய எம் நாதனுமான சிவபெருமான் திருவடிகளை அடைவோரைத் துன்பங்கள் வந்தடையமாட்டா.

மேல்

(626)
பறையும் நம் வினை உள்ளன பாழ்பட

மறையும் மாமணி போல் கண்டம்

கறையவன், திகழும் கரவீரத்து எம்

இறையவன், கழல் ஏத்தவே.

நீலமணி போலக் கண்டத்தில் கறையுடையவனும், விளங்கும் திருக்கரவீரத்தில் உறையும் எம் இறைவனுமாகிய பெருமான் திருவடிகளை ஏத்த நம் வினைகள் நீங்கும். சஞ்சிதமாக உள்ளவும் மறையும்.

மேல்

(627)
பண்ணின் ஆர் மறை பாடலன், ஆடலன்,

விண்ணின் ஆர் மதில் எய்த முக்

கண்ணினான், உறையும் கரவீரத்தை

நண்ணுவார் வினை நாசமே.

சந்த இசையமைப்புடன் கூடிய வேதங்களைப் பாடியும் ஆடியும் மகிழ்பவரும், வானகத்தில் சஞ்சரித்த மும்மதில் களையும் எய்தழித்த மூன்றாம் கண்ணை உடையவரும் ஆகிய சிவபிரானார் எழுந்தருளிய திருக்கரவீரத்தை அடைவார் வினைகள் நாசமாம்.

மேல்

(628)
நிழலின் ஆர் மதி சூடிய நீள் சடை

அழலினார், அனல் ஏந்திய

கழலினார், உறையும் கரவீரத்தைத்

தொழ வல்லார்க்கு இல்லை, துக்கமே.

ஒளி பொருந்திய பிறைமதியைச்சூடிய நீண்ட சடைமுடியினரும், அழலைக் கையில் ஏந்தியவரும் வீரக்கழலை அணிந்தவரும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய திருக்கரவீரத்தைத் தொழவல்லவர்கட்குத் துக்கம் இல்லை.

மேல்

(629)
வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன்,

அண்டன், ஆர் அழல் போல் ஒளிர்

கண்டனார் உறையும் கரவீரத்துத்

தொண்டர்மேல் துயர் தூரமே.

தீயவர்களாகிய அசுரர்களின் முப்புரங்களும் அழிந்தொழியுமாறு கணை எய்தவரும், அனைத்து உலகங்களின் வடிவாக விளங்குபவரும், விடம் போல ஒளிவிடும் கண்டத்தை உடைய வரும் ஆகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள திருக்கரவீரத்துத் தொண்டர்களைப் பற்றிய துயரங்கள் தூர விலகும். அழல் - தீப்போன்ற கொடிய விடம்.

மேல்

(630)
“புனல் இலங்கையர் கோன் முடிபத்து இறச்

சின வல் ஆண்மை செகுத்தவன்,

கனலவன், உறைகின்ற கரவீரம்”

என வல்லார்க்கு இடர் இல்லையே.

கடலால் சூழப்பட்ட இலங்கை மக்களின் தலைவனாகிய இராவணனின் தலைகள் பத்தும் நெரியுமாறு செய்து, கோபத்தோடு கூடிய அவனது ஆண்மையை அழித்தவனாய், எரிபோலும் உருவினன் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய கரவீரம் என்று சொல்ல வல்லார்க்கு இடர் இல்லை.

மேல்

(631)
வெள்ளத் தாமரையானொடு மாலும் ஆய்த்

தெள்ள, தீத்திரள் ஆகிய

கள்ளத்தான் உறையும் கரவீரத்தை

உள்ளத் தான் வினை ஓயுமே.

நீரில் தோன்றும் தாமரை மலர் மேல் உறையும் நான் முகனோடு திருமாலும் உண்மையைத் தெளியுமாறு ஒளிப் பிழம்பாகத் தோன்றி அவர்கள் அறியாவாறு கள்ளம் செய்தவனாகிய சிவபிரான் உறையும் திருக்கரவீரத்தை நினைந்து போற்ற வினைகள் நீங்கும்.

மேல்

(632)
செடி அமணொடு சீவரத்தார் அவர்

கொடிய வெவ் கொள்ளேன் மின்!

கடியவன் உறைகின்ற கரவீரத்து

அடியவர்க்கு இல்லை, அல்லலே.

முடைநாற்றம் வீசும் அமணர்களோகாவியாடை அணிந்து திரியும் புத்தர்கள் ஆகியோர்தம் கொடிய வெம்மையான உரைகளை மெய்யெனக் கொள்ளாதீர். அனைத்துலகையும் காத்தருள் கின்றவனாகிய சிவபிரான் உறைகின்ற திருக்கரவீரத்து அடியவர்க்கு அல்லல் இல்லை.

மேல்

(633)
வீடு இலான், விளங்கும் கரவீரத்து எம்

சேடன் மேல் கசிவால்-தமிழ்

நாடும் ஞானசம்பந்தன் சொல் இவை

பாடுவார்க்கு இல்லை, பாவமே.

அழிவில்லாதவனாக விளங்கும் திருக்கரவீரத்துப் பெரியோன் மேல் அன்புக்கசிவால் தமிழை விரும்பும் ஞானசம்பந்தன் சொல்லிய இத்திருப்பதிகப் பாடல்களாகிய,

இவற்றைப் பாடுவோர்க்குப் பாவம் இல்லை.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(59)
திருத்தூங்கானைமாடம் - பழந்தக்கராகம்

(634)
ஒடுங்கும் பிணி, பிறவி, கேடு, என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழியத் தவம்

அடங்கும் இடம் கருதி நின்றீர் எல்லாம், அடிகள் அடி நிழல் கீழ் ஆள் ஆம் வண்ணம்,

கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும் கெழு மனைகள் தோறும் மறையின் ஒலி

தொடங்கும் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானைமாடம் தொழுமின்களே!.

வெளிப்படுதற்குரிய காலம் வருந்துணையும் ஒடுங்கியிருக்கும் நோய் இனிவரும் பிறப்புகள், துன்பங்கள் ஆகியனவாய இவைகளை உடைய இவ்வாழ்க்கை நீங்கத்தவம் புரிதற்குரிய இடத்தை விரும்பி நிற்கும் நீவிர் எல்லீரும் அகழும் மதிலும் சூழ்ந்து எல்லா இடங்களிலும் உள்ள வீடுகள் தோறும் வேதங்களின் ஒலிகள் ஒலிக்கும் கடந்தை என்னும் ஊரில் உறையும் அடிகளாகிய சிவபெருமானின் அடிநிழலின்கீழ் அவருக்கு ஆளாகுமாறு அவர் கோயிலாகிய திருத்தூங்கானைமாடம் செல்வீராக.

மேல்

(635)
பிணி நீர சாதல், பிறத்தல், இவை பிரியப் பிரியாத பேர் இன்பத்தோடு

அணி நீர மேல் உலகம் எய்தல் உறில், அறிமின்! குறைவு இல்லை; ஆன் ஏறு உடை

மணி நீலகண்டம் உடைய பிரான் மலைமகளும் தானும் மகிழ்ந்து வாழும்

துணி நீர்க் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!.

பிணிகளின் தன்மையினை உடைய சாதல் பிறத்தல் ஆகியன நீங்க, எக்காலத்தும் நீங்காத பேரின்பத்தோடு கூடிய அழகிய தன்மை வாய்ந்த, மேலுலகங்களை நீவிர் அடைய விரும்பினால், விடையேற்றை ஊர்தியாகவும், கொடியாகவும் உடையவனும், நீலமணி போன்ற கண்டத்தினைக் கொண்டவனும் ஆகிய சிவபிரான் மலைமகளும் தானுமாய் மகிழ்ந்து வாழும், தெளிந்த நீரை உடைய கடந்தையில் ஒளியோடு கூடிய திருத்தூங்கானைமாடக் கோயிலை அறிந்து தொழுவீராக. உங்கட்கு யாதும் குறைவில்லை.

மேல்

(636)
சாம் நாளும் வாழ் நாளும் தோற்றம் இவை சலிப்பு ஆய வாழ்க்கை ஒழியத் தவம்

ஆம் ஆறு அறியாது, அலமந்து, நீர் அயர்ந்தும் குறைவு இல்லை; ஆன் ஏறு உடைப்

பூ மாண் அலங்கல் இலங்கு கொன்றை புனல் பொதிந்த புன்சடையினான் உறையும்

தூ மாண் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!.

இறக்கும் நாளும், வாழும் நாளும், பிறக்கும் நாளும் ஆகி்ய இவற்றோடு கூடிய சலிப்பான வாழ்க்கை நீங்கச் செய்யும் தவம் யாதென அறியாது நீவிர் மறந்ததனாலும் யாதும்குறைவில்லை. விடையேற்றை ஊர்தியாகக்கொண்டு மலர்களில் மாட்சிமையுற்று விளங்கும் கொன்றை மாலையும், கங்கையும் தங்கிய சிவந்த சடையினை உடைய சிவபிரான் உறையும் தூய்மையான, மாண்புடைய கடம்பைநகரில் விளங்கும் பெரிய கோயிலாக அமைந்த திருத்தூங்கானை மாடத்தைத் தொழுவீராக. அது ஒன்றே தவத்தின் பயனைத் தரப்போதுமானதாகும்.

மேல்

(637)
ஊன்றும் பிணி, பிறவி, கேடு, என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழியத் தவம்

மான்று மனம் கருதி நின்றீர் எல்லாம், மனம் திரிந்து, மண்ணில் மயங்காது, நீர்

மூன்று மதில் எய்த மூவாச் சிலை முதல்வர்க்கு இடம்போலும் முகில் தோய் கொடி

தோன்றும் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!.

நிலையானநோய், பிறப்பு, இறப்பு, துன்பம் இவற்றை உடைய வாழ்க்கை நீங்கவும், நிலையான வீடு பேற்றைப் பெறவும், தவம் செய்ய விரும்பி மயங்கி நிற்கும் நீவிர் எல்லீரும் மனம் வேறுபட்டு உலகில் மயங்காது, திரிபுரங்களை எய்த அழியாத வில்லை ஏந்தியவரும், உலகின் தலைவருமாகிய சிவபிரானது இடமாக விளங்குவதாய், வானளாவிய கொடிகள் தோன்றும் கடந்தை நகரில் உள்ள பெரிய கோயிலாக அமைந்த திருத்தூங்கானை மாடத்தைத் தொழுவீர்களாக.

மேல்

(638)
மயல் தீர்மை இல்லாத தோற்றம் இவை மரணத்தொடு ஒத்து அழியும் ஆறுஆதலால்,

வியல் தீர மேல் உலகம் எய்தல் உறின், மிக்கு ஒன்றும் வேண்டா; விமலன் இடம்

உயர் தீர ஓங்கிய நாமங்களால், ஓவாது நாளும் அடி பரவல்செய்

துயர் தீர்-கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!.

மயக்கம் நீங்காத பிறப்பிறப்புக்கள் அழியும் வழிகள் ஆதலால் அவற்றின் நீங்கி மேலுலகம் எய்த நீவிர் விரும்பினால் பெரிதாய முயற்சி எதுவும் வேண்டா. எளிய வழியாகச் சிவபிரானது இடமாக விளங்குவதும் நம் துயர்களைத் தீர்ப்பதும் ஆகிய கடந்தை நகரில் உள்ள பெரிய கோயிலாகிய திருத்தூங்கானைமாடத்தை அடைந்து அப்பெருமானுடைய மிக உயர்ந்த திருப்பெயர்களைக் கூறி இடைவிடாது அவன் திருவடிகளைத் தொழுவீர்களாக.

மேல்

(639)
பல்-நீர்மை குன்றி, செவி கேட்பு இலா, படர் நோக்கின் கண் பவளநிற

நன்நீர்மை குன்றி, திரைதோலொடு நரை தோன்றும் காலம் நமக்கு ஆதல் முன்,

பொன் நீர்மை துன்றப் புறம் தோன்றும் நல் புனல் பொதிந்த புன்சடையினான்உறையும்

தொல்-நீர்க் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!.

புலன் நுகர்ச்சிக்குரிய பலதன்மைகளும் குறைந்து காதுகள் கேளாமல் கண்களில், சென்று பற்றும் பார்வைகுன்றிப் பவளம் போன்ற உடல்நிறம் குன்றிச் சுருங்கிய தோலோடு நரை தோன்றும் மூப்புக் காலம் நம்மை வந்து அணுகுமுன் பொன் போன்ற நிறம் பொருந்திய கங்கை தங்கிய செஞ்சடையினையுடைய சிவபிரான் உறையும், பழமையான புகழையுடைய கடம்பை நகர்த் தடங்கோயிலாகிய திருத்தூங்கானை மாடத்தைத் தொழுவீர்களாக.

மேல்

(640)
இறை ஊண் துகளோடு இடுக்கண் எய்தி இழிப்பு ஆய வாழ்க்கை ஒழியத் தவம்

நிறை ஊண் நெறி கருதி நின்றீர் எல்லாம், நீள் கழலே நாளும் நினைமின்!சென்னிப்

பிறை, சூழ் அலங்கல் இலங்கு கொன்றை, பிணையும் பெருமான் பிரியாத நீர்த்

துறை சூழ் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!.

குறைந்த உணவோடு பல்வகைத் துன்பங்களையும் எய்தி வருந்தும் இழிந்த வாழ்க்கை நீங்க, தவமாகிய நிறைந்த உணவைப் பெரும் வழியாதென மயங்கி நிற்கும் நீவிர் அனைவீரும்.முடியில் பிறை சூடியவரும், கொன்றை மாலை அணிந்தவரும் ஆகிய பெருமான் பிரியாது உறைவதாய், நீர்த்துறைகள் சூழ்ந்த கடந்தை நகரிலுள்ள தடங்கோயிலாகிய தூங்கானைமாடத்தை நாளும் நினைந்து தொழுவீர்களாக.

மேல்

(641)
பல் வீழ்ந்து, நாத் தளர்ந்து, மெய்யில் வாடி, பழிப்பு ஆய வாழ்க்கை ஒழியத் தவம்

இல் சூழ் இடம் கருதி நின்றீர் எல்லாம் இறையே பிரியாது எழுந்து போதும்!

கல் சூழ் அரக்கன் கதறச் செய்தான், காதலியும் தானும் கருதி வாழும்,

தொல்சீர்க் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!.

பல்வீழ்ந்து பேச்சுத் தளர்ந்து, உடல் வாடிப் பலராலும் பழிக்கப்படும் இவ்வுலக வாழ்க்கை நீங்கத் தவம் புரியும் இடம் யாதெனக் கருதி நிற்கும் நீவிர் அனைவீரும் சிறிதும் காலம் தாழ்த்தாது எழுந்துவருவீர்களாக. கயிலைமலையைப் பெயர்த்த இராவணனைக் கதறுமாறு அடர்த்த சிவபிரான் மலைமகளும் தானுமாய்க் கருதி வாழும் பழமையான புகழையுடைய கடம்பை நகரில் உள்ள பெருங்கோயிலாகிய தூங்கானைமாடத்தைத் தொழுவீர்களாக.

மேல்

(642)
நோயும் பிணியும் அருந்துயரமும் நுகர் உடைய வாழ்க்கை ஒழியத் தவம்

வாயும் மனம் கருதி நின்றீர் எல்லாம் மலர்மிசைய நான்முகனும், மண்ணும் விண்ணும்

தாய அடி அளந்தான், காணமாட்டாத் தலைவர்க்கு இடம்போலும் தண் சோலை விண்

தோயும் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!.

உடலை வருத்தும் நோய்களும், மனத்தை வருத்தும் கவலைகளும் அவற்றால் விளையும் துன்பங்களும் ஆகியவற்றை நுகர்தற்குரிய இவ்வாழ்க்கை நீங்கத் தவம்புரியும் எண்ணத்துடன் நிற்கும் நீவிர் அனைவீரும் தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும், மண்ணையும், விண்ணையும் அடியால் அளந்த திருமாலும் காண மாட்டாத தலைவனாகிய சிவபிரானுக்குரிய இடமாகிய விண் தோயும் சோலைகளால் சூழப்பட்ட கடந்தை நகரிலுள்ள திருத்தூங்கானை மாடப்பெருங்கோயிலைத் தொழுவீர்களாக.

மேல்

(643)
பகடு ஊர்பசி நலிய, நோய் வருதலால், பழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய, தவம்

முகடு ஊர் மயிர் கடிந்த செய்கையாரும் மூடு துவர் ஆடையாரும் நாடிச் சொன்ன

திகழ் தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா; திருந்திழையும் தானும் பொருந்தி வாழும்

துகள் தீர் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!.

பெரும்பசி நலிய, நோய்கள் வருத்துவதால். பழிக்கத்தக்க இவ்வாழ்க்கை நீங்கத் தவம் செய்ய விரும்பும் நீவிர் தலையை முண்டிதமாக்கித் திரிபவரும், உடலைத் துவராடையால் போர்த்தவரும் ஆகிய சமண புத்தர்களின் ஞானம் நீங்கிய பொய்மொழிகளைத் தெளியாது இறைவன் இறைவியோடு பொருந்தி வாழும் குற்றமற்ற கடந்தை நகர்த் தடங் கோயிலாகிய திருத்தூங்கானை மாடத்தைத் தொழுவீர்களாக.

மேல்

(644)
மண் ஆர் முழவு அதிரும் மாட வீதி வயல் காழி ஞானசம்பந்தன், நல்ல

பெண்ணாகடத்துப் பெருங்கோயில் சேர் பிறை உரிஞ்சும் தூங்கானை மாடம் மேயான்

கண் ஆர் கழல் பரவு பாடல் பத்தும் கருத்து உணரக் கற்றாரும் கேட்டாரும் போய்,

விண்ணோர் உலகத்து மேவி வாழும் விதி அதுவே ஆகும்; வினை மாயுமே.

மார்ச்சனையோடு கூடிய முழவு ஒலி செய்யும் மாட வீதிகளைக் கொண்டுள்ள வயல்கள் சூழ்ந்த சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தர் பெண்ணாகடத்தில் பெருங்கோயிலாக விளங்கும் வானளாவிய திருத்தூங்கானைமாடத்து இறைவன் திருவடிகளைப் பரவிப் பாடிய,

பாடல்கள் பத்தையும் கற்றவரும், கேட்டவரும் விண்ணவர் உலகத்தை மேவி வாழ அப்பாடல்களே தவப்பயன்தரும்; வினைகள் மாயும்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(60)
திருத்தோணிபுரம் - பழந்தக்கராகம்

(645)
வண் தரங்கப் புனல் கமல மது மாந்திப் பெடையினொடும்

ஒண் தரங்க இசை பாடும் அளி அரசே! ஒளி மதியத்

துண்டர், அங்கப்பூண் மார்பர், திருத் தோணிபுரத்து உறையும்

பண்டரங்கர்க்கு என் நிலைமை பரிந்து ஒரு கால் பகராயே!.

வளமையான அலைகளோடு கூடிய நீர் நிலைகளில், மலர்ந்த தாமரை மலர்களின் விளைந்த தேனை வயிறார உண்டு, தன் பெண் வண்டோடு களித்து, சிறந்த அலைபோல மேலும் கீழுமாய் அசையும் நடையில் இசைபாடும் அரச வண்டே! என் மேல் பரிவு கொண்டு, ஒளிபொருந்திய இளம்பிறையை முடியிற் சூடியவரும், எலும்பு மாலைகளை அணிகலனாகப் பூண்ட மார்பினருமாகிய, திருத்தோணிபுரத்தில் பண்டரங்கக் கூத்து ஆடும் பரமரைக் கண்டு, அவரிடம் எனது பிரிவாற்றாத நிலையை ஒரு முறையேனும் பகர்வாயாக.

மேல்

(646)
எறி சுறவம் கழிக் கானல் இளங் குருகே! என் பயலை

அறிவு உறாது ஒழிவதுவும் அருவினையேன் பயன் அன்றே!

செறி சிறார் பதம் ஓதும் திருத் தோணிபுரத்து உறையும்

வெறி நிற ஆர் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே!.

எதிர்ப்பட்டனவற்றைக் கொல்லும் இயல்பினவாகிய சுறா மீன்கள் நிறைந்த உப்பங் கழிகளை அடுத்துள்ள கடற்கரைச் சோலைகளில் வாழும் இளங்குருகே! என்னுடைய பசலைத் துன்பத்தை நீ அறியாமல் இருப்பதும் நீக்குதற்கரிய என் வினைப்பயன் அன்றோ? அந்தணச் சிறுவர்கள் பலர் கூடி, பத மந்திரங்களை ஓதிப் பயிலும் திருத்தோணிபுரத்தில் எழுந்தருளியவரும் முடிமீது மணமும் நிறமும் பொருந்திய மலர்க்கண்ணி சூடியவருமான சிவபிரானாருக்கு என் நிலைமையைக் கூறுவாயாக.

மேல்

(647)
பண் பழனக் கோட்டு அகத்து வாட்டம் இலாச் செஞ்சூட்டுக்

கண்பு அகத்தின் வாரணமே! கடுவினையேன் உறு பயலை,

செண்பகம் சேர் பொழில் புடை சூழ் திருத் தோணிபுரத்து உறையும்

பண்பனுக்கு என் பரிசு த்தால் பழி ஆமோ? மொழியாயே!.

பண்படுத்தப்பட்ட வயல்களின் கரைகளில் முளைத்த சம்பங்கோரைகளின் இடையே வாட்டமின்றி மகிழ்வோடு வாழும் சிவந்த உச்சிக் கொண்டையை உடைய கோழியே! சண்பகமரங்கள் நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய இனிய இயல்பினன் ஆகிய இறைவனிடம் மிக்க வினைகளின் பயனாய் அவனைப் பிரிந்து மிகுதியான பசலையால் வருந்தி வாழும் என் நிலைமையை உரைத்தால் உனக்குப் பழி விளையுமோ? மொழிவாயாக.

மேல்

(648)
காண் தகைய செங்கால் ஒண் கழி நாராய்! “காதலால்

பூண் தகைய முலை மெலிந்து பொன் பயந்தாள்” என்று, வளர்

சேண் தகைய மணி மாடத் திருத் தோணிபுரத்து உறையும்

ஆண்தகையாற்கு இன்றே சென்று அடி அறிய உணர்த்தாயே!.

உப்பங்கழியில் வாழும் அழகுமிக்க சிவந்த கால்களை உடைய நாரையே! ‘காதல் மிக்கூர்தலால் அணிகலன்களைப் பொருந்திய அழகிய தனங்கள் மெலிந்து பசலை நோய் பூக்கப் பெற்று உன் அடியவள் வருந்துகிறாள்‘ என்று வானோங்கி வளர்ந்துள்ள அழகிய மாடவீடுகளைக் கொண்டுள்ள திருத்தோணிபுரத்தில் எழுந்தருளியுள்ள ஆண்மக்களில் சிறந்தவராய் விளங்கும் சிவபிரானை இன்றே சென்று அடைந்து என் மெலிவுக்குரிய காரணத்தை அவர் அறியுமாறு உணர்த்துவாயாக.

மேல்

(649)
பாராரே, எனை ஒரு கால்; தொழுகின்றேன், பாங்கு அமைந்த

கார் ஆரும் செழு நிறத்துப் பவளக்கால் கபோதகங்காள்!

தேர் ஆரும் நெடுவீதித் திருத் தோணிபுரத்து உறையும்

நீர் ஆரும் சடையாருக்கு என் நிலைமை நிகழ்த்தீரே!.

அழகியதாய் அமைந்துள்ள கருமை நிறைந்த செழுமையான நிறத்தினையும் பவளம் போன்ற கால்களையும் உடைய புறாக்களே! உம்மைத் தொழுகின்றேன். வண்டு முதலியவற்றிடம் என் நிலைமை கூறியும் அவை என்னை ஒருமுறையேனும் பாராவாயின. நீவிர் தேரோடும் அகலமான வீதிகளை உடைய திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய கங்கை தங்கிய சடையினை உடைய சிவபிரானிடம் சென்று என் பிரிவாற்றாத நிலையைக் கூறுவீர்களாக.

மேல்

(650)
சேற்று எழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர் வீச,

வீற்றிருந்த அன்னங்காள்! விண்ணோடு மண் மறைகள்

தோற்றுவித்த திருத் தோணிபுரத்து ஈசன், துளங்காத

கூற்று உதைத்த, திருவடியே கூடுமா கூறீரே!.

வளமான சேற்றிடை முளைத்து மலர்ந்த தாமரை மலர்மேல் நெற்பயிர்கள் தம் கதிர்களையே சாமரையாகவீச, அரச போகத்தில் வீற்றிருக்கும் அன்னங்களே! விண்ணுலகம் மண்ணுலகம் ஆகியவற்றையும் நான்கு வேதங்களையும் தோற்றுவித்த திருத்தோணி புரத்தில் உறையும் சிவபிரானாருடைய யாராலும் அசைத்தற்கு இயலாத இயமனை உதைத்தழித்த திருவடிகளை யாம் அடையும் வழிகளைக் கூறுவீர்களாக.

மேல்

(651)
முன்றில்வாய் மடல் பெண்ணைக் குரம்பை வாழ், முயங்கு சிறை,

அன்றில்காள்! பிரிவு உறும் நோய் அறியாதீர்; மிக வல்லீர்;

தென்றலார் புகுந்து உலவும் திருத் தோணிபுரத்து உறையும்

கொன்றை வார்சடையார்க்கு என் கூர் பயலை கூறீரே!.

வீடுகளின் வாயிற்பகுதியில் மடல்களை உடைய பனைமரங்களில் கட்டிய கூடுகளில் வாழ்ந்து தம் பெடைகளைத் தழுவும் சிறகுகளோடு கூடிய அன்றிற் பறவைகளே! நீவிர் பிரிவுத் துன்பத்தை அறியமாட்டீர் ஆயினும் நேசிப்பதில் மிக வல்லவர்களாயுள்ளீர்கள். தென்றல் காற்று தவழ்ந்து வரும் திருவீதிகளை உடைய திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய கொன்றை மாலை அணிந்த சடை முடியினை உடைய சிவபிரானுக்கு என்பால் மிகுந்துள்ள பசலை நோயின் இயல்பை எடுத்துரைப்பீர்களாக.

மேல்

(652)
பால் நாறும் மலர்ச் சூதப் பல்லவங்கள் அவை கோதி,

ஏனோர்க்கும் இனிது ஆக மொழியும் எழில் இளங்குயிலே!

தேன் ஆரும் பொழில் புடை சூழ் திருத் தோணிபுரத்து அமரர்

கோனாரை என்னிடைக்கே வர ஒரு கால் கூவாயே!.

பால்மணம் கமழும் மலர்களைக் கொண்ட மாமரத்தின் தளிர்களைக் கோதி உண்டு, எல்லோர்க்கும் இனிதாகக் கூவும் அழகிய இளமையான குயிலே! தேன் நிறைந்த பொழில்கள் புடைசூழ்ந்து விளங்கும் திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய தேவர் தலைவனாகிய சிவபிரான் என்னிடம் வருமாறு ஒருமுறையேனும் கூவுவாயாக.

மேல்

(653)
நல் பதங்கள் மிக அறிவாய்; நான் உன்னை வேண்டுகின்றேன்;

பொற்பு அமைந்த வாய் அலகின் பூவைநல்லாய்! போற்றுகின்றேன்;

சொல்பதம் சேர் மறையாளர் திருத் தோணிபுரத்து உறையும்

வில் பொலி தோள் விகிர்தனுக்கு என் மெய்ப் பயலை விளம்பாயே!.

அழகமைந்த வாயாகிய அலகினை உடைய நாகண வாய்ப் பறவையே! நான் உன்னைத் துதித்துப் போற்றுகிறேன். தலைவனிடம் முறையிடுதற்குரிய செவ்விகளை நீ மிகவும் நன்கறிவாய் ஆதலால், இம்முறையீட்டை உன்பால் தெரிவிக்கிறேன். சொற்களால் அமைந்த பதம் என்னும் இசையமைப்புடைய வேதங்களில் வல்லமறையவர் வாழும் திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய வில்லாற்பொலியும் தோளை உடைய விகிர்தனுக்கு என் உடலில் தோன்றிய பசலை நோயை உரைப்பாயாக.

மேல்

(654)
சிறை ஆரும் மடக்கிளியே! இங்கே வா! தேனோடு பால்

முறையாலே உணத் தருவன்; மொய் பவளத்தொடு தரளம்

துறை ஆரும் கடல் தோணி புரத்து ஈசன், துளங்கும் இளம்

பிறையாளன், திரு நாமம் எனக்கு ஒரு கால் பேசாயே!.

அழகிய சிறகுகளை உடைய இளங்கிளியே! என்பால் வருவாயாக. நான் உனக்குத் தேனையும் பாலையும் மாறி மாறி உண்ணத் தருவேன். நீ செறிந்த பவளங்களையும் முத்துக்களையும் கரைகளில் சேர்ப்பிக்கும் கடல் அருகில் உள்ள திருத்தோணிபுரத்தில் உறையும் இளம்பிறை சூடிய பெருமானின் திருநாமத்தை ‘ஒரு முறை‘ என் செவி குளிரப் பேசுவாயாக.

மேல்

(655)
போர் மிகுத்த வயல்-தோணிபுரத்து உறையும் புரிசடை எம்

கார் மிகுத்த கறைக் கண்டத்து இறையவனை, வண்கமலத்

தார் மிகுத்த வரைமார்பன்-சம்பந்தன்-செய்த

சீர் மிகுத்த தமிழ் வல்லார் சிவலோகம் சேர்வாரே.

தூற்றாப் பொலிகளை மிகுதியாகக் கொண்ட வயல்கள் சூழ்ந்த திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய முறுக்கேறிய சடையினையும் கருமை நிறைந்த விடக்கறை பொருந்திய கழுத்தையும் உடைய சிவபிரானை, வளமையான தாமரை மலர் மாலையைச் சூடிய மலை போன்ற மார்பினனாகிய ஞானசம்பந்தன் போற்றி உரைத்த,

புகழ் பொருந்திய இத்தமிழ்த் திருப்பதிகத்தை ஓதி நினைய வல்லவர் சிவலோகம் சேர்வர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(61)
திருச்செங்காட்டங்குடி - பழந்தக்கராகம்

(656)
நறை கொண்ட மலர் தூவி, விரை அளிப்ப, நாள் தோறும்

முறை கொண்டு நின்று, அடியார் முட்டாமே பணி செய்ய,

சிறை கொண்ட வண்டு அறையும் செங்காட்டங்குடி அதனுள்,

கறை கொண்ட கண்டத்தான்-கணபதீச்சுரத்தானே.

அடியவர்கள் நாள்தோறும் விதிப்படி தேன் பொருந்திய நாண்மலர்களைத் தூவி மணம் கமழச் செய்வித்துத் தவறாமல் நின்று பணி செய்து வழிபட, விடக்கறை பொருந்திய கண்டத்தினனாகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் கோயில் சிறகுகளை உடைய வண்டினங்கள் ஒலிக்கும் திருச்செங்காட்டங் குடியில் விளங்கும் கணபதீச்சரமாகும்.

மேல்

(657)
வார் ஏற்ற பறை ஒலியும் சங்கு ஒலியும் வந்து இயம்ப,

ஊர் ஏற்ற செல்வத்தோடு ஓங்கிய சீர் விழவு ஓவாச்

சீர் ஏற்றம் உடைத்து ஆய செங்காட்டங்குடி அதனுள்,

கார் ஏற்ற கொன்றையான்-கணபதீச்சுரத்தானே.

கார்காலத்தே மலரும் கொன்றை மலரை அணிந்த சிவபிரான், வாரால் இழுத்துக் கட்டப்பட்ட பறைகளின் ஒலியும், சங்குகளின் ஒலியும் வந்திசைக்க ஊர் முழுதும் நிறைந்த செல்வ வளங்களோடு பரவிய புகழை உடைய திருவிழாக்கள் இடைவிடாது நிகழும் திருச் செங்காட்டங்குடியில் விளங்கும் கணபதீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளியுள்ளான்.

மேல்

(658)
வரந்தையான், சோபுரத்தான், மந்திரத்தான், தந்திரத்தான்,

கிரந்தையான், கோவணத்தான், கிண்கிணியான், கையது ஓர்

சிரந்தையான், செங்காட்டங்குடியான், செஞ்சடைச் சேரும்

கரந்தையான், வெண் நீற்றான்-கணபதீச்சுரத்தானே.

கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ள இறைவன், வரந்தை, சோபுரம் ஆகிய தலங்களில் எழுந்தருளியிருப்பவன். வேதாகமங்களை அருளிச் செய்தவன். கோவணம் அணிந்தவன். காலிற் கிண்கிணி அணிந்தவன். கையில் உடுக்கை ஒன்றை ஏந்தியவன். சிவந்த சடைமுடிமீது கரந்தை சூடியவன். திருவெண்ணீறு அணிந்தவன். அப்பெருமான் திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.

மேல்

(659)
தொங்கலும் கமழ்சாந்தும் அகில் புகையும் தொண்டர் கொண்டு,

அங்கையால் தொழுது ஏத்த, அருச்சுனற்கு அன்று அருள்செய்தான்;

செங்கயல் பாய் வயல் உடுத்த செங்காட்டங்குடி அதனுள்,

கங்கை சேர் வார்சடையான்-கணபதீச்சுரத்தானே.

மணம் கமழும் மாலைகளும் சந்தனமும், அகில் புகையும் கொண்டு தொண்டர்கள் தம் அழகிய கைகளால் தொழுது போற்றி வணங்கி அருச்சிக்க அவர்கட்கு உடனே அருள் செய்த பெருமானும் கங்கை தங்கிய நீண்ட சடைமுடியை உடையவனுமாகிய சிவபிரான். சிவந்த கயல் மீன்கள் பாயும் வளமான வயல்கள் புறமாகச் சூழ்ந்த திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.

மேல்

(660)
பாலினால் நறு நெய்யால் பழத்தினால் பயின்று ஆட்டி,

நூலினால் மணமாலை கொணர்ந்து, அடியார் புரிந்து ஏத்த,

சேலின் ஆர் வயல் புடை சூழ் செங்காட்டங்குடி அதனுள்,

காலினால் கூற்று உதைத்தான்-கணபதீச்சுரத்தானே.

தனது இடத் திருவடியால் இயமனை உதைத்தருளிய இறைவன், அடியவர்கள் ஆகம விதிப்படி பாலினாலும் மணம் கமழும் நெய்யாலும், பழவர்க்கங்களாலும் விரும்பி அபிடேகித்து மணமாலைகளைக் கொண்டு வந்து சூட்டி அன்போடு வழிபடுமாறு சேல்மீன்கள் நிறைந்த வளமான வயல்கள் புடை சூழ்ந்துள்ள திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.

மேல்

(661)
நுண்ணியான், மிகப் பெரியான், நோய் உளார் வாய் உளான்,

தண்ணியான், வெய்யான், நம் தலைமேலான், மனத்து உளான்,

திண்ணியான், செங்காட்டங்குடியான், செஞ்சடை மதியக்

கண்ணியான், கண் நுதலான்-கணபதீச்சுரத்தானே.

திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் நுண்ணியன யாவற்றினும் மிக நுண்ணியன். பருமையான பொருள்கள் யாவற்றிலும் மிகப் பருமையானவன். நோய் முதலியவற்றால் வருந்துவோர் தம் வாயினால் துதிக்கப் பெறுபவன். தண்மையானவன். புறச்சமயிகட்கு வெய்யவன். நமதுமுடிமீதும் மனத்தின் கண்ணும் உறைபவன். உறுதியானவன். தனது சிவந்த சடைமீது பிறைமதிக் கண்ணியைச் சூடியவன். நெற்றியில் கண்ணுடையவன்.

மேல்

(662)
மையின் ஆர் மலர் நெடுங்கண் மலைமகள் ஓர் பாகம் ஆம்

மெய்யினான், பை அரவம் அரைக்கு அசைத்தான், மீன் பிறழ் அச்

செய்யின் ஆர் அகன் கழனிச் செங்காட்டங்குடி அதனுள்

கையின் ஆர் கூர் எரியான்-கணபதீச்சுரத்தானே.

கருங்குவளை மலர் போன்ற நீண்ட கண்களை உடைய மலைமகளாகிய பார்வதிதேவியை ஒரு பாகமாகக் கொண்டுள்ள திருமேனியனும், படம் பொருந்திய பாம்பை இடையிலே கட்டியவனும், கையின்கண் மிகுந்துள்ள தீயை ஏந்தியவனுமாகிய சிவபிரான், மீன்கள் விளங்கித் திரியும் வயல்களாலும் அகன்ற கழனிகளாலும் சூழப்பட்ட திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.

மேல்

(663)
தோடு உடையான், குழை உடையான், அரக்கன்தன் தோள் அடர்த்த

பீடு உடையான், போர் விடையான், பெண் பாகம் மிகப் பெரியான்,

சேடு உடையான், செங்காட்டங்குடி உடையான், சேர்ந்து ஆடும்

காடு உடையான், நாடு உடையான்-கணபதீச்சுரத்தானே.

திருச்செங்காட்டங்குடியில் விளங்கும் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ள இறைவன், ஒரு காதில் தோட்டினை அணிந்தவன். பிறிதொரு காதில் குழை அணிந்தவன். கயிலையைப் பெயர்த்த இராவணனின் தோள்களை நெரித்த பெருமை உடையவன், போரிடும் காளையை உடையவன். பெண்ணை ஒரு பாகமாகக் கொண்டவன். மிகவும் பெரியவன். பெருமைகட்கு உரியவன். பூதகணங்களோடு சேர்ந்தாடும் சுடுகாட்டைத் தனக்குரிய இடமாகக் கொண்டவன். நாடுகள் பலவற்றிலும் கோயில் கொண்டு அருள்புரிபவன்.

மேல்

(664)
ஆன் ஊரா உழி தருவான், அன்று இருவர் தேர்ந்து உணரா

வான் ஊரான், வையகத்தான், வாழ்த்துவார் மனத்து உளான்,

தேனூரான், செங்காட்டங்குடியான், சிற்றம்பலத்தான்,

கானூரான், கழுமலத்தான்-கணபதீச்சுரத்தானே.

விடைமிசை ஏறி அதனை ஊர்ந்து பல இடங்களிலும் திரிபவன். முன்னொரு காலத்தே திருமால் பிரமன் ஆகிய இருவர் அடிமுடிகளைத் தேர்ந்து உணர முடியாதவாறு வானளாவ ஓங்கி நின்றவன். இவ்வுலகில் சிற்றம்பலத்திலும் தேனூரிலும் கானூரிலும் கழுமலத்திலும் விளங்குபவன். அவ்விறைவன் திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.

மேல்

(665)
செடி நுகரும் சமணர்களும், சீவரத்த சாக்கியரும்

படி நுகராது அயர் உழப்பார்க்கு அருளாத பண்பினான்;

பொடி நுகரும் சிறுத் தொண்டர்க்கு அருள் செய்யும் பொருட்டாகக்

கடி நகர் ஆய் வீற்றிருந்தான்-கணபதீச்சுரத்தானே.

முடைநாற்றத்தை நுகரும் சமணர்களும், காவியாடை கட்டிய புத்தர்களும் எம்பெருமானுடைய இயல்புகளை அறிந்துணராது துன்புறுபவர்கள். அவர்கட்கு அருள்புரியாத இயல்பினனாகிய சிவபிரான் திருநீற்று மணத்தையே நுகரும் சிறுத்தொண்டர்க்கு அருள்செய்யும் பொருட்டுத் திருச்செங்காட்டங்குடியை விளங்கிய தலமாகக் கொண்டு அங்குள்ள கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.

மேல்

(666)
கறை இலங்கு மலர்க்குவளை கண் காட்டக் கடிபொழிலின்

நறை இலங்கு வயல் காழித் தமிழ் ஞானசம்பந்தன்,

சிறை இலங்கு புனல் படப்பைச் செங்காட்டங்குடி சேர்த்தும்

மறை இலங்கு தமிழ் வல்லார் வான் உலகத்து இருப்பாரே.

கருமை பரவி விளங்கும் மலராகிய குவளை கண்போல் மலர்ந்து விளங்குவதும் மணம் கமழும் சோலைகளிலுள்ள தேனின் மணம் வீசுவதுமான, வயல்களால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் தோன்றிய தமிழ் வல்ல ஞானசம்பந்தன் கரைகளோடு கூடி நீர்நிறைந்து தோன்றும் வயல்கள் சூழ்ந்த திருச்செங்காட்டங்குடியில் விளங்கும் கணபதீச்சரத்து இறைவர் மீது பாடிய,

வேதப் பொருள் நிறைந்த இத் திருப்பதிகத் தமிழ் மாலையை ஓதவல்லவர் வானுலகில் வாழ்வர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(62)
திருக்கோளிலி - பழந்தக்கராகம்

(667)
நாள் ஆய போகாமே, நஞ்சு அணியும் கண்டனுக்கே

ஆள் ஆய அன்பு செய்வோம்; மட நெஞ்சே! அரன் நாமம்

கேளாய்! நம் கிளை கிளைக்கும் கேடு படாத் திறம் அருளிக்

கோள் ஆய நீக்குமவன்-கோளிலி எம்பெருமானே.

அறியாமையை உடைய மனமே! உலகில் உயிர் வாழும் நாள்கள் பல போவதற்கு முன்னரே நீலகண்டனாய சிவபிரானுக்கே அடியவராக விளங்கி அவனிடத்து அன்பு செய்வோம். அவ்வரனது திருநாமங்களைப் பலகாலும் கேட்பாயாக. அவ்வாறு கேட்பின் நம் சுற்றத்தினரும் கிளைத்து இனிது வாழ்வர். துன்பங்கள் நம்மைத் தாக்காதவாறு அருள்புரிந்து நம் மனமாறுபாடுகளையும் அவன் தீர்த்து அருள்வான். அவ்விறைவன் திருக்கோளிலி என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளான்.

மேல்

(668)
ஆடு அரவத்து, அழகு ஆமை, அணி கேழல் கொம்பு, ஆர்த்த

தோடு அரவத்து ஒரு காதன், துணை மலர் நல் சேவடிக்கே

பாடு அரவத்து இசை பயின்று, பணிந்து எழுவார் தம் மனத்தில்

கோடரவம் தீர்க்குமவன்-கோளிலி எம்பெருமானே.

படம் எடுத்து ஆடும் இயல்புடைய பாம்பை நாணாகக் கொண்டு அதில் அழகிய ஆமை ஓட்டையும் பன்றிக் கொம்பையும் கோத்து அணிந்தவனும், தோடாகப் பாம்பையே கொண்டவனும் ஆகிய சிவபிரானது இரண்டு மலர் போன்ற சிவந்த நல்ல திருவடிகளையே பாடலால் வரும் இசையினால் பாடிப் பழகிப் பணிந்து வணங்குபவர்களின் மனக்கோணலைத் தீர்த்தருள்பவன் திருக்கோளிலி எம்பெருமானாவான்.

மேல்

(669)
நன்று நகு நாள்மலரால், நல் இருக்கு மந்திரம் கொண்டு,

ஒன்றி வழிபாடு செயல் உற்றவன் தன் ஓங்கு உயிர்மேல்

கன்றி வரு காலன் உயிர் கண்டு, அவனுக்கு அன்று அளித்தான்-

கொன்றைமலர் பொன் திகழும் கோளிலி எம்பெருமானே.

அழகிதாக மலர்ந்த புதிய பூக்களைக் கொண்டு இருக்கு வேத மந்திரங்களைக் கூறி மன ஒருமையோடு வழிபாடு செய்த மார்க்கண்டேயனின் உயர்ந்த உயிரைக் கவரச் சினந்து வந்த இயமனது உயிரைப் போக்கி அம்மார்க்கண்டேயனுக்கு அன்றே என்றும் பதினாறாண்டாக இருக்கும் வரமளித்தவன், பொன் போல் விளங்கும் கொன்றை மலரைச் சூடிய எம் திருக்கோளிலிப் பெருமானாவான்.

மேல்

(670)
வந்த மணலால் இலிங்கம் மண்ணியின் கண் பால் ஆட்டும்

சிந்தை செய்வோன் தன் கருமம் தேர்ந்து சிதைப்பான் வரும் அத்

தந்தைதனைச் சாடுதலும், “சண்டீசன்” என்று அருளி,

கொந்து அணவும் மலர் கொடுத்தான்-கோளிலி எம்பெருமானே.

மண்ணியாறு கொண்டுவந்த மணலால் அவ்வாற்றின் கரையில் இலிங்கம் அமைத்து மேய்ச்சலுக்குக் கொண்டு வந்த பசுவின் பாலை அபிடேகித்து வழிபட்ட விசாரசருமனது செயலைக் கண்டு அச்சிவபூசையைச் சிதைக்க முற்பட்ட அவன் தந்தையின் காலை அவன் தடிய, அதனைக் கண்டு அவ்விசாரசருமனுக்குச் சண்டீசப் பதவி அருளித் தான் உண்ட கலத்தொடு சூடிய மலர் மாலைகளைச் சூடிக்கொள்ளும் சிறப்பை அளித்தவன், திருக்கோளிலியில் விளங்கும் எமது பெருமான் ஆவான்.

மேல்

(671)
வஞ்ச மனத்து அஞ்சு ஒடுக்கி, வைகலும் நல் பூசனையால்,

“நஞ்சு அமுது செய்து அருளும் நம்பி” எனவே நினையும்

பஞ்சவரில் பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்து உகந்தான்-

கொஞ்சுகிளி மஞ்சு அணவும் கோளிலி எம்பெருமானே.

வஞ்சகமான மனத்தைத் திருத்தி ஐம்பொறிகளை ஒடுக்கி நாள்தோறும் நல்ல பூசையை இயற்றி, நஞ்சினை அமுதாக உண்டருளிய நம்பியே என நினையும் சிவபக்தனும், பாண்டவர் ஐவரில் ஒருவனுமான அருச்சுனனுக்குப் பாசுபதம் என்னும் அத்திரம் வழங்கி மகிழ்ந்தவன். கொஞ்சும் கிளிகள் வானவெளியில் பறக்கும் திருக்கோளிலியில் விளங்கும் எம் பெருமான் ஆவான்.

மேல்

(672)
தாவியவன் உடன் இருந்தும் காணாத தற்பரனை,

ஆவிதனில் அஞ்சு ஒடுக்கி, “அங்கணன்” என்று ஆதரிக்கும்

நா இயல் சீர் நமி நந்தியடிகளுக்கு நல்குமவன்-

கோ இயலும் பூ எழு கோல் கோளிலி எம்பெருமானே.

மூவுலகங்களையும் தாவி அளந்த திருமால் தன்னோடு உடனிருந்தும் திருவடிகளைக் காண இயலாதவாறு சிறந்து நின்ற தற்பரனாகிய சிவபிரானை, ஐம்புலன்களையும் ஒடுக்கிக் கருணையாளனாக உயிர்க்குயிராய்க் காதலித்து வழிபடும் நாவால் புகழத்தக்க பெரியவராகிய நமிநந்தி அடிகளுக்கு அருள் புரிந்தவன். தலைமை சான்றமலர் மரங்களை உடைய திருக்கோளிலியில் விளங்கும் எம் பெருமானாவான்.

மேல்

(673)
கல்-நவிலும் மால்வரையான், கார் திகழும் மாமிடற்றான்,

சொல்-நவிலும் மாமறையான், தோத்திரம் செய் வாயின் உளான்,

மின் நவிலும் செஞ்சடையான்; வெண்பொடியான், அம் கையினில்

கொல்-நவிலும் சூலத்தான்-கோளிலி எம்பெருமானே.

கற்கள் செறிந்த பெரிய கயிலாய மலையில் எழுந்தருளியிருப்பவன். கருமை விளங்கும் பெரிய மிடற்றை உடையவன். புகழ் பொருந்திய வேதங்களை அருளிச் செய்தவன். தன்னைத் தோத்திரிப்பாரின் வாயின்கண் உள்ளவன். மின்னல் போன்ற சிவந்த சடையினை உடையவன். திருவெண்ணீறு அணிந்தவன். அழகிய கையில் கொல்லும் தொழிலில் பழகிய சூலப்படையை ஏந்தியவன். இத்தகையோனாகி விளங்குவோன் திருக்கோளிலியின்கண் விளங்கும் எம்பெருமானாவான்.

மேல்

(674)
அந்தரத்தில்-தேர் ஊரும் அரக்கன் மலை அன்று எடுப்ப,

சுந்தரத் தன் திருவிரலால் ஊன்ற, அவன் உடல் நெரிந்து,

மந்திரத்த மறை பாட, வாள் அவனுக்கு ஈந்தானும்

கொந்து அரத்த மதிச் சென்னிக் கோளிலி எம்பெருமானே.

ஆகாய வெளியிலே தேரை ஊர்ந்து வரும் இராவணன் கயிலை மலையைப் பெயர்த்த போது அழகிய தனது கால் விரலால் சிறிதே ஊன்றிய அளவில், அவன் உடல் நெரிந்து, மந்திரமாக விளங்கும் வேத கீதங்களைப் பாடிப் போற்றச் சந்திரஹாசம் என்னும் வாளை ஈந்து அருள் செய்தவன், கொத்துப் போல இரண்டு முனைகளை உடைய பிறை மதியைச் சூடிய சடையினனாகிய திருக்கோளிலி எம்பெருமானாவான்.

மேல்

(675)
நாணம் உடை வேதியனும் நாரணனும் நண்ண ஒணாத்

தாணு, எனை ஆள் உடையான், தன் அடியார்க்கு அன்பு உடைமை

பாணன் இசை பத்திமையால் பாடுதலும் பரிந்து அளித்தான்-

கோணல் இளம்பிறைச் சென்னிக் கோளிலி எம்பெருமானே.

ஐந்து தலைகளில் ஒன்றை இழந்ததால் நாணமுற்ற வேதியனாகிய பிரமனும், திருமாலும் அணுக முடியாத நிலைத்த பொருள் ஆனவனும் என்னை அடிமையாக உடையவனும், தன் அடியவர்கட்கு அன்பு வடிவானவனும், பாணபத்திரன் பத்திமையோடு பாடப் பரிவோடு அவனுக்கு அருள் புரிந்தவனுமான வளைந்த பிறை மதியைச் சென்னியில் சூடிய சிவபிரான், திருக்கோளிலி எம்பெருமான் ஆவான்.

மேல்

(676)
தடுக்கு அமரும் சமணரொடு தர்க்க சாத்திரத்தவர் சொல்

இடுக்கண் வரும் மொழி கேளாது, ஈசனையே ஏத்துமின்கள்!

நடுக்கம் இலா அமருலகம் நண்ணலும் ஆம்; அண்ணல் கழல்

கொடுக்ககிலா வரம் கொடுக்கும் கோளிலி எம்பெருமானே.

அடியவர்கள் நம்முடைய செல்வம் என நம்பியிருப்பவனாய்ப், பூங்கொம்பு போன்ற அழகிய உமையம்மையின் கணவனாய், அழகிய திருக்கோளிலியில் விளங்கும் எம் பெரு மானை, மணம் விரியும் தண்ணிய சீகாழிப் பதியுள் தோன்றிய ஞான சம்பந்தன் பாடிய இத்தமிழ்ப் பதிகத்தால் இன்பம் பொருந்தப் பாட வல்லவர்கள் அப்பெருமானையே அடைவர்.

மேல்

(677)
நம்பனை, நல் அடியார்கள் “நாம் உடை மாடு” என்று இருக்கும்

கொம்பு அனையாள் பாகன், எழில் கோளிலி எம்பெருமானை,

வம்பு அமரும் தண் காழிச் சம்பந்தன் வண் தமிழ் கொண்டு

இன்பு அமர வல்லார்கள் எய்துவர்கள், ஈசனையே.

அடியவர்கள் நம்முடைய செல்வம் என நம்பியிருப்பவனாய்ப், பூங்கொம்பு போன்ற அழகிய உமையம்மையின் கணவனாய், அழகிய திருக்கோளிலியில் விளங்கும் எம் பெரு மானை, மணம் விரியும் தண்ணிய சீகாழிப் பதியுள் தோன்றிய ஞான சம்பந்தன் பாடிய ,

இத்தமிழ்ப் பதிகத்தால் இன்பம் பொருந்தப் பாட வல்லவர்கள் அப்பெருமானையே அடைவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(63)
திருப்பிரமபுரம் - பல்பெயர்ப்பத்து

(678)
எரி ஆர் மழு ஒன்று ஏந்தி, அங்கை இடுதலையே கலனா,

வரி ஆர் வளையார் ஐயம் வவ்வாய், மா நலம் வவ்வுதியே?

சரியா நாவின் வேதகீதன், தாமரை நான்முகத்தன்,

பெரியான், பிரமன் பேணி ஆண்ட பிரமபுரத்தானே!.

உச்சரிப்பு தவறாதவாறு நாவினால் வேத கீதங்களைப் பாடுபவனும், தாமரை மலர்மேல் விளங்குவோனும் ஆகிய நான்கு திருமுகங்களை உடைய பெரியவனாகிய பிரமன் விரும்பி வழிபட்டு ஆட்சிபுரிந்த பிரமபுரத்தில் விளங்கும் இறைவனே! எரியும் மழு ஆயுதத்தைக் கையில் ஏந்தி அழகிய கையில் பிரமனது ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்து கொண்ட மண்டை ஓட்டையே உண்கல னாகக் கொண்டு வீதிகள்தோறும் பலி ஏற்பது போல் வந்து வரிகளை உடைய வளையல்களை அணிந்த இளம் பெண்கள் தரும் பிச்சையை ஏலாது அவர்களது மிக்க அழகைக் கவர்ந்து செல்கின்றாயே! இது நீதிதானா?

மேல்

(679)
பியல் ஆர் சடைக்கு ஓர் திங்கள் சூடி, பெய் பலிக்கு என்று, அயலே

கயல் ஆர் தடங்கண் அம் சொல் நல்லார் கண் துயில் வவ்வுதியே?

இயலால் நடாவி, இன்பம் எய்தி, இந்திரன் ஆள் மண்மேல்

வியல் ஆர் முரசம் ஓங்கு செம்மை வேணுபுரத்தானே!.

இந்திரன் விண்ணுலகை இழந்து மண்ணுலகம் வந்து முறைப்படி ஆட்சி நடத்தி மகிழ்வெய்தி வழிபட்டு வாழ்ந்த சிறப்பினதும், பெரிதாய முரசுகள் ஓங்கி ஒலிப்பதும் நீதி நிலை பெற்றதும் ஆகிய வேணுபுரத்தில் எழுந்தருளிய இறைவனே, கங்கை தங்கிய சடைமுடியில் ஒரு திங்களைச் சூடி மகளிர்இடும் பலியை ஏற்பதற்கு என்றே வந்து அதனின் வேறாய் மீன் போன்ற தடங்கண்களையும் அழகிய சொற்களையும் உடைய இளம்பெண்களின் கண்கள் துயில் கொள்வதைக் கவர்ந்து அவர்களை விரக நோய்ப் படுத்தல் நீதியோ?

மேல்

(680)
நகல் ஆர் தலையும் வெண்பிறையும் நளிர் சடை மாட்டு, அயலே

பகலாப் பலி தேர்ந்து, ஐயம் வவ்வாய், பாய் கலை வவ்வுதியே?

அகலாது உறையும் மா நிலத்தில் அயல் இன்மையால், அமரர்

புகலால் மலிந்த பூம் புகலி மேவிய புண்ணியனே!.

இம்மாநிலத்தில் தம்மை அடைக்கலமாக ஏற்போர் பிறர் இன்மையால் தேவர்கள் தமக்குப் புகலிடமாய் வந்தடைந்த சிறப்பினதும், அவர்கள் அகலாது உறைவதுமாகிய அழகிய புகலி நகரில் மேவிய புண்ணியனே! சிரிக்கும் தலையோட்டையும் வெண்மையான பிறை மதியையும் குளிர்ந்த சடையில் அணிந்து பகற்போதில் பலி ஏற்பது போல் வந்து, மகளிர்தரும் பிச்சைப் பொருள் கொள்ளாது அவர்கட்கு விரகதாபம் அளித்து, அதனால் அவர்கள் அணிந்துள்ள ஆடை முதலியன, நெகிழும்படி செய்து போதல் நீதியோ?

மேல்

(681)
சங்கோடு இலங்கத் தோடு பெய்து, காதில் ஒர் தாழ்குழையன்,

அம் கோல்வளையார் ஐயம் வவ்வாய், ஆய்நலம் வவ்வுதியே?

செங்கோல் நடாவிப் பல் உயிர்க்கும் செய் வினை மெய் தெரிய,

வெங் கோத் தருமன் மேவி ஆண்ட வெங்குரு மேயவனே!.

கொடிய அரசன் எனப்படும் எமதருமராசன் தானும் குருவாகிச் செங்கோல் ஆட்சியை நடத்தித் தான் செய்யும் செயல்கள் நீதிநெறிக்கு உட்பட்டவை என்ற உண்மை எல்லோர்க்கும் தெரியுமாறு செங்கோல் முறைகளை வந்து கற்று அருள் புரிந்து ஆண்ட வெங்குரு என்னும் தலத்தில் எழுந்தருளியவனே! சங்கக் குண்டலத்தோடு விளங்குமாறு தோடணிந்தும் ஒரு காதில் தாழும் குழையணிந்தும் பலி ஏற்பதற்கென்று வந்து அழகிய திரண்ட வளையல்களை அணிந்த இளம் பெண்களின் அழகினைக் கவர்ந்து செல்லல் நீதியோ?

மேல்

(682)
தணி நீர் மதியம் சூடி, நீடு தாங்கிய தாழ்சடையன்,

பிணி நீர் மடவார் ஐயம் வவ்வாய், பெய் கலை வவ்வுதியே?

அணி நீர் உலகம் ஆகி எங்கும் ஆழ்கடலால் அழுங்க,

துணி நீர் பணிய, தான் மிதந்த தோணிபுரத்தானே!.

மண்ணுலகம் அழகிய நீருலகம் ஆகி, அனைத்திடங்களும் ஆழமான கடலால் மூழ்கி வருந்தும் அவ்வேளையில், அச்சம் தரும் அக்கடல் பணியுமாறு தான் மட்டும் அவ்வூழி வெள்ளத்தில் அழியாது மிதந்த தோணிபுரத்து இறைவனே! தன்னை வந்து பணிந்த மதியைச் சூடி அம்மதியை நெடிது நாள் காத்தருளிய, தாழ்ந்து தொங்கும் சடைமுடியை உடையவனாய், காமநோயால் வருந்தும் மகளிர் பால் சென்று அவர்கள் தரும் பிச்சையை ஏலாது அவர்களின் ஆடைகளை நிலைகுலையச் செய்தல் நீதியாகுமா ?

மேல்

(683)
கவர் பூம்புனலும் தண் மதியும் கமழ் சடை மாட்டு, அயலே

அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாய், ஆய் நலம் வவ்வுதியே?

அவர் பூண் அரையர்க்கு ஆதி ஆய அடல் மன்னன் ஆள் மண்மேல்

தவர் பூம் பதிகள் எங்கும் ஓங்கும் தங்கு தராயவனே!.

அணிகலன்களை அணிந்த அரசர்களாகிய அவர்க்கெல்லாம் தலைவனாகிய வலிமை பொருந்திய மன்னனாகிய திருமால் வராக அவதாரத்தில் இரண்ய கசிபுவைக் கொன்ற பழி நீங்கப் பூசித்து ஆட்சி செய்த இம்மண்ணுலகில் உள்ளதும், தவமுனிவர்கள் எல்லா இடங்களிலும் தங்கும் சிறப்பினதும், ஆகிய பூந்தராயில் எழுந்தருளியவனே, இம்மண்ணுலகைக் கவர வந்த அழகிய கங்கையையும் தண்ணிய மதியையும் மணம் கமழும் சடைமிசைச் சூடி மகளிர் அருகருகே இடும் சுவைமிக்க பலியாகிய உணவை ஏலாது அவர்களின் அழகை வவ்வுகின்றாயே; இது நீதியோ?

மேல்

(684)
முலையாழ் கெழும, மொந்தை கொட்ட, முன் கடை மாட்டு அயலே,

நிலையாப் பலி தேர்ந்து, ஐயம் வவ்வாய், நீ நலம் வவ்வுதியே?

தலை ஆய்க் கிடந்து இவ் வையம் எல்லாம் தனது ஓர் ஆணை நடாய்,

சிலையால் மலிந்த சீர்ச் சிலம்பன் சிரபுரம் மேயவனே!.

கரவாக அமுதுண்டதால் திருமாலால் வெட்டப்பெற்றுத் தலைமாத்திரமாய் நின்ற வில்வீரனாகிய சிலம்பன் என்னும் இராகு வழிபட்டு இவ்வையகமெல்லாவற்றையும் தன் ஆணைவழி நடத்தி ஆட்சி புரிந்த சிரபுரம் என்னும் நகரில் எழுந்தருளிய இறைவனே! முல்லையாழை மீட்டி மொந்தை என்னும் பறை ஒலிக்கச் சென்று வீட்டின் முன் கடையின் அயலே நின்று உண்பதற்காக அன்றிப் பொய்யாகப் பிச்சை கேட்டு மகளிர் தரும் உணவைக் கொள்ளாது நீ அவர்தம் அழகினைக் கவர்வது நீதியோ?

மேல்

(685)
“எருதே கொணர்க!” என்று ஏறி, அங்கை இடு தலையே கலனா,

கருது ஏர் மடவார் ஐயம் வவ்வாய், கண் துயில் வவ்வுதியே?

ஒரு தேர் கடாவி ஆர் அமருள் ஒருபது தேர் தொலையப்

பொரு தேர் வலவன் மேவி ஆண்ட புறவு அமர் புண்ணியனே!.

ஒரு தேரைச் செலுத்திய அரிய போரில் பத்துத் தேர்களை அழியுமாறு சண்டையிடும் தேர் வல்லவன் ஆகிய சிபிச் சக்கரவர்த்தி வீற்றிருந்து அரசாண்ட சிறப்பினதும் அவனை வஞ்சித்துப் புறாவின் எடைக்கு எடை தசைகேட்ட பாவம் தீரத் தீக்கடவுள் வழிபட்டதுமான புறவம் என்னும் சீகாழிப் பதியில் விளங்கும் இறைவனே! தனது எருது ஊர்தியைக் கொணர்க என ஆணையிட்டு அதன்மிசை ஏறித்தனது அழகிய கையில் ஏந்திய பிரமகபாலத்தையே உண்கலனாகக் கொண்டு விரும்பும் அழகுடைய மகளிரிடும் பலியைக் கொள்ளாது அவர்களின் உறக்கம் கெடுமாறு விரகதாபம் செய்து வருதல் நீதியோ?

மேல்

(686)
துவர் சேர் கலிங்கப் போர்வையாரும், தூய்மை இலாச் சமணும்,

கவர் செய்து உழலக் கண்ட வண்ணம், காரிகை வார் குழலார்

அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாய், ஆய் நலம் வவ்வுதியே?

தவர் செய் நெடுவேல் சண்டன் ஆளச் சண்பை அமர்ந்தவனே!.

உடலைத் துளைக்கும் நீண்ட வேலை உடைய இயமனை அடக்கி ஆளச் சண்பையில் எழுந்தருளிய இறைவரே! காவி நிறம் சேர்ந்த ஆடையைப் போர்த்த புத்தரும், தூய்மையற்ற சமணரும் மனம் திரிந்து உழலுமாறு செய்து, பிச்சையேற்கும் கோலத்தவராய் மகளிர் வாழும் இல்லங்களை அடைந்து, நீண்ட கூந்தலை உடைய அம்மகளிர் கண்ட அளவில் மனம் திரிந்து நிற்க, அவர்கள் இடவந்த இனிய உணவாகிய பிச்சையை ஏலாது அவர்தம் அழகினைக் கவர்ந்து செல்கின்றீரே; இது நீதியோ?

மேல்

(687)
நிழலால் மலிந்த கொன்றை சூடி, நீறு மெய் பூசி, நல்ல

குழல் ஆர் மடவார் ஐயம் வவ்வாய், கோல்வளை வவ்வுதியே?

அழல் ஆய் உலகம் கவ்வை தீர, ஐந்தலை நீள் முடிய

கழல் நாகஅரையன் காவல் ஆகக் காழி அமர்ந்தவனே!.

உலகம் அழலாக வெதும்பி வருந்திய துன்பம் தீருமாறு ஐந்து தலைகளையும் நீண்ட முடியையும் வீரக் கழலையும் அணிந்த நாகங்களின் தலைவனாகிய காளிதன் என்னும் பாம்பு காவல் புரிந்த காழிப் பதியில் அமர்ந்த தலைவனே! ஒளி நிறைந்த கொன்றை மலர் மாலையைச் சூடி, திருமேனியில் நீற்றினைப் பூசிக் கொண்டு பிச்சையேற்பவர் போல மகளிர் வாழும் வீதிகளில் சென்று அழகிய கூந்தலினை உடைய மகளிர்தரும் பிச்சையை ஏலாது அவர்களை விரகதாபத்தினால் மெலியச் செய்து அவர்தம் திரண்ட வளையல்களை வவ்வுகின்றீரே; இது நீதியோ?

மேல்

(688)
கட்டு ஆர் துழாயன், தாமரையான், என்று இவர் காண்பு அரிய

சிட்டார் பலி தேர்ந்து, ஐயம் வவ்வாய், செய் கலை வவ்வுதியே?

நட்டார் நடுவே நந்தன் ஆள, நல்வினையால் உயர்ந்த

கொட்டாறு உடுத்த தண்வயல் சூழ் கொச்சை அமர்ந்தவனே!.

ஆற்றின் நடுவே பராசரமுனிவன் மச்சகந்தியைக் கூடிய பழி போகும்படி; அம்முனிவன் செய்த பூசனையால், அம்முனிவர் அடையுமாறு அப்பெண்ணுக்கு மணத்தையும் நல்லொழுக்கத்தையும் அளித்து அம்முனிவனை வாழச் செய்த சிறப்பினதாகிய குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட கொச்சைவயம் என்னும் இத்தலத்தில் எழுந்தருளிய இறைவனே! கட்டப்பட்ட துளசி மாலையை அணிந்த திருமால் நான்முகன் என்ற இவர்களாலும் காண்டற்கரிய மேன்மையனாகிய நீ பிச்சை ஏற்கச் சென்று மகளிர் தரும் பலியை ஏலாது அவர் தம் அழகிய ஆடைகளை வவ்வுதல் நீதியோ?

மேல்

(689)
கடை ஆர் கொடி நல் மாட வீதிக் கழுமல ஊர்க் கவுணி

நடை ஆர் பனுவல் மாலை ஆக ஞானசம்பந்தன்-நல்ல

படை ஆர் மழுவன்மேல் மொழிந்த பல்பெயர்ப்பத்தும் வல்லார்க்கு

அடையா, வினைகள் உலகில் நாளும்; அமருலகு ஆள்பவரே.

வாயில்களிற் பொருந்திய கொடிகளோடு கூடிய மாடவீடுகளை உடைய வீதிகள் சூழ்ந்த கழுமலம் என்னும் சீகாழிப் பதியில் கவுணியர் குலத்தில் தோன்றிய ஞானசம்பந்தன் சந்தநடைகளோடு கூடிய இலக்கிய மாலையாக மழுப்படையை உடைய ,

சீகாழி இறைவர்மேற் பாடிய பல் பெயர்ப்பத்து என்னும் இத்திருப்பதிகத்தை ஓதி வழிபட வல்லவர்களை இவ்வுலகில் துன்புறுத்தும் வினைகள் ஒருநாளும் வந்து அடையா. மறுமையில் அவர்கள் அமரருலகினை ஆள்வர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(64)
திருப்பூவணம்

(690)
அறை ஆர் புனலும் மா மலரும் ஆடு அரவு ஆர் சடைமேல்

குறை ஆர் மதியும் சூடி, மாது ஓர் கூறு உடையான் இடம் ஆம்

முறையால் முடி சேர் தென்னர் சேரர் சோழர்கள் தாம் வணங்கும்,

திறை ஆர் ஒளி சேர், செம்மை ஓங்கும், தென் திருப்பூவணமே.

ஆரவாரித்து வரும் கங்கையும், ஆத்தி மலரும், ஆடும் பாம்பும் பொருந்திய சடையின் மேல், ஒரு கலையாய்க் குறைந்த பிறை மதியையும் சூடி மாதொர் பாகனாக விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய இடம், நீதியோடு கூடியவராய் முடிசூடி ஆளும் பாண்டியர், சேரர், சோழர் ஆகிய மூவேந்தர்களும் வணங்குவதும், வையை ஆற்றின் அலைகள் வீசுவதும், புகழோடு கூடியதும், வயல் வளம் மிக்கதுமாகிய அழகிய திருப்பூவணமாகும்.

மேல்

(691)
மருவார் மதில் மூன்று ஒன்ற எய்து, மாமலையான் மடந்தை

ஒருபால் பாகம் ஆகச் செய்த உம்பர்பிரான் அவன் ஊர்

கரு ஆர் சாலி ஆலை மல்கி, கழல் மன்னர் காத்து அளித்த

திருவால் மலிந்த சேடர் வாழும் தென்திருப்பூவணமே.

பகைவர்களாகிய திரிபுர அசுரர் மதில்கள் மூன்றையும் ஒருசேர எய்து அழித்தோனும், மலையரையன் மகளாகிய பார்வதி தேவியை ஒருபால் கொண்டு தேவர்கள் தலைவனாக விளங்குவோனும் ஆகிய சிவபிரானது ஊர்; கருக்கொண்ட நெற்பயிர்கள் கரும்புகள் ஆகியன நிறைந்ததும் வீரக் கழல் புனைந்த மன்னர்கள் காப்பாற்றிக் கொடுத்த செல்வ வளத்தால் சிறந்த மேலானவர்கள் வாழ்வதுமான அழகிய பூவண நகராகும்.

மேல்

(692)
போர் ஆர் மதமா உரிவை போர்த்து, பொடி அணி மேனியனாய்,

கார் ஆர் கடலில் நஞ்சம் உண்ட கண்ணுதல், விண்ணவன், ஊர்

பார் ஆர் வைகைப் புனல் வாய் பரப்பி, பல்மணி பொன் கொழித்து,

சீர் ஆர் வாரி சேர நின்ற தென்திருப்பூவணமே.

போர்ப் பயிற்சியுடைய மதம் பொருந்திய யானையின் தோலை உரித்துப் போர்த்து, திருநீற்றுப் பொடி அணிந்த மேனியனாய், கருநிறம் பொருந்திய கடலிடைத் தோன்றிய நஞ்சினை உண்டவனாய், நுதல் விழி உடையவனாய் விளங்கும் சிவனது ஊர், நிலவுலகை வளம் செய்வதற்கு வந்த வையையாறு வாய்க்கால் வழியே பரப்பிப்பலவகை மணிகளையும் பொன்னையும் கொழித்து வளம் செய்யும் அழகிய திருப்பூவணமாகும்.

மேல்

(693)
கடி ஆர் அலங்கல் கொன்றை சூடி, காதில் ஓர் வார்குழையன்,

கொடி ஆர் வெள்ளை ஏறு உகந்த கோவணவன், இடம் ஆம்

படியார் கூடி, நீடி ஓங்கும் பல்புகழால் பரவ,

செடி ஆர் வைகை சூழ நின்ற தென்திருப்பூவணமே.

மணம் பொருந்திய கொன்றை மலர் மாலையைச் சூடி ஒரு காதில் நீண்ட குழை அணிந்தவனாய், வெண்மையான விடைக் கொடியைத் தனக்குரியதாகக் கொண்டவனாய், கோவணம் அணிந்தவனாய் விளங்கும் சிவபிரானது இடம், நிலவுலக மக்கள் ஒருங்கு கூடி நீண்டு விரிந்த தன் புகழைக் கூறி வணங்கப் புதர்கள் நிறைந்த வைகை யாறு சூழ்ந்துள்ள அழகிய திருப்பூவணமாகும்.

மேல்

(694)
கூர் ஆர் வாளி சிலையில் கோத்துக் கொடி மதில் கூட்டு அழித்த

பார் ஆர் வில்லி, மெல்லியலாள் ஓர் பால் மகிழ்ந்தான், இடம் ஆம்

ஆரா அன்பில் தென்னர் சேரர் சோழர்கள் போற்று இசைப்ப,

தேர் ஆர் வீதி மாடம் நீடும் தென் திருப்பூவணமே.

கூர்மை பொருந்திய அம்பை வில்லில் பூட்டி, கொடிகள் கட்டிப் பறந்த மும்மதில்களின் கூட்டுக்களையும் ஒருசேர அழித்த போர்வல்ல வில் வீரனும், மெல்லியலாகிய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டு மகிழ்பவனுமாகிய சிவபிரானது இடம், குன்றாத அன்போடு பாண்டியர் சேரர் சோழர் ஆகிய மூவேந்தர்கள் போற்றத் தேரோடும் திருவீதியையும் மாட வீடுகளையும் உடைய அழகிய திருப்பூவணமாகும்.

மேல்

(695)
நன்று தீது என்று ஒன்று இலாத நால்மறையோன், கழலே

சென்று பேணி ஏத்த நின்ற தேவர்பிரான், இடம் ஆம்

குன்றில் ஒன்றி ஓங்க மல்கு குளிர் பொழில் சூழ் மலர்மேல்

தென்றல் ஒன்றி முன்றில் ஆரும் தென் திருப்பூவணமே.

நன்மை தீமை என்பனவற்றுள் ஒன்றும் இல்லாதவனும், நான்கு வேதங்களை அருளியவனும், தேவர்களின் தலைவனுமான சிவபிரான் தன் திருவடிகளை அடைந்து அன்பர்கள் போற்றி அருள் பெறுமாறு நின்ற இடம், பொதிய மலையில் பொருந்தி அங்கு நிறைந்த ஓங்கிய குளிர் பொழில்களில் உள்ள மலர்களிற் படிந்து வந்து தென்றல் முன்றில்களில் தங்கி மகிழ்விக்கும் அழகிய திருப்பூவணமாகும்.

மேல்

(696)
பைவாய் அரவம் அரையில் சாத்தி, பாரிடம் போற்று இசைப்ப,

மெய் வாய் மேனி நீறு பூசி, ஏறு உகந்தான் இடம் ஆம்

கை வாழ் வளையார் மைந்தரோடும் கலவியினால் நெருங்கிச்

செய்வார் தொழிலின் பாடல் ஓவாத் தென் திருப்பூவணமே.

படம் பொருந்திய வாயினை உடைய பாம்பை இடையில் கட்டிக்கொண்டு, பூதகணங்கள் போற்றிப் பாட, மேனி முழுதும் மெய்மை வடிவான திருநீற்றைப் பூசி, விடையேற்றை ஊர்ந்துவரும் சிவபிரானது இடம், கைகளில் வளையல்களை அணிந்துள்ள இளமகளிர் தம் காதலர்களோடு புணர்ச்சி விருப்புடையராய் நெருங்கிச் செய்யப்படும் கலவி பற்றிய பாடல்களின் ஓசை நீங்காத அழகிய திருப்பூவணமாகும்.

மேல்

(697)
மாட வீதி மன் இலங்கை மன்னனை மாண்பு அழித்து,

கூட வென்றிவாள் கொடுத்து ஆள் கொள்கையினார்க்கு இடம் ஆம்

பாடலோடும் ஆடல் ஓங்கி, பல்மணி பொன் கொழித்து,

ஓடி நீரால் வைகை சூழும் உயர் திருப்பூவணமே.

மாடவீதிகள் நிலைபெற்ற இலங்கை மன்னன் இராவணன் பெருவீரன் என்று மக்கள் பாராட்டிய சிறப்பை அழித்து, அவன் பிழை உணர்ந்து பாடி வேண்டிய அளவில் உடன் வெற்றி நல்கும் வாளைக் கொடுத்து ஆளும் அருட்கொள்கையாளனாகிய சிவ பிரானுக்குரிய இடம், ஆடல் பாடல்களால் மிக்க சிறப்புடையதும், பல்வகை மணிகளையும் பொன்னையும் அடித்து ஓடிவரும் நீரோடு வைகையாறு சூழ்ந்ததுமான உயர்ந்த திருப்பூவணமாகும்.

மேல்

(698)
பொய்யா வேத நாவினானும், மகள் காதலனும்,

கையால் தொழுது கழல்கள் போற்ற, கனல் எரி ஆனவன் ஊர்

மை ஆர் பொழிலின் வண்டு பாட, வைகை மணி கொழித்து,

செய் ஆர் கமலம் தேன் அரும்பும் தென்திருப்பூவணமே.

என்றும் பொய்யாகாத வேதங்களை ஓதும் நாவினன் ஆகிய நான்முகனும், மலர்மகள் கணவனாகிய திருமாலும், தம் கைகளால் தன் திருவடிகளைத் தொழுது போற்ற, சிவந்த எரி உருவான சிவபிரானது ஊர், கருநிறம் பொருந்திய சோலைகளில் வண்டுகள் பாடுவதும், வைகை ஆறு மணி கொழித்து வளம் சேர்ப்பதும், சிவந்த தாமரை மலர்களில் தேன் அரும்பி நிற்பதுமான அழகிய திருப்பூவணமாகும்.

மேல்

(699)
அலை ஆர் புனலை நீத்தவரும், தேரரும், அன்பு செய்யா

நிலையா வண்ணம் மாயம் வைத்த நின்மலன் தன் இடம் ஆம்

மலை போல் துன்னி வென்றி ஓங்கும் மாளிகை சூழ்ந்து, அயலே

சிலை ஆர் புரிசை பரிசு பண்ணும் தென்திருப்பூவணமே.

அலைகள் வீசும் நீரில் நீராடாது அதனைத் துறந்த சமணரும் புத்தரும் புண்ணியப் பேறு இன்மையால் அன்பு செய்து வழிபாட்டில் நிலைத்திராது அவர்கட்கு மாயத்தை வைத்த குற்றமற்ற சிவபிரானுக்குரிய இடம், வெற்றி மிக்க மாளிகைகள் மலைபோல் நெருங்கி அமைய அவற்றைச் சூழ்ந்து கருங்கல்லால் ஆகிய மதில்கள் அழகு செய்யும் அழகிய திருப்பூவணமாகும்.

மேல்

(700)
திண் ஆர் புரிசை மாடம் ஓங்கும் தென்திருப்பூவணத்துப்

பெண் ஆர் மேனி எம் இறையை, பேர் இயல் இன்தமிழால்,

நண்ணார் உட்கக் காழி மல்கும் ஞானசம்பந்தன் சொன்ன

பண் ஆர் பாடல் பத்தும் வல்லார் பயில்வது வான் இடையே.

வலிமை பொருந்திய மதில்களும் மாடவீடுகளும் நிறைந்த அழகிய திருப்பூவணத்தில் பெண்ணொரு பாகனாம் திருமேனியோடு விளங்கும் எம் தலைவனாகிய சிவபிரானைப் பெருமை பொருந்திய இனிய தமிழால் பகைவராய புறச் சமயத்தவர் அஞ்சுமாறு சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் சொல்லிய,

இவ்விசைத் தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் ஓத வல்லவர் வாழ்வது வான் உலகமாகும்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(65)
காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சுரம் - தக்கேசி

(701)
அடையார் தம் புரங்கள் மூன்றும் ஆர் அழலில் அழுந்த,

விடை ஆர் மேனியராய்ச் சீறும் வித்தகர் மேய இடம்

கடை ஆர் மாடம் நீடி எங்கும் கங்குல் புறம் தடவ,

படை ஆர் புரிசைப் பட்டினம் சேர் பல்லவனீச்சுரமே.

பகைவராய அசுரர்களின் திரிபுரங்கள் தாங்குதற்கரிய அழலில் அழுந்துமாறு விடைமிசை ஏறிவரும் திருமேனியராய்ச் சென்று சினந்த வித்தகராகிய சிவபிரான் மேவிய இடம், வாயில்களோடு கூடிய மாடவீடுகள் எங்கும் உயர்ந்து விளங்குவதும், வானவெளியைத் தடவும் மதில்களால் சூழப்பட்டதும் ஆகிய காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த திருப்பல்லவனீச்சரமாகும்.

மேல்

(702)
எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தைபிரான், இமையோர்

கண் ஆய் உலகம் காக்க நின்ற கண்ணுதல், நண்ணும் இடம்

மண் ஆர் சோலைக் கோல வண்டு வைகலும் தேன் அருந்தி,

பண் ஆர் செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.

பகைவராய அசுரர்களின் கோட்டைகளாய திரிபுரங்களைச் சினந்தழித்த எந்தையாகிய பெருமானும், தேவர்களின் கண்களாய் விளங்குவோனும், இவ்வுலகைக் காக்கின்ற கண்ணுதலும் ஆகிய சிவபிரான் மேவிய இடம், நன்கு அமைக்கப்பட்ட சோலைகளில் அழகிய வண்டுகள் நாள்தோறும் தேனுண்டு இசை பாடும் காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.

மேல்

(703)
மங்கை அங்கு ஓர் பாகம் ஆக, வாள் நிலவு ஆர் சடைமேல்

கங்கை அங்கே வாழவைத்த கள்வன் இருந்த இடம்

பொங்கு அயம் சேர் புணரி ஓதம் மீது உயர் பொய்கையின் மேல்

பங்கயம் சேர் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.

உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு ஒளி பொருந்திய பிறை தங்கிய சடையின்மேல் கங்கை நங்கையையும் வாழ வைத்துள்ள கள்வனாகிய சிவபிரான் எழுந்தருளிய இடம், மிக்க ஆழமான கடலினது வெள்ள நீரால் தானும்மேலே உயர்ந்துள்ள நீர் நிலையாகிய பொய்கைகளில் தாமரை மலர்கள் பூத்துள்ள காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனரச்சரமாகும்.

மேல்

(704)
தார் ஆர் கொன்றை பொன் தயங்கச் சாத்திய மார்பு-அகலம்

நீர் ஆர் நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னும் இடம்

போர் ஆர் வேல்கண் மாதர் மைந்தர் புக்கு இசைபாடலினால்,

பார் ஆர்கின்ற பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.

மாலையாகக் கட்டிய கொன்றை மலர்கள் பொன் போல் விளங்குமாறு சூட்டியுள்ள மார்பின் பரப்பில், நீரில் குழைத்த சாம்பலைச் சந்தனத்தைப் போலப் பூசியுள்ள குற்றமற்ற சிவபிரான் எழுந்தருளிய இடம், போர் செய்யத் தகுதியான கூரிய வேல் போலும் கண்களையுடைய மாதர்களும் இளைஞர்களும் கூடி இசை பாடுதலால் அதனைக் கேட்க மக்கள் வெள்ளம்போல் திரண்டுள்ள காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.

மேல்

(705)
மை சேர் கண்டர், அண்டவாணர், வானவரும் துதிப்ப,

மெய் சேர் பொடியர், அடியார் ஏத்த மேவி இருந்த இடம்

கை சேர் வளையார், விழைவினோடு காதன்மையால், கழலே,

பை சேர் அரவு ஆர் அல்குலார், சேர் பல்லவனீச்சுரமே.

கருமை நிறம் பொருந்திய கண்டத்தினை உடையவரும், மண்ணக மக்களும் விண்ணகத் தேவரும் துதிக்க மேனிமிசைத் திருநீறு பூசியவனும் ஆகிய நிமலன், அடியவர் புகழ மேவியிருந்தருளும் இடம், கைகளில் மிகுதியான வளையல்களை அணிந்தபாம்பின் படம் போன்ற அல்குலை உடைய இளமகளிர் விழைவோடும் காதலோடும் திருவடிகளை வழிபடச் சேர்கின்ற திருப்பல்லவனீச்சரமாகும்.

மேல்

(706)
குழலின் ஓசை, வீணை, மொந்தை கொட்ட, முழவு அதிர,

கழலின் ஓசை ஆர்க்க, ஆடும் கடவுள் இருந்த இடம்

சுழியில் ஆரும் கடலில் ஓதம் தெண்திரை மொண்டு எறிய,

பழி இலார்கள் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே.

குழலோசைக்கு ஏற்ப வீணை, மொந்தை ஆகியன முழங்கவும், முழவு ஒலிக்கவும், காலில் அணிந்துள்ள வீரக்கழல் நடனத்துக்கு ஏற்பச் சதங்கை போல இசைக்கவும் ஆடும் கடவுளாகிய சிவபிரான் எழுந்தருளிய இடம், சுழிகள் பொருந்திய கடலில் காவிரி வெள்ளநீர் தெளிந்த நீரை முகந்து எறியுமாறு விளங்குவதும், பழியற்ற நன்மக்கள் வாழ்வதுமான புகார் நகரிலுள்ள பல்லவனீச்சரமாகும்.

மேல்

(707)
வெந்தல் ஆய வேந்தன் வேள்வி வேர் அறச் சாடி, விண்ணோர்

வந்து எலாம் முன் பேண நின்ற மைந்தன் மகிழ்ந்த இடம்

மந்தல் ஆய மல்லிகையும், புன்னை, வளர் குரவின்

பந்தல் ஆரும் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.

தகுதி இல்லாத மிக்க கூட்டத்தை உடைய தக்கன் என்னும் வேந்தன் செய்த வேள்வியை அடியோடு அழித்துத் தேவர்கள் எல்லோரும் வந்து தன்னை விரும்பி வழிபட நின்ற பெருவீரனாகிய சிவபிரானது இடம், மென்மையான மல்லிகை, வளர்ந்து பரவியுள்ள புன்னை குராமரம் ஆகியவற்றில் படர்ந்துள்ள, காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.

மேல்

(708)
தேர் அரக்கன் மால்வரையைத் தெற்றி எடுக்க, அவன்

தார் அரக்கும் திண் முடிகள் ஊன்றிய சங்கரன் ஊர்

கார் அரக்கும் கடல் கிளர்ந்த காலம் எலாம் உணர,

பார் அரக்கம் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே.

சிறந்த தேரை உடைய இராவணன் பெருமை மிக்க கயிலை மலையைக் கைகளைப்பின்னி அகழ்ந்து எடுக்க, மாலைகள் அழுத்தும் அவனது திண்ணிய தலைகள் பத்தையும் கால் விரலால் ஊன்றி நெரித்த சங்கரனது ஊர், மேகங்கள் வந்து அழுந்தி முகக்கும் கடல், கிளர்ந்து எழும் காலங்களிலும் அழியாது உணரப்படும் சிறப்பினதும், மக்கள் அக்குமணிமாலை பூண்டு போற்றி வாழும் பெருமையுடையதுமாகிய, புகார் நகரைச் சேர்ந்த பல்லவனரச்சரமாகும்.

மேல்

(709)
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஓதும் அயன், நெடுமால்,

தம் கணாலும் நேட நின்ற சங்கரன் தங்கும் இடம்

வங்கம் ஆரும் முத்தம் இப்பி வார் கடல் ஊடு அலைப்ப,

பங்கம் இல்லார் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே.

ஆறு அங்கங்களையும், நான்கு வேதங்களையும், முறையே ஓதும் பிரமனும், திருமாலும் தம் கண்களால் தேருமாறு உயர்ந்து நின்ற சங்கரன் தங்கும் இடம், மரக்கலங்களை உடைய கடல் முத்துக்களையும் சங்கங்களையும் அலைக்கரங்களால் அலைத்துத் தருவதும், குற்றமற்றோர் வாழ்வதுமாய புகாரில் அமைந்துள்ள பல்லவனீச்சரம் ஆகும்.

மேல்

(710)
உண்டு உடுக்கை இன்றியே நின்று ஊர் நகவே திரிவார்,

கண்டு உடுக்கை மெய்யில் போர்த்தார், கண்டு அறியாத இடம்

தண்டு, உடுக்கை, தாளம், தக்கை, சார நடம் பயில்வார்

பண்டு இடுக்கண் தீர நல்கும் பல்லவனீச்சுரமே.

அளவுக்கு மீறி உண்டு ஆடையின்றி ஊரார் சிரிக்கத் திரியும் சமணர்களும், அவர்களைக் கண்டு தாமும் அவ்வாறு திரியாது ஆடையை மெய்யில் போர்த்து உழலும் புத்தர்களும் கண்டு அறியாத இடம், தண்டு, உடுக்கை, தாளம், தக்கை இவை பொருந்த நடனம் புரிபவராய், அடியவர் இடக்கண்களைப் பண்டு முதல் தீர்த்தருளிவரும் பரமனார் எழுந்தருளிய பல்லவனீச்சரமாகும்.

மேல்

(711)
பத்தர் ஏத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சுரத்து எம்

அத்தன்தன்னை, அணி கொள் காழி ஞானசம்பந்தன் சொல்

சித்தம் சேரச் செப்பும் மாந்தர் தீவினை நோய் இலராய்,

ஒத்து அமைந்த உம்பர்வானில் உயர்வினொடு ஓங்குவரே.

பக்தர்கள் போற்றும் காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விளங்கும் எம் தலைவனாகிய இறைவனை அழகிய சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய,

இப்பதிகச் செழுந்தமிழை மனம் ஒன்றிச் சொல்லி வழிபடும் மக்கள், தீ வினையும் நோயும் இல்லாதவராய், அமைந்த ஒப்புடையவர் என்று கூறத் தேவர் உலகில் உயர்வோடு ஓங்கி வாழ்வர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(66)
திருச்சண்பைநகர் - தக்கேசி

(712)
பங்கம் ஏறு மதி சேர் சடையார், விடையார், பலவேதம்

அங்கம் ஆறும் மறை நான்கு அவையும் ஆனார் மீன் ஆரும்

வங்கம் மேவு கடல் வாழ் பரதர் மனைக்கே நுனை மூக்கின்

சங்கம் ஏறி முத்தம் ஈனும் சண்பை நகராரே.

மீன்கள் நிறைந்ததும், கப்பல்களை உடையதும் ஆன கடலிடையே வாழும் பரதவர்கள் வீட்டு முற்றங்களில் கூரிய மூக்கினை உடைய சங்குகள் முத்துக்களை ஈனுகின்ற கடற்கரை ஊராகிய சண்பை நகரில் மேவிய இறைவர் கலை குறைந்த பிறை மதி சேர்ந்த சடையினர். விடைஊர்தியர், பலவாய் விரிந்த நான்கு வேதங்களாகவும் ஆறு அங்கங்களாகவும் விளங்குபவர்.

மேல்

(713)
சூது அகம் சேர் கொங்கையாள் ஓர்பங்கர், சுடர்க் கமலப்

போது அகம் சேர் புண்ணியனார், பூதகண நாதர்

மேதகம் சேர் மேகம் அம் தண்சோலையில், விண் ஆர்ந்த

சாதகம் சேர், பாளை நீர் சேர், சண்பை நகராரே.

வானகத்தே திரிந்து வாழும் சாதகப் பறவைகள் உண்ணுமாறு மேன்மை பொருந்திய மேகங்கள் பெய்த மழை நீர் அழகிய குளிர்ந்த சோலைகளில் விளங்கும் தெங்கு கமுகு இவற்றின் பாளைகளில் சேரும் சண்பை நகர் இறைவர். சூது ஆடு கருவி போன்ற தனபாரங்களை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவர். ஒளி பொருந்திய தாமரை மலரைச் சூடிய புண்ணிய வடிவினர். பூதகணங்களின் தலைவர்.

மேல்

(714)
மகரத்து ஆடு கொடியோன் உடலம் பொடி செய்து, அவனுடைய

நிகர்-ஒப்பு இல்லாத் தேவிக்கு அருள்செய் நீல கண்டனார்

பகரத் தாரா, அன்னம், பகன்றில், பாதம் பணிந்து ஏத்த,

தகரப் புன்னை தாழைப்பொழில் சேர் சண்பை நகராரே.

எல்லோரும் புகழத்தாரா அன்னம் அன்றில் முதலிய பறவைகள் தம் திருவடிகளை வணங்கிப் போற்றுமாறு தகரம் புன்னை தாழை முதலிய மரங்களின் பொழில்கள் சூழ்ந்த சண்பை நகரில் விளங்கும் இறைவர், மகர மீன் வடிவு எழுதப்பட்டு ஆடும் கொடியை உடைய மன்மதனது உடலை நீங்குமாறு செய்து, அழகில் தன்னொப்பில்லாத அவனுடைய மனைவி வேண்ட அவள் கண்களுக்கு மட்டும் மன்மதனைப் புலனாகுமாறு அருள் செய்த நீலகண்டர் ஆவார்.

மேல்

(715)
மொய் வல் அசுரர் தேவர் கடைந்த முழு நஞ்சு அது உண்ட

தெய்வர், செய்ய உருவர், கரிய கண்டர், திகழ் சுத்திக்

கையர், கட்டங்கத்தர், கரியின் உரியர் காதலால்,

சைவர், பாசுபதர்கள், வணங்கும் சண்பை நகராரே.

அன்போடு சைவர்களும் பாசுபதர்களும் வழிபடும் சண்பை நகர் இறைவர். வலிமை செறிந்த அசுரர்களும் தேவர்களும் கடலைக் கடைந்தபோது எழுந்த நஞ்சு முழுவதையும் உண்டருளிய தெய்வமாவார். அவர் சிவந்த திருமேனி உடையவர். கருநிறம் பொருந்திய கண்டத்தினர். சுத்தியைக் கொண்டகையினர். மழுவினர் - யானைத் தோலைப் போர்த்தியவர்.

மேல்

(716)
கலம் ஆர் கடலுள் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் அருள் செய்த

குலம் ஆர் கயிலைக்குன்று அது உடையர், கொல்லை எருது ஏறி

நலம் ஆர் வெள்ளை, நாளிகேரம், விரியா நறும்பாளை

சலம் ஆர் கரியின் மருப்புக் காட்டும் சண்பை நகராரே.

மக்கட்கு நன்மை தரும் மரமாகிய தென்னையிலிருந்து வெண்மை நிறத்தோடு வெளிவரும் மணம் மிக்க பாளை கபடம் மிக்க யானையின் மருப்புப் போலத் தோன்றும் சோலை வளம் மிக்க சண்பைநகர் இறைவர் மரக்கலங்கள் நிறைந்த கடலிடையே தோன்றிய விடத்தை உண்டு அமரர்கட்கு அமுதம் அருள் செய்தவர். மலைக் குலங்களில் மேம்பட்ட கயிலை மலைக்கு உரியவர். முல்லை நிலத்து ஆனேற்றை ஊர்ந்து வருபவர்.

மேல்

(717)
மா கரம் சேர் அத்தியின் தோல் போர்த்து, மெய்ம் மால் ஆன

சூகரம் சேர் எயிறு பூண்ட சோதியன்-மேதக்க

ஆகரம் சேர் இப்பிமுத்தை அம் தண்வயலுக்கே

சாகரம் சேர் திரைகள் உந்தும் சண்பைநகராரே.

கடலில் வாழும் சிப்பிகள் தந்த முத்துக்களை அழகியதாய்க் குளிர்ந்த வயல்களுக்குக் கடல் அலைகள் உந்தி வந்து சேர்க்கும் சண்பை நகர் இறைவன் நீண்ட கையினை உடைய யானையின் தோலை உரித்துப் போர்த்துள்ள திருமேனியில் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றான பன்றியின் பல்லை அணிகலனாகப் பூண்ட ஒளி வடிவினன்.

மேல்

(718)
இருளைப் புரையும் நிறத்தின் அரக்கன் தனை ஈடு அழிவித்து,

அருளைச் செய்யும் அம்மான்-ஏர் ஆர் அம் தண்கந்தத்தின்

மருளைச் சுரும்பு பாடி, அளக்கர் வரை ஆர் திரைக்கையால்-

தரளத்தோடு பவளம் ஈனும் சண்பை நகராரே.

அழகிய மணத்தோடு மருள் என்னும் பண்ணை வண்டுகள் பாட, கடல் மலை போன்ற அலைக் கைகளால் முத்துக்களையும் பவளங்களையும் கொணர்ந்து சேர்க்கும் சண்பைநகர் இறைவன் இருள் போன்ற கரிய நிறத்தினன் ஆகிய இராவணனின் வீரத்தை அழித்து அவன் உணர்ந்து வருந்த அருள் செய்த தலைவன்.

மேல்

(719)
மண்தான் முழுதும் உண்ட மாலும், மலர்மிசை-மேல் அயனும்,

எண்தான் அறியா வண்ணம் நின்ற இறைவன், மறை ஓதி

தண்டு ஆர் குவளைக் கள் அருந்தி, தாமரைத்தாதின் மேல்

பண் தான் கொண்டு வண்டு பாடும் சண்பைநகராரே.

தண்டிலே மலர்ந்த குவளை மலர்களின் தேனை உண்டு தாமரை மலர்களில் நிறைந்துள்ள மகரந்தங்களில் தங்கி வண்டுகள் பண்பாடும் சண்பை நகர் இறைவன் உலகங்கள் முழுவதையும் உண்ட திருமால் தாமரை மலர் மேல் விளங்கும் நான்முகன் ஆகியோர் மனத்தாலும் அறிய ஒண்ணாதவாறு நின்றவன் வேதங்களை ஓதி வெளிப்படுத்தியவன்.

மேல்

(720)
போதியாரும் பிண்டியாரும் புகழ் அல சொன்னாலும்,

நீதி ஆகக் கொண்டு அங்கு அருளும் நிமலன், இரு-நான்கின்

மாதி சித்தர், மாமறையின் மன்னிய தொல்-நூலர்,

சாதி கீத வர்த்தமானர் சண்பை நகராரே.

அணிமா முதலிய எண்வகைச் சித்திகளில் வல்ல சித்தர், பழமையான நூல்களாகிய வேதப் பொருள்களில் நிலைபெற்று நிற்பவர், சகாரம் முதலாகப் பாடப்படும் பாட்டில் நிலைத்திருப்பவர் ஆகிய சண்பை நகரார், புத்தர்களும் சமணர்களும் புகழ் அல்லவற்றைக் கூறினாலும் அவற்றைப் புகழ் மொழிகளாகக் கொண்டருளும் நிமலர்.

மேல்

(721)
வந்தியோடு பூசை அல்லாப் போழ்தில் மறை பேசி,

சந்திபோதில் சமாதி செய்யும் சண்பை நகர் மேய

அந்தி வண்ணன் தன்னை, அழகு ஆர் ஞானசம்பந்தன் சொல்

சிந்தை செய்து பாட வல்லார் சிவகதி சேர்வாரே.

அடியவர்கள் வந்தனையோடு பூசை செய்யும் காலங்கள் அல்லாத ஏனைய பொழுதுகளில் வேதப் பொருள்களைப் பேசியும், மூன்று சந்தியா காலங்களிலும் தியானம் சமாதி நிலையில் நின்று வழிபடும் சண்பைநகர்மேய, மாலைக்காலம் போன்ற செம்மேனியனாகிய இறைவனை, ஞானசம்பந்தன் அருளிய அழகிய இப்பதிகப் பொருளை மனத்தில் நிறுத்திப் பாடவல்லவர் சிவகதி சேர்வர்.*

மேல்

(722)
வேதம் ஓதி, வெண்நூல் பூண்டு, வெள்ளை எருது ஏறி,

பூதம் சூழ, பொலிய வருவார்; புலியின் உரி-தோலார்;

“நாதா!” எனவும், “நக்கா!” எனவும், “நம்பா!” என நின்று,

பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழனநகராரே.

நாதனே எனவும், நக்கனே நம்பனே எனவும் கூறி நின்று தம் திருவடிகளைப்பரவும் அடியவர்களின் பாவங்களைத் தீர்த்தருளும் திருப்பழனத்து இறைவர் வேதங்களை ஓதிக் கொண்டு மார்பில் வெண்மையான பூணூலையணிந்து கொண்டு வெண்மையான எருதின் மிசை ஏறிப் பூதகணங்கள் புடைசூழப் புலியின் தோலை அணிந்து பொலிவு பெற வருவார்,

திருவடிகளைப்பரவும் அடியவர்களின் பாவங்களைத் தீர்த்தருளும் பதிகம்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(67)
திருப்பழனம் - தக்கேசி

(723)
கண் மேல் கண்ணும், சடைமேல் பிறையும், உடையார்; காலனைப்

புண் ஆர் உதிரம் எதிர் ஆறு ஓடப் பொன்றப் புறம்தாளால்

எண்ணாது உதைத்த எந்தை பெருமான்-இமவான் மகளோடும்,

பண் ஆர் களி வண்டு அறை பூஞ்சோலைப் பழன நகராரே.

மது உண்ட வண்டுகள் பண்பாடி ஒலி செய்யும் அழகிய சோலைகள் சூழ்ந்த திருப்பழன நகரில் இமவான் மகளாகிய பார்வதி தேவியோடு எழுந்தருளிய இறைவர் இயல்பாக உள்ள இரண்டு கண்களுக்கு மேலாக நெற்றியில் ஒரு கண்ணையும், சடைமுடிமேல் பிறையையும் உடையவர். காலனை உதைத்து, அவன் உடலில் தோன்றிய புண்களிலிருந்து குருதி வெள்ளம் ஆறாக ஓடுமாறு, அவனை ஒரு பொருளாக மதியாது புறந்தாளால் அவன் அழிய உதைத்த எந்தை பெருமானார் ஆவார்.

மேல்

(724)
பிறையும் புனலும் சடைமேல் உடையார்; பறை போல் விழி கண் பேய்

உறையும் மயானம் இடமா உடையார்; உலகர் தலைமகன்-

அறையும் மலர்கொண்டு அடியார் பரவி, ஆடல் பாடல் செய்

பறையும் சங்கும் பலியும் ஓவாப் பழன நகராரே.

அடியவர்கள் உயர்ந்தனவாகப் போற்றப்படும் நறுமலர்களைக் கொண்டுவந்து சாத்தி, பரவி, ஆடல் பாடல்களைச் செய்தும் பறை, சங்கு ஆகியவற்றை முழக்கியும், பணிந்தும் இடைவிடாது வழிபடும் திருப்பழனநகர் இறைவர் சடைமேல் பிறையையும், கங்கையையும் உடையவர். பறை வாய் போன்ற வட்டமான, விழிகளையுடைய பேய்கள்வாழும் மயானத்தைத் தமக்கு இடமாகக்கொண்டவர். அனைத்துலக மக்கட்கும் தலைவர்.

மேல்

(725)
உரம் மன் உயர்கோட்டு உலறு கூகை அலறு மயானத்தில்,

இரவில் பூதம் பாட ஆடி, எழில் ஆர் அலர்மேலைப்

பிரமன் தலையில் நறவம் ஏற்ற பெம்மான்; எமை ஆளும்

பரமன்; பகவன்; பரமேச்சுவரன்-பழன நகராரே.

திருப்பழன நகர் இறைவர் வலிமை பொருந்திய உயரமான மரக்கிளைகளில் அமர்ந்து ஒலி செய்யும் கூகைகள் அலறும் மயானத்தே நள்ளிருளில் பூதங்கள் பாட ஆடியும் அழகிய தாமரை மலர்மேல் உறையும் பிரமனது தலையோட்டில் பலியேற்றும் திருவிளையாடல் புரியும் பெருமானார் எம்மை ஆளும் பரமர் ஆவார். அவர் பகவன், பரமேச்சுவரன் என்பனவாகிய பெயர்களை உடையவர்.

மேல்

(726)
குல வெஞ்சிலையால் மதில் மூன்று எரித்த கொல் ஏறு உடை அண்ணல்

கலவமயிலும் குயிலும் பயிலும் கடல் போல் காவேரி

நல மஞ்சு உடைய நறு மாங்கனிகள் குதிகொண்டு எதிர் உந்தி,

பலவின் கனிகள் திரை முன் சேர்க்கும் பழன நகராரே.

தோகைகளையுடைய மயில்கள், குயில்கள் வாழ்வதும், கடல்போல் பரந்து விரிந்த காவிரி ஆற்றின் அலைகள் மாங்கனிகளையும், பலாவின் கனிகளையும் ஏந்திக் குதித்து உந்தி வந்து கரையிற் சேர்ப்பதுமாகிய திருப்பழன நகர் இறைவர், உயர்ந்த கொடிய மலை வில்லால் அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தவர். பகைவரைக் கொல்லும் ஆனேற்றையுடைய அண்ணல் ஆவார்.

மேல்

(727)
வீளைக் குரலும், விளி சங்கு ஒலியும், விழவின் ஒலி ஓவா,

மூளைத்தலை கொண்டு, அடியார் ஏத்த, பொடியா மதிள் எய்தார்

ஈளைப் படுகில் இலை ஆர் தெங்கின், குலை ஆர் வாழையின்,

பாளைக்கமுகின், பழம் வீழ் சோலைப் பழன நகராரே.

ஈரத்தன்மையுடைய ஆற்றுப் படுகைகளில் வளர்ந்த பசுமையான மட்டைகளோடு கூடிய தென்னை மரங்களின் குலைகளில் விளைந்த தேங்காயும், வாழை மரத்தில் பழுத்த வாழைப் பழங்களும், பாளைகளையுடைய கமுகமரங்களில் பழுத்த பாக்குப் பழங்களும் விழுகின்ற சோலைகளால் சூழப்பட்ட திருப்பழன நகர் இறைவர். அழைக்கும் சீழ்க்கை ஒலியும் அழைக்கும் சங்கொலியும், விழவின் ஆரவாரங்களும் ஓயாத ஊரகத்தே சென்று மூளை பொருந்திய தலையோட்டில் பலியேற்பவர். அடியவர்கள் போற்றி வாழ்த்த முப்புரங்களையும் அழித்தவராவார்.

மேல்

(728)
பொய்யா மொழியார் முறையால் ஏத்திப் புகழ்வார்; திருமேனி

செய்யார்; கரிய மிடற்றார்; வெண் நூல் சேர்ந்த அகலத்தார்;

கை ஆடலினார்; புனலால் மல்கு சடைமேல் பிறையோடும்

பை ஆடு அரவம் உடனே வைத்தார் பழன நகராரே.

திருப்பழனநகர் இறைவர் பொய் கூறாத அடியவர்களால் முறைப்படி ஏத்திப் புகழப் பெறுவர். சிவந்த திருமேனி உடையவர். கரிய கண்டம் உடையவர். முப்புரிநூல் அணிந்த மார்பினை உடையவர். கைகளை வீசி ஆடல் புரிபவர். கங்கை சூடிய சடை முடி மீது பிறையையும், படப்பாம்பையும் ஒருசேர வைத்தவர்.

மேல்

(729)
மஞ்சு ஓங்கு உயரம் உடையான் மலையை மாறு ஆய் எடுத்தான் தோள்

அஞ்சோடு அஞ்சும் ஆறும் நான்கும் அடர ஊன்றினார்;

நஞ்சார் சுடலைப் பொடி-நீறு அணிந்த நம்பான்-வம்பு ஆரும்

பைந்தாமரைகள் கழனி சூழ்ந்த பழன நகராரே.

மணம்கமழும் புதிய தாமரை மலர்களையுடைய. வயல்களால் சூழப்பட்ட திருப்பழன நகர் இறைவர், வானகத்தே விளங்கும் மேகங்கள் அளவு உயர்ந்த தோற்றம் உடைய இராவணன் தனக்கு எதிராகக் கயிலை மலையைப் பெயர்க்க அவனுடைய இருபது தோள்களும் நெரியுமாறு கால்விரலை ஊன்றியவர். நச்சுத் தன்மை பொருந்திய சுடலையில் எரிந்த சாம்பலை அணிந்த பெருமானாகிய சிவனார் ஆவார்.

மேல்

(730)
கடி ஆர் கொன்றைச் சுரும்பின் மாலை கமழ் புன் சடையார்; விண்

முடியாப் படி மூ அடியால் உலகம் முழுதும் தாவிய

நெடியான், நீள் தாமரைமேல் அயனும், நேடிக் காணாத

படியார்; பொடி ஆடு அகலம் உடையார் பழன நகராரே.

திருப்பழன நகர் இறைவர் மணங்கமழ்வதும் வண்டுகள் மொய்ப்பதுமான கொன்றை மாலை கமழ்கின்ற சிவந்த சடைமுடியையுடையவர். விண்ணளாவிய திருமுடியோடு இவ்வுலகம் முழுவதையும் மூவடியால் அளந்த நெடியோனாகிய திரு மாலும், நீண்ட தண்டின்மேல் வளர்ந்த தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகனும் தேடிக் காணமுடியாத தன்மையை யுடையவர். திருநீற்றுப் பொடியணிந்த மார்பினையுடையவர்.

மேல்

(731)
கண் தான் கழுவா முன்னே ஓடிக் கலவைக் கஞ்சியை

உண்டு ஆங்கு அவர்கள் க்கும் சிறு சொல் ஓரார், பாராட்ட,

வண் தாமரை இன்மலர் மேல் நறவம் அது வாய் மிக உண்டு,

பண் தான் கெழும வண்டு யாழ் செய்யும் பழன நகராரே.

வண்டுகள் வளமையான தாமரை மலர்மேல் விளங்கும் தேனாகிய மதுவை வாயால் மிக உண்டு பண்பொருந்த யாழ்போல் ஒலி செய்யும் கழனிகளையுடைய திருப்பழன நகர் இறைவர், கண்களைக் கூடக் கழுவாமல் முந்திச் சென்று கலவைக் கஞ்சியை உண்பவர்களாகிய சமணர்கள் உரைக்கும் சிறு சொல்லைக் கேளாத அடியவர்கள் பாராட்ட விளங்குபவராவார்.

மேல்

(732)
வேய் முத்து ஓங்கி, விரை முன் பரக்கும் வேணுபுரம் தன்னுள்

நா உய்த்தனைய திறலால் மிக்க ஞானசம்பந்தன்,

பேசற்கு இனிய பாடல் பயிலும் பெருமான் பழனத்தை

வாயில் பொலிந்த மாலை பத்தும் வல்லார் நல்லாரே.

மூங்கில் மரங்கள் முத்துக்களோடு ஓங்கி வளர்ந்து மணம் பரப்பும் வேணுபுர நகரில் உள்ள, நாவினால் வல்ல திறன் மிக்க ஞானசம்பந்தன் திருப்பழனப் பெருமான் மீது, பேசற்கினிய பாடல்களாய்த் தன் வாயால் பாடிய ,

இப்பதிகப் பாமாலை பத்தையும், இசையுடன் பாடவல்லவர் நல்லவர் ஆவார்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(68)
திருக்கயிலாயம் - தக்கேசி

(733)
பொடி கொள் உருவர், புலியின் அதளர், புரிநூல் திகழ் மார்பில்

கடி கொள் கொன்றை கலந்த நீற்றர், கறை சேர் கண்டத்தர்,

இடிய குரலால் இரியும் மடங்கல் தொடங்கு முனைச்சாரல்

கடிய விடை மேல் கொடி ஒன்று உடையார் கயிலை மலையாரே.

மேகங்களின் இடிக்குரல் கேட்டு அஞ்சிய சிங்கங்கள், நிலைகெட்டு ஓடத்தொடங்கும் சாரலை உடைய கயிலை மலையில் வாழும் இறைவர், திருநீறு பூசிய திருமேனியை உடையவர். புலியின் தோலை உடுத்தவர். முப்புரி நூல் விளங்கும் மார்பில் மணம் கமழும் கொன்றை மாலையோடு திருநீற்றையும் அணிந்தவர். விடக்கறை பொருந்திய கண்டத்தை உடையவர். விரைந்து செல்லும் விடை மீது ஏறி அவ்விடை எழுதிய கொடி ஒன்றையே தம் கொடியாகக் கொண்டவர்.

மேல்

(734)
புரி கொள் சடையார்; அடியர்க்கு எளியார்; கிளி சேர் மொழி மங்கை

தெரிய உருவில் வைத்து உகந்த தேவர் பெருமானார்;

பரிய களிற்றை அரவு விழுங்கி மழுங்க, இருள் கூர்ந்த

கரிய மிடற்றர், செய்யமேனி; கயிலைமலையாரே.

பெரிய களிற்றி யானையை மலைப்பாம்பு விழுங்கி மறையும் இருள் மிக்க கயிலை மலையில் விடம் உண்ட கரிய கண்டராய்ச் சிவந்த திருமேனியராய் விளங்கும் இறைவர் வளைத்துக்கட்டிய சடைமுடியை உடையவர். அடியவர்க்கு எளிமையானவர். கிளி போன்ற மெல்லிய மொழி பேசும் உமை மங்கையைப் பலருக்கும் தெரியுமாறு ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்த தேவர் தலைவராவார்.

மேல்

(735)
மாவின் உரிவை மங்கை வெருவ மூடி, முடிதன் மேல்

மேவும் மதியும் நதியும் வைத்த வினைவர்; கழல் உன்னும்

தேவர் தேவர்; திரிசூலத்தர் திரங்கல் முகவன் சேர்

காவும் பொழிலும் கடுங்கல் சுனை சூழ் கயிலைமலையாரே.

திரங்கிய தோலை உடைய குரங்குகள் வாழும் காடுகளும் பொழில்களும் மலையிடையே இயற்கையாக அமைந்தசுனைகளும் சூழ்ந்த கயிலைமலைப் பெருமானார் உமையம்மை அஞ்சயானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டு முடிமீது பிறை கங்கை ஆகியவற்றைக் கொண்ட இறைவர், தம் திருவடிகளை நினைந்து போற்றும் தேவர்களின் தேவர். முத்தலைச் சூலத்தை உடையவர்.

மேல்

(736)
முந்நீர் சூழ்ந்த நஞ்சம் உண்ட முதல்வர், மதனன் தன்

தென் நீர் உருவம் அழியத் திருக்கண் சிவந்த நுதலினார்

மன் நீர் மடுவும், படு கல்லறையின் உழுவை சினம் கொண்டு

கல்-நீர் வரைமேல் இரை முன் தேடும் கயிலை மலையாரே.

இயற்கையாகத் தோன்றிய மலைக் குகைகளில் வாழும் புலிகள், பசியினால் சினமடைந்து கல்லால் இயன்ற மலை மிசை உணவாதற்குரிய இரைகளையும், அருந்துவதற்கு நிலைபெற்ற நீரையுடைய மடுக்களையும் தேடும் கயிலை மலையில் உறையும் தலைவர், கடலில் பரவித் தோன்றிய நஞ்சினைத் திரட்டி உண்டவர் மன்மதனின் அழகிய உருவம் அழியக் கண் சிவந்த நுதலை உடையவர்.

மேல்

(737)
ஒன்றும் பலவும் ஆய வேடத்து ஒருவர், கழல் சேர்வார்,

நன்று நினைந்து நாடற்கு உரியார் கூடித் திரண்டு எங்கும்

தென்றி இருளில் திகைத்த கரி தண்சாரல் நெறி ஓடி,

கன்றும் பிடியும் அடிவாரம் சேர் கயிலை மலையாரே.

இரவில் சிதறித் தனிமைப்பட்ட யானைகள் குளிர்ந்த மலைச் சாரலின் வழிகளில் விரையச் சென்று கன்றும் பிடியுமாய் இணையும் கயிலை மலைக்குரிய இறைவர். ஒருவராக இருந்தே பற்பல வடிவங்களைக் கொண்ட ஒப்பற்ற பரம்பொருளாவார். தம் திருவடிகளை அடைய எண்ணும் அடியவர்கள் பேரின்பத்தை அடையும் விருப்போடு நாடுதற்குரியவர்.

மேல்

(738)
தாது ஆர் கொன்றை தயங்கும் முடியர், முயங்கு மடவாளைப்

போது ஆர் பாகம் ஆக வைத்த புனிதர், பனி மல்கும்

மூதார் உலகில் முனிவர் உடன் ஆய் அறம் நான்கு அருள் செய்த

காது ஆர் குழையர், வேதத் திரளர் கயிலை மலையாரே.

கயிலைமலை இறைவர், மகரந்தம் நிறைந்த கொன்றைமாலை விளங்கும் முடியினை உடையவர். தம்மைத் தழுவிய உமையம்மையை மென்மையான இடப்பாகமாக ஏற்ற தூயவர். குளிர்ந்த இவ்வுலகின்கண் வயதால் முதிர்ந்த சனகர் முதலிய முனிவர்களுக்கு அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கையும் அருளிச் செய்தவர். வலக் காதில் குழை அணிந்தவர். வேத வடிவாய் விளங்குபவர்.

மேல்

(739)
தொடுத்தார், புரம் மூன்று எரியச் சிலைமேல் அரி ஒண் பகழியால்;

எடுத்தான் திரள் தோள் முடிகள் பத்தும் இடிய விரல் வைத்தார்;

கொடுத்தார், படைகள்; கொண்டார், ஆளா; குறுகி வரும் கூற்றைக்

கடுத்து, ஆங்கு அவனைக் கழலால் உதைத்தார் கயிலை மலையாரே.

கயிலைமலை இறைவர் முப்புரங்களை மேருவில்லை வளைத்து எரியாகிய ஒளி பொருந்திய அம்பைத் தொடுத்து எரித்து அழித்தவர். கயிலை மலையைப் பெயர்த்த இராவணனின் திரண்ட தோள்கள் பத்துத் தலைகள் ஆகியன நெரியுமாறு கால்விரலை ஊன்றியவர். அவன் பிழையுணர்ந்து வருந்த அவனை அடிமையாக ஏற்று வாள் முதலிய படைகள் கொடுத்தவர். மார்க்கண் டேயனின் உயிரைக் கவர அவன்மேல் நெருங்கி வந்த எமனைச் சினந்து அவனைக் காலால் உதைத்தவர்.

மேல்

(740)
ஊணாப் பலி கொண்டு உலகில் ஏற்றார்; இலகு மணி நாகம்

ண், நாண், ஆரம், ஆகப் பூண்டார்; புகழும் இருவர்தாம்

பேணா ஓடி நேட, எங்கும் பிறங்கும் எரி ஆகி,

காணா வண்ணம் உயர்ந்தார் போலும் கயிலை மலையாரே.

கயிலை மலை இறைவர் உலகில் மகளிர் இடும் பலியை உணவாகக் கொண்டு அதனை ஏற்றவர். விளங்கும் மணி களைக் கொண்டுள்ள நாகங்களை அணிகலனாகப் பூண்டவர். எல்லோராலும் புகழப்பெறும் திருமால் பிரமர்கள் அடிமுடி காண விரும்பிச் சென்று தேட எங்கும் விளங்கும் எரியுருவோடு அவர்கள் காணாதவாறு உயர்ந்து நின்றவர்.

மேல்

(741)
விருது பகரும் வெஞ்சொல் சமணர், வஞ்சச் சாக்கியர்,

பொருது பகரும் மொழியைக் கொள்ளார் புகழ்வார்க்கு அணியராய்,

எருது ஒன்று உகைத்து, இங்கு இடுவார் தம்பால் இரந்து உண்டு, இகழ்வார்கள்

கருதும் வண்ணம் உடையார் போலும் கயிலை மலையாரே.

தாம் பெற்ற விருதுகளைப் பலரிடமும் சொல்லிப் பெருமை கொள்ளும் இயல்புடைய கொடுஞ்சொல் பேசும் சமணரும் வஞ்சனையான மனமுடைய சாக்கியரும் பிற சமயத்தவரோடு சண்டையிட்டுக் கூறும் சொற்களைக் கேளாதவராய், புகழ்ந்து போற்றுவார்க்கு அணிமையானவராய் விடை ஒன்றைச் செலுத்தி உணவிடுவார்பால் இரந்து உண்பவராய் இகழ்பவரும் தம் பெருமையை நினைந்து போற்றும் இயல்பினராய் விளங்குபவர் கயிலைமலை இறைவர்.

மேல்

(742)
போர் ஆர் கடலில் புனல் சூழ் காழிப் புகழ் ஆர் சம்பந்தன்,

கார் ஆர் மேகம் குடிகொள் சாரல் கயிலை மலையார் மேல்,

தேரா த்த செஞ்சொல் மாலை செப்பும் அடியார் மேல்

வாரா, பிணிகள்; வானோர் உலகில் மருவும் மனத்தாரே.

கரையோடு போர் செய்யும் கடலினது நீரால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் தோன்றிய புகழ் பொருந்திய ஞானசம்பந்தன், கரிய மேகங்கள் நிலையாகத் தங்கியுள்ள சாரலை உடைய கயிலைமலை இறைவர்மேல் தெளிந்துரைத்த இச்செஞ்சொல் மாலையாகிய ,

திருப்பதிகத்தை ஓதும் அடியவர்பால் பிணிகள்வாரா. அவர்கள் வானோர் உலகில் மருவும் மனத்தினராவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(69)
திருஅண்ணாமலை - தக்கேசி

(743)
பூ ஆர் மலர் கொண்டு அடியார் தொழுவார்; புகழ்வார், வானோர்கள்;

மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார்

தூ மாமழை நின்று அதிர, வெருவித் தொறுவின் நிரையோடும்

ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.

நீர்த்துளிகளைத் தூவும் கரிய மேகங்கள் வானத்தில் நின்றவாறு இடி முழக்கத்தைச்செய்ய, அதனைக் கேட்டு அஞ்சியகாட்டுப் பசுக்களின் மந்தைகளான வரிசைகள் வந்து ஒருங்கிணையும் அடிவாரத்தை உடைய திருவண்ணாமலை இறைவர், அடியவர்கள் பொலிவுமிக்க நறுமலர்களைத் தூவி வழிபடவும், வானோர்கள் புகழ்ந்து போற்றவும், அழியா வரம் பெற்ற அசுரர்களின் முப்புரங்களை எரித்து அழித்து அவ்வசுரர்களில் மூவர்க்கு அருளையும் வழங்கிய பெருமையுடையவர்.

மேல்

(744)
மஞ்சைப் போழ்ந்த மதியம் சூடும் வானோர் பெருமானார்

நஞ்சைக் கண்டத்து அடக்குமதுவும் நன்மைப் பொருள் போலும்

வெஞ்சொல் பேசும் வேடர் மடவார் இதணம் அது ஏறி,

அம் சொல் கிளிகள், “ஆயோ!” என்னும் அண்ணாமலையாரே.

குத்து வெட்டு முதலிய கொடிய சொற்களையே பேசும் வேடர்களின் பெண்கள் தினைப்புனங்களில் பரண்மீது ஏறியிருந்து தினைகவர வரும் அழகிய சொற்களைப் பேசும் கிளிகளை ஆயோ என ஒலியெழுப்பி ஓட்டும் திருவண்ணாமலை இறைவர், மேகங்களைக் கிழித்துச் செல்லும் பிறைமதியை முடியிற்சூடும் வானவர் தலைவர். கடலிடைத் தோன்றிய நஞ்சையுண்டு கண்டத்தில் அடக்கியவர். இச்செயல் உலகத்தை அழியாது காக்கும் நன்மை கருதியதேயாகும்.

மேல்

(745)
ஞானத்திரள் ஆய் நின்ற பெருமான்-நல்ல அடியார் மேல்

ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப் பொருள் போலும்

ஏனத்திரளோடு இனமான் கரடி இழியும் இரவின்கண்

ஆனைத்திரள் வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.

இராப்போதில் பன்றிகளின் கூட்டமும், மான் இனங்களும், கரடிகளும், ஒருங்கே இறங்கிவரும் மலைச்சாரலில் யானைகளின் கூட்டமும் வந்தணையும் திருவண்ணாமலை இறைவர், ஞானப் பிழம்பாய் நிற்பவர். நன்மைகளையே கருதும் அடியவர்கள் ஊனுடலோடு பிறக்கும் பிறவிகளை நீக்குபவர். இவ்வருட்செயல் வேதாகம நூல்கள் உணர்த்தும் உண்மைப் பொருளாகும்.

மேல்

(746)
இழைத்த இடையாள் உமையாள் பங்கர், இமையோர் பெருமானார்,

தழைத்த சடையார், விடை ஒன்று ஏறித் தரியார் புரம் எய்தார்

பிழைத்த பிடியைக் காணாது ஓடிப் பெருங்கை மதவேழம்

அழைத்துத் திரிந்து, அங்கு உறங்கும் சாரல் அண்ணாமலையாரே.

தன்னைவிட்டுப் பிரிந்த பெண் யானையைக் காணாத பெரிய கையை உடைய மதம் பொருந்திய ஆண் யானை, குரல் கொடுத்து அழைத்துத் திரிந்து அலுத்து உறங்கும் சாரலை உடைய திருவண்ணாமலை இறைவர், நூல் போன்று நுண்ணிய இடையினை உடைய உமையம்மையை ஒருபாகமாக உடையவர். விடைமீது ஏறிச் சென்று பகைவரின் முப்புரங்களை எரித்தவர்.

மேல்

(747)
உருவில்-திகழும் உமையாள் பங்கர், இமையோர் பெருமானார்,

செரு வில் ஒரு கால் வளைய ஊன்றிச் செந்தீ எழுவித்தார்

பரு வில் குறவர் புனத்தில் குவித்த பரு மா மணி முத்தம்

அருவித்திரளோடு இழியும் சாரல் அண்ணாமலையாரே.

பெரிய வில்லை ஏந்திய குறவர்கள் விளைநில வரப்புக்களில் குவித்து வைத்திருந்த பெரிய முத்துக்களும் மணிகளும் அருவித்திரள்களின் வழியே நிலத்தில் வந்து இழியும் திருவண்ணாமலை இறைவர், உருவத்தால் அழகிய உமையவளை ஒருபாகமாகக் கொண்டவர். இமையவர்கட்குத் தலைவர். பெரிய போர்வில்லை ஒரு காலால் ஊன்றிக்கொண்டு வளைத்துக் கணை எய்து முப்புரங்களும் செந்தீயால் அழிந்து விழுமாறு செய்தவர்.

மேல்

(748)
எனைத்து ஓர் ஊழி அடியார் ஏத்த, இமையோர் பெருமானார்,

நினைத்துத் தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர், உறை கோயில்

கனைத்த மேதி காணாது ஆயன் கைம்மேல் குழல் ஊத,

அனைத்தும் சென்று திரளும் சாரல் அண்ணாமலையாரே.

மலைச்சாரலில் புல் மேய்க்கச் சென்ற ஆயன்கனைத்து மேய்ந்த தம் எருமைகளைக் காணாதவனாய்த் தன் கையிலிருந்த வேய்ங்குழலை ஊத அவ்வளவில் அனைத்தெருமைகளும் வீடு திரும்பும் விருப்போடு ஒன்று திரளும் அடிவாரத்தை உடைய திருவண்ணாமலை, அடியவர்கள் தன்னைத் துதிக்க இமையவர் தலைவனாய்ப் பல்லூழிக் காலங்களைக் கண்ட பழையோனாய் விளங்கும் தன்னை நினைத்துத் தொழும் அன்பர்களின் பாவங்களைத் தீர்த்தருளும் நிமலனாய் விளங்கும் அப்பெரியோனின் கோயிலாக விளங்குவது ஆகும்.

மேல்

(749)
வந்தித்திருக்கும் அடியார் தங்கள் வரு மேல் வினையோடு

பந்தித்திருந்த பாவம் தீர்க்கும் பரமன் உறை கோயில்

முந்தி எழுந்த முழவின் ஓசை, முது கல் வரைகள் மேல்

அந்திப் பிறை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.

விழா நிகழ்ச்சிகளை முன்னதாக அறிவித்தெழும் முழவின் ஓசை இடையறாது கேட்பதும், பழமையான மலைப் பாறைகளுக்கு இடையே அந்திக்காலத்துப் பிறை வந்து அணைவதுமாகிய திருவண்ணாமலையில் விளங்கும் இறைவன் தன்னை வழிபட்டு வேறு நினைவின்றி இருக்கும் அடியவர்களின் ஆகாமிய வினைகளோடு அவர்களைப் பந்தித்திருக்கும் பாவங்களையும் போக்கியருளும் பரமனாவான். அவனது கோயில் திருவண்ணாமலையாகும்.

மேல்

(750)
மறம் தான் கருதி, வலியை நினைந்து, மாறு ஆய் எடுத்தான் தோள்

நிறம் தான் முரிய, நெரிய ஊன்றி, நிறைய அருள் செய்தார்

“திறம் தான் காட்டி அருளாய்!” என்று தேவர் அவர் வேண்ட,

அறம்தான் காட்டி, அருளிச் செய்தார் அண்ணாமலையாரே.

தனது வலிமையை வெளிப்படுத்தித் திரிபுர அசுரர்களை அழித்து அருள்புரியுமாறு தேவர்கள் வேண்ட, தீயவரை ஒறுப்பது அறநெறியின் பாற்பட்டதாதலை உணர்த்தும் நிலையில் அசுரர்களை அழித்துத் தேவர்கட்கு அருள்செய்த பெருமானாகிய திருவண்ணாமலை இறைவன், தன் வலிமையையும், பெற்ற வெற்றிகளையும் பெரிதாக எண்ணியவனாய்த் தனக்கு மாறாகத் தான் உறையும் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் மார்பு தோள் ஆகியனவற்றை நெரியுமாறு காலை ஊன்றிப் பின் அவ்விராவணன் வேண்ட அவனுக்கு அருள் செய்த மேம்பாடுடையவனாவன்.

மேல்

(751)
தேடிக் காணார், திருமால் பிரமன் தேவர் பெருமானை;

மூடி ஓங்கி முதுவேய் உகுத்த முத்தம்பல கொண்டு,

கூடிக் குறவர் மடவார் குவித்து, “கொள்ள வம்மின்!” என்று,

ஆடிப் பாடி அளக்கும் சாரல் அண்ணாமலையாரே.

மலையை மூடி ஓங்கி வளர்ந்த பழமையான மூங்கில் மரங்கள் உகுத்த முத்துக்கள் பலவற்றைக் குறவர்குலப் பெண்கள் ஓரிடத்தே குவித்து வைத்து அவற்றை வாங்கிட வருக என மக்களை அழைத்து ஆடிப்பாடி அவர்களுக்கு அளந்து அளிக்கும் திருவண்ணாமலை இறைவனாகிய தேவர் பெருமானைத் திருமால் பிரமன் ஆகிய இருவர் தேடிக் காணாதவராயினர்.

மேல்

(752)
தட்டை இடுக்கித் தலையைப் பறித்துச் சமணே நின்று உண்ணும்

பிட்டர் சொல்லுக் கொள்ள வேண்டா; பேணித் தொழுமின்கள்!

வட்ட முலையாள் உமையாள் பங்கர் மன்னி உறை கோயில்,

அட்டம் ஆளித்திரள் வந்து அணையும் அண்ணாமலையாரே.

தடுக்கை அக்குளில் இடுக்கிக் கொண்டு தலை மயிரை ஒன்றொன்றாகப் பறித்த முண்டிதராய் ஆடையின்றி நின்றுண்ணும் சமணர்களாகிய பித்தர்களின் சொற்களைப் பொருளெனக் கொள்ளல் வேண்டா. வட்டமான தனங்களைக் கொண்ட உமையம்மையின் பங்கராய், மலைச்சாரல்களில் சிங்க ஏறுகள் கூட்டமாய் வந்தணையும் திருவண்ணாமலையில் வீற்றிருந்தருளும் பெருமான் நிலையாக எழுந்தருளி உறையும் கோயிலை விரும்பித் தொழுவீராக.

மேல்

(753)
அல் ஆடு அரவம் இயங்கும் சாரல் அண்ணாமலையாரை,

நல்லார் பரவப்படுவான் காழி ஞானசம்பந்தன்

சொல்லால் மலிந்த பாடல் ஆன பத்தும் இவை கற்று

வல்லார் எல்லாம் வானோர் வணங்க மன்னி வாழ்வாரே.

இரவு வேளைகளில் படம் எடுத்தாடும் பாம்புகள் இயங்கும் சாரலை உடைய திருவண்ணாமலையில் உறையும் இறைவரை, நல்லவர்களால் போற்றப்படுபவனாகிய, சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய அருஞ்சொல்லமைப்புக்கள் நிறைந்த,

இப்பதிகப் பாடல்கள் பத்தையும் கற்று வல்லவர் அனைவரும் வானோர் வணங்க நிலைபெற்று வாழ்வர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(70)
திருஈங்கோய்மலை - தக்கேசி

(754)
வானத்து உயர் தண்மதி தோய் சடைமேல் மத்தமலர் சூடி,

தேன் ஒத்தன மென்மொழி மான்விழியாள் தேவி பாகமா,

கானத்து இரவில் எரி கொண்டு ஆடும் கடவுள் உலகு ஏத்த,

ஏனத்திரள் வந்து இழியும் சாரல் ஈங்கோய் மலையாரே.

வானத்தில் உயர்ந்து விளங்கும் குளிர்ந்த சந்திரன் தோயும் சடைமுடிமேல் ஊமத்தம் மலர்களைச் சூடித் தேன் போன்ற இனிய மொழிகளையும் மான் விழிபோலும் கண்களையுமுடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டு சுடுகாட்டில் இரவில் எரியேந்தி ஆடும் இறைவர் உலக மக்கள் உணர்ந்து போற்றுமாறு பன்றிகள் பலகூடி இறங்கிவரும் சாரலையுடைய திருவீங்கோய்மலையில் எழுந்தருளியுள்ளார்.

மேல்

(755)
சூலப் படை ஒன்று ஏந்தி, இரவில் சுடுகாடு இடம் ஆக,

கோலச் சடைகள் தாழ, குழல், யாழ், மொந்தை கொட்டவே,

பால் ஒத்தனைய மொழியாள் காண, ஆடும் பரமனார்

ஏலத்தொடு நல் இலவம் கமழும் ஈங்கோய் மலையாரே.

முத்தலைச் சூலம் ஒன்றைத்தமது படைக்கலனாக ஏந்தி இரவில் சுடுகாட்டை இடமாகக் கொண்டு அழகிய சடைகள் தாழ்ந்து தொங்கவும், குழல் யாழ்மொந்தை ஆகிய இசைக் கருவிகள் முழங்கவும், பால் போன்று இனிய மொழியினை உடைய பார்வதி தேவி காண ஆடும் பரமர் ஏலம் நல்ல இலவங்கம் முதலியன கமழும் திருவீங்கோய்மலையின்கண் எழுந்தருளியுள்ளார்.

மேல்

(756)
கண் கொள் நுதலார், கறை கொள் மிடற்றார், கரியின் உரி-தோலார்,

விண் கொள் மதி சேர் சடையார், விடை ஆர் கொடியார், வெண் நீறு

பெண் கொள் திருமார்பு அதனில் பூசும் பெம்மான், எமை ஆள்வார்

எண்கும் அரியும் திரியும் சாரல் ஈங்கோய்மலையாரே.

கண் ஒன்றைக்கொண்ட நுதலினரும், விடக்கறை பொருந்திய கண்டத்தினரும், யானையின் தோலை உரித்துப் போர்த்த வரும், வானில் விளங்கும் மதியைச் சூடிய சடையினரும், விடைக்கொடியினரும், ஒருபாகமாக உமையம்மையைக் கொண்டுள்ளவரும் திருவெண்ணீற்றைத் திருமேனியின் மார்பகத்தே பூசுபவரும் ஆகிய எமை ஆள்பவராகிய பெருமான் கரடிகளும், சிங்கங்களும் திரியும் சாரலை உடைய திருவீங்கோய் மலையில் எழுந்தருளியுள்ளார்.

மேல்

(757)
மறையின் இசையார், நெறிமென் கூந்தல் மலையான் மகளோடும்,

குறை வெண்பிறையும் புனலும் நிலவும் குளிர்புன்சடை தாழ,

பறையும் குழலும் கழலும் ஆர்ப்ப, படு காட்டு எரி ஆடும்

இறைவர் சிறை வண்டு அறை பூஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.

சிறகுகளையுடைய வண்டுகள் ஒலிக்கும் அழகிய சாரலை உடைய திருவீங்கோய் மலை இறைவர் வேதங்களை இனிய இசையோடு பாடுபவர். வளைவுகளோடு கூடிய மென்மையான கூந்தலையுடைய மலையரையன் மகளாகிய பார்வதி தேவியோடு, கலைகள் குறைந்த வெண்மையான பிறையும் கங்கையும் விளங்கும் குளிர்ந்த மென்மையான சடைகள் தாழ, பறை குழல் இவற்றோடு காலிற் கட்டிய கழலும் ஆரவாரிக்கப் பிணங்களை எரிக்கும் சுடுகாட்டுள் எரியேந்தி ஆடுபவராவார்.

மேல்

(758)
நொந்த சுடலைப் பொடி-நீறு அணிவார், நுதல் சேர் கண்ணினார்,

கந்த மலர்கள் பலவும் நிலவு கமழ் புன்சடை தாழ,

பந்து அண் விரலாள் பாகம் ஆக, படுகாட்டு எரி ஆடும்

எம்தம் அடிகள் கடி கொள் சாரல் ஈங்கோய்மலையாரே.

நறுமணங்களைக் கொண்டுள்ள சாரலையுடைய திருவீங்கோய்மலை இறைவர், இறந்தார் உடலை எரிக்கும் சுடலையில் விளைந்த சாம்பற் பொடியைத் திருநீறாக அணிந்தவர். நெற்றியைச் சார்ந்துள்ள விழியையுடையவர். மணம் பொருந்திய மலர்கள் பலவும் விளங்கும் மணங்கமழ் செஞ்சடைகள் தாழ்ந்து தொங்கப் பந்து சேரும் கைவிரல்களையுடைய உமையம்மை ஒரு பாகமாக விளங்கச் சுடுகாட்டில் எரியாடுபவர்.

மேல்

(759)
நீறு ஆர் அகலம் உடையார், நிரை ஆர் கொன்றை அரவோடும்

ஆறு ஆர் சடையார், அயில்வெங்கணையால் அவுணர் புரம் மூன்றும்

சீறா எரி செய் தேவர் பெருமான், செங்கண் அடல் வெள்ளை-

ஏறு ஆர் கொடியார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.

உமையம்மையோடு திருவீங்கோய்மலையில் எழுந்தருளியுள்ள இறைவர் திருநீறு அணிந்த மார்பினையுடையவர். சரஞ்சரமாக வரிசையாய் மலரும் கொன்றை மாலை பாம்பு கங்கை ஆகியவற்றை அணிந்த சடைமுடியை உடையவர். கூரிய கொடிய கணையால் அசுரர்களின் முப்புரங்களையும் சினந்து எரித்த தேவர் தலைவர். சிவந்த கண்களையும் வலிமையையும் உடைய வெண்மையான விடையேற்றுக் கொடியினை உடையவர்.

மேல்

(760)
வினை ஆயின தீர்த்து அருளே புரியும் விகிர்தன், விரிகொன்றை

நனை ஆர் முடிமேல் மதியம் சூடும் நம்பான், நலம் மல்கு

தனை ஆர் கமலமலர் மேல் உறைவான் தலையோடு அனல் ஏந்தும்

எனை ஆள் உடையான்-உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.

உமையம்மையோடு திருவீங்கோய்மலையில் எழுந்தருளி விளங்கும் இறைவர், வினைகளானவற்றைத் தீர்த்து அருளையே வழங்கும் விகிர்தர். விரிந்து தழைத்த கொன்றை அரும்புகள் சூடிய முடிமீது பிறைமதியையும் சூடும் நம்பர். அழகு நிறைந்ததும் தலைமை உடையதுமான தாமரை மலர்மேல் உறையும் பிரமனின் தலையோட்டுடன் அனலையும் ஏந்தி என்னை அடிமையாகக் கொண்டருளுபவர்.

மேல்

(761)
பரக்கும் பெருமை இலங்கை என்னும் பதியில் பொலிவு ஆய

அரக்கர்க்கு இறைவன் முடியும் தோளும் அணி ஆர் விரல் தன்னால்

நெருக்கி அடர்த்து, “நிமலா, போற்றி!” என்று நின்று ஏத்த,

இரக்கம் புரிந்தார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.

உமையம்மையாரோடு எழுந்தருளியுள்ள ஈங்கோய்மலை இறைவர், எங்கும் பரவிய பெருமையை உடைய இலங்கை என்னும் நகரில் புகழோடு விளங்கிய அரக்கர்களுக்குத் தலைவனாகிய இராவணன் தலைகளையும் தோள்களையும் தமது அழகு பொருந்திய கால் விரலால் நெருக்கி அடர்த்து, பின் அவன் ‘நிமலா போற்றி’ என்று ஏத்த இரக்கம் காட்டி அருள்புரிந்தவராவார்.

மேல்

(762)
வரி ஆர் புலியின் உரி-தோல் உடையான், மலையான் மகளோடும்

பிரியாது உடன் ஆய் ஆடல் பேணும் பெம்மான், திருமேனி

அரியோடு அயனும் அறியா வண்ணம் அளவு இல் பெருமையோடு

எரி ஆய் நிமிர்ந்த எங்கள் பெருமான்-ஈங்கோய்மலையாரே.

ஈங்கோய்மலை இறைவர் வரிகளோடு கூடிய புலித்தோலை உடையாகக் கட்டியவர். மலையரையன் மகளாகிய பார்வதி தேவியோடு பிரியாது அவளுடனாக இருந்து ஆடுதலை விரும்பும் தலைமை சான்றவர். தம் திருமேனியின் அடிமுடிகளைத் திருமாலும் நான்முகனும் அறியாதபடி அளவற்ற பெருமை உடையவராய் எரி உருவத்தோடு ஓங்கிநின்ற எங்கள் பெருமான் ஆவார்.

மேல்

(763)
பிண்டி ஏன்று பெயரா நிற்கும் பிணங்கு சமணரும்,

மண்டை கலனாக் கொண்டு திரியும் மதி இல் தேரரும்,

உண்டி வயிறார் கள் கொள்ளாது, உமையோடு உடன் ஆகி,

இண்டைச் சடையான், இமையோர் பெருமான்-ஈங்கோய்மலையாரே.

அருகதேவன் வீற்றிருக்கும் அசோகமரம் என அம்மரத்தின் பெருமை கூறிப்பெயர்ந்து செல்லும் மாறுபட்ட சமயநெறியில் நிற்கும் சமணர்களும், பிச்சை ஏற்கும் மண்டை என்னும் பாத்திரத்தைக்கையில் ஏந்தித் திரியும் அறிவற்ற புத்தரும் உண்டு பருத்த வயிற்றினராய்க் கூறும் உரைகளைக் கொள்ளாது, உமையம்மையாரோடு உடனாய், இண்டை சூடிய சடைமுடியினனாய், இமையோர் தலைவனாய், ஈங்கோய் மலையில் எழுந்தருளியுள்ள எம்பெருமானைச் சென்று வழிபடுவீராக.

மேல்

(764)
விழவு ஆர் ஒலியும் முழவும் ஓவா வேணுபுரம் தன்னுள்,

அழல் ஆர் வண்ணத்து அடிகள் அருள் சேர் அணி கொள் சம்பந்தன்,

எழில் ஆர் சுனையும் பொழிலும் புடை சூழ் ஈங்கோய்மலை ஈசன்

கழல் சேர் பாடல் பத்தும் வல்லார் கவலை களைவாரே.

திருவிழாக்களின் ஓசையும் முழவின் ஓசையும் நீங்காத வேணுபுரம் என்னும் சீகாழிப் பதியில் அழல் வண்ணனாகிய சிவபிரானின் அருள்சேரப் பெற்ற அழகிய ஞானசம்பந்தன் எழிலார்ந்த சுனையும் பொழிலும் புடைசூழ்ந்து விளங்கும் திருவீங்கோய்மலை ஈசனின் திருவடிகளைப் பரவிய ,

இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்கள் கவலைகள் நீங்கப் பெறுவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(71)
திருநறையூர்ச் சித்தீச்சுரம் - தக்கேசி

(765)
பிறை கொள் சடையர்; புலியின் உரியர்; பேழ்வாய் நாகத்தர்;

கறை கொள் கண்டர்; கபாலம் ஏந்தும் கையர்; கங்காளர்

மறை கொள் கீதம் பாடச் சேடர் மனையில் மகிழ்வு எய்தி,

சிறை கொள் வண்டு தேன் ஆர் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

பெருமை உடைய மறையவர் தங்கள் இல்லங்களில் வேதப்பொருள்களை உள்ளடக்கிய பாடல்களைப் பாட, அதனைக் கேட்டுச் சிறகுகளைக் கொண்ட வண்டுகள் மகிழ்வெய்திப் பாடித் தேனை உண்ணுகின்ற நறையூரில் விளங்கும் சித்தீச்சரத்து இறைவர், பிறைசூடிய சடையர் புலித்தோலை உடுத்தவர். பிளந்த வாயினை உடைய பாம்பினை அணிந்தவர். விடக் கறை பொருந்திய கழுத்தை உடையவர். பிரமனது தலையோட்டை ஏந்திய கையினை உடையவர். எலும்பு மாலை அணிந்தவர்.

மேல்

(766)
பொங்கு ஆர் சடையர்; புனலர்; அனலர் பூதம் பாடவே,

தம் காதலியும் தாமும் உடன் ஆய்த் தனி ஓர் விடை ஏறி,

கொங்கு ஆர் கொன்றை வன்னி மத்தம் சூடி, குளிர்பொய்கைச்

செங்கால் அனமும் பெடையும் சேரும் சித்தீச்சுரத்தாரே.

தழைத்த சடையினராய், கங்கை அணிந்தவராய், அனல் ஏந்தியவராய், பூதகணங்கள் பாடத் தம் காதலியாகிய உமையம்மையும் தாமும் உடனாய், ஒப்பற்றதொரு விடைமீது, தேன்பொருந்திய கொன்றை மலர், வன்னியிலை, ஊமத்தை மலர் ஆகியவற்றைச் சூடிக் கொண்டு குளிர்ந்த பொய்கைகளில் சிவந்த கால்களை உடைய ஆண் அன்னமும் பெண் அன்னமும் கூடிக் களிக்கும் சித்தீச்சரத்தில் எழுந்தருளியுள்ளார்.

மேல்

(767)
முடி கொள் சடையர்; முளை வெண்மதியர்; மூவா மேனிமேல்

பொடி கொள் நூலர்; புலியின் அதளர் புரிபுன் சடை தாழ,

கடி கொள் சோலை வயல் சூழ் மடுவில் கயல் ஆர் இனம் பாயக்

கொடி கொள் மாடக்குழாம் ஆர் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

முடியாகச் சடையினை உடையவராய், ஒரு கலையோடு தோன்றும் வெண்மையான மதியை அணிந்தவராய், மூப்படையாத தம் திருமேனியின்மேல் திருநீற்றையும் முப்புரி நூலையும் அணிந்தவராய், புலித்தோலை உடுத்தவராய், முறுக்கப்பட்ட சடைகள் தாழ்ந்து தொங்க மணம் கமழும் சோலைகளும் வயல்களும் சூழ்ந்த நீர்நிலைகளில் கயல் மீன்களின் இனங்கள் பாய்ந்து விளையாடக் கொடிகள் கட்டிய மாடவீடுகளின் கூட்டங்கள் நிறைந்த நறையூரில் உள்ள சித்தீச்சரத்தில் எழுந்தருளியுள்ளார்.

மேல்

(768)
பின் தாழ் சடைமேல் நகுவெண்தலையர்; பிரமன் தலை ஏந்தி,

மின் தாழ் உருவில் சங்கு ஆர் குழைதான் மிளிரும் ஒரு காதர்

பொன் தாழ் கொன்றை, செருந்தி, புன்னை, பொருந்து, செண்பகம்,

சென்று ஆர் செல்வத் திரு ஆர் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

பூசைக்குகந்த பொன் போன்ற கொன்றை, செருந்தி, புன்னை, ஏற்புடையதான செண்பகம் ஆகியன வானுறப் பொருந்தி வளரும் செல்வச் செழுமையுடைய அழகிய நறையூரில் விளங்கும் சித்தீச்சரத்து இறைவர், பின்புறம் தாழ்ந்து தொங்கும் சடைமுடிமேல், விளங்கும் வெண்மையான தலை மாலையை அணிந்தவர். பிரமனது தலையோட்டைக் கையில் ஏந்தி மின்னலைத் தாழச் செய்யும் ஒளி உருவினர். சங்கக் குழையணிந்த காதினை உடையவர்.

மேல்

(769)
நீர் ஆர் முடியர்; கறை கொள் கண்டர்; மறைகள் நிறை நாவர்

பார் ஆர் புகழால் பத்தர் சித்தர் பாடி ஆடவே,

தேர் ஆர் வீதி முழவு ஆர் விழவின் ஒலியும் திசை செல்ல,

சீர் ஆர் கோலம் பொலியும் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

உலகில் பரவிய தமது புகழ் மொழிகளைப் பக்தர்களும் சித்தர்களும் பாடி ஆடத் தேரொடும் வீதிகளில் முழவின் ஒலி, விழா ஒலியோடு பெருகி எண் திசையும் பரவ, புகழ் பொருந்திய அழகோடு விளங்கும் நறையூர்ச் சித்தீச்சரத்தில் உறையும் இறைவர், கங்கையை அணிந்த சடைமுடியினர். கறை பொருந்திய கண்டத்தை உடையவர். வேதங்கள் நிறைந்த நாவினர்.

மேல்

(770)
நீண்ட சடையர்; நிரை கொள் கொன்றை விரை கொள் மலர்மாலை

தூண்டு சுடர் பொன் ஒளி கொள் மேனிப் பவளத்து எழிலார் வந்து

ஈண்டு மாடம், எழில் ஆர் சோலை, இலங்கு கோபுரம்,

தீண்டு மதியம் திகழும் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

ஒன்றோடு ஒன்று வந்து பொருந்தும் மாட வீடுகளையும், அழகிய சோலைகளையும், மதியைத் தீண்டும் உயரமாக விளங்கிய கோபுரங்களையும் உடைய நறையூரில் உள்ள சித்தீச்சரத்து இறைவர், நரண்ட சடைமுடியை உடையவர். பூச்சரங்களைக் கொண்ட கொன்றையினது மலரால் தொடுத்த மாலையை அணிந்தவர். ஒளி மிகுந்து தோன்றும் பொன்போன்ற ஒளி உருவம் உடையவர். பவளம் போன்ற அழகிய செந்நிறத்தை உடையவர்.

மேல்

(771)
குழல் ஆர் சடையர்; கொக்கின் இறகர்; கோல நிற மத்தம்

தழல் ஆர் மேனித் தவள நீற்றர்; சரி கோவணக்கீளர்

எழில் ஆர் நாகம் புலியின் உடைமேல் இசைத்து, விடை ஏறி,

கழல் ஆர் சிலம்பு புலம்ப, வருவார் சித்தீச்சுரத்தாரே.

அழகு பொருந்திய பாம்பினைப் புலித்தோல் ஆடை மேல் பொருந்தக் கட்டிக் கொண்டு விடைமீது ஏறி, கழலும் சிலம்பும் கால்களில் ஒலிக்க வருபவராகிய நறையூர்ச் சித்தீச்சரத்து இறைவர், மாதொரு பாகராதலின் கூந்தலும் சடையும் அமைந்த திருமுடியினர். கொக்கின் இறகை அணிந்தவர். அழகிய நிறம் அமைந்த ஊமத்தம் மலர் சூடித் தழல் போலச் சிவந்த திருமேனியில் வெண்ணிறமான திருநீற்றை அணிந்தவர்.

மேல்

(772)
கரை ஆர் கடல் சூழ் இலங்கை மன்னன் கயிலைமலை தன்னை

வரை ஆர் தோளால் எடுக்க, முடிகள் நெரிந்து மனம் ஒன்றி

ஆர் கீதம் பாட, நல்ல உலப்பு இல் அருள் செய்தார்

திரை ஆர் புனல் சூழ் செல்வ நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

அலைகளோடு கூடிய நீர் நிலைகளால் சூழப்பட்ட செல்வ வளம் மிக்க நறையூரில் விளங்கும் சித்தீச்சரத்துறையும் இறைவர், கரைகளை வந்து பொருந்தும் கடல் நாற்புறமும் சூழ்ந்துள்ள இலங்கை மன்னன் இராவணன், கயிலை மலையை, மலை போன்ற தன்தோளால் பெயர்க்க முற்பட்டபோது, தலைகளைக் கால் விரலால் நெரிக்க, அவன்தன் பிழை உணர்ந்து நல் உரைகளால் இயன்ற பாடல்களைப் பாடிப் போற்ற, அளவிடமுடியாத நல்லருளை வழங்கியவர்.

மேல்

(773)
நெடியான் பிரமன் நேடிக் காணார் நினைப்பார் மனத்தாராய்,

அடியார் அவரும் அருமா மறையும் அண்டத்து அரரும்

முடியால் வணங்கிக் குணங்கள் ஏத்தி, “முதல்வா, அருள்!” என்ன,

செடி ஆர் செந்நெல் திகழும் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

திருமாலும் பிரமனும் தேடிக் காண இயலாதவராய் விளங்கிய சிவபெருமான் தம்மை நினைப்பவரின் மனத்தில் விளங்கித் தோன்றுபவராய், அடியவர்களும், அரிய புகழ்மிக்க வேதங்களும், மேலுலகில் வாழும் தேவர்களும், தம் முடியால் வணங்கிக் குணங்களைப் போற்றி ‘முதல்வா அருள்’ என்று வழிபடுமாறு செந்நெற் பயிர்கள் புதர்களாய்ச் செழித்துத் திகழும் திருநறையூர்ச் சித்தீச்சரத்தில் எழுந்தருளியுள்ளார்.

மேல்

(774)
நின்று உண் சமணர், இருந்து உண் தேரர் நீண்ட போர்வையார்,

ஒன்றும் உணரா ஊமர் வாயில் கேட்டு உழல்வீர்காள்!

கன்று உண் பயப்பால் உண்ண முலையில், கபாலம் அயல் வழிய,

சென்று உண்டு ஆர்ந்து சேரும் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

நின்றுண்ணும் சமணர்களும், இருந்துண்ணும் புத்தர்களும் சித்தாந்த சைவச் சிறப்பொன்றையும் அறியாத ஊமர்கள். அவர்கள் தம் வாயால் கூறும் உரைகளைக் கேட்டு உழல் பவரே! எளிதில் அருள் நல்கும் சிவபிரான், கன்று விருப்போடு உண்ண, முலைக் காம்பில் சுரந்த பால் பாத்திரத்தில் நிறைந்து அயலினும் பொழிவதைக் கண்டு பால் போதுமென மீண்டும் கன்றை அவிழ்த்துவிட அக் கன்றுகள் சென்று உண்டு கொட்டிலை அடையும் நறையூர்ச் சித்தீச்சரத்தில் எழுந்தருளி உள்ளார். சென்று தொழுமின்.

மேல்

(775)
குயில் ஆர் கோல மாதவிகள், குளிர் பூஞ்சுர புன்னை,

செயில் ஆர் பொய்கை, சேரும் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரை,

மயில் ஆர் சோலை சூழ்ந்த காழி மல்கு சம்பந்தன்,

பயில்வார்க்கு இனிய, பாடல் வல்லார் பாவம் நாசமே.

குயில்கள் வாழும் அழகிய மாதவிகளும், குளிர்ந்த அழகிய சுரபுன்னைகளும் வயல்களில் நீரைச் செலுத்தும் பொய்கைகளும் நிறைந்த நறையூர்ச் சித்தீச்சரத்து இறைவரை மயில்கள் வாழும் சோலைகள் சூழ்ந்த சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பயில்பவர்க்கு இனியவாய்ப் போற்றிப்பாடிய,

இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர்களின் பாவம் நாசமாம்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(72)
திருக்குடந்தைக்காரோணம் - தக்கேசி

(776)
வார் ஆர் கொங்கை மாது ஓர் பாகம் ஆக, வார்சடை,

நீர் ஆர் கங்கை திங்கள் சூடி, நெற்றி ஒற்றைக்கண்,

கூர் ஆர் மழு ஒன்று ஏந்தி, அம் தண் குழகன்-குடமூக்கில்,

கார் ஆர் கண்டத்து எண்தோள் எந்தை, காரோணத்தாரே.

திருக்குடமூக்கில் விளங்கும் காரோணத்தில் கருமை பொருந்திய கண்டத்தராய், எட்டுத் தோள்களோடு விளங்கும் எந்தையாராகிய இறைவர், கச்சணிந்த கொங்கைகளை உடைய பார்வதி தேவியை ஒருபாகமாக் கொண்டு, நீண்ட சடைமிசை நீர் மயமான கங்கை, பிறை ஆகியவற்றைச் சூடி, இயல்பான இருவிழிகளோடு நெற்றியில் ஒற்றைக் கண்ணுடையவராய் கூரிய மழு என்னும் ஓர் ஆயுதத்தை ஏந்தி, அழகிய தண்ணளி செய்யும் குழகராய் விளங்குகின்றார்.

மேல்

(777)
முடி ஆர் மன்னர், மடமான் விழியார், மூ உலகும் ஏத்தும்

படியார்; பவள வாயார் பலரும் பரவிப் பணிந்து ஏத்த,

கொடி ஆர் விடையார் மாட வீதிக் குடந்தை, குழகு ஆரும்

கடி ஆர் சோலைக் கலவமயில் ஆர் காரோணத்தாரே.

மாட வீதிகளை உடைய குடந்தை என்னும் திருத்தலத்தில் உள்ளதும், மணம் கமழும் சோலைகளில் தோகைகளோடு கூடிய மயில்கள் விளங்குவதும் ஆகிய காரோணத்தில், இளமை பொருந்தியவராய் இலங்கும் இறைவர், முடிமன்னர்கள், இளைய மான் போன்ற விழியினை உடைய மகளிர், மேல் கீழ் நடு என்னும் மூவுலக மக்கள், தேவர், முனிகணங்கள், பவளம் போன்ற வாயினை உடைய அரம்பையர் முதலானோர் பலரும் பரவிப் பணிந்து போற்ற விடைக்கொடியோடு விளங்குபவராவார்.

மேல்

(778)
மலையார் மங்கைபங்கர், அங்கை அனலர் மடல் ஆரும்

குலை ஆர் தெங்கு, குளிர் கொள் வாழை, அழகு ஆர் குட மூக்கில்

முலையார் அணி பொன், முளை வெண் நகையார், மூவா மதியினார்,

கலை ஆர் மொழியார், காதல் செய்யும் காரோணத்தாரே.

மட்டைகளோடும் குலைகளோடும் கூடிய தென்னைகளும் குளிர்ந்த வாழைகளும் சூழ்ந்த அழகமைந்த குடமூக்கு என்னும் திருத்தலத்தில், பொன்னணிகள் விளங்கும் தனங்களையும் மூங்கில் முளை போன்ற வெண்மையான பற்களையும் இளம் பிறை போன்ற நெற்றியையும் இசைக்கலை சேர்ந்த மொழியையும் உடைய மகளிர் பலரால் விரும்பப்படும் காரோணத்து இறைவர் மலை மங்கை பங்கர்; அழகிய கையில் அனல் ஏந்தியவர்.

மேல்

(779)
போது ஆர் புனல் சேர் கந்தம் உந்திப் பொலிய அழகு ஆரும்

தாது ஆர் பொழில் சூழ்ந்து எழில் ஆர் புறவில், அம் தண் குட மூக்கில்

மாது ஆர் மங்கை பாகம் ஆக மனைகள் பலி தேர்வார்,

காது ஆர் குழையர், காளகண்டர் காரோணத்தாரே.

நீர் நிலைகளில் தோன்றும் தாமரை கழுநீர் குவளை முதலிய பூக்களின் வாசனை முற்பட்டுப் பொலிவெய்த, அழகு நிரம்பிய மகரந்தம் நிறைந்த சோலைகளாலும் எழிலார்ந்த காடு களாலும் சூழப்பெற்றதாய் விளங்கும் அழகிய தண்மையான குட மூக்கில் விளங்கும் காரோணம் எனப் பெயர் பெறும் கோயிலில் எழுந்தருளிய இறைவர், காதல் நிறைந்த உமையம்மை பாகராக மனைகள் தோறும் பலி ஏற்பவர். காதில் குழை அணிந்தவர். காளம் என்னும் நஞ்சினைக் கண்டத்தே கொண்டவர்.

மேல்

(780)
பூ ஆர் பொய்கை அலர் தாமரை, செங்கழுநீர், புறவு எல்லாம்

தேவு ஆர் சிந்தை அந்தணாளர் சீரால் அடி போற்ற,

கூ ஆர் குயில்கள், ஆலும் மயில்கள், இன்சொல் கிளிப்பிள்ளை,

கா ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் குடந்தைக் காரோணத்தாரே.

சிவபிரான், தெய்வத்தன்மை நிறைந்த மனத்தினராகிய அந்தணர்கள் அழகிய பொய்கைகளில் பூத்த தாமரை செங்கழுநீர் ஆகியவற்றையும் முல்லை நிலங்களில் பூத்த மல்லிகை முல்லை முதலிய மணமலர்களையும் கொண்டு தனது புகழைக் கூறித் திருவடிகளைப் போற்ற, கூவும் குயில்கள் ஆடும் மயில்கள், இன்சொல் பேசும் கிளிப்பிள்ளைகள் ஆகிய பறவைகளை உடையதும், பணியாளர்களால் காக்கப் பெறுவதுமாகிய பொழிலால் சூழப்பெற்ற அழகிய குடந்தைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளார்.

மேல்

(781)
மூப்பு ஊர் நலிய நெதி ஆர் விதி ஆய், முன்னே அனல் வாளி

கோப்பார், பார்த்தன் நிலை கண்டு அருளும் குழகர், குடமூக்கில்

தீர்ப்பார், உடலில் அடுநோய் அவலம் வினைகள் நலியாமை;

காப்பார், காலன் அடையா வண்ணம்; காரோணத்தாரே.

குடமூக்கிலுள்ள காரோணத்து இறைவர் மூப்பு ஊர்ந்துவந்து நலிய நியதி தத்துவத்தின் வழியே நெறியாய் நின்று நம்மைக் காப்பவர். முற்காலத்தில் அனலையே அம்பாக வில்லில் கோத்து முப்புரங்களை அழித்தவர். அருச்சுனன் செய்த தவத்தின் நிலை கண்டு இரங்கிப் பாசுபதக் கணை வழங்கியருளிய குழகர். நம் உடலை வருத்தும் நோய்கள், நம்மைப் பற்றிய வினைகள், மனத்தை வருத்தும் துன்பங்கள் ஆகியவற்றைத் தீர்ப்பவர். காலன் அடையா வண்ணம் காப்பவர்.

மேல்

(782)
ஊன் ஆர் தலை கை ஏந்தி உலகம் பலி தேர்ந்து உழல் வாழ்க்கை,

மான் ஆர் தோலார்; புலியின் உடையார்; கரியின் உரி போர்வை

தேன் ஆர் மொழியார் திளைத்து அங்கு ஆடித் திகழும் குடமூக்கில்,

கான் ஆர் நட்டம் உடையார், செல்வக் காரோணத்தாரே.

விளங்கும் குடமூக்கில் உள்ள செல்வவளம் மிக்க காரோணத்து இறைவர், ஊன் பொருந்திய தலையோட்டைக் கையில் ஏந்தி, உலகம் முழுதும் திரிந்து பலி ஏற்று உழலும் வாழ்க்கையர், மான் தோலைப் பூணநூலில் அணிந்தவர். தேனார் மொழி அம்மையோடு குடமூக்கில் கூடி மகிழ்ந்து சுடுகாட்டில் நடனம் புரிபவர்.

மேல்

(783)
வரை ஆர் திரள் தோள் மதவாள் அரக்கன் எடுப்ப மலை, சேரும்

விரை ஆர் பாதநுதியால் ஊன்ற, நெரிந்து சிரம் பத்தும்,

ஆர் கீதம் பாடக் கேட்டு, அங்கு ஒளிவாள் கொடுத்தாரும்

கரை ஆர் பொன்னி சூழ் தண் குடந்தைக் காரோணத்தாரே.

கரைகளோடு கூடிய காவிரியாற்று நீர் சூழ்ந்த தண்மையான குடந்தை மாநகரில் அமைந்த காரோணத்து இறைவர் மலை போன்ற திரண்ட தோள்களை உடைய மதம் மிக்க வாட்போரில் வல்ல இராவணன் கயிலைமலையைப் பெயர்க்க, அவ்வளவில் தம் மணம் கமழும் திருவடி நுனிவிரலால் அம்மலையில் சேர்த்து ஊன்றி, அவ்விராவணன் தலை பத்தும் நெரித்துப் புகழ்மிக்க சாம கானத்தைப் பாடக் கேட்டு, அப்பொழுதே அவனுக்கு ஒளிபொருந்திய சந்திரஹாசம் என்னும் வாளைக் கொடுத்தவர் ஆவார்.

மேல்

(784)
கரிய மாலும் செய்ய பூமேல் அயனும் கழறிப் போய்,

அரிய அண்டம் தேடிப் புக்கும் அளக்க ஒண்கிலார்,

தெரிய அரிய தேவர் செல்வம் திகழும் குடமூக்கில்,

கரிய கண்டர், காலகாலர், காரோணத்தாரே.

செல்வம் விளங்கும் குடமூக்கில் உள்ள காரோணத்து இறைவர் கருநிறம் பொருந்திய திருமாலும் சிவந்த தாமரை மலர் மேல் விளங்கும் நான்முகனும் ஒருவரோடு ஒருவர் மாறுபடப் பேசியவராய் அரிய உலகங்கள் அனைத்தும் தேடிச் சென்றும் அடி முடிகளை அளக்க ஒண்ணாதவராய் உயர்ந்து நின்ற பெரியவர். முனைப்புடையவரால் காணுதற்கு அரியவர். கருநிறம் பொருந்திய கண்டத்தினர். கால காலர்.

மேல்

(785)
நாணார் அமணர்; நல்லது அறியார்; நாளும் குரத்திகள்,

பேணார் தூய்மை; மாசு கழியார்; பேசேல், அவரோடும்!

சேண் ஆர் மதி தோய் மாடம் மல்கு செல்வ நெடுவீதிக்

கோணாகரம் ஒன்று உடையார் குடந்தைக் காரோணத்தாரே.

சமணர்கள் நாணம் இல்லாதவர்கள். நல்லதை அறியாதவர்கள். நாள்தோறும் பெண்பால் குருமார்களும், தூய்மை பேணாதவர்கள். உடல் மாசை நீராடிப் போக்கிக் கொள்ளாதவர்கள். அவர்களோடு பேசவும் செய்யாதீர்கள். வான் அளாவிய மதியினைத் தோயும் மாட வீடுகளைக் கொண்ட செல்வச் செழுமை உடைய வீதிகளோடு கூடிய காரோணமாகிய இருப்பிடத்தை உடையவர் சிவபெருமானார். அவரைச் சென்று வழிபடுவீர்களாக.

மேல்

(786)
கரு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் செல்வக் காரோணத்தாரை,

திரு ஆர் செல்வம் மல்கு சண்பைத் திகழும் சம்பந்தன்

உரு ஆர் செஞ்சொல்மாலை இவைபத்து ப்பார், உலகத்துக்

கரு ஆர் இடும்பைப் பிறப்பு அது அறுத்து, கவலை கழிவாரே.

அடர்த்தியால் கருநிறம் பெற்ற பொழில்கள் சூழ்ந்த அழகிய செல்வக் காரோணத்து இறைவரைத் தெய்வ நலத்தால் விளைந்த செல்வம் நிறைந்த சண்பை என்னும் சீகாழிப் பதியில் விளங்கும் ஞானசம்பந்தன் பாடிய,

செஞ்சொல் மாலையாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் உரைப்பவர், இவ்வுலகில் மீளக் கருவுற்று இடர்ப்படும் பிறப்பினை எய்தாது கவலைகள் நீங்கப் பெறுவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(73)
திருக்கானூர் - தக்கேசி

(787)
வான் ஆர் சோதி மன்னு சென்னி, வன்னி புனக்கொன்றைத்

தேன் ஆர் போது, தான் ஆர் கங்கை, திங்களொடு சூடி,

மான் ஏர் நோக்கி கண்டு அங்கு உவப்ப, மாலை ஆடுவார்

கானூர் மேய, கண் ஆர் நெற்றி, ஆன் ஊர் செல்வரே.

திருக்கானூரில் மேவிய கண்பொருந்திய நெற்றியினை உடையவரும், ஆனேற்றை ஊர்ந்து வருபவருமாகிய செல்வர், வானத்தில் ஒளியோடு விளங்கும் சூரிய சந்திரர் போன்ற ஒளி மன்னும் சென்னியில் வன்னி, காடுகளில் பூத்த தேன் பொருந்திய கொன்றை மலர், தானே வந்து தங்கிய கங்கை, திங்கள் ஆகியவற்றைச் சூடி, மான் போன்ற மருண்ட கண்களையுடைய உமையம்மை கண்டு மகிழ மாலைக் காலத்தில் நடனம் புரிபவராவர்.

மேல்

(788)
நீந்தல் ஆகா வெள்ளம் மூழ்கு நீள்சடைதன் மேல், ஓர்

ஏய்ந்த கோணல் பிறையோடு அரவு கொன்றை எழில் ஆர,

போந்த மென்சொல் இன்பம் பயந்த மைந்தர் அவர் போல் ஆம்

காந்தள் விம்மு கானூர் மேய சாந்த நீற்றாரே.

காந்தள் செடிகள் தழைத்து வளர்ந்து பூத்து மணம் பரப்பும் கானூரில் மேவிய சந்தனமும் திருநீறும் பூசிய இறைவர், தடுக்க முடியாதபடி பெருகிவந்த கங்கையினது வெள்ளம் மூழ்கி மறைந்துபோன நீண்ட சடைமுடிமேல் பொருந்த வளைந்த பிறை மதியோடு, பாம்பு, கொன்றைமலர் ஆகியன அழகுதர வீதியுலா வந்து அழகிய மென் சொற்களால் இன்பம் தந்த மைந்தர் ஆவார்.

மேல்

(789)
சிறை ஆர் வண்டும் தேனும் விம்மு செய்ய மலர்க்கொன்றை,

மறை ஆர் பாடல் ஆடலோடு, மால்விடைமேல் வருவார்;

இறையார்; வந்து, என் இல் புகுந்து, என் எழில் நலமும் கொண்டார்

கறை ஆர் சோலைக் கானூர் மேய பிறை ஆர் சடையாரே.

கருநிறமான சோலைகள் சூழ்ந்த கானூரில் மேவிய பிறை பொருந்திய சடையினராகிய இறைவர், சிறகுகளோடு கூடிய வண்டுகளும் அவற்றால் உண்ணப்பெறும் தேனும் நிறைந்து செவ்விதாக மலர்ந்த கொன்றை மலர்களைச் சூடியவராய் வேதப்பாடல்களைப் பாடி ஆடுபவராய்ப் பெரிய விடைமேல் வருவார். அவ்வாறு வரும் இறைவர் என் இல்லத்தே புகுந்து என் அழகையும் நலத்தையும் கவர்ந்து சென்றார், இது முறையோ?.

மேல்

(790)
விண் ஆர் திங்கள், கண்ணி, வெள்ளை மாலை அது சூடி,

தண் ஆர் அக்கோடு ஆமை பூண்டு, தழை புன்சடை தாழ,

எண்ணா வந்து, என் இல் புகுந்து, அங்கு எவ்வம் நோய் செய்தான்-

கண் ஆர் சோலைக் கானூர் மேய விண்ணோர் பெருமானே.

இடம் அகன்ற சோலைகள் சூழ்ந்த திருக்கானூரில் மேவிய விண்ணோர் தலைவராகிய சிவபிரானார் வானகத்தில் பொருந்திய பிறை மதியைக் கண்ணியாகச்சூடி, வெண்ணிறமான மாலையை அணிந்து, குளிர்ந்த என்புமாலை, ஆமையோடு ஆகியவற்றைப் புனைந்து தழைத்த சிவந்த சடைகள் தொங்க, என்னை அடைய எண்ணி வந்து என் இல்லம் புகுந்து, எனக்கு மிக்க விரக வேதனையைத் தந்து சென்றார். இது முறையோ?

மேல்

(791)
தார் கொள் கொன்றைக் கண்ணியோடும் தண்மதியம் சூடி,

சீர் கொள் பாடல் ஆடலோடு சேடராய் வந்து,

ஊர்கள் தோறும் ஐயம் ஏற்று, என் உள் வெந்நோய் செய்தார்

கார் கொள் சோலைக் கானூர் மேய கறைக்கண்டத்தாரே.

கருநிறம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த கானூரில் மேவிய கறைக்கண்டர், கொன்றை மலர்களால் இயன்ற கண்ணி தார் ஆகியவற்றை அணிந்தவராய்க் குளிர்ந்த பிறைமதியை முடியில் சூடி, சிறப்புமிக்க ஆடல் பாடல்களோடு பெருமைக்குரியவராய் வந்து ஊர்கள்தோறும் திரிந்து, பலியேற்று, என் மனத்தகத்தே கொடிய விரக வேதனையைத் தந்து சென்றார்.

மேல்

(792)
முளிவெள் எலும்பும் நீறும் நூலும் மூழ்கும் மார்பராய்,

எளிவந்தார் போல், “ஐயம்” என்று, என் இல்லே புகுந்து, உள்ளத்

தெளிவும் நாணும் கொண்ட கள்வர் தேறல் ஆர் பூவில்

களிவண்டு யாழ்செய் கானூர் மேய ஒளிவெண் பிறையாரே.

தேன் பொருந்திய மலரில் கள்ளுண்டு களித்த வண்டுகள் யாழ்போல ஒலி செய்யும் திருக்கானூரில் மேவிய ஒளிபொருந்திய வெண்பிறையை முடியிற் சூடிய இறைவர், காய்ந்த வெண்மையான எலும்பும் திருநீறும் முப்புரி நூலும் பொருந்திய மார்பினராய் எளிமையாக வந்தவர் போல வந்து, ‘ஐயம் இடுக’ என்று கூறிக் கொண்டே என் இல்லத்தில் புகுந்து உள்ளத் தெளிவையும் நாணத்தையும் கவர்ந்து சென்ற கள்வர் ஆவார்.

மேல்

(793)
மூவா வண்ணர், முளை வெண் பிறையர், முறுவல் செய்து இங்கே

பூ ஆர் கொன்றை புனைந்து வந்தார், பொக்கம்பல பேசிப்

போவார் போல மால் செய்து உள்ளம் புக்க புரிநூலர்

தேவு ஆர் சோலைக் கானூர் மேய தேவதேவரே.

தெய்வத்தன்மை வாய்ந்த சோலைகள் சூழ்ந்த கானூரில் மேவிய தேவதேவராகிய சிவபிரானார், மூப்பு அடையாத அழகினர். ஒரு கலையோடு முளைத்த வெண்மையான பிறையை அணிந்தவர். அவர் கொன்றை மாலை சூடியவராய்க் காமக் குறிப்புத் தோன்றும் புன்சிரிப்புடன் என் இல்லம் நோக்கி வந்து, பொய் கலந்த வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருந்து போவாரைப்போல் காட்டி என்னை மயக்கி என் உள்ளத்தில் புக்கொளித்த புரிநூலர் ஆவார்.

மேல்

(794)
தமிழின் நீர்மை பேசி, தாளம் வீணை பண்ணி, நல்ல

முழவம் மொந்தை மல்கு பாடல் செய்கை இடம் ஓவார்,

குமிழின் மேனி தந்து, கோல நீர்மை அது கொண்டார்

கமழும் சோலைக் கானூர் மேய பவளவண்ணரே.

மணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்கானூரில் மேவிய பவளம் போன்ற நிறத்தினை உடைய பரமர், தமிழ்போன்று இனிக்கும் இனிய வார்த்தைகளைப் பேசி, தாளத்தோடு வீணையை மீட்டி, முழவம் மொந்தை ஆகிய துணைக் கருவிகளுடன் கூடிய பாடல்களைப் பாடி எனது இல்லத்தை அடைந்து, அதனை விட்டுப் பெயராதவராய் எனக்குக் குமிழம்பூப் போன்ற பசலை நிறத்தை அளித்து என் அழகைக் கொண்டு சென்றார்.

மேல்

(795)
அந்தம் ஆதி அயனும் மாலும் ஆர்க்கும் அறிவு அரியான்,

சிந்தையுள்ளும் நாவின்மேலும் சென்னியும் மன்னினான்,

வந்து என் உள்ளம் புகுந்து மாலைகாலை ஆடுவான்-

கந்தம் மல்கு கானூர் மேய எந்தை பெம்மானே.

மணம் நிறைந்த திருக்கானூரில் எழுந்தருளிய எந்தையாராகிய பெருமானார், அந்தத்தைச் செய்பவரும், யாவர்க்கும் ஆதியாய் இருப்பவரும் ஆவார். அயன், மால் முதலிய அனைவராலும் அறிதற்கரியவர். என் சிந்தையிலும் சென்னியிலும் நாவிலும் நிலைபெற்றிருப்பவர். அத்தகையோர் யான் காண வெளிப்பட்டு வந்து என் உள்ளம் புகுந்து மாலையிலும் காலையிலும் நடனம் புரிந்தருளுகின்றார்.

மேல்

(796)
ஆமை அரவோடு ஏன வெண்கொம்பு அக்குமாலை பூண்டு,

ஆம் ஓர் கள்வர் வெள்ளர் போல உள் வெந்நோய் செய்தார்

ஓம வேத நான்முகனும் கோள் நாகணையானும்

சேமம் ஆய செல்வர், கானூர் மேய சேடரே.

வேள்விகள் இயற்றும் முறைகளைக் கூறும் வேதங்களை ஓதும் நான்முகனும், வளைந்த பாம்பணையில் பள்ளி கொள்ளும் திருமாலும் தங்கள் பாதுகாப்புக்குரியவராகக் கருதும் செல்வராகிய கானூர் மேவிய பெருமானார், ஆமை, அரவு, பன்றியின் வெண்மையான கொம்பு என்புமாலை ஆகியவற்றைப் பூண்ட ஓர்கள்வராய் வெள்ளை உள்ளம் படைத்தவர் போலக் கருதுமாறு நல்லவர் போல வந்து எனக்கு மன வேதனையைத் தந்தார்.

மேல்

(797)
கழுது துஞ்சும் கங்குல் ஆடும் கானூர் மேயானை,

பழுது இல் ஞானசம்பந்தன் சொல்பத்தும் பாடியே,

தொழுது பொழுது தோத்திரங்கள் சொல்லித் துதித்து நின்று,

அழுதும் நக்கும் அன்பு செய்வார் அல்லல் அறுப்பாரே.

பேய்களும் தூங்கும் நள்ளிரவில் நடனம் ஆடும் கானூர் மேவிய இறைவனைக் குற்றமற்ற ஞானசம்பந்தன் போற்றிச் சொன்ன சொல்மாலையாகிய,

இப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடித்தொழுது முப்பொழுதும் தோத்திரங்களைச் சொல்லித் துதித்து நின்று அழுதும் சிரித்தும் அன்பு செய்பவர்கள் அல்லலை அறுப்பார்கள்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(74)
திருப்புறவம் - தக்கேசி

(798)
நறவம் நிறை வண்டு அறை தார்க்கொன்றை நயந்து, நயனத்தால்

சுறவம் செறி வண் கொடியோன் உடலம் பொடியா விழிசெய்தான்,

புறவம் உறை வண்பதியா, மதியார் புரம் மூன்று எரி செய்த

இறைவன், அறவன், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

தேன் நிறைந்த வண்டுகள் ஒலிக்கும் கொன்றை மாலையை விரும்பிச் சூடி, சுறாமீன் எழுதப்பட்ட கொடியை உடைய, உயிர்கட்கு எல்லாம் இன்ப நலம் தரும் வள்ளன்மை உடைய, மன்மதனைப் பொடியாகுமாறு நெற்றிக்கண்ணால் விழித்து அழித்த, சிவபிரான் உறையும் பதி புறவம் எனப்பெறும் சீகாழியாம். தன்னை மதியாத அசுரர்களின் முப்புரங்களை எரித்தழித்த அவ்விறைவனாகிய அறவன் இமையவர் ஏத்தித் துதிக்க அப்பதியிடை உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.

மேல்

(799)
உரவன், புலியின் உரி-தோல் ஆடை உடைமேல் பட நாகம்

விரவி விரி பூங்கச்சா அசைத்த விகிர்தன், உகிர்தன்னால்

பொரு வெங்களிறு பிளிற உரித்து, புறவம் பதி ஆக,

இரவும் பகலும் இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

மிக்க வலிமையை உடையவனும், புலியினது தோல் ஆடையாகிய உடை மேல், படம் பொருந்திய நாகத்தைக் கச்சாகக் கட்டிய விகிர்தனும், தனது கைவிரல் நகத்தால் போர் செய்யும் கொடிய யானை பிளிற அதன் தோலை உரித்துப் போர்த்தவனுமாகிய இறைவன், புறவம் என்னும் சீகாழியையே தான் உறையும் பதியாகக் கொண்டு அதன்கண் இரவும் பகலும் தேவர்கள் பலரும் வந்து வணங்க உமையம்மையோடு எழுந்தருளியிருக்கின்றான்.

மேல்

(800)
பந்தம் உடைய பூதம் பாட, பாதம் சிலம்பு ஆர்க்க,

கந்தம் மல்கு குழலி காண, கரிகாட்டு எரி ஆடி,

அம் தண்கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதியா அமர்வு எய்தி,

எம் தம்பெருமான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

எம்முடைய தலைவனாகிய இறைவன், உதரபந்தத்தை அணிந்துள்ள பூதங்கள் பாடவும், பாதங்களில் சிலம்புகள் ஒலிக்கவும், மணம் நிறைந்த கூந்தலையுடைய உமையம்மை காணச் சுடுகாட்டில் எரியேந்தி ஆடி, அழகிய குளிர்ந்த கடலால் சூழப்பட்ட எழில்மிக்க புறவம் என்னும் சீகாழியையே இருப்பிடமாகக் கொண்டு, எழுந்தருளி இமையோர்கள் தன்னையேத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.

மேல்

(801)
நினைவார் நினைய இனியான், பனி ஆர் மலர் தூய், நித்தலும்;

கனை ஆர் விடை ஒன்று உடையான்; கங்கை, திங்கள், கமழ்கொன்றை,

புனை வார்சடையின் முடியான்; கடல் சூழ் புறவம் பதி ஆக,

எனை ஆள் உடையான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

என்னை ஆளாக உடைய இறைவன், நாள்தோறும் குளிர்ந்த மலர்களைத் தூவித் தன்னை நினையும் அடியவர்களின் நினைப்பிற்கு இனியவனாய், கனைக்கும் விடை ஒன்றை ஊர்தியாக உடையவனாய், கங்கை, திங்கள், மணங்கமழும் கொன்றை ஆகியவற்றைச் சூடிய அழகிய நீண்ட சடைமுடியை உடையவனாய், கடலால் சூழப்பட்ட புறவம் என்னும் சீகாழிப் பதியை இடமாகக் கொண்டு இமையவர் ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.

மேல்

(802)
செங்கண் அரவும், நகுவெண்தலையும், முகிழ் வெண் திங்களும்,

தங்கு சடையன்; விடையன்; உடையன், சரி கோவண ஆடை;

பொங்கு திரை வண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக,

எங்கும் பரவி இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

சிவபிரான், சிவந்த கண்களையுடைய பாம்பும், சிரிப்பதுபோல வாய்விண்டு தோன்றும் வெள்ளிய தலையோடும், இளைய வெண்பிறையும் தங்கும் சடைமுடியன். விடை ஊர்தியன். சரியும் கோவண ஆடையை உடையாகக் கொண்டவன். அப்பெருமான் பொங்கி எழும் அலைகளையுடைய வளம் பொருந்திய கடலால் சூழப்பட்ட அழகிய புறவம் என்னும் சீகாழியைத் தனக்குரிய பதியாகக் கொண்டு இமையோர் எங்கும் பரவி நின்று ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கின்றான்.

மேல்

(803)
பின்னுசடைகள் தாழக் கேழல் எயிறு பிறழப் போய்,

அன்ன நடையார் மனைகள் தோறும் அழகு ஆர் பலி தேர்ந்து,

புன்னை மடலின் பொழில் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக,

என்னை உடையான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

என்னை அடிமையாக உடைய இறைவன், முறுக்கி விடப்பட்ட சடைகள் தாழ்ந்து தொங்க மாலையாகக் கோத்தணிந்த பன்றியின் பற்கள் விளங்கச் சென்று, அன்னம் போன்ற நடையினையுடைய மகளிரின் இல்லங்கள்தோறும் அழகு பொருந்தப் பலியேற்று, புன்னை தாழை முதலியன நிறைந்த பொழிலால் சூழப்பட்ட அழகிய புறவம் என்னும் சீகாழியைத் தனது பதியாகக்கொண்டு உமையம்மையோடு வீற்றிருந்தருள்கின்றான்.

மேல்

(804)
உண்ணற்கு அரிய நஞ்சை உண்டு, ஒரு தோழம்தேவர்

விண்ணில் பொலிய, அமுதம் அளித்த விடை சேர் கொடி அண்ணல்,

பண்ணில் சிறைவண்டு அறை பூஞ்சோலைப் புறவம் பதி ஆக,

எண்ணில் சிறந்த இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

யாராலும் உண்ண முடியாத நஞ்சைத் தான் உண்டு, ஒரு தோழம் என்ற எண்ணிக்கையில் தேவர்கள் விண்ணுலகில் மகிழ்வுற்று வாழ, கடலிடைத் தோன்றிய அமுதை வழங்கிய விடை எழுதிய கொடியையுடைய அண்ணல். சிறகுகளையுடைய வண்டுகள் பண்ணோடு ஒலிக்கும் பூஞ்சோலைகளால் சூழப்பட்ட புறவம் என்னும் சீகாழியைத் தன் பதியாகக் கொண்டு எண்ணற்ற இமையோர் தன்னை ஏத்தி வணங்க உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.

மேல்

(805)
விண்தான் அதிர வியன் ஆர் கயிலை வேரோடு எடுத்தான் தன்

திண்தோள் உடலும் முடியும் நெரியச் சிறிதே ஊன்றிய

புண்தான் ஒழிய அருள்செய் பெருமான், புறவம் பதி ஆக,

எண்தோள் உடையான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

எட்டுத் தோள்களையுடைய சிவபிரான் விண் அதிரும்படியாகப் பெரிய கயிலை மலையை வேரோடு பெயர்த்து எடுத்த இராவணனின் வலிமை பொருந்திய தோள்கள், உடல், முடி ஆகியன நெரியுமாறு கால் விரலால் சிறிதே ஊன்றிப் பின் அவன் வருந்திய அளவில் உடலில் தோன்றிய புண்கள் நீங்க அவன் வேண்டும் வரங்கள் பலவற்றைத் தந்த பெருமானாவான். அவ்விறைவன் புறவம் என்னும் சீகாழியைத் தனக்குரிய பதியாகக் கொண்டு இமையோர் ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.

மேல்

(806)
நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடிக் காண்கில்லாப்

படி ஆம் மேனி உடையான், பவளவரை போல்-திருமார்பில்

பொடி ஆர் கோலம் உடையான், கடல் சூழ் புறவம் பதி ஆக,

இடி ஆர் முழவு ஆர் இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

திருமாலும், நீண்டு வளர்ந்த தாமரை மலர் மேல்உறையும் நான்முகனும் தேடிக் காண இயலாத தன்மையை உடைய திருமேனியன். பவளமலை போன்ற திருமார்பின்கண் திருநீறு அணிந்த அழகினையுடையவன். அவ்விறைவன், கடல் நீரால் சூழப்பட்டதும் இடி போன்ற முழக்கத்தையுடைய முழா ஒலிப்பதும் ஆகிய புறவம் என்னும் சீகாழியைத் தனக்குரிய பதியாகக் கொண்டு, இமையவர் ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கின்றான்.

மேல்

(807)
ஆலும் மயிலின் பீலி அமணர், அறிவு இல் சிறுதேரர்,

கோலும் மொழிகள் ஒழிய, குழுவும் தழலும் எழில் வானும்

போலும் வடிவும் உடையான், கடல் சூழ் புறவம் பதி ஆக,

ஏலும் வகையால் இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

ஆடுகின்ற மயிலின் தோகையைக் கையில் ஏந்திய அமணர்களும், அறிவில் குறைந்த புத்தர்களும், புனைந்து பேசும் மொழிகளைத் தாழுமாறு செய்பவனாய், கூடி எரியும் தழலும், அழகிய வானமும் போன்ற செவ்வண்ணம் உடைய சிவன், கடல் நீர் சூழ்ந்த புறவம் என்னும் சீகாழியைத் தனது பதியாகக் கொண்டு இமையோர் பொருந்தும் வகையால் போற்ற உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.

மேல்

(808)
பொன் ஆர் மாடம் நீடும் செல்வப் புறவம் பதி ஆக

மின் ஆர் இடையாள் உமையாளோடும் இருந்த விமலனை,

தன் ஆர்வம் செய் தமிழின் விரகன் த்த தமிழ்மாலை

பல்-நாள் பாடி ஆட, பிரியார், பரலோகம்தானே.

அழகு பொருந்திய உயர்ந்த மாட வீடுகளை உடையதும், செல்வச் செழுமை வாய்ந்ததும் ஆகிய புறவம் என்னும் சீகாழிப் பதியில், மின்னல் போன்ற இடையினையுடைய உமையம்மையாரோடு எழுந்தருளியுள்ள குற்றமற்ற இறைவனைத் தன் அன்பால் தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன் போற்றி உரைத்த,

இத்தமிழ் மாலையைப் பல நாள்களும் பாடி ஆடுவோர், மேலுலகத்தில் பிரியாது உறைவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(75)
திருவெங்குரு - குறிஞ்சி

(809)
காலை நல்மாமலர் கொண்டு அடி பரவி, கைதொழு மாணியைக் கறுத்த வெங்காலன்,

ஓலம் அது இட, முன் உயிரொடு மாள உதைத்தவன்; உமையவள் விருப்பன்; எம்பெருமான்-

மாலை வந்து அணுக, ஓதம் வந்து உலவி, மறிதிரை சங்கொடு பவளம் முன் உந்தி,

வேலை வந்து அணையும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

வைகறைப் பொழுதில், சிறந்தனவாகிய நல்ல மலர்களைப் பறித்துவந்து சாத்தித் தன் திருவடிகளைப் பரவி, கைகளால் தொழும் மார்க்கண்டேயன் உயிரைக் கவரச் சினந்து வந்த கொடிய காலனை ஓலமிட்டு அலறித் தனக்கு முன்னே உயிரோடு மாளுமாறு உதைத்தருளியவனும், உமையம்மைக்கு விருப்பமானவனும் ஆகிய எம்பெருமான், மாலைக் காலம் வரக் கடல் வெள்ள நீர் வந்து உலவிச் சூழ்ந்து வரும் அலைகளால் சங்கு, பவளம் ஆகியவற்றை உந்திவந்து கரையிற் சேர்க்கும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு என்னும் சீகாழியில் மேவி வீற்றிருந்தருள்கின்றான்.

மேல்

(810)
பெண்ணினைப் பாகம் அமர்ந்து, செஞ்சடைமேல் பிறையொடும் அரவினை அணிந்து, அழகு ஆகப்

பண்ணினைப் பாடி ஆடி, முன் பலி கொள் பரமர் எம் அடிகளார் பரிசுகள் பேணி,

மண்ணினை மூடி, வான்முகடு ஏறி, மறிதிரை கடல் முகந்து எடுப்ப, மற்று உயர்ந்து

விண் அளவு ஓங்கி வந்து இழி கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

உமையம்மையை இடப்பாகமாக விரும்பி ஏற்று, செஞ்சடைமேல் பிறை பாம்பு ஆகியவற்றை அணிந்து, பண் வகைகளை அழகாகப் பாடி ஆடியவராய்ச் சென்று, மகளிரிடம் பலியேற்கும் பரமராகிய எம் அடிகளார், ஊழிக் காலத்தில் உலகை மூடி வான்முகடு வரை உயர்ந்து சுருண்டு விழும் அலைகடல் நீரில் மிதந்து உயர்ந்து வான் உற ஓங்கி மீள நிலவுலகிற்கு வந்திழிந்த கோயிலாகிய வெங்குரு என்னும் சீகாழிப்பதியுள், வீற்றிருந்தருள்கிறார்.

மேல்

(811)
ஓர் இயல்பு இல்லா உருவம் அது ஆகி, ஒண்திறல் வேடனது உரு அது கொண்டு,

காரிகை காணத் தனஞ்சயன் தன்னைக் கறுத்து, அவற்கு அளித்து, உடன் காதல் செய் பெருமான்-

நேரிசை ஆக அறுபதம் முரன்று, நிரை மலர்த் தாதுகள் மூச, விண்டு உதிர்ந்து,

வேரிகள் எங்கும் விம்மிய சோலை வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

தம் இயல்பிற்குப் பொருத்தமற்ற உருவமாய் மிக்க வலிமையுடைய வேடர் உருத்தாங்கி வந்து உமையம்மை காண அருச்சுனனோடு ஒரு காரணங்காட்டிச் சண்டையிட்டு அவனுக்கு வேண்டும் பொருள்களை வழங்கி அன்பு செய்த பெருமானாகிய சிவபிரான், வண்டுகள் நேரிசைப் பண்பாடி முரன்று வரிசையாக மலர்ந்த மலர்களின் மகரந்தங்களில் புரள, அதனால் மலர்கள் விரிந்து தேன் உதிருவதால் தேன் எங்கும் விம்மி வழியும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு என்னும் சீகாழிப்பதியில் வீற்றிருந்தருள்கிறான்.

மேல்

(812)
வண்டு அணை கொன்றை வன்னியும் மத்தம் மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க

கொண்டு அணி சடையர்; விடையினர்; தம் கொடுகொட்டி குடமுழாக் கூடியும், முழவப்-

பண் திகழ்வு ஆகப் பாடி, ஒர் வேதம் பயில்வர் முன் பாய் புனல் கங்கையைச் சடைமேல்

வெண்பிறை சூடி, உமையவளோடும் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

வண்டுகள் சூழும் கொன்றை மலர், வன்னி இலை, ஊமத்தம் மலர், வில்வம், எருக்கம்பூ ஆகியனவற்றை மிகுதியாகக் கொண்டு அணிந்த சடையினரும், விடை ஊர்தியரும், பூத கணங்கள் கொடுகொட்டி குடமுழா முழவு முதலியவற்றை முழக்கப் பண் விளங்க ஒப்பற்ற வேதங்களைப் பாடிப் பழகியவரும், தமக்கு முன்னே பாய்ந்து வந்த கங்கை வெள்ளத்தை வெண்பிறையோடு சடையில் அணிந்தவரும் ஆகிய சிவபிரானார் உமையம்மையாரோடு வெங்குரு எனப்படும் சீகாழிப் பதியில் வீற்றிருந்தருள்கிறார்.

மேல்

(813)
சடையினர், மேனி நீறு அது பூசி, தக்கை கொள் பொக்கணம் இட்டு உடன் ஆகக்

கடைதொறும் வந்து, பலி அது கொண்டு, கண்டவர் மனம் அவை கவர்ந்து, அழகு ஆகப்

படை அது ஏந்தி, பைங்கயல் கண்ணி உமையவள் பாகமும் அமர்ந்து, அருள்செய்து,

விடையொடு தம் சூழ்தரச் சென்று, வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

சடைமுடியினராய்த் திருமேனியில் வெண்ணீறு பூசியவராய், தக்கை என்னும் இசைக் கருவியை வைத்துக் கட்டியுள்ள துணிமூட்டையைத் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு வீடுகள் தோறும் வந்து பலியேற்று, தம்மைக் கண்ட மகளிரின் மனங்களைக் கவர்ந்து அழகிய கோலத்தோடு மழுப்படையைக் கையில் ஏந்தியவராய் விளங்கும் பெருமானார், பசிய கயல் போன்ற கண்களை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டு அமர்ந்து அருள் செய்யும் குறிப்பினராய், விடையூர்தியோடு பூத கணங்கள் சூழ வெங்குரு என்னும் சீகாழிப் பதியில் வந்து வீற்றிருந்தருள்கிறார்.

மேல்

(814)
கரை பொரு கடலில் திரை அது மோத, கங்குல் வந்து ஏறிய சங்கமும் இப்பி

உடை முத்தம் மணல் இடை வைகி, ஓங்கு வான் இருள் அறத் துரப்ப, எண்திசையும்

புரை மலி வேதம் போற்று சுரர்கள் புரிந்தவர் நலம் கொள் ஆகுதியினின் நிறைந்த

விரை மலி தூபம் விசும்பினை மறைக்கும் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

கரையை அலைக்கும் கடலின் திரைகள் மோதுதலால் இரவிடைக் கரையில் வந்து ஏறிய சங்குகளும் சிப்பிகளும் முத்துக்களை ஈனப் புகழ்பெற்ற அம்முத்துக்கள் மணல் இடையே தங்கி ஓங்கிய வானத்தின் இருளை முற்றிலும் துரத்தி ஒளி செய்ய, எண் திசைகளிலும் பரவி நிறைந்த வேதங்களைப் போற்றும் அந்தணர்கள் நன்மை விளைக்கும் வேள்விகளைப் புரிய, அவ்வேள்விகளின் ஆகுதியால் எழும் மணம் மிக்க புகை வானை மறைத்துத் தோன்றும் வெங்குரு என்னும் சீகாழிப்பதியில் பெருமான் உமையம்மையாரோடு வீற்றிருந்தருள்கின்றார்.

மேல்

(815)
வல்லி நுண் இடையாள் உமையவள் தன்னை மறுகிட வரு மதகளிற்றினை மயங்க

ஒல்லையில் பிடித்து, அங்கு உரித்து, அவள் வெருவல் கெடுத்தவர்; விரிபொழில் மிகு திரு ஆலில்

நல் அறம் த்து ஞானமோடு இருப்ப, நலிந்திடல் உற்று வந்த அக் கருப்பு

வில்லியைப் பொடிபட விழித்தவர் விரும்பி, வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

கொடி போன்று நுண்ணிய இடையினை உடைய உமையம்மை அஞ்சுமாறு வந்த மதகளிற்றை அது மயங்குமாறு விரைந்து பிடித்து அதனை உரித்து அம்மையின் அச்சத்தைப் போக்கியவரும், விரிந்த பொழிலிடையே அமைந்த அழகிய ஆலமரத்தின் அடியில் அமர்ந்து சனகாதியர்க்கு நல்லறங்களை உரைத்து, யோக நிலையில் ஞானமாத்திரராய் வீற்றிருக்க, திருமால் பிரமர் தம் கடுஞ்சொற்களால் நலிவுற்று மலர்க்கணை தொடுத்து யோக நிலையைக் கலைக்க வந்த கரும்பு வில்லையுடைய காமன் எரிந்து பொடிபடுமாறு விழித்தவரும் ஆகிய சிவபிரானார் விரும்பி வெங்குரு என்னும் சீகாழிப் பதியில் எழுந்தருளியுள்ளார்.

மேல்

(816)
பாங்கு இலா அரக்கன் கயிலை அன்று எடுப்ப, பலதலை முடியொடு தோள் அவை நெரிய,

ஓங்கிய விரலால் ஊன்றி, அன்று, அவற்கே ஒளி திகழ் வாள் அது கொடுத்து, அழகு ஆய

கோங்கொடு, செருந்தி, கூவிளம், மத்தம், கொன்றையும், குலாவிய செஞ்சடைச் செல்வர்

வேங்கை பொன்மலர் ஆர் விரை தரு கோயில் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

நற்குணங்கள் இல்லாத அரக்கனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்தபோது அவன் முடிகள் அணிந்த பல தலைகளையும் தோள்களையும் கால்விரலை ஊன்றி நெரித்த வரும், அவன் பிழை உணர்ந்து வருந்திப் பாடிய அளவில் அப்பொழுதே அவனுக்கு ஒளிபொருந்திய வாளை வழங்கியருளியவரும், அழகிய கோங்கு, செருந்தி, வில்வம், ஊமத்த மலர், கொன்றை ஆகியன விளங்கும் சிவந்த சடைமுடிச் செல்வரும் ஆகிய சிவபிரானார் வேங்கை மரங்களின் பொன்போன்ற மலர்களின் மணம் கமழும் வெங்குரு என்னும் சீகாழித் திருக்கோயிலில் வீற்றிருந்தருள்கிறார்.

மேல்

(817)
ஆறு உடைச் சடை எம் அடிகளைக் காண, அரியொடு பிரமனும் அளப்பதற்கு ஆகி,

சேறு இடை, திகழ் வானத்து இடை, புக்கும் செலவு அறத் தவிர்ந்தனர்; எழில் உடைத் திகழ் வெண்

நீறு உடைக் கோல மேனியர்; நெற்றிக்கண்ணினர்; விண்ணவர் கைதொழுது ஏத்த,

வேறு எமை ஆள விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

கங்கை நதியைச் சடையிற் சூடிய எம் தலைவராகிய சிவபிரானாரின் அடிமுடிகளை அளந்து காணுதற்குத் திருமால் பிரமர்கள் சேற்று நிலத்தைப் பன்றியாய் அகழ்ந்து சென்றும், முடியினைக் காண அன்னமாய்ப் பறந்து சென்றும் தம் செயல் அழிந்தனர். அழகு விளங்கும் வெண்ணீறு பூசிய திருமேனியரும், நெற்றிக்கண்ணரும், விண்ணவர் கைகளால் தொழுது ஏத்த அவர்களை விடுத்து எம்மைச் சிறப்பாக ஆள விரும்பியவரும் ஆகிய அவ்விகிர்தர் வெங்குரு என்னும் சீகாழிப் பதியில் எழுந்தருளியுள்ளார்.

மேல்

(818)
பாடு உடைக் குண்டர், சாக்கியர், சமணர், பயில்தரும் மற விட்டு, அழகு ஆக

ஏடு உடை மலராள் பொருட்டு வன்தக்கன் எல்லை இல் வேள்வியைத் தகர்த்து, அருள்செய்து,

காடு இடைக் கடிநாய் கலந்து உடன் சூழ, கண்டவர் வெரு உற விளித்து, வெய்து ஆய

வேடு உடைக் கோலம் விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

துன்பங்களைத் தாங்குதலே தவத்தின் அடையாளம் எனக் கருதும் குண்டர்களாகிய சமணர்களும் சாக்கியர்களும் கூறும் அறவுரைகளைக் கருதாது, அழகிய இதழ்களோடு கூடிய தாமரைமலர் போன்றவளாகிய தாட்சாயணியின் பொருட்டு வலிய தக்கன் இயற்றிய அளவிட முடியாத பெரிய வேள்வியை அழித்துப் பின் தக்கனுக்கும் அருள்புரிந்து, காட்டில் காவல் புரியும் நாய்கள் சூழ்ந்து வரவும், கண்டவர் அஞ்சவும், வேடர் பயிலும் சொற்களால் விலங்குகளை விளித்து வேட்டுவக் கோலத்தை விரும்பி ஏற்ற விகிர்தர் வெங்குரு என்னும் சீகாழிப் பதியில் வீற்றிருந்தருள்கின்றார்.

மேல்

(819)
விண் இயல் விமானம் விரும்பிய பெருமான் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரை,

நண்ணிய நூலன்-ஞானசம்பந்தன்-நவின்ற இவ் வாய்மொழி நலம் மிகு பத்தும்

பண் இயல்பு ஆகப் பத்திமையாலே பாடியும் ஆடியும் பயில வல்லார்கள்,

விண்ணவர் விமானம் கொடுவர ஏறி, வியன் உலகு ஆண்டு வீற்றிருப்பவர் தாமே.

வானளாவிய விமானத்தை விரும்பி, வெங்குரு என்னும் சீகாழிப் பதியுள் வீற்றிருந்தருளும் பெருமானைப் பற்றி அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றைத் தெரிவிக்கும் நல்ல நூல்களை அறிந்த ஞானசம்பந்தன் அருளிய இவ்வுண்மை மொழிகளாகிய,

நன்மைகளைத் தரும் இப்பதிகப் பாடல்கள் பத்தையும், பண்ணிசையோடும், பக்தியோடும் பாடி ஆடிக் கூற வல்லவர்கள், தேவர்கள் விமானம் கொண்டுவர அதன்மிசை ஏறி, அகன்ற அத்தேவருலகை அடைந்து அரசு புரிந்து, அதன்கண் வீற்றிருப்பர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(76)
திருஇலம்பையங்கோட்டூர் - குறிஞ்சி

(820)
மலையினார் பருப்பதம், துருத்தி, மாற்பேறு, மாசு இலாச் சீர் மறைக்காடு, நெய்த் தானம்,

நிலையினான், எனது தனது ஆக, நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன்-

கலையின் ஆர் மடப்பிணை துணையொடும் துயில, கானல் அம் பெடை புல்கிக் கணமயில் ஆலும்

இலையின் ஆர் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?.

கயிலாய மலையை இடமாகக் கொண்டுறையும் இறைவன், சீபருப்பதம், துருத்தி, மாற்பேறு, குற்றமற்ற சிறப்புடைய திருமறைக்காடு, நெய்த்தானம் ஆகிய தலங்களில் நிலையாக எழுந்தருளியிருப்பவன். தன் உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தி அருள்புரிபவன். திருநீறு அணிந்து ஆனேற்றில் மகிழ்வோடு ஏறி வரும் நிமலன். அத்தகையோன் ஆண்மான்கள் தம் இளைய பெண்மான்களோடு துயில்வதும், சோலைகளில் வாழும் ஆண் மயில்கள் பெடைகளைத் தழுவி அகவுவதுமாய இலைகள் நிறைந்த பசிய பொழில்கள் சூழ்ந்த இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் அழகினைக் கவர்ந்து செல்வது முறையோ?

மேல்

(821)
திரு மலர்க்கொன்றையான், நின்றியூர் மேயான், தேவர்கள் தலைமகன், திருக்கழிப்பாலை

நிருமலன், எனது தனது ஆக, நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன்-

கருமலர்க் கமழ் சுனை நீள் மலர்க்குவளை கதிர் முலை இளையவர் மதிமுகத்து உலவும்

இருமலர்த் தண்பொய்கை இலம்பையங்கோட்டூர்இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?.

அழகிய கொன்றை மலர் மாலையை அணிந்தவன். திருநின்றியூரில் எழுந்தருளியிருப்பவன். தேவர்கட்குத் தலைவன். திருக்கழிப்பாலையில் குற்றமற்றவனாய் உறைபவன். தன்னுடைய உரைகளை என்னுடைய உரைகளாக வெளிப்படுத்தி அருள் புரிபவன். திருநீறு அணிந்து ஆனேற்றில் மகிழ்வோடு ஏறிவரும் நிமலன். அத்த கையோன் பெரிய தாமரை மலர்களால் மணம் கமழும் சுனைகளில் உள்ள நீண்ட குவளை மலர்கள் இளம் பெண்களின் மதி போன்ற முகத்தில் உலவும் பெரிய கண்களை நிகர்க்கும் இலம்பையங் கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் அழகைக் கவர்ந்து செல்லுதல் முறையோ?

மேல்

(822)
பாலன் ஆம், விருத்தன் ஆம், பசுபதிதான் ஆம், பண்டு வெங்கூற்று உதைத்து அடியவர்க்கு அருளும்

காலன் ஆம், எனது தனது ஆக, கனல் எரி அங்கையில் ஏந்திய கடவுள்

நீலமாமலர்ச் சுனை வண்டு பண் செய்ய, நீர் மலர்க்குவளைகள் தாது விண்டு ஓங்கும்

ஏலம் நாறும் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?.

பால வடிவோடும், விருத்த வடிவோடும் வரும் பசுபதி எனப் பெறுபவன். முற்காலத்தில் கொடிய கூற்றுவனை உதைத்து மார்க்கண்டேயருக்கு அருள்புரிந்த காலகாலன். தன்னுடைய உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவன். கையில் விளங்கும் எரியை ஏந்திய கடவுள். அத்தகைய இறைவன் நீல நிறம் பொருந்திய சிறந்த மலர்கள் பூக்கும் சுனையில் வண்டுகள் பாட நீரில் பூக்கும் குவளை மலர்கள் மகரந்தம் விண்டு மணம் பரப்புவதும், ஏலமணம் கமழும் பொழில்கள் சூழ்ந்ததுமான இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அவனைத் தரிசிக்க வந்த என் எழிலைக் கொள்வது முறையோ?

மேல்

(823)
உளம் கொள்வார் உச்சி ஆர் கச்சி ஏகம்பன், ஒற்றியூர் உறையும் அண்ணாமலை அண்ணல்,

விளம்புவான் எனது தனது ஆக, வெள்ள நீர் விரிசடை தாங்கிய விமலன்-

குளம்பு உறக் கலை துள, மலைகளும் சிலம்ப, கொழுங்கொடி எழுந்து எங்கும் கூவிளம் கொள்ள,

இளம்பிறை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?.

உள்ளத்தில் தியானிப்பவர்களின் முடிமீது விளங்குபவன் கச்சியேகம்பன். ஒற்றியூர், திருவண்ணாமலை ஆகிய தலங்களில் விளங்கும் தலைவன். என்னுடைய உரைகளாகத் தன்னுரைகளை வெளியிடுபவன். கங்கை வெள்ளத்தைத் தனது விரிந்த சடைமிசைத் தாங்கிய விமலன். அத்தகையோன். கலைமான்கள் குளம்புகள் நிலத்தில் பதியுமாறு கால்களை அழுத்தித் துள்ளவும், மலைகள் அவ்விடங்களில் எழும்பும் ஒலிகளை எதிரொலிக்கவும், வளமையான கொடிகள் வளர்ந்த வில்வ மரங்கள் முழுதும் படியவும் அமைந்துள்ள, இளம்பிறை தவழும் வான் அளவிய பொழில்கள் சூழ்ந்த இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அவனைத் தரிசிக்க வந்த என் எழிலைக் கவர்ந்து கொள்வது நீதியோ!

மேல்

(824)
தேனும் ஆய் அமுதம் ஆய்த் தெய்வமும் தான் ஆய்த் தீயொடு நீர் உடன் வாயு ஆம் தெரியில்

வானும் ஆம், எனது தனது ஆக, வரி அரா அரைக்கு அசைத்து உழிதரு மைந்தன்-

கானமான் வெரு உறக் கருவிரல் ஊகம் கடுவனோடு உகளும் ஊர் கல் கடுஞ்சாரல்

ஏனம் ஆன் உழிதரும் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?.

தேன், அமுது ஆகியன போல இனிப்பவனாய். தெய்வம் தானேயானவன். தீ, நீர், வாயு, வான், மண் ஆகிய ஐம்பூத வடிவினன். தன் உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவன். உடலில் வரிகளை உடைய பாம்பைத் தன் இடையிலே கட்டிக் கொண்டு திரிபவன். மான்கள் அஞ்சும்படி கரிய விரல்களை உடைய பெண் கருங்குரங்கு ஆண் குரங்கோடு காட்டில் உகளும் பாறைகளையுடைய கடுமையான மலைச்சாரலில் பன்றிகளும் காட்டுப் பசுக்களும் திரியும் இலம்பையங்கோட்டூரைத் தன் இருப்பிடமாகக் கொண்டு தன்னை வழிபட வந்த என் அழகைக் கவர்ந்து கொள்ளல் முறையோ?

மேல்

(825)
மனம் உலாம் அடியவர்க்கு அருள் புரிகின்ற வகை அலால் பலி திரிந்து உண்பு இலான், மற்று ஓர்

தனம் இலான், எனது தனது ஆக, தாழ்சடை இளமதி தாங்கிய தலைவன்-

புனம் எலாம் அருவிகள் இருவி சேர் முத்தம் பொன்னொடு மணி கொழித்து, ஈண்டி வந்து, எங்கும்

இனம் எலாம் அடைகரை இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?.

தங்கள் மனங்களில் இறைவனை உலாவச் செய்யும் அடியவர்க்கு அருள்புரிதற் பொருட்டே பலியேற்றுத் திரிபவனேயன்றி உண்ணும்பொருட்டுப் பலி ஏலாதவன். வீடு பேறாகிய செல்வமன்றி வேறு செல்வம் இல்லாதவன். தன்னுடைய உரைகளை என்னுடைய உரைகளாக வெளிப்படுத்தியவன். தாழ்ந்து தொங்கும் சடைமீது இளம் பிறையைத் தாங்கியுள்ள தலைவன். அத்தகையோன் தினைப்புனங்களில் பாய்ந்து வரும் அருவிகள் அரிந்த தினைத்தாள்களில் ஒதுங்கிய முத்து பொன் மணி முதலியவற்றைக் கொழித்துக் கொண்டு வந்து எல்லா இடங்களிலும் சேர்க்கும் கரைகளோடு கூடிய வயல்களை உடைய இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் எழிலைக் கொள்வது முறையோ?

மேல்

(826)
நீர் உளான், தீ உளான், அந்தரத்து உள்ளான், நினைப்பவர் மனத்து உளான், நித்தமா ஏத்தும்

ஊர் உளான், எனது தனது ஆக, ஒற்றை வெள் ஏறு உகந்து ஏறிய ஒருவன்-

பார் உளார் பாடலோடு ஆடல் அறாத பண் முரன்று அஞ்சிறை வண்டு இனம் பாடும்

ஏர் உளார் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?.

நீர், தீ, ஆகாயம் ஆகியவற்றுள் இருப்பவன். நினைப்பவர் மனத்தில் உறைபவன். நாள்தோறும் அடியவர்கள் வந்து வணங்கும் ஊர்களை இடமாகக் கொண்டவன். தன்னுடைய உரைகளை என்னுடையனவாக வெளிப்படுத்தியவன். தனித்த ஒரு வெள்ளேற்றை உகந்து ஏறி வருபவன். அத்தகையோன், மண்ணக மக்களின் பாடல் ஆடல்கள் இடையறாது நிகழ்வதும், அழகிய சிறகுகளை உடைய வண்டுகள் பண்ணிசை போல ஒலி செய்து பாடும் அழகிய பொழில்கள் சூழ்ந்ததுமான இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் எழிலைக் கவர்தல் முறையாகுமோ?

மேல்

(827)
வேர் உலாம் ஆழ்கடல் வரு திரை இலங்கை வேந்தன தடக்கைகள் அடர்த்தவன், உலகில்

ஆர் உலாம் எனது தனது ஆக, ஆகம் ஓர் அரவு அணிந்து உழி தரும் அண்ணல்

வார் உலாம் நல்லன மாக்களும் சார, வாரணம் உழிதரும் மல்லல் அம் கானல்,

ஏர் உலாம் பொழில் அணி இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?.

நிலத்தின் வேர் வரை உலாவுகின்ற ஆழ்ந்த கடலின் அலைகள் தவழ்கின்ற இலங்கை வேந்தனாகிய இராவணனின் நீண்ட கைகள் இருபதையும் நெரித்தவன். உலகின்கண் நிறைந்து விளங்கும் தன்னுடைய உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவன். தன்னுடைய மார்பில் பெரியதொரு பாம்பினை அணிந்து திரியும் தலைவன். அத்தகையோன், கழுத்தில் வார் கட்டப்பட்ட நல்ல வளர்ப்பு விலங்குகளும், யானைகளும் திரியும் வளமான காடுகளும் அழகிய பொழில்களும் சூழ்ந்த இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக்கொண்டு என் எழிலைக் கவர்தல் முறையோ?

மேல்

(828)
கிளர் மழை தாங்கினான், நான்முகம் உடையோன், கீழ் அடி மேல்முடி தேர்ந்து அளக்கில்லா,

உளம் அழை எனது தனது ஆக, ஒள் அழல் அங்கையில் ஏந்திய ஒருவன்-

வள மழை எனக் கழை வளர் துளி சோர, மாசுணம் உழிதரு மணி அணி மாலை,

இளமழை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?.

ஆயர்பாடியை அழித்தற்கெனக் கிளர்ந்தெழுந்த மழையைக் கோவர்த்தனம் என்னும் மலையால் தடுத்த திருமாலும், நான்முகனும், கீழே அகழ்ந்து சென்று அடியையும், மேலே பறந்து சென்று முடியையும் அளந்தறியமுடியாதவாறு அழலுருவாய் ஓங்கி நின்றவன். மனத்தால் அழைத்தற்குரியனவாய் அமைந்த தன்னுடைய உரைகளை என்னுடையவாக வெளிப்படுத்தியவன். அழகிய கையில் ஒளி பொருந்திய அழலை ஏந்திய ஒப்பற்ற தலைவன். அத்தகையோன், வளமான மழை போல, மூங்கிலில் தேங்கிய பனி நீர், காற்றால் பொழிவதும், மலைப் பாம்புகள் ஊர்வதும், அழகிய மணிகள் மாலை போல நிறைந்து தோன்றுவதும், மேகக் கூட்டங்கள் தவழும் பொழில் சூழ்ந்ததுமான இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் எழிலைக் கவர்ந்தான். இது முறையோ?

மேல்

(829)
உரிஞ்சன கூறைகள் உடம்பினர் ஆகி உழிதரு சமணரும் சாக்கியப்பேய்கள்

பெருஞ்செல்வன், எனது தனது ஆக, பெய் பலிக்கு என்று உழல் பெரியவர் பெருமான்-

கருஞ்சுனை முல்லை நன்பொன் அடை வேங்கைக் களி முக வண்டொடு தேன் இனம் முரலும்,

இருஞ்சுனை மல்கிய இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?.

ஆடைகளை உரிந்துவிட்டாற் போன்ற அம்மண உடம்பினராய்த் திரியும் சமணர்களும், சாக்கியர்களாகிய பேய்களும் அறிய இயலாத பெரிய வைப்பு நிதியாய் விளங்குவோன். தன்னுடைய உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவன். ஊரார் இடும் பலியை ஏற்பதற்கெனப் பிட்சாடனனாய்த் திரிபவன். பெரியோர்களுக்கெல்லாம் தலைவன். அத்தகையோன், பெரிதான அரும்புகளை உடைய முல்லையும், பொன் போன்று மலரும் வேங்கையும், மகிழ்ச்சி நிறைந்த முகத்தோடு வண்டுகளும், தேனீக்களும் முரலும் பெரிய சுனைகளும், நிறைந்து காணப்படும் இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு, என் எழிலைக் கவர்தல் முறையோ?

மேல்

(830)
கந்தனை மலி கனைகடல் ஒலி ஓதம் கானல் அம் கழி வளர் கழுமலம் என்னும்

நந்தியார் உறை பதி நால்மறை நாவன்-நல்-தமிழ்க்கு இன்துணை, ஞானசம்பந்தன்-

எந்தையார் வள நகர் இலம்பையங்கோட்டூர் இசையொடு கூடிய பத்தும் வல்லார், போய்

வெந்துயர் கெடுகிட, விண்ணவரோடும் வீடு பெற்று, வீடு எளிது ஆமே.

மணம் நிரம்பியதும், கடல் ஒலியோடு அதன் வெள்ளம் பெருகிக் கடற்கரைச் சோலைகள் உப்பங்கழிகள் ஆகியன நிரம்புவதும் ஆகிய கழுமலம் என்னும் சிவன் உறை பதியாகிய சீகாழியில் தோன்றிய நான்மறை ஓதும் நாவினனும் நற்றமிழ்க்கு இனிய துணையாயிருப்பவனுமாகிய ஞானசம்பந்தன் எந்தையார் உறையும் வளநகராகிய இலம்பையங்கோட்டூரில் வீற்றிருந்தருளும் இறைவன் மீது பாடிய,

இசையொடும் கூடிய பத்துப் பாடல்களையும் ஓத வல்லவர்கள் தம் கொடிய துயர்கள் ஓடிக்கெட விண்ணவரோடும் வீற்றிருந்து பின் விண்ணிலிருந்து விடுபட்டு வீடு பேற்றையும் இப்பிறப்பு ஒன்றாலேயே எளிதாகப் பெறுவார்கள்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(77)
திருஅச்சிறுபாக்கம் - குறிஞ்சி

(831)
பொன் திரண்டன்ன புரிசடை புரள, பொருகடல் பவளமொடு அழல் நிறம் புரைய,

குன்று இரண்டு அன்ன தோள் உடை அகலம் குலாய வெண் நூலொடு கொழும்பொடி அணிவர்;

மின் திரண்டன்ன நுண் இடை அரிவை மெல்லியலாளை ஓர்பாகமாப் பேணி,

அன்று இரண்டு உருவம் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.

அச்சிறுபாக்கத்தைத் தான் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர், தமது, முறுக்கேறிய பொன் திரண்டாற் போன்ற சடை, அலைகள் பெருங்கடலில் தோன்றும் பவளக் கொடியையும், தீ வண்ணத்தையும் ஒத்துப் புரள, குன்றுகள் போன்ற இரண்டு தோள்களோடு கூடிய மார்பகத்தில் விளங்கும் வெண்மையான முப்புரி நூலோடு வளமையான திருநீற்றையும் அணிந்து, மின்னல் போன்ற நுண்ணிய இடையினையுடைய மென்மைத் தன்மை வாய்ந்த அரிவையாகிய பார்வதி தேவியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று, ஓருருவில் ஈருருவாய்த் தோன்றும் அடிகளாவார்.

மேல்

(832)
தேனினும் இனியர், பால் அன நீற்றர், தீம்கரும்பு அனையர், தம் திருவடி தொழுவார்

ஊன் நயந்து உருக உவகைகள் தருவார், உச்சிமேல் உறைபவர், ஒன்று அலாது ஊரார்,

வானகம் இறந்து வையகம் வணங்க வயம் கொள நிற்பது ஓர் வடிவினை உடையார்,

ஆனையின் உரிவை போர்த்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.

அச்சிறுபாக்கத்தை, தான் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர், தேனினும் இனியவர். பால் போன்ற நீறணிந்தவர். இனிய கரும்பு போன்றவர். தம் திருவடிகளை மெய்யுருகி வணங்கும் அன்பர்கட்கு உவகைகள் தருபவர். அவர்களின் தலைமேல் விளங்குபவர். இடபவாகனமாகிய ஓர் ஊர்தியிலேயே வருபவர். வானுலகைக் கடந்து மண்ணுலகை அடைந்து அங்குத் தம்மை வழிபடும் அன்பர்கள் நினைக்கும் செயலை வெற்றி பெறச் செய்து நிற்கும் வடிவினை உடையவர். யானையின் தோலைப் போர்த்தியவர். அவர் எம் தலைவராவர்.

மேல்

(833)
கார் இருள் உருவ மால்வரை புரையக் களிற்றினது உரிவை கொண்டு அரிவை மேல் ஓடி,

நீர் உருமகளை நிமிர்சடைத் தாங்கி, நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலர்;

பேர் அருளாளர்; பிறவியில் சேரார்; பிணி இலர்; கேடு இலர்; பேய்க்கணம் சூழ

ஆர் இருள் மாலை ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.

அச்சிறுபாக்கத்தைத் தாம் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர், உமையம்மை பெண் யானை வடிவு கொள்ளத் தாம் காரிருளும், பெரிய மலையும் போன்ற களிற்றுயானை வடிவம் தாங்கிச் சென்று அவளோடு கூடியவர். நீர்வடிவமான கங்கையை மேல்நோக்கிய சடைமிசைத் தாங்கியவர். நீறுபூசி விடையேற்றில் மகிழ்ந்து ஏறிவரும் புனிதர். பேரருளாளர். பிறப்பிறப்பிற் சேராதவர். பிணி, கேடு இல்லாதவர். பேய்க்கணங்கள் சூழச் சுடுகாட்டில் முன்மாலை யாமத்தில் நடனம் புரியும் எம் அடிகளாவார்.

மேல்

(834)
"மைம்மலர்க்கோதை மார்பினர்" எனவும், "மலைமகள் அவளொடு மருவினர்" எனவும்,

"செம்மலர்ப்பிறையும் சிறை அணி புனலும் சென்னிமேல் உடையர், எம் சென்னிமேல் உறைவார்"

தம் மலர் அடி ஒன்று அடியவர் பரவ, தமிழ்ச்சொலும் வடசொலும் தாள் நிழல் சேர,

அம் மலர்க்கொன்றை அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.

அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் குவளை மலர்களால் இயன்ற மாலையைச் சூடிய மார்பினர் எனவும், மலைமகளாகிய பார்வதி தேவியை இடப்பாகமாகக் கொண்டுள்ளவர் எனவும், சிவந்த மலர் போலும் பிறையையும், தேங்கியுள்ள கங்கை நீரையும் தம் சடைமுடி மீது உடையவர் எனவும், எம் சென்னி மேல் உறைபவர் எனவும், தம் மலர் போன்ற திருவடிகளை மனத்தால் ஒன்றி நின்று அடியவர்கள் பரவவும் தமிழ்ச்சொல், வடசொற்களால் இயன்ற தோத்திரங்கள் அவர்தம் திருவடிகளைச் சாரவும் அழகிய கொன்றை மலர் மாலையை அணிந்தவராய் விளங்கும் அடிகள் ஆவார்.

மேல்

(835)
"விண் உலாம் மதியம் சூடினர்" எனவும், "விரிசடை உள்ளது, வெள்ளநீர்" எனவும்,

"பண் உலாம் மறைகள் பாடினர்" எனவும், "பல புகழ் அல்லது பழி இலர்" எனவும்,

எண்ணல் ஆகாத இமையவர், நாளும், ஏத்து அரவங்களோடு எழில் பெற நின்ற

அண்ணல்; ஆன் ஊர்தி ஏறும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.

அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் வானிலே உலாவும் திங்களைச் சூடியவர் எனவும், அவர்தம் விரிந்த சடைமுடியில் கங்கை நீர் வெள்ளம் தங்கி உள்ளது எனவும், இசை அமைதியோடு கூடிய நான்கு வேதங்களைப் பாடியவர் எனவும், பலவகையான புகழையே உடையவர் எனவும், பழியே இல்லாதவர் எனவும் எண்ணற்ற தேவர்கள் நாள்தோறும் தம்மை ஏத்த அரவாபரணங்களோடு, மிக்க அழகும் தலைமையும் உடையவராய் ஆனேறு ஏறிவரும் எம் அடிகள் ஆவார்.

மேல்

(836)
நீடு இருஞ்சடைமேல் இளம்பிறை துளங்க, நிழல் திகழ் மழுவொடு, நீறு மெய் பூசி,

தோடு ஒரு காதினில் பெய்து, வெய்து ஆய சுடலையில் ஆடுவர்; தோல் உடை ஆக,

காடு அரங்கு ஆக, கங்குலும் பகலும், கழுதொடு பாரிடம் கைதொழுது ஏத்த,

ஆடுஅரவு ஆட, ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.

அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் தமது நீண்ட பெரிய சடைமேல் இளம்பிறை விளங்க, ஒளிபொருந்திய மழுவோடு, திருநீற்றை மேனிமேல் பூசி, ஒரு காதில் தோடணிந்து கொடிய சுடலைக்காட்டில் ஆடுபவர். புலித்தோலை உடையாக அணிந்து இரவும், பகலும் பேய்க்கணங்களும், பூதகணங்களும் கைகளால் தொழுதேத்தப் படமெடுத்தாடும் பாம்புகள் தம் மேனிமேல் பொருந்தி ஆடச் சுடுகாட்டைத் தமது அரங்கமாகக் கொண்டு ஆடும் எம் அடிகள் ஆவார்.

மேல்

(837)
ஏறும் ஒன்று ஏறி, நீறு மெய் பூசி, இளங்கிளை அரிவையொடு ஒருங்கு உடன் ஆகிக்

கூறும் ஒன்று அருளி, கொன்றை அம்தாரும் குளிர் இளமதியமும் கூவிளமலரும்

நாறும் மல்லிகையும் எருக்கொடு முருக்கும் மகிழ் இளவன்னியும் இவை நலம் பகர,

ஆறும் ஓர் சடைமேல் அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.

அச்சிறுபாக்கத்தில் ஆட்சிகொண்டுள்ள இறைவர், ஆனேறு ஒன்றில் ஏறித்தம் திருமேனிமேல் நீறுபூசி இளைய கிளி போன்ற அழகிய பார்வதி தேவியாருக்குத் தம் உடலில் ஒரு கூறு அருளி இருவரும் ஒருவராய் இணைந்து திருமுடிமேல் கொன்றை மாலை, குளிர்ந்த இளமதி, வில்வம், பிற நறுமலர்கள் மணங்கமழும் மல்லிகை, எருக்கு, முருக்கு, மகிழ், இளவன்னி இலை ஆகிய இவை மணம் பரப்ப, கங்கையாற்றைச் சடைமேல் அணிந்துள்ள எம் அடிகள் ஆவார்.

மேல்

(838)
கச்சும் ஒள்வாளும் கட்டிய உடையர், கதிர் முடி சுடர்விடக் கவரியும் குடையும்

பிச்சமும் பிறவும் பெண் அணங்கு ஆய பிறை நுதலவர், தமைப் பெரியவர் பேண,

பச்சமும் வலியும் கருதிய அரக்கன் பருவரை எடுத்த திண்தோள்களை அடர்வித்து,

அச்சமும் அருளும் கொடுத்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.

அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் ஒளி பொருந்திய வாளைக் கச்சிலே பொருத்தி இடையில் ஆடையாகக் கட்டியுள்ளவர். ஒளி பொருந்திய முடி சுடர்விடக்கவரி, குடை, பீலிக்குஞ்சம் முதலியவற்றோடு பெண்களைக் கவரும் பிறை மதியை முடியிற் சூடி விளங்குபவர். பெருமை உடைய அடியவர் தம்மை விரும்பி வழிபடுமாறு, தம் அன்பு வலிமை ஆகியவற்றைக் கருதித் தன்னைப் பெரியவனாக எண்ணிப் பெரிய கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் தோள்களை அடர்த்து அவனுக்குத் தம்பால் அன்பையும் அருளையும் கொடுத்த எம் அடிகள் ஆவார்.

மேல்

(839)
நோற்றலாரேனும், வேட்டலாரேனும், நுகர் புகர் சாந்தமோடு ஏந்திய மாலைக்

கூற்றலாரேனும், இன்ன ஆறு என்றும் எய்தல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார்;

தோற்றலார் மாலும் நான்முகம் உடைய தோன்றலும், அடியொடு முடி உற, தங்கள்

ஆற்றலால் காணார் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.

அச்சிறுபாக்கத்தில் ஆட்சிகொண்டுள்ள இறைவர் தவம் செய்யாராயினும், அன்பு செய்யாராயினும் நுகரத்தக்க உணவு, சந்தனம், கையில் ஏந்திய மாலை இவற்றின் கூறுகளோடு வழிபாடு செய்யாராயினும் இத்தகையவர் என்று அறிய முடியாத தன்மையும் அடைய முடியாத அருமையும் உடைய இயல்பினராய் மாலும் நான்முகனும் பன்றியும் அன்னமுமாய்த் தோன்றி அடியையும் முடியையும் தங்கள் ஆற்றலால் காண இயலாதவாறு உயர்ந்து நின்ற எம்அடிகள் ஆவார். எனவே நோற்பவருக்கும் அன்பு செய்பவருக்கும் வழிபடுவோருக்கும் அவர் எளியர் என்பது கருத்து.

மேல்

(840)
வாது செய் சமணும், சாக்கியப்பேய்கள் நல்வினை நீக்கிய வல்வினையாளர்,

ஓதியும் கேட்டும் உணர்வினை இலாதார் உள்கல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார்;

வேதமும் வேத நெறிகளும் ஆகி, விமல வேடத்தொடு கமல மா மதி போல்

ஆதியும் ஈறும் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.

அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள எம் அடிகள் நல்வினைகளைச் செய்யாது வல்வினைகள் புரிபவரும் ஓதியும் கேட்டும் திருந்தாத உணர்வோடு தர்க்கவாதம் புரிபவருமாகிய சமணர்களும் சாக்கியப் பேய்களும் நினைத்தும் அறிய முடியாத இயல்பினை உடையவர். வேதமும் வேத நெறிகளும் ஆகியவர். தம்மை வழிபடுவார் மலங்களை நீக்கும் வேடம் உடையவர். தாமரை மலரும் திங்களும் போன்ற அழகும், தண்மையும் உடையவர். உலகின் முதலும் முடிவும் ஆனவர்.

மேல்

(841)
மைச் செறி குவளை தவளை வாய் நிறைய மதுமலர்ப் பொய்கையில் புதுமலர் கிழியப்

பச்சிறவு எறி வயல் வெறி கமழ் காழிப்பதியவர் அதிபதி கவுணியர் பெருமான்,

கைச் சிறுமறியவன் கழல் அலால் பேணாக் கருத்து உடை ஞானசம்பந்தன்-தமிழ் கொண்டு,

அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் அன்பு உடை அடியவர் அருவினை இலரே.

பொருந்திய குவளை மலர்கள் தவளைகளின் வாய் நிறையுமாறு தேனைப் பொழியும் மலர்கள் நிறைந்த பொய்கைகளும், புதுமலர்களின் இதழ்கள் கிழியுமாறு பசிய இறால் மீன்கள் துள்ளி விழும் பொய்கைகளை அடுத்துள்ள வயல்களும் மணம் கமழும் சீகாழிப் பதியினர்க்கு அதிபதியாய் விளங்கும் கவுணியர் குலத் தலைவனும், கையின்கண் சிறிய மானை ஏந்திய சிவன் திருவடிகளையன்றிப் பிறவற்றைக் கருதாத கருத்தினை உடையவனும் ஆகிய ஞானசம்பந்தன் பாடிய ,

இப்பதிகத்தைக் கொண்டு அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் அன்புடை அடியவர் நீக்குதற்கரிய வினைகள் இலராவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(78)
திருஇடைச்சுரம் - குறிஞ்சி

(842)
வரி வளர் அவிர் ஒளி அரவு அரை தாழ, வார் சடை முடிமிசை வளர்மதி சூடி,

கரி வளர்தரு கழல்கால் வலன் ஏந்தி, கனல் எரி ஆடுவர், காடு அரங்கு ஆக;

விரி வளர்தரு பொழில் இனமயில் ஆல, வெண் நிறத்து அருவிகள திண்ணென வீழும்,

எரி வளர் இனமணி புனம் அணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே?.

மரங்கள் வளர்ந்த விரிந்த பொழில்களில் இளமயில்கள் ஆடுவதும், வெண்மையான நிறத்துடன் அருவிகள் திண்ணென்ற ஒலிக் குறிப்போடு வீழ்வதும், எரி போன்று ஒளிரும் ஓரினமான மணிகள் காடுகளில் அழகுற விளங்குவதுமாய மலைச் சாரலை உடைய திருஇடைச்சுரத்தில், வரிகளையும் ஒளியையும் உடைய பாம்பை இடையிலே கட்டி, நீண்ட சடைமுடிமீது வளரும் பிறை மதியைச் சூடி யானை உருவம் பொறித்த வீரக் கழலைக்காலின்கண் வெற்றி பெறச் சூடிச் சுடுகாட்டைத் தமது அரங்காகக் கொண்டு ஆடும் இவ்விறைவரது இயல்பு யாதோ?

மேல்

(843)
ஆற்றையும் ஏற்றது ஓர் அவிர்சடை உடையர்; அழகினை அருளுவர்; குழகு அலது அறியார்;

கூற்று உயிர் செகுப்பது ஓர் கொடுமையை உடையர்; நடு இருள் ஆடுவர்; கொன்றை அம்தாரார்;

சேற்று அயல் மிளிர்வன கயல் இளவாளை செருச் செய, ஓர்ப்பன செம்முக மந்தி

ஏற்றையொடு உழிதரும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே?.

வயல்களில் உள்ள சேற்றில் விளங்கும் கயல் மீன்களும் வாளை மீன்களும் தம்மோடு சண்டையிடுவதைக் கூர்ந்து நோக்கும் சிவந்த முகத்தையுடைய பெண் குரங்கோடு ஆண் குரங்கு கூடித் திரியும் அழகிய மலைச் சாரலை உடைய திருஇடைச்சுரத்தில், கங்கை நதியையும் ஏற்றருளிய விரிந்த சடையை உடையவராய், அழகும் இளமையும் உடையவராய், கூற்றுவன் உயிரை மாய்க்கும் பெருவிரல் உடையவராய், நள்ளிருளில் திருநடம்புரிபவராய், கொன்றை மலர் மாலை சூடியவராய் விளங்கும் இவ்விறைவர்தம் இயல்பு யாதோ?

மேல்

(844)
கானமும், சுடலையும், கல் படு நிலனும், காதலர்; தீது இலர்; கனல் மழுவாளர்;

வானமும் நிலமையும் இருமையும் ஆனார்; வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார்;

நானமும் புகை ஒளி விரையொடு கமழ, நளிர்பொழில் இள மஞ்ஞை மன்னிய பாங்கர்,

ஏனமும் பிணையலும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே?.

தூவி எரிக்கும் புழுகு, சந்தனம், அகில் முதலியவற்றின் புகையும் அவை எரிதலால் விளங்கும் ஒளியும் மணம் வீசச் செறிந்த பொழில்களிடையே இளமயில்கள் நிறைந்துள்ளதும், அருகில் பன்றிகளும் மானினங்களும் வாழ்வதுமான அழகிய மலைச் சாரலை அடுத்துள்ள திருஇடைச்சுரத்தில் காட்டையும், சுடலையையும், கற்கள் நிரம்பிய மலையிடங்களையும் விரும்புபவரும், தீமையில்லாதவரும், அழல் போன்ற வெம்மையான மழுவாயுதத்தை ஏந்தியவரும், தீமையில்லாதவரும், மறுமை இம்மை ஆகிய இருமை இன்பங்களையும் தருபவரும் வணங்குதற்கும் பழகுதற்கும் வாழ்த்துதற்கும் உரிமையானவருமாகிய இவ்விறைவரின் இயல்பு யாதோ?

மேல்

(845)
கட மணி மார்பினர்; கடல் தனில் உறைவார் காதலர்; தீது இலர்; கனல் மழுவாளர்;

விடம் அணி மிடறினர்; மிளிர்வது ஓர் அரவர்; வேறும் ஓர் சரிதையர்; வேடமும் உடையர்;

வடம் உலை அயலன கருங்குருந்து ஏறி, வாழையின் தீம்கனி வார்ந்து தேன் அட்டும்

இடம் முலை அரிவையர் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே?.

அசையும் ஆலமரத்தினருகே விளங்கும் கரிய குருந்த மரங்களில் ஏறி வாழைக் கனிகளின்மீது ஒழுகுமாறு தேன் அடைகளை எடுத்துப் பிழியும், இடங்கொண்டு வளர்ந்த முலைகளை உடைய பெண்கள் வாழும் அழகிய மலைச்சாரலை உடைய திருஇடைச்சுரத்தில், மலைச்சாரல்களில் விளைந்த மணிகளை அணிந்த மார்பினரும் கடலில் உறைபவரும், அன்புடையவரும் தீமையில்லாதவரும், கனலும் மழுவை ஏந்தியவரும் விடத்தை அடக்கிய மணிமிடற்றினரும், பாம்பை அணிகலனாகப் பூண்டவரும் வேறு வேறான ஒழுக்க நெறிகளை உடையவரும் பல்வேறு தோற்றங்களையுடைய வருமாய் எழுந்தருளிய இவ்விறைவரின் இயல்பு யாதோ?

மேல்

(846)
கார் கொண்ட கடி கமழ் விரிமலர்க் கொன்றைக் கண்ணியர்; வளர்மதி கதிர்விட, கங்கை-

நீர் கொண்ட சடையினர்; விடை உயர் கொடியர்; நிழல் திகழ் மழுவினர்; அழல் திகழ் நிறத்தர்;

சீர் கொண்ட மென்சிறைவண்டு பண்செய்யும் செழும் புனல் அனையன செங்குலை வாழை

ஏர் கொண்ட பலவினொடு எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே?.

கார்காலத்தே உண்டான மணம் கமழும் விரிந்த கொன்றை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவரும், வளரும் பிறைமதி ஒளிவிடக் கங்கை நீரை ஏற்ற சடையினரும், விடை எழுதிய உயர்ந்த கொடியை உடையவரும், ஒளி விளங்கும் மழுப்படையை ஏந்தியவரும், அழல்போலும் சிவந்த நிறத்தினரும் ஆய், சிறப்புமிக்க மெல்லிய இறகுகளை உடைய வண்டுகள் இசை பாடுவதும் வளவிய புனல் போலும் தண்ணிய செவ்வாழைக் குலைகள் அழகுமிக்க பலாக்கனிகளோடு விளங்கி அழகு செய்வதும் ஆகிய சாரலை உடைய இடைச்சுரத்தில் எழுந்தருளியிருக்கும் இவரது தன்மை யாதோ?

மேல்

(847)
தோடு அணி குழையினர்; சுண்ண வெண் நீற்றர்; சுடலையின் ஆடுவர்; தோல் உடை ஆகப்

பீடுடி உயர் செய்தது ஓர் பெருமையை உடையர்; பேய் உடன் ஆடுவர்; பெரியவர் பெருமான்;

கோடல்கள் ஒழுகுவ, முழுகுவ தும்பி, குரவமும் மரவமும் மன்னிய பாங்கர்,

ஏடு அவிழ் புதுமலர் கடி கமழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே?.

தோடணிந்த காதினராய்த் திருவெண்ணீறாகிய சுண்ணப் பொடி பூசியவரும், தோலை உடுத்திச் சுடுகாட்டில் நடனம் ஆடுபவரும், பீடு என்னும் சொல் பெருமை உறுமாறு மிக்க பெருமையை உடையவரும் பேய்க் கணங்களோடு ஆடுபவரும், பெரியவர் எனப் போற்றத் தக்கவர்கட்குத் தலைவருமாய்ச் செங்காந்தட் பூக்கள் தேனைச் சொரிய அவற்றின்கண் முழுகும் வண்டுகளை உடையதும் குரவம் கடம்ப மரம் ஆகியன நிறைந்துள்ள சோலைகளில் பூத்த புதுமலர்களின் மணம் வீசப் பெறுவதுமாகிய சாரலை உடைய இடைச்சுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபிரானது இயல்பு யாதோ?

மேல்

(848)
கழல் மல்கு காலினர்; வேலினர்; நூலர்; கவர் தலை அரவொடு கண்டியும் பூண்பர்;

அழல் மல்கும் எரியொடும் அணி மழு ஏந்தி ஆடுவர்; பாடுவர்; ஆர் அணங்கு உடையர்;

பொழில் மல்கு நீடிய அரவமும் மரவம் மன்னிய கவட்டு இடைப் புணர்குயில் ஆலும்

எழில் மல்கு சோலையில் வண்டு இசை பாடும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே?.

வீரக்கழல் அணிந்த திருவடியினரும், கையில் வேலை ஏந்தியவரும், முப்புரிநூல் அணிந்தவரும் ஐந்தாகக் கிளைத்த தலைகளை உடைய பாம்போடு உருத்திராக்க மாலை அணிந்துள்ளவரும், சுவாலைவிட்ட எரியோடு அழகிய மழுவை ஏந்தி ஆடுபவரும், பாடுபவரும், பிறரை வருத்தும் அழகுடையவருமாய்ப் பொழில்களில் நிறைந்து உயர்ந்துள்ள மராமரங்களில் பொருந்திய கிளைகளில் ஆண்பெண் குயில்கள் இணைந்து பாடுவதும் அழகிய சோலைகளில் வண்டுகள் இசை பாடுவதும் ஆகிய சாரலை உடைய இடைச்சுரத்தில் விளங்கும் சிவபிரானது இயல்பு யாதோ?

மேல்

(849)
தேம் கமழ் கொன்றை அம் திருமலர் புனைவார்; திகழ்தரு சடைமிசைத் திங்களும் சூடி,

வீந்தவர் சுடலை வெண் நீறு மெய் பூசி, வேறும் ஓர் சரிதையர்; வேடமும் உடையர்;

சாந்தமும் அகிலொடு முகில் பொதிந்து அலம்பி, தவழ் கன மணியொடு மிகு பளிங்கு இடறி,

ஏந்து வெள் அருவிகள் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே?.

தேன் மணம் கமழும் அழகிய கொன்றை மலர் மாலையைச் சூடுபவரும், விளங்கும் சடைமுடியில் பிறை மதியைச் சூடி இறந்தவர்களை எரிக்கும் சுடுகாட்டுச் சாம்பலைத் தம் திருமேனி மீது பூசி, வேறுபடும் புராண வரலாறுகளை உடையவரும் அவ்வாறே வேறுபடும் பல வேடங்களுடன் காட்சி தருபவருமாய், சந்தனம் அகில் ஆகியவற்றின் மணம் பொதிந்து இடித்துப் பொழியும் மழையாள் உருண்டுவரும் பெரிய மணிகளையும் பளிங்குகளையும் அடித்து வருவனவாகிய உயர்ந்த வெண்மையான அருவிகள் விளங்கும் மலைச் சாரலை உடைய இடைச்சுரத்தில் விளங்கும் பெருமானது இயல்பு யாதோ?

மேல்

(850)
பல இலம் இடு பலி கையில் ஒன்று ஏற்பர்; பலபுகழ் அல்லது பழி இலர், தாமும்;

தலை இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன் தடக்கைகள் அடர்த்தது ஓர் தன்மையை உடையர்;

மலை இலங்கு அருவிகள் மணமுழவு அதிர, மழை தவழ் இள மஞ்ஞை மல்கிய சாரல்,

இலை இலவங்கமும் ஏலமும் கமழும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே?.

பலர் இல்லங்களுக்கும் சென்று மகளிர் இடும் உணவைக் கைகளில் ஏற்பவரும், பலவாய் விரிந்த புகழ் அல்லது பழி எதுவும் இல்லாதவரும், விட்டு விளங்கும் ஒளியை உடைய நீண்ட மகுடங்களைத் தரித்த பத்துத் தலைகளையுடைய இராவணனின் நீண்ட கைகளை நெரித்த வலிமையை உடையவருமாய், மலையில் விளங்கும் அருவிகள் மணமுழாப் போல் ஒலியோடு இழிவதும், இளமயில்கள் நிறைந்ததும், மேகங்கள் தவழும் சாரலை உடையதும், இலைகளை உடைய இலவங்கம் ஏலம் கமழ்வதுமான திருஇடைச்சுரத்தில் எழுந்தருளிய இப்பெருமானது இயல்பு யாதோ?

மேல்

(851)
பெருமைகள் தருக்கி ஓர் பேது உறுகின்ற பெருங்கடல் வண்ணனும் பிரமனும் ஓரா

அருமையர்; அடி நிழல் பரவி நின்று ஏத்தும் அன்பு உடை அடியவர்க்கு அணியரும் ஆவர்;

கருமை கொள் வடிவொடு சுனை வளர் குவளைக் கயல் இனம் வயல் இளவாளைகள் இரிய,

எருமைகள் படிதர, இள அனம் ஆலும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே?.

பெருமைகளால் செருக்குற்றுப் பேதைமை உறுகின்ற கடல் நிற வண்ணனாகிய திருமாலும் பிரமனும் அறிய முடியாத அருமையை உடையவரும், தம் திருவடி நிழலை நின்று பரவிப் போற்றும் அன்புடைய அடியவர்கட்கு அணிமையானவருமாய், சுனைகளில் கரிய நிறவடிவோடு பூத்து வளர்ந்த குவளை மலர்களையும் கயலினங்களையும் உடையதும் வயல்களில் வாளைமீன்களும் கயல் மீன்களும் அஞ்சித் துள்ளுமாறு எருமைகள் படிய அதனைக் கண்டு இளைய அன்னங்கள் ஆரவாரிப்பதுமாகிய திருஇடைச்சுரத்தில் எழுந்தருளிய சிவபிரானாராகிய இவர்தம் இயல்பு யாதோ?

மேல்

(852)
மடைச்சுரம் மறிவன வாளையும் கயலும் மருவிய வயல் தனில் வருபுனல் காழிச்

சடைச்சுரத்து உறைவது ஓர் பிறை உடை அண்ணல் சரிதைகள் பரவி நின்று உருகு சம்பந்தன்,

புடைச் சுரத்து அரு வரைப் பூக் கமழ் சாரல் புணர் மட நடையவர் புடை இடை ஆர்ந்த

இடைச்சுரம் ஏத்திய இசையொடு பாடல், இவை சொல வல்லவர் பிணி இலர்தாமே.

நீர் மடைகளில் துள்ளுவனவாகிய வாளை மீன்களும் கயல் மீன்களும் வயல்களிடத்து வரும் நீர் வளம் மிக்க காழி நகரில், சடைக்காட்டில் உறையும் பிறை மதியை உடைய சிவபிரானின் வரலாறுகளைப் பரவி உருகும் ஞானசம்பந்தன், அருகருகே வெற்றிடங்களை உடைய மலையின் பூக்கமழ் சாரலில் அழகிய மட நடையினை உடைய மகளிர் பல இடங்களில் தங்கி அழகு செய்வதாகிய இடைச்சுரத்தைப் போற்றிப் பாடிய ,

இப்பதிகப் பாடலை இசையோடு சொல்ல வல்லவர், பிணிகள் இன்றி வாழ்வர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(79)
திருக்கழுமலம் - குறிஞ்சி

(853)
அயில் உறு படையினர்; விடையினர்; முடிமேல் அரவமும் மதியமும் விரவிய அழகர்;

மயில் உறு சாயல் வனமுலை ஒருபால் மகிழ்பவர்; வான் இடை முகில் புல்கும் மிடறர்;

பயில்வு உறு சரிதையர்; எருது உகந்து ஏறிப் பாடியும் ஆடியும் பலி கொள்வர்; வலி சேர்

கயிலையும் பொதியிலும் இடம் என உடையார் கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே.

கூர்மை பொருந்திய சூலப் படையை உடையவரும், விடை ஊர்தியினரும், முடிமேல் அரவு மதி ஆகியன விரவிய அழகுடையவரும், ஆண்மயில் போலும் கட்புலனாகிய மென்மையையும், அழகிய தனபாரங்களையும் உடைய உமையம்மையை ஒரு பாலாகக் கொண்டு மகிழ்பவரும், வானகத்தே பொருந்திய மேகம் போன்ற கரிய மிடற்றினரும், எல்லோராலும் போற்றப்படும் புராண வரலாறுகளை உடையவரும், இடபத்தில் மகிழ்ந்தேறிப் பாடியும் ஆடியும் சென்று பலியேற்பவரும், வலிமை சேர்ந்த கயிலை, பொதியில் போன்ற அழகிய மலைகளைத் தம் இடங்களாக உடையவரும் ஆகிய சிவபெருமான் உறையும் கழுமலத்தை நினைய நம்வினைத் தீமை அறும்.

மேல்

(854)
கொண்டலும் நீலமும் புரை திருமிடறர்; கொடு முடி உறைபவர்; படுதலைக் கையர்;

பண்டு அலர் அயன் சிரம் அரிந்தவர்; பொருந்தும் படர் சடை அடிகளார் பதி அதன் அயலே

வண்டலும் வங்கமும் சங்கமும் சுறவும் மறிகடல்-திரை கொணர்ந்து எற்றிய கரைமேல்

கண்டலும் கைதையும் நெய்தலும் குலவும் கழுமலம் நினைய, நம் வினை கரிசு அறுமே.

மேகம் நீல மலர் ஆகியன போன்ற அழகிய மிடற்றை உடையவரும், கயிலைச் சிகரத்தில் உறைபவரும், உயிரற்ற தலையோட்டைக் கையில் ஏந்தியவரும், முற்காலத்தில் தாமரை மலர் மேல் உறையும் பிரமனின் தலைகளில் ஒன்றைக் கொய்தவரும், அழகுறப் பொருந்தும் விரிந்த சடைமுடியை உடையவரும் ஆகிய சிவபிரானதுபதி, பக்கலின் சுருண்டு விழும் கடல் அலைகள் வண்டல் மண், இலவங்கம், சங்குகள் சுறா ஆகியனவற்றைக் கொணர்ந்து வீசும் கரை மேல் நீர்முள்ளி தாழை நெய்தல் ஆகியன பூத்து விளங்கும் கழுமல நகராகும். அதனை நினைய நம் வினைகளின் தீமைகள் நீங்கும்.

மேல்

(855)
எண் இடை ஒன்றினர்; இரண்டினர் உருவம்; எரி இடை மூன்றினர்; நால் மறையாளர்;

மண் இடை ஐந்தினர்; ஆறினர் அங்கம்; வகுத்தனர் ஏழ் இசை; எட்டு இருங்கலை சேர்

பண் இடை ஒன்பதும் உணர்ந்தவர்; பத்தர் பாடி நின்று அடி தொழ, மதனனை வெகுண்ட

கண் இடைக் கனலினர் கருதிய கோயில் கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே.

எண்ணத்தில் ஒன்றாயிருப்பவர், சிவம் சக்தி என உருவத்தால் இரண்டாயிருப்பவர். நெருப்பில் மூன்றாயிருப்பவர். நான்கு மறைகளை அருளியவர். மண்ணிடைச் சுவை ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து தன்மையர். வேதத்தின் ஆறு அங்கங்களாக இருப்பவர். ஏழிசைகளை வகுத்தவர். எண்வகைக் கலைகளில் ஒன்றாய இசைத்துறையில் ஒன்பான் கலையையும் உணர்ந்தவர். பக்தர்கள் பாடி நின்று திருவடிகளை வணங்க வீற்றிருப்பவர். மன்மதனைக் கண்ணிடைத் தோன்றிய கனலால் வெகுண்டவர். அத்தகைய பெருமான் விரும்பி உறையும் கழுமலத்திலுள்ள கோயிலை நினைய நம் வினைகளின் தீமை முற்றிலும் நீங்கும்.

மேல்

(856)
எரி ஒரு கரத்தினர்; இமையவர்க்கு இறைவர்; ஏறு உகந்து ஏறுவர்; நீறு மெய் பூசித்

திரிதரும் இயல்பினர்; அயலவர் புரங்கள் தீ எழ விழித்தனர்; வேய் புரை தோளி,

வரி தரு கண் இணை மடவரல், அஞ்ச, மஞ்சு உற நிமிர்ந்தது ஓர் வடிவொடும் வந்த

கரி உரி மருவிய அடிகளுக்கு இடம் ஆம் கழுமலம் நினைய, நம் வினை கரிசு அறுமே.

ஒருகரத்தில் எரி ஏந்தியவர். தேவர்கட்குத் தலைவர். விடையை விரும்பி ஊர்பவர். திருநீற்றை மெய்யிற் பூசித் திரியும் இயல்பினர். பகைமை பூண்டவர்களாய அசுரர்களின் மூன்று புரங்களும் தீயில் அழியுமாறு விழித்தவர். மூங்கில் போன்ற திரண்ட தோள்களையும், வரி பரந்த கண்களையும் உடைய உமையம்மை அஞ்சுமாறு மேகம் திரண்டு நிமிர்ந்து வந்தாற் போன்ற கரிய வடிவோடு தம்பால் வந்த யானையின் தோலை உரித்து அதனை அணிந்தவர். அத்தகைய பெருமானுக்கு இடமாக விளங்கும் கழுமலத்தை நினைய நம் வினைத்தீமை நீங்கும்.

மேல்

(857)
ஊர் எதிர்ந்து இடு பலி, தலை கலன் ஆக உண்பவர்; விண் பொலிந்து இலங்கிய உருவர்;

பார் எதிர்ந்து அடி தொழ, விரை தரும் மார்பில் பட அரவு ஆமை அக்கு அணிந்தவர்க்கு இடம் ஆம்

நீர் எதிர்ந்து இழி மணி, நித்தில முத்தம் நிரை சொரி சங்கமொடு, ஒண்மணி வரன்றி,

கார் எதிர்ந்து ஓதம் வன் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய, நம் வினை கரிசு அறுமே.

ஊர்மக்கள் வரவேற்று இடும் பலியைத் தலையோட்டில் ஏற்று உண்பவர். வானத்தில் பொலிவோடு இலங்கும் திருவுருவினர். மண்ணுலக மக்கள் விரும்பி வந்து தம் திருவடிகளை வணங்க மணம் கமழும் மார்பகத்தே படப்பாம்பு ஆமைஓடு உருத்திராக்கம் ஆகியன அணிந்தவர். அவர் தமக்கு இடமாய் உள்ளதால், மேகங்கள் படியும் வெண்மையான வலிய கடல் அலைகள் மிகுதியான நீருடன் இழிந்துவரும் மணிகள், முத்துக்கள், ஒழுங்குற நிறைந்த வளைந்த சங்குகள், ஒளி பொருந்திய பவளமணி ஆகியவற்றைக் கரையில் கொணர்ந்து வீசும் கழுமலத்தை நினைய நம் வினைத் தீமை நீங்கும்.

மேல்

(858)
முன் உயிர்த் தோற்றமும் இறுதியும் ஆகி, முடி உடை அமரர்கள் அடி பணிந்து ஏத்த,

பின்னிய சடைமிசைப் பிறை நிறைவித்த பேர் அருளாளனார் பேணிய கோயில்

பொன் இயல் நறுமலர் புனலொடு தூபம் சாந்தமும் ஏந்திய கையினர் ஆகி,

கன்னியர் நாள்தொறும் வேடமே பரவும் கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே.

உயிர்கட்கு முதலில் தோற்றத்தையும் பின்னர் இறுதியையும் வழங்குவோராய், முடியணிந்த தேவர் கணங்கள் தம் திருவடிகளைப் பணிந்து போற்ற, வட்டமாக, முறுக்கிய சடையின் மேல் பிறையைச் சூடிய பெருங் கருணையாளராகிய சிவபிரான் விரும்பிய கோயிலை உடையதும், பொன் போன்ற மணம் பொருந்திய மலர்கள் புனல் தூபம் சந்தனம் முதலியன ஏந்திய கையினராய்க் கன்னியர்கள் நாள்தோறும் வந்து இறைவர் கொண்டருளிய வடிவங்களைப் போற்றி வழிபடுவதுமாய கழுமலத்தை நினைய நம் வினைத் தீமைகள் நீங்கும்.

மேல்

(859)
கொலைக்கு அணித்தா வரு கூற்று உதைசெய்தார், குரை கழல் பணிந்தவர்க்கு அருளிய பொருளின்

நிலைக்கு அணித்தா வர நினைய வல்லார் தம் நெடுந் துயர் தவிர்த்த எம் நிமலருக்கு இடம் ஆம்

மலைக்கு அணித்தா வர வன் திரை முரல, மது விரி புன்னைகள் முத்து என அரும்ப,

கலைக்கணம் கானலின் நீழலில் வாழும் கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே.

மார்க்கண்டேயர் உயிரைக் கொல்லுதற்கு அணித்தாக வந்த கூற்றுவனை உதைத்தவர். ஒலிக்கின்ற கழல் அணிந்த தமது திருவடியைப் பணிந்தவர்கட்கு உரியதாக அருளிச் செய்த வீட்டின்பமாகிய நிலை அணியதாக வரவும் அவர்தம் நெடுந்துயர் போகவும் நினைக்கும் எம் நிமலர். அவர்க்கு இடமாக விளங்குவதும், தோணிமலைக்கு அருகில் வரும் வலிய அலைகள் ஒலிப்பதும், தேன் நிறைந்த புன்னைகள் முத்தென அரும்பவும் கடற்கரைச் சோலைகளின் நீழலில் மானினங்கள் வாழ்வதுமாய கழுமல நகரை நினைய நம் வினைக் குற்றங்கள் நீங்கும்.

மேல்

(860)
புயம்பல உடைய தென் இலங்கையர் வேந்தன், பொருவரை எடுத்தவன், பொன்முடி திண்தோள்

பயம்பல பட அடர்த்து, அருளிய பெருமான் பரிவொடும் இனிது உறை கோயில் அது ஆகும்

வியன்பல விண்ணினும் மண்ணினும் எங்கும் வேறு வேறு உகங்களில் பெயர் உளது என்ன,

இயம்பல படக் கடல்-திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே.

தோள்கள் பலவற்றை உடைய தென்னிலங்கை மன்னனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்க்க அவன் பொன் முடிகளையும், வலிய தோள்களையும் அச்சம் பல உண்டாகுமாறு அடர்த்தருளிய பெருமான் விருப்போடு மகிழ்ந்துறையும் கோயிலை உடையதும் அகன்ற விண்ணுலகிலும் மண்ணுலகிலும் வேறுவேறு யுகங்களில் வேறுவேறு பெயர்களுடையதாய் விளங்குவதும் நீர்த்துளி பலவாகத் தோன்ற கடல் அலைகள் தொடர்ந்து வந்து கரையில் வீசுவதுமாய கழுமலத்தை நினைய நம் வினைகளின் தீமைகள் நீங்கும்.

மேல்

(861)
விலங்கல் ஒன்று ஏந்தி வன்மழை தடுத்தோனும், வெறி கமழ் தாமரையோனும், என்று இவர் தம்

பலங்களால் நேடியும் அறிவு அரிது ஆய பரிசினன் மருவி நின்று இனிது உறைகோயில்

மலங்கி வன் திரை வரை எனப் பரந்து, எங்கும் மறிகடல் ஓங்கி, வெள் இப்பியும் சுமந்து,

கலங்கள் தம் சரக்கொடு நிரக்க வந்து ஏறும் கழுமலம் நினைய, நம் வினை கரிசு அறுமே.

கோவர்த்தனத்தைக் குடையாகக் கவித்துக் கொடிய மழையைத் தடுத்த திருமாலும், மணம்கமழ் தாமரையில் தோன்றிய பிரமனும் ஆகிய இவர்கள் தம் வலிமையினால் தேடியும் அறிய முடியாத தன்மையனாகிய சிவபெருமான், விரும்பி வந்து மகிழ்வாக உறையும் கோயில், வெள்ளிய அலைகள் ஒன்றோடொன்று கலந்து மலைகளைப் போலப் பரவி எங்கும் கரையில் மோதி மீளும் கடலில் பெருமிதத்துடன் கப்பல்கள் தம் சரக்கொடு வெள்ளிய முத்துச் சிப்பிகளையும் சுமந்து கரையை நோக்கி வரும் கழுமலமாகும் அதனை நினைய நும்வினைத் தீமை நீங்கும்.

மேல்

(862)
ஆம் பலதவம் முயன்று அற சொல்லும் அறிவு இலாச் சமணரும், தேரரும், கணி சேர்

நோம் பலதவம் அறியாதவர் நொடிந்த மூதுரை கொள்கிலா முதல்வர் தம் மேனிச்

சாம்பலும் பூசி, வெண்தலை கலன் ஆகத் தையலார் இடு பலி வையகத்து ஏற்று,

காம்பு அன தோளியொடு இனிது உறை கோயில் கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே.

இயன்ற பலவகையான தவங்களை மேற்கொண்டு பிறர்க்கு அறவுரை கூறும் அறிவற்ற சமணரும் புத்தரும், எண்ணத்தக்க வருத்தத்தைத் தரும் தவம் பலவற்றை அறியாதவராய்க் கூறும் பழமொழிகளை ஏற்று அருளாத தலைவர், தம் மேனி மீது திருநீற்றைப் பூசிக் கொண்டு வெண்டலையை உண்கலனாக் கொண்டு மகளிர் இடும் பலியை உலகில் ஏற்று மூங்கில் போலும் தோள்களை உடைய உமையம்மையோடு இனிதாக உறையும் கோயிலை உடைய கழுமலத்தை நினைய நம் வினைக்குற்றம் தீரும்.

மேல்

(863)
கலி கெழு பார் இடை ஊர் என உளது ஆம் கழுமலம் விரும்பிய கோயில் கொண்டவர் மேல்,

வலி கெழு மனம் மிக வைத்தவன், மறை சேர்வரும் கலை ஞானசம்பந்தன் தமிழின்

ஒலிகெழுமாலை என்று செய்த பத்தும் உண்மையினால் நினைந்து ஏத்த வல்லார்மேல்

மெலி குழு துயர் அடையா; வினை சிந்தும்; விண்ணவர் ஆற்றலின் மிகப் பெறுவாரே.

ஆரவாரம் மிக்க உலகில் ஊர் எனப் போற்ற விளங்கும் கழுமலத்தை விரும்பிக் கோயில் கொண்டுள்ள இறைவரிடம் உறுதியோடு தன் மனத்தை வைத்தவனும், வேதங்களிலும் கலைகளிலும் வல்லவனுமாகிய ஞானசம்பந்தன், இசையோடு பாடிய மாலையாகிய,

இப்பதிகப் பாடல்கள் பத்தையும், உண்மையோடு நினைந்து ஏத்த வல்லவரை, மெலிவைத் தரும் துன்பங்கள் சாரா. வினைகள் நீங்கும், விண்ணவரினும் மேம்பட்ட ஆற்றலை அவர்கள் பெறுவார்கள்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(80)
கோயில் - குறிஞ்சி

(864)
கற்றாங்கு எரி ஓம்பி, கலியை வாராமே

செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய

முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே

பற்றா நின்றாரைப் பற்றா, பாவமே.

வேதம் முதலிய நூல்களைக் கற்று அவற்றின்கண் ஓதிய நெறியிலே நின்று, வேள்விகளைச் செய்து, இவ்வுலகில் வறுமையை வாராமல் ஒழிக்கும் அந்தணர்கள் வாழும் தில்லையிலுள்ள சிற்றம் பலத்தில் எழுந்தருளியவனும் இளமையான வெள்ளிய பிறை மதியைச் சூடியவனும் ஆகிய முதல்வனது திருவடிகளைப் பற்றுக்கோடாகக் கொண்டு வாழ்பவர்களைப் பாவம் பற்றா.

மேல்

(865)
பறப்பைப் படுத்து, எங்கும் பசு வேட்டு, எரி ஓம்பும்

சிறப்பர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய

பிறப்பு இல்பெருமானை, பின் தாழ்சடையானை,

மறப்பு இலார் கண்டீர், மையல் தீர்வாரே.

பல இடங்களிலும் வேள்விச் சாலைகளை அமைத்து, ஆன்ம போதத்தைக் கொன்று, எரியோம்பும் சிறப்புடைய அந்தணர்கள் வாழும் தில்லையில் உள்ள சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ளவனும், தாயின் வயிற்றில் தங்கிப் பிறத்தல் இல்லாதவனும், பின்புறம் தாழ்ந்து தொங்கும் சடாபாரம் உடையவனும் ஆகிய பெருமானை மறவாதவர் மயக்க உணர்வு நீங்கப் பெறுவர்.

மேல்

(866)
மை ஆர் ஒண்கண்ணார் மாடம் நெடுவீதிக்

கையால் பந்து ஓச்சும் கழி சூழ் தில்லையுள்,

பொய்யா மறை பாடல் புரிந்தான், உலகு ஏத்தச்

செய்யான், உறை கோயில் சிற்றம்பலம்தானே.

மைதீட்டப் பெற்ற ஒளி பொருந்திய கண்களை உடைய பெண்கள், நீண்ட வீதிகளிலுள்ள மாட வீதிகளில் தம் கைகளால் பந்தோச்சி விளையாடும் அழகுடையதும், உப்பங்கழிகள் சூழ்ந்ததுமான தில்லையுள், என்றும் பொய்யாத வேதப் பாடல்களை விரும்பும் சிவந்த திருமேனியை உடைய சிவபிரான், உலக மக்கள் தன்னை ஏத்த உறையும் கோயிலை உடையது சிற்றம்பலமாகும்.

மேல்

(867)
நிறை வெண்கொடி மாட நெற்றி நேர் தீண்டப்

பிறை வந்து இறை தாக்கும் பேரம்பலம், தில்லைச்

சிறைவண்டு அறை ஓவாச் சிற்றம்பலம், மேய

இறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே.

மாடவீடுகளில் நிறைந்துள்ள வெண்மையான கொடிகள் வானத்திலுள்ள பிறையின் நெற்றியை நேரே தீண்டுமாறு வந்து சிறிதே தாக்கும் தில்லைப் பதியில் சிறகுகளை உடைய வண்டுகள் எப்போதும் ஒலிக்கும் பேரம்பலத்தை அடுத்துள்ள சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் திருவடிகளைப் பரவுவதே இன்பம் ஆகும்.

மேல்

(868)
செல்வ நெடுமாடம் சென்று சேண் ஓங்கிச்

செல்வ மதி தோய, செல்வம் உயர்கின்ற,

செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய

செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே.

செல்வ வளம்மிக்க பெரிய மாடவீடுகள் வானளாவ ஓங்கி உயர்ந்து அழகிய மதியினைத் தோயப் பல்வகை அழகு நலன்களும் உயர்ந்து விளங்கிவருவதும், ஞானச் செல்வர்கள் பலர் வாழ்வதுமாகிய தில்லையிலுள்ள சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள, வீடுபேறாகிய செல்வத்திற்குரிய பெருமான் திருவடிகளை வாழ்த்தும் செல்வமே, ஒருவருக்குச் செல்வமாம்.

மேல்

(869)
வரு மாந்தளிர் மேனி மாது ஓர்பாகம் ஆம்

திரு மாந் தில்லையுள், சிற்றம்பலம் மேய

கருமான் உரி-ஆடைக் கறை சேர் கண்டத்து எம்

பெருமான் கழல் அல்லால் பேணாது, உள்ளமே.

புதிதாக மரத்தின்கண் இருந்து வெளிவரும் மாந்தளிர் போன்ற மேனியளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, திருமகள் விளங்கும் தில்லை மாநகருள் சிற்றம்பலத்தின் கண் எழுந்தருளியவரும், யானைத் தோலை உரித்து ஆடையாகப் போர்த்தவரும் நீலமணி போன்ற கண்டத்தை உடையவருமாகிய எம் பெருமான் திருவடிகளை அல்லது என் உள்ளம் வேறொன்றையுமே விரும்பாது.

மேல்

(870)
அலை ஆர் புனல் சூடி, ஆகத்து ஒருபாகம்

மலையான் மகளோடும் மகிழ்ந்தான், உலகு ஏத்தச்

சிலையால் எயில் எய்தான், சிற்றம்பலம் தன்னைத்

தலையால் வணங்குவார் தலை ஆனார்களே.

அலைகள் வீசும் கங்கை நதியை முடியிற்சூடித் தன் திருமேனியில் ஒருபாகமாக மலையரையன் மகளாகிய பார்வதி தேவியோடு மகிழ்ந்திருப்பவனும் உலகம் போற்ற மேருமலையாகிய வில்லால் முப்புரங்களை எய்து அழித்தவனும் ஆகிய சிற்றம்பலத்துப்பெருமானைத் தலைதாழ்த்தி வணங்குவார் தலைமைத் தன்மையோடு விளங்குவார்.

மேல்

(871)
கூர்வாள் அரக்கன் தன் வலியைக் குறைவித்து,

சீராலே மல்கு சிற்றம்பலம் மேய

நீர் ஆர் சடையானை நித்தல் ஏத்துவார்

தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே.

கூரிய வாளை உடைய அரக்கனாகிய இராவணனின் வலிமையை அழித்துச் சிறந்த புகழ் மல்கிய சிற்றம்பலத்தின் கண் எழுந்தருளிய கங்கையைத் தரித்த சடையினை உடைய இறைவனை நாள்தோறும் ஏத்துபவருக்குத் தீராத நோய்கள் எல்லாம் தீர்தல் திண்ணம்.

மேல்

(872)
கோள் நாக(அ)ணையானும் குளிர்தாமரையானும்

காணார் கழல் ஏத்த, கனல் ஆய் ஓங்கினான்,

சேணார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் ஏத்த,

மாணா நோய் எல்லாம் வாளா மாயுமே.

வளைந்து சுற்றிய பாம்பணையில் பள்ளிகொள்ளும் திருமாலும், குளிர்ந்த தாமரை மேல் விளங்கும் நான்முகனும், அடிமுடிகளைக் காணாதவராய்த் தன் திருவடிகளைப் பரவ, அழல் வடிவில் ஓங்கி நின்றவனும், உயர்ந்தோர் பலர் வாழும் தில்லைப் பதியுள் சிற்றம்பலத்தின்கண் எழுந்தருளியவனுமாகிய பெருமானைப் போற்ற, நோய்களில் மாட்சிமை உள்ள கொடிய நோய்கள் எல்லாமும் பயன்தாராது கழியும்.

மேல்

(873)
பட்டைத் துவர் ஆடை, படிமம், கொண்டாடும்

முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே,

சிட்டர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய

நட்டப்பெருமானை நாளும் தொழுவோமே.

மரப்பட்டையின் சாயம் ஏற்றிய ஆடையை உடுத்த புத்தரும் நோன்புகள் பலவற்றை மேற்கொண்டு திரியும் சமணர்களும் மொழியும் அறியாமையோடு கூடிய உரைகளைக் கேளாது ஒழுக்கத்தால் மேம்பட்டவர் வாழும் தில்லையில் சிற்றம்பலத்தில் எழுந்தருளிய நடராசப் பெருமானை நாள்தோறும் நாம் தொழுவோம்.

மேல்

(874)
ஞாலத்து உயர் காழி ஞானசம்பந்தன்

சீலத்தார் கொள்கைச் சிற்றம்பலம் மேய

சூலப்படையானைச் சொன்ன தமிழ்மாலை

கோலத்தால் பாட வல்லார் நல்லாரே.

உலகில் உயர்ந்து விளங்கும் சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், ஒழுக்க சீலர்களாலே புனிதமாகக் கொண்டு போற்றப் பெறும் தில்லைச் சிற்றம்பலத்தே எழுந்தருளிய, சூலப்படையுடைய பெருமான் மீது பாட,

இத்தமிழ் மாலையாகிய திருப்பதிகத்தை. அழகுறப் பாட வல்லவர் நல்லவர் ஆவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(81)
சீகாழி - குறிஞ்சி

(875)
நல்லார், தீ மேவும் தொழிலார், நால்வேதஞ்-

சொல்லார், கேண்மையார், சுடர் பொன்கழல் ஏத்த,

வில்லால் புரம் செற்றான் மேவும் பதிபோலும்

கல் ஆர் மதில் சூழ்ந்த காழி நகர்தானே.

நல்லவர்களும், நாள்தோறும் வேள்விகளைச் செய்பவர்களும், நான்கு வேதங்களை ஓதுபவர்களும், அன்புடையவர்களும் ஆகிய அந்தணர்கள், ஒளி பொருந்திய அழகிய தன் திருவடிகளைப் போற்ற, மேருவில்லால் முப்புரங்களை அழித்த சிவபெருமான் எழுந்தருளிய தலம், மலை போன்ற மதில்களால் சூழப்பட்ட சீகாழி நகராகும்.

மேல்

(876)
துளி வண் தேன் பாயும் இதழி, மத்தம்,

தெளி வெண் திங்கள், மாசுணம், நீர் திகழ் சென்னி,

ஒளி வெண் தலைமாலை உகந்தான் ஊர்போலும்

களி வண்டு யாழ் செய்யும் காழி நகர்தானே.

வளமான தேன் துளிபாயும் கொன்றை மலர், தூய ஊமத்தம் மலர், தெளிந்த வெண்மையான பிறை மதி, பாம்பு, கங்கை ஆகியன விளங்கும் சென்னிக்கண், ஒளி பொருந்திய வெள்ளிய தலை மாலையை விரும்பிச் சூடிய சிவபிரானது ஊர், கள்ளுண்டு களித்த வண்டுகள், யாழ்போல ஒலிக்கும், சீகாழி நகராகும்.

மேல்

(877)
ஆலக் கோலத்தின் நஞ்சு உண்டு, அமுதத்தைச்

சாலத் தேவர்க்கு ஈந்து அளித்தான், தன்மையால்

பாலற்கு ஆய் நன்றும் பரிந்து பாதத்தால்

காலற் காய்ந்தான், ஊர் காழி நகர்தானே.

பாற்கடலில் தோன்றிய ஆலகாலம் எனப்படும் அழகிய நஞ்சினை உண்டு, அமுதம் முழுவதையும் தேவர்களுக்கு ஈந்தருளிய தன்மையை உடையவனாய் மார்க்கண்டேயன் பொருட்டுத் தன் பாதத்தால் காலனை உதைத்த சிவபிரானது ஊர், சீகாழி நகராகும்.

மேல்

(878)
இரவில்-திரிவோர்கட்கு இறை தோள் இணைபத்தும்

நிரவி, கர வாளை நேர்ந்தான் இடம் போலும்

பரவித் திரிவோர்க்கும் பால் நீறு அணிவோர்க்கும்

கரவு இல்-தடக்கையார் காழி நகர்தானே.

இரவில் திரியும் நிசாசரராகிய அசுரர்களுக்குத் தலைவனாகிய இராவணனின் இருபது தோள்களையும் நெரித்து, பின் அவன் வருந்திய அளவில் கைகளில் ஏந்தும் வாள் வழங்கிய சிவபிரானது இடம், இறைவனைப் பரவித் திரியும் அடியவர்கட்கும், பால் போன்ற திருநீற்றை அணிபவர்கட்கும், ஒளியாமல் வழங்கும் நீண்ட கைகளையுடைய, வள்ளன்மை மிக்க அடியார் வாழும், சீகாழிப் பதியாகும்.

மேல்

(879)
மாலும் பிரமனும் அறியா மாட்சியான்,

தோலும் புரிநூலும் துதைந்த வரைமார்பன்,

ஏலும் பதிபோலும் இரந்தோர்க்கு எந்நாளும்

காலம் பகராதார் காழிந் நகர்தானே.

திருமால், பிரமன் ஆகியோர் அறிய முடியாத மாட்சிமையை உடையவனும் மான்தோலும், முப்புரி நூலும் பொருந்திய மலை போன்ற மார்பினனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளும் பதி, தம்பால் இரந்தவர்களுக்கு எந்நாளும் பிறிதொரு நாளையோ, நேரத்தையோ குறிக்காது உடனே பொருள் வழங்கும் செல்வர்கள் வாழ்கின்ற சீகாழி நகராகும்.

மேல்

(880)
தம் கை இட உண்பார், தாழ் சீவரத்தார்கள்,

பெங்கை உணராதே பேணித் தொழுமின்கள்!

மங்கை ஒருபாகம் மகிழ்ந்தான், மலர்ச் சென்னிக்

கங்கை தரித்தான், ஊர் காழி நகர்தானே.

உணவளிப்போர் தங்கள் கைகளிலே தர, அதனை வாங்கி உண்ணும் சமணர்களும் தாழ்ந்த சீவரம் என்னும் கல்லாடையை உடுத்திய புத்தர்களும் ஆகியவர்களின் தீயொழுக்கத்தை மனத்துக் கொள்ளாமல், உமையம்மையை ஒரு பாகமாக மகிழ்ந்து ஏற்றவனும், மலரணிந்த சென்னியில் கங்கையைத் தரித்தவனுமாகிய சிவபெருமான் எழுந்தருளிய காழி நகரைப் பேணித் தொழுவீர்களாக.

மேல்

(881)
வாசம் கமழ் காழி மதி செஞ்சடை வைத்த

ஈசன் நகர்தன்னை, இணை இல் சம்பந்தன்

பேசும் தமிழ் வல்லோர் பெருநீர் உலகத்துப்

பாசம்தனை அற்றுப் பழி இல் புகழாரே.

பிறைமதியைச் செஞ்சடையில் வைத்த சிவபிரானது மணங்கமழ்கின்ற சீகாழிப் பதியாகிய நகரை, ஒப்பற்ற ஞானசம்பந்தன் போற்றிப் பேசிய,

இத்திருப்பதிகத் தமிழில் வல்லவர்கள் கடல் சூழ்ந்த இவ்வுலகில் பாசங்களை நீக்கிப் பழியற்ற புகழோடு வாழ்வர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(82)
திருவீழிமிழலை - குறிஞ்சி

(882)
இரும் பொன்மலை வில்லா, எரி அம்பா, நாணில்,-

திரிந்த புரம் மூன்றும் செற்றான் உறை கோயில்

தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும்

விரும்பி எதிர்கொள்வார் வீழி மிழலையே.

பெரிய பொன்மயமான மேருமலையை வில்லாக வளைத்து, அனலை அம்பாக அவ்வில் நாணில் பூட்டி வானில் திரிந்து கொண்டிருந்த முப்புரங்களையும் அழித்தவனாகிய சிவபிரான் உறையும் கோயில், கற்றுணர்ந்த அடியவர்கள் செல்லும் திசைகளில் எல்லாம் விரும்பி அவர்களை எதிர்கொள்ளும் மக்கள் வாழும் திருவீழிமிழலை ஆகும்.

மேல்

(883)
வாதைப்படுகின்ற வானோர் துயர் தீர,

ஓதக்கடல் நஞ்சை உண்டான் உறை கோயில்

கீதத்து இசையோடும் கேள்விக் கிடையோடும்

வேதத்து ஒலி ஓவா வீழி மிழலையே.

துன்புறும் தேவர்களின் துயர்தீர, வெள்ள நீரொடு கூடிய கடலின்கண் எழுந்த நஞ்சினை உண்ட சிவபிரான் உறையும் கோயில், இசையமைப்போடு கூடியதும் சுருதி என்பதற்கேற்ப ஒருவர் ஓதக்கேட்டு ஓதப்பட்டு வருவதும் ஆகிய வேத பாராயணத்தின் ஒலி நீங்காமல் ஒலிக்கின்ற திருவீழிமிழலை ஆகும்.

மேல்

(884)
பயிலும் மறையாளன் தலையில் பலி கொண்டு,

துயிலும் பொழுது ஆடும் சோதி உறை கோயில்

மயிலும் மடமானும் மதியும் இள வேயும்

வெயிலும் பொலி மாதர் வீழி மிழலையே.

வேதங்களை ஓதிய பிரமனின், தலையோட்டில் பலியேற்று அனைவரும் துயிலும் நள்ளிரவில் ஆடும் ஒளிவடிவினனாகிய சிவபிரான் உறையும் கோயில், மயில், மடப்பம் பொருந்திய மான், மதி, இள மூங்கில், வெயில் ஆகியனவற்றைப் போன்று கண்ணுக்கு இனிய மென்மையும், மருளும் விழி, முகம், தோள்கள், உடல்ஒளி இவற்றால் பொலியும் மகளிர் வாழும் திருவீழிமிழலையாகும்.

மேல்

(885)
இரவன் பகலோனும் எச்சத்து இமையோரை

நிரவிட்டு, அருள் செய்த நிமலன் உறை கோயில்

குரவம், சுரபுன்னை, குளிர் கோங்கு, இள வேங்கை,

விரவும் பொழில் அம் தண் வீழி மிழலையே.

தக்கன் செய்த யாகத்தில் சந்திரன், சூரியன் ஏனைய தேவர்கள் ஆகியோரை, வீரபத்திரரை அனுப்பித் தண்டம் செய்து செம்மைப்படுத்தி அருள்செய்த சிவபிரான் உறையும் கோயில் குரா, சுரபுன்னை, குளிர்ந்த கோங்கு, இளவேங்கை ஆகியன விரவிய பொழில்கள் சூழ்ந்த அழகிய தட்பமுடைய வீழிமிழலையாகும்.

மேல்

(886)
கண்ணின் கனலாலே காமன் பொடி ஆக,

பெண்ணுக்கு அருள்செய்த பெருமான் உறை கோயில்

மண்ணில் பெரு வேள்வி வளர் தீப்புகை நாளும்

விண்ணில் புயல் காட்டும் வீழி மிழலையே.

நெற்றி விழியில் தோன்றிய கனலால் காமனைப் பொடி செய்து, இரதிதேவிவேண்ட அவள் கண்களுக்கு மட்டும் புலனாகுமாறு அருள் செய்த பெருமான் உறையும் கோயில் மண்ணில் செய்யும் பெரிய வேள்விகளில் வளரும் தீப்புகை நாள்தோறும் விண்ணகத்தே மழை மேகங்களை உருவாக்கும் திருவீழிமிழலை யாகும்.

மேல்

(887)
மால் ஆயிரம் கொண்டு மலர்க்கண் இட, ஆழி

ஏலா வலயத்தோடு ஈந்தான் உறை கோயில்

சேல் ஆகிய பொய்கைச் செழு நீர்க் கமலங்கள்

மேலால் எரி காட்டும் வீழி மிழலையே.

திருமால் ஆயிரம் தாமரைப் பூக்களைக் கொண்டு அருச்சித்தபோது ஒன்று குறையக் கண்டு, தன், மலர் போன்ற கண்ணைஇடந்து சாத்திய அளவில் பிறர் சுமக்கலாற்றாத சக்கராயுதம் ஆகிய ஆழியை அவனுக்கு ஈந்தருளிய பெருமான் உறையும் கோயில், சேல்மீன்கள் பொருந்திய செழுநீர்ப் பொய்கைகளில் முளைத்த தாமரை மலர்கள் தீப்பிழப்பு போலக் காணப்படும் திருவீழிமிழலையாகும்.

மேல்

(888)
மதியால் வழிபட்டான் வாழ்நாள் கொடுபோவான்,

கொதியா வரு கூற்றைக் குமைத்தான் உறை கோயில்

நெதியால் மிகு செல்வர் நித்தம் நியமங்கள்

விதியால் நிற்கின்றார் வீழி மிழலையே.

மெய்யறிவால் தன்னை வழிபட்ட மார்க்கண்டேயனின் வாழ்நாளைக் கையகப் படுத்தச் சினந்து வந்த கூற்றுவனை அழித்த சிவபிரானது கோயில், நிதியால் மிகுந்த செல்வர்கள் நாள்தோறும் செய்யும் நியமங்களை விதிப்படி செய்து வாழும் திருவீழிமிழலையாகும்.

மேல்

(889)
எடுத்தான் தருக்கினை இழித்தான், விரல் ஊன்றி;

கொடுத்தான், வாள்; ஆளாக் கொண்டான்; உறை கோயில்

படித்தார், மறை வேள்வி பயின்றார், பாவத்தை

விடுத்தார், மிக வாழும் வீழி மிழலையே.

கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் செருக்கினைத் தன் கால்விரலை ஊன்றி அழித்தவனும், பின்அவன் பிழையுணர்ந்து வேண்ட, வாள் முதலியன கொடுத்து, அவனை அடிமையாக ஏற்றுக் கொண்டருளியவனுமாகிய சிவபிரான் உறையும் கோயில், வேதங்களைப் பயின்றவர்களும், வேள்விகள் பலவற்றைச் செய்பவர்களும், பாவங்களை விட்டவர்களுமாகிய அந்தணர்கள் மிகுதியாக வாழும், திருவீழிமிழலையாகும்.

மேல்

(890)
கிடந்தான் இருந்தானும், கீழ் மேல் காணாது,

தொடர்ந்து ஆங்கு அவர் ஏத்தச் சுடர் ஆயவன் கோயில்

படம் தாங்கு அரவு அல்குல், பவளத்துவர் வாய், மேல்

விடம் தாங்கிய கண்ணார் வீழி மிழலையே.

பாம்பணையில் துயிலும் திருமாலும், தாமரை மலரில் உறையும் நான்முகனும் அடிமுடிகளைக் காணாது திரும்பித் தொடர்ந்து ஏத்த அழலுருவாய் நின்ற சிவபிரானது கோயில். அரவின் படம் போன்ற அல்குலையும், பவளம் போன்ற வாயினையும் விடம் பொருந்திய கண்களையும் உடைய மகளிர் மிகுதியாக வாழும் திருவீழிமிழலையாகும்.

மேல்

(891)
சிக்கு ஆர் துவர் ஆடை, சிறு தட்டு, உடையாரும்

நக்கு ஆங்கு அலர் தூற்றும் நம்பான் உறை கோயில்

தக்கார், மறை வேள்வித் தலை ஆய் உலகுக்கு

மிக்கார் அவர் வாழும் வீழி மிழலையே.

சிக்குப் பிடித்த காவி உடையையும் சிறிய ஓலைத் தடுக்குக்களையும் உடைய புத்தரும் சமணர்களும் ஏளனம் செய்துசிரித்துப் பழிதூற்றும் நம் இறைவர் தங்கும் கோயில், தக்கவராய், வேதவேள்விகள் செய்வதில் தலையாயவராய், உலகில் மேம்பட்டவராய் விளங்கும் மறையவர் வாழும் வீழிமிழலை ஆகும்.

மேல்

(892)
மேல் நின்று இழி கோயில் வீழி மிழலையுள்

ஏனத்து எயிற்றானை, எழில் ஆர் பொழில் காழி

ஞானத்து உயர்கின்ற நலம் கொள் சம்பந்தன்

வாய்மைத்து இவை சொல்ல, வல்லோர் நல்லோரே.

விண்ணிலிருந்து இழிந்து வந்துள்ள வீழிமிழலைக் கோயிலில், பன்றிப்பல் சூடியவனாய் எழுந்தருளி விளங்கும் சிவபிரானை, அழகிய பொழில்கள் சூழ்ந்த காழிப் பதியில் தோன்றிய ஞானத்தால் மேம்பட்ட அழகிய ஞானசம்பந்தன், உண்மையை உடையவனாய் ஓதிய,

இப்பதிகத்தைச் சொல்ல வல்லவர் நல்லவர் ஆவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(83)
திருஅம்பர்மாகாளம் - குறிஞ்சி

(893)
அடையார் புரம் மூன்றும் அனல்வாய் விழ எய்து,

மடை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய

விடை ஆர் கொடி எந்தை, வெள்ளைப்பிறை சூடும்

சடையான், கழல் ஏத்த, சாரா, வினைதானே.

பகைவராகிய அசுரர்களின் மூன்று கோட்டைகளும் அனலிடைப்பட்டு அழியுமாறு கணை எய்தவனும், நீரைத் தேக்கும் மடைகளையுடைய புனல் வளம் நிறைந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளிய விடை எழுதிய கொடியை உடைய எம் தந்தையும், வெண்மையான பிறை மதியை அணிந்த சடையினனும் ஆகிய பெருமான் திருவடிகளை ஏத்துவாரை வினைகள் சாரா.

மேல்

(894)
தேன் ஆர் மதமத்தம் திங்கள் புனல் சூடி,

வான் ஆர் பொழில் அம்பர் மாகாளம் மேய,

ஊன் ஆர் தலை தன்னில் பலி கொண்டு உழல் வாழ்க்கை

ஆனான் கழல் ஏத்த, அல்லல் அடையாவே.

தேன் பொருந்திய செழுமையான ஊமத்தம் மலர், பிறைமதி, கங்கை ஆகியவற்றை முடியில் சூடி, வானளாவிய பொழில்சூழ்ந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளிய ஊன் பொருந்திய தலையோட்டில் பலியேற்றுத் திரியும் வாழ்க்கையை மேற்கொண்ட பெருமான் திருவடிகளைப் போற்றத் துன்பங்கள் நம்மை அடையா.

மேல்

(895)
திரை ஆர் புனலோடு செல்வமதி சூடி,

விரை ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய,

நரை ஆர் விடை ஊரும், நம்பான் கழல் நாளும்

யாதவர்கள்மேல் ஒழியா, ஊனமே.

அலைகள் பொருந்திய கங்கை நதியோடு, கண்டாரை மகிழ்விக்கும் சிறப்பு வாய்ந்த பிறைமதியை முடியில் சூடி, மணம் கமழும் பொழில் சூழ்ந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளிய வெண்மையான விடையை ஊர்ந்து வரும் சிவபிரான் திருவடிப் புகழை நாள்தோறும் உரையாதவர்கள் பால் பழிபாவங்கள் நீங்கா.

மேல்

(896)
கொந்து அண் பொழில்-சோலைக் கோல வரிவண்டு,

மந்தம், மலி அம்பர்மாகாளம் மேய,

கந்தம் கமழ்கொன்றை கமழ் புன்சடை வைத்த,

எந்தை கழல் ஏத்த, இடர் வந்து அடையாவே.

பூங்கொத்துக்கள் நிறைந்த பொழில்களிலும் சோலைகளிலும் அழகிய வரி வண்டுகள் பாடும் மந்தச் சுருதி இசை நிறைந்து விளங்கும் இயற்கை எழில் வாய்ந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளிய, மணம் கமழும் கொன்றை மலர்களை இயல்பாக மணம் வீசும் தனது சிவந்த சடைமிசை வைத்துள்ள எம் தந்தையாகிய சிவபிரானின் திருவடிகளை ஏத்தினால் இடர்கள் நம்மை வந்தடைய மாட்டா.

மேல்

(897)
அணி ஆர் மலைமங்கை ஆகம் பாகம் ஆய்,

மணி ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய

துணி ஆர் உடையினான் துதை பொன்கழல் நாளும்

பணியாதவர் தம்மேல் பறையா, பாவமே.

அழகு பொருந்திய மலைமங்கையாகிய பார்வதிதேவியைத் தனது உடலின் இடப்பாகமாய்க் கொண்டவனாய் மணிகளோடு கூடிய புனல் வளம் உடைய அம்பர் மாகாளத்தில் எழுந்தருளிய, துணிக்கப்பட்ட கோவண உடையினன் ஆகிய சிவபெருமானின் பொன்னிறம் துதைந்த திருவடிகளை நாள்தோறும் பணியாதவரைப் பாவம் நீங்கா.

மேல்

(898)
பண்டு ஆழ்கடல் நஞ்சை உண்டு, களி மாந்தி,

வண்டு ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய

விண்டார் புரம் வேவ மேருச் சிலை ஆகக்

கொண்டான் கழல் ஏத்த, குறுகா, குற்றமே.

முற்காலத்தில் ஆழ்ந்த கடலிடைத் தோன்றிய நஞ்சினை உண்டு, களிப்புற்று வண்டுகள் மொய்க்கும் சோலைகள் சூழ்ந்த அம்பர்மாகாளத்தில் எழுந்தருளியிருப்பவனும், பகைவராகிய அசுரர்களின் முப்புரங்களும் வெந்தழியுமாறு மேருமலையை வில்லாகக் கொண்டருளியவனுமான சிவபெருமான், திருவடிகளைப் போற்ற, குற்றங்கள் நம்மைக் குறுகா.

மேல்

(899)
மிளிரும் அரவோடு வெள்ளைப்பிறை சூடி,

வளரும் பொழில் அம்பர்மாகாளம் மேய

கிளரும் சடை அண்ணல் கேடு இல் கழல் ஏத்த,

தளரும், உறு நோய்கள்; சாரும், தவம்தானே.

விளங்குகின்ற பாம்போடு வெள்ளை நிறமுடைய பிறையை முடியிற்சூடி, வளர்கின்ற பொழில்கள் சூழ்ந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளியிருக்கும், விளங்குகின்ற சடைமுடியை உடைய தலைமையாளனாகிய சிவபிரானுடைய குற்றமற்ற திருவடிகளை ஏத்தினால், மிக்க நோய்கள் தளர்வுறும்; தவம் நம்மை வந்து அடையும்.

மேல்

(900)
கொலை ஆர் மழுவோடு கோலச்சிலை ஏந்தி,

மலை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய

இலை ஆர் திரிசூலப்படையான் கழல் நாளும்

நிலையா நினைவார்மேல் நில்லா, வினைதானே.

கொல்லும் தொழிலில் வல்ல மழுவாயுதத்தோடு, அழகிய வில்லையும் கையில் ஏந்தி, கரையோடு மோதும் நீர் நிரம்பிய அம்பர் மாகாளத்தில் எழுந்தருளியிருக்கும், இலை வடிவமான முத்தலைச் சூலத்தைப் படையாகக் கொண்ட சிவபெருமான் திருவடிகளை நாள்தோறும் நிலையாக நினைவார்பால் வினைகள் சாரா.

மேல்

(901)
சிறை ஆர் வரிவண்டு தேன் உண்டு இசை பாட,

மறையார் நிறை அம்பர்மாகாளம் மேய

நறை ஆர் மலரானும் மாலும் காண்பு ஒண்ணா,

இறையான் கழல் ஏத்த, எய்தும், இன்பமே.

சிறகுகளை உடைய வரி வண்டுகள் தேனுண்டு இசைபாட, வேதம் ஓதும் அந்தணர் நிறைந்த அம்பர் மாகாளத்தில்எழுந்தருளியிருப்பவனும், தேன் நிறைந்த தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகனும் திருமாலும் காண ஒண்ணாத தலைமையாளனுமாய சிவபிரான் திருவடிகளை ஏத்தினால் இன்பம் கிடைக்கும்.

மேல்

(902)
மாசு ஊர் வடிவினார், மண்டை உணல் கொள்வார்,

கூசாது க்கும் சொல் கொள்கை குணம் அல்ல;

“வாசு ஆர் பொழில் அம்பர்மாகாளம் மேய

ஈசா!” என்பார்கட்கு இல்லை, இடர்தானே.

அழுக்கடைந்த மேனியரும், துன்ப வடிவினராகி, மண்டை என்னும் பாத்திரத்தில் உணவு கொள்பவருமாய புத்தரும், சமணரும் மனம் கூசாமல் கூறும் பொய்யுரைகளை ஏற்றுக் கொள்ளல் நன்மை தாராது. மணம் கமழும் பொழில் சூழ்ந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளியுள்ள ஈசனே என்று கூறுபவர்கட்கு இடர் வாராது.

மேல்

(903)
வெருநீர் கொள ஓங்கும் வேணுபுரம் தன்னுள்-

திருமாமறை ஞானசம்பந்தன சேண் ஆர்

பெருமான் மலி அம்பர்மாகாளம் பேணி

உருகா, செய்வார் உயர்வான் அடைவாரே.

அஞ்சத்தக்க ஊழி வெள்ளம். உலகத்தை மூட, அவ்வெள்ளத்தே ஓங்கிமேல் மிதந்த வேணுபுரம் என்னும் சீகாழிப் பதியுள் தோன்றிய அழகியனவும் சிறந்தனவுமான வேதங்களில் வல்ல ஞானசம்பந்தனுடைய,

இத்திருப்பதிகப் பாடல்களை, விண்ணோர் தலைவனாகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள அம்பர் மாகாளத்தை விரும்பித் தொழுது உருகி உரை செய்பவர் உயர்ந்த வானோர் உலகத்தை அடைவார்கள்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(84)
திருநாகைக்காரோணம் - குறிஞ்சி

(904)
புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல் பாய

நனையும் சடைமேல் ஓர் நகுவெண் தலை சூடி,

வினை இல் அடியார்கள் விதியால் வழிபட்டு,

கனையும் கடல் நாகைக்காரோணத்தானே.

விரிந்த கொன்றை மலர் மாலையைப் புனையும் கடவுளாய சிவபிரான், கங்கை நீரைத் தாங்கியதால் நனைந்துள்ள சடையின்மேல், வாய் விரித்துச் சிரிப்பது போன்ற வெள்ளியதொரு தலை மாலையைச் சூடி, வினை நீங்கிய அடியவர்கள் விதிப்படி வழிபடச் செறிந்துள்ள கடற்கரையை அடுத்த நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளார்.

மேல்

(905)
பெண் ஆண் என நின்ற பெம்மான், பிறைச் சென்னி

அண்ணாமலை நாடன், ஆரூர் உறை அம்மான்-

மண் ஆர் முழவு ஓவா மாடம் நெடுவீதிக்

கண் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே.

பெண்ணும் ஆணுமாய் ஓருருவில் விளங்கும் பெருமானும், பிறை சூடிய சென்னியனாய் அண்ணாமலை ஆரூர் ஆகிய ஊர்களில் எழுந்தருளிய தலைவனும் ஆகிய சிவபிரான் மார்ச்சனை பொருந்திய முழவின் ஒலி இடைவிடாமல் கேட்கும், மாட வீடுகளுடன் கூடிய நெடிய வீதிகளை உடைய அகன்ற இடப் பரப்புடைய கடலையடுத்த நாகைக் காரோணத்தில் எழுந்தருளி யுள்ளான்.

மேல்

(906)
பாரோர் தொழ, விண்ணோர் பணிய, மதில்மூன்றும்

ஆரார் அழலூட்டி, அடியார்க்கு அருள் செய்தான்;

தேர் ஆர் விழவு ஓவாச் செல்வன்-திரை சூழ்ந்த

கார் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே.

மண்ணக மக்கள் தொழவும், விண்ணவர் பணியவும் அனைவர்க்கும் நெருங்குதற்கரிய அழலை ஊட்டி அழித்து அடியவர்க்கு அருள் செய்து, தேரோட்டமாகிய சிறப்பு விழா இடைவிடாது நிகழும் சிறப்பினை ஏற்றருளும் செல்வன் ஆகிய சிவபெருமான், அலைகள் நிரம்பிய, மேகங்கள் பொருந்திய கடலின் கரையில் விளங்கும் நாகைக் காரோணம் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளான்.

மேல்

(907)
மொழி சூழ் மறை பாடி, முதிரும் சடைதன்மேல்

அழி சூழ் புனல் ஏற்ற அண்ணல் அணிஆய

பழி சூழ்விலர் ஆய பத்தர் பணிந்து ஏத்த,

கழி சூழ் கடல் நாகைக்காரோணத்தானே.

பொருள் பொதிந்த சொற்கள் நிரம்பிய வேதங்களைப் பாடிக் கொண்டு, முதிர்ந்த தன் சடைமுடி மேல் உலகை அழிக்க எண்ணி வந்த கங்கை நதியை ஏற்றருளிய தலைவனாகிய சிவபெருமான், அழகிய செயல்களோடு பழி பாவங்களை மனத்திலும் கருதாதவர்களாகிய அடியவர்கள் பணிந்து போற்ற உப்பங்கழிகள் சூழ்ந்த கடற்கரையை அடுத்துள்ள நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.

மேல்

(908)
ஆணும் பெண்ணும் ஆய் அடியார்க்கு அருள் நல்கி,

சேண் நின்றவர்க்கு இன்னம் சிந்தைசெய வல்லான்-

பேணி வழிபாடு பிரியாது எழும் தொண்டர்

காணும் கடல் நாகைக்காரோணத்தானே.

ஆணும் பெண்ணுமான வடிவோடு காட்சி தந்து, அடியவர்களுக்கு அருள் வழங்கி, வானுலகில் வாழும் தேவர்கட்கு மேலும் அருள் புரிய விரும்பும் மனத்தை உடையனாய் விளங்கும் சிவபிரான் அன்புடன் வழிபாடு செய்து பிரியாது வாழும் தொண்டர்கள் காணும் வண்ணம் கடற்கரையில் விளங்கும் நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.

மேல்

(909)
ஏனத்து எயிறோடும் அரவம் மெய் பூண்டு,

வானத்து இளந்திங்கள் வளரும் சடை அண்ணல்

ஞானத் துறை வல்லார் நாளும் பணிந்து ஏத்த,

கானல் கடல் நாகைக்காரோணத்தானே.

பன்றியின் பல், பாம்பு ஆகியவற்றை மெய்யிற் பூண்டு, வானகத்தே இயங்கும் இளம்பிறை தங்கும் சடைமுடியை உடைய தலைமையாளனாகிய சிவபெருமான், மெய்யறிவு மயமான சொற்களைப் பேசவல்ல அடியவர்கள் நாள்தோறும் பணிந்து போற்றச் சோலைகள் சூழ்ந்த கடற்கரையை அடுத்துள்ள நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.

மேல்

(910)
அரை ஆர் அழல்நாகம் அக்கோடு அசைத்திட்டு,

விரை ஆர் வரைமார்பின் வெண் நீறு அணி அண்ணல்

வரை ஆர்வன போல வளரும் வங்கங்கள்

கரை ஆர் கடல் நாகைக்காரோணத்தானே.

இடையில் அழல்போலும் கொடிய நாகத்தைச் சங்கு மணிகளோடு இணைத்துக் கட்டிக் கொண்டு, மணம் கமழும் மலை போன்ற மார்பில் திருவெண்ணீறு அணிந்துள்ள தலைமையாளனாகிய சிவபெருமான், மலைகள் மிதந்து வருவன போலக் கப்பல்கள் கரையைச் சாரும் கடலை அடுத்துள்ள நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.

மேல்

(911)
வலம் கொள் புகழ் பேணி, வரையால் உயர் திண்தோள்

இலங்கைக்கு இறை வாட அடர்த்து, அங்கு அருள்செய்தான்-

பலம் கொள் புகழ் மண்ணில் பத்தர் பணிந்து ஏத்த,

கலம் கொள் கடல் நாகைக்காரோணத்தானே.

மேலும் மேலும் வெற்றிகளால் பெற்ற புகழால் தருக்கி, மலை போன்று உயர்ந்த திண்ணிய தோளால் கயிலை மலையை எடுத்த இராவணனை வாடுமாறு அடர்த்துப்பின் அவனுக்கு அருள்செய்த சிவபிரான், வாழ்வின் பயனாகக் கொள்ளத் தக்க புகழை உடையவர்களாகிய அடியவர்கள் மண்ணுலகில் தன்னைப் பணிந்து ஏத்த மரக்கலங்கள் பொருந்திய கடற்கரையை அடுத்து விளங்கும் நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.

மேல்

(912)
திருமால் அடி வீழ, திசை நான்முகன் ஏத்த,

பெருமான் என நின்ற பெம்மான்; பிறைச் சென்னிச்

செரு மால்விடை ஊரும் செல்வன்-திரை சூழ்ந்த

கருமால் கடல் நாகைக்காரோணத்தானே.

திருமால் தன் திருவடியில் விழுந்து வணங்கவும், நான்முகன் ஏத்தவும், தானே முழுமுதற் பரம்பொருள் என உணர்ந்து அழலுருவாய் ஓங்கி நின்ற பெருமானும், பிறை மதியை முடியிற்சூடிப் பகைவரை எதிர்க்க வல்ல விடையேற்றை ஊர்ந்து வரும் செல்வனும் ஆகிய சிவபெருமான், அலைகளால் சூழப்பட்ட கரிய பெரிய கடற்கரையில் விளங்கும் நாகைக் காரோணத்தில் எழுந்தருளி யுள்ளான்.

மேல்

(913)
நல்லார் அறம் சொல்ல, பொல்லார் புறம்கூற,

அல்லார் அலர் தூற்ற, அடியார்க்கு அருள்செய்வான்;

பல் ஆர் தலைமாலை அணிவான்-பணிந்து ஏத்த,

கல் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே.

நல்லவர்கள் அறநெறிகளைப் போதிக்கவும், பொல்லாதவர்களாகிய சமணர்கள் புறங்கூறவும், நல்லவரல்லாத புத்தர்கள் பழி தூற்றவும், தன் அடியவர்க்கு அருள்புரியும் இயல்பினன் ஆகிய இறைவன் சுடுகாட்டில் கிடக்கும் பலர் தலையோடுகளை மாலைகளாகக் கோத்து அணிந்தவனாய்ப் பலரும் பணிந்து ஏத்த, கல் என்னும் ஒலியோடு கூடிய கடற்கரையில் விளங்கும் நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.

மேல்

(914)
கரை ஆர் கடல் நாகைக்காரோணம் மேய

நரை ஆர் விடையானை நவிலும் சம்பந்தன்

ஆர் தமிழ்மாலை பாடும் அவர் எல்லாம்

கரையா உரு ஆகிக் கலி வான் அடைவாரே.

இடைவிடாது ஒலி செய்யும் கடலின் கரையில் விளங்கும் நாகைக் காரோணத்தில் எழுந்தருளிய வெண்மை நிறம் பொருந்திய விடை ஊர்தியைக் கொண்டுள்ள இறைவனை ஞானசம்பந்தன் பரவிப் போற்றிய புகழ்பொருந்திய,

இத்தமிழ் மாலையைப் பாடிப் பரவுபவர் அனைவரும் அழியாத வடிவத்தோடு ஆரவாரம் மிக்க வானுலகை அடைவார்கள்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(85)
திருநல்லம் - குறிஞ்சி

(915)
“கல்லால் நிழல் மேய கறை சேர் கண்டா!” என்று

எல்லாமொழியாலும் இமையோர் தொழுது ஏத்த,

வில்லால் அரண்மூன்றும் வெந்து விழ எய்த

நல்லான்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.

இமையவர்கள் கல்லால மர நிழலில் எழுந்தருளிய கறை பொருந்திய கண்டத்தை உடையவனே என்று தமக்குத் தெரிந்த அனைத்து மொழிகளாலும் தோத்திரம் செய்து தொழுது ஏத்த, மேரு வில்லால் அசுரர்தம் மூன்று அரண்களும் வெந்து விழுமாறு செய்தருளிய பெரியவனாகிய சிவபிரான் நம்மையாட்கொள்ளுதற் பொருட்டு நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.

மேல்

(916)
தக்கன் பெரு வேள்வி தன்னில் அமரரைத்

துக்கம் பல செய்து, சுடர் பொன்சடை தாழ,

கொக்கின் இறகோடு குளிர் வெண்பிறை சூடும்

நக்கன்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.

தன்னை இகழ்ந்து தக்கன் செய்த பெரிய வேள்விக்குச் சென்ற அமரர்களை, அவ்வேள்விக் களத்திலேயே பலவகையான துக்கங்களை அடையச் செய்தவனும், ஒளிவிடும் பொன்போன்ற சடைகள் தாழ்ந்து தொங்கக் கொக்கின் இறகோடு குளிர்ந்த வெண்மையான பிறையைச் சூடியிருப்பவனும் திகம்பரனுமாய இறைவன் நம்மை ஆளுதற்பொருட்டு நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.

மேல்

(917)
அந்திமதியோடும் அரவச் சடை தாழ,

முந்தி அனல் ஏந்தி, முதுகாட்டு எரி ஆடி;

சிந்தித்து எழ வல்லார் தீரா வினை தீர்க்கும்

நந்தி; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.

மாலைக் காலத்தில் தோன்றும் பிறை மதியோடு பாம்பையும் அணிந்த சடைமுடி தாழ்ந்து தொங்க, முற்பட்ட ஊழிக் காலத்தில் கையில் அனலேந்திப் பழமையான சுடுகாட்டகத்தே எரியில் நின்றாடித் தன்னைச் சிந்தித்தே எச்செயலையும் தொடங்கும் அன்பர்களின் தீராத வினைகள் எல்லாவற்றையும் தீர்த்தருளும் நந்தியாகிய சிவபெருமான், நம்மை ஆட்கொண்டருளுதற் பொருட்டு நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.

மேல்

(918)
குளிரும் மதி சூடிக் கொன்றைச் சடை தாழ,

மிளிரும் அரவோடு வெண் நூல் திகழ் மார்பில்,

தளிரும் திகழ்மேனித் தையல் பாகம் ஆய்,

நளிரும் வயல் சூழ்ந்த நல்லம் நகரானே.

குளிர்ந்த பிறை மதியைச் சூடி, கொன்றை மலர்களை அணிந்துள்ள சடைகள் தாழ்ந்து தொங்க விளங்கும் பாம்போடு பூணநூல் திகழும் மார்பினாய்த் தளிர் போன்ற திருமேனியை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்ட சிவபிரான் குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.

மேல்

(919)
மணி ஆர் திகழ் கண்டம் உடையான்; மலர் மல்கு

பிணி வார்சடை எந்தை பெருமான்; கழல் பேணித்

துணிவு ஆர் மலர்கொண்டு தொண்டர் தொழுது ஏத்த,

நணியான்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.

நீல மணி போன்ற விளங்கிய கண்டத்தினை உடையவனும், மலர்கள் நிறைந்த வளைத்துக் கட்டப்பட்ட நீண்ட சடைமுடியினனும், எமக்குத் தந்தையானவனும் ஆகிய பெருமான் மனத்துணிவோடு மலர் கொண்டு தன் திருவடிகளை விரும்பித் தொழுதேத்தவும் நம்மை ஆட்கொண்டருளவும் நண்ணிய நிலையினனாய் நல்லம் நகரில் எழுந்தருளியுள்ளான்.

மேல்

(920)
“வாசம் மலர் மல்கு மலையான் மகளோடும்

சும் சுடுநீறு புனைந்தான், விரிகொன்றை

ஈசன்!” என உள்கி எழுவார் வினைகட்கு

நாசன்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.

மணம் கமழ்கின்ற மலர்களைச் சூடிய மலையரையன் மகளாகிய பார்வதி தேவியோடும், பூசத்தக்கதாய்ச் சுட்டெடுத்த திருநீறு அணிந்தவனாய், இதழ் விரிந்த கொன்றை மாலையைப் புனைந்தவனாய், ஈசன் எனத் தன்னை நினைந்தேத்துபவர்களின் வினைகளைப் பொடி செய்பவனாய், விளங்கும் இறைவன், நம்மை ஆட்கொண்டருள நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.

மேல்

(921)
அம் கோல்வளை மங்கை காண, அனல் ஏந்தி,

கொங்கு ஆர் நறுங்கொன்றை சூடி, குழகு ஆக,

வெங்காடு இடம் ஆக, வெந்தீ விளையாடும்

நம் கோன்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.

அழகிய திரண்ட வளையல்களை அணிந்த உமையம்மை காணக் கையில் அனல் ஏந்தி, தேன் நிறைந்த மணமுடைய கொன்றை மலர்மாலை சூடி, இளமைக் கோலத்தில் சுடுகாட்டை அரங்காகக் கொண்டு எரியாடும் நம் தலைவனாகிய சிவபிரான், நம்மை ஆட்கொள்ளுதற் பொருட்டு நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.

மேல்

(922)
பெண் ஆர் திருமேனிப் பெருமான்; பிறை மல்கு

கண் ஆர் நுதலினான்; கயிலை கருத்தினால்

எண்ணாது எடுத்தானை இறையே விரல் ஊன்றி,

நண்ணார் புரம் எய்தான்-நல்லம் நகரானே.

உமையம்மையைத் திருமேனியின் ஒரு கூற்றிலே கொண்டுள்ள பெருமானும், பிறை மதியை முடியில் சூடிக் கண்பொருந்திய நுதலினனாய் விளங்குவோனும், இறைவனது வரம் பிலாற்றலை மனத்தால் எண்ணாது கயிலை மலையை எடுத்த இராவணனைச் சிறிதே விரலூன்றி அடர்த்தவனும், பகைவர்தம் முப் புரங்களை எய்தழித்தவனுமாகிய சிவபிரான், நம்மை ஆட்கொண்டருள, நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.

மேல்

(923)
நாகத்து அணையானும் நளிர் மா மலரானும்

போகத்து இயல்பினால் பொலிய, அழகு ஆகும்

ஆகத்தவளோடும் அமர்ந்து, அங்கு அழகு ஆரும்

நாகம் அரை ஆர்த்தான்-நல்லம் நகரானே.

பாம்பணையில் துயிலும் திருமாலும், தண்ணிய, தாமரை மலர்மேல் எழுந்தருளியுள்ள நான்முகனும், திருமகள்கலைமகளிரோடு போகம் பொருந்தி வாழ, தானும் மலை மகளோடு கூடிப் போகியாய் இருந்து அருள் செய்த, அழகு பொருந்திய பாம்பை இடையில் அரைநாணாகக் கட்டிக் கொண்டிருப்பவன் ஆகிய சிவபிரான், நம்மை ஆள நல்லம் என்னும் நகரிடை எழுந்தருளியுள்ளான்.

மேல்

(924)
குறி இல் சமணோடு, குண்டர்வண் தேரர்,

அறிவு இல் கேட்டு, அங்கு அவமே கழியாதே!

பொறி கொள் அரவு ஆர்த்தான்-பொல்லாவினை தீர்க்கும்,

நறை கொள் பொழில் சூழ்ந்த, நல்லம் நகரானே.

குறிக்கோள் இல்லாத சமணர்களும் புத்தரும் கூறும் அறிவற்ற சொற்களைக் கேட்டு நாள்களைப் பயனற்றனவாய்ப் போக்காதீர், புள்ளிகளோடு கூடிய பாம்பினை இடையிற் கட்டிய பரமன், நம் பொல்லா வினைகளைத் தீர்க்கும் நிலையில் தேன் நிறைந்த பொழில்கள் சூழ்ந்த நல்லம் என்னும் நகரிடை எழுந்தருளியுள்ளான்.

மேல்

(925)
நலம் ஆர் மறையோர் வாழ் நல்லம் நகர் மேய

கொலை சேர் மழுவானை, கொச்சை அமர்ந்து ஓங்கு

தலம் ஆர் தமிழ் ஞானசம்பந்தன், சொன்ன

கலைகள் இவை வல்லார் கவலை கழிவாரே.

நன்மைகள் நிறைந்த வேதங்களை ஓதும் அந்தணர்கள் வாழும் நல்லம் நகரில் எழுந்தருளிய, கொல்லும் தொழில் வல்ல மழுவைக் கையில் ஏந்திய சிவபிரானை, கொச்சை வயம் என்னும் புகழுடைய தலத்தில் வாழ்ந்த தமிழ் ஞானசம்பந்தன், போற்றிப் பாடிய ,

கலை நலம் வாய்ந்த இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர், கவலைகள் நீங்கப் பெறுவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(86)
திருநல்லூர் - குறிஞ்சி

(926)
கொட்டும் பறை சீரால் குழும, அனல் ஏந்தி,

நட்டம் பயின்று ஆடும் நல்லூர்ப் பெருமானை

முட்டு இன்று இருபோதும், முனியாது எழுந்து, அன்பு-

பட்ட மனத்தார்கள் அறியார், பாவமே.

பறை கொட்டும் சீருக்கு ஏற்பப் பூதகணங்கள் முதலியன சூழக் கையின்கண் அனலேந்தி விருப்போடு நடனம் ஆடும் நல்லூர்ப் பெருமானைக் காலை மாலை இருபொழுதும் தவறாமல் வெறுப்பின்றி எழுச்சியோடு வணங்கி அன்பு பூண்ட மனத்தார்களைப் பாவம் அணுகாது.

மேல்

(927)
ஏறில் எருது ஏறும், எழில் ஆயிழையோடும்

வேறும் உடனுமாம், விகிர்தர் அவர் என்ன,

நாறும் மலர்ப் பொய்கை நல்லூர்ப் பெருமானைக்

கூறும் அடியார்கட்கு அடையா, குற்றமே.

ஊர்தியாக எருது ஒன்றிலேயே ஏறுபவனும், அழகிய உமையம்மையோடு ஒன்றாகவும் வேறாகவும் விளங்கும் தன்மையை உடையவனுமாகிய சிவபெருமான், அன்பர்கள் எண்ணுமாறு மணங்கமழும் மலர்ப் பொய்கை சூழ்ந்த நல்லூரில் விளங்குகின்றான். அப்பெருமான் புகழைக் கூறும் அடியவர்களைக் குற்றங்கள் அடையா.

மேல்

(928)
சூடும் இளந்திங்கள் சுடர் பொன்சடை தாழ,

ஓடு உண்கலன் ஆக, ஊர் ஊர் இடு பிச்சை

நாடும் நெறியானை, நல்லூர்ப் பெருமானைப்

பாடும் அடியார்கட்கு அடையா, பாவமே.

இளம்பிறை, முடியிற்சூடி, ஒளி விடுகின்ற பொன் போன்ற சடைகள் தாழ, தலையோட்டையே உண்கலனாகக் கொண்டு, ஒவ்வோர் ஊரிலும் மகளிர் இடும் பிச்சையை நாடிச் செல்லும் அறநெறியாளனாகிய நல்லூர்ப் பெருமானைப் பாடும் அடியவர்களைப் பாவங்கள் அடையா.

மேல்

(929)
நீத்த நெறியானை, நீங்காத் தவத்தானை,

நாத்த நெறியானை, நல்லூர்ப் பெருமானை,

காத்த நெறியானை, கைகூப்பித் தொழுது

ஏத்தும் அடியார்கட்கு இல்லை, இடர்தானே.

உலகியல் நெறி முறைகளைத் தான் பின்பற்றாது நீத்தவனும், நீங்காத தவத்தை உடையவனும், கட்டுப்பாடுகளுடைய நெறிகளை வகுத்து அளித்தவனும், அந்நெறி நிற்பாரைக் காத்தருள்பவனும் ஆகிய நல்லூர்ப் பெருமானைக் கைகுவித்துத் தொழுதேத்தும் அடியவர்கட்கு இடரில்லை.

மேல்

(930)
ஆகத்து உமைகேள்வன், அரவச் சடை தாழ

நாகம் அசைத்தானை, நல்லூர்ப் பெருமானை,

தாகம் புகுந்து அண்மி, தாள்கள் தொழும் தொண்டர்

போகம் மனத்தராய், புகழத் திரிவாரே.

தனது திருமேனியில், கூறாகக் கொண்டுள்ள உமையம்மையின் கணவனும் பாம்பணிந்த சடைகள் தாழ்ந்து தொங்க, இடையில் பாம்பைக் கச்சாகக் கட்டியவனும் ஆகிய நல்லூர்ப் பெருமானை, வேட்கை மிக்கவராய் அணுகி அவன் திருவடிகளைத் தொழும் தொண்டர்கள் இன்பம் பொருந்திய மனத்தவராய்ப் பலரும் புகழ உலகில் வாழ்வார்.

மேல்

(931)
கொல்லும் களியானை உரி போர்த்து, உமை அஞ்ச,

நல்ல நெறியானை, நல்லூர்ப் பெருமானை,

செல்லும் நெறியானை, சேர்ந்தார் இடர் தீர,

சொல்லும் அடியார்கள் அறியார், துக்கமே.

தன்னைக் கொல்ல வந்த மதம் பொருந்திய யானையை, உமையம்மை அஞ்சுமாறு கொன்று, அதன் தோலைப் போர்த்த நல்ல நெறியாளனாய், நல்லூர்ப் பெருமானாய், எல்லோரும் அடையத்தக்க முத்திநெறியாளனாய் விளங்கும் சிவபிரானை அடைந்து, தங்களது அரிய துன்பங்கள் தீருமாறு புகழ்ந்து போற்றும் அடியவர்கள், துக்கம் அறியார்.

மேல்

(932)
எங்கள் பெருமானை, இமையோர் தொழுது ஏத்தும்

நங்கள் பெருமானை, நல்லூர் பிரிவு இல்லா,

தம் கை தலைக்கு ஏற்றி, “ஆள்” என்று அடிநீழல்

தங்கும் மனத்தார்கள் தடுமாற்று அறுப்பாரே.

எங்கள் தலைவனும், தேவர்களால் தொழுது போற்றப்படும் நம் பெருமானும், நல்லூரில் பிரிவின்றி எழுந்தருளியிருக்கும் தலைவனுமாய இறைவனை அடைந்து, தம் கைகளை உச்சி மேல் குவித்து, நாங்கள் உனக்கு அடிமை என்று கூறி, அவனது திருவடி நீழலில் ஒன்றி வாழும் மனத்தவர்கள் தடுமாற்றம் இலராவர்.

மேல்

(933)
காமன் எழில் வாட்டி, கடல் சூழ் இலங்கைக் கோன்

நாமம் இறுத்தானை, நல்லூர்ப் பெருமானை,

ஏம மனத்தாராய் இகழாது எழும் தொண்டர்

தீபமனத்தார்கள்; அறியார், தீயவே.

மன்மதனது உருவ அழகை அழித்துக் கடல் சூழ்ந்த இலங்கை மன்னனாகிய இராவணனது புகழைக் கெடுத்து, விளங்கும் நல்லூரில் எழுந்தருளிய பெருமானை, பாதுகாப்புக் கொண்ட மனத்தவர்களாய் இகழாது அவனைக் காண எழும் தொண்டர்கள், தீபம் போன்ற ஞானஒளி நிலைத்த மனம் உடையவராவர். தீயனவற்றை அவர்கள் அறியார்.

மேல்

(934)
வண்ண மலரானும் வையம் அளந்தானும்

நண்ணல் அரியானை, நல்லூர்ப் பெருமானை,

தண்ணமலர் தூவித் தாள்கள் தொழுது ஏத்த

எண்ணும் அடியார்கட்கு இல்லை, இடுக்கணே.

செந்தாமரையில் விளங்கும் பிரமனும், உலகை அளந்த திருமாலும், நண்ணுதற்கு அரியவனாய் விளங்கும் நல்லூர்ப் பெருமானை, குளிர்ந்த மலர்களைத்தூவி, அவன் திருவடிகளைத் தொழுது வணங்க எண்ணும் அடியவர்களுக்கு, இடுக்கண் இல்லை.

மேல்

(935)
பிச்சக்குடை நீழல் சமணர், சாக்கியர்,

நிச்சம் அலர் தூற்ற நின்ற பெருமானை,

நச்சுமிடற்றானை, நல்லூர்ப் பெருமானை,

எச்சும் அடியார்கட்கு இல்லை, இடர்தானே.

மயிற்பீலியாலாகிய குடை நீழலில் திரியும் சமணர்களும், புத்தர்களும் நாள்தோறும் பழி தூற்றுமாறு நின்ற பெருமானாய், நஞ்சு பொருந்திய கண்டத்தை உடைய நல்லூர்ப்பெருமானாய் விளங்கும் சிவபிரானை, ஏத்தும் அடியவர்களுக்கு இடரில்லை.

மேல்

(936)
தண்ணம்புனல் காழி ஞானசம்பந்தன்,

நண்ணும் புனல் வேலி நல்லூர்ப் பெருமானை,

வண்ணம் புனை மாலை வைகல் ஏத்துவார்

விண்ணும் நிலனும் ஆய் விளங்கும் புகழாரே.

குளிர்ந்த நீரால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், பொருந்திய நீரை வேலியாக உடைய நல்லூரில் விளங்கும் பெருமான் இயல்புகளைப் புனைந்து பாடிய,

இத்திருப்பதிகத்தை நாள்தோறும் சொல்லித் துதிப்பவர் விண்ணும் மண்ணும் விளங்கும் புகழாளர் ஆவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(87)
திருவடுகூர் - குறிஞ்சி

(937)
சுடு கூர் எரிமாலை அணிவர்; சுடர் வேலர்;

கொடுகு ஊர் மழுவாள் ஒன்று உடையார்; விடை ஊர்வர்;

கடுகு ஊர் பசி, காமம், கவலை, பிணி, இல்லார்

வடு கூர் புனல் சூழ்ந்த வடுகூர் அடிகளே.

சுடும் தன்மை மிக்க தீப மாலையை அணிபவரும், ஒளி பொருந்திய சூலத்தினரும், கொடிய மழுவாயுதம் ஒன்றைக் கையில் உடையவரும், விடையை ஊர்ந்து வருபவரும், நீர் வளம் மிக்க வடுகூர் இறைவர் ஆவார். மிக்க பசி காமம் கவலை பிணி ஆகியன இல்லாதவரும் ஆவர்.

மேல்

(938)
பாலும் நறு நெய்யும் தயிரும் பயின்று ஆடி,

ஏலும் சுடு நீறும் என்பும் ஒளி மல்க,

கோலம் பொழில்-சோலைக் கூடி மட அன்னம்

ஆலும் வடுகூரில் ஆடும், அடிகளே.

பால், நறுமணம் மிக்க நெய், தயிர் ஆகியவற்றை விரும்பி ஆடி, பொருந்துவதான வெண்ணீறு, எம்புமாலை ஆகியவற்றை ஒளி மல்க அணிந்து அழகிய பொழில்களிலும் சோலைகளிலும். வாழும் அன்னங்கள் கூடி ஆரவாரிக்கும் வடுகூரில் நம் அடிகளாகிய இறைவர் மகிழ்வோடு ஆடுகின்றார்.

மேல்

(939)
சூடும், இளந்திங்கள் சுடர் பொன்சடை தன்மேல்

ஓடும் களியானை உரி போர்த்து, உமை அஞ்ச,

ஏடு மலர் மோந்து அங்கு எழில் ஆர் வரிவண்டு

பாடும் வடு கூரில் ஆடும் அடிகளே.

ஒளி பொருந்திய பொன் போன்ற சடைமுடிமேல் இளந்திங்களைச் சூடி, மதம் கொண்டு தன்பால் ஓடிவந்த யானையை, உமையம்மை அஞ்சக் கொன்று, அதன் தோலைப் போர்த்து, அழகு பொருந்திய வரி வண்டுகள் இதழ்களோடு கூடிய மலர்களை முகர்ந்து தேனுண்டு பாடும் வடுகூரில், அடிகள் நடனம் ஆடுவர்.

மேல்

(940)
துவரும் புரிசையும் துதைந்த மணி மாடம்

கவர எரியூட்டி, கடிய மதில் எய்தார்

கவரும் அணி கொல்லைக் கடிய முலை நல்லார்

பவரும் வடுகூரில் ஆடும் அடிகளே.

செந்நிறமும், மதிலும் செறிந்த அழகிய மாடங்களை அழிக்குமாறு தீயைச் செலுத்தி அம்மதில்கள் அழியுமாறு அம்பு எய்த சிவபெருமானார், காவல் பொருந்திய முலையாராகிய பெண் கொடிகள் முல்லைநிலத்தில் கைகளால் இரத்தினங்களைப் பொறுக்கி எடுக்கும் வடுகூரில் நடம்பயிலும் அடிகளாவர்.

மேல்

(941)
துணி ஆர் உடை ஆடை துன்னி, அரைதன்மேல்

தணியா அழல் நாகம் தரியா வகை வைத்தார்

பணி ஆர் அடியார்கள் பலரும் பயின்று ஏத்த,

அணி ஆர் வடுகூரில் ஆடும் அடிகளே.

துணிக்கப் பெற்றதாகிய கோவண ஆடையை இடையிலே தரித்து அதன்மேல் தீப்போன்ற விட வெம்மை தணியாத நாகத்தை அழகுறத் தரித்தவராகிய அடிகள் அடியவர் பலரும் பணிந்து பரவி வாழ்த்த அழகிய வடுகூரில் ஆடியருள்கின்றார்.

மேல்

(942)
தளரும் கொடி அன்னாள் தன்னோடு உடன் ஆகி,

கிளரும் அரவு ஆர்த்து, கிளரும் முடிமேல் ஓர்

வளரும் பிறை சூடி, வரிவண்டு இசை பாட

ஒளிரும் வடுகூரில் ஆடும், அடிகளே.

சுமை பொறுக்காது தள்ளாடும் கொடி போன்றவளாகிய உமையம்மையோடு கூடி, விளங்கும் பாம்பினை இடையிலே கட்டிக்கொண்டு விளக்கம் பொருந்திய முடிமேல் வளரும் பிறைமதி ஒன்றைச் சூடி, வரிகள் பொருந்திய வண்டுகள் இசைபாட பலராலும் நன்கறியப்பட்ட வடுகூரில் அடிகளாகிய பெருமான் ஆடியருள்கின்றார்.

மேல்

(943)
நெடியர்; சிறிது ஆய நிரம்பா மதி சூடும்

முடியர்; விடை ஊர்வர்; கொடியர் மொழி கொள்ளார்;

கடிய தொழில் காலன் மடிய, உதை கொண்ட

அடியர் வடுகூரில் ஆடும் அடிகளே.

வடுகூரில் ஆடும் அடிகள் பேருருவம் கொள்பவர். சிறிதான கலைநிரம்பாத பிறை மதியைச் சூடும் முடியை உடையவர். விடையை ஊர்ந்து வருபவர். கொடியவர் மொழிகளை ஏற்றுக் கொள்ளாதவர். கொல்லும் தொழிலைச் செய்யும் காலன் மடியுமாறு உதைத்தருளிய திருவடியினர்.

மேல்

(944)
பிறையும் நெடுநீரும் பிரியா முடியினார்,

மறையும் பல பாடி மயானத்து உறைவாரும்

பறையும் அதிர் குழலும் போலப் பலவண்டு ஆங்கு

அறையும் வடுகூரில் ஆடும் அடிகளே.

அதிர்கின்ற பறையும் வேய்ங்குழலும் போலப் பல வண்டுகள் ஒலிக்கும் சோலைகளை உடைய வடுகூரில் ஆடும் அடிகள், இளம் பிறை, பெருகிய கங்கை நீர் ஆகியன பிரியாத திருமுடியை உடையவர் வேதங்களில் உள்ள சந்தங்கள் பலவற்றையும் பாடிக்கொண்டு இடுகாட்டில் உறைபவர்.

மேல்

(945)
சந்தம் மலர் வேய்ந்த சடையின் இடை விம்மு

கந்தம் மிகு திங்கள் சிந்து கதிர்மாலை

வந்து நயந்து, எம்மை நன்றும் மருள் செய்வார்

அம் தண் வடு கூரில் ஆடும் அடிகளே.

அழகு தண்மை ஆகியவற்றை உடைய வடுகூரில் ஆடும் அடிகள் அழகிய மலர்கள் வேய்ந்த சடையின்கண் பெருகி எழும் மணம் மிகும் பிறை மதி வெளியிடும் கிரணங்களை உடையமாலை நேரத்தில் வந்து விரும்பி எமக்கு நன்றாக அருள் செய்வார்.

மேல்

(946)
திருமால் அடி வீழ, திசை நான்முகன் ஆய

பெருமான் உணர்கில்லாப் பெருமான், நெடு முடி சேர்

செரு மால் விடை ஊரும் செம்மான்-திசைவு இல்லா

அரு மா வடுகூரில் ஆடும் அடிகளே.

எட்டுத் திசைகளிலும் ஒளி பரவுமாறு அரிய பெரிய வடுகூரில் நடனம் ஆடும் அடிகள். திருமால் தம் அடியை விரும்பித் தோண்டிச் செல்லவும், திசைக்கு ஒரு முகமாக நான்கு திருமுகங்களைக் கொண்ட பிரமனாகிய தலைவனும் அறிய முடியாத பெரிய முடியினை உடைய இறைவர், போர் செய்யத் தக்க விடைமீது எழுந்தருளிவரும் சிவந்த நிறத்தினர்.

மேல்

(947)
படி நோன்பு அவை ஆவர், பழி இல் புகழ் ஆன,

கடிநாள் நிகழ் சோலை கமழும் வடுகூரை,

படி ஆன சிந்தை மொழி ஆர் சம்பந்தன்

அடிஞானம் வல்லார் அடி சேர்வார்களே.

இவ்வுலகில் கூறப்படும் நோன்புகள் பலவற்றுக்கும் உரியவராய் விளங்கும் சிவபிரான் எழுந்தருளியதும், குற்றமற்ற புகழோடு கூடிய மணம் கமழும் சோலைகளால் மணம் பெறுவதுமான வடுகூரில் மேவிய இறைவன் திருவடிகளில் படிந்த மனத்தோடு ஞானசம்பந்தன் பாடிய ,

இப்பதிகத் தமிழை ஓதி, அடிசேர்ஞானம் பெற்றார், திருவடிப்பேறு பெறுவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(88)
திருஆப்பனூர் - குறிஞ்சி

(948)
முற்றும் சடை முடி மேல் முதிரா இளம்பிறையன்,

ஒற்றைப் பட அரவம் அது கொண்டு அரைக்கு அணிந்தான்,

செற்றம் இல் சீரானைத் திரு ஆப்பனூரானைப்

பற்றும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

முடியைச் சூழ்ந்துள்ள சடையின்மேல் வளராத இளம் பிறையைச் சூடியவனும், ஒருதலைப் படத்தோடு கூடிய பாம்பை இடையில் கட்டியுள்ளவனும், வெறுத்தற்கியலாத புகழானும் ஆகிய திருஆப்பனூர் இறைவனைப் பற்றும் உள்ளமுடையோர் வினைத்தொடர்ச்சி நீங்கப் பெறுவர்.

மேல்

(949)
குரவம் கமழ் குழலாள் குடி கொண்டு நின்று, விண்ணோர்

விரவும் திருமேனி, விளங்கும் வளை எயிற்றின்

அரவம் அணிந்தானை, அணி ஆப்பனூரானைப்

பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

குராமலர் மணம் கமழும் கூந்தலையுடைய உமையம்மை விளங்கும் திருமேனியோடு தேவர்கள் கூடி வணங்கத் திருஆப்பனூரில் விளங்கும் சிவபிரானைப் பரவும் மனம் உடையவர் வினைத் தொடர்ச்சி நீங்கப் பெறுவர்.

மேல்

(950)
முருகு விரி குழலார் மனம் கொள் அநங்கனை முன்

பெரிதும் முனிந்து உகந்தான், பெருமான், பெருங்காட்டின்

அரவம் அணிந்தானை, அணி ஆப்பனூரானைப்

பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

மணம் கமழும் கூந்தலை உடைய மகளிரால் நினைக்கப் பெறும் காமனை, முற்காலத்தில் பெரிதும் சினந்து, பின் அவனுக்கு வாழ்வு தந்த பெருமானும், பெரிய காட்டகத்தே வாழும் அரவத்தை அணிந்தவனும், அழகிய ஆப்பனூரில் எழுந்தருளியவனுமாகிய இறைவனைப் பரவும் மனம் உடையவர் வினைத் தொடர்ச்சி நீங்கப் பெறுவர்.

மேல்

(951)
பிணியும் பிறப்பு அறுப்பான், பெருமான், பெருங்காட்டில்

துணியின் உடை தாழச் சுடர் ஏந்தி ஆடுவான்,

அணியும் புனலானை, அணி ஆப்பனூரானைப்

பணியும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

உடலைப் பற்றிய நோய்களையும் உயிரைப் பற்றிய பிறவி நோயையும் அறுத்தருளும் பெருமானும், சுடுகாட்டகத்தே கோவண ஆடையோடு அழலேந்தி ஆடுபவனும், கங்கையை முடியில் அணிந்தவனும் ஆகிய அழகிய ஆப்பனூர் இறைவனைப் பணியும் மனம் உடையவர் வினைத் தொடர்ச்சி நீங்கப் பெறுவர்.

மேல்

(952)
தகரம் அணி அருவித் தடமால்வரை சிலையா,

நகரம் ஒரு மூன்றும் நலம் குன்ற வென்று உகந்தான்,

அகரமுதலானை, அணி ஆப்பனூரானைப்

பகரும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

தகரம் எனப்படும் மணப் பொருளும் மணிகளும் கலந்து விழும் அருவிகளை உடைய மிகப் பெரிய மலையை, வில்லாகவளைத்து, அசுரர்களின் நகரங்களாக விளங்கிய முப்புரங்களும் பொடி படச் செய்து மகிழ்ந்தவனும், எல்லா எழுத்துக்களிலும் கலந்து நிற்கும் அகரம் போல எப்பொருள்களிலும் கலந்து நிற்பவனும், அழகிய ஆப்பனூரில் எழுந்தருளியிருப்பவனுமாகிய சிவபிரான் புகழைக் கூறும் மனம் உடையவர்கள் வினை மாசுகளினின்று நீங்கப் பெறுவர்.

மேல்

(953)
ஓடும் திரிபுரங்கள் உடனே உலந்து அவிய,

காடு அது இடம் ஆகக் கனல் கொண்டு நின்று இரவில்

ஆடும் தொழிலானை, அணி ஆப்பனூரானைப்

பாடும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

பறந்து திரியும் முப்புரங்களையும் ஒரு நொடியில் அழித்து, பொடிபடச் செய்து, சுடுகாட்டைத் தனது இடமாகக் கொண்டு, கனல் ஏந்தி நின்று, இரவில் திருநடனம் புரிவதைத் தொழிலாகக் கொண்டவனும், அழகிய ஆப்பனூரில் விளங்குபவனுமாகிய இறைவனைப் பாடும் மனம் உடையவர் வினைத் தொடர்ச்சி நீங்கப் பெறுவர்.

மேல்

(954)
இயலும் விடை ஏறி, எரி கொள் மழு வீசி,

கயலின் இணைக்கண்ணாள் ஒருபால் கலந்து ஆட,

இயலும் இசையானை, எழில் ஆப்பனூரானைப்

பயிலும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

மனம் போல் இயங்கும் விடைமிசை ஏறி, எரிதலைக் கொண்ட மழுவைச் சுழற்றிக் கொண்டு, கயல் போன்ற இரு விழிகளைக் கொண்ட உமையம்மை திருமேனியின் ஒருபால் இணைந்து மகிழ, இசை பாடி மகிழ்பவனாய் அழகிய ஆப்பனூரில் எழுந்தருளியுள்ள இறைவனைப் பாடுவதைத் தம் இயல்பாகக் கொண்ட மனம் உடையவர், வினை மாசு தீர்வர்.

மேல்

(955)
கருக்கும் மணிமிடறன், கதநாகக்கச்சையினான்,

உருக்கும் அடியவரை, ஒளிவெண்பிறைசூடி,

அரக்கன் திறல் அழித்தான், அணி ஆப்பனூரானைப்

பரு(க்)கும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

கரிதான நீலமணி போன்ற கண்டத்தை உடையவனும், சினம் பொருந்திய பாம்பைக் கச்சையாக அணிந்தவனும், அடியவர்களை மனம் உருகச் செய்பவனும், ஒளிபொருந்திய வெண்பிறையைச் சூடியவனும், இராவணனின் வலிமையை அழித்தவனும் ஆகிய அழகிய ஆப்பனூரில் எழுந்தருளிய இறைவனை, சுவைக்கும் மனம் உடையவர் வினை மாசு நீங்கப் பெறுவர்.

மேல்

(956)
கண்ணன், கடிக் கமல மலர் மேல் இனிது உறையும்

அண்ணற்கு அளப்பு அரிது ஆய் நின்று, அங்கு அடியார்மேல்

எண் இல் வினை களைவான், எழில் ஆப்பனூரானைப்

பண்ணின் இசை பகர்வார் வினை பற்று அறுப்பாரே.

திருமால், மணம் பொருந்திய தாமரை மலர் மேல் இனிதாய் உறையும் பிரமன் ஆகியோரால், அளத்தற்கரியவனாய் நின்றவனும், அடியவர் மேல் வரும் எண்ணற்ற வினைகள் பலவற்றையும் களைபவனும் ஆகிய அழகிய ஆப்பனூரில் விளங்கும் இறைவனைப் பண் பொருந்த இசை பாடிப் போற்றுவார் வினை மாசு நீங்கப் பெறுவர்.

மேல்

(957)
செய்ய கலிங்கத்தார், சிறு தட்டு உடையார்கள்,

பொய்யர் புறம் கூற, புரிந்த அடியாரை

ஐயம் அகற்றுவான், அணி ஆப்பனூரானைப்

பைய நினைந்து எழுவார் வினை பற்று அறுப்பாரே.

சிவந்த காவி ஆடை உடுத்த புத்தர்களும், சிறு தடுக்கை ஆடையாக உடுத்துக் கொண்டு திரியும் சமணர்களும் பொய்பேசிப் புறம் பேச, தன்னை விரும்பிய அடியவர்களின் விபரீத ஞானத்தைப் போக்கி, மெய்யுணர்வு நல்கும் அழகிய ஆப்பனூரில் விளங்கும் இறைவனை மெல்ல உள்குவார்களின் வினை மாசுகள் நீங்கும்.

மேல்

(958)
அம் தண்புனல் வைகை அணி ஆப்பனூர் மேய

சந்த மலர்க்கொன்றை சடைமேல் உடையானை,

நந்தி அடி பரவும் நல ஞானசம்பந்தன்

சந்தம் இவை வல்லார் தடுமாற்று அறுப்பாரே.

அழகிய குளிர்ந்த நீர் நிறைந்த வைகைக் கரையில் விளங்கும் அழகிய ஆப்பனூரில் எழுந்தருளிய அழகிய கொன்றை மலர் மாலையைச் சடைமேல் அணிந்துள்ள இறைவனை, சிவன் திருவடிகளையே பரவும் நல்ல ஞானசம்பந்தன் பாடிய சந்த இசையோடு கூடிய ,

இத்திருப்பதிகப் பாடல்களை ஓதவல்லவர் நிலையான மெய்யறிவு பெறுவார்கள்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(89)
திருஎருக்கத்தம்புலியூர் - குறிஞ்சி

(959)
படை ஆர்தரு பூதப் பகடு ஆர் உரி போர்வை

உடையான், உமையோடும் உடன் ஆய் இடு கங்கைச்

சடையான்-எருக்கத்தம்புலியூர்த் தகு கோயில்

விடையான்; அடி ஏத்த, மேவா, வினைதானே.

படைகளாக அமைந்த பூத கணங்களை உடையவனும், யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவனும், உமையம்மையோடு உடனாய் விளங்குபவனும், வந்து பொருந்திய கங்கையை ஏற்ற சடையை உடையவனும் ஆகிய எருக்கத்தம்புலியூரில் விளங்கும் தகுதி வாய்ந்த கோயிலில் எழுந்தருளிய விடை ஏற்றை உடைய பெருமான் திருவடிகளை ஏத்துவாரை, வினைகள் வந்து சாரா.

மேல்

(960)
இலை ஆர் தரு சூலப்படை எம்பெருமானாய்,

நிலையார் மதில் மூன்றும் நீறு ஆய் விழ எய்த

சிலையான்-எருக்கத்தம்புலியூர்த் திகழ் கோயில்

கலையான்; அடி ஏத்த, கருதா, வினைதானே.

இலை வடிவமாக அமைந்த சூலப்படையை உடையவனும், எம் பெருமானும், நிலைபெற்ற முப்புரங்களையும் நீறாய்ப் பொடிபடுமாறு கணை எய்த வில்லை உடையவனும், எருக்கத்தம்புலியூரில் விளங்கும் கோயிலில் மேவியிருப்பவனும் ஆகிய கலைகளின் வடிவான சிவபிரானின் திருவடிகளை ஏத்தி வாழ்த்துவோரை, வினைகள் கருதா.

மேல்

(961)
“விண்ணோர் பெருமானே! விகிர்தா! விடை ஊர்தீ!.

பெண், ஆண், அலி, ஆகும் பித்தா! பிறைசூடி!.

எண் ஆர் எருக்கத்தம்புலியூர் உறைகின்ற

அண்ணா!” என வல்லார்க்கு அடையா, வினைதானே.

விண்ணவர் தலைவனே. வேறுபட்ட வடிவும் பண்பும் உடையவனே, விடைமீது ஏறிவருபவனே! பெண், ஆண், அலி என்னும் திணை பால் பாகுபாடுகளைக் கடந்துள்ளவனே, பித்தனே, பிறை சூடியவனே, எல்லோராலும் எண்ணத்தகும் எருக்கத்தம் புலியூரில் உறைகின்ற தலைவனே என்றுரைத்துப் போற்ற வல்லவரை, வினைகள் அடையா.

மேல்

(962)
அரை ஆர்தரு நாகம் அணிவான், அலர்மாலை

விரை ஆர்தரு கொன்றை உடையான், விடை ஏறி,

வரையான், எருக்கத்தம்புலியூர் மகிழ்கின்ற

திரை ஆர் சடையானைச் சேர, திரு ஆமே.

இடையிலே பாம்பைப் பொருந்துமாறு அணிந்துள்ளவனும், மணம் கமழும் கொன்றை மலர் மாலையை அணிந்துள்ளவனும், விடைமீது ஏறி வருபவனும், கயிலை மலையைத் தனக்குரிய இடமாகக் கொண்டவனும், எருக்கத்தம்புலியூரில் மகிழ்ந்து உறைபவனும் ஆகிய அலைகள் வீசும் கங்கை நதியை, சடைமிசைத் தரித்த சிவபிரானைச் சேர்வோர்க்குச் செல்வங்கள் வந்து சேரும்.

மேல்

(963)
வீறு ஆர் முலையாளைப் பாகம் மிக வைத்து,

சீறா வரு காலன் சினத்தை அழிவித்தான்,

ஏறான், எருக்கத்தம்புலியூர் இறையானை

வேறா நினைவாரை விரும்பா, வினைதானே.

வேறொன்றற்கில்லா அழகினை உடைய தனங்களைக் கொண்ட உமையம்மையை, இடப்பாகமாக சிறப்புடன் வைத்துக் கொண்டருளியவனும், சீறி வந்த காலனின் சினம் அடங்கச் செய்தவனும், இடப ஊர்தியை உடையவனும், எருக்கத்தம்புலியூரில் எழுந்தருளியுள்ள இறைவனும் ஆகிய சிவபிரானைத் தனித்திருந்து தியானிப்பவரை வினைகள் விரும்பா.

மேல்

(964)
நகுவெண்தலை ஏந்தி நானாவிதம் பாடிப்

புகுவான் அயம் பெய்ய, புலித்தோல் பியற்கு இட்டுத்

தகுவான்-எருக்கத்தம்புலியூர்த் தகைந்து அங்கே

தொகுவான்; கழல் ஏத்த, தொடரா, வினைதானே.

சிரிக்கும் வெள்ளிய தலையோட்டைக் கையில் ஏந்திப் பலவிதமாகப் பாடிக் கொண்டு மகளிர் இடும் பிச்சையை ஏற்கப் புகுபவனாய்ப் புலித்தோலைத் தோளில் இட்டுக்கொண்டு தகுதிவாய்ந் தவனாய் எருக்கத்தம்புலியூரில் தங்கி அங்கே நிலைத்திருப்பவனாகிய இறைவன் கழல்களை ஏத்த வினைகள் தொடரா.

மேல்

(965)
‘ “ஆவா!” என அரக்கன் அலற அடர்த்திட்டு,

“தேவா!” என, அருள் ஆர் செல்வம் கொடுத்திட்ட

கோவே! எருக்கத்தம்புலியூர் மிகு கோயில்-

தேவே!’ என, அல்லல் தீர்தல் திடம் ஆமே.

ஆ ஆ என்ற இரக்கக் குறிப்போடு இராவணன் அலறுமாறு அவனை அடர்த்து, பின் தேவா என அவன் வேண்ட அருள் நிறைந்த செல்வங்கள் பலவற்றை வழங்கியருளிய தலைவனே, எருக்கத்தம்புலியூரில் விளங்கும் சிறப்புமிக்க கோயிலில் எழுந்தருளும் தேவனே என்று போற்ற, நம் அல்லல்கள் தீர்தல் உறுதியாகும்.

மேல்

(966)
“மறையான், நெடுமால், காண்பு அரியான்! மழு ஏந்தி!.

நிறையா மதி சூடி! நிகழ் முத்தின் தொத்து ஏய்

இறையான்!”எருக்கத்தம்புலியூர் இடம் கொண்ட

கறை ஆர் மிடற்றானைக் கருத, கெடும், வினையே.

வேதங்களை ஓதும் நான்முகனும், நெடுமாலும் காணுதற்கு அரியவனே, மழுவைக் கையில் ஏந்தியவனே, கலை நிறையாத பிறை மதியைச் சூடியவனே, முத்துக்களின் கொத்துப் போன்ற இறையோனே என்று போற்றி, எருக்கத்தம்புலியூரை இடமாகக் கொண்ட கறைமிடற்று அண்ணலை நினைந்தால், வினை கெடும்.

மேல்

(967)
புத்தர் அருகர்தம் பொய்கள் புறம் போக்கி,

சுத்தி தரித்து உறையும் சோதி, உமையோடும்

நித்தன்-எருக்கத்தம்புலியூர் நிகழ்வு ஆய

அத்தன்; அறவன்தன் அடியே அடைவோமே.

புத்தர் சமணர் ஆகியோர்தம் பொய்யுரைகளை விலக்கித் தூய்மையைத் தழுவி விளங்கும் ஒளி வடிவினனாய், உமையம்மையாருடன் நித்தம் மணாளனாக விளங்குவோனாய், எருக்கத்தம்புலியூரில் விளங்கிக் கொண்டிருக்கும் அறவடிவினனாகிய தலைவன் அடிகளை, நாம் அடைவோம்.

மேல்

(968)
ஏர் ஆர் எருக்கத்தம்புலியூர் உறைவானை,

சீர் ஆர் திகழ் காழித் திரு ஆர் சம்பந்தன்

ஆரா அருந்தமிழ் மாலை இவை வல்லார்

பாரார் அவர் ஏத்த, பதிவான் உறைவாரே.

அழகிய எருக்கத்தம்புலியூரில் விளங்கும் இறைவனை, சீர்மிகு காழிப்பதியில் தோன்றிய திருவார் சம்பந்தன் அருளிய சுவை குன்றாத அருந்தமிழ் மாலையாகிய ,

இத்திருப்பதிகப் பாடல்களை ஓதுபவர்கள் உலகவர் ஏத்த வானகம் எய்துவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(90)
திருப்பிரமபுரம் - திருஇருக்குக் குறள்

(969)
அரனை உள்குவீர்! பிரமன் ஊருள் எம்

பரனையே மனம் பரவி, உய்ம்மினே!.

சிவபிரானைச் சிந்தித்துப் போற்ற விரும்பும் அன்பர்களே, பிரமனூரில் விளங்கும் பரனையே மனத்தால் பரவிப் போற்றி உய்வீர்களாக.

மேல்

(970)
காண உள்குவீர்! வேணுநல்புரத்

தாணுவின் கழல் பேணி, உய்ம்மினே!.

சிவபிரானைக் கண்டு தொழ எண்ணும் அன்பர்களே, வேணுபுரத்தில் விளங்கும் தாணுவின் திருவடிகளைப் பேணி உய்வீர்களாக.

மேல்

(971)
நாதன் என்பிர்காள்! காதல் ஒண் புகல்

ஆதிபாதமே ஓதி, உய்ம்மினே!.

சிவபெருமானை எம் தலைவன் எனக் கூறும் அன்பர்களே! அன்போடு ஒளி விளங்கும் புகலிப் பதியில் விளங்கும் ஆதியின் திருவடிப் பெருமைகளை ஓதி உய்வீர்களாக.

மேல்

(972)
அங்கம் மாது சேர் பங்கம் ஆயவன்,

வெங்குரு மன்னும் எங்கள் ஈசனே.

அருள் வழங்கும் குறிப்போடு உமையம்மையைத் தனது திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டுள்ளவன், வெங்குருவில் நிலையாக உள்ள எங்கள் ஈசன் ஆவான்.

மேல்

(973)
வாள் நிலாச் சடைத் தோணிவண்புரத்து

ஆணி நன்பொனைக் காணுமின்களே!.

ஒளி பொருந்திய, பிறைமதி பொருந்திய சடைமுடி உடையவனாய்த் தோணிபுரத்தில் விளங்கும் ஆணிப் பொன் போன்ற இறைவனைக் கண்டு தொழுவீர்களாக.

மேல்

(974)
“பாந்தள் ஆர் சடைப் பூந்தராய் மன்னும்,

ஏந்து கொங்கையாள் வேந்தன்” என்பரே.

பாம்பு பொருந்திய சடைமுடியோடு பூந்தராயில் விளங்கும் பெருமானை, ஏந்திய தனபாரங்களை உடைய உமையம்மையின் கணவன் என்று கூறுவார்கள்.

மேல்

(975)
கரிய கண்டனை, சிரபுரத்துள் எம்

அரசை, நாள்தொறும் பரவி, உய்ம்மினே!.

கருமை பொருந்திய கண்டத்தை உடையவனாய்ச், சிரபுரத்துள் எழுந்தருளிய அரசனை நாள்தோறும் பரவி உய்வீர்களாக.

மேல்

(976)
நறவம் ஆர் பொழில் புறவம் நல் பதி

இறைவன் நாமமே மறவல், நெஞ்சமே!.

தேன் பொருந்திய சோலைகளை உடைய புறவமாகிய நல்ல ஊரில் எழுந்தருளிய இறைவன் திருநாமங்களை, நெஞ்சமே! நீ மறவாதே.

மேல்

(977)
தென்றில் அரக்கனைக் குன்றில் சண்பை மன்

அன்று நெரித்தவா, நின்று நினைமினே!.

தென் திசையிலுள்ள இலங்கை மன்னனாம் இராவணனாகிய அரக்கனைச் சண்பை மன்னனாகிய சிவபிரான் கயிலை மலையிடைப்படுத்து அன்று நெரித்த வரலாற்றை நின்று நினைத்துப் போற்றுவீர்களாக.

மேல்

(978)
அயனும் மாலும் ஆய் முயலும் காழியான்

பெயல்வை எய்தி நின்று இயலும், உள்ளமே.

பிரமனும் திருமாலும் அடிமுடி தேடி முயலும் பரம்பொருளாகிய சீகாழிப் பதியில் விளங்கும் இறைவனது கருணைப் பொழிவைச் சார்ந்து நின்று நினைக்கும் என் உள்ளம்.

மேல்

(979)
தேரர் அமணரைச் சேர்வு இல் கொச்சை மன்

நேர் இல் கழல் நினைந்து ஓரும், உள்ளமே.

புத்தர் சமணர் ஆகியோரை அணுகாத, கொச்சை வயத்து மன்னனாகிய சிவபிரானின் ஒப்பற்ற திருவடிகளை நினைந்து தியானிக்கும் என் உள்ளம்.

மேல்

(980)
தொழு மனத்தவர், கழுமலத்து உறை

பழுது இல் சம்பந்தன் மொழிகள் பத்துமே.

கழுமலத்தில் உறையும் குற்றமற்ற ஞான சம்பந்தன் அருளிய மொழிகளாகிய,,

இத்திருப்பதிகப் பாடல்களை ஓதி, பெருமானைத் தொழும் மனத்தவர் ஆகுக.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(91)
திருஆரூர் - திருஇருக்குக்குறள்

(981)
சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப்

பத்தி மலர் தூவ, முத்தி ஆகுமே.

சித்தம் மாசு நீங்கித் தெளிவடைய விரும்புகின்றவர்களே, அனைவர்க்கும் தலைவனாய் ஆரூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானைப் பக்தியோடு மலர் தூவி வாழ்த்துங்கள். சித்தத் தெளிவோடு முக்தி கிடைக்கும்.

மேல்

(982)
பிறவி அறுப்பீர்காள்! அறவன் ஆரூரை

மறவாது ஏத்துமின்! துறவி ஆகுமே.

பிறப்பினை அறுத்துக் கொள்ள விரும்புபவர்களே, அறவடிவினனாகத் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் இறைவனை மறவாது ஏத்துங்கள் பிறப்பிற்குக் காரணமான ஆசைகள் நீங்கித் துறவு நிலை எய்தலாம்.

மேல்

(983)
துன்பம் துடைப்பீர்காள்! அன்பன் அணி ஆரூர்

நன்பொன்மலர் தூவ, இன்பம் ஆகுமே.

துன்பங்களைத் துடைத்துக் கொள்ள விரும்புகின்றவர்களே, அழகிய ஆரூரில் எழுந்தருளிய அன்பு வடிவான இறைவனை நல்ல பொலிவுடைய மலர்களைத் தூவி வழிபடுங்கள். துன்பம் நீங்குவதோடு இன்பம் உளதாம்.

மேல்

(984)
உய்யல் உறுவீர்காள்! ஐயன் ஆரூரைக்

கையினால்-தொழ, நையும், வினைதானே.

உலக வாழ்க்கையிலிருந்து கடைத்தேற விரும்புகின்றவர்களே, ஆரூரில் எழுந்தருளிய தலைவனாகிய இறைவனைக் கைகளைக் கூப்பி வணங்குங்கள். உங்கள் வினைகள் மெலிவடையும். உய்தி பெறலாம்.

மேல்

(985)
பிண்டம் அறுப்பீர்காள்! அண்டன் ஆரூரைக்

கண்டு மலர் தூவ, விண்டு வினை போமே.

மீண்டும் பிறவா நிலையைப் பெற விரும்புகின்றவர்களே, ஆரூரில் எழுந்தருளிய அனைத்துலக நாயகனாகிய இறைவனைச் சென்று கண்டு மலர் தூவி வழிபடுங்கள். பிறப்புக்குக் காரணமான வினைகள் விண்டுபோம். பிறவா நிலை எய்தலாம்.

மேல்

(986)
பாசம் அறுப்பீர்காள்! ஈசன் அணி ஆரூர்

வாசமலர் தூவ, நேசம் ஆகுமே.

உயிரோடு பிணைந்துள்ள பாசம் அகல வேண்டுமென விரும்புகின்றவர்களே, அழகிய ஆரூரில் எழுந்தருளியுள்ள ஈசனை மணம் பொருந்திய மலர்களைத் தூவி வழிபடுங்கள். உம்பால் அவனது நேசம் உளதாகும். பாசம் அகலும்.

மேல்

(987)
வெய்ய வினை தீர, ஐயன் அணி ஆரூர்

செய்யமலர் தூவ, வையம் உமது ஆமே.

கொடிய வினைகள் தீர வேண்டுமென விரும்புகின்றவர்களே, அழகிய ஆரூரில் எழுந்தருளிய அனைத் துயிர்க்கும் தலைவனாகிய இறைவனைச் செம்மையான மலர்களைத் தூவி வழிபடுங்கள். உலகம் உம்முடையதாகும்.

மேல்

(988)
அரக்கன் ஆண்மையை நெருக்கினான் ஆரூர்

கரத்தினால்-தொழ, திருத்தம் ஆகுமே.

அரக்கர் தலைவனாகிய இராவணனின் ஆற்றலைக் கால்விரல் ஒன்றால் நெருக்கி அடர்த்து அழித்து ஆரூரில் எழுந்தருளிய இறைவனைக் கைகளால் தொழுவீர்களாக. உமது மனக்கோணல் நீங்கும், திருத்தம் பெறலாம்.

மேல்

(989)
துள்ளும் இருவர்க்கும் வள்ளல் ஆரூரை

உள்ளுமவர் தம்மேல் விள்ளும், வினைதானே.

செருக்குற்றுத்துள்ளிய திருமால் பிரமரின் செருக்கு அடக்கி அருள் செய்த, ஆரூரில் எழுந்தருளிய வள்ளற் பெருமானை மனத்தால் நினைத்து வழிபட வல்லவர்களின் வினைகள் நீங்கும்.

மேல்

(990)
கடுக் கொள் சீவரை அடக்கினான் ஆரூர்

எடுத்து வாழ்த்துவார் விடுப்பர், வேட்கையே.

கடுக்காயைத் தின்று துவர் ஆடை போர்த்துத் திரியும் சமண புத்தர்களை அடக்கியவனாகிய ஆரூர் இறைவனே பரம் பொருள் எனச் சிறப்பித்து வாழ்த்துவார், வேட்கை என்னும் ஆசையை விடுப்பர்.

மேல்

(991)
சீர் ஊர் சம்பந்தன் ஆரூரைச் சொன்ன

பார் ஊர் பாடலார் பேரார், இன்பமே.

சிறப்புப் பொருந்திய ஞானசம்பந்தன் ஆரூர் இறைவன்மீது பாடிய உலகம் முழுதும் பரவிய,

பாடல்களைப் பாடி வழிபட வல்லவர் இன்பத்தினின்று நீங்கார்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(92)
திருவீழிமிழலை - திருஇருக்குக்குறள்

  திருமுறை ;  முதல் திருமுறை

  நாடு ;  சோழநாடு காவிரித் தென்கரை

  தலம் ; வீழிமிழலை

  பண் ; குறிஞ்சி

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

 சிவபெருமான் அருளிய படிக்காசில் உள்ள மாசு தீர்க்க வேண்டி திருஞானசம்பந்தர் பாடிய திருப்பதிகம்.

(992)
வாசி தீரவே, காசு நல்குவீர்!

மாசு இல் மிழலையீர்! ஏசல் இல்லையே.

குற்றம் அற்ற வீழிமிழலையில் எழுந்தருளியுள்ள இறைவரே, அடியேனுக்கு வழங்கியருளும் காசில் உள்ள உயர்வு தாழ்வு நீங்குமாறு செய்து அக்காசினை நல்குக. அதனால் உமக்குப் பழிப்பு இல்லை.

மேல்

(993)
இறைவர் ஆயினீர்! மறை கொள் மிழலையீர்!.

கறை கொள் காசினை முறைமை நல்குமே!.

எல்லோருக்கும் இறைவராக விளங்கும் பெருமானீரே, வேதங்களின் ஒலி நிறைந்த திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே, கறை படிந்ததாக அளிக்கப்படும் காசில் உள்ள அக்கறையை நீக்கி முறையாக அளித்தருளுக.

மேல்

(994)
செய்யமேனியீர்! மெய் கொள் மிழலையீர்!.

பை கொள் அரவினீர்! உய்ய, நல்குமே!.

சிவந்த திருமேனியை உடையவரே, மெய்ம்மையாளர் வாழும் திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே, படம் எடுக்கும் பாம்பை அணிகலனாகப் பூண்டுள்ளவரே, அடியேங்கள் உய்யுமாறு வாசியில்லாததாகக் காசு அருளுக.

மேல்

(995)
நீறு பூசினீர்! ஏறு அது ஏறினீர்!.

கூறு மிழலையீர்! பேறும் அருளுமே!.

திருவெண்ணீற்றை அணிந்தவரே, ஆனேற்றில் ஏறி வருபவரே, பலராலும் புகழப்பெறும் திருவீழிமிழலையில் எழுந்தருளியவரே, காசு அருளுவதோடு எமக்கு முத்திப் பேறும் அருளுவீராக.

மேல்

(996)
காமன் வேவ, ஓர் தூமக் கண்ணினீர்!.

நாம மிழலையீர்! சேமம் நல்குமே!.

காமனை எரிந்து அழியுமாறு செய்த புகை பொருந்திய அழல் விழியை உடையவரே! புகழ் பொருந்திய திருவீழிமிழலையில் எழுந்தருளியவரே! எமக்குச் சேமத்தை அருளுவீராக.

மேல்

(997)
பிணி கொள் சடையினீர்! மணி கொள் மிடறினீர்!.

அணி கொள் மிழலையீர்! பணிகொண்டு அருளுமே!.

கட்டப்பட்ட சடையை உடையவரே, நீலமணி போன்ற கண்டத்தை உடையவரே, அழகு பொருந்திய திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே, எம்மைப் பணி கொண்டு அருளுவீராக.

மேல்

(998)
மங்கை பங்கினீர்! துங்க மிழலையீர்!.

கங்கை முடியினீர்! சங்கை தவிர்மினே!.

உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரே, உயர்வுடைய திருவீழிமிழலையில் உறைபவரே, கங்கை சூடிய திருமுடியை உடையவரே, எங்களது ஐயுறவைப் போக்கியருளுக.

மேல்

(999)
அரக்கன் நெரிதர, இரக்கம் எய்தினீர்!.

பரக்கும் மிழலையீர்! கரக்கை தவிர்மினே!.

இராவணன் கயிலை மலையின் கீழ் அகப்பட்டு நெரிய இரக்கம் காட்டியருளியவரே, எங்கும் பரவிய புகழ் உடைய திருவீழிமிழலையில் உறைபவரே, எமக்கு அளிக்கும் காசில் உள்ள குறையைப் போக்கியருளுக.

மேல்

(1000)
அயனும் மாலும் ஆய் முயலும் முடியினீர்!.

இயலும் மிழலையீர்! பயனும் அருளுமே!.

நான்முகனும் திருமாலும் அடிமுடி காண முயலும் பேருருவம் கொண்டருளியவரே, எல்லோரும் எளிதில் வழிபட இயலுமாறு திருவீழிமிழலையில் எழுந்தருளியவரே, எமக்கு வீட்டின் பத்தையும் அருளுவீராக.

மேல்

(1001)
பறிகொள் தலையினார் அறிவது அறிகிலார்;

வெறி கொள் மிழலையீர்! பிரிவு அது அரியதே.

ஒன்றொன்றாக மயிர் பறித்த தலையினை உடைய சமணர்கள் அறிய வேண்டுபவராகிய உம்மை அறியாது வாழ்கின்றனர். மணம் கமழும் திருவீழிமிழலையில் உறைபவரே, அடியேங்கள் உம்மைப் பிரிந்து வாழ்தல் இயலாது.

மேல்

(1002)
காழி மா நகர் வாழி சம்பந்தன்

வீழிமிழலைமேல்-தாழும் மொழிகளே.

இத்திருப்பதிகம் சீகாழிப் பதியாகிய பெரிய நகருள் தோன்றி வாழும் ஞானசம்பந்தன் திருவீழிமிழலை இறைவர் மேல் தாழ்ந்து பணிந்து போற்றிய மொழிகளைக் கொண்டதாகும்.

முத்திப் பேறு நல்கவும் ,சேமத்தை அருளவும் ,சிவப் பணி கொண்டு அருளவும், ஐயுறவைப் போக்கி அருளவும் சிவபெருமானிடம் வேண்டுதல்  வைக்கும்  பதிகம்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(93)
திருமுதுகுன்றம் - திருஇருக்குக்குறள்

(1003)
நின்று மலர் தூவி, இன்று முதுகுன்றை

நன்றும் ஏத்துவீர்க்கு என்றும் இன்பமே.

இன்றே திருமுதுகுன்றம் சென்று, அங்குள்ள இறைவரை மலரால் அருச்சித்து நின்று நல்லமுறையில் துதிப்பீராயின் உமக்கு எக்காலத்தும் இன்பம் உளதாம்.

மேல்

(1004)
அத்தன் முதுகுன்றை, பத்தி ஆகி, நீர்,

நித்தம் ஏத்துவீர்க்கு உய்த்தல் செல்வமே.

நீர் திருமுதுகுன்றத்துத் தலைவனாய் விளங்கும் இறைவன்மீது பக்தி செலுத்தி நாள்தோறும் வழிபட்டு வருவீராயின் உமக்குச் செல்வம் பெருகும்.

மேல்

(1005)
ஐயன் முதுகுன்றை, பொய்கள் கெட நின்று,

கைகள் கூப்புவீர்! வையம் உமது ஆமே.

திருமுதுகுன்றத்துள் விளங்கும் தலைவனாகிய சிவபிரானை நீர் பலவகையான பொய்கள் இன்றி மெய்மையோடு நின்று கைகளைக் கூப்பி வழிபடுவீர்களாயின் உலகம் உம்முடையதாகும்.

மேல்

(1006)
ஈசன் முதுகுன்றை நேசம் ஆகி நீர்

வாசமலர் தூவ, பாசவினை போமே.

திருமுதுகுன்றத்து ஈசனை நீர் அன்போடு மணம் பொருந்திய மலர்களால் அருச்சித்துவரின் உம் பாசங்களும் அவற்றால் விளைந்த வினைகளும் நீங்கும்.

மேல்

(1007)
மணி ஆர் முதுகுன்றைப் பணிவார் அவர் கண்டீர்,

பிணி ஆயின கெட்டுத் தணிவார், உலகிலே.

அழகிய திருமுதுகுன்றத்து இறைவரைப் பணிபவர்கள், பிணிகளிலிருந்து விடுபட்டு உலகில் அமைதியோடு வாழ்வார்கள்.

மேல்

(1008)
“மொய் ஆர் முதுகுன்றில் ஐயா!” என வல்லார்

பொய்யார், இரவோர்க்கு; செய்யாள் அணியாளே.

அன்பர்கள் நெருங்கித் திரண்டுள்ள திருமுதுகுன்றத்து இறைவனை, நீர், ஐயா என அன்போடு அழைத்துத் துதிக்க வல்லீர்களாயின் இரப்பவர்க்கு இல்லை என்னாத நிலையில் திருமகள் நிறை செல்வத்தோடு உமக்கு அணியள் ஆவாள்.

மேல்

(1009)
விடையான் முதுகுன்றை இடையாது ஏத்துவார்

படைஆயின சூழ, உடையார், உலகமே.

திருமுதுகுன்றத்து விடை ஊர்தியை உடைய சிவபிரானை இடையீடுபடாது ஏத்துகின்றவர், படைகள் பல சூழ உலகத்தை ஆட்சிசெய்யும் உயர்வை உடையவராவர்.

மேல்

(1010)
பத்துத்தலையோனைக் கத்த, விரல் ஊன்றும்

அத்தன் முதுகுன்றை மொய்த்துப் பணிமினே!.

பத்துத் தலைகளை உடைய இராவணனை அவன் கதறி அழுமாறு கால் விரலை ஊன்றி அடர்த்த திருமுதுகுன்றத்துத் தலைவனாகிய சிவபிரானை நெருங்கிச் சென்று பணிவீராக.

மேல்

(1011)
இருவர் அறியாத ஒருவன் முதுகுன்றை

உருகி நினைவார்கள் பெருகி நிகழ்வோரே.

திருமால் பிரமர்களாகிய இருவரும் அறியவொண்ணாத திருமுதுகுன்றத்தில் விளங்கும் பெருமானை மனம் உருகி நினைப்பவர் பெருக்கத்தோடு வாழ்வர்.

மேல்

(1012)
தேரர் அமணரும் சேரும் வகை இல்லான்,

நேர் இல் முதுகுன்றை நீர் நின்று உள்குமே!.

புத்தர் சமணர் ஆகியோர்க்குத் தன்னை வந்தடையும் புண்ணியத்தை அளிக்காத சிவபெருமானுடைய திருமுதுகுன்றத்தை வாய்ப்பு நேரின் நீர் நின்று உள்குவீராக.

மேல்

(1013)
நின்று முதுகுன்றை நன்று சம்பந்தன்

ஒன்றும் வல்லார் என்றும் உயர்வோரே.

திருமுதுகுன்றம் சென்று நின்று பெருமை உடையவனாகிய ஞானசம்பந்தன் ஒன்றி உரைத்த,

இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர் எக்காலத்தும் உயர்வு பெறுவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(94)
திருஆலவாய் - திருஇருக்குக்குறள்

(1014)
நீலமாமிடற்று ஆலவாயிலான்

பால் அது ஆயினார் ஞாலம் ஆள்வரே.

நீலநிறம் பொருந்திய கண்டத்தினை உடைய திரு ஆலவாய் இறைவனைச் சென்று தொழுது மனத்தால் அவன் அருகில் இருப்பதாக உணர்பவர்கள், இவ்வுலகை ஆள்வர்.

மேல்

(1015)
ஞாலம் ஏழும் ஆம் ஆலவாயிலார்

சீலமே சொலீர், காலன் வீடவே!.

எமபயம் இன்றி வாழ, ஏழுலகங்களிலும் எழுந்தருளியிருக்கும் ஆலவாய் இறைவனது மெய்ப்புகழையே உரையால் போற்றி வருவீர்களாக.

மேல்

(1016)
ஆலநீழலார், ஆலவாயிலார்,

காலகாலனார் பால் அது ஆமினே!.

கல்லால மர நிழலில் வீற்றிருப்பவரும், காலனுக்குக் காலனாய் அவனை அழித்தருளிய பெருவீரரும் ஆகிய ஆலவாய் இறைவரை மனத்தால் அணுகியிருப்பீர்களாக.

மேல்

(1017)
அந்தம் இல் புகழ் எந்தை ஆலவாய்

பந்தி ஆர் கழல் சிந்தை செய்ம்மினே!.

ஆலவாய்க் கோயிலிலுள்ள எந்தையாகிய சிவபெருமானுடைய அழிவில்லாத புகழுக்கு இருப்பிடமான திருவடிகளை மனங்கொள்ளுங்கள்.

மேல்

(1018)
ஆடல் ஏற்றினான் கூடல் ஆலவாய்

பாடியே, மனம் நாடி, வாழ்மினே!.

வெற்றியோடு கூடிய ஆனேற்றினானது நான்மாடக்கூடல் என்னும் ஆலவாயின் புகழைப் பாடி மனத்தால் அவ்விறைவனையே நாடி வாழ்வீர்களாக.

மேல்

(1019)
அண்ணல் ஆலவாய் நண்ணினான் தனை

எண்ணியே தொழ, திண்ணம் இன்பமே.

தலைமையாளனும் ஆலவாய் என்னும் மதுரைப் பதியின் கோயிலைப் பொருந்தியிருப்பவனுமாகிய சோமசுந்தரப் பெருமானையே எண்ணித் தொழுதுவரின் இன்பம் பெறுவது திண்ணமாகும்.

மேல்

(1020)
அம் பொன்-ஆலவாய் நம்பனார் கழல்

நம்பி வாழ்பவர் துன்பம் வீடுமே.

அழகிய பொன்மயமான ஆலவாய்த் திருக்கோயிலில் விளங்கும் இறைவனுடைய திருவடிகளே நமக்குச் சார்வாகும் என நம்பி வாழ்பவரின் துன்பம் நீங்கும்.

மேல்

(1021)
அரக்கனார் வலி நெருக்கன் ஆலவாய்

க்கும் உள்ளத்தார்க்கு, இரக்கம் உண்மையே.

அரக்கனாகிய பெருவலிபடைத்த இராவணனைக் கால் விரலால் நெரித்தருளிய ஆலவாய் அரன் புகழை உரைக்கும் உள்ளத்தார்க்கு அவனது கருணை உளதாகும்.

மேல்

(1022)
அருவன், ஆலவாய் மருவினான்தனை

இருவர் ஏத்த, நின்று உருவம் ஓங்குமே.

அருவனாய் விளங்கும் இறைவன் திருவாலவாயில் திருமால் பிரமர் ஆகிய இருவர் போற்றும் உருவனாய் மருவி ஓங்கி நிற்கின்றான்.

மேல்

(1023)
“ஆரம் நாகம் ஆம் சீரன், ஆலவாய்த்

தேர் அமண் செற்ற வீரன்” என்பரே.

பாம்பாகிய ஆரத்தை அணிந்தவனாய், ஆலவாயில் பெரும் புகழாளனாய் விளங்கும் இறைவன், புத்தரையும் சமணரையும் அழித்த பெருவீரன் ஆவான் என்று அடியவர்கள் அவனைப் புகழ்ந்து போற்றுவார்கள்.

மேல்

(1024)
அடிகள் ஆலவாய், படி கொள் சம்பந்தன்,

முடிவு இல் இன்தமிழ் செடிகள் நீக்குமே.

ஆலவாயில் எழுந்தருளிய அடிகளாகிய இறைவனது திருவருளில் தோய்ந்த ஞானசம்பந்தனின் அழிவற்ற,

இனிய இத்தமிழ் மாலை நமக்கு வரும் வினைகளைப் போக்குவதாகும்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(95)
திருஇடைமருர் - திருஇருக்குக்குறள்

(1025)
தோடு ஓர் காதினன்; பாடு மறையினன்-

காடு பேணி நின்று ஆடும் மருதனே.

திருவிடைமருதூர் இறைவன் தோட்டை, இடத் திருச்செவியில் அணிந்தவனாய் நான்கு வேதங்களைப் பாடுபவனாய், சுடுகாட்டை விரும்பி அதன்கண் நின்று ஆடுகின்றவனாவான்.

மேல்

(1026)
கருதார் புரம் எய்வர்; எருதே இனிது ஊர்வர்;

மருதே இடம் ஆகும்; விருது ஆம், வினை தீர்ப்பே.

தம்மைக் கருதாதவராகிய அசுரர்களின் முப்புரங்களை எய்து அழித்தவரும், எருதை வாகனமாகக் கொண்டு இனிதாக ஊர்பவரும் ஆகிய இறைவர்க்குத் திருவிடை மருதூரே விரும்பி உறையும் இடமாகும். அவரைத் தொழுதால் புகழ் சேரும். வினைகள் தீர்தலை உடையனவாகும்.

மேல்

(1027)
எண்ணும் அடியார்கள் அண்ணல் மருதரை,

பண்ணின் மொழி சொல்ல, விண்ணும் தமது ஆமே.

மனத்தால் எண்ணி வழிபடும் அன்பர்கள் தலைமையாளராய் விளங்கும் மருதவாணரைப் பண்ணிசையோடு அவர்தம் புகழைப் போற்ற, விண்ணுலகமும் அவர்கள் வசமாகும்.

மேல்

(1028)
விரி ஆர் சடை மேனி எரி ஆர் மருதரைத்

தரியாது ஏத்துவார் பெரியார், உலகிலே.

விரிந்த சடைமுடியை உடையவரும், எரிபோன்ற சிவந்த மேனியருமாகிய மருதவாணரைத் தாமதியாது துதிப்பவர் உலகில் பெரியவர் எனப் போற்றப்படுவர்.

மேல்

(1029)
பந்த விடை ஏறும் எந்தை மருதரைச்

சிந்தை செய்பவர் புந்தி நல்லரே.

கட்டுத்தறியில் கட்டத்தக்க விடையை ஊர்ந்து வரும் எந்தையாராகிய மருதவாணரை மனத்தால் தியானிப்பவர்கள் அறிவால் மேம்பட்டவராவர்.

மேல்

(1030)
கழலும் சிலம்பு ஆர்க்கும் எழில் ஆர் மருதரைத்

தொழலே பேணுவார்க்கு உழலும் வினை போமே.

ஒரு காலில் கழலும், பிறிதொரு காலில் சிலம்பும் ஒலிக்கும் உமைபாகராகிய அழகிய மருதவாணரை விரும்பித் தொழுவதை நியமமாகக் கொண்டவர்க்கு வருத்துதற்கு உரிய வினைகள் துன்புறுத்தா; அகலும்.

மேல்

(1031)
பிறை ஆர் சடை அண்ணல் மறை ஆர் மருதரை

நிறையால் நினைபவர் குறையார், இன்பமே.

பிறை பொருந்திய சடைமுடியினை உடைய தலைமையாளரான வேதங்களை அருளிய மருதவாணரை நிறைந்த மனத்தால் நினைப்பவர் இன்பம் குறையப் பெறார்.

மேல்

(1032)
எடுத்தான் புயம் தன்னை அடுத்தார் மருதரைத்

தொடுத்து ஆர்மலர் சூட்ட, விடுத்தார், வேட்கையே.

கயிலை மலையை எடுத்த இராவணனின் தோள்களை நெரித்த மருதவாணருக்குச் சூட்டுவதற்கு மலர் தொடுத்தவர்கள், பிறவிக்குக் காரணமான ஆசையை விடுத்தவர்களாவர்.

மேல்

(1033)
இருவர்க்கு எரி ஆய உருவம் மருதரைப்

பரவி ஏத்துவார் மருவி வாழ்வரே.

திருமால் பிரமர் அடிமுடி அறிய முடியாதவாறு எரி உருவமாய் நின்ற மருதவாணரைப் புகழ்ந்து ஏத்தித் துதிப்பவர் எல்லா நலன்களோடும் மருவி வாழும் வாழ்க்கையைப் பெறுவர்.

மேல்

(1034)
நின்று உண் சமண், தேரர், என்றும் மருதரை

அன்றி சொல்ல, நன்று மொழியாரே.

நின்றுண்ணும் சமணரும், புத்தரும் எக்காலத்தும் இடைமருது இறைவனாகிய சிவபெருமானை மாறுபட்ட உரைகளால் கூறுவதால் அவர் எக்காலத்தும் நல்லனவே கூறார்.

மேல்

(1035)
கருது சம்பந்தன், மருதர் அடி பாடி,

பெரிதும் தமிழ் சொல்ல, பொருத வினை போமே.

இறைவன் திருவருளையே கருதும் ஞானசம்பந்தன் மருதவாணரின் திருவடிகளைப் பெரிதும் போற்றிப் பாடிய,

இத்தமிழ் மாலையை ஓதுபவர்க்குத் துன்புறுத்திய வினைகள் போகும்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(96)
திருஅன்னியூர் - திருஇருக்குக்குறள்

(1036)
மன்னி ஊர் இறை; சென்னியார், பிறை

அன்னியூர் அமர் மன்னுசோதியே.

திருஅன்னியூரில் எழுந்தருளிய நிலைபெற்ற ஒளி வடிவினனாகிய சிவன், பிறை சூடிய திருமுடியோடு பல தலங்களிலும் எழுந்தருளியிருந்து, ஆங்காங்குள்ள மக்கட்குத் தலைவனாய் விளங்குபவன்.

மேல்

(1037)
பழகும் தொண்டர், வம்! அழகன், அன்னியூர்க்

குழகன், சேவடி தொழுது வாழ்மினே!.

இறைவன்பால் மனம் ஒன்றிப் பழகும் தொண்டர்களே வாருங்கள். அன்னியூரில் அழகனாகவும் இளமைத் தன்மை உடையவனாகவும் எழுந்தருளியுள்ள சிவபிரானின் செம்மையான திருவடிகளைத் தொழுது வாழ்வீர்களாக.

மேல்

(1038)
நீதி பேணுவீர்! ஆதி, அன்னியூர்ச்

சோதி, நாமமே ஓதி உய்ம்மினே!.

நீதியைப் போற்றி அதன்படி வாழ்கின்றவர்களே. அன்னியூரில் விளங்கும் ஒளி வடிவினனாகிய சிவபிரான் திருநாமங்களையே ஓதி உய்வீர்களாக.

மேல்

(1039)
பத்தர் ஆயினீர்! அத்தர், அன்னியூர்ச்

சித்தர், தாள் தொழ முத்தர் ஆவரே.

இறைவனிடம் பத்திமை பூண்டவர்களே, தலைமையாளனாய் அன்னியூரில் விளங்கும் ஞானவடிவினனின் திருவடிகளைத் தொழுதலால் வினை மாசுகளிலிருந்து விடுபட்டவராவீர்.

மேல்

(1040)
நிறைவு வேண்டுவீர்! அறவன், அன்னியூர்

மறை உளான், கழற்கு உறவு செய்ம்மினே!.

மனநிறைவுடன் வாழ விரும்புகின்றவர்களே, அற வடிவினனாய் நான்கு வேதங்களிலும் பரம்பொருளாகக் கூறப்பட்டுள்ள அன்னியூர்ப் பெருமான் திருவடிகளுக்கு அன்பு செய்து அவனோடு உறவு கொள்வீர்களாக.

மேல்

(1041)
இன்பம் வேண்டுவீர்! “அன்பன், அன்னியூர்

நன்பொன்” என்னுமின், உம்பர் ஆகவே!.

உலக வாழ்க்கையில் இன்பங்களை எய்த விரும்பும் அடியவர்களே, அன்பனாக விளங்கும் அன்னியூர் இறைவனை நல்ல பொன்னே என்று கூறுமின், தேவர்களாகலாம்.

மேல்

(1042)
“அந்தணாளர்தம் தந்தை! அன்னியூர்

எந்தையே!” என, பந்தம் நீங்குமே.

அந்தணர்களின் தந்தையாக விளங்கும் அன்னியூர் இறைவனை எந்தையே என அழைக்க மலமாயைகள் நீங்கும்.

மேல்

(1043)
தூர்த்தனைச் செற்ற தீர்த்தன் அன்னியூர்

ஆத்தமா அடைந்து, ஏத்தி வாழ்மினே!.

காமாந்தகனாகிய இராவணனைத் தண்டித்த புனிதனாகிய அன்னியூர் இறைவனை அடைந்து அன்புக்குரியவனாக அவனைப் போற்றி வாழுங்கள்.

மேல்

(1044)
இருவர் நாடிய அரவன் அன்னியூர்

பரவுவார், விண்ணுக்கு ஒருவர் ஆவரே.

திருமால் பிரமர்களால் அடிமுடி தேடப்பட்ட அரவை அணிகலனாகப் பூண்ட அன்னியூர் இறைவனைப் பரவித் துதிப்பவர் தேவருலகில் இந்திரராவர்.

மேல்

(1045)
குண்டர் தேரருக்கு அண்டன் அன்னியூர்த்

தொண்டு உளார் வினை விண்டு போகுமே.

சமணர்களாலும் புத்தர்களாலும் அணுக முடியாதவனாகிய அன்னியூர் இறைவனுக்குத் தொண்டு செய்பவர்களின் வினைகள் விண்டு போகும்.

மேல்

(1046)
பூந்தராய்ப் பந்தன் ஆய்ந்த பாடலால்,

வேந்தன் அன்னியூர் சேர்ந்து, வாழ்மினே!.

பூந்தராய் என்னும் சீகாழிப் பதியில் தோன்றிய ,

ஞானசம்பந்தன் ஆய்ந்து சொல்லிய பாடல்களைப் பாடி அன்னியூர் வேந்தனாகிய சிவபிரானைச் சேர்ந்து வாழ்வீர்களாக.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(97)
திருப்புறவம் - குறிஞ்சி

(1047)
எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று எரிசெய்த

மை ஆர் கண்டன், மாது உமை வைகும் திருமேனிச்

செய்யான், வெண்நீறு அணிவான், திகழ் பொன் பதிபோலும்

பொய்யா நாவின் அந்தணர் வாழும் புறவமே.

பொய் கூறாத நாவினை உடைய அந்தணர்கள் வாழும் திருப்புறவம் என்னும் சீகாழிப்பதி, இளையாத வெற்றியை உடைய அசுரர்களின் முப்புரங்களை எரித்த நீலகண்டன், உமையம்மையை ஒருகூறாகக் கொண்டு எழுந்தருளும், செய்ய திருமேனியனாய் வெண்ணீறு அணிந்தவனாய் விளங்கும் அழகிய பதியாகும்.

மேல்

(1048)
“மாது ஒருபாலும் மால் ஒருபாலும் மகிழ்கின்ற

நாதன்” என்று ஏத்தும் நம்பான் வைகும் நகர்போலும்

மாதவி மேய வண்டு இசை பாட, மயில் ஆட,

போது அலர் செம்பொன் புன்னை கொடுக்கும் புறவமே.

குருக்கத்தியில் மேவிய வண்டுகள் இசைபாடவும் மயில்கள் ஆடவும், அவற்றிற்குப் பரிசிலாகப் புன்னை மரங்கள் விரிந்த மலர்களின் மகரந்தங்களைப் பொன்னாக அளிக்கும் இயற்கைவளம் சான்ற புறவம் என்னும் பதி, உமையம்மையை ஒரு பாகமாகவும் திருமாலை ஒரு பாகமாகவும் கொண்டு மகிழ்கின்ற நம் மேலான தலைவன் வைகும் நகராகும்.

மேல்

(1049)
வற்றா நதியும் மதியும் பொதியும் சடைமேலே

புற்று ஆடு அரவின் படம் ஆடவும், இப் புவனிக்கு ஓர்

பற்று ஆய், “இடுமின், பலி!” என்று அடைவார் பதிபோலும்

பொன்தாமரையின் பொய்கை நிலாவும் புறவமே.

என்றும் நீர் வற்றாத கங்கையும், பிறையும் பொருந்திய சடையின்மேல் புற்றை இடமாகக் கொண்ட பாம்பு படத்துடன் ஆட, இவ்வுலகிற்கு ஒரு பற்றுக்கோடாகி, எனக்குப் பலி இடுமின் என்று பல ஊர்களுக்கும் செல்லும் சிவபிரானது பதி, அழகிய தாமரைகள் மலர்ந்துள்ள பொய்கை விளங்கும் புறவம் என்னும் பதியாகும்.

மேல்

(1050)
துன்னார்புரமும் பிரமன் சிரமும் துணிசெய்து,

மின் ஆர் சடைமேல் அரவும் மதியும் விளையாட,

பல்-நாள், “இடுமின், பலி!” என்று அடைவார் பதிபோலும்

பொன் ஆர் புரிநூல் அந்தணர் வாழும் புறவமே.

பகைவர்களாகிய திரிபுர அசுரர்களின் முப்புரங்களையும், பிரமனின் தலைகளில் ஒன்றையும் அழித்து, மின்னல் போல் ஒளி விடும் சடைமுடி மேல் பாம்பும் மதியும் பகை நீங்கி விளையாடுமாறு சூடிப் பல நாள்களும் சென்று பலியிடுமின் என்று கூறித் திரிவானாகிய சிவபிரானது பதி, பொன்னாலியன்ற முப்புரி நூலை அணிந்த அந்தணர்கள் வாழும் புறவமாகும்.

மேல்

(1051)
“தேவா! அரனே! சரண்!” என்று இமையோர் திசைதோறும்,

“காவாய்!” என்று வந்து அடைய, கார்விடம் உண்டு,

பா ஆர் மறையும் பயில்வோர் உறையும் பதிபோலும்

பூ ஆர் கோலச் சோலை சுலாவும் புறவமே.

பாற்கடலைக் கடைந்தபோது எழுந்த விடத்தின் கொடுமை தாங்காது, தேவர்கள் திசைதோறும் சூழ்ந்து நின்று ‘தேவனே! அரனே! உனக்கு அடைக்கலம் எங்களைக் காவாய்‘ எனச் சரண் அடைய, அக்கடலில் தோன்றிய கரிய விடத்தை உண்டு, பாடல்களாக அமைந்த வேதங்களைப் பயிலும் சிவபெருமான் வாழும் பதி, மலர்கள் நிறைந்த அழகிய சோலைகள் சூழ்ந்த புறவம் என்னும் பதியாகும்.

மேல்

(1052)
‘கற்று அறிவு எய்தி, காமன் முன் ஆகும் உகவு எல்லாம்

அற்று, “அரனே! நின் அடி சரண்!” என்னும் அடியோர்க்குப்

பற்று அது ஆய பாசுபதன் சேர் பதி’ என்பர்

பொந்திகழ் மாடத்து ஒளிகள் நிலாவும் புறவமே.

மெய்ந்நூல்களைக் கற்று, அதனால் நல்லறிவும் பெற்று, காமனாகிய மன்மதனின் குறிப்பினால் ஆகும் காமவிருப்பமெல்லாம் அற்று, ‘அரனே! நின் திருவடிகளே சரண்‘ என்று கூறும் அடியவர்கட்குப் பற்றுக்கோடாய்ப் பாசுபதன் எழுந்தருளிய பதி, பொன் நிறைந்து விளங்கும் மாடவீடுகளின் ஒளி சூழ்ந்த புறவம் என்னும் பதியாகும் என்பர்.

மேல்

(1053)
“எண் திசையோர் அஞ்சிடு வகை கார் சேர் வரை என்ன,

கொண்டு எழு கோல முகில் போல், பெரிய கரிதன்னைப்

பண்டு உரிசெய்தோன் பாவனை செய்யும் பதி” என்பர்

புண்டரிகத்தோன் போல் மறையோர் சேர் புறவமே.

எண்திசையில் உள்ளாரும் அஞ்சிடுமாறு கரிய மலைபோலவும், நீரை முகந்து கொண்டெழுந்த அழகிய கரிய மேகம் போலவும் வந்த பெரிய களிற்று யானையை முற்காலத்தில் கொன்று அதன் தோலை உரித்துப் போர்த்த சிவபிரான் விரும்பியிருக்கும் பதி,தாமரை மலர் மேல் உறையும் நான்முகன் போல வேதங்களில் வல்ல அந்தணர்கள் வாழும் புறவமாகும்.

மேல்

(1054)
பரக்கும் தொல் சீர்த் தேவர்கள் சேனைப்பௌவத்தைத்

துரக்கும் செந்தீப் போல் அமர் செய்யும் தொழில் மேவும்

அரக்கன் திண்தோள் அழிவித்தான், அக் காலத்தில்;

புரக்கும் வேந்தன்; சேர்தரு மூதூ புறவமே.

எங்கும் பரவிய பழமையான புகழை உடைய தேவர்களின் கடல் போன்ற படையை, ஊழித் தீப் போன்று அழிக்கும் தொழிலில் வல்ல இராவணனின் வலிய தோள் வலியை அக்காலத்தில் அழித்தருளி, அனைத்து உலகங்களையும் புரந்தருளும் வேந்தனாக விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய பழமையான ஊர் புறவமாகும்.

மேல்

(1055)
“மீத் திகழ் அண்டம் தந்தயனோடு மிகு மாலும்,

மூர்த்தியை நாடிக் காண ஒணாது, முயல் விட்டு, ஆங்கு

ஏத்த, வெளிப்பாடு எய்தியவன் தன் இடம்” என்பர்

பூத் திகழ் சோலைத் தென்றல் உலாவும் புறவமே.

மேலானதாக விளங்கும் உலகங்களைப் படைத்த பிரமனும், புகழால் மேம்பட்ட திருமாலும் அழலுருவாய் வெளிப்பட்ட சிவமூர்த்தியின் அடிமுடிகளைக்காண இயலாது தமது முயற்சியைக் கைவிட்டு ஏத்த, அவர்கட்குக் காட்சி தந்தருளிய சிவபிரானது இடம், மலர்கள் நிறைந்த சோலைகளில் தென்றல் வந்து உலாவும் புறவமாகும்.

மேல்

(1056)
வையகம், நீர், தீ, வாயுவும், விண்ணும், முதல் ஆனான்;

மெய் அல தேரர், “உண்டு, இலை” என்றே நின்றே தம்

கையினில் உண்போர், காண ஒணாதான்; நகர் என்பர்

பொய் அகம் இல்லாப் பூசுரர் வாழும் புறவமே.

மண், நீர், தீ, காற்று, விண் ஆகிய ஐம்பூதங்களில் நிறைந்து, அவற்றின் முதலாக விளங்கும் இறைவனாய், உண்மையல்லாதவற்றைப் பேசி உண்டு இல்லை என்ற உரைகளால் அத்தி நாத்தி எனக் கூறிக் கொண்டு தம் கைகளில் உணவேற்று உண்போராய சமணரும், புத்தரும் காண ஒண்ணாத சிவபிரானின் நகர், நெஞ்சிலும் பொய்யறியாத பூசுரர் வாழும் புறவமாகும்.

மேல்

(1057)
பொன் இயல் மாடப் புரிசை நிலாவும் புறவத்து

மன்னிய ஈசன் சேவடி நாளும் பணிகின்ற

தன் இயல்பு இல்லாச் சண்பையர்கோன்-சீர்ச் சம்பந்தன்-

இன் இசைஈர்-ஐந்து ஏத்த வல்லோர்கட்கு இடர் போமே.

பொன்னால் இயன்ற மாடங்களின் மதில்கள் சூழ்ந்த, புறவம் என்னும் பதியில் நிலைபெற்று விளங்கும் சிவபிரானின் சேவடிகளை, நாள்தோறும் பணிந்து, சீவபோதம் அற்றுச் சிவபோதம் உடையவனாய்ப் போற்றும் சண்பையர் தலைவனாகிய புகழ்மிக்க ஞானசம்பந்தன், இன்னிசையோடு பாடிய ,

இப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடி ஏத்தவல்லவர்கட்கு, இடர் போகும்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(98)
திருச்சிராப்பள்ளி - குறிஞ்சி

(1058)
நன்று உடையானை, தீயது இலானை, நரை-வெள் ஏறு

ஒன்று உடையானை, உமை ஒரு பாகம் உடையானை,

சென்று அடையாத திரு உடையானை, சிராப்பள்ளிக்-

குன்று உடையானை, கூற, என் உள்ளம் குளிருமே.

நன்மைகளையே தனக்கு உடைமையாகக் கொண்டவனை, தீயது ஒன்றேனும் இல்லாதவனை, மிக வெண்மையான ஆனேற்றைத் தனக்கு ஊர்தியாகக் கொண்டவனை, பார்வதியை ஒரு பாகமாக உடையவனை, அவனது அருளாலன்றிச் சென்றடைய முடியாத வீடு பேறாகிய செல்வத்தை உடையவனை, சிராப்பள்ளிக் குன்றில் எழுந்தருளியுள்ளவனைப் போற்ற என் உள்ளம் குளிரும்.

மேல்

(1059)
கைம் மகவு ஏந்திக் கடுவனொடு ஊடிக் கழை பாய்வான்,

செம்முக மந்தி கருவரை ஏறும் சிராப்பள்ளி,

வெம் முக வேழத்து ஈர் உரி போர்த்த விகிர்தா! நீ

பைம்முக நாகம் மதி உடன் வைத்தல் பழி அன்றே?.

சிவந்த முகம் உடைய பெண் குரங்கு தனது ஆண் குங்கோடு ஊடல் கொண்டு மூங்கில் புதரில் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளுதற்காகத் தனது குட்டியையும் ஏந்திக் கொண்டு கரிய மலை மீது ஏறும் சிராப்பள்ளியில் எழுந்தருளியவனும் கொடிய முகத்தோடு கூடிய யானையின் தோலைப் போர்த்துள்ள விகிர்தனும் ஆகிய நீ படத்தோடு கூடிய முகத்தினை உடைய நாகப்பாம்பை அதன் பகைப்பொருளாகிய பிறை மதியுடன் முடிமிசை அணிந்திருத்தல் பழிதரும் செயல் அன்றோ?

மேல்

(1060)
மந்தம் முழவம் மழலை ததும்ப, வரை நீழல்

செந் தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளி,

சந்தம் மலர்கள் சடைமேல் உடையார், விடை ஊரும்

எம்தம் அடிகள், அடியார்க்கு அல்லல் இல்லையே.

மந்த சுருதியினை உடைய முழவு மழலை போல ஒலி செய்ய, மலை அடிவாரத்தில் செவ்விய தண்ணிய தோட்டங்களையும் சுனைகளையும் கொண்டுள்ள சிராப்பள்ளியில் எழுந்தருளிய அழகிய மலர்களைச் சடைமேற் சூடியவரும், விடையேற்றை ஊர்ந்து வருபவரும் ஆகிய எம் தலைவராகிய செல்வரை வணங்கும் அடியார்களுக்கு அல்லல் இல்லை.

மேல்

(1061)
துறை மல்கு சாரல், சுனை மல்கு நீலத்து இடை வைகி,

சிறை மல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளி,

கறை மல்கு கண்டன், கனல் எரி ஆடும் கடவுள், எம்

பிறை மல்கு சென்னி உடையவன், எங்கள் பெருமானே!.

பலவாகிய வழிகளைக் கொண்டுள்ள மலையடிவாரத்தில் விளங்கும் சுனைகளில் நெருங்கிப் பூத்த நீல மலர்களில் தங்கிச் சிறகுகளை உடைய வண்டுகளும் தும்பியும் இசைபாடும் சிராப்பள்ளியில் எங்கள் பெருமானாகிய சிவபிரான் கறை பொருந்திய கண்டத்தை உடையவனாய்க் கனலும் எரியைக் கையில் ஏந்தி ஆடும் எம் கடவுளாய்ப் பிறை பொருந்திய சென்னியை உடையவனாய் விளங்கியருள்கின்றான்.

மேல்

(1062)
கொலை வரையாத கொள்கையர் தங்கள் மதில் மூன்றும்

சிலை வரை ஆகச் செற்றனரேனும், சிராப்பள்ளித்

தலைவரை நாளும் தலைவர் அல்லாமை ப்பீர்காள்!.

நிலவரை நீலம் உண்டதும் வெள்ளை நிறம் ஆமே?

பலவாகிய வழிகளைக் கொண்டுள்ள கொல்லும் தொழிலைக் கைவிடாத கொள்கை யினராகிய அவுணர்கள் மும்மதில்களையும் மேரு மலையை வில்லாகக் கொண்டு அழித்தவராயினும் சிராப்பள்ளியின் தலைவராகிய அப்பெருமானாரைத் தலைவரல்லர் என்று நாள் தோறும் கூறிவரும் புறச் சமயிகளே! நிலவுலகில் நீலம் உண்டதுகிலின் நிறத்தை, வெண்மை நிறமாக மாற்றல் இயலாதது போல நீவிர் கொண்ட கொள்கையையும் மாற்றுதல் இயலுவதொன்றோ?

மேல்

(1063)
வெய்ய தண்சாரல் விரி நிற வேங்கைத் தண்போது

செய்யபொன் சேரும் சிராப்பள்ளி மேய செல்வனார்,

தையல் ஒர்பாகம் மகிழ்வர்; நஞ்சு உண்பர்; தலைஓட்டில்

ஐயமும் கொள்வர்; ஆர், இவர் செய்கை அறிவாரே?.

எல்லோராலும் விரும்பத்தக்க குளிர்ந்த மலைச்சாரலில் விரிந்த தண்ணிய பொன்னிறமான வேங்கை மலர்கள்சிவந்த பொன் போன்ற நிறத்தனவாய் உதிரும் சிராப்பள்ளி மலையில் வீற்றிருக்கும் செல்வராகிய சிவபிரான் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்வர். நஞ்சினை உண்பர். தலையோட்டில் பலி ஏற்பர். வேறுபட்ட இவர்தம் செயல்களின் உண்மையை யார் அறியவல்லார்.

மேல்

(1064)
வேய் உயர் சாரல் கருவிரல் ஊகம் விளையாடும்

சேய் உயர் கோயில் சிராப்பள்ளி மேய செல்வனார்,

பேய் உயர் கொள்ளி கைவிளக்கு ஆக, பெருமானார்,

தீ உகந்து ஆடல் திருக்குறிப்பு ஆயிற்று; ஆகாதே!.

கரிய விரல்களை உடைய கருங்குரங்குகள் விளையாடும் மூங்கில் மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ள சாரலை உடைய சிராப்பள்ளியில் நெடிதாக உயர்ந்துள்ள கோயிலில் மேவிய செல்வராகிய பெருமானார் பேய்கள் உயர்த்திப் பிடித்த கொள்ளிகளைக் கைவிளக்காகக் கொண்டு. சுடுகாட்டில் எரியும் தீயில் மகிழ்ந்து நடனம் ஆடும் திருக்குறிப்பு யாதோ? அஃது அவரை அடைய விரும்பும் மகளிர்க்குப் புலனாகாததாக உள்ளதே.

மேல்

(1065)
மலை மல்கு தோளன் வலி கெட ஊன்றி, மலரோன் தன்

தலை கலன் ஆகப் பலி திரிந்து உண்பர்; பழி ஓரார்

சொல வல வேதம் சொல வல கீதம் சொல்லுங்கால்,

சில அலபோலும், சிராப்பள்ளிச் சேடர் செய்கையே!.

மலைபோன்ற திண்மை நிரம்பிய தோள்களை உடைய இராவணனின் வலிமை கெடுமாறு ஊன்றி அழித்துத் தாமரை மலர் மேல் உறைபவனாகிய பிரமனது தலையோட்டை உண்கலனாகக் கொண்டு திரிந்து அவ்வோட்டில் பலியேற்று உண்ணுவதால் தமக்குப் பழி வருமே என்று நினையாதவராய், இசையோடு ஓதத் தக்க வேதங்களையும் கீதங்களையும் அன்பர்கள் ஓதுமிடத்துச் சில பிழைபட்டன என்றாலும் அவற்றையும் ஏற்று மகிழ்பவர் சிராப்பள்ளி மேவிய பெருமைக்குரிய சிவனார். இவர்தம் செய்கைகளின் உட்பொருள் யாதோ?

மேல்

(1066)
அரப்பள்ளியானும் அலர் உறைவானும், அறியாமைக்

கரப்பு உள்ளி, நாடிக் கண்டிலரேனும், கல் சூழ்ந்த

சிரப்பள்ளி மேய வார்சடைச் செல்வர் மனைதோறும்

இரப்பு உள்ளீர்; உம்மை ஏதிலர் கண்டால், இகழாரே?.

பாம்பணையில் பள்ளி கொள்ளும் திருமாலும், தாமரை மலர்மேல் உறையும் பிரமனும் அறியாதவாறு அடிமுடி கரந்துஉயர்ந்து நின்றதை அவர்கள் தேடிக் கண்டிலர் என்ற பெருமை உமக்கு உளதாயினும் மலையகத்துள்ள சிராப்பள்ளியில் எழுந்தருளிய நீண்ட சடையினை உடைய செல்வராகிய சிவபிரானே நீர் வீடுகள் தோறும் சென்று இரப்பதைக் கருதுகின்றீர். அயலவர் கண்டால் இதனை இகழாரோ?

மேல்

(1067)
“நாணாது உடை நீத்தோர்களும், கஞ்சி நாள்காலை

ஊணாப் பகல் உண்டு ஓதுவோர்கள், க்கும் சொல்

பேணாது, உறு சீர் பெறுதும்” என்பீர்! எம்பெருமானார்

சேண் ஆர் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்மினே!.

நாணாது உடையின்றித் திரியும் திகம்பர சமணரும், காலையிலும் நண்பகலிலும் கஞ்சியை மட்டும் உணவாக உண்டு வாழும் புத்தரும் கூறும் பழிப்புரைகளைக் கருதாது நாம் சிறப்படைய வேண்டுமென்று விரும்பும் நீர் எம்பெருமான் உறையும் வானளாவிய கோயிலை உடைய சிராப்பள்ளியைச் சென்று அடைவீர்களாக.

மேல்

(1068)
தேன் நயம் பாடும் சிராப்பள்ளியானை, திரை சூழ்ந்த

கானல் சங்கு ஏறும் கழுமல ஊரில் கவுணியன்-

ஞானசம்பந்தன்-நலம் மிகு பாடல் இவை வல்லார்

வான சம்பந்தத்தவரொடும் மன்னி வாழ்வாரே.

தேனுண்ணும் வண்டுகள் இனிய இசைபாடும் சிராப்பள்ளியில் விளங்கும் இறைவனை, அலைகளிற் பொருந்திவந்த சங்குகள் சோலைகளில் ஏறி உலாவும் கடலை அடுத்துள்ள கழுமல ஊரில் கவுணியர் கோத்திரத்தில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிப் போற்றிய,

நன்மைகள் மிக்க இப்பதிகப் பாடல்களை ஓதவல்லவர் வானுலகிற் சம்பந்தமுடையவராகத் தேவர்களோடு நிலைபெற்று வாழ்வர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(99)
திருக்குற்றாலம் - குறிஞ்சி

(1069)
வம்பு ஆர் குன்றம், நீடு உயர் சாரல், வளர் வேங்கைக்

கொம்பு ஆர் சோலைக் கோல வண்டு யாழ்செய் குற்றாலம்

அம் பால் நெய்யோடு ஆடல் அமர்ந்தான், அலர்கொன்றை

நம்பான், மேய நன்நகர்போலும்; நமரங்காள்!.

நம்மவர்களே! காணுந்தோறும் புதுமையைப் பயக்கும் குன்றங்களையும், நீண்டுயர்ந்த மலைச்சாரலையும், அழகிய வண்டுகள் யாழ் போல் ஒலிக்கும் வளர்ந்த வேங்கை மரங்களின் கிளைகள் அடர்ந்த சோலைகளையும் உடைய குற்றாலம், இனிய பால் நெய் ஆகியவற்றோடு நீராடலை விரும்புபவனாய் விரிந்த கொன்றை மலர்களைச் சூடிய நம்பனாகிய சிவபெருமான் எழுந்தருளிய நன்னகராகும்.

மேல்

(1070)
பொடிகள் பூசித் தொண்டர் பின் செல்ல, புகழ் விம்ம,

கொடிகளோடும் நாள்விழ மல்கு குற்றாலம்

கடி கொள் கொன்றை, கூவிள மாலை, காதல் செய்

அடிகள் மேய நன்நகர் போலும்; அடியீர்காள்!.

அடியவர்களே! திருநீறு பூசித் தொண்டர்கள் பின்னே வரவும், புகழ் சிறக்கவும், கொடிகளை ஏந்தியவர்களாய் அன்பர்கள் முன்னால் செல்லவும், நாள்தோறும் விழாக்கள் நிகழும் நகர் குற்றாலமாகும். இவ்வூர் மணம் கமழும் கொன்றை வில்வமாலை ஆகியவற்றை விரும்பும் அடிகளாகிய சிவபிரானார் எழுந்தருளிய நன்னகராகும்.

மேல்

(1071)
செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்று ஏறி,

கொல்லை முல்லை மெல் அரும்பு ஈனும் குற்றாலம்

வில்லின் ஒல்க மும்மதில் எய்து, வினை போக

நல்கும் நம்பான் நன்நகர்போலும்; நமரங்காள்!.

நம்மவர்களே! செல்வம் நிறைந்ததும், செண்பகம் வேங்கை ஆகிய மரங்களில் தாவிப் படர்ந்து முல்லைக் கொடி அரும்புகளை ஈனுவதும் ஆகிய குற்றாலம், வில்லின் நாண் அசைய அதன்கண் தொடுத்த கணையை விடுத்து மும்மதில்களையும் எய்து அழித்துத் தன்னை வழிபடும் அன்பர்களின் வினை மாசுகள் தீர அருள் புரியும் சிவபிரான் எழுந்தருளியுள்ள நன்னகராகும்.

மேல்

(1072)
பக்கம் வாழைப் பாய் கனியோடு பலவின் தேன்,

கொக்கின் கோட்டுப் பைங்கனி, தூங்கும் குற்றாலம்

அக்கும் பாம்பும் ஆமையும் பூண்டு ஓர் அனல் ஏந்தும்

நக்கன் மேய நன்நகர்போலும்; நமரங்காள்!.

மலையின் பக்கங்களில் எல்லாம் முளைத்த வாழை மரத்தின் கனிகளோடு தேன் ஒழுகும் பலாவின் பழங்களும் மாமரக் கிளைகளில் பழுத்த புத்தம் புதிய நறுங்கனிகளும் ஆய முக்கனிகளும் அவ்வம்மரங்களில் தொங்கும் குற்றால நகர், என்புமாலை, பாம்பு, ஆமை ஆகியவற்றைப் பூண்டு கையில் அனலை ஏந்தி விளங்கும் சிவபிரான் மேவிய நன்னகராகும்.

மேல்

(1073)
மலை ஆர் சாரல் மகஉடன் வந்த மடமந்தி

குலை ஆர் வாழைத் தீம்கனி மாந்தும் குற்றாலம்

இலை ஆர் சூலம் ஏந்திய கையான், எயில் எய்த

சிலையான், மேய நன்நகர்போலும்; சிறு தொண்டீர்!.

இறைவனுக்குக் கைத்தொண்டு புரியுமவர்களே! தன் குட்டிகளோடு மலையின் சாரலுக்கு வந்த மடமந்தி வாழை மரக் குலைகளில் பழுத்த இனிய கனிகளை வயிறு புடைக்கத் தின்னும்குற்றாலம். இலை வடிவமான சூலத்தை ஏந்திய கையினனும், மும்மதில்களையும் எய்து அழித்த வில்லாளனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள நன்னகராகும்.

மேல்

(1074)
மைம்மா நீலக் கண்ணியர் சாரல் மணி வாரி,

கொய்ம் மா ஏனல் உண் கிளி ஓப்பும் குற்றாலம்

கைம்மா வேழத்து ஈர் உரி போர்த்த கடவுள், எம்

பெம்மான், மேய நன் நகர்போலும்; பெரியீர்காள்!.

பெரியீரே! மிகக் கரிய பெரிய நீலமலர் போன்ற கண்களை உடைய குறமகளிர், மலைச்சாரல்களில் விளைந்த தினைப் புனங்களில் கொய்யத்தக்க பருவத்திலுள்ள பெரிய தினைக்கதிர்களை உண்ண வரும் கிளிகளை அங்குள்ள மணிகளை வாரி வீசியோட்டும் குற்றாலம், கைம்மா எனப்பெறும் யானையின் தோலைப் போர்த்த கடவுளும் எம் தலைவனுமாகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள நன்னகராகும்.

மேல்

(1075)
நீலம், நெய்தல், தண்சுனை சூழ்ந்த நீள் சோலை,

கோல மஞ்ஞை பேடையொடு ஆடும் குற்றாலம்

காலன் தன்னைக் காலால் காய்ந்த கடவுள் எம்

சூலபாணி, நன்நகர் போலும்; தொழுவீர்காள்!.

தொழுது வணங்கும் அடியவர்களே! நீலமலரும் நெய்தல் மலரும் பூத்த தண்ணியவான சுனைகள் சூழ்ந்ததும், நீண்டுவளர்ந்துள்ள சோலைகளில் அழகிய ஆண் மயில்கள் தத்தம் பெண் மயில்களோடு களித்தாடுவதுமாகிய குற்றாலம், காலனைக் காலால் கடிந்த கடவுளும் சூலத்தைக் கையில் ஏந்தியவனுமாகிய எம் சிவபிரான் எழுந்தருளியுள்ள நன்னகராகும்.

மேல்

(1076)
போதும் பொன்னும் உந்தி அருவி புடை சூழ,

கூதல் மாரி நுண்துளி தூங்கும் குற்றாலம்

மூதூர் இலங்கை முட்டிய கோனை முறை செய்த

நாதன் மேய நன்நகர் போலும்; நமரங்காள்!.

நம்மவர்களே! அருவிகள் மலர்களையும் பொன்னையும் உந்திவந்து இரு புறங்களிலும் குளிர்ந்த மழை போல் நுண்மையான துளிகளை உதிர்க்கும் குற்றாலம், தன் தகுதிக்கு மேலே செயற்பட்ட இலங்கை நகரின் புகழ் பெருக்கி ஆளும் அரசனாகிய இராவணனைத் தண்டித்த சிவபிரான் எழுந்தருளிய நல்ல நகராகும்.

மேல்

(1077)
அரவின் வாயின் முள் எயிறு எய்ப்ப அரும்பு ஈன்று,

குரவம்பாவை முருகு அமர் சோலைக் குற்றாலம்

பிரமனோடு மால் அறியாத பெருமை எம்

பரமன் மேய நன் நகர்போலும்; பணிவீர்காள்!.

பணியும் தொண்டர்களே! பாம்பின் வாயில் அமைந்த வளைந்த கூரிய பற்களை ஒப்ப அரும்பீன்று குரவ மரங்கள் பூத்துள்ள பாவை போன்ற மலர்களின் மணம் தங்கியுள்ள குற்றாலம், பிரமன் மால் அறியாப் பெரியோனாகிய எம் பரமன் மேவியுள்ள நன்னகராகும்.

மேல்

(1078)
பெருந் தண்சாரல் வாழ் சிறை வண்டு பெடை புல்கி,

குருந்தம் ஏறிச் செவ்வழி பாடும் குற்றாலம்

இருந்து உண் தேரும் நின்று உண் சமணும் எடுத்து ஆர்ப்ப,

அருந் தண் மேய நன்நகர்போலும்; அடியீர்காள்!.

அடியவர்களே! பெரிய தண்ணிய மலைச்சாரலில் வாழ்கின்ற சிறகுகளை உடைய வண்டு தன் பெண் வண்டை விரும்பிக் கூடி குருந்த மரத்தில் ஏறிச் செவ்வழிப் பண்பாடும் குற்றாலம், இருந்துண்ணும் புத்தர்களும், நின்று உண்ணும் சமணர்களும் புறங்கூற அரிய தண்ணியோனாகிய சிவபிரான் எழுந்தருளிய நன்னகராகும்.

மேல்

(1079)
மாட வீதி வருபுனல் காழியார் மன்னன்,

கோடல் ஈன்று கொழு முனை கூம்பும் குற்றாலம்

நாட வல்ல, நல்-தமிழ் ஞானசம்பந்தன்,

பாடல்பத்தும் பாட, நம் பாவம் பறையுமே.

மாடவீதிகளையுடையதும் ஆற்று நீர்வளம் மிக்கதுமான சீகாழிப் பதிக்கு மன்னனும் பலராலும் நாட வல்லவனுமான நற்றமிழ் ஞானசம்பந்தன்,

செங்காந்தள் மலர்களை ஈன்று அவற்றின் கொழுவிய முனையால் கை குவிக்கும் குற்றாலத்து இறைவர் மேல் பாடிய பாடல்கள் பத்தையும் பாடப் பாவம் நீங்கும்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(100)
திருப்பரங்குன்றம் - குறிஞ்சி

(1080)
நீடு அலர் சோதி வெண்பிறையோடு நிரை கொன்றை

சூடலன், அந்திச் சுடர் எரி ஏந்திச் சுடுகானில்

ஆடலன், அம் சொல் அணியிழையாளை ஒருபாகம்

பாடலன், மேய நன்நகர்போலும் பரங்குன்றே.

நீண்டு விரிந்த ஒளிக்கதிர்களை உடைய வெண்பிறையோடு வரிசையாகத் தொடுத்த கொன்றை மாலையைச் சூடுதலை உடையவன். அந்திப் போதில் ஒளியோடு கூடிய எரியை ஏந்திச் சுடுகாட்டில் ஆடுபவன். அழகிய சொற்களைப் பேசும் அணிகலன்களோடு கூடிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு பாடுபவன். அத்தகைய பெருமானது நல்லநகர் பரங்குன்று.

மேல்

(1081)
அங்கம் ஓர் ஆறும் அருமறை நான்கும் அருள் செய்து,

பொங்கு வெண் நூலும் பொடி அணி மார்பில் பொலிவித்து,

திங்களும் பாம்பும் திகழ்சடை வைத்து ஓர் தேன்மொழி

பங்கினன் மேய நன்நகர்போலும் பரங்குன்றே.

நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அருளிச் செய்து, திருநீறு அணிந்த மார்பில் அழகுமிக்க வெண்ணூலைப் பொலிவுற அணிந்து, பிறை பாம்பு ஆகியவற்றை விளங்கும் சடைமீது சூடித் தேன் போன்ற மொழியினளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனாய்ச் சிவபிரான் விளங்கும் நன்னகர் திருப்பரங்குன்றம்.

மேல்

(1082)
நீர் இடம் கொண்ட நிமிர் சடை தன்மேல் நிரை கொன்றை

சீர் இடம் கொண்ட எம் இறைபோலும், சேய்து ஆய

ஓர் உடம்புள்ளே உமை ஒருபாகம் உடன் ஆகி,

பாரிடம் பாட, இனிது உறை கோயில் பரங்குன்றே.

கங்கை சூடிய நிமிர்ந்த சடைமுடிமேல் வரிசையாகத் தொடுத்த கொன்றை மாலையைச் சிறப்புற அணிந்துள்ள எம் இறைவன் மிக உயர்ந்துள்ள தனது திருமேனியின் ஒரு பாகமாகக்கொண்டுள்ள உமையம்மையோடும் உடனாய்ப் பூதகணங்கள் பாட இனிதாக உறையும் கோயில் திருப்பரங்குன்றம்.

மேல்

(1083)
வளர் பூங்கோங்கம் மாதவியோடு மல்லிகைக்

குளிர்பூஞ்சாரல் வண்டு அறை சோலைப் பரங்குன்றம்,

தளிர் போல் மேனித் தையல் நல்லாளோடு ஒரு பாகம்,

நளிர் பூங்கொன்றை சூடினன் மேய நகர்தானே.

வளர்ந்துள்ள கோங்கு முதலிய மரங்களும், மணம் தரும் மாதவி முதலிய செடிகளும், மல்லிகை முதலிய கொடிகளும் நிறைந்துள்ள வண்டுகள் முரலும் சோலைகள் சூழ்ந்த சாரலை உடைய திருப்பரங்குன்றம், ஒரு பாகமாகிய தளிர் போன்ற மேனியளாகிய தையல் நல்லாளோடு பொருந்திக் கொத்தாகச் செறிந்த பூக்களைக் கொண்ட கொன்றை மலர் மாலையை அணிந்தவனாகிய சிவபிரானது நகராகும்.

மேல்

(1084)
பொன் இயல் கொன்றை பொறி கிளர் நாகம் புரிசடைத்

துன்னிய சோதி ஆகிய ஈசன், தொல்மறை

பன்னிய பாடல் ஆடலன், மேய பரங்குன்றை

உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை, உறு நோயே.

பொன் போன்ற கொன்றை மலர், பொறிகள் விளங்கும் பாம்பு ஆகியவற்றை அணிந்துள்ள முறுக்கேறிய சடைமுடியோடுபொருந்திய ஒளி வடிவினனாகிய ஈசனும், பழமையான வேதங்களில் அமைந்துள்ள பாடல்களைப் பாடி ஆடுபவனுமாகிய சிவபிரான் எழுந்தருளிய திருப்பரங்குன்றை எண்ணிய சிந்தை உடையவர்க்கு மிக்க நோய்கள் எவையும் இல்லை.

மேல்

(1085)
கடை நெடு மாடக் கடி அரண் மூன்றும் கனல் மூழ்கத்

தொடை நவில்கின்ற வில்லினன், அந்திச் சுடுகானில்

புடை நவில் பூதம் பாட, நின்று ஆடும் பொரு சூலப்-

படை நவில்வான்தன் நன்நகர்போலும் பரங்குன்றே.

வாயிலை உடைய காவல் பொருந்திய அசுரர்களின் மூன்று கோட்டைகளும் கனலில் மூழ்குமாறு அம்பினை எய்த வில்லினனும், அந்திக் காலத்தில் சுடுகாட்டில் அருகில் தன்னொடு பழகிய பூதகணங்கள் பாட நின்றாடுபவனும் போர்க்கருவியாகிய சூலப்படையை ஏந்தியவனுமாகிய சிவபிரானது நன்னகர் திருப்பரங்குன்றம்.

மேல்

(1086)
அயில் உடை வேல் ஓர் அனல் புல்கு கையின் அம்பு ஒன்றால்

எயில் பட எய்த எம் இறை மேய இடம்போலும்

மயில் பெடை புல்கி மா நடம் ஆடும் வளர் சோலை,

பயில் பெடைவண்டு பாடல் அறாத பரங்குன்றே.

கூரிய வேற்படையை உடையவனும், அனல் தழுவிய கை அம்பு ஒன்றால் மூவெயில்களை எய்து அழித்தவனும் ஆகிய எம் இறைவன் மேவிய இடம், ஆண் மயில்கள் பெண் மயில்களைத் தழுவிச் சிறந்த வகையில் நடனம் ஆடும் வளர்ந்த சோலைகளில் பெண் வண்டுகளோடு கூடிய ஆண் வண்டுகள் இடையறாது இசை பாடும் சிறப்புடைய திருப்பரங்குன்றாகும்.

மேல்

(1087)
மைத் தகு மேனி வாள் அரக்கன் தன் மகுடங்கள்-

பத்தின, திண்தோள் இருபதும், செற்றான் பரங்குன்றைச்

சித்தம் அது ஒன்றிச் செய் கழல் உன்னிச் “சிவன்” என்று

நித்தலும் ஏத்த, தொல்வினை நம்மேல் நில்லாவே.

மை எனத்தக்க கரிய மேனியனாகிய வாட் போரில் வல்ல இராவணனின் மகுடம் பொருந்திய பத்துத் தலைகளையும் இருபது தோள்களையும் அடர்த்த சிவபிரான் எழுந்தருளிய திருப்பரங்குன்றை ஒன்றிய மனத்துடன் அங்குள்ள பெருமானின்சேவடிகளைச் சிந்தித்துச் சிவனே என்று நித்தலும் ஏத்தித் துதிக்க, வினைகள் நம் மேல் நில்லா.

மேல்

(1088)
முந்தி இவ் வையம் தாவிய மாலும், மொய் ஒளி

உந்தியில் வந்து இங்கு அருமறை ஈந்த உரவோனும்,

சிந்தையினாலும் தெரிவு அரிது ஆகித் திகழ்சோதி,

பந்து இயல் அம் கை மங்கை ஒர்பங்கன், பரங்குன்றே!.

மாவலியிடம் மூன்றடி மண் கேட்டு அவன் தந்த அளவில் முந்திக் கொண்டு இவ்வுலகை ஓரடியால் அளந்ததுடன் வானுலகங்களையும் ஓரடியால் அளந்த திருமாலும், அத்திருமாலின் ஒளி நிறைந்த உந்திக் கமலத்தில் தோன்றி அரிய மறைகளை ஓதும் நான் முகனும் மனத்தாலும் அறிய முடியாதவாறு பேரொளிப் பிழம்பாய் நின்ற சோதி வடிவினனும், விளையாடும் பந்து தங்கிய அழகிய கையை உடைய மங்கையை ஒரு பாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய தலம் திருப்பரங்குன்று.

மேல்

(1089)
குண்டு ஆய் முற்றும் திரிவார், கூறை மெய் போர்த்து,

மிண்டு ஆய் மிண்டர் பேசிய பேச்சு மெய் அல்ல;

பண்டு ஆல் நீழல் மேவிய ஈசன் பரங்குன்றைத்

தொண்டால் ஏத்த, தொல்வினை நம்மேல் நில்லாவே.

பருத்த உடலினராய் எங்கும் திரியும் சமணரும், ஆடையை உடலிற் போர்த்துத் திரியும் புத்தரும் தர்க்க வாதத்துடன்மிடுக்காய்ப் பேசும் பேச்சுக்கள் எவையும் உண்மையல்ல. முற்காலத்தில் கல்லால மர நிழலில் வீற்றிருந்து அறம் நால்வர்க்கருளிய ஈசனது பரங்குன்றைத் தொண்டு செய்து ஏத்தினால் நம் தொல்வினை நம்மேல் நில்லாது கழியும்.

மேல்

(1090)
தட மலி பொய்கைச் சண்பை மன் ஞானசம்பந்தன்,

படம் மலி நாகம் அரைக்கு அசைத்தான் தன் பரங்குன்றைத்

தொடை மலி பாடல் பத்தும் வல்லார், தம் துயர் போகி,

விடம் மலி கண்டன் அருள் பெறும் தன்மை மிக்கோரே.

பரப்புமிக்க பொய்கையை உடைய சண்பை என்னும் சீகாழிப் பதியின் மன்னனாகிய ஞானசம்பந்தன் படத்தோடு கூடிய பாம்பை இடையில் கட்டிய,

பரங்குன்றிறைவர் மீது பாடிய தொடை நயம் மிக்க பாடல்கள் பத்தையும் ஓதி வழிபட வல்லவர் தம் துன்பம் நீங்கி விடமுண்ட கண்டனாகிய சிவபிரானின் அருள்பெறும் தகுதியில் மேம்பட்டவராவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(101)
திருக்கண்ணார்கோயில் - குறிஞ்சி

(1091)
தண் ஆர் திங்கள், பொங்கு அரவம், தாழ்புனல், சூடி,

பெண் ஆண் ஆய பேர் அருளாளன் பிரியாத

கண்ணார்கோயில் கைதொழுவோர்கட்கு, இடர்பாவம்

நண்ணா ஆகும்; நல்வினை ஆய நணுகுமே.

குளிர்ந்த திங்கள், சினம் மிக்க பாம்பு, ஆகாயத்திலிருந்து தாழ்ந்துவந்த கங்கை ஆகியவற்றை முடியில் சூடி, பெண்ணும் ஆணுமாய கோலத்தில் விளங்கும் பெருங்கருணையாளனாகிய சிவபிரான் பிரியாமல் எழுந்தருளியிருக்கும் திருக்கண்ணார் கோயிலைக் கைகளால் தொழுது வணங்குவாரைத் துன்பங்களும் பாவங்களும் நண்ணா. நல்வினைகளும் அவற்றின் பயனான இன்பங்களும் நண்ணும்.

மேல்

(1092)
கந்து அமர் சந்தும், கார் அகிலும், தண்கதிர் முத்தும்,

வந்து அமர் தெண் நீர் மண்ணி வளம் சேர் வயல் மண்டி,

கொந்து அலர் சோலைக் கோகிலம் ஆட, குளிர் வண்டு

செந்து இசை பாடும் சீர் திகழ் கண்ணார்கோயிலே.

மணம் பொருந்திய சந்தனம், கரிய அகில், குளிர்ந்த ஒளி பொருந்திய முத்து ஆகியன பொருந்தியதாய் வரும் தெளிந்த நீரையுடைய மண்ணியாற்றால் வளம் பெறும் வயல்களால் சூழப்பட்டு, கொத்துக்களாக விரிந்த மலர்களை உடைய சோலைகளில் குயில்கள் ஆடச் செவிகளைக் குளிர்விக்கும் வண்டுகள் செவ்வழிப் பண்பாடும் சீரோடு திகழ்வது, சிவபிரானது திருக்கண்ணார் கோயிலாகும்.

மேல்

(1093)
“பல் இயல் பாணிப் பாரிடம் ஏத்த, படுகானில்

எல்லி நடம் செய் ஈசன் எம்மான் தன் இடம்” என்பர்

கொல்லையின் முல்லை, மல்லிகை, மௌவல், கொடி பின்னி,

கல் இயல் இஞ்சி மஞ்சு அமர் கண்ணார்கோயிலே.

பலவாக இயலும் தாளங்களை இசைத்துப் பூதகணங்கள் ஏத்த, பிணங்கள் இடப்படும் சுடுகாட்டில் நள்ளிராப்போதில் திருநடம்புரியும் ஈசனாகிய எம்பெருமானது இடம், காடுகளில் முல்லையும், மல்லிகையும் காட்டு மல்லிகையோடு பின்னி விளங்குவதும், கல்லால் இயன்ற வானளாவிய மதில்களில் மேகங்கள் அமர்ந்திருப்பதுமாகிய கண்ணார்கோயில் என்னும் தலமாகும் என்பர்.

மேல்

(1094)
தரு வளர் கானம் தங்கிய துங்கப் பெருவேழம்,

மருவளர் கோதை அஞ்ச, உரித்து, மறை நால்வர்க்கு

உரு வளர் ஆல் நீழல் அமர்ந்து ஈங்கு செய்தார்

கரு வளர் கண்ணார் கோயில் அடைந்தோர் கற்றோரே.

மரங்கள் செழித்து வளர்ந்துள்ள காட்டில் வாழ்ந்த உயர்ந்த பெரிய யானையை, மணம் பொருந்திய மலர் மாலையை அணிந்துள்ள உமையம்மை அஞ்சுமாறு உரித்தவரும், அடர்ந்த பசுமை நிறம் பொருந்தி உயர்ந்து வளர்ந்துள்ள கல்லால மர நிழலில் அமர்ந்து வேதங்களின் உட்பொருளைச் சனகாதி முனிவர்க்கு இவ்வுலகத்தே உரை செய்து உணர்த்தியவருமாகிய சிவபெருமான் கருவறையில் தங்கியிருக்கின்ற கோயிலை அடைந்தவர்கள் முழுமையான கல்வியறிவின் பயனை அடைந்தோராவர்.

மேல்

(1095)
மறு மாண் உரு ஆய் மற்று இணை இன்றி, வானோரைச்

செறு மாவலிபால் சென்று, உலகு எல்லாம் அளவிட்ட

குறு மாண் உருவன், தற்குறியாகக் கொண்டாடும்

கறு மா கண்டன் மேயது கண்ணார்கோயிலே.

வஞ்சகம் பொருந்திய மனத்தோடு பெரிய உருவம் உடையவனாய், தனக்கு ஒப்பார் இல்லாதவனாய், தேவர்களைத் துன்புறுத்திய மாவலி என்ற அரக்கர் குல மன்னனிடம் சென்று அவனிடம் மூன்றடி மண் கேட்டு எல்லா உலகங்களையும் தனக்கே உரியவாய் அளவிட்டு அளந்த குள்ளமான பிரமசாரிய வடிவுடைய வாமனன், சிவபெருமானது வடிவாகத் தாபித்து வழிபட, அவனுக்கு அருள் செய்த நீல மறுப் பொருந்திய கண்டனாகிய சிவபிரான் மேவிய ஊர், கண்ணார் கோயிலாகும்.

மேல்

(1096)
விண்ணவருக்கு ஆய் வேலையுள் நஞ்சம் விருப்பு ஆக

உண்ணவனை, தேவர்க்கு அமுது ஈந்து, எவ் உலகிற்கும்

கண்ணவனை, கண்ணார் திகழ் கோயில் கனிதன்னை,

நண்ண வல்லோர்கட்கு இல்லை, நமன்பால் நடலையே.

விண்ணவர்களைக் காத்தற் பொருட்டுக் கடலுள் தோன்றிய நஞ்சினை விருப்போடு உண்டவனை, தேவர்களுக்கு அமுதம் அளித்து எவ்வுலகிற்கும் பற்றுக்கோடாய் விளங்குபவனை, விளக்கமான கண்ணார் கோயிலுள் விளங்கும் கனி போல்பவனை நண்ணிவழிபட வல்லவர்கட்கு, நமனால் வரும் துன்பங்கள் இல்லை.

மேல்

(1097)
“முன் ஒரு காலத்து இந்திரன் உற்ற முனிசாபம்,

பின் ஒரு நாள் அவ் விண்ணவர் ஏத்த, பெயர்வு எய்தி,

தன் அருளால் கண் ஆயிரம் ஈந்தோன் சார்பு” என்பர்

கன்னியர் நாளும் துன் அமர் கண்ணார் கோயிலே.

முன்னொரு காலத்தில் கௌதம முனிவரால் விளைந்த சாபத்தால் உடல் எங்கும் பெண் குறிகளோடு வருந்தித் தன்னை வழிபட்ட இந்திரனுக்குப் பின்னொரு நாளில் தேவர்கள் புகழ்ந்து போற்றுமாறு தண்ணருளோடு அச்சாபத்தைப் போக்கி அவற்றை ஆயிரம் கண்களாகத் தோன்றுமாறு அருள் செய்த சிவபிரான் எழுந்தருளிய இடம், கன்னியர்கள் நாள்தோறும் கூடி வந்து வழிபடும் தலமாகிய கண்ணார் கோயில் என்பர்.

மேல்

(1098)
“பெருக்கு எண்ணாத பேதை அரக்கன் வரைக்கீழால்

நெருக்குண்ணா, தன் நீள்கழல் நெஞ்சில் நினைந்து ஏத்த,

முருக்குண்ணாது ஓர் மொய் கதிர் வாள், தேர், முன் ஈந்த

திருக்கண்ணார்” என்பார் சிவலோகம் சேர்வாரே.

அன்போடு வழிபட்டால் ஆக்கம் பெறலாம் என்று எண்ணாத அறிவிலியாகிய இராவணன் கயிலையைப் பெயர்த்த போது அதன்கீழ் அகப்பட்டு நெருக்குண்டு நல்லறிவு பெற்று விரிந்த புகழை உடைய தன் திருவடிகளை அவன் நெஞ்சினால் நினைந்து போற்றிய அளவில் அவனுக்கு அழிக்கமுடியாத, ஒளியினை உடைய வாளையும் தேரையும் முற்காலத்தில் வழங்கியருளிய சிவபிரான் வீற்றிருக்கும் தலமாகிய திருக்கண்ணார் கோயில் என்று கூறுவார் சிவலோகம் சேர்வர்.

மேல்

(1099)
செங்கமலப் போதில்-திகழ் செல்வன் திருமாலும்

அங்கு அமலக் கண் நோக்க அரும் வண்ணத்து அழல் ஆனான்

தங்கு அமலக் கண்ணார் திகழ்கோயில் தமது உள்ளத்து

அங்கு அமலத்தோடு ஏத்திட, அண்டத்து அமர்வாரே.

செந்தாமரைப் போதில் வீற்றிருக்கும் பிரமனும் திருமாலும் அழகிய தங்கள் கமலம் போன்ற கண்களால் நோக்கிக் காணுதற்கரிய அழலுருவாய் நின்ற பெருமான் தன் கருணை நிறைந்த கமலக் கண்களோடு வீற்றிருக்கும் தலமாகிய கண்ணார் கோயிலை அடைந்து அங்குத் தம் உள்ளத்தில் மலம் நீங்கப் பெற்றவராய் ஏத்திடுவோர் வானுலகில் இனிது உறைபவராவர்.

மேல்

(1100)
தாறு இடு பெண்ணைத் தட்டு உடையாரும், தாம் உண்ணும்

சோறு உடையார், சொல்-தேறன்மின்! வெண்நூல் சேர் மார்பன்,

ஏறு உடையன், பரன், என்பு அணிவான், நீள் சடை மேல் ஓர்

ஆறு உடை அண்ணல், சேர்வது கண்ணார் கோயிலே.

குலைகளை ஈனும் பனை மரத்தின் ஓலைகளால் வேயப்பட்ட தடுக்கை உடையாக உடுத்தித் திரியும் சமணரும், தாம் உண்ணும் சோற்றையே பெரிதெனக் கருதும் புத்தரும் கூறும் அறிவுரைகளைக் கேளாதீர். வெண்மையான பூநூல் அணிந்த மார்பினனும், ஆனேற்றை ஊர்தியாக உடையவனும், மேலானவனும், என்பு மாலை அணிபவனும், நீண்ட சடைமுடி மேல் கங்கையை அணிந்துள்ளவனுமாகிய தலைமைத் தன்மை உடைய சிவபிரான் எழுந்தருளி விளங்கும் தலம் கண்ணார் கோயிலாகும். அதனைச் சென்று தொழுமின்.

மேல்

(1101)
காமரு கண்ணார்கோயில் உளானை, கடல் சூழ்ந்த

பூ மரு சோலைப் பொன் இயல் மாடப் புகலிக் கோன்-

நா மரு தொன்மைத்தன்மை உள் ஞானசம்பந்தன்-

பா மரு பாடல்பத்தும் வல்லார் மேல் பழி போமே.

அழகிய திருக்கண்ணார் கோயில் என்னும் தலத்துள் விளங்கும் சிவபெருமானை, கடல் ஒரு புடைசூழ்ந்ததும், பூக்கள் நிறைந்த சோலைகளை உடையதும் அழகியதாய் அமைந்த மாட வீடுகளைக் கொண்டதுமான புகலிப் பதியின் தலைவனும், பழமையான இறை புகழை, நாவினால் மருவிப் போற்றுபவனும் ஆகிய ஞான சம்பந்தன் பாடிப் பரவிய ,

ஓசையோடு திகழும் இப்பதிகப் பாடல்கள் பத்தினாலும் போற்றி வழிபட வல்லவர்கள், தம் மேல் வரும் பழிகள் நீங்கப் பெறுவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(102)
சீகாழி - குறிஞ்சி

(1102)
“உரவு ஆர் கலையின் கவிதைப் புலவர்க்கு ஒருநாளும்

கரவா வண்கைக் கற்றவர் சேரும் கலிக் காழி

அரவு ஆர் அரையா! அவுணர் புரம் மூன்று எரி செய்த

சரவா!” என்பார் தத்துவஞானத் தலையாரே.

ஞானம் நிறைந்த கலை உணர்வோடு, கவிதைகள் பாடும் புலவர்களுக்கு ஒரு நாளும் கரவாத வள்ளன்மை மிக்க கைகளை உடைய கற்றவர்கள் வாழும் ஒலி மிக்க காழி மாநகரில் விளங்கும் பாம்பை இடையில் அணிந்துள்ள பரமனே! அசுரர்களின் முப்புரங்களையும் எரித்த அம்பை ஏந்தியவனே! என்று போற்றுபவர், தத்துவ ஞானத்தில் தலையானவராவர்.

மேல்

(1103)
“மொய் சேர் வண்டு உண் மும்மதம் நால்வாய் முரண் வேழக்

கை போல் வாழை காய்குலை ஈனும் கலிக் காழி

மை சேர் கண்டத்து எண்தோள் முக்கண் மறையோனே!.

ஐயா!” என்பார்க்கு அல்லல்கள் ஆன அடையாவே.

சூழ்ந்து மொய்த்தலை உடைய வண்டுகள் தங்கி உண்ணும் மும்மதங்களையும், தொங்குகின்ற வாயையும், முரண்படுதலையும் உடைய களிற்று யானையின் கை போல வாழை மரங்கள்காய்களை ஈனும் ஒலி நிறைந்த காழிப் பதியில், நீலகண்டனாய் எட்டுத் தோள்களையும் மூன்று கண்களையும் உடையவனாய் விளங்கும் மறையோனே! தலைவனே! என்பவர்களை அல்லல்கள் அடையா.

மேல்

(1104)
“இளகக் கமலத்து ஈன் கள் இயங்கும் கழி சூழ,

களகப் புரிசைக் கவின் ஆர் சாரும் கலிக் காழி,

அளகத் திரு நன்நுதலி பங்கா! அரனே!” என்று

உளகப் பாடும் அடியார்க்கு உறு நோய் அடையாவே.

முறுக்கவிழ்ந்த தாமரை மலர்கள் பிலிற்றிய தேன் ஓடுகின்ற கழிகள் சூழப் பெற்றதும், சுண்ணாம்பினால் இயன்ற அழகு பொருந்திய மதில்களை உடையதுமான, ஆரவாரம் மிக்க காழிப்பதியில் அழகிய கூந்தலையும் நல்ல நெற்றியையும் உடைய உமையம்மையின் கணவனே, அரனே! என்று மனம் உருகிப்பாடும் அடியவர்களை மிக்க துன்பங்கள் எவையும் அடையா.

மேல்

(1105)
“எண் ஆர் முத்தம் ஈன்று, மரகதம் போல் காய்த்து,

கண் ஆர் கமுகு பவளம் பழுக்கும் கலிக் காழி,

பெண் ஓர் பாகா! பித்தா! பிரானே!” என்பார்க்கு

நண்ணா, வினைகள்; நாள்தொறும் இன்பம் நணுகுமே.

அழகிய கமுக மரங்கள், எண்ணத்தில் நிறையும் அழகிய முத்துக்களைப் போல அரும்பி மரகதம் போலக் காய்த்துப் பவளம் போலப் பழுக்கும் ஆரவாரம் மிக்க காழிப் பதியில் விளங்கும் பெண்ணோர் பாகனே! பித்தனே! பிரானே! என்பவர்களை வினைகள் நண்ணா. நாள்தோறும் அவர்கட்கு இன்பங்கள் வந்து சேரும்.

மேல்

(1106)
“மழை ஆர் சாரல் செம்புனல் வந்து அங்கு அடி வருட,

கழை ஆர் கரும்பு கண்வளர் சோலைக் கலிக் காழி,

உழை ஆர் கரவா! உமையாள் கணவா! ஒளிர்சங்கக்-

குழையா!” என்று கூற வல்லார்கள் குணவோரே.

மேகங்கள் தங்கிய குடதிசை மலைச் சாரல்களிலிருந்து சிவந்த நிறமுடைய தண்ணீர் வந்து அடிகளை வருட, அதனால்மூங்கில் போன்று பருத்த கரும்புகளில் கணுக்கள் வளரும் சோலைகளை உடைய ஒலிமிக்க சீகாழிப் பதியில் எழுந்தருளிய மானேந்திய கையனே, உமையம்மையின் கணவனே! ஒளி பொருந்திய சங்கக் குழையை அணிந்தவனே என்று கூறிப் போற்ற வல்லவர்கள் குணம் மிக்கவராவர்.

மேல்

(1107)
“குறி ஆர் திரைகள் வரைகள் நின்றும் கோட்டாறு

கறி ஆர் கழி சம்பு இரசம் கொடுக்கும் கலிக் காழி,

வெறி ஆர் கொன்றைச் சடையா! விடையா!” என்பாரை

அறியா, வினைகள்; அருநோய், பாவம், அடையாவே.

தாள ஒலிக் குறிப்போடு கூடிய அலைகளை உடைய, மலைகளிலிருந்து வரும் அருவிகள் இரு கரைகளுக்கும் உள்ளடங்கிய ஆறாக அடித்துக் கொண்டு வரும் மிளகின் கொடித் தண்டுகளின் சுவையைத் தன் தண்ணீருக்கு வழங்கும். ஆரவாரம் மிக்க காழிப் பதியில் எழுந்தருளிய மணம் கமழும் கொன்றை மலர் மாலையை அணிந்த சடையினனே! விடையை ஊர்ந்து வருபவனே! என்று கூறுபவரை வினைகள் அறியாது அகலும். அவர்களை அரிய நோய்கள் பாவங்கள் அடைய மாட்டா.

மேல்

(1108)
“உலம் கொள் சங்கத்து ஆர் கலி ஓதத்து உதையுண்டு,

கலங்கள் வந்து கார் வயல் ஏறும் கலிக் காழி,

இலங்கை மன்னன் தன்னை இடர் கண்டு அருள் செய்த

சலம் கொள் சென்னி மன்னா!” என்ன, தவம் ஆமே.

வலிய சங்குகளை உடைய கடலினது வெள்ளத்தால் மோதப்பட்டுத் தோணிகள் வந்து கரிய வயலின்கண் சேரும் ஒலி மிக்க சீகாழியில் எழுந்தருளிய, இலங்கை மன்னன் இராவணனை முதலில் துன்புறுத்திப்பின் அருள் செய்த, கங்கை சூடிய திருமுடியினை உடைய மன்னவனே! என்று சிவபிரானைப் போற்றத்தவம் கைகூடும்.

மேல்

(1109)
“ஆவிக் கமலத்து அன்னம் இயங்கும் கழி சூழ,

காவிக் கண்ணார் மங்கலம் ஓவாக் கலிக் காழி,

வில்-தோன்றும் புத்தேளொடு மாலவன் தானும்

மேவிப் பரவும் அரசே!” என்ன, வினை போமே.

ஓடைகளில் உள்ள தாமரை மலர்களில் வாழும் அன்னங்கள் நடமாடும் உப்பங்கழிகள் சூழ்ந்திருப்பதும், நீலமலர் போன்ற கண்களை உடைய மகளிரது மங்கல ஒலி ஓவாது கேட்பதுமாகிய செழிப்புமிக்க சீகாழியில் தாமரை மலர் மேல் உறையும் பிரமனும் திருமாலும் வந்துபரவும் அரசனாக விளங்கும் பெருமானே என்று சொல்ல நம் வினைகள் போகும்.

மேல்

(1110)
“மலை ஆர் மாடம், நீடு உயர் இஞ்சி, மஞ்சு ஆரும்

கலை ஆர் மதியம் சேர்தரும் அம் தண் கலிக் காழித்

தலைவா! சமணர் சாக்கியர்க்கு என்றும் அறிவு ஒண்ணா

நிலையாய்!” என்ன, தொல்வினை ஆய நில்லாவே.

மலை போலுயர்ந்த மாட வீடுகளின், மேகங்கள் தவழும் நீண்டுயர்ந்த மதில்களில் கலைகள் நிறைந்த மதி வந்து தங்கும் அழகிய குளிர்ந்த ஒலிமிக்க காழிப் பதியின் தலைவனே! சமண புத்தர்களால் என்றும் அறிய ஒண்ணாத நிலையினனே! என்று போற்ற நம் தொல்வினைகள் நில்லா.

மேல்

(1111)
வடி கொள் வாவிச் செங்கழு நீரில் கொங்கு ஆடிக்

கடி கொள் தென்றல் முன்றிலில் வைகும் கலிக் காழி

அடிகள் தம்மை, அந்தம் இல் ஞானசம்பந்தன்

படி கொள் பாடல் வல்லவர் தம்மேல் பழி போமே.

தேன் மணங் கொண்ட வாவியில் மலர்ந்த செங்கழு நீர்ப் பூவின் மகரந்தங்களில் படிந்து அவற்றின் மணத்தைக்கொண்ட தென்றல், முன்றிலில் வந்து உலாவும் ஒலிமிக்க காழிப் பதியில் வீற்றிருக்கும் அடிகளை, முடிவற்ற புகழை உடைய ஞான சம்பந்தன் இவ்வுலகிடைப் போற்றிப் பாடிய,

பாடல்களை பாட வல்லவர்கள் மேல் வரும் பழிகள் போகும்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(103)
திருக்கழுக்குன்றம் - குறிஞ்சி

(1112)
தோடு உடையான் ஒரு காதில்-தூய குழை தாழ

ஏடு உடையான், தலை கலன் ஆக இரந்து உண்ணும்

நாடு உடையான், நள் இருள் ஏமம் நடம் ஆடும்

காடு உடையான், காதல் செய் கோயில் கழுக்குன்றே.

ஒரு காதில் தோடும் பிறிதொரு காதில் தூய குழையும் தாழ்ந்து தொங்கத், தாமரை மலரில் தங்கும் பிரமனின் தலையோட்டை உண்கலனாகக் கொண்டு இரந்துண்ணும் நாடுகளை உடையவன். நள்ளிருள் யாமத்தில் மகிழ்வோடு சுடுகாட்டில் நடனம் ஆடுபவன். அத்தகையோன் விரும்பி உறையும் கோயில் திருக்கழுக் குன்றமே.

மேல்

(1113)
கேண வல்லான்; கேழல் வெண் கொம்பு; குறள் ஆமை

பூண வல்லான்; புரிசடைமேல் ஒர் புனல், கொன்றை,

பேண வல்லான்; பெண் மகள் தன்னை ஒருபாகம்

காண வல்லான்; காதல் செய் கோயில் கழுக்குன்றே.

திருமாலாகிய பன்றியினது வெண்மையான கொம்பை அகழ்ந்து அணிய வல்லவன். வாமனனாக அவதரித்த திருமாலின் கூர்மாவதார ஆமையோட்டினை அணிகலனாகக் கோத்துப் பூண வல்லவன். முறுக்கிய சடைமுடிமேல் ஒப்பற்ற கங்கை, கொன்றை மாலை ஆகியவற்றை விரும்பி அணிபவன். பெண்ணின் நல்லவளான உமையம்மையைத் தன் திருமேனியின் ஒரு பாகமாகக் காணுமாறு செய்தருளியவன். அத்தகையோன் காதல் செய்யும் கோயில் திருக்கழுக்குன்றமே.

மேல்

(1114)
தேன் அகத்து ஆர் வண்டு அது உண்ட திகழ் கொன்றை-

தான் நக, தார்; தண்மதி சூடி, தலைமேல்; ஓர்

வானகத்தார் வையகத்தார்கள் தொழுது ஏத்தும்

கானகத்தான்; காதல் செய் கோயில் கழுக்குன்றே.

தேனை அகத்தே இருந்து வண்டுகள் உண்ட, விளங்கிய கொன்றை மாலையைச் சூடிய தலையில் மதியைச் சூடி, வானகத்தவரும், வையகத்தவரும் தொழுதேத்தும் வண்ணம் சுடுகாட்டைத் தனக்கு இடமாகக் கொண்ட இறைவன் விரும்பி உறையும் கோயில் திருக்கழுக்குன்றம்.

மேல்

(1115)
துணையல் செய்தான், தூய வண்டு யாழ் செய் சுடர்க் கொன்றை

பிணையல் செய்தான், பெண்ணின் நல்லாளை ஒருபாகம்

இணையல் செய்யா, இலங்கு எயில் மூன்றும் எரியுண்ணக்

கணையல் செய்தான், காதல் செய் கோயில் கழுக்குன்றே.

வண்டுகள் யாழ்போல் ஒலித்து மொய்க்கும் தூய ஒளி நிறைந்த கொன்றை மாலையை அணிந்தவனும், பெண்ணின் நல்லவளான உமையம்மையைக்கூடி அவளைத்தன் உடலில் ஒரு பாகமாகப் பிணைத்திருப்பவனும், தன்னோடு இணைந்து வாராத புரங்கள் மூன்றையும் எரி உண்ணுமாறு கணையை விடுத்தவனுமாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில், திருக்கழுக்குன்றமே.

மேல்

(1116)
பை உடைய பாம்பொடு நீறு பயில்கின்ற

மெய் உடையான், வெண் பிறை சூடி, விரிகொன்றை

மை உடைய மா மிடற்று அண்ணல், மறி சேர்ந்த

கை உடையான், காதல் செய் கோயில் கழுக்குன்றே.

நச்சுப் பையையுடைய பாம்போடு திருநீறு அணிந்த திருமேனியை உடையவனும், வெண்பிறையையும், விரிந்த கொன்றையையும் முடியில் சூடியவனும், விடம் பொருந்திய மிடற்றினை உடைய தலைமையாளனும், மானேந்திய கையை உடையவனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் கோயில் திருக்கழுக்குன்றமே.

மேல்

(1117)
வெள்ளம் எல்லாம் விரிசடைமேல் ஓர் விரிகொன்றை

கொள்ள வல்லான், குரைகழல் ஏத்தும் சிறு தொண்டர்

உள்ளம் எல்லாம் உள்கி நின்று ஆங்கே உடன் ஆடும்

கள்ளம் வல்லான், காதல்செய் கோயில் கழுக்குன்றே.

விரிந்த சடைமுடியின்மேல் வெள்ளமாகப் பெருகி வந்த கங்கையின் அனைத்து நீரையும் விரிந்த கொன்றை மாலையோடு சூடியிருப்பவனும், தனது ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடிகளை ஏத்தித் துதிக்கும் சிறிய தொண்டர்களின் உள்ளமெல்லாம் நிறைந்து, அவர்கள் தியானித்து நின்று ஆடத் தானும் உடன் ஆடும் கள்ளம் வல்லவனுமாகிய, சிவபிரான் காதல் செய்யும் கோயில் திருக்கழுக்குன்றமே.

மேல்

(1118)
ஆதல் செய்தான்; அரக்கர்தம் கோனை அரு வரையின்

நோதல் செய்தான்; நொடிவரையின் கண் விரல் ஊன்றி;

பேர்தல் செய்தான்; பெண்மகள் தன்னோடு ஒரு பாகம்

காதல் செய்தான்; காதல் செய் கோயில் கழுக்குன்றே.

அரக்கர் கோனை அரிய கயிலை மலையின்கீழ் அகப்படுத்தி, நொடிப்பொழுதில் கால் விரலை ஊன்றி, அவனை நோதல் செய்தவனும், பிறகு அவனுக்கு ஆக்கம் வழங்கியவனும், பெண்மகளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு காதல் செய்தவனுமாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் திருக்கழுக்குன்றமே.

மேல்

(1119)
இடந்த பெம்மான் ஏனம் அது ஆயும், அனம் ஆயும்,

தொடர்ந்த பெம்மான்; மதி சூடி; வரையார்தம்

மடந்தை பெம்மான்; வார்கழல் ஓச்சிக் காலனைக்

கடந்த பெம்மான்; காதல் செய் கோயில் கழுக்குன்றே.

அடிமுடி காணப் பன்றி உருவோடு நிலத்தை அகழ்ந்து சென்ற திருமாலும், அன்னமாய்ப் பறந்து சென்ற நான்முகனும், தொடர்ந்த பெருமானாய், தூய மதியை முடியிற் சூடியவன், மலைமகளின் தலைவன், வார்கழலணிந்த திருவடியை உயர்த்திக் காலனைக் காய்ந்தவன் ஆகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் திருக்கழுக்குன்றமே.

மேல்

(1120)
தேய நின்றான் திரிபுரம், கங்கை சடைமேலே

பாய நின்றான், பலர் புகழ்ந்து ஏத்த உலகு எல்லாம்

சாய நின்றான், வன் சமண் குண்டர் சாக்கீயர்

காய நின்றான், காதல் செய் கோயில் கழுக்குன்றே.

முப்புரங்களை அழியுமாறு செய்தவனும், பெருகி வந்த கங்கை தன் சடை மேல் பாய நின்றவனும், பலரும் புகழ்ந்து போற்ற உலகனைத்தும் ஊழி இறுதியில் அழியுமாறு நின்றவனும், வலிய சமண் குண்டர்களும், புத்தர்களும் கெடுமாறு நின்றவனும் ஆகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் திருக்கழுக்குன்றமே.

மேல்

(1121)
கண் நுதலான் காதல் செய் கோயில் கழுக்குன்றை,

நண்ணிய சீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை,

பண் இயல்பால் பாடிய பத்தும் இவை வல்லார்

புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே.

நெற்றியில் கண்ணுடையவனாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயிலாகிய திருக்கழுக்குன்றத்தைப் புகழ் பொருந்திய ஞானசம்பந்தன் பண் அமைதியோடு பாடிய தமிழ் மாலையாகிய ,

இப் பத்துப் பாடல்களையும் பாடிப் போற்றுபவர் புண்ணியராய்த் தேவர்களோடு வானுலகம் புகுவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(104)
திருப்புகலி - வியாழக்குறிஞ்சி

(1122)
ஆடல் அரவு அசைத்தான், அருமாமறைதான் விரித்தான், கொன்றை

சூடிய செஞ்சடையான், சுடுகாடு அமர்ந்த பிரான்,

ஏடு அவிழ் மாமலையாள் ஒரு பாகம் அமர்ந்து அடியார் ஏத்த

ஆடிய எம் இறை, ஊர் புகலிப்பதி ஆமே.

படம் எடுத்து ஆடும் பாம்பினை இடையில் கட்டியவனும், அரிய பெரிய வேதங்களை அருளிச் செய்தவனும், கொன்றை மலர் மாலையைச் சூடிய செஞ்சடை முடியை உடையவனும், சுடுகாட்டைத் தனது இருப்பிடமாகக் கொண்டு உறைபவனும், இதழ் அவிழும் மலர்கள் பூத்த பெரிய இமய மலை அரசனின் புதல்வியாகிய பார்வதி தேவியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று அடியவர் போற்ற நடனம் ஆடியவனும் ஆகிய எம் இறைவனது ஊர் புகலிப் பதியாகும்.

மேல்

(1123)
ஏலம் மலி குழலார் இசை பாடி எழுந்து, அருளால் சென்று,

சோலை மலி சுனையில் குடைந்து ஆடித் துதி செய்ய,

ஆலை மலி புகை போய் அண்டர் வானத்தை மூடி நின்று நல்ல

மாலை அது செய்யும் புகலிப்பதி ஆமே.

மயிர்ச் சாந்தணிந்த கூந்தலினை உடைய மகளிர் காலையில் எழுந்து இசை பாடிக் கொண்டு இறையருள் பெறும் வேட்கையோடு சென்று சோலையின்கண் விளங்கும் சுனையில் துளைந்து நீராடித் துதி செய்ய, கரும்பு ஆலைகளில் நிறைந்தெழுந்த புகை சென்று தேவர்கள் உறையும் வானகத்தை மூடி நின்று காலையை நல்ல மாலைப் போதாகச் செய்வது புகலிப் பதியாம். மகளிர் நீராடித் துதி செய்ய விளங்குவது புகலிப் பதி என முடிவு காண்க.

மேல்

(1124)
ஆறு அணி செஞ்சடையான்; அழகு ஆர் புரம் மூன்றும் அன்று வேவ,

நீறு அணி ஆக வைத்த நிமிர் புன்சடை எம் இறைவன்;

பாறு அணி வெண் தலையில் பகலே “பலி” என்று வந்து நின்ற

வேறு அணி கோலத்தினான்; விரும்பும் புகலி அதே.

கங்கை சூடிய செஞ்சடையினை உடையவனும், அழகமைந்த முப்புரங்களைத் தீயால் வேவச் செய்தவனும், திருநீற்றைத் தன் திருமேனியில் அழகாகப் பூசியவனும், மேல்நோக்கிய சிவந்த சடையை உடைய எம் இறைவனும், பருந்து சூழும் வெள்ளிய தலையோட்டை ஏந்திப் பகலில் பலி இடுக என்று வந்து நிற்பவனும் வேறுபாடு உடையனவாய்ப் புனையப் பெற்ற கோலத்தினனும் ஆகிய சிவபிரான் விரும்பும் தலம் புகலியாகும்.

மேல்

(1125)
வெள்ளம் அது சடைமேல் கரந்தான், விரவார் புரங்கள் மூன்றும்

கொள்ள எரி மடுத்தான், குறைவு இன்றி உறை கோயில்

அள்ளல் விளை கழனி அழகு ஆர் விரைத் தாமரைமேல் அன்னப்

புள் இனம் வைகி எழும் புகலிப்பதிதானே.

பெருகி வந்த கங்கை வெள்ளத்தைச் சடைமேல் கரந்தவனும், பகைவர்களாகிய அசுரர்களின் புரங்கள் மூன்றையும் எரிமடுத்தவனும் ஆகிய சிவபிரான் குறைவிலா நிறைவோடு உறையும் கோயில், சேறு நிறைந்த வயல்களில் முளைத்த அழகிய மணங்கமழும் தாமரை மலர்கள் மேல் அன்னமும் பிற பறவைகளும் வந்து தங்கிச் செல்லும் புகலிப் பகுதியாகும்.

மேல்

(1126)
சூடும் மதிச் சடைமேல் சுரும்பு ஆர் மலர்க்கொன்றை துன்ற, நட்டம்-

ஆடும் அமரர்பிரான், அழகு ஆர் உமையோடும் உடன்

வேடுபட நடந்த விகிர்தன், குணம் பரவித் தொண்டர்

பாட, இனிது உறையும் புகலிப்பதி ஆமே.

மதி சூடிய சடையின் மீது வண்டுகள் மொய்க்கும் கொன்றை மலர்களைப் பொருந்துமாறு அணிந்து நடனம் ஆடும் தேவர் பிரானும், அழகிய உமையம்மையோடு உடனாய் வேட்டுவக்கோலத்தோடு தோன்றி அருச்சுனற்கு அருள்புரிய நடந்த வேறுபாடுடையவனும் ஆகிய சிவபிரானின் குணங்களைப் போற்றித் தொண்டர்கள் பாட அப்பெருமான் இனிதுறையும் பதி புகலியாகும்.

மேல்

(1127)
மைந்து அணி சோலையின் வாய் மதுப் பாய் வரி வண்டு இனங்கள் வந்து

நந்து இசை பாட, நடம் பயில்கின்ற நம்பன் இடம்

அந்தி செய் மந்திரத்தால் அடியார்கள் பரவி எழ, விரும்பும்

புந்தி செய் நால்மறையோர் புகலிப்பதிதானே.

இளமை குன்றாத மரங்களை உடைய அழகிய சோலையின்கண் மலர்ந்த பூக்களின் தேனில் பரவிய வரி வண்டுகள் வந்து வளரும் இசையைப் பாட நடம் பயிலும் பெருமானது இடம், அந்திக் காலங்களில் செய்யும் சந்தியாவந்தன மந்திரங்களால் அடியார்களாய்ப் போற்றுவதற்கு நான்கு வேதங்களிலும் வல்ல அந்தணர் விருப்போடு தமது புந்தியில் நினைக்கும் புகலிப் பதியாகும்.

மேல்

(1128)
மங்கை ஓர்கூறு உகந்த மழுவாளன், வார்சடைமேல்-திங்கள்

கங்கைதனைக் கரந்த கறைக்கண்டன், கருதும் இடம்

செங்கயல் வார் கழனி திகழும் புகலிதனைச் சென்று, தம்

அம் கையினால்-தொழுவார் அவலம் அறியாரே.

உமையம்மையைத் தனது திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்பவனும், மழுவாயுதத்தைக் கையில் ஏந்தியவனும், நீண்ட சடைமேல் திங்களையும் கங்கையையும் அணிந்தவனும், விடக் கறை பொருந்திய மிடற்றினனும் ஆகிய சிவபிரான் கருதி உறையும் இடமாகிய சிவந்த கயல் மீன்கள் திகழும் நீண்ட வயல்களோடு விளங்கும் திருப்புகலிக்குச் சென்று தம் அழகிய கைகளைக் குவித்து வணங்குபவர் துன்பங்கள் நீங்கப் பெறுவர்.

மேல்

(1129)
வில் இயல் நுண் இடையாள் உமையாள் விருப்பன் அவன் நண்ணும்

நல் இடம் என்று அறியான் நலியும் விறல் அரக்கன்

பல்லொடு தோள் நெரிய விரல் ஊன்றி, பாடலுமே, கை வாள்

ஒல்லை அருள் புரிந்தான் உறையும் புகலி அதே.

ஒளி பொருந்திய நுண்ணிய இடையினை உடைய உமையவளிடம் பெருவிருப்பினனாகிய சிவபிரான் எழுந்தருளிய மேம்பட்ட இடம் என்று கருதாது கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த வலிய அரக்கனாகிய இராவணனின் பற்களும் தோள்களும் நெரியுமாறு கால்விரலை ஊன்றி அடர்த்த அளவில் அவன் தன்னைப்புகழ்ந்து பாடக் கேட்டுக் கையில் ஏந்திப் போர் செய்யும் வாளை விரைந்து அருள்புரிந்தவனாகிய சிவபிரான் உறையுமிடம் திருப்புகலியாகும்.

மேல்

(1130)
தாது அலர் தாமரை மேல் அயனும் திருமாலும் தேடி

ஓதியும் காண்பு அரிய உமைகோன் உறையும் இடம்

மாதவி, வான் வகுளம், மலர்ந்து எங்கும் விரை தோய, வாய்ந்த

போது அலர் சோலைகள் சூழ் புகலிப்பதிதானே.

மகரந்தம் விரிந்த தாமரை மலர் மேல் உறையும் பிரமனும் திருமாலும் தேடியும் புகழ்ந்தும் காண்டற்கு அரியவனாய் நின்ற உமை மணவாளனாம் சிவன் உறையுமிடம், மாதவி, வானளாவ உயர்ந்த மகிழமரம் ஆகியன மலர்ந்து எங்கும் மணம் பரப்புமாறு பொருந்திய மலர் விரிந்த சோலைகள் சூழ்ந்த புகலிப் பதியாகும்.

மேல்

(1131)
வெந் துவர் மேனியினார், விரி கோவணம் நீத்தார், சொல்லும்

அந்தர ஞானம் எல்லாம் அவை ஓர் பொருள் என்னேல்!.

வந்து எதிரும் புரம் மூன்று எரித்தான் உறை கோயில் வாய்ந்த

புந்தியினார் பயிலும் புகலிப்பதிதானே.

கொடிய மருதத் துவராடை உடுத்த மேனியினராகிய புத்தர்களும் விரிந்த கோவணம் உடுப்பதையும் துறந்த திகம்பர சமணரும் சொல்லும் அழிவுதரும் ஞானங்களாகிய அவற்றை ஒரு பொருளாகக் கொள்ளாதீர். தம்மை வந்தெதிர்த்த திரிபுரங்களை எரித்தவனாகிய சிவபிரான் உறையும் கோயில், பொருந்திய அறிவு உடையவர் வாழும் புகலிப் பதியாகும். அதனைச் சென்று தொழுமின்.

மேல்

(1132)
வேதம் ஓர் கீதம் உணர்வாணர் தொழுது ஏத்த, மிகு வாசப்-

போதனைப் போல் மறையோர் பயிலும் புகலிதன்னுள்

நாதனை, ஞானம் மிகு சம்பந்தன் தமிழ்மாலை நாவில்

ஓத வல்லார் உலகில் உறு நோய் களைவாரே.

வேத கீதங்களை உணர்ந்து வாழ்பவர் தொழுது ஏத்தவும், மிக்க மணமுடைய தாமரை மலர் மேல் உறையும் நான்முகனைப் போல விளங்கும் மறையவர் போற்றவும், விளங்கும் புகலியுள் உறையும் சிவபிரானை ஞானம் மிகும் சம்பந்தன் பாடிய,

இத்தமிழ் மாலையை நாவினால் ஓதி - வழிபட வல்லவர் மேம்பட்ட பிறவிப் பிணியை நீக்கிவிடுவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(105)
திருஆரூர் - வியாழக்குறிஞ்சி

(1133)
பாடலன் நால்மறையன்; படி பட்ட கோலத்தன்; திங்கள்

சூடலன்; மூ இலையசூலம் வலன் ஏந்தி;

கூடலர் மூஎயிலும் எரியுண்ண, கூர் எரி கொண்டு, எல்லி

ஆடலன்; ஆதிரையன்-ஆரூர் அமர்ந்தானே.

திருவாரூரின்கண் எழுந்தருளிய இறைவன் பாடப்படும் நான்கு வேதங்களை அருளியவன். ஒப்பற்ற தோற்றத்தை உடையவன். திங்களை முடியிற் சூடியவன். இலை வடிவமான முத்தலைச் சூலத்தை வலக் கரத்தே ஏந்தித் தன் பகைவராக இருந்த அசுரர்களின் முப்புரங்களையும் எரியுண்ணச் செய்தவன். மிக்க எரியைக் கையில் ஏந்தி நள்ளிரவில் நடம் புரிபவன். திருவாதிரை நாளை உகந்தவன்.

மேல்

(1134)
சோலையில் வண்டு இனங்கள் சுரும்போடு இசை முரல, சூழ்ந்த

ஆலையின் வெம்புகை போய் முகில் தோயும் ஆரூரில்,

பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடும் பரமேட்டி பாதம்,

காலையும் மாலையும் போய், பணிதல் கருமமே.

சோலைகளில் வண்டுகளும், சுரும்புகளும் இசை முரலவும், சூழ்ந்துள்ள கரும்பாலைகளில் தோன்றும் விரும்பத்தக்க புகை மேல் நோக்கிச் சென்று வானத்திலுள்ள முகில்களில் தோய்வதுமான திருவாரூரில் பால், நெய், தயிர் ஆகியவற்றை விரும்பி ஆடும் மேலான இறைவன் திருவடிகளைக் காலை மாலை ஆகிய இரு போதுகளிலும் சென்று பணிவது நாம் செய்யத்தக்க கருமமாகும்.

மேல்

(1135)
உள்ளம் ஓர் இச்சையினால் உகந்து ஏத்தித் தொழுமின், தொண்டீர்! மெய்யே

கள்ளம் ஒழிந்திடுமின்! கரவாது இரு பொழுதும்,

வெள்ளம் ஓர் வார் சடை மேல் கரந்திட்ட வெள் ஏற்றான் மேய,

அள்ளல் அகன் கழனி, ஆரூர் அடைவோமே.

தொண்டர்களே! நீவிர் உள்ளத்தால் ஆராய்ந்தறிந்த விருப்போடு மகிழ்ந்து போற்றித் தொழுவீர்களாக. மறைக்காமல் உண்மையாகவே உம் நெஞ்சத்திலுள்ள கள்ளங்களை ஒழிப்பீர்களாக! காலை மாலை இருபோதுகளிலும் கங்கை வெள்ளத்தை ஒப்பற்ற நீண்ட தன் சடைமேல் மறையும்படி செய்தவனும், வெண்மையான ஆனேற்றை உடையவனுமான சிவபிரான் எழுந்தருளிய சேற்று வளம் மிக்க அகன்ற வயல்களால் சூழப்பெற்ற திருவாரூரை வழிபடுதற் பொருட்டு நாம் செல்வோம்.

மேல்

(1136)
வெந்து உறு வெண் மழுவாள் படையான், மணிமிடற்றான், அரையின்

ஐந்தலை ஆடு அரவம் அசைத்தான், அணி ஆரூர்ப்

பைந்தளிர்க் கொன்றை அம்தார்ப் பரமன் அடி பரவ, பாவம்

நைந்து அறும்; வந்து அணையும், நாள்தொறும் நல்லனவே.

அடியவர்களின் வினைகளை வெந்தறுமாறு செய்யும் வெண்மையான மழுவாளைக் கையில் ஏந்தியவனும், நீலமணி போன்ற கண்டத்தை உடையவனும், இடையில் ஐந்து தலையுடையதாய் ஆடும் பாம்பினைக் கட்டியவனும், அழகிய திருவாரூரில் பசுந்தளிர்களோடு கட்டிய கொன்றை மாலையை அணிந்தவனுமாகிய பரமனுடைய அடிகளைப் பரவ நம் பாவங்கள் நைந்து இல்லையாகும். நாள்தோறும் நமக்கு நல்லனவே வந்தணையும்.

மேல்

(1137)
வீடு பிறப்பு எளிது ஆம்; அதனை வினவுதிரேல், வெய்ய

காடு இடம் ஆக நின்று கனல் ஏந்திக் கை வீசி

ஆடும் அவிர்சடையான் அவன் மேய ஆரூரைச் சென்று

பாடுதல், கைதொழுதல், பணிதல், கருமமே.

வீடு பேற்றை அடைதல் நமக்கு எளிதாகும். அதற்குரிய வழிகளை நீர் கேட்பீராயின் கூறுகிறேன். கொடிய சுடுகாட்டைத் தனக்குரிய இடமாகக் கொண்டு கனலை ஏந்திக் கைகளை வீசிக்கொண்டு ஆடுகின்ற விளங்கிய சடைமுடியை உடையவனாகிய சிவபிரான் எழுந்தருளிய திருவாரூரை அடைந்து பாடுதல், கைகளால் தொழுதல், பணிதல் ஆகியனவற்றைச் செய்தலே அதற்குரிய வழிகளாகும்.

மேல்

(1138)
கங்கை ஓர் வார்சடைமேல் கரந்தான், கிளிமழலைக் கேடு இல்

மங்கை ஓர் கூறு உடையான், மறையான், மழு ஏந்தும்

அம் கையினான், அடியே பரவி, அவன் மேய ஆரூர்

தம் கையினால்-தொழுவார் தடுமாற்று அறுப்பாரே.

கங்கையை ஒப்பற்ற தனது நீண்ட சடை முடி மேல் கரந்தவனும், கிளி போன்ற மழலை மொழி பேசும் கேடில்லாத உமை மங்கையை ஒரு பாகமாக உடையவனும், மழுவாயுதத்தை அழகியகையில் ஏந்தியவனும் ஆகிய இறைவன் திருவடிகளையே பரவி அவன் எழுந்தருளிய திருவாரூரைத் தம் கைகளால் தொழுபவர் தடுமாற்றங்கள் தவிர்வர்.

மேல்

(1139)
நீறு அணி மேனியனாய், நிரம்பா மதி சூடி, நீண்ட

ஆறு அணி வார்சடையான், ஆரூர் இனிது அமர்ந்தான்-

சேறு அணி மா மலர்மேல் பிரமன் சிரம் அரிந்த, செங்கண்

ஏறு அணி வெள் கொடியான் அவன்-எம்பெருமானே.

திருநீறு அணிந்த திருமேனியனாய்த் திருமுடியில் இளம்பிறையைச் சூடி, கங்கை விளங்கும் அழகிய நீண்ட சடைமுடியை உடையவனாய், திருவாரூரின் கண் மகிழ்வோடு எழுந்தருளி விளங்குபவனும், சேற்றின்கண் அழகியதாய்த் தோன்றி மலர்ந்த தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனது சிரங்களில் ஒன்றைக் கொய்த, சிவந்த கண்களை உடைய விடையேற்றை வெற்றிக் கொடியாகக் கொண்டவனுமாகிய சிவபெருமானே எம் தலைவனாவான்.

மேல்

(1140)
வல்லியந்தோல் உடையான், வளர் திங்கள் கண்ணியினான், வாய்த்த

நல் இயல் நான்முகத்தோன் தலையில் நறவு ஏற்றான்,

அல்லி அம் கோதை தன்னை ஆகத்து அமர்ந்து அருளி, ஆரூர்ப்

புல்லிய புண்ணியனைத் தொழுவாரும் புண்ணியரே.

வலிய புலியினது தோலை உடுத்தவனும், வளர்தற்குரிய பிறைமதியைக் கண்ணியாகச் சூடியவனும், நல்லியல்புகள் வாய்ந்த பிரமனது தலையில் பலியேற்று உண்பவனும், அல்லியங்கோதை என்ற பெயருடைய அம்மையைத் தனது திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டவனும் ஆகிய திருவாரூரில் விளங்கும் புண்ணியனைத் தொழுபவர்களும் புண்ணியராவர்.

மேல்

(1141)
செந்துவர் ஆடையினார், உடை விட்டு நின்று உழல்வார், சொன்ன

இந்திரஞாலம் ஒழிந்து, இன்பு உற வேண்டுதிரேல்,

அந்தர மூ எயிலும் அரணம் எரியூட்டி, ஆரூர்த்

தம் திரமா உடையான் அவன்-எம் தலைமையனே.

செந்துவர் ஊட்டப்பட்ட ஆடையை உடுத்தவரும், ஆடையின்றித் திகம்பரராய்த் திரிபவரும் ஆகிய புத்த சமணர்கள் கூறிய மாயப் பேச்சுக்களைக் கேளாது விடுத்து, இன்புற்று வாழ விரும்புவீராயின் வானத்தில் திரியும் மூவெயில்களாகிய கோட்டைகளை எரியூட்டி அழித்தவனும் திருவாரூரைத் தனக்கு நிலையான இடமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானே எம் தலைவன் என்று வழிபடுவீர்களாக.

மேல்

(1142)
நல்ல புனல் புகலித் தமிழ் ஞானசம்பந்தன், நல்ல

அல்லிமலர்க் கழனி ஆரூர் அமர்ந்தானை,

வல்லது ஓர் இச்சையினால், வழிபாடு இவைபத்தும் வாய்க்கச்

சொல்லுதல், கேட்டல், வல்லார் துன்பம் துடைப்பாரே.

தூயதான நீர்வளத்தை உடைய புகலியில் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் அக இதழ்களையுடைய நல்ல தாமரை முதலிய மலர்கள் பூத்த கழனிகளால் சூழப்பட்ட திருவாரூரில் எழுந்தருளிய இறைவனைத் தனக்கியன்ற வல்லமையால் அன்போடு பாடிய வழிபாட்டுப் பாடல்களாகிய,

இப்பதிகத்தைப் பொருந்தச் சொல்லுதல் கேட்டல் வல்லவர்கள் துன்பம் துடைப்பவர்களாவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(106)
திருஊறல் - வியாழக்குறிஞ்சி

(143)
மாறு இல் அவுணர் அரணம் அவை மாய, ஓர் வெங்கணையால், அன்று,

நீறு எழ எய்த எங்கள் நிமலன் இடம் வினவில்

தேறல் இரும் பொழிலும், திகழ் செங்கயல் பாய் வயலும், சூழ்ந்த

ஊறல்; அமர்ந்த பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே.

தமக்கு ஒப்பாரில்லாத வலிய அவுணர்களின் அரணங்களாக விளங்கிய முப்புரங்களை மறையுமாறு முற்காலத்தில் ஒரு வெங்கணையால் நீறுபடச் செய்தழித்த எங்கள் நிமலன் ஆகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள இடம், யாதென வினவில், தேன் நிறைந்த பெரிய பொழில்களும், விளங்கிய செங்கயல்கள் பாயும் வயல்களும், சூழ்ந்துள்ள திருவூறலாகும். அப்பெருமானுடைய ஒலிக்கின்ற கழலணிந்த திருவடிகளை நாம் தியானிப்போம்.

மேல்

(1144)
மத்தமதக்கரியை, மலையான்மகள் அஞ்ச, அன்று, கையால்

மெத்த உரித்த எங்கள் விமலன் விரும்பும் இடம்

தொத்து அலரும் பொழில் சூழ் வயல் சேர்ந்து, ஒளிர் நீலம் நாளும் நயனம்

ஒத்து அலரும் கழனி திரு ஊறலை உள்குதுமே.

மதம் பொருந்திய பெரிய தலையையுடைய யானையை மலைமகள் அஞ்ச, முற்காலத்தில் தன் கைகளால் மெல்ல உரித்த எங்கள் விமலனாகிய சிவபெருமான் விரும்பும் இடம் யாதெனவினவில், பூங்கொத்துக்கள் விரிந்துள்ள பொழில்கள் சூழ்ந்ததும், வயல்களில் நாள்தோறும் முளைத்து விளங்கிய நீல மலர்கள் மங்கையரின் கண்களையொத்து மலரும் வயல்வளங்களை உடையதுமான திருவூறலாகும். அத்தலத்தை நாம் நாள்தோறும் நினைவோமாக.

மேல்

(1145)
ஏன மருப்பினொடும் எழில் ஆமையும் பூண்ட அழகார், நன்றும்

கான் அமர் மான்மறிக் கைக் கடவுள், கருதும் இடம்

வான மதி தடவும் வளர் சோலைகள் சூழ்ந்து, அழகு ஆர், நம்மை

ஊனம் அறுத்த பிரான்-திரு ஊறலை உள்குதுமே.

பன்றிக் கொம்புகளோடு ஆமையோட்டையும் அணிகலனாக அழகுறப் பூண்டு, நல்ல காட்டில் வாழும் மான்கன்றைத் தன் கையில் ஏந்தியுள்ள கடவுளாகிய சிவபெருமான் விரும்புமிடம், வானத்தின் கண் உள்ள மதி தோயுமாறு வளர்ந்துள்ள சோலைகளால் அழகுறச் சூழப்பட்டு நமது பிறவிப் பிணியைப் போக்க வல்லவனாய்ச் சிவபிரான் எழுந்தருளிய திருவூறலாகும். அதனை நாம் நாள்தோறும் நினைவோமாக.

மேல்

(1146)
நெய் அணி மூஇலைவேல், நிறை வெண்மழுவும், அனலும், அன்று,

கை அணி கொள்கையினான் கடவுள் இடம் வினவில்

மை அணி கண் மடவார்பலர் வந்து இறைஞ்ச, மன்னி நம்மை

உய்யும் வகை புரிந்தான்-திரு ஊறலை உள்குதுமே.

நெய் பூசப்பெற்ற மூவிலை வேல், ஒளிநிறைந்த வெண்மழு, அனல் ஆகியவற்றைத் தன் கைகளில் அணியும் கோட்பாட்டினை உடைய கடவுள் விரும்பும் இடம் யாதென வினவுவீராயின், மை பூசப் பெற்ற கண்களையுடைய மடவார் பலர் வந்து வழிபட நிலையாகத் தங்கி, நாம் உய்யும் வகையில் எழுந்தருளி அருள்புரியும் திருவூறலாகும். அத்தலத்தை நாம் நாள்தோறும் நினைவோமாக.

மேல்

(1147)
எண்திசையோர் மகிழ, எழில் மாலையும் போனகமும், பண்டு,

கண்டி தொழ அளித்தான் அவன் தாழும் இடம் வினவில்

கொண்டல்கள் தங்கு பொழில் குளிர்பொய்கைகள் சூழ்ந்து, நஞ்சை

உண்ட பிரான் அமரும் திரு ஊறலை உள்குதுமே.

எட்டுத் திசைகளில் உள்ளாரும் கண்டு மகிழுமாறு தன்னைத் தொழுத சண்டீசர்க்கு அழகிய மாலை, உணவு முதலியவற்றை முற்காலத்தே அளித்தருளியவனும், கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு தேவர்களைக் காத்தவனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம் யாதென வினவில், மேகங்கள் தங்கும் பொழில்களும், குளிர்ந்த பொய்கைகளும் சூழ்ந்து விளங்கும் திருவூறலாகும். அதனை நாம் நாள்தோறும் நினைவோமாக.

மேல்

(1148)
கறுத்த மனத்தினொடும் கடுங்காலன் வந்து எய்துதலும், கலங்கி,

மறுக்கு உறும் மாணிக்கு அருள மகிழ்ந்தான் இடம் வினவில்

செறுத்து எழு வாள் அரக்கன் சிரம் தோளும் மெய்யும் நெரிய அன்று

ஒறுத்து, அருள் செய்த பிரான்-திரு ஊறலை உள்குதுமே.

சினம் பொருந்திய மனத்தோடு கூடிய கொடிய காலன் தம் வாழ்நாளைக் கவர வந்து அடைதலைக் கண்டு கலங்கி மயங்கிய மார்க்கண்டேயனுக்கு அருள் புரிந்தவனும், தன்னை மதியாது சினந்து வந்த வாள்வல்ல இராவணனின் தலை, தோள், உடல் ஆகியனவற்றை முற்காலத்தில் நெரித்து அருள் செய்தவனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம் யாதென வினவில் திருவூறலாகும். அதனை நாம் நாள்தோறும் நினைவோமாக.

மேல்

(1149)
நீரின் மிசைத் துயின்றோன் நிறை நான்முகனும் அறியாது, அன்று,

தேரும் வகை நிமிர்ந்தான் அவன் சேரும் இடம் வினவில்

பாரின் மிசை அடியார் பலர் வந்து இறைஞ்ச, மகிழ்ந்து, ஆகம்

ஊரும் அரவு அசைத்தான்-திரு ஊறலை உள்குதுமே.

கடல்நீரின் மேல் துயில் கொள்வோனாகிய திருமாலும் ஞானத்தினால் நிறைவுபெற்ற நான்முகனும் அறிய முடியாமல் தேடி ஆராயுமாறு நிமிர்ந்து நின்றவனும், மண்ணுலகில் அடியவர் பலரும் வந்து வணங்க மகிழ்ந்து ஊரும் பாம்பினை இடையில் கட்டியவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் யாதென வினவில் திருவூறலாகும். அதனை நாமும் உள்குவோமாக.

மேல்

(1150)
பொன் இயல் சீவரத்தார், புளித் தட்டையர், மோட்டு அமணர்குண்டர்,

என்னும் இவர்க்கு அருளா ஈசன் இடம் வினவில்

தென்னென வண்டு இனங்கள் செறி ஆர் பொழில் சூழ்ந்து, அழகு ஆர், தன்னை

உன்ன வினை கெடுப்பான்-திரு ஊறலை உள்குதுமே.

பொன்போன்ற மஞ்சட் காவியுடை அணிந்த புத்தர்கள், புளிப்பேறிய காடியைத் தட்டில் இட்டு உண்பவர்கள் ஆகியஅறியாமையை உடைய சமண் குண்டர்கள் என்னும் இவர்கட்கு அருள் புரியாதவனும், தன்னை நினைவார்களின் வினைகளைக் கெடுப்பவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் யாதென வினவில் வண்டு இனங்கள் தென்னென்ற ஓசையோடு செறிந்த பொழில்கள் சூழ்ந்த அழகிய திருவூறலாகும். அதனை நாமும் நினைவோமாக.

மேல்

(1151)
கோடல் இரும் புறவில் கொடி மாடக் கொச்சையர்மன், மெச்ச

ஓடுபுனல் சடைமேல் கரந்தான் திரு ஊறல்,

நாடல் அரும்புகழான் மிகு ஞானசம்பந்தன், சொன்ன நல்ல

பாடல்கள் பத்தும் வல்லார் பரலோகத்து இருப்பாரே.

செங்காந்தட் செடிகள் நிறைந்த பெரிய புதர்கள் விளங்குவதும் கொடிகள் கட்டிய மாட வீடுகளைக் கொண்டதுமான கொச்சையம்பதிக்குத் தலைவனும், பெருகிவரும் கங்கையைச் சடைமிசைக் கரந்தவனுமாகிய சிவபிரானது திருவூறலைப் பற்றி நாடற்கரிய புகழால் மிக்க ஞானசம்பந்தன் பாடிய,

இப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர் பரலோகத்திருப்பர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(107)
திருக்கொடிமாடச்செங்குன்றூர் - வியாழக்குறிஞ்சி

(1152)
வெந்த வெண் நீறு அணிந்து, விரிநூல் திகழ் மார்பில் நல்ல

பந்து அணவும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்து அருளி,

கொந்து அணவும் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற

அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே.

விரிக்கப் பெற்ற பூணநூல் திகழும் திருமார்பினனாய், நன்றாக வெந்த திருவெண்ணீற்றை அணிந்து, பந்து பொருந்திய கைவிரல்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, பூங்கொத்துக்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய அழகிய தண்ணளியை உடைய சிவபெருமானைத் தொழுவார் துன்பங்கள் நீங்கப் பெறுவர்.

மேல்

(1153)
அலை மலி தண்புனலோடு அரவம் சடைக்கு அணிந்து, ஆகம்

மலைமகள் கூறு உடையான், மலை ஆர் இள வாழைக்

குலை மலி தண் பொழில் சூழ் கொடி மாடச் செங்குன்றூர் நின்ற

தலைமகனைத் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே.

அலைகள் நிறைந்த குளிர்ந்த கங்கை நதியோடு பாம்பினையும், சடையின்கண் அணிந்து, தனது திருமேனியில் மலைமகளை ஓர் பாகமாகக் கொண்டுள்ளவனும், மலையின்கண் வளரும் குலைகள் நிறைந்துள்ள இளவாழை மரங்களை உடைய குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்து விளங்கும் கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய தலைவனுமாகிய சிவபிரானைத் தொழுவார் தடுமாற்றம் தவிர்வர்.

மேல்

(1154)
பால் அன நீறு புனை திருமார்பில், பல்வளைக்கை நல்ல

ஏலமலர்க் குழலாள் ஒருபாகம் அமர்ந்து அருளி,

கோல மலர்ப்பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும்

நீலநல் மாமிடற்றான் கழல ஏத்தல் நீதியே.

பால் போன்று வெள்ளிய திருநீற்றைப் புனைந்து விளங்கிய மார்பினோடு பல்வகை வளையல்களையும் பாங்குறப் புனைந்த கையினளாய், மணம் கமழும் நறுமலர்களைச் சூடிய கூந்தலினளாகிய உமையம்மை ஒரு பாகமாக அமைந்த கோலத்தோடு அழகிய மலர்கள் பூத்த பொழில்கள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய நீல நன்மாமிடற்றானின் கழலணிந்த திருவடிகளை ஏத்துதலே நீதியாகும்.

மேல்

(1155)
வார் உறு கொங்கை நல்ல மடவாள் திகழ் மார்பில், நண்ணும்

கார் உறு கொன்றையொடும் கதநாகம் பூண்டு அருளி,

சீர் உறும் அந்தணர் வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற

நீர் உறு செஞ்சடையான் கழல் ஏத்தல் நீதியே.

கச்சணிந்த தனங்களை உடைய அழகிய உமையம்மை விளங்கும் திருமார்பின்கண் கார்காலத்தே மலரும் கொன்றை மலர் மாலையோடு சினம் பொருந்திய பாம்பை அணிகலனாகப் பூண்டு சிறப்புப் பொருந்திய அந்தணர்கள் வாழும் கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய கங்கையணிந்த செஞ்சடையனாய் விளங்கும் சிவபிரானின் கழலணிந்த திருவடிகளை ஏத்துதல் நீதியாகும்.

மேல்

(1156)
பொன் திகழ் ஆமையொடு புரிநூல் திகழ் மார்பில், நல்ல

பன்றியின் கொம்பு அணிந்து, பணைத்தோளி ஓர்பாகம் ஆக,

குன்று அன மாளிகை சூழ் கொடி மாடச் செங்குன்றூர், வானில்

மின்திகழ் செஞ்சடையான் கழல் ஏத்தல் மெய்ப்பொருளே.

திருமகள் விளங்கும் திருமாலாகிய ஆமையினது ஓட்டினோடு முப்புரிநூல் திகழும் மார்பின்கண் நல்ல பன்றியின் கொம்புகளையும் அணிந்து மூங்கில் போன்ற தோளினளாகிய உமையம்மை ஒரு பாகமாக விளங்கக் குன்றுகள் போன்ற மாளிகைகள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் வானில் திகழும் மின்னல் போன்று விளங்கும் செஞ்சடையானின் கழலணிந்த திருவடிகளை ஏத்துதலே மெய்ப் பொருளாகும்.

மேல்

(1157)
ஓங்கிய மூஇலை நல் சூலம் ஒரு கையன், சென்னி

தாங்கிய கங்கையொடு மதியம் சடைக்கு அணிந்து,

கோங்கு அணவும் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த

பாங்கன தாள் தொழுவார் வினை ஆய பற்று அறுமே.

மேம்பட்ட மூவிலை வடிவான நல்ல சூலத்தை ஒரு கையில் ஏந்தியவனாய்த் திருமுடியில் தடுத்த கங்கையோடு, பிறையையும் சடையின்கண் அணிந்து, தேன் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் பொருந்திய தோழனாய் விளங்கும் சிவபெருமானின் திருவடிகளைத் தொழுபவர்களின் வினைகள் வேர்ப்பற்றோடு நீங்கும்.

மேல்

(1158)
நீடு அலர்கொன்றையொடு நிமிர்புன் சடை தாழ, வெள்ளை-

வாடல் உடை தலையில் பலி கொள்ளும் வாழ்க்கையனாய்,

கோடல் வளம் புறவில் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற

சேடன தாள் தொழுவார் வினை ஆய தேயுமே.

கொத்தாக நீண்டு மலர்கின்ற கொன்றை மலர்களோடு நிமிர்ந்து தோன்றும் சிவந்த சடைகள் தாழ்ந்து தொங்க, வெண்மையான புலால் நீங்கிய தலையோட்டில் பலி ஏற்றுண்ணும் வாழ்க்கையனாய், வெண்காந்தள் மலர்ந்த புதர்களை உடைய வளமான முல்லை நிலங்களால் சூழப்பட்ட கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய பெருமை உடையோனின் திருவடிகளைத் தொழுபவர்களின் வினைகள் தேய்ந்தொழியும்.

மேல்

(1159)
மத்த நல் மாமலரும் மதியும் வளர் கொன்றை உடன் துன்று

தொத்து அலர் செஞ்சடைமேல்-துதைய உடன் சூடி,

கொத்து அலர் தண்பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய

தத்துவனைத் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே.

செஞ்சடைமீது நல்ல ஊமத்த மலரையும் இளமதியையும் கொத்தாக அலரும் கொன்றை மலருடன் ஒருசேரநெருங்கச் சூடிப் பூங்கொத்துக்கள் அலரும் தண்ணிய பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய தத்துவனைத் தொழுவார் தடுமாற்றங்கள் இலராவர்.

மேல்

(1160)
செம்பொனின் மேனியன் ஆம் பிரமன் திருமாலும் தேட நின்ற

அம் பவளத்திரள் போல் ஒளி ஆய ஆதிபிரான்,

கொம்பு அணவும் பொழில் சூழ் கொடி மாடச்செங்குன்றூர் மேய

நம்பன தாள் தொழுவார் வினை ஆய நாசமே.

சிவந்த பொன்போன்ற மேனியினன் ஆகிய பிரமனும் திருமாலும் தேடுமாறு பவளத் திரள் போல ஒளி வடிவினனாய் ஓங்கிநின்ற மூல காரணனும், கொம்புகளாகக் கிளைத்து நெருங்கிய மரங்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளியவனுமாகிய சிவபிரானின் திருவடிகளைத் தொழுபவர்களின் வினைகள் நாசமாகும்.

மேல்

(1161)
போதியர் பிண்டியர் என்று இவர்கள் புறம் கூறும் பொய்ந்நூல்

ஓதிய கட்டுரை கேட்டு உழல்வீர்! வரிக்குயில்கள்

கோதிய தண்பொழில் சூழ் கொடி மாடச் செங்குன்றூர் நின்ற

வேதியனைத் தொழ, நும் வினை ஆன வீடுமே.

போதி மரத்தை வழிபடும் புத்தர், அசோக மரத்தை வழிபடும் சமணர் ஆகியோர் பொய்ந்நூல்களை மேற்கோள்களாகக்காட்டிக் கூறும் புனைந்துரைகளைக் கேட்டு அவற்றை மெய்யெனக் கருதி உழல்பவர்களே!, இசை பாடும் குயில்கள் கோதிய தளிர்களோடு கூடிய தண்பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய வேதம் விரித்த சிவபிரானைத் தொழுமின்; நம் வினைகள் யாவும் அழியும்.

மேல்

(1162)
அலை மலி தண் புனல் சூழ்ந்து அழகு ஆர் புகலிநகர் பேணும்

தலைமகன் ஆகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன்,

கொலை மலி மூஇலையான் கொடி மாடச்செங்குன்றூர் ஏத்தும்

நலம் மலி பாடல் வல்லார் வினை ஆன நாசமே.

அலைகள் மிகுந்த குளிர்ந்த நீரால் சூழப்பட்ட அழகிய புகலி நகரை விரும்பும் தலைமகனாகிய தமிழ் ஞானசம்பந்தன், கொல்லும் தொழிலில் வல்ல மூன்று இலை வடிவான சூலத்தைக் கையில் ஏந்தியவனாய சிவபிரான் எழுந்தருளிய கொடிமாடச் செங்குன்றூரைப் போற்றிப் பாடிய,

நலம் மிக்க, இப்பதிகப் பாடல்களை ஓத, வல்லவர்களின் வினைகள் நாசமாகும்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(108)
திருப்பாதாளீச்சுரம் - வியாழக்குறிஞ்சி

(1163)
மின் இயல் செஞ்சடைமேல் விளங்கும் மதி மத்தமொடு நல்ல

பொன் இயல் கொன்றையினான்; புனல் சூடி; பொற்பு அமரும்

அன்னம் அன நடையாள் ஒரு பாகத்து அமர்ந்து அருளி; நாளும்

பன்னிய பாடலினான்; உறை கோயில்-பாதாளே.

மின்னல் போன்ற செஞ்சடைமேல் விளங்கும் மதி, ஊமத்தமலர் பொன் போன்ற நல்ல கொன்றை ஆகியவற்றோடு கங்கையையும் சூடி, அழகு விளங்கும் அன்னம் போன்ற நடையினளாகிய உமையம்மை ஒரு பாகமாக விளங்க, நாள்தோறும் வேத கீதங்களைப் பாடியவனாய்ச் சிவபெருமான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.

மேல்

(1164)
நீடு அலர் கொன்றையொடு நிரம்பா மதி சூடி; வெள்ளைத்-

தோடு அமர் காதில் நல்ல குழையான்; சுடு நீற்றான்;

ஆடு அரவம் பெருக அனல் ஏந்திக் கை வீசி, வேதம்

பாடலினால் இனியான்; உறை கோயில் பாதாளே.

கொத்தாக நீண்டு அலர்கின்ற கொன்றையோடு கலைநிறையாத இளம் பிறையை முடியில் சூடி, ஒரு காதில் வெள்ளைத் தோட்டுடன் மறு காதில் நல்ல குழையையுடையவனாய் விளங்குவோனும், சுட்ட திருநீற்றை மெய்யில் பூசியவனும், ஆடும் பாம்பு அணிகலனாகப் பெருகித் தோன்ற அனல் ஏந்திக் கைவீசி வேதப் பாடல்களைப் பாடுதலில் இனியனாய் விளங்குவோனும் ஆகிய சிவபெருமான் உறையும் கோயில் திருப்பாதாளீச்சரமாகும்.

மேல்

(1165)
நாகமும் வான்மதியும் நலம் மல்கு செஞ்சடையான், சாமம்

போக நல் வில்வரையால் புரம் மூன்று எரித்து உகந்தான்,

தோகை நல் மாமயில் போல் வளர் சாயல்-மொழியைக் கூடப்

பாகமும் வைத்து உகந்தான், உறை கோயில்-பாதாளே.

பாம்பு, வானில் விளங்கும் மதி ஆகியனவற்றைச் சூடிய அழகுமிக்க செஞ்சடையை உடையவனும், உரிய காலம் கழிய நல்ல மேருவில்லால் முப்புரங்களை எரித்துகந்தவனும், தோகையை உடைய நல்ல ஆண்மயில் போன்று வளர்கின்ற கட்புலனாய மென்மையை உடைய தூய மொழி பேசும் உமையம்மையைத் தன்னோடு உடனாக இடப்பாகமாகக் கொண்டு மகிழ்ந்தவனும் ஆகிய சிவபிரான் மகிழ்ந்துறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.

மேல்

(1166)
அங்கமும் நால்மறையும் அருள்செய்து, அழகு ஆர்ந்த அம் சொல்

மங்கை ஓர் கூறு உடையான், மறையோன், உறை கோயில்

செங்கயல் நின்று உகளும் செறுவில்-திகழ்கின்ற சோதிப்

பங்கயம் நின்று அலரும் வயல் சூழ்ந்த பாதாளே.

பேய்கள் பலவும் உடன் சூழ, சுடுகாட்டை அரங்காக எண்ணி நின்று, தீ, மான்கன்று மழு ஆகியவற்றைக் கைகளில் விளங்குவித்து, தேய்ந்த பிறையும் பாம்பும் விளங்கிய கொன்றை மலரும் உடைய தன் சடைமேல் பாய்ந்து வரும் கங்கையையும் உடையவனாகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.

மேல்

(1167)
பேய் பலவும் நிலவப் பெருங்காடு அரங்கு ஆக உன்னி நின்று,

தீயொடு மான்மறியும் மழுவும் திகழ்வித்து,

தேய்பிறையும் அரவும் பொலி கொன்றைச் சடைதன் மேல் சேர,

பாய் புனலும் உடையான் உறை கோயில் பாதாளே.

கண் பொருந்திய நெற்றியை உடையவனும், சடைமுடி மீது மணம் கமழும் கொன்றை மலரோடு, அழகு பொருந்த வானின்கண் உலாவும் சிறந்த பிறைமதியையும் உடனாக வைத்தவனும், தன்னால் விரும்பப் பெற்ற உமை மங்கை பொருந்திய திருமேனியனும், சுடுகாட்டை அரங்காகக் கொண்டு பண்ணொடு கூடிய பாடல்களுடன் ஆடுபவனுமாகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.

மேல்

(1168)
கண் அமர் நெற்றியினான், கமழ் கொன்றைச் சடைதன்மேல் நன்றும்

விண் இயல் மா மதியும் உடன் வைத்தவன், விரும்பும்

பெண் அமர் மேனியினான், பெருங்காடு அரங்கு ஆக ஆடும்

பண் இயல் பாடலினான், உறை கோயில் பாதாளே.

கண் பொருந்திய நெற்றியை உடையவனும், சடைமுடி மீது மணம் கமழும் கொன்றை மலரோடு, அழகு பொருந்த வானின்கண் உலாவும் சிறந்த பிறைமதியையும் உடனாக வைத்தவனும், தன்னால் விரும்பப் பெற்ற உமை மங்கை பொருந்திய திருமேனியனும், சுடுகாட்டை அரங்காகக் கொண்டு பண்ணொடு கூடிய பாடல்களுடன் ஆடுபவனுமாகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.

மேல்

(1169)
விண்டு அலர் மத்தமொடு மிளிரும் இள நாகம், வன்னி, திகழ்

வண்டு அலர் கொன்றை, நகு மதி, புல்கு வார்சடையான்;

விண்டவர் தம் புரம் மூன்று எரி செய்து, வேதம் நான்கும் அவை

பண்டு இசைபாடலினான்; உறை கோயில் பாதாளே.

தளையவிழ்ந்து மலர்ந்த ஊமத்த மலரோடு, புரண்டு கொண்டிருக்கும் இளநாகம், வன்னிஇலை, வண்டுகளால் மலர்த்தப் பெறும் கொன்றை, பிறைமதி ஆகியன பொருந்திய நீண்ட சடை உடையவனும், பகைவரான அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தவனும், நான்கு வேதங்களையும் உரைத்தலோடு அவற்றைப் பண்டைய இசை மரபோடு பாடி மகிழ்பவனுமான சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.

மேல்

(1170)
மல்கிய நுண் இடையாள் உமை நங்கை மறுக, அன்று, கையால்-

தொல்லைமலை எடுத்த அரக்கன் தலைதோள் நெரித்தான்;

கொல்லை விடை உகந்தான்; குளிர்திங்கள் சடைக்கு அணிந்தோன்;

பல் இசை பாடலினான்; உறை கோயில் பாதாளே.

செறிந்த நுண்மையான இடையினை உடைய உமையம்மை அஞ்ச அன்று கையால் பழமையான கயிலை மலையைப் பெயர்த்த இராவணனின் தலைகளையும் தோள்களையும் நெரித்தவனும், முல்லை நிலத் தெய்வமான திருமாலாகிய விடையை உகந்தவனும், குளிர்ந்த திங்களைச் சடையின்கண் அணிந்தவனும் பல்வகையான இசைப் பாடல்களைப் பாடுபவனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.

மேல்

(1171)
தாமரைமேல் அயனும் அரியும் தமது ஆள்வினையால்-தேடி,

காமனை வீடுவித்தான் கழல் காண்பு இலராய் அகன்றார்;

பூ மருவும் குழலாள் உமைநங்கை பொருந்தியிட்ட நல்ல

பா மருவும் குணத்தான் உறை கோயில் பாதாளே.

மன்மதனை எரித்த சிவபிரான் திருவடிகளைத் தாமரை மலரின்மேல் எழுந்தருளிய அயனும், திருமாலும் தமது முயற்சியால் தேடிக்காண இயலாது நீங்கினர். மலர்கள் சூடிய கூந்தலை உடைய உமைநங்கை ஒரு பாகமாகப் பொருந்தியவனும் வேதப் பாடல்களைப் பாடும் நல்ல குணத்தினனும் ஆகிய அப்பெருமான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும். அங்குச் சென்றால் அவன் கழலடி காணலாம் என்பது குறிப்பெச்சம்.

மேல்

(1172)
காலையில் உண்பவரும் சமண்கையரும் கட்டுரை விட்டு, அன்று

ஆலவிடம் நுகர்ந்தான் அவன்தன் அடியே பரவி,

மாலையில் வண்டு இனங்கள் மது உண்டு இசை முரல, வாய்த்த

பாலையாழ்ப் பாட்டு உகந்தான் உறை கோயில் பாதாளே.

காலையில் சோறுண்ணும் புத்தரும், சமண சமயக் கீழ் மக்களும் கூறும் மெய்போன்ற பொய்யுரைகளை விடுத்து, ஆலகால விடமுண்டு அமரர்களைக் காத்தவனும் மாலைக் காலத்தில்வண்டினங்கள் மதுவுண்டு இசை முரல ஏற்புடையதான பாலைப் பண்ணையாழில் பாடக் கேட்டு மகிழ்பவனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.

மேல்

(1173)
பல்மலர் வைகு பொழில் புடை சூழ்ந்த பாதாளைச் சேர,

பொன் இயல் மாடம் மல்கு புகலி நகர் மன்னன்-

தன் ஒளி மிக்கு உயர்ந்த தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன

இன் இசைபத்தும் வல்லார் எழில் வானத்து இருப்பாரே.

பலவகையான மலர்களும் பூத்துள்ள பொழில் புடை சூழ்ந்த பாதாளீச்சரத்தைச் சென்று தரிசிக்குமாறு, பொன்னால் இயன்ற மாட வீடுகள் நிறைந்த புகலி நகர் மன்னனும், தன்புகழ் உலகெங்கும் பரவி விளங்குமாறு உயர்ந்தவனுமாகிய தமிழ் ஞானசம்பந்தன் பாடிய,

இன்னிசை பொருந்திய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர் அழகிய வானுலகின்கண் இருப்பர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(109)
திருச்சிரபுரம் - வியாழக்குறிஞ்சி

(1174)
வார் உறு வனமுலை மங்கை பங்கன்,

நீர் உறு சடை முடி நிமலன், இடம்

கார் உறு கடி பொழில் சூழ்ந்து அழகு ஆர்

சீர் உறு வளவயல் சிரபுரமே.

கச்சணிந்த அழகிய தனபாரங்களை உடைய உமையம்மையின் கணவனும், கங்கையை அணிந்த சடைமுடியை உடைய நிமலனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம், மேகங்கள் தோயுமாறு வானளாவிய மணம் கமழும் பொழில் சூழ்ந்த அழகிய சிறப்புப் பொருந்திய வளமையான வயல்களை உடைய சிரபுரம் ஆகும்.

மேல்

(1175)
அங்கமொடு அருமறை அருள்புரிந்தான்,

திங்களொடு அரவு அணி திகழ் முடியன்,

மங்கையொடு இனிது உறை வள நகரம்

செங்கயல் மிளிர் வயல், சிரபுரமே.

ஆறங்கங்களோடு அரிய வேதங்கள் நான்கையும் அருளிச் செய்தவனும், திங்கள் பாம்பு ஆகியவற்றை அணிந்து விளங்கிய முடியினனும் ஆகிய சிவபெருமான் உமைமங்கையோடு மகிழ்வாக உறையும் வளமையான நகரம் செங்கயல்கள் துள்ளி விளையாடும் வயல்கள் சூழ்ந்த சிரபுரம் ஆகும்.

மேல்

(1176)
பரிந்தவன், பல் முடி அமரர்க்கு ஆகித்

திரிந்தவர் புரம் அவை தீயின் வேவ

வரிந்த வெஞ்சிலை பிடித்து, அடுசரத்தைத்

தெரிந்தவன், வள நகர் சிரபுரமே.

பல்வகையான முடிகளைச் சூடிய அமரர்களிடம் மிக்க பரிவுடையவனாகி வானவெளியில் திரிந்த அவுணர்களின் முப்புரங்களும் தீயில் வேகுமாறு வரிந்து கட்டிய கொடிய வில்லைப் பிடித்துக் கொல்லும் அம்பினை ஆராய்ந்து தொடுத்த பெருமானது வளநகர் சிரபுரமாகும்.

மேல்

(1177)
நீறு அணி மேனியன், நீள் மதியோடு

ஆறு அணி சடையினன், அணியிழை ஓர்-

கூறு அணிந்து இனிது உறை குளிர் நகரம்

சேறு அணி வளவயல், சிரபுரமே.

திருநீறு அணிந்த திருமேனியை உடையவனும், வளைவாக நீண்ட பிறை மதியோடு கங்கையை அணிந்த சடையினை உடையவனும் ஆகிய சிவபிரான், அழகிய அணிகலன்களைப் பூண்ட உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு இனிதாக உறையும் குளிர்ந்த நகரம் சேற்றால் அழகிய வளமான வயல்கள் சூழ்ந்த சிரபுரமாகும்.

மேல்

(1178)
அருந்திறல் அவுணர்கள் அரண் அழியச்

சரம் துரந்து எரி செய்த சங்கரன் ஊர்

குருந்தொடு கொடிவிடு மாதவிகள்

திருந்திய புறவு அணி சிரபுரமே.

வெல்லுதற்கரிய வலிமையினையுடைய அசுரர்களின் முப்புரங்களும் அழியுமாறு கணையைத் தொடுத்து எரித்த சங்கரனாகிய சிவபெருமானது ஊர், குருந்தமரம் கொடிகளாகப்படரும் மாதவி எனும் குருக்கத்தி ஆகியன நிறைந்த அழகிய புதர்களால் சூழப் பட்ட சிரபுரம் என்னும் நகரமாகும்.

மேல்

(1179)
கலை அவன், மறை அவன், காற்றொடு தீ

மலை அவன், விண்ணொடு மண்ணும் அவன்,

கொலைய வன் கொடி மதில் கூட்டு அழித்த

சிலையவன், வள நகர் சிரபுரமே.

கலைகளாக விளங்குபவனும், வேதங்களை அருளியவனும் காற்று, தீ, மலை, விண், மண் முதலியனவாகத் திகழ்பவனும் கொடிகள் கட்டப்பெற்ற அசுரர்களின் முப்புரங்களை அவற்றின் மதில்களோடு கூட்டாக அழித்த மேருவில் ஏந்திய கொலையாளனும் ஆகிய சிவபெருமானது வளநகர் சிரபுரமாகும்.

மேல்

(1180)
வான் அமர் மதியொடு மத்தம் சூடித்

தானவர் புரம் எய்த சைவன் இடம்

கான் அமர் மடமயில் பெடை பயிலும்

தேன் அமர் பொழில் அணி சிரபுரமே.

வானத்தில் உலவும் பிறை மதியையும், ஊமத்த மலரையும் முடியிற் சூடி, அசுரர்களின் முப்புரங்களை எய்தழித்த சைவன் இடம், காடுகளில் வாழும் இள ஆண் மயில்கள் பெண் மயில்களோடு கூடி மகிழ்வதும் இனிமை நிறைந்து விளங்குவதுமான சிரபுரமாகும்.

மேல்

(1181)
மறுத்தவர் திரிபுரம் மாய்ந்து அழியக்

கறுத்தவன், கார் அரக்கன் முடிதோள்

இறுத்தவன், இருஞ் சினக் காலனை முன்

செறுத்தவன், வள நகர் சிரபுரமே.

தன்னோடு உடன்பாடு இல்லாது மாறுபட்டு ஒழுகிய அசுரர்களின் முப்புரங்களும் கெட்டு அழியுமாறு சினந்தவனும், கரிய அரக்கனாகிய இராவணனின் தலை தோள் ஆகியவற்றை நெரித்தவனும், மிக்க சினம் உடைய இயமனை அழித்தவனுமான சிவபிரானது வளநகர் சிரபுரமாகும்.

மேல்

(1182)
வண்ண நல்மலர் உறை மறையவனும்

கண்ணனும் கழல் தொழ, கனல் உரு ஆய்

விண் உற ஓங்கிய விமலன் இடம்

திண்ண நல்மதில் அணி சிரபுரமே.

செவ்வண்ணமுடைய நல்ல தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும், திருமாலும் தன் திருவடிகளைத் தொழுது நிற்குமாறு கனல் உருவாய் விண்ணுற ஓங்கி நின்ற விமலனாகிய சிவபிரானது இடம் உறுதியான நல்ல மதில்களால் அழகுறும் சிரபுர வளநகராகும்.

மேல்

(1183)
வெற்று அரை உழல்பவர், விரி துகிலார்,

கற்றிலர் அற புறன் க்க,

பற்றலர் திரி புரம் மூன்றும் வேவச்

செற்றவன் வள நகர் சிரபுரமே.

ஆடையில்லாத இடையோடு திரிந்துழல்வோரும், விரித்த ஆடையைப் போர்வையாகப் போர்த்தியுள்ளவரும், மெய் நூல்களைக் கல்லாதவரும் ஆகிய சமண பௌத்தர்கள் அறவுரை என்ற பெயரில் புறம்பான உரைகளைக் கூறக்கேட்டு அவற்றைப் பொருட்படுத்தாதவனாய்ப் பகைவராகிய அவுணர்களின் முப்புரங்களும் தீயில் வேகுமாறு அழித்தருளிய சிவபிரான் எழுந்தருளிய வளநகர் சிரபுரமாகும்.

மேல்

(1184)
அருமறை ஞானசம்பந்தன், அம் தண்

சிரபுரநகர் உறை சிவன் அடியைப்

பரவிய செந்தமிழ் பத்தும் வல்லார்

திருவொடு புகழ் மல்கு தேசினரே.

அரிய மறைகளை ஓதாது உணர்ந்த ஞானசம்பந்தன் அழகிய தண்ணளியை உடைய சிரபுர நகரில் எழுந்தருளிய சிவபெருமான் திருவடிகளைப் பரவிப் போற்றிய ,

இப்பதிகச் செந்தமிழ் பத்தையும் ஓத வல்லவர் செல்வத்துடன் புகழ் நிறைந்து ஒளியுடன் திகழ்வர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(110)
திருஇடைமருதூர் - வியாழக்குறிஞ்சி

(1185)
மருந்து அவன், வானவர் தானவர்க்கும்

பெருந்தகை, பிறவினொடு இறவும் ஆனான்,

அருந்தவ முனிவரொடு ஆல் நிழல் கீழ்

இருந்தவன், வள நகர் இடைமருதே.

பிறவி நோய் தீர்க்கும் மருந்தாக விளங்குபவனும், தேவர்கட்கும் அசுரர்கட்கும் தலைவனாய் விளங்குபவனும், உயிர்களின் பிறப்பு இறப்பிற்குக் காரணமானவனும், அரிய தவம் உடைய சனகாதி முனிவர்களோடு கல்லால மர நிழலில் எழுந்தருளியிருந்து அறம் உரைத்தருளியவனுமான சிவபிரானது வளநகர் இடைமருதாகும்.

மேல்

(1186)
தோற்று அவன் கேடு அவன், துணைமுலையாள்

கூற்றவன், கொல் புலித் தோல் அசைத்த

நீற்றவன், நிறை புனல் நீள் சடைமேல்

ஏற்றவன், வள நகர் இடைமருதே.

உயிர்களின் தோற்றத்திற்கும் கேட்டிற்கும் காரணமானவனும், இணையான தனங்களை உடைய உமையம்மையை ஒருகூறாகக் கொண்டவனும், கொல்லும் தொழிலில் வல்ல புலியினது தோலை இடையில் கட்டியவனும், மெய்யெலாம் திருநீறு அணிந்தவனும், பெருகிவந்த கங்கையை நீண்ட சடைமுடிமேல் ஏற்று உலகைக் காத்தவனுமான சிவபிரானது வளநகர் இடைமருதாகும்.

மேல்

(1187)
படை உடை மழுவினன், பால்வெண் நீற்றன்,

நடை நவில் ஏற்றினன், ஞாலம் எல்லாம்

உடை தலை இடு பலி கொண்டு உழல்வான்-

இடைமருது இனிது உறை எம் இறையே.

மழுவைத் தனக்குரிய ஆயுதமாகக் கொண்டவனும், பால் போன்று வெள்ளிய திருநீற்றை மேனிமேல் பூசியவனும், இனிய நடையைப் பழகுகின்ற விடை ஏற்றை உடையவனும், உடைந்த தலையோட்டில் பலி கொண்டு உலகெலாம் திரிந்துழல்பவனும் ஆகிய எம் தலைவனாகிய சிவபெருமான் இனிது உறையும் நகர் இடைமருதாகும்.

மேல்

(1188)
பணைமுலை உமை ஒருபங்கன், ஒன்னார்

துணை மதில் மூன்றையும் சுடரில் மூழ்கக்

கணை துரந்து, அடு திறல் காலன் செற்ற

இணை இலி, வள நகர் இடைமருதே.

பருத்த தனங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனும், பகைவராகிய அசுரர்கட்குத் துணையாக இருந்த மூன்று அரணங்களையும் தீயில் மூழ்கி அழியுமாறு கணையைச் செலுத்தி அழித்தவனும், காலனைச் செற்ற ஒப்பிலியும் ஆகிய சிவ பெருமானது வளநகர் இடைமருது ஆகும்.

மேல்

(1189)
பொழில் அவன், புயல் அவன், புயல் இயக்கும்

தொழில் அவன், துயர் அவன், துயர் அகற்றும்

கழலவன், கரிஉரி போர்த்து உகந்த

எழிலவன், வள நகர் இடைமருதே.

ஏழ் உலகங்களாக இருப்பவனும், மேகங்களாகவும் அவற்றை இயக்கி மழையைப் பெய்விக்கும் தொழிலைப் புரிவோனாக இருப்பவனும், துன்பங்களைத் தருபவனாகவும் அவற்றைப் போக்கும் கழலணிந்த திருவடிகளை உடையவனாக விளங்குபவனும், யானையின் தோலைப் போர்த்து மகிழ்ந்து அழகனாக விளங்குபவனும் ஆகிய சிவபெருமானது வளநகர் இடைமருதாகும்.

மேல்

(1190)
நிறை அவன், புனலொடு மதியும் வைத்த

பொறையவன், புகழ் அவன், புகழ நின்ற

மறை அவன், மறிகடல் நஞ்சை உண்ட

இறையவன், வள நகர் இடைமருதே.

குறைவற்ற நிறைவாக விளங்குபவனும், கங்கையோடு திங்களைத் திருமுடியில் வைத்துச் சுமக்கும் சுமையை உடையவனும், புகழ் வடிவினனாக விளங்குபவனும், எல்லோராலும் புகழப்படும் வேதங்களாக விளங்குபவனும், சுருண்டு விழும் அலைகளை உடைய கடலின்கண் தோன்றிய நஞ்சினை உண்ட தலைவனும் ஆகிய சிவபிரானது வளநகர் இடைமருதாகும்.

மேல்

(1191)
நனி வளர் மதியொடு நாகம் வைத்த

பனி மலர்க் கொன்றை அம் படர் சடையன்,

முனிவரொடு அமரர்கள் முறை வணங்க,

இனிது உறை வள நகர் இடைமருதே.

நாள்தோறும் ஒரு கலையாக நன்றாக வளர்தற்குரிய பிறை மதியோடு பாம்பையும் உடனாக வைத்துள்ளவனும் குளிர்ந்த கொன்றை மலர்மாலை சூடிய விரிந்த சடைமுடியை உடையவனும் ஆகிய சிவபிரான் முனிவர்களும் தேவர்களும் முறையாக வணங்க இனிதாக உறையும் வளநகர் இடைமருதாகும்.

மேல்

(1192)
தருக்கின அரக்கன தாளும் தோளும்

நெரித்தவன், நெடுங்கை மா மதகரி அன்று

உரித்தவன், ஒன்னலர் புரங்கள் மூன்றும்

எரித்தவன், வள நகர் இடைமருதே.

செருக்குற்ற அரக்கனாகிய இராவணனின் தாள்களையும், தோள்களையும் நெரித்தவனும், நீண்ட கையை உடைய பெரிய மத யானையை அக்காலத்தில் உரித்துப் போர்த்தவனும், பகைவர்களாகிய அசுரர்களின் புரங்கள் மூன்றையும் எரித்தவனும் ஆகிய சிவபெருமானது வளநகர் இடைமருதாகும்.

மேல்

(1193)
பெரியவன், பெண்ணினொடு ஆணும் ஆனான்,

வரி அரவு அணை மறிகடல்-துயின்ற

கரியவன் அலரவன் காண்பு அரிய

எரியவன், வள நகர் இடைமருதே.

எல்லோரினும் பெரியவனும், பெண் ஆண் வடிவாக விளங்குபவனும், வயிற்றிடையே கீற்றுக்களாகிய கோடுகளை உடைய பாம்பணைமேல் கடலிடையே துயிலும் கரியவனாகியதிருமால் தாமரை மலர்மேல் உறையும் நான்முகன் ஆகியோர் காணுதற்கரிய எரியுருவாய் ஓங்கி நின்றவனும் ஆகிய சிவபெருமானது வளநகர் இடைமருதாகும்.

மேல்

(1194)
சிந்தை இல் சமணொடு தேரர் சொன்ன

புந்தி இல் அவை பொருள் கொளாதே,

அந்தணர் ஓத்தினொடு அரவம் ஓவா,

எந்தைதன் வள நகர் இடைமருதே.

சிந்திக்கும் திறனற்ற சமணர்களும், புத்தர்களும் கூறிய அறிவற்ற உரைகளைப் பொருளுடைய உரைகளாகக் கொள்ளாதீர். அந்தணர்களின் வேத ஒலியோடு விழவொலி நீங்காத வளநகர் ஆகிய இடைமருது எந்தையாகிய சிவபிரான் உறையும் இடமாகும் என்று அறிந்து சென்று வழிபடுமின்.

மேல்

(1195)
இலை மலி பொழில் இடைமருது இறையை

நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன

பலம் மிகு தமிழ் இவைபத்தும் வல்லார்

உலகு உறு புகழினொடு ஓங்குவரே.

இலைகள் நிறைந்த பொழில்கள் சூழ்ந்த இடைமருதில் உறையும் சிவபிரானை, அருள்நலம் மிகுந்த ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய பயன்மிகு தமிழ்ப் பாடல்களாலியன்ற ,

இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதி வழிபட வல்லவர் உலகில் நிறைந்து விளங்கும் புகழ்கள் அனைத்தையும் பெற்று ஓங்கி வாழ்வர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(111)
திருக்கடைமுடி - வியாழக்குறிஞ்சி

(1196)
அருத்தனை, அறவனை, அமுதனை, நீர்

விருத்தனை, பாலனை, வினவுதிரேல்,

ஒருத்தனை, அல்லது இங்கு உலகம் ஏத்தும்

கருத்தவன், வள நகர் கடைமுடியே.

வேதப் பொருளாய் விளங்குபவனும், அறவடிவினனும், அமுதம்போல இனியவனும், மூத்தவனும், இளையோனும், உலக மக்கள் பலராலும் இவ்வொருவனையன்றித் துணையில்லை என்று கருதி வழிபடும் முடிந்த பொருளாயுள்ளவனும், ஆகிய பெருமான் எவ்விடத்தான் என நீர் வினவுவீராயின் அவன் எழுந்தருளிய வளநகர் கடைமுடி என்னும் தலமாகும். சென்று வழிபடுவீராக.

மேல்

(1197)
திரை பொரு திரு முடி திங்கள் விம்மும்

அரை பொரு புலி அதள் அடிகள் இடம்,

திரையொடு நுரை பொரு தெண் சுனை நீர்

கரை பொரு வள நகர் கடைமுடியே.

ஒளியால் விம்மித் தோன்றும் பிறைமதி, அலைகள் ஒன்றோடு ஒன்று மோதும் கங்கை ஆகியவற்றை உடைய திருமுடியை உடையவரும், இடையில் புலித்தோலைப் பொருந்த அணிந்தவருமாகிய அடிகள் எழுந்தருளிய இடம், அலைகளோடு நுரைகள் பொருந்திய தெளிந்த சுனைநீர் கரைகளில் வந்து மோதும் வளநகராகிய கடை முடியாகும்.

மேல்

(1198)
ஆல் இளமதியினொடு, அரவு, கங்கை,

கோல வெண் நீற்றனைத் தொழுது இறைஞ்சி,

ஏல நல்மலரொடு விரை கமழும்

காலன வள நகர் கடைமுடியே.

கல்லால மர நீழலில் இளமதி அரவு கங்கை ஆகியன சூடிய சடைமுடியுடனும், அழகிய திருவெண்ணீற்றுடனும், நறுமலர் ஆகியனவற்றால் மணம் பொருத்தமாகக் கமழும் திருவடிகளை உடையவனாக விளங்கும் இறைவனைத் தொழுது இறைஞ்சுதற்குரிய வளநகராக விளங்குவது கடைமுடியாகும்.

மேல்

(1199)
கொய் அணி நறுமலர்க் கொன்றை அம்தார்

மை அணி மிடறு உடை மறையவன் ஊர்,

பை அணி அரவொடு மான் மழுவாள்

கை அணிபவன் இடம் கடைமுடியே.

கொய்யப் பெற்ற அழகிய மணம் கமழும் கொன்றை மலர்மாலை அணிந்தவனாய் விடம் பொருந்திய கண்டத்தை உடையவனாய், படம் பொருந்திய பாம்பையும், மான் மழு வாள் ஆகியவற்றையும் கையின்கண் அணிந்தவனாய் விளங்கும் மறை முதல்வனது ஊர் கடைமுடியாகும்.

மேல்

(1200)
“மறை அவன், உலகு அவன், மாயம் அவன்,

பிறையவன், புனல் அவன், அனலும் அவன்,

இறையவன்” என உலகு ஏத்தும் கண்டம்-

கறையவன் வள நகர் கடைமுடியே.

வேதங்களை அருளியவனும், அனைத்துலகங்களும் ஆகியவனும், மாயை வடிவினனும், சடைமுடியில் பிறை கங்கை ஆகியவற்றை அணிந்தவனும், கையில் அனல் ஏந்தியவனும் உலக மக்கள் இறைவன் எனப் போற்றும் நீல கண்டனுமான சிவபிரானது வளநகர் கடைமுடியாகும்.

மேல்

(1201)
பட அரவு ஏர் அல்குல் பல்வளைக்கை

மடவரலாளை ஒர்பாகம் வைத்து,

குடதிசை மதி அது சூடு சென்னிக்

கடவுள் தன் வள நகர் கடைமுடியே.

அரவின் படம் போன்ற அழகிய அல்குலையும் பலவகையினவான வளையல்களை அணிந்த கைகளையும் உடைய உமை யம்மையை ஒரு பாகமாக வைத்து, மேற்குத் திசையில் தோன்றும் பிறை மதியைச் சூடிய சடைமுடியினனாய் விளங்கும் கடவுளின் வளநகர் கடைமுடியாகும்.

மேல்

(1202)
பொடி புல்கு மார்பினில் புரி புல்கு நூல்,

அடி புல்கு பைங்கழல், அடிகள் இடம்;

கொடி புல்கு மலரொடு குளிர் சுனை நீர்

கடி புல்கு வள நகர் கடைமுடியே.

திருநீறு அணிந்த மார்பின்கண் முறுக்கேறிய பூணூலை அணிந்தவராய், திருவடிகளில் பொருந்திய அழகிய கழல்களை உடையவராய் விளங்கும் அடிகள் இடம் கொடிகளில் பூத்த மலர்களோடு குளிர்ந்து சுனை நீரின் மணம் கமழும் வளநகராகிய கடை முடியாகும்.

மேல்

(1203)
நோதல் செய்து அரக்கனை, நோக்கு அழியச்

சாதல் செய்து, அவன், “அடி சரண்!” எனலும்,

ஆதரவு அருள் செய்த அடிகள் அவர்

காதல் செய் வள நகர் கடைமுடியே.

இராவணனைத் துன்புறுமாறு செய்து, அவன் மீது முதலில் கருணை நோக்கம் செய்யாமல் வலிமை காட்டிப்பின் அவன் திருவடியே சரண் எனக் கூறிய அளவில் அவனுக்கு ஆதரவு காட்டி அருள்செய்த அடிகளாகிய சிவபிரானார் விரும்பும் வளநகர் கடைமுடியாகும்.

மேல்

(1204)
அடி முடி காண்கிலர் ஓர் இருவர்

புடை புல்கி, “அருள்!” என்று போற்று இசைப்ப,

சடை இடைப் புனல் வைத்த சதுரன் இடம்

கடை முடி; அதன் அயல் காவிரியே.

அடிமுடி காணாதவராகிய திருமால் பிரமர் அருகிற்சென்று அருள்புரிக எனப் போற்றி செய்து வழிபடுமாறு, சடைமிசையே கங்கையை அணிந்த சதுரப்பாடுடைய சிவபிரானது இடமாக விளங்குவது காவிரியின் அயலிலே உள்ள கடைமுடியாகும்.

மேல்

(1205)
மண்ணுதல் பறித்தலும் மாயம் இவை;

எண்ணியகால், அவை இன்பம் அல்ல;

ஒண் நுதல் உமையை ஒர் பாகம் வைத்த

கண்ணுதல் வள நகர் கடைமுடியே.

நீரிற் பல கால் மூழ்கலும் மயிர் பறித்தலும் ஆகிய புத்த சமண விரத ஒழுக்கங்கள் பொய்யானவை; ஆராயுமிடத்து இவை இன்பம் தாரா. ஒளி பொருந்திய நுதலினளாகிய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டுள்ள கண்ணுதலோனின் வளநகர் கடைமுடியாகும்.

மேல்

(1206)
பொன் திகழ் காவிரிப் பொரு புனல் சீர்

சென்று அடை கடைமுடிச் சிவன் அடியை

நன்று உணர் ஞானசம்பந்தன் சொன்ன

இன்தமிழ் இவை சொல, இன்பம் ஆமே.

பொன்துகள் திகழும் காவிரியாற்றின் அலைகளின் நீர் முறையாகச் சென்று அடையும் கடைமுடியில் விளங்கும் சிவபிரான் திருவடிப் பெருமைகளை நன்குணர்ந்த ஞானசம்பந்தன் சொன்ன ,

இனிய தமிழாகிய இத்திருப்பதிகப் பாடல்களை ஓதி வழிபட இன்பம் ஆகும்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(112)
திருச்சிவபுரம் - வியாழக்குறிஞ்சி

(1207)
இன்குரல் இசை கெழும் யாழ் முரலத்

தன் கரம் மருவிய சதுரன் நகர்

பொன் கரை பொரு பழங்காவிரியின்

தென் கரை மருவிய சிவபுரமே.

இனிய ஒலியும் இசையும் பொருந்திய யாழ் முரலுமாறு தனது கரத்தின்கண்ணே அதனை ஏந்தி விளங்கும் சதுரனது நகர், அழகிய கரையினை மோதும் பழமையான காவிரியாற்றின் தென்கரையில் விளங்கும் சிவபுரமாகும்.

மேல்

(1208)
அன்று அடல் காலனைப் பாலனுக்கு ஆய்ப்

பொன்றிட உதை செய்த புனிதன் நகர்

வென்றி கொள் எயிற்று வெண்பன்றி முன்நாள்

சென்று அடி வீழ்தரு சிவபுரமே.

முற்காலத்தில் மார்க்கண்டேயன் பொருட்டு வலிய காலனைக் காலால் அழியுமாறு உதைத்தருளிய புனிதனதுநகர், தனது கோரைப் பல்லால் வெற்றி பெறும் வெள்ளைப் பன்றியாகத் திருவவதாரம் கொண்ட திருமால், முற்காலத்தில் வந்து திருவடியைப் பணிந்து வழிபாடு செய்த தலமாகிய சிவபுரமாகும்.

மேல்

(1209)
மலைமகள் மறுகிட, மதகரியைக்

கொலை மல்க உரிசெய்த குழகன் நகர்

அலை மல்கும் அரிசிலின் அதன் அயலே

சிலை மல்கு மதில் அணி சிவபுரமே.

மலைமகளாகிய பார்வதி தேவி அஞ்சுமாறு மதம் பொருந்திய யானையைக் கொன்று, அதன் தோலை உரித்துப் போர்த்த குழகனது நகர், அலைகள் நிரம்பிய அரிசிலாற்றின் கரையருகே விளங்குவதும் மலை போன்ற மதில்களை உடையதுமான சிவபுரமாகும்.

மேல்

(1210)
மண், புனல், அனலொடு, மாருதமும்,

விண், புனை மருவிய விகிர்தன் நகர்

பண் புனை குரல்வழி வண்டு கெண்டிச்

செண்பகம் அலர் பொழில் சிவபுரமே.

மண், புனல், அனல், காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களாய்ப் பொருந்தி விளங்கும் விகிர்தனது நகர், பண் பொருந்திய குரலோடு வண்டுகள் சூழ்ந்து கிளர மலரும் செண்பகப் பூக்களோடு கூடிய பொழில்கள் சூழ்ந்து சிவபுரமாகும்.

மேல்

(1211)
வீறு நன்கு உடையவள் மேனி பாகம்

கூறு நன்கு உடையவன் குளிர் நகர்தான்-

நாறு நன் குர விரி வண்டு கெண்டித்

தேறல் உண்டு எழுதரு சிவபுரமே.

அழகால் தனிப் பெருமை பெற்ற உமையம்மையைத் தன் திருமேனியின் ஒரு பாகமாக உடையவனாகிய சிவ பிரானது குளிர்ந்த நகரம், மணம் வீசும் நல்ல குராமலரை வண்டுகள் கிண்டித் தேனை உண்டு மகிழ்ந்து எழும் பொழில் சூழ்ந்த சிவபுரமாகும்.

மேல்

(1212)
மாறு எதிர்வரு திரிபுரம் எரித்து,

நீறு அது ஆக்கிய நிமலன் நகர்

நாறு உடை நடுபவர் உழவரொடும்

சேறு உடை வயல் அணி சிவபுரமே.

பகைமை உணர்வோடு மாறுபட்டுத் தன்னை எதிர்த்துவந்த அசுரர்களின் திரிபுரங்களை எரித்து நீறாக்கிய நிமலனது நகர், உழவர்களோடு நாற்றுநடும் மகளிர் பலரைக் கொண்ட சேற்று வளம் மிக்க வயல்களால் அழகு பெறுவதாகிய சிவபுரமாகும்.

மேல்

(1213)
ஆவில் ஐந்து அமர்ந்தவன் அரிவையொடு

மேவி நன்கு இருந்தது ஒர் வியல் நகர்தான்-

வில் வண்டு அமர்தரு பொய்கை அன்னச்-

சேவல் தன் பெடை புல்கு சிவபுரமே.

பகைமை உணர்வோடு மாறுபட்டுத் தன்னை எதிர்த்துவந்த அசுரர்களின் திரிபுரங்களை எரித்து நீறாக்கிய நிமலனது நகர், உழவர்களோடு நாற்றுநடும் மகளிர் பலரைக் கொண்ட சேற்று வளம் மிக்க வயல்களால் அழகு பெறுவதாகிய சிவபுரமாகும்.

மேல்

(1214)
எழில் மலை எடுத்த வல் இராவணன் தன்

முழுவலி அடக்கிய முதல்வன் நகர்

விழவினில் எடுத்த வெண்கொடி மிடைந்து,

செழு முகில் அடுக்கும் வண் சிவபுரமே.

அழகிய கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த வலிய இராவணனின் முழுமையான வல்லமையை அடக்கிய முதல்வனாகிய சிவபிரானது நகர், விழாக் காலங்களில் எடுக்கப்பட்ட வெண்மையான கொடிகள் நிறைந்து கரிய மேகங்களை நெருங்கிச் செறியும் வளமையான சிவபுரமாகும்.

மேல்

(1215)
சங்கு அளவிய கையன், சதுர்முகனும்,

அங்கு அளவு அறிவு அரியவன் நகர்தான்-

கங்குலும் பறவைகள் கமுகுதொறும்

செங்கனி நுகர்தரு சிவபுரமே.

சங்கேந்திய கையினனாகிய திருமாலும் நான்முகனும் முற்காலத்தில் அடிமுடி தேடி அளந்தறியப் பெறாத சிவபிரானது நகர், இரவிலும் பறவைகள், கமுக மரங்கள் தோறும் தங்கிச் செங்கனிகளை நுகரும் வளம் மிக்க சிவபுரமாகும்.

மேல்

(1216)
மண்டையின், குண்டிகை, மாசு தரும்,

மிண்டரை விலக்கிய விமலன் நகர்-

பண்டு அமர்தரு பழங்காவிரியின்

தெண்திரை பொருது எழு சிவபுரமே.

உண்கலன் குண்டிகை ஆகியனவற்றை ஏந்தியவராய், மாசேறிய உடலினராய்த் தருக்கொடு திரியும் சமணர்களை வெறுக்கும் சிவபிரானது நகர், பழமையான காலந்தொட்டே ஓடி வந்து வளம் சேர்க்கும் பழங்காவிரியின் அலைகள் வந்து பொருந்தும் சிவபுரமாகும்.

மேல்

(1217)
சிவன் உறைதரு, சிவபுரநகரைக்

கவுணியர் குலபதி காழியர்கோன்-

தவம் மல்கு தமிழ் இவை சொல்ல வல்லார்

நவமொடு சிவகதி நண்ணுவரே.

சிவபெருமான் எழுந்தருளிய சிவபுர நகரைப் போற்றிக் கவுணியர் குலபதியாகிய காழியர் தலைவன் ஞானசம்பந்தன் பாடிய தவத்தைத் தருவனவாகிய ,

இப்பதிகத் தமிழை ஓத வல்லவர் புதுமைகள் பலவும் பெற்று முடிவில் சிவகதி சேர்வர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(113)
திருவல்லம் - வியாழக்குறிஞ்சி

(1218)
எரித்தவன், முப்புரம் எரியில் மூழ்க;

தரித்தவன், கங்கையைத் தாழ்சடைமேல்;

விரித்தவன் வேதங்கள்; வேறுவேறு

தெரித்தவன், உறைவு இடம் திரு வல்லமே.

அவுணர்களின் முப்புரங்களையும் எரியில் மூழ்குமாறு செய்து அழித்தவனும், தாழ்ந்து தொங்கும் சடைமுடிமீது கங்கையைத் தரித்தவனும், வேதங்களை அருளிச் செய்தவனும், அவற்றின் பொருள்களை ஆறு அங்கங்களுடன் தெளியச் செய்தவனும் ஆகிய சிவபிரான் உறையும் இடம் திருவல்லமாகும்.

மேல்

(1219)
தாயவன் உலகுக்கு, தன் ஒப்பு இலாத்

தூயவன், தூ மதி சூடி, எல்லாம்

ஆயவன், அமரர்க்கும் முனிவர்கட்கும்

சேயவன், உறைவு இடம் திரு வல்லமே.

உலக உயிர்கட்குத் தாய் போன்றவனும், தனக்கு யாரையும் உவமை சொல்ல முடியாத தூயவனும், தூய மதியை முடியில் சூடியவனும், எல்லாப் பொருள்களுமாக ஆனவனும், போகிகள் ஆன அமரர், மானசீலரான முனிவர் முதலானோர்க்குச் சேயவனும் ஆன சிவபிரானது உறைவிடம் திருவல்லமாகும்.

மேல்

(1220)
பார்த்தவன், காமனைப் பண்பு அழிய;

போர்த்தவன், போதகத்தின் உரிவை;

ஆர்த்தவன் நான்முகன் தலையை, அன்று

சேர்த்தவன்; உறைவு இடம் திரு வல்லமே.

மன்மதனின் அழகு கெடுமாறு நெற்றி விழியால் பார்த்து அவனை எரித்தவனும், யானையின் தோலை உரித்துப் போர்த்தவனும், தன்முனைப்போடு ஆரவாரித்த பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்து அத்தலையினது ஓட்டைக் கையில் உண்கலன் ஆகச் சேர்த்துள்ளவனும் ஆகிய சிவபிரானது உறைவிடம் திருவல்லமாகும்.

மேல்

(1221)
கொய்த அம் மலர் அடி கூடுவார் தம்-

மை, தவழ் திருமகள் வணங்க வைத்து,

பெய்தவன், பெரு மழை; உலகம் உய்யச்

செய்தவன்; உறைவு இடம் திரு வல்லமே.

அன்பர்களால் கொய்து அணியப்பெற்ற அழகிய மலர் பொருந்திய திருவடிகளைச் சேர்பவர்களைப் பலரிடத்தும் மாறி மாறிச் செல்லும் இயல்பினளாகிய திருமகளை வணங்குமாறு செய்விப்பவனும், பெருமழை பெய்வித்து உலகை உய்யுமாறு செய்பவனுமாய சிவபிரானது உறைவிடம் திருவல்லமாகும்.

மேல்

(1222)
சார்ந்தவர்க்கு இன்பங்கள் தழைக்கும் வண்ணம்

நேர்ந்தவன்; நேரிழையோடும் கூடி,

தேர்ந்தவர் தேடுவார் தேடச் செய்தே

சேர்ந்தவன்; உறைவு இடம் திரு வல்லமே.

தன்னைச் சார்ந்தவர்கட்கு இன்பங்கள் தழைக்குமாறு நேரிய அணிகலன்களைப் பூண்டுள்ள உமையம்மையாரோடு அருள் வழங்க இசைந்துள்ளவனும் தன்னைச் சேர்ந்த சிவஞானியர்க்கும் பிறவாறு தேடுபவர்க்கும் அவர்களைத் தேடுமாறு செய்து அவர்கட்கு உள்ளிருந்து அருள் செய்பவனுமாகிய சிவபெருமானது உறைவிடம் திருவல்லமாகும்.

மேல்

(1223)
பதைத்து எழு காலனைப் பாதம் ஒன்றால்

உதைத்து, எழு மா முனிக்கு உண்மை நின்று,

விதிர்த்து எழு தக்கன் தன் வேள்வி அன்று

சிதைத்தவன் உறைவு இடம் திரு வல்லமே.

சினந்து வந்த எமனை இடக்காலால் உதைத்துத் தன்னை வணங்கி எழுந்த மார்க்கண்டேயனுக்கு உண்மைப் பொருளாய் எதிர்நின்று அருள் செய்தவனும், விதிர்த்தெழு கோபத்தால் படபடத்துத் திட்டமிட்டுச் செயற்பட்ட தக்கனது வேள்வியை முற்காலத்தில் சிதைத்தவனும் ஆகிய சிவபிரானது இடம் திருவல்லமாகும்.

மேல்

(1224)
இகழ்ந்து அரு வரையினை எடுக்கல் உற்று, ஆங்கு

அகழ்ந்த வல் அரக்கனை அடர்த்த பாதம்

நிகழ்ந்தவர், நேடுவார், நேடச் செய்தே

திகழ்ந்தவன் உறைவு இடம் திரு வல்லமே.

இகழ்ந்து அரிய கயிலை மலையை எடுத்து அப்புறப்படுத்தற் பொருட்டு அகழ்ந்த வலிய இராவணனை அடர்த்த திருவடியை உடையவனும், அத்திருவடியையே நிகழ் பொருளாகக் கொண்ட அன்பர்கள் தேடி வருந்திய அளவில் அவர்கள் உள்ளத்திலேயே திகழ்ந்து விளங்குபவனும் ஆகிய சிவபிரான் உறையுமிடம் திருவல்லமாகும்.

மேல்

(1225)
பெரியவன்; சிறியவர் சிந்தைசெய்ய

அரியவன்; அருமறை அங்கம் ஆனான்;

கரியவன், நான்முகன், காண ஒண்ணாத்

தெரியவன்; உறைவு இடம் திரு வல்லமே.

எல்லோரினும் பெரியவனும், அறிவிற் சிறியவர்கள் சிந்தித்து உணர்தற்கு அரியவனும், அரிய வேதங்களும் அவற்றின் அங்கங்களும் ஆனவனும், திருமால் பிரமர்கள் காண ஒண்ணாதவனாய் அன்பிற் சிறந்தார்க்குத் தெரிய நிற்பவனும் ஆன சிவபிரானது வளநகர் திருவல்லமாகும்.

மேல்

(1226)
அன்றிய அமணர்கள், சாக்கியர்கள்,

குன்றிய அற கூறா வண்ணம்

வென்றவன், புலன் ஐந்தும்; விளங்க எங்கும்

சென்றவன்; உறைவு இடம் திரு வல்லமே.

கொள்கைகளால் மாறுபட்ட சமணர்களும் புத்தர்களும் அறம் குன்றிய உரைகளைக் கூறாவாறு, ஐம்புலன்களையும் வென்றவனும், எங்கும் விளங்கித் தோன்றுபவனும் ஆகிய சிவபிரான் உறைவிடம் திருவல்லமாகும்.

மேல்

(1227)
கற்றவர் திரு வல்லம் கண்டு சென்று,

நல்-தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன

குற்றம் இல் செந்தமிழ் கூற வல்லார்

பற்றுவர், ஈசன் பொன்பாதங்களே.

கற்றவர்கள் வாழும் திருவல்லத்தைத் தரிசித்துச் சென்று நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தன் பாடிய,

குற்றமற்ற இச்செந்தமிழ்ப் பதிகத்தைக் கூற வல்லவர்கள் சிவபிரானுடைய அழகிய திருவடிகளை அடைவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(114)
திருமாற்பேறு - வியாழக்குறிஞ்சி

(1228)
குருந்து அவன், குருகு அவன், கூர்மை அவன்,

பெருந்தகை, பெண் அவன், ஆணும் அவன்,

கருந்தட மலர்க்கண்ணி காதல் செய்யும்

மருந்து அவன், வள நகர் மாற்பேறே.

குருத்தாக, தளிராக, மொட்டு, காய் ஆதியனவாக விளங்குபவனும், பெருந்தகையாய்ப் பெண் ஆண் வடிவோடு விளங்குபவனும், தடாகத்தில் பூக்கும் கருநீல மலர் போன்ற கண்களை உடைய உமையம்மையால் விரும்பப்படுபவனும்; அரிய மருந்தாய் விளங்குபவனும் ஆகிய சிவபெருமானது வளநகர் மாற்பேறு.

மேல்

(1229)
பாறு அணி வெண்தலை கையில் ஏந்தி,

வேறு அணி பலி கொளும் வேட்கையனாய்,

நீறு அணிந்து, உமை ஒருபாகம் வைத்த

மாறு இலி வள நகர் மாற்பேறே.

பருந்தால் நெருங்கப்பட்ட புலால் நீங்கிய அழகிய வெள்ளிய தலையோட்டைக் கையில் ஏந்தி, உலகியலில் வேறுபட்ட அழகுடன் சென்று பலியேற்கும் வேட்கையனாய் மேனி முழுதும் நீறுபூசி உமையம்மையை ஒருபாகமாக வைத்துள்ளவனும், தனக்கு ஒப்பு இல்லாதவனும் ஆகிய சிவபிரானது வளநகர், மாற்பேறு.

மேல்

(1230)
கரு உடையார் உலகங்கள் வேவ,

செரு விடை ஏறி முன் சென்று நின்று,

உரு உடையாள் உமையாளும் தானும்

மருவிய வள நகர் மாற்பேறே.

பிறப்புடைய ஆன்மாக்களுக்குப் படைக்கப் பட்ட உலகங்களை ஊழிக் காலத்தில் அழியுமாறு செய்பவனும், போரில் வல்ல விடைமீது ஏறிவருபவனும் ஆகிய சிவபிரான் மணம் புரிந்த அழகிய இடையினை உடைய உமையாளும் தானுமாய்ச் சென்று நின்று பொருந்தி விளங்கும் வளநகர் மாற்பேறாகும்.

மேல்

(1231)
தலையவன், தலை அணிமாலை பூண்டு

கொலை நவில் கூற்றினைக் கொன்று உகந்தான்,

கலை நவின்றான், கயிலாயம் என்னும்

மலையவன், வள நகர் மாற்பேறே.

எல்லோரினும் மேம்பட்டவனும், அழகிய தலைமாலையைப் பூண்டு உயிரைக் கொல்லும் விருப்பொடுவந்த கூற்றுவனைக் கொன்று மகிழ்ந்தவனும், பல கலைகளையும் உலகிற்கு அருளியவனும், கயிலாய மலையாளனுமாகிய சிவபிரானது வளநகர் மாற்பேறாகும்.

மேல்

(1232)
துறை அவன், தொழிலவன், தொல் உயிர்க்கும்

பிறை அணி சடை முடிப் பெண் ஓர்பாகன்,

கறை அணி மிடற்று அண்ணல், காலன் செற்ற

மறையவன், வள நகர் மாற்பேறே.

பல்வேறு நெறிகளாய் விளங்குபவனும், பழமையாக வரும் உயிர்களின் பொருட்டு ஐந்தொழில்களைப் புரிபவனும், பிறையணிந்த சடைமுடியனும், உமை நங்கையை ஒருபாகமாகக் கொண்டவனும், விடக்கறை பொருந்திய மிடற்றினை உடைய தலைமையாளனும், காலனைச் செற்றுகந்த மறையவனுமான சிவபிரானது வளநகர், மாற்பேறாகும்.

மேல்

(1233)
பெண்ணின் நல்லாளை ஓர்பாகம் வைத்துக்

கண்ணினால் காமனைக் காய்ந்தவன்தன்,

விண்ணவர் தானவர் முனிவரொடு

மண்ணவர் வணங்கும், நல் மாற்பேறே.

பெண்களிற் பேரழகினளாகிய உமையம்மையை ஒரு பாகமாக வைத்திருந்தும் தனது நெற்றிக் கண்ணால் காமனை நீறாக்கி அழித்தவனும், தேவர்கள், அசுரர்கள் முனிவர்கள், மண்ணுலக மக்கள் ஆகியோரால் வணங்கப் பெறுபவனுமாய சிவபிரானது வளநகர், மாற்பேறாகும்.

மேல்

(1234)
தீது இலா மலை எடுத்த அரக்கன்

நீதியால் வேத கீதங்கள் பாட,

ஆதியான் ஆகிய அண்ணல், எங்கள்

மாதி தன் வள நகர் மாற்பேறே.

குற்றமற்ற கயிலை மலையைப் பெயர்த்த அரக்கனாகிய இராவணனை முதலில் கால்விரலால் அடர்த்துப் பின் அவன் பிழை உணர்ந்து முறையோடு வேத கீதங்களைப் பாட அருள்புரிந்த ஆதியானாகிய அண்ணலும் மாதினை இடப்பாகமாக உடைய எங்கள் தலைவனுமாய சிவபிரானது வளநகர், மாற்பேறாகும்.

மேல்

(1235)
செய்ய தண் தாமரைக் கண்ணனொடும்

கொய் அணி நறுமலர் மேல் அயனும்

ஐயன் நன் சேவடி அதனை உள்க,

மையல் செய் வள நகர் மாற்பேறே.

சிவந்த தண் தாமரை மலர் போன்ற கண்களை உடைய திருமாலும், கொய்து அணியத்தக்க தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனும், தலைவனாகிய சிவபிரானின் சேவடிகளை விருப்போடு நினைந்து வழிபட அருள்புரியும் சிவபிரான் எழுந்தருளிய வளநகர், மாற்பேறாகும்.

மேல்

(1236)
குளித்து உணா அமணர், குண்டு ஆக்கர், என்றும்

களித்து நன் கழல் அடி காணல் உறார்;

முளைத்த வெண்மதியினொடு அரவம் சென்னி

வளைத்தவன் வள நகர் மாற்பேறே.

குளித்துப்பின் உண்ணாத இயல்பினராகிய அமணர்களும், பருத்த உடலினராகிய புத்தர்களும், களிப்போடு சிவபிரான் திருவடிகளைக் காணப் பெறார். ஒரு கலைப் பிறையாக முளைத்த வெள்ளிய பிறை மதியையும் பாம்பையும் முடிமீது சூடியவனாகிய சிவபிரானது வளநகர், மாற்பேறாகும்.

மேல்

(1237)
அந்தம் இல் ஞானசம்பந்தன் நல்ல

செந்து இசை பாடல் செய் மாற்பேற்றைச்

சந்தம் இன் தமிழ்கள் கொண்டு ஏத்த வல்லார்

எந்தை தன் கழல் அடி எய்துவரே.

ஞானசம்பந்தன் செவ்விய இசையால் பாடிப் போற்றிய மாற்பேற்றைத் தரிசித்துச் சந்த இசையோடு கூடிய அழிவற்ற ,

இனிய இத்திருப்பதிகப் பாடல்களைக் கொண்டு ஏத்தி வழிபட வல்லவர் எந்தையாகிய சிவபிரானின் கழலணிந்த திருவடிகளை எய்துவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(115)
திருஇராமன்நந்தீச்சுரம் - வியாழக்குறிஞ்சி

(1238)
சங்கு ஒளிர் முன் கையர் தம் இடையே

அங்கு இடு பலி கொளுமவன், கோபப்

பொங்கு அரவு ஆடலோன், புவனி ஓங்க

எங்கும் மன், இராமன் நந்தீச்சுரமே.

சங்கு வளையல்கள் அணிந்த முன்கைகளை உடைய முனி பன்னியர் வாழும் வீதிகளிடையே சென்று அங்கு அவர்கள் இடும் பலியை மகிழ்வோடு கொள்பவனும், சினம் பொங்கும் அரவைப் பிடித்து ஆட்டுபவனும், உலக மக்கள் உயர்வுபெற எங்கும் நிறைந்திருப்பவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.

மேல்

(1239)
சந்த நல்மலர் அணி தாழ்சடையன்,

தந்த மதத்தவன் தாதையோ தான்,

அந்தம் இல் பாடலோன், அழகன், நல்ல

எம் தவன், இராமன் நந்தீச்சுரமே.

அழகிய நல்ல மலர்களை அணிந்து தாழ்ந்து தொங்கும் சடையினை உடையவனும், தந்தத்தையும் மதத்தையும் உடைய விநாயகப் பெருமானின் தந்தையும், முடிவற்ற இசைப்பாடல்களைப் பாடுபவனும், அழகனும், எங்கள் தவப்பேறாய் விளங்கும் நல்லவனுமாய சிவபிரானது தலம், இராமனதீச்சரம்.

மேல்

(1240)
தழை மயில் ஏறவன் தாதையோ தான்,

மழை பொதி சடையவன், மன்னு காதில்

குழை அது விலங்கிய கோல மார்பின்

இழையவன், இராமன் நந்தீச்சுரமே.

தழைத்த பீலியோடு கூடிய மயில்மீது ஏறிவரும் முருகனது தந்தையும். உலகிற்கு நீர்வளந்தரும் கங்கை பாயும் சடையினை உடையவனும், காதில் நிலைபெற்று விளங்கும் குழையை அணிந்தவனும், அழகிய மார்பில் குறுக்காக முப்புரிநூல் அணிந்தவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.

மேல்

(1241)
சத்தியுள் ஆதி ஓர் தையல் பங்கன்,

முத்தி அது ஆகிய மூர்த்தியோ தான்,

அத்திய கையினில் அழகு சூலம்

வைத்தவன், இராமன் நந்தீச்சுரமே.

சத்திகளில் முதல்வியாக விளங்கும் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனும், உயிர்கட்கு முத்திப்பேறாக விளங்கும் கடவுளும், தீயேந்திய கையில் அழகிய சூலத்தைத் தாங்கியவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.

மேல்

(1242)
தாழ்ந்த குழல் சடைமுடி அதன்மேல்-

தோய்ந்த இளம்பிறை துளங்கு சென்னிப்

பாய்ந்த கங்கையொடு பட அரவம்

ஏய்ந்தவந்-இராமன் நந்தீச்சுரமே.

தலையில், தாழ்ந்த கூந்தலால் இயன்ற சடை முடியின்மேல், அழகு தோய்ந்த இளம்பிறை, பாய்ந்துவரும் கங்கை, படம் பொருந்திய அரவம் ஆகியவற்றைச் சூடிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.

மேல்

(1243)
சரிகுழல் இலங்கிய தையல் காணும்

பெரியவன், காளிதன் பெரிய கூத்தை

அரியவன், ஆடலோன், அங்கை ஏந்தும்

எரியவன், இராமன் நந்தீச்சுரமே.

பிடரியின்மேல் விளங்கும் சுருண்ட கூந்தலினளாகிய உமையம்மை அருகிலிருந்து காணும் பெரியவனும், காளியின் பெரிய கூத்தோடு போட்டியிட்டு அவளால் அறிதற்கு அரியவனாய், நடனமாடுபவனும், அழகிய கையில் எரி ஏந்தி விளங்குபவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.

மேல்

(1244)
மாறு இலா மாது ஒருபங்கன், மேனி

நீறு அது ஆடலோன், நீள்சடைமேல்

ஆறு அது சூடுவான், அழகன், விடை

ஏறவன், இராமன் நந்தீச்சுரமே.

தனக்கு ஒப்பாரில்லாத அழகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனும், திருமேனியில் திருநீற்றை அணிந்தவனும், நீண்ட சடைமுடியின்மேல் கங்கையைச் சூடியவனும் அழகனும், விடையின்மேல் ஏறி வருபவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.

மேல்

(1245)
தடவரை அரக்கனைத் தலை நெரித்தோன்,

பட அரவு ஆட்டிய படர் சடையன்,

நடம் அது ஆடலான், நால்மறைக்கும்

இடமவன், இராமன் நந்தீச்சுரமே.

பெரிய கயிலை மலையால் இராவணனின் தலையை நெரித்தவனும், படம் பொருந்திய பாம்பை ஆட்டி மகிழ்பவனும், விரிந்த சடைமுடியை உடையவனும், நடனம் புரிபவனும், நான்கு வேதங்கட்கும் இடமாக விளங்குபவனும் ஆகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.

மேல்

(1246)
தனம் அணி தையல் தன் பாகன் தன்னை,

அனம் அணி அயன் அணிமுடியும் காணான்;

பன மணி அரவு அரி பாதம் காணான்;

இன மணி இராமன் நந்தீச்சுரமே.

அழகிய தனபாரங்களையுடைய உமையம்மையின் கேள்வனும், அன்னமாகத் தன்னை மாற்றிக் கொண்டு, அழகிய முடியைக் காணாது திரும்பிய நான்முகன், திருவடியைக் காணாத, படங்களில் மணிகளையுடைய ஆதிசேடனாகிய அணையில் துயிலும் திருமால் ஆகியோர் வணங்க அருள் புரிந்தவனுமாகிய சிவபிரானது தலம் பல்வகையான மணிக்குவைகளையுடைய இராமனதீச்சரம் ஆகும்.

மேல்

(1247)
தறி போல் ஆம் சமணர் சாக்கியர் சொல் கொளேல்!.

அறிவோர் அரன் நாமம் அறிந்து மின்!.

மறி கையோன், தன் முடி மணி ஆர் கங்கை

எறியவன், இராமன் நந்தீச்சுரமே.

மரத்தால் இயன்ற தடிபோன்ற அறிவற்ற சமண புத்தருடைய சொற்களைக் கேளாதீர். மெய்ஞ்ஞானியர்கள் வாயினால் இறைவன் திருப்பெயரை அறிந்து சொல்வீர்களாக. அப்பெருமான் மான் இளங்கன்றை ஏந்திய கையனாய்த் தனது முடியில், மணிகளோடு கூடிய கங்கை நதி அலை, மோதுபவனாய், இராமனதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான். சென்று வழிபடுக.

மேல்

(1248)
தேன் மலர்க் கொன்றை யோன்... .

தேன் பொருந்திய கொன்றை மாலையைச் சூடியவன்,

இராமனதீச்சரத்தில் எழுந்தருளியுள்ள இறைவனை சென்று வழிபடுக.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(116)
பொது - திருநீலகண்டம்

(1249)
“அவ் வினைக்கு இவ் வினை ஆம்” என்று சொல்லும் அஃது அறிவீர்!

உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே?

கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும், நாம் அடியோம்;

செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்!.

‘நாம் முற்பிறவிகளிற் செய்த வினைகளுக்கேற்பவே, இப்பிறவியில் வினைகளைச் செய்து அவற்றாலாய பயன்களை நுகர்கிறோம்‘ என்று சொல்லப் பெறுவதை நீங்கள் அறிவீர்கள். இவற்றிலிருந்து விடுதிபெறும் வழியை நீவிர் தேடாதிருப்பது உமக்குக் குறையன்றோ? நாம் அனைவரும் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம். அவ்விறைவனை நோக்கிச் சரியை, கிரியை முதலான சிவப்பணிகளைச் செய்து அவ்விறைவன் கழலைப் போற்றுவோம். அவ்வாறு செய்யின் நாம் செய்த பழவினைகள் நம்மை வந்து அணுகா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.

மேல்

(1250)
காவினை இட்டும், குளம்பல தொட்டும், கனி மனத்தால்,

“ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர்” என்று, இருபொழுதும்,

வினைக் கொய்து, மலர் அடி போற்றுதும், நாம் அடியோம்;

தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்!.

நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? நந்தவனம் சோலை முதலியவற்றை வளர்த்தும் குளங்கள் பல தோண்டியும் நல்லறங்கள் பலவற்றைச் செய்து, கனிந்த மனத்தோடு ‘கணையொன்றால் முப்புரங்களை எரித்தவனே‘ என்று காலை மாலை இருபொழுதும் பூக்களைக் கொய்து வந்து அணிவித்துச் சிவபிரானுடைய மலர்போலும் திருவடிகளைப் போற்றுவோம். அவ்வாறு செய்யின் கொடிய பழவினைகள் நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை.

மேல்

(1251)
முலைத்தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம்,

விலைத்தலை ஆவணம் கொண்டு எமை ஆண்ட விரிசடையீர்!.

இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்!.

சிலைத்து எமைத் தீவினை தீண்டப்பெறா; திரு நீலகண்டம்!.

நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அவ்விறைவனை நோக்கி மகளிர் இன்பத்தில் திளைத்து மகிழ்தல் முதலான உலக நுகர்வுகள் எல்லாம் நம்மை விலையாகக் கொண்டு, அலைக்காதவாறு சிவபெருமானாரை ‘எம்மை ஆட்கொண்டருளிய விரிந்த சடையை உடையவரே‘ முத்தலைச் சூலம், தண்டாயுதம், மழு முதலியவற்றைப் படைக்கலங்களாக உடையவரே! எனப் போற்றுவோமாயின், பழைய தீவினைகள் ஆரவாரித்து வந்து நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை.

மேல்

(1252)
விண்ணுலகு ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும்,

“புண்ணியர்” என்று இரு போதும் தொழப்படும் புண்ணியரே!.

கண் இமையாதன மூன்று உடையீர்! உம் கழல் அடைந்தோம்;

திண்ணிய தீவினை தீண்டப்பெறா; திரு நீலகண்டம்!.

நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அவ்விறைவனை நோக்கி, விண்ணுலகை ஆளுகின்ற வித்யாதரர்களும், வேதியர்களும் ‘புண்ணிய வடிவமானவர்‘ என்று காலை மாலை இருபோதும் துதித்துத் தொழப்படும் புண்ணியரே. இமையாத முக்கண்களை உடையவரே! உம் திருவடிகளைப் புகலாக அடைந்தோம் எனப் போற்றுவோமாயின் பழையதான வலிய தீவினைகள் நம்மை வந்து தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.

மேல்

(1253)
மற்று இணை இல்லா மலை திரண்டன்ன திண்தோள் உடையீர்!.

கிற்று எமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மைகொல்லோ?

சொல்-துணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்;

செற்று எமைத் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!.

நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அப்பெருமானை நோக்கி ஒப்பற்ற மலைபோல் திரண்ட தி்ண்மையான தோள்களை உடையவரே!. எம்மைப் பெருவலிமை கொண்டு ஆட்கொண்டும் சிறிதேனும் எம்குறையைக் கேளாதொழிவது உமது பெருமைக்கு ஏற்புடையதாமோ?. இல்லற வாழ்க்கைக்குச் சொல்லப்படும் எல்லாத் துணைகளையும் விடுத்து உம் திருவடிகளையே சரணாக அடைந்தோம் எனப் போற்றுவோமாயின், நாம் முற்பிறவியில் செய்த தீவினைகள் பெருவலிமை கொண்டு வருத்தி நம்மை வந்து அடையமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.

மேல்

(1254)
மறக்கும் மனத்தினை மாற்றி, எம் ஆவியை வற்புறுத்தி,

பிறப்பு இல் பெருமான் திருந்து அடிக்கீழ்ப் பிழையாத வண்ணம்,

பறித்த மலர் கொடுவந்து, உமை ஏத்தும் பணி அடியோம்;

சிறப்பு இலித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!.

நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அவ்விறைவனை நோக்கி மறக்கும் இயல்பை உடைய நம் மனத்தை மாற்றி மலமறைப்பால் தடுமாறும் உயிரை வற்புறுத்திப் பிறப்பற்ற பெருமானாகிய அச்சிவபெருமானுடைய அழகிய திருவடியின் கீழ் தவறாதவாறு மனத்தை நிறுத்தி அப்பொழுது பறித்த மலர்களைக்கொண்டு பூசித்து ‘உம்மை ஏத்தும் பணியை உடைய அடியவர் நாங்கள்’ எனக் கூறி வழிபட்டுவரின் சிறப்பற்ற தீய பழவினைகள் நம்மைத் தீண்ட மாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.

மேல்

(1255)
கருவைக் கழித்திட்டு, வாழ்க்கை கடிந்து, உம் கழல் அடிக்கே

உருகி, மலர் கொடுவந்து, உமை ஏத்துதும், நாம் அடியோம்;

செரு இல் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள்செய்தவரே!.

திரு இலித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!.

நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ! பிறவியை அறுத்து உலக வாழ்க்கையை வெறுத்து அவன் திருவடிக்கண் நல்லமலர்களைக் கொண்டு அருச்சித்துப் போற்றித் ‘தன்னை எதிர்ப்பாரில்லாத வலிய இராவணனைப் பலரும் போற்ற அடர்த்துப்பின் அருள் செய்த பெருமானே! என உருகிப் போற்றுவோமாயின் சிவனடிவழுத்தும் செல்வத்தைப் போக்கும் இந்தப் பழைய தீவினைகள் நம்மை வந்து தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.

மேல்

(1256)
நாற்றமலர் மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து,

தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வு அரியீர்!.

தோற்றினும் தோற்றும், தொழுது வணங்குதும், நாம் அடியோம்;

சீற்ற அது ஆம் வினை தீண்டப் பெறா; திரு நீலகண்டம்!.

நாம் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அப்பெருமானை நோக்கி, மணங்கமழும் தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகனும், திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாது செய்தபோது, அவர்கட்கு எதிரே கட்புலனாகத் தோன்றி, அவர்களால் அடியும் முடியும் அறியப்பெறாத் தன்மையை உடையவரே!, என்று அழைத்து, நாம் காணத்தோன்றுதலையும் செய்யும் அவ்விறைவனை நாம் தொழுது வணங்குவோம். அவ்வாறு வழிபடின், சினந்துவரும் பழவினைகள் நம்மைத் தீண்டமாட்டா. இது திரு நீலகண்டத்தின்மேல் ஆணை.

மேல்

(1257)
சாக்கியப்பட்டும், சமண் உரு ஆகி உடை ஒழிந்தும்,

பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றுவிட்டார்;

க்கமழ் கொன்றைப் புரிசடையீர்! அடி போற்றுகின்றோம்;

தீக்குழித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!.

நாம் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? சிலர் புத்த மதத்தைச் சார்ந்தும், சமண சமயத்தைச் சார்ந்து ஆடையின்றித் திரிந்தும் சிவபிரானை வணங்கும் பாக்கியமின்றி இம்மை மறுமை இன்பங்களையும் அவற்றைப் பெறும் பற்றையும் விட்டுப் பயனற்றவராயினர். நாம் அவ்விறைவனை நோக்கிக் கொன்றை மலர் மணக்கும் சடையை உடையவரே! உம் திருவடிகளைப் போற்றுகின்றோம் எனக் கூறிச் செயற்படின் தீக்குழி போலக் கனலும் பழைய தீவினைகள் நம்மைத் தீண்ட மாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.

மேல்

(1258)
பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல் அடைவான்,

இறந்த பிறவி உண்டாகில், இமையவர்கோன் அடிக்கண்

திறம் பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்

நிறைந்த உலகினில் வானவர்கோனொடும் கூடுவரே.

மக்கட் பிறப்பெடுத்த இப்பிறவியிலேயே சிவ பிரான் திருவடிகளை விரும்பி வழிபடின் முத்திப்பேறு அடையலாம். மீண்டும் பழவினைகளால் பிறப்பு உளதாயின், தேவர்களின் தலைவனாகிய சிவபிரான் திருவடிகளின் பெருமைகளை அறிந்த ஞானசம்பந்தன் அருளிய ,

இத்திருப்பதிகச் செந்தமிழ்ப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்களாயின், அவர்கள் இமையவர்கள் நிறைந்த வானுலகில் அவ்வானவர் கோனொடும் கூடி மகிழும் பதவியைப் பெற்று இன்புறுவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(117)
திருப்பிரமபுரம் - மொழிமாற்று - வியாழக்குறிஞ்சி

(1259)
காடு அது, அணிகலம் கார் அரவம், பதி; கால் அதனில்,-

தோடு அது அணிகுவர் சுந்தரக் காதினில்,-தூச் சிலம்பர்;

வேடு அது அணிவர், விசயற்கு, உருவம், வில்லும் கொடுப்பர்;

பீடு அது மணி மாடப் பிரமபுரத்து அரரே.

பெருமைபெற்ற மணிகள் இழைத்த மாட வீடுகளை உடைய பிரமபுரத்து அரனார் இடுகாட்டைப் பதியாகக் கொள்வர். கரிய அரவினை அணிகலனாகப் பூண்டவர். கால்களில் தூய சிலம்பை அணிந்தவர். அழகிய காதில் தோடணிந்தவர். வேட்டுவ உருவம் தாங்கி அருச்சுனனுக்குப் பாசுபதக் கணை அருளியவர்.

மேல்

(1260)
கற்றைச் சடையது, கங்கணம் முன்கையில்-திங்கள் கங்கை;

பற்றித்து, முப்புரம், பார் படைத்தோன் தலை, சுட்டது பண்டு;

எற்றித்து, பாம்பை அணிந்தது, கூற்றை; எழில் விளங்கும்

வெற்றிச் சிலைமதில் வேணுபுரத்து எங்கள் வேதியரே.

கருங்கல்லால் அழகு விளங்குவதாய் அமைக்கப்பட்ட வெற்றித் திருமதில் சூழ விளங்கும் வேணுபுரத்துள் உறையும் எங்கள் வேதியராகிய இறைவர் கற்றையான சடையின்கண் திங்களையும் கங்கையையும் கொண்டவர். முன்கையில் பாம்பைக் கங்கணமாக அணிந்தவர். கையில் உலகைப் படைத்த பிரமனது தலையோட்டை உண்கலமாகப் பற்றியிருப்பவர். முப்புரங்களைச் சுட்டெரித்தவர். முற்காலத்தில் மார்க்கண்டேயர் பொருட்டு எமனை உதைத்தவர். பாம்பை அணிகலனாகப் பூண்டவர்.

மேல்

(1261)
கூவிளம், கையது பேரி, சடைமுடிக் கூட்டத்தது;

தூ விளங்கும் பொடி, பூண்டது, பூசிற்று, துத்தி நாகம்;

ஏ விளங்கும் நுதல், ஆனையும், பாகம், உரித்தனர்; இன்

இளஞ் சோலைப் புகலியுள் மேவிய புண்ணியரே.

இனிய பூக்களை உடைய இளஞ்சோலைகளால் சூழப்பட்ட புகலியுள் மேவிய புண்ணியராகிய இறைவர், அடர்த்தியான சடைமுடியில் வில்வம் அணிந்தவர். கையில் பேரி என்னும் தோற் பறையை உடையவர். தூய்மையோடு விளங்கும் திருநீற்றுப் பொடியைப் பூசியவர். படப் பொறிகளோடு கூடிய நாகத்தைப் பூண்டவர். அம்பொடு கூடிய வில் போன்று வளைந்த நெற்றியை உடைய உமையம்மையை ஒரு பாகத்தே கொண்டவர். ஆனையை உரித்தவர்.

மேல்

(1262)
உரித்தது, பாம்பை உடல்மிசை இட்டது, ஓர் ஒண் களிற்றை;

எரித்தது, ஒர் ஆமையை இன்பு உறப் பூண்டது, முப்புரத்தை;

செருத்தது, சூலத்தை ஏந்திற்று, தக்கனை வேள்வி; பல்-நூல்

விரித்தவர் வாழ்தரு வேங்குருவில் வீற்றிருந்தவரே.

பல நூல்களைக் கற்றுணர்ந்து விரித்துரைக்கும் புலவர்கள் வாழும் வெங்குருவில் வீற்றிருக்கும் இறைவர் ஒப்பற்ற சிறந்த களிற்றை உரித்தவர். பாம்பைத் தம் திருமேனிமேல் அணிந்தவர். முப்புரங்களை எரித்தவர். ஆமையோட்டை மகிழ்வுறப் பூண்டவர். தக்கனை வேள்வியில் வெகுண்டவர். சூலத்தைக் கையில் ஏந்தியவர்.

மேல்

(1263)
கொட்டுவர், அக்கு அரை ஆர்ப்பது, தக்கை; குறுந்தாளன

இட்டுவர் தம், கலப்பு இலர், இன்புகழ், என்பு; உலவின்

மட்டு வரும் தழல், சூடுவர் மத்தமும், ஏந்துவர்; வான்

தொட்டு வரும் கொடித் தோணிபுரத்து உறை சுந்தரரே.

வானைத் தொடுமாறு உயர்ந்துள்ள கொடிகளைக் கொண்ட தோணிபுரச் சுந்தரராகிய இறைவர் தக்கை என்னும் வாத்தியத்தைக் கொட்டுபவர். இடையிலே சங்கு மணிகளைக் கட்டியவர். குறுகிய தாளை உடைய பூதகணங்களைக் கலத்தல் இல்லாதவர். இனிய புகழை ஈட்டுபவர். எலும்பையும், உலவுகின்ற இனிய தேன்மணம் வெளிப்படும் ஊமத்தம் பூவையும் சூடுபவர். தீயை ஏந்துபவர். ஈட்டுவர் - இட்டுவர் என எதுகை நோக்கிக் குறுகிற்று.

மேல்

(1264)
சாத்துவர், பாசம் தடக்கையில் ஏந்துவர், கோவணம்; தம்

கூத்து, அவர், கச்சுக் குலவி நின்று, ஆடுவர்; கொக்கு இறகும்,

பேர்த்தவர் பல்படை பேய் அவை, சூடுவர்; பேர் எழிலார்;

பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே.

தவமுனிவர்கள் பூக்களைத் தூவி, கைகளால் தொழும் பூந்தராய் என்ற தலத்தில் எழுந்தருளிய புண்ணிய வடிவினர், கோவணம் உடுத்தவர். நீண்ட கையில் பாசத்தை ஏந்தியவர். தமக்கே உரித்தான கூத்தினை உடையவர். கச்சணிந்து ஆடுபவர். கொக்கிறகு சூடுபவர். பல்வகைப் படைகளாகிய பேய்க் கணங்களை அடி பெயர்த்து ஆடல் செய்தவர். மிக்க அழகுடையவர்.

மேல்

(1265)
காலது, கங்கை கற்றைச் சடையுள்ளால், கழல் சிலம்பு;

மாலது, ஏந்தல் மழு அது, பாகம்; வளர் கொழுங் கோட்டு

ஆல் அது, ஊர்வர் அடல் ஏற்று, இருப்பர்; அணி மணி நீர்ச்

சேல் அது கண்ணி ஒர்பங்கர் சிரபுரம் மேயவரே.

அழகிய நீலமணியின் நிறத்தையும் சேல்மீன் போன்ற பிறழ்ச்சியையும் கொண்ட கண்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரும் சிரபுரத்தில் எழுந்தருளியவரும் ஆகிய சிவபிரான், கழலையும் சிலம்பையும் காலில் சூடியவர். கற்றைச் சடையில் கங்கையை உடையவர். திருமாலைப் பாகமாகக் கொண்டவர். மழுவை ஏந்தியவர். கொழுமையான கிளைகளைக் கொண்ட ஆலமரத்தின் கீழ் இருப்பவர். அடல் ஏற்றினை ஊர்பவர்.

மேல்

(1266)
நெருப்பு உரு, வெள்விடை, மேனியர், ஏறுவர்; நெற்றியின் கண்,

மருப்பு உருவன், கண்ணர், தாதையைக் காட்டுவர்; மா முருகன்

விருப்பு உறு, பாம்புக்கு மெய், தந்தையார்; விறல் மா தவர் வாழ்

பொருப்பு உறு மாளிகைத் தென் புறவத்து அணி புண்ணியரே.

வீரர்களாகிய மிக்க தவத்தினை உடைய தவமுனிவர்கள் வாழ்வதும் மலை போன்ற மாளிகைகளை உடையதுமான அழகிய புறவ நகருக்கு அணிசேர்க்கும் புண்ணியராகிய இறைவர் நெருப்புப் போலச் சிவந்த மேனியை உடையவர். வெண்மையான விடைமீது ஏறி வருபவர். நெற்றியின் கண், விழி உடையவர். தந்தத்தை உடையவராகிய விநாயகருக்குத் தந்தையாராவார். பாம்புக்குத் தம் மெய்யில் இடம் தந்து அதனைச் சூடுபவர். சிறப்புக்குரிய முருகனுக்கு உகப்பான தந்தையார் ஆவார்.

மேல்

(1267)
இலங்கைத் தலைவனை, ஏந்திற்று, இறுத்தது, இரலை; இல்-நாள்,

கலங்கிய கூற்று, உயிர் பெற்றது மாணி, குமை பெற்றது;

கலம் கிளர் மொந்தையின், ஆடுவர், கொட்டுவர், காட்டு அகத்து;

சலம் கிளர் வாழ் வயல் சண்பையுள் மேவிய தத்துவரே.

நீர் நிறைந்து விளங்கும் வயல்களை உடைய சண்பைப் பதியில் எழுந்தருளிய இறைவர் இலங்கைத் தலைவனாகிய இராவணனை நெரித்தவர். மானைக் கையில் ஏந்தியவர். கலக்கத் தோடு வந்த கூற்றுவனைக் குமைத்தவர். வாழ்நாள் முடிவுற்ற மார்க்கண்டேயருக்கு உயிர் கொடுத்துப் புது வாழ்வருளியவர். வாத்தியமாக இலங்கும் மொந்தை என்ற தோற்கருவியைக் கொட்டுபவர். இடு காட்டின்கண் ஆடுபவர்.

மேல்

(1268)
அடி இணை கண்டிலன், தாமரையோன், மால், முடி கண்டிலன்;

கொடி அணியும், புலி, ஏறு, உகந்து ஏறுவர், தோல் உடுப்பர்;

பிடி அணியும் நடையாள், வெற்பு இருப்பது, ஓர்கூறு உடையர்;

கடி அணியும் பொழில் காழியுள் மேய கறைக்கண்டரே.

மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த சீகாழிப்பதியுள் விளங்கும் கறைக் கண்டராகிய சிவபெருமானின் அடி இணைகளைத் திருமால் கண்டிலன். தாமரை மலரில் எழுந்தருளியுள்ள பிரமன்முடியைக் கண்டிலன். அவ்விறைவன் கொடிமிசை இலச்சினையாகவுள்ள ஏற்றினை உகந்து ஏறுவர். புலித்தோலை உடுத்தவர். பிடி போன்ற அழகிய நடையினை உடைய உமையம்மையை ஒரு கூறாகக் கொண்டவர். அவர் இருப்பதோ கயிலை மலையாகும்.

மேல்

(1269)
கையது, வெண்குழை காதது, சூலம்; அமணர் புத்தர்,

எய்துவர், தம்மை, அடியவர், எய்தார்; ஓர் ஏனக்கொம்பு,

மெய் திகழ் கோவணம், பூண்பது, உடுப்பது; மேதகைய

கொய்து அலர் பூம்பொழில் கொச்சையுள் மேவிய கொற்றவரே.

சிறந்தனவாய்க் கொய்யக் கொய்ய மலர்வனவாய அழகிய பொழில்கள் சூழ்ந்த கொச்சையுள் எழுந்தருளிய கொற்றவராகிய சிவபிரான் கையில் சூலமும் காதில் வெண்குழையும் கொண்டவர். அப்பெருமானை அமணர் புத்தர் எய்தார். அடியவர் எய்துவர். பன்றியின் கொம்பை அவர் திருமேனிமேல் விளங்கப் பூண்பவர், கோவணம் உடுத்தவர்.

மேல்

(1270)
கல் உயர் இஞ்சிக் கழுமலம் மேய கடவுள் தன்னை

நல் ஞானசம்பந்தன் ஞானத்தமிழ் நன்கு உணரச்

சொல்லிடல் கேட்டல் வல்லோர், தொல்லை வானவர் தங்களொடும்

செல்குவர்; சீர் அருளால் பெறல் ஆம் சிவலோகம் அதே.

உயர்ந்த மதில்களை உடைய கழுமலக் கோயிலுள் விளங்கும் கடவுளை நல்லுரைகளால் ஞானசம்பந்தன் பாடிய ,

ஞானத்தமிழை நன்குணர்ந்து சொல்லவும் கேட்கவும் வல்லவர் பழமையான தேவர்களோடும் அமருலகம் சென்று சிவலோகத்தைப் பெறுவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(118)
திருப்பருப்பதம் - வியாழக்குறிஞ்சி

(1271)
சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர அரைக்கு அசைத்தான்;

இடு மணி எழில் ஆனை ஏறலன், எருது ஏறி;

விடம் அணி மிடறு உடையான்; மேவிய நெடுங்கோட்டுப்

படு மணிவிடு சுடர் ஆர் பருப்பதம் பரவுதுமே.

மிக்க ஒளியைத் தரும் மாணிக்க மணியை உமிழும் பாம்பை இடையில் பொருந்தக் கட்டியவனும், இரு புறங்களிலும் மணிகள் தொங்கவிடப்பட்ட அழகிய யானையை ஊர்தியாகக் கொண்டு அதன்மிசை ஏறாது ஆனேற்றில் ஏறி வருபவனும், நஞ்சணிந்த மிடறுடையவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய நீண்ட சிகரங்களை உடையதும் ஆங்காங்கே தோன்றும் மணிகள் உமிழ்கின்ற ஒளியினை உடையதுமான திருப்பருப்பதத்தை நாம் பரவுவோம்.

மேல்

(1272)
நோய் புல்கு தோல் திரைய நரை வரு நுகர் உடம்பில்

நீ புல்கு தோற்றம் எல்லாம் நினை-உள்கு, மட நெஞ்சே!.

வாய் புல்கு தோத்திரத்தால், வலம்செய்து, தலைவணங்கி,

பாய் புலித்தோல் உடையான் பருப்பதம் பரவுதுமே.

அறியமையுள் மூழ்கித் திளைக்கும் நெஞ்சே! நீ போக நுகர்ச்சிக்குரிய இவ்வுடம்பில் இளமை முதல் மாறிவரும் தோற்ற மெல்லாவற்றையும், நோய்கள் தழுவும் தோல் சுருங்கி நரை தோன்றும் நிலையையும் நினைந்து சிந்திப்பாயாக. மூப்பு வருமுன் வாய் நிறைந்த தோத்திரங்களைப் பாடி, வலம் வந்து, தலையால் வணங்கிப் பாயும் புலியி்ன் தோலை உடுத்த பெருமான் எழுந்தருளிய திருப்பருப்பதத்தைப் பரவுவோம்; வருக.

மேல்

(1273)
துனி உறுதுயர் தீரத் தோன்றி ஓர் நல்வினையால்

இனி உறுபயன் ஆதல் இரண்டு உற மனம் வையேல்!.

கனி உறு மரம் ஏறிக் கருமுசுக் கழை உகளும்,

பனி உறு கதிர் மதியான், பருப்பதம் பரவுதுமே.

நெஞ்சே! வருத்தத்தைத் தரும் பிறவித் துயர்தீரத் தோன்றிய நீ, நல் வினைகள் செய்து அப்புண்ணியத்தால் தேவர் உலக இன்பங்களை நுகர்தல், வீடு பேறாகிய விழுமிய பயனை எய்துதல் ஆகிய இரண்டிலும் பற்றுக் கொள்ளாதே. கரிய குரங்குகள் கனி நிறைந்த மரத்தில் ஏறி அதனை விடுத்து மூங்கில் மரங்களில் தாவி உகளும், குளிர்ந்த ஒளியோடு கூடிய பிறைமதியைச் சூடிய சிவபெருமானின் திருப்பருப்பதத்தை வணங்குவோம்; வருக. மனிதமனம் ஒன்றை விட்டு ஒன்று பற்றும் நிலையை இப்பாடலின் வருணனை தெரிவிக்கிறது.

மேல்

(1274)
“கொங்கு அணி நறுங் கொன்றைத் தொங்கலன், குளிர்சடையான்,

எங்கள் நோய் அகல நின்றான்” என, அருள் ஈசன் இடம்

ஐங்கணை வரிசிலையான் அநங்கனை அழகு அழித்த

பைங்கண் வெள் ஏறு உடையான்-பருப்பதம் பரவுதுமே.

தேன் நிறைந்ததாய் மணம் கமழும் கொன்றை மலர்மாலையைச் சூடியவன், குளிர்ந்த சடைமுடியை உடையவன், எங்கள் துன்பங்களைப் போக்க எழுந்தருளியவன் என்று அடியவர் போற்ற அவர்கட்கு அருள்புரியும் ஈசனது இடம், ஐவகை மலர்களையும் வரிந்த கரும்பு வில்லையும் உடைய மன்மதனின் அழகினை அழித்து அவனை எரித்துப் பசிய கண்களை உடைய வெள்ளேற்றை உடையவனாய் அப்பெருமான் எழுந்தருளிய பதி திருப்பருப்பதம். அதனைப் பரவுவோம்.

மேல்

(1275)
துறை பல சுனை மூழ்கி, மலர் சுமந்து ஓடி,

மறை ஒலி வாய் மொழியால், வானவர் மகிழ்ந்து ஏத்த,

சிறை ஒலி கிளி பயிலும், தேன் இனம் ஒலி ஓவா,

பறை படு விளங்கு அருவிப் பருப்பதம் பரவுதுமே.

கிளிகள் சிறகுகளால் எழுப்பும் ஓசையோடு வாயால் எழுப்பும் மெல்லிய அழைப்பொலியும், வண்டுகளின் ஒலியும் நீங்காததாய்ப் பறை போல ஒலிக்கும் அருவிகளை உடையதாய் விளங்குவதும், தேவர்கள் துறைகள் பலவற்றை உடைய சுனைகளில் மூழ்கித் தூய மலர்களைச் சுமந்து விரைந்து வந்து வேத கீதங்களைத் தம் வாய்மொழியாக ஓதி மகிழ்வோடு வழிபடுமாறு சிவபெருமான் விளங்குவதுமாகிய திருப்பருப்பதத்தைப் பரவுவோம்.

மேல்

(1276)
சீர் கெழு சிறப்பு ஓவாச் செய்தவ நெறி வேண்டில்,

ஏர் கெழு மட நெஞ்சே! இரண்டு உற மனம் வையேல்!.

கார் கெழு நறுங்கொன்றைக் கடவுளது இடம், வகையால்

பார் கெழு புகழ் ஓவா, பருப்பதம் பரவுதுமே.

அழகிய மடநெஞ்சே! பெருமை மிக்க சிறப்புக்கள் அகலாததாய் நாம் மேற்கொள்ளத்தக்க தவநெறியை நீ பின்பற்ற விரும்புவாயாயின், வேண்டுமா வேண்டாவா என இரண்டுபட எண்ணாமல் உறுதியாக ஒன்றை நினைந்து நெறியின் பயனாய் விளங்கும், கார்காலத்தே மலரும் மணம் மிக்க கொன்றை மலர்மாலை சூடியவனாய் எழுந்தருளியுள்ள அக்கடவுளது இடமாய் உலகிற் புகழ்மிக்க தலமாய் விளங்கும் திருப்பருப்பதத்தைப் பரவுவோம்.

மேல்

(1277)
புடை புல்கு படர் கமலம் புகையொடு விரை கமழ,

தொடை புல்கு நறுமாலை திருமுடி மிசை ஏற,

விடை புல்கு கொடி ஏந்தி, வெந்த வெண் நீறு அணிவான்-

படை புல்கு மழுவாளன்-பருப்பதம் பரவுதுமே.

ஓடைகளின் புறத்தே நிறைந்து வளர்ந்த விரிந்த தாமரை மலர்கள் அந்தணர் வேட்கும் யாகப் புகையோடு மணம் கமழுமாறு தொடுக்கப் பெற்ற நறுமாலை திருமுடியின்மேல் விளங்க, விடைக் கொடியைக் கையில் ஏந்தி, மேனியில் திருவெண்ணீறு அணிந்து மழுப்படை ஏந்தியவனாய் விளங்கும் சிவபெருமானது பருப்பதத்தை நாம் பரவுவோம்.

மேல்

(1278)
நினைப்பு எனும் நெடுங்கிணற்றை நின்று நின்று அயராதே

மனத்தினை வலித்து ஒழிந்தேன்; அவலம் வந்து அடையாமை,

கனைத்து எழு திரள் கங்கை கமழ் சடைக் கரந்தான்தன்-

பனைத்திரள் பாய் அருவிப் பருப்பதம் பரவுதுமே.

நினைப்பு என்னும் ஆழமான கிணற்றின் அருகில் இடையறாது நின்று சோர்வுபடாமல், மனம் என்னும் கயிற்றைப் பற்றி இழுத்து, எண்ணங்கள் ஈடேறாமல் அயர்வுற்றேன். ஆதலின் இதனைக் கூறுகின்றேன். துன்பங்கள் நம்மை அடையா வண்ணம் காத்துக்கொள்ளுவதற்கு இதுவே வழி. ஆரவாரித்து எழுந்த பரந்துபட்ட வெள்ளமாக வந்த கங்கை நீரைத் தனது மணம் கமழும் சடையிலே தாங்கி மறையச் செய்தவன் ஆகிய சிவபிரானது பனைமரம் போல உருண்டு திரண்டு ஒழுகும் அருவி நீரை உடைய திருப்பருப்பதத்தை நாம் பரவுவோம்.

மேல்

(1279)
மருவிய வல்வினை நோய் அவலம் வந்து அடையாமல்,-

திரு உரு அமர்ந்தானும், திசைமுகம் உடையானும்,

இருவரும் அறியாமை எழுந்தது ஒர் எரி நடுவே

பருவரை உற நிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே.

பலபிறவிகள் காரணமாக நம்மைத் தொடரும் வலிய வினைகளின் பயனாகிய துன்பங்கள் நம்மை வந்து அடையாமல் இருக்கத் திருமகளைத் தன் மார்பில் கொண்ட திருமால், நான்முகன் ஆகிய இருவரும் அறியமுடியாதவாறு எழுந்த எரியின் நடுவே பெரிய மலையாய் ஓங்கி நின்ற சிவபிரான் எழுந்தருளிய திருப்பருப்பதத்தை நாம் வணங்குவோம்.

மேல்

(1280)
சடம் கொண்ட சாத்திரத்தார் சாக்கியர், சமண்குண்டர்

மடம் கொண்ட விரும்பியராய் மயங்கி, ஒர் பேய்த்தேர்ப் பின்

குடம் கொண்டு நீர்க்குச் செல்வார் போதுமின்! குஞ்சரத்தின்

படம் கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே.

அறியாமை வயப்பட்ட சாத்திரங்களை ஓதும் புத்தர்களும், சமணராகிய இழிந்தோரும் குண்டர்களும் கூறும் மடமையை விரும்பியவராய் மயங்கியோர் சிலர், கானல் நீரை முகக்கக் குடத்தை எடுத்துச் செல்வார் போன்றவராவர். அவ்வாறு சென்றவர் செல்லட்டும். யானைத் தோலைப் போர்வையாகப் போர்த்த சிவபிரான் எழுந்தருளிய திருப்பருப்பதத்தை நாம் சென்று பரவுவோம்.

மேல்

(1281)
வெண் செ(ந்)
நெல் விளை கழனி விழவு ஒலி கழுமலத்தான்,

பண் செலப் பல பாடல் இசை முரல் பருப்பதத்தை,

நன் சொலினால் பரவும் ஞானசம்பந்தன், நல்ல

ஒண் சொலின் இவைமாலை உரு எண, தவம் ஆமே.

வெண்ணெல், செந்நெல் ஆகிய இருவகை நெற்பயிர்களும் விளைவுதரும் வயல்களையுடையதும் விழாக்களின் ஆரவாரம் மிகுந்து தோன்றுவதுமாகிய கழுமலத்தில் அவதரித்தவனாய்ப் பண்ணோடு பொருந்திய பாடல்கள் பலவற்றால் இசைபாடி இறைவனைப் பரவிவரும் ஞானசம்பந்தன், திருப்பருப்பதத்தை நல்ல சொற்கள் அமைந்த பாடலால் பாடிய,

ஒளி பொருந்திய இத்திருப்பதிகப் பாமாலையைப் பலகாலும் எண்ணிப் பரவ, அதுவே தவமாகிப் பயன்தரும்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(119)
திருக்கள்ளில் - வியாழக்குறிஞ்சி

(1282)
முள்ளின் மேல் முது கூகை முரலும் சோலை,

வெள்ளில் மேல் விடு கூறைக்கொடி விளைந்த

கள்ளில் மேய அண்ணல் கழல்கள் நாளும்

உள்ளும்! மேல் உயர்வு எய்தல் ஒருதலையே.

முள்ளுடைய மரங்களின்மேல் இருந்து முதிய கூகைகள் ஒலிக்கும் சோலைகள் சூழ்ந்ததும், விளமரங்களின்மேல் படர்ந்த கூறைக் கொடிகள் விளைந்து தோன்றுவதுமாய கள்ளில் என்னும் இத்தலத்தில் எழுந்தருளிய சிவபிரான் திருவடிகளை நாள்தோறும் நினைவோமானால் உயர்வெய்துதல் உறுதியாகும்.

மேல்

(1283)
ஆடலான், பாடலான், அரவங்கள் பூண்டான்,

ஓடு அலால் கலன் இல்லான்-உறை பதியாக்

காடு அலால் கருதாத கள்ளில் மேயான்;

பாடு எலாம் பெரியோர்கள் பரசுவாரே.

ஆடல் பாடல்களில் வல்லவனும், பாம்புகள் பலவற்றை அணிந்தவனும், தலையோட்டையன்றி வேறு உண்கலன் இல்லாதவனும், சுடுகாட்டைத் தவிர வேறோர் இடத்தைத் தனது இடமாகக் கொள்ளாதவனும் ஆகிய சிவபிரான், பெரியோர்கள் அருகிலிருந்து அவன் புகழைப் பரவக் கள்ளில் என்னும் தலத்தைத் தான் உறையும் பதியாகக் கொண்டுள்ளான்.

மேல்

(1284)
எண்ணார் மும்மதில் எய்த இமையா முக்கண்

பண் ஆர் நால்மறை பாடும் பரமயோகி,

கண் ஆர் நீறு அணி மார்பன்-கள்ளில் மேயான்,

பெண் ஆண் ஆம் பெருமான், எம் பிஞ்ஞகனே.

பகைவர்களாகிய அசுரர்களின் மும்மதில்களை எய்து அழித்தவனும், இமையாத மூன்று கண்களை உடையவனும் இசையமைப்போடு கூடிய நான்மறைகளைப் பாடி மகிழும் மேலான யோகியும், கண்களைக் கவரும் வண்ணம் திருநீறு அணிந்த மார்பினனும், பெண் ஆண் என இருபாலாகக் கருதும் உமைபாகனும் ஆகிய பெருமான், கள்ளில் என்னும் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளான்.

மேல்

(1285)
பிறை பெற்ற சடை அண்ணல், பெடைவண்டு ஆலும்

நறை பெற்ற விரிகொன்றைத்தார் நயந்த

கறை பெற்ற மிடற்று அண்ணல் கள்ளில் மேயான்,

நிறை பெற்ற அடியார்கள் நெஞ்சு உள்ளானே.

பிறை சூடிய சடையை உடைய அண்ணலும், பெண்வண்டுகளோடு ஆண் வண்டுகள் கூடி ஒலிக்கும் தேன் நிறைந்த விரிந்த கொன்றை மாலையை விரும்பிச் சூடிய, விடக்கறை பொருந்திய கண்டத்தை உடையவனும், மனநிறைவு பெற்ற அடியவர்களின் நெஞ்சங்களில் நிறைந்து நிற்பவனுமாகிய சிவபிரான், கள்ளில் என்னும் இத்தலத்தே எழுந்தருளியுள்ளான்.

மேல்

(1286)
விரையாலும் மலராலும் விழுமை குன்றா

யாலும் எதிர் கொள்ள, ஊரார், அம் மாக்

கரை ஆர் பொன் புனல் வேலிக் கள்ளில் மேயான்

அரை ஆர் வெண் கோவணத்த அண்ணல் தானே.

இடையில் வெண்ணிறமான கோவணத்தை உடுத்த சிவபிரான் மணம் கமழும் ஐவகை மணப் பொருள்களாலும் மலர்களாலும் சீர்மை குன்றாத புகழுரைகளாலும் ஊர் மக்கள் எதிர்கொள்ள, அழகியவும் பெரியவுமான கரைகளை உடைய பொன்னி நதியின் கிளையாறு சூழ்ந்துள்ள கள்ளில் என்னும் இத்தலத்தே எழுந்தருளியுள்ளான்.

மேல்

(1287)
நலன் ஆய பலி கொள்கை நம்பான், நல்ல

வலன் ஆய மழுவாளும் வேலும் வல்லான்,

கலன் ஆய தலை ஓட்டான்-கள்ளில் மேயான்;

மலன் ஆய தீர்த்து எய்தும், மா தவத்தோர்க்கே.

மக்கட்கு நன்மைகள் உண்டாகத் தான் பலியேற்கும் கொள்கையனாகிய நம்பனும், அழகிய வெற்றியைத் தரும் மழு வாள் வேல் ஆகியவற்றில் வல்லவனும், உண்கலனாகிய தலை யோட்டை உடையவனும் ஆகிய சிவபிரான், தன்னை எய்தும் மாதவத் தோர்க்கு மும்மலங்களைத் தீர்த்து அருள்பவனாய்க் கள்ளில் என்னும் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளான்.

மேல்

(1288)
பொடியார் மெய் பூசினும், புறவின் நறவம்

குடியா ஊர் திரியினும், கூப்பிடினும்,

கடி ஆர் பூம்பொழில்-சோலைக் கள்ளில் மேயான்

அடியார் பண்பு இகழ்வார்கள், ஆதர்களே.

மணம் கமழும் அழகிய பொழில்களும் சோலைகளும் சூழ்ந்த கள்ளிலில் எழுந்தருளிய இறைவன் அடியவர்கள் திருநீற்றுப் பொடியை உடலில் பூசினும், சோலைகளில் எடுத்த தேனைஉண்டு திரியினும் பலவாறு பிதற்றினும் அவர்கள் மனம் இறைவன் திருவருளிலேயே அழுந்தியிருக்குமாதலின் அடியவர்களின் குணம் செயல்களை இகழ்பவர்கள் அறியாதவர்களாவர்.

மேல்

(1289)
திரு நீலமலர் ஒண்கண் தேவி பாகம்

புரிநூலும் திரு நீறும் புல்கு மார்பில்,

கரு நீலமலர் விம்மு கள்ளில், என்றும்

பெரு நீலமிடற்று அண்ணல் பேணுவதே.

அழகிய நீலமலர் போன்ற ஒளி பொருந்திய கண்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, முப்புரி நூலும் திருநீறும் பொருந்திய மார்பினனாய் விளங்கும் கரிய மிடற்று அண்ணலாகிய சிவபிரான் என்றும் விரும்புவது கருநீலமலர்கள் மிகுந்து பூத்துள்ள கள்ளில் என்னும் தலமாகும்.

மேல்

(1290)
“வரி ஆய மலரானும் வையம் தன்னை

உரிது ஆய அளந்தானும் உள்ளுதற்கு அங்கு

அரியானும் அரிது ஆய கள்ளில் மேயான்,

பெரியான்” என்று, அறிவார்கள் பேசுவாரே.

சிவந்த வரிகளைக் கொண்ட தாமரை மலர்மேல் உறையும் பிரமனும், உலகங்களைத் தனக்கு உரியதாகுமாறு அளந்த திருமாலும், நினைத்தற்கும் அரியவனாய் விளங்கும் பெரியோனாகிய இறைவன், அரியதலமாய் விளங்கும் கள்ளிலில் எழுந்தருளி உள்ளான். அறிந்தவர்கள் அவனையே பெரியோன் எனப் போற்றிப் புகழ்வர்.

மேல்

(1291)
ஆச்சியப் பேய்களோடு அமணர் குண்டர்

பேச்சு இவை நெறி அல்ல; பேணுமின்கள்,

மாச்செய்த வளவயல் மல்கு கள்ளில்

தீச் செய்த சடை அண்ணல் திருந்து அடியே!.

பரிகசிக்கத்தக்க பேய்கள் போன்றவர்களாகிய அமணர்களும், புத்தர்களும், கூறும் உரைகள் உண்மையான நெறிகளை மக்கட்கு உணர்த்தாதவை. எனவே அவர்தம் உரைகளைக் கேளாது விடுத்து, பெருமைக்குரிய வள வயல்கள் நிறைந்த கள்ளிலில் விளங்கும் தீத்திரள் போன்ற சடைமுடியை உடைய சிவபிரானுடைய அழகிய திருவடிகளையே பேணுவீர்களாக.

மேல்

(1292)
திகை நான்கும் புகழ் காழிச் செல்வம் மல்கு

பகல் போலும் பேர் ஒளியான்-பந்தன்-நல்ல

முகை மேவு முதிர் சடையான் கள்ளில் ஏத்த,

புகழோடும் பேர் இன்பம் புகுதும் அன்றே.

நாற்றிசை மக்களாலும் புகழப்பெறும் சீகாழிப் பதியில் செல்வவளம் நிறைந்த பகல் போன்ற பேரொளியினனாகிய ஞான சம்பந்தன,

நறுமணம் கமழும் மலர் அரும்புகள் நிறைந்த, முதிர்ந்த சடைமுடி உடையவனாகிய சிவபிரானது கள்ளிலைப் போற்றிப் பாடிய இத்திருப்பதிகத்தைப் பாடி ஏத்தினால், புகழோடு பேரின்பம் அடையலாம்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(120)
திருஐயாறு - திருவிராகம் - வியாழக்குறிஞ்சி

(1293)
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து அருள்செயத்

துணிந்தவன், தோலொடு நூல் துதை மார்பினில்

பிணிந்தவன், அரவொடு பேர் எழில் ஆமை கொண்டு

அணிந்தவன், வள நகர் அம் தண் ஐயாறே.

தன்னை வணங்கும் அடியவர்களின் நீக்குதற்கரிய வினைகளை அடியோடு அழித்து அவர்கட்கு அருள் வழங்கத் துணிந்திருப்பவனும், மார்பின்கண் மான்தோலோடு விளங்கும் முப்புரி நூல் அணிந்தவனும், பாம்போடு பெரிய அழகிய ஆமை ஓட்டைப் பூண்டவனும், ஆகிய சிவபிரானது வளநகர் அழகிய குளிர்ந்த ஐயாறாகும்.

மேல்

(1294)
கீர்த்தி மிக்கவன் நகர் கிளர் ஒளி உடன் அடப்

பார்த்தவன்; பனிமதி படர் சடை வைத்து,

போர்த்தவன் கரி உரி; புலி அதள், அரவு, அரை

ஆர்த்தவன்; வள நகர் அம் தண் ஐயாறே.

புகழ்மிக்கவனும், பகைவர்களாகிய அவுணர்களின் முப்புரங்களைப் பேரொளி தோன்ற எரியுமாறு அழிந்தொழிய நெற்றி விழியால் பார்த்தவனும், குளிர்ந்த திங்களை விரிந்த சடைமுடிமீது வைத்துள்ளவனும், யானையின் தோலை உரித்துப் போர்த்தவனும், புலித்தோலைப் பாம்போடு இடையில் கட்டியவனும் ஆகிய சிவபிரானது வளநகர் அழகிய குளிர்ந்த ஐயாறாகும்.

மேல்

(1295)
வரிந்த வெஞ்சிலை பிடித்து, அவுணர்தம் வள நகர்

எரிந்து அற எய்தவன்; எழில் திகழ் மலர்மேல்

இருந்தவன் சிரம் அது, இமையவர் குறை கொள,

அரிந்தவன்; வள நகர் அம் தண் ஐயாறே.

இருமுனைகளும் இழுத்துக் கட்டப்பட்ட கொடிய வில்லைப் பிடித்து, அசுரர்களின் வளமையான முப்புரங்கள் எரிந்து அழியுமாறு கணை எய்தவனும், தேவர்கள் வேண்ட அழகிய தாமரை மலர்மேல் எழுந்தருளிய பிரமன் தலைகளில் ஒன்றைக் கொய்தவனுமாகிய சிவபிரானது வளநகர் அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும்.

மேல்

(1296)
வாய்ந்த வல் அவுணர் தம் வள நகர் எரி இடை

மாய்ந்து அற எய்தவன், வளர்பிறை விரிபுனல்

தோய்ந்து எழு சடையினன், தொல்மறை ஆறு அங்கம்

ஆய்ந்தவன், வள நகர் அம் தண் ஐயாறே.

வலிமை வாய்ந்த அவுணர்களின் வளமையான முப்புரங்களும் தீயிடை அழிந்தொழியுமாறு கணை எய்தவனும், வளரத்தக்க பிறை, பரந்து விரிந்து வந்த கங்கை ஆகியன தோய்ந்தெழும் சடையினனும், பழமையான நான்கு வேதங்கள் ஆறு அங்கங்கள் ஆகியவற்றை நன்கு ஆய்வு செய்தருளியவனும் ஆகிய சிவபிரானது நகர் அழகும் தண்மையும் உடைய திருவையாறாகும்.

மேல்

(1297)
வான் அமர் மதி புல்கு சடை இடை அரவொடு

தேன் அமர் கொன்றையன், திகழ்தரு மார்பினன்,

மான் அன மென் விழி மங்கை ஒர் பாகமும்

ஆனவன், வள நகர் அம் தண் ஐயாறே.

வானின்கண் விளங்கும் பிறைமதி பொருந்திய சடையின்மேல் பாம்பையும், தேன் நிறைந்த கொன்றையையும் அணிந்தவனும், விளங்கும் மார்பினை உடையவனும், மான்போன்ற மென்மையான விழிகளை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானது நகர் அழகும் தண்மையும் உடைய திருவையாறாகும்.

மேல்

(1298)
முன்பனை, முனிவரொடு அமரர்கள் தொழுது எழும்

இன்பனை, இணை இல இறைவனை, எழில் திகழ்

என் பொனை, ஏதம் இல் வேதியர் தாம் தொழும்

அன்பன வள நகர் அம் தண் ஐயாறே.

வலிமையுடையவனும் முனிவர்களும் அமரர்களும் தொழும் திருவடிகளை உடைய இன்ப வடிவினனும், ஒப்பற்ற முதல்வனும், அழகு விளங்கும் என் பொன்னாக இருப்பவனும், குற்றமற்ற வேதியர்களால் தொழப்பெறும் அன்பனும் ஆகிய சிவபிரானது வளநகர் அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும்.

மேல்

(1299)
வன்திறல் அவுணர்தம் வள நகர் எரி இடை

வெந்து அற எய்தவன், விளங்கிய மார்பினில்

பந்து அமர் மெல் விரல் பாகம் அது ஆகி, தன்

அந்தம் இல் வள நகர் அம் தண் ஐயாறே.

பெருவலி படைத்த அவுணர்களின் வளமையான முப்புர நகர்களும் தீயிடையே வெந்தழியுமாறு கணை எய்தவனும், விளங்கிய மார்பகத்தே பந்தணை மெல் விரலியாகிய உமையம்மையைப் பாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரானது அழிவற்ற வளநகர் அழகும் தண்மையுமுடைய ஐயாறாகும்.

மேல்

(1300)
விடைத்த வல் அரக்கன் நல் வெற்பினை எடுத்தலும்,

அடித்தலத்தால் இறை ஊன்றி, மற்று அவனது

முடித்தலை தோள் அவை நெரிதர, முறைமுறை

அடர்த்தவன் வள நகர் அம் தண் ஐயாறே.

செருக்கோடு வந்த வலிய இராவணன் நல்ல கயிலை மலையைப் பெயர்த்த அளவில் தனது அடித்தலத்தால் சிறிது ஊன்றி, அவ்விராவணனின் முடிகள் அணிந்த தலைகள், தோள்கள் ஆகியவற்றை முறையே நெரித்தருளிய சிவபிரானது வளநகர் அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும்.

மேல்

(1301)
விண்ணவர் தம்மொடு, வெங்கதிரோன், அனல்,

எண் இலி தேவர்கள், இந்திரன், வழிபட,

கண்ணனும் பிரமனும் காண்பு அரிது ஆகிய

அண்ணல் தன் வள நகர் அம் தண் ஐயாறே.

வானகத்தே வாழ்வார் தம்மோடு, சூரியன், அக்கினி, எண்ணற்ற தேவர்கள், இந்திரன் முதலானோர் வழிபட, திருமால் பிரமர்கள் காணுதற்கு அரியவனாய் நின்ற தலைவனாகிய சிவபிரானது வளநகர், அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும். வெங்கதிரோன் அனல் என்று பாடம் ஓதுவாரும் உளர்.

மேல்

(1302)
மருள் உடை மனத்து வன் சமணர்கள், மாசு அறா

இருள் உடை இணைத்துவர்ப் போர்வையினார்களும்,

தெருள் உடை மனத்தவர்; தேறுமின், திண்ணமா

அருள் உடை அடிகள் தம் அம் தண் ஐயாறே!.

தெளிந்த மனத்தினை உடையவர்களே! மருட்சியை உடைய மனத்தவர்களாகிய வலிய சமணர்களும், குற்றம் நீங்காத இரண்டு துவர்நிற ஆடைகளைப் பூண்ட புத்தர்களும் கூறுவனவற்றைத் தெளியாது சிவபிரானை உறுதியாகத் தெளிவீர்களாக. கருணையாளனாக விளங்கும் சிவபிரானது இடம் அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும்.

மேல்

(1303)
நலம் மலி ஞானசம்பந்தனது இன்தமிழ்

அலை மலி புனல் மல்கும் அம் தண் ஐயாற்றினைக்

கலை மலி தமிழ் இவை கற்று வல்லார் மிக

நலம் மலி புகழ் மிகு நன்மையர்தாமே.

அலைகள் வீசும் ஆறு குளம் முதலிய நீர் நிலைகளால் சூழப்பட்ட ஐயாற்று இறைவனை, நன்மைகள் நிறைந்த ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய ,

இன்தமிழால் இயன்ற கலைநலம் நிறைந்த இத்திருப்பதிகத்தைக் கற்று வல்லவராயினார் நன்மை மிக்க புகழாகிய நலத்தைப் பெறுவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(121)
திருஇடைமருதூர் - திருவிராகம் - வியாழக்குறிஞ்சி

(1304)
நடை மரு திரிபுரம் எரியுண நகை செய்த

படை மரு தழல் எழ மழு வல பகவன்,

புடை மருது இள முகில் வளம் அமர் பொதுளிய,

இடை மருது அடைய, நம் இடர் கெடல் எளிதே.

இயங்குதலைப் பொருந்திய திரிபுரங்களை எரியுண்ணுமாறு சிரித்தருளித் தனது படைக்கலத்தால் தீ எழும்படி செய்தருளிய வெற்றி மழுவேந்திய பகவனாகிய சிவபிரான் எழுந்தருளியதும் அருகில் வளர்ந்துள்ள மருத மரங்களில் இளமேகங்கள் தவழ்ந்து மழை வளத்தை நிரம்பத் தருவதுமான திருஇடைமருதூரை அடைந்தால் நம் இடர்கெடல் எளிதாகும்.

மேல்

(1305)
மழை நுழை மதியமொடு, அழிதலை, மடமஞ்ஞை

கழை நுழை புனல், பெய்த கமழ் சடைமுடியன்;

குழை நுழை திகழ் செவி, அழகொடு மிளிர்வது ஒர்

இழை நுழை புரி அணல்; இடம் இடைமருதே.

மேகங்களிடையே நுழைந்து செல்லும் பிறை மதியோடு தசை வற்றிய தலையோடு ஆகியவற்றையும், மடமயில்கள் மூங்கிலிடையே நுழைந்து செல்லும் மலையில் தோன்றிய தேவ கங்கை நதியையும்; கமழுமாறு சடைமுடியில் சூடியவனும், குழை நுழைந்து விளங்கும் செவியழகோடு இழையாகத் திரண்ட முப்புரிநூலை விரும்பி அணிபவனுமாகிய அண்ணல் எழுந்தருளிய இடம் திரு விடைமருதூராகும்.

மேல்

(1306)
அருமையன், எளிமையன், அழல் விட மிடறினன்,

கருமையின் ஒளி பெறு கமழ் சடைமுடியன்,

பெருமையன், சிறுமையன், பிணைபெணொடு ஒருமையின்

இருமையும் உடை அணல், இடம் இடைமருதே.

அன்பில்லாதவர்க்கு அரியவனும், அன்புடை அடியவர்க்கு எளியவனும், அழலும் தன்மையுடைய விடத்தை உண்டு நிறுத்திய கண்டத்தினனும், பெரியனவற்றுக்கெல்லாம் பெரியவனும், சிறியன யாவற்றினும் சிறியவனும், தன்னோடு பிணைந்துள்ள உமையம்மையோடு ஓருருவில் இருவடிவாய்த் தோன்றுபவனுமாகிய சிவபிரானுக்குரிய இடம் திருவிடைமருதூர் ஆகும்.

மேல்

(1307)
பொரி படு முதுகு உற முளி களி புடை புல்கு

நரி வளர் சுடலையுள் நடம் என நவில்வோன்,

வரி வளர் குளிர்மதி ஒளி பெற மிளிர்வது ஒர்

எரி வளர்சடை அணல், இடம் இடைமருதே.

நன்கு காய்ந்து பொரிந்த முதுகினை உடைய நரிகள் களிப்போடு அருகில் மிகுந்து தோன்ற, சுடலைக் காட்டில் நடம் நவில்பவனும், கோடாகத் தோன்றிப் பின்வளரும் குளிர்ந்த பிறைமதியை ஒளிபெற அணிந்த எரிபோன்று வளரும் சடைமுடியை உடையவனும் ஆகிய தலைமையாளனாகிய சிவபிரானது இடம் இடைமருதாகும்.

மேல்

(1308)
வரு நல மயில் அன மடநடை மலைமகள்

பெரு நல முலை இணை பிணைசெய்த பெருமான்,

செரு நல மதில் எய்த சிவன், உறை செழு நகர்

இரு நல புகழ் மல்கும் இடம் இடைமருதே.

அழகோடு அசைந்து வரும் மயில் போன்ற மடநடையினளாகிய மலையரையன் மகளும், பெரு நல முலையாள் என்ற திருப்பெயருடையவளுமாகிய அம்மையின் இருதன பாரங்களைக் கூடியவனும், போர் செய்தற்குரிய தகுதியோடு விளங்கிய அவுணர்களின் மும்மதில்களை எய்தழித்தவனும் ஆகிய சிவபிரான் உறையும் இடமாகிய செழுமையான நகர் விரிந்த புகழால் நிறைந்த திருஇடைமருதூர் ஆகும்.

மேல்

(1309)
கலை உடை விரி துகில், கமழ்குழல், அகில்புகை,

மலை உடை மடமகள் தனை இடம் உடையோன்;

விலை உடை அணிகலன் இலன் என மழுவினொடு

இலை உடை படையவன்; இடம் இடைமருதே.

மேகலை சூழ்ந்த விரிந்த ஆடையுடன் அகிற் புகையின் மணம் கமழும் கூந்தலை உடைய மலையரையனின் மடமகளாகிய பார்வதி தேவியை இடப்பாகமாக உடையவனும் விலை மதிப்புடைய அணிகலன்கள் எவையும் இல்லாதவன் என்னுமாறு என்பு முதலியன பூண்டு மழு இலைவடிவான சூலம் இவற்றைப் படைக்கலனாகக் கொண்டவனுமாகிய சிவபிரானது இடம் இடைமருதாகும்.

மேல்

(1310)
வளம் என வளர்வன வரி முரல் பறவைகள்

இள மணல் அணை கரை இசைசெயும் இடைமருது

உளம் என நினைபவர் ஒலிகழல் இணை அடி,

குளம் அணல் உற மூழ்கி, வழிபடல் குணமே.

இது வளமான இடமாகும் என வளர்வனவாகிய வரிப் பாடல்களைப் பாடும் வண்டுகள் இளமணல் அணைந்த கரையில் தங்கி முரலும் இடைமருதை மனமார நினைபவர் அந்நகரை அடைந்து ஆங்குள்ள தீர்த்தத்தில் நன்கு மூழ்கி ஒலிக்கின்ற கழலணிந்த மருத வாணனை வழிபடுதலைப் பண்பாகக் கொள்க.

மேல்

(1311)
“மறை அவன், உலகு அவன், மதியவன், மதி புல்கு

துறையவன்” என வல அடியவர் துயர் இலர்;

கறையவன் மிடறு அது, கனல் செய்த கமழ் சடை

இறையவன், உறைதரும் இடம் இடைமருதே.

வேதங்களை அருளியவனும் அனைத்துலகங்களாய் விளங்குபவனும், திங்களாகத் திகழ்பவனும், அறிவொடுபட்ட கலைத் துறைகளாக விளங்குபவனும் சிவபிரானேயாவன் என்று போற்ற வல்ல அடியவர் துயரிலராவர். மிடற்றிற் கறையுடையவனும் கனல்போல் விளங்கும் சடையினனும் எல்லோர்க்கும் தலைவனும் ஆய அப்பெருமான் உறையும் இடம் இடைமருதாகும்.

மேல்

(1312)
மருது இடை நடவிய மணிவணர், பிரமரும்

இருது உடை அகலமொடு இகலினர், இனது எனக்

கருதிடல் அரியது ஒர் உருவொடு பெரியது ஒர்

எருது உடை அடிகள் தம் இடம் இடைமருதே.

மருதமரங்களின் இடையே கட்டிய உரலோடு தவழ்ந்த நீலமணிபோன்ற நிறத்தை உடைய திருமாலும், பிரமனும் மிக்க பெருமையுடையவர் யார் எனத் தம்முள் மாறுபட்டவராய் நிற்க அவர்கள் இன்னதெனக் கருதற்கரிய பெரிய ஒளி உருவோடு தோன்றிய பெரிய விடையூர்தியனாகிய சிவபிரானது இடம் இடைமருதாகும்.

மேல்

(1313)
துவர் உறு விரிதுகில் உடையரும் அமணரும்

அவர் உறு சிறுசொலை நயவன்மின்! இடு மணல்

கவர் உறு புனல் இடைமருது கைதொழுது எழு-

மவர் உறு வினை கெடல் அணுகுதல் குணமே.

துவர் ஏற்றிய விரிந்த ஆடையினை உடுத்தும் போர்த்தும் திரியும் புத்தரும் சமணரும் கூறும் சிறு சொல்லை விரும்பாதீர். காவிரி பல கிளைகளாகப் பிரிந்து செல்லும் வாய்க்கால்களை உடைய இடைமருதைக் கைகளால் தொழுபவர்க்கு வினைகள் கெடுதலும் நல்ல குணங்கள் உண்டாதலும் கூடும்.

மேல்

(1314)
தட மலி புகலியர் தமிழ் கெழு விரகினன்,

இடம் மலி பொழில் இடைமருதினை இசை செய்த,

படம் மலி, தமிழ் இவை பரவ வல்லவர் வினை

கெட, மலி புகழொடு கிளர் ஒளியினரே.

நீர்நிலைகள் பலவற்றை உடைய புகலிப் பதியில் தோன்றியவனும், தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் ,

விரிந்த பொழில்களால் சூழப்பட்ட இடைமருதீசனை இசையால் பரவிய சொல்லோவியமாகிய இத்திருப்பதிகத் தமிழைப் பாடிப் பரவ வல்லவர்தம் வினைகள் கெட்டொழிய அவர்கள் புகழோடும் விளங்கும் ஒளியோடும் திகழ்பவராவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(122)
திருஇடைமருதூர் - திருவிராகம் - வியாழக்குறிஞ்சி

(1315)
விரிதரு புலிஉரி விரவிய அரையினர்,

திரிதரும் எயில் அவை புனை கணையினில் எய்த

எரிதரு சடையினர், இடைமருது அடைவு உனல்

புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே.

விரிந்த புலித்தோலை ஆடையாக உடுத்த இடையினரும், வானகத்தில் திரிந்து இடர் செய்த முப்புரங்களை ஆற்றல் பலவும் அமைந்த கணையால் எய்தழித்தவரும் எரிபோன்ற சிவந்த சடையினருமாகிய சிவபிரானார் உறையும் இடைமருதை அடைய எண்ணும் மனம் உடையவர்க்குப் புகழ் மிக உளதாகும்.

மேல்

(1316)
“மறிதிரை படு கடல் விடம் அடை மிடறினர்

எறிதிரை கரை பொரும் இடைமருது” எனுமவர்

செறி திரை நரையொடு செலவு இலர், உலகினில்;

பிறிது இரை பெறும் உடல் பெருகுவது அரிதே.

சுருண்டு விழும் அலைகள் உண்டாகும் கடலிடைத் தோன்றிய விடம் சேர்ந்த மிடற்றினர் உறைவதும், காவிரியாற்று அலைகள் கரைகளைப் பொருவதுமான இடைமருது என்னும் தலத்தின் பெயரைச் சொல்லுவோர் உடலிடை அலைபோலத் தோன்றும் தோலின் சுருக்கம், மயிரின் நரை ஆகியன நீங்குவர். மீண்டும் இவ்வுலகில் உணவு உண்ணும் உடலோடு கூடிய பிறவியை எய்தார்.

மேல்

(1317)
சலசல சொரி புனல் சடையினர், மலைமகள்

நிலவிய உடலினர், நிறை மறைமொழியினர்,

இலர் என இடு பலியவர், இடைமருதினை

வலம் இட, உடல் நலிவு இலது, உள வினையே.

சலசல என்னும் ஒலிக்குறிப்போடு சொரியும் கங்கை ஆற்றைச் சடைமிசை அணிந்தவரும், மலைமகளை ஒருபாகமாகக் கொண்ட உடலினரும், நிறைவான வேதங்களை மொழிபவரும், உணவின்மையால் பசியோடுள்ளார் என மகளிர் இடும் பலியை ஏற்பவருமான சிவபிரான் உறையும் இடைமருதை வலம்வருபவர்க்கு வினைகளால் ஆகும் உடல் நலிவு இல்லையாம்.

மேல்

(1318)
விடையினர், வெளியது ஒர் தலை கலன் என நனி

கடை கடை தொறு, “பலி இடுக!” என முடுகுவர்,

இடைவிடல் அரியவர் இடை மருது எனும் நகர்

உடையவர்; அடி இணை தொழுவது எம் உயர்வே.

விடையூர்தியை உடையவரும், வெண்மையான தலையோட்டை உண்கலன் எனக் கொண்டு பலகாலும் வீடுகள்தோறும் சென்று பலி இடுக என விரைந்து செல்பவரும், ஒருமுறை அன்பு செய்யின் விடுதற்கு அரியவரும், இடைமருது என்னும் நகரை உடையவரும் ஆகிய சிவபிரான் திருவடிகளைத் தொழுவதே எமக்கு உயர்வைத் தரும்.

மேல்

(1319)
“ அரும் உருவினர், உணர்வு அரு வகையினர்,

அரை பொரு புலி அதள் உடையினர், அதன்மிசை

இரை மரும் அரவினர், இடைமருது” என உளம்

கள் அது உடையவர் புகழ் மிக உளதே.

சொல்லுதற்கரிய அழகரும், உணர்வதற்கரிய தன்மையரும், இடையில் பொருந்திய புலித்தோல் ஆடையினரும் அதன்மேல் இரையை விழுங்கும் பாம்பைக் கச்சையாகக் கட்டியவரும் ஆகிய சிவபிரானது இடைமருதைப் பலகாலும் புகழ்ந்து போற்றுவார்க்கு மிகுதியான புகழ் உளதாகும்.

மேல்

(1320)
ஒழுகிய புனல் மதி அரவமொடு உறைதரும்

அழகிய முடி உடை அடிகளது, அறைகழல்

எழிலினர் உறை, இடைமருதினை மலர்கொடு

தொழுதல் செய்து எழுமவர் துயர் உறல் இலரே.

வழிந்தொழுகும் கங்கை நதி, இளம்பிறை, பாம்பு ஆகியன உறையும் அழகிய சடைமுடியை உடையவரும், ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்துள்ள அழகரும் ஆகிய அடிகளது இடைமருதை அடைந்து மலர் கொண்டு போற்றித் தொழுது எழுவார் துன்புறுதல் இலராவர்.

மேல்

(1321)
கலை மலி விரலினர், கடியது ஒர் மழுவொடும்

நிலையினர், சலமகள் உலவிய சடையினர்,

மலைமகள் முலை இணை மருவிய வடிவினர்,

இலை மலி படையவர், இடம் இடைமருதே.

வீணையை மீட்டி இன்னிசைக் கலையை எழுப்பும் விரலை உடையவரும், கொடிய மழுவாயுதத்தோடு விளங்கும் நிலையினரும், கங்கை உலாவும் சடைமுடியினரும் மலைமகளின் முலைத்தழும்பு பொருந்திய வடிவினரும், இலைவடிவான சூலத்தை ஏந்தியவருமாய சிவபிரானார் இடம் இடைமருதாகும்.

மேல்

(1322)
செருவு அடை இல வல செயல் செய் அத் திறலொடும்

அரு வரையினில் ஒருபது முடி நெரிதர,

இருவகை விரல் நிறியவர் இடைமருது அது

பரவுவர் அருவினை ஒருவுதல் பெரிதே?.

போரில் முறையற்ற செயல்களைச் செய்யும் இராவணன் தன்னிடமும் அவ்வாறு திறலோடும் செய்தலைக் கண்டு அரிய கயிலைமலையின்கீழ் அகப்படுத்தி அவனுடைய பத்துத் தலைகளும் நெரியுமாறு சினம் கருணை ஆகிய இருவகைக் குறிப்போடு கால் விரலை ஊன்றியவராகிய சிவபிரானது இடைமருதைப் பரவுவார் அருவினைகள் பெரிதும் நீங்கும்.

மேல்

(1323)
அரியொடு மலரவன் என இவர் அடி முடி

தெரி வகை அரியவர், திருவடி தொழுது எழ,

எரிதரும் உருவர்தம் இடைமருது அடைவு உறல்

புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே.

திருமால் பிரமர்களாகிய இருவரும் அடிமுடி காணமுயன்றபோது அவர்கட்கு அரியவராய்த் தோன்றி அவர்கள் தம்மைத் தொழுது எழுந்தபோது அழலுருவாய்க் காட்சி தந்த சிவபிரானாரது இடைமருதினை அடைய விரும்புவார்க்குப் புகழ் மிக உளதாகும்.

மேல்

(1324)
குடை மயிலின தழை மருவிய உருவினர்,

உடை மரு துவரினர், பல சொல உறவு இலை;

அடை மரு திருவினர் தொழுது எழு கழுலவர்

இடை மருது என மனம் நினைவதும் எழிலே.

குடையையும் மயிற்பீலியையும் கையில் ஏந்திய வடிவினை உடைய சமணர்களும், மருதந்துவர் ஏற்றிய ஆடையை உடுத்த புத்தர்களும் பலவாறு கூற அவர்களோடு நமக்கு உறவில்லை என ஒதுக்கிச் செல்வங்கள் யாவும் தம்மை வந்தடைந்தவராய் விளங்கும் அடியவர்களால் தொழப் பெறும் திருவடிகளை உடைய சிவபிரானது இடைமருது என மனத்தால் நினைவது அழகைத் தரும்.

மேல்

(1325)
பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடு

விரகினன், விரிதரு பொழில் இடைமருதினைப்

பரவிய ஒருபது பயில வல்லவர் இடர்

விரவிலர், வினையொடு; வியன் உலகு உறவே.

கரையைப் பொரும் கடலை அணித்தாக உடைய புகலிப் பதியில் தோன்றியவனும், தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் ,

விரிந்த பொழில்களால் சூழப்பட்ட இடைமருதில் விளங்கும் பெருமானைப் பரவிய இத்திருப்பதிகத்தின் பத்துப் பாடல்களையும் பயில வல்லவர் வினைகளும் இடர்களும் இலராவர். அகன்ற வீட்டுலகம் அவர்கட்குச் சொந்தமாகும்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(123)
திருவலிவலம் - திருவிராகம் - வியாழக்குறிஞ்சி

(1326)
பூ இயல் புரிகுழல்; வரிசிலை நிகர் நுதல்;

ஏ இயல் கணை, பிணை, எதிர் விழி; உமையவள்

மேவிய திரு உரு உடையவன்-விரைமலர்

மா இயல் பொழில் வலிவலம் உறை இறையே.

மணம் கமழும் மலர்களையும், அவற்றில் தேனுண்ணும் வண்டுகளையும், உடைய பொழில் சூழ்ந்த வலிவலத்தில் உறையும் இறைவன், மலர்கள் அணிந்த சுருண்ட கூந்தலையும், வரிந்து கட்டப்பெற்ற வில்போன்ற நுதலையும், செலுத்துதற்கு உரிய கணை, மான் ஆகியன போன்ற கண்களையும் பெற்றுடைய உமையம்மையோடு கூடிய திருமேனியை உடையவன்.

மேல்

(1327)
இட்டம் அது அமர் பொடி இசைதலின், நசை பெறு

பட்டு அவிர் பவள நல்மணி என அணி பெறு

விட்டு ஒளிர் திரு உரு உடையவன்-விரைமலர்

மட்டு அமர் பொழில் வலிவலம் உறை இறையே.

மணம் கமழ்கின்ற மலர்கள் தேனோடு விளங்கும் பொழில் சூழ்ந்த வலிவலத்தில் உறையும் இறைவன், விருப்பத்தோடு அணியப் பெற்ற திருநீறு பொருந்தி இருத்தலின் பட்டோடு விளங்கும் பவளமணி போல் ஒளிவிடுகின்ற அழகிய ஒளி வீசும் திருமேனியை உடையவனாகத் தோன்றுகின்றான்.

மேல்

(1328)
உரு மலி கடல் கடைவுழி உலகு அமர் உயிர்

வெரு உறு வகை எழு விடம், வெளிமலை அணி

கருமணி நிகர் களம் உடையவன்-மிடைதரு

மரு மலி பொழில் வலிவலம் உறை இறையே.

மிகுதியான மணம் நிறைந்து விளங்கும் பொழில் சூழ்ந்த வலிவலத்தில் உறையும் இறைவன், தேவர்கள் அஞ்சத்தக்க கடலைக் கடைந்தபோது உலகில் உள்ள அனைத்துயிர்களும் அஞ்சத்தக்க வகையில் எழுந்த விடத்தை உண்டு, திருநீறு சண்ணித்த திருமேனி வெள்ளி மலை போல விளங்க அதனிடை நீலமணி பதித்தாற்போல் கரிய கண்டம் உடையவனாய் விளங்குபவன் ஆவான்.

மேல்

(1329)
அனல் நிகர் சடை அழல் அவி உற என வரு

புனல் நிகழ்வதும், மதி நனை பொறி அரவமும்

என நினைவொடு வரும் இதும், மெல முடிமிசை

மனம் உடையவர் வலிவலம் உறை இறையே.

வலிவலம் உறை இறைவன், அனல் போன்ற சடையழலை அவிப்பதற்கென வருவது போன்ற கங்கையையும், பிறையையும், பூ மொட்டுப் போன்ற படப்புள்ளிகளை உடைய பாம்பையும் முடிமிசை உடையவன் என்னும் நினைவோடு வரும் மனமுடைய அடியவர் வாழும் சிறப்பினை உடையது வலிவலமாகும்.

மேல்

(1330)
பிடி அதன் உரு உமை கொள, மிகு கரி அது

வடிகொடு, தனது அடி வழிபடுமவர் இடர்

கடி, கணபதி வர அருளினன்-மிகு கொடை

வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே.

மிகுதியாக வழங்கும் கொடையே தமக்கு அழகைத் தரும் என நினையும் வள்ளற் பெருமக்கள் வாழும் வலிவலத்தில் உறையும் இறைவன், உமையம்மை பெண் யானை வடிவு கொள்ள, தான் ஆண் யானையின் வடிவு கொண்டு தன் திருவடியை வணங்கும் அடியவர்களின் இடர்களைக் கடியக் கணபதியைத் தோற்றுவித்தருளினான்.

மேல்

(1331)
தரை முதல் உலகினில் உயிர் புணர் தகை மிக,

விரை மலி குழல் உமையொடு விரவு அது செய்து,

நரை திரை கெடு தகை அது அருளினன்-எழில்

வரை திகழ் மதில் வலிவலம் உறை இறையே.

அழகிய மலைபோலத் திகழும் மதில் சூழ்ந்த வலிவலத்தில் உறையும் இறைவன், மண் முதலிய அனைத்து அண்டங்களிலும் வாழும் உயிர்கள் ஆணும் பெண்ணுமாய்க் கூடிப் போகம் நுகருமாறு மணம் மிக்க கூந்தலை உடைய உமையம்மையோடு கூடியவனாய் விளங்கித் தன்னை வழிபடும் அடியவர்க்கு நரை தோலின் சுருக்கம் என்பன கெடுமாறு செய்து என்றும் இளமையோடு இருக்க அருள்புரிபவனாவான்.

மேல்

(1332)
நலிதரு தரை வர நடை வரும் இடையவர்

பொலிதரு மடவரலியர் மனை அது புகு

பலி கொள வருபவன்-எழில் மிகு தொழில் வளர்

வலி வரு மதில் வலிவலம் உறை இறையே.

அழகுமிக்கக் கவின் கலை முதலான தொழில்கள் வளரும் வலிமை மிக்க மதில்களால் சூழப்பட்ட வலிவலத்தில் உறையும் இறைவன், மண்ணை மிதிப்பதற்கே அஞ்சும் மென்மையான பாதங்களையும், அசையும் இடையினையும் உடைய அழகிய தாருகாவன மகளிர் உறையும் மனைகள் தோறும் சென்று புகுந்து பலி ஏற்கப்பிட்சாடனனாய் வருபவன்.

மேல்

(1333)
இரவணன் இருபதுகரம் எழில் மலைதனின்

இரவணம் நினைதர அவன் முடி பொடி செய்து,

இரவணம் அமர் பெயர் அருளினன்-நகநெதி

இரவு அண நிகர் வலிவலம் உறை இறையே.

தன்னை வழிபட்டு இரக்கும் தன்மையாளர்களாகிய அடியவர்கட்குத் தன் மனத்தில் தோன்றும் கருணையாகிய நிதியை வழங்கும் வலிவலத்தில் உறையும் இறைவன், இராவணனின் இருபது கரங்களையும் அவனுடைய பத்துத் தலைகளையும் அழகிய கயிலை மலையின்கீழ் அகப்படுத்திப் பொடி செய்து பின் அவன் இரந்துவேண்டி நினைத்த அளவில் அவனுக்கு வேண்டுவன அளித்து இராவணன் என்ற பெயரையும் அருளியவன்.

மேல்

(1334)
தேன் அமர்தரு மலர் அணைபவன், வலி மிகும்

ஏனம் அது ஆய் நிலம் அகழ் அரி, அடி முடி

தான் அணையா உரு உடையவன்-மிடை கொடி

வான் அணை மதில் வலிவலம் உறை இறையே.

வானத்தைச் சென்றடையுமாறு நெருக்கமாகக் கட்டப்பட்ட கொடிகளைக் கொண்ட மதில்களால் சூழப்பட்ட வலிவலத்தில் உறையும் இறைவன், தேன் நிறைந்த தாமரை மலர்மேல் உறையும் நான்முகன், வலிமைமிக்க பன்றியுருவினனாய் நிலத்தை அகழும் திருமால் ஆகியோர் முடியையும் அடியையும் காண முடியாதவாறு ஓங்கி உயர்ந்த திருவுருவை உடையவன்.

மேல்

(1335)
இலை மலிதர மிகு துவர் உடையவர்களும்,

நிலைமையில் உணல் உடையவர்களும், நினைவது

தொலை வலி நெடுமறை தொடர் வகை உருவினன்-

மலை மலி மதில் வலிவலம் உறை இறையே.

மலை போன்ற மதில்களால் சூழப்பட்ட வலிவலத்தில் உறையும் இறைவன், மிகுதியான மருதந்துவர் இலைகளால் பிழியப்பட்ட மிக்க துவர்நிறம் உடைய ஆடைகளை அணிந்த புத்தர்களும் நின்றுண்ணும் இயல்பினர்களாகிய சமணர்களும் நினைப்பதை அழித்துப் பொருட்டன்மையால் வலியவான பெருமை மிக்க வேதங்கள் தன்னைத் தொடருமாறு செய்தருளும் உருவினை உடையவனாய் உள்ளான்.

மேல்

(1336)
மன்னிய வலி வல நகர் உறை இறைவனை,

இன் இயல் கழுமல நகர் இறை எழில் மறை

தன் இயல் கலை வல தமிழ் விரகனது

உன்னிய ஒருபதும் உயர்பொருள் தருமே.

நிலைபேறுடைய வலிவல நகரில் உறையும் இறைவன்மீது இனிமையான இயல்பினை உடைய கழுமல நகருக்குத் தலைவனும் அழகிய வேதங்களையும் கலைகளையும் ஓதாமல் தானே உணர்ந்த தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் எண்ணி உரைத்த ,

இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தும் உயர்வான வீடு பேறாகிய செல்வத்தை அளிக்கும்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(124)
திருவீழிமிழலை - திருவிராகம்

(1337)
அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர்

மலர் மலி குழல் உமைதனை இடம் மகிழ்பவர்,

நலம் மலி உரு உடையவர், நகர் மிகு புகழ்

நிலம் மலி மிழலையை நினைய வல்லவரே.

மலர் நிறைந்த கூந்தலை உடைய உமையம்மையை இடப்பாகமாகக் கொண்டு மகிழ்பவரும், அழகிய திருமேனியை உடையவரும் ஆகிய சிவபிரானது நிலவுலகத்தே நிறைந்த புகழை உடைய மிழலை நகரை நினைய வல்லவர் திருமகளின் கருணையால் செல்வம் நிறையப் பெற்று உலகில் வாழ்வர்.

மேல்

(1338)
இரு நிலம் இதன் மிசை எழில் பெறும் உருவினர்

கரு மலிதரு மிகு புவி முதல் உலகினில்

இருள் அறு மதியினர், இமையவர் தொழுது எழு

நிருபமன், மிழலையை நினைய வல்லவரே.

எண்ணற்ற உயிரினங்கள் வாழும் மண் முதலிய அனைத்துலகங்களிலும் இருளைப் போக்கும் மதி போல ஒளியும் தண்ணளியும் செய்பவரும், தேவர்களால் தொழப் பெறும் தன்னொப்பார் இல்லாதவரும் ஆகிய சிவபிரானது மிழலையை நினைப்பவர்கள் பரந்து விரிந்த இவ்வுலகில் அழகிய உருவோடு விளங்குபவர் ஆவர்.

மேல்

(1339)
“கலைமகள் தலைமகன், இவன்” என வருபவர்

அலை மலிதரு புனல், அரவொடு, நகுதலை,

இலை மலி இதழியும், இசைதரு சடையினர்

நிலை மலி மிழலையை நினைய வல்லவரே.

அலைகள் நிறைந்த கங்கை நதி, பாம்பு, தலையோடு, வில்வஇலை, மிக்க கொன்றை ஆகியன பொருந்திய சடை முடியினனாகிய சிவபிரான் உறையும் நிலைபேறு உடைய திருவீழிமிழலையை நினைய வல்லவர் கலைமகளின் தலைவன் இவன் என்னும் ஒவ்வொருவரும் சொல்லத்தக்க தகுதியை உடையவராய்க் கல்வி நலம் வாய்க்கப் பெறுவர்.

மேல்

(1340)
மாடு அமர் சனம் மகிழ்தரு மனம் உடையவர்

காடு அமர் கழுதுகள் அவை முழவொடும் இசை

பாடலின் நவில்பவர் மிகுதரும் உலகினில்

நீடு அமர் மிழலையை நினைய வல்லவரே.

இடுகாட்டில் வாழும் பேய்கள் ஒலிக்க முழவு முதலிய கருவிகள் ஒலிக்க இசைபாடி நடம் நவில்பவனாகிய சிவபிரான் இனிதாக எழுந்தருளியதும் இவ்வுலகிடைப் பெருமையோடு நீண்ட காலமாக விளங்குவதுமாகிய திருவீழிமிழலையை நினைய வல்லவர்கள் அருகில் விரும்பி உறையும் சுற்றத்தினர் மகிழும் மனம் உடையவராவர்.

மேல்

(1341)
புகழ்மகள் துணையினர் புரிகுழல் உமைதனை

இகழ்வு செய்தவன் உடை எழில் மறைவழி வளர்

முகம் அது சிதைதர முனிவு செய்தவன் மிகு

நிகழ்தரு மிழலையை நினைய வல்லவரே.

சுருண்ட கூந்தலை உடைய உமையம்மையை இகழ்ந்த தக்கனுடைய அழகிய வேத நெறிகளை ஓதி வளர்க்கும் தலையைச் சினந்து சிதைத்தருளியவனாகிய சிவபிரானது புகழ் பொருந்திய திரு வீழிமிழலையை நினைய வல்லவர் புகழ்மகளைப் பொருந்துவர்.

மேல்

(1342)
அன்றினர் அரி என வருபவர்-அரிதினில்

ஒன்றிய திரிபுரம் ஒருநொடியினில் எரி

சென்று கொள் வகை சிறு முறுவல்கொடு ஒளி பெற

நின்றவன் மிழலையை நினைய வல்லவரே.

தவம் செய்து அரிதாகப் பெற்ற ஒன்று பட்ட முப்புரங்களைத் தேவர்கள் வேண்டுகோட்படி ஒருநொடிப் பொழுதில் எரி உண்ணுமாறு சிறுமுறுவல் செய்து புகழ் பெற்றவனாகிய சிவபிரானது திருவீழிமிழலையைநினைய வல்லவர் பகைவர்கட்குச் சிங்க ஏறு போன்ற வன்மை உடையவராவர்.

மேல்

(1343)
கரம் பயில் கொடையினர் கடிமலர் அயனது ஒர்

சிரம் பயில்வு அற எறி சிவன் உறை செழு நகர்,

வரம் பயில் கலைபல மறை முறை அறநெறி

நிரம்பினர், மிழலையை நினைய வல்லவரே.

மணங்கமழும் தாமரை மலர்மேல் உறையும் பிரமனுடைய தலைகளில் ஒன்றை அவனது உடலில் பொருந்தா வண்ணம் கொய்த சிவபிரான் உறையும் செழுமையான நகராய். மேன்மை மிக்க கலைகள் பலவற்றோடு வேத விதிகளையும், அறநெறிகளையும் அறிந்தவர்கள் நிரம்பிய திருவீழிமிழலையை நினைய வல்லவர்தம் கைகளால் பலகாலும் கொடுக்கும் வள்ளன்மையோடு கூடிய உள்ளத்தைப் பெறுவர்.

மேல்

(1344)
ஒருக்கிய உணர்வினொடு ஒளிநெறி செலுமவர்

அரக்கன் நல்மணி முடி ஒருபதும் இருபது-

கரக்கனம் நெரிதர, மலர் அடிவிரல் கொடு

நெருக்கினன் மிழலையை நினைய வல்லவரே.

இராவணனுடைய மணிமுடி தரித்த பத்துத் தலைகளும், இருபது கரங்களும் நெரியுமாறு தன்மலர் போன்ற திருவடியின் விரலைக் கொண்டு நெரித்தருளியவனாகிய சிவபிரானது திருவீழிமிழலையை நினைய வல்லவர் ஒன்றுபட்ட உணர்வோடு ஒளி நெறியாகிய ஞானமார்க்கத்தில் செல்லுபவராவர்.

மேல்

(1345)
அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர்

கடிமலர் அயன் அரி கருத(அ)ரு வகை தழல்-

வடிவு உரு இயல் பினொடு உலகுகள் நிறைதரு

நெடியவன் மிழலையை நினைய வல்லவரே.

மணம் மிக்க தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனும், திருமாலும் நினைதற்கு அரிய வகையில் தழல் வடிவோடு எல்லா உலகங்களிலும் நிறைந்தருளிய பெரியோனாகிய சிவபிரானது திருவீழிமிழலையை நினைய வல்லவர்கள், அடியவர் பலர் தம்மைச் சூழ இவ்வுலகில் இனிது வாழ்வர்.

மேல்

(1346)
மன்மதன் என ஒளி பெறுமவர் மருது அமர்

வன் மலர் துவர் உடையவர்களும், மதி இலர்

துன்மதி அமணர்கள், தொடர்வு அரு மிகு புகழ்

நின்மலன் மிழலையை நினைய வல்லவரே.

மருதத்தினது வலிய மலரால் துவர் ஏற்றிய காவி ஆடையை உடுத்த புத்தர்களும் அறிவற்றவர். சமணர்களும் துன்மதியாளர்கள். இவர்கள் இருவராலும் அறிதற்கு அரிய மிக்க புகழினை உடைய நின்மலனாகிய சிவபிரானின் மிழலையை நினைப்பவர்கள் மன்மதன் போன்ற அழகினைப் பெறுவார்கள்.

மேல்

(1347)
நித்திலன் மிழலையை, நிகர் இலி புகலியுள்

வித்தகமறை மலி தமிழ்விரகன மொழி

பத்தியில் வருவன பத்து இவை பயில்வொடு

கற்று வல்லவர் உலகினில் அடியவரே.

முத்துப் போன்றவனாகிய சிவபிரானது திருவீழிமிழலையை ஒப்பற்ற புகலிப் பதியில் வாழும் சதுரப்பாடுகளோடு வேதங்களிலும் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் வல்லவன் ஆகிய ஞானசம்பந்தனது பத்தியால் விளைந்த ,

இப்பதிகப் பாடல்கள் பத்தையும் பயின்று கற்று வல்லவர் உலகினில் சிறந்த அடியவராய் விளங்குவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(125)
திருச்சிவபுரம் - திருவிராகம்

(1348)
கலை மலி அகல் அல்குல் அரிவைதன் உருவினன்,

முலை மலிதரு திரு உருவம் அது உடையவன்,

சிலை மலி மதில் பொதி சிவபுரநகர் தொழ,

இலை, நலி வினை; இருமையும் இடர் கெடுமே.

மேகலை பொருந்திய அகன்ற அல்குலை உடைய உமையம்மை இடப்பாகமாகப் பொருந்திய திருவுருவினனும், அதனால் ஒரு கூற்றில் நகில் தோன்றும் திருவுருவை உடையவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய கருங்கற்களால் இயன்ற மதில்களால் பொதியப் பட்டுள்ள சிவபுர நகரைத் தொழுதால் நம்மை நலியும் வினைகள் இல்லை. இருமையிலும் இடர்கெடும்.

மேல்

(1349)
படர் ஒளி சடையினன், விடையினன், மதில் அவை

சுடர் எரி கொளுவிய சிவன் அவன், உறை பதி

திடல் இடு புனல் வயல் சிவபுரம் அடைய, நம்

இடர் கெடும்; உயர்கதி பெறுவது திடனே.

ஒளி விரிந்த சடையினனும், விடை ஊர்தியனும் அசுரர்களின் மும்மதில்களை விளங்கும் எரி கொள்ளுமாறு செய் தழித்தவனுமாகிய சிவன் உறையும் பதி ஆகிய, இடையிடையே திடலைக் கொண்ட நீர் சூழ்ந்த வயல்களை உடைய சிவபுரத்தை அடைந்து தொழுதால் நம் இடர் கெடும். உயர்கதி பெறுவது உறுதி.

மேல்

(1350)
வரை திரிதர, அரவு அகடு அழல் எழ, வரு

நுரை தரு கடல் விடம் நுகர்பவன்-எழில் திகழ்

திரை பொரு புனல் அரிசில் அது அடை சிவபுரம்

தரும் அடியவர் உயர்கதியினரே.

மந்தரமலை மத்தாகச் சுழல அதில் கயிறாகச் சுற்றிய வாசுகி என்னும் பாம்பின் வயிற்றிலிருந்து அழலாகத் தோன்றி, நுரையுடன் வெளிப்பட்ட விடம், கடலில் பொருந்த, ஆலகாலம் என்னும் அந்நஞ்சினை உண்டவனுடைய, அழகு விளங்கக் கரையில் மோதும் நீர் நிறைந்த அரிசிலாற்றங்கரையில் விளங்கும் சிவபுரத்தின் பெயரைக் கூறுபவர் உயர்கதிகளைப் பெறுவர்.

மேல்

(1351)
துணிவு உடையவர்; சுடுபொடியினர்; உடல் அடு

பிணி அடைவு இலர்; பிறவியும் அற விசிறுவர்

திணிவு உடையவர் பயில் சிவபுரம் மருவிய

மணிமிடறனது அடி இணை தொழுமவரே.

அடக்கமுடைய மக்கள் வாழும் சிவபுரத்தில் எழுந்தருளிய நீலமணிபோலும் மிடற்றினை உடைய சிவபிரானுடைய திருவடிகளை வணங்குவோர் துணிபுடையவராவர். திருநீறு பூசும் அடியவர் ஆவர். உடலை வருத்தும் பிணிகளை அடையார். பிறவியும் நீங்கப் பெறுவர்.

மேல்

(1352)
மறையவன், மதியவன், மலையவன், நிலையவன்,

நிறையவன், உமையவள் மகிழ் நடம் நவில்பவன்,

இறையவன்-இமையவர் பணிகொடு சிவபுரம்

உறைவு என உடையவன், எமை உடையவனே.

தேவர்கள் செய்யும் பணிவிடைகளை ஏற்றுச் சிவபுரத்தைத் தனது உறைவிடமாகக் கொண்டவனும் எம்மை அடிமையாகக் கொண்டவனுமாகிய சிவபிரான் வேதங்களை அருளியவன். பிறை சூடியவன். கயிலை மலையைத் தனது இடமாகக் கொண்டவன். நிலைபேறு உடையவன். எங்கும் நிறைந்தவன். உமையம்மை கண்டு மகிழும் நடனத்தைப் புரிபவன். எல்லோர்க்கும் தலைவன்.

மேல்

(1353)
முதிர் சடை இளமதி நதிபுனல் பதிவுசெய்து,

அதிர்கழல் ஒலிசெய, அருநடம் நவில்பவன்;

எதிர்பவர் புரம் எய்த இணை இலி; அணை பதி

சதிர் பெறும் உளம் உடையவர் சிவபுரமே.

முதிர்ந்த சடையின்மீது இளம்பிறை, கங்கை நதி ஆகியவற்றைப் பொருந்த அணிந்து, காலில் அசையும் கழல்கள் ஒலிக்குமாறு அரிய நடனம் புரிபவனும், தன்னை எதிர்த்த அசுரர்களின் முப்புரங்களை எய்தழித்த ஒப்பற்றவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய தலம், திறமையான மனம் உடைய அடியவர் வாழும் சிவபுரமாகும்.

மேல்

(1354)
வடிவு உடை மலைமகள் சலமகள் உடன் அமர்

பொடிபடும் உழை அதள் பொலி திரு உருவினன்,

செடி படு பலி திரி சிவன், உறை சிவபுரம்

அடைதரும் அடியவர் அருவினை இலரே.

அழகிய வடிவினைக் கொண்ட மலைமகள் நீர்மகளாகிய கங்கை ஆகியோருடன் புள்ளி பொருந்திய மானினது தோல் விளங்கும் அழகிய உருவத்தைக் கொண்டவனும், தீ நாற்றம் வீசும் மண்டையோட்டில் பிச்சையை ஏற்றுத் திரிபவனுமாகிய சிவபிரான் உறையும் சிவபுரத்தை அடையும் அடியவர் நீங்குதற்கரிய வினைகள் இலராவர்.

மேல்

(1355)
கரம் இருபதும் முடி ஒருபதும் உடையவன்

உரம் நெரிதர, வரை அடர்வு செய்தவன், உறை

பரன் என அடியவர் பணிதரு, சிவபுர-

நகர் அது புகுதல் நம் உயர்கதி அதுவே.

இருபது கைகளையும், பத்துத் தலைகளையும் உடையவனாகிய இராவணனின் மார்பு நெரியுமாறு கயிலை மலையால் அடர்த்தருளிய சிவபிரான் உறைவதும், மேலான பரம் பொருள் இவனேயாவான் என அடியவர் வழிபாடு செய்வதும் ஆகிய சிவபுரத்தை அடைதல் நமக்கு உயர் கதியைத் தரும்.

மேல்

(1356)
“அன்று இயல் உருவு கொள் அரி அயன் எனுமவர்

சென்று அளவிடல் அரியவன் உறை சிவபுரம்”

என்று இரு பொழுதும் முன் வழிபடுமவர் துயர்

ஒன்று இலர்; புகழொடும் உடையர், இவ் உலகே.

தங்கள் செயலுக்கு மாறுபட்ட தன்மையொடு கூடிய பன்றி அன்னம் ஆகிய வடிவங்களைக் கொண்ட திருமால் பிரமன் ஆகியோர் சென்று அளவிடுதற்கு அரியவனாய் ஓங்கிசிவபிரான் உறையும் சிவபுரம் என்று இருபொழுதுகளிலும் நினைத்து வழிபடும் அடியவர் ஒரு துன்பமும் இலராவர். இவ்வுலகில் புகழோடும் பொருந்தி வாழ்வர்.

மேல்

(1357)
புத்தரொடு அமணர்கள் அற புற

வித்தகம் ஒழிகில; விடை உடை அடிகள் தம்

இத் தவம் முயல்வு உறில், இறைவன சிவபுரம்

மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே.

புத்தர்களும் சமணர்களும் கூறுவன அறவுரைக்குப் புறம்பான உரைகளாகும், அவை அறிவுடைமைக்கு ஏற்ப மொழியாதவை. அவற்றை விடுத்து விடையூர்தியை உடையதலைவனாகிய சிவபிரானை நோக்கிச் செய்யும் இத்தவத்தைச் செய்யும் முயற்சியை மேற்கொள்வீராயின் அவ்விறைவனது சிவபுரத்தைச் சென்றடைந்து வழிபடுதல் சிறந்த குணங்களை உங்கட்குத் தரும்.

மேல்

(1358)
புந்தியர் மறை நவில் புகலி மன் ஞானசம்-

பந்தன தமிழ்கொடு, சிவபுரநகர் உறை

எந்தையை செய்த இசை மொழிபவர், வினை

சிந்தி முன் உற, உயர்கதி பெறுவர்களே.

அறிவுடையவர்கள் ஓதும் வேதங்களை ஓதி உணர்ந்த புகலி மன்னனாகிய ஞானசம்பந்தன் தமிழைக் கொண்டு சிவபுர நகரில் உறையும் எந்தையைப் போற்றி உரை செய்த,

இவ்விசை மாலையை ஓதி வழிபடுபவர் வினைகள் முற்பட்டு நீங்க உயர்கதி பெறுவார்கள்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(126)
திருக்கழுமலம் - திருத் தாளச்சதி

(1359)
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர், அப் பாலே சேர்வு ஆய் ஏனோர், கான்பயில் கணமுனிவர்களும்,

சிந்தித்தே வந்திப்ப, சிலம்பின் மங்கை தன்னொடும் சேர்வார், நாள்நாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசு அது எலாம்

சந்தித்தே, இந்தப் பார்சனங்கள் நின்று தம் கணால் தாமே காணா வாழ்வார் அத் தகவு செய்தவனது இடம்

கந்தத்தால் எண்திக்கும் கமழ்ந்து இலங்கு சந்தனக் காடு ஆர், ஆர், சீர் மேவும் கழுமல வள நகரே.

வினைவயத்தால் மண்ணுலகம் வந்து எல்லா இடங்களிலும் பொருந்தி அவ்விடங்களே தமக்கு இருப்பிடமாய் வாழும் தேவர்களும், மற்றவர்களாகிய கானகங்களில் வாழும் முனிவர்களும், மனத்தால் சிந்தித்து வழிபட்டு உய்தி பெறுமாறு, மலையரையன் மகளாகிய பார்வதி தேவியாரோடு சேர்ந்தவராய், நாளும் நாளும் நீண்டுயர்ந்த கயிலைமலையில் விளங்கும் திருவோலக்கச் சிறப்புக்கள் எல்லாவற்றையும் இந்த உலகில் வாழும் மக்கள் தங்கள் கண்களால் தாமே கண்டு வாழ்பவராகப் பெருங்கருணையோடு காட்சி நல்குபவனது இடம் எட்டுத் திசைகளிலும் மணம் கமழ்ந்து விளங்கும் மலர்களோடு கூடிய சந்தன மரக்காடுகள் சிறந்து வளர்ந்து செழிக்கும் கழுமல நகராகும்.

மேல்

(1360)
பிச்சைக்கே இச்சித்து, பிசைந்து அணிந்த வெண்பொடிப் பீடு ஆர் நீடு ஆர் மாடுஆரும்பிறைநுதல் அரிவையொடும்,

உச்சத்தான் நச்சிப் போல் தொடர்ந்து அடர்ந்த வெங் கண் ஏறு ஊராஊரா, நீள்வீதிப் பயில்வொடும் ஒலிசெய் இசை

வச்சத்தால் நச்சுச் சேர் வடம் கொள் கொங்கை மங்கைமார் வாரா, நேரே மால் ஆகும் வச வல அவனது இடம்

கச்சத்தான் மெச்சிப் பூக் கலந்து இலங்கு வண்டு இனம் கார் ஆர் கார் ஆர் நீள் சோலைக் கழுமல வள நகரே.

பிச்சை ஏற்பதை விரும்பி நீரில் குழைத்தணிந்த வெண்பொடியினராய்ப் பெருமை பொருந்தியவரும் புகழால் விரிந்தவருமாய், அருகில் விளங்கும் பிறை போன்ற நெற்றியினளாகிய உமையம்மையோடு உச்சிப்போதினை விரும்பித் தன்னை எதிர்ப்பவரைத் தொடர்ந்து கொல்லும் தறுகண்மையை உடைய விடையேற்றின் மீதமர்ந்து, ஊர்ந்து ஊர்ந்து நீண்ட தெருக்களில் விருப்பத்தோடு பாடுவதால், நச்சுதலுக்குரியனவும் முத்துவடங்கள் அணிந்தனவுமாகிய கொங்கைகளை உடைய மகளிர் அவ்விசையைக் கேட்டு வந்து தமக்கு முன்னே விரக மயக்கம் கொள்ளுமாறு வசீகரிக்கும் வன்மை பொருந்திய சிவபிரானது இடம். மேலைக் காற்றினால் அல்லது ஒற்றுமையோடு பூக்களைக் கலந்து விளங்கும் வண்டினங்களோடு கருமை நிறம் பொருந்திய மேகங்கள் தவழும் நீண்ட சோலைகளை உடைய கழுமல வளநகராகும்.

மேல்

(1361)
திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்து-இலங்கு மத்தையின் சேரேசேரே, நீர் ஆகச் செறிதரு சுர நதியோடு,

அங்கைச் சேர்வு இன்றிக்கே அடைந்து உடைந்த வெண்தலைப் பாலே மேலே மால் ஏயப் படர்வு உறும் அவன் இறகும்,

பொங்கப் பேர் நஞ்சைச் சேர் புயங்கமங்கள், கொன்றையின் போது ஆர் தாரேதாம், மேவிப் புரிதரு சடையன் இடம்

கங்கைக்கு ஏயும் பொற்பு ஆர் கலந்து வந்த பொன்னியின் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே.

திங்கள், தும்பை, விளங்கித் தோன்றும் ஊமத்தமலர் ஆகியவற்றைச் சேர்த்துச் செறிந்த நீராகிய கங்கை நதி, அழகிய கையில் விளங்குவதையன்றி உடைந்த கபாலம், முடிகாண மயக்க உணர்வுடையனாய் மேலே பறந்து சென்ற பிரமனாகிய அன்னத்தின் இறகு, நஞ்சு பொங்கும் பாம்பு, கொன்றை மாலை ஆகியவற்றை அணிந்து, வளைத்துக் கட்டிய சடையை உடைய சிவபிரானது இடம்; கங்கைக்கு நிகரான அழகோடு கலந்து வந்த பொன்னி நதியின் வாய்க்கால்கள் பாய்ந்து வளஞ் சேர்க்கும் கழுமல வளநகராகும்.

மேல்

(1362)
அண்டத்தால் எண்திக்கும் அமைந்து அடங்கும் மண்தலத்து ஆறே, வேறே வான் ஆள்வார் அவர் அவர் இடம் அது எலாம்

மண்டிப் போய் வென்றிப் போர் மலைந்து அலைந்த உம்பரும் மாறு ஏலாதார்தாம் மேவும் வலி மிகு புரம் எரிய,

முண்டத்தே வெந்திட்டே முடிந்து இடிந்த இஞ்சி சூழ் மூவா மூர் மூரா முனிவு செய்தவனது இடம்

கண்டிட்டே செஞ்சொல் சேர் கவின் சிறந்த மந்திரக் காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே.

இம்மண்ணுலகில் இருந்துகொண்டே எண் திசைகளையும் உள்ளடக்கிய அனைத்துலகங்களுக்கும் சென்று வெற்றி கொண்டு வான் உலகை ஆளும் தேவர்களையும் நெருங்கிச் சென்று வெற்றிப்போர் செய்து, அத்தேவர்களாலும் எதிர்க்க இயலாதவர்களாய் விளங்கிய அவுணர்களின் வலிமை மிக்க முப்புரங்களைத் தன்நெற்றி விழியால் வெந்து முடியுமாறு செய்து அவ் இஞ்சி சூழ்ந்த அழியாத பழமையான மூன்று ஊர்களும் முதுமை உடையவாய் அழியுமாறு சினந்த சிவபிரானது இடம், செஞ்சொற்களைக் கண்டு தேர்ந்து தொகுத்த அழகிய மந்திரங்களை மூச்சுக் காற்றாகக் கொண்டு உருவேற்றி வருவோர் வாழும் கழுமலமாகிய வளநகராகும்.

மேல்

(1363)
திக்கில்-தேவு அற்று அற்றே திகழ்ந்து இலங்கு மண்டலச் சீறு ஆர் வீறு ஆர் போர் ஆர் தாருகன் உடல் அவன் எதிரே

புக்கிட்டே வெட்டிட்டே, புகைந்து எழுந்த சண்டத்தீப் போலே, , நீர், தீ, கால், மீ, புணர்தரும் உயிர்கள் திறம்

சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத் தோடு ஏயாமே, மா லோகத் துயர் களைபவனது இடம்

கைக்கப் போய் உக்கத்தே கனன்று மிண்டு தண்டலைக் காடே ஓடா ஊரே சேர் கழுமல வள நகரே.

எட்டுத் திசைகளுக்கும் காவலர்களாகிய தெய்வங்கள் அங்கங்கே இருந்து காவல் செய்து விளங்கும் இம் மண்ணுலகைச் சீறி அழித்தற்கு வந்த வலிய போர்வல்ல தாருகன் உடலை அவன் எதிரிலேயே புகுந்து வெட்டி வீழ்த்தி, புதைந்தெழுந்து வந்த ஊழித் தீப்போலத் தோன்றி மண் நீர் தீ கால் விண் ஆகிய ஐம்பூத வடிவாய் விளங்கும் இவ்வுலகில் வாழும் உயிர்களை அழிக்கச் சிவந்த கோபத்தோடு சொக்கநிருத்தத்தில் நடனமாடி வந்த காளியின் கோபத்தை அவளோடு எதிர் நடனம் ஆடி வென்று பெரிதான இவ்வுலக உயிர்களின் துயரைக் களைந்தவன் ஆகிய சிவபிரானது இடம் பலரும் வெறுக்கக் கனன்று வந்த பேரூழிக் காலத்தும் செறிந்த சோலைகளாகிய காடுகளோடு அழியாத ஊராக விளங்கும் கழுமல வளநகராகும்.

மேல்

(1364)
செற்றிட்டே வெற்றிச் சேர் திகழ்ந்த தும்பி மொய்ம்பு உறும் சேரே வாரா, நீள் கோதைத் தெரியிழை பிடி அது ஆய்,

ஒற்றைச் சேர் முற்றல்கொம்பு உடைத் தடக்கை முக்கண் மிக்கு ஓவாதே பாய் மா தானத்து உறு புகர்முக இறையைப்

பெற்றிட்டே, மற்று இப் பார் பெருத்து மிக்க துக்கமும் பேரா நோய்தாம் ஏயாமைப் பிரிவு செய்தவனது இடம்

கற்றிட்டே எட்டு-எட்டுக்கலைத்துறைக் கரைச் செலக் காணாதாரே சேரா மெய்க் கழுமல வள நகரே.

சலந்தரன், திரிபுரத்தசுரர் முதலானவர்களைக் கொன்று வெற்றி பெற்று விளங்கும் வலிமை பொருந்திய ஆண் யானை வடிவு கொண்ட தன்னைச் சேர்தற் பொருட்டு வரும் நீண்ட மலர்மாலை அணிந்த உமையம்மை பெண் யானை வடிவு கொண்டு வந்து கூட முற்றிய ஒரு கொம்பையும் நீண்ட கையையும் மூன்று கண்களையும், இடைவிடாது மிகுந்து பொழியும் மதநீரையும் புள்ளிகளோடு கூடிய முகத்தையும் உடைய விநாயகனைப் பெற்றெடுத்து இவ்வுலகில் வாழும் மக்கட்குப் பெரிய துன்பங்களும் நோய்களும் வந்து பொருந்தாதவாறு செய்து காத்தருளிய சிவபிரானது இடம், அறுபத்து நான்கு கலைகளையும் முற்றக் கற்றுக் கரை கண்டு அவற்றின் வழி ஒழுகுவோர் சேர்ந்துறைவதும், அவ்வாறு ஒழுகாதார் அடைய முடியாததுமாகிய கழுமல வளநகராகும்.

மேல்

(1365)
பத்திப் பேர் வித்திட்டே, பரந்த ஐம்புலன்கள்வாய்ப் பாலே போகாமே காவா, பகை அறும் வகை நினையா,

முத்திக்கு ஏவி, கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய் மூடா, ஊடா, நால் அந்தக்கரணமும் ஒரு நெறி ஆய்,

சித்திக்கே உய்த்திட்டு, திகழ்ந்த மெய்ப் பரம்பொருள் சேர்வார்தாமே தானாகச் செயுமவன் உறையும் இடம்

கத்திட்டோர் சட்டங்கம் கலந்து இலங்கும் நல்பொருள் காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே.

அன்பாகிய விதையை ஊன்றி, பரந்துபட்ட சுவை முதலிய ஐம்புலன்கள் வழி ஒழுகாது தம்மைக் காத்துக் காமம் முதலிய பகைகளைக் கடிந்து முத்திக்கு இடையூறாகும் முக்குணங்களின்வழி ஒழுகாது அந்தக்கரணங்கள் நான்கையும் ஒரு நெறிப்படுத்திச் சிந்தனையில் செலுத்தி விளங்கும், மெய்ப்பரம்பொருளாகிய தன்னையே எண்ணுபவர்களைத் தானாகச் செய்யும் சிவபெருமான் உறையும் இடம், ஆறு அங்கங்களையும் கற்றுணர்ந்தோர் தம்மோடு கலந்து விளங்கும் சிவபரம் பொருளின் திருவடிகளை இடைவிடாது தியானித்து வாழும் கழுமல வளநகராகும்.

மேல்

(1366)
செம்பைச் சேர் இஞ்சிச் சூழ் செறிந்து இலங்கு பைம்பொழில் சேரே வாரா வாரீசத்திரை எறி நகர் இறைவன்,

இம்பர்க்கு ஏதம் செய்திட்டு இருந்து, அரன் பயின்ற வெற்பு ஏர் ஆர், நேர் ஓர்பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு

அம் பொன் பூண் வென்றித் தோள் அழிந்து வந்தனம் செய்தாற்கு ஆர் ஆர் கூர்வாள் வாழ்நாள் அன்று அருள்புரிபவனது இடம்

கம்பத்து ஆர் தும்பித் திண் கவுள் சொரிந்த மும்மதக் கார் ஆர், சேறு ஆர், மா வீதிக் கழுமல வள நகரே.

செம்பினால் இயன்ற மதில்களால் சூழப்பெற்றுச் செறிந்து விளங்குவதும், பசுமையான பொழில்கள் சேர்ந்ததும், நீண்ட கடல்களின் அலைகளால் மோதப் பெறுவதுமாகிய இலங்காபுரி நகருக்கு இறைவனாகிய இராவணன், இவ்வுலக மக்கட்குத் துன்பங்கள் செய்து வாழ்ந்ததோடு சிவபிரான் உறையும் கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்டபோது அழகிய மலர் போன்ற ஓர் திருவடி விரல் ஒன்றை ஊன்றி அழகிய பொன்னணிகலன்கள் பூண்ட அவனது வெற்றி நிறைந்த தோள் வலிமையை அழித்து அவன் பிழை உணர்ந்து வந்தனம் செய்த அளவில் அவனுக்கு அரிய கூரிய வாளையும் நீண்ட வாழ்நாளையும் அப்பொழுதே அருள் புரிந்தருளிய சிவபெருமானது இடம்; கம்பங்களில் கட்டிய யானைகளின் வலி கன்னங்கள் முதலியன பொழிந்த மும்மதங்களால் நிலம் கரிய சேறாகும் வீதிகளை உடைய கழுமலநகராகும்.

மேல்

(1367)
பன்றிக்கோலம் கொண்டு இப் படித்தடம் பயின்று இடப் பான் ஆம் ஆறு ஆனாமே, அப் பறவையின் உருவு கொள

ஒன்றிட்டே அம்புச் சேர் உயர்ந்த பங்கயத்து அவனோ தான் ஓதான், அஃது உணராது, உருவினது அடிமுடியும்

சென்றிட்டே வந்திப்ப, திருக்களம் கொள் பைங்கணின் தேசால், வேறு ஓர் ஆகாரம் தெரிவு செய்தவனது இடம்

கன்றுக்கே முன்றிற்கே கலந்து இலம் நிறைக்கவும், காலே வாரா, மேலே பாய் கழுமல வள நகரே.

திருமால் பன்றி உருவம் எடுத்து இவ்வுலகைப் பிளந்து சென்று பாதாளம் வரைத் தேடியும், நீரில் தோன்றிய தாமரை மலரில் உறையும் நான்முகன் வேதங்களை ஓதுபவனாக இருந்தும் அதன் உண்மைப் பொருளை உணராது அன்னப்பறவை வடிவம் எடுத்து வான வெளியில் பறந்து சென்று தேடியும் தம் எதிரே தோன்றிய வடிவினது அடிமுடிகளைக் காணாது அயர்த்துச் சென்று வழிபட அவர்களின் பசுமையான கண்களுக்கு அழகிய நீலகண்டத்தோடு தனது வல்லமையால் வேறோர் வடிவம் தெரியச் செய்தவனது இடம் ஆன் கன்றுகள் முன்றிலில் நிறைந்து கலந்து நின்று இல்லத்தை நிறைக்கவும் வாய்க்கால்கள் வந்து மேல் ஏறிப் பாயவும் வளத்தால் நிறைந்து விளங்கும் கழுமல வளநகராகும்.

மேல்

(1368)
தட்டு இட்டே முட்டிக்கைத் தடுக்கு இடுக்கி, நின்று உணா, தாமே பேணாதே நாளும் சமணொடும் உழல்பவனும்;

இட்டத்தால், “அத்தம்தான் இது அன்று; அது” என்று நின்றவர்க்கு ஏயாமே வாய் ஏதுச்சொல், இலை மலி மருதம்பூப்

புட்டத்தே அட்டிட்டுப் புதைக்கும் மெய்க் கொள் புத்தரும்; போல்வார்தாம் ஓராமே போய்ப் புணர்வு செய்தவனது இடம்

கட்டிக் கால் வெட்டித் தீம்கரும்பு தந்த பைம்புனல் காலே வாரா, மேலே பாய் கழுமல வள நகரே.

தட்டைக் கையில் ஏந்தி வளைந்த கையில் தடுக்கை இடுக்கி நின்று உண்டு ஆடைகளால் தம்மைப் பேணாது நாள்தோறும் வருந்தித் திரியும் சமணர்களும், தம் விருப்பப்படி கேட்பவர்க்குத் தெளிவு ஏற்படாதவாறு பொருள் இது அன்று அதுதான் என்று வாய்க்கு வந்தபடி காரணம் கூறுபவரும், இலைகள் நெருங்கிய மருதமரத்தின் பூவை அரைத்துப் பின்புறத்தே, பூசிச் சாயமூட்டிய ஆடையைத் தம் உடலின் பின்பாகத்தே சுற்றிக்கொண்டு உடலை மறைப்போரும் ஆகிய புத்தர்களும் போல்பவர் கண்டறியாதவாறு சென்று எழுந்தருளியுள்ள சிவபிரானது இடம் வெல்லக்கட்டிகளைத் தரும் இனிய கரும்பை வெட்டியதால் அக்கரும்பு தந்த இனிய சாறு வாய்க்கால் வழியே வந்து மேல் ஏறிப் பாயும் வளமுடைய கழுமல வளநகராகும்.

மேல்

(1369)
கஞ்சத்தேன் உண்டிட்டே களித்து வண்டு, சண்பகக் கானே தேனே போர் ஆரும் கழுமல நகர் இறையைத்

தஞ்சைச் சார் சண்பைக் கோன் சமைத்த நல் கலைத் துறை, தாமே போல்வார் தேன் நேர் ஆர் தமிழ் விரகன் மொழிகள்,

எஞ்சத் தேய்வு இன்றிக்கே இமைத்து இசைத்து அமைத்த கொண்டு, ஏழே ஏழே நாலே மூன்று இயல் இசை இசை இயல்பா,

வஞ்சத்து ஏய்வு இன்றிக்கே மனம் கொளப் பயிற்றுவோர் மார்பே சேர்வாள், வானோர் சீர் மதிநுதல் மடவரலே.

தாமரை மலரிலுள்ள தேனைக் குடித்துக் களித்த வண்டுகள் சண்பக மரச்சோலைகளில் உள்ள தேன் வண்டுகளோடு போரிடும் கழுமல வளநகர் இறைவனைத் தஞ்சமாகச் சார்ந்துள்ள சண்பை நகர்த் தலைவனும் தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் குறைவின்றிப் பாடியமைத்த,

தேனுக்கு நிகரான இப்பதிகப் பாடல்களை நல்ல கலைகளில் துறைபோய்த் தமக்குத் தாமே நிகராய் இருபத்தொரு பண்முறையினால் இயல்பாக வஞ்சனையின்றி மனம் பொருந்தப் பாடுபவர்களின் மார்பினில் தேவர்களால் போற்றப் பெறும் சிறப்புமிக்க பிறை போன்ற நெற்றியினை உடைய திருமகள் சேர்வாள்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(127)
திருப்பிரமபுரம் - ஏகபாதம்

(1370)
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்

பிரம புரத்துறை பெம்மா னெம்மான்

பிரம புரத்துறை பெம்மா னெம்மான்

பிரம புரத்துறை பெம்மா னெம்மான்.

ஞானாகாசமாகிய பராசத்தியான பரிபூரணத்தை மிகுதியாக வியந்து அந்தப் பராசத்திக்கு அதீதமாகிய சுகமே வடிவாய் முதல் நடு இறுதி காணப்படாத வஸ்து எந்தப் பெரியோன். மேல்நிலமாகிய ஆகாசத்தின்கண்ணே யோடா நின்ற கங்காதேவியை விரும்பித் திருமுடியிலே வைத்தவன், எம்மை நீங்காத நிலைமையையுடைய எமது உயிர். பிரமரூபத்திலே எண்ணப்பட்ட என்னை முத்தியிலே விடுகைக்கு அமையாத விருப்பமுள்ளவனாய் என்னை ஒக்கவந்தவன். பிரமபுரம் என்கின்ற சீகாழிப்பதியிலே வீற்றிராநின்ற கர்த்தாவானவன் என்னுடைய சுவாமி. பெரியோனும் எனக்கு உயிரானவனும் என்னை யொக்கவந்தவனும் சீகாழிப்பதியில் வீற்றிருக்கும் கடவுள் எனக் கூட்டிப் பொருள் கொள்க.

மேல்

(1371)
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்

விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்

விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்

விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்.

அஷ்டகுல பர்வதங்களும் ஒலிசிறந்த தரிசு மணியாகவும், அகில லோகங்களையும் உள்ளே அகப்படுத்தும் தன்மையவாயும், பெரிதாயும் உள்ள திருச்சிலம்பினைத் தரித்துள்ளவன். நூபுரம் எனற்பாலது நுபுரம் எனக் குறுகிநின்றது. விஷ்ணுவின் புறனுரையாகிய சிவதூஷணத்தை அரசமரத்தினீழலில் அவனுடன் இருந்து விரும்பியுள்ள முப்புரங்களைச் சங்கரித் துள்ளவன். அண்ணி எனற்பாலது அணி என இடைக்குறையாய் நின்றது. தேவர்கள் கற்பகப் பூஞ்சோலை மலர்களால் அர்ச்சிக்கப் படுகின்ற தேவேந்திரனுடைய. எணு எனற்பாலது ஏணு என நீண்டது. புரந்தரன் எனற்பாலது புரத்தரன் என வலித்து நின்றது. இதழ்கள் விண்டு மலர்கின்ற சோலை சூழ்ந்த சீகாழிப்பதிக்குக் கர்த்தாவாயுள்ளவன். தேவேந்திரன் மூங்கில் வழியாகவந்து பூசித்ததால் வேணுபுரம் என்னும் பெயர்பெற்றது. சிலம்பினைத் தரித்துள்ளவரும், முப்புரத்தை எரித்தவரும், தேவேந்திரனுடைய சோலைசூழ்ந்த வேணுபுரத்தில் வீற்றிருக்கும் இறைவர் எனக் கூட்டி உரைத்துக் கொள்க.

மேல்

(1372)
புண்டரி கத்தவன் மேவிய புகலியே

புண்டரி கத்தவன் மேவிய புகலியே

புண்டரி கத்தவன் மேவிய புகலியே

புண்டரி கத்தவன் மேவிய புகலியே.

இதயகமலத்திலிருந்து இடையறாத ஆனந்தம் பொழியப்பட்டு என்னை மலபோதத்தில் தள்ளாமல் எனக்கு அடைக்கலப் பொருளாயுள்ளவன். ஆன்மாக்களுக்கு இரக்ஷையாக முண்டம்போலிருந்த திருநீற்றை அணியப்பட்ட மிக்க கருணையானவனே யான்பாடும் பாடலை உவந்துள்ளவன். புலிக்காலும் புலிக்கையும் பெற்றுள்ள வியாக்கிரபாத முனிவருக்கு ஞானானந்தமாகிய நாடகத்தைக் கனகசபையிலே ஆடல்செய்யும் பரத வித்தையைக் கற்றுள்ளான். வியம் எனற்பாலது விய எனக் கடைகுறைந்து நின்றது. கீழ்ச்சொன்ன லீலைகளெல்லாம் செய்கின்ற சிவன் தனது இச்சையால் பொருந்தியிருக்கும் ஊர் பிரமா பூசித்த புகலி என்னும் திருப்பதி.

மேல்

(1373)
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்

விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்

விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்

விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்.

கன்று குணிலாக எறிந்து விளவின் கனியைக் கொண்ட நாரணனைப் பிரகாசஞ்செய்யப்பட்டு நின்மலமாயிருந்துள்ள தனது பெரிய திருமேனியிலே ஒன்று பாதியாக வைத்துள்ளான் என்க. தீ எனற்பாலது தி எனக் குறுகிநின்றது. கழுதரு எனற்பாலது கழ்தரு என நின்றது. மாறுபாடாய்க் கதறப்பட்ட புத்தனது தலையிலே அக்கினியைச் சொரிந்து மிக்க பயத்தோடும் விழுகின்ற இடியை விழும்படி ஏவிப் புத்தரை வேரறுத்தானும் தானேயன்றியானன்றாகும். தீ எனற்பாலது தி எனவும், காழ்தரு எனற்பாலது கழ்தரு எனவும், ஏங்கு எனற்பாலது எங்கு எனவும் குறுகிநின்றன. தனது பரிபூரணத்திலே தன்னையிழந்து இரண்டாய் விசுவமுருகித் தான் விஷமாகத் தூஷணப்பட்டு நிற்கின்ற எனக்கும் குருமூர்த்தியாய் வந்து என் பிறவியை ஒழித்துத் தனது பேரின்பமாகிய பரிபூரணத்திலே எனது அடிமை குலையாமல் இரண்டறவைத்தவன். கீழ்ச்சொல்லிப் போந்த செய்திகளெல்லாமுடையன் எத்தன்மையனோ என்னில் எங்கும் பிரகாசியாநின்ற கீர்த்தியினால் சிறக்கப்பட்டுள்ள இயமனால் பூசிக்கப்பட்ட வெங்குரு என்னும் திருப்பதியை விரும்பியுள்ளான். வெங்குரு என்பதும் சீகாழி.

மேல்

(1374)
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்

சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்

சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்

சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்.

சுடுநிலமாகிய மயானத்தை நடமாடும் இடமாகக் கொண்டும், முப்புரங்களையும் நகைசெய்து சுடப்பட்ட வெற்றிப் போரையுடைய தும்பைமாலைக் கடவுள். சூடார் எனற்பாலது சுடர் எனவும், ஈமம் எனற்பாலது இம் எனவும் குறுகி நின்றன. துரோணம் எனற்பாலது தோணி என மருவிற்று. என் உச்சிக்குச் சூடாமணியுமாய் என்மேல்வைத்த மாலினையுடையனுமாய் யாகத்தின் கண் வந்த யானையை வடிவொழித்துப் போர்க்கும் தன்மையை உடையவன். சூடாமணி எனற்பாலது சுடர்மணி எனவும், மாலி எனற்பாலது மாளி எனவும், தோல் எனற்பாலது தோள் எனவும் நின்றன. மாலையுடையவன் - மாலி. தோல் - யானை. சூரியனுடைய களங்கத்தைக் கழுவப்பட்ட சமுத்திரம் போன்ற செனனக்கடலிலே கீழ்ப்பட்டழுந்திக் கெடாநின்ற ஆன்மாக்களுக்குக் கைப்பற்றிக் கரையேறும் தெப்பமாகப் பிரணவம் என்கிற மந்திரத்தை அவரது செவியின் கண்ணே உண்டாக்கா நின்றவன். மண்ணி என்பது மணி என இடை குறைந்து நின்றது. புரந்தவன் எனற்பாலது புரத்தவன் என வலித்தல் விகாரமாயிற்று. விளக்கத்தையுடைய நவரத்தினங்களாலே அலங்கரிக்கப்பட்ட மாளிகை சூழ்ந்த திருத்தோணிபுரத்திலே வீற்றிருக்கும் சிவன் இத்தன்மையன்.

மேல்

(1375)
பூசுரர் சேர்ந் தராயவன் பொன்னடி

பூசுரர் சேர்ந் தராயவன் பொன்னடி

பூசுரர் சேர்ந் தராயவன் பொன்னடி

பூசுரர் சேர்ந் தராயவன் பொன்னடி.

பூமியிலுள்ளாரையும் தேவகணங்களாய உள்ளாரையும் தனது நாபிக் கமலத்திலே தோற்றுவிக்கப்பட்ட பிர்மா விஷ்ணுவினது போதத்திலே கண்ணாடியும் நிழலும் போலப் பிரதிவிம்பியா நின்றவன். ஆடி என்பது அடி எனக் குறுகிநின்றது. மலத்திரயங்களைக் கழுவப்பட்ட சிவஞானிகள் கூட்டம் பொலிவு பெறத்தக்க வனப்பையுடைய ஆனந்தநிருத்தம் செய்தருள்பவன். சர்வாங்கமும் உத்தூளனம் பண்ணின மார்பை உடைய சிவஞானிகளும், புண்ணியபாவக்கட்டையரிந்து விசுவத்தைத் தள்ளப்பட்ட சிறப்பையுடையருமாயிரா நின்றவர்களுக்கு மிகுதியான மூலமாயுள்ளவன். உந்தராய் என்பது, ஊந்தராயென நீண்டது. மறுவிலா மறையோர் வாழ்கின்ற திருப்பூந்தராய் என்னும் திருப்பதியின்கண் வீற்றிராநின்ற சிவனது அழகிய திருவடித் தாமரை என்னை ஆண்டிடுவதாக, பூந்தராய் என்பது சீகாழி.

மேல்

(1376)
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்

செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்

செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்

செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்.

தனது திருவடிப்பிரசாதமில்லாதார்க்கு மல மயக்கத்தின் மேலீட்டைக்கெடாத சிவனுக்கு விசுவாதீதமான இருப்பிடம் எனது சைதன்னியமே. சத்தாதிகளஞ்சும் சேரப்பட்ட உலகத்தைத் தன் வாயினிடமாகவுடைய விஷ்ணுவின் களேபரத்தைத் திருமேனியிலே தரித்துள்ளான். சேர் எனற்பாலது செர் எனவும், சீர் எனற்பாலது சிர் எனவும் குறுகிநின்றன. ஆத்தும விகாரமாகிய கர்மத்தினாலே இந்திரியங்களுக்கு விடயமாகிய சுவர்க்கத்திலிச்சை யுடையானுக்கு அந்தச் சுவர்க்கம் மெய்யாக விசேடித்திருக்குமன்றே. இந்திரிய வன்மையாகிய யுத்தத்துக்கு இளையாமல் அந்த இந்திரியமாகிய பாணங்கள் தனது அறிவுக்குள் தைக்கப்படான். ஒருகால் சிரபுரம் என்று சொன்ன விடத்துப் பஞ்சேந்திரியங்களையும் அவியப்பொருது சிவனுடைய திருவடியிலே அடையாநிற்பன் என்பதாம்.

மேல்

(1377)
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்

பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்

பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்

பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்.

பொலிவினையுடைய மாயாநிருத்தம் புரிகின்ற பத்திரகாளியும் பூதபசாசும் பொருந்திய மயானமே திருக்கோயிலாக உள்ளவன். சுத்தமான வழியைத் தரப்பட்ட மகாரிஷிகள் திரண்டு தவம் பண்ணாநிற்கும் ஆரணியத்தில் தனித்துத் தவம் புரியாநிற்கும் தபோதனன். அழகிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள இலக்குமியையொத்த இருடிபத்தினிகள் பிச்சையிடவந்து அணையுமிடத்துத் தனக்குள்ள நிருவாணத்தை அவர்களுக்குக் கொடுத்தவன். பொன்னாற் செய்யப்பட்ட பாடக நூபுராதிகளைப் பாதங்களிலே யணிந்துள்ள கன்னியர் திரண்டு விளையாடும் புறவம் என்னும் திருப்பதியில் வாழ்கின்ற சிவன். புறவம் என்பதும் சீகாழி.

மேல்

(1378)
தசமுக நெறிதர ஊன்று சண்பையான்

தசமுக நெறிதர ஊன்று சண்பையான்

தசமுக நெறிதர ஊன்று சண்பையான்

தசமுக நெறிதர ஊன்று சண்பையான்.

ஆத்துமாக்களிடத்துக் கருணைபிறக்கும் இடமாயுள்ளவன். அக்கினி வீசப்பட்டுத் திருவரையிலே அழுந்தச் சாத்தியுள்ள விரிந்த படத்தினையுடைய பாம்பை அரைஞாணாகவுடையான். எல்லாம் இறந்து அந்தமாயுள்ள சிவஞானிகள் குழாத்துக்கு நேரிதாகிய சூனியமாயுள்ள பொருளைத் தோற்றுவித்துள்ளானுமாய்ப் புலியினது ஊன்பொருந்திய தோலாடையைத் திருவரையிலே விரித்துடுத்தவன். நேரி எனற்பாலது நெரி எனக் குறுகிநின்றது. தரக்கு எனற்பாலது தர எனக் குறைந்தது. தூசு எனற்பாலது துசு எனக் குறுகிநின்றது. பாயான் எனற்பாலது பையானெனக்குறுகிப் போலியாயிற்று. ஆத்தும விகாரமான அகங்காரம் போம்படி என்னறிவில் எதிர்ப்பட்டவன் கயிலாயமலையைத் திருவுள்ளத்தடைத்து எழுந்தருளியிருந்து ஆத்துமாக்களை இரக்ஷியாநின்ற விசேஷத்தையுடையவனென்றேத்தும் சட்சமயங்களுக்கும் அவரவர்கொண்ட பயனாயுள்ளவன். நேரி எனற்பாலது நெரி எனக் குறுகிநின்றது. பத்துத்தலையுள்ள இராவணன் முரியும்படி திருவிரலாலடர்த்தவன் யாரென்னில், சண்பை என்னும் திருப்பதியிலே வீற்றிருக்கும் கடவுள்.

மேல்

(1379)
காழி ஆனய உள்ளவா காண்பரே

காழி ஆனய உள்ளவா காண்பரே

காழி ஆனய உள்ளவா காண்பரே

காழி ஆனய உள்ளவா காண்பரே.

நிலைபெற்றுநின்ற நின்மலமாகிய சித்தத்தையுடைய பத்தரிடத்துச் சத்தியப்பொருள் விளையும்பொருட்டு ஞானநாட்டத்திலே அவர்களைக் கடாக்ஷிக்கின்றவன். திருமிடற்றில் களங்கமுடையானது கருணையை நினைத்து ஞானநாட்டத்தையுடைய சிவஞானிகள் சிவனுக்கிச்சை தன்னடியார்க்கே ஆங்காரத்தைத் தடுக்குமதே பணியெனத் தமதறிவிலே கருதாநிற்பர். விஷ்ணுவும் பிர்மாவும், திருமுடியும் திருவடியும் காணும் பொருட்டு வராகமும் அன்னமுமாகக் கருதி வடிவுகொண்டார். ஐயோ! உள்ளபடி கருதிச் சிவனைப்பெறாமல் அவர்கருதியதேது எனில், அன்னியமே கண்டனர். கண் எனற்பாலது காண் என நீண்டது. என்பொருட்டால் காழி என்னும் திருப்பதியைப் படைத்தானை, என் ஐயனை, எனது ஆசையை, கீழ்ச் சொன்ன இருவர்களும் தாங்கள் தேடும் தேட்டப் பிரிவில் மயக்கத்திலே தேட்டமழித்துத் தோன்றா நிற்பவனைத் தேடி மறத்தலொழிந்து எவ்வாறு காண்பர்.

மேல்

(1380)
கொச்சையன் அலைக்கூட கிலாருடன் மூடரே

கொச்சையன் அலைக்கூட கிலாருடன் மூடரே

கொச்சையன் அலைக்கூட கிலாருடன் மூடரே

கொச்சையன் அலைக்கூட கிலாருடன் மூடரே.

ஆணவமலத்தோடு கூடியுள்ள மயக்கத்துடன் மாறுபட்டோர்கள் மாயாதனுவாலும் மந்திரதனுவாலும் மறைக்கப்படார்கள். மூடார் எனற்பாலது மூடர் எனக் குறுகிநின்றது. புலால் நாற்றத்தைப் பொருந்திய அழுக்குமெய்யைப் பொய்யென்று மனங்கொள்ளமாட்டாமல் அதுவே தமது நிலைபெற்றவுருவாக நினைத்துத் துவராடையாலே உடம்பைச் சூழப்பட்ட பௌத்தரும், பேதைத் தன்மையையுடைய மச்சியகந்தியினுடைய நலத்தைக் கொள்ளும் பொருட்டு அவளது சரீரம் எல்லாம் சுகந்தமொய்க்கும்படி அவளுடனே பொருந்திய பராசரனாகிய மகாவிருடிவந்து சிவனைப் பொருந்தி அருச்சிக்கப்படுதலால். பராசரமுனிவரால் பூசிக்கப்பட்டு அவன்பெயரால் பெயர்பெற்றுள்ள கொச்சை நகரம் என்னும் திருப்பதியிலே எழுந்தருளியிராநின்ற தலைமையோனை உள்ளபடி தரிசனம் பண்ணி வழிபடமாட்டார்களது நினைவு எவ்வாறிருக்கும் என்னில், மழைக்காலிருளும் வெளிதென இருண்ட மயக்கத்தையுடைய ஆணவ போதமாயிருக்கும்.

மேல்

(1381)
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை.

மிகுதிப்பட்ட தோஷமாயுள்ள சுக்கில சுரோணிதமாகிய இருவகை நீரின்கண்ணே சிரமுதலாகிய அவயவமாகத் தோன்றிப் பூமியின்கண் செனித்துப் பரிணமித்துப் பின்பு தேய்ந்து மரிக்கின்ற சென்மத்தையும் பரிணமித்தல் - வேறுபடுதல். கீழ்ச் சொல்லிப்போந்த சென்மத்தையும் கழுவி மலத்திரயங்களையும் கழுவாநிற்கும். தனது பாதியாகிய திருவருளினாலே என்னை அகப்படுத்திக் கவளிகரித்துக் கொண்டு அந்த அருள்வழியாக எனதிடத்தில் இடையறாமல் வாழும் தன்னை எனக்குத்தந்த அடிமை குலையாமல் எக்கண்ணும் விட்டு விளங்கும் கர்த்தர். பாதி எனற்பாலது பதி எனக் குறுகி நின்றது. மாயா மயக்கத்தின்கண்ணே மயங்கி பெத்த முத்தி இரண்டும் தெரியாமல் திண்டாடப்பட்ட மலபோதர்க்கு அமுதம் போன்று அரிதாயுள்ளவனுமாய் விட்டு விளங்கப்படாநின்ற பொன்னுருவையுடையவனாய்ச் சிருஷ்டிக்குக் கர்த்தாவாகிய பிரமனது சிரக்கபாலத்திலே பிச்சைகொண்டு நுகரும் கருணை யாளனே! திருக்கழுமலம் என்னும் மூவாப் பழங்கிழமைப் பன்னிரு பெயர்பெற்ற அனாதிமூலமாகிய பதியிடத்துக் கவுணிய கோத்திரத்திலே தோன்றப்பட்ட யான் நிவேதிக்கப்படும் காட்டாகிய இப்பாடலைக் கீழ்ச்சொன்னவற்றிலும் மலத்திரயங்களிலும் அழுந்தாநின்ற ஒருத்தராகிலும் பலராகிலும் உரை செய்வார் உயர்ந்தாரேயாதலால் இப்பாடலை இடைவிடாமல் உரைசெய்வீராக. காட்டு என்பது கட்டு எனக் குறுகிநின்றது,

உரை செய்வார் உயர்ந்தாரேயாதலால் இப்பாடலை இடைவிடாமல் உரைசெய்வீராக.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(128)
திருப்பிரமபுரம் - திருஎழுகூற்றிருக்கை

சம்பந்தர் தேவாரம் முழுவதையும் பாராயணம் செய்த பலன் கிடைக்க

திருஞான சம்ப்ந்த மூர்த்தி நாயனார் பாடிவந்த தேவாரங்கள் அனைத்தையும் அவ்வப்போது பாராயணம் செய்து வந்த அவரது தந்தையார் சிவபாதஹ்ருதயர், அவை நாள்தோறும் எண்ணிக்கையில் பெருகிக் கொண்டு வர நித்ய பாராயணம் செய்வது கடினமாகிக்  கொண்டு வந்தன. சம்பந்தரிடம் அவரது தேவாரம் முழுவதையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்படியும் ஆனால் அதே சமயம் ஒரு சிறிய நூலாகவும் இருக்கும்படியும் மிகமிகச் சக்தியுள்ளதான ஒரு சிவஸ்தோத்திரத்தை அருளிச் செய்யும் படி வேண்டினார். அதன்படி சம்பந்தரும் திருவெழுக் கூற்றிருக்கையை இயற்றி அருளினார்.

பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் கோபுரம் பெரியநாயகி சிவபாத இருதயர் திருக்குள தீர்த்தக் கரையில் ஞானப் பிள்ளையாரை இருத்திவிட்டு விரைந்து நீராடித் திரும்புகையில் கரையில் நின்றியிருந்த தன் மகன் கடைவாய் வழியாகப் பால் வழிந் திருப்பதைக் கண்ட அவர், தன் மகனார்க்கு யாரோ பால் அளித்துச் சென்றுள்ளார்கள் என்று எண்ணியவராய் ஞான போனகரை நோக்கிப் பிள்ளாய் நீ யார் அளித்த பால் அடிசிலை உண்டாய்? எச்சில் கலக்குமாறு உனக்கு இதனை அளித்தவர் யார்? காட்டுக என்று வெகுண்டு தரையில் கிடந்த கோல் ஒன்றைக் கையில் எடுத்து ஓச்சியவராய் வினவ,
சிறிய பெருந்தகையார் தம் உள்ளத்துள் எழுந்த உயர் ஞானத் திருமொழியால் தமிழ் என்னும் மொழியின் முதல் எழுத்தாகிய தகர மெய்யில் பிரணவத்தை உயிராய் இணைத்துத் தனக்குப் பாலளித்த உலகன்னை தன் அன்னை உமைஅம்மையின் தோடணிந்த திருச்செவியைச் சிறப்பிக்கும் முறையில் தோடுடைய செவியன் என்ற முதற்பெரும் பாடலால் தனக்குப் பாலளித்த கடவுளின் அடையாளங்களைச் சுட்டுதல்.
இறைவன்: பிரம்மபுரீசுவரர், தோணியப்பர், சட்டைநாதர்
இறைவி: பெரியநாயகி, திருநிலை நாயகி, ஸ்திர சுந்தரி
தல விருட்சம்: பாரிஜாதம், பவளமல்லி
பாடல் குறிப்பு :

திரு + எழு + கூற்று + இருக்கை பாடல்களின் உள்ள வார்த்தைகளில் உள்ள எண்களால் சுட்டப்படும் அடுக்கில் முதல் 7 வரை படிப்படியாக ஒன்று, இரண்டு, ஒன்று, 1 2 1 ஒன்று, இரண்டு, மூன்று, இரண்டு, ஒன்று 1 2 3 2 1 என ஒன்று முதல் ஏழு வரையிலும் ஒவ்வொன்று ஏற்றியும், இறக்கியும் ஏழு கூறுகளிலும் எண்கள் இருக்க இயற்றப்படும் செய்யுள், எழு கூற்றிருக்கை ஆகும்.

கூறுகளாக அறைகளைக் கீறும்போது... முதற்கூற்றில் மூன்று அறைகளும்
1 2 1
இரண்டாம் கூற்றில் ஐந்து அறைகளும்
1 2 3 2 1
மூன்றாம் கூற்றில் ஏழு அறைகளும்
1 2 3 4 3 2 1
நான்காம் கூற்றில் ஒன்பது அறைகளும்
1 2 3 4 5 4 3 2 1
ஐந்தாம் கூற்றில் பதினோரு அறைகளும் கீறி,
1 2 3 4 5 6 5 4 3 2 1
ஆறாம் கூற்றிலும், ஏழாம் கூற்றிலும் பதிமூன்று அறைகள் அமைப்பர்.
1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1
1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1

இவற்றை சித்திரக்கவி, ரதபந்தம் என்பர்.இது தேர் போன்ற அமைப்பும் எண்களைக் கூட்டி பின் ஒவ்வொரு எண் அதிகமாகும்போதும் , மீண்டும் கீழிறங்கி, மேலே வந்து அடுத்த எண்ணைக் கூட்டிச் செல்லும். என ஏழு வரைச் சென்றதும் இது தேரின் மேலடுக்கு போல் ஆகிறது. அதன் பின் ஒரு இடைத் தட்டு ,பீடம் பின்னர் மீண்டும் முன் சொன்ன வரிசையை அப்படியே திருப்பி தேரின் கீழ் அடுக்காக அமைத்து இறுதியில் தொடங்கிய அதே எண்ணிலேயே முடிவடையும். ✴️முடிவில் பாடல் அமைப்பு இப்படி இருக்க வேண்டும்.

o
1 2 1
1 2 3 2 1
1 2 3 4 3 2 1
1 2 3 4 5 4 3 2 1
1 2 3 4 5 6 5 4 3 2 1
1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1
1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1
⏫மேலடுக்கு
நடு பீடம்
கீழடுக்கு ⏬
1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1
1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1
1 2 3 4 5 6 5 4 3 2 1
1 2 3 4 5 4 3 2 1
1 2 3 4 3 2 1
1 2 3 2 1
1 2 1
o

நான்காவது தலையாத்திரையை முடித்துக் கொண்டு சீர்காழி திரும்பிய திருஞானசம்பந்தர் பல நாட்கள் சீர்காழி தலத்தில் தங்கியிருந்து, வித்தியாசமான பல பதிகங்கள் பாடினார். அப்போது அவர் பாடிய பதிகங்களில் பல தமிழ் இலக்கியத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தன. அத்தகைய பதிகங்களில் ( மொழிமாற்றுப் பதிகம் (1.117) மாலைமாற்றுப் பதிகம் (3.117) வழிமொழி விராகப் பதிகம் (3.67) ஏகபாதம் (1.127) திருவிருக்குக்குறள் (1.90) ) ஒன்று தான் திருவெழுகூற்றிருக்கை என்று அழைக்கப்படும் இந்த பதிகம். இந்த பதிகம் அகவல் முறையில் அமைந்துள்ளது. இந்த பதிகத்திலும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள பதிகங்கள் போன்று சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்கள் குறிப்பிடப் படுகின்றன.

மிகவும் அழகான அலங்காரத்துடன் வீதி வலம் வரும் பெருமானின் அழகினைக் கண்டு இரசிப்பதற்கு அனைவரும் விரும்புவார்கள். அதிலும் தேரில் உயர்ந்த இடத்தில் அமர்ந்து வீதி வலம் வரும் பெருமானை காண்பதற்கு சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்புவார்கள். திருஞான சம்பந்தர் ஒரு படி மேல் சென்று, பெருமானை தானே தேரில் அமர்த்தி அழகு பார்க்க வேண்டும் என்று விரும்பினார் போலும். சொற்களாலான தேரினை உருவாக்கி அந்த தேரினில் பெருமானின் பண்புகளையும் தன்மையையும் சீர்காழி நகரத்தின் பன்னிரண்டு பெயர்களையும் வைத்து நாம் அனைவரும் படித்து இன்புறும் வண்ணம் ஒரு பதிகத்தினை இயற்றுகின்றார். இவ்வாறு சொற்களால் அமைந்த தேரினில் இறைவனின் பலவிதமான பெருமைகளை குறிப்பிட்டு அழகு பார்க்கின்றார். சொற்களால் அமைந்துள்ள தேர் என்பதை நாம் உணரும் வண்ணம் தேரின் மேல் பாகம் அமைந்திருப்பது போன்று எண்களை வைத்து பல வரிசைகளாய் அடுக்கியுள்ளார். இத்தகைய கவிதை நடையினை இரதபந்தம் என்று வ்டமொழியில் அழைப்பார்கள். இதனை தமிழ்மொழியில் மிகவும் அழகாக திருவெழுகூற்றிருக்கை (திரு எழு கூற்று இருக்கை) என்று அழைக்கின்றனர். திரு=தெய்வம்; எழு=எழுந்தருளும்; கூற்று=சொற்களாலான; இருக்கை=அமரும் இடம், தேர்;

இனி, எண்களைக் கொண்டு எவ்வாறு தேரின் அமைப்பினை சம்பந்தர் உணர்த்துகின்றார் என்பதை நாம் காண்போம். முதல் வரிசையில் 13 சதுரங்கள் அதற்கு மேல் வரிசையில் 11 சதுரங்கள் அதற்கும் மேல் 9 சதுரங்கள் அதற்கும்மேல் உள்ள வரிசைகளில் 7 சதுரங்கள் 5 சதுரங்கள் 3 சதுரங்கள் வைக்கப்பட்டுள்ள அமைப்பினை கற்பனை செய்து பார்த்தால் ஒரு தேரின் மேல் பகுதியை ஒத்திருக்கும் உண்மையை நாம் அறியலாம். கீழ் வரிசையில் ஒன்று முதல் ஏழு வரை எண்களை முதலில் ஏறு வரிசையிலும் பின்னர் இறங்கு வரிசையிலும் அமைத்து, ஒவ்வொரு எண்ணையும் ஒரு சதுரத்தை உணர்த்துவதகக் கொண்டால் இந்த வரிசையில் பதின்மூன்று சதுரங்கள் இருப்பதை (1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1) நாம் உணர்ந்து அறியலாம். இவ்வாறு கீழ் வரிசையில் உள்ள சதுரங்களின் எண்ணிக்கையை உணர்த்திய ஞானசம்பந்தர் அதற்கும் மேல் உள்ள வரிசைகள் முறையே பதினோரு சதுரங்கள் (1 2 3 4 5 6 5 4 3 2 1) ஒன்பது சதுரங்கள் (1 2 3 4 5 4 3 2 1) ஏழு சதுரங்கள் (1 2 3 4 3 2 1) ஐந்து சதுரங்கள் (1 2 3 2 1) மற்றும் மூன்று சதுரங்கள் (1 2 1) வைத்திருப்பதை நாம் காணலாம். இந்த அமைப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதனைக் காணும் நமக்கு தேரின் மேற்கூரையின் மேல் உள்ள அமைப்பு தென்படும்,

(1 2 1)
(1 2 3 2 1)
(1 2 3 4 3 2 1)
(1 2 3 4 5 4 3 2 1)
(1 2 3 4 5 6 5 4 3 2 1)
(1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1)

பாடலின் 19ஆம் வரியிலிருந்து 31ஆம் வரிகள் வரை ஒன்று முதல் ஏழு வரை உள்ள எண்களை ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் வரும் வண்ணம் அமைத்துள்ள சம்பந்தர், மீண்டும் பாடலின் 32ஆம் வரியிலிருந்து 42ஆம் வரிகள் வரையிலும் ஒன்று முதல் ஏழு வரை உள்ள எண்கள் ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் வரும் வண்ணம் அமைந்துள்ளார். இவ்வாறு அமைந்துள்ள நிலையினை தேர் தட்டின் கீழ் பாகம் என்றும் கூரை என்றும் கொள்வதும் பொருத்தமாக உள்ளது, இனி இந்த பாடல் உணர்த்தும் பொருளை நாம் காண்போம்.


குரலிசையோடு பாடல் கேட்க:
இத்தேனாரமுதத் திருப்பதிகத்தை குரலிசையோடு பாடித் துதிக்க :

♪ ஓர் உரு ஆயினை; மான் ஆங்காரத்து
திருப்பிரமபுரம் - திருஎழுகூற்றிருக்கை

நன்றி : Thevaaram.org

கோவில் பற்றி மேலும் அறிந்துகொள்ள : Templeyatra.com : அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில்
Shaivam.org :திருக்காழி (சீர்காழி)
Aanmeegam.in :காசிக்கு இணையான சீர்காழி சட்டைநாதர் திருக்கோவில்
Temple.dinamalar.com:அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில்

(1382)
ஓர் உரு ஆயினை; மான் ஆங்காரத்து

ஈர் இயல்பு ஆய்; ஒரு விண்முதல் பூதலம்

 

ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்

படைத்து, அளித்து, அழிப்ப, மும்மூர்த்திகள் ஆயினை;

இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை;

 

ஓர் ஆல் நீழல், ஒண் கழல் இரண்டும்

முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி

காட்டினை; நாட்டம் மூன்றாகக் கோட்டினை;

இருநதி அரவமோடு ஒருமதி சூடினை;

 

ஒரு தாள் ஈர் அயில் மூ இலைச் சூலம்,

நால்கால் மான்மறி ஐந்தலை அரவம்,

ஏந்தினை; காய்ந்த நால்வாய் மும்மதத்து

இருகோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை;

 

ஒரு தனு இருகால் வளைய வாங்கி

முப்புரத் தோடு நானிலம் அஞ்சக்,

கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை;

ஐம்புலன் நால் ஆம் அந்தக் கரணம்

முக்குணம், இருவளி, ஒருங்கிய வானோர்

ஏத்த நின்றனை;

 

-ஒருங்கிய மனத்தோடு

இரு பிறப்பு ஓர்ந்து முப்பொழுது குறை முடித்து

நால்மறை ஓதி, ஐவகை வேள்வி

அமைத்து, ஆறு அங்கம் முதல் எழுத்து ஓதி,

வரல் முறை பயின்று, எழு வான்தனை வளர்க்கும்

பிரமபுரம் பேணினை;

அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை;

இகலி அமைந்து உணர் புகலி அமர்ந்தனை;

பொங்குநால் கடல் சூழ் வெங்குரு விளங்கினை;

பாணி மூஉலகும் புதைய, மேல் மிதந்த

தோணிபுரத்து உறைந்தனை; தொலையா இருநிதி

வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை;

வர புரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை;

 

ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்

விறல் கெடுத்து அருளினை;புறவம் புரிந்தனை;

முந்நீர்த் துயின்றோன் நான்முகன் அறியாப்

பண்பொடு நின்றனை;

ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்

ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை;

எச்சன் ஏழ் இசையோன் கொச்சையை மெச்சினை;

ஆறு பதமும், ஐந்துஅமர் கல்வியும்,

மறைமுதல் நான்கும் ,மூன்று காலமும் தோன்ற நின்றனை;

இருமையின் ஒருமையும், ஒருமையின் பெருமையும்,

 

மறு இலா மறையோர்

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை

கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்;

அனைய தன்மையை ஆதலின், நின்னை

நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே.

 

  1. ஓர் உரு ஆயினை– எல்லாத் தத்துவங்களையும் கடந்து நிற்கும் பரசிவம் ஆகிய தாங்கள் உயிர்கள் உய்யும் பொருட்டு உம் விருப்பத்தினாலேயே ஒரு திருமேனியை எடுத்துக்கொண்டீர்;
  2. மான் ஆங்காரத்து ஈர் இயல்பாய்–  சத்தியை எழுச்சி உறச் செய்து, சத்திசிவம் என்னும் இரண்டு நிலைகளாய்;
  3. ஒரு விண்முதல் பூதலம்– ஒப்பற்ற ஆகாயம் முதல் ஈறாக உள்ள ஐம்பெரும் பூதங்களையும்;  ஓன்றிய இருசுடர் –  பொருந்திய ஞாயிறு திங்கள் என்னும் இரண்டு பேரொளிகளையும்; உம்பர்கள் பிறவும் – வானுலகத்தில் வாழும் தேவர்களையும் மற்றும் பிற உயிர்களையும் பொருள்களையும் எல்லாம்;
  4. படைத்து அளித்து அளிப்ப மும்மூர்த்திகள் ஆயினை–  தோற்றுவித்தற்குப் பிரமன், காத்தற்குத் திருமால், அழித்தற்கு உருத்திரன் என்னும் மூன்று மூர்த்திகளாகவும் நிற்கின்றீர்;
  5. இருவரொடு ஒருவன் ஆகி நின்றனை– பிரம விட்டுணுக்களைத் தங்கள் திருமேனியின் வலப்பக்கத்தும் இடப்பக்கத்தும் தோற்றுவித்தும் ஒடுக்கிக் கொண்டும், அவ் இருவரோடு ஏகபாதர் என்னும் திருவுருவம் கொண்டு திகழ்கின்றீர்;
  6. ஓர் ஆல் நீழல் ஒண்கழல் இரண்டும்–  ஒப்பு அற்ற கல்லால மரத்தின் நிழலில் தங்களின் இரண்டு திருவடிகளையும்;
  7. முப்பொழுது ஏத்திய–  காலை நண்பகல் மாலை என்னும் மூன்று காலங்களிலும் துதித்து வணங்கிய;  நால்வர்க்கு –  சனகர், சனாதனர், சனற்குமாரர், சனந்தனர் என்னும் நான்கு முனிவர்களுக்கும்;  ஒளிநெறி காட்டினை –  சிவஞான நெறியை உணர்த்தி அருளினீர்;
  8. நாட்டம் மூன்றாகக் கோட்டினை–  ஞாயிற் திங்கள் தீ என்னும் சுடர்கள் மூன்றையும் மூன்று திருக்கண்களாகக் கொண்டு, உலகம் இன்புற இருளை அகற்றி அருளினீர்,  நாட்டம் –  கண்;
  9. இருநதி அரவமோடு ஒருமதி சூடினை–  பெரிய கங்கையாற்றையும் பாம்பினையும் ஒப்பற்ற பிறைச்சந்திரனையும் தலையில் சூடி அருளினீர்;
  10. ஒருதாள் ஈர் அயில் மூஇலைச் சூலம்–  ஓர் அடிப்பகுதியினையும், ஈருகின்ற கூர்மையையும், மூன்று இலை போன்ற அமைப்பையும் உடைய சூலத்தையும்;
  11. நாற்கால் மான்மறி ஐந்தலை அரவம் ஏந்தினை–  நான்கு கால்களையுடைய மான் கன்றினையும், ஐந்து தலைகளையுடைய பெரிய பாம்பினையும் திருக்கைகளில் ஏற்று ஏந்திக் கொண்டு இருக்கின்றீர்;
  12. காய்ந்த நால்வாய்–  கோபம் மிக்க தொங்குகின்ற வாயையும்;  மும்மதத்து –  கன்னமதம், கபோலமதம், பீஜமதம் என்னும் மூன்று மதங்களையும்;
  13. இருகோட்டு–  இரண்டு தந்தங்களையும் உடைய;  ஒரு கரி ஈடு அழித்து உரித்தனை – கஜாசுரன் என்னும் அவுணன் ஆகிய ஒரு யானையினுடைய வலிமையை அழியும்படி செய்து, அதன் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டு அருளினீர்;
  14. ஒரு தனு இருகால் வளைய வாங்கி– ஒப்பற்ற மேருமலை ஆகிய வில்லை, இரண்டு முனைகளும் வளையும்படி வளைத்து;
  15. முப்புரத்தோடு தலத்துற அவுணரை–  முப்புரங்களையும் அவற்றில் வாழ்ந்த அவுணர்களையும்;
  16. நானிலம் அஞ்சக் கொன்று அறுத்தனை–  பெரிய பூமியில் உள்ள யாவரும் அஞ்சுமாறு கொன்று ஒருங்கே ஒழித்தருளினீர்;
  17. ஐம்புலன் நாலாம் அந்தக்கரணம்–  சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்து புலன்களையும்,  மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் உட்கருவிகள் நான்கினையும்;
  18. முக்குணம் இருவளி ஒருங்கிய வானோர்–  சத்துவம், இராசதம், தாமதம் என்னும் மூன்று குணங்களையும், பிராணன் அபானன் என்னும் இரண்டு வாயுக்களையும் ஒடுக்கி, ஒருமைப்பட்ட உள்ளமுடைய தேவர்கள்;
  19. ஏத்த நின்றனை–  போற்றுமாறு எழுந்தருளி இருக்கின்றீர்;  ஒருங்கிய மனத்தோடு – ஒருமைப் பட்ட உள்ளத்துடன்;
  20. இருபிறப்பு ஓர்ந்து–  உலகில் தோன்றியதனால் உண்டான பிறப்பும், உபநயனச் சடங்கினால் ஏற்பட்ட பிறப்பும் ஆகிய இரண்டினையும் ஆராய்ந்து;  முப்பொழுது குறை முடித்து –  காலை நண்பகல் மாலை என்னும் மூன்று வேளைகளிலும் செபம் தர்ப்பணம் அனுட்டானம் ஓமம் என்னும் நியமங்களைச் செய்து நிறைவேற்றி;
  21. நான்மறை ஓதி–  நான்கு வேதங்களையும் பாராயணம் செய்து;  ஐவகை வேள்வி அமைத்து  – வேதம் ஓதுதலாகிய பிரமயாகம்,  ஓமம் வளர்த்தல் ஆகிய தேவயாகம், நீர்க்கடன் ஆற்றுதலாகிய பிதிர்யாகம்,  விருந்தோம்பல் ஆகிய மானுடயாகம், பலியீதல் ஆகிய பூதயாகம் (சிவபூசை குருபூசை மாகேசுரபூசை அந்தணர்பூசை அதிதிபூசை)
    என்னும் ஐந்து வகையான வேள்விகளையும் செய்து நிறைவேற்றி;
  22. ஆறு அங்கம்,முதல் எழுத்து ஓதி – மந்திரம் வியாகரணம் நிகண்டு சந்தோவிசிதம் நிருத்தம் சோதிடம் எண்ணிம் வேத அங்கங்கள் ஆறினையும்,  வேதம் முதலிய எல்லாக் கலைகளுக்கும் முதலாக உள்ள பிரணவத்தையும் உச்சரித்து
  23. வரன்முறை பயின்று–  வேள்விகளையும் இயம நியமங்களையும் தொன்றுதொட்டு வரும் முறையின்படி இடைவிடைது செய்து;  எழு வான்தனை வளர்க்கும் – எழுந்து பெய்கின்ற மழையினைக் காலம் தவறாது பெய்விக்கின்ற;
  24. பிரமபுரம் பேணினை–  திருப்பிரமபுரத்தினை விரும்பி எழுந்தருளி இருக்கின்றீர்;
  25. அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை–  ஆறு கால்களையுடைய வண்டுகள் பண்பாடுகின்ற சோலைகள் சூழ்ந்த வேணுபுரத்தை விரும்பி இருக்கின்றீர்;
  26. இகலிய மைந்து உணர் புகலி அமர்ந்தனை–  தேவர்கள் தம்மைப் பகைத்த சூரபதுமனின் வலியை உணர்ந்து அடைக்கலம் புகுந்த புகலியில் அமர்ந்து இருக்கின்றீர்;
  27. பொங்கும் நாற்கடல் சூழ் வெங்குரு விளங்கினை– பொங்கிப் பெருகிவரும் பிரளய வெள்ளம் ஆகிய நான்கு கடல்களும் சூழ்ந்து கொண்ட வெங்குருவில் விளங்குகின்றீர்;
  28. பாணி மூவுலகும் புதைய–  ஊழிநீர் வெள்ளத்தில் மூன்று உலகங்களும் அமிழ்ந்து போகவும்;
  29. மேல் மிதந்த தோணிபுரத்து உறைந்தனை– தான் மட்டும் அழியாமல் தோணியின் வடிவம் கொண்டு மிதந்த புரத்தில் உறைகின்றீர்;
  30. தொலையா இருநிதி வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை–  ஒரு காலத்தும் அழியாத பெருஞ்செல்வம் பொருந்திய பூந்தராயில் ஏய்ந்து பொருந்தி வாழ்கின்றீர்;
  31. ஒருபுரம் என்று உணர் சிரபுரத்து உறைந்தனை–  ஒப்பு அற்ற தலம் என்று உணர்ந்து யாவரும் போற்றுகின்ற சிரபுரத்தில் தங்கி உறைந்து வருகின்றீர்;
  32. ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்–  ஓப்பு உயர்வு அற்ற திருக்கயிலை மலையைப் பெயர்த்து எடுக்க முயன்ற மிக்க வலிமை உடைய இராவணனின்;
  33. விறல் கெடுத்து அருளினை–  வெற்றியைக் கெடுத்துப் பின்னர் அருள் புரிந்தீர்;  புறவம் புரிந்தனை –  திருப்புறவம் என்னும் இத்தலத்தில் விருப்பம் கொண்டு வீற்றிருக்கின்றீர்;
  34. முந்நீர்த் துயின்றோன் நான்முகன் அறியாப் பண்பொடு நின்றனை–  திருப்பாற்கடலில் அறிதுயில் புரிகின்ற திருமாலும் பிரமனும் அறிந்துகொள்ள இயலாத பெருமையுடண் திகழ்கின்றீர்;
  35. சண்பை அமர்ந்தனை–  திருச்சண்பை என்னும் இத்தலத்தில் விருப்பம் கொண்டு அமர்ந்து இருக்கின்றீர்;
  36. ஐயுறும் அமணரும்–  கடவுள் உண்மையில் ஐய உணர்வினை உடைய சமணர்களும்; அறுவகைத் தேரரும் –  முடிவில் யாவும் அற்று ஒழிந்துவிடும் என்னும் புத்தர்களும்;
  37. ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை–  எக்காலத்தும் உணர்ந்து கொள்ளாத நிலையில் சீர்காழியில் நிலையாக வாழ்ந்து வருகின்றீர்;
  38. எச்சன்–  வேள்வித் தலைவனாயும்;  ஏழ் இசையோன் –  குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்னும் ஏழிசைகளின் வடிவினனாயும்;  கொச்சையை மெச்சினை – கொச்சை வயத்தை வியந்து இருப்பிடமாகக் கொண்டு உள்ளீர்;
  39. ஆறு பதமும்–  பிரத்தி பிரத்தியாகாரம் துல்லியம் துல்லியாதீதம் வித்தை அவித்தை என்னும் ஆறுபதங்களும்;  ஐந்து அமர் கல்வியும் –  ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம் விரையம் என்கிற ஐந்து விதமான கல்வியும்;
  40. மறைமுதல் நான்கும்–  முதன்மையான இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்னும் நான்கு வேதங்களும்;
  41. மூன்று காலமும் –  இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் காலங்கள் மூன்றும்;  தோன்ற நின்றனை –  தோன்றுவதற்கு ஏதுவாக நின்றீர்;
  42. இருமையின் ஒருமையும்– உயிர்களோடு கலந்து ஒருமைப்பட்டு அத்துவிதம் ஆகியும்; ஓருமையின் பெருமையும் –  எல்லாம் தன்னுள் அடக்கிய எல்லை அற்ற ஒரு பரம்பொருள் ஆகிய சிவம் ஆகியும் திகழ்கின்றீர்;
  43. மறுஇலா மறையோர்–  குற்றம் இல்லாத வேதங்களை உடைய அந்தணர் குலத்தில் தோன்றி;
  44. கழுமலம்– மலம் கழுவப்பெற்ற நிலையில்;   முதுபதி –  அநாதி நித்திய சிவத்தன்மையை அடைந்த;   கவுணியன் –  கவுணிய கோத்திரத்திலே தோன்றியருளிய திருஞானசம்பந்தன் ஆகிய யான் கூறிய;  கட்டுரை –  திருவெழுகூற்றிருக்கை என்னும் இந்தத் திருப்பதிகத்தினை;
  45. கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்–  கழுமலம் என்னும் பழம்பெரும் தலத்தில் எழிந்தருளி உள்ள,  பிரமனின் தலையாகிய கலத்தில் உண்கின்ற இறைவன் உவந்து அருள்புரிவர்;
  46. அனைய தன்மையை ஆதலின்–  அத்தகைய சிறந்த பண்பை உடையவர் ஆகையால்; நின்னை –  தேவரீரை;
  47. நினைய வல்லவர்–  நினைந்து தியானிக்க வல்லவர்களுக்கு;  நீள் நிலத்து இல்லை – நீண்ட பெரிய இவ் உலகத்தில் பிறவி இல்லையாகும்.

சம்பந்தர் தேவாரம் முழுவதையும் பாராயணம் செய்த பலன் கிடைக்க மிகமிகச் சக்தியுள்ளதான ஒரு சிவஸ்தோத்திரம்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(129)
திருக்கழுமலம் - மேகராகக்குறிஞ்சி

(1383)
"சே உயரும் திண் கொடியான் திருவடியே சரண்" என்று சிறந்த அன்பால்

நா இயலும் மங்கையொடு நான்முகன் தான் வழிபட்ட நலம் கொள கோயில்

வாவிதொறும் வண்கமலம் முகம் காட்ட, செங்குமுதம் வாய்கள் காட்ட,

காவி இருங்கருங்குவளை கரு நெய்தல் கண் காட்டும் கழுமலமே.

விடை வடிவம் எழுதி உயர்த்திய வலிமையான கொடியை உடைய சிவபிரானின் திருவடிகளே நமக்குச் சரண் என்று நாவின்கண் பொருந்திய கலைமகளோடு வந்து நான்முகன் சிறந்த அன்போடு வழிபட்ட அழகிய கோயில்; வாவிகள்தோறும் மலரும் வளவிய தாமரை மலர்கள் மகளிர்தம் முகங்களையும் செங்கழுநீர் மலர்கள் வாய்களையும், காவி மலர்கள், கருங்குவளை மலர்கள், கரிய நெய்தல் மலர்கள் ஆகியன கண்களையும் போலத் தோன்றி மலரும் கழுமலத்தின்கண் விளங்குவதாகும்.

மேல்

(1384)
பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடு உடைய மலைச் செல்வி பிரியா மேனி

அருந்தகைய சுண்ணவெண் நீறு அலங்கரித்தான், அமரர் தொழ, அமரும்கோயில்

தரும் தடக்கை முத்தழலோர் மனைகள் தொறும் இறைவனது தன்மை பாடி,

கருந்தடங்கண்ணார் கழல் பந்து அம்மானைப் பாட்டு அயரும் கழுமலமே.

அகன்ற விழிகளையும், பவளம் போலச் சிவந்த வாயையும் உடைய பெருமை மிக்க மலைமகளாகிய உமையம்மை பிரியாத திருமேனியில், அருமையான திருவெண்ணீற்றுப் பொடியை அழகுறப் பூசிய சிவபிரான் தேவர்கள் தன்னை வணங்க எழுந்தருளி யுள்ள திருக்கோயில், வள்ளன்மையோடு விளங்கும் நீண்ட கைகளை உடைய முத்தீ வேட்கும் அந்தணர்களின் வீடுகள்தோறும் கரியவான பெரிய கண்களை உடைய மகளிர் இறைவனுடைய இயல்புகளைக் கூறிக்கொண்டு கழற்சிக்காய் அம்மானை பந்து ஆகியன ஆடி மகிழும் கழுமல நகரின் கண் உள்ளது.

மேல்

(1385)
அலங்கல் மலி வானவரும் தானவரும் அலைகடலைக் கடைய, தம்

கலங்க, எழு கடுவிடம் உண்டு இருண்ட மணிகண்டத்தோன் கருதும் கோயில்

விலங்கல் அமர் புயல் மறந்து, மீன் சனி புக்கு, ஊன் சலிக்கும் காலத்தானும்

கலங்கல் இலா மனப் பெரு வண்கை உடைய மெய்யர் வாழ் கழுமலமே.

மலர்மாலை அணிந்த தேவர்களும் அசுரர்களும் கூடி அலைகள் பொருந்திய திருப்பாற்கடலைக் கடைந்தபோது பூதங்களும் கலங்குமாறு எழுந்த கொடிய நஞ்சை, அவர்களைக் காத்தற்பொருட்டுத் தான் உண்டு. கரிய மணி போன்ற மிடற்றினன் ஆகிய சிவபிரான் தனது உறைவிடம் என்று மகிழ்வோடு நினையும் கோயில்; மலைகள் மீது தங்கி மழை பொழியும் மேகங்கள் மழை பொழிவதை மறத்தற்குரியதான மகர ராசியில் சனி புகுந்து உணவு கிடைக்காமல் மக்கள் உடல் இளைக்கும் பஞ்ச காலத்திலும் மனம் கலங்காது பெரிய வள்ளன்மையோடு மக்களைக் காக்கும் உண்மையாளர் வாழும் கழுமலத்தின்கண் உள்ளது.

மேல்

(1386)
பார் இதனை நலிந்து, அமரர் பயம் எய்தச் சயம் எய்தும் பரிசு வெம்மைப்

போர் இசையும் புரம்மூன்றும் பொன்ற ஒரு சிலை வளைத்தோன் பொருந்தும் கோயில்

வார் இசை மென்முலை மடவார் மாளிகையின் சூளிகைமேல் மகப் பாராட்ட

கார் இசையும் விசும்பு இயங்கும் கணம் கேட்டு மகிழ்வு எய்தும் கழுமலமே.

மண்ணுலக மக்களை வருத்தியும், தேவர்களை அஞ்சுமாறு செய்தும், வெற்றி பெறும் இயல்பினராய்க் கொடிய போரை நிகழ்த்தும் அவுணர்களின் முப்புரங்களும் அழிய ஒப்பற்ற வில்லை வளைத்த சிவபிரான் உறையும் கோயில்; கச்சணிந்த மென்மையான தனங்களை உடைய மகளிர் மாடவீடுகளின் உச்சியில் நின்று தம் குழந்தைகளைப் பாடிப் பாராட்டும் இசையை மேகங்கள் உலாவும் வானவெளியில் உலாவும் கந்தருவர்கள் கேட்டு மகிழும் கழுமல நகரில் உள்ளதாகும்.

மேல்

(1387)
ஊர்கின்ற அரவம், ஒளிவிடு திங்களொடு, வன்னி, மத்தம், மன்னும்

நீர் நின்ற கங்கை, நகுவெண்தலை, சேர் செஞ்சடையான் நிகழும் கோயில்

ஏர் தங்கி, மலர் நிலவி, இசை வெள்ளிமலை என்ன நிலவி நின்ற,

கார் வண்டின் கணங்களால், கவின் பெருகு சுதை மாடக் கழுமலமே.

ஊர்ந்து செல்லும் அரவு. ஒளிவிடும் திங்கள், வன்னி, ஊமத்த மலர், நீர்வடிவான கங்கை, நகும் வெண்டலை ஆகியன சேர்ந்த செஞ்சடையை உடைய சிவபிரான் எழுந்தருளியுள்ள கோயில்; அழகு பொருந்திய வெள்ளி மலைகள் போல விளங்கி நிற்பனவும் மலர்களால் அலங்கரிக்கப்பெற்று அவற்றை மொய்க்கும் கரிய வண்டுகளின் கணங்களால் சூழப்பெற்றுக் கவின்மிகுவனவுமாய வெண்மையான சுதையால் அமைந்த மாட வீடுகள் நிறைந்த கழுமல நகரில் உள்ளது.

மேல்

(1388)
"தரும் சரதம் தந்தருள்!" என்று அடி நினைந்து, தழல் அணைந்து, தவங்கள் செய்த

பெருஞ் சதுரர் பெயலர்க்கும் பீடு ஆர் தோழமை அளித்த பெருமான் கோயில்

அரிந்த வயல் அரவிந்தம் மது உகுப்ப, அது குடித்துக் களித்து வாளை,

கருஞ் சகடம் இளக வளர் கரும்பு இரிய, அகம் பாயும் கழுமலமே.

மெஞ்ஞானியர்க்குத் தரும் உண்மை ஞானத்தை எங்கட்கும் தந்தருள் என்று திருவடிகளை நினைந்து, தீ நடுவில் நின்று தவம் செய்யும் பெரிய சதுரப்பாடு உடையவர்கட்கும் மழை நீரில் நின்று தவமியற்றுபவர்கட்கும் பெருமை மிக்க தோழமையை வழங்கியருளும் சிவபிரான் உறையும் கோயில்; நெல்லறுவடை செய்த வயலில் முளைத்த தாமரை மலர்கள் தேனைச் சொரிய, அதனைக் குடித்துக் களித்த வாளை மீன்கள் வயற்கரைகளில் நிற்கும் பெரிய வண்டிகள் நிலைபெயரவும் கரும்புகள் ஒடியவும் துள்ளிப்பாயும் கழுமல வளநகரில் உள்ளதாகும்.

மேல்

(1389)
புவி முதல் ஐம்பூதம் ஆய், புலன் ஐந்து ஆய், நிலன் ஐந்து ஆய், கரணம் நான்குஆய்,

அவை அவை சேர் பயன் உரு ஆய், அல்ல உரு ஆய், நின்றான்; அமரும்கோயில்

தவம் முயல்வோர் மலர் பறிப்பத் தாழ விடு கொம்பு உதைப்ப, கொக்கின் காய்கள்

கவண் எறி கல் போல் சுனையின் கரை சேர, புள் இரியும் கழுமலமே.

மண், புனல் முதலிய பூதங்கள் ஐந்து. சுவை ஒளி முதலிய புலன்கள் ஐந்து. அவற்றுக்கு இடமாகிய மெய், வாய் முதலிய பொறிகள் ஐந்து. வாக்கு பாதம் முதலிய செய் கருவிகள் ஐந்து. மனம் புத்தி முதலிய உட்கருவிகள் நான்கு ஆகிய ஆன்ம தத்துவங்களாகவும் அவற்றின் பயனாகவும், உருவமாகவும் அருவமாகவும் நிற்கின்ற சிவபிரான் எழுந்தருளிய கோயில், தவம் செய்ய முயல்வோர் இறைவனை அருச்சிக்க மரங்களில் பூத்த மலர்களைப் பறித்துக் கொண்டு விடுத்த கொம்புகள் நிமிர்ந்து தாக்குதலால் மாமரத்தில் காய்த்த காய்கள் விண்டு கவணிலிருந்து வீசப்பட்ட கல்போல சுனைகளில் வீழ ஆங்குறைந்த பறவைகள் அஞ்சி அகலும் வளமான கழுமல வளநகரில் உள்ளதாகும்.

மேல்

(1390)
அடல் வந்த வானவரை அழித்து, உலகு தெழித்து உழலும் அரக்கர்கோமான்

மிடல் வந்த இருபது தோள் நெரிய, விரல் பணிகொண்டோன் மேவும் கோயில்

நட வந்த உழவர், "இது நடவு ஒணா வகை பரலாய்த்து" என்று துன்று

கடல் வந்த சங்கு ஈன்ற முத்து வயல் கரை குவிக்கும் கழுமலமே.

வலிமை பொருந்திய தேவர்கள் பலரை அழித்து உலகை அச்சுறுத்தித் திரிந்த அரக்கர் தலைவனாகிய இராவணனின் வலிமைமிக்க இருபது தோள்களையும் கால் விரலால் நெரிய ஊன்றி அவனைப் பணிகொண்ட சிவபிரான் எழுந்தருளியுள்ள கோயிலை உடையது, நாற்று நடவந்த உழவர்கள் இவை நாற்று நடுவதற்கு இடையூறாய்ப் பரற்கற்கள் போலத் தோன்றுகின்றனவே என்று கூறுமாறு கடலின்கண் இருந்துவந்த சங்குகள் முத்துக்களை வயல்களில் ஈன்று குவிக்கும் கழுமலமாகும்.

மேல்

(1391)
பூமகள் தன் கோன், அயனும், புள்ளினொடு கேழல் உரு ஆகிப் புக்கிட்டு,

ஆம் அளவும் சென்று, முடி அடி காணா வகை நின்றான் அமரும் கோயில்

பா மருவும் கலைப் புலவோர் பல்மலர்கள் கொண்டு அணிந்து, பரிசினாலே

காமனைகள் பூரித்துக் களி கூர்ந்து நின்று, ஏத்தும் கழுமலமே.

திருமகளின் கேள்வனாகிய திருமாலும், நான்முகனும் பன்றி உருவம் எடுத்தும், அன்னப்பறவை வடிவ மெடுத்தும், தேடப் புகுந்து தம்மால் ஆமளவும் சென்று அடிமுடி காணாதவராய்த் தோற்று நிற்க, அழலுருவாய் ஓங்கி நின்ற சிவபிரான் எழுந்தருளிய கோயிலையுடையது. பல்வகைப் பாக்களில் அமைந்துள்ள அருங்கலைகளை அறிந்த புலவர்கள் பல மலர்களைக் கொண்டு அருச்சித்து முறையோடு விருப்பங்கள் நிறைவேறக்கண்டு களிகூர்ந்து போற்றும் கழுமல நகராகும்.

மேல்

(1392)
குணம் இன்றிப் புத்தர்களும், பொய்த்தவத்தை மெய்த்தவம் ஆய் நின்று கையில்

உணல் மருவும் சமணர்களும், உணராத வகை நின்றான் உறையும் கோயில்

மணம் மருவும் வதுவை ஒலி, விழவின் ஒலி, இவை இசைய மண்மேல்-தேவர்

கணம் மருவும் மறையின் ஒலி கீழ்ப்படுக்க, மேல்படுக்கும் கழுமலமே.

நற்குணங்கள் இல்லாத புத்தர்களும், பொய்த்தவத்தை மெய்த்தவமாய் எண்ணிக் கையில் உணவேற்று உண்டு வாழும் சமணர்களும், அறிய முடியாதவாறு நின்ற சிவபிரான் உறையும் கோயிலை உடையது, ஆடவர் பெண்டிரை மணக்கும் திருமணத்தில் எழும் ஆரவாரமும், திருவிழாக்களின் ஓசையும், பூசுரர்களாகிய அந்தணர்கள் ஓதும் வேத ஒலியை அடங்குமாறு செய்து மிகுந்து ஒலிக்கும் கழுமல நகராகும்.

மேல்

(1393)
கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்துள் ஈசன்தன் கழல்மேல், நல்லோர்

நல்-துணை ஆம் பெருந்தன்மை ஞானசம்பந்தன்தான் நயந்து சொன்ன

சொல்-துணை ஓர் ஐந்தினொடு ஐந்து இவை வல்லார், மலராள் துணைவர் ஆகி,

முற்று உலகம் அது கண்டு, முக்கணான் அடி சேர முயல்கின்றாரே.

கற்றவர்களாலே பணிந்து வழிபடப்பெறும் கழுமலத்துள் விளங்கும் இறைவருடைய திருவடிகளின் மேல், நல்லோர்க்கு நற்றுணையாகும் பெருந்தன்மையையுடைய ஞானசம்பந்தன் விரும்பிப் போற்றிப் பாடிய,

ஓதுவார்களுக்குத் துணையாய் அமைந்த சொற்களையுடைய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர், திருமகள் கேள்வராய் இவ்வுலகம் முழுவதையும் அரசாண்டு சிவனடி கூடும் முயற்சியைச் செய்கின்றவராவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(130)
திருஐயாறு - மேகராகக்குறிஞ்சி

(1394)
புலன் ஐந்தும் பொறி கலங்கி, நெறி மயங்கி, அறிவு அழிந்திட்டு, ஐம் மேல் உந்தி,

அலமந்த போது ஆக, "அஞ்சேல்!" என்று அருள் செய்வான் அமரும் கோயில்

வலம் வந்த மடவார்கள் நடம் ஆட, முழவு அதிர, மழை என்று அஞ்சி,

சிலமந்தி அலமந்து, மரம் ஏறி, முகில் பார்க்கும் திரு ஐயாறே.

ஐம்புலன்களும் தத்தம் பொறிகளை விட்டு வழிமாறி அறிவழிந்து, கபம் மேற்பட மனம் சுழன்று வருந்தும் இறுதிக் காலத்து, ‘அஞ்சேல்‘ என்றுரைத்து அருள் செய்பவனாகிய சிவபிரான் அமரும் கோயிலை உடையது, நடனக்கலையில் வெற்றியுற்ற பெண்கள் நடனம் ஆட, அவ்வாடலுக்கேற்ற கூத்தொலிகளை எழுப்பும் முழவுகள் அதிர, அவற்றைக் கண்டு அஞ்சிய சிலமந்திகள் வானத்தில் கேட்கும் இடியோசை என்றஞ்சி மனம் சுழன்று மரங்களில் ஏறி மேகங்களைப் பார்க்கும் திருவையாறாகும்.

மேல்

(1395)
விடல் ஏறு படநாகம் அரைக்கு அசைத்து, வெற்பு அரையன் பாவையோடும்

அடல் ஏறு ஒன்று அது ஏறி, "அம் சொலீர், பலி!" என்னும் அடிகள் கோயில்

கடல் ஏறித் திரை மோதிக் காவிரியின் உடன் வந்து கங்குல் வைகி,

திடல் ஏறிச் சுரிசங்கம் செழு முத்து அங்கு ஈன்று அலைக்கும் திரு ஐயாறே.

கொல்லுதலாகிய குற்றம் பொருந்திய படத்தினையுடைய நாகத்தை இடையிற் கட்டி, மலையரையன் மகளாகிய பார்வதி தேவியோடு வலிமை பொருந்திய விடையேற்றின் மேல் ஏறி, அழகிய சொற்களைப் பேசும் மகளிரே! பிச்சையிடுங்கள் என்று கேட்டுச் சென்ற சிவபிரானது கோயிலையுடையது. வளைந்த மூக்கினையுடைய கடற்சங்குகள் கடலினின்றும் அலை வழியாக அதில் பாயும் காவிரியோடு வந்து இரவின்கண் திடலில் ஏறித் தங்கிச் செழுமையான முத்துக்களை ஈன்று சஞ்சரிக்கும் திருவையாறாகும்.

மேல்

(1396)
கங்காளர், கயிலாயமலையாளர், கானப்பேராளர், மங்கை-

பங்காளர், திரிசூலப்படையாளர், விடையாளர், பயிலும் கோயில்

கொங்கு ஆள் அப் பொழில் நுழைந்து, கூர்வாயால் இறகு உலர்த்தி, கூதல் நீங்கி,

செங்கால் நல் வெண்குருகு, பைங்கானல் இரை தேரும் திரு ஐயாறே.

சிறந்த பிரமன், திருமால் ஆகியோரின் முழு எலும்புக்கூட்டை அணிந்தவரும், கயிலாய மலையில் உறைபவரும், கானப்பேர் என்னும் தலத்தில் எழுந்தருளியவரும், மங்கை பங்கரும் முத்தலைச் சூலப்படை ஏந்தியவரும், விடை ஊர்தியை உடையவரும் ஆகிய சிவபிரானார் எழுந்தருளிய கோயிலை உடையது, சிவந்த கால்களையுடைய வெண்ணிறக் குருகுகள் தேன் நிறைந்த சோலைகளில் நுழைந்து கூரிய தம் அலகுகளால் தம் இறகுகளைக் கோதிக் குளிர் நீங்கிப் பசுமையான சோலைகளில் தமக்கு வேண்டும் இரைகளைத் தேடும் திருவையாறாகும்.

மேல்

(1397)
ஊன் பாயும் உடைதலைக் கொண்டு ஊர் ஊரன் பலிக்கு உழல்வார், உமையாள்பங்கர்,

தான் பாயும் விடை ஏறும் சங்கரனார், தழல் உருவர், தங்கும் கோயில்

மான் பாய, வயல் அருகே மரம் ஏறி, மந்தி பாய் மடுக்கள் தோறும்

தேன் பாய, மீன் பாய, செழுங்கமலமொட்டு அலரும் திரு ஐயாறே.

புலால் பொருந்தியதாய், முடைநாற்றமுடைத்தாய் உள்ள தலையோட்டைக் கையில் ஏந்தி, ஊர்கள்தோறும் பலியேற்று உழல்பவரும், உமை பாகரும், பாய்ந்து செல்லும் விடையேற்றை உடையவரும், நன்மைகளைச் செய்வதால் சங்கரன் என்ற பெயரை உடையவரும், தழல் உருவினருமாகிய சிவபிரான் எழுந்தருளிய கோயிலையுடையது, மான் துள்ளித் திரிய, வயலருகே உள்ள மரங்களில் ஏறி மந்திகள் பாய்வதால் மடுக்களில் தேன் பாய, அதனால் மீன்கள் துள்ளவும் செழுமையான தாமரை மொட்டுக்கள் அலரவும், விளங்குவதாகிய திருவையாறாகும்.

மேல்

(1398)
நீரோடு கூவிளமும், நிலாமதியும், வெள் எருக்கும், நிறைந்த கொன்றைத்

தாரோடு, தண்கரந்தை, சடைக்கு அணிந்த தத்துவனார் தங்கும் கோயில்

கார் ஓடி விசும்பு அளந்து, கடி நாறும் பொழில் அணைந்த கமழ் தார் வீதித்

தேர் ஓடும் அரங்கு ஏறி, சேயிழையார் நடம் பயிலும் திரு ஐயாறே.

கங்கைநதி, வில்வம், பிறைமதி, வெள்ளெருக்கு, கொன்றை மலர் நிறைந்த மாலை, குளிர்ந்த கரந்தை ஆகியவற்றைச் சடையின்கண் அணிந்த தத்துவனாகிய சிவபிரான் தங்கியுள்ள கோயிலையுடையது, மேகமண்டலம் வரை உயர்ந்து சென்று வானத்தை அளந்து மணம் பரப்பும் பொழில்கள் சூழ்ந்ததும், மணம் வீசும் வீடுகளை உடைய தேரோடும் வீதிகளில் அரங்குகளில் ஏறி அணிகலன்கள் புனைந்த இளம் பெண்கள் நடனம் ஆடுவதுமாகிய திருவையாறாகும்.

மேல்

(1399)
வேந்து ஆகி, விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறி காட்டும் விகிர்தன் ஆகி,

பூந்தாம நறுங்கொன்றை சடைக்கு அணிந்த புண்ணியனார் நண்ணும் கோயில்

காந்தாரம் இசை அமைத்துக் காரிகையார் பண் பாட, கவின் ஆர் வீதி,

"தேம்தாம்" என்று, அரங்கு ஏறிச் சேயிழையார் நடம் ஆடும் திரு ஐயாறே.

அனைத்துலகங்களுக்கும் வேந்தனாய், விண்ணவர்களுக்கும், மண்ணவர்களுக்கும் வழி காட்டும் வள்ளலாய், மணங்கமழும் கொன்றை மாலையைச் சடையின்மிசை அணிந்தவனாய் புண்ணிய வடிவினனாய் விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய கோயிலையுடையது. மகளிர் காந்தாரப் பண்ணமைத்து இசைபாட அழகிய வீதிகளில் அமைந்த அரங்கங்களில் ஏறி அணிகலன்கள் பூண்ட இளம் பெண்கள் தேம், தாம் என்ற ஒலிக் குறிப்போடு நடனம் ஆடும் திருவையாறாகும்.

மேல்

(1400)
நின்று உலாம் நெடுவிசும்பில் நெருக்கி வரு புரம் மூன்றும் நீள்வாய் அம்பு

சென்று உலாம்படி தொட்ட சிலையாளி, மலையாளி, சேரும் கோயில்

குன்று எலாம் குயில் கூவ, கொழும் பிரசமலர் பாய்ந்து வாசம் மல்கு

தென்றலார் அடி வருட, செழுங் கரும்பு கண்வளரும் திரு ஐயாறே.

நீண்ட வானவெளியில் நின்று உலவி, தேவர்கள் வாழ்விடங்களை அழித்துவந்த முப்புரங்களையும், நீண்ட கூரிய அம்பு சென்று உலவும்படி கணை தொடுத்த வில்லாளியும், கயிலைமலை ஆளியுமாகிய சிவபிரான் சேர்ந்துறையும் கோயிலையுடையது, சிறுமலைகளில் குயில்கள் கூவவும், செழுமையான தேன் நிறைந்த மலர்களைத் தீண்டி மணம் மிகுந்து வருவதாகிய தென்றல் காற்று அடிவருடவும், அவற்றால் செழுமையான கரும்புகள் கண் வளரும் வளமுடைய திருவையாறாகும்.

மேல்

(1401)
அஞ்சாதே கயிலாயமலை எடுத்த அரக்கர்கோன் தலைகள் பத்தும்,

மஞ்சு ஆடு தோள், நெரிய அடர்த்து, அவனுக்கு அருள்புரிந்த மைந்தர் கோயில்

இஞ்சாயல் இளந் தெங்கின் பழம் வீழ, இள மேதி இரிந்து அங்கு ஓடி,

செஞ்சாலிக்கதிர் உழக்கி, செழுங் கமல வயல் படியும் திரு ஐயாறே.

அஞ்சாமல் கயிலை மலையை எடுத்த அரக்கர் தலைவனாகிய இராவணனின் தலைகள் பத்தையும் வலிமை பொருந்திய அவன் தோள்களோடு நெரியுமாறு அடர்த்துப் பின் அவனுக்கு அருள் புரிந்த சிவபிரான் எழுந்தருளிய கோயிலை உடையது. இனிய தோற்றத்தையுடைய இளந்தென்னையில் காய்த்த நெற்று விழ, அதனைக் கண்டு அஞ்சிய எருமை இளங்கன்று அஞ்சி ஓடி செந்நெற்கதிர்களைக் காலால் மிதித்துச் செழுமையான தாமரைகள் களையாகப் பூத்த வயல்களில் படியும் திருவையாறாகும்.

மேல்

(1402)
மேல் ஓடி விசும்பு அணவி, வியன் நிலத்தை மிக அகழ்ந்து, மிக்கு நாடும்

மாலோடு நான்முகனும் அறியாத வகை நின்றான் மன்னும் கோயில்

கோல் ஓட, கோல்வளையார் கூத்தாட, குவிமுலையார் முகத்தில் நின்று

சேல் ஓட, சிலை ஆட, சேயிழையார் நடம் ஆடும் திரு ஐயாறே.

அன்னமாய் மேலே பறந்து சென்று வானத்தைக் கலந்தும், அகன்ற நிலத்தை ஆழமாக அகழ்ந்தும் முயற்சியோடு தேடிய நான்முகன், திருமால் ஆகியோர் அறிய முடியாதவாறு ஓங்கி நின்ற சிவபிரான் உறையும் கோயிலையுடையது. கூத்தர்கள் கையில் வைத்து ஆட்டும் அபிநயக் கோலுடன் திரண்ட வளையல்களை அணிந்த மகளிர் கூத்தாட, திரண்ட தனங்களையுடைய அச்சேயிழையார் முகத்தில் கண்களாகிய சேல் மீன்கள் பிறழவும், வில் போன்ற புருவங்கள் மேலும் கீழும் செல்லவும், நடனமாடும் திருவையாறாகும்.

மேல்

(1403)
குண்டாடு குற்று உடுக்கைச் சமணரொடு சாக்கியரும் குணம் ஒன்று இல்லா

மிண்டாடும் மிண்டர் கேளாதே, ஆள் ஆமின், மேவித் தொண்டீர்!.

எண்தோளர், முக்கண்ணர், எம் ஈசர், இறைவர், இனிது அமரும் கோயில்

செண்டு ஆடு புனல் பொன்னிச் செழு மணிகள் வந்து அலைக்கும் திரு ஐயாறே.

இழிசெயல்களில் ஈடுபடுவோராய்ச் சிறிய ஆடையினராய்த் திரியும் சமணர்களும், சாக்கியர்களும் கூறும் நன்மை பயவாத சொற்களையும், வஞ்சனை பொருந்திய உரைகளையும், கேளாமல், தொண்டர்களே! நீவிர் சிவபிரானை அடைந்து அவருக்கு ஆட்படுவீர்களாக. எட்டுத் தோள்களையும், முக்குணங்களையும் உடைய எம் ஈசனாகிய இறைவன் இனிதாக எழுந்தருளியிருக்கும் கோயிலையுடையது, பூக்களைச் செண்டுகள் போல் உருட்டி ஆட்டிக் கொண்டு வரும் நீர் நிறைந்த காவிரி செழுமையான மணிகளைக் கரையில் கொண்டு வந்து சேர்க்கும் திருவையாறு என்னும் தலமாகும்.

மேல்

(1404)
அன்னம் மலி பொழில் புடை சூழ் ஐயாற்று எம்பெருமானை, அம் தண் காழி

மன்னிய சீர் மறை நாவன்-வளர் ஞானசம்பந்தன்-மருவு பாடல்

இன் இசையால் இவைபத்தும் இசையுங்கால், ஈசன் அடி ஏத்துவார்கள்

தன் இசையோடு அமருலகில் தவநெறி சென்று எய்துவார், தாழாது அன்றே!.

அன்னப் பறவைகள் நிறைந்த பொழில்கள் புடைசூழ்ந்து விளங்கும் திருவையாற்றுப் பெருமானை, அழகிய தண்மையான சீகாழிப் பதியில் வாழும் சிறப்பு மிக்க, வேதங்கள் பயிலும் நாவினன் ஆகிய புகழ் வளரும் ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய ,

பாடல்களாகிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதி, ஈசனடியை ஏத்துபவர்கள் புகழோடு தவநெறியின் பயனாக விளங்கும் அமரர் உலகத்தைத் தாழாமல் பெறுவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(131)
திருமுதுகுன்றம் - மேகராகக்குறிஞ்சி

(1405)
மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும், எண்குணங்களும், விரும்பும் நால்வே-

தத்தாலும் அறிவு ஒண்ணா நடை தெளியப் பளிங்கே போல் அரிவை பாகம்

ஒத்து, ஆறுசமயங்கட்கு ஒரு தலைவன் கருதும் ஊர் உலவு தெண்நீர்

முத்தாறு வெதிர் உதிர நித்திலம் வாரிக் கொழிக்கும் முது குன்றமே.

மெய்யினால் அறியத்தக்கதாகிய ஆறு சுவைகள் ஏழிசைகள், எண் குணங்கள், எல்லோராலும் விரும்பப் பெறும் நான்கு வேதங்கள் ஆகியவற்றால் அறிய ஒண்ணாதவனும், அன்போடு நடத்தலால் தெளியப் பெறுபவனும், பளிங்கு போன்றவனும், உமையம்மையை ஒரு பாகமாக உடையவனும், ஆறு சமயங்களாலும் மாறுபாடின்றி ஏற்றுக் கொள்ளப் பெறும் ஒரே தலைவனும் ஆகிய சிவபிரான் விரும்பும் ஊர், தெளிந்த நீர் நிறைந்த மணிமுத்தாறு மலையின்கண் உள்ள மூங்கில்கள் உதிர்க்கும் முத்துக்களை வாரிக் கொணர்ந்து கரையிற் கொழிக்கும் திருமுதுகுன்றமாகும்.

மேல்

(1406)
வேரி மிகு குழலியொடு வேடுவனாய், வெங்கானில் விசயன் மேவு

போரின் மிகு பொறை அளந்து, பாசுபதம் புரிந்து அளித்த புராணர் கோயில்

காரின் மலி கடிபொழில்கள் கனிகள் பல மலர் உதிர்த்து, கயம் முயங்கி,

மூரி வளம் கிளர் தென்றல் திருமுன்றில் புகுந்து உலவு முதுகுன்றமே.

தேன் மணம் மிகும் கூந்தலையுடைய உமையம்மையோடு வேட்டுவ உருவந்தாங்கி அருச்சுனன் தவம் புரியும் கொடிய கானகத்திற்குச் சென்று அவனோடு போர் உடற்றி அவன் பொறுமையை அளந்து அவனுக்குப் பாசுபதக் கணையை விரும்பி அளித்த பழையோனாகிய சிவபிரான் உறையும் கோயில், மழையால் செழித்த மணமுடைய சோலைகளில் கனிகளையும் பல மலர்களையும் உதிர்த்து, நீர் நிலைகளைப் பொருந்தி வலிய வளமுடைய தென்றல் காற்று அழகிய வீடுகள் தோறும் புகுந்து உலவும் திருமுதுகுன்றமாகும்.

மேல்

(1407)
தக்கனது பெருவேள்வி, சந்திரன், இந்திரன், எச்சன், அருக்கன், அங்கி,

மிக்க விதாதாவினொடும், விதிவழியே தண்டித்த விமலர் கோயில்

கொக்கு, இனிய கொழும் வருக்கை, கதலி, கமுகு, உயர் தெங்கின், குவை கொள்சோலை,

முக்கனியின் சாறு ஒழுகிச் சேறு உலரா நீள் வயல் சூழ் முதுகுன்றமே.

தக்கன் செய்த பெருவேள்வியில் சந்திரன், இந்திரன், எச்சன், சூரியன், அனலோன், பிரமன், முதலியவர்களை வீரபத்திரனைக் கொண்டு தண்டித்த விமலனாகிய சிவபெருமான் உறையும் கோயில், இனிய மாங்கனிகள், வளமான பலாக்கனிகள், வாழைக் கனிகள் ஆகிய முக்கனிகளின் சாறு ஒழுகிச் சேறு உலராத நீண்ட வயல்களும் குலைகளையுடைய கமுகு, தென்னை ஆகிய மரங்கள் நிறைந்த சோலைகளும் சூழ்ந்த திருமுதுகுன்றமாகும்..

மேல்

(1408)
வெம்மை மிகு புரவாணர் மிகை செய்ய; விறல் அழிந்து, விண் உளோர்கள்,

செம்மலரோன், இந்திரன், மால், சென்று இரப்ப; தேவர்களே தேர் அது ஆக,

மைம் மருவு மேரு விலு, மாசுணம் நாண், அரி எரிகால் வாளி ஆக,

மும்மதிலும் நொடி அளவில் பொடிசெய்த முதல்வன் இடம் முதுகுன்றமே.

கொடுமை மிகுந்து முப்புரங்களில் வாழும் அவுணர்கள் தீங்கு செய்ய அதனால் தங்கள் வலிமை அழிந்து தேவர்களும், பிரமனும், இந்திரனும், திருமாலும் சென்று தங்களைக் காத்தருளுமாறு வேண்ட, தேவர்களைத் தேராகவும், மேகங்கள் தவழும் உயர்ச்சியையுடைய மேருமலையை வில்லாகவும், வாசுகி என்னும் பாம்பை நாணாகவும், திருமால், அனலோன், வாயுவாகிய முத்தேவர்களையும் அம்பாகவும் கொண்டு அவுணர்களின் மும்மதில்களையும் ஒரு நொடிப் பொழுதில் பொடி செய்த தலைவனாகிய சிவபிரானது இடம், திருமுதுகுன்றமாகும்.

மேல்

(1409)
இழை மேவு கலை அல்குல் ஏந்திழையாள் ஒருபால் ஆய், ஒருபால் எள்காது

உழை மேவும் உரி உடுத்த ஒருவன் இருப்பு இடம் என்பர் உம்பர் ஓங்கு

கழை மேவு மடமந்தி மழை கண்டு, மகவினொடும் புக, ஒண் கல்லின்

முழை மேவு மால்யானை இரை தேரும் வளர் சாரல் முதுகுன்றமே.

மேகலை என்னும் அணிகலன் பொருந்திய அல்குலையும், அழகிய முத்துவடம் முதலியன அணிந்த மேனியையும் உடையவளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு தனக்குரியதான ஒரு பாகத்தே மான்தோலை இகழாது உடுத்த ஒப்பற்றவனாகிய சிவபிரானது இருப்பிடம், ஊரின் நடுவே உயர்ந்த மூங்கில்மேல் ஏறி அமர்ந்த மடமந்தி, மழை வருதலைக் கண்டு அஞ்சித் தன் குட்டியோடும் ஒலி சிறந்த மலைக்குகைகளில் ஒடுங்குவதும், பெரிய யானைகள் இரை தேர்ந்து திரிவதும் நிகழும் நீண்ட சாரலையுடைய திருமுதுகுன்றமாகும்.

மேல்

(1410)
நகை ஆர் வெண் தலைமாலை முடிக்கு அணிந்த நாதன் இடம் நல் முத்தாறு

வகை ஆரும் வரைப்பண்டம் கொண்டு இரண்டுகரை அருகும் மறிய மோதி,

தகை ஆரும் வரம்பு இடறி, சாலி கழுநீர் குவளை சாயப் பாய்ந்து,

முகை ஆர் செந்தாமரைகள் முகம்மலர, வயல் தழுவு முதுகுன்றமே.

சிரித்தலைப் பொருந்திய வெண்மையான தலைமாலையை முடியில் அணிந்துள்ள நாதனாகிய சிவபிரானது இடம், நல்ல மணிமுத்தாறு வகை வகையான மலைபடு பொருள்களைக் கொண்டு நெல், கழுநீர், குவளை ஆகியன சாயுமாறு பாய்ந்து வந்து, தாமரை மொட்டுக்கள் முகம் மலரும்படி வயலைச் சென்றடையும் திருமுதுகுன்றமாகும்..

மேல்

(1411)
அறம் கிளரும் நால்வேதம் ஆலின் கீழ் இருந்து அருளி, அமரர் வேண்ட,

நிறம் கிளர் செந்தாமரையோன் சிரம் ஐந்தின் ஒன்று அறுத்த நிமலர் கோயில்

திறம் கொள் மணித்தரளங்கள் வர, திரண்டு அங்கு எழில் குறவர் சிறுமிமார்கள்

முறங்களினால் கொழித்து, மணி செல விலக்கி, முத்து உலைப் பெய்முதுகுன்றமே.

அறநெறி விளங்கித் தோன்றும் நான்கு வேதங்களை ஆலின்கீழ் இருந்து சனகாதியர்க்கு அருளி, தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, செந்நிறம் விளங்கும் தாமரையில் எழுந்தருளிய பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்த நிமலனாகிய சிவபிரானது கோயில், முற்றிய மாணிக்கங்கள். முத்துக்கள் ஆகியன ஆற்றில் வருதலைக் கண்டு அழகிய குறவர் குடிப் பெண்கள் திரண்டு சென்று அவற்றை முறங்களால் வாரி மணிகளை விலக்கிப் புடைத்து முத்துக்களை அரிசியாக உலையில் பெய்து சிற்றில் இழைத்து விளையாடி மகிழும் திருமுதுகுன்றமாகும்.

மேல்

(1412)
கதிர் ஒளிய நெடுமுடிபத்து உடைய கடல் இலங்கையர்கோன் கண்ணும் வாயும்

பிதிர் ஒளிய கனல் பிறங்க, பெருங்கயிலைமலையை நிலை பெயர்த்த ஞான்று,

மதில் அளகைக்கு இறை முரல, மலர் அடி ஒன்று ஊன்றி, மறை பாட, ஆங்கே

முதிர் ஒளிய சுடர் நெடுவாள் முன் ஈந்தான் வாய்ந்த பதி முதுகுன்றமே.

கதிரவன் போன்ற ஒளியுடைய நீண்ட மகுடங்களைச் சூடிய பத்துத் தலைகளையுடைய இராவணன் கண்களும், வாயும், ஒளிபரவும் தீ வெளிப்படச் சினங்கொண்டு பெரிய கயிலாய மலையை நிலைபெயர்த்த காலத்து, மதில்கள் சூழ்ந்த அளகாபுரிக்கு இறைவனாகிய குபேரன் மகிழுமாறு, மலர்போன்ற தன் திருவடி ஒன்றை ஊன்றி அவ் இராவணனைத் தண்டித்துப் பின் அவன் மறைபாடித் துதித்த அளவில் அவனுக்கு மிக்க ஒளியுள்ள நீண்ட வாளை முற்படத் தந்த சிவபிரான் எழுந்தருளிய பதி திருமுதுகுன்றமாகும்.

மேல்

(1413)
பூ ஆர் பொன்தவிசின்மிசை இருந்தவனும், பூந்துழாய் புனைந்த மாலும்,

ஓவாது கழுகு ஏனம் ஆய், உயர்ந்து ஆழ்ந்து, உற நாடி, உண்மை காணாத்

தே ஆரும் திரு உருவன் சேரும் மலை செழு நிலத்தை மூட வந்த

மூவாத முழங்கு ஒலி நீர் கீழ் தாழ, மேல் உயர்ந்த முதுகுன்றமே.

தாமரை மலராகிய அழகிய தவிசின்மிசை விளங்கும் பிரமனும், அழகிய துளசிமாலை அணிந்த திருமாலும், அன்னமாகவும், பன்றியாகவும் உருமாறி வானில் பறந்தும், நிலத்தை அகழ்ந்தும் இடைவிடாது தேடியும் உண்மை காண இயலாத தெய்வ ஒளி பொருந்திய திருவுருவை உடையவனாகிய சிவபிரான் எழுந்தருளிய மலை, ஊழிக் காலத்து உலகத்தை மூடுமாறு முழங்கி வந்த கடல்நீர் கீழ்ப்படத் தான் மேல் உயர்ந்து தோன்றும் திருமுதுகுன்றமாகும்.

மேல்

(1414)
மேனியில் சீவரத்தாரும், விரிதரு தட்டு உடையாரும், விரவல் ஆகா

ஊனிகளாய் உள்ளார் சொல் கொள்ளாது உம் உள் உணர்ந்து, அங்கு உய்மின்,தொண்டீர்!.

ஞானிகளாய் உள்ளார்கள் நால்மறையை முழுது உணர்ந்து, ஐம்புலன்கள் செற்று,

மோனிகளாய் முனிச்செல்வர் தனித்து இருந்து தவம் புரியும் முதுகுன்றமே.

உடம்பில் துவராடை புனைந்த புத்த மதத்தினரும், விரிந்த ஓலைத் தடுக்கை உடையாகப் பூண்ட சமணர்களும், நட்புச் செய்து கோடற்கு ஏலாதவராய்த் தங்கள் உடலை வளர்த்தலையே குறிக்கோளாக உடைய ஊனிகளாவர். அவர்கள் சொற்களைக் கேளாது ஞானிகளாக உள்ளவர்களும், நான்மறைகளை உணர்ந்தவர்களும், ஐம்புலன்களை வென்ற மௌனிகளும், முனிவர்களாகிய செல்வர்களும், தனித்திருந்து தவம் புரியும் திருமுதுகுன்றை உள்ளத்தால் உணர்ந்து, தொண்டர்களே! உய்வீர்களாக.

மேல்

(1415)
முழங்கு ஒலி நீர் முத்தாறு வலம்செய்யும் முதுகுன்றத்து இறையை, மூவாப்

பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்து உடைய கழுமலமே பதியாக் கொண்டு,

தழங்கு எரிமூன்று ஓம்பு தொழில்-தமிழ் ஞானசம்பந்தன் சமைத்த பாடல்

வழங்கும் இசை கூடும் வகை பாடுமவர் நீடு உலகம் ஆள்வர்தாமே.

ஆரவாரத்தோடு நிறைந்துவரும் மணிமுத்தாறு வலஞ்செய்து இறைஞ்சும் திருமுதுகுன்றத்து இறைவனை, முதுமையுறாததாய்ப் பழமையாகவே பன்னிரு பெயர்களைக் கொண்டுள்ள கழுமலப் பதியில் முத்தீ வேட்கும் தொழிலையுடைய தமிழ் ஞானசம்பந்தன் இயற்றிய,

இப்பதிகப் பாடல்களைப் பொருந்தும் இசையோடு இயன்ற அளவில் பாடி வழிபடுபவர் உலகத்தை நெடுங்காலம் ஆள்வர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(132)
திருவீழிமிழலை - மேகராகக்குறிஞ்சி

(1416)
ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து, அங்கு ஈர்-இருவர்க்கு இரங்கி நின்று,

நேரிய நால்மறைப்பொருளை த்து, ஒளி சேர் நெறி அளித்தோன் நின்றகோயில்

பார் இசையும் பண்டிதர்கள் பல்-நாளும் பயின்று ஓதும் ஓசை கேட்டு,

வேரி மலி பொழில், கிள்ளை வேதங்கள் பொருள் சொல்லும் மிழலை ஆமே.

அழகிய வடவால மரத்தின்கீழ் வீற்றிருந்து சனகாதி முனிவர்களுக்குக் கருணையோடு நேரிய நால்வேதங்களின் உண்மைப் பொருளை உரைத்து அவர்கட்குச் சிவஞானநெறி காட்டியருளிய சிவபிரானது கோயில், நிலவுலகில் வாழும் வேதப் புலவர்கள் பல நாள்களும் தம்மிடம் பயிலும் மாணவர்களுக்கு வேதம் பயிற்றுவிப்பதைக் கேட்டுத் தேன் நிறைந்த பொழில்களில் வாழும் கிளிகள் நாள்தோறும் வேதங்களுக்குப் பொருள் சொல்லும் சிறப்பினதாய திருவீழிமிழலை ஆகும்.

மேல்

(1417)
பொறி அரவம் அது சுற்றி, பொருப்பே மத்து ஆக, புத்தேளிர் கூடி,

மறி கடலைக் கடைந்திட்ட விடம் உண்ட கண்டத்தோன் மன்னும் கோயில்

செறி இதழ்த் தாமரைத்தவிசில்-திகழ்ந்து ஓங்கும் இலைக் குடைக் கீழ், செய் ஆர்செந்நெல்

வெறி கதிர்ச்சாமரை இரட்ட, இள அன்னம் வீற்றிருக்கும் மிழலை ஆமே.

தேவர்கள் அனைவரும் கூடி மந்தரமலையை மத்தாக நாட்டி உடலில் புள்ளிகளை உடைய வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகச் சுற்றிச் சுருண்டு விழும் அலைகளை உடைய கடலைக் கடைந்த காலத்து எழுந்த நஞ்சினை உண்ட கண்டத்தை உடையவனாகிய சிவபிரான் உறையும் கோயில், செறிந்த இதழ்களை உடைய தாமரை மலராகிய இருக்கையில் விளங்கும், தாமரை இலையாகிய குடையின்கீழ் உள்ள இள அன்னம், வயலில் விளையும் செந்நெற்கதிர்களாகிய சாமரம் வீச வீற்றிருக்கும் திருவீழிமிழலை யாகும்.

மேல்

(1418)
எழுந்து உலகை நலிந்து உழலும் அவுணர்கள் தம் புரம் மூன்றும், எழில் கண்ணாடி

உழுந்து உருளும் அளவையின், ஒள் எரி கொள, வெஞ்சிலை வளைத்தோன் உறையும் கோயில்

கொழுந் தரளம் நகை காட்ட, கோகநதம் முகம் காட்ட, குதித்து நீர்மேல்

விழுந்த கயல் விழி காட்ட, வில் பவளம் வாய் காட்டும் மிழலை ஆமே.

வானத்திற் பறந்து திரிந்து உலக மக்களை நலிவு செய்து உழன்ற அசுரர்களின் முப்புரங்களையும் அழகிய கண்ணாடியில், உளுந்து உருளக்கூடிய கால அளவிற்குள் ஒளி பொருந்திய தீப்பற்றி எரியுமாறு கொடிய வில்லை வளைத்தவனாகிய சிவபிரான் உறையும் கோயில், செழுமையான முத்துக்கள் மகளிரின் பற்களையும், தாமரைகள் முகங்களையும் துள்ளிக்குதித்து நீர்மேல் விழும் கயல்கள் கண்களையும், ஒளி பொருந்திய பவளங்கள் வாய்களையும் காட்டும் திருவீழிமிழலையாகும்.

மேல்

(1419)
சேரும் எண்பத்து நான்கு நூறு ஆயிரம் ஆம் யோனி பேதம்

நிரை சேரப் படைத்து, அவற்றின் உயிர்க்கு உயிர் ஆய், அங்கு அங்கே நின்றான்கோயில்

வரை சேரும் முகில் முழவ, மயில்கள் பல நடம் ஆட, வண்டு பாட,

விரை சேர் பொன் இதழி தர, மென்காந்தள் கை ஏற்கும் மிழலை ஆமே.

நூல்களில் உரைக்கப் பெறும் எண்பத்துநான்கு லட்சம் பிறப்பு வேறுபாடுகளையும் முறையாகப் படைத்து, அவ்வவற்றின் உயிர்கட்கு உயிராய் அங்கங்கே விளங்கி நிற்போனாகிய சிவபிரான் உறையும் கோயில், மலைகளில் தங்கியுள்ள மேகங்கள் எழுந்து வந்து முழவுபோல ஒலிக்க, ஆண்மயில்கள் பல நடனமாட, வண்டுகள் பாட, பரிசிலாகக் கொன்றை மரங்கள் மணம் பொருந்திய மலர் இதழ்களாகிய பொன்னைத் தர மெல்லிய காந்தள் மலர்கள் கை போல விரிந்து அதனை ஏற்கும் திருவீழிமிழலையாகும்.

மேல்

(1420)
காணும் ஆறு அரிய பெருமான் ஆகி, காலம் ஆய், குணங்கள் மூன்று ஆய்,

பேணு மூன்று உருஆகி, பேர் உலகம் படைத்து அளிக்கும் பெருமான் கோயில்

"தாணு ஆய் நின்ற பரதத்துவனை, உத்தமனை, இறைஞ்சீர்!" என்று

வேணு வார்கொடி விண்ணோர்தமை விளிப்ப போல் ஓங்கு மிழலை ஆமே.

காண்டற்கரிய கடவுளாய், மூன்று காலங்களாய், மூன்று குணங்களாய் எல்லோராலும் போற்றப் பெறும் அரி, அயன், அரன் ஆகிய மும்மூர்த்திகளாய், பெரிதாகிய இவ்வுலகத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களைப் புரியும் சிவபிரான் உறையும் கோயில், மூங்கில்களிற் கட்டிய நெடிய கொடிகள் நிலை பேறு உடையவனாய் நிற்கும் மேலான சிவபிரானாகிய, உத்தமனை, வந்து வழிபடுவீர்களாக என்று தேவர்களை அழைப்பனபோல, அசைந்து ஓங்கி விளங்கும் திருவீழிமிழலையாகும். மூன்று உருவுக்கு ஏற்ப அழித்தல் வருவிக்கப்பட்டது.

மேல்

(1421)
அகன் அமர்ந்த அன்பினராய், அறுபகை செற்று, ஐம்புலனும் அடக்கி, ஞானப்

புகல் உடையோர்தம் உள்ளப் புண்டரிகத்துள் இருக்கும் புராணர் கோயில்

தகவு உடை நீர் மணித்தலத்து, சங்கு உள வர்க்கம் திகழ, சலசத்தீயுள்,

மிக உடைய புன்கு மலர்ப்பொரி அட்ட, மணம் செய்யும் மிழலை ஆமே.

உள்ளத்தில் பொருந்திய அன்புடையவராய், காமம் முதலிய அறுபகைகளையும் கடிந்து, சுவை ஒளி முதலிய ஐம்புலங்களை அடக்கிச் சிவஞானத்தில் திளைத்திருப்பவர்களாகிய துறவிகளின் இதயத் தாமரையில் எழுந்தருளி விளங்கும் பழையோனாகிய சிவபிரான் உறையும் கோயில், மணிகளும் சங்கினங்களும் விளங்கும் தூயதான நீர் நிலைகளில் முளைத்த தாமரை மலராகிய தீயில் மிகுதியாக வளர்ந்த புன்க மரங்கள் பொரி போல மலர்களைத் தூவி, திருமண நிகழ்ச்சியை நினைவுறுத்திக் கொண்டிருப்பதாகிய திருவீழிமிழலையாகும்.

மேல்

(1422)
ஆறு ஆடு சடைமுடியன், அனல் ஆடு மலர்க்கையன், இமயப்பாவை

கூறு ஆடு திரு உருவன், கூத்து ஆடும் குணம் உடையோன், குளிரும் கோயில்

சேறு ஆடு செங்கழுநீர்த் தாது ஆடி, மது உண்டு, சிவந்த வண்டு

வேறு ஆய உருஆகி, செவ்வழி நல்பண் பாடும் மிழலை ஆமே.

கங்கையணிந்த சடைமுடியை உடையவனும், மலர் போன்ற கரத்தில் அனலை ஏந்தியவனும், இமவான் மகளாகிய பார்வதிதேவி தன் ஒரு கூறாக விளங்கத் திகழும் திருமேனியை உடையவனும், கூத்தாடும் குணமுடையவனும், ஆகிய சிவபிரான் மனங் குளிர்ந்து எழுந்தருளியிருக்கும் கோயில், சேற்றில் முளைத்த செங்கழுநீர் மலர்களின் மகரந்தங்களில் படிந்து தேனையுண்டு, தன் இயல்பான நிறம் மாறிச் சிவந்த நிறம் உடையதாய்த் தோன்றும் வண்டு செவ்வழிப் பண்ணைப் பாடிக் களிக்கும் திருவீழிமிழலையாகும்.

மேல்

(1423)
கருப்பம் மிகும் உடல் அடர்த்து, கால் ஊன்றி, கை மறித்து, கயிலை என்னும்

பொருப்பு எடுக்கல் உறும் அரக்கன் பொன் முடி தோள் நெரித்த விரல் புனிதர்கோயில்

தருப்பம் மிகு சலந்தரன் தன் உடல் தடிந்த சக்கரத்தை வேண்டி, ஈண்டு

விருப்பொடு மால் வழிபாடு செய்ய, இழி விமானம் சேர் மிழலை ஆமே.

கர்வம் மிகுந்த உடலை வருத்தி நெருங்கிச் சென்று காலை ஊன்றிக் கைகளை வளைத்துக் கயிலை என்னும் மலையைப் பெயர்த்தெடுக்க முற்பட்ட அரக்கனாகிய இராவணனின் பொன்முடி தரித்த தலைகளையும் தோள்களையும் நெரித்து அடர்த்த கால் விரலையுடைய தூயவராகிய சிவபிரானார் உறையும் கோயில், செருக்கு மிக்க சலந்தரன் என்னும் அவுணனது உடலைத் தடிந்த சக்கராயுதத்தைப் பெற விரும்பிப் பெருவிருப்போடு இவ்வுலகில் திருமால் வழிபாடு செய்ததும், வானிலிருந்து இழிந்த விமானத்தை உடையதுமாகிய திருவீழிமிழலையாகும்.

மேல்

(1424)
செந்தளிர் மா மலரோனும் திருமாலும், ஏனமொடு அன்னம் ஆகி,

அந்தம் அடி காணாதே, அவர் ஏத்த, வெளிப்பட்டோன் அமரும் கோயில்

புந்தியின் நால்மறைவழியே புல் பரப்பி, நெய் சமிதை கையில் கொண்டு,

வெந்தழலின் வேட்டு, உலகில் மிக அளிப்போர் சேரும் ஊர் மிழலை ஆமே.

சிவந்த இதழ்களையுடைய பெரிய தாமரை மலரின்மேல் உறையும் பிரமனும், திருமாலும் அன்னமாகியும் பன்றியாகியும் முடியடிகளைக் காணாது தம் செருக்கழிந்து வழிபட அவர்கட்குக் காட்சி அளித்தோனாகிய சிவபிரான் அமரும் கோயில், தாங்கள் பெற்ற அறிவால் வேத விதிப்படி தருப்பைப் புற்களைப் பரப்பி நெய், சமித்து ஆகியவற்றைக் கையில் கொண்டு அழல் வளர்த்து வேள்வி செய்து உலகைக் காப்பவர்களாகிய அந்தணர்கள் சேரும் ஊராகிய திருவீழிமிழலையாகும்.

மேல்

(1425)
எண் இறந்த அமணர்களும், இழி தொழில் சேர் சாக்கியரும், என்றும் தன்னை

நண்ண (அ)ரிய வகை மயக்கி, தன் அடியார்க்கு அருள்புரியும் நாதன் கோயில்

பண் அமரும் மென்மொழியார் பாலகரைப் பாராட்டும் ஓசை கேட்டு,

விண்ணவர்கள் வியப்பு எய்தி, விமானத்தோடும் இழியும் மிழலை ஆமே.

எண்ணற்ற சமணர்களும், இழிதொழில் புரியும் சாக்கியர்களும், எக்காலத்தும் தன்னை நெருங்க இயலாதவாறு அவர்கள் அறிவை மயக்கித் தன் அடியவர்களுக்கு அருள் புரியும் சிவபிரான் எழுந்தருளிய கோயில், பண்ணிசை போலும் மென்மொழி பேசும் மகளிர் தாங்கள் பெற்ற புதல்வர்களைப் பாராட்டும் தாலாட்டு ஓசை கேட்டு வியந்து, தேவர்கள் விமானங்களோடு வந்து இறங்கும் திருவீழிமிழலையாகும்.

மேல்

(1426)
மின் இயலும் மணி மாடம் மிடை வீழி மிழலையான் விரை ஆர் பாதம்

சென்னிமிசைக் கொண்டு ஒழுகும் சிரபுரக் கோன்-செழுமறைகள் பயிலும் நாவன்,

பன்னிய சீர் மிகு ஞானசம்பந்தன்-பரிந்து த்த பத்தும் ஏத்தி,

இன் இசையால் பாட வல்லார், இருநிலத்தில் ஈசன் எனும் இயல்பினோரே.

மின்னல் போலும் ஒளியுடைய மணிகள் இழைத்த மாட வீடுகள் செறிந்த திருவீழிமிழலை இறைவனின் மணம் கமழ்கின்ற திருவடிகளைச் சென்னிமிசைக் கொண்டு ஒழுகும் இயல்புடைய சிரபுரநகரின் தலைவனும், செழுமறை பயின்ற நாவினனும் பலர் போற்றும் சிறப்பு மிக்கவனுமாகிய ஞானசம்பந்தன் அன்பு கொண்டு பாடிய,

இப்பதிகப் பாடல்கள் பத்தையும் போற்றி இன்னிசையோடு பாடவல்லவர்கள் பெரிதான இந்நிலவுலகில் ஈசன் என்று போற்றும் இயல்புடையோராவர்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(133)
திருக்கச்சி ஏகம்பம் - மேகராகக்குறிஞ்சி

(1427)
வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின் விரிநூல் ஒருபால் பொருந்த,

கந்தம் மல்கு குழலியோடும் கடிபொழில் கச்சி தன்னுள்,

அந்தம் இல் குணத்தார் அவர் போற்ற, அணங்கினொடு ஆடல் புரி

எந்தை மேவிய ஏகம்பம் தொழுது ஏத்த, இடம் கெடுமே.

அனலிடை நன்றாக வெந்த வெண்மையான திருநீற்றைப் பூசியுள்ள மார்பின்கண் விரிந்த பூணூல் ஒருபால் விளங்கித் தோன்ற, மணங்கமழும் கூந்தலினையுடைய உமையம்மையோடும், விளங்கும் பொழில்களால் சூழப்பட்ட கச்சி என்னும் தலத்துள் எல்லையற்ற குணங்களையுடைய அடியவர்கள் போற்ற நடனம் செய்யும் எந்தையாகிய சிவபெருமான் எழுந்தருளிய ஏகம்பம் என்னும் திருக்கோயிலைத் தொழுது போற்ற நம் இடர் கெடும்.

மேல்

(1428)
வரம் திகழும் அவுணர் மா நகர்மூன்று உடன் மாய்ந்து அவியச்

சரம் துரந்து, எரிசெய்த தாழ்சடைச் சங்கரன் மேய இடம்

குருந்தம், மல்லிகை, கோங்கு, மாதவி, நல்ல குரா, மரவம்,

திருந்து பைம்பொழில் கச்சி ஏகம்பம் சேர, இடர் கெடுமே.

வரம்பெற்ற அவுணர்களின் பெருநகராக விளங்கிய முப்புரங்களும் ஒருசேர மாய்ந்து கெடுமாறு கணை எய்து எரித்தழித்த, தாழ்ந்து தொங்கும் சடைகளையுடைய சங்கரன் எழுந்தருளிய இடமாகிய, குருந்தம், மல்லிகை, கோங்கு, மாதவி, நல்லகுரா, கடம்பமரம் ஆகியனவற்றால் சிறந்து விளங்கும் பசுமையான பொழில் சூழ்ந்த கச்சிமாநகரிலுள்ள திருஏகம்பத்தை அடைந்து தொழ, நம் இடர்கெடும்.

மேல்

(1429)
வண்ண வெண்பொடிப் பூசும் மார்பின் வரி அரவம் புனைந்து,

பெண் அமர்ந்து, எரி ஆடல் பேணிய பிஞ்ஞகன் மேய இடம்,

விண் அமர் நெடுமாடம் ஓங்கி விளங்கிய கச்சி தன்னுள்-

திண்ண மாம்பொழில் சூழ்ந்த ஏகம்பம் சேர, இடர் கெடுமே.

வெண்மைநிறம் அமைந்த திருநீறு பூசிய மார்பின்கண் உடலில் வரிகளையுடைய பாம்பை அணிந்து, உமையம்மையை விரும்பியேற்று, சுடுகாட்டில் எரியாடல் புரியும் தலைக்கோலம் உடையவனாகிய சிவபிரான் மேவிய இடமாகிய விண்ணளாவிய நீண்ட மாட வீடுகள் ஓங்கி விளங்குவதும், என்றும் நிலை பெற்ற பொழில்களால் சூழப்பட்டதுமாகிய கச்சிமாநகரில் உள்ளதுமாகிய திருஏகம்பத்தைச் சென்று வணங்க நம் இடர் கெடும்.

மேல்

(1430)
தோலும் நூலும் துதைந்த வரை மார்பில் சுடலை வெண் நீறு அணிந்து,

காலன் மாள் உறக் காலால் காய்ந்த கடவுள் கருதும் இடம்,

மாலை வெண்மதி தோயும் மா மதில் கச்சி மா நகருள்,

ஏலம் நாறிய சோலை சூழ் ஏகம்பம் சேர, இடர் கெடுமே.

மான்தோலும் பூணூலும் பொருந்திய மலை போன்ற மார்பின்கண் சுடலையில் எடுத்த வெண்மையான திருநீற்றை அணிந்து மார்க்கண்டேயர்க்காகக் காலன் மாயும்படி காலால் அவனை உதைத்தருளிய கடவுளாகிய சிவபிரான் விரும்புமிடமாகிய, மாலைக் காலத்தில் தோன்றும் வெண்மையான மதி தோயுமாறு உயர்ந்த பெரிய மதில்களை உடைய பெரிய காஞ்சிபுர நகரில் மணம் வீசும் சோலைகளால் சூழப்பட்ட ஏகம்பம் என்னும் திருக்கோயிலை ஏத்த, நம் இடர் கெடும்.

மேல்

(1431)
தோடு அணி மலர்க்கொன்றை சேர் சடைத் தூ மதியம் புனைந்து,

பாடல் நால்மறை ஆக, பலகணப் பேய்கள் அவை சூழ,

வாடல் வெண் தலை ஓடு, அனல், ஏந்தி, மகிழ்ந்து உடன் ஆடல் புரி

சேடர் சேர் கலிக் கச்சி ஏகம்பம் சேர, இடர் கெடுமே.

அழகிய இதழ்களோடு கூடிய கொன்றை மலர்மாலை சூடிய சடையின்மேல் தூய பிறை மதியை அணிந்து நான்மறைகளைப் பாடல்களாகக் கொண்டு பேய்க் கணங்கள் பல சூழப், புலால் வற்றிய வெண்தலையோட்டையும், அனலையும் கையிலேந்தி மகிழ்வோடு உமையம்மையுடன் ஆடல் புரிகின்ற பெரியோனாகிய சிவபிரான் எழுந்தருளிய ஆரவாரமுடைய கச்சியில் விளங்கும் திருஏகம்பத்தை நினைக்க, நம் இடர் கெடும்.

மேல்

(1432)
சாகம் பொன்வரை ஆகத் தானவர் மும்மதில் சாய் எய்து,

ஆகம் பெண் ஒருபாகம் ஆக, அரவொடு நூல் அணிந்து,

மாகம் தோய் மணி மாட மா மதில் கச்சி மா நகருள்,

ஏகம்பத்து உறை ஈசன் சேவடி ஏத்த, இடர் கெடுமே.

மேரு மலையை வில்லாகக் கொண்டு அசுரர்களின் முப்புரங்களை அழியுமாறு கணைதொடுத்துத் தன் திருமேனியில் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு மார்பில் பாம்பையும், முப்புரி நூலையும் அணிந்து விண்ணளாவிய அழகிய மாடங்களையும், பெரிய மதிலையும் உடைய கச்சிமாநகரில் விளங்கும் திருஏகம்பத்தில் உறையும் ஈசன் திருவடிகளை ஏத்த நம் இடர் கெடும்.

மேல்

(1433)
வாள் நிலாமதி புல்கு செஞ்சடை வாள் அரவம் அணிந்து,

நாண் இடத்தினில் வாழ்க்கை பேணி, நகுதலையில் பலி தேர்ந்து,

ஏண் இலா அரக்கன் தன் நீள் முடி பத்தும் இறுத்தவன் ஊர்,

சேண் உலாம் பொழில் கச்சி ஏகம்பம் சேர, இடர் கெடுமே.

ஒளி விளங்கும் பிறைமதி பொருந்திய செஞ்சடையில் ஒளி பொருந்திய பாம்பினை அணிந்து இடப்பாகத்தே நாணோடு கூடியவளாகிய இல்வாழ்க்கைக்குரிய உமையம்மையை விரும்பியேற்றுச் சிரிக்கும் தலையோட்டில் பலியேற்று, மன உறுதி படைத்தவனாகிய இராவணனின் நீண்ட முடிகள் பத்தையும் நெரித்தவனாகிய சிவபிரானது, வானளாவிய பொழில்களையுடைய கச்சிமா நகரிலுள்ள திருஏகம்பத்தை அடைந்து தொழ நம் இடர் கெடும்..

மேல்

(1434)
பிரமனும் திருமாலும் கைதொழப் பேர் அழல் ஆய பெம்மான்,

அரவம் சேர் சடை அந்தணன், அணங்கினொடு அமரும் இடம்,

கரவு இல் வண்கையினார்கள் வாழ் கலிக் கச்சி மா நகருள்,

மரவம் சூழ் பொழில் ஏகம்பம் தொழ, வில்வினை மாய்ந்து அறுமே.

பிரமனும், திருமாலும் தம் கைகளால் தொழுது வணங்கப் பெரிய அனலுருவாகி நின்ற பெருமானும், பாம்பணிந்த சடையை யுடைய அந்தணனும் ஆகிய சிவபிரான் தன் தேவியோடு அமரும் இடமாகிய, வஞ்சகம் இல்லாத வள்ளன்மை பொருந்திய கையினை உடையவர்கள் வாழ்கின்ற ஆரவாரமுடைய கச்சி மாநகரில் குங்கும மரங்கள் பொருந்திய சோலைகளால் சூழப்பட்டு விளங்கும் திருஏகம்பத்தைத் தொழ நம் வல்வினைகள் மாய்ந்து கெடும்.

மேல்

(1435)
குண்டுபட்டு அமண ஆயவரொடும், கூறை தம் மெய் போர்க்கும்

மிண்டர், கட்டிய கட்டுரை அவை கொண்டு விரும்பேன்மின்!.

விண்டவர் புரம் மூன்றும் வெங்கணை ஒன்றினால் அவியக்

கண்டவன் கலிக் கச்சி ஏகம்பம் காண, இடர் கெடுமே.

பருமையான உடலோடு ஆடையின்றித் திரியும் சமணர்களோடு ஆடையைத் தம் உடலில் போர்த்து வலியவராய்த் திரியும் புத்தர்களும் புனைந்து கூறும் உரைகளைப் பொருளுரையாகக் கருதி விரும்பாதீர்கள். பகைவர்களாகிய அவுணர்களின் மூன்று புரங்களையும் கொடிய கணை ஒன்றை எய்து எரித்தழித் தவனாகிய சிவபிரான் எழுந்தருளிய கச்சியின்கண் உள்ள திரு ஏகம்பத்தைச் சென்று காண, நம் இடர் கெடும்.

மேல்

(1436)
ஏரின் ஆர் பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பம் மேயவனை,

காரின் ஆர் மணி மாடம் ஓங்கு கழுமல நன்நகருள்,

பாரின் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் பரவிய பத்தும் வல்லார்,

சீரின் ஆர் புகழ் ஓங்கி, விண்ணவரோடும் சேர்பவரே.

அழகு நிறைந்த பொழில்கள் சூழ்ந்த கச்சியேகம் பத்துள் விளங்கும் இறைவனை மேகங்கள் தவழும் அழகிய மாடங்கள் ஓங்கும் கழுமல நன்னகருள் தோன்றிய தமிழ்வல்ல ஞானசம்பந்தன் பரவிப் போற்றிய,

பத்துப் பாடல்களையும் ஓத வல்லவர் இவ்வுலகின்கண் சிறந்த புகழால் ஓங்கி விளங்கிப் பின் விண்ணவர்களோடும் சேர்ந்து வாழும் நிலையைப் பெறுவர்..

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(134)
திருப்பறியலூர் வீரட்டம் - மேகராகக்குறிஞ்சி

(1437)
கருத்தன், கடவுள், கனல் ஏந்தி ஆடும்

நிருத்தன், சடைமேல் நிரம்பா மதியன்-

திருத்தம் உடையார் திருப் பறியலூரில்,

விருத்தன் எனத் தகும் வீரட்டத்தானே.

திருந்திய மனமுடையவர்கள் வாழும் திருப்பறியலூரில் தொன்மையானவனாய் விளங்கும் வீரட்டானத்து இறைவன் அனைத்துலகங்களுக்கும் தலைவனும், கடவுளுமாக இருப்பவன். கையில் கனலேந்தி நடனம் புரிபவன். சடைமுடி மீது இளம்பிறை அணிந்தவன்.

மேல்

(1438)
மருந்தன், அமுதன், மயானத்துள் மைந்தன்,

பெருந்தண்புனல் சென்னி வைத்த பெருமான்-

திருந்து மறையோர் திருப் பறியலூரில்,

விரிந்த மலர்ச்சோலை வீரட்டத்தானே.

ஒழுக்கத்திற் சிறந்த அந்தணர்கள் வாழும் விரிந்த மலர்ச் சோலைகளையுடைய திருப்பறியலூரில் விளங்கும் வீரட்டானத்து இறைவன், பிணி தீர்க்கும் மருந்தாவான். உயிர் காக்கும் அமுதமாவான். மயானத்துள் நின்றாடும் வலியோனாவான். மிகப் பெரியதாகப் பரந்து வந்த குளிர்ந்த கங்கையைத் தன் சென்னியில் தாங்கி வைத்துள்ள பெருமானாவான்.

மேல்

(1439)
குளிர்ந்து ஆர் சடையன், கொடுஞ்சிலை வில் காமன்

விளிந்தான் அடங்க வீந்து எய்தச் செற்றான்-

தெளிந்தார் மறையோர் திருப் பறியலூரில்,

மிளிர்ந்து ஆர் மலர்ச்சோலை வீரட்டத்தானே.

அறிவில் தெளிந்த மறையோர்கள் வாழும் மலர்ச்சோலைகளால் சூழப்பட்ட திருப்பறியலூரில் விளங்கும் வீரட்டானத்து இறைவன் குளிர்ந்த சடைமுடியை உடையவன். கொடிய வில்லை வளைத்து மலர்க்கணை தொடுத்த மன்மதனை எரித்து இறக்குமாறு செய்து, இரதி தேவி வேண்ட அவனைத் தோற்றுவித்தவன்.

மேல்

(1440)
பிறப்பு ஆதி இல்லான், பிறப்பார் பிறப்புச்

செறப்பு ஆதி அந்தம் செலச் செய்யும் தேசன்-

சிறப்பாடு உடையார் திருப் பறியலூரில்,

விறல் பாரிடம் சூழ, வீரட்டத்தானே.

சிறப்புடையவர்கள் வாழ்கின்ற திருப்பறியலூரில் வலிமை பொருந்திய பூதகணங்கள் தன்னைச் சூழ விளங்கும் வீரட்டானத்து இறைவன், பிறப்பும் இறப்பும் இல்லாதவன். இவ்வுலகில் பிறவி எடுக்கும் உயிர்கள் அடையும் பிறப்புக்கும், சிறப்புக்கும் முதலும் முடிவும் காணச் செய்யும் ஒளி வடிவினன்.

மேல்

(1441)
கரிந்தார் இடுகாட்டில் ஆடும் கபாலி,

புரிந்தார் படுதம் புறங்காட்டில் ஆடும்

தெரிந்தார் மறையோர் திருப் பறியலூரில்,

விரிந்து ஆர் மலர்ச்சோலை வீரட்டத்தானே.

நான்கு வேதங்களையும் ஆராய்ந்தறிந்த மறையவர்கள் வாழும் விரிந்த மலர்ச்சோலைகளையுடைய திருப்பறியலூரில் விளங்கும் வீரட்டானத்து இறைவர், இறந்தவர்களைக் கரிந்தவர்களாக எரிக்கும் சுடுகாட்டில் ஆடும் கபாலி.

மேல்

(1442)
அரவு உற்ற நாணா, அனல் அம்பு அது ஆக,

செரு உற்றவர் புரம் தீ எழச் செற்றான்-

தெருவில் கொடி சூழ் திருப் பறியலூரில்,

வெரு உற்றவர் தொழும் வீரட்டத்தானே.

தெருக்களில் நடப்பட்ட கொடிகளால் சூழப்பெற்ற திருப்பறியலூரில், பிறவிப் பிணிக்கு அஞ்சுபவர்களால் தொழப்படும் வீரட்டானத்து இறைவன், வாசுகி என்னும் பாம்பை மேருவில்லில் நாணாக இணைத்து அனலை அம்பாகக் கொண்டு தன்னோடு போரிட்டவரின் முப்புரங்களைத் தீ எழுமாறு செய்து அழித்தவன்.

மேல்

(1443)
நரை ஆர் விடையான், நலம் கொள் பெருமான்,

அரை ஆர் அரவம் அழகா அசைத்தான்-

திரை ஆர் புனல் சூழ் திருப் பறியலூரில்,

விரை ஆர் மலர்ச்சோலை வீரட்டத்தானே.

அலைகளையுடைய நீர்க்கால்களால் சூழப்பட்டதும், மணம் பொருந்திய மலர்ச் சோலைகளை உடையதுமான திருப்பறியலூர் வீரட்டத்தில் விளங்கும் இறைவன், வெண்மை நிறம் பொருந்திய விடையேற்றை உடையவன். நன்மைகளைக் கொண்டுள்ள தலைவன், இடையில் பாம்பினைக் கச்சாக அழகுறக் கட்டியவன்.

மேல்

(1444)
வளைக்கும் எயிற்றின் அரக்கன் வரைக்கீழ்

இளைக்கும்படி தான் இருந்து, ஏழை அன்னம்

திளைக்கும் படுகர்த் திருப் பறியலூரில்,

விளைக்கும் வயல் சூழ்ந்த வீரட்டத்தானே.

பெண் அன்னங்கள் ஆண் அன்னங்களோடு கூடித்திளைக்கும் ஆழமான மடுக்களை உடையதும், மிகுதியான நெல்விளைவைத் தரும் வயல்களால் சூழப்பட்டதுமான திருப்பறியலூர் வீரட்டானத்து இறைவன், வளைந்த பற்களையுடைய இராவணனைக் கயிலைமலையின்கண் அகப்படுத்தி அவனை வலிமை குன்றியவனாகும்படி கால்விரலால் அடர்த்து எழுந்தருளி இருப்பவனாவான்.

மேல்

(1445)
வளம் கொள் மலர்மேல் அயன், ஓதவண்ணன்,

துளங்கும் மனத்தார் தொழ, தழல் ஆய் நின்றான்-

இளங்கொம்பு அனாளோடு இணைந்தும் பிணைந்தும்

விளங்கும் திருப் பறியல் வீரட்டத்தானே.

இளைய பூங்கொம்பு போன்றவளாகிய உமையம்மையோடு இணைந்தும், இடப்பாகமாக அவ்வம்மையைக் கொண்டும் விளங்குபவனாகிய திருப்பறியல்வீரட்டத்து இறைவன், ஒளி விளங்கும் தாமரை மலர்மேல் உறையும் பிரமனும் கடல்வண்ணனாகிய திருமாலும் அச்சத்தால் நடுங்கிய மனத்தை யுடையவராய்த் தன்னைத் தொழத் தழல் உருவாய் நின்றவனாவான்.

மேல்

(1446)
சடையன்; பிறையன்; சமண் சாக்கியரோடு

அடை அன்பு இலாதான்; அடியார் பெருமான்;

உடையன், புலியின் உரி-தோல் அரைமேல்;

விடையன்-திருப் பறியல் வீரட்டத்தானே.

திருப்பறியல் வீரட்டத்தில் உறையும் இறைவன், சடையில் பிறை அணிந்தவன். சமணர், புத்தர் ஆகியோர்க்கு அருள்புரிதற்கு உரிய அன்பிலாதவன். புலியின் தோலை இடைமேல் ஆடையாக உடுத்தவன். விடையேற்றினை உடையவன்.

மேல்

(1447)
நறு நீர் உகும் காழி ஞானசம்பந்தன்,

வெறி நீர்த் திருப் பறியல் வீரட்டத்தானை,

பொறி நீடு அரவன், புனை பாடல் வல்லார்க்கு

அறும், நீடு அவலம்; அறும், பிறப்புத்தானே.

நல்ல நீர் பாயும் சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், மணங்கமழும் நீர்வளமுடைய திருப்பறியல் வீரட்டானத்து உறையும் புள்ளிகளையுடைய நீண்ட பாம்பினை அணிந்த இறைவனைப் புனைந்து போற்றிய,

இப்பதிகப் பாடல்களை பாட வல்லவர்கட்குப் பெரிய துன்பங்களும் பிறப்பும் நீங்கும்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(135)
திருப்பராய்த்துறை - மேகராகக்குறிஞ்சி

(1448)
நீறு சேர்வது ஒர் மேனியர், நேரிழை

கூறு சேர்வது ஒர் கோலம் ஆய்,

பாறு சேர் தலைக் கையர் பராய்த்துறை

ஆறு சேர் சடை அண்ணலே.

திருப்பராய்த்துறையில், கங்கையை அணிந்த சடையினராய் விளங்கும் இறைவர், திருநீறு அணிந்த திருமேனியை உடையவர். அணிகலன்கள் பல புனைந்த உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட கோலத்தினர். பருந்துகள் தொடரத் தக்கதாய்ப் புலால் நாற்றம் கூடிய பிரமனது தலையோட்டைக் கையில் கொண்டவர்.

மேல்

(1449)
கந்தம் ஆம் மலர்க்கொன்றை, கமழ் சடை,

வந்த பூம்புனல், வைத்தவர்

பைந்தண் மாதவி சூழ்ந்த பராய்த்துறை

அந்தம் இல்ல அடிகளே.

பசுமையான குளிர்ந்த குருக்கத்திக் கொடிகள் சூழ்ந்த திருப்பராய்த்துறையில் விளங்கும் அழிவற்றவராகிய இறைவர், மணங்கமழும் சிறந்த மலர்களும், கொன்றையும் மணக்கும் சடைமுடியின்மேல் பெருக்கெடுத்து வந்த கங்கை நதியை வைத்துள்ளவர்.

மேல்

(1450)
வேதர் வேதம் எல்லாம் முறையால் விரித்து

ஓத நின்ற ஒருவனார்;

பாதி பெண் உரு ஆவர் பராய்த்துறை

ஆதி ஆய அடிகளே.

திருப்பராய்த்துறையில் எல்லா உலகங்களுக்கும் ஆதியாக விளங்குபவராய் எழுந்தருளியுள்ள இறைவர், வேதங்களை அருளிச் செய்தவர். எல்லா வேதங்களையும் முறையாக விரித்துப் பொருள் விளக்கம் அருளிய ஒப்பற்றவர். தம் திருமேனியில் பாதிப் பெண்ணுருவாக விளங்குபவர்.

மேல்

(1451)
தோலும் தம் அரை ஆடை, சுடர்விடு

நூலும் தாம் அணி மார்பினர்

பாலும் நெய் பயின்று ஆடு, பராய்த்துறை,

ஆல நீழல் அடிகளே.

திருப்பராய்த்துறையில் ஆலநீழலில் எழுந்தருளிப் பால், நெய் முதலியவற்றை விரும்பி ஆடும் இறைவர், புலித்தோலைத் தம் இடையிலே ஆடையாக உடுத்தவர். ஒளி பொருந்திய பூணூல் அணிந்த மார்பினை உடையவர்.

மேல்

(1452)
விரவி நீறு மெய் சுவர், மேனிமேல்;

இரவில் நின்று எரி ஆடுவர்;

பரவினார் அவர் வேதம் பராய்த்துறை

அரவம் ஆர்த்த அடிகளே.

திருப்பராய்த்துறையில் பாம்பை இடையில் கட்டியவராய் விளங்கும் பரமர், திருநீற்றைத் தம் மேனிமேல் விரவப்பூசியவர். நள்ளிரவில் சுடுகாட்டுள் நின்று எரி ஆடுபவர். வேதங்களால் பரவப் பெற்றவர்.

மேல்

(1453)
மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்;

கறை கொள் கண்டம் உடையவர்

பறையும் சங்கும் ஒலிசெய் பராய்த்துறை

அறைய நின்ற அடிகளே.

பறை, சங்கு முதலியன முழங்கும் திருவிழாக்கள் நிகழும் திருப்பராய்த்துறையில் எல்லோரும் புகழ்ந்து போற்ற எழுந்தருளிய இறைவர், வேதங்களை ஓதுபவர். மான் கன்றைக் கையின்கண் உடையவர், விடக்கறை கொண்ட கண்டத்தையுடையவர்.

மேல்

(1454)
விடையும் ஏறுவர்; வெண்பொடிப் பூசுவர்;

சடையில் கங்கை தரித்தவர்;

படை கொள் வெண்மழுவாளர் பராய்த்துறை

அடைய நின்ற அடிகளே.

திருப்பராய்த்துறையிற் பொருந்தி விளங்கும் இறைவர், விடையேற்றினை ஊர்ந்து வருபவர். வெண்மையான திருநீற்றைப் பூசுபவர். சடையின்மேல் கங்கையைத் தரித்தவர். வெண்மையான மழுவைப் படைக்கருவியாகக் கொண்டவர்.

மேல்

(1455)
தருக்கின் மிக்க தசக்கிரிவன் தனை

நெருக்கினார், விரல் ஒன்றினால்;

பருக்கினார் அவர் போலும் பராய்த்துறை

அருக்கன் தன்னை, அடிகளே.

திருப்பராய்த்துறையில் எழுந்தருளிய இறைவர், வலிமைமிக்க பத்துத் தலைகளை உடைய இராவணனைத் தம் கால்விரல் ஒன்றினால் நெரித்தவர். தக்கன் வேள்வியில் கதிரவனின் பற்களைத் தகர்த்தவர்.

மேல்

(1456)
நாற்ற மாமலரானொடு மாலும் ஆய்த்

தோற்றமும் அறியாதவர்;

பாற்றினார், வினை ஆன; பராய்த்துறை

ஆற்றல் மிக்க அடிகளே.

திருப்பராய்த்துறையில் ஆற்றல் மிக்கவராய் விளங்கும் அடிகள், மணம் பொருந்திய தாமரை மலரில் விளங்கும் பிரமன், திருமால் ஆகியோரால் அடிமுடி அறியப் பெறாத தோற்றத்தினை உடையவர். தம்மை வழிபடுபவர்களின் வினைகளைப் போக்குபவர்.

மேல்

(1457)
திரு இலிச் சிலதேர், அமண் ஆதர்கள்,

உரு இலா கொள்ளேலும்!.

பரு விலால் எயில் எய்து, பராய்த்துறை

மருவினான் தனை வாழ்த்துமே!.

புண்ணியமில்லாத சிலராகிய புத்தர்களும், சமணர்களாகிய, கீழ்மக்களும், கூறும் பொருளற்ற அறவுரைகளைக் கேளாதீர். பெரிய மேருமலையாகிய வில்லால் முப்புரங்களை எய்தழித்து உலகைக் காத்துத் திருப்பராய்த்துறையில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வாழ்த்துவீர்களாக.

மேல்

(1458)
செல்வம் மல்கிய செல்வர் பராய்த்துறைச்

செல்வர்மேல், சிதையாதன

செல்வன் ஞானசம்பந்தன செந்தமிழ்,

செல்வம் ஆம், இவை செப்பவே.

பொருட் செல்வங்களால் நிறைந்து விளங்கும் சிவஞானச் செல்வர்கள் வாழும் திருப்பராய்த்துறையில் எழுந்தருளிய, வீடுபேறாகிய செல்வத்தையுடைய, இறைவன்மீது, அருட்செல்வனாக விளங்கும் ஞானசம்பந்தன் அருளிய,

அழிவற்ற இச்செந்தமிழ்ப் பாடல்களை ஓதினால், ஓதின அவர்கட்கு எல்லாச் செல்வங்களும் உண்டாகும்.

 

செம்பொன்னம்பலம்! திருவம்பலம்! திருச்சிற்றம்பலம்!
மேல்

(136)
திருத்தருமபுரம் - யாழ்மூரி

(1459)
மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னது ஓர் நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர்,

த இனப்படை நின்று இசை பாடவும் ஆடுவர், அவர் படர் சடை நெடுமுடியது ஒர் புனலர்,

வேதமொடு ஏழிசை பாடுவர் ஆழ்கடல் வெண்திரை இரை நுரை கரை பொருது, விம்மி நின்று, அயலே

தாது அவிழ் புன்னை தயங்கு மலர்ச் சிறைவண்டு அறை எழில் பொழில் குயில் பயில் தருமபுரம்பதியே.

விரும்பத்தக்க இளம்பிடியையும், இள அன்னத்தையும் போன்ற நடையினை உடையவளாகிய பார்வதி தேவியைத் தம் துணைவியாகக் கொண்டு மகிழ்பவரும், பூதப்படைகள் நின்று இசை பாட ஆடுபவரும், விரிந்த சடைகளையுடைய நீண்ட முடிமீது கங்கையை அணிந்தவரும் வேதங்களையும், ஏழிசைகளையும் பாடுபவரும் ஆகிய இறைவர்தம் இடமாக விளங்குவது ஆழ்ந்த கடலின் வெண்மையான அலைகள் ஆரவாரித்து நுரைகளோடு கரையைப் பொருது விளங்கவும், அதன் அயலில் புன்னை மரங்களில் பூத்த மகரந்தம் பொருந்திய மலர்களில் வண்டுகள் ஒலிக்கவும். அழகிய பொழில்களில் குயில்கள் பாடவும் விளங்கும் திருத்தருமபுரம் என்னும் நகராகும்.

மேல்

(1460)
பொங்கும் நடைப் புகல் இல் விடை ஆம் அவர் ஊர்தி, வெண்பொடி அணி தடம் கொள் மார்பு ணநூல் புரள,

மங்குல் இடைத் தவழும் மதி சூடுவர், ஆடுவர், வளம் கிளர்புனல் அரவம் வைகிய சடையர்

சங்கு கடல்-திரையால் உதையுண்டு, சரிந்து இரிந்து, ஒசிந்து அசைந்து, இசைந்து சேரும் வெண்மணல் குவைமேல்

தங்கு கதிர் மணி நித்திலம் மெல் இருள் ஒல்க நின்று, இலங்கு ஒளி நலங்கு எழில்-தருமபுரம் பதியே.

சினம் பொங்கிய நடையினை உடையதாய், உவமை சொல்லுதற்கு வேறொன்று இல்லாததாய் விளங்கும் விடையை ஊர்தியாகக் கொண்டவரும், திருநீறு அணிந்த அகன்ற மார்பின்கண் பூணூல் புரள வானத்தில் தவழும் பிறைமதியைச் சூடி ஆடுபவரும், வளமைகளைத் தருவதாகிய கங்கை, அரவம் ஆகியன தங்கிய சடையினருமாகிய சிவபிரானாரது இடம், கடல் அலைகளால் அலைக்கப் பெற்ற சங்குகள் சரிந்து இரிந்து, ஒசிந்து, அசைந்து, இசைந்து வெண்மணற் குவியலின் மேல் ஏறித் தங்கி ஈனும் ஒளி பொருந்திய முத்துமணிகளால் மெல்லிய இருள் விலகி ஒளி சிறந்து தோன்றும் அழகிய திருத்தருமபுரமாகிய நகரமாகும்.

மேல்

(1461)
விண் உறு மால்வரை போல் விடை ஏறுவர், ஆறு சூடுவர், விரி சுரி ஒளி கொள் தோடு நின்று இலங்கக்

கண் உற நின்று ஒளிரும் கதிர் வெண்மதிக்கண்ணியர், கழிந்தவர் இழிந்திடும் உடைதலை கலனாப்

பெண் உற நின்றவர், தம் உருவம் அயன் மால் தொழ அரிவையைப் பிணைந்து இணைந்து அணைந்ததும் பிரியார்

தண் இதழ் முல்லையொடு, எண் இதழ் மௌவல், மருங்கு அலர் கருங்கழி நெருங்கு நல்-தருமபுரம்பதியே.

வானளாவிய பெரிய மலை போன்ற விடையின் மேல் ஏறி வருபவரும், கங்கையை அணிந்தவரும், விரிந்து சுருண்டு ஒளிதரும் தோடு விளங்கக் கண்ணைக் கவரும் ஒளிதரும் பிறைமதியாகிய கண்ணியை முடியிற் சூடியவரும், முடை நாறும் தலையோட்டை உண்கலனாகக் கொண்டவரும், உமையம்மையைக் கூடிப் பிணைந்து இணைந்து அணைத்துத் தம் திருமேனியில் ஒரு பாதியாகக் கொண்டவரும், தமது உருவத்தை அயனும் மாலும் தொழ நின்றவருமாகிய சிவபிரானாரது இடம், குளிர்ந்த இதழ்களையுடைய முல்லை மலர்களோடு எட்டு இதழ்களையுடைய காட்டு மல்லிகை மலர்கள் மலர்ந்து மணம் வீசுவதும், கரிய உப்பங்கழிகள் நிறைந்ததுமாகிய திருத்தருமபுரம் என்னும் நன்னகராகும்.

மேல்

(1462)
வார் உறு மென்முலை நன்நுதல் ஏழையொடு ஆடுவர், வளம் கிளர் விளங்கு திங்கள் வைகிய சடையர்,

கார் உற நின்று அலரும் மலர்க்கொன்றை அம் கண்ணியர், கடு விடை கொடி, வெடிகொள் காடு உறை பதியர்,

பார் உற விண்ணுலகம் பரவபடுவோர், அவர் படுதலைப் பலி கொளல் பரிபவம் நினையார்

தார் உறு நல் அரவம் மலர் துன்னிய தாது உதிர் தழை பொழில் மழை நுழை தருமபுரம்பதியே.

கச்சணிந்த மென்மையான தனங்களையுடைய உமையம்மையோடு கூடி நடனம் ஆடுபவரும், உலகிற்கு வளம் சேர்க்கும் நிலவொளியைத் தரும் மதி சூடிய சடையினரும், கார்காலத்தே மலரும் கொன்றை மாலையைச் சூடியவரும், விரைந்து செல்லும் விடையைக் கொடியாகக் கொண்டவரும், அச்சந்தரும் சுடுகாட்டைத் தமக்குரிய இடமாகக் கொண்டவரும், மண்ணுலகத்தினர், விண்ணுலகத்தினர்களால் போற்றப்படுபவரும், அவமானம் எனக் கருதாது அழிந்துபட்ட தலையோட்டில் பலிகொள்பவரும், பாம்பை மாலையாக அணிந்தவரும் ஆகிய சிவபிரானார் எழுந்தருளிய பதி. மகரந்தங்களை உதிர்க்கும் மலர்கள் நிறைந்த, தழைகள் செறிந்த, மேகங்கள் தவழும் பொழில்கள் சூழ்ந்த திருத்தருமபுரம் என்னும் நகரமாகும்.

மேல்

(1463)
நேரும் அவர்க்கு உணரப் புகில் இல்லை; நெடுஞ்சடைக் கடும்புனல் படர்ந்து இடம் படுவது ஒர் நிலையர்;

பேரும் அவர்க்கு எனை ஆயிரம்! முன்னைப் பிறப்பு, இறப்பு,இலாதவர்; உடற்று அடர்த்த பெற்றி யார் அறிவார்?

ஆரம் அவர்க்கு அழல் வாயது ஒர் நாகம்; அழகு உற எழு கொழு மலர் கொள் பொன் இதழி நல் அலங்கல்;

தாரம் அவர்க்கு இமவான்மகள்; ஊர்வது போர் விடை கடு படு செடி பொழில்-தருமபுரம் பதியே.

ஆராயுமிடத்து அவருக்கு உவமையாகச் சொல்லத்தக்கவர் யாரும் இல்லை. கடிதாக வந்த கங்கைக்குத் தம் நீண்ட சடையை இடமாகக் கொடுத்த நிலையினர் அவர். அவருக்குப் பெயர்களோ பல ஆயிரம். முன்தொட்டு அவருக்குப் பிறப்பு இறப்பு இல்லை. தம்மை எதிர்த்தவர்களோடு சினந்து அவர்களைக் கொன்ற அவரது பெருவலியை யார் அறிவார்? தீயின் தன்மையுடைய நஞ்சினைக் கொண்ட நாகம் அவருக்கு ஆரம். செழுமையான பொன்போன்ற கொன்றை மலர், அவருக்கு மாலையாகும். இமவான் மகளாகிய பார்வதி அவருக்கு மனைவி. அவர் ஊர்ந்து செல்வது போர்ப் பயிற்சி உடைய இடபம். அவர் தங்கியுள்ள இடம் மணம் பொருந்திய ஒளிகளையுடைய பொழில்களால் சூழப்பட்ட தருமபுரம் என்னும் பதியாகும்.

மேல்

(1464)
கூழை அம் கோதை குலாயவள் தம் பிணை புல்க, மல்கு மென்முலை,பொறி கொள் பொன்-கொடி இடை, துவர்வாய்,

மாழை ஒண்கண் மடவாளை ஓர்பாகம் மகிழ்ந்தவர்; வலம் மலி படை, விடை கொடி, கொடு மழுவாள்

யாழையும் எள்கிட ஏழிசை வண்டு முரன்று, இனம் துவன்றி, மென்சிறகு அறை உற நற விரியும் நல்-

தாழையும் ஞாழலும் நீடிய கானலின் நள் அல் இசை புள் இனம் துயில் பயில் தருமபுரம்பதியே.

மலர்மாலை சூடிய கூந்தலையும், தன் கணவரால் தழுவப்பெறும் மெல்லிய தனங்களையும், தேமல்களோடு கூடிய மேனியினையும், கொடி போன்ற இடையையும், பவளம் போன்ற வாயையும், மாவடு போன்ற ஒளி விளங்கும் கண்களையும் உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்தவரும், வெற்றியைத் தரும் படைக்கலனாக மழுவாளைக் கொண்டவரும் விடையைக் கொடியாகக் கொண்டவரும் ஆகிய சிவபிரான் உறையும் பதி, யாழிசையையும் வெல்லுமாறு வண்டுகள் ஏழிசை முரன்று மெல்லிய சிறகுகளால் ஒலித்துச் சூழும் தேன்நிறைந்த நல்ல தாழை மரங்களும், புலிநகக் கொன்றையும் நிறைந்த கடற்கரைச் சோலைகளிலுள்ள சேற்று நிலங்களில் இசைபாடும் பறவையினங்கள் துயில்கொள்ளும் தலமாகிய தருமபுரமாகும்.

மேல்

(1465)
தே மரு வார்குழல் அன்னநடைப் பெடைமான் விழித் திருந்திழை பொருந்து மேனி செங்கதிர் விரிய,

தூ மரு செஞ்சடையில்-துதை வெண்மதி, துன்று கொன்றை, தொல்புனல், சிரம், கரந்து, உரித்த தோல் உடையர்

கா மரு தண்கழி நீடிய கானல கண்டகம் கடல் அடை கழி இழிய, முண்டகத்து அயலே,

தாமரை சேர் குவளைப் படுகில் கழுநீர் மலர் வெறி கமழ் செறி வயல்- தருமபுரம்பதியே.

இனிமையும், மணமும் பொருந்திய நீண்ட கூந்தல், அன்னம் போன்ற நடை, பெண்மான் போன்ற விழி இவற்றை உடையவளும் திருத்தம் பெற்ற அணிகலன்கள் பூண்டவளும் ஆகிய உமையம்மை ஒருபாலாகப் பொருந்திய மேனியனும், செவ்வொளி விரியும் தூய செஞ்சடையில் வெண்மையான பிறைமதி, நிறைந்த கொன்றை மலர், பழமையான கங்கை நீர், தலைமாலை ஆகியவற்றை மறைத்துச் சூடி, உரித்து உடுத்த தோல்களை உடையாகக் கொண்டவனும் ஆகிய இறைவனது பதி அழகிய குளிர்ந்த உப்பங்கழிகளை அடுத்துள்ள கடற்கரைச் சோலைகளில் தாழை மரங்களும், கடலினிடத்திருந்து பெருகிவரும் உப்பங்கழிகளிடத்து நீர்முள்ளிகளும், நீர் நிலைகளில் தாமரை, குவளை, செங்கழுநீர் ஆகியவற்றின் மலர்களும் மணம் வீசுவதும், வயல்கள் செறிந்ததுமாகிய தருமபுரமாகும்.

மேல்

(1466)
தூ வணநீறு அகலம் பொலிய, விரை புல்க மல்கு மென்மலர் வரை புரை திரள்புயம் அணிவர்;

கோவணமும் உழையின் அதளும் உடை ஆடையர்; கொலை மலி படை ஒர் சூலம் ஏந்திய குழகர்;

பா வணமா அலறத் தலைபத்து உடை அவ் அரக்கன வலி ஒர் கவ்வை செய்து அருள்புரி தலைவர்;

தாவண ஏறு உடை எம் அடிகட்கு இடம்வன் தடங் கடல் இடும் தடங்கரைத் தருமபுரம்பதியே.

தூய வெண்ணிறம் பொருந்திய திருநீறு மார்பின் கண் விளங்க, மலை போலத் திரண்ட தோள்களில் மணம் நிறைந்து செறிந்த மென்மையான மலர்மாலையை அணிவர். கோவணத்தையும் மான் தோலையும் ஆடைகளாக உடையவர். கொல்லும் தொழிலில் வல்ல ஆயுதமாக ஓர் சூலத்தை ஏந்திய இளையர். பத்துத் தலைகளை உடைய அரக்கனாகிய இராவணன், பாடல்கள் பாடி அலறுமாறு அவனது வலிமையைச் செற்றுப் பின் அருள் புரிந்த தலைவர். தாவிச் செல்லும் இயல்புடைய ஆனேற்றைத் தம் ஊர்தியாகக் கொண்டவர். அவ்அடிகட்கு இடம், வலிய பெரிய கடலின் அலைகள் சேர்ந்த பெரிய மணற்கரையில் விளங்கும் தருமபுரம் என்னும் பதியாகும்.

மேல்

(1467)
வார் மலி மென்முலை மாது ஒருபாகம் அது ஆகுவர்; வளம் கிளர் மதி, அரவம், வைகிய சடையர்;

கூர் மலி சூலமும், வெண்மழுவும், அவர் வெல் படை; குனிசிலை தனி மலை அது ஏந்திய குழகர்;

ஆர் மலி ஆழி கொள் செல்வனும், அல்லி கொள் தாமரை மிசை அவன், அடி முடி அளவு தாம் அறியார்;

தார் மலி கொன்றை அலங்கல் உகந்தவர்; தங்கு இடம் தடங்கல் இடும் திரைத் தருமபுரம் பதியே.

கச்சணிந்த மென்மையான தனங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவர். பிறைமதி, பாம்பு ஆகியவை தங்கும் சடையினர். கூரிய சூலமும், வெண்ணிறமான மழுவும் அவர் வெற்றி கொள்ளுதற்குரிய படைக்கலங்களாகும். ஒப்பற்ற மேரு மலையை வளைத்து வில்லாக ஏந்திய இளைஞர். ஆரக்கால் பொருந்திய சக்கராயுதத்தைக் கொண்ட திருமாலும், அகஇதழ்களை உடைய தாமரை மலரில் உறையும் பிரமனும் தம்முடைய அடிமுடிகளின் அளவுகளைத் தாம் அறியாவாறு அயரும்படி செய்தவர் அவர். கொத்தாகப் பூக்கும் கொன்றை மலரால் தொடுத்த மாலையை விரும்புபவர். அப்பெருமானார் தங்கியுள்ள இடம், பெரிய கடலின் அலைகள் வந்து தழுவிச் செல்லும் தருமபுரம் என்னும் பதியாகும்.

மேல்

(1468)
புத்தர், கடத் துவர் மொய்த்து உறி புல்கிய கையர், பொய் மொழிந்த அழிவு இல் பெற்றி உற்ற நல்-தவர், புலவோர்,

பத்தர்கள், அத் தவம் மெய்ப் பயன் ஆக உகந்தவர்; நிகழ்ந்தவர்; சிவந்தவர்; சுடலைப் பொடி அணிவர்; முத்து அன வெண்நகை ஒண் மலைமாது உமை பொன் அணி

புணர் முலை இணை துணை அணைவதும் பிரியார்

தத்து அருவித்திரள் உந்திய மால்கடல் ஓதம் வந்து அடர்த்திடும் தடம் பொழில்-தருமபுரம்பதியே.

புத்தர்களாகிய தத்துவாதிகளும், உறிகளை ஏந்திய கையினராய்த் திரியும் சமணர்களும் கூறும் பொய் மொழிகளினின்று நீங்கிய நல்ல தவத்தை உடையவர்களும், புலவர்கள் பக்தர்கள் ஆகியோரின் தவத்தை மெய்ப் பயனாக உகந்தவரும், அன்புக்கு நெகிழ்பவரும், வன்புக்குச் சினப்பவரும் சுடலைப் பொடி அணிபவரும், முத்துப் போன்ற வெண்மையான பற்களை உடைய ஒளி பொருந்திய மலை மாதாகிய பார்வதி தேவியாரின் ஒன்றோடு ஒன்று செறிந்த தனங்கள் இரண்டையும் துணையாகக் கொண்டு அவற்றைப் பிரியாதவரும் ஆகிய சிவபிரானாரது பதி, தவழும் அலைகளை உடைய பெரிய கடலின் ஓதநீர் வந்து பொருந்தும் தருமபுரம் ஆகும்.

மேல்

(1469)

“பொன் நெடு நல் மணி மாளிகை சூழ் விழவம் மல பொரூஉ புனல் திரூஉ அமர் புகலி” என்று உலகில்

தன்னொடு நேர் பிற இல் பதி ஞானசம்பந்தனது செந்தமிழ்த் தடங்கல்-தருமபுரம்பதியைப்

பின் நெடுவார் சடையில் பிறையும் அரவும் உடையவன் பிணைதுணை கழல்கள் பேணுதல் உரியார்,

இன் நெடுநன் உலகு எய்துவர்; எய்திய போகமும் உறுவர்கள்; இடர், பிணி, துயர், அணைவு இலரே.

பொன்னால் இயன்ற நெடிய நல்ல மணிகள் இழைத்த மாளிகைகள் சூழ்ந்ததும், திருவிழாக்கள் மலிந்ததும், கரைகளை மோதும் நிறைந்த நீர்வளம் உடையதும், திருமகள் உறைவதுமான புகலி என்னும், தனக்கு உவமை சொல்ல இயலாத பதியின் மன்னனாகிய ஞானசம்பந்தனுடைய பரந்து விரிந்து கடல் போன்ற செந்தமிழாகிய பாமாலைகளால், ஒன்றோடு ஒன்று பின்னி நீண்டுள்ள சடைமுடியில் பிறையையும் பாம்பையும் அணிந்துள்ளவனாகிய,

சிவபிரானுடைய பிணைந்துள்ள இரண்டு திருவடிகளையும் போற்றி அன்பு செய்பவர், இனிய பெரிய நல்லுலகை எய்துவர், அடையத் தக்கனவாய போகங்களையும் பெறுவர். இடர் செய்யும் பிணி துயர் முதலியன நீங்கி என்றும் இன்பம் உறுவர்.

 

முதல் திருமுறை முற்றிற்று!

மேல்
திருஞான சம்பந்தர் வரலாறு

பிறையணிந்த பெருமானை வழிவழியாகப் போற்றி வரும் சோழர்களின் கொடி நிழலிலே வளம் கொழிக்கும் திருநகரங்கள் பலவற்றுள் சீர்காழியும் ஒன்றாகும்.இத்தலத்திற்கு பிரமபுரம், வேணுபுரம், சீர்காழி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராம், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சைவயம், கழுமலம் என்னும் பன்னிரெண்டு பெயர்கள் உண்டு. நிலவளமும், நீர்வளமும், தெய்வவளமும் ஒருங்கே அமையப்பெற்ற இப்பழம்பெரும் பதியிலே சிவனின் சிந்தை மறவாது செந்தண்மை பூண்டொழுகும் அந்தணர் மரபிலே - கவுணியர் கோத்திரத்திலே - சிவபாதவிருதயர் என்னும் பெயருடைய தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவருடைய வாழ்க்கைத் துணைவியார் பெயர் பகவதியார். இவ்விரு சிவனருள் தம்பதியரும் இல்லற இலக்கணமறிந்து திருவெண்ணீற்றன்பர்களிடத்தும் இறைவனிடத்தும் எல்லையில்லாப் பக்தி பூண்டு யாவரும் வியக்கும் வண்ணம் இல்லறத்தை இனிமையாக நடத்தி வந்தனர். இவ்வாறு, இவர்கள் வாழ்ந்து வரும் நாளில் சைவ சமயமும் சற்று வலிமை குறைந்து இருக்க, பவுத்தமும், சமணமும் வன்மை பெற்று விளங்கிற்று. வேறு சில சமயங்களால் வேதநெறி குன்றியது. இரவையே பகல் போல் பிரகாசமாகத் தோன்றச் செய்யும் திருவெண்ணீற்றின் மகிமையும் பெருமையும் போற்றுதலின்றி நலிந்து காணப்பட்டன. சிவசமயத்திற்கு ஏற்பட்ட இத்தகைய தாங்கொணாத் துயர்கண்டு சிவபாதவிருதயரும் அவரது மனைவியாரும் மிகவும் மனம் வாடினர். அவர்கள் இருவரும் புறச் சமயங்களால் வரும் தீமைகளைப் போக்கித் திருவெண்ணீற்றின் ஆக்கத்தை அகிலமெல்லாம் ஓங்கச் செய்யத்தக்க சிவப்பற்றும் தெய்வ அருளும் மிக்க மகனைப் பெற்றுப் பெருமிதமடைய எண்ணினர். இச்சிவ அன்பர்கள் எப்போதும் முழுமுதற் பரம் பொருளின் நினைவாகவே இருந்தனர். அதற்கென அருந்தவம் செய்தனர். திருத்தோணியப்பருக்குத் தொண்டுகள் பல புரிந்தனர். அதன் பயனாக தோணியப்பர் இச்சிவத் தொண்டர்களின் மனக்குறையைப் போக்க மக்கட்பேற்றை அளித்து அருளத் திருவுள்ளம் கொண்டார். பிறைமுடிப் பெருமானின் திருவருளால் பகவதியார் கருவுற்றாள். வைகாசிமுதல் நாளன்று - சைவம் தழைக்க திருஞான சம்பந்தப்பெருமான் பகவதியாருக்கும் சிவபாத விருதயருக்கும் திருமகனாய் அவதாரம் செய்தார்.

மேல்

செல்வன் பிறந்த பேருவகையில் பெற்றோர்கள் பொன்னும் பொருளும் வந்தோர்க்கெல்லாம் வாரி வாரி வழங்கினர். அன்பர்களுக்கு அமுது அளித்தனர். ஆலயத்திற்கு முக்காலமும் கோலாகலமாகப் பெருவிழா போல் சிவ வழிபாடுகள் பல செய்தனர்.மண்மாதாவின் மடியில் பிறந்த அருந்தவப் புதல்வன் பெற்றோர்களின் மடியிலும் துங்கமணி மாடத்திலும் தூயமணி பீடத்திலும், அணிமிகும் தொட்டிலிலும் விளையாடினான்.செங்கீரை, சப்பாணி, அம்மானை முதலிய பருவங்களைக் களிப்போடு கடந்து, சின்னஞ்சிறு தேர் உருட்டி வீதியிலே தளர் நடை பயிலும் பருவத்தை அடைந்தான். இப்படியாகப் பிரபஞ்சத்தில் கமலமலர்ப் பாதங்களைப் பதிய வைத்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்பிறைபோல் வளர்ந்து வந்த தவப்புதல்வருக்கு மூன்றாவது ஆண்டு தொடங்கிற்று. வழக்கம்போல் சிவபாதவிருதயர் கோயிலை அடுத்துள்ள பொற்றாமரைக் குளத்தில் நீராடப் புறப்பட்டார். அப்போது தவப்புதல்வன் அழுது கொண்டே தந்தையைப் பின்னே தொடர்ந்து வாயில் வரை வந்தான். பிஞ்சுக் கால்களிலே இனியதான கிண்கிணி ஓசை ஒலிக்க, மெல்ல அடி இட்டு வந்த செல்வன் தாமும் உடன் வருவதாகக் குழலைப் பழிக்கக் கூறி நின்றான். மழலை மொழிதனில் உலகை மறந்த சிவபாத விருதயர் தம்மோடு நீராடி மகிழ குழந்தையையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டார். குளத்தை வந்தடைந்த சிவபாதவிருதயர் குழந்தையைக் கரையிலே உட்கார வைத்துவிட்டு நீராடக் குளத்தில் இறங்கினார்; ஜபதபங்கள் புரிந்து தண்ணீரில் மூழ்கினார். குழந்தை தந்தையாரைக் காணாது மனம் கலங்கியது; கண்களிலே கண்ணீர் கசிய சுற்றும் முற்றும் பார்த்தது! குழந்தை கோபுரத்தை நோக்கி, அம்மே! அப்பா எனத் தன் பவழ வாயால் அழைத்தது. பொருமிப் பொருமி அழுதது. தோணியப்பர், உமாதேவியாரோடு வானவீதியில் பேரொளி பரவ எழுந்தருளினார்.

மேல்

எம்பெருமான் உமாதேவியாரிடம், தேவி ! நமது தொண்டனுக்குச் சிவஞானத்தை குழைத்த பாலைப் பொற்கிண்ணத்தில் ஏந்தி ஊட்டுவாயாக என்று அருளினார். அன்னை பராசக்தி குழந்தையின் அருகே வந்தாள். வாரி அணைத்து முத்தமிட்டு மகிழ்ந்தாள். மடி மீது அமர்த்திக் கொண்டாள். தமது திருமுலைப் பாலினைப் பொற்கிண்ணத்தில் ஏந்தினாள். அவரது கண் மலரிலே வழியும் நீரைத் துடைத்தாள். சிவஞான அமுதத்தைக் கலந்த பொற்கிண்ணத்தை அவரது கைகளிலே அளித்து பாலமுதத்தினை உண்பாயாக என மொழிந்தாள்.குழந்தையின் கையைப் பிடித்தவாறு பார்வதி தேவியார் பாலைப் பருகச் செய்தார்கள். குழந்தை அழுவதை நிறுத்தி ஆனந்தக் கண்ணீர் பூண்டது. திருத்தோணியப்பராலும் உமாதேவியாராலும் ஆட்கொள்ளப்பெற்ற குழந்தை ஆளுடைப் பிள்ளையார் என்னும் திருநாமம் பெற்றது.அமரர்க்கும் அருந்தவசியர்க்கும் அறிவதற்கு அரிய பொருளாகிய ஒப்பற்றச் சிவஞானச் செல்வத்தைச் சம்பந்தம் செய்ததனாலே சிவஞான சம்பந்தர் என்னும் திருநாமமும் பெற்றார். அப்பொழுதே சம்பந்தர் உவமையில்லாத கலைஞானத்தைப் பெற்று விளங்கும் பெருமகனானார். குளத்தில் மூழ்கி நியமங்களை முடித்துக் கரையேறினார் சிவபாதவிருதயர். ஒப்பற்ற ஞானத்தோடு பேருணர்வு பெற்று விளங்குகின்றார் பிள்ளை என்ற உண்மையை அவர் அறிந்திலார். குழந்தையருகில் வந்தார்.பிஞ்சுக் கரங்களிலே பொற்கிண்ணமிருப்பதைக் கண்டார். செக்கச் சிவந்த செங்கனி இதழ்களிலே பால் வழிவதனையும் கண்டார். அந்தணர் ஐயமுற்றார்.பால் மணம் மாறாப் பாலகனுக்கு எவரோ எச்சிற் பால் ஊட்டிச் சென்றனரே என ஐயமுற்றார். கள்ளமில்லாப் பாலகனை கடுங்கோபத்தோடு பார்த்தார். கீழே கிடந்த குச்சியை எடுத்தார் பாலகன் அருகே சென்று, உனக்கு எச்சிற் பாலைக் கொடுத்தது யாரென்று எனக்கு காட்டு என்று மிக்கச் சினத்துடன் கேட்டார். தந்தையின் சுடுமொழியினால் மெய்ஞான சம்பந்தர் விழிகளிலே ஆனந்தக் கண்ணீர் தான் ததும்பியது. சம்பந்தர் ஒரு காலைத் தூக்கி ஒரு திருக்கை விரலை உச்சி மேல் உயர்த்தி விண்ணிலே விடையின் மேல் பேரொளியோடு எழுந்தருளிய பெருமானைச் சுட்டிக்காட்டினார். ஞானசம்பந்தர் தமது ஒப்பற்ற ஞானத் திருமொழியினால் எல்லையில்லா வேதங்கட்கு மூலமாகிய ஓங்காரத்தோடு சேர்ந்த எழுத்தால் இன்பம் பெருகப் பாடத் தொடங்கினார். தாம் பாடும் தமிழ்மறை பரமசிவத்தின்பாற் சென்று ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு ஏற்ப சிவபிரானது திருச்செவிறைச் சிறப்பித்துச் செவ்விசையோடு, தோடுடைய செவியன் எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடலானார். தெய்வத்திருவருள் பெற்ற திருஞானசம்பந்தரை மிரட்டுவதற்காகக் கோலெடுத்து வந்த அந்தணர் திகைத்தார். செயலற்று நின்றார். அவர் கையிலே இருந்த கோல் அவரையறியாமலேயே கை நழுவிக் கீழே விழுந்தது.

மேல்

அந்தணர் ஆனந்தக் கூத்தாடினார். அருந்தமிழ்ப் பதிகத்தால் உண்மையை உணர்த்திய புதல்வரின் முகத்தில் இறைவனின் தோற்றப் பொலிவுதனைக் கண்டு மெய்யுருகினார். சம்பந்தப் பெருமான் தோணியப்பர் எழுந்தருளியிருக்கும் கோவிலுக்குச் செல்ல மெல்ல தம் சீரடி எடுத்து வைத்தார். தந்தையாரும் பிள்ளையாரைப் பின் தொடர்ந்தார். தோணியப்பர் கோவிலையடைந்த ஞானசம்பந்தர் இறைவனை வணங்கி வழிபட்டார். பதிகம் ஒன்றைப் பாடினார். இந்த அற்புத நிகழ்ச்சி பகலவனின் காலை இளங்கீற்றுப்போல் ஊரெங்கும் பரவியது. ஞானசம் பந்தரின் அருஞ்செயலை நேரில் கண்டு களிப்புற அனைவரும் கோவிலின் வாயிலில் ஒருங்கே கூடினர். ஞானசம்பந்தர் அங்கிருந்த அனைவருக்கும் எம்பெருமான் உமாதேவியாருடன் விடையின் மேல் வந்து தம்மை ஆட்கொண்டு அருளிய திறத்தினை மொழிந்தார். அனைவரும் ஞானசம்பந்தரை, காழியர் செய்த தவமே! கவுணியர்தனமே ! கலைஞானக் கடலே, அக்கடலிடை தோன்றிய அமுதே! மறைவளர் திருவே! வைதிக நிலையே! வளர்ஞானப் பொறையணி முகிலே! புகலியர் புகலே! காவிரி பெற்ற மணியே ! மறையின் ஒளியே! புண்ணிய முதலே! கலை வளரும் திங்களே! கண் கவரும் கதிரொளியே! இசையின் முதலே! மூன்றாண்டிலே சைவந் தழைக்க எம்பெருமான் அருள் பெற்ற செல்வனே ! நீ வாழ்க! என வாழ்த்தி மகிழ்ந்தனர். சம்பந்தர் கோவிலை விட்டுத் வீட்டிற்குப் புறப்பட்டார். அன்பர்களும் அடியார்களும் தொடர்ந்து புறப்பட்டனர். சிவபாதவிருதயர் தம் தெய்வத் திருமகனைத் தோளிற் சுமந்துகொண்டு மகிழ்ச்சியுடன் வீதி வழியே பவனி புறப்பட்டார். கோவிலை மும்முறை வலம் வந்தார். தோணிபுரத்துப் பெருமக்கள் புடை சூழ்ந்து கொண்டு ஞானசம்பந்தரை வாழ்த்தி வணங்கியதோடு தங்களுடைய மேலாடைகளை வானில் எறிந்து அளவு கடந்த ஆரவாரம் செய்தனர். மங்கல மங்கையர்கள் மேல் மாடங்களிலே வந்து நின்று மங்கள மொழிகள் கூறினர். தேன் சிந்தும் நறுமலர்களையும், நறுமணப் பொடியையும் நெற்பொரியோடு கலந்து தூவி வாழ்த்தினர். வீதிதோறும் மணிவிளக்குகள் ஒளியூட்டின. எங்கும் மாவிலைத் தோரணங்கள் அழகு செய்தன. வீடெல்லாம் அழகாக அலங்கரித்தனர். வெண் சிறு கடுகு, முகில் முதலியவற்றால் தூபமெடுத்தார்கள். இப்படியாகத் திருவீதியெங்கும் மறை ஒலியும், மங்கல வாத்தியமும் ஒலிக்க ஆளுடைப்பிள்ளையார் இல்லத்தை அடைந்தார்.

மேல்

பகவதியார் தமது தவச் செல்வனை ஆரத்தி எடுத்து வாரி அணைத்து எடுத்துக் கொண்டார். முத்தமாரி பொழிந்தார். உலகையே மறந்து உவகை பூண்டார். வியக்கத்தக்கத் திருவருளைப் பரமனருளால் பெற்ற ஞானசம்பந்தர் தந்தையாருடன் சிவத்தலங்கள் தோறும் சென்று ஆலய தரிசனம் செய்ய எண்ணினார். ஒரு நாள் தந்தையாருடன் ஆலய தரிசனம் காணப் புறப்பட்டார். அடுத்துள்ள திருக்கோலக்காவை அடைந்தார். அங்கு எழுந்தருளி இருக்கும் எம்பெருமானை வழிபட்டார். கையினால் தாளம் போட்டுக் கொண்டே, மடையில் வாளையாய எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடிக் கொண்டிருந்தார். பிஞ்சுக்கரம் சிவக்கத் தாளம் போடுவதைப் பார்த்த செஞ்சடைவண்ணர் ஐந்தெழுத்து மந்திரம் எழுதிய பொன்னாலான இரண்டு தாளங்களை ஞானசம்பந்தரின் திருக்கை மலரிலே வந்து தங்குமாறு திருவருள் பாலித்தார். ஞானசம்பந்தர் இறைவனின் கருணையை எண்ணி உள்ளமும் உடலும் பூரித்தார். இறைவன் அருளால் தம் அங்கை மலரிலே வந்து தங்கிய பொற்தாளங்களைச் சிரம் மீது எடுத்து வணங்கினார்.அவற்றாலே தாளம் போட்ட வண்ணம் ஏழிசைகளும் தழைத்தோங்குமாறு பக்திப் பெருக்கோடு தமிழிசை பொழிந்து திருக்கடைக் காப்பு சாத்தி நின்றார்.தேவத் துந்துபிகள் முழங்க விண்ணவர் பூ மழையைப் பொழிந்தனர். தந்தையார் ஞானசம்பந்தரைத் தம் தோள் மீது சுமந்து கொண்டு சீர்காழிக்கு வந்து நின்றார்.ஞானசம்பந்தருக்குப் பொன்னாலான தாளம் அளித்தமையால் திருத்தாளமுடையார் கோவில் என்று அத்தலத்திற்குச் சிறப்புப் பெயர் ஏற்பட்டது. சீர்காழியில் உள்ள தொண்டர்களும் சுற்றுப்புற ஊர்களிலுள்ள சிவத் தொண்டர்களும் அந்தண சிரேஷ்டர்களும் கூட்டங் கூட்டமாக வந்து ஞான சம்பந்தரை வழிபட்டனர். சம்பந்தர் அனைவரோடும் கோயிலுக்குச் சென்றார். தோணியப்பரை எட்டுப் பதிகங்கள் அடங்கிய கட்டளை ஒன்றில் அமைந்த பூவார் கொன்றை என்ற தேவாரப் பதிகம் பாடி வணங்கினார். சிவனருட் செல்வரின் சுந்தர தரிசனத்தால் சீர்காழி அன்பர்கள் பாலாழியில் மூழ்கிய பேரின்பத்தைப் பெற்றார்கள். இவ்வாறு, எம்பெருமானுக்கு சம்பந்தனார் திருத்தொண்டு புரிந்து வரும் நாளில் திருநனிப்பள்ளி அன்பர்கள் தங்கள் ஊருக்கு எழுந்தருள வேண்டும் என்று சம்பந்தரைக் கேட்டுக் கொண்டார். ஒருநாள் சம்பந்தர், தாயின் ஊராகிய திருநனிப் பள்ளிக்குப் புறப்பட்டார். தந்தையார் தனயனைத் தோளிலே சுமந்து நடந்தார். திருநனிப்பள்ளிப் பெருமானைத் தமிழ்மறை பல பாடி வணங்கியவாறு புறப்பட்டார். திருவலம்புரம், பல்லனீச்சரம், திருச்சாயக்காடு, திருவெண்காடு, திருமுல்லைவாயில் முதலிய சிவத்தலங்களை தரிசித்த வண்ணம் மீண்டும் சீர்காழியை வந்தடைந்தார் திருஞானசம்பந்தர்! ஞானசம்பந்தர் சீர்காழியில் இருந்தவாறே சுற்றுப்புறத்துள்ள பல சிவத் தலங்களைத் தரிசித்துப் பதிகங்கள் பாடி வந்தார். சம்பந்தருடைய தெய்வத் திருப்பணியைப் பற்றிக் கேள்வியுற்ற திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவரது மனைவியாராகிய மதங்கசூளாமணியாரும் ஞான சம்பந்தரை தரிசிக்கச் சீர்காழிக்கு வந்தனர். ஞானசம்பந்தர் அவர்கள் தம்மை வீழ்ந்து வணங்கும் முன்பே அன்போடு வீழ்ந்து வணங்கி எழுந்தார். ஞான சம்பந்தர் தேவார அமுதும் பொழிந்தார். அத்தேவார அமுதத்தைப் பாணர் தம்பதியர் யாழிசைத்து மகிழ்ந்தனர். ஞானசம்பந்தர் பாட, பாணர் யாழிசைக்க, பாலும் தேனும் கலந்தாற்போல் எங்கும் தமிழ் மழை பொழிந்தது. திருநீலகண்ட யாழ்ப்பாணரும், மதங்கசூளாமணியாரும் ஞானசம்பந்தருடனேயே இருந்து அவருடைய பாசுரங்களை யாழிலே இசைக்கும் அரும் பெரும் தொண்டை மனங்குளிர - பரமன் செவி குளிர - கேட்போர் உள்ளம் உருகத் தொடர்ந்து நடத்தி வரலாயினர். இவ்வாறு வாழ்ந்து வரும் நாளில் ஞானசம்பந்தருக்குத் தில்லையில் எழுந்தருளியிருக்கும் நடராசப் பெருமானை வழிபட வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது.

மேல்

யாழ்ப்பாணரோடு தந்தையாரையும் அழைத்துக் கொண்டு தில்லைக்குப் புறப்பட்டார் சம்பந்தர். தந்தையார், சம்பந்தரைத் தோளில் சுமந்து கொண்டு மகிழ்வோடு புறப்பட்டார். சீர்காழி மெய்யன்பர்கள் சம்பந்தரை வழிஅனுப்பி வைத்தனர். தில்லைவாழ் அந்தணர்கள் ஞானசம்பந்தர் பெருமானைப் பூரண பொற்கும்ப கலசங்கள் வைத்து வரவேற்று வீதி வழியே அழைத்துச் சென்றனர். தில்லைத் திருவீதியையும், எழுநிலைக் கோபுரத்தையும் வணங்கியவாறே ஆலயத்தை வலம் வந்த ஞானசம்பந்தர் கண்களிலே ஆனந்தக் கண்ணீர் பெருகியது. பதிகம் பாடிக்கொண்டே தெற்கு ராஜகோபுரத்தின் வழியாக சென்று நடராஜப் பெருமானை வணங்கினார். அவரது பாடல்களை பாணரும் அவரது மனைவியாரும் யாழில் இசைத்தனர். பல நாட்கள் தில்லையில் தங்கி திருப்பணிகளைச் செய்தார் சம்பந்தப் பெருமான்! தில்லையில் தங்கி இருந்த ஞான சம்பந்தர் அருகிலுள்ள திருவேட்களம் சென்றார். அங்கு திருக்கோவிலிலே தங்கி இருக்கும் அரனாரைப் பாடிப் பாடி, உள்ளம் உருகினார். அங்கிருந்தபடியே அடிக்கடி தில்லைக்கு வந்து சிற்றம்பலத்தையும் தரிசனம் செய்து வரலானார். பாணர் வேண்டுகோளுக்கிணங்க அவரது சொந்த ஊராகிய திருஎருக்கத்தம்புலியூருக்கு சம்பந்தர் புறப்பட்டார். ஆங்காங்கே கோவில் கொண்டுள்ள இறைவனை வழிபட்டு திருப்பதிகங்களைப் பாடிக் கொண்டே சென்றார். ஞானசம்பந்தருக்கு திருநெல்வாயில் அரந்துறையைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆசை எழுந்தது. இத்திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு உச்சிநாதர் என்று பெயர். அது காரணம் பற்றியே அத்தலத்திற்கு திருவுச்சி என்றும் ஒரு பெயர் உண்டு. திருமகனின் ஆசையை நிறைவேற்ற தந்தையார் அவரைத் தமது தோளில் சுமந்துகொண்டு புறப்பட்டார். தந்தையார் தம்மைத் தூக்கிக்கொண்டு நடப்பது கண்டு சம்பந்தர் மனம் கலங்கினார். தந்தையாரைத் தோளிலே தூக்கிச் செல்ல வேண்டாம் என்று கூறிய ஞானசம்பந்தர், தமது பட்டுப்பாதம் நோவதையும் அறியாது நடக்கலானார். இவர்கள் போகும் வழியே மாறன்பாடி என்னும் தலம் ஒன்று எதிர்ப்பட்டது. இரவு நெருங்கவே அனைவரும் அங்கே தங்கினர். திருநெல்வாயில் அரத்துறை அமைந்த இறைவன், ஞான சம்பந்தர் சேவடி நோக நடந்துவருவதை எண்ணி, அவ்வூர் அடியார்களின் கனவில் தோன்றினார். ஞானசம்பந்தன் தளிர் அடிகள் நோக நம்மைத் தரிசிக்க வருகின்றான். அவனை ஏற்றி வருவதற்காக முத்துச் சிவிகையையும், முத்துக் குடையையும், முத்துச் சின்னங்களையும் வைத்திருக்கின்றோம். அவற்றை எடுத்துச் சென்று, இது எமது கட்டளை என்று கூறி அழைத்து வருவீர்களாக ! என சிவ பெருமான் திருவாய் மலர்ந்தருளினார். எம்பெருமான், ஞானசம்பந்தர் கனவிலும் தோன்றி, நாம் உனக்கு மகிழ்ந்து அருளும் முத்துச்சிவிகை, முத்துக்குடை முதலியவற்றைப் பெற்றுக் கொள்வாயாக எனத் திருவாய் மலர்ந்தருளினார். பொழுது புலர்ந்தது! ஞானசம்பந்தர் இறைவனின் திருவருட் கருணையை எண்ணிப் பதிகம் ஒன்றைப் பாடிப் பரமன் அருளைப் போற்றினார். அதற்குள் மறையோர்கள் முத்துச்சிவிகையோடு வந்தனர். ஞானசம்பந்தப் பெருமானைக் கண்டு இறைவன் திருவாய் மலர்ந்து அருளிய திருவாசகத்தைச் சொல்லினர். முத்துச் சிவிகையில் எழுந்தருளப் பிரார்த்தித்தனர். நெல்வாயில் மெய்யன்பர்கள் சம்பந்த பெருமானையும் அவரது தந்தையாரையும் உடன் வந்த அடியார்களையும் நெல்வாயில் அரத்துறைத் திருக்கோவிலுக்கு மேளதாள இன்னிசை முழக்கத்துடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டனர். ஞானசம்பந்தர் அரத்துறை அரனாரை வழிபட்டுப் பதிகம் பலவற்றைப் பாடினார். அவ்வூர் அடியார்கள் விருப்பத்திற்கு இணங்க சில காலம் நெல்வாயிலில் தங்கினார் சம்பந்தர். அங்கிருந்தவாறே அருகிலுள்ள பல சிவன் கோவில்களையும் வழிபட்டு வரலானார். பிறகு சீர்காழியை வந்தடைந்தார்.

மேல்

சீர்காழிப் பகுதியில் எழுந்தருளியிருந்த சம்பந்தர் அனுதினமும் தோணியப்பரைப் பாடிப் பரவசமுற்றார். ஞானசம்பந்தருக்கு உரிய பருவத்தில் அவரது பெற்றோர்கள், முப்புரி நூலணியும் சடங்கினைச் சீரோடும் சிறப்போடும் நடத்தினர். ஞானசம்பந்தர் சீர்காழியில் தங்கி இருக்கும் நாளில் ஞானசம்பந்தருடைய அன்பையும், அருளையும், ஞானத்தையும், மேன்மையையும் கேள்வியுற்ற திருநாவுக்கரசர் சீர்காழிக்கு வந்தார். அவரது வருகையை முன்னதாகவே தெரிந்துகொண்ட சம்பந்தர் அன்பர் புடைசூழ அப்பரடிகளை எல்லையிலேயே எதிர்கொண்டழைத்தார். ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அகமகிழ்ந்து களித்தனர். ஞானசம்பந்தர் கரங்குவித்து இன்பம் பெருக இன்மொழியால் அப்பரே என்றழைக்க நாவுக்கரசர் அவரை நோக்கி அடியேன் என்று உள்ளம் உருக வணங்கினார். இருவரும் கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டனர். ஞானசம்பந்தருடன் தங்கி இருந்து திருத்தலங்கள் பவலவற்றைத் தரிசித்து வந்த அப்பரடிகள் ஒருநாள் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டார். ஞானசம்பந்தர் திருத்தோணியப்பரைச் செந்தமிழ் மாலை விகற்பங்களான திருமொழிமாற்று, திருமாலை மாற்று, வழிமொழித் திருவிராகம், திருஏகபாதம், திருவிருக்குறள், திருவெழுக கூற்றிருக்கை, திருவிராகம் போன்ற பற்பல திருப்பதிகங்களை உள்ளம் உருக பாடிப் பரவசம் பூண்டார். இத்திருப்பதிகங்கள், மூல இலக்கியமாக வீடுபேற்றிற்கான உண்மை இயல்பினை உணர்த்தும் சன்மார்க்க பதிகங்களாக அமைந்துள்ளன. ஒருநாள் தந்தையாருடன், பிள்ளையார் சிவயாத்திரையைத் தொடர்ந்தார். அதுசமயம் பாணரும் அவரது மனைவியாரும் உடன் சென்றார்கள். சோழ நாட்டிலுள்ள பல சிவத் தலங்களை தரிசித்தவாறு திருப்பாச்சிலாச்சிரமத்தை அடைந்தனர். திருக்கோவிலை வலம் வந்து இறைவனைத் தொழுது நின்ற சம்பந்தர் இறைவன் திருமுன் கிடந்த கொல்லி மழவன் மகளைக் கண்டார். மழநாட்டுத் தலைவன் கொல்லி மழவன் வலிப்பு நோயால் துன்புறும் தன் மகளை இவ்வாலயத்தில் விட்டுச் சென்றுவிட்டான். இறைவன் அருளால் தன் மகளுக்கு நோய் நீங்கும் என்றெண்ணித்தான் மழவன் இவ்வாறு செய்தான். இந்த சமயத்தில், ஞானசம்பந்தர் ஆலயத்திற்கு வந்துள்ளார் என்பதைக் கேள்விப்பட்டான் மன்னன். ஆளுடைப் பிள்ளையாரால் எப்படியும் தன் மகளுக்கு உடல் பூரண குணமடையும் என்று மனம் குளிர்ந்த மழநாட்டுத் தலைவன் ஞானசம்பந்தரைக் காண ஓடோடி வந்தான். தலைவன் ஞானசம்பந்தரிடம் மகளின் உடல்நிலையைக் கூறி வருந்தி உள்ளம் உருகி நின்றான்.

மேல்

ஞானசம்பந்தர் துணிவளர் திங்கள் எனத் தொடங்கும் பதிகத்தை, மழவன் மகளின் வலிப்பு நோய் நீங்குமாறு உள்ளம் இரங்கிப் பாடினார். இறைவன் திருவருளால் ஞானசம்பந்தர் பதிகம் பாடி முடிந்ததும் தலைவன் மகள் நோய் நீங்கி, சுய உணர்வு பெற்று எழுந்தாள். ஞானசம்பந்தரின் வியக்கத்தக்க இவ்வருட் செயலை எண்ணி உள்ளமும் உடலும் பொங்கிப் பூரித்துப்போன தலைவனும், தலைவன் மகளும் தெய்வத் திருமகனின் தாள்தனில் வீழ்ந்து வணங்கி கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்க நின்றனர். ஞானசம்பந்தர் அவர்களை வாழ்த்தினார். அங்கியிருந்து புறப்பட்ட ஞானசம்பந்தர் மேலும் பல கோயில்களை வழிபட்ட வண்ணம் கொங்கு நாட்டை வந்தடைந்தார். கொங்குநாட்டில் மக்களைக் கொல்லும் கொடும் பனியைக் கண்டார். அவ்வினைக்கு இவ்வினை எனத் தொடங்கும் பதிகமொன்றைப் பாடிக் கொடும் பனி அந்த நாட்டினைச் சேரா வண்ணம் பேரருள் புரிந்து மக்களைக் காத்தார்.கொங்கு நாட்டு மக்கள் ஞானசம்பந்தரைப் போற்றி புகழ்ந்து வாழ்த்தி வணங்கினர். இவ்வாறு இறைவனைத் தரிசித்துப் பதிகங்கள் பல பாடி, பாரோர் புகழ்ப் பற்பல அற்புதங்களை நிகழ்த்தி, ஊர் ஊராகச் சுற்றி வந்த ஞானசம்பந்தர், திருப்பட்டீ சுரத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனைத் தரிசிக்கத் திருவுள்ளம் கொண்டு அத்திருத்தலம் நோக்கிப் புறப்பட்டார். ஞானசம்பந்தர் வெய்யிலில் நடந்து வரும்பொழுது திருவுளங் கனிந்த இறைவன் அவருக்குப் பூதகணங்கள் மூலம் முத்துப்பந்தல் அமைத்து நிழல் கொடுக்கச் செய்தார். முத்துப் பந்தலின் நிழலிலே திருப்பட்டீசுரத்தை அடைந்த ஞானசம்பந்தர் எம்பெருமானை வழிபட்டுப் பதிகம் ஒன்றைப் பாடினார். அங்கியிருந்து புறப்பட்டுத் திருவாடுதுறையை வந்தடைந்தார் திருஞான சம்பந்தர். அங்கு தொண்டர்களும், அடியார்களும், அந்தணர்களும், ஞானசம்பந்தரை எதிர்கொண்டு அழைத்து வரவேற்று வணங்கினர். ஞானசம்பந்தர் அத்தலத்தில் சில காலம் தங்கியிருந்தார். அப்பொழுது, அவருடைய தந்தையார் அவரிடம், சீர்காழியில் வேள்வி நடத்துவதற்குப் பொன்னும் பொருளும் வேண்டும் என்று கேட்டார். ஞானசம்பந்தர் இறைவன் திருவடியை எண்ணித் திருப்பதிகம் ஒன்றைப் பாடினார். இறைவன் ஒரு பீடத்தில் எடுக்க எடுக்க என்றும் குறையாத ஆயிரம் பொன் நிறைந்த கிழி ஒன்றைக் கொடுத்து அருளினார். தந்தை சிவபாதவிருதயர் மனம் மகிழ அதைக் கொண்டு வேள்வி நடத்துவதற்காகச் சீர்காழியை நோக்கிப் புறப்பட்டார். ஞானசம்பந்தரும் விடை கொடுத்து அனுப்பி வைத்தார்.

மேல்

திருவாடுதுறையில் தங்கியிருந்த சம்பந்தர் பாடினார். பாணர் யாழ் மீட்டி மகிழ்ந்தார். மெய்யன்பர்கள் இசை வெள்ளத்தில் மூழ்கினர்.அவ்வூரிலுள்ள பாணருடைய உறவினர்களும், சுற்றத்தார்களும் தங்கள் அறியாமையால் ஞானசம்பந்தர் பாடும் பதிகங்கள் பாணர் யாழ் மீட்டி வாசிப்பதால்தான் புகழ் பெறுகின்றன என்ற தவறான எண்ணத்தைக் கொண்டிருந்தனர். அவ்வெண்ணத்தை அவர்கள் பாணரிடமே பெருமையுடன் வெளியிடவும் செய்தனர். அதுகேட்ட பாணர், உளம் துடித்துப் போனார். ஞானப் பாலுண்ட சம்பந்தரிடம், தன் சுற்றத்தாரின் அறியாமையையும் செருக்கையும் அடக்கவேண்டும் என்று உள்ளமுருக வேண்டினார். அதைக் கேட்ட ஞானசம்பந்தர் மாதர் மடப்பிடி எனத் தொடங்கிடும் திருப்பதிகமொன்றைப் பாடினார். பாணர் அப்பதிகத்தை யாழில் மீட்டிப் பாட இயலாது செயலற்றுப் போனார். பாணர் கண் கலங்கினார். வேதனை கருணையை உணராது யாழை உடைக்க முற்பட்டது தவறு. இந்தக் கருவியில் முடிந்த அளவுக்கு எவை கிட்டுமோ அவற்றை முன்போல் இதனிலிட்டு வாசிப்பீராக என்று ஞானசம்பந்தர் பாணருக்கு அன்பு கூர்ந்து அருளி வாழ்த்தினார். பாணர் முன்போல் யாழில் பண் அமைத்துப் பதிகம் பாடினார். அதுகண்ட பாணருடைய உறவினர்களும், சுற்றத்தார்களும் தங்கள் தவற்றை உணர்ந்தனர். ஞானசம்பந்தருடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கி, தங்கள் தவற்றுக்கு மன்னிப்புக் கோரினர். அங்கியிருந்து சிவயாத்திரை புறப்பட்ட ஞானசம்பந்தர் திருச்சாத்த மங்கையை அடைந்து, திருநீலநக்க நாயனாரைக் கண்டு மகிழ்ந்து வேறு பல தலங்களைத் தரிசித்த வண்ணம் செங்காட்டங்குடி வழியாக திருமருகல் என்னும் தலத்தை வந்தடைந்தார். திருமருகல் கோயில் மடத்தில் தங்கியிருந்து எப்போதும் இறைவனை வழிபட்டு வந்தார் சம்பந்தர். ஒருநாள் அங்கு வியக்கத்தக்க நிகழ்ச்சி ஒன்று நடந்தது. திருமருகல் கோயில் மடத்தில் ஒரு கன்னிப் பெண்ணும் ஒரு வணிக மகனும் தங்கி இருந்தனர். அக்கன்னிப் பெண்ணின் காதலனான வணிக மகன் ஓர்நாள் அவ்விடத்தில் பாம்பு தீண்டி உயிர் நீத்தான். காதலனுக்கு ஏற்பட்ட கதியை எண்ணிக் கன்னி மகள் துடித்தாள். பெற்றோருக்குத் தெரியாமல் அத்தை மகனை மணக்க வேண்டும் என்று ஓடிவந்த தனது ஆசையில் இப்படியொரு பேரிடி வீழ்ந்ததே என்றெண்ணி தத்தளித்தாள். அப்பெண்மணி வணிக மகனைத் தீண்ட முடியாத நிலையில் தாங்கொணாத் துயரால் பலவாறு சொல்லி புலம்பிக் கொண்டே இருந்தாள். அவளது புலம்பல் கோயிலை நோக்கி வரும் ஞானசம்பந்தர் செவிகளில் விழுந்தது. வாடிய முகத்துடனும், வடிக்கும் கண்ணீருடனும் ஒடிந்து விழுந்த பூங்கொடி போல் தன் நிலை மறந்து நின்ற வணிக மகள், ஞானசம்பந்தரைக் கண்டாள். திருமருகல் தெய்வமே எழுந்தருளினாற்போல் சித்தத்தில் கொண்டாள். ஓடிச்சென்று அவரது பாதங்களில் வீழ்ந்தாள். ஞானசம்பந்தர் அப்பெண்மணிக்கு ஆறுதல் மொழி கூறினார். அப்பெண்மணி தனது சோகக் கதையைச் சொல்லத் துவங்கினாள். நான் பிறந்த ஊர் வைப்பூர். தாமன் என்பவர் என் தந்தை. என் தந்தைக்கு என்னுடன் ஏழு பெண்கள் உண்டு. இங்கு இறந்து கிடக்கும் என் அத்தை மகனுக்குத் தன் பெண்களில் ஒருவரைக் கொடுப்பதாகச் சொல்லிய அவர், மற்ற ஆறு பெண்களில் ஒருத்தியைக் கூட இவருக்குக் கொடுக்காமல் ஏமாற்றியதை எண்ணி மனம் பொறாத நான், இவரை அழைத்துக்கொண்டு இரவோடிரவாக இங்கு ஓடிவந்தேன்.வந்த இடத்தில் விதி எனக்குச் சதி செய்துவிட்டது. என் வாழ்க்கைத் துணைவராக இல்லறத்தில் இருக்க வேண்டிய என் அத்தை மகன் அரவத்தால் தீண்டப்பட்டு எனக்குமில்லாமல் இந்த உலகத்திலும் நில்லாமல் போய்விட்டார் எனச் சொல்லி மேலும் புலம்பிக் கண்ணீர் வடித்தாள். ஞானசம்பந்தர் கால்களில் விழுந்து அழுதாள் அந்த வணிகக் குலப் பெண்மணி!

மேல்

ஞானசம்பந்தர் திருமருகல் தெய்வத்தைப் பணிந்து எழுந்து, சடையாய் எனுமால் எனத் தொடங்கி பதிகம் ஒன்றைப் பாடியருளினார். நீலகண்டப் பெருமான் சம்பந்தரின் செந்தமிழ்ப் பண் கேட்டுச் சிந்தை மகிழ்ந்தார். திருமருகல் உறையும் உமையொருபாகன் வணிக மகனைக் காத்தார். இறைவனின் கருணையால் வணிக மகன் உயிர் பெற்று எழுந்தான். அனைவரும் அதிசயித்து சம்பந்த பெருமானை வணங்கி துதித்தனர்.வணிக மகனும், வணிக மகளும் ஞானசம்பந்தரின் பாத கமலங்களில் வீழ்ந்து வணங்கினர். சம்பந்தர் இருவரையும், திருமணம் செய்து கொண்டு என்றென்னும் நீடு புகழ் வாழ்வீராக என்று ஆசி கூறி வழி அனுப்பினர்.ஞானசம்பந்தர் அத்தலத்தில் சில நாட்கள் தங்கியிருந்து, சிவ வழிபாட்டை இடையறாது நடத்தி வந்தார். அந்நாளில், அவரைக் காண சிறுத்தொண்ட நாயனார் வந்தார். இருவரும், ஒருவரை ஒருவர் வணங்கி மகிழ்ந்தனர். இருவரும் திருமருகல் நீலகண்டப் பெருமானை வழிபட்டவாறு, அங்கியிருந்து புறப்பட்டு, திருச்செங்காட்டாங்குடிக்கு வந்தனர். அங்கு கோவில் கொண்டுள்ள கணபதீச்சுரரை வணங்கி வழிபட்டு வாழ்ந்து வரலாயினர். சில நாட்களில், அங்கியிருந்து புறப்பட்டுத் திருப்புகலூரை அடைந்தார். அங்கு முருகநாயனார் தங்கியிருந்த திருமடத்தில் தங்கினார். அச்சமயத்தில் அப்பரடிகள் தொண்டர் பலருடன் திருப்புகலூரை வந்தடைந்தார். அப்பரடிகள் திருவாரூர் தரிசனத்தைப் பற்றிச் சிந்தை குளிரும் பதிகத்தால் சிறப்புற எடுத்து இயம்பியதைக் கேட்ட ஞானசம்பந்தருக்குத் திருவாரூர் சென்று புற்றிடம் கொண்ட பெருமானைப் போற்றிப் பணிந்து வரவேண்டும் என்ற விருப்பம் உண்டாயிற்று. ஞானசம்பந்தர் அப்பரடிகளைத் திருப்புகலூரிலேயே சில காலம் தங்கி இருக்கும்படி கூறி விட்டு திருவாரூருக்குப் புறப்பட்டார். ஞானசம்பந்தர் திருவாரூர் செல்லும் வழியே உள்ள சிவத்தலங்கள் பலவற்றைத் தரிசித்து மகிழ்ந்தவாறே திருவாரூரை வந்து அடைந்தார். திருவாரூரில் தியாகேசப் பெருமானைக் கண்குளிரக் கண்டு களித்தார். தமிழ்ப் பாமாலை தொடுத்து இன்புற்றார். சில காலம் தங்கியிருந்து பேரின்பம் கொண்டார். பின்பு திருவாரூரை நீத்துத் திருப்புகலூர் வந்தார். அங்கு அப்பரடிகளோடு தங்கியிருந்து எம்பெருமானை வழிபட்டு வரலானார். திருப்புகலூர்ச் செஞ்சடை வண்ணர் அருள்பெற்று, இன்புற்று ஆளுடைப் பிள்ளையாரும், அப்பரடிகளும் அங்கியிருந்து புறப்பட்டு மற்றும் பல சிவத்தலங்களைத் தரிசித்து வரலாயினர். இரு ஞானமூர்த்திகளும் கால்நடையாகவே சென்று கொண்டிருந்தனர். ஞானசம்பந்தர் இறைவன் தமக்களித்த முத்துப்பல்லக்கில் அமர்ந்து வராமல் தம்முடன் நடந்து வருவது, அப்பருக்கு மன வேதனையைக் கொடுத்தது.அப்பரடிகள் ஞானசம்பந்தரை நோக்கி, முத்துச் சிவிகைத்தனித்து வரத் தாங்கள் கால் கடுக்க நடந்து வருதல் ஆகாது. தாங்கள் எம்பெருமான் அருளிச் செய்த முத்துச் சிவிகையில் எழுந்தருள்க என்று அன்போடு வேண்டினார். அது கேட்டு ஞானசம்பந்தர் சிறிதும் மனம் ஒவ்வாத நிலையில் அப்பரிடம், தாங்கள் நடந்துவர நான் மட்டும் முத்துச் சிவிகையில் ஏறி வருவது முறையல்ல என்று கூறினார். எனினும் எம்பெருமானின் திருவருட் கருணையை எண்ணிப் பார்த்த ஆளுடைப் பிள்ளையார், தாங்கள் முன்னர் எழுந்தருளுங்கள், தங்கள் பின்னால் நான் மெதுவாக வந்து சேருகிறேன் என்றார். அப்பரடிகளும் அதற்கு இசைந்தார். இவ்வாறாக அப்பரடிகள் முதலில் ஒரு திருத்தலத்தை சேர்வதும், பின்னார் ஆளுடைப்பிள்ளையார் முத்துச்சிவிகையில் அத்தலத்தை அடைவதுமாக, இரு சிவநேசச் செல்வர்களும் தங்கள் சிவ யாத்திரையைத் தொடர்ந்து நடத்திக் கொண்டே இருந்தனர். இப்படியாக இரு திருத்தொண்டர்களும் திருக்கடவூர், திருவம்பர் முதலிய தலங்களைத் தரிசித்தவாறு, திருவீழிமிழலையை வந்தடைந்தனர்.

மேல்

அந்நகரத்துத் தொண்டர்களும், அடியார்களும் இவர்களைப் போற்றி வணங்கினர். ஞானசம்பந்தர் வீழிமிழலை எம்பெருமானைப் போற்றி சடையார் புனலுடையார் எனத் தொடங்கும் பதிகம் ஒன்றை உள்ளமுருகப் பாடி எம்பெருமானின் சேவடியை வழிபட்டார்.ஆளுடை அரசரும் ஆளுடைப் பிள்ளையாரும் தினந் தவறாது அரனாரை, அழகு தமிழ்ப் பாமாலைகள் புனைந்து வழிபட்டு வந்தார்கள். ஊர் மக்களுக்கு உற்சாகம் தாங்கவில்லை. அவர்கள் சிவச் செல்வர்களைப் போற்றிப் பணிந்து பெருமிதம் கொண்டனர்.சீர்காழி அந்தணர்கள், திருத்தோணியப்பரைத் தரிசிக்கச் சீர்காழிக்கு வருமாறு அவர்களை வேண்டினர். ஞானசம்பந்தர் திருவீழிமிழலை இறைவன் விடை அளிப்பின் வருவோம் என்று மறுமொழி கூறினார். அன்றிரவு பிறைத்திங்களை முடிந்த பேரருளாளர், ஞானசம்பந்தர் கனவிலே எழுந்தருளி, இத்திருத்தலத்திலேயே திருத்தோணியப்பர் திருக்கோலத்தைக் காட்டி அருளுகின்றோம் என்று திருவாய் மலர்ந்தார். பொழுது புலர்ந்தது. ஆளுடைப் பிள்ளையாரும், அப்பரடிகளும், மறையோர்களும் புடைசூழக் கோவிலுக்குச் சென்றனர். திருவீழிமிழலை ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன், தோணியப்பர் திருக்கோலம் விளங்க காட்சியளித்தார். தோணியப்பர் திருக்கோலத்தைக் கண்டு பிள்ளையார் பக்திப் பரவசத்தால் கைம்மரு பூங்குழல் எனத் தொடங்கிப் பாடினார். தோணியப்பரின் பேரருளை எண்ணிப் பார்த்த சீர்காழி அந்தணர்கள், ஞானசம்பந்தரிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டனர். ஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் திருவீழிமிழலை இறைவனை நாள்தோறும் வழிபட்டு பதிகங்கள் பலவற்றைப் பாடி வந்தனர். இவ்வாறு இருந்துவரும் நாளில் திருவீழிமிழலை நகரத்தில் மழையின்மையால் பஞ்சம் பெருகியது.திருவீழிமிழலைப் பெருமான் இவர்கள் கனவிலே எழுந்தருளி, சிவனடியார்க்கும், மக்களுக்கும் பஞ்சத்தால் துன்பம் வருமோ என்று நீங்கள் அஞ்சற்க! அவர்கட்கு எவ்வித தீங்கும் நேராது. அடியார்களது வாட்டத்தைப் போக்கும் பொருட்டு நாள்தோறும் திருக்கோயில் கிழக்குப் பீடத்திலும், மேற்குப் பீடத்திலும் ஒவ்வொரு பொற்காசுகளை வைத்து அருளுவோம். அவற்றைக் கொண்டு அடியார்களது வறுமை நிலையைப் போக்கி உதவுங்கள் என்று திருவாய் மலர்ந்தார். இறைவன் கனவிலே மொழிந்ததற்கேற்ப, தினமும் பொற்பீடத்திலிருந்து பொற்காசுகளைப் பெற்றெடுத்து பிள்ளையும், அரசும் அடியார்களுக்குக் குறைவின்றி அமுதூட்டி இன்புற்றனர். இது நிகழும் நாளில் அப்பரடிகளது திருமடத்திலே மட்டும் தொண்டர்கள் உரிய காலத்தே திருவமுது செய்து களிப்புற, திருஞான சம்பந்தர் திருமடத்தில் உணவு முடிக்கச் சற்றுக் காலதாமதமானது. இதை உணர்ந்த ஞானசம்பந்தர், தமது திருமடத்தில் அமுது படைக்க காலதாமதம் ஆவதின் காரணம் என்ன ! என்று அடியார்களிடம் வினவினார். அதற்கு அவர்கள் ஞானசம்பந்தரை நோக்கி, நம்முடைய பொற்காசு நல்ல காசல்ல என்று கூறி பண்டங்களைக் கொடுக்கக் காலதாமதம் செய்கின்றார்கள். ஆனால், நல்ல காசு பெற்ற அப்பர் பெருமானுக்கு வியாபாரிகள் வேண்டும் பொருளை விரைவிலே கொடுத்து விடுகிறார்கள் என்ற உண்மையை விளக்கிக் கூறினர்.

மேல்

அடியார்கள் இங்ஙனம் மொழிந்தது கேட்டு ஞான சம்பந்தர் சிந்தித்து, அப்பரடிகள் கோயிற் திருப்பணிகள் செய்ததின் பயனே இது என உணர்ந்து எம்பெருமானை வணங்கி வழிபட்டு, வாசிதீரவே காசு நல்குவீர் என்னும் திருப்பதிகத்தைப் பாடினார். இறைவன் ஞானசம்பந்தருக்கு நற்காசு கொடுத்தருளினார். அன்று முதல் ஆளுடைப் பிள்ளையும் உரிய காலத்தே விருந்தளித்து அரும்பெரும் தொண்டாற்றி வரலானார். சில நாட்களில் மழை பொழிய பஞ்சம் தணிந்தது. இரு ஞான மூர்த்திகளும் தொடங்கிய தலயாத்திரையின் தொடக்கத்தில் இருவரும் வேதாரண்யத்தை வந்து அடைந்தனர். சம்பந்தரும், அப்பரும் திருக்கோயில் கோபுரத்தைத் தாழ்ந்து பணிந்து கோயில் வெளி முற்றத்தைக் கடந்து மறைகளால் காப்பிடப்பட்டிருந்த வாயிலை அடைந்தனர். அங்கு திருவாயில் தாழிடப் பட்டிருப்பதால் அன்பர்கள் பிறிதொரு பக்கம் வாயில் அமைத்து அதன் வழியே உள்ளே சென்று வழிபட்டு வருவதைக் கண்டார்கள். ஞானசம்பந்தர் அடியார்களிடம் வாயில் அடைத்துக் கிடக்கும் காரணத்தை வினவினார். இறைவனை வழிபட்டு வந்த அருமறைகள் வாயிலை அடைத்துச் சென்றுவிட்டன என்ற உண்மையை அவ்வூர் அடியார்கள் வேதனையுடன் எடுத்துக் கூறினர். அடியார்கள் மொழிந்ததைக் கேட்ட ஞானசம்பந்தர் அப்பரடிகளைப் பார்த்து, அத்திருக் காப்பு நீங்குமாறு திருப்பதிகம் ஒன்றைப் பாடுவீராக ! என்று கேட்டுக் கொண்டார். அப்பர் அடிகள் பதினொரு பாட்டுக்களால் கதவின் தாழ் திறக்கும்படிச் செய்தார். அடியார்கள் எல்லோரும் பெருமகிழ்ச்சியினால் எம்பெருமானின் திருநாமத்தைக் கயிலைமலை எட்டும் வண்ணம் முழக்கம் செய்தனர். உச்சி மீது குவித்த செங்கரங்களோடும், ஆனந்தக் கண்ணீர் பெருகும் கண்களோடும் கோயிலுள் புகுந்து இறைவனைப் பன்முறை வீழ்ந்து வணங்கி எழுந்தனர். இரு ஞான மூர்த்திகளும் நெக்குருக எம்பெருமானைப் பணிந்து திருப்பதிகங்கள் பல பாடிப் பக்தி வெள்ளத்தில் மூழ்கினர். அனைவரும் வழிபட்டு வணங்கி வெளிவந்தவுடன் அப்பர் அடிகளின் வேண்டுகோளுக்கிணங்க ஞானசம்பந்தர் திறந்த கதவுகளை அடைக்கும் பொருட்டு சதுரம் என்று தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். அக்கணமே வாயிலின் கதவுகள் காப்பு நிரம்பின.

மேல்

அன்று முதல் அத்திருவாயில் திறக்கவும் காப்பிடவும் எளிதாக அமைந்தது. அடியார்கள் அவ்வாயில் வழியாக சிரமமின்றி இறைவனை வழிபடடு வரலாயினர். தலங்கள் தோறும், இறைவன் அருளால் வியக்கத்தக்க பற்பல செயல்களை நிகழ்த்திய இரு ஞானமூர்த்திகளும் இவ்வாறு திருமறைக்காட்டை அடைந்தனர். திருமறைப் பெருமானைப் பணிந்து பதிகம் பாடிப் பரவினர். அத்திருத்தலத்திலேயே தங்கியிருந்து திருத்தொண்டுகள் பல புரிந்து வரலாயினர். அக்காலத்தில் பாண்டிய நாட்டை கூன்பாண்டியன் நெடுமாறன் என்ற மன்னன் அரசாண்டு வந்தான். பாண்டிய மன்னன் சோழன் மகளாகிய மங்கையர்க்கரசியை மணந்திருந்தான். அவனது முதன்மந்திரியாகப் பணியாற்றியவர் குலச்சிறையார் என்ற பெருந்தகையார். பாண்டியனின் ஆட்சியிலே சைவம் வளர்ச்சி குறைந்து சமணம் சிறுகச் சிறுகப் பரவிக் கொண்டிருந்தது. மன்னன் நெடுமாறன் சமணத்தில் மிக்கப் பற்றுக் கொண்டு சமணத்தை ஊக்குவித்தால் சமணத் தலைவர்கள் செருக்குற்றுச் சைவத்தைக் குறை கூறி வந்தனர். அதனால் மாதேவி மங்கையர்க்கரசியாரும், முதன் மந்திரி குலச்சிறையாரும் சைவ சமயத்தைப் பாதுகாக்கத் தங்களால் இயன்றதைச் செய்து வந்தனர். பாண்டிய நாட்டில் முன்போல் சைவம் தழைத்தோங்க வேண்டும் என்று எண்ணி ஏங்கிக் கொண்டிருந்த அவர்கள் செவிகளில் அப்பர் அடிகளும், திருஞான சம்பந்தரும் திருமறைக் காட்டில் வந்து தங்கி இருக்கும் செய்தி எட்டியது. அரசியாரும், குலச்சிறையாரும் ஊக்கமும் பெருமகிழ்ச்சியும் கொண்டவர்களாய்த் தம் ஏவலர்கள் சிலரைத் திருமறைக் காட்டிற்கு அனுப்பி ஞான சம்பந்த மூர்த்திகளை அழைத்து வருவதற்கான ஏற்பாட்டைச் செய்தனர்.

மேல்

ஏவலாளர் ஞானசம்பந்தர் வசிக்கும் மடத்தை அடைந்தனர். அடியார்களை வணங்கினர். அரசியார் விருப்பத்தை உரைத்தனர். பாண்டியநாடு சமணர்களிடம் சிக்கித் சிதைந்து வருகிறது. மன்னர் கூடச் சமணர்களின் மாயவலையில் வீழ்ந்துவிட்டார். அதனால் தாங்கள் அருள்கூர்ந்து மதுரை மாநகருக்கு எழுந்தருள வேண்டும். சமணரை வென்று தென்பாண்டிய நாட்டில் சிவனடியார்களின் தொண்டு சிறக்கவும் சைவ நெறி தழைக்கவும் திருவுள்ளம் கொண்டருள வேண்டும். அரசியாரும் அமைச்சரும் தங்களிடம் இவ்விவரத்தைச் சொல்லி வருமாறு எங்களை அனுப்பியுள்ளார்கள் என்று பணிவன்போடு கூறினர் பணியாட்கள். சீர்காழிப் பிள்ளையார் முக மலர்ச்சியோடு விரைவில் வந்து சேருவதாக அரசியாரிடம் கூறும்படிச் சொன்னார். ஏவலாளர் வணங்கி புறப்பட, சம்பந்தர் ஏவலாளர்களை வாழ்த்தி அனுப்பினார். அவர்களும் மதுரையம்பதி வந்து அரசியாரிடம் சம்பந்தர் வருகையைப் பற்றிக் கூறினர். அரசியாரும் அமைச்சரும் அக மகிழ்ந்தனர். அப்பரடிகள் திருஞான சம்பந்தரிடம் சமணர்களின் தீய வழியினை எடுத்து விளக்கி இப்பொழுது மதுரை போவது உசிதம் அல்லவென்றும், அதற்குத் தான் உடன்படப் போவதில்லை என்றும் சொன்னார். அதற்கு ஆளுடைப்பிள்ளையார், நாம் போற்றுவது பரமனின் பாத கமலங்களே. எனவே நாளும் கோளும் நம்மை என்ன செய்யும்? எம்பெருமான் திருத்தொண்டில் நமக்கு ஆபத்து ஒன்றும் ஏற்படாது என்று கூறிப் பரமனைப் போற்றி, வேயுறு தோளிபங்கன் என்னும் திருப்பதிகத்தை இயம்பினார். ஞானசம்பந்தர் அப்பரடிகளை வேழநாட்டிலேயே இருக்கும்படிக் கூறிவிட்டுத் தமது முத்துப் பல்லக்கில் மதுரையம்பதியை நோக்கிப் புறப்பட்டார். திருமறைக்காட்டு நலம் தந்த நாதரின் திருத்தாளியினைச் சித்தத்திலே கொண்டு புறப்பட்ட ஞானசம்பந்தர், இடையிடையே உள்ள தலங்களை வணங்கிப் பதிகங்கள் பல பாடி மகிழ்ந்தார். நெய்தல் நிலத்தைக் கடந்து மருதநிலம் வழியாக முல்லையைத் தாண்டி பாலையில் புகுந்து பாண்டி நாட்டின் பாங்கிலே வந்தடைந்தார் சம்பந்தர். மணம் கமழும் மலர் நிறைந்த மலைகளில் துள்ளி ஓடும் தேனருவிகளைக் கடந்தார். புள்ளினங்கள் துள்ளி விளையாடும் காடுகளைக் கடந்தார். ஒருவாறு ஆளுடைப்பிள்ளையார் திருக்கொடுங்குன்றம் எனும் பிரான்மலை சிவத்தலத்தை வந்தடைந்தார். அங்கு மலை மீது எழுந்தருளி இருக்கும், விரிபுனல் அணிந்த வேணியரது அடிபோற்றியவாறு மதுரையை நெருங்கலானார். அரசியாரும் அமைச்சரும் சம்பந்தரை வரவேற்க மதுரை மாநகரைக் கவின்பெற அழகு செய்யத்தக்க ஏற்பாடுகளைச் செய்தனர். உலகிலுள்ள எழிலை எல்லாம் ஒன்று திரட்டிக் கொழித்து வைத்தாற்போல் மதுரையம்பதி அழகுற விளங்கிற்று. மதுரை தெருக்களிலே மறையொலி கேட்டவண்ணமாகவே இருந்து கொண்டிருந்தது. அரங்கிலே அழகு மயில் போல் ஆரணங்குப் பதுமைகள் நடனமாடும் சிலம்பொலி கலீர் கலீர் எனக் கேட்டுக் கொண்டே இருந்தது. அந்தணர்கள் வேள்விகள் நடத்தி விண் எட்ட புகை எழுப்பி மறைவேத முழக்கம் செய்தனர். ஓரிடத்தின் எழிலைக்கண்ட கண்கள் வேறிடம் திரும்பாத காட்சியைத் தான் ஒவ்வொரு இடத்திலும் காண முடிந்தது. திருஞானசம்பந்தர் பதிகம் பாடியவாறு நகருக்குள் நுழைந்தார். அன்பர்கள் பூரண கும்பம் எடுத்தனர். தூப தீபங் காட்டினர். பாலிகைகள் ஏந்தினர்.

மேல்

வீதி எங்கும் மணமிக்க மலரையும், நறுமணப் பொடியையும், பொரிகளையும் வாரி வாரி வீசினர். பன்னீர் தெளித்தனர். ஞானசம்பந்தர் வந்தடைந்த செய்தியை ஏவலாளர்கள் கூறியதும், அரசியார் அவர்களுக்கு பொன்னும் பொருளும் சன்மானமாகக் கொடுத்து அனுப்பினார். அரசியார் அமைச்சரை அனுப்பி ஞானசம்பந்தரை எதிர்கொண்டு அழைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அதுவே சமணர்களுக்குத் தீய சகுணங்கள் தோன்றுவதற்கும், குலச்சிறையாருக்கும், மங்கையர்க்கரசியாருக்கும் நல்ல சகுணங்கள் தோன்றுவதற்கும் காரணமாக அமைந்தன. சம்பந்தரின் வருகையைக் கேள்வியுற்ற சமணர்கள் ஒன்றுகூடி நிலைமையை விவாதிக்கத் தொடங்கினர். அமைச்சரும், அரசியாரும் ஆனந்தக் கடலில் மூழ்கினர். சமணரால் பாண்டிய நாட்டிற்கு நேர்ந்த தீமையினைப் போக்குவதற்குத் தூய வெண்புனற் கங்கையே பாண்டிய நாட்டை நோக்கி வந்தாற்போல் அடியார்களின் தூய திருவெண்ணீற்றுப் பொலிவு தோன்ற ஞானசம்பந்தர் இறைவனின் திருவருள் ஒளியுடன் முத்துச் சிவிகையில் எழுந்தருளினார். அத்திருக் காட்சியைக் கண்ட குலச்சிறையார் உடல் புளகம் போர்ப்ப - கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக -தம்மை மறந்து, உலகை மறந்து பக்தியால் கட்டுண்டு அப்படியே முத்துச்சிவிகை முன் வீழ்ந்து பணிந்து எழுந்தார். மீண்டும் சிரமீது கரந்தூக்கி நெஞ்சத்தில் பொங்கி வரும் அன்புப் பெருக்கால் பூமியில் விழுந்து வணங்கினார். ஞானசம்பந்தருடன் வந்த அடியார்கள் அமைச்சரை எழுப்ப முயன்றனர். அமைச்சர் தம்மை மறந்த நிலையில் படுத்திக் கிடந்தார். ஞானசம்பந்தர் முத்துச் சிவிகையினின்று கீழே இறங்கி தமது அருட்கரத்தால் அமைச்சரைத் தொட்டு எழுப்பினர். அமைச்சர் எழுந்து அண்ணலைத் தொழுது அடிபணிந்து போற்றினார். ஞானசம்பந்தர் அரசியார் நலம் பற்றி அமைச்சரை வினவ அமைச்சரும் மகிழ்ச்சியோடு, ஐயனை எதிர்கொண்டு அழைக்க அரசியார் பணித்துள்ளார் என்று கூறினார். அமைச்சர் மொழிந்தது கேட்டு அகமகிழ்ந்த ஆளுடைப்பிள்ளையார், முதலில் ஆலவாய் அப்பன் எழுந்தருளியிருக்கும் கோயிலுக்குச் செல்வோம் என்றார். அமைச்சர் முன்செல்ல அன்பர்கள் புடைசூழ ஆலயத்தை நோக்கிப் புறப்பட்டார் ஞானசம்பந்தர். ஞானசம்பந்தர் திருக்கோயிலுக்கு எழுந்தருளப் போகிறார் என்ற செய்தி கேட்டு அரசியாரும் ஆலயத்திற்கு விரைந்தார்கள். இதற்குள் ஞானசம்பந்தர் அமைச்சரும், அடியார்களும் புடைசூழ கோயிலை வந்தடைந்தார். திருவாலவாய்த் திருக்கோயில் உயர் கோபுரத்தைக் கண்ட ஞானசம்பந்தர் வணங்கி எழுந்து மங்கையர்க்கரசி வலவர்கோன் பாவை எனத் தொடங்கும் திருப்பாடலால் அரசியாரையும், அமைச்சரையும் சிறப்பித்தார். பிறகு அச்சிவத் தொண்டர் அன்பர்கள் புடைசூழ அமைச்சருடன் கோயிலை வலம் வந்து சோமசுந்தரப் பெருமானை வழிபட்டார்.

மேல்

நீலமாமிடற்று ஆலவாயிலான் என்னும் திருப்பாடலால் சிவனை துதித்தார். அடியார்கள் ஆனந்தக் கடலில் மூழ்கித் திளைத்தனர். ஞானசம்பந்தர் தலைச்சங்கப் புலவர்களை வணங்கி வழிபட்டார். கோபுரவாயிலை அடைந்தார். அங்கு அரசியார் வணக்கத்துடன் நிற்பதை அமைச்சர் கண்பித்தார். அரசியார் விரைந்து வந்து ஞானசம்பந்தரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி எழுந்தாள். ஞானசம்பந்தர் அரசியாரைத் தமது அருட்கரத்தால் எடுத்து அருளினார். அரசியார் உள்ளமும், உடலும் பொங்கிப் பூரிக்கக் கண்களில் நீர்மல்க நாக்குழற ஞானசம்பந்தரை நோக்கி, யானும் என்பதியும் செய்த தவம் என்கொல் என்று பணிவன்புடன் கூறினார். யாழின் மென்மொழி போல் அரசியார் மொழிந்ததைக் கேட்டு நாயனார், சுற்றிலும் மற்ற சமயத்தார்கள் இருந்தும் சிவத்தொண்டினை மேற்கொண்டு வாழும் உம்மைக் காண வந்தனம் என விடை பகர்ந்தார். ஞானமூர்த்தியின் அன்பு மொழியைக் கேட்டு மனம் பூரித்துப் போன மங்கையர்க்கரசியார் மீண்டும் ஞான சம்பந்தரை வணங்கி எழுந்தார். ஞானசம்பந்தரையும் அவருடன் வந்த அடியார்களையும் மடத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்தார் அரசியார்! அரசியார் ஆளுடைப்பிள்ளையாரிடம் விடை பெற்றுக் கொண்டு அரண்மனைக்குப் புறப்பட்டார். அமைச்சர் குலச்சிறையார் ஞானசம்பந்தரை மடத்திற்கு அழைத்துச் சென்றார். ஞானசம்பந்தர் தம்முடன் வந்த பரிவாரங்கள், அடிடயார்களுடனும் மடத்தில் தங்கினார். ஞானசம்பந்தர் தங்கி இருந்த இடத்தில் இருந்து எழுந்த வேத முழக்கமும், திருப்பதிக ஒலியும் சமணர்களைக் கதிகலங்கச் செய்தது. அவர்கள் வஞ்சனையால் ஆளுடைப்பிள்ளையாரைப் பழிவாங்க எண்ணினர். அவர்கள் மன்னனைக் கண்டு எல்லா விவரமும் கூறினர். மன்னர் அது கேட்டு மனம் குழம்பினார். சமணர்கள் மன்னனிடம் ஞானசம்பந்தர் தங்கி இருக்கும் மடத்திற்குத் தீ மூளச் செய்தல் வேண்டும் என்று ஆலோசனை கூறினர். மன்னன் ஒன்றும் தோன்றாத நிலையில், ஆக வேண்டிய காரியம் எதுவாயினும் உடனே சென்று அதனைச் செய்க என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தான்.சமணர்களின் அடாத செயலை அப்படியே செய்ய பணித்த பாண்டியன் நெடுமாறன், எதனாலோ வேதனை மேலிட தீராத மனக்குழப்பத்தோடு பூமலர் தூவிய பட்டு மெத்தையிலும் இருக்க வொண்ணாது படுத்துப் புரண்டு கொண்டிருந்தான். முகத்திலே துயரத்தின் ரேகைகள் படர்ந்திருந்தன. அதுசமயம் மங்கையார்க்கரசியார் மன்னன் அருகே வந்தார்.

மேல்

மனவாட்டத்தோடு படுத்திருக்கும் மன்னனிடம் என்னுயிர்க்குயிராய் உள்ள இறைவா! உங்களுக்கு ஏற்பட்ட துன்பம்தான் என்ன? சற்றுமுன் இருந்த பெருமகிழ்ச்சி முகத்தில் சற்றுகூடக் காணப்பட வில்லையே! உங்கள் மனதில் ஏதோ துயரம் சொல்ல முடியாத அளவிற்கு இருப்பது போல் தோன்றுகிறது. அதனைத் தயைகூர்ந்து என்னிடம் சொல்வீராக என்று கவலையோடு வேண்டினார். மன்னன் அரசியாரிடம் சமணர்கள் வந்து முறையிட்டதையும், அதற்குத் தான் விடையளித்ததையும் கூறினார். அதுகேட்ட மங்கையர்க்கரசியார் திடுக்கிட்டார்கள் வேதனைப்பட்டார்கள். மங்கையர்க்கரசியார் மன்னனை நோக்கி, எனக்கு ஓர் வழி தோன்றுகிறது. சமணர்களுக்கும், சைவர்களுக்கும் வாதம் நடக்கட்டும். வாதில் எவர் வெற்றி பெறுகிறாரோ அவர்கள் பக்கம் சேர்ந்து கொண்டால் போகிறது என்று கணவனுக்கு அரிய யோசனை கூறினார். மன்னனும் இதைப்பற்றிச் சிந்திக்கலானான். அரசியார் அமைச்சரை சந்தித்து நடந்தவற்றைக் கூறினார். அமைச்சர் அரசியாரிடம் ஆளுடைப்பிள்ளையாரின் வருகையால் பெற்ற பேற்றினைப் பெருமிதத்தோடு கூறியபோதிலும் சமணர்களின் சூழ்ச்சியை நினைத்துச் சற்று மனம் அஞ்சினார். அரசியார் மனம் கலங்கினார். ஞானசம்பந்தப் பெருமானுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்திடின் அக்கணமே நாமும் உயிர் இழப்போம் என்று அரசியாரும் அமைச்சரும் தங்களுக்குள் உறுதிபூண்டனர். இதற்குள் ஞானசம்பந்தருக்குத் தீமை விளைவிக்கக் கருதிய சமணர்கள் தங்கள் மந்திரத்தால் அவர் எழுந்தருளி இருக்கும் மடத்திற்கு தீ வைக்க முயன்று தோற்றுப் போயினர். தந்திரத்தால் மடத்திற்குத் தீ வைத்தனர். மடத்தில் துயின்று கொண்டிருந்த தொண்டர்கள் கண் விழித்துப் பார்த்துத் திடுக்கிட்டனர். இறைவனின் அருளால் தீ பரவும் முன்பே அதனை அணைத்துவிட்டு ஞானசம்பந்தப் பெருமானிடம் சென்று நடந்தவற்றை எல்லாம் விளக்கிக் கூறினர்.

மேல்

தொண்டர்கள் மொழிந்ததைக் கேட்ட ஞானசம்பந்தர் மனம் பதைபதைத்துப் போனார். என் பொருட்டுத்தான் அவர்கள் இத்தகையத் தீமையைச் செய்தனர். என்றாலும் அஃது தொண்டர்களுக்கும் அல்லவா தீமையை விளைவித்திருக்கிறது. இது சமணர்களின் குற்றமாக இருந்தாலும் இத்தகைய கொடியவர்கள் வாழும் நாட்டை ஆளும் வேந்தனின் குற்றம்தான் அதனைவிடக் கொடியது எனத் தனக்குள் எண்ணிப் பார்த்தார். மனவேதனைப்பட்டார்.செய்யனே திரு ஆலவாய் மேவிய, எனத் தொடங்கும் பாடலைத் திருப்பதிகத்தின் முதலாகக் கொண்டு பல பாடல்களைப் பாடினார். ஒவ்வொரு பாடலின் ஈற்றடியிலும் சமணர் இட்ட தீயானது பாண்டியனைச் சாரட்டும் என்ற கருத்தை வைத்தார். ஞானசம்பந்தர் பதிகத்துள் கூறியதுபோல் தீப்பிணி என்னும் வெப்புநோய் மன்னனைப் பற்றிக்கொண்டது. வேந்தர் உடல் நெருப்பிடைப் புழுப்போல் துடிதுடித்தது. தீயின் வெம்மை மேலும் மேலும் ஓங்க கொற்றவனின் உயிர் ஊசலாடியது. மன்னர்க்கு நேர்ந்த விபத்தைக் கண்டு மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் மிகவும் வருந்தினர். அவர்கள் செய்வதறியாது திகைத்தனர். மன்னனுக்கு ஏற்பட்ட நிலை கேட்ட சமணர்கள் விரைந்தோடி வந்தனர். சமணர்கள் மந்திரம் கூறி பீலி கொண்டு மன்னன் உடலைத் தடவினர். பீலிகள் எரிந்து சாம்பலாயின. சமணர்கள் திகைத்தனர். பிரம்புகளால் மன்னன் உடல் வேதனையைப் போக்க முயன்றனர். பிரம்புகளால் மன்னன் உடலைத் தீண்டும் மன்னரே அவைகளும் தீய்ந்தன. அரசன் உயிரை வருத்தும் வெப்பு நோய் யாரையும் கிட்டவிடாமல் தடுத்தது. மருத்துவ வல்லவர்களாலும் மந்திர மகா மேதைகளாலும், சமண முனிவர்களாலும் மன்னனின் வெப்பு நோயைச் சிறிதளவுகூடத் தணிக்க முடியாமல் போயிற்று. மன்னனுக்குச் சமணர்கள் மீது ஆத்திரம் மேலிட்டது. அவர்களை அவ்விடத்தை விட்டு அகலும்படி கட்டளையிட்டான். ஞானசம்பந்தருக்குச் சமணர்கள் செய்த தீமையின் விளைவுதான் மன்னனை இப்படி வருத்துகிறது என்ற உண்மையை நன்கு உணர்ந்த அரசியாரும், அமைச்சரும் மன்னரிடம், இவ்வேதனை தீர புகலி மன்னர் எழுந்தருள வேண்டும் என்று எடுத்துரைத்தனர்.மன்னன் மனம் தெளிந்த நிலையில் கண்களிலே நீர் மல்க அரசியாரையும், அமைச்சரையும் நோக்கி, சைவத் தலைவர் வந்து அவருடைய திருவருளால் எனக்கு ஏற்பட்டுள்ள வெப்பு நோய் அகலுமாயின் உங்கள் கருத்தினை நான் ஏற்பேன். அது மட்டுமல்ல; எனக்கு நேர்ந்த இந்நோயைத் தீர்த்து வென்றவர் எவரோ? அவர் பக்கம் யான் சேர்வேன்.

மேல்

ஆதலால் உடனே புகலி மன்னரை அரண்மனைக்கு அழைத்து வருவதற்கு ஆவன செய்யுங்கள் என்று கூறினான். மன்னன் மொழிந்ததைக் கேட்டு அமைச்சரும் அரசியாரும் அமிழ்தத்தைப் பருகியதுபோல் ஆனந்தக் களிப்பெய்தினர். அமைச்சர் குதிரை மீதேறி மடத்தை நோக்கி முன்னால் விரைந்து புறப்பட, பின்னால் அரசியாரும் சிவிகையில் புறப்பட்டார். அமைச்சர் திருமடத்திலுள்ள அன்பு அடியார்களை வணங்கி, சம்பந்தப் பெருமானைத் தரிசிக்க அரசியார் வருகிறார்கள் என்றார். அமைச்சர் வெளியே காத்திருந்தார். அதற்குள் அரசியாரும் வந்து சேர்ந்தார். அடியார்கள் ஆளுடைப் பிள்ளையாரிடம் சென்று அமைச்சரும், அரசியாரும் வந்துள்ளனர் என்ற செய்தியைக் கூறினர். அடியார்கள் கூறியதைக் கேட்டுப் பிள்ளையார், அவர்களை உள்ளே அழையுங்கள் என்று அன்புக் கட்டளை இட்டதும் அடியார்கள் விரைந்தனர். மடத்தின் வெளியே நின்று கொண்டிருந்த அமைச்சரும், அரசியாரும் மகிழ்ச்சி பொங்க மடத்திற்குள் சென்றனர். அங்கே ஞான சம்பந்தர் சிவஞானமே வடிவமாக அமர்ந்திருக்கும் எழில் மிகும் காட்சியைக் கண்டனர். அமைச்சரும், அரசியாரும் அவரது தூய பொற்பாதங்களை சரணம் என்று பற்றிக் கொண்டனர். பிள்ளையார் இருவரையும் எழுந்திருக்கப் பணித்தார். ஞானசம்பந்தர் அவர்களை நோக்கி, உங்களுக்கு ஏதாவது தீங்கு நேர்ந்ததோ! என்று கேட்டார். அமைச்சரும், அரசியாரும் சமணர்கள் செய்த கொடுமையால் மன்னர் படுகின்ற கடும் வேதனையை விளக்கி, வேந்தர் உயிர் வாழ தேவரீர் அரண்மனைக்கு எழுந்தருளி அரசனையும், எங்களையும் காக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். ஞானசம்பந்தர் சற்றும் அஞ்சற்க ! யாம் இன்றே வருவோம். நன்றே செய்வோம் என்று கூறி அவர்களைத் தேற்றினார். சற்று நேரத்தில் திருஞான சம்பந்தர் மடத்திலிருந்து புறப்பட்டார். ஆலவாய் அழகனைத் தரிசித்து மகிழ முத்து சிவிகையில் ஏறித் தொண்டர்களுடன் புறப்பட்டார். அவரைத் தொடர்ந்து அரசியாரும், அமைச்சரும் புறப்பட்டார்கள்.

மேல்

கோயிலை அடைந்த ஞானசம்பந்தர், வாது செய்வது உமது திருவுள்ளமே என்னும் கருத்து அமைந்த செந்தமிழ் மாலையைச் செஞ்சடையானுக்குச் சாற்றினார். சம்பந்தரின் பாமாலையைக் கேட்டு அரசியார் மெய்யுருகினார். ஆலகாலத்தை அமுதாக உண்ட அண்ணலின் திருவருள் பெற்ற ஞானசம்பந்தர் திருவாயில் புறத்தே இருந்த முத்துச் சிவிகையில் அமர்ந்து அரண்மனையை நோக்கிப் புறப்பட்டார். இவர் அரண்மனையை அணுகிக் கொண்டிருக்கும் போதே, அமைச்சர் குதிரையில் விரைந்து சென்று மன்னனிடம் ஞானசம்பந்தர் எழுந்தருளுகின்றார் என்பதை முன்னதாகவே அறிவித்தார். மகா மந்திரியார் மொழிந்ததைக் கேட்டு மனம் குளிர்ந்த மன்னவன் தனது தலைப்பக்கத்தில் ஞானப்பால் உண்ட தவப் புதல்வருக்கு முழுமணி பொற்பீடம் ஒன்று இடும்படிச் செய்தான். மந்திரியாரிடம் சிவனேசரை எதிர்கொண்டு அழைத்துவரக் கட்டளையிட்டான். மந்திரியார் பேருவகையுடன் மன்னனின் ஆணையை நிறைவேற்றப் புறப்பட்டார். இச் செய்தியைக் கேள்வியுற்ற சமணர்கள் மன்னனைக் காண வந்தனர். ஞானசம்பந்தர் வரவை எதிர்பார்த்த வண்ணமாகவே இருந்த மன்னன் சமணர்களைக் கண்டு கடுமையான வெறுப்பு கொண்டான். மன்னனின் மனோநிலையைப் புரிந்துகொண்ட சமணர்கள் அஞ்சி நடுங்கியவர்களாய் மன்னனிடம், மன்னா! நமது சமண மதத்தின் நெறியை நீர் காக்கும் முறை இதுதானோ? அரசே! உங்களுக்கு ஏற்பட்டுள்ள வெப்பு நோயைக் குணமாக்குமாறு, எங்களுக்கும் சைவ சமயத்தார்க்கும் ஆணையிடுங்கள். நாங்கள் உங்கள் வெப்பு நோயைத் தீர்க்க முற்படுகின்றோம். ஆனால் ஒன்று சொல்கிறோம். நாளை உங்கள் நோயை ஒருவேளை அவர்களே போக்கினாலும்கூட எங்களால்தான் அந்நோய் தீர்ந்தது என்று நீங்கள் உறுதியாகச் சொல்ல வேண்டும். அதுவே அவர்களை வெல்லும் வழி என்று வஞ்சக மொழி கூறி அரசனைத் தங்கள் வழிக்குத் திருப்ப முயன்றனர். பாண்டியன் நெடுமாறன் சமணர்களின் சூழ்ச்சிக்குச் சற்றும் செவிசாய்க்கவில்லை. அரசன் அவர்களிடம், இரு தரப்பினரும் அவரவர்கள் தெய்வ சார்பினால் நோயைத் தீர்க்க முயலுங்கள். அதற்காக நான் மட்டும் பொய் சொல்லமாட்டேன் என்று தனது கருத்தை அறுதியிட்டுக் கூறினான். சமணர்கள் செய்வதறியாது சித்தம் கலங்கினர். இச்சமயத்தில், தொண்டர் குழாத்துடன் ஞான சம்பந்தர், அரசியாரும், அமைச்சரும் புடைசூழ மன்னர் இருக்கும் தனி அறைக்குள் வந்தார்.ஞானசம்பந்தரின் அருட் கண்கள் மன்னனைப் பார்த்தன. அந்தப் பார்வையின் ஒளியிலேயே மன்னன் மதிமயங்கினான். உண்மையை உணரும் ஆற்றல் பெற்றான்.

மேல்

உடலிலே நோய் வருந்துவதையும் ஒரு பொருட்டாக எண்ணாமல் ஞானசம்பந்தரை இருகை கூப்பி வணங்கியபடியே தன் தலைப் பக்கத்திலிருக்கும் பொன் ஆசனத்தில் அமரும்படி வேண்டினான். ஞானசம்பந்தர் முகம் மலர ஆசனத்தில் அமர்ந்தார்.மயக்கமும், தயக்கமும் கொண்ட சமணர்கள் சிந்தை நொந்து செயலற்றுச் சிலையாயினர். சமணரைப் பற்றி சிறிதும் கவலைப்படாத மன்னன் ஞானசம்பந்தரிடம் குசலப்பிரசினம் விசாரித்தான்.ஆளுடைப்பிள்ளையார் தான் பிறந்த திருத்தலம் சீர்காழி என்பதனையும் பிரமபுரம் எனத் தொடங்கி சீர்காழித் திருநகரின் பன்னிரண்டு திருநாமங்களையும் அமைத்து செந்தமிழ்ப் பாட்டொன்றால் பதிலுரைத்து அருளினார்.அப்பெருமானுடைய பொன்மேனிதனைப் பயபக்தியோடு அன்பு மேலிட பார்த்தபொழுது தனது வெப்பு நோய் சற்றுத் தணிந்தது போல் மன்னனுக்குத் தோன்றியது.பொங்கி வரும் பெருநிலவைக் கிரகணம் விழுங்க வந்தாற் போல ஞானசம்பந்தப் பெருமானைப் பொறாமையோடு பார்த்துக் கொண்டிருந்த சமணர்கள் அவர் மீது அகந்தையால் ஆத்திரம் கொண்டனர். அவரை வாதினால் வெல்லக் கருதினர். தங்களுடைய வேத நூலிகளிலிருந்து சிலவற்றை எடுத்துக் கூறி சிறு நரி போல் ஊளையிட்டனர். இச்சூழ்ச்சிக்காரர்களின் கூச்சலைக் கேட்டு ஞான சம்பந்தர், உங்கள் சமய நூற் கொள்கையின் உண்மைக் கருத்துக்களை உள்ளபடிப் பேசுங்கள் என்றார். அவர்கள் துள்ளி எழுந்து ஆளுக்கொரு பக்கமாக ஆர்ப்பரிக்கத் தொடங்கி விட்டனர். சமணர்களின் முறை தவறிய செயலைக் கண்ட அரசியார், மன்னன் முகம் நோக்கி, சுவாமி! சமணர்களை வெற்றிகாண வந்திருக்கும் இப்பெருமான் பால்மணம் மாறாப்பாலகர். ஆளுடைப் பிள்ளையார் என்று போற்றப்படும் சிவநேச செல்வர். இவர் ஒருவராக தனித்து வந்துள்ளார். ஆனால் சமணர்களோ வயது முதிர்ந்தவர்கள். கணக்கற்றவர்கள். முதலில் ஆளுடைப் பிள்ளையாரின் அருளினால் தங்கள் உடலில் ஏற்பட்டுள்ள வெப்ப நோய் விலகட்டும். அதன் பிறகு வேண்டுமென்றால் இவர்கள் வாதாடட்டும் என்றார்.

மேல்

மன்னன் அரசியாரைப் பார்த்து, மங்கையர்க்கரசி! வருந்தற்க ! நான் சொல்லப் போவதுதான் இதற்கொரு நல்ல தீர்ப்பாகும் என்று ஆறுதல் மொழிந்தான். அரசியார் தன் மீது கொண்டுள்ள அன்பையும், பக்தியையும் எண்ணிப் பார்த்த ஞானசம்பந்தர், மானிநேர் விழி மாதராய் எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார்.அப்பாடலைக் கேட்டு மன்னன் உள்ளம் உருகினான். மன்னனைப் பார்த்து சமணர்கள் பொருமினார்கள்.பாண்டியன் நெடுமாறன் சமணர் மீது ஆத்திரம் கொண்டு கோபத்தோடு அவர்களைப் பார்த்து, உங்களின் ஆற்றலை என் உடலில் ஏற்பட்டுள்ள வெப்பு நோயைக் குணப்படுத்துவதின் மூலம் உணர்த்தலாமே என்றான்.மன்னன் பணித்ததைக் கேட்டுச் சமணர்கள் மன்னா! எங்கள் முயற்சியின் சக்தியினால் உம்முடைய இடப்பாகத்திலுள்ள வெப்பு நோயைத் தீர்த்து வைப்போம் இங்கு புதிதாக வந்துள்ள இவர், வலப்பாகத்திலுள்ள நோயைத் தீர்க்கட்டுமே பார்க்கலாம்! என்று இறுமாப்புடன் கூறினர். தங்களது மந்திரத்தை மொழியத் தொடங்கினர். அவர்கள் பீலியை எடுத்து மன்னன் உடம்பின் இடப்பக்கம் தடவினார்கள். வெப்பு நோயின் அனலின் தன்மையால் பீலி தீய்ந்து வீழ்ந்ததோடல்லாமல் அப்பாகத்தில் வெப்பு நோயின் வெம்மையும் பன்மடங்கு அதிகரித்தது.மன்னன் வேதனை தாங்காமல் துடிதுடித்தான். நெடுமாறன் நெஞ்சத்திலே வேதனையை அடக்கிக் கொண்டு ஞானப்பாலுண்ட அருட்புனலை நோக்கினான்.ஞானசம்பந்தர் மன்னனின் குறிப்பறிந்து நோயைத் தணிப்பதற்காக, மந்திரமாவது நீறு என்னும் பதிகம் ஒன்றைப் பாடினார். ஆலவாய் அண்ணலின் அருட் பக்தியிலே திருநீற்றை எடுத்துத் தம் மென் மலர்க்கரங்களால் மன்னனின் வலப்புறமாகத் தடவினார் சம்பந்தர்.வேந்தனின் வலப்பக்கம் குளிர்ந்தது. அதே சமயத்தில் இடப்பக்கத்தில் வீசும் அனல் மேலும் அதிகரித்தது. அனலின் வெம்மையைத் தாங்கச் சக்தியற்றச் சமணர்கள் சற்று விலகிச் சென்று ஒதுங்கி நின்றனர்.மன்னனுக்கு ஞானசம்பந்தர் மீது அன்பும், பக்தியும் மேலிட்டது. சமணர்கள் மீது அளவிட முடியாத வெறுப்பும், கோபமும் ஏற்பட்டது. சமணர்களைப் பார்த்து, நீங்கள் இவ்விடத்தை விட்டுப் போய்விடுங்கள். நீங்கள்தான் தோற்றுப் போனீர்கள் என்று சீறி விழுந்தான் மன்னன்.

மேல்

உடலில் நஞ்சும் அமுதமும் கலந்தாற்போல் வெம்மையும் குளிர்ச்சியும் கலந்திருப்பதை உணர்ந்த மன்னன் ஞானசம்பந்தப் பெருமானை நோக்கி, யான் உய்யும் படி வந்த ஞான வள்ளலே! தங்க திருவருட் கருணையாலே என் உடலில் உள்ள வெப்பம் முழுவதும் தீருமாறு எனக்கு அருள்புரிவீராகுக! என்று வேண்டினான். சம்பந்தர் புன்முறுவல் பூத்தார். அருள்வடியும் அந்தனப் பெருமானின் திருமுகத்தில் கருணை மலர்ந்தது. ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சத்திலே தியானித்த வண்ணம் திருநீற்றினை எடுத்து ஒரே ஒருமுறை மன்னனின் இடப்பக்கத்திலே தடவினார். அப்பக்கத்திலிருந்த வெப்பு நோயும் அக்கணமே மன்னன் உடலை விட்டு முற்றிலும் நீங்கியது.அரசியாரும், அமைச்சரும் எல்லையில்லா இன்பப் பெருக்கில் ஞானசம்பந்தரின் திருவடித் தாமரைகளில் வீழ்ந்து வணங்கி எழுந்தனர். மன்னனும் தன் உடம்பிலுள்ள வெப்பமெல்லாம் அப்படியே மாறியதும் எல்லையில்லா அன்புப் பெருக்கில் உய்ந்தேன் என்றவாறே அவரது திருவடிகளை வணங்கிப் பெருமகிழ்ச்சி கொண்டான். சமணர்கள் வெட்கித் தலைகுனிந்து செய்வதறியாது திகைத்து நின்றனர். அதோடு வெறிபிடித்த சமணர்களின் அகந்தை அடங்கவில்லை. ஞானசம்பந்தரிடம் மந்திரத்தாலும், தந்திரத்தாலும் தோற்ற சமணர்கள் நெருப்பிலும், நீரிலும் தங்களுக்குள்ள ஆற்றலால் வாதமிட்டு அவரை வெல்லலாம் என்று கருதினர். அந்த வீணான எண்ணத்தில் பாண்டிய மன்னனிடம், மன்னா! அவரவர்கள் சமயக் கொள்கைகளை ஏட்டில் எழுதித் தீயிலிட்டு விட வேண்டும். எவ்வேடு எரியாமல் இருக்கிறதோ அந்த ஏட்டினுக்குரியவர் வெற்றி பெற்றவராவார்! என்றனர். சமணர்களின் வார்த்தைகளைக் கேட்டு ஞானசம்பந்தர், நன்று! நீவிர் சொன்னது நன்று! நெருப்பிலே ஏட்டினை இடுவதுதான் உங்கள் கருத்தென்றால் அங்ஙனமே மன்னர் முன்னிலையில் செய்யலாம் என்று தமது சம்மதத்தை வெளிப்படுத்தினார். இரு சமயத்தினரும் மன்னன் முன்னிலையில் கனல் வாதத்திற்குச் சித்தமாயினர். அதற்கென அரங்கம் அமைக்கப்பட்டது. அனைவரும் கூடினர். தீ மூட்டப்பட்டது. நெருப்பும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

மேல்

ஞானசம்பந்தர் தாம் பாடிய பதிகங்கள் எழுதிய ஏட்டிலிருந்து, போகம் ஆர்த்த பூண் முலையாள் என்ற திருநள்ளாற்றுப் பதிகத்தை எடுத்தார். சிவத்தை மனதிலே தியானித்தவாறே, தளிர் இள வளர் ஒளி எனத் தொடங்கும் திருப்பதிகம் ஒன்றைப் பாடி அதனை அனலிலிட்டார். நெருப்பிடை வீழ்ந்த திருப்பதிக ஏடு எரியாது பனிபோல் பசுமையாய் முன்னிலும் பளபளப்போடு பார்ப்போர் வியக்கும் வண்ணம் விளங்கியது. இதுகண்டு சமணர் அச்சங்கொண்டனர். அகந்தையோடு தாங்கள் எழுதிய சமயக் கொள்கைகள் அடங்கிய ஏட்டைத் தீயிலிட்டனர்.அவ்வேடுகள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. சமணர்கள் வெட்கித் தலைகுனிந்தனர். செய்வதறியாது திகைத்தனர். ஞானசம்பந்தர் அனலிடையிட்ட ஏடுகளோ வரையறுத்த காலம்வரை அனலிலே இருந்ததோடல்லாமல் எடுத்த பின்னரும் தொடுத்து முடித்த பூமாலைபோல் அழகுறக் காட்சியளித்தது.அனைவரும் வியந்தனர். ஆலவாய் அண்ணலின் அருள் ஒளியிலே மதுரை மாநகரிலே சைவ சமயம் புத்துயிர் பெறத் தொடங்கியது.சதிமிக்கச் சமணர்களின் தோல்வியைக் கண்டு நெடுமாறன் நகைத்தான். அப்பொழுது சமணர்கள் நெருப்பைத் தண்ணீரால் அணைத்து, அதனின்று நனைந்த தங்களது ஏட்டுச் சாம்பலை எடுத்து கைகளால் பிசைந்தனர்.இவ்வாறு செய்த சமணர்களைப் பார்த்து, மன்னன் நகைத்துக்கொண்டே, ஏட்டினை இன்னும் அரித்துப் பார்க்கிறீர்களா? நன்று! பொய்யை மெய்யாக்க முயலுகின்ற நீங்கள் இந்த இடத்தைவிட்டு உடனே போய்விடுங்கள். வெப்பு நோயினின்றும் நான் நீங்கி பிழைத்தபோதே, நீங்கள் தோற்றுத் தலை தாழ்ந்தீர்கள். அத்தோடு இப்போது தீயிடை வீசிய உங்கள் சமயக் கொள்கையும் எரிந்தது. இதற்கு மேலும் நீங்கள் இங்கிருப்பது முறையல்ல; இன்னும் தோற்றுப் போகவில்லை என்ற எண்ணமோ உங்களுக்கு? என்று அவர்களை இழித்தும் பழித்தும் கூறினான். ஞானசம்பந்தரிடம் தோற்றுப்போன சமணர்கள் அத்துடன் நில்லாமல் ஞானசம்பந்தரைப் புனல் வாதத்திற்கு அழைக்க எண்ணினர். சமணர்களின் அகந்தையைக் கண்டு சினம் கொண்டான் மன்னன். ஞானசம்பந்தரோ அவர்களை நோக்கி, இன்னும் என்ன வாதம் செய்ய வேண்டும் என் வினவினார். சமணர்கள் அவரவர் கொள்கைகளை ஏட்டில் எழுதி, நீரில் விட வேண்டும். எவரது ஏடு நீரோடு ஓடாமல் எதிர்த்துச் செல்கிறதோ, அவ்வேடே உண்மைப் பொருளுடைய சமயத்தை உடையதாகும் என்று எடுத்துரைத்தனர். அமைச்சர் இடைமறித்து, இந்த வாதத்திலும் சமணர்கள் தோற்றால் அவர்களை என்ன செய்யலாம்? என்று மன்னனைப் பார்த்துக் கேட்டார். மன்னன் பதிலுரைப்பதற்குள், பொறுத்திருக்க மாட்டாத சமணர்கள், இம்முறை நாங்கள் தோற்றால் எங்களைக் கொற்றவன் கழுவில் ஏற்றட்டும். இது எங்கள் உறுதிமொழி என்று ஆத்திரத்தோடு பதிலுரைத்தார்கள்.

மேல்

பகைமையினாலும், பொறாமையினாலும் சமணர்கள் கூறியது கேட்டு நெடுமாறன் அனைவரையும் வைகையாற்றிற்குப் புறப்படுமாறுபணித்தான். ஞானசம்பந்தர் முத்துச் சிவிகையில் ஏறி வைகை ஆற்றிற்குப் புறப்பட்டார். மன்னன் வெண் புரவி மீது ஏறி முன் செல்லப் பின்னால் அமைச்சரும், அரசியாரும் புலவர்களோடும், சேனைகளோடும் புறப்பட்டனர். கார்கால மாதலால் வைகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. எல்லோரும் வைகை ஆற்றின் கரையில் பொங்கி வரும் வெள்ளமெனத் திரண்டு வந்திருந்தனர். திருவெண்ணீற்று அடியார்களும் அன்பர்களும் திரள் திரளாகக் கூடி இருந்தனர். பாண்டியன் நெடுமாறன், மங்கையர்ச்சரகியார் குலச்சிறையார் ஒருபுறமிருந்தனர். அவர்களுடன் அமைதியே உருவாகி, அருள்வடிவமாய் ஞானசம்பந்தர் பொற்பீடத்தில் அமர்ந்திருந்தார். மறுபுறத்தில் சமணர்கள் சூழ்ச்சியே உருவெடுத்து நின்று கொண்டிருந்தனர். மன்னன் ஏடுகளை வைகையாற்றில் இடுங்கள் என்று சமணர்களைப் பார்த்துச் சினத்துடன் கூறினான். சமணர்கள் தமது கொள்கைகள் தீட்டப்பட்ட அத்திநாத்தி என்னும் ஏட்டை வைகை ஆற்றில் வீசி எறிந்தனர். அத்திநாத்தி சமணர்களின் மூலமந்திரம். அத்தி என்றால் உள்ளது உண்டு என்றும், நாத்தி என்றால் இல்லாதது இல்லை என்றும் பொருள்படும். உள்ளதை உடன் மறுத்து இல்லதென்று கூறுவதாகும். ஏடு, நீரில் சுற்றிச் சுழன்று ஓடும் நீரோடு ஓடிற்று. நிலை தளர்ந்த சமணர்கள் சிந்தையற்றுச் செயலற்றுச் செய்வதறியாது திகைத்து நின்றனர். ஏடு சமணர்களையே நட்டாற்றில் விட்டுச் சென்றது.பாண்டியன் நெடுமாறன் ஞானசம்பந்தரின் உள்ள குறிப்பினை அறியும் பொருட்டு அவரை நோக்கினான். அருள் வடிவாய் எழுந்தருளியிருந்த திருஞான சம்பந்தப் பெருமான், அந்தணர் வானவர் ஆனினம் எனும் கௌசிகப் பண்ணில் அமைந்த பன்னிரண்டு திருப்பாடல்களைக் கொண்ட திருப்பாசுரத்தை திரு ஏட்டில் எழுதி வைகையாற்றில் மிதக்க விட்டார். வைகையாற்றில் வீழ்ந்த ஏடு வெள்ளப் பெருக்கை கிழித்துக் கொண்டு எதிர்நோக்கிச் சென்றது.பிறவிப் பெருங்கடலில் பெருந்தவத்தினையுடைய மெய்ஞ்ஞானியரின் மனமானது, எதிர்த்துச் சென்று வெற்றி காண்பது போல், நீரை எதிர்த்துச் சென்றது ஏடு.

மேல்

சைவ சமயமே மெய் சமயம் என்பதை உலகோர்க்கும், சமணர்களின் மங்கிய மூளைக்கும் உணர்த்தியது. கரைபுரளும் வைகையில் ஏடு எதிர்த்துச் செல்லும் அதிசயத்தை அனைவரும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.பாண்டியன் நெடுமாறனும் ஆனந்தம் மேலிட பக்தியால் உள்ளத்தில் புத்துணர்ச்சி பொங்கி எழ, தன்னையறியாமலேயே உந்தப்பட்டு, சொல்ல முடியாத பெரும் சக்தியால், தலைநிமிர்ந்து, வைகையை எட்டிப் பார்த்தான். அப்பொழுது அவனையறியாமலேரயே கூன் நிமிர்ந்து கூத்தாடினான்.வைகையிலிட்ட பாசுரத்தின் முதற் பாட்டில் இறைவன் அருளாலே வேந்தனும் ஓங்குக என்று ஞானசம்பந்தர் பாடியருளியதால் தென்னவனின் கூன் நிமிர்ந்தது.பாண்டிய மன்னனின் கூன் நிமிர்ந்தாற் போன்று குன்றியிருந்த சைவம் மீண்டும் நிமிர்ந்தது. சமணத்திற்குக் கூன் விழுந்தது. மேலும் கூனிக் குறுகி, தலை சாய்ந்து இருக்கும் இடம் தெரியாமல் மறைந்தே போனது.அமைச்சர் குலச்சிறையார் ஆற்றிலே எதிர்த்துச் செல்லும் ஏட்டினை எடுப்பதற்காகக் குதிரை மீது வேகமாக புறப்பட்டார். வெள்ளத்திலே ஓடம் போல் செல்லும் தெய்வ ஏடு கரையிலே தங்கும் வண்ணம், வன்னியும், மந்தமும் எனத் தொடங்கும் பதிகத்தை ஞானசம்பந்தர் பாடத் தொடங்கியதும் திரு ஏடு திருவேடகம் என்னும் தலத்தில், எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடத்தில் போய்த் தங்கியது.அவ்விடத்தை அடைந்த அமைச்சர் பரிதியினின்றும் இறங்கி ஏட்டுச் சுவடிகளை எடுத்தார். திருவேடக இறைவனை வணங்கி குதிரை மீது அமர்ந்து சம்பந்தர் இருக்குமிடத்திற்கு வந்தார். குதிரையினின்றும் இறங்கி ஏட்டுச்சுவடியை சுமந்து வந்து சம்பந்தர் திருமுன் வைத்தார் அமைச்சர். விண்ணவர் தண்மலர் பொழிந்தனர். பல்வகை இன்னிசைக் கருவிகள் ஒருங்கே ஒலித்தன. அன்பர்களும், அடியார்களும் சிவநாமத்தை விண்ணெட்ட முழக்கினர். ஞானசம்பந்தரை வாழ்த்தினர். சமணர்கள் கழுவிலேறி உயிர் நீத்தார்கள்.தென்னவன் நெடுமாறன் சைவ சமயத்துக்குப் பணிந்தான். திருவெண்ணீற்றின் உயர்வையும், பெருமையையும் உணர்ந்தான். மங்கையர்க்கரசியாரும், அமைச்சரும் அகமகிழ்ந்தனர்.திருவாலவாய் அண்ணலைச் சிந்திக்கத் தவறிய தன் தவற்றை எண்ணிக் கலங்கினான். மன்னன் ஞானசம்பந்தரை வணங்கித் திருநீறு பெற்றான்.பாண்டியன், நின்றசீர் நெடுமாற நாயனார் என்ற சிறப்புப் பெயர் உலகு போற்ற வாழ்ந்தான்.திருஞானசம்பந்தர் சில காலம் மன்னனின் விருந்தினராகத் தங்கியிருந்து, அனுதினமும் ஆலவாய் அண்ணலை வணங்கிப் பல திருப்பதிகங்கள் பாடி வந்தார்.

மேல்

இதுசமயம் திருஞானசம்பந்தரின் தந்தை சிவபாத விருதயர் சீர்காழியினின்றும் புறப்பட்டு, மதுரைக்கு வந்தார். சிவக்கொழுந்தை கண்டார். அன்பின் பெருக்கால் ஆரத்தழுவி ஆனந்தக் களிப்பு எய்தினார்.தகப்பனாரைக் கண்ட பெருமிதத்தில் ஞானசம்பந்தர் தோணியப்பரைப் போற்றிப் பதிகம் ஒன்றை பாடினார். சிறிது காலம் சம்பந்தருடன் தங்கியிருந்து சிவ தரிசனத்தால் சிந்தை மகிழ்ந்த சிவபாதவிருதயர், சீர்காழிக்குத் திரும்பினார்.அதன் பிறகு பாண்டிய நாட்டுத் திருத்தலங்களைத் தரிசிக்க ஞானசம்பந்தர் தென்னவனுடனும், தேவியாருடனும், அமைச்சருடனும் புறப்பட்டார்.பாண்டிய நாட்டிலுள்ள திருத்தலங்கள் பலவற்றை தரிசித்துப் பதிகம் பாடிப் களிப்பெய்திய ஞானசம்பந்தர் பாண்டியனிடம் விடைபெற்றுக் கொண்டு சோழ நாட்டை நோக்கிப் புறப்பட்டார். மன்னன் சம்பந்தப் பெருமானுக்குப் பிரியாவிடை கொடுத்து அனுப்பினார்.ஞானசம்பந்தர் சோழ நாட்டை அடைந்தார். ஆங்காங்கே உள்ள கோயில்களைத் தரிசித்து மகிழ்ந்தார்.முள்ளிவாய் எனும் ஆற்றின் கரைதனை அடைந்தார். ஆற்றின் எதிர்க்கரையில் அமைந்துள்ள திருக்கொள்ளம் பூதூர் இறைவனைத் தரிசிக்க எண்ணங்கொண்டார். ஆனால் ஆற்றில் வெள்ளம் மிகுந்திருக்கவே ஓடக்காரர்கள் ஓடம் செலுத்த மறுத்து நின்றார்கள்.ஞானசம்பந்தர், அடியார்களுடன் ஓடமொன்றில் ஏறிக்கொண்டார். அதனை அவிழ்த்து விடச் சொன்னார். அவர்களும் அவ்வாறே செய்தனர்.சம்பந்தர், கொட்டமே கமழும் என்னும் பதிகத்தைப் பாட, ஓடம் தானாகவே சென்று எதிர்கரையை அடைந்தது.அக்கரையை அடைந்த ஞானசம்பந்தர் எம்பெருமானை வணங்கி வழிபட்டார். அங்கியிருந்து பல திருத்தலங்களைத் தரிசித்த வண்ணம் போதி மங்கை என்ற இடத்தை அடைந்தார். சிவநாமத்தை முழக்கிய வண்ணம் வந்து கொண்டிருந்த ஞானசம்பந்தரைக் கண்டு போதி மங்கை பவுத்தர்கள் சினங்கொண்டு தங்கள் தலைவனான புத்தநத்தி என்பவனிடம் சென்று முறையிட்டனர். ஞானசம்பந்தருடன் வந்த அடியார்களின் உள்ளம் பவுத்தர்களின் போக்கைக் கண்டு வருந்தியது. அவர்கள் ஞானசம்பந்தரிடம் முறையிட்டார்கள்.அடியார்கள் மொழிந்ததைக் கேட்டுச் சினங்கொண்ட ஞானசம்பந்தர், புத்த நந்தியின் தலையில் இடி விழக்கடவது என்று பதைப்புடன் சபித்தார். மறுகணம் புத்த நந்தி இடியுண்டு அழிந்து மடிந்தான். பவுத்தர்களோ அஞ்சி ஓடினர்.இதை மனத்தில்கொண்டு வெகுண்ட பவுத்தர்கள் சாரிபுத்தன் என்பவனைத் தங்கள் தலைவனாகக் கொண்டு ஞானசம்பந்தரை வாதில் வெல்லக் கருதி வந்தனர்.சம்பந்தர் அப்புத்தர்களையும் வாதில் வென்று வெற்றிவாகை சூடினார். பவுத்த சமயமும் சமணத்தின் வழி சென்று சம்பந்தரிடம் தோற்றது. ஞானசம்பந்தர் மீண்டும் தமது சிவயாத்திரையைத் தொடர்ந்தார். தொண்டர்களுடன் அவர் சிவிகையில் புறப்பட்டு திருக்கடலூரை அடைந்தார். அங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பணிந்து இன்புற்றார்.

மேல்

ஞானசம்பந்தருக்கு அப்பரடிகளைக் காண வேண்டும் என்ற பேரவா எழுந்தது. அப்பரடிகள் எங்கே இருக்கிறார்கள்? என அடியார்களைக் கேட்டார்.அடியார்கள் மூலம் அப்பர் திருப்பூந்துருத்தியில் எழுந்தருளி இருப்பதை அறிந்து, அத்தலத்தை நோக்கி அடியார் குழாத்தோடு புறப்பட்டார்.ஞானசம்பந்தர் வருவதை முன்பே அறிந்திருந்த அப்பரடிகள், ஞானவள்ளலை எதிர்ச் சென்று வரவேற்று வழிபடப் பேராவல் கொண்டார்.தொண்டர்கள் புடைசூழ வந்து கொண்டிருக்கும் ஞானசம்பந்தரைக் கண்டு பேருவகை கொண்ட அப்பரடிகள், எவரும் அறியாத வண்ணம், அவ்வடியார் கூட்டத்திடையே புகுந்து, அவர் எழுந்தருளிவரும் சிவிகையைத் தாங்குவோருடன் ஒருவராய்ச் சேர்ந்துகொண்டு தாமும் சுமந்தார்.தம்மை எதிர்கொண்டு அழைத்துச் செல்லவரும் தொண்டர் கூட்டத்தைக் கண்டு, களிப்பெய்திய ஞானசம்பந்தர், அக்கூட்டத்திடையே, அப்பரடிகளைக் காணாது, எங்குற்றார் அப்பர்? எனக் கேட்க, அப்பரடிகள் ஒப்பரிய தவம் புரிந்தேன். ஆதலால் உம் அடிகளை இப்பொழுது தாங்கி வரப்பெற்று உய்ந்தேன் என மொழிந்தார்.அப்பரடிகளின் குரலைக் கேட்டு, ஞானசம்பந்தர் சிவிகையினின்று இறங்கி, அப்பர் அடிகளைப் பார்த்து திகைத்து இங்ஙனம் செய்யலாமா? எனக் கேட்டார்.அதற்கு அவர் பின் எவ்வாறு செய்தல் தகும்? என்று கேட்டவாறே பிள்ளையாரை வணங்கினார்.அடியார்களும், தொண்டர்களும் மனம் உருகும் இக்காட்சியைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்து நின்றனர்.இரு சிவச் செம்மல்களும் ஒருவரையொருவர் ஆரத்தழுவிக் களித்து மகிழ்ந்தனர். இருவரும் திருப்பூந்துருத்தி எம்பெருமானை வணங்கி வழிபட்டனர்.அப்பரடிகள் ஞானசம்பந்தரிடம் தொண்டை மண்டலத்திலுள்ள சிவத்தலங்களைப் பற்றிக் கூறிக்களிப்பெய்தினார். அவர் மொழிந்தது கேட்டு ஞானசம்பந்தருக்குத் தொண்டைநாட்டு சிவத்தலங்களைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆசை மேலிட்டது. ஓரிரு நாட்களில் ஞானசம்பந்தர் அப்பரடிகளிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார். நேராகச் சீர்காழியை அடைந்தார். திருத்தொண்டர்களுடன் சிவபாதவிருதயர் சம்பந்தப்பெருமானை எல்லையிலே வரவேற்று எதிர்கொண்டு அழைத்தார்.அனைவரும் கோயிலுக்குச் சென்றனர். திருஞான சம்பந்தர் திருத்தோணியப்பரை வழிபட்டு, உற்று உமைச் சேர்வது மெய்யினையே எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடிப் பரவசமுற்றார். தந்தையாருடன் இல்லத்திற்குச் சென்றார். சீர்காழியில் சில காலம் பெற்றோர்களுடனும், சீர்காழி அன்பர்களுடனும் தங்கியிருந்து தினமும் தோணியப்பரைத் தரிசித்து சந்தோஷித்தார். மீண்டும் சிவ யாத்திரையைத் தொடங்கினார். தில்லை, காஞ்சி மற்றும் பல தலங்களைத் தரிசிக்கத் திருவுள்ளங் கொண்டு அன்பர்கள் புடைசூழ புறப்பட்டார் சம்பந்தர். தில்லைச் சிற்றம்பலத்தை வந்தடைந்த ஞானசம்பந்தர் நடராசப் பெருமானைத் பணிந்து எழுந்தார். அங்கிருந்து புறப்பட்டுத் திருத்தலங்கள் பலவற்றைக் கண்டுகளித்து தேவாரப் பாடல்ளைப் பாடியவாறு திருவோத்தூரை அடைந்து வேதபுரீசரரை வணங்கி வழிபட்டார்.இத்திருத்தலத்தில் எம்பெருமான் அமரர்க்கு வேதங்களை ஓதுவித்து அருளிச் செய்ததாகவும், வேதங்களுக்கு இறைவன் தமது திருக்கூடத்தினை காட்சி அளித்து அருளியதாகவும் வரலாறு கூறுகிறது. இதுபற்றியே இப்பெயர் பெற்றது. அத்து என்றால் வேதம் என்று பொருள்!திருஞானசம்பந்தர் அத்திருத்தலத்தில் தங்கியிருந்து வேதபுரீசுரரை, தினமும் வணங்கினார். அந்நாளில் வியக்கத்தக்க நிகழ்ச்சி ஒன்று நடந்தது.அரனாரிடத்தும், அடியார்களிடத்தும் எல்லையில்லாப் பேரன்புடைய திருத்தொண்டர் ஒருவர் திருஞானசம்பந்தரைச் சந்தித்துத் தமது குறையை விளக்கினார்.

மேல்

சீர்காழிப் பெருமானே! அடியேன் நட்ட சில பனைகள் காய்க்காத பனைகளாக இருக்கின்றன. அதனால் சமணர்கள் எமக்கு வெறுப்பு ஏற்படுமாறு என்னிடம் ஆண் பனை எங்காகிலும் காய்ப்பதுண்டா எனக் கேட்டுக் கேலி செய்கின்றனர் என நெஞ்சு நெகிழக் கூறிக் கலங்கினார். அதுகேட்டு புகலிவேந்தர், பூ தேர்ந்தாய் எனத் தொடங்கும் பதிகத்தைப் பாட, அப்போதே ஆண் பனைகள் எல்லாம் நற்பனைகளாக மாறி காய்த்துக் குலைகள் விட்டன.ஞானசம்பந்தரின் அருள் வல்லமையைக் கண்டு அனைவரும் வியந்தனர். இழித்துக் கூறிய சமணர் சிலர் அஞ்சினர். பலர் சைவ மதத்தில் சேர்ந்தனர்.சில நாட்களில் அங்கியிருந்து புறப்பட்ட ஞானசம்பந்தர் பல திருத்தலங்களைத் தரிசித்துக் கொண்டே காஞ்சியை அடைந்தார்.காஞ்சிபுரத்துக் தொண்டர்கள் புகலி மன்னரை வரவேற்க நகரை கவின்பெற அழகு செய்தனர். கமுகு, வாழை, கொடி, மாலை முதலியவை நிறைந்த எழில்மிகுப் பந்தல்கள் வீதியெங்கும் அமைத்தனர். பாவையர் நீர்தெளித்து வண்ணவண்ண கோலமிட்டு பொன்விளக்குகள் ஏற்றினர். நறுமலர் தூவினர். மங்கள வாழ்த்தொலி எழுப்பினர். மறைவேதம் எங்கும் முழங்கியது. காஞ்சியின் எல்லையிலே அன்பர்களும், தொண்டர்களும் மங்கல மங்கையர்களும் புடை சூழ்ந்து கொண்டு காத்திருந்தனர். எல்லையை வந்தடைந்த ஞானசம்பந்தரை பூரண பொற்கும்ப கலசங்கள் வைத்து எதிர்கொண்டழைத்து, நகருள் எழுந்தருளச் செய்தனர். காமகோட்டம் அழைத்துச் சென்றனர். கண்களிலே பக்தி வெள்ளம் பெருக பதிகம் ஒன்றைப் பாடிப் பரவியவாறு காமக் கோட்டத்தில் காஞ்சி காமாக்ஷியைத் தொழுதெழுந்தார்.ஏகாம்பரேசுவரர் ஆலயம் வந்து பெருமானை தூய பதிகத்தால் ஏற்றிப் பணிந்தார்.காஞ்சியிலுள்கள பல சிவ சந்நதிகளுக்கு விஜயம் செய்தார் சம்பந்தர்! காஞ்சியம்பதியில் சில நாள் தங்கியிருந்து திருப்பணிகள் பலபுரிந்த சம்பந்தர் அங்கியிருந்து புறப்பட்டு மற்றும் பல சிவத்தலங்களைத் தரிசித்துக் கொண்டே திருக்காளத்திமலைத் தரிசனத்தை முடித்துக் கொண்டு, திருவொற்றியூரை வந்தடைந்தார். விடையவன் எனத் தொடங்கும் பாசுரம் ஒன்றைப் பாடியவாறு முத்துச் சிவிகையகன்று இறங்கித் திருக்கோயிலுள் சென்று திருவொற்றியூரான் திருத்தாளினைப் போற்றிப் பணிந்தார். திருவொற்றியூரானை விட்டுப் பிரிய மனம் வராது ஞானசம்பந்தர் சில காலம் அங்குள்ள மடம் ஒன்றில் தங்கியிருந்து நாள்தோறும் இறைவனை நாள்தோறும் இறைவனை வழிபட்டு வரலானார். திருமயிலையில் சிவநேசர் என்னும் பெயருடைய வணிகர் குடியில் பிறந்த வள்ளல் ஒருவர் இருந்தார்.

மேல்

அவர் சிவனாரிடத்தும், சிவனடியார்களிடத்தும் அன்புடையவராய்த் திகழ்ந்தார். எம்பெருமானினும் மெய்ப் பொருளையே ஆராய்ந்து அறியும் ஆற்றல்மிக்க அருந்தவத்தை உணர்ந்து வாழ்வை நடத்தி வந்தார். பொய்மை இல்லாத இவ்வணிக குலப்பெருந்தகையார் வாணிபம் செய்து பெரும் பொருள் ஈட்டினார்.இவர்க்கு அரனார் அருளால் பூமகளைப் போன்ற பொலிவும், நாமகளைப் போன்ற அறிவும் உடைய பூம்பாவை என்னும் பெயருடைய மகள் இருந்தாள். அம்மகள் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வந்தாள். ஞானசம்பந்தரை மனதிலே தியானித்து அவரையே தன் குலத்தின் முழுமுதற் கடவுள் எனக் கருதி வந்த சிவநேசர் தமது அருமை மகள் பூம்பாவையையும், பொன்னையும், பொருளையும், தன்னையும் திருஞான சம்பந்தருக்கே அர்ப்பணம் செய்வதாய் உறுதிபூண்டார். அதனால் தம் மகளைக் கன்னிமாடத்தில் வளர்த்து வரலானார். ஒருநாள் தோழியருடன் மலர்வனத்திற்கு மலர் கொய்யச் சென்ற பூம்பாவையை அரவம் ஒன்று தீண்டிவிட்டது. சிவநேசர் விஷத்தை நீக்க மந்திரம், வைத்தியம், மாந்திரீகம் எல்லாம் செய்வதும், அனைத்தும் பலிக்காமல் பயனற்றுப் போயின. பூம்பாவை உடல் பூவுலகை விட்டு மறைந்தது. துயரக் கடலிலே ஆழ்ந்த சிவநேசர் செய்வதறியாது திகைத்தார். தகனம் செய்யப்பட்ட மகளின் சாம்பலையும், எலும்பையும் ஒரு குடத்திலிட்டு கன்னி மாடத்தில் வைத்துக் காப்பிட்டார். இவ்வாறு இருந்து வரும் நாளில்தான் ஞானசம்பந்தர் திருவொற்றியூருக்கு எழுந்தருளினார். சிவநேசர் மகிழ்ச்சி கொண்டார். தமது தவப் பயனால்தான் அவர் எழுந்தருளினார் என்று எண்ணினார். திருவொற்றியூர் சென்று சம்பந்தப் பெருமானைத் திருமயிலைக்கு எழுந்தருளுமாறு பிரார்த்தித்தார். சம்பந்தர் சம்மதித்தார். சிவநேசர் மகிழ்ச்சி மிகப்பூண்டு சம்பந்தப் பெருமானை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை தொடங்கினார். திருவொற்றியூரிலிருந்து மயிலை வரை அலங்காரம் செய்தார். ஞானசம்பந்தரை வரவேற்க பல வகையான ஏற்பாடுகளைச் செய்தார். ஞானசம்பந்தர் மயிலையில் எழுந்தருளியிருக்கும் கபாலீச்சுரரைத் தரிசிக்க அடியார்களுடன் முத்துச் சிவிகையில் புறப்பட்டு வந்து கொண்டே இருந்தார். சிவநேசர், மகிழ்ச்சி பொங்க, எதிர்சென்று ஞானசம்பந்தரை வரவேற்று வணங்கினார்.ஞானசம்பந்தர் சிவநேசருடன் மயிலையை அடைந்து கோயிலில் எழுந்தருளியிருக்கும் அருள் தரும் அம்பிகை கற்பகாம்பாளையும், கருணைக் கடலான கபாலீச்சுரரையும் பைந்தமிழ்ப் பாசுரத்தால் போற்றினார்.

மேல்

அடியார்கள் மூலம் சிவநேசருக்கு ஏற்பட்ட சோகக்கதையை முன்னதாகவே கேள்விப்பட்டிருந்த ஞான சம்பந்தர் சிவநேசரிடம், உம்முடைய மகளின் எலும்பு நிறைந்த குடத்தை மதிற்புற வாயிலின் முன்பு கொண்டு வருக என்று பணித்தார். சிவநேசர் கன்னி மாடத்தில் வைத்திருந்த குடத்தை எடுத்து வந்து கோயிலுக்குப் புறத்தே ஞானசம்பந்தர் எழுந்தருளியிருந்த முத்துச் சிவிகையின் முன்னால் வைத்தார்.ஞானசம்பந்தர் கபாலீச்சுரரைப் பணிந்தவாறு, மட்டிட்ட புன்னையைக் கானல் மடமயிலை என்னும் திருப்பதிகத்தைப் பாடத் தொடங்கினார். முதல் பாசுரத்திலேயே பூம்பாவாய் என விளித்தார்.மண்ணிலே பிறந்தவர்கள் பெறும் பயன் பிறைமதி சூடிய அண்ணலாரின் மலரடிகளுக்கு அமுது செய்வித்தலும், கண்களால் அவர் நல்விழாவைக் காண்பதும்தான் என்பது உண்மையாகும் என்றால் உலகோர் காண நீ வருவாய் என உரைத்தார்.முதற் பாட்டிலே வடிவு பெற்று அடுத்த எட்டுப் பாட்டுக்களில் பன்னிரண்டு வயதை எய்தினாள் பூம்பாவை.சமணரைக் குறிப்பிட்டு பாடி முடித்ததும் குடம் உடைந்தது. பூம்பாவை பொங்கி எழும் எழிலோடு கூம்பிய தாமரை மலர்ந்தாற்போல் திருமகளை ஒத்தப் பேரழகு மிக்க வடிவோடு எழுந்து நின்றாள்.பூம்பாவை குடத்தினின்றும் வெளியே வந்து இறைவனை வழிபட்டு ஞானசம்பந்தரின் திருவடித்தாமரைகளில் வீழ்ந்து வணங்கி எழுந்தாள். சிவநேசரும், அடியார்களும் வியக்கத்தக்க இவ்வருட் செயலைக் கண்டு மெய்யுருகி நின்றனர்.சிவநேசர் ஆளுடைப் பிள்ளையாரிடம் தன் மகளை மணம் புரிந்து வாழ்த்தியருள வேண்டும் என பணிவன்போடு பிரார்த்தித்தார். ஞானசம்பந்தர் புன்முறுவல் பூக்கச் சிவநேசரை நோக்கி, உமது மகள் அரவந்தீண்டி இறந்துவிட்டாள். ஆனால் இவளோ அரனார் அருளால் மறுபிறப்பு எடுத்துள்ளாள். எனவே, இவள் என் மகளுக்கு ஒப்பாவாளேயன்றி நான் மணம் செய்ய ஏற்றவளல்ல என மொழிந்தார்.சிவநேசரும் உண்மையை உணர்ந்து தெளிந்தார். அவர் ஞானசம்பந்தரின் திருவடியை வணங்கி தம் மகளோடு திரும்பினார்.பூம்பாவை முன்போல கன்னி மாடத்தில் வாழ்க்கையைத் தொடங்கினாள். சிவனாரை எண்ணித் தவமிருந்து இறுதியில் அவரது திருவடித் தாமரையை அடையும் சிறந்த ஆற்றலையும் பெற்றாள்.இவ்வாறு பூம்பாவைக்கு மறுபிறப்பு கொடுத்த ஞானசம்பந்தர் கற்காம்பாள் சமேத கபாலீச்சுரரை வணங்கி விட்டு தமது புண்ணிய யாத்திரையை புனித மண்ணில் துவங்கினார். திருவான்மியூர், திருஇடைச்சுரம், திருக்கழுக்குன்றம், அச்சிரப்பாக்கம், திருவரசிலி, திருப்பனங்காட்டூர் முதலிய தலங்களைத் தரிசித்தவண்ணம் மீண்டும் தில்லையை வந்தடைந்தார்.

மேல்

தில்லைவாழ் அந்தணர்கள் எதிர்கொண்டு அழைக்கத் திருஞானசம்பந்தர் தில்லை அம்பல நடராசப் பெருமானைத் தரிசித்தார்.பைந்தமிழ்ப் பாமாலையால் ஆடும் கூத்தனைக் கொண்டாடினார். அங்கியிருந்து புறப்பட்டு முத்துச்சிவிகையில் தமது பிறந்த ஊரான சீர்காழியை வந்தடைந்தார். பெற்றோர்களும் மற்றோர்களும் மேளதாளத்துடன் பிள்ளையாரை வரவேற்றனர். எல்லையில் நின்றவாறே தோணியப்பரைச் சேவித்து அம்பலத்துள் எழுந்தருளினார். பிரம்மபுரீசுரர் திருமுன் சைவப்பிழம்பாய் நின்று வழிபட்ட ஞானசம்பந்தப்பிரான் அன்பர்களும் தொண்டர்களும் புடைசூழத் தமது திருமாளிகைக்கு எழுந்தருளினார். இத்தருணத்தில் திருமுருக நாயனார். திருநீலநக்க நாயனார் முதலிய சிவனருட் செல்வர்கள் மற்றும் அன்பு அடியார்கள் தங்கள் சுற்றத்தாருடன் சீர்காழிக்கு வந்தனர். ஞானசம்பந்தர் அவர்களை வணங்கி வரவேற்றார்.ஞானசம்பந்தர் பெருமகிழ்ச்சியோடு அவர்களது வருகையைச் சிறப்பித்துப் பெருமையுற்றார். அவ்வடியார்களும் சம்பந்தரைப் போற்றி பணிந்தனர்.அவ்வடியார் களோடு தினந்தோறும் திருத்தோணி யப்பரை வழிபட்டு சிவப்பாடல்களைப் பாடி வந்தார் சம்பந்தர்.இவ்வாறு சீர்காழியில் தங்கியிருந்து தோணியப்பரின் தாளினுக்குத் தண்தமிழ்ப் பதிகப் பாமாலைகள் பல சூட்டி மகிழ்ந்த ஞானசம்பந்தருக்கு திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று பெற்றோர்களும், சுற்றத்தார்களும் தீர்மானித்தனர்.அவர் ஞானசம்பந்தரை அணுகி, வேதநெறியின் முறைப்படி வேள்விகள் பல செய்வதற்கு இத்தருணத்தில் திருமண வாழ்க்கையை மேற்கொள்வதுதான் மிக்கச் சிறப்புடையதாகும் என்று செப்பினர்.அவர்கள் மொழிந்தது கேட்டு, உங்கள் முடிவு உலகோரால் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகும் என்பதனை நான் மறுப்பதாக இல்லை. இருந்தாலும் தற்போது மண வாழ்க்கையை மேற்கொள்வதை நான் சற்றும் விரும்பவில்லை என்று விடையிறுத்தார்.உலகப்பற்று எனும் பாசத் தொடர்பை விட்டு அகலும் அரும்பெரும் நிலையை இறைவன் திருவருளால் அடைந்துவிட்ட ஞானசம்பந்தர் திருமணம் செய்து கொள்ள இசையவே இல்லை. ஆனால் சிவபாதவிருதயரும், மறையவர்களும் மறையவர்களுக்குரிய அறத்தை எடுத்துக்கூறி அவரை வைதீக நெறிப்படி ஒழுகுமாறு வற்புறுத்தினர். இறுதியில் ஞானசம்பந்தர் அவர்களது வேண்டுகோளுக்கு ஒருவாறு இசைந்தார். அனைவரும் பெரும் மகிழ்ச்சி பூண்டனர்.

மேல்

திருப்பெருண நல்லூரில் வாழும் நம்பியாண்டார் நம்பியின் திருமகளே ஞானசம்பந்தருக்கு மணமகளாக வரத் தகுதியுடையவள் என்பதைத் தீர்மானித்தனர். அக்குலமகளையே மணம் முடிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தனர்.கணித மங்கல நூலோர் வகுத்துக் கொடுத்த சிறந்த ஓரையில் திருமண நந்நாள் குறிக்கப்பட்டது. நாளோலை உறவினருக்கும், சுற்றத்தாருக்கும் அனுப்பப்பட்டது. திருமணத்திற்கு ஏழு நாட்கள் முன்பே சுற்றமும், நட்பும் சிவபாதவிருதயர் பெருமனையில் மகிழ்ச்சி பொங்க வந்து கூடினர்.திருஞானசம்பந்தரின் திருமணத்தை விண்ணவர் வியக்குமளவு மிக்கச் சிறப்புடன் நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினர்.எங்கும் விதவிதமான அலங்காரங்கள் செய்தனர். முத்து வளைவுகள் அமைத்து அழகிய மாவிலைத் தோரணங்களும், புத்தம் புது மலரால் கட்டப்பட்ட பூமாலைகளும் தொங்க விட்டனர்.வீதி முழுவதும், ஆலயத்தைச் சுற்றியும் மிகப் பிரம்மாண்டமான அலங்காரப் பந்தல்கள் போடப்பட்டன.முரசங்கள் முழங்க, இசைக் கருவிகள் ஒலிக்கப் பொன்மணிப் பாலிகை மீது புனித முளையை நிறைத்து பாலும் நீரும் கலந்து தெளித்தனர். மாடமாளிகைகளையும், மணிமண்டபங்களையும் எண்ணத்தைக் கவரும் வண்ண ஓவியங்களால் அழகுற அலங்கரித்தனர். வேதியர் குலப் பெண்கள் வாயிற் புறங்களில் அழகுக் கோலமிட்டனர்.தீபங்களை ஏற்றினர். பொற்சுண்ணங்களையும், மலர்த் தாதுக்களையும் எங்கும் தூவினர். புண்ணிய புது நீரைப் பொற்குடங்களில் நிறைத்தனர்.சிவபாதவிருதயர் சீர்காழியிலுள்ள திருத்தொண்டர்களை வரவேற்று வணங்கினார். திருமணத்திற்கு வருகை தந்துள்ளோரை உபசரித்து மனம் மகிழ்ச்சியுற செய்தார். தான தருமங்களைச் செய்து கொண்டேயிருந்தார். எங்கும் மகிழ்ச்சி வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடியது. திருமணத்திற்கு முதல் நாள் மறையோர்களும், தொண்டர்களும் திருஞான சம்பந்தருக்கு இறைவன் திருவருள் பொருந்திய திருக்காப்பு நாணினைச் செய்து அத்திருக் காப்பு நாணினை நகர்வலம் கொண்டு வந்தனர். தேவகீதம் ஒலிக்க மங்கள முழக்கத்துடன் மணமலரும், சாந்தும், பொன் அணிகளும், அழகிய துகிலும் அணியப்பெற்று, புண்ணியத்தின் திருவுருவத்தைப் போல் மலரணையில் எழுந்தருளியிருந்த திருஞானசம்பந்தரின் திருக்கையில் மறைமுமைப்படி வேதியர்கள் திருக்காப்பு நாணினைக் கட்டினர்.

மேல்

மறுநாள் திருமணத்தன்று வைகறைப் பொழுது துயிலெழுந்த ஞானசம்பந்தர் திருத்தோணியப்பர் தரிசனத்திற்குப் பிறகு திருமணச் சடங்கினை மேற்கொள்ளலானார். சீர்காழிப் பதியிலிருந்து பொன்னொளி பொருந்திய முத்துச் சிவிகையில் அமர்ந்து திருநல்லூர்ப் பெருமணம் என்னும் திருப்பதிக்கு எழுந்தருளலானார்.இயற்கை அருளோடும், இறைவன் அருளோடும்முத்துச் சிவிகைக்கு முன்னும் பின்னும் மங்கள வாத்தியங்களும், தேவ துந்துபிகளும் முழங்கின. சிவயோகிகள் உற்றார் உறவினர் புடைசூழ திருஞானசம்பந்தர், திருசடைபிரானின் சேவடியைத் தமது திருவுள்ளத்தில் சிந்தித்தவாறு திருநல்லூர்ப் பெருமணம் என்னும் தலத்தை அடைந்தார்.திருநல்லூர்ப் பெருமணத்து அடியார்களும், பெண்வீட்டார் பலரும் ஞானசம்பந்தரை எதிர்கொண்டழைக்க எல்லையிலேயே காத்திருந்தனர்.ஞானசம்பந்தர் முத்துச் சிவிகையில் எல்லையை வந்தடைந்ததும், வீணை ஒலியும் வேத ஒலியும் வாழ்த்தொலிகளும் விண்ணை முட்டின. அடியார்கள் ஞானசம்பந்தரை வரவேற்று திருவீதி வழியாக கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். சிவன் மீது சுந்தரத் தமிழில் பாட்டிசைத்துப் பணிந்து மனம் குளிர்ந்த ஞானசம்பந்தர் பரமன் அருள் பெற்றுப் புறப்பட்டார். கோயிலின் புறத்தே உள்ள மடத்தில் ஞானசம்பந்தர் எழுந்தருளினார். ஞானசம்பந்தரைத் திருமண கோலத்திலே அணிபுனையத் தொடங்கினார். அத்தொழிலில் தேர்ச்சி பெற்ற முதிய அந்தணர்கள் அவரைப் பொற்பீடத்தில் அமரச் செய்து, தூய திருமஞ்சன நீரை எண்ணற்ற பொற்குடத்தில் கொண்டு வந்து திருநீராட்டினர்.வெண்பட்டாடையினை அணிவித்தனர். நறுமண மிக்க சந்தனக் கலவையை அவரது திருமேனியில் பூசினர். திருவடிகளிலே முத்துக் கோவைகளையுடைய இரத்தின வளையினைப் புனைந்தனர்.முத்து மாலைகளைக் கொத்தாகத் திரட்டிய அணி வடத்தினை மணிக்கட்டிலே அழகுறப் புனைந்தார்கள். பொற்கயிற்றிலே பரு முத்துக்களைக் கோர்த்துத் திருவரையில் அரைஞாணாக விளங்கச் செய்தனர்.முத்து வடங்களாலாகிய அரைப்பட்டையின் மேல் வீரசங்கிலியினைப் புனைந்தனர். முத்துக் கோரையாலாகிய பூணூலினை முறைப்படி மந்திரம், வேதம் ஓதி மாற்றி அணிவித்தனர்.கழுத்திலே முத்துமாலை, விரல்களிலே வயிரமணி மோதிரம், கையிலே முத்துத்தண்டையும், கைவளையும், முழங்கையிலே, மணிவடங்கள், தோளிலே முத்துமணி ஆபரணங்கள், கழுத்திலே உருத்திரச் சண்டிகையும் முத்துவடமும், காதுகளிலே மகரக் குண்டலமும் ,சிரசிலே முத்து வடமும், இவரது வைரமிழைத்த பொன்னாற் மேனிதனிலே நவரத்தின மணிகளாலும், தெய்வத்தன்மை பிரகாசிக்கத் திருமண அலங்காரத்தை ஒளியுறச் செய்தனர்.

மேல்

அலங்கார வைபவம் முடிந்ததும் ஞானசம்பந்தர் உருத்திராட்ச மாலையினை எடுத்து நமச்சிவாய என்ற திருநாமத்தை மனதிலே தியானித்தவாறு தொழுது தாமே கழுத்தில் அணிந்து கொண்டார்.ஞானசம்பந்தர் கோடி சூரிய பிரகாச ஒளியுடன், அன்பர்களும், அடியார்களும், உறவினர்களும் சூழ்ந்துவர, திருமணம் நடக்க இருக்கும் நம்பியாண்டார் நம்பியின் பெருமனைக்குள் எழுந்தருளினார்.பந்தலிலே போடப்பட்டிருந்த முத்துக்குடை நிழலின் கீழ் பொற்பலகையில் அமர்ந்தார்.சங்கநாதங்களும், சுந்தர கீதங்களும், மங்கல இசைக் கருவிகளும் ஒலித்த வண்ணமாகவே இருந்தன. வாழ்த்தொலிகளும், வேத முழக்கங்களும் இடையறாது ஒலித்துக் கொண்டேயிருந்தன.இதே சமயத்தில் நம்பியாண்டார் நம்பியின் அருந்தவப்புதல்விக்குக் காப்பு கட்டிச் சங்கற்பம் முதலிய வேதச் சடங்குகளைச் செய்தனர்.அப்பவளக் கொடி பெண்ணுக்கு வைரத்தாலும், நவமணிகளினாலும் செய்யப்பட்ட பசும் பொன் ஆபரணங்களை வரிசையாகச் சூட்டி அலங்காரப் பொன் விளக்கு போல் பொலிவு பெறச் செய்தனர்.அந்தணர் குலக் குழந்தைகள், ஓங்கி எழுந்த ஓமப்புகையில், வாசனைத் தூளை வீசினர். வேதியர்கள், பொற் கலசத்திலிருந்து நன்னீரையும், அரசிலையும், தருப்பையும் கொண்டு தெளித்தார்கள்.அழகு மகளிர் நறுமலர்களைத் தூவினர். குறித்த நேரத்தில் சிவக்கொழுந்தும், அக்கொழுந்தின் கரம்பற்றப் போகும் பொற்கொடி போன்ற நற்குண நங்கையும் ஆதிபூமி என்னும் மணவறையின் உள்ளே அமர்ந்தருளினார்.நம்பியாண்டார் நம்பி ஞானசம்பந்தருடைய கரத்தில் மங்கள நீரினை மும்முறை வார்த்துத் தமது மகளைத் தாரை வார்த்துக் கொடுத்தார்.ஞானசம்பந்தர், மங்கை நல்லாளின் கரம் பற்றி ஓமத்தைச் சுற்றி வலம் வந்தார்.அபபொழுது அவரது திருவுள்ளத்திலே, எனக்கு ஏன் இந்த இல்லற வாழ்க்கை வந்தமைந்தது? சிற்றின்பத்தில் உழலுவதைவிட, இவளுடன் எம்பெருமானின் திருவடி நீழலை அடைந்தே தீருவது என்று பேரின்ப ஆசை அமிர்தம் போல் சுரந்தது. அத்தகைய மெய்ஞ்ஞான எண்ணத்தோடு, ஞான சம்பந்தர் மனைவியோடும், மற்றவரோடும், உற்றார் உறவினர்களோடும் திருமணப் பெருங்கோயிலை வந்தடைந்தார். சிவனடியார் மலரடியை மனதிலே நிறுத்தி, தன்னை அவரது சேவடியில் சேர்த்துக் கொண்டருள வேண்டும் என்ற கருத்துடன், நல்லூர்ப் பெருமணம் என்று தொடங்கும் திருப்பதிகம் ஒன்றைப் பாடி அருளினார். அப்பொழுது விண்வழியே அசரீரியாக எம்பெருமான், நீயும், உன் மனைவியும், உன் புண்ணிய திருமணத்தைக் காண வந்தவர்களும், எம்மிடம் சோதியினுள்ளாகக் கலந்தடையுங்கள் என்று திருவாய் மலர்ந்து அருள் செய்தார்.எம்பெருமான் மூன்று உலகங்களும் தம் ஒளியால் விளங்கும் வண்ணம் சோதிலிங்கமாக காட்சி அளித்தார்.

மேல்

அப்பேரொளி திருக்கோயிலையும் தன்னகத்தே கொண்டு மேலோங்கி ஒளிமயமாக ஓங்கி நின்றது. அச்சோதியிலே ஓர் வாயிலையும் காட்டியருளினார்.அன்பும், அறமும், அருளும், திருவும் உருவாகக் கொண்ட உமையாளின் திருமுலைப் பாலுண்ட புண்ணியத்தின் திரு அவதாரமாகிய திருஞானசம்பந்தப் பெருந்தகையார் - சைவத்தை வளர்த்து, செந்தமிழ்ப் பதிகம் பல பாடிய தென்னகத்துத் தெய்வப் புதல்வன் சிவபரஞ் சுடராகிய மனநல்லூர்ப் பெருமானைத் தொழுது போற்றினார்.தண் தமிழால் பாடிப் பரவசமுற்றார். தேன் தமிழால் அபிஷேகம் செய்தார். பக்தி வெள்ளத்தில் மூழ்கினார்.உலகம் உய்ய, சிவஞான நெறியினை எல்லார்க்கும் அளிக்க வல்லது நமச்சிவாய என்னும் திருவைந் தெழுத்துப் பெருமந்திரமாகும் என்று திருவாய் மலர்ந்தருளினார்.காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி எனத் தொடங்கும் நமச்சிவாயத் திருப்பதிகத்தினை, விண்ண வரும், மண்ணவரும் கேட்கும் வண்ணம் பாடினார் சம்பந்தர்.திருஞான சம்பந்தர் அனைவரையும் நோக்கி, பிறவித் துயரம் தீர யாவரும் இப்பேரொளியிலே புகுவீர்களாக என்று கேட்டுக் கொண்டார். சிவாய நம; சிவாய நம என்ற வேத மந்திரத்தினை விண்ணை முட்டும் வண்ணம் பெருமழை போல் கோஷித்து வாழ்த்தினர். எல்லையில்லாத பிறவி என்னும் வெள்ளத்திலே மூழ்கித் தத்தளித்துக்கொண்டு, காற்றடைத்த பையாகிய காயத்திலே அடைபட்டு, உய்ய உணர்வின்றி மயங்கும் மக்களுக்கு பேரின்ப வழிகாட்டிய திருஞான சம்பந்தரின் திருவடியைத் தொழுது, நமச்சிவாய மந்திரத்தை மனதிலே தியானித்த வண்ணம் மக்கள் யாவரும் சோதியினுள்ளே புகுந்தனர்.திருநீலநக்க நாயனார், திருமுருக நாயனார், திருநீல கண்ட யாழ்ப்பாண நாயனார், சிவபாத விருதயர், நம்பியாண்டார் நம்பி ஆகிய சிவனருட் செல்வர்கள் தம் இல்லறத்தாருடன் பேரொளியில் புகுந்தனர். ஏனையவர்களும், திருமணத்திற்கு வந்தணைந்தவர்களும், திருமணத்திற்கு பணிகள் செய்தோரும் தத்தம் மனையார்களோடு பேரொளியில் புகுந்தார்கள்.அருந்தவசிகளும், மறைமுனிகளும், ஆலயம் தொழ வந்த சால்புடை மக்களும் சோதியினுள் கலந்தனர். பேரின்ப வீட்டிற்குப் பெருவழிகாட்டிய ஞான சம்பந்தப் பெருமான் தம் மனைவியாரின் கையைப் பிடித்தவாறே அச்சோதியினை வலம் வந்தார். நமச்சிவாய என்ற நாமத்தை முழக்கியவாறு, சோதியினுள் புகுந்தார்.அதன் பின்பு அப்பேரொளியில் காணப்பட்ட வாயிலும் மூடிக்கொண்டது.தேவர்களும், முனிவர்களும், சிவகணத்தவர்களும் சிந்தை மகிழ்ந்து போற்றித் துதித்தனர்.கொன்றை மாலையை அணிந்த செஞ்சடை வண்ணர், உமாதேவியாருடன் விடைமேல் தோன்றி அருளினார்.பேரொளி புகுந்த சிவனருட் செல்வர்களைத் தமது திருவடி நீழலை அடைந்து திருப்பணி புரியும் திருப்பேற்றை அளித்தார்.வேதங்களையும், ஏழுலகங்களையும் ஈன்று கருணை வடிவமாக நின்ற உமாதேவியாரின் திருமுலைப் பாலினைச் சிவஞான அமுதத்தோடு உண்டு, அருள்பெற்று, சைவத்தை உயர்வித்த அருந்தவச் செல்வன் திருஞான சம்பந்தப் பெருமானையும் அவர் தம் மனைவியாரையும் எம்பெருமான் தமது அருகிலேயே அணைந்து வாழும் நிகரில்லாப் பெருவாழ்வை அளித்தருளினார்.

மேல்

குருபூஜை: திருஞானசம்பந்தரின் குருபூஜை வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்.

மேல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *