-
திரு ஆலவாய் உடையார், 2. காரைக்கால் அம்மையார், 3. ஐயடிகள் காடவர்கோன், 4.
சேரமான் பெருமாள் நாயனார், 5. நக்கீர தேவ நாயனார், 6. கல்லாட தேவ நாயனார், 7.
கபில தேவ நாயனார், 8. பரண தேவ நாயனார், 9. இளம் பெருமாள் அடிகள், 10. அதிரா
அடிகள், 11. திருவெண்காட்டு அடிகள், 12. நம்பியாண்டார் நம்பி
நூல் வரலாறும் நூல் ஆசிரியர்கள் வரலாறும்
திருஆலவாய் உடையார்
இவர் மதுரையில் எழுந்தருளியிருக்கும் சொக்கநாதப் பெருமான் ஆவார். தமிழ்ச் சங்கத்
தலைவராக வீற்றிருந்தருளிய இப்பெருமான் சேரமான் பெருமாள் நாயனாருக்கு அனுப்பிய
திருமுகப்பாசுரம் இதில் முதற்கண் உள்ளது. இதில் அனுப்புநர், பெறுநர், செய்தி
முதலியவை நிரல்பட எழுதப்பட்டுள்ளன.
காரைக்கால் அம்மையார்
இவர் 63 நாயன்மார்களுள் ஒருவர். கணவன் தம் தெய்வத் தன்மை கண்டு பத்திமையோடு
துறந்து ஒழுக, இறைவனிடம் பேய் வடிவை வேண்டிப் பெற்றவர். இறைவனும் இப்பெருமை சேர்
வடிவுடன் தம்பால் என்றும் இருக்க என அருளப் பெற்றவர். இவர் காலம் கி.பி நான்கு
அல்லது ஐந்தாம் நூற்றாண்டாக இருக்கலாம். இவர் எழுதிய நூல்கள் வருமாறு.
-
திருவாலங்காட்டு மூத்தத் திருப்பதிகங்கள் இரண்டு.
2. திருஇரட்டை மணி மாலை
3. அற்புதத் திருவந்தாதி
ஐயடிகள் காடவர்கோன்
காடவர் என்பது பல்லவ மரபினரைக் குறிக்கும் பொதுப்பெயர். இவர் காஞ்சி மாநகரைத் தலை
நகராகக் கொண்டு தொண்டை நாட்டை ஆண்ட பேரரசர். இவர் காலம் கி.பி. ஒன்பதாம்
நூற்றாண்டு. இவர் பாடிய நூல் ÷க்ஷத்திரத் திருவெண்பா என்பதாகும்.
சேரமான் பெருமாள்நாயனார்
இவர் சேர நாட்டுப் பேரரசர், வேறு பெயர் கழறிற்றறிவார். திருச்சிலம்பு ஓசை கேட்டு
வழிபடும் பேறு பெற்றவர். இறைவனின் திருமுகம் பெற்ற பேறுடையவர். சுந்தரரின் தோழர்.
அவருடன் கயிலைக்குச் சென்று இறைவனின் இன்னருள் பெற்றவர். இவர் கி.பி. எட்டாம்
நூற்றாண்டினர். இவர் அருளிய நூல்களாவன:
-
பொன் வண்ணத் தந்தாதி
2. திருவாரூர் மும்மணிக் கோவை
3. திருக் கயிலாய ஞான உலா
நக்கீரதேவ நாயனார்
சங்க காலத்தில் வாழ்ந்த நக்கீரருக்குப் பல நூற்றாண்டுகள் பிற்பட்டவர் இவர்.
எனினும் பெயர் ஒற்றுமையால் இருவரும் ஒருவர் எனக் கருதப் பெற்றனர். சங்க கால
நக்கீரர் எழுதியது திருமுருகாற்றுப்படை ஒன்றே. மற்றவை பிற்காலத்தவரான நக்கீர
தேவநாயனாரால் எழுதப்பட்டவை.
-
கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி
2. திரு ஈங்கோய் மலை எழுபது
3. திருவலஞ்சுழி மும்மணிக் கோவை
4. திருஎழு கூற்றிருக்கை
5. பெருந்தேவபாணி
6. கோபப் பிரசாதம்
7. கார் எட்டு
8. போற்றித் திருக்கலி வெண்பா
9. திருமுருகாற்றுப்படை
10. திருகண்ணப்பதேவர் திருமறம்
கல்லாடதேவ நாயனார்
கல்லாடர் என்னும் பெயருடைய புலவர்கள் மூன்று அல்லது நான்கு பெயர்கள்
இருந்திருத்தல் கூடும். கல்லாடம் என்பது ஒரு சிவத்தலம். அதில் எழுந்தருளிய
சிவபெருமான் கல்லாடர் எனப் பெறுவார். ஆகவே இப்புலவர்களும் அப்பெயர் பெற்றனர்
எனலாம். இவர் எழுதிய நூல் திருக்கண்ணப்பதேவர் திருமறம் என்பதாகும்.
கபிலதேவ நாயனார்
இவரும் கடைச் சங்க காலப் புலவராகிய கபிலரும் ஒருவர் அல்லர். இவர் காலத்தால்
பிற்பட்டவர். இவர் எழுதிய நூல்களாவன:
-
மூத்த நாயனார் திரு இரட்டை மணி மாலை
2. சிவபெருமான் திரு இரட்டை மணி மாலை
3. சிவபெருமான் திருவந்தாதி
பரணதேவ நாயனார்
இவரும் கடைச் சங்க காலப் பரணரின் வேறானவர். காலம்: கடைச் சங்ககாலப் புலவர்
பெருமக்களின் பெயர் பெற்ற இந்நால்வரும் கி.பி. 9,10 ஆம் நூற்றாண்டைச்
சேர்ந்தவர்களாவர். இவர் செய்த நூல்: சிவபெருமான் திருவந்தாதி
இளம் பெருமாள்அடிகள்
இவருடைய நாடு, ஊர், குலம் முதலியன இவையெனத் தெரியவில்லை. இவர் அருளிய நூல்
சிவபெருமான் திருமும்மணிக் கோவை என்பதாகும்.
அதிராஅடிகள்
இவருடைய ஊர், குலம் வரலாறுகள் யாதொன்றும் தெரியவில்லை. அதிராவடிகள் என்னும் பெயர்
எதற்கும் கலக்கமடையாத உள்ளமுடைய பெரியாரைக் குறிப்பதாகும். இவர் காலம் கி.பி.
9ஆம் நூற்றாண்டு எனலாம். இவர் செய்த நூல்: மூத்த பிள்ளையார் திருமும்மணிக் கோவை.
(விநாயகரைப் பற்றிய நூல்)
திருவெண்காட்டு அடிகள்
இவர் காவிரிப் பூம்பட்டினத்தில் தோன்றியவர். பட்டினத்துப் பிள்ளையார் எனவும்
அழைக்கப்பெறுபவர். திருவெண்காட்டு அடிகள் எனவும் பட்டினத்துப் பிள்ளையாரெனவும்
பெயர் வழங்கப் பெற்றவர். இருவேறு காலங்களில் இருவர் இருந்திருத்தல் வேண்டும்.
அடியிற் கண்ட நூல்களை இயற்றியவர் காலத்தால் முற்பட்டவர் எனலாம்.
இவர் அருளிய நூல்கள்
-
கோயில் நான்மணிமாலை (சிதம்பரம் பற்றியது)
2. திருக்கழுமல முண்மணிக் கோவை (சீர்காழி பற்றியது)
3. திருவிடை மருதூர் மும்மணிக் கோவை
4. திருஏகம்பமுடையார் திருவந்தாதி (காஞ்சிபுரம்)
5. திருவொற்றியூர் ஒருபா ஒரு பஃது
நம்பியாண்டார் நம்பி
இவர் திருநாரையூரில் தோன்றியவர். ஆதிசைவர். திருநாரையூரில் எழுந்தருளியிருக்கும்
பொல்லாப் பிள்ளையாரால் ஆட்கொள்ளப் பெற்றவர். அப்பெருமானால் திருமுறைகளைக்
காணவும், கண்டவற்றை ஏழு திருமுறைகளாகத் தொகுக்கவும் பேறு பெற்றவர். 63
நாயன்மார்களுடைய வரலாற்றையும் திருத்தொண்டத் தொகையைக் கொண்டு வழி நூலாக
விரித்தோதியவரும் இவரே. திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் பதினொரு திருமுறைகளையும்
இவர் வகுத்தருளினார். சேக்கிழார் பாடிய திருமுறைகளையும் இவர் வகுத்தருளினார்.
சேக்கிழார் பாடிய திருத்தொண்டர் புராணம் பிறகு பன்னிரண்டாவது திருமுறையாகச்
சேர்க்கப்பட்டது.
இவர் செய்த நூல்களாவன:
-
திருநாரையூர் விநாயகர் திருவிரட்டை மணிமாலை
2. கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
3. திருத்தொண்டர் திருவந்தாதி
4. ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி
5. ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
6. ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக் கோவை
7. ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை
8. ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்
9. ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை
10. திருநாவுக்கரசர் திரு ஏகாதசமாலை
காலம் : இளம் பெருமான் அடிகள் முதலாகவுள்ள இந்நால்வரின் காலம் கி.பி. 9ஆம்
நூற்றாண்டின் இறுதியும் கி.பி.10ஆம் நூற்றாண்டின் தொடக்கமுமாகக் கருதுகின்றனர்.
11ம் திருமுறையில் திருவாலவாய் உடையார்(ஈசன்), காரைக்கால் அம்மையார், ஐயடிகள்
காடவர் கோன், சேரமான் பெருமான், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமான்
அடிகள், அதிரா அடிகள், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி ஆகியோர் பாடிய 1400
பாடல்களின் தொகுப்பும், அதன் தெளிவுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
திருமுகப் பாசுரம் (திரு ஆலவாய்உடையார்அருளிச் செய்தது)
-
மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற(கு)
அன்னம் பயில்பொழில் ஆல வாயின்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்(கு)
உரிமையின் உரிமையின் உதவி, ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்கும் சேரலன் காண்க;
பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்
தன்போல் என்பால் அன்பன்; தன்பால்
காண்பது கருதிப் போந்தனன்;
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.
தெளிவுரை : மின்னலைப் போல் விளங்குகின்ற செம் பொன்னினாலும் இரத்தினங்களாலும்
அமைந்த உப்பரிகைகள் நிறைந்த மதுரையிலிருக்கும் சிவனாகிய யாம் எழுதி விடுக்கும்
திருமுகத்தை, பருவ காலத்து மேகம் போல் புலவர்களுக்குக் கைம்மாறு கருதாமல்
கொடுக்கிறவரும் ஒளி பொருந்திய சந்திரனைப் போன்ற குடையின் கீழ் போரில் யானையைச்
செலுத்துகிறவருமான சேரமான் பெருமாள் காண்க. தன்னைப் போல் நமதிடத்து அன்பனாகிய
இன்னிசை யாழ்ப் பத்திரன் தன்னிடத்திற்கு வருகிறதனால், அவன் விரும்பிய வண்ணம்
மிகுந்த திரவியங்களைக் கொடுத்து அனுப்புவீராக.
திருச்சிற்றம்பலம்
திருவாலங்காட்டு மூத்ததிருப்பதிகங்கள் -( காரைக்கால் அம்மையார்அருளிச்செய்தது )
காரைக்கால் அம்மையாருடைய வரலாறு பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் புராணமான
12ம் திருமுறையில் விரிவாகக் கூறப்படுகிறது. அம்மையார் இல்லறத்தில் இருக்குங்கால்
இலக்கண இலக்கியங்களைக் கற்றதாகவோ செய்யுள் பாடும் திறமடைந்து திகழ்ந்ததாகவோ
கூறப்படவில்லை. அடியார்கட்கு அமுதளித்தல், வேண்டுவன நல்கல் முதலிய
திருத்தொண்டுகளில் ஈடுபட்டிருந்ததாகவே கூறப்படுகிறது. தம்மைக் கணவன்
துறந்து விட்டான் என்பதை உணர்ந்தவுடன் அம்மையார் சதைப் பற்றுமிக்க தம்முடைய
ஊனுடம்பை யொழித்து எற்புடம்பை அருள வேண்டுகிறார். அம்மையார் வேண்டிய படியே
எற்புடம்பு அமைவதோடு தெய்வத் தன்மையும் மிகுதியாக அமைகிறது. தலையால் நடத்தல்
முதலிய புதுமைகளும் நிகழ்கின்றன.
தெய்வீக முதிர்ச்சியினால் உள்ளத்திலிருந்து அருட் பாடல்களும் தோன்றுகின்றன.
அவ்வாறு தோன்றிய பாடல்கள் தாம் மூத்த திருப்பதிகங்கள்.
திருச்சிற்றம்பலம்
-
கொங்கை திரங்கி நரம்பெழுந்து
குண்டுகண் வெண்பற் குழிவயிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள்நீண்டு
பரடுயர் நீள்கணைக் காலோர்பெண்பேய்
தங்கி யலறி யுலறுகாட்டில்
தாழ்சடை எட்டுத் திசையும்வீசி
அங்கங் குளிர்ந்தன லாடும்எங்கள்
அப்ப னிடந்திரு ஆலங்காடே.
தெளிவுரை : மார்பகங்கள் வற்றி, நரம்புகள் மேல் எழுந்து, கண்கள் குழி
விழுந்து, பற்கள் விழுந்து, வயிறு குழி விழுந்து தலை மயிர் சிவப்பாகி, கோரைப்
பற்கள் இரண்டும் நீண்டு, கணுக்கால் உயர்ந்து நீண்ட கால்களையுடைய ஓர் பெண் பேய்
தங்கி, அலறி, காய்ந்த காட்டில் தாழ்ந்த சடைகள் எட்டுத் திக்குகளிலும் வீசி அங்கம்
குளிருமாறு ஆடும் எங்கள் அப்பன் இருக்கும் இடம் திருஆலங்காடாகும்.
-
கள்ளிக் கவட்டிடைக் காலைநீட்டிக்
கடைக்கொள்ளி வாங்கி மசித்துமையை
விள்ள எழுதி. வெடுவெடென்ன
நக்கு வெருண்டு விலங்குபார்த்து
துள்ளிச் சுடலைச் சுடுபிணத்தீச்
சுட்டிட முற்றும் சுளிந்துபூழ்தி
அள்ளி அவிக்கநின் றாடும்எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங்காடே.
தெளிவுரை : கள்ளிக் கிளைகளுக்கு இடையில் காலை நீட்டி கொள்ளிக் கட்டையை வாங்கி
குழைத்து மையை அழித்து எழுதி நடுநடுங்குமாறு சிரித்து, மருட்சியடைந்து குறுக்கே
நோக்கி, குதித்து சுடலையில் எரிந்து கொண்டிருக்கும் பிணத்தின் தீயானது சுடவும்,
சினக் குறிப்புக் கொண்டு மணலை அள்ளி அவிக்க, நின்று ஆடுகின்ற எங்கள் அப்பன்
தங்கியிருக்கும் இடம் திரு ஆலங்காடாகும். இச்செய்யுளில் பேய்களின் செயல்கள்
கூறப்பட்டன.
-
வாகை விரிந்துவெண் ணெற்றொலிப்ப,
மயங்கிருள் கூர்நடு நாளையாங்கே
கூகையோ(டு) ஆண்டலை பாடஆந்தை
கோடதன் மேற்குதித்(து) ஓடவீசி
ஈகை படர்தொடர் கள்ளிநீழல்
ஈமம் இடுசுடு காட்டகத்தே
ஆகம் குளிர்ந்தனல் ஆடும்எங்கள்
அப்பன் இடம்திரு ஆலங்காடே.
தெளிவுரை : பாலை நிலத்துக்குரிய வாகை மரத்தின் முற்றிய வெண்மையான நெற்றுக்கள்
காற்றினால் ஒலி செய்யவும், அறிவை மயக்கும் திணிந்த இருளையுடைய நள்ளிரவில் கூகை
(கோட்டான்) யோடு ஆண் தலை போன்ற வடிவுடைய பறவை பாடவும், ஆந்தை கொம்புடன் அதன்
மேற்குதித்து ஓடுமாறு வீசி கொடி படர்ந்த கள்ளியின் நீழலில் ஈமம் அடுக்கப்பட்ட
சுடுகாட்டில், உடல் குளிர்ந்து அனலில் ஆடுகின்ற எங்கள் அப்பன் இருக்கும் இடம்
திருஆலங்காடாகும்.
-
குண்டில்ஓ மக்குழிச் சோற்றைவாங்கிக்
குறுநரி தின்ன அதனைமுன்னே
கண்டிலம் என்று கனன்றுபேய்கள்
கையடித்(து) ஓடிடு கா(டு)அரங்கா
மண்டலம் நின்றங்(கு) உளாளம்இட்டு,
வாதித்து வீசி, எடுத்தபாதம்
அண்டம் உறநிமிர்ந்(து) ஆடும்எங்கள்
அப்பன் இடம்திரு ஆலங்காடே.
தெளிவுரை : ஆழமான வேள்விக் குழியில் உள்ள சோற்றை எடுத்து குறுநரி தின்னவும், அதை
முன்பே பார்க்கவில்லையே என்று பேய்கள் கோபங் கொண்டு கையடித்துச் சுடுகாட்டைச்
சுற்றி ஆடும் அரங்காக வளைந்து சுற்றி வந்தும், மாறி வந்தும், எல்லா உலகங்களிலும்
பொருந்துமாறு ஆடுகின்ற எங்கள் அப்பன் இருக்கும் இடம் திருவாலங்காடே.
-
விழுது நிணத்தை விழுங்கியிட்டு
வெண்தலை மாலை விரவப்பூட்டிக்
கழுதுதன் பிள்ளையைக் காளியென்று
பேரிட்டுச் சீருடைத் தாவளர்த்துப்
புழுதி துடைத்து முலைகொடுத்துப்
போயின தாயை வரவுகாணா(து)
அழுதுறங் கும்புறங் காட்டில்ஆடும்
அப்பன் இடம்திரு ஆலங்காடே.
தெளிவுரை : விழுதாக உள்ள ஊனை விழுங்கிவிட்டு, வெண்மையான தலைமாலையைப் பரவ அணிந்து,
பேயானது தன்னுடைய குழந்தையைக் காளியென்று பெயரிட்டு, சிறப்புடன் வளர்த்து, தூசு
அகற்றி, பால் கொடுத்துச் சென்ற தாயின் வரவைக் காணாமல் அழுது உறங்குகின்ற ஊழிக்கால
ஈமத்தில் ஆடுகின்ற என் அப்பன் வாழும் இடம் திருஆலங்காடே.
-
பட்டடி நெட்டுகிர்ப் பாறுகாற்பேய்
பருந்தொடு கூகை பகண்டைஆந்தை
குட்டி யிடமுட்டை கூகைபேய்கள்
குறுநரி சென்றணங்(கு) ஆடுகாட்டில்
பிட்டடித் துப்புறங் காட்டில்இட்ட
பிணத்தினைப் பேரப் புரட்டிஆங்கே
அட்டமே பாயநின்(று) ஆடும்எங்கள்
அப்பன் இடம்திரு ஆலங்காடே.
தெளிவுரை : பட்டு அடிபட்ட நீண்ட நகத்தையும், மாறுபட்ட கால்களையும் உடைய பேய்,
பருந்து, கூகை, சீவற் பறவை, ஆந்தை ஆகியவை முட்டையிடவும் குறுநரி வெறியாடவும்
பின்புறம் அடித்து, சுடுகாட்டில் இட்ட பிணத்தினை வெளியே எடுத்து, குறுக்கே பாய
நின்று ஆடுகின்ற எங்கள் அப்பன் கோயில் கொண்டிருக்கும் இடம் திருஆலங்காடே.
-
சுழலும் அழல்விழிக் கொள்ளிவாய்ப்பேய்
சூழ்ந்து துணங்கையிட்(டு) ஓடிஆடித்
தழலுள் எரியும் பிணத்தைவாங்கித்
தான்தடி தின்றணங்(கு) ஆடுகாட்டிற்
கழல்ஒலி ஓசைச் சிலம்பொலிப்பக்
காலுயர் வட்டணை இட்டுநட்டம்
அழல்உமிழ்ந்(து) ஓரி கதிக்கஆடும்
அப்பன் இடம்திரு ஆலங்காடே.
தெளிவுரை : சுழலுகின்ற நெருப்புக் போன்ற கண்களையுடைய கொள்ளிவாய்ப் பேய்கள் ஒன்று
கூடி துணங்கை என்னும் கூத்தை ஆடி, நெருப்பில் எறியப்படும் பிணத்தை எடுத்து அதன்
ஊனைத்தின்று ஆடுகின்ற சுடுகாட்டில் கழலின் ஓசையைச் சிலம்பு ஒலிக்க, காலை உயர்த்தி
வட்டனை என்னும் சுழன்றாடும் நடனம் நெருப்பைக் கக்கி நரியும் ஆட ஆடுகின்ற எங்கள்
அப்பன் வாழும் இடம் திருஆலங்காடேயாகும்.
-
நாடும் நகரும் திரிந்துசென்று,
நன்னெறி நாடி நயந்தவரை
மூடி முதுபிணத்(து) இட்டமாடே
முன்னிய பேய்க்கணம் சூழச்சூழக்
காடும் கடலும் மலையும் மண்ணும்
விண்ணும் சுழல அனல்கை யேந்தி
ஆடும் அரவப் புயங்கன் எங்கள்
அப்பன் இடம்திரு ஆலங்காடே.
தெளிவுரை : நாடும் நகரும் திரிந்து சென்று நல்ல நெறியை விரும்பிய வரை மூடிப்
புதைத்த சுடுகாட்டில் வந்தணைந்த பேய்க் கூட்டம் காடும், கடலும் மலையும் மண்ணும்,
விண்ணும் சுழலுமாறு நெருப்பைக் கையிலேந்தி ஆடுகின்ற, பாம்பை அணிந்து புயங்கக்
கூத்தை ஆடுகின்ற எங்கள் தலைவன் கோயில் கொண்டிருக்கும் தலம் திருஆலங்காடேயாகும்.
-
துத்தங்கைக் கிள்ளை விளரிதாரம்
உழைஇளி ஓசைபண் கெழுமப்பாடிச்
சச்சரி கொக்கரை தக்கையோடு,
தகுணிதந் தந்துபி தாளம்வீணை
மத்தளம் கரடிகை வன்கை மென்தோல்
தமருகம் குடமுழா மொந்தை வாசித்(து)
அத்தனை விரவினோடு ஆடும்எங்கள்
அப்பன் இடம்திரு ஆலங்காடே.
தெளிவுரை : துத்தம், கைக்கிளை, விளரி, தாரம், உழை, இளி, ஓசை என்ற ஏழு பண்களையும்
இசைத்து, சச்சரி, கொக்கரை, தக்கை, தகுணி, துந்துபி, தாளம், வீணை, மத்தளம் கரடிகை,
தமருகம், குடமுழா, மொந்தை முதலிய வாத்திய வகைகளை இயக்கி அத்தன்மையோடு ஆடுகின்ற
எங்கள் இறைவன் எழுந்தருளியிருக்கின்ற இடம் திருஆலங்காடேயாகும்.
-
புந்தி கலங்கி மதிமயங்கி
இறந்தவ ரைப்புறங் காட்டில்இட்டுச்
சந்தியில் வைத்துக் கடமைசெய்து
தக்கவர் இட்டசெந் தீவிளக்கா
முந்தி அமரர் முழலின்ஓசை
திசைகது வச்சிலம்(பு) ஆர்க்கஆர்க்க,
அந்தியில் மாநடம் ஆடும்எங்கள்
அப்பன் இடம்திரு ஆலங்காடே.
தெளிவுரை : அறிவு கலங்கி, மதி மயங்கி, இறந்தவர்களை மயானத்தில் வைத்து இறுதிச்
சடங்குகளை நிகழ்த்தி ஈமச்சடங்கு செய்யும் உரிமை உடையவர் இட்ட தீயை விளக்காகக்
கொண்டு, முன்பு தேவர்களது மத்தளத்தின் ஓசை திசைகள் தோறும் நிறைய, சிலம்புகள்
மிகுதியாக ஒலிக்க, யுகமுடிவில் மாநடனம் செய்யும் எங்கள் இறைவன் தங்கியிருக்கும்
இடம் திருஆலங்காடேயாகும்.
-
ஒப்பினை இல்லவன் பேய்கள்கூடி
ஒன்றினை ஒன்றடித்(து) ஒக்கலித்துப்
பப்பினை யிட்டுப் பகண்டை யாட
பாடிருந்(து) அந்நரி யாழ்அமைப்ப
அப்பனை அணிதிரு ஆலங்காட்டுள்
அடிகளைச் செடிதலைக் காரைக்காற்பேய்
செப்பிய செந்தமிழ் பத்தும்வல்லார்
சிவகதி சேர்ந்தின்பம் எய்துவாரே.
தெளிவுரை : ஒப்பில்லாதவனது, பேய்கள் கூடி ஒன்றை ஒன்று அடித்து, களிப்பு
மிகுதியால் ஆரவாரித்து இசையை முழக்கி, பகண்டை பாடுதலுக்கு ஏற்ப யாழ் வாசித்தல்
போல் நரி கூவ, இறைவனை அணியாகக் கொண்டுள்ள திருஆலங்காட்டுள் அடிகளை,
முடிக்கப்படாமல் செடி போல் விரித்த மயிர் நிறைந்த தலையினையுடைய காரைக்காற் பேய்
என்று தன்னைக் கூறிக் கொள்ளும் காரைக்கால் அம்மையார் பாடிய செந்தமிழ்ப் பாடல்கள்
பத்தும் பாட வல்லவர் சிவகதி சேர்ந்து இன்பம் எய்துவர்.
திருச்சிற்றம்பலம்
திருவாலங்காட்டு மூத்ததிருப்பதிகங்கள் - 2( காரைக்கால் அம்மையார் அருளிச்செய்தது )
திருச்சிற்றம்பலம்
-
எட்டி இலவம் ஈகை
சூரை காரை படர்ந்தெங்கும்
சுட்ட சுடலை சூழ்ந்த
கள்ளி சோர்ந்த குடர்கௌவப்
பட்ட பிணங்கள் பரந்த
காட்டிற் பறைபோல் விழிகட்பேய்
கொட்ட முழவங் கூளி
பாடக் குழகன் ஆடுமே.
தெளிவுரை : எட்டி, இலவம், ஈகை, சூரை, காரை, கள்ளி முதலிய மரங்களும் செடிகளும்
சூழ்ந்ததும் கழுகுகளால் குடர் கௌவப்பட்ட பிணங்கள் நிறைந்ததுமான சுடுகாட்டில்
பரந்து வட்டவடிவம் கொண்ட விழிகளையுடைய பேய் முழவங் கொட்ட, கூளி பாட, அழகன்
ஆடுவான்.
இரண்டு, திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி ஆகிய நூல்கள்.
மூத்த திருப்பதிகங்கள் இரண்டினுள் சிவபெருமானுடைய தன்மைகள் முதலியன
பேசப்படுகின்றன. பதிகங்களின் இறுதியில் அம்மையார் தம்மைக் காரைக்கால் பேய் என்று
கூறிக் கொள்வதுடன் முதற்பதிகத்தைக் கற்று வல்லவர்கள் ஆனவர்கள் சிவகதி சேர்வர்
என்றும், இரண்டாவது பதிகத்தைப் பாடப் பாபநாசம் ஆகும் என்றும் கூறுகிறார்.
-
நிணந்தான் உருகி நிலந்தான்
நனைப்ப நெடும்பற் குழிகட்பேய்
துணங்கை யெறிந்து சூழும்
நோக்கிச் சுடலை நவிழ்த்தெங்கும்
கணங்கள் கூடிப் பிணங்கள்
மாந்திக் களித்த மனத்தவாய்
அணங்கு காட்டில் அனல்கை
யேந்தி அழகன் ஆடுமே.
தெளிவுரை : தசையின் இழுது தீயினால் உருகி நிலத்தை நனைக்கவும், நீண்ட பல்லையும்
குழிந்த கண்ணையும் உடைய பேய் துணங்கைக் கூத்து சுற்றிலும் ஆடவும், சுடலையை நோக்கி
அவிழ்த்து கணங்கள் கூடி பிணங்களைத் தின்று வெறியாடுதலைச் செய்யும் காட்டில்,
அனலைக் கையிலேந்தி அழகன் ஆடுவான்.
-
புட்கள் பொதுத்த புலால்வெண்
தலையைப் புறமே நரிகவ்வ
அட்கென் றழைப்ப ஆந்தை
வீச அருகே சிறுகூகை
உட்க விழிக்க ஊமன்
வெருட்ட ஓரி கதித்தெங்கும்
பிட்க நட்டம் பேணும்
இறைவன் பெயரும் பெருங்காடே.
தெளிவுரை : பறவைகள் கொத்தித் தின்னுதலால் பொத்தல் செய்த புலால் வெண் தலையை
வெளிப்புறத்தில் நரிபற்ற, அட்கு என்று அழைக்க ஆந்தை வீசவும், அருகில் சிறிய
கோட்டான் அஞ்சுமாறு விழிக்க, ஊமன் என்னும் பறவை வெருட்டவும், நரியானது பெருங்
குரலாற் கூவ, அந்த ஒலி விண்ணையே பிளக்குமாறு நடனம் ஆடும் இறைவன் பெயரும் இடம்
சுடுகாடே.
-
செத்த பிணத்தைத் தெளியா(து)
ஒருபேய் சென்று விரல்சுட்டிக்
கத்தி உறுமிக் கனல்விட்(டு)
எறிந்து கடக்கப் பாய்ந்துபோய்ப்
பத்தல் வயிற்றைப் பதைக்க
மோதிப் பலபேய் இரிந்தோடப்
பித்த வேடம் கொண்டு
நட்டம் பெருமான் ஆடுமே.
தெளிவுரை : செத்ததென்று தெரியாமல் பிணத்தை ஒரு பேய் சென்று விரலால்
சுட்டிக்காட்டிக் கத்தியும் உறுமியும் நெருப்பில் போட்டு விட்டுச் சென்று, ஒட்டி
உலர்ந்து உள்வற்றிய வயிற்றை வருந்துமாறு அடித்துப் பல பேய்கள் அஞ்சியோட பித்த
வேடங் கொண்டு பெருமான் நடனம் ஆடுவான்.
-
முள்ளி தீந்து முளரி
கருகி மூளை சொரிந்துக்குக்
கள்ளி வற்றி வெள்ளில்
பிறங்கு கடுவெங் காட்டுள்ளே
புள்ளி உழைமான் தோலொன்(று)
உடுத்துப் புலித்தோல் பியற்கிட்டுப்
பள்ளி இடமும் அதுவே
யாகப் பரமன் ஆடுமே.
தெளிவுரை : முள்மரம் தீய்ந்து, முளரி என்னும் முள் செடியும் கருகி, மூளை சொரிந்து
எழுந்து கள்ளியும் வற்றி விளாமரம் விளங்குகின்ற மிகக் கொடிய காட்டில் புள்ளிகளை
உடைய ஆண்மான் தோலை முதுகில் போட்டுக் கொண்டு கோயிலாகிய இடமும் அதுவேயாக இறைவன்
ஆடுவான்.
-
வாளை கிளர வளைவாள்
எயிற்று வண்ணச் சிறுகூகை
மூளைத் தலையும் பிணமும்
விழுங்கி முரலும் முதுகாட்டில்
தாளிப் பனையின் இலைபோல்
மயிர்க்கட் டழல்வாய் அழல்கட்பேய்
கூளிக் கணங்கள் குழலோ(டு)
இயம்பக் குழகன் ஆடுமே.
தெளிவுரை : வாளைப் போல் விளங்க வளைந்த ஒளிவிடும் பல்லும் நிறமும் உடைய சிறிய
கோட்டான் முளையோடு கூடிய தலையும் பிணமும் விழுங்கி ஒலிக்கும் சுடுகாட்டில் தாளிப்
பனையில் இலை போன்ற மயிரும் தீப்போல் எரியும் வாயையும் கண்களையும் உடைய பேயும்
கூளிகளின் கூட்டமும் குழல் ஓசையோடு வாசிக்க இறைவன் ஆடுவான்.
-
நொந்திக் கிடந்த சுடலை
தடவி நுகரும் புழுக்கின்றிச்
சிந்தித் திருந்தங்(கு) உறங்குஞ்
சிறுபேய் சிரமப் படுகாட்டின்
முந்தி அமரர் முழவின்
ஓசை முறைமை வழுவாமே
அந்தி நிருத்தம் அனல்கை
ஏந்தி அழகன் ஆடுமே.
தெளிவுரை : கிளறிக் கிடந்த சுடுகாட்டைத் தடவி அருந்தும் உணவு ஏதும் இன்றி நினைத்த
வண்ணமாய் அங்கு உறங்கும் சிறுபேய் சிரமப்படுகின்ற சுடுகாட்டில் முன்பு தேவர்கள்
மத்தளம் வாசிக்க முறைமை தவறாமல் யுகமுடிவாகிய அந்திப் பொழுதில் ஆடும் நடனத்தை ,
கையில் தீயை ஏந்தி இறைவன் ஆடுவான்.
-
வேய்கள் ஓங்கி வெண்முத்(து)
உதிர வெடிகொள் சுடலையுள்
ஓயும் உருவில் உலறு
கூந்தல் அலறு பகுவாய
பேய்கள் கூடிப் பிணங்கள்
மாந்தி அணங்கும் பெருங்காட்டின்
மாயன் ஆட மலையான்
மகளும் மருண்டு நோக்குமே.
தெளிவுரை : மூங்கில்கள் உயர்ந்து உதிர்த்த வெண் முத்துக்கள் நாலாபக்கங்களிலும்
சிதறிக் கிடக்கும் சுடலையுள் ஓய்ந்த நிலையில் வெளிறிக் கிடக்கும்
கூந்தலையுடையதும் அலறுகின்ற பிளந்த வாயையுடையதுமான பேய்கள் ஒன்று கூடிப்
பிணங்களைத் தின்று அணங்கு ஆடுகின்ற சுடுகாட்டில் சிவபெருமான் ஆட, பார்வதி
தேவியார் மருண்டு பார்க்கும்.
-
கடுவன் உகளும் கழைசூழ்
பொதும்பிற் கழுகும் பேயுமாய்
இடுவெண் தலையும் ஏமப்
புகையும் எழுந்த பெருங்காட்டில்
கொடுவெண் மழுவும் பிறையும்
ததும்பக் கொள்ளென்(று) இசைபாடப்
படுவெண் துடியும் பறையும்
கறங்கப் பரமன் ஆடுமே.
தெளிவுரை : ஆண் குரங்கு சுற்றித்திரியும் மூங்கில்கள் நிறைந்த இளமரச் சோலையில்
கழுகும் பேயும் இடுகின்ற வெண்தலையும் ஏமப்புகையும் எழுந்த சுடுகாட்டில்
கொடுமையைச் செய்யும் வெள்ளிய மழுவும் பிறைச் சந்திரனும் ததும்ப, கொள்ளென்று இசை
பாடவும், உடுக்கையும் பறையும் ஒலி செய்யவும், மேலோனாகிய இறைவன் ஆடுவான்.
-
குண்டை வயிற்றுக் குறிய
சிறிய நெடிய பிறங்கற்பேய்
இண்டை படர்ந்த இருள்சூழ்
மயானத்(து) எரிவாய் எயிற்றுப்பேய்
கொண்டு குழவி தடவி
வெருட்டிக் கொள்ளென்(று) இசைபாட
மிண்டி மிளிர்ந்த சடைகள்
தாழ விமலன் ஆடுமே.
தெளிவுரை : குழி விழுந்த வயிறும் குறிய சிறிய நெடியதாய் விளங்கும் பேய் இண்டு
என்ற காட்டுச் செடி படர்ந்த, இருள் சூழ்ந்த மயானத்தில் எரிகின்ற வாயையும்
பற்களையும் உடைய பேயை அச்சுறுத்திக் குழந்தையைத் தடவி ஏற்றுக்கொள் என்று இசைபாட
நெருங்கி விளங்கிய சடைகள் தொங்குமாறு இறைவன் ஆடுவான்.
-
சூடும் மதியம் சடைமேல்
உடையார் சுழல்வார் திருநட்டம்
ஆடும் அரவம் அரையில்
ஆர்த்த அடிகள் அருளாலே
காடு மலிந்த கனல்வாய்
எயிற்றுக் காரைக் காற்பேய்தன்
பாடல் பத்தும் பாடி
ஆட பாவம் நாசமே.
தெளிவுரை : பிறைச் சந்திரனைச் சடை மீது உடையவர். இடையில் பாம்பைக் கச்சையாகக்
கட்டியுள்ளவர்; திருஆலங்காட்டில் எழுந்தருளியுள்ள இறைவன் அருளால் தீப்போன்ற
வாயையும் பற்களையும் உடைய காரைக்கால் அம்மையார் பாடிய பத்துப் பாடல்களையும் பாடி
ஆட பாவங்கள் இல்லாது போகும் என்பதாம்.
திருச்சிற்றம்பலம்
திருஇரட்டைமணிமாலை ( காரைக்கால் அம்மையார் அருளிச்செய்தது )
திரு இரட்டை மணி மாலை என்பது கட்டளைக் கலித்துறை முன்னும் வெண்பாப் பின்னுமாக
அந்தாதித் தொடையால் பாடப் பெறுவதாகும். இரட்டை மணிமாலை என்னும் நூலை முதன்
முதலாகப் பாடியவர் காரைக்கால் அம்மையாரே என்று பலரும் எண்ணுகின்றனர். இவ் இரட்டை
மணி மாலைக்கு முற்பட்டதாக வேறோர் இரட்டை மணி மாலையும் கிடைத்திலது.
உலக வாழ்வில் துன்பம் உண்டாகும் பொழுதும் உள்ளம் தளராது இறைவனையே போற்றுதல்
வேண்டும். இறைவன் ஆணையின்றி இவ்வுலகத்தில் எதுவும் நிகழாது என்பது உணர்ந்து
மறவாது போற்றும் அடியார்களை இறைவன் மீண்டும் பிறவாது காத்தருளுகின்றான்.
எண் தோள் முக்கண் எம்மானாகிய இறைவனுடைய திருவடிகளை வணங்கிப் போற்றுவோர் கடலனைய
துன்பங்கள் அனைத்தையும் கடந்து ஈறில்லாத திருவடிப் பேற்றை எய்தி மகிழ்வர்.
மறைகட்கு எல்லாம் தலையாய திருஐந்தெழுத்தினை உருவேற்றிப் போற்றுவோர் இறைவன் கழல்
அடைவர். மெய்யடியார்களைப் போற்றுவோரைக் கண்டு வினைகள் எல்லாம் நில்லாது ஒழிந்து
போகின்றன. தீவினை வந்து அடையாதவாறு திருஐந்தெழுத்தை ஓதினால் உய்தி பெறலாம்.
இத்தகைய நுண் பொருள்கள் எல்லாம் இம்மாலையிற் காணலாம்.
திருச்சிற்றம்பலம்
கட்டளைக் கலித் துறை
-
கிளர்ந்துந்து வெந்துயர் வந்தடும்
போ(து)அஞ்சி நெஞ்சம்என்பாய்த்
தளர்ந்திங்(கு) இருத்தல் தவிர்திகண்
டாய் தளராதுவந்தி
வளர்ந்துந்து கங்கையும் வானத்(து)
இடைவளர் கோட்டுவெள்ளை
இளந்திங் களும்எருக் கும்மிருக்
குஞ்சென்னி ஈசனுக்கே.
தெளிவுரை : முன்வினை தூண்ட அது காரணமாக வெங்கும்பிக் காயத்துள் வந்து சேரும்
பிறவித் துன்பம் அடர்ந்து வருத்தும் சமயத்தில் நெஞ்சம் என்று சொல்லப்படுகின்ற
மனமே! அதற்கு நீ அஞ்சி, தளர்ந்திருத்தலைத் தவிர்ப்பாயாக. கங்கையையும் பிறையையும்
எருக்கம் பூவையும் சென்னியில் அணிந்திருக்கும் ஈசனுக்குத் தளராமல் வணக்கம் செய்.
வெண்பா
-
ஈசன் அவன்அல்லா(து) இல்லை யெனநினைந்து
கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து - பேசி
மறவாது வாழ்வாரை மண்ணுலகத்(து) என்றும்
பிறவாமைக் காக்கும் பிரான்.
தெளிவுரை : சிவனைத் தவிர வேறு தெய்வம் இல்லை என்று நினைந்து, கடவுளின்
பெருமையையும் தன்னுடைய சிறுமையையும் எண்ணி நாணத்தை அடைந்து, மனத்தில் இருத்தி,
அவனது புகழைப் பேசி, மறவாமல் வாழ்வாரை மறுபடியும் பிறவி எடுக்காதவாறு செய்பவன்
அவனேயாவான்.
-
பிரானென்று தன்னைப்பன் னாள்பர
வித்தொழு வார்இடர்கண்(டு)
இரான்என்ன நிற்கின்ற ஈசன்கண்
டீர்இன வண்டுகிண்டிப்
பொராநின்ற கொன்றைப் பொதும்பர்க்
கிடந்துபொம் மென்துறைவாய்
அராநின்(று) இரைக்கும் சடைச்செம்பொன்
நீள்முடி அந்தணனே.
தெளிவுரை : தலைவன் என்று தன்னைப் பல நாளும் துதித்துத் தொழுகின்றவரது
துன்பங்களைப் பார்த்துக் கொண்டிராதவன். அவன் யாரெனில் கூட்டமான வண்டுகள்
நெருங்கியுள்ள கொன்றை மாலையாகிய பொந்தில் உள்ள பாம்பு ஒலி செய்கின்ற சடையாகிய
நீண்ட செம்பொன் முடியினையுடைய அந்தணனே யாவான்.
-
அந்தணனைத் தஞ்சமென்(று) ஆட்பட்டார் ஆழாமே
வந்தணைந்து காத்தளிக்கும் வல்லாளன் கொந்தணைந்த
பொன்கண்டால் பூணாதே கோள்அரவம் பூண்டானே
என்கண்டாய் நெஞ்சே இனி.
தெளிவுரை : அழகிய தண்ணருளையுடைய சிவபிரானை அடைக்கலம் என்று ஏற்றுக் கொண்டவர்கள்
பிறவிக் கடலில் ஆழ்ந்து விடாதவாறு வந்து அருள் செய்யும் பேராற்றலை உடையவன்.
கொத்தாகப் பொருந்திய பொன் ஆபரணங்களை அணியாமல் தீமையைச் செய்யும் பாம்பை
பூண்டிருப்பவனை நெஞ்சே நீ நினை என்பதாம்.
-
இனிவார் சடையினில் கங்கையென்
பாளைஅங் கத்திருந்த
கனிவாய் மலைமங்கை நாணில்என்
செய்திகை யிற்சிலையால்
முனிவார் திரிபுரம் மூன்றும்வெந்(து)
அன்றுசெந் தீயில்மூழ்கத்
தனிவார் கணைஒன்றி னால்மிகக்
கோத்தஎஞ் சங்கரனே.
தெளிவுரை : நீண்ட சடையில் உள்ள கங்கையைக் கண்டு இடப்பாகத்தில் உள்ள உமாதேவியார்
நாணினால் நீ என்ன செய்வாய்? சினம் பொருந்திய திரிபுரங்கள் மூன்றையும்
வெந்தழியுமாறு ஒப்பற்ற கணையைக் கோத்த சங்கரனே! இப்போது என்ன செய்வாய்! என்று
ஏளனமாய்க் கேட்பது போல் உள்ளது.
மேருமலையை வில்லாகவும் திருமாலை அம்பாகவும் கொண்டார் என்று புராணம் கூறும்.
-
சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேல்
பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை அங்கொருநாள்
ஆவாவென்(று) ஆழாமைக் காப்பானை எப்பொழுதும்
ஓவாது நெஞ்சே உரை.
தெளிவுரை : சங்கரனை, தொங்குகின்ற சடையை உடையவனை, அந்தச் சடையில் சினம் பொங்கி
எழுகின்ற பாம்பை உடைய புண்ணியனை, இறக்கும் அன்று துன்பத்தில் அமிழ்ந்தாமல்
காப்பாற்றுகின்றவனை இடை விடாமல் நெஞ்சே நீ துதிப்பாயாக.
-
உரைக்கப் படுவதும் ஒன்றுண்டு
கேட்கிற்செவ் வான்தொடைமேல்
இரைக்கின்ற பாம்பினை என்றும்
தொடேல்இழிந்(து) ஓட்டந்(து)எங்கும்
திரைக்கின்ற கங்கையும் தேன்நின்ற
கொன்றையும் செஞ்சடைமேல்
விரைக்கின்ற வன்னியும் சென்னித்
தலைவைத்த வேதியனே.
தெளிவுரை : சொல்லப்படுவதும் ஒன்றுண்டு. அது யாதெனில், செவ்வானத்தைக் கற்றையாகத்
தொகுத்தது போன்ற தொகுதியின் மேல் ஒலிக்கின்ற பாம்பை எப்போதும் தொடாதே. ஏனெனில்
அது இறங்கி ஓடி விடும். அலை வீசுதலைச் செய்கின்ற கங்கையும் தேன் பொருந்திய
கொன்றையும் செஞ்சடை மேல் மணம் வீசுகின்ற வன்னியும் தலையில் வைத்துள்ள வேதியனே!
-
வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்(கு)
ஆதியனை ஆதிரைநன் னாளானைச் - சோதிப்பான்
வல்லேன மாய்ப்புக்கு மாலவனும் மாட்டாது
கில்லேன மாஎன்றான் கீழ்.
தெளிவுரை : மறையை அருளியவனை, மறையின் உட்பொருளாக உள்ளவனை, வேதத்துக்கு ஆதியாக
இருப்பவனை, திருவாதிரை நன்னாளுக்கு உரியவனை, அடியை ஆராய்ந்து கண்டறியும் பொருட்டு
வலிமை தங்கிய பன்றியாய்ப் புகுந்து திருமாலும் அடியைக் காணமாட்டாது அறிய மாட்டேன்
போற்றி என்றான்.
-
கீழா யினதுன்ப வெள்ளக்
கடல்தள்ளி உள்ளுறப்போய்
வீழா திருந்தின்பம் வேண்டும்என்
பீர்விர வார்புரங்கள்
பாழா யிடக்கண்ட கண்டன்எண்
தோளன்பைம் பொற்கழலே
தாழா(து) இறைஞ்சிப் பணிந்துபன்
னாளும் தலைநின்மினே.
தெளிவுரை : கீழான துன்ப வெள்ளக் கடலை அணுகாமல் அப்புறப்படுத்தி, உள்ளுறப் போய்
வீழாதிருந்து இன்பம் வேண்டும் என்று சொல்வீர்கள். பகைவர்களது முப்புரங்கள்
பாழாகுமாறு செய்த நீல கண்டன் எட்டுத் தோள்களை உடையவன். அவனது பைம் பொற் கழலைப்
பொழுது போக்காமல் போற்றிப் பணிந்து எக்காலமும் சலியாது உறுதியுடன் நில்லுங்கள்.
உங்கள் கோரிக்கை øகூடும் என்பதாம்.
-
தலையாய ஐந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து
தலையா யினவுணர்ந்தோர் காண்பர் - தலையாய
அண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்டிருண்ட
கண்டத்தான் செம்பொற் கழல்.
தெளிவுரை : தலைமை பெற்ற திருஐந்தெழுத்தை இடைவிடாது கூறி எண்ணுதல் செய்து, வணங்கி,
தலைமை பெற்ற பொருள்களை உணர்ந்தவர்கள் காண்பார்கள். தலைமை பெற்று உலகங்களை
உடையவன். திருவாதிரைக்கு உரியவன். நஞ்சையுண்டு இருண்ட கண்டத்தை உடையவனது செம்பொற்
கழலைக் காண்பார்கள் என முடிக்க.
-
கழற்கொண்ட சேவடி காணலுற்
றார்தம்மைப் பேணலுற்றார்
நிழற்கண்ட போழ்தத்து நில்லா
வினைநிகர் ஏதுமின்றித்
தழற்கொண்ட சோதிச்செம் மேனிஎம்
மானைக்கைம் மாமலர்தூய்த்
தொழக்கண்டு நிற்கிற்கு மோதுன்னி
நம்அடுந் தொல்வினையே.
தெளிவுரை : வீரக்கழலணிந்த திருவடியைக் கண்ட அடியவரைப் போற்றியவர் சாயலைப் பார்த்த
போது, சமானமில்லாத தழலைப் போன்ற ஒளியுடைய செம்மேனி எம்மானை மலர் கொண்டு
அருச்சித்துத் தொழுதலைப் பார்த்தும் பொருந்தி நம்மை வருந்தும் பழமையான தீவினைகள்
நிற்க மாட்டா என்பதாம்.
-
தொல்லை வினைவந்து சூழாமுன் தாழாமே
ஒல்லை வணங்கி உமையென்னும் - மெல்லியல்ஓர்
கூற்றானைக் கூற்றுருவங் காய்ந்தானை வாய்ந்திலங்கு
நீற்றானை நெஞ்சே நினை.
தெளிவுரை : துன்பத்தை உண்டாக்கும் தீவினை வந்து சூழாமுன், காலந் தாழ்த்தாது
விரைவாக வணங்கி, உமாதேவி என்று கூறப் பெறும் மெல்லியலாளை ஒரு பாகத்தில்
உடையவனும், நமனைத் தண்டித்தவனும் பொருந்தி விளங்குகின்ற திருநீற்றை
அணிந்தவருமாகிய சிவபெருமானை நெஞ்சே நினைப்பாயாக.
-
நினையா(து) ஒழிதிகண் டாய்நெஞ்ச
மேஇங்கோர் தஞ்சமென்று
மனையா ளையும்மக்கள் தம்மையும்
தேறியோர் ஆறுபுக்கு
நனையாச் சடைமுடி நம்பன்நந்
தாதைநொந் தாதசெந்நீ
அனையான் அமரர் பிரான்அண்ட
வாணன் அடித்தலமே.
தெளிவுரை : நெஞ்சமே! இங்கு ஒரு பற்றுக் கோடு என்று மனைவியையும் மக்களையும்
நினையாமல் ஒழிவாயாக. மனம் தேறி, ஒப்பற்ற கங்கையாறானது புகுந்தும் ஈரமாகாத சடை
முடியை உடையவனும், நம் தந்தையும், ஒளி குறைவு படுதல் இல்லாத செம்மையான தீயைப்
போன்றவனும் தேவர்களுக்குத் தலைவனும் எல்லா உலகங்களிலும் நிறைந்து இருப்பவனுமாகிய
இறைவனது பாதங்களைப் பற்றுக் கோடாகக் கொள்வாயாக என்பதாம்.
-
அடித்தலத்தின் அன்றரக்கன் ஐந்நான்கு தோளும்
முடித்தலமும் நீமுரித்த வாறென் - முடித்தலத்தின்
ஆறாடி ஆறா அனலாடி அவ்வனலின்
நீறாடி நெய்யாடி நீ.
தெளிவுரை : நீ உன் திருவடிகளால் முன்பு இராவணனது இருபது தோள்களும் திருமுடிகளும்
முரிந்தொழியுமாறு செய்த வகை எங்ஙனம்? உன் தலையில் கங்கையாறு படியுமாறு செய்பவன்.
அனலை ஏந்துபவன். நீறாடுதலைச் செய்பவன். நெய்யாடுதலை செய்பனாகிய உனக்கு இது
எங்ஙனம் சாத்தியமாயிற்று என்பதாம்.
-
நீநின்று தானவர் மாமதில்
மூன்றும் நிரந்துடனே
தீநின்று வேவச் சிலைதொட்ட
வாறென் திரங்குவல்வாய்ப்
பேய்நின்று பாடப் பெருங்கா(டு)
அரங்காப் பெயர்ந்துநட்டம்
போய்நின்று பூதம் தொழச்செய்யும்
மொய்கழற் புண்ணியனே.
தெளிவுரை : நீ அரக்கர்களின் மூன்று பெரிய மதில்களையும் கலந்து உடனே எரியுமாறு
வில்லேந்திய காரணம் என்ன? திரங்கிய பெரியவாயையுடைய பேய் நின்று பாட, ஊழிக்கால
ஈமம் ஆடுமிடுமாகக் கொண்டு நடனமாடி பூதம் தொழச் செய்யும் வலிய வீரக்கழலை யணிந்த
நல்வினை வடிவினனாகிய நீ இவ்வாறு செய்தது ஏன்? என்று முடிக்க.
-
புண்ணியங்கள் செய்தனவும் பொய்ந்நெறிக்கட் சாராமே
எண்ணியோ ரைந்தும் இசைந்தனவால் - திண்ணிய
கைம்மாவின் ஈருரிவை மூவுருவும் போர்த்துகந்த
அம்மானுக் காட்பட்ட அன்பு.
தெளிவுரை : புண்ணியங்கள் செய்தனவும், பொய்யான வழிகளில் சாராமல் எண்ணி ஒப்பற்ற
திருஐந்து எழுத்துக்களும் பொருந்தின. இதற்குக் காரணம் ஆற்றல் மிக்க கையை உடைய
யானையின் தோலைப் போர்த்தியுள்ளவனும். அயன், அரன், அரி என்னும் மூவுருவமும் உடைய
தலைவனுமாகிய உன்னைத் தொழுது பெற்ற அன்பினாலேயாம்.
-
அன்பால் அடைவதெவ் வாறுகொல்
மேலதோர் ஆடரவம்
தன்பால் ஒருவரைச் சாரஒட்
டாதது வேயும்அன்றி
முன்பா யினதலை யோடுகள்
கோத்தவை ஆர்த்துவெள்ளை
என்பா யினவும் அணிந்தங்கோர்
ஏறுகந்(து) ஏறுவதே.
தெளிவுரை : உன்னை அன்பால் அடைவது எங்ஙனம்? உன் உடலின் மேல் ஓர் ஆடுகிற பாம்பு
பொருந்தியிருக்கிறது. அது ஒருவரையும் தன்பக்கம் நெருங்க விடாது. அதுவும் அல்லாமல்
முன்பு இறந்து பட்டவர்களின் தலையோடுகள் மாலையாகக் கோக்கப் பெற்று, வெண்மையான
எலும்புகளையும் அணிந்து விடையின் மீது ஏறியுள்ளீர். உன்னை நெருங்குவது சாத்தியமா
என்றபடி.
-
ஏறலால் ஏறமற் றில்லையே எம்பெருமான்
ஆறெலாம் பாயும் அவிர்சடையார் - வேறோர்
படங்குலவு நாகமுமிழ் பண்டமரர்ச் சூழ்ந்த
தடங்கடல்நஞ் சுண்டார் தமக்கு.
தெளிவுரை : இடபக் காளையை அல்லாமல் எம் பெருமானுக்கு வேறு வாகனம் இல்லையோ?
கங்கையாறு முழுமையும் பாய்கின்ற ஒளியுடைய சடையை உடையவர்க்கு, அதுவும் அன்றி
பாம்பு உலவுகின்றது. முன்பு தேவர்கள் பொருட்டு, பெரிய கடலில் தோன்றிய நஞ்சை
உண்டவருக்கு இவை தாம் கிடைத்தனவோ?
-
தமக்கென்றும் இன்பணி செய்திருப்
பேமுக்குத் தாம்ஒருநாள்
எமக்கொன்று சொன்னால் அருளுங்கொ
லாமிணை யாதுமின்றிச்
சுமக்கின்ற பிள்ளைவெள் ளேறொப்ப
தொன்றுதொண்டைக் கனிவாய்
உமைக்கென்று தேடிப் பெறாதுட
னே கொண்ட உத்தமரே.
தெளிவுரை : சிவபிரானாகிய தமக்கு அடியவர்களாய் இருக்கின்ற எங்களுக்கு என்று
கொடுத்தருள வேண்டுமென்றால் கேட்டால் அருளுவாரா? ஒப்பில்லாத வெள்ளிய இடபக் காளைப்
போன்ற ஒன்றை, கோவைக் கனியைப் போன்ற சிவந்த வாயை யுடைய உமைக்கென்று தேடிப் பெறாமல்
ஏற்றுக் கொண்ட உத்தமரே!
-
உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் உற்றார்கள்
செத்த மரமடுக்கித் தீயாமுன் - உத்தமனாம்
நீளாழி நஞ்சுண்ட நெய்யாடி தன்திறமே
கேளாழி நெஞ்சே கிளர்ந்து.
தெளிவுரை : எல்லாச் செயல்களாலும் சிறப்பாக வாழ்ந்திருந்தவர்களும் இறந்து போனால்
உரியவர்கள் காய்ந்த மரம் கொண்டு சுடுவதற்கு முன்பு உயர்ந்தவனாய் பெரிய கடலில்
வெளிப்பட்ட விஷத்தைப் பருகின நெய் முழுக்கு ஆடும் இறைவனது அன்பினாற் பொலிந்து
நெஞ்சமே கேட்பாயாக. அதன் கண்ணே ஆழ்வாயாக.
திருச்சிற்றம்பலம்
அற்புதத் திருவந்தாதி ( காரைக்கால் அம்மையார்அருளிச்செய்தது )
மெய்யறிவு கைவரப் பெற்ற காரைக்கால் அம்மையார் முதன் முதலாகப் பாடியருளியது இவ்
அற்புதத் திருஅந்தாதியே என்பர். அற்புதத் திருவந்தாதி புதுமையான போக்குடையது. இவ்
அந்தாதியின் சிறப்பை நோக்கியே சான்றோர் இவ் அந்தாதிக்கு அற்புதத் திருவந்தாதி
என்று பெயர் கொடுத்தருளினர். இவ் வந்தாதி ஓதுவதற்கு இனிமையும் எளிமையும் உடையது.
அறிதற்கரிய சிவஞானத்தின் இயல்பைத் தெளிவாக விளக்குவது. மெய்யன்போடு ஓதுவோர்
உள்ளத்தை இவ் வந்தாதி உருக்கும் இயல்புடையது.
அம்மையார் தாம் பெற்ற திருவருள் மெய்யறி வினைத் தன்மை நிலையில் வைத்து
உலகத்தார்க்கு அறிவுறுத்தும் பாடல்களும் தம்மைப் போன்ற அடியார்களுடைய இயல்பை
விரித்துரைக்கும் பாடல்களும் சிவபெருமானுடைய அருட் கோலங்களையும் திருவருள்
செயல்களையும் எண்ணிச் சிவபிரானை முன்னிலைப்படுத்தி அழைத்து உரையாடி மகிழும்
பாடல்களும் அனைவருக்கும் இன்பத்தை அளிப்பன.
திருச்சிற்றம்பலம்
-
நீலகண்டன்
-
பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்ப(து) இடர்.
தெளிவுரை : எம்பெருமானே ! தேவர்கள் வணங்கிய உடனே அவர்களுக்கு அருள் செய்து கருமை
நிறம் பொருந்திய கண்டத்து வானோர் பெருமானாக நிற்கும் நீ, நான் இவ்வுலகில் தோன்றி
மொழி பயின்ற பின் எல்லாம் உன் திருவடிப் பேற்றில் அன்பு மிகுந்து நின் சேவடியே
சேர்ந்தேன். என் பிறவித் துன்பத்தை எப்போது தீர்க்கப் போகிறாய்?
அன்புஅறாது
-
இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும் - சுடருருவில்
என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்(கு)
அன்பறா(து) என்நெஞ் சவர்க்கு.
தெளிவுரை : சிவபெருமான் எம்முடைய இடரைக் களையார் என்றாலும், எம்பால் இரங்காமல்
இருந்தார் என்றாலும், நாங்கள் செல்ல வேண்டிய வழியைக் காட்டாராயினும் சோதி
வடிவமுள்ள தம் திருமேனியில் எலும்பு மாலை எப்போதும் நீங்காமல் இருக்கும்
கோலத்தோடு தீயைத் திருக் கையிலேந்தி ஆடுகிற எம் தலைவருக்கு என் அன்பு என்றும்
அறாது. என் நெஞ்சு அவருக்கே உரியது.
-
அவருக்கே
-
அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்
அவர்க்கேநாம் அன்பாவ தன்றிப் - பவர்சடைமேற்
பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்(கு)
ஆகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்.
தெளிவுரை : அவருக்கே அன்பாவதன்றி, கொடி போன்ற சடையின் மேல் துண்டாகத் திங்கள்
பிளவைச் சூடுகின்ற அந்தப் பெருமானுக்கு அல்லாமல் வேறு ஒருவர்க்கு ஆளாவது இனி
எந்தக் காலத்தும் இல்லை. எந்த நாளும் அவருக்கே ஆளாகக் கழியும் அன்றி வேறு
யாருக்கும் ஆளாகாமலே அந்த நாட்கள் போகும்.
என்னகாரணம் ?
-
ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டாற்
கேளாத(து) என்கொலோ ! கேள்ஆமை - நீளாஆகம்
செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம்
எம்மையாட் கொண்ட இறை.
தெளிவுரை : அவன் திருமேனி சிவப்பாகத் தோன்றி, அணுகிய போது திருமிடறு வேறு நிறமாக
இருப்பதைப் போலவே, பெருங் கருணை உடையவனைப் போல வலிய வந்து ஆண்டு கொண்டவன் என்
அல்லலைத் தானாகவே அறிந்து போக்குவது முறையாக இருக்க, நான் பலமுறை முறையிட்டுக்
கேளாமல் இருக்கிறான். இரண்டுக்கும் ஒரு பொருத்தம் இருக்கிறது.
பொதுவும் சிறப்பும்
-
இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான்; தோற்றி
இறைவனே ஈண்டிறக்கஞ் செய்வான்; - இறைவனே
எந்தாய் எனஇரங்கும்; எங்கள்மேல் வெந்துயரம்
வந்தால் அதுமாற்று வான்.
தெளிவுரை : பொதுவாக, உயிர்க் கூட்டங்களின் வினைக்கு ஈடாக அவர்களைத்
தோற்றுவிக்கும் உடம்பினின்றும் பிரித்தும் செயல் புரியும் இறைவன், சிறப்பாகத்
தன்னையன்றி வேறுயாரையும் புகலாக அடையாத அன்பர்களைத் துன்பத்தினின்றும்
விடுவித்து, நலம் அருளுவான் என்ற கருத்தை இந்தப் பாட்டில் காரைக்கால் அம்மையார்
வெளியிடுகின்றார்.
என் நெஞ்சத்தான்
-
வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்
தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான்
முன்நஞ்சத் தாலிருண்ட மெய்யோளிசேர் கண்டத்தான்
என்நெஞ்சத் தானென்பன் யான்.
தெளிவுரை : முன் நஞ்சை உண்டு அதனால் இருள் கப்பியதைப் போல கருமை நிறம் பெற்ற
மொய்த்த ஒளியையுடைய கண்டம் உடையவனாகவே நான் பார்க்கிறேன். வானத்துக்குச் செல்ல
வேண்டாம். தேவலோகத்துக்கும் செல்ல வேண்டாம். என் நெஞ்சமாகிய இடத்திலேயே அவனை
எப்போதும் தரிசிக்கிறேன். மற்றவர்கள் என்ன சொன்னால் எனக்கு என்ன? நான்
பார்ப்பதையே சொல்கிறேன்.
காரணமும் காரியமும்
-
யானே தவமுடையேன் என்னெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானேஅக்
கைம்மா வுரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற
அம்மானுக்(கு) ஆளாயி னேன்.
தெளிவுரை : யான் தவமுடையேன். என் நெஞ்சு நல்ல நெஞ்சு; யான் பிறப்பு அறுக்க
எண்ணினேன். யான் அந்த யானை உரியைப் போர்த்த நெற்றிக் கண்ணனும் வெண்ணீற்றை அணிந்த
பெருமானுமாகிய சிவபெருமானுக்கு ஆளாகி விட்டேன்.
கஜாசுர சங்காரம் இறைவன் செய்த எட்டு வீரச் செயல்களுள் ஒன்று.
அவன்அருளின் தன்மை
-
ஆயினேன் ஆள்வானுக்(கு) அன்றே பெறற்கரியன்
ஆயினேன் அஃதன்றே ஆமாறு - தூய
புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான்
அனற்கங்கை ஏற்றான் அருள்.
தெளிவுரை : இறைவனுக்கு நான் அடிமை ஆனேன். ஆன அப்பொழுதே யாராலும் மகவாகப்
பெறுதற்கு அரியேன் ஆகிப் பிறவித் துயரைக் கடந்து விட்டேன். அஃது அல்லவா, புனிதமான
புனலையுடைய கங்கையைத் திருமுடியிலே தாங்கியவனும் ஒப்பற்ற பொன் மலையாகிய மேருவைப்
போன்ற தோற்ற முடையவனும் அனலை உள்ளங்கையில் தாங்கினவனுமாகிய ஆண்டவன் அருள்
இருக்கும் வண்ணம்?
எல்லாம்அருளே
-
அருளே, உலகெலாம் ஆள்விப்ப(து) ஈசன்
அருளே, பிறப்பறுப்ப தானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன்; எஞ்ஞான்றும்
எப்பொருளும் ஆவ(து) எனக்கு.
தெளிவுரை : பிறருக்கெல்லாம் சிறந்த பதவிகளைக் கொடுத்துப் பல வகை உலகங்களை
ஆள்விப்பது இறைவன் அருளே. அந்த அருளே பிறப்பை அறுத்து முத்தி தருவது.; ஆனால் நானோ
அவன் அருளாலே உண்மையான பொருளைக் காணும் நியமத்தை உடையவள். ஆதலால் அவன் அருளே,
எனக்கு எல்லாக் காலத்தும் எல்லாப் பொருளும் ஆவது.
எனக்கு அரியதுஉண்டா ?
-
எனக்கினிய எம்மானை, ஈசனையான் என்றும்
மனக்கினிய வைப்பாக வைத்தேன்;- எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே எனக்கரிய(து) ஒன்று.
தெளிவுரை : என் உயிருக்கு இனிமை தரும் எம்பெருமானாகிய ஈசனை யான் என்றைக்கும்
மனத்துக்கு இனிய பெருஞ் செல்வமாகப் பொதிந்து வைத்தேன். அவனையே எனக்கு உரிய
பிரானாகக் கொண்டேன். அப்படிக் கொண்டவுடன் நான் மாறாத இன்பத்தை அடைந்தேன். இனிமேல்
எனக்குக் கிடைப்பதற்கு அரியதாகிய பொருள் ஒன்று உண்டோ?
-
ஒன்றே
-
ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்
ஒன்றேயென் உள்ளத்தின் உள்ளடைத்தேன் - ஒன்றேகாண்
கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர்
அங்கையாற்(கு) ஆளாம் அது.
தெளிவுரை : ஒன்றையே எப்போதும் நினைந்து வாழ்ந்தேன். அந்த ஒன்றையே துணிவாக உறுதி
செய்து பிறவற்றினின்றும் நீங்கினேன். அந்த ஒன்றையே என் அந்தரங்கத்தினுள்ளே
பொன்னைப் போலப் பொதிந்து இன்புற்றேன். அந்த ஒன்று கங்கையைத் தரித்தவனும் சந்திரனை
அணிந்த ஒளி வீசும் சடாமுடியை உடையவனும் கொழுந்துவிடும் ஒளியை உடைய கனலையுடைய
உள்ளங்கையைப் பெற்றவனுமாகிய சிவபெருமானுக்கு ஆளாகும் இந்த இன்பம்.
அதுதானா ?
-
அதுவே பிரான்ஆமா(று) ஆட்கொள்ளு மாறும்
அதுவே யினியறிந்தோ மானால் - அதுவே
பனிக்கணங்கு கண்ணியார் ஒண்ணுதலின் மேலோர்
தனிக்கணங்கு வைத்தார் தகவு.
தெளிவுரை : அவர் தலைவராகும் வண்ணம் அதுதான்; அவர் அடியவரை ஆட் கொள்ளுமாறும்
அதுதான்; இவ்வுண்மையை இப்போது அறிந்தோம். ஆனால் பனிக்கு வாடும் கொன்றை மாலையை
அணிந்தவரும் விளக்கமான நெற்றியின் மேல் ஒப்பற்ற ஒற்றைக் கண்ணைப் படைத்தவருமாகிய
சிவபெருமானுடைய பெருமை அது மட்டுமா?
ஏபாவம் !
-
தகவுடையார் தாமுளரேல் தாரகலஞ் சாரப்
புகவிடுதல் பொல்லாது கண்டீர் - மிகவடர
ஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச்
சார்ந்திடுமேல் ஏபாவம் தான்,
தெளிவுரை : தகவுடையவர்கள் இல்லையா? அம்மையின் மேல் பாம்பு ஊராமல் இருக்க
வேண்டுமானால் இறைவன் மார்பிலேயே அது புகும்படி செய்யக் கூடாது. அவனுக்கும்
அம்மைக்கும் நெடுந் தூரமா? அவன் மார்புக்கு ஆபரணம் என்று சொல்கிறார்களே,
அங்கேதான் தார் இருக்கிறதே, அது போதுமே! இந்தப் பாம்பு எதற்கு? இதுவரைக்கும்
இருப்பது போலவே அது இருக்கும் என்பது என்ன நிச்சயம்? என்றேனும் ஒருநாள் மலைமகளைச்
சாரலாம். அதை நினைத்தாலே பயமாய் இருக்கிறது! அப்படி ஆகி விட்டால் அதைப் போன்ற
மகாபாவம் வேறு இல்லை.
-
பெருஞ் சேமம்
-
தானே தனிநெஞ்சந் தன்னையுயக் கொள்வான்,
தானே பெருஞ்சேமம் செய்யுமால்; - தானேயோர்
பூணாகத் தாற்பொலிந்து, பொங்கழல்சேர் நஞ்சுமிழும்
நீணாகத் தானை நினைந்து
தெளிவுரை : என்னுடைய நெஞ்சம் தானே தனியாக வேறு துணையின்றி இருக்கும் நெஞ்சம். இது
தன்னைத் தானே உய்யக் கொள்ளும் பொருட்டு, ஒப்பற்ற, தன்னைப் பூணும் திருமேனியால்
பொலிவு பெற்றுக் கொழுந்து பொங்கும் அழலின் வெம்மையைச் சேர்ந்த நஞ்சை உமிழும்
நீண்ட நாகத்தை உடையவனைத் தியானம் செய்து, அவனைத் தனக்குள்ளே பெரிய சேமிப்பாகச்
சேர்த்துக் கொள்ளும்.
அடி பொருந்தும்அன்பு
-
நினைந்திருந்து வானவர்கள் நீள்மலராற் பாதம்
புனைந்தும் அடிபொருந்த மாட்டார் - நினைந்திருந்து
மின்செய்வான் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற்(கு)
என்செய்வான் கொல்லோ இனி.
தெளிவுரை : தேவர்கள் தம் நலத்தையும் இறைவனை வழிபட்டால் அவை மிகும் என்பதையும்
நினைந்து, சில காலம் தாழ்த்திருந்து, பிறகு நீண்ட மாலைகளால் இறைவனுடைய பாதத்தை
அலங்காரம் செய்தும் அந்தத் திருவடியில் மனம் பொருந்த மாட்டார். எப்போதும்
இடைவிடாது அவனையே நினைத்திருந்து, மின்னலைப் போன்ற பெரிய செம்மையுடைய சடையை
உடையவனே மறையை எப்போதும் ஓதிக் கொண்டிருப்பவனே என்று வாழ்த்துகிற எனக்கு அவன்
இனிமேல் என்ன செய்து அருளுவானோ?
இருமையிலும் இன்பம்
-
இனியோநாம் உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம்
இனியோர் இடரில்லோம் நெஞ்சே - இனியோர்
வினைக்கடலை யாக்குவிக்கும் மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண்.
தெளிவுரை : என் நெஞ்சே, இப்போது நாம் உய்ந்து போகிறோம். இறைவன் திருத்தாளைச்
சேர்ந்து விட்டோம். ஆகையால் இனி ஒரு துன்பமும் நாம் இல்லோம்; இதை இப்போது
சிந்தித்துப்பார். கன்மங்களுக்கு உரிய வலிமையை உண்டாக்குவதும் தன்பால் விழுந்தவர்
மீளாமல் இருக்கப் பண்ணுவதும் ஆகிய பிறவியாகிய ஒலித்தலையுடைய கடலை நாம் நீக்கி
விட்டோம்.
சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் என்பன மூன்று வகை வினைகள், இவற்றில் நாம் செய்த
பழவினைகளின் குவியலுக்குச் சஞ்சிதம் என்று பெயர். இந்தப் பிறவியில் அனுபவிக்க
வாய்ந்த பகுதிக்கு பிராரப்தம் என்று பெயர். இங்கே செய்யும் புதிய வினைக்கு
ஆகாமியம் என்று பெயர். இறைவன் தாளை இடைவிடாது சிந்திப்பார்க்கு இம்மை இன்பமும்,
மறுமை இன்பமும் எய்தும் என்பது இப்பாட்டின் கருத்து.
காண்பவர் மூவர்
-
காண்பார்க்குங் காணலாந் தன்மையனே கைதொழுது
காண்பார்க்குங் காணலாம் காதலால் - காண்பார்க்குச்
சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்(கு)
ஆதியாய் நின்ற அரன்.
தெளிவுரை : பழமையான உலகத்துக்கு மூல காரணமாக நின்ற சிவபெருமான், வடிவத்தை மட்டும்
காண்பவர்களுக்கும் காணத்தக்க இயல்புடையவன். அன்பினால் இவன் நம் இறைவன் என்று
எண்ணிக் கைதொழுது காணும் பக்தர்களுக்கும் காணுதல் கூடும். உள்ளே நிறைந்த
பேரன்பால் காணுகிறவர்களுக்கும் அவர்களுடைய சித்தத்துக்குள்ளே சோதிமயமாகக் காட்சி
அளிப்பான். முதல் நிலையினர் பொதுமக்கள். அடுத்த நிலையினர் பக்தர். கடைசியில்
வருகிறவர் அநுபூதிமான்.
எப்படிச் சொல்வேன் !
-
அரனென்கோ நான்முகன் என்கோ அரிய
பரனென்கோ பண்புணர மாட்டேன் - முரண் அழியத்
தானவனைப் பாதத் தனிவிரலால் செற்றானை
யானவனை எம்மானை இன்று.
தெளிவுரை : வலிமை அழியும்படி இராவணனைத் தன்னுடைய திருவடியிலுள்ள கட்டை விரலால்
அடர்த்தவனை, இறைவனாகிய அவனை, என் தலைவனை இன்று அடியேன் அவன் பண்பை உணர
மாட்டாதேன், அரன் என்பேனா? பிரம தேவன் என் பேனா? யாவர்க்கும் அரிய சர்வ சூட்சுமப்
பொருளான பரம் பொருள் என்பேனா?
அருமையும் எளிமையும்
-
இன்று நமக்கெளிதே மாலுக்கும் நான்முகற்கும்
அன்றும் அளப்பரியன் ஆனானை - என்றும்ஓர்
மூவா மதியானை மூவேழ் உலகங்கள்
ஆவானைக் காணும் அறிவு.
தெளிவுரை : திருமாலுக்கும் நான்முகனாகிய பிரம தேவனுக்கும் இன்று போல அன்றும்
அளப்பதற்கு அரியவனாக நின்றவனும் என்றைக்கும் முதுமை அடையாமல் உள்ள ஒப்பற்ற
சந்திரனைத் தலையில் அணியாக உடையவனும் இருபத்தொரு உலகங்களுமாக உள்ளவனும் ஆகிய
சிவபெருமானை உள்முகத்தே கண்டு அனுபவிக்கும் அனுபவம் இன்று நமக்கு எளிதாக
இருக்கிறதே! இது என்ன வியப்பு!
எல்லாம் அவன்
-
அறிவானுந் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே-அறிகின்ற
மெய்ப்பொருளும் தானே விரிசுடர்பார் ஆகாயம்
அப்பொருளுந் தானே அவன்.
தெளிவுரை : இறைவன் எல்லாவற்றையும் அறிபவனும் தானாக இருக்கிறான். உயிர்களுக்கு
அறிவிப்பவனும் அவனாகவே இருக்கிறான். அறிவாகவும் அறிகின்றவனாகவும் தானே; அறிகின்ற
மெய்ப்பொருளும் அவனே; விரிந்த சுடரும் விரிந்த பாரும் விரிந்த ஆகாயமும் ஆகிய
அப்பொருள்களும் அவன்.
-
அட்டமூர்த்தி
-
அவனே இருசுடர்தீ ஆகாசம் ஆவான்
அவனே புவிபுனல்காற் றாவான் - அவனே
இயமான னாய்அட்ட மூர்த்தியுமாய் ஞான
மயனாகி நின்றானும் வந்து.
தெளிவுரை : இயமானனாய், அட்டமூர்த்தியுமாய் ஞான மயனாகி வந்து நின்றானும் அவனே
என்று பின் பகுதியில் கூட்டிப் பொருள் செய்க. இயமானனாய் ஆகிய அட்டமூர்த்தியுமாய்
என்று சொல் வருவிக்க. அட்டமூர்த்தி என்பது மண், நீர், தீ, காற்று, ஆகாயம்,
சூரியன், சந்திரன், உயிர் என்ற எட்டுமாம்.
பிறையும் பாம்பும்
-
வந்திதனைக் கொள்வதே யொக்குமிவ் வாளரவின்
சிந்தை யதுதெரிந்து காண்மினோ - வந்தோர்
இராநீர் இருண்டனைய கண்டத்தீர் எங்கள்
பிரானீரும் சென்னிப் பிறை.
தெளிவுரை : தேடி வந்து ஓர் இரவானது தன் இயல்பு பின்னும் இருண்டாற் போலக்
கறுத்திருக்கும் கண்டத்தை உடையவரே, எங்கள் தலைவரே, உம்முடைய திருமுடியில் உள்ள
பிறையாகிய இதனை ஊர்ந்து வந்து பற்றிக் கொள்வது போல இருக்கிறது, இந்தக் கொலைகாரப்
பாம்பின் கருத்தை ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.
பாம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள், அது உம்மிடம் புகல் அடைந்த பிறையை
விழுங்கினாலும் விழுங்கி விடும் என்று அசதியாடுகிறார் அம்மையார்.
உள்ள நிறைவு
-
பிறையும், புனலும், அனலரவுஞ் சூடும்
இறைவர் எமக்கிரங்கா ரேனுங் - கறைமிடற்ற
எந்தையார்க்(கு) ஆட்பட்டேம் என்றென்(று) இருக்குமே
எந்தையா உள்ளம் இது.
தெளிவுரை : பிறையையும் கங்கையையும் அனலுகின்ற பாம்பையும் தம் திருமுடிமேல் அணிந்த
சிவபெருமான் எமக்கு இரங்காமல் இருப்பார் எனினும் நஞ்சை மிடற்றில் வைத்த எம்
தந்தையாருக்கு நாம் ஆளாகிவிட்டோம் என்று பலகாலம் எண்ணி நிறைவோடு அமைதி
பெற்றிருக்கும் எம்முடைய புண்படாத நெஞ்சமாகிய இது, இவ்வாறு எண்ணும் பக்தி நிலை
எல்லாவற்றிலும் உயர்ந்தது.
சோதி தரிசனம்
-
இதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமா(று)
இதுவன்றே என்றனக்கோர் சேமம் - இதுவன்றே
மின்னுஞ் சுடருருவாய் மீண்டாயென் சிந்தனைக்கே
இன்னுஞ் சுழல்கின்ற(து) இங்கு.
தெளிவுரை : இந்தச் சோதி வடிவம் அல்லவா இறைவனுடைய திருவுருவம் ஆகும் வண்ணம்? இது
அல்லவா எனக்கு ஒரு பாதுகாப்பான இடம்? அனுபவத்தை மீண்டும் எண்ணிப் பார்க்கின்ற என்
சிந்தனையில் மின்னுகின்ற சோதி வடிவாகி இன்னும் இந்த விழிப்பு நிலையிலும் சுழன்று
கொண்டிருக்கிறது. இறைவனுடைய சோதியுருவக் காட்சி அனுபவநிலைக்கு, இட்டுச் செல்வது
என்ற உண்மை இதனால் புலனாகிறது.
-
எதற்கு
-
இங்கிருந்து சொல்லுவதென் எம்பெருமான் எண்ணாதே
எங்கும் பலிதிரியும் எத்திறமும் - பொங்கிரவில்
ஈமவனத்(து) ஆடுவதும் என்னுக்கென்(று) ஆராய்வோம்
நாமவனைக் காணலுற்ற ஞான்று.
தெளிவுரை : இங்கே அவனைக் காணாமல் இருந்து கொண்டு அவனைப் பற்றிக் குறை கூறுவது
ஏன்? நாம் அதனை நேரிலே காணும் அன்று, எம்பெருமானே,
உன்னுடைய பெருமைமையும் மற்றவர்கள் கூறும் பழியையும் எண்ணாமல் எவ்விடத்திலும்
பிச்சைக்காகத் திரிகின்ற இந்தக் கோலமும், மிக்க இரவில் சுடுகாட்டில் ஆடுவதும்
எதற்காக? என்று கேட்போம். இப்படியெல்லாம் தாய் அன்பிலே காரைக்கால் அம்மையார்
எண்ணுகிறார்.
தொங்கும் பொருள்கள்
-
ஞான்ற குழற்சடைகள் பொன்வரைபோல் மின்னுவன
போன்ற கறைமிடற்றான் பொன்மார்பின் - ஞான்றெங்கும்
மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே
அக்கயலே வைத்த அரவு.
தெளிவுரை : தொங்கும் கேசத்திலுள்ள சடைகள் பொன் மலையின் மேல் மின்னும்
மின்னல்களைப் போல் உள்ளன. அவன் நீலகண்டப் பெருமான். கறுப்பான கழுத்தை உடையவன்.
பொன் மேனியில் அது சிறிது மாறுபாடாகத் தோன்றும். அவனுடைய பொன்னிறம் பெற்ற
திருமார்பில் என்பு மாலையும் பாம்புகளும் விளங்கிப் புரண்டு தோன்றும். அக்கு -
ருத்திராட்சம். தேவருடைய என்புகளையே இறைவன் மாலைகளாக அணிந்துள்ளான். அவை மற்ற
தேவர்களின் பதவிகள் நிலையில்லாதன என்பதைக் காட்டுகின்றன.
பாம்பை அணையாதே
-
அரவம்ஒன்(று) ஆகத்து நீநயந்து பூணேல்
பரவித் தொழுதிரந்தோம் பன்னாள் - முரணழிய
ஒன்னாதார் மூவெயிலும் ஓரம்பால் எய்தானே
பொன்னாரம் மற்றொன்று பூண்.
தெளிவுரை : மூன்று அசுரர்களாகிய பகைவர்களுடைய வலிமையும் அழியும்படி
அப்பகைவர்களுடைய மூன்று மதில்களாகிய திரிபுரங்களையும் ஓர் அம்பால் எய்தவனே, உன்
திருமேனியில் ஒரு பாம்பையும் நீ விரும்பி அணிந்து கொள்ளாதே. வேறு ஒரு
பொன்னாரத்தைப் பூண்பாயாக. நீ நயந்து பூணுகிறாய்; நான் பயந்து நடுங்குகிறேன் என்று
தாய் அன்பினால் காரைக்கால் அம்மையார் இவ்வாறு பாடுகின்றார்.
எங்கும் பாம்பு
-
பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின்
நாணாக மேல்மிளிர நன்கமைத்துக் - கோள்நாகம்
பொன்முடிமேற் சூடுவது மெல்லாம் பொறியிலியேற்(கு)
என்முடிவ தாக இவர்.
தெளிவுரை : இறைவராகிய இவர் கொலை புரிவதாகிய நாகப் பாம்பு ஒன்றை மார்பில் ஆபரணமாக
அணிந்து, மற்றொரு பாம்பை, சிறந்து தோன்றும் புலித்தோல் ஆடையை இறுகக் கட்டும் அரை
நாணாக மேலே விளங்கும்படி நன்றாகச் செறித்துக் கொண்டு மற்றொரு பாம்பை அழகிய
திருமுடியின் மேல் அணிந்திருப்பதுமாகிய இந்தச் செயல் எல்லாம் அறிவில்லாத எனக்கு
என்ன முடிவு உண்டாவதற்காக?
பேய்க் கோலம்
-
இவரைப் பொருளுணர மாட்டாதார் எல்லாம்
இவரை யிகழ்வதே கண்டீர் - இவர்தமது
பூக்கோல மேனிப் பொடிபூசி என்பணிந்த
பேய்க்கோலங் கண்டார் பிறர்.
தெளிவுரை : இந்தச் சிவபெருமானுடைய தாமரைப் பூவின் அழகையுடைய சிவந்த திருமேனியில்
சுடுகாட்டுத் திருநீற்றைப் பூசி எலும்பை ஆபரணமாக அணிந்த பேய் போன்ற வடிவத்தைப்
பார்த்தவர்களாகிய அன்பர் அல்லாத பிறர் இந்தப் பெருமானுடைய உண்மையை உணரும் அறிவு
வன்மையும் அருள் வன்மையும் இல்லாதவர்கள். அவர்கள் யாவரும் இப்பெருமானை இழித்துப்
பேசுவதையே பாருங்கள்! என்ன அறியாமை இது!
-
சச்சிதானந்த மூர்த்தி
-
பிறர்அறிய லாகாப் பெருமையரும் தாமே
பிறர்அறியும் பேருணர்வும் தாமே - பிறருடைய
என்பே அணிந்திரவில் தீயாடும் எம்மானார்
வன்பேயும் தாமும் மகிழ்ந்து.
தெளிவுரை : வன்மையையுடைய பேய்களும் தாமும் கூடி மகிழ்ந்து மற்ற தேவர்களுடைய
என்பைப் புனைந்து கொண்டு மயானத்தில் தீயில் கூத்தாடும் எம் பெருமானார் தாம்
ஒருவரே அன்பர் அல்லாத பிறர் அறிவதற்கு இயலாத பெருமை உடையவரும் ஆவார். பிறர் தம்மை
அறிவதற்குரிய பெரிய அனுபவ ஞானமாக இருப்பவரும் தாம் ஒருவரே ஆவார். மேற் சொன்ன
மூன்று காரணங்களினால் அவர் (சத்து + சித்து + ஆனந்தம்) சச்சிதானந்த மூர்த்தி
என்று சொன்னவாறாயிற்று.
அன்பைப் பெருக்கு
-
மகிழ்தி மடநெஞ்சே மானுடரில் நீயும்
திகழ்தி பெருஞ்சேமஞ் சேர்ந்தாய் - இகழாதே
யாரென்பே யேனும் அணிந்துழல்வார்க்(கு) ஆட்பட்ட
பேரன்பே இன்றும் பெருக்கு.
தெளிவுரை : அறியாமை உடையையாக இருந்த நெஞ்சே, முன்பு துன்புற்ற நீ இப்போது
மகிழ்கிறாய். பேயாகி விட்டோமே இனித் தாழ்ந்த நிலை வருமே என்று அஞ்சிய நீயும்
மானிடரைப் போன்ற சிறப்பைப் பெற்று விளங்குகின்றாய். இதற்குக் காரணம் நீ பெரிய
பாதுகாப்பான இடத்தைச் சேர்ந்து விட்டாய், யாருடைய எலும்புக்காக இருந்தாலும் இது
தொடுவதற்கும் உரிய தன்று என்று பிறர் இகழ்வது போல இகழாமல் அதை அணிந்து கொண்டு
ஊரூர்தோறும் பிச்சைக்காகத் திரிகின்ற இறைவருக்கு ஆளாகப் புகுந்ததற்குக் காரணமான
பெரிய அன்பையே இன்னும் பெருகச் செய்வாயாக.
திருமார்பின் நூல்
-
பெருகொளிய செஞ்சடைமேற் பிள்ளைப் பிறையின்
ஒருகதிரே போந்தொழுகிற்(று) ஒக்கும் - தெரியின்
முதற்கண்ணான் முப்புரங்கள் அன்றெரித்தான் மூவா
நுதற்கண்ணான் தன்மார்பின் நூல்.
தெளிவுரை : எல்லாப் பொருளுக்கும் முதலிலே உள்ளவனும் என் உயிர்க்குக் கண்ணைப்
போன்றவனும் மூன்று புரங்களையும் பழங்காலத்தில் எரித்தவனும் அழியாதவனும்
நெற்றியில் கண்ணை உடையவனுமாகிய சிவபெருமானுடைய திருமார்பில் உள்ள முப்புரி
நூலானது, ஆராய்ந்து பார்த்தால், பெருகும் ஒளியை உடைய செம்மையான சடையின் மேல் உள்ள
இளம் பிறையின் ஒரு கதிர் கீழே வந்து ஒழுகியதை ஒக்கும் என்பது இதன் பொருள்.
கோலமும் வடிவும்
-
நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக
நீல மணிமிடற்றான் நீர்மையே - மேலுவந்த(து)
எக்கோலத்(து) எவ்வுருவாய்? எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத்(து) அவ்வுருவே ஆம்.
தெளிவுரை : நூலைக் கற்று அதனால் வந்த அறிவையே பெரிதாக எண்ணி வீண் பேச்சுப் பேசி,
நுட்பமான வாலறிவுலகத்தில் புகாதவர்கள் ஒரு பயனும் பெறாமல் திரிந்து கொண்டே
இருக்கட்டும். நீலமணி போன்ற திருக்கழுத்தையுடைய பெருமானுடைய அனந்த கல்யாண
குணங்களின், தொகுதியே, நான் மேலாக உவந்து ஏற்று வழிபடுவது; இறைவனை எந்தக்
கோலத்தில், எந்த வடிவாக எண்ணி எத்தகைய தவம் செய்தாலும் அவன் அந்தக் கோலத்தில்
அந்த வடிவுடையவனாகவே வந்து அருள் புரிவான்.
அணையாதார் பெறும்இன்பம்
-
ஆமா(று) அறியாவே வல்வினைகள் அந்தரத்தே
நாமாள்என்(று) ஏத்தார் நகர்மூன்றும் - வேமா(று)
ஒருகணையால் செற்றானை உள்ளத்தால் உள்ளி
அருகணையா தாரை அடும்.
தெளிவுரை : நன்மைகள் உண்டாகும் வழியைத் தீவினைகள் அறியா; நாம் இறைவனுக்கு
அடிமைகள் என்பதை உணர்ந்து அவனைத் துதித்து வணங்காத மூன்று அசுரர்களுக்கு
உரியனவாகிய, வானத்தில் பறந்த மூன்று நகரங்கள் வெந்து எரியும்படியாக ஓர் அம்பினால்
அழித்தவனை மனத்தினால் தியானித்து அவனை நெருங்கிப் பக்தி செய்யாதவர்களை அந்த
வினைகள் துன்புறுத்தும்.
இருள் இருக்கும் இடம்
-
அடுங்கண்டாய் வெண்மதியென்(று) அஞ்சி இருள்போந்(து)
இடங்கொண்(டு) இருக்கின்ற(து) ஒக்கும் - படங்கொள்
அணிமிடற்ற பேழ்வாய் அரவசைத்தான் கோல
மணிமிடற்றின் உள்ள மறு.
தெளிவுரை : படத்தைக் கொண்டனவும் அழகிய கழுத்தை உடையனவும் ஆழமான வாயை உடையனவுமாகிய
நாகப் பாம்புகளை அணிகலனாகக் கட்டியவனுடைய அழகையுடைய நீல மணி போன்ற கழுத்தில் உள்ள
நஞ்சின் கறுப்பான அடையாளமானது, இந்த வெண்மதி நம்மை அழித்து விடும் என்று பயந்து
இருளானது இங்கே வந்து இந்த இடத்தைப் பற்றிக் கொண்டு இங்கேயே தங்கியிருக்கிறதைப்
போல் இருக்கும்.
வளராதமதி
-
மறுவுடைய கண்டத்தீர் வார்சடைமேல் நாகம்
தெறுமென்று தேய்ந்துழலும் ஆஆ - உறுவான்
தளரமீ(து) ஓடுமேல் தான்அதனை அஞ்சி
வளருமோ பிள்ளை மதி.
தெளிவுரை : ஆலகால நஞ்சாகிய மறுவை அளித்த திருக்கழுத்தை உடைய பெருமானே!
இளமையையுடைய பிறை, உம்முடைய நீண்ட சடையின் மேல் அணிந்துள்ள நாகப்பாம்பு தன்னை
வருத்தும் என்று அஞ்சித் தேய்ந்து மனம் மறுகும், ஐயோ பாவம்! (தான் வளர்ந்து
முழுத் திங்களாகி விடும் போது) மேலே உள்ள வானத்தில் உள்ளோர் தளரும்படியாக அந்தப்
பாம்பு மேலே தன்னைக் கொல்ல ஓடுமானால் அந்த மதி அஞ்சி நையுமே அன்றி வளருமா?
பிறை அச்சத்தினால் வளராமல் தேய்ந்திருக்கிறது என்பது கருத்து.
திருக்கோல உண்மை
-
மதியா அடல்அவுணர் மாமதில்மூன்(று) அட்ட
மதியார் வளர்சடையி னானை - மதியாலே
என்(பு)ஆக்கை யால்இகழா(து) ஏத்துவரேல் இவ்வுலகில்
என்(பு)ஆக்கை யாய்ப்பிறவார் ஈண்டு.
தெளிவுரை : தன்னை மதிக்காத வலிமையுடைய அசுரர்களின் பெயரில் மதில்கள் மூன்றை
அழித்த, சந்திரன் தங்கும் வளரும் சடையை உடைய சிவபெருமானை, அவன் அணிந்த என்புச்
சட்டத்தை அறியாமையால் இகழாமல், அறிவுத் திறத்தால் உண்மையைத் தெரிந்து புகழ்ந்து
இவ்வுலகத்தில் வழிபடுவார்கள். ஆனால் அவர்கள் என்போடு கூடிய உடம்புடன் இங்கே
மீண்டும் பிறக்க மாட்டார்கள்.
சிறுத்தமதி
-
ஈண்டொளிசேர் வானத்(து) எழுமதியை வாளரவம்
தீண்டச் சிறுகியதே போலாதே - பூண்டதோர்
தாரேறு பாம்புடையான் மார்பில் தழைந்திலங்கு
கூரேறு கார்எனக் கொம்பு.
தெளிவுரை : அணிந்த ஒப்பற்ற மாலையின் தன்மையை உடைய பாம்பை உடைய சிவபெருமானுடைய
திருமார்பில் நன்றாகச் சிறந்து விளங்கும் கூர்மையை உடைய கடுமையான பன்றியின்
வெண்மையான கொம்பு நெருங்கிய ஒளி சேர்ந்த வானத்தில் எழுந்த சந்திரனை விடத்தையுடைய
பாம்பு தீண்டி விழுங்க அது சிறுத்தது போல இருக்கிறதல்லவா?
வராக அவதாரத்தில் முரித்த கொம்பைச் சிவபிரான் திருமார்பில் அணிந்துள்ளார் என்பது
நூல் முடிவு.
பொன்மலையும் வெள்ளிமலையும்
-
கொம்பினையோர் பாகத்துக் கொண்ட குழகன்தன்
அம்பவள மேனி அதுமுன்னம் - செம்பொன்
அணிவரையே போலும் பொடியணிந்தால் வெள்ளி
மணிவரையே போலும் மறித்து.
தெளிவுரை : பூங்கொம்பு போன்ற அம்பிகையைத் தன் ஒரு பாகமாகிய இடப் பகுதியில்
ஏற்றுக் கொண்ட இளமை எழிலையுடைய சிவபெருமானுடைய அழகிய பவளம் போன்ற திருமேனி
முதலில் செம்பொன்னாலான அழகையுடைய மேருமலையைப் போல இருக்கும். வெண்பொடியாகிய
திருநீற்றை அணிந்து கொண்டால் மறுபடியும் அந்தத் திருமேனி அழகைப் பெற்ற வெள்ளி
மலையாகிய கைலாசத்தைப் போல இருக்கும்.
நல்லோரை மருவுதலும்அல்லோரை ஒருவுதலும்
-
மறித்தும் மடநெஞ்சே வாயாலும் சொல்லிக்
குறித்துத் தொழுதொண்டர் பாதம் - குறித்தொருவர்
கொள்ளாத திங்கட் குறுங்கண்ணி கொண்டார்மாட்(டு)
உள்ளதார் கூட்டம் ஒருவு.
தெளிவுரை : அறியாமையையுடைய நெஞ்சே, இவனைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணி யாரும்
ஏற்றுக் கொள்ளாத சந்திரனைக் குறுங் கண்ணியாக திருமுடியில் வைத்துக் கொண்டவரை
மீட்டும் வாயினாலும் புகழ் பாடித் தியானித்து, அவருடைய தொண்டர்களின் திருவடிகளைத்
தொழுவாயாக, அவரை எண்ணாதவர்களின் கூட்டத்தினின்று நீ விலகி ஒழுகுவாயாக.
நீஎங்கே ?
-
ஒருபால் உலகளந்த மாலவனாம் மற்றை
ஒருபால் உமையவளாம் என்றால் - இருபாலும்
நின்னுருவ மாக நிறந்தெரிய மாட்டோமால்
நின்னுருவோ மின்னுருவோ? நேர்ந்து.
தெளிவுரை : இறைவனே, உன்னுடைய ஒரு பாகத்தில் இருப்பவன் உலகத்தைத் தன் திருவடியால்
அளந்த திருமாலாம். மற்ற ஒரு பாகத்தில் இருப்பவள் உமையவளாம். இவ்வாறு சொன்னால்
அடியேங்கள் இரண்டு பக்கத்திலும் நின் திருவுருவமாக இதுதான் நிறம் என்று தெரிந்து
கொள்ளும் ஆற்றல் இல்லோம். இன்னும் அணுகிப் பார்த்து நின் உருவமோ அல்லது மின்னலைப்
போன்ற உமையவளின் உருவமோ என்றும் அறிய மாட்டோம்.
என்னகாரணம் ?
-
நேர்ந்தரவம் கொள்ளச் சிறுகிற்றோ நீயதனை
ஈர்ந்தளவே கொண்டிசைய வைத்தாயோ - பேர்ந்து
வளங்குழவித் தாய்வளர மாட்டாதோ என்னோ
இளங்குழவித் திங்க ளிது?
தெளிவுரை : எம்பெருமானே, இளைய குழந்தை போன்ற சந்திரனாகிய இது, நீ அணிந்திருக்கும்
பாம்பு பற்றிக் கொள்ள, நைந்து சிறியதாயிற்றோ? நீயே அதை அறிந்து உனக்கு வேண்டும்
அளவில் கொண்டு உன் திருமுடியில் பொருந்தும்படி வைத்தாயோ? இளமையை உடையதாய் இதன்
வளப்பம் மறுபடியும் வளராதோ ? என்ன காரணம்?
நம்மால் முடியுமா ?
-
திங்கள் இதுசூடிச் சில்பலிக்(கு)என்று ஊர்திரியேல்
எங்கள் பெருமானே என்றிரந்து - பொங்கொளிய
வானோர் விலக்காரேல் யாம்விலக்க வல்லமே
தானே அறிவான் தனக்கு.
தெளிவுரை : இந்தச் சந்திரனைத் தலையில் அணிந்து கொண்டு சிறிது பிச்சைக்காக
ஊர்தோறும் திரியாதே, எம்பெருமானே ! கெஞ்சிக் கேட்டுக் கொண்டு மிக்க ஒளியையுடைய
தேவர்கள் சிவபெருமான் பிச்சை எடுப்பதை விலக்காமல் இருப்பாரானால் ஒன்றுக்கும்
பற்றாத யாம் விலக்கும் வன்மையை உடையேமா? தனக்கு உரியதைத் தானே அறிவான்
எம்பெருமான்.
அருளுக்கு ஏங்குதல்
-
தனக்கே அடியனாய்த் தன்னடைந்து வாழும்
எனக்கே அருளாவா(று) என்கொல் மனக்கினிய
சீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப்
பேராளன் வானோர் பிரான்.
தெளிவுரை : மனத்துக்கு இனியனவாக உள்ள கல்யாண குணங்களை உடையவனும் கங்காதேவியின்
மணவாளனும் செம்மையான திருமேனியையுடைய பெரியவனும், தேவர்களுக்கெல்லாம் உபகாரியுமாக
இருக்கின்ற சிவபெருமான் வேறுயாரையும் அணுகாமல் தனக்கே அடிமைப் பட்டேனாய்த் தன்னை
அடைந்து வாழும் அடியேனுக்கே அருளாமல் இருக்கும் இயல்பு ஏன்? அதற்கு என்ன காரணம்?
எங்கே இருக்கிறான் ?
-
பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப்
பிரானவன்தன் பேரருளே வேண்டிப் - பிரானவனை
எங்குற்றான் என்பீர்கள் என்போல்வார் சிந்தையினும்
இங்குற்றான் காண்பார்க்(கு) எளிது.
தெளிவுரை : பரம உபகாரியாகிய ஆண்டவனை நோக்கி ஒழுகும் பெருநெறியைக் கடைப்பிடித்து,
பிரானாகிய அவனுடைய பேரருளைப் பெறுவதை லட்சியமாக அதனை விரும்பி, அந்தப் பிரான்
எங்கே இருக்கிறான்? என்று கேட்கிறீர்கள். அவன் இங்கே என் போல்வார் உள்ளத்திலும்
இருக்கிறான். ஆர்வத்தோடு உள்ளே காண்போர்க்கு அவனுடைய காட்சி எளிதாக அமையும்.
எளிய செயல்
-
எளிய(து) இதுவன்றே ஏழைகாள் யாதும்
அளியீர் அறிவிலீர் ஆஆ - ஒளிகொள்மிடற்(று)
எந்தைஅராப் பூண்டுழலும் எம்மானை உள்நினைந்த
சிந்தையராய் வாழுந் திறம்.
தெளிவுரை : அருட் செல்வம் பெறாத வறியவர்களே! சிறிதும் பிறருக்குக்
கொடுக்காதவர்களே, அறிவில்லாதவர்களே! அந்தோ! மணியின் ஒளியைக் கொண்ட
திருக்கழுத்தையுடைய எந்தையும் அராவை அணிகலனாகப் பூண்டு அன்பர்களைத் தேடித்
திரியும் எம்மானுமாகிய பரமேஸ்வரனை அந்தரங்கத்தில் நினைக்கும் உள்ளம் உடையவர்களாக
வாழும் திறமையாகிய இது எளிது அல்லவா?
இறைவனை அடையும்திரு
-
திறத்தான் மடநெஞ்சே சென்றடைவ தல்லால்
பெறத்தானும் ஆதியோ பேதாய் - நிறத்த
இருவடிக்கண் ஏழைக்(கு) ஒருபாகம் ஈந்தான்
திருவடிக்கண் சேரும் திரு.
தெளிவுரை : இயல்பாகவே மடமையையுடைய நெஞ்சே, சொன்னாலும் புரிந்து கொள்ளாத பேதமையை
உடைய மனமே, நல்ல வண்ணமுடைய இரண்டு மாவடுவின் பிளப்பைப் போன்ற திருவிழிகளையுடைய
பெண்ணாகிய அம்பிகைக்குத் தன் ஒரு பாகமாகிய இடப்பாகத்தை வழங்கினவனாகிய இறைவனுடைய
திருவடியைச் சேர்ந்து இன்புறும் வளவாழ்வு, அதற்குரிய தகுதியோடு அதனைப் பெற
வேண்டும் என்ற ஏக்கத்தோடு எல்லாவற்றையும் விட்டொழித்து அதனையே நாடிச் சென்று
அடைவதல்லாமல் இருந்த இடத்தில் இருந்தபடியே பெறுவதற்கு நீ தகுதியுடையை ஆவாயோ?
மதியில்லா அரவு
-
திருமார்பில் ஏனச் செழுமருப்பைப் பார்க்கும்
பெருமான் பிறைக்கொழுந்தை நோக்கும் - ஒருநாள்
இதுமதியென்(று) ஒன்றாக இன்றளவுந் தேரா
தது, மதியொன்(று) இல்லா அரா.
தெளிவுரை : ஆராய்ந்து பார்க்கும் அறிவு சிறிதும் இல்லாத (சிவபெருமான்
அணிந்திருக்கும்) பாம்பு இறைவன் அழகிய மார்பில் உள்ள (இதுதான் சந்திரனோ என்று)
பன்றியின் வளமான கொம்பை முதலில் பார்க்கும். பிறகு இறைவன் முடிமேல் அணிந்துள்ள
இளம்பிறையைப் பார்க்கும். இந்த நாள் வரைக்கும் ஏதேனும் ஒரு நாளில் இதுதான்
சந்திரன் என்று ஒரு முடிவாகத் தெரியாதது.
பொன்னும் வெள்ளியும்
-
அராவி வளைத்தனைய அங்குழவித் திங்கள்
விராவு கதிர்விரிய ஓடி - விராவுதலால்
பொன்னோடு வெள்ளிப் புரிபுரிந்தாற் போலாவே
தன்னோடே யொப்பான் சடை.
தெளிவுரை : அரத்தால் வெள்ளித் தகட்டை அராவி வளைத்தாற் போன்ற தோற்றத்தையுடைய அழகிய
இளம் பிறையிலிருந்து வெளியே தோன்றுகின்ற கதிர்கள் விரிவாக ஓடி இடையிடையே
விராவுதலால், தனக்குத் தானே ஒப்பாகிய இறைவனுடைய சடைகள் பொன்னாலான புரிகளோடு
வெள்ளிப் புரிகள் கலந்து அமைந்தாற் போலுள்ளன அல்லவா?
கொன்றையும் கனியும்
-
சடைமேல்அக் கொன்றை தருகனிகள் போந்து
புடைமேவித் தாழ்ந்தனவே போலும் - முடிமேல்
வலப்பால்அக் கோலமதி வைத்தான்தன் பங்கின்
குலப்பாவை நீலக் குழல்.
தெளிவுரை : தன்னுடைய திருமுடியின் மேல் வலப்பக்கத்தில் அந்த அழகிய பிறையை வைத்த
சிவபெருமானுடைய ஒரு பாதியில் எழுந்தருளியிருக்கும் உயர் குலப் பெண்ணாகிய
உமாதேவியின் கருமையான கூந்தல் கற்றைகள் இறைவன் சடையின்மேல் குடியிருக்கும்
அந்தக் கொன்றை மலர்கள் முதிர்ந்து உண்டாக்கிய கனிகள் உருவாகி வந்து பக்கத்தில்
சார்ந்து கீழே தொங்குவன போலத் தோன்றும். கொன்றைக் கனிகள் கரியனவாய் நீண்டு
தொங்குபவை உமாதேவியின் குழற் சடை போன்றன என்பதாம்.
அங்கே அழைத்துச்செல்லாதே
-
குழலார் சிறுபுறத்துக் கோல்வளையைப் பாகத்(து)
எழிலாக வைத்தேக வேண்டா - கழலார்ப்பப்
பேரிரவில் ஈமப் பெருங்காட்டிற் பேயோடும்
ஆரழல்வாய் நீயாடும் அங்கு.
தெளிவுரை : காலில் அணிந்த வீரக் கண்டை ஒலிக்க பெரிய நள்ளிரவில் ஈமமாகிய
சுடுகாட்டில் பேய்களோடும் வெப்பம் தாங்குவதற்கு அரிய நெருப்பில் நீ தாண்டவமாடும்
அவ்விடத்துக்குக் கூந்தல் தாழ்ந்திருக்கும் சிறிய முதுகை உடையவரும் திரட்சியான
வளைகளை அணிந்தவருமாகிய உமாதேவியை உன் வாம பாகத்தில் அழகாக வைத்துக் கொண்டு போக
வேண்டா. இவ்வாறு இறைவனுக்கு அறிவுரை கூறுவனவாக உள்ள பாடல்களில் காரைக்கால்
அம்மையாரின் தாய்த்தன்மை புலனாகிறது.
எங்கும்முழு மதியம்
-
அங்கண் முழுமதியம் செக்கர் அகல்வானத்(து)
எங்கும் இனிதெழுந்தால் ஒவ்வாதே - செங்கண்
திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த
சிரமாலை தோன்றுவதோர் சீர்.
தெளிவுரை : செம்மையான கண்ணையுடைய திருமாலைத் தன் பங்கில் உடையவனாகிய சிவபிரானுடைய
செம்மையான சடாபாரத்தின் மேல் அணிகலனாக வைத்த தலைமாலை தோற்றமளிக்கிற ஒப்பற்ற அழகு,
அழகிய இடபத்தையுடைய பூரண சந்திரன்கள் செம்மை நிறமுடைய அகன்ற வானத்தில் எங்கும்
இனிதாக உதயமானாற் போல உள்ளதல்லவா?
காரின்வடிவம்
-
சீரார்ந்த கொன்றை மலர்தழைப்பச் சேணுலவி
நீரார்ந்த பேரியாறு நீத்தமாய்ப் - போரார்ந்த
நாண்பாம்பு கொண்டசைத்த நம்மீசன் பொன்முடிதான்
காண்பார்க்குச் செவ்வேயோர் கார்.
தெளிவுரை : சிறப்பு நிரம்பிய கொன்றைப் பூவானது தளதளவென்று மலர்ந்து விளங்க,
வானுலகத்தில் ஓடி நீர் நிரம்பிய பெரிய ஆறாகிய கங்கையானது வெள்ளமாக இங்கே
தங்கியிருக்க, போர் செய்யும் இயல்பு நிறைந்த கயிற்றைப் போன்ற பாம்பைக் கொண்டு
கட்டிய நம் ஈசனாகிய சிவபெருமானுடைய பொன்நிறம் பெற்ற திருமுடிதான் காண்பவர்களுக்கு
நன்றாக கார்காலப் பருவத்தின் வடிவேயாகும்.
எங்கு ஒளித்தாய் ?
-
காருருவக் கண்டத்தெம் கண்ணுதலே எங்கொளித்தாய்
ஓர்உருவாய் நின்னோ(டு) உழிதருவான் - நீர்உருவ
மேகத்தால் செய்தனைய மேனியான் நின்னுடைய
பாகத்தான் காணாமே பண்டு.
தெளிவுரை : மேகத்தைப் போன்ற நிறத்தையுடைய திருக்கழுத்தையும் நெற்றியில் கண்ணையும்
உடைய எம்பெருமானே! ஒரே வடிவமாக நின்னோடு எங்கும் உலவுகிறவனும் நீரையுடைய அழகிய
மேகத்தினால் செய்தமைத்தால் போன்ற திருமேனியை உடையவனும் நின்னுடைய இடப்பாகத்தில்
இணைந்திருப்பவனுமாகிய திருமால் பழங்காலத்தில் நின்னைக் காண முடியாமல் நீ எங்கே
மறைந்தாய்?
வேறுஒன்றும் உண்டு
-
பண்டமரர் அஞ்சப் படுகடலின் நஞ்சுண்டு
கண்டம் கறுத்ததவும் அன்றியே - உண்டு
பணியுறுவார் செஞ்சடைமேல் பால்மதியின் உள்ளே
மணிமறுவாய்த் தோன்றும் வடு.
தெளிவுரை : பழங்காலத்தில் தேவர்கள் அமுதம் வேண்டுமென்று கடைந்தபோது அவர்கள்
அஞ்சும்படி பாற்கடலில் தோன்றிய ஆலகால நஞ்சத்தை உண்டு இறைவனுடைய கண்டம் கறுப்பு
நிறத்தை அடைந்ததும் அல்லாமல் பாம்புகள் இருக்கும் நீண்ட செம்மையான சடையின்மேல்
பாலைப் போல வெளுப்பான சந்திரனுக்குள்ளே நீலமணியின் நிறத்தைப் பெற்ற மறுவென்ற
வடிவில் தோன்றும் வடுவும் உண்டு.
நிலாச் சூடும்காரணம்
-
வடுவன்(று) எனக்கருதி நீமதித்தி யாயில்
சுடுவெண் பொடிநிறத்தாய் சொல்லாய் - படுவெண்
புலால்தலைவி னுள்ஊண் புறம்பேசக் கேட்டோம்
நிலாத்தலையில் சூடுவாய் நீ.
தெளிவுரை : சுட்ட வெண்மையான திருநீற்றின் நிறத்தை உடைய திருமேனிப் பெருமானே!
உயிரின்றிப் பட்டுப் போன புலால் நாற்றம் கமழும் கபாலத்தினுள் பிச்சை உணவைப்
பெறுவதைப் பழியன்று என எண்ணி நீ அதைச் சிறப்பாக எண்ணினையாயினும் மற்றவர்கள்
புறத்தே பழிகூறுவதைக் கேட்டோம். நிலாவையுடைய சந்திரனை நீ தலையில் சூடிக்
கொண்டிருக்கிறாய்! நீ அதன் காரணத்தைச் சொல்.
நிலவை அணிதல் மண்டை ஓட்டில் பலி ஏற்று உண்டதற்கு ஒரு கழுவாய் போல உள்ளதென்று
கற்பனை செய்தபடி.
-
பலியிடார்
-
நீயுலகம் எல்லாம் இரப்பினும் நின்னுடைய
தீய அரவொழியச் செல்கண்டாய் - தூய
மடவரலார் வந்து பலியிடார் அஞ்சி
விடஅரவம் மேல்ஆட மிக்கு.
தெளிவுரை : இறைவனே, நீ உலகம் எல்லாம் தெரிந்து பிச்சை எடுத்தாலும் குற்றம் இல்லை.
ஆபரணமாகப் பூண்டிருக்கும் நின்னுடைய தீங்கைப் பயக்கும் கெட்ட பாம்பு ஒழிந்து
நிற்கப் போவாயாக. ஏனென்றால் உனக்குப் பிச்சையிடும் தூய மனம் உள்ள பெண்கள் விடம்
பொருந்திய பாம்பு உன் மேலே ஆட, அதைக் கண்டு அஞ்சி உன் அருகில் வந்து பிச்சை போட
மாட்டார்கள். பாம்பாகிய அணியை நீக்கிவிட்டுச் செல்வாயாக என்பதாம்.
சடையும் குழலும்
-
மிக்க முழங்கெரியும் வீங்கிய பொங்கிருளும்
ஒக்க உடனிருந்தால் ஒவ்வாதே - செக்கர்போல்
ஆகத்தான் செஞ்சடையும், ஆங்கவன்தன் பொன்னுருவில்
பாகத்தாள் பூங்குழலும் பண்பு.
தெளிவுரை : அந்திச் செவ்வானத்தைப் போலுள்ள திருமேனியையுடைய சிவபெருமானுடைய
செந்நிறமான சடையும் அங்கே அவனுடைய பொலிவு பெற்ற திருவுருவத்தில் இடப்
பாகத்திலுள்ள அம்பிகையின் பூவை அணிந்த கருங்குழலும் தோற்றுவிக்கும் இயல்பு,
மிகவும் அதிகமாகப் பொங்கி முழங்கும் நெருப்புக் கொழுந்தும் மிகுதியாக அடர்ந்துள்ள
இருளும் ஒருங்கே உடன் இருந்தால் எப்படியோ அப்படி ஒத்திராதோ?
நீறுஅணியும் உருவம்
-
பண்புணர மாட்டேன்நான் நீயே பணித்துக்காண்
கண்புணரும் நெற்றிக் கறைக்கண்டா - பெண்புணரும்
அவ்வுருவோ மாலுருவோ ஆனேற்றாய் நீறணிவ(து)
எவ்வுருவோ நின்னுருவ மேல்.
தெளிவுரை : கண் சேர்ந்த நெற்றியையும் நஞ்சுக் கறுப்பையுடைய கண்டத்தையும் கொண்ட
எம்பெருமானே, இடப வாகனத்தை உடையானே, உன்னுடைய இயல்பு முழுவதையும் உணரும் ஆற்றல்
இல்லாதவள் யான். ஆதலால் நீயே என் ஐயம் நீங்கப் பணித்தருளல் வேண்டும். நின்னுடைய
பலவகைத் திருக்கோலங்களுக்குள் உமாதேவியாகிய பெண்ணின் நல்லாள் சேர்ந்த அந்தத்
திருவுருவமோ, திருமாலோடு இணைந்தபோது அந்தத் திருமாலின் பத்தியோ எவ்வுருவம்
திருநீற்றை அணிவது?
-
பொன்மலை
-
மேலாய மேகங்கள் கூடியோர் பொன்விலங்கல்
போலாம் ஒளிபுதைத்தால் ஒவ்வாதே - மாலாய
கைம்மா மதக்களிற்றுக் காருரிவை போர்த்தபோ(து)
அம்மான் திருமேனி அன்று.
தெளிவுரை : மயக்கமே தன் உருவாக வந்து துதிக்கையை உடைய விலங்காக, மதம் மிகுந்த
யானையாக வந்த கஜாசுரனைச் சங்காரம் செய்து, அந்த யானையின் கரிய தோலை அந்தப்
பழங்காலத்தில் இறைவன் போர்த்துக் கொண்ட போது அவன் திருமேனி, மேலே படர்ந்த கரிய
மேகங்கள் ஒன்றாகக் கூடி ஒரு பொன் மலையில் வீசிய மிக்க ஒளியை மறைத்தால் அமையும்
காட்சியை ஒத்திருக்காதோ?
எந்தஉருவம் ?
-
அன்றும் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்
இன்றும் திருவுருவம் காண்கிலேன் - என்றும்தான்
எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட்(கு) என்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது
தெளிவுரை : எம்பெருமானே, உன்னை வழிபடத் தொடங்கிய அந்தக் காலத்திலும் உன்னுடைய
இயல்பான திருவுருவத்தைக் காணாமலே உனக்கு அடிமையானேன். உன்னுடைய திருவருளால் உன்
அருள் அனுபவத்தைப் பெற்று நிற்கும் இப்போதும் உன் திருவுருவத்தை நான் காணவில்லை.
உம்முடைய கடவுள் என்றைக்கும் எந்த உருவத்தை உடையவன்? என்று கேட்கிறவர்களுக்கு
நான் எந்த விடையைச் சொல்வேன்? எந்த உருவத்தைச் சொல்வது? நின் உருவம் எது?
வேடவடிவம்
-
ஏதொக்கும் ஏதொவ்வா(து) ஏதாகும் ஏதாகா(து)
ஏதொக்கும் என்பதனை யார்அறிவார் - பூதப்பால்
வில்வேட னாகி விசயனோ(டு) ஏற்றநாள்
வல்வேடன் ஆன வடிவு.
தெளிவுரை : பழங்காலத்தில் வில்லைக் கையிலேந்திய வேடனாக வந்து விசயனோடு
எதிர்த்துப் போரிட்ட காலத்தில் வலிமையை உடைய வேடத்தை உடையவனான அந்த இறைவன்
வடிவத்திற்கு எது ஒப்பாகும். எது ஒவ்வாது? எது சொல்லத்தகும்? எது சொல்லத் தகாது?
எது உவமானமாகும். என்பதனை யார் அறிவார்கள்?
திங்கள்நிலா
-
வடிவுடைய செங்கதிர்க்கு மாறாய்ப் பகலே
நெடிதுலவி நின்றெறிக்கும் கொல்லோ - வடியுலவு
சொன்முடிவுஒன் றில்லாத சோதியாய் சொல்லாயால்
நின்முடிமேல் திங்கள் நிலா.
தெளிவுரை : புதுமை சேர்ந்த சொல்லுக்கு முடிவு ஒன்றும் இல்லாத சோதியாக நிற்கும்
எம்பெருமானே! நின்னுடைய திருமுடியின் மேல் உள்ள திங்களின் ஒளியானது வடிவழகுடைய
செந்நிறமுள்ள சூரியனுக்கு எதிராகப் பகலில் நீண்டு உலவி நின்று ஒளி வீசுமா? இதைச்
சொல்வாயாக.
திரியும் பாம்பு
-
நிலாஇலங்கு வெண்மதியை நேடிக்கொள் வான்போல்
உலாவி உழிதருமா கொல்லோ - நிலாவிருந்த
செக்கர்அவ் வானமே ஒக்கும் திருமுடிக்கே
புக்கரவம் காலையே போன்று.
தெளிவுரை : பாம்பானது நிலா இருந்த அந்தச் சிவப்பான அந்திவானத்தை ஒத்து விளங்கும்
சிவபெருமானுடைய அழகிய முடியிலே புகுந்து நிலா விளங்குகின்ற வெண்ணிறமுள்ள
சந்திரனைக் காலை நேரத்தில் தேடுவதைப் போன்று அதைத் தேடிப் பற்றிக் கொள்வதைப் போல்
உலவித் திரியும் வண்ணமோ?
காலைமுதல் இரவுவரை
-
காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின்
தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவற்கு
வீங்கிருளே போலும் மிடறு.
தெளிவுரை : சிவபெருமானாகிய அவனுக்கு உதயவேளையாகிய காலை நேரத்தைப் போலச்
சிவப்பாகத் திருமேனி விளங்கும். கடும் பகலாகிய நண்பகல் வேளையைப் போல அவன்
திருமேனியில் அணிந்த வெண்மையான திருநீறு விளங்கும். மாலை நேரத்தில் வானம்
தாங்கும் சிவப்பு உருவம் போல அவன் சடையின் தொகுதி தோன்றும். மிக்க இருளைப் போல
அவனுடைய நீல கண்டம் தோன்றும்.
கழுத்தில் உள்ளநஞ்சு
-
மிடற்றில் விடமுடையீர் உம்மிடற்றை நக்கி
மிடற்றில் விடங்கொண்ட வாறோ - மிடற்றகத்து
மைத்தாம் இருள்போலும் வண்ணம் கரிதாலோ
பைத்தாடும் நும்மார்பிற் பாம்பு.
தெளிவுரை : திருக்கழுத்தில் ஆலகால நஞ்சை உடைய எம்பெருமானே, உம்முடைய திருமார்பில்
படம் எடுத்தாடும் பாம்பு, தன் கழுத்தில் கருமை பொருந்திய இருள் போல் நிறம்
கரியதாக இருக்கிறது. அது உம்முடைய திருக்கழுத்தை நக்கி அங்குள்ள விடத்தைத் தன்
கழுத்திலும் கொண்ட வண்ணமோ இது?
இறைவன் என்னும்மலை
-
பாம்பும் மதியும் மடமானும் பாய்புலியும்
தாய்பயின்று தாழ்அருவி தாங்குதலால் - ஆம்பொன்
உருவடிவில் ஓங்கொளிசேர் கண்ணுதலான் கோலத்
திருவடியின் மேய சிலம்பு.
தெளிவுரை : அணிகளாகிய பாம்பும் சந்திரனும் மென்மையான மானும், பாய்கின்ற புலியும்
தாம் அவனிடத்தில் பலகாலம் இருந்து பயின்று கீழே விழுகிற கங்கையாகிய அருவி
ஒழுகுவதால் பொன்னான நிறத்தையுடைய திருவுருவத்தில் சிறந்து நிற்கின்ற ஒளியைச்
சேர்ந்தவனும் நெற்றியில் கண்ணை உடையவனுமாகிய சிவபெருமான் தன்னுடைய அழகிய தெய்வத்
திருவடிவினால் அன்பர்கள் விரும்பிய மலையாக உள்ளான்.
திருமுடியின் கோலம்
-
சிலம்படியாள் ஊடலைத் தான்தவிர்ப்பான் வேண்டிச்
சிலம்படிமேல் செவ்வரத்தம் சேர்த்தி - நலம்பெற்(று)
எதிராய செக்கரினும் இக்கோலஞ் செய்தான்
முதிரா மதியான் முடி.
தெளிவுரை : முதிராத இளம்பிறையை அணிந்த இறைவன் சிலம்பை அணிந்த திருமுடியை உடைய
அம்பிகையின் ஊடலைத் தானே போக்குவதற்கு விரும்பி, அப்பெருமாட்டியின் சிலம்படியின்
மேல் உள்ள செம்பஞ்சுக் குழம்பைப் படச் செய்து, அழகு பெற்று, முன்பு ஒப்பாக உள்ள
இக் கோலத்தைத் திருமுடிக்குச் செய்தான்.
அவலம்உண்டோ ?
-
முடிமேல் கொடுமதியான் முக்கணான் நல்ல
அடிமேற் கொடுமதியோம் கூற்றைப் - படிமேல்
குனியவல மாம்அடிமை கொண்டாடப் பெற்றோம்
இனியவலம் உண்டோ எமக்கு.
தெளிவுரை : தன்னுடைய திருமுடியின் மேல் வளைந்த பிறையை அணிந்தவனும் மூன்று கண்களை
உடையவனும் ஆகிய சிவபெருமானுடைய பிறப்பு இறப்பை நீக்கும் நல்ல அடியை வணங்கித்
தலையின் மேற்கொண்டு அந்தப் பலத்தால் யமனை ஒரு பொருளாக மதிக்க மாட்டோம். இந்த
உலகத்தில் ஒருவரை வணங்குவற்காக உள்ளோம் அல்லோம், எங்களுக்கு ஆகிய அடியாரான
தன்மையைப் பெரியோர்கள் கொண்டாடும் பேறு பெற்றோம். இப்போது எமக்கு ஏதேனும் துயரம்
உண்டோ?
எரியில் ஆடும்இடம்
-
எமக்(கு)இதுவோ பேராசை என்றும் தவிரா(து)
எமக்கொருநாள் காட்டுதியோ எந்தாய் - அமைக்கவே
போந்தெரிபாய்ந் தன்ன புரிசடையாய் பொங்கிரவில்
ஏந்தெரிபாய்ந் தாடும் இடம்.
தெளிவுரை : எம் தந்தையே, மற்ற ஒளிகளை அடக்கும் பொருட்டு நெருப்பானது வந்து
பரந்தது போலத் தோன்றும் புரிசடையுடைய சடாபாரத்தை உடையவனே,
எமக்கு இது ஒரு பேராசை; அது எப்போதும் நீங்காமல் இருக்கிறது. இருள் விம்மித்
ததும்பும் இரவில் கொழுந்துகளைத் தாங்கும் நெருப்பில் திருநடனம் ஆடும் இடத்தை
எமக்கு ஒரு நாள் காட்டுவாயோ?
வேறுபாடு தெரியாது
-
இடப்பால வானத்(து) எழுமதியை நீயோர்
மடப்பாவை தன்னருகே வைத்தால் - இடப்பாகம்
கொண்டாள் மலைப்பாவை கூறொன்றும் கண்டிலங்காண்
கண்டாயே முக்கண்ணாய் கண்.
தெளிவுரை : மூன்று கண்களையுடையாய், எம்பெருமானே! இடப் பகுதிகளைத் தன்னிடத்தே
கொண்ட வானத்தில் தோன்றும் பிறையை நீ ஒப்பற்ற இளமையையுடைய சித்திரப்பாவை போன்ற
உமாதேவியின் வாம பாகத்தில் வைத்துக் கொண்டால், அப்போது உன் இடப்பாகத்தைத் தனக்கு
உரியதாக ஆக்கிக் கொண்ட மலை மடந்தையாகிய பார்வதி தேவியின் கூற்றைச் சிறிதும் யாம்
கண்டிலோம். இதை நீ அறிந்தாயோ? இல்லை யெனின் இப்போதாவது எண்ணிப்பார்.
என் கருத்து
-
கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல்
அண்டம் பெறினும் அதுவேண்டேன் - துண்டஞ்சேர்
விண்ணாளுந் திங்களாய் மிக்குலகம் ஏழினுக்கும்
கண்ணாளா ஈதென் கருத்து.
தெளிவுரை : துண்டமாகச் சேர்ந்ததும் வானிலே ஆட்சி புரிந்ததுமாகிய பிறையைத்
திருமுடியில் புனைந்துள்ள பெருமானே, ஏழு உலகங்களுக்கும் மேலாக நிற்கும் கண்ணாக
உள்ளவனே, உன்னை தரிசித்து, எம் தந்தையே என்று உன்னை வணங்கி, உன்னுடைய
திருத்தொண்டை அடியேன் செய்யாமல் இருப்பேனாயின் அண்டத்தைப் பெற்றாலும் அந்தப்
பதவியை அடியேன் வேண்டேன். இதுவே அடியேனுடைய கருத்து.
நினைத்ததைப் பெறும்வழி
-
கருத்தினால் நீகருதிற் றெல்லாம் உடனே
திருத்தலாம் சிக்கெனநான் சொன்னேன் - பருத்தரங்க
வெள்ளநீர் ஏற்றான் அடிக்கமலம் நீவிரும்பி
உள்ளமே எப்போதும் ஓது.
தெளிவுரை : என் நெஞ்சமே, நீ உன் கருத்துக்குள்ளே எதனை வேண்டுமென்று கருதுகிறாயோ
அதனையெல்லாம் உடனே பெற்று நுகரலாம். இதை உறுதியாக நான் சொன்னேன். அதற்கு இதுதான்
வழி, பெரிய அலைகளையுடையதாய் வெள்ளமாகப் பரந்து வந்த கங்கை நீரை அடக்கித் தன்
தலைப் பாரத்தில் ஏற்றுக் கொண்ட சிவபெருமானுடைய திருவடித் தாமரையை நீ விரும்பி
எப்போதும் அவன் திருநாமத்தையும் புகழையும் ஓதிக் கொண்டே இரு.
கபாலக் கலம்
-
ஓத நெடுங்கடல்கள் எத்தனையும் உய்த்தட்ட
ஏதும் நிறைந்தில்லை என்பரால் - பேதையர்கள்
எண்ணா(து) இடும்பலியால் என்னோ நிறைந்தவா
கண்ணார் கபாலக் கலம்.
தெளிவுரை : இடம் நிரம்ப உள்ளதும் இறைவன் திருக்கரத்தில் உள்ளதுமாகிய பிரம
கபாலமாகிய பிச்சைப் பாத்திரமானது அலைப் பெருக்கையுடைய ஆழமான கடல்கள் எத்துணையைப்
பெய்து இட இட, சிறிதும் நிறைவு பெறவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் ஒன்றும்
அறியாத பேதையர்களாகிய தாருகாவனத்து முனிவரின் மனைவிமார் பிச்சைப் பாத்திரத்தின்
அளவையும் பிறவற்றையும் எண்ணாமல் இட்ட பிச்சையால் நினைந்வாறு என்ன வியப்பு !
சடையும் விசும்பும்
-
கலங்கு புனற்கங்கை ஊடாட லாலும்
இலங்கு மதிஇயங்க லாலும் - தலங்கொள்
பரிசுடையான் நீள்முடிமேல் பாம்பியங்க லாலும்
விரிசடையாம் காணில் விசும்பு.
தெளிவுரை : பல நலங்களைக் கொண்ட தன்மையை உடைய இறைவனுடைய நீண்ட திருமுடியின்மேல்
கலங்கிய புனலையுடைய ஆகாச கங்கை ஊடே அசைவதாலும், விளங்கும் பிறையானது
இயங்குவதாலும் பாம்புகள் உலாவுவதாலும் அவனுடைய விரிந்த சடையை யாம் காணும்போது
வானமாகத் தோற்றம் அளிக்கிறது.
திருவடிக்கு வந்ததீங்கு
-
விசும்பில் விதியுடைய விண்ணோர் பணிந்து
பசும்பொன் மணிமகுடந் தேய்ப்ப - முசிந்தெங்கும்
எந்தாய் தழும்பேறி யேபாவம் பொல்லாவாம்
அந்தா மரைபோல் அடி.
தெளிவுரை : எங்கள் தந்தையே, வானத்தில் வாழும் நியமனத்தை உடைய தேவர்கள் கீழே
விழுந்து தம்முடைய தூய பொன்னும் மணியும் கொண்டு சமைத்த கிரீடங்களைப் படியும்படி
தேய்ப்பதனால், உன்னுடைய அழகிய தாமரையைத் போலத் தோற்றம் அளிக்கும் திருவடிகள்
நலிவு பெற்று, எங்கும் தழும்பு ஏறிக் காண்பதற்கு அழகற்றனவாக இருக்கின்றனவே, அந்தோ
பாவம்!
அறிந்துஆடும்
-
அடிபேரின் பாதாளம் பேரும் அடிகள்
முடிபேரின் மாமுகடு பேரும் - கடகம்
மறிந்தாடு கைபேரில் வான்திசைகள் பேரும்
அறிந்தாடும் ஆற்றா(து) அரங்கு.
தெளிவுரை : சுவாமி நீங்கள் தாண்டவம் புரியும்போது, தங்கள் திருவடி வேகமாகப்
பெயர்ந்து கதி மிதித்தால் கீழே உள்ள பாதாள உலகம் நிலை பெயரும். தேவரீர் திருமுடி
பெயர்த்து வேகமாக ஆடினால் பெரிய வானத்தின் உச்சியில் அது முட்டி அந்த வானம்
பெயர்ந்து விடும். வளைகள் மாறி மாறி ஆடும் திருக்கரங்களை வீசி ஆடினால், பெரிய
திசைகளே தம் நிலையிலும் குலைந்து மாறிவிடும். ஆகவே இவற்றை எல்லாம் அறிந்து நடனம்
புரிந்தருள்வீராக. இந்தச் சிறிய நடன அரங்கு தேவரீருடைய ஆனந்த தாண்டவத்தைத்
தாங்காது. நிலை குலைந்து போகும்.
எல்லாம் கிடைக்கும்
-
அரங்கமாப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளா
இரங்குமோ எவ்வுயிர்க்கும் ஏழாய் - இரங்குமேல்
என்னாக வையான்தான் எவ்வுலகம் ஈந்தளியான்
பன்னாள் இரந்தால் பணிந்து.
தெளிவுரை : அறிவற்ற நெஞ்சமே, பேய்களையுடைய சுடுகாட்டில் அதையே அரங்கமாகக் கொண்டு
நடனமிடும் சிவபெருமான் தராதரம் பாராமல் எல்லா உயிர்களுக்கும் வாளா இரங்குவானோ?
மாட்டான். அவனைப் பலகாலம் வணங்கி வழிபட்டு விண்ணப்பித்துக் கொண்டால் இரங்குவான்.
அவ்வாறு இரங்குவானாயின், அவன் நம்மை எந்தப் பதவியில் உள்ளவராகத்தான் வைக்க
மாட்டான்; எந்த உலகத்தைத்தான் வழங்கிக் காப்பாற்ற மாட்டான்?
அடிவயர்களின் பெருமிதம்
-
பணிந்தும் படர்சடையான் பாதங்கள் போதால்
அணிந்தும் அணிந்தவரை ஏத்தத் - துணிந்தென்றும்
எந்தையார்க்(கு) ஆட்செய்யப் பெற்ற இதுகொலோ
சிந்தையார்க்(கு) உள்ள செருக்கு.
தெளிவுரை : படர்ந்த சடையை உடையவன் பாதங்களைப் பணிந்தும், பிறகு அந்தத் திருவடிகளை
அலரும் பருவத்துள்ள மலர்களால் அலங்கரித்தும், அப்பால் அவ்வாறு அலங்கரித்த
அன்பர்களை ஏத்துவதே நல்ல நெறியென்று பணிந்து நின்றோம். அப்பால் என்றும் பிறழாமல்
எம் தந்தையாராகிய சிவபெருமானுக்கு ஆளாகித் தொண்டு செய்யப் பெற்றோம். அவ்வாறு
பெற்ற இந்த நிலைதானோ எம்முடைய சிந்தையார்க்கு உள்ள செருக்குக்குக் காரணம்.
திருவடியின் ஆற்றல்
-
செருக்கினால் வெற்பெடுத்த எத்தனையோ திண்தோள்
அரக்கனையும் முன்னின்(று) அடர்த்த - திருத்தக்க
மாலயனுங் காணா(து) அரற்றி மகிழ்ந்தேத்தக்
காலனையும் வென்றுதைத்த கால்.
தெளிவுரை : திருவினால் தகுதி பெற்ற திருமாலும் அயனும் காணாமல் அரற்றி, பின்பு
இறைவன் அருள் செய்தனால் மகிழ்ந்து துதி பாட, யாராலும் வெல்லற்கரிய காலனையும்
உதைத்து வென்ற திருவடிகள், நம்மைவிட வலியவர் இல்லை என்ற கர்வத்தால் கைலாச மலையைத்
தூக்கிய பல திண்ணிய தோள்களை உடைய அரக்கனாகிய இராவணனையும் முன்னே நின்று அழுத்தின.
அடியார்களின் நிலை
-
காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம்
மேலை இருவினையும் வேரறுத்தோம் - கோல
அரணார் அவிந்தழிய வெந்தீயம் பெய்தான்
சரணார விந்தங்கள் சார்ந்து.
தெளிவுரை : பார்ப்பதற்கு அழகாக இருந்த கோட்டைகளாகிய திரிபுரங்களை உடைய அசுரர்கள்,
தம் ஊக்கம் குலைந்து இரங்கும்படியாக அந்தப்புரங்களை வெவ்விய தீயைக் கக்கும் ஓர்
அம்பினால் எய்து அழித்த சிவபெருமானுடைய திருவடிகளைப் பற்றாகப் பற்றி. யாம் கால
ஜெயம் பெற்றோம். கடுமையான நரக அனுபவத்தினின்றும் விலகி நிற்கின்றோம். முன்புள்ள
சஞ்சித வினையையும் இப்போது சேரும் ஆகாமிய வினையையும் வேரோடு அறுத்து விட்டோம்.
இறைவன் திருச்சடை
-
சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே ஒத்திலங்கிச் சாராது
பேரந்தார்க்குத் தீக்கொடியின் பெற்றியதாம் தேர்ந்துணரில்
தாழ்சுடரோன் செங்கதிரும் சாயும் தழல்வண்ணன்
வீழ்சடையே என்றுரைக்கும் மின்.
தெளிவுரை : பொருந்தி உணர்ந்தால் கிரணங்கள் தங்கும் சூரியனுடைய சிவந்த கதிர்களும்
மழுங்கிச் சாய்வதற்குரிய தழல் போன்ற வண்ணமுடைய சிவபெருமானுடைய தொங்கும் சடை என்று
சொல்லும் மின்னல்கள் ஆனவை, இறைவனை அணுகி அன்பு செய்பவர்களுக்குப் பொன்னின்
கொழுந்தைப் போலத் தோன்றி, அவ்வாறு அவனைச் சாராமல் விலகிச் செல்பவர்களுக்கு
நெருப்புக் கொடியின் தன்மையை உடையனவாகும்.
இரண்டு குன்றுகள்
-
மின்போலும் செஞ்சடையான் மாலோடும் ஈண்டிசைந்தால்
என்போலும் காண்பார்கட்(கு) என்றிரேல் - தன்போலும்
பொற்குன்றும் நீல மணிக்குன்றும் தாமுடனே
நிற்கின்ற போலும் நெடிது.
தெளிவுரை : மின்னலைப் போன்ற செம்மையை உடைய சடையை உடைய சிவபெருமான், திருமாலோடு
பிரிந்து நில்லாமல் மீண்டு ஒன்றி இணைந்து நின்றால், அந்தக் கோலம்
தரிசிப்பவர்களுக்கு எதைப் போல இருக்கும்? என்று கேட்பீர்களானால், சிவபிரானைப்
போன்றுள்ள பொன் மலையும் நீலமணிக் குன்றும் உடன் ஒன்றி உயர்ந்து நிற்கின்றதைப் போல
இருக்கும்.
மூன்றுகண்கள்
-
நெடிதாய பொங்கெரியும் தண்மதியும் நேரே
கடிதாம் கடுஞ்சுடரும் போலும் - கொடிதாக
விண்டார்கள் மும்மதிலும் வெந்தீ யினில்அழியக்
கண்டாலும் முக்கணான் கண்.
தெளிவுரை : கொடுமை உண்டாக மற்றவர்களினின்றும் பிரிந்து சென்று பகைவர்களாக இருந்த
திரிபுரத் தலைவர்களுடைய மூன்று மதில்களும் வெம்மையான தீயினால் அழியும்படி
பார்த்து, அவை அழிந்த பிறகு மகிழ்ந்த முக்கண்ணனாகிய சிவபெருமானுடைய கண்கள்
உயர்ந்ததாகிய கொழுந்துவிடும் தீயையும், குளிர்ச்சியுடைய சந்திரனையும் நேரே
கடுமையாக உள்ள வெய்ய கதிரவனையும் போல இருக்கும்.
தரிசனத்தால் பெறும்இன்பம்
-
கண்ணாரக் கண்டும்என் கையாரக் கூப்பியும்
எண்ணார எண்ணத்தால் எண்ணியும் - விண்ணோன்
எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ
பெரியானைக் காணப் பெறின்.
தெளிவுரை : எல்லாரினும் பெரியவனாகி சிவபெருமானைத் தரிசிக்கும் பேறு பெற்றால்,
அவனை என் கண் நிரம்பும்படியாகப் பார்த்தும், என் கைகள் நிரம்பக் கும்பிட்டும்,
மனம் நிரம்பும்படியாக அவனைப் பற்றிய எண்ணங்களை எண்ணியும், மகாதேவனே! எரியாடியே
என்று பலகால் சொல்லியும் இன்பம் அடைவேன்.
வேறுநிலையே வேண்டாம்
-
பெறினும் பிறிதியாதும் வேண்டேம் நமக்கீ(து)
உறினும் உறாதொழியு மேனும் - சிறிதுணர்த்தி
மற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்தன் பேயாய
நற்கணத்தில் ஒன்றாய நாம்.
தெளிவுரை : இயல்பான இரண்டு கண்களோடு மற்றும் ஒரு கண்ணைச் சில சமயங்களில் சிறிதளவு
உணரச் செய்து, தன் நெற்றியின்மேல் வைத்துள்ள சிவபிரானுடைய பேயாகிய நல்ல கணத்தில்
ஒரு பேயாகிய நாம், இந்த நிலை எப்போதும் தங்கினாலும் - தங்காமல் போய் விட்டாலும்
இதனினும் சிறந்ததென்று பிறர் சொல்லும் பிறநிலை எதனையும் வேண்டோம்.
எப்படிஅடும் ?
-
நாமாலை சூடியும் நம்ஈசன் பொன்னடிக்கே
பூமாலை கொண்டு புனைந்தன்பாய் - நாமோர்
அறிவினையே பற்றினால் எற்றே தடுமே
எறிவினையே என்னும் இருள்.
தெளிவுரை : என்னுடைய நெஞ்சமே! நாம் நமக்கு உறவாகிய சிவபெருமானுடைய பொன் வண்ணத்
திருவடிகளுக்கே நாவினால் - அன்பால் பாமாலை சூடியும், பூ மாலையைக் கொண்டு
அலங்கரித்தும், அவனை நினைக்கும் அறிவினையே பற்றி வாழ்ந்தால் பிறரை மோதித்
துன்புறுத்தும் தீவினையாகிய இருள் நம்மை எவ்வாறு எதற்காக வந்து அடும்? எற்று +
ஏது + அடும் எனப் பிரித்துப் பொருள் கொள்ள.
கண்டத்துஒளி
-
இருளின் உருவென்கோ மாமேகம் என்கோ
மருளின் மணிநீலம் என்கோ - அருளெமக்கு
நன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண்மதியம்
ஒன்றுடையாய் கண்டத்(து) ஒளி.
தெளிவுரை : நல்லவற்றை எல்லாம் உடையவனே! செந்நிறம் படைத்த சடையின்மேல் ஒளி விட்டு
விளங்கும்படி வெண்ணிறம் பெற்ற ஒன்றை உடையவனே! உன்னுடைய திருக்கழுத்தில் நஞ்சினால்
உண்டான ஒளியை இருளின் உருவம் என்று சொல்வேனா ? கரிய மேகம் என்று சொல்வேனா?
மயக்கம் இன்றித் தெளிவாக வண்ணம் தெரியும் நீலமணி என்று சொல்லட்டுமா? எது சரி
என்பதை நீயே எமக்குச் சொல்லி அருள வேண்டும்.
வாயும் கண்டமும்
-
ஒளிவிலி வன்மதனை ஒண்பொடியா நோக்கித்
தெளிவுள்ள சிந்தனையில் சேர்வாய் - ஒளிநஞ்சம்
உண்டவாய் அஃதிருப்ப உன்னுடைய கண்டம்இருள்
கொண்டவா(று) என்இதனைக் கூறு.
தெளிவுரை : எம்பெருமானே ! ஒளியை உடைய கரும்பு வில்லை உடைய வன்மையான மன்மதனைச்
சாம்பலாகும்படி திருவிழியால் பார்த்து ஞானத்தினால் தெளிவு பெற்ற அன்பர்களின்
சித்தத்தில் தங்கி வடிவத்தைக் காட்டும் ஐயனே, ஒளியை உடைய ஆலகால விடத்தை உண்ட
வாய், தன் நிறம் மாறாமல் இருக்க, உன்னுடைய திருக்கழுத்து மட்டும் கரிய நிறத்தை
அடைந்த வண்ணம் ஏன்? இதை எனக்குத் தெளிவாகச் சொல்வாயாக.
கங்கை பெருகினால்
-
கூறெமக்கீ(து) எந்தாய் குளிர்சடையை மீதழித்திட்(டு)
ஏற மிகப்பெருகின் என்செய்தி - சீறி
விழித்தூரும் வாளரவும் வெண்மதியும் ஈர்த்துத்
தெழித்தோடும் கங்கைத் திரை.
தெளிவுரை : என் அப்பனே ! இந்தக் கேள்வியை விடுக்கும் எமக்கு விடையைச் சொல்.
சீறிக் கோபத்தோடு விழித்து ஊர்ந்து செல்லும் ஒளியை உடைய பாம்பையும் வெண்மையான
பிறையையும் இழுத்துக் கொண்டு ஒலித்து ஓடும் கங்கையில், அலைகள் தாம்
தங்கியிருக்கும் நின்னுடைய குளிர்ந்த சடையை மேலே அவிழ்த்து விட்டு வெள்ளம்
ஏறும்படியாக மிகப் பெருகினால் நீ என்ன செய்வாய்?
புறம் கூறுவதுஏன் ?
-
திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய்
உரைமருவு யாமுணர்ந்தோம் கண்டீர் - தெரிமினோ
இம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைந்தோமே
எம்மைப் புறனுரைப்ப(து) என்.
தெளிவுரை : உலகியலில் ஈடுபட்டு எம்மைப் பற்றிப் பழி கூறுகிறவர்களே, கங்கை
பொருந்திய செம்மையான சடையை உடைய சிவபெருமானுடைய செம்மையான திருவடிக்கே ஆளாகி,
அவனைப் பற்றிய உரைகளையே உரைத்து, அவனை யாம் உணர்ந்தோம். இதைப் பாருங்கள்; இந்த
நிலையை அறிந்து கொள்ளுங்கள். இகலோக வாழ்வுக்கும் அடுத்த வாழ்வுக்கும் உரிய எல்லா
நலன்களும் அமையப் பெற்றோம். அப்படி இருக்க எம்மைப் புறத்தே நின்று பழி கூறுவது
ஏன்?
எம்மைஉடையான்
-
என்னை உடையானுமண ஏகமாய் நின்றானும்
தன்னை அறியாத தன்மையானும் - பொன்னைச்
கருளாகச் செய்தனைய தூச்சடையான் வானோர்க்(கு)
அருளாக வைத்த அவன்.
தெளிவுரை : என்னை உடைமையாக உடைய சுவாமியும், தானே தனித் தலைவனாக நின்றவனும்,
தன்னையே தான் அறியாத இயல்புள்ளவனும், செம்பொன்னைச் சுருளாகச் செய்தாற் போன்ற தூய
சடையவனாகிய தேவர்களுக்கு அருள் உண்டாகும்படியாக அந்தச் சிவபெருமான் உள்ளான் என்க.
உடையானும், நின்றானும் தன்மையானும் சடையான் அவன் என்று முடிக்க.
அன்பாய் விரும்பு
-
அவன்கண்டாய் வானோர் பிரானாவான் என்றும்
அவன்கண்டாய் அம்பவள வண்ணன் - அவன்கண்டாய்
மைத்தமர்ந்த கண்டத்தான் மற்றவன்பால் நன்னெஞ்சே
மெய்த்தமர்ந்தன் பாய்நீ விரும்பு.
தெளிவுரை : என்னுடைய நல்ல நெஞ்சமே! சிவபெருமானே எல்லாக் காலத்தும்
வானோர்களுக்குத் தலைவனாய் அவர்களுக்கு வேண்டியவற்றை வழங்கும் பரம உபகாரியாக
இருப்பவன்; இதனை நீ தெரிந்து கொள். அவனே அழகிய பவள வண்ணத் திருமேனியை உடையவன்.
இதையும் அறிந்து கொள். அவனே மைநிறம் பெற்றுப் பொருந்திய திருக்கழுத்தை உடையவன்.
இதனையும் நீ உணர்ந்து கொள். அவனிடம் உண்மையாகத் தங்கி அன்பாக இருந்து அவனை
விரும்புவாயாக.
இணைப்புக் காரணம்
-
விருப்பினால் நீபிரிய கில்லாயோ வேறா
இருப்பிடமற் றில்லையோ என்னோ - பொருப்பன்மகள்
மஞ்சுபோல் மால்விடையாய் நிற்பிரிந்து வேறிருக்க
அஞ்சுமோ சொல்லாய் அவள்.
தெளிவுரை : மேகம் போன்ற நிறத்தையுடைய திருமாலை விடையாகக் கொண்டவளே! நீ
பார்வதியிடம் கொண்ட பெருங்காதலால் அவளைப் பிரியும் ஆற்றல் இல்லாதவனாக
இருக்கிறாயோ? அன்றி உன்னை விட்டு வேறாக இருக்கும் இடம் பிறிது அவளுக்கு இல்லையோ?
என்ன காரணம்? அந்தப் பார்வதி உன்னைப் பிரிந்து வேறாக இருக்க அஞ்சுவாளோ? இதை
எனக்குச் சொல்வாயாக.
அன்பு மிக்கவர்யார் ?
-
அவளோர் குலமங்கை பாகத் தகலாள்
இவளோர் சலமகளும் ஈதே - தவளநீ(று)
என்(பு)அணிவீர் என்றும் பிரிந்தறியீர் ஈங்கிவருள்
அன்(பு)அணியார் சொல்லுமின்இங்(கு) ஆர்.
தெளிவுரை : வெண்மையான திருநீற்றையும் எலும்பையும் அணியும் பெருமானே! அங்கே
இருக்கும் ஒப்பற்ற அவள் நல்ல குலத்தில் தோன்றிய மங்கையாகிய பார்வதி; இங்கே
இருக்கும் இந்த நீர் வடிவத்திலுள்ள கங்கா தேவியும் இந்தத் திருமுடியில்
இருக்கிறாள். இந்த இரண்டு தேவிமாரையும் நீர் என்றும் பிரிந்தறிய மாட்டீர்.
இவ்வாறு உம்மோடு ஒட்டி நிற்கும் இந்த இரு தேவிமார்களுக்குள் உம்முடைய அன்புக்கு
அணிமையை உடைய நெருக்கமானவர் யார்? இதை யானாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. நீரே
சொல்லும்.
மறைத்து வைத்தோம்
-
ஆர்வல்லார் காண அரனவனை அன்பென்னும்
போர்வை அதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல
தாயத்தால் நாமும் தனிநெஞ்சின் உள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து.
தெளிவுரை : அரனை அன்பு என்னும் மூடு துணியினால் போர்த்து உள்ளே அமையச் செய்து,
சிறப்பு மிக்க உரிமையால் நாம் வேறெதுவும் தன்னிடம் இல்லாத எம்முடைய தனி நெஞ்சின்
அந்தரங்கத்தில் அடைத்துப் பிறருக்குத் தெரியாத மாயமான முறையினால் மறைத்து வைத்து
விட்டோம். ஆகையால், அவனை ஆர் காண வல்லார்?
செந்தீஅழல்
-
மறைத்துலகம் ஏழினிலும் வைத்தாயோ அன்றேல்
உறைப்போடும் உன்கைக்கொண் டாயோ - நிறைத்திட்(டு)
உளைந்தெழுந்து நீயெரிப்ப மூவுலகும் உள்புக்(கு)
அளைந்தெழுந்த செந்தீ யழல்.
தெளிவுரை : எம்பெருமானே! சர்வ பிரளயகாலத்தில் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து
நின்று சீறி எழுந்து நீ எரிப்பதனால் மூன்று உலகங்களிலும் கலந்து பொங்கி எழுந்த
பிரளய காலாக்கினியாகிய செம்மையாகிய தீயின் கொழுந்துகளை, மற்றக் காலங்களில் இந்த
உலகம் ஏழினிலும் மறைத்து வைத்தாயோ? அல்லாமல் அதனை அதன் வெம்மையோடும் நின்
திருக்கரத்தில் பாதுகாத்து வைத்தாயோ? இதனை எனக்குச் சொல்லி அருள வேண்டும்.
சிவந்தது எப்படி ?
-
அழலாட அங்கை சிவந்ததோ அங்கை
அழகால் அழல்சிவந்த வாறோ - கழலாடப்
பேயோடு கானிற் பிறங்க அனலேந்தித்
தீயாடு வாயிதனைச் செப்பு.
தெளிவுரை : காலில் கட்டிய வீரக் கண்டை ஆடி ஒலிக்க, சுடுகாட்டில் பேயோடு உன் கோலம்
நன்றாக விளங்கும்படி தழலை ஏந்திக் கொண்டு தீயில் நடனம் புரியும் எம்பெருமானே!
உன்னுடைய உள்ளங்கை அதில் ஏந்தியிருக்கும் தீயானது ஆடி எரிய அதனால் சிவந்ததோ?
அன்றி உன்னுடைய உள்ளங்கையில் அழகிய செவ் வண்ணத்தால் அந்த அழல் சிவந்த படியோ? இந்த
வினாவுக்கு உரிய விடையை நீ சொல்லியருள்வாயாக.
யார்காண ?
-
செப்பேந்(து) இளமுலையாள் காணவோ தீப்படுகாட்(டு)
அப்பேய்க் கணம்அவைதாம் காணவோ- செப்பெனக்கொன்(று)
ஆகத்தான் அங்காந்(து) அனல்உமிழும் ஐவாய
நாகத்தாய் ஆடுன் நடம்.
தெளிவுரை : வாயைத் திறந்து அனலைக் கக்கும ஐந்து வாய்களையுடைய நாகத்தை அணிந்த
எம்பெருமானே! நீ ஆடுகின்ற உன் நடனமானது, தங்கச் செப்பின் தன்மையை ஏந்திய இளமையின்
அடையாளமாகிய தனங்களையுடைய அன்னை கண்டு களிக்கவோ? அல்லது தீ உண்டாகும்
சுடுகாட்டில் உள்ள அந்தப் பேய்க் கணங்கள் கண்டு மகிழவோ? இந்த இரண்டில் இன்னதுதான்
காரணம் என்று ஒன்றாக எனக்குச் சொல்.
இறைவன்ஊறும் ஏறு
-
நடக்கிற் படிநடுங்கும் நோக்கில் திசைவேம்
இடிக்கின் உலகனைத்தும் ஏங்கும் - அடுக்கல்
பொரும்ஏறோ ஆனேறோ பொன்ஒப்பாய் நின்னே(று)
உரும்ஏறோ ஒன்றா உரை.
தெளிவுரை : பொன்னை ஒத்த நிறமுடையவனே! நின்னுடைய வாகனமாகிய இடபம் நடந்தால், இந்த
உலகமே நடுங்கும்; கோபத்தோடு பார்த்தால் திசைகளில் உள்ளவை வெந்து போகும் இடி போல
முழங்கினால் உலகிலுள்ள உயிர்கள் யாவும் அச்சத்தால் துன்பம் கொண்டு, என்ன ஆகுமோ
என்ற ஏக்கத்தை அடையும்; ஆதலால் அது மலைகளோடு மோதி உடைக்கும் ஆண் சிங்கமோ? ஆனேறு
தானோ? இடிதானோ? ஏதேனும் என் வினாவுக்குரிய விடையை ஒன்றாகச் சொல்.
பாடலின்பயன்
-
உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக்
கரைவினாற் காரைக்கால் பேய்சொல் - பரவுவார்
ஆராத அன்பினோ(டு) அண்ணலைச்சென்(று) ஏத்துவார்
பேராத காதல் பிறந்து.
தெளிவுரை : இந்த வெண்பா அந்தாதி மாலையாகிய காரைக்கால் பேயின் சொல்லைத் தம்முடைய
வாக்கினால் மனக் கசிவோடு சொல்லி இறைவனைத் துதிக்கும் அன்பர்கள், என்றும் அடங்காத
அன்போடு, என்றும் நீங்காத பக்தி பிறந்து இறைவனிடம் சென்று துதித்துக் கொண்டே
இருப்பார்கள்.
திருச்சிற்றம்பலம்
5. திருக்கோயில் திருவெண்பா(ஐயடிகள் காடவர்கோன்
நாயனார் அருளிச் செய்தது)
வேறு பெயர் : ÷க்ஷத்திரத் திருவெண்பா
திருக்கோயில் வெண்பாவைப் பாடிய ஐயடிகள் காடவர்கோன் நாயனார், திருத்தொண்டர்
புராணத்துள் கூறப்பெறும் நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் காடவர் என்னும் பல்லவ
அரச வழி முறையினர். இவரும் இவருடைய வழிமுறையினரும் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக்
கொண்டு அரசு புரிந்திருந்தனர் என்று தெரிகிறது. இவர் ஏறக்குறைய 1500 ஆண்டுகட்கு
முன்பு இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகின்றனர். இவர் தமிழ்
மொழியை நன்கு கற்றுச் செய்யுள் பாடும் திறமுடையவராகத் திகழ்ந்ததன்றி,
வடமொழியிலும் வல்லவராக விளங்கினார். உலக நூல்களை அன்றி அறிவு நூல்களையும் இவர்
மிகுதியாகப் பயின்ற படியால் நாளடைவில் மெய்யறிவு உண்டாகியது.
அரசாட்சி துன்பமுடையது என்று அதனைத் துறந்து துறவி போல் வாழ்தலை மேற்கொண்டார்.
அதனால் இவருடைய பெயர் ஐயடிகள் என்று மாறியது. இவர் சிவபெருமான் எழுந்தருளிய
திருக்கோயில்கள்தோறும் சென்று இறைவனைப் போற்றினார். ஒவ்வொர் ஊரிலும் ஒவ்வொரு
வெண்பாப் பாடுதலையும் மேற்கொண்டார். அவ்வாறு இவரால் பாடப் பெற்ற வெண்பாக்கள் பல.
அவைகள் எல்லாம் நாளடைவில் மறைந்து போக, நம்பியாண்டார் நம்பிகள் காலத்தில் 24
வெண்பாக்களே எஞ்சி நின்றன. அவற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருமுறையிற்
சேர்த்தருளினார்.
இவ்வெண்பாக்கள் யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை, செல்வ நிலையாமை உற்றார்,
உறவினர்கள் இறுதிக் காலத்தில் கைவிடுதல், முதுமை பருவத் துன்பம் முதலியவற்றைப்
பற்றியே பேசுகின்றன. பாடல்கள் யாவும் யாவருக்கும் எளிதில் விளங்கும் இனிய நடையில்
அமைந்து கற்போருக்குக் கழிபேருவகை ஊட்டும் பண்புடையனவாகத் திகழ்கின்றன. சொற்
சுவை, பொருட் சுவை முதலிய சுவைகள் யாவும் நன்கு அமைந்துள்ளன.
திருச்சிற்றம்பலம்
தில்லைச் சிற்றம்பலம்
-
ஓடுகின்ற நீர்மை ஒழிதலுமே, உற்றாரும்
கோடுகின்றார் மூப்பும் குறுகிற்று - நாடுகின்ற
நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே
தில்லைச்சிற் றம்பலமே சேர்.
தெளிவுரை : வாழ்க்கையில் இயங்குகின்ற தன்மை ஒழித்தவுடன், உறவினரும் மனம் திரும்பி
வேறுபடுகிறார்கள். வயோதிகமும் நெருங்கியது. விரும்புகின்ற நல்ல உடல் இறந்து
சுடுகாட்டை அடைவாற்குமுன் நல்ல நெஞ்சமே! திருச்சிற்றம்பலத்தைச் சேர்வாயாக.
மூன்றாம் அடியை, நல் அச்சு இற்று அம்பலமே நண்ணாமே எனப் பிரித்துக் கொள்க.
திருநாகேச்சுரம்
-
கடுவடுத்த நீர்கொடுவா காடிதா என்று
நடுநடுத்து நாஅடங்கா முன்னம் - பொடிஅடுத்த
பாழ்கோட்டம் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக்
கீழ்க்கோட்டம் செப்பிக் கிட.
தெளிவுரை : கடுக்காய் போட்டுக் காய்ச்சப்பட்ட மருந்து நீர் கொண்டு வா; புளித்த
நீர் கொடு என்று நடுநடுங்கி நாக்கு அடங்குவதற்கு முன், சாம்பல் நிறைந்த சுடுகாடு
சேர்வதற்கு முன் பல மாடங்களை உடைய கும்பகோணத்தில் கோயில் கொண்டுள்ள திருநாகேசுரர்
கோயிலைப் பிரார்த்தனை செய்து கொண்டிரு.
திருவையாறு
-
குந்தி நடந்து குனித்தொருகை கோல்ஊன்றி
நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி - வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை.
தெளிவுரை : உட்கார்ந்தபடியே நகர்ந்தும், குனிந்து ஒரு கையில் கோல் ஊன்றியும்,
நொந்தும் இறுமியும் வருந்தியும், நுரைதள்ளியும் கோழை பெருகி வாய் வழியே
பாய்வதற்கு முன், நெஞ்சமே! திருவையாற்றை வாயால் அழைப்பாயாக.
திருவாரூர்
-
காளை வடிவொழிந்து கையுறவோ(டு) ஐயுறவாய்
நாளும் அணுகி நலியாமுன் - பாளை
அவிழ்கமுகம் பூஞ்சோலை ஆரூரற்(கு) ஆளாய்க்
கவிழ்கமுகம் கூம்புகஎன் கை.
தெளிவுரை : காளையைப் போல் உள்ள இளமைப் பருவத்தின் வடிவு ஒழிந்து, துன்பத்தோடு
கோழை பொருந்தி, நாள்தோறும் நெருங்கித் துன்புறாமுன், பாளை அவிழ்கின்ற பாக்குமரச்
சோலைகள் சூழ்ந்த திருவாரூர் எம்பெருமானுக்கு அடிமையாகி முகங்கவிழ்ந்து வணங்குக.
என் கைகள் கூம்புவதாக.
திருத்துருத்தி
-
வஞ்சியன நுண்ணிடையார் வாள்தடங்கண் நீர்சோரக்
குஞ்சி குறங்கின்மேல் கொண்டிருந்து - கஞ்சி
அருத்தொருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சே
திருத்துருத்தி யான்பாதம் சேர்.
தெளிவுரை : வஞ்சிக் கொடியைப் போன்ற மென்மையான இடையை உடையாரது வாளைப் போன்ற பெரிய
கண்களில் நீர் சோரவும், தொடையின் மேல் வைத்துக் கொண்டு கஞ்சி உண்பிக்கக் கொண்டு
வா என்னாமுன் நெஞ்சமே! சோழ நாட்டிலுள்ள திருக்குத்தாலத்தில் எழுந்தருளியுள்ள
இறைவனது பாதங்களைச் சேர்வாயாக.
திருக்கோடிக்கா
-
காலைக் கலையிழையால் கட்டித்தாங் கையார்த்து
மாலை தலைக்கணிந்து மைஎழுதி - மேலோர்
பருக்கோடி மூடிப் பலர்அழா முன்னம்
திருக்கோடி காஅடைநீ சென்று.
தெளிவுரை : கால்களைத் துணியின் கரைப் பகுதியினால் இறுகக் கட்டி, கைகளை இழுத்துக்
கட்டி, மாலையைத் தலைக்குச் சூட்டி, மை எழுதி, பெரிய புதுத் துணியினால் மூடுதல்
செய்து, பலர் அழாமுன்பே காவிரிக்கு வடகரையில் உள்ள திருக்கோடிக்கா என்னும்
திருக்கோயிலை நீ சென்று அடைவாயாக.
திருவிடைவாய்
-
மாண்டுவாய் அங்காவாய் முன்னம் மடநெஞ்சே
வேண்டுவாய் ஆகி விரைந்தொல்லைப் - பாண்டவாய்த்
தென்இடைவாய் மேய சிவனார் திருநாமம்
நின்னிடைவாய் வைத்து நினை.
தெளிவுரை : இறந்து, வாய் திறந்து போவதற்கு முன்பு, மடமை நிறைந்த நெஞ்சமே!
வேண்டுதலைச் செய்து, விரைவாக விரிந்த வாயினையுடைய அழகிய திரு இடைவாய் என்னும்
பதியில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானுடைய திருநாமத்தை உன் மனத்தில் பதிய வைத்து
எண்ணுவாயாக.
திருநெடுங்களம்
-
தொட்டுத் தடவித் துடிப்பொன்றும் காணாது
பெட்டப் பிணம்என்று பேரிட்டுக் - கட்டி
எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே
நெடுங்களத்தான் பாதம் நினை.
தெளிவுரை : தொட்டுப் பார்த்தும் தடவிப் பார்த்தும் துடிப்பொன்றும் இல்லாமையால்,
வறிய பிணம் என்று பேரிட்டுப் பாடையில் வைத்துக் கட்டி, எடுங்கள் அத்தா என்னா
முன், மடப்பம் பொருந்திய நெஞ்சமே! திருநெடுங்களம் என்னும் ஊரில் எழுந்தருளிய
இறைவனது பாதங்களை நினைப்பாயாக.
குழித்தண்டலை
-
அழுகு திரிகுரம்பை ஆங்கதுவிட்(டு) ஆவி
ஒழுகும் பொழுதறிய ஒண்ணா - கழுகு
கழித்துண்(டு) அலையாமுன் காவிரியின் தென்பால்
குழித்தண் டலையானைக் கூறு.
தெளிவுரை : அழுகிப் போவதும் மாறுபட்டுப் போவதுமான உடலை விட்டு உயிர்
வெளியேறும்போது அறிய முடியாமல் கழுகு உடலைச் சிதைத்து உண்டு அலையாத முன்,
திருக்கடம்பந்துறையில் கோயில் கொண்டுள்ள இறைவனைப் போற்றுவாயாக. இப்போது இத்தலம்
குளித்தலை எனப்படுகிறது.
பொது
-
படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பாரெலாம் ஆண்ட
முடியரசர் செல்வத்து மும்மைக் - கடியிலங்கு
தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட்(டு)
ஓடேந்தி உண்ப(து) உறும்.
தெளிவுரை : உலக முழுவதையும் வெண்குடைக்கீழ் இருந்து ஆண்ட முடி சூடிய மன்னர்,
பெரிய அரச செல்வத்தை நுகர்ந்திருப்பதைப் பார்க்கிலும், மணமிகுந்த கொன்றை
மாலையணிந்த ஒளி வடிவாகிய சிவபெருமானுக்குப் பணி செய்து ஐயம் ஏற்றுண்டல் மூன்று
மடங்கு சிறந்தது என்றவாறு.
திருவானைக்கா
-
குழீஇயிருந்த சுற்றம் குணங்கள்பா ராட்ட
வழீஇயிருந்த அங்கங்கள் எல்லாம் - தழீஇயிருந்தும்
என்னானைக் காவா இதுதகா(து) என்னாமுன்
தென்னானைக் காஅடைநீ சென்று.
தெளிவுரை : சுற்றிக் கூடியிருந்த சுற்றத்தார் குணங்களை எல்லாம் பாராட்டவும்,
நழுவிக் கடந்த உறுப்புக்கள் எல்லாம் தழுவிச் சேர்த்துக் கொண்டிருந்து என்னுடைய
ஆனையைப் போன்ற இவனுக்கு இவ்வாறு இறந்து போனது கூடாது என்னாமுன், திருவானைக்காவை
நீ சென்று அடைவாயாக. (அங்கங்கள் எல்லாம் என்பது குடும்பத்தாரையும் குறிக்கும்
என்க)
திருமயிலை
-
குயிலொத்(து) இருள்குஞ்சி கொக்கொத்(து) இருமல்
பயிலப் புகாமுன்னம் நெஞ்சே - மயிலைத்
திருப்புன்னை யங்கானல் சிந்தியா யாகில்
இருப்பின்னை அங்காந்(து) இளைத்து.
தெளிவுரை : குயில் நிறம் போல் கருமையாக இருந்த மயிர், கொக்கைப் போல் வெண்மையாய்
நரைத்து, இருமல் மிகுதிப்படத் தொடங்குவதற்கு முன், திருமயிலைச் சிவப்பதியை
சிந்திக்காமற் போனால், பின்னை வாய் திறந்து இளைத்து இரு என்பதாம்.
உஞ்சேனைமாகாளம்
-
காளையர்கள் ஈளையர்கள் ஆகிக் கருமயிரும்
பூளையெனப் பொங்கிப் பொலிவழிந்து - சூளையர்கள்
ஓகாளஞ் செய்யாமுன் நெஞ்சமே உஞ்சேனை
மாகாளங் கைதொழுது வாழ்த்து.
தெளிவுரை : காளை போன்ற இளவயதுடையவர்கள் இருமல் முதலிய நோயுடையவர்களாகி கரு
மயிரும் வெண்ணிறப் பூளைப் பூவைப் போல் நரைத்து, தோற்றம் கெட்டு விலைமகளிர்
வெறுப்பதற்கு முன்னே நெஞ்சமே, வடநாட்டிலுள்ள உஞ்சேனை மாகாளம் என்னும்
சிவத்தலத்தைக் கைதொழுது வாழ்த்து.
வளைகுளம்
-
இல்லும் பொருளும் இருந்த மனையளவே
சொல்லும் அயலார் துடிப்பளவே - நல்ல
கிளைகுளத்து நீர்அளவே கிற்றியே நெஞ்சே
வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து.
தெளிவுரை : மனைவியும் செல்வமும் வீட்டில் இருந்தவரைதான். புகழ்ந்துரைக்கும்
அயலாரும் உயிர் உள்ள அளவுதான். நல்ல சுற்றத்தாரும் இறந்தபின் மூழ்கும்
குளத்தளவுதான். வல்லையாயின் நெஞ்சமே! வளைகுளம் என்னும் சிவப்பதியில் இருக்கும்
ஈசனையே வாழ்த்துவாயாக. இது சோழ நாட்டுத் திருத்தலம்.
திருச்சாய்க்காடு
-
அஞ்சனஞ்சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய்க்
குஞ்சி வெளுத்துடலம் கோடாமுன் - நெஞ்சமே
போய்க்காடு கூடப் புலம்பாது பூம்புகார்ச்
சாய்க்காடு கைதொழுநீ சார்ந்து.
தெளிவுரை : மை தீட்டப் பெற்ற கண்களை உடையவர் வெறுக்கும் பருவமாய் மயிர் நரையாகி
உடம்பு கூன் அடைவதற்கு முன் நெஞ்சமே! சுடுகாட்டிற்குப் போய்ச் சேர, இறப்புத்
துன்பத்தால் பிதற்றாமல் பூம்புகாரைச் சேர்ந்த திருச்சாய்க்கொடு என்னும்
சிவப்பதியைச் சார்ந்து நீ கை தொழுவாயாக.
திருப்பாச்சிலாச்சிராமம்
-
இட்ட குடிநீர் இருநாழி ஓர்உழக்காச்
சட்டஒரு முட்டைநெய் தான்கலந்(து) - அட்ட
அருவாச்சார் என்றங்(கு) அழாமுன்னம் பாச்சில்
திருவாச்சி ராமமே சேர்.
தெளிவுரை : மருந்துகள் இடப்பட்ட இரு நாழி அளவுள்ள மருந்து நீர் ஓர் உழக்களவு
ஆகுமாறு செப்பமாகக் காய்ச்சி, சிறிய கரண்டியளவு நெய் கலந்து ஊட்டியிட உயிர்
பிரிந்தார் என்று அங்கு இருப்பவர் அழுவதற்கு முன், திருப்பாச்சிலாச்சிராமம்
என்னும் சோழநாட்டுச் சிவத்தலத்திற்குச் செல்வாயாக என்பதாம்.
திருச்சிராமலை
-
கழிந்தது நென்னற்றுக் கட்டுவிட்டு நாறி
ஒழிந்த துடன்இரா வண்ணம் - அழிந்த(து)
இராமலையா கொண்டுபோ என்னாமுன் நெஞ்சே
சிராமலையான் பாதமே சேர்.
தெளிவுரை : நல்ல நெற்று தளர்ச்சியடைந்து கழிந்தது; நம்முடன் வைத்திருக்க
முடியாதபடி அழிந்தது; இதை எடுத்துக்கொண்டு போ என்று சொல்வதற்கு முன்பே நெஞ்சமே!
திருச்சிராப்பள்ளி மலைமீது கோயில் கொண்டிருக்கும் இறைவனது பாதங்களைச் சென்று
அடைவாயாக.
திருமழபாடி
-
இழவாடிச் சுற்றத்தார் எல்லாருங் கூடி
விழவாடி ஆவிவிடா முன்னம் - மழபாடி
ஆண்டானை ஆரமுதை அன்றயன்மால் காணாமை
நீண்டானை நெஞ்சே நினை.
தெளிவுரை : இழவு கொண்டாடி சுற்றத்தார் எல்லாரும் கூடி பிணத்தின்மேல் விழுந்து
வருந்திக் கதற, உயிர் பிரிவதற்கு முன் திருமழபாடி என்னும் சிவப்பதியில்
எழுந்தருளியிருக்கும் இறைவனை, அமுதம் போன்றவனை, முன்பு பிரமனும் திருமாலும்
கண்டறியாதபடி ஜோதி வடிவாய் நின்றானை, நெஞ்சே நினைவாயாக.
திருவாப்பாடி
-
உள்ளிடத்தான் வல்லையே நெஞ்சமே ஊழ்வினைகள்
கள்ளிடத்தான் வந்து கலவாமுன் - கொள்ளிடத்தின்
தென்திருவாப் பாடியான் தெய்வமறை நான்கனையும்
தன்திருவாய்ப் பாடியான் தாள்.
தெளிவுரை : நெஞ்சமே! நீ நினைக்கத்தான் வல்லையோ? ஊழ்வினைகள் கொள்ளை கொள்ள வந்து
சேராமுன் கொள்ளிடத்தின் தெற்கிலுள்ள திருவாய்பாடியில் கோயில் கொண்டுள்ளவனும்
நான்கு வேதங்களையும் தன் திருவாயினால் பாடியவனுமான இறைவனது பாதங்களை
நினைக்கவல்லையோ என்று கூட்டுக.
திருவேகம்பம்
-
என்னெஞ்சே உன்னை இரந்தும் உரைக்கின்றேன்
கன்னஞ்செய் வாயாகில் காலத்தால் - வன்னெஞ்சேய்
மாகம்பத் தானை உரித்தானை வண்கச்சி
ஏகம்பத் தானை இறைஞ்சு.
தெளிவுரை : என் நெஞ்சமே! உன்னை நான் வேண்டிச் சொல்கின்றேன். காது கொடுத்துக்
கேட்பாயானால், காலப் போக்கில் வலிமையுடைய மனம் பொருந்திய பெரிய தூணில்
கட்டப்படுகிற யானையினது தோலை உரித்தவனும், வளம் பொருந்திய காஞ்சிபுரத்தில்
எழுந்தருளியிருப்பவனுமான ஏகாம்பரநாதனை வழிபடுவாயாக.
திருப்பனந்தாள்
-
கரம்ஊன்றிக் கண்இடுங்கிக் கால்குலைய மற்றோர்
மரம்ஊன்றி வாய்குதட்டா முன்னம் - புரம்மூன்றும்
தீச்சரத்தால் செற்றான் திருப்பனந்தாள் தாடகைய
ஈச்சரத்தான் பாதமே ஏத்து.
தெளிவுரை : கையை ஊன்றி, கண்கள் குழிவிழுந்து, கால் தடுமாற ஊன்றுகோலை ஊன்றி, வாய்
பேச முடியாமல் அசைப்பதற்குமுன், முப்புரங்களையும் தீயினைக் கூராகவுடைய அம்பினால்
அழித்தவனும், திருப்பனந்தாளில் உள்ள தாடகையீச்சரத்தானுமாகிய இறைவனின் பாதங்களையே
புகழ்வாயாக.
திருவொற்றியூர்
-
தஞ்சாக மூவுலகும் ஆண்டு தலையளித்திட்(டு)
எஞ்சாமை பெற்றிடினும் யான்வேண்டேன் - நஞ்சம்
கரந்துண்ட கண்டர்தம் ஒற்றியூர் பற்றி
இரந்துண் டிருக்கப் பெறின்.
தெளிவுரை : விஷத்தை மறைந்திருக்குமாறு உண்ட நீல கண்டனது திருவொற்றியூரைச்
சார்ந்து யாசித்து உண்டு இருக்கப் பெற்றால், அடைக்கலப் பொருளாக மூன்று
உலகங்களையும் ஆண்டு காத்து, குறைவில்லாமற் பெற்றாலும் யான் வேண்டேன் என்பதாம்.
பொது
-
நூற்றனைத்தோர் பல்லூழி நுண்வயிர வெண்குடைக்கீழ்
வீற்றிருந்த செல்வம் விழையாதே - கூற்றுதைத்தான்
ஆடரவம் கச்சா அரைக்கசைத்த அம்மான்தன்
பாடவரம் கேட்ட பகல்.
தெளிவுரை : நூற்றுக்கணக்காகிய பல்லூழிக் காலம் வெண்கொற்றக்குடைக்கீழ் அரசாட்சி
செய்து கொண்டிருந்த அரசாட்சிச் செல்வத்தை விரும்பாதே, எமனை அழித்தவனும் ஆடுகின்ற
பாம்பை அரையில் கச்சாகக் கட்டியவனுமாகிய அம்மானுடைய பாட்டின் ஒலி ஒருபகல்
கேட்பதனால் உளவாம் பயன், நூற்றுக்கணக்கான ஊழிக் காலம் அரசாட்சி செய்ததனாலும்
உண்டாகாது என்றபடி.
திருமயானம்
-
உய்யும் மருந்திதனை உண்மின் எனஉற்றார்
கையைப் பிடித்தெதிரே காட்டியக்கால் - பைய
எழுந்திருமி யான்வேண்டேன் என்னாமுன் நெஞ்சே
செழுந்திரும யானமே சேர்.
தெளிவுரை : இஃது உயிர் வாழச் செய்யும் மருந்து, உண்பாயாக என உறவின் முறையார்
கையைப் பிடித்து எதிரே காட்டினால், மெள்ள எழுந்து இருமி எனக்கு வேண்டாம்
என்பதற்கு முன் நெஞ்சமே! செழிப்பான திருக்கடவூர் மயானம் என்னும் தலத்தையே சென்று
அடைவாயாக.
திருச்சிற்றம்பலம்
பொன்வண்ணத்து அந்தாதி ( சேரமான் பெருமாள்நாயனார்அருளிச் செய்தது )
சேரமான் பெருமாள் நாயனார் சேர நாட்டுப் பேரரசர். கார் கொண்ட கொடைக் கழறிற்றறிவார்
எனப் போற்றப்படுபவர். திருச்சிலம்பு ஓசை ஒலி வழியே சென்று நிருத்தனைக் கும்பிடும்
பேறு பெற்றவர். இறைவனின் திருமுகம் பெறும் பேறுடையவர். சுந்தரரின் இனிய தோழர்.
அவருடன் கயிலைக்குச் சென்று இறைவனின் இன்னருள் பெற்றவர்.
காலம்: இவர் சுந்தரர் காலத்தவர்; ஆதலின், அவர் காலமாகிய எட்டாம் நுற்றாண்டே இவரது
காலமும் ஆகும்.
அருளியநூல்கள்:
-
பொன் வண்ணத்தந்தாதி 2. திருவாரூர் மும்மணிக் கோவை 3. திருக்கயிலாய ஞான உலா
என்பன. இவற்றுள் முன்னயதைத் தில்லையிலும், இரண்டாவது நூலைச் சுந்தரருடன்
திருவாரூர்ப் பெருமானை வழிபட்ட பொழுதும், மூன்றாவது நூலைத் திருக்கயிலையிலும்
அருளிச் செய்தார்.
பொன்வண்ணத்தந்தாதி
பொன் வண்ணம் எனத் தொடங்கிப் பொன் வண்ணமே என நிறைவு பெறுதலானும், அந்தாதித்
தொடையாக அமைந்திருத்தலானும் இப்பெயர் பெற்றது. இந்நூல் நூறு பாடல்களை உடையது.
கட்டளைக் கலித்துறையால் ஆனது. அணி நலம் சான்றது. கடவுள்மாட்டு மானிடப் பெண்டிர்
நயந்த பக்கமாகப் பாடிய பாடல்கள் 40க்கு மேல் இந்நூற்கண் உள்ளன.
இதன்கண் அமைந்துள்ள பாடல்கள் யாவும் மோனை எதுகை முதலிய தொடை நலம் பொருந்தியனவாய்,
நிரல் நிறை முதலிய பொருள் கோளும், தன்மை உவமை முதலிய பொருளணிகளும், யமகம் திரிபு
முதலிய சொல்லணிகளும் அமையப் பெற்று விளங்குகின்றன. ஆழ்ந்து பயில்வார்க்கு இந்நூல்
பேருவகையை அளிக்கும் என்பது திண்ணம்.
திருச்சிற்றம்பலம்
-
பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
ஆகிய ஈசனுக்கே.
தெளிவுரை : பொன் வண்ணம் போல மேனி அழகாகப் பொலிவுற்று விளங்கும் மின்னல் போன்று
நீண்ட சடை உள்ளது. வெள்ளிக் குன்றமாகிய கயிலை மலை போன்று பெரிய இடபம் வெண்மை
நிறமானது. என் நிறம் போலவே ஈசனுடைய நிறமும் உள்ளது.
இது இறைவன் மீது காமுற்ற பெண் கூறியது போன்றுள்ளது. தன்னுடைய மேனி பசலை
உற்றுள்ளது என்று குறிப்பால் உணர்த்துகின்றாள்.
-
ஈசனைக் காணப் பலிகொடு
செல்லஎற் றேஇவளோர்
பேயனைக் காமுறு பிச்சிகொ
லாம்என்று பேதையர்முன்
தாயெனை ஈர்ப்பத் தமியேன்
தளரஅத் தாழ்சடையோன்
வாவெனைப் புல்லஎன் றான்இமை
விண்டன வாட்கண்களே.
தெளிவுரை : இது இறைவனுடைய பிட்சாடணத் திருக்கோலம் கண்டு காமுற்ற பெண் கூறியது.
நான் இறைவனைக் காண பிச்சை எடுத்துக் கொண்டு செல்ல, இது எத்தன்மைத்து என்றால்,
இவள் ஓர் பேயனைக் காமுற்ற பைத்தியக்காரி போலும் என்று பேதைப் பெண்களின் முன்னால்
தாயானவள் என்னைப் பிடித்து இழுக்க, யான் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்க,
அந்த நீண்ட சடையை உடையவன் என்னைத் தழுவ வருவாயாக என்றான். கண்கள் விழித்துக்
கொண்டன.
-
கண்களங் கம்செய்யக் கைவளை
சோரக் கலையுஞ்செல்ல
ஒண்களங் கண்ணுதல் வேர்ப்பஒண்
கொன்றையந் தாருருவப்
பெண்களங் கம்இவள் பேதுறும்
என்பதோர் பேதைநெஞ்சம்
பண்களங் கம்இசை பாடநின்(று)
ஆடும் பரமனையே.
தெளிவுரை : கண்கள் நீர் பொழிய, கைவளைகள் கழல, ஆடை இடுப்பை விட்டு நழுவ, கழுத்தும்
நெற்றியும் வேர்ப்ப, ஒளி பொருந்திய கொன்றை மாலை கழல, விண்ணின் மீது இசை பாட இவள்
மயங்குவாள். பேதை நெஞ்சம் ஆடும் பரமனைக் குறித்து இசை பாடும்.
-
பரமனை யேபலி தேர்ந்துநஞ்
சுண்டது பன்மலர்சேர்
பிரமனை யேசிரம் கொண்டும்
கொடுப்பது பேரருளாம்
சரமனை யேஉடம் பட்டும்
உடம்பொடு மாதிடமாம்
வரமனை யேகிளை யாகும்முக்
கண்ணுடை மாதவனே.
தெளிவுரை : பிறர் வீடுகளுக்குச் சென்று பிச்சை எடுத்தது, ஆலகால விஷத்தை உண்டது,
பல மலர்கள் சேர்ந்த பிரமனைச் சிரம் அறுத்தது, காமனை எரித்தது, உடம்பின் இடப்
பாகத்தில் மேலான இல்லாளைக் கொண்டது, இவைகளே முக்கண்களையுடைய மாதவனுடைய உறவுகளாம்.
-
தவனே உலகுக்குத் தானே
முதல்தான் படைத்தவெல்லாம்
சிவனே முழுதும்என் பார்சிவ
லோகம் பெறுவர்செய்ய
அவனே அடல்விடை ஊர்தி
கடலிடை நஞ்சமுண்ட
பவனே எனச்சொல்லு வாரும்
பெறுவர்இப் பாரிடமே.
தெளிவுரை : சிவனே உலகுக்கு முதல்வன். சிவனே எல்லாவற்றையும் படைத்தான் என்பார்.
அவனே சிவலோகம் பெறச் செய்பவன். வலிமையுள்ள காளையை ஊர்பவன். கடலிடத்து எழுந்த
ஆலகால விஷத்தை உண்டவனும் அவனே என்று இவர் பெருமையைச் சொல்லுகின்றவர், இப்பெரிய
உலகைப் பெறுவர்.
-
இடமால் வலந்தான் இடப்பால்
துழாய்வலப் பால்ஒண்கொன்றை
வடமால் இடந்துகில் தோல்வலம்
ஆழி இடம்வலம்மான்
இடமால் கரிதால் வலஞ்சே(து)
இவனுக்கு எழில்நலஞ்சேர்
குடமால் இடம்வலம் கொக்கரை
யாம்எங்கள் கூத்தனுக்கே.
தெளிவுரை : இது சங்கரநாராயணத் திருக்கோலம் பற்றியது. இடப்பக்கம் திருமால்,
வலப்பக்கம் சிவன்; இடப்பக்கம் துளசிமாலை, வலப்பக்கம் கொன்றை மாலை; இடப்பக்கம்
பொன்னாடை, வலப்பக்கம் தோலாடை; இடப்பக்கம் சக்கராயுதம், வலப்பக்கம் மான்;
இடப்பக்கம் கருநிறம், வலப்பக்கம் செந்நிறம்; இடப்பக்கம் குடக் கூத்து, வலப்பக்கம்
கொக்கரை என்னும் கூத்து. இந்த உருவம்தான் எங்கள் கூத்தனுடையது.
-
கூத்துக் கொலாம்இவர் ஆடித்
திரிவது கோல்வளைகள்
பாத்துக் கொலாம்பலி தேர்வது
மேனி பவளம்கொலாம்
ஏத்துக் கொலாம்இவர் ஆதரிக்
கின்ற(து) இமையவர்தம்
ஓத்துக் கொலாம்இவர் கண்ட(து)இண்
டைச்சடை உத்தமரே.
தெளிவுரை : இவர் ஆடித் திரிவது கூத்து போலும். வளைந்த வளையல்களை அணிந்த பெண்கள்
பிச்சை இடுவது சோறு போலும். இவருடைய மேனி பவள நிறம் போன்றது. இவர் ஆதரிக்கின்றது
துதிப்பாடல். தேவர்களுடைய வேதமே இவர் கண்டது. தலையில் உள்ளது ஊமத்தம் பூமாலை.
-
உத்தம ராய்அடி யார்உல
காளத் தமக்குரிய
மத்தம் அராமதி மாடம்
பதிநலம் சீர்மைகுன்றா
எத்தம ராயும் பணிகொள்ள
வல்ல இறைவர்வந்தென்
சித்தம ராயக லாதுடன்
ஆடித் திரிதவரே.
தெளிவுரை : இவரது அடியார்கள் உத்தமராய் உலகாளுகிறார்கள். ஆனால் ஊமத்தம் பூ,
பாம்பு, பிறைச் சந்திரன் ஆகியவை இவரது உடைமைகள். எப்படிப்பட்ட தன்மை
உடையவர்களையும் பணிகொள்ள வல்ல இறைவர் வந்து என் உள்ளத்தில் பொருந்தியவர். அவர்
என்னை விட்டுப் பிரியாமல் திரிகின்றவர்.
-
திரிதவர் கண்ணுள்ளும் உள்ளத்தின்
உள்ளும் திரிதரினும்
அரிதவர் தன்மை அறிவிப்ப
தாயினும் ஆழிநஞ்சேய்
கரிதவர் கண்டம் வெளிதவர்
சாந்தம்கண் மூன்றொ(டு)ஒன்றாம்
பரிதவர் தாமே அருள்செய்து
கொள்வர்தம் பல்பணியே.
தெளிவுரை : அவ்வாறு திரிகின்றவரது கண்ணுள்ளும் மனத்திலும் குடிகொண்டிருந்தும்
அவரை அடைவது அரிது. அவரது தன்மையை அறிவிப்பதாயின், கடலில் தோன்றிய நஞ்சை
அருந்தியதால் நீல கண்டத்தை உடையவர். அவர் அணிந்துள்ள நீறு வெண்மையானது. மூன்று
கண்களை உடையவர். அவர் பெரிய தவத்தை உடையவர். தம் அணிகலன்களை அவரே சரி செய்து
கொள்வார்.
-
பணிபதம் பாடிசை ஆடிசை
யாகப் பனிமலரால்
அணிபதங் கன்பற் கொளப்பனை
அத்தவற் கேயடிமை
துணிபதங் காமுறு தோலொடு
நீறுடல் தூர்த்துநல்ல
தணிபதங் காட்டிடும் சஞ்சலம்
நீஎன் தனிநெஞ்சமே.
தெளிவுரை : நீ அவனைப் பணிவாயாக. அவனுடைய பாதங்களைத் துதி செய். இசையோடு ஆடு. பனி
மலரால் அருச்சனை செய். சூரியனது பற்களைப் பிடுங்கிய பெருமானே சிறந்தவன் என முடிவு
செய்து கொள். அவனை அடைய விரும்பு, நெஞ்சமே! அவன் உன் கவலைகளைத் தீர்த்து
வைப்பான்.
-
நெஞ்சம் தளிர்விடக் கண்ணீர்
ததும்ப முகம்மலர
அஞ்செங் கரதலம் கூம்பவட்
டாங்கம் அடிபணிந்து
தஞ்சொல் மலரால் அணியவல்
லோர்கட்குத் தாழ்சடையான்
வஞ்சம் கடிந்து திருத்திவைத்
தான்பெரு வானகமே.
தெளிவுரை : நெஞ்சம் அன்புத் தளிரை விடவும், கண்களில் நீர் பெருகவும், முகம்
மலரவும், கைகள் குவியவும், எட்டு உறுப்புக்களும் தரையில் தோயப் பணிந்தும்
வணங்குபவர்களுக்கு, நீண்ட சடையை உடைய இறைவன், உன் மனத்திலுள்ள வஞ்சனைகளைப்
போக்கி, செம்மைப்படுத்தி வைப்பான். பெருமை பொருந்திய வீடு பேற்றை அளிப்பான்
என்பதாம்.
-
வானகம் ஆண்டுமந் தாகினி
ஆடிநந் தாவனம்சூழ்
தேனக மாமலர் சூடிச்செல்
வோரும் சிதவல்சுற்றிக்
கானகந் தேயத் திரிந்திரப்
போரும் கனகவண்ணப்
பால்நிற நீற்றற்(கு) அடியரும்
அல்லாப் படிறருமே.
தெளிவுரை : சுவர்க்கத்தை ஆண்டு, விண்ணகக் கங்கையில் நீராடி, நந்தவனம் சூழ்ந்த
தேன் பொருந்திய மலரைச் சூடிச் செல்வோரும், கந்தைத் துணியைச் சுற்றிக் கொண்டு காடு
தேயத் திரிந்து யாசிப்பவரும் பால் போன்ற வெண்ணிற நீறு அணிந்த அப்பெருமாற்கு
அடியவர் ஆகாதவர் வஞ்சகரே.
-
படிறா யினசொல்லிப் பாழுடல்
ஓம்பிப் பலகடைச்சென்(று)
இடறா(து) ஒழிதும் எழு, நெஞ்ச
மேஎரி ஆடிஎம்மான்
கடல்தா யினநஞ்சம் உண்ட
பிரான்கழல் சேர்தல்கண்டாய்
உடல்தான் உளபயன் ஆவசொன்
னேன்இவ் வுலகினுள்ளே.
தெளிவுரை : பொய் பேசி, இந்தப் பாழ் உடலை வளர்த்து, பல வாசல்கள் சென்று வருந்தாமல்
எழுச்சி பெற்ற நெஞ்சமே ஒழிவாயாக. அவன் நெருப்பில் நடனமாடிய எம்மான். கடலில்
உண்டாகிய விஷத்தை அருந்திய அப்பெருமானது பாதங்களை அடைவது தான் வழி என்பதை நீ
காண்பாய். இவ்வுலகில் பிறவி எடுத்ததன் பயன் அதுதான். அறிவாயாக.
-
உலகா ளுறுவீர் தொழுமின்விண்
ணாள்வீர் பணிமின்நித்தம்
பலகா முறுவீர் நினைமின்
பரமனோ(டு) ஒன்றலுற்றீர்
நலகா மலரால் அருச்சிமின்
ஆள்நர கத்துநிற்கும்
அலகா முறுவீர் அரனடி
யாரை அலைமின்களே.
தெளிவுரை : உலகை ஆள விரும்புகிறவர்களே, இறைவனை வணங்குங்கள். அவனைத் தொழுதால்
தெய்வ லோகத்தையும் ஆள்வீர்கள். அவனை நாள்தோறும் பணியுங்கள். பலவற்றையும் அடைய
அலைபவர்களே, அவனை நினையுங்கள். பரமனை அடைய விரும்பினால் நல்ல மலரைக் கொண்டு
அருச்சியுங்கள். ஆளுகின்ற நரகத்தில் நிற்பதற்குக் காரணமான அறமல்லாத செயல்களைச்
செய்யாதீர்கள். அதாவது, அடியவரை வருத்துபவர் நரகம் புகுவர் என்றபடி நாள் நரகம்
என்றும் பாடம்.
-
அலையார் புனல்அனல் ஞாயி(று)
அவனி மதியம்விண்கால்
தொலையா உயிருடம் பாகிய
சோதியைத் தொக்குமினோ
தலையாற் சுமந்துந் தடித்துங்
கொடித்தேர் அரக்கன்என்னே
கலையான் ஒருவிரல் தங்ககில்
லான்விட்ட காரணமே.
தெளிவுரை : நீர், தீ, சூரியன், பூமி, சந்திரன், ஆகாயம், காற்று, நிலைத்திராத
உயிர் ஆகிய அஷ்ட மூர்த்தங்களாக உடைய ஒளி வடிவினனை அடையுங்கள். தலையால் சுமந்தும்
வீழ்த்தியும் கொடி கட்டிய தேரையுடைய இராவணனை, பிறைச்சந்திரனைச் சூடிய சிவபிரான்
கால் விரலால் அழுத்தி, தண்டித்த காரணம் என்னவோ?
-
காரணன் காமரம் பாடவோர்
காமரம் பூடுறத்தன்
தாரணங் காகத் தளர்கின்ற
தையலைத் தாங்குவர்யார்
போரணி வேற்கண் புனற்படம்
போர்த்தன பூஞ்சுணங்கார்
ஏரணி கொங்கையும் பொற்படம்
மூடி இருந்தனவே.
தெளிவுரை : யாவற்றிற்கும் காரணமாகிய இறைவன் காமரம் என்னும் இசையைப் பாட, ஒப்பற்ற
மன்மதனுடைய கணை, மாலையாக வருத்துவதற்குரிய பொருளாக வருந்துகின்ற என் மகளை யார்
தாங்குவர்? போர் செய்கின்ற வேல் போன்ற கண்கள் நீர் சொரிந்தன. பசலை என்னும்
பொன்னாடை கொங்கைகளை மூடியது.
இது தாய்க் கூற்று.
-
இருந்தனம் எய்தியும் நின்றும்
திரிந்தும் கிடந்தலைந்தும்
வருந்திய வாழ்க்கை தவிர்த்திடு
போகநெஞ் சேமடவாள்
பொருந்திய பாகத்துப் புண்ணியன்
புண்ணியல் சூலத்தெம்மான்
திருந்திய போதவன் தானே
களையும்நம் தீவினையே.
தெளிவுரை : பெருஞ் செல்வம் பெற்ற பின்பும், நின்றும், திரிந்தும், கிடந்து
அலைந்தும் வருந்திய வாழ்க்கையை விட்டுவிடு. இன்பத்தை மென்மேலும் அடைய விரும்பும்
நெஞ்சமே! உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டுள்ள புண்ணியனும் ஊன் பொருந்திய சூலத்தைக்
கையில் ஏந்தியவனுமாகிய நம் தலைவன், நாம் திருந்திவிட்ட காலத்தில் அவனே வந்து நம்
தீவினைகளைப் போக்குவான்.
-
தீவினை யேனைநின்(று) ஐவர்
இராப்பகல் செத்தித்தின்ன
மேவின வாழ்க்கை வெறுத்தேன்
வெறுத்துவிட் டேன்வினையும்
ஓவின(து) உள்ளந் தெளிந்தது
கள்ளங் கடிந்(து) அடைந்தேன்
பாவின செஞ்சடை முக்கணன்
ஆரணன் பாதங்களே.
தெளிவுரை : தீவினை உடையவனாகிய என்னை விடாமல் ஐம்புலக் கள்வர் இரவும் பகலும்
வருத்தித் தின்ன, பொருந்திய இந்த வாழ்க்கையை வெறுத்தேன். வினையும் ஒழிந்தது.
உள்ளம் தெளிந்தது. கள்ளங் கடிந்து, பரவின செஞ்சடையையும் மூன்று கண்களையும் உடைய
மறை முதல்வனது பாதங்களை அடைந்தேன்.
-
பாதம் புவனி சுடர்நய
னம்பவ னம்உயிர்ப்(பு)ஓங்
கோதம் உடுக்கை உயர்வான்
முடிவிசும் பேயுடம்பு
வேதம் முகம்திசை தோள்மிகு
பன்மொழி கீதமென்ன
போதம் இவற்கோர் மணிநிறம்
தோற்பது பூங்கொடியே.
தெளிவுரை : திருவடி, உலகம்; சூரிய சந்திர அக்கினி, மூன்றும் கண்கள்; காற்று,
மூச்சு; ஒலி செய்கின்ற கடல், ஆடை; உயர்ந்த வானம், தலைமுடி; ஆகாயமே உடம்பு; வேதம்
முகம். திசைகள், தோள்கள்; மிகுபன்மொழி கீதம் என்று சொல்லும் போதம். இவற்கு
ஒப்பற்ற மணி நிறம். தோற்பது பூங்கொடி.
-
கொடிமேல் இடபமுங் கோவணக்
கீளுமோர் கொக்கிறகும்
அடிமேற் கழலும் அகலத்தில்
நீறும்ஐ வாயரவும்
முடிமேல் மதியும் முருகலர்
கொன்றையும் மூவிலைய
வடிவேல் வடிவும்என் கண்ணுள்எப்
போதும் வருகின்றவே.
தெளிவுரை : கொடியில் எழுதியிருப்பது இடபம்; அரையில் இருப்பவை கோவணமும் கீளும்;
தலையில் அணிந்திருப்பது கொக்கின இறகு; பாதத்தில் உள்ளது வீரக்கழல். மார்பில்
பூசியிருப்பது திருநீறு; முடிமேல் ஐந்து தலை நாகமும் பிறைச்சந்திரனும் வாசனை
மலராகிய கொன்றையும் உள்ளன. அவர் கையில் உள்ளது மூன்று நிலையாக உள்ள சூலப்படை.
இவைகள் எப்போதும் என் கண்முன் வருகின்றன.
-
வருகின்ற மூப்பொடு தீப்பிணிக்
கூற்றம்வை கற்குவைகல்
பொருகின்ற போர்க்கொன்றும் ஆற்றகில்
லேன்பொடி பூசிவந்துன்
அருகொன்றி நிற்க அருளுகண்
டாய்அழல் வாயரவம்
வெருகொன்ற வெண்மதி செஞ்சடை
மேல்வைத்த வேதியனே.
தெளிவுரை : வருகின்ற வயோதிகமும் தீப்பிணியாகிய எமனும் நாளுக்கு நாள் தாக்குகின்ற
போரும் ஆகிய இவற்றிற்குப் பொறுக்க முடியாதவனாக இருக்கிறேன். திருநீறு பூசி வந்து
உன் அருகில் வந்து நிற்க அருள் செய்வாயாக. தீயைப் போன்ற நஞ்சு பொருந்திய
வாயினையுடைய பாம்பையும் பிறைச் சந்திரனையும் செஞ்சடைமேல் வைத்த வேதியனே,
வேண்டுதலை இறுதியில் பொருத்திக் கொள்க.
-
வேதியன் பாதம் பணிந்தேன்
பணிந்துமெய்ஞ் ஞானமென்னும்
சோதியென் பால்கொள்ள உற்றுநின்
றேற்(கு)இன்று தொட்டியதுதான்
நீதியென் றான்செல்வம் ஆவதென்
றேன்மேல் நினைப்புவண்டேர்
ஓதிநின் போல்வகைத் தேயிரு
பாலும் ஒழித்ததுவே.
தெளிவுரை : சிவபெருமானது பாதங்களை வணங்கினேன். வணங்கியதும் உண்மையறிவு என்று
சொல்லப்படுகிற ஒளி என்மேல் பாய்ந்தது. உற்றுப் பார்த்த எனக்கு இன்று முதல்
இதுதான் நீதியென்றான். செல்வம் ஆவது என்றேன். மேல் நினைப்பு வண்டு பொருந்திய
அழகு. கூந்தல் போல்வது வெறுத்துத் தள்ளி விட்டது என்பதாம்.
-
ஒழித்தேன் பிறவியை ஊர்ந்தேன்
உவகையை ஓங்கிற்றுள்ளம்
இழித்தேன் உடம்பினை ஏலேன்
பிறரிடை இம்மனையும்
பழித்தேன் பழியே விளைக்கும்பஞ்
சேந்தியக் குஞ்சரமும்
தெழித்தேன் சிவனடி சேர்ந்தேன்
இனிமிகத் தெள்ளியனே.
தெளிவுரை : பிறவியை ஒழித்துவிட்டேன்; மகிழ்ச்சியை அடக்கி விட்டேன். உள்ளம்
உயர்ந்த நிலையை அடைந்தது. உடம்பை இழிவுடையதாக வெறுத்தேன். பிறரிடம் சென்று
யாசிக்க மாட்டேன். குடும்ப வாழ்க்கையும் பழித்தேன். துன்பத்தையே தருகின்ற
ஐம்பொறிகளாகிய யானையையும் அடக்கினேன். சிவனது பாதங்களைச் சேர்ந்தேன்.
-
தெள்ளிய மாந்தரைச் சேர்ந்திலேன்
தீங்கவி பாடலுற்றேன்
ஒள்ளிய சொல்லும் பொருளும்
பெறேன்உரைத் தார்உரைத்த
கள்ளிய புக்காற் கவிகள்ஒட்
டார்; கடல் நஞ்சயின்றாய்
கொள்ளிய அல்லகண் டாய்புன்சொல்
ஆயினும் கொண்டருளே.
தெளிவுரை : தெளிந்த அறிவினையுடைய மாந்தர்களிடம் நான் சேரவில்லை. இனிமையான
கவிகளைப் பாடலானேன். சிறந்த சொற்களும் பொருளும் பெறவில்லை. மற்றவர்கள் சொன்ன
திருடப்பட்ட அப்பாடல்களைப் புலவர்கள் ஏற்க மாட்டார்கள். கடலினின்றும் எழுந்த
விடத்தைப் பருகினாய். அவை கொள்ளத் தக்கனவல்ல. என்னுடைய சொற்கள் அற்பமானவை
என்றாலும் ஏற்றுக் கொள்வீர்களாக.
-
அருளால் வரும்நஞ்சம் உண்டுநின்
றாயை அமரர்குழாம்
பொருளார் கவிசொல்ல யானும்புன்
சொற்கள் புணர்க்கலுற்றேன்
இருளா சறவெழில் மாமதி
தோன்றவும் ஏன்றதென்ன
வெருளா(து) எதிர்சென்று மின்மினி
தானும் விரிகின்றதே.
தெளிவுரை : தேவர்கள் மீது கொண்ட கருணையினால் கடலில் தோன்றிய விடத்தை உண்டு நின்ற
உன்னை, அவர்கள் நற்பொருள்கள் நிறைந்த கவிகளைப் பாடி துதி செய்ய, யானும் பொருளற்ற
பாடல்களைச் சேர்க்கலானேன். இருளாகிய குற்றம் நீங்க அழகிய சந்திரன் தோன்றவும்
ஒத்திருக்கின்றது என்ன. அஞ்சாமல் எதிர் சென்று மின்மினிப் பூச்சியும்
விளக்குகின்றது.
-
விரிகின்ற ஞாயிறு போன்றது
மேனி; யஞ் ஞாயிறுசூழ்ந்(து)
எரிகின்ற வெங்கதிர் ஒத்தது
செஞ்சடை அச்சடைக்கீழ்ச்
சரிகின்ற காரிருள் போன்றது
கண்டம்அக் காரிருட்கீழ்ப்
புரிகின்ற வெண்முகில் போன்றுள
தால்எந்தை ஒண்பொடியே.
தெளிவுரை : பரவுகின்ற சூரியனைப் போன்றது உன் மேனி; அச்சூரியனைச் சூழ்ந்து வெப்பம்
பொருந்திய ஒளிக்கதிர் போன்றது உன் செந்நிறச் சடை; அச்சடையின் கீழ் தவழ்கின்ற
கருமையான இருள் போன்றது உன் நீலகண்டம்; அந்தக் கருமையான இருளின்கீழ் மிகுகின்ற
வெண்முகில் போன்றுள்ளது என் தந்தையாகிய நீ அணிந்துள்ள திருநீற்றுப் பொடி.
-
பொடிக்கின் றிலமுலை போந்தில
பல்சொற் பொருள்தெரியா
முடிக்கின் றிலகுழல் ஆயினும்
கேண்மின்கள் மூரிவெள்ளம்
குடிக்கொண்ட செஞ்சடைக் கொண்டலங்
கண்டன்மெய்க் கொண்டணிந்த
கடிக்கொன்றை நாறுகின் றாள்அறி
யேன்பிறர் கட்டுரையே.
தெளிவுரை : முலைகள் இன்னும் திரண்டு தோன்றவில்லை. பற்கள் இன்னும் முளைக்கவில்லை.
சொற்களுக்கு இன்னும் பொருள் தெரியவில்லை. கூந்தல் இன்னும் முடிக்கும் அளவுக்கு
வளரவில்லை. என்றாலும் கேளுங்கள். பெரிய வெள்ளம் பொருந்தியுள்ள செஞ்சடையாகிய மேகம்
அணிந்த மணம் பொருந்திய கொன்றை மலரின் வாசனையை உடையவளாய் இருக்கின்றாள். பிறர்
சொல்வதை நான் அறியேன்.
-
உரைவளர் நான்மறை ஓதி
உலகம் எலாந் திரியும்,
விரைவளர் கொன்றை மருவிய
மார்பன் விரிசடைமேல்
திரைவளர் கங்கை நுரைவளர்
தீர்த்தம் செறியச்செய்த
கரைவளர் ஒத்துள தால்சிர
மாலைஎம் கண்டனுக்கே.
தெளிவுரை : புகழ் பெருகுகின்ற நான்கு வேதங்களையும் பாராயணம் செய்து உலகம்
முழுவதிலும் திரிகின்ற மணம் வீசுகின்ற கொன்றை மலர் பொருந்திய மார்பை உடையவன்,
விரிந்த சடையின்மேல் அலைகள் பெருகுகின்ற கங்கையின் நுரையோடு கூடிய புனித நீர்
செறியச் செய்த கரையின் வளர்ச்சி, தலையில் அணிந்துள்ள மாலை அப் பெருமானுக்கு
ஒத்துள்ளது.
-
கண்டங் கரியன் கரியீர்
உரியன் விரிதருசீர்
அண்டங் கடந்த பெருமான்
சிறுமான் தரித்தபிரான்
பண்டன் பரம சிவனோர்
பிரமன் சிரம்அரிந்த
புண்தங் கயிலன் பயிலார
மார்பன்எம் புண்ணியனே.
தெளிவுரை : நீலகண்டத்தை உடையவன்; யானையின் உரித்த தோலை உடையவன்; பரந்த உலகங்களை
எல்லாம் தாண்டிய பெருமான்; சிறிய மானைக் கையில் தரித்துள்ளவன்; பழைமையானவன்;
பரமசிவன்; ஒப்பற்ற பிரமதேவனது தலையை அரிந்தவன்; ஊன் பொருந்திய சூலப்படையை
உடையவன். ஆத்தி மலர் மாலை பொருந்திய மார்பை உடையவன்; அவனே நான் வணங்கும்
புண்ணியனாகிய சிவபெருமான் என்றபடி.
-
புண்ணியன் புண்ணியல் வேலையன்
வேலைய நஞ்சன்அங்கக்
கண்ணியன் கண்ணியல் நெற்றியன்
காரணன் காரியங்கும்
விண்ணியன் விண்ணியல் பாணியன்
பாணி கொளஉமையாள்
பண்ணியன் பண்ணியல் பாடலன்
ஆடற் பசுபதியே.
தெளிவுரை : அறவடிவினன் ஊன் பொருந்திய சூலப் படையை உடையவன்; கடலில் உண்டான நஞ்சைக்
கழுத்தில் உடையவன்; எலும்பு மாலையை உடையவன். நெற்றியில் கண்ணை உடையவன்;
முத்தொழில்களுக்கும் காரணமானவன்; மேகங்கள் சஞ்சரிக்கின்ற விண் வடிவமானவன்;
விண்ணில் பொருந்திய கங்கையை உடையவன்; உமாதேவியின் கையைப் பிடிக்கத்
தகுதியுடையவன்; புகழ்ப் பாடல்களை உடையவன். நடனமாடுகின்ற அந்தப் பசுபதியை நீ
நாடுவாயாக.
-
பதியார் பலிக்கென்று வந்தார்
ஒருவர்க்குப் பாவைநல்லீர்
கதியார் விடைஉண்டு கண்மூன்(று)
உளகறைக் கண்டமுண்டு
கொதியார் மழுவுண்டு கொக்கரை
உண்டிறை கூத்துமுண்டு
மதியார் சடையுள மாலுள(து)
ஈவது மங்கையர்க்கே.
தெளிவுரை : தலைவர் பிச்சை வேண்டி வந்தார். அந்த ஒப்பற்ற தலைவர்க்குப் பாவை போன்ற,
பெண்களே! விரைவாகச் செல்லும் காளை உண்டு; மூன்று கண்கள் உள்ளன; கருமையான கழுத்தை
உடையவன்; கொதித்தலைச் செய்யும் மழுவுண்டு; கொக்கரை யென்னும் வாத்தியத்தை உடையவன்;
சிறிது கூத்தும் ஆடுவான்; பிறை அணிந்த சடையை உடையவன். மங்கையர்க்கு ஈவதாகிய
மயக்கம் அவனிடம் உள்ளது.
-
மங்கைகொங் கைத்தடத் திங்குமக்
குங்குமப் பங்கநுங்கி
அங்கமெங் கும்நெகச் சங்கமங்
கைத்தலத் துங்கவர்வான்
கங்கைநங் கைத்திரைப் பொங்குசெங்
கண்ணர வங்கள்பொங்கிப்
பங்கிதங் கும்மலர்த் திங்கள்தங்
கும்முடிப் பண்டங்கனே.
தெளிவுரை : மங்கையர்களின் கொங்கைகளில் குங்குமச் சேறு வருந்தி, உடல் முழுதும்
உருக, மயிர்க் கற்றைகளின் இடையே தங்கும் பழைமையான முழு எலும்பு அணிந்தவன்.
கங்கையின் அலைகள் பொங்கும். செங்கண் அரவங்கள் அங்கு தங்கியிருக்கும். பிறைச்
சந்திரனும் இருக்கும். மங்கையர்களின் கைவளைகளையும் கவர்வான்.
-
பண்டங்கள் வந்து பலிதாஎன்
றான்பக லோற்(கு)இடுஎன்றேன்
அண்டங் கடந்தவன் அன்னம்என்
றான்அயன் ஊர்தியென்றேன்
கொண்டிங்(கு) உன்ஐயம்பெய் என்றான்
கொடித்தேர் அநங்கன்என்றேன்
உண்டிங்(கு) அமைந்ததென் றாற்(கு)அது
சொல்ல உணர்வுற்றதே.
தெளிவுரை : சிவபெருமான் வந்து பலிதா, பிச்சை இடு என்றான். கதிரவனுடைய (பல் இதா)
பல்லைக் கொடு என்றேன். உலகங்களை எல்லாம் கடந்தவன் (அன்னம்) சோறு என்றான். அது
பிரமனுடைய ஊர்தியாகிய அன்னப் பறவை என்றேன். இங்கு எடுத்து வந்து (ஐயம் பெய்)
பிச்சை போடு என்றான். காமனுடைய ஐந்து கணைகளை எய்வாயாக என்றேன். இவைதான் இங்கு
உள்ளவை என்று அவற்றுச் சொல்ல அறிவு உண்டாயிற்று. இப் பாட்டில் சிலேடை
அமைந்துள்ளன.
-
உற்றடி யார்உல காளஓர்
ஊணும் உறக்கும்இன்றிப்
பெற்றம தாவதென்(று) ஏறும்
பிரான்பெரு வேல்நெடுங்கண்
சிற்றடி யாய்வெண்பல் செவ்வாய்
இவள்சிர மாலைக்(கு)என்றும்
இற்றிடை யாம்படி யாகாஎன்
னுக்கு மெலிக்கின்றதே.
தெளிவுரை : இவருடைய அடியார்கள் எல்லாம் உலகை ஆண்டு கொண்டிருக்க, இவர் உணவும்
உறக்கமும் இல்லாமல் இடபத்தை ஊர்தியாகக் கொண்டு திரியும் காரணம் என்ன? பெரிய வேல்
போன்ற நீண்ட கண்களையும் சிறிய பாதங்களையும் வெண்மையான பற்களையும் சிவந்த வாயையும்
உடைய இவள், அவருடைய தலைமாலைக்காக மனம் முறிந்து இடை துவண்டு வாடும் தன்மை போல
மெலிக்கின்றதே.
-
மெலிக்கின்ற வெந்தீ வெயில்வாய்
இழுதழல் வாய்மெழுகு
கலிக்கின்ற காமம் கரதலம்
எல்லி துறக்கம்வெங்கூற்(று)
ஒலிக்கின்ற நீருறு தீயொளி
யார்முக்கண் அத்தர்மிக்க
பலிக்கென்று வந்தார் கடிக்கொன்றை
சூடிய பல்லுயிரே.
தெளிவுரை : வெப்பமான தீ மெல்லியது; வாய் வெண்ணெய் மெழுகு போல் பெருகுகின்ற நாமம்.
கையில் தீ வெங்கூற்றை அழித்தவன். ஒலிக்கின்ற நீரைத் தலையில் உடையவன். மிகுந்த
தீயைப் போன்ற செந்நிறம் உடையவன். மூன்று கண்களையுடைய தலைவன். பிச்சை ஏற்று
வந்துள்ளான். மணம் பொருந்திய கொன்றை மாலையைச் சூடுபவன்.
-
பல்லுயிர் பாகம் உடல்தலை
தோல்பக லோன்மறல்பெண்
வில்லியோர் வேதியன் வேழம்
நிரையே பறித்துதைத்துப்
புல்லியும் கட்டும் அறுத்தும்
உரித்துங்கொண் டான்புகழே
சொல்லியும் பாடியும் ஏத்தக்
கெடும்நங்கள் சூழ்துயரே.
தெளிவுரை : இதில் நிரல் நிறையப் பொருள்கோள் வந்துள்ளது. பகலோன் பல்லைப் பறித்து,
யமன் உயிரை உதைத்து, உமாதேவியின் பாகம் புல்லி, காமன் உடலைச் சுட்டு, பிரமன்
தலையை அறுத்து, வேழத்தின் தோலை உரித்துப் புகழ் கொண்டவன் என்று முறையே கூட்டுக.
அவனுடைய புகழைச் சொல்லியும் பாடியும் ஏத்தியும் வணங்கினால் நம்மைச் சூழ்ந்து
வரும் துன்பங்கள் கெடும் என்பதாம்.
-
துயரும் தொழும்அழும் சோரும்
துகிலும் கலையும்செல்லப்
பெயரும் பிதற்றும் நகும்வெய்
துயிர்க்கும் பெரும்பணிகூர்ந்(து)
அயரும் அமர்விக்கும் மூரி
நிமிர்க்கும்அந் தோஇங்ஙனே
மயரும் மறைக்காட்(டு) இறையினுக்(கு)
ஆட்பட்ட வாணுதலே.
தெளிவுரை : திருமறைக்காட்டு (வேதாரண்யம்) இறைவனுக்கு ஆட்பட்ட வாணுதல் வருந்துவள்;
தொழுவாள்; அழுவாள்; சோர்வடைவாள்; ஆடையும் மேகலா பரணமும் நழுவ நடப்பாள்;
பிதற்றுவாள்; நகைப்பாள்; பெருமூச்சு விடுவாள்; பெரும் பணி கூர்ந்து அயர்வாள்;
மிகுதியாக விக்குவாள்; திமிர் விடுவாள்; அந்தோ! இவ்வாறு மயங்குவாள் என்க.
-
வாணுதற்(கு) எண்ணம்நன் றன்று
வளர்சடை எந்தைவந்தால்
நாணுதற்(கு) எண்ணாள் பலிகொடு
சென்று நகும்நயந்து
பேணுதற்(கு) எண்ணும் பிரமன்
திருமால் அவர்க்(கு)அரிய
தாணுவுக்(கு) என்னோ இராப்பகல்
நைந்(து)இவள் தாழ்கின்றதே.
தெளிவுரை : ஒளி பொருந்திய நெற்றியை உடைய இவளுக்கு எண்ணம் நல்லதல்ல. பெரிய சடையை
உடைய சிவபெருமான் வந்தால் நாண வேண்டுமென்று நினையாள். பிச்சை எடுத்துக் கொண்டு
போய் சிரிப்பாள். விரும்பித் தழுவுவதற்கு நினைப்பாள். பிரமனும் திருமாலும்
தேடியும் காண முடியாத சிவபெருமானுக்கு என்ன காரணம் பற்றி இவள் இரவு பகல் இவ்வாறு
தாழ்ந்து போகின்றாள்?
-
தாழும் சடைசடை மேலது
கங்கையக் கங்கைநங்கை
வாழும் சடைசடை மேலது
திங்கள்அத் திங்கட்பிள்ளை
போழும் சடைசடை மேலது
பொங்கர(வு) அவ்வரவம்
வாழும் சடைசடை மேலது
கொன்றையெம் மாமுனிக்கே.
தெளிவுரை : தாழ்ந்திருக்கும் சடைமேல் உள்ளது கங்கை. அந்த கங்கையாகிய நங்கை வாழும்
சடை மேலது பிறைச் சந்திரன்; அது பிளந்து செல்லும் சடை மேல் உள்ளது சீறுகின்ற
பாம்பு. அந்தப் பாம்பு வாழும் சடை மேல் உள்ளது கொன்றை மலர். இவை யாவும் எம்
முனிவர் தலைவனாகிய பரமனது சிரசில் உள்ளவை.
-
முனியே முருகலர் கொன்றையி
னாய்என்னை மூப்பொழித்த
கனியே கழலடி அல்லால்
களைகண்மற்(று) ஒன்றுமிலேன்
இனியேல் இருந்தவம் செய்யேன்
திருந்தவஞ் சேநினைந்து
தனியேன் படுகின்ற சங்கடம்
ஆர்க்கினிச் சாற்றுவனே.
தெளிவுரை : முனிவனே ! மணம் வீசுகின்ற கொன்றை மலரைச் சூடியவனே ! என்னுடைய
முதுமையைப் போக்கிய கனியே ! உன்னுடைய திருவடிகளை அல்லாமல் வேறு பற்றுக் கோடு
எனக்கு இல்லை. இனிமேல் ஏற்றுக் கொள்வாயாக. பெருந் தவம் செய்ய மாட்டேன். நான்
திருந்துவதற்கு ஐம்புலன்களின் விடயங்களையே எண்ணி, தனியேன் படுகின்ற சங்கடத்தை
யார்க்கு இனி சொல்லுவேன்.
-
சாற்றுவன் கோயில் தலையும்
மனமும் தவம்இவற்றால்
ஆற்றுவன் அன்பெனும் நெய்சொரிந்(து)
ஆற்றிஅம் சொல்மலரால்
ஏற்றுவன் ஈசன்வந்(து) என்மனத்
தான்என்(று) எழுந்தலரே
தூற்றுவன் தோத்திரம் ஆயின
வேயினிச் சொல்லுவனே.
தெளிவுரை : சிதம்பரத்தைத் துதிப்பேன். தலை, மனம், தலம் இவற்றால் செய்வேன்.
அன்பென்ற நெய்யை வார்த்து, அழகிய சொல்லாகிய மலரால் அருச்சிப்பேன். என் மனத்தில்
இருப்பவன் என்று எழுந்து பலர் அறியச் சொல்வேன். இனி தோத்திரப் பாடல்களைப்
பாடுவேன்.
-
சொல்லா தனகொழு நாவல்ல
சோதியுள் சோதிதன்பேர்
சொல்லாச் செவிமரம் தேறித்
தொழாதகை மண்திணிந்த
கல்லாம் நினையா மனம்வணங்
காத்தலை யும்பொறையாம்
அல்லா அவயவம் தானும்
மனிதர்க்(கு) அசேதனமே.
தெளிவுரை : இறைவனைப் புகழாதன இரும்புக் கொழு. நாக்குகள் அல்ல. பேரொளியாக
விளங்கும் பரம்பொருளின் புகழ் நுழையாத காது மரம். தெளிந்து தொழாத கைகள் மண்
திணிந்த கல். அவனை நினைக்காத மனமும் வணங்காத தலையும் சலதாரை அடைக்குங் கல்.
இறைவன் பொருட்டாகப் பயன்படாத உறுப்புக்கள் சடப் பொருள்களாம்.
-
தனக்குன்றம் மாவையம் சங்கரன்
தன்னருள் அன்றிப்பெற்றால்
மனக்கென்றும் நஞ்சிற் கடையா
நினைவன் மதுவிரியும்
புனக்கொன்றை யான்அரு ளால்புழு
வாகிப் பிறந்திடினும்
எனக்கென்றும் வானவர் பொன்னுல
கோ(டு)ஒக்க எண்ணுவனே.
தெளிவுரை : பொருட் குவியலையும் பெரிய நிலத்தையும் சங்கரனுடைய அருள் இல்லாமல்
பெற்றால், மனத்தின்கண் நஞ்சை விடக் கீழ்ப்பட்டதாக எண்ணுவேன். தேன் நிறைந்த கொன்றை
மலரையுடையவனது அருளால் புழுவாகப் பிறந்தாலும் எனக்கு என்றும் தேவர்களது
பொன்னுலகுக்குச் சமமாக எண்ணுவேன்.
-
எண்ணம் இறையே பிழைக்கும்
கொலாம்இமை யோர்இறைஞ்சும்
தண்ணம் பிறைச்சடைச் சங்கரன்
சங்கக் குழையன்வந்தென்
உண்ணன் குறைவ(து) அறிந்தும்
ஒளிமா நிறங்கவர்வான்
கண்ணும் உறங்கா(து) இராப்பகல்
எய்கின்ற காமனுக்கே.
தெளிவுரை : நினைவு சிறிது தவறுமோ? தேவர்கள் வணங்கும் குளிர்ந்த பிறை சூடிய
சடையினையுடைய சங்கரனும் சங்காலாகிய குண்டலங்களை உடையவனுமாகிய இறைவன் வந்து என்
மனத்தில் நன்றாகத் தங்கியிருப்பது அறிந்தும், ஒளி பொருந்திய நிறம் கவரும்
பொருட்டுக் கண் உறங்காமல் இரவு பகல் மலர் அம்புகளை விடுக்கும் காமனுக்காக மனம்
சிறிது தவறுமோ என்று கூட்டிப் பொருள் கொள்க.
-
காமனை முன்செற்ற(து) என்றாள்
அவளிவள் காலன்என்னும்
தாமநன் மார்பனை முன்செற்ற(து)
என்றுதன் கையெறிந்தாள்
நாம்முனம் செற்றதன் றாரைஎன்
றேற்(கு)இரு வர்க்கும்அஞ்சி
ஆமெனக் கிற்றிலர் அற்றெனக்
கிற்றிலர் அந்தணரே.
தெளிவுரை : மன்மதனை முன்பு அழித்தது என்றாள். அவள், இவள் எமன் என்னும் தாமநன்
மார்பனை முன்; அழித்தது என்று தன் கையை வீசினாள். தேவரீர் முதலில் அழித்தது அல்ல
என்று சொன்ன எனக்கு இருவர்க்கும் அஞ்சி ஆம் என்றும் கூற மாட்டார்; அல்ல என்றும்
கூறமாட்டார் அந்தணராகிய இப் பரமர்.
-
அந்தண ராம்இவர் ஆரூர்
உறைவதென் றேன்அதுவே
சந்தணை தோளியென் றார்தலை
யாய சலவர் என்றேன்
பத்தணை கையாய் அதுவும்உண்
டென்றார் உமையறியக்
கொந்தணை தாரீர் உரைமின்என்
றேன்துடி கொட்டினரே.
தெளிவுரை : அந்தணராகிய இப்பரமர் உறைவது (ஆர் ஊர்) எவருடைய ஊர் என்றேன். சந்தனக்
குழம்பு பூசப்பட்ட தோள்களையுடைய பெண்ணே! அதுவே - ஆருரே; திருவாரூரே என்றார்.
முதன்மையான சலம் பேசுகின்றவர் என்றேன். பந்தாடுகின்ற கைகளை உடையவளே! சலவர் -
சலமாகிய கங்கையை முடியிற் கொண்டவர் என்றார். உமை அறிய - உம்மை அறிந்து கொள்ளுமாறு
(உமாதேவியார் சாட்சியாக) பூங்கொத்து பொருந்திய மாலையைத் தருவீராக (பூங்கொத்து
பொருந்திய படுக்கையைத் தருவீராக) என்றேன். உடுக்கையை அடித்தார்.
-
கொட்டும் சிலபல சூழநின்
றார்க்கும்குப் புற்றெழுந்து
நட்ட மறியும் கிரீடிக்கும்
பாடும் நகும்வெருட்டும்
வட்டம் வரும்அருஞ் சாரணை
செல்லும் மலர்தயங்கும்
புட்டங்(கு) இரும்பொழில் சூழ்மறைக்
காட்டான் பூதங்களே.
தெளிவுரை : பறவைகள் தங்கும் நெருங்கிய மலர்ச் சோலைகளையுடைய திருமறைக்காட்டிலுள்ள
இறைவனது பூதங்கள் கை கொட்டும்; ஒன்றாகக் கூடி நின்று ஆரவாரிக்கும்;
குதித்தெழுந்து கூத்தாடும்; விளையாடும்; பாடும்; சிரிக்கும்; அச்சுறுத்தும்;
வட்டமாகச் சுற்றி வரும். வரிசையாகச் செல்லும்.
-
பூதப் படையுடைப் புண்ணிய
ரேபுறஞ் சொற்கள்நும்மேல்
ஏதப் படஎழு கின்றன
வாலிளை யாளொடும்மைக்
காதற் படுப்பான் கணைதொட்ட
காமனைக் கண்மலரால்
சேதப் படுத்திட்ட காரணம்
நீரிறை செப்புமினே.
தெளிவுரை : பூதப் படைகளை உடைய புண்ணியரே! பழிச் சொற்கள் உம்மேல் குற்றம் உண்டாக
எழுகின்றன. பார்வதியோடும் விருப்பமாகச் சேர்க்குமாறு மலரம்புகளைத் தொடுத்த
மன்மதனைக் கண் மலரால் அழித்து விட்ட காரணத்தை நீர் சிறிது கூறுவீராக.
-
செப்பனக் கொங்கைக்குத் தேமலர்க்
கொன்றை நிறம்பணித்தான்
மைப்புரை கண்ணுக்கு வார்புனல்
கங்கைவைத் தான்மனத்துக்(கு)
ஒப்பன இல்லா ஒளிகிளர்
உன்மத் தமும்அமைத்தான்
அப்பனை அம்மனை நீயென்
பெறாதுநின் றார்க்கின்றதே.
தெளிவுரை : கிண்ணத்தைப் போன்ற முலைகளுக்குத் தேன் பொருந்திய கொன்றைப் பூவின்
நிறத்தைக் கொடுத்தான். மை பூசிய கண்களுக்கு நீர் விட்டு அழுது கொண்டிருக்குமாறு
செய்தான். மனத்துக்கு ஒப்புமையில்லாத ஒளியுள்ள மயக்கத்தை அமைத்தான். அப்பனே இது
தகுமோ என்று ஆரவாரம் செய்கின்றாள் என்பதாம். பிரிவினால் மார்பில் பசலை நிறம்
வந்தது என்பது பொருள்.
-
ஆர்க்கின்ற நீரும் அனலும்
மதியும்ஐ வாய்அரவும்
ஓர்க்கின்ற யோகும் உமையும்
உருவும் அருவும்வென்றி
பார்க்கின்ற வேங்கையும் மானும்
பகலும் இரவும்எல்லாம்
கார்க்கொன்றை மாலையி னார்க்குடன்
ஆகிக் கலந்தனவே.
தெளிவுரை : ஒன்றோடு ஒன்று ஒவ்வாத பொருள்களை உடன் வைத்தவன் என்றபடி. ஒலிக்கின்ற
நீரையும் தீயையும், பிறைச் சந்திரனையும் ஐந்து தலைகளையுடைய பாம்பையும்,
நினைத்தற்குரிய யோகத்தையும் உமையையும், உருவுள்ள பொருளையும், உருவம் இல்லாத
பொருளையும், புலியையும் மானையும், பகலையும் இரவையும், கொன்றை மாலையினை உடையவர்
இணைத்து வைத்துள்ளார்.
-
கலந்தனக் கென்பலர் கட்டவிழ்
வார்கொன்றை கட்டரவார்
சலந்தனக் கண்ணிய கானகம்
ஆடியோர் சாணகமும்
நிலந்தனக் கில்லா அகதியன்
ஆகிய நீலகண்டத்(து)
அலந்தலைக்(கு) என்னே அலந்தலை
யாகி அழிகின்றதே.
தெளிவுரை : அணிகலம் எலும்பு. முறுக்கு விரிகின்ற கொன்றை மலர் அணிந்தவர். அரையில்
கட்டி இருப்பது பாம்பு. நிறைந்த வெள்ளப் பெருக்கு உடையவர். நெருங்கியுள்ள
மயானத்தில் ஆடுபவர். ஓரு சாண் அகலமுள்ள நிலமும் தனக்குச் சொந்தமாய்ப் பெற்றிராத
அகதியாகிய நீலகண்டத்து துக்கமுடையவனுக்கு ஏன் இவள் துக்கமுடையவளாகி அழிகின்றாள்?
-
அழிகின்ற(து) ஆருயிர் ஆகின்ற(து)
ஆகுலம் ஏறிடும்மால்
இழிகின்ற சங்கம் இருந்த
முலைமேல் கிடந்தனபீர்
பொழிகின்ற கண்ணீர் புலர்ந்தது
வாய்கலை போனவந்தார்
மொழிகின்ற(து) என்இனி நான்மறை
முக்கண் முறைவனுக்கே.
தெளிவுரை : அருமையான உயிர் அழிகின்றது. கவலை மிகுகின்றது. மயக்கம் ஏறுகின்றது.
சங்க வளையல்கள் நழுவி விழுகின்றன. முலைகளின் மீது பசலை படர்ந்தது. கண்களிலிருந்து
நீர் பொழிகின்றது. வாய் உலர்ந்தது. தூது சென்று வந்த பெண்கள் நான்மறை உணர்ந்த
முக்கண்ணனாகிய பரமனுக்கு இனி சொல்ல வேண்டியது என்ன இருக்கின்றது?
-
முறைவனை மூப்புக்கு நான்மறைக்
கும்முதல் ஏழ்கடலந்
துறைவனைச் சூழ்கயி லாயச்
சிலம்பனைத் தொன்மைகுன்றா
இறைவனை எண்குணத்(து) ஈசனை
ஏத்தினர் சித்தம்தம்பால்
உறைவனைப் பாம்பனை யாம்பின்னை
என்சொல்லி ஓதுவதே.
தெளிவுரை : நீதி உடையவன். முதுமைக்கும் நான்கு மறைகளுக்கும் முதல்வன். ஏழ் கடல்
துறையை உடையவன். கயிலாய மலையை உடையவன். பழைமை குறையாத இறைவன். எண் குணத்தானாகிய
ஈசன். தன்னைத் துதிப்பவர்களின் மனத்தில் வாழ்பவன். பாம்பை ஆபரணமாக உடையவன். யாம்
அத்தகைய பெருமானை இன்னும் என்ன சொல்லிப் பாடுவது?
-
ஓதவன் நாமம் உரையவன்
பல்குணம் உன்னைவிட்டேன்
போதவன் பின்னே பொருந்தவன்
வாழ்க்கை திருந்தச்சென்று
மாதவ மாகிடு மாதவ
மாவளர் புன்சடையான்
யாதவன் சொன்னான் அதுகொண்(டு)
ஒழியினி ஆரணங்கே.
தெளிவுரை : ஆரணங்கே ! அவனுடைய பெயரை உரைப்பாயாக. அவனுடைய பல நற்குணங்களைச்
சொல்வாயாக. உன்னை விட்டுவிட்டேன். அவன் பிறகே செல்லக் கடவாய். அவனுடைய
வாழ்க்கையோடு இணைந்து கொள். திருந்த வேண்டுமானால் நீ சென்று சிறந்த தவமுடையவளாக
இருக்கக் கடவாய். மாதவத்தோனாகிய அந்த இறைவன் என்ன சொல்கிறானோ அதன்படி செய். இனிச்
செல்வாயாக.
-
ஆரணங் கின்முகம் ஐங்கணை
யானகம் அவ்வகத்தில்
தோரணந் தோனவன் தேரகல்
அல்குல்தொன் மைக்கண்வந்த
பூரண கும்பம் முலையிவை
காணப் புரிசடைஎம்
காரணன் தாள்தொழும் அன்போ
பகையோ கருதியதே.
தெளிவுரை : அரிய தெய்வப் பெண்ணின் முகம் காமனது வீடாம்; அவ்வீட்டில் அவனது தேர்
அகன்ற அல்குல்; பழைமையாக வந்த பூரண கும்பம் முலைகள்; இவை காண நெருங்கிய சடையை
உடையவன்; எம் காரணனாகிய அவன் தாள் தொழும் அன்போ பகையோ கருதியது? இதற்கு விடை
அடுத்த பாட்டு.
-
கருதிய(து) ஒன்றில்லை ஆயினும்
கேண்மின்கள் காரிகையாள்
ஒருதின மும்முள ளாகஒட்
டாதொடுங் கார்ஒடுங்கப்
பொருதநன் மால்விடைப் புண்ணியன்
பொங்கிளங் கொன்றைஇன்னே
தருதிர்நன் றாயிடும் தாரா
விடிற்கொல்லும் தாழ்இருளே.
தெளிவுரை : கருதியது ஒன்றில்லை ஆயினும், கேளுங்கள். இப்பெண் ஒரு நாளும் உயிரோடு
இருப்பவளாக விடாமல் பகைவர்கள் ஒடுங்கப் போர் செய்து அழித்த பெரிய இடப
வாகனத்தையுடைய சிவபெருமான் அணிந்துள்ள பொங்கிளங் கொன்றை மாலையை இப்போதே
தாருங்கள். குணமடைவாள். தராவிட்டால் நிரம்பிய இருள் அவளைக் கொன்று விடும்.
-
இருளார் மிடற்றால் இராப்பகல்
தன்னால் வரைமறையால்
பொருளார் கமழ்கொன்றை யால்முல்லை
புற்றர வாடுதலால்
தெருளார் மதிவிசும் பால்பௌவந்
தெண்புனல் தாங்குதலால்
அருளாற் பலபல வண்ணமு
மாஅரன் ஆயினனே.
தெளிவுரை : இருள் நிறைந்த கண்டத்தாலும், இரவாலும் பகலாலும் மலையிலுள்ள மானாலும்,
பொன்னிறம் பொருந்திய மணமுள்ள கொன்றையாலும், முல்லையிலுள்ள புற்றில் வாழும் பாம்பு
ஆடுதலாலும், விளக்கம் பொருந்திய மதியோடு கூடிய விசும்பாலும், கடலின் தெளிந்த
நீரைத் தாங்குதலாலும், அருளாலும் பலபல வண்ணங்களாக அரன் ஆயினன். குறிஞ்சி முதலிய
ஐந்து நில இயல்புகளும் பெற்றான் என்றபடி.
-
ஆயின அந்தணர் வாய்மை
அரைக்கலை கைவளைகள்
போயின வாள்நிகர் கண்ணுறு
மைந்நீர் முலையிடையே
பாயின வேள்கைக் கரபத்
திரத்துக்குச் சூத்திரம்போல்
ஆயின பல்சடை யார்க்(கு)அன்பு
பட்டவெம் ஆயிழைக்கே.
தெளிவுரை : சிவபெருமானுக்கு அன்பு பட்ட ஆயிழைக்கு அந்தணர்களது உண்மையுரை ஆயின.
அரையிலுள்ள ஆடையும் கையிலுள்ள வளையல்களும் நழுவின. வாள் போன்ற கண்களிலிருந்து
பெருகிய மையோடு கூடிய நீர்த்தாரைகள் முலைகள் மீது ஒழுகிப் பாய்ந்தன. மன்மதனது
கையிலுள்ள ஈர்வாளுக்குக் சூத்திரம் போல் ஆயின.
-
இழையார் வனமுலை வீங்கி
இடையிறு கின்ற(து)இற்றால்
பிழையாள் நமக்கிவை கட்டுண்க
என்பது பேச்சுக்கொலாம்
கழையார் கழுக்குன்ற வாணனைக்
கண்டனைக் காதலித்தாள்
குழையார் செவியொடு கோலக்
கயற்கண்கள் கூடியவே.
தெளிவுரை : அணிகலன்கள் பொருந்திய அழகிய முலைகள் இடை முரியும் தன்மை உடையதாக
இருக்கிறது. அவ்வாறு முரிந்தால் உயிர் பிழையாள். இந்நோய் தணியும் என்று
சொல்வதற்கில்லை. மூங்கில் புதர்கள் நிறைந்த திருக்கழுக்குன்றத்தில்
எழுந்தருளியுள்ள இறைவனும் நீலகண்டனுமாகிய இறைவனைக் காதலித்தாள். குண்டலம்
பொருந்திய செவியோடு அழகிய கயல் போன்ற கண்கள் கூடின.
-
கூடிய தன்னிடத் தான்உமை
யாளிடத் தானைஐயா(று)
ஈடிய பல்சடை மேற்றெரி
வண்ணம் எனப்பணிமின்
பாடிய நான்மறை பாய்ந்தது
கூற்றைப் படர்புரஞ்சுட்(டு)
ஆடிய நீறுசெஞ் சாந்திவை
யாம்எம் அயன்எனவே.
தெளிவுரை : உமையவளை இடப்பாகத்தில் கொண்டவனும் திருவையாற்றை இடமாகக் கொண்டவனும்
ஆகிய இறைவனது சடையின் மேல் இருப்பது தீயின் நிறம் என்று பணியுங்கள். பாடிய நான்கு
வேதங்களும் பாய்ந்தது. கூற்றை உதைத்து ஆடிய திருநீறு செஞ்சாந்து இல்லை. இவை நம்
நல்வினையே.
-
அயமே பலிஇங்கு மாடுள
தாணுவோர் குக்கிக்கிடப்
பயமே மொழியும் பசுபதி
ஏறெம்மைப் பாய்ந்திடுமால்
புயமேய் குழலியர் புண்ணியர்
போமின் இரத்தல்பொல்லா
நயமே மொழியினும் நக்காம்அம்
மாஉம்மை நாணுதுமே.
தெளிவுரை : இங்கு புண்ணியமே பிச்சை. மாட்டிலேறும் சிவபெருமான் நல்ல மொழிகளையே
சொன்னாலும் நக்கராய் இருக்கிறார். அதாவது ஆடையற்றவராய் இருக்கிறார். அவருடைய
வயிறு வருத்தத்தையே சொல்லும். அவருடைய ஊர்தியாகிய காளை எம்மைப் பாய்ந்திடும்.
அழகிய கூந்தலையுடைய புண்ணியர் போய்விடுங்கள். யாசிக்க வேண்டா பொல்லாதது என்பதாம்.
-
நாணா நடக்க நலத்தார்க்(கு)
இடையில்லை நாம்எழுத
ஏணார் இருந்தமி ழால்மற
வேனுந் நினைமின்என்றும்
பூணார் முலையீர் நிருத்தன்
புரிசடை எந்தைவந்தால்
காணா விடேன்கண் டிரவா
தொழியேன் கடிமலரே.
தெளிவுரை : நாணாமல் நடக்க நலத்தார்க்கு சமயம் வாய்ப்பதில்லை. நாம் எழுத இடையில்லை
என்பதுமாம். மேன்மை பொருந்திய சிறந்த தமிழ்ப் பாடல்களால் உன்னை மறவாமல்
துதிப்பேன். நினையுங்கள். ஆபரணம் அணிந்த முலைகளை உடையீர், திருக்கூத்தியற்றும்
புரிசடை எந்தை வந்தால் நான் பார்க்காமல் விடமாட்டேன். கண்டு கடி மலரை யாசிக்காமல்
இருக்க மாட்டேன்.
-
கடிமலர்க் கொன்றை தரினும்புல்
லேன்கலை சாரலொட்டேன்
முடிமலர் தீண்டின் முனிவன்
முலைதொடு மேற்கெடுவன்
அடிமலர் வானவர் ஏத்தநின்
றாய்க்(கு)அழ கல்லஎன்பன்
தொடிமலர்த் தோள்தொடு மேல்திரு
ஆணை தொடங்குவனே.
தெளிவுரை : மணமுள்ள கொன்றை மாலையைத் தந்தாலும் தழுவ மாட்டேன். ஆடையை அவர் மீது பட
விடமாட்டேன். முடி மலரைத் தொட்டால் சினப்பேன். முலைகளைத் தொட்டால் அழுது
புலம்புவேன். தேவர்கள் வணங்கும் பெருமானுக்கு இது ஒழுங்கல்ல என்பேன். தொடி மலர்த்
தோள்களைத் தொட்டால் தொடக்கூடாது என்று ஆணையிட்டுத் தடுப்பேன்.
-
தொடங்கிய வாழ்க்கையை வாளா
துறப்பர் துறந்தவரே
அடங்கிய வேட்கை அரன்பால்
இலர்அறு காற்பறவை
முடங்கிய செஞ்சடை முக்கண
னார்க்கன்றி இங்கும்அன்றிக்
கிடங்கின்றி பட்ட கராஅனை
யார்பல கேவலரே.
தெளிவுரை : துறவிகள் ஆரம்பித்த வாழ்க்கையை வீணாக ஒழித்து விடுவர். ஆசை ஒழிந்தவர்
அன்பாக இலர். வண்டுகள் மொய்த்து நெருங்கியுள்ள சிவந்த சடையையுடைய
முக்கணனார்க்கும் அன்றி இங்கும் அன்றி அகழியில் அகப்பட்டுள்ள முதலையைப் போன்றவர்
இழிவுடையர் என்பதாம்.
-
வலந்தான் கழல்இடம் பாடகம்
பாம்பு வலம்இடமே
கலந்தான் வலம்நீ றிடம்சாந்
தெரிவலம் பந்திடமென்
பலந்தார் வலம்இடம் ஆடகம்
வேல்வலம் ஆழிஇடம்
சலந்தாழ் சடைவலம் தண்ணங்
குழல்இடம் சங்கரற்கே.
தெளிவுரை : இது, மாதொர் பாதியனது திருக்கோல வருணனை. சங்கரருக்கு வலப்பக்கம்
வீரக்கழல். இடப்பக்கம் பாடகம் என்னும் அணி. பாம்பு வலப்பக்கம். இடப்பக்கம் மேகலை.
வலப்பக்கம் திருநீறு. இடப்பக்கம் சாந்து. வலப்பக்கம் தீ. பந்து இடப்பக்கம்.
அசைகின்ற எலும்பு மாலை வலப்பக்கம். பொன்னரி மாலை இடப்பக்கம். வேல் (முத்தலை
சூலம்) வலப்பக்கம். சக்கரம் இடப்பக்கம். நீர் தாழ் சடை வலப்பக்கம். தண்ணிய
கூந்தல் இடப்பக்கம் என்பதாம்.
-
சங்கரன் சங்கக் குழையன்
சரணார விந்தந்தன்னை
அங்கரங் கூப்பித் தொழுதாட்
படுமின்தொண் டீர்நமனார்
கிங்கரர் தாம்செய்யும் கீழா
யினமிறை கேட்டலுமே
இங்கரம் ஆயிரம் ஈரஎன்
நெஞ்சம் எரிகின்றதே.
தெளிவுரை : தொண்டர்களே! சங்கரனும் சங்கக் குழையை உடையவனுமாகிய இறைவனது திருவடித்
தாமரை மலர்களை அழகிய கைகளைக் குவித்து வணங்கி அவனுக்குத் தொண்டு செய்யுங்கள்.
எமனுடைய ஆட்களாகிய கிங்கரர்கள் இழிவான தொல்லைகளைச் சிறிது கேட்ட அளவில், இரும்பை
அராவுங் கருவிகள் பல அராவ, நெஞ்சம் எரிகின்றது.
-
எரிகின்ற தீயொத்(து) உளசடை
ஈசற்(கு)அத் தீக்(கு)இமையோர்
சொரிகின்ற பாற்கடல் போன்றது
சூழ்புனல் அப்புனலிற்
சரிகின்ற திங்களோர் தோணிஒக்
கின்ற(து)அத் தோணிஉய்ப்பான்
தெரிகின்ற திண்கழை போன்றுள
தால்அத் திறல்அரவே.
தெளிவுரை : ஈசனுக்கு எரிகின்ற தீ போன்றுள்ளது சடை. அத் தீயினுக்குத் தேவர்கள்
சொரிகின்ற பாற்கடல் போன்றுள்ளது கங்கை. அந்நீரில் ஒதுங்கிச் செல்லுகின்ற சந்திரன்
தோணி போன்றுள்ளது. அத் தோணியைச் செலுத்த திண்கழை போன்றுள்ளது பாம்பு.
இப்பாட்டில் உவமையணி பயின்று வந்துள்ளது.
-
அரவம் உயிர்ப்ப அழலும்அங்
கங்கை வளாய்க்குளிரும்
குரவங் குழல்உமை ஊடற்கு
நைந்துரு கும்அடைந்தோர்
பரவும் புகல்அண்ணல் தீண்டலும்
பார்வா னவைவிளக்கும்
விரவும் இடர்இன்பம் எம்இறை
சூடிய வெண்பிறையே.
தெளிவுரை : பாம்பு மூச்சு விட கங்கை வெம்மையடையும். கலத்தலினால் குராமலர்
குளிரும். உமாதேவி ஊடற்கு வருந்துவாள். அடியார்கள் போற்றும் கீர்த்தியை உடைய
சிவபெருமான், தொட்டவுடன் அவர் சூடிய வெண்பிறை நிலத்தையும் வானத்தையும் விளங்கச்
செய்யும். பிறை இடரும் இன்பமும் கலந்து அனுபவிக்கும் என்பதாம்.
-
பிறைத்துண்டம் சூடலுற் றோபிச்சை
கொண்டனல் ஆடலுற்றோ
மறைக்கண்டம் பாடலுற் றோஎன்பும்
நீறும் மருவலுற்றோ
கறைக்கண்டம் புல்லலுற் றோகடு
வாய்அர ஆடலுற்றோ
குறைக்கொண் டிவள்அரன் பின்செல்வ
தென்னுக்குக் கூறுமினே.
தெளிவுரை : பிறைச் சந்திரனை அணிதலை விரும்பியோ, பிச்சை ஏற்று தீயில் ஆடுதலை
விரும்பியோ, மறையைக் கண்டத்திலிருந்து பாடுதலை விரும்பியோ, எலும்பும் திருநீறும்
அணிதலை விரும்பியோ, நீலகண்டத்தைத் தழுவ விரும்பியோ, நஞ்சு பொருந்திய பற்களையுடைய
பாம்பு ஆடுவதை விரும்பியோ, குறையைக் கூறிக் கொண்டு இவள் அரன் பின் செல்வது என்ன
காரணம் என்பதைச் சொல்லுங்கள்.
-
கூறுமின் ஈசனைச் செய்ம்மின்குற்
றேவல் குளிர்மின்கண்கள்
தேறுமின் சித்தம் தெளிமின்
சிவனைச் செறுமின்செற்றம்
ஆறுமின் வேட்கை அறுமின்
அவலம் இவைநெறியா
ஏறுமின் வானத்(து) இருமின்
விருந்தாய் இமையவர்க்கே.
தெளிவுரை : ஈசனைப் புகழ்ந்து பாடுங்கள்; அவனுக்குக் குற்றேவல் செய்யுங்கள்.
கண்கள் குளிருமாறு செய்யுங்கள். மனம் தெளியுங்கள். சிவனை அறியுங்கள். கோபத்தை
அடக்குங்கள். வேட்கை தணியுங்கள். பயனில்லாத செயல்களை அறுத்து எறியுங்கள்.
இவைகளையே வழியாகக் கொண்டு வானுலகம் ஏறுங்கள். தேவர்களுக்கு விருந்தாய் இருங்கள்.
-
இமையோர் கொணர்ந்திங்(கு) இழித்திட
நீர்மைகெட்(டு) ஏந்தல்பின்போய்
அமையா நெறிச்சென்றோர் ஆழ்ந்த
சலமக ளாய்அணைந்தே
எமையாளு டையான் தலைமக
ளாஅங்(கு) இருப்பஎன்னே
உமையாள் அவள்கீழ் உறைவிடம்
பெற்றோ உறைகின்றதே.
தெளிவுரை : தேவர்கள் கொண்டு வந்து இம்மண்ணுலகத்தில் இறங்கச் செய்ய நல்லியல்பு
அழிந்து பகீரதன் பின்னால் சென்று பொருந்தாத வழியில் சென்று ஒரு சலமகளாய் அணைந்து
இறைவனுக்குத் தலைமகளாய் அங்கு இருக்கவும் உமாதேவியார் அவளுக்குக் கீழ் தங்குமிடம்
பெற்று வாழ்வதும் என்ன வியப்பு.
கங்கை தலையில் இருக்க, உமை கீழ் உறைவது நியாயமா என்றபடி.
-
உறைகின் றனர்ஐவர் ஒன்பது
வாயில்ஓர் மூன்றுளதால்
மறைகின்ற என்பு நரம்போ(டு)
இறைச்சி உதிரம்மச்சை
பறைகின்ற தோல்போர் குரம்பை
பயன்இல்லை போய்அடைமின்
அறைகின்ற தெண்புனல் செஞ்சடைக்
கொண்டோன் மலரடிக்கே.
தெளிவுரை : இவ்வுடம்பில் ஐம்புலன்களும் ஒன்பது வாயில்களும் மூன்று சரீரங்களும்
உள்ளன. எலும்பு, நரம்பு, இறைச்சி, உதிரம், பச்சை இவைகளோடு இழித்துக்
கூறப்படுகின்ற தோலால் போர்க்கப்பட்ட சிறு குடிசை இது. இதனால் பயன் இல்லை.
ஒலிக்கின்ற தெளிந்த புனலைச் செஞ்சடையில் கொண்டோனது மலரடிகளை அடைமின். நற்கதி
பெறுவீர்கள் என்றபடி.
-
அடிக்கண்ணி கைதொழு தார்க்(கு)அகன்
ஞாலங் கொடுத்தடிநாய்
வடிக்கண்ணி நின்னைத் தொழவளை
கொண்டனை வண்டுண்கொன்றைக்
கடிக்கண்ணி யாய்எமக்(கு) ஓரூர்
இரண்டகங் காட்டினையால்
கொடிக்கண்ணி மேல்நல்ல கொல்லே(று)
உயர்த்த குணக்குன்றமே.
தெளிவுரை : கயிறு கட்டிய கொடியில் காளை உருவை எழுதி உயர்த்திய குணக் குன்றமே! ஓர்
ஊரில் இரண்டு விதமான மன இயல்பைக் காட்டினாய். இது நியாயமா என்றபடி எப்படியெனில்,
திருவடிகளை அடைந்து கைதொழுதார்க்கு அகன்ற உலகைக் கொடுத்து, மாவடு போன்ற கண்களை
உடையவள் நின்னைத் தொழுதபோது அவளது கை வளைகளைப் பெற்றுக் கொண்டாய். வண்டுகள்
மொய்க்கின்ற கொன்றை மாலையைத் தலையில் சூடியவரே, ஒரே ஊரில் வஞ்சனையைக்
காண்பித்தாய்.
-
குன்றெடுத் தான்செவி கண்வாய்
சிரங்கள் நெரிந்தலற
அன்றடர்த் தற்றுகச் செற்றவன்
நற்றவர்க் கற்றசிவன்
மன்றிடைத் தோன்றிய நெல்லிக்
கனிநிற்ப மானுடர்போய்
ஒன்றெடுத்(து) ஓதிப் புகுவர்
நரகத் துறுகுழியே.
தெளிவுரை : கைலை மலையை எடுத்தவனாகிய இராவணனது செவி, கண், வாய், சிரங்கள் நெரிந்து
அலறுமாறு கெட்டழிய நெருக்கி வருத்தியவனும், நல்ல தவமுடையோர்க்கு
அருளுகின்றவனுமாகிய சிவன், பொன்னம் பலத்தில் தோன்றிய நெல்லிக்கனி நிற்க, மானிடர்
போய் ஒன்றை எடுத்து ஓதி நரகத்து உறுகுழி புகுவர்.
-
குழிகட் கொடுநடைக் கூன்பற்
கவட்டடி நெட்டிடைஊன்
உழுவைத் தழைசெவித் தோல்முலைச்
சூறை மயிர்ப்பகுவாய்த்
தெழிகட் டிரைகுரல் தேம்பல்
வயிற்றுத் திருக்குவிரற்
கழுதுக் குறைவிடம் போல்கண்டன்
ஆடும் கடியரங்கே.
தெளிவுரை : ஆழமாகிய கண், விரைவான நடை, வளைந்த பல், பிளவுபட்ட அடி, நீண்ட இடுப்பு,
இறைச்சி, புலி, தாழ்ந்த செவி, சதை வற்றிய முலை, சுருளுதலை உடைய மயிர், பிளந்த
வாய், மிகுதியாக அதட்டிக் கூவுகின்ற குரல், வாடிய வயிறு, முறுக்கிய விரல்
ஆகியவற்றையுடைய பேய்களுக்கு உறைவிடம் போல் உள்ளது நீலகண்டன் ஆடும் அச்சம் மிகுந்த
அரங்கம் என்றபடி.
-
அரங்கா மணிஅன்றில் தென்றல்ஓர்
கூற்றம் மதியம்அந்தீச்
சரம்காமன் எய்யஞ்சு சந்துட்
பகையால் இவள்தளர்ந்தாள்
இரங்கா மனத்தவர் இல்லை
இரங்கான் இமையவர்தம்
சிரங்கா முறுவான் எலும்புகொள்
வான்என்றன் தேமொழிக்கே.
தெளிவுரை : இவளுக்கு, காவில் உள்ள அழகிய அன்றில் பறவை அரமாகும். தென்றல் ஒப்பற்ற
யமனாகும். சந்திரன் மாலைக் காலத்துத் தீயாகும். மலர் அம்புகளை எய்யும் மன்மதன்
மாலைக் காலத்தில் பகையாவான். இவைகளினால் இவள் தளர்ந்தாள். இவளைக் கண்டு
இரங்காதவர் எவரும் இல்லை. ஆனால், இமையவர்களுடைய தலைகளை மாலையாக அணிய
விரும்புகிறவன் மனம் இரங்கான். என் தேமொழியின் எலும்பைத்தான் கொள்வான். இவள்
இவனுக்காக ஏக்கமுற்று இறந்து படுவாள் என்பதாம்.
-
மொழியக்கண் டான்பழி மூளக்கண்
டான்பிணி முன்கைச்சங்கம்
அழியக்கண் டான்அன்றில் ஈரக்கண்
டான்தென்றல் என்உயிர்மேல்
சுழியக்கண் டான்துயர் கூரக்கண்
டான்துகில் சூழ்கலையும்
கழியக்கண் டான்தில்லைக் கண்ணுத
லான்கண்ட கள்ளங்களே.
தெளிவுரை : தில்லையில் கோயில் கொண்டிருப்பவனும் நெற்றிக் கண்ணை உடையவனுமாகிய
நடராஜப் பெருமான் கண்ட வஞ்சகச் செயல்களாவன; பழிச்சொற்கள் மொழிவதைக் கண்டான். நோயை
அதிகரிக்கச் செய்தான். முன் கைகளில் உள்ள சங்க வளையல்கள் கழலுமாறு செய்தான்.
அன்றில் பறவையைக் கொண்டு என்னைப் பிளக்கச் செய்தான். தென்றல் காற்று என்
உயிர்மேல் சுழித்தோடச் செய்தான். துயரத்தை மிகுமாறு செய்தான். ஆடைகள் நழுவுமாறு
செய்தான் என்பதாம்.
-
கள்ள வளாகங் கடிந்தடி
மைப்படக் கற்றவர்தம்
உள்ள வளாகத்(து) உறுகின்ற
உத்தமன் நீள்முடிமேல்
வெள்ள வளாகத்து வெண்ணுரை
சூடி வியன்பிறையைக்
கொள்ள அளாய்கின்ற பாம்பொன்(று)
உளது குறிக்கொண்மினே.
தெளிவுரை : கள்ளமுடையவர் கூட்டத்தை வெறுத்து, கற்றவர்களுடைய உள்ளமாகிய வளாகத்தில்
பொருந்தியிருக்கின்ற உத்தமனுடைய நீண்ட முடிமேல் உள்ள வெள்ளப் பெருக்த்தில் உள்ள
சிறந்த பிறையைப் பற்றுவதற்குப் பாம்பு ஒன்று உள்ளது. அதைக் கவனியுங்கள்.
-
குறிக்கொண்(டு) இவள்பெய்த கோல்வளை
யேவந்து கோள்இழைத்தீர்
வெறிக்கொண்ட வெள்ளிலம் போதோ
எலும்போ விரிசடைமேல்
உறைக்கொன்றை யோவுடைத் தோலோ
பொடியோ உடைகலனோ
கறைக்கண்ட ரேநுமக்(கு) என்னோ
சிறுமி கடவியதே.
தெளிவுரை : கொள்ளுங் குறிப்பைக் கொண்டு வந்து இவள் பெய்த கைவளைகளையே கொள்ளுதலைச்
செய்தீர். விளா மரத்தினது அழகிய மலர் மாலையையோ, எலும்போ, விரிசடைமேல் உள்ள
கொன்றையையோ, உடுத்தியுள்ள தோல் ஆடையையோ, திருநீற்றையோ, அணிகலன்களையோ, நீலகண்டரே !
சிறுமி கேட்டது யாது என்று கூறுவீர் என்பதாம்.
-
கடவிய(து) ஒன்றில்லை ஆயினும்
கேண்மின்கள் காரிகையாள்
மடவிய வாறுகண் டாம்பிறை
வார்சடை எந்தைவந்தால்
கிடவிய நெஞ்சம் இடங்கொடுத்
தாட்(கு)அவ லங்கொடுத்தான்
தடவிய கொம்பதன் தாள்மேல்
இருந்து தறிக்குறுமே.
தெளிவுரை : கேட்கத் தக்கது ஒன்றில்லை என்றாலும் கேளுங்கள். பிறைச் சந்திரனையும்
சடையையும் உடைய எந்தை வந்தால் காணலாம் என்று பொருந்திய நெஞ்சத்தில் இடம்
கொடுத்தவருக்குத் துன்பத்தைக் கொடுத்தான். பெரிய அடியை வெட்டும் மடமை உடையவளான
தன்மையைக் கொடுத்தான் என்பதாம்.
-
தறித்தாய் அயன்தலை சாய்த்தாய்
சலந்தர னைத்தழலாப்
பொறித்தாய் அனங்கனைச் சுட்டாய்
புரம்புன லும்சடைமேல்
செறித்தாய்க்(கு) இவைபுகழ் ஆகின்ற
கண்டிவள் சில்வளையும்
பறித்தாய்க்(கு) இதுபழி ஆகுங்கொ
லாம்என்று பாவிப்பனே.
தெளிவுரை : பிரமனது தலையை அறுத்தாய்; சலந்தரனைக் கொன்றாய்; மன்மதனை எரித்தாய்;
திரிபுரங்களை எரித்தாய்; இவைகளைச் செய்த உனக்குப் புகழ் ஆகின்றது என்று கண்டு,
இவளுடைய சிலவாகிய வளைகளையும் பறித்துக் கொண்ட உனக்கு இது பழியாகுமோ என்று
எண்ணுவேன்.
-
பாவிக்கும் பண்டையள் அல்லள்
பரிசறி யாள்சிறுமி
ஆவிக்கும் குற்குலு நாறும்
அகம்நெக அங்கம்எங்கும்
காவிக்கண் சோரும்பொச் சாப்புங்
கறைமிடற் றானைக்கண்ணில்
தாவிக்கும் வெண்ணகை யாளம்மெல்
லோதிக்குச் சந்தித்தவே.
தெளிவுரை : எண்ணியறியும் பழைமையானவள் அல்லள். தன்மை அறியாள். சிறுமி பெருமூச்சு
விடும். குங்கிலிய மணம் வீசப் பெற்றிருக்கிறாள். உடல் முழுதும் நடுங்குகிறாள்.
கருங்குவளை மலரைப் போன்ற கண்கள் சோர்கின்றன. தன்னை மறக்கும் நீலகண்டனைக் கண்ணில்
நிலை பெறச் செய்கின்றாள். வெண்மையான பற்களையும் மெல்லிய கூந்தலையும் உடையவளுக்கு
இவைகள் உண்டாயின.
-
சந்தித்த கூற்றுக்குக் கூற்றாம்
பிணிக்குத் தணிமருந்தாம்
சிந்திக்கிற் சிந்தா மணியாகித்
தித்தித்(து) அமுதமுமாம்
வந்திக்கில் வந்தென்னை மால்செய்யும்
வானோர் வணங்கநின்ற
அந்திக்கண் ணாடியி னான்அடி
யார்களுக்(கு) ஆவனவே.
தெளிவுரை : எதிர்ப்பட்ட நமனுக்கு நமனாம். நோய்க்கு மருந்து ஆனவன். சிந்தித்தால்
சிந்தாமணியாகி இனிமை உடையதாகிய அமுதமாம். வழிபட்டால் வந்து என்னை மயக்குகின்றான்.
தேவர்கள் வணங்குமாறு நின்றவனும் மாலைப் பொழுதில் கூத்தாடியவனுமாகிய சிவபெருமான்
அடியார்களுக்கு அருள் செய்வான்.
-
ஆவன யாரே அழிக்கவல்
லார்அமை யாவுலகில்
போவன யாரே பொதியகிற்
பார்புரம் மூன்றெரித்த
தேவனைத் தில்லைச் சிவனைத்
திருந்தடி கைதொழுது
தீவினை யேன்இழந் தேன்கலை
யோடு செறிவளையே.
தெளிவுரை : வரத் தக்கவற்றை அழிக்க வல்லவர் யார்? நிலை பெற்றிராத இவ்வுலகில்
போகின்றவற்றைப் போகாமல் பாதுகாக்க வல்லவர் யார்? முப்புரங்களை அழித் தெரித்த
தேவனும் தில்லைச் சிவனுமாகிய அவனது திருந்திய பாதங்களைத் தொழுது ஆடையோடு
நெருங்கிய வளையல்களையும் தீவினையேனாகிய யான் இழந்தேன்.
-
செறிவளை யாய்நீ விரையல்
குலநலம் கல்விமெய்யாம்
இறையவன் தாமரைச் சேவடிப்
போதென்றெல் லோரும்ஏத்தும்
நிறையுடை நெஞ்சிது வேண்டிற்று
வேண்டிய நீசர்தம்பால்
கறைவளர் கண்டனைக் காணப்
பெரிதும் கலங்கியதே.
தெளிவுரை : செறிந்த வளையல்களை உடையவளே! நீ விரைந்து செல்லாதே. குல நலம், கல்வி
ஆகியவை மெய்யானவை. இறைவனது தாமரை மலர் போன்ற பாதங்களை எல்லாரும் ஏத்தும் நிறையுடை
நெஞ்சிது. வேண்டியதைத் தரவல்லது. இழிந்தவர்களிடம் நஞ்சுக்கறை பொருந்திய கழுத்தை
உடையவனைக் காணப் பெரிதும் கலங்கியது.
-
கலங்கின மால்கடல் வீழ்ந்தன
கார்வரை ஆழ்ந்ததுமண்
மலங்கின நாகம் மருண்டன
பல்கணம் வானம்கைபோய்
இலங்கின மின்னொடு நீண்ட
சடைஇமை யோர்வியந்தார்
அலங்கல்நன் மாநடம் ஆர்க்கினி
ஆடுவ(து) எம்மிறையே.
தெளிவுரை : முன்பு இறைவன் ஆடியபோது பெரிய கடல்கள் கலங்கின. முகில் தவழ்கிற மலைகள்
வீழ்ந்தன. பூமி ஆழ்ந்தது. நாகங்கள் வருத்தமடைந்தன. பல தேவக் கூட்டங்கள் மருண்டன.
வானம் செயலிழந்து மின்னலோடு விளங்கியது. நீண்ட சடையைக் கண்டு தேவர்கள்
வியந்தார்கள். கொன்றை மலர்மாலையோடு நன்மாடத்தில் இனி எவர்க்காக இறைவன் ஆடுவது?
முன்பு ஆடியதே போதும் என்றபடி.
-
எம்இறை வன்இமை யோர்தலை
வன்உமை யாள்கணவன்
மும்முறை யாலும் வணங்கப்
படுகின்ற முக்கண்நக்கற்(கு)
எம்முறை யாள்இவள் என்பிழைத்
தாட்(கு)இறை என்பிழைத்தான்
இம்முறை யாலே கவரக்
கருதிற்(று) எழிற்கலையே.
தெளிவுரை : எம் இறைவன் தேவர்களுக்குத் தலைவன்; உமாதேவியார்க்குக் கணவன்; மனம்,
வாக்கு, காயம் என்னும் மூன்றாலும் வணங்கப்படுகின்ற மூன்று கண்களையுடைய
நிர்வாணிக்கு இவள் எம்முறையாள்? எலும்பு மாலையை விரும்பிய இவளுக்கு இறைவன் பிழை
செய்தான். அழகிய ஆடையை இம்முறையால் கவரக் கருதினாள் என்க.
-
கலைதலை சூலம் மழுக்கனல்
கண்டைகட் டங்கம்கொடி
சிலைஇவை ஏந்திய எண்தோள்
சிவற்கு மனஞ்சொற்செய்கை
நிலைபிழை யாதுகுற் றேவல்செய்
தார்நின்ற மேருஎன்னும்
மலைபிழை யார்என்ப ரால்அறிந்
தோர்கள்இம் மாநிலத்தே.
தெளிவுரை : எட்டுத் திருக்கரங்களிலும் ஏந்தும் எட்டுப் பொருள்களைக் கூறினார்.
கலைமான், பிரமனது தலை, சூலம், மழுவாகிய கனல், வீரக்கழல் யோக தண்டம், கொடி,
பிளாகம் என்னும் வில் என்னும் இனை எட்டையும் ஏந்திய எட்டுத் தோள்களையுடைய
சிவபிரானுக்கு, மனம் வாக்கு காயம் என்னும் மூன்று நிலைகளிலும் பிழையாமல்
சிறுதொண்டு செய்தார் மேருமலைக்கு ஒப்பாவர்; பிழை செய்ய மாட்டார்கள் என்று
அறிந்தோர்கள் இம்மாநிலத்தில் சொல்வார்கள்.
-
மாநிலத் தோர்கட்குத் தேவர்
அனையஅத் தேவர்எல்லாம்
ஆனலத் தால்தொழும் அஞ்சடை
ஈசன் அவன்பெருமை
தேனலர்த் தாமரை யோன்திரு
மாலவர் தேர்ந்துணரார்
பானலத் தாற்கவி யாமெங்ங
னேஇனிப் பாடுவதே.
தெளிவுரை : மாநிலத்தோர்கட்குத் தேவர் ஒப்பாவர். அத்தேவர்கள் எல்லாம் பசுவிடத்தே
பெறும் நல்ல பொருள்களைக் கொண்டு தொழும் அழகிய சடையை உடையவன் ஈசன். அவன் பெருமையை,
நான்முகனும் திருமாலும் தேர்ந்துணராதவர்கள். இலக்கணம் அமைந்த நல்ல பாடலால் யாம்
எவ்வாறு அவன் புகழை இனிப் பாடுவது?
-
பாடிய வண்டுறை கொன்றையி
னான்படப் பாம்புயிர்ப்ப
ஓடிய தீயால் உருகிய
திங்களின் ஊறல்ஒத்த(து)
ஆடிய நீறது கங்கையும்
தெண்ணீர் யமுனையுமே
கூடிய கோப்பொத்த தால்உமை
பாகம்எம் கொற்றவற்கே.
தெளிவுரை : நீற்றினால் வெண்ணிறம் பெற்ற பெருமான் மேனி கங்கையையும், உமாதேவியாரின்
நீலத்திருமேனி யமுனையையும் ஒத்தன என்கிறார்.
ரீங்காரம் செய்கின்ற வண்டுகள் நிறைந்த கொன்றை மாலையையுடைய பெருமான், படத்தை உடைய
பாம்பு பெருமூச்சுவிட குலைந்த தீயால் உருகிய சந்திரனின் கசிவு நீர் கலப்பையை
ஒத்திருக்கின்றது. பூசிய வெண்ணீறு கங்கையையும் உமையின் திருமேனி தெளிந்த
யமுனையையும் ஒத்திருக்கின்றன.
-
கொற்றவ னேஎன்றும் கோவணத்
தாய்என்றும் மாவணத்தால்
நற்றவ னேஎன்றும் நஞ்சுண்டி
யேஎன்றும் அஞ்சமைக்கப்
பெற்றவ னேஎன்றும் பிஞ்ஞக
னேஎன்றும் மன்மதனைச்
செற்றவ னேஎன்றும் நாளும்
பரவும்என் சிந்தனையே.
தெளிவுரை : வெற்றியாளனே என்றும், கோவணம் அணிந்தவனே என்றும், மாவணத்தால் நற்றவனே
என்றும், விடத்தை அருந்தியவனே என்றும், ஐந்தொழில்களையும் செய்ய வல்லவன் என்றும்,
சிவனே என்றும், மன்மதனை எரித்தவனே என்றும், நாள்தோறும் என் சிந்தனை
துதிக்கின்றது.
ஆவணம் என்று பாடம் கொண்டு அடையாளம் என்று பொருள் கூறுவர். அஞ்சு அமைக்கப்
பெற்றவன் என்பதற்குப் புலன் ஐந்தும் வென்றவன் என்றும் பொருள் கூறுவர்.
-
சிந்தனை செய்ய மனம்அமைத்
தேன்செப்ப நாஅமைத்தேன்
வந்தனை செய்யத் தலைஅமைத்
தேன்கை தொழஅமைத்தேன்
பந்தனை செய்வதற்(கு) அன்பமைத்
தேன்மெய் அரும்பவைத்தேன்
வெந்தவெண் ணீறணி ஈசற்(கு)
இவையான் விதித்தனவே.
தெளிவுரை : சிந்தனை செய்வதற்கு மனத்தை அமைத்தேன். துதிப் பாடல்களைப் பாட நாக்கை
அமைத்தேன். வழிபாடு செய்யத் தலையை அமைத்தேன். வணங்குவதற்குக் கையை அமைத்தேன்.
உள்ளத்தில் கட்டுவதற்கு அன்பை அமைத்தேன். அரும்புவதற்கு உடம்பை வைத்தேன். சுட்ட
வெண்ணீற்றை அணியும் ஈசற்கு இவை யான் விதித்தனவாம்.
-
விதித்தன வாழ்நாள் பெரும்பிணி
விச்சைகள் கொண்டுபண்டே
கொதிப்பினில் ஒன்றும் குறைவில்லை
குங்குமக் குன்றனைய
பதித்தனம் கண்டனம் குன்றம்வெண்
சந்தனம் பட்டனைய
மதித்தனம் கண்டனம் நெஞ்சினி
என்செய்யும் வஞ்சனையே.
தெளிவுரை : வாழ்நாளும் பெரும் பிணியும் நான்முகனால் விதிக்கப்பட்டன. வித்தைகளைக்
கூறும் நூல்களைக் கொண்டு முன்பே வருத்தத்திற்கு ஒன்றும் குறைவு இல்லை. குங்குமக்
குன்று அளவு தீங்கு இழைத்தனம். கயிலாய மலையைக் கண்டனம். வெண் சந்தனம் பட்டு அனைய
மதித்தனம். நெஞ்சமே, இனி என்ன வஞ்சனையைச் செய்யப் போகிறாய்?
-
வஞ்சனை யாலே வரிவளை
கொண்டுள்ள மால்பனிப்பத்
துஞ்சும் பொழுதும் உறத்தொழு
தேன்சொரி மால்அருவி
அஞ்சன மால்வரை வெண்பிறை
கவ்விஅண் ணாந்தனைய
வெஞ்சின ஆனையின் ஈருரி
மூடிய வீரனையே.
தெளிவுரை : வஞ்சனையால் வளைகளைக் கொண்டு மயக்கம் நீங்குமாறு தூங்கும் பொழுதும்
பொருந்துமாறு வணங்கினேன். பெரிய அருவி நீர் சொரிகின்ற பெரிய நீல மலை, வெண்பிறை
கவ்வி மல்லாந்தது போலக் கோபம் மிகுந்த யானையின் உரித்த தோலைப் போர்த்துக்
கொண்டுள்ள ஈசனை வணங்கினேன் என முடிக்க. யானையின் வருணனை, பாட்டின் பிற்பகுதியில்
கூறப்பட்டுள்ளது.
-
வீரன் அயன்அரி வெற்பலர்
நீர்எரி பொன்எழிலார்
காரொண் கடுக்கை கமலம்
துழாய்விடை தொல்பறவை
பேர்ஒண் பதிநிறம் தார்இவர்
ஊர்திவெவ் வேறென்பரால்
யாரும் அறியா வகைஎங்கள்
ஈசர் பரிசுகளே.
தெளிவுரை : திரிமூர்த்திகளும் இறைவனே என்றபடி. இவர்களின் பெயர்: பதி, நிறம்,
தார், ஊர்தி நிரல்படக் கூறப்பட்டுள்ளன. சிவபெருமானது பதி கைலைமலை நிறம் தீ; தார்
கொன்றை; ஊர்தி விடை.
-
பரியா தனவந்த பாவமும்
பற்றும்மற் றும்பணிந்தார்க்(கு)
உரியான் எனச்சொல்லி உன்னுடன்
ஆவன் எனஅடியார்க்(கு)
அரியான் இவன்என்று காட்டுவன்
என்றென்(று) இவைஇவையே
பிரியா(து) உறையும் சடையான்
அடிக்கென்றும் பேசுதுமே.
தெளிவுரை : ஒழியாதனவாகி வந்த பாவமும் பற்றும் அன்றித் தொழுதவர்களுக்கு உரியவன்
என்றும் சொல்லி உன்னுடன் கலந்திருப்பன் என்று சொல்லுபவன். அடியார்களால் அடைய
முடியாதவன் என்று காட்டுவேன். என்றாலும் இவன் இவைகளிலிருந்து பிரியாமல் உறைபவன்.
அவன்தான் சடாபாரத்தை உடைய சிவபெருமான்.
-
பேசுவ(து) எல்லாம் அரன்திரு
நாமம்அப் பேதைநல்லாள்
காய்சின வேட்கை அரன்பா
லதுஅறு காற்பறவை
மூசின கொன்றை முடிமே
லதுமுலை மேல்முயங்கப்
பூசின சாந்தம் தொழுமால்
இவைஒன்றும் பொய்யலவே.
தெளிவுரை : அப் பேதை நல்லாள் பேசுவது எல்லாம் அரன் திருநாமமே. அவளை வருத்துகிற
அவா அரன் பாலது. ஆறு கால்களையடைய வண்டுகள் நெருங்கியுள்ள கொன்றை மலர் அவள் முடி
மேலது. முலைகள் மேல் பூசப்பட்டிருப்பது அவனது சந்தனமே. அவள் அவனையே தொழுவாள். இவை
எதுவும் பொய்யல்ல.
-
பொய்யா நரகம் புகினும்
துறக்கம் புகினும்புக்கிங்(கு)
உய்யா உடம்பினோ(டு) ஊர்வ
நடப்ப பறப்பஎன்று
நையா விளியினும் நானிலம்
ஆளினும் நான்மறைசேர்
மையார் மிடற்றான் அடிமற
வாவரம் வேண்டுவனே.
தெளிவுரை : தவறுதல் இல்லாத நரகம் புகுந்தாலும், துறக்கம் புகுந்தாலும் மீண்டும்
இங்கு வந்து உடம்போடு கூடி ஊர்வன, நடப்பன, பறப்பன என்று பல பிறவிகளை எடுத்து
வருத்தமுற்று இறந்தாலும், இவ்வுலகை ஆட்சி செய்தாலும் நான்கு வேதங்களும்
துதிக்கின்ற நீல கண்டனது பாதங்களை மறவாத வரத்தை வேண்டுவேன்.
-
வேண்டிய நாள்களில் பாதியும்
கங்குல் மிகஅவற்றுள்
ஈண்டிய வெந்நோய் முதலது
பிள்ளைமை மேலதுமூப்(பு)
ஆண்டின அச்சம் வெகுளி
அவாஅழுக் கா(று)இங்ஙனே
மாண்டன சேர்தும் வளர்புன்
சடைமுக்கண் மாயனையே.
தெளிவுரை : நமக்காக வரையறை செய்யப்பட்ட வாழ்நாளில் பாதி இரவில் தூங்கிக் கழியும்.
எஞ்சியுள்ள சேர்ந்துள்ள கொடிய நோய்கள் வருத்தும். ஆரம்ப நாட்களில் பிள்ளைப்
பருவமும் அதன் பின்னர் வயோதிகமும், அச்சமும் வெகுளியும் அவாவும் பொறாமையும்
என்னும் இவற்றோடு இறப்பும் வரும். ஆகையால் வளர்கின்ற புன்சடையானும் மாயையைத்
தன்னிடம் கொண்டுள்ளவனுமான இறைவனைச் சேர்வோமாக.
-
மாயன்நன் மாமணி கண்டன்
வளர்சடை யாற்(கு)அடிமை
ஆயின தொண்டர் துறக்கம்
பெறுவது சொல்லுடைத்தே
காய்சின ஆனை வளரும்
கனக மலையருகே
போயின காக்கையும் அன்றே
படைத்தது பொன்வண்ணமே.
தெளிவுரை : மாயங்களில் வல்லவனும் நீலகண்டனும் வளர்கின்ற சடையை உடையவனுக்கு
அடிமையானவர்கள் துறக்கம் பெறுவது சொல்ல வேண்டிய அவசியமும் உள்ளதோ? மிக்க கோபமுள்ள
யானை வளரும் பொன் மலையைச் சார்ந்த காக்கையும் பொன்னிறம் பெற்றது என்க.
-
அன்றுவெள் ளானையின் மீதிமை
யோர்சுற் றணுகுறச்செல்
வன்தொண்டர் பின்பரி மேற்கொண்டு
வெள்ளி மலையரன்முன்
சென்றெழில் ஆதி உலாஅரங்
கேற்றிய சேரர்பிரான்
மன்றிடை ஓதுபொன் வண்ணத்
தந்தாதி வழங்கிதுவே.
தெளிவுரை : முன்பு வெள்ளை யானையின் மீது தேவர்கள் சூழ்ந்து வரச் சென்ற சுந்தரர்,
பின்னால் குதிரையின் மீது கயிலை மலையை அடைந்து அழகுடைய திருக்கயிலாய ஞான உலாவை
அரங்கேற்றிய சேரமான்பெருமாள் நாயனார் ஓதிய பொன் வண்ணத்தந்தாதி இதுவாகும்.
திருச்சிற்றம்பலம்
-
திருவாரூர்மும்மணிக்கோவை
( சேரமான்பெருமாள்நாயனார்அருளிச்செய்தது )
மும்மணிக் கோவை என்பது அகவல், வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் மூவகைப்
பாடல்களையும் வகைக்குப் பத்து விழுக்காடு கொண்டு பாடப்பட்டதாகும். இம் மும்மணிக்
கோவை திருவாரூரில் எழுந்தருளிய இறைவன் மீது பாடப்பட்டபடியால் திருவாரூர்
மும்மணிக் கோவை என்னும் பெயருடையதாயிற்று. சேரமான் பெருமாள் இந்நூலை இயற்றித்
திருவாரூர்ப் பூங்கோயிலில் சுந்தரர் தலைமையில் அரங்கேற்றம் செய்தருளினார்.
விண்ணகக் கங்கைப் பெரு வெள்ளத்தை அடக்கியது, அதனைச் சடையிற் சேர்த்தது, தேயுந்
திங்களையணிந்து காத்தது, நஞ்சினை உண்டு, தேவர்களை உய்வித்தது, மேருமலையை வில்லாக
வளைத்தது, முப்புரத்தை எரித்தது, தக்கன் வேள்வியை அழித்தது. கூற்றை அடக்கியது
காமனை எரித்தது, ஆனையை உரித்துப் போர்த்தது, அருச்சுனனுக்கு அருள் செய்தது முதலிய
செய்திகளும் பிறவும் இந்நூலிற் கூறப் பெறுகின்றன.
திருச்சிற்றம்பலம்
அகவல்
இவள் கார்காலத்துத் தன்மைகளை எல்லாம் காட்டினாள். இது தலைவியின் நிலை கண்ட தோழி
வருந்திக் கூறியது.
-
விரிகடல் பருகி அளறுபட் டன்ன
கருநிற மேகம் கல்முக டேறி
நுண்துளி பொழிய நோக்கி ஒண்தொடி
பொலங்குழை மின்னப் புருவ வில்லிட்டு
இலங்கெழிற் செவ்வாய்க் கோபம் ஊர்தரக்
தெளிவுரை : விரிவான கடல் குழைசேறு ஆனாற்போல அதிலுள்ள நீரைப் பருகி, கருமையான
நிறமுள்ள மேகமானது மலையின் உச்சிக்குச் சென்று, மழை பொழிவதைக் கண்ட ஒளி பொருந்திய
வளையலை அணிந்த தலைவியின் பின்னிய சடை மின்ன புருவம் வில்லைப் போல் வளைந்து, அழகிய
செவ்வாய் இந்திர கோபப் பூச்சி போல செந்நிறம் அடைய
கைத்தலம் என்னும் காந்தள் மலர
முத்திலங்(கு) எயிறெனும் முல்லை யரும்பக்
குழலும் சுணங்கும் கொன்றை காட்ட
எழிலுடைச் சாயல் இளமயில் படைப்ப
உள்நிறை உயிர்ப்பெனும் ஊதை ஊர்தரக்
தெளிவுரை : கைகள் காந்தள் மலர் வகை போலவும் முத்துப் போல் விளங்கும் பல் முல்லை
அரும்புவதைப் போலவும் (பின்னிய சடை கொன்றைப்பழம் போலவும் சுணங்கு கொன்றை மலரைப்
போலவும் விளங்க), அழகிய சாயல் இளமயில் போலவும் உள்ளிருந்து வரும் பெருமூச்சு
ஊதைக் காற்றைப் போலவும் - (சுணங்கு-பசலை) ஊதை - வாடைக் காற்று.
கண்ணீர்ப் பெருமழை பொழிதலின் ஒண்ணிறத்(து)
அஞ்சனக் கொழுஞ்சே(று) அலம்பி எஞ்சா
மணியும் பொன்னும் மாசறு வயிரமும்
அணிகிளர் அகிலும் ஆரமும் உரிஞ்சிக்
கொங்கை என்னும் குவட்டிடை இழிதரப்
தெளிவுரை : கண்ணீர் பெருமழை போலப் பெய்தலினால் கண்களில் பூசிய மை கரைந்து,
சேறாகி, வழிந்து மணி, பொன், வயிரம், அகில், ஆரம் இவைகளை நனைத்து முலையின் மீது
இறங்கி வர
பொங்குபுயல் காட்டி யோளே கங்கை
வருவிசை தவிர்த்த வார்சடைக் கடவுள்
அரிவை பாகத்(து) அண்ணல் ஆரூர்
எல்லையில் இரும்பலி சொரியும்
கல்லோ சென்ற காதலர் மனமே.
தெளிவுரை : பொங்குகின்ற புயலைக் காட்டியவளே, கங்கையின் வேகத்தைத் தவிர்த்த
சிவபெருமான் கோயில் கொண்டிருக்கும் திருவாரூர் எல்லையில் நம்மை விட்டுச் சென்ற
தலைவரின் மனம் கல்லோ! கார்காலத்தில் திரும்பி வருவதாகச் சொல்லிச் சென்ற தலைவர்
கார் காலம் வந்த பிறகும் வரவில்லையே என்கிறாள்.
வெண்பா
-
மனமால் உறாதே மற்றென்செய் யும்வாய்ந்த
கனமால் விடையுடையோன் கண்டத்(து)-இனமாகித்
தோன்றினகார் தோன்றிலதேர்; சோர்ந்தனசங்(கு) ஊர்ந்தனபீர்
கான்றனநீர் ஏந்திழையாள் கண்.
தெளிவுரை : மனம் மயக்கம் அடையாமல் வேறு என்ன செய்யும்? மிகப் பெரிய காளையை
உடையவன் நீல கண்டத்துக்கு ஒப்பாகி மேகங்கள் தோன்றின. தலைவனது தேர் இன்னும்
வரவில்லை. கைவளைகள் கழன்றன. பசலை படர்ந்தது. தலைவியின் கண்களிலிருந்து கண்ணீர்
வடிந்தது.
கட்டளைக் கலித் துறை
-
கண்ணார் நுதலெந்தை காமரு
கண்ட மெனஇருண்ட
விண்ணால் உருமொடு மேலது
கீழது கொண்டல்விண்ட
மண்ணார் மலைமேல் இளமயி
லால்மட மான்அனைய
பெண்ணாம் இவள்இனி என்னாய்க்
கழியும் பிரிந்துறைவே.
தெளிவுரை : நெற்றியில் கண்ணை உடைய சிவபெருமானது அழகிய கழுத்தைப் போல
விண்ணிடத்தில் இருண்ட மேகம் இடிக்கின்ற இடியுடன் மலைமேல் மழை பொழிய, மடப்பம்
பொருந்திய மடமான் போன்ற இவளது பிரிவு வாழ்க்கை எங்ஙனம் கழியும்? பிரிவுத் துயரால்
துன்புறுவாள் என்றபடி.
அகவல்
துணைவனின் பிரிவுக் காலத்தில் பருவங் கண்ட தலைவி வருந்திக் கூறியது.
-
உறைகழி ஒள்வாள் மின்னி உருமெனும்
அறைகுரல் முரசம் ஆர்ப்பக் கைபோய்
வெஞ்சிலை கோலி விரிதுளி என்னும்
மின்கரந் துரந்தது வானே நிலனே
கடிய வாகிய களவநன் மலரொடு
தெளிவுரை : உறையிலிருந்து வெளியே எடுத்த ஒளி பொருந்திய வாளைப் போல மின்னி,
இடியோசை முரசம் போல் ஒலி செய்ய, வல்லமையுடையதாகி இந்திர வில்லை வளைத்து விரிந்த
மழையென்னும் ஒளியுடைய அம்பு பெய்தது. வானத்திலும் நிலத்திலும் மணமுடைய களவ மலரோடு
கொடிய வாகிய தளவமும் அந்தண்
குலைமேம் பட்ட கோடலும் கோபமோடு
அலைமேம் பட்ட காந்தளும் இவற்றொடு
காயா வெந்துயர் தருமேல் அவரே
பொங்கிரும் புரிசை போக்கற வளைஇக்
தெளிவுரை : கொடியில் தோன்றுவதாகிய முல்லை மலரும், குளிர்ந்த குலையாகவுள்ள வெண்
காந்தளும் இந்திர கோபம் என்றும் பூச்சியும், காந்தளும் காயா மலரும் வெந்துயர்
தரும். தலைவர் பெரிய மதிலைச் சூழ்ந்து
கங்குலும் பகலும் காவில் மேவி
மாசறு வேந்தன் பாசறை யோரே
யானே இன்னே
அலகி லாற்றல் அருச்சுனற்(கு) அஞ்ஞான்று
உலவா நல்வரம் அருளிய உத்தமன்
தெளிவுரை : இரவும் பகலும் புறஞ்சோலையில் பொருந்திய குற்றமற்ற பாசறையில் உள்ளார்.
யானே இப்போதே எல்லையற்ற ஆற்றல் படைத்த அருச்சுனனுக்கு அப்போது அழியாத நல்ல வரத்தை
அருளிய உத்தமனது
அந்தண் ஆரூர் சிந்தித்து மகிழா
மயரிய மாக்களைப் போலத்
துயருழந்(து) அழியக் கண்துயி லாவே.
தெளிவுரை : குளிர்ந்த திருவாரூரைச் சிந்தித்து மகிழாத மயக்கங் கொண்டவர்களைப்
போலத் துன்ப முற்று அழியக் கண்கள் உறக்கங் கொள்ளவில்லை என்பதாம்.
வெண்பா
-
துயிலாநோய் யாம்தோன்றத்தீத் தோன்ற
மயிலால வந்ததால் மாதோ - அயலாய
அண்டத்துக்(கு) அப்பாலான் அந்திங்கட் கண்ணியான்
கண்டத்துக்(கு) ஒப்பாய கார்.
தெளிவுரை : இது கார் கால வருணனை.
தூங்காத நோயின்கண் யாம் வருந்த செங்காந்தள் மலர் தோன்ற, மயிலாட வந்தது.
நிலவுலகத்திற்கு அப்பாற்பட்ட அண்டத்துக்கும் அப்பால் உள்ளவனும் பிறைச்சந்திரனைத்
தலையில் அணிந்தவனுமாகிய எம்பெருமானது கழுத்துக்கு ஒப்பாய கருமேகம். கருமேகம்
வந்தது என்க.
கட்டளைக் கலித் துறை
-
காரும் முழக்கொடு மின்னொடு
வந்தது காதலர்தம்
தேருந் தெருவும் சிலம்பப்
புகுந்தது சில்வளைகள்
சோருஞ் சிலபல அங்கே
நெரிந்தன துன்னருநஞ்
சாரும் மிடற்றண்ணல் ஆரூர்
அனைய அணங்கினுக்கே.
தெளிவுரை : முகிலும் ஆரவாரத்தோடும் மின்னலோடும் வந்தது. காதலருடைய தேரும்,
தெருவில் ஒலி செய்து கொண்டு புகுந்தது. சிலவாகிய வளைகள் சோர்ந்தன. சில பல அங்கே
உடைந்தன. நெருங்குதற்கரிய நஞ்சையுண்ட நீலகண்டனது திருவாரூரைப் போன்ற சிறப்புடைய
தலைவிக்கு என்றவாறு. தலைவி மகிழ்ந்தாள் என்க.
அகவல்
வரும் வழியிடையே உண்டாகும் இடையூற்றுக்கு அஞ்சினாள் தலைவி என்று தோழி தலை
மகனுக்குக் கூறியது.
-
அணங்குறை நெடுவரை அருமைபே ணாது
மணங்கமழ் தெரியல் சூடி வைகலும்
விடுசுடர் நெடுவேல் முன்னடி விளக்காக்
கடுவிசைக் கான்யாற்று நெடுநீர் நீந்தி
ஒருதனி பெயரும் பொழுதிற் புரிகுழல்
தெளிவுரை : தீண்டி வருத்தும் தெய்வம் உறையும் பெரிய மலையின் அருமையைப்
பாராட்டாமல், மணம் வீசுகின்ற மாலையைச் சூடி நாள்தோறும் ஒளிபொருந்திய வேலை
விளக்காகக் கொண்டு விரைந்து செல்லும் காட்டாற்றின் நீரில் நீந்தி வருங்காலத்தில்
புரிகுழலை உடைய
வானர மகளிர்நின் மல்வழங்(கு) அகலத்(து)
ஆனாக் காதல் ஆகுவர் என்று
புலவி உள்ளமொடு பொருந்தாக் கண்ணள்
கலைபிணை திரியக் கையறவு எய்தி
மெல்விரல் நெரித்து விம்மி வெய்துயிர்த்து
தெளிவுரை : தெய்வப் பெண்கள் உன்னுடைய வலிமை பொருந்திய மார்பைக் கண்டு குறையாத
காதல் கொள்வர் என்று ஊடல் கொண்டு உறங்காத கண்ணையுடையவள். ஆண் மானோடு பெண் மான்
மகிழ்ந்து விளையாடச் செயல் ஒழிந்து, கைவிரல்களை நெரித்து விம்மிப் பெருமூச்சு
விட்டு (கோதை - மலர் மாலை)
அல்லியங் கோதை அழலற் றாஅங்கு
எல்லையில் இருந்துயர் எய்தினள் புல்லார்
திரிபுரம் எரிய ஒருகணை தெரிந்த
அரிவை பாகத்(து) அண்ணல் ஆரூர்
வளமலி கமல வாள்முகத்(து)
இளமயிற் சாயல் ஏந்திழை தானே.
தெளிவுரை : அல்லியங் கோதை தீயல் விழுந்தாற் போன்று எல்லையற்ற துயர் எய்தினள்.
பகைவரது திரிபுரங்கள் எரிய ஒரு கணை விடுத்தவனும் உமாதேவியாரை இடப் பக்கத்தில்
கொண்டவனுமாகிய இறைவனது திருவாரூரில், தாமரை மலரைப் போல் ஒளியமைந்த முகத்தையும்
மயிலன்ன சாயலையும் உடைய தலைவி துயர் எய்தினள் என்க.
வெண்பா
-
இழையார் வனமுலை ஈர்ந்தண் புனத்தில்
உழையாகப் போந்ததொன்(று) உண்டே - பிழையாச்சீர்
அம்மான் அனலாடி ஆரூர்க்கோன் அன்றுரித்த
கைம்மானேர் அன்ன களிறு.
தெளிவுரை : (கெடுதி வினவிப் புக்க தலை மகன் கூறியது) அணிகலன்களை உடைய வன முலையீர்
! மிகுந்த குளிர்ச்சி பொருந்திய இவ்வனத்தில், சீர் பிழையாத அம்மானும் அனலாடியும்
திருவாரூர் இறைவனுமாகிய எங்கோன் முன்பு உரித்த யானையைப் போன்ற களிறு ஒன்று இப்
பக்கமாக வந்ததா?
கட்டளைக் கலித் துறை
-
களிறு வழங்க வழங்கா
அதர்கதிர் வேல்துணையா
வெளிறு விரவ வருதிகண்
டாய்விண்ணின் நின்றிழிந்து
பிளிறு குரற்கங்கை தாங்கிய
பிஞ்சகன் பூங்கழல்மாட்(டு)
ஒளிறு மணிக்கொடும் பூணிமை
யோர்செல்லும் ஓங்கிருளே.
தெளிவுரை : (தோழி தலைமகனை இரவில் வரவேண்டாம் என்றல்)
யானை திரிதலால் போக்குவரவு இல்லாத வழியில் வேலைத் துணையாகக் கொண்டு வெளிச்சம் வீச
வர வேண்டாம். ஆகாயத்திலிருந்து இறங்கிய உரத்த குரலைக் கொண்ட கங்கையைத் தாங்கிய
சிவபெருமான் பூங்கழல் மாட்டு ஒளிரும் மணிக் கொடும் பூண் இமையோர் செல்லும்
ஓங்கிருளில் வர வேண்டாம் என்றபடி.
வருதி என்பதற்கு வருக என்று சிலர் பொருள் கொண்டனர்.
அகவல்
(இது தோழி கூற்று. தலைவனுடன் அளவளாகிய தலைவி பெற்ற வேறுபாடுகளைச் சொல்கிறாள்.)
-
இருள்புரி கூந்தலும் எழில்நலம் சிதைந்தது
மருள்புரி வண்டறை மாலையும் பரிந்தது
ஒண்ணுதல் திலகமும் அழிந்தது கண்ணும்
மைந்நிறம் ஒழிந்து செந்நிறம் எய்தி
உள்ளறி கொடுமை உரைப்ப போன்றன
தெளிவுரை : கூந்தல் எழில் நலம் சிதைந்தது. வண்டு முரலும் மாலையும் நிலையழிந்தது.
நெற்றித் திலகமும் அழிந்தது. கண்ணும் கருநிறம் ஒழிந்து செந்நிறம் எய்தியது. இவை
வாய்விட்டுச் சொல்வது போல் உள்ளன.
சேதகம் பரந்தது செவ்வாய் மேதகு
குழைகெழு திருமுகம் வியப்புள் உறுத்தி
இழைகெழு கொங்கையும் இன்சாந்(து) அழீஇக்
கலையுந் துகிலும் நிலையிற் கலங்கி
என்னிது விளைந்த வாறென மற்றிஃது
தெளிவுரை : வாய் விளத்தற் சிவப்புற்றது. சிறந்த குழையணிந்த திருமுகம் வியப்புள்
ஆழ்ந்தது. கொங்கை மீதிருந்த சாந்து அழிந்தது. கலையும் துகிலும் நிலையில் கலங்கின.
கூந்தல் நலம் சிதைத்தல் முதலியன புணர்ச்சியினால் உண்டாகிய வேறுபாடுகள்.
அன்னதும் அறிகிலம் யாமே செறிபொழில்
அருகுடை ஆரூர் அமர்துறை அமுதன்
முருகுவிரி தெரியல் முக்கண் மூர்த்தி
மராமரச் சோலை சிராமலைச் சாரல்
சுரும்பிவர் நறும்போது கொய்யப்
பெருஞ்செறி வனத்தில்யான் பிரிந்ததிப் பொழுதே.
தெளிவுரை : செறித்த பொழில்களையுடைய திருவாரூரில் கோயில் கொண்டுள்ள அமுதம்
போன்றவன். மணம் வீசும் மாலை அணிந்தவன். மூன்று கண்களையுடையவனது மராமரச் சோலை
சிராமலைச் சோலையில் மலர் கொய்யச் சென்ற வனத்தில் நான் பிரிந்த போது நடந்தது இது
என்றவாறு.
வெண்பா
-
பொழுது கழிந்தாலும் பூம்புனங்காத்(து) எள்கி
எழுது கொடியிடையாய் ஏகான் - தொழுதமரர்
முன்னஞ்சேர் மொய்கழலான் முக்கணான் நான்மறையான்
மன்னுஞ்சேய் போலொருவன் வந்து.
தெளிவுரை : பொழுது போனாலும் அழகிய புனத்தைக் காவல் செய்து வருந்தினாலும்
சித்திரம் போன்ற கொடி இடையை உடையாய்! முன்பு தேவர்கள் வழிபட்டு அடைந்த வீரக் கழல்
அணிந்த மூன்று கண்களையுடைய நான்மறையாளனின் மகனாகிய முருகன் போல் வந்து போக
மாட்டான். இது தோழி கூற்று.
கட்டளைக் கலித் துறை
-
வந்தார் எதிர்சென்று நின்றேன்
கிடந்தவண் தார்தழைகள்
தந்தார் அவையொன்றும் மாற்றகில்
லேன்தக்கன் வேள்விசெற்ற
செந்தா மரைவண்ணன் தீர்த்தச்
சடையன் சிராமலைவாய்க்
கொந்தார் பொழிலணி நந்தா
வனஞ்சூழ் குளிர்புனத்தே.
தெளிவுரை : தக்கனது வேள்வியை அழித்த, செந்தாமரை மலர் போன்ற நிறத்தையுடைய,
கங்கையைச் சடையில் அணிந்தவன் சிராமலை இடத்தில் சோலைகள் நிறைந்த நந்தவனம் சூழ்ந்த
குளிர் புனத்தில், தலைவர் வந்தார். எதிர் சென்று நின்றேன். அங்கு அவர்
தழையினாலாகிய ஆடையைக் கொடுத்தார். அதை என்னால் மறுக்க முடியவில்லை.
அகவல்
தலைமகள் தலைமகனுடன் சென்றாளாக செவிலி கவன்று கூறியது.
-
புனமயில் சாயல் பூங்குழல் மடந்தை
மனைமலி செல்வம் மகிழா ளாகி
ஏதிலன் ஒருவன் காதல னாக
விடுசுடர் நடுவுநின்(று) அடுதலின் நிழலும்
அடியகத்(து) ஒளிக்கும் ஆரழற் கானத்து
தெளிவுரை : மயில் போன்ற சாயலையுடைய பூங்குழல் மடந்தை இல்லத்தில் மிகுதியாகப்
பொருந்தியுள்ள செல்வத்தைக் கண்டு மகிழாமல், அயலான் ஒருவனைக் காதலனாகக் கொண்டு
சூரிய வெப்பம் எரிக்கின்ற காட்டில்
வெவ்வினை வேடர் துடிக்குரல் வெரீஇ
மெய்விதிர் எறியும் செவ்வித் தாகி
முள்ளிலை ஈந்தும் முளிதாள் இலவமும்
வெள்ளிலும் பரந்த வெள்ளிடை மருங்கில்
கடுங்குரல் கதநாய் நெடுந்தொடர் பிணித்துப்
தெளிவுரை : வேடவர்களுடைய உடுக்கை ஒலி நடுக்கத்தைச் செய்ய உலர்ந்த ஈந்து, இலவம்
விளா மரங்களில் நாய்களைப் பிணித்து
பாசந் தின்ற தேய்கால் உம்பர்
மரையதள் மேய்ந்த மயிர்ப்புன் குரம்பை
விரிநரைக் கூந்தல் வெள்வாய் மறத்தியர்
விருந்தா யினள்கொல் தானே திருந்தாக்
கூற்றெனப் பெயரிய கொடுந்தொழில் ஒருவன்
தெளிவுரை : மான் தோல் வேய்ந்த சிறு குடிலில் விரிந்த நரைக் கூந்தலையும் வெற்றிலை
போடாத வெள்வாயையுடைய மறத்தியருக்கு விருந்தாயினாள். பாலை நிலத்தில் போற்றுவார்
வேறு எவரும் இன்மையால், மறத்தியரால் போற்றப்பட்டாள் என்க. எமனது ஆற்றலை அழித்த
ஒப்பற்றவன்
ஆற்றல் செற்ற அண்ணல் ஆரூர்ச்
செய்வளர் கமலச் சீறடிக்
கொவ்வைச் செவ்வாய்க் குயில்மொழிக் கொடியே.
தெளிவுரை : பெருமையிற் சிறந்தவன். அவனுடைய திருவாரூர் வயலில் வளர்கின்ற கமல மலர்
போன்ற சீறடிகளையும் கொவ்வைச் செவ்வாயையும் குயில் போன்ற மொழியையும் உடைய தலைவி
(சென்றனள் என்க) மறத்தியர்க்கு விருந்தாயினள் என முடிக்க.
வெண்பா
-
கொடியேர் நுடங்கிடையாள் கொய்தாரான் பின்னே
அடியால் நடந்தடைந்தாள் ஆக - பொடியாக
நண்ணாரூர் மூன்றெரித்த நாகஞ்சேர் திண்சிலையான்
தண்ணாரூர் சூழ்ந்த தடம்.
தெளிவுரை : செவிலி, தன் மகள் ஆரூரை இனிது சென்று அடைவாளாக என்று வாழ்த்துகிறாள்.
கொடியைப் போல் அழகாக அசைகின்ற இடையை உடையவள் மாலை அணிந்த தலைவன் பின்னே நடந்து
சென்றாள். பகைவர்களது திரிபுரங்களை எரித்த மேரு மலையை வில்லாகவுடையவனது குளிர்ந்த
திருவாரூரைச் சென்று அடைவாளாக.
கட்டளைக் கலித் துறை
-
தடப்பாற் புனற்சடைச் சங்கரன்
தண்மதி போல்முகத்து
மடப்பால் மடந்தை மலரணைச்
சேக்கையில் பாசம்பிரீஇ
இடப்பால் திரியில் வெருவும்
இருஞ்சுரம் சென்றனளால்
படப்பா லனவல்ல வால்தமி
யேன்தையல் பட்டனவே.
தெளிவுரை : பெருந் தடத்தின் தன்மை கொண்ட பெரிய நீராகிய கங்கையைச் சடையில் உடைய
சங்கரன் அணிந்துள்ள சந்திரனைப் போன்ற முகத்தையுடைய பேதைமைப் பகுதியையுடைய பெண்
மலரணையாகிய படுக்கையில் பிணைப்புப் பிரிந்து இடப்பால் திரும்பினால் அஞ்சுவாள்.
அத்தகையவள் கொடிய பாலையில் சென்றனள். பட்ட துன்பங்கள் அவள் படுந்தன்மையுடையன
அல்ல. (படுக்கையில் நான் கட்டிக் கொள்வதை விட்டு இடப்பக்கத்தில் திரும்பிப்
படுத்தால் அஞ்சுவாள் என்று செவிலி கூறினாள் என்க)
அகவல்இதுசெவிலிகூறுதல்.
-
பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி
நட்ட கல்லும் மூதூர் நத்தமும்
பரல்முரம்(பு) அதரும் அல்லது படுமழை
வரன்முறை அறியா வல்வெயிற் கானத்துத்
தேனிவர் கோதை செல்ல மானினம்
தெளிவுரை : போரில் பொருது இறந்தோர் பெயரும் ஆற்றலும் எழுதி நட்ட கல்லும் வீரக்
கல்லும் பழைய ஊர் இருந்து அழிந்து போன இடமும், பருக்கைக் கற்களையுடைய மேட்டு
நிலத்திலுள்ள வழியும் அல்லது மழை பெய்யாத வறண்ட நிலத்தில் இவள் செல்ல மானினம்
அஞ்சில் ஓதி நோக்கிற் கழிந்து
நெஞ்செரி வுடைமையின் விலக்காது விடுக
கொங்கைக் கழிந்து குன்றிடை அடைந்த
கொங்கிவர் கோங்கமும் செலவுடன் படுக
மென்றோள் குடைந்து வெயில்நிலை நின்ற
தெளிவுரை : அழகிய சிலவாகிய கூந்தலை உடையவள் பார்வைக்குத் தோற்று விலக்காமல்
இருந்தாலும் இருக்கட்டும். கோங்கமும் உடன் செல்வதாக. மெல்லிய தோள்களுக்குத்
தோற்று வெயிலின்கண் நிற்கின்ற
குன்ற வேய்களும் கூற்றடைத்(து) ஒழிக
மாயிருங் கடற்றிடை வைகல் ஆயிரம்
பாவையை வளர்ப்போய் நீநனி பாவையை
விலக்காது பிழைத்தனை மாதோ நலத்தகும்
தெளிவுரை : மலை மூங்கில்களும் பேச்சின்றிக் கிடக்கட்டும். பெரிய பாலையின்கண்
நாள்தோறும் பாலை போன்ற குராமலர்களைப் பூக்கும் குராமரமே. நீ என் பெண்ணை
விலக்காமல் விட்டு விட்டாய். நன்மையுடைய
அலைபுனல் ஆரூர் அமர்ந்துறை அமுதன்
கலையமர் கையன் கண்ணுதல் எந்தை
தொங்கலஞ் சடைமுடிக்(கு) அணிந்த
கொங்கலர் கண்ணி ஆயின குரவே.
தெளிவுரை : நீர் வளமிக்க திருவாரூரில் எழுந்தருளியுள்ள அமுதம் போன்றவன்; மான்
கன்றை ஏந்திய கையன்; நெற்றிக் கண்ணை உடையவன். எந்தை சடை முடிக்கு அணிந்த தலை
மாலையாக அமைந்தன குராமலர்கள்.
இது செவிலி கூறுதல்.
வெண்பா
-
குரவம் கமழ்கோதை கோதைவே லோன்பின்
விரவும் கடுங்கானம் வெவ்வாய் - அரவம்
சடைக்கணிந்த சங்கரன் தார்மதனன் தன்னைக்
கடைக்கணித்த தீயிற் கடிது.
தெளிவுரை : இது கண்டோர் கூறியது:
குராமலர் மணம் வீசுகின்ற கூந்தலையுடையாள். கைச் சல்லடத்தையும் வேலையும் உடையவன்
பின்னால் சென்ற கொங்காளமாகிய வழி, நஞ்சு பொருந்திய கொடிய வாயையுடைய அரவத்தைச்
சடைக்கு அணிந்த சங்கரன் மன்மதனைக் கடைக் கண்ணாற் பார்த்து எரித்த தீயை விடக்
கடுமையானது. கடுங்கானம் கடிது என முடிக்க. கோதை வேல் - மாலை அணிந்த வேல்
எனினுமாம்.
கட்டளைக் கலித் துறை
-
கடிமலர்க் கொன்றையும் திங்களும்
செங்கண் அரவும்அங்கே
முடிமல ராக்கிய முக்கணநக்
கன்மிக்க செக்கரொக்கும்
படிமலர் மேனிப் பரமன்
அடிபர வாதவர்போல்
அடிமலர் நோவ நடந்தோ
கடந்த(து)எம் அம்மனையே.
தெளிவுரை : மணமுள்ள கொன்றை மாலையும் சந்திரனும் சிவந்த கண்களையுடைய பாம்பும்
முடிமலராக்கிய மூன்று கண்களையுடைய ஆடையற்றவன் செவ்வானத்தை ஒத்திருப்பான்.
அப்பரமனது பாதங்களை வணங்காதவர் போலப் பாதங்கள் நோவ எம் அருமை மகள் நடந்தோ
கடந்தாள்.
இது செவிலி கூற்று.
அகவல்
வாயிலாகப் புக்க பாணனுக்குத் தலைவி கூறியது.
-
மனையுறைக் குருவி வளைவாய்ச் சேவல்
சினைமுதிர் பேடைச் செவ்வி நோக்கி
ஈனில் இழைக்க வேண்டி ஆனா
அன்புபொறை கூர மேன்மேல் முயங்கிக்
கண்ணுடைக் கரும்பின் நுண்தோடு கவரும்
தெளிவுரை : வீட்டில் வாழும் குருவியாகிய வளைந்த வாயையுடைய சேவல், தனது பெடையின்
ஈறும் பருவம் நோக்கி, கூடு கட்ட அன்பு மீதூர, மேலும் மேலும் தழுவி கணுக்களையுடைய
கரும்பின் தோகையைக் கவருகின்ற
பெருவளம் தழீஇய பீடுசால் கிடக்கை
வருபுனல் ஊரன் பார்வை யாகி
மடக்கொடி மாதர்க்கு வலையாய்த் தோன்றிப்
படிற்று வாய்மொழி பலபா ராட்டி
உள்ளத்(து) உள்ளது தெள்ளிதிற் கரந்து
தெளிவுரை : பெருமை மிகுந்த நீர் வரும் பெரிய நிலப்பரப்புக் கொண்ட ஊரின் தலைவனுடைய
பார்வை மிருகமாகி (பிறரை வசப்படுத்தும் கருவியாய் இருப்பவன் என்றபடி) மடக் கொடி
போன்ற பெண் மக்களுக்கு வலையாய்த் தோன்றி, பொய்ம்மையான உரைகள் பலவற்றைக் கூறி
மனத்திலுள்ளதை மறைத்து
கள்ள நோக்கமொடு கைதொழு(து) இறைஞ்சி
எம்மி லோயே பாண அவனேல்
அமரரும் அறியா ஆதிமூர்த்தி
குமரன் தாதை குளிர்சடை இறைவன்
அறைகழல் எந்தை ஆரூர் ஆவணத்
தெளிவுரை : கள்ள எண்ணத்தோடு கைகூப்பி வணங்கி எம் இல்லத்துக்கு வந்திருக்கும்
பாணனே ! அவன், அமரரும் அறியாத ஆதிமூர்த்தி; குமரனுடைய தந்தை; குளிர் சடை இறைவன்;
கழல் ஒலிக்கின்ற அவனுடைய திருவாரூர்க் கடை வீதியில்
துறையில் தூக்கும் எழில்மென் காட்சிக்
கண்ணடி அணைய நீர்மைப்
பண்ணுடைச் சொல்லியர் தம்பா லோனே.
தெளிவுரை : தொங்கிக் கொண்டிருக்கும் கண்ணாடி யார் எதிர் நின்றாலும் அவர் நிழலைக்
கொள்ளும். அதுபோல யாரை எதிர்ப்பட்டாலும் தம் வசப்படுத்தும் பொது மகளிர் பக்கம்
இருப்பவனே. உன் பொய் உரையை நம்ப மாட்டேன் என்றபடி.
வெண்பா
-
பாலாய சொல்லியர்க்கே சொல்லுபோய்ப் பாண்மகனே,
ஏலாஇங்(கு) என்னுக்(கு) இடுகின்றாய் - மேலாய
தேந்தண் கமழ்கொன்றைச் செஞ்சடையான் தாள்சூடும்
பூந்தண் புனலூரன் பொய்.
தெளிவுரை : தலைமகள் பாணனுக்கு உரைத்தது.
பாண்மகனே ! பால் போன்ற சொல்லையுடைய பரத்தையர்க்கு நீ போய்ச் சொல். இவ்விடத்தில்
உன் சொல் எடுபடாது. எதற்காகக் கூறுகின்றாய். மேன்மையான தேன் பொருந்திய குளிர்ந்த
கொன்றையைச் சூடுகின்றவன் தாளை வணங்குகின்ற தலைமகனது பொய்யான வார்த்தைகளைப்
பரத்தையர்களிடம் போய்ச் சொல் என்பதாம்.
கட்டளைக் கலித் துறை
-
பொய்யால் தொழினும் அருளும்
இறைகண்டம் போலிருண்ட
மையார் தடங்கண் மடந்தையர்
கேட்கிற்பொல் லாதுவந்துன்
கையால் அடிதொடல் செல்லல்நில்
புல்லல் கலையளையல்
ஐயா இவைநன்கு கற்றாய்
பெரிதும் அழகியதே.
தெளிவுரை : தலைவன் பணிதல் கண்டு தலைவி கூறியது.
பொய்ம்மையாக வணங்கினாலும் அருள் செய்கின்ற நீலகண்டம் போல் இருண்ட மை பூசிய
கண்களையுடைய பரத்தையர் இதை அறிந்தால் பொல்லாது. உன் கையால் என் கால்களைத் தொடாதே,
அணுகி வாராதே. தழுவாதே. ஆடையைக் களையாதே. இவைகளை நீ எங்குக் கற்றாய். மிகவும்
நன்றாக இருக்கிறது என்றபடி.
அகவல்
பரத்தையர் பிரிவில் தலைவி நெஞ்சொடு கூறியது.
-
அழகுடைக் கிங்கிணி அடிமிசை அரற்றத்
தொழிலுடைச் சிறுபறை பூண்டு தேர்ஈர்த்து
ஒருகளி(று) உருட்டி ஒண்பொடி ஆடிப்
பொருகளி(று) அனைய பொக்கமொடு பிற்றாழ்ந்து
பூங்குழற் சிறாரொடு தூங்குநடை பயிற்றி
தெளிவுரை : அழகிய கிண்கிணி அடிமீது ஒலி செய்ய, சிறுபறை முழக்கி, சிறுதேர்
உருட்டி, மர யானையை இழுத்து, மண் அளைந்து, போர் செய்கின்ற யானையைப் போல
மிகுதியாகப் பின்புறம் தாழ்ந்த அழகிய தலைமயிரை யுடைய சிறுவர்களோடு அசைந்து நடந்து
அக்கரை உடுத்தி ஐம்படை கட்டி
ஒக்கரை இருக்கும் ஒளிர்புன் குஞ்சிக்
குதலையங் கிளவிப் புதல்வன் தன்னை
உள்ளச் சொரிந்த வெள்ளத் தீம்பால்
உடைய வாகிய தடமென் கொங்கை
தெளிவுரை : ஆடை கட்டி ஐம்படைத் தாலியை அணிந்து இடுப்பில் வைத்து இருக்கும்,
கொஞ்சமான தலை மயிரையும் கொச்சைச் சொல்லையும் உடைய புதல்வனை நினைக்கச் சொரிகின்ற
தீம்பாலை உடையதாகிய பருத்த என் கொங்கைகளை
வேண்டாது பிரிந்த விரிபுனல் ஊரன்
பூண்தாங்(கு) அகலம் புல்குவன் எனப்போய்ப்
பெருமடம் உடையை வாழி வார்சடைக்
கொடுவெண் திங்கள் கொழுநிலவு ஏய்க்கும்
சுடுபொடி யணிந்த துளங்கொளி அகலத்(து)
தெளிவுரை : வேண்டாமென்று பிரிந்து சென்ற விரிபுனல் ஊரனாகிய தலைவன் உடைய ஆபரண
மணிந்த மார்பைத் தழுவுவேன் என்னும் எண்ணத்தை உடைய நெஞ்சமே! நீ வாழ்க! வளர்ந்த
சடையில் வளைந்த பிறை நிலவொளி வீச, திருநீறு அணிந்த மார்பினை உடைய
அண்ணல் ஆரூர் திண்ணிதிற் செய்த
சிறைகெழு செம்புனல் போல
நிறையொடு நீங்காய் நெஞ்சம் நீயே.
தெளிவுரை : அண்ணலது திருவாரூரில் தேக்கிய செம்புனல் போல நீ கற்பிலிருந்து
நீங்காதே!
வெண்பா
-
நீயிருந்திங்(கு) என்போது நெஞ்சமே நீள்இருட்கண்
ஆயிரங்கை வட்டித்(து) அனலாடித் - தீயரங்கத்(து)
ஐவாய் அரவசைத்தான் நன்பணைத் தோட்(கு) அன்பமைத்த
செய்வான்நல் லூரன் திறம்.
தெளிவுரை : நெஞ்சமே! நீ இங்கு இருந்து என்ன பயன்? பெரிய இருளில் ஆயிரங் கைகளை
வீசி, தீயில் நின்றாடி, அந்தத் தீயாகிய அரங்கில் ஐந்து வாய்களையுடைய பாம்பை
இடையில் கட்டியுள்ளவனது பருத்த தோள்களுக்கு அன்பாக அமைத்த செய்கைகளையுடைய தலைவனது
வல்லமையை நீ அறியாய் என்றபடி.
கட்டளைக் கலித் துறை
-
திறமலி சின்மொழிச் செந்துவர்
வாயினர் எங்கையர்க்கே
மறவலி வேலோன் அருளுக
வார்சடை யான்கடவூர்த்
துறைமலி ஆம்பல்நல் லாயிரத்
துத்தமி யேயெழினும்
நறைமலி தாமரை தன்னதென்
றேசொல்லும் நற்கயமே.
தெளிவுரை : தோழிக்குத் தலைவி கூறியது. (கயத்தில் பல்லாயிரம் ஆம்பல் எழுந்தாலும்
தனியொரு தாமரையைக் கொண்டு தாமரைப் பொய்கை என்று உலகம் சொல்லும். இது உவமானம்)
திறமை நிறைந்த இன்மொழியுடையவளே! சிவந்த வாயினையுடைய எம் தங்கையர் போன்ற
பரத்தையர்க்கு வீரம் மிகுந்த வேலை உடைய தலைவன் அருளுக. நீண்ட சடையினை உடைய
திருக்கடவூர் துறையில் மலிந்த ஆம்பல்கள் பல மலர்ந்தாலும் தாமரைக் குளம் என்றே
சொல்வார்கள். அதுபோல் தலைவன் எனக்கே உரியவன் என்பதாம்.
அகவல் தலைவிஅலர்மிகுதியைஉரைத்தல்.
-
கயங்கெழு கருங்கடல் முதுகு தெருவுபட
இயங்குதிமில் கடவி எறியொளி நுளையர்
நெய்ம்மீன் கவரல் வேண்டிக் கைம்மிகுத்
தால வட்டம் ஏய்ப்ப மீமிசை
முடிகெழு தருவலை வீசி முந்நீர்க்
தெளிவுரை : கயல் மீன்கள் நிறைந்த கருங்கடல், முதுகு தெருவு போல் வழி விடுமாறு,
படகுகளை வலையர் நெய் மிகுந்த மீன்களைப் பிடிப்பதற்காக, கைம்மிகுந்து ஆலவட்டம்
போல, மேலிருந்து வலைகளை வீசி - கடலின்
குடரென வாங்கிக் கொள்ளை கொண்ட
சுரிமுகச் சங்கும் சுடர்விடு பவளமும்
எரிகதிர் நித்திலத் தொகுதியும் கூடி
விரிகதிர் நிலவும் செக்கரும் தாரகை
உருவது காட்டும் உலவாக் காட்சித்
தெளிவுரை : குடரைப் பிடுங்கியது போல, கொள்ளை கொண்ட உட்கழிகளையுடைய முகத்தில்
சங்கும் ஒளிவிடு பவளமும், முத்தும் வானத்தில் நட்சத்திரங்களைப் போலப்
பிரகாசிக்கும் காட்சி
தண்ணந் துறைவன் தடவரை அகலம்
கண்ணுறக் கண்டது முதலா ஒண்ணிறக்
காள மாசுணம் கதிர்மதிக் குழவியைக்
கோளிழைத் திருக்கும் கொள்கை போல
மணிதிகழ் மிடற்று வானவன் மருவும்
தெளிவுரை : தண்ணந்துறைவனை மலைப் பக்கத்தில் கண்ணுறக் கண்டது முதலாக, ஒளி
பொருந்திய கருநிற காளத்தையுடைய பாம்பு பிறைச் சந்திரனை விழுங்குவது போல நீல
கண்டத்து வானவன் மருவும்
அணிதிகழ் அகலத்(து) அண்ணல் ஆரூர்
ஆர்கலி விழவின் அன்னதோர்
பேரலர் சிறந்தது சிறுநல் லூரே.
தெளிவுரை : திருவாரூர் பெருமானது ஆரவாரமுள்ள விழாவைப் போல இச்சிறு நல்லூரில்
பழிமொழி பரவியது என்க.
வெண்பா
-
ஊரெலாம் துஞ்சி உலகெலாம் நள்ளென்று
பாரெலாம் பாடஇந்தப் பாயிருட்கண் - சீரூலாம்
மாந்துறைவாய் ஈசன் மணிநீர் மறைகாட்டுப்
பூந்துறைவாய் மேய்ந்துறங்கா புள்.
தெளிவுரை : ஊர் எல்லாம் உறங்கி, உலகெல்லாம் நடு இரவு என்று பூமியெல்லாம்
ஓசையடங்கிய இந்தப் பரவிய இருளின் கண் சிறப்புப் பொருந்திய மாந்துறை என்னும் ஊரில்
கோயில் கொண்டிருக்கும் ஈசனுடைய திருமறைக்காட்டு அழகிய துறையில் மேய்ந்த தூங்காத
பறவையின் ஒலி கேட்கிறது. அதுவும் என்னைப் போல் ஏங்குகிறதோ?
கட்டளைக் கலித் துறை
-
புள்ளும் துயின்று பொழுதிறு
மாந்து கழுதுறங்கி
நள்ளென்ற கங்குல் இருள்வாய்ப்
பெருகிய வார்பனிநாள்
துள்ளுங் கலைக்கைச் சுடர்வண்
ணனைத் தொழு வார்மனம் போன்(று)
உள்ளும் உருக ஒருவர்திண்
தேர்வந்(து) உலாத் தருமே.
தெளிவுரை : தலைவன் வந்தமை தலைவிக்குத் தோழி உணர்த்தல்.
பறவையும் தூங்கி, பொழுது முற்றி, பேய் தூங்கி, நள்ளென்ற இடை யாமத்தில், இருண்டு
நீண்ட பனி நாள் மான் கன்றைக் கையில் கொண்டுள்ள பிரகாசமான நிறத்தனைத் தொழுவார்
மனம் போன்று மனமும் உருக, தலைவரின் திண்ணிய தேர் உலாவும் என்க.
அகவல்
இது தலைவன் கூற்று.
-
உலாநீர்க் கங்கை ஒரு சடைக் கரந்து
புலால்நீர் ஒழுகப் பொருகளி(று) உரித்த
பூத நாதன் ஆதி மூர்த்தி
திருமட மலைமகட்(கு) ஒருகூறு கொடுத்துத்தன்
அன்பின் அமைந்தவன் ஆரூர் நன்பகல்
தெளிவுரை : போக்கு வரவு செய்யும் தன்மையுள்ள கங்கையைச் சடையில் மறைத்து, குருதி
ஒழுக போர் செய்யும் யானையின் தோலை உரித்த பூத நாதன், ஆதி மூர்த்தி,
உமாதேவியாருக்கு இடப்பாகத்தை அளித்தவன். அவனது திருவாரூரில் நண்பகலில்
வலம்புரி அடுப்பா மாமுத்(து) அரிசி
சலஞ்சலம் நிறைய ஏற்றி நலந்திகழ்
பவளச் செந்தீ மூட்டிப் பொலம்பட
இப்பியந் துடுப்பால் ஒப்பத் துழாவி
அடாஅ(து) அட்ட அமுதம் வாய்மடுத்து
தெளிவுரை : வலம்புரிச் சங்கை அடுப்பாகவும் முத்தை அரிசியாகவும் சலஞ்சலம் நிறைய
ஏற்றி நலந்திகழ் பவளச் செந்தீ மூட்டி, பொலம்பட இப்பியாகிய துடுப்பால்
ஒப்பத்துழாவி மானசீகமாகச் சமைத்த சிறுசோறு
இடாஅ ஆயமோ(டு) உண்ணும் பொழுதில்
திருந்திழைப் பணைத்தோள் தேமொழி மாதே
விருந்தின் அடியேற்(கு) அருளுதி யோவென
முலைமுகம் நோக்கி முறுவலித்(து) இறைஞ்சலின்
நறைகமழ் எண்ணெய்ச் சிறுநுண் துள்ளி
தெளிவுரை : வாயில் போடுவதுபோல் பாவனை செய்து கூட்டத்தோடு உண்ணும் பொழுதில் இழை
யணிந்த, பணைத்தோள், தேமொழி மாதே ! விருந்தில் எனக்கும் கொடுப்பாயோ என்று
முலைமுகம் நோக்கி சிரித்து வேண்டுதலின், மணம் வீசுகின்ற எண்ணெய்ச் சிறுதுளி,
வெண்பா
-
ஆயினஅன் பாரே அழிப்பர் அனலாடி
பேயினவன் பாரோம்பும் பேரருளான் - தீயினவன்
கண்ணாளன் ஆரூர்க் கடலார் மடப்பாவை
தண்ணாருங் கொங்கைக்கே தாழ்ந்து.
தெளிவுரை : தலைவன் கூற்று.
உளதாகிய அன்பு, அதையாரே அழிப்பர்? தீயில் ஆடுபவன்; (தீயை ஏந்தியவன் எனினுமாம்);
பேய்களைக் கணமாகக் கொண்டவன்; உலகைக் காக்கும் பேரருளான்; தீயின் மத்தியில்
உள்ளவன்; கண் போன்றவன் (அருமைப் பாடு குறித்தது) திருவாரூர் கடல் போலப் பெரிதுங்
குணமுடையவளது தண்ணாருங் கொங்கைக்கு விருப்பங் கொண்டுள்ளதை யாரே அழிப்பர் என்றபடி.
கட்டளைக் கலித் துறை
-
தாழ்ந்து கிடந்த சடைமுடிச்
சங்கரன் தாள்பணியா
தாழ்ந்து கிடந்துநை வார்கிளை
போலயர் வேற்(கு) இரங்கிச்
சூழ்ந்து கிடந்த கரைமேல்
திரையென்னும் கையெறிந்து
வீழ்ந்து கிடந்தல றித்துயி
லாதிவ் விரிகடலே.
தெளிவுரை : இது தலைவி கூற்று.
தொங்கிக் கிடந்த சடை முடியையுடைய சங்கரனது தாள் பணியாமல் பிறவியில் அழுந்திக்
கிடந்து உறைகின்றவர் போல, வருந்தி இளைப்பேனாகிய எனக்கு இரங்கி, சூழ்ந்து கிடந்த
கரைமேல் திரைகளாகிய கையை வீசி, வீழ்ந்து, கிடந்து, அலறி இப்பரந்த கடல் துயிலாது.
திருச்சிற்றம்பலம்
திருக்கயிலாய ஞானவுலா (சேரமான் பெருமாள் நாயனார் அருளிச் செய்தது )
அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகிய கழறிற்றறிவார் என்னும் மறுபெயருடைய
சேரமான் பெருமாள் நாயனார் கல்வி அறிவிலும் அதன் பயனாகிய சிவபக்தியிலும் சிறந்து
விளங்கினார். இதனால்தான் திருஆலவாயுடைய சிவபெருமானும் இவருக்குத் திருமுகம்
எழுதியருளினார். சேரமான் பெருமாள் திருக்கயிலைக்குச் செல்லும் வழியில் இவ்வுலாவை
மிக விரைவாகப் பாடியருளினார். இதனால் இவர் மிக விரைவாகச் செய்யுள் இயற்றக் கூடிய
ஆசுகவி என்பது பெறப்படுகின்றது. இவரை அருணகிரிநாதரும் தம்முடைய திருப்புகழில்
ஆதியந்தவுலா ஆசு பாடிய சேரர் என்று ஆசுகவியாகவே குறிப்பிட்டுள்ளார். உலா என்பது
தமிழில் உள்ள தொண்ணூற்றாறு வகை நூல்ளுள் ஒன்றாகும். சேரமான் பெருமாளுக்கு முன்னர்
யாரும் உலாநூல் பாடியிருப்பதாகத் தெரியவில்லை. இதனால் இவரே முதன் முதலாக உலா நூல்
பாடியவராகச் சான்றோர்களால் கொள்ளப் பெறுகிறார். இவ்வுலா முதன் முதலாக எழுந்தது
என்னும் காரணம் பற்றியே இதற்கு ஆதிஉலா என்னும் பெயர் வழங்குகிறது. சேரமான்
பெருமாள் திருக்குறளைக் கற்றுத் தேர்ந்தவர் என்பது திருக்குறளை இவ்வுலாவில்
எடுத்து ஆண்டிருப்பதால் பெறப்படும். சேரமான் பெருமாள் சிவபெருமான் திருமுன்
அடைந்ததும் தாம் உலாப் பாடி இருப்பதாகவும் அதனைக் கேட்டருள வேண்டும் என்றும்
இறைவனிடம் விண்ணப்பித்தார். இறைவனும் கூறுமாறு கட்டளையிடச் சிவபிரான் திருமுன்னே
உலா அரங்கேற்றம் செய்யப்பட்டது.
சிவபெருமான் திருக்கயிலையில் எழுந்தருளியிருக்கின்றார். தேவர்கள் இறைவனைக் காண
வேண்டுமென்று பேரார்வங் கொண்டு திருக்கோயிலின் முன் சென்று நின்று வேண்டிக்
கொள்கிறார்கள். வேண்டுகோளுக்கு இரங்கிய சிவபெருமான் ஒரு நாள் தம்மை அழகு செய்து
கொண்டு வசுக்கள் போற்றிச் செய்யவும் முனிவர்கள் வாழ்த்துரை கூறவும், பன்னிரு
கதிரவர்கள் பல்லாண்டு பாடவும், நாரதர் யாழ் வாசிக்கவும் மற்றும் பலவகையான
சிறப்புகளோடு திருவுலாப் புறப்பட்டார். சிவபெருமான் திருவுலாப் புறப்பட்ட தெரு
இனிய மொழிகளைப் பேசும் தன்மையினராகிய பெண்களின் பேராரவாரத்தை உடையதாயிற்று.
எழுவகைப் பருவ மாதர்களும் அப்பெருமானைக் கண்டு காதல் கொள்கின்றனர். இறைவனைத்
தலைவனாகவும் அவனருளை விரும்பிய மன்னுயிர்களை அத் தலைவன்பாற் காதல் கொண்டு மயங்கிய
பெண்களாகவும் வைத்துப் பாடப் பெற்றது, இத்திருக்கயிலாய ஞான உலா. இந்நூலினால்
சிவபெருமானுடைய முழு முதல் தன்மையைச் சேரமான் பெருமாள் விளக்கிய திறம்
அறிந்து இன்புறத் தக்கதாகும். இத் திருவுலாவே திருச்சிற்றம்பலக் கோவையார் போன்று
செந்தமிழின் முதன்முதல் தோன்றிய திருவுலா என எல்லாராலும் சிறப்பித்துச்
சொல்லப்படும்.
திருச்சிற்றம்பலம்
-
திருமாலும் நான்முகனும் தேர்ந்துணரா(து) அன்றங்(கு)
அருமால் உறஅழலாய் நின்ற -பெருமான்
பிறவாதே தோன்றினான் காணாதே காண்பான்
துறவாதே யாக்கை துறந்தான் - முறைமையால்
ஆழாதே ஆழ்ந்தான் அகலா(து) அகவியான்
ஊழால் உயராதே ஓங்கினான் - சூழொளிநூல்
ஓதா(து) உணர்ந்தான் நுணுகாது நுண்ணியான்
யாதும் அணுகா(து) அணுகியான் - ஆதி
அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான்
அரனாய் அழிப்பவனும் தானே
தெளிவுரை : நாரணனும் பிரமனும் ஊன்றிச் சிந்தித்து உணராமல் முன்னொரு காலத்தில்
அகலா மயக்கத்தை அடைய, தெய்வத் தீப்பிழம்பாய் அவர் முன் வெளிப்பட்ட சிவபெருமான்,
கருவாய்ப்பட்டுப் பிறவாமல் தூயவடிவுடன் தோன்றினவன். கண்களின் துணைகொண்டு
எவற்றையும் காண்பது இன்றியே பேரறிவால் எதனையும் காண்பவன். நீக்காமல் திருமேனியைத்
தானே மறைத்துக் கொண்டவன். முறை முறையாக ஆழ்ந்து சொல்லாமலேயே இயல்பாகவே ஆழ்ந்து
இருப்பவன். எவ்விடத்தும் நீங்காமல் நீங்கி இருப்பவன். முன்வினைப் பயனால் வளர்ந்து
உயராமல் இயல்பாகவே உயர்ந்துளன். அறிவு ஒளி ததும்பிய நூற்களை ஓதாமலேயே
உணர்ந்திருப்பவன். நுண்ணியனாக இராமலேயே அணுவாக இருப்பவன். எப்பொருளையும் தான்
அணுகாமலேயே அணுகியிருப்பவன். முதன்மை பொருந்திய திருமாலில் தங்கி உலகத்தைக்
காப்பவனும், நான்முகன் இடத்தில் இருந்து உலகனைத்தும் படைப்பவனும்
உருத்திரனிடத்தில் தங்கி ஒடுக்கம் செய்து கொள்பவனும் தானே ஆகியிருப்பவன்.
தேவர் அறியாத தோற்றத்தான் தேவரைத்தான் - பரனாய
மேவிய வாறே விதித்தமைத்தான் - ஓவாதே
எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்
அவ்வுருவாய்த் தோன்றி அருள் கொடுப்பான் - எவ்வுருவும்
தானேயாய் நின்றளிப்பான் தன்னிற் பிறிதுருவம்
ஏனோர்க்கும் காண்பரிய எம்பெருமான் - ஆனாத
சீரார் சிவலோகம் தன்னுள் சிவபுரத்தில்
ஏரார் திருக்கோயில் உள்ளிருப்ப - ஆராய்ந்து
செங்கண் அமரர் புறங்கடைக்கண் சென்(று) ஈண்டி
எங்கட்குக் காட்சியருள் என்றிரப்ப- ஆங்கொருநாள்
தெளிவுரை : மேலான விண்ணவரும் காண முடியாத வியன் மிகுமேனியன். அந்தத் தேவர்களைத்
தான் சங்கற்பித்தபடியே படைத்து உரிய சூழ்நிலை உதவினன். எவ்வௌர் எந்த எந்த உருவில்
இடையறாது தன்னை எண்ணினாலும் உள்ளத்துள் அவ்வவ் உருவங்களாகவே வெளிப்பட்டு,
திருவருள் பாலிப்பன். அன்பர் எண்ணும் எல்லா உருவங்களும் தானே ஆகியிருந்து
புறத்திலும் காட்சி தருபவன். தன்னைக் காட்டிலும் வேறு ஓர் உருவம்
எத்தகையோர்க்கும் காண்பதற்கு இயலாத பெருமையை உடைய எம் இறைவன். நீங்காத சிறப்புப்
பொருந்திய சிவலோகம் தன்னுள் சிவபுரத்தில் அழகு நிறைந்த திருக்கோயிலுள் இறைவன்
இனிது வீற்றிருக்க, தரிசன காலத்தைச் சிந்தித்து உணர்ந்து, செம்மையான கண்களையுடைய
தேவர்கள் தலைவாயிலில் சென்று நெருக்கமாக நின்று அடியேங்கட்குச் சேவையை அருள்
என்று விநயமுடன் கூவி வேண்ட,
பூமங்கை பொய்தீர் தரணி புகழ்மங்கை
நாமங்கை என்றிவர்கள் நன்கமைத்த - சேமங்கொள்
ஞானக் கொழுந்து நகராசன் தன்மடந்தை
தேன் மொய்த்த குஞ்சியின்மேல் சித்திரிப்ப - ஊனமில்சீர்
நந்தா வனமலரும் மந்தா இனித்தடஞ்சேர்
செந்தா மரைமலர்நூ றாயிரத்தால் - நொந்தா
வயந்தன் தொடுத்தமைத்த வாசிகை சூட்டி
நயந்திகழும் நல்லுறுப்புக் கூட்டிப் - பயன்கொள்
குலமகளிர் செய்த கொழுஞ்சாந்தம் கொண்டு
நலமலிய ஆகம் தழீஇக்-
தெளிவுரை : அங்ஙனம் துதிக்கும் ஒரு நாளில் இனிய தாமரையில் இருக்கும் திருமகள்
பொய்ம்மை இல்லாத நிலமகள் புகழ் அமைந்த உருத்திராணி, கலைமகள் என்றுள்ள இந்தத்
தெய்வ மாதர்கள் நலமுறச் செய்த நலம் சிறந்த வழிபாட்டை ஏற்றுக் கொண்ட ஒளி நிறை
அறிவுக் கொழுந்தான மலை மன்னன் மகளான பார்வதியார் வண்டுகள் மொய்த்த சடை மேல்
அலங்காரம் செய்தற் பொருட்டுப் பழுது இல்லாத சிறப்பையுடைய நந்தனவனத்து மலர்களாலும்
தேவ கங்கையில் மலர்ந்த பல இதழ்களையுடைய செந்தாமரை மலர்களாலும் அதிக சிரமப்பட்டு
வசந்தன் தொடுத்து வைத்த தொடுமாலையை அணிந்து, பிறவி எடுத்த பயனைப் பெற்ற சிறந்த
மாதர்கள் மேன்மை விளங்கும் சிறந்த கூட்டுச் சரக்குகளைச் சேர்த்து அமைத்த
கொழுமையான சாந்தை எடுத்து நன்மை நிரம்பத் திருமேனியிற் பூசி,
கற்பகம் ஈன்ற கமழ்பட் டினைஉடுத்துப் - கலைமலிந்த
பொற்கழல்கள் கால்மேற் பொலிவித்து - விற்பகரும்
சூளா மணிசேர் முடிகவித்துச் சுட்டிசேர்
வாளார் நுதற்பட்டம் மன்னுவித்துத் - தோளா
மணிமகர குண்டலங்கள் காதுக்(கு) அணிந்தாங்(கு)
அணிவயிரக் கண்டிகை பொன்னாண் - பணிபெரிய
ஆரம் அவைபூண்(டு) அணிதிக ழும்சன்ன
வீரம் திருமார்பில் வில்லிலக - ஏருடைய
எண்தோட்கும் கேயூரம் பெய்துதர பந்தனமும்
கண்டோர் மனமகிழக் கட்டுறீஇக் - கொண்டு
தெளிவுரை : கற்பகமரம் உதவிய மணம் கமழ்கின்ற பட்டு ஆடையை உடுத்தி, பொன்னாலாகிய
வீரக்கழல்களைத் திருவடிகளின் மீது சிறப்புற அணிந்து, ஒளி வீசும் சூளாமணி பதித்த
மகுடத்தைச் சூட்டி, சுட்டியோடு சேர்ந்த ஒளி நிறைந்த நெற்றிப் பட்டங் கட்டி,
துளைபடாத இரத்தினக் கற்களைப் பதித்த மகரமீன் வடிவாகச் செய்யப் பெற்ற
குண்டலங்களைத் திருச்செவிக்கு அலங்காரமாக அணிந்து அதனுடன் அழகிய வயிர கண்டிகையும்
பொன் நாணும் சிறந்த வேலைப்பாடு அமைந்த பெரிய முத்து மாலை முதலாகச் சொல்லப்பட்ட
அப்பணிகளை அணிந்து, அலங்காரமாக விளங்கும் வீர சங்கிலி சிறந்த மார்பகத்தில் ஒளி
செய்ய, எழுச்சியை யுடைய எட்டுத் திருத்தோள்களுக்கும் வளையென்னும் ஆபரணத்தை
அணிந்து பார்த்தவரது உள்ளங் களிக்க அரைப் பட்டிகையையும் கட்டி.
கடிசூத் திரம்புனைந்து கங்கணங்கைப் பெய்து
வடிவுடைய கோலம் புனைந்தாங்(கு) - அடிநிலை மேல்
நந்திமா காளர் கடைகழிந்த போழ்தத்து
வந்து வசுக்கள் இருக்குரைப்ப - அந்தமில்சீர்
எண்ணருங் கீர்த்தி எழுவர் இருடிகளும்
அண்ணல்மேல் ஆசிகள் தாமுணர்த்த - ஒண்ணிறத்த
பன்னிருவர் ஆதித்தர் பல்லாண்(டு) எடுத்திசைப்ப
மன்னும் மகதியன்யாழ் வாசிப்பப் பொன்னியலும்
அங்கி கமழ்தூபம் ஏந்த யமன் வந்து
மங்கல வாசகத்தால் வாழ்த்துரைப்பச் - செங்கண்
தெளிவுரை : அதன் மேல் அரை ஞாணை எடுத்து அழகாகப் பூட்டி, கரத்தில் கங்கணம் அணிந்து
இயற்கைத் திருமேனிக்கு உரிமையாக உடைய செயற்கை அலங்காரங்களைச் செய்ததும்,
திருப்பாதுகை மேல் ஏறி, திருநந்தி தேவரும் மாகாளரும் காவல் செய்யும் திருஅணுக்கன்
திருவாயிலைக் கடந்து சென்ற சமயம், அஷ்ட வசுக்கள் இறைவன் எதிரில் தோன்றி இருக்கு
வேத பாராயணம் செய்ய, முடிவு இல்லாத சிறப்பினை யுடைய நினைத்தற்கும் அரிய புகழமைந்த
சப்த முனிவர்களும் வந்து, பெருமையிற் சிறந்த தலைவராம் சிவபெருமான் மீது
வாழ்த்துக் கூற, ஒளி வீசும் நிறத்தினை உடையவர்களான பன்னிரு சூரியர்களும்
பல்லாண்டைப் பெரிதுபாட, நிலை பெற்ற அகத்திய முனிவர் யாழ்வாசிக்க, பொன்னிறத்தோடு
விளங்கும் அக்கினி பகவான் மணம் வீசும் தூப கலசம் ஏந்தி வர, யமன் வந்து மங்கல
மொழியால் வாழ்த்துக் கூற,
நிருதி முதலோர் நிழற்கலன்கள் ஏந்த
வருணன் மணிக்கலசம் தாங்கத் - தெருவெலாம்
வாயு நனிவிளக்க மாமழை நீர்தெளிப்பத்
தூயசீர்ச் சோமன் குடையெடுப்ப - மேவியசீர்
ஈசானன் வந்(து) அடைப்பை கைக்கொள்ள அச்சுனிகள்
வாயார்ந்த மந்திரத்தால் வாழ்த்துரைப்பத் - தூய
உருத்திரர்கள் தோத்திரங்கள் சொல்லக் குபேரன்
திருத்தகு மாநிதியம் சிந்தக் - கருத்தமைந்த
கங்கா நதியமுனை உள்ளுறுத்த தீர்த்தங்கள்
பொங்கு கவரி புரையிரட்டத்-
தெளிவுரை : செவ்விய கண்களையுடைய நிருதி முதலாயுள்ளவர்கள் ஒளி செய்யும் கண்ணாடிகளை
ஏந்திக் கொண்டு வர, வருண பகவான் அழகிய நீர்க்கலச்த்தைச் சுமந்து வர, வீதிகள்
முழுவதும் வாயு பகவான் பெரிதும் தூய்மை செய்ய, சிறந்த மேகங்கள் வீதியெல்லாம் நீர்
தெளிப்ப, தூய்மையான சிறப்புடைய திங்கள் குடை பிடித்து வர, விரும்பத் தக்க
சீர்த்தி யமைந்த ஈசானன் வந்து வெற்றிலைப் பையைக் கையில் எடுத்துக் கொண்டு வர,
அஸ்வினி தேவர்கள் வாய் நிறைந்த மந்திரங்களால் வாழ்த்துச் சொல்ல, தூய்மையையுடைய
உருத்திர கணத்தவர் துதி மொழிகளைக் கூற, குபேரன் மேன்மையும் தகுதியும் உடைய சிறந்த
பொருள்களை வரும் வழியில் வாரி இறைக்க, அமைதி பெற்ற மனத்தினரான கங்கை யமுனையை
உள்ளிட்ட நதிகளின் அதி தெய்வங்கள் அளவிலாத வெண்சாமரங்களை இருபாலும் வீச,
பைந்நாகம் எட்டும் சுடரெடுப்பப் பைந்தறுகண் - தங்கிய
கைந்நாகம் எட்டும் கழல்வணங்க - மெய்ந்நாக
மேகம் விதானமாய் மின்னெலாம் சூழ்கொடியாய்
மேகத்(து) உருமும் முரசறையப் - போகஞ்சேர்
தும்புரு நாரதர்கள் பாடத் தொடர்ந்தெங்கும்
கொம்புருவ நுண்ணிடையார் கூத்தாட - எம்பெருமான்
விண்ணோர் பணிய உயர்ந்த விளங்கொளிசேர்
வெண்ணார் மழவிடையை மேல்கொண்டாங்(கு) எண்ணார்
கருத்துடைய பாரிடங்கள் காப்பொத்துச் செய்யத்
திருக்கடைகள் ஏழ்கழிந்த போதில் - செருக்குடைய
தெளிவுரை : இந்நிலவுலகத்தின் கீழ் தலைமையாகத் தங்கியிருந்த படங்களையுடைய எட்டுப்
பாம்புகளும் விளக்குகளை ஏந்தி வர, பசுமையும் அஞ்சாமையும் கொண்டு துதிக்கையையுடைய
எட்டுத் திக்கு யானைகளும் திருவடிகளை வணங்கவும், மெய்ம்மையை உடைய விண்ணில் உள்ள
மேகங்களே மேற் கட்டியாய் விளங்க, மின்னல்கள் அனைத்தும் சூழ்ந்திருக்கும்
கொடிகளாய் அமைய, மேகத்தின் இடியே முரசு வாத்தியமாக ஒலிக்கவும், இன்பம் நிறைந்த
தும்புரு நாரதர் எனும் இரு முனிவர்கள் தத்தம் யாழில் அமலன் புகழைச் சேர்த்துப்
பாட, பூங்கொடி போலும் வடிவமும் நுண்ணிய இடையையும் உடைய பல மாதர்கள் எல்லா இடங்
களிலும் தொடர்ச்சியாகப் பரவி, பாத நிருத்தம் பண்ணி வரவும், எமது சிவபெருமான்
தரிசனத்திற்குக் காத்திருந்த தேவர்கள் எல்லாரும் வணங்கவும், உயர்ச்சி
பொருந்தியதும் என்றும் விளங்குகின்ற பேரொளி உடையதுமான வெண்மை நிறைந்த இளமையை
யுடைய இடபத்தின் மேல் அமர்ந்து, எப்போதும் தம்மையே தியானிக்கப் பொருந்திய
மனத்தையுடைய பூதகணங்கள் ஒன்று பட்டுக் காவல் செய்துவர, சிறந்த ஏழு வாயிற் படியைக்
கடந்து சென்ற சமயத்து-
சேனா பதிமயில்மேல் முன் செல்ல யானை மேல்
ஆனாப்போர் இந்திரன் பின்படர - ஆனாத
அன்னத்தே யேறி அயன்வலப்பால் கைபோதக்
கன்னவிலும் திண்தோள் கருடன்மேல் - மன்னிய
மால்இடப்பால் செல்ல மலரார் கணைஐந்து
மேலிடப்பால் மென்கருப்பு வில் இடப்பால் - ஏல்வுடைய
சங்கணையும் முன்கைத் தடமுலையார் மேல் எய்வான்
கொங்கணையும் பூவாளி கோத்தமைத்த - ஐங்கணையான்
காமன் கொடிப்படைமுன் போதக் கதக்காரி
வாமன் புரவிமேல் வந்தணைய -
தெளிவுரை : களிப்புடைய முருகப் பெருமான் மயில் மேல் அமர்ந்து முன்னே செல்ல,
போரில் பின் வாங்காத ஆற்றலுடைய தேவேந்திரன் வெள்ளை யானையாகிய ஐராவதத்தின் மேல்
அமர்ந்து பின் தொடர்ந்து வர, பிரமன் தன்னை விட்டு நீங்காத அன்ன வாகனத்தின் மேல்
அமர்ந்து வலது பக்கத்தில் வர, மலையெனச் சொல்லப் பெறும் வன்மை வாய்ந்த
தோள்களையுடைய கருடன் மேல் அமர்ந்துள்ள நாரணன் இடது பக்கத்தில் வர, தாமரை, மாம்பூ,
அசோகு, முல்லை குவளையெனப் பொருந்திய மலர்க்கணை ஐந்தினை உடலின் மேற்புறத்திலும்
பால் முற்றிய சுவையுள்ள கரும்பு வில்லைத் தமது இடது பக்கத்திலுமாகப் பெற்றுள்ள,
வளையல் நெருங்கிய முன்னங் கைகளையும் பருத்த தனங்களையும் உடைய மாதர்கள் மேல்
மகரந்தம் நிறைந்த மலர்க்கணை விடுவதன் பொருட்டு வரிசையாகக் கோத்துப் பிடித்த ஐந்து
கணைகளை உடையவனும், முரசு, குடை, தென்றல் வசந்தம் விருது முதலிய வெற்றிக்
கொடியுடைய சேனைகள் சூழ்ந்துள்ளவனுமாகிய மன்மதன் முன்னே செல்ல, சின மிக்க ஐயனார்
அழகிய குதிரை மேல் ஏறி அண்மையில் தொடர்ந்து வர.
வேழ முகத்து விநாயகனை உள்ளுறுத்துச்
சூழ்வளைக்கைத் தொண்டைவாய்க் கெண்டையொண் கண் -தாழ் கூந்தல்
மங்கை எழுவரும் சூழ மடநீலி
சிங்க அடலேற்றின் மேற் செல்லத் - தங்கிய
விச்சா தரர் இயக்கர் சின்னரர் கிம்புருடர்
அச்சா ரணர்அரக்க ரோடசுடர் - எச்சார்வும்
சல்லரித் தாளம் தகுணிதந் தத்தளகம்
கல்லலகு கல்ல வடம் மொந்தை - நல்லிலயத்
தட்டழி சங்கம் சலஞ்சலம் தண்ணுமை
கட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும்
தெளிவுரை : யானை முகத்தவர் என்னும் பெயர் பொருந்திய கணபதியை நடுவில் இருத்தி,
வளைகள் சூழ்ந்துள்ள கைகளையும் கொவ்வைக் கனியொத்த வாயினையும், சேல் கண்டை போன்று
பிறழும் ஒளியுடைய கண்களையும் நீண்டு தொங்கும் கூந்தலையும் உடைய அபிராமி,
மகேச்சுவரி, கௌமாலி, நாராயணி, வராகி. இந்திராணி, காளி எனப் பெறும் ஏழு மாதர்களும்
சூழ்ந்துவர, மடப்பத்தை யுடைய துர்க்கை வலிமை வாய்ந்த ஆண் சிங்கத்தின் மேல்
அமர்ந்து வர, எல்லா இடங்களிலும் தங்கிய விச்சாதரர், இயக்கர், கின்னரர்
கிம்புருடர் அச்சாரணர் அரக்கரோடு அசுரர் முதலாயினோர் சூழ்ந்து வர, சல்லரி,
பிரமதாளம், தகுணிதம், தத்தளகம், கல்லவடம், மொந்தை, சிறந்த இலயத்தை விளைவிக்கும்
தட்டழி, சங்கம், சலஞ்சலம். தண்ணுமை, வார்க்கட்டு அழியாத பேரி, கரதாளம்.
குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ்
இடமாந் தடாரி படகம் - இடவிய
மத்தளர் துந்துபி வாய்ந்த முருடிவற்றால்
எத்திசை தோறும் எழுந்தியம்ப - ஒத்துடனே
மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும்
கிங்கரரும் எங்கும் கிலுகிலுப்பத் - தங்கிய
ஆறாம் இருதுவும் யோகும் அருந்தவமும்
மாறாத முத்திரையும் மந்திரமும் - ஈறார்ந்த
காலங்கள் மூன்றும் கணமும் குணங்களும்
வால கிலியரும் வந்தீண்டி - மேலை
தெளிவுரை : அடிக்கப்படும் குட முழவம், கொக்கரை, வீணை, புல்லாங்குழல், யாழ், இடம்
பரந்த பம்பை, படகம், வலியுடைய மத்தளம் துந்துபி, வாய்ப்பாக அமைந்த முருடு, ஆதிய
இவ்வாத்தியங்களால் எல்லாத் திசைகளிலும் ஓசை மிக்கு ஒலிக்கவும், வாத்தியங்களுடன்
சேர்ந்து அதே காலத்தில், மங்கலப் பாடகர் வந்து வணங்க, மல்லரும் கிங்கரரும்
எவ்விடத்தும் நிறைந்து ஓசை செய்ய, பொருந்திய ஆறு பருவங்களுக்கு உரிய
அதிதேவதைகளும், யோகங்கட்கு உரிய அதிதேவதைகளும், அருமையான தவங்கட்கு உரிய
அதிதெய்வங்களும், சிவபூசையில் கையாளப் பெறுதலால் பயன் அளித்தலில் மாறுதல் இல்லாத
தேனு, அங்குசம், பதாகை ஆதிய முத்திரைகட்கு உரிய அதிதெய்வங்களும், மந்திரங்கட்கு
உரிய அதிதெய்வங்களும் முடிவாக நிறைந்த கால தேவதைகளும் கணப்பொழுதிற்கு உரிய
அதிதேவதைகளும் குணங்களுக்குரிய அதிதேவதைகளும் வாலகிலியரும் சிவசன்னிதானத்தில்
வந்து கூடி
இமையோர் பெருமானே போற்றி எழில்சேர்
உமையாள் மணவாளா போற்றி - எமையாளும்
தீயாடி போற்றி சிவனே அடிபோற்றி
ஈசனே எந்தாய் இறை போற்றி-தூயசீர்ச்
சங்கரனே போற்றி சடாமகுடத் தாய்போற்றி
பொங்கரவா பொன்னங் கழல் போற்றி - அங்கொருநாள்
ஆய விழுப்போர் அருச்சுனன் ஆற்றற்குப்
பாசுபதம் ஈந்த பதம்போற்றி - தூய
மலைமேலாய் போற்றி மயானத்தாய் வானோர்
தலைமேலாய் போற்றிதாள் போற்றி - நிலை போற்றி
போற்றியெனப் பூமாரி பெய்து புலன்கலங்க
நாற்றிசையும் எங்கும் நலம்பெருக - ஏற்றுக்
கொடியும் பதாகையும் கொற்றக் குடையும்
வடிவுடைய தொங்கலும் சூழக் - கடிகமழும்
பூமாண் கருங்குழலார் உள்ளம் புதிதுண்பான்
வாமாள ஈசன் வரும் போழ்திற் - சேமேலே
தெளிவுரை : விண்ணுலகத்திலுள்ள தேவர்களது தலைவரே! உமக்கே அடைக்கலம்; அழகு
பொருந்திய உமாதேவியாரின் மணவாளரே! உமக்கே அடைக்கலம். எம்மை ஆட் கொண்ட அழலாடும்
பெருமானே! உமக்கே அடைக்கலம். சிவபெருமானே! உமது திருவடிக்கு வணக்கம். அருட்
செல்வனே! எங்கள் அப்பனே! இறைவனே! உமக்கே அடைக்கலம். தூய்மையான சிறப்பையுடைய இன்ப
வடிவினனே! உமக்கே அடைக்கலம். சடை முடி உடையவரே! உமக்கே அடைக்கலம். மிகுதியான
பாம்புப் பணிகளை அணிந்தவரே! பொன்னாலாகிய அழகிய வீரக்கழல் அணிந்த உமது
திருவடிகளுக்கே அடைக்கலம். முன் ஒரு காலத்தில் மேன்மையான போர் செய்த பார்த்தனுடைய
உறுதிக்கு வியந்து அவனுக்குப் பாசுபதாத்திரம் அளித்த உமது திருவடிக்கு வணக்கம்.
தூய்மை பொருந்திய திருக் கயிலாய மலைமேல் வீற்றிருப்பவரே! அடைக்கலம். மயானத்தில்
ஆடுபவரே! தேவர்கள் முடிமேல் இருப்பவரே! உமக்கே அடைக்கலம். உமது திருவடிகளுக்கு
வணக்கம். தேவரீரது நிலை பேறுடைமைக்கு வணக்கம் என்று மலர் மழை பொழிந்து இவ்விசேடக்
காட்சியால் ஐம்புலச் சேட்டை கலக்கம் கொள்ள நான்கு திசைகளும் மற்ற எல்லாப்
பக்கங்களிலும் நன்மை அதிகரிக்க, விடைக் கொடியும் பெரிய கொடிகளும், வெற்றிக்
குடையும் இயல்பு உருவுடைய மயில் பீலியாலான குஞ்சங்களும் சூழ்ந்திருக்க, மணம்
வீசும் மலர் சூடிய சிறந்த கருமையான கூந்தலையுடைய மாதர்களின் மனம் புதிய இன்பத்தை
அனுபவித்தற் பொருட்டு, அழகிய சிவபெருமான் விடைமேல் இருந்தபடியே உலாவரும் சமயம்-
குழாங்கள்
வாமான யீசன் மறுவில்சீர் வானவர்தம்
கோமான் படைமுழக்கம் கேட்டலுமே - தூமாண்பில்
வானநீர் தாங்கி மறையோம்பி வான்பிறையோ(டு)
ஊனமில் சூலம் உடையவாய் - ஈனமிலா
வெள்ளை அணிதலால் வேழத்(து) உரிபோர்த்த
வள்ளலே போலும் வடிவுடைய - ஒள்ளிய
மாட நடுவில் மலரார் அமளியே
கூடிய போர்க்கல மாக்குறித்துக் - கேடில்
சிலம்பு பறையாகச் சேயரிக்கண் அம்பா
விலங்கு கொடும்புருவம் வில்லா- நலந்திகழும்
தெளிவுரை : விடையின் மேல் அழகிய அருட் செல்வன் ஆகிய குற்றம் இல்லாத சிறப்புப்
பொருந்திய தேவர்களுடைய பெருமானது படைப் பெருக்கத்தின் பேரொலி மாதர் செவிப்
பட்டதும் தூய்மையான சிறப்புடைய ஆகாய கங்கையைத் தாங்குதலால், மறைவு இடங்களைக்
காத்தலால், விண்ணில் உள்ள சந்திரனுடன் பழுதில்லாத சூலத்தைக் கொண்டிருந்ததால்,
களங்கம் இல்லாத வெள்ளை நீறு பூசப் பெற்று இருத்தலால், யானைத் தோல் போர்த்த
வண்மைச் சிவத்தைப் போலும் தோற்றமுள்ள ஒளி மயமான மாளிகைகளின் நடுஇடத்தில் மலர்களை
நிறையப் பரப்பிய படுக்கையையே கலவிப் போர் புரியும் இடமாகக் கொண்டு, குற்றம்
இல்லாத சிலம்புகளே போர்ப் பறையாகவும், செவ்வரி படர்ந்த கண்களே அம்புகளாகவும்,
அகன்று வளைந்த புருவமே வில்லாகவும்.
கூழைபின் தாழ வளையார்ப்பக் கைப்போந்து
கேழ்கிளரும் அல்குலாம் தேருந்திச் - சூழொளிய
கொங்கைமாப் பொங்கக் கொழுநர் மனங்கவர
அங்கம் பொருநசைந்த ஆயிழையார் - செங்கேழற்
பொற்கவசத் துள்ளால் மணிநீர் முகஞ்சேர்த்தி
நற்பெரும் கோலம் மிகப்புனைந்து - பொற்புடைய
பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாக
மாதரவர் சேர மகிழ்ந்தீண்டிச் - சோதிசேர்
சூளிகையும் சூட்டும் சுளிகையும் சுட்டிகையும்
வாளிகையும் பொற்றோடும் மின்விலக-
தெளிவுரை : வளப்பம் விளங்கும் கூந்தல் பின்னே தொங்கவும் வளையல்கள் ஒலிக்கவும்
இடம் பெயர்ந்து நிறம் மிக்கு விளங்கும் நிதம்பமாகிய தேரினைச் செலுத்தி, சூழ்ந்த
ஒளியினையுடைய தனங்களாகிய யானைகள் விம்ம, தத்தம் கணவர்களுடைய உள்ளத்தை வயப்படுத்த
அவர்கள் தம் உடம்போடு காமப் போர் விளைத்தலால் அசைந்த அணிகலன்கள் பல அணிந்த
மாதர்கள் சிவந்த நிறத்தையுடைய பொன்பாத்திரத்து உள்ள அழகிய நீரால் முகம் துலக்கி,
சிறந்த பெருமை தோன்றத் தங்களை மிக நன்றாக அலங்கரித்துக் கொண்டு, பேதைப் பருவம்
முதலாகப் பேரிளம் பெண் பருவம் இறுதியாக உள்ள மாதர்கள் எங்குப் பார்த்தாலும்
மகிழ்ச்சியுடன் கூட்டம் கூட்டமாகக் கூடி நிறைந்து பேரொளி அமைந்த சூட்டும்
சுட்டிகையும், வாளிகையும் பொன்னாலான தோடு என்னும் ஆபரணமும் மின்னல் போல் ஒளிர,
மேலேறி நின்று தொழுவார் துயர்கொண்டு
மாலேறி நின்று மயங்குவார் - நூலேறு
தாமமே தந்து சடாதாரி நல்கானேல்
யாமமேல் எம்மை அடும் என்பார் - காமவேள்
ஆமென்பார் அன்றென்பார் ஐயுறுவார் கையெறிவார்
தாம்முன்னை நாணோடு சங்கிழப்பார் - பூமன்னும்
பொன்னரி மாலையைப் பூண்பார்அப் பூண்கொண்டு
துன்னரி மாலையாச் சூடுவார் - முன்னம்
ஒருகண் எழுதிவிட்(டு) ஒன்றெழுதா(து) ஓடித்
தெருவம் புகுவார் திகைப்பார் - அருகிருந்த
கண்ணாடி மேற்பஞ்சு பெய்வார் கிளியென்று
பண்ணாடிச் சொற்பந்துச் குற்றுரைப்பார் - அண்ணல்மேல்
கண்ணென்னும் மாசாலம் கோலிக் கருங்குழலார்
திண்ண நிறைத்தாழ் திறந்திட்டார்-ஒண்ணிறந்த
தெளிவுரை : மாளிகையின் மேல் ஏறி நின்று, உலாவரும் இறைவனைத் தொழுவார்கள். அவனை
அணைய முடியாமை கருதித் துன்பங்கொண்டு மையல் மிகுந்து அறிவு தடுமாறுவார்கள்.
சடைமுடியுடைய இப்பெருமான் தான் அணிந்துள்ள நூலில் கோத்த கொன்றை மாலையே ஆயினும்
கொடாது போவானேல் இனிமேல் வரும் இரவுப் பொழுது எம்மைக் கொன்று விடுமே என்பார்கள்.
இவன் மன்மதன்தான் என்பார்கள். அதற்கு மாறாக அல்ல என்று மறுத்துக் கூறுவார்கள்.
ஐயத்தை அடைவார்கள். கைந் நெரிப்பார்கள்.
தங்கள் பழைய நாணத்துடன் கைவளையல்களையும் இழப்பார்கள். அழகு பொருந்திய பொன்னரி
மாலையைச் சூட்டிக் கொள்வதை மறுந்து, ஆபரணம் என மயங்கிக் கழுத்தில் அணிவார்கள்.
கழுத்தில் அணியும் நினைவுடன் அந்த ஆபரணங்களை எடுத்து மயங்கிய அறிவால் பொன்னரி
மாலையாகச் சிரத்தில் சூடுவார்கள்.
முதலில் ஒரு கண்ணில் மை எழுதியதும் அவசரத்தில் மற்றொரு கண்ணிற்கு மை தீட்டாமலேயே
உலாக்காட்சி காணத் தெருவிற்கு ஓடி வருவார்கள். திகைப்படைவார்கள். அண்மையில்
இருந்த கண்ணாடியின் மேல் செம்பஞ்சை ஒத்துவார்கள்.
கிளி என்று மயக்கம் அடைந்து கையில் உள்ள பூப்பந்துக்கு இசையோடு ஆராய்ந்த
சொற்களைப் பயிற்றுவார்கள். கரிய கூந்தலையுடைய அம்மாதர்கள் பெருமையிற் சிறந்த
பெருமான் மேல் கண்கள் என்னும் பெரிய வலைகளை வீசி அது பயன்படாது போக இறுதியில்
உறுதி உடைத்தான கற்புக் கதவைத் திறந்து விட்டவராயினர்.
பேதை ( வயது 5
முதல் 7 வரை )
பேதைப் பருவம் பிழையாதாள் வெண்மணலால்
தூதைச் சிறுசோ(று) அடுதொழிலாள் - தீதில்
இடையாலும் ஏக்கழுத்த மாட்டாள் நவஞ்சேர்
உடையாலும் உள்ளுருக்க கில்லாள் - நடையாலும்
கௌவைநோய் காளையரைச் செய்யாள் கதிர்முலைகள்
எவ்வநோய் செய்யும் தொழில்பூணாள் - செவ்வனேர்
நோக்கிலும் நோய்நோக்கம் நோக்காள்தன் செவ்வாயின்
வாக்கும் பிறர்மனத்தை வஞ்சியாள் - பூக்குழலும்
பாடவந் தோன்ற முடியாள் இளவேய்ந்தோள்
ஆடவர் தம்மை அயர்வு செய்யாள் - நாடொறும்
தெளிவுரை : தூய ஒளியும் அறியாமைக்கு ஏதுவான ஏழு வயதும் கடவாதவள். சிறிய மண்
பாத்திரத்தில் வெண்மையான மணலால் சிறு சோறு சமைக்கும் விளையாட்டுத் தொழிலை
உடையவள். தீமையில்லாத இடுப்பினாலும் இறுமாந்திருத்தலைச் செய்யாள்; அழகு மிக்க
ஆடையாலும் கண்டவர் உள்ளத்தை உருகும்படி செய்யாதவள். ஆண் மக்களை நடக்கும்
அழகினாலும் வருந்தும்படி காம நோயைச் செய்ய மாட்டாள். அரும்பிய முலைகளால்
ஆடவர்க்குத் துன்பநோய் செய்கின்ற தொழிலையும் மேற் கொள்ளாள். செவ்விதின் நேர்
நின்று நோக்கினாலும் காம நோய் நேரும் வண்ணம் பார்க்கும் பார்வையை அறியாள். பவளம்
போல் சிவந்த வாயில் இருந்து வரும் மொழியாலும் அயலாரது உள்ளத்தை வஞ்சிக்க அறியாள்.
மலர் சூடிய கூந்தலையும் திறமை விளங்க முடிக்க அறியாள். ஆண் மக்களை இளமையான
மூங்கில் ஒத்த தோள்களால் மயக்கி அயர்ச்சி அடையும்படி செய்ய மாட்டாள்.
ஒன்றுரைத்(து) ஒன்றுன்னி ஒன்றுசெய்(து) ஒன்றின்கண்
சென்ற மனத்தினளாம் சேயிழையாள் - நன்றாகத்
தாலி கழுத்தணிந்து சந்தனத்தால் மெய்பூசி
நீல அறுவை விரித்துடுத்துக் - கோலஞ்சேர்
பந்தரில் பாவைகொண்டாடும்இப் பாவைக்குத்
தந்தையார் என்றொருத்தி தான்வினவ - அந்தமில்சீர்
ஈசன் எரியாடி என்ன அவனையோர்
காய்சின மால்விடைமேற் கண்ணுற்றுத் - தாய்சொன்ன
இக்கணக்கு நோக்காள் இவள்போல்வாள் காமன்நூல்
நற்கணக்கின் மேற்சிறிதே நாட்செய்தாள் - பொற்புடைய
தெளிவுரை : ஒவ்வொரு நாளும் ஒன்று சொல்லி வேறு ஒன்றை எண்ணி, வேறு ஒன்றைச் செய்து,
மாறான வேறு ஒன்றினிடத்துச் சென்ற உள்ளத்தை உடையவளாம். செவ்விய ஆபரணங்களை அணிந்த
பேதை இளம் பெண் ஒருத்தி, தனக்கு நலன் உண்டாக ஐம்படைத் தாலியை ஆன்றோர் இட்டபடி
கழுத்தில் அணிந்து, உடல் எல்லாம் சந்தனம் பூசி, நீலச் சிற்றாடையை விரித்துக்
கட்டிக் கொண்டு, இயற்கை அழகு அமைந்த பூப்பந்தல் கீழ், பதுமை போன்ற இச்சிறிய பெண்
வைத்துக் கொண்டு விளையாடும் இந்தப் பொம்மைக்குத் தந்தை யாவர் என்று ஒருத்தி
கேட்க, அக்கேள்விக்குத் தாயானவள் அளவிலாச் சிறப்புடைய அருட் செல்வன் எனப் பெறும்
அழலாடும் பெருமான்தான் இப்பதுமைக்குப் பிதா என்று கூற, அதே நேரத்தில் உலாவந்த
அப்பெருமானை, ஒப்பற்ற சினமிக்கு மதர்த்த விடைமேல் அப்பேதைச் சிறுமி கண்டு, தாய்
விளையாட்டாகக் கூறிய சொற்களின் சிறந்த பொருள் நுட்பம் அறியாதவளாய், இப்பேதை
காமனது நூலில் உரைத்த கணக்கின் மேல் சிறிது நாள்தான் பழகினவள் போன்ற உணர்வு
உற்றனள். தாலி - திருமால் கூரத்துள ஐந்து ஆயுத உருவான அணிகலன்.
பெதும்பை ( வயது 8
முதல் 11 வரை )
பேரொளிசேர் காட்சிப் பெதும்பைப் பிராயத்தாள்
காரொளிசேர் மஞ்ஞைக் கவின்இயலாள் - சீரொளிய
தாமரை ஒன்றின் இரண்டு குழையிரண்டு
காமருவி கெண்டையோர் செந்தொண்டை - தூமருவி
முத்த முரிவெஞ் சிலைசுட்டி செம்பவளம்
வைத்தது போலும் மதிமுகத்தாள் - ஒத்தமைந்த
கங்கணம் சேர்ந்திலங்கு கையாள் கதிர்மணியின்
கிங்கிணி சேர்ந்த திருந்தடியாள் - ஒண்கேழல்
அந்துகில் சூழ்ந்தசைந்த அல்குலாள் ஆய்பொதியில்
சந்தனம் தோய்ந்த தடந்தோளாள் - வந்து
தெளிவுரை : உலகியலை உணராதவள் பேதை. உணர்ந்தும், உணராதவள் பெதும்பை. இவளுக்குப்
பேதை குணம் பாதி, மங்கைப் பெண் குணத்திற் பாதி. இரண்டும் கொண்ட இவட்குப் பெதும்பை
என்று பெயரிடுவர். உலகியலை உணர்ந்தும் உணராத இவள் நிலையை எடுத்து விளக்கல் எளியது
அன்று, அதனால் தான், பயனான உலா நூலைப் பாடுபவர், பெதும்பைப் பருவத்தை விளக்கி
எப்படிப் பாடுவது என்று அறியாமல் இடர்ப்படுவர். இயன்ற வரை முயன்று பாடும் திறம்
கண்டு, பேசும் உலாவில் பெதும்பை புலி என்று அதைப் பாடினவரைப் பின்வந்தோர்
பாராட்டினர்.
அழகுடைய பேரொளியமைந்த தோற்றம் உள்ள பெதும்பைப் பருவ வயதினள் ஒருத்தி, நீல நிறம்
பொருந்திய மயில் போன்ற அழகிய சாயலை உடையவள் சிறந்த ஒளியினையுடைய ஒரு தாமரையில்
(திருமுகத்தில் என்றபடி) இரு குழைகளும், இன்பம் பொருந்திய இரண்டு சேற் கெண்டை
மீன்களும், சிவந்த ஒரு கொவ்வைக் கனியும் தூய்மை பொருந்திய முத்துக்களும் வளைந்த
கொடிய வில்லும் சுட்டிகை என்ற ஆபரணமும், சிவந்த பவள நிறத் திலகமும் வைத்து
இருக்கும் திங்கள் போன்ற திருமுகம் உடையவள். ஒன்று போல அமைந்து உள்ள, கங்கணம்
சேர்ந்து ஒளிரும் கரங்களை உடையவள். ஒளியமைந்த மணிகள் பதித்த கிண்கிணி அணிந்த
திருத்தமான கால்களையுடையவள். ஒளிரும் நிறமுடைய அழகிய ஆடை மொய்த்து அசைகின்ற
நிதம்பம் உடையவள். தமிழ் ஆயும் பொதிகை மலையில் விளைந்த சந்தனம் படிந்த விசாலித்த
தோள்களை உடையவள்.
திடரிட்ட திண்வரைக்கண் செய்த முலையாள்
கடல்பட்ட இன்னமுதம் அன்னாள் - மடல்பட்ட
மாலை வளாய குழலாள் மணம்நாறு
சோலை இளங்கிளிபோல் தூமொழியாள் - சாலவும்
வஞ்சனை செய்து மனங்கவரும் கண்ணுக்(கு)
அஞ்சனத்தை இட்டங்(கு) அழகாக்கி - எஞ்சா
மணியாரம் பூண்டாழி மெல்விரலிற் சேர்த்தி
அணியார் வளைதோள்மேல் மின்ன - மணியார்த்த
தூவெண் மணற்கொண்டு தோழியரும் தானுமாய்க்
காமன் உருவம் வரஎழுதிக் - காமன்
தெளிவுரை : (பேதைப் பருவத்து இல்லாமல் இப்பெதும்பைப் பருவத்தின் வருங்காலத்தில்)
பெரிய மலையாவதற்கு இப்போதுதான் சிறிய மேடாகத் தோன்றியதோ எனும்படியான சூதாடு கருவி
போன்ற தனங்களை யுடைவள். கடலில் தோன்றிய இனிய அமுதம் போன்றவள். இதழ் விரிந்து மலர்
மாலை சூடிய கூந்தலை உடையவள். மணம் வீசும் பூஞ்சோலையில் உள்ள கிளி போன்ற தூய மழலை
மொழியினள். பெரிதும் வஞ்சகத்தைப் புரிந்து, ஆடவர் மனத்தைக் கவர்ந்து கொள்ளும்
வாள்படை போலும் கண்களுக்கு மை எழுதி அவ்விடத்தில் அழகைத் தோற்றுவித்து, குறையாத
மணிகள் கோத்த மாலையைக் கழுத்தில் அணிந்து, மென்மையுள்ள விரல்களில் மோதிரம்
அணிந்து, அலங்காரமான வளையெனும் கடகம் தோள் மீது ஒளிர, தோழியரும் தானுமாய்த் தூய
வெள்ளை மணல் மேல் இருந்து காமன் வடிவம் தோன்ற அம்மணல் மேல் எழுதி-
கருப்புச் சிலையும் மலரம்புத் தேரும்
ஒருப்பட்(டு) உடன் எழுதும் போழ்தில் - விருப்பூரும்
தேனமரும் கொன்றையந்தார்த் தீர்த்தன் சிவலோகன்
வானமால் ஏற்றின்மேல் வந்தணையத் - தானமர
நன்றறிவார் சொன்ன நலந்தோற்று நாண்தோற்று
நின்றறிவு தோற்று நிறைதோற்று - நன்றாகக்
கைவண்டும் கண்வண்டும் ஓடக் கலைஓட
நெய்விண்ட பூங்குழலாள் நின்றொழிந்தாள் - மொய்கொண்ட
தெளிவுரை : காமனுடைய கரும்பு வில்லும் மலர்க்கணைகளும் தேரும் தோன்ற மனம்
ஒன்றுபட்டு எழுதிக் கொண்டே இருக்கும்போது, எவர்க்கும் விருப்பம் ஊற்றெடுக்கும்
தேன் நிறைந்த அழகிய கொன்றை மாலை சூடிய தூயோனாகிய சிவபெருமான் சிறந்த மதர்த்த
விடையின் மேல் அமர்ந்து தான் இருக்கும் அவ்வழியே உலாவர நோக்கி, தான் வாழ்வதன்
பொருட்டு, கல்வி கேள்விகளால் நலத்தை அறிந்த மேலோர் அருளிய நலம் இழந்து, எஞ்சி
இருந்த அறிவையும் இழந்து, நிறைவுடைமையையும் இழந்து மிகுதியாகக் கையில் உள்ள
வளையல்களும் கீழ்விழ, கண்களாகிய வண்டும் அதாவது கருவிழியும் காதளவு ஓட, ஆடையும்
ஒரு தலைக் காமத்தால் அவிழ்ந்து விழ, நெய்ப்பு மிக்க மலரணிந்த கூந்தலை யுடைய அப்
பெதும்மை விடை மேல் உள்ள பரமனைக் கண்டு நின்றபடியே தன்னை மறந்தனள் ஆயினாள்.
மங்கை ( வயது
12-13)
மங்கை யிடங்கடவா மாண்பினாள் வானிழந்த
கங்கைச் சுழியனைய உந்தியாள் - தங்கிய
அங்கை கமலம் அடிகமலம் மான்நோக்கி
கொங்கை கமலம் முகங்கமலம் - பொங்கெழிலார்
இட்டிடையும் வஞ்சி இரும்பணைத்தோள் வேயெழிலார்
பட்டுடைய அல்குலும் தேர்த்தட்டு - மட்டுவிரி
கூந்தல் அறல்பவளம் செய்யவாய் அவ்வாயில்
ஏய்ந்த மணி முறுவல் இன்முத்தம் - வாய்ந்தசீர்
வண்டு வளாய வளர்வா சிகைசுட்டிக்
கண்டி, கழுத்திற் கவின்சேர்த்திக் - குண்டலங்கள்
காதுக்(கு) அணிந்து கனமே கலைதிருத்தித்
தீதில் செழுங்கோலம் சித்திரித்து - மாதராள்
தெளிவுரை : நிறைந்த மங்கைப் பருவம் அகலாத மாண்புடைய ஒருத்தி விண்ணில் இருந்து
இறங்கிய கங்கையின் நீர்ச் சுழியை ஒத்த கொப்பூழை உடையவள், சாமுத்ரிகப்படி அமைந்த
அழகிய கைகளும் தாமரை, கால்களும் தாமரை, மான் போலும் மருண்ட பார்வையையுடைய அவளின்
தனங்கள் இரண்டும் தாமரை, திருமுகமும் தாமரை, மிக்க பேரழகு அமைந்து நெருங்கிய
சிறிய இடையும் வஞ்சிக் கொடி, பெருமை மிக்க தோள்களும் மூங்கில், எழிச்சி அமைந்த
பட்டாடை உடுத்திய நிதம்பமும் தேரினது தட்டு, மணம் விரியும் கூந்தலும் கருமணல்,
செவ்விய வாயும் பவளம், அந்த வாயில் பொருந்திய அழகிய பற்களும் சிறந்த முத்துக்கள்
ஆக விளங்கியவளாய், சிறப்புப் பொருந்தியதும் வண்டுகள் மொய்த்ததும் ஆகிய மலர்
வளர்ச்சி பெற்றதொடு மாலையைச் சூட்டிக் கொண்டு, கண்டி என்னும் ஆபரணத்தைக்
கழுத்தில் அழகு பெறச் சேர்த்து, குண்டலங்களைச் செவியில் அணிந்து பெரிய மேகலையைத்
திருத்தமுற உடுத்தி, குற்றம் இல்லாத செழுமையான இயற்கை அழகுடன் சிறந்த செயற்கை
அழகையும் சேர்த்து.
பொற்கூட்டிற் பூவையை வாங்கி அதனோடும்
சொற்கோட்டி கொண்டிருந்த ஏல்வைக்கண் - நற்கோட்டு
வெள்ளி விலங்கல்மேல் வீற்றிருந்த ஞாயிறுபோல்
ஒள்ளிய மால்விடையை மேல்கொண்டு - தெள்ளியநீர்
தாழும் சடையான் சடாமகுடம் தோன்றுதலும்
வாழுமே மம்மர் மனத்தளாய்ச் - சூழொளியான்
தார்நோக்கும் தன்தாரும் நோக்கும் அவனுடைய
ஏர்நோக்கும் தன்ன(து) எழில் நோக்கும் - பேரருளான்
தோள்நோக்கும் தன்தோளும் நோக்கும் அவன்மார்பின்
நீள்நோக்கம் வைத்து நெடிதுயிர்த்து- நாண் நோக்கா(து)
உள்ளம் உருக ஒழியாத வேட்கையாம்
வெள்ளத் திடையழுந்தி வெய்துயிர்த்தாள் - ஒள்ளிய
தெளிவுரை : ஏல்வை - சமயம். பின் அம்மங்கை நல்லாள் பொன்னாலாகிய கூட்டில் இருந்த
நாகணவாய்ப் பறவையைக் கையில் எடுத்து, அதற்குச் சொற்களைப் பேசப் பழகிக்
கொண்டிருந்த சமயத்தில் சிறந்த சிகரங்களையுடைய வெள்ளி மலையின் மேல்
எழுந்தருளியிருந்த பரிதி போன்று தூய்மையுள்ள மதர்த்த விடைமேல் அமர்ந்துள்ள
தெளிவான கங்கை தங்கிய சடையுடைய உலாவந்த சிவபெருமானது சடைமுடி அம்மங்கையின் எதிரே
தோன்றுதலும் உணர்வோடு வாழ்வாளோ? உணர்வை இழப்பாள்.
மயக்கம் கொண்ட மனத்தை உடையளாகி பேரொளி சூழ்ந்த வடிவினனாகிய பெருமான் சூடிய மாலையை
நோக்குவாள். தனது மாலையையும் நோக்குவாள். அதன்பின் அப்பரமனது அழகை நோக்குவாள்.
தன்னுடைய அழகையும் நோக்குவாள். பெருங்கருணை பெருமானது தோள்களை நோக்குவாள். தனது
தோள்களையும் நோக்குவாள். இங்ஙனம் பலமுறை ஒப்பு நோக்கியபின் அப்பரமன் திருமார்பில்
நீண்ட நேரம் பார்வையைச் செலுத்தி, பெருமூச்சு விட்டாள். பெண்களுக்கு உரிய
நாணத்தையும் கவனியாமல் மனம் உருக நீங்காத ஆசை வெள்ளத்தில் அழுந்தி வெம்மை தோன்ற
மீண்டும் ஒருமுறை பெரு மூச்சு விட்டு நின்றனள்.
மடந்தை ( வயது 14-19 வரை )
தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்தியசீர்
வாய்ந்த மடந்தைப் பிராயத்தாள் - ஏய்ந்தசீர்
ஈசன் சிலையும் எழில்வான் பவளமும்
சேய்வலங்கை வேலும் திரள்முத்தும் - பாசிலைய
வஞ்சியும் வேயும் வளர்தா மரைமொட்டும்
மஞ்சில்வரு மாமதிபோல் மண்டலமும் - எஞ்சாப்
புருவமும் செவ்வாயும் கண்ணும் எயிறும்
உருவ நுசுப்பும்மென் தோளும் - மருவினிய
கொங்கையும் வாண்முகமு மாக்கொண்டாள் கோலஞ்சேர்
பங்கயப் போதனைய சேவடியாள் - ஒண்கேழல்
வாழைத்தண் டன்ன குறங்கினாள் வாய்ந்தசீர்
ஆழித்தேர்த் தட்டனைய அல்குலாள் - ஊழித்
திருமதியும் மற்றொன்றாம் என்று முகத்தை
உருவுடைய நாண்மீன்சூழ்ந் தாற்போல் - பெருகொளிய
தெளிவுரை : தூய்மையுள் பொருள் துறை நிரம்பிய இனிய தெய்வத் தமிழின் வடிவினளான
திருத்தமான சிறப்பு அமைந்த மடந்தைப் பருவமக உடையவள் ஒருத்தி, சிறப்புப் பொருந்திய
சிவபெருமான் வில்லையும் எழில் மிக்க பவளத்தையும், முருகனுடைய வலத்திருக்கரத்துள்ள
வேற்படையையும், திரட்சியான முத்துக்களையும் பசிய இலைகள் உள்ள வஞ்சிக் கொடியையும்
மூங்கிலையும் வளர்ந்த தாமரை அரும்பையும் மேகத்தின் மேல் வரும் சிறந்த சந்திர
மண்டலத்தையும் முறையே ஒத்துள்ள,
தோலாத புருவமும், சிவந்த வாயும், கண்ணும், பற்களும் சிறுத்த இடையும், மேல் தோளும்
சேர்ந்துள இனிய தனங்களும் ஒளியுடைய முகமுமாகக் கொண்டு இருப்பவள். செயற்கை அழகு
சேர்ந்த தாமரை மலரை ஒத்த சிவந்த பாதங்களை உடையவள். ஒளி மிக்க வாழைத் தண்டை ஒத்த
தொடையை உடையவள். சிறப்பு அமைந்த சக்கரங்களையுடைய தேர்த்தட்டைப் போன்ற நிதம்பத்தை
உடைய அம்மங்கை முறையாக வளர்ந்த வேறு ஒரு முழுத்திங்கள் போலும் என்று மயங்கி
நிறமுடைய விண்மீன்கள் அவள் முகத்தைச் சூழ்ந்திருப்பதுபோல்,
முத்தாரங் கண்டத்(து) அணிந்தாள் அணிகலங்கள்
மொய்த்தார வாரம் மிகப் பெருகி - வித்தகத்தால்
கள்ளும் கடாமும் கலவையும் கைபோந்திட்(டு)
உள்ளும் புறமும் செறிவமைத்துத் - தெள்ளொளிய
காளிங்கம் சோதி கிடப்பத் தொடுத்தமைத்த
தாளிம்பத் தாமம் நுதல்சேர்த்தித் - தோளெங்கும்
தண்ணறும் சந்தனம் கொண்(டு) அப்பிச் சதிர்சாந்தை
வண்ணம் பெறமிசையே மட்டித்தாங்(கு) ஒண்ணுதலாள்
தன்னமர் தோழியர்கள் சூழத் தவிசேறிப்
பின்னுமோர் காமரம் யாழ் அமைத்து - மன்னும்
விடவண்ணக் கண்டத்துவேதியன் மேல் இட்ட
மடல்வண்ணம் பாடும் பொழுதீண்(டு) அடல்வல்ல
வேல்வல்லான் வில்வல்லான் மெல்லியலார்க்(கு) எஞ்ஞான்றும்
மால்வல்லான் ஊர்கின்ற மால்விடையின் - கோல
தெளிவுரை : மிக்க ஒளி செய்கின்ற முத்து மாலைகளைக் கழுத்தில் அணிந்தாள், மற்ற
ஆபரணங்களையும் நிரம்ப அணிந்து, பேரொளியை மிகுதியாகத் தோற்றுவித்து, அறிவின்
திறமையால் தேனையும் மான் மதத்தையும் கலவைச் சாந்தையும் பூசி, உள்ளத்தும்
புறத்தும் நிறைவு கொண்டு தெளிந்த ஒளியினையுடைய கலிங்க தேயப்பட்டுச் சேலை மிக்கு
ஒளிர உடுத்தி, பொருந்திய நுதலணி வரிசைகளை நெற்றியில் சேர்த்து, தோள் முழுதும்
குளிர்ந்த மணம் வீசும் சந்தனத்தை எடுத்து நிரம்பப் பூசி, ஒளியுடைய புருவம் உள்ள
அம் மடந்தை நிரம்பப் பூசி, ஒளியுடைய புருவம் உள்ள அம் மடந்தை நல்லாள் அழகிய
கூட்டுச் சாந்தைப் பொலிவு பெற மேல் எல்லாம் அப்பிய வண்ணம்,
தன்னை விரும்பிய தோழிகள் சூழ்ந்திருக்க ஒரு பீடத்தில் அமர்ந்து, உணர்வை ஒருமுகப்
படுத்துகின்ற ஒப்பற்ற சீகாமரம் என்னும் பண்ணை வீணையில் சேர்த்துப் பொருந்திய
அழகுடைய திருநீலகண்டப் பெருமான் மேல் பாடியுள்ள மடல் வண்ணம் என்னும்
பிரபந்தத்தைப் பாடிக் கொண்டே இருந்த சமயம்,
நெருங்கி வெல்லும் வன்மை வாய்ந்த வேற்படை ஏந்திய வல்லாளன், வில்படை ஏந்திய
வல்லாளன் மென்மை இயல்புள மாதரார்க்கு எக்காலத்தும் காம மயக்கம் செய்யும் வல்லாளன்
எக்காலத்தும் காம மயக்கம் செய்யும் வல்லாளன் எதிர் செலுத்துகின்ற மதர்த்த
விடையின்,
மணியேறு கேட்டாங்கு நோக்குவாள் சால
அணியேறு தோளானைக் கண்டாங்(கு) - அணியார்ந்த
கோட்டி ஒழிய எழுந்து குழைமுகத்தைக்
கோட்டி நுதல்சிவப்ப வாய்துலக்கி - நாட்டார்கள்
எல்லாருங் கண்டார் எனக் கடவுள் இங்காயம்
நல்லாய் படுமேல் படுமென்று - மெல்லவே
செல்ல லுறுஞ்சரணம் கம்பிக்கும் தன்னுறுநோய்
சொல்லலுறும் கொல்லி உடைசெறிக்கும் - நல்லாகம்
காணல் உறுங்கண்கள் நீர்மல்கும் காண்பார்முன்
நாணல் உறும்நெஞ்சம் ஒட்டாது - பூணாகம்
புல்லலுறும் அண்ணல்கை வாரான்என்(று) இவ்வகையே
அல்ல லுறும் அழுந்தும் ஆழ்துயரால் - மெல்லியலாள்
தன்னுருவம் பூங்கொன்றைத் தார்கொள்ளத் தான் கொன்றைப்
பொன்னுருவம் கொண்டு புலம்புற்றாள் -பின்னொருத்தி
தெளிவுரை : கழுத்திற் கட்டிய அழகிய மணியின் பேரோசையைக் கேட்டதும் அவ்விடத்தை
உற்றுப்பார்த்தவள் அழகு மிக்க தோள்களையுடைய உலாவந்த பரமனைக் கண்டாள். கண்டதும்
பொலிவு நிறைந்த கூட்டத்தை விட்டு எழுந்து குழைவு உடைய முகத்தைப் பொலிவு குன்றச்
சுளித்து, நெற்றி சிவப்பேற வாய்திறந்து தோழியை நோக்கி, சிறந்த தோழியே! அந்த எனது
பெருமான் இவ்விடத்தில் வந்ததை மென் மேலும் கண்ணெச்சில் படும் போலும், என்று
இவ்வண்ணம் தோழியிடம் சொல்லிக் கொண்டே மெதுவாகப் பரமனை நோக்கிச் செல்ல அடியெடுத்து
வைப்பாள்.
நடக்கும் போதே இரண்டு கால்களும் நடுக்கம் அடைவாள். தனக்கு நேர்ந்த காதல் நோயைத்
தோழியிடம் சொல்லத் தொடங்குவாள். சொல்லித் தடை நேர்படுத்திக் கொள்வாள். இறைவனது
சிறந்த திருமார்பைக் காணத் தொடங்குவாள். கண்களில் நீர் நிரம்பப் பெருக்குவாள்.
நோக்குவார் எதிரில் பெரிது நாணம் கொள்வாள். மனம் பொருந்தாமல் ஆபரணம் அணிந்த தன்
மார்பைத் தானே தழுவுவாள். பெருமான் தன் கைக்கு அகப்படான் என்று எண்ணி இவ்வண்ணமே
பெரிது வருந்துவாள்.
மிக்க துன்பத்தால் நைகின்ற அம் மடந்தை தனது தேகத்தில் அப்பரமனது கொன்றை மலர்
மாலையைச் சூட்டிக் கொள்ள நினைத்து, தான் கொன்றையின் பொன்னிறத்தை அடைந்தாளாய்க்
கதறலானாள்.
அரிவை ( வயது 20
முதல் 24 வரை )
செங்கேழல் தாமரைபோல் சீறடியாள் தீதிலா
அங்கேழ் அரிவைப் பிராயத்தாள் - ஒண்கேழல்
திங்களும் தாரகையும் வில்லும் செழும்புயலும்
தங்கொளிசேர் செவ்வாயும் உண்மையால் - பொங்கொளிசேர்
மின்னார்வான் காட்டும் முகவொளியாள் மெய்ம்மையே
தன்னாவார் இல்லாத் தகைமையாள் - எந்நாளும்
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பென்னும் - சொல்லாலே
அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலை மேல்
மல்கிய சாந்தொடு பூண்புனைந்து -
தெளிவுரை : சிவந்த நிறம் உள்ள தாமரை போன்ற சிறிய பாதங்களை உடையவளான குற்றம்
இல்லாத அழகிற் சிறந்த அரிவைப் பருவம் உடைய வேறு ஒருத்தி, ஒண்மை நிறம் உள்ள முகில்
கூட்டமும், நிலைத்த ஒளி அமைந்த செவ்வாய்க் கிரகமும் கொண்டு இருத்தலினால் (இவை
முறையே நுதல், முத்து மாலையும் பல்வரிசையும், புருவம், கூந்தல், வாய் ஆகியவற்றைக்
குறிக்கும்) மிக்க ஒளி பொருந்திய மின்னல் அமைந்த வானத்திற்கு எடுத்துக்காட்டாக
உள்ள திருமுகத்தை உடையவள். மெய்ம்மையாகவே தனக்கு ஒப்பானவர் இல்லாத தகுதியை
உடையவள்.
என்றைக்கும் பொருள் இல்லாத ஏழைகளை எத்தகையோரும் இகழ்வர், செல்வரை எல்லாரும்
சிறப்புச் செய்வர் எனப்பெறும் சொற்களை அறிந்திருப்பதனால் நிதம்பத்தைச்
சூழ்ந்திருக்கும்படி மிக உயர்ந்த மேகலையைச் சுற்றிக் கட்டினாள். அழகிய தனங்களின்
மேல் நிரம்பிய மணம் வீசும் கலவைச் சந்தனம் பூசி, மேலும் பல ஆபரணங்களையும்
அணிந்து,
இடையிடையே உள்ளுருகக் கண்டாள் எழிலார்
நடைபெடை அன்னத்தை வென்றாள் - அடியிணைமேல்
பாடகங் கொண்டு பரிசமைத்தாள் பன்மணிசேர்
சூடகம் முன்கை தொடர்வித்தாள் - கேடில்சீர்ப்
பொன்னரிமாலை தலைக்கணிந்து பூண்கொண்டு
மன்னுங் கழுத்தை மகிழ்வித்தாள் - பொன்னனாள்
இன்னிசை வீணையை வாங்கி இமையவர்தம்
அண்ணல்மேல் தானிட்ட ஆசையால் - முன்னமே
பாடல் தொடங்கும் பொழுதில் பரஞ்சோதி
கேடிலா மால்விடைமேல் தோன்றுதலும் - கூடிய
தெளிவுரை : மிகச் சிறுத்திருந்த இடை, பாரம் தாங்காமல் வரவர வருந்தித் தேய்வுற்றது
என்னும்படி செய்தாள். அழகு நிறைந்த நடையால் பெண் அன்னத்தை வென்றவள் இரண்டு
கால்களில் பாடகம் என்னும் அணியை எடுத்து, சிறப்புற அணிந்தாள். பல மணிகள் பதித்த
சூடகம் என்னும் வளையை முன்னங் கையில் தொடர்பு உண்டாகும் படி அணிந்தாள். கெடுதி
யில்லாப் பெருமையுள்ள பொன்னரி மாலையைத் தலையில் அணிந்து, ஆபரணத்தை எடுத்து
நிறைந்த கழுத்தை மகிழச் செய்தாள். திருமகளை ஒத்த அந்த அரிவை, இனிய இசையை யுடைய
வீணையை எடுத்து இசை கூட்டி, தேவர்களுடைய பெருமான்மீது தான் முன்னரேயே
வைத்திருக்கும் காதல் காரணமாகப் பாட்டொன்று பாடத் தொடங்கும் நேரத்தில் மேலான
ஒளிப் பிழம்பினனாக உலா வந்த சிவபிரான் கெடுதல் இல்லா மதர்த்த விடை மேல் காட்சி
யளித்தலும்
இன்னிசையும் இப்பிறப்பும் பேணும் இருந்தமிழும்
மன்னிய வீணையும் கைவிட்டுப் - பொன்னனையீர்
இன்றன்றே காண்ப(து) எழில் நலம் கொள்ளேனேல்
நன்றன்றே பெண்மை நமக்கென்று - சென்றவன்தன்
ஒண்களபம் ஆடும் ஒளிவாள் முகத்திரண்டு
கண்களபம் ஆடுவபோல் கட்டுரைத்தும் - ஒண்கேழல்
கூந்தல் அவிழ்க்கும் முடிக்கும் கலைதிருத்தும்
சாந்தம் திமிரும் முலையார்க்கும் - பூந்துகிலைச்
சூழும் அவிழ்க்கும் தொழும் அழும் சோர்துயருற்(று)
ஆழும் அழுந்தும் அயாவுயிர்க்கும் - சூழ்ஒளிய
அங்கை வளைதொழுது காத்தாள் கலைகாவாள்
நங்கை இவளும் நலந்தோற்றாள் - அங்கொடுத்தி
தெளிவுரை : நேர்ந்த நயமான இசையையும் இந்தப் பெண்மைப் பிறப்பையும், மேற் கொண்ட
மேன்மையான தமிழையும் நிலை பெற்ற வீணையையும் கை நழுவச் சோர விட்டு, திருமகளை ஒத்த
தோழியர்காள், அழகு இன்றைக்குத்தான் அல்லவா பயனைக் கண்டதாயிற்று. இத்தலைவனைக்
கணவனாகக் கொள்ளேனாயின் இப்பெண்மைப் பிறப்பு நமக்கு இருந்தும் பயனில்லை அன்றோ
என்று கூறியபடியே சென்று, அந்த இறைவனுடைய சிறந்த திருநீறு தோய்ந்த மிக்க ஒளியுடைய
திருமுகத்தில் கலத்தல் செய்வது போல இரண்டு கண்களால் தன் கருத்தைக் கூறி,
ஒளியுடைய கருத்த நிறம் வாய்ந்த கூந்தலை அவிழ்ப்பாள்; மீட்டும் முடிப்பாள்.
ஆடையைத் திருத்தப் படுத்துவாள். சந்தனம் பூசும் தனங்களை நெருக்குவாள். அழகிய
ஆடையைக் கட்டுவாள். மீட்டும் அவிழ்ப்பாள்; வணங்குவாள்; அழுவாள்;
சோர்வடையும்படியான துன்பம் அடைந்து ஆழ்வாள். மீட்டும் கரை ஏறமுடியாதபடி அழுந்தி
விடுவாள்; அயர்ச்சியோடு பெரு மூச்சு விடுவாள்.
சூழ்ந்த ஒளியையுடைய அழகிய கைவளையல்களைக் காத்தனள். ஆடையைக் காக்க முடியாதவள்
ஆயினாள். எனவே பெண் மக்களிற் சிறந்த இவ் அரிவையும் நலன் அனைத்தும் இழந்தவளாகி
நின்றிட்டாள்.
தெரிவை ( வயது 25
முதல் 30 வயதுவரை )
ஆரா அமுதம் அவயவம் பெற்றனைய
சீரார் தெரிவைப் பிராயத்தாள் - ஓரா
மருளோசை இன்மழலை வாய்ச்சொலால் என்றும்
இருள்நீர் புலரியே ஒப்பாள் - அருளாலே
வெப்பம் இளையவர்கட்(கு) ஆக்குதலால் உச்சியோ(டு)
ஒப்பமையக் கொள்ளும் உருவத்தாள் - வெப்பம் தீர்ந்(து)
அந்தளிர்போல் சேவடியும் அங்கையும் செம்மையால்
அந்திவான் காட்டும் அழகினாள்-அந்தமில்
சீரார் முகம்மதியம் ஆதலால் சேயிழையாள்
ஏரார் இரவின் எழில்கொண்டாள் - சீராரும்
கண்ணார் பயோதரமும் நுண்ணிடையும் உண்மையால்
தண்ணிளங் காரின் சவிகொண்டாள் - வண்ணஞ்சேர்
மாந்தளிர் மேனி முருக்கிதழ்வாய் ஆதலால்
வாய்ந்த இளவேனில் வண்மையாள் - மாந்தர்
அறிவுடையீர் நின்மின்கள் அல்லார்போம் என்று
பறையறைவ போலும் சிலம்பு - முறைமையால்
தெளிவுரை : தெவிட்டாத அமுத அவயவங்கள் பெற்றிருப்பதை ஒத்த சிறப்பமைந்த தெரிவைப்
பருவத்தை உடையவளாய் ஒருத்தி, உணர்தலுக்கு உரிய மருண்ட ஒலியையுடைய இனிய மழலை
மொழியான வாய்ச் சொற்களால் இருள் நீங்கிய காலைப் பொழுதை ஒத்தவள். ஆசையால்
வெப்பத்தை இளம் காளைகட்குச் செய்தலால் உச்சிப் பொழுதுடன் சமநிலையாகக் கொண்ட
உருவம் உடையவள்.
வெம்மை நீங்கி அழகிய மாந்தளிர் போலும் செவ்விய பாதங்களும், உள்ளங் கைகளும்
சிவந்திருக்கும் தன்மையால் அந்திப் பொழுதின் சிறப்பைக் காட்டும் அழகினை உடையவள்.
அழிவு இல்லாச் சிறப்பு நிறைந்த திருமுகம் மதிபோன்று அமைந்திருத்தலால் எழுச்சி
நிறைந்த இராப் பொழுதின் அழகைக் கொண்டவள்.
சிறப்பு நிறைந்து காம்பு அமைந்த பயோதரமும் நுண்ணிய இடையும் கொண்டிருத்தலால்
குளிர்ந்த இளமையான மேகத்தின் அழகைக் கொண்டவள். நிறம் பொருந்திய மாந்தளிர் போலும்
மேனியையும் முருக்கம் பூவின் இதழைப் போன்ற வாயையும் உடையவள். ஆதலினால் இளவேனில்
பருவமாக அமைந்த வளம் உடையவள்; ஆண் மக்களில் அறிவுடையவர்களே நில்லுங்கள் அத் திடம்
இல்லாதவர்கள் செல்லுங்கள் என்று பறை அடிப்பது போன்ற சிலம்புகளை,
சீரார் திருந்தடிமேல் சேர்த்தினாள் தேர்அல்குல்
ஓராது அகவல் உறாதென்று - சீராலே
அந்துகிலும் மேகலையும் சூழ்ந்தாள் அணிமுலைகள்
மைந்தர் மனங்கவரும் என்பதனால் - முந்துறவே
பூங்கச்சி னால் அடையப் பூட்டுறீஇப் பொற்றொடியால்
காம்பொத்த தோளிணையைக் காப்பேவி - வாய்ந்தசீர்
நற்கழுத்தை நல்லாரத் தால்மறைத்துக் காதுக்கு
விற்பகரும் குண்டலங்கள் மேவுவித்து - மைப்பகரும்
காவியங் கண்ணைக் கதந்தணிப்பாள் போலத்தன்
தாவிய அஞ்சனத்தை முன்னூட்டி - யாவரையும்
ஆகுலம் ஆக்கும் அழகினாள் அன்னமும்
கோகிலமும் போலும் குணத்தினாள் - ஆகிப்
பலகருதிக் கட்டி கரியவாய்க் கோடி
அலர் சுமந்து கூழைய ஆகிக் - கலைகரந்து
உள்யாதும் இன்றிப் புறங்கமழ்ந்து கீழ்தாழ்ந்து
கள்ளாவி நாறும் கருங்குழலாள் - தெள்ளொளிய
தெளிவுரை : சிறப்புப் பொருந்திய திருத்தமான பாதங்களில் அணிந்தாள். தேர்த்தட்டு
போன்ற நிதம்பம் நினையாமல் செல்லுதல் கூடாது என்று எண்ணிச் சிறப்பு முறையாமல்
அழகிய ஆடையையும் மேகலையையும் சுற்றி அணிந்தாள்.
அழகிய தனங்கள் ஆடவர் மனத்தைக் கவர்ந்து விடும் என்ற எண்ணத்தால் முதலிலேயே
மென்மையான இரவிக்கையால் முழுதும் கட்டி, பொன்னால் ஆகிய தொட்டியை எடுத்து மூங்கில்
ஒத்த இருதோள்களுக்குக் காவல் வைத்ததென அணிந்து, (காம்பு-மூங்கில்)
சீர்த்தி அமைந்த சிறந்த கழுத்தை உயர்ந்த முத்தாரம் அணிந்தமையால் மறைத்து,
செவிகளுக்கு ஒளி மிக்கதென எவராலும் சொல்லப் பெறும் குண்டலங்களை விரும்பி அணிந்து,
கருங்குவளை மலர் போன்றது எனும் அழகிய கண்களை வெம்மை தணிக்க முயன்றவள் போல, தான்
செய்தமையை முதலில் கண்களுக்கு இட்டு, எவரையும் துன்பத்தில் சேர்க்கும் அழகு
உடையவள்.
அன்னத்தையும் கோகிலத்தையும் ஒத்த குணம் உடையவளாய்ப் பலவகையாகச் சிந்தனை செய்து
முடிந்து, கருமை நிறம் உடையதாய், எண்ணிலா மலர்களைத் தாங்கிப் பின் பாகத்தில்
இருப்பதாய், சிறிதும் ஆடையின் உட்புறத்தில் இல்லாமல், புறத்தில் மணம் வீசி,கீழ்
நோக்கித் தொங்கி, தேன் மணம் வீசும் கருமையுள்ள கூந்தலை உடையவள்.
செங்கழுநீர்ப் பட்டுடுத்துச் செங்குங் குமம்எழுதி
அங்கழுநீர்த் தாமம் நுதல்சேர்த்திப் -பொங்கெழிலார்
பொற்கவற்றின் வெள்ளிப் பலகை மணிச்சூது
நற்கமைய நாட்டிப் பெரும்பொழுதில் - விற்பகரும்
தோளான் நிலைபேறு தோற்றங்கே டாய்நின்ற
தாளான் சடாமகுடம் தோன்றுதலும் - கேளாய
நாணார் நடக்க நலத்தார்க்(கு) இடையில்லை
ஏணார் ஒழிக எழில் ஒழிக - பேணும்
குலத்தார் அகன்றிடுக குற்றத்தார் வம்மின்
நலத்தீர் நினைமினீர் என்று - சொலற்கரிய
தேவாதி தேவன் சிவனாயில் தேன்கொன்றைப்
பூவார் அலங்கல் அருளாது - போவானேல்
கண்டால் அறிவன் எனச்சொல்லிக் கைசோர்ந்து
வண்டார்பூங் கோதை வளந்தோற்றாள் - ஒண்டாய
தெளிவுரை : தெள்ளிய ஒளியுடைய செங்கழுநீர் மலர் போலும் நிறமுடைய பட்டுச் சேலையை
உடுத்தி, சிவந்த குங்குமப் பொட்டு இட்டு, அழகிய கழுநீர் மாலை என்னும் ஆபரணத்தை
நெற்றியில் அணிந்து மிகுதியான பொலிவு அமைந்த பொன்னால் ஆன தாயக் கட்டையால்
வெள்ளிப் பலகையில் மணிகளாலான சூதாடு காய்களை நன்கு பொருந்த வைத்துச் சூதுபோர்
ஆடிக் கொண்டிருந்த போது,
ஒளிவீசும் தோள்களையுடையவனும் படைப்பு, காப்பு, அழிப்பு ஆகிய முத்தொழிலும்
செய்வதாய் நின்ற திருவடிகளையுடைய பெருமானது சடை முடிதோன்றவும் தன்வசம் கெட்டாள்
ஆகலின், சுற்றத்தினரான அச்சம் மடம் பயிர்ப்போடு கூடிய நாணமே செல். சிறப்பு
என்னும் ஒன்று இங்குத் தங்குதற்கும் இனி இடம் இல்லை. திடம் என்பவரே! செல்வீராக!
அழகே, நீங்குக. என்னைக் காக்கும் வரிசையில் இருப்பார் எல்லாம் நீங்குக. குற்றம்
என்பவர்களே வாருங்கள் சிறப்புடைய நாணம் திடம் அழகு முதலியவர்களே நீங்கள் என்னை
மறவாது நினையுங்கள் என்று சொல்லிக் கொண்டே,
பவனி வந்தவன் சொற்களால் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத தேவர்கட்கு எல்லாம்
ஆதிமூர்த்தியான சிவபிரான் எனில் (கொன்றை மாலையைக் கொடுப்பான்.) தேன் நிறைந்த
கொன்றைப் பூக்களால் ஆன நிறைந்த மாலையைக் கொடுக்காமல் போவானாயின், அவன் என்னை
நோக்கினால் அவனை நான் ஒரு கை பார்க்கின்றேன் என்று கூறி, மிக்க சோர்வடைந்து,
வண்டுகள் ஆரவாரிக்கும் பூமாலை சூடிய கூந்தல் தெரிவை, தன் பெண்மை வளம் அழிந்து
நின்றிட்டாள்.
பேரிளம்பெண் ( வயது 31
முதல் 40 வரை )
பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள்
பண்ணமரும் இன்சொல் பணிமொழியாள் - மண்ணின்மேல்
கண்டுகேட்(டு) உண்(டு) உயிர்த்(து) உற்றறியும் ஐம்புவனும்
ஒண்டொடி கண்ணே யுளவென்று - பண்டையோர்
கட்டுரையை மேம்படுத்தாள் கண்ணாடி மண்டலம்போல்
விட்டிலங்கு நல்லுகிர்சேர் மெல்விரலாள் - கட்டரவம்
அஞ்சப் பரந்தகன்ற அல்குலாள் ஆய்நலத்த
வஞ்சிக் கொடி நுடங்கும் நுண்ணிடையாள் - எஞ்சாத
பொற்செப்(பு) இரண்டு முகடு மணியழுத்தி
வைத்தன போல வளர்ந்தேந்தி - ஒத்துச்
சுணங்கும் திதலையும் சூழ்போந்து கண்டார்க்(கு)
அணங்கும் அமுதமாய்த் தோன்றி - இணங்கொத்த
தெளிவுரை : ஒளி பரவிய பெண்மை உலகுக்கே அரசத் தானமாகப் பிறந்த பேரிளம் பெண்
பருவத்தாள் ஒருத்தி, இசையும் விரும்பத் தக்க இனிய சொல்லும் பணிவான மொழியும்
உடையவள். நிலவுலகில் கண்டும், கேட்டும், சுவைத்தும், மோந்தும், தீண்டியும்
விஷயங்களை அனுபவிக்கும் ஐம்புலனும் இவ் ஒளி பொருந்திய வளையலை உடையாளிடத்தே உள்ளன
என்று சொல்லும் மேலோர் வாய்மை மொழியை மேன்மையாகும்படி செய்யும் தோற்றத்தினை
உடையவள்.
வட்டாகாரமான கண்ணாடிபோல விட்டுவிட்டு ஒளிரும் தூய நகங்கள் அமைந்த மேன்மையான
விரல்களையுடையவள், திரண்ட படமெடுக்கும் பாம்பும் அஞ்சும்படி பரவி அகன்றுள்ள
நிதம்பத்தை உடையவள். ஆராயும் நலம் உடைய வஞ்சிக் கொடி போலத் துவள்கின்ற சிறுத்த
இடையை உடையவள்.
குறைவு இல்லாத பொன்னாலாகிய இரண்டு முழுக் குடத்தின் அதாவது பூரண கலசத்தின்
உச்சியில் நீலமணியைப் பதித்து வைத்திருப்பது போல வளர்ச்சி பெற்றுள்ள நரம்புகளைச்
சுமந்து, சமமாகி, மென்மையும் தேமலும் சுற்றிலும் நிறைந்து, நோக்கினார்க்கு
வருத்தமும், அமுதமுமாக்கக் காணப்பட்டு,
கொங்கையாள் கோலங்கட்(கு) எல்லாம் ஓர் கோலமாம்
நங்கையாள் நாகிளவேய்த் தோளினாள் - அங்கையால்
காந்தட் குலம்பழித்தாள் காமவேள் காதலாள்
சாந்தம் இலங்கும் அகலத்தாள் - வாய்ந்துடனே
ஏய்ந்து குவிந்து திரண்டு மறிந்திருபால்
தேய்ந்து துடித்த செழும்பவளும் - காய்ந்திலங்கி
முத்தமும் தேனும் பொதிந்து முனிவரையும்
சித்தந் திறைகொள்ளும் செவ்வாயாள் - ஒத்து
வரிகிடந்(து) அஞ்சனம் ஆடி மணிகள்
உருவம் நடுவுடைய வாகிப் - பெருகிய
தண்ணங் கயலும் சலஞ்சலமும் தோன்றுதலால்
வண்ணம் கடலனைய வாட்கண்ணாள் - ஒண்ணிறத்த
தெளிவுரை : ஒன்றுடன் ஒன்று நெருங்கி ஒத்துள்ள தனங்களை உடையவள். அழகுடைய
அனைத்திற்கும் ஒப்பற்ற அழகினையுடைய பெண் மக்களிற் சிறந்தவள். சிறிய மூங்கில் ஒத்த
இரு தோள்களை உடையவள். கைகளின் அழகால் காந்தள் மலர்த் தொகுதியைத் தோற்கச்
செய்தவள். மன்மதன் விரும்பும் இரதி போல்வாள். சந்தனம் பூசி ஒளிரும் மார்பை
உடையவள்.
இரண்டாக அமைந்து, ஒப்பாகி, குவிவு பெற்று, திரட்சி யுற்று, மடங்கி இருமுனையிலும்
தேய்வு பெற்றுத் துடித்துக் கொண்டிருக்கின்ற செழுமையான பவளம் போன்ற உதடுகளும்,
மிக்கு ஒளிரும் பற்களாகிய முத்துக்களும், ஊறல் நீரான தேனும் நிறைந்து, முனிவர்
மனத்தையும் கப்பமாகக் கொள்ளும் சிவந்த வாயினை உடையவள்.
செவ்வரிகள் சமமாகப் படர்ந்து, அஞ்சனம் பூசி, கரு விழிகளான நீல மணிகளின் உருவம்
நடுவில் இருப்பதாய், பிறழ்ச்சியாலும் ஒளியாலும் மிக்க குளிர்ந்த அழகிய கயல்
மீனும், சலஞ்சலம் என்ற வெண் சங்கும் வெள்ளை விழிகளாகக் காணப்படுதலினால் கடலின்
தன்மை ஒத்த ஒளிவீசும் கண்களை உடையவள்.
குண்டலஞ்சேர் காதினாள் கோலக் குளிர்மதிய
மண்டலமே போலும் மதிமுகத்தாள் - வண்டலம்ப
யோசனை நாறு குழலாள் ஒளிநுதல் மேல்
வாசிகை கொண்டு வடிவமைத்தாள் - மாசீல்சீர்ப்
பாதாதி கேசம் பழிப்பிலாள் பாங்கமைந்த
சீதாரி கொண்டுதன் மெய்புகைத்தாள் - மாதார்ந்த
பண்கவரும் சொல்லார்பல் லாண்டேத்தப் பாயொளிசேர்
வெண்கவரி வெள்ளத் திடையிருந்து - ஒண்கேழற்
கண்ணவனை அல்லாது காணா செவிஅவன(து)
எண்ணருஞ்சீர் அல்ல(து) இசைகொள்ளா - அண்ணல்
கழலடி அல்லது கைதொழா அஃதான்(று)
அழல் அங்கைக் கொண்டான்மாட்(டு) அன்பென்(று) - எழிலுடைய
தெளிவுரை : ஒண்மை நிறம் உள்ள குண்டலங்கள் சேர்ந்திருக்கும் செவிகளை உடையவள்.
சிறந்த குளிர்ச்சியுள்ள மதிமண்டலம் போன்ற மதிக்கத்தக்க திருமுகமுடையவள். வண்டுகள்
ஒலிக்க ஒரு யோசனை தூரம் மணம் வீசும் கூந்தலையுடையவள். ஒளியுடைய நெற்றியின் மேல்
வாசிகை என்னும் ஆபரணத்தைச் சேர்த்துச் செயற்கை அழகைச் செய்தவள்.
குற்றம் இல்லாச் சீர்த்தியும் அடி முதல் முடி வரை பழிப்புச் சொல்லற்கு இல்லாத
சாமுத்ரிக இலக்கணமும் அமைந்தவள். தகுதியாக அமைந்து உள்ள சீதாரி என்னும் வாசனையை
எடுத்து உடம்பிற்குப் புகை ஊட்டினாள். அழகு நிறைந்த இசையையும் வயப்படுத்தத் தக்க
மொழிகளையுடைய தோழியர்கள், பல்லாண்டு பாட பரவிய ஒளி பொருந்திய வெண்சாமரை எடுத்துப்
பலர் வீச அக்கூட்டத்தின் நடுவில் இருந்து,
ஒளிரும் நிறமுடைய என் கண்களானவை அப்பரமனை அல்லாது வேறு ஒன்றையும் காணாது.
என்னுடைய செவிகள் அந்த இறைவனது நினைத்தற்கு அரிய புகழை அல்லாது வேறு எவர்
புகழையும் ஏற்காது. பெருமையிற் சிறந்த சிவபிரானது வீரக்கழல் அணிந்த திருவடிகளை
அல்லாமல் வேறு எவரையும் எனது கைகள் கும்பிடாது. அழகிய திருக்கரத்தில் அழல்
ஏந்திய பெருமானிடத்துக் கொண்ட என் மனத்து அன்பு அதுவேயாம்.
வெண்பா விரித்துரைக்கும் போழ்தில் விளங்கொளிசேர்
கண்பாவு நெற்றிக் கறைக்கண்டன் - விண்பால்
அரியரணம் செற்றாங்(கு) அலைபுனலும் பாம்பும்
புரிசடைமேல் வைத்த புராணன் - எரியிரவில்
ஆடும் இறைவன் அமரர்குழாம் தற்சூழ
மாட மறுகில் வரக்கண்டு - கேடில்சீர்
வண்ணச் சிலம்படி மாதரார் தாமுண்ட
கண்ணெச்சில் எம்மையே ஊட்டுவான் - அண்ணலே
வந்தாய் வளைகவர்ந்தாய் மாலும் அருந்துயரும்
தந்தாய் இதுவோ தகவென்று - நொந்தாள்போல்
கட்டுரைத்துக் கைசோர்ந்(து) அகமுருகி மெய்வெளுத்து
மட்டிவரும் பூங்கோதை மால்கொண்டாள் - கொட்டிமைசேர்
பண்ணாரும் இன்சொல் பணைப்பெருந்தோள் செந்துவர்வாய்ப்
பெண்ஆர வாரம் பெரிதன்றே - விண்ஓங்கி
மஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலா வீற்றிருந்த
செஞ்சடையான் போந்த தெரு.
தெளிவுரை : என்று சொல்லும் அழகுடைய வெண்பாவை விரிவாக இப்பேரிளம் பெண் பாடிக்
கொண்டிருக்கும் அவ்வமயம், விளக்கம் தங்கிய ஒளி பொருந்திய கண் பரவியிருக்கும்
நெற்றியை உடையவனும், திருநீல கண்டனும், ஆகாயத்து இருந்த முப்புரங்கள் எனப்படும்
மாற்றார் மதில்களைப் புன்னகையால் அழித்தவனும், அலைகளையுடைய கங்கையையும்
அரவினங்களையும் முறுக்கேறிய அச்சடை முடிமேல் வைத்திருக்கின்ற மிகப் பழையவனும்,
சர்வ சம்கார காலத்து நள்ளிரவில் தாண்டவம் செய்பவனும் ஆன எம்பெருமான் தேவர்கள்
கூட்டம் தன்னைச் சூழ்ந்து தொடர உயர்ந்த மாளிகைகளையுடைய வீதியில் உலாவர நோக்கி,
கெடுதி யில்லாத சிறப்புள்ள அழகான சிலம் பணிந்த பாதங்களையுடைய பெண்கள், தாம்
கண்டதால் ஆன கண் பார்வையால் நேர்ந்த தோஷங்களை எல்லாம் பெருமானே! எமக்கே
சேர்ப்பதன் பொருட்டு வந்தனை, வந்ததும் எம் கை வளையல்களைக் கவர்ந்து கொண்டாய்.
மேலும் காம மயக்கமும் நீங்குதற்கு அரிய துன்பமும் கொடுத்தனை. இது உனக்குத்
தகுதியாமோ என்று மனம் நொந்தவள் போல் வாய்மைபடக் கூறி,
அயர்ச்சி மிக்கு மனம் கசிந்து உருகி, உடல் வெண்மை நிறம் அடைந்து, நிமிரும் பூமாலை
சூடிய அப்பேரிளம் பெண் மயக்கம் கொண்டவள் ஆனாள்.
ஆகாயத்தை அளாவி, மேகங்கள் வந்து தங்கும், நீண்ட சிகரங்களை யுடைய ஒளியுடைய பிறைமதி
சிறப்புடன் அமர்ந்திருந்த செக்கர் வானம் போன்ற சடைமுடி யுடைய பெருமான் உலா வந்த
வீதியில்,
கொட்டிக் கொண்டே யிருக்கும் இமைகள் சேரப் பெற்ற கண்களையும், இசை வந்து அமையும்
இனிய மொழிகளையும் பருத்த பெரிய தோள்களையும் சிவந்த பவளம் போன்ற வாயையும் உடைய
இப்பெண்களினுடைய ஆரவாரம் பெரிதாய் இருந்தது.
காப்பு
-
பெண்ணீர்மை காமின் பெருந்தோள் இணைகாமின்
உண்ணீர்மை மேகலையும் உள்படுமின் - தெண்ணீரக்
காரேறு கொன்றையந்தார்க் காவாலி கட்டங்கன்
ஊரேறு போந்த(து) உலா.
தெளிவுரை : பெண்மையின் இயல்பைக் காத்துக் கொள்ளுங்கள்; பெருமை வாய்ந்த முன்கை
வளையல் அணிந்த இரண்டு தோள்களையும் காத்துக் கொள்ளுங்கள். நினைக்கத் தக்க
நேர்மையுள்ள மேகலையையும் அவிழாவண்ணம் அகப்படுத்துங்கள். ஏனெனில் தெளிந்த கங்கை
நதியையும் கார்காலத்தில் மிக்கு மலரும் கொன்றையாகிய அழகிய மாலையையும் சூடிய
கபாலியும், மழுவை ஏந்தியவனுமான பெருமான் ஊர்கின்ற விடையின் மேல் உலா வந்தான்.
திருச்சிற்றம்பலம்
கயிலைபாதி காளத்திபாதித்திருவந்தாதி ( நக்கீர தேவ நாயனார்அருளிச்செய்தது )
நூறு பாடல்களைக் கொண்டது. ஒற்றைப்படை எண்களில் அமைந்த ஐம்பது வெண்பாக்களும்
திருக்கயிலையைப் போற்றுவனவாகவும், இரட்டைப் படை எண்களில் அமைந்த ஐம்பது
வெண்பாக்களும் திருக்காளத்தி மலையைப் போற்றுவனவாகவும் அமைய, அந்தாதித் தொடைப்பட
அமைந்திருத்தலின் இந்நூல் இப்பெயர் பெறுவதாயிற்று. மலை வளரும் இறைவனின் அருள்
நலமும் ஒருங்கு காணும் நிலையில் இந்நூல் அமைந்துள்ளது.
கயிலை
-
சொல்லும் பொருளுமே தூத்திரியும் நெய்யுமா
நல்லிடிஞ்சல் என்னுடைய நாவாகச் - சொல்லரிய
வெண்பா விளக்கா வியன்கயிலை மேலிருந்த
பெண்பாகர்க்(கு) ஏற்றினேன் பெற்று.
தெளிவுரை : சொல், தூய்மையுடைய திரிசீலையாகவும், பொருள் நெய்யாகவும் என் நாக்கு
நல்ல அகலாகவும் கொண்டு சொல்லுதற்கருமையான வெண்பா என்னும் விளக்கை, பெருமையுடைய
கயிலை மலை மேல் எழுந்தருளியிருக்கும் உமாதேவியை இடப் பாகத்தில் கொண்டுள்ள
சிவபெருமானுக்கு ஏற்றினேன்.
காளத்தி
-
பெற்ற பயனிதுவே அன்றே பிறந்தியான்
கற்றவர்கள் ஏத்துஞ்சீர்க் காளத்திக் - கொற்றவர்க்குத்
தோளாகத் தாடரவம் சூழ்ந்தணிந்த அம்மானுக்(கு)
ஆளாகப் பெற்றேன் அடைந்து.
தெளிவுரை : நான் இவ்வுலகில் பிறந்து கற்றவர்கள் ஏத்துகின்ற சிறப்புடைய
காளத்தியில் கோயில் கொண்டிருக்கும் வெற்றி பொருந்தியவரும் தோளிலும் மார்பிலும்
ஆடுகின்ற பாம்பை அணிந்திருப்பவருமாகிய அம்மானுக்கு ஆளாக அடைந்தேன். இது யான்
பெற்ற பெரும் பயன் அல்லவா? என்று முடிக்க.
கயிலை
-
அடைந்துய்ம்மின் அம்மானை உம்மாவி தன்னைக்
குடைந்துண்ண எண்ணியவெங் கூற்றம் - குடைந்துநும்
கண்ணுளே பார்க்கும் பொழுது கயிலாயத்(து)
அண்ணலே கண்டீர் அரண்.
தெளிவுரை : உன் உயிரைத் தோண்டி எடுத்துண்ண எண்ணிய கொடிய எமன், குடைந்து கண்ணால்
பார்க்கும் சமயத்தில் கயிலாயத்து அண்ணலே பாதுகாப்பாவான் என்பதைக் கண்டீர்கள்.
ஆதலால் அந்தப் பெருமானையே அடைந்து பிழையுங்கள்.
காளத்தி
-
அரணம் ஒருமூன்றும் ஆரழலாய் வீழ
முரணம்பு கோத்த முதல்வன் சரணமே
காணுமால் உற்றவன்தன் காளத்தி கைதொழுது
பேணுமால் உள்ளம் பெரிது.
தெளிவுரை : மூன்று மதில்களும் நிறைந்த நெருப்பால் அழிய, வலிமையுள்ள கணையைத்
தொடுத்த முதல்வன் சரணத்தைக் காண வேண்டும் என்னும் விருப்பம் கொண்டு சென்று
அவனுடைய காளத்தி மலையைக் கைதொழுது வணங்க உள்ளம் பெரிதும் விரும்பும்.
கயிலை
-
பெரியவர்கா ணீர்என் உள்ளத்தின் பெற்றி
தெரிவரிய தேவாதி தேவன் - பெரிதும்
திருத்தக்கோர் ஏத்தும் திருக்கயிலைக் கோனை
இருத்தத்தான் போந்த(து) இடம்
தெளிவுரை : பெரியோர்களே! காணுங்கள், தேவர்களாலும் காண இயலாத தேவனும் மிகவும்
சிவஞானப் பெருஞ் செல்வத்தினை யுடையவர்கள் வணங்குகின்ற திருக்கயிலையில் கோயில்
கொண்டிருப்பவனுமாகிய சிவபெருமானை என் உள்ளத்தில் வீற்றிருக்குமாறு வைக்க என்
உள்ளம் விழைகிறது என்க.
காளத்தி
-
இடப்பாகம் நீள்கோட்(டு) இமவான் பயந்த
மடப்பாவை தன்வடிவே ஆனால் - விடப்பாற்
கருவடிசேர் கண்டத்தெம் காளத்தி ஆள்வார்க்(கு)
ஒருவடிவே அன்றால் உரு.
தெளிவுரை : இறைவனது இடப்பாகம் நீண்ட சிகரங்களையுடைய இமவான் பயந்த உமாதேவியாரின்
வடிவமாகும். நஞ்சின் பகுதியால் கருமை நிறம் கொண்ட கழுத்தினையுடைய
காளத்தியப்பனுக்கு உருவம் ஒரு வடிவினை உடையதன்று.
கயிலை
-
உருவு பலகொண்(டு) உணர்வரிதாய் நிற்கும்
ஒருவன் ஒருபால் இருக்கை - மருவினிய
பூக்கையிற் கொண்(டு) எப்பொழுதும் புத்தேளிர் வந்திறைஞ்சு
மாக்கயிலை என்னும் மலை.
தெளிவுரை : பல உருவங்கொண்டு அறிய முடியாதவாறு இருக்கும் ஒருவன் ஒரு பக்கத்தில்
வீற்றிருப்பது, மணமுள்ள இனிய பூக்களைக் கையிற் கொண்டு எப்போதும் தேவர்கள் வந்து
வணங்குகின்ற பெருமை பொருந்திய கயிலை என்னும் மலையாகும்.
காளத்தி
-
மலைவரும் போல் வானவரும் தானவரும் எல்லாம்
அலைகடல்வாய் நஞ்செழல்கண் டஞ்சி - நிலைதளரக்
கண்டமையால் நண்சாரல் காளத்தி ஆள்வார்நஞ்(சு)
உண்டமையால் உண்டிவ் வுலகு.
தெளிவுரை : மலையானது வருதலைப் போல, தேவர்களும் அசுரர்களும் அலைகளையுடைய
கடலிலிருந்து ஆலகால விஷம் வருவதைக் கண்டு பயந்து, நிலை தளர்வதைக் கண்டு குளிர்ந்த
சாரலையுடைய காளத்தியப்பர் நஞ்சை உண்டமையால் இவ்வுலகு நிலை பெற்றிருக்கின்றது.
கயிலை
-
உலகம் அனைத்தினுக்கும் ஒண்ணுதல்மேல் இட்ட
திலகம் எனப்பெறிறும் சீசீ - இலகியசீர்
ஈசா திருக்கயிலை எம்பெருமான் என்றென்றே
பேசா(து) இருப்பார் பிறப்பு.
தெளிவுரை : உலகம் அனைத்திற்கும் ஒளி பொருந்திய நெற்றியில் இட்ட திலகம் போன்று
இருந்தாலும் பிறப்பு சீசீ என்று இகழத் தக்கது. விளங்குகின்ற சிறப்பினை உடைய ஈசன்
திருக்கயிலையில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே என்று அறிவுடையோர் மவுனமாய்
இருப்பர்.
காளத்தி
-
பிறப்புடையர் கற்றோர் பெருஞ்செல்வர் மற்றும்
சிறப்புடையர் ஆனாலும் சீசீ - இறப்பில்
கடியார் நறுஞ்சோலைக் காளத்தி யாள்வார்
அடியாரைப் பேணா தவர்.
தெளிவுரை : நற்குடிப் பிறப்புடையவர், கற்றவர், பெருஞ் செல்வர் மற்றும்
சிறப்புடையர் ஆனாலும், அழிவில்லாத மணமிக்க சோலைகளையுடைய காளத்தி ஈஸ்வரனது
அடியார்களை வழிபடாதவர்களின் பிறப்பு இகழத் தக்கது என்க. இங்கு அடியார்களின்
சிறப்புக் கூறப்பட்டது.
கயிலை
-
அவரும் பிறந்தவராய்ப் போவார்கொல் ஆவி
எவரும் தொழுதேத்தும் எந்தை - சிவமன்னு
தேக்குவார் சோலைத் திருக்கயிலை ஏத்தாதே
போக்குவார் வாளா பொழுது.
தெளிவுரை : எவரும் வணங்குகின்ற எம் தந்தையாகிய நன்மை நிலை பெற்ற தேன் ஒழுகுகின்ற
பொழில்கள் நிறைந்த திருக்கயிலையை வணங்காமல் வீணாகக் காலத்தைக் கழிப்பவர்
இவ்வுலகத்தில் பிறந்து நடமாடினாலும் பிணம் போல்வர் என்பது கருத்து.
காளத்தி
-
வாளா பொழுது கழிக்கின்றார் மானுடவர்
கேளார்போல் அந்தோ குறிபட்டார் - கீளாடை
அண்ணற்(கு) அணுக்கராய்க் காளத்தி யுள்கின்ற
கண்ணப்பர் ஆவார் கதை.
தெளிவுரை : மானிடர்கள் வீணாகக் காலத்தைக் கழிக்கின்றனர். பொய் வாழ்க்கையில்
அகப்பட்டவர்கள் கேட்க மாட்டார்களோ! அந்தோ! கிழித்து உரித்த படியினால் வந்த ஆடையை
யுடைய அண்ணற்கு நெருங்கிய அன்பராகில் காளத்தி கோயிலில் இருக்கின்ற கண்ணப்ப
நாயனார் கதை போல் சிறப்பு உடையவர் ஆவார். (சுமார் 8 அடி உயரமுள்ள கண்ணப்பர்
கற்சிலை காளத்தி கோயிலில் உள்ளது)
கயிலை
-
கதையிலே கேளீர் கயிலாயம் நோக்கிப்
புதையிருட்கண் மாலோடும் போகிச் - சிதையாச்சீர்த்
தீர்த்தன்பால் பாசுபதம் பெற்றுச் செருக்களத்தில்
பார்த்தன்போர் வென்றிலனோ பண்டு.
தெளிவுரை : பாரதக் கதையில் கேளுங்கள். கயிலாயத்தை நோக்கி மிகுந்த இருளில் மாலின்
பிறப்பாகிய கண்ணனோடும் சென்று, அழிவு படாத சிறப்பினையுடைய தூய்மை உடையவனாகிய
சிவபெருமானிடம் பசுபதியாகிய இறைவன் கணையைப் பெற்று, போர்க் களத்தில் அருச்சுனன்
முன்பு வெற்றி பெற வில்லையா?
காளத்தி
-
பண்டு தொடங்கியும் பாவித்தும் நின்கழற்கே
தொண்டு படுவான் தொடர்வேனைக் கண்டுகொண்(டு)
ஆளத் தயாவுண்டோ இல்லையோ சொல்லாயே
காளத்தி யாயுன் கருத்து.
தெளிவுரை : முன்கால முதல் நினைந்து உன்னுடைய பாதங்களுக்கே வழிபாடு செய்யத்
தொடர்ந்து பற்றுகின்ற என்னைக் கண்டு அருள் செய்யத் தயவு உண்டோ இல்லையோ சொல்வாயாக.
காளத்தியில் குடி கொண்டிருப்பவனே உன் கருத்து யாது?
கயிலை
-
கருத்துக்குச் சேயையாய்க் காண்தக்கோர் காண
இருத்தி திருக்கயிலை என்றால் - ஒருத்தி
அறிவான் உறுவார்க்(கு) அறியுமா றுண்டோ
நெறிவார் சடையாய் நிலை.
தெளிவுரை : எண்ணத்துக்குத் தொலைவானவனாகி, காணத் தகுதி உடையவர்கள் காண்பதற்குத்
திருக்கயிலையில் இருப்பாய் என்றால் நன்றாக நீண்ட சடையினை உடையாய்! உன்னை அறிய
விரும்புகின்றவர்களுக்கு அறியும் வழி உண்டோ?
காளத்தி
-
நிலையில் பிறவி நெடுஞ்சுழியிற் பட்டுத்
தலைவ தடுமாறு கின்றேன் - தொலை வின்றிப்
போந்தேறக் கைதாராய் காளத்திப் புத்தேளிர்
வேந்தேயிப் பாசத்தை விட்டு.
தெளிவுரை : நிலையற்ற பிறவியாகிய நெடுஞ்சுழியில் அகப்பட்டு, தலைவனே!
தடுமாறுகின்றேன். முடிவில்லாமல், வீடு பேறாகிய கரையில் வந்து ஏற கை கொடுப்பாயாக.
காளத்தியில் எழுந்தருளி இருக்கும் தேவர்களுடைய அரசனே! இப்பாசத்தை விட்டுக்
கடைத்தேற வழி செய்வாயாக என்பதாம்.
கயிலை
-
பாசத்தை விட்டு நீன் பாதத்தின் கீழேயென்
நேசத்தை வைக்க நினைகண்டாய் - பாசத்தை
நீக்குமா வல்ல கயிலாயா நீ என்னைக்
காக்குமா(று) இத்தனையே காண்.
தெளிவுரை : உலகப் பற்றை விட்டு உன் பாதத்தின் கீழே என் அன்பை வைக்க அருள்
செய்வாயாக. பாசத்தை நீக்கும் வல்லமை யுடைய கயிலாய வாசனே! நீ என்னைக் காக்கும் வழி
இவ்வளவே.
காளத்தி
-
காணா(து) அலக்கின்றார் வானோர்கள் காளத்திப்
பூணார மார்பன்தன் பொற்பாதம் - நாணாதே
கண்டிடுவான் யானிருந்தேன் காணீர் கடல்நஞ்சை
உண்டிடுவான் தன்னை ஒருங்கு.
தெளிவுரை : தேவர்கள் காளத்தியில் எழுந்தருளியிருக்கும் பூணுதற்குரிய அணிகலன்களைப்
பூண்ட மார்பை யுடையவனுடைய பொற் பாதங்களைக் காணாமல் வருந்துகின்றார்கள். கடலில்
இருந்து எழுந்த ஆலகால விஷத்தை உண்டவனை நான் நாணாமல் காணத் துணிந்திருக்கின்றேன்.
என்னுடைய அறியாமையை நோக்குங்கள்.
கயிலை
-
ஒருங்கா துடனேநின்(று) ஓர்ஐவர் எம்மை
நெருங்காமல் நித்தம் ஒருகால் - நெருங்கிக்
கருங்கலோங் கும்பல் கயிலாயம் மேயான்
வருங்கொலோ நம்பால் மதித்து.
தெளிவுரை : அடங்காமல் உடனிருந்தே ஐம்பொறிகள் எம்மை நெருங்காமல், நாள்தோறும்
ஒருகால் நெருங்கி, கரிய மலைகள் போல் உயர்ந்த யானைகள் சுற்றித் திரியும் கயிலாய
மலையில் எழுந்தருளியவன் நம்பால் மதித்து வருவானோ?
காளத்தி
-
நம்பால் மதித்துறையும் காளத்தி நண்ணாதே
வம்பார் மலர்தூய் வணங்காதே - நம்பாநின்
சீலங்கள் ஏத்தாதே தீவினையேன் யானிருந்தேன்
காலங்கள் போன கழிந்து.
தெளிவுரை : சிவபெருமானே ! நம்மிடம் மதித்தலைச் செய்து உறையும் காளத்தியை
நெருங்காமலும் மணமுள்ள மலர்களைத் தூவி வணங்காமலும் உன்னுடைய நல்லியல்புகளைப்
புகழாலும் பாவியேனாகிய நான் வீணாக இருந்து விட்டேன். காலங்கள் கழிந்து போயின.
கயிலை
-
கழிந்த கழிகிலாய் நெஞ்சே கழியா(து)
ஒழிந்தநாள் மேற்பட்(டு) உயர்ந்தோர் - மொழிந்தசீர்க்
கண்ணுதலான் எந்தை கயிலாய மால்வரையே
நண்ணுதலாம் நன்மை நமக்கு.
தெளிவுரை : கழிந்து போன நாட்களுக்காக நெஞ்சே நீ இரங்கினாய் இல்லை.
எஞ்சியிருக்கும் நாட்கள் மேம்பாடு அடைந்து உயர்ந்தவர்கள் புகழ்ந்த
சிறப்புக்களையுடைய நெற்றிக் கண்ணையுடைய எந்தையினது கயிலாய மலையைப் பொருந்துதல்
நமக்கு நன்மை பயக்கும்.
காளத்தி
-
நமக்கிசைந்த வாநாமும் ஏத்தினால் நம்பர்
தமக்கழகு தாமே அறிவர் - அமைப்பொதும்பிற்
கல்லவா நீடருவிக் காளத்தி ஆள்வாரை
வல்லவா நெஞ்சமே வாழ்த்து.
தெளிவுரை : நமக்குப் பொருந்தியபடி நாம் வழிபட்டால் இறைவன் தமக்கு அழகாகிய
காரியத்தைச் செய்யத் தாமே அறிவார். மூங்கிற் புதர் நிறைந்த கற்களை உடைய நீண்ட
அருவிகளையுடைய காளத்தி நாதரை இயன்றபடி நெஞ்சமே வாழ்த்து.
கயிலை
-
வாழ்த்துவாய் வாழ்த்தா(து) ஒழிவாய் மறுசுழியிட்(டு)
ஆழ்த்துவாய் அஃதறிவாய் நீயன்றே - யாழ்த்தகைய
வண்டார் பொழிற்கயிலை வாழ்கென்(று) இருப்பதே
கண்டாய் அடியேன் கடன்.
தெளிவுரை : வாழ்த்துவாய் வாழ்த்தாமல் இருந்து விடுவாய். மறுபிறவியாகிய சுழியின்
கண் சேர்த்து அழுத்துவாய். அதை அறிபவன் நீதானே. வீணையின் அழகையுடைய வண்டுகள்
நிறைந்த சோலைகளையுடைய கயிலை வாழ்வதாக என்று இருப்பதே அடியேன் கடனாகும். வண்டுகள்
பாடும் இசை யாழிசை போன்றிருத்தலின் யாழ்த்தகைய வண்டு என்றார்.
காளத்தி
-
கடநாகம் ஊடாடும் காளத்திக் கோனைக்
கடனாகக் கைதொழுவார்க்(கு) இல்லை - இடம்நாடி
இந்நாட்டிற் கேவந்திங்(கு) ஈண்டிற்குக் கொண்டுபோய்
அந்நாட்டில் உண்டுழறு மாறு.
தெளிவுரை : மத யானைகள் சுற்றித் திரிதற்கு இடமாகிய காளத்தி மலைக்குத் தலைவனைக்
கடமையாகக் கை தொழுவார்க்கு, இடம் நாடி இவ்வுலகில் வந்து பிறந்து மிகுதியாகச்
சேர்த்துக் கொண்டு போய் மறுமையில் உண்டு வருந்துமாறு இல்லை என முடிக்க.
கயிலை
-
மாறிப் பிறந்து வழியிடை ஆற்றிடை
ஏறி இழியும் இதுவல்லால் - தேறித்
திருக்கயிலை ஏத்தீரேல் சேமத்தால் யார்க்கும்
இருக்கையிலை கண்டீர் இனிது.
தெளிவுரை : மறுபடியும் பிறந்து இடை வழியில் நல்வினை தீவினைகட்கு ஈடாக
விண்ணுலகிலும் நிரயத்திலும் ஏறியிறங்குகின்ற இதனை யல்லாமல், மனம் தெளிவடைந்து
திருக்கயிலையை ஏத்தாவிடில் பாது காவலால் யார்க்கும் இருத்தல் இல்லை. இதை நீங்கள்
கண்டு தெளிவீர்களாக.
காளத்தி
-
இனிதே பிறவி இனமரங்கள் ஏறிக்
கனிதேர் கடுவன்கள் தம்மில் - முனிவாய்ப்
பிணங்கிவருந் தண்சாரல் காளத்தி பேணி
வணங்கவல்ல ராயின் மகிழ்ந்து.
தெளிவுரை : கூட்டமாகிய மரங்களில் ஏறி, பழங்களைத் தேடுகின்ற ஆண் குரங்குகள்
தம்மில் சினங் கொண்டு, மாறுபட்டு வரும் குளிர்ந்த சாரல்களை உடைய காளத்தியை
விரும்பி வணங்க வல்லராயின் பிறவி இனிதே என்று கூட்டுக.
கயிலை
-
மகிழ்ந்தவரும் வண்கொன்றை மேலே மனமாய்
நெகிழ்ந்து நெகிழ்துள்ளே நெக்குத் - திகழ்ந்திலங்கும்
விண்ணுறங்கா ஓங்கும் வியன்கயிலை மேயாயென்
பெண்ணுறங்காள் என்செய்கேன் பேசு.
தெளிவுரை : இது நற்றாய் இரங்கல் என்னும் துறை. அலருகின்ற வண்கொன்றை மேல் மனமாக
மகிழ்ந்து மிகுதியான தளர்ச்சியை அடைந்து, உருகி, திகழ்ந்து இலங்கும் விண்ணையளாவ
அழகிய பொழில் மேலெழும் வியன் கயிலையில் இருப்பவனே ! என் பெண் உறங்கவில்லை. என்ன
செய்வேன்? சொல் வாயாக.
காளத்தி
-
பேசும் பரிசறியாள் பேதை பிறர்க்கெல்லாம்
ஏசும் பசிசானாள் ஏபாவம் - மாசுனைநீர்க்
காம்பை அலைத்(து) ஆலிக்கும் காளத்தி என்றென்று
பூம்பயலை மெய்ம் முழுதும் போர்த்து.
தெளிவுரை : இவள் பேசும் வகையறியாத பேதைப் பெண். பிறரால் பழி தூற்றப்படும் தன்மை
யுடையவள் ஆனாள். ஐயோ பாவம் பெரிய சுனை நீர்க்கு மூங்கில் அசைத்து ஒலிக்கும்
காளத்தி என்று அடிக்கடி கூறுவாள். அழகிய பசலை உடல் முழுதும் போர்த்து ஏசும்
பரிசானாள் என முடிக்க.
கயிலை
-
போர்த்த களிற்றுரியும் பூண்ட பொறியரவும்
தீர்த்த மகளிருந்த செஞ்சடையும் - மூர்த்தி
குயிலாய மென்மொழியாள் கூறாய வாறும்
கயிலாயா யான்காணக் காட்டு.
தெளிவுரை : போர்த்துள்ளது யானைத்தோல், பூண்பது புள்ளிகளையுடைய பாம்பு. சடையில்
இருப்பவள் கங்கை. குயில் போல இனிமையாகப் பேசும் மொழியை உடைய உமாதேவியை
இடப்பாகத்தில் கொண்ட மூர்த்தியாகிய கயிலைவாசா ! இந்தக் கோலத்தை யான் காணக்
காட்டுவாயாக.
காளத்தி
-
காட்டில் நடமாடிக் கங்காள ராகிப்போய்
நாட்டிற் பலிதிரிந்து நாடோறும் - ஓட்டுண்பார்
ஆனாலும் என்கொலோ காளத்தி ஆள்வாரை
வானோர் வணங்குமா வந்து.
தெளிவுரை : புறங் காட்டில் நடமாடி, முழு எலும்புக் கூடாகி, பிறகு ஊர்களில் பிச்சை
எடுத்துத் திரிந்து நாள் தோறும் ஓட்டிலே உணவு கொள்வார். என்றாலும் காளத்திநாதரைத்
தேவர்கள் வணங்குவதற்காக வருவது யாது காரணம் கருதி என்பதாம்? ஓட்டுண்பார் - பிரம
கபாலத்தில் பிச்சை ஏற்று உண்பார்.
கயிலை
-
வந்தமரர் ஏத்தும் மடைக்கூழும் வார்சடைமேல்
கொந்தவிழும் மாலை கொடுத்தார்கொல் ! - வந்தித்து
வாலுகுத்த வண்கயிலைக் கோனார்தம் மாமுடிமேல்
பாலுகுத்த மாணிக்குப் பண்டு.
தெளிவுரை : தேவர்கள் வந்து வணங்குகின்ற பரிகல சேடமும் நீண்ட சடை மேல் கொத்துக்கள்
விரிகின்ற நிருமாலிய மாலையும் கொடுத்தார் அல்லவா? அது என் கருதி? வணங்கி
வெள்ளொளியைப் பரப்புகிற வளம் பொருந்திய கயிலைக் கோன் தம் முடிமேல் பாலைத்
திருமுழுக் காட்டிய பிரமசாரியாகிய சண்டேசுரருக்குக் கொடுத்தது ஏன் என முடிக்க.
காளத்தி
-
பண்டிதுவே அன்றாயின் கேளீர் கொல் பல்சருகு
கொண்டிலங்கத் தும்பிநூற் கூடிழைப்பக் - கண்டு
நலந்திக் கெலாம்ஏத்தும் காளத்தி நாதர்
சிலந்திக்குச் செய்த சிறப்பு.
தெளிவுரை : இது மட்டும் அன்று. கேளுங்கள். ஆராயுங்கால் பல சருகு கொண்டிலங்க
சிலந்திவாயின் நூலால் கூடு கட்டக் கண்டு நன்மையை எடுத்துப் புகழும் காளத்தி நாதர்
சிலந்திக்குச் செய்த சிறப்புக் கேளீர் கொல் எனக் கூட்டுக. கேளீர் கொல் -
கேட்டிலீரோ? சிலந்திக்குச் செய்த சிறப்பென்றது சிலந்தியைக் கோச் செங்கட் சோழராகப்
பிறக்கச் செய்த சிறப்பை.
கயிலை
-
செய்த சிறப்பெண்ணில் எங்குலக்கும் சென்றடைந்து
கைதொழுவார்க்(கு) எங்கள் கயிலாயர் - நொய்தளவில்
காலற்காய்ந் தார்அன்றே காணீர் கழல்தொழுத
பாலற்காய் அன்று பரிந்து.
தெளிவுரை : செய்த சிறப்பை எண்ணினால் எப்படி முடிவு பெறும்? என்பதைச் சென்றடைந்து
கைதொழுவார்க்கு எங்கள் கயிலாயர் சிறிது போதில் அருள் செய்வார். தனது பாதங்களை
வணங்கிய பாலகனாகிய மார்க் கண்டேயனுக்காக நமனைக் காய்ந்தாய் அல்லவா? காண்பீர்களாக.
காளத்தி
-
பரிந்துரைப்பார் சொற்கேளாள் எம்பெருமான் பாதம்
பிரிந்திருக்க கில்லாமை பேசும் - புரிந்தமரர்
நாதாவா காளத்தி நம்பாவா என்றென்று
மாதாவா உற்ற மயல்.
தெளிவுரை : என் மகள், அந்தோ, அடைந்த மயல் எத்தகையது என்று சொல்கிறேன் கேளுங்கள்.
அன்பு கொண்டு கூறுவார் சொல்லைக் கேட்க மாட்டாள். எம்பெருமானது பாதத்தைப்
பிரிந்திருக்க முடியாமல் பேசுவாள். விரும்பித் தேவர்களின் நாதா வா, காளத்தி நம்பா
வா, என்று பேசும் என முடிக்க.
கயிலை
-
மயலைத் தவிர்க்க நீ வாராய் ஒருமூன்(று)
எயிலைப் பொடியாக எய்தாய் - கயிலைப்
பருப்பதவா நின்னுடைய பாதத்தின் கீழே
இருப்பதவா உற்றாள் இவள்.
தெளிவுரை : இவள் மையலைத் தீர்க்க வருவாயாக. ஒப்பற்ற மூன்று மதில்களை அழித்தவனே!
கயிலை மலையை உடையவனே ! உன்னுடைய பாதத்தின் கீழே இருப்பதற்கு இவள்
விரும்புகின்றாள்.
காளத்தி
-
இவளுக்கு நல்லவா(று) எண்ணுதிரேல் இன்றே
தவளப் பொடியிவள்மேல் சாத்தி - இவளுக்குக்
காட்டுமின்கள் காளத்தி காட்டிக் கமழ்கொன்றை
சூட்டுமின்கள் தீரும் தூயர்.
தெளிவுரை : இவளுக்கு நன்மையான செய்கையைச் செய்ய எண்ணினால் இன்றே திருநீற்றை இவள்
மேல் சாத்தி, இவளுக்குத் திருக்காளத்தி மலையைக் காட்டுங்கள். மணம் வீசுகின்ற
கொன்றை மாலையை அணியுங்கள். இவளது துயர் தீரும். அதாவது துன்பம் நீங்கும் என்றபடி.
இது செவிலி கூற்று.
கயிலை
-
துயர்க்கெலாம் கூடாய தோற்குரம்பை புக்கு
மயக்கில் வழிகாண மாட்டேன் - வியற்கொடும்போர்
ஏற்றானே வண்கயிலை எம்மானே என்கொலோ
மேற்றான் இதற்கு விளைவு.
தெளிவுரை : துன்பக் கூடாகிய, தோலாற் செய்த சிறுகுடிலாகிய உடல் புகுந்து,
மயக்கமில்லாத வழியைக் காண மாட்டாதவனாக உள்ளேன். பெருமையுள்ள கொடும் போரைச்
செய்யும் காளையை வாகனமாக உடையவனே! வளம் பொருந்திய கயிலை எம்மானே. இனிமேலாயினும்
இதற்கு என்ன முடிவு என்று கூறுவாயாக ! கடைத்தேறும் வழியாது என்பதாம்.
காளத்தி
-
விளையும் வினையரவின் வெய்ய விடத்தைக்
களைமினோ காளத்தி ஆள்வார் - வளைவில்
திருந்தியசீர் ஈசன் திருநாமம் என்னும்
மருந்தினைநீர் வாயிலே வைத்து.
தெளிவுரை : வினைகளாகிய பாம்பின் கொடிய விஷத்தை வேரறப் போக்குங்கள்.
திருக்காளத்தியில் கோயில் கொண்டிருக்கும் பெருமானே! கோடுதல் இல்லாத திருத்தமாகிய
சிறப்புடைய ஈசன் திருநாமம் என்னும் மருந்தினை உபதேசிப்பாயாக. வாயில் வைத்துக்
களைமின் என்று கூட்டுக.
கயிலை
-
வாயிலே வைக்கும் அளவில் மருந்தாகித்
தீய பிறவிநோய் தீர்க்குமே - தூயவே
கம்பெருமா தேவியொடு மன்னு கயிலாயத்(து)
எம்பெருமான் ஓர்அஞ் செழுத்து.
தெளிவுரை : தூய்மையுடைய திருவேகம்பரே! தேவியோடு நிலை பெற்றிருக்கும் கயிலாயத்து
எம்பெருமானே! திரு ஐந்தெழுத்தை உபதேசித்த அளவில் அது மருந்தாகி, கொடிய பிறவி
நோயைத் தீர்க்கும்.
காளத்தி
-
அஞ்செழுத்தும் கண்டீர் அருமறைகள் ஆவனவும்
அஞ்செழுத்தும் கற்க அணித்தாகும் - நஞ்சவித்த
காளத்தி யார்யார்க்கும் காண்டற்(கு) அரிதாய்ப்போய்
நீளத்தே நின்ற நெறி.
தெளிவுரை : நஞ்சின் வேகத்தைத் தணித்த, திருக்காளத்தியில் எழுந்தருளிய
திருக்காளத்தி நாதரைக் காண முடியாத அளவு நீளத்தே நின்ற நெறி, அஞ்செழுத்தும் கற்க
அணித்தாகும். அஞ்செழுத்தே அறுமறைகளாகும் என்பதைக் காணுங்கள்.
கயிலை
-
நெறிவார் சடையாய் நிலையின்மை நீயொன்(று)
அறியாய் கொல் அந்தோ அயர்ந்தாள் - நெறியிற்
கனைத்தருவி தூங்கும் கயிலாயா நின்னை
நினைத்தருவி கண்சோர நின்று.
தெளிவுரை : வழியில் ஒலி செய்யும் அருவி தூங்கும் கயிலாயா! நின்னை நினைத்து என்
மகள் கண்ணீர் அருவியாக வெளிப்பட நின்று சோர்ந்தாள். நெறித்த நீண்ட சடையை
யுடையவனே! அவள் இறந்து படுவாள் என்பதை நீ அறியாயா? வந்து அருள் செய்வாயாக
என்பதாம்.
காளத்தி
-
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் யாம்
என்றும் நினைந்தாலும் என்கொலோ - சென்றுதன்
தாள்வா னவர்இறைஞ்சும் தண்சாரல் காளத்தி
ஆள்வான் அருளாத வாறு.
தெளிவுரை : குளிர்ந்த சாரலையுடைய காளத்தியப்பரே! தேவர்கள் வந்து வணங்கியும்
அவர்களுக்கு இன்னும் அருள் செய்யாத காரணம் என்ன? அவர்களே பயன் பெறாதபோது நாங்கள்
நின்றும், இருந்தும் கிடந்தும், நடந்தும் இடையறாது நினைந்தும் யாது பயன்?
கயிலை
-
அருளாத வாறுண்டே யார்க்கேனும் ஆக
இருளார் கறைமிடற்றெம் ஈசன் - பொருளாய்ந்து
மெய்ம்மையே உன்னில் வியன்கயிலை மேயான்வந்(து)
இம்மையே தீர்க்கும் இடர்.
தெளிவுரை : இருளைப் போற் பொருந்திய நஞ்சுக் கறையமைந்த கழுத்தையுடைய ஈசன் உண்மையாக
எண்ணினால் யார்க்கேனும் அருள் செய்யாமல் இருந்த துண்டா? ஆகவே கயிலை வாசன் வந்து
இப் பிறப்பிலேயே நம் இடரைத் தீர்ப்பார் என்று அறிக.
காளத்தி
-
இடரீர் உமக்கோர் இடம்நாடிக் கொண்டு
நடவீரோ காலத்தால் நாங்கள் - கடல்வாய்க்
கருப்பட்டோங்(கு) ஒண்முகில்சேர் காளத்தி காண
ஒருப்பட்டோம் கண்டீர் உணர்ந்து.
தெளிவுரை : கடலிடத்து சூல்கொண்டு மேலெழுந்து மேகங்கள் சேர்கின்ற காளத்தியைக் காண
நாங்கள் மனம் துணிந்தோம். ஆகவே துயர் உறுத்தும் துன்பங்களே! உமக்கோர் இடம் நாடிக்
கொண்டு நடவீரோ? செல்லுங்கள் என்றபடி.
கயிலை
-
உணருங்கால் ஒன்றை உருத்தெரியக் காட்டாய்
புணருங்கால் ஆரமுதே போலும் - இணரில்
கனியவாம் சோலைக் கயிலாயம் மேயாய்
இனியவா காண்நின் இயல்பு.
தெளிவுரை : அறியுமிடத்து ஒன்றை வடிவம் தெரியுமாறு காட்டு வாயாக. புணருங்கால்
ஆரமுதே போலும் பூங்கொத்துக்களையுடைய சோலைகள் நிறைந்த கயிலாயத்தில் உள்ளவனே! நின்
இயல்பு இனிமை உடையதாகும்.
காளத்தி
-
நின்னியல்பை யாரே அறிவார் நினையுங்கால்
மன்னியசீர்க் காளத்தி மன்னவனே - நின்னில்
வெளிப்படுவ(து) ஏழுலகும் மீண்டே ஒருகால்
ஒளிப்பதுவும் ஆனால் உரை.
தெளிவுரை : நிலை பெற்ற சிறப்பமைந்த காளத்தி மன்னவனே! நினையுமிடத்து உன் பெருமையை
யார் அறிய வல்லார்? உன்னிடத்திலிருந்து ஏழு உலகங்களும் தோன்றுகின்றன. மறுபடியும்
அவை உன்னிடத்தி லேயே ஒடுங்குகின்றன. ஆகவே உன் பெருமையை அளவிட முடியுமோ என்றபடி.
கயிலை
-
உரையும் பொருளும் உடலும் உயிரும்
விரையும் மலரும்போல் விம்மிப் - புரையின்றிச்
சென்றவா(று) ஓங்கும் திருக்கயிலை எம்பெருமான்
நின்றவா(று) எங்கும் நிறைந்து.
தெளிவுரை : உரையும் பொருளும் போலவும், உடலும் உயிரும் போலவும், மணமும் மலரும்
போலவும் பெருகி, குற்றமில்லாமல் சென்றவாறு ஓங்கும் திருக்கயிலை எம்பெருமான்
எங்கும் நிறைந்து நிற்கின்றான் என்பதாம்.
காளத்தி
-
நிறைந்தெங்கும் நீயேயாய் நின்றாலும் ஒன்றின்
மறைந்தைப் புலன்காண வாராய் - சிறந்த
கணியாரும் தண்சாரல் காளத்தி ஆள்வாய்
பணியாயால் என்முன் பரிசு.
தெளிவுரை : நீ எங்கும் நிறைந்து நின்றாலும், ஒன்றில் மறைந்து ஐம்புலன்களும் காண
வருவாயாக, சிறந்த வேங்கை மரங்கள் நிறைந்த குளிர்ந்த சாரலையுடைய காளத்தி மலையை
ஆள்பவனே ! காட்சி தருவாயாக, ஒன்றில் என்றது கல் மரம் முதலிய யாதேனும் ஒன்றில்
என்றபடி.
கயிலை
-
பரிசறியேன் பற்றிலேன் கற்றிலேன் முற்றும்
கரியுரியாய் பாதமே கண்டாய் - திரியும்
புரம்மாளச் செற்றவனே பொற்கயிலை மன்னும்
பரமா அடியேற்குப் பற்று.
தெளிவுரை : உன் பரிசு முற்றும் அறியேன். எதிலும் பற்றில்லாதவன். கற்றறியாதவன்.
யானைத் தோலைப் போர்த்தவனே! யாண்டும் உலாவும் திரிபுரங்களை எரித்தவனே!
பொற்கயிலையில் நிலையாகவுள்ள மேலானவனே! அடியேற்குப் பற்று உன் பாதமே. அறிவாயாக.
காளத்தி
-
பற்றாவான் எவ்வுயிர்க்கும் எந்தை பசுபதியே
முற்றாவெண் திங்கள் முளைசூடி - வற்றாவாம்
கங்கைசேர் செஞ்சடையான் காளத்தி யுள்நின்ற
மங்கைசேர் பாகத்து மன்.
தெளிவுரை : எல்லா உயிர்களுக்கும் எந்தை பசுபதியே. இளம்பிறையைச் சூடியவன்.
வற்றாததாகிய கங்கையைச் சடையில் வைத்திருப்பவன். காளத்தியுள் நின்ற மங்கைசேர்மன்.
பற்றாவான் என்க, பற்று-பற்றுக் கோடு. பசுபதி-உயிர்கட் கெல்லாம் தலைவன்.
கயிலை
-
மன்னா கயிலாயா மாமுத்தம் மாணிக்கம்
பொன்னார மாக்கொண்டு பூணாதே - எந்நாளும்
மின்செய்வார் செஞ்சடையாய் வெள்ளெலும்பு பூண்கின்ற(து)
என்செய்வான் எந்தாய் இயம்பு.
தெளிவுரை : நிலை பேறுடையவனே! (எல்லா உலகங்கட்கும் மன்னனாக இருப்பவனே எனினுமாம்.)
கயிலாயத்திலுள்ள சிறந்த முத்து மாணிக்கம் பொன் முதலியவற்றை ஆரமாகக் கொண்டு
பூணாமல் எப்போதும் ஒளி செய்கின்ற செஞ்சடையை உடையவனே. வெள்ளெலும்பு பூண்கின்ற
காரணம் என்ன? என்ன செய்யும் பொருட்டு இவ்வாறு இருக்கிறாய்?
காளத்தி
-
இயம்பாய் மடநெஞ்சே ஏனோர்பால் என்ன
பயம்பார்த்துப் பற்றுவான் உற்றாய் புயம்பாம்பால்
ஆர்த்தானே காளத்தி அம்மானே என்றென்றே
ஏத்தாதே வாளா இருந்து.
தெளிவுரை : பிற கடவுளரிடத்தில் என்ன பயன் கருதிப் பற்றுக் கொண்டாய். தோள்களில்
பாம்பைக் கட்டியவன். காளத்தி அம்மானே என்று எப்போதும் துதி செய்யாமல் வீணாகக்
காலங் கழிக்கின்றாய். மட நெஞ்சே! சொல்வாயாக.
கயிலை
-
இருந்தவா காணீர் இதுவென்ன மாயம்
அருந்தண் கயிலாயத்(து) அண்ணல் - வருந்திப்போய்த்
தானாளும் பிச்சை புகும்போலும் தன்னடியார்
வானாள மண்ணாள வைத்து.
தெளிவுரை : அருமையான குளிர்ந்த கயிலாயத்து அண்ணல் தன் அடியார்கள்
விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் ஆளுமாறு விட்டு விட்டு, தான் வருந்தி சென்று
பிச்சையேற்று உண்பான் போலும். இந்தச் செய்தி இருந்த விதத்தைப் பாருங்கள்.
காளத்தி
-
வைத்த இருநிதியே என்னுடைய வாழ்முதலே
நித்திலமே காளத்தி நீள்சுடரே - மொய்த்தொளிசேர்
அக்காலத்(து) ஆசை அடிநாயேன் காணுங்கால்
எக்காலத்(து) எப்பிறவி யான்.
தெளிவுரை : பாதுகாத்து வைக்கப்பட்ட செல்வமே! என்னுடைய வாழ் முதலே! முத்துப்
போன்றவனே! காளத்தியின் ஒளிச் சுடரே! இனி வரப்போகும் காலத்தில் என் ஆசை யாதெனில்
நான் எப்பிறப்பை எடுப்பேன் என்பதாகும். எத்தகைய பிறப்பையும் எடுக்க மாட்டேன்
என்றபடி.
கயிலை
-
யானென்று தானென்(று) இரண்டில்லை என்பதனை
யானென்றும் கொண்டிருப்பன் ஆனாலும் - தேனுண்(டு)
அளிகள்தாம் பாடும் அகன்கயிலை மேயான்
தெளிகொடான் மாயங்கள் செய்து.
தெளிவுரை : அடியேன் என்றும், காளத்தியான் அடியேன் என்றும், இரண்டில்லை, என்பதை
யான் உறுதியாகக் கொண்டிருப்பினும் தேனை உண்டு வண்டுகள் பாடும் விசாலமான கயிலையில்
எழுந்தருளியிருக்கும் இறைவனே! மாயங்கள் செய்து காளத்தி மேயான் எனக்கு மயக்கத்தை
உண்டாக்கி விடுவான் என்றபடி.
காளத்தி
-
மாயங்கள் செய்தைவர் சொன்ன வழிநின்று
காயங்கொண் டாடல் கணக்கன்று - காயமே
நிற்பதன்(று) ஆதலால் காளத்தி நின்மலன்சீர்
கற்பதே கண்டீர் கணக்கு.
தெளிவுரை : உலகில் பிறந்து, ஐம்புலன் சொன்ன வழி நடந்து உடம்பைப் பாராட்டுதல் நல்ல
வழக்கமன்று. இந்த, உடம்பு நிலை பெற்றிருக்காது ஆதலால், காளத்தி நின்மலன் சீர்
கற்பதே கணக்கு என்பதாம். அதாவது கடவுளைப் போற்றுவதே உய்யும் வழி என்பதை
உணர்வாயாக.
கயிலை
-
கணக்கிட்டுக் கொண்டிருந்து காலனார் நம்மை
வணக்கி வலைப்படா முன்னம் - பிணக்கின்றிக்
காலத்தால் நெஞ்சே கயிலாயம் மேவியநற்
சூலத்தான் பாதம் தொழு.
தெளிவுரை : உலக வாழ்க்கையைச் சதமென்று நம்பி வாழ்ந்து, எமன் நம்மை வணங்கச் செய்து
பாசவலையிற் அகல் படுத்துவதற்கு முன்பாக, மாறுபாடு இல்லாமல், காலம் இருக்கும் போதே
சூலப்படையை உடைய சிவபெருமான் பாதங்களைத் தொழுவாயாக.
காளத்தி
-
தொழுவாள் பெறாளேதன் தோள்வளையும் தோற்றாள்
மழுவாளன் காளத்தி வாழ்த்தி - எழுவாள்
நறுமா மலர்க்கொன்றை நம்முன்னே நாளைப்
பெறுமாறு காணீர்என் பெண்.
தெளிவுரை : என் மகள், மழு வேந்தியவனது காளத்தியை வாழ்த்தித் தொழுவாள். கைவளைகளைத்
தோற்பாள். அவள் திரும்பப் பெற மாட்டாளோ? நாளைய தினம் உன் மணம் பொருந்திய மலர்க்
கொன்றையைப் பெறுமாறு அருள் செய்வாயாக. அப்போதுதான் அவள் எழுவாள்.
கயிலை
-
பெண்ணின்(று) அயலார்முன் பேதை பிறைசூடி
கண்ணின்ற நெற்றிக் கயிலைக்கோன் - உண்ணின்ற
காமந்தான் மீதூர நைவாட்குன் கார்க்கொன்றைத்
தாமந்தாம் மற்றிவளைச் சார்ந்து.
தெளிவுரை : பேதைப் பெண்ணாகிய இவள், அயலார் முன் பிறைசூடியவனும் நெற்றிக் கண்ணை
உடையவனுமாகிய கயிலை நாதனாகிய உன் மீது கொண்ட காமத்தால் நைகின்றாள். ஆகையால்
அவளைச் சார்ந்து கார்க் கொன்றைத் தாமத்தை அவளுக்குத் தருவாயாக.
காளத்தி
-
சார்ந்தாரை எவ்விடத்தும் காப்பனவும் சார்ந்தன்பு
கூர்ந்தார்க்கு முத்தி கொடுப்பனவும் - கூர்ந்துள்ளே
மூளத் தியானிப்பார் முன்வந்து நிற்பனவும்
காளத்தி யார்தம் கழல்.
தெளிவுரை : தம்மைப் பற்றுக் கோடாக அடைந்தாரை எல்லா இடங்களிலும் காப்பனவும்,
சார்ந்து அன்பு மிகுந்தவர்க்கு முக்தி கொடுப்பனவும் உள்ளே அன்பு பற்றுமாறு
தியானிப்பவர்களுக்கு முன் வந்து நிற்பனவும் காளத்தியார் தம் கழல்களே என்றவாறு.
கயிலை
-
தங்கழல்கள் ஆர்ப்ப விளக்குச் சலன்சலனென்(று)
அங்கழல்கள் ஆர்ப்ப அனலேந்திப் - பொங்ககலத்(து)
ஆர்த்தா(டு) அரவம் அகன்கயிலை மேயாய்நீ
கூத்தாடல் மேவியவா கூறு.
தெளிவுரை : வீரக் கழல்கள் ஒலிக்கவும் விளக்குச் சலசல என்று அழல்கள் ஒலிக்கவும்,
அனலை ஏந்தி. உன் மார்பகத்தில் படமெடுத்து ஆடுகிற பாம்பைக் கட்டி அகன்ற கயிலையில்
மேவி இருப்பவனே கூத்தாடல் பொருந்திய விதத்தைக் கூறுவாயாக.,
பொங்கு + அகலத்து எனப்பிரிக்க.
காளத்தி
-
கூறாய்நின் பொன்வாயால் கோலச் சிறுகிளியே
வேறாக வந்திருந்து மெல்லெனவே - நீல் தாவும்
மஞ்சடையும் நீள்குடுமி வாளருவிக் காளத்திச்
செஞ்சடைஎம் ஈசன் திற்ம.
தெளிவுரை : நீல நிறமுடைய முகில்கள் வந்து படிகின்ற உயர்ந்த சிகரங்களையும்
அருவிகளையும் உடைய காளத்தியில் எழுந்தருளியிருக்கும் செஞ்சடையினையுடைய எம் ஈசனது
திறத்தை, கோலச் சிறுகிளியே உன் பொன் வாயால் தனியாக வந்து மெல்லெனவே கூறுவாயாக.
கயிலை
-
ஈசன் திறமே நினைந்துருவம் எம்மைப்போல்
மாசில் நிறந்த மடக்குருகே - கூசி
இருத்தியால் நீயும் இருக்கயிலை மேயாற்(கு)
அருத்தியாய்க் காமுற்றா யாம்.
தெளிவுரை : குற்றமற்ற நிறத்தையுடைய இளமையுடைய நாரையே! ஈசன் திறமே நினைந்து
எம்மைப் போல நீயும் உருகுகின்றாய். அதனால் கூச்சத்துடன் இருக்கிறாய். கயிலையில்
மேவி யிருப்பவனைக் காதலிக்கின்றாய். உன் விருப்பம் நிறைவேற வேண்டும்.
காளத்தி
-
காமுற்றா யாமன்றே காளத்ட யான்கழற்கே
யாமுற்ற துற்றாய் இருங்கடலே - யாமத்து
ஞாலத்(து) உயிரெல்லாம் கண்துஞ்சம் நள்ளிருள்கூர்
காலத்துந் துஞ்சாதுன் கண்.
தெளிவுரை : இருங் கடலே ! நீ காளத்தியான் கழற்கே காமுற்றாய். யாம் அடைந்த நிலையை
நீயும் அடைந்திருக்கிறாய். இந்த நள்ளிரவில் உலகத்து உயிர்கள் எல்லாம் உறங்கும்.
இந்த நடுயாமத்திலும் உன் கண்கள் உறங்கவில்லையே! சற்று உறங்குவாயாக என்பதாம்.
கயிலை
-
கண்ணும் கருத்தும் கயிலாய ரேஎமக்கென்(று)
எண்ணி இருப்பன்யான் எப்பொழுதும் - நண்ணும்
பொறியா(டு) அரவசைத்த பூதப் படையார்
அறியார் கொல் நெஞ்சே அவர்.
தெளிவுரை : நெஞ்சமே! யான் எப்போதும் கண்ணும் கருத்தும் கயிலாயரே எமக்கு என்று
எண்ணி இருக்கின்றேன். புள்ளிகளையுடைய, ஆடுகின்ற, பாம்பைக் கட்டியவரும்
பூதப்படையாருமாகிய அவர் என் நிலையை அறியவில்லை போலும்.
காளத்தி
-
நெஞ்சே அவர்கண்டாய் நேரே நினைவாரை
அஞ்சேல் என்(று) ஆட்கொண்(டு) அருள் செய்வார் - நஞ்சேயும்
கண்டத்தார் காளத்தி ஆள்வார் கழல்கண்டீர்
அண்டத்தார் சூடும் அலர்.
தெளிவுரை : நஞ்சு பொருந்திய கண்டத்தையுடைய காளத்தி ஆள்வார் கழல்தான் தேவர்கள்
சூடும் மலராகும். அவரை அணுகித் துதிப்பவர்களை அஞ்சாதே என்று ஆட்கொண்டு அருள்
செய்வார். ஆதலால் நெஞ்சமே! அவரே கதி என்று காண்பாயாக.
கயிலை
-
அலரோன் நெடுமால் அமரர்கோன் மற்றும்
பலராய்ப் படைத்துக் காத்(து) ஆண்டு - புலர்காலத்(து)
ஒன்றாகி மீண்டு பலவாகி நிற்கின்றான்
குன்றாத சீர்க்கயிலைக் கோ.
தெளிவுரை : குன்றாத சீர்கயிலைக்கோ, பிரமன், திருமால், இந்திரன் ஆகியோரைப்
படைத்துக் காத்து ஆண்டு, யுக காலத்தில் அழித்து, மீண்டும் பலவாகி நிற்கின்றான்.
இது இறைவனுடைய சிறப்பைக் கூறியதாகும்.
காளத்தி
-
கோத்த மலர்வாளி கொண்(டு) அநங்கள் காளத்திக்
கூத்தன்மேல் அன்று குறித்தெய்யப் - பார்த்தலுமே
பண்பொழியாக் கோபத்தீச் சுற்றுதலும் பற்றற்று
வெண்பொடியாய் வீழ்ந்திலனோ வெந்து.
தெளிவுரை : வில்லில் தொடுத்த மலர் அம்புகளைக் கொண்டு காமன் காளத்திக் கூத்தன்
மேல் அன்று குறித்து எய்யவும், இறைவன் திருக்கண்களைத் திறந்து பார்த்ததும் குணம்
நீங்காத கோபத் தீ சுற்றியது. ஓர் ஆதரவும் இல்லாமல் அவன் வெந்து சாம்பலானான்.
கயிலை
-
வெந்திறல்வேல் பார்த்தற்(கு) அருள்செய்வான் வேண்டியோர்
செந்தறுகண் சேழல் திறம்புரிந்து - வந்தருளும்
கானவனாம் கோலம்யான் காணக் கயிலாயா
வானவர்தங் கோமானே வா.
தெளிவுரை : வெந்திறல்வேல் அருச்சுனனுக்கு, அருள் செய்வதற்காக, ஒப்பற்ற
அஞ்சாமையையுடைய பன்றியைக் காரணமாக வைத்து வந்த வேடுவனாம் கோலத்தையாம் காண,
கயிலாயா, வானவர்தம் கோமானே வருவாயாக.
காளத்தி
-
வாமான்தேன் வல்ல வயப்போர் விசயனைப்போல்
தாமார் உலகில் தவமுடையார் - தாம்யார்க்கும்
காண்டற்(கு) அரியராய்க் காளத்தி ஆள்வாரைத்
தீண்டத்தாம் பெற்றமையால் சென்று.
தெளிவுரை : தாவிச் செல்லும் குதிரைகள் பூட்டப்பட்ட தேரை யுடைய வெற்றியை யுடைய
போர்த்திறன் கொண்ட அருச்சுனனைப் போல் இவ்வுலகில் தவமுடையர் யாருளர்? நம்மால்
காண்டற்கு அரியராய்க் காளத்தி ஆள்வாரை நாம் தீண்டப் பெற்றமையால் சென்று
காண்போமாக.
கயிலை
-
சென்றிறைஞ்சும் வானோர்தம் சிந்தைக்கும் சேயராய்
என்றும் அடியார்க்கு முன்னிற்பர் - நன்று
கனியவாம் சோலைக் கயிலாயம் மேயார்
இனியவா பத்தர்க்(கு) இவர்.
தெளிவுரை : சென்று வழிபாடு செய்யும் தேவர்களுடைய சிந்தைக்கும் எட்டாதவர். ஆனால்
அவர் அடியார்கள் துகிக்கும்போது வந்து முன் நிற்பார். நல்ல கனிகள் நிறைந்த
சோலைகளையுடைய கயிலாயத்தில் மேவி இருப்பவராகிய இவர் பக்தர்களுக்கு இனியவர்.
காளத்தி
-
இவரே முதல்தேவர் எல்லார்க்கும் மிக்கார்
இவரல்லர் என்றிருக்க வேண்டா - கவராதே
காதலித்(து) இன்(று) ஏத்துதிரேல் காளத்தி ஆள்வார்நீர்
ஆதரித்த தெய்வமே ஆம்.
தெளிவுரை : முதன்மை அமைந்த தேவர் இவரே. எல்லார்க்கும் மேலானவர் இவரல்லர் என்று
இருந்து விட வேண்டா. மனம் வேறுபடாமல் பேரன்பு செய்து இன்றிலிருந்தே
வழிபடுவீரானால் நீர் விரும்பிய தேவர் காளத்தி நாதரே என்று அறிவீர்.
கயிலை
-
ஆமென்று நாளை உளஎன்று வாழ்விலே
தாமின்று வீழ்கை தவமன்று - யாமென்றும்
இம்மாய வாழ்வினையே பேணா(து) இருங்கயிலை
அம்மானைச் சேர்வ(து) அறிவு
தெளிவுரை : ஆமென்று, நாளை உளவென்று வாழ்வில் இப்போது வீழ்ந்து அழுந்துதல்
தவமாகாது. யாம் எப்போதும் இந்த நிலையில்லாத வாழ்வைப் போற்றிக் கொண்டிராமல்
திருக்கயிலை அம்மானை அடைவதே அறிவாகும்.
காளத்தி
-
அறியாம லேனும் அறிந்தேனும் செய்து
செறிநின்ற தீவினைகள் எல்லாம் - நெறிநின்று
நன்முகில்சேர் காளத்தி நாதன் அடிபணிந்து
பொன்முகலி ஆடுதலும் போம்
தெளிவுரை : தெரிந்தோ தெரியாமலோ செய்து மிகுதியாகப் பொருந்தி யிருக்கின்ற
தீவினைகள் எல்லாம் நல்ல நெறியில் நின்று மேகங்கள் சேர்கின்ற காளத்தி நாதனது
பாதங்களைப் பணிந்து பொன் முகலியாற்றில் நீராடினால் போகும்.
கயிலை
-
போகின்ற மாமுகிலே பொற்கயிலை வெற்பளவும்
ஏகின்(று) எமக்காக எம்பெருமான் - ஏகினால்
உண்ணப் படாநஞ்சம் உண்டாற்(கு) என்
விண்ணப்பம் செய்கண்டாய் வேறு உள்ளுறுநோய்
தெளிவுரை : விண்ணிற் செல்கின்ற மேகங்களே, பொற் கயிலை மலைவரையில் செல்வீர்களாயின்,
எமக்காக அந்த எம்பெருமானிடம் செல்ல நேர்ந்தால், எவரும் உண்ணுதல் இல்லாத விஷத்தை
உண்டவற்கு, என் உள்ளே பொருந்திய காம நோய் பற்றி, தனியாக விண்ணப்பம் செய்வீர்களாக.
காளத்தி
-
வேறேயும் காக்கத் தகுவேனை மெல்லியலாள்
கூறேயும் காளத்திக் கொற்றவனே - ஏறேறும்
அன்பா அடியேற்(கு) அருளா(து) ஒழிகின்ற(து)
என்பாவ மேயன்றோ இன்று.
தெளிவுரை : தனியாகவாயினும் காக்க வேண்டிய நிலையிலுள்ள எனக்கு அருள் செய்யாமல்
இருப்பது ஏன்? இது பாவமல்லவா? உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டு காளத்தி மலையை
ஆட்சி செய்பவனே, காளை ஊர்தியை உடைய அன்பனே இது உனக்கு நீதியோ என்றபடி.
கயிலை
-
இன்று தொடங்கிப் பணிசெய்வேன் யானுனக்(கு)
என்றும் இளமதியே எம்பெருமான் - என்றுமென்
உட்காதல் உண்மை உயர்கயிலை மேயாற்குத்
திட்காதே விண்ணப்பம் செய்.
தெளிவுரை : பிறைத் திங்களே! இன்று தொடங்கி எப்போதும் உனக்கு யான் பணி செய்வேன்.
உயர் கயிலையில் மேவி யிருப்பவருக்கு என் நெஞ்சத்தில் காதலிக்கும் உண்மையை அந்த
எம்பெருமானுக்கு அஞ்சாமல் விண்ணப்பம் செய்வாயாக.
காளத்தி
-
செய்ய சடைமுடியென் செல்வனையான் கண்டெனது
கையறவும் உள்மெலிவும் யான்காட்டப் - பையவே
காரேறு பூஞ்சோலைக் காளத்தி ஆள்வார்தம்
போரேறே இத்தெருவே போது.
தெளிவுரை : சிவந்த சடை முடியையுடைய என் செல்வனை யான் கண்டு, எனது துன்பத்தையும்
மனமெலிவையும் யான் காட்டுவதற்காக, மேகங்கள் படிகின்ற காளத்தி ஆள்வார்தம் போர்க்
காளையே, மெதுவாக இத் தெருவில் போவாயாக.
கயிலை
-
போது நெறியனவே பேசிநின் பொன்வாயால்
ஊதத் தருவன் ஒளிவண்டே காதலால்
கண்டார் வணங்கும் கயிலாயத்(து) எம்பெருமான்
வண்தார்மோந்(து) என்குழற்கே வா.
தெளிவுரை : ஒளி வண்டே! நீ சென்று முறையாகப் பேசி, உன் பொன் வாயால் ஊதத் தருவேன்.
காதலால் கண்டார் வணங்கும் கயிலாயத்து எம்பெருமானுடைய வளவிய கொன்றை மலர் மாலையை
மோந்து என் குழற்கு வருவாயாக.
காளத்தி
-
வாவா மணிவாயால் மாவின் தளிர்கோதிக்
கூவா(து) இருந்த குயிற்பிள்ளாய் - ஓவாதே
பூமாம் பொழிலுடுத்த பொன்மதில் சூழ் காளத்திக்
கோமான் வரஒருகாற் கூவு.
தெளிவுரை : மாந்தளிர் நீங்காமல் இருக்கும் அழகிய மாஞ்சோலையாற் சூழப்பட்ட பொன்
மதில்களை யுடைய காளத்திக் கோமான் வர குயிற் பிள்ளாய் ஒருகாற் கூவு. உன் மணி
வாயால் மாவின் தளிர் கோதிக் கூவாதிருந்த குயிற் பிள்ளாய் வருவாயாக. ஒரு முறை
கூவுவாயாக என முடிக்க.
கயிலை
-
கூவுதலும் பாற்கடலே சென்றவனைக் கூடுகஎன்(று)
ஏவினான் பொற்கயிலை எம்பெருமான் - மேவியசீர்
அன்பால் புலிக்காலன் பாலன்பால் ஆசையினால்
தன்பாற்பால் வேண்டுதலும் தான்.
தெளிவுரை : பொற் கயிலை எம்பெருமான் சிறந்த அன்பினால் புலிக்கால் முனிவராகிய
வியாக்கிர பாதரின் மகனாகிய உபமன்யு, பாலுக்காக அழுதவுடன், திருப்பாற் கடலுக்குச்
சென்று அவனைக் கூடுக என்று ஏவினான்.
காளத்தி
-
தானே உலகாள்வான் தான்கண்ட வாவழக்கம்
ஆனால்மற்(று) ஆரிதனை அன்றென்பார் - வானோர்
களைகண்தா னாய்நின்ற காளத்தி ஆள்வார்
வளைகொண்டார் மால்தந்தார் வந்து.
தெளிவுரை : தேவர்களின் பற்றுக் கோடாக நின்ற காளத்தி மலையை ஆட்சி செய்பவர் வந்து
என் கைவளையல் களைக் கொண்டதோடு காம மயக்கத்தையும் தந்தார். தானே உலகை ஆள்வதற்காகத்
தான் கண்ட வண்ணம் வழங்குதலை உடையவன் ஆயின் யார் இதனை அன்று என்பார்?
கயிலை
-
வந்தோர் அரக்கனார் வண்கயிலை மால்வரையைத்
தந்தோள் வலியினையே தாம்கருதி - அந்தோ
இடந்தார் இடந்திட்(டு) இடார்க்கீழ் எலிபோல்
கிடந்தார் வலியெலாம் கெட்டு.
தெளிவுரை : இராவணன் வந்து வண்கயிலை மால்வரையைத் தன் தோள் வலிமையைப் பெரிதெனக்
கருதி, தோண்டினான். அவ்வாறு தோண்டியபோது பொறியிற் அகப்பட்ட எலிபோல் வலியெலாம்
கெட்டுக் கிடந்தான். வருந்தினான் என்றபடி.
காளத்தி
-
கெட்ட அரக்கரே வேதியரே கேளீர் கொல்
பட்டதுவும் ஓராது பண்டொருநாள் - ஒட்டக்
கலந்தரனார் காளத்தி யாள்வார்மேல் சென்று
சலந்தரனார் பட்டதுவும் தாம்.
தெளிவுரை : தீய அரக்கர்களே வேதியர்களே கேளுங்கள்! பட்ட பாட்டையும் எண்ணிப்
பாராமல் முன்பொரு காலத்தில் நெருங்கக் கூடி காளத்தி நாதன் மீது சென்று சலந்தரன்
என்னும் அவுணன் பட்டதையும் கேளீர் எனக் கூட்டுக. வேதியர் என்பது தாருகாவனத்து
இருடிகளை.
கயிலை
-
தாம்பட்ட தொன்றும் அறியார்கொல் சார்வரே
காம்புற்ற செந்நெற் கயிலைக் கோன் - பாம்புற்ற
ஆரத்தான் பத்தர்க்(கு) அருகணையார் காலனார்
தூரத்தே போவார் தொழுது.
தெளிவுரை : மூங்கிலில் தோன்றிய செந்நெல் கிடக்கும் கயிலைக் கோன். அவர் பாம்பணிந்த
சிவபெருமான். எமன் அவருடைய அடியார்களை நெருங்கமாட்டான். தொழுது தூரத்தே போவான்.
அவன் முன்பு தான் பட்ட துன்பத்தை அறியானோ என்றபடி. மார்க்கண்டேயர் வரலாற்றை
நினைவு கூர்கிறார்.
காளத்தி
-
தொழுது நமனுந்தன் தூதுவர்க்குச் சொல்லும்
வழுவில்சீர்க் காளத்தி மன்னன் - பழுதிலாப்
பத்தர்களைக் கண்டால் பணிந்தகலப் போமின்கண்
எத்தனையும் சேய்த்தாக என்று.
தெளிவுரை : குற்றமற்ற சிறப்புக்களையுடைய காளத்தி மன்னனது பழுதில்லாத அன்பர்களைக்
கண்டால், அவர்களைப் பணிந்து விலகிச் செல்லுங்கள். எவ்வளவு தூரமாயினும் தொலைவாகச்
செல்லுங்கள் என்று எமன் தன் தூதுவர்க்குச் சொல்லுவான்.
கயிலை
-
வென்றைந்தும் காமாதி வேரறுத்து மெல்லவே
ஒன்ற நினைதிரேல் ஒன்றலாம் - சென்றங்கை
மானுடையான் என்னை உடையான் வடகயிலை
தானுடையான் தன்னுடைய தாள்.
தெளிவுரை : ஐம்பொறிகளையும் வெற்றி கொண்டு, காமம் முதலிய அறுபகைகளையும் வேரோடு
களைந்து, மெதுவாகப் பொருந்த நினைந் தீர்களானால் போய்ச் சேரலாம். (நினைதிரேல் தாள்
ஒன்றலாம் என்க.) கையில் மானை ஏந்தியவனும் என்னை ஆட்கொண்டவனும் வட கயிலையை
இருப்பிடமாகக் கொண்டவனுமான அவனைக் காணுங்கள் என்று அவனது தாளின் சிறப்பைக்
கூறினார்.
-
தாளொன்றால் பாதாளம் ஊடுருவத் தண்விசும்பில்
தாளொன்றால் அண்டங் கடந்துருவித் - தோளொன்றால்
திக்கனைத்தும் போர்க்குந் திறற்காளி காளத்தி
நக்கனைத்தான் கண்ட நடம்.
தெளிவுரை : திருக்காளத்தியில் எழுந்தருளிய சிரிப்புக்கு இடமாகிய சிவபெருமான்
காளியோடு நடனம் ஆடும்போது, பாதம் ஒன்றால் பாதாளம் ஊடுருவ, தண்விசும்பில் தாள்
ஒன்றால் அண்டம் கடந்துருவி, தோள் ஒன்றால் திக்கனைத்தும் போர்க்கும்.
சிவபெருமான் காளியோடு ஆடிய நடனக் காட்சியை விவரித்துள்ளார் ஆசிரியர்.
கயிலை
-
நடமாடும் சங்கரன்தாள் நான்முகனும் காணான்
படமாடு பாம்பணையான் காணான் - விடமேவும்
காரேறு கண்டன் கயிலாயன் தன் உருவை
யாரே அறிவார் இசைந்து.
தெளிவுரை : நடனமாடும் சங்கரனுடைய பாதத்தைப் பிரமனும், காணவில்லை; படமாடுகின்ற
பாம்பைப் படுக்கையாகவுடைய திருமாலும் காணவில்லை. அப்படியிருக்க நஞ்சு பொருந்திய
கருநிறங் கொண்ட கழுத்தையுடைய கயிலாய நாதனுடைய உருவை யார் இசைந்து அறிவார்?
காளத்தி
-
இசையும்தன் கோலத்தை யான்காண வேண்டி
வசையில்சீர்க் காளத்தி மன்னன் - அசைவின்றிக்
காட்டுமேல் காட்டிக் கலந்தென்னைத் தன்னோடும்
கூட்டுமேல் கூடலே கூடு.
தெளிவுரை : ஒரு பெண் கூடல் இழைக்கும் போது சொல்வது இது, கூடல் - மணலில்
சுழித்துப் பார்க்கும் நிமித்தம். கூடற் சுழியே நீ கூடுவாறயாக என்று வேண்டிக்
கொள்வது, காளத்தி நாதன் தன் கோலத்தை யான் காண வேண்டிக் காட்டு. மேல், காட்டிக்
கலந்தென்னைத் தன்னோடும் கூட்டு மேல் கூடலே கூடு என்கிறாள்.
கயிலை
-
கூடி யிருந்து பிறர்செய்யும் குற்றங்கள்
நாடித்தம் குற்றங்கள் நாடாதே - வாடி
வடகயிலை யேத்தாதே வாழ்ந்திடுவான் வேண்டில்
அட(கு) அயில ஆரமுதை விட்டு.
தெளிவுரை : கூடியிருந்து, பிறர் செய்யும் குற்றங்களை மட்டும் நாடி, தம்
குற்றங்களை நாடாமல் வாடி, வட கயிலையை ஏத்தாமல் வாழ வேண்டுமானால் அருமையான
அமுதத்தைவிட்டு இலையை உண்பாராக.
காளத்தி
-
விட்டாவி போக உடல்கிடந்து வெந்தீயில்
பட்டாங்கு வேமாறு பார்த்திருந்தும் - ஒட்டாதாம்
கள்ளலைக்கும் பூஞ்சோலைக் காளத்தி யுள்நின்ற
வள்ளலைச் சென் றேத்த மனம்.
தெளிவுரை : உயிர் விட்டுப் போக, உடல் தனியாகக் கிடந்து வெம்மையான தீயில் பட்டு
எரிவதைப் பார்த்தும், தேன் சிந்தும் பூஞ்சோலைகள் நிறைந்த காளத்தி மலையில் கோயில்
கொண்டிருக்கும் வள்ளலைச் சென்று மனம் போற்றவில்லையே என்று ஏங்குகிறார்.
கயிலை
-
மனமுற்றும் மையலாய் மாதரார் தங்கள்
கனமுற்றும் காமத்தே வீழ்வர் - புனமுற்(று)
இனக்குறவர் ஏத்தும் இருங்கயிலை மேயான்
தனக்குறவு செய்கலார் தாழ்ந்து.
தெளிவுரை : மனம் முழுவதும் மையலாய் மாதர்கள் தங்கள் பெருத்த காமத்தில்
வீழ்வார்கள். புனத்திற்குச் சென்று கூட்டமான குறவர்கள் வழிபாடு செய்யும் பெரிய
கயிலையில் மேவி யிருக்கின்ற இறைவனுக்கு வணங்கி வழிபாடு செய்யவில்லையே என
ஏங்குகிறார்.
காளத்தி
-
தாழ்ந்த சடையும் தவளத் திருநீறும்
சூழ்ந்த புலியதளும் சூழ்அரவும் - சேர்ந்து
நெருக்கிவா னோர்இறைஞ்சும் காளத்தி யாள்வார்க்(கு)
இருக்குமா கோலங்கள் ஏற்று.
தெளிவுரை : நீண்டு தொங்குகின்ற சடையும், வெண்மையான திருநீறும், இடையில்
கட்டியுள்ள புலித் தோலும், சூழ்ந்துள்ள பாம்பும் சேர்ந்து, நெருங்கித் தேவர்கள்
வணங்குகின்ற காளத்தி மலையை ஆட்சி செய்யும் எம்பெருமானுக்கு அழகாகத்
தோற்றமளிக்கும்.
கயிலை
-
ஏற்றின் மணியே அமையாதோ ஈர்ஞ்சடைமேல்
வீற்றிருந்த வெண்மதியும் வேண்டுமோ - ஆற்றருவி
கன்மேற்பட் டார்க்கும் கயிலாயத்(து) எம்பெருமான்
என்மேற் படைவிடுப்பாற்(கு) ஈங்கு.
தெளிவுரை : என்மேல் மலர் அம்புகளைப் பெய்யும் காமனுக்கு இறைவனது ஊர்தியாகிய
காளையின் மணியே போதாதோ? குளிர்ந்த சடா மகுடத்தின் மேல் கொலு வீற்றிருக்கும்
பிறைச் சந்திரனும் வேண்டுமோ? ஆறாகிய அருவிகள் விழும் ஒலியினையுடைய கயிலாயத்து
எம்பெருமானும் வேண்டுமோ? காமுற்ற மாதர்க்கு மணியோசையும் நிலவொளியும் துன்பந்
தரும் என்க.
காளத்தி
-
ஈங்கேவா என்றருளி என்மனத்தில் எப்பொழுதும்
நீங்காமல் நீவந்து நின்றாலும் - தீங்கை
அடுகின்ற காளத்தி ஆள்வாய் நான் நல்ல
படுகின்ற வண்ணம் பணி.
தெளிவுரை : இங்கே வருவாயாக என்று அருள் செய்து, என் மனத்தில் எப்போதும் நீங்காமல்
நீ வந்து நின்றாலும் தீங்கைச் சிதைக்கின்ற காளத்தி மலையானே! நான் வந்து உன்னை
வணங்குமாறு செய்வாயாக என்பதாம். எனக்கு நன்மையுண்டாகக் கட்டளையிட்டருள் என்றும்
கூறலாம்.
கயிலை
-
பணியாது முன்னிவனைப் பாவியேன் வாளா
கணியாது காலங் கழித்தேன் - அணியும்
கருமா மிடற்றெங் கயிலாயத்(து) எங்கள்
பெருமான(து) இல்லை பிழை.
தெளிவுரை : பாவியேனாகிய நான் முன் இவனைப் பணியாமலும் மதியாமலும் வீணாகக்
காலத்தைக் கழித்து விட்டேன். இந்தத் தவறு, அழகாகப் பொருந்தும் கருமையான
கழுத்தையுடைய கயிலாயப் பெருமானுடையதன்று. என்னுடையதேயாம் என்க.
காளத்தி
-
பிழைப்புவாய்ப்(பு) ஒன்றறியேன் பித்தேறி னாற்போல்
அழைப்பதே கண்டாய் அடியேன் - அழைத்தாலும்
என்னா தரவேகொண்(டு) இன்பொழில்சூழ் காளத்தி
மன்னா தருவாய் வரம்.
தெளிவுரை : குற்றமும் குணமும் அறியாதவனாய் உள்ளேன். பைத்தியம் பிடித்தவனைப் போல்
அடியேன் அழைக்கின்றேன். காண்பாயாக. நான் அழைத்தாலும் என்னுடைய விருப்பத்தை
ஏற்றுக் கொண்டு இனிய பொழில்கள் சூழ்ந்த காளத்தி மன்னா! வரம் தருவாயாக.
கயிலை
-
வரமாவ(து) எல்லாம் வடகயிலை மன்னும்
பரமாவுன் பாதார விந்தம் - சிரமார
ஏத்திடும்போ தாகவந்(து) என் மனத்தில் எப்பொழுதும்
வைத்திடுநீ வேண்டேன்யான் மற்று.
தெளிவுரை : வடகயிலை மன்னும் மேலானவனே! நான் வேண்டுவது எல்லாம் உன் திருவடித்
தாமரையேயாகும். தலையார வணங்கும் போது என் மனத்தில் எப்போதும் உன் திருவடித்
தாமரையை வைத்திடு. வேறு எதுவும் வேண்டேன்.
காளத்தி
-
மற்றும் பலபிதற்ற வேண்டாம் மடநெஞ்சே
கற்றைச் சடையண்ணல் காளத்தி - நெற்றிக்கண்
ஆரா அமுதின் திருநாமம் அஞ்செழுத்தும்
சோராமல் எப்பொழுதும் சொல்.
தெளிவுரை : மட நெஞ்சே! இன்னும் பல பிதற்ற வேண்டாம். கற்றைச் சடையண்ணல் காளத்தி
நெற்றிக்கண் தெவிட்டாத அமுது. அவனுடைய திருநாமமாகிய ஐந்தெழுத்தை மறவாமல்
எப்பொழுதும் சொல்வாயாக.
திருச்சிற்றம்பலம்
திருஈங்கோய்மலை எழுபது(நக்கீரதேவநாயனார் அருளிச்செய்தது )
ஈங்கோய் மலையைப் பற்றிய எழுபது பாடல்களைக் கொண்டிருத்தலின் இப்பெயர் பெற்றது.
கொடிய விலங்குகளும் நெடிது வழிபாடு செய்யும் நீர்மையை இவ் அருள் நூல் பெரிதும்
விளக்குகின்றது.
திருச்சிற்றம்பலம்
-
அடியும் முடியும் அரியும் அயனும்
படியும் விசும்பும் பாய்ந்(து) ஏறி - நொடியுங்கால்
இன்ன(து) என அறியா ஈங்கோயே - ஓங்காரம்
அன்னதென நின்றான் மலை.
தெளிவுரை : உன்னுடைய அடியையும் முடியையும் காண்பதற்காக முறையே திருமாலும்
பிரமனும் நிலவுலகையும் ஆகாயத்தையும் ஊடுருவித் தேடியும், கூறுமிடத்து, இன்னது என
அறிய முடியாததாக இருக்கின்ற ஈங்கோய், ஓங்காரம் அன்னதென நின்றானது மலையாகும்.
-
அந்தஇள மாக்குழவி ஆயம் பிரிந்ததற்குக்
கொந்தவிழ்தேன் தோய்த்துக் குறமகளிர் - சந்தின்
இலைவளைக்கை யாற்கொடுக்கும் ஈங்கோயே மேரு
மலைவளைக்கை வில்லி மலை.
தெளிவுரை : அந்த இளைய மான்கன்று தனது கூட்டத்திலிருந்து பிரிந்து விட்டதால்
குறமகளிர் சந்தன மரத்தின் இலையில் கொந்தவிழ்த் தேனைத் தோய்த்து வளையலணிந்த தம்
கையால் கொடுக்கும் ஈங்கோய் மேருமலையை வில்லாக வளைத்தவரது மலையாகும்.
-
அம்பவள வாய் மகளிர் அம்மனைக்குத் தம்மனையைச்
செம்பவளம் தாஎன்னச் சீர்க்குறத்தி - கொம்பின்
இறுதலையி னாற்கிளைக்கும் ஈங்கோயே நம்மேல்
மறுதலைநோய் தீர்ப்பான் மலை.
தெளிவுரை : அழகிய பவளம் போன்ற வாயினையுடைய மகளிர், அம்மானை ஆடுவதற்குத் தம்முடைய
தாயைச் செம்பவளம் தா என்று கேட்க சீர் குறத்தி கொம்பின் நுனியால் கிளறுகின்ற
ஈங்கோயே, நம்மேல் மறுபடியும் வருகிற பிறவித் துன்பங்களைத் தீர்ப்பவனுடைய
மலையாகும்.
-
அரிகரியைக் கண்டவிடத்(து) அச்சலிப்பாய் ஓடப்
பிரிவரிய தன்பிடியைப் பேணிக் - கரிபெரிதும்
கையெடுத்து நீட்டிக் கதஞ்சிறக்கும் ஈங்கோயே
மையடுத்த கண்டன் மலை.
தெளிவுரை : சிங்கம், யானையைப் பார்த்த போது பயந்து ஓட, பிரிவதற்கு இயலாத பெண்
யானையைக் காப்பாற்றி ஆண்யானையானது பெரிதும் துதிக்கையைத் தூக்கிக் கோபங் கொள்ளும்
ஈங்கோயே, கருமை நிறம் பொருந்திய கழுத்தை உடையவனது மலையாகும்.
-
அரியும் உழுவையும் ஆளியுமே ஈண்டிப்
பரியிட்டுப் பன்மலர்கொண்(டு) ஏறிச் - சொரிய
எரியாடி கண்டுகக்கும் ஈங்கோயே கூற்றம்
திரியாமல் செற்றான் சிலம்பு.
தெளிவுரை : சிங்கமும், புலியும், ஆளியும் நெருங்கிப் பரிவாரமாகப் பல மலர்களைக்
கொண்டு ஏறிச் சொரிய தீயிலாடும் இறைவன் கண்டு மகிழும் ஈங்கோய், எமன் திரியாமல்
அழிந்தான் மலையாகும். ஆளி - யாளி. (பழங்காலத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் கொடிய
விலங்கு வகையைச் சேர்ந்தது.)
-
ஆளி தொடர அரிதொடர ஆங்குடனே
வாளி கொடு தொடரும் மாக்குறவர் - கோளின்
இடுசிலையி னாற்புடைக்கும் ஈங்கோயே நம்மேல்
கொடுவினைகள் வீட்டுவிப்பான் குன்று.
தெளிவுரை : ஆளி தொடர சிங்கம் தொடர அவ்விடத்தில் உடனே அம்புகளோடு தொடரும்
வேடுவர்கள் கொடிய வில்லினால் கொன்றழிக்கும் ஈங்கோய் மலையே, நம்மேல் வர இருக்கும்
கொடிய வினைகளைக் கெடுத்து ஒழிப்பவனது மலையாகும்.
-
இடுதினைதின் வேழம் கடியக் குறவர்
வெடிபடு வெங்கவண்கல் ஊன்ற - நெடுநெடென
நீண்டகழை முத்துதிர்க்கும் ஈங்கோயே ஏங்குமணி
பூண்டகழை யேறி பொருப்பு.
தெளிவுரை : பயிரிடப்பட்ட தினையைத் தின்ன வந்த யானையை ஓட்டுவதற்காகக் குறவர் கவண்
கொண்டு வீசிய கற்கள் விரைந்து தாக்கியதனால் உயர்ந்த மூங்கில்கள் முத்தை
உதிர்க்கும் ஈங்கோய் மலையே, ஒலி செய்கின்ற மணிகளைப் பூண்ட காளை வாகனனது
மலையாகும்.
-
ஈன்ற குறமகளிர்க்(கு) ஏழை முதுகுறத்தி
நான்றகறிக் கேறசலை நற்கிழங்(கு) - ஊன்றவைத்(து)
என் அன்னை உண்ணென்(று) எடுத்துரைக்கும் ஈங்கோயே
மின்னன்ன செஞ்சடையான் வெற்பு.
தெளிவுரை : வறிய வயது முதிர்ந்த குறத்தி தான் ஈன்ற குறமகளிர்க்கு உண்பதற்குரிய
அசலை என்னும் மீனை கிழங்கோடு சேர்த்து உண் என்று சொல்லும் ஈங்கோய் மலை, மின்னலைப்
போன்று ஒளி வீசும் சடையை உடையவனது மலையாகும்.
-
ஈன்ற குழவிக்கு மந்தி இறுவரை மேல்
நான்ற நறவத்தைத் தான்நணுகித் - தோன்ற
விரலால்தேன் தோய்த்தூட்டும் ஈங்கோயே நம்மேல்
வரலாம்நோய் தீர்ப்பான் மலை.
தெளிவுரை : பிறந்த குட்டிக்குப் பெண் குரங்கு, பிளவுபட்ட மலை மேல் தொங்குகின்ற
தேனடையை நெருங்கி, தன் விரலைக் கொண்டு எடுத்த தேனைத் தோய்த் தூட்டும் ஈங்கோய்,
நம்மேல் வர இருக்கும் துன்பங்களைத் தீர்ப்பவனது மலையாகும்.
-
உண்டிருந்த தேனை அறுபதங்கள் ஊடிப்போய்ப்
பண்டிருந்த யாழ்முரலப் பைம்பொழில்வாய்க் - கண்டிருந்த
மாமயில்கள் ஆடி மருங்குவரும் ஈங்கோயே
பூமயிலி தாதை பொருப்பு.
தெளிவுரை : உண்டு எஞ்சியிருந்த தேனை வண்டுகள் பிணங்கிச் சென்று முன்பிருந்த யாழ்
போல் முரல பசுமையான சோலையினிடத்துப் பார்த்த மயில்கள் ஆடி மருங்கு வரும் ஈங்கோய்
அழகிய மயிலை ஊர்தியாகக் கொண்ட முருகக் கடவுளது தந்தையின் மலையாகும்.
-
ஊடிப் பிடியுறங்க ஒண்கதலி வண்கனிகள்
நாடிக் களிறு நயந்தெடுத்துக் - கூடிக்
குணமருட்டிக் கொண்டாடும் ஈங்கோயே வானோர்
குணமருட்டும் கோளரவன் குன்று.
தெளிவுரை : பெண் யானை பிணங்கி உறங்க, ஆண்யானை யானது சென்று ஒளி பொருந்திய
வாழையின் வளப்ப மிக்க பழங்களை விரும்பி எடுத்து வந்து கூடி, பிடியின் ஊடலைப்
பேதித்துக் கொண்டாடும் ஈங்கோய் மலையே, தேவர்களின் குணமருட்டும் பாம்பை மாலையாகக்
கொண்டவனது மலையாகும்.
-
எய்யத் தொடுத்தோன் குறத்திநோக்(கு) ஏற்றதேனக்
கையிற் கணைகளைந்து கன்னிமான் - பையப்போ
என்கின்ற பாவனைசெய் ஈங்கோயே தூங்கெயில்கள்
சென்றன்று வென்றான் சிலம்பு.
தெளிவுரை : எய்வதற்குக் கணையைத் தொடுத்த வேடன் குறத்தியின் பார்வைக்கு ஏற்ற
தென்று, கணையை நீக்கி விட்டு, ஈனாத இளமானை மெதுவாகப் போ என்று பாவனை செய்கின்ற
ஈங்கோய் மலையே, தொங்குகின்ற மதில்களைச் சென்று அன்று வென்றவனுடைய மலையாகும்.
-
ஏழை இளமாதே என்னொடுநீ போதென்று
கூழை முதுவேடன் கொண்டுபோய் - வேழ
இனைக்குவால் வீட்டுவிக்கும் ஈங்கோயே நந்தம்
வினைக்குவால் வீட்டுவிப்பான் வெற்பு.
தெளிவுரை : ஏழை இளமாதே என்னோடு நீ வருவாயாக என்று வயது முதிர்ந்த வேடன்
ஒருவன் கொண்டு போய் யானைக் கூட்டத்திலிருந்து விடுவித்த ஈங்கோயே, நம்முடைய வினைத்
தொகுதியை அழிப்பவனது மலையாகும். யானக் கூட்டத்தில், அகப்பட்டுக் கொண்ட இளமாது
ஒருத்தியைக் கிழவேடன் ஒருவன் காத்த செய்தி கூறப்படுகிறது.
-
ஏனம் உழுத புழுதி இனமணியைக்
கானவர்தம் மக்கள் கனலென்னக் - கூனல்
இறுக்கங் கதிர்வெதுப்பும் ஈங்கோயே நம்மேல்
மறுக்கங்கள் தீர்ப்பான் மலை.
தெளிவுரை : காட்டுப் பன்றி உழுத புழுதியில் கிடந்த சிறந்த மாணிக்கக் கற்களை
வேடர்களது மக்கள் நெருப்பென்று, வளைந்த சோளக் கதிர்களை வேக வைக்கும் ஈங்கோயே, நம்
மேல் வரவிருக்கும் கவலைகளைப் போக்குவானது மலையாகும்.
-
ஏனங் கிளைத்த இனபவள மாமணிகள்
கானல் எரிபரப்பக் கண்டஞ்சி - யானை
இனமிரிய முல்லைநகும் ஈங்கோயே நம்மேல்
வினையிரியச் செற்றுகந்தான் வெற்பு.
தெளிவுரை : காட்டுப் பன்றிகள் தோண்டியெடுத்த மிக்க பவளப் பெருமணிகள் நெருப்புப்
போல, ஒளி வீசக் கண்டு அஞ்சி யானைக் கூட்டங்கள் பிரிந்து செல்ல, முல்லை மலர் எள்ளி
நகையாடினாற் போல் காட்சி யளிக்கும் ஈங்கோய் மலையானது நம்மேல் வரக் கடவதாகிய
வினைகள் கெடுமாறு செய்யும் இறைவனது மலையாகும்.
-
ஒருகணையும் கேழல் உயிர்செகுத்துக் கையில்
இருகணையும் ஆனைமேல் எய்ய - அருகணையும்
ஆளரிதான் ஓட அரிவெருவும் ஈங்கோயே
கோளரிக்கும் காண்பரியான் குன்று.
தெளிவுரை : ஒரு கணையால் பன்றியினது உயிரைப் போக்கி, கையிலுள்ள இரண்டாவது கணையை
யானைமேல் விடுக்க அப்போது அருகில் வந்த சிங்கம் பயந்து ஓடும், ஈங்கோய் மலை,
விரதத்தையுடைய திருமாலுக்கும் காண்பதற்கு அரிய முடியாதவனுடைய மலையாகும்.
-
ஓங்கிப் பரந்தெழுந்த ஒள்ளிலவத் தண்போதைத்
தூங்குவதோர் கொள்ளி எனக்கடுவன் - மூங்கில்
தழையிறுத்துக் கொண்டோச்சும் ஈங்கோயே சங்கக்
குழையிறுத்த காதுடையான் குன்று.
தெளிவுரை : உயர்ந்து வளர்ந்திருந்த இலவமரத்தின் குளிர்ந்த மலரை, தொங்குகின்ற
கொள்ளி என்று நினைத்த ஆண் குரங்கு மூங்கில் தழையை ஒடித்து வீசுகின்ற ஈங்கோய்
மலையானது சங்கினாலாகிய குண்டலங்களைக் காதில் அணிந்தவனுடைய மலையாகும்.
-
ஓடும் முகிலை உகிரால் இறவூன்றி
மாடுபுக வான்கை மிகமடுத்து - நீடருவி
மாச்சீயம் உண்டு மனங்களிக்கும் ஈங்கோயே
கோச்சீயம் காண்பரியான் குன்று.
தெளிவுரை : வானத்தில் செல்லுகின்ற மேகத்தை நகத்தால் அறுத்து உண்ண வானத்தில்
கைநீட்டிய சிங்கம், அருவி நீரை அருந்தி மனங்களிக்கும் ஈங்கோய், நரசிங்க
மூர்த்தியாகிய திருமால் காண முடியாத மலையாகும்.
-
கண்ட கனிநுகர்ந்த மந்தி கருஞ்சுனைநீர்
உண்டு குளிர்ந்திலஎன் றூடிப்போய்க் - கொண்டல்
இறைக்கீறி வாய்மடுக்கும் ஈங்கோயே நான்கு
மறைக்கீறு கண்டான் மலை.
தெளிவுரை : பார்த்த பழங்களையெல்லாம் உண்ட பெண் குரங்கு, கருஞ் சுனை நீரைக்
குடித்து, மனங்குளிர வில்லை என்று பிணங்கிச் சென்று மேகத்தைச் சிறிது கிழித்துக்
குடிக்கும் ஈங்கோய், நான்கு வேதங்களுக்கும் முடிவானவனது மலையாகும்.
-
கருங்களிற்றின் வெண்கொம்பால் கல்லுரல்வாய் நல்லார்
பெருந்தினைவெண் பிண்டி இடிப்ப - வருங்குறவன்
கைக்கொணரும் செந்தேன் கலந்துண்ணும் ஈங்கோயே
மைக்கொணரும் கண்டன் மலை.
தெளிவுரை : கரிய ஆண்யானையின் வெண்மையான தந்தத்தால் கல் உரலில் மகளிர் தினைமாவை
இடிப்ப, குறவன் கையில் கொண்டு வந்த செந்தேனை மாவோடு கலந்துண்ணும் ஈங்கோய், நீல
கண்டனது மலையாகும்.
-
கனைய பலாங்கனிகள் கல்லிலையர் தொக்க
நனைய கலத்துரத்தில் ஏந்தி - மனைகள்
வரவிரும்பி ஆய்பார்க்கும் ஈங்கோயே பாங்கார்
குருஅரும்பு செஞ்சடையான் குன்று.
தெளிவுரை : மிகுதியான பலாப் பழங்களைக் கொண்ட கல்லிலையர் ஒன்று கூடி, தேனைப்
பாத்திரங்களில் ஏந்தி வீட்டுக்கு வரும் விருந்தினர்களை எதிர்பார்க்கும் ஈங்கோய்,
பாங்கார் குராமலர்கள் மலருகின்ற செஞ்சடையானது குன்றாகும்.
-
கடக்களிறு கண்வளரக் கார்நிறவண் டார்ப்பச்
சுடர்க்குழையார் பாட்டெழவு கேட்டு - மடக்கிளிகள்
கீதம் தெரிந்துரைக்கும் ஈங்கோயே ஆல்கீழ்நால்
வேதம் தெரிந்துரைப்பான் வெற்பு.
தெளிவுரை : மதம் பொருந்திய ஆண்யானை உறங்க, கருநிற வண்டுகள் ஆரவாரஞ் செய்ய, ஒளி
தங்கிய குண்டலத்தை அணிந்த பெண்களின் பாட்டு எழுதலைக் கேட்டு மடக் கிளிகள் கீதம்
தெரிந்துரைக்கும் ஈங்கோய், கல்லால மரத்தின் கீழ் நால் வேதத்தைத்
தெரிந்துரைப்பானது மலையாகும்.
-
கறுத்தமுலைச் சூற்பிடிக்குக் கார்யானை சந்தம்
இறுத்துக்கை நீட்டும்ஈங் கோயே - செறுத்த
கடதடத்த தோலுரிவைக் காப்பமையப் போர்த்த
விடமிடற்றி னான்மருவும் வெற்பு.
தெளிவுரை : கறுத்த முலைகளையுடைய சூல்கொண்ட பெண் யானைக்கு, கரிய ஆண்யானை
சந்தனத்தைப் பறித்து, கை நீட்டும் ஈங்கோய், கோபங் கொண்ட மதம் பொருந்திய பெரிய
யானையின் தோலைப் போர்த்த நீல கண்டன் பொருந்தி யிருக்கும் மலையாகும்.
-
கங்குல் இரைதேரும் காகோ தரங்கேழற்
கொம்பி னிடைக்கிடந்த கூர்மணியைப் - பொங்கி
உருமென்று புற்றடையும் ஈங்கோயே காமன்
வெருவொன்றக் கண்சிவந்தான் வெற்பு.
தெளிவுரை : இரவில் இரைதேடும் பாம்பு பன்றிக் கொம்பின் இடைக் கிடந்த கூர் மணியை,
கோபித்த இடியென்று அஞ்சிப் புற்றுக்குள் செல்லும் ஈங்கோய் மலையானது, மன்மதன்
அச்சத்தை யடைய, கண் சிவந்தவனது மலையாகும். நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்த
செய்தி சொல்லப்படுகிறது.
-
கலவிக் களிறசைந்த காற்றெங்கும் காணா(து)
இலைகைக்கொண் டேந்திக்கால் வீச - உலவிச்சென்(று)
ஒண்பிடிகாற் றேற்றுகக்கும் ஈங்கோயே பாங்காய
வெண்பொடிநீற் றான்மருவும் வெற்பு.
தெளிவுரை : கலவி செய்தலையுடைய ஆண்யானை பல இடங்களிலும் சுற்றியலைந்து காணாமல்
இலையைக்கைக் கொண்டு காற்றுண்டாகுமாறு வீச, பெண் யானை காற்றை யடைந்து மகிழும்
ஈங்கோய், சிறப்புப் பொருந்திய வெண்ணீறு அணிந்த இறைவன் பொருந்தியுள்ள மலையாகும்.
-
கன்னிப் பிடிமுதுகிற் கப்புருவம் உட்பருகி
அன்னைக் குடிவர லாறஞ்சியே - பின்னரே
ஏன்தருக்கி மாதவம்செய் ஈங்கோயே நீங்காத
மான்தரித்த கையான் மலை.
தெளிவுரை : கன்னிப் பிடி முதுகிற்கு அப்பருவம் உட்பருகி, அன்னைக் குடிவரலாறு
அஞ்சிப் பிறகு தருக்கி மாதவர் செய் ஈங்கோய், எப்போதும் கையில் மான் கன்றைக்
கையில் ஏந்திய சிவபெருமானது மலையாகும்.
-
கள்ள முதுமறவர் காட்டகத்து மாவேட்டை
கொள்ளென்(று) அழைத்த குரல்கேட்டுத் - துள்ளி
இனக்கவலை பாய்ந்தோடும் ஈங்கோயே நந்தம்
மனக்கவலை தீர்ப்பான் மலை.
தெளிவுரை : கள்ளம் நிறைந்த முதுமை பொருந்திய வேடர்கள் வாழும் காட்டில் மிருக
வேட்டை மேற் கொள்வாயாக என்ற குரல் கேட்டுத் துள்ளிப் பாய்ந்தோடும் ஈங்கோய்
நம்முடைய மனக் கவலையைத் தீர்ப்பவனாகிய சிவபெருமானுடைய மலையாகும்.
-
கல்லைப் புனம்மேய்ந்து கார்க்கொன்றைத் தார்போர்த்துக்
கொல்லை எழுந்த கொழும்புறவின் - முல்லையங்கள்
பல்லரும்பு மொய்த்தீனும் ஈங்கோயே மூவெயிலும்
கொல்லரும்பக் கோல்கோத்தான் குன்று.
தெளிவுரை : மலைச்சாரலில் உள்ள கொல்லையில் மேய்ந்து கார்காலத்தில் பூக்கும் கொன்றை
மாலையை அணிந்து கொல்லை யெழுந்த வளமான காட்டில் முல்லை அரும்பில் மொய்த்து ஈனும்
ஈங்கோய், மூன்று மதில்களும் அழிந்தொழிய கணை தொடுத்தவனுடைய மலையாகும்.
-
கல்லாக் குரங்கு பளிங்கிற் கனிகாட்ட
எல்லாக் குரங்கும் உடன்ஈண்டி - வல்லே
இருந்துகிரால் கற்கிளைக்கும் ஈங்கோயே மேனிப்
பொருந்தவராப் பூண்டான் பொருப்பு.
தெளிவுரை : கல்வி அறிவில்லாத குரங்கு, பளிங்குக் கல்லில் வேறிடத்தில் உள்ள
கனியின் நிழலைக் காட்ட எல்லாக் குரங்குகளும் ஒன்று கூடி நகத்தினால் கல்லைப்
பறிக்கும் ஈங்கோய் மலையானது உடலில் பொருந்த பாம்பை அணிந்தவனது மலையாகும்.
-
கண்கொண்(டு) அவிர்மணியின் நாப்பண் கருங்கேழல்
வெண்கோடு வீழ்ந்த வியன்சாரல் - தண்கோ(டு)
இளம்பிறைசேர் வான்கடுக்கும் ஈங்கோயே வேதம்
விளம்பிறைசேர் வான்கடுக்கும் வெற்பு.
தெளிவுரை : கண் கொண்டு விளங்குகின்ற மணியின் நடுவில் கரிய பன்றியின் வெண்மையான
கொம்பு வீழ்ந்த பெருமை மிகுந்த சாரல் குளிர்ந்த கொம்பு போன்ற பிறைச் சந்திரன்
சேர்ந்த ஆகாயத்தை ஒத்திருக்கும் ஈங்கோய், வேதத்தை விளம்பிய பிறையணிந்தவனை
ஒத்திருக்கும் மலையாகும்.
-
காந்தளம் கைத்தலங்கள் காட்டக் களிமஞ்ஞை
கூந்தல் விரித்துடனே கூத்தாடச் - சாய்ந்திரங்கி
ஏர்க்கொன்றை பொன்கொடுக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல்
கார்க்கொன்றை ஏன்றான் கடறு.
தெளிவுரை : காந்தள் கூத்தாடுமாறு கையைக் காட்ட, களிப்பு மிக்க மயில் தோகையை
விரித்துக் கூத்தாடச் சாய்ந்து தாழ்ந்து அழகிய கொன்றை மரம் பொன் கொடுப்பதைப் போல
மலர்ந்து விளங்கும் ஈங்கோய் செஞ்சடைமேல் கார்க்கொன்றையை ஏற்றுக் கொண்டவனது காடு
ஆகும்.
-
குறமகளிர் கூடிக் கொழுந்தினைகள் குத்தி
நறவமாக் கஞ்சகங்கள் நாடிச் - சிறுகுறவர்
கைந்நீட்டி உண்ணக் களித்துவக்கும் ஈங்கோயே
மைந்நீட்டுங் கண்டன் மலை.
தெளிவுரை : குறப் பெண்கள் ஒன்று சேர்ந்து செழிப்பான தினையைக் குத்தி, தேன் கலந்து
மாவினால் செய்த பண்டத்தை விரும்பிக் குறச் சிறுவர்கள் கை நீட்டி உண்ண மகிழ்ச்சி
பொங்கும் ஈங்கோய் நீல கண்டனது மலையாகும்.
-
கூழை முதுமந்தி கோல்கொண்டு தேன்பாய
ஏழை இளமந்தி சென்றிருந்து - வாழை
இலையால்தேன் உண்டுவக்கும் ஈங்கோயே இஞ்சி
சிலையால்தான் செற்றான் சிலம்பு.
தெளிவுரை : குட்டையான கிழப்பெண் குரங்கு கோல் கொண்டு தேன் அடையைக் குத்த அறிவற்ற
இளமந்தி சென்று, இரந்து வாழையிலையில் தேன் உண்டு மகிழ்கின்ற ஈங்கோய் திரிபுரங்களை
வில்லால் அழித்தவனது மலையாகும்.
-
கொல்லை இளவேங்கைக் கொத்திறுத்துக் கொண்டுசுனை
மல்லைநீர் மஞ்சனமா நாட்டிக்கொண்(டு) ஒல்லை
இருங்கைக் களிறேறும் ஈங்கோயே மேல்நோய்
வருங்கைக் களைவான் மலை.
தெளிவுரை : கொல்லையிலுள்ள இளவேங்கை மரத்தினது கொத்தை ஒடித்துக்கொண்டு, சுனை நீரை
மஞ்சனமா நாட்டிக் கொண்டு பெரிய துதிக்கையினையுடைய ஆண்யானை விரைவில் ஏறிவரும்
ஈங்கோய், இனிவரும் பிறவி நோயைக் களைவானது மலையாகும்.
-
கொவ்வைக் கனிவாய்க் குறமகளிர் கூந்தல்சேர்
கவ்வைக் கடிபிடிக்கும் காதன்மையால் - செவ்வை
எறித்தமலர் கொண்டுவிடும் ஈங்கோயே அன்பர்
குறித்தவரந் தான்கொடுப்பான் குன்று.
தெளிவுரை : கொவ்வைக் கனி போன்ற வாயினையுடைய குற மகளிர் கூந்தலில் சேர்ந்த மலரின்
மணத்தைப் பிடிக்கும் அன்புடைமையால் செவ்வை எறித்த மலர் கொண்டு விடும் ஈங்கோய்
அன்பர்கள் குறித்த வரத்தைக் கொடுப்பவனது மலையாகும்.
-
கொடுவிற் சிலைவேடர் கொல்லை புகாமல்
படுகுழிகள் கல்லுதல்பார்த்(து) அஞ்சி - நெடுநாகம்
தண்டூன்றிச் செல்லும்நீர் ஈங்கோயே தாழ்சடைமேல்
வண்டூன்றும் தாரான் மலை.
தெளிவுரை : வளைந்த வில்லையுடைய வேடர் தினைக் கொல்லைக்குள் புகாமல் படுகுழிகள்
தோண்டுவதைக் கண்டு அஞ்சிப் பெரிய யானை குழியிருக்கும் இடத்தைத் தெரிந்து
கொள்வதற்காகத் தடியினால் ஊன்றிப் பார்த்துக் கொண்டு செல்லும் ஈங்கோய், தாழ்
சடைமேல் வண்டுகள் மொய்க்கும் மாலைகளையுடைய வனது மலையாகும்.
-
கோங்கின் அரும்பழித்த கொங்கைக் குறமகளிர்
வேங்கைமணி நீழல் விளையாடி - வேங்கை
வரவதனைக் கண்டிரியும் ஈங்கோயே தீங்கு
வரவதனைக் காப்பான் மலை.
தெளிவுரை : கோங்கின் அரும்பைத் தோல்வியுறச் செய்த கொங்கைகளையுடைய குறமகளிர்
வேங்கை மரத்தினது அழகிய நீழலில் விளையாடி, வேங்கைப் புலி வருவதைக் கண்டு ஓடும்
ஈங்கோய், தீங்கு வருவதை வராமல் காப்பவனது மலையாகும்.
-
சந்தனப்பூம் பைந்தழையைச் செந்தேனில் தோய்த்தியானை
மந்த மடப்பிடியின் வாய்க்கொடுப்ப - வந்ததன்
கண்களிக்கத் தான்களிக்கும் ஈங்கோயே தேங்காதே
விண்களிக்க நஞ்சுண்டான் வெற்பு.
தெளிவுரை : சந்தனப் பூம் பைந்தழையைச் செந்தேனில் தோய்த்து ஆண் யானையானது, மந்தத்
தன்மையுள்ள பெண் யானையின் வாய் கொடுக்கவும், வந்து அதன் கண் களிக்கத் தான்
களிக்கும் ஈங்கோய், காலந் தாழ்த்தாமல் விண்ணுலகத்தவர்கள் மகிழ்ச்சி யடைய நஞ்சை
உண்டவனது மலையாகும்.
-
சந்தின் இலையதனுள் தண்பிண்டி தேன்கலந்து
கொந்தியினி துண்ணக் குறமகளிர் - மந்தி
இனமகளிர் வாய்க்கொடுத்துண் ஈங்கோயே வெற்பின்
வளமகளிர் பாகன் மலை.
தெளிவுரை : குறமகளிர் சந்தன மரத்தின் இலையில் குளிர்ந்த தினை மாவில் தேன் கலந்து
எடுத்து இனிதுண்ண, பெண் குரங்கு இளமகளிர் வாயில் கொடுத்து, தானும் உண்ணும்
ஈங்கோய், இமயமலையின் மகளாகிய உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டவனது மலையாகும்.
-
சாரற் குறத்தியர்கள் தண்மருப்பால் வெண்பிண்டி
சேரத் தருக்கி மதுக்கலந்து - வீரத்
தமரினிதா உண்ணுஞ்சீர் ஈங்கோயே இன்பக்
குமரன்முது தாதையார் குன்று.
தெளிவுரை : மலைச் சாரல் குறத்தியர்கள் குளிர்ந்த தந்தத்தால் வெண்மையான அசோக
மரத்தருகில் மதுவைக் கலந்து வீரம் பொருந்திய தம் மலர்களோடு இனிதாக உண்ணுகின்ற
சீர் ஈங்கோய் இன்பக் குமரன் ஆகிய முருகக் கடவுளது பழைமை பொருந்திய தந்தை யாராகிய
சிவபெருமானது குன்று ஆகும்.
-
தாயோங்கித் தாமடரும் தண்சாரல் ஒண்கானம்
வேயோங்கி முத்தம் எதிர்பிதுங்கித் - தியோங்கிக்
கண்கன்றித் தீவிளைக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல்
வண்கொன்றைத் தாரான் வரை.
தெளிவுரை : தாவி யோங்கி தாம் நெருங்கி வளரும் குளிர்ந்த சாரலையுடைய ஒளி பொருந்திய
காடு, மூங்கில் உயர்ந்து முத்தம் உதிர்ந்து தீயை உண்டாக்கும் கணுக்கள் உராய்ந்து
தீயை உண்டாக்கும் ஈங்கோய், செஞ்சடை மேல் வண் கொன்றைத் தாரை அணிந்தவனது மலையாகும்.
-
செடிமுட்டச் சிங்கத்தின் சீற்றத்தீக்(கு) அஞ்சிப்
பிடியட்ட மாக்களிறு பேர்ந்து - கடம்முட்டி
என்னேசீ என்னுஞ்சீர் ஈங்கோயே ஏந்தழலிற்
பொன்னேர் அனையான் பொருப்பு.
தெளிவுரை : செடிகள் மோத சிங்கத்தின் கோபத் தீக்கு அஞ்சி பெண் யானை மோத ஆண்யானை
பெயர்ந்து காட்டை முட்டி சீ என வெறுக்கும் ஈங்கோய், கையில் ஏந்திய தீயில்
பொன்னின் அழகிற்கு ஒப்பானவனது மலையாகும்.
-
சுனைநீடு தாமரையின் தாதளைந்து சோதிப்
புனைநீடு பொன்னிறத்த வண்டு - மனைநீடி
மன்னி மணம்புணரும் ஈங்கோயே மாமதியம்
சென்னி அணிந்தான் சிலம்பு.
தெளிவுரை : சுனையிற் பொருந்திய தாமரை மலரின் மகரந்தப் பொடியைத் துழாவி ஒளி
புனைந்து பொன்னிற மடைந்த வண்டு வீடு திரும்பிப் பொருந்தி மணம் புணரும் ஈங்கோய்,
பிறைச் சந்திரனைத் தலையில் அணிந்த சிவபிரானது மலையாகும்.
-
செந்தினையின் வெண்பிண்டி பச்சைத்தே னாற்குழைத்து
வந்தவிருந் தூட்டும் மணிக்குறத்தி - பந்தியாத்
தேக்கிலைகள் இட்டுச் சிறப்புரைக்கும் ஈங்கோயே
மாக்கலைகள் வைத்தான் மலை.
தெளிவுரை : செந்தினையின் வெண்மையான மாவைப் பச்சைத் தேனால் குழைத்து வந்த
விருந்தினருக்கு அளிக்கும் மணிக் குறத்தி வரிசையாகத் தேக்கிலையில் வைத்து
உபசரிக்கும் ஈங்கோய், சிறந்த அறிவுக் கலைகளை வைத்தவனது மலையாகும்.
-
தடங்குடைந்த கொங்கைக் குறமகளிர் தங்கள்
இடம்புகுந்தங்(கு) இன்நறவம் மாந்தி - உடன்கலந்து
மாக்குரவை ஆடி மகிழ்ந்துவரும் ஈங்கோயே
கோக்குரவை ஆடிகொழுங் குன்று.
தெளிவுரை : பெரிய சுனையில் நீராடிய கொங்கைக் குறமகளிர் தங்கள் இருப்பிடம்
சேர்ந்து வீட்டிலிருந்த இனிய தேனைப் பருகி , ஒன்று சேர்ந்து, மகளிர் கை
கோத்தாடும் குரவைக் கூத்தை ஆடி மகிழ்ந்து வரும் ஈங்கோய், ஊழிக் கூத்தை ஆடும்
பெருமானது வளமுள்ள குன்றாகும்.
-
தாமரையின் தாள்தகைத்த தாமரைகள் தாள்தகையத்
தாமரையில் பாய்ந்துகளும் தண்புறவில் - தாமரையின்
ஈட்டம் புலிசிதறும் ஈங்கோயே எவ்வுயிர்க்கும்
வாட்டங்கள் தீர்ப்பான் மலை.
தெளிவுரை : தாவுகின்ற மானின் காலைத் தடுத்த, தாமரைக் கொடிகள் காலைத் தடுக்க,
தாமரையில் பாய்ந்து உகளும் குளிர்ந்த காட்டில் மான் கூட்டத்தால் புலிகள் சிதறி
ஓடுகின்ற ஈங்கோய், எல்லா உயிர்களின் வருத்தங்களையும் தீர்ப்பவனது மலையாகும்.
-
தெள்ளகட்ட பூஞ்சுனைய தாமரையின் தேமலர்வாய்
வள்ளவட்டப் பாழி மடலேறி - வெள்ளகட்ட
காராமை கண்படுக்கும் ஈங்கோயே வெங்கூற்றைச்
சேராமல் செற்றான் சிலம்பு.
தெளிவுரை : தெளிந்த நடுவிடத்தையுடைய பூஞ்சுனையை உடையதாய், தாமரை மலரின் கிண்ணம்
போன்ற வட்ட வடிவமான பெரிய மடலில் ஏறி, வெண்மையான வயிற்றை உடைய கரிய ஆமை கண்
உறங்கும் ஈங்கோய், கொடிய எமனை வராமல் அழித்தவனது மலையாகும்.
-
தேன்பலவின் வான்சுளைகள் செம்முகத்த பைங்குரங்கு
தான்கொணர்ந்து மக்கள்கை யிற்கொடுத்து - வான்குணங்கள்
பாராட்டி யூட்டுஞ்சீர் ஈங்கோயே பாங்கமரர்
சீராட்ட நின்றான் சிலம்பு.
தெளிவுரை : இனிமை மிகுந்த பலாவின் சிறந்த சுளைகளை சிவந்த முகத்தையுடைய பெண்
குரங்கு கொண்டு வந்து, தம் குட்டிகளின் கையிற் கொடுத்து, சிறந்த குணங்களைப்
பாராட்டி ஊட்டுகின்ற சிறப்புடைய ஈங்கோய், பாங்காய் அமரர்கள் சீராட்ட நின்றானது
மலையாகும். சீராட்ட - சிறப்புச் செய்ய.
-
தேன்மருவு பூஞ்சுனைகள் புக்குச் செழுஞ்சந்தின்
கானமர்கற் பேரழகு கண்குளிர - மேனின்(று)
அருவிகள்தாம் வந்திழியும் ஈங்கோயே வானோர்
வெருவுகடல் நஞ்சுண்டான் வெற்பு.
தெளிவுரை : தேன் பொருந்திய பூஞ்சுனைகளில் நீராடி, செழுமையான சந்தன மரங்கள்
நிறைந்த நாட்டின் பேரழகைக் கண் குளிரக் கண்டு மேல் நின்று அருவிகள் வந்து
விழுகின்றதைக் காணும் காட்சிகளை உடைய ஈங்கோய் தேவர்கள் அஞ்சிய கடல் நஞ்சினை
உண்டவனது மலையாகும்.
-
தோகை மயிலினங்கள் சூழ்ந்து மணிவரைமேல்
ஓகை செறிஆயத் தோடாட - நாகம்
இனவளையில் புக்கொளிக்கும் ஈங்கோயே நம்மேல்
வினைவளையச் செற்றுகந்தான் வெற்பு.
தெளிவுரை : தோகையை யுடைய மயில் கூட்டங்கள் சூழ்ந்து, அழகிய மலையின் மேல் உவகை
பொருந்திய பெண்கள் கூட்டத்தோடு ஆட, பாம்பு வளையிற் புகுந்து, ஒளிந்துக் கொள்ளும்
ஈங்கோய், நம்மேல் வினை சூழ்ந்து கொள்ள அவைகளைப் போக்கி மகிழ்ந்தவனது மலையாகும்.
-
நறவம் நனிமாந்தி நள்ளிருட்கண் ஏனம்
இறவில் இயங்குவான் பார்த்துக் - குறவர்
இரைத்துவலை தைத்திருக்கும் ஈங்கோயே நங்கை
விரைத்துவலைச் செஞ்சடையான் வெற்பு.
தெளிவுரை : தேனை மிகுதியாக உண்டு, நள்ளிரவில் பன்றி, தினைப்புனத்தில் நடமாடுவதைக்
கண்டு குறவர் ஒலி செய்து, சுற்றிலும் வலையைக் கட்டியிருக்கும் ஈங்கோய், கங்கையின்
மணம் பொருந்திய துளிகள் சிந்துகின்ற செஞ்சடையான் மலையாகும்.
-
நாக முழைநுழைந்த நாகம்போய் நல்வனத்தில்
நாகம் விழுங்க நடுக்குற்று - நாகந்தான்
மாக்கையால் மஞ்சுரிக்கும் ஈங்கோயே ஓங்கியசெந்
தீக்கையால் ஏந்தி சிலம்பு.
தெளிவுரை : மலைப்பாம்பு வளையில் நுழைந்த யானை, வனத்தில் பாம்பு விழுங்குவதைக்
கண்டு நடுக்குற்று, யானையானது தனது பெரிய துதிக்கையை உயர்த்தி முகிலை உறிஞ்சிக்
குடிக்கும் ஈங்கோய், ஓங்கிய செந்தீயைக் கையில் ஏந்துகிற சிவபெருமானது மலையாகும்.
-
நாகங் களிறுநு(ங்)க நல்லுழுவை தாமரையின்
ஆகந் தழுவி அசைவெய்த - மேகம்
கருவிடைக்க ணீர்சோரும் ஈங்கோயே ஓங்கு
பொருவிடைக்க ணூர்வான் பொருப்பு.
தெளிவுரை : ஆண்யானை தாக்க, புலி பயந்து தாமரையின் ஆகம் தழுவி, தளர்ச்சி யடைய,
மேகம் கண்ணீர் சொரியும் ஈங்கோய், போர் செய்யும் தன்மையுள்ள காளையை ஊர்தியாக
உடையவனது மலையாகும்.
-
பணவநிலைப் புற்றின் பழஞ்சோற் றமலை
கணவ னிடந்திட்ட கட்டி - உணவேண்டி
எண்கங்கை ஏற்றிருக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல்
வண்கங்கை ஏற்றான் மலை.
தெளிவுரை : பாம்புப் புற்றிலுள்ள புற்றாஞ் சோற்றை ஆண்கரடி எடுக்க அதை உண்ண வேண்டி
பெண் கரடி அழகிய கையை ஏந்திக் கொண்டிருக்கும் ஈங்கோய், செஞ்சடைமேல் வளமுடைய
கங்கையாற்றை ஏற்றுக் கொண்டிருக்கும் சிவபெருமானது மலையாகும்.
-
பன்றி பருக்கோட்டாற் பாருழுத பைம்புழுதித்
தென்றி மணிகிடப்பத் தீயென்று - கன்றிக்
கரிவெருவிக் கான்படரும் ஈங்கோயே வானோர்
மருவரியான் மன்னும் மலை.
தெளிவுரை : பன்றியின் பெரிய கொம்பினால் பூமியை உழுததால் ஏற்பட்ட புழுதியில்
கிடந்த மணிகளைத் தீயென்று வருந்தி யானை பயந்து காட்டிற்குச் செல்லும் ஈங்கோய்,
தேவர்கள் பொருந்துவதற்கு ஒண்ணாதவன் நிலை பெற்றிருக்கும் மலையாகும்.
-
பாறைமிசைத் தன்நிழலைக் கண்டு பகடென்று
சீறி மருப்பொசித்த செம்முகமாத் - தேறிக்கொண்(டு)
எல்லே பிடியென்னும் ஈங்கோயே மூவெயிலும்
வில்லே கொடுவெகுண்டான் வெற்பு.
தெளிவுரை : பாறையின் மீது தன் நிழலைக் கண்டு ஆண் யானை என்று கோபித்துக் கொம்பை
ஒடித்த செம்முக யானை மனந்தேறிச் சென்ற போது பிடி ஏளனம் செய்யும் ஈங்கோய்,
திரிபுரங்களை வில்லைக் கொண்டு சினந்தவனது மலையாகும்.
-
பிடிபிரிந்த வேழம் பெருந்திசைநான் கோடிப்
படிமுகிலைப் பல்காலும் பார்த்திட்(டு) - இடரா
இருமருப்பைக் கைகாட்டும் ஈங்கோயே வானோர்
குருவருட்குன் றாய்நின்றான் குன்று.
தெளிவுரை : தனது பெண் யானையைப் பிரிந்த ஆண்யானை நான்கு திசைகளிலும் தேடியலைந்து
மலையில் படிகின்ற மேகத்தைப் பல தடவை பார்த்து, துன்பமுடையதாய் தன் பெரிய
தந்தத்தைக் காட்டும் ஈங்கோய், தேவர்களுக்குக் குருவருட் குன்றாய் நின்றவனது
மலையாகும்.
-
பொருத கரியின் முரிமருப்பிற் போந்து
சொரிமுத்தைத் தூநீரென்(று) எண்ணிக் - கருமந்தி
முக்கிவிக்கி நக்கிருக்கும் ஈங்கோயே மூவெயிலும்
திக்குகக்கச் செற்றான் சிலம்பு.
தெளிவுரை : போர் செய்த யானையின் முரிந்த கொம்பை எடுத்துச் சென்று அதிலிருந்து
சொரிந்த முத்தைத்தூ நீர் என்றெண்ணிக் கரிய பெண் குரங்கு முயற்சி செய்து நக்கிப்
பார்த்துக் கொண்டிருக்கும் ஈங்கோய், திக்குகளில் உள்ளார்கள் எல்லாம் மகிழ்ச்சியை
அடையத் திரிபுரங்களை, அழித்தவனது மலையாகும்.
-
மறவெங் களிற்றின் மருப்புகுத்த முத்தம்
குறவர் சிறார்குடங்கைக் கொண்டு - நறவம்
இளவெயில்தீ அட்டுண்ணும் ஈங்கோயே மூன்று
வளவெயில்தீ யிட்டான் மலை.
தெளிவுரை : மதங் கொண்ட ஆண் யானையின் தந்தத்திலிருந்து சிந்திய முத்துக்களைக்
குறச்சிறுவர்கள் உள்ளங்கைகளில் வைத்துத் தேன் சேர்த்து இள வெயில் தீயில்
காயவைத்து உண்ணும் ஈங்கோய், திரிபுரங்களையும் தீயில் இட்டவனுடைய மலையாகும்.
-
மலைதிரிந்த மாக்குறவன் மான்கொணர நோக்கிச்
சிலைநுதலி சீறிச் சிலைத்துக் - கலைபிரிய
இம்மான் கொணர்தல் இழுக்கென்னும் ஈங்கோயே
மெய்ம்மான் புணர்ந்தகையான் வெற்பு.
தெளிவுரை : மலையில் திரிந்த மாக்குறவன் மான் கொண்டு வந்ததைப் பார்த்து, வில்லைப்
போன்ற நெற்றியை யுடைய குறத்தி கோபித்து, பெருங் குரலெடுத்து, ஆண் மானைப்
பிரியவிட்டு இம்மானைக் கொணர்தல் குற்றம் என்று சொல்லும் ஈங்கோய் மலை, மானைக்
கையில் ஏந்திய சிவபெருமானது மலையாகும்.
-
மரையதளும் ஆடு மயிலிறகும் வேய்ந்த
புரையிதணம் பூங்கொடியார் புக்கு - நுரைசிறந்த
இன்நறவுண்(டு) ஆடி இசைமுரலும் ஈங்கோயே
பொன்நிறவெண் ணீற்றான் பொருப்பு.
தெளிவுரை : மான் தோலும் ஆடுகின்ற மயிலிறகும் வேய்ந்த காவற் பரணில் பூங்கொடியார்
புகுந்து நுரையோடு கூடிய இனிய தேனை உண்டு மகிழ்ந்து பாட்டுப்பாடும் ஈங்கோய், பொன்
போன்ற திருமேனி நிறமும் திருவெண்ணீறும் உடைய சிவபெருமானது மலையாகும்.
-
மலையர் கிளிகடிய மற்றப் புறமே
கலைகள் வருவனகள் கண்டு - சிலையை
இருந்தெடுத்துக் கோல்தெரியும் ஈங்கோயே மாதைப்
புரிந்திடத்துக் கொண்டான் பொருப்பு.
தெளிவுரை : மலையில் வாழ்பவர்கள் கிளிகளை ஓட்ட, அக்காட்டில் மான்கள் வருவதைக்
கண்டு வில்லை எடுத்து, கணை தொடுக்கும் ஈங்கோய், உமாதேவியை விரும்பி இடப்பாகத்தில்
கொண்ட சிவபெருமானது மலையாகும்.
-
மத்தக் கரிமுகத்தை வாளரிகள் பீறஒளிர்
முத்தம் பனிநிகர்க்கும் மொய்ம்பிற்றால் - அத்தகைய
ஏனற் புனம்நீடும் ஈங்கோயே தேங்குபுனல்
கூனற் பிறையணிந்தான் குன்று.
தெளிவுரை : மத்தகத்தையுடைய யானையின் முகத்தைச் சிங்கங்கள் கிழிக்க ஒளி வீசும்
முத்துக்கள் பனிபோல் காட்சியளிக்கும், அத்தகைய தினைப்புனங்கள் நிறைந்திருக்கும்
ஈங்கோய், கங்கையையும், வளைந்த பிறைச்சந்திரனையும் அணிந்த சிவபெருமானின்
மலையாகும்.
-
மந்தி இனங்கள் மணிவரையின் உச்சிமேல்
முந்தி இருந்து முறைமுறையே - நந்தி
அளைந்தாடி ஆலிக்கும் ஈங்கோயே கூற்றம்
வளைந்தோடச் செற்றான் மலை.
தெளிவுரை : பெண்குரங்குக் கூட்டங்கள் அழகிய மலையின் உச்சி மேல் முன்னாடியாகப்
போய் முறையாக மறைந்து துழாவுதல் செய்து ஆரவாரிக்கும் ஈங்கோய், எமன் தோற்றோட
உøத்தழித்த பெருமானின் மலையாகும்.
-
மந்தி மகவினங்கள் வண்பலவின் ஒண்சுளைக்கண்
முந்திப் பறித்த முறியதனுள் - சிந்திப்போய்த்
தேனாறு பாயும்சீர் ஈங்கோயே செஞ்சடைமேல்
வானாறு வைத்தான் மலை.
தெளிவுரை : மந்தியின் குட்டிகள் வளப்பம் பொருந்திய பலாவின் சுளைகளை முதலில்
பறித்த தளிருள் சிந்திய தேன், ஆறு போல் பாயும் சிறப்பமைந்த ஈங்கோய், செஞ்சடை மேல்
கங்கையை வைத்தவனது மலையாகும்.
-
முள்ளார்ந்த வெள்இலவம் ஏறி வெறியாது
கள்ளார்ந்த பூப்படியும் கார்மயில்தான் - ஒள்ளார்
எரிநடுவுள் பெண்கொடியார் ஏய்க்கும்ஈங் கோயே
புரிநெடுநூல் மார்பன் பொருப்பு.
தெளிவுரை : முள் பொருந்திய வெள் இலவ மரத்தில் ஏறி, மணமில்லாமல் தேன் பொருந்திப்
பூவில் அமரும் கார் மயில் ஒளி பொருந்திய தீயின் மத்தியில் உள்ள பெண்களை
ஒத்திருக்கும் ஈங்கோய், பூணூல் அணிந்த மார்பை யுடையவனது மலையாகும்.
-
வளர்ந்த இளங்கன்னி மாங்கொம்பின் கொங்கை
அளைந்து வடுப்படுப்பான் வேண்டி - இளந்தென்றல்
எல்லிப் புகநுழையும் ஈங்கோயே தீங்கருப்பு
வில்லிக்குக் கூற்றானான் வெற்பு.
தெளிவுரை : வளர்ந்த இளங்கன்னி, மாங்கொம்பின் பூந்தாதைக் கீண்டி, மாவடுவை
உண்டாக்கும் பொருட்டு இளந் தென்றல் உள்ளே புக நுழையும் ஈங்கோய், கரும்பு
வில்லோனாகிய காமனுக்கு நமன் ஆனவனது மலையாகும்.
மன்மத தகனத்தைக் குறிப்பிடுகிறார்.
-
வான மதிதடவல் உற்ற இளமந்தி
கான முதுவேயின் கண்ணேறித் - தானங்(கு)
இருந்துயரக் கைநீட்டும் ஈங்கோயே நம்மேல்
வருந்துயரம் தீர்ப்பான் மலை.
தெளிவுரை : வானத்திலுள்ள திங்களைத் தடவ முயன்ற இளமந்தி வனத்திலுள்ள பழமையான
மூங்கிலின் மேல் ஏறித் தான் அங்கிருந்து, உயரக் கை நீட்டும் ஈங்கோய், நம்மேல் வர
இருக்கும் துயரங்களைத் தீர்ப்பவனது மலையாகும்.
-
வேய்வனத்துள் யானை தினைகவர வேறிருந்து
காய்வனத்தே வேடன் கணைவிசைப்ப - வேயணைத்து
மாப்பிடிமுன் ஓட்டும்ஈங் கோயே மறைபரவு
பூப்பிடிபொற் றாளான் பொருப்பு.
தெளிவுரை : மூங்கில் நிறைந்த காட்டினுள் யானை தினைக் கதிரைக் கவர, வேடன்
மறைந்திருந்து அம்பை விரைவாகச் செலுத்த, மூங்கிலை வளைத்துப் பெரிய பெண் யானை,
கணைக்கு இலக்கு ஆகாமல் யானையை விலகச் செய்யும் ஈங்கோய், வேதங்கள் போற்றும்
பூப்பிடி பொற்றாளான் மலையாகும்.
-
வழகிதழ்க் காந்தள்மேல் வண்டிருப்ப ஒண்தீ
முழுகிய(து)என்(று) அஞ்சிமுது மந்தி - பழகி
எழுந்தெழுந்து கைநெரிக்கும் ஈங்கோயே திங்கள்
கொழுந்தெழுந்த செஞ்சடையான் குன்று.
தெளிவுரை : வழவழப்பான இதழ்களையுடைய காந்தள் மேல் வண்டு இருக்க, ஒளி பொருந்திய
தீயில் மூழ்கியது என்று அஞ்சி, கிழக்குரங்கு பழகி எழுந்தெழுந்து கை நெரிக்கும்
ஈங்கோய், பிறைச்சந்திரனைச் செஞ்சடையில் தரித்தவனது மலையாகும்.
திருச்சிற்றம்பலம்
திருவலஞ்சுழி மும்மணிக்கோவை ( நக்கீரதேவ நாயனார்அருளிச்செய்தது )
திருவலஞ்சுழி என்பது சோழவள நாட்டில் திருக்குடந்தைக்குக் குடபால் உள்ள தேவாரம்
பெற்ற ஒரு சிவப்பதி. அப்பதியில் எழுந்தருளிய சிவபெருமான் மீது பாடப் பெற்ற
மும்மணிக் கோவையாதலின் இது திருவலஞ்சுழி மும்மணிக்கோவை என்று பெயர் பெற்றது.
இப்பதி காவிரி வலமாகச் சூழ்ந்து செல்லும் இடத்தில் அமைந்திருப்பதனால் இவ்வாறு
பெயர் பெற்ற தென்பர். வேறு காரணம் கூறுவாரும் உளர்.
மும்மணிக்கோவை ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் மூவகைப் பாக்களால்
முப்பது செய்யுட்கள் அமையுமாறு பாடப் பெறுவதாகும். ஆனால் இம்மும்மணிக் கோவையில்
பதினைந்து செய்யுட்களே அமைந்துள்ளன. ஆயினும் இது முதலும் முடிவும் இயைய நிரலே
அந்தாதித் தொடை விடாது அமைந்துள்ளது. அதனால் இது பதினைந்து பாட்டே கொண்டதாகும்.
இந்நூலில் திருவலஞ்சுழியில் திருக்கோயில் கொண்டுள்ள சிவபிரானைக் கண்டு அவ்
இறைவனது பேரழகில் ஈடுபட்டுக் காதல் கொண்டு வருந்தும் தலைவியின் நீங்கா அன்பின்
திறத்தைப் புலப்படுத்தும் பாடல்களும், திருவலஞ்சுழி இறைவனைப் பாட்டுடைத் தலைவனாக
வைத்துப் போற்றும் அகத்துறைப் பாடல்களும் உள்ளன.
திருச்சிற்றம்பலம்
ஆசிரியப்பா
-
வணங்குதும் வாழி நெஞ்சே புணர்ந்துடன்
பொருகடல் முகந்து கருமுகிற் கணம்நற்
படவர வொடுங்க மின்னிக் குடவரைப்
பொழிந்து கொழித்திழி அருவி குணகடல்
மடுக்குங் காவிரி மடந்தை வார்புனல்
உடுத்த மணிநீர் வலஞ்சுழி
அணிநீர்க் கொன்றை அண்ணல(து) அடியே.
தெளிவுரை : நெஞ்சமே! உடன் பொருந்தி, அலை மோதும் கடலில் இருந்து நீரை முகந்து,
கரிய மேகக் கூட்டம் நல்ல படத்தினை யுடைய பாம்பு ஒடுங்க மின்னி, மேற்கு மலையில்
பெய்து, கொழித்து இறங்கி வருகின்ற அருவி கீழ்க்கடலில் வந்து பொருந்தும் காவிரி
மடந்தையின் நீண்ட வெள்ளத்தை உடுத்த அழகிய நீரையுடைய வலஞ்சுழியில் உள்ள அணி நீர்க்
கொன்றை யணிந்த அண்ணலது அடியை வணங்குவோமாக.
வெண்பா
-
அடிப்போது தந்தலைவைத்(து) அவ்வடிகள் உன்னிக்
கடிப்போது கைக்கொண்டார் கண்டார் - முடிப்போதா
வாணாகஞ் சூடும் வலஞ்சுழியான் வானோரும்
காணாத செம்பொற் கழல்.
தெளிவுரை : அவ் அண்ணலது அடியாகிய அலரும் பருவத்து அரும்பைத் தம் தலையில் வைத்து,
அவ் அடிகளைச் சிந்தித்து மணமுள்ள மலரை கைக் கொண்டவர், திருமுடியிற் பூவாக
ஒளியுள்ள பாம்பைச் சூடும் திருவலஞ்சுழியில் கோயில் கொண்டுள்ளவனது, தேவர்களும்
காணாத செம்பொற் கழலைக் கண்டார்கள்.
கட்டளைக் கலித் துறை
-
கழல்வண்ண மும்சடைக் கற்றையும்
மற்றவர் காணகில்லார்
தழல்வண்ணம் கண்டே தளர்ந்தார்
இருவரந் தாமரையின்
நிழல்வண்ணம் பொன்வண்ணம் நீர்நிற
வண்ணம் நெடியவண்ணம்
அழல்வண்ண முந்நீர் வலஞ்சுழி
ஆள்கின்ற அண்ணலையே.
தெளிவுரை : தாமரையின் நிழல் வண்ணம், பொன் வண்ணம், நீர் நிற வண்ணம், நெடிய வண்ணம்,
அழல் வண்ணம் ஆகியவற்றைக் கொண்டவனும், முந்நீர் வலஞ்சுழியை ஆள்கின்றவனாகிய அண்ணலது
கழல் வண்ணத்தையும் சடைக் கற்றையையும் பிறர் காண மாட்டார்கள். தீயின் நிறத்தைக்
கண்டே தளர்ந்தார். வண்ணம் - நிறம், அழகு, ஒப்பனை, குணம், வகை, முதலிய பல
பொருள்களை யுடையது.
ஆசிரியப்பா
-
அண்ணலது பெருமை கண்டனம் கண்ணுதற்
கடவுள் மன்னிய தடமல்கு வலஞ்சுழிப்
பனிப்பொருட் பயந்து பல்லவம் பழிக்கும்
திகழொளி முறுவல் தேமொழிச் செவ்வாய்த்
திருந்திருங் குழலியைக் கண்டு
வருந்திஎன் உள்ளம் வந்தவப் போதே.
தெளிவுரை : நெற்றிக் கண்ணை யுடைய சிவபெருமானது நிலை பெற்ற இடம் வளமிக்க
வலஞ்சுழியாகும், பனிப் பொருட் பயந்து, தளிரைப் பயக்கும் திகழொளி முறுவல் தே
மொழியானது செவ்வாய் திருந்து கரிய குழலியைக் கண்டு வருந்தி என் உள்ளம் வந்த
அப்போதே பெருமை பொருந்திய உன் பெருமையைக் கண்டேன் என்று பாங்கன் தலைவனை வியந்தது.
தலைவியைக் கண்டு வந்த பாங்கன் அவளது சிறப்பைத் தலைவனுக்குக் கூறியது என்க.
வெண்பா
-
போதெலாம் பூங்கொன்றை கொண்டிருந்த பூங்கொன்றைத்
தாதெலாம் தன்மேனித் தைவருமால் - தீதில்
மறைக்கண்டன் வானோன் வலஞ்சுழியான் சென்னிப்
பிறைக்கண்டம் கண்டணைந்த பெண்.
தெளிவுரை : மலரெல்லாம் பூங்கொன்றை; கொண்டிருந்த பூங்கொன்றைத் தாது எல்லாம்
திருமேனியைத் தடவி வரும், தீதில்லாத வேதத்தை ஓதுபவன், விண்ணுலகத்தவன்.
வலஞ்சுழியில் கோயில் கொண்டிருப்பவன். தலையில் பிறைத் திங்களை வைத்திருப்பவன்
என்று தோழி தலைவிக்குக் கூறுகின்றாள்.
கட்டளைக் கலித் துறை
-
பெண்கொண் டிருந்து வருந்துங்கொ
லாம்பெரு மான்திருமால்
வண்கொண்ட சோலை வலஞ்சுழி
யான்மதி சூடிநெற்றிக்
கண்கொண்ட கோபம் கலந்தன
போல்மின்னிக் கார்ப்புனத்துப்
பண்கொண்டு வண்டினம் பாடநின்(று)
ஆர்த்தன பன்முகிலே.
தெளிவுரை : இது தலைவன் கார் வரவு கண்டு தேர்ப்பாகனொடு கூறியது.
தலைவி வீட்டில் இருந்து வருந்துவாள். திருமால் வழிபட்ட திருவலஞ்சுழியில்
எழுந்தருளியிருக்கும் பெருமான் பிறைச் சந்திரனை முடியில் சூடியிருப்பவன். அவனது
நெற்றிக் கண்ணில் தோன்றிய கோபம் போல் மின்னி மேகங்கள் புனத்தில் இசை கொண்டு
வண்டினம் பாட ஆரவாரித்தன. ஆகவே, நாம் உடனே புறப்பட வேண்டும் என்பதாம்.
ஆசிரியப்பா
-
முகிற்கணம் முழங்க முனிந்த வேழம்
எயிற்றிடை அடக்கிய வெகுளி ஆற்ற
அணிநடை மடப்பிடி அருகுவந்(து) அணைதரும்
சாரல் தண்பொழில் அணைந்து சோரும்
தேனுகு தண்தழை செறிதரு வனத்தில்
சருவரி வாரல்எம் பெருமநீர் மல்கு
சடைமுடி ஒருவன் மருவிய வலஞ்சுழி
அணிதிகழ் தோற்றத்(து) அங்கயத்(து) எழுந்த
மணிநீர்க் குவளை அன்ன
அணிநீர்க் கருங்கண் ஆயிழை பொருட்டே.
தெளிவுரை : இது, இரவுக்குறி வரும் தலைவனைத் தோழி வரவேண்டா என விலக்கியது. வழி
ஆபத்துக்குரியது என்பது பொருள். மேகக் கூட்டங்கள் ஒலி செய்ய, ஆண் யானையின்
கோபத்தைத் தணிக்க அழகிய நடையினை யுடைய பெண்யானை அருகில் வந்து அணைதரும் சாரல்,
குளிர்ந்த சோலை சூழ்ந்த தேனுகு தண்தழை செறிந்த வனத்தில் இரவில் வரவேண்டா. எம்
தலைவனே ! கங்கையைச் சடையில் வைத்த ஒருவன் பொருந்தியிருக்கும் திருவலஞ்சுழி.
அணிதிகழ் தோற்றத்து அழகிய தடாகத்திலிருந்து எழுந்த மணி நீர் குவளை போன்ற அழகிய
கருங்கண்களையுடைய தலைவியின் பொருட்டு வராதே என்பதாம்.
வாரல் - வராதே. அல் ஈற்று எதிர்மறை வியங்கோள் வினைமுற்று.
வெண்பா
-
பொருள்தக்கீர் சில்பலிக்கென்(று) இல்புகுந்தீ ரேனும்
அருள்தக்கீர் யாதும்ஊர் என்றேன் - மருள்தக்க
மாமறையாம் என்றார் வலஞ்சுழிநம் வாழ்வென்றார்
தாம்மறைந்தார் காணேன்கைச் சங்கு.
தெளிவுரை : இது தலைவி கூற்று. நல்ல பொருள் அமைதியுடையவரே! சிறுபிச்சை வேண்டி
என்வீடு நோக்கி வந்தீரேனும் அருள் அமைதி யுடையவரே! உம்முடைய ஊர் எது என்று
கேட்டேன். மருளத்தக்கவாறு பெரிய மறைக்காட்டில் உள்ளோம் என்றார். திருவலஞ்சுழி
நம்வாழ்விடம் என்றார். அவர் மறைந்து சென்றள். என் கைவளையலைக் காணேன்.
கட்டளைக் கலித் துறை
-
சங்கம் புரளத் திரைசுமந்(து)
ஏறுங் கழியருகே
வங்கம் மலியும் துறையிடைக்
காண்டிர் வலஞ்சுழியா(று)
அங்கம் புலன்ஐந்தும் ஆகிய
நான்மறை முக்கணக்கன்
பங்கன்(று) இருவர்க்(கு) ஒருவடி
வாகிய பாவையையே.
தெளிவுரை : சங்குகள் புரண்டு வர அலையைச் சுமந்து ஏறும் கழியருகே மரக்கலங்கள்
நிறைந்திருக்கும் துறையிடையில் காணுங்கள். திருவலஞ்சுழியில் ஆறு அங்கமும், புலன்
ஐந்துமாகிய நான்மறை மூன்று கண்களையுடைய சிவபெருமான் இருவர்க்குப் பங்கன்று
ஒருவடிவாகிய பாவையையே காண்டீர் என முடிக்க.
எண்கள் ஆறு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என்று வரிசைப்
படுத்தியிருப்பதைக் காண்க.
இது தலைவன், இவ்விடத்து இன்ன இயல்புடையது என்று இயம்பியது.
அகவல்
-
பாவை ஆடிய துறையும் பாவை
மருவொடு வளர்ந்த அன்னமும் மருவித்
திருவடி அடியேன் தீண்டிய திறனும்
கொடியேன் உள்ளங் கொண்ட சூழலும் கள்ளக்
கருங்கண் போன்ற காவியும் நெருங்கி
அவளே போன்ற(து) அன்றே தவளச்
சாம்பல் அம்பொடி சாந்தெனத் தைவந்து
தேம்பல் வெண்பிறை சென்னிமிசை வைத்த
வெள்ளேற் றுழவன் வீங்குபுனல் வலஞ்சுழி
வண்டினம் பாடுஞ் சோலைக் கண்டஅம்மஅக்கடிபொழில்தானே.
தெளிவுரை : இது தலைவன் கூறியது.
பாவை நீராடிய துறையும், பாவை அன்போடு வளர்ந்த அன்னமும் பொருந்தி, தங்கள்
பாதங்களைத் தொட்ட திறனும், கொடியேனாகிய எனது உள்ளம் கொண்ட சூழலும் கள்ளத்
தன்மையுடைய கரிய கண்கள் போன்ற கருங்குவளையும் நெருங்கி அவளே போன்றது திருநீற்றைச்
சந்தனம் போலப் பூசி, பிறைச் சந்திரனைத் தலைமீது அணிந்த வெண்மையான காளை ஊர்தியை
உடையவளின், நிறைந்த நீர்வளமுள்ள திருவலஞ்சுழி என்னும் தலத்தில் வண்டுக்
கூட்டங்கள் பாடும் மணம் பொருந்திய சோலையாகும்.
இந்தச் சோலை தலைவியைப் போன்றது எனத் தலைவன் கூறுவது இப்பாடல்.
வெண்பா
-
தானேறும் ஆனேறு கைதொழேன் தன்சடைமேல்
தேனேறு கொன்றைத் திறம்பேசேன் - வானேறு
மையாரும் சோலை வலஞ்சுழியான் என்கொல்என்
கையார் வளைகவர்ந்த வாறு.
தெளிவுரை : தன் கைவளைகளைக் கவர்ந்து சென்றமையால் தலைவி புலந்து கூறியது,
இப்பாடல். சிவபெருமான் ஏறும் காளை ஊர்தியை வணங்கமாட்டேன். அவன் சடை மீதுள்ள தேன்
பொருந்திய கொன்றை மலரின் சிறப்பைப் புகழ மாட்டேன். விண்ணில் ஏறுகின்ற இருள்
பொருந்திய சோலைகளையுடைய திருவலஞ்சுழியான் என் கையிலிருந்த வளையைக் கவர்ந்தது ஏன்?
இது தலைவியின் கூற்று.
கட்டளைக் கலித் துறை
-
ஆறுகற் றைச்சடைக் கொண்டொரொற்
றைப்பிறை சூடிமற்றைக்
கூறுபெண் ணாயவன் கண்ணார்
வலஞ்சுழிக் கொங்குதங்கு
நாறுதண் கொம்பரன் னீர்களின்
னேநடந் தேகடந்தார்
சீறுவென் றிச்சிலைக் கானவர்
வாழ்கின்ற சேண்நெறியே.
தெளிவுரை : இஃது உடன் போக்கைக் கண்டவர்கள் செவிலிக்கு உரைத்தது. கங்கையாற்றைச்
சடையில் கொண்டு, பிறைச் சந்திரனைச் சூடி, உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டவனது
திருவலஞ்சுழி மணம் தங்கும் பூங்கொம்பைப் போன்றவர்ளே ! அவர்கள் இந்நேரம் கோபங்
கொண்ட வில்லேந்திய வேடர்கள் வாழ்கின்ற தொலை வழியில் நடந்து சென்றார்கள்.
தலைவனும் தலைவியும் உடன் போக்கில் சென்றனர் என்க.
ஆசிரியப்பா
-
நெறிதரு குழலி விறலியொடு புணர்ந்த
செறிதரு தமிழ்நூல் சீறியாழ்ப் பாண
பொய்கை யூரன் புதுமணம் புணர்தர
மூவோம் மூன்று பயன்பெற் றனவே நீயவன்
புனைதார் மாலை பொருந்தப் பாடி
இல்லதும் உள்ளதும் சொல்லிக் கள்ள
வாசகம் வழாமல் பேச வண்மையில்
வாரை மகளிர் வான்பொருள் பெற்றனை, அவரேல்
எங்கையர் கொங்கைக் குங்குமம் தழீஇ
விழையா இன்பம் பெற்றனர் யானேல்
அரன்மர்ந்(து) உறையும் அணிநீர் வலஞ்சுழிச்
சுரும்பிவர் நறவயல் சூழ்ந்தெழு கரும்பில்
தீநீர் அன்ன வாய்நீர் சோரும்
சிலம்புகுரல் சிறுபறை பூண்ட
அலம்புகுரல் கிண்கிணிக் களிறுபெற் றனனே.
தெளிவுரை : இது தலைவி பாணனை நோக்கி வெகுண்டு கூறியது.
நெறித்த கூந்தலையுடைய விறலியோடு சேர்ந்த செறிவினையுடைய தமிழ் நூல்வல்ல
சீறியாழையுடைய பாணனே! பொய்கைகளை யுடைய ஊரனாகிய தலைவன் புதுமணத்தை நுகர மூன்று
பேரும் மூவகையான பயனைப் பெற்றோம். நீ அவனுடைய புனைதார் மாலையைப் பொருந்தப் பாடி
இல்லாததும் உள்ளதுவும் சொல்லி, கள்ள வாசகம் வழாமல் பேசும் திறமுடைய
பரத்தையரிடமிருந்து மிக்க பொருளைப் பெற்றனை. அவர்கள் எம் தங்கையராகிய பரத்தையர்.
கொங்கைகளில் குங்குமக் குழம்பைப் பூசி மிக்க இன்பத்தைப் பெற்றனர். என் நிலை யாதோ
எனில் சிவபெருமான் அமர்ந்துறையும் அழகிய நீர்வளம் பொருந்திய திருவலஞ்சுழி
வண்டுகள் தேன் உண்ணும் வயல் சூழ்ந்து எழு கரும்பில் உள்ள கரும்பஞ்சாறு போன்ற
வாயில் நீர் சோரும் காற்சிலம்பும் சிறுபறையும் உடைய கிண்கிணி ஒலிக்கும்
புதல்வனைப் பெற்றேன்.
வெண்பா
-
தனமேறிப் பீர்பொங்கித் தன்னங்கம் வேறாய்
மனம்வேறு பட்டொழிந்தாள் மாதோ - இனமேறிப்
பாடாலம் வண்டலம்பும் பாய்நீர் வலஞ்சுழியான்
கோடாலம் கண்டணைந்த கொம்பு.
தெளிவுரை : இது தோழி கூறியது. தனங்களின் மீது, பசலை பூத்து தன் உடம்பு வேறுபட்டு
மனம் வேறுபட்டு ஒழிந்தாள். பாதிரி மரத்தில் வண்டு அலம்பும் நீர் வளமிக்க
திருவலஞ்சுழியான் மாலையில் உலா வந்ததைக் கண்ட பூங்கொம்பு போன்ற தலைவி இந்நிலையை
அடைந்தாள் என்க.
கட்டளைக் கலித் துறை
-
கொம்பார் குளிர்மறைக் காடனை
வானவர் கூடிநின்று
நம்பா எனவணங் கப்பெறு
வானை நகர்எரிய
அம்பாய்ந் தவனை வலஞ்சுழி
யானைஅண் ணாமலைமேல்
வம்பார் நறுங்கொன்றைத் தாருடை
யானை வணங்குதுமே.
தெளிவுரை : பூங்கொம்பு நிறைந்த குளிர்ந்த சோலைகளை யுடைய திருமறைக் காட்டில்
உள்ளவனைத் தேவர்கள் கூடி நின்று, இறைவனே! என வணங்கப் பெறுவானை, திரிபுரங்கள்
எரிந்து அழியுமாறு அம்பு தொடுத்தவனை, திருவலஞ்சுழியானை, அண்ணாமலை மேல் மணமுள்ள
நறுங் கொன்றைத் தாருடையானை நாம் வணங்குவோமாக.
திருச்சிற்றம்பலம்
திருஎழுகூற்றிருக்கை ( நக்கீரதேவ நாயனார் அருளிச்செய்தது )
திருஎழுகூற்றிருக்கை என்பது மிறைக் கவி, (ஓவியப் பாட்டு) வகைகளில் ஒன்று. ஒன்று
என்னும் எண்ணை முதலாகக் கொண்டு தொடங்கிப் படிப்படியே ஒவ்வொர் எண்ணாகக் கூட்டியும்
அவ்வாறே ஒன்று ஒன்றாக ஒன்று முடியக் குறைத்தும் இவ்வாறு ஒன்று முதல் ஏழ் ஈறாக
எண்ணும் நிலையில் அமைந்த செய்யுள் எழு கூற்றிருக்கை யென்று பெயர் பெறும்.
எழுகூற்றிருக்கை என்னும் ஓவியப் பாட்டை முதன் முதலாகப் பாடியவர்
திருஞானசம்பந்தரே. அதனை அடியொற்றிப் பாடப் பட்டதேயாகும் இப்பாட்டு. உமையொரு
பாகனாகிய சிவபெருமானுடைய அருளுருவத் தோற்றத்தினையும், அவ்விறைவன் உயிர்களின்
பொருட்டுச் செய்தருளிய அருட் செயல்களையும் நக்கீர தேவ நாயனார் இத்திரு எழு
கூற்றிருக்கையில் இனிய முறையில் இயம்புகின்றார்.
திருச்சிற்றம்பலம்
-
ஓருடம்பு ஈருரு ஆயினை ஒன்றுபுரிந்(து)
ஒன்றி னீர்இதழ்க் கொன்றை சூடினை
மூவிலைச் சூலம் ஏந்தினை
சுடரும் சென்னி மீமிசை
இருகோட்(டு) ஒருமதி எழில்பெற மிலைச்சினை
தெளிவுரை : ஓர் உடம்பில் ஆணும் பெண்ணுமாகிய இரண்டு உருவம் உடையவன் ஆனாய். ஒன்றைச்
செய்து, அதிலிருந்து ஈரிதழ்க் கொன்றை சூடினை. மூன்று இலைகளாகப் பிரிந்துள்ள
சூலத்தைக் கையில் ஏந்தினை. ஒளிவிடும் தலையின் மேல் இரு முனைகளும் உயர்ந்து
காணப்படும் பிறைச் சந்திரனை அழகு பெறச் சூடினாய்.
ஒருகணை இருதோள் செவியுற வாங்கி
மூவெயில் நாற்றிசை முரணஅரண் செகுத்தனை
ஆற்ற முன்னெறி பயந்தனை
செறிய இரண்டும் நீக்கி
ஒன்று நினைவோர்க்(கு) உறுதி யாயினை
தெளிவுரை : ஒப்பற்ற அம்பை, இருதோள் செவியோடு பொருந்த இழுத்துத் திரிபுரங்களை
நான்கு திசைகளிலும் கெடுமாறு அழித்தாய். பொருந்த முன் மாதிரியாகச் செய்தனை.
நல்வினை தீவினையாகிய இரண்டையும் நீக்கி, ஒன்றாகிய தெய்வத்தை நினைப்பவர்களுக்குப்
பற்றுக் கோடாக இருக்கின்றாய்.
அந்நெறி ஒன்று
மனம்வைத்(து) இரண்டு நினைவி லோர்க்கு
முன்னெறி உலகங் காட்டினை அந்நெறி
நான்கென ஊழி தோற்றினை
சொல்லும் ஐந்தலை அரவசைத்(து) அசைந்தனை
தெளிவுரை : அந்த நெறி ஒன்றேயாம். இரண்டு நினைவு இல்லோர்க்கு, அதாவது மன
ஒருமைப்பாடு உடையவர்க்கு வீடு பேற்றினைக் காட்டினை. அந்நெறி நான்கென நான்கு
யுகங்களை உண்டாக்கினாய். சிறப்பாகச் சொல்லப்படும் ஐந்தலை நாகத்தைக் கட்டிக்
கொண்டு ஆடினாய்.
நான்முகன் மேன்முகம் கபாலம் ஏந்தினை
நூல்முக முப்புரி மார்பில்
இருவர் அங்கம் ஒருங்குடன் ஏந்திய
ஒருவநின் ஆதி காணா(து) இருவர்
மூவுல(கு) உழன்று நாற்றிசை உழிதர
ஐம்பெருங் குன்றத்(து) அழலாய் தோன்றினை
தெளிவுரை : பிரமனது மண்டை ஓட்டைப் பிச்சைப் பாத்திரமாக ஏந்தினை. மார்பில்
முப்புரி நூலை அணிந்தனை. நான்முகன், திருமால் ஆகிய இருவர் அங்கத்தினையும் ஒருங்கே
ஏந்தினாய். அதற்குக் காயாரோகணத் திருக்கோலம் என்று பெயர். உன்னுடைய ஆதியைக்
காணாமல் பிரமனும் திருமாலும் மூன்று உலகங்களிலும் சுற்றி, நான்கு திசைகளிலும்
அலைய அழகிய பெருமலையில் தீயாய்த் தோன்றினை. (இது நடைபெற்றது திருவண்ணாமலையில்.)
ஆறுநின் சடையது ஐந்துநின் நிலையது
நான்குநின் வாய்மொழி மூன்றுநின் கண்ணே
இரண்டுநின் குழையே ஒன்றுநின் ஏறே
தெளிவுரை : கங்கையாறு உன் சடையில் உள்ளது. திருஐந்தெழுத்து (பஞ்சாட்சர மந்திரம்)
உன் நிலையாகும். உன் வாய் மொழி நான்கு வேதங்களாகும். மூன்றாக உள்ளவை உன் கண்களே.
இரண்டு நின் குழைகளே. ஒன்றாக உள்ளது உன் வாகனமாகிய காளையே.
ஒன்றிய காட்சி உமையவள் நடுங்க
இருங்களிற்(று) உரிவை போர்த்தனை நெருங்கி
முத்தீ நான்மறை ஐம்புலன் அடக்கிய
அறுதொழி லாளர்க்(கு) உறுதி பயந்தனை
தெளிவுரை : உன் ஒன்றிய காட்சியைக் கண்டு உமையவள் நடுங்க பெரிய யானைத் தோலைப்
போர்த்திக் கொண்டாய். நெருங்கி, முத்தீயை வளர்த்து நான்மறை ஓதி ஐம்புலன்களை
அடக்கிய அறுதொழிலாளர்களுக்கு உறுதியான நன்மைகளைச் செய்யும்.
ஏழில் இன்னரம்(பு) இசைத்தனை
ஆறில் அமுதம் பயந்தனை ஐந்தில்
விறலியர் கொட்டும் அழுத்த ஏந்தினை
ஆல நீழல் அன்றிருந்(து) அறநெறி
நால்வர் கேட்க நன்கினி(து) உரைத்தனை
தெளிவுரை : ஏழாகிய இனிய நரம்புகளை இசைத்தாய். ஆறில் அமுதத்தைக் கொடுத்தாய்.
ஐந்தில் விறலியர் கொட்டும் அழுத்த ஏந்தினை. கல்லால மரத்தின் நிழலில்
தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளி அறநெறியை நால்வர் கேட்க நன்கு இனிது உரைத்தனை.
நன்றி இல்லா முந்நீர்ச் சூர்மாக்
கொன்றங்(கு) இருவரை எறிந்த ஒருவன்
தாதை ஒருமிடற்று இருவடி(வு) ஆயினை
தெளிவுரை : கடலில், நன்றி இல்லாத சூரபதுமன் மாவடியாக நின்றபோது, அவனைக் கொன்று,
அங்கிருந்த இருவரையும் அழித்த முருகக் கடவுளது தாதையே! ஒப்பற்ற கண்டத்தையுடைய இரு
வடிவு ஆயினை. (இரு நிறம் - கழுத்து கருநிறம்; உடல் செந்நிறம்)
தருமம் மூவகை உலகம் உணரக்
கூறுவை நால்வகை
இலக்கண இலக்கியம் நலத்தக மொழிந்தனை
ஐங்கணை அவனொடு காலனை அடர்த்தனை
அறுவகைச் சமயமும் நெறிமையில் வகுத்தனை
ஏழின் ஓசை இராவணன் பாடத்
தாழ்வாய் கேட்டவன் தலையளி பொருத்தினை
தெளிவுரை : மூவகை தருமத்தையும் உலகம் உணரக் கூறுபவை. நால்வகை இலக்கண இலக்கியங்களை
நலத்தக மொழிந்தனை. காமனோடு எமனையும் அழித்தனை. அறுவகைச் சமயமும் முறையாக
வகுத்தனை. ஏழிசையோடு இராவணன் பாட, அமைதியாக இருந்து கேட்டு அவனது வேண்டுகோளைப்
பூர்த்தி செய்தாய்.
ஆறிய சிந்தை யாகி ஐங்கதித்
தேரொடு திசைசெல விடுத்தோன்
நாற்றோள் நலனே நந்தியிங்(கு) இருடியென்(று)
ஏற்ற பூதம் மூன்றுடன் பாட
இருகண் மொந்தை ஒருகணம் கொட்ட
மட்டுவிரி அலங்கல் மலைமகள் காண
நட்டம் ஆடிய நம்ப அதனால்
தெளிவுரை : மனம் சாந்தம் அடைந்து ஐந்து கதியில் செல்லும் தேரோடு எல்லாத்
திக்குகளிலும் விஜயம் செய்ய அனுப்பியது. நான்கு தோள்களை உடைய உனது நலனாகும்.
நந்தி, பிருங்கி முனிவர் என்று ஏற்ற பூதம் மூன்றுடன் பாட இரு கண் மொந்தை யென்ற
தோற்கருவி ஒருகணம் கொட்டவும், தேன் பிலிற்றும் மாலையணிந்த உமையவள் காண நடனம் ஆடிய
நம்பி ! அதனால்,
சிறியேன் சொன்ன அறிவில் வாசகம்
வறிதெனக் கொள்ளா யாகல் வேண்டும்
வெறிகமழ் கொன்றையொடு வெண்ணில(வு) அணிந்து
கீதம் பாடிய அண்ணல்
பாதம் சென்னியில் பரவுவன் பணிந்தே.
தெளிவுரை : சிறியேன் சொன்ன பொருளற்ற வாசகம் சிறப்பில்லாதது என்று விட்டு விடாமல்
ஏற்றுக் கொள்ள வேண்டும். மணம் வீசும் கொன்றையொடு வெண்ணிலவு அணிந்து கீதம் பாடிய
அண்ணலே ! உன் பாதங்களைப் பணிந்து துதிக்கின்றேன்.
வெண்பா
-
பணிந்தேன்நின் பாதம் பரமேட்டீ பால்நீ(று)
பணிந்(து)ஆல வாயில் அமர்ந்தாய் - தணிந்தென்மேல்
மெய்யெரிவு தீரப் பணித்தருளு வேதியனே
ஐயுறவொன் றின்றி அமர்ந்து.
தெளிவுரை : பரமேட்டி ! உன் பாதங்களைப் பணிந்தேன். பால் போன்ற வெண்ணீறு அணிந்து,
மதுரையில் அமர்ந்தாய். கோபம் தணிந்து என்மேல் நெற்றிக் கண் பார்வையினால் உடம்பு
முழுவதும் உண்டாகிய எரிச்சல் தீரப் பணித்தருள்வாய் வேதியனே! சந்தேகம் ஏதும் இன்றி
அமர்ந்து அருள் செய்வாய் என்றபடி.
பெருந்தேவபாணி ( நக்கீரதேவ நாயனார் அருளிச்செய்தது )
தேவபாணி என்பது இசைப் பாவகைகளில் ஒன்று. இது பெருந்தேவபாணி எனவும் சிறுதேவபாணி
எனவும் இருவகைப்படும். நக்கீர தேவ நாயனாரால் பாடப் பெற்ற இப் பெருந்தேவபாணி 67
அடிகளால் நீண்ட பெருமையுடையதாய், முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை
முன்னிலைப்படுத்தி அப் பெருமானுடைய திருவருள் திறத்தைப் பண் பொருந்தப் பரவிப்
போற்றுவதாகலின் பெருந்தேவபாணி என்று பெயர் பெற்றது.
திருச்சிற்றம்பலம்
-
சூல பாணியை சுடர்தரு வடிவனை
நீல கண்டனை நெற்றியோர் கண்ணனை
பால்வெண் ணீற்றனை பரம யோகியை
காலனைக் காய்ந்த கறைமிடற் றண்ணலை
நூலணி மார்பனை நுண்ணிய கேள்வியை
தெளிவுரை : சூலமேந்திய கையை உடையவனாக இருக்கிறாய். ஒளி பொருந்திய வடிவம் உடையவனாக
இருக்கிறாய். நீலகண்டத்தை உடையவனாக உள்ளாய். நெற்றியில் கண்ணை உடையை. பால் போன்ற
திருநீற்றை உடையை. பரம யோகியாகவும் உள்ளாய். நீ காலனைக் கோபித்த நீலகண்டன்.
மார்பில் முப்புரி நூலை அணிந்துள்ளாய். நுண்ணிய கேள்வி ஞானம் உடையாய்.
கோல மேனியை கொக்கரைப் பாடலை
வேலுடைக் கையனை விண்தோய் முடியனை
ஞாலத் தீயினை நாதனைக் காய்ந்தனை
தேவ தேவனை திருமறு மார்பனை
கால மாகிய கடிகமழ் தாரனை
தெளிவுரை : அழகிய திருமேனியை உடையாய். இசைக் கருவியோடு பாடும் வல்லமை உடையை.
சூலத்தை ஏந்திய கையினை உடையாய். விண்ணில் தோய்கிற முடியை உடையவனாக இருக்கிறாய்.
அக்கினி தேவனைக் காய்ந்தனை. தேவர்களுக்கெல்லாம் தேவனாக உள்ளாய். திருமாலாகி
இருக்கிறாய். காலத்தையே மணம் பொருந்திய மாலையாகக் கொண்டுள்ளாய்.
வேத கீதனை வெண்தலை ஏந்தியை
பாவ நாசனை பரமேச் சுவரனை
கீதம் பாடியை கிளர்பொறி அரவனை
போதணி கொன்றையெம் புண்ணிய ஒருவனை
ஆதி மூர்த்தியை அமரர்கள் தலைவனை
தெளிவுரை : வேத கீதனாக உள்ளாய். பிரமனது மண்டை ஓட்டை ஏந்தியுள்ளாய். பாவங்களை
நாசம் செய்கின்றாய். பரமேஸ்வரனாக உள்ளாய். கீதம் பாடுகிறாய். புள்ளிகளையுடைய
பாம்பை உடையாய். கொன்றை அணியும் புண்ணியனாக உள்ளாய். ஆதி மூர்த்தியாகவும்
தேவர்கள் தலை வனாகவும் இருக்கின்றாய்.
சாதி வானவர் தம்பெரு மான்தனை
வேத விச்சையை விடையுடை அண்ணலை
ஓத வண்ணனை உலகத்(து) ஒருவனை
நாத னாகிய நன்னெறிப் பொருளினை
மாலை தானெரி மயானத்(து) ஆடியை
தெளிவுரை : பிரிவுகளை உடைய வானவர் தலைவனாகவும் வேத விற்பன்னனாகவும் உள்ளாய்.
காளையை வாகனமாக உடையை. ஓத வண்ணனாகவும் உலகத்து ஒருவனாகவும் உள்ளாய். நாதனாகவும்
நன்னெறிப் பொருளாகவும் இருக்கின்றாய். மாலையில் எரிகின்ற மயானத்தில் ஆடுகின்றாய்.
வேலை நஞ்சினை மிகஅமு தாக்கியை
வேத வேள்வியை விண்ணவர் தலைவனை
ஆதி மூர்த்தியை அருந்தவ முதல்வனை
ஆயிர நூறுக்(கு) அறிவரி யானை
பேயுருவு தந்த பிறையணி சடையனை
தெளிவுரை : கடலில் இருந்து எழுந்த நஞ்சினைச் சிறந்த அமுதமாகச் செய்தாய். வேத
வேள்வியாகவும் விண்ணவர் தலைவனாகவும் உள்ளாய். ஆதிமூர்த்தியாகவும் அருந்தவ
முதல்வனாகவும் இருக்கின்றாய். காரைக்கால் அம்மையாருக்கு பேயுருவு தந்த பிறையணி
சடையனாகவும் இருக்கின்றாய்.
மாசறு சோதியை மலைமகள் கொழுநனை
கூரிய மழுவனை கொலற்கருங் காலனைச்
சீரிய அடியாற் செற்றருள் சிவனை
பூதிப் பையனை புண்ணிய மூர்த்தியை
பீடுடை யாற்றை பிராணி தலைவனை
தெளிவுரை : குற்றமற்ற சோதி வடிவாக உள்ளாய். பார்வதி தேவியின் கணவனாகவும், கூரிய
மழுவாளை உடையவனாகவும் கொல்வதற்கரிய நமனையும் உன்னுடைய சிறப்பமைந்த அடியால்
அடித்து, பிறகு அருள் செய்த சிவனாகவும் இருக்கின்றாய். திருநீற்றுப் பையை
உடையாய். புண்ணிய மூர்த்தியாகவும் உள்ளாய். பெருமை பொருந்திய கங்கை ஆற்றை சடையில்
அணிந்தவனாயும் இருக்கின்றாய்.
நீடிய நிமலனை நிறைமறைப் பொருளினை
ஈசனை இறைவனை ஈறில் பெருமையை
நேசனை நினைப்பவர் நெஞ்சத்(து) உள்ளனை
தாதணி மலரனை தருமனை பிரமனை
காதணி குழையனை களிற்றின் உரியனை
தெளிவுரை : பெரிய குற்றமற்றவனாய் விளங்குகின்றாய். நிறைந்த வேதப் பொருளாகவும்,
ஈசனாகவும், இறைவனாகவும் முடிவில்லாத பெருமை உடையவனாகவும் விளங்குகின்றாய்.
நேசனாகவும் நினைப்பவர். நெஞ்சத்தில் நிலைத்திருப்பவனாகவும் உள்ளனை. மகரந்தத்தோடு
கூடிய மலரினை அணிபவனாகவும், தரும சொரூபியாகவும், பிரமனாகவும், காதுகளில் குழையினை
உடையவனாகவும், யானைத் தோலைப் போர்த்தியவனாகவும் உள்ளனை.
சூழ்சடைப் புனலனை சுந்தர விடங்கனை
தார்மலர்க் கொன்றை தயங்கு மார்பனை
வித்தக விதியனை
தீதமர் செய்கைத் திரிபுரம் எரித்தனை
பிரமன் பெருந்தலை நிறைவ தாகக்
கருமன் செந்நீர் கபாலம் நிறைத்தனை
தெளிவுரை : சடையில் கங்கையை உடையை. சுந்தரவிடங்கனாகவும் இருக்கின்றாய். கொன்றை
மலர் மாலையை மார்பில் தரித்துள்ளாய். அறிவுள்ள விதியனாகவும், குற்றமற்ற
செய்கையோடு திரிபுரங்களை எரித்தனை; பிரமனுடைய மண்டை ஓடு நிறைவதற்காகத் திருமாலின்
குருதியை அந்தக் கபாலத்தில் நிறைத்தனை.
நிறைத்த கபாலச் செந்நீர் நின்றும்
உறைத்த உருவார் ஐயனைத் தோற்றினை
தேவரும் அசுரரும் திறம்படக் கடைந்த
ஆர்வமுண் நஞ்சம் அமுத மாக்கினை
தெளிவுரை : கபாலம் நிறைந்த குருதி நின்ற பிறகும் உறைத்த உருவார் ஐயனைத்
தோற்றுவித்தாய். தேவர்களும் அசுரர்களும் திறம்படக் கடைந்த ஆர்வத்தில் வெளியான
விடத்தை அமுதமாகச் செய்தனை.
ஈரமில் நெஞ்சத்(து) இராவணன் தன்னை
வீரம் அழித்து விறல்வாள் கொடுத்தனை
திக்கமர் தேவரும் திருந்தாச் செய்கைத்
தக்கன் வேள்வியைத் தளரச் சாடினை
வேதமும் நீயே வேள்வியும் நீயே
நீதியும் நீயே நிமலன் நீயே
புண்ணியம் நீயே புனிதன் நீயே
பண்ணியன் நீயே பழம்பொருள் நீயே
ஊழியும் நீயே உலகமும் நீயே
வாழியும் நீயே வரதனும் நீயே
தெளிவுரை : நெஞ்சில் இரக்கமில்லாத இராவணனது வீரத்தை அழித்து, வெற்றி பொருந்திய
வாளைக் கொடுத்தனை. திக்குகளில் அமர்ந்த தேவர்களும், திருந்தாத செய்கையுடைய
தக்கனும் செய்த வேள்வி தளர்ந்து ஒழியுமாறு அழித் தொழித்தாய். நீதியும் நீயே.
நிமலனும் நீயே. புண்ணியனாகவும் புனிதனாகவும் உள்ளாய். பண்ணியல் நீயே; பழம் பொருள்
நீயே; ஊழியாகவும் உலகமாகவும் உள்ளாய். வாழியும் நீயே; வரதனும் நீயே.
தேவரும் நீயே தீர்த்தமும் நீயே
மூவரும் நீயே முன்னெறி நீயே
மால்வரை நீயே மறிகடல் நீயே
இன்பமும் நீயே துன்பமும் நீயே
தாயும் நீயே தந்தையும் நீயே
தெளிவுரை : தேவர்களாவும் தீர்த்தமாகவும் உள்ளவன் நீயே. மூவரும் முன்னெறியும்
நீயே. மால் வரையும் மறிகடலும் நீயே. இன்பமாகவும் துன்பமாகவும் உள்ளவன் நீயே.
தாயாகவும் தந்தையாகவும் இருக்கின்றாய்.
விண்முதற்பூதம் ஐந்தவை நீயே
புத்தியும் நீயே முத்தியும் நீயே
சொலற்கரும் தன்மைத் தொல்லோய் நீயே, அதனால்
கூடல் ஆலவாய்க் குழகன் ஆவ(து)
அறியா(து) அருந்தமிழ் பழித்தனன் அடியேன்
ஈண்டிய சிறப்பின் இணையடிக் கீழ்நின்று
வேண்டும் மதுவினி வேண்டுவன் விரைந்தே.
தெளிவுரை : விண் முதலாகிய ஐந்து பூதங்களும் நீயே. புத்தியாகவும் முத்தியாகவும்
உள்ளவன் நீயே. சொல்வதற்கு அரிய தன்மைகளையுடைய பழமையை உடையவன் நீயே. அதனால்,
மதுரையில் கோயில் கொண்டுள்ள குழகனே! ஆவது அறியாத அருந்தமிழைப் புகழ்ந்து
போற்றவில்லை. அடியேன், பொருந்திய சிறப்போடு உன் இரண்டு அடிக்கீழ் நின்று
வேண்டியவற்றை இனி விரைந்து வேண்டுவேன்.
வெண்பா
-
விரைந்தேன்மற்(று) எம்பெருமான் வேண்டியது வேண்டா(து)
இகழ்ந்தேன் பிழைத்தேன் அடியேன் - விரைந்தென்மேல்
சீற்றத்தைத் தீர்த்தருளும் தேவாதி தேவனே
ஆற்றவும் செய்யும் அருள்.
தெளிவுரை : விரைந்தேன். பெருமான் வேண்டியதை, வேண்டாமல் இகழ்ந்து விட்டேன். அதாவது
நீ நெற்றிக் கண்ணைக் காட்டியபோது இகழ்ந்து தவறு செய்து விட்டேன். அப்படியே
விரைந்து என்மேல் உள்ள கோபத்தைத் தீர்த்து அருள்வீராக. தேவாதி தேவனே ! நீ
செய்யும் அருள், சீற்றத்தைத் தீர்த்தருளுதலே என்க.
திருச்சிற்றம்பலம்
கோபப்பிரசாதம்
( நக்கீரதேவநாயனார் அருளிச்செய்தது )
அருட் கடலாகிய சிவபிரான், உயிர்த் தொகைகளின் மாட்டுப் பேரருள் படைத்தவர். அருளே
வடிவமாக அமைந்த அப்பெருமான் யாவர் மாட்டேனும் சினங் கொள்வாராயின், அச் சினமும்
அம் மக்களின்பாற் கொண்ட பேரருள் திறத்தின் விளைவேயாகும். அச் சினம் அவ்வுயிரை
ஒறுத்து நல்வழிக்கண் செலுத்துதல் பொருட்டு அமைந்த தாகலின் அதனையும் அருட்பேறு
என்றே கூறுதல் வேண்டும். சிவபிரான் சிலரிடத்துச் சின அருள் கொண்டு செய்த
திருவருள் திறத்தை விளக்குவது கோபப் பிரசாதம் என்னும் இத் திருப்பாட்டு.
திருச்சிற்றம்பலம்
-
தவறுபெரி துடைத்தே தவறுபெரி துடைத்தே
வெண்திரைக் கருங்கடல் மேல்துயில் கொள்ளும்
அண்ட வாணனுக்(கு) ஆழியன்(று) அருளியும்
உலகம் மூன்றும் ஒருங்குடன் படைத்த
மலரோன் தன்னை வான்சிரம் அரிந்தும்
தெளிவுரை : தவறு பெரிதானது; தவறு பெரிதானது . வெள்ளிய திரையையுடைய கருங்கடல் மேல்
துயில் கொள்ளும் திருமாலுக்கு சக்கராயுதத்தை அன்று அருள் செய்தும், மூன்று
உலகங்களையும் ஒரே சமயத்தில் படைத்த பிரமனது தலையை அரிந்தும்,
கான வேடுவன் கண்பரிந்(து) அப்ப
வான நாடு மற்றவற்(கு) அருளியும்
கடிபடு பூங்கணைக் காம னார்உடல்
பொடிபட விழித்தும் பூதலத்(து) இசைந்த
மானுட னாகிய சண்டியை
வானவன் ஆக்கியும்
தெளிவுரை : காட்டு வேடுவனாகிய கண்ணப்ப நாயனார் அன்பு கொண்டு கண்ணைப் பெயர்த்து
அப்ப, அவருக்கு வான நாடு அருள் செய்தும், மணமுள்ள மலர் அம்புகளையுடைய மன்மதனது
உடல் சாம்பலாகுமாறு நெற்றிக் கண்ணைத் திறந்தும் இவ்வுலகிற்கு ஏற்ற மனிதனாகிய
சண்டிகேசுவரரைத் தேவன் ஆக்கியும்,
மறிகடல் உலகின் மன்னுயிர் கவரும்
கூற்றுவன் தனக்கோர் கூற்றுவ னாகியும்
கடல்படு நஞ்சம் கண்டத்(து) அடக்கியும்
பருவரை சிலையாப் பாந்தள் நாணாத்
திரிபுரம் எரிய ஒருகணை துரந்தும்
தெளிவுரை : கடலால் சூழப்பட்ட உலகின் மன்னுயிர்களைக் கவரும்
கூற்றுவனாகியும், கடலில் தோன்றிய விடத்தைக் கழுத்தில் நிறுத்தியும், மேரு மலையை
வில்லாகவும் ஆதிசேடனை நாணாகவும் கொண்டு திரிபுரம் எரிய ஒரு கணையைச் செலுத்தியும்,
கற்கொண்(டு) எறிந்த சாக்கியன் அன்பு
தற்கொண்(டு) இன்னருள் தான்மிக அளித்தும்
கூற்றெனத் தோன்றியுங் கோளரி போன்றும்
தோற்றிய வாரணத்(து) ஈருரி போர்த்தும்
தெளிவுரை : கற்கொண்டு எறிந்த சண்டேசுவர நாயனாரின் அன்பை ஏற்று, இன்னருள்
செய்தும், எமனைப் போலவும் சிங்கம் போலவும் தோன்றிய யானையின் தோலை உரித்துப்
போர்த்தியும்,
நெற்றிக் கண்ணும் நீள்புயம் நான்கும்
நற்றா நந்தீச் சுவரர்க்(கு) அருளியும்
அறிவின் ஓரா அரக்க னார் உடல்
நெறநெற இறுதர ஒருவிரல் ஊன்றியும்
தெளிவுரை : நெற்றிக் கண்ணும், நீண்ட புயம் நான்கும் நந்தீஸ்வரர்க்கு அருளியும்,
அறிவில்லாதவனாகிய இராவணனது உடல் நெறுநெறுவென்று முறியக் கால் விரல் ஒன்றினால்
ஊன்றியும்,
திருவுரு வத்தொடு செங்கண் ஏறும்
அரியன திண்திறள் அசுரனுக்(கு) அருளியும்
பல்கதிர் உரவோன் பற்கெடப் பாய்ந்து
மல்குபிருங்(கு) இருடிக்கு மாவரம் ஈந்தும்
தக்கன் வேள்வி தகைகெடச் சிதைத்தும்
மிக்கவரம் நந்தி மாகாளர்க்(கு) அருளியும்
தெளிவுரை : திருவுருவத்தொடு செங்கண் ஏறும் அரியன திண்திறல் அசுரனுக்கு அருளியும்,
பல கதிர்களையுடைய சூரியனுடைய பல்லை உடைத்தும், பிருங்கி முனிவருக்குப் பெரிய
வரத்தைக் கொடுத்தும், தட்சனது யாகத்தை அழித்தும், மிக்க வரத்தை நந்திக்கும்,
மாகாளர்க்கும் அருளியும்,
செந்தீக் கடவுள்தன் கரதலம் செற்றும்
பைந்தார் நெடும்படை பார்த்தற்(கு) அருளியும்
கதிர்மதி தனையோர் காற்பயன் கெடுத்தும்
நிதிபயில் குபேரற்கு நீள்நகர் ஈந்தும்
சலந்தரன் உடலந் தான்மிகத் தடிந்தும்
தெளிவுரை : அக்கினி தேவனது கைகளைச் சிதைத்தும் பார்த்தனுக்குத் தார் அணிந்த
பாசுபதக் கணையைக் கொடுத்தும், சந்திரனது உருவில் காற்பங்கு குறைத்தும்,
குபேரனுக்கு வடதிசையிலுள்ள அளகாபுரி என்னும் பட்டணத்தை ஈந்தும், சலந்திரனது
தோள்களை வெட்டியும்,
மறைபயில் மார்க்கண் டேயனுக்(கு) அருளியும்
தாருகற் கொல்லமுன் காளியைப் படைத்தும்
சீர்மலி சிலந்திக்(கு) இன்னர(சு) அளித்தும்
கார்மலி உருவக் கருடனைக் காய்ந்தும்
ஆலின் கீழிருந்(து) அறநெறி அருளியும்
தெளிவுரை : வேதம் பயில் மார்க்கண்டேயனுக்கு அருள் செய்தும், தாரகனைக் கொல்ல முன்
காளியைப் படைத்தும், சீர்மலி சிலந்திக்கு இன்னரசு அளித்தும், கார்மலி உருவக்
கருடனைக் காய்ந்தும், கல்லால நிழலில் இருந்து நால்வருக்கு உபதேசம் செய்தும்,
இன்னவை பிறவும் எங்கள் ஈசன்
கோபப் பிரசாதம் கூறுங் காலைக்
கடிமலர் இருந்தோன் கார்க்கடற் கிடந்தோன்
புடமுறு சோலைப் பொன்னகர் காப்போன்
உரைப்போர் ஆகிலும் ஒண்கடல் மாநீர்
அங்கைக்கொண்(டு) இறைக்கும் ஆதர் போன்றுளர்
தெளிவுரை : இது போன்ற பிறவும் எங்கள் ஈசன் கோபப் பிரசாதங்களாகும். இன்னும்
இதுபற்றிச் சொல்ல வேண்டுமானால் நான்முகனும் திருமாலும் இந்திரனும் பற்றி உரைக்க
கடல் நீரை உள்ளங்கையினால் இறைக்கும் அறிவில்லாதவர் இருக்கின்றனர்.
ஒடுங்காப் பெருமை உம்பர் கோனை
அடங்கா ஐம்புலத்(து) அறிவில் சிந்தைக்
கிருமி நாவாற் கிளத்தும் பரமே, அதாஅன்று
ஒருவகைத் தேவரும் இருவகைத் திறமும்
தெளிவுரை : குறையாத பெருமையினையுடைய தேவர்கள் தலைவனை அடங்காத ஐம்புலத்தறிவில்
சிந்தை கிருமி நாவாற் பேசும் பரமேயாகும். அதுவும் அல்லாமல் ஒருவகைத் தேவரும்,
இருவகைத் திறமும் கொண்ட
மூவகைக் குணமும் நால்வகை வேதமும்
ஐவகைப் பூதமும் அறுவகை இரதமும்
எழுவகை ஓசையும் எண்வகை ஞானமும்
ஒன்பதின் வகையாம் ஒண்மலர்ச் சிறப்பும்
பத்தின் வகையும் ஆகிய பரமனை
தெளிவுரை : மூவகைக் குணமும், நான்கு வகையான வேதங்களும், ஐம்பெரும் பூதங்களும்,
அறுவகையான சுவைகளும், எழுவகையான ஓசைகளும், எட்டு வகையான ஞானமும், ஒன்பது வகையாக
உள்ள ஒளியுள்ள மலர்களின் சிறப்பும், பத்து வகையாக உள்ள பரமனை,
இன்பனை நினைவோர்க்(கு) என்னிடை அமுதினைச்
செம்பொனை மணியினைத் தேனினைப் பாலினைத்
தஞ்சமென்(று) ஒழுகும் தன்னடி யார்தம்
நெஞ்சம் பிரியா நிமலனை நீடுயர்
செந்தழற் பவளச் சேணுறு வரையனை
தெளிவுரை : இன்ப வடிவாக உள்ளவனை, நினைவோர்க்கு என்னிடை அமுதம் போன்றவனை,
செம்பொன், மணி, தேன், பால் ஆகியவற்றைத் தஞ்சம் என்று ஒழுகும் சிவனடியார்களுடைய
நெஞ்சத்தினின்றும் பிரியாது இருக்கின்ற நிமலனை, நீடுயர் செந்தழற் பவளச் சேணுறு
வரையனை, (கயிலை வாசனை)
முக்கட் செல்வனை முதல்வனை மூர்த்தியைக்
கள்ளங் கைவிட்(டு) உள்ளம(து) உருகிக்
கலந்து கசிந்துதன் கழலிணை அவையே
நினைந்திட ஆங்கே தோன்றும் நிமலனைத்
தேவ தேவனைத் திகழ்சிவ லோகனைப்
தெளிவுரை : மூன்று கண்களையுடைய செல்வனை, முதல்வனை, மூர்த்தியை, கள்ளம் கைவிட்டு,
உள்ளமது உருகி, கலந்து, கசிந்து தன் கழல் இணைகளை நினைந்திட, அங்கு தோன்றும்
குற்றமற்றவனை, தேவதேவனை, திகழ சிவலோகனை,
பாவ நாசனைப் படரொளி உருவனை
வேயார் தோளி மெல்லியல் கூறனைத்
தாயாய் மன்னுயிர் தாங்கும் தந்தையைச்
சொல்லும் பொருளும் ஆகிய சோதியைக்
கல்லும் கடலும் ஆகிய கண்டனைத்
தெளிவுரை : பாவங்களை நாசம் செய்பவனை, பிரகாசமான உருவம் உடையவனை, மூங்கில் போன்ற
தோள்களையுடைய உமாதேவியை இடப்பாகத்தில் வைத்துள்ளவனை, தாய் போல் இருந்து நிலை
பெற்ற உயிர்களைத் தாங்கும் தந்தையை, சொல்லும் பொருளும் ஆகிய ஒளி வடிவினனை,
மலையும் கடலும் ஆகிய நீலகண்டனை,
தோற்றம் நிலைஈ றாகிய தொன்மையை
நீற்றிடைத் திகழும் நித்தனை முத்தனை
வாக்கும் மனமும் இறந்த மறையனைப்
பூக்கமழ் சடையனைப் புண்ணிய நாதனை
இனைய தன்மையன் என்றறி அரியவன்
தெளிவுரை : தோன்றுதல், நிற்றல், அழிதல் ஆகிய பழைமையை, திருநீறு திகழும் நித்தனை,
முத்தனை, வாக்குக்கும் மனத்திற்கும் எட்டாமல் மறைந்து நிற்கும் மெய்ப் பொருளை,
பூக்கமழ்கின்ற சடையனை, புண்ணிய நாதனை, எத் தன்மையுடையவன் என்று அறிய முடியாது.
தனைமுன் விட்டுத் தாம்மற்று நினைப்போர்
மாமுயல் விட்டுக்
காக்கைப் பின்போம் கலவர் போலவும்
விளக்கங் கிருப்ப மின்மினி கவரும்
அளப்பரும் சிறப்பில் ஆதர் போலவும்
தெளிவுரை : தனை முன் விட்டு, வேறு கடவுளர்களை நினைப்போர் மாமுயல் விட்டு,
காக்கைப் பின் போகின்ற கீழ்மக்கள் போலவும், விளக்கு கையில் இருக்க, மின்மினி
கவரும் அளப்பரும் சிறப்பில் அறிவில்லாதவர் போலவும்,
கச்சங் கொண்டு கடுந்தொழில் முடியாக்
கொச்சைத் தேவரைத் தேவரென்(று) எண்ணிப்
பிச்சரைப் போலவோர்
ஆரியப் புத்தகப் பேய்கொண்டு புலம்புற்று
வட்டணை பேசுவர் மானுடம் போன்று
தெளிவுரை : ஆடையைக் கச்சமாகக் கட்டிக் கொண்டு, கடுந்தொழில் முடியா கீழான தேவரைத்
தேவரென்று எண்ணி, பித்தரைப் போல ஓர் ஆரியப் புத்தகப் பேய் கொண்டு புலம்பி பெருமை
பேசுவர். மானுடம் போன்று,
பெட்டினை உரைப்போர் பேதையர் நிலத்துன்
தலைமீன் தலைஎண் பலமென் றால்அதனை
அறுத்து நிறுப்போர் ஒருத்தர் இன்மையின்
மந்திர ஆகுவர் மாநெறி கிடப்பவோர்
சித்திரம் பேசுவர் தேவ ராகில்
தெளிவுரை : வீண் பெருமை சொல்லுவோர் பேதையராவர். பூமியில் உன் தலை மீன், தலை எள்,
பலம் என்றால் அதனை அறுத்து நிறுப்போர் ஒருத்தரும் இல்லாமையின் கோபம் உடையவர்
ஆவர். மாநெறி கிடப்ப ஒரு பொய் பேசுவர். தேவர்களானால்,
இன்னோர்க் காய்ந்தனர் இன்னோர்க்(கு) அருளினர்
என்றறிய உலகின்
முன்னே உரைப்ப தில்லை ஆகிலும்
ஆடு போலக் கூடிநின்(று) அழைத்தும்
மாக்கள் போல வேட்கையீ(டு) உண்டும்
தெளிவுரை : இன்னோரை வருந்தினர், இன்னோர்க்கு அருளினர் என்று அறிய உலகின் முன்னே
உரைப்பதில்லை. என்றாலும், ஆடு போலக் கூடி நின்று அழைத்தும் மாக்கள் போல அதாவது
விலங்குகளைப் போல விருப்பம் ஏற்படும்போது உண்டும்,
இப்படி ஞானம் அப்படி அமைத்தும்
இன்ன தன்மையன் என்றிரு நிலத்து
முன்னே அறியா மூர்க்க மாக்களை
இன்னேகொண்(டு) ஏகாக் கூற்றம்
தவறுபெரி(து) உடைத்தே தவறுபெரி(து) உடைத்தே.
தெளிவுரை : இப்படியுள்ள ஞானத்தை அப்படி அமைத்தும் இன்ன தன்மையன் என்று இந்தப்
பெரிய உலகில் முன்னே அறியாத மூர்க்கரை, அதாவது ஆறறிவு பெறாத மக்கள் உருவாய்க்
காணப்படுவோரை, இப்போதே கொண்டு செல்லாத கூற்றம் பெரிய தவறு செய்கிறது என்க. இது
பெருந்தவறாகும்.
திருச்சிற்றம்பலம்
கார்எட்டு
( நக்கீரதேவநாயனார் அருளிச்செய்தது )
இந் நூல் கார் கால வரவினைக் கூறும் எட்டுப் பாடல்களால் அமைந்தபடியால் கார் எட்டு
என்னும் பெயருடையதாயிற்று. உலகமும் அதற்கு உறுதியாகிய அறம் பொருளின்பங்களும்
நடத்தற்குக் காரணமாகிய மழையினது வரவினை எடுத்துக் கூறுமுகத்தான், அம் மழைக்கும்
காரணமாகிய இறைவனுடைய திருவருள் வண்ணத்தை எண்ணச் செய்வது இந் நூலாகும்.
திருச்சிற்றம்பலம்
-
அரவம் அரைக்கசைத்த அண்ணல் சடைபோல்
விரவி எழுந்தெங்கும் மின்னி - அரவினங்கள்
அச்சங்கொண் டோடி அணைய அடைவுற்றே
கைச்சங்கம் போல்முழங்கும் கார்.
தெளிவுரை : பாம்பை அரையில் கட்டிய சிவபெருமானது சடையைப் போல் பரவி, எழுந்து
எங்கும் மின்னி, பாம்புக் கூட்டங்கள் அச்சங் கொண்டு ஓடி அணைய அடைவுற்று கையில்
வைத்து ஊதப்படும் சங்குப் போல கார் பருவத்து மேகம் முழங்கும் என்க.
-
மையார் மணிமிடறு போற்கருகி மற்றவன்தன்
கையார் சிலை விலகிக் காட்டிற்றே - ஐவாய்
அழலரவம் பூண்டான் அவிர்சடைபோல் மின்னிக்
கழலரவம் காண்புற்ற கார்.
தெளிவுரை : கருமை நிறம் பொருந்திய அழகிய கழுத்தைப் போலக் கருதி, பிறகு அவனுடைய
கையிலுள்ள வில்லைப் போல விலகிக் காட்டிற்று. ஐந்து வாயினை உடைய தீயைப் போலும்
நஞ்சுள்ள பாம்பை அணிந்தவனது ஒளிவிடும் சடையைப் போல் மின்னி கழலின் ஒலி போல மேகம்
இடித்தது.
-
ஆலமர் கண்டத்(து) அரன்தன் மணிமிடறும்
கோலக் குழற்சடையும் கொல்லேறும் - போல
இருண்டொன்று மின்தோன்றி அம்பொனவ் வானம்
கருண்டொன்று கூடுதலிற் கார்.
தெளிவுரை : நீலகண்டத்து அரனுடைய அழகுள்ள கழுத்தும் அழகு பொருந்திய குழலாகிய
சடையும் கொல்லும் தன்மையுள்ள காளையும் போல முறையே இருண்டு, மின்னி, தோன்றி அழகிய
அந்த செவ்வானத்தில் மேகம் கருநிறமுற்றது. கழுத்துப் போல் இருண்டு, சடை போல்
மின்னி, ஏறு போல் தோன்றி என நிரல் நிறையாகப் பொருள் கொள்க.
-
இருள்கொண்ட கண்டத்(து) இறைவன்தன் சென்னிக்
குருள்கொண்ட செஞ்சடைபோல் மின்னிச் - சுருள்கொண்டு
பாம்பினங்கள் அஞ்சிப் படம்ஒடுங்க ஆர்த்ததே
காம்பினங்கள் தோளீயக் கார்.
தெளிவுரை : இருளின் நிறத்தைக் கொண்ட கழுத்தையுடைய இறைவனது தலையில் சுருள் கொண்ட
செஞ்சடை போல் மின்னி, சுருளுதலைக் கொண்டு பாம்பினங்கள் அஞ்சிப் படம் ஒடுங்க,
மூங்கில் தொகுதிகள் தோள் கொடுக்க மேகம் ஆரவாரம் செய்தது.
-
கோடரவங் கோடல் அரும்பக் குருமணிகான்(று)
ஆடரவம் எல்லாம் அளையடைய - நீடரவப்
பொற்பகலம் பூண்டான் புரிசடைபோல் மின்னிற்றே
கற்பகலம் காண்புற்ற கார்.
தெளிவுரை : காந்தள், வளைந்த பாம்பைப் போல அரும்ப, நிறம் பொருந்திய மணியைக் கக்கி,
ஆடுகின்ற பாம்புகள் எல்லாம் வளையை அடைய பொன் போன்ற மார்பை உடையவனது சடை போல்,
தலைவர் வருமளவும் ஆற்றியிருந்து அறஞ் செய்யும் தலைவியரது கற்பின் விரிவைக் கண்ட
கார் மின்னிற்று.
-
பாரும் பனிவிசும்பும் பாசுபதன் பல்சடையும்
ஆரும் இருள்கீண்டு மின்விலகி - ஊரும்
அரவம் செலவஞ்சும் அஞ்சொலார் காண்பார்
கரவிந்தம் என்பார்அக் கார்.
தெளிவுரை : புவியும் குளிர்ச்சி பொருந்திய விண்ணும் சிவபெருமானது பல சடையும்
நிறைந்துள்ள இருளைக் கிழித்து மின் விலகி, ஊர்ந்து செல்லும் பாம்பும் செல்ல
அஞ்சும் மேகத்தை அஞ்சொல்லை உடைய மகளிர், கையாகிய தாமரை என்பர்.
-
செழுந்தழல் வண்ணன் செழுஞ்சடைபோல் மின்னி
அழுந்தி அலர்போல் உயர - எழுந்தெங்கும்
ஆவிசோர் நெஞ்சினரை அன்பளக்க உற்றதே
காவிசேர் கண்ணாயக் கார்.
தெளிவுரை : செழுமை தங்கிய தீ நிறக் கடவுளின் செழுஞ் சடைபோல் மின்னி, அழுந்தி,
பழிச் சொல் போல் உயர, எழுந்து எங்கும் ஆவிசோர் நெஞ்சினரை அன்பளிக்க, கருங்குவளை
மலரைப் போன்ற கண்களை நிகர்த்த மேகம் நேரிட்டது.
மேகத்தைக் கண்டு மகளிர் ஆறுதல் பெற்றனர் என்க.
-
காந்தள் மலரக் கமழ்கொன்றை பொன்சொரியப்
பூந்தளவம் ஆரப் புகுந்தின்றே - ஏந்தொளிசேர்
அண்டம்போல் மீதிருண்ட ஆதியான் ஆய்மணிசேர்
கண்டம்போல் மீதிருண்ட கார்.
தெளிவுரை : காந்தள் மலர, மணமுள்ள கொன்றை மலர்ந்திருக்கும் காட்சி பொன் சொரிவதைப்
போன்று இருக்கும் என்க. பூக்களையுடைய முல்லை பொருந்தப் புகுந்தது. மேகம் ஏந்தொளி
சேர் அண்டம் போலவும் ஆதியான் ஆய்மணிசேர் கண்டம் போலவும் இருண்டது என்க.
திருச்சிற்றம்பலம்
போற்றித் திருக்கலிவெண்பா ( நக்கீரதேவநாயனார் அருளிச்செய்தது )
சிவபெருமான் உலகத்தில் உள்ள உயிர்த்தொகைகளுக்கு அருள் புரியும் பொருட்டு அவ்வக்
காலங்களில் செய்தருளிய அருட் செயல்களை எடுத்துரைத்துப் பாராட்டுங் கருத்துடன்,
நக்கீரதேவ நாயனாரால் பாடப் பெற்ற இப்போற்றித் திருக்கலி வெண்பாவின்கண்
சிவபெருமான் இயற்றி யருளிய அருட் செயல்கள் விரித்துரைத்துப் பெற்றுள்ளன.
திருச்சிற்றம்பலம்
-
திருத்தங்கு மார்பில் திருமால் வரைபோல்
எருத்தத்(து) இலங்கியவெண் கோட்டுப் - பருத்த
குறுத்தாள் நெடுமூக்கில் குன்றிக்கண் நீல
நிறத்தாற் பொலிந்து நிலமேழ் - உறத்தாழ்ந்து
பன்றித் திருவுருவாய்க் காணாத பாதங்கள்
நின்றவா நின்ற நிலைபோற்றி - அன்றியும்
புண்டரிகத் துள்ளிருந்த புத்தேள் கழுகுருவாய்
அண்டரண்டம் ஊடுருவ ஆங்கோடிப் - பண்டொருநாள்
காணான் இழியக் கனக முடிகவித்துக்
கோணாது நின்ற குறிபோற்றி - நாணாளும்
தெளிவுரை : திருமகள் வாசம் செய்கின்ற மார்பினையுடைய திருமால், மலை போல் பெரிய
பிடரியையும் இரண்டு வெண்மையான கொம்புகளையும் பருத்த குறுகிய கால்களையும் கொண்டு
நீண்ட மூக்கில் குறுகி, கண் நீல நிலத்திற் பொலிந்து நிலத்தைத் தோண்டி பன்றி
உருவாகித் தேடியும் காணாத உன் பாதங்கள் இருந்த நிலைக்கு வணக்கம். அதன்றியும்
தாமரை மலரில் இருந்த பிரமன் கழுகு உருவமாகி எல்லா அண்டங்களும் ஊடுருவப் பறந்து
சென்று முன்பொரு நாள் தேடியும் காணாமல் இறங்கி வந்து அவருக்குப் பொன் முடி
சூட்டி, கோணாது நின்ற இறைவா, உனக்கு வணக்கம்.
பிரமன் எடுத்தது அன்ன உருவம் என்றும் கூறுவர்.
பேணிக்கா லங்கள் பிரியாமை பூசித்த
மாணிக்கா அன்று மதிற்கடவூர்க் - காண
வரத்திற் பெரிய வலிதொலைத்த காலன்
உரத்தில் உதைத்தஉதை போற்றி - கரத்தாமே
வெற்பன் மடப்பாவை கொங்கைமேல் குங்குமத்தின்
கற்பழியும் வண்ணங் கசிவிப்பான் - பொற்புடைய
வாமன் மகனாய் மலர்க்கணையொன்(று) ஓட்டியஅக்
காமன் அழகழித்த கண்போற்றி - தூமப்
தெளிவுரை : உன்னையே பல காலம் பிரியாமல் வழிபட்டு வந்த மார்க்கண்டேயனுக்காக, அன்று
மதில்களையுடைய திருக்கடவூர்க் காண, வரத்திற் பெரிய வலி தொலைத்த எமதர்ம ராஜனை
மார்பில் உதைத்த உதையை நினைத்து உன்னை வணங்குகிறேன். பர்வத ராஜனது மகளாகிய
பார்வதி தேவியின் கொங்கைமேல் குங்குமத்தால் உனக்கு விருப்பம் உண்டாக்குவதற்காக,
பொற்புடைய வாமனாவதாரம் எடுத்த திருமாலின் மகளாகிய மன்மதன் மலர்க்கணை ஒன்றை
உன்மேல் செலுத்தியதால், அவனை எரித்தழித்த நெற்றிக் கண்ணிற்கு வணக்கம்.
படமெடுத்த வாளரவம் பார்த்தடரப் பற்றி
விடமெடுத்த வேகத்தால் மிக்குச் - சடலம்
முடங்க வலிக்கும் முயலகன்தன் மொய்ம்பை
அடங்க மிதித்த அடி போற்றி - நடுங்கத்
திருமால் முதலாய தேவா சுரர்கள்
கருமால் கடல்நாகம் பற்றிக் - குருமாற
நீலமுண்ட நீள்முகில்போல் நெஞ்சழல வந்தெழுந்த
ஆலமுண்ட கண்டம் அதுபோற்றி - சாலமண்டிப்
தெளிவுரை : தீய படத்தை எடுத்த வாள் போன்ற பாம்பு பார்த்து அடரப் பற்றி விடமெடுத்த
வேகத்தால் மிகுந்த சடலம் முடங்க வலிக்கும் முயலகனுடைய வலிமை அடங்க, அவனைக்
காலடியில் போட்டு மிதித்த உன் பாதங்களுக்கு வணக்கம். திருமால் முதலாகிய
தேவர்களும் அசுரர்களும் நடுங்க, எழுந்த கரிய பெரிய கடல் நாகத்தைப் பற்றி,
செந்நிறமான நீலமுண்ட நீண்ட மேகத்தைப் போல மனம் கொதிக்க வந்தெழுந்த விஷத்தை உண்ட
கண்டத்துக்கு வணக்கம்.
போருகந்த வானவர்கள் புக்கொடுங்க மிக்கடர்க்கும்
தாருகன்தன் மார்பில் தனிச்சூலம் - வீரம்
கொடுத்தெறியும் மாகாளி கோபந் தவிர
எடுத்த நடத்தியல்பு போற்றி - தடுத்து
வரையெடுத்த வாளரக்கன் வாயா(று) உதிரம்
நிறையெடுத்து நெக்குடலம் இற்றுப் - புரையெடுத்த
பத்தனைய பொன்முடியும் தோள்இருப தும்நெரிய
மெத்தெனவே வைத்த விரல்போற்றி - அத்தகைத்த
தெளிவுரை : மிகுதியாக நெருங்கி, போரை விரும்பிய வானவர்கள் ஓடி ஒளிக்க நெருக்கி
வருத்தும் தாருகாசுரனது மார்பில் ஒப்பற்ற சூலத்தை வீரமுடன் எறிய, மாகாளியினது
கோபம் தணியுமாறு எடுத்த நடனத்தினது இயல்பிற்கு வணக்கம். தடுத்து இமய மலையை எடுக்க
முயன்ற இராவணனது வாயில் ஆறாக இரத்தம் பெருகி, உடலும் நொறுங்கி, பத்து
தலைகளின்மேல் இருந்த பொன் முடிகளும், தோள் இருபதும் நெரிய மெத்தெனவே வைத்த உன்
கால் விரலுக்கு வணக்கம்.
வானவர்கள் தாங்கூடி மந்திரித்த மந்திரத்தை
மேனவில ஓடி விதிர்விதிர்த்துத் - தானவருக்(கு)
ஒட்டிக் குறளை உரைத்த அயன்சிரத்தை
வெட்டிச் சிரித்த விறல்போற்றி - மட்டித்து
வாலுலகத்தால் நல்லிலிங்க மாவகுத்து மற்றதன்மேல்
பாலுகுப்பக் கண்டு பதைத்தோடி - மேலுதைத்தங்(கு)
ஓட்டியவன் தாதை இருதாள் எறிந்துயிரை
வீட்டிய சண்டிக்கு வேறாக - நாட்டின்கண்
பொற்கோயில் உள்ளிருத்திப் பூமாலை போனகமும்
நற்கோலம் ஈந்த நலம்போற்றி - நிற்க
தெளிவுரை : அத்தகைய வானவர்கள் ஒன்று கூடி மந்திரித்த மந்திரத்தை மேல் நவில ஓடி
நடுநடுங்கி, அரக்கர்களுக்குச் சாதகமாகப் புறங்கூறிய பிரமனது தலையை வெட்டிச்
சிரித்த உன் வல்லமைக்கு வணக்கம். வெண்மணலால் பூசி நன்றாக இலிங்கமாகச் செய்து
மற்றதன்மேல் பால் அபிஷேகம் செய்வதைக் கண்டு பதைத்தோடி இலிங்கத்தைக் காலால் உதைத்த
தனது தந்தையினது இரண்டு கால்களையும் வெட்டி, அவரது உயிரைப் போக்கிய
சண்டிகேசுவரருக்குத் தனியாக நாட்டின்கண் பொற்கோயிலை நிறுவிப் பூமாலை, பிரசாதம்
தந்து நற்கோலம் தந்த உன் நலத்திற்கு வணக்கம்.
வலந்தருமால் நான்முகனும் வானவரும் கூடி
அலந்தருமால் கொள்ள அடர்க்கும் - சலந்திரனைச்
சக்கரத்தால் ஈரந்தரிதன் தாமரைக்கண் சாத்துதலும்
மிக்கஅஃ(து) ஈந்த விறல்போற்றி - அக்கணமே
நக்கிருந்த நாமகளை மூக்கரிந்து நால்வேதம்
தொக்கிருந்த வண்ணம் துதிசெய்ய - மிக்கிருந்த
அங்கைத் தலத்தே அணிமானை ஆங்கணிந்த
செங்கைத் திறத்த திறல்போற்றி - திங்களைத்
தெளிவுரை : வெற்றியைத் தரும் திருமாலும், பிரமனும் தேவர்களும் ஒன்று கூடித்
துன்பத்தை அடைய மயக்கத்தைத் தந்து தாக்கிய சலந்தரனைச் சக்கரத்தால் அழித்த
திருமால் தனது தாமரை மலர் போன்ற கண்ணை இடந்து அருச்சித்த அந்த வெற்றிக்கு
வணக்கம். அப்போதே நகைத்திருந்த சரஸ்வதியை மூக்கு அரிந்து, நான்கு வேதங்களும்
விரும்பி துதி செய்ய, மிக்கிருந்த அழகிய மானைக் கையில் ஏந்திய உன் வெற்றிக்கு
வணக்கம்.
தேய்த்ததுவே செம்பொற் செழுஞ்சடைமேல் சேர்வித்து
வாய்த்திமையோர் தம்மைஎல்லாம் வான்சிறையில் - பாய்த்திப்
பிரமன் குறையிரப்பப் பின்னும் அவர்க்கு
வரம்அன்(று) அளித்தவலி போற்றி புரமெரித்த
அன்றுய்ந்த மூவர்க்(கு) அமர்ந்து வரமளித்து
நின்றுய்ந்த வண்ணம் நிகழ்வித்து - நன்று
நடைகாவல் மிக்க அருள்கொடுத்துக் கோயில்
கடைகாவல் கொண்டவா போற்றி - விடைகாவல்
தெளிவுரை : காலால் தேய்த்த சந்திரனைச் செம்பொற் செழுஞ்சடைமேல் சேர்வித்து,
தேவர்களைச் சிறையில் அடைத்து, பிரமன் வேண்டிக் கொள்ள, பிறகு அவர்களுக்கு
வரமளித்து அருளிய உன் வலிமைக்கு வணக்கம். திரிபுரங்களை எரித்த போது, தப்பிய
அசுரர்கள் மூவர்க்கும் அருள் கூர்ந்து வரமளித்து அவர்களைக் கோயில்களில் காவல்
தெய்வமாக்கிய உன் அருள் தன்மைக்கு வணக்கம்.
தானவர்கட்(கு) ஆற்றாது தன்னடைந்த நன்மைவிறல்
வானவர்கள் வேண்ட மயிலூரும் - கோனவனைக்
சேனா பதியாகச் செம்பொன் முடிகவித்து
வானாள வைத்த வரம் போற்றி - மேனாள்
அதிர்தெழுந்த அந்தகனை அண்டரண்டம் உய்யக்
கொதித்தெழுந்த சூலத்தால் கோத்துத் -துதித்தங்(கு)
அவனிருக்கும் வண்ணம் அருள்கொடுத்(து)அங்(கு) எழேழ்
பவமறுத்த பாவனைகள் போற்றி - கவைமுகத்த
தெளிவுரை : அசுரர்கள் சிறையிலிருந்த தேவர்கள் துன்ப மிகுதியால் உன்னிடம் முறையிட,
மயில்வாகனனாகிய முருகப் பெருமானைச் சேனா பதியாகச் செம்பொன் முடி கவித்து வானாள
வைத்த உன் வரத்திற்கு வணக்கம். முற்காலத்தில் ஆரவாரம் செய்தெழுந்த எமதர்மராஜனை
உலகமெல்லாம் கடைத்தேற கொதித்தெழுந்த சூலத்தால் கோத்து, பிறகு அவன் வேண்டிக்
கொண்டபடி அருள் செய்து நாற்பத்தொன்பது பலத்தை அறுத்த உன் பாவனைகளுக்கு வணக்கம்.
பொற்பா கரைப்பிளந்து கூறிரண்டாப் போகட்டும்
எற்பா சறைப்போக மேல்விலகி - நிற்பால
மும்மதத்து வெண்கோட்டுக் கார்நிறத்துப் பைந்தறுகண்
வெம்மதத்த வேகத்தால் மிக்கோடி - விம்மி
அடர்த்திரைத்துப் பாயும் அடுகளிற்றைப் போக
எடுத்துரித்துப் போர்த்த இறை போற்றி - தொடுத்தமைத்த
தெளிவுரை : பிளவுபட்ட முகத்தையுடைய பொற்பாகரைப் பிளந்து இரண்டு கூறாக எடுத்து
வீசியும் பாசறையை விட்டு வெளியே வந்து நின்ற மூன்று மறதத்தையும் வெண் கோட்டையும்
கார் நிறத்தையும் அஞ்சாமையோடு மதங் கொண்டு வேகமாக ஓடி விம்மிப் பேரொலி செய்து பாய
வந்த அடுகளிற்றைக் கொன்று அதன் தோலைப் போர்த்திக் கொண்ட உன் வீரத்திற்கு வணக்கம்.
நாண்மாலை கொண்டணிந்த நால்வர்க்(கு)அன்று(று) ஆல்நிழற்கீழ்
வாண்மாலை ஆகும் வகையருளித் - தோள்மாலை
விட்டிலங்கத் தக்கிணமே நோக்கி வியந்தகுணம்
எட்டிலங்க வைத்த இறைபோற்றி - ஒட்டி
விசையன் விசையளப்பான் வேடுருவம் ஆகி
அசைய உடல்திரியா நின்று - வசையினால்
பேசு பதப்பாற் பிழைபொறுத்து மற்றவற்குப்
பாசுபதம் ஈந்த பதம்போற்றி - நேசத்தால்
தெளிவுரை : அன்றலர்ந்த மலர்மாலை அணிந்த சனகாதி முனிவர்கள் நால்வர்க்கு, கல்லால
நிழலின்கீழ் நல்லுபதேசம் செய்து, தோள் மீதிருந்த மாலை பிரகாசிக்க, அப்போதே
பார்த்து, வியந்த குணம் எட்டிலங்க வைத்த இறையே வணக்கம். அதை அடுத்து, அருச்சுனனது
ஆற்றலின் அளவை அறிய வேண்டி, வேடுருவம் தாங்கி அசைய, உடல் திரியா நின்று வசையினால்
பேசிய சொற் குற்றம் பொறுத்து, அவனுக்குப் பாசுபதக் கணை தந்த உன் பாதங்களுக்கு
வணக்கம்.
வாயில்நீர் கொண்டு மகுடத் துமிழ்ந்திறைஞ்சி
ஆயசீர் போனகமா அங்கமைத்து -தூயசீர்க் 42
கண்ணிடந்த கண்ணப்பர் தம்மைமிகக் காதலித்து
விண்ணுலகம் ஈந்த விறல்போற்றி - மண்ணின்மேல் 43
காளத்தி போற்றி கயிலைமலை போற்றியென
நீளத்தி னால்நினைந்து நிற்பார்கள் - தாளத்தோடு 44
எத்திசையும் பன்முரசும் ஆர்த்திமையோர் போற்றிசைப்ப
அத்தனடி சேர்வார்கள் ஆங்கு.
தெளிவுரை : அன்பினால் வாயில் நீர் முகந்து வந்து, உன் முடிமீது அதை உமிழ்ந்து,
இறைச்சியினாலாகிய உணவை அங்கு வைத்து, தூய்மையான சிறப்புடைய கண்ணைத் தோண்டிய
கண்ணப்பரது கையை மிக விரும்பி விண்ணுலகம் அளித்த உன் வெற்றிக்கு வணக்கம்.
பூமியில் காளத்திபதிக்கு வணக்கம், கயிலை மலைக்கு வணக்கம் என்று நெடுங் காலமாக
எண்ணி நிற்பவர்கள் தாளத்தோடு எல்லாப் பக்கங்களிலும் பல பேரிகைகளும் ஒலி செய்ய
இமையோர் வணங்க, அத்தனாகிய உனது அடியை அப்போதே சேர்வார்கள் என்பதாம்.
திருச்சிற்றம்பலம்
திருமுருகாற்றுப்படை ( நக்கீரதேவ நாயனார் அருளிச்செய்தது )
ஆற்றுப் படை என்பதன் பொருள், வழிப்படுத்துதல் என்பதாகும். திருமுருகாற்றுப்படை
என்னும் இந் நூல் திருமுருகனுடைய திருவருளைப் பெற்றான், ஒருவன் பெறாதானாகிய
ஒருவனை அக் கடவுளிடத்தே ஆற்றுப்படுத்துவதாகப் பாடப்பட்டதாகும். இதன்கண் முதலில்
முருகப் பெருமானுடைய தலைமைத் தன்மையின் சிறப்பினைக் கூறிப் பிறகு அப் பெருமானுடைய
திருவுருவச் சிறப்பும் அப் பெருமானை வழிபட்டுத் தேவ மகளிர் ஆடும் சிறப்பினையும்,
திருப்பரங்குன்றத்துப் பெருமையும் பிறகு திருச்சீர் அலைவாயின்கண் வீற்றிருக்கும்
அம்முருகப் பெருமானுடைய ஆறுமுகங்களும் பன்னிரண்டு கைகளும் அமைந்திருப்பதை
விரிக்கும் வகையால், அவர் இயற்றும் ஐந்தொழிற் சிறப்பும் திருவாவினன்குடியின்கண்
அப்பெருமானைக் கண்டு வழிபடற்கு முனிவர் தேவர் முதலியோர் வந்து சேரும் காட்சியும்,
திருவேரகத்தின்கண் இரு பிறப்பாளர் முருகப் பெருமானைப் போற்றும் சிறப்பும்,
குன்றுகள் தோறும் முருகப் பெருமானுக்கு வேல் முருகன் ஆடும் வெறியாட்டம் பிற
செய்திகளும் அழகுற விரித்தோதப் பெற்றுள்ளன.
திருச்சிற்றம்பலம்
-
திருப்பரங்குன்றம்
-
உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்(கு) அவிரொளி
உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்தாள்
செறுநர்த் தேய்த்த செல்உறழ் தடக்கை
மறுவில் கற்பின் வாணுதல் கணவன்
தெளிவுரை : உயர்ந்தோர் விரும்பும்படி எழுந்து மேருவை வலமாக வருகின்ற பலராலும்
புகழப்பட்ட ஆதித்தன், கடலிடத்து கண்டாலொத்த ஒழிவில்லாமல் விளங்குவதாய் நீண்ட
தூரத்தில் சென்று விளங்குகின்ற ஒளியினையும், தன்னை அடைந்தோராகிய அடியார்களைத்
தாங்குகின்ற செருக்கும் வலியும் உளவான சீர் பாதங்களையும் பகைவர்களை மாய்த்த மேகம்
போன்ற வளவிய கையினையும் உடைய குற்றமில்லாத கற்பினையும், ஒளி சிறந்த
நெற்றியினையும் உடைய தெய்வயானையார்க்குக் கணவனாய் உள்ளவன்.
கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை
வாள்போழ் விசும்பின் வள்உறை சிதறித்
தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்(து)
இருள்படப் பொதுளிய பராஅரை மராஅத்(து)
உருள்பூந் தண்டார் புரளும் மார்பினன்
தெளிவுரை : கடலில் நீர் முகந்த முதிர்ந்த சினையை யுடைய கரிய மேகங்களானவை வாளால்
பிளந்தாற்போல மின்னுகின்ற வானத்தில் நின்ற வளவிய நீர்த் துளிகளைச் சிந்தி முதற்
பெயலைப் பெய்துவிட்ட தட்பத்தையும் நறுநாற்றத்தையும் உடைத்தாய காட்டிடத்து
இருளுண்டாகும்படி நெருங்கித் தழைத்த பருத்த வரை வடிவினையுடைய திருக்கடம்பின்
வட்டப் பூவால் தொடுத்த குளிர்ந்த மாலை அசைகின்ற திருமார்பினை உடையவன்.
மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற்
கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடிக்
கணைக்கால் வாங்கிய நுசுப்பிற் பணைத்தோள்
கோபத் தன்ன தோயாப் பூந்துகில்
பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல்
தெளிவுரை : பெரிய மூங்கில்கள் ஓங்கி, மிகவும் உயர்ந்த மலையில் பாதசாலம் பொருந்தின
அழகியதாகச் சிவந்த சிறிய அடிகளையும் அம்புக்குதையடி போன்ற சுருங்கிய இடையையும்
பணைத்த தோள்களையும், இந்திர கோபத்தை யொத்த சிவந்த தோய்க்கப்படாத பூத்தொழிற்
பட்டினையும் பல இரத்தினங்களால் நிறைக்கப்பட்ட நுண் தொழிலாற் சிறந்த மேகலை அணிந்த
அல்குலையும்;
கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழைச்
சேணிகந்து விளங்கும் செயிர்தீர் மேனித்
துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதிச்
தெளிவுரை : கையால் திருத்திச் செய்ய வேண்டாத நன்மை பெற்ற அழகையும், நாவலால் பேர்
பெற்ற சாம்பு நதம் என்ற பொன்னால் செய்யப்பட்ட விளங்குகிற ஆபரணங்களையும், அதிதூரம்
கடந்து விளங்குகிற குற்றம் தீர்ந்த மேனியையும் உடையவராய்ப் பாங்கிமாரால்
வகிரப்பட்ட இணையொத்த குளிர்ச்சியை உடைத்தாகிய மயிரில்;
செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு
பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித்
தெய்வ உத்தியொடு வலம்புரி வயின்வைத்துத்
திலகந் தைஇய தேங்கமழ் திருநுதல்
மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத்
துவர முடித்த துகளறு முச்சிப்
பெருந்தண் சண்பகம் செரீஇக் கருந்தகட்(டு)
உளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக்
கிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்
பிணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக
வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர்
நுண்பூண் ஆகந் திளைப்பத் திண்காழ்
தெளிவுரை : சிவந்த தாளையுடைத்தாகிய வெட்சியின் சிறிய இதழையும், இடையிட்டுப்
பச்சென்ற தாளையுடைத்தாகிய நீலப் பூவின் துய்ய இதழையும், கிள்ளிச் சீதேவி என்னும்
தலைக் கோலத்துடன் வலம்புரிச் சங்கு வடிவான அணியையும், இடம் வாய்க்க வைத்துத்
திலகத்தை அணிந்த நறுநாற்றம் கமழ்கின்ற நெற்றியில் சுறாமீனின் அங்காத்த வாய்
தோற்கும்படி செய்த அணியை அலங்காரம் பெற அணிந்து, முற்றுப் பெற முடித்த குற்றமற்ற
உச்சிக் கொண்டையில் மிகவும் குளிர்ந்த சண்பகப் பூவையும் சொருகி, பச்சென்ற புற
இதழையும் துய்யினையும் உடைய மலர்களைப் பொருந்திய மருதினது ஒள்ளிய கொத்துக்களையும்
இட்டு, கிளை அரும்பீன்று அழகியதாய் மேல் நோக்கின நீர்க் கீழ்ச் சிவந்த
அரும்பினால் தொடுக்கலுற்ற மாலையை நெற்றி மாலையாகச் சுற்றி இணையொத்த வளவிய காதில்
நிறைய விட்ட அசோகினது அழகிய தளிர் நுண் தொழிலால் சிறந்த ஆபரணம் அணிந்த மார்பில்
வந்தலைய;
நறுங்குற(டு) உருஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
தேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின்
குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர்
வேங்கை நுண்தா(து) அப்பிக் காண்வர
வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக்
கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி
வாழிய பெரிதென்(று) ஏத்திப் பலருடன்
சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடிச்
சூரர மகளிர் ஆடும் சோலை
மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச்
சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்
தெளிவுரை : திண்ணிய வயிரத்தையுடைய நறுமணமுள்ள சந்தனக் குறட்டைத் தேய்த்த
பொலிவையும் நிறத்தையும் உடைய குழம்பை, மணங் கமழ்கின்ற மருதின் பூவை அப்பினால்
ஒப்பக் கோங்கினது குவிந்த அரும்பை ஒத்த இளமுலைகளில் அப்பி, வேங்கையின் இதழ்
விரிந்த பூவில் உள்ள நுண்ணிய தாதையும் குழம்பின் மேலதாய் அப்பி அழகு பெற விளாவின்
இளந்தளிரையும் கிள்ளிப் பிள்ளையார் சீர்பாதங்களுக்குப் பத்திரியாகத் தெரித்து,
கோழியை உயரக் கொண்டிருக்கின்ற மிக்க வெற்றியை உடைய உயர்ந்த கொடியை மிகவும்
வாழ்வதாக என்று வாழ்த்தி மகளிர் பலருடனே சிறப்பு மிக்க மலையிடமெல்லாம் எதிராய்
ஆரவாரிக்கும்படி பாடி, தெய்வப் பெண்கள் விளையாடுகின்ற சோலையையுடைய,
குரங்குகளாலும் ஏறி அறியப் படாத உயர்ந்த மரங்கள் நெருங்கிய பக்கவரையாகிய காட்டில்
வண்டுகள் மொய்க்காத சுடரை ஒத்த காந்தட்பூவால் தொடுத்த மிகவும் குளிர்ந்த மாலையைச்
சூடிய திருமுடியை உடையவன்;
பார்முதிர் பனிக்கடல் கலங்கஉள் புக்குச்
சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்
உலறிய கதுப்பிற் பிறழ்பல் பேழ்வாய்ச்
சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கிற்
கழல்கண் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்
பெருமுலை அலைக்கும் காதில் பிணர்மோட்(டு)
உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதி ஆடிய கூருகிர்க் கொடுவிரல்
கண்தொட்(டு) உண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்டொடித் தடக்கையின் ஏந்தி வெருவர
வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா
நிணந்தின் வாயள் துணங்கை தூங்க
இருபே ருருவின் ஒருபே ரியாக்கை
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம் அடங்கக் கவிழிணர்
மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்
தெய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்
தெளிவுரை : பூமியைச் சூழ்ந்த குளிர்ந்த கடல் கலங்கும்படி அதன் உள்ளே புகுந்து
சூரனை வேரோடு வெட்டின ஒளியினையும், இலைத் தொழிலையும் உடைய மிக்க திருக்கை
வேலினால்,
உயர்ந்த மயிரையும் பிறழ்ந்த பல்லையும் பெரிய வாயையும் வட்ட விழியாலாகிய பச்சைக்
கண்ணால் கண்டோர் பயப்படும்படி பார்க்கின்ற பார்வையையும், கழன்று விழுவது போன்ற
கண்களையுடைய கோட்டானுடனே கடுங்கோபத்தையுடைய பாம்பு தொங்குதலால் பெரிய முலைகளை
வருத்துகின்ற காதுகளையும், சருச்சரை பொருந்திய முதுகையும் வெப்பங் கெழுமின
நடையையும் உடைய கண்டார் அஞ்சத் தக்க பேய்ப் பெண் உதிரந்தோய்ந்த கூரிய உகிரையுடைய
வளைந்த விரலால் கண்களைத் தோண்டி உண்ணப்பட்ட ஊன் கழிந்த முடை நாற்றத்தை உடைய பெரிய
தலையை அழகிய வளையிட்ட பெரிய கையிலேந்தி, அஞ்சத்தக்க திருக்கை வேலால் வெற்றி
செய்து கொண்டருள்கின்ற பிள்ளையாருடைய போர்க்களத்தைப் பாடித் தோளோடு தோளிட்டு
நிணம் தின்கின்ற வாயினை உடையவளாய்ப் பேய்க் கூத்தை இடைவிடாதே ஆடச் சூரன் என்றும்
பதுமன் என்றும் இரண்டு பெயரையும் பிறர் அஞ்சத் தக்க வடிவையும், ஒப்பற்ற பெரிய
உடம்பையும் உடைய சூரன் ஆனவன், ஆறு வேறு வகைப்பட்ட வடிவினாலும் அஞ்சும்படி
அடுக்கச் சென்று, அசுரருடைய நல்ல வெற்றி அழியும்படி மாயையினால் கீழ் நோக்கிக்
கவிழ்ந்த கொத்தினை உடைய மாமரத்தை வேரோடே வெட்டின குற்றமில்லாத வெற்றியினையும்
ஒருவராலும் அறியப்படாத நல்ல கீர்த்தியினையும் சிவந்த வேலையுமுடைய பிள்ளையாரின்;
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்(து) உறையும்
செலவுநீ நயந்தனை யாயின் பலவுடன்
நன்னர் நெஞ்சத்(து) இன்னிசை வாய்ப்ப
இன்னே பெறுதிநீ முன்னிய வினையே
தெளிவுரை : சிவந்த திருவடிகளைத் தேடிச் செல்லுகிற செம்மாந்த உள்ளத்தோடே நன்மை
புரிந்த கோட்பாட்டையுடைய நீ, அவன் விரும்பி வாழ்கிற கோட்பாட்டையுடைய நீ, அவன்
விரும்பி வாழ்கிற நிலத்தில் செல்வதற்கு விரும்பினாயானால் நற்குணங்கள் பலவும்
வாய்க்கப்பெற்ற அழகிய நெஞ்சத்து இனிதாக நச்சின பொருள்கள் எல்லாம் வாய்க்கும்படி
இப்பொழுதே நீ நினைத்த காரியங்களைப் பெறுபவை;
இனி மதுரை வளம் சொல்லுகிறார்.
செருப்புகன்(று) எடுத்த சேணுயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த போரரு வாயில்
திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து
மாடமலி மறுகில் கூடற் குடவயின்
இருஞ்சேற் றகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த
முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கள்கமழ் நெய்தல் ஊதி எற்படக்
கண்போல் மலர்ந்த காமர் கணைமலர்
அம்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்றமர்ந்(து) உறைதலும் உரியன் அதாஅன்று
தெளிவுரை : பூசலைக் கூறி எடுத்த அதிதூரத்தில் உயர்ந்து தோன்றுகிற மிகுந்த
கொடிகளின் அருகில் அழகியதாகச் செய்த பந்துடன் வீரத்துக்கு அறிகுறியாகப்
பன்னிரண்டு பாவைகளும் தூங்கும்படி; பகைவரை மகளிராக்கி அவர் கொண்டு
விளையாடுவதற்குப் பந்தும் பாவையும் தொங்கவிடுவர்.
பொருவாரை அழித்ததனால் போர் செய்வதற்கு அரிதாகிய மதில் வாயிலையும், திருமகள்
சிறப்போடு அமர்ந்திருந்த குற்றம் தீர்ந்த அங்காடி வீதியையும், மாடங்கள் மிகுந்த
மற்றத் தெருக்களையும் உடைய திரு ஆலவாய்க்கு மேற்குப் பக்கத்தில்,
இனி, திருப்பரங்குன்றின் வளம் சொல்லப் புகுகின்றார்.
பெரிய சேற்றிடத்து அகன்ற வயலின்கண் கிண்கிணி போல வாய் செய்து மலர்ந்த முள்ளுடைத்
தாகிய தாளாற் சிறந்த தாமரைப் பூவில் உறங்கி, விடியாமத்து மதுக் கமழுகின்ற நெய்தற்
பூவில் ஊதி ஒளியுண்டாகும்படி, மகளிர் கண் போல் மலர்ந்த அழகிய சுனையில் குவளைப்
பூவில் அழகிய சிறகை உடைய வண்டுத்திரள் ஆரவாரிக்கும். இப்படிப்பட்ட
திருப்பரங்குன்றம் என்கிற திருமலையிடத்தே விரும்பி வாழ்தற்கு உரியன்; அங்குச்
செல்க.
திருச்சீர் அலைவாய் ( திருச்செந்தூர் )
வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வரப்
படுமணி இரட்டு மருங்கின் கடுநடைக்
கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பிற்
கால்கிளர்ந் தன்ன வேழம் மேல் கொண்(டு)
தெளிவுரை : கோட்டின் கூரிய நுனியில் தோன்றி அத்தழும்பு வாழும் வரியுடைத்தாகிய
நெற்றியையும், பொன்னரி மாலையானது பட்டத்துடனே அசைய, ஓசையுடையவனாகிய மணிகள்
ஆரவாரிக்கின்ற பக்கத்தையும் கடிய நடையையும் உடைய கூற்றுவனை ஒத்த மாற்றுவதற்குரிய
வலியையும் உடையதாய்க் காற்றுக் கிளர்ந்தாலொத்த ஆனையின் மேல் ஏறியருளி;
ஐவே(று) உருவில் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி
மின்னுறழ் இமைப்பில் சென்னிப் பொற்ப
நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை
சேண்விலங்(கு) இயற்கை வான்மதி கவை(இ)
அகலா மீனின் அவிர்வன இமைப்பத்
தாவில் கொள்கைத் தந்தொழில் முடிமார்
மனனேர்(பு) எழுதரு வாணிற முகனே
தெளிவுரை : ஐந்து வேறு வகைப்பட்ட வடிவிலும் செய்தொழில் முற்றுப்பெற்ற மகுடத்துடன்
விளங்கிய விளக்கம் பெற்ற மாறுபாடு, மிக்க அழகிய மாணிக்கங்கள் மின்னை ஒத்த
விளக்கத்துடன் திருமுடியில் நின்று அழகு செய்ய, மணியொளி தங்கி மிக்கு அசைகின்ற
கூறுபாடு மிக்க பொன்னால் செய்த மகரக் குழையானது அதி தூரத்தைக் கடந்து
விளங்குகின்ற இயல்பையுடைய ஒளி பொருந்திய சந்திரனைப் பொருந்தி அகலாது நின்ற வான்
மீன்களை ஒப்பப் பாடம் செய்து விளங்குகிற குற்றமில்லாத கோட்பாட்டினை உடைய தமது
தவத் தொழிலை முடிக்கிற பெரியோருடைய மனத்தில் அழகியதாக உதித்துத் தோன்றுகிற ஒளி
நிறமுடைய திருமுக மண்டலங்களில்,
மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன்(று) ஒருமுகம் ஒருமுகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி(து) ஒழுகிக்
காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே ஒருமுகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வியோர்க் கும்மே ஒருமுகம்
தெளிவுரை : மிகவும் பெரிய பூமி குற்றமின்றி விளங்கப் பல ஒளிகளுமாக விளங்குமாறு
நின்றது ஒரு திருமுக மண்டலம். ஒரு முகமானது ஒரு பொருள் மேல் ஆசைப்பட்டார் வாழ்த்த
விரும்பி இனிதாகச் சென்று அன்பினால் மகிழ்ந்து அவர் வேண்டின வரங்களைக்
கொடுத்தருளியது; ஒரு முகமானது மந்திரங்கள் விதிக்கப்பட்ட வேத விதியால் மரபு
வழுவாத பிராமணர்களுடைய யாகத்தைத் திருவுளம் பற்றி அருளியது.
எஞ்சிய பொருளை ஏமுற நாடித்
திங்கள் போலத் திசைவிளக் கும்மே ஒருமுகம்
செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்
கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே ஒருமுகம்
குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே ஆங்(கு)அம்
மூவிரு முகனும் முறைநவின்(று) ஒழுகலின்
தெளிவுரை : ஒரு முகமானது வேதங்களில் மறைந்த பொருள்களைத் தெய்வ இருடிகள் இன்புறும்
வண்ணம் விசாரித்துப் பூரண சந்திரன் போலத் திக்கெல்லாம் விளக்கி நின்றது, ஒரு
முகமானது, முன்புள்ள பகைவர்களை மாய்த்து இப்பொழுதுள்ள பூசலையும் கெடுத்து மேலும்
பொருவாருண்டோ என்று கறுவின திருவுளத்தோடு போர்க்களத்தை விரும்பி நின்றது; ஒரு
முகமானது, குறவருடைய மெல்லிய மகளாகிய கொடி போன்ற இடையினை உடைய மடப்பத்தை
வேலியாகக் கொண்ட வள்ளி நாச்சியாருடனே திருமுறுவல் செய்து மிளிர்கின்றது.
அத்தொழில்களில் அந்த ஆறு திரு மண்டலங்களும் முறைமையிற் சொன்னபடியே நடத்தலினால்,
ஆரந் தாழ்ந்த அம்பகட்டு மார்பில்
செம்பொறி வாங்கிய மொய்ம்பிற் சுடர்விடுபு
வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்
விண்செலல் மரபின் ஐயர்க்(கு) ஏந்திய(து) ஒருகை
உக்கம் சேர்த்திய(து) ஒருகை
நலம்பெறு கலிங்கத்து குறங்கின்மிசை அசைஇய(து) ஒருகை
அங்குசம் கடாவ ஒருகை இருகை
ஐயிரு வட்டமொ(டு) எஃகுவலந் திரிப்ப ஒருகை
தெளிவுரை : முத்து வடம் தாழ்ந்த அழகிய பெரிய மார்பில் அழகிய கரும்பும் கொடியுமாக
எழுதப்பட்ட வலியுடைய ஒளிவிட்டு வளவிய புகழை நிறைய உடைத்தாய் வசிகரணம் உண்டாக
வளைப்பட்டு நிமிர்ந்த தோள்களில், திருப்புயங்களைச் சொல்லப் புகுகின்றார்.
ஆகாயத்தில் செல்லுகிற இயல்பினையுடைய தெய்வ இருடிகளுக்கு அபயத்தம் கொடுத்தது ஒரு
கை; ஒரு கை திருங்குலைச் சேர்த்து அருளியது. (இரண்டு கையும் முதல் முகத்துக்கு
ஏற்ற கைகள்). நன்மை பெற்ற திருவுடையால் சிறந்த திருத்தொடையின்மேல் அசைத்தருளியது
ஒரு கை. தோட்டியால் யானையைக் கடாவி அருளி நின்றது ஒரு கை (இவை இரண்டாவது
முகத்திற்கு ஏற்ற கைகள்)
இரண்டு கைகள் அழகிய பெரிய கேடகத்தோடு வாளையும் வெற்றியுண்டாக நின்றன. (இவை
மூன்றாவது முகத்திற்கு ஏற்ற கைகள்)
மார்பொடு விளங்க ஒருகை
தாரொடு பொலிய ஒருகை
கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப ஒருகை
பாடின் படுமணி இரட்ட ஒருகை
நீனிற விசும்பின் மலிதுளி பொழிய ஒருகை
வானர மகளிர்க்கு வதுவை சூட்ட ஆங்கப்
பன்னிரு கையும் பாற்பட இயற்றி
தெளிவுரை : ஒரு கை, திருமார்பில் யோக முத்திரையைக் கொடுத்து நின்றது. ஒரு கை
திருமாலையைத் திருத்தியது. (இவை இரண்டும் நான்காவது முகத்திற்கு ஏற்ற கைகள்) ஒரு
கை பாதாள லோகத்தில் விழுகின்ற பருவளையை எடுத்து மேன்மேல் சுற்றுகின்றது. ஒரு கை
திருவரையில் சுற்றின மணிகளை அசைக்கின்றது. (இவை இரண்டும் ஐந்தாவது முகத்திற்கு
ஏற்ற கைகள்). ஒரு கை நீல நிறமுடைத்தாகிய ஆகாயத்தில் மிக்க மழையைப்
பொழிவிக்கின்றது, ஒரு கை தெய்வயானை யாருக்குத் திருமண மாலையைச் சூட்டி அருளியது.
(இவை இரண்டும் ஆறாவது முகத்திற்கு ஏற்ற கைகள்)
ஆங்கு அசை. அந்தப் பன்னிரண்டு கைகளையும் முறைமையில் திருமுக மண்டலங்களுக்குச்
சொன்ன படியில் செலுத்தி,
அந்தரப் பல்லியங் கறங்கத் திண்காழ்
வயிரெழுந் திசைப்ப வால்வளை நரல
உரம்தலைக் கொண்ட உரும்இடி முரசமொடு
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ
விசும்பா றாக விரைசெலல் முன்னி
உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே அதாஅன்று
தெளிவுரை : ஆகாயத்தில் பல தெய்வ துந்துபிகளும் நின்று முழங்கித் திண்ணிய கருங்
கொம்புகள் மிகவும் ஆரவாரிக்க, வெள்ளிய சங்குகள் முழங்க வலிமையைத் தன்னிடத்தே
கொண்ட உருமேற்றை ஒத்து முழங்கிய வீர முரசோடு பலவரிகளை யுடைய மயிலின் வெற்றிக்
கொடியைப் பொருந்த எடுத்து ஆரவாரிக்க ஆகாயமே வழியாக விரைந்து வருவதாகத்
திருவுள்ளத்து அடைந்தருளி உயர்ந்தோரால் புகழப்பட்ட மிகவும் உயர்ந்த விழுமிய
சீர்மைப் பாட்டினையுடைய திருஅலைவாயில் எழுந்தருளி வந்தது தொடங்கி நிலை நின்று
வாழ்கிற பண்பினையுடையவன் அங்கேறிச் செல்க. அங்கன்றாயின் நம் பிள்ளையாரைக்
காணலாமிடம் சொல்லப் புகுகின்றார்.
-
திருஆவினன்குடி
சீரை தைஇய உடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வானரை முடியினர்
மாசற இமைக்கும் உருவினர் மானின்
உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்பெழுந்(து) இயங்கும் யாக்கையர் நன்பகல்
பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம் பாகிய தலைமையர் காமமொடு
கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை
யாவதும் அறியா இயல்பினர் மேவரத்
துனியில் காட்சி முனிவர் முற்புகப்
தெளிவுரை : மரவுரியைப் பொருந்தின உடையாக உடையவர்களும் சிறப்புடனே வலம்புரிச்
சங்கை யொத்த வெள்ளிய நரை முடியை யுடையவர்களும் குற்றமற விளங்குகிற வடிவை
உடையவர்களும், மான் தோல் பொருந்தின, பட்டினியால் ஊன் சென்றதால் எலும்புடனே
ஒடுங்கின மார்பை உடையவர்களும் எலும்புச் சட்டை மேல் எழுந்து உலாவுகின்றாற் போல
இருக்கிற உடம்பினை உடையவர்களும் மாற் சரியத்தையும் கோபத்தையும் விட்ட மனத்தினை
யுடையவர்களும், எல்லா நூல்களையும் கற்று வல்லோராலும் அறியப்படாத அறிவை உடையவர்
களும் பல கலைகளையும் கற்றோர்க்குத் தாங்கள் எல்லையாய் இருக்கிற தலைமையானவர்களும்
ஒரு பொருள் மேலே விரும்புதலும் வேறுபடுதலும் அற்ற அறிவினை யுடையவர்களும்
கிலேசத்தைச் சிறிதும் அறியாத இயல்பினை யுடையவர்களும் ஆகிய திருவுள்ளத்துக்குப்
பொருந்த வெறுப்பற்ற அறிவினையுடைய இருடிகள் முன்னே செல்ல, (அவர் பின்னாக)
புகைமுகத் தன்ன மாசில் தூவுடை
முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச்
செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின்
நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேவலர் இன்னரம் புளர
தெளிவுரை : புகையைக் கையினால் முகந்தாற்போல மென்மையாய் இருக்கும் குற்றமற்று
விளங்குகிற உடையையும், அரும்புகள் வாய் அவிழ்ந்து விரிந்த அழகிய மாலையை யணிந்த
மார்பினையும் செவியால் அளந்து செய்யப்பட்ட வார்க்கட்டையுடைய நல்ல யாழைச் சேவித்த
இனிமையுடைய மனத்தையும் உடைய மென்மையான சொற்களைப் பொருந்திய கந்தருவர் இனிய யாழ்
நரம்பை வாசித்துக் கொண்டு செல்ல, அவருடனே,
நோயின் றியன்ற யாக்கையர் மாவின்
அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்
பொன்னுரை கடுக்கும் திதலையர் இன்னகைப்
பருமம் தாங்கிய பணிந்தேந்(து) அல்குல்
மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்கக்
தெளிவுரை : நோயின் இயன்ற உடம்பினை யுடையவர்களும் மாவினுடைய விளங்குகின்ற தளிரை
யொத்த நிறத்தினை உடையவர்களும் விளங்குந்தோறும் பொன்னை உரைத்தால் ஒத்த அழகிய தேமலை
உடையவர்களும் இனிய முறுவலையும் அரையாபரணம் தரிக்கப்பட்ட தாழ்ந்து பக்கம் உயர்ந்த
அல்குலையும் உடையவர்களுமாகிய குற்றமில்லாத கந்தர்வ மகளிருடனே குற்றமின்றி விளங்க,
அதன்பின்,
கடுவோ(டு) ஒடுங்கிய தூம்புடை வாலெயிற்(று)
அழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப்
புள்ளணி நீள்கொடிச் செல்வனும் வெள்ளேறு
வலவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்
உமைஅமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்
நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல்
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்(து)
ஈரிரண்(டு) ஏந்திய மருப்பின் எழில்நடைத்
தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்
தெளிவுரை : நஞ்சோடு இணங்கின உள்ளே வெளியுடைத்தாகிய வெள்ளிய எயிற்றையும் (பல்)
நெருப்புப் போல மூச்சு விடுகிற கண்டார் அஞ்சத்தக்க கடிய கோபத்தையும் உடைய
பாம்பையும் படும்படி புடைக்கிற பலவரிகளையும் வளைந்த சிறகையும் உடைய கருடாழ்வாரை
அழகிய கொடியாகவுடைய நாராயணனும், வெள்ளை இடபத்தை வலப்பக்கத்தே கொடியாக எடுத்த
பலராலும் புகழப்பட்ட திருப்புயங்களையும் தம்பிராட்டியை விரும்பி விளங்குகிற
இமையாத மூன்று நயனங்களையும் உடைய திரிபுரங்களை அழித்த வலிமை மிக்க செல்வனாகிய
மகாதேவனும், ஆயிரங் கண்களையும் நூறுபல பத்தாயிரம் வேள்வி செய்து கொல்லுகிற
எயிற்றையும் நன்கு ஏந்தப்பட்ட கொம்புகளையும் அழகிய நடையையும் நீண்ட பெரிய
கையினையும் உடைய யானையின் கழுத்தில் ஏறியிருந்த அழகு மிக்க தேவேந்திரனும்
நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய
உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ் மூவரும் தலைவ ராக
ஏமுறு ஞாலந் தன்னில் தோன்றித்
தாமரை பயந்த தாவில் ஊழி
நான்முக ஒருவற் சுட்டிக் காண்வரப்
பகலில் தோன்றும் இகலில் காட்சி
நால்வே(று) இயற்கைப் பதினொரு மூவரோ(டு)
ஒன்பதிற்(று) இரட்டி உயர்நிலை பெறீஇயர்
மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு
வளிகிளர்ந் தன்ன செலவினர் வளியிடைத்
தீஎழுந் தன்ன திறலினர் தீப்பட
உருமிடித் தன்ன குரலினர் விழுமிய
உறுகுறை மருங்கில்தம் பெருமுறை கொண்மார்
தெளிவுரை : அந்தணர் பூதம், அரசர் பூதம், வணிகர் பூதம், வேளாளர் பூதம் என்று
நான்கு பெரிய தெய்வங்களையும் உடைய நல்ல கோபுரங்கள் நிலை பெற்ற இந்த உலகத்தைக்
காக்கின்ற உண்மை ஒன்றினையே விரும்பிய கோட்பாட்டினால் நாராயணனும் மகாதேவரும்
தேவேந்திரனும் தலைவர்களாக வேண்டி, ÷க்ஷமமுற்ற பூமியில் வந்து தோன்றித்
திருமால் திருநாபிக் கமலத்தில் பிறந்த கேடு இல்லாத ஊழிக்காலத்தையுடைய நான்கு
முகங்களை யுடைய பிரமாவைச் சுட்டிப் பிள்ளையாரைக் காண வருவதாக ஆதித்தனைப் போலத்
தோன்றுகிற வெறுப்பற்ற அறிவினை யுடையவர் நாலு வேறுபட்ட இயல்பினையுடைய பன்னிரு
ஆதித்தியரும், பதினொரு உருத்திரமும், அட்டவசுக்களும், மருத்துவர் இருவரும், ஆகிய
முப்பத்து மூவருடனே பதினெட்டு வகையினாலும் உயர்ந்த நிலையைப் பெற்றவர்களும் ஆகிய
பதினெண் கணங்களும், விண்மீனால் பொலிவு பெற்றால் ஒத்த தோற்றத்தையுடைவர்களாயும்
மீனுடனே காற்றுக் கலந்தாலொத்த கூடிய நடையினை யுடையவர்களாயும், காற்றிடத்தே
நெருப்புப் பிறந்தாலொத்த வலியை உடையவர்களாயும், நெருப்புப் பிறப்ப இடி எறிந்தால்
ஒத்த குரலை உடையவர்களாயும், சீரிய தாங்கள் வந்து உறைகிற இடத்தே தாங்கள் பெறற்கு
உரியவற்றைக் கடலமுதம் போலப் பெறுவதற்காக,
அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத்
தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள்
ஆவி னன்குடி அசைதலும் உரியன் அதாஅன்று
தெளிவுரை : ஆகாயத்தில் சுழலுகின்ற தேவர்கள் வந்தபொழுதே காணும்படி குற்றமில்லாத
கோட்பாட்டையுடைய வள்ளி நாச்சியாருடனே எந்நாளும் செவ்வியனாய்த் திருஆவினன்குடியில்
இருக்கவும் உரியன். (சின்-அசை) அங்குச் செல்க. அதன் பின்னர் இன்னும் முருகப்
பெருமானைக் காணும் இடம் சொல்லப் புகுகின்றார்.
அதாஅன்று - இனி மேலும் சொல்லுகிறேன் என்றவாறு.
-
திருவேரகம்
இருமூன்(று) எய்திய இயல்பினின் வழாஅ(து)
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்(கு) இரட்டி இளமை நல்லியாண்(டு)
ஆறினிற் கழிப்பிய அறனவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்(து)
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
தெளிவுரை : ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், இரத்தல் என்ற ஆறு
இயல்பையும் பொருந்திய முறையில் வழுவாமல் மாதாவின் கோத்திரமும் பிதாவின்
கோத்திரமும் நன்றென்று மதிக்கப்பட்ட பலவாய் வேறுபட்ட பழைய குடியின் கண் பிறந்த
நாற்பத்தெட்டு ஆண்டாகிய நல்ல இளமைக் காலத்தைப் பிரமசரிய நெறியில் கழித்துத்
தருமத்தில் செல்லுகிற கோட்பாட்டையுடைய மூன்று வகையால் குறிக்கப்பட்ட மூன்று
தீமையும் செல்வமாக வுடைய இரண்டு பிறப்பான உபநயனம் பண்ணுதற்கு முன்பே ஒரு
பிறப்பும், உபநயனம் பண்ணின பின் ஒரு பிறப்பும் ஆகிய இரண்டு பிறப்பினையும் உடைய
பிராமணர் முக்காலமும் அறிந்து தோத்திரம் செய்ய, முச்செல்வம் - மூத்தீயோடு நித்திய
ஓமம் பண்ணும் செல்வம்.
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்(து)
ஆறெழுத்(து) அடக்கிய அருமறைக் கேள்வி
நாவியல் மருங்கின் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுவந்(து)
ஏரகத்(து) உறைதலும் உரியன் அதாஅன்று.
தெளிவுரை : அந்தப் பிராமணர்கள் ஒன்பது வடம் கொண்டு முறுக்கின மூன்று புரியாகிய
நுண்ணிய பூணு நூலைத் தரித்தவராய் நீரில் முழுகின படியினால் ஈரம் புலராத கழாயத்தை
வேள்வித் தீயால் உலரும்படி உடுத்துச் சிரசிற் குவத்த கையை உடையவர்களாய் முருகப்
பெருமானைப் புகழ்ந்து அவருடைய திருமந்திரமாகிய ஆறெழுத்துக்களையும் அடக்கின அரிய
வேதக் கேள்வியினை நாவால் இயன்ற விடத்தை ஆரவாரிக்கும்படி பாடி நறுநாற்ற மிக்க நல்ல
மலர்களை ஏந்தி வணங்கி நிற்க, அவர்கள் வணங்கு கைக்குப் பெருகவும் திருவுள்ளம்
விரும்பியருளித் திருஏரகம் என்ற திருப்படை வீட்டில் வாழ்தற்கும் உரியன். அங்கே
செல்க; அடுத்த படியாக முருகப் பெருமானைக் காணும் இடம் சொல்லப் புகுகின்றார்.
-
குன்றுதோறாடல்
பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன்
அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு
வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன்
நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பில்
தெளிவுரை : பச்சென்ற வெற்றிலைக் கொடியையும் நல்ல பழுக்காயையும் இடை இடையே
யிட்டுப் படிமத்தோன் அழகிதாகத் தழைத்த சாதிக்காய் புட்டிலையும் குளவிப் பூவுடனே
கலந்து வெள்ளிய கூதளம் பூவையும் இடை இடையே தொடுத்த தலைமாலையை உடையவனாயும் நல்ல
சந்தனத்தைப் பூசின நிறங் கிளர்ந்த மார்பினையுடைய வனாயும்; படிமத்தோன் - பூசாரி;
குளவி - காட்டு மல்லிகை.
கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர்
நீடமை விளைந்த தேக்கள் தேறல்
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர
தெளிவுரை : கொடிய தொழிலைச் செய்கின்ற வலிய வில்லினால் கொலைத் தொழிலைத் தமக்கு
இயல்பாகவுடைய குறவர் நீண்ட மூங்கிலில் விளைந்த இனிய கள்ளின் தெளிவை மலையிடத்தில்
சிற்றூர்களில் தங்கள் உறவின் முறையார்களுடனே குடித்து மகிழ்ந்து தொண்டக மென்னும்
பெயரையுடைய சிறு பறையைக் கொட்டிக் குரவைக் கூத்தை யாடுவதாக,
(உயர்ந்த மூங்கிலில் கட்டின தேனை யழித்து என்று கொள்க)
விரல்உளர்ப்(பு) அவிழ்ந்த வேறுபடு நறுங்கால்
குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி
இணைத்த கோதை அணைத்த கூந்தல்
முடித்த குல்லை இலையுடைய நறும்பூச்
செங்கால் மராஅத்த வாலிணர் இடையிடுபு
சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை
திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ
மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு
தெளிவுரை : விரலை யொத்த விரிந்த வேறுபட்ட நறுநாற்றமுடைய ஆழ்ந்த சுனையில் பூத்த
நீலப் பூவால் தொடுத்த வண்டுகள் வந்து படிகிற மாலையையும் இதர மலர்களால் கட்டிய
மாலையையும் செருகப் பெற்ற மயிரையும் உடையவராய் முடித்தாற் போன்ற கஞ்சங்
குல்லையினையும் முடித்த பச்சிலையுடனே நறுநாற்றம் உடைத்தாகிய பூவையும் சிவந்த
தாளினை உடைத்தாகிய கடம்பினது வெள்ளிக் கொத்துக்களையும் இடையில் இட்டு வண்டுச்
சாதிகள் மதுவுண்ணும்படி தொடுக்கப்பட்ட மிகவும் குளிர்ந்து நிறைந்த தழையைத்
திருந்திய மேகலாபரணம் அணிந்த அல்குலில் அலைய வுடுத்து மயிலைக் கண்டால் ஒத்த சாயலை
யுடைய மடப்பத்தாற் சிறந்த மகளிருடனே,
செய்யன் சிவந்த ஆடையன் செல்வரைச்
செயலைத் தண்தளிர் துயல்வருங் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்
தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங்
கொடியன் நெடியன் தொடியணி தோளன்
தரம்பார்த் தன்ன இன்குரல் தொழுதியொடு
குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்
மருங்கிற் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்
தெளிவுரை : சிவந்த நிறமுடையவனும் சிவந்த பரிவட்ட மென்னும் ஆடை அணிந்தவனும்
செவ்விய மலையில் தளிர்த்த அசோகினது குளிர்ந்த களிர் அசைகின்ற காதினை உடையவனும்,
பூங்கச்சை உடுத்தவனும் வீரக் கழலை உடையவனும், வெட்சி மாலை அணிந்தவனும்,
வேய்ங்குழலை ஊதுகின்றவனும், குறிக்கப்பட்ட கருங்கொம்பினையுடையவனும், சிறிய பலவான
வாச்சியங்களை உடையவனும், கைக்கிடாயை யுடையவனும், மயிலை உடையவனும், குற்றமில்லாத
சேவலங் கொடியை உடையவனும், எல்லாரிலும் நெரியவனும், வாகுவலயம் செறிந்த தோள்களை
உடையவனும், யாழ் ஆரவாரித்தால் ஒத்த கந்தருவ மகளிர் திரளுடனே மார்பில் சந்தனம்
குங்குமங்களால் நுண்ணிய வரியாக எழுதப்பட்ட நறு நாற்றமும் தட்பமும் உடைத்தாகிய
திருமேனியை உடையவனும், இடையில் கட்டின நிலத்திற் பொருந்திய திருவுடை ஆடையை
யுடையவனும் ஆகி,
முழுவுறழ் தடக்கையின் இயல ஏந்தி
மென்தோள் பல்பிணை தழீஇத் தலைத்தந்து
குன்றுதோ றாடலும் நின்றதன் பண்பே அதாஅன்று
தெளிவுரை : குடமுழாவை யொத்த பெரிய தடக்கையில் மாற்சரியம் உடைய பெரிய வேலை எடுத்து
மெல்லிய தோள்களை உடையராய் நோக்கத்தால் பலவாகிய மான் பிணைகளைப் போன்ற தீண்டி
விளையாடற்குரிய தெய்வப் பெண்களைத் தழுவிக் கொண்டு அவர்களுடன் தானும் ஒரு தலையிலே
கைகோத்து மலையிடங்கள் தோறும் ஆடுகின்ற குரவைக் கூத்தில் நிலை நின்று வந்த
பண்புடையவன்! அங்கே செல்க! அதுவன்றி மேலும் முருகப் பெருமானைக் காணும் இடம்
சொல்லப் புகுகின்றார்.
-
பழமுதிர்சோலை
சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்
வேலன் தைஇய வெறிஅயர் களனும்
காடும் காவும் கவின்பெறு துருத்தியும்
யாறும் குளனும் வேறுபல் வைப்பும்
சதுக்கமும் சந்தியும் புதுப்பூம் கடம்பும்
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்
தெளிவுரை : சிறிய தினையையும் பூவையும் கலந்து இடப்பட்ட வெள்ளாட்டுக் கிடாயை
அறுத்து கோழிக் கொடியுடனே தான் உண்டாகும் வண்ணம் இடம் வாய்க்க நிறுத்திக் குறவர்
இருக்கும் ஊர் தோறும் எடுத்த சிறப்புப் பொருந்திய திருநாள் கொண்ட இடங்களிலும்,
தன்மேல் அன்பு கொண்ட அடியார்கள் துதிக்கத்தான் விரும்பி வீற்றிருக்கின்ற
இடத்திலும் படிமத்தான் படிமைத் தொழிலினால் அழகியதாக அலங்கரிக்கப்பட்ட வெறியாட்டக்
களத்திலும், காடுகளிலும், சோலைகளிலும், அழகு பெற்ற ஆற்றிடைக் குறைகளிலும்,
ஆறுகளிலும், குளங்களிலும் பலவேறு வகைப்பட்ட ஊர்களிலும், நாற்சந்தி கூடின
இடங்களிலும், முச்சந்தி கூடின இடங்களிலும், புதிதாகப் பூத்த திருக்கடம்பிலும்,
ஊர் அம்பலங்களிலும், புறத்திண்ணை மரத்திலும், கம்பம் உடைத்தாகிய ஆலைக்
கொட்டில்களிலும்,
மாண்டலைக் கொடியொடு மண்ணி அமைவர
நெய்யோ(டு) ஐயவி அப்பி ஐதுரைத்துக்
குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி
முரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇச்
செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி
மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக்
குருதியொடு விரைஇய தூவெள் அரிசி
சில்பலிச் செய்து பல்பிரப் பிரீஇச்
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப்
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துணையுற அறுத்துத் தூங்க நாற்றி
தெளிவுரை : மாட்சிமையும் தலைமையும் உடைய கோழிக் கொடியுடன் மயிலையும்
அலங்கரித்துக் கையிலேந்தி, நெய்யையும் கடுகையும் கலந்து உண்டை பண்ணிப்
பேய்கட்குப் பலியாக அப்பி அழகிய மூலமந்திரம் உச்சரித்துக் கையெடுத்துக்
கும்பிட்டு வளவிய பூக்களைச் சிதறி மாறுபாடு மிக்க வடிவினையுடைய நீலமும்
சிவப்புமாகிய இரண்டு உடைகளையும் தரித்துச் சிவந்த வல்லிக் கயிற்றைக் கட்டி
வெள்ளிய பொரிகளை இறைத்துச் செருக்கும் வலிவும் நிலைபெற்ற பெரிய காலினை
உடைத்தாய்க் கொழுத்த செம்மறிக் கிடாயின் உதிரத்தோடே கலந்து தூயதாகிய வெள்ளிய
அரிசியினைச் சிறு பலியாக இட்டுப் பல பிரம்புகளையும் வைத்து மலைச்சிறு பசு
மஞ்சளுடனே நறுமணமுடைய பலவிதைகளையும் தெளித்து மிகவும் குளிர்ந்த அலரிப்பூவால்
தொடுத்த நறுநாற்றமுடைய மாலையை இணையொக்க மட்டம் செய்து அசையும்படி பூங்கோயிலாக
தூக்கி,
நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி
இமிழிசை அருவியோ(டு) இன்னியம் கறங்க
உருவப் பல்பூத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்திணை பரப்பிக் குறமகள்
முருகியம் நிறுத்து முரணினர் உட்க
முருகாற்றுப் படுத்த உருகெழு வியனகர்
தெளிவுரை : குளிர்ச்சியாகிய பக்க வரைகளையுடைய மலையின்கண் உள்ள முருகப் பெருமான்
வீற்றிருக்கும் நகரங்களை வாழ்க என வாழ்த்தி நல்ல மணமுள்ள சீதாரிப் புகைகளையும்
எடுத்து மலைநிலத்துக்குரிய குறிஞ்சி யென்னும் பண்ணையும் பாடி இம்மென்ற மிக்க
ஆரவாரத்தால் சிறந்த அருவியுடன் இனிய பல வாத்தியங்களும் முழங்க அழகிய பூக்களை
எங்கும் தூவிக் கண்டார். அஞ்சும்படி உதிரத்தை யொத்த சிவந்த தினையையும் பரப்பிக்
குறத்தியானவள் முருகை மேல் நிறுத்திய முருகப் பெருமானை மெய்யிலே ஏற்றிக் கொண்டு
பகைவர்கள் பயப்படும்படி முருகனை வழிப்பட்ட அழகு பொருந்திய பெரிய நகரியில்;
ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன்
கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங்(கு) எய்தினர் வழிபட
ஆண்டாண்(டு) உறைதலும் அறிந்த வாறே
தெளிவுரை : வெறியாட்டுக் களத்தின் எதிரே ஆரவாரிக்கும்படி முருகனைப் பாடி பலரும்
உடனே கருங்கொம்பை வாயிலே வைத்து ஊதி வட்ட மணிகளையும் எப்பொழுதும் மேற்கோளையுடைய
மயிற் கொடியை வாழ்த்தி வேண்டிய பொருள்களை வேண்டியபடியே பெறுபவர்கள் வழிபாடு
செய்ய, விழாவிடம் முதல் நகர் ஈறாகச் சொல்லப்பட்ட அவ்விடங்களில் தங்குதற்கும்
உரியவன். யான் அறிந்த படியே கூறினேன்.
ஆண்டாண் டாயினும் ஆக காண்டக
முந்துநீ கண்டுழி முகனமர்ந்(து) ஏத்திக்
கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி
நெடும்பெரும் சிமயத்து நீலப் பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறமர் செல்வ
ஆல்கெழு கடவுள் புதல்வ மால்வரை
மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ
இழையணி சிறப்பிற் பழையோள் குழவி
வானோர் வணங்குவில் தானைத் தலைவ
தெளிவுரை : அந்தந்த இடங்களில் ஆகிலும் பிற இடங்களிலும் ஆகிலும் நீ காணத் தகும்;
முற்பட நீ கண்ட பொழுது முகமலர்ந்து வாழ்த்திக் கைகளால் தொழுது புகழ்ந்து சீர்
பாதங்களைப் பொருந்தும்படி தெண்டனிட்டு மிகவும் பெரிய மாமேருவின் உச்சியில் நீல
நிறமுடைய அழகிய சுனையில் ஐவருள் ஒருவனான அக்கினி தேவன் அவன்தன் கையால் ஏற்பக்
கார்த்திகை மாதர் அறுவரானும் வளர்க்கப்பட்ட முறையை விரும்பின செல்வனே! ஆலின்
கீழிருந்து அறமுரைத்த மகாதேவருடைய புத்திரனாய் உள்ளவனே! பகைவர்களுக்குக்
கூற்றுவனாய் உள்ளவனே! வெற்றி செய்து கொல்லுகிற போரைச் செய்யும் வீர
துர்க்கைக்குப் பிள்ளையாய் உள்ளவனே! ஆபரணம் அணிந்த சிறப்பினையுடைய எல்லாருக்கும்
மூத்தாளாகிய காடு இழாளுக்குப் பிள்ளையாய் உள்ளவனே! தேவர்கள் வணங்குகின்ற
விற்படைக்குத் தலைவனாய் உள்ளவனே!
மாலை மார்ப நூலறி புலவ
செருவில் ஒருவ பொருவிறல் மள்ள
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை
மங்கையர் கணவ மைந்தர் ஏறே
வேல்கெழு தடக்கைச் சால்பெரும் செல்வ
குன்றங் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ
தெளிவுரை : மாலையணிந்த மார்பினை உடையவனே! நூல்களைக் கற்றறிந்த அறிவினை யுடையவனே!
பூசலுக்கு ஒப்பில்லாதவனே! மிக்க வெற்றியை யுடைய வீரனே! பிராமணருக்குப் பொருளாய்
உள்ளவனே! அறிந்தோர்க்கு எல்லாம் சொன்மாலையாய் உள்ளவனே! வள்ளி நாச்சியாருக்கும்
தெய்வயானை நாச்சியாருக்கும் கணவனாய் உள்ளவனே! இளையோராய் உள்ளவர்க்கு எல்லாம்
இடபத்தை ஒப்பானவனே! வேலைப் பொருந்தின பெரிய திருக்கையை யுடைய பெருஞ் செல்வனே!
கிரவுஞ்சமென்னும் மலையை எறிந்த குறையாத வெற்றியினை உடையவனே! விண்ணில் பொருந்திய
நெடிய மூங்கிலை
பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே
அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக
நசையினர்க்(கு) ஆர்த்தும் இசைபே ராள
அலந்தோர்க்(கு) அளிக்கும் பொலம்பூட் சேஎய்
வண்டமர் கடந்தநின் வென்றா(டு) அகலத்துப்
பரிசிலர்த் தாங்கும உருகெழு நெடுவேள்
பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்
சூர்மருங்(கு) அறுத்த மொய்ம்பின் மதவலி
போர்மிகு நொருந குரிசில் எனப்பல
தெளிவுரை : எல்லாச் சமயத்தாரும் புகழ்கின்ற நன்மையான மொழியறிவை அறிந்த புலவர்
என்னும் யானைகளுக்குச் சிங்கம் போன்ற முதன்மை யுடையோனே! அருமையாகப் பெறுதற்குரிய
முறையை உடைய பெரும் பொருளாயுள்ள முருகனே! விரும்பினவர்க்கு இன்பத்தை
நுகர்விக்கின்ற புகழமைந்த பெயரை ஆள்பவனே! பிறரால் இடுக்கண் பட்டு வந்தோர்க்கு
அவர்கள் துன்பம் தீரும்படி வரங்கொடுக்கும் பொன்னணியணிந்த சேயே! நெருங்கிய
அமர்க்களத்தில் பகைவர்களை வென்ற நினது வெற்றி விளங்குகின்ற மார்பினை உடையவனே!
இரப்போரைப் பாதுகாக்கின்ற அழகு பொருந்திய நெடியவேளே! சான்றோர்கள் துதிக்கின்ற
மிகவும் பெரிய பெயரையுடைய கடவுளே! சூரனை வழியுடன் அறுத்த தோளினது மிக்க வலிமையை
உடையவனே! போர் மிக்க வீரருக்குத் தலைவனாய் உள்ளவனே! என்று பலவும்,
யான்அறி அளவையின் ஏத்தி ஆனாது
யுடைய குறிஞ்சி நிலத்துத் தலைவனே!
நின்னளந்(து) அறிதல் மன்னுயிர்க்(கு) அருமையின்
நின்னடி உள்ளி வந்தனன் நின்னொடு
புரைகுநர் இல்லாப் புலமை யோய்எனக்
குறித்தது மொழியா அளவையில் குறித்துடன்
தெளிவுரை : நான் அறிந்து கூறிய அளவில் நீயும் புகழ்ந்து கூறி அவ்வளவில் அமையாமல்
மேலும் உன்னுடைய புகழை முற்ற அளந்து அறியுமது நிலை பெற்ற பல உயிர்கட்கும்
அரிதாகையினால் உன்னுடைய சீர் பாதங்களை யடைய வேண்டுமென்று நினைத்து வந்தேன்.
உன்னோடு ஒப்பாவோர் இல்லாத மெய்யறிவை உடையவனே! என்று புகழ்ந்து நீ கருதிச் சென்ற
பொருளினை விண்ணப்பம் செய்வதற்கு முன்னே,
வேறுபல் உருவில் குறும்பல் கூளியர்
சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி
அளியன் தானே முதுவாய் இரவலன்
வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்தென
இனியவும் நல்லவும் நனிபல ஏத்தித்
தெய்வம் சான்ற திறல்விளங்கு உருவின்
வான்தோய் நிவப்பின் தான்வந்(து) எய்தி
அணங்குசால் உயர்நிலை தழீஇப் பண்டைத்தன்
மணங்கமழ் தெய்வத்(து) இளநலங் காட்டி
தெளிவுரை : நீ நினைந்து வந்ததைத் தானே திருவுள்ளம் பற்றியருளி அப்பொழுதே
இளமையுடையோராய்ப் பலராக முருகப் பெருமானைச் சேவித்து நிற்போர் திருநாள் கொண்ட
இடத்திலே அழகு பெறத்தோன்றி அளிசெய்யத் தக்கான் தானே கற்றுவல்ல வாயையுடைய பரிசில்
பெறத்தக்க இரப்போன் வந்துள்ளான் பெருமானே, நினது வளவிய புகழைக் கூற விரும்பி,
கேட்டோர்க்கு இனிமை பயப்பனவும் நன்மை பயப்பனவுமாக மிகவும் பலபடப் புகழ்ந்து,
என்று கூறிய அப்பொழுதே நனிபல ஏத்தி என என்று கூட்டுக.
அஞ்சல் ஓம்புமதி அறிவல்நின் வரவென
அன்புடை நன்மொழி அளைஇ விளிவின்(று)
இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்(து)
ஒருநீ யாகத் தோன்ற விழுமிய
தெளிவுரை : தெய்வத் தன்மை மிக்க வலிமை விளங்கும் வடிவையும் விண்ணில் தோய்கின்ற
உயர்ச்சியை யுடைய தான் (முருகப்பெருமான் காணும் படி சாறு அயர் களத்தை) வந்து
சேர்ந்து, தெய்வத் தன்மை சான்ற தனது உயர்ந்த தன்மையை உள்ளடக்கிக் கொண்டு பண்டே
உண்டாகிய தன்னுடைய நறுமணம் கமழ்கின்ற தெய்வீகமான இளைய திருவழகைக்காட்டி, நீ
கருதிய பொருள் எய்துதல் அரிதென்று அஞ்சுதலைப் பரிகரிப்பாயாக; கருதியது பெற வந்த
நின் வரவும் யான் அறிவேன் என்று அன்புடைய நல்ல வார்த்தைகளைப் பல தரமும் கலந்து
சொல்லிக் கேடின்றி இருண்ட நிறமுடைத்தாகிய கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் நீ
ஒப்பில்லாதவனாக தோன்றும்படி சிறந்த பேரின்பமாகிய பெறுதற்கரிய பரிசைத் தருவன்.
பெறலரும் பரிசில் நல்குமதி பலவுடன்
வேறுபல் துகிலின் நுடங்கி அகில்சுமந்து
ஆரம் முழுமுதல் உருட்டி வேரல்
பூவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டு
விண்பொரு நெடுவரை பரிதியில் தொடுத்த
தண்கமழ் அலர்இறால் சிதைய நன்பல
பலவுடன் சேர்ந்து வேறு பல வகைப்பட்ட விரித்த துகிற் கொடிகள் போல் அசைந்த
அகில் மரங்களை மேலே சுமந்து கொண்டு பெரிய சந்தன மரத்தை வேரொடு பிடுங்கி உருட்டி
மூங்கிலினது பூக்களையுடைய அசைகின்ற கொம்புகள் தனிப்ப வேரைக் கிழித்து ஆகாயத்தைத்
தீண்டிய நெடிய மலையிடத்து ஆதித்தனைப் போல வட்டமாகத் தொடுக்கப்பட்ட தட்பத்தையும்
நறுமணத்தையும் உடைய விரிந்த தேன்கூடு, கெட, நல்ல பலவாகிய,
ஆசினி முதுசுளை கலாவ மீமிசை
நாக நறுமலர் உதிர யூகமொடு
மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்
இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று
முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று
தெளிவுரை : ஈரப்பலாக்களின் முற்றிய சுளைகள் கலக்க மிகவும் உயர்ந்த இடத்தில்
உண்டான சுர புன்னையினது நறுமண மிக்க பூக்கள் உதிரக் கருங்குரங்குடனே இருள் நிறம்
பொருந்திய பெற்ற நெற்றியையுடைய பெரும்பிடி யானைகள் நடுங்கும்படி திரையை வீசிப்
பெரிய களிற்றானையின் முத்தையுடைய வெள்ளிய கொம்புகளை உட்கொண்டு குதித்து.
நன்பொன் மணிநிறம் கிளரப் பொன்கொழியா
வாழை முழுமுதல் துமியத் தாழை
இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக்
கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற
மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக்
கோழி வயப்பெடை இரியக் கேழலோ(டு)
தெளிவுரை : நல்ல அழகு மிக்க மாணிக்க மணிகள் ஒளி விளங்கும்படி பொற் பொடிகளைத்
தெள்ளி வாழையினது பெருத்த முதல் துணியவும் தெங்கினது இளநீரின் மிக்க சீரியருலைகள்
உதிரவும் மோதி மிளகுக் கொடியின் கரிய கொத்துக்கள் சாயப் புள்ளிகளையுடைய
மேற்புறத்தையும் மடப்பம் பொருந்திய நடையையும் உடைய மயில்கள் பலவும் ஒரு சேரப்
பயந்து காட்டுக் கோழியின் வலிமையுள்ள பெடையானது கெட்டு ஓடும்படி பன்றியுடனே,
இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன
குரூஉமயிர் யாக்கைக் குடாஅடி உளியம்
பெருங்கல் விடரளைச் செறியக் கருங்கோட்(டு)
மா நல்லேறு சிலைப்பச் சேணின்(று)
இழுமென இழிதரும் அருவிப்
பழமுதிர் சோலை மலைகிழ வோனே
தெளிவுரை : உள்ளில் வெளிற்றினையுடைய பெரிய பனையின் புன்மையாகிய செறும்பினைப்
போன்ற கருநிற மயிரால் மிக்க உடம்பினையும் வளைவாகிய அடியினையும் உடைய கரடி பெரிய
கற்பிளப்பின் முழைகளில் செறியும்படி நீரை வீசிக் கரிய கொம்புகளையுடைய காட்டுப்
பசுக்களின் நல்ல ஏறுகள் சிலைத்துக் கொண்டு நிற்ப மலையின் உச்சியில் இருந்து
இழுமென்னும் ஓசையுண்டாக ஒழுகுகின்ற அருவியை உடையதாய்ப் பழங்கள் முற்றப் பெற்ற
சோலை மலைக்கு உரியவனாய் உள்ளவனே!
திருச்சிற்றம்பலம்
நேரிசைவெண்பா
-
குன்றம் எறிந்தாய் குரைகடலிற் சூர்தடிந்தாய்
புன்தலைய பூதப் பொருபடையாய் - என்றும்
இளையாய் அழகியாய் ஏறூர்ந்தான் ஏறே
உளையாய்என் உள்ளத் துறை.
தெளிவுரை : கிரளெஞ்ச கிரியை அழித்தாய்; ஒலிசெய்கின்ற கடலில் சூரபன்மாவைக்
கொன்றாய், புல்லிய தலையை உடைய பூதங்களைக் கொண்ட படையை உடையாய், எப்பொழுதும்
இளமையாய் இருக்கின்றாய், அழகுடையவனாய் உள்ளாய். காளை ஊர்தியையுடைய சிவபெருமானது
மகனே. வலிமையை உடையவனே! என் உள்ளத்தில் உறைவாயாக.
-
குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும்
அன்றங்(கு) அமரரிடர் தீர்த்ததுவும் - இன்றென்னைக்
கைவிடா நின்றதுவும் கற்பொதும்பில் காத்ததுவும்
மெய்விடா வீரன்கை வேல்.
தெளிவுரை : கிரௌஞ்ச கிரியை அழித்ததுவும் குன்றப் போர் செய்ததுவும் முன்பு அங்குத்
தேவர்களது துன்பத்தைத் தீர்த்ததுவும் இன்று என்னைக் கைவிடாமல் காப்பாற்றியதும்
மலைக் குகையில் காத்ததுவும் உடம்பை விடாத வீரனுடைய கையிலுள்ள வேலாகும்.
-
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை.
தெளிவுரை : வீரம் பொருந்தியவேல், நீளமானவேல், தேவர்களைச் சிறையிலிருந்து மீட்ட
தீரம் பொருந்திய வேல். செவ்வேள் ஆகிய முருகனது திருக்கையில் உள்ளவேல், வாரியில்
குளித்தவேல், வெற்றி பொருந்திய வேல், சூரபன்மனுடைய மார்பையும் கிரௌஞ்ச மலையையும்
துளைத்த வேல் எனக்குத் துணையாக இருக்கிறது.
-
இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்குக்
கொன்னவில்வேற் சூர்தடிந்த கொற்றவா - முன்னம்
பனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட
தனிவேலை வாங்கத் தகும்.
தெளிவுரை : இன்னும் ஒரு தடவை என் துன்ப மலைக்கு, சூரபதுமனைக் கொன்ற வெற்றி வீரனே,
முன்பு பனி பொருந்திய பெரிய மலையைத் துளைத்த ஒப்பற்ற வேலை எடுத்தால் போதும்.
-
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்திவாழ் வே.
தெளிவுரை : உன்னைத் தவிர வேறு யாரையும் நம்ப மாட்டேன். அதன்றியும் வேறுயார்
பின்னாலும் செல்ல மாட்டேன். பன்னிரு கைகளையுடைய அழகையுடைய அப்பனே. தேவர்களது
கொடிய வினையைத் தீர்த்தருளும் வேலப்பா, திருச்செந்தில் கோயில் கொண்டிருப்பவனே.
கோல அப்பா என்றது கோலப்பா என நின்றது.
-
அஞ்சு முகம்தோன்றில் ஆறு முகம்தோன்றும்
வெஞ்ச மரம்தோன்றில் வேல்தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகாஎன் றோதுவார் முன்.
தெளிவுரை : எனக்கு முகத்தில் அச்சம் தோன்றினால் உன்னுடைய ஆறுமுகம் தோன்றும்.
பெரிய போர் ஏற்பட்டால் அங்கே வேல் வந்து முன் நிற்கும். நெஞ்சில் ஒருதரம்
நினைத்தால் இரண்டு முறை தோன்றும். முருகா என்று ஓதுவார் முன் மேற் கூறப்பட்டவை
தோன்றும் என்க.
-
முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே - ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்.
தெளிவுரை : அழுகுடையவனே! திருச்செந்தூரில் எழுந்தருளி யிருப்பவனே. திருமாலின்
மருகனே! சிவபெருமானின் மகனே! விநாயகனுடைய தம்பியே. உன்னுடைய தண்டை அணிந்த கால்களை
எப்போதும் நம்பியே நான் கைதொழுவேன்.
-
காக்கக் கடவியநீ காவா(து) இருந்தக்கால்
ஆர்க்குப் பரமாம் அறுமுகவா - பூக்கும்
கடம்பா முருகா கதிர்வேலா நல்ல
இடங்காண் இரங்காய் இனி.
தெளிவுரை : என்னைக் காப்பதற்குக் கடமைப்பட்ட நீ காவாமல் இருந்தால், எவர்க்குப்
பாரமாம். ஆறுமுகங்களை உடையவனே. கடம்ப மாலையைத் தரித்தவனே ! இளவழகனே! ஒளியுடைய
வேலைத் தாங்கியவனே இது தக்க சமயமாகும். இனி அருள் புரிவாயாக.
-
பரங்குன்றில் பன்னிருகைக் கோமான்தன் பாதம்
கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு - சுருங்காமல்
ஆசையால் நெஞ்சே அணிமுருகாற் றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல்.
தெளிவுரை : திருப்பரங்குன்றில் எழுந்தருளியிருக்கும் பன்னிரண்டு கைகளையுடைய
கோமானுடைய பாதங்களைக் கைகூப்பிக் கண் குளிரக் கண்டு, உள்ளச் சோர்வடையாமல்
விருப்பத்தோடு நெஞ்சமே அழகுடைய திருமுருகாற்றுப்படை என்னும் இத்தோத்திரப் பாவைப்
பூசையாக வைத்து துதிப்பாயாக.
-
நக்கீரர் தாமுரைத்த நன்முருகாற் றுப்படையைத்
தற்கோல நாள்தோறும் சாற்றினால் - முற்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித்
தான்நினைத்த எல்லாம் தரும்.
தெளிவுரை : நக்கீரர் தாம் உரைத்த நல்ல திருகாற்றுப்படை என்னும் தெய்வீக நூலைத்
தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தினந்தோறும் ஓதினால் அதுமுடியுமுன்னே மாமுருகன்
வந்து மனக்கவலையைத் தீர்த்தருளி, நாம் நினைத்ததை யெல்லாம் தருவான்.
திருச்சிற்றம்பலம்
திருக்கண்ணப்ப தேவர்திருமறம் ( நக்கீரதேவ நாயனார் அருளிச்செய்தது )
மறம் என்றால் வீரம் என்று பொருள். 63 நாயன்மார்களில் ஒருவராகிய கண்ணப்ப நாயனார்
தம்முடைய கண்ணையிடத்து சிவபெருமானுக்கு அப்புதலாகிய மாபெரும் வீரத்தைச்
செய்தவராதலின் அவர்மீது மறம் என்னும் இப்பாட்டுப் பாடப்பட்டது. இது 158 அடிகளால்
ஆக்கப் பெற்ற ஆசிரியப்பாவாகும். சேக்கிழார் பாடிய கண்ணப்ப நாயனார் புராணத்துக்கு
இப்பாட்டு ஆதாரமாகும்.
திருச்சிற்றம்பலம்
-
திருக்கண் ணப்பன் செய்தவத் திறத்து
விருப்புடைத் தம்ம விரிகடல் உலகே, பிறந்தது
தேனிழித்(து) ஊனூண் கானவர் குலத்தே, திரிவது
பொருபுலி குமுறும் பொருப்பிடைக் காடே, வளர்ப்பது
செங்கண் நாயொடு தீவகம் பலவே, பயில்வது
தெளிவுரை : விரிகடல் உலகு, திருக்கண்ணப்பரது செய்தவத் திறத்தில் விருப்புடையதாக
இருக்கிறது. அவர் தேன் அழித்து, ஊன் உண்ணும் கானவர் குலத்தில் பிறந்தார். அவர்,
போர் குணமுடைய புலிகள் குமுறுகின்ற பொருப்பிடைக் காட்டில் திரிந்தார். அவர்,
சிறந்த கண்களையுடைய நாய்களையும் பார்வை மிருகங்கள் பலவற்றையும் வளர்த்தார்.
வெந்திறற் சிலையொடு வேல்வாள் முதலிய
அந்தமில் படைக்கலம் அவையே, உறைவது
குறைதசை பயின்று குடம்பல நிரைத்துக்
கறைமலி படைக்கலம் கலந்த புல்லொடு
பீலி மேய்ந்தவை பிரிந்த வெள்ளிடை
வாலிய புலித்தோல் மறைப்ப வெள்வார்
தெளிவுரை : அவர், கொடிய திறலுடைய வில்லோடு, வேல், வாள், முதலிய எண்ணற்ற
படைக்கலங்களையும் பயின்றார். அவர் குறை தசை பயின்று, குடம் பல நிறைந்து, கறைமலி
படைக்கலங் கலந்த புல்லொடு பீலி வேய்ந்த குடிசையில் வாழ்ந்தார். பிரிந்த
வெள்ளிடையை ஒளி பொருந்திய புலித்தோல் மறைத்தது.
இரவும் பகலும் இகழா முயற்றியொடு
மடைத்த தேனும் வல்நாய் விட்டும்
சிலைவிடு கணையிலும் திண்சுரி கையிலும்
பலகிளை அவையொடும் பதைப்பப் படுத்துத்
தொல்லுயிர் கொல்லும் தொழிலே, வடிவே
தெளிவுரை : வெள்வார் இரவும் பகலும் குறையாத முயற்சியோடு உண்ணுதற்குரிய தேனுடன்,
வல்லமை பொருந்திய நாய்களை முன் விட்டு வில்லில் வைத்துச் செலுத்துகின்ற
அம்புகளுடன் திண்ணிய உடைவாளோடு பல உதவியாளரோடு வேட்டையாடி பல உயிர்களைக் கொல்வதே
அவருடைய தொழிலாகும்.
மறப்புலி கடித்த வன்திரள் முன்கை
திறற்படை கிழித்த திண்வரை அகலம்
எயிற்றெண்கு கவர்ந்த இருந்தண் நெற்றி
அயிற்கோட் டேனம் படுத்தெழு குறங்கு
செடித்தெழு குஞ்சி செந்நிறத் துறுகண்
கடுத்தெழும் வெவ்வுரை அவ்வாய்க் கருநிறத்(து)
அடுபடை பிரியாக் கொடுவிரல் அதுவே, மனமே
தெளிவுரை : வீரப்புலி கடித்த வலிய திரண்ட முன்கையையும் வலிய ஆயுதங்கள் கிழித்த
கெட்டியான மலை போன்ற மார்பையும் உடையது அவரது வடிவம். இவையே யன்றி, நீண்ட
பற்களையுடைய கரடி கவர்ந்த இருந்தண் நெற்றியும், வேல் போன்ற கொம்பினையுடைய
காட்டுப்பன்றி படுத்தெழுகின்ற தொடையும், செடியைப் போல எழுந்து விளங்குகின்ற தலை
மயிரும், செந்நிறங் கொண்ட கூர்மையான கண்களும், கோபத்தோடு எழும் கொடிய சொற்களை
யுடைய வாழும் கருநிறத்துக் கொடிய ஆயுதங்களைப் பிரியாத அவருடைய வீரமும் கொண்டது
அவரது உருவமாகும்.
மிகக்கொலை புரியும் வேட்டையில் உயிர்கள்
அகப்படு துயருக்(கு) அகனமர்ந் ததுவே, இதுஅக்
கானத் தலைவன் தன்மை; கண்ணுதல்
தெளிவுரை : அவருடைய மனம் எத்தகையது என்றால் மிகக் கொலை புரியும் வேட்டையில்,
உயிர்கள் அகப்படு துயருக்கு மிகவும் பொருத்தமுடையது. இதுவே அந்தக் கானத் தலைவனது
தன்மையாகும்.
வானத் தலைவன் மலைமகள் பங்கன்
எண்ணரும் பெருமை இமையவர் இறைஞ்சும்
புண்ணிய பாதப் பொற்பார் மலரிணை
தாய்க்கண் கன்றெனச் சென்றுகண் டல்லது
வாய்க்கிடும் உண்டி வழக்கறி யானே, அதாஅன்று
தெளிவுரை : நெற்றிக் கண்ணையுடையவரும், வானத் தலைவரும், உமாதேவியை இடப்பாகத்தில்
வைத்துள்ளவரும் எண்ணற்ற பெருமைகளை யுடைய தேவர்கள் வழிபடும் புண்ணியருமான அவருடைய
பொற்பார் இரண்டு மலர்ப் பாதங்களைத் தாயைக் கண்ட கன்று போலச் சென்று கண்ட பிறகே
உணவு கொள்ளும் தன்மையுடையவர். அதுவுமல்லாமல்,
கட்டழல் விரித்த கனற்கதிர் உச்சியிற்
சுட்டடி இடுந்தொறும் சுறுக்கொளும் சுரத்து
முதுமரம் நிரந்த முட்பயில் வளாகத்து
எதிரினங் கடவிய வேட்டையில் விரும்பி
எழுப்பிய விருகத் தினங்களை மறுக்குறத்
தன்நாய் கடித்திரித் திடவடிக் கணைதொடுத்து
எய்து துணித்திடும் துணித்த விடக்கினை
விறகினிற் கடைந்த வெங்கனல் காய்ச்சி
நறுவிய இறைச்சி நல்லது சுவைகண்டு
அண்ணற்(கு) அமிர்தென்று அதுவேறு அமைத்துத்
தெளிவுரை : நெருப்புப் போன்ற வெப்பத்தை யுடைய உச்சி வேளையில் கால் சுடும்
பாலையில் பழைமையான மரங்களும் முட்களும் கலந்த பகுதியில் மேற் கொண்ட வேட்டையில்
இவர்கள் எழுப்பிய காட்டு மிருகங்களை நாய் துரத்திக் கடித்து இரித்திட அம்பு
தொடுத்துக் கொன்று துணி ஊனை, விறகினைக் கடைந்து வெங்கனலில் காய்ச்சி நறுமணமுள்ள
நல்ல இறைச்சி இது என்று சுவைகண்டு, அண்ணற்கு அமிர் தென்று அதைத் தனியாக எடுத்து
வைத்து,
தண்ணறுஞ் சுனைநீர் தன்வாய்க் குடத்தால்
மஞ்சன மாக முகந்து மலரெனக்
குஞ்சியில் துவர்க்குலை செருகிக் குனிசிலை
கடுங்கணை அதனொடும் ஏந்திக் கனல்விழிக்
கடுங்குரல் நாய்பின் தொடர யாவரும்
வெருக்கோ ளுற்ற வெங்கடும் பகலில்
திருக்கா ளத்தி எய்திய சிவற்கு
வழிபடக் கடவ மறையோன் முன்னம்
தெளிவுரை : குளிர்ந்த சுனைநீரைத் தன்வாய்க் குடத்தால் மஞ்சனமாக முகந்து, மலரெனத்
தலைமுடியில் துவர்க்குலை செருகி, வளைந்த வில்லையும் கொடிய களைகளையும் அதனோடும்
ஏந்தி, நெருப்புப் போன்ற கண்களையும் கடுமையான குரலையும் உடைய நாய் பின் தொடர,
யாவரும் கண்டு நடுங்கும் வெங்கொடும் பகலில் திருக்காளத்தியில்
எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு வழிபாடு செய்யும் சிவகோசரியார் முன்பு,
துகிலிடைச் சுற்றித் தூநீர் ஆட்டி
நல்லன விரைமலர் நறும்புகை விளக்கவி
சொல்லின பரிசில் சுருங்கலின் பூவும்
பட்ட மாலையும் தூக்கமும் அலங்கரித்(து)
அருச்சுனை செய்தாங்கு அவனடி இறைஞ்சித்
திருந்த முத்திரை சிறப்பொடும் காட்டி
மந்திரம் எண்ணி வலமிடம் வந்து
விடைகொண் டேகின பின்தொழில்
தெளிவுரை : இலிங்கத்திற்கு நீராட்டி, ஆடை உடுத்தி, நல்ல மணமுள்ள மலர்களைச்
சூட்டி, நறும்புகையும் விளக்கும் காட்டி திருவமுதைப் படைத்து, (அதாவது தூப தீப
நைவேத்தியங்களை முறைப்படி செய்து என்க) மந்திரங்களைச் சொல்லி ஆபரணங்கள், பூமாலை,
காதணி இவைகளைக் கொண்டு அலங்கரித்து அருச்சனை செய்து இறைவனது பாதங்களில் வணங்கி,
திருந்த முத்திரை சிறப்பொடுங் காட்டி, மந்திரம் சொல்லி, சுவாமியை வலம் வந்து அவர்
சென்ற பிறகு,
பூசனை தன்னைப் புக்கொரு காலில்
தொடுசெருப்(பு) அடியால் நீக்கி வாயில்
இடுபுனல் மேனியில் ஆட்டித் தன்தலைத்
தங்கிய துவர்ப்பூ ஏற்றி இறைச்சியில்
பெரிதும் போனகம் படைத்துப் பிரானைக்
கண்டுகண்(டு) உள்ளங் கசிந்து காதலில்
கொண்டதோர் கூத்துமுன் ஆடிக் குரைகழல்
அன்பொடும் இறுக இறைஞ்சி ஆரா
அன்பொடு கானகம் அடையும் அடைந்த
தெளிவுரை : கண்ணப்பர், பூசை செய்யத் தொடங்கினார். காலில் இருந்த செருப்பினால்
முன்பு இட்டிருந்தவற்றை அப்புறப்படுத்தினார். வாயில் இருந்த நீரால் நீராட்டினார்.
தன் தலையில் செருகியிருந்த செந்நிறப் பூக்களைச் சுவாமியின் தலைமீது அணிவித்து
இறைச்சியாகிய உணவைப் படைத்து, சிவபிரானை உற்று நோக்கி, உள்ளங் கசிந்து, அன்பினால்
சுவாமியின் முன் கூத்தாடி குரைகழல் அன்பொடு இறுக வணங்கி, தெவிட்டாத அன்போடு
காட்டை அடைந்தார்.
அற்றை அயலினிற் கழித்தாங்(கு) இரவியும்
உதித்த போழ்தத்து உள்நீர் மூழ்கி
ஆதரிக்கும் அந்தணன் வந்து
சீரார் சிவற்குத் தான்முன் செய்வதோர்
பொற்புடைப் பூசனை காணான் முடிமிசை
ஏற்றிய துவர்கண்(டு) ஒழியான் மறித்தும்
இவ்வா(று) அருச்சனை செய்பவர் யாவர்கொல் என்று
காத்திருந்(து) அவன்அக் கானவன் வரவினைப்
பரந்த காட்டிடைப் பார்த்து நடுக்குற்று
தெளிவுரை : இரவு, மறுநாள் காலை, நீராடி, ஆதரிக்கும் அந்தணன் வந்து சிறப்புடைய
சிவபெருமானுக்குத் தான் வழக்கமாய்ச் செய்யும் பூசையைக் காணாதவராகி, இவ்வாறு பூசை
செய்தவர் யார் என்று காணும் பொருட்டு, தூரத்தில் வந்து கொண்டிருந்த வேடுவனைக்
கண்டு பயந்து,
வந்தவன் செய்து போயின வண்ணம்
சிந்தையிற் பொறாது சேர்விடம் புக்கு
மற்றை நாளும்அவ் வழிப்பட்(டு) இறைவ
உற்றது கேட்டருள் உன்தனக்(கு) அழகா
நாடொறும் நான்செய் பூசனை தன்னை
ஈங்கொரு வேடுவன்
நாயொடும் புகுந்து மிதித் துழக்கித்
தொடுசெருப் படியால் நீக்கி வாயில்
இடுபுனல் மேனியில் ஆட்டித் தன்தலை
தங்கிய சருகிலை உதிர்த்தோர் இறைச்சியை
நின்திருக் கோயிலில் இட்டுப் போமது
என்றும் உன்தனக்(கு) இனிதே எனையுருக்
தெளிவுரை : வந்தவன் செய்துவிட்டுப் போன விதத்தைக் கண்டு மனம் பொறுக்காமல், தன்
வீடு சேர்ந்து, மறுநாளும் அவ்வாறு வழிபடப்பட்ட விதத்தை அறிந்து இறைவா! இது உனக்கு
அழகோ? நாள்தோறும் நான் செய்யும் பூசனையை இங்கொரு வேடுவன் நாயுடன் வந்து புகுந்து,
மிதித்து உழக்கி, செருப்பினால் அப்புறப்படுத்தி, வாயில் கொண்டு வந்த நீரினால் உன்
மேனியை நீராட்டி, அவன் தலையில் செருகி வைத்திருந்த சருகுகளையும் இலைகளையும்,
எடுத்துச் சாத்தி, இறைச்சியை உன் திருக்கோயிலில் இட்டுப் போவது உனக்கு இனிதோ?
காணில் கொன்றிடும் யாவ ராலும்
விலக்குறும் குணத்தன் அல்லன் என்றும்
திருக்குறிப்(பு) என்றவன் சென்ற அல்லிடைக்
கனவில்ஆ தரிக்கும் அந்தணன் தனக்குச்
சீரார் திருக்கா ளத்தியுள் அப்பன்
பிறையணி இலங்கு பின்னுபுன் சடைமுடிக்
கறையணி மிடற்றுக் கனல்மழுத் தடக்கை
நெற்றி நாட்டத்து நிறைநீற் றாக
ஒற்றை மால்விடை உமையொடு மருங்கில்
திருவுருக் காட்டி அருளிப்
தெளிவுரை : என்னை அவன் காணில் கொன்று விடுவான் என்று சிவகோசிரியார் முறையிட்டார்.
அதற்கு இறைவன் அன்றிரவு அந்தணர் கனவில் தோன்றி, அவன் கொடியவன் அல்லன்; என்று
கூறினார். அந்தக் காட்சியை ஆசிரியர் விவரிக்கும் பாங்கைப் பாருங்கள்! சிறப்புடைய
திருக் காளத்தியப்பன் பிறையணிந்த சடை முடியோடும், கறையணி மிடற்றோடும், கனல் மழு
தடக்கையோடும், நெற்றிக் கண்ணோடும், நிறைந்த திருநீற்றோடும், காளை மீது இவர்ந்து,
உமாதேவியோடு காட்சியளித்து,
புரிவொடு பூசனை செய்யும்
குணிசிலை வேடன் குணம் அவை ஆவன
உரிமையிற் சிறந்தநன் மாதவன் என்றுணர்
அவன்உகந் தியங்கிய இடம்முனி வனம்அதுவே; அவன்
செருப்படி யாவன விருப்புறு துவலே
எழில் அவன் வாயது தூயபொற் குடமே
அதனில் தங்குநீர் கங்கையின் புனலே
புனற்கிடு மாமணி அவன்நிரைப் பல்லே
அதற்கிடு தூமலர் அவனது நாவே
உப்புனல் விடும்பொழு(து) உருஞ்சிய மீசைப்
புன்மயிர் குசையினும் நம்முடிக்(கு) இனிதே; அவன்தலை
தங்கிய சரு(கு) இலை தருப்பையிற் பொதிந்த
அங்குலி கற்பகத் தவரே; அவன் உகந்(து)
இட்ட இறைச்சி எனக்குநன் மாதவர்
இட்ட நெய்பால் அவியே
இதுஎனக்(கு) உனக்கவன்
கலந்ததோர் அன்பு காட்டுவன் நாளை
நலந்திகழ் அருச்சனை செய்தாங்(கு) இருவென்று
இறையவன் எழுந்த ருளினன்
தெளிவுரை : அந்த வேடன் அன்போடு செய்கின்ற பூசை எத்தகையது என்றால், அவன் சிறந்த
மாதவன்; அவன் விரும்பி வாழும் இடம் முனிவர்கள் வாழும் வனம். அவன் செருப்படிகள்
நான் விரும்பும் பூ. அவனுடைய வாய் ஆனது அழகுடைய தூய பொற் குடமாகும். அதில்
தங்கியுள்ள நீர் கங்கை நீராகும். புனலுக்கு இடுகின்ற மாமணி வரிசையான பல்
இரத்தினம் ஒக்கும். அதற்கு இடும் தூமலர் அவனது நாவாகும் வாயிலுள்ள நீரை
விடும்போது உரிஞ்சிய மீசைப் புன்மயிர் தருப்பையோடு கூடிய மோதிரம். கற்பகத்து
அலருமாகும். அவன் விரும்பியளித்த இறைச்சி எனக்கு நன்மாதவர் இட்ட நெய்பால்
அவியுணவாகும் இது எனக்கு. உனக்கு அவன் கலந்ததோர் அன்பைக் காட்டுவன். நாளையதினம்
நீ பூசையைச் செய்த பிறகு மறைந்திரு என்று இறையவன் எழுந்தருளினன்.
அருளலும் மறையவன் அறிவுற்(று) எழுந்து
மனமிகக் கூசி வைகறைக் குளித்துத்
தான்முன் செய்வதோர்
பொற்புடைப் பூசனை புகழ்தரச் செய்து
தோன்றா வண்ணம் இருந்தனன் ஆக, இரவியும்
தெளிவுரை : இவ்வாறு இறைவன் அருள் செய்து மறைந்ததும், அந்தணன் அறிவுற்றெழுந்து
மனம் மிகக் கூசி, வைகறைக் குளித்து, தான் முன் செய்வதோர் பொற்புடைப் பூசையைச்
சிறப்பாகச் செய்து ஒரு முறை விடத்தில் ஒளிந்திருந்தான்.
வான்தனி முகட்டில் வந்தழல் சிந்தக்
கடும்பகல் வேட்டையில் காதலித்(து) அடித்த
உடும்பொடு சிலைகணை உடைத்தோல் செருப்புத்
தொடர்ந்த நாயொடு தோன்றினன் தோன்றலும்
தெளிவுரை : சூரியன் உச்சிப் பொழுதில் வெயிலைக் கடுமையாக வீச, கடும் பகல்
வேட்டையில் கண்ணப்பர் விரும்பிக் கொண்டு வந்த உடும்போடு, வில், அம்பு, உடைத்தோல்,
செருப்பு, தொடர்ந்து வந்த நாயோடு வந்து சேர்ந்தார்.
செல்வன் திருக்கா ளத்தியுள் அப்பன்
திருமேனியின் மூன்று கண்ணாய்
ஆங்கொரு கண்ணிலும் உதிரம்
ஒழியா(து) ஒழுக இருந்தன னாகப்
பார்த்து நடுக்குற்றுப் பதைத்து மனஞ்சுழன்று
வாய்ப்புனல் சிந்தக் கண்ணீர் அருவக்
கையில் ஊனொடு கணைசிலை சிந்த
நிலப்படப் புரண்டு நெடிதினில் தேறிச்
சிலைக்கொடும் படைகடி(து) எடுத்திதுப் படுத்தவர்
அடுத்தஇவ் வனத்துளர் எனத்திரிந் தாஅங்கு
தெளிவுரை : வந்ததும் செல்வனாகிய திருக்காளத்தியப்பனது திருமேனியின் மூன்று
கண்களில் ஒரு கண்ணில் இரத்தம் நிற்காமல் ஒழுகிக் கொண்டிருந்தது. அதைக் கண்ணப்பர்
கண்டதும் நடுங்கி, பதைத்து, மனம் சுழன்று, வாயிலிருந்த நீர் சிந்த, கண்ணீர்
பெருக, கையிலிருந்த இறைச்சியோடு அம்பு வில் யாவும் சிதறின. அவர் தரையில் விழுந்து
புரண்டு, பிறகு ஒருவாறு மனம் தேறி, வில்லையும் மற்ற ஆயுதங்களையும் விரைந்து
எடுத்து, இவ்வாறு செய்தவர் அடுத்துள்ள காட்டில் யாராக இருக்கும்? என்று
திரிந்தார்.
இன்மை கண்டு நன்மையில்
தக்கன மருந்துகள் பிழியவும் பிழிதொறும்
நெக்கிழி குருதியைக் கண்டுநிலை தளர்ந்தென்
அத்தனுக்(கு) அடுத்ததென் அத்தனுக்(கு) அடுத்ததென் என்(று)
அன்பொடும் கனற்றி
இத்தனை தரிக்கிலன் இதுதனைக் கண்டஎன்
கண்தனை இடந்து கடவுள்தன் கண்ணுறு
புண்ணில் அப்பியும் காண்பன் என்றொரு கண்ணிடைக்
கணையது மடுத்துக் கையில் வாங்கி
அணைதர அப்பினன் அப்பலுங் குருதி
தெளிவுரை : அங்கு யாரும் இல்லாமை கண்டு, நல்ல தகுந்த மருந்துத் தழைகளைக் கொண்டு
வந்து பிழிந்தார். அப்போதும் குருதி நிற்கவில்லை. நிலை தளர்ந்தார். என்
அத்தனுக்கு என்ன நேர்ந்தது? என்று பலமுறை அன்பொடு அழுது அரற்றி இதை என்னால்
பொறுக்க முடியாது. இதைக் கண்ட என் கண்ணைப் பெயர்த்து எடுத்து, இறைவனது கண்ணில்
ஏற்பட்ட புண்ணில் அப்புவேன் என்று ஒரு கண்ணிடை அம்பைப் பாய்ச்சி, கையில் அதை
எடுத்து இறைவனது கண்ணில் வைத்து அப்பினார்.
நிற்பதொத்(து) உருப்பெறக் கண்டுநெஞ்(சு) உகந்து
மற்றைக் கண்ணிலும் வடிக்கணை மடுத்தனன் மடுத்தலும்
நில்லுகண் ணப்ப நில்லுகண் ணப்பஎன்
அன்புடைத் தோன்றல் நில்லுகண் ணப்பஎன்(று)
இன்னுரை அதனொடும் எழிற்சிவ லிங்கம்
தன்னிடைப் பிறந்த தடமலர்க் கையால்
அன்னவன் தன்கை அம்பொடும் அகப்படப் பிடித்(து)
அருளினன் அருளலும்
தெளிவுரை : அவ்வாறு அப்பவும், இரத்தம் நின்றது கண்டு மகிழ்ச்சி யடைந்தார். ஆனால்
மற்றக் கண்ணிலும் இரத்தம் ஒழுக ஆரம்பித்தது. உடனே கண்ணப்பர் தன் அம்பை மற்றக்
கண்ணில் பாய்ச்சினார். உடனே இறைவன், நில்லு கண்ணப்ப, நில்லு கண்ணப்ப என்று
இனிமையாகக் கூறி, அதனோடு சிவலிங்கத்திலிருந்து தோன்றிய தடமலர்க் கையால்
கண்ணப்பருடைய கையில் உள்ள அம்போடு பிடித்து அருளினன்.
விண்மிசை வானவர்
மலர்மழை பொழிந்தணர் வளையொலி படகம்
துந்துபி கறங்கின தொல்சீர் முனிவரும்
ஏந்தினர் இன்னிசை வல்லே
சிவகதி பெற்றனன் திருக்கண் ணப்பனே.
தெளிவுரை : அவ்வாறு அருளவும் வானத்தில் தேவர்கள் தோன்றி மலர் மழை பொழிந்தனர்.
வளையொலி, படகம், துந்துபி முதலியன முழங்கின. தொல்சீர் முனிவரும் ஏத்தினர்.
திருக்கண்ணப்பர் இன்னிசை வல்லே சிவகதி பெற்றனர்.
வெண்பா
-
தத்தையாம் தாய்தந்தை நாகனாம் தன்பிறப்புப்
பொத்தப்பி நாட்டுடுப்பூர் வேடுவனாம் - தித்திக்கும்
திண்ணப்ப னாஞ்சிறுபேர் செய்தவத்தால் காளத்திக்
கண்ணப்ப னாய்நின்றான் காண்.
தெளிவுரை : தாயின் பெயர் தத்தை, தந்தையின் பெயர் நாகன், அவர் பிறந்தது பொத்தப்பி
நாடு, ஊர் உடுப்பூர், வேடுவர் குலத்தில் பிறந்தார். அவரது பிள்ளைத் திருநாமம்
திண்ணப்பன். அவர் செய்த முன் தவப் பயனால் காளத்திக் கண்ணப்பனாய் நின்றார்.
அறிவாயாக என்பதாம்.,
திருச்சிற்றம்பலம்
திருக்கண்ணப்ப தேவர்திருமறம் (கல்லாடதேவ நாயனார் அருளிச்செய்தது)
பதினோராம் திருமுறை ஆசிரியர்களுள் கல்லாட தேவநாயனாரும் ஒருவர். கடைச் சங்கப்
புலவர்களுள் ஒருவராகிய கல்லாடரும், கல்லாடம் என்னும் நூலைப் பாடிய கல்லாடர்
என்பவரும், இத்திருமறப் பாட்டைப் பாடிய கல்லாடரும் வெவ்வேறாவர் என்று துணிதற்கு
அவர்கள் இயற்றிய நூல்களின் நடையே சான்றாக அமைந்து திகழ்கின்றன. கல்லாடம் என்பது
ஒரு சிவப்பதி. அதில் எழுந்தருளிய சிவபெருமான் கல்லாடர் எனப் பெறுவார். கடவுளரின்
பெயர்களை மக்களுக்கு இட்டு வழங்கும் முறைப்படியே இப்புலவர்களும் கல்லாடர் என்று
பெயர் பெற்றனர்.
திருச்சிற்றம்பலம்
-
பரிவின் தன்மை உருவுகொண் டனையவன்
போழ்வார் போர்த்த தாழகச் செருப்பினன்
குருதி புலராச் சுரிகை எஃகம்
அரையிற் கட்டிய உடைதோற் கச்சையன்
தோல்நெடும் பையிற் குறுமயிர் திணித்து
வாரில் வீக்கிய வரிக்கைக் கட்டியன்
உழுவைக் கூனுகிர் கேழல்வெண் மருப்பு
மாறுபடத் தொடுத்த மாலைஉத் தரியன்
தெளிவுரை : கண்ணப்பன் அன்பே உருவு கொண்டு வந்தவன் எனலாம். போழ்ந்த வாரினால் மூடப்
பெற்ற கரிய செருப்பை உடையவன். இரத்தம் உலராத உடை வாளை உடையவன். அரையில் தோலால்
செய்த கச்சையை உடையவன். தோலால் ஆகிய நீண்ட பையில் குறுமயிரைத் திணித்து வாரினால்
இழுத்துக் கட்டிய கையை யுடையவன். புலியினது வளைந்த நகத்தையும் பன்றியின்
வெண்மையான கொம்புபையும் மாறி மாறி கட்டிய மாலையைத் தரித்தவன்.
நீலப் பீலி நெற்றி சூழ்ந்த
கானக் குஞ்சிக் கவடி புல்லினன்
முடுகு நாறு குடிலை யாக்கையன்
வேங்கை வென்று வாகை சூடிய
சங்கரன் தன்னினத் தலைவன் ஓங்கிய
தெளிவுரை : நீலநிற மயில் தோகையை நெற்றியில் சூழ்ந்த காட்டுக் குடுமியில் சோழியைக்
கோத்துக் கட்டியிருப்பவன். முடை நாற்றம் வீசும் குடிசையில் வாழ்பவன். வேங்கைப்
புலியை வென்று வாகை சூடிய சங்கரனது இனத் தலைவன்.
வில்லும் அம்பும் நல்லன தாங்கி
ஏற்றுக் கல்வனம் காற்றில் இயங்கிக்
கணையில் வீழ்த்துக் கருமா அறுத்துக்
கோலின் ஏற்றிக் கொழுந்தீக் காய்ச்சி
நாவில் வைத்த நாட்போ னகமும்
தெளிவுரை : ஓங்கிய வில்லும் அம்பும் நல்லன தாங்கி, மலைக்காடுகளில் காற்றைப் போல
விரைந்து சென்று அம்பினால் கொன்று, பன்றியை அறுத்து கோலில் மாட்டி கொழுந்தீயில்,
வேகவைத்து, நாவில் வைத்து ருசி பார்த்த நல்ல உணவும்,
தன்தலைச் செருகிய தண்பள்ளித் தாமமும்
வாய்க்கல சத்து மஞ்சன நீரும்
கொண்டு கானப் பேருறை கண்ணுதல்
முடியிற் பூசை அடியால் நீக்கி
நீங்காக் குணத்துக்
கோசரிக்(கு) அன்றவன் நேசங் காட்ட
தெளிவுரை : தன் தலையில் செருகிய கடவுளுக்கு அணியும் மாலையும் வாயாகிய
பாத்திரத்தில் திருமஞ்சன நீரும் கொண்டு காட்டில் வாழும் சிவபெருமானது முடியில்
இருந்த பூசை மலரை செருப்புக் காலால் தள்ளி விட, சிவபக்தியில் குறையாத
சிவகோசரியாருக்கு, கண்ணப்பரது அன்பைக் காட்டுவான் வேண்டி,
முக்கண் அப்பனுக்(கு) ஒருகணில் உதிரம்
தக்கி ணத்திடை இழிதர அக்கணம்
அழுது விழுந்து தொழுதெழுந்(து) அரற்றிப்
புன்மருந் தாற்றப் போகா தென்று
தெளிவுரை : மூன்று கண்களையுடைய சிவபெருமானுக்கு ஒரு கண்ணில் உதிரம் அப்போது ஒழுக,
அப்போதே கண்ணப்பர் கீழே விழுந்து அழுது தொழுது எழுந்து வாய் விட்டுக் கதறி,
மூலிகைகளைக் கொண்டு வந்து சாறு பிழிந்து தடவியும் இரத்தம் ஒழுகுவது நிற்காமையால்,
தன்னை மருந்தென்று மலர்க்கண் அப்ப
ஒழிந்தது மற்றை ஒண்திரு நயனம்
பொழிந்த கண்ணீர்க் கலுழி பொங்க
அற்ற தென்று மற்றக் கண்ணையும்
பகழித் தலையால் அகழ ஆண்டகை
ஒருகை யாலும் இருகை பிடித்து
தெளிவுரை : தானே அதற்கு மருந்தென்று மனம் தேறி, தனது கண்ணைப் பெயர்த்தெடுத்து
அப்ப, இரத்தம் பெருகுவது நின்றது. ஆனால் அடுத்த கண்ணில் இரத்தம் பெருக,
ஆரம்பித்தது. தனது மற்றொரு கண்ணையும் அம்பின் நுனியால் அகழ ஆரம்பித்த போது,
சிவபெருமான் தனது ஒருகையால் கண்ணப்பரது இரண்டு கைகளையும் பிடித்து,
ஒல்லை நம்புண் ஒழிந்தது பாராய்
நல்லை நல்லை எனப்பெறும்
திருவேட் டுவர்தந் திருவடி கைதொழக்
கருவேட் டுழல்வினைக் காரியம் கெடுமே.
தெளிவுரை : விரைவில் எம்புண் ஆறியது பார்ப்பாயாக. நலம் பெருவாயாக. நலம் பெறுவாயாக
என்று இறைவன் அருள் பாலித்தார். கண்ணப்பர் இறைவர் தம் திருவடிகளை வணங்கினார்.
பிறவியை விரும்பி உழலுகின்ற காரியம் கெடும் என்றவாறு. அதாவது அவர் இனி பிறவா வரம்
பெற்று இறைவனது திருவடி நீழலை அடைந்தார் என்பதாம்.
திருச்சிற்றம்பலம்
மூத்த நாயனார்திருஇரட்டைமணிமாலை ( கபிலதேவநாயனார் அருளிச்செய்தது )
இவரது நாடு, ஊர் முதலிய செய்திகளை உணர்ந்து கொள்ளுதற்குத் தக்க ஆதாரங்கள் இல்லை.
இவர் தம்முடைய, பாடல்களில் போற்றிப் பரவிய சிவதலங்களைப் பற்றிய குறிப்புக்களை
ஆழ்ந்து நோக்குமிடத்து, இவர் சிவதலப் பயணத்தை மேற்கொண்டு வாழ்ந்தவர் என்று
தெரிகிறது.
கடைச் சங்கப் புலவராகிய கபிலர் அல்லர் இவர். கபிலதேவர் பிற்காலத்துப் புலவர்.
இவரால் இயற்றப் பெற்ற நூல்கள் மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை, சிவபெருமான்
திருஇரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி என்பன.
மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை என்னும் இந்நூல் ஆனைமுகக் கடவுள்மீது
வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் அடுத்தடுத்து வர இருபது செய்யுட்களால்
அந்தாதித் தொடையாக இயற்றப் பெற்றது. ஆனைமுகக் கடவுளைத் தேவர்களும்
வழிபடுகின்றனர். ஆனைமுகக் கடவுளே தீவினைகளெல்லாம் வேரோடு களைய வல்லவர். ஆனைமுகக்
கடவுளைப் போற்றி வழிபடுபவர் இடத்தன்றி மற்றவர்களிடம் திருமகள் சேர மாட்டாள் என்பன
போன்ற செய்திகள் இந்நூலில் கூறப்படுகின்றன.
திருச்சிற்றம்பலம்
வெண்பா
-
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.
தெளிவுரை : செல்வத்தைப் பெருகச் செய்யும். செய்கின்ற வேலை வெற்றி பெரும்,
செம்மையான சொல் பெருகும். பெருமையை அதிகரிக்கச் செய்யும். சாரூப பதவியைக்
கொடுக்கும். ஆதலால் தேவர்களும் யானைமுகக் கடவுளாகிய விநாயகனை அன்போடு
வழிபடுவார்கள் என்பதாம்.
கட்டளைக் கலித் துறை
-
கைக்கும் பிணியொடு காலன்
தலைப்படும் ஏல்வையினில்
எய்க்கும் கவலைக் கிடைந்தடைந்
தேன்வெம்மை நாவளைக்கும்
பைக்கும் அரவரை யான்தந்த
பாய்மத யானைபத்துத்
திக்கும் பணிநுதற் கண்திரு
வாளன் திருவடியே.
தெளிவுரை : வெறுக்கும் நோயோடு எமன் முயற்சிக்கும் சமயத்தில் குறைக்கும்.
கவலைக்குத் தளர்ந்து இருந்தேன். வெம்மை நாவளைக்கும், படம் எடுத்து ஆடுகின்ற
பாம்பை இடையில் கட்டியுள்ள சிவபெருமான் பெற்ற பாய் மதயானையாகிய விநாயக் கடவுள்.
அந்த நெற்றிக் கண்ணையுடைய திருவாளன் திருவடிகளைப் பணிவாயாக. விநாயகப் பெருமானது
திருவடிகளை வணங்கினால் துன்பங்கள் இரா என்பதாம்.
வெண்பா
-
அடியமர்ந்து கொள்வாயே நெஞ்சமே அப்பம்
இடியவலோ(டு) எள்ளுண்டை கன்னல் - வடிசுவையில்
தாழ்வானை ஆழ்வானைத் தன்னடியார் உள்ளத்தே
வாழ்வானை வாழ்த்தியே வாழ்.
தெளிவுரை : நெஞ்சமே! அவனது அடிமைத் தொழிலிற் பொருந்திய இருப்பாயாக. அப்பம்,
மாவாற் செய்யப்பட்ட கொழுக்கட்டை, அவலோடு, எள்ளுருண்டை, கரும்பு இவற்றின் சுவையில்
விரும்பி ஆழ்ந்திருப்பவனும், தன் அடியார் உள்ளத்து வாழ்கின்றவனுமாகிய விநாயகனை
வாழ்த்தி வாழ்வாயாக.
கட்டளைக் கலித் துறை
-
வாழைக் கனிபல வின்கனி
மாங்கனி தாஞ்சிறந்த
கூழைச் சுருள்குழை அப்பம்எள்
உண்டைஎல் லாம்துறத்தும்
பேழைப் பெருவயிற் றோடும்
புகுந்தென் உளம்பிரியான்
வேழத் திருமுகத் துச்செக்கர்
மேனி விநாயகனே.
தெளிவுரை : வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம், சிறப்பமைந்த கூழைச்சுருள்
குழையப்பம், எள் உருண்டை எல்லாம் வெளியே நீட்டும்படியாகச் சேர்த்து வைத்திருக்கிற
பெட்டகமாகிய பெருவயிற்றோடும் புகுந்தது என் மனத்தை விட்டகலான் யானைத்
திருமுகத்துடன் செவ்வானம் போன்ற மேனியையுடைய விநாயகன்.
விநாயகன் உளம் பிரியான் எனக் கூட்டுக.
வெண்பா
-
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கைதணி விப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.
தெளிவுரை : விநாயகனே கொடிய துன்பங்களை வேர் அறுக்க வல்லான், விநாயகனே
பொருட்பற்றைத் தணிவிப்பான். விநாயகனே வானுலகத்திற்கும் மண்ணுலகத்திற்கும்
நாதனாகும். இத்தன்மைகளினால், நன்மைகளைப் பெற எண்ணினால் அவளது பாதங்களை
மனங்குழைந்து பணியுங்கள்.
கட்டளைக் கலித் துறை
-
கனிய நினைவொடு நாடொறும்
காதற் படும்அடியார்க்(கு)
இனியன் இனியொர் இன்னாங்(கு)
இலம்எவ ரும்வணங்கும்
பனிவெண் பிறை,நறுங் கொன்றைச்
சடைப்பலி தேர்இயற்கை
முனிவன் சிறுவன் பெருவெங்கொல்
யானை முகத்தவனே.
தெளிவுரை : மனங்குழைந்த நினைவோடு நாள்தோறும் துதி செய்யும் அடியார்களுக்கு
இனியனாம். இனி எந்த துன்பமும் நமக்கு இராது. எல்லாரும் வணங்குகின்ற குளிர்ந்த
வெண்மையான பிறையும் நறுங் கொன்றையும் உடைய சடையை உடையவனும் ஐயமேற்கும் இயற்கைத்
தன்மையை உடையவனுமாகிய சிவபெருமானது சிறுவன் பெருவெங்கொல் யானை முகத்தவன். அவனைப்
பணிமின் என்பதாம்.
வெண்பா
-
யானை முகத்தான் பொருவிடையான் சேழ் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் - மேல்நிகழும்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்.
தெளிவுரை : யானை முகத்தை உடையவன், போர் செய்கின்ற காளையை வாகனமாக உடைய
சிவபெருமானது மூத்த மகன். அழகுடைய நீல மணி போன்ற நிறத்தினை உடைய திருமாலினது
மாமருகன். மேல் நிகழும் வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என் உள்ளக் கருத்தில்
இருக்கின்றான்.
கட்டளைக் கலித் துறை
-
உளதள வில்லதொர் காதல்என்
நெஞ்சில்வன் நஞ்சமுண்ட
வளரிள மாமணி கண்டன்வண்
டாடுவண் கோதைபங்கத்(து)
இளவளர் மாமதிக் கண்ணியெம்
மான்மகன் கைம்முகத்துக்
களகள மாமதம் சேர்களி
யானைக் கணபதியே.
தெளிவுரை : உளது. அளவில்லதோர் காதல் என் நெஞ்சில். விடமுண்ட வளர் இள மாமணிகண்டன்,
வண்டுகள் சுற்றித் திரிகின்ற வண் கோதை பங்கத்து இளவளர் திங்கள் மாலை எம்மான் மகன்
சிவன். கைம் முகத்துக் களகள மாமதம் சேர் களியானை கணபதியாகும்.
வெண்பா
-
கணங்கொண்ட வல்வினைகள் கண்கொண்ட நெற்றிப்
பணங்கொண்ட பாந்தள் சடைமேல் - மணங்கொண்ட
தாதகத்த தேன்முரலும் கொன்றையான் தந்தளித்த
போதகத்தின் தாள்பணியப் போம்.
தெளிவுரை : கூட்டம் கொண்டு வந்த கொடிய வினைகள், நெற்றிக் கண்ணைக் கொண்டவனும்
படத்தையுடைய பாம்பைச் சடையில் கொண்டவனும் ஆகிய அந்தத் தேன் முரலும் கொன்றையான்
தந்தளித்த ஆனைமுகத்தையுடைய பிள்ளையாருடைய திருவடிகளைப் பணிந்தால் போகும் என்க.
வல்வினைகள் போம் எனக் கூட்டுக.
கட்டளைக் கலித் துறை
-
போகபந் தத்தந்தம் இன்றிநிற்
பீர்புனை தார்முடிமேல்
நாகபந் தத்தந்த நாளம்
பிறையிறை யான்பயந்த
மாகபந் தத்தந்த மாமழை
போல்மதத் துக்கதப்போர்
ஏகதந் தத்துஎந்தை செந்தாள்
இணைபணிந்(து) ஏத்துமினே.
தெளிவுரை : உலக இன்பங்கள் உள்ள பற்றில் முடிவின்றி ஆழ்ந்திருப்பவர்களே! முடிமேல்
பாம்பை அணிகலமாகக் கட்டுதலை யுடைய பிறையான் பயந்த விண்ணில் ஒன்றனோடு ஒன்று
இணைந்துள்ள மாமழை போல் மதத்துக் கதப்போர் செய்யும் ஒற்றைக் கொம்பையுடைய
எந்தையினது இரண்டு செம்மையான பாதங்களைப் பணிந்து ஏத்துமின்.
வெண்பா
-
ஏத்தியே என்னுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனிவெண் கோட்டு மதமுகத்துத் - தூத்தழல்போல்
செக்கர்த் திருமேனிச் செம்பொற் கழலங்கை
முக்கட் கடாயானை முன்.
தெளிவுரை : வழிபாடு செய்தே என் உள்ளம் நிற்கும். எப்பொழுதும் யானையின் ஒப்பற்ற
வெண்கோட்டு மதமுகத்துத் தூய நெருப்புப் போன்ற சிவந்த உடலழகுடைய செம்பொற்கழல்,
அம்கை, முக்கண் கடாயானை முன் வழிபாடு செய்வாயாக என்பதாம்.
கட்டளைக் கலித் துறை
-
முன்னிளங் காலத்தி லேபற்றி
னேன்வெற்றி மீனுயர்த்த
மன்னிளங் காமன்தன் மைத்துன
னேமணி நீலகண்டத்(து)
என்னிளங் காய்களி றேஇமை
யோர்சிங்க மேயுமையாள்
தன்னிளங் காதல னேசர
ணாவுன் சரணங்களே.
தெளிவுரை : இளமைப் பருவத்திலேயே பற்றினேன். வெற்றி பொருந்திய மீனக் கொடியை
உயர்த்திய மன் இளம் காமன் தன் அத்தை உமாதேவியின் மகனாகிய விநாயகனே ! (மைத்துன
முறையைக் காண்க) மணிநீல கண்டத்தானுடைய இளங்களிறே! தேவர்களின் சிங்கமே! உமையாளது
அன்பு மகனே! உன்பாதங்களுக்கு வணக்கம்.
வெண்பா
-
சரணுடை யேனென்று தலைதொட் டிருக்க
முரணுடையேன் அல்லேன் நான்முன்னம் - திரள்நெடுங்கோட்(டு)
அண்டத்தான் அப்புறத்தான் ஆனைமுகத் தானமரர்
பண்டத்தான் தாள்பணியாப் பண்டு.
தெளிவுரை : வணக்க முடையேன் என்று முதன்மை தொடர்கிறது. நான் மாறுபாடு உடையவன்
அல்லன். முன்பு திரண்ட நீண்ட கொம்பினை யுடைய வனாகவும் அண்டங்களை உடையவனாகவும்
அண்டங்களுக்கு அப்பாற்பட்டவனாகவும் ஆனை வணங்கப்படுவனாகவும் உள்ளவனது பாதங்களைப்
பணிவாயாக.
கட்டளைக் கலித் துறை
-
பண்டந்த மாதரத் தான்என்(று)
இனியன வேபலவும்
கொண்டந்த நாள்குறு காமைக்
குறுகுவர் கூருணர்வில்
கண்டந்த நீண்முடிக் கார்மத
வார்சடைக் கற்றை யொற்றை
வெண்தந்த வேழ முகத்தெம்
பிரானடி வேட்கையரே.
தெளிவுரை : (பண்+தந்த) சிறப்பைத் தந்த பெரியோன் என்று இனியவான பலவும் கொண்டு அந்த
நாள் குறுக முடியாதவாறு குறுகுவர். கூரிய அறிவு கொண்டு நீல கண்டனது மகனும்
வெண்மையான தந்தத்தையுடைய யானை முகக் கடவுளினது வேட்கையுடையர் குறுகுவர் என
முடிக்க.
வெண்பா
-
வேட்கை வினைமுடித்து மெய்யடியார்க்(கு) இன்பஞ்செய்
ஆட்கொண் டருளும் அரன்சேயை - வாட்கதிர்கொள்
காந்தார மார்பிற் கமழ்தார்க் கணபதியை
வேந்தா உடைத்(து) அமரர் விண்.
தெளிவுரை : விரும்பிய தொழில் நிறைவேறும்படி செய்து உன் மெய்யடியார்களுக்கு இன்பம்
செய்து ஆட்கொண்டருளும் சிவபிரானது மூத்த பிள்ளையை ஒளி பொருந்திய கதிர்களையுடைய
காந்தார மார்பில் மணம் பொருந்திய மாலையையுடைய கணபதியைத் தேவர் உலகம் அரசனாக
உடையது.
கட்டளைக் கலித் துறை
-
விண்ணுதல் நுங்கிய விண்ணுமண்
ணுஞ்செய் வினைப்பயனும்
பண்ணுதல் நுங்கடன் என்பர்மெய்
அன்பர்கள் பாய்மதமா
கண்ணுதல் நுங்கிய நஞ்சமுண்
டார்க்கு மாமிடற்றுப்
பெண்ணுதல் நும்பிரி யாவொரு
பாகன் பெருமகனே.
தெளிவுரை : ஆகாயம் அடர்ந்த மேலுலகமும் மண்ணுலகமும் செய்யும் வினைப் பயனும்
தீர்த்து வைப்பது உன் கடன் என்று மெய் அன்பர்கள் சொல்வார்கள். பாய்கின்ற
மதங்கொண்ட நெற்றிக்கண்ணையுடைய நஞ்சுண்ட வரும் நீலகண்டரும் உமையை இடப்பாகத்தில்
கொண்டவருமான சிவபெருமானது மூத்த மகனே!
வெண்பா
-
பெருங்காதல் என்னோடு பொன்னோடை நெற்றி
மருங்கார வார்செவிகள் வீசி - ஒருங்கே
திருவார்ந்த செம்முகத்துக் கார்மதங்கள் சோர
வருவான்தன் நாமம் வரும்.
தெளிவுரை : பொன்னாலாகிய முகபடாமும், நெற்றியின் பக்கங்களில் அசைந்தாடுகின்ற
செவிகளும் ஒரு மிக்க செல்வம் மிகுந்த செந்நிற முகமும் கார்மதங்கள் சோர
வருகின்றவனது பெயர் என்னோடு பெருங்காதலோடு வரும் என்க. கார்மதங்கள் சோரவருபவன் -
ஆனை முகக்கடவுள்.
கட்டளைக் கலித் துறை
-
வருகோட் டருபெருந் தீமையும்
காலன் தமரவர்கள்
அருகோட் டரும்அவர் ஆண்மையும்
காய்பவன் கூர்ந்தன்பு
தருகோட் டருமர பிற்பத்தர்
சித்தத் தறியணையும்
ஒருகோட் டிருசெவி முக்கட்செம்
மேனிய ஒண்களிறே.
தெளிவுரை : கிரகங்கள் தருகின்ற பெருந்தீமைகளையும், நமனுடைய தூதர்கள் தருகின்ற
இம்சைகளையும் போக்குபவனும் அன்பு கூர்ந்து அடியார்களுடைய உள்ளமாகிய கட்டுத்
தறியில் கட்டுப்படும் இறைவன் யாரெனில் ஒற்றைக் கொம்பையும் இருசெவிகளையும், மூன்று
கண்களையும் செம்மேனியையும் உடைய ஒண்களிறாகிய விநாயகனே யாம்.
வெண்பா
-
களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க்(கு) உதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்.
தெளிவுரை : களிப்பு மிகுந்த யானைக் கன்றை, கணபதியை, செம்பொன் ஒளியானை,
உலகத்தவர்க்கு உதவும் அருளுடையவனை எண்ணுவதும், கைத்தலங்கள் கூப்புவதும் மற்றும்
அவனுடைய பாதங்களை அடைவதும் நல்லவர்களது கடனாகும்.
கட்டளைக் கலித் துறை
-
நல்லார் பழிப்பில் எழிற்செம்
பவளத்தை நாணநின்ற
பொல்லா முகத்தெங்கள் போதக
மேபுரம் மூன்றெரித்த
வில்லான் அளித்த விநாயக
னேஎன்று மெய்ம்மகிழ
வல்லார் மனத்தன்றி மாட்டாள்
இருக்க மலர்த்திருவே.
தெளிவுரை : நல்லவர்களின் பழிப்பில்லாத அழகிய செம்பவளத்தை நாணநின்ற உளியால்
பொளியப் படாத திருமுகத்தையுடைய எங்கள் யானையே, திரிபுரங்களை எரித்த மேரு மலையை
வில்லாகவுடையவன் அளித்த விநாயகனே ! என்று மெய்ம் மகிழ வல்லவர்கள் மனத்திலன்றி
மற்றவர்கள் மனத்தில் திருமகள் பொருந்தியிருக்க மாட்டாள். அதாவது ஆனைமுகக்
கடவுளைப் போற்றுவாரிடத்தன்றிப் பிறரிடத்தில் திருமகள் தங்க மாட்டாள் என்க.
திருச்சிற்றம்பலம்
சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை ( கபிலதேவ நாயனார் அருளிச்செய்தது )
இதில் முப்பத்தேழு பாடல்கள் உள்ளன. இந்நூலில் சிவபெருமானுடைய பெருமையும், அவர்
அடியார்கட்கு அருள் செய்யும் முறைமையும், அப்பெருமானைப் போற்றாதார் அடையும்
சிறுமையும், திருவருட் சிறப்பின் அருமையும் கூறப்பட்டுள்ளன.
திருச்சிற்றம்பலம்
வெண்பா
-
அந்தி மதிமுகிழான் அந்தியஞ் செந்நிறத்தான்
அந்தியே போலும் அவிர்சடையான் - அந்தியில்
தூங்கிருள்சேர் யாமமே போலும் சுடுநீற்றான்
வீங்கிருள்சேர் நீல மிடறு.
தெளிவுரை : மாலையில் தோன்றும் பிறையைச் சூடியவன். அந்திமாலையில் தோன்றும்
செந்நிறம் போன்ற மேனியை உடையவன். அந்தியே போலும் ஒளிமிக்க சடையை உடையவன்.
திருநீற்றை யணிந்தவன். மிக்க இருள் சேர்ந்த கழுத்து, தூங்கிருள் சேர் யாமமே
போன்றிருக்கும்.
கட்டளைக் கலித் துறை
-
மிடற்றாழ் கடல்நஞ்சம் வைக்கின்ற
ஞான்றுமெல் லோதிநல்லாள்
மடற்றா மரைக்கைகள் காத்தில
வேமழு வாள்அதனால்
அடற்றா தையைஅன்று தாளெறிந்
தாற்(கு) அருள் செய்தகொள்கைக்
கடற்றாழ் வயற்செந்நெல் ஏறும்வெண்
காட்டெங் கரும்பினையே.
தெளிவுரை : கடலில் இருந்து எழுந்த நஞ்சைத் தாங்கள் பருக முயன்றபோது
பக்கத்திலிருந்த உமாதேவி தடுத்து நிறுத்தியதால் அன்றோ அந்த விடம் கழுத்தோடு
நின்றது. மழுவினால் தனது தந்தையின் தாளை வெட்டிய சண்டிகேசுவரருக்கு அருள் செய்த
கொள்கை திருவெண்காடருக்கு அருள் செய்ய உதவியது என்க.
வெண்பா
-
கருப்புச் சிலையநங்கன் கட்டழகு சுட்ட
நெருப்புத் திருநெற்றி நாட்டம் - திருச்சடையில்
திங்கள் புரையும் திரள்பொன் திருமேனி
எங்கள் இமையோர் இறைக்கு.
தெளிவுரை : கரும்பு வில்லையுடைய மன்மதன் பெற்றிருந்த கட்டழகை எரித்த நெருப்புப்
போன்ற நெற்றிக் கண்ணும், திருச்சடையில் பிறைச்சந்திரனும் பொன்னிறமான மேனியும்
உடையவன் தேவர்களுக்கு இறைவனாகிய எங்கள் சிவபெருமான்.
கட்டளைக் கலித் துறை
-
இறைக்கோ குறைவில்லை உண்டிறை
யேஎழி லார்எருக்கு
நறைக்கோ மனக்கொன்றை துன்றும்
சடைமுடி நக்கர் சென்னிப்
பிறைக்கோர் பிளவும் பெறுவிளிக்
கொண்டெம் பிரானுடுக்கும்
குறைக்கோ வணமொழிந் தாற்பின்னை
ஏதும் குறைவில்லையே.
தெளிவுரை : இறைவனுக்கு ஒரு குறையும் இல்லை; சிறிதளவு மாத்திரம் உண்டு. அவையாவை
யெனில், அழகிய எருக்குமலர், மணமுள்ள கொன்றை மாலை யணிந்த சடைமுடி நக்கர் சென்னிப்
பிறைக்கு ஓர் பிளவு. பிரான் உடுப்பது கோவணம். (எருக்கு, மண்டையோடு, கோவணம்
முதலியவைகளை ஒழித்துவிட்டால் பிறகு எம்முடைய இறைவனுக்கு எத்தகைய குறையும் இல்லை
யென்க).
வெண்பா
-
இல்லை பிறவிக் கடலேறல் இன்புறவில்
முல்லை கமழும் முதுகுன்றில் - கொல்லை
விடையானை வேதியனை வெண்மதிசேர் செம்பொற்
சடையானைச் சாராதார் தாம்.
தெளிவுரை : இனிய காட்டில் முல்லை கமழும் பழமலையில் (விருத்தாசலம்) முல்லை
நிலத்தில் காளை வாகனத்தை யுடையவனை, வெண்மையான பிறைச் சந்திரனைச் சூடிய செம்பொற்
சடையானைச் சாராதார் பிறவிக் கடல் ஏறல் இல்லை என்க.
கட்டளைக் கலித் துறை
-
தாமரைக் கோவும்நன் மாலும்
வணங்கத் தலையிடத்துத்
தாமரைக் கோவணத் தோ(டு) இரந்(து)
உண்ணினும் சார்ந்தவர்க்குத்
தாமரைக் கோமளத் தோடுவ
காளத் தருவர் கண்டீர்
தாமரைக் கோமளக் கைத்தவ
ளப்பொடிச் சங்கரரே.
தெளிவுரை : பிரமனும் திருமாலும் வணங்க, தாம் அரைக் கோவணத்தோடு இரந்துண்ணினும்,
தம்மை வழிபடுகின்றவர்களுக்குத் திருமகளோடு (செல்றவத்தோடு) உலகை ஆளவும் தரவல்லவர்.
அவர் யாரென்னில் அழகிய கைகளையும் திருநீற்றையும் உடைய சங்கரர் என்க.
வெண்பா
-
சங்குகோள் எண்ணுவரே பாவையரைத் தம்அங்கம்
பங்குபோய் நின்றாலும் பாய்கலுழிக் - கங்கை
வரியராப் போதும் வளர்சடையாய் நின்போல்
பெரியர்ஆ வாரோ பிறர்.
தெளிவுரை : கைவளைகளைக் கொள்ளும் எண்ணம் உடையவரே! தம் உடம்பில் பாதி பாகத்தை
உமையவள் எடுத்துக் கொண்ட போதிலும் கங்கையையும் பாம்பையும் சடையில் உடையவரே,
உம்போல் பிறர் பெரியர் ஆவாரோ?
கட்டளைக் கலித் துறை
-
பிறப்பாழ் குழியிடை வீழ்ந்துநை
வேற்குநின் பேரருளின்
சிறப்பார் திருக்கை தரக்கிற்றி
யேதிரி யும்புரமூன்(று)
அறப்பாய் எரியுற வான்வரை
வில்வளைத் தாய்இரவாய்
மறப்பா வரியர நாணிடைக்
கோத்தகை வானவனே.
தெளிவுரை : பிறப்பாகிய பாழ்குழியில் விழுந்து வருந்துகின்றவனாகிய எனக்கு,
உன்பேரருளின் சிறப்பமைந்த திருக்கையைத் தரவில்லையே! திரிபுரங்களை அடியோடு எரிக்க
மேருமலையை வளைத்தாய் ஆதிசேஷனை நாணாகக் கோத்த வானவனே!
வெண்பா
-
வானம் மணிமுகடா மால்வரையே தூணாக
ஆன பெரும்பார் அரங்காகக் - கானகத்தில்
அம்மா முழவதிர ஆடும் பொழுதாரூர்
எம்மானுக்(கு) எய்தா(து) இடம்.
தெளிவுரை : ஆகாயமே உச்சியாகவும், பெரிய மலையே தூணாகவும், பெரிய இந்தப் பூமியே
அரங்காகவும் கானகத்தில் மத்தளம் முதலிய ஒலிக்கருவிகள் அதிர ஆடும் பொழுது
திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் எம் தலைவனுக்கு இடம் போதாது.
கட்டளைக் கலித் துறை
-
இடப்பா கமும்உடை யாள்வரை
ஈன்இள வஞ்சியன்ன
மடப்பால் மொழியென்பர் நின்வலப்
பாகத்து மான்மழுவும்
விடப்பா சனக்கச்சும் இச்சைப்
படநீ(று) அணிந்துமிக்க
கடப்பார் களிற்றுரி கொண்டெங்கும்
மூடும்எங் கண்ணுதலே.
தெளிவுரை : பர்வதராஜன் பெற்ற மகளாகிய பார்வதி உன் இடப்பாகத்தில் உள்ளாள். அவளுடைய
மொழி இனிமையானது. நீ, உன் வலப்பாகத்தில் மான், மழு, பாம்புக் கச்சை, திருநீறு
இவைகளை அணிந்துள்ளாய். கொடிய யானையின் தோலை உரித்து உடலைப் போர்த்திக்
கொண்டுள்ளாய். என் கண்ணுதலே! இது என்ன கோலம் !
வெண்பா
-
கண்ணி இளம்பிறையும் காய்சினத்த மாசுணமும்
நண்ணி இருந்தால் நலமில்லை; - தண்ணலங்கல்
பூங்கொன்றை யின்தேன் பொதியும் சடைப்புனிதா
வாங்கொன்றை இன்றே மதித்து.
தெளிவுரை : தலைமாலையாகச் பிறைச் சந்திரனையும் கோப மிக்க பாம்பையும் ஒரு சேர
வைத்திருப்பது நல்லது அல்ல. ஏனெனில் அவை இரண்டிற்கும் பகை. குளிர்ந்த கொன்றை
மாலையின் தேன் பொதிந்த சடைப் புனிதா ! இவற்றுள் ஒன்றை நீக்கி விடு என்பதாம்.
வாங்கு+ஒன்றை எனப்பிரிக்க.
கட்டளைக் கலித் துறை
-
மதிமயங் கப்பொங்கு கோழிருள்
கண்டவ ! விண்டவர்தம்
பதிமயங் கச்செற்ற கொற்றவில்
வானவ! நற்றவர்சூழ்
அதிகைமங் கைத்திரு வீரட்ட
வாரிட்ட தேனுமுண்டு
கதிமயங் கச்செல்வ தேசெல்வ
மாகக் கருதுவதே?
தெளிவுரை : கண்டவர் மயங்குமாறு மிக்க இருள் சூழ்ந்த கண்டத்தை உடையவரே! சிவபிரான்
அருள் பெற்று வானத் திருந்த முப்புர அரக்கர்களது திரிபுரங்களை எரித் கொற்ற
வில்லையுடைய வானவ! நல்லோர்கள் வாழ்கின்ற திருவதிகை வீரட்டானத் தேனும் உண்டு கதி
மயங்கச் செய்வதே செல்வமாகக் கருதுகின்றாய் என்பதாம்.
வெண்பா
-
கருதுங் கருத்துடையேன் கையுடையேன் கூப்பப்
பெரிதும் பிறதிறத்துப் பேசேன் - அரிதன்றே
யாகப் பிறையான் இனியென் அகம்புகுந்து
போகப் பெறுமோ புறம்.
தெளிவுரை : உன்னைக் கருதும் கருத்துடையேன். உன்னை வணங்க கைகளை உடையேன். வேறு
வகைகளில் பேச மாட்டேன். வேள்வியில் தோன்றிய பிறையை அணிந்தவன். இனி என் மனத்தில்
புகுந்து, வெளியே போக முடியுமோ? அரிதென்க.
கட்டளைக் கலித் துறை
-
புறமறை யப்புரி புன்சடை
விட்டெரி பொன்திகழும்
நிறமறை யத்திரு நீறு
துதைந்தது நீள்கடல்நஞ்(சு)
உறமறை யக்கொண்ட கண்டமும்
சால உறப்புடைத்தால்,
அறமறை யச்சொல்லி வைத்(து)ஐயம்
வேண்டும் அடிகளுக்கே.
தெளிவுரை : முதுகு மறையச் செய்கிற சடையை உடையாய். பிரகாசமான உன் மேனி மறையத்
திருநீறு பூசியுள்ளாய். கடலில் இருந்து எழுந்த விடத்தை மறைக்க நீலகண்டத்தை
உடையாய். அறம் மறையச் சொல்லி வைத்து, பிச்சை வேண்டிச் செல்கின்றாய். அடிகளே இது
சரியா?
வெண்பா
-
அடியோமைத் தாங்கியோ ஆடை உடுத்தோ
குடியோம்ப மாநிதியங் கொண்டோ - பொடியாடு
நெற்றியூர் வாளரவ நீள் சடையாய் நின்னூரை
ஒற்றியூர் ஆக்கிற்(று) உரை.
தெளிவுரை : கடன் கொண்ட இடத்தில் ஒற்றியாக வைக்கப்பட்ட திருஒற்றியூரை உடையாய்,
இவ்வாறு கடன் பட்டதற்கு என்ன காரணம்? சொல்வாயாக! அடியவர் களாகிய எங்களைத்
தாங்கியா? ஆடை உடுத்தியா? குடும்பத்தைக் காப்பாற்ற பெருங்கடன் பட்டா? அடகு
வைத்தீர்? நெற்றியில் திருநீறும் சடையில் பாம்பையும் உடையவரே! ஊரை ஏன் அடகு
வைத்தீர் !
கட்டளைக் கலித் துறை
-
உரைவந் துறும்பதத் தேயுரை
மின்களன் றாயினிப்பால்
நரைவந் துறும்பின்னை வந்துறுங்
காலன்நன் முத்திடறித்
திரைவந் துறுங்கரைக் கேகலம்
வந்துறத் திண்கைவன்றாள்
வரைவந் துறுங்கடல் மாமறைக்
காட்டெம் மணியினையே.
தெளிவுரை : போற்றிப் புகழ்வதற்கு நல்ல சொற்கள் அமையும் பக்குவ காலத்தில்
உரையுங்கள் என்று சொன்னாய். இனி, பால் போன்ற நரை வந்துறும். பிறகு எமன் வருவான்.
பிறகு நன்முத்து இடறித்திரை வந்துறுங் கரைக்கு கப்பல் வந்துற யானை வந்துறும்.
கடல் கரையிலும் வேதாரண்யத் (திருமறைக்காடு) தில் கோயில் கொண்டுள்ள இறைவனே!
(யானைத் தீ - தீராத பசி நோய் எனினுமாம்)
வெண்பா
மணியமரும் மாமாட வாய்மூரான் தன்னை
அணியமர ரோ(டு)அயனும் மாலும் - துணிசினத்த
செஞ்சூட்ட சேவற் கொடியானு மாய்நின்று
நஞ்சூட்ட எண்ணியவா நன்று.
தெளிவுரை : மணிகள் பதிக்கப்பட்ட பெரிய மாடங்களை யுடைய திருவாய் மூவராகிய அப்பர்
பெருமானைத் தேவரோடு பிரமனும் திருமாலும் போற்ற அமைத்தனை. மிகவும் கோபமுடைய சிவந்த
தலைச் சூட்டையுடைய சேவற் கொடியோனாகிய முருகப் பெருமானோடு நன்கு அருள் செய்தார்.
கட்டளைக் கலித் துறை
-
நன்றைக் குறும்இரு மற்பெரு
மூச்சுநண் ணாதமுன்னம்
குன்றைக் குறுவது கொண்டழி
யாதறி வீர்செறிமின்
கொன்றைக் குறுநறுங் கண்ணியி
னான்தன்கொய் பூங்கயிலைக்
குன்றைக் குறுகரி தேனும்உள்
ளத்திடைக் கொள்மின்களே.
தெளிவுரை : உடல் நலத்தைக் கெடுக்கும் இருமலும், பெரு மூச்சும் வந்தடைவதற்கு
முன்பு, கர்வங் கொண்டு அழிந்து போகாதீர்கள். நல்லதை அறிந்து சேருங்கள் கொன்றையின்
சிறிய மணம் பொருந்திய மாலையைத் தலைமாலையாகக் கொண்டவனது கயிலை மலையைச் சேர்வது
அருமையாயினும் உங்கள் மனத்தில் கொள்வீர்களாக.
வெண்பா
-
கொண்ட பலிநுமக்கும், கொய்தார் குமரர்க்கும்
புண்டரிக மாதினுக்கும் போதுமே? - மண்டி
உயிரிழந்தோர் சேர்புறங்காட்(டு) ஓரிவாய் ஈர்ப்ப
மயிரிழந்த வெண்டலைவாய் வந்து.
தெளிவுரை : நெருங்கிய இறந்தவர்களை எரிக்கும் சுடுகாட்டில் நரி வாயினால் ஈர்த்து
மயிரிழந்த கபாலத்தைக் கொண்டு எடுத்த பிச்சை உமக்கும், முருகனுக்கும்,
திருமகளுக்கும் போதுமோ என இயைக்க.
கட்டளைக் கலித் துறை
-
வந்தா(று) அலைக்கும் வலஞ்சுழி
வானவ வானவர்தம்
அந்தார் மகுடத் தடுத்தபைம்
போதில் தேனுழக்கிச்
செந்தா மரைச்செவ்வி காட்டும்
திருவடிக் கும்செல்லுமே
எந்தாய் அடித்தொண்டர் ஓடிப்
பிடித்திட்ட இன்மலரே.
தெளிவுரை : காவிரியாறு வந்து யாண்டும் மோதும் வலஞ்சுழி என்னும் தலத்தில்
எழுந்தருளியிருக்கும் தேவனே. வானவர்கள் சூட்டிய மலர்மாலையிலுள்ள தேனைக் கலக்கச்
செய்து திருமகள் வணங்கும் பாதங்களுக்கும் செல்லும் எம் தந்தையே. உன் அடியார்கள்
ஓடிப் பிடித்திடும் இன் மலராகும் அப்பாதங்கள் என்றபடி.
வெண்பா
-
மலர்ந்த மலர்தூவி மாமனத்தைக் கூப்பிப்
புலர்ந்தும் புலராத போதும் - கலந்திருந்து
கண்ணீர் அரும்பக் கசிவார்க்குக் காண்பெளியன்
தெண்ணீர் சடைக்கரந்த தே.
தெளிவுரை : மலர்ந்த மலர்களை அருச்சித்து, மனத்தை ஒருமுகப்படுத்தி
விடியற்காலையிலேயே கலந்திருந்து, கண்ணீர் அரும்பக் கசிந்து உருகுபவர்களுக்கு
காண்பதற்கு எளியன். அவன் கங்கையைச் சடையில் மறைத்து வைத்துள்ள தெய்வமாவான்
என்பதாம்.
கட்டளைக் கலித் துறை
-
தேவனைப் பூதப் படையனைக்
கோதைத் திருஇதழிப்
பூவனைக் காய்சினப் போர்விடை
தன்னொடும் போற்றநின்ற
மூவனை ஈருரு வாயமுக்
கண்ணனை முன்னுமறை
நாவனை நான்மற வேனிவை
நான்வல்ல ஞானங்களே.
தெளிவுரை : தேவனாக இருப்பவனை, பூதங்களைப் படையாக உடையவனை, கொன்றை மாலையை
அணிந்தவனை, மிகுந்த கோபமுள்ள காளை வாகனத்தைத் தன்னோடும் போற்ற நின்ற
மும்மூர்த்திகளாக இருப்பவனை ஆணும் பெண்ணுமாகிய இரண்டு உருவங்களும் மூன்று
கண்களும் உடையவனை எண்ணுகின்ற மறையோதும் நாவினை உடையவனை நான் மறக்க மாட்டேன். இவை
நான் அறிந்த ஞானங்களாகும்.
வெண்பா
-
நானும்என் நல்குரவும் நல்காதார் பல்கடையில்
கானிமிர்ந்து நின்றிரப்பக் கண்டிருக்கும் - வானவர்கள்
தம்பெருமான் மூவெயிலும் வேவச் சரந்தூர்த்த
எம்பெருமான் என்னா இயல்பு.
தெளிவுரை : நானும் என் வறுமையும், லோபிகளின் கடை வாசலில் கால் நோவக் காத்திருந்து
யாசிக்கக் கண்டிருக்கும் வானவர்கள் தம் பெருமானே! திரிபுரங்களும் பற்றி எரியச்
சரந்தொடுத்த எம்பெருமானே உன் இயல்பு என்ன?
கட்டளைக் கலித் துறை
-
இயலிசை நாடக மாயெழு
வேலைக ளாய் வழுவாப்
புயலியல் விண்ணொடு மண்முழு
தாய்ப்பொழு தாகிநின்ற
மயிலியல் மாமறைக் காடர்வெண்
காடர்வண் தில்லை மல்கு
கயலியல் கண்ணிபங் கார்அன்பர்
சித்தத்(து) அடங்குவரே.
தெளிவுரை : இயல் இசை நாடகமாய் ஏழுகடல்களாய் வழுவாப் புயலியல் விண்ணொடு மண்
முழுதாய்ப் பொழுதாகி நின்ற மயில்கள் அசைகின்ற திருமறைக்காட்டில்
எழுந்தருளியிருந்த வரும் வெண்காடரும் வண்தில்லை மல்கு அம்மையைப் பங்காக உடையவரும்
ஆன பெருமான் அடியார்களின் மனத்துக்குள் அடங்குவர்.
வெண்பா
-
அடங்காதார் ஆரொருவர் அங்கொன்றை துன்று
மடங்காதல் என்வளைகொள் வார்த்தை - நுடங்கிடையீர்
ஊரூரன் சென்றக்கால் உண்பலிக்கென்(று) அங்ஙனே
ஆரூரன் செல்லுமா(று) அங்கு.
தெளிவுரை : யார் ஒருவர் அடங்காதவர்? (எல்லாரும் அடங்குவர் என்றபடி) அழகிய கொன்றை
மலர் பொருந்திய காதலினால் வளைகளை இழந்த பெண் மக்களே! ஊர் ஊராகப் பிச்சை ஏற்றுச்
சென்றால் அப்படியே திருவாரூர் இறைவன் நீங்கள் இருக்கும் இடத்திற்கும் வருவான்.
கட்டளைக் கலித் துறை
-
அங்கை மறித்தவ ரால்அவி
உண்ணும்அவ் வானவர்கள்
தங்கை மறித்தறி யார்தொழு
தேநிற்பர் தாழ்சடையின்
கங்கை மறித்தண வப்பண
மாசுணக் கங்கணத்தின்
செங்கை மறித்(து)இர விற்சிவன்
ஆடுந் திருநட்டமே.
தெளிவுரை : அங்கை மறித்தவரால் அவி உண்ணும் வானவர்கள் வணங்காமல் இரார். தொழுதே
நிற்பர். நீண்ட சடையில் உள்ள கங்கை திரும்பிப் பாய, படத்தை யுடைய பாம்பு
கங்கணத்தின் செங்கை மறித்து, இரவில் சிவபெருமான் திருநடனம் ஆடுவார்.
வெண்பா
-
நட்டம்நீ ஆடும் பொழுதத்து நல்லிலயம்
கொட்டக் குழிந்தொழிந்த வாகொல்லோ - வட்டுக்
கடுங்குன்ற மால்யானைக் காருரிவை போர்த்த
கொடுங்குன்ற பேயின் கொடிறு.
தெளிவுரை : நீ நடனம் செய்யும் போது நல்ல தாளம் கொட்ட முடியாமற் போயிற்றோ? ஆடை
கொடிய மலையைப் போன்ற மால் யானையின் தோலாகும். கொடுங்குன்ற பேயின் கன்னம்
போர்த்திருக்கும்.
கட்டளைக் கலித் துறை
-
கொடிறு முரித்தன்ன கூன்தாள்
அல்லன் குருகினம் சென்(று)
இடறுங் கழனிப் பழனத்
தரசை எழில் இமையோர்
படிறு மொழிந்து பருகக்
கொடுத்துப் பரவை நஞ்சம்
மிடறு தடுத்தது வும்அடி
யேங்கள் விதிவசமே.
தெளிவுரை : கன்னம் முரிந்தது போன்ற வளைந்த காலையுடைய நண்டுகளைப் பறவைக் கூட்டம்
சென்று இடறும் கழனிகளையுடைய அரசை, எழில் இமையோர் வஞ்சக மொழிகளைச் சொல்லி உண்ணும்
படியாகக் கொடுத்த கடலின் விடத்தைக் கண்டம் தடுத்ததுவும் எங்கள் விதிவசமே.
வெண்பா
-
விதிகரந்த செய்வினையேன் மென்குழற்கே வாளா
மதுகரமே எத்துக்கு வந்தாய் - நதிகரந்த
கொட்டுக்காட் டான்சடைமேல் கொன்றைக் குறுந்தெரியல்
தொட்டுக்காட் டாய்சுழல்வாய் தொக்கு.
தெளிவுரை : விதி மறைத்த செய்வினையேன் மென்மையான கூந்தலுக்கு வீணாக வண்டே! எதற்காக
வந்தாய்? கங்கையை மறைத்த சுடுகாட்டில் நடனமாடுகின்ற சிவனது சடைமேல் உள்ள கொன்றை
மாலையைத் தொட்டுக் காட்டுவாயாக. தொக்குச் சுழல்வாயாக.
கட்டளைக் கலித் துறை
-
தொக்கு வருங்கணம் பாடத்தொல்
நீறணிந் தேநிலவும்
நக்கு வருங்கண்ணி குடிவந்
தார்நறும் புன்னைமுன்னம்
அக்கு வருங்கழிக் கானலை
யாறரைக் காணஅன்பு
மிக்கு வரும்அரும் போதவ
ரைக்காண வெள்குவனே.
தெளிவுரை : ஒரு சேர வரும் பூதக் கூட்டம் பாட, பழைமையான திருநீறு அணிந்து நிலவும்
ஒளி பொருந்திய மாலையைச் சூடிவந்தார். மணமுள்ள புன்னை முன்பு சங்கு வரும்
கழிக்கானல் ஆற்றை உடையவரைக் காண அன்பு மிக்கு வரும் போது அவரைக் காண நாணம்
உறுவேன்.
வெண்பா
-
வெள்காதே உண்பலிக்கு வெண்டலை கொண்(டு) ஊர்திரிந்தால்
எள்காரே வானவர்கள் எம்பெருமான் - வள்கூர்
வடதிருவீ ரட்டானத் தென்அதிகை மங்கைக்
குடதிருவீ ரட்டானங் கூறு.
தெளிவுரை : நாணாமல், பிச்சையேற்க கபாலத்தைக் கொண்டு ஊர் திரிந்தால் வானவர்கள்
இகழ்ந்து கூற மாட்டார்களா ? எம் பெருமானே! வளப்பம் பொருந்திய வட வீரட்டானத்துத்
தென் அதிகை மங்கை மேற்குத் திருவீரட்டானங் கூறு.
கட்டளைக் கலித் துறை
-
கூறு பெறுங்கண்ணி சேர்கருங்
கூந்தல்சுண் ணந்துதைந்து
நீறு பெறுந்திரு மேனி
நெருப்புப் புரைபெயருப்பொத்(து)
ஆறு பெறுஞ்சடை அங்கொன்றை
யந்தேன் துவலைசிந்த
வீறு பெறுஞ்சென்று சென்றெம்
பிரானுக்கு வெண்ணிறமே.
தெளிவுரை : கூறுபெறும் கண்ணிசேர் கருங்கூந்தல் பொடியாக நெருங்கி, திருநீறு பூசிய
திருமேனி நெருப்பு மலை போன்று பெறுஞ்சடை அங்கொன்றை அந்தேன் துளிகள் சிந்த, பெருமை
பொருந்திய எம்பெருமானுக்கு வெண்ணிறமே வாய்த்தது.
வெண்பா
-
நிறம்பிறிதாய் உள்மெலிந்து நெஞ்சுருகி வாளா
புறம்புறமே நாள்போக்கு வாளோ - நறுந்தேன்
படுமுடியாப் பாய்நீர் பரந்தொழுகு பாண்டிக்
கொடுமுடியாய் என்றன் கொடி.
தெளிவுரை : இது நற்றாய் கூற்று. என்னுடைய இளம்பெண் நிறம் வேறுபட்டு, உள்ளம்
மெலிந்து, நெஞ்சு உருகி, வீணாகத் திரிந்து நாள் போக்குவாளோ? நறுந்தேன் பாய்கின்ற,
நீர்பரந்து ஒழுகுகின்ற திருப்பாண்டிக் கொடுமுடி என்னும் சிவப்பதியாய்! அவளுக்கு
ஆறுதல் கூறுவீராக.
கட்டளைக் கலித் துறை
-
கொடிக்குல வும்மதிற் கோவலூர்
வீரட்டக் கோளரவம்
பிடிக்கில அம்முடிப் பூணலை
யத்தொடு மால்விடையின்
இடிக்குரல் கேட்டிடி என்றிறு
கக்கடி வாளெயிற்றால்
கடிக்க லுறும்அஞ்சி நஞ்சம்
இருந்தநின் கண்டத்தையே.
தெளிவுரை : கொடி வீசுகின்ற உயர்ந்த மதிலை யுடைய கோவலூர் வீரட்டத்து, தீமை
இழைக்கும் பாம்பு சிவபெருமானது முடியில் இருப்பதைப் பிடிக்காமல் பெரிய விடையின்
இடி போன்ற குரலைக் கேட்டு, முழக்கம் செய்து இறுக, கூரிய பற்களால் கடித்துவிடும்
என்று அஞ்சி நஞ்சு பொருந்திய நின்கண்டம் நடுங்கிற்று.
வெண்பா
-
கண்டம் நிறங்கறுப்பக் கவ்வைக் கருங்கடல்நஞ்(சு)
உண்டல் புரிந்துகந்த உத்தமற்குத் - தொண்டடைந்தார்
கூசுவரே கூற்றைக் குறுகுவரே தீக்கொடுமை
பேசுவரே மற்றொருவர் பேச்சு.
தெளிவுரை : கண்டம் நிறங்கறுப்ப ஒலிமிகுந்த கரிய கடலின் விஷத்தை உண்ட
உத்தமருக்குத் தொண்டாற்றுகின்றவர்கள் எமனைக் கண்டு அஞ்சுவார்களோ? தீக் கொடுமையைக்
குறுகுவரோ? மற்றொருவர் பேச்சைப் பேசுவார்களோ?
கட்டளைக் கலித் துறை
-
பேய்ச்சுற்றம் வந்திசை பாடப்
பிணமிடு காட்டயலே
தீச்சுற்ற வந்துநின் றாடல்என்
னாஞ்செப்பு முப்பொழுதும்
கோச்சுற்ற மாக்குடை வானவர்
கோனயன் மால்முதலா
மாச்சுற்றம் வந்திறைஞ் சுந்திருப்
பொற்சடை மன்னவனே.
தெளிவுரை : பேய்களாகிய உறவினர்கள் வந்து இசை பாடப் பிணத்தை இடுகின்ற சுடுகாட்டில்
தீச்சுற்ற வந்து ஆடுகின்ற ஆடல் எதற்காக என்று சொல்வாயாக ! மூன்று நேரத்திலும்
இந்திரன், பிரமன், திருமால் முதலான பெருமை தங்கிய உறவு வந்து துதிக்கின்ற பொற்
சடை மன்னவனே செப்பு என்று முடிக்க.
வெண்பா
-
மன்னும் பிறப்பறுக்கும் மாமருந்து வாளரக்கன்
துன்னும் சுடர்முடிகள் தோள்நெரியத் - தன்னைத்
திருச்சத்தி முற்றத்தான் சித்தத்துள் வைத்தான்
திருச்சத்தி முற்றத்தான் தேசு.
தெளிவுரை : இராவணன் துன்னும் சுடர் முடிகளும் தோளும் நெரிய அழகிய ஆண்மை
முழுவதுமாகத் தன் சித்தத்துள் வைத்தான். திருச்சித்தி முற்றம் என்னும்
சிவப்பதியில் கோயில் கொண்டிருக்கும் இறைவனது தேசை, நிலை பெற்ற பிறப்பறுக்கும்
மாமருந்து என வைத்தான் என்க.
திருச்சிற்றம்பலம்
சிவபெருமான் திருவந்தாதி(கபிலதேவநாயனார் அருளிச்செய்தது )
இவ் அந்தாதியில் திருவாரூர், திருவொற்றியூர், திருவண்ணாமலை, ஆவூர்,
திருவாமாத்தூர், திருவேங்கடம், கூடல், திருவெண்காடு, திருமறைக்காடு, சிராமலை.
பூம்புகார், திருக்கானப்பேர், இடுமணல், ஆக்கூர், புறந்தை, காரோணம், திருவாடானை,
திருப்பழனம், திருப்புன்கூர், மண்டளி, கோகரணம், கோப்பாடி, குற்றாலம், புகலூர்,
களந்தை, தலையாலங்காடு, செங்குன்றூர் முதலிய பல திருவூர்கள் குறிப்பிடப்
பட்டுள்ளன. பலபாடல்களின் பொருள்கள் இதுதான் என்று உறுதிபெற உரைக்க முடியாத
நிலையில் உள்ளன.
திருச்சிற்றம்பலம்
வெண்பா
-
ஒன்று முதலாக நூறளவும் ஆண்டுகள்வாழ்ந்(து)
ஒன்றும் மனிதர் உயிரையுண் - டொன்றும்
மதியாத கூற்றுதைத்த சேவடியான் வாய்ந்த
மதியான் இடப்பக்கம் மால்.
தெளிவுரை : ஒன்று முதலாக நூறு ஆண்டுகள் வாழ்ந்து சேர்ந்திருக்கும் மனிதர்களது
உயிரையுண்டு, யாதொன்றையும் மதியாமல் இருக்கும் காலனை உதைத்த செம்மையான
பாதங்களையுடைய சிவபெருமான், சடையில் திங்களையுடையவன். இடப்பக்கத்தில் திருமாலை
யுடையவன்.
-
மாலை ஒருபால் மகிழ்ந்தானை வண்கொன்றை
மாலை ஒருபால் முடியானை - மாலை
ஒளியானை உத்தமனை உண்ணாநஞ்(சு) உண்டற்(கு)
ஒளியானை ஏத்தி உளம்.
தெளிவுரை : திருமாலை இடப்பாகத்தில் கொண்டிருப்பவனை, வண்கொன்றை மாலையை முடியில்
உடையானை, மாலைப் பொழுதைப் போன்ற ஒளியுடையவனை, உத்தமனை, உண்ணத்தகாத நஞ்சை உண்டற்கு
மறைந்து கொள்ளாதவனை, மனமே! நீ துதிப்பாயாக.
-
உளமால்கொண்(டு) ஓடி ஒழியாது யாமும்
உளமாகில் ஏத்தாவா(று) உண்டே - உளம்மாசற்(று)
அங்கமலம் இல்லா அடல்வெள்ளே(று) ஊர்ந்துழலும்
அங்கமல வண்ணன் அடி.
தெளிவுரை : உள்ளம் மயக்கம் கொண்டு ஓடாமல் நாமும் இருந்தால் நம்மையும்
புகழ்வாருண்டு. மனம் குற்றங்களினின்று நீங்கி, வலிமைமிக்க வெள்ளேறு ஊர்ந்து
உழலும் அழகிய தாமரை மலர் போன்ற நிறமுடைய சிவபெருமானது பாதங்களை வணங்குவோமாக.
-
அடியார்தம் ஆருயிரை அட்டழிக்கும் கூற்றை
அடியால் அருவாகச் செற்றான்- அடியார்தம்
அந்தரத்தால் ஏத்தி அகங்குழைந்து மெய்யரும்பி
அந்தரத்தார் சூடும் அலர்.
தெளிவுரை : அடியார்களுடைய ஆருயிரைக் கொன்றழிக்கும் காலனைத் தம் பாதங்களால் உருவம்
இல்லாதபடி அழித்தவனை, அடியார்கள் மனதினால் தியானித்து, உள்ளம் உருகி, மெய்
சிலிர்த்து, மனத்தினால் மலர் மாலை சூட்டி வழிபடுவர்.
-
அலராளுங் கொன்றை அணியல் ரூரற்(கு)
அலராகி யானும் அணிவன் - அலராகி
ஓதத்தான் ஒட்டினேன் ஓதுவன்யான் ஓங்கொலிநீர்
ஓதத்தான் நஞ்சுண்டான் ஊர்.
தெளிவுரை : கொன்றை மாலையை அணியும் ஆரூரற்கு நான் பழிச்சொல் ஆகி அணிவன், பேரொலி
யுடையானை விரும்பினேன். கடலிலிருந்து எழுந்த நஞ்சை உண்டவனது ஊரை நான் துதிப்பேன்.
இது தலைவி கூற்று.
-
ஊரும(து) ஒற்றியூர் உண்கலனும் வெண்தலையே
ஊரும் விடையொன்(று) உடைதோலே - ஊரும்
படநாகம் மட்டார் பணமாலை ஈதோ
படநாகம் அட்டார் பரிசு.
தெளிவுரை : அவனது ஊர் திருவொற்றியூர். அவன் உண்ணும் பாத்திரம் பிரம கபாலம்,
வாகனமாக உள்ளது காளை, ஆடை தோல், ஊர்ந்து செல்லும் படத்தையுடைய பாம்பு அவனது
மாலையாகும். இறந்து படும்படி யானையைச் சங்கரித்து அவனது பரிசாகும்.
-
பரியானை ஊராது பைங்கண் ஏ(று) ஊரும்
பரியானைப் பாவிக்க லாகா - பரியானைக்
கட்டங்கம் ஏந்தியாக் கண்டுவாழ் நன்னெஞ்சே
கட்டங்கம் ஏந்தியாக் கண்டு.
தெளிவுரை : குதிரையையும் யானையையும் வாகனமாகக் கொள்ளாமல் பசுமையான கண்களையுடைய
காளையை ஏறி நடத்தும் பெரியவனை, கட்டிய எலும்பை ஆபரணமாக ஏந்தியவனை மனமே! மழு
ஏந்திய அவனைக் கண்டு வாழ்வாயாக.
-
கண்டங் கரியன் உமைபாலும் தன்பாலும்
கண்டங் கரியன் கரிகாடன் - கண்டங்கள்
பாடியாட் டாடும் பரஞ்சோதிக்(கு) என்னுள்ளம்
பாடியாக் கொண்ட பதி.
தெளிவுரை : அவன் நீல கண்டன்; (கழுத்துக் கருமையாக அமையப் பெற்றவன்) உமையின்
பாகமும் தன்பாகமும் தன்னிடத்தே தங்கிய அருமையானவன். சுடுகாட்டில் ஆடுபவன்.
கண்டங்கள் பாடி ஆட்டாடும் பரஞ் சோதிக்கு என்னுள்ளம் தங்கும் இடமாயிற்று.
-
பதியார் பழிதீராப் பைங்கொன்றை தாவென்
பதியான் பலநாள் இரக்கப் - பதியாய
அம்மானார் கையார் வளைகவர்ந்தார் அஃதேகொல்
அம்மானார் கையார் அறம்.
தெளிவுரை : ஊரார் அலர் உரையைத் தீர்க்காத பைங்கொன்றைதா என்று யான் பல நாளும்
யாசிக்கின்றேன். தலைவராகிய அழகிய மான் பொருந்திய கையை உடையவர் என் வளையைக்
கவர்ந்தார். இதுதான் அந்த இறைவரது ஒழுக்கம் போலும்.
-
அறமானம் நோக்கா(து) அநங்கனையும் செற்றங்(கு)
அறமாநஞ் சுண்ட அமுதன்- அறமான
ஓதியாள் பாகம் அமர்ந்தான் உயர்புகழே
ஓதியான் தோற்றேன் ஒளி.
தெளிவுரை : அறமானவைகளைப் பாராமல் மன்மதனை எரித்து அறத்துக்காக நஞ்சை அமுதமாகக்
கருதி உண்டவன். அறமே கூந்தலாக உடையவளைத் தனது இடப்பாகத்தில் உடையவன். உயர்புகழையே
உரைத்து நான் என் அழகை இழந்தேன்.
-
ஒளியார் சுடர்மூன்றும் கண்மூன்றாக் கோடற்(கு)
ஒளியான் உலகெல்லாம் ஏத்தற்(கு) - ஒளியாய
கள்ளேற்றான் கொன்றையான் காப்பிகந்தான் நன்னெஞ்சே
கள்ளேற்றான் கொன்றை கடிது.
தெளிவுரை : ஒளியுடைய ஞாயிறு, திங்கள், தீ ஆகிய மூன்றையும் கண் மூன்றாகக்
கொள்ளுதலுக்கு மறைக் காதவன். உலகெல்லாம் புகழ்வதற்கு ஒளியாய தேன் பொருந்திய
கொன்றை மாலையை அணிந்தான் கட்டுப் பாட்டை இழந்தான். நன்னெஞ்சே! விரைவில் கொன்றை
மாலையைத் தா என்று கேள்.
-
கடியரவர் அக்கர் கரிதாடு கோயில்
கடியரவர் கையதுமோர் சூலம் - கடியரவர்
ஆனேற்றார்க்(கு) ஆட்பட்ட நெஞ்சமே அஞ்சல்நீ
ஆனேற்றார்க்(கு) ஆட்பட்டேம் யாம்.
தெளிவுரை : கடிக்கும் இயல்பை யுடைய பாம்பை யுடையவர். உருத்திராக்கத்தை அணிந்தவர்.
சுடுகாடே அவரது கோயில். கடுமையானவர். சூலத்தைக் கையில் ஏந்தியவர். இடப வாகனத்தை
உடையவருக்கு ஆட்பட்ட நெஞ்சமே, நீ பயப்படாதே அவர் நம்மைக் கைவிடமாட்டார் என்பதாம்.
-
யாமான நோக்கா(து) அலர்கொன்றைத் தார்வேண்ட
யாமானம் கொண்டங்(கு) அலர்தந்தார் - யாமாவா
ஆவூரா ஊரும் அழகா அனலாடி
ஆவூரார்க்(கு) என்னுரைக்கோம் யாம்.
தெளிவுரை : யாம் மானத்தை நோக்காமல் ( நாம் பெருமையைப் பொருட்படுத்தாமல்) அலர்ந்த
கொன்றை மாலையை வேண்ட, அவர் நம்முடைய மானத்தை எடுத்துக் கொண்டு ஊரார் பழிச்
சொல்லைத் தந்தார். யாம் விரும்புகின்ற ஆவூரா, அழகா, தீயின் நடுவில் நின்று
ஆடுகின்றவனே! யாம் ஊரார்க்கு என்ன பதில் சொல்வது?
-
யானென்றங்(கு) அண்ணா மலையான் அகம்புகுந்து
யானென்றங்(கு) ஐயறிவும் குன்றுவித்து - யானென்றங்(கு)
ஆர்த்தானே ஆயிடினும் அம்பரன்மேல் அங்கொன்றை
ஆர்த்தானேல் உய்வ(து) அரிது.
தெளிவுரை : யான் என்று அங்கு அண்ணாமலையான் வீடு புகுந்து, அன்று என் ஐயறிவையும்
குறையச் செய்து, ஆர்த்தானே ஆயிடினும் விண்வெளியை உடையவன் தனது கொன்றை மாலையைத்
தராவிட்டால் பிழைப்பது அரிது என்றவாறு.
-
அரியாரும் பூம்பொழில்சூழ் ஆமாத்தூர் அம்மான்
அரியாரும் பாகத்(து) அமுதன் - அரியாரும்
வேங்கடத்து மேயானை மேவா உயிரெல்லாம்
வேங்கடத்து நோயால் வியந்து.
தெளிவுரை : வண்டுகள் பொருந்திய பூம்பொழில்கள் சூழ்ந்த திருவாமாத்தூர் அம்மான்,
திருமாலை இடப்பாகத்தில் உடையவன். சிங்கங்கள் சஞ்சரிக்கின்ற திருவேங்கடத்தில்
கோயில் கொண்டிருக்கும் பெருமானைப் பொருந்தாத உயிரெல்லாம் உடல் நோயால் வேம் என்று
கூட்டுக.
-
வியந்தாழி நன்னெஞ்சே மெல்லியலார்க்(கு) ஆளாய்
வியந்தாசை யுள்மெலிய வேண்டா - வியந்தாய
கண்ணதலான் எந்தைகா பாலி கழலடிப்பூக்
கண்ணுதலாம் நம்பாற் கடன்.
தெளிவுரை : நன்னெஞ்சே ! புகழ்ந்து ஆழ்வாயாக, மெல்லியலார்க்கு ஆளாய் வியந்து
ஆசையுள் மெலிய வேண்டா, வியந்தாய கண்ணுதலான், எந்தை மண்டை யோட்டை ஏந்தியவன்
கழலடியை எண்ணுதல்தான் நம் கடன் என்பதாம்.
-
கடனாகம் ஊராத காரணமும் கங்கை
கடனாக நீகவர்ந்த வாறும் - கடனாகப்
பாரிடந்தான் மேவிப் பயிலும் பரஞ்சோதி
பாரிடந்தான் மேயாப் பணி.
தெளிவுரை : பூமியைத் தோண்டிய திருமாலை ஒருபாகமாக வைத்துப் பயிலும் பரஞ்சோதி
இவ்வுலகைப் பொருந்தியிருப்பதால் அவனைப் பணி, கடல் நாகம் ஊர்ந்து செல்லாத காரணமும்
கங்கையை நீ கவர்ந்த செயலும் யாது கருதி?
-
பணியாய் மடநெஞ்சே பல்சடையான் பாதம்
பணியாத பத்தர்க்குஞ் சேயன் - பணியாய
ஆகத்தான் செய்துமேல் நம்மை அமரர்கோன்
ஆகத்தான் செய்யும் அரன்.
தெளிவுரை : மடநெஞ்சே! பல்சடையான் பாதங்களைப் பணிவாயாக. அவ்வாறு பணியாத
பக்தர்களுக்கு அவன் தொலைவில் உள்ளவன். பாம்புகள் பொருந்திய உடம்பை உடையவன். அவனை
வணங்கினால் அவன் நம்மை இந்திரனாகச் செய்வான்.
-
அரன்காய நைவேற்(கு) அநங்கவேள் அம்பும்
அரன்காயும் அந்தியும்மற்(று) அந்தோ! - அரங்காய
வெள்ளில்சேர் காட்டாடி வேண்டான் களிறுண்ட
வெள்ளில்போன்(று) உள்ளம் வெறிது.
தெளிவுரை : அரன் வருத்த வருந்துகின்ற எனக்கு மன்மதனது அம்பும் மாலைப் போதும் ஐயோ;
அரங்காகப் பொருந்திய வெள்ளியம்பலத்தில் சேர்ந்த இடுகாட்டில் ஆடுபவன் வேண்டான்.
யானை நோயால் உள்ளீடற்ற விளாங்கனி போல் ஆனேன் என்பதாம்.
-
வெறியானை ஊர்வேந்தர் பின்செல்லும் வேட்கை
வெறியார்பூந் தாரான் விமலன் - வெறியார்தம்
அல்லல்நோய் தீர்க்கும் அருமருந்தாம் ஆரூர்க்கோன்
அல்லனோ நெஞ்சே அயன்.
தெளிவுரை : மதம் பிடித்த யானையைத் தொடர்ந்து ஊர் வேந்தர் பின் செல்லும் வேட்கை
உடையவர்கள். அதுபோல மணம் பொருந்திய மலர் மாலையை யுடைய விமலன் பித்துப்
பிடித்தவர்கள் துன்ப நோயைத் தீர்க்கும் அருமருந்தாகும். திருவாரூரில் கோயில்
கொண்டிருக்கும் அந்த இறைவனை நெஞ்சே வணங்குவாயாக.
-
அயமால்ஊண் ஆடரவம் நாண்அதள(து) ஆடை
அயமாவ(து) ஆனேறூர் ஆரூர் - அயமாய
என்னக்கன் தாழ்சடையன் நீற்றன் எரியாடி
என்னக்கன் றாழும் இவள்.
தெளிவுரை : பிச்சை எடுக்கும் சோறு உணவாகும். ஆடுகின்ற பாம்பு நாணாகும். தோலே
ஆடையாகும். குதிரையைப் போன்ற வாகனமாக இருப்பது காளை. ஊர் திருவாரூர். என்
தலைவனாகிய சிவபெருமான் தொங்குகின்ற சடையை உடையவன் திருநீறு அணிந்தவன். தீயில்
ஆடுபவன். அவனிடத்தில் இவள் விருப்பம் கொண்டவள்.
-
ஆழும் இவளையும் கையகல ஆற்றேனென்(று)
ஆழும் இவளை அயராதே - ஆழும்
சலமுடியாய் சங்கரனே சங்கக் குழையாய்
சலமுடியா(து) இன்றருள்உன் தார்.
தெளிவுரை : துன்பத்தில் ஆழும் இவளையும் கைவிட மாட்டேன் என்று அயராமல் ஆழும்
கங்கையை முடியில் வைத்த சங்கரனே சங்கக் குழையாய் துன்பத்தைத் தாங்க முடியாது.
குண்டலத்தால் தாங்க முடியாது என்க.
-
தாராய தண்கொன்றை யானிரப்பத் தானிதனைத்
தாராதே சங்கம் சரிவித்தான் - தாராவல்
ஆனைமேல் வைகும் அணிவயல்ஆ ரூர்க்கோன்நல்
ஆனையும் வானோர்க்(கு) அரசு.
தெளிவுரை : குளிர்ந்த கொன்றை மாலையைத் தருமாறு நான் வேண்டிக் கேட்க, அதை அவன்
தாராமல் என் கைவளையல்களைக் கழலச் செய்தான். தாராவல் யானைமேல் வைகும் நிலவள மிக்க
திருவாரூர் எம்பெருமான் தேவர்க்குத் தலைவனாவான்.
-
அரசுமாய் ஆள்விக்கும் ஆட்பட்டார்க்(கு) அம்மான்
அரசுமாம் அங்கொன்று மாலுக்(கு) - அரசுமான்
ஊர்தி எரித்தான் உணரும் செவிக்கின்பன்
ஊர்தி எரித்தான் உறா.
தெளிவுரை : அடியவர்களுக்கு அவன் அரசாய் இருந்து ஆள்விப்பான் உமாதேவிக்கும்
திருமாலுக்கும் அரசாவான். மன்மதனை எரித்தான். செவிக்கு இன்பமானவன். பகையாய
திரிபுரங்களையும் எரித்தவன் அவன் என்க.
-
உறாவேயென் சொற்கள் ஒளிவளைநின் உள்ளத்(து)
உறாவேதீ உற்றனகள் எல்லாம் - உறாவேபோய்க்
காவாலி தார்நினைந்து கைசோர்ந்து மெய்மறந்தாள்
காவாலி தானின் கலை.
தெளிவுரை : என் சொற்கள் பொருந்த மாட்டா, பெண்ணே! நான் சொல்வது உன்மனத்தில்
பொருந்தவில்லையே! நீ நினைப்பவை யாவும் கைகூடிவரா அந்தக் காபாலியிடம் (கபாலத்தைக்
கையில் ஏந்தியவன்) மையல் கொண்டு ஆடை நெகிழ கைசோர்ந்து மெய்மறந்தாள் என்க.
-
கலைகாமின் ஏர்காமின் கைவளைகள் காமின்
கலைசேர் நுதலிர்நாண் காமின் - கலையாய
பான்மதியன் பண்டரங்கன் பாரோம்பு நான்மறையன்
பால்மதியன் போந்தான் பலிக்கு.
தெளிவுரை : பிறைத் திங்களைப் போன்ற நெற்றியை உடையவர்களே ! கலைகளையுடைய வெள்ளிய
பிறைத் திங்களைச் சூடியவன். பாண்டரங்கம் என்னும் சிவபுரக் கூத்தை ஆடுபவன்; இவ்
உலகைக் காக்கும் நான்மறையன்; அவன் பிச்சைக்குப் புறப்பட்டு விட்டான். உங்கள்
ஆடைகளையும் அழகையும், கைவளைகளையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
-
பலிக்குத் தலையேந்திப் பாரிடங்கள் சூழப்
பலிக்கு மனைபுகுந்து பாவாய் - பலிக்குநீ
ஐயம்பெய் என்றானுக்கு ஐயம்பெய் கின்றேன்மேல்
ஐயம்பெய் தான்அநங்கன் ஆய்ந்து.
தெளிவுரை : பிச்சைக்கு மண்டை யோட்டை ஏந்தி, பூதங்கள் சூழ வீடுகளுக்குச் சென்று,
பாவாய்! பிச்சை போடு என்றான். நான் பிச்சை போட்ட போது மன்மதன் என்மேல் ஐந்து மலர்
அம்புகளைச் செலுத்தினான்.
-
ஆயம் அழிய அலர்கொன்றைத் தார்வேண்டி
ஆயம் அழிய அயர்வேன்மேல் - ஆயன்வாய்த்
தீங்குழலும் தென்றலும் தேய்கோட்(டு) இளம்பிறையும்
தீங்குழலும் என்னையே தேர்ந்து.
தெளிவுரை : தோழியர்கள் கூட்டம் அங்கிருந்து செல்ல, அவர் கொன்றைத் தார் வேண்டி
நான் வருந்திய போது இடையன் இனிமையாக ஊதும் வேய்ங் குழலும் தென்றலும் தேய்பிறையும்
என்னைத் தேர்ந்தெடுத்து, தீமையைச் செய்து திரிகின்றன.
-
தேரோன் கதிரென்னும் செந்தழலால் வெந்தெழுபேய்த்
தேரோன் கதிரென்னும் செய்பொருள்நீ - தேராதே
கூடற்கா வாலி குரைகழற்கா நன்னெஞ்சே
கூடற்கா வாலிதரக் கூர்.
தெளிவுரை : தேரையுடைய கதிரவனின் ஒளி வெப்ப மிகுதியால் வெந்தெழுகின்ற கானலின்
எழுச்சி கானலைப் போன்றது. நெஞ்சமே ! நீ ஆராயாமல் கூடற் பெருமானைச் சேரும்
பொருட்டு, உருகிக் கண்ணீர் ஒழுக வருந்துகின்றாய்.
-
கூரால மேயாக் குருகோடு நைவேற்குக்
கூரார்வேற் கையார்க்காய்க் கொல்லாமே - கூரார்
பனிச்சங்காட் டார்சடைமேற் பால்மதியைப் பாம்பே
பனிச்சங்காட் டாய்கடிக்கப் பாய்ந்து.
தெளிவுரை : பிறையைப் பொருந்திய நஞ்சேயாக, வளையலோடு வருந்துகின்றவளாகிய எனக்கு,
கூர்மையான சூலபாணியே ! குளிர்ந்த சடையின் மேல் உள்ள வெண்மையான பிறையைப் பாம்பு
கடிக்குமாறு எனக்கு வேடிக்கை காட்டுகின்றாய் ! பிறை என்னை வருத்துவதை நீ அறியாயா
என்றபடி.
-
பாயும் விடையூர்தி பாசுபதன் வந்தெனது
பாயிற் புகுதப் பணை முலைமேல் - பாயில்அனற்
கொன்றாய் குளிர்சடையாற்(கு) என்நிலைமை கூறாதே
கொன்றாய் இதுவோ குணம்.
தெளிவுரை : பாயும் தன்மையுள்ள இடபத்தை ஊர்தியாக உடைய சிவபெருமான் வந்து எனது
பாயில் புகுந்த அளவில், பருத்த முலைமேல் பொருந்தினால் நல்ல கொன்றை மாலையே!
குளிர்ந்த சடையை யுடையவர்க்கு என் நிலைமையைக் கூறாமல் விட்டு விட்டாயே! உன்னுடைய
குணம் இதுதானா ?
-
குணக்கோடி கோடாக் குளிர்சடையான் வில்லின்
குணக்கோடிக் குன்றம்சூழ் போகிக் - குணக்கோடித்
தேரிரவில் வாரான் சிவற்(கு)ஆளாம் சிந்தனையே
தேரிரவில் வாழும் திறம்.
தெளிவுரை : குணக்கோடி கோணாத குளிர் சடையான் வில்லின் கிழக்காய் ஓடி மலையைச்
சுற்றிச் சென்று குணம் வேறுபட்டு இரவில் தேரில் வரமாட்டான். அத்தகைய
சிவபெருமானுக்கு ஆளாகும் நினைவையே கொள்வாயாக ! அதுதான் நீ இரவில் துன்பப்படாமல்
வாழும் திறமாகும்.
-
திறங்காட்டும் சேயாள் சிறுகிளியைத் தான்தன்
திறங்காட்டும் தீவண்ணன் என்னும் - திறங்காட்டின்
ஊர்அரவம் ஆர்த்தானோ(டு) என்னை உடன்கூட்டின்
ஊரஅரவம் சால உடைத்து.
தெளிவுரை : அழகு காட்டும் செந்நிறமுடையவன் இந்தச் சிறு கிளியை நோக்கி, தன்
திறத்தைக் காட்டும் தீ வண்ணன் என்பாள். அந்தத் திறத்தைக் காட்டினால் ஊர்ந்து
செல்லும் பாம்பைக் கட்டியவனோடு என்னைச் சேர்த்து வைத்தால் ஊரார் தூற்றும் பழிச்
சொல் அதிகரிக்கும் என்பாள்.
-
உடையோடு காடாடி ஊர்ஐயம் உண்ணி
உடையாடை தோல்பொடிசந்(து) என்னை - உடையானை
உன்மத் தகமுடிமேல் உய்த்தானை நன்னெஞ்சே
உன்மத் தகமுடிமேல் உய்.
தெளிவுரை : தோலாடையோடு சுடுகாட்டில் நடனமாடுகின்றவன். ஊரார் இடும் பிச்சையை
உண்பவன். திருநீறே பூசும் சந்தனம். என்னை அவன் ஆட்கொண்டான். ஊமத்தை மலர் சூடிய
சடையை உடையவன். நன்னெஞ்சே! உன்மத்தக முடிமேல் அவனை வைத்து உய்தி பெறுவாயாக.
-
உய்யாதென் ஆவி ஒளிவளையும் மேகலையும்
உய்யா(து) உடம்பழிக்கும் ஒண்திதலை - உய்யாம்
இறையானே ஈசனே எம்மானே நின்னை
இறையானும் காண்கிடாய் இன்று.
தெளிவுரை : என் உயிர் பிழைக்காது. ஒளிவளையும் மேகலையும் உடம்பிலிருந்து நழுவி
விடும், ஒளியுள்ள பசலை மார்பில் படரும். இறைவனே! ஈசனே! எம்மானே ! உன்னை இன்று
கொஞ்ச நேரமாகிலும் காண அருள் செய்வாயாக.
-
இன்றியாம் உற்ற இடரும் இருந்துயரும்
இன்றியாம் தீர்தும் எழில்நெஞ்சே - இன்றியாம்
காட்டாநஞ் சேற்றாஅன் காமரு வெண்காட்டான்
காட்டான்அஞ் சேற்றான் கலந்து.
தெளிவுரை : இன்று யாம் உற்ற துன்பமும். பெருந் துயரமும் இல்லாமல் யாம்
போக்குவோம். எழில் நெஞ்சே! திருநீல கண்டனும் திருவெண் காட்டை யுடையவனுமாகிய அவன்
அருள் பாலிப்பான். அஞ்சாதே என்பதாம்.
-
கலம்பெரியார்க்(கு) ஆம்சிரம்காய் வில்மேரு என்னும்
கலம்பெரிய ஆல்கீழ் இருக்கை - கலம்பிரியா
மாக்கடல்நஞ் சுண்டார் கழல்தொழார்க்(கு) உண்டாமோ
மாக்கடனஞ் சேரும் வகை.
தெளிவுரை : உண்கலம் நான் முகனுடைய தலையோடு, பகைவரைக் காயும் வில் பெரிய மேரு
என்னும் மலை, இருப்பிடம் அழகிய பெரிய ஆலமரத்தின் கீழ் இடம் மரக்கலம் பிரியாத
பெரிய கடலில் இருந்து எழுந்த விடத்தை உண்டவரது கழலைத் தொழாதவர்க்குப் பிறவிக்
கடலைக் கடக்கும் வகை உண்டோ? இல்லை என்பதாம்.
-
கையா(று) ஆவாவெகுளி அச்சம் கழிகாமம்
கையாறு செஞ்சடையான் காப்பென்னும் - கையாறு
மற்றிரண்ட தோளானைச் சேர்நெஞ்சே சேரப்போய்
மற்றிரண்ட தோளான் மலை.
தெளிவுரை : (திருக்குறள்) அழுக்காறு, அவா, வெகுளி, அச்சம், அளவு கடந்த காமம்
இவைகளைக் கடிந்தவனும் செஞ்சடையை உடையவனுமாகிய இறைவன் காப்பான் என்னும் ஒழுக்க
நெறியுடன் மற்போருக்கு ஏற்றவாறு திரண்டுள்ள தோள்களை யுடையவனை, நெஞ்சமே! நீ
சேர்வாயாக! அதுவே அவனை அடையும் வழியாகும்.
-
மனையாய் பலிக்கென்று வந்தான்வண் காமன்
மனையா சறச்செற்ற வானோன் - மனையாய
என்பாவாய் என்றேனுக்(கு) யானல்லேன் நீதிருவே
என்பாவாய் என்றான் இறை.
தெளிவுரை : மனைக்கு, பிச்சைக்கென்று வந்தான், மன்மதனை எரித்த வானோன். என்பு
மாலையை அணிந்தவனே, என்றேனுக்கு யான் அல்லன். நீ திரு; என்னுடைய பெண்ணே என்றான்
இறைவன்.
-
இறையாய வெண்சங்(கு) இவைதருவேன் என்னும்
இறையாகம் இன்றருளாய் என்னும் - இறையாய்
மறைக்காட்டாய் மாதவனே நின்னுருவம் இங்கே
மறைக்காட்டாய் என்னும்இம் மாது.
தெளிவுரை : முன்கை இடத்தவாய வெள்ளிய வளையல் ஆகிய இவை தருவேன். கொஞ்ச நேரம் உன்
மார்பை அருளாய் என்னும். இறைவனே ! திருமறைக் காட்டை யுடையவனே! மாதவனே! நின்
உருவம் இங்கே காட்டாது ஒழி என்று இம்மாது கூறுவாள்.
-
மாதரங்கம் தன்னரங்கஞ் சேர்த்தி வளர்சடைமேல்
மாதரங்கக் கங்கைநீர் மன்னுவித்து - மாதரங்கத்
தேரானை யூரான் சிவற்காளாம் சிந்தனையே
தேரானை யூரானைத் தேர்.
தெளிவுரை : உமாதேவியை இடப்பாகத்தில் வைத்து, சடைமேல் கங்கையைப் பொருத்துவித்து
காவிரி யாற்றின் அலை வீசுகின்ற திருவானைக்காவில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு
ஆளாகும் எண்ணத்தையே கொள்.
-
தெருளிலார் என்னாவார் காவிரிவந் தேறும்
அருகில் சிராமலையெங் கோமான் - விரியுலகில்
செல்லுமதில் மூன்றெரித்தான் சேவடியே யாம்பரவிச்
செல்லும்எழில் நெஞ்சே தெளி.
தெளிவுரை : தெளிவில்லாதவர்கள் என்னாவார்கள். அருகில் காவிரி வந்து மோதுகின்ற
திரிசிராமலையில் கோயில் கொண்டிருக்கும் எம்பெருமான் சுற்றித் திரியும் இயல்புள்ள
மூன்று மதில்களையும் எரித்த சேவடியே யாம் பரவிச் செல்லும் எழில் நெஞ்சே !
தெளிவாயாக.
-
தெளியாய் மடநெஞ்சே செஞ்சடையான் பாதம்
தெளியாதார் தீநெறிக்கண் செல்வர் - தெளியாய
பூவார் சடைமுடியான் பொன்னடிக்கே ஏத்துவன்நற்
பூவாய வாசம் புனைந்து.
தெளிவுரை : மட நெஞ்சே ! நீ தெளிய மாட்டாய். செஞ்சடையான் பாதம் தெளியாதார் தீ
நெறிக்கண் செல்வர். தெளிவு அமைந்த பூவார் செஞ்சடையான் பொன்னடிக்கே நற்பூவாய வாசம்
புனைந்து ஏத்துவன் என்றபடி.
-
புனைகடற்குப் பொன்கொடுக்கும் பூம்புகார் மேயான்
புனைகடுக்கை மாலைப் புராணன் - புனைகடத்து
நட்டங்கம் ஆட்டயரும் நம்பன் திருநாமம்
நட்டங்க மாட்டினேன் நக்கு.
தெளிவுரை : புனை கடற்குப் பொன்னியென்னும் காவிரியைக் கொடுக்கும் காவிரிப்பூம்
பட்டினத்தில் மேவியிருக்கும் கொன்றை மாலையை யணியும் பழமையானவன். சுடுகாட்டில்
நடனமாடும் நம்சிவன் திருப்பெயரைப் பொருந்த அழுத்தி வைத்தேன்.
-
நக்கரை சாளும் நடுநாளை நாரையூர்
நக்கரை வக்கரையோம் நாமென்ன - நக்குரையோம்
வண்டாழங் கொன்றையான் மால்பணித்தான் மற்றவர்க்காய்
வண்டாழங் கொண்டான் மதி.
தெளிவுரை : விரும்பி அரசாளும் நடுநாளை நாரையூரில் மேவியிருக்கும் சிவபெருமானை
இகழ்ந்துரையோம். வண்டு படிகின்ற அழகிய கொன்றை மாலையை உடையவன். மற்றவர்க்கா
மயக்கத்தைத் தந்தான். நீ அவனை மதித்து வணங்குவாயாக.
-
மதியால் அடுகின்ற தென்னும்மால் கூரும்
மதியாதே வைதுரப்பார் என்னும் - மதியாதே
மாதெய்வம் ஏத்தும் மறைக்காடா ஈதேகொல்
மாதெய்வம் கொண்ட வனப்பு.
தெளிவுரை : திங்கள் வருந்துகின்றது என்று சொல்வாள். மயக்கத்தை அடைவாள். பொருட்
படுத்தாமல் ஏசுகின்றார்கள் என்பாள். தேவர்கள் போற்றும் திருமறைக் காடனே! பெரிய
தெய்வத்தின் அழகிய செயல் இதுதானோ?
-
வனப்பார் நிறமும் வரிவளையும் நாணும்
வனப்பார் வளர்சடையான் கொள்ள - வனப்பாற்
கடல்திரையும் ஈரும்இக் கங்குல்வா யான்கண்
கடல்திரையும் ஈருங் கனன்று.
தெளிவுரை : அழகுள்ள என் நிறத்தையும் வரிகளையுடைய வளையல்களையும் நாணத்தையும்
அழகுள்ள வளர் சடையான் கவர்ந்து கொள்ள, வனப்பாற் கடல் அலையும் உயிரைப் பிளக்கும்.
இரவு முழுவதும் யான் விடும் கண்ணீரும் சினந்து என் உயிரைப் பிளக்கும்.
-
கனன்றாழி நன்னெஞ்சே கண்ணுதலார்க்(கு) ஆளாய்க்
கனன்றார் களிற்றுரிமால் காட்டக் - கனன்றோர்
உடம்பட்ட நாட்டத்தர் என்னையுந்தன் ஆளா
உடம்பட்ட நாட்டன் உரு.
தெளிவுரை : கோபித்துக் காமனுடைய உடலை எரித்த நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமான்
என்னையும் ஆளாக ஏற்றுக் கொள்ள உடன்பட்ட நாட்டனது உருகனன்று ஆழ்ந்திருக்கின்ற
நன்னெஞ்சே ! கண்ணுதலார்க்கு ஆளாய் இருப்பாயாக.
-
உருவியலும் செம்பவளம் ஒன்னார் உடம்பில்
உருவியலும் சூலம் உடையன் - உருவியலும்
மாலேற்றான் நான்முகனும் மண்ணோடு விண்ணும்போய்
மாலேற்றாற்(கு) ஈதோ வடிவு.
தெளிவுரை : வடிவம் செம்பவளத்தை ஒத்திருக்கும். பகைவர் உடம்பில் உருவிச்
செல்லும் சூலத்தை உடையவன். உருவும் திருமாலை இடபமாகக் கொண்டவன். பிரமனும் மண்ணும்
விண்ணும் சுற்றிப் பார்த்தாயிற்று. அவருக்கு வடிவு இதுதானா?
-
வடிவார் அறப்பொங்கி வண்ணக்கச் சுந்தி
வடிவார் வடம்புனைந்தும் பொல்லா - வடிவார்மேல்
முக்கூடல் அம்மா முருகமரும் கொன்றையந்தார்
முக்கூட மாட்டா முலை.
தெளிவுரை : வடிவார் அறப் பொங்கி வண்ணக்கக் கோட் சொல்வோள் அழகு பொருந்திய மாலை
புனைந்தும் சிறந்த வடிவாராகிய சிவபெருமான் மீது முக்கூடல் அம்மா வாசனை வீசும்
கொன்றை மாலை பொருந்த முலை கூடமாட்டா என்றபடி.
-
முலைநலம்சேர் கானப்பேர் முக்கணான் என்னும்
முலைநலஞ்சேர் மொய்சடையான் என்னும் - முலைநலஞ்சேர்
மாதேவா என்று வளர்கொன்றை வாய்சோர
மாதேவா சோரல் வளை.
தெளிவுரை : முலை நலஞ் சேர்ந்த திருக்கானப்பேர் என்னும் பதியில் கோயில்
கொண்டிருக்கும் முக்கணான் என்னும். முலை நலஞ்சேர்மாதே ! வா என்று வளர் கொன்றை
சொல்ல மாதின் கையிலிருந்த வளைகள் கழன்றன. இது இறைவனுக்கும் அவன் மீது மையல் கொண்ட
மாதுக்கும் இடையே நடந்த உரையாடல்.
-
வளையாழி யோடகல மால்தந்தான் என்னும்
வளையாழி நன்னெஞ்சே காணில் - வளையாழி
வன்னஞ்சைக் கண்டமரர் வாய்சோர வந்தெதிர்ந்த
வன்னஞ்சக் கண்டன் வரில்.
தெளிவுரை : வளை பொருந்திய கடலில் இருந்து எழுந்த கொடிய விடத்தைக் கண்டு தேவர்கள்
நடுங்க, அதை ஏற்றுக் கொண்ட நீல கண்டன் வந்தால் வருவான். வளையல்கள் கணையாழியோடு
கழல, முன்பு மயக்கத்தைதைத் தந்தான். ஆகவே நன்னெஞ்சே விழிப்பாய் இரு என்று
சொல்லுவாள்.
-
வரிநீல வண்டலம்பு மாமறைக்காட் டங்கேழ்
வரிநீர் வலம்புரிகள் உந்தி - வரிநீர்
இடுமணல்மேல் அந்நலங்கொண்(டு) இன்னாநோய் செய்தான்
இடுமணல்மேல் ஈசன் எமக்கு.
தெளிவுரை : வரிகளையுடைய கருவண்டு ஒலிக்கின்ற திருமறைக் காட்டுக் கடல் நீரில்
வலம்புரிச் சங்குகள் மோதிய இடு மணல்மேல் என்னைச் சேர்ந்து, துன்பத்தைத் தரும்
நோயைச் செய்தான். அவன் அப்பதியில் கோயில் கொண்டிருக்கும் இறைவன்தான்!
-
அக்காரம் ஆடரவம் நாண்அறுவை தோல்பொடிசாந்(து)
அக்காரம் தீர்ந்தேன் அடியேற்கு - வக்காரம்
பண்டரங்கன் எந்தை படுபிணஞ்சேர் வெங்காட்டுப்
பண்டரங்கன் எங்கள் பவன்.
தெளிவுரை : அவனுக்கு எலும்பே மாலை. ஆடுகின்ற பாம்பே நாண். தோலே ஆடை. திருநீறே
பூசுகின்ற சந்தனம். பாண்டரங்கம் என்னும் கூத்தை ஆடும் எந்தை. சுடுகாட்டில் எங்கள்
சிவபெருமான் அருள் செய்வான். அதுவே அவனது அரங்கம்.
-
பவனடிபார் விண்நீர் பகலோன் மதிதீப்
பவனஞ்சேர் ஆரமுதம் பெண்ணாண் - பவனஞ்சேர்
காலங்கள் ஊழி அவனே கரிகாட்டிற்
காலங்கை ஏந்தினான் காண்.
தெளிவுரை : இறைவனது பாதம் பூமி; ஆகாயம், நீர், சூரியன், சந்திரன், தீ, காற்று
சேர்ந்த ஆரமுதம். பெண்ணாகவும் ஆணாகவும் இருப்பவன். பவனம் சேர்காலங்கள், ஊழி
எனப்படும். அவன் சுடுகாட்டிற் காலங் கழித்து, பிச்சைக்குக் கை ஏந்துவான். நீ
அறிவாயாக என்பதாம்.
-
காணங்கை இன்மை கருதிக் கவலாதே
காணங்கை யால்தொழுது நன்னெஞ்சே - காணங்கை
பாவனையாய் நின்றான் பயிலும் பரஞ்சோதி
பாவனையாய் நின்ற பதம்.
தெளிவுரை : கையிலே பொருள் இல்லாமையை எண்ணிக் கவலைப் படாதே. நன்னெஞ்சே ! கை கூப்பி
அவனை வணங்கு! அவன் அருள் செய்யும் பாவனையாய் நிற்கின்றான். அவன் பேரொளியாய்
நின்றவன் என அறிக.
-
பதங்க வரையுயர்ந்தான் பான்மகிழ்ந்தான் பண்டு
பதங்கன் எயிறு பறித்தான் - பதங்கையால்
அஞ்சலிகள் அன்பாலும் ஆக்குதிகாண் நெஞ்சேகூர்ந்(து)
அஞ்சலிகள் அன்பாலும் ஆக்கு.
தெளிவுரை : பதங்க வரை உயர்ந்தான்பால் பண்டு மகிழ்ந்தான். பின்பு சூரியன் பல்லைப்
பிடுங்கினான். ஆகவே உன் கைகளைக் கூப்பி வணங்குவாயாக. நெஞ்சே ! அவனை அன்போடு
அஞ்சலி செய். நலம் பெறுவாய் என்பதாம்.
-
ஆக்கூர் பனிவாடா ஆவிசோர்ந்து ஆழ்கின்றேன்
ஆக்கூர் அறலர்தான் அழகிதா - ஆக்கூர்
மறையோம்பு மாடத்து மாமறையோ நான்கு
மறையோம்பு மாதவர்க்காய் வந்து.
தெளிவுரை : திருஆக்கூர் என்னும் சிவப்பதியில் பனியால் வாடி, ஆவி சோர்ந்து,
துன்பத்தில் ஆழ்கின்றேன். ஆக்கூரில் எழுந்துள்ள பழிச்சொல் கேட்டு அமைதியாய்
உள்ளாயே! இது உமக்கு அழகிதோ ! ஆக்கூர், வேதம் ஓதுகின்ற மாடத்து மாமறையோ நான்கு
மறை யோம்பும் மாதவர்க்காய் வந்து அருள் செய்வாயாக.
-
வந்தியான் சீறினும் ஆழி மடநெஞ்சே
வந்தியா உள்ளத்து வைத்திராய் - வந்தியாய்
நம்பரனை யாடும் நளிர்புன் சடையானை
நம்பரனை நாள்தோறும் நட்டு.
தெளிவுரை : மடநெஞ்சே ! வந்தியான் சீறினும் வருந்தாதே. வந்தியா உள்ளத்து
வைத்திராய். நம்முடைய இறைவனை வணங்குவாயாக. ஆடும் நளிர் புன் சடையானை நம்சிவனை -
நாள் தோறும் உள்ளத்தே பதித்துத் துதி. நம்பரனை - சிவனை நம்புவாயாக.
-
நட்டமா கின்றன வொண்சங்கம் நானவன்பால்
நட்டமா நன்னீர்மை வாடினேன் - நட்டமா
டீயான் எரியாடி எம்மான் இருங்கொன்றை
ஈயானேல் உய்வ(து) இலம்.
தெளிவுரை : ஒள்ளிய வளையல்கள் இழக்கப்படுகின்றன. நான் அவன்பால் கொண்ட நன்னீர்மை
நஷ்டமாகின்றன. வாடினேன். அவன் நடன மாடுகின்றவன். தீயில் நின்றாடுகின்ற எம்மான்.
குளிர்ந்த கொன்றை மாலையைத் தாரானேல் நான் இறந்து படுவேன் என்பதாம்.
-
இலமலர்அஞ் சேவடியார் ஏகப் பெறாரே
இலமலரே யாயினும் ஆக - இலமலரும்
ஆம்பல்சேர் செவ்வாயார்க்(கு) ஆடாதே ஆடினேன்
ஆம்பல்சேர் வெண்தலையர்க்(கு) ஆள்.
தெளிவுரை : இலவ மலர் போன்ற அழகிய திருவடிகளை யுடையவர் போகாமல் இருக்க மாட்டாரா?
பழிச் சொல் இல்லாதவர்கள் ஆனோம். என்றாலும் செவ்வல்லிசேர் செவ்வாயார்க்கு ஆடாமல்
ஆம்பல் சேர் வெண்தலையார்க்கு ஆளாய் ஆடினேன்.
-
ஆளானம் சேர்களிறும் தேரும் அடல்மாவும்
ஆளானார் ஊரத்தான் ஏறூரும் - தாளான்பொய்
நாடகங்கள் ஆட்டயரும் நம்பன் திருநாமம்
நாடகங்கள் ஆடி நயந்து.
தெளிவுரை : மற்றவர்கள் யானை, தேர், குதிரை ஆகியவற்றின் மீது ஏறிச் செல்ல,
இடபத்தின் மீது ஏறிச் செல்வது பொய் நாடகங்கள் ஆடி அயரும் நம்பன் கூத்தாகும்.
அவருடைய திருநாமத்தை நாடு. மனம் விரும்பி வழிபடு என்பதாம்.
-
நயந்தநாள் யானிரப்ப நற்சடையான் கொன்றை
நயந்தநாள் நன்னீர்மை வாட- நயந்தநாள்
அம்பகலம் செற்றான் அருளான் அநங்கவேள்
அம்பகலம் பாயும் அலர்ந்து.
தெளிவுரை : நாள்தோறும் விரும்பி யான் யாசிக்க, நற்சடை யான் கொன்றை மாலையின் நலம்
வாட, மன்மதன் என் மார்பில் மலர் அம்பை எய்தான். இதைக் கண்டும் இறைவன் அருள்
செய்யாமல் செல்கின்றான்.
-
அலங்காரம் ஆடரவம் என்புதோல் ஆடை
அலங்கார வண்ணற்(கு) அழகார் - அலங்காரம்
மெய்காட்டு வார்குழலார் என்னாவார் வெள்ளேற்றான்
மெய்காட்டும் வீடாம் விரைந்து.
தெளிவுரை : அழகு செய்தல், ஆடுகின்ற பாம்பும் எலும்பும். ஆடை, தோல் அசைகின்ற
மாலையை உடைய தலைவர் அவர். அவருக்கு அழகார் அலங்காரம் மெய் காட்டும் வார்குழலார்.
அவர்கள் என்னாவர்? வெள்ளேற்றான் விரைந்து வீடாம் மெய் காட்டும் என்க.
-
விரையார் புனற்கங்கை சேர்சடையான் பொன்னார்
விரையார் பொழில்உறந்தை மேயான் - விரையாநீ(று)
என்பணிந்தான் ஈசன் இறையான் எரியாடி
என்பணிந்தான் ஈசன் எனக்கு.
தெளிவுரை : விரையார் புனற்கங்கை சேர்சடையான் பொன்னார் விரையார் பொழில்கள் நிறைந்த
உடையூரில் மேவியவன். திருநீறும் எலும்பும் அணிந்த ஈசன். எப்போதும் தீயில்
ஆடுபவன். நீ விரைந்து சென்று அவனைப் பணிவாயாக என்பதாம்.
-
எனக்குவளை நில்லா எழில்இழந்தேன் என்னும்
எனக்குவளை நில்லாநோய் செய்தான் - இனக்குவளைக்
கண்டத்தான் நால்வேதன் காரோணத்(து) எம்மானைக்
கண்டத்தான் நெஞ்சேகாக் கை.
தெளிவுரை : கைவளையல் நிற்க மாட்டாது. அழகை இழந்தேன் என்று சொல்லுவாள். எனக்குக்
காதல் நோயைத் தந்தான். அவன் நீலகண்டன். நான்கு வேதங்களையும் ஓதுபவன். நாகைக்
காரோணத்தில் எழுந்தருளிய தலைவன். நெஞ்சமே ! அவனைத் தஞ்சமாகக் கொள் என்பதாம்.
-
காக்கைவளை என்பார்ப்பார்க்(கு) அன்பாப்பா னையாதே
காக்கைவளை யென்பார்ப்பான் ஊன்குரக்குக் காக்கைவளை
ஆடானை ஈருரியன் ஆண்பெண் அவிர்சடையன்
ஆடானை யான(து) அமைவு.
தெளிவுரை : இப்பாடலில் குரக்குக்கா, திருவாடானை என்ற இரண்டு தலங்கள்
போற்றப்படுகின்றன. (காக்கைவளை - வளையைக் காத்தல்) என்பை அணிகின்றவனுடைய ஊர்
குரக்குக்கா. அசையும் இயல்புள்ள ஆனையை உரித்த தோலை உடையவன். ஆண் பெண் உருவும்
அவிர் சடையும் உடையவன். திருவாடானை அவன் இருக்கும் இடம்.
-
அமையாமென் தோள்மெலிவித்(து) அம்மாமை கொண்டிங்(கு)
அமையாநோய் செய்தான் அணங்கே - எமையாளும்
சாமத்த கண்டன் சடைசேர் இளம்பிறையன்
சாமத்தன் இந்நோய்செய் தான்.
தெளிவுரை : மூங்கில் போன்ற மென்மையான தோள்களை மெலிவித்து, மாமை என்னும் தணியாத
நோயைச் செய்தான். எமையாளும் நீலகண்டன். சடையில் இளம்பிறையைச் தரித்தவன். சாமகானம்
பாடுபவன். நள்ளிரவில் கூத்தியற்றுபவன் எனினுமாம். அவனே இந்நோயைச் செய்தான்.
-
தானக்கன் நக்க பிறையன் பிறைக்கோட்டுத்
தானக் களிற்றுரியன் தண்பழனன் - தானத்
தரையன் அரவரையன் ஆயிழைக்கும் மாற்கும்
அரையன் உடையான் அருள்.
தெளிவுரை : சிவன் விளங்குகின்ற பிறையை உடையவன். பிறையைப் போன்ற தந்தங்களையுடைய
யானையின் தோலை உடுத்தியவன். குளிர்ந்த திருப்பழனம் என்னும் சிவப்பதியை உடையவன்.
பாம்பை இடையில் கட்டியவன். உமாதேவிக்கும் திருமாலுக்கும் அரைப் பாகத்தைக்
கொடுத்தவன். அவன் அருளுடையவன்.
-
அருள்நம்பால் செஞ்சடையன் ஆமாத்தூர் அம்மான்
அருள்நம்பால் நல்கும் அமுதன் - அருள்நம்பால்
ஓராழித் தேரான் எயிறட்ட உத்தமனை
ஓராழி நெஞ்சே உவ.
தெளிவுரை : திருவாமாத்தூரில் எழுந்தருளிய தலைவன், நம்பால் அருள் உடையவன்.
செஞ்சடையை உடையவன். அமுதம் போன்றவன். கதிரவன் பற்களை உகுத்த உத்தமனை நெஞ்சே!
மகிழ்ந்து வழிபடு என்பதாம்.
-
உவவா நறுமலர்கொண்(டு) உத்தமனை உள்கி
உவவா மனமகிழும் வேட்கை - உவவா(று)
எழுமதிபோல் வாள்முகத்(து) ஈசனார்க்(கு) என்னே
எழுமதிபோல் ஈசன் இடம்.
தெளிவுரை : உவத்தல் செய்யும் நறுமணமுள்ள மலர்களைக் கொண்டு உத்தமனை எண்ணி, உவவா
மனமகிழும் பற்றுள்ளம் கொண்டு எழுமதி போல் ஒளி பொருந்திய முகத்தையுடைய ஈசனார்க்கு
(எழுமதி போல் ஈசன் இடம் இதுவாகும்) எழுகின்ற மதியே இதுதான் ஈசன் இருக்கும் இடம்
என்பதாம்.
-
இடமால் வலமாலை வண்ணமே தம்பம்
இடமால் வலமானஞ் சேர்த்தி - இடமாய
மூளா மதிபுரையும் முன்னிலங்கு மொய்சடையான்
மூவா மதியான் முனி.
தெளிவுரை : இடப்பக்கம் கரிய நிறம். வலப்பக்கத்தில் மாலை. வானத்தைப் போன்ற சிவந்த
நிறம். தம்பம் இடமால் வலமானஞ் சேர்த்தி, இடமாய முதிராத சந்திரனை ஒத்திருக்கும்
முன்னிலங்கு மொய் சடையான். மூவா மதியான் முனி யோக முறையில் சொல்லப்படும் இடைகலை
பங்கலையைக் கையாண்டு அறியாமையை முனி என்பாரும் உளர்.
-
முனிவன்மால் செஞ்சடையான் முக்கணான் என்னும்
முனிவன்மால் செய்துமுன் நிற்கும் - முனிவன்மால்
போற்றார் புரம்எரித்த புண்ணியன்தன் பொன்னடிகள்
போற்றாநாள் இன்று புலர்ந்து.
தெளிவுரை : செஞ்சடையான் மயக்கத்தைப் போக்குவான், மூன்று கண்களையுடையவன் என்று
சொல்லுவாள். அத்தகையவன் மயக்கத்தையும் செய்வான். திரிபுரங்ககளை எரித்த புண்ணியன்.
அவனைப் போற்றாத நாள் இன்று புலர்ந்தது. விரைந்து போற்றுவாயாக என்பதாம்.
-
புலர்ந்தால்யான் ஆற்றேன் புறனுரையும் அஃதே
புலர்ந்தானூர் புன்கூரான் என்னும் - புலர்ந்தாய
மண்டளியன் அம்மான் அவர்தம் அடியார்தம்
மண்டளியன் பின்போம் மனம்.
தெளிவுரை : ஊடி யிருந்தால் என்னால் தாங்க முடியாது என்பாள். வெளியே இருக்கும்
அதுவே திருப்புன்கூரில் எழுந்தருளியவன் ஊராகும். திருப்புன்கூரான் என்று
அழைப்பாள். புலர்வதற்குக் காரணமாய அருளுடையவன் அவன். அவனுடைய அடியார்களை நோக்கிச்
செல்கின்றது என் மனம்.
-
மனமாய நோய்செய்தான் வண்கொன்றை தாரான்
மனமாய உள்ளார வாரான் - மனமாயப்
பொன்மாலை சேரப் புனைந்தான் புனைதருப்பைப்
பொன்மாலை சேர்சடையான் போந்து.
தெளிவுரை : மனம் அழிய மையல் நோய் செய்தான். அவன் வண்கொன்றை மாலை யணிந்தவன்.
(தரமாட்டான் என்பதுமாம்) மனம் உள்ளார பொருந்துமாறு வரமாட்டான். மனமாய பொன்மாலை
சேரப் புனைந்தான். தருப்பையாகிய பொன்மாலை சேர் சடையான் வந்து போனான்.
-
போந்தார் புகவணைந்தார் பொன்னேர்ந்தார் பொன்னாமை
போந்தார் ஒழியார் புரமெரித்தார் - போந்தார்
இலங்கோல வாள்முகத்(து) ஈசனாற்(கு) எல்லே
இலங்கோலம் தோற்ப(து) இனி.
தெளிவுரை : வந்தார்; புகுந்து என்னை அணைந்தார். என்மார்பில் பசலை பூத்தது.
(பொன்னிற மாயிற்று) அவர் திரிபுரங்களை எரித்தவர். இலங்கோல வாள் முகத்து ஈசனாற்கு,
இளம் பெண்ணே! இனிதோற்பது ஏது? இனி நான் தோற்க மாட்டேன் என்றபடி.
-
இனியாரும் ஆளாக எண்ணுவர்கொல் எண்ணார்
இனியானஞ்(சு) ஊணிருக்கைக்(கு) உள்ளான் இனியானைத்
தாளங்கை யாற்பாடித் தாழ்சடையான் தானுடைய
தாளங்கை யால்தொழுவார் தாம்.
தெளிவுரை : இனிமேல் எவரும் ஆளாக எண்ணுவார்களோ. எண்ணமாட்டார்கள். இனிமை யுடையவன்.
(இனிமையில்லாதவன் எனினுமாம்) கையால் தாளம் போட்டுப் பாடி, தாழ் சடையானது
திருவடிகளை அழகிய கையினால் வணங்குபவர் நற்கதி அடைவர் என்பதாம்.
-
தாமரைசேர் நான்முகற்கும் மாற்கும் அறிவரியார்
தாமரைசேர் பாம்பர் சடாமகுடர் - தாமரைசேர்
பாணியார் தீர்ந்தளிப்பர் பாரோம்பு நான்மறையார்
பாணியார் தீர்ந்தளிப்பர் பார்.
தெளிவுரை : தாமரை மலரில் சேர்தலையுடைய பிரமனுக்கும் திருமாலுக்கும் அறிய
மாட்டாதவர். தமது அரையில் பாம்பைக் கட்டியுள்ளவர்; சடா மகுடத்தர். தாவுகின்ற மானை
ஏந்திய கையை உடையவர். நல்ல அருளினைச் செய்பவர். உலகை ஓம்புகின்ற நான்மறையாளர்.
காலந் தாழ்த்த மாட்டார். நல்லதையே செய்வார் என்றபடி.
-
பார்கால்வான் நீர்தீப் பகலோன் பனிமதியோன்
பார்கோல மேனிப் பரனடிக்கே - பார்கோலக்
கோகரணத் தானறியக் கூறுதியே நன்னெஞ்சே
கோகரணத் தானாய கோ.
தெளிவுரை : பூமி, காற்று, ஆகாயம், நீர், தீ, சூரியன், சந்திரன் இவைகளோடு கூடிய
பரமனது அடிகளுக்கே, அழகிய திருக்கோகரணம் என்னும் தலத்தில் எழுந்தருளிய இறைவன்
அழியுமாறு கூறுவாயாக. நன்னெஞ்சே! அவனை நீ வணங்குவாயாக என்பதாம்.
-
கோப்பாடி ஓடாதே நெஞ்சம் மொழி கூத்தன்
கோப்பாடிக் கோகரணங் குற்றாலம் - கோப்பாடிப்
பின்னைக்காய் நின்றார்க்(கு) இடம்கொடுக்கும் பேரருளான்
பின்னைக்காம் எம்பெருமான் பேர்.
தெளிவுரை : திருமகள் பொருட்டாக அமைந்த திருமாலுக்கு இடம் கொடுக்கும் அதாவது
வலப்பாகத்தைக் கொடுக்கும் பேரருளாளன். பிற்காலத்திற்கு அதாவது இறக்குங்
காலத்திற்கு அவன் திருநாமம் பயன்படும். நெஞ்சமே வேறு எங்கும் அலையாமல் திருக்
கோகரணத்திற்கும் குற்றாலத்திற்கும் செல்வாயாக.
-
பேரானை ஈருரிவை போர்த்தானை ஆயிரத்தெண்
பேரானை ஈருருவம் பெற்றானைப் - பேராநஞ்(சு)
உண்டானை உத்தமனை உள்காதார்க்(கு) எஞ்ஞான்றும்
உண்டாம்நாள் அல்ல உயிர்.
தெளிவுரை : பெரிய யானையைப் பிளந்து உரித்த தோலை போர்த்தவனை, ஆயிரத் தெட்டுப்
பெயர்களை உடையவனை, ஆண், பெண் என்ற இரண்டு உருவத்தினைப் பெற்றவனை, நஞ்சுண்டவனை,
உத்தமனை எண்ணாதவர்களுக்கு எப்போதும் இருக்கும் நாள் அல்ல; இறந்த நாளே.
-
உயிராய மூன்றொடுக்கி ஐந்தடக்கி உள்ளத்(து)
உயிராய ஒண்மலர்த்தாள் ஊடே - உயிரான்
பகர்மனத்தான் பாசுபதன் பாதம் பணியப்
பகர்மனமே ஆசைக்கண் பட்டு.
தெளிவுரை : உயிராகிய மும்மலத்தைத் தடுத்து, ஐம்பொறிகளைப் புலன்வழி செல்லாதவாறு
மடக்கி உள்ளத்தில் உயிர் போன்ற ஒளி பொருந்திய மலர்த்தாளின் ஊடே பாசுபதன் பாதம்
பணிய, மனமே ! நீ ஆசைப்படுவாயாக, இறைவனை உள்ளத் திருத்தி வழிபடுவாயாக என்பதாம்.
-
பட்டாரண் பட்டரங்கன் அம்மான் பரஞ்சோதி
பட்டார் எலும்பணியும் பாசுபதன் - பட்டார்ந்த
கோவணத்தான் கொல்லேற்றன் என்றென்று நெஞ்சமே
கோவணத்து நம்பனையே கூறு.
தெளிவுரை :இறந்தொழிந்த நான்முகன் திருமால் ஆகியோருடைய எலும்புகளை அணியும்
பாசுபதன். பட்டினால் பொருந்திய கோவணத்தைக் கட்டியவன். கொல்லுந் தன்மையுள்ள
இடபத்தை ஊர்தியாக உடையவன் என்று நெஞ்சமே! அந்தக் கோவணத்து நம்பனையே நீ
துதிப்பாயாக, அவன் பரஞ்சோதி.
கூற்றும் பொருளும்போற் காட்டியென் கோல்வளையைக்
கூற்றின் பொருள்முயன்ற குற்றாலன் - கூற்றின்
செருக்கழியச் செற்ற சிவற்கடிமை நெஞ்சே
செருக்கழியா முன்னமே செய்.
தெளிவுரை : சொல்லும் பொருளும் போல் காட்டி, என் (கோல் வளையை அணிந்த) பெண்ணை,
நமனுடைய ஆணவத்தை அழித்த குற்றாலநாதன் தன் சொல்வன்மையினால் தன் வசமாக்கிக்
கொண்டான். ஆகையால் நெஞ்சமே! செருக்கழியாமுன் அவனை அடைக்கலமாகக் கொள் என்க.
-
செய்யான் கருமிடற்றான் செஞ்சடையான் தேன்பொழில்சூழ்
செய்யான் பழனத்தான் மூவுலகும் - செய்யாமுன்
நாட்டூணாய் நின்றானை நாடுதும்போய் நன்னெஞ்சே
நாட்டூணாய் நின்றானை நாம்.
தெளிவுரை : அவன் செம்மேனியை உடையவன். நீலகண்டன் செஞ்சடையன் நிலவளம் உள்ளவன்.
மூன்று உலகங்களையும் படைத்து முன் நாட்டூணாய் நின்றானை, நன்னெஞ்சே ! நாம் போய்
நாடுவோமாக, அதுதான் உய்யும் வழி.
-
நாவாய் அகத்துளதே நாமுளமே நம்மீசன்
நாவாய்போல் நன்னெறிக்கண் உய்க்குமே - நாவாயால்
துய்க்கப் படும்பொருளைக் கூட்டுதும் மற்றவர்க்காள்
துய்க்கப் படுவதாம் சூது.
தெளிவுரை : நாவானது வாயினுள்ளே உள்ளது. நம் ஈசன் நாவாய் போல் நாம் உள்ளோம். அவன்
நம்மை நன்னெறிக் கண்செலுத்துவான். தோணியினால் நுகரப் பெறும் பொருளை நமக்கு
அளிப்பான். மற்றவர்கள் நமக்குத் தீ நெறியைத்தான் காட்டுவார்கள்.
-
சூதொன்(று) உனக்கறியச் சொல்லினேன் நன்னெஞ்சே
சூதன் சொலற்கரிய சோதியான் - சூதின்
கொழுந்தேன் கமழ்சோலைக் குற்றாலம் பாடிக்
கொழுந்தே இழந்தேன் குருகு.
தெளிவுரை : சூழ்ச்சி ஒன்றை உனக்கறியச் சொன்னேன். நன்னெஞ்சே ! கதிரவன் சொலற்கரிய
சோதியான். மாமரத்தின் கொழுந்தேன் கமழ்கின்ற சோலைகளையுடைய குற்றாலத்தைப் பாடிக்
கொழுந்தே, வளையலை இழந்தேன், குற்றாலம் ஒரு சிவத்தலம்.
6590 குருகிளவேய்த் தோள்மெலியக் கொங்கைமார் புல்கிக்
குருகிளையார் கோடு கொடாமே - குருகிளரும்
போதார் கழனிப் புகலூர் அமர்ந்துறையும்
போதாநின் பொன்முடிக்கண் போது.
தெளிவுரை : மூங்கில் போலும் தோள் மெலிய, கொங்கை மாரைத் தழுவி அவர்களுடைய
வளையல்களைத் தராமல், புகழ் விளங்கும் வயல்கள் நிறைந்துள்ள திருப்புகலூரில் கோயில்
கொண்டுள்ள மெய்யறிவுடையவனே ! உன் முடியிலுள்ள மலரைத் தருவாயாக.
-
போதரங்க வார்குழலார் என்னாவார் நன்னெஞ்சே
போதரங்க நீர்கரந்த புண்ணியனைப் - போதரங்கக்
கானகஞ்சேர் சோதியே கைவிளக்கா நின்றாடும்
கானகஞ்சேர் வாற்(கு) அடிமை கல்.
தெளிவுரை : மலரினை அணிந்த மிக நீண்ட கூந்தலையுடையவர் என்னாவர்? நன்னெஞ்சே !
அலையோடு கூடிய கங்கையைச் சடையில் மறைத்த புண்ணியனை, போதரங்கக் கானகஞ்சேர் சோதியே
கைவிளக்காகக் கொண்டு நின்றாடும் சேர்வார்க்கு அடிமை செய். நற்கதி பெறுவாய்
என்பதாம்.
-
கற்றான்அஞ் சாடுகா வாலி களந்தைக்கோன்
கற்றானைக் கல்லாத நாளெல்லாம் - கற்றான்
அமரர்க்(கு) அமரர் அரர்க்(கு)அடிமை பூண்டார்
அமரர்க்(கு) அமரர்ஆ வார்.
தெளிவுரை : கன்றையுடைய பசுவினிடத்திலிருந்து பெறும் ஐந்து பொருள்களால் அபிடேகம்
கொள்ளும் இறைவன் திருக்களந்தையில் எழுந்தருளியிருக்கிறான். அவனை வணங்காத நாள்
எல்லாம் வீணாகக் கழியும் நாளாகும். அவன் யாவற்றையும் கற்றவன். அவனுக்கு அடிமை
பூண்டவர்கள் தேவர்களுக்குத் தலைவர் ஆவார்கள். அவன் தேவதேவன்.
-
ஆவா மனிதர் அறிவிலரே யாதொன்றும்
ஆவார்போற் காட்டி அழிகின்றார் - ஆஆ
பகல்நாடிப் பாடிப் படர்சடைக்குப் பல்பூப்
பகல்நாடி ஏத்தார் பகர்ந்து.
தெளிவுரை : அவனுக்கு அடிமையாகாத மனிதர் அறிவில்லாதவர் ஆவர். எல்லாச சிறப்பும்
பெற்று உயர்ந்தவர்களைப் போல் தங்களை உலகத்துக்குப் புலப்படுத்தி அழிகின்றார்கள்.
ஐயோ ! பகலில் அவனைப் புகழ்ந்துபாடி, படர் சடைக்குப் பகல் நாடி ஏத்தாதார்
வருந்துவர் என்றபடி.
663. பகனாட்டம் பாட்டயரும் பாட்டோ(டு)ஆட்(டு) எல்லி
பகனாட்டம் பாழ்படுக்கும் உச்சி - பகனாட்டம்
தாங்கால் தொழுதெழுவார் தாழ்சடையார் தம்முடைய(து)
தாங்கால் தொழுதல் தலை.
தெளிவுரை : பகல் எல்லாம் பாட்டுப் பாடி காலங் கழித்து இரவில் தூங்கிக் கழிக்கும்
மாந்தர், தாழ் சடையார் திருவடிகளை வணங்கி எழுந்தால் நற்கதி பெறுவார்கள். அதுதான்
அவர்களுடைய தலையாய கடமை, மற்ற முயற்சிகள் பலன்தரா என்பதாம்.
-
தலையாலங் காட்டிற் பலிதிரிவர் என்னும்
தலையாலங் காடர்தாம் என்னும் - தலையாய
பாகீ ரதிவளரும் பல்சடையீர் வல்விடையீர்
பாகீ ரதிவளரும் பண்பு.
தெளிவுரை : தாருகாவனத்தில் அழகைக் காட்டும் வீடுகளில் கபாலத்தில் பிச்சையேற்றுத்
திரிவார். அவர் தலையாலங்காடு என்னும் சிவப்பதியில் எழுந்தருளியிருப்பவர். கங்கை
வளரும் பல்சடையீர் ! வல்லிடையீர் ! பாகீரதி வளரும் பண்பு எத்தகையது ?
-
பண்பாய நான்மறையான் சென்னிப் பலிதோந்தான்
பண்பாய பைங்கொன்றைத் தாரருளான் - பண்பால்
திருமாலு மங்கைச் சிவற்(கு) அடிமை செய்வான்
திருமாலு மங்கைச் சிவன்.
தெளிவுரை : பிரமதேவனது கபாலத்தைக் கையிலேந்திப் பிச்சை எடுத்தான். கொன்றை
மாலையைத் தராமல் காலங் கடத்துகின்றான். திருமாலும் சிவற்கு அடிமை செய்வான்.
திருமாலையும் சிவன் தன் உருவில் கொண்டுள்ளான்.
-
சிவன்மாட் டுகவெழுதும் நாணும் நகுமென்னும்
சிவன்மேய செங்குன்றூர் என்னும் - சிவன்மாட்டங்(கு)
ஆலிங்ச கனம்நினையும் ஆயிழையீர் அங்கொன்றை
யாலிங் கனம்நினையு மாறு.
தெளிவுரை : சிவன்பால் மையல் கொண்டு அவனை அடைய இவள் அவன் உருவை எழுதுவாள்,
நாணுவாள், சிரிப்பான் என்பாள். சிவன் எழுந்தருளியிருக்கும் செங்குன்றம் என்பாள்.
சிவனைத் தழுவிக் கொள்ள எண்ணுவாள். கொன்றை மாலையால் இவ்வாறு நினைக்கிறாள்
என்பதாம்.
-
ஆறாவெங் கூற்றுதைத் தானைத்தோல் போர்த்துகந்தங்(கு)
ஆறார் சடையீர்க்(கு) அமையாதே - ஆறாத
ஆனினத்தார் தாந்தம் அணியிழையி னார்க்கடிமை
ஆனினத்தார் தாந்தவிர்ந்த தாட்டு.
தெளிவுரை : கோபமிக்க காலனை உதைத்து, யானைத் தோலைப் போர்த்து, கங்கையைச் சடையில்
வைத்தவர்க்கு அமையாதோ? ஆனினத்தார் தாம் தம் அணியிழையினார்க்கு அடிமை. ஆனினத்தார்
தாம் ஆட்டு தவிர்ந்தது.
-
ஆட்டும் அரவர் அழிந்தார் எலும்பணிவார்
ஆட்டும் இடுபலிகொண் டார்அமரர் - ஆட்டுமோர்
போரேற்றான் கொன்றையான் போந்தான் பலிக்கென்று
போரேற்றான் போந்தான் புறம்.
தெளிவுரை : பாம்பை ஆட்டும் இறைவன், இறந்தவருடைய எலும்பை அணிவார். பலியேற்று
உண்பார். அமரர்களை நடத்தும் எருதை வாகனமாக உடையவர். கொன்றை மாலையை அணிபவர். அவர்
பிச்சைக்காக வந்தார். மன்மதனும் வெளியே வந்து நின்றான்.
-
புறந்தாழ் குழலார் புறனுரைஅஞ் சாதே
புறந்தாழ் புலிப்பொதுவுள் ஆடி - புறந்தாழ்பொன்
மேற்றளிக்கோன் வெண்பிறையான் வெண்சுடர்போல் மேனியான்
மேற்றளிக்கோன் என்றுரையான் மெய்.
தெளிவுரை : புறத்தே தொங்குகின்ற கூந்தலை உடையவர் பழிச் சொல்லை அஞ்சாமல்
பொன்னம்பலத்தில் நடனமாடுகின்ற இறைவன், திருமேற்றளி என்னும் கோயிலில் உள்ளவன்.
வெண்பிறையை அணிந்தவன். வெண்சுடர் போல் திருமேனியை உடையவன் தான் இன்னான் என்று
சொல்லவில்லை.
-
மெய்யன் பகலாத வேதியன் வெண்புரிநூல்
மெய்யன் விரும்புவார்க்(கு) எஞ்ஞான்றும் - வெய்ய
துணையகலா நோக்ககலா போற்றகலா நெஞ்சே
துணையிகலா கூறுவான் நூறு.
தெளிவுரை : உண்மையான அன்பு அகலாத வேதியன். வெண்மையான முப்புரி நூலை உடலில்
அணிந்தவன். தன்னை விரும்பியவர்களுக்கு எப்போதும் துணையாய் இருப்பவன், நெஞ்சமே!
அவன் நூறு ஆறுதல் மொழிகளைக் கூறுவான்.
-
நூறான் பயன்ஆட்டி நூறு மலர்சொரிந்து
நூறா நொடிஅதனின் மிக்கதே - நூறா
உடையான் பரித்தஎரி உத்தமனை வெள்ளே(று)
உடையானைப் பாடலால் ஒன்று.
தெளிவுரை : நூறு பசுவினுடைய பாலைப் பொழிந்து, நூறு மலர்களை அருச்சித்து, நூறு
தோத்திரங்களைச் சொல்வதைக் காட்டிலும் சிறந்தது. மழுவேந்திய உத்தமனை, வெள்ளேறு
உடையானை ஒரு பாடலால் ஒன்று படுவதேயாம்.
திருச்சிற்றம்பலம்
சிவபெருமான் திருவந்தாதி (பரணதேவ நாயனார்அருளிச்செய்தது )
பரணர், இவர் கபில பரணர் என இலக்கண நூல்களில் சிறப்பாகக் கூறப்படும் பெருமை
உடையவர். கபிலரும் பரணரும் இணை பிரியா நண்பர்கள். சங்கப் புலவர் ஆலவாய்
அவிர்சடைக் கடவுளின் அடியவராய்த் திகழ்வதில் ஐயமோ வியப்போ இல்லை. உயிர்க்கு உறுதி
பயக்கும் சிவபெருமானைப் பாடியது அவர்தம் நிலைக்கு ஏற்புடையதே. இந்நூலை ஓதுவார்
சிறந்த பயன் எய்துவர்.
திருச்சிற்றம்பலம்
-
ஒன்றுரைப்பீர் போலப் பலஉரைத்திட்(டு) ஓயாதே
ஒன்றுரைப்பீர் ஆயின் உறுதுணையாம் - ஒன்றுரைத்துப்
பேரரவம் பூண்டு பெருந்தலையில் உண்டுழலும்
பேரரவம் பூணும் பிரான்.
தெளிவுரை : சிறந்த ஒன்றைச் சொல்லுவார் போல பொதுவானவற்றைச் சொல்லி சோர்வுறாது,
ஒப்பில்லாத திருஐந்தெழுத்தை அருளினால் உறுதுணையாக இருக்கும். ஒன்றைச் சொல்லி
பாம்பை அணிந்து கபாலத்தில் பிச்சை ஏற்று உண்டு உழலுகின்ற எம் தலைவன் பேரொலி
செய்யும்.
-
பிரானிடபம் மால்பெரிய மந்தாரம் வில்லுப்
பிரானிடபம் பேரொலிநா ணாகம் - பிரானிடபம்
பேணும் உமைபெரிய புன்சடையின் மேலமர்ந்து
பேணும் உமையிடவம் பெற்று.
தெளிவுரை : பிரான் ஊர்வது ஆனேறு; மேரு மலையே வில்; பாம்பு நாண்; பிரானது
இடப்பாகத்தில் உள்ளவள் உமாதேவி; பொன் போன்ற சடையில் இருப்பது கங்கை; (ஆதிசக்தி);
திரிபுரங்களை எரித்தபோது மந்தரம் என்ற மேருமலை வில்லாக உதவியது. மந்தரம் என்பது
மந்தாரம் என நின்றது.
-
பெற்றும் பிறவி பிறந்திட்(டு) ஒழியாதே
பெற்றும் பிறவி பிறந்தொழிமின் - பெற்றும்
குழையணிந்த கோளரவக் கூற்றுதைத்தான் தன்னைக்
குழையணிந்த கோளரவ நீ.
தெளிவுரை : பிறந்து பிறந்து ஓய்வின்றி உழலும் நெஞ்சே ! பிறவி நீங்கப்
பார்ப்பாயாக. சிவபெருமான் காதணி பாம்பு, அவன் காலனைக் கடிந்தவன். குண்டலியாகிய
மாயையை ஈற்றடியில் குறிக்கிறார்.
-
நீயேயா ளாவாயும் நின்மலற்கு நன்னெஞ்சே
நீயேயா ளாவாயும் நீள்வாளின் - நீயே
ஏறூர் புனற்சடையா எங்கள் இடைமருதா
ஏறூர் புனற்சடையா என்று.
தெளிவுரை : நன்னெஞ்சமே ! நீயே உலக ஆசையைக் கொள்ளாதே. ஆய்ந்து நீ அவாக் கொள்ள
வேண்டுவது எங்கள் இடைமருதனே என்றும், கங்கைச் சடையானே என்றும் விரும்பு. என்னை
ஆண்டுகொள் என்பதாம்.
-
என்றும் மலர்தூவி, ஈசன் திருநாமம்
என்றும் அலர்தூற்றி பேயிருந்தும் - என்றும்
புகலூராபுண்ணியனேஎன்.
தெளிவுரை : நீ நாள்தோறும் மலர் தூவி ஈசன் திருநாமமாகிய ஐந்து எழுத்தைத் (நமசிவய)
துதிப்பாயாக. தலைவியின் காதலைப் பிறர் வெளிப்படுத்தினாலும் திருப்புகலூரா என்றும்
புண்ணியனே என்றும் கூறி வணங்குவாயாக.
-
என்னே இவளுற்ற மாலென்கொல் இன்கொன்றை
என்னே இவள்ஒற்றி யூரென்னும் - என்னே
தவளப் பொடியணிந்த சங்கரனே என்னும்
தவளப் பொடியானைச் சார்ந்து.
தெளிவுரை : இவளுற்ற காதல் நோய் சொல்லும் தரமோ ! கொன்றை மலரையே நினைந்து
வாடுகிறாள். திருவொற்றியூரா என்பாள். திருநீறு அணிந்த சங்கரனே என்பாள். எப்போதும்
அந்தத் திருநீறு அணிந்த சிவபெருமானையை நினைந்து வருந்துவாள்.
-
சார்ந்துரைப்ப(து) ஒன்றுண்டு சாவாமூ வாப்பெருமை
சார்ந்துரைத்த தத்துவத்தின் உட்பொருளைச் - சார்ந்துரைத்த
ஆதியே அம்பலவா அண்டத்தை ஆட்கொள்ளும்
ஆதியேன்(று) என்பால் அருள்.
தெளிவுரை : சார்ந்துரைப்பது ஒன்றுண்டு; அது யாதெனில் இறந்துபோகாத, மூப்படையாத
உண்மையாகும். இது உட்பொருள். உயிர் அடிமையாய் ஆண்டவனோடு ஒட்டி வாழ்வதைக்
குறிக்கும் அறிவு அடையாளமாகிய சின்முத்திரை. முதற்காரணமே ! அம்பலத்தில் நடனம்
ஆடுபவனே! அண்டத்தை ஆட்கொள்ளும் பரனே ! அருள் செய்வாயாக.
-
அருள்சேரா தாரூர்தீ ஆறாமல் எய்தாய்
அருள்சேரா தாரூர்தீ யாடி - அருள்சேரப்
பிச்சையேற் றுண்டு பிறர்கடையிற் கால்நிமிர்த்துப்
பிச்சையேற் றுண்டுழல்வாய் பேச்சு.
தெளிவுரை : (அருள் சேராதார் ஊர்) திரிபுரத்தை அணைந்து விடாதபடி எரித்தாய்.
(அருள்சேர் + ஆதார் + ஊர்) ஆதரம் உடையார் விருப்பப்படி மெய்யுணர் ஒளியாகிய தீயை
ஒழுக்கமெனும் திருக்கையில் வைத்து ஆடுபவனே ! அருள் சேரப் பிச்சையேற்று உண்டு
நடந்து சென்று உழல்பவனே ! சொல்வாயாக. அருள் சேராதார் ஊர் எனப் பிரிக்க.
-
பேச்சுப் பெருகுவதென் பெண்ஆண் அலியென்று
பேச்சுக் கடந்த பெருவெளியைப் - பேச்சுக்(கு)
உரையானை ஊனுக்(கு) உயிரானை ஒன்றற்(கு)
உரியானை நன்னெஞ்சே உற்று.
தெளிவுரை : பேச்சைப் பெருக்குவானேன்? பெண், ஆண், அலி என்று பேச்சுக்கு எட்டாத
திருச்சிற்றம்பலத்தைச் சொல்லுக்கு உரையாய் இருப்பவனை, உயிருக்கு உயிராய்
இருப்பவனை, பொருந்துதற்கு உரியானை நன்னெஞ்சே பொருந்தியிரு.
-
உற்றுரையாய் நன்னெஞ்சே ஓதக் கடல்வண்ணன்
உற்றுரையா வண்ணம்ஒன் றானானை - உற்றுரையா
ஆனை உரித்தானை அப்பனை எப்பொழுதும்
ஆனையுரித் தானை அடைந்து.
தெளிவுரை : திருமால் தேடியும் காணாமல் ஒப்பில்லாத தீப்பிழம்பாக அடிமுடி அறியா
வண்ணம் நின்றானை, யானையைக் கொன்றவனை, அப்பனை, நன்னெஞ்சே ! உற்றுரையாய். உமையாளை
இடப்பாகத்தில் கொண்ட இறைவனை அடைந்து நற்கதி பெறுவாயாக.
-
அடைந்துன்பால் அன்பாய் அணிமணிகொண்(டு) அர்ச்சித்(து)
அடைந்துன்பால் மேலுகுத்த மாணிக்(கு) - அடைந்துன்பால்
அவ்வமுதம் ஊட்டி அணிமலரும் சூழ்ந்தன்று
அவ்வமுதம் ஆக்கினாய் காண்.
தெளிவுரை : உன்னிடத்து அடைந்து அன்பால் மலரிட்டு அருச்சித்து பால் அபிடேகம் செய்த
சண்டேசுவரருக்கு இறைவன் திருவடி இன்பம் நுகர்வித்து சிவபிரானுக்கு ஊட்டிய மலரும்
அன்றிலிருந்து அவருக்கு உரியதாகுமாறு செய்யும் என்பதாம்.
-
காணாய் கபாலி கதிர்முடிமேல் கங்கைதனைக்
காணாய்அக் காருருவில் சேருமையைக் - காணாய்
உடைதலைகொண்(டு) ஊரூர் திரிவானை நச்சி
உடைதலைகொண்(டு) ஊரூர் திரி.
தெளிவுரை : மண்டை ஓட்டைத் திருக்கையில் தாங்கியவன் கதிர் முடிமேல் கங்கையைக்
காண்பாயாக. அந்தக் காருருவில் உமாதேவியைக் காண்பாயாக. அந்தக் கபாலத்தைக் கொண்டு
ஊர் ஊராகத் திரிவானை விரும்பி உள்ளம் உடைந்து கலங்குதலைக்கொண்டு நீயும் அவன்
பின்னால் திரிவாயாக.
-
திரியும் புரமெரித்த சேவகனார் செவ்வே
திரியும் புரமெரியச் செய்தார் - திரியும்
அரியான் திருக்கயிலை என்னாதார் மேனி
அரியான் திருக்கயிலை யாம்.
தெளிவுரை : முப்புரங்களை எரித்த வீரன், செம்மையாக வேதிப்பு வகையால் மாற்றும்
உயிர் உடல் மாறுபடும். அருமையானவனது திருக்கயிலை என்று வணங்காதவர் மேனியைத்
திருக்கை மூவிலையால் நீக்கான். அவனை வணங்காதவர் நற்கதி பெறார் என்பதாம்.
-
ஆம்பரிசே செய்தங் கழியாக்கை - ஆம்பரிசே
ஏத்தித் திரிந்தானை எம்மானை அம்மானை
ஏத்தித் திரிந்தானை ஏத்து.
தெளிவுரை : தோன்றி மறையும் தடத்தத்திருமேனி இதன் தன்மை. ஆம் பரிசே ஏத்தித்
திரிந்தானை, உமையம்மையை இடப்பாகத்தில் வைத்துத் திரிந்தானை நீ வணங்கு.
-
ஏத்துற்றுப் பார்த்தன் எழில்வான் அடைவான்போல்
ஏத்துற்றுப் பார்த்தன் இறைஞ்சுதலும் - ஏத்துற்றுப்
பாசுபதம் அன்றளித்த பாசூரான் பால்நீற்றான்
பாசுபதம் இன்றளியென் பால்.
தெளிவுரை : அருச்சுனன் தவம் புரிந்து எழில் வான் அடைவான் போல் வழிபாட்டை ஏற்று
வணங்கவும், வழிபாட்டை ஏற்று, பாசுபதப் படையை அன்றளித்த திருப்பாசூரில்
கொண்டிருப்பவன் எங்கும் நிறைந்த தூய திருவடிப் பேற்றை இன்று எனக்கு அளிப்பானாக.
-
பாலார் புனல்வாய் சடையானுக்(கு) அன்பாகிப்
பாலார் புனல்பாய் சடையானாள் - பாலாடி
ஆடுவான் பைங்கண் அரவூர்வான் மேனிதீ
ஆடுவான் என்றென்றே ஆங்கு.
தெளிவுரை : பராசக்தியின் கூறாகிய திரோதான சத்தியாகிய கங்கை நிறைந்த பால் போலும்
தூய நீர் முழுகாத தன்மையினால் சடை பிடித்தவள் ஆனாள். பசுவின் பாலால் அபிடேகம்
பெறும், பைங்கண் பாம்பு அணிந்தவன் மேனி தீ செந்நிறம். ஆட்டுவிப்பான் என்று
துதிப்பாயாக.
-
ஆங்குரைக்க லாம்பொன் மலர்ப்பாதம் அஃதன்றே
ஆங்குரைக்க லாம்பொன் அணிதில்லை - ஆங்குரைத்த
அம்பலத்தும் அண்டத்தும் அப்பாலு மாய்நின்ற
அம்பரத்தும் அண்டத்தும் ஆம்.
தெளிவுரை : பொன்மலர்ப் பாதத்தை உரைத்துப் பார்க்கலாம். அஃதன்றே புகழ்ந்து
போற்றலாம். அணிதில்லையிலும் பொன்னம்பலத்தும் அடைத்தும் அப்பாலுமாய் நின்ற
அம்பரத்தும் வெளியிலும் இருப்பான். அப்பாலும் முப்பத்தாறு தத்துவம் கடந்த
இடத்தும்.
-
மாயனைஓர் பாகம் அமர்ந்தானை வானவரும்
மாயவரு மால்கடல்நஞ்(சு) உண்டானை - மாய
வருவானை மாலை ஒளியானை வானின்
உருவானை ஏத்தி உணர்.
தெளிவுரை : ஆதியில் தன்பால் தோற்றுவித்த காத்தற் கடவுள் இறந்து பட்டுப் போக,
பெரிய பசை மலமும் அடங்க, தேவர்களும் மாய, கடலில் இருந்து எழுந்த நஞ்சை உண்டவனை
மாயவருவானை மாலையில் தோன்றும் செவ்வானம் போன்ற நிறமுடையவனை, வானின் உருவானைத்
துதி செய்து உணர்வாயாக.
-
உணரா வளைகழலா உற்றுன்பாற் சங்கம்
உணரா வளைகழல ஒட்டி - உணரா
அளைந்தான மேனி அணியாரூ ரேசென்(று)
அளைந்தானை ஆமாறு கண்டு.
தெளிவுரை : உணர்ந்து, வளை சோர, பொருந்தி உன்பால் சங்கத்தாராலும் உணர முடியாத
சூழ்ந்த ஐயம் நீங்கும் படியாகச் செய்து, ஒட்டிய பொன் (தருமிக்குப் பொன் கொடுத்த
குறிப்பு) ஐந்து நிறமான மேனி ஆரூர் சென்று அணைந்தானை ஆமாறு கண்டு விளங்கு
என்பதாம்.
-
கண்திறந்து காயெரியின் வீழ்ந்து கடிதோடிக்
கண்டிறந்து காமன் பொடியாகக் - கண்டிறந்து
கானின் உகந்தாடும் கருத்தர்க்குக் காட்டினான்
கானினுகந் தாடுங் கருத்து.
தெளிவுரை : நெற்றிக் கண்ணை விழித்து, காமன் எரியும் படியாகச் செய்து சுடுகாட்டில்
விரும்பி நடனமாடும் முதல்வர்க்கு, கருத்தால் ஐந்தொழிலும் புரிபவன் என்பதாம்.
-
கருத்துடைய ஆதி கறைமிடற்றெம் ஈசன்
கருத்துடைய கங்காள வேடன் - கருத்துடைய
ஆனேற்றான் நீற்றான் அனலாடி ஆமாத்தூர்
ஆனேற்றான் ஏற்றான் எரி.
தெளிவுரை : ஆதி சத்தியை உடைய மூலகாரணன்; நீல கண்டன் (இஃது ஆறெழுத்து அருந்தமிழ்
மந்திரம்) முழு எலும்புக் கூடாகிய வேட உருவம். ஆன்மாவை அடிமையாக ஏற்றருவானவன்.
திருநீறு அணிந்தவன்; தீயில் ஆடுபவன்; திருவாமாத்தூரில் கோயில் கொண்டிருக்கும்
காளை வாகனன், தீயைக் கையிலேந்தினான்.
-
எரியாடி ஏகம்பம் என்னாதார் மேனி
எரியாடி ஏகம்ப மாகும் - எரியாடி
ஈமத்(து) இருங்காடு தேரும் இறைபணிப்ப
ஈமத் திடுங்காடு தான்.
தெளிவுரை : சிவபெருமான் என்றும், கச்சி ஏகம்பம் என்றும் சொல்லி வணங்காதவருடைய
உடம்பு துன்பத் தீப்பற்றி நடுங்கும். எரியாடிப் பிணம் சுட விறகு அடுக்கும்
கடவுளின் திருத்தொண்டு புரி.
-
தானயன் மாலாகி நின்றான் தனித்துலகில்
தானயன் மாலாய தன்மையான் - தானக்
கரைப்படுத்தான் நான்மறையைக் காய்புலித்தோ ஆடைக்
கரைப்படுத்தான் தன்பாதஞ் சார்.
தெளிவுரை : தானே அயனாகவும் மாலாகவும் இருந்து செயல்பட்டான். தனித்து உலகில்
அவர்களாக இருக்கும் தன்மையுடையவன் அவன். நான்மறை ஆனவன் அவன். புலித்தோல் ஆடையை
அரையில் கட்டிக் கொண்டான். அவனுடைய பாதங்களைச் சார்வாயாக.
-
சாராவார் தாமுளரேல் சங்கரன் தன் மேனிமேல்
சாராவார் கங்கை உமைநங்கை - சார்வாய்
அரவமது செஞ்சடைமேல் அக்கொன்றை ஒற்றி
அரவமது செஞ்சடையின் மேல்.
தெளிவுரை : சார்ந்திருப்பவர் யார் என்னில், சங்கரன் தன் மேனிமேல் உள்ள பாம்பு,
கங்கை, உமாதேவி, கொன்றை ஆகியவரே. சடையின் மீது அரவம் ஏறிக் கொன்றையை ஒற்றிச்
சீறும் என்க.
-
மேலாய தேவர் வெருவ எழுநஞ்சம்
மேலாயம் இன்றிவே றுண்பொழுதில் - மேலாய
மங்கை உமைவந் தடுத்திலளே வானாளும்
மங்கை உமைவந் தடுத்து.
தெளிவுரை : மேலுலக தேவர்கள் அஞ்ச, கடலில் இருந்து எழுந்த ஆலகாலவிடத்தை மேல்
விளைவைப் பற்றிச் சிந்தியாமல் நீ உண்டபோது, தேவர்க்கும் யாவர்க்கும் மேலாக
வீற்றிருக்கும் உமையம்மை தடுத்திரா விட்டால் நீ இறந்துபட்டிருப்பாய் என்பதாம்.
-
அடுத்தபொன் அம்பலமே சார்வும் அதனுள்
அடுத்த திருநட்டம் அஃதே - அடுத்ததிரு
ஆனைக்கா ஆடுவதும் மேலென்பு பூண்பதுவும்
ஆனைக்கா வான்தன் அமைவு.
தெளிவுரை : பொன் அம்பலத்தைச் சார்ந்து அதனுள் திருநடனம் ஆடுவதுதான் உன்
தொழிலாகும். அதனை அடுத்த திருவானைக்காவில் குளிப்பதும், என்பு மாலையைப்
பூண்பதும், விடையை ஊர்ந்து செல்வதும் உனக்கு இயல்பாகும். பிறை சூடியிருப்பதால்
தாங்குபவனாகியும், ஆனேற்றை ஊர்வதால் தாங்கப்படுவோன் ஆகியும் ஓங்கியுள்ளான்
என்பதாம்.
-
அமைவும் பிறப்பும் இறப்புமாம் மற்றாங்(கு)
அமைவும் பரமான ஆதி - அமையும்
திருவால வாய்சென்று சேராது மாக்கள்
திருவால வாய்சென்று சேர்.
தெளிவுரை : பிறப்பும் இறப்பும் இயல்பாகும். மேலான ஆதி காரணனே ! பொருத்தமான மதுரை
சென்று ஆறறிவு பெறாதார் ஐயறிவு உடையவரே, நஞ்சொத்த வினைப் பிறப்பையே அடைவர்.
-
சென்றுசெருப் புக்காலாற் செல்ல மலர்நீக்கிச்
சென்று திருமுடிவாய் நீர்வார்த்துச் - சென்றுதன்
கண்ணிடந்தன்(று) அப்பும் கருத்தற்குக் காட்டினான்
கண்ணிடந்தன்(று) அப்பாமை பார்த்து.
தெளிவுரை : கண்ணப்ப நாயனார் சரிதம் இது. ஆலயத்துள் செருப்புக் காலோடு சென்று,
அதைக் கொண்டே சுவாமியின் முடியில் இருந்த மலரை நீக்கி, வாயில் கொண்டு சென்ற நீரை
வார்த்து, தன் கண்ணையே தோண்டி எடுத்து அப்பியவர் கண்ணப்பர்; ஞான சம்பந்தர்
கண்ணப்பர் திருவடியில் விழுந்து வணங்கினார்.
-
பார்த்துப் பரியாதே பால்நீறு பூசாதே
பார்த்துப் பரிந்தங்கம் பூணாதே - பார்த்திட்(டு)
உடையானஞ் சோதாதே ஊனாரைக் கைவிட்(டு)
உடையானஞ் சோதாதார் ஊண்.
தெளிவுரை : பார்த்து வணங்காமல், திருநீறு பூசாமல், சிவ மணியைப் பூணாமல்
திருஐந்தெழுத்தை ஓதாமல் ஊன் உணவைக் கைவிட்டு, சிவபெருமானுடைய அழகிய திருவடி
வேட்கையே இன்பம் என்று இருப்பாயாக.
-
ஊணொன்றும் இல்லை உறக்கில்லை உன்மாலின்
ஊணென்று பேசவோர் சங்கிழந்தாள் - ஊணென்றும்
விட்டானே வேள்வி துரங்தானே வெள்ளநீர்
விட்டானே புன்சடைமேல் வேறு.
தெளிவுரை : சிவபெருமானின் திருவடி வேட்கையை இன்பம் என்று இடையறாது
பேசுவதால் ஊண் உறக்கம் விட்டாள். சிறந்த சங்கு வளையலும் இழந்தாள். தக்கன்
வேள்வியூன் தீது என்று ஓட்டினான், கங்கையை; பகீரதன் வேண்டுகோளுக்காக நிலத்தே
போகச் செய்தான். இதுவே அவனது சிறப்பு.
-
வேறுரைப்பன் கேட்டருளும் வேதம்நான் காறங்கம்
வேறுரைத்த மேனி விரிசடையான் - வேறுரைத்த
பாதத்தாய் பைங்கண் அரவூர்வாய் பாரூரும்
பாதத்தாய் என்னும் மலர்.
தெளிவுரை : வேறொன்று சொல்வேன் கேள். நான்கு வேதம், ஆறு அங்கம் வேறு உரைத்த மேனி
விரிசடையான். வேறு உரைத்த பாதத்தாய். பைங்கண் பாம்பை உடையவனே ! நிலவுலகத்தோர்
ஊரும் திருவடியினை நிலைத்த உறையுளாகக் கொள்ளும் திருவடியை உடையாய். அதுவே
சின்முத்திரையாம்.
-
மலரணைந்து கொண்டு மகிழ்வாய்உன் பாத
மலரணைந்து மால்நயன மாகும் - மலரணைந்து
மன்சக் கரம்வேண்ட வாளா அளித்தனையால்
வன்சக்க ரம்பரனே வாய்த்து.
தெளிவுரை : மலருக்கு ஒப்பாகத் திருமால் கண்ணை இடந்து வைத்தான். அதனை மலர் போல்
கொண்டு மகிழ்வாய். அவனுக்குச் சக்கரம் கருணையால் அளித்தாய் என்பதாம். செந்நிற
மேனியனே, உனக்குக் கதி என்று உணர்வாயாக.
-
வாய்த்த அடியார் வணங்க மலரோன்மால்
வாய்த்த அடிமுடி யுங்காணார் - வாய்த்த
சலந்தரனைக் கொன்றிட்டுச் சங்கரனார் என்னோ
சலந்தரனாய் நின்றவா தாம்.
தெளிவுரை : வாய்த்த அடியார் வணங்க, பிரமனும் திருமாலும் வாய்த்த அடியையும்
முடியையும் காண இயலாதவராயினர். வாய்த்த சலந்தரன் என்ற அசுரனைக் கொன்றுவிட்டு,
கங்கையை முடியில் தாங்கி நிற்கின்றாய். இது யாது காரணம் கருதி என்றவாறு.
-
தாமென்ன நாமென்ன வேறில்லை தத்துறவில்
தாமென்னை வேறாத் தனித்திருந்து - தாமென்
கழிப்பாலை சேரும் கறைமிடற்றார் என்னோ
கழிப்பாலை சேரும் கடன்.
தெளிவுரை : தாங்கப்படும் பொருளாகிய நாமும், தாங்கும் பொருளாகிய சிவமும் வெவ்வேறு
இடங்களில் இருப்பதற்கில்லை. வான் கலந்திருக்கும் ஏனைப் பூதங்கள்போல் கலந்து
ஒன்றாய் இருப்பதால் வேறில்லை. ஒருவரும் உண்ணாத நஞ்சைக் கண்டத்தில் உடையவர்.
எதற்காகத் திருக்கழிப்பாலையில் எழுந்தருளினார்? தெரியவில்லையே ! கழிப்பாலை -
ஒருவரும் உண்ணாத நஞ்சு.
-
கடனாகக் கைதொழுமின் கைதொழவல் லீரேல்
கடல்நாகைக் காரோணம் மேயார் - கடநாகம்
மாளவுரித் தாடுவார் நம்மேலை வல்வினைநோய்
மாளஇரித் தாடுமால் வந்து.
தெளிவுரை : கடமையாக எண்ணிக் கைதொழுங்கள். அவ்வாறு வணங்க வல்லீரேல்,
கடற்கரையிலுள்ள திருநாகைக் காரோணம் என்னும் சிவப்பதியில் எழுந்தருளி இருப்பவரும்,
மத யானை மாள, தோலை உரித்து ஆடுவாராகிய சிவபெருமான் நம் வல்வினை நோய் மாள வந்து
ஆடுவான் என்க.
-
வந்தார் வளைகழல்வார் வாடித் துகில்சோர்வார்
வந்தார் முலைமெலிவார் வார்குழல்கள் - வந்தார்
சுரிதருவார் ஐங்கொன்றைத் தாராரைக் கண்டு
சுரிதருவார் ஐங்கொன்றைத் தார்.
தெளிவுரை : வளையை இழப்பர்; வருந்தித் துகில் சோர்வர். முலை மெலிவர். நீண்ட
குழல்கள் சோர்வர் (சுருங்குவர்). அழகிய கொன்றை மாலை அணிந்தவரைக் கண்டு
சூழ்ந்திருப்பர். ஐம்பொறிகளை அடக்கியவர் வந்தார்.
-
தாரான் எனினும் சடைமுடியான் சங்கரனந்
தாரான் தசமுகனைத் தோள்நெரித்துத் - தாராய
நாளுங் கொடுத்தந்த வானவர்கள் தம்முன்னே
வாளுங் கொடுத்தான் மதித்து.
தெளிவுரை : சங்கரன் மாலையணிந்தவன் எனினும் சடை முடியை உடையவன். அழகிய மாலை அணிந்த
இராவணனைத் தோள் நெரித்து நீண்டதாய நீண்டதாய வாழ் நாளும் கொடுத்து, அந்தத்
தேவர்கள் முன்னிலையில் வாளும் கொடுத்தான். இராவணன் செய்த சிவபூசையைத்
திருவுள்ளத்தமைத்து முக்கோடி வாழ்நாளை அளித்தான் என்க.
-
மதியாரும் செஞ்சடையான் வண்கொன்றைத் தாரான்
மதியாரும் மாலுடைய பாகன் - மதியாரும்
அண்ணா மலைசேரார் ஆரோடுங் கூடாகி
அண்ணா மலைசேர்வ ரால்.
தெளிவுரை : பிறைச் சந்திரன் பொருந்திய செஞ்சடையான்; வண்கொன்றைத் தாரான்.
உமாதேவியை இடப் பாகத்தில் கொண்டவன். அவனைச் சேராதவர் பிறவித் துன்பத்திலிருந்து
மீளார். அண்ணாமலையைச் சேர்வரேல் நற்கதி பெறுவர் என்பதாம்.
-
ஆல நிழற்கீழ் இருப்பதுவும் ஆய்வதறம்
ஆலம் அமுதுசெய்வ தாடுவதீ - ஆலந்
துறையுடையான் ஆனை உரியுடையான் சோற்றுத்
துறையுடையான் சோராத சொல்லு.
தெளிவுரை : இருப்பது கல்லால மரநிழலில்; ஆய்வது அறமாகும்; அமுது செய்வது ஆலகால
விடம்; ஆடுவது தீயின் மத்தியில், ஆலந்துறை என்னும் சிவப்பதியில் வாசம் செய்பவன்;
யானையின் தோலைப் போர்த்திருப்பான். திருச்சோற்றுத் துறை என்னும் சிவப்பதியை
உடையவன், திருஐந்தெழுத்தை ஓதுவாயாக.
-
சொல்லாயம் இன்றித் தொலைவின்றித் தூநெறிக்கண்
சொல்லாய்ப் பெருத்த சுடரொளியாய்ச் - சொல்லாய்
வீரட்டத் தானை விரவாய் புரம்அட்ட
வீரட்டத் தானை விரை.
தெளிவுரை : சொல் ஆதாயம் இல்லாமல், தொலைவில்லாமல் தூநெறிக்கண் சொல்லாய், பெருத்த
சுடரொளியாய் திருவதிகை வீரட்டானம் என்னும் பதியில் எழுந்தருளியிருப்பவன்,
பகைவர்களின் திரிபுரத்தை எரித்தவன். அவனை விரைந்து வழிபடுவாயாக. இங்குதான் அந்த
நிகழ்ச்சி நடைபெற்றது.
-
விரையாரும் மத்தம் விரகாகச் சூடி
விரையாரும் வெள்ளெலும்பு பூண்டு - விரையாரும்
நஞ்சுண்ட ஆதி நலங்கழல்கள் சேராதார்
நஞ்சுண்ட வாதி நலம்.
தெளிவுரை : மணமுள்ள ஊமத்த மலரை மகிழ்ந்து சூடி, விரையாரும் வெள்ளெலும்பு பூண்டு
விரையாரும் விடத்தை உண்ட முதல்வனது கழல்களைச் சேராதார், பிறப்பு இறப்பை வெல்ல
முடியாதவர் ஆவர் என்பதாம்.
-
நலம்பாயும் ஆக்க நலங்கொண்டல் என்றல்
நலம்பாயும் மான்நன்(கு) உருவ - நலம்பாய்செய்(து)
ஆர்த்தார்க்கும் அண்ணா மலையா னிடந்.
தார்த்தார்க்கும் அண்ணா மலை.
தெளிவுரை : நலம் பாயும் ஆக்கந்தரும் மேகம் பெருமை தரும் நெற்பயிர் நன்கு வளர நலம்
பாயுமாறு செய்தார்க்கும், எட்டாத மலையானிடம் உண்ணத்தக்க சோறு இல்லாமல் போகுமோ?
அமலை என்பது ஆமலை என நீண்டது.
-
மலையார் கலையோட வாரோடக் கொங்கை
மலையார் கலைபோய்மால் ஆனாள் - மலையார்
கலையுடையான் வானின் மதியுடையான் காவாத்
தலையுடையான் என்றுதொழு தாள்.
தெளிவுரை : யானைத் தோலைப் போர்வையாக உடையவன், வேட்கையுற்ற பெண்ணைக் காவாத தலைமைப்
பாருடையவன்மேல் இவள் ஆடை நெகிழ மையல் கொண்டாள். கையில் மானை உடையவன். வானின்
மதியை உடையவன். பிரமாவின் கபாலத்தை ஏந்தியவன் என்று தொழுதாள்.
-
தாளார் கமல மலரோடு தண்மலரும்
தாளார வேசொரிந்து தாமிருந்து - தாளார்
சிராமலையாய் சேமத் துணையேயென் றேத்தும்
சிராமலையார் சேமத் துளார்.
தெளிவுரை : பாதமாகிய கமல மலரோடு குளிர்ந்த மலரும் பொருந்துமாறு அருச்சித்து,
திருச்சிராமலையில் எழுந்தருளி இருப்பவனே ! பாதுகாப்பாக உள்ளவனே! என்று துதிபாடி
சிராமாலையை தலைமாலையாகக் கொண்டாள். மாலை மலையெனக் குறுகி நின்றது.
-
ஆர்துணையா ஆங்கிருப்ப தம்பலவா அஞ்சலுமை
ஆர்துணையா ஆனை உரிமூடி - ஆர்துணையாம்
பூவணத்தாய் பூதப் படையாளி பொங்கொளியாய்
பூவணத்தாய் என்னின் புகல்.
தெளிவுரை : அம்பலவா! உமையம்மை அஞ்சுதல் செய்ய நீ யார் துணைகொண்டு அங்கு
இருக்கின்றாய்? யானைத் தோலைப் போர்த்தவனே ! திருப்பூவணம் என்னும் தலத்தில் உனக்கு
யார் துணை? பூதங்களைப் படையாகப் பெற்றவனே ! பேரொளியுடையாய்! செந்தாமரைப் பூவின்
நிறத்தாய்! நீயே என்னுடைய புகலிடம்.
-
புகலூர் உடையாய் பொறியரவம் பூணி
புகலூர்ப் புனற்சடையெம் பொன்னே - புகலூராய்
வெண்காடா வேலை விட முண்டாய் வெள்ளேற்றாய்
வெண்காடா என்பேனோ நான்.
தெளிவுரை : புகலூர் என்னும் சிவத்தலத்தில் உள்ளவனே ! புள்ளிகளையுடைய பாம்பைப்
பூண்டுள்ளவன். புகலாக ஊரும் கங்கையைச் சடையில் வைத்துள்ள பொன்னே ! திருவெண்காடா !
கடல் நஞ்சை உண்டாய். வெண்மையான காளையை ஊர்தியாகக் கொண்டாய், நான் உன்னை மிக்க
பெரு வெளி என்பேனோ?
-
நானுடைய மாடேஎன் ஞானச் சுடர்விளக்கே
நானுடைய குன்றமே நான்மறையாய் - நானுடைய
காடுடையாய் காலங்கள் ஆனாய் கனலாடும்
காடுடையாய் காலமா னாய்.
தெளிவுரை : என் செல்வமே! என் ஞானச் சுடர் விளக்கே! என்னுடைய குணக் குன்றமே!
நான்கு வேதங்களை உடையாய். கால தத்துவங்கள் ஆனாய். சுடுகாட்டை உடையாய்; அழகிய
திருவடியை உடையாய். எனக்கு அருள் செய்வாய் என்பதாம்.
-
ஆயன்(று) அமரர் அழியா வகைசெய்தாய்
ஆயன்(று) அமரர் அழியாமை - ஆயன்
திருத்தினான் செங்கண் விடையூர்வான் மேனி
திருத்தினான் சேதுக் கரை.
தெளிவுரை : அந்நாளில் உனக்குத் துணையாய் இருந்த தேவர் அழியாவண்ணம்
காப்பாற்றினாய். தேவர்களுக்குத் தலைவன் ஆனாய். சிவந்த கண்களையுடைய காளையை வாகனமாக
உடையாய். கடலில் இராமன் கட்டிய அணையைத் திருத்தினாய். (சேதுக்கரை
இராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ளது.)
-
கரையேனு மாதர் கருவான சேதுக்
கரையேனு மாது கரையாம் - கரையேனும்
கோளிலியெம் மாதி குறிபரவ வல்லையே
கோளிலியெம் மாதி குறி.
தெளிவுரை : திருக்கோளிலி என்பது ஒரு சிவத்தலம் (அவிநாசி); குற்றமில்லாத தலம்.
ஆதி-முதற் கடவுள்; காரணக் கடவுள். திருக்கோளிலியில் எழுந்தருளி யிருக்கும்
இறைவனைக் குறியாகக் கொண்டு வழிபடுவாயாக. சேதுக்கரையில் உள்ள சிவபெருமானது
சிறப்புக் கூறியவாறு. பிறவிக் கடலைக் கடக்க அந்த இறைவன் அருள் பாலிப்பானாக.
-
குறியார் மணிமிடற்றுக் கோலஞ்சேர் ஞானக்
குறியாகி நின்ற குணமே - குறியாகும்
ஆலங்கா(டு) எய்தா அடைவேன்மேல் ஆடரவம்
ஆலங்கா(டு) எய்தா அடை.
தெளிவுரை : ஞானக்குறி - திருவருட் குறி - இலிங்கம். நீலகண்டப் பெருமான் இலிங்க
உருவாகியுள்ளான். அவன் எண் குணத்தான். நான் சுடுகாட்டை அடையாமல் இருக்கப் பாம்பை
யணிந்த பெருமான் அருள் பாலிப்பானாக. அவன் திருஆலங்காட்டில்
எழுந்தருளியிருக்கின்றான். அவனை அடைவாயாக.
-
அடையும் படைமழுவும் சூலமிலம் பங்கி
அடையும் இறப்பறுப்ப தானால் - அடைய
மறைக்காடு சேரும் மணாளரென்பாற் சேரா
மறைக்காடு சேர்மக்கள் தாம்.
தெளிவுரை : தாக்கும் படையாகிய மழுவும் சூலமும் ஆடையும் இறப்பு அறுப்பதானால் வந்து
பொருந்தும். நீங்காப் புகலாக மறுக்கும் சுடுகாடு. இறைவனை
அடைய திருமறைக்காட்டிற்கு (வேதாரண்யத்திற்கு) மக்கள் வந்து சேர்வார்கள். பிறப்பு
அறுத்தவர்க்குச் சுடுகாடு இல்லை என்பதாம்.
-
தாமேய ஆறு சமய முதற்பரமும்
தாமேய வாறு தழைக்கின்றார் - தாமேல்
தழலுருவர் சங்கரவர் பொங்கரவம் பூண்ட
தழலுருவர் சங்கரர்என் பார்.
தெளிவுரை : ஆறு சமயங்களாக உள்ளவரும் இவரே. அவர் தீ உருவினர்; அவர் சங்கரர்;
பொங்கு அரவம் பூண்ட தழலுருவர். இது அவராகக் கொண்ட உருவம். தாமே ஆறு சமயங்களாக
இருந்து தழைக்கின்றார் என்க. ஆறு சமயங்களாவன: சைவம், வைணவம், சாக்தம்,
காணாபத்யம், கௌமாரம், சௌரம் என்பனவாம்.
-
பார்மேவு கின்ற பலருருவர் பண்டரங்கர்
பார்மேவு கின்ற படுதலையர் - பார்மேல்
வலஞ்சுழியைச் சேர்வர் மலரடிகள் சேர்வார்
வலஞ்சுழியைச் சேர்வாகு வார்.
தெளிவுரை : இவ்வுலகம் பொருந்துகின்ற பல உருவினை உடையவர்; பாண்டரங்கம் என்னும்
கூத்தை ஆடியவர். பருந்து வழிபட்ட திருவலஞ்சுழியைச் சேர்பவர்கள் இறைவனது
மலரடிகளைச் சேர்வார்கள் என்பதாம்.
-
வாரணிந்த கொங்கை உமையாள் மணவாளா
வாரணிந்த கொன்றை மலர்சூடீ - வாரணிந்த
செஞ்சடையாய் சீர்கொள் சிவலோகா சேயொளியாய்
செஞ்சடையாய் செல்ல நினை.
தெளிவுரை : கச்சணிந்த கொங்கைகளையுடைய உமாதேவியின் மணவாளா! நீண்ட கொன்றை மாலையை
அணிந்தவனே. நீண்டு தொங்குகின்ற சடையினை உடையாய். சிவலோகத்தில் இருப்பவனே! செம்மை
நிறம் உடையவனே. எங்களுக்கு அருள் செய்வாயாக.
-
நினைமால் கொண்டோடி நெறியான் தேடி
நினைமாலே நெஞ்சம் நினைய - நினைமால்கொண்(டு)
ஊர்தேடி உம்பரால் அம்பரமா காளாஎன்(று)
ஊர்தேடி என்றுரைப்பான் ஊர்.
தெளிவுரை : நினைத்தபடி மயக்கம் கொண்டு ஓடி, அறமானவற்றைத் தேடி, பேரன்பு கொண்டு,
ஊர் தேடி திருஅம்பரம், திரு அம்பர்மாகாளம் என்று தேவர்களால் தேடி அலைகின்ற ஊரைச்
சேர்வாயாக.
-
ஊர்வதுவும் ஆனே(று) உடைதலையில் உண்பதுவும்
ஊர்வதுவும் மெல்லுரக மூடுவர்கொல் - ஊர்வதுவும்
ஏகம்பம் என்றும் இடைமருதை நேசித்தார்க்(கு)
ஏகம்ப மாய்நின்ற ஏறு.
தெளிவுரை : ஏறிச் செல்வது இடபமாகும். கபாலம் உண்கலமாகும். மேலே ஊர்ந்து செல்வது
பாம்பாகும். குடியிருக்கும் ஊர் ஏகம்பம் திருஇடை மருதை நேசித்தவர்க்குப் பற்றுக்
கோடாக உள்ள தூண் ஆகும்.
-
ஏறேய வாழ்முதலே ஏகம்பா எம்பெருமான்
ஏறேறி யூரும் எரியாடி - ஏறேய
ஆதிவிடங் காகாறை அண்டத்தாய் அம்மானே
ஆதிவிடங் காவுமைநன் மாட்டு.
தெளிவுரை : ஆனேற்றை வாழ்முதலாகக் கொண்டவனே ! ஏகம்பனே ! எம்பெருமான் தீயில்
ஆடுபவன். ஆதி விடங்கப் பெருமானே ! திருக்காறை என்னும் தலத்தில் உள்ளவனே ! உளியால்
செய்யப்படாதவனே. (சுயம்பு வாய்த் தோன்றியவன் என்றபடி) நான் உன்னை அடையச்
செய்வாயாக.
-
மாட்டும் பொருளை உருவை வருகாலம்
வாட்டும் பொருளாய் மறையானை - வாட்டும்
உருவானைச் சோதி உமைபங்கா பங்காய்
உருவான சோதி உரை.
தெளிவுரை : தந்தருளிய உலகியற் பொருளை, உடம்பை. எதிர் காலத்தில் வாட்டும்
பொருளாய்ச் செய்பவனே. சோதி வடிவானவனே ! உமாதேவியை இடப்பாகத்தில் வைத்துள்ளவனே. நீ
சோதி உருவாய் மாறியதைப் பாங்காய் உரைப்பாயாக.
-
உரையா இருப்பதுவும் உன்னையே ஊனின்
உரையாய் உயிராய்ப் பொலிந்தாய் - உரையாய்
அம்பொனே சோதி அணியாரூர் சேர்கின்ற
அம்பொனே சோதியே ஆய்ந்து.
தெளிவுரை : ஓதிக் கொண்டிருப்பதுவும் உன்னையே. உடம்பின் போர்வையாய்க்
கொண்டிருப்பதுவும், உயிருக்கு உயிராய் விளங்குகின்றதுவும், மாற்றுரைக்குப்
பொருந்திய அம்பொன் சோதியாக இருப்பதுவும் அழகிய திருவாரூர் சேர்கின்ற அம்பொன்
சோதியென்று நீ ஆய்ந்து உணர்வாயாக.
-
ஆய்ந்துன்றன் பாதம் அடையவரும் என்மேல்
ஆய்ந்தென்றன் பாச மலம்அறுத் - தாய்ந்துன்தன்
பாலணையச் செய்த பரமா பரமேட்டி
பாலணையச் செய்த பரம்.
தெளிவுரை : திருமுறை மெய்கண்ட நூல்வழி நின்று, திருவருளால் ஆராய்ந்து உன் பாதம்
அடையவரும் என்மேல் நுணுகி என் பாச மலம் அறுத்து ஆய்ந்து உன்தன்பால் அணையச் செய்த
பரமா! பரமேட்டி, திருவடிப் பேரின்பம் அடையச் செய்வாயாக.
-
பரமாய பைங்கண் சிரமேயப் பூண்ட
பரமாய பைங்கண் சிரமே - பரமாய
ஆறடைந்த செஞ்சடையாய் ஐந்தடைந்த மேனியாய்
ஆறுடைந்த செஞ்சடையாய் அன்பு.
தெளிவுரை : ஐந்தொழில்களாவன: ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன.
பாம்பு சிரத்தில் பொருந்த, பரமாய அபயம் சிரத்தில் அமைய கங்கைகளையுடைய
செஞ்சடையாய்; பஞ்சகௌவிய அபிடேகம் கொண்ட திருமேனியை உடையாய். உன் அன்பையே நாடி
நிற்கிறேன் என்பதாம். ஐந்து - ஐந்து தினைகளுக்கும் உரியவன். ஐந்து முகத்தை
உடையவன்; ஐந்து தொழில்களைச் செய்பவன் என்பதாம்.
-
அன்பே உடைய அரனே அணையாத
அன்பே உடைய அனலாடி - அன்பே
கழுமலத்து ளாடும் கரியுரிபோர்த் தானே
கழுமலத்து ளாடும் கரி.
தெளிவுரை : ஆருயிர்கள் உய்ய வேண்டுமெனக் கருதும் உள்ளம் உடையவனே! அணையாத அன்பே
உடைய அனலாடி. கழுமலம் என்னும் சீகாழிப் பதியில் எழுந்தருளியிருக்கும் ஆடுங்
கடவுளே! யானைத் தோலைப் போர்த்தவனே ! மிக்க மலத்தில் ஆடும் தெய்வம் என்பதற்கும்
நீயே சான்று.
-
கரியார்தாம் சேரும் கலைமறிகைக் கொண்டே
கரியார்தாம் சேரும் கவாலி - கரியாகி
நின்ற கழிப்பாலை சேரும் பிரான்நாமம்
நின்ற கழிப்பாலை சேர்.
தெளிவுரை : கரிய நிறம் சேர்ந்த மான் கன்றைக் கையில் ஏந்தியவர்தாம் சான்றாவார்.
பிரமனது தலை ஓட்டைக் கையில் கொண்டவர். பாலை நிலத்தில் சேரும் பிரான்
திருநாமத்தைச் சொல்லுகின்ற திருக் கழிப்பாலை என்னும் தலத்தைச் சென்று அடைவாயாக.
-
சேரும் பிரான்நாமம் சிந்திக்க வல்லீரேல்
சேரும் பிரான்நாமம் சிந்திக்கச் - சேரும்
மலையான் மகளை மகிழ்ந்தாரூர் நின்றான்
மலையான் மகளை மகிழ்ந்து.
தெளிவுரை : சிவபிரான் திருப்பெயரைச் சிந்திக்க வல்லீரேல், அவனுடைய திருப்பெயரைக்
கொண்ட கயிலை மலைக்குச் செல்லுங்கள். மலைமகளைச் சேர்ந்து மகிழ்ந்திருக்கும்
திருவாரூரில் நின்றான். அவன் மலை வில்லாதவன். அவனை வழிபடுங்கள்.
-
மகிழ்ந்தன்பர் மாகாளம் செய்யும் மகளிர்
மகிழ்ந்தம் பரமாகி நின்றார் - மகிழ்ந்தங்கம்
ஒன்றாகி நின்ற உமைபங்கன் ஒற்றியூர்
ஒன்றாகி நின்ற உமை.
தெளிவுரை : (அம்பரம் - வான், திசை, கடல், சீலை, ஆடை, துயிலிடம்) அன்பர்களுக்குப்
பெருங் களிப்பைச் செய்பவன். மகளிர் மகிழ்ந்து அவன் மயமாகி நின்றனர். விரும்பி
அர்த்தநாரீஸ்வர உருவாய் உள்ளவன். உமையை இடப்பாகத்தில் கொண்டவன். திருவொற்றியூரில்
உமையோடு ஒன்றாகி நின்றவன்.
-
உமைகங்கை என்றிருவர் உற்ற உணர்வும்
உமைகங்கை என்றிருவர் காணார் - உமைகங்கை
கார்மிடற்றம் மேனிக் கதிர்முடியான் கண்மூன்று
கார்மிடற்றம் மேனிக்(கு) இனி.
தெளிவுரை : உமையும் கங்கையும் இறைவன் கையில் வைத்திருக்கும் பிரம கபாலத்தை
அறியார். அவ்விருவரும் ஒருவரையொருவர் அறியார். இறைவன் நீலகண்டன். செந்நிறச் சடையை
உடையவன். கண் மூன்று உடையவன். அவன் அவ்விருவர் உணர்வுகளை அறியான்.
-
இனியவா காணீர்கள் இப்பிறவி எல்லாம்
இனியவா ஆகாமை யற்றும் - இனியவா(று)
ஆக்கை பலசெய்த ஆமாத்தூர் அம்மானை
ஆக்கை பலசெய்த அன்று.
தெளிவுரை : இந்த உடம்பு இதுவரை துன்பமாகக் காணப்பட்டாலும் இனியாவது இன்பமாக
இருக்கப் பல உயிர்களைப் படைத்த திருஆமாத்தூர் பதியில் கோயில் கொண்டிருக்கும்
அம்மானை இனியாவது நற்கதி காட்ட வேண்டுவாயாக.
-
அன்றமரர் உய்ய அமிர்தம் அவர்க்கருளி
அன்றவுணர் வீட அருள்செய்தோன் - அன்றவுணர்
சேராமல் நின்ற அடிகள் அடியார்க்குச்
சேராமல் நின்ற சிவம்.
தெளிவுரை : அந்நாளில் தேவர் வாழ்வதற்காக அமுதத்தை அவர்களுக்குக் கொடுத்து, அவுணர்
மாள அருள் செய்தவன். மாறுபட்ட அசுரர்களோடு சேராமல் நின்ற இறைவன், அடியார்க்கும்
இன்று சேராமல் இருக்கின்றான் என்பதாம்.
-
சிவனந்தஞ் செல்கதிக்கோர் கண்சேர்வ தாக்கும்
சிவனந்தஞ் செல்கதிக்கோர் கண்ணாம் - சிவனந்தம்
சேரும் உருவுடையீர் செங்காஅட் டங்குடிமேல்
சேரும் உருவுடையீர் செல்.
தெளிவுரை : சிவனை அடைவதற்குரிய வழி யாதெனில் அடியார்கள் நற்கதி பெறுவதற்காகச்
செல்லும் திருச் செங்காட்டங்குடியில் கோயில் கொண்டிருக்கும் இறைவனை வழிபடுங்கள்.
அதுவே அவனை அடைவதற்குரிய கண்போன்ற நெறியாகும்.
-
செல்லு மளவும் சிதையாமல் சிந்திமின்
செல்லும் மளவும் சிவனும்மைச் - செல்லும்
திருமீச்சூர்க்(கு) ஏறவே செங்கணே(று) ஊரும்
திருமீச்சூர் ஈசன் திறம்.
தெளிவுரை : உயிர் பிரியும் வரையில் சிதையாமல் அவனை நினையுங்கள். திருமீச்சூரில்
உள்ள இறைவன்தான் கடைசிவரை வழி நடத்திச் செல்வான். இடபத்தை ஊரும் ஈசன் திறம்
அதுவாகும். அதுவே நற்கதி பெறுவதற்குரிய மார்க்கமாகும்.
-
திறமென்னும் சிந்தை தெரிந்தும்மைக் காணும்
திறமென்னும் சிந்தைக்கும் ஆமே - திறமென்னும்
சித்தத்தீர் செல்வத் திருக்கடவூர் சேர்கின்ற
சித்தத்தீ ரே செல்லும் நீர்.
தெளிவுரை : திறம் என்னும் சிந்தை தெரிந்து உம்மைக் காணும் திறம் என்னும்
சிந்தைக்கும் ஆமே. திறம் என்னும் நெஞ்சுடையீர் ! செல்வமிக்க திருக்கடவூர்
சேர்கின்ற அறிவுடையீர் ! நீரே செல்லும், சித்து - அறிவு. நான் கடைத் தேறும்
வழியைக் காட்டுவீராக.
-
நீரே எருதேறும் நின்மலனார் ஆவீரும்
நீரே நெடுவானில் நின்றீரும் - நீரே
நெருப்பாய தோற்றத்து நீளாறும் பூண்டு
நெருப்பாய தோற்றம் நிலைத்து.
தெளிவுரை : நீர் இடபத்தை வாகனமாக உடையவர். நின்மலமானவர். நீரே தீப்பிழம்பாய்
நெடுவானம்வரை நிமிர்ந்து நின்றீர். பிரமனும் திருமாலும் அறிய முடியாத படி
(அடிமுடி காணாதவாறு) நின்றனை. உம்மை யாரே காண வல்லார்? இது திருவண்ணாமலையில்
நிகழ்ந்தது.
-
நிலைத்திவ் வுலகனைத்தும் நீரேயாய் நின்றீர்
நிலைத்திவ் வுலகனைத்தும் நீரே - நிலைத்தீரக்
கானப்பே ரீர்க்கங்கை சூடினீர் கங்காளீர்
கானப்பே ரீர்கங்கை யீர்.
தெளிவுரை : நிலைத்து இவ்வுலகனைத்தும் நீரேயாய் நின்றீர். இவ்வுலகனைத்தும் நீரே
நிலைத்தீர். திருக்கானப்பேர் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளீர். கங்கையைத்
தலையில் சூடினீர். மண்டை ஓட்டைக் கையில் ஏந்தினீர். கானப்பேர் - காடு போன்ற பெரிய
நீர்.
-
ஈரம் உடைய இளமதியம் சூடினீர்
ஈரம் உடைய சடையினீர் - ஈர
வருங்காலம் ஆயினீர் இவ்வுலகம் எல்லாம்
வருங்கால மாயினீர் வாழ்வு.
தெளிவுரை : குளிர்ந்த பிறைமதியைத் தலையில் சூடினீர். கங்கையைத் சடையில் வைத்தீர்.
முழுவதையும் அழிக்க எதிர் காலத்தை நோக்குகின்றீர், இவ்வுலக மெல்லாம் வருங்காலமாக
வாழ்வு நடத்தப் போகிறீர். உம்முடைய திருவிளையாடல்களை யார் அறிவார் என்பதாம்.
-
வாழ்வார் மலரணைவார் வந்த வருநாகம்
வாழ்வார் மலரணைவார் வண்கங்கை - வாழ்வாய
தீயாட வானாள்வான் வான்கழல்கள் சேராதார்
தீயாட வானாளு மாறு.
தெளிவுரை : உன்னுடைய மலர் போன்ற பாதங்களை அடைந்தவர்கள் எல்லா நலன்களையும் பெற்று
வாழ்வார். கயிலாய மலையில் வாசம் செய்யும் உன் பாதங்களைப் பெற்றவர்கள் கங்கையைப்
போல நல் இன்பத்தைப் பெறுவர். உன் பாதத்தைச் சேராதவர் நெருப்புக்கு இரையாகித்
துன்புறுவர்.
-
மாறாத ஆனையின்தோல் போர்த்து வளர்சடைமேல்
மாறாத நீருடைய மாகாளர் - மாறா
இடுங்கையர் சேரும் எழிலவாய் முன்னே
இடுங்கையர் சேர்வாக ஈ.
தெளிவுரை : பகையாக வந்த யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்து, வளர் சடைமேல்
வற்றாத கங்கையை உடையவர்; கையில் கபாலத்தை ஏந்தியவர். மாறாத ஒழுக்கமுடையவரைச்
சேருங்கள். தானம் செய்யுங்கள் அதுவே இறைவனை அடையும் வழியாகும்.
-
ஈயும் பொருளே எமக்குச் சிவலோகம்
ஈயும் பொருளே இடுகாட்டில் - நீயும்
படநாகம் பூணும் பரலோகீர் என்னீர்
படநாகம் பூணும் படி.
தெளிவுரை : நீங்கள் பிறருக்குத் தானமாகக் கொடுக்கும் பொருளே சிவலோகம்
நமக்குத் தரும் அருள் கொடையாகும். சுடுகாட்டில் நீயும் படத்தையுடைய பாம்பை
அணியும் இறைவனைத் துதியுங்கள். அப்போதுதான் உங்கள் ஆணவம் அழியும்.
-
படியேறும் பார்த்துப் பரத்தோடும் கூட்டிப்
படியேறும் பார்த்துப் பரனெப் - படியேனைப்
பாருடையாய் பைங்கண் புலியதளாய் பால்நீற்றாய்
பாருடையாய் யானுன் பரம்.
தெளிவுரை : இறைவனே, என்னைப் பார். பசுமையான கண்களையுடைய புலித்தோலை ஆடையாக
உடையாய். திருநீற்றை அணிந்தவனே ! இவ்வுலகை உடையாய். நான் உன் பொறுப்பில் வந்து
விட்டேன். நீ என்னை ஆட்கொண்டால் துன்பங்கள் என்னை விட்டு நீங்கும். அது தவிர வேறு
வழியில்லை.
-
பரமாய விட்டுநின் பாதம் பணிந்தேன்
பரமாய ஆதிப் பரனே - பரமாய
நீதியே நின்மலனே நேரார் புரமூன்றும்
நீதியே செய்தாய் நினை.
தெளிவுரை : வினைச் சுமைகளை விட்டு, உன் பாதங்களை வணங்கினேன். மேலான முதல்வன்
நீயே. மேலான அறவடிவினனே. குற்றமற்றவனே. பகைவர்களின் திரிபுரங்களை நீ எரித்தாய்.
நீ தீயே என்பது நீதியே எனக் குறைந்தது. நினைத்துப் பார்.
-
நினையடைந்தேன் சித்தம் நிலையாகும் வண்ணம்
நினையடைந்தேன் சித்த நிமலா - நினையடைந்தேன்
கண்டத்தாய் காளத்தி யானே கனலாரும்
கண்டத்தாய் காவாலி கா.
தெளிவுரை : உன்னைப் புகலிடமாக அடைந்தேன். என்னுடைய மனம் நேர் வழியில் செல்லும்
வண்ணம் உன்னைப் பற்றுக் கோடாகத் தேர்ந்தேன். மனத்தில் குற்றமில்லாதவனே ! தாய்
போன்றவனே. திருக்காளத்தியில் உள்ளவனே! திருநீலகண்டனே. என்னைக் காப்பாற்றுவாயாக.
-
காவார் பொழிற்கயிலை ஆதீ கருவேயெம்
காவாய்ப் பொலிந்த கடுவெளியே - காவாய
ஏறுடையாய் என்னை இடைமருதி லேயென்றும்
ஏறுடையாய் நீயே கரி.
தெளிவுரை : சோலைகள் சூழ்ந்த கயிலையில் வீற்றிருக்கும் ஆதியெம் பொருளே! உலகக்
காரணனே. எம்மைக் காத்தருள்வாய். அறிவுப் பேரொளியே. எருதாகிய ஊர்தியை உடையாய்.
என்னைத் திருவிடைமருதூரில் எப்போதும் இருக்கச் செய்வாய். நீயே சான்றாவாய்.
-
கரியானும் நான்முகனு மாய்நின்ற கண்ணன்
கரியாரும் கூற்றங் கனியே - கரியாரும்
காடுடையாய் காலங்கள் ஆனாய் கனலாடும்
காடுடையாய் காலமா னாய்.
தெளிவுரை : திருமாலும் பிரமனுமாய் நின்ற கண்ணன்; கரியாருங் கூற்றம் கனியே,
சுடுகாட்டில் இருப்பவனே; பல யுகங்களைக் கண்டவன் நீ; கனலாடும் சுடுகாடாகவும்
காலமாகவும் இருக்கின்றவன் நீ.
-
ஆனாய னாய அடலேறே ஆரூர்க்கோன்
ஆனாய னாவமுத மேயானாய் - ஆனாய்
கவரெலும்போ டேந்தி கதநாகம் பூணி
கவரெலும்பு தார்கை வளை.
தெளிவுரை : ஆனாய னாய வலிமை பொருந்திய சிங்கமே. திருவாரூர் இறைவன் உயிர்களுக்கு
அமுதம் போன்றவன். பிளவுபட்ட எலும்பு ஓடு ஏந்தி, கோபமுள்ள பாம்புகளை அணிந்தனனே !
கை வளையல்களைக் கழலுமாறு செய்பவனே ! உன் எலும்பு மாலையைத் தா.
-
வளைகொண்டாய் என்னை மடவார்கண் முன்னே
வளைகொண்டாய் மாசற்ற சோதி - வளைகொண்டாய்
மாற்றார் கதுவ மதிலாரூர் சேர்கின்ற
மாற்றாரூர் கின்ற மயல்.
தெளிவுரை : உன்மீது மையல் கொண்ட என் கை வளைகளைப் பறித்துக் கொண்டாய். என்னைப்
பெண்கள் முன்னை வளைத்துக் கொண்டாய். குற்றமற்ற சோதி வடிவானவனே! பகைவர்கள் மாள
மதில்களை உடைய திருவாரூர் சேர்கின்ற மாற்றாருடைய ஊரின் மீது மயல் கொண்டாய்
போலும்.
-
மயலான தீரும் மருந்தாகும் மற்றும்
மயலானார் ஆரூர் மயரார் - மயலான
கண்ணியர்தம் பாகா கனியே கடிக்கொன்றைக்
கண்ணியலான் பாதமே கல்.
தெளிவுரை : மயலானது நம்மைப் பற்றி ஈர்க்கும் மருந்தாகும். அப்படியிருந்தும் மயல்
கொண்டவர்களைக் கண்டு திருவாரூர் பெருமான் மயங்க மாட்டார். மயல் கொண்ட உமையைப்
பாகமாகக் கொண்டவரே. கனி போன்றவனே என்று போற்றி, மனமே ! மணமுள்ள கொன்றையைத் தலை
மாலையாகக் கொண்டவரது பாதங்களை அடையும் வழியைக் கற்பாயாக.
-
கலைமான்கை ஏனப்பூண் காண்கயிலை மானின்
கலைமான் கறைகாண் கவாலி - கலைமானே
ஆடுவதும் பாடுவதும் காலனைப்பொன் அம்பலத்துள்
ஆடுவதும் ஆடான் அரன்.
தெளிவுரை : கையில் உள்ளது மான் கன்று பன்றிக் கொம்பு ஆபரணம். அவனைக் கயிலையில்
காண்பாயாக. அவன் கழுத்தில் கறையுள்ளவன். பொன்னம்பலத்துள் ஆடுவான் பாடுவான். அவன்
காலனை அழித்தவன் என்க. அடுவது ஆடுவது என நீண்டது.
-
அரனே அணியாரூர் மூலட்டத் தானே
அரனே அடைந்தார்தம் பாவம் - அரனே
அயனார்தம் அங்கம் அடையாகக் கொண்டாய்
அயனாக மாக அடை.
தெளிவுரை : அரனே, அணி திருவாரூர் மூலட்டத்தானே ! தம்மை அடைந்தவர்களது பாவத்தை
அழிப்பவனே ! பிரமனது உடம்பை அடைக்கலமாகக் கொண்டாய் என்று துதித்து அத்தகையவனை
மனமே ! அடைக்கலமாகக் கொள்வாயாக.
-
அடையும் திசைஈசன் திண்தோளா காசம்
அடையும் திருமேனி அண்டம் - அடையும்
திருமுடிகால் பாதாளம் ஆடைகடல் அங்கி
திருமுடிநீர் கண்கள்சுடர் மூன்று.
தெளிவுரை : இது சிவபெருமான் உலகமே உருவமாகக் கொள்ளும் நிலையை உணர்த்துகின்றது.
திசைகளே தோள்; ஆகாயமே மேனி; அண்டமே திருமுடி; பாதாளமே திருவடி; கடலே ஆடை;
திருமுடியில் இருப்பது கங்கையாகிய நீர்; மூன்று சுடர்களும் மூன்று கண்கள்.
-
மூன்றரணம் எய்தானே மூலத் தனிச்சுடரே
மூன்றரண மாய்நின்ற முக்கணனே - மூன்றரண
மாய்நின்ற சோதி அணியாரூர் சேர்கின்ற
வாய்நின்ற சோதி அறம்.
தெளிவுரை : திரிபுரங்களை அழித்தவனே ! எல்லாவற்றிற்கும் மூலகாரணமாகிய ஒப்பற்ற
ஒளிச்சுடரே. மூன்று காவலாய் நின்ற முக்கணனே. மூன்று கோட்டைகளை உடையவனே ! அவன்தான்
திருவாரூரில் கோயில் கொண்டுள்ள சோதி வடிவினன். அவனே அறக் கடவுள்.
-
அறமாய்வ ரேனும் அடுகாடு சேர
அறமானார் அங்கம் அணிவர் - அறமாய
வல்வினைகள் வாரா எனமருக லாரென்ன
வல்வினைகள் வாராத வாறு.
தெளிவுரை : தருமத்தை ஆராய்ச்சி செய்பவரேனும் சுடுகாடே கதியாய் உள்ளவர்.
இறந்தவர்களின் எலும்பை அணிபவர். அருவினைகள் நம்மைச் சேராவண்ணம் காப்பவர்.
வல்வினைகள் நம்மை அணுகாமல் இருக்க அவன் அருள் பாலிப்பானாக.
-
ஆறுடையர் நஞ்சுடையர் ஆடும் அரவுடையர்
ஆறுடையர் காலம் அமைவுடையர் - ஆறுடைய
சித்தத்தீர் செல்வத் திருக்கயிலை சேர்கின்ற
சித்தத்தீர் எல்லார்க்கும் சேர்வு.
தெளிவுரை : தலையில் கங்கையாற்றை உடையவர்; கழுத்தில் விடத்தை உடையவர்; உடம்பில்
பாம்பை அணிந்தவர்; பெரும்பொழுது சிறுபொழுது எனக் காலம் ஆறு உடையவர்; நன்னெறியை
உடைய மனமுடையவர்களே, செல்வத் திருக்கயிலையைச் சென்று வழிபடுங்கள்.
-
சேர்வும் உடையர் செழுங்கொன்றைத் தாரார்நஞ்
சேர்வும் உடையர் அரவுடையர் - சேரும்
திருச்சாய்க்காட் டாடுவரேல் செய்தக்க என்றும்
திருச்சாய்க்காட் டேநின் உருவு.
தெளிவுரை : திருச்சாய்க் காட்டில் எழுந்தருளியிருக்கும் பெருமானை நீங்கள்
வழிபடுங்கள். அவர் செல்வம் உடையவர். செழுங்கொன்றைத் தாருடையவர். நீலகண்டர்.
பாம்பு அணிபவர். திருகல் சாயும் இடம் அப்பதியேயாகும்.
-
உருவு பலகொண்(டு) ஒருவராய் நின்றார்
உருவு பலவாம் ஒருவர் - உருவு
பலவல்ல ஒன்றல்ல பைஞ்ஞீலி மேயார்
பலவல்ல ஒன்றாப் பகர்.
தெளிவுரை : திருப்பைஞ்ஞீலி என்னும் சிவப்பதியின் சிறப்பைக் கூறுகின்றார்.
அங்குள்ள இறைவன் ஒருவரே பல உருவங்களைக் கொண்டவர். உருவு பலவாயினும் அவர் ஒருவரே.
உருவு பலவும் அல்லன் அவன் எங்கும் நிறைந்தவன் என்பதாம். தடத்த வடிவம் கலப்பால்
பலவாம் பான்மையர் என்க. தடத்தம் - நடுநிலை தொழில் நிலை.
-
பகரப் பரியானை மேலூரா தானைப்
பகரப் பரிசடைமேல் வைத்த - பகரப்
பரியானைச் சேருலகம் பல்லுயிர்கள் எல்லாம்
பரியானைச் சேருலகம் பண்.
தெளிவுரை : சொல்லப்படும் குதிரை, யானை ஆகியவற்றை ஊர்தியாகக் கொள்ளாதவன். அழகிய
சடையை உடையவன். அவன் இன்ன தன்மையன் என்று சொல்ல ஒண்ணாதவன். மனமே ! இந்த இறைவனை
அடையத் துதிப்பாயாக.
-
பண்ணாகப் பாடிப் பலிகொண்டாய் பாரேழும்
பண்ணாகச் செய்த பரஞ்சோதீ - பண்ணா
எருதேறி யூர்வாய் எழில்வஞ்சி எங்கள்
எருதேறி யூர்வாய் இடம்.
தெளிவுரை : இசையோடு பாடி, பிச்சை ஏற்கின்றாய். ஏழு உலகங்களையும் பண்ணுதலாகச்
செய்த ஒளி மயமானவனே! அலங்காரம் செய்த இடபத்தை வாகனமாகக் கொண்டவனே. அழகிய வஞ்சி
என்னும் சிவத்தலம் நாம் வணங்கும் இறைவனுக்கு உகந்த இடமாகும்.
-
இடமாய எவ்வுயிர்க்கும் ஏகம்பம் மேயார்
இடமானார்க்(கு) ஈந்த இறைவர் - இடமாய
ஈங்கோய் மலையார் எழிலார் சிராமலையார்
ஈங்கோய் மலையார் எமை.
தெளிவுரை : தனது இருப்பிடமாகத் திருவேகம்பத்தைக் கொண்டவர். இடப்பாகத்தை
உமாதேவியார்க்கு அளித்தவர். தனக்கு இடமாக ஈங்கோய் மலையையும்
திருச்சிராப்பள்ளியையும் உடையவர். நமக்கு வரும் துன்பங்களை இங்கு ஓயும்படி
செய்வார்.
-
எமையாள வந்தார் இடரான தீர
எமையாளும் எம்மை இமையோர் - எமையாளும்
வீதிவிடங் கர்விடம(து) உண்டகண் டர்விடையூர்
வீதிவிடங் கர்விடையூர் தீ.
தெளிவுரை : நமது துன்பங்களைப் போக்க வந்தவர். இவர் இமையோர் தலைவன், வீதிவிடங்கப்
பெருமான் நீலகண்டர். திருவிடைமருதூரில் எழுந்தருளியிருப்பவர் . அவரே நமக்குக்
கதியாவார் என்க.
-
தீயான மேனியனே செம்பவளக் குன்றமே
தீயான சேராமற் செய்வானே - தீயான
செம்பொற் புரிசைத் திருவாரூ ராயென்னைச்
செம்பொற் சிவலோகம் சேர்.
தெளிவுரை : செந்நிற மேனியனே ! செம்பவளக் குன்றமே. தீமைகள் நம்மை வந்து அடையாமல்
செய்பவன் இவனே. செம்பொன் மதில்களையுடைய திருவாரூராய் என்னைச் செம்பொற்
சிவலோகத்தில் சேர்ப்பாயாக.
-
சேர்கின்ற சிந்தை சிதையாமல் செய்வானே
சேர்கின்ற சிந்தை சிதையாமல் - சேர்கின்றோம்
ஒற்றியூ ரானே உறவாரும் இல்லையினி
ஒற்றியூ ரானே உறும்.
தெளிவுரை : உயிர்களுடன் புணர்ப்பாய் ! ஒற்றியூர்பவனே ! மனம் ஒன்றுபடும்படி செய்ய
வல்லவனே ! உன்னைப் புகலிடமாகக் கொள்ள நாங்கள் வருகின்றோம். எங்களுக்கு வேறு
உறவினர்கள் இல்லை. நீயே கதி என்பதாம். திருவொற்றியூரானே நீங்காப் பேருறவு.
-
உறுமுந்த முன்னே உடையாமல் இன்னம்
உறுமுந்த முன்னே உடையாமல் - உறுமுந்தம்
ஓரைந் துரைத்துற்(று) உணர்வோ(டு) இருந்தொன்றை
ஓரைந் துரைக்கவல்லார்க்(கு) ஒன்று.
தெளிவுரை : பஞ்சாட்சர மகிமை கூறியவாறு. இந்த உடம்பு அழிவதற்கு முன்பாக
ஐந்தெழுத்தை உரைப்பாயாக. உயிரோடு இருக்கும்போதே நாம் ஓதினால் நற்கதி பெறலாம்
என்றபடி. ஓர் ஐந்து - ஓர்ந்து உணர்தற்கு உரிய அவ்வைந்து,
-
ஒன்றைப் பரணர் உரைத்தஅந் தாதிபல
ஒன்றைப் பகரில் ஒருகோடி - ஒன்றைத்
தவிரா(து) உரைப்பார் தளரார் உலகில்
தவிரார் சிவலோகந் தான்.
தெளிவுரை : பரணர் பாடிய இந்தச் சிவபெருமான் திரு அந்தாதியை முறைப்படி ஓதினால்
சிவலோகத்தைத் தவறாமல் பெறலாம். மற்ற நூல்கள் பலவற்றை ஓதுவதை விட இது சிறந்தது
என்பதாம்.
திருச்சிற்றம்பலம்
சிவபெருமான் திருமும்மணிக்கோவை (
இளம்பெருமான்அடிகள்அருளிச்செய்தது )
திருமும்மணிக்கோவையை திருவாய் மலர்ந்து அருளிய இளம் பெருமான் அடிகளுடைய ஊர்,
குலம் முதலியன தெரியவில்லை. பெருமான் அடிகள் என்பது சிவ பெருமானைக் குறித்து
வழங்கும் பெயராகும். இளம் என்னும் சொல்லும் சேர்ந்திருத்தலின் இப்பெயர் முருகக்
கடவுளைக் குறிக்கக்கூடும். கடவுட் பெயரை மக்களுக்கு இட்டு வழங்கும் முறைப்படி இந்
நூலின் ஆசிரியரும் இவ்வாறு பெயரிட்டு அழைக்கப் பட்டிருத்தல்கூடும் என்று
ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகின்றனர்.
இம்மும்மணிக்கோவையின்கண் உள்ள பாடல்கள் யாவும் செறிவு உடையன. இறைவனை முன்னிலைப்
படுத்தி உரையாடி மகிழும் நிலையில் பாடிய பாடல்களும், இறைவனைக் கண்டு காமுற்ற
தலைவியின் துயர் உரைக்கும் அகத்துறைப் பாடல்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
திருச்சிற்றம்பலம்
அகவல்
-
முதல்வன் வகுத்த மதலை மாடத்து
இடவரை ஊன்றிய கடவுட் பாண்டிற்
பள்ளிச் செம்புய லுள்விழு துறீஇப்
புத்தேள் நிவந்த முத்த மாச்சுடர்
எறிவளி எடுப்பினும் சிறுநடுக் குறாநின்
அடிநிழல் அளியவோ வைத்த முடிமிசை
இலங்குவளைத் தனிப்போது விரித்த
அலங்குகதிர் ஒலியல்நீ அணிந்ததென் மாறே.
தெளிவுரை : நான்முகன் படைத்த தூண்களை உடைய மாடத்தில் இடப் பக்கத்திலுள்ள
மலையில் பொருந்திய தெய்வத்தன்மையுள்ள தகழியில் பள்ளிச் செம்புயலுள் விழுந்த
தேவருலகம், உயர்ந்த முத்தமாகிய பேரொளி. காற்று வீசினாலும் சிறிதும் அசையாத உன்
பாத நிழல் அளியுமாறு வைத்த உச்சியின்மீது விளங்குகின்ற வளைந்த திங்களாகிய
மலர்மாலையை நீ அணிந்ததன் காரணம் யாது?
வெண்பா
-
மாறு தடுத்த மணிக்கங்கை திங்களின்
கீறு தடுப்பக் கிடக்குமே - நீறடுத்த
செந்தாழ் வரையின் திரள்போல் திருமேனி
எந்தாய்நின் சென்னி இடை.
தெளிவுரை : நீறு பூசிய செந்தாழ் வரையின் திரள்போல் திருமேனியை உடைய எம் தந்தையே !
தலை முடியில் இருக்கும் கங்கையாறு பிறைச் சந்திரனின் இரு பக்கக்கீற்றுக்கள்
தடுத்ததனால் தேங்கிக் கிடக்கிறதோ?
கட்டளைக் கலித் துறை
-
இடைதரில் யாமொன்(று) உணர்த்துவ(து)
உண்டிமை யோர்சிமையத்
தடைதரு மூரிமந் தாரம்
விராய்நதி வெண்ணிலவின்
தொடைதரு துண்டங் கிடக்கினும்
தொண்டர் ஒதுக்கியிட்ட
புடைதரு புல்லெருக் குஞ்செல்லு
மோநின் புரிசடைக்கே.
தெளிவுரை : இடம் தந்தால், யாம் உணர்த்துவது ஒன்று உண்டு. அது யாது எனில்,
தேவர்கள் உச்சியில் இருந்த பெருமையுள்ள மந்தார மலர் விரவிவரும் நதியாகிய
வெண்ணிலவின் மாலைத் துண்டம் கிடந்தாலும் தொண்டர்கள் ஒதுக்கியிட்ட நிறைந்த எருக்க
மலர்கள் நின் புரிசடைக்கு ஏற்புடையனவோ?
அகவல்
-
சடையே, நீரகம் ததும்பி நெருப்புக் கலிக்கும்மே
மிடறே, நஞ்சகம் துவன்றி அமிர்து பிலிற்றும்மே
வடிவே, முளியெரி கவைஇத் தளிர்தயங் கும்மே
அடியே, மடங்கல்மதம் சீறி மலர்பழிக் கும்மே
அஃதான்று, இனையஎன்(று) அறிநிலம் யாமே முனைதவத்
தலைமூன்று வகுத்த தனித்தாட்
கொலையூன்று குடுமி நெடுவே லோயே.
தெளிவுரை : கூர்மையான முத்தலைகளை அமைத்த முத்தலைச் சூலத்தை ஏந்தியவரே ! உமது கூடை
நீர்ப்பாகம் ததும்பி நெருப்பு கொழுந்துவிடும். கழுத்து விடம் பொருந்தி அமிழ்தம்
வெளிப்படுத்தும். உம்முடைய வடிவம் மூண்டெறியும். தீ கிடைவிட்டுத் தளிர் தயங்கும்.
பாதம் கூற்றுவன் செருக்கை அழிக்கும். அதுவும் அல்லாமல் இவைபோன்றவை இனியும் உளவோ?
அறியோம். முத்தலைச் சூலம் தனித்தாளையும் கொலையூன்று குடுமியையும் உடையது.
வெண்பா
-
வேலை முகடும் விசும்பகடும் கைகலந்த
காலைநீர் எங்கே கரந்தனையால் - மாலைப்
பிறைக்கீறா கண்ணுதலா பெண்பாகா ஐயோ
இறைக்கூறாய் எங்கட்(கு) இது.
தெளிவுரை : மாலையில் பிறைக்கீற்றையும் நெற்றிக் கண்ணையும், இடப்பாகத்தில் உமா
தேவியையும் கொண்டுள்ளவரே ! கடலின் உச்சியையும் ஆகாயத்தின் வயிற்றையும் ஊழிக்
காலத்துப் பெரு நீரையும் எங்கே மறைத்து வைத்தீர்? இதற்கு எங்களுக்குப் பதில்
சொல்வீராக.
கட்டளைக் கலித் துறை
-
இதுநீர் ஒழிமின் இடைதந்
துமையிமை யத்தரசி
புதுநீர் மணத்தும் புலியத
ளேயுடை பொங்குகங்கை
முதுநீர் கொழித்த இளமணல்
முன்றில்மென் றோட்டதிங்கள்
செதுநீர் ததும்பத் திவளஞ்செய்
செஞ்சடைத் தீவண்ணரே.
தெளிவுரை : உமாதேவி உம்மை மணந்த காலத்தும், இடையில் இந்தப் புலித்தோல் ஆடையையா
அணிந்திருந்தீர்? பொங்கு கங்கை முதுநீர் கொழித்த இளமணல் முன்றிலில் மென்றோட்ட
திங்கள் நீர் ததும்ப திவளும்செய் செஞ்சடையையும் தீ வண்ணத்தையும் உடையவரே ! இந்த
ஆடை வேண்டாம். நீக்கி விடுங்கள்.
அகவல்
-
வண்ணம், ஐஞ்சுதலை கவைஇப் பவள மால்வரை
மஞ்சுமி விலகிப் பகல்செருக் கும்மே
என்னைப் பழமுடைச் சிலகலத் திடுபலி பெய்வோள்
நெஞ்சகம் பிணிக்கும் வஞ்சமோ உடைத்தே
அஃதான்று, முளையெயிற்றுக் குருளை இன்துயில் எடுப்ப
நடுங்குதலைச் சிறுநிலா விதிர்க்கும் கொடும்பிறைத்
தேமுறு முதிர்சடை இறைவ
மாமுறு கொள்கை மாயமோ உடைத்தே.
தெளிவுரை : நிறம், ஐந்து தலைகளாகப் பிரிந்துள்ள பவள மால் வரை மேகத்தை விலக்கி
பகல் போல் பிரகாசிக்கும். பழைய புலால் நாற்றத்தையுடைய கபாலமாகிய சிறிய பிச்சைப்
பாத்திரத்தில் பிச்சை போடுகிறவள் நெஞ்சத்தை ஈர்க்கும் வஞ்சம் என்னிடம்
உண்டாகிறது. அஃதல்லாமல், முளைக்கின்ற சிறிய பற்களையுடைய முயல்குட்டி
தூக்கத்திலிருந்து எழுந்து நடுங்குதலைச் சிறுநிலா விதிர்க்கும் வளைந்த பிறை
தவழும் முதிர்சடையை உடைய இறைவ இந்தக் கொள்கை மாயம் உடையது.
வெண்பா
-
உடைதலையின் கோவை ஒருவடமோ கொங்கை
புடைமலிந்த வெள்ளெருக்கம் போதோ - சடைமுடிமேல்
முன்னநாள் பூத்த முகிழ்நிலவோ முக்கணா
இன்னநாள் கண்ட(து) இவள்.
தெளிவுரை : இறந்தவர்களின் தலைகளைக் கொண்டு கட்டிய மாலையே கொங்கைகளின் இடையில்
பொருந்திய வெள்ளெருக்கும் பூவோ, உன் சடை மேல் பண்டைக் காலத்தில் பூத்த முகிழ்
நிலவோ, மூன்று கண்களை உடையவனே ! இவள் இன்று கண்டது எது?
கட்டளைக் கலித் துறை
-
இவளப் பனிமால் இமையத்(து)
அணங்குகற் றைச்சடைமேல்
அவளப்புத் தேளிர் உலகிற்(கு)
அரசி அதுகொண்டென்னை
எவளுக்கு நீநல்ல தியாரைமுன்
எய்திற்றெற் றேயிதுகாண்
தவளப் பொடிச்செக்கர் மேனிமுக்
கண்ணுடைச் சங்கரனே.
தெளிவுரை : வெண்மையான திருநீறு அணிந்து, செவ்வானம் போன்ற மேனியையும் மூன்று
கண்களையும் உடைய சங்கரனே ! உமையாள் அப்பனிமால் இமயத்து அணங்கு. கற்றைச் சடைமேல்
உள்ள கங்கை அந்த தேவர் உலகத்து அரசி. இவர்கள் இருவருள் யாரை நீ முதலில்
அடைந்தாய்? சொல்வாயாக என்பதாம்.
அகவல்
-
கரதலம் நுழைத்த மரகதக் கபாடத்து
அயில்வழங்கு குடுமிக் கயிலை நாடநின்
அணங்குதுயில் எடுப்பிற் பிணங்குநிலாப் பிணையல்
யாமே கண்டதும் இலமே தாமா
மூவா எஃகமும் முரணும்
ஓவாது பயிற்றும் உலகமால் உளதே.
தெளிவுரை : கரதலம் நுழைந்த மரகதம் பதித்த கதவுகளையும் உயர்ந்த சிகரங்களையும் உடைய
கயிலை நாடனே! அணங்கு துயின்ற எடுப்பில் கோபித்துக் கொண்ட திங்களாகிய மாலையை யாம்
பார்த்ததில்லை. அழியாத சூலமும் முரணும் ஒழியாமல் பயிற்றும் உலகம் மயங்குகின்றதே.
அது ஏன்?
வெண்பா
-
உளரொளிய கங்கை ஒலிதிரைகள் மோத
வளரொளிதேய்ந்(து) உள்வளைந்த(து) ஒக்கும் கிளரொளிய
பேதைக் கருங்கண் பிணாவின் மணாளனார்
கோதைப் பிறையின் கொழுந்து.
தெளிவுரை : ஒளி பொருந்திய கங்கையின் ஒலி பொருந்திய திரைகள் மோதுவதால் சந்திரன்
வளர்கின்ற ஒளி தேய்ந்து உள் வளைந்து காணப்படுகிறது. ஒளி மிகுந்த பேதைக் கருங்கண்
பிணாவின் மணாளனார் கோதை பிறையின் கொழுந்து ஒக்கும் என்க.
கட்டளைக் கலித் துறை
-
எழுந்திரள் தெண்ணில வஞ்சிநின்
கூரிருள் வார்பளிங்கின்
செழுந்திரட் குன்றகஞ் சென்றடைந்
தாலொக்கும் தெவ்வர்நெஞ்சத்
தழுந்திரள் கண்டத் தவளப்
பொடிச்செக்கர் மேனிநின்றோர்
எழுந்திரட் சோதிப் பிழம்புமென்
உள்ளத்(து) இடங்கொண்டவே.
தெளிவுரை : சந்திரனின் ஒளி மிகுதியால் கயிலை மலையின் பளிங்கின் செழுந்திரள்
குன்று அகம் சென்று அடைந்தது போல் இருக்கும். பகைவர் நெஞ்சத்தில் அழுந்திரள்
நீலகண்டமும் திருநீறும் செக்கர் வானம் போன்ற உன் மேனியின் சோதிப் பிழம்பும் என்
மனத்தில் இடம் கொண்டன.
அகவல்
-
கொண்டற் காரெயிற்றுச் செம்மருப்(பு) இறாலின்
புண்படு சிமையத்துப் புலவுநாறு குடுமி
வரையோன் மருக புனலாள் கொழுந
இளையோன் தாதை முதுகாட்டுப் பொருநநின்
நீறாடு பொலங்கழல் பரவ
வேறாங்கு கவர்க்குமோ வீடுதரு நெறியே.
தெளிவுரை : கொண்டல் கார் எயிற்றுச் செம்மருப்பு தேனடை புண்படுகின்ற உச்சியில்,
புலவு நாறுகின்ற சிகரங்களை உடைய பர்வத ராஜனின் மருக ! கங்கா தேவியின் மணாளனே !
முருகப் பெருமானின் தந்தையே ! சுடுகாட்டில் கூத்தாடுபவனே ! நின் நீறாடு பொலங்கழல்
வீடு அடைவதற்குரிய வழியைப் பெற, துணை செய்வதாக.
வெண்பா
-
நெறிவிரவு கொன்றை நெடும்படற்கீழ்க் கங்கை
எறிதிரைகள் ஈர்த்தெற்ற ஏறிப் - பொறிபிதிர
ஈற்றராக் கண்படுக்கும் இண்டைச் சடைச்செங்கண்
ஏற்றரால் நீரும் இடர்.
தெளிவுரை : கொன்றை மலர் பொதிந்த சடையில் கங்கை வீசுகின்ற அலைகள் இழுத்து மோத, ஏறி
நிலை தடுமாறிய பாம்பு உறங்கும் தலை மாலை பொருந்திய சடையை உடைய இறைவனை வணங்கினால்
இடர் நீங்கும்.
கட்டளைக் கலித் துறை
-
இடர்தரு தீவினைக்(கு) எள்கிநை
வார்க்குநின் ஈரடியின்
புடைதரு தாமரைப் போதுகொ
லாம்சரண் போழருவிப்
படர்தரு கொம்பைப் பவளவண்
ணாபரு மாதைமுயங்(கு)
அடைதரு செஞ்சுடர்க் கற்றையொக்
குஞ்சடை அந்தணனே.
தெளிவுரை : துன்பத்தைக் கொடுக்கிற தீவினைக்கு மிகவும் வருந்துகின்றவர்களுக்கு,
உன்னுடைய இரண்டு பாதங்களில் அருச்சிக்கப்பட்ட தாமரை மலர்களே சரணாகும் ! அருவிப்
படர்கின்ற கொம்பு போல்பவளை, முயங்குகின்ற பவள வண்ணன் செஞ்சுடர்க் கற்றையொக்கும்
அந்தணனே.
அகவல்
7880 அந்த ணாளர் செந்தொடை ஒழுக்கமும்
அடலோர் பயிற்றும்நின் சுடர்மொழி ஆண்மையும்
அவுணர் நன்னாட்(டு) இறைவன் ஆகிக்
குறுநெடுந் தானை பரப்பித் தறுகண்
மால்விடை அடரத் தாள்நிமிர்ந் துக்க
காய்சின அரவுநாண் பற்றி நீயோர்
நெடுவரை நெளிய வாங்கிச்
சுடுகணை எரிநிமிர்த்துத் துரந்த ஞான்றே.
தெளிவுரை : அந்தணர்களுடைய செந்தொடையாகிய ஒழுக்கமும் ஆண்மையுடையோர் பயிற்றுகின்ற
உன் ஒளி மிகு சொல் ஆண்மையும், அரக்கர்களுடைய நன்னாட்டிற்கு இறைவனாகி சிறிய பெரிய
சேனையைப் பரப்பி அஞ்சாமையுடைய மால்விடை அடரத் தான் நிமிர்ந்து செலுத்த கோபமிக்க
பாம்பை நாணாகக் கொண்டு, மேரு மலையை வளைத்து சுடுகணை எரி நிமிர்த்து செலுத்திய
போது,
வெண்பா
-
ஞான்ற புனமாலை தோளலைப்ப நாண்மதியம்
ஈன்ற நிலவோடும் இவ்வருவான் - மூன்றியங்கு
மூதூர் வியன்மாடம் முன்னொருகால் துன்னருந்தீ
மீதூரக் கண்சிவந்த வேந்து.
தெளிவுரை : அந்தச் சமயத்தில் புனமாலை தோளில் இலங்க பூர்ண சந்திரன் அளித்த
நிலவோடும் வருவான்; திரிபுரங்களை முன்னொரு சமயம் தீக்கு இரையாக்கினான்.
கண்சிவந்து மீதூர - மிகவும் கோபங்கொண்டு இறைவன் இச்செயலைச் செய்தான் என்க.
கட்டளைக் கலித் துறை
-
வேந்துக்க மாக்கடற் சூரன்முன்
னாள்பட வென்றிகொண்ட
சேந்தற்குத் தாதையிவ் வையம்
அளந்ததெய் வத்திகிரி
ஏந்தற்கு மைத்துனத் தோழனின்
தேன்மொழி வள்ளியென்னும்
கூந்தற் கொடிச்சிதன் மாமன்வெம்
மால்விடைக் கொற்றவனே.
தெளிவுரை : நம் இறைவன், கடல் மத்தியிலிருந்த சூரபத்மன் அழியக் காரணமாயிருந்த
வெற்றியுடைய முருகப் பெருமானுக்குத் தந்தை; இவ்வுலகை அளந்த, சக்கரப் படையை ஏந்திய
திருமாலுக்கு மைத்துனன்; தேன்மொழி வள்ளி என்னும் கொடி போலும் இடையை உடையவளுக்கு
மாமன்; வெம்மால் விடைக் கொற்றவன் என்க. இத்தகைய சிறப்புக்களை உடையவன் சிவபெருமான்
என்பதாம்.
அகவல்
-
கொற்றத் துப்பில் ஒன்றை ஈன்ற
துணங்கையஞ் செல்வத்(து) அணங்குதரு முதுகாட்டுப்
பேய்முதிர் ஆயத்துப் பிணவின் கொழுநநின்
நேர்கழல் கவைஇ இலங்கிதழ்த் தாமம்
தவழ்தரு புனல்தலைப் படுநர்
அவல மாக்கடல் அழுந்தலோ இலரே.
தெளிவுரை : கொற்றத்துப்பில் ஒன்றை ஈன்ற துணங்கைக் கூத்தை ஆடுகின்ற சுடுகாட்டில்,
பேய்களின் கூட்டத்திற்குத் தலைவியாகிய துர்க்கையின் கணவனே ! உன்னுடைய வீரக்
கழலைக் கட்டி இலங்குகின்ற மாலையை அணிந்து ஆடுதலை மேற்கொண்டவர் துன்பக் கடலில்
அழுந்த மாட்டார்கள் என்பதாம்.
வெண்பா
-
இலர்கொலாம் என்றிளைஞர் ஏசப் பலிக்கென்(று)
உலகெலாம் சென்றுழல்வ ரேனும் - மலர்குலாம்
திங்கட் குறுந்தெரியல் தேவர்க்காட் செய்வதே
எங்கட் குறுந்தெரியின் ஈண்டு.
தெளிவுரை : இவர் யாதும் இல்லாதவரோ என்று இளைஞர் பழி சொல்ல, பிச்சைக்கு என்று
உலகமெல்லாம் சுற்றித் திரிவரேனும், மலர் நிறைந்த பிறையாகிய சிறிய கண்ணியை அணிந்த
தேவனாகிய சிவபெருமானுக்கு ஆட்செய்வதே எங்களுடைய கடமையாகும்.
கட்டளைக் கலித் துறை
-
ஈண்டுமுற் றத்(து)ஒற்றை மால்விடை
ஏறியை அம்முனைநாள்
வேண்டிமுற் றத்திரிந்(து) எங்கும்
பெறாது வெறுங்கைவந்தார்
பூண்டஒற் றைச்செங்கண் ஆரமும்
கற்றைச் சடைப்புனலும்
நீண்டஒற் றைப்பிறைக் கீளும்எப்
போதும்என் நெஞ்சத்தவே.
தெளிவுரை : இப்போது நம் முற்றத்தில் வந்துள்ள ஒற்றை மால் விடை ஏறியை (இறைவனை),
முன்பு அவனைக் காண வேண்டி எங்கும் திரிந்து காணப் பெறாது வெறும் கையோடு வந்தார்.
எனினும், அவர் பூண்ட ஒற்றைச் செங்கண் ஆரமும், கற்றைச் சடை புனலும், நீண்ட ஒற்றைப்
பிறைக் கீளும், எப்போதும் என் நெஞ்சத்தை விட்டு விலகவில்லை.
முன்பு தேடியும் காணாதவர், இன்று என் வீட்டு முற்றத்தில் வந்துள்ளார் என்பதாம்.
அகவல்
-
நெஞ்சிற் கொண்ட வஞ்சமோ உடைத்தே
மடவோர் விரும்புநின் விளையாட் டியல்போ
மருள்புரி கொள்கைநின் தெருளா மையோ
யாதா கியதோ எந்தை நீதியென்(று)
உடைதலை நெடுநிலா வெறியல்
கடைதலென் றருளிச் சூடிய பொருளே.
தெளிவுரை : உன் நெஞ்சில் வஞ்சத்தைக் கொண்டுள்ளீர். அறிவில்லாதவர் அறிய
முடியாதவாறு விளையாடுவது உன் இயல்போ. மயக்கத்தைப் புரிகிற உன் கொள்கை
தெளிவில்லாமையாலா? யாதானும் ஆகுக. எந்தை நீதியென்று கபாலத்தையும் பிறைச்
சந்திரனையும் மயக்கத்தை நீக்கும் பொருள்கள் என்று சூடுகின்றாயோ அறியேன்.
வெண்பா
-
பொருளாக யானிரந்தால் புல்லெருக்கின் போதும்
அருளான்மற் றல்லாதார் வேண்டின் - தெருளாத
பான்மறா மான்மறிக்கைப் பைங்கண் பகட்டுரியான்
தான்மறான் பைங்கொன்றைத் தார்.
தெளிவுரை : நான் விரும்பி யாசித்தால், புன்மையான எருக்கம் பூவையும் தாரான்.
மற்றவர்கள் கேட்டால் தெருளாத பால் மறா மான் கன்றைக் கையில் உடைய பைங்கண் யானைத்
தோலைப் போர்த்தவன், தான் அணிந்திருக்கும் பைங்கொன்றை மாலையை மறவாமல் தருவான். இது
வஞ்சனை அல்லவா?
கட்டளைக் கலித் துறை
-
தாரிளங் கொன்றைநல் ஏறு
கடாவித் தலைமைமிக்க
ஏரிள மென்முலைப் பொன்மலை
யாட்டிக்(கு)எற் றேயிவனோர்
பேரிளங் கொங்கைப் பிணாவொடுங்
கூடிப் பிறைக்கொழுந்தின்
ஓரிளந் துண்டம் சுமந்(து)ஐயம்
வேண்டி உழிதருமே.
தெளிவுரை : இளங்கொன்றைத் தார் அணிந்து, இடப வாகனத்தில் ஏறி, தலைமை மிக்க இளமுலை
நாயகியாகிய பார்வதி தேவிக்கு, இவன் ஓர் பேரிளம் கொங்கைப் பிணாவாகிய கங்கையோடும்
கூடி பிறைச் சந்திரனைச் சுமந்து பிச்சை ஏற்று எதற்காக அலைய வேண்டும் என்று
தெரியவில்லையே !
அகவல்
-
உழிதரல் மடிந்து கழுதுகண் படுக்கும்
இடருறு முதுகாட்டுச் சீரியல் பெரும
புகர்முகத் துளைக்கை உரவோன் தாதை
நெடியோன் பாகநின் சுடர்மொழி ஆண்மை
பயிற்று நாவலர்க்(கு)
இடர்தரு தீவினை கெடுத்தலோ எளிதே.
தெளிவுரை : பேய் உறங்கும் துன்பம் மிகுந்த சுடுகாட்டில் இருக்கும் பெருமானே !
விநாயகப் பெருமானின் தந்தையே ! திருமாலை இடப்பாகத்தில் கொண்டவனே ! நீர் திரிவதை
விட்டுவிட்டு, உன் சுடர்மொழி ஆண்மை பயிற்றும் நாவலர்க்கு, துன்பத்தைக் கொடுக்கிற
தீவினைகளை அழிப்பது எளிதாகும்.
வெண்பா
-
எளியமென்(று) எள்கி இகழாது நாளும்
அளியம்ஆட் செய்தாலும் ஐயோ - தெளிவரிய
வள்கயிலை நீள்பொருப்ப வான்தோய் மதிச்சடையாய்
கொள்கையிலை எம்மாற் குறை.
தெளிவுரை : வளப்பம் பொருந்திய கயிலை மலையை உடையவனே ! ஆகாயத்தில் உறையும்
சந்திரனைச் சடையில் வைத்துள்ளவனே ! நாங்கள் எளிமையானவர்கள் என்று எள்ளி இகழாமல்
அரும் செய்ய வேண்டுகிறோம். இதுவே எங்கள் குறையாகும். வேறு நினைவு ஒன்றுமில்லை.
கட்டளைக் கலித் துறை
-
குறையாப் பலியிவை கொள்கஎன்
கோல்வளை யும்கலையும்
நிறையாக்கொண் டாயினிச் செய்வதென்
தெய்வக்கங் கைப்புனலில்
பொறைபாய் ஒருகடல் நஞ்சுண்ட
கண்டா பொடியணிந்த
இறைவா இடுபிணக் காடசெம்
மேனியெம் வேதியனே.
தெளிவுரை : தெய்வ கங்கைப் புனலில் பொறைபாய் கடல் விஷத்தை உண்டாய். நீலகண்டப்
பெருமானே ! திருநீறு அணிந்த இறைவா ! சுடுகாட்டில் வாசம் செய்பவனே ! செம்மேனி எம்
வேதியனே ! என் வளையல்களையும் ஆடையையும் கப்பமாகக் கொண்டாய். இனிச் செய்வது என்ன
இருக்கிறது ? குறையாத இந்தப் பிச்சையை ஏற்றுக் கொள்வாயாக என்பதாம்.
அகவல்
-
வேதியர் பெரும விண்ணோர் தலைவ
ஆதி நான்முகத்(து) அண்ட வாண
செக்கர் நான்மறைப் புத்தேள் நாட
காய்சின மழவிடைப் பாகநின்
மூவிலை நெடுவேல் பாடுதும்
நாவலம் பெருமை நல்குவோய் எனவே.
தெளிவுரை : வேதியர் பெரும ! தேவர்களுக்குத் தலைவனே ! ஆதியில் நான்கு முகத்தையுடைய
அண்டவாண ! சிவந்த நான்மறையோதும் தேவர் நாட! கோபமிக்க காளையை வாகனமாக உடையவனே !
உன் முத்தலைச் சூலத்தைப் பாடுவோம். நீ நாவன்மையாகிய சிறப்பை நல்குவோன்
என்பதற்காகப் பாடுவதும் என முடிக்க.
வெண்பா
-
எனவே உலகெலாம் என்றிளைஞர் ஏச
நனவே பலிதிரிதி நாளும் - சினவேங்கைக்
கார்க்கயிலை நாட களிற்றீர் உரியலாற்
போர்க்கையிலை பேசல்நீ பொய்.
தெளிவுரை : பொய் பேசுகின்றாய் என்று இளைஞர் இகழ, உண்மையாகவே நீ நாள்தோறும் பிச்சை
ஏற்றுத் திரிகின்றாய். சின வேங்கைக் கார்க்கயிலை நாடனே ! யானைத்தோல் அல்லாமல்
வேறு போர்வையில்லை என்று பொய் பேசாதே என்பதாம்.
கட்டளைக் கலித் துறை
-
பொய்நீர் உரைசெய்தீர் பொய்யோம்
பலியெனப் போனபின்னை
இந்நீள் கடைக்கென்று வந்தறி
யீர்இனிச் செய்வதென்னே
செந்நீர் வளர்சடைத் திங்கட்
பிளவொடு கங்கைவைத்த
முந்நீர்ப் பவளத் திரட்செக்கர்
ஒக்கும் முதல்வனே.
தெளிவுரை : நீர் பொய் வார்த்தை சொன்னீர். யாம் பொய் கூற மாட்டோம். பிச்சைக்கென்று
போன பிறகு இந்த நீண்ட வாசலுக்கு நீர் வந்ததில்லை. இனி என்ன செய்யப் போகிறீர்.
செம்மையான தன்மை கொண்ட வளர் சடைத் திங்கட் பிளவோடு கங்கை வைத்த, கடலில் உண்டாகும்
பவளம் போன்ற செந்நிறமாகக் காட்சியளிக்கும் முதல்வனே !
திருச்சிற்றம்பலம்
மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை ( அதிராஅடிகள்அருளி செய்தது )
இம் மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவையினைப் பாடிய அதிராவடிகளுடைய வரலாறு
தெரியவில்லை. மூத்தபிள்ளையார் என்பது ஆனை முகக் கடவுளைக் குறிக்கும்.
சிவபிரானுடைய மக்கள் இருவரில் இவர் முதற்கண் தோன்றியமையால், ஆனைமுகக் கடவுள்
இவ்வாறு குறிக்கப் பெறுகிறார். தம்மை அன்பினால் வழிபடும் மெய்யடியார்களின்
பிறவிப் பிணியைப் போக்க வல்லவர் ஆனைமுகக் கடவுள். அவருடைய திருவடிகளை எண்ணி
வாழ்வார்க்கு மனக்கவலை இல்லை.
திருச்சிற்றம்பலம்
நேரிசை ஆசிரியப்பா
-
ஒருநெடுங் கங்கை இருங்குறும் பைம்புகர்
மும்முகச் செந்நுதி நாலிணர் வெள்நிணக்
குடற்புலவு கமழும் அடற்கழுப் படையவன்
மதலை மாமதந் துவன்றிய கதனுடைக்
கடதடக் கபோலத்(து) ஓரிட மருப்பிற்
கரண்டக உதரத்து முரண்தரு குழவிதன்
சேவடி யுகளம் அல்லது
யாவையும் இலமினி இருநிலத் திடையே.
தெளிவுரை : ஒரு நெடுங் கங்கை இறுங்குறும் பசுமையான புள்ளிகளை உடைய மும்முகமும்
செந்நுதி நாலிணர் வெண்மையான குடலின் புலால் நாற்றம் வீசுகின்ற கொல்லும்
தன்மையுள்ள சூலப் படையையுடைய சிவபெருமானது மகன் விநாயகன். மாமதம் பொருந்திய
கோபமுடைய கடதடக் கபோலத்தில் இடப் பக்கத் தந்தத்தில் குடலைப் போன்ற வயிற்றை உடைய
முரண்பாடு உடைய குழவியினது இரண்டு பாதங்களை வணங்குவதல்லாது வேறு எதுவும் இந்தப்
பெரிய நிலத்தில் இனிப் பெற்றிலோம் என்பதாம். சூலப்படை மூன்று கிளைகளாகப் பிரிந்து
நுனி கூர்மையாக உள்ளது.
வெண்பா
-
நிலந்துளங்க மேருத் துளங்க நெடுவான்
தலந்துளங்கச் சப்பாணி கொட்டும் - கலந்துளங்கொள்
காமாரி ஈன்ற கருங்கைக் கடதடத்து
மாமாரி ஈன்ற மணி.
தெளிவுரை : பிள்ளைத்தமிழ் பிரபந்தத்தில் சப்பாணிப் பருவம் நான்காவதாகும்.
பூமி நடுங்க, மேரு மலை நடுங்க, ஆகாயம் முழுவதும் நடுங்க கை கொட்டும். கலந்
துளங்கொள் காமனை எரித்த சிவபெருமான் பெற்றெடுத்த கருங்கையையும்
மதச்சுவட்டிலிருந்து பெருகும் மத மழையையும் உடைய விநாயகப்பெருமான் கை கொட்ட இவை
அனைத்தும் நடுங்கும் என்க.
கட்டளைக் கலித் துறை
-
மணிசிந்து கங்கைதன் மானக்
குருளையை வாளரக்கர்
அணிசிந்த வென்றஎம் ஐயர்க்(கு)
இளங்கன்றை அங்கரும்பின்
துணிசிந்த வாய்ப்பெய்த போதகத்
தைத்தொடர்ந்(து) ஓர்பிறவிப்
பிணிசிந்து கார்முளை யைப்பிடித்
தோர்க்கில்லை பேதுறவே.
தெளிவுரை : மணியைச் சிந்துகின்ற கங்கையினுடைய சிறந்த குழந்தையை வாள் ஏந்திய
அரக்கர் அழிய வென்ற சிவபெருமானுக்கு மகனாகிய இளங் கன்றைக் கரும்பின் துணி இந்த
வாய்ப்பெய்த யானையைப் பின் தொடர்ந்தோர்க்கு இனி பிறப்பில்லை என்பதாம். இனி
பிறவியுண்டோ என்ற மயக்கம் இல்லையென்க. விநாயகப் பெருமானை வணங்கியோர்க்கு இனி,
பிறவித் துன்பம் இல்லை என்று கூறியவாறு.
அகவல்
-
பேதுறு தகையம் அல்லது தீதுறச்
செக்கர்க் குஞ்சிக் கருநிறத் தொக்கல் நாப்பண்
புக்கவண் இரும்பொறித் தடக்கையும்
முரணிய பெருந்தோட்
கொட்ட நாவி தேவிதன்
மட்டுகு தெரியல் அடிமணந் தனமே.
தெளிவுரை : மயங்கும் இயல்பையுடையேம். அல்லது தீதுறச் செக்கர் குஞ்சிக் கருநிற
உறவினர் மத்தியில் புகுந்த இரும்பொறித் தடக்கையும் முரணிய பெருந்தோள் கொட்ட
கஸ்தூரி மணம் வீசும் தேவிதன் மணமிகுந்த மாலையின் அடி மணந்தனம்.
-
மேய கருமிடற்றர் வெள்ளெயிற்றர் திண்சேனை
ஓய மணியூசல் ஆடின்றே - பாய
மழைசெவிக்காற் றுந்திய வாளமர்க்கண் எந்தை
தழைசெவிக்காற் றுந்தத் தளர்ந்து.
தெளிவுரை : பொருந்திய கரிய கழுத்தையும், வெள்ளிய பற்களையும் உடைய சிவபெருமானது
திண்சேனை ஓய மணியூசல் ஆடியது. விநாயகப் பெருமானது மழை செவிக்காற்று உந்திய
வாளமர்க்கண் எந்தை தழை செவிக்காற்று உந்தத் தளர்ந்து ஆடியது என்க.
கட்டளைக் கலித் துறை
-
உந்தத் தளரா வளைத்தனம்
முன்னம்மின் ஓடைநெற்றிச்
சந்தத் தளரா ஒருதனித்
தெவ்வர்தந் தாளிரியூர்
விந்தத் தளரா மருங்கில்
கிளிபெற்ற வேழக்கன்றின்
மந்தத் தளரா மலர்ச்சர
ணங்கள் வழுத்துமின்னே.
தெளிவுரை : நெட்டித் தள்ளியதால் முன்னம் வளைத்தனம். மின்னுகின்ற முகபடாத்தை
அணிந்த நெற்றி சந்தத்தளரா ஒப்பற்ற பகைவர் நடுங்க கிளியைப் போன்ற உமாதேவியார்
தந்தார். அவர் யாரெனில், யானைக் கன்றின் உருவாய் அமைந்த விநாயகப் பெருமான். அவரது
பாத கமலங்களை வணங்குவோமாக.
நேரிசை ஆசிரியப்பா
-
மின்னெடுங் கொண்டல் அந்நெடு முழக்கத்து
ஓவற விளங்கிய துளைக்கைக் கடவுளை
யாம்மிக வழுத்துவ(து) எவனோ அவனேல்
பிறந்த(து)இவ் வுலகின் பெருமூ தாதை
உரந்தரு சிரம்அரிந் தவற்கே வரைந்தது
மேருச் சிமையத்து மீமிசை
வாரிச் செல்வன் மகள்மகன் மொழியே.
தெளிவுரை : மின்னலோடும் கூடிய பெரிய மேகம் செய்த பெருமுழக்கத்தில் (இடி)
ஒழிவில்லாமல் விளங்கிய யானை முகக் கடவுளை (விநாயகனை) யாம் மிகவும் துதிப்பதற்குக்
காரணம் யாதென்றால், அவன் இன்றேல் பாரதக் கதை தோன்றியிராது. பிரமனது தலையை அரிந்த
சிவபெருமானுக்காக மேரு மலையின் மீது பரதவன் மகளாகிய பரிமளகந்தியின் மகனாகிய
வியாசர் பாரதத்தைச் சொல்லிக் கொண்டே வர விநாயகர் எழுதினார் என்க.
வெண்பா
-
மொழியின் மறைமுதலே முந்நயனத்(து) ஏறே
கழிய வருபொருளே கண்ணே - தெழிய
கலாலயனே எங்கள் கணபதியே நின்னை
அலா(து)ஐயனே சூழாதென் அன்பு.
தெளிவுரை : பாரதத்தை எழுதிய முதற்கடவுளே ! மூன்று கண்களை உடைய இடியேறு போன்றவனே !
கல்விக்கு அதிபதியே ! எங்கள் கணபதியே ! உன்னைத் தவிர வேறு எவரையும் என் அன்பு
சூழாது என்க.
கட்டளைக் கலித் துறை
-
அன்பு தவச்சுற்று காரழல்
கொண்டெயில் மூன்றெரிய
வன்புத வத்துந்தை மாட்டுகின்
றாம்மதஞ் சூழ்மருப்பிற்(கு)
அன்பு தவக்கரத் தாளமிட்
டோடிக் கடுநடையிட்(டு)
இன்பு தவச்சென்று நீயன்று
காத்த(து) இயம்புகவே.
தெளிவுரை : அன்பு தவச்சுற்று ஆரழல் கொண்டு திரிபுரங்களை எரித்த உன் தந்தைக்காக
வணங்குகின்றோம். தந்தத்துக்கு கைத்தாளமிட்டு ஓடி, விரைந்து சென்று நீ உதவி
செய்தாய். நீயல்லவா அதைச் செய்தாய் சொல்லுக என்பதாம்.
இணைக்குறள் ஆசிரியப்பா
-
கவவுமணிக் கேடகக் கங்கணக் கரவனா
அறைகழல் அவுணரொடு பொருத ஞான்றுநீள்
புழைக்கரம் உயிர்த்த அழற்பேர் ஊதை
விரைநனி கீறி மூரி
அஞ்சேறு புலர்த்தும் என்பர்
மஞ்சேறு கயிலை மலைகிழ வோயே.
தெளிவுரை : வளைத்த மணிக் கேடகமும் காப்பும் கரவோசையோடு வீரக் கழல் ஒலிப்ப,
அரக்கரோடு போர் செய்த பொழுது நீண்ட துதிக்கையை உயர்த்த நெருப்பு என்று சொல்லத்
தக்க பெருங்காற்று விரைந்து நன்றாகக் கீறி மூரி அஞ்சேற்றைக் காயச் செய்யும்.
முகில்கள் ஏறுகின்ற கயிலை மலையில் வாழும் தெய்வமே !
வெண்பா
-
மலைசூழ்ந்(து) இழிகின்ற மாசுணப்பொற் பாறை
தலைசூழ்ந்து தானினைப்ப(து) ஒக்கும் - கலைசூழ்
திரண்டகங்கொள் பேரறிவன் திண்வயிற்றின் உம்பர்க்(கு)
அரண்டகங்கொள் காலுயிர்க்கும் கை.
தெளிவுரை : மலையைச் சூழ்ந்து இறங்குகின்ற பெரும் பாம்பு போன்ற பொற் பாறை
தலையிலிருந்து தொங்குகின்ற துதிக்கை, கலைசூழ்ந்து திரண்டு அகங்கொண்டு பேரறிவன்;
திண் வயிறன்; தேவர்களது பூக்குடலை; காற்றை உயிர்க்கும் துதிக்கை. துதிக்கையின்
சிறப்புக் கூறியவாறு.
கட்டளைக் கலித் துறை
-
காலது கையது கண்ணது
தீயது கார்மதநீர்
மேலது கீழது நூலது
வெற்பது பொற்பமைதீம்
பாலது தேனது தானது
மென்மொழிப் பாவைமுப்பூண்
வேலது வாளது நான்மறைக்(கு)
ஈன்ற விடுசுடர்க்கே.
தெளிவுரை : நான்மறைக்கு அளித்த பேரொளியாகிய விநாயகருக்கு உள்ளது காலளவும் நீண்ட
துதிக்கை. கண் தீயைப் போன்றது. முப்புரி நூல் மேலும் கீழுமாக உள்ளது. ஆனைமுகக்
கடவுளின் வடிவமோ அழகிய மலையைப் போன்றது. அதன்றியும் மேகம் போன்று மத நீர்
பொழிவது; இனிய பால்போலும் தேன்போலும் மொழியினை உடைய பாலையின் முப்பூண் சேர்ந்த
வேலும் வாளும் உடையது.
நேரிசை ஆசிரியப்பா
-
சுடர்ப்பிழம்பு தழைத்த அழல்தனி நெடுவேல்
சேய்மூ வுலகம் வலம்வர வேயக்
கொன்றையம் படலை துன்றுசடைக் கிடந்த
ஓங்கிருந் தாதையை வளாஅய் மாங்கனி
அள்ளல் தீஞ்சுவை அருந்திய
வள்ளற்(கு) இங்கென் மனங்கனிந் திடுமே.
தெளிவுரை : சிவபெருமானிடமிருந்து விநாயகன் மாங்கனி பெற்ற செய்தி சொல்லப்படுகிறது.
ஒளி வீசுகின்ற நீண்ட வேலையுடைய முருகப் பெருமான் மூன்று உலகங்களையும் சுற்றி
வந்தார். ஆனால், கொன்றை மாலை அணிந்த சடையினையுடைய தந்தையாகிய சிவபெருமானை இந்த
விநாயகர் வலம் வந்து மாங்கனியைப் பெற்று அதன் தீஞ்சுவையை அருந்தினார். அத்தகைய
வள்ளற்கு இங்கு என் மனம் கனிந்திடும்.
வெண்பா
-
இக்கயங்கொள் மூவலயம் சூழேழ் தடவரைகள்
திக்கயங்கள் பேர்ந்தாடச் செங்கீரை - புக்கியங்கு
தேனாட வண்டாடச் செங்கீரை ஆடின்றே
வானாடன் பெற்ற வரை.
தெளிவுரை : (இது செங்கீரைப் பருவ நிகழ்ச்சியைக் குறிக்கிறது. கைகளையும்
முழங்கால்களையும் ஊன்றிக்கொண்டு ஐந்தாம் திங்களில் பிள்ளைகள் தலை நிமிர்ந்தாடும்
பருவம்.) வான நாடனாகிய சிவபெருமான் பெற்ற மலையைப் போன்ற ஆனைமுகக் கடவுள்,
இவ்வுலகைச் சுற்றியுள்ள பெருமலைகள் போன்ற திக்கு யானைகள் பெயர்த்து செங்கீரை ஆட,
புக்கியங்கு தேனாட, வண்டாட, செங்கீரை ஆடியது. விநாயகக் கடவுளாகியவரை , செங்கீரை
ஆடியது என முடிக்க.
கட்டளைக் கலித் துறை
-
பெற்றமெல் லோதி சிலம்பின்
மகள்பெறப் பிச்சுகந்த
மற்றவள் பிச்சன் மயங்கன்முன்
னோன்பின் னிணைமைமிகக்
கற்றவன் துயன் புறங்காட்
டிடைநடம் ஆட்டுகந்தோ
செற்றவெண் தந்தத் தவன்நம்மை
ஆட்கொண்டு செய்தனவே.
தெளிவுரை : மலையரசனாகிய பர்வதராஜன் மகளாகிய உமாதேவி மகனைப் பெற, பொறாமை கொண்டவளை
மகிழ்விப்பான் வேண்டி சிவபெருமான் சுடுகாட்டில் நடனமாடியதைக் கண்டு மகிழ்ந்த
விநாயகப் பெருமான், நம்மை ஆட்கொண்டு இவனும் நடனமாடினன் என்க. வெண்மையான தந்தங்களை
உடைய விநாயகன் என்பதாம்.
இணைக்குறள் ஆரிரியப்பா
-
செய்தரு பொலம்படை மொய்தரு பரூஉக்குருளை
வெள்ளெயிறு பொதிந்த வள்ளுகிர்த் திரள்வாய்ப்
பெருந்திரள் புழைக்கை
மண்முழை வழங்கும் திண்முரண் ஏற்றின்
பனையடர்ப் பாகன் றனதிணையடி
நெடும்பொற் சரணம் ஏத்த
இடும்பைப் பௌவம் இனிநீங் கலமே.
தெளிவுரை : செய்தரு பொலம்படை மொய்தரு பரூஉக் குருளை வெள்ளிய தந்தமும் கூரிய
நகங்களையும் திரண்ட வாயையும் பெரிய திரண்ட துளைக்கையையும் (துதிக்கை) மண்முழை
முழங்கும் திண்முரண் காளையை ஊர்தியாக உடையவனது இரண்டு பாதங்களாகிய பொற் சரணங்களை
ஏத்தத் துன்பக் கடலை நீங்கலாம்.
வெண்பா
-
அலங்கல் மணிகனகம் உந்தி அருவி
விலங்கல் மிசையிழிவ(து) ஒக்கும் - பலங்கனிகள்
உண்டளைந்த கோன்மகுடத் தொண்கடுக்கைத் தாதளைந்து
வண்டணைந்து சோரும் மதம்.
தெளிவுரை : மாலை போன்று மணியையும் பொன்னையும் கொழித்துக் கொண்டு மலையிலிருந்து
விழும் அருவி போன்றது. அது எது எனில், பழங்களை உண்டு அளைந்த கோன் மகுடத்து ஒளி
பொருந்திய கொன்றை மலரின் தாதளைந்து வண்டணைந்து ஒழுகும் மதம். அருவி போன்று மதம்
பொழிந்தது.
கட்டளைக் கலித் துறை
-
மதந்தந்த மென்மொழி மாமலை
யாட்டி மடங்கல்கொன்ற
மதந்தந்த முக்கண் ணாற்குமுன்
ஈன்றவம் மாமலைபோல்
மதந்தந்த கும்பக் குழவிமந்
தாரப்பொன் னாட்டிருந்து
மதந்தந்த செம்மலன் றோவையம்
உய்ய வளர்கின்றதே.
தெளிவுரை : மதந்தந்த மென்மொழி உமாதேவியிடம் சிங்கத்தைக் கொன்ற மதந்தந்த மூன்று
கண்களையுடைய சிவ பெருமானுக்கு முதல் மகனாகப் பிறந்தவன் விநாயகன். மந்தாரமரம்
பொருந்திய பொன் உலகத்திலிருந்து மதந்தந்த அந்த விநாயகப் பெருமான் அல்லவோ
இவ்வுலகம் உய்யுமாறு வளர்கின்றார்.
இணைக்குறள் ஆசிரியப்பா
-
வளர்தரு கவட்டின் கிளரொளிக் கற்பகப்
பொதும்பர்த் தும்பி ஒழிகின் றோச்சும்
பாரிடைக் குறுநடைத் தோடி ஞாங்கர்
இட்ட மாங்கனி
முழுவதும் விழுங்கிய முளைப்பனைத் தடக்கை
எந்தை அல்லது மற்று யாவுள
சிந்தை செய்யும் தேவதை நமக்கே.
தெளிவுரை : வளர்கிற கிளைகளை உடைய கற்பகச் சோலையில் விநாயகப் பெருமானாகிய யானை
இடைவிடாது அரசு செய்யும். இவ்வுலகில் குறுநடையோடு எல்லா இடங்களிலும் இட்ட மாங்கனி
முழுவதும் விழுங்கிய பனை மரம் போன்ற பெரிய கையை உடைய எமது தந்தையாகிய விநாயகப்
பெருமானை அல்லது வணங்குவதற்கு உரிய வேறு தெய்வம் யாவுள. இவரைத் தவிர நமக்கு வேறு
தெய்வம் இல்லை என்பதாம்.
வெண்பா
-
கேளுற்றி யான்தளர ஒட்டுமே கிம்புரிப்பூண்
வாளுற்ற கேயூர வாளரக்கர் - தோளுற்(று)
அறுத்தெறிந்து கொன்றழித்த அங்கயங்கண் மீண்டே
இறுத்தெறிந்து கொன்றழித்த ஏறு.
தெளிவுரை : உறவு உற்றி யான் தளருமாறு செய்யுமோ ? யானைத் தந்தத்திற்கு உரிய
அணியைப் பூண்டு வாளுற்ற தோளணியை உடைய வாளேந்திய அரக்கர் தோள்களை அரிந்து
கொன்றழித்தவன் ஆண் சிங்கம் போன்ற கணபதி என்றபடி.
கட்டளைக் கலித் துறை
-
ஏறு தழீஇயவெம் புத்தேள்
மருகவெங் குந்தவள
நீறு தழீஇயஎண் தோளவன்
செல்வவண் டுண்ணநெக்க
ஆறு தழீஇய கரதலத்(து)
ஐயநின் றன்னைஅல்லால்
வேறு தழீஇத்தொழு மோவணங்
காத வியன்சிரமே.
தெளிவுரை : ஏழு தழுவிய திருமாலின் மருக ! கங்கையைத் தழுவிய வெண்ணீறு பூசிய
எண்தோள் எம்மானாகிய சிவபெருமானது செல்வ ! வண்டுண்ண மதநீர் தழுவிய துதிக்கையை உடைய
ஐய ! உன்னை அல்லாமல் வேறு யாரையாவது என் சிரம் தொழுமோ? தொழாது என்க.
நப்பின்னைப் பிராட்டிக்காகக் கண்ணன் ஏறு தழுவிய நிகழ்ச்சியைக் குறிக்கிறார்.
நேரிசை ஆசிரியப்பா
-
சிரமே, விசும்பு போத உவரி இரண்டசும்பு பொழியும்மே
கரமே, வரைத்திரண் முரணிய விரைத்து விழும்மே
புயமே, திசைவிளம்பு கிழியச் சென்று செறிக்கும்மே
அடியே, இடுந்தொறும் இவ்வுலகம் பெயரும்மே
ஆயினும், அஞ்சுடர்ப் பிழம்பு தழீஇ
நெஞ்சகத்(து) ஒடுங்குமோ நெடும்பணைச் சூரே.
தெளிவுரை : உன்னுடைய தலை ஆகாயம் வரை உயர்ந்து இரண்டு துளிகளைப் பொழியும். கைகளோ
மலைகளோடு மோதி விழுமாறு செய்யும். தோள்களோ திக்குகளின் எல்லை கிழியுமாறு செய்து
செறிக்கும். பாதங்களோ பதியும்போது இவ்வுலகம் பெயரும். என்றாலும், அஞ்சுடர் தழுவி
நெடும் பணைச்சூர் நெஞ்சத்து ஒடுங்குமோ? ஒடுங்காது என்க.
வெண்பா
-
சூர்தந்த பொற்குவட்டின் சூளிகையின் வானயிர்த்து
வார்தந்(து) எழுமதியம் மன்னுமே - சீர்தந்த
மாமதலை வான்மதியம் கொம்பு வயிறுதித்த
கோமதலை வாண்மதியம் கொம்பு.
தெளிவுரை : சூர்தந்த பொன் போன்ற நிலா முற்றத்தைவிட மிக உயர்ந்து வளர்ந்து
எழுகின்ற சந்திரன், உமாதேவி பெற்றெடுத்த விநாயகப் பெருமானது ஒளி பொருந்திய
தந்தத்தைவிட உயர்ந்து பொருந்தியிருக்குமோ? இராது என்றபடி.
பதினோராம்திருமுறைமுதல்தொகுதிமுற்றிற்று.
கோயில் நான்மணிமாலை
( பட்டினத்துப்பிள்ளையார்அருளிச்செய்தது )
கோயில் நான்மணி மாலை முதலிய நூல்களைப் பாடிய திருவெண்காட்டு அடிகள், கடல்துறைப்
பட்டினமாகிய காவிரிப் பூம்பட்டினத்தில் பிறந்தமையால் பட்டினத்துப் பிள்ளையார்
எனவும் கூறப் பெறுவர். இவருக்கு இளமையில் இடப் பெற்ற பிள்ளைப் பெயர்
திருவெண்காடர் என்பது. துறவியாகிய பிறகு அடிகள் என்னும் சொல்லும் சேர்ந்து
திருவெண்காட்டு அடிகள் என மாறியது. இவருடைய வரலாறு இவர் பாடிய நூல்களின்
முகப்பில் விரிவாக அச்சிடப் பட்டிருப்பதன்றிப் புராணமாகவும் பாடப்பட்டுள்ளது. இப்
பெயர் உடையவர்கள் இருவேறு காலங்களில் இருவர் இருந்திருத்தல் கூடுமென
ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகின்றனர். இதற்குக் காரணம், பாடல்கள் இருவகையான
போக்குகளில் அமைந்திருத்தலேயாம்.
இறைவன் எழுந்தருளியிருக்குமிடம் கோயில் எனப் பெறும். சிவநேசச் செல்வர்களால்
கோயில் எனச் சிறப்பித்துப் போற்றப் பெறுவது திருத்தில்லையின்கண் கூத்தப்பிரான்
திருக்கூததியற்றும் சிதம்பரக் கோயிலேயாம். திருவெண்காட்டு அடிகள் தில்லைத்
திருச்சிற்றம்பலத்தைப் பாடிப் பரவ வேண்டும் என்னும் நோக்கத்துடன் இக் கோயில்
நான்மணி மாலையை இயற்றி யருளினார். பாடல்கள் பிரானின் சிறப்பை இனிது
விளக்குகின்றன. ஆழ்ந்து பயில்வார்க்கு இம் மாலை பேரின்பத்தை அளிக்கும் என்பது
திண்ணம்.
திருச்சிற்றம்பலம்
வெண்பா
-
பூமேல் அயன்அறியா மோலிப் புறத்ததே
நாமே புகழ்ந்தளவை நாட்டுவோம் - பாமேவும்
ஏத்துகந்தான் தில்லை இடத்துகந்தான் அம்பலத்தே
கூத்துகந்தான் கொற்றக் குடை.
தெளிவுரை : தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமதேவன் அறியாத திருமுடியான் மேலது
அவனது கொற்றக்குடை. அதை நாம் புகழ்ந்து ஏத்துவோம். புகழை விரும்பியவனும்
பாட்டுக்களை ஏற்றுக் கொள்பவனும் சிதம்பரத்தில் எழுந்தருளியிருப்பவனும்
பொன்னம்பலத்தில் நடனமாடுகின்றவனுமாகிய நடராஜப் பெருமானுடைய வெற்றிக் குடையை நாம்
புகழ்ந்து பேசுவோம்.
கட்டளைக் கலித் துறை
-
குடைகொண்டிவ் வையம் எலாங்குளிர்
வித்தெரி பொற்றிகிரிப்
படைகொண் டிகல்தெறும் பார்த்திவர்
ஆவதிற் பைம்பொற்கொன்றைத்
தொடைகொண்ட வார்சடை அம்பலத்
தான்தொண்டர்க்(கு) ஏவல்செய்து
கடைகொண்ட பிச்சைகொண்(டு) உண்டிங்கு
வாழ்தல் களிப்புடைத்தே.
தெளிவுரை : வெற்றிக் குடையைக் கொண்டு இவ்வுலகை எல்லாம் குளிர்வித்து, தீ
வளர்த்து, சக்கராயுதத்தைக் கொண்டு ஆட்சி செய்து பகைவர்களை வெல்லும் அரசர்
ஆவதைவிட, பொன்னிறம் போன்ற கொன்றை மாலை அணிந்த நீண்ட சடையை உடைய தில்லை நடராஜப்
பெருமானது தொண்டர்களுக்குப் பணி செய்து கீழ்மையுடைய பிச்சை ஏற்று இங்கு வாழ்வது
இன்பமானதாகும்.
ஆசிரிய விருத்தம்
-
களிவந்(து) அமுதூறிக் கல்மனத்தை எல்லாம்
கசியும் படிசெய்து கண்டறிவார் இல்லா
வெளிவந்(து) அடியேன் மனம்புகுந்த(து) என்றால்
விரிசடையும் வெண்ணீறும் செவ்வானம் என்ன
ஒளிவந்த பொன்னிறமும் தொல்நடமும் காட்டும்
உடையான் உயர்தில்லை அமபலம்ஒன் றல்லால்
எளிவந்(து) இனிப்பிறர்பால் சென்றவர்க்குப் பொய்கொண்(டு)
இடைமிடைந்த புன்மொழியால் இச்சையுரை யோமே.
தெளிவுரை : களிப்பைச் செய்கின்ற அமுதம் ஊறி, கல்மனத்தை உடையோரையெல்லாம்
கசியும்படி செய்து, அறிந்துணர்வார் இல்லாத வெளியில் வந்து அடியேனுடைய மனம்
புகுந்தது என்றால், விரிந்த சடையும் திருநீறும் செவ்வானத்தைப் போன்ற பிரகாசமான
பொன்னிறமும் பழைமையான திருக்கூத்தையும் காட்டும் பெருமானது தில்லையம்பதியில்
அல்லாமல் தாழ்வாகிப் பிறர்பால் சென்றவர்க்குப் பொய்மையான புகழ்ச்சிச் சொற்கள்
அமைந்த மொழிகளால் புகழ்ந்து பாட மாட்டோம்.
நேரிசை ஆசிரியப்பா
-
உரையின் வரையும் பொருளின் அளவும்
இருவகைப் பட்ட எல்லையும் கடந்து
தம்மை மறந்து நின்னை நினைப்பவர்
செம்மை மனத்தினும் தில்லைமன் றினும்நடம்
ஆடும் அம்பல வாண நீடு
தெளிவுரை : சொல்லின் எல்லையும், பொருளும் அளவும் இருவகைப்பட்ட எல்லையும் கடந்து,
தம்மை மறந்து, உம்மை நினைப்பவரது செம்மையான மனத்திலும், தில்லைச் சிற்றம்
பலத்திலும் நடனமாடும் அம்பலவாண!
குன்றக் கோமான் தன்திருப் பாவையை
நீல மேனி மால்திருத் தங்கையைத்
திருமணம் புணர்ந்த ஞான்று பெருமநின்
தாதவிழ் கொன்றைத் தாரும் ஏதமில்
வீர வெள்விடைக் கொடியும் போரில்
தெளிவுரை : உயர்ந்த மலையரசன் மகளாகிய உமாதேவியை - திருமாலின் தங்கையைத் திருமணம்
கொண்டபோது ஐயனே ! உன்னுடைய கொன்றை மாலையும் இடபக் கொடியும் ஒலி செய்யும்
உடுக்கையும், ஓசை மிகுந்த கங்கை ஆறும்
தழங்கும் தமருகப் பறையும் முழங்கொலித்
தெய்வக் கங்கை ஆறும் பொய்தீர்
விரையாக் கலியெனும் ஆணையும் நிரைநிரை
ஆயிரம் வகுத்த மாயிரு மருப்பின்
வெண்ணிறச் செங்கண் வேழமும் பண்ணியல்
தெளிவுரை : பொய்யில்லாத நீக்க முடியாத மறையென்னும் ஆணையும் வரிசையாக ஆயிரம்
கொண்ட, பெரிய தந்தங்களையுடைய வெள்ளானையும், பண்ணோடு ஓதப்பெறும் நான்மறை என்னும்
குதிரையும்
வைதிகப் புரவியும் வான நாடும்
மையறு கனக மேருமால் வரையும்
செய்வயல் தில்லை யாகிய தொல்பெரும் பதியுமென்று
ஒருபதி னாயிரம் திருநெடு நாமமும்
உரிமையிற் பாடித் திருமணப் பந்தருள்
தெளிவுரை : விண்ணுலகமும் களங்கமற்ற மேரு மலையும் விளை நிலங்களை உடைய
திருத்தில்லையாகிய பழைமையான தலமும் என்று ஒரு பதினாயிரம் திருப்பெயர்களும்
உரிமையாகப்பாடி, திருமணப்பந்தருள்
அமரர் முன்புகுந்(து) அறுகு சாத்திநின்
தமர்பெயர் எழுதிய வரிநெடும் புத்தகத்து
என்னையும் எழுத வேண்டுவன் நின்னருள்
ஆணை வைப்பிற் காணொணா அணுவும்
வானுற நிமிர்ந்து காட்டும்
கானில்வால் நுளம்பும் கருடன்ஆ தலினே.
தெளிவுரை : தேவர்கள் முதலில் வந்து அறுகம்புல்லைச் சாத்தி உன்னுடைய அடியார்களுடைய
பெயர்கள் எழுதப்பட்ட பெரிய புத்தகத்தில் என் பெயரையும் எழுதும்படி வேண்டுவேன்.
உன்னுடைய அருள் உலகத்தில் கண்ணுக்குத் தெரியாத அணுவும் ஆகாயம் வரை உயர்ந்து
காட்டும். அது எங்ஙனமெனின், சிறிய கொசுவும் கருடனாகி விடும் என்ற விதியின்படி
என்க.
வெண்பா
-
ஆதரித்த மாலும் அறிந்திலன்என்(று) அஃதறிந்தே
காதலித்த நாயேற்கும் காட்டுமே - போதகத்தோல்
கம்பலத்தான் நீள்நாக கங்கணத்தான் தென்புலியூர்
அம்பலத்தான் செம்பொன் அடி.
தெளிவுரை : உன்னை விரும்பிய திருமாலும் அறிய முடியவில்லையென்று அறிந்து, உன்மீது
அன்பு கொண்ட எனக்காவது காட்டுவாயாக. யானைத் தோலைப் போர்வையாகக் கொண்டவன், நீண்ட
பாம்பைக் கங்கணமாகக் கட்டியவன், சிதம்பரத்தில் கோயில் கொண்டிருப்பவனுமாகிய உன்
செம்பொற் பாதங்களைக் காட்டுவாயாக என்பதாம்.
கட்டளைக் கலித் துறை
-
அடியொன்று பாதலம் ஏழிற்கும்
அப்புறம் பட்டதிப்பால்
முடியொன்றிவ் அண்டங்கள் எல்லாம்
கடந்தது முற்றும்வெள்ளைப்
பொடியொன்று தோள்எட்டுத் திக்கின்
புறத்தன பூங்கரும்பின்
செடியொன்று தில்லைச்சிற் றம்பலத்
தான்தன் திருநடமே.
தெளிவுரை : திருவடி ஒன்றுமே பாதாளம் ஏழிற்கும் கீழ் உள்ளது. தேவரீருடைய திருமுடி
ஒன்று அண்டங்கள் எல்லாம் கடந்தது. திருநீறு நிறைந்த எட்டுத் தோள்களும் எட்டுக்
திக்குகளையும் கடந்துள்ளன. பூங்கரும்பின் செடி பொருந்தப்பெற்ற தில்லைச்
சிற்றம்பலத்தான் திருநடமே நடனக் காட்சியின் திறம் பேசுகிறது.
திருநடம், பட்டது; கடந்தது; புறத்தன என இயைக்க.
ஆசிரிய விருத்தம்
-
நடமாடி ஏழுலகம் உய்யக் கொண்ட
நாயகரே ! நான்மறையோர் தங்க ளோடும்
திடமாட மதில்தில்லைக் கோயில் கொண்ட
செல்வரே ! உமதருமை தேரா விட்டீர்
இடமாடி இருந்தவளும் விலக்கா விட்டால்
என்போல்வார்க்(கு) உடன்நிற்க இயல்வ தன்று
தடமாலை முடிசாய்த்துப் பணிந்த வானோர்
தஞ்சுண்டா யங்கருதி நஞ்சுண் டீரே.
தெளிவுரை : திருக்கூத்து இயற்றி ஏழு உலகங்களையும் காப்பாற்றுகின்ற நாயகரே !
நான்கு வேதங்களைப் பயின்றவர்களோடும் திண்ணிய திருமாளிகைகளையும் மதிலையும் உடைய
தில்லையில் கோயில் கொண்ட செல்வரே ! தேராவிட்டீர். இடப் பாகத்திலிருந்த உமா
தேவியாரும் தடுத்திராவிட்டால் என்னைப் போன்றவர்க்கு உடன் நிற்க இயலாமல்
போயிருக்கும். பெரிய மாலை அணிந்த முடியைச் சாய்த்துப் பணிந்த வானோர்க்குத் தஞ்சம்
அளிப்பவராய்த் தீய நஞ்சை உண்டீர் என்பதாம்.
நேரிசை ஆசிரியப்பா
-
நஞ்சுமிழ் பகுவாய் வெஞ்சின மாசுணம்
தன்முதல் முருக்க தென்முதற் சூழ்ந்த
நீர்ச்சிறு பாம்புதன் வாய்க்கெதிர் வந்த
தேரையை வவ்வி யாங்கு யான்முன்
கருவிடை வந்த ஒருநாள் தொடங்கி
மறவா மறலி முறைபிறழ் பேழ்வாய்
அயில்தலை அன்ன எயிற்றிடைக் கிடந்தாங்கு
அருள்நனி இன்றி ஒருவயி(று) ஓம்பற்குப்
தெளிவுரை : நஞ்சை உமிழ்கின்ற கொடிய பெரிய பாம்பு தன் அடிப்பாகத்தைப் பறித்துத்
துன்புறுத்த, தென்முதல் சூழ்ந்த நீர்ச் சிறுபாம்பு தன் வாய்க்கு எதிர் வந்த
தேரையைக் கௌவியதைப் போல, யான் முன்பு கருவிடை வந்த நாள் முதலாக, மறதியில்லாத நமன்
முறை பிறழ் பெரிய வாய் வேலின் நுனி போல எயிற்றிடைக் கிடந்தது போன்று, அருள்
சிறிதும் இல்லாமல் இந்த வயிற்றைப் பாதுகாப்பதற்கு,
பல்லுயிர் செகுத்து வல்லிதின் அருந்தி
அயர்த்தனம் இருந்தும் போலும் பெயர்ந்துநின்று
எண்தோள் வீசிக் கண்டோர் உருகத்
தொல்லெயில் உடுத்த தில்லை மூதூர்
ஆடும் அம்பலக் கூத்தனைப்
பாடுதல் பரவுதல் பணிதலோ இலமே.
தெளிவுரை : பல உயிர்களைக் கொன்று, வலிமையாக அருந்திச் சோர்வடைந்தனன். அப்படி
இருந்தும் மறுபடியும் எட்டுத் தோள்களையும் வீசி, கண்டோர் உருகுமாறு பழைமையான
மதில் சூழ்ந்த தில்லையம்பலத்தில் ஆடும் அம்பலக் கூத்தனைப் பாடுதல், பரவுதல்,
பணிதல் ஆகிய எதையும் செய்யவில்லையே !
வெண்பா
-
இலவிதழ்வாய் வீழ்வார் இகழ்வார் அவர்தம்
கலவி கடைக்கணித்தும் காணேன் - இலகுமொளி
ஆடகஞ்சேர் அம்பலத்தே ஆளுடையார் நின்றாடும்
நாடகங்கண்(டு) இன்பான நான்.
தெளிவுரை : இலவ மலர் போன்ற இதழ்களை உடைய மங்கையரை விரும்பிச் செல்பவர்கள் என்னை
இகழ்வார்கள். அம் மாதரை நான் விரும்பிச் செல்லமாட்டேன். ஒளி வீசுகின்ற
பொன்னம்பலத்தில், என்னை அடிமையாகக் கொண்டவர் சூடுகின்ற திருக்கூத்தைக் கண்டு
இன்புறுவேன்.
கட்டளைக் கலித் துறை
-
நானே பிறந்த பயன்படைத்
தேன்அயன் நாரணன்எம்
கோனே எனத்தில்லை அம்பலத்
தேநின்று கூத்துகந்த
தேனே திருவுள்ள மாகியென்
தீமையெல் லாம்மறுத்துத்
தானே புகுந்தடி யேன்மனத்
தேவந்து சந்திக்கவே.
தெளிவுரை : பிரமதேவனும் திருமாலும் எம் தலைவனே என்று தில்லை அம்பலத்தே நின்று,
கூத்துகந்த தேனே என்று அவர்கள் வேண்டி நிற்கிறார்கள். அதையும் பொருட்படுத்தாமல்,
என்மீது நீயே திருவுளங் கொண்டு, என் தீமையெல்லாம் அறுத்து என் மனத்தே வந்து
எதிர்ப்பட்டுத் தோன்றுகின்றாய். இப்போதுதான் நான் பிறந்த பயனை அடைந்தேன்.
ஆசிரியச்சந்தவிருத்தம்
-
சந்து புனைய வெதும்பி மலரணை
தங்க வெருவி இலங்கு கலையொடு
சங்கு கழல நிறைந்த அயலவர்
தஞ்சொல் நலிய மெலிந்து கிளியொடு
பந்து கழல்கள் மறந்து தளிர்புரை
பண்டை நிறமும் இழந்து நிறையொடு
பண்பு தவிர அனங்கன் அவனொடு
நண்பு பெருக விளைந்த இனையன
நந்தி முழவு தழங்க மலைபெறு
நங்கை மகிழ அணிந்த அரவுகள்
நஞ்சு பிழிய முரன்று முயலகன்
நைந்து நரல அலைந்த பகிரதி
அந்தி மதியொ(டு) அணிந்து திலைநகர்
அம்பொன் அணியும் அரங்கின் நடநவில்
அங்கண் அரசை அடைந்து தொழுதிவள்
அன்று முதலெ திரின்று வரையுமே.
தெளிவுரை : தலைவியின் நிலையைத் தோழி உரைத்தல்: காம நோயின் தன்மை கூறியவாறு:
சந்தனம் பூசியதால் உடல் வெப்பமடைந்து, மலரணையில் படுக்க அஞ்சி ஆடையோடு சங்கு
வளையல்களும் கழல, ஊரார் தூற்றும் பழிச் சொல் அதிகரிக்க மெலிவடைந்து கிளியோடு
பந்தையும் கழற்றிக் காயையும் மறந்து தளிர் போன்ற முன்னிருந்த நிறத்தையும் இழந்து,
நிறையொடு பண்பு தவிர, மன்மதன் தன்னோடு அன்பு கொண்டதன் விளைவாக, நந்தி மத்தளம்
வாசிக்க உமாதேவியார் மகிழ இறைவன் உடலில் அணிந்திருந்த பாம்புகள், விடத்தைக்
கக்கச் சீறி, இறைவன் பாதத்தின் அடியிலுள்ள முயலகன் வருந்தியலற அலையுண்ட
கங்கையை
மாலை நேர சந்திரனோடு அணிந்து சிதம்பரத்தில் பொன்னம்பலத்தில் நடனம் செய்கின்ற
அழகிய பெருமானை அடைந்து, தொழுது, இவள் அன்று முதல் எதிரில் நின்றாள். அதனால்
நிகழ்ந்த நிகழ்ச்சிகள் இவை.
நிலைமண்டிலஆசிரியப்பா
-
வரையொன்று நிறுவி அரவொன்று பிணித்து
கடல்தட வாக மிடலொடும் வாங்கித்
திண்தோள் ஆண்ட தண்டா அமரர்க்(கு)
அமிர்துணா அளித்த முதுபெருங் கடவுள்
தெளிவுரை : மந்திர மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு
கடலைக் கடைந்து, வலிமையான தோள்களையுடைய மன அமைதியில்லாத தேவர்களுக்கு அமுதை
உண்ணும்படியாகக் கொடுத்த முதுபெருங்கடவுள்,
கடையுகஞ் சென்ற காலத்து நெடுநிலம்
ஆழிப் பரப்பில் ஆழ்வது பொறாஅது
அஞ்சேல் என்று செஞ்சேல் ஆகித்தன்
தெய்வ உதரத்துச் சிறுசெலுப் புரையில்
பௌவம் ஏழே பட்டது பௌவத்தோ(டு)
உலகு குழைத்தொரு நாள் உண்டதும்
தெளிவுரை : கடையுகம் சென்ற காலத்து (ஊழிக்காலம்) இந்தப் பெரிய நிலம் கடலில்
மூழ்கிப் போகாவண்ணம் பாதுகாத்து, அஞ்சாதீர்கள் என்று செம்மை நிறமுடைய சேல்மீன்
ஆகி, தன் தெய்வ வயிற்றின் செதிள் ஒன்றில் ஏழு கடல்களையும் உள்ளடக்கி உலகங்களையும்
சேர்த்து ஒருநாள் உண்டதும்,
உலக மூன்றும் அளந்துழி ஆங்கவன்
ஈரடி நிரம்பிற்றும் இலவே தேரில்
உரைப்போர்க்(கு) அல்ல(து) அவன்குறை வின்றே
இனைய னாகிய தனிமுதல் வானவன்
கேழல் திருவுரு ஆகி ஆழத்து
தெளிவுரை : மூன்று உலகங்களையும் திருமால் அளந்தபோது அவனுடைய இரண்டு பாதங்களும்
நிரம்பவில்லை. நேரில் உரைப்போர்க்கு அல்லது அவன் குறை அன்று. இத்தகைய சிறந்த
தேவனாகிய திருமால் பன்றி உருவம் தாங்கி,
அடுக்கிய ஏழும் எடுத்தனன் எடுத்தெடுத்து
ஊழி ஊழி கீழுறக் கிளைத்தும்
காண்பதற்(கு) அரியநின் கழலும் வேண்டுபு
நிகில லோகமும் நெடுமறைத் தொகுதியும்
அகில சராசரம் அனைத்தும் உதவிய
பொன்னிறக் கடவுள் அன்ன மாகிக்
கண்டி லாதநின் கதிர்நெடு முடியும்
ஈங்கிவை கொண்டு நீங்காது விரும்பிச்
சிறிய பொதுவின் மறுவின்றி விளங்கி
ஏவருங் காண ஆடுதி அதுவெனக்(கு)
தெளிவுரை : ஏழு உலகங்களையும் தோண்டிப் பார்த்தார். அவ்வாறு பல ஊழிகள் தோண்டியும்,
காண்பதற்கு அரிய உன் கழலும் வேண்டி எல்லா உலகங்களையும் வேதங்களையும் அகில
சராசரங்களையும் படைத்த பிரமதேவன் அன்ன உருவம்கொண்டு பார்க்க முடியாத உன்
பிரகாசமான நெடுமுடியும் ஈங்கு கொண்டு நீங்காது விரும்பி, தில்லைச்சிற்றம்பலத்தில்
மறுவின்றி விளங்கி அனைவரும் காணுமாறு நடனம் ஆடுகின்றாய்.
அதிசயம் விளைக்கும் அன்றே அதிசயம்
விளையாது மொழிந்த(து) எந்தை வளையாது
கல்லினும் வலிதது நல்லிதிற் செல்லாது
தான்சிறி தாயினும் உள்ளிடை நிரம்ப
வான்பொய் அச்சம் மாயா ஆசை
மிடைந்தன கிடப்ப இடம்பெறல் அருமையில்
தெளிவுரை : அது எனக்கு அதிசயமாக உள்ளது. அதிசயம் விளையாமல் எந்தையாகிய நீ
மொழிந்து வளையாது, கல்லைக் காட்டிலும் வலிமையானது. நல்லிதற் செல்லாது, அது
சிறிதாக இருந்த போதிலும் உள்ளிடம் நிரம்புமாறு பொய், அச்சம், மாயா ஆசை இவை ஒன்று
சேர்ந்து, இடம் பெற முடியாமல்,
ஐவர் கள்வர் வல்லிதிற் புகுந்து
மண்மகன் திகிரியில் எண்மடங்கு சுழற்ற
ஆடுபு கிடந்த பீடில் நெஞ்சத்து
நுழைந்தனை புகுந்து தழைந்தநின் சடையும்
தெளிவுரை : ஐம்புல ஆசை மிகுந்து, உள்ளே நுழைந்து குயவனது சக்கரத்தை போல், எட்டு
மடங்கு சுழற்ற ஆடிக் கொண்டிருக்கும் என் பாழ் நெஞ்சத்தில் நீயாக வந்து நுழைந்தனை.
செய்ய வாயும் மையமர் கண்டமும்
நெற்றியில் நிகழ்ந்த ஒற்றை நாட்டமும்
எடுத்த பாதமும் தடுத்தசெங் கையும்
புள்ளி ஆடையும் ஒள்ளிநின் விளங்க
நாடகம் ஆடுதி நம்ப கூடும்
தெளிவுரை : உன்னுடைய நீண்ட சடையும் சிவந்த வாயும், கருமை நிறமுடைய கழுத்தும்,
நெற்றிக் கண்ணும், தூக்கிய பாதமும், அபயம் காட்டும் கையும் (அஞ்சற்க எனத் தடுத்த
கை) புலித்தோல் ஆடையும் பிரகாசமாக விளங்க நடனம் ஆடுகின்றாய்.
வேதம் நான்கும் விழுப்பெரு முனிவரும்
ஆதி நின்திறம் ஆதலின் மொழிவது
பெரியதிற் பெரியை என்றும் அன்றே
சிறியதிற் சிறியை என்றும் அன்றே
நிறைபொருள் மறைகள் நான்கும்நின் அறைகழல்
இரண்டொடும் அறிவினில் ஆர்த்து வைத்த
மறையவர் தில்லை மன்றுகிழ வோனே !
தெளிவுரை : சிவபெருமானே ! நான்கு வேதங்களும் முனிவர்களும் போற்றும் ஆதி தெய்வமே !
இது நின் திறம் ஆதலின், இதை எடுத்துரைப்பது மிகவும் சிரமம். நீ பெரியதில் பெரியை,
சிறியதில் சிறியை, மறையையும் கழலையும் அறிவிலே கட்டி வைத்தவனும் எல்லாவற்றிற்கும்
முதற் காரணனுமாகிய நீ மறையவர் வாழும் தில்லை மன்றிற்கு உரியவனாவாய்.
வெண்பா
-
கிழவருமாய் நோய்மூப்புக் கீழ்ப்பட்டுக் காமத்(து)
உழவரும்போய் ஓயுமா கண்டோம் - மொழிதெரிய
வாயினால் இப்போதே மன்றில் நடமாடும்
நாயனார் என்றுரைப்போம் நாம்.
தெளிவுரை : நோய் மூப்பு இவைகளுக்கு ஆளாகித் துன்புற்று, அதிகமாகச் சிற்றின்ப
நெறியில் ஈடுபட்டவர் ஓய்ந்து போவதைக் கண்டோம். ஓதும் மொழி நன்றாக விளங்க வாயினால்
இப்போது மன்றில் நடமாடும் இறைவனே என்று நாம் வாழ்த்துவோமாக.
கட்டளைக் கலித் துறை
-
நாமத்தி னால்என்தன் நாத்திருத்
தேன்நறை மாமலர்சேர்
தாமத்தி னால்உன் சரண்பணி
யேன்சார்வ தென்கொடுநான்
வாமத்தி லேயொரு மானை
தரித்தொரு மானைவைத்தாய்
சேமத்தி னாலுன் திருத்தில்லை
சேர்வதோர் செந்நெறியே.
தெளிவுரை : திருஐந்தெழுத்தினால் என் நாக்கு திருந்தவில்லை, மணமுள்ள மலர்
மாலைகளைச் சாத்தி உன் பாதங்களைப் பணிந்தறியேன். நான் எந்த உரிமையைக் கொண்டு உன்னை
அடைவது? (மான் என்றது மான் மறியையும் உமாதேவியையும் குறிக்கும்) இடப் பாகத்தில்
உமா தேவியையும் கையில் மான் மரியையும் வைத்துள்ளாய். என் வைப்பிடமாக உன்
திருத்தில்லையை அடைவதுதான் நல்ல நெறியெனக் கொண்டேன் என்பதாம்.
ஆசிரியச் சந்த விருத்தம்
-
நெறிதரு குழலை அறலென்பர்கள்
நிழலெழு மதியம் நுதலென்பர்கள்
நிலவினும் வெளிது நகையென்பர்கள்
நிறம்வரு கலசம் முலையென்பர்கள்
அறிகுவ தரிதிவ் விடையென்பர்கள்
அடியிணை கமல மலரென்பர்கள்
அவயவம் இனைய மடமங்கையர்
அழகியர் அமையும் அவரென்செய
மறிமழு வுடைய கரனென்கிலர்
மறலியை முனியும் அரனென்கிலர்
மதிபொதி சடில தரனென்கிலர்
மலைமகள் மருவு புயனென்கிலர்
செறிபொழில் நிலவு நிலையென்கிலர்
திருநடம் நவிலும் இறையென்கிலர்
சிவகதி அருளும் அரசென்கிலர்
சிலர்நர குறுவர் அறிவின்றியே.
தெளிவுரை : ஒழுங்காக வகிர் எடுத்து முடிக்கப்பட்ட கூந்தலைக் கருமணல் ஒழுங்கு
என்பார்கள். ஒளியோடு கூடிய சந்திரனை நெற்றி என்பார்கள். நிலவைக் காட்டிலும்
வெண்மையானது பல் என்பார்கள். நிறமிக்க கலசத்தை முலை என்பார்கள்.
அறிகுவது அரிது இடுப்பு என்பார்கள். இரண்டு பாதங்களையும் தாமரை மலர்கள்
என்பார்கள். இத்தகைய உடல் உறுப்புக்களையுடைய இள மங்கையர் அழகியர் போதும் என்று
திருப்தி கொண்டவர்கள் இறைவனை வணங்குவார்களோ ?
சிவபெருமான் மானையும் மழுவையும் ஏந்திய கைகளை உடையவன் என்றும், காலனைக்
கோபிக்கும் அரன் என்றும், சந்திரனைச் சடையில் சூடியவன் என்றும், உமாதேவியை
இடப்பாகத்தில் கொண்டவன் என்றும், நிலவு பொழிகின்ற தில்லை நகர் என்றும், அங்கு
இறைவன் திருநடனம் செய்கின்றான் என்றும், அவன் மக்களுக்குச் சிவகதியை
அருளுகின்றவன் என்றும் துதித்து வழிபடாதவர்கள் அறிவில்லாதவர் ஆவர். எனவே சிவகதி
பெற வேண்டுவோர் அவனை வணங்குங்கள் என்பதாம்.
நேரிசை ஆசிரியப்பா
-
அறிவில் ஒழுக்கமும் பிறிதுபடு பொய்யும்
கடும்பிணித் தொகையும் இடும்பை ஈட்டமும்
இனையன பலசரக் கேற்றி, வினையெனும்
தொல்மீ காமன் உய்ப்ப அந்நிலைக்
தெளிவுரை : உடம்பைக் கப்பலாக உருவகம் செய்கிறார். அறிவில்லாத ஒழுக்கமும்,
வேறுபடுத்தும் பொய்யும் கடுமையான நோய்களின் தொகையும் துன்பத் தொகுதியும் இத்தகைய
பல சரக்குகளை ஏற்றி, ஊழ் என்ற பழமையான கப்பலோட்டி செலுத்த,
கருவெனும் நெடுநகர் ஒருதுறை நீத்தத்துப்
புலனெனும் கோண்மீன் அலமந்து தொடரப்
பிறப்பெனும் பெருங்கடல் உறப்புகுந்(து) அலைக்கும்
துயர்த்திரை உவட்டில் பெயர்ப்பிடம் அயர்த்துக்
குடும்பம் என்னும் நெடுங்கல் வீழ்த்து
நிறையெனும் கூம்பு முரிந்து குறையா
தெளிவுரை : அந்த நிலை கருவெனும் நெடுநகர் (கருப்பம் தரித்தல் - பிறவி எடுத்தல்)
ஒரு துறையில் வெள்ளம் புலன் என்னும் கிரகம் வருந்தித் தொடர, பிறப்பெனும்
பெருங்கடலில் பொருந்தப் புகுந்து அலையச் செய்யும். துயர்த் திரையாகிய நீர்ப்
பெருக்கில் பெயர்ப்பிடம் மறந்து குடும்பம் என்னும் மலை தடுத்து, மனத்தை அடக்கி
ஆளும் பாய் மரம் முரிந்து குறையாத,
உணர்வெனும் நெடும்பாய் கீறிப் புணரும்
மாயப் பெயர்ப்படு காயச் சிறைக்கலம்
கலங்குபு கவிழா முன்னம் அலங்கல்
மதியுடன் அணிந்த பொதியவிழ் சடிலத்துப்
பையர(வு) அணிந்த தெய்வ நாயக
தொல்லெயில் உடுத்த தில்லை காவல
வம்பலர் தும்பை அம்பல வாணநின்
அருளெனும் நலத்தார் பூட்டித்
திருவடி நெடுங்கரை சேர்த்துமா செய்யே.
தெளிவுரை : உணர்வெனும் நெடும்பாய் கிழிந்து, தேகமாகிய சிறைக் கப்பல் கலங்கித்
கவிழ்ந்து விடுவதற்குமுன், தலை மாலையையும் பிறைச் சந்திரனையும் அணிந்த சடையில்
பாம்பை அணிந்துள்ள தெய்வ நாயகனே ! மதில் சூழ்ந்த சிதம்பரத்தின் காவலனே ! தும்பை
அணிந்த அம்பல வாணனே ! உன்னுடைய அருள் என்னும் வடம் பூட்டி திருவடியாகிய
நெடுங்கரையில் கொண்டு வந்து சேர்ப்பாயாக !
வெண்பா
-
செய்ய திருமேனிச் சிற்றம் பலவருக்கென்
தையல் வளைகொடுத்தல் சாலுமே - ஐயன்தேர்
சேயே வருமளவில் சிந்தாத மாத்திரமே
தாயே நமதுகையில் சங்கு.
இதுசெவிலிக்கூற்று.
தெளிவுரை : சிவந்த திருமேனியை உடைய சிற்றம்பல நாதருக்கு என் மகள் கை வளைகளைக்
கொடுக்க அமையும் (நேரும்). ஐயனுடைய தேர் தூரத்தில் வரும்போதே நமது கையில் உள்ள
சங்கு வளைகள் கழன்று விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதாம்.
கட்டளைக் கலித் துறை
-
சங்கிடத் தானிடத் தான்தன
தாகச் சமைந்தொருத்தி
அங்கிடத் தாள்தில்லை அம்பலக்
கூத்தற்(கு) அவிர்சடைமேல்
கொங்கிடத் தார்மலர்க் கொன்றையென்
றாயெங்கை நீயுமொரு
பங்கிடத் தான்வல்லை யேல்இல்லை
யேல்உன் பசப்பொழியே.
தெளிவுரை : சங்கை இடப்பக்கத்திலுடைய திருமாலின் இடமாகிய இடப்பாகத்தில் உமையாளைக்
கொண்ட தில்லை அம்பலக் கூத்தன், பிரகாசமான சடையின் மேல் கொன்ற மலர் உள்ளது
என்றாய். அங்கு கங்கையையும் வைத்துள்ளாய் அல்லவா? உன் பசப்பு மொழிகளை விட்டுவிடு.
எழுசீர்ஆசிரியவிருத்தம்
-
ஒழிந்த(து) எங்களுற(வு) என்கொ லோஎரியில்
ஒன்ன லார்கள்புரம் முன்னொர்நாள்
விழுந்தெ ரிந்துதுக ளாக வென்றிசெய்த
வில்லி தில்லைநகர் போலியார்
சுழிந்த உந்தியில் அழுந்தி மேகலை
தொடக்க நின்றவர் நடக்கநொந்(து)
அழிந்த சிந்தையினும் வந்த தாகிலுமொர்
சிந்தை யாயொழிவ(து) அல்லவே.
தெளிவுரை : எங்கள் உறவு இன்றோடு ஒழிந்தது என்று சொல்லலாமோ? நெருப்பில் பகைவர்களது
திரிபுரங்கள் எரிந்து சாம்பலாயின. அத்தகைய வெற்றியைப் பெற்ற வில்லியினது தில்லை
நகர் போன்றவர்கள் சுழித்த உந்தியில் (தொப்புளில்) அழுந்தி மேகலையை விரும்பிச்
சென்றவர் நடக்க முடியாத நிலையிலும் வந்தால் உன்னுடைய அருள் பார்வை அவர்களுக்குக்
கிடைக்குமல்லவா ?
நேரிசை ஆசிரியப்பா
-
அல்லல் வாழ்க்கை வல்லிதிற் செலுத்தற்குக்
கைத்தேர் உழந்து கார்வரும் என்று
வித்து விதைத்தும் விண்பார்த்(து) இருந்தும்
கிளையுடன் தவிரப் பொருளுடன் கொண்டு
முளைமுதிர் பருவத்துப் பதியென வழங்கியும்
தெளிவுரை : துன்பம் தரும் வாழ்க்கையை முயன்று நடத்துதற்கு ஏரைச் செலுத்தித்
தொழில் செய்து, மழை பெய்யுமென்று விதையை விதைத்து வானத்தைப் பார்த்திருந்தும்
கிளையுடன் தவிரப் பொருளுடன் கொண்டு, முளைக்கும் காலத்தில் பதியென வழங்கியும்,
அருளா வயவர் அம்பிடை நடந்தும்
இருளுறு பவ்வத்(து) எந்திரங் கடாஅய்த்
துன்றுதிரைப் பரப்பிற் குன்றுபார்த்(து) இயங்கியும்
ஆற்றல் வேந்தர்க்குச் சோற்றுக்கடன் பூண்டும்
தாளுழந்(து) ஓடியும் வாளுழந்(து) உண்டும்
தெளிவுரை : இரக்கமற்ற போர் வீரர் போர் மேல் சென்றும், இருள் நிறைந்த கடலின்கண்
கப்பலாகிய இயந்திரத்தைச் செலுத்தி திரைப் பரப்பில் குன்று பார்த்து இயங்கியும்,
வல்லமை பொருந்திய பெரிய அரசர்க்கு பெற்று உண்ட உணவுக்குக் கைம்மாறாகச்
செய்வதற்குரிய கடமையைச் செய்ய முயற்சி செய்து போர் செய்தும்,
அறியா ஒருவனைச் செறிவந்து தெருட்டியும்
சொற்பல புனைந்தும் கற்றன கழறியும்
குடும்பப் பாசம் நெடுந்தொடர்ப் பூட்டி
ஐவர் ஐந்திடத்(து) ஈர்ப்ப நொய்தில்
பிறந்தாங்(கு) இறந்தும் இறந்தாங்கு பிறந்தும்
தெளிவுரை : முன்பின் தெரியாதவனைத் தெளிவித்தும் சொற்களைப் புனைந்துரைத்தும்,
படித்தவற்றைக் கூறியும், குடும்பப் பாசமாகிய நீண்ட சங்கிலியைப் பூட்டி,
ஐம்பொறிகள் இழுத்த வழியில் சென்று எளிதில் பிறந்தது போலவே இறந்தும் இறந்தது போலவே
மறுபடியும் பிறந்தும்,
கணத்திடைத் தோன்றிக் கணத்திடைக் கரக்கும்
கொப்புட் செய்கை ஒப்பின் மின்போல்
உலப்பில் யோனிக் கலக்கத்து மயங்கியும்
நெய்யெரி வளர்த்துப் பெய்முகிற் பெயல்தரும்
தெய்வ வேதியர் தில்லை மூதூர்
தெளிவுரை : கண்ணிமைப் பொழுதுக்குள் தோன்றியும் அதே போல் விரைந்து மறைந்தும்
நீர்க்குமிழி போன்றும் மின்னல் போன்றும் அளவில்லாத பிறப்புக்களை எடுத்து அந்தக்
கலக்கத்தில் மயங்கியும் வேள்வித்தழல் வளர்த்து அதனால் மழையை உண்டாக்கும் அந்தணர்
வாழும் தில்லைமூதூர்.
ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும்
கடவுட் கண்ணுதல் நடம்முயன் றெடுத்த
பாதப் போதும் பாய்புலிப் பட்டும்
மீதியாத்(து) அசைத்த வெள்ளெயிற்(று) அரவும்
சேயுயர் அகலத்து ஆயிரம் குடுமி
மணிகிடந்(து) இமைக்கும் ஒருபேர் ஆரமும்
தெளிவுரை : பொன்னம்பலத்தில் நடன மாடுகின்ற பெருமானின் தூக்கிய பாதமும்,
புலித்தோல் ஆடையும் மேலே அணிந்துள்ள வெள்ளிய பற்களையுடைய பாம்பும் உயர்ந்த ஆயிரம்
தலைகளில் மாணிக்கம் விளங்குகின்ற ஆதிசேடனாகிய மாலையும்,
அருள்பொதிந்(து) அலர்ந்த திருவாய் மலரும்
நெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும்
கங்கை வழங்கும் திங்கள் வேணியும்
கண்ணிடைப் பொறித்து மனத்திடை அழுத்தியாங்கு
உள்மகிழ்ந்(து) உரைக்க உறுதவம் செய்தனள்
நான்முகன் பதத்தின் மேல்நிகழ் பதந்தான்
உறுதற்(கு) அரியதும் உண்டோ
பெறுதற்(கு) அரியதோர் பேறுபெற் றேற்கே.
தெளிவுரை : அருள் வழங்கும் உன் திருவாய் மலரும், நெற்றிக் கண்ணும் கங்கையும்
பிறைச் சந்திரனும் சடை முடியும் கருதுதல் பொறித்து மனத்திடைப் பொருத்தியாங்கு
மனம் களித்து உரைக்க நான் மிகுந்த தவத்தைச் செய்துள்ளேன். பிரம பதத்தைவிட மேலான
பதம் இதுவல்லவா. பெறுதற்கரிய பேறு பெற்றேன் என்பதாம்.
வெண்பா
-
பெற்றோர் பிடிக்கப் பிழைத்துச் செவிலியர்கள்
சுற்றோட ஓடித் தொழாநிற்கும் - ஒற்றைக்கைம்
மாமறுகச் சீறியசிற் றம்பலத்தான் மான்தேர்போம்
கோமறுகிற் பேதை குழாம்.
தெளிவுரை : பேதைக் குழாம் (அறியாமை நிறைந்த பெண் பிள்ளைகளின் கூட்டம்) தமது
பெற்றோர்கள் தடுத்து நிறுத்தியதையும் விலக்கி, செவிலித்தாயர்கள் அவர்களைச்
சூழ்ந்து ஓடி வரச் சென்று தொழுகின்றார்கள். யானை மயங்கி வருந்தச் சீறிய
சிற்றம்பலத்தான் குதிரை கட்டிய தேரில் போகின்ற அரச வீதியில் சென்று தொழுதார்கள்
என முடிக்க.
கட்டளைக் கலித் துறை
-
பேதையெங் கேயினித் தேறியுய்
வாள்பிர மன்தனக்குத்
தாதைதன் தாதையென் றேத்தும்
பிரான்தண் புலிசைப்பிரான்
கோதையந் தாமத்தண் கொன்றை
கொடான்இன்று கொல்லஎண்ணி
ஊதையும் காரும் துளியொடும்
கூடி உலாவியே.
தெளிவுரை : கார்ப் பருவம் வந்தது கண்டு தோழி கவன்று உரைத்தல். பேதைப் பெண்ணாகிய
இவள் எங்கே இனித் தேறி உய்வாள்? பிரமன் தந்தையாகிய திருமால், என் தந்தையே என்று
ஏத்தும் பிரான். பெரும்பற்றப் புலியூராகிய சிதம்பரத்தில் கோயில் கொண்டிருப்பவன்
கொன்றை மாலையைத் தரமாட்டான். இன்று அவளைக் கொல்ல எண்ணி வாடைக் காற்றும் மேகமும்
மழையோடு கூடி வருகின்றன. ஆகையால் இவள் எப்படி மனந்தேறி இருப்பாள் என்க.
ஆசிரியச் சந்த விருத்தம்
-
உலதி சலதி வாழ்விடம்
அமரர் தொழவு ணாவென
நுகரும் ஒருவர் ஊழியின்
இறுதி ஒருவர் ஆழிய
புலவு கமழ்க ரோடிகை
உடைய புனிதர் பூசுரர்
புலிசை யலர்செய் போதணி
பொழிலின் நிழலின் வாழ்வதோர்
கலவ மயில னார்சுருள்
கரிய குழலி னார்குயில்
கருது மொழியி னார்கடை
நெடிய விழியி னார்இதழ்
இலவில் அழகி யாரிடை
கொடியின் வடிவி னார்வடி
எழுதும் அருமை யாரென(து)
இதய முழுதும் ஆள்வரே.
தெளிவுரை : தலைவன் தலைவியின் இயல்பைப் பாங்கனுக்கு உரைத்தல்.
அலைகளையுடைய கடல் வாழ்விடம், தேவர்கள் தொழ உணவென்று நுகரும் ஒப்பற்றவர். ஊழிக்
காலத்தின் முடிவாகிய ஒருவர், ஆழமான புலால் நாற்றம் வீசுகின்ற தலை மாலையை உடைய
புனிதர், அந்தணர்கள் புலிசையில் மலர்தலைச் செய்கின்ற போதணி நிழலின் வாழ்வதோர்
தோகையை உடைய மயில் போன்றவர்கள். சுருண்ட கரிய கூந்தலை உடையவர்கள். குயில் போன்ற
சொல்லை உடையவர்கள். நீண்ட கண்களை உடையவர்கள். இலவம் பூப் போன்ற இடையினை
உடையவர்களைப் படமாக எழுதும் அருமையானவர் எவரோ, அவரே என் இதயம் முழுதும் ஆள்பவர்
ஆவர். அவர்தாம் என் காதலின் உருவை எழுத வல்லவர் என்றபடி.
இணைக்குறள் ஆசிரியப்பா
-
ஆளெனப் புதிதின்வந்(து) அடைந்திலம் அத்தநின்
தாளின் ஏவல் தலையின் இயற்றி
வழிவழி வந்த மரபினம் மொழிவதுன்
ஐந்தெழுத்(து) அவைஎம் சிந்தையிற் கிடத்தி
நனவே போல நாடொறும் பழகிக்
தெளிவுரை : புதிதாக அடிமையென்று வந்தேம் இலம். முதல்வ; தந்தையே! உன் பாதங்களின்
ஏவல் வழி நின்று கால் வழியாக வந்தவர்கள். உச்சரிப்பதோ உன் ஐந்தெழுத்து. அவை எம்
சிந்தையில் கிடத்தி விழிப்பே போல நாள்தோறும் பழகி,
கனவிலும் நவிற்றும் காதலேம் வினைகெடக்
கேட்பது நின்பெருங் கீர்த்தி மீட்பது
நின்னெறி அல்லாப் புன்னெறி படர்ந்த
மதியில் நெஞ்சத்தை வரைந்து நிதியென
அருத்திசெய் திடுவது உருத்திர சாதனம்
தெளிவுரை : கனவு நிலையிலும் சொல்லுகின்ற பிரியம் உடையோம். இருவினை கெடக் கேட்பது
உன்னுடைய பெருங் கீர்த்தியாகும். மீட்பது யாதோ எனில், உன்னுடைய சைவ நெறி அல்லாத
புன்னெறி படர்ந்த என் மதியில்லாத நெஞ்சத்தை வரைந்து நிதியென வேட்கை உண்டாக்குவது
உருத்திர சாதனமாகிய உருத்திராட்சத்தை.
காலையும் மாலையும் கால்பெயர்த் திடுவதுன்
ஆலயம் வலம்வரு தற்கே சால்பினில்
கைகொடு குயிற்றுவ(து) ஐய நின்னது
கோயில் பல்பிணி குறித்தே ஓயாது
தெளிவுரை : காலையும் மாலையும் நான் நடந்து செல்வது உன் ஆலயத்தை வலம் வருவதற்கே.
நிறைவோடு நான் கைகளைக் கொண்டு செய்வது, ஐய, உன் கோயில் திருப்பணிகள்
குறித்தேயாகும்.
உருகி நின்னினைந்(து) அருவி சோரக்
கண்ணிற் காண்பதெவ் வுலகினும் காண்பனவெல்லாம்
நீயேயாகி நின்றதோர் நிலையே நாயேன்
தலைகொடு சார்வதுன் சரண்வழி அல்லால்
அலைகடல் பிறழினும் அடாதே அதனால்
பொய்த்தவ வேடர் கைத்தகப் படுத்தற்கு
தெளிவுரை : ஓயாமல் உருகி உன்னை நினைந்து அருவிசோரக் கண்ணிற் காண்பது எல்லா
இடங்களிலும் காண்பன எல்லாம் நீயேயாகி நின்றதோர் நிலையே. நாய் போன்றவனாகிய நான்
தலையைக் கொண்டு சார்வது உன் பாதங்களை அல்லாமல் அலைகடல் பிறழ்ந்தாலும் வேறு எதன்
மீதும் பொருந்தாது. அதனால் பொய்த்தவ வேடர் கைத்து அகப்படுத்தற்கு
வஞ்சச் சொல்லின் வார்வலை போக்கிச்
சமயப் படுகுழி சமைத்தாங்(கு) அமைவயின்
மானுட மாக்களை வலியப் புகுத்தும்
ஆனா விரதத்(து) அகப்படுத்(து) ஆழ்ந்து
வளைவுணர்(வு) எனக்கு வருமோ உளர்தரு
நுரையும் திரையும் நொப்புறு கொட்பும்
வரையில் சீகர வாரியும் குரைகுடல்
பெருத்தும் சிறுத்தும் பிறங்குவ தோன்றி
எண்ணில வாகி இருங்கடல் அடங்கும்
தன்மை போலச் சராசரம் அனைத்தும்
நின்னிடைத் தோன்றி நின்னிடை அடங்கும்நீ
தெளிவுரை : வஞ்சகம் பேசிய சமய வாதிகளின் போக்கில் அகப்பட்டேன் என்கிறார். இவர்கள்
சூழ்ச்சியினால் வெளியேற முடியாமல் தவித்தேன். நுரை, திரை, தடைச் சுழற்சி,
துளிகளின் வரவு, ஒலியுடைய குடல் பெருத்தும், விளங்கித் தோன்றி, இவ்வாறு இயங்கும்
தன்மைபோல சராசரம் அனைத்தும் உன்னிடத்தில் தோன்றி உன்னிடத்திலேயே அடங்கும்.
ஒன்றினும் தோன்றாய் ஒன்றினும் அடங்காய்
வானோர்க்(கு) அரியாய் மறைகளுக்(கு) எட்டாய்
நான்மறை யாளர் நடுவுபுக்(கு) அடங்கிச்
செம்பொன் தில்லை மூதூர்
அம்பலத்(து) ஆடும் உம்பர் நாயகனே.
தெளிவுரை : என்றாலும் நீ ஒன்றிலும் தோன்றாய், ஒன்றிலும் அடங்காய். வானவர்களாலும்
அறியப் படாதவன் நீ, மறைகளும் தேடிக் கண்டில. வேதியர்களின் நடுவில் புகுந்து,
செம்பொன் தில்லை மூதூர் அம்பலத்துள் ஆடுகின்றவன் நீயே. நீ தேவர் நாயகன் !
வெண்பா
-
நாயனைய என்னைப் பொருட்படுத்தி நன்களித்துத்
தாயனைய னாய்அருளும் தம்பிரான் - தூயவரை
மென்துழாய் மாலொடயன் தேட வியன்தில்லை
மன்றுளே ஆடும் மணி.
தெளிவுரை : நாய் போல் கீழ்ப்பட்ட என்னை ஒரு பொருளாகக் கருதி நன்கு ஆதரித்து,
தாய்போல் காப்பாற்றும் கடவுள், பரிசுத்தமான மணமுள்ள துழாய் மாலை அணிந்த
திருமாலும் பிரமனும் தேட, பெருமை பொருந்திய தில்லை மன்றுள் மணி போன்றவன்
நடனமாடுகின்றான்.
கட்டளைக் கலித் துறை
-
மணிவாய் முகிழ்ப்பத் திருமுகம்
வேர்ப்பஅம் மன்றுக்கெல்லாம்
அணியாய் அருள்நடம் ஆடும்
பிரானை அடைந்துருகிப்
பணியாய் புலன்வழி போம்நெஞ்ச
மேயினிப் பையப்பையப்
பிணியாய்க் கடைவழி சாதியெல்
லோரும் பிணம்என்னவே.
தெளிவுரை : அழகிய வாய் குவிய, திருமுகம் வேர்ப்ப அந்த அம்பலத்துக்கு எல்லாம்
ஆபரணமாய் அருள் நடம் புரிகின்ற எம் பெருமானைப் போய்ச் சேர்ந்து உருகிப் பணியாமல்
புலன்கள் வழியாகச் செல்கின்ற நெஞ்சமே ! இனி மெல்ல மெல்ல நோய் வாய்ப்பட்டு
கடைசியில் சாவாய். பின்னர் ஊரார் உனக்குப் பிணம் என்னும் பெயர் வைப்பார்கள்.
ஆகவே உயிர் உள்ள போதே இறைவனை வழிபட்டு நற்கதி பெறுவாயாக என்பதாம்.
ஆசிரிய விருத்தம்
-
என்னாம் இனிமட வரலாய் செய்குவ(து)
இனமாய் வண்டுகள் மலர்கிண்டித்
தென்னா எனமுரல் பொழில்சூழ் தில்லையுள்
அரனார் திருமுடி அணிதாமம்
தன்னால் அல்லது தீரா(து) என்னிடர்
தகையா(து) உயிர்கரு முகிலேறி
மின்னா நின்றது துளிவா டையும்வர
வீசா நின்றது பேசாயே.
தெளிவுரை : கார்ப் பருவம் கண்டு கலங்கிய தலைவிக்குச் சொல்லியது.
இளம்பெண்ணே ! இனி எப்படி முடியும்? என்ன செய்வது? கூட்டமாக வண்டுகள் மலர்களைத்
திறந்து தென்னாட்டவனே ! என ஒலிக்கின்ற சோலைகள் சூழ்ந்த சிதம்பரத்தில்
சிவபெருமானுடைய திருமுடியிலுள்ள அழகிய மாலையால் அல்லது என் இடர் தீராது என்னுயிர்
நிலைத்திராது கரிய மேகங்கள் மேலேறி மின்னுகின்றன. மழையும் வரப் போகிறது. பேசாமல்
இருக்கிறாயே !
இணைக்குறள் ஆசிரியப்பா
-
பேசு வாழி பேசு வாழி
ஆசையொடு மயங்கி மாசுறு மனமே
பேசு வாழி பேசு வாழி
கண்டன மறையும் உண்டன மலமாம்
பூசின மாசாம் புணர்ந்தன பிரியும்
தெளிவுரை : பேசுவாயாக ! பேசுவாயாக ! ஆசையோடு மயங்கி மாசுபடும் மனமே ! பேசுவாயாக.
கண்டன மறையும். உண்ட உணவு பின்னர் மலமாகிவிடும. பூசிய மணப் பொருள்கள் மாசுபட்டுப்
போகும். ஒன்று சேர்ந்திருந்தவை பிரிந்து போகும்.
நிறைந்தன குறையும் உயர்ந்தன பணியும்
பிறந்தன இறக்கும் பெரியன சிறுக்கும்
ஒன்றொன்(று) ஒருவழி நில்லா அன்றியும்
செல்வமொடு பிறந்தோர் தேசொடு திகழ்ந்தோர்
கல்வியிற் சிறந்தோர் கடுந்திறல் மிகுந்தோர்
தெளிவுரை : நிறைந்திருந்தவை குறைந்து போகும். உயர்ந்திருந்தவை தாழ்ந்து போகும்.
பிறந்தவை அனைத்தும் இறந்து போகும். பெரியவை சிறியவையாகும். எதுவும் நிலைத்திரா.
அதன்றியும் செல்வத்தில் பிறந்தவரும் பெருமையோடு வாழ்ந்தவரும் கல்வியிற்
சிறந்தவர்களும் திறமை மிக்கவர்களும்
கொடையிற் பொலிந்தோர் படையிற் பயின்றோர்
குலத்தின் உயர்ந்தோர் நலத்தினின் வந்தோர்
எனையர்எங் குலத்தினர் இறந்தோர் ஏனையவர்
பேரும் நின்றில போலும் தேரின்
நீயும்அஃ(து) அறிதி யன்றே மாயப்
தெளிவுரை : கொடையாளிகளும், போர் வீரர்களும், உயர் குடியில் பிறந்தோரும்
நலமிக்கவர்களும் எத்தன்மையராய் இருந்தாலும் எந்தக் குலத்தில் பிறந்தோராயினும்
இறந்தோரே. ஏனையவர் பேரும் நின்றில போலும். ஆராயுமிடத்து நீயும் அதை அறிவாயாக.
இதுதான் உண்மை நிலை.
பேய்த்தேர் போன்றும் நீப்பரும் உறக்கத்துக்
கனவே போன்றும் நனவுப்பெயர் பெற்ற
மாய வாழ்க்கையை மதித்துக் காயத்தைக்
கல்லினும் வலிதாக் கருதிப் பொல்லாத்
தன்மையர் இழிவு சார்ந்தனை நீயும்
தெளிவுரை : மாயக் கானல் நீர் போலவும், தூக்கத்தின்கண் தோன்றும் கனவு போலவும் நனவு
என்று சொல்லப்படும் மாய வாழ்க்கையைப் பெரிதாக நம்பி, இந்த உடம்பைக் கல்லைக்
காட்டிலும் வலிமை உடையதென்று கருதும் பொல்லாத் தன்மையர் இழிவை நீயும் சார்ந்தாய்.
நன்மையில் திரிந்த புன்மையை யாதலின்
அழுக்குடைப் புலன்வழி இழுக்கத்தின் ஒழுகி
வளைவாய்த் தூண்டிலின் உள்ளிரை விழுங்கும்
பன்மீன் போலவும்
மின்னுபு விளக்கத்து விட்டில் போலவும்
தெளிவுரை : நன்மையில் திரிந்த புன்மையை ஆதலின் அழுக்குடை புலன்வழி இழுக்கத்தின்
ஒழுகி, வளைந்த வாயினையுடைய தூண்டிலில் கோக்கப்பட்ட இரையை விழுங்கும் சுவையால்
கெடும் பல மீன்களைப் போலவும், மின்னுகின்ற வெளிச்சத்தைக் கண்டு காட்சியால் கெடும்
விட்டிலைப் போலவும்
ஆசையாம் பரிசத் தியானை போலவும்
ஓசையின் விளிந்த புள்ளுப் போலவும்
வீசிய மணத்தின் வண்டு போலவும்
உறுவ(து) உணராச் செறுவுழிச் சேர்ந்தனை
தெளிவுரை : பரிசத்தாற் கெடும் யானையைப் போலவும், ஓசையாகிய கேள்வியாற் கெடும்
அசுணத்தைப் போலவும், மோத்தலால் கெடும் (வீசிய மணம்) வண்டைப் போலவும் ஐம்பொறிகளின்
வசப்பட்டுத் துன்புற்றாய்.
நுண்ணூல் நூற்றுத் தன்னகப் படுக்கும்
அறிவில் கீடத்து நுந்துழி போல
ஆசைச் சங்கிலிப் பாசத் தொடர்ப்பட்டு
இடர்கெழு மனத்தினோ(டு) இயற்றுவ(து) அறியாது
குடர்கெழு சிறையறைக் குறங்குபு கிடத்தி
தெளிவுரை : மெல்லிய நூலை நூற்று அதனுள் அகப்பட்டுக் கொள்ளும் அறிவில்லாத சிலந்தி
வருந்துவது போல ஆசைச் சங்கிலிப் பாசத்தில் சிக்கி, இடர் நிறைந்த மனத்தோடு செய்வது
அறியாது குடலோடு பொருந்திய சிறையின் அறைபோன்ற உடம்பினுள் வளைந்து கிடக்கிறாய்.
கறவை நினைத்த கன்றென இரங்கி
மறவா மனத்து மாசறும் அடியார்க்(கு)
அருள்சுரந்(து) அளிக்கும் அற்புதக் கூத்தனை
மறையவர் தில்லை மன்றுள் ஆடும்
இறையவன் என்கிலை என்நினைந் தனையே.
தெளிவுரை : பசு நினைந்த கன்றென இரங்கி, மறவா மனத்து மாசறு அடியார்க்கு, அருள்
சுரந்து அளிக்கும் நடராஜப் பெருமானை, வேதியர் தில்லை மன்றுள் ஆடும் இறைவனைத்
துதிக்கவில்லையே. மனமே, என்ன நினைத்தாய்.
வெண்பா
-
நினையார் மெலியார் நிறையழியார் வாளாப்
புனைவார்க்குக் கொன்றை பொதுவோ - அனைவீரும்
மெச்சியே காண வியன்தில்லை யான்அருளென்
பிச்சியே நாளைப் பெறும்.
தெளிவுரை : இறைவனை நினையாதவர்களும், அவனை நினைந்து மெலியாதவர்களுக்கும்,
நிறையழியாத வருக்கும், வீணாக அணிந்து கொள்ள விரும்புவார்களுக்கும் கொன்றை மாலை
கிடைக்குமோ? எல்லாரும் புகழ்ந்து காண, பெருமையுடைய தில்லையான் அருளை நாளைய தினம்
பிச்சியே பெறுவாள்.
கட்டளைக் கலித் துறை
-
பெறுகின்ற எண்ணிலி தாயரும்
பேறுறும் யானுமென்னை
உறுகின்ற துன்பங்கள் ஆயிர
கோடியும் ஓய்வொடுஞ்சென்(று)
இறுகின்ற நாள்களும் ஆகிக்
கிடந்த இடுக்கணெல்லாம்
அறுகின் றனதில்லை யாளுடை
யான்செம்பொன் அம்பலத்தே.
தெளிவுரை : பெறுகின்ற எண்ணற்ற தாய்மாரும், பிறவி தோறும் அத் தாய்மார்களால்
பெறுதலையுடைய அடியேனும் அடைகின்ற துன்பங்கள் ஆயிரம் கோடியும் ஓய்வொடும் சென்று
முடிகின்ற நாள்களும் ஆகி, எஞ்சியிருந்த இடையூறுகளும் ஒழிகின்றன. எங்கு எனில்,
தில்லையாளுடையான் செம்பொன் அம்பலத்தில் என்றபடி.
எண்சீர் ஆசிரிய விருத்தம்
-
அம்பலவர் அங்கணர் அடைந்தவர் தமக்கே
அன்புடையர் என்னுமிதென் ஆனையை யுரித்துக்
கம்பலமு வந்தருளு வீர்மதனன் வேவக்
கண்டருளு வீர்பெரிய காதலறி யாதே
வம்பலர் நிறைந்துவசை பேசவொரு மாடே
வாடையுயிர் ஈரமணி மாமையும் இழந்தென்
கொம்பல மருந்தகைமை கண்டுதக வின்றிக்
கொன்றையரு ளீர்கொடியீர் என்றருளு வீரே.
இது செவிலி கூற்று.
தெளிவுரை : பொன்னம்பலத்தில் கோயில் கொண்டிருப்பவர்; அழகிய கண்களையுடையவர்; தம்மை
அடைக்கலமாக வந்து சேர்ந்தவர்களுக்கே அன்புடையவர்; தன்னைக் கொல்ல வந்த யானையை
உரித்து அதன் தோலைப் போர்வையாகப் போர்த்துக் கொண்டவர். அதை உவந்து அளித்திடுவீர்.
மன்மதன் அழியக் கண்டருளுவீர். பெரிய காதலை அறியாமல் ஊரார் பழி தூற்ற வசை பேச ஒரு
பக்கம் வாடைக் காற்று உயிரை அறுக்க, அழகிய நிறத்தை இழந்து என் மகள் கலங்குகின்ற
தன்மையைக் கண்டு தகவின்றி கொன்றை அருளீர் ! கொடியீர் என்று அருளுவீரே.
இணைக்குறள் ஆசிரியப்பா
-
அருளு வாழி அருளு வாழி
புரிசடைக் கடவுள் அருளு வாழி
தோன்றுழித் தோன்றி நிலைதவக் கறங்கும்
புற்புதச் செவ்வியின் மக்கள் யாக்கைக்கு
நினைப்பினுங் கடிதே இளமை நீக்கம்
தெளிவுரை : அருளுவாயாக ! அருளுவாயாக ! முறுக்கிய சடையையுடைய கடவுளே ! அருளுவாயாக.
தோன்றி அழியும் நீர்க்குமிழியின் இயல்பைப்போல மக்கள் யாக்கைக்கு இளமை நீக்கம்
நினைப்பதைவிட வேகமாகச் செல்வது.
அதனினுங் கடிதே மூப்பின் தொடர்ச்சி
அதனினுங் கடிதே கதுமென மரணம்
வாணாள் பருகி உடம்பை வறிதாக்கி
நாணாள் பயின்ற நல்காக் கூற்றம்
இனைய தன்மைய(து) இதுவே இதனை
தெளிவுரை : மூப்பின் தொடர்ச்சி அதைவிட வேகமாகச் செல்லக்கூடியது. மரணம் அதைவிட
வேகமாகச் செல்வது. வாழ்நாளைக் குடித்து, உடம்பைப் பயனின்மையாக்கி பல நாள் பயின்ற
அருள் செய்யாத யமனின் தன்மை இதுவாகும்.
எனதெனக் கருதி இதற்கென்று தொடங்கிச்
செய்தன சிலவே செய்வன சிலவே
செய்யா நிற்பன சிலவே அவற்றிடை
நன்றென்ப சிலவே தீதென்ப சிலவே
ஒன்றினும் படாதன சிலவே யென்றிவை
தெளிவுரை : இவ்வுடலை எனதெனக் கருதி, இதற்கென்று தொடங்கிச் செய்தன சிலவே. செய்வன
சிலவே. செய்கின்றனவும் சிலவே. அவற்றுள் நல்லன சில; தீயன சில; இவை இரண்டிலும்
சேராதன சில.
கணத்திடை நினைந்து களிப்பவும் கலுழ்பவும்
கணக்கில் கோடித் தொகுதி அவைதாம்
ஒன்றொன்(று) உணர்வுழி வருமோ அனைத்தும்
ஒன்றா உணர்வுழி வருமோ அனைத்தும்
தெளிவுழித் தேறல் செல்லேம் அளிய
தெளிவுரை : என்று இவை ஒரு கணம் நினைந்து மகிழ்தலும் அழுதலும் எல்லையற்றன. அவைதாம்
ஒவ்வொன்று உணர்வுழி வருமோ, அனைத்தும் சேர்த்துப் பார்க்கும்போது வருமோ என்பதை
அறுதியிட்டுச் சொல்ல இயலவில்லை.
மனத்தின் செய்கை மற்றிதுவே நீயே
அரியை சாலவெம் பெரும தெரிவுறில்
உண்டாய்த் தோன்றுவ யாவையும் நீயே
கண்டனை அவைநினைக் காணா அதுதான்
நின்வயின் மறைத்தோ யல்லை யுன்னை
தெளிவுரை : மனத்தின் செய்கை இவ்வளவு தான், நீயே மிகவும் அருமையுடையவன். எம்
பெருமானே ! ஆராயுமிடத்து உலகில் தோன்றியவை அனைத்தும் நீயே. அவற்றை நீ கண்டனை.
ஆனால் அனை உன்னைக் காணவில்லை. அவை உன்னிடத்தில் மறைந்தனவோ.
மாயாய் மன்னினை நீயே வாழி
மன்னியும் சிறுமையிற் கரந்தோய் அல்லை
பெருமையிற் பெரியோய் பெயர்த்தும் நீயே
பெருகியும் சேணிடை நின்றோய் அல்லை
தேர்வோர்க்குத் தம்மினும் அணியை நீயே
தெளிவுரை : நீ மாயமாய் நிலைத்திருக்கின்றாய். நீ வாழ்வாயாக. நிலை
பெற்றிருந்தாலும் சிறுமையில் மறையவில்லை. பெருமையில் பெரியோய் மறுபடியும்
நீயேதான். பெருகினாலும் நீ தூரத்தில் இல்லை. என்றாலும் தெளிந்தவர்களுக்கு நீ
அருகில் உள்ளாய்.
நண்ணியும் இடையொன்றின் மறைந்தோ யல்லை
இடையிட்டு நின்னை மறைப்பதும் இல்லை
மறைப்பினும் அதுவும்
நீயே யாகி நின்றதோர் நிலையே அஃதான்று
நினைப்புருங் காட்சி எம்நிலை யிதுவே
தெளிவுரை : நெருங்கியிருந்தும் இடையில் மறைந்திருக்கவில்லை. இடையில் உன்னை
மறைத்துக் கொள்வதும் இல்லை. அப்படி மறைந்தாலும் உனக்கென்று ஒரு நிலையுள்ளது.
அதுவல்லாமல் உன்னை நினைப்பதற்கு உனக்கென்று தனி நிலை உள்ளது.
நினைப்புறுங் காட்சி எம்நிலை யதுவே
இனிநனி இரப்பதொன்(று) உடையம் மனமருண்டு
புன்மையின் நினைத்துப் புலன்வழி படரினும்
நின்வயின் நினைந்தேம் ஆகுதல் நின்வயின்
நினைக்குமா நினைக்கப் பெறுதல் அனைத்தொன்றும்
நீயே அருளல் வேண்டும் வேய்முதிர்
தெளிவுரை : ஆராயுங்கால், எம் நிலை இதுவே. இனி உன்னிடத்தில் யாசிப்பது ஒன்று உளது.
அது யாதெனின், மனம் மருட்சியடைந்து அற்பமானதை நினைத்துப் புலன்கள் வழி மனம்
சென்றால் அதைத் தடுத்து நிறுத்தி நின்வழி நினைக்குமாறு அருளல் வேண்டும்.
கயிலை புல்லென எறிவிசும்பு வறிதாக
இம்பர் உய்ய அம்பலம் பொலியத்
திருவளர் தில்லை மூதூர்
அருநடங் குயிற்றும் ஆதிவா னவனே.
தெளிவுரை : மூங்கில் முற்றிய கயிலை புல்லென, எறிவிசும்பு வறிதாக இவ்வுலக மக்கள்
நற்கதி பெறுமாறு பொன்னம்பலம் விளக்கம் உற, திருவளர் தில்லை மூதூரில் அருமையான
திருநடனம் செய்கின்ற ஆதிவானவனே.
வெண்பா
-
வானோர் பணிய மணியா சனத்திருக்கும்
ஆனாத செல்வத்(து) அரசன்றே - மால்நாகம்
பந்திப்பார் நின்றாடும் பைம்பொன்னின் அம்பலத்தே
வந்திப்பார் வேண்டாத வாழ்வு.
தெளிவுரை : இந்திர பதவியையும் சிவனடியார் வேண்டார் என்றபடி.
தேவர்கள் பணிய, உயர்ந்த ஆசனத்திலிருக்கும் குறைபாடு இல்லாத செல்வத்து அரசை, பெரிய
நாகப் பாம்பை ஆபரணமாகக் கட்டிக் கொண்டவர் நின்று ஆடுகின்ற பொன்னம்பலத்தை
வழிபடுகின்றவர் (மேற் சொன்ன இந்திர பதவியை) விரும்ப மாட்டார்கள் என்பதாம்.
கட்டளைக் கலித் துறை
-
வாழ்வாக வும்தங்கள் வைப்பாக
வும்மறை யோர்வணங்க
ஆள்வாய் திருத்தில்லை அம்பலத்
தாய்உன்னை அன்றியொன்றைத்
தாழ்வார் அறியாச் சடுலநஞ்
சுண்டிலை யாகிலன்றே
மாள்வார் சிலரையன் றோதெய்வ
மாக வணங்குவதே.
தெளிவுரை : வாழ்வாகவும் தங்கள் சேம நிதியாகவும் தில்லைவாழ் அந்தணர்கள் வணங்க,
ஆட்சி செய்யும் திருத்தில்லை அம்பலத்தாய் ! உன்னை அல்லாமல் வேறொருவரை
வணங்குபவர்கள், நடுக்கத்தைத் தரும் ஆலகால விடத்தை இவர் உண்ணாதிருந்தால் அன்றே
மாண்டிருப்பர். அத்தகைய சிறு தெய்வங்களையா வணங்கப் போகிறீர்கள்?
ஆசிரிய விருத்தம்
-
வணங்குமிடை யீர்வறிது வல்லியிடை யாள்மேல்
மாரசர மாரிபொழி யப்பெறு மனத்தோ(டு)
உணங்கியிவள் தானுமெலி யப்பெறும் இடர்க்கே
ஊதையெரி தூவியுல வப்பெறு மடுத்தே
பிணங்கியர வோடுசடை ஆடநட மாடும்
பித்தரென வும்இதயம் இத்தனையும் ஓரீர்
அணங்குவெறி யாடுமறி யாடுமது வீரும்
மையலையும் அல்லலையும் அல்லதறி யீரே.
தெளிவுரை : துவளும் இடையினை உடையீர் ! வீணாகக் கொடியைப் போன்ற தலைவியின்மேல்
காமன் அம்பு மாரி பொழியவும் மனத்தோடு வருந்தி இவள் மெலிகின்றாள். அதுவும் அன்றிக்
குளிர் காற்று தீயைப் போல் துன்புறுத்துகிறது. இது சடை முடியோடு ஆட நடமாடும்
பித்தர் பொருட்டு என்பதை நீங்கள் அறியாமல் தெய்வத்தை நினைத்து வெறியாடுவதையும்
ஆட்டை வெட்டுவதையும் செய்கின்றீர்கள். உண்மை நிலையை நீங்கள் அறியவில்லையே
என்பதாம். இடையீர் என்பது நற்றாய் முதலியோரை.
நேரிசை ஆசிரியப்பா
-
ஈரவே ரித்தார் வழங்கு சடிலத்துக்
குதிகொள் கங்கை மதியின்மீ(து) அசைய
வண்டியங்கு வரைப்பின் எண்தோள் செல்வ
ஒருபால் தோடும் ஒருபால் குழையும்
இருபாற் பட்ட மேனி எந்தை
தெளிவுரை : தேன் நிறைந்த மாலை சூடிய சடைமுடியுள் குடிக் கொண்டிருக்கும் கங்கை
சந்திரன் மீது அசைய, வண்டு மொய்க்கின்ற எல்லையின் எட்டுத் தோள்களை உடைய செல்வனே !
ஒரு காதில் தோடும் மற்றொரு காதில் குழையும் என்று இருபாற்பட்ட திருமேனி கொண்ட
எந்தை.
ஒல்லொலிப் பழனத் தில்லை மூதூர்
ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும்
இமையா நாட்டத்(து) ஒருபெருங் கடவுள்
வானவர் வணங்கும் தாதை யானே
மதுமழை பொழியும் புதுமந் தாரத்துத்
தெளிவுரை : ஒலியுள்ள வயல்களை உடைய சிதம்பரம் என்ற பழைமையான ஊரில் உள்ள
பொன்னம்பலத்தில் நடனமாடும் இமைக்காத கண்ணை உடைய ஒப்பற்ற கடவுள், தேவர்கள்
வணங்கும் தந்தை போன்றவனே. தேன் மழை பொழியும் மந்தார மரத்து,
தேனியங்(கு) ஒருசிறைக் கானகத்(து) இயற்றிய
தெய்வ மண்டபத்(து) ஐவகை அமளிச்
சிங்கம் சுமப்ப ஏறி மங்கையர்
இமையா நாட்டத்(து) அமையா நோக்கத்
தம்மார்பு பருகச் செம்மாந் திருக்கும்
தெளிவுரை : வண்டுகள் மொய்க்கின்ற கானகத்தில் அமைந்த தெய்வ மண்டபத்தில் ஐவகை
ஆசனத்தைச் சிங்கம் தாங்க ஏறி, மங்கையரது மார்பைத் தேவர்கள் கண்டு களிக்க
அமர்ந்திருக்கும்.
ஆனாச் செல்வத்து வானோர் இன்பம்
அதுவே எய்தினும் எய்துக கதுமெனத்
தெறுசொ லாளர் உறுசினந் திருகி
எற்றியும் ஈர்த்தும் குற்றம் கொளீஇ
ஈர்ந்தும் போழ்ந்தும் எற்றுபு குடைந்தும்
தெளிவுரை : குறையாத செல்வம் படைத்த தேவர்கள் அனுபவிக்கும் இன்பம் அவ்வளவே.
என்றாலும் அவர்கள் அனுபவிக்க இருக்கும் துன்பங்கள் அளவில. துன்பந்தருபவர் கோபங்
கொண்டு தாக்கியும், இழுத்தும், குற்றங்களைக் கூறிப் போர் தொடுத்தும்,
வார்ந்தும் குறைந்தும் மதநாய்க்(கு) ஈந்தும்
செக்குரல் பெய்தும் தீநீர் வாக்கியும்
புழுக்குடை அழுவத்து அழுக்கியல் சேற்றுப்
பன்னெடுங் காலம் அழுத்தி இன்னா
வரையில் தண்டத்து மாறாக் கடுந்துயர்
தெளிவுரை : இவ்வாறு பல துன்பங்களைச் செய்தும் அதாவது (மத நாய்க்கு ஈந்தும்,
செக்கில் இட்டு ஆட்டியும், வெந்நீரில் போட்டும், நரகத்தில் சேர்த்தும், சேற்றில்
அழுத்தியும் என்று பல திறத்தன) தண்டித்து, மாறாக் கடுந்துயர் விளைவிப்பர்.
நிரயஞ் சேரினும் சேர்க உரையிடை
ஏனோர் என்னை ஆனாது விரும்பி
நல்லன் எனினும் என்க அவரே
அல்லன் எனினும் என்க நில்லாத்
திருவொடு திளைத்துப் பெருவளஞ் சிதையாது
தெளிவுரை : இவ்வாறு பல துன்பங்களை அடைந்தாலும் அடைக. சொல்லளவில் என்னை மிகவும்
விரும்பி நல்லவன் என்று சொன்னாலும் சொல்லட்டும்; அவரே என்னை நல்லவன் அல்லன் என்று
சொன்னாலும் சொல்லட்டும். நான் என் கொள்கையிலிருந்து மாறாமல் இருப்பேன்.
இன்பத்(து) அழுந்தினும் அழுந்துக அல்லாத்
துன்பந் துதையினும் துதைக முன்பில்
இளைமையொடு பழகிக் கழிமூப்புக் குறுகாது
என்றும் இருக்கினும் இருக்க அன்றி
இன்றே இறக்கினும் இறக்க ஒன்றினும்
வேண்டலும் இலனே வெறுத்தலும் இலனே
தெளிவுரை : அதனால் நான் இன்பத்தைப் பெற்றாலும் துன்பத்தில் அழுந்தினாலும் ஒன்றே.
முன்பு போல இளமை, மூப்பு அடையாமல் இருப்பினும் இருக்கட்டும் அல்லது இன்றே உயிர்
போனாலும் போகட்டும்.
ஆண்டகைக் குரிசில்நின் அடியரொடும் குழுமித்
தெய்வக் கூத்துநின் செய்ய பாதமும்
அடையவும் அணுகவும் பெற்ற
கிடையாச் செல்வம் கிடைத்த லானே.
தெளிவுரை : இனிமேல் நான் எதையும் உன்னிடம் விரும்பிக் கேட்கப் போவதில்லை;
வெறுக்கப் போவதும் இல்லை. உன்னுடைய அடியாரொடும் குழுமி, தெய்வக் கூத்தாடும்
உன்னுடைய செம்மையான பாதங்களை அடையவும் அணுகவும் பெற்ற இணையற்ற செல்வம் எனக்குக்
கிடைத்துவிட்டது.
வெண்பா
-
ஆனேறே போந்தால் அழிவுண்டே அன்புடைய
நானேதான் வாழ்ந்திடினும் நன்றன்றே - வானோங்கு
வாமாண் பொழில்தில்லை மன்றைப் பொலிவித்த
கோமானை இத்தெருவே கொண்டு.
தெளிவுரை : கோமானை இந்தத் தெரு வழியே கொண்டு வந்தால் ஏதாவது கஷ்டம் உண்டோ?
வானளவு புகழ் படைத்த பொன்னம்பலத்தில் எழுந்தருளியிருக்கும் கோமானை இத் தெரு வழியே
கொண்டு வந்தால் காளையே! உனக்கு ஏதாவது கஷ்டம் உண்டோ? அன்புடைய நான் அவனைக் கண்டு
நல்வாழ்வு பெற்றால் உனக்கும் நல்லதுதானே !
கட்டளைக் கலித் துறை
-
கொண்டல்வண் ணத்தவன் நான்முகன்
இந்திரன் கோமகுடத்
தண்டர்மிண் டித்தொழும் அம்பலக்
கூத்தனுக்(கு) அன்புசெய்யா
மிண்டர்மிண் டித்திரி வாரெனக்(கு)
என்னினி நானவன்தன்
தொண்டர்தொண் டர்க்குத் தொழும்பாய்த்
திரியத் தொடங்கினனே.
தெளிவுரை : இறைவனுக்கு அன்பு செய்யாதவர்கள் துன்புறுவார்கள். அவனுடைய
தொண்டருக்குத் தொண்டனாக உள்ள எனக்கு என்ன பயம்?
நீலமேக சாமள வண்ணனாகிய திருமாலும் நான்முகனும், மிகுந்த செல்வமுள்ள இந்திரனும்,
முடி சூடிய தேவர்களும் நெருங்கி வந்து தொழுகின்ற அம்பலக் கூத்தனுக்கு அன்பு
செய்யாத செருக்குக் கொண்டவர்கள் செருக்கோடு திரிவார்கள். ஆனால் நான் இனி செய்யப்
போவது யாதெனில், அடியாரின் அடியார்களுக்கு அடிமைத் தொண்டு புரிபவனாகத் திரியத்
தொடங்கிவிட்டேன்.
ஆசிரியச் சந்த விருத்தம்
தொடர நரைத்தங்க முன்புள வாயின
தொழில்கள் மறுத்தொன்றும் ஒன்றி யிடாதொரு
சுளிவு தலைக்கொண்டு புன்புலை வாரிகள்
துளையொழு கக்கண்டு சிந்தனை ஓய்வொடு
நடைகெட முற்கொண்ட பெண்டிர் பொறாவொரு
நடலை நமக்கென்று வந்தன பேசிட
நலியிரு மற்(கு)அஞ்சி உண்டி வேறாவிழு
நரக உடற்கன்பு கொண்டலை வேன்இனி
மிடலொடி யப்பண்டி லங்கையர் கோனொரு
விரலின் அமுக்குண்டு பண்பல பாடிய
விரகு செவிக்கொண்டு முன்புள தாகிய
வெகுளி தவிர்த்தன்று பொன்றி யிடாவகை
திடமருள் வைக்குஞ் செழுஞ்சுடர் ஊறிய
தெளியமு தத்தின் கொழுஞ்சுவை நீடிய
திலைநக ரிற்செம்பொன் அம்பல மேவிய
சிவனை நினைக்குந் தவஞ்சது ராவதே.
தெளிவுரை : அங்கங்கள் எல்லாம் முன்பு உள்ளபடி இயங்காமல் இருக்கும் நிலையை
விவரிக்கிறார். தொடர்ந்து நரை தோன்றலாயிற்று. முன்பு போல அங்கங்கள் வேலை செய்ய
முடியாமல் தளர்ந்து விட்டன. ஐம்புலன்களின் வழியாக அழுக்குத் தாரைகள் இழிந்தன.
சிந்தனை சரியாக இல்லை. நடை தளர்ந்தமையால் மனைவியரும் மனதுக்க வந்தவாறு ஏளனமாகப்
பேசுகின்றனர். துன்புறுத்துகின்ற இருமல் வந்து, கஞ்சி உணவை உண்டு, நரகமாகிய
இவ்வுடலுக்கு அன்பு கொண்டு அலைந்தேன். இனிமேல் செய்யப்போவது யாதெனில்,
வலிகெடுமாறு முன்பு இராவணன் இறைவனது கால் விரலினால் அழுத்தப் பெற்று, சாமவேதம்
பாடினான். இறைவன் மனம் இளகி, முன்பு இருந்த கோபத்தைத் தவிர்த்து, அவனுக்கு அருள்
செய்தார். அத்தகைய பெருமானின் அமுத மயமாகிய தில்லை நகரில் செம்பொன் அம்பலத்தில்
மேவிய சிவனை நினைக்கும் தவமே மேம்பாட்டைக் கொடுப்பது என்பதாம்.
நேரிசை ஆசிரியப்பா
-
சதுர்முகன் தந்தைக்குக் கதிர்விடு கடவுள்
ஆழி கொடுத்த பேரருள் போற்றி
முயற்சியொடு பணிந்த இயக்கர்கோ னுக்கு
மாநிதி இரண்டும் ஆனாப் பெருவளத்(து)
அளகை ஒன்றும் தளர்வின்றி நிறுவிய
செல்வங் கொடுத்த செல்வம் போற்றி
தெளிவுரை : பிரமனுடைய தந்தையாகிய திருமாலுக்கு ஒளிவிடுகின்ற தெய்வத்தன்மை
பொருந்திய சக்கரத்தை அருளிய உன் திருவருளுக்கு வணக்கம். முயற்சியோடு பணிந்த
இயக்கர் கோனாகிய குபேரனுக்குச் சங்கநிதி, பதுமநிதி ஆகிய இரண்டு நிதிகளையும்
குறையாத பெருவனத்தை உடைய அளகாபுரியையும் எல்லையற்ற செல்வத்தையும் அளித்த செல்வனே
உனக்கு வணக்கம்.
தாள்நிழல் அடைந்த மாணிக் காக
நாண்முறை பிறழாது கோண்முறை வலித்துப்
பதைத்துவருங் கூற்றைப் படிமிசைத் தெறிக்க
உதைத்துயிர் அளித்த உதவி போற்றி
தெளிவுரை : உன்னுடைய பாதாரவிந்தகளைச் சரணமாக அடைந்த பிரமசாரியாகிய
மார்க்கண்டேயனுக்காக நாள் தவறாமல் தன் பணியைச் செய்துவரும் இயமன் வந்தபோது அவனை
உதைத்து, மார்க்கண்டேயனுக்கு நீண்ட ஆயுளை அளித்த உன் உதவிக்கு வணக்கம்.
குலைகுலை குலைந்த நிலையாத் தேவர்
படுபேர் அவலம் இடையின்றி விலக்கிக்
கடல்விடம் அருந்தின கருணை போற்றி
தவிராச் சீற்றத்(து) அவுணர் மூவெயில்
ஒல்லனல் கொளுவி ஒருநொடிப் பொடிபட
வில்லொன்று வளைத்த வீரம் போற்றி
தெளிவுரை : மிகுந்த நடுக்கத்தினை அடைந்த தேவர்களின் துன்பத்தைத் தாளாமல் விலக்கி
கடலிலிருந்து எழுந்த ஆலகால விடத்தைப் பருகின உன் கருணைக்கு வணக்கம்.
திரிபுராதிகளின் மூன்று கோட்டைகளைத் தீயிட்டுக் கொளுத்தி ஒரு நொடியில்
சாம்பலாகுமாறு மேருமலையை வில்லாக வளைத்த உன் வீரத்திற்கு வணக்கம்.
பூமென் கரும்பொடு பொடிபட நிலத்துக்
காமனைப் பார்த்த கண்ணுதல் போற்றி
தெய்வ யாளி கைமுயன்று கிழித்தெனக்
கரியொன்று உரித்த பெருவிறல் போற்றி
தெளிவுரை : கரும்பு வில்லோடு சாம்பலாகுமாறு மன்மதனை எரித்த உன் நெற்றிக்
கண்ணுக்கு வணக்கம். தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய யானையைக் கிழித்து அதன் தோலைப்
போர்த்திய உன் பெரு வெற்றிக்கு வணக்கம்.
பண்டு பெரும்போர்ப் பார்த்தவனுக்(கு) ஆகக்
கொண்டு நடந்த கோலம் போற்றி
விரற்பதம் ஒன்றில் வெள்ளிமலை எடுத்த
அரக்கனை நெரித்த ஆண்மை போற்றி
தெளிவுரை : முன்பு பெருவீரனாகிய அருச்சுனனுக்காக நீ எடுத்த வேட்டுவக் கோலத்திற்கு
வணக்கம். வெள்ளி மலையை எடுத்த இராவணனை, கால் விரல் ஒன்றினால் நெரித்த உன்
ஆண்மைக்கு வணக்கம்.
விலங்கல் விண்டு விழுந்தென முன்னாள்
சலந்தரன் தடிந்த தண்டம் போற்றி
தாதையை எறிந்த வேதியச் சிறுவற்குப்
பரிகலங் கொடுத்த திருவுளம் போற்றி
நின்முதல் வழிபடத் தன்மகன் தடிந்த
தொண்டர் மனையில் உண்டல் போற்றி
தெளிவுரை : மலை பிளவுபட்டு விழுந்தது போன்று சலந்தரனை அழித்த உன் ஆற்றலுக்கு
வணக்கம். தன் தந்தையின் கால்களை வெட்டி சண்டீசருக்கு உண்கலம் கொடுத்த உன் திரு
உள்ளத்துக்கு வணக்கம் (உண்கலம் - தாம் ஏற்ற நிவேதனம்). உன்னை உபசரிக்க தன்
மகனாகிய சீராள தேவனை அரிந்த சிறுத்தொண்ட நாயனாருடைய வீட்டில் நீ உண்டமைக்கு
வணக்கம்.
வெண்ணெய் உண்ண எண்ணுபு வந்து
நந்தா விளக்கை நுந்துபு பெயர்த்த
தாவுபுல் எலிக்கு மூவுல காள
நொய்தினில் அளித்த கைவளம் போற்றி
தெளிவுரை : வெண்ணெய் உண்பதற்காக எண்ணி வந்து நந்தா விளக்கைத் தூண்டிய எலிக்கு
மூவுலகு ஆள விரைந்து அருள் செய்த உன் கை வண்ணத்திற்கு வணக்கம். (இதில்
குறிக்கப்பட்டது கோச்செங்கட் சோழர் வரலாறு ஆகும்.)
பொங்குளை அழல்வாய்ப் புகைவிழி ஒருதனிச்
சிங்கங் கொன்ற சேவகம் போற்றி
வரிமிடற்(று) எறுழ்வலி மணியுகு பகுவாய்
உரகம் பூண்ட ஒப்பனை போற்றி
கங்கையும் கடுக்கையும் கலந்துழி ஒருபால்
திங்கள் சூடிய செஞ்சடை போற்றி
தெளிவுரை : பொங்கும் பிடரியையும் அழல் போன்ற வாயையும் உடைய புகை விழியையும் உடைய
சிங்கத்தைக் கொன்ற உன் ஒப்பனைக்கு வணக்கம். கொடிய பாம்பை அணிந்துள்ள உன்
ஒப்பனைக்கு வணக்கம். கங்கையும் கொன்றையும் கலந்து ஒரு பக்கத்திலும் திங்களை மறு
பக்கத்திலும் சூடிய உன் செஞ்சடைக்கு வணக்கம்.
கடவுள் இருவர் அடியும் முடியும்
காண்டல் வேண்டக் கனற்பிழம்பாகி
நீண்டு நின்ற நீளம் போற்றி
ஆலம் பில்குநின் சூலம் போற்றி
கூறுதற்(கு) அரியநின் ஏறு போற்றி
தெளிவுரை : திருமாலும் பிரமனும் முறையே உன் அடியையும் முடியையும் காண்பதற்காக
முயன்ற போது நீ கனற் பிழம்பாகி நீண்டு நின்ற உன் நீளத்திற்கு வணக்கம். விஷம்
கக்கும் உன் சூலத்திற்கு வணக்கம். சொல்வதற்கு அரிய நின் வாகனத்திற்கு வணக்கம்.
ஏகல் வெற்பன் மகிழும் மகட்(கு) இடப்
பாகங் கொடுத்த பண்பு போற்றி
தில்லை மாநகர் போற்றி தில்லையுட்
செம்பொன் அம்பலம் போற்றி அம்பலத்(து)
ஆடும் நாடகம் போற்றி என்றாங்(கு)
தெளிவுரை : ஒப்பற்ற மலையரசன் மகிழும் மகளாகிய உமாதேவியாருக்கு இடப்பாகம் கொடுத்த
உண் பண்பிற்கு வணக்கம். தில்லை மாநகர்க்கு வணக்கம். தில்லையுள் செம்பொன்
அம்பலத்திற்கு வணக்கம். அம்பலத்தாடும் உன் நாடகத்திற்கு வணக்கம்.
என்றும் போற்றினும் என்தனக்(கு) இறைவ
ஆற்றல் இல்லை ஆயினும்
போற்றி போற்றிநின் பொலம்பூ அடிக்கே.
தெளிவுரை : எனக்கு இறைவனே ! உன் திருவடிகளை எப்போதும் போற்றும் ஆற்றல் எனக்கு
இல்லை. என்றாலும் எனக்கு அருள் செய்வாயாக என்பதாம்.
திருச்சிற்றம்பலம்
திருக்கழுமல மும்மணிக்கோவை
( பட்டினத்துப்பிள்ளையார்அருளிச்செய்தது )
கழுமலம் என்பது சீகாழிக்குரிய பன்னிரண்டு திருப்பெயர்களுள் ஒன்று. அப் பதியில்
எழுந்தருளிய சிவபெருமானை அகவல், வெண்பா, கலித்துறை என்னும் மூவகைப் பாக்களால்
புகழ்ந்து பாடப் பெற்றமையின் இந்நூல் திருக்கழுமல மும்மணிக் கோவை என்று பெயர்
பெற்றது. இந் நூலில் சீகாழிச் சிவபெருமான் திருஞானசம்பந்தர்க்கு அருள் செய்த
திறம், சிவபெருமானுடைய தன்மைகள், பிறவி இயல்பைக் கூறிப் பெருமானை வேண்டுதல்
முதலிய செய்திகள் கூறப்பெறுகின்றன. இந் நூலில் பன்னிரண்டு பாடல்களே பட்டினத்துப்
பிள்ளையார் வாக்கெனவும் 13 முதல் 30 வரையுள்ள பாடல்கள் மறைந்து போக வேறு எவராலோ
பாடிச் சேர்க்கப்பட்டன என்றும் கூறுகின்றனர்.
திருச்சிற்றம்பலம்
இணைக்குறள் ஆசிரியப்பா
-
திருவளர் பவளப் பெருவரை மணந்த
மரகத வல்லி போல ஒருகூ(று)
இமையச் செல்வி பிரியாது விளங்கப்
பாய்திரைப் பரவை மீமிசை முகிழ்த்த
அலைகதிர்ப் பரிதி ஆயிரந் தொகுத்த
வரன்முறை திரியாது மலர்மிசை இருந்தெனக்
தெளிவுரை : பெருமைமிக்க பவளப்பெரு மலை மீது மரகதக் கொடி படர்ந்தது போன்று, இடது
பாகத்தில் உமாதேவியார் பிரியாமல் விளங்க, அலைகளையுடைய கடல்மீது உதித்த
கதிர்களையுடைய சூரியன் ஆயிரம் ஒன்றுகூடி, திரியாமல் மலர்மிசை இருந்ததைப் போல,
கதிர்விடு நின்முகங் காண்தொறும் காண்தொறும்
முதிரா இளமுலை முற்றாக் கொழுந்தின்
திருமுகத் தாமரை செவ்வியின் மலரநின்
தையல் வாணுதல் தெய்வச் சிறுபிறை
இளநிலாக் காண்தொறும் ஒளியொடும் புணர்ந்தநின்
செவ்வாய்க் குமுதம் செவ்வி செய்யநின்
செங்கைக் கமலம் மங்கை வனமுலை
அமிர்த கலசம் அமைவின் ஏந்த
மலைமகள் தனாது நயனக் குவளைநின்
பொலிவினொடு மலர மறையோர்
தெளிவுரை : பிரகாசிக்கின்ற உன் முகத்தைக் காணும்தோறும், காணும்தோறும் முதிரா
இளமுலை முற்றாக் கொழுந்தின் (அம்மையின்) திருமுகமாகிய தாமரை மலரின் அழகு மலர உன்
உமாதேவியின் ஒளி பொருந்திய நெற்றி தெய்வச் சிறு பிறையாகிய இளநிலவைக்
காணும்தோறும், ஒளியோடு புணர்ந்த நின் சிவந்த வாயும் உன் செம்மையான கையாகிய கமலம்,
அம்மையின் வன முலையாகிய அமிர்த கலசத்தைப் பொருத்தமாக ஏந்த, உமாதேவியின் நயனமாகிய
குவளைமலர் நின் அழகோடு மலர,
கழுமல நெறிநின்று பொலிய
நாகர் நாடு மீமிசை மிதந்து
மீமிசை உலகங் கீழ்முதல் தாழ்ந்திங்(கு)
ஒன்றா வந்த குன்றா வெள்ளத்(து)
உலகம்மூன் றுக்கும் களைகண் ஆகி
முதலில் காலம் இனிதுவீற் றிருந்துழித்
தாதையொடு வந்த வேதியச் சிறுவன்
தெளிவுரை : வேதியர்கள் சீகாழியின் நெறி நின்று விளங்க, நாகர்களுடைய உலகமாகிய
பாதலம் மேலே எழுந்து, தேவலோகம் கீழே இறங்கி வந்தது போல, இங்குக் குறையாத மூன்று
உலகங்களுக்கும் பற்றுக் கோடாகி ஆதிக் காலத்திலிருந்து இனிது வீற்றிருந்தபோது,
தந்தையாகிய சிவபாத இருதய ரோடு வந்த திருஞான சம்பந்தர்,
தளர்நடைப் பருவத்து வளர்பசி வருத்த
அன்னா யோஎன்(று) அழைப்பமுன் னின்று
ஞான போனகத்(து) அருள்அட்டிக் குழைத்த
ஆனாத் திரளை அவன்வயின் அருள
அந்தணன் முனிந்து தந்தார் யாரென
தெளிவுரை : தளர்நடைப் பருவத்தில் மிகுந்த பசி வருத்த அம்மா ! என்று அழைக்க முன்
தோன்றி ஞானப்பாலை அருள் சேர்த்துக் குழைத்து அவன் வயின் கொடுக்க, தந்தையாகிய
சிவபாத இருதயர் கோபித்து, இதைக் கொடுத்தவர் யார் எனக் கேட்க,
அவனைக் காட்டுவன் அப்ப வானார்
தோஒ டுடைய செவியன் என்றும்
பீஇ டுடைய பெம்மான் என்றும்
கையில் சுட்டிக் காட்ட
ஐயநீ வெளிப்பட்(டு) அருளினை ஆங்கே.
தெளிவுரை : அவனைக் காட்டுகிறேன் என்று சொல்லும்போது வானத்தில் தோடுடைய செவியன்
என்றும் பீடுடைய பெம்மான் என்றும் கையில் சுட்டிக் காட்ட, ஐயனே ! நீ அங்கே
வெளிப்பட்டு அருளினை,
வெண்பா
-
அருளின் கடலடியேன் அன்பென்னும் ஆறு
பொருளின் திரள்புகலி நாதன் - இருள்புகுதும்
கண்டத்தான் என்பாரைக் காதலித்துக் கைதொழுவார்
அண்டத்தார் நாமார் அதற்கு.
தெளிவுரை : சீகாழியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் அருளாகிய கடல் போன்றவன்;
அன்பாகிய ஆறு போன்றவன். அவனுக்கு நான் அடியேன். அவன் நீலகண்டன் என்று வணங்கும்
அடியார்களை விரும்பி கை தொழுபவர்கள் இவ்வுலகத்தினரும் தேவ லோகத்தினரும் என்றால்
அந்தச் சிறப்பை அளவிட நாம் தகுதியுடையவரா ? என்றபடி.
கட்டளைக் கலித் துறை
-
ஆரணம் நான்கிற்கும் அப்பால்
அவனறி யத்துணிந்த
நாரணன் நான்முக னுக்(கு)அரி
யான்நடு வாய்நிறைந்த
பூரணன் எந்தை புகலிப்
பிரான்பொழில் அத்தனைக்கும்
காரணன் அந்தக் கரணங்
கடந்த கருப்பொருளே.
தெளிவுரை : சிவபெருமான் வேதங்கள் நான்கிற்கும் அப்பால் இருப்பவன். அவனை அறியும்
பொருட்டுத் துணிந்த திருமாலும் பிரமனும் முயன்றும் அறிய முடியாதவன். எல்லா
உலகங்களுக்கும் நடுவாய் நிறைந்த பூரணன். எந்தை (என் தந்தை) சீகாழியில்
எழுந்தருளியிருப்பவன். உலகம் அத்தனைக்கும் ஆதியாக உள்ள காரணன். மனம், புத்தி,
சித்தம், அகங்காரம் என்னும் அந்தக்கரணங்கள் நான்கையும் கடந்த கருப்பொருள் அவன்.
இணைக்குறள் ஆசிரியப்பா
-
கருமுதல் தொடங்கிப் பெருநாள் எல்லாம்
காமம் வெகுளி கழிபெரும் பொய்யெனும்
தூய்மையில் குப்பை தொலைவின்றிக் கிடந்ததை
அரிதின் இகழ்ந்து போக்கிப் பொருதிறன்
மையிருள் திறத்து மதனுடை அடுசினத்(து)
ஐவகைக் கடாவும் யாப்பவிழ்த்(து) அகற்றி
தெளிவுரை : கருவுற்ற நாள் முதலாக, வாழ்நாள் முழுவதும் காமம், வெகுளி, கழிபெரும்
பொய்யெனும் தூய்மையில்லாத குப்பை இடைவிடாமல் கிடந்ததை அரிதின் இகழ்ந்து போக்கி,
பொரு திறனுடைய மிகுந்த இருளும் வலிமையும் உடைய மிகுந்த கோபமுடைய ஐம்பொறிகளாகிய
கடாக்களையும் கட்டு அவிழ்த்து அகற்றி,
அன்புகொடு மெழுகி அருள்விளக் கேற்றித்
துன்ப இருளைத் துரந்து முன்புறம்
மெய்யெனும் விதானம் விரித்து நொய்ய
கீழ்மையில் தொடர்ந்து கிடந்தஎன் சிந்தைப்
பாழறை உனக்குப் பள்ளியறை யாக்கிச்
தெளிவுரை : அன்பு கொண்டு மெழுகி, அருள் என்னும் விளக்கை ஏற்றி, துன்ப இருளை
விட்டு நீங்கி, முன் பக்கத்தில் மெய் என்னும் மேற்கட்டியை விரித்து, மென்மையான
கீழ்மையில் தொடர்ந்து கிடந்த என்னுடைய சிந்தையாகிய பாழறையை உனக்குப்
பள்ளியறையாக்கி,
சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவி(சு)
எந்தைநீ இருக்க இட்டனன் இந்த
நெடுநில வளாகமும் அடுகதிர் வானமும்
அடையப் பரந்த ஆதிவெள் ளத்து
நுரையெனச் சிதறி இருசுடர் மிதப்ப
தெளிவுரை : என் சிந்தையாகிய தாமரைச் செழுமலர் பூந்தவிசில் என் தந்தையாகிய நீ
இருக்க வைத்தேன். இந்த நிலவுலகப் பரப்பும் பிரகாசமான வானமும் அடையப் பரந்த
ஆதியாகிய பெரு வெள்ளத்து நுரை என்று சொல்லுமாறு சிதறிச் சூரிய சந்திரர்களாகிய
இருசுடர்களும் மிதக்க,
வரைபறித்(து) இயங்கும் மாருதம் கடுப்ப
மாலும் பிரமனும் முதலிய வானவர்
காலம் இதுவெனக் கலங்கா நின்றுழி
மற்றவர் உய்யப் பற்றிய புணையாய்
தெளிவுரை : மலைகளைப் பிடுங்கி, வீசுகின்ற சண்டமாருதம் என்னும்படி திருமால்,
பிரமன் முதலிய தேவர்கள் இது ஊழிக் காலமோ என்று கலங்கி இருந்த போது, அவர்கள்
பிழைத்து இருக்கப் பற்றிய தோணியாக,
மிகநனி மிதந்த புகலி நாயக
அருள்நனி சுரக்கும் பிரளய விடங்கநின்
செல்வச் சிலம்பு மெல்லென மிழற்ற
அமையாக் காட்சி இமையக்
கொழுந்தையும் உடனே கொண்டிங்கு
எழுந்தரு ளத்தகும் எம்பெரு மானே.
தெளிவுரை : மிகவும் சிறப்பாக மிதந்த சீகாழி நாயகனே ! அருள் மிகுதியாகச்
சுரக்கும் பிரளய விடங்கனே ! நின் செல்வச் சிலம்பு மென்மையால் ஒலிக்க கண்கொள்ளாக்
காட்சி, உமா தேவியாரையும் உடனே கொண்டு இங்கு எழுந்தருளத் தகும் எம் பெருமானே !
வெண்பா
-
மானும் மழுவும் திருமிடற்றில் வாழுமிருள்
தானும் பிறையும் தரித்திருக்கும் - வானவர்க்கு
வெள்ளத்தே தோன்றிக் கழுமலத்தே வீற்றிருந்தென்
உள்ளத்தே நின்ற ஒளி.
தெளிவுரை : தேவர்களுக்கு வெள்ளத்தில் காட்சி கொடுத்து, சீகாழியில் வீற்றிருந்து
என் உள்ளத்தில் நின்ற ஒளியானது மான், மழு, கழுத்தில் கருநிறம், பிறைச் சந்திரன்
ஆகியவற்றைக் தரித்திருக்கும் என்பதாம்.
கட்டளைக் கலித் துறை
-
ஒளிவந்த வாபொய் மனத்திருள்
நீங்கஎன் உள்ளவெள்ளத்(து)
எளிவந்த வாவந்து தித்தித்த
வாசித்தி யாததொரு
களிவந்த வாஅன்பு கைவந்த
வாகடை சாரமையத்(து)
எளிவந்த வாநங் கழுமல
வாணர்தம் இன்னருளே.
தெளிவுரை : நம் சீகாழிப் பதியில் கோயில் கொண்டிருக்கும் சிவ பெருமானின் இன்னருள்,
ஒளி வந்தவாறு என்ன வியப்பு? பொய் மனத்து இருள் நீங்க, என் உள்ள வெள்ளம்
எளிவந்தவாறு என்ன வியப்பு ! வந்து தித்தித்தவாறும், சிந்தியாது ஒரு களி
வந்தவாறும், அன்பு கை வந்தவாறும், இறுதிவரை மையத்து எளி வந்தவாறும் என்ன வியப்பு
!
இறைவனின் எளிவந்த தன்மையை வியந்து போற்றுகின்றார் என்பதாம்.
இணைக்குறள் ஆசிரியப்பா
-
அருள்பழுத் தளித்த கருணை வான்கனி
ஆரா இன்பத் தீராக் காதல்
அடியவர்க்(கு) அமிர்த வாரி நெடுநிலை
மாட கோபுரத்(து) ஆடகக் குடுமி
மழைவயிறு கிழிக்கும் கழுமல வாணநின்
தெளிவுரை : அருள் பழுத்தளித்த கருணை வான்கனி, தெவிட்டாத இன்பம். தீராத காதல்,
அடியவர்க்கு அமுதக்கடல் உயர்ந்த மாடங்களை உடைய கோபுரத்துப் பொன் சிகரங்கள்
முகிலின் வயிற்றைக் கிழிக்கும் சீகாழிப் பதியில் எழுந்தருளியிருக்கும் இறைவனே !
உன்னுடைய,
வழுவாக் காட்சி முதிரா இளமுலைப்
பாவையுடன் இருந்த பரம யோகி
யானொன்(று) உணர்த்துவன் எந்தை மேனாள்
அகில லோகமும் அனந்த யோனியும்
நிகிலமும் தோன்றநீ நினைந்தநாள் தொடங்கி
தெளிவுரை : தவறாத காட்சி முதிர்ச்சியடையாத இளமுலைப் பாவையாகிய உமாதேவியுடன்
இருந்த பரமயோகி யென்று உணர்த்துவேன். எந்தையே! முன்னாட்களில் எல்லா உலகங்களும்
எல்லாப் பிறவிகளும் மற்றெல்லாப் பொருட்களும் தோன்ற நீ நினைந்த நாள் தொடங்கி,
எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்(து)
யாரும் யாவையும் எனக்குத் தனித்தனித்
தாய ராகியும் தந்தைய ராகியும்
வந்தி லாதவர் இல்லை யானவர்
தெளிவுரை : பல பிறவிகளும் நினைப்பதற்கு அருமையான பேதங்களுடன் யாரும் யாவையும்
எனக்கு தனித்தனி தாயார் ஆகியும், தந்தையர் ஆகியும் வந்தவர்களே யாவர்.
தந்தையர் ஆகியும் தாயர் ஆகியும்
வந்தி ராததும் இல்லை முந்து
பிறவா நிலனும் இல்லை அவ்வயின்
இறவா நிலனும் இல்லை பிறிதில்
என்னைத் தின்னா உயிர்களும் இல்லை யான்அவை
தம்மைத் தின்னா(து) ஒழிந்ததும் இல்லை அனைத்தே
தெளிவுரை : யான் அவர்களுக்குத் தந்தையராகியும் தாயராகியும் வந்துள்ளேன். முன்பு
பிறவா நிலனும் இல்லை. அதேபோல் இறவா நிலனும் இல்லை. பிறவற்றில் என்னை எல்லா
உயிர்களும் தின்றன. அதுபோல் யானும் அவற்றைத் தின்றுள்ளேன்.
காலமும் சென்றது யான்இதன் மேலினி
இளைக்குமா றிலனே நாயேன்
நந்தாச் சோதிநின் அஞ்செழுத்து நவிலும்
தந்திரம் பயின்றதும் இலனே தந்திரம்
பயின்றவர்ப் பயின்றதும் இலனே ஆயினும்
தெளிவுரை : இவ்வாறே காலமும் சென்றது. இனிமேல் நான் இவ்வாறு பிறந்து இறந்து
இளைக்கும் சக்தியையும் பெற்றிருக்கவில்லை. நான் நாய்போன்ற இழிகுணம் உள்ளவன்.
அணையாத சோதியே ! உன் ஐந்தெழுத்தைச் சொல்லும் தந்திரமும் பயிலவில்லை. அந்தத்
தந்திரம் பயின்ற குருமார்களையும் போய்க் கேட்கவில்லை.
இயன்றதோர் பொழுதின் இட்டது மலராச்
சொன்னனது மந்திர மாக என்னையும்
இடர்ப்பிறப்(பு) இறப்பெனும் இரண்டின்
கடற்ப டாவகை காத்தல் நின்கடனே.
தெளிவுரை : ஆயினும் இயன்றதோர் பொழுதில் இட்டது மலராச் சொன்னது மந்திரமாகக் கொண்டு
என்னையும் துன்பமாகிய பிறப்பு இறப்பு என்னும் இரண்டு கடல்களையும் அடையா வகை
காத்தல் உன் கடனாகும்.
வெண்பா
-
கடலான காமத்தே கால்தாழ்வர் துன்பம்
அடலாம் உபாயம் அறியார் - உடலாம்
முழுமலத்தை ஓர்கிலார் முக்கட் பெருமான்
கழுமலத்தைக் கைதொழா தார்.
தெளிவுரை : மூன்று கண்களையுடைய பெருமான் கோயில் கொண்டிருக்கும் கழுமலமாகிய
சீகாழியைக் கை தொழாதவர்கள் கடல்போன்ற காமத்தில் மிகுதியாக மூழ்குவார்கள்.
துன்பத்தை வெல்லக்கூடிய உபாயத்தை அறியமாட்டார்கள். உடலாகிய முழு மலத்தை
ஆராய்ந்தறியமாட்டார்கள். எனவே சீகாழிப் பெருமானைக் கைதொழுது நற்கதி பெறுமாறு
அறிவுறுத்துகின்றது.
கட்டளைக் கலித் துறை
-
தொழுவாள் இவள்வளை தோற்பாள்
இவளிடர்க் கேயலர்கொண்(டு)
எழுவாள் எழுகின்ற தென்செய
வோஎன் மனத்திருந்தும்
கழுவா மணியைக் கழுமல
வாணனைக் கையிற்கொண்ட
மழுவா ளனைக்கண்டு வந்ததென்
றால்ஓர் வசையில்லையே.
தெளிவுரை : இவள் காமநோயால் துன்புற்று அவனை நோக்கித் தொழுவாள். கையிலுள்ள வளைகள்
தாமாகவே கழன்று போகும். இவள் துன்புறுவதைக் கொண்டு ஊரார் பழி தூற்றுவார்கள்.
எழுவாள், எழுந்து என்ன செய்யப் போகிறாள். என் மனத்திலிருந்து சாணைப் பிடிக்காத
மணியாகிய கழுமல நாதனை, கையிற் கொண்ட மழுவாளனைக் கொண்டு வந்தால்தான் இவள் துன்பம்
நீங்கும் என்க.
நேரிசை ஆசிரியப்பா
-
வசையில் காட்சி இசைநனி விளங்க
முன்னாள் நிகழ்ந்த பன்னீ ருகந்து
வேறுவேறு பெயரின் ஊறின்(று) இயன்ற
மையறு சிறப்பின் தெய்வத் தன்மைப்
புகலி நாயக இகல்விடைப் பாக
தெளிவுரை : குற்றமற்ற காட்சி, புகழ் மிகவும் விளங்க முன்பு நடந்த பன்னிரண்டு
யுகங்களில் வேறு வேறு பெயர்களில் இயன்ற சீகாழிப் பதியின் குற்றமற்ற சிறப்பினை
யுடைய புகலி நாயக ! வலிமையுள்ள காளையை வாகனமாக உடையவனே !
அமைநாண் மென்தோள் உமையாள் கொழுந
குன்று குனிவித்து வன்தோள் அவுணர்
மூவெயில் எரித்த சேவகத் தேவ
இளநிலா முகிழ்க்கும் வளர்சடைக் கடவுள்நின்
தெளிவுரை : மூங்கிலும் நாணும்படியான மென்மையான தோள்களையுடைய உமையாளுடைய கொழுநனே !
மேரு மலையை வளைத்து, வலிய தோள்களையுடைய அவுணர்களின் திரிபுரங்களை எரித்த வீரத்
தன்மையுள்ள தேவனே ! பிறைச் சந்திரன் தங்கிய சடையை உடைய கடவுளே ! உன்னுடைய,
நெற்றியில் சிறந்த ஒற்றை நாட்டத்துக்
காமனை விழித்த மாமுது தலைவ
வானவர் அறியா ஆதி யானே
கல்லா மனத்துப் புல்லறிவு தொடர
மறந்து நோக்கும் வெறுந்தண் நாட்டத்துக்
காண்தொறும் காண்தொறும் எல்லாம் யாண்டை
ஆயினும் பிறவும் என்னதும் பிறரதும்
ஆவன பலவும் அழிவன பலவும்
தெளிவுரை : நெற்றியில் உள்ள சிறந்த ஒப்பற்ற கண்ணால் மன்மதனை எரித்த பெரிய
பழைமையான தலைவனே ! தேவர்கள் அறியாத ஆதியானே ! படிக்காத மனத்து அற்ப அறிவு தொடர
மறந்து பார்க்கும் வெறுமையான கண்களால் பார்க்கின்ற ஒவ்வொரு சமயத்திலும் ஆவதும்
அழிவதுமான எல்லாப் பொருள்களும்,
போனதும் வருவதும் நிகழ்வதும் ஆகித்
தெண்ணீர் ஞாலத்துத் திரண்ட மணலினும்
எண்ணில் கோடி எனைப்பல வாகி
இல்லன உளவாய் உள்ளன காணாப்
பன்னாள் இருள்வயின் பட்டேன் அன்னதும்
தெளிவுரை : போவதும் வருவதும் நிகழ்வதுமாகிக் கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தில்
திரண்ட மணலைக் காட்டிலும் எண்ணில்லாத கோடி எனப் பலவாகி, இல்லாதன இருப்பனவாகவும்,
இருப்பவை காணாதவையாகவும் பன்னாள் இருளில் இருந்து வருந்தினேன்.
அன்ன(து) ஆதலின் அடுக்கும் அதென்னெனின்
கட்புலன் தெரியாது கொட்புறும் ஒருவற்குக்
குழிவழி யாகி வழிகுழி யாகி
ஒழிவின்(று) ஒன்றின் ஒன்றுதடு மாற
வந்தாற் போல வந்த(து) எந்தைநின்
தெளிவுரை : அத்தகையதும் மேற்சொன்னவாறு துன்புறும். அஃது எங்ஙனமெனின் கண் பார்வை
தெரியாமல் அலையும் ஒருவற்குக் குழியானது வழியாகியும், வழியானது குழியாகியும்
ஒன்று மற்றொன்றாகத் தடுமாற, வந்தாற்போல வந்த என் தந்தையே ! உன்னுடைய
திருவருள் நாட்டம் கருணையின் பெறலும்
யாவையும் எனக்குப் பொய்யெனத் தோன்றி
மேவரும் நீயே மெய்யெனத் தோன்றினை
தெளிவுரை : திருவருள் பார்வை கருணையின் பெறலும் யாவையும் எனக்குப் பொய்யெனத்
தோன்றியது. பொருந்திய நீ மட்டும் மெய்யாகத் தோன்றினை.
ஓவியப் புலவன் சாயல்பெற எழுதிய
சிற்ப விகற்பம் எல்லாம் ஒன்றித்
தவிராது தடவினர் தமக்குச்
சுவராய்த் தோன்றுங் துணிவுபோன் றெனவே.
தெளிவுரை : ஓவியப் புலவன் (சித்திரம் எழுதுபவன்) உன்னைப் போலவே எழுதிய சிற்ப
விகற்பம் எல்லாம் ஒன்றி, எஞ்சாமல், தடவினர் தமக்குச் சுவராய்த் தோன்றும் துணிவு
போன்றனவே. நீதான் உண்மைப் பொருள் என்பதாம்.
வெண்பா
-
எனவே எழுந்திருந்தாள் என்செய்வாள் இன்னம்
சினவேறு காட்டுதிரேல் தீரும் - இனவேகப்
பாம்புகலி யால்நிமிரும் பன்னாச் சடைமுடிநம்
பூம்புகலி யான்இதழிப் போது.
தெளிவுரை : கூட்டமான பாம்புகள் ஒலித்து நிமிர்தற்கு இடமான சடை முடியை யுடைய
சீகாழிப் பெருமான் கொன்றை மாலை என்று சொன்ன மாத்திரத்தில் மயக்கம் தீர்ந்து
எழுந்திருந்தாள். இன்னும் சிவனின் வாகனமாகிய இடபத்தைக் காட்டுதிரேல் அவள் நோய்
முழுதும் தீரும் என்க.
கட்டளைக் கலித் துறை
-
போதும் பெறாவிடில் பச்சிலை
உண்டு புனலுண்டெங்கும்
ஏதும் பெறாவிடில் நெஞ்சுண்டன்
றேயிணை யாகச்செப்பும்
சூதும் பெறாமுலை பங்கர்தென்
தோணி புரேசர்வண்டின்
தாதும் பெறாத அடித்தா
மரைசென்று சார்வதற்கே.
தெளிவுரை : மலரைப் பெறாமற் போயினும் பச்சிலை உண்டு, நீர் எங்கும் உண்டு. இவை
ஏதும் பெறாவிடில், மனம் இருக்கிறதல்லவா? கிண்ணமும், சொக்கட்டான் காயும்போல
இருக்கும் முலைகளையுடைய உமையை இடப்பாகத்தில் கொண்டதென் தோணி புரேசர் வண்டின்
தாதும் பெறாத அடித்தாமரை சேர்வதற்கு மனம் போதும் என்க.
திருச்சிற்றம்பலம்
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
( பட்டினத்துப்பிள்ளையார்அருளிச்செய்தது )
திருவிடைமருதூர் என்னும் சிவப்பதியில் திருக்கோயில் கொண்டெழுந்தருளிய சிவபெருமான்
மீது அகவல், வெண்பா, கட்டளைக் கலித்துறை ஆகிய மூன்று வகைப் பாடல்களால்
இயற்றப்பட்ட நூலாதலின் இது திருவிடை மருதூர் மும்மணிக் கோவை என்று பெயர் பெற்றது.
உயிர்த்தொகைகளின் நிலையைக் கருதி இறைவன் தன்னுடைய அருள் இன்ப வாழ்வை எல்லா
உயிர்களுக்கும் உரியதாக அமைத்து வைத்துள்ளான். ஆகவே அவன்பால் ஒரு சிறிதும்
குற்றம் இல்லை. அவ் இறைவனை எண்ணிப் போற்றி அவன் அருளால் துன்பங்களை நீக்கிக்
கூற்றுவனுடைய ஆற்றலைத் தொலைத்துப் பிறப்பையும் இறப்பையும் போக்கிக் கொள்ளாத
குற்றம் உயிர்த் தொகைகள் உடையதேயாகும் என்பன போன்ற நல்லறிவுரைகள் இக் கோவையில்
இன்பம் பயக்கும் வகையில் அமைந்துள்ளன.
திருச்சிற்றம்பலம்
இணைக்குறள் ஆசிரியப்பா
-
தெய்வத் தாமரைச் செவ்வியின் மலர்ந்து
வாடாப் புதுமலர்த் தோடெனச் சிவந்து
சிலம்பும் கழலும் அலம்பப் புனைந்து
கூற்றின் ஆற்றல் மாற்றிப் போற்றாது
வலம்புரி நெடுமால் ஏனமாகி நிலம்புக்(கு)
ஆற்றலின் அகழத் தோற்றாது நிமிர்ந்து
பத்தி அடியவர் பச்சிலை இடினும்
முத்தி கொடுத்து முன்னின்(று) அருளித்
நிகழ்ந்துள(து) ஒருபால் திருவடி அகஞ்சேந்து
தெளிவுரை : அர்த்த நாரீசுவரத் திருக்கோலத்தில் இறைவன் பாகமாகிய வலப்பால்
திருவடியைப் பற்றிக் கூறுகிறார்.
தெய்வத் தாமரையின் அழகை யொத்து மலர்ந்து, வாடாத புதுமலர்த் தொகுதி போன்று
சிவந்து, சிலம்பும் வீரக் கழலும் ஒலி செய்ய அணிந்து, காலனின் வல்லமையை அழித்த
அந்தத் திருவடிகளைப் போற்றாமல் வலம்புரிச் சங்கை ஏந்திய திருமால் பன்றி
உருவெடுத்துப் பூமியைத் தோண்டியும் காணாமல் போனார். அடியவர்கள் பச்சிலையை இட்டு
வழிபட்டாலும் அவர்களுக்கு முத்தி கொடுத்து முன்னின்று அருளித் திகழ்கின்றது ஒரு
பக்கம் (வலப்பக்கம்) ஐயனின் திருவடி.
மறுவில் கற்பகத் துறுதளிர் வாங்கி
நெய்யில் தோய்த்த செவ்வித் தாகி
நூபுரம் கிடப்பினும் நொந்து தேவர்
மடவரல் மகளிர் வணங்குபு வீழ்த்த
சின்னப் பன்மலர் தீண்டிடச் சிவந்து
பஞ்சியும் அனிச்சமும் எஞ்ச எஞ்சாத்
திருவொடும் பொலியும் ஒருபால் திருவடி
தெளிவுரை : அம்பிகையின் பாகமாகிய இடப்பால் திருவடியின் இயல்பு கூறுகின்றார்.
உட்புறம் சிவந்து, குற்றமற்ற கற்பகத் தருவின் உறுதளிர் வாங்கி, நெய்யில் தோய்த்த
அழகுடையதாகி, சிலம்பு இருந்த போதிலும் வருந்தித் தேவர் மகளிர் வணங்கும்போது
வீழ்ந்த சின்னப் பன்மலர் தொடும்போது சிவந்து, பஞ்சியும் அனிச்ச மலரும் தோற்குமாறு
அழகோடு விளங்குவது இடப்பக்கத் திருவடி (அம்மையின் திருவடி).
நீலப் புள்ளி வாளுகிர் வேங்கைத்
தோலின் கலிங்கம் மேல்விரித்(து) அசைத்து
நச்செயிற்(று) அரவக் கச்சையாப் புறுத்துப்
பொலிந்துள(து) ஒருபால் திருவிடை இலங்கொளி
அரத்த ஆடை விரித்து மீதுறீஇ
இரங்குமணி மேகலை ஒருங்குடன் சாத்திய
மருங்கிற் றாகும் ஒருபால் திருவிடை
தெளிவுரை : நீலப் புள்ளிகளையும் கூரிய நகங்களையும் உடைய வேங்கையின் தோலை ஆடையாகக்
கட்டி, விஷப்பற்களை உடைய பாம்பைக் கச்சையாகக் கட்டி விளங்குகின்றது வலப்பக்கம்.
அழகிய இடையில் விளங்குவது சிவந்த ஆடையை விரித்து மேலே போர்த்து ஒலி செய்கின்ற
மேகலை, ஒருங்குடன் சாத்திய மருங்கில் இடப்பக்கம் உள்ளது.
செங்கண் அரவும் பைங்கண் ஆமையும்
கேழற் கோடும் வீழ்திரள் அக்கும்
நுடங்கு நூலும் இடங்கொண்டு புனைந்து
தவளநீ(று) அணிந்ததோர் பவளவெற் பென்ன
ஒளியுடன் திகழும் ஒருபால் ஆகம்
தெளிவுரை : சிவந்த கண்களையுடைய அரவும், பசிய கண்களை உடைய ஆமை ஓடும். பன்றியின்
கொம்பும், தொங்குகின்ற நீண்ட எலும்பு மாலையும், அசைகின்ற முப்புர நூலும் அணிந்து
வெண்மையான திருநீறும் கொண்ட பவள மலை என்று சொல்லுமாறு ஒலியுடன் திகழ்வது
வலப்புறம்.
வாரும் வடமும் ஏர்பெறப் புனைந்து
செஞ்சாந்(து) அணிந்து குங்குமம் எழுதிப்
பொற்றா மரையின் முற்றா முகிழென
உலகேழ் ஈன்றும் நிலையில் தளரா
முலையுடன் பொலியும் ஒருபால் ஆகம்
தெளிவுரை : உடல் வாரும் வடமும் அழகுற அணிந்து, செஞ்சாந்து அணிந்து, குங்குமம்
எழுதி, பொற்றாமரையின் முற்றா முகிழென, ஏழு உலகங்களையும் பெற்ற பிறகும் சாயாத
முலைகளுடன் பொலிவது இடப்பாகம்.
அயில்வாய் அரவம் வயின்வயின் அணிந்து
மூவிலை வேலும் பூவாய் மழுவும்
தமருகப் பறையும் அமர்தரத் தாங்கிச்
சிறந்துள(து) ஒருபால் திருக்கரம் செறிந்த
தெளிவுரை : கூரிய வாயினையுடைய பாம்புகளை ஆங்காங்கே அணிந்து, முத்தலைச் சூலமும்
பூவாய் மழுவும், உடுக்கையும், தேவர்கள் தரத் தாங்கிச் சிறந்துள்ளது வலப்பாகம்.
சூடகம் விளங்கிய ஆடகக் கழங்குடன்
நொம்மென் பந்தும் அம்மென் கிள்ளையும்
தரித்தே திகழும் ஒருபால் திருக்கரம்
தெளிவுரை : திருக்கரம் செறிந்த கைவளையும் பொன்னாலாகிய கழற்சிக் காய்களும்,
பந்தும், கிளியும், கொண்டு விளங்குவது இடப்பக்கம்.
இரவியும் எரியும் விரவிய வெம்மையின்
ஒருபால் விளங்கும் திருநெடு நாட்டம்
நவ்வி மானின் செவ்வித் தாகிப்
பாலிற் கிடந்த நீலம் போன்று
குண்டுநீர்க் குவளையிற் குளிர்ந்து நிறம்பயின்(று)
எம்மனோர்க்(கு) அடுத்த வெம்மைநோய்க்(கு) இரங்கி
உலகேழ் புரக்கும் ஒருபால் நாட்டம்
தெளிவுரை : திருக்கரத்தில் சூரியனும் தீயும் கலந்த கொடுமை வலப்பக்கத்தில்
விளங்கும். அழகிய நீண்ட கண்ணும் மான்கன்றும் அழகுடையதாய் பாலிற் கிடந்த நீலம்போல
குண்டுநீர்க் குவளை போன்று குளிர்ந்து நிறம் விளங்கி எம்மனோர்க்கு அடுத்த வெம்மை
நோய்க்கு இரங்கி உலகம் ஏழையும் காப்பாற்றுவது இடப்பாகம்.
நொச்சிப் பூவும் பச்சை மத்தமும்
கொன்றைப் போதும் மென்றுணர்த் தும்பையும்
கங்கை யாறும் பைங்கண் தலையும்
அரவும் மதியமும் விரவித் தொடுத்துச்
சூடா மாலை சூடிப் பீடுகெழு
நெருப்பில் திரித்தனைய உருக்கிளர் சடிலமொடு
நான்முகம் கரந்த பால்நிற அன்னம்
காணா வண்ணம் கருத்தையும் கடந்து
சேண்இகந்(து) உளதே ஒருபால் திருமுடி பேணிய
தெளிவுரை : நொச்சிப்பூவும் பச்சை ஊமத்தமும், கொன்றை மலரும் தும்பை மலர்க்
கொத்தும், கங்கையாறும் பைங்கண் தலையும் பாம்பும், பிறைச் சந்திரனும் கலந்து
தொடுத்த (எவரும் அணியாத) எலும்பு மாலையைச் சூடி பெருமையுள்ள நெருப்பில் திரித்தது
போன்ற ஒளியுள்ள சடையோடு நான்கு முகங்களை மறைத்த, பால்நிற அன்னமாகிய பிரமனும்
காணாவண்ணம் கருத்தையும் கடந்து அருகில் உள்ளது வலப்பக்கம்.
கடவுட் கற்பின் மடவரல் மகளிர்
கற்பக வனத்துப் பொற்பூ வாங்கிக்
கைவைத்துப் புனைந்த தெய்வ மாலை
நீலக் குழல்மிசை வளைஇமேல் நிவந்து
வண்டுந் தேனுங் கிண்டுபு திளைப்பத்
திருவொடு பொலியும் ஒருபால் திருமுடி
தெளிவுரை : பேணிய கடவுட் கற்பின் மடவரல் மகளிர் கற்பகவனத்திலுள்ள அழகிய மலர்களைக்
கொண்டு வந்து மாலையாகத் தொடுத்து அணிந்த தெய்வ மாலையுடன், கருநிறக் கூந்தல்மீது
உயர்ந்து வண்டும் தேனும் கிண்டித் திளைப்ப, திருவோடு பொலிவது இடப்பக்கம்.
இனையவண் ணத்து நினைவருங் காட்சி
இருவயின் உருவும் ஒருவயிற் றாகி
வலப்பால் நாட்டம் இடப்பால் நோக்க
வாணுதல் பாகம் நாணுதல் செய்ய
வலப்பால் திருக்கரம் இடப்பால் வனமுலை
தைவந்து வருட மெய்ம்மயிர் பொடித்தாங்(கு)
தெளிவுரை : இந்த அழகிய கோலத்தோடு, இரண்டு பக்கத்து உருவும் ஒன்றாகி வலக்கண்
இடக்கண்ணைப் பார்க்கப் பெண் பாகம் நாணமுற்று, வலப்பக்கத்துக் கை இடப்பக்கத்து
முலையைத் தடவிக் கொடுக்க, மயிர்க் கூச்செறிந்து
உலகம் ஏழும் பன்முறை ஈன்று
மருதிடம் கொண்ட ஒருதனிக் கடவுள்நின்
திருவடி பரவுதும் யாமே நெடுநாள்
இறந்தும் பிறந்தும் இளைத்தனம் மறந்தும்
சிறைக்கருப் பாசயம் சேரா
மறித்தும் புகாஅ வாழ்வுபெறற் பொருட்டே.
தெளிவுரை : ஏழு உலகங்களையும் பலமுறை ஈன்று மருது இடம் கொண்ட ஒப்பற்ற கடவுளே !
உன்னுடைய திருவடிகளை வணங்குகின்றோம். யாங்கள் நெடுநாட்களாக இறந்தும் பிறந்தும்
இளைத்தோம். மறந்துங்கூட சிறைபோன்ற கருப்பப் பையில் மீண்டும் புகா வாழ்வு பெறுதற்
பொருட்டே வணங்குகின்றோம் என்க.
வெண்பா
-
பொருளும் குலனும் புகழும் திறனும்
அருளும் அறிவும் அனைத்தும் - ஒருவர்
கருதாஎன் பார்க்கும் கறைமிடற்றாய் தொல்லை
மருதாஎன் பார்க்கு வரும்.
தெளிவுரை : வேறு ஒருவரும் அணிதற்கு உரியது என்று கருதாத என்பை மாலையாகக் கட்டி
அணிந்த நீல கண்டனே ! பழங்காலத்து இடைமருதா என்று துதிப்பார்க்கு, பொருளும்
நற்சார்பும் புகழும், திறனும் அருளும் அனைத்தும் வரும் என்பதாம்.
கட்டளைக் கலித் துறை
-
வருந்தேன் இறந்தும் பிறந்தும்
மயக்கும் புலன்வழிபோய்ப்
பொருந்தேன் நரகிற் புகுகின்றி
லேன்புகழ் மாமருதிற்
பெருந்தேன் முகந்துகொண் டுண்டு
பிறிதொன்றில் ஆசையின்றி
இருந்தேன் இனிச்சென்(று) இரவேன்
ஒருவரை யாதொன்றுமே.
தெளிவுரை : இனிமேல் பிறந்தும் இறந்தும் வருந்தமாட்டேன். என்னை மயக்கும் பொறிகளின்
வழிச்சென்று பொருந்த மாட்டேன். நரகத்தில் விழ மாட்டேன். புகழ் பெற்ற
திருவிடைமருதூரில் கோயில் கொண்டிருக்கும் இறைவனாகிய தேனை முகந்து உண்டு
பிறிதொன்றில் ஆசையில்லாமல் இருந்தேன். இனி யாரிடமும் சென்று யாசிக்க மாட்டேன்.
இனி எனக்கு எதுவும் தேவையில்லை என்பதாம்.
நேரிசை ஆசிரியப்பா
-
ஒன்றினோ(டு) ஒன்று சென்றுமுகில் தடவி
ஆடுகொடி நுடங்கும் பீடுகெழு மாளிகை
தெய்வக் கம்மியர் கைம்முயன்று வகுத்த
ஓவநூற் செம்மைப் பூவியல் வீதிக்
குயிலென மொழியும் மயிலியல் ஆயத்து
மான்மாற விழிக்கும் ஆனாச் செல்வத்(து)
இடைமரு(து) இடங்கொண்(டு) இருந்த எந்தை
தெளிவுரை : திருவிடைமருதூரில் உள்ள உயர்ந்த மாளிகைகளை விவரிக்கிறார். ஒன்றோடொன்று
உயர்வில் போட்டியிட்டுச் சென்று மேகத்தைத் தடவும் கொடிகள் ஆடுகின்ற பெருமை மிக்க
மாளிகைகள் நிறைந்த தெய்வப் பொற் கொல்லர்களால் கைமுயன்று வகுத்த, ஓவநூல் செம்மைப்
பூவியல் வீதியில் குயிலென மொழியும் மயிலியல் சாயலும் மான்போன்ற விழிகளும் கொண்ட
மாதர்கள் செல்வத்தோடு வாழ்கின்ற திருவிடைமருதூரில் கோயில் கொண்டிருக்கும் எந்தையே
!
சுடர்மழு வலங்கொண் டிருந்த தோன்றல்
ஆரணந் தொடராப் பூரண புராண
நாரணன் அறியாக் காரணக் கடவுள்
சோதிச் சுடரொளி ஆதித் தனிப்பொருள்
ஏக நாயக யோக நாயக
தெளிவுரை : சுடர்மழு வலங்கொண்டிருந்த தோன்றலே ! வேதங்கள் தொடர்கின்ற பூரணனே !
புராணங்களில் சிறப்பிக்கப் படுகின்றவனே! திருமால் முயன்றும் காணாத காரணக் கடவுளே
! சோதிச் சுடரொளியே ! ஆதித் தனிப்பொருளே ! ஏக நாயகனே ! (இது திருவிடைமருதூரில்
எழுந்தருளிய இறைவர் பெயர்களுள் ஒன்று) யோக நாயகனே !
யானொன்(று) உணர்த்துவ(து) உளதே யான்முன்
நனந்தலை உலகத்(து) அனந்த யோனியில்
பிறந்துழிப் பிறவாது கறங்கெனச் சுழன்றுழித்
தோற்றும் பொழுதின் ஈற்றுத் துன்பத்(து)
யாயுறு துயரமும் யானுறு துயரமும்
இறக்கும் பொழுதின் அறப்பெருந் துன்பமும்
நீயல(து) அறிகுநர் யாரே அதனால்
தெளிவுரை : யான் ஒன்று சொல்ல வேண்டி இருக்கிறது. விரிந்த இடத்தையுடைய இவ்வுலகில்
யான் முன் பல பிறவிகள் எடுத்து காற்றாடி போலச் சுழன்று அதனால் நான் பெற்ற
துன்பங்கள் பல. இதை நீதான் அறிவாய். அதனால்,
யான்இனிப் பிறத்தல் ஆற்றேன் அஃதான்(று)
உறப்பவம் துடைத்தல் நிற்பிடித் தல்லது
பிறிதொரு நெறியின் இல்லைஅந் நெறிக்கு
வேண்டலும் வெறுத்தலுமாண் டொன்றிற் படரா
உள்ளமொன்(று) உடைமை வேண்டும்அஃ தன்றி
தெளிவுரை : இனி நான் பிறவி எடுக்க மாட்டேன். அதுதான் பிறவியை அறுத்தல். உன்னைப்
பற்றுக்கோடாக அடைந்தால்தான் இது முடியும். வேறு வழியில்லை. இது ஓர் ஆண்டில்
முடியாது. இதற்கு உள்ள உறுதியும் வேண்டும்.
ஐம்புலன் ஏவல் ஆணைவழி நின்று
தானல(து) ஒன்றைத் தானென நினையும்
இதுஎன(து) உள்ளம் ஆதலின் இதுகொடு
நின்னை நினைப்ப(து) எங்ஙனம் முன்னம்
தெளிவுரை : அஃது அல்லாமல் ஐம்புல ஏவலின் வழிநின்று, தான் அல்லாத ஒன்றைத் தான்
என்று நினையும் குணமுடையது என் உள்ளம். ஆதலால் இவைகளை வைத்துக்கொண்டு உன்னை
வழிபடுவது இயலாது.
கற்புணை யாகக் கடல்நீர் நீந்தினர்
எற்பிறர் உளரோ இறைவ கற்பம்
கடத்தல்யான் பிறவும் வேண்டும் கடத்தற்கு
நினைத்தல்யான் பெறவும் வேண்டும் நினைத்தற்கு
நெஞ்சுநெறி நிற்கவும் வேண்டும் நஞ்சுபொதி
உரைஎயிற்(று) உரகம் பூண்ட
கறைகெழு மிடற்றெங் கண்ணுத லோயே.
தெளிவுரை : முன்பு கல்லையே தெப்பமாகக் கொண்டு கடல் நீரை நீந்தினர். (நீந்தியவர்
திருநாவுக்கரசர்.) இறைவா ! நான் எப்படி இந்தக் கரையை ஏறுவேன்? கடந்துதான் ஆக
வேண்டும். நான் நினைத்ததைப் பெறவும் வேண்டும். நினைத்தற்கு நெஞ்சின் வழி
நிற்கவும் வேண்டும். விஷப் பாம்பை அணிந்துள்ள நீலகண்டனே ! இதற்கு அருள் செய்வாயாக
என்பதாம்.
வெண்பா
-
கண்ணென்றும் நந்தமக்கோர் காப்பென்றும் கற்றிருக்கும்
எண்ணென்றும் மூல எழுத்தென்றும் - மொண்ணை
மருதவப்பா என்றும்உனை வாழ்த்திலரேல் மற்றும்
கருதஅப்பால் உண்டோ கதி.
தெளிவுரை : கண் எப்போதும் நமக்குப் பாதுகாவல் என்றும், நாம் கற்றிருக்கும் அளவை
மூல எழுத்து என்றும் நினைந்து, ஒற்றை திருவிடைமருதூரில் கோயில் கொண்டிருக்கும்
உன்னை எப்போதும் வாழ்த்தாரேல் மறுபடியும் பிறவியில் வீழாதிருக்க முடியுமோ? நீதான்
கதி என்று வழிபடுவாராக.
கட்டளைக் கலித் துறை
-
கதியா வதுபிறி(து) யாதொன்றும்
இல்லை களேவரத்தின்
பொதியா வதுசுமந் தால்விழப்
போமிது போனபின்னர்
விதியாம் எனச்சிலர் நோவதல்
லால்இதை வேண்டுநர்யார்
மதியா வதுமரு தன்கழ
லேசென்று வாழ்த்துவதே.
தெளிவுரை : மாறாத புகலிடம் என்பது வேறு யாதொன்றும் இல்லை. உடல் ஒரு சுமையாகும்.
சுமந்தால் இறப்போடு முடியும் என்று சொல்வதற்கில்லை. அதன் பின்னர் மற்றொரு பிறவி
வரும். இதை நாம் அனுபவிக்கத்தான் வேண்டும் என்று நோவதைத் தவிர உன்னை வேண்டுபவர்
யார்? ஆகவே அறிவு என்ன சொல்கிறது என்றால், இடைமருதனாகிய உன் கழலைச் சென்று
வாழ்த்துவதுதான். இது தவிர வேறு வழியில்லை என்பதாம்.
நேரிசை ஆசிரியப்பா
-
வாழ்ந்தனம் என்று தாழ்ந்தவர்க்(கு) உதவாது
தன்னுயிர்க்(கு) இரங்கி மன்னுயிர்க்(கு) இரங்கா(து)
உண்டிப் பொருட்டால் கண்டன வெஃகி
அவியடு நர்க்குச் சுவைபகர்ந்(து) ஏவி
ஆரா உண்டி அயின்றன ராகித்
தூராக் குழியைத் தூர்த்துப் பாரா
தெளிவுரை : வணங்குவோருக்கு உதவாமல் வாழ்ந்தோம் என்று, மன்னுயிர்க்கு இரங்காமல்
தன்னுயிர்க்கு மட்டும் இரங்கி, உணவின் பொருட்டு கண்டவற்றை எல்லாம் விரும்பி,
சமையல் செய்பவருக்கு ஒன்று தராமல் சுவையாக இருந்தது என்று சொல்லி அனுப்பிவிட்டு,
தெவிட்டாத உண்டியைத் தான்மட்டும் உண்டு. தூர்க்க முடியாத குழியைத் தூர்த்து,
விழுப்பமும் குலனும் ஒழுக்கமும் கல்வியும்
தன்னிற் சிறந்த நன்மூ தாளரைக்
கூஉய்முன் னின்றுதன் ஏவல் கேட்கும்
சிறாஅர்த் தொகுதியின் உறாஅப் பேசியும்
பொய்யோடு புன்மைதன் புல்லர்க்குப் புகன்றும்
தெளிவுரை : விழுப்பமும் குலனும் ஒழுக்கமும் கல்வியும் பாராமல் தன்னைக் காட்டிலும்
சிறந்த வயதில் மூத்த பெரியோர்களை அழைத்து முன்னின்று தன் ஏவல் கேட்கும் சிறுவர்
கூட்டத்தைப் போல பொருந்தாதவற்றைக் கூறியும், பொய், புன்மை ஆகியவற்றைத்
தகாதவர்களுக்குக் கூறியும்,
மெய்யும் மானமும் மேன்மையும் ஒரீஇத்
தன்னைத் தேறி முன்னையோர் கொடுத்த
தன்மனைக் கிழத்தி யாகிய அந்நிலைச்
சாவுழிச் சாஅந் தகைமையன் ஆயினும்
மேவுழி மேவல் செல்லாது காவலொடு
கொண்டோள் ஒருத்தி உண்டிவேட் டிருப்ப
எள்ளுக்(கு) எண்ணெய் போலத் தள்ளாது
பொருளின் அளவைக்குப் போகம்விற் றுண்ணும்
அருளில் மடந்தையர் ஆகந் தோய்ந்தும்
தெளிவுரை : மெய்யும் மானமும் மேன்மையும் நீங்கி, தன்னை அறிந்து பெரியோர்கள்
கொடுத்த நல்ல மனைவியைப் பற்றிக் கவனியாமல், வேறொருத்தி உண்டி வேட்டிருப்ப
எள்ளுக்கு எண்ணெய் போலத் தள்ளாமல், ஆடவர் தரும் பொருளுக்கு ஏற்றவாறு இன்பம்
தருகின்ற விலைமகளிரிடம் இன்பம் அனுபவித்தும்,
ஆற்றல்செல் லாது வேற்றோர் மனைவயின்
கற்புடை மடந்தையர் பொற்புநனி கேட்டுப்
பிழைவழி பாராது நுழைவழி நோக்கியும்
நச்சி வந்த நல்கூர் மாந்தர்தம்
விச்சையிற் படைத்த வெவ்வேறு காட்சியின்
தெளிவுரை : ஆற்றல் செல்லாமல் வேற்றோர் வீட்டில் சென்று கற்புடை மனைவியரது
இன்பத்தை விரும்பியும் நன்னெறியைக் கைவிட்டு, தீ நெறியில் சென்றும், விரும்பி
வந்த வறுமை மாந்தரிடம் உள்ள கல்வித் திறனைக் கண்டு களித்து,
அகமலர்ந்(து) ஈவார் போல முகமலர்ந்(து)
இனிது மொழிந்தாங்(கு) உதவுதல் இன்றி
நாளும் நாளும் நாள்பல குறித்தவர்
தாளின் ஆற்றலும் தவிர்த்துக் கேள்இகழ்ந்(து)
இகமும் பரமும் இல்லை என்று
பயமின்(று) ஒழுகிப் பட்டிமை பயிற்றி
மின்னின் அனையதன் செல்வத்தை விரும்பித்
தெளிவுரை : அவர்களது திறமைக்கு ஏற்றவாறு மனமலர்ந்து கொடுப்பார் போல முகமலர்ந்து
இனிது மொழிந்தாங்கு உதவாமல் நாளைக் கடத்தியவர், முயற்சியும் இல்லாமல்
சுற்றத்தாரால் இகழப்பட்டு இம்மையும் மறுமையும் இல்லாமல் பயமில்லாமல் காலம்
கடத்திப் பொய்யை வளர்த்து, மின்னலைப் போலத் தோன்றி மறையும் செல்வத்தை விரும்பி,
தன்னையும் ஒருவ ராக உன்னும்
ஏனையோர் வாழும் வாழ்க்கையும் நனைமலர்ந்(து)
யோசனை கமழும் உற்பல வாவியிற்
பாசடைப் பரப்பிற் பால்நிற அன்னம்
பார்ப்புடன் வெருவப் பகுவாய் வாளைகள்
போர்த்தொழில் புரியும் பொருகா விரியும்
தெளிவுரை : தன்னையும் ஒரு மேலோனாக எண்ணும் மற்றவர்கள் வாழும் வாழ்க்கையும்,
அரும்பு மலர்ந்து வெகு தூரம் வரை வாசனை வீசும் நீலோற்பலம் (குவளை) உள்ள குளத்தில்
பச்சை இலைகளுக்கு மத்தியில் பால்போன்ற வெண்மை நிறமுள்ள அன்னம் தன் குஞ்சுகளுடன்
பயப்பட, பிளந்த வாயை உடைய வாளை மீன்கள் போர்த்தொழில் புரியும் வண்ணம் விரைந்து
வரும் காவிரியும்,
மருதமும் சூழ்ந்த மருத வாண
சுருதியும் தொடராச் சுருதி நாயக
பத்தருக்(கு) எய்ப்பினில் வைப்பென உதவும்
முத்தித் தாள மூவா முதல்வநின்
திருவடி பிடித்து வெருவரல் விட்டு
மக்களும் மனைவியும் ஒக்கலும் திருவும்
பொருளென நினையா(து) உன்அரு ளினைநினைந்(து)
தெளிவுரை : விளை நிலங்களும் சூழ்ந்த மருதவாண ! சுருதி தொடராத சுருதி நாயக !
பக்தர்களுக்கு உதவும் சேமிப்பு நிதி போல முத்தியைத் தரும் திருவடிகளை உடையவனே !
அழிவில்லாத முதல்வனே ! உன்னுடைய திருவடியைப் பிடித்துப் பயப்படாமல் மனைவி
மக்களும், உறவினரும், இலக்குமியும் செல்வமாகக் கருதாமல், உன் அருளையே நினைந்து,
இந்திரச் செல்வமும் எட்டுச் சித்தியும்
வந்துழி வந்துழி மறுத்தனர் ஒதுங்கிச்
சின்னச் சீரை துன்னல் கோவணம்
அறுதற் கீளொடு பெறுவது புனைந்து
சிதவ லோடுஒன்று உதவுழி எடுத்தாங்(கு)
இடுவோர் உளரெனின் நிலையினின்(று) அயின்று
படுதிரைப் பாயலிற் பள்ளி மேவி
தெளிவுரை : இந்திரச் செல்வமும் அஷ்டமா சித்திகளும் வந்தபோது வேண்டாமென்று
மறுத்தவர் ஒதுங்கி சின்னச் சீரையாகிய தைத்த கோவணத்தையும் கிழிந்த அரைத்
துண்டையும் பெறுவது புனைந்து, கந்தைத் துணியையும் உதவும்போது எடுத்தாங்கு இடுவோர்
இருந்தால், நின்றபடியே உணவை உட்கொண்டு, தரையாகிய படுக்கையிலே படுத்து,
ஓவாத் தகவெனும் அரிவையைத் தழீஇ
மகவெனப் பல்லுயிர் அனைத்தையும் ஒக்கப்
பார்க்கும்நின்
செல்வக் கடவுள் தொண்டர் வாழ்வும்
பற்றிப் பார்க்கின் உற்ற நாயேற்குக்
குளப்படி நீரும் அளப்பருந் தன்மைப்
பிரளய சலதியும் இருவகைப் பொருளும்
ஒப்பினும் ஒவ்வாத் துப்பிற்(று) ஆதலின்
தெளிவுரை : ஒழியாத பெருமை என்னும் அரிவையைத் (25 வயதுடைய பெண்) தழுவி,
பிள்ளையாகப் பல உயிர்களையும் சமமாகக் கருதும் நின் அடியார் வாழ்வும் பற்றிப்
பார்க்கின் பொருந்திய நாய் போன்ற எனக்கு, குளம் மறையும் அளவுள்ள நீரும்
அளவிடுதற்கு அரிய சலதியும் இருவகைப் பொருளும் தொண்டர் வாழ்வுக்கு ஒப்பாகும்.
நின்சீர் அடியார் தஞ்சீர் அடியார்க்(கு)
அடிமை பூண்டு நெடுநாட் பழகி
முடலை யாக்கையொடு புடைபட்(டு) ஒழுகியவர்
காற்றலை ஏவலென் நாய்த்தலை ஏற்றுக்
கண்டது காணின் அல்லதொன்(று)
உண்டோ மற்றெனக்(கு) உள்ளது பிறிதே.
தெளிவுரை : என்றாலும் மன உறுதியுள்ள அடியார்க்கு அடிமை பூண்டு, நெடுநாள் பழகி,
துர்நாற்றம் வீசும் இந்த உடம்போடு சேர்ந்து வாழ்ந்தவர் காலால் இடும் வேலையைத்
தலையால் செய்யும் பணியை ஏற்று கண்டது காணின் அல்லது வேறு ஒன்று உண்டோ? இதுதான்
என் பணி. மற்றவை எல்லாம் எனக்கு வேறானதே என்பதாம்.
வெண்பா
-
பிறிந்தேன் நரகம் பிறவாத வண்ணம்
அறிந்தேன் அநங்கவேள் அம்பிற் - செறிந்த
பொருதவட்ட வில்பிழைத்துப் போந்தேன் புராணன்
மருதவட்டந் தன்னுளே வந்து.
தெளிவுரை : பழைமையானவனும் இடைமருது வட்டம் என்னும் இவனுடைய எல்லையில் வந்து நான்
பெற்ற பேறுகள் யாவையெனின், தீவினையின் பயனை நுகரும் இடமாகிய நரகத்தைவிட்டுப்
பிரிந்தேன். உருவில்லாதவனாகிய காமனுடைய அம்பில் பொருத, வட்டமாகிய வில்லுக்குப்
பிழைத்து விட்டேன் என்பதாம்.
கட்டளைக் கலித் துறை
-
வந்திகண் டாய்அடி யாரைக்கண்
டால்மற வாதுநெஞ்சே
சிந்திகண் டாய்அரன் செம்பொற்
கழல்திரு மாமருதைச்
சந்திகண் டாயில்லை யாயின்
நமன்தமர் தாங்கொடுபோய்
உந்திகண் டாய்நிர யத்துன்னை
வீழ்த்தி உழக்குவரே.
தெளிவுரை : நெஞ்சமே ! அடியாரைக் கண்டால் வணங்குவாயாக. அரன் செம்பொற்கழல் கண்டால்
எண்ணுவாயாக. திருமாமருதைச் சேர முயற்சிப்பாயாக. இல்லையேல் எமதூதர்கள் வந்து
உன்னைக் கொண்டுபோய் நரகத்தில் தள்ளிவிடுவர். துன்பப்படுத்துவர் என்பதாம்.
நேரிசை ஆசிரியப்பா
-
உழப்பின் வாரா உறுதிகள் உளவோ
கழப்பின் வாராக் கையற வுளவோ அதனால்
நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை
வேரற அகழ்ந்து போக்கித் தூர்வைசெய்(து)
அன்பென் பாத்தி கோலி முன்புற
மெய்யெனும் எருவை விரித்தாங்(கு) ஐயமில்
பத்தித் தனிவித் திட்டு நித்தலும்
ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சி நேர்நின்று
தடுக்குநர்க்(கு) அடங்கா(து) இடுக்கண் செய்யும்
பட்டி அஞ்சினுக்(கு) அஞ்சியுட் சென்று
தெளிவுரை : முயற்சியினால் வராத உறுதிப் பொருட்கள் உண்டோ? சோம்பலினால் வராத
துன்பங்கள் உண்டோ? நெஞ்சமாகிய புனத்திலுள்ள வஞ்சக் கட்டையை வேரொடு தோண்டி
எடுத்து, செம்மைப்படுத்தி, அன்பு என்னும் பாத்தியை அமைத்து, முன்னதாக
மெய்யென்னும் எருவைப் போட்டு, ஐயமில்லாமல் பக்தியாகிய ஒப்பற்ற விதையை விதைத்து,
நாள்தோறும் ஆர்வமாகிய தெளிந்த நீரைப் பாய்ச்சி, நேர்நின்று, தடுப்பவர்களுக்கு
அஞ்சாமல் துன்பம் செய்யும் முரட்டு மாடுகளைப் போன்ற ஐந்து பொறிகளுக்கு,
சாந்த வேலி கோலி வாய்ந்தபின்
ஞானப் பெருமுளை நந்தாது முளைத்துக்
கருணை இளந்தளிர் காட்ட அருகாக்
காமக் குரோதக் களையறக் களைந்து
சேமப் படுத்துழிச் செம்மையின் ஓங்கி
தெளிவுரை : அஞ்சி உள்ளே சென்று, காந்தமாகிய வேலி அமைத்து, எல்லாம் சரியான பிறகு,
ஞானமாகிய பெருமுளை கெடாமல் முளைத்து, கருணையாகிய இளந்தளிர் காட்ட, குறையாத காமம்
குரோதம் என்னும் களைகளைக் களைந்து, பாதுகாக்கும் செழுமையாக வளர்ந்து,
மெய்ம்மயிர்ப் புளகம் முகிழ்த்திட்(டு) அம்மெனக்
கண்ணீர் அரும்பிக் கடிமலர் மலர்ந்து புண்ணிய
அஞ்செழுத்(து) அருங்காய் தோன்றி நஞ்சுபொதி
காள கண்டமும் கண்ணொரு மூன்றும்
தோளொரு நான்கும் சுடர்முகம் ஐந்தும்
பவளநிறம் பெற்றுத் தவளநீறு பூசி
அறுசுவை அதனினும் உறுசுவை உடைத்தாய்க்
தெளிவுரை : மயிர் சிலிர்த்து , கண்ணீர் அரும்பி, கடிமலர் மலர்த்து, புண்ணிய
ஐந்தெழுத்து என்னும் அருமையான காய் தோன்றி, கறுத்த கழுத்தும், நெற்றிக் கண்ணும்
நான்கு தோள்களும், பிரகாசமான ஐந்து முகங்களும், பவள நிறம் பெற்று, வெண்ணீறு பூசி,
அறுசுவையைக் காட்டிலும் மிகுந்த சுவையுடையதாய்,
காணினும் கேட்பினும் கருதினுங் களிதரும்
சேணுயர் மருத மாணிக்கத் தீங்கனி
பையப் பையப் பழுத்துக் கைவர
எம்ம னோர்கள் இனிதின் அருந்திச்
செம்மாந் திருப்பச் சிலர்இதின் வாராது
தெளிவுரை : பார்த்தாலும், கேட்டாலும், கருதினாலும் இன்பம் தரும் உயரத்திலுள்ள
மருத மாணிக்கமாகிய தீங்கனி மெல்ல மெல்லப் பழுத்து, கையில் வந்து சேர, எம்மனோர்கள்
இனிதிருந்து அருந்தி, யாதொரு கவலையும் இன்றி இருப்ப,
மனமெனும் புனத்தை வறும்பா ழாக்கிக்
காமக் காடு மூடித் தீமைசெய்
ஐம்புல வேடர் ஆறலைத்(து) ஒழுக
இன்பப் பேய்த்தேர் எட்டா(து) ஓடக்
கல்லா உணர்வெனும் புல்வாய் அலமர
இச்சைவித்(து) உகுத்துழி யானெனப் பெயரிய
நச்சு மாமரம் நனிமிக முளைத்துப்
தெளிவுரை : சிலர் இதில் சேராமல், மனமெனும் புனத்தைத் திருத்தம் செய்யாமல்,
காமமாகிய காடு மூடி, தீமை செய்கின்ற ஐம்புலன்களாகிய வேடுவர் வழிபறித்து ஒழுக.
சிற்றின்பமாகிய கானல் எனக்கு எட்டாமல் ஓட, படிக்காத உணர்வு என்னும் மான் தடுமாற,
இச்சையாகிய வித்து உகுத்துழி யான் எனது என்னும் நச்சுமாமரம் நன்றாக முளைத்து,
பொய்யென் கவடுகள் போக்கிச் செய்யும்
பாவப் பஃறழை பரப்பிப் பூவெனக்
கொடுமை அரும்பிக் கடுமை மலர்ந்து
துன்பப் பல்காய் தூக்கிப் பின்பு
மரணம் பழுத்து நரகிடை வீழ்ந்து
தமக்கும் பிறர்க்கும் உதவா(து)
இமைப்பிற் கழியும் இயற்கையோர் உடைத்தே.
தெளிவுரை : பொய்யென்னும் கவடுகள் விட்டு, செய்கின்ற பாவமாகிய பல தழைகளைப் பரப்பி,
பூ என்ற கொடுமை அரும்பி கடுமை மலர்ந்து, துன்பமாகிய பல காய்களைக் காய்த்து,
பின்பு மரணம் பழுத்து, நரகில் விழுந்து, தமக்கும் பிறர்க்கும் பயன்படாமல் இமைப்
பொழுதில் கழியும் இயற்கையும் உடைத்து.
வெண்பா
-
உடைமணியின் ஓசைக்(கு) ஒதுங்கி அரவம்
படம்ஒடுங்கப் பையவே சென்றங்(கு) - உடைமருதர்
ஐயம் புகுவ(து) அணியிழையார் மேல் அநங்கன்
கையம் புகவேண்டிக் காண்.
தெளிவுரை : உடையிலுள்ள சதங்கையின் ஓசைக்கு அஞ்சி பாம்பு படத்தைச் சுருக்கிக்
கொள்ள, மெதுவாகச் சென்று இடைமருதர் பிச்சை ஏற்பது, அழகிய ஆபரணங்களை அணிந்த
மாதர்கள்மேல் மன்மதன் கையிலுள்ள அம்பு தைப்பதற்காகத்தான் என்றபடி.
கட்டளைக் கலித் துறை
-
காணீர் கதியொன்றும் கல்லீர்
எழுத்தஞ்சும் வல்லவண்ணம்
பேணீர் திருப்பணி பேசீர்
அவன்புகழ் ஆசைப்பட்டுப்
பூணீர் உருத்திர சாதனம்
நீறெங்கும் பூசுகிலீர்
வீணீர் எளிதோ மருதப்
பிரான்கழல் மேவுதற்கே.
தெளிவுரை : நீங்கள் மருதவாணரது கழல்களை அடைவதற்குரிய வழியைக் காணமாட்டீர்கள்.
ஐந்தெழுத்தைக் கற்க மாட்டீர்கள். கோயில் திருப்பணிகளை நல்ல வழியில் செய்ய
மாட்டீர்கள். அவன் புகழை விரும்பிப் பேசமாட்டீர்கள். உருத்திராட்சத்தை அணிய
மாட்டீர்கள். திருநீற்றைப் பூச மாட்டீர்கள். வீணாகக் காலத்தைக் கழிக்கிறீர்களே !
அவனை அடைய முயலுங்கள் என்பதாம்.
நேரிசை ஆசிரியப்பா
-
மேவிய புன்மயிர்த் தொகையோ அம்மயிர்
பாவிய தோலின் பரப்போ தோலிடைப்
புகவிட்டுப் பொதிந்த புண்ணோ புண்ணிடை
ஊறும் உதிரப் புனலோ கூறுசெய்(து)
இடையிடை நிற்கும் எலும்போ எலும்பிடை
தெளிவுரை : பொருந்திய தாழ்ந்த மயிர்த் தொகையோ, அம்மயிர் பரவிய தோலின் பரப்போ,
தோலிடைப் புகவிட்டுப் பொதிந்த புண்ணோ, புண்ணிடை ஊறும் இரத்தப் பெருக்கோ,
பகுத்துப் பிரித்து இடையிடை நிற்கும் எலும்போ,
முடைகெழு மூளை விழுதோ வழுவழுத்(து)
உள்ளிடை ஒழுகும் வழும்போ மெள்ளநின்(று)
ஊரும் புழுவின் ஒழுங்கோ நீரிடை
வைத்த மலத்தின் குவையோ வைத்துக்
கட்டிய நரம்பின் கயிறோ உடம்பிற்குள்
தெளிவுரை : எலும்பின் இடையில் துர்நாற்றம் வீசுகின்ற மூளையின் நிணமோ,
வழுவழுப்போடு கூடிய உள்ளே ஒழுகுகின்ற மச்சையோ, மெள்ள நின்று ஊறுகின்ற புழுவின்
வரிசையோ, நீரிடை வைத்த மலத்தின் குவியலோ, வைத்துக் கட்டிய நரம்பின் கயிறோ,
உடம்பிற்குள்,
பிரியா(து) ஒறுக்கும் பிணியோ தெரியாது
இன்னது யானென்(று) அறியேன் என்னை
எங்கும் தேடினன் யாதிலும் காணேன் முன்னம்
வரைத்தனி வில்லாற் புரத்தைஅழல் ஊட்டிக்
கண்படை யாகக் காமனை ஒருநாள்
தெளிவுரை : பிரியாமல் துன்புறுத்தும் நோயோ, அது இன்னது என்று எனக்குத்
தெரியவில்லை. என் உடல் முழுதும் தேடினேன். அதைக் காணவில்லை. முன்பு மேருமலையை
வில்லாகக் கொண்டு திரிபுரங்களைத் தீ வைத்துக் கொளுத்தி, நெற்றிக் கண்ணை ஆயுதமாகக்
கொண்டு மன்மதனை அன்றொரு நாள்,
நுண்பொடி யாக நோக்கி அண்டத்து
வீயா அமரர் வீயவந்(து) எழுந்த
தீவாய் நஞ்சைத் திருவமு தாக்கி
இருவர் தேடி வெருவர நிமிர்ந்து
பாலனுக் காகக் காலனைக் காய்ந்து
தெளிவுரை : சாம்பலாகும்படி நோக்கி, வானத்திலுள்ள சாகா வரம் பெற்ற தேவர்கள்
அழியுமாறு வந்தெழுந்த தீப் போன்ற வாயினையுடைய ஆலகால விடத்தை, திருஅமுதாக்கி
திருமாலும் பிரமனும் தேடி, அவர்கள் அஞ்சுமாறு நிமிர்ந்து, மார்க்கண்டேயனுக்காகக்
காலனை உதைத்து,
சந்தன சரள சண்பக வகுள
நந்தன வனத்திடை ஞாயிறு வழங்காது
நவமணி முகிழ்த்த புதுவெயில் எறிப்ப
எண்ணருங் கோடி இருடிகணங் கட்குப்
புண்ணியம் புரக்கும் பொன்னி சூழ்ந்த
தெளிவுரை : சந்தனம், சரளம், சண்பகம், மகிழ் ஆகிய மரங்கள் நிறைந்த நந்தன வனத்திடை
சூரிய ஒளி உள்ளே புக முடியாதபடி அடர்ந்து, நவமணிகள் ஒளி வீச, எண்ணற்ற
முனிவர்களுக்குப் புண்ணியம் அளிக்கும் காவிரி ஆறு சூழ்ந்த,
திருவிடை மருத பொருவிடைப் பாக
மங்கை பங்க கங்கை நாயகநின்
தெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின்
மாயப் படலம் கீறித் தூய
ஞான நாட்டம் பெற்றபின் யானும்
தெளிவுரை : திருவிடைமருதூர் என்னும் தலத்தில் கோயில் கொண்டிருக்கும் இறைவனே !
கொல்லேற்றுப் பாகனே ! உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டவனே ! கங்கையின் நாயகனே ! உன்
தெய்வத்திருவருள் கைகூடி இருப்பதால் மாய வாழ்க்கையைக் கிழித்து, தூய ஞானக்கண்
பெற்றபின்,
நின்பெருந் தன்மையும் கண்டேன் காண்டலும்
என்னையும் கண்டேன் பிறரையுங் கண்டேன்
நின்னிலை அனைத்தையும் கண்டேன் என்னே
நின்னைக் காணா மாந்தர்
தன்னையும் காணாத் தன்மை யோரே.
தெளிவுரை : யானும் நின் பெருந்தன்மையைக் கண்டேன். காணவும் என்னையும் கண்டேன்.
பிறரையும் கண்டேன். நின்னிலை அனைத்தையும் கண்டேன். உன்னைக் காணாத மாந்தர் தன்னை
அறியாதவர் ஆவர்.
வெண்பா
-
ஓராதே அஞ்செழுத்தும் உன்னாதே பச்சிலையும்
நேராதே நீரும் நிரப்பாதே - யாராயோ
எண்ணுவார் உள்ளத்(து) இடைமருதர் பொற்பாதம்
நண்ணுவாம் என்னுமது நாம்.
தெளிவுரை : ஐந்தெழுத்தைத் தியானிக்காமலும், பச்சிலையை நினைக்காமலும், மஞ்சன
நீரைக் கொண்டுவந்து நிரப்பாமலும் இருந்துவிட்டால் இறைவன் அருள் கிடைக்குமோ? யார்
ஒருவர் திருவிடைமருதர் பொற்பாதத்தை நண்ணுவார்களோ அவர்களே பதம் பெறுவர் என்பதாம்.
வேறு தெய்வங்களை எண்ணிப் பயனில்லை.
கட்டளைக் கலித் துறை
-
நாமே இடையுள்ள வாறறி
வாம்இனி நாங்கள்சொல்ல
லாமே மருதன் மருத
வனத்தன்னம் அன்னவரைப்
பூமேல் அணிந்து பிழைக்கச்செய்
தார்ஒரு பொட்டுமிட்டார்
தாமே தளர்பவ ரைப்பாரம்
ஏற்றுதல் தக்கதன்றே.
தெளிவுரை : திருவிடை மருத வனத்தில் உள்ள அன்னம் போன்ற தலைவியைப் பூ மேல் அணிந்து,
பிழைக்கச் செய்தவர். ஒரு பொட்டும் இட்டார். தாமே தளர்பவரைப் பாரம் ஏற்றுதல்
தக்கதன்று. நாமே இடையுள்ளவாறு அறிவோம். இனி நாங்கள் சொல்ல வேண்டா.
நேரிசை ஆசிரியப்பா
-
அன்றினர் புரங்கள் அழலிடை அவியக்
குன்றுவளைத்(து) எய்த குன்றாக் கொற்றத்து
நுண்பொடி அணிந்த எண்தோள் செல்வ
கயிலைநடந் தனைய உயர்நிலை நோன்தாள்
பிறைசெறிந் தன்ன இருகோட்(டு) ஒருதிமில்
தெளிவுரை : பகைவர்களது திரிபுரங்கள் தீயில் அழிய, மேரு மலையை வளைத்து எய்த,
குன்றாத வெற்றியையும் திருநீறு அணிந்த எண் தோள்களையும் உடைய செல்வ ! கயிலை மலை
நடந்தது போல உயர்நிலை வலிமையையும் பிறை பதித்தது போன்ற இரு கொம்புகளும் ஒரு
திமிலும்,
பால்நிறச் செங்கண் மால்விடைப் பாக
சிமையச் செங்கோட்(டு) இமையச் செல்வன்
மணியெனப் பெற்ற அணியியல் அன்னம்
வெள்ளைச் சிறுநகைக் கிள்ளைப் பிள்ளை
குயிலெனப் பேசும் மயிலிளம் பேடை
தெளிவுரை : பால் நிறமும் செங்கண்ணும் உள்ள காளையை ஊர்தியாக உடையவனே ! உயர்ந்த
சிகரங்களையுடைய இமயச் செல்வன் (பர்வத ராஜன்) பெற்ற பார்வதி தேவி. அவள் வெள்ளைச்
சிறுநகைக் கிள்ளைப் பிள்ளை. குயில் எனப் பேசும் மயிலிளம் பேடை.
கதிரொளி நீலம் கமலத்து மலர்ந்தன
மதரரி நெடுங்கண் மானின் கன்று
வருமுலை தாங்கும் திருமார்பு வல்லி
வையம் ஏழும் பன்முறை ஈன்ற
ஐய திருவயிற்(று) அம்மைப் பிராட்டி
தெளிவுரை : கதிரொளி நீலம் கமலத்து மலர்ந்தன மதரரி நெடுங்கண்கள். மான் கன்று
போன்றவள். வருமுலை தாங்கும் திருமார்பு வல்லி. (வல்லி-கொடி போன்றவள்.) ஏழு
உலகங்களையும் பலமுறை பெற்ற திருவயிற்றை உடைய பிராட்டி.
மறப்பரும் செய்கை அறப்பெருஞ் செல்வி
எமையா ளுடைய உமையாள் நங்கை
கடவுட் கற்பின் மடவரல் கொழுந
பவள மால்வரைப் பணைக்கைபோந் தனைய
தழைசெவி எண்தோள் தலைவன் தந்தை
தெளிவுரை : மறப்பதற்கரிய செய்கைகளைச் செய்த அறப்பெருஞ் செல்வி. எம்மை ஆளுடைய
உமையாள் என்னும் நங்கை. அத்தகைய கடவுள் கற்பின் மடவரலின் கொழுநனே ! பவளம் போன்ற
மால்வரை; பனைக்கை போன்ற துதிக்கையையும் தழைந்த செவிகளையும் எண் தோள்களையும் உடைய
விநாயகக் கடவுளது தந்தையே !
பூவலர் குடுமிச் சேவலம் பதாகை
மலைதுளை படுத்த கொலைகெழு கூர்வேல்
அமரர்த் தாங்கும் குமரன் தாதை
பொருதிடங் கொண்ட பொன்னி புரக்கும்
மருதிடங் கொண்ட மருத வாண
தெளிவுரை : பூப்போன்ற உச்சிக் கொண்டையை உடைய சேவற் கொடியையும் கொலை வேலையும் உடைய
அமரர் தாங்கும் முருகப் பெருமானின் தந்தையே ! காவிரி சூழ்ந்த மருது இடம் கொண்ட
மருதவாண !
நின்னது குற்றம் உளதோ நின்னினைந்(து)
எண்ணரும் கோடி இடர்ப்பகை கடந்து
கண்ணுறு சீற்றத்துக் காலனை வதையா
இறப்பையும் பிறப்பையும் இகந்து சிறப்பொடு
தேவர் ஆவின் கன்றெனத் திரியாப்
தெளிவுரை : குற்றம் உன்னுடையதோ? உன்னை நினைந்து பல கோடி துன்பங்களைக் களைந்து,
மிகுந்த கோபம்கொண்ட காலனை வதைத்து, இறப்பையும் பிறப்பையும் நீக்கி, சிறப்போடு
காமதேனுவின் கன்றெனத் திரிந்து,
பாவிகள் தமதே பாவம் யாதெனின்
முறியாப் புழுக்கல் முப்பழங் கலந்த
அறுசுவை அடிசில் அட்டினி(து) இருப்பப்
புசியா தொருவன் பசியால் வருந்துதல்
அயினியின் குற்றம் அன்று வெயிலின்வைத்(து)
தெளிவுரை : பாவிகள் உடையதே பாவம். எப்படியென்றால் உடையாத சோறும் மா, பலா, வாழை
என்ற மூன்று பழங்களும் கலந்த அறுசுவை சமையல் சமைத்து இனிது இருப்ப, அவைகளைப்
புசியாமல் ஒருவன் பசியால் வருந்துதல் உணவின் குற்றம் அல்ல. அதேபோல வெயிலில்
வைத்து,
ஆற்றிய தெண்ணீர் நாற்றமிட் டிருப்ப
மடாஅ ஒருவன் விடாஅ வேட்கை
தெண்ணீர்க் குற்றம் அன்று கண்ணகன்று
சேந்துளி சிதறிப் பூந்துணர் துறுமி
வாலுகங் கிடந்த சோலை கிடப்ப
வெள்ளிடை வெயிலிற் புள்ளிவெயர் பொடிப்ப
அடிபெயர்த்(து) இடுவான் ஒருவன்
நெடிது வருந்துதல் நிழல்தீங்(கு) அன்றே.
தெளிவுரை : ஆற்றிய தெண்ணீர் நறுமணம் ஊட்டப்பட்டிருக்க, அதைக் குடிக்காமல் ஒருவன்
நீர் வேட்கையோடு இருந்தால் அது தெண்ணீர்க் குற்றம் அல்ல. கண் அகன்று தேன் துளி
சிதறிப் பூந்துணர் சேர்ந்து மணற்குவியலோடு சோலை இருப்ப, வெளியே வெய்யிலில்
வியர்த்துப் போகுமாறு அடிபெயர்ந்து ஒருவன் நீண்ட நேரம் வருந்துதல் நிழலின்
தீங்கன்று. அதாவது இறைவனது அருள் தேங்கி இருக்கும்போது அதை மக்கள் பயன்படுத்திக்
கொள்ளவில்லையே என்று ஆசிரியர் தனது ஆற்றாமையை வெளிப்படுத்துகின்றார்.
வெண்பா
-
அன்றென்றும் ஆமென்றும் ஆறு சமயங்கள்
ஒன்றொன்றோ(டு) ஒவ்வா(து) உரைத்தாலும் - என்றும்
ஒருதனையே நோக்குவார் உள்ளத் திருக்கும்
மருதனையே நோக்கி வரும்.
தெளிவுரை : (ஆறு சமயங்களாவன: சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம்,
சௌரம் என்பன. ஆறு சமயங்களும் முடிவில் மருதனையே நோக்கி வந்து முடியும்
என்கிறார்.) அன்று என்றும், ஆம் என்றும் ஆறு சமயங்களும் ஒன்றோடு ஒன்று மாறுபட்டு
உரைத்தாலும் ஒருமைப்பாட்டை நோக்குகின்றவர்கள் உள்ளத்தில் இருக்கும் மருதனையே
நோக்கி வரும். அதாவது ஆறு சமயங்களும் சைவத்தில் அடங்கும் என்பதாம்.
கட்டளைக் கலித் துறை
-
நோக்கிற்றுக் காமன் உடல்பொடி
யாக நுதிவிரலால்
தாக்கிற்(று) அரக்கன் தலைகீழ்ப்
படத்தன் சுடர்வடிவாள்
ஓக்கிற்றுத் தக்கன் தலைஉருண்
டோடச் சலந்தரனைப்
போக்கிற்(று) உயர்பொன்னி சூழ்மரு
தாளுடைப் புண்ணியமே.
தெளிவுரை : புண்ணிய உருவானவனாகிய இறைவனுடைய நெற்றிக்கண் மன்மதனுடைய உடல்
சாம்பலாகுமாறு செய்தது. கால் விரல் நுனி இராவணனது தலை கீழ்ப்படத் தாக்கிற்று.
சுடர் வடிவாள் தக்கன் தலை உருண்டோடச் செய்தது. உயர் பொன்னி சூழ் மருது ஆளுடைப்
புண்ணியம் சலந்தரனை அழித்தது என்பதாம்.
நேரிசை ஆசிரியப்பா
-
புண்ணிய புராதன புதுப்பூங் கொன்றைக்
கண்ணி வேய்ந்த கைலை நாயக
காள கண்ட கந்தனைப் பயந்த
வாளரி நெடுங்கண் மலையாள் கொழுந
பூத நாத பொருவிடைப் பாக
தெளிவுரை : புண்ணியம் நிறைந்த பழைமையானவனே. கொன்றையைத் தலை மாலையாகக் கொண்டவனே !
கயிலைக்கு நாயகனே ! விடத்தைக் கழுத்தில் வைத்துள்ளவனே ! கந்தனைப் பயந்த வாளரி
நெடுங்கண் உமாதேவியின் கொழுநனே ! பூத கணங்களுக்கு நாதனே ! கொல்லேற்று வாகனனே !
வேத கீத விண்ணோர் தலைவ
முத்தி நாயக மூவா முதல்வ
பத்தி யாகிப் பணைத்தமெய் யன்பொடு
நொச்சி யாயினும் கரந்தை யாயினும்
பச்சிலை யிட்டுப் பரவுந் தொண்டர்
தெளிவுரை : வேத கீதனே ! தேவர்களுக்குத் தலைவனே ! முத்திக்கு நாயகனே ! மூவா முதல்வ
! பக்தி கொண்டு பணைத்த மெய்யன்பொடு நொச்சி, கரந்தை ஆகிய பச்சிலை கொண்டு
அருச்சிக்கும் தொண்டர்கள்,
கருவிடைப் புகாமல் காத்தருள் புரியும்
திருவிடை மருத திரிபு ராந்தக
மலர்தலை உலகத்துப் பலபல மாக்கள்
மக்களை மனைவியை ஒக்கலை ஓரீஇ
மனையும் பிறவுந் துறந்து நினைவரும்
தெளிவுரை : மறுபடியும் பிறவி எடுக்காமல் காத்து அருள் புரியும் திருவிடை மருத !
திரிபுராந்தக ! பரந்த இவ்வுலகில் பலபல மாக்கள் மக்களையும் மனைவியையும்
சுற்றத்தாரையும் விட்டு நீங்கி, வீடு வாசல்களைத் துறந்து,
காடும் மலையும் புக்குக் கோடையிற்
கைம்மேல் நிமிர்த்துக் காலொன்று முடக்கி
ஐவகை நெருப்பின் அழுவத்து நின்று
மாரி நாளிலும் வார்பனி நாளிலும்
நீரிடை மூழ்கி நெடிது கிடந்தும்
தெளிவுரை : காடும் மலையும் புகுந்து, கோடையில் கையைத் தலைக்கு மேலே உயர்த்தி, ஒரு
காலை முடக்கி, ஐந்து வகையான நெருப்பின் மத்தியில் நின்று, மழைக் காலத்திலும்,
பனிக் காலத்திலும் நீரில் மூழ்கி அதிக நேரம் கிடந்தும்,
சடையைப் புனைந்தும் தலையைப் பறித்தும்
உடையைத் துறந்தும் உண்ணா(து) உழன்றும்
காயும் கிழங்கும் காற்றுதிர் சருகும்
வாயுவும் நீரும் வந்தன அருத்தியும்
களரிலும் கல்லிலும் கண்படை கொண்டும்
தெளிவுரை : சடையைப் புனைந்தும், தலையை மொட்டை அடித்தும், ஆடையைத் துறந்தும்
பட்டினி கிடந்தும், காயும் கிழங்கும் காற்றில் உதிர்ந்த சருகும் காற்றையும்
நீரையும் எது கிடைக்கிறதோ அதை அருந்தியும், களரிலும் கல்லிலும் தூங்கி,
தளர்வுறும் யாக்கையைத் தளர்வித்து ஆங்கவர்
அம்மை முத்தி அடைவதற் காகத்
தம்மைத் தாமே சாலவும் ஒறுப்பர்
ஈங்கிவை செய்யாது யாங்கள் எல்லாம்
பழுதின்(று) உயர்ந்த எழுநிலை மாடத்தும்
தெளிவுரை : தளர்ச்சியடையும் உடம்பைத் தளர்வித்து ஆங்கு அவர் வீடுபேறு ஆகிய
முத்தியை அடைவதற்காகத் தம்மைத் தாமே மிகவும் தண்டிப்பர். இங்கு இவ்வாறு
செய்யாமல், யாங்கள் எல்லாம் குறைவில்லாமல் உயர்ந்த எழுநிலை மாடத்தில்,
செழுந்தா(து) உதிர்ந்த நந்தன வனத்தும்
தென்றல் இயங்கும் முன்றில் அகத்தும்
தண்டாச் சித்திர மண்டப மருங்கிலும்
பூவிரி தரங்க வாரிக் கரையிலும்
மயிற்பெடை ஆலக் குயிற்றிய குன்றிலும்
தெளிவுரை : செழுமையாக மகரந்தம் உதிர்ந்த நந்தவனத்தில், தென்றல் வீசுகின்ற
முன்றிலின் இடத்தில் குறைதல் இல்லாத சித்திர மண்டப மருங்கிலும் அலை வீசுகின்ற
குளக்கரையிலும் பெண் மயில் ஆடச் செய்த குன்றிலும்,
வேண்டுழி வேண்டுழி ஆண்டாண்(டு) இட்ட
மருப்பின் இயன்ற வாளரி சுமந்த
விருப்புறு கட்டில் மீமிசைப் படுத்த
ஐவகை அமளி அணைமேல் பொங்கத்
தண்மலர் கமழும் வெண்மடி விரித்துப்
தெளிவுரை : தேவைப்பட்ட பொழுதெல்லாம் ஆங்காங்கு தந்தத்தால் செய்யப்பட்ட
சிங்காதனத்தின் மீது படுத்த ஐந்து வகையான படுக்கை அணைமேல் பொங்க, குளிர்ந்த
மலர்கள் கமழும் வெண்மையான ஆடையை விரித்து,
பட்டினுட் பெய்த பதநுண் பஞ்சின்
நெட்டணை யருகாக் கொட்டைகள் பரப்பிப்
பாயல் மீது பரிபுரம் மிழற்றச்
சாயல்அன் னத்தின் தளர்நடை பயிற்றிப்
பொன்தோ ரணத்தைச் சுற்றிய துகிலென
தெளிவுரை : பட்டினுள் திணித்த பத நுண் பஞ்சின் நெட்டணை அருகா தலையணைகளைப் பரப்பி,
பாயலின் மீது சிலம்பு ஒலி செய்ய, சாயல் அன்னத்தின் தளர் நடை பயிற்றிப்
பொன்னாலாகிய தோரணத்தின் மீது சுற்றிய ஆடை போல,
அம்மென் குறங்கின் நொம்மென் கலிங்கம்
கண்ணும் மனமும் கவற்றப் பண்வர
இரங்குமணி மேகலை மருங்கிற் கிடப்ப
ஆடர(வு) அல்குல் அரும்பெறல் நுசுப்பு
வாட வீங்கிய வனமுலை கதிர்ப்ப
தெளிவுரை : அழகிய தொடையின் மீதுள்ள மிகவும் மெல்லிய ஆடை கண்ணும் மனமும் கவரும்படி
பண்வர இரங்கும் மணிமேகலை இடுப்பில் கட்டியிருக்க, பாம்புப் படத்தைப் போன்ற
அல்குலும் அரும்பெறல் இடையும் வாட, பூரித்த வன முலைகள் இறுமாந்திருக்க,
அணியியல் கமுகை அலங்கரித் ததுபோல்
மணியியல் ஆரங் கதிர்விரித்(து) ஒளிர்தர
மணிவளை தாங்கிய அணிகெழு மென்தோள்
வரித்த சாந்தின்மிசை விரித்துமீ(து) இட்ட
உத்தரீ யப்பட்(டு) ஒருபால் ஒளிர்தர
தெளிவுரை : அணியாக அமைந்த பாக்கு மரத்தை அலங்கரித்ததுபோல மணியோடு கூடிய மாலை ஒளி
வீச, மணிவளைகளைத் தாங்குகின்ற அலங்கரிக்கப்பட்ட மென்தோள் சாந்தின்மீது விரித்து
இடப்பட்ட மேலாடை ஒரு பக்கம் பிரகாசிக்க,
வள்ளை வாட்டிய ஒள்ளிரு காதொடு
பவளத் தருகாத் தரளம் நிரைத்தாங்(கு)
ஒழுகி நீண்ட குமிழொன்று பதித்துக்
காலன் வேலும் காம பாணமும்
ஆல காலமும் அனைத்தும்இட்(டு) அமைத்த
தெளிவுரை : சங்குகள் பூட்டிய இரு காதுகளோடு பவளத்திற்கு அருகில் முத்துக்களை
நிரைத்ததைப் போன்று தாழ்ந்து நீண்ட நாசியொன்று பதித்து, காலனுடைய சூலமும்
மன்மதனது மலர் அம்புகளும் ஆலகால விடமும் இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து பொருந்திய,
இரண்டு நாட்டமும் புரண்டுகடை மிளிர்தர
மதியென மாசறு வதனம் விளங்கப்
புதுவிரை அலங்கல் குழன்மிசைப் பொலியும்
அஞ்சொல் மடந்தையர் ஆகந் தோய்ந்தும்
சின்னம் பரப்பிய பொன்னின் கலத்தில்
தெளிவுரை : இரண்டு கண்களும் புரண்டு கடைமிளிர்தர சந்திரன் போன்ற குற்றமற்ற முகம்
விளங்க, புதிய மணமுள்ள மாலை கூந்தல்மீது விளங்கும் அழகிய சொல்லையுடைய பெண்களை
அனுபவித்தும், சித்திர அன்னங்கள் பரிமாறப்பட்ட பொன் தட்டில் இருந்த,
அறுசுவை அடிசில் வறிதினி(து) அருந்தா(து)
ஆடினர்க்(கு) என்றும் பாடினர்க்(கு) என்றும்
வாடினர்க்(கு) என்றும் வரையாது கொடுத்தும்
பூசுவன பூசியும் புனைவன புனைந்தும்
தூசு நல்லன தொடையிற் சேர்த்தியும்
தெளிவுரை : அறுசுவை உணவை உண்ணாமல் ஆடியவர்களுக்கும் பாடியவர்களுக்கும்
வாடினவர்களுக்கும் மிகுதியாகக் கொடுத்தும், பூசுவனவற்றைப் பூசியும், அலங்காரம்
செய்தும், உயர்ந்த பட்டாடைகளைத் தொடையில் கட்டியும்,
ஐந்து புலன்களும் ஆர ஆர்த்தும்
மைந்தரும் ஒக்கலும் மகிழ மனமகிழ்ந்(து)
இவ்வகை இருந்தோம் ஆயினும் அவ்வகை
மந்திர எழுத்தைந்தும் வாயிடை மறவாது
சிந்தை நின்வழி செலுத்தலின் அந்த
தெளிவுரை : ஐம்புலன்களும் திருப்தியடையும் படி அனுபவித்தும், இளையோரும்
சுற்றத்தாரும் மனமகிழ்ந்து ஓங்கி இவ்வாறு இருந்தோம் என்றாலும், அவ்வகை
மந்திரமாகிய ஐந்தெழுத்தும் வாயில் மறவாமல் மனத்தை உன் போக்கில் செலுத்துவதால்,
அந்த
முத்தியும் இழந்திலம் முதல்வ அத்திறம்
நின்னது பெருமை அன்றோ என்னெனின்
வல்லான் ஒருவன் கைம்முயன்(று) எறியினும்
மாட்டா ஒருவன் வாளா எறியினும்
நிலத்தின் வழாஅக் கல்லேபோல்
நலத்தின் வழார்நின் நாமம்நவின் றோரே.
தெளிவுரை : வீடு பேற்றையும் இழக்கவில்லை. முதல்வனே ! அந்த வல்லமை உன்னுடைய
பெருமையினால் அல்லவா வந்தது? எப்படியென்றால் வல்லான் ஒருவன் முயற்சி செய்து
எறிந்தாலும் வல்லமை இல்லாத ஒருவன் சாதாரணமாக எறிந்தாலும் நிலத்திலே வந்து
விழுவதினின்றும் தப்பாத கல்லைப்போல, நின் நாமம் நவில்வார் நலத்தினின்றும் வழுவ
மாட்டார்கள் என்பதாம்.
வெண்பா
-
நாமம்நவிற் றாய்மனனே நாரியர்கள் தோள்தோய்ந்து
காமம் நவிற்றிக் கழிந்தொழியல் - ஆமோ
பொருதவனத் தானைஉரி போர்த்தருளும் எங்கள்
மருதவனத் தானை வளைந்து.
தெளிவுரை : எதிர்த்த காட்டு யானையின் தோலைப் போர்த்தருளும், எங்கள்
திருவிடைமருதூரில் கோயில் கொண்டிருக்கும் இறைவனைப் பணிந்து, மனமே ! அவனது பெயரைச்
சொல்லாமல் பெண்களின் தோளில் அழுந்திக் காமத்தைச் சொல்லியே காலங் கடத்துகின்றாயே,
இது தகுமோ? அவன் நாமத்தை நவிற்று என்றும் வீண் காலம் கழிக்காதே என்றும்
அறிவுறுத்துகின்றார்.
கட்டளைக் கலித் துறை
-
வளையார் பசியின் வருந்தார்
பிணியின் மதனன்அம்புக்
கிளையார் தனங்கண் டிரங்கிநில்
லார்இப் பிறப்பினில்வந்(து)
அளையார் நரகினுக்(கு) என்கட
வார்பொன் அலர்ந்தகொன்றைத்
தளையார் இடைமரு தன்னடி
யார்அடி சார்ந்தவரே.
தெளிவுரை : பொன்போல் மலர்ந்த கொன்றை மாலையை அணிந்த இடை மருதனின்
அடியார்களின் அடி சார்ந்தவர், பசியினால் வணங்குதல் செய்யார். பிணியினால் வருந்த
மாட்டார்கள். மன்மதனுடைய அம்புக்கு இளைக்க மாட்டார்கள். செல்வத்தைக் கண்டு இரங்கி
நில்லார். மறுபடியும் பிறவி எடுக்க மாட்டார்கள். நரகினுக்குப் போக மாட்டார்கள்
என்பதாம்.
நேரிசை ஆசிரியப்பா
-
அடிசார்ந் தவர்க்கு முடியா இன்பம்
நிறையக் கொடுப்பினும் குறையாச் செல்வ
மூலமும் நடுவும் முடிவும் இகந்து
காலம் மூன்றையும் கடந்த கடவுள்
உளக்கணுக்(கு) அல்லா(து) ஊன்கணுக்(கு) ஒளித்துத்
தெளிவுரை : உன் அடியார்களுக்கு முடிவில்லாத இன்பமாகிய வீடு பேற்றை நிறைய கொடுத்த
போதிலும் குறைவில்லாத செல்வனே ! ஆதியும், நடுவும், முடிவும் கடந்து மூன்று
காலங்களையும் கடந்த கடவுளே ! உளக்கண்ணுக்கு அல்லாது ஊன் கண்ணுக்கு ஒளித்து,
துளக்கற நிமிர்ந்த சோதித் தனிச்சுடர்
எறுப்புத் துளையின் இருசெவிக்(கு) எட்டா(து)
உறுப்பினின்(று) எழுதரும் உள்ளத்(து) ஓசை
வைத்த நாவின் வழிமறுத்(து) அகத்தே
தித்தித்(து) ஊறும் தெய்வத் தேறல்
தெளிவுரை : நடுக்கமின்றி நிமிர்ந்த சோதித் தனிச்சுடரே ! எறும்பு வளைபோன்று அமைந்த
இரண்டு காதுகளுக்கும் எட்டாமல் உறுப்பில் நின்று எழும் உள்ளத்து ஓசை வைத்த நாவின்
வழி மறுத்து, அகத்தில் தித்திக்கின்ற தெய்வத்தன்மை பொருந்திய தேனே !
துண்டத் துளையிற் பண்டை வழியன்றி
அறிவில் நாறும் நறிய நாற்றம்
ஏனைய தன்மையும் எய்தா(து) எவற்றையும்
தானே யாகி நின்ற தற்பர
தோற்றுவ(து) எல்லாம் தன்னிடைத் தோற்றித்
தெளிவுரை : மூக்குத் துவாரத்தில் முன்பு இருந்த வழி இல்லாமல் அறிவின் மூலம் மணம்
வீசுகின்ற நறுமணமே ! மற்ற தன்மைகளையும் அடையாமல் எல்லாவற்றிலும் தானே ஆகிநின்ற
தத்துவ ! (உண்மைப் பொருளே!) தோன்றுகின்ற யாவும் உன்னிடமிருந்தே தோன்றி,
தோற்றம் பிறிதில் தோற்றாச் சுடர்முளை
விரிசடை மீமிசை வெண்மதி கிடப்பினும்
இருள்புரை கண்டத்(து) ஏக நாயக
சுருதியும் இருவரும் தொடர்ந்துநின்(று) அலமர
மருதிடம் கொண்ட மருதமா ணிக்க
தெளிவுரை : தோற்றம் வேறு ஒன்றிலும் தோற்றாத சுடர் முளையே ! விரிந்த சடையின்மேல்
வெண்மையான பிறைச் சந்திரன் இருந்த போதிலும் இருண்ட கழுத்தை உடைய ஏக நாயகனே !
வேதமும் திருமால் பிரமன் ஆகிய இருவரும் தொடர்ந்து நின்று தடுமாற மருதிடம் கொண்ட
மருத மாணிக்கமே!
உமையாள் கொழுந ஒருமூன் றாகிய
இமையா நாட்டத்(து) என்தனி நாயக
அடியேன் உறுகுறை முனியாது கேண்மதி
நின்னடி பணியாக் கல்மனக் கயவரொடு
நெடுநாள் பழகிய கொடுவினை ஈர்ப்பக்
தெளிவுரை : உமாதேவியின் கொழுநனே ! இமைக்காத மூன்று கண்களையுடைய என் தனி நாயகனே !
அடியேனுடைய குறையைக் கோபப்படாமல் கேட்பாயாக. உன்னுடைய பாதங்களைப் பணியாத கல்மனக்
கயவரொடு நெடுநாள் பழகிய கொடுவினை ஈர்க்க,
கருப்பா சயமெனும் இருட்சிறை அறையில்
குடரென் சங்கிலி பூண்டு தொடர்ப்பட்டுக்
கூட்டுச்சிறைப் புழுவின் ஈட்டுமலத்(து) அழுந்தி
உடனே வருந்தி நெடுநாட் கிடந்து
பல்பிணிப் பெயர்பெற்(று) அல்லற் படுத்தும்
தெளிவுரை : கருப்பப் பை என்னும் இருட் சிறையாகிய அறையில் குடல் என்ற சங்கிலியால்,
கட்டுப்பட்டு கூட்டுச் சிறைப் புழுவைப் போல, முன்பு சேர்ந்துள்ள வினையாகிய மலத்து
அழுந்தி, அங்கேயே வருந்தி, நெடுநாள் கிடந்து பல பிணிகளில் துன்பப் படுத்தும்,
தண்ட லாளர் மிண்டிவந்(து) அலைப்ப
உதர நெருப்பிற் பதைபதை பதைத்தும்
வாதமத் திகையின் மோதமொத் துண்டும்
கிடத்தல் நிற்றல் நடத்தல் செல்லா(து)
இடங்குறை வாயிலின் முடங்கி இருந்துழிப்
தெளிவுரை : தண்டனை செய்யும் ஏவலாளர் நெருங்கி வந்து வருத்த வயிறாகிய நெருப்பில்
துடித்தும், வாயுவாகிய சவுக்கினால் அடிபட்டும், கிடந்தும், நின்றும், நடந்தும்,
செல்லாமல் குறுகிய வாயிலில் இருந்த சமயத்தில்,
பாவப் பகுதியில் இட்டுக் காவற்
கொடியோர் ஐவரை ஏவி நெடிய
ஆசைத் தளையில் என்னையும் உடலையும்
பாசப் படுத்திப் பையென விட்டபின்
யானும் போந்து தீதினுக்(கு) உழன்றும்
தெளிவுரை : பாவப் பகுதியில் கிடத்தி காவல் கொடியோராகிய ஐம் பொறிகளைத் தூண்டி,
நீண்ட ஆசைத் தளையில் என்னையும் உடலையும் பிணித்து மெதுவாக விட்ட பிறகு யானும்
வெளிப்பட்டு தீதினுக்கு உழன்றும்,
பெரியோர்ப் பிழைத்தும் பிறர்பொருள் வெளவியும்
பரியா(து) ஒழிந்தும் பல்லுயிர் செகுத்தும்
வேற்றோர் மனைவியர் தோற்றம் புகழ்ந்தும்
பொய்பல கூறியும் புல்லினம் புல்லியும்
ஐவரும் கடுப்ப அவாவது கூட்டி
தெளிவுரை : பெரியோர்களிடம் பிழை செய்தும் பிறர் பொருளைக் கவர்ந்தும் பிறர்
துன்பம் கண்டு இரங்காமல் நீங்கியும் பல்லுயிர்களைக் கொன்றும் அயலார் மனைவியின்
அழகைப் புகழ்ந்தும், பல பொய்களைச் சொல்லியும், அற்பர்களோடு சேர்ந்து பழகியும்,
ஐம்பொறிகளும் விரைய ஆசையைப் பெருக்கி,
ஈண்டின கொண்டும் மீண்டு வந்துழி
இட்டுழி இடாது பட்டுழிப் படாஅது
இந்நாள் இடுக்கண் எய்திப் பன்னாள்
வாடுபு கிடப்பேன் வீடுநெறி காணேன்
நின்னை அடைந்த அடியார் அடியார்க்(கு)
தெளிவுரை : அதுவரை சம்பாதித்ததைக் கொண்டு மறுபடி வந்தபோது, இட்ட இடத்தில்
இடாமலும் பட்ட இடத்தில் படாமலும் இப்போது துன்பமடைந்து பலநாள் வாடிக் கிடப்பேன்.
முத்தி அடையும் வழியைக் காணேன். உன்னை வந்து அடைந்த அடியார்களின் அடியார்களுக்கு,
என்னையும் அடிமை யாகக் கொண்டே
இட்டபச் சிலைகொண்(டு) ஒட்டி அறிவித்(து)
இச்சிறை பிழைப்பித்(து) இனிச்சிறை புகாமல்
காத்தருள் செய்ய வேண்டும்
தீத்திரண் டன்ன செஞ்சடை யோனே.
தெளிவுரை : என்னையும் அடிமையாகக் கொண்டு இட்ட பச்சிலை கொண்டு ஒட்டி அறிவித்து
இந்தச் சிறையிலிருந்து விடுவித்து, இனியும் இச்சிறையில் புகாமல் காத்தருள் செய்ய
வேண்டும். தீப் பிழம்பு போன்ற செஞ்சடையை உடைய பெருமானே ! இதுவே என் வேண்டுகோள்.
வெண்பா
-
சடைமேல் ஒருத்தி சமைந்திருப்ப மேனிப்
புடைமேல் ஒருத்தி பொலிய - இடையேபோய்ச்
சங்கே கலையே மருதற்குத் தான்கொடுப்ப(து)
எங்கே இருக்க இவள்.
தெளிவுரை : எங்கே இருக்கலாம் என்ற எண்ணத்தால், இவள், இடைமருது ஈசர்மேல் காதல்
கொண்டாள் !
சடைமேல் கங்காதேவி குடிகொண்டிருக்க இடப்பாகத்தில் உமாதேவி திகழ்ந்து கொண்டிருக்க
இவள் இடைமருது ஈசன்மேல் காதல்கொண்டு சங்கு வளையல்களையும் ஆடையையும் இவள் எப்படிக்
கொடுப்பாள். இவள் எங்கே இருப்பாள் ?
கட்டளைக் கலித் துறை
-
இருக்கும் மருதினுக்(கு) உள்ளிமை
யோர்களும் நான்மறையும்
நெருக்கு நெருக்கத்து நீளகத்
துச்சென்று மீளவொட்டாத்
திருக்கு மறுத்தைவர் தீமையும்
தீர்த்துச்செவ் வேமனத்தை
ஒருக்கும் ஒருக்கத்தின் உள்ளே
முளைக்கின்ற ஒண்சுடரே.
தெளிவுரை : திருவிடை மருதினுக்குள் இமையோர்களும் நான்கு வேதங்களும் நெருங்கி
இருக்கும் நீண்ட இடத்தில் சென்று, மீள முடியாத என் கோணலையும் அறுத்து,
ஐம்பொறிகளின் தீமையையும் தீர்த்து நல்ல நிலையில் என் மனத்தை ஒருமைப்படுத்தித்
தியானிக்கும் நிலையில் வைப்பாயாக. மருதினுக்குள் இருக்கும் ஒண்சுடரே ! உன்னை
வேண்டிக் கொள்கிறேன் என்பதாம்.
நேரிசை ஆசிரியப்பா
-
சுடர்விடு சூலப் படையினை என்றும்
விடைஉகந்(து) ஏறிய விமல என்றும்
உண்ணா நஞ்சம் உண்டனை என்றும்
கண்ணாற் காமனைக் காய்ந்தனை என்றும்
திரிபுரம் எரித்த சேவக என்றும்
தெளிவுரை : பிரகாசிக்கின்ற சூலாயுதத்தை உடையவன் என்றும், விடையை விரும்பி ஏறிய
விமலன் என்றும், பிறரால் உண்ண முடியாத ஆலகால விஷத்தை உண்டாய் என்றும், நெற்றிக்
கண்ணை விழித்துக் காமனை எரித்தாய் என்றும், திரிபுரங்களை எரித்த வீரன் என்றும்,
கரியுரி போர்த்த கடவுள் என்றும்
உரகம் பூண்ட உரவோய் என்றும்
சிரகஞ் செந்தழல் ஏந்தினை என்றும்
வலந்தரு காலனை வதைத்தனை என்றும்
சலந்தரன் உடலம் தடிந்தனை என்றும்
தெளிவுரை : யானைத் தோலைப் போர்த்த கடவுள் என்றும், பாம்பை அணிந்த வல்லவன்
என்றும், கபாலத்தையும் செந்தழலையும் ஏந்தினை என்றும், வல்லமை படைத்த காலனை
உதைத்தாய் என்றும், சலந்தரன் உடலை அழித்தாய் என்றும்,
அயன்சிரம் ஒருநாள் அரிந்தனை என்றும்
வியந்தவாள் அரக்கனை மிதித்தனை என்றும்
தக்கன் வேள்வி தகர்த்தனை என்றும்
உக்கிரப் புலியுரி உடுத்தனை என்றும்
ஏனமும் அன்னமும் எட்டா(து) இளைப்ப
தெளிவுரை : ஓர் ஊழிக் காலத்தில் பிரமன் தலையை அரிந்தனை என்றும், வாளேந்திய
இராவணனைக் கால் கட்டை விரலால் மிதித்தனை என்றும், தக்கனது யாகத்தை அழித்தாய்
என்றும், தாருகா வனத்து முனிவர்கள் ஏவிய கொடிய புலியைக் கிழித்து அதன் தோலை
உடுத்திக் கொண்டாய் என்றும், பன்றியும் அன்னமும் (திருமாலும் பிரமனும்) பார்க்க
முடியாமல் தடுமாற,
வானம் கீழ்ப்பட வளர்ந்தனை என்றும்
செழுநீர் ஞாலம் செகுத்துயிர் உண்ணும்
அழல்விழிக் குறளை அமுக்கினை என்றும்
இனையன இனையன எண்ணில் கோடி
நினைவருங் கீர்த்தி நின்வயின் புகழ்தல்
தெளிவுரை : தீப்பிழம்பாய் உயர்ந்தனை என்றும், செழுநீர் ஞாலம் செகுத்து உயிர்
உண்ணும் தீப்போன்ற கண்ணையுடைய முயலகனைக் காலடியில் அழுத்தினாய் என்றும், இது
போன்ற உன்னுடைய சிறப்பினை உன்னிடம் புகழ்தல்,
துளக்குறு சிந்தையேன் சொல்லள வாதலின்
அளப்பரும் பெருமைநின் அளவில(து) ஆயினும்
என்றன் வாயிற் புன்மொழி கொண்டு
நின்னை நோக்குவன் ஆதலின் என்னை
இடுக்கண் களையா அல்லற் படுத்தா
தெளிவுரை : என்னால் இயலாத ஒன்றாகும். உன்னுடைய பெருமை எல்லையற்றதாயினும் என்
வாயினால் சொல்லப்படும் இந்த எளிய மொழியைக் கொண்டு உன்னை நோக்குவேன் ஆதலின், என்
துன்பங்களைக் களைந்து, இனி துன்புறுத்தாமல்,
எழுநிலை மாடத்துச் செழுமுகில் உறங்க
அடித்துத் தட்டி எழுப்புவ போல
நுண்துகில் பதாகை கொண்டுகொண்(டு) உகைப்பத்
துயிலின் நீங்கிப் பயிலும் வீதித்
திருமரு(து) அமர்ந்த தெய்வச் செழுஞ்சுடர்
தெளிவுரை : எழுநிலை மாடத்து செழுமுகில் உறங்க அடித்துத் தட்டி எழுப்புவதுபோல
உன்னுடைய பெருங் கொடியைக் கொண்டு துகைப்ப, தூக்கத்திலிருந்து எழுந்து பயிலுகின்ற
வீதியை உடைய திருமருதத்து அமர்ந்த தெய்வச் செழுஞ்சுடரே !
அருள்சுரந்(து) அளிக்கும் அற்புதக் கூத்த
கல்லால் எறிந்த பொல்லாப் புத்தன்
நின்னினைந்(து) எறிந்த அதனால்
அன்னவன் தனக்கும் அருள்பிழைத் தின்றே.
தெளிவுரை : அருள் சுரந்து காப்பாற்றும் அற்புதக் கூத்தனே! மலர்களுக்குப் பதிலாக
கல்லைக் கொண்டு அருச்சித்த சாக்கிய நாயனார் உன்னை நினைந்து எறிந்ததனால்
அவருக்கும் அருள் தவறாமல் கிடைத்தது. அதுபோல் எனக்கும் கிடைக்க வேண்டுகிறேன்
என்பதாம்.
வெண்பா
-
இன்றிருந்து நாளை இறக்கும் தொழிலுடைய
புன்தலைய மாக்கள் புகழ்வரோ - வென்றிமழு
வாளுடையான் தெய்வ மருதுடையான் நாயேனை
ஆளுடையான் செம்பொன் அடி.
தெளிவுரை : வெற்றி மழுவையும் வாளையும் உடையவனும் தெய்வத்தன்மை பொருந்திய மருதை
உடையவனும் நாயேனாகிய என்னை ஆளுடையவனுமாகிய அப் பெருமானது செம்பொன் அடிகளை
இன்றிருந்து நாளை மடியும் தொழிலுடைய சிற்றறிவினையுடைய மக்களாகப் பிறந்தும் மக்கட்
பண்பில்லாதவர்கள் புகழ்வார்களோ? புகழ மாட்டார்கள் என்றபடி.
கட்டளைக் கலித் துறை
-
அடியா யிரம்தொழில் ஆயின
ஆயிரம் ஆயிரம்பேர்
முடியா யிரம்கண்கள் மூவா
யிரம்முற்றும் நீறணிந்த
தொடியா யிரங்கொண்ட தோள்இரண்
டாயிரம் என்றுநெஞ்சே
படியாய் இராப்பகல் தென்மரு
தாளியைப் பற்றிக்கொண்டே.
தெளிவுரை : நெஞ்சமே ! இரவும் பகலும் தென் மருதாளியைப் (திருவிடைமருதூரில் கோயில்
கொண்டிருக்கும் இறைவனை) பற்றிக் கொண்டு, அடி (உன் திருவடி) ஆயிரந்தொழில் ஆயின
என்றும் ஆயிரக் கணக்கானோரின் முடியும் கண்களும் நீறணிந்த தோள்களும் பற்றி
ஓதுவாயாக. அதாவது, அவனது திருவுருவச் சிறப்பை இரவும் பகலும் துதி செய்வாயாக
என்பதாம்.
நேரிசை ஆசிரியப்பா
-
கொண்டலின் இருண்ட கண்டத்(து) எண்தோள்
செவ்வான் உருவிற் பையர(வு) ஆர்த்த
சிறுபறை கிடந்த நெறிதரு புன்சடை
மூவா முதல்வ முக்கட் செல்வ
தேவ தேவ திருவிடை மருத
தெளிவுரை : மேகத்தைப் போன்ற இருண்ட கண்டத்தையும் எட்டுத் தோள்களையும்,
செவ்வானத்தைப் போன்ற உருவத்தோடு, பாம்பை ஆபரணமாகக் கொண்டு, சிறு பிறை தவழும்
நெறிந்த சடையினையும் உடைய அழிவில்லாத முதல்வனே ! மூன்று கண்களையுடைய செல்வனே !
தேவ தேவனே ! திருவிடை மருதனே !
மாசறு சிறப்பின் வானவர் ஆடும்
பூசத் தீர்த்தம் புரக்கும் பொன்னி
அயிரா வணத்துறை ஆடும் அப்ப
கயிலாய வாண கௌரி நாயக
நின்னை வணங்கிப் பொன்னடி புகழ்ந்து
தெளிவுரை : மாசறு சிறப்பின் தேவர்கள் நீராடுகின்ற பூசத் தீர்த்தம்
புரக்கும் காவிரியல் அயிராவணத் துறையில் நீராடும் அப்பனே ! கைலாய வாண ! கௌரி நாயக
! நின்னருள் சுரந்து பொன்னடி பணிந்து,
பெரும்பதம் பிழையா வரம்பல பெற்றோர்
இமையா நெடுங்கண் உமையாள் நங்கையும்
மழைக்கட் கடத்துப் புழைக்கைப் பிள்ளையும்
அமரர் தாங்கும் குமர வேளும்
சுரிசங்(கு) ஏந்திய திருநெடு மாலும்
தெளிவுரை : பெரும்பதம் பிழையா வரம்பல பெற்றோர் இமைக்காத கண்களை உடைய உமா
தேவியாரும் மழைபோன்று மதம் பொழியும் துதிக்கையை உடைய விநாயகரும், தேவர்களுக்கு
ஆதரவாக இருக்கும் குமரக் கடவுளும், சுழிவோடு கூடிய சங்கை ஏந்திய திருமாலும்,
வான்முறை படைத்த நான்முகத்(து) ஒருவனும்
தாருகற் செற்ற வீரக் கன்னியும்
பூவின் கிழத்தியும் நாவின் மடந்தையும்
பீடுயர் தோற்றத்துக் கோடி உருத்திரரும்
ஆனாப் பெருந்திறல் வானோர் தலைவனும்
தெளிவுரை : இந்த உலகைப் படைத்த பிரம தேவனும், தாருகனை அழித்த வீரம் பொருந்திய
துர்க்கையும் சரஸ்வதி தேவியும், திருமகளும், பெருமை பொருந்திய கோடி உருத்திரரும்,
குறையாத பெருந் திறலுடைய இந்திரனும்,
செயிர்தீர் நாற்கோட்(டு) அயிரா வதமும்
வாம்பரி அருக்கர் தாம்பன் னிருவரும்
சந்திரன் ஒருவனும் செந்தீக் கடவுளும்
நிருதியும் எமனும் சுருதிகள் நான்கும்
வருணனும் வாயுவும் இருநிதிக் கிழவனும்
தெளிவுரை : குற்றமற்ற நான்கு தந்தங்களை உடைய ஐராவதமும், தாவும் பரிசுடைய அருக்கர்
பன்னிருவரும், சந்திரனும் அக்கினி தேவனும், நிருதியும், இயமனும், வேதங்கள்
நான்கும், வருணனும் வாயுவும், குபேரனுமாகிய அஷ்டத்திக்குப் பாலகர்களும்,
எட்டு நாகமும் அட்ட வசுக்களும்
மூன்று கோடி ஆன்ற முனிவரும்
வசிட்டனும் கபிலனும் அகத்தியன் தானும்
தும்புரு நாரதர் என்றிரு திறத்தரும்
வித்தகப் பாடல் முத்திறத்(து) அடியரும்
தெளிவுரை : எட்டுக் கிரிகளும், அஷ்ட வசுக்களும், முக்கோடி முனிவர்களும்,
வசிட்டனும், கபிலனும், அகத்தியரும், தும்புரு நாரதர் ஆகிய இருவரும், தேவாரப்
பாடல்களைப் பாடிய திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள்
ஆகிய மூவரும்,
திருந்திய அன்பிற் பெருந்துறைப் பிள்ளையும்
அத்தகு செல்வத்(து) அவமதித் தருளிய
சித்த மார்சிவ வாக்கிய தேவரும்
வெள்ளை நீறு மெய்யிற் கண்டு
கள்ளன் கையிற் கட்டவிழ்ப் பித்தும்
தெளிவுரை : பேரன்பு கொண்ட பெருந்துறைப் பிள்ளையாகிய மாணிக்கவாசகரும், பெருஞ்
செல்வத்தைத் துறந்த சித்தமார் சிவவாக்கிய தேவரும், உடம்பில் திருநீறு
பூசியிருந்ததைக் கண்டு கள்ளன் கையில் பிணித்திருந்த கட்டை அவிழ்த்தும், (வரகுண
பாண்டியனது பெருமையைக் கூறுகின்றார்.)
ஓடும் பன்னரி ஊளைகேட்(டு) அரனைப்
பாடின என்று படாம்பல அளித்தும்
குவளைப் புனலில் தவளை அரற்ற
ஈசன் தன்னை ஏத்தின என்று
காசும் பொன்னும் கலந்து தூவியும்
தெளிவுரை : ஓடுகின்ற நரிகளின் ஊளையைக் கேட்டு சிவபெருமானைப் பாடின என்று
அவைகளுக்குப் போர்வையளித்தும், குவளை பூத்திருந்த குளத்தில் தவளைகள் கத்த அவை
ஈசனைத் துதிக்கின்றன என்று காசும் பொன்னும் கலந்து தூவியும் (இதைக் கொடை மடம்
என்பர்)
வழிபடும் ஒருவன் மஞ்சனத்(து) இயற்றிய
செழுவிதை எள்ளைத் தின்னக் கண்டு
பிடித்தலும் அவனிப் பிறப்புக் கென்ன
இடித்துக் கொண்டவன் எச்சிலை நுகர்ந்தும்
மருத வட்டத்(து) ஒருதனிக் கிடந்த.
தெளிவுரை : அபிடேகத்திற்குரிய எண்ணெய்க்காக வைத்திருந்த எள்ளு விதையைத் தின்னக்
கண்டு பிடித்தலும், அவனிப் பிறப்புக்கு என்று இடித்துக் கொண்டவன் எச்சிலை
நுகர்ந்தும், மருத வட்டத்தின் ஒரு பக்கத்தில் இருந்த,
தலையைக் கண்டு தலையுற வணங்கி
உம்மைப் போல எம்இத் தலையும்
கிடக்கல் வேண்டுமென்(று) அடுத்தடுத்(து) இரந்தும்
கோயில் முற்றத்து மீமிசைக் கிடப்ப
வாய்த்த(து) என்றுநாய்க் கட்டம் எடுத்தும்
தெளிவுரை : தலையைக் கண்டு தலையுற வணங்கி, உம்மைப் போல எம் இத்தலையும் கிடக்க
வேண்டுமென்று திரும்பத் திரும்ப யாசித்தும், கோயில் முற்றத்தின் மேலே கிடந்த நாய்
மலத்தை அப்புறப் படுத்தியும்,
காம்பவிழ்த்(து) உதிர்ந்த கனியுருக் கண்டு
வேம்புகட்(கு) எல்லாம் விதானம் அமைத்தும்
விரும்பின கொடுக்கை பரம்பரற்(கு) என்று
புரிகுழல் தேவியைப் பரிவுடன் கொடுத்த
பெரிய அன்பின் வரகுண தேவரும்
தெளிவுரை : காம்பு அவிழ்ந்து உதிர்ந்த கனியுருக் கண்டு வேப்ப மரங்களுக்கு எல்லாம்
விதானம் (மேற்கட்டி) அமைத்தும், விரும்பியவற்றைக் கொடுக்கும் சிவபெருமானுக்குப்
புரிகுழல் தேவியை (மனைவியை) விரும்பிக் கொடுத்த பெரிய அன்பினை உடைய வரகுண
தேவரும், (வரகுண பாண்டியன்)
இனைய தன்மையர் எண்ணிறந் தோரே
அனையவர் நிற்க யானும் ஒருவன்
பத்தி என்பதோர் பாடும் இன்றிச்
சுத்த னாயினும் தோன்றாக் கடையேன் நின்னை
இறைஞ்சிலன் ஆயினும் ஏத்திலன் ஆயினும்
தெளிவுரை : இத்தகைய தியாகசீலர்கள் பலர் இருந்துள்ளனர். அவர்கள் ஒரு புறம் இருக்க,
யானும் ஒருவன் பக்தி என்று எதையும் செய்யாமல் போனாலும் பரிசுத்தன் ஆயினும்,
கடையேனாகிய யான் உன்னைத் துதிக்கவில்லையாகினும் வணங்க வில்லையாயினும்,
வருந்திலன் ஆயினும் வாழ்த்திலன் ஆயினும்
கருதி யிருப்பன் கண்டாய் பெரும
நின்னுல(கு) அனைத்தும் நன்மை தீமை
ஆனவை நின்செயல் ஆதலின்
நானே அமையும் நலமில் வழிக்கே.
தெளிவுரை : வருந்தவில்லை என்றாலும் வாழ்த்தவில்லை என்றாலும் உன்னையே நினைத்துக்
கொண்டிருப்பேன். இதை நீ காண்பாயாக. பெருமானே ! உன்னுடைய உலகத்தில் நன்மை தீமை
முதலானவை நின் செயலாதலின் நலமில் வழிக்கு யானே அமையும்.
எனவே என்னை ஏற்றுக் கொள்வாய் என்பதாம்.
வெண்பா
-
வழபிழைத்து நாமெல்லாம் வந்தவா செய்து
பழிபிழைத்த பாவங்கள் எல்லாம் - பொழில்சூழ்
மருதிடத்தான் என்றொருகால் வாய்கூப்ப வேண்டா
கருதிடத்தாம் நில்லா கரந்து.
தெளிவுரை : நடக்க வேண்டிய நெறிமுறைகளைத் தவறி, நாம் எல்லாம் நினைத்தபடியே தொழில்
செய்து பழிபிழைத்த பாவங்கள் எல்லாம், சோலைகள் சூழ்ந்த திருவிடைமருதூரில் கோயில்
கொண்டவன் என்று வாயினால் சொல்லக்கூட வேண்டா. நினைத்தாலே போதுமானது. அவனைத்
தொழுதால் நற்கதி பெறலாம் என்றபடி.
கட்டளைக் கலித் துறை
-
கரத்தினில் மாலவன் கண்கொண்டு
நின்கழல் போற்றநல்ல
வரத்தினை ஈயும் மருதவப்
பாமதி ஒன்றும்இல்லேன்
சிரத்தினு மாயென்றன் சிந்தைபு
ளாகிவெண் காடனென்னும்
தரத்தினும் ஆயது நின்னடி
யாம்தெய்வத் தாமரையே.
தெளிவுரை : (திருமால் சிவனை வழிபடும்போது ஆயிரம் மலர்களுள் ஒன்று குறைய அதை
ஈடு செய்வான் வேண்டி,) தன் கண்களில் ஒன்றைப் பறித்து கையில் ஏந்திப் போற்ற நல்ல
வரத்தினைத் தந்த திருவிடை மருதப்பனே. நான் அறிவற்றவன்; என்னை நீ ஆட்கொண்டு
திருவெண்காடர் என்ற பெயருக்கேற்ப என் நிலையையும் உயர்த்தியுள்ளாய். ஆகவே, உன்
திருவடியாகிய தெய்வத் தாமரையுள் நான் சரண் அடைந்தேன். நான் நற்கதி பெற அருள்
செய்வாயாக.
திருச்சிற்றம்பலம்
திருஏகம்பமுடையார் திருவந்தாதி
( பட்டினத்துப்பிள்ளையார்அருளிச்செய்தது )
அந்தாதித் தொடை பொருந்த நூறு பாடல்களைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் இந்நூல்
காஞ்சி மாநகரில் உள்ள திருவேகம்பம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளிய சிவ
பெருமானைப் புகழ்ந்து பாடியது ஆதலின் திருவேகம்பமுடையார் திருவந்தாதி எனப் பெயர்
பெற்றது.
திருவேகம்பத்தில் எழுந்தருளிய பெருமானே ! மெய்யறிவினால் நின்னை வழிபட்டொழுகும்
மெய்யன்பர்கள் செல்லும் ஞானநெறி இதுவென உணர்ந்திலேன். சரியை கிரியை ஆகிய கைத்
தொண்டு செய்து நின்னடி வணங்கும் அடியார்கள் தொண்டினை மகிழ்ந்து மேற்கொண்டேன்
அல்லேன். உடல் வளர்க்கும் உணவினையே விரும்பிப் பொய்யாக உன்னைப் போற்றிப் புறமே
திரியும் அடியவனாகிய எளியேனுடைய பணியையும் ஏற்றுக் கொள்வாயோ?
சிவபெருமானுக்குத் தொண்டு பூண்டதன் பயன் அவனடியார்களுக்குப் பணி செய்து
ஒழுகுதலேயாகும். அடியார்களுடைய திருவடித் துகளைத் தலைமேற் கொள்வாருள்ளம் தெளிவு
பெறும். ஆகையால் அவர்கள் சிவபிரான் அருள் பெறுதல் ஒருதலை. சிவபெருமானுடைய
திருவடிகளை வணங்குவதற்கே தம் தலையினைப் பயன்படுத்தும் பெருவிருப்புடைய
மெய்யடியார்களோடு இணங்கிப் பழகுவது அல்லாமல் பிறரோடு தாம் நெருங்கிப்
பழகுவதில்லை.
பிற தெய்வங்களைக் கடவுளாக எண்ணிப் புலமை மிக்கோர் பாடும் செய்யுட் பொருட்கள்
முடிவில் ஏகம்ப நாதராகிய முழுமுதற் பொருளைச் சென்று சாரும். போர் செய்து பகை
வேந்தரை வெல்லும் பேரரசர்களாயினும் எவ்வுயிர்க்கும் இறைவராகிய ஏகம்பவாணருடைய
திருவருள் வடிவாகத் திகழும் திருநீற்றினைத் தம்முடைய நெற்றியில் அணிந்து
அப்பெருமானைப் போற்றாராயின் அவ் அரசருடைய அரசாட்சி முதலியன நிலை பெறல் இல்லை.
பூதேவர் என்று போற்றப் பெறும் தலைமையைப் பிறப்பினால் அடைந்து மறைகளை மறவாது ஓதி,
வேள்விகளை முறைப்படி செய்து வந்தாலும், திருவேகம்பரைத் தொண்டர்களோடும் கூடித்
தொழும் திருவருள் நலம் அமையப் பெறாதவர்கள் காடுகளில் வேட்டையாடித் திரியும்
வேடர்களோடு சேர்த்து எண்ணப் பெறும் தாழ்வுடையவராவர். சீலமின்றி அறிவின்றிக் கொலை
களவு முதலிய தீமை புரிந்தொழுகும் கீழ்க்குல மக்களாயினும் ஏகம்பத்து இறைவனுடைய
திருவடிக்கு அன்புடைய தொண்டராயின் அவர்களே சிறந்தவர்களாகப் போற்றத் தக்கவராவர்
என்பன போன்ற பல செய்திகள் இவ் அந்தாதியில் அமைந்துள்ளன.
திருச்சிற்றம்பலம்
கட்டளைக் கலித் துறை
-
மெய்த்தொண்டர் செல்லும் நெறியறி
யேன்மிக நற்பணிசெய்
கைத்தொண்டர் தம்மிலும் நற்றொண்(டு)
உவந்திலன் உண்பதற்கே
பொய்த்தொண்டு பேசிப் புறம்பற
மேஉன்னைப் போற்றுகின்ற
இத்தொண்ட னேன்பணி கொள்ளுதி
யோகச்சி ஏகம்பனே.
தெளிவுரை : கச்சித் திருவேகம்பத்தில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானே !
உண்மையான அடியவர்கள் செல்லுகின்ற சிவநெறியை நான் அறிந்திலேன். நற்பணி செய்யும்
ஒழுக்கமுள்ள தொண்டர்களைக் காட்டிலும் நற்றொண்டை விரும்பவில்லை. உண்டு உயிர்
வாழ்வதற்காகப் பொய்த் தொண்டு பேசி, புறத்தில் மட்டுமே உன்னை வழிபடுகின்ற
அடியேனுடைய தொண்டினைக் கொள்வாயாக.
-
ஏகம்ப னேஎன்னை ஆள்பவ
னேஇமை யோர்க்கிரங்கிப்
போகம்பன் னாளும் கொடுக்கின்ற
நாயக பொங்கும்ஐவாய்
நாகம்பொன் ஆரம் எனப்பொலி
வுற்றுநல் நீறணியும்
ஆகம்பொன் மாமலை ஒப்பவ
னேயென்பன் ஆதரித்தே.
தெளிவுரை : கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளியிருப்பவனே ! என்னை ஆட்கொண்டவனே.
தேவர்களுக்கு இரங்கி நுகர் பொருள்களை எப்போதும் கொடுக்கின்ற நாயகனே ! சீறி
வருகின்ற ஐந்து தலைகளையுடைய பாம்பு பொன் ஆபரணத்தைப் போல் பொலிவுற, நல்ல திருநீறு
அணியும் உடல் பொன்மா மலைபோல உள்ளவனே, என்னை ஆதரிக்குமாறு வேண்டுகிறேன்.
-
தரித்தேன் மனத்துன் திகழ்தரு
நாமம் தடம்பொழில்வாய்
வரித்தேன் முரல்கச்சி ஏகம்ப
னேயென்றன் வல்வினையை
அரித்தேன் உனைப்பணி யாதவர்
ஏழைமை கண்டவரைச்
சிரித்தேன் உனக்கடி யாரடி
பூணத் தெளிந்தனனே.
தெளிவுரை : உன்னுடைய சிறந்த திருப்பெயரை என் மனத்துள் பொருத்திக் கொண்டேன். பெரிய
சோலையிடத்தில் கீற்றுக்களையுடைய வண்டுகள் ஒலி செய்கின்ற கச்சியம்பதியில் கோயில்
கொண்டிருக்கும் ஏகம்பனே ! என் வல்வினைகளைப் போக்கினேன். உன்னை வணங்காதவர் ஏழைமை
கண்டவர்கள் என எள்ளி நகையாடினேன். உன்னுடைய மெய்த் தொண்டர்களின் பாதங்களை அணியத்
தெரிந்து கொண்டேன்.
-
தெளிதரு கின்றது சென்றென்
மனம்நின் திருவடிவம்
அளிதரு நின்னருட்(கு) ஐயம்
இனியில்லை அந்திச்செக்கர்
ஒளிதரு மேனிஎம் ஏகம்ப
னேஎன்(று) உகந்தவர்தாள்
தளிதரு தூளிஎன் றன்தலை
மேல்வைத்த தன்மைபெற்றே.
தெளிவுரை : என் மனம் உன் திருவடிவத்தில் சென்று பதிந்தமையால்
தெளிவடைகின்றது. அருள் பாலிக்கின்ற நின் கருணைக்கு இனி சந்தேகம் இல்லை. மாலையில்
தோன்றும் செவ்வானம் போல் ஒளிதரும் மேனி ஏகம்பனே என்று மகிழ்ந்தவர்களின் பாதமாகிய
திருக்கோயிலில் உள்ள புழுதி என் தலைமேல் வைத்த தன்மை பெற்று உய்ந்தேன்.
-
பெற்றுகந் தேன்என்றும் அர்ச்சனை
செய்யப் பெருகுநின்சீர்
கற்றுகந் தேன்என் கருத்தினி
தாக்கச்சி ஏகம்பத்தின்
பற்றுகந் தேறும் உகந்தவ
னேபட நாகக்கச்சின்
சுற்றுகந் தேர்விடை மேல்வரு
வாய்நின் துணையடியே.
தெளிவுரை : அர்ச்சனை செய்யப் பெருகும் நின்னுடைய சிறப்புக்களைக் கற்று
மகிழ்ந்தேன். கச்சி ஏகம்பத்தின் விருப்பத்தை இனிதாகக் கொண்டு மகிழ்ந்து, காளையை
ஊர்தியாக உடையவனே. படத்தையுடைய பாம்பைக் கச்சையாக விரும்புகின்றவனே. உன்னுடைய
இரண்டு பாதங்களையே பற்றுக் கோடாக விரும்பி ஏற்றுக் கொண்டேன்.
-
அடிநின்ற சூழல் அகோசரம்
மாலுக்(கு) அயற்(கு) அலரின்
முடிநின்ற சூழ்முடி காண்பரி
தாயிற்றுக் கார்முகிலின்
இடிநின்ற சூழ்குரல் ஏறுடை
ஏகம்ப யாம்எங்ஙனே
வடிநின்ற சூலப் படையுடை
யாயை வணங்குவதே.
தெளிவுரை : உன்னுடைய திருவடி யிருந்த இடம் திருமாலுக்கு அறிய முடியாதது.
நான்முகனுக்கு, கொன்றையலர் தாங்கிய உன் திருமுடி காண முடியாதாயிற்று.
கருமேகத்தின் இடியைப் போல் ஒலிக்கும் குரலை யுடைய காளையை ஊர்தியாக உடைய ஏகம்பனே !
யாம் எவ்வாறு கூர்மை பொருந்திய சூலப் படையை உடைய உன்னை வணங்குவது?
-
வணக்கம் தலைநின் திருவடிக்
கேசெய்யும் மையல்கொண்டோர்
இணக்கன்றி மற்றோர் இணக்கறி
வோம்அல்லம் வல்லரவின்
குணக்குன்ற வில்லி குளிர்கச்சி
ஏகம்பம் பாடின்அல்லால்
கணக்கன்று மற்றொரு தேவரைப்
பாடும் கவிநலமே.
தெளிவுரை : வணக்கம் தலைநின் திருவடிக்கே செய்யும் பேரன்பு கொண்டவர், நட்பு
இல்லாமல் வேறு வழியை அறிவோம் அல்லோம். வல்லரவை நாணாகவும் மேரு மலையை வில்லாகவும்
கொண்ட குளிர் கச்சி ஏகம்பனைப் பாடுவதன்றி வேறு ஒரு தேவரைப் பாடும் கவி நலம்
பொருட் படுத்தக் கூடியதன்று.
-
நலந்தர நான்ஒன்று சொல்லுவன்
கேண்மின்நல் லீர்கள்அன்பு
கலந்தர னார்கச்சி ஏகம்பம்
கண்டு கனல்திகிரி
சலந்தரன் ஆகம் ஒழிக்கவைத்
தாய்தக்கன் வேள்வியெல்லாம்
நிலந்தர மாகச்செய் தாயென்று
பூசித்து நின்மின்களே.
தெளிவுரை : நல்லவர்களே ! நன்மை பெற நான் ஒன்று சொல்கின்றேன் கேளுங்கள். அன்பு
கலந்து அரனார் கச்சி ஏகம்பம் கண்டு, தீப்பிழம்பைக் கக்கும் உருளைப் படையைக்
கொண்டு சலந்தரன் உடம்பை ஒழியும்படி செய்தாய், தட்சனது யாகத்தை அழியும்படி
செய்தாய், என்று வழிபாடு செய்யுங்கள் என்றபடி.
-
மின்கள்என் றார்சடை கொண்டல்என்
றார்கண்டம் மேனிவண்ணம்
பொன்கள்என் றார்வெளிப் பாடுதம்
பொன்அடி பூண்டுகொண்ட
என்கள்என் றாலும் பிரிந்தறி
யார்கச்சி ஏகம்பத்தான்
தன்கள்என் றார்உல கெல்லாம்
நிலைபெற்ற தன்மைகளே.
தெளிவுரை : சடையை மின்னல்கள் என்றார்கள். கண்டத்தைக் கொண்டல்கள் என்றார்கள். மேனி
வண்ணத்தைப் பொன்கள் என்றார்கள். அவருடைய பொன்னடியைச் சிரமேற்கொண்ட அடியார்கள்.
என்றாலும் பிரிந்தறியார். கச்சி ஏகம்பத்தான் தன்மைகளே உலகெல்லாம் நிலை பெற்றன
என்பதாம்.
-
தன்மையிற் குன்றாத் தவத்தோர்
இமையவர் தாம்வணங்கும்
வன்மையிற் குன்றா மதிற்கச்சி
ஏகம்பர் வண்கயிலைப்
பொன்மயிற் சாயலும் சேயரிக்
கண்ணும் புரிகுழலும்
மென்மையிற் சாயும் மருங்குலும்
காதல் விளைத்தனவே.
தெளிவுரை : தலைவியைப் பற்றித் தலைவன் பாங்கனிடம் கூறுதல்.
தன்மையில் குன்றாத தவத்தை உடையவராகிய தேவர்கள் வணங்குகின்ற, வலிமை பொருந்திய
மதில்களை உடைய கச்சி ஏகம்பரது வளப்பம் பொருந்திய கயிலை மலையில் தலைவியினது
பொன்மயில் போன்ற சாயலும், சேயரிக்கண்ணும் புரிகுழலும் மென்மையில் சாயும் இடையும்
எனக்குக் காதலை விளைத்தன.
-
தனமிட் டுமைதழு வத்தழும்
புற்றவர் தம்அடியார்
மனம்விட் டகலா மதிற்கச்சி
ஏகம்பர் வான்கயிலைச்
சினம்விட் டகலாக் களிறு
வினாவியோர் சேயனையார்
புனம்விட் டகலார் பகலாம்
பொழுதும்நம் பூங்கொடியே.
இது தலைவிக்குத் தோழி கூறியது.
தெளிவுரை : உமாதேவியார் நடுங்கி இறைவனைச் சேர்த்துத் தழுவிக் கொள்ள
முலைத்தழும்பைப் பெற்ற ஏகம்பரது அடியார்களது மனத்தை விட்டு அகலாத மதில்களை உடைய
கச்சி ஏகம்பரது வான் கயிலையில் சினம் விட்டு அகலாத ஆண் யானை இங்கு வந்ததா என்று
கேட்டுக்கொண்டு முருக வேளைப் போன்றவர் பகல் முழுவதும் நம் புனத்தைவிட்டு அகலாமல்
இருக்கிறார் என்று தலைவிக்குத் தோழி கூறினாள் என்க.
-
பூங்கொத் திருந்தழை யார்பொழில்
கச்சிஏ கம்பர்பொற்பார்
கோங்கத் திருந்த குடுமிக்
கயிலைஎம் பொன்னொருத்தி
பாங்கொத் திருந்தனை ஆரணங்
கேபடர் கல்லருவி
ஆங்கத் திருந்திழை ஆடிவந்
தாற்கண்(டு) அடிவருத்தே.
தெளிவுரை : திருமகளே ! பூங்கொத்துக்களையுடைய சோலைகள் சூழ்ந்திருக்கும் கச்சி
ஏகம்பரது அழகமைந்த சிகரத்தை உடைய கயிலையில் எம் பொன்போன்ற தலைவியின் இயல்பை
ஒத்திருந்தாய். படர்ந்த மலை யருவியில் அவள் ஆடி வந்தால் அவளைக் கண்டு பிறகு
செல்வாயாக. இது நாண நாட்டம்.
-
வருத்தம் தருமெய்யும் கையில்
தழையும்வன் மாவினவும்
கருத்தந் தரிக்கு நடக்கவின்(று)
ஐய கழல்நினையத்
திருத்தந் தருளும் திகழ்கச்சி
ஏகம்பர் சீர்க்கயிலைத்
துருத்தந் திருப்பதன் றிப்புனங்
காக்கும் தொழில்எமக்கே.
பாங்கி எதிர்மொழி கொடுத்தல்.
தெளிவுரை : வருத்தத்தையுடைய உடம்பும், கையில் தழையும் கொண்டு வலிய யானை இங்கு
வந்ததா என்று கேட்கும் வண்ணம் மாறுபாடு உடையதாகும். கழல் நினையத் திருத்
தந்தருளும்படி திகழ்கின்ற கச்சி ஏகம்பரது சிறப்புடைய கயிலை ஆராய்வு
தந்திருப்பதன்றி எங்களுடைய வேலை தினைப் புனத்தைக் காப்பதுதான்.
-
எம்மையும் எம்மைப் பணிகொள்ளும்
கம்பர் எழிற்கயிலை
உம்மையும் மானிடம் இப்புனத்
தேவிற்று வந்தமைந்தர்
தம்மையும் மானையும் சிந்தையை
நோக்கங் கவர்வஎன்றோ
அம்மையும் அம்மலர்க் கண்ணும்
பெரியீர் அருளுமினே.
இது கலைமான் வினாதல் என்னும் துறை.
தெளிவுரை : எம்மையும் எம்மைப் பணிகொள்ளும் திருவேகம் பத்து இறைவர் எழிற்
கயிலையில் உங்களையும் மான் போன்ற பெண்ணையும் இப்புனத்தில் இருத்தி, இங்கு வரும்
மைந்தரையும் மானையும் சிந்தையையும் கவர்வதற் கென்றே கண்ணிற்கு இடும் மையையும்
மலரைப் போல விரிந்து பரந்த கண்களையும் பெரியீர் அருளுமின்.
-
அருளைத் தருகம்பர் அம்பொற்
கயிலையுள் எம்மையரம்
பிருளைக் கரிமறிக் கும்மிவர்
ஐயர் உறுத்தியெய்ய
வெருளக் கலைகணை தன்னொடும்
போயின வில்லிமைக்கு
மருளைத் தருசொல்லி எங்கோ
விளையுண்(டு)இவ் வையகத்தே.
தெளிவுரை : அருளைத் தருகின்ற திருவேகம்பத்து இறைவர் அழகிய பொன்போன்ற கயிலையுள்
எம்மையர் யானையை நோக்கி வலிகொண்டு அம்புவிட, வெகுண்ட கலைமான் அந்த அம்போடு
போயிற்று. வில்லின் வன்மை போன்ற மயக்கத்தைத் தரும் சொல்லிக்கு இவ் வையகத்துள்
விலை எங்குள்ளது?
-
வையார் மழுப்படை ஏகம்பர்
ஈங்கோய் மலைப்புனத்துள்
ஐயார் வருகலை ஏனம்
கரிதொடர் வேட்டையெல்லாம்
பொய்யான ஐயர் மனத்தவெம்
பூங்கொடி கொங்கைபொறாப்
பையார் அரவிடை ஆயிற்று
வந்து பரிணமித்தே.
தெளிவுரை : இது தோழி கூற்று. கூர்மை பொருந்திய மழுப்படையை உடைய ஏகம்பர் கோயில்
கொண்டிருக்கும் ஈங்கோய் மலைப் புனத்தில் அழகு பொருந்தி வருகின்ற மான், பன்றி,
யானை இவைகளைத் தொடர்ந்து வேட்டையாடும் பொய்யான தலைவர் மனத்தின்கண் உள்ளது
யாதெனில் பூங்கொடி போன்றவளது கொங்கையானது தோன்றி பாரத்தைத் தாங்காமல் இடை
இல்லையாயிற்று என்பதாம்.
-
பருமுத் துதிர்த்திடும் சீர்மத்த
யானை நுதல்பகுந்திட்(டு)
உருமொத்த திண்குரல் சீயம்
திரிநெறி ஓங்குவைவாய்ப்
பொருமுத் தலைவேல் படைக்கம்பர்
பூங்கயி லைப்புனத்துள்
தருமுத் தனநகை தன்நசை
யால்வெற்ப சார்வரிதே.
தெளிவுரை : தோழி இரவு வரல் விலக்கல் : குறிஞ்சி நிலத் தலைவனே !
பெரிய முத்துக்கள் உதிர்த்திடும் சீர்மதம் மிக்க யானையின் நெற்றியைப் பிளந்து
இடிபோன்ற குரலையுடைய சிங்கம் திரிகின்ற மாறுபாடான பாலை வழியில் ஓங்கிய கூரிய
முத்தலை வேல் ஏந்திய ஏகம்பர் பூங்கயிலைப் புனத்துள், பல்வரிசை சிறந்த தலைவியின்
விருப்பத்தால் இச்சுரத்திடை வரவேண்டாம். அது அடைதற்கு அரியது.
-
அரிதின் திருக்கண் இடநிரம்
பாயிரம் போதணிய
அரிதன் திருவடிக்(கு) அற்சித்த
கண்ணுக்(கு) அருளுகம்பர்
அரிதன் திருக்கங் குலியால்
அழிந்த கயிலையல்லிங்(கு)
அரிதென்(று) இருப்ப(து)எம் பால்வெற்ப
எம்ஐயர்க்(கு) அஞ்சுதுமே.
தெளிவுரை : இது தோழி கூற்று. மலை நாட்டுத் தலைவ ! ஆயிரம் மலர்களில் ஒன்று குறைய,
திருமால் தன் கண்ணை இடந்து அர்ச்சிக்க அருள் பாலித்த கம்பர், பகைவனாக வந்த
இராவணனது மயக்கம் தீர கால் விரலால் அழித்த கயிலையில் இரவு நேரத்தில் இங்கு
இருப்பது ஆபத்தானது. உங்களுக்கா நாங்கள் அஞ்சுகிறோம் என்பதாம்.
-
அஞ்சரத் தான்பொடி யாய்விழத்
தீவிழித்(து) அன்புசெய்வோர்
நெஞ்சரத் தாழ்வுகந் தோர்கச்சி
ஏகம்பர் நீள்கயிலைக்
குஞ்சரத் தாழ்வரை வீழநுங்
கொம்புய்யக் கும்பமூழ்கும்
வெஞ்சரத் தாரன வோவல்ல
வோஇவ் வியன்முரசே.
மணமுரசின் சிறப்புக் கூறயவாறு.
தெளிவுரை : மன்மதன் எரிந்து சாம்பலாக நெற்றிக்கண்ணை விழித்து அன்பு செய்தவர்.
மெய்யடியார்கள் செய்யும் குற்றம் குறைகளை உயர்வாகவே கருதும் கச்சி ஏகம்பரது
கயிலையின்கண் யானைகள் சஞ்சரிக்கும் தாழ்வரை வீழ, உங்களுடைய கொம்புய்யக் கும்ப
மூழ்கும் வெஞ்சரத்தாரனவோ இந்தப் பெரிய மணமுரசு.
-
சேய்தந் தகைமை உமைகண
வன்திரு ஏகம்பத்தான்
தாய்தந்தை யாயுயிர் காப்போன்
கயிலைத் தயங்கிருள்வாய்
வேய்தந்த தோளிநம் ஊச
லொடும்விரை வேங்கைதன்னைப்
பாய்தந்து பூசலுண் டாங்கொண்ட(து)
ஓசைப் பகடுவந்தே.
தெளிவுரை : உயர்ந்த தகைமையுடைய உமாதேவியின் கணவன் திரு ஏகம்பத்தான், தாய்
தந்தையாய் உயிர் காப்போன். அவனுடைய கயிலை மலையில் இருள் நிறைந்த நேரத்தில்
மூங்கில் போன்ற தோள்களை யுடைய தலைவியின் ஊசலொடு யானை வேங்கை மரத்தைக் குத்தியதால்
ஓசை உண்டாயிற்று.
-
வந்தும் மணம்பெறின் பொன்னனை
யீர்மன்னும் ஏகம்பர்தம்
முந்தும் அருவிக் கயிலை
மலையுயர் தேனிழிச்சித்
தந்தும் மலர்கொய்தும் தண்தினை
மேயுங் கிளிகடிந்தும்
சிந்தும் புகர்மலை கைச்சுமிச்
சாரல் திரிகுவனே.
இது தலைவன் கூற்று.
தெளிவுரை : திருமகளைப் போன்றவர்களே ! உம்மை மணம் பெறின், நிலைபெற்ற ஏகம்பருடைய
முந்தும் அருவிக் கயிலை மலையில் தேன் எடுத்தும், மலர் கொய்தும் தினைப் புனத்தில்
மேயும் கிளிகளை விரட்டியும், புள்ளிகளை உடைய யானையை ஓட்டியும் இச்சாரலில் இந்த
ஏவல்களை யெல்லாம் செய்வேன்.
-
திரியப் புரமெய்த ஏகம்ப
னார்திக ழுங்கயிலைக்
கிரியக் குறவர் பருவத்
திடுதர ளம்வினையோம்
விரியச் சுருள்முத லானும்
அடைந்தோம் விரைவிரைந்து
பிரியக் கதிர்முத்தின் நீர்பெற்ற
தென்னங்குப் பேசுமினே.
தெளிவுரை : திரிபுரங்களை எரித்த ஏகம்பனார் திகழும் கயிலை மலைக் குறவர் பருவத்தில்
முத்துக்களை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இறைவனது அருளையும் பெற்றோம்.
விரைந்து செய்யும் இப்பணியில் நீர் பெற்றது என்ன சொல்லுங்கள்?
-
பேசுக யாவரு மைக்கணி
யாரென்று பித்தரெங்கும்
பூசுகை யார்திரு நீற்றெழில்
ஏகம்பர் பொற்கயிலைத்
தேசுகை யார்சிலை வெற்பர்
பிரியும் பரிசிலர்அக்
கூசுகை யாதும்இல் லாக்குலை
வேங்கைப் பெயர்நும்மையே.
தெளிவுரை : பேசுக, யாவரும். வேங்கை மரம் என்று பித்தர் எங்கும் கூறுவர். திருநீறு
பூசிய ஏகம்பரது பொற் கயிலையில் நும்மைப் பிரியும் பரிசிலர் பொன் பெற்றுச்
செல்வர். யாதுமில்லாக் குலை வேங்கைப் பெயர் எதற்கு?
-
பெயரா நலத்தொழில் ஏகம்ப
னார்பிறை தோய்கயிலைப்
பெயரா திருக்கப் பெறுகிளி
காள்புன மேபிரிவின்
துயரால் வருந்தி மனமும்இங்(கு)
ஓடித் தொழுதுசென்ற(து)
அயரா துரையும்வெற் பற்(கு)அடி
யேற்கும் விடைதமினே.
இது தலைவி கூற்று. இது கிளிகளைப் பார்த்துக் கூறியது.
தெளிவுரை : பெயரா நலத்தொழில் ஏகம்பனார் பிறைதோய்கின்ற கயிலையை விட்டு நீங்காமல்
இருக்கின்ற கிளிகளே ! நாங்கள் பிரிந்து செல்வதால் இந்தத் தினைப்புனம் துயரால்
வருந்தியது. நீங்கள் மறவாமல் வெற்பற்கு (மலைநாட்டுத் தலைவருக்கு) சொல்லுங்கள்.
எங்களுக்கும் விடை தாருங்கள்.
-
தம்மைப் பிறவிக் கடல்கடப்
பிப்பவர் தாம்வணங்கும்
மும்மைத் திருக்கண் முகத்தெழில்
ஏகம்பர் மொய்கயிலை
அம்மைக் கருங்கண்ணி தன்னொ(டு)இன்
பம்தரும் தண்புனமே
எம்மைக் கவலை செயச்சொல்லி
யோவல்லி எய்தியதே.
தலைவன் வறும் புனம் கண்டு வருந்துதல்.
தெளிவுரை : நம்மைப் பிறவிக் கடலினின்றும் கரையேற்றுபவர். நாம் வணங்கும் அழகு
செய்யும் மூன்று கண்களை உடைய ஏகம்பர் நெருக்கமான கயிலை மலையில் அம்மைக் கருங்
கண்ணியோடு இன்பம் தரும் குளிர்ந்த தினைப் புனமே என்னைக் கவலையில் ஆழ்த்திவிட்டு
வல்லிக்கொடி போன்றவள் சென்றுவிட்டாள்.
-
இயங்கும் திரிபுரம் எய்தஏ
கம்பர் எழிற்கயிலைத்
தயங்கு மலர்ப்பொழில் காள்தையல்
ஆடரு வித்தடங்காள்
முயங்கு மணியறை காள்மொழி
யீர்ஒழி யாதுநெஞ்சம்
மயங்கும் பரிசுபொன் னார்சென்ற
சூழல் வகுத்தெமக்கே.
தெளிவுரை : பறந்து செல்லும் மூன்று கோட்டைகளை அழித்த ஏகம்பரது எழிற் கயிலையில்
விளங்கும் மலர்ச் சோலைகளே ! தலைவி நீராடும் அருவிகளே ! நெருங்குகின்ற பளிங்குப்
பாறைகளே ! இடைவிடாமல் நெஞ்சம் மயங்கும் பரிசு பொன்னார் சென்ற சூழலை வகுத்தெமக்கு
மொழியுங்கள்.
இது தலைவன் கூற்று.
-
வகுப்பார் இவர்போல் மணத்துக்கு
நாள்மணந் தன்னொடின்பம்
மிகுப்பார்கள் ஆருயிர் ஒன்றாம்
இருவரை விள்ளக்கள்வாய்
நெகுப்பால் மலர்கொண்டு நின்றார்
கிடக்க நிலாவுகம்பர்
தொகுப்பால் மணிசிந் தருவிக்
கயிலைஇச் சூழ்புனத்தே.
தெளிவுரை : தோழி வரையும் நாள் உணர்த்தல். இந்த வேங்கை மரம் பூத்தது. இது மணம்
செய்யத்தக்க நாள் என்பது குறிப்பு. இவர் என்றது வேங்கையை. திருவேகம்பர்
தொகுப்பால் மணியைச் சிந்துகின்ற அருவிகளை உடைய கயிலைச் சூழ்ந்த இத் தினைப்
புனத்தில் வகுத்துக் கூறுபவர்போல இந்த வேங்கை மரம் மணத்துக்கு நாள் குறிப்பதைப்
போல, தீப்போன்ற தன் மலர் கொண்டு பூத்திருக்கிறது. இனி தலைவி தலைவன் இவர்கள் மனம்
ஒன்றுபட்டு இன்பம் நுகருவார்கள் என்பதாம்.
-
புனங்குழை யாதென்று மென்தினை
கொய்ததும் போகலுற்ற
கனங்குழை யாள்தற் பிரிய
நமக்குறும் கையறவால்
மனங்குழை யாவரும் கண்களி
பண்பல பாடுந்தொண்டர்
இனங்குழை யாத்தொழும் ஏகம்பர்
இக்கயி லாயத்துள்ளே.
தெளிவுரை : இது தலைவன் கூற்று. தினை கொய்தவுடன் தலைவியை இற் செறித்துவிட்டார்கள்.
தொண்டர்கள் அன்பின் மிகுதியால் தோத்திரப் பாடல்களைப் பாடும் ஏகம்பரது
இக்கயிலாயத்துள்ளே புனங் குழையாதென்று மென் தினையைக் கொய்தவுடன் சென்றுவிட்ட
தலைவியை இல்லிலேயே இருக்குமாறு செய்து விட்டார்கள். இதனால் யானுற்ற துன்பம்
கொஞ்சமோ என்று தலைவன் வருந்தினான் என்க.
-
உள்ளம் பெரியரல் லாச்சிறு
மானுடர் உற்றசெல்வம்
கள்ளம் பெரிய சிறுமனத்
தார்க்கன்றிக் கங்கையென்னும்
வெள்ளம் பெரிய சடைத்திரு
ஏகம்பர் விண்ணரணம்
தள்ளம்(பு) எரிகொண் டமைத்தார்
அடியவர் சார்வதன்றே.
தெளிவுரை : கங்கை என்னும் பெரிய நீர்ப்பெருக்கினைச் சடையில் தாங்கிய ஏகம்பர்
வானத்தில் அமைந்திருந்த மூன்று கோட்டைகளை ஓர் அம்பினால் எரித்துத் தன்
அடியவர்களுக்கு வாழ்வளித்தார். விசாலமான மனம் படைத்திராத சிறு மானிடர்களிடம் உள்ள
பெருஞ்செல்வம் கள்ளமுடைய சிறு மனத்தார்க்கே பயன்படும் என்பதாம்.
-
அன்றும் பகையடர்க் கும்பரி
மாவும் மதமருவிக்
குன்றும் பதாதியும் தேரும்
குலவிக் குடைநிழற்கீழ்
நின்றும் பொலியினும் கம்பர்நன்
னீறு நுதற்கிலரேல்
என்றும் அரசும் முரசும்
பொலியா இருநிலத்தே.
தெளிவுரை : இந்தப் பெரிய உலகத்தில் யானை, குதிரை, தேர், காலாள் என்னும் நால்வகைப்
படையோடுகூடிக் குடை நிழற் கீழ் இருந்து ஆட்சி செய்த பெருமன்னரும் திருஏகம்பரது
திருநீறு அவர்கள் நெற்றியில் இல்லையேல் அவர்களுடைய அரசும் பேரிகையும் பொலிந்து
இரா, பகைவர்களும் வந்து வருத்துவார்கள்.
-
நிலத்திமை யோரில் தலையாய்ப்
பிறந்து மறையொ(டு)அங்கம்
வலத்திமை போதும் பிரியா
எரிவளர்த் தாலும்வெற்பன்
குலத்துமை யோர்பங்கர் கச்சியுள்
ஏகம்பம் கூடித்தொழும்
நலத்தமை யாதவர் வேட்டுவர்
தம்மின் நடுப்படையே.
தெளிவுரை : அந்தணர்கள் மேற்சாதியில் பிறந்து வேதங்களை முறையாக ஓதி, தீயை
இடைவிடாது வளர்த்தாலும் உமாதேவியாரை இடப்பாகத்தில் கொண்ட காஞ்சி புரத்தில் கோயில்
கொண்டிருக்கும் ஏகாம்பர நாதரைக் கூடித் தொழாதவர்கள் வேடுவர்களாகவே கருதப்
படுவார்கள்.
-
படையால் உயிர்கொன்று நின்று
பசுக்களைப் போலச்செல்லும்
நடையால் அறிவின்றி நட்பிடைப்
பொய்த்துக் குலங்களினும்
கடையாய்ப் பிறக்கினும் கச்சியுள்
ஏகம்பத்(து) எங்களையாள்
உடையான் கழற்(கு)அன்ப ரேல்அவர்
யாவர்க்கும் உத்தமரே.
தெளிவுரை : ஆயுதங்களால் பிற உயிர்களைக் கொன்று, பசுக்களைப் போலச் சாதுவாக
நடித்து, அறிவில்லாமல் நண்பர்கள் இடையே பொய்பேசி, கீழான சாதியில் கடைப்பட்டுப்
பிறந்தாலும் காஞ்சி புரத்தில் ஏகம்பத்தில் எங்களை ஆட்கொண்ட பெருமானது
திருவடிகளுக்கு அன்பராகில் அவர்கள் எல்லாரையும்விட உத்தமர்களே. (இதுபோல்
திருநாவுக்கரசரும் பாடியுள்ளார்.)
-
உத்துங்க யானை உரியார்
விரலால் அரக்கன்சென்னி
பத்தும்கை யான இருபதும்
சோர்தர வைத்திலயம்
ஒத்துங்கை யாலவன் பாடக்
கயிலையின் ஊடுகைவாள்
எத்துங்கை யான்என்(று) உகந்தளித்
தார்கச்சி ஏகம்பரே.
தெளிவுரை : பெரிய யானையின் தோலைப் போர்த்தியுள்ள கயிலைநாதர் தன் கால்விரலால்
இராவணனது தலைகள் பத்தும், கைகள் இருபதும் சோர்தர, வைத்து கைத் தாளத்தோடு ஒத்துப்
பாட அவனுக்குக் கைவாளை உகந்தளித்தவர் கச்சி ஏகம்பரே.
-
அம்பரம் காலனல் நீர்நிலம்
திங்கள் அருக்கன்அணு
அம்பரம் கொள்வதோர் வேழத்
துரியவன் தன்னுருவாம்
எம்பரன் கச்சியுள் ஏகம்பத்
தானிடை யாதடைவான்
நம்பரன் தன்னடி யார்அறி
வார்கட்கு நற்றுணையே.
தெளிவுரை : ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், மண், சந்திரன், சூரியன், ஆத்மா
என்னும் அஷ்டமூர்த்தியாய் உள்ளவனும் யானைத் தோலைப் போர்த்தவனுமாகிய எம் தலைவன்
கச்சியுள் கோயில் கொண்டிருக்கும் ஏகம்பரநாதரைச் சரணாக அடைபவர்களுக்கு அவன் நல்ல
துணையாவான்.
-
துணைத்தா மரையடி யும்பவ
ளத்திரள் நன்குறங்கும்
பணைத்தோள் அகலமும் கண்டத்து
நீலமும் அண்டத்துமின்
பிணைத்தா லனசடை யும்திரு
முக்கணும் பெண்ணொர்பக்கத்(து)
அணைத்தார் எழிற்கம்பர் எங்கள்
பிரானார்க்(கு) அழகியவே.
தெளிவுரை : இரண்டு பாதங்களும் தாமரை மலர்கள், பவளம் திரண்டது போன்ற தொடைகள்.
பணைத்த தோள்களும் மார்பும். கழுத்தில் நீலமும். வானத்தில் மின்னலை இணைத்தது போன்ற
சடையும், மூன்று அழகிய கண்களும், இடப்பாகத்தில் உமையும் பொருந்திய அழகிய உருவம்
உடையவர் ஏகம்பர். எங்கள் பிரானுக்கு இவை அழகு செய்கின்றன.
-
அழகறி விற்பெரி தாகிய
ஏகம்பர் அத்தர்கொற்றம்
பழகறி விற்பெரி யோர்தமைப்
பற்றலர் பற்றும்அன்பின்
குழகறி வேற்பினுள் ஒன்றறி
யார்அறி யாமைதெய்வம்
கிழகெறி யப்பட்(டு) உலந்தார்
உலகிற் கிடந்தனரே.
தெளிவுரை : அழகிலும் அறிவிலும் பெரிய ஏகாம்பரநாதர், தலைவர். கொற்றம் பழகு அறிவிற்
பெரியோர் தமைப் பற்றாதவர் பற்றும் அன்பின் குழகறி வேற்பினுள் ஒன்றறியாதவர்
அறியாமை தெய்வம் கீழே எறியப்பட்டு அழிந்தனர். உலகில் கேட்பாரற்றுக் கிடந்தனர்.
ஏகாம்பர நாதரை வணங்காதவர் சீரழிவர் என்றபடி.
-
கிடக்கும் ஒருபால் இரைக்கின்ற
பாம்பொரு பால்மதியம்
தொடக்குண்(டு) இலங்கும் மலங்கும்
திரைக்கங்கை சூடுங்கொன்றை
வடக்குண்டு கட்டத் தலைமாலை
வாளால் மலைந்தவெம்போர்
கடக்கும் விடைத்திரு ஏகம்பர்
கற்றைச் சடைமுடியே.
தெளிவுரை : சீறுகின்ற பாம்பு ஒருபால் கிடக்கும். வெள்ளைச் சந்திரன் மங்கலமாக
விளங்கும். திரைகளையுடைய கங்கை ததும்பும். கொன்றை மாலை துவண்டு தலை மாலையுடைய
வாளால் மலைந்த வெம்போரில் வெற்றி பெற்ற, விடையூறும் ஏகம்பர் கற்றைச் சடை முடி
இந்த நிலையை அடைந்தென்க.
-
கற்றைப் பவளச் சடைவலம்
பூக்கமழ் கொன்றையந்தார்
முற்றுற் றிலாமதி யின்கொழுந்
தேகம்பர் மொய்குழலாம்
மற்றைத் திசையின் மணிப்பொற்
கொழுந்தத் தரங்கழுநீர்
தெற்றிப் பொலிகின்ற சூட்டழ
காகித் திகழ்தருமே.
தெளிவுரை : கற்றையாக, பவள நிறம் பொருந்திய சடையின் வலப்பக்கத்தில் உள்ளது பூக்
கமழ்கின்ற கொன்றை மாலை. (முற்றாத) பிறைச் சந்திரனாகிய கொழுந்தே ! ஏகம்பரின்
இடப்பாகத்திலுள்ள உமாதேவியின் மொய் குழலில் செங்கழுநீர் மலர் பொலிந்து
விளங்குகிறது.
-
தரும்அருள் தன்மை வலப்பால்
கமலக்கண் நெற்றியின்மேல்
திருமலர்க் கண்பிள விற்றிக
ழுந்தழல் செல்வக்கம்பர்
கருமலர்க் கண்இடப் பாலது
நீலம் கனிமதத்து
வருநுதற் பொட்டணங் குக்குயர்ந்(து)
ஓங்கும் மலர்க்குழலே.
தெளிவுரை : தருகின்ற அருள் தன்மை யுடையது வலப் பக்கத்தில் உள்ள தாமரை மலர் போன்ற
கண், நெற்றியின்மேல் உள்ளது திருமலர்க்கண். பிளவின் திகழும் தீயினையுடைய செல்வக்
கம்பரின் இடப்பாலுள்ளது கருமலர்க்கண். நீலம் கனிமதத்து வருநுதல் பொட்டுடன்
மலர்க்குழல் உயர்ந்து ஓங்கும். இடப்பாகம் உமையினுடையது. ஆதலின் பெண் தன்மையோடு
உள்ளது.
-
மலர்ந்த படத்துச்சி ஐந்தினும்
செஞ்சுடர் மாமணிவிட்(டு)
அலர்ந்த மணிக்குண் டலம்வலக்
காதினில் ஆடிவரும்
நலந்திரு நீள்வயி ரம்வெயிற்
பாய நகுமணிகள்
கலந்தசெம் பொன்மக ரக்குழை
ஏகம்பர் காதிடமே.
தெளிவுரை : வலப்பாகம் ஆணாகவும் இடப்பாகம் பெண்ணாகவும் உள்ள கோலம் இதுவாகும்.
மலர்ந்த பாம்புப் படத்தின் உச்சி ஐந்திலும் செஞ்சுடர் மாமணி விட்டு அலர்ந்த மணிக்
குண்டலம் வலக்காதில் உள்ளது. ஆடி வரும் நலந்திரு நீள்வயிரம் ஒளிவீச நகுமணிகள்
கலந்த செம்பொன் மகரக் குழை ஏகம்பரின் இடப்பாகத்தில் உள்ளது.
-
காதலைக் கும்வலத் தோள்பவ
ளக்குன்றம் அங்குயர்ந்து
போதலைக் கும்பனிப் பொன்மலை
நீற்றின் பொலியகலம்
தாதலைக் கும்குழல் சேர்பணைத்
தோள்நறுஞ் சாந்தணிந்து
சூதலைக் கும்முலை மார்பிடம்
ஏகம்பர் சுந்தரமே.
தெளிவுரை : காது அலைக்கும் வலத்தோள் பவளக் குன்று. அங்கு உயர்ந்து போது அலைக்கும்
பனி படர்ந்த பொன்மலை (மேருமலை). திருநீறு மார்பில் விளங்கித் தோன்றும்.
இடப்பக்கத்தில் தாது அலைக்கும் கூந்தல் சேர்ந்த பணைத்தோள். நறும் சாந்தணிந்து
சூதாடும் கருவி போன்ற முலை மார்பிடம் ஏகம்பரது அழகிய திருமேனி என்பதாம்.
-
தரம்பொற் பழியும் உலகட்டி
எய்த்துத் தரந்தளரா
உரம்பொற் புடைய திருவயி
றாம்வலம் உம்பர்மும்மைப்
புரம்பொற் பழித்தகம் பர்க்குத்
தரத்திடு பூண்முலையும்
நிரம்பப் பொறாது தளரிள
வஞ்சியும் நேர்வுடைத்தே.
அர்த்தநாரீஸ்வர வருணனை தொடர்கிறது.
தெளிவுரை : வலப்பக்கம்: தரம் பொற்ப அழியும் உலகு அட்டி எய்த்து தரம் தளரா உரம்
பொற்புடைய திருவயிறு. இது திரிபுரம் எரித்த கம்பர்க்கு உரியதாகும். இடப்பக்கம்:
தரத்திடும் பூண்முலையும் நிரம்பப் பொறாது தளரிள வஞ்சியும் நேர்வுடைத்து.
-
உடைப்புலி ஆடையின் மேலுர
கக்கச்சு வீக்குமுஞ்சி
வடத்தொரு கோவணந் தோன்றும்
அரைவலம் மற்றையல்குல்
தொடக்குறு காஞ்சித் தொடுத்த
அரசிலை தூநுண்துகில்
அடம்பொலி ஏறுடை ஏகம்பம்
மேய அடிகளுக்கே.
தெளிவுரை : புலித்தோல் இடை ஆடை. மேலேயுள்ளது பாம்புக் கச்சு. தருப்பையால் அமைந்த
அரை ஞாண். அதில் கோவணம் தோன்றும். இது வலப்பக்கம். இடப்பக்கத்தில் அல்குல்,
தொடக்குறுகாஞ்சி தொடுத்த அரசிலை தூநுண் துகில். கொல்லேற்றுப் பாகராகிய
ஏகம்பம் மேய அடிகளின் திருவுருவமாகும்.
-
அடிவலப் பாலது செந்தா
மரையொத்(து) அதிர்கழல்சூழ்ந்(து)
இடிகுரல் கூற்றின் எருத்திற
வைத்த(து) இளந்தளிரின்
அடியிடப் பாலது பஞ்சுற
அஞ்சும் சிலம்பணிந்த
வடிவுடைத் தார்கச்சி ஏகம்பம்
மேய வரதருக்கே.
தெளிவுரை : வலப்பாகத்தது: பாதம் செந்தாமரை போன்றது. அதிர் கழல் சூழ்ந்து இடிகுரல்
கூற்றின் எருத்து இறவைத்தது. இடப்பாகத்தது: இளந்தளிரின் அடி பஞ்சுற அஞ்சும்
சிலம்பு அணிந்தது. வடிவுடைத்தார் கச்சி ஏகம்பத்தில் மேவிய வரதருக்கு என்பதாம்.
-
தருக்கவற் றான்மிக்க முப்புரம்
எய்தயன் தன்தலையை
நெருக்கவற் றோட மழுவாள்
விசைத்தது நெற்களென்றும்
பருக்கவற் றாங்கச்சி ஏகம்பர்
அத்தர்தம் பாம்புகளின்
திருக்கவற் றால்இட்(டு) அருளும்
கடகத் திருக்கரமே.
தெளிவுரை : கர்வம் கொண்ட திரிபுராதிகளின் கோட்டையை எரித்து அழித்தவன். பிரமன்
தலையை அரிந்தவள். நெற்கள் என்றும் பருக்கவற்றாம் கச்சி ஏகம்பர்; தலைவர்; தம்
பாம்புகளின் திருக்கவற்றால் இட்டு அருளும் கடகத் திருக்கரமே.
இறைவனின் திருக்கரதத்தின் பெருமை கூறியவாறு.
-
கரத்தத் தமருகத்(து) ஓசை
கடுத்தண்ட மீபிளப்ப
அரத்தத்த பாதம் நெரித்திட்(டு)
அவனி தலம்நெரியத்
தரத்தத் திசைகளுக்(கு) அப்புறம்
போர்ப்பச் சடைவிரித்து
வரத்தைத் தருகம்பர் ஆடுவர்
எல்லியும் மாநடமே.
ஊழிக்காலத்துப்பெருங்கூத்தைவியந்தவாறு:
தெளிவுரை : கையிலுள்ள உடுக்கையின் ஓசையைக் கேட்டு அண்டங்கள் எல்லாம் பிளவு
படவும். அரத்தத்த பாதம் நெரித்ததனால் உலகம் நெரியவும், தரத்தத்த திசைகளுக்கு
அப்புறம் மூடிக் கொள்ளவும் சடைவிரித்து வரத்தைத்தரும் ஏகாம்பர நாதர் இரவிலும்
பெருங்கூத்தை ஆடுவார்.
-
நடனம் பிரான்உகந்(து) உய்யக்கொண்
டானென்று நான்மறையோர்
உடன்வந்து மூவா யிரவர்
இறைஞ்சி நிறைந்தஉண்மைக்
கடனன்றி மற்றறி யாத்தில்லை
அம்பலம் காளத்தியாம்
இடம்எம் பிரான்கச்சி ஏகம்பம்
மேயாற்(கு) இனியனவே.
தெளிவுரை : இறைவன் இந்த நடனத்தை விரும்பிச் செய்தான் என்று நான்மறையோர் உடன்
வந்து தில்லை மூவாயிரவர் வணங்கி, நிறைந்த உண்மைக் கடன் அன்றி மற்று அறியாத தில்லை
அம்பலம், காளத்தி முதலியனவும் கச்சி ஏகம்பம் விரும்பும் இடமாகும் என்று
அறிந்தனர்.
-
இனியவர் இன்னார் அவரையொப்
பார்பிறர் என்னஒண்ணாத்
தனியவர் தையல் உடனாம்
உருவர் அறம்பணித்த
முனியவர் ஏறும் உகந்தமுக்
கண்ணவர் சண்டியன்புக்(கு)
இனியவர் காய்மழு வாட்படை
யார்கச்சி ஏகம்பரே.
தெளிவுரை : வேண்டியவர் என்றும், வேண்டாதவர் என்றும் அவருக்குச் சமமானவர் என்றும்,
பிறர் என்றும் என்ன ஒண்ணாத் தனியவர் அவர். உமாதேவியாரோடு இருப்பவர். காமம் வெகுளி
மயக்கங்களை முனிந்தவர். திருநெறி ஒழுக்கத்தால் முன்னிற்பவர் எனினுமாம், காளை
வாகனர். மூன்று கண்களை உடையவர்; சண்டிகேசுவரர் அன்புக்கு இனியவர்; கொல்லும்
மழுவாட் படையினர். அவர் கச்சி ஏகம்பர்.
-
பரவித் தனைநினை யக்கச்சி
ஏகம்பர் பண்ணும்மையல்
வரவித் தனையுள்ள(து) எங்கறிந்
தேன்முன் அவர்மகனார்
புரவித் தனையடிக் கக்கொடி
தாய்விடி யாஇரவில்
அரவித் தனையும்கொண் டார்மட
வார்முன்றில் ஆட்டிடவே.
தெளிவுரை : துதித்து, தன்னை நினைக்குமாறு கச்சி ஏகம்பர் செய்கின்ற மையல்
வரவித்தனை உள்ளது எங்கு அறிந்தேன். முன் அவர் மகனார் புரவித் தனையடிக்கக்
கொடிதாய் விடியா இரவில் அரவு இத்தனையும் கொண்டார். மடவார் முன்றில் ஆட்டிடவே.
தாருகா வனத்து முனிவர்கள் இறைவனை மதியாமல் வேத நெறியைக் கடைப்பிடித்தமையால்
சிவபெருமான் பிட்சாடனராய் அங்குச் சென்ற செய்தி சொல்லப்படுகிறது.
-
இடவம் சுறுக்கெனப் பாயுமுஞ்
சென்னி நகுதலைகண்(டு)
இடஅஞ் சுவர்மட வார்இரி
கின்றனர் ஏகம்பத்தீர்
படம்அஞ்சு வாயது நாகம்
இரைக்கும் அதனுக்குமுற்
படஅஞ் சுவர்எங்ங னேபலி
வந்திடும் பாங்குகளே.
தெளிவுரை : தாருகாவனத்துக்கு இவர் பிச்சை ஏற்கச் சென்றதைப் பற்றிக் கூறுகின்றார்.
நீ ஏறிச் சென்ற காளை மாடு விரைந்து பாயும்; உன் கையிலுள்ள பிச்சைப் பாத்திரமாகிய
மண்டையோடு சிரிப்பதைப் பார்த்து முனி பத்தினிகள் பிச்சையிட அஞ்சுவர். விரைந்து
ஓடி விடுவர். ஏகம்பரே ! நீர் அணிந்துள்ள பாம்பின் படம் பயத்தை உண்டாக்கும்.
பாம்பு சீரும். அதன் அருகில் வர அஞ்சுவர். இப்படியிருக்க உனக்குப் பிச்சை
எப்படிக் கிடைக்கும்?
-
பாங்குடை கோள்புலி யின்அதள்
கொண்டீர்நும் பாரிடங்கள்
தாங்குடை கொள்ளப் பலிகொள்ள
வந்தீர் தடங்கமலம்
பூங்குடை கொள்ளப் புனற்கச்சி
ஏகம்பம் கோயில்கொண்டீர்
ஈங்கிடை கொள்ளக் கலைகொள்ள
வந்தீர் இடைக்குமின்றே.
தெளிவுரை : பாங்காக, கொல்லும் புலியின் தோலை ஆடையாகக் கொண்டீர். உம்முடைய
பூதங்கள் குடை பிடிக்கப் பிச்சை ஏற்க வந்தீர். தடம் கமலம் பூங்குடை கொள்ளப்
புனற்கச்சி ஏகம்பர் கோயில் கொண்டீர். இவ்விடம் முனி பத்தினிகளின் ஆடைகளைக் கவர
வந்தீர். இது கைகூடுமோ?
-
இடைக்குமின் தோற்கும் இணைமுலை
யாய்முதி யார்கள்தஞ்சொல்
கடைக்கண்நன் றாம்கச்சி ஏகம்பர்
ஐயங் கொளக்கடவும்
விடைக்குமுன் தோற்றநில் லேநின்
றினியிந்த மொய்குழலார்
கிடைக்குமுன் தோற்றநஞ்(சு) அங்கிது
வோதங் கிறித்துவமே.
தெளிவுரை : இடைக்கு மின் தோற்கும். (தோன்றி மறையும் தன்மையது, மிகச் சிறுத்தது
என்றபடி). இணையாகவுள்ள முலைகளை யுடையாய். முதியோர்களுடைய சொல் அருள் நிறைந்தது.
கச்சி ஏகம்பர் பிச்சை யேற்க ஏறிச் செல்லும் காளைக்குத் தோன்றும்படி முன்னால்
நிற்பாயாக. நின்று இனி இந்த மொய்குழலார் கிடைக்குமுன் தோற்ற நஞ்சு அங்கு இதுவோ
உம் தந்திரமோ அறியேன் என்றபடி.
-
கிறிபல பேசிச் சதிரால்
நடந்து விடங்குபடக்
குறிபல பாடிக் குளிர்கச்சி
ஏகம்பர் ஐயங்கொள்ள
நெறிபல வார்குழ லார்மெலி
வுற்ற நெடுந்தெருவில்
செறிபல வெள்வளை போயின
தாயர்கள் தேடுவரே.
தெளிவுரை : பல பொய்களைப் பேசி, நடனமாடியபடி நடந்து, காமக் குறிப்போடு பல
பாடல்களைப் பாடி குளிர்வித்த கச்சி ஏகம்பர் பிச்சை யேற்க வழிகள் பல உள்ளன.
வார்குழலார் மெலிவுற்ற பெரிய தெருவில் செறிந்த பலவாகிய வெள் வளைகள் கீழே விழுந்து
விட்டன. தாய்மார்கள் தேடுவார்கள். (இது தாருகா வனத்தில் நடந்த நிகழ்ச்சி).
-
தேடுற் றிலகள்ள நோக்கம்
தெரிந்தில சொற்கள்முடி
கூடுற் றிலகுழல் கொங்கை
பொடித்தில கூறுமிவள்
மாடுற் றிலமணி யின்மட
அல்குலும் மற்றிவள்பால்
நாடுற் றிலஎழில் ஏகம்ப
னார்க்(கு)உள்ளம் நல்கிடத்தே.
தெளிவுரை : தோழி தலைவியின் இளமைத் தன்மையைக் கூறுதல். கள்ளப் பார்வை
பார்ப்பதற்குப் பழகிக் கொள்ளவில்லை. சொற்கள் தெரிந்தில. கூந்தல் முடி இன்னும்
கூடிற்றிலை. கொங்கைகள் இன்னும் தோன்றவில்லை. மணியின் மட அல்குலும் மாடுற்றில.
எழில் இவள்பால் இன்னும் நாடுற்றில. ஏகம்பர்க்கு உள்ளம் நல்கிட இது சமயம் அன்று
என்றபடி.
-
நல்கும் புகழ்க்கட வூர்தன்
மறையவன் உய்யநண்ணிக்
கொல்கின்ற கூற்றைக் குமைத்தவெங்
கூற்றம் குளிர்திரைகள்
மல்கும் திருமறைக் காட்டமிர்(து)
என்றும் மலைமகள்தான்
புல்கும் பொழிற்கச்சி ஏகம்பம்
மேவிய பொன்மலையே.
தெளிவுரை : புகழ் நல்கும் திருக்கடவூரில் மார்க்கண்டேயனது உயிரைக் கவர வந்த
கூற்றுவனை அழித்த அமிர்த கடேசர் குளிர்ந்த திரைகளை வீசும் திருமறைக் காட்டில்
(வேதாரண்யத்தில்) எழுந்தருளியிருக்கும் இறைவன் பார்வதி தேவியாரைத் தழுவும்
பொழில்கள் சூழ்ந்த கச்சியில் ஏகம்பமாக மேவியுள்ளார். அவர் ஒப்பற்ற பொன் மலை.
கச்சியைப் புகழும்போது மற்ற தலங்களையும் சேர்த்துக் கொள்கின்றார். இது கவி மரபு.
-
மலையத்(து) அகத்தியன் அர்ச்சிக்க
மன்னி வடகயிலை
நிலையத்(து) அமரர் தொழஇருந்
தான்நெடு மேருஎன்னும்
சிலையத்தன் பைம்பொன் மதில்திரு
ஏகம்பத் தான்திகழ்நீர்
அலையத் தடம்பொன்னி சூழ்திரு
ஐயாற்(று) அருமணியே.
தெளிவுரை : பார்வதி திருக்கல்யாண நிகழ்ச்சி சொல்லப்படுகிறது. பார்வதி தேவியின்
கல்யாணத்தின்போது வடபால் தாழ்ந்தமையால் அகத்தியர் தெற்கே அனுப்பப்பட்டார்.
திருக்கல்யாணக் காட்சிகளை அவரும் கண்டு களிக்கின்றார் என்க. பொதிய மலையில்
அகத்தியர் அருச்சனை செய்ய, பொருந்தி வடகயிலையில் அமரர் தொழ இருந்த பெரிய
மேருமலையை வில்லாகக் கொண்டவன் பொன் மதில்சூழ் திருஏகம்பத்தான் திகழ்வதை, காவிரி
சூழ்ந்த திருவையாற்றில் கோயில் கொண்டிருந்ததைக் கண்டார் என்க.
-
மணியார் அருவித் தடம்இம
யங்குடக் கொல்லிகல்லின்
திணியார் அருவியின் ஆர்த்த
சிராமலை ஐவனங்கள்
அணியார் அருவி கவர்கிளி
ஓப்புமின் சாரல்விந்தம்
பணிவார் அருவினை தீர்க்குமே
கம்பர் பருப்பதமே.
தெளிவுரை : இமயம், கைலாசத்தைத் தன்பால் உடையது. கொல்லி மலை அறைப்பள்ளி என்னும்
தலத்தை உடையது. அழகிய அருவிகளை உடையது இமயம். மேற்குத் திக்கில் உள்ள கொல்லி மலை
திணியார் அருவிகளையுடையது. சிராமலை மலைநெல் உடையது. அருவிகளையுடைய அப்புனங்களில்
கிளிகளை ஓட்டும் மின் சாரல் விந்திய மலை ஆகியவற்றைப் பணிபவர்களின் தீராத
வினைகளைத் தீர்ப்பது ஏகம்பரின் மலையே. இறைவன் கோயில் கொண்டிருக்கும் மலைத்
தலங்களைக் கூறியவாறு.
-
பருப்பதம் கார்தவழ் மந்தரம்
இந்திர நீலம்வெள்ளை
மருப்பதங் கார்கருங் குன்றியங்
கும்பரங் குன்றம்வில்லார்
நெருப்பதங் காகுதி நாறும்
மகேந்திரம் என்றிவற்றில்
இருப்பதங் காஉகந் தான்கச்சி
ஏகம்பத்(து) எம்இறையே.
தெளிவுரை : இறைவன் கோயில் கொண்டிருக்கும் மலைகளைக் கூறுகின்றார். பருப்பதம்
என்பது ஸ்ரீசைலம் (மல்லிகார்ச்சுனம்) அர்ச்சுனம்-மருதமரம். மேகங்கள் வந்து
படிகின்ற மந்தர மலை, இந்திர நீல மலை. வெள்ளைத் தந்தங்களையுடைய கரிய யானைகள்
இயங்குகின்ற திருப்பரங்குன்றம். நெருப்பது அங்கு ஆகுதி நாறும் மகேந்திரமலை, இந்த
மலைகளில் விரும்பிக் கோயில் கொண்டிருப்பவர் கச்சி ஏகம்பத்து எம் இறையாகும்.
வடமருது, இடமருது, தென்மருது என்ற மூன்றும் சிவத்தலங்கள்.
-
இறைத்தார் புரம்எய்த வில்லிமை
நல்லிம வான்மகட்கு
மறைத்தார் கருங்குன்றம் வெண்குன்றம்
செங்குன்ற மன்னற்குன்றம்
நிறைத்தார் நெடுங்குன்றம் நீள்கழுக்
குன்றம்என் தீவினைகள்
குறைத்தார் முதுகுன்றம் ஏகம்பர்
குன்றென்று கூறுமினே.
தெளிவுரை : முதன்மை கொண்ட கொடிப் படையை யுடைய முப்புரங்களை எரித்த வில்லியாகிய
எம்பெருமான் இமவான் மகளாகிய பார்வதி தேவியாரோடு கருங்குன்றம் என்னும் அறையணி
நல்லூர் வெண்குன்றம் செங்குன்றம் மன்னற்குன்றம் நிறைத்தார் நெடுங்குன்றம் நீள்
திருக்கழுக்குன்றம் என் தீவினைகளைக் குறைத்த மதுகுன்றம் (விருத்தாசலம்) ஆகிய
மலைகள் ஏகம்பர் கோயில் கொண்டிருக்கும் மலைகள் என்று கூறுங்கள்.
-
கூறுமின் தொண்டர்குற் றாலம்நெய்த்
தானம் துருத்தியம்பேர்
தேறுமின் வேள்விக் குடிதிருத்
தோணி புரம்பழனம்
ஆறுமின் போல்சடை வைத்தவன்
ஆரூர் இடைமருதென்(று)
ஏறுமின் நீரெம் பிரான்கச்சி
ஏகம்பம் முன்நினைந்தே.
தெளிவுரை : எம்பிரானாகிய கச்சி ஏகம்பனை முன் நினைந்து தொண்டர்களே அடியில்கண்ட
தலங்களைத் துதிப்பீர்களாக. அவையாவன: குற்றாலம், நெய்த்தானம், திருத்துருத்தி.
இத்தலங்களைத் தெளிந்து வழிபடுங்கள். வேள்விக்குடி திருத்தோணிபுரம் (சீகாழி)
திருப்பழனம், திருவாரூர், திருவிடைமருதூர் என்று ஓதுங்கள் என்பதாம்.
-
நினைவார்க்(கு) அருளும் பிரான்திருச்
சோற்றுத் துறைநியமம்
புனைவார் சடையோன் புகலூர்
புறம்பயம் பூவணம்நீர்ப்
பனைவார் பொழில்திரு வெண்காடு
பாச்சில் அதிகையென்று
நினைவார் தருநெஞ்சி னீர்கச்சி
ஏகம்பம் நண்ணுமினே.
தெளிவுரை : இறைவன் கோயில் கொண்டிருக்கும் தலங்களை நினைவு கூர்கிறார்.
நினைவார்க்கு அருளும் சிவ பெருமான் திருச்சோற்றுத்துறை, நியமம், நீண்ட சடையை
யுடையோன் மேவியுள்ள திருப்புகலூர், திருப்புறம்பயம், திருப்பூவணம், நீர்ப்புனை
வார் பொழில் திருவெண்காடு, திருப்பாச்சிலார் சிராமம், திருவதிகை என்று நினைவார்
தருநெஞ்சில் நீர் கச்சி ஏகம்பர் போய்ச் சேருங்கள் என்றபடி.
-
நண்ணிப் பரவும் திருவா
வடுதுறை நல்லம்நல்லூர்
மண்ணில் பொலிகடம் பூர்கடம்
பந்துறை மன்னுபுன்கூர்
எண்ணற் கரிய பராய்த்துறை
ஏர்கொள் எதிர்கொள்பாடி
கண்ணிப் பிறைச்சடை யோன்கச்சி
ஏகம்பம் காண்மின் சென்றே.
தெளிவுரை : போய்த் துதிக்கின்ற திருவாவடுதுறை, நல்லம், நல்லூர் நிலவுலகில்
விளங்குகின்ற கடம்பூர், கடம்பந்துறை, நிலைபெற்ற திருப்புன்கூர், எண்ணற்கரிய
திருப்பராய்த் துறை, அழகிய எதிர்கொள்பாடி, மாலையணிந்த பிறைச் சடையோன் கச்சி
ஏகம்பன் எழுந்தருளியிருக்கின்ற தலங்களைச் சென்று தரிசியுங்கள்.
-
சென்றேறி விண்ணுறும் அண்ணா
மலைதிகழ் வல்லம்மென்பூ
வின்தேறல் பாய்திரு மாற்பேறு
பாசூர் எழில்அழுந்தூர்
வன்தே ரவன்திரு விற்பெரும்
பேறு மதில்ஒற்றியூர்
நின்றேர் தருகச்சி ஏகம்பம்
மேயார் நிலாவியவே.
தெளிவுரை : இறைவன் எழுந்தருளியிருக்கும் தொண்டை நாட்டுத் திருத்தலங்களைக்
கூறுகின்றார். மேல் ஏறிச் சென்று ஆகாயத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் திரு
அண்ணாமலை. திகழ் வல்லம், மென்பூவின் தேறல் பாய்கின்ற திருமால்பேறு, பாசூர்,
எழில்மிகு அழுந்தூர் வன்தேரவன் திருவிற்பெரும்பேறு, மதில்சூழ்ந்த திருஒற்றியூர்,
நின்று ஏர்தரு கச்சி ஏகம்பம் கோயில் கொண்டிருக்கும் தலங்களாகும்.
-
நிலாவு புகழ்த்திரு வோத்தூர்
திருஆமாத் தூர்நிறைநீர்
சுலாவு சடையோன் புலிவலம்
வில்வலம் கொச்சைதொண்டர்
குலாவு திருப்பனங் காடுநன்
மாகறல் கூற்றம்வந்தால்
அலாயென்(று) அடியார்க்(கு) அருள்புரி
ஏகம்பர் ஆலயமே.
தெளிவுரை : புகழ் மிக்க திருவோத்தூர், திரு ஆமாத்தூர், நிறைநீர் சூழ்ந்த சடையோன்
எழுந்தருளியிருக்கும் புலிவலம், வில்வலம், கொச்சை வயமென்னும் சீகாழி, தொண்டர்
குலாவும் திருப்பனங்காடு, நன்மாகறல். கூற்றம் வந்தால் இங்கே வரத்தகாதவன் நீ என்று
அடியார்க்கு அருள் புரிகின்ற ஏகம்பரின் ஆலயங்களே.
-
ஆலையங் கார்கரு காவைகச்
சூர்திருக் காரிகரை
வேலையங் கேறு திருவான்மி
யூர்திரு ஊறல்மிக்க
சோலையங் கார்திருப் போந்தைமுக்
கோணம் தொடர்கடுக்கை
மாலையன் வாழ்திரு ஆலங்கா(டு)
ஏகம்பம் வாழ்த்துமினே.
தெளிவுரை : கரும்பாலைகள் நிறைந்த திருக்கருகாவூர், கச்சூர் திருக்காரிக்கரை, கடல்
அலைகள் வீசும் திருவான்மியூர் திருவூறல் மிக்க சோலைகள் சூழ்ந்த திருப்பனந்தாள்,
முக்கோணம் தொடர் கொன்றை மாலை யணிந்த பெருமான் எழுந்தருளியிருக்கும் திரு ஆலங்காடு
ஆகிய இடங்களில் உள்ள ஏகாம்பர நாதரை வாழ்த்துங்கள். எல்லாத் தலங்களிலும்
ஏகம்பனாகிய இறைவன் கோயில் கொண்டிருக்கிறான் என்கிறார்.
-
வாழப் பெரிதெமக்(கு) இன்னருள்
செய்யும் மலர்க்கழலோர்
தாழச் சடைத்திரு ஏகம்பர்
தம்மைத் தொழாதவர்போய்
வாழப் பரற்சுரம் ஆற்றா
தளிரடி பூங்குழல்எம்
ஏழைக்(கு) இடையிறுக் குங்குய
பாரம் இயக்குறினே.
தெளிவுரை : இது தலைவன் கூற்று. தொழாதவர் போய் வாழுகின்ற அப்பரலை யுடைய சுரம்.
சுரம்-பாலை நிலம். வாழப் பெரிது எமக்கு இன்னருள் செய்யும் மலர்க் கழலோர் தாழச்
சடைத்திரு ஏகம்பர் தம்மைத் தொழாதவர் போய் வாழ்கின்ற, பரற்கற்களையுடைய பாலை
நிலத்தில் செல்ல ஆற்றாது தளிர் போன்ற பாதங்களையும் பூங்குழலையும் உடைய எம்
தலைவிக்கு, கொங்கையின் கனம் தாங்காது இடை முரியும் என்பதாம்.
-
உறுகின்ற வெவ்அழல் அக்கடம்
இக்கொடிக்(கு) உன்பின்வரப்
பெறுகின்ற வண்மையி னால்ஐய
பேரருள் ஏகம்பனார்
துறுகின்ற மென்மலர்த் தண்பொழில்
கச்சியைச் சூழ்ந்திளையோர்
குறுகின்ற பூங்குவ ளைக்குறுந்
தண்பணை என்றுகொளே.
தெளிவுரை : தோழி உடன்படச் செய்தல். அந்தப் பாலைவனம் உன் பின்னே வருவதனால்
குளிர்ந்த வயல் போலிருக்கும். தீயைப்போல் வெப்பம் மிகுந்த அப் பாலை நிலம் இந்தத்
தலைவிக்கு உன் பின்னால் வரப் போகின்ற ஆறுதலினால், ஐய ! பேரருள் செய்யும்
ஏகம்பனார் நெருங்கிய மலர்ச் சோலைகளையுடைய கச்சியைச் சூழந்து இளம் பெண்கள் கொய்து
தருகின்ற பூங்குவளைக் குறுந்தண் பணை என்று கொள்வாயாக.
-
கொள்ளுங் கடுங்கதி ரிற்கள்ளி
தீச்சில வேயுலறி
விள்ளும் வெடிபடும் பாலையென்
பாவை விடலைபின்னே
தெள்ளும் புனற்கச்சி யுள்திரு
ஏகம்பர் சேவடியை
உள்ளும் அதுமறந் தாரெனப்
போவ(து) உரைப்பரிதே.
தெளிவுரை : இது செவிலி கூற்று. சூரியனது கடும் வெப்பத்தினால் கள்ளியைத் தீயச்
செய்து, ஈரம் காய்ந்து, மூங்கில் காய்ந்து பிளக்கும் பாலை நிலத்தின் வழியாக என்
பாவை போன்றவள் இந்தத் தலைவன் பின்னே தெளிந்த நீர் வளமிக்க கச்சியுள் மேவும் திரு
ஏகம்பர் சேவடியை மறந்தவர்போல போக எத்தனிப்பது சொல்லும் தரமரிதே.
-
பரிப்பருந் திண்மைப் படையது
கானர் எனிற்சிறகு
விரிப்பருந் துக்கிரை ஆக்கும்வெய்
யேன்அஞ்சல் செஞ்சடைமேல்
தரிப்பருந் திண்கங்கை யார்திரு
வேகம்பம் அன்னபொன்னே
வரிப்பருந் திண்சிலை யேயும
ராயின் மறைகுவனே.
தெளிவுரை : இது தலைவன் கூற்று. தாங்குதற்கரிய திண்மைக்குரியது பாலை நிலத்து
வாழ்வார் வாழ்க்கை. சிறகை விரித்தலை யுடைய பருந்துக்கு இரையாக்கும் கொடுமையை
உடையேன். நீ அஞ்சாதே. செஞ்சடை மேல் கங்கையை வைத்திருக்கும் திருவேகம்பம் போன்ற
பொன் போன்றவளே ! வில்லேந்திய உன் சுற்றத்தார் தடுத்தாராயின் நான் மறைகுவன்.
-
வனவரித் திண்புலி யின்னதள்
ஏகம்ப மன்னருளே
எனவரு பொன்னணங் கென்னணங்
கிற்கென் எழிற்கழங்கும்
தனவரிப் பந்தும் கொடுத்தெனைப்
புல்லியும் இற்பிரிந்தே
இனவரிக் கல்லதர் செல்வதெங்
கேஒல்கும் ஏழைநெஞ்சே.
தெளிவுரை : இது செவிலி கூற்று. (திருமகளை அழகினால் வருத்தும் என் மகளுக்கு)
வனத்தில் வாழும் வரிகளையுடைய வலிய புலியின் தோலை இடையில் கட்டிய ஏகம்ப மன்னனே !
திருமகள் போன்ற என் மகளுக்கு என் அழகிய கழற்சிக் காயையும் கோடுகளோடு கூடிய
கைப்பந்தையும் கொடுத்து என்னைத் தழுவியும் வீட்டை விட்டுப் பிரிந்து, பரற்கற்களை
உடைய பாலை நிலத்தில் செல்வது எப்படிப் பொருந்தும், என் ஏழை நெஞ்சே ! என்று செவிலி
வருந்துகிறாள்.
-
நெஞ்சார் தரஇன்பம் செய்கழல்
ஏகம்பர் கச்சியன்னாள்
பஞ்சார் அடிவைத்த பாங்கிவை
ஆங்கவள் பெற்றெடுத்த
வெஞ்சார் வொழியத்தன் பின்செல
முன்செல் வெடுவெடென்ற
அஞ்சா அடுதிறல் காளைதன்
போக்கிவை அந்தத்திலே.
தெளிவுரை : செவிலி சுவடு கண்டு இரங்கல்: நெஞ்சு ஆறுதல் பெற இன்பம் செய்கின்ற
கழல்களை உடைய ஏகம்பரின் கச்சியைப் போன்றவள். செம்பஞ்சு குழம்பு தோய்ந்த பாதத்தை
உடையவள். அவள் நடந்து சென்ற தன்மை இதுவாகும். அவள் இவ் வழியில் துன்பப்பட்டுச்
சென்றாள். அவளுக்கு முன்னால் சென்ற காளையின் சுவடுகள் இவை. அவன் எதற்கும் அஞ்சாத
வீரன். ஆகவே இந்த வழி அவளுக்குத் துன்பமாகத் தெரியவில்லை.
-
இலவவெங் கானுனை யல்லால்
தொழுஞ்சரண் ஏகம்பனார்
நிலவும் சுடரொளி வெய்யவ
னேதண் மலர்மிதித்துச்
செலவும் பருக்கை குளிரத்
தளிரடி செல்சுரத்துன்
உலவும் கதிர்தணி வித்தருள்
செய்யுன் உறுதுணைக்கே.
தெளிவுரை : நற்றாய் சுரம் தணிவித்தல். அவர்கள் சென்றவழி இலவ மரங்கள் உள்ள
வெப்பமான பாலை நிலமாகும். கதிரவனே உன்னை யல்லாமல் வேறு சரண் இல்லை. ஏகம்பனார்
துணை செய்வாராக. இவளுடைய மென்மையான பாதங்கள் செல்லும் வழி பருக்கைக் கற்கள்
நிறைந்தது. உன்னுடைய வெப்பமான கதிர்களைத் தணிவிப்பாயாக. சூரியனே இது உன் உதவியாக
இருக்கட்டும்.
-
துணையொத்த கோவையும் போலெழில்
பேதையும் தோன்றலுமுன்
இணையொத்த கொங்கையொ(டு) ஏயொத்த
காதலொடு ஏகினரே
அணையத்தர் ஏறொத்த காளையைக்
கண்டனம் மற்றவரேல்
பிணையொத்த நோக்குடைப் பெண்ணிவள்
தன்னொடும் பேசுமினே.
தெளிவுரை : (கலந்துடன் வருவோர் செவிலியிடம் கூறுதல். மற்றவர் என்றது தலைவியை.
இவள் என்றது தன் காதலியை.) உங்களைப் போன்று என் மகளும் அவள் காதலனும் முன்னே
சென்றார்களே, அவர்களைப் பார்த்தீர்களா என்று செவிலி கேட்க, எதிரேவந்த காளை
போன்றவன் செவிலியைப் பார்த்துக் கூறுகின்றான். அன்னையே ! ஏகம்பர் ஏறிச் செல்லும்
காளையைப் போன்ற தலைவனைக் கண்டேன். தலைவியைப் பற்றிய விவரங்களை மான் போன்ற
பார்வையினை உடைய இவளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்றான்.
-
மின்னலிக் கும்வணக் கத்திடை
யாளையும் மீளியையும்
நென்னலிப் பாக்கைவந் தெய்தின
ரேல்எம் மனையிற்கண்டீர்
பின்னரிப் போக்கருங் குன்று
கடந்தவர் இன்றுகம்பர்
மன்னரி தேர்ந்து தொழுங்கச்சி
நாட்டிடை வைகுவரே.
தெளிவுரை : இது கண்டோர் கூற்று: மின்னலைத் தோற்கச் செய்யும் சிறிய இடையினை
உடையவளையும் அவள் காதலனையும் நேற்று இச்சிறிய ஊரில் வந்து தங்கியதைக் கண்டீர்.
பிறகு அவர்கள் செல்வதற்கு அரிய இந்தக் குன்றைக் கடந்து, இன்று ஏகம்பரது திருமால்
வந்து தொழும் கச்சி நாட்டிடை வைகுவர். என்று கூறினர்.
-
உவரச்சொல் வேடுடைக் காடுகந்
தாடிய ஏகம்பனார்
அவரக்கன் போன விமானத்தை
ஆயிரம் உண்மைசுற்றும்
துவரச் சிகரச் சிவாலயம்
சூலம் துலங்குவிண்மேல்
கவரக் கொடிதிளைக் கும்கச்சி
காணினும் கார்மயிலே.
தெளிவுரை : இது தலைவன் கூற்று. வேடுவர் வாழ்கின்ற காட்டில் விரும்பி ஆடுகின்ற
ஏகம்பனார். இராவணன் சென்ற விமானத்தை அழித்த உயர்ந்த மதில்களை உடைய சிவாலயம் சூலம்
துலங்கு விண் வரை உயர்ந்த கொடிகள் ஆடுகின்ற கச்சியைக் காண்பாயாக என்று தலைவன் தன்
காதலியிடம் கூறுகின்றான்.
-
கார்மிக்க கண்டத்(து) எழில்திரு
ஏகம்பர் கச்சியின்வாய்
ஏர்மிக்க சேற்றெழில் நெல்நடு
வோர்ஒலி பொன்மலைபோல்
போர்மிக்க செந்நெல் குவிப்போர்
ஒலிகருப் பாலையொலி
நீர்மிக்க மாக்கட லின்ஒலி
யேஒக்கும் நேரிழையே.
தெளிவுரை : கச்சிப் பதியின் நில வளத்தையும் நீர் வளத்தையும் புகழ்ந்து
கூறுகின்றார். கருநிற கண்டத்தை உடைய அழகிய ஏகம்பர நாதரது காஞ்சிபுரத்தில் சேறு
நிரம்பிய கழனிகளில் நெல் நாற்றுக்களை நடுவோர் பேசும் ஒலியும், பொன்மலை போல்
நெற்கட்டுக் களைக் களத்து மேட்டில் கொண்டுவந்து போடுவோர் ஒலியும் கரும்பாலைகளின்
ஒலியும், நீர்மிக்க மாக்கடலின் ஒலியைப் போல் இருக்கும் என்று தலைவன் தலைவிக்குக்
கூறுகின்றான்.
-
நேர்த்தமை யாமை விறற்கொடு
வேடர் நெடுஞ்சுரத்தைப்
பார்த்தமை யால்இமை தீந்தகண்
பொன்னே பகட்டுரிவை
போர்த்தமை யாலுமை நோக்கரும்
கம்பர்கச் சிப்பொழிலுள்
சேர்த்தமை யால்இமைப் போதணி
சீதம் சிறந்தனவே.
தெளிவுரை : இது தலைவன் கூற்று. இமை தீந்த கண், சீதம் சிறந்தன என முடிக்க. பொன்
போன்றவளே ! வேடர் வாழ்கின்ற பாலை நிலத்தைப் பார்த்து வெப்பமடைந்த உன் கண்கள்,
யானையின் தோலைப் போர்த்தமையால் உமை நோக்கரும் ஏகம்பரது கச்சிப் பொழிலுள்
சேர்ந்தமையால் இமைப்போதணி சீதம் சிறந்தன என்று தலைவன் தலைவிக்கு ஆறுதல்
கூறுகின்றான்.
முன்பு வெப்பத்தால் துன்புற்ற கண்கள் இப்போது குளிர்ந்து காணப்படும் என்பதாம்.
-
சிறைவண்டு பாடும் கமலம்
கிடங்கிவை செம்பழுக்காய்
நிறைகொண்ட பாளைக் கமுகின்
பொழிலிவை தீங்கனியின்
பொறைகொண்ட வாழைப் பொதும்புவை
புன்சடை ஏகம்பனார்
நறைகொண்ட பூங்கச்சி நாடெங்கும்
இவ்வண்ணம் நன்னுதலே.
தெளிவுரை : காஞ்சியின் வளத்தைத் தலைவன் புகழ்கின்றான். நன்னுதலே ! இறகுகளையுடைய
வண்டுகள் பாடும் தாமரை மலர்கள் நிறைந்த அகழிகள் இவை. சிவந்த பழுக்காய்கள் நிறைந்த
பாளைக் கமுகின் சோலைகள் இவை. தீங்கனியின் சுமை கொண்ட வாழைத் தோட்டங்கள் இவை.
புல்லிய சடையினையுடைய ஏகம்பனாரின் மணமிக்க பூங்கச்சி நாடெங்கும் இவ்வண்ணத்தைக்
கொண்டது.
-
நன்னுத லார்கருங் கண்ணும்செவ்
வாயும்இவ் வாறெனப்போய்
மன்னித ழார்திரு நீலமும்
ஆம்பலும் பூப்பவள்ளை
என்னவெ லாம்ஒப்புக் காதென்று
வீறிடும் ஏகம்பனார்
பொன்னுத லார்விழி யார்கச்சி
நாட்டுளிப் பொய்கையுளே.
தெளிவுரை : இது தலைவன் கூற்று: நல்ல நெற்றியை உடைய மாதர்களின் கருங்கண்ணும்
செவ்வாயும் இவ்வாறெனப் போய் நிலை பெற்ற இதழ்களையுடைய குவளை மலரும் அல்லி மலரும்
பூக்க வள்ளை என்னவெலாம் ஒப்புக்காதென்று பெருமை கொள்ளும் ஏகம்பனார் பொன்னுதலார்
விழியார். கச்சி நாட்டுள் இப் பொய்கையுள்ளே.
-
உள்வார் குளிர நெருங்கிக்
கருங்கிடங் கிட்டநன்னீர்
வள்வா ளைகளொடு செங்கயல்
மேய்கின்ற எங்களையாட்
கொள்வார் பிறவி கொடாதஏ
கம்பர் குளிர்குவளை
கள்வார் தருகச்சி நாட்டெழில்
ஏரிக் களப்பரப்பே.
தெளிவுரை : எண்ணுபவர் குளிர நெருங்கி இருண்ட அகழியில் உள்ள நன்னீர். வள்வாளைகளோடு
செங்கயல் மீன்களும் மேய்கின்ற இடம் எதுவென்றால் எங்களை ஆட்கொள்கிறவர் இனிமேல்
பிறவி கொடாத ஏகம்பர் குளிர் குவளை தேன் நிறைந்த கச்சி நாட்டெழில் ஏரிக் களப்
பரப்பே.
கச்சி நாட்டின் நீர்வளம் கூறியவாறு.
-
பரப்பார் விசும்பிற் படிந்த
கருமுகில் அன்னநன்னீர்
தரப்பா சிகள்மிகு பண்பொடு
சேம்படர் தண்பணைவாய்ச்
சுரப்பார் எருமை மலர்தின்னத்
துன்னுக ராஒருத்தல்
பொரப்பார் பொலிநுத லாய்செல்வக்
கம்பர்தம் பூங்கச்சியே.
தெளிவுரை : இது தலைவன் கூற்று. விசாலமான ஆகாயத்தில் படிந்த கருமேகம் போன்ற
நன்னீர்தரப் பாசிகள் மிகுந்த பண்பொடு சேம்பு படர்ந்திருக்கும் வயலில்
பால்சுரக்கும் எருமை மலரைத் தின்ன, அங்குள்ள ஆண்முதலை எதிர்ப் பதைப்பார் அழகிய
நெற்றியை உடையவளே ! செல்வக் கம்பர்தம் பூங்கச்சி இவ்வளவு வளமுடையது.
-
கச்சார் முலைமலை மங்கைகண்
ணாரஎண் ணான்(கு)அறமும்
வைச்சார் மகிழ்திரு ஏகம்பர்
தேவி மகிழவிண்ணோர்
விச்சா தரர்தொழு கின்ற
விமானமும் தன்மமறா
அச்சா லையும்பரப் பாங்கணி
மாடங்கள் ஓங்கினவே.
தெளிவுரை : கச்சணிந்த பருத்த முலைகளையுடைய உமா தேவியார் விரும்பி முப்பத்திரண்டு
அறங்களையும் வளர்ப்பதைக் கண்டு மகிழும் ஏகம்பர், தேவி மகிழ தேவர்களும்
வித்தியாதரர்களும் தொழுகின்ற விமானமும் தர்மம் குறையாத அறச் சாலையும் பரப்பும்
அழகிய மாடங்கள் உயர்ந்து நிற்கின்றன.
-
ஓங்கின ஊரகம் உள்ளகம்
உம்பர் உருகிடமாம்
பாங்கினில் நின்ற(து) அரியுறை
பாடகம் தெவ்வரிய
வாங்கின வாட்கண்ணி மற்றவர்
மைத்துனி வான்கவிகள்
தாங்கின நாட்டிருந் தாளது
தன்மனை ஆயிழையே.
தெளிவுரை : கச்சி, உயர்ந்த ஊரகத்தை உள்ளிடமாகக் கொண்டது. தேவர்கள் தங்குவதற்கு
இடமாக உள்ளது. பாங்காக நின்றது. திருமால் உறைகின்ற பாடகம். பகைவர் ஓட வாங்கின
வாள் போன்ற கண்களை உடையவள். மற்று அவர் மைத்துனி வான் கவிகள் தாங்கின நாட்டு
இருந்தாள். அது தன்மனை. ஆயிழையே !
-
இழையார் அரவணி ஏகம்பர்
நெற்றி விழியின்வந்த
பிழையா அருள்நம் பிராட்டிய(து)
இன்ன பிறங்கலுன்னும்
நுழையா வருதிரி சூலத்தள்
நோக்கரும் பொன்கடுக்கைத்
தழையார் பொழிலிது பொன்னே
நமக்குத் தளர்வில்லையே.
தெளிவுரை : இது தலைவன் கூற்று. அணிகலனாகப் பாம்பை யணிந்த ஏகம்பர் நெற்றிக்கண்ணின்
வழியாக வந்த பிழையாத அருள் நம் உமாதேவியது மலை, திரிசூலம் பொன்போன்ற கொன்றை
நிறைந்த சோலை. இதுதான் பொன் போன்றவளே ! இனி தளர்வில்லை. இது குளிர்ந்த இடமாகும்.
-
தளரா மிகுவெள்ளம் கண்டுமை
ஓடித் தமைத்தழுவக்
கிளையார் வளைக்கை வடுப்படும்
ஈங்கோர் கிறிபடுத்தார்
வளமாப் பொழில்திரு ஏகம்பம்
மற்றிது வந்திறைஞ்சி
உளரா வதுபடைத் தோம்மட
வாய்இவ் வுலகத்துள்ளே.
தெளிவுரை : இது தலைவன் கூற்று. காஞ்சிபுரத்தில் பார்வதி தேவியார் லிங்கம் அமைத்து
வழிபாடு செய்துவரும் போது கம்பா நதி பெருக்கெடுத்து வந்தது. அதைக் கண்டு தேவி
பயந்து லிங்கத்தைச் சேர்த்துத் தழுவிக் கொண்டார். அம்மையாரது முலைத்தழும்பும்
வளைத் தழும்பும் லிங்கத்தில் பதிந்தன. அத்தகைய சோலைகள் சூழ்ந்த திருஏகம்பம் இது.
வந்து வழிபட்டு இவ்வுலகில் இனி ஆகவேண்டியதைப் படைத்தோம், மடவாய் !
-
உலவிய மின்வடம் வீசி
உருமதிர் வுள்முழங்கி
வலவிய மாமதம் பாய்முகில்
யானைகள் வானில்வந்தால்
சுலவிய வார்குழல் பின்னரென்
பாரிர் எனநினைந்து
நிலவிய ஏகம்பர் கோயிற்
கொடியன்ன நீர்மையனே.
தெளிவுரை : உலவிய மின்னலாகிய வடத்தை வீசி, இடியாகிய (அதிர்வு) பேரொலி செய்து
வல்லிய மாமதமாகிய மிகுந்த மதம் பாய்கின்ற கரிய யானைகள் வானில் வந்தால் நீண்ட
கூந்தல் பின்னல் என்பார் என நினைந்து நிலவிய ஏகம்பர் கோயில் கொடியன்ன நீர்மையனே.
-
நீரென்னி லும்அலுங் கண்முகில்
காள்நெஞ்சம் அஞ்சலையென்(று)
ஆரென்னி லும்தம ராயுரைப்
பார்அம ராவதிக்கு
நேரென்னி லும்தகும் கச்சியுள்
ஏகம்பர் நீள்மதில்வாய்ச்
சேரென்னி லும்தங்கும் வாட்கண்ணி
தான்அன்பர் தேர்வரவே.
தெளிவுரை : கார்காலம் கண்டு தலைவன் தேர்வரும் என்று கலங்கிய தலைவியின் நிலை
கூறப்படுகிறது. தலைவியின் கண்கள் நீர் என்று சொன்னவுடன் அழ ஆரம்பிக்கும்.
முகில்களே ! நெஞ்சம் அஞ்சாதே என்று ஆர் என்னிலும் சுற்றத்தாரைப்போல் உரைப்பார்.
துறக்க வுலகத்திற்கே போய்விடுவாள் போலும். கச்சியுள் ஏகம்பரின் நீண்ட மதில்வாய்
போய்ச்சேர் என்றாலும் தங்கும். அன்பர் தேர் வரவு நோக்கிய வாட் கண்ணியின் நிலை
இது.
-
வரங்கொண்(டு) இமையோர் நலங்கொள்ளும்
ஏகம்பர் கச்சியன்னாய்
பரங்கொங்கை தூவன்மின் நீர்முத்தம்
அன்பர்தம் தேரின்முன்னே
தரங்கொண்டு பூக்கொண்டு கொன்றைபொன்
னாகத்தண் காந்தட்கொத்தின்
கரங்கொண்டு பொற்சுண்ணம் ஏந்தவும்
போந்தன கார்முகிலே.
தெளிவுரை : வரங்கொண்டு தேவர்களின் நலத்தைக் கொள்ளுகின்ற ஏகம்பரது கச்சி நகரைப்
போன்றவளே ! பாரமான கொங்கைகளைத் தூவன்மின், நீர் முத்தம் அன்பர் தந்து தேரின் முன்
நிறுத்தி பூக்கொண்டு, பொன்போன்ற கொன்றை மலரைத் தூவி காந்தட் கொத்தைக்
கையிற்கொண்டு பொற்சுண்ணம் ஏந்த கார்முகில் போந்தன. கார்முகில் வந்தன எனில்
கார்காலத்தில் வருவதாகச் சொன்ன தலைவரின் தேர்வரும் என்க.
-
கார்முகம் ஆரவண் கைக்கொண்ட
கம்பர் கழல்தொழுது
போர்முக மாப்பகை வெல்லச்சென்
றார்நினை யார்புணரி
நீர்முக மாக இருண்டு
சுரந்தது நேரிழைநாம்
ஆர்முக மாக வினைக்கடல்
நீந்தும் அயர்வுயிர்ப்பே.
தெளிவுரை : பினாகி என்னும் வில்லைக் கைக்கொண்ட ஏகம்பரது பாதங்களைத் தொழுவாயாக.
போர் முகமாகப் பகைவெல்லச் சென்ற நம் தலைவர் நினையார். மேகம் கடல் நீரை முகந்து,
கறுத்து, சுரந்தது. நேரிழையே ! நாம் ஆர்வமாக பிறவிக் கடலை நீந்தும்
பெருமூச்சாகும் இது.
-
உயிரா யினஅன்பர் தேர்வரக்
கேட்டுமுன் வாட்டமுற்ற
பயிரார் புயல்பெற்ற தென்னநம்
பல்வளை ! பான்மைகளாம்
தயிரார்பால் நெய்யொடும் ஆடிய
ஏகம்பர் தம்மருள்போல்
கையிரா வளையழுந் தக்கச்(சு)
இறுத்தன கார்மயிலே.
தெளிவுரை : உயிர் போன்ற நம் தலைவர் தேர்வரும் மணியோசையைக் கேட்டு முன்வாட்ட
முற்று வாடிய பயிர் மழையைப் பெற்றதுபோல் நம் தலைவியின் பான்மைகள் வருமாறு. தயிர்,
பால், நெய்யொடும் அபிடேகங் கொண்ட ஏகம்பர் தம் அருள்போல் வளைகள் கையில் இல்லாமல்
கழன்றன. கச்சு இறுகின. கார் மயிலே என்பது தலைவியை விளித்தது.
-
கார்விடை வண்ணத்தன் அன்றேழ்
தழுவினும் இன்றுதனிப்
போர்விடை பெற்றெதிர் மாண்டார்
எனஅண்டர் போதவிட்டார்
தார்விடை ஏகம்பர் கச்சிப்
புறவிடைத் தம்பொன்நன்பூண்
மார்விடை வைகல் பெறுவார்
தழுவ மழவிடையே.
தெளிவுரை : திருமால் கண்ணனாக அவதரித்தபோது ஏழு காளைகளைத் தழுவி நப்பின்னை
பிராட்டியாரை மணந்தார். இன்று தனிப்போர் விடை பெற்று, எதிர் மாண்டார் என இடையர்
போதவிட்டார். தார்விடை ஏகம்பர் கச்சிப் புறவிடைத்து அம்பொன் நன்பூண்மார் விடை
வைகல் பெறுவார் தழுவ மழவிடையே.
இது ஏறு தழுவுதல் பற்றிக் கூறப்படுகிறது.
-
விடைபாய் கொடுமையெண் ணாதுமே
லாங்கன்னி வேல்கருங்கண்
கடைபாய் மனத்திளங் காளையர்
புல்கொலி கம்பர்கச்சி
மடைபாய் வயலிள முல்லையின்
மான்கன்றொ(டு) ஆன்கன்றினம்
கடைபாய் தொறும்பதி மன்றில்
கடல்போல் கலந்தெழுமே.
தெளிவுரை : விடை தழுவுதலால் உண்டாகும் கொடுமைகளை எண்ணாமல், கன்னியைப் பெறுதல்
மேல் என்று வேல் போன்ற கருங் கண்களையுடைய மாதர்களின் மேல் கொண்ட ஆர்வத்தால்
காளையர் ஏறு தழுவுதலாகிய வீரத்தை மேற்கொண்ட ஏகம்பர் கச்சி மடைபாய் வயலில் உள்ள
இளமுல்லையின் மான் கன்றொடு பசுங் கன்றினம் கடைபாய்தொறும் பதிமன்றில் கடல் ஓசைபோல்
எழும் என்றவாறு. இதுவும் ஏறு தழுவும் வழக்கத்தைப் பற்றிக் கூறுகிறது.
-
எழுமலர்த் தண்பொழில் ஏகம்பர்
கச்சி இருங்கடல்வாய்க்
கொழுமணப் புன்னைத் துணர்மணற்
குன்றில் பரதர்கொம்பே
செழுமலர்ச் சேலல்ல வாளல்ல
வேலல்ல நீலமல்ல
முழுமலர்க் கூர்அம்பின் ஓரிரண்
டாலும் முகத்தனவே.
தெளிவுரை : மலர்களோடு கூடிய குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த ஏகம்பரது கச்சி பெரிய
கடற்கரையிலுள்ள கொழு மணப்புன்னைத் துணர் மணற்குன்றில் நெய்தல் நில மக்களின்
கொம்பே செழுமலர் சேல்மீன் அல்ல, வாளல்ல, வேலல்ல, நீலமல்ல முழுமலர் கூர் அம்பின்
ஓர் இரண்டாலும் முகத்தனவே. நெய்தல் நில பெண்ணின் கண்களை இவ்வாறு வர்ணிக்கின்றார்.
சேல்மீன் போல் பிரளும். வாள் போல் வெட்டும். வேல் போல் குத்தும். நீலமலர் போல்
கருநிறமுடையது. கூர் அம்பு போன்றது.
-
முகம்பாகம் பண்டமும் பாகமென்(று)
ஓதிய மூதுரையை
உகம்பார்த் திரேல்என் நலமுயர்
ஏகம்பர் கச்சிமுன்நீர்
அகம்பாக ஆர்வின் அளவில்லை
என்னின் பவளச்செவ்வாய்
நகம்பால் பொழில்பெற்ற நாமுற்ற
வர்கொள்க நன்மயலே.
தெளிவுரை : அருளும் செல்வமும் பாகம் என்று சொன்ன மூதுரையை ஊகித்துப் பார்த்தால்
என்ன? நலம் உயர் ஏகம்பர் கச்சிமுன் நீர் இடம் பாக ஆர்வின் அளவில்லை. என்னின்,
பவளம் போன்ற சிவந்த வாயையும் மலையின்பால் சோலை பெற்ற நாமுற்றவர் கொள்க. நன்மயலே !
(நன்மயிலே எனவும் பாடம்.)
-
மயக்கத்த நல்லிருள் கொல்லும்
சுறவோ(டு) எறிமகரம்
இயக்கத்(து) இடுசுழி ஓதம்
கழிகிளர் அக்கழித்தார்
துயக்கத் தவர்க்(கு)அரு ளாக்கம்பர்
கச்சிக் கடலர்பொன்னூல்
முயக்கத் தகல்வு பொறாள்கொண்க
நீர்வரும் ஊர்க்(கு)அஞ்சுமே.
தெளிவுரை : நல்லிருள் கொல்லும் மயக்கத்த, சுறா மீனோடு, எறி முதலைகளின்
இயக்கத்தில் இடுகின்ற சுழியை உடைய கடற்கழி கிளர் அக்கழித்தார் பாசப் பிணிப்பு
உடையவர்களுக்கு அருள் செய்யாத கம்பர் கச்சிக் கடலர் பொன்னூல் முயக்கத்து அகல்வு
பொறாள் கொண்கனே ! நீர்வரும் ஊர்க்கு என்மகள் அஞ்சுவாள். உன்பால் அன்புடையவள்
என்றாலும் உன் ஊரைக் கண்டு அஞ்சுகிறாள் என்பதாம்.
-
மேயிரை வைகக் குருகுண
ராமது உண்டுபுன்னை
மீயிரை வண்டோ தமர்புக்
கடிய விரிகடல்வாய்ப்
பாயிரை நாகம்கொண் டோன்தொழும்
கம்பர்கச் சிப்பவ்வநீர்
தூயிரை கானல்மற்(று) ஆரறி
வார்நந் துறைவர்பொய்யே.
தெளிவுரை : மேயிரை வைகக் கொக்கு உணராமல் மதுவுண்டு புன்னை மீயிரை வண்டு
தமர்புக்கடிய விரிகடல் வாய், இரைகின்ற நாகத்தைப் பாயாகக் கொண்ட திருமால்
தொழுகின்ற கம்பர் கச்சிக்கடல்நீர் தூயிரை கானல் மற்று ஆரறிவார். நம் துறைவர்
(நெய்தல் நிலத் தலைவர்) சொல்லும் பொய்யை யார் அறிவார் என்றபடி.
-
பொய்வரு நெஞ்சினர் வஞ்சனை
யாரையும் போகவிடா
மெய்வரும் பேரருள் ஏகம்பர்
கச்சி விரையினவாய்க்
கைவரும் புள்ளொடு சங்கினம்
ஆர்ப்பநம் சேர்ப்பர்திண்தேர்
அவ்வரு தாமங் கள்இனம்வந்(து)
ஆர்ப்ப அணைகின்றதே.
தெளிவுரை : பொய் வரும் நெஞ்சினரது வஞ்சனை யாரையும் போகவிடாது. மெய்வரும் பேரருள்
ஏகம்பர் கச்சி விரையனவாய்க் கைவரும் பறவையோடு சங்கினம் ஆர்ப்ப நம் நெய்தல்
நிலத்தலைவரது தேர் யானைகள் இனம் வந்து ஆரவாரிக்க நெருங்கி வருகின்றது. தலைவர்
கார் காலத்தில் திரும்பி வருவதாகச் சொன்னபடி வந்துவிட்டார் என்க.
-
இன்றுசெய் வோம்இத னில்திரு
ஏகம்பர்க்(கு) எத்தனையும்
நன்றுசெய் வோம்பணி நாளையென்(று)
உள்ளிநெஞ் சேயுடலில்
சென்றுசெ யாரை விடும்துணை
நாளும் விடா(து)அடிமை
நின்றுசெய் வாரவர் தங்களின்
நீள்நெறி காட்டுவரே.
தெளிவுரை : இன்று செய்வோம் இதனில் திருஏகம்பர்க்கு, அனைத்தையும் நன்றாகவே
செய்வோம். நெஞ்சமே ! பணி நாளையென்று நினைத்து உடலில் சென்று செய்யாரை விடும் துணை
நாளும் விடாமல் நின்று அடிமை செய்வார். அவர் தங்களின் நீள் நெறி காட்டுவர்
என்றபடி. ஒழுக்க நெறிகளைப் போதிக்கிறார்.
-
காட்டிவைத் தார்தம்மை யாம்கடிப்
பூப்பெய்யக் காதல்வெள்ளம்
ஈட்டிவைத் தார்தொழும் ஏகம்பர்
ஏதும் இலாதஎம்மைப்
பூட்டிவைத் தார்தமக் கன்பது
பெற்றுப் பதிற்றுப்பத்துப்
பாட்டிவைத் தார்பர வித்தொழு
வாம்அவர் பாதங்களே.
தெளிவுரை : காட்டி வைத்தார் தம்மை யாம் மணமுள்ள பூப் பெய்யக் காதல் வெள்ளம் ஈட்டி
வைத்தார் தொழும் ஏகம்பர் ஏதும் இல்லாத எம்மைப் பூட்டி வைத்தார் தமக்கென்பது
பெற்றுப் பத்தாகிய பத்து அதாவது இந்த நூறு அந்தாதிப் பாடல்களைச் பாடச் செய்தார்.
அவர் பாதங்களைத் தொழுவோம். என்று தன்னை ஆட்கொண்ட கருணை வெள்ளத்தைப் பாடிப்
பரவுகின்றார்.
-
பாதம் பரவியோர் பித்துப்
பிதற்றினும் பல்பணியும்
ஏதம் புகுதா வகையருள்
ஏகம்பர் ஏத்தெனவே
போதம் பொருளால் பொலியாத
புன்சொல் பனுவல்களும்
வேதம் பொலியும் பொருளாம்
எனக்கொள்வர் மெய்த்தொண்டரே.
தெளிவுரை : இறைவனது பாதங்களைத் துதித்து, ஒப்பற்ற பேரன்போடு பிதற்றினாலும்
பல்பணியும் குற்றம் புகா வகையில் அருளும் ஏகம்பரை ஏத்துவாயாக என்று அறிவுப்
பொருள் நிரம்பாத அற்பச் சொற்களால் ஆகிய பாடல்களும், வேதம் நிறைந்த பொருளாக மெய்த்
தொண்டர்கள் கொள்வார்கள்.
திருச்சிற்றம்பலம்
திருவொற்றியூர் ஒருபாஒருபஃது
( பட்டினத்துப்பிள்ளையார்அருளிச்செய்தது )
திருவொற்றியூரில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள சிவபெருமானது பொருள்சேர்
புகழை விரித்துரைக்கும் ஆசிரியப்பாவாலாகிய பத்துப் பாடல்களால் அந்தாதித் தொடை
அமையப் பாடப்பட்ட நூலாதலின், இது திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது என்னும்
பெயருடையதாயிற்று.
இதன்கண் அமைந்துள்ள பாடல்கள் பத்தும் ஒற்றியூர் பரமனை முன்னிலைப் படுத்திப்
போற்றும் இயல்பினவாய்ச் சைவசித்தாந்த உண்மைகளை நன்கு விளக்குவனவாக அமைந்துள்ளன.
எல்லாப் பொருள்களிலும் இரண்டறக் கலந்து விளங்கும் இறைவனுக்கு உலகமே வடிவமாகலின்
அப்பேருருவினை விட்டுவிலகி நிற்கும் பொருள்கள் உலகத்தில் இல்லை. உலகப் பொருள்கள்
யாவும் இறைவன் திருவுருவத்தில் உறுப்புக்களாகவே கொள்ளத்தக்கன.
முப்புரம் எரியச் செய்தது; தக்கன் தலை அரிந்தது; இந்திரனைத் தோள் நெரித்தது;
நான்முகன் தலைகளில் ஒன்றைக் கிள்ளியது; காமனை எரித்தது; இராவணனை விரலால்
நெருக்கியது. நமனை உதைத்து முதலிய இறைவனுடைய வீரச் செயல்களெல்லாம் இறைவன் உலகத்தை
இயக்குங்கால் அவன் அருளினை எதிரேற்றுக் கொள்ளாதார் செய்த வினை வயத்தால் நிகழ்ந்த
நிகழ்ச்சிகளெனக் கொள்வதல்லாது இறைவன் தனக்குப் புகழ் உண்டாகுமாறு விரும்பிச்
செய்த வீரச் செயல்களென மெய்யறிவாளர்கள் கொள்ள மாட்டார்கள் என்பன போன்ற செய்திகள்
இதன்கண் காண்க.
திருச்சிற்றம்பலம்
அகவல்
-
இருநில மடந்தை இயல்பினின் உடுத்த
பொருகடல் மேகலை முகமெனப் பொலிந்த
ஒற்றி மாநகர் உடையோய் உருவின்
பெற்றிஒன் றாகப் பெற்றோர் யாரே
மின்னின் பிறக்கம் துன்னும்நின் சடையே.
தெளிவுரை : பூமாதேவி இயல்பாக உடுத்த அலைளை உடைய கடல் மேகலையாகும். முகமாகப்
பொலியும் ஒற்றிமாநகரை உடையோய். உருவின் தன்மையை முழுமையாகப் பெற்றோர் யாரே !
மின்னலின் ஒளியைப் போன்று விளங்குவது உன்னுடைய சடையாகும்.
மன்னிய அண்டம்நின் சென்னியின் வடிவே
பாவகன் பரிதி பனிமதி தன்னொடு
மூவகைச் சுடரும்நின் நுதல்நேர் நாட்டம்
தண்ணொளி ஆரந் தாரா கணமே
விண்ணவர் முதலா வேறோர் இடமாக்
கொண்டுறை விசும்பே கோலநின் ஆகம்
தெளிவுரை : நிலைபெற்ற இந்தப் பிரபஞ்சம் உன் தலையின் வடிவாகும். அக்கினி, சூரியன்,
சந்திரன் ஆகிய மூன்றும் உன் கண்களாகும். குளிர்ந்த முத்து மாலையாக விளங்குவது
நட்சத்திரக் கூட்டம். தேவர் முதலானோர் வேறோர் இடமாகக் கொண்டு வாழும் விசும்பு உன்
உடம்பாகும்.
எண்திசை திண்தோள் இருங்கடல் உடையே.
அணியுடை அல்குல் அவனிமண் டலமே.
மணிமுடிப் பாந்தள்நின் தாளிணை வழக்கே
ஒழியா(து) ஓடிய மாருதம் உயிர்ப்பே.
தெளிவுரை : எட்டுத் திசைகளும் உன்னுடைய திண்ணிய தோள்களாகும். பெரிய கடல்
உடையாகும். அணியுடை வயிறு இந்த அவனி மண்டலமே. மணிமுடி பாந்தள்; நின் இரண்டு
பாதங்கள் இயக்கம். இடைவிடாது ஓடும் காற்று உன்மூச்சு.
வழுவா ஓசை முழுதும்நின் வாய்மொழி
வானவர் முதலா மன்னுயிர் பரந்த
ஊனமில் ஞானத் தொகுதிநின் உணர்வே.
நெருங்கிய உலகினில் நீர்மையும் நிற்றலும்
சுருங்கலும் விரிதலும் தோற்றநின் தொழிலே.
தெளிவுரை : வழுவாத ஓசை முழுதும் நின் வாய்மொழி. தேவர்கள் முதலாக நிலைபெற்ற
உயிர்கள் பரந்த ஊனமில் ஞானத்தொகுதி நின் உணர்வே. நெருங்கிய உலகில் நீர்மையும்
நிற்றலும் சுருங்கலும் விரிதலும் தோற்றும் நின் தொழிலே ஆகும்.
அமைத்தலும் அழித்தலும் ஆங்கதன் பெயர்ச்சியும்
இமைத்தலும் விழித்தலும் ஆகும்நின் இயல்பே.
என்றிவை முதலாம் இயல்புடை வடிவினோ(டு)
ஒன்றிய துப்புரு இருவகை ஆகி
முத்திறக் குணத்து நால்வகைப் பிறவி
தெளிவுரை : அமைத்தலும் அழித்தலும் ஆங்கு அதன் பெயர்ச்சியும் கண் இமைத்தலும்
விழித்தலும் நின் இயல்பாகும் என்று இவை முதலாக இயல்புடை வடிவினோடு ஒன்றிய
பவழத்தின் உரு இருவகையாகி, சாத்துவிகம், இராசசம், தாமதம் என்னும் மூன்று
குணங்களாகிய நால்வகைப் பிறவி.
அத்திறத்(து) ஐம்பொறி அறுவகைச் சமயமோ(டு)
ஏழுல காகி எண்வகை மூர்த்தியோ(டு)
ஊழியோ(டு) ஊழி எண்ணிறந் தோங்கி
எவ்வகை அளவினிற் கூடிநின்(று)
அவ்வகைப் பொருளும்நீ ஆகிய இடத்தே.
தெளிவுரை : அத்திறத்து ஐம்பொறி, அறுவகைச் சமயமோடு, ஏழ்உலகு ஆகி, எண்வகை
மூர்த்தியோடு உலக முடிவு அளவிறந்து எவ்வகை அளவிற் கூடி நின்று அவ்வகைப் பொருளும்
நீ ஆகிய இடத்து எல்லாம் நீயே என்று முடிக்கின்றார்.
-
இடத்துறை மாதரோ(டு) ஈருடம்(பு) என்றும்
நடத்தினை நள்ளிருள் நவிற்றினை என்றும்
புலியதள் என்பொடு புனைந்தோய் என்றும்
பலிதிரி வாழ்க்கை பயின்றோய் என்றும்
அருவமும் உருவரும் ஆனாய் என்றும்
தெளிவுரை : இடப்பாகத்திலுள்ள உமாதேவி யாரோடு சேர்ந்து இரண்டு உடம்பென்றும்,
நள்ளிரவில் நடனத்தைப் புரிகின்றாய் என்றும், புலித் தோலையும் எலும்பு மாலையையும்
அணிந்துள்ளாய் என்றும், பிச்சையெடுத்து வாழ்க்கை நடத்துகிறாய் என்றும்
அருவமாகவும் உருவமாகவும் ஆனாய் என்றும்,
திருவமர் மாலொடு திசைமுகன் என்றும்
உளனே என்றும் இலனே என்றும்
தளரான் என்றும் தளர்வோன் என்றும்
ஆதி என்றும் அசோகினன் என்றும்
போதியிற் பொலிந்த புராணன் என்றும்
தெளிவுரை : திருமகளோடு கூடிய திருமால் என்றும், நான்முகன் என்றும், உள்ளவன்
என்றும், இல்லவன் என்றும், தளரான் என்றும், தளர்வோன் என்றும், ஆதியாகிய முதல்வன்
என்றும், அசோக மரத்தடியில் உள்ள அருகதேவன் என்றும், அரச மரத்தின் கீழ் உள்ள புத்த
பெருமான் என்றும்,
இன்னவை முதலாத் தாமறி அளவையின்
மன்னிய நூலின் பன்மையுள் மயங்கிப்
பிணங்கு மாந்தர் பெற்றிமை நோக்கி
அணங்கிய அவ்அவர்க்(கு) அவ்வவை ஆகி அடையப்
பற்றிய பளிங்கு போலும்
ஒற்றி மாநகர் உடையோய் உருவே.
தெளிவுரை : இவ்வாறு கூறப்பட்டவை முதலாக எமக்குத் தெரிந்த அளவு பொருந்திய பல
நூல்களில் மயங்கி, மாறுபாடு உடைய மாந்தர்களின் பெருமைகளை நோக்கித் துன்பம்
செய்தவர்களுக்கு ஏற்றவாறு ஆகிக் கையிலுள்ள கண்ணாடிபோல உருவம் கொள்ளும்
திருவொற்றியூரில் கோயில் கொண்டிருக்கும் இறைவனே ! வணக்கம்.
-
உருவாம் உலகுக்(கு) ஒருவன் ஆகிய
பெரியோய் வடிவிற் பிறிதிங்(கு) இன்மையின்
எப்பொரு ளாயினும் இங்குள தாமெனின்
அப்பொருள் உனக்கே அவயவம் ஆதலின்
முன்னிய மூவெயில் முழங்கெரி ஊட்டித்
தெளிவுரை : உருவாம் உலகுக்கு ஒருவன் ஆகிய பெரியோய் ! வடிவில் வேறு பொருள் ஒன்றும்
இன்மையின், எந்தப் பொருளாய் இருந்தாலும் இங்கு இருக்கிறதென்றால் அப்பொருள் உனக்கு
அவயவம் ஆகும். ஆதலால் முன்பு திரிபுரங்களுக்கு எரி ஊட்டினாய் !
தொன்னீர் வையகம் துயர்கெடச் சூழ்ந்ததும்
வேள்வி மூர்த்திதன் தலையினை விடுத்ததும்
நீள்விசும் பாளிதன் தோளினை நெரித்ததும்
ஓங்கிய மறையோற்(கு) ஒருமுகம் ஒழித்ததும்
பூங்கணை வேளைப் பொடிபட விழித்ததும்
தெளிவுரை : தொன்னீர் (கடல்) உலகம் துன்பமடையச் சூழ்ந்ததும், வேள்வி மூர்த்தியாகிய
தட்சனது தலையை வெட்டியதும் இந்திரனது தோள்களை நெரித்ததும், பிரமனது ஒரு தலையைக்
கிள்ளி எரிந்ததும், மன்மதனைச் சாம்பலாக்கியதும்,
திறல்கெட அரக்கனைத் திருவிரல் உறுத்ததும்
குறைபடக் கூற்றினைக் குறிப்பினில் அடர்த்ததும்
என்றிவை முதலா ஆள்வினை எல்லாம்
நின்றுழிச் செறிந்த நின்செய லாதலின்
உலவாத் தொல்புகழ் ஒற்றி யூர
தெளிவுரை : வலிமை கெட இராவணனைத் தன் கால் கட்டை விரலால் அழுத்தியதும், மார்க்
கண்டேயனது உயிரைக் கவர வந்த காலனைக் காலால் உதைத்ததும், என்று இவை முதலாகச் செய்த
முயற்சிகள் எல்லாம், நின்றுழிச் செறிந்த உன்னுடைய வீரச் செயல்கள் ஆதலின் கெடாத
பழைமையான புகழ்பெற்ற திருவொற்றியூரில் கோயில் கொண்ட இறைவனே !
பகர்வோர் நினக்குவே றின்மை கண்டவர்
நிகழ்ச்சியின் நிகழின் அல்லது
புகழ்ச்சியிற் படுப்பரோ பொருளுணர்ந் தோரே.
தெளிவுரை : சொல்லுகின்றவர் உனக்கு வேறுபட்டவர் அல்லர். கண்டவர் இவையாவும் இயல்பாக
நீ செய்த செயல்களே யன்றிப் புகழுக்காகச் செய்தவையல்ல என்பதை அறிவர். இதுதான்
பொருள் உணர்ந்தோரின் கருத்து என்பதாம்.
-
பொருள்உணர்ந்(து) ஓங்கிய பூமகன் முதலா
இருள்துணை யாக்கையில் இயங்கு மன்னுயிர்
உருவினும் உணர்வினும் உயர்வினும் பணியினும்
திருவினும் திறலினும் செய்தொழில் வகையினும்
வெவ்வே றாகி வினையொடும் பிரியா(து)
தெளிவுரை : பொருள் உணர்ந்து ஓங்கிய பிரமன் முதலாக இருளை யொத்த உடலில் இயங்குகின்ற
நிலை பெற்ற உயிர் உருவிலும், உணர்விலும், உயர்விலும், பணிவிலும், திருவிலும்,
திறலிலும், செய்தொழில் வகையிலும் வெவ்வேறாகி வினையிலிருந்து பிரியாமல்,
ஒவ்வாப் பன்மையுள் மற்றவர் ஒழுக்கம்
மன்னிய வேலையுள் வான்திரை போல
நின்னிடை எழுந்து நின்னிடை ஆகியும்
பெருகியும் சுருங்கியும் பெயர்ந்தும் தோன்றியும்
விரவியும் வேறாய் நின்றனை விளக்கம்
தெளிவுரை : பொருந்தாத பன்மையுள் மற்றவர்களுடைய ஒழுக்கம் நிலைபெற்ற கடலுள் அலை போல
உன்னிடமிருந்து எழுந்து உன்னிடமே ஒடுங்கியும், அதிகமாகியும், குறைந்தும்,
அங்கிருந்து அகன்றும் பிறகு அங்கு வந்து தோன்றியும், கலந்தும், வேறாகியும்,
நின்றனை.
ஓவாத் தொல்புகழ் ஒற்றி யூர
மூவா மேனி முதல்வ நின்னருள்
பெற்றவர் அறியின் அல்லது
மற்றவர் அறிவரோ நின்னிடை மயக்கே.
தெளிவுரை : இடைவிடாத பழைமையான புகழையுடைய ஒற்றியூர ! மூத்தல் இல்லாத மேனியை யுடைய
முதல்வனே ! உன்னுடைய அருள் பெற்றவர்கள் அறிவார்களோ அல்லது மற்றவர் அறிவார்களோ?
அறிய மாட்டார்கள் ! (அவர்கள் உன்னைப் பற்றி, சரியாய் அறியவில்லை என்பதாம்.)
-
மயக்கமில் சொல்நீ யாயினும் மற்றவை
துயக்க நின்திறம் அறியாச் சூழலும்
உறைவிடம் உள்ளம் ஆயினும் மற்றது
கறைபட ஆங்கே கரந்த கள்ளமும்
செய்வினை உலகினில் செய்வோய் எனினும்
தெளிவுரை : மயக்கம் இல்லாத சொல் நீ. ஆயினும் மற்றவை தளர்ச்சியுடையவை. நின்னுடைய
ஆற்றல் அறியாத சூழலும், உறைவிடம் உள்ளம் ஆயினும் மற்றது குற்றம் உண்டாக ஆங்கே
மறைந்த கள்ளமும் செய்வினை உலகில் செய்வோய். எனினும்,
அவ்வினைப் பயன்நீ அணுகா அணிமையும்
இனத்திடை இன்பம் வேண்டிநிற் பணிவோர்
மனத்திடை வாரி ஆகிய வனப்பும்
அன்பின் அடைந்தவர்க்(கு) அணிமையும் நாடொறும்
என்பினை உருக்கும் இயற்கைய ஆதலின்
தெளிவுரை : அவ்வினையின் பயன் நீ. நெருங்க முடியாத நெருக்கமும், இனத்திடை இன்பம்
வேண்டி உன்னைப் பணிகின்றவர் மனத்தின்கண் கடல் ஆகிய அழகும், அன்போடு
அடைந்தவர்களுக்கு அருகிலும், நாள்தோறும் எலும்பை உருக்கும் இயல்பினை உடையை
ஆதலின்,
கண்டவர் தமக்கே ஊனுடல் அழிதல்
உண்டென உணர்ந்தனம் ஒற்றி யூர
மன்னிய பெரும்புகழ் மாதவத்
துன்னிய செஞ்சடைத் தூமதி யோயே.
தெளிவுரை : கண்டவர் தமக்கே இந்த உடம்பு அழிதல் உண்டென அறிந்தோம். திருவொற்றி
யூரனே ! நிலைபெற்ற பெரும்புகழ் மாதவத் துன்னிய செஞ்சடையில் பரிசுத்தமான சந்திரனை
அணிந்தவனே !
-
தூமதி சடைமிசைச் சூடுதல் தூநெறி
ஆமதி யான்என அமைத்த வாறே
அறனுரு வாகிய ஆனே(று) ஏறுதல்
இறைவன் யானென இயற்று மாறே
அதவள் அவனென நின்றமை யார்க்கும்
பொதுநிலை யானென உணர்த்திய பொருளே
தெளிவுரை : இறைவனுடைய திருக்கோலத்தில் உள்ள பொருள்களுக்குக் கருத்து உரைக்கிறார்.
தூய்மையான சந்திரனைச் சடையின் மேல் சூடியிருப்பது தூய வழியை உடையவன் என
அமைந்துள்ளது. தரும தேவதையின் உருவமாகிய ரிஷபத்தின் (காளை) மேல் ஏறுதல் இறைவன்
யான் என்று காட்டுவதற்கே யாம். அது, அவன், அவள் என நின்றமை எல்லார்க்கும் பொது
நிலையான் என்று உணர்த்திய பொருளே.
முக்கணன் என்பது முத்தீ வேள்வியில்
தொக்க(து) என்னிடை என்பதோர் சுருக்கே
வேத மான்மறி ஏந்துதல் மற்றதன்
நாதன் நான்என நவிற்று மாறே
தெளிவுரை : மூன்று கண்களை உடையவன் என்பது முத்தீ வேள்வியில் தொக்கது என்னிடை
என்பதோர் சுருக்கே, மறைவடிவாகிய மான் கன்று ஏந்துதல், அதன் நாதன் நான் என்று
சொல்லுவதற்கே.
மூவிலை ஒருதாள் சூலம் ஏந்துதல்
மூவரும் யான்என மொழிந்த வாறே
எண்வகை மூர்த்தி என்பதிவ் வுலகினில்
உண்மை யான்என உணர்த்திய வாறே
தெளிவுரை : மூன்று கிளைகளாகப் பிரிந்துள்ள ஒரு தாள் சூலம் ஏந்துதல் பிரமா,
விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் யான்எனத் தெரிவிப்பதற்காகவே. எண்வகை மூர்த்தி என்பது
இவ்வுலகில் உண்மை யான் என உணர்த்துவதற்கேயாம்.
நிலம்நீர் தீவளி உயர்வான் என்றும்
உலவாத் தொல்புகழ் உடையோய் என்றும்
பொருளும் நற்பூதப் படையோய் என்றும்
தெருளநின்(று) உலகினில் தெருட்டு மாறே
தெளிவுரை : நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் எக்காலத்திலும் கெடாத பழைமையான
புகழினை உடையோய் என்றும் பொருளும் நல்ல பூதப் படையோய் என்றும் தெளிவாக நின்று
உலகில் தெளிவிப்பதற்கேயாம்.
ஈங்கிவை முதலா வண்ணமும் வடிவும்
ஓங்குநின் பெருமை உணர்த்தவும் உணராத
தற்கொலி மாந்தர் தம்மிடைப் பிறந்த
சொற்பொருள் வன்மையிற் சுழலும் மாந்தர்க்(கு)
ஆதி யாகிய அறுதொழி லாளர்
ஓதல் ஓவா ஒற்றி யூர
சிறுவர்தம் செய்கையிற் படுத்து
முறுவலித்(து) இருத்திநீ முகப்படும் அளவே.
தெளிவுரை : இங்கு இவை முதலாக வண்ணமும் வடிவும் (நிறமும் உருவமும்) ஓங்குகின்ற உன்
பெருமை உணர்த்தவும் உணராத தற்கொலை செய்து கொள்ளும் மனிதர்களிடமிருந்து பிறந்த
சொற்பொருள் வன்மையில் சுழலும் மனிதர்க்கு ஆதியாகிய (அறு தொழிலாளர்) அந்தணர்கள்
வேதம் ஓதுதல் நீங்காத ஒற்றியூர ! சிறுவர்களது செய்கையில் படிந்து புன்முறுவல்
செய்து நீ அருள் செய்வாயாக.
-
அளவினில் இறந்த பெருமையை ஆயினும்
எனதுளம் அகலா(து) ஒடுங்கிநின்(று) உளையே
மெய்யினை இறந்த மெய்யினை ஆயினும்
வையகம் முழுதும்நின் வடிவெனப் படுமே
கைவலத்(து) இலைநீ எனினும் காத்தல்
செய்வோர் வேண்டும் சிறப்பொழி யாயே
தெளிவுரை : அளவற்ற பெருமையை உடையை ஆயினும் என் உள்ளத்திலிருந்து நீங்காமல்
ஒடுங்கி நின்று இருக்கின்றாய். பூத உடம்புகளைக் கடந்த சூட்சும உடம்பை உடையாய்
ஆயினும் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் உன் உருவம்தான் என்று பொருள் படும். நீ
உதவவில்லை என்றாலும் காப்பாற்ற வேண்டும் என்னும் பெருங்குணம் படைத்துள்ளாய்.
சொல்லிய வகையால் துணையலை யாயினும்
நல்லுயிர்க் கூட்ட நாயகன் நீயே
எங்கும் உள்ளோய் எனினும் வஞ்சனை
தங்கிய அவரைச் சாராய் நீயே அஃதான்று
தெளிவுரை : சொல்லிய வகையால் நீ துணையாக இல்லை யென்றாலும் உயிர்த் தொகுதிகளுக்கு
நாயகன் நீயே. எல்லா இடங்களிலும் நீ நிறைந்துள்ளாய் எனினும் வஞ்சனை உடையவர்களை நீ
சார்ந்திருக்க மாட்டாய். அதுவும் அல்லாமல்,
பிறவாப் பிறவியைப் பெருகாப் பெருமையைத்
துறவாத் துறவியைத் தொடராத் தொடர்ச்சியைத்
நுகரா நுகர்ச்சியை நுணுகா நுணுக்கினை
அகலா அகற்சியை அணுகா அணிமையை
செய்யாச் செய்கையை சிறவாச் சிறப்பினை
தெளிவுரை : பிறவாப் பிறவியை, பெருகாப் பெருமையை, துறவாத் துறவியை, தொடராத்
தொடர்ச்சியை, நுகரா நுகர்ச்சியை, நுணுகா நுணுக்கினை, அகலா அகற்சியை அணுகா
அணிமையை, செய்யாச் செய்கையை, சிறவாச் சிறப்பினை,
வெய்யை தணியை விழுமியை நொய்யை
செய்யை பசியை வெளியை கரியை
ஆக்குதி அழித்தி ஆன பல்பொருள்
நீக்குதி தொகுத்தி நீங்குதி அடைதி
ஏனைய வாகிய எண்ணில் பல்குணம்
தெளிவுரை : வெய்யை, தணியை, விழுமியை, நொய்யை, செய்யை, பசியை, வெளியை, கரியை,
ஆக்குதி, அழித்தீ, ஆனபல் பொருள் நீக்குதி, தொகுத்தி, நீங்குதி, அடைதி ஏனையவாகிய
எண்ணற்ற பல குணங்களை உடையாய்.
நினைதொறும் மயக்கும் நீர்மைய ஆதலின்
ஓங்குகடல் உடுத்த ஒற்றி யூர
ஈங்கிது மொழிவார் யாஅர் தாஅம்
சொன்னிலை சுருங்கின் அல்லது
நின்னியல் அறிவோர் யார்இரு நிலத்தே.
தெளிவுரை : இதை எண்ணிப் பார்க்கும் ஒவ்வொரு சமயத்திலும் மயக்கம் தருவதாய் உள்ளது.
ஆதலின் கொந்தளிக்கும் கடலை ஆடையாக உடுத்த ஒற்றி யூரனே ! இதற்கு யார் பதில் சொல்ல
முடியும்? சுருங்கச் சொல்வது அல்லது உன்னுடைய தன்மையை அறிவோர் இவ்வுலகில் யாரும்
இல்லை என்பதாம்.
-
நிலத்திடைப் பொறையாய் அவாவினில் நீண்டு
சொல்லத்தகு பெருமைத் தூரா ஆக்கை
மெய்வளி ஐயொடு பித்தொன் றாக
ஐவகை நெடுங்காற்(று) ஆங்குடன் அடிப்ப
நரையெனும் நுரையே நாடொறும் வெளுப்ப
தெளிவுரை : பூமியின்கண் பாரமாய் ஆசையில் அதிகரித்துச் சொல்லும் பெருமையுடைய
உணவால் தூர்க்கப்படாத உலை மெய்யென்று நம்பி வாதம், கபம், பித்தம், ஒன்றாக, ஐந்து
வகையான நெடுங்காற்று ஆங்குடன் அடிப்ப, நரை யென்னும் நுரை நாள் தோறும் வெளுப்ப,
திரையுடைத் தோலே செழுந்திரை யாகக்
கூடிய குருதி நீரினுள் நிறைந்து
மூடிய இருமல் ஓசையின் முழங்கிச்
சுடுபசி வெகுளிச் சுறவினம் எறியக்
குடரெனும் அரவக் கூட்டம்வந் தொலிப்ப
தெளிவுரை : சுருக்கத்தை உடைய தோல் கடலில் உள்ள பெரும் அலைகளாகக் கூடிய இரத்தமாகிய
நீரினுள் நுழைந்து, மூடிய இருமல் ஓசையுடன் முழங்கி, வருத்தும் பசி என்னும்
வெகுளிச் சுறாமீன் வீசி எறிய, குடர் என்னும் பாம்பின் கூட்டம் வந்து ஆரவாரம்
செய்ய,
ஊன்தடி எலும்பின் உள்திடல் அடைந்து
தோன்றிய பல்பிணிப் பின்னகஞ் சுழலக்
கால்கையின் நரம்பே கண்ட மாக
மேதகு நிணமே மெய்ச்சா லாக
முழக்குடைத் துளையே முகங்க ளாக
தெளிவுரை : மாமிச பிண்டம் எலும்பின் உள் அடைந்து, தோன்றிய பல்பிணிப் பின்னகஞ்
சுழல, கால் கை இவைகளின் நரம்பு திரையாக, மேன்மை பொருந்திய நிணம் மெய்ச்சாலாக
முழக் குடைத் துளையே முகங்களாக,
வழுக்குடை மூக்கா(று) ஓதம்வந்(து) ஒலிப்ப
இப்பரி(சு) இயற்றிய உடலிருங் கடலுள்
துப்புர(வு) என்னும் சுழித்தலைப் பட்டுழி
ஆவா என்றுநின் அருளினைப் பெற்றவர்
நாவா யாகிய நாதநின் பாதம்
முந்திச் சென்று முறைமையின் வணங்கிச்
சிந்தைக் கூம்பினைச் செவ்விதின் நிறுத்தி
தெளிவுரை : வழுக்குடை மூக்காறு ஓதம் வந்து ஒலிப்ப, இப்பரிசு இயற்றிய உடல் இரும்
கடலுள் துப்புரவு என்னும் சுழித்தலைப் பட்டுழி ஐயோ என்று உன் அருளைப் பெற்றவர்
படகு ஆகிய நாதனே ! உன் பாதம் முன்னதாகச் சென்று முறைப்படி வணங்கி, சிந்தைக்
கூம்பினைச் (பாய்மரம்) செம்மையாக நிறுத்தி,
உருகிய ஆர்வப் பாய்விரித்(து) ஆர்த்துப்
பெருகிய நிறையெனும் கயிற்றிடைப் பிணித்துத்
துன்னிய சுற்றத் தொடர்க்கயி(று) அறுத்து
மன்னிய ஒருமைப் பொறியினை முறுக்கிக்
காமப் பாரெனும் கடுவெளி அற்ற
தூமச் சோதிச் சுடர்குறி நிறுத்திச்
தெளிவுரை : உருகிய ஆர்வமாகிய பாய்விரித்து ஆரவாரம் செய்து, பெருகிய நிறையெனும்
கயிற்றிடைப் பிணித்து, நெருங்கிய சுற்றமாகிய தொடர்க் கயிறு அறுத்து, நிலைபெற்ற
ஒருமைப் பொறியினை முறுக்கி, காமப் பார் எனும் பெருங்காற்று அற்ற தூமச் சோதிச்
சுடர்குறி நிறுத்தி,
சுருங்கா உணர்ச்சித் துடுப்பினைத் துழாவி
நெருங்கா அளவின் நீள்கரை ஏற்ற
வாங்க யாத்திரை போக்குதி போலும்
ஓங்குகடல் உடுத்த ஒற்றியூ ரோயே.
தெளிவுரை : சுருங்காத உணர்ச்சி யென்னும் துடுப்பினைத் துழாவி நெருங்கியபோது நீண்ட
கரை ஏற்ற வாங்க யாத்திரை போக்குதி போலும். ஓங்கிய கடலை ஆடையாக உடுத்த ஒற்றியூரில்
கோயில் கொண்டுள்ள பெருமானே ! (கரையேறும் வழி கூறியவாறு)
-
ஒற்றி யூர உலவா நின்குணம்
பற்றி யாரப் பரவுதல் பொருட்டா
என்னிடைப் பிறந்த இன்னாப் புன்மொழி
நின்னிடை அணுகா நீர்மைய ஆதலின்
ஆவலித்(து) அழுதலின் அகன்ற அம்மனை
கேவலம் சேய்மையிற் கேளாள் ஆயினும்
தெளிவுரை : திருவொற்றியூரில் எழுந்தருளியிருக்கும் சிவ பெருமானே ! அழியாத உன்
குணம் பற்றி நிரம்பப் போற்றுதல் பொருட்டு என்னிடம் பிறந்த துன்பந்தரும் அற்ப மொழி
உன்னிடம் அணுகாத தன்மைய ஆதலின் பாய்விட்டு அழுதலின் அந்த விசாலமான இடத்திலிருந்து
தாய் தூரத்திலிருந்து கேட்கமாட்டாள் என்றாலும்,
பிரித்தற்(கு) அரிய பெற்றிய தாகிக்
குறைவினில் ஆர்த்தும் குழவிய(து) இயல்பினை
அறியா(து) எண்ணில் ஊழி பிறவியின்
மயங்கிக் கண்ணிலர் கண்பெற் றாங்கே
தெளிவுரை : பிரித்தற்கு இயலாத தன்மை உடையதாகி குறைவாக அரற்றியும் குழந்தையினது
இயல்பை அறியாது எண்ணில் ஊழிக் காலத்து பிறப்பைக் கண்டு மயங்கி, கண்ணில்லாதவர்
கண்ணைப் பெற்றதைப்போல,
தாய்தலைப் படநின் தாளிணை வணக்கம்
வாய்தலை அறியா மயக்குறும் வினையேன்
மல்கிய இன்பத் தோடுடன் கூடிய
எல்லையில் அவாவினில் இயற்றிய வாகக்
கட்டிய நீயே அவிழ்க்கின் அல்ல(து)
எட்டனை யாயினும் யான்அவிழ்க் கறியேன்
தெளிவுரை : தாய் முன்வர நின் பாதங்களை வணங்கும் வழிமுறை அறியாத மயக்கத்தை அடையும்
வினையை உடையேன். நிறைந்த இன்பத்தோடு உடன் கூடிய எல்லையில்லாத ஆசையினால் ஏற்பட்ட
கட்டினை நீயே அவிழ்த்தால் அல்லது எள் அளவுகூட யான் அவிழ்க்க அறியேன்.
துன்னிடை இருளெனும் தூற்றிடை ஒதுங்கி
வெள்ளிடை காண விருப்புறு வினையேன்
தந்தையும் தாயும் சாதியும் அறிவும்நம்
சிந்தையும் திருவும் செல்கதித் திறனும்
தெளிவுரை : இடையில் உள்ள இருண்ட சிறு செடிகளில் ஒதுங்கி வெளியிடம் காண
விரும்புகின்ற வினையேன் தந்தையும் தாயும் சாதியும் அறிவும் நம் சிந்தையும்
திருவும் புகலிடத்தின் திறனும்,
துன்பமும் துறவும் தூய்மையும் அறிவும்
இன்பமும் புகழும் இவைபல பிறவும்
சுவையொளி ஊ(று)ஓசை நாற்றம் தோற்றம்
என்றிவை முதலா விளங்குவ எல்லாம்
ஒன்றநின் அடிக்கே ஒருங்குடன் வைத்து
நின்றனன் தமியேன் நின்னடி யல்லது
தெளிவுரை : துன்பமும் துறவும் தூய்மையும் அறிவும், இன்பமும் புகழும் இவை போன்ற
வேறு பிறவும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் (புலன் ஐந்தும்) தோற்றம் என்று இவை
முதலாக விளங்குகின்ற பொருள்கள் யாவும் ஒன்ற நின் அடிக்கே ஒருங்குடன் வைத்து,
தமியேன் நின்றேன். நின்னடி அல்லது,
சார்வுமற்(று) இன்மையின் தளர்ந்தோர் காட்சிச்
சேர்விடம் அதனைத் திறப்பட நாடி
எய்துதற்(கு) அரியோய் யான்இனிச்
செய்வதும் அறிவனோ தெரியுங் காலே.
தெளிவுரை : வேறு சார்வு இல்லாமையின் தளர்ந்தோர் காட்சி சேர்விடம் அதனைத் திறப்பட
நாடி எய்துதற்கு அரியோய் ! யான் இனிச் செய்வதும் அறியேன். யோசித்துப் பார்த்தும்
வேறு வழி தெரிய வில்லையே !
-
காலற் சீறிய கழலோய் போற்றி
மூலத் தொகுதி முதல்வா போற்றி
ஒற்றி மாநகர் உடையோய் போற்றி
முற்றும் ஆகிய முதல்வ போற்றி
அணைதொறும் சிறக்கும் அமிர்தே போற்றி
தெளிவுரை : காலனைக் கோபித்த பாதத்தோய் வணக்கம் ! ஆதியாகிய தொகுதி முதல்வா வணக்கம்
! திருவொற்றியூரில் மேவி யிருக்கும் பெரியோய் வணக்கம் ! எல்லாவற்றிற்கும்
தலைமையாய் உள்ளவனே வணக்கம். உன்னை நெருங்கும் தோறும் சிறக்கும் அமிர்தமே வணக்கம்
!
இணைபிறி தில்லா ஈச போற்றி
ஆர்வம் செய்பவர்க்(கு) அணியோய் போற்றி
தீர்வில் இன்சுவைத் தேனே போற்றி
வஞ்சனை மாந்தரை மறந்தோய் போற்றி
நஞ்சினை அமிர்தாய் நயந்தோய் போற்றி
தெளிவுரை : பிரிதில் இல்லாத ஈசனே வணக்கம். ஆவலாய்த் துதிப்போர்க்கு நெருங்கி
யிருப்பவனே வணக்கம். முடிவில்லாத இன் சுவைத் தேனே வணக்கம். வஞ்ச மனம் கொண்டவரை
மறந்தாய் வணக்கம் ! ஆலகால விடத்தை அமிர்தமாய் விரும்பினாய் வணக்கம்.
விரிகடல் வையக வித்தே போற்றி
புரிவுடை வனமாய்ப் புணர்ந்தோய் போற்றி
காண முன்பொருள் கருத்துறை செம்மைக்
காணி யாகிய அரனே போற்றி
வெம்மை தண்மையென்(று) இவைகுணம் உடைமையின்
பெண்ணோ(டு) ஆணெனும் பெயரோய் போற்றி
தெளிவுரை : விரிந்த கடலுக்கும் இவ்வுலகத்திற்கும் வித்து போன்றவனே வணக்கம் !
கட்டுதலை யுடைய வனமாகப் புணர்ந்தாய் வணக்கம் ! காண முன்பொருள் கருத்துறை
செம்மைக்கு ஆணியாகிய அரனே ! வணக்கம். வெப்பமும் குளிர்ச்சியும் என்று இவைகளின்
குணமாதலின் பெண்ணோடு ஆண் என்னும் பெயரோய் வணக்கம்.
மேவிய அவர்தமை வீட்டினிற் படுக்கும்
தீப மாகிய சிவனே போற்றி
மாலோய் போற்றி மறையோய் போற்றி
மேலோய் போற்றி வேதிய போற்றி
சந்திர போற்றி தழலோய் போற்றி
இந்திர போற்றி இறைவ போற்றி
தெளிவுரை : பொருந்தியவர்களுக்கு வீடு பேறு அளிக்கும் விளக்காகிய சிவனே வணக்கம்.
திருமால் என்றும் பிரமன் என்றும் மேலோன் என்றும் வேதியன் என்றும் சந்திரன்
என்றும் சூரியன் என்றும் இந்திரன் என்றும் தோற்ற மளிக்கும் இறைவ, வணக்கம்.
அமரா போற்றி அழகா போற்றி
குமரா போற்றி கூத்தா போற்றி
பொருளே போற்றி போற்றி என்றுனை
நாத்தழும்(பு) இருக்க நவிற்றின் அல்ல(து)
ஏத்துதற்(கு) உரியோர் யார்இரு நிலத்தே.
தெளிவுரை : தேவனே வணக்கம். அழகானவனே வணக்கம். குமரனே வணக்கம். கூத்தனே வணக்கம் !
பொருளே வணக்கம், வணக்கம் என்று உன்னை நாத்தழும்பேறும் வரை போற்றினால் அல்லாமல்
வணங்குதற்கு உரியவர் இந்நிலத்தில் வேறு யார் உளர்? வேறு எவரும் இலர் என்க.
திருச்சிற்றம்பலம்
திருநாரையூர் விநாயகர்திருஇரட்டை மணிமாலை ( நம்பியாண்டார் நம்பிஅருளிச்செய்தது )
பதினோராம் திருமுறை ஆசிரியர்களுள் நம்பியாண்டார் நம்பியும் ஒருவர். இவர் சோழ வள
நாட்டில் திருநாரையூரில் ஆதி சைவர் மரபில் தோன்றியவர். இளமைப் பருவத்திலேயே
திருநாரையூர் பொல்லாப் பிள்ளையாரால் ஆட் கொள்ளப் பெற்றவர். அப் பிள்ளையாரின்
திருவருட் பெருக்கினால் செந்தமிழ்ப் புலமையும் செம்பொருள் துணிவும் நன்கு அமையப்
பெற்றவர்.
தேவாரத் திருமுறைகள் மறைவிடத்தில் இருந்து வெளிவந்து உலாவுவதற்கு இவரே துணைக்
காரணராவார். அறுபத்துமூன்று நாயன்மார்களுடைய வரலாற்றையும் திருத்தொண்டர் தொகையைக்
கொண்டு வழிநூலாக விரித்து ஓதியவரும் இவரே. திருஞானசம்பந்தர் தேவாரம் முதல்
பதினொரு திருமுறைகளையும் இவர் வகுத்தருளினார். சேக்கிழார் பாடிய திருத்தொண்டர்
புராணம் பிறகு பன்னிரண்டாவது திருமுறையாகச் சேர்க்கப்பட்டது.
விநாயகர் திருஇரட்டை மணிமாலையாகிய இந்நூல் திருநாரையூரில் கோயில் கொண்டு அருளிய
பொல்லாப் பிள்ளையாராகிய ஆனைமுகக் கடவுள் மீது வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும்
இருவகைப் பாக்களால் அந்தாதித் தொடை அமையப் பாடப்பெற்றதாதலின் திருநாரையூர்
விநாயகர் திரு இரட்டை மணிமாலை என்று பெயர் பெற்றது. நம்பியாண்டார் நம்பி முதன்
முதலாகப் பாடிய நூல் இதுவே என்று கூறுவர். மாங்கனியின் பொருட்டு இளைய பிள்ளையார்
உலகை வலம்வர இவர் சிவபெருமானையே வலம் வந்து கனிபெற்ற செய்தி முதலியன இந்நூலில்
கூறப்பெறும்.
திருச்சிற்றம்பலம்
வெண்பா
1018. என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத்
தன்னை நினையத் தருகின்றான் - புன்னை
விரசுமகிழ் சோலை வியன்நாரை யூர்முக்கண்
அரசுமகிழ் அத்திமுகத் தான்.
தெளிவுரை : புன்னை மரங்கள் கலந்த, மகிழ்ச்சியைத் தருகின்ற, சோலைகள் சூழ்ந்த
வியக்கத்தக்க திருநாரையூரில் கோயில் கொண்டுள்ள முக்கண்களை யுடைய சிவபெருமான்
கண்டு மகிழ்கின்ற யானை முகத்தான் என்னை நினைந்து என்னை அடிமையாகக் கொண்டு, என்
துயர்களைக் களைந்து, அவனை நினைக்க அருள் செய்கின்றான் என்பதாம்.
கட்டளைக் கலித் துறை
-
முகத்தாற் கரியன்என் றாலும்
தனையே முயன்றவர்க்கு
மிகத்தான் வெளியன்என் றேமெய்ம்மை
உன்னும் விரும்படியார்
அகத்தான் திகழ்திரு நாரையூர்
அம்மான் பயந்தஎம்மான்
உகத்தா னவன்தன் உடலம்
பிளந்த ஒருகொம்பனே.
தெளிவுரை : யானை முகத்தான் என்றாலும் அவனை அடைய முயல்கின்றவர்களுக்கு மிகவும்
எளிமையானவன் என்று உண்மையை நினையும் விருப்பமுள்ளவர்கள் மனத்தில் இருப்பவன்.
திகழ்கின்ற திருநாரையூரில் எழுந்தருளியிருக்கும் சிவ பெருமான் பெற்ற எம்மான்,
கயமுகாசுரன் இறந்து விழ அவனுடைய உடம்பைப் பிளந்த ஒப்பற்றவனாகிய விநாயகப்
பெருமான்.
வெண்பா
-
கொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமே
வம்பனைய மாங்கனியை நாரையூர் - நம்பனையே
தன்னவலம் செய்துகொளும் தாழ்தடக்கை யாய்என்நோய்
பின்னவலம் செய்வதெனோ பேசு.
தெளிவுரை : பூங்கொம்பைப் போன்ற வள்ளியின் நாயகனாகிய முருகன் அடையாதபடி
பிரச்சினைக்குரிய மாம்பழத்தை, திருநாரையூரில் மேவிய நம்புவர்க்கருளும்
சிவபெருமானை வலம் வந்து பெற்றுக் கொண்ட துதிக்கையை உடையாய் எனக்குத் துன்பம்
செய்வது ஏன் என்பதைச் சொல்வாயாக.
கட்டளைக் கலித் துறை
-
பேசத் தகாதெனப் பேயெரு
தும்பெருச் சாளியும்என்(று)
ஏசத் தரும்படி ஏறுவ
தேயிமை யாதமுக்கண்
கூசத் தகுந்தொழில் நுங்கையும்
நுந்தையும் நீயும்இந்தத்
தேசத் தவர்தொழு தாரைப்
பதியுள் சிவக்களிறே.
தெளிவுரை : பேசத் தகாதது என்னும்படி மூர்க்கமான எருதும் பெருச்சாளியும் என்று
இகழுமாறு ஏறுவது ஏன்? உன் தந்தையும் தாயும் எருதை வாகனமாகக் கொண்டுள்ளனர். நீ
பெருச்சாளி மீது ஏறிச் செல்கின்றாய். தேசத்தவர் தொழுகின்ற திருநாரையூரில்
எழுந்தருளியிருக்கும் சிவபெருமானால் பெறப்பட்ட யானையே ! இது கேலிக் கூத்தாக
உள்ளது என்றபடி.
வெண்பா
-
களிறு முகத்தவனாய்க் காயம்செந் தீயின்
ஒளிறும் உருக்கொண்ட தென்னே - அளறுதொறும்
பின்நாரை யூர்ஆரல் ஆரும் பெரும்படுகர்
மன்நாரை யூரான் மகன்.
தெளிவுரை : சேறு நிரம்பிய இடங்களில் எல்லாம் நாரை என்ற பறவை ஆரல்மீனைத் தின்னும்
பெரிய குளங்களை உடைய திருநாரையூரில் எழுந்தருளிய சிவ பெருமானது மகன் யானை
முகத்துடனும் உடம்பு செந்தீயாகவும் விளங்குகின்ற காரணம் என்ன?
கட்டளைக் கலித் துறை
-
மகத்தினில் வானவர் பல்கண்
சிரம்தோள் நெரித்தருளும்
சுகத்தினில் நீள்பொழில் நாரைப்
பதியுட் சுரன்மகற்கு
முகத்தது கையந்தக் கையது
மூக்கந்த மூக்கதனின்
அகத்தது வாய்அந்த வாயது
போலும் அடுமருப்பே.
தெளிவுரை : தக்கனது யாகத்தில் சூரியனது பல்லையும் பகனது கண்ணையும், தக்கனது
தலையையும் இந்திரனது தோளையும் இறைவன் போக்கியருளினான். அந்த சுகத்தில் பெரிய
சோலைகளை உடைய திருநாரையூரில் கோயில் கொண்டிருக்கும் இறைவனது மகனாகிய விநாயகருக்கு
முகத்தில் கையும், அந்தத் துதிககையுள் மூக்கும் அந்த மூக்கினுள் வாயும், அந்த
வாயினுள் கொலை செய்யக் கூடிய தந்தமும் உள்ளன. இது என்ன விந்தை !
வெண்பா
-
மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்
பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை
அருந்தஎண்ணு கின்றஎறும் பன்றே அவரை
வருந்தஎண்ணு கின்ற மலம்.
தெளிவுரை : நெருப்பினிடம் எறும்பு செல்லாததுபோல அடியாரிடம் ஆணவ மலர் சேராது
என்பதாம்.
தந்தத்தைக் கையில் கொண்டு திருநாரையூரில் எழுந்தருளியிருக்கும் மலை போன்ற
வடிவமுடைய விநாயகனை வணங்கும் அடியார்களிடம் ஆணவ மலம் நெருப்பினிடம் எறும்பு
அணுகமுடியாதது போல தூர விலகிவிடும்.
கட்டளைக் கலித் துறை
-
மலஞ்செய்த வல்வினை நோக்கி
உலகை வலம்வரும்அப்
புலஞ்செய்த காட்சிக் குமரற்கு
முன்னே புரிசடைமேல்
சலஞ்செய்த நாரைப் பதியரன்
தன்னைக் கனிதரவே
வலஞ்செய்து கொண்ட மதக்களி
றேயுன்னை வாழ்த்துவனே.
தெளிவுரை : உலகை வலம் வந்த முருகப் பெருமானுக்கு முன்னே, புரியாகச் செய்யப்பட்ட
சடையில் கங்கையை வைத்துள்ள திருநாரையூர் பெருமானாகிய சிவபெருமான் தன்னை வலம்
வந்து கனியைப் பெற்றுக் கொண்ட மதக்களிறே முன் வினைகள் என்னை அணுகா வண்ணம் உன்னை
வாழ்த்துவேன்.
வெண்பா
-
வனஞ்சாய வல்வினைநோய் நீக்கி வனசத்
தனஞ்சாய லைத்தருவான் அன்றோ - இனஞ்சாயத்
தேரையூர் நம்பர்மகன் திண்தோள் நெரித்தருளும்
நாரையூர் நம்பர்மக னாம்.
தெளிவுரை : சூரியன் மகனாகிய எமன் மார்க்கண்டேயனது உயிரைக் கவர வந்தபோது அவனது
திண்தோள்களை நெரித்தவனாகிய சிவபெருமானது மகனாகிய விநாயகப் பெருமான் தனது சோலையை
நெருங்க வல்வினை நோயை நீக்கி, தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளது அருளை நாம்
பெறுமாறு செய்வான்.
கட்டளைக் கலித் துறை
-
நாரணன் முன்பணிந்(து) ஏத்தநின்(று)
எல்லை நடாவியஅத்
தேரண வும்திரு நாரையூர்
மன்னு சிவன்மகனே
காரண னேஎம் கணபதி
யேநற் கரிவதனா
ஆரண நுண்பொரு ளேயென்
பவர்க்கில்லை அல்லல்களே.
தெளிவுரை : திருமால் முதலில் வந்து வணங்கவும் அதன் பின்னர் வந்த சூரியனது தேர்
பொருந்தவும் உள்ள திரு நாரையூர் மேவிய சிவபெருமானது மகனே !காரணனே, எம் கணபதியே
நல்ல யானை முகத்தை உடையவனே ! வேதத்தின் நுட்பப் பொருளே ! என்று துதிப்பவர்களுக்கு
அல்லல்கள் இல்லை.
வெண்பா
-
அல்லல் களைந்தான்தன் அம்பொன் உலகத்தின்
எல்லை புகுவிப்பான் ஈண்டுழவர் - நெல்லல்களை
செங்கழுநீர் கட்கும் திருநாரை யூர்ச்சிவன்சேய்
கொங்கெழுதார் ஐங்கரத்த கோ.
தெளிவுரை : துன்பங்களை நீக்கியவனது முக்தி உலகத்தின் எல்லையை அடையும் பொருட்டு
இங்கு உழவர்கள் நெல் வயலில் உள்ள களைகளை எடுக்கும் செங்கழுநீர் நிரம்பிய
திருநாரையூர் சிவபெருமானது மகனும், மலர் மாலை அணிந்த ஐந்து கரங்களை உடையவனுமாகிய
விநாயகன் நம் துன்பங்களைக் களைவான் என்க.
கட்டளைக் கலித் துறை
-
கோவிற் கொடிய நமன்தமர்
கூடா வகைவிடுவன்
காவில் திகழ்திரு நாரைப்
பதியிற் கரும்பனைக்கை
மேவற் கரிய இருமதத்(து)
ஒற்றை மருப்பின்முக்கண்
ஏவிற் புருவத்(து) இமையவள்
தான்பெற்ற யானையையே.
தெளிவுரை : சோலைகள் நிறைந்த திருநாரையூரில் எழுந்தருளியிருக்கும் கரிய துதிக்கையை
உடையவனும் இரண்டு மதங்களையும் ஒற்றை தந்தத்தையும் மூன்று கண்களையும் உடையவனும்
உமாதேவியார் பெற்றெடுத்த மகனுமாகிய விநாயகக் கடவுள் எம தூதர்கள் நம்மை நெருங்கா
வகை செய்வான் என்பதாம்.
வெண்பா
-
யானேத் தியவெண்பா என்னை நினைந்தடிமை
தானே சனார்த்தனற்கு நல்கினான் - தேனே
தொடுத்தபொழில் நாரையூர்ச் சூலம் வலனேந்தி
எடுத்த மதமுகத்த ஏறு.
தெளிவுரை : தேன் நிரம்பிய சோலைகளை உடைய திரு நாரையூரில் சூலத்தை வலமாக ஏந்திய
சிவபெருமான் பெற்றெடுத்த விநாயகக் கடவுள் யான் அவர் பேரில் எழுதிய இந்த வெண்பாவை
என்னை நினைந்து என்னை அடிமையாகத் திருமாலுக்குக் கொடுத்தான்.
கட்டளைக் கலித் துறை
-
ஏறிய சீர்வீ ரணக்குடி
ஏந்திழைக் கும்இருந்தேன்
நாறிய பூந்தார்க் குமரற்கும்
முன்னினை நண்ணலரைச்
சீறிய வெம்பணைச் சிங்கத்தி
னுக்(கு)இளை யானைவிண்ணோர்
வேறியல் பால்தொழு நாரைப்
பதியுள் விநாயகனே.
தெளிவுரை : தேவர்கள் மணம் பொருந்திய மலர்களை இட்டுத் தொழுகின்ற திருநாரைப்
பதியுள் எழுந்தருளியிருக்கும் விநாயகப் பெருமான் வேடுவர் குடியில் பிறந்த வள்ளி
நாயகிக்கும் மலர்மாலை யணிந்த முருகப் பெருமானுக்கும் முன்னால் தோன்றியவன்.
எதிர்த்து வந்த பகைவர்களைச் சாடிய வெம்பணைச் சிங்கத்தினுக்கு இளையானை உடையவன்
எனக் கூட்டுக.
வெண்பா
-
கனமதில்சூழ் நாரையூர் மேவிக் கசிந்தார்
மனமருவி னான்பயந்த வாய்ந்த - சினமருவு
கூசாரம் பூண்டமுகக் குஞ்சரக்கன்(று) என்றார்க்கு
மாசார மோசொல்லு வான்.
தெளிவுரை : பெரிய மதில் சூழ்ந்த திருநாரையூரை மேவி அன்பால் உருகியவர்களின்
மனத்தில் பொருந்திய சிவ பெருமானது மகனாகிய விநாயகப் பெருமான் கோபமிக்க கூசாரம்
பூண்ட முக யானைக் கன்று என்றார்க்கு மாசாரமோ சொல்லுவான். கைவிட மாட்டான் என்றபடி.
கட்டளைக் கலித் துறை
-
வானிற் பிறந்த மதிதவ
ழும்பொழில் மாட்டளிசூழ்
தேனிற் பிறந்த மலர்த்திரு
நாரைப் பதிதிகழும்
கோனிற் பிறந்த கணபதி
தன்னைக் குலமலையின்
மானிற் பிறந்த களிறென்(று)
உரைப்பர்இவ் வையகத்தே.
தெளிவுரை : ஆகாயத்தில் சஞ்சரிக்கின்ற மதியை எட்டும்படி உள்ள உயர்ந்த சோலையில்
தேன் ஒழுகும் மலர்களை உடைய திருநாரையூரில் திகழும் சிவபெருமானின் மூத்த
பிள்ளையாகிய கணபதியை, பார்வதி தேவியாரின் மகனாகிய யானையை இவ்வுலகத்தார் சிறந்த
தெய்வமாகப் போற்றுவார்கள் என்றபடி.
வெண்பா
-
வையகத்தோர் ஏத்த மதில்நாரை யூர்மகிழ்ந்து
பொய்யகத்தார் உள்ளம் புகலொழிந்து - கையகத்தோர்
மாங்கனிதன் கொம்பண்டம் பாசமழு மல்குவித்தான்
ஆங்கனகநஞ் சிந்தைஅமர் வான்.
தெளிவுரை : உலகில் உள்ளோர் துதிக்க, உயர்ந்த மதில்களை உடைய திருநாரையூரில்
மகிழ்ந்து எழுந்தருளி பொய்ம்மை யுள்ளம் படைத்தவர்களின் மனத்தில் புகாமல், கையில்
மாங்கனியை யேந்தி, பாசம் மழு இலைகளைக் கொண்டுள்ள விநாயகப் பெருமான் நம்
சிந்தையில் வந்து அமர்வானாக.
கட்டளைக் கலித் துறை
-
அமரா அமரர் தொழுஞ்சரண்
நாரைப் பதிஅமர்ந்த
குமரா குமரர்க்கு முன்னவ
னேகொடித் தேர்அவுணர்
தமரா(சு) அறுத்தவன் தன்னுழைத்
தோன்றின னேஎனநின்(று)
அமரா மனத்தவர் ஆழ்நர
கத்தில் அழுந்துவரே.
தெளிவுரை : அமரா ! என்று அமரர் தொழுது சரண் அடையும் திருநாரையூரில் அமர்ந்துள்ள
குமரனே ! முருக வேளுக்குத் தமயனே ! கொடி கட்டிய தேர்களையுடைய அரக்கர்களது பற்றுக்
கோடுகளை அறுத்தவனே ! தன்னுழைத் தோன்றினனே என விரும்பாத உள்ளத்தை உடையவர்
ஆழ்நரகத்தில் அழுந்துவர்.
வெண்பா
-
அவமதியா(து) உள்ளமே அல்லலற நல்ல
தவமதியால் ஏத்திச் சதுர்த்தோம் - நவமதியாம்
கொம்பன் விநாயகன்கொங் கார்பொழில்சூழ் நாரையூர்
நம்பன் சிறுவன்சீர் நாம்.
தெளிவுரை : அவமதியாமல் உள்ளமே ! துன்பங்கள் நீங்க நல்ல தவத்தினால் பெற்ற
நல்லறிவால் வழிபட்டுச் சதுரப் பாட்டினை அடைந்தோம். பிறைச் சந்திரனைப் போன்ற
தந்தத்தை உடைய விநாயகன் மகரந்தங்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருநாரையூரில்
எழுந்தருளியிருக்கும் சிவபெருமானது சிறுவனை நாம் வணங்கி நற்கதி பெறுவோமாக.
கட்டளைக் கலித் துறை
-
நாந்தன மாமனம் ஏத்துகண்
டாய்என்றும் நாண்மலரால்
தாந்தன மாக இருந்தனன்
நாரைப் பதிதன்னுளே
சேர்ந்தன னேஐந்து செங்கைய
னேநின் திரண்மருப்பை
ஏந்தின னேஎன்னை ஆண்டவ
னேஎனக்(கு) என்ஐயனே.
தெளிவுரை : மனமே ! நாம் பெற்ற செல்வமாக அவனை எப்போதும் வணங்குவாயாக. அன்றலர்ந்த
மலர்களாக இருந்தனன். திருநாரையூர் என்னும் தலத்தில் வந்து அடைந்தேன். ஐந்து கைகளை
உடையவனே ! வலிமையான தந்தத்தை ஏந்தியவனே ! என்னை ஆட்கொண்டவனே ! எனக்குத் தலைவனாக
உள்ளவனே ! அருள்பாலிப்பாயாக.
திருச்சிற்றம்பலம்
கோயில் திருப்பண்ணியர்விருத்தம் ( நம்பியாண்டார் நம்பி அருளிச்செய்தது )
சிவநேசச் செல்வர்களால் கோயில் எனச் சிறப்பித்துப் போற்றப் பெறும் பெரும்பற்றப்
புலியூராகிய தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளிய கூத்தப் பெருமானைப்
போற்றுங் கட்டளைக் கலித்துறையாகிய திருவிருத்தங்களால் செய்யப்பட்ட நூலாதலின்
கோயில் திருப்பண்ணியர் விருத்தம் என்று பெயர் பெற்றது. திருநாரையூர் பொல்லாப்
பிள்ளையார் உணர்த்தி யருளியபடி தில்லைச் திருக்கோயிலை அடைந்து, தேவாரத்
திருமுறைகளைக் காண விரும்பிய நம்பியாண்டார் நம்பிகள் இந்நூலால் கூத்தப்
பெருமானைப் பரவிப் போற்றினார் என்பது வரலாறு.
திருச்சிற்றம்பலம்
கட்டளைக் கலித் துறை
-
நெஞ்சந் திருவடிக் கீழ்வைத்து
நீள்மலர்க் கண்பனிப்ப
வஞ்சம் கடிந்துன்னை வந்தித்தி
லேன்அன்று வானர்உய்ய
நஞ்சம் கருந்து பெருந்தகை
யேநல்ல தில்லைநின்ற
அஞ்செம் பவளவண் ணாஅருட்(கு)
யானினி யார்என்பரே.
தெளிவுரை : நெஞ்சத்தை உன் திருவடிக்கீழ் வைத்து நீண்ட மலர்போன்ற கண்களில் நீர்
அரும்ப, வஞ்சத்தை வெறுத்து ஒதுக்கி உன்னை வழிபடவில்லை. முன்பு தேவர்கள்
பிழைப்பதற்காக ஆலகால விடத்தைக் குடித்து அருளிய பெருந்தகையே ! நல்ல தில்லையில்
நடனமாடுகின்ற அழகிய செம்பவள வண்ணா, உன் அருளை விட்டு இனி வேறு யார் அருளை எதிர்
பார்ப்பேன் என்பதாம்.
-
என்பும் தழுவிய ஊனும்
நெகஅக மேஎழுந்த
அன்பின் வழிவந்த ஆரமிர்
தேஅடி யேன்உரைத்த
வன்புன் மொழிகள் பொறுத்திகொ
லாம்வளர் தில்லைதன்னுள்
மின்புன் மிளிர்சடை வீசிநின்
றாடிய விண்ணவனே.
தெளிவுரை : எலும்பும் தழுவிய ஊனும் நெகிழ்ந்துருக அகத்திலிருந்து எழுந்த அன்பின்
வழிவந்த நிறைந்த அமிர்தம் போன்றவனே ! அடியேன் உரைத்த வலிமை தங்கிய இழிந்த
சொற்களைப் பொறுத்து அருள்வாயாக. மென்மேல் உயர்கின்ற தில்லைச் சிற்றம்பலத்துள்
மின்சடை, புன்சடை, மிளிர்சடையை வீசி நின்று ஆடிய தேவதேவனே !
-
அவநெறிக் கேவிழப் புக்கஇந்
நான்அழுந் தாமைவாங்கித்
தவநெறிக் கேஇட்ட தத்துவ
னேஅத் தவப்பயனாம்
சிவநெறிக் கேஎன்னை உய்ப்பவ
னேசென னந்தொறுஞ்செய்
பவமறுத் தாள்வதற் கோதில்லை
நட்டம் பயில்கின்றதே.
தெளிவுரை : வீணான நெறியில் விழ இருந்த என்னை அவ்வாறு விழுந்து விடாமல்
காப்பாற்றித் தவநெறியில் செலுத்திய உண்மைப் பொருளே ! அந்தத் தவப் பயனாகிய சைவ
நெறிக்கே என்னை நடத்திச் செல்பவனே ! பிறவிகள் தோறும் செய்கின்ற பாவங்களைப்
போக்கியருள்வதற்கோ தில்லையில் நடனம் ஆடுகின்றாய்?
-
பயில்கின் றிலேன்நின் திறத்திரு
நாமம் பனிமலர்த்தார்
முயல்கின் றிலேன்நின் திருவடிக்
கேஅப்ப முன்னுதில்லை
இயல்கின்ற நாடகச் சிற்றம்
பலத்துள்எந் தாய்இங்ஙனே
அயர்கின்ற நான்எங்ங னேபெறு
மாறுநின் ஆரருளே.
தெளிவுரை : உன்னுடைய திருநாமத்தைத் துதிக்க பயிற்சி செய்யவில்லை. குளிர்ந்த
மலர்களை உன்னுடைய பாதங்களில் அருச்சிக்க முயற்சி செய்யவில்லை. கருதுகின்ற
தில்லையில் நடனம் ஆடுகின்ற என் தந்தையே ! இவ்வாறு வீணில் காலங்கழிக்கின்ற நான்
உன்னுடைய நிறைந்த அருளைப் பெறுவது எங்ஙனம் ? இதை நீ எனக்குத் தெரிவிப்பாயாக.
-
அருதிக்கு விம்மி நிவந்ததோ
வெள்ளிக் குவடதஞ்சு
பருதிக் குழவி உமிழ்கின்ற
தேஒக்கும் பற்றுவிட்டோர்
கருதித் தொழுகழற் பாதமும்
கைத்தலம் நான்கும்மெய்த்த
சுருதிப் பதம்முழங் குந்தில்லை
மேய சுடரினுக்கே.
தெளிவுரை : திக்குகள் அழுது உயர்ந்தனவோ, வெள்ளி மலையாகிய கயிலாயத்திற்கு
அஞ்சுகின்ற இளங் கதிரவன் உமிழ்கின்றதை ஒக்கும். பற்றுவிட்டவர்கள் கருதித்
தொழுகின்ற கழலணிந்த திருவடிகளும், கைகள் நான்கும் உண்மையான மறை மொழிகளும்
முழுங்குகின்ற தில்லையில் கோயில் கொண்டுள்ள பேரொளிக்கே. பேரொளியினால் இவ்வாறு
நிகழ்கின்றனவோ என்கிறார்.
-
சுடலைப் பொடியும் படுதலை
மாலையும் சூழ்ந்தஎன்பும்
மடலைப் பொலிமலர் மாலைமென்
தோள்மேல் மயிர்க்கயிறும்
அடலைப் பொலிஅயில் மூவிலை
வேலும் அணிகொள்தில்லை
விடலைக்கென் ஆனைக்(கு) அழகிது
வேத வினோதத்தையே.
தெளிவுரை : மயானச் சாம்பலும், இறந்தவர்களின் தலை மாலையும், அவர்களுடைய எலும்பும்,
மடலைப் பொலி மலர்மாலை மென்தோள் மேல் பஞ்சவடியும், வெற்றி பொருந்திய மூவிலைச்
சூலமும் அழகு நிறைந்த தில்லை வீரனுக்கு இது என்ன அழகு? வேத வினோதமோ என்று
வியக்கின்றார்.
-
வேத முதல்வன் தலையும்
தலையாய வேள்விதன்னுள்
நாதன் அவன்எச்சன் நற்றலை
யும்தக்க னார்தலையும்
காதிய தில்லைச்சிற் றம்பலத்
தான்கழல் சூழ்ந்துநின்று
மாதவர் என்னோ மறைமொழி
யாலே வழுத்துவதே.
தெளிவுரை : நான்முகனது தலையும், சிறந்த வேள்வியுள் யாகத் தலைவனாகிய தக்கனது
தலையும் விழுமாறு கொன்ற தில்லைச் சிற்றம்பலத்தான் கழல் சூழ்ந்து நின்று வேதம்
பயின்றவர்கள் என்ன மந்திரங்களைச் சொல்லி போற்றுவது என்கிறார்.
-
வழுத்திய சீர்த்திரு மால்உல(கு)
உண்டவன் பாம்புதன்னின்
கழுத்தரு கேதுயின் றானுக்(கு)அப்
பாந்தளைக் கங்கணமாச்
செழுத்திரள் நீர்த்திருச் சிற்றம்
பலத்தான் திருக்கையிட
அழுத்திய கல்லொத் தனன்ஆயன்
ஆகிய மாயவனே.
தெளிவுரை : உன்னை வணங்கிய திருமால் இந்த உலகத்தை விழுங்கி உண்டவன்; பாம்பு மீது
துயின்றவன்; அந்தப் பாம்பை நீ கங்கணமாக அணிந்தாய். நீர் வளமிக்க
திருச்சிற்றம்பலத்தான், அப்பாம்பைத் தன் திருக்கையில் அணிய, ஆயனாகிய மாயவன்
அழுத்திய கல் ஒத்தனன். ஆதிசேடனை இறைவன் கையில் கங்கணமாக அணியத் திருமால்
நீலமணியைப் போல அதில் தோன்றினான் என்கிறார்.
-
மாயவன் முந்நீர்த் துயின்றவன்
அன்று மருதிடையே
போயவன் காணாத பூங்கழல்
நல்ல புலத்தினர்நெஞ்
சேயவன் சிற்றம் பலத்துள்நின்
றாடுங் கழல்எவர்க்கும்
தாயவன் தன்பொற் கழல்என்
தலைமறை நன்னிழலே.
தெளிவுரை : திருமால் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டவன். கண்ணனாக அவதரித்தபோது
இரண்டு மருத மரங்களுக்கு இடையில் சென்றவன். அவன் காணாத பூங்கழல் நல்ல புலத்தினர்
நெஞ்சில் அவன் சிற்றம்பலத்துள் நின்றாடும் கழல். அவன் எவர்க்கும் தாய் போன்றவன்.
அவனுடைய பொற்கழல் என் தலைமறை நன்னிழலே.
-
நிழல்படு பூண்நெடு மால்அயன்
காணாமை நீண்டவரே
தழல்படு பொன்னகல் ஏந்தித்
தமருகந் தாடித்தமைத்
தெழில்பட வீசிக் கரமெறி
நீர்த்தில்லை அம்பலத்தே
குழல்படு சொல்வழி ஆடுவர்
யாவர்க்கும் கூத்தினையே.
தெளிவுரை : ஒளிமிக்க ஆபரணங்களையுடைய திருமாலும் பிரமனும் காண முடியாதபடி நீண்டவரே
? நெருப்பை உடைய பொன்னகல் ஏந்தி, உடுக்கை அடித்து, எழில்பட வீசிக் கரமெறி
நீர்த்தில்லை அம்பலத்தே குழல்படு சொல்வழி ஆடுவர் யாவர்க்கும் கூத்தினையே.
அடியார்கள் கண்டு மகிழுமாறு நடனம் ஆடுபவர் என்கிறார்.
-
கூத்தனென் றுந்தில்லை வாணன்என்
றும்குழு மிட்டிமையோர்
ஏத்தனென் றுஞ்செவி மாட்டிசை
யாதே இடுசுணங்கை
மூத்தவன் பெண்டீர் குணலையிட்
டாலும் முகில்நிறத்த
சாத்தன்என் றாலும் வருமோ
இவளுக்குத் தண்எனவே.
தெளிவுரை : கூத்தன் என்றும் தில்லைவாணன் என்றும் கூட்டமாகத் தேவர்கள் வந்து
தலைவன் என்றும் துதித்தாலும் செவிசாய்க்காமல் தேமலை இட்டுப் பயின்றவன் அவன்.
பெண்களே ! நீங்கள் சுற்றி வந்து ஆடினாலும் முகில் போன்ற நிறத்தினையுடைய வயிரவன்
என்றாலும் வெப்பமடைந்துள்ள இவள் உடல் குளிர்ச்சி அடையுமோ?
-
தண்ணார் புனல்தில்லைச் சிற்றம்
பலந்தன்னில் மன்னிநின்ற
விண்ணாள னைக்கண்ட நாள்விருப்
பாயென் உடல்முழுதும்
கண்ணாங் கிலோதொழக் கையாங்
கிலோதிரு நாமங்கள்கற்(று)
எண்ணாம் பரிசெங்கும் வாயாங்கி
லோஎனக்(கு) இப்பிறப்பே.
தெளிவுரை : நீர் வளமிக்க தில்லைச் சிற்றம்பலத்தில் நிலை பெற்றிருக்கின்ற அம்பலக்
கூத்தனைப் பார்த்தது முதல் அவன்மேல் காதலாய் அவனைக் காண என் உடன் முழுவதும் கண்
இல்லை. தொழுவதற்குக் கைகள் இல்லை. திருநாமங்கள் கற்று எண்ணும் பரிசு எங்கும் வாய்
இல்லை. இப்பிறப்பில் இல்லை என்று ஏங்குகின்றாள்.
-
பிறவியிற் பெற்ற பயனொன்று
கண்டிலம் பேரொலிநீர்
நறவியல் பூம்பொழில் தில்லையுள்
நாடகம் ஆடுகின்ற
துறவியல் சோதியைச் சுந்தரக்
கூத்தனைத் தொண்டர்தொண்டர்
உறவியல் வாற்கண்கள் கண்டுகண்(டு)
இன்பத்தை உண்டிடவே.
தெளிவுரை : இப் பிறப்பில் கண்ட பயன் ஒன்றும் இல்லை. ஒலி செய்கின்ற நீர்
வளமிக்கதும் மணமுள்ளதுமான சோலைகள் சூழ்ந்த தில்லையுள் திருநடனம் செய்கின்ற
பற்றற்ற சோதியை, அழகுமிக்க கூத்தனை, தொண்டர்களுக்குத் தொண்டரானவர்களின் உறவானவனை
நீண்ட கண்கள் கண்டுகண்டு இன்புற வேண்டும்.
-
உண்டேன் அவரருள் ஆரமிர்
தத்தினை உண்டலுமே
கண்டேன் எடுத்த கழலும்
கனலும் கவித்தகையும்
ஒண்டேன் மொழியினை நோக்கிய
நோக்கும் ஒளிநகையும்
வண்டேன் மலர்த்தில்லை அம்பலத்(து)
ஆடும் மணியினையே.
தெளிவுரை : வண்டுகள் தேன் உண்ணுகின்ற மலர் சோலைகளை உடைய தில்லை அம்பலத்து ஆடும்
மணியினது அருள் உண்டேன். அருளாகிய அமுதத்தை உண்டவுடன் எடுத்த பொற்பாதத்தையும்
அனலையும் கண்டேன். கவித்தகையும் ஒண் தேன் மொழியாகிய உமையவளைப் பார்த்த
பார்வையையும், ஒளி நகையையும் கண்டேன்.
-
மணியொப் பனதிரு மால்மகு
டத்து மலர்க்கமலத்(து)
அணியொப் பனஅவன் தன்முடி
மேல்அடி யேன்இடர்க்குத்
துணியச் சமைத்தநல் லீர்வாள்
அனையன சூழ்பொழில்கள்
திணியத் திகழ்தில்லை அம்பலத்
தான்தன் திருந்தடியே.
தெளிவுரை : சோலைகள் நிறைந்த தில்லை யம்பலத்தான் தன் திருந்தடிகள் திருமால்
மகுடத்துக்கு மணியொப்பன. மலர்க் கமலத்து அணி யொப்பன, அவன்தன் முடி, அடியேன்
துன்பங்களை அரியச் சமைந்த வாள்போல் ஆகும், அவன் தன் திருவடி. என் துன்பங்களைப்
போக்க வல்லவன் அவன் ஒருவனே என்கிறார்.
-
அடியிட்ட கண்ணினுக் கோஅவன்
அன்பினுக் கோஅவுணர்
செடியிட்ட வான்துயர் சேர்வதற்
கோதில்லை அம்பலத்து
முடியிட்ட கொன்றைநன் முக்கட்
பிரான்அன்று மூவுலகும்
அடியிட்ட கண்ணனுக்(கு) ஈந்தது
வாய்ந்த அரும்படையே.
தெளிவுரை : மூன்று உலகங்களையும் அடியினால் அளந்த கண்ணனுக்கு வாய்ந்த
அரும்படையாகிய சக்கரத்தைக் கொடுத்தது திருவடிகளில் அருச்சித்த திருக்கண்ணின்
பொருட்டோ, அவர்மீது கொண்ட அன்பினுக்கோ, அரக்கர்கள் செய்த துன்பங்களைப்
போக்குவதற்கோ, தில்லை அம்பலத்து முடியிட்ட கொன்றையையும் மூன்று கண்களையும் உடைய
சிவபெருமான் சக்கரத்தைக் கொடுத்தது எதன் பொருட்டு என்று கேட்கின்றார்.
-
படைபடு கண்ணிதன் பங்கதென்
தில்லைப் பரம்பரவல்
விடைபடு கேதுக விண்ணப்பம்
கேள்என் விதிவசத்தால்
கடைபடு சாதி பிறக்கினும்
நீவைத்(து) அருளுகண்டாய்
புடைபடு கிங்கிணித் தாட்செய்ய
பாதம்என் னுள்புகவே.
தெளிவுரை : வில், அம்பு முதலிய படைக்கலங்களைப் போன்ற கண்களையுடைய உமாதேவியை
இடப்பாகத்தில் கொண்டவனே ! தென் தில்லை இறைவனைத் துதித்தல் வருமாறு: இடபக் கொடியை
உடையவனே ! என் விண்ணப்பத்தைக் கேட்பாயாக. விதி வசத்தால் கடைசி சாதியில்
பிறக்கினும் நீ எனக்கு அருள் செய்யவேண்டும். புடைபடு கிங்கிணித்தாள் செய்ய பாதம்
என்னுள் புகுமாறு செய்வாயாக என்பதாம்.
-
புகவுகிர் வாளெயிற் றால்நிலம்
கீண்டு பொறிகலங்கி
மிகவுகு மாற்(கு)அரும் பாதத்த
னேல்வியன் தில்லைதன்னுள்
நகவு குலாமதிக் கண்ணியற்
கங்கணன் என்றல்நன்றும்
தகவு கொலாம்தக வன்று
கொலாம்என்று சங்கிப்பனே.
தெளிவுரை : நகங்களாலும் பற்களாலும் நிலத்தைத் தோண்டி பொறி கலங்கி மிகவும்
வருந்திய திருமாலுக்குக் காண்டற்கு அரிய திருவடிகளை உடையவனே, வியன் தில்லை
தன்னுள், சந்திரனைத் தலை மாலையாகக் கொண்டவன் என்று கூறுதல் தகுதியாகும் என்றும்
தகுதி ஆகாது என்றும் ஐயுறுவேன்.
-
சங்கோர் கரத்தன் மகன்தக்கன்
தானவர் நான்முகத்தோன்
செங்கோல இந்திரன் தோள்தலை
ஊர்வேள்வி சீர்உடலம்
அங்கோல வெவ்வழ லாயிட்(டு)
அழிந்தெரிந்(து) அற்றனவால்
எங்கோன் எழில்தில்லைக் கூத்தன்
கடைக்கண் சிவந்திடவே.
தெளிவுரை : எனது தலைவனும் அழகிய தில்லைக் கூத்தனுமாகிய சிவபெருமான் கடைக்கண்
சிவந்ததனால் காமன் உடல் அழலாகி, தக்கன் வேள்வி அழிந்து, தானவர் ஊர் எரிந்து,
நான்முகத்தோன் தலையும் இந்திரன் தோளும் அற்றன. இப்பாடலில் முதலில் எதிர் நிரல்
நிறையும் பின்பு நேர் நிரல் நிறையும் வந்தன.
-
ஏவுசெய் மேருத் தடக்கை
எழில்தில்லை அம்பலத்து
மேவுசெய் மேனிப் பிரான்அன்றி
அங்கணர் மிக்குளரே
காவுசெய் காளத்திக் கண்ணுதல்
வேண்டும் வரங்கொடுத்துத்
தேவுசெய் வான்வாய்ப் புனலாட்
டியதிறல் வேடுவனே.
தெளிவுரை : வில்லாகச் செய்த மேருவை உடைய விசாலமான கைகளை உடையவனும், எழில் தில்லை
அம்பலத்து மேவி யிருக்கின்றவனுமாகிய பிரானை அன்றி மிக்கவர் யாருளர்? காவு செய்
காளத்திக் கண்ணுதல், வாய்நீரால் திருமுழுக்குச் செய்த கண்ணப்ப நாயனாருக்கு
வேண்டும் வரம்கொடுத்து, தெய்வமாக்கினார்.
-
வேடன்என் றாள்வில் விசயற்கு
வெங்கணை அன்றளித்த
கோடன்என் றாள்குழைக் காதன்என்
றாள்இடக் காதில்இட்ட
தோடன்என் றாள்தொகு சீர்த்தில்லை
அம்பலத்(து) ஆடுகின்ற
சேடன்என் றாள்மங்கை அங்கைச்
சரிவளை சிந்தினவே.
தெளிவுரை : இது தோழி கூற்று: வேடன் என்று கூறிவந்து, ஆட்கொண்டருளி,
அருச்சுனனுக்கு பாசுபத அத்திரத்தை அன்று அளித்த குறி சொல்பவன் என்றாள். காதில்
குழையணிந்தவன் என்றாள். இடக்காதில் தோடு அணிந்தவன் என்றாள். தொகுசீர் தில்லை
அம்பலத்து ஆடுகின்ற பெரியோன் என்றாள் என் மங்கை. அவளுடைய கைகளில் இருந்த வளைகள்
சரிந்து விழுந்தன. காதல் வழிப்பட்டாள் என்பதாம்.
-
சிந்திக் கவும்உரை யாடவும்
செம்மல ராற்கழல்கள்
வந்திக் கவும்மனம் வாய்கரம்
என்னும் வழிகள்பெற்றும்
சந்திக் கிலர்சிலர் தெண்ணர்தண்
ணார்தில்லை அம்பலத்துள்
அந்திக் கமர்திரு மேனிஎம்
மான்தன் அருள்பெறவே.
தெளிவுரை : சிந்திக்க மனமும், உரையாட வாயும், வந்திக்கக் கரமும் பெற்றிருந்தும்
அன்பில்லாதவர் அவனைச் சந்திக்கிலர். நீர்வளமிக்க தில்லை அம்பலத்துள் அந்திவானம்
போன்ற திருமேனியை உடைய எம்மான் தன் அருள் பெறவில்லையே என்று வருந்துகின்றார்.
-
அருள்தரு சீர்த்தில்லை அம்பலத்
தான்தன் அருளின்அன்றிப்
பொருள்தரு வானத்(து) அரசாத
லின்புழு வாதல்நன்றாம்
சுருள்தரு செஞ்சடை யோன்அரு
ளேல்துற விக்குநன்றாம்
இருள்தரு கீழேழ் நரகத்து
வீழும் இருஞ்சிறையே.
தெளிவுரை : அருளைத் தருகின்ற சீர்தில்லை அம்பலத்தான் தன் அருள் அல்லாமல் பொருளைத்
தருகின்ற தெய்வ லோக அரசைவிட புழுவாகப் பிறத்தல் நன்று. சுருளாகப் பொருந்திய
சிவந்த சடையோன் அருளா விட்டால் துறவிக்கு நன்று ! இருளாகப் பொருந்தியுள்ள கீழ்ஏழ்
நரகத்து வீழும் பெருஞ் சிறை !
இறைவன் அருளைத் தவிர வேறு எதையும் நான் விரும்பேன் என்கிறார்.
-
சிறைப்புள வாம்புனல் சூழ்வயல்
தில்லைச் சிற்றம்பலத்துப்
பிறைப்பிள வார்சடை யோன்திரு
நாமங்க ளேபிதற்ற
மிறைப்புள வாகிவெண் ணீறணிந்(து)
ஓடேந்தும் வித்தகர்தம்
உறைப்புள வோஅயன் மாலினொ(டு)
உம்பர்தம் நாயகற்கே.
தெளிவுரை : கரைகளையுடைய நீர்வளமுள்ள வயல் சூழ்ந்த தில்லைச் சிற்றம்பலத்து, பிளவு
பட்டாற் போன்ற பிறைத் திங்களை அணிந்த சடையோனது திருநாமங்களைத் துதிக்க வருத்தம்
கொண்டு திருநீறு அணிந்து கையில் ஓடு ஏந்திய ஞானிகளது மனத்தின்மை உள்ளதோ? பிரமன்
திருமாலொடு தேவர்களின் நாயகற்கே. இறைவனை அடைய மனத்தின்மை வேண்டும் என்கிறார்.
-
அகழ்சூழ் மதில்தில்லை அம்பலக்
கூத்த அடியம்இட்ட
முகிழ்சூழ் இலையும் முகைகளும்
ஏயுங்கொல் கற்பகத்தின்
திகழ்சூழ் மலர்மாலை தூவித்
திறம்பயில் சிந்தையராய்ப்
புகழ்சூழ் இமையவர் போற்றித்
தொழும்நின் பூங்கழற்கே.
தெளிவுரை : அகழியால் சூழப்பட்ட மதில்களையுடைய தில்லை அம்பலக் கூத்தனே !
அடியார்களாகிய நாங்கள் இட்ட முகில்சூழ் இலையும் அரும்புகளும் பொருந்துமோ?
கற்பகத்தின் திகழ்சூழ் மலர்மழை தூவித் திறம்பயில் மனமுடையவராய்ப் புகழ்சூழ்
தேவர்கள் வணங்கித் தொழும் நின் திருவடிகளுக்கு, இவ்விரண்டில் எது விருப்பமாகும்
என்று வினவுகிறார்.
-
பூந்தண் பொழில்சூழ் புலியூர்ப்
பொலிசெம்பொன் அம்பலத்து
வேந்தன் தனக்கன்றி ஆட்செய்வ
தென்னே விரிதுணிமேல்
ஆந்தண் பழைய அவிழைஅன்
பாகிய பண்டைப்பறைச்
சேந்தன் கொடுக்க அதுவும்
திருஅமிர்(து) ஆகியதே.
தெளிவுரை : பூக்கள் நிறைந்த குளிர்ந்த சோலைகளையுடைய தில்லைச் சிற்றம்பலத்தில்
மேவிய இறைவனையன்றி வேறு யாருக்கும் ஆட்செய்யமாட்டேன். விரித்த துணியின்மேல்
குளிர்ந்த பழைய சோற்றை அன்பாகிய பண்டைப் பறைச்சேந்தன் கொடுக்க, அதுவும் உனக்கு
அமிர்தமாகியது என்க.
-
ஆகங் கனகனைக் கீறிய
கோளரிக்(கு) அஞ்சிவிண்ணோர்
பாகங் கனகுழை யாய்அரு
ளாயெனத் தில்லைப்பிரான்
வேகந் தருஞ்சிம்புள் விட்டரி
வெங்கதஞ் செற்றிலனேல்
மோங் கலந்தன்(று) உலந்ததன்
றோஇந்த மூவுலகே.
தெளிவுரை : இரணியனைச் சங்காரம் செய்த நரசிங்க மூர்த்திக்குப் பயந்து தேவர்கள்,
உமாதேவியை இடப் பாகத்தில் கொண்டவனே ! அருள் செய்வாயாக என வேண்ட, தில்லைப் பிரான்
வேகந்தரும் சரப்பறவையாகச் சென்று அரியின் கோபத்தை அழித்திராவிட்டால், இந்த
மூவுலகும் மோகம் கலந்து அழிந்து போயிருக்கும்.
-
மூவுல கத்தவர் ஏத்தித்
தொழுதில்லை முக்கட்பிராற்(கு)
ஏவு தொழில்செய்யப் பெற்றவர்
யாரெனில் ஏர்விடையாய்த்
தாவு தொழிற்பட்(டு) எடுத்தனன்
மால்அயன் சாரதியா
மேவிர தத்தொடு பூண்டதொன்
மாமிக்க வேதங்களே.
தெளிவுரை : மூன்று உலகத்தவர்களும் ஏத்தித் தொழுகின்ற தில்லை முக்கட் பிராற்கு,
தொண்டு செய்யப் பெற்றவர்கள் யார் என்றால் அழகிய காளையை உடையாய் ! வேதங்கள்
குதிரைகளாகவும் பிரமன் சாரதியாகவும் திருமால் தொண்டு செய்யவும் திரிபுரங்களை
அழிக்கச் சென்றபோது பங்கு கொண்டவர்கள் என்கிறார்.
-
வேதகச் சிந்தை விரும்பிய
வன்தில்லை அம்பலத்து
மேதகக் கோயில்கொண் டோன்செய
வன்வீ ரணக்குடிவாய்ப்
போதகப் போர்வைப் பொறிவாள்
அரவரைப் பொங்குசினச்
சாதகப் பெண்பிளை தன்னயன்
தந்த தலைமகனே.
தெளிவுரை : வேதகச் சிந்தை விரும்பிய வன்தில்லை அம்பலத்துள் சிறப்புடன் கோயில்
கொண்டிருக்கும் இறைவன், சேயவன் வீரணக்குடியில் யானையைக் கொன்று அதன் தோலைப்
போர்த்திக் கொண்டவன்; புள்ளிகளையுடைய ஒளி தங்கிய பாம்பை அணிந்தவன்; பொங்கு சினச்
சாதகர் பெண் பிளைதன் ஐயன் தந்த தலைமகனே.
-
தலையவன் பின்னவன் தாய்தந்தை
இந்தத் தராதலத்து
நிலையவம் நீக்கு தொழில்புரிந்
தோன்நடு வாகிநின்ற
கொலையவன் சூலப் படையவன்
ஆலத்தெழு கொழுந்தின்
இலையவன் காண்டற்(கு) அருந்தில்லை
அம்பலத் துள்இறையே.
தெளிவுரை : தலையவன், பின்னவன், இந்தப் பூமிக்குத் தாய் தந்தையாக உள்ளவன். நிலையான
துன்பங்களை நீக்கும் தொழிலைப் புரிந்தவன்; நடுவாகி நின்ற கொலைத் தொழிலையுடைய வலிய
சூலப்படையை உடையவன். ஆலமரத்தின் கொழுந்து இலையில் பள்ளி கொண்ட திருமால் தேடியும்
காண முடியாதவன்; தில்லையம்பலத்துள் கோயில் கொண்டிருக்கும் இறைவன்.
-
இறையும் தெளிகிலர் கண்டும்
எழில்தில்லை அம்பலத்துள்
அறையும் புனற்சென்னி யோன்அரு
ளால்அன்(று) அடுகரிமேல்
நிறையும் புகழ்த்திரு வாரூ
ரனும்நிறை தார்பரிமேல்
நறையுங் கமழ்தொங்கல் வில்லவ
னும்புக்க நல்வழியே.
தெளிவுரை : சிறிதும் அறிகின்றிலர்; பார்த்திருந்தும் அழகிய தில்லை அம்பலத்துள்
கங்கையை முடியில் சூடிய இறைவனது அருளால் அன்று வெள்ளானைமேல் நிறையும் புகழ்
சுந்தரமூர்த்தி நாயனாரும், நிறைதார் குதிரையின்மேல் மணமுள்ள மலர் மாலையணிந்த
சேரமான் பெருமாள் நாயனாரும் சென்ற நல்வழியே. (நல்வழியைச் சிறிதும்
சிந்திக்கின்றிலர் என முடிக்க.)
-
நல்வழி நின்றார் பகைநன்று
நொய்யர் உறவிலென்னும்
சொல்வழி கண்டனம் யாம்தொகு
சீர்த்தில்லை அம்பலத்து
வில்வழி தானவர் ஊர்எரித்
தோன்வியன் சாக்கியனார்
கல்வழி நேர்நின்(று) அளித்தனன்
காண்க சிவகதியே.
தெளிவுரை : நல்வழியில் நிற்பவரின் பகை நன்மையை உண்டாக்கும். இழிந்தோர் உறவில்
துன்பமே தோன்றும் என்பதை யாம் சொல்வழி கண்டனம். தொகுசீர்த் தில்லை அம்பலத்து
வில்வழி திரிபுரங்களை எரித்தோன் வியன் சாக்கிய நாயனார் கல்லெறிந்து வழிபட்ட வழி
நன்மையாயிற்று என்பதைக் காண்க. சிவகதிக்கு உண்மை அன்பே தேவை என்க.
-
கதியே அடியவர் எய்ப்பினில்
வைப்பாக் கருதிவைத்த
நிதியே நிமிர்புன் சடைஅமிர்
தேநின்னை என்னுள்வைத்த
மதியே வளர்தில்லை அம்பலத்
தாய்மகிழ் மாமலையாள்
பதியே பொறுத்தரு ளாய்கொடி
யேன்செய்த பல்பிழையே.
தெளிவுரை : அடியவர்களின் புகலிடமே ! வறுமைக் காலத்துக்கு ஏற்ற செல்வமே !
நிமிர்ந்த புன் சடை அமிர்தே ! உன்னை என்னுள் வைத்த மதியே ! வளர்தில்லை
அம்பலத்தாய் ! மகிழ்கின்ற உமா தேவியின் கணவனே ! கொடியவனாகிய நான் இதுவரை செய்த பல
பிழைகளைப் பொறுத்தருளாய்.
-
பிழையா யினவே பெருக்கிநின்
பெய்கழற்(கு) அன்புதன்னில்
நுழையாத சிந்தையி னேனையும்
மந்தா கினித்துவலை
முழையார் தருதலை மாலை
முடித்த முழுமுதலே
புழையார் கரியுரித் தோய்தில்லை
நாத பொறுத்தருளே.
தெளிவுரை : தவறான காரியங்களையே மிகுதியாகச் செய்து உன்னுடைய திருவடிகளுக்கு அன்பு
செய்யாத என்னையும் கங்கையின் நீர்த்திவலையையும் முழையார் தரு தலை மாலையையும்
முடித்த முழுமுதலே ! துளை பொருந்திய துதிக்கையை உடைய யானையை உரித்தவனே ! தில்லை
நாயகனே ! பொறுத்தருள்வாயாக !
-
பொறுத்தில னேனும்பன் னஞ்சினைப்
பொங்கெரி வெங்கதத்தைச்
செறுத்தில னேனும்நந் தில்லைப்
பிரான்அத் திரிபுரங்கள்
கறுத்தில னேனுங் கமலத்
தயன்கதிர் மாமுடியை
அறுத்தில னேனும் அமரருக்(கு)
என்கொல் அடுப்பனவே.
தெளிவுரை : இவற்றை யெல்லாம் செய்யாவிட்டால் தேவர்களுக்கு என்ன அபாயங்கள்
வந்திருக்குமோ என்று கேட்கின்றார்? நம் தில்லை பிரான் பொறுத்திரா விட்டாலும்,
ஆலகால விடத்தை பொங்கி தீப்போல் வெங்கதத்தைக் குடித்திராவிட்டாலும்,
திரிபுரங்களைச் சினந்து எரிக்காமல் இருந்தாலும், தாமரை மலரோனாகிய பிரமனது முடியை
அறுத்திரா விட்டாலும் தேவர்களுக்கு என்ன தீங்கு நேர்திருக்கும்?
-
அடுக்கிய சீலைய ராய்அகல்
ஏந்தித் தசைஎலும்பில்
ஒடுக்கிய மேனியோ(டு) ஊண்இரப்
பார்ஒள் இரணியனை
நடுக்கிய மாநர சிங்கனைச்
சிம்புள தாய்நரல
இடுக்கிய பாதன்தன் தில்லை
தொழாவிட்ட ஏழையரே.
தெளிவுரை : ஒளி பொருந்திய இரணியனை நடுங்கச் செய்த பெரிய நரசிங்கனை சரபப் பறவையாக
வந்து கதறுமாறு நெருக்கிப் பிடித்தவனது தில்லையம் பதியைத் தொழாத அறிவில்லாதவர்
அடுக்கிய சீலையராய், பிச்சை பாத்திரத்தை ஏந்தி, தசை எலும்பில் ஒடுக்கிய மேனியோடு
பிச்சை யெடுத்துக் காலங்கழிப்பர் என்றபடி. (இறைவனை வழிபடாதவர் நிலை இது என்க)
-
ஏழையென் புன்மை கருதா(து)
இடையறா அன்பெனக்கு
வாழிநின் பாத மலர்க்கே
மருவ அருளுகண்டாய்
மாழைமென் நோக்கிதன் பங்க
வளர்தில்லை அம்பலத்துப்
போழிளந் திங்கள் சடைமுடி
மேல்வைத்த புண்ணியனே.
தெளிவுரை : மாவடு போன்ற கண்களையுடைய உமாதேவியை இடப்பக்கத்தில் கொண்டவனே ! வளர்
தில்லை அம்பலத்துள் பிறைச் சந்திரனைச் சடைமுடியில் வைத்த புண்ணியனே ! ஏழையேனது
துன்பத்தைக் கருதாமல், இடையறாத அன்பு கொண்டு உன் பாத மலர்களை அடைய அருள்
செய்வாயாக.
-
புண்ணிய னேஎன்று போற்றி
செயாது புலன்வழியே
நண்ணிய னேற்(கு)இனி யாதுகொ
லாம்புகல் என்னுள்வந்திட்(டு)
அண்ணிய னேதில்லை அம்பல
வாஅலர் திங்கள் வைத்த
கண்ணிய னேசெய்ய காமன்
வெளுப்பக் கறுத்தவனே.
தெளிவுரை : புண்ணியனே என்று உன்னைப் போற்றாமல் புலன் வழியே பொருந்தியவனாகிய
எனக்குப் புகலிடம் யாது? என்னுள் வந்து நெருங்கியவனே ! தில்லை அம்பலவா ! அலர்
திங்களைத் தலை மாலையில் வைத்துள்ளவனே ! மன்மதன் வெந்து நீறாகச் சினந்தவனே.
என்னை நல்வழிப் படுத்துவது உன் பாரமாகும்.
-
கறுத்தகண் டாஅண்ட வாணா
வருபுனற் கங்கைசடை
செறுத்தசிந் தாமணி யேதில்லை
யாய்என்னைத் தீவினைகள்
ஒறுத்தல்கண் டால்சிரி யாரோ
பிறர்என் உறுதுயரை
அறுத்தல்செய் யாவிடின் ஆர்க்கோ
வருஞ்சொல் அரும்பழியே.
தெளிவுரை : நீல கண்டனே ! தேவர்களுக்குத் தலைவனே ! வருபுனல் கங்கையச் சடையில்
செறிய வைத்த சிந்தா மணியே? தில்லையில் எழுந்தருளியிருப்பவனே ! என்னைத் தீவினைகள்
துன்புறுத்துவதைக் கண்டால் வெளியார் சிரிக்க மாட்டார்களா ? என்னை வருத்தும்
துயரைப் போக்கி யொழித்தல் செய்யாவிடின் அரும்பழி உனக்கல்லவா? ஆகவே விரைந்து ஆவன
செய்வாயாக.
-
பழித்தக் கவும்இக ழான்தில்லை
யான்பண்டு வேட்டுவனும்
பழித்திட்(டு) இறைச்சி கலையன்
அளித்த விருக்குழங்கன்
மொழித்தக்க சீர்அதி பத்தன்
படுத்திட்ட மீன்முழுதும்
இழித்தக்க என்னா(து) அமிர்துசெய்
தான்என்(று) இயம்புவரே.
தெளிவுரை : தில்லையான் கேவலமானவற்றையும் குறைவாகக் கருதமாட்டான். முன்பு
(வேடுவர்) கண்ணப்ப நாயனார் இறைச்சியை இலையில் கொண்டு வந்து படைத்தபோதும், அதி
பத்த நாயனார் (செம்படவர்) தான் பிடித்த மீன் முழுவதையும், அவை இழிவானவை என்று
கருதாமல் கொடுத்ததையும் மகிழ்ந்து உண்டாய் என்று சொல்கிறார்களே !
இறைவன் அன்பிற்குக் கட்டுப்பட்டவன் என்கிறார்.
-
வரந்தரு மா(று)இதன் மேலும்உண்
டோவயல் தில்லைதன்னுள்
புரந்தரன் மால்தொழ நின்ற
பிரான்புலைப் பொய்ம்மையிலே
நிரந்தர மாய்நின்ற என்னையும்
மெய்மையின் தன்னடியார்
தரந்தரு வான்செல்வத் தாழ்த்தினன்
பேசருந் தன்மைஇதே.
தெளிவுரை : வரந்தருமாறு இதன் மேலும் உண்டோ? வயல்கள் சூழ்ந்த தில்லை தன்னுள்
இந்திரன், திருமால் ஆகியோர் தொழ நின்ற பிரான் புலைப் பொய்ம்மையில் நிரந்தரமாய்
நின்ற என்னையும் உண்மையாகவே தன்னுடைய அடியார்களின் மேன்மை உயருமாறு செல்வத்துள்
ஆழ்த்தினான். இது சொல்லும் தரமுடியதோ.
இறைவன் சோதனையை வியக்கின்றார்.
-
தன்தாள் தரித்தார் இயாவர்க்கும்
மீளா வழிதருவான்
குன்றா மதில்தில்லை மூதூர்க்
கொடிமேல் விடைஉடையோன்
மன்றாட வும்பின்னும் மற்றவன்
பாதம் வணங்கிஅங்கே
ஒன்றார் இரண்டில் விழுவர்அந்
தோசில ஊமர்களே.
தெளிவுரை : தன் பாதங்களைப் புகலிடமாகக் கொண்ட எல்லார்க்கும் இனி மீளாத வழி தரும்
பொருட்டு, உயர்ந்த மதில்களை உடைய தில்லை மூதூர் கொடிமேல் காளையை எழுதியுள்ளவன்
நடனமாட, அவன் பாதங்களை வணங்கி அங்கே நிலைத்திராதவர் பிறப்பு இறப்பு என்னும்
இரண்டில் விழுவர். ஐயோ இது இந்த ஊர்மக்களுக்குத் தெரியவில்லையே என்று
இரங்குகின்றார்.
-
களைகண் இலாமையும் தன்பொற்
கழல்துணை யாம்தன்மையும்
துளைகள் நிலாம்முகக் கைக்கரிப்
போர்வைச் சுரம்நினையான்
தளைகள் நிலாமலர்க் கொன்றையன்
தண்புலி யூர(து)என்றேன்
வளைகள் நிலாமை வணங்கும்
அநங்கன் வரிசிலையே.
தெளிவுரை : இது தலைவி கூற்று: பற்றுக்கோடு இல்லாமையும், உன் பொற்கழல் துணையாம்
தன்மையும் யானைப் போர்வையை உடையான் என்னைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்கின்றான்.
தளைகள் நிலா மலர்க் கொன்றையன் குளிர்ந்த தில்லையில் உள்ளது என்றேன். கைவளைகள்
கையில் நிற்காதவாறு மன்மதன் தனது வில்லை வளைத்து அம்பு எய்கின்றான். இவளது காதல்
நோயை இறைவன் கவனிக்கவில்லையே என்று வருந்துகின்றாள்.
-
வரித்தடந் திண்சிலை மன்மதன்
ஆதலும் ஆழிவட்டம்
தரித்தவன் தன்மகன் என்பதோர்
பொற்பும் தவநெறிகள்
தெரித்தவன் தில்லையுள் சிற்றம்
பலவன் திருப்புருவம்
நெரித்தலும் கண்டது வெண்பொடி
யேயன்றி நின்றிலவே.
தெளிவுரை : வரிந்து கட்டப்பட்ட திண் சிலையை யுடைய மன்மதன் ஆதலும் சக்கரத்தை
ஏந்திய திருமாலின் மகன் என்பதோர் அழகும் தவநெறிகள் தெரிந் தெடுத்தவன் தில்லையுள்
சிற்றம்பலவன் திருப்புருவம் வளைதலும் கண்டது திருநீறேயன்றி நிலை
பெற்றிருக்கவில்லை.
இவைகளினால் அழிவே நேரும் என்பதாம்.
-
நின்றில வேவிச யன்னொடும்
சிந்தை களிப்புறநீள்
தென்தில்லை மாநடம் ஆடும்
பிரான்தன் திருமலைமேல்
தன்தலை யால்நடந் தேறிச்
சரங்கொண்(டு) இழிந்ததென்பர்
கன்றினை யேவிள மேலெறிந்(து)
ஆர்த்த கரியவனே.
தெளிவுரை : கிருஷ்ணாவதாரத்தில் தன்னைக் கொல்லவந்த கன்றினை விளாமரத்தின் மீது
எறிந்து கொன்றான். அத்தகைய கண்ணன் அருச்சுனன் உடன் கைலைக்குச் சென்று பாசுபதக்
கணையைப் பெற்றுக் கொண்டு வந்தான். அத்தகைய சிறப்பு கொண்ட சிவபெருமான் தென்
தில்லையில் நடனமாடுகின்றான் என்கிறார்.
தலையால் நடந்தேறியதால் மழை தாழ்ந்தது என்பது புராணக்கதை.
-
கருப்புரு வத்திரு வார்த்தைகள்
கேட்டலும் கண்பனியேன்
விருப்புரு வத்தினொ(டு) உள்ளம்
உருகேன் விதிர்விதிரேன்
இருப்புரு வச்சிந்தை என்னைவந்(து)
ஆண்டதும் எவ்வணமோ
பொருப்புரு வப்புரி சைத்தில்லை
ஆடல் புரிந்தவனே.
தெளிவுரை : மலை வடிவத்தைக் கொண்ட மதில்களை உடைய தில்லையில் நடனம் புரிந்தவன்
கரும்பின் இனிமையை உடைய அழகிய சொற்களைக் கேட்டதும் கண்களில் நீர் வடியவில்லை.
விருப்பத்தோடு உள்ளம் உருகேன். உடம்பு நடுங்கவில்லை. இரும்பின் வடிவம் கொண்ட
சிந்தை என்னை வந்து ஆண்டதும் எப்படியோ, நான் அறியேன்.
-
புரிந்தஅன் பின்றியும் பொய்ம்மையி
லேயும் திசைவழியே
விரிந்தகங் கைமலர் சென்னியில்
கூப்பில் வியநமனார்
பரிந்தவன் ஊர்புகல் இல்லை
பதிமூன்(று) எரியஅம்பு
தெரிந்தஎங் கோன்தன் திரையார்
புனல்வயல் சேண்தில்லையே.
தெளிவுரை : விரும்பிய அன்பு இல்லாமலும், பொய்மையோடும், திசை வழியே, கங்கை மலர்
தலையில் முறையீடு இல்லாத யமனை, அழித்தவன் ஊர் எது வென்றால் திரிபுரங்கள் எரிய
அம்பு எய்த எங்கள் தலைவன் இருக்கும் தண்ணீர் பொருந்திய வயல்களை உடைய தில்லையே
என்பதாம்.
-
சேண்தில்லை மாநகர்த் திப்பியக்
கூத்தனைக் கண்டும்அன்பு
பூண்டிலை நின்னை மறந்திலை
ஆங்கவன் பூங்கழற்கே
மாண்டிலை இன்னம் புலன்வழி
யேவந்து வாழ்ந்திடுவான்
மீண்டனை என்னைஎன் செய்திட
வோசிந்தை நீவிளம்பே.
தெளிவுரை : மனமே ! நீண்ட தில்லை மாநகர் தெய்வத் தன்மை பொருந்திய திருக்கூத்து
ஆடுபவனைப் பார்த்த பிறகும் அன்பு கொள்ளவில்லை. உன்னை மறந்திலை. அங்கு அவனுடைய
அழகிய திருவடிகளுக்கு ஐக்கியமாகவில்லை. இன்னமும் புலன் வழியே சென்று வாழ
வேண்டுமென்று திரும்பிவிட்டாய். என்னை என்ன செய்யச் சொல்கிறாய்; சொல்வாயாக.
-
விளவைத் தளர்வித்த விண்டுவும்
தாமரை மேல்அயனும்
அளவிற்(கு) அறியா வகைநின்ற
அன்றும் அடுக்கல்பெற்ற
தளர்விற் றிருநகை யாளும்நின்
பாகங்கொல் தண்புலியூர்க்
களவிற் கனிபுரை யுங்கண்ட
வார்சடைக் கங்கையனே.
தெளிவுரை : கண்ணனாக அவதரித்தபோது கன்றை விளாமரத்தின் மீது வீசிய திருமாலும்,
தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் அறிய முடியாத வகையில் நின்ற அப்போதும் உமா
தேவியார் உன் இடப் பாகத்தில் இருந்தார் போலும். குளிர்ந்த தில்லையம் பதியில்
களாப்பழம் போன்ற நிறமுடைய நீல கண்டனே ! நீண்ட சடையில் கங்கையை வைத்திருப்பவனே !
-
கங்கை வலம்இடம் பூவலம்
குண்டலம் தோடிடப்பால்
தங்கும் கரம்வலம் வெம்மழு
வீயிடம் பாந்தள்வலம்
சங்கம் இடம்வலம் தோலிடம்
ஆடை வலம்அக்கிடம்
அங்கஞ் சரிஅம் பலவன்
வலங்காண் இடம்அணங்கே.
தெளிவுரை : அர்த்த நாரீஸ்வர வடிவத்தைப் புகழ்கிறார். வலப்பக்கத்தில் கங்கை;
இடப்பக்கத்தில் பூ; வலப்பக்கத்தில் குண்டலம்; இடப்பக்கம் தோடு; தங்கும் கரம்
வலம்; வெம்மழு இடம்; பாந்தள்வலம்; சங்கம் இடம்; வலப்பக்கம் தோல்; இடம் ஆடை; வலம்
எலும்புமாலை; இடம் அங்கம் அம்பலவன் வலம்; அணங்கு இடம்.
இறைவன் வலப்பாகம் ஆணாகவும் இடப்பாகம் பெண்ணாகவும் உள்ளான் என்கிறார்.
-
அணங்கா டகக்குன்ற மாதற
வாட்டிய வாலமர்ந்தாட்(கு)
இணங்கா யவன்தில்லை எல்லை
மிதித்தலும் என்புருகா
வணங்கா வழுத்தா விழாவெழும்
பாவைத் தவாமதர்த்த
குணங்காண் இவள்என்ன என்றுகொ
லாம்வந்து கூடுவதே.
தெளிவுரை : வெறியாடுதல் போன்ற ஆதரவு காட்டியவளுக்கு இணங்கமாட்டாய். அவன் தில்லையை
மிதித்தலும், என்புருகி, வணங்கி, வழுத்தி, விழுந்தெழும் பாவையின் காதற்
குணங்களைக் காண். எப்பொழுது வந்து அவளைச் சேர்வது. அவள் உன் நினைவாகவே உள்ளாள்
என்பதாம்.
அணங்கு ஆடு அகக்குன்றம் ஆதரவு ஆட்டிய ஆல் அமர்ந்தாட்கு இணங்காய் அவன் எனப்
பிரிக்க.
-
கூடுவ(து) அம்பலக் கூத்தன்
அடியார் குழுவுதொறும்
தேடுவ(து) ஆங்கவன் ஆக்கம்அச்
செவ்வழி அவ்வழியே
ஓடுவ(து) உள்ளத்(து) இருத்துவ(து)
ஒண்சுட ரைப்பிறவி
வீடுவ தாக நினையவல்
லோர்செய்யும் வித்தகமே.
தெளிவுரை : தில்லை அம்பலக் கூத்தனது அடியார்கள் குழுவு தொறும் கூடுவது. தேடுவது
அவனது செல்வமாகிய வாழ்த்து. அவ்வாறு செல்வதே நல்வழி என்று ஓடுவது. உள்ளத்து
இருத்துவது ஒண் சுடரை. பிறவித் துன்பத்தை ஒழிப்பதற்கு உன்னை யல்லாமல் வேறு யாரால்
இந்த வித்தகத்தைச் செய்ய முடியும்?
-
வித்தகச் செஞ்சடை வெண்மதிக்
கார்நிறக் கண்டத்தெண்தோள்
மத்தகக் கைம்மலைப் போர்வை
மதில்தில்லை மன்னனைத்தம்
சித்தகக் கோயில் இருத்தும்
திறத்தா கமிகர்க்கல்லால்
புத்தகப் பேய்களுக்(கு) எங்கித்த
தோஅரன் பொன்னடியே.
தெளிவுரை : புதுமையான செஞ்சடை, வெண்மதி, கறுத்த கழுத்து, எட்டுத் தோள்கள்,
மதங்கொண்ட யானையின் தோல் இவரது போர்வை. உயர்ந்த மதில்களை உடைய தில்லை வாணனது
சித்தகக் கோயிலில் இருத்தும் திறம் உடையவர்கள் ஆகம நூல் உணர்வு உடையவர்கள்.
அரனுடைய பொன்னடி எங்கே உள்ளது என்பது புத்தகப் பேய்களுக்கு தெரியுமோ?
-
பொன்னம் பலத்துறை புண்ணியன்
என்பர் புயல்மறந்த
கன்னம்மை தீரப் புனிற்றுக்
கலிக்காமற்(கு) அன்றுபுன்கூர்
மன்னு மழைபொழிந்(து) ஈரறு
வேலிகொண்(டு) ஆங்கவற்கே
பின்னும் மழைதவிர்த்(து) ஈரறு
வேலிகொள் பிஞ்ஞகனே.
தெளிவுரை : ஏயர்கோன் கலிக்காம நாயனார் வரலாறு இதில் கூறப்படுகிறது.
பொன்னம்பலத்துறை புண்ணியன் மழை பெய்யாமல் பஞ்சம் நேர்ந்த சமயத்தில் நல்ல மழை
பெய்வித்து, பன்னிரண்டு வேலி கொண்டு ஆங்கு அவற்கு உதவி, பின்னும் மழை பெய்யாமல்
தவிர்ந்து அந்த நிலங்களைக் கொண்டு அந்த அடியாரைச் சோதித்தார் நம் சிவபெருமான்.
-
நேசன்அல் லேன்நினை யேன்வினை
தீர்க்கும் திருவடிக்கீழ்
வாசநன் மாமல ரிட்(டு)இறைஞ்
சேன்என்தன் வாயதனால்
தேசன்என் னானைபொன் னார்திருச்
சிற்றம் பலம்நிலவும்
ஈசன்என் னேன்பிறப்(பு) என்னாய்க்
கழியுங்கொல் என்தனக்கே.
தெளிவுரை : உனக்கு நான் அன்பு உடையவனாக இருக்க வில்லையே ! ?உன்னை நினைக்கவில்லையே
! பிறவித் துன்பங்களைப் போக்கும் உன் திருவடிகளின்கீழ் மணமுள்ள மலர்களை
அருச்சித்து வணங்க வில்லையே ! என் வாயினால் ஒளி மயமானவன் என்றும் பொன்னார்
திருச்சிற்றம்பலத்தில் உள்ள ஈசன் என்றும் துதிக்கவில்லையே ! இந்தப் பிறவி
எப்படிக் கழியுமோ தெரியவில்லையே என்று வருந்துகிறார்.
-
தனந்தலை சக்கரம் வானத்
தலைமை குபேரன்தக்கன்
வனந்தலை ஏறடர்த் தோன்வா
சவன்உயிர் பல்லுடல்ஊர்
சினந்தலை காலன் பகல்காமன்
தானவர் தில்லைவிண்ணோர்
இனந்தலை வன்அரு ளால்முனி
வால்பெற்(று) இகந்தவரே.
தெளிவுரை : தனத்தைக் குபேரனும், தலையைத் தக்கனும், சக்கரத்தைத் திருமாலும், வானத்
தலைமையை இந்திரனும் தில்லையான் அருளால் பெற்றார்கள். உயிரைக் காலனும், பல்லைக்
கதிரவனும், உடலைக் காமனும், ஊரைத் தானவரும் தில்லையான் முனிவால் இழந்தனர்.
-
அவமதித்(து) ஆழ்நர கத்தில்
இடப்படும் ஆதர்களும்
தவமதித்(து) ஒப்பிலா என்னவிண்
ஆளும் தகைமையரும்
நவநிதித் தில்லையுட் சிற்றம்
பலத்து நடம்பயிலும்
சிவநிதிக் கேநினை யாரும்
நினைந்திட்ட செல்வருமே.
தெளிவுரை : நவநிதித் தில்லையுள் சிற்றம்பலத்து நடம் பயிலும் சிவநிதிக்கே
நினைக்காதவர் அவமதித்து ஆழ்நரகத்தில் இடப்படும் ஆதர்கள். தவமதித்து ஒப்பிலர் என்ன
விண் ஆளும் தகைமையோர் அந்த இறைவனை நினைந்திட்ட செல்வர் எனக் கொள்க.
-
வருவா சகத்தினில் முற்றுணர்ந்
தோனைவண் தில்லைமன்னைத்
திருவாத வூர்ச்சிவ பாத்தியன்
செய்திருச் சிற்றம்பலப்
பொருளார் தருதிருக் கோவைகண்
டேயுமற் றப்பொருளைத்
தெருளாத வுள்ளத் தவர்கவி
பாடிச் சிரிப்பிப்பரே.
தெளிவுரை : வருவாசகத்தினில் முற்றுணர்ந்தோனை, வண் தில்லை மன்னை, திருவாதவூர்
அடிகளாகிய மாணிக்க வாசகர் செய்ய திருச்சிற்றம்பலக் கோவை என்னும் நூலைக் கண்ட
பிறகும் அதன் பொருளைத் தெளிந்து கொள்ளாத மனமுடையவர்கள் கவிபாடி சிரிப்புக்கு
ஆளாவார்கள். இகழப் படுவார்கள் என்பதாம்.
-
சிரித்திட்ட செம்பவ ளத்தின்
திரளும் செழுஞ்சடைமேல்
விரித்திட்ட பைங்கதிர்த் திங்களும்
வெங்கதப் பாந்தளும்தீத்
தரித்திட்ட அங்கையும் சங்கச்
சுருளும்என் நெஞ்சினுள்ளே
தெரிந்திட்ட வாதில்லைச் சிற்றம்
பலத்துத் திருநடனே.
தெளிவுரை : ஒளி வீசுகின்ற செம்பவளத்தின் திரளும், செஞ்சடை மேல் விரித்திட்ட பசிய
கதிர்களை உடைய திங்களும் சினத்தை உடைய பாம்பும் தீயை ஏந்தியுள்ள கையும் சங்கச்
சுருளும் என் நெஞ்சில் தெளிய வைத்தவனே ! தில்லைச் சிற்றம்பலத்துத் திருநடனம்
செய்யும் இறைவனே !
-
நடஞ்செய்சிற் றம்பலத் தான்முனி(வு)
என்செயும் காமன்அன்று
கொடுஞ்சினத் தீவிழித் தாற்குக்
குளிர்ந்தனன் விற்கொடும்பூண்
விடுஞ்சினத் தானவர் வெந்திலர்
வெய்தென வெங்கதத்தை
ஒடுங்கிய காலன்அந் நாள்நின்(று)
உதையுணா வீட்டனனே.
தெளிவுரை : எதிர்மறையாகச் சொல்லினும் குறிப்பினால் காமன் எரிந்தனன் என்பது
முதலாகக் கொள்க. உதையுணா-உதையுண்ணுதல். நடஞ்செய்கின்ற சிற்றம்பலத்தானது கோபம்
என்செய்யும் என்றால் காமன், அன்று மிகுந்த கோபத்தினால், இறைவனது நெற்றிக் கண்ணால்
எரிந்து சாம்பலாயினன். திரிபுராதிகளின் முப்புரங்கள் எரிந்தன. மிகுந்த
கோபத்தையுடைய இயமன் உதையுண்டு அழிந்தான்.
-
விட்டங்(கு) ஒளிமணிப் பூண்திகழ்
வன்மதன் மெய்யுரைக்கில்
இட்டங் கரியநல் லான்அல்லன்
அம்பலத்(து) எம்பரன்மேல்
கட்டங் கியகணை எய்தலும்
தன்னைப்பொன் னார்முடிமேல்
புட்டங்கி னான்மக னாமென்று
பார்க்கப் பொடிந்தனனே.
தெளிவுரை : ஒளிமயமான ஆபரணங்களை அணிந்த மன்மதன், உண்மையைச் சொல்வதென்றால், அவன்
நல்லவன் அல்லன். அம்பலத்து எம் பெருமான் மீது கள் தங்கிய கணையாகிய மலரம்புகளை
எய்தான். தன்னைக் கருடப் பறவைமேல் தங்கிய திருமாலின் மகன் என்றும் சொல்லிக் கொண்ட
அவன் எரிந்து சாம்பலாயினான்.
-
பொடியேர் தருமே னியனாகிப்
பூசல் புகவடிக்கே
கடிசேர் கணைகுளிப் பக்கண்டு
கோயிற் கருவியில்லா
வடியே படஅமை யுங்கணை
என்ற வரகுணன்தன்
முடியே தருகழல் அம்பலத்(து)
ஆடிதன் மொய்கழலே.
தெளிவுரை : திருநீறு பூசிய அழகைக் கொடுக்கின்ற உடலை உடையவன், போர் ஒடுங்குகின்ற
பாதங்களுக்கு மிகுதியாகக் குவிந்துள்ள அம்புகளைக் கண்டு கோயிற் கருவியில்லா வடியே
பட அமையும் கணை என்ற வரகுண பாண்டியன்தன் முடியேதரு கழல் அம்பலத்து ஆடிதன்
மொய்கழலே. வரகுண பாண்டியனின் உண்மை அன்பு விளக்கப் படுகிறது. அவன் சிறந்த
சிவபக்தன்.
-
கழலும் பசுபாச ராம்இமை
யோர்தங் கழல்பணிந்திட்(டு)
அழலும் இருக்கும் தருக்குடை
யோரிடப் பால்வலப்பால்
தழலும் தமருக மும்பிடித்(து)
ஆடிசிற் றம்பலத்தைச்
சுழலும் ஒருகால் இருகால்
வரவல்ல தோன்றல்களே.
தெளிவுரை : இறைவனின் திருப்பாதங்களைப் பணியும் தேவர்களின் பாதங்களைப் பணிந்து
அழுதலும் அதைக் கவனியாது செம்மாந்து இருக்கும் தருக்குடையார் இடப்பால்,
வலப்பாலில் தீயும், உடுக்கையும் பிடித்து ஆடிச் சிற்றம்பலத்தைச் சுழலும் ஒருகால்.
இருமுறை வரவல்ல தருக்குடையோர்கள் என்பதாம். இறைவனை வழிபடாமல் பிற தெய்வங்களை
வணங்குவோர் துன்புறுவர் என்றபடி.
-
தோன்றலை வெண்மதி தாங்கியைத்
துள்ளிய மாலயற்குத்
தான்தலை பாதங்கள் சாரெரி
யோன்தன்னைச் சார்ந்தவர்க்குத்
தேன்தலை யான்பால் அதுகலந்
தால்அன்ன சீரனைச்சீர்
வான்தலை நாதனைக் காண்பதென்
றோதில்லை மன்றிடையே.
தெளிவுரை : தலைவனை, வெண்மதி தாங்கியை, துள்ளிய திருமாலுக்கும் அயனுக்கும் அரிய
மாட்டாதவனை (அதாவது திருமால் பாதத்தையும், பிரமன் முடியையும் காண்பதற் கியலாதவாறு
பெரும் தீப்பிழம்பாய் ஆயினான்) தன்னைத் தலைவனாய் ஏற்றுக் கொண்டவர்களுக்குத்
தேனும் பாலும் கலந்தது போன்ற சிறப்புடையவனை, கங்கையைத் தலையில் வைத்துள்ள நாதனைக்
காண்பது எப்போது? அதாவது தில்லையில் தரிசிப்பது எப்போது என்கிறார்.
-
மன்றங் கமர்திருச் சிற்றம்
பலவ வடவனத்து
மின்றங் கிடைந்குந்தி நாடக
மாடக்கொல் வெண்டரங்கம்
துன்றங் கிளர்கங்கை யாளைச்
சுடுசினத் தீயரவக்
கன்றங் கடைசடை மேலடை
யாவிட்ட கைதவமே.
தெளிவுரை : திருஆலங்காடு (இரத்தின சபை) நடனத்தைக் குறிக்கின்றார்.
தில்லையம்பலத்தில் நடனமாடும் பெருமானே ? திருஆலங்காட்டில் மின்னலைப் போன்ற
இடையினை யுடைய துர்க்கை (காளிகா தேவி) யோடு நடனமாடியபோது கங்கையாளையும்
பாம்பையும் வெளியேறவிட்டது கபடமாகும்.
-
தவனைத் தவத்தவர்க்(கு) அன்பனைத்
தன்னடி யெற்குதவும்
சிவனைச் சிவக்கத் திரிபுரத்
தைச்சிவந் தானைச்செய்ய
அவனைத் தவளத் திருநீ
றனைப்பெரு நீர்கரந்த
பவனைப் பணியுமின் நும்பண்டை
வல்வினை பற்றறவே.
தெளிவுரை : தவத்தை உடையவனை, தவசிகளுக்கு அன்பனை, தன் அடியவர்க்கு உதவும் சிவனை,
முப்புரங்களை எரித்தவனை, செந்நிறமுடையவனை, வெள்ளிய திருநீறு அணிந்தவனை, கங்கையைச்
சடையில் மறைத்து வைத்திருக்கும் சிவனைப் பணியுங்கள். உங்களுடைய முன் வினைகள்
எல்லாம் நீங்குமாறு பணியுங்கள் என்று அறவுரை கூறுகின்றார்.
-
பற்றற முப்புரம் வெந்தது
பைம்பொழில் தில்லைதன்னுள்
செற்றரு மாமணிக் கோயிலின்
நின்றது தேவர்கணம்
சுற்றரு நின்புகழ் ஏத்தித்
திரிவது சூழ்சடையோய்
புற்றர(வு) ஆட்டித் திரியும்
அதுவொரு புல்லனவே.
தெளிவுரை : முப்புரங்கள் முழுவதும் வெந்து போனது, பசிய சோலைகள் சூழ்ந்த
தில்லையில் பகையில்லாத பொன்னம்பலம் தன்னுள் நின்றது, தேவர் கூட்டம்
சுற்றியிருந்து உன்னுடைய புகழை ஏந்தித் திரிவது சூழ்ந்த சடையை உடையோய் புற்றில்
வாழும் தன்மையுள்ள பாம்பை ஆட்டித் திரிவது ஆகிய இவை யாவும் அற்பமானவை என்பதாம்.
-
புல்லறி வின்மற்றைத் தேவரும்
பூம்புலி யூருள்நின்ற
அல்லெறி மாமதிக் கண்ணிய
னைப்போல் அருளுவரே
கல்லெறிந் தானும்தன் வாய்நீர்
கதிர்முடி மேலுகுத்த
நல்லறி வாளனும் மீளா
வழிசென்று நண்ணினரே.
தெளிவுரை : சிற்றறிவினால் மற்றைத் தேவரும் அழகிய சிதம்பரத்தில் நின்ற இருளைப்
போக்கும் திங்களாகிய மாலையை அணிந்தவனைப்போல் அருளுவர். கல்லெறிந்த சாக்கிய
நாயனாரும், தன்வாய் நீரை உன் தலைமீது உகுத்த நல்லறிவாளனாகிய கண்ணப்ப நாயனாரும்
முத்தியை அடைந்து உயர்ந்தனர்.
-
நண்ணிய தீவினை நாசஞ்
செலுத்தி நமனுலகத்(து)
எண்ணினை நீக்கி இமையோர்
உலகத்(து) இருக்கலுற்றீர்
பெண்ணினொர் பாகத்தன் சிற்றம்
பலத்துப் பெருநடனைக்
கண்ணினை யார்தரக் கண்டுகை
யாரத் தொழுமின்களே.
தெளிவுரை : வந்து சேர்ந்துள்ள தீவினைகளை நாசம் செய்து, நமன் உலகத்திற்குச்
செல்வதைத் தடுத்து, தேவர்கள் உலகத்தில் இருப்பதற்கு எண்ணுகிறவர்களே ! உமா
தேவியாரை இடப் பாகத்தில் வைத்திருப்பவன் சிற்றம் பலத்தில் பெரு நடனத்தைக் கண்கள்
இரண்டும் நன்றாகப் பொருந்தத் தொழுவீர்களாக !
-
கைச்செல்வம் எய்திட லாமென்று
பின்சென்று கண்குழித்தல்
பொய்ச்செல்வர் செய்திடும் புன்மைகட்
கேஎன்றும் பொன்றில்இல்லா
அச்செல்வம் எய்திட வேண்டுதி
யேல்தில்லை அம்பலத்துள்
இச்செல்வன் பாதம் கருதிரந்
தேன்உன்னை என்நெஞ்சமே.
தெளிவுரை : என் நெஞ்சமே ! உடனடியாகக் கையிலே கிடைக்கிற செல்வத்தை எய்திடலாமென்று,
பொய்ச் செல்வர் செய்திடும் புன்மை கட்கு மாறாக, என்றும் அழிதல் இல்லாத
அச்செல்வத்தை அடைவதற்கு விரும்பினால் தில்லையம்பலவாணன் பாதம் கருதி உன்னை
யாசிக்கின்றேன்.
திருச்சிற்றம்பலம்
திருத்தொண்டர் திருவந்தாதி ( நம்பியாண்டார்நம்பி அருளிச்செய்தது )
திருவாரூரில் திருக்கோயில் கொண்டருளிய சிவபெருமான், தில்லைவாழ் அந்தணர்தம்
அடியார்க்கும் அடியேன் என்று அடியெடுத்துக் கொடுக்கச் சுந்தரர் திருத்தொண்டத்
தொகையைப் பாடி அடியார்களைப் போற்றினார். திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையாரின்
திருவருளைப் பெற்ற நம்பியாண்டார் நம்பி, மேற்படி பிள்ளையாரின் திருவருளால்
திருத்தொண்டத் தொகையை விரித்து அத் தொகையை முதனூலாகக் கொண்டு இவ் அந்தாதியை
வழிநூலாகப் பாடினார். சேக்கிழார் திருவாய் மலர்ந்தருளிய திருத்தொண்டர் புராணம்
என்னும் பெரிய புராணத்திற்குப் பெரிதும் ஆதாரமாக விளங்குவது இவ் அந்தாதியே.
இத் திருவந்தாதியின்கண் தேவாரம் பாடிய மூவரும், தனியடியார் அறுபதின்மரும் ஒன்பது,
திருக் கூட்டத்தாரும் ஆகிய திருத்தொண்டர்களுக்குரிய ஊர், நாடு, மரபு
முதலியவைகளும் அவர்கள் மேற்கொண்டொழுகிய திருத்தொண்டின் நெறியும் அதனால் அவர்கள்
பெற்ற பேறும் கூறப்பட்டுள்ளன. இவ் அந்தாதி எண்பத்தொன்பது கட்டளைக் கலித்துறைகளைக்
கொண்டதாக விளங்குகிறது.
திருத் தொண்டத் தொகை திருப்பதிகத்திலுள்ள பதினொரு பாடல்களிலும் ஆரூரன் ஆரூரில்
அம்மானுக்காளே என, நம்பியாரூரர் தம்மைத் தொண்டருக்குத் தொண்டராகக்
குறிப்பிடுகின்றார். இப்பதினோரிடங்களிலும் சுந்தரர் வரலாற்று நிகழ்ச்சிகளைக்
குறித்துப் போற்றும் பதினோரு பாடல்கள் இத் திருவந்தாதியில் முறையே அமைந்துள்ளன.
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சேரமான் பெருமாள், கோச்செங்கட் சோழர் ஆகிய
பெருமக்களின் வரலாறுகள் இரண்டிரண்டு பாடல்களிலும், ஏனையப் பெருமக்களின் வரலாறுகள்
ஒவ்வொரு பாடலிலும் குறித்துப் போற்றப் பெற்றன. திருத்தொண்டத் தொகையில் போற்றப்
பெறும் தனியடியார் தொகையடியார் இத்துணையர் என்பதை ஒரு பாடலிலும், அத்
திருப்பதிகத்திலுள்ள பாடல்களின் முதற் குறிப்பினை ஒரு பாடலிலும், இத்
திருவந்தாதியை ஓதுதலால் வரும் பயனை ஒரு பாடலிலும் கூறி நம்பியாண்டார் நம்பிகள்
இத் திரு அந்தாதியினை நிறைவு செய்துள்ளார்.
திருச்சிற்றம்பலம்
-
பொன்னி வடகரை சேர்நாரை
யூரில் புழைக்கைமுக
மன்னன் அறுபத்து மூவர்
பதிதேம் மரபுசெயல்
பன்னஅத் தொண்டத் தொகைவகை
பல்கும்அந் தாதிதனைச்
சொன்ன மறைக்குல நம்பிபொற்
பாதத்துணை துணையே.
தெளிவுரை : காவேரியின் வடகரையிலுள்ள திருநாரையூரில் கோயில் கொண்டிருக்கும்
துளையுள்ள தும்பிக்கையையுள்ள பொல்லாப் பிள்ளையார் அறுபத்து மூன்று நாயன்மார்களது
ஊரும், தேசமும், குலமும், செயல்களும் சொல்ல, அந்தத் திருத்தொண்டத் தொகையின்
வகையாகப் பெருகும் இந்தத் திருத்தொண்டர் திரு அந்தாதியினைச் சொன்ன வேதியர் குல
நம்பியாண்டார் நம்பிகளின் பொற்பாதங்கள் நமக்குத் துணையாக இருக்கும்.
தில்லைவாழந்தணர்
-
செப்பத் தகுபுகழ்த் தில்லைப்
பதியிற் செழுமறையோர்
ஒப்பப் புவனங்கள் மூன்றினும்
உம்பரின் ஊர்எரித்த
அப்பர்க்(கு) அமுதத் திருநடர்க்(கு)
அந்திப் பிறையணிந்த
துப்பர்க்(கு) உரிமைத் தொழில்புரி
வோர்தமைச் சொல்லுதுமே.
தெளிவுரை : சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற சிதம்பரத்தில் வாழும் அந்தணர்களைப்
போன்ற உலகங்கள் மூன்றினும் ஆகாயத்தில் திரிந்த திரிபுரங்களை எரித்த தந்தையாக
விளங்குபவரும், திருநடனம் செய்பவரும், பிறையணிந்தவரும், பவழம் போன்ற
நிறமுடையவருமான சிவபெருமானுக்கு உரிமைத் தொண்டு செய்து வருகின்ற தில்லைவாழ்
அந்தணர் மூவாயிரவரைத் துதிப்போமாக.
திருநீலகண்ட நாயனார்
-
சொல்லச் சிவன்திரு வாணைதன்
தூமொழி தோள்நசையை
ஒல்லைத் துறந்துரு மூத்ததற்
பின்உமை கோன்அருளால்
வில்லைப் புரைநுத லாளோ(டு)
இளமைபெற்(று) இன்பமிக்கான்
தில்லைத் திருநீல கண்டக்
குயவனாம் செய்தவனே.
தெளிவுரை : சிதம்பரத்தில் வாழ்ந்திருந்த திருநீலகண்டர் என்ற சிவனடியார்,
பரத்தையர்பால் இன்பத்துறையில் எளியர் ஆனார் என்பதை அறிந்த அவரது மனைவியார்,
எம்மைத் தீண்டாதீர், திருநீலகண்டத்து மீது ஆணை என்றார். அன்று முதல் அவர்
பெண்ணாசை துறந்தார். ஆண்டுகள் பல சென்றன. இளமை நீங்கி மூப்பு வந்தது. பின்னர்
இறைவன் திருவருளால் தானும் தன் மனைவியும் இளமை நலம் பெற்றனர். இவர் குயவர் மரபைச்
சேர்ந்தவர்.
இயற்பகை நாயனார்
-
செய்தவர் வேண்டிய(து) யாதும்
கொடுப்பச் சிவன்தவனாய்க்
கைதவம் பேசிநின் காதலி
யைத்தரு கென்றலுமே
மைதிகழ் கண்ணியை ஈந்தவன்
வாய்ந்த பெரும்புகழ்வந்(து)
எய்திய காவிரிப் பூம்பட்
டினத்துள் இயற்பகையே.
தெளிவுரை : காவிரிப் பூம்பட்டினத்தில் பெருவணிகராய் வாழ்ந்தவர் இயற்பகையார்.
அடியார்கள் கேட்பதை இல்லை என்னாது கொடுத்து வந்தார். ஒருநாள் சிவபெருமான் தூர்த்த
வேதியர் உருவில் வந்து உன்னுடைய மனைவியை வேண்டி வந்தேன் என்றார். அவ்வாறே தம்
மனைவியை ஈந்தார். இறைவர் மறைந்து, உமையொருபாகராய் விடைமேல் காட்சி கொடுத்து
இருவர்க்கும் முக்தியளித்தார்.
இளையான் குடிமாற நாயனார்
-
இயலா விடைச்சென்ற மாதவற்(கு)
இன்னமு தாவிதைத்த
வயலார் முளைவித்து வாரி
மனைஅலக் கால்வறுத்துச்
செயலார் பயிர்விழுத் தீங்கறி
ஆக்கும் அவன்செழுநீர்க்
கயலார் இளையான் குடியுடை
மாறன்எங் கற்பகமே.
தெளிவுரை : மாறன் என்பவர் இளையான்குடியில் வேளாளர் குலத்தில் பிறந்தவர். அவர்
அடியவர்களுக்கு அமுதளித்து வறுமையுற்றார். அவரைச் சோதிக்க ஒருநாள் இரவு இறைவன்
அடியவர் உருவில் வந்தார். வீட்டில் ஒன்றும் இல்லாத நிலை. வயலில் விதைத்த நெல்
முளைகளை எடுத்து வந்து வீட்டுக் கூரையை எடுத்து, அதை வறுத்து, சோறு சமைத்து,
கீரையைத் தீங்கறியாகச் செய்து உணவளிக்க முயன்றபோது இறைவன் தோன்றி அந்தத்
தம்பதியரை ஆட்கொண்டார்.
மெய்ப்பொருள் நாயனார்
-
கற்றநன் மெய்த்தவன் போல்ஒரு
பொய்த்தவன் காய்சினத்தால்
செற்றவன் தன்னை அவனைச்
செறப்புக லும்திருவாய்
மற்றவன் தத்தா நமரே
எனச்சொல்லி வான்உலகம்
பெற்றவன் சேதிபன் மெய்ப்பொரு
ளாம்என்று பேசுவரே.
தெளிவுரை : மெய்ப்பொருள் நாயனார் சேதி நாட்டு மன்னர். சிறந்த சிவபக்தர். அவரை
நயவஞ்சகமாகக் கொல்ல நினைத்த முத்தநாதனைத் தடுத்து நிறுத்திய தன் ஏவலாளை, தத்தா
நமர் எனக் கூறி வீழ்ந்தார். இறைவன் நாயனாரின் எதிரே தோன்றி காட்சி அளித்தார்.
சிவனடியாரைக் கொன்றான் என்று கூறாமல், தன் முன் நினைத்த அப்பரிசே செய்தான் என்று
சேக்கிழார் கூறியுள்ளார்.
விறன்மிண்ட நாயனார்
-
பேசும் பெருமையவ் ஆரூ
ரனையும் பிரானவனாம்
ஈசன் தனையும் புறகுதட்
டென்றவன் ஈசனுக்கே
நேசன் எனக்கும் பிரான்மனைக்
கேபுக நீடுதென்றல்
வீசும் பொழில்திருச் செங்குன்றம்
மேய விறன்மிண்டேனே.
தெளிவுரை : சேர நாட்டைச் சேர்ந்த செங்குன்றூரில் வேளாளர் குலத்தில் தோன்றியவர்
விறன்மிண்டர். சிறந்த சிவனடியார். திருவாரூர் தேவாசிரிய மண்டபத்தில் இவர்
தங்கியிருந்தபோது, சுந்தரர் அடியார்களை வெளிப்படையாக வணங்காமல் மனத்திலேயே
எண்ணிக் கொண்டு சென்றார். அதுகண்டு விறன்மிண்டர் சினந்து, வன்தொண்டர் புறகு
இறைவனும் புறகு என்றார். பின்னர் சுந்தரர் திருத்தொண்டத் தொகை பாடி அடியார்களைத்
தொழுதணைந்தார்.
அமர்நீதி நாயனார்
-
மிண்டும் பொழில்பழை யாறை
அமர்நீதி வெண்பொடியின்
முண்டம் தரித்த பிராற்குநல்
லூரின்முன் கோவணம்நேர்
கொண்டிங்(கு) அருளென்று தன்பெருஞ்
செல்வமும் தன்னையும்தன்
துண்ட மதிநுத லாளையும்
ஈந்த தொழிலினனே.
தெளிவுரை : சோழநாட்டைச் சேர்ந்த பழையாறையில் வணிகர் குலத்தில் அமர்நீதியார்
தோன்றினார். அவர் சிவனடியார்களுக்கு அமுதும் கோவணமும் அளித்து வந்தார். இறைவன்
இவரைச் சோதிக்க வேண்டி இவரிடம் கொடுத்த கோவணம் காணாமற் போகவே, அதற்கு ஈடாக அவரும்
அவரது மனைவியும் மைந்தரும் தராசுத் தட்டில் ஏறி ஈடு செய்தனர். அத் துலையோடு
சிவலோகத்திற்கு வருமாறு சிவபெருமான் அருள்பாலித்தார்.
சுந்தரமூர்த்தி நாயனார்
-
தொழுதும் வணங்கியும் மாலயன்
தேடரும் சோதிசென்றாங்(கு)
எழுதும் தமிழ்ப்பழ ஆவணம்
காட்டி எனக்குன்குடி
முழுதும் அடிமைவந்(து) ஆட்செய்
எனப்பெற்ற வன்முரல்தேன்
ஒழுகு மலரினற் றார்எம்பி
ரான்நம்பி யாரூரனே.
தெளிவுரை : திருத்தொண்டாத் தொகை பாடிய நம்பி ஆரூரனாகிய சுந்தரமூர்த்தி
சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு பதினொரு பாடல்களில் கூறப்படுகிறது. அவற்றுள் முதல்
பாடல் இது.
திருமாலும் பிரமனும் வழிபாடு செய்தும் காண்பதற்கரிய சிவபெருமான், சுந்தரரைத்
தடுத்தாட் கொள்ள எண்ணினார். திருமணக் கோலத்தோடு நம்பி யாரூரர் புத்தூருக்குச்
சென்றிருந்தார். அங்கு சிவபெருமான் கிழவேதியர் உருவில் சென்று மணப்பந்தரில் இந்த
நம்பியாரூரன் குடி முழுதும் என் அடிமை என்று கூறி ஓர் ஓலையைக் காட்டினார். ஆரூரர்
அவர் கையிலிருந்த ஓலையைப் பிடுங்கிக் கிழித் தெறிந்தார். அத்தகைய சிறப்பு
வாய்ந்தவர் நம் நம்பியாரூரர்.
எறிபத்த நாயனார்
-
ஊர்மதில் மூன்றட்ட வுத்தமற்கு
என்றோர் உயர்தவத்தோன்
தார்மலர் கொய்யா வருபவன்
தண்டின் மலர்பறித்த
ஊர்மலை மேற்கொள்ளும் பாகர்
உடல்துணி யாக்குமவன்
ஏர்மலி மாமதில் சூழ்கரு
வூரில் எறிபத்தனே.
தெளிவுரை : சோழ நாட்டில் கரூர் என்னும் பதியில் ஆனிலை என்னும் கோயிலில் எறிபத்தர்
தொண்டு செய்து கொண்டிருந்தார். ஒருநாள் சிவகாமியாண்டார் என்னும் முனிவர்
பூக்கொண்டு வந்தார். புகழ்ச் சோழனது மதங்கொண்ட பட்டத்து யானை பூக்கூடையைப்
பறித்து சிந்திச் சென்றது. உடனே எறிபத்தர் ஓடி வந்து யானையையும் பாகனையும் வெட்டி
வீழ்த்தினார். இறைவன் எழுந்தருளி யானையையும் பாகனையும் உயிர்பெறச் செய்தார்.
எறிபத்தர் சிவகணங்களுக்குத் தலைவராகும் நிலைமை பெற்றார்.
ஏனாதிநாத நாயனார்
-
பத்தனை ஏனாதி நாதனைப்
பார்நீ(டு) எயினைதன்னுள்
அத்தனைத் தன்னோ(டு) அமர்மலைந்
தான்நெற்றி நீறுகண்டு
கைத்தனி வாள்வீ(டு) ஒழிந்தவன்
கண்டிப்ப நின்றருளும்
நித்தனை ஈழக் குலதீபன்
என்பர்இந் நீணிலத்தே.
தெளிவுரை : சோழநாட்டில் எயினனூரில் ஈழர் குலச் சான்றோர் மரபில் ஏனாதிநாத நாயனார்
இருந்தார். அவர் சிவ வழிபாட்டிலும் திருநீற்று அன்பிலும் சிறந்து விளங்கினார்.
அவர்மீது பொறாமை கொண்டு அவரிடம் போரிட வந்த அதிசூரன் என்பவன் நெற்றியில் திருநீறு
இருப்பதைக் கண்டு வாளைக் கீழே எறிந்தார். வந்தவன் தன் பகையைத் தீர்த்துக்
கொண்டான். சிவபெருமான் உமாதேவியாரோடு காட்சி கொடுத்து நாயனார்க்கு அருள்
செய்தார்.
கண்ணப்ப நாயனார்
-
நிலத்தில் திகழ்திருக் காளத்தி
யார்திரு நெற்றியின்மேல்
நலத்தில் பொழிதரு கண்ணிற்
குருதிகண் டுள்நடுங்கி
வலத்தில் கடுங்கணை யால்தன்
மலர்க்கண் இடந்தப்பினான்
குலத்தில் கிராதன்நம் கண்ணப்ப
னாம்என்று கூறுவரே.
தெளிவுரை : பூமியில் சிறந்து விளங்கும் திருக்காளத்தி நாதரின் வலக் கண்ணில்
குருதி பெருகுவதைக் கண்ட கண்ணப்பர் நடுநடுங்கி தன் வலக்கண்ணை அம்பால் தோண்டி
எடுத்து இறைவனின் கண்ணில் அப்பினார். அவர் வேடர் குலத்தைச் சேர்ந்தவர். அவ்வாறே
இடது கண்ணையும் தோண்டி எடுக்க முற்பட்டபோது திருக்காளத்தியப்பர் திண்ணனாரின்
கையைத் தம் கையால் பிடித்துக் கொண்டு, நில்லு கண்ணப்ப, என் வலத்தில் மாறிலாய்
நிற்க என்று அருள் புரிந்தார்.
குங்குலியக்கலய நாயனார்
-
ஏய்ந்த கயிறுதன் கண்டத்திற்
பூட்டி எழிற்பனந்தாள்
சாய்ந்த சிவன்நிலைத் தான்என்பர்
காதலி தாலிகொடுத்(து)
ஆய்ந்தநற் குங்குலி யங்கொண்(டு)
அனற்புகை காலனைமுன்
காய்ந்த அரற்(கு)இட்ட தென்கட
வூரில் கலயனையே.
தெளிவுரை : சோழ நாட்டில் திருக்கடவூரில் அந்தணர் குலத்தில் கலயனார் தோன்றினார்.
சிவபெருமானுக்கு குங்குலியதூபம் போடும் பணியில் ஈடுபட்டார். திருப்பனந்தாளில்
பெருமான் சாய்ந்திருக்க, இவர் தன் கழுத்தில் கயிறு கட்டி சிவலிங்கத்தை இழுத்து
நிமிர்த்தினார். வீட்டுக்கு வேண்டிய சாமான் வாங்கிவரத் தன் மனைவியார் கொடுத்த
தாலியைக் கொடுத்து குங்குலியம் வாங்கிக் கொண்டார். நீண்ட நாள் வாழ்ந்து இறைவன்
திருவடி நீழலை அடைந்தார்.
மானக்கஞ்சாற நாயனார்
-
கலச முலைக்கன்னி காதற்
புதல்வி கமழ்குழலை
நலசெய் தவத்தவன் பஞ்ச
வடிக்கிவை நல்கெனலும்
அலசும் எனக்கரு தாதவன்
கூந்தல் அரிந்தளித்தான்
மலைசெய் மதிற்கஞ்சை மானக்கஞ்
சாறன் எனும்வள்ளலே.
தெளிவுரை : கஞ்சாறூரில் வேளாளர் குலத்தில் தோன்றிய மானக்கஞ்சாறனார் சேனாதிபதியாக
இருந்தார். தன் மகளின் திருமணத்தின்போது அகச்சமய சிவனடியார் உருவில் ஒருவர் வந்து
மகளின் கூந்தலைப் பூணூலாக (பஞ்சவடியாக)ச் செய்து கொள்ளக் கேட்டார். சிறிதும்
தாமதியாமல் நாயனார் தன் மகள் கூந்தலை அரித்து கொடுத்தார். அடியார் மறைந்தார்.
இறைவன் காட்சியளித்தார். மகளின் கூந்தல் முன்போல் வளர்ந்தது.
அரிவாட்டாய நாயனார்
-
வள்ளற் பிராற்(கு)அமு தேந்தி
வருவோன் உகலும்இங்கே
வெள்ளச் சடையாய் அமுதுசெய்
யாவிடில் என்தலையைத்
தள்ளத் தகுமென்று வாட்பூட்
டியதடங் கையினன்காண்
அள்ளற் பழனக் கணமங்
கலத்(து)அரி வாட்டாயனே.
தெளிவுரை : சோழ நாட்டிலுள்ள கணமங்கலம் என்னும் திருப்பதியில் வேளாளர் குலத்தில்
தோன்றியவர் தாய நாயனார். அவர் நாள்தோறும் இறைவனுக்கு அமுது படைத்து வந்தார்.
வழியில் மாதவர் விழுந்துவிட்டார். அவரை அணைக்கையில் எல்லாம் நிலவெடிப்பில் சிந்தி
வீழ்ந்துவிட்டன. இறைவனுக்கு அமுதூட்ட இயலாமையை எண்ணித் தம்முடைய கழுத்தில்
அரிவாளை வைத்து அரியலுற்றார். வெடிப்பிலிருந்து பெருமான் கை வெளி வந்து நாயனாரின்
கையைப் பிடித்துக் கொண்டது.
ஆனாய நாயனார்
-
தாயவன் யாவுக்கும் தாழ்சடை
மேல்தனித் திங்கள்வைத்த
தூயவன் பாதம் தொடர்ந்துதொல்
சீர்துளை யால்பரவும்
வேயவன் மேல்மழ நாட்டு
விரிபுனல் மங்கலக்கோன்
ஆயவன் ஆனாயன் என்னை
உவந்தாண்(டு) அருளினனே.
தெளிவுரை : மழநாட்டில் திருமங்கலம் என்னும் ஊரில் ஆயர் குலத்தில் ஆனாய நாயனார்
தோன்றினார். திருநீற்று அன்புடன் சிவபெருமானை வணங்கியதோடு ஆனிரை மேய்த்தலைச்
செய்து வந்தார். ஒருநாள் சிவ பெருமானை வேய்ங்குழலில் இசைத்தார். இறைவன் காட்சி
கொடுத்தார்.
சுந்தர மூர்த்தி நாயனார்
-
அருள்துறை அத்தற்(கு) அடிமைப்பட்
டேன்இனி அல்லன்என்னும்
பொருள்துறை யாவதென் னேஎன்ன
வல்லவன் பூங்குவளை
இருள்துறை நீர்வயல் நாவற்
பதிக்கும் பிரான்அடைந்தோர்
மருள்துறை நீக்கிநல் வான்வழி
காட்டிட வல்லவனே.
தெளிவுரை : மூல ஓலையின்படி சுந்தரர் அம் முதியவர்க்கு அடிமையாக ஏவல் செய்ய
வேண்டுமென்று திருவெண்ணெய்நல்லூர் சபையினர் முடிவு செய்தனர். நீர் எவ்வூரினர்?
என்று கேட்க, வேதியர் நம்பியாரூரரையும் பிறரையும் அழைத்துச் சென்று
கோயிலுக்குள்ளே சென்று மறைந்தனர். சிவபெருமான் இடப வாகனத்தின்மேல் எழுந்தருளி
ஆரூரருக்குக் காட்சி தந்து, நாமே உம்மைத் தடுத்தாட் கொண்டோம். நீ வன்தொண்டன் என்ற
பெயருக்கு உரியாய் என்று அருளினார்.
மூர்த்தி நாயனார்
-
அவந்திரி குண்(டு)அமண் ஆவதின்
மாள்வனென்(று) அன்றாலவாய்ச்
சிவன்திரு மேனிக்குச் செஞ்சந்
தனமாச் செழுமுழங்கை
உவந்தொளிர் பாறையில் தேய்த்துல(கு)
ஆண்டஒண் மூர்த்திதன்னூர்
நிவந்தபொன் மாட மதுரா
புரியென்னும் நீள்பதியே.
தெளிவுரை : மதுரையில் வணிகர் குலத்தில் மூர்த்தி நாயனார் தோன்றினார்.
சிவபெருமானுக்குச் சந்தனக் காப்பிடும் பணியைச் செய்து வந்தார். படையெடுத்து வந்த
சமண மன்னன் சூழ்ச்சியால் சந்தனக் கட்டை கிடைக்கவில்லை. இவர் தன் கையையே கல்லில்
தேய்த்தார். சிவனருளால் சமண மன்னன் மாண்டான். மூர்த்தியார் அரசு செலுத்தி பின்னர்
இறைவன் திருவடி சேர்ந்தார்.
முருக நாயனார்
-
பதிகம் திகழ்தரு பஞ்சாக்
கரம்பயில் நாவினன்சீர்
மதியம் சடையால் கலர்தொட்(டு)
அணிபவன் யான்மகிழ்ந்து
துதியம் கழற்சண்பை நாதற்குத்
தோழன்வன் தொண்டன்அம்பொன்
அதிகம் பெறும்புக லூர்முரு
கன்எனும் அந்தணனே.
தெளிவுரை : திருப்புகலூரில் முருக நாயனார் அந்தணர் குலத்தில் தோன்றினார்.
இறைவனுக்கு மலர் மாலைகள் கட்டித் தரும் பணியைச் செய்து வந்தார்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் முதலியோர் அவருடன் தங்கியிருந்தனர். சம்பந்தர்
திருமணத்தில் கலந்து கொண்டு சோதியில் கலந்துவிட்டார். வன்தொண்டன் பொன் அதிகம்
பெறும் என்றது புகலூருக்கு விசேடம்.
உருத்திர பசுபதி நாயனார்
-
அந்தாழ் புனல்தன்னில் அல்லும்
பகலும்நின்(று) ஆதரத்தால்
உந்தாத அன்பொ(டு) உருத்திரஞ்
சொல்லிக் கருத்தமைந்த
பைந்தார் உருத்திர பசுபதி
தன்னற் பதிவயற்கே
நந்தார் திருத்தலை யூர்என்(று)
உரைப்பர்இந் நானிலத்தே.
தெளிவுரை : திருத்தலையூரில் பசுபதி என்னும் அந்தணர் ஒருவர் இருந்தார்.
சிவபெருமானுக்குப் பரம பிரீதியான ருத்திர மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தார்.
நாள்தோறும் காலையிலிருந்து மாலை வரை குளத்தில் கழுத்தளவு நீரில் நின்று ஜபம்
செய்வார். இறைவன் அவருக்குக் காட்சியளித்துத் தம்மிடத்துக்கு அழைத்துக் கொண்டார்.
திருநாளைப் போவார் நாயனார்
-
நாவார் புகழ்த்தில்லை அம்பலத்
தான்அருள் பெற்றுநாளைப்
போவான் அவனாம் புறத்திருத்
தொண்டன்தன் புன்புலைபோய்
மூவா யிரவர்கை கூப்ப
முனியா அவன்பதிதான்
மாவார் பொழில்திகழ் ஆதனூர்
என்பர்இம் மண்டலத்தே.
தெளிவுரை : ஆதனூர் புலைச்சேரியில் நந்தனார் வாழ்ந்து வந்தார். சிவத்தொண்டு செய்து
வந்தார். தில்லைக்குச் சென்று பொன்னம்பலவாணனைத் தரிசிக்க வேண்டுமென்று ஆவல்
கொண்டார். நாளைக்குப் போவேன் என்று அடிக்கடி அவர் சொல்லி வந்ததால், அனைவரும்
அவரைத் திருநாளைப் போவார் என்றே அழைத்தனர். தில்லை சென்று தீக்குழியில் இறங்கிக்
கரை ஏறினார். தில்லை மூவாயிரவர் அவரைக் கைகூப்பி வணங்கினர். ஐயனின் ஆனந்தக்
கூத்தில் நந்தனார் ஐக்கியமாகிவிட்டார்.
திருக்குறிப்புத் தொண்ட நாயனார்
-
மண்டும் புனற்சடை யான்தமர்
தூசெற்றி வாட்டும்வகை
விண்டு மழைமுகில் வீடா
தொழியின்யான் வீவன்என்னா
முண்டம் படர்பாறை முட்டும்
எழிலார் திருக்குறிப்புத்
தொண்டன் குலங்கச்சி ஏகா
லியர்தங்கள் தொல்குலமே.
தெளிவுரை : சிறப்பு வாய்ந்த காஞ்சி மாநகரில் ஏகாலியர் குலத்தில் சிவபக்தர் ஒருவர்
இருந்தார். அடியார்களின் ஆடைகளை நன்றாகக் துவைத்து உலர்த்திக் கொடுத்து வந்தார்.
அதனால் அவரைத் திருக்குறிப்புத் தொண்டர் என்றே எல்லாரும் அழைக்கலாயினர். இறைவன்
அவரைச் சோதிக்க விரும்பி, ஒரு மழைநாளில் தன் ஆடையை அவரிடம் துவைக்கக் கொடுத்தார்.
குறித்த நேரத்தில் ஆடையைக் கொடுக்க முடியாமையால் துணி தோய்க்கும் பாறையில் தலையை
மோதிக் கொண்டு உயிரை விட முயன்றார். இறைவன் காட்சி அளித்து அவருக்குக் கைலாய
வாழ்வு அளித்தார்.
சண்டேசுர நாயனார்
-
குலமே றியசேய்ஞ லூரில்
குரிசில் குரைகடல்சூழ்
தலமே றியவிறல் சண்டிகண்
டீர்தந்தை தாள்இரண்டும்
வலமே றியமழு வால்எறிந்(து)
ஈசன் மணிமுடிமேல்
நலமே றியபால் சொரிந்தலர்
சூட்டிய நன்னிதியே.
தெளிவுரை : சேய்ஞலூரில் (சேந்தனூரில்) வேதியர் குலத்தில் விசாரசர்மர் பிறந்தார்.
அவர் மாடு கன்றுகளை மேய்த்து வந்தார். அங்கிருந்த சிவலிங்கத்திற்குப் பாலை
அபிஷேகம் செய்து வந்தார். இதைக் கண்டித்த தன் தந்தையின் இரண்டு கால்களையும்
வெட்டிவிட்டார். எம்பெருமான் தோன்றி விசாரசர்மரை ஆட்கொண்டார். தந்தையின்
வெட்டுண்ட கால்கள் முன்போல் வளர்ந்தன. இவ்வாறு விசார சர்மர் சண்டேசுவர நாயனாராகப்
போற்றப் படுகிறார். சிவன் கோயில்களில் சுவாமிக்கு இடப் புறத்தில் இவருடைய சன்னதி
இருக்கும்.
சுந்தரமூர்த்தி நாயனார்
-
நிதியார் துருத்திதென் வேள்விக்
குடியாய் நினைமறந்த
மதியேற்(கு) அறிகுறி வைத்த
புகர்பின்னை மாற்றிடென்று
துதியா அருள்சொன்ன வாறறி
வாரிடைப் பெற்றவன்காண்
நதியார் புனல்வயல் நாவலர்
கோன்என்னும் நற்றவனே.
தெளிவுரை : சங்கிலியாரிடம் சொல்லாமல் திருவொற்றியூரிலிருந்து சுந்தரர்
புறப்பட்டு, திருவாரூரை நோக்கி நடந்தார். கண் பார்வையை இழந்து பல தொல்லைகளுக்கு
ஆளானார். வழியில் திருத் துருத்தியை (குத்தாலத்தை) அடைந்தார். தம்மை வருத்தி
வரும் பிணியைப் போக்கி அருள வேண்டும் எனக் கெஞ்சினார். ஆலயத்தின் வடபாலுள்ள
தீர்த்தத்தில் நீராடுமாறு இறைவன் தம் சோழனுக்கு அனுக்கிரகித்தார். சுந்தரரும்
அவ்வாறே திருக்குளத்தில் நீராடி எழுந்து இறைவனை வணங்கியபோது, அவர் உடலில்
ஏற்பட்டிருந்த தளர்ச்சி நீங்கப் பெற்று புதிய பொலிவுடன் விளங்கலானார்.
திருநாவுக்கரசு நாயனார்
-
நற்றவன் நல்லூர்ச் சிவன்திருப்
பாதம்தன் சென்னிவைக்கப்
பெற்றவன் மற்றிப் பிறப்பற
வீரட்டர் பெய்கழற்றாள்
உற்றவ னுற்ற விடம்அடை
யாரிட வொள்ளமுதாத்
துற்றவன் ஆமூரில் நாவுக்
கரசெனுந் தூமணியே.
தெளிவுரை : திருநாவுக்கரசர் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருவாரூரில் பிறந்தவர்.
இடையில் சமண சமயத்தில் சேர்ந்தார். பிறகு தமக்கையார் வேண்டிக் கொண்டபடி திருவதிகை
வீரட்டனத்திற்கு வந்து இறைவனை வணங்கிச் சைவரானார். சமணர்கள் கொடுத்த விஷத்தை
அமுதென உண்டார். சிவத் தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருநல்லூர் போய்ச்
சேர்ந்தார். பகவான் தமது திருவடியை அப்பரின் தலை மேலே வைத்து அருளினார்.
-
மணியினை மாமறைக் காட்டு
மருந்தினை வண்மொழியால்
திணியன நீள்கத வந்திறப்
பித்தன தெண்கடலிற்
பிணியன கன்மிதப் பித்தன
சைவப் பெருநெறிக்கே
அணியன நாவுக் கரையர்
பிரான்தன் அருந்தமிழே.
தெளிவுரை : திருநாவுக்கரசரும் ஞானசம்பந்தரும் திருமறைக் காட்டிற்குச்
(வேதாரண்யம்) சென்றனர். வேதங்கள் பூசித்த காலத்திலிருந்து அடைபட்டிருக்கும் கதவை
வாகீசர் பதிகம் பாடிப் திறந்தார். இருவரும் அவ்வாயில் வழியாகச் சென்று இறைவனை
வணங்கிக் களிகூர்ந்தனர். மன்னன் ஆணைப்படி சமணர்கள் நாவுக்கரசரைப் பாறையுடன்
பிணித்துக் கடலில் எறிந்தனர். சொற்றுணை வேதியன் என்னும் பதிகத்தைப் பாடினார்.
பாறை மிதக்கத் தொடங்கியது. அப்பர் கரை ஏறினார். அவருடைய தேவாரப் பாடல்கள் சைவ
சமயத்திற்கு அணி எனத் திகழ்கின்றன.
குலச்சிறை நாயனார்
-
அருந்தமிழ் ஆகரன் வாதில்
அமணைக் கழுநுதிமேல்
இருந்தமிழ் நாட்டிடை ஏற்றுவித்
தோன்எழிற் சங்கம்வைத்த
பெரும்தமிழ் மீனவன் தன்அதி
காரி பிரசம்மல்கு
குருந்தவிழ் சாரல் மணமேற்
குடிமன் குலச்சிறையே.
தெளிவுரை : மணமேற் குடியில் தோன்றியவர் குலச்சிறை நாயனார். பாண்டிய மன்னன்
நெடுமாறனுக்கு அமைச்சர். பாண்டிய நாட்டில் சமண மதம் தலை தூக்கி நின்றது.
திருஞானசம்பந்தரை இவர் அழைத்து வந்து, அவர்களை வாதில் வென்று கழுவேறச் செய்தார்.
பின்னர் சைவ சமயம் அங்கு தழைத்து வளர்ந்தது.
பெருமிழலைக்குறும்ப நாயனார்
-
சிறைநன் புனல்திரு நாவலூர்
ஆளி செழுங்கயிலைக்(கு)
இறைநன் கழல்நாளை எய்தும்
இவனருள் போற்றஇன்றே
பிறைநன் முடிய அடியடை
வேன்என்(று) உடல்பிரிந்தான்
பிறைநன் மலர்த்தார் மிழலைக்
குறும்பன் எனும்நம்பியே.
தெளிவுரை : பெருமிழலை என்ற ஊரில் குறும்பர் என்னும் சிவபக்தர் வாழ்ந்துவந்தார்.
சுந்தரரை என்றும் பணிந்து போற்றி வந்தார். அதனால் சித்திகள் பலவும் கைவரப்
பெற்றார். சுந்தரர் திருவஞ்சைக் களத்திலிருந்து கைலாயம் செல்ல இருப்பதைத் தமது
யோக பலத்தால் அறிந்து, சமாதியில் அமர்ந்தார். சுந்தரருக்கு முன்பே இவர் கயிலை
போய்ச் சேர்ந்தார்.
காரைக்கால் அம்மையார்
-
நம்பன் திருமலை நான்மிதி
யேன்என்று தாள்இரண்டும்
உம்பர் மிசைத்தலை யால்நடந்(து)
ஏற உமைநகலும்
செம்பொன் உருவன்என் அம்மை
எனப்பெற் றவள்செழுந்தேன்
கொம்பின் உருகாரைக் காலினின்
மேய குலதனமே.
தெளிவுரை : காரைக்கால் அம்மையார் கருவிலே திருவுடையார். கனிந்த திருவருள்
உடையார். நாவிலே தமிழுடையார். நற்றவத்தின் திறமுடையார். கயிலை மலையைக் காலால்
மிதிக்கலாகாது என்று தலையால் நடந்து சென்றார். இதைக் கண்டு உமாதேவியார்
நகைத்தார். அம்மையே என்றழைக்கும் பேறு பெறாத இறைவன் புனிதவதியாரை நோக்கி, அம்மையே
வருக என்றனன். அவர் வேண்டிய வரங்களை உவந்து அளித்தனன்.
அப்பூதிஅடிகள் நாயனார்
-
தனமா வதுதிரு நாவுக்(கு)
அரசின் சரணம்என்னா
மனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத்(து)
ஆங்கவன் வண்தமிழ்க்கே
இனமாத் தனது பெயரிடப்
பெற்றவன் எங்கள்பிரான்
அன்னமார் வயல்திங்கள் ஊரினில்
வேதியன் அப்பூதியே.
தெளிவுரை : திங்களூரில் வேதியர் குலத்தில் பிறந்தவர் அப்பூதியடிகள்.
திருநாவுக்கரசரையே தன் வழிபடு தெய்வமாகக் கொண்டு அவர் பேரிலேயே தண்ணீர்ப் பந்தல்
முதலியவற்றை வைத்து நடத்தினார். தனது பிள்ளைகளுக்கும் அவர் பெயரையே
வைத்திருந்தார். அவரை வணங்கியே அப்பூதியபடிகள் நற்கதி பெற்றார்.
திருநீலநக்க நாயனார்
-
பூதிப் புயத்தர் புயத்திற்
சிலந்தி புகலும் அஞ்சி
ஊதித் துமிந்த மனைவியை
நீப்பஉப் பாலவெல்லாம்
பேதித்து எழுந்தன காணென்று
பிஞ்ஞகன் காட்டுமவன்
நீதித் திகழ்சாத்தை நீலநக்
கன்எனும் வேதியனே.
தெளிவுரை : சோழ நாட்டில் சாத்தமங்கை என்னும் ஊரில் திருநீல நக்கர் என்ற வேதியர்
வாழ்ந்து வந்தார். கோயிலுக்கு இவரும் இவரது மனைவியாரும் சென்று சிவலிங்கத்திற்கு
அபிஷேகம் செய்யும்போது, சிவ லிங்கத்தின்மீது விழுந்த சிலந்தியை மனைவியார் ஊதி
அப்புறப்படுத்தினார். அது பெரும் அபசாரம் என்று மனைவியைக் கோயிலேயே விட்டுவிட்டு
வீடு திரும்பினார். பிறகு இவர் கனவில் இறைவன் தோன்றி சமாதானப் படுத்தினார்.
நமிநந்தியடிகள் நாயனார்
-
வேத மறிக்கரத் தாரூர்
அரற்கு விளக்குநெய்யைத்
தீது செறிஅமண் கையர்அட்
டாவிடத்(து) எண்புனலால்
ஏத முறுக அருகரென்(று)
அன்று விளக்கெரித்தான்
நாதன் எழில்ஏமப் பேறூர்
அதிபன் நமிநந்தியே.
தெளிவுரை : சோழ நாட்டில் ஏமப்பேறு என்ற ஊரில் நமிநந்தி அடிகள் என்ற அந்தணர்
வாழ்ந்து வந்தார். அவர் நாள்தோறும் திருவாரூருக்குச் சென்று இறைவனை வழிபட்டு
வருவது வழக்கம். ஒரு நாள் விளக்கிற்கு எண்ணெய் தர சமணர் மறுத்துவிட நாயனார்
குளத்து நீரை விட்டு விளக்கு எரித்தார். அத்தகைய சிறந்த சிவனடியாரை அப்பர்
பெருமான் தம் பாடல் ஒன்றில் சிறப்பித்துள்ளார்.
சுந்தரமூர்த்தி நாயனார்
-
நந்திக்கும் நம்பெரு மாற்குநல்
ஆரூரில் நாயகற்குப்
பந்திப் பரியன செந்தமிழ்
பாடிப் படர்புனலிற்
சிந்திப் பரியன சேவடி
பெற்றவன் சேவடியே
வந்திப் பவன்பெயர் வன்தொண்டன்
என்பர்இவ் வையகத்தே.
தெளிவுரை : சிவபெருமானைக் குறித்து செய்யுட் குற்றம் இல்லாத தேவாரப் பாடல்களைப்
பாடி இறைவனை வழிபட்ட மெய் அன்பரை வன்தொண்டர் என்று வையத்தோர் கூறுகின்றனர்.
திருமுதுகுன்றத்தில் இறைவன் அளித்த பன்னீராயிரம் பொன்னை மணிமுத்தாற்றில் இட்டு,
திருவாரூர் சென்று கமலாலயத்தில் மூழ்கி அப்பொன்னை எடுத்த மெய்த் தொண்டர் அல்லவா
அவர்.
திரு ஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
-
வையம் மகிழயாம் வாழ
அமணர் வலிதொலைய
ஐயன் பிரம புரத்தரற்(கு)
அம்மென் குதலைச்செவ்வாய்
பைய மிழற்றும் பருவத்துப்
பாடப் பருப்பதத்தின்
தையல் அருள்பெற் றனன்என்பர்
ஞானசம் பந்தனையே.
தெளிவுரை : திருஞானசம்பந்தர் சிறு வயதிலேயே ஞானத்தின் திருவுருவாக வாழ்ந்தவர்.
தேவாரத்தில் முதல் மூன்று திருமுறைகளையும் பாடியவர். இவர் பிறந்த ஊர் சீர்காழி.
மூன்று வயதில் உமாதேவியால் ஞானப்பால் ஊட்டப்பெற்றுத் தெய்வப் பாடல்களாகிய
தேவாரத்தைப் பாடத் தொடங்கியவர். சமணர்களால் சிவநெறிக்கு ஏற்பட்ட இடரை அகற்றிச்
சைவம் தழைக்க உதவியவர்.
-
பந்தார் விரலியர் வேள்செங்கட்
சோழன் முருகன்நல்ல
சந்தார் அகலத்து நீலநக்
கன்பெயர் தான்மொழிந்து
கொந்தார் சடையர் பதிகத்தில்
இட்டடி யேன்கொடுத்த
அந்தாதி கொண்ட பிரான்அருட்
காழியர் கொற்றவனே.
தெளிவுரை : மங்கையர்க்கரசியார், குலச்சிறை நாயனார், கோச்செங்கட் சோழ நாயனார்,
முருக நாயனார், திருநீல நக்க நாயனார் இவர்கள் சம்பந்தரால் பாடப் பெறும் பேறு
பெற்றவர்கள். திருத்தொண்டர் திருஅந்தாதியை ஏற்றுக்கொண்ட பிரான் சீர்காழியில்
தோன்றிய திருஞானசம்பந்தரே ஆவார்.
ஏயர் கோன் கலிக்காம நாயனார்
-
கொற்றத் திறல்எந்தை தந்தைதன்
தந்தைஎங் கூட்டமெல்லாம்
தெற்றச் சடையாய் நினதடி
யேம்திகழ் வன்றொண்டனே
மற்றிப் பிணிதவிர்ப் பான்என்(று)
உடைவாள் உருவிஅந்நோய்
செற்றுத் தவிர்கலிக் காமன்
குடிஏயர் சீர்க்குடியே.
தெளிவுரை : சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானைப் பரவையாரிடம் தூது அனுப்பியதைத்
தவறாகக் கொண்டு, கலிக்காமர் அவரிடம் சினம் கொண்டிருந்தார். ஆனால், சிவபெருமான்
கலிக்காமரின் சூலை நோய் சுந்தரரால்தான் தீரும் என்றார். அதை விரும்பாத கலிக்காமர்
உடை வாளால் தன் வயிற்றைக் கிழித்துக் கொண்டார். உயிர் போய்விட்டது. சுந்தரர்
வந்து உடைவாளைப் பற்றினார். கலிக்காமர் உயிர் பெற்றெழுந்தார். இருவரும்
நண்பராயினர். அவர் சோழ அரசனுக்குச் சேனாதிபதியாகப் பணிபுரியும் ஏயர்கோன் குடியைச்
சேர்ந்தவர்.
திருமூல நாயனார்
-
குடிமன்னு சாத்தனூர்க் கோக்குலம்
மேய்ப்போன் குரம்பைபுக்கு
முடிமன்னு கூனற் பிறையாளன்
தன்னை முழுத்தமிழின்
படிமன்னு வேதத்தின் சொற்படி
யேபர விட்டென்உச்சி
அடிமன்ன வைத்த பிரான்மூலன்
ஆகின்ற அங்கணனே.
தெளிவுரை : நந்திகேஸ்வரரின் அருள் பெற்ற யோகிகளுள் ஒருவர் தென்னாடு நோக்கி
வந்தார். சாத்தனூரைச் சேர்ந்த மூலன் என்னும் இடையன் இறந்து கிடந்தான். அவன்
உடலில் இவர் புகுந்து (பரகாயம் செய்து-கூடுவிட்டுக் கூடு பாய்தல்) சிவபெருமானைக்
குறித்து 3000 பாடல்களைக் கொண்ட திருமந்திரத்தைப் பாடினார். இவர் யோகி,
எம்பெருமானைப் பஞ்சாட்சரத்தால் துதித்தார்.
தண்டியடிகள் நாயனார்
-
கண்ணார் மணிஒன்றும் இன்றிக்
கயிறு பிடித்தரற்குத்
தண்ணார் புனல்தடம் தொட்டலும்
தன்னை நகும்அமணர்
கண்ணாங்(கு) இழப்ப அமணர்
கலக்கங்கண்(டு) அம்மலர்க்கண்
விண்ணா யகனிடைப் பெற்றவன்
ஆரூர் விறல்தண்டியே.
தெளிவுரை : தண்டியடிகள் திருவாரூரில் பிறந்தவர். அவர் பிறவிக் குருடர்.
திருக்குளம் தூர்ந்து சிறியதாகியது. குளத்தின் நடுவில் ஒரு தறி நட்டு அதோடு ஒரு
கயிற்றைக் கட்டி அதைப் பிடித்துக் கொண்டே மண்ணைத் தோண்டி எடுத்தார். இதைக் கேலி
செய்த சமணர்களின் கண்கள் குருடாயின. இறைவன் அருளால் இவர் கண் பார்வை பெற்றார்.
பலநாள் வாழ்ந்து பின்னர் தியாகேசர் பாதார விந்தங்களை அடைந்தார்.
மூர்க்க நாயனார்
-
தண்டலை சூழ்திரு வேற்காட்டூர்
மன்னன் தருகவற்றால்
கொண்டவல் லாயம்வன் சூதரை
வென்றுமுன் கொண்டபொருள்
முண்டநன் னீற்றன் அடியவர்க்(கு)
ஈபவன் மூர்க்கனென்பர்
நண்டலை நீரொண் குடந்தையில்
மேவுநற் சூதனையே.
தெளிவுரை : தொண்டை நாட்டில் திருவேற்காட்டில் வேளாளர் குலத்தில் மூர்க்க நாயனார்
தோன்றினார். அடியார்களுக்கு அமுதளித்து வறுமையுற்றார். சூதின் மூலம் பொருள் தேட
கும்பகோணம் சென்றார். சூதாட மறுத்தாரைச் சுரிகை உருவிக் குத்தி மூர்க்கர் என்னும்
பெயர் பெற்றார். இறுதியில் சிவபெருமான் திருவடியில் சேர்ந்தார்.
சோமாசி மாற நாயனார்
-
சூதப் பொழில் அம்பர் அந்தணன்
சோமாசி மாறன்என்பான்
வேதப் பொருள்அஞ் செழுத்தும்
விளம்பியல் லால்மொழியான்
நீதிப் பரன்மன்னு நித்த
நியமன் பரவையென்னும்
மாதுக்குக் காந்தன்வன் தொண்டன்
தனக்கு மகிழ்துணையே.
தெளிவுரை : சோழ நாட்டில் திருஅம்பர் என்ற ஊரில் அந்தணர் குலத்தில் சோமாசி மாறர்
தோன்றினார். எத்தன்மையராயினும் ஈசனுக்கு அன்பர்தாம் தமக்கு உதவி செய்பவர் என்ற
கொள்கையுடையவர். அவர் திருவாரூருக்குச் சென்று அங்கிருந்த சுந்தரமூர்த்தி
சுவாமிகளுக்குத் தொண்டராக இருந்து சிவபெருமான் திருவடியை அடைந்தார். அவர் எந்த
நேரமும் பஞ்சாட்சரத்தை ஓதுபவர்.
சுந்தரமூர்த்தி நாயனார்
-
துணையும் அளவும்இல் லாதவன்
தன்னரு ளேதுணையாக்
கணையும் கதிர்நெடு வேலும்
கறுத்த கயலிணையும்
பிணையும் நிகர்த்த சங்கிலி
பேரமைத் தோள்இரண்டும்
அணையும் அவன்திரு ஆரூரன்
ஆகின்ற அற்புதனே.
தெளிவுரை : திருவொற்றியூரில் அநிந்திதையார், சங்கிலியார் என்னும் பெயருடன்
அவதாரம் செய்திருந்தார். அழகும் நற்குணங்களும் பொருந்தியவராய் மணப்பருவம்
எய்தியிருந்தார். சங்கிலியார் கன்னி மாடத்திலிருந்துகொண்டு இறைவனுக்கு மலர்த்
தொண்டு செய்து வந்தார். சுந்தரர் திருவொற்றியூர் வந்தபோது சங்கிலியாரைக்
கண்ணுற்றார். காதல் கொண்டார். இறையருளால் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
சாக்கிய நாயனார்
-
தகடன ஆடையன் சாக்கியன்
மாக்கற் றடவரையன்
மகடனந் தாக்கக் குழைந்ததிண்
தோளர்வண் கம்பர்செம்பொன்
திகழ்தரு மேனியிற் செங்கல்
எறிந்து சிவபுரத்துப்
புகழ்தரப் புக்கவன் ஊர்சங்க
மங்கை புவனியிலே.
தெளிவுரை : தொண்டை நாட்டைச் சேர்ந்த திருச்சங்க மங்கை என்னும் ஊரில் சாக்கிய
நாயனார் வேளாளர் குலத்தில் தோன்றினார். பௌத்த மதத்தில் ஞானம் பெற முயன்று பிறகு
சிவநெறியே சிறந்ததெனக் கண்டார். காஞ்சிபுரத்தில் ஏகாம்பர நாதரைத் தொழுதார். தகடு
போன்ற பௌத்தர்க்குரிய ஆடையை அணிந்தவர். அதை மாற்றிக் கொள்ளாமல் சிவபெருமானைக்
கல்லால் எறிந்து வழிபட்டார். சைவ சமயத்தில் அவருக்கிருந்த பற்றின் காரணமாக
இறைவனடி சேர்ந்தார்.
சிறப்புலி நாயனார்
-
புவனியிற் பூதியும் சாதன
மும்பொலி வார்ந்துவந்த
தவநிய மற்குச் சிறப்புச்செய்
தத்துவ காரணனாம்
அவனியில் கீர்த்தித்தென் னாக்கூர்
அதிபன் அருமறையோன்
சிவனிய மந்தலை நின்றதொல்
சீர்நஞ் சிறப்புலியே.
தெளிவுரை : சோழ நாட்டில் வேதியர் குலத்தில் தோன்றியவர் சிறப்புலி நாயனார். அவர்
பிறந்த ஊர் ஆக்கூர். அவர் சிவனடியார்களிடம் மிக்க அன்பு கொண்டிருந்தார். அவர்களை
வரவேற்று அமுதளிப்பார். பஞ்சாட் சரத்தை நாள்தோறும் ஓதுவார். இவ்வாறு பன்னாள்
தொண்டு செய்து, ஈசன் திருவடிகளைச் சேர்ந்தார்.
சிறுத் தொண்ட நாயனார்
-
புலியின் அதளுடைப் புண்ணியற்(கு)
இன்னமு தாத்தனதோர்
ஒலியின் சதங்கைக் குதலைப்
புதல்வன் உடல்துணித்துக்
கலியின் வலிகெடுத்(து) ஓங்கும்
புகழ்ச்சிறுத் தொண்டன்கண்டீர்
மலியும் பொழில்ஒண்செங் காட்டம்
குடியவர் மன்னவனே.
தெளிவுரை : சோழவள நாட்டிலுள்ள திருச் செங்காட்டங்குடியில் சிறுத்தொண்டர்
பிறந்தார். இவரது இயற்பெயர் பரஞ்சோதி. சிறுத்தொண்டர் சிவனடியார்களை உண்பிக்கும்
தம் கொள்கையை நிறைவேற்றும் பொருட்டு, வயிரவர் பணித்தபடி, தன் அருமை மைந்தனையே
வாளால் அரிந்து கறி சமைத்தார். வெற்றியும் கண்டார். இறைவன் இதைக் கண்டு
அதிசயித்து மைந்தனை உயிர் பெற்றெழச் செய்ததோடு, குடும்பத்தோடு தன் திருவடி நீழலை
அடையுமாறும் அருள் பாலித்தார்.
சேரமான் பெருமாள் நாயனார்
-
மன்னர் பிரானெதிர் வண்ணா
னுடலுவ ரூறிநீறார்
தன்னர் பிரான்தமர் போல
வருதலுந் தான்வணங்க
என்னர் பிரானடி வண்ணா
னெனவடிச் சேரனென்னுந்
தென்னர் பிரான்கழ றிற்றறி
வானெனும் சேரலனே.
தெளிவுரை : இவரது இயற்பெயர் பெருமாக் கோதையார். சேரமன்னர், இறைவன் அருளால் பிறர்
கழறும் சொற்களை அறியும் ஆற்றல் பெற்றிருந்தமையால் கழறிற்றறிவார் என்று இவரை
அழைக்கலாயினர். சிவபெருமானிடம் பேரன்பு கொண்டவர். வண்ணான் ஒருவன் எதிரே வந்தான்.
மழையினால் கரைந்த உவர்மண் அவன் உடம்பில் வழிந்து வெளுத்திருந்தது. அதைத் திருநீறு
என்று மன்னர் நினைத்து அவனைச் சிவனடியாராகப் பாவித்து வணங்கினார். அவன்
நடுநடுங்கி, அரசே அடியேன் வண்ணான் அன்றோ! என்றான்.
-
சேரற்குத் தென்னா வலர்பெரு
மாற்குச் சிவனளித்த
வீரக் கடகரி முன்புதன்
பந்தி யிவுளிவைத்த
வீரற்கு வென்றிக் கருப்புவில்
வீரனை வெற்றிகொண்ட
சூரற் கெனதுள்ளம் நன்றுசெய்
தாயின்று தொண்டுபட்டே.
தெளிவுரை : கயிலைக்கு வருமாறு சிவபெருமான் சுந்தரர்க்கு வெள்ளானையை அனுப்பி
இருந்தார். அதை அறிந்த சேரமான் குதிரை மீதேறி, ஆகாயமார்க்கமாகச் சென்று.
சுந்தரர்க்கு முன்னதாகக் கயிலாயத்தை அடைந்தார். அத்தகைய சிறந்த சிவனடியாராகிய
சேரமான்பெருமாள் நாயனாரை என் உள்ளம் பிரார்த்திக்கிறது.
கணநாத நாயனார்
-
தொண்டரை யாக்கி யவரவர்க்
கேற்ற தொழில்கள்செய்வித்
தண்டர்தங் கோனக் கணத்துக்கு
நாயகம் பெற்றவன்காண்
கொண்டல்கொண் டேறிய மின்னுக்குக்
கோல மடல்கள்தொறும்
கண்டல்வெண் சோறளிக் குங்கடல்
காழிக் கணநாதனே.
தெளிவுரை : சீர்காழியில் மறையவர் குலத்தில் தோன்றியவர் கணநாதர். சீர்காழிப்
பெருமானுக்குத் தாம் திருத்தொண்டு செய்ததோடு அங்குச் சென்றவர்களுக்கும் அத்
தொண்டுகளில் பயிற்சி கொடுத்து வந்தார். ஞானசம்பந்தப் பெருமானின் கழல்களையும்
வழிபட்டுக் கயிலையில் கணநாதராகும் பேறு பெற்றார்.
கூற்றுவ நாயனார்
-
நாதன் திருவடி யேமுடி
யாகக் கவித்துநல்ல
போதங் கருத்திற் பொறித்தமை
யாலது கைகொடுப்ப
ஒதந் தழுவிய ஞாலமெல்
லாமொரு கோலின்வைத்தான்
கோதை நெடுவேற் களப்பாள
னாகிய கூற்றுவனே.
தெளிவுரை : களந்தை என்னும் பதியில் குறுநில மன்னராக இருந்தவர் கூற்றுவ நாயனார்.
தில்லைவாழ் அந்தணர்களைத் தனக்கு முடிசூட்டக் கேட்டார். சோழர் குலத்து மன்னர்களைத்
தவிர மற்றையோருக்கு நாங்கள் முடிசூட்ட மாட்டோம் என்று அறிவித்துவிட்டனர். ஒருநாள்
கனவின்கண் அம்பலவாணர் தம் பாத மலரைத் தலையில் சூட்ட அதையே தாங்கினார். பல
தலங்களுக்கும் சென்று தொண்டுகள் புரிந்து வந்தார். முடிவில் அவர் எம்பெருமான்
திருவடிகளையே அடைந்தார்.
சுந்தரமூர்த்தி நாயனார்
-
கூற்றுக் கெவனோ புகல்திரு
வாரூரன் பொன்முடிமேல்
ஏற்றுத் தொடையலு மின்னடைக்
காயு மிடுதருமக்
கோற்றொத்து கூனனுங் கூன்போய்க்
குருடனுங் கண்பெற்றமை
சாற்றித் திரியும் பழமொழி
யாமித் தரணியிலே.
தெளிவுரை : சிறந்த தேவாரப் பாடல்களைப் பாடிய சுந்தரர் அடியார்களிடமிருந்து மலர்
மாலையும் தாம்பூலமும் பெற்று இன்புற்றிருந்தார். கோல் ஊன்றி நடந்த கூனன் கூன்
நிமிர்ந்து சென்றது போலவும், குருடனும் கண் பார்வை பெற்று மகிழ்ந்தது போலவும்
சுந்தரர் மகிழ்வோடு இவ்வுலகில் மகிழ்ச்சியுடன் இருந்தார்.
பொய்யடிமை இல்லாத புலவர்
-
தரணியில் பொய்ம்மை இலாத்தமிழ்ச்
சங்கம் அதில்கபிலர்
பரணர்நக் கீரர் முதல்நாற்பத்
தொன்பது பல்புலவோர்
அருள்நமக் கீயுந் திருவால
வாயரன் சேவடிக்கே
பொருளமைத் தின்பக் கவிபல
பாடும் புலவர்களே.
தெளிவுரை : பூமியில் சிறந்த கடைச் சங்கப் புலவர் பெருமக்களுள் கபிலர், பரணர்,
நக்கீரர் முதலாகிய நாற்பத்தொன்பதின்மரும் உள்ளிட்ட திரு ஆலவாய் பெருமான்
திருவடியையே சரண் எனக் கருதிப் பாடும் புலவர் பெருமக்களுக்கு என் வணக்கம் என்றும்
உரியது என்று நம்பியாண்டார் நம்பிகள் பாடுகின்றார்.
புகழ்ச் சோழ நாயனார்
-
புலமன் னியமன்னைச் சிங்கள
நாடு பொடுபடுத்த
குலமன் னியபுகழ்க் கோகன
நாதன் குலமுதலோன்
நலமன் னியபுகழ்ச் சோழன
தென்பர் நகுசுடர்வாள்
வலமன் னியவெறி பத்தனுக்
கீந்ததொர் வண்புகழே.
தெளிவுரை : சிங்கள மன்னனைப் புறமுதுகிட்டு ஓடச் செய்த புகழ் சோழ மன்னர் பொன்னம்பல
நாதனின் சிறந்த சிவனடியார். கரூர் என்னும் பதியில் அரசாண்டு வந்தார். இவரது
பட்டத்து யானை பூக்கூடையைப் பிடுங்கி எறிந்ததற்காக எறிபத்த நாயனார் யானையையும்
பாகரையும் வாளால் வெட்டிவிட்டார். இத் தவறுக்கு யானே பொறுப்பு என்னை வெட்டுங்கள்
என்று எறிபத்தருக்கு இவர் தன் வாளைக் கொடுத்தார்.
நரசிங்க முனையரைய நாயனார்
-
புகழும் படியெம் பரமே
தவர்க்குநற் பொன்னிடுவோன்
இகழும் படியோர் தவன்மட
வார்புனை கோலமெங்கும்
நிகழும் படிகண் டவனுக்
கிரட்டிபொன் இட்டவன்நீள்
திகழு முடிநர சிங்க
முனையர சன்திறமே.
தெளிவுரை : திருமுனைப்பாடி நாட்டில் நரசிங்க முனையரையர் என்பவர் ஆட்சி புரிந்து
வந்தார். சுந்தரரை மகன்மை கொண்டு வளர்த்தவர். திருவாதிரைதோறும் சிவபெருமானுக்கு
வழிபாடு செய்பவர்களுக்கு பொன்கொடுத்து அமுதளிப்பார். ஒருநாள் காமக்குறி மலர்ந்த
ஓரடியார் வந்தார். அவரே இவரைப் பார்த்து ஒதுங்கினார். நீறு பூசியிருந்த அந்த
தூர்த்தரை இவர் வணங்கி, இரட்டிப்புப் பொன் கொடுத்தனுப்பினார். இவ்வாறு
தொண்டாற்றிச் சிவபெருமான் திருவடி எய்தினார்.
அதிபத்த நாயனார்
-
திறமமர் மீன்படுக் கும்பொழு
தாங்கொரு மீன்சிவற்கென்
றுறவமர் மாகடற் கேவிடு
வோனொரு நாட்கனக
நிறமமர் மீன்பட நின்மலற்
கென்றுவிட் டோன்கமலம்
புறமமர் நாகை யதிபத்த
னாகிய பொய்யிலியே.
தெளிவுரை : நாகப்பட்டினத்தில் செம்படவர் குடியில் பிறந்தவர் அதிபத்தர்.
நாள்தோறும் தான் பிடிக்கும் முதல் மீனைப் பெருமானுக்காக என்று கடலில்
விட்டுவிடுவார். ஒருநாள் உலகையே விலை மதிக்கத் தக்க நவமணிகளாலான மீனொன்று
கிடைத்தது. அதையும் எம்பெருமானுக்கே விட்டார். இறைவன் திருவருளால் அதிபத்தர் உலக
பந்தத்திலிருந்து விடுபட்டுச் சிவலோகம் அடைந்தார்.
கலிக்கம்ப நாயனார்
-
பொய்யைக் கடிந்துநம் புண்ணியர்க்
காட்பட்டுத் தன்னடியான்
சைவத் திருவுரு வாய்வரத்
தானவன் தாள்கழுவ
வையத் தவர்முன்பு வெள்கிநீர்
வாரா விடமனைவி
கையைத் தடிந்தவன் பெண்ணா
கடத்துக் கலிக்கம்பனே.
தெளிவுரை : சோழ நாட்டில் திருப்பெண்ணாகடத்தில் வணிகர் குலத்தில் தோன்றியவர்
கலிக்கம்பர். இறை வழிபாடு செய்வதோடு அவர் அடியார் பாதங்களை விளக்கி அமுதளித்து
வந்தார். ஒருநாள் மாறுவேடத்தில் வந்த இறைவன் பாதங்களில் நீர் வார்க்க மறுத்த
மனைவியின் கையை வெட்டிவிட்டார். இவரது அடியார் பக்தியை மெச்சிய இறைவன், மனைவியின்
கையை வளரச் செய்தார். முடிவில் அடியார் இறைவன் திருவடிகளை அடைந்தார்.
கலிய நாயனார்
-
கம்பக் கரிக்குஞ் சிலந்திக்கும்
நல்கிய கண்ணுதலோன்
உம்பர்க்கு நாதற் கொளிவிளக்
கேற்றற் குடலிலனாய்க்
கும்பத் தயிலம்விற் றுஞ்செக்
குழன்றுங்கொள் கூலியினால்
நம்பற் கெரித்த கலியொற்றி
மாநகர்ச் சக்கிரியே.
தெளிவுரை : திருவொற்றியூரில் வாணியர் குலத்தில் கலியர் அவதரித்தார்.
ஆலயத்திற்குத் திருவிளக்கு ஏற்றி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். வறுமை
வந்துற்றது. கூலி வேலை செய்து அப்பணியை விடாது செய்துவந்தார். இறைவன் அவருக்குக்
காட்சியளித்து சிவலோக பதவி கொடுத்தருளினார்.
சத்தி நாயனார்
-
கிரிவில் லவர்தம் மடியரைத்
தன்முன்பு கீழ்மைசொன்ன
திருவில் லவரையந் நாவரி
வோன்திருந் தாரைவெல்லும்
வரிவில் லவன்வயல் செங்கழு
நீரின் மருவுதென்றல்
தெருவில் விரைமக ழுந்தென்
வரிஞ்சைத் திகழ்சத்தியே.
தெளிவுரை : சோழ நாட்டிலுள்ள வரிஞ்சையூரில் வேளாளர் குலத்தில் சத்தியார் வாழ்ந்து
வந்தார். சிவனடியார்களை யாராவது இகழ்ந்து பேசினால் அவர்களது நாவைத் துண்டித்து
விடுவார். முடிவில் எம் பெருமான் மலரடிகளை அடைந்தார்.
ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
-
சத்தித் தடக்கைக் குமரன்நற்
றாதைதன் தானமெல்லாம்
முத்திப் பதமொரொர் வெண்பா
மொழிந்து முடியரசா
மத்திற்கு மும்மைநன் தாளரற்
காயயம் ஏற்றலென்னும்
பத்திக் கடல் ஐயடிகளா
கின்றநம் பல்லவனே.
தெளிவுரை : காஞ்சிபுரத்தில் பல்லவர் குலத்தில் தோன்றியவர். ஐயடிகள் காடவர்கோன்
சிறந்த சிவனடியார். ஆட்சியைத் தம் மைந்தனிடம் ஒப்படைத்துவிட்டு
÷க்ஷத்திராடனம் செய்யக் கிளம்பினார். முதலில் சிதம்பரத்திற்கும் பின்னர்
பல தலங்களுக்கும் சென்று வெண்பா பாடினார். முடிவில் பரமன் திருவடிகளை அடைந்தார்.
சுந்தர மூர்த்தி நாயனார்
-
பல்லவை செங்கதி ரோனைப்
பறித்தவன் பாதம்புகழ்
சொல்லவன் தென்புக லூரரன்
பால்துய்ய செம்பொன்கொள்ள
வல்லவன் நாட்டியத் தான்குடி
மாணிக்க வண்ணனுக்கு
நல்லவன் தன்பதி நாவலூ
ராகின்ற நன்னகரே.
தெளிவுரை : சுந்தரர் சிவபெருமானது புகழைப் பாடுபவர். தென்புகலூர் இறைவனைப் பாடி,
பொன் பெற்றவர். நாட்டியத்தான் குடியில் மாணிக்க வண்ணருக்கு நண்பர். திருநாவலூர்
புகழனாகிய சுந்தரர் என்று நம்பியாண்டார் நம்பிகள் பாடி மகிழ்ந்தார்.
கணம்புல்ல நாயனார்
-
நன்னக ராய விருக்குவே
ளூர்தனில் நல்குரவாய்ப்
பொன்னக ராயநல் தில்லை
புகுந்து புலீச்சரத்து
மன்னவ ராய வரற்குநற்
புல்லால் விளக்கெரித்தான்
கன்னவில் தோளெந்தை தந்தை
பிரானெம் கணம்புல்லனே.
தெளிவுரை : இருக்குவேளூரில் குறுநில மன்னராய் விளங்கியவர் கணம்புல்லர்.
தில்லையில் திருப்புலீச்சரத்தில் விளக்கெரித்து வந்தார். பொருள் தீர்ந்த பிறகு
கணம் புல்லை அரிந்து வந்து அதை விற்று எண்ணெய் வாங்கினார். அவருடைய ஆழ்ந்த
பக்தியை மெச்சி இறைவன் அவருக்குத் தரிசனம் தந்து என்றும் தம் உலகில் இருக்கும்
பேற்றை அளித்தார்.
காரி நாயனார்
-
புல்லன வாகா வகையுல
கத்துப் புணர்ந்தனவும்
சொல்லின வுந்நய மாக்கிச்
சுடர்பொற் குவடுதனி
வில்லனை வாழ்த்தி விளங்கும்
கயிலைப்புக் கானென்பரால்
கல்லன மாமதில் சூழ்கட
வூரினில் காரியையே.
தெளிவுரை : திருக்கடவூரில் அந்தணர் குலத்தில் பிறந்தவர் காரியார். சிறந்த
சிவபக்தர்; தமிழில் நல்ல பாண்டியத்யம் உடையவர். அவர் மூவேந்தர்களையும் பாடிப்
பெறும் பரிசில் பொருள்களைக் கொண்டு திருக்கோயில் பணிகள் செய்து வந்தார். இறைவன்
காரி யாருக்குத் தம் கீழ் என்றும் இருந்து வரும் பாக்கியம் அளித்தார்.
நெடுமாற நாயனார்
-
கார்த்தண் முகிற்கைக் கடற்காழி
யர்பெரு மாற்கெதிராய்
ஆர்த்த வமண ரழிந்தது
கண்டுமற் றாங்கவரைக்
கூர்த்த கழுவின் நுதிவைத்த
பஞ்சவ னென்றுரைக்கும்
வார்த்தை யதுபண்டு நெல்வேலி
யில்வென்ற மாறனுக்கே.
தெளிவுரை : நின்றசீர் நெடுமாறன் சமண சமயத்தைச் சார்ந்திருந்தான். அரசமா தேவி
மங்கையர்க்கரசியார் சம்பந்தரை அழைத்து வந்தார். சம்பந்தர் சமணர்களை வாதில்
வென்றார். அவர்கள் கழுவேறினர். மன்னன் சைவன் ஆனான். அவனை எதிர்த்து வந்த
வடபுலத்து மன்னர்களை இறைவன் திருவருளால் திருநெல்வேலியில் வென்று வாகை சூடினான்.
வாயிலார் நாயனார்
-
மாறா வருளரன் தன்னை
மனவா லயத்திருத்தி
ஆறா வறிவா மொளி விளக்
கேற்றி யகமலர்வாம்
வீறா மலரளித் தன்பெனும்
மெய்யமிர் தங்கொடுத்தான்
வீறார் மயிலையுள் வாயிலா
னென்று விளம்புவரே.
தெளிவுரை : மயிலாப்பூரில் வேளாளர் குலத்தில் வாயிலார் பிறந்தார். அவர்தம்
உள்ளமாகிய பெருங்கோயிலில் இறைவனை இருத்தி வழிபட்டார். ஞானமாகிய ஒளி விளக்கால்
உள்ளக்கோயிலை விளங்கச் செய்தார். ஆனந்தமாகிய திருமஞ்சனமிட்டு இறைவனை
நீராட்டினார். அடியார்களிடம் கொண்டுள்ள அன்பை அமுதமாக நிவேதிப்பார். அவர்
முடிவில் இறைவன் திருப்பாதங்களைச் சேர்ந்தார்.
முனையடுவார் நாயனார்
-
என்று விளம்புவர் நீடூ
ரதிபன் முனையடுவோன்
என்று மமரு ளழிந்தவர்க்
காக்கூலி யேற்றெறிந்து
வென்று பெருஞ்செல்வ மெல்லாங்
கனகநன் மேருவென்னுங்
குன்று வளைத்த சிலையான்
தமர்க்குக் கொடுத்தனனே.
தெளிவுரை : இவர் பொன்னி நாட்டில் திருநீடுரில் வேளாளர் குடியில் பிறந்து
வாழ்ந்துவந்தார். யுத்தத்தில் தோற்றவர்களுக்கு உதவி செய்து, அவர்கள் வெற்றி பெறச்
செய்வார். அவ்வாறு கிடைக்கும் பொருளை அவர் எம்பெருமான் அடியார்களுக்குக் கொடுத்து
உதவினார். இவ்வாறு பன்னாள் வாழ்ந்து இறைவன் திருவடிகளை அடைந்தார்.
சுந்தர மூர்த்தி நாயனார்
-
கொடுத்தான் முதலைகொள் பிள்ளைக்
குயிரன்று புக்கொளியூர்த்
தொடுத்தான் மதுர கவியவி
நாசியை வேடர்சுற்றம்
படுத்தான் திருமுரு கன்பூண்
டியினில் பராபரத்தேன்
மடுத்தா னவனென்பர் வன்றொண்ட
னாகின்ற மாதவனே.
தெளிவுரை : சுந்தரர் சேரநாடு செல்லும்போது திருபுக்கொளியூரில் (அவிநாசியில்)
முதலையுண்ட பாலகனுக்கு உயிர் கொடுத்தார். சேரமானிடம் பொருள் பெற்றுத்
திரும்பும்போது வழியில் வேடுவர் அப்பொருள்களைச் சூறையாடினர். திருமுருகன்
பூண்டியில் வந்து சுந்தரர் இறைவனிடம் முறையிட்டார். இறைவன் அப்பொருள்களைத்
திருப்பித் தந்தார். இது இறைவனுடைய திருவிளையாடல். திருடர்களாக வந்தவர்கள் சிவ
கணங்களே.
கழற்சிங்க நாயனார்
-
மாதவத் தோர்தங்கள் வைப்பினுக்
காரூர் மணிக்குவைத்த
போதினைத் தான்மோந்த தேவிதன்
மூக்கை யரியப்பொற்கை
காதிவைத் தன்றோ வரிவதென்
றாங்கவள் கைதடிந்தான்
நாதமொய்த் தார்வண்டு கிண்டுபைங்
கோதைக் கழற்சிங்கனே.
தெளிவுரை : கழற்சிங்கர் என்னும் பல்லவ மன்னர் ஒரு சிவனடியார். தம் மனைவியோடு
தலயாத்திரை செய்து கொண்டு திருவாரூர் வந்து சேர்ந்தார். செருத்துணை நாயனார் அங்கு
பூமாலை தொடுத்துக் கொண்டிருந்தார். கீழே விழுந்த மலர் ஒன்றை அரசியார் எடுத்து
மோந்து பார்த்தார். செருத்துணையார் கோபங் கொண்டு அரசியின் மூக்கை
அரிந்துவிட்டார். அது போதாது என்று கழற்சிங்கர் மலர் எடுத்த அரசியின் கையை வெட்டி
விட்டார். இறைவன் தோன்றி பக்தியைப் பாராட்டினார். அரசியின் மூக்கும் கையும்
முன்போல் ஆயின.
இடங்கழி நாயனார்
-
சிங்கத் துருவனைச் செற்றவன்
சிற்றம் பலமுகடு
கொங்கிற் கனக மணிந்தவா
தித்தன் குலமுதலோன்
திங்கட் சடையர் தமரதென்
செல்வ மெனப்பறைபோக்
கெங்கட் கிறைவ னிருக்குவே
ளூர்மன் இடங்கழியே.
தெளிவுரை :கோனாட்டில் கொடும்பாளூர் என்ற நகரத்தை இடங்கழியார் என்னும் குறுநில
மன்னர் ஆண்டு வந்தார். சிவன் அடியார்களுக்கு உணவளிக்க நெல்லைத் திருடிய ஒருவரை
மன்னித்து மேலும் அவன் வேண்டிய அளவு கொடுத்தனுப்பினார். நெடுங்காலம் இறைவன்
தொண்டில் ஈடுபட்டு நாட்டில் சைவம் விளங்க ஆட்சி புரிந்தார்.
செருத்துணை நாயனார்
-
கழிநீள் கடல்நஞ் சயின்றார்க்
கிருந்த கடிமலரை
மொழிநீள் புகழ்க்கழற் சிங்கன்தன்
தேவிமுன் மோத்தலுமே
எழில்நீள் குமிழ்மலர் மூக்கரிந்
தானென் றியம்புவரால்
செழுநீர் மருகல்நன் னாட்டமர்
தஞ்சைச் செருத்துணையே.
தெளிவுரை : தஞ்சை நகரில் வேளாண் குடியில் பிறந்தவர் செருத்துணையார். எம்
பெருமானிடம் இடையறாத பக்தி கொண்டவர். திருவாரூர் கோயிலில் மலர்த் தொண்டு செய்து
வந்தார். அப்போது அங்கு தரிசனத்திற்கு வந்த கழற்சிங்க நாயனாரின் மனைவி, மலரை
மோந்து பார்த்ததற்காக அவருடைய மூக்கை இவர் அரிந்து விட்டார். இறைவன்
காட்சியளித்து அருள் பாலித்தார்.
புகழ்த்துணை நாயனார்
-
செருவிலி புத்தூர்ப் புகழ்த்துணை
வையம் சிறுவிலைத்தா
வுருவலி கெட்டுண வின்றி
யுமைகோனை மஞ்சனஞ்செய்
தருவதோர் போதுகை சோர்ந்து
கலசம் விழத்தரியா
தருவரை வில்லி யருளும்
நிதியது பெற்றனனே.
தெளிவுரை : செருவில்லிபுத்தூரில் சிவமறையோர் குலத்தில் பிறந்தவர்
புகழ்த்துணையார். சிவனை ஆறு காலங்களிலும் அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்வார்.
பஞ்ச காலத்தால் உடல் மெலிந்தார். திருமஞ்சனம் செய்யும்போது குடம் இறைவன்
திருமுடிமேல் விழுந்தது. அடியார் மயங்கி விழுந்தார். அன்றுமுதல் இறைவன்
அவருக்குப் படிக்காசு அளித்து வந்தார். பிறவாப் பேரின்பம் எய்தினார் அடியார்.
கோட்புலி நாயனார்
-
பெற்ற முயர்த்தோன் விரையாக்
கலிபிழைத் தோர்தமது
சுற்ற மறுக்குந் தொழில்திரு
நாட்டியத் தான்குடிக்கோன்
குற்ற மறுக்கும்நங் கோட்புலி
நாவற் குரிசிலருள்
பெற்ற வருட்கட் லென்றுல
கேத்தும் பெருந்தகையே.
தெளிவுரை : சோழ நாட்டில் நாட்டியத்தான்குடி என்ற ஊரில் வேளாளர் மரபில்
கோட்புலியார் பிறந்தார். சிறந்த சிவனடியார். அவர் யுத்தத்திற்குச் செல்லுமுன்
அடியார்களுக்காகச் சேர்த்து வைத்திருந்த நெல்லைச் சுற்றத்தார்
செலவழித்துவிட்டார்கள். கோபம் கொண்டு அவர்களை இவர் கொன்றுவிட்டார். அனைவரும்
நற்கதி பெற்றனர். திருவிரையாக்கலி பிழைத்தோர் திருவிரையாக்கலி என்று கூறிய ஆணையை
மீறியவர்கள். நாவற்குரிசில் சுந்தர மூர்த்தி நாயனார். அவருடைய அருள் பெற்றவர்
இந்த நாயனார்.
சுந்தரமூர்த்தி நாயனார்
-
தகுமகட் பேசினோன் வீயவே
நூல்போன சங்கிலிபால்
புகுமணக் காதலி னாலொற்றி
யூருறை புண்ணியன்தன்
மிகுமலர்ப் பாதம் பணிந்தரு
ளாலிவ் வியனுலகம்
நகும்வழக் கேநன்மை யாப்புணர்ந்
தான்நாவ லூரரசே.
தெளிவுரை : சங்கிலியாருக்குத் திருமணம் பேசிய மணமகன் இறந்துவிடவே, சங்கிலியார்
திருவொற்றியூர் இறைவனுக்கு மலர்க் கைங்கரியம் செய்துகொண்டு கன்னிமாடத்தில்
இருந்து வந்தார். ஒற்றியூருக்கு வந்த சுந்தரர் சங்கிலியாரைக் கண்டார். இறையருளால்
இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இது நகுதற்குரிய வழக்கு என்கிறார் இப்பாடல்
ஆசிரியர்.
பத்தராய்ப் பணிவார்கள்
-
அரசினை யாரூ ரமரர்
பிரானை அடிபணிந்திட்
டுரைசெய்த வாய்தடு மாறி
யுரோம புளகம்வந்து
கரசர ணாதி யவயவங்
கம்பித்துக் கண்ணருவி
சொரிதரு மங்கத்தி னோர்பத்த
ரென்று தொகுத்தவரே.
தெளிவுரை : திருநாவுக்கரசரையும் சுந்தரரையும் வணங்கி உரை தடுமாறி, மயிர்க்
கூச்செறிந்து கைகால்கள் யாவும் விதிர்விதிர்த்துக் கண்ணீர் சொரிந்து
வழிபடுகிறவர்கள், ஒப்பற்ற பக்தர்கள் என்று சொல்லப்படுவர்.
பரமனையே பாடுவார்
-
தொகுத்த வடமொழி தென்மொழி
யாதொன்று தோன்றியதே
மிகுத்த வியலிசை வல்ல
வகையில்விண் தோயுநெற்றி
வகுத்த மதில்தில்லை யம்பலத்
தான்மலர்ப் பாதங்கள்மேல்
உகுத்த மனத்தொடும் பாடவல்
லோரென்ப ருத்தமரே.
தெளிவுரை : பழைமையான வடமொழி (சமஸ்கிருதம்), தென்மொழி (தமிழ்) இவைகளுள் யாதாம்
ஒன்றில் சிறந்த இயல், இசைகளில் வல்ல வகையில் ஆகாயம் வரை உயர்ந்துள்ள மதில்களை
உடைய சிதம்பரத்தில் கோயில் கொண்டிருக்கும் நடராஜப் பெருமானின் பாதார விந்தங்கள்
மேல் கனிந்த மனத்தோடு பாட வல்லோர் உத்தமர் என்று சொல்லப்படுவார்கள்.
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்
-
உத்தமத் தானத் தறம்பொரு
ளின்ப மொடியெறிந்து
வித்தகத் தானத் தொருவழிக்
கொண்டு விளங்கச்சென்னி
மத்தம்வைத் தான்திருப் பாத
கமல மலரிணைக்கீழ்ச்
சித்தம்வைத் தாரென்பர் வீடுபே
றெய்திய செல்வர்களே.
தெளிவுரை : உத்தம தானத்தில் இருக்கும் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றையும் அறவே
துறந்து, மேலான வீடு பேற்றிற்குரிய ஒப்பற்ற வழியை மேற்கொண்டு, ஊமத்த மலரைச்
சூடும் சிவபெருமானது திருப்பாதத் தாமரை மலரின் கீழ் மனத்தை வைத்தவர்களை வீடு பேறு
எய்திய செல்வர்கள் என்று சொல்லுவார்கள்.
திருவாரூர்ப் பிறந்தார்கள்
-
செல்வம் திகழ்திரு வாரூர்
மதில்வட்டத் துட்பிறந்தார்
செல்வன் திருக்கணத் துள்ளவ
ரேயத னால்திகழச்
செல்வம் பெருகுதென் னாரூர்ப்
பிறந்தவர் சேவடியே
செல்வ நெறியுறு வார்க்கணித்
தாய செழுநெறியே.
தெளிவுரை : செல்வச் செழிப்புடைய திருவாரூர் மதில் வட்டத்துள் பிறந்தவர்கள்,
சிவபெருமானது திருக்கணத்தைச் சேர்ந்தவர்களே. அதனால் செல்வம் மென்மேலும் பெருகும்
தென் ஆரூரில் பிறந்தவர்களின் செம்மையான பாதங்களே செல்வ நெறியில் செல்பவர்கள்
கணித்த செழுநெறியாகும்.
முப்பொழுதும் திருமேனி தீண்டுவார்
-
நெறிவார் சடையரைத் தீண்டிமுப்
போதும்நீ டாகமத்தின்
அறிவால் வணங்கியர்ச் சிப்பவர்
நம்மையு மாண்டமரர்க்
கிறையாய்முக் கண்ணுமெண் தோளும்
தரித்தீறில் செல்வத்தொடும்
உறைவார் சிவபெரு மாற்குறை
வாய வுலகினிலே.
தெளிவுரை : அடர்ந்த நீண்ட சடையினை உடைய சிவ பெருமானது உருவத்தைத் தொட்டு மூன்று
வேளைகளிலும் பெரிய ஆகமத்தின் பயிற்சியால் வழிபாடு செய்து அர்ச்சிப்பவர்,
நம்மையும் ஆண்டு, தேவர்களுக்கு அதிபதியாய், மூன்று கண்களும் எட்டுத் தோள்களும்
பெற்று, முடிவில் செல்வத்தோடும் சிவ பெருமானுடைய இருப்பிடமாகிய உலகில்
வாழ்வார்கள்.
முழுநீறு பூசிய முனிவர்
-
உலகு கலங்கினும் மூழி
திரியினு முள்ளொருகால்
விலகுத லில்லா விதியது
பெற்றநல வித்தகர்காண்
அலகில் பெருங்குணத் தாரூ
ரமர்ந்த வரனடிக்கீழ்
இலகுவெண் ணீறுதம் மேனிக்
கணியு மிறைவர்களே.
தெளிவுரை : இந்த உலகு கலங்கினாலும், ஊழி திரிந்தாலும், உள்ளம் ஒருகாலும் விலகாத
விதியைப் பெற்ற நல்ல ஞானத்தைப் பெற்றவர், அலகில் எல்லா நலன்களையும் பெற்ற
திருவாரூரில் எழுந்தருளியுள்ள தியாகேசப் பெருமானுடைய திருவடியின்கீழ்
விளங்குகின்ற வெண்ணீறு தம் மேனிக்கு அணியும் இறைவர்களே.
அப்பாலும் அடிச்சார்ந்தார்
-
வருக்க மடைத்துநன் னாவலூர்
மன்னவன் வண்டமிழால்
பெருக்கு மதுரத் தொகையிற்
பிறைசூடி பெய்கழற்கே
ஒருக்கு மனத்தொடப் பாலடிச்
சார்ந்தவ ரென்றுலகில்
தெரிக்கு மவர்சிவன் பல்கணத்
தோர்நஞ் செழுந்தவரே.
தெளிவுரை : சுந்தரமூர்த்தி சுவாமிகள் வளப்பம் பொருந்திய தமிழ் மொழியால்
சிவபெருமானது பாதங்களில் தேவாரப் பாடல்களைப் பாடினார். அத்தகைய பொற்பாதங்களை
இடைவிடாது சிந்திப்பவர்கள் உண்மைத் தொண்டர்கள் ஆவர்.
சுந்தரமூர்த்தி நாயனார்
-
செழுநீர் வயல்முது குன்றினில்
செந்தமிழ் பாடிவெய்ய
மழுநீள் தடக்கைய னீந்தபொன்
னாங்குக்கொள் ளாதுவந்தப்
பொழில்நீ டருதிரு வாரூரில்
வாசியும் பொன்னுங்கொண்டோன்
கெழுநீள் புகழ்த்திரு வாரூர
னென்றுநாம் கேட்பதுவே.
தெளிவுரை : சுந்தரர் திருமுதுகுன்றத்துக்குச் சென்று (விருத்தாசலம்) பழமலைநாதர்
அருளால் பன்னீராயிரம் பொன் பெற்றார். அதனை மணி முத்தாற்றிலிட்டு. அப்பால்
திருவாரூர் சென்று, அங்குள்ள கமலாலயத்திலிருந்து அப்பொன்னை எடுத்துப்
பரவையாருக்கு வழங்கினார்.
பூசலார் நாயனார்
-
பதுமநற் போதன்ன பாதத்
தரற்கொரு கோயிலையான்
கதுமெனச் செய்குவ தென்றுகொலா
லாமென்று கண்துயிலா
ததுமனத் தேயெல்லி தோறும்
நினைந்தருள் பெற்றதென்பர்
புதுமணத் தென்றல் உலாநின்ற
வூர்தனிற் பூசலையே.
தெளிவுரை : திருநின்றவூரில் (தின்னனூரில்) அந்தணர் குலத்தில் பூசலார் பிறந்தார்.
வேத சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்தார். சிறந்த சிவபக்தர். அவ்வூரில் சிவ
பெருமானுக்கு ஒரு கோயில் எழுப்ப எண்ணினார். போதிய நிதியில்லாமையால், இரவில்
தூங்காது மனத்திலேயே சிந்தித்து அதைக் கட்டி முடித்தார். பலகாலம் வாழ்ந்து இறைவன்
திருவடி நீழலை அடைந்தார்.
மங்கையர்க்கு அரசியார்
-
பூச லயில்தென்ன னார்க்கன
லாகப் பொறமையினால்
வாச மலர்க்குழல் பாண்டிமா
தேவியாம் மானிகண்டீர்
தேசம் விளங்கத் தமிழா
கரர்க்கறி வித்தவரால்
நாசம் விளைத்தா ளருகந்
தருக்குத்தென் னாட்டகத்தே.
தெளிவுரை : சோழர் குலத்தில் பிறப்த மங்கையர்க்கு அரசியார் பாண்டிய மன்னன்
நெடுமாறனை மணந்து, பாண்டிய நாட்டு அரசியானார். மன்னன் சமண மதத்தைச்
சார்ந்திருந்தான். இவர் திருஞான சம்பந்தரை அழைத்து வரச் செய்தார். அவர் சமணர்களை
வாதில் வென்று நாட்டில் சைவம் தழைக்கச் செய்தார். இறுதியில் அரசியார் கணவனோடு
இறைவன் திருவடிகளில் சேர்ந்தார்.
நேச நாயனார்
-
நாட்டமிட்ட டன்ரி வந்திப்ப
வெல்படை நல்கினர்தந்
தாட்டரிக் கப்பெற் றவனென்பர்
சைவத் தவரரையில்
கூட்டுமக் கப்படம் கோவணம்
நெய்து கொடுத்துநன்மை
ஈட்டுமக் காம்பீலிச் சாலிய
நேசனை இம்மையிலே.
தெளிவுரை : கர்நாடகத்திலுள்ள காம்பிலி நகரத்தில் சாலியர் குலத்தில் நேசர் என்னும்
சிவனடியார் ஒருவர் இருந்தார். சோழ நாட்டுக்கு வந்து கைத்தறி நெசவு செய்து
அடியார்களுக்கு உடை, உள்ளாடை, கோவணம் இவைகளைக் கொடுத்து உதவினார். இறுதியில்
இறைவனடி சேர்ந்தார். கண்ணை வைத்து அருச்சித்து, சக்ராயுதத்தைப் பெற்றவர்
திருமால்.
கோச் செங்கட் சோழநாயனார்
-
மைவைத்த கண்டன் நெறியன்றி
மற்றோர் நெறிகருதாத்
தெய்வக் குடிச்சோழன் முன்பு
சிலந்தியாய்ப் பந்தர்செய்து
சைவத் துருவெய்தி வந்து
தரணிநீ டாலயங்கள்
செய்வித்த வந்திருக் கோச்செங்க
ணானென்னுஞ் செம்பியனே.
தெளிவுரை : திருவானைக்கா கோயிலில் சிவ வழிபாட்டில் ஈடுபட்டிருந்த யானையும்
சிலந்தியும் தம்முள் மாறு கொண்டு இரண்டும் இறந்தன. யானை சிவலோகத்தை அடைந்தது.
சிலந்தி சோழ அரசனின் குமாரனாகத் திரும்பவும் இவ்வுலகில் பிறவி எடுத்தது. அவனே
கோச்செங்கண் சோழன். யானைகள் ஏறாவண்ணம் கட்டுமலை அமைத்து அவற்றின்மீது எம்
பெருமானுக்கு மாடக் கோயில்கள் அமைத்தான். முதலில் கட்டியது திருவானைக்கா.
-
செம்பொ னணிந்துசிற் றம்பலத்
தைச்சிவ லோகமெய்தி
நம்பன் கழற்கீ ழிருந்தோன்
குலமுத லென்பர்நல்ல
வம்பு மலர்த்தில்லை யீசனைச்
சூழ மறைவளர்த்தான்
நிம்ப நறுந்தொங்கல் கோச்செங்க
ணானென்னும் நித்தனையே.
தெளிவுரை : தந்தையைப் போன்று கோச்செங்கணானும் தில்லை நடராஜனிடம் அளவில்லாத
பக்தி கொண்டு சிதம்பரம் சென்று இறைவனைத் தரிசித்தான். அவ்வூரில் இறைவன் தொண்டில்
ஈடுபட்டு வரும் அந்தணர்களுக்கு மாளிகைகளை அமைத்துக் கொடுத்தான். இறுதியில்
எம்பெருமான் திருவடிகளைச் சேர்ந்தான். இவன் பாண்டி நாட்டையும் ஆண்டமையால் நிம்ப
நறுந்தொங்கலும் அணிந்தான்.
திரு நீலகண்ட யாழ்ப்பாண நாயனார்
-
தனையொப் பருமெருக் கத்தம்
பூலியூர்த் தகும்புகழோன்
நினையொப் பருந்திரு நீலகண்
டப்பெரும் பாணனைநீள்
சினையொப் பலர்பொழில் சண்பையர்
கோன்செந் தமிழொடிசை
புனையப் பரனருள் பெற்றவ
னென்பரிப் பூதலத்தே.
தெளிவுரை : நடுநாட்டில் திருஎருக்கத்தம் புலியூரில் பாணர் மரபில் அவதரித்தவர்
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார். அவரும் அவர் மனைவியர் மதங்க சூளாமணியாரும்
யாழிசையில் வல்லவர்கள். திருஞானசம்பந்தரை அடைந்து இறுதிவரை அவருடன் பேரிசைத்
தொண்டு புரிந்து சோதியுள் கலந்தார்கள்.
சடைய நாயனார்
-
தலம்விளங் குந்திரு நாவலூர்
தன்னில் சடையனென்னுங்
குலம்விளங் கும்புக ழோனை
யுரைப்பர் குவலயத்தில்
நலம்விளங் கும்படி நாம்விளங்
கும்படி நற்றவத்தின்
பலம்விளங் கும்படி யாரூ
ரனைமுன் பயந்தமையே.
தெளிவுரை : தொகை அடியார்களைப் பாடிய சுந்தரர், தன் பெற்றோர்களுக்கும் வணக்கம்
தெரிவிக்கிறார். இப் பாடலில் தன் தந்தையாராகிய சடையனாரை வணங்குகிறார். சிறந்த
திருநாவலூரிலுள்ள சடையன் என்பவருடைய குலம் விளங்க புகழ் அமைந்தவராக அவதரித்தவர்
சுந்தரர். அவ்வாறு சிறப்புடையவரைப் பயந்தவர் சடையனார் ஆகும்.
இசை ஞானியார்
-
பயந்தாள் கறுவுடைச் செங்கண்வெள்
ளைப்பொள்ளல் நீள்பனைக்கைக்
கயந்தா னுகைத்தநற் காளையை
யென்றுங் கபாலங்கைக்கொண்
டயந்தான் புகுமர னாரூர்ப்
புனிதன் அரன்திருத்தாள்
நயந்தாள் தனதுள்ளத் தென்று
முரைப்பது ஞானியையே.
தெளிவுரை : கறுவுதலையுடைய, துளையுடைய துதிக்கையை உடைய, செங்கண்களையுடைய, யானையைச்
செலுத்திய காளை போன்ற சுந்தரர் எப்போதும் கபாலத்தைக் கையில் ஏந்திய பிச்சை
ஏற்கும் திருவாரூரில் கோயில் கொண்டிருக்கும் சிவ பெருமானை வணங்குபவர். அவர்
எப்போதும் மனத்தில் நினைந்து தியானிப்பது தனது தாயாகிய இசைஞானியையே.
சுந்தரமூர்த்தி நாயனார்
-
ஞானவா ரூரரைச் சேரரை
யல்லது நாமறியோம்
மானவ வாக்கை யொடும்புக்
கவரை வளரொளிப்பூண்
வானவ ராலும் மருவற்
கரிய வடகயிலைக்
கோனவன் கோயில் பெருந்தவத்
தோர்தங்கள் கூட்டத்திலே.
தெளிவுரை : சிவஞானம் பெற்ற சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் மனித உடலோடு,
தேவர்களாலும் அடைய முடியாத கயிலாயத்திற்குச் சென்று இறைவனைத் தரிசித்தனர்.
பெருந்தவத்தோர் கூடியிருக்கும் அந்த அவையில் இறைவன் அவர்களுக்கு அருள்
பாலித்தார். இது ஓர் அருஞ் செயலாகும்.
-
கூட்டமொன் பானொ டறுபத்து
மூன்று தனிப்பெயரா
ஈட்டும் பெருந்தவத்தோரெழு
பத்திரண் டாம்வினையை
வாட்டுந் தவத்திருத் தொண்டத்
தொகைபதி னொன்றின்வகைப்
பாட்டுந் திகழ்திரு நாவலூ
ராளி பணித்தனனே.
தெளிவுரை : தொகை அடியார்கள் ஒன்பதின்மர், தனி யடியார்கள் அறுபத்துமூவர் என்று
பெருந்தவத்தோர் மொத்தம் எழுபத்திரண்டு பேராவர். இவர்களுடைய வரலாறுகளைப் பதினொரு
பாடல்களைக் கொண்ட திருத்தொண்டத் தொகையாகப் பாடியவர், திருநாவலூர் பெருமானாகிய
சுந்தரரே என்பதாம்.
திருத்தொண்டத் தொகைப் பதிகங்களின் முதற்குறிப்பு
-
பணித்தநல் தொண்டத் தொகைமுதல்
தில்லை யிலைமலிந்த
அணித்திகழ் மும்மை திருநின்ற
வம்பறா வார்கொண்டசீர்
இணைத்தநல் பொய்யடி மைகறைக்
கண்டன் கடல்சூழ்ந்தபின்
மணித்திகழ் சொற்பத்தர் மன்னிய
சீர்மறை நாவனொடே.
தெளிவுரை : சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையில் உள்ள பதினொரு பாடல்களின்
முதற்குறிப்பு வருமாறு:
-
தில்லைவாழ், 2. இலைமலிந்த, 3. மும்மையால், 4. திருநின்ற, 5. வம்பறா, 6.
வார்கொண்ட, 7. பொய்யடிமை, 8. கறைக்கண்டன், 9. கடல்சூழ்ந்த, 10. பத்தராய்ப், 11.
மன்னியசீர்.
நூற் பயன்
-
ஓடிடும் பஞ்சேந் திரிய
மொடுக்கியென் னூழ்வினைகள்
வாடிடும் வண்ணம்நின் றெத்தவம்
செய்தனன் வானினுள்ளோர்
சூடிடுஞ் சீர்த்திருப் பாதத்தர்
தொண்டத் தொகையினுள்ள
சேடர்தஞ் செல்வப் பெரும்புக
ழந்தாதி செப்பிடவே.
தெளிவுரை : ஐம்புலன்களால் நுகரப்படும் உலக இன்பங்களைக் குறைத்து என் முன்வினைத்
துன்பங்கள் செயல்படாமல் செய்யும். திருத்தொண்டத் தொகையில் குறிப்பிடப்பட்ட
அடியார்களின் சீர்பாதங்களைச் சூடச் செய்யும். அப்பெரியோர்களின் பெரும் புகழைச்
செப்பினால் இவை அனைத்தும் சித்திக்கும் என்கிறார். இத் திருவந்தாதியை ஓதினால் இப்
பலன்களைப் பெறலாம் என்பது பொருள்.
திருச்சிற்றம்பலம்
ஆளுடைய பிள்ளையார்திருவந்தாதி ( நம்பியாண்டார் நம்பிகள் அருளிச்செய்தது )
சிவபெருமானை அல்லாமல் மற்றெவரையும் போற்றாத மாண்பமைந்த திருஞானசம்பந்தப்
பெருமானுடைய திருவடிகளைப் பணிந்து போற்றும் அடியார்கள், இறைவனுடைய திருவடிகளை
எளிதிற் பெறுவார்கள் எனவும், திருஞானசம்பந்தரிடத்தில் அளவிலாப் பேரன்பு உடையவர்
சிறுத்தொண்ட நாயனார் ஆதலின், அவரைப் போற்றுவோர் திருஞான சம்பந்தருடைய
திருவடித்துணையை எளிதில் பெறுவர் எனவும்,
திருமாலும் நான்முகனும் தேடிக் காண்டற்கரிய சிவபிரானைத் தம்முடைய கண்களால் கண்டு
தம் தந்தையார்க்கும் காட்டியருளிய சிவஞானச் செல்வராகிய ஆளுடைய பிள்ளையாரைச்
செந்தமிழ்ப் பாடல்களால் போற்றிப் பரவுவதற்குத் தாம் எவ்வளவோ தவம் செய்திருத்தல்
வேண்டுமெனவும்,
திருஞான சம்பந்தரை அன்றிப் பட்டத்து யானை மீது உலா வரும் பேரரசராயினும் பிறர்
எவரையும் தாம் பாடுவதில்லை எனவும் இவ் அந்தாதியில் கூறுகின்றார். இவ் அந்தாதியில்
திருஞான சம்பந்தர்க்குக் கவுணியர் தீபன், பரசமயக் கோளரி, அருகாணி, தமிழாகரன்,
தமிழ்விரகன், சைவ சிகாமணி முதலிய சிறப்புப் பெயர்கள் வழங்கப் பெறுகின்றன.
திருச்சிற்றம்பலம்
கட்டளைக் கலித் துறை
-
பார்மண் டலத்தினிற் பன்னிரு
பேரொடு மன்னிநின்ற
நீர்மண் டலப்படப் பைப்பிர
மாபுரம் நீறணிந்த
கார்மண் டலக்கண்டத் தெண்தடந்
தோளான் கருணைபெற்ற
தார்மண் டலமணி சம்பந்தன்
மேவிய தண்பதியே.
தெளிவுரை : நிலவுலகில் பன்னிரண்டு பெயர்களோடு நிலை பெற்ற நீர் நிரம்பிய தோட்டமாக
விளங்குவது பிரமாபுரம் ஆகிய சீகாழி. திருநீறு அணிந்த, கருமை பொருந்திய இடம் ஆகிய
கழுத்தையும் எட்டுப் பெரிய தோள்களையும் உடைய சிவபெருமானது அருளைப் பெற்ற, தார்
அணிந்த மணியாகிய திருஞானசம்பந்தப் பெருமான் பொருந்திய குளிர்ந்த தலமாகும்.
சம்பந்தர் பிறந்த தலம் சீகாழி என்கிறார்.
-
பதிகப் பெருவழி காட்டிப்
பருப்பதக் கோன்பயந்த
மதியத் திருநுதல் பங்க
னருள்பெற வைத்தஎங்கள்
நிதியைப் பிரமா புரநகர்
மன்னனை யென்னுடைய
கதியைக் கருதவல் லோரம
ராவதி காவலரே.
தெளிவுரை : பதிகம் பாடிப் பணியும் அரிய நெறி காட்டிட இமாசல மன்னன் பயந்த
பிறைத்திங்களைப் போன்ற அழகிய நெற்றியை உடைய உமையை இடப்பாகத்தில் கொண்டவன்
அருள்பெற வைத்த எங்கள் செல்வத்தை, பிரமாபுர மன்னனை, என்னுடைய புகலிடத்தைக் கருத
வல்லோர் இந்திரன் நகரத்தைக் காப்பவர் ஆவர்.
1200.காப்பயில் காழிக் கவுணியர்
தீபற்கென் காரணமா
மாப்பழி வாரா வகையிருப்
பேன்என்ன, மாரனென்னே!
பூப்பயில் வாளிக ளஞ்சுமென்
நெஞ்சுரங் கப்புகுந்த;
வேப்பயில் வார்சிலை கால்வளை
யாநிற்கும் மீண்டிரவே.
தெளிவுரை : தலைவி கூற்று: சோலைகள் சூழ்ந்த சீகாழி கவுணியர் தீபற்கு என் பொருட்டு,
பெரிய பழிவாரா வகை இருப்பேன் என்ன, மன்மதன் பூங்கணைகளைக் கண்டு அஞ்சும் என்
நெஞ்சு குலையப் புகுந்த அம்பு பொருந்திய நீண்ட வில் இரவு முழுதும் வளைந்து
நிற்கும்.
-
இரவும் பகலும்நின் பாதத்
தலரென் வழிமுழுதும்
பரவும் பரிசே யருளுகண்
டாயிந்தப் பாரகத்தே
விரவும் பரமத கோளரி
யே!குட வெள்வளைகள்
தரளஞ் சொரியுங் கடல்புடை
சூழ்ந்த தராய்மன்னனே.
தெளிவுரை : இரவும் பகலும் உன் பாதமாகிய மலர் என் வழி முழுதும் பரவும் பரிசே அருளு
கண்டாய். இந்த உலகில் விரவும் பிற சமயங்களை அழித்து ஒழிப்பவனே ! வளைந்த வெள்ளிய
சங்குகளையும் முத்துக்களையும் சொரியும் கடல் பக்கங்கள் சூழ்ந்த பூந்தராய் என்னும்
சீகாழி மன்னனே !
-
மன்னிய மோகச் சுவையொளி
யூறோசை நாற்றமென்றிப்
பன்னிய ஐந்தின் பதங்கடந்
தோர்க்குந் தொடர்வரிய
பொன்னியல் பாடகம் கிங்கிணிப்
பாத நிழல்புகுவோர்
துன்னிய காஅமர் சண்பையர்
நாதற்குத் தொண்டர்களே.
தெளிவுரை : நிலையற்ற மோகச் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்பட்ட ஐந்து
புலன்களின் பதங்கடந்தோர்க்குத் தொடர்வரிய பொன்னாலாகிய பாடகக் கிங்கிணி
திருவடிப்பேற்றை அடைவோர் இருக்கின்ற சோலைகள் சூழ்ந்த சண்பையர் நாதனுக்குத்
தொண்டர்கள்.
இவருடைய தொண்டர்கள் முத்திப் பேற்றை அடைவர் என்க.
-
தொண்டினஞ் சூழச் சுரிகுழ
லார்தம் மனந்தொடர,
வண்டினஞ் சூழ வருமிவன்
போலும், மயிலுகுத்த
கண்டினஞ் சூழ்ந்த வளைபிரம்
போக்கழு வாவுடலம்
விண்டினஞ் சூழக் கழுவின
ஆக்கிய வித்தகனே.
தெளிவுரை : அடியார்கள் சூழ, மாதர்களின் மனம் தொடர, வண்டுக் கூட்டங்கள் சூழ
வருகின்றவன் இவன் போலும். மயிற் பீலியோடு பிரம்பை ஏந்
திய சமணர்கள் குளிக்காத உடம்பை உடையவர்கள் இறந்துபடுமாறு கழுநிரைகளில் ஏறுமாறு
செய்த வித்தகனே.
-
வித்தகம் பேசி,நம் வேணுத்
தலைவனை வாள்நிகர்த்து
முத்தகங் காட்டும் முறுவல்நல்
லார்தம் மனம்அணைய,
உய்த்தகம் போந்திருந் துள்ளவும்
இல்லா தனவுமுறு
பொத்தகம் போலும்! முதுமுலைப்
பாணன் புணர்க்கின்றதே.
தெளிவுரை : இது தலைவி கூற்று. பாணனை இழித்துரைப்பது. ஞானம் பேசி நம் சீகாழித்
தலைவராகிய திருஞானசம்பந்தர் வாளைப் போன்று முத்துக்களைத் தம்மிடத்தே காட்டுகின்ற
முறுவல் செய்யும் மாதர்கள், தம் மனமார உய்த்து அகம் போந்து இருந்து உள்ளளவும்
இல்லாதனவும் உறுபுத்தகம்போலும் வயது முதிர்ந்த இந்தப் புலையர் குலப் பாணன்
புனைந்துரைக்கின்றான்.
-
புணர்ந்தநன் மேகச் சிறுநுண்
துளியின் சிறகொதுக்கி
உணர்ந்தனர் போல விருந்தனை
யால்உல கம்பரசும்
குணந்திகழ் ஞானசம் பந்தன்
கொடிமதில் கொச்சையின்வாய்
மணந்தவர் போயின ரோசொல்லு,
வாழி! மடக்குருகே.
தெளிவுரை : இப்பாடல் காமம் மிக்க கழிபடர் கிளவி என்னும் துறை. மடக்குருகே,
சொல்வாயாக என முடிக்க, கலந்த நன்மேகச் சிறுநுண் துளியில் சிறகை ஒதுக்கி,
அறிந்தவர்கள்போல இருந்தனை. பெரியோர்கள் போற்றும் குணக்குன்றாக விளங்கும் திருஞான
சம்பந்தன் வாழும் கொடி மதில் சீகாழியின் வாய் என்னைக் கூடியவர் சென்று விட்டாரா?
குருகே ! சொல்வாயாக. தலைவனைப் பிரிந்த தலைவி மிகவும் வருந்துதல்.
-
குருந்தலர் முல்லையங் கோவல
ரேற்றின் கொலைமருப்பால்
அருந்திற லாகத் துழுதசெஞ்
சேற்றரு காசனிதன்
பெருந்திற மாமதில் சண்பை
நகரன்ன பேரமைத்தோள்
திருந்திழை ஆர்வம்
. . . . . . . . . முரசே.
தெளிவுரை : குறுந்தின் மலர்கள் மலர்கின்ற முல்லை நிலத்துக் கோவலர் காளையின்
கொல்லுகின்ற கொம்புகளை, வீரமிக்க மார்பில் செஞ்சேறு தருகின்ற திருஞான சம்பந்தரின்
பெருந்திறலுடைய பெரிய மதில்களை உடைய சீகாழி நகரைப் போல, பெரிய மூங்கில் போன்ற
தோள்களையும் திருந்தியஆபரணங்களையும் உடைய மாதர்களின் ஆர்வம் முரசாகும்.
(ஈற்றில் சில சீர்கள் விடுபட்டுள்ளன.)
-
முரசம் கரைய,முன் தோரணம்
நீட, முழுநிதியின்
பரிசங் கொணர்வா னமைகின்
றனர்பலர்; பார்த்தினிநீ
அரிசங் கணைதலென் னாமுன்
கருது, அரு காசனிதன்
சுரிசங் கணைவயல் தந்த
நகரன்ன தூமொழிக்கே.
தெளிவுரை : தோழி தலைவனுக்கு நொதுமலர் வரவு உணர்த்தல். முரசங்கள் ஒலிக்க, வீட்டின்
முன்னால் தோரணங்கள் அசைய, பெருஞ்செல்வமாகிய பரிசம் கொண்டு வருவதை முன்னிட்டுப்
பலர் நிற்கின்றனர். பார்த்தும் இனி நீ இங்கு வராதே என்று சொல்வதற்கு முன்
திருஞானசம்பந்தரின் வளைவுகளை உடைய சங்குகள் நிறைந்த வயல்களை உடைய சீகாழியைப்
போன்ற அழகுடைய தலைவியை விரும்பி வராதே. விரைவில் மணந்து கொள் என்பதாம்.
-
மொழிவது, சைவ சிகாமணி
மூரித் தடவரைத்தோள்
தொழுவது, மற்றவன் தூமலர்ப்
பாதங்கள்; தாமங்கமழ்ந்
தெழுவது, கூந்தல் பூந்தா
மரையினி யாதுகொலோ!
மொழிவது, சேரி முப்புதை
மாதர் முறுவலித்தே.
தெளிவுரை : சொல்வது யாவும் சைவ சிகாமணியாகிய ஞான சம்பந்தரின் பெருமை பொருந்திய
விசாலமான மலைபோன்ற தோள்களைப் பற்றித்தான்; தொழுவது அவனுடைய தூமலர்
பாதங்களைத்தான். தாமம் கமழ்ந்து எழுவது ஞானசம்பந்தரது மாலையைத்தான். இனி சொல்ல
என்ன இருக்கிறது. இவ்வாறு சொல்வது முறுவலித்து சேரி முரிப்பதை மாதர்கள்தாம்.
-
வழிகெழு குண்டர்க்கு வைகைக்
கரையன்று வான்கொடுத்த
கலிகெழு திண்தோள் கவுணியர்
தீபன், கடலுடுத்த
ஒலிதரு நீர்வை யகத்தை
யுறையிட்ட தொத்துதிரு
மலிதரு வார்பனி யாம்மட
மாதினை வாட்டுவதே.
தெளிவுரை : இது தோழி பருவங்கண்டு இரங்குதல். வலிமை பொருந்திய சமணர்க்கு வைகைக்கரை
அன்று விண்ணகம் ஏறச் செய்தது. மகிழ்ச்சி பொருந்திய வலிய தோள்களை உடைய கவுணியர்
குலத்துக்கு விளக்குப் போன்ற திருஞானசம்பந்தர் கடலால் சூழப்பட்ட ஒலிமிக்க இந்த
உலகத்தை உறையிட்டதைப்போல் உதிரும் மலிதருவார் பனிமடமாதினை வாட்டுகிறது என்பதாம்.
பனிக்காலத்தில் தலைவி தனித்திருந்து துன்பப்படுவதைக் கூறுகின்றாள் தோளி.
-
வாட்டுவர் தத்தந் துயரை;வன்
கேழலின் பின்புசென்ற
வேட்டுவர் கோலத்து வேதத்
தலைவனை மெல்விரலால்,
தோட்டியல் காத னிவனென்று
தாதைக்குச் சூழ்விசும்பில்
காட்டிய கன்றின் கழல்திற
மானவை கற்றவரே.
தெளிவுரை : வலிய பன்றியின் பின்னால் வேட்டுவர் கோலத்தோடு சென்ற வேதத் தலைவனாகிய
சிவ பெருமானைத் தனது மெல்லிய விரலால் தோடுடைய செவியன் இவன் என்று தன் தந்தைக்கு
ஆகாயத்தில் காட்டிய ஞானசம்பந்தரின் பாதப் பெருமையைக் கற்றவர் தத்தம் துயரை
வாட்டுவர் என இயைக்க. அர்ச்சுனன் தவம் செய்தபோது நிகழ்ந்த காட்சியைச்
சுட்டுகின்றார்.
-
அவர்சென் றணுகுவர்; மீள்வதிங்கு
அன்னை யருகர்தம்மைத்
தவர்கின்ற தண்டமிழ்ச் சைவ
சிகாமணி சண்பையென்னப்
பவர்கின்ற நீள்கொடிக் கோபுரம்
பல்கதி ரோன்பரியைக்
கவர்கின்ற சூலத் தொடுநின்று
தோன்றுங் கடிநகரே.
தெளிவுரை : (துறை) கண்டோர் செவிலிக்கு உணர்த்துதல். சமணர்களை வாதில் வென்ற
தண்டமிழ்ச் சைவ சிகாமணியாகிய ஞானசம்பந்தரின் சீகாழியைப் போன்ற உயர்ந்த கொடிகள்
கட்டப்பட்ட கோபுரங்களின் சூரியனுடைய குதிரையைக் கவர்கின்ற சூலத்தொடு நின்று
தோன்றும் கடி நகரைத் தலைவனும் தலைவியும் சென்று சேர்ந்திருப்பர். ஆதலால் அன்னையே!
நீ மீள்வாயாக என்றனர். இங்கு நகர் என்றது தலைவனது நகர்.
-
நகரங் கெடப்பண்டு திண்தேர்
மிசைநின்று, நான்மறைகள்
பகரங் கழலவ னைப்பதி
னாறா யிரம்பதிகம்
மகரங் கிளர்கடல் வையம்
துயர்கெட வாய்மொழிந்த
நிகரங் கிலிகலிக் காழிப்
பிரானென்பர், நீணிலத்தே.
தெளிவுரை : திரிபுரங்கள் அழிய முன்பு வலிய தேர்மீது நின்று, நான்கு வேதங்களும்
துதிக்கும் சிவபெருமானைப் பதினாறாயிரம் பதிகம், மகர மீன்கள் வாழ்கின்ற கடலால்
சூழப்பட்ட இந்த உலகத்தின் துன்பம் நீங்க, திருவாய் மலர்ந்தருளியவர்
சீகாழிப் பெருமானாகிய ஞானசம்பந்தர் என்று நீண்ட உலகத்தார் கூறுவர். அழிந்தவை போக
எஞ்சியுள்ளவை இப்போது வெளிவந்துள்ளன.
-
நிலம் ஏறியமருப் பின்திரு
மாலும், நிலம்படைத்த
குலம் ஏறியமலர்க் கோகனை
தத்தய னுங்கொழிக்குஞ்
சலம் ஏறியமுடி தாள்கண்
டிலர்,தந்தை காணவன்று
நலம் ஏறியபுகழ்ச் சம்பந்தன்
காட்டிய நாதனையே.
தெளிவுரை : தந்தையாகிய சிவபாத இருதயர் காணுமாறு அன்று பெரும்புகழ் பெற்ற
ஞானசம்பந்தர் காட்டிய சிவபெருமானை, வராக அவதாரத்தில் பூமியைத் தனது கொம்புகளால்
எடுத்த திருமாலும், இவ்வுலகைப் படைத்த மலர்களில் சிறந்து விளங்குகிற தாமரையில்
வாசம் செய்கின்ற பிரமதேவனும் நீர்ப் பெருக்கினையுடைய கங்கையைக் கொண்ட அந்த
இறைவனது முடியையும் பாதங்களையும் காண முடியவில்லை. திருமால் சிவனது பாதத்தையும்,
பிரமன் அவனது முடியையும் காணாமல் திரும்பினர் என்பது புராணம்.
-
நாதன் நனிபள்ளி சூழ்நகர்
கானக மாக்கிஃதே
போதின் மலிவய லாக்கிய
கோனமர் பொற்புகலி
மேதை நெடுங்கடல் வாருங்
கயலோ? விலைக்குளது
காதி னளவும் மிளிர்கய
லோ?சொல்லு; காரிகையே.
தெளிவுரை : இது தலைவன் கூற்று: காதளவோடிய கலக பாதகக் கண்களை உடையவளே !
சிவபெருமான் கோயில் கொண்டுள்ள நனிப்பள்ளி என்னும் தலத்தைச் சுற்றியுள்ள நகரைக்
கானகமாக்கிப் பிறகு அதையே மலர்களையுடைய வயலாக்கிய ஞானசம்பந்தப் பெருமானின்
சீர்காழிக் கடலில் பிடிக்கும் மீன் விலைக்கு வந்தது என்றான்.
-
கைம்மையி னால்நின் கழல்பர
வாது,கண் டார்க்(கு)இவனோர்
வன்மைய னேயென்னும் வண்ணம்
நடித்து, விழுப்பொருளோ(டு)
இம்மையில் யானெய்து மின்பங்
கருதித் திரிதருமத்
தன்மையி னேற்கும் அருளுதி
யோ!சொல்லு சம்பந்தனே.
தெளிவுரை : இழி தகைமையினால் உன்னுடைய திருவடிகளை வணங்காமல், கண்டார்க்கு இவனோர்
வன்மையனே என்னும் வண்ணம் நடித்து, மேலான பொருளோடு இப்பிறப்பில் யான் அடையும்
இன்பத்தைப் பெரிதெனக் கருதித் திரிகின்ற அத் தன்மையுடைய எனக்கு அருளுவாயா?
சம்பந்தனே சொல்வாயாக.
-
பந்தார் அணிவிரற் பங்கயக்
கொங்கைப் பவளச்செவ்வாய்க்
கொந்தார் நறுங்குழல் கோமள
வல்லியைக் கூறருஞ்சீர்
நந்தா விளக்கினைக் கண்டது
நானெப்பொழுது முன்னுஞ்
சந்தார் அகலத் தருகா
சனிதன் தடவரையே.
தெளிவுரை : தலைவன் பாங்கனுக்குத் தலைவியின் இயல்பும் இடமும் உரைத்தல்: பந்துகளைப்
பிடிக்கின்ற அழகிய கைவிரல், தாமரை போன்ற கொங்கை, பவளம் போன்ற செவ்வாய், கொந்தார்
நறுங்குழலையுடைய அழகிய வல்லி போன்றவளை, நந்தா விளக்கினை நான் இதற்கு முன்பு
கண்டது ஞானசம்பந்தரது தடவரையில்தான் என்றவாறு.
-
வரைகொண்ட மாமதில் சண்பைத்
தலைவனை வாழ்த்தலர்போல்
நிரைகொண்டு வானோர் கடைந்ததின்
நஞ்ச நிகழக்கொலாம்,
நுரைகொண்டு மெய்ப்பரத் துள்ளஞ்
சுழலநொந் தோரிரவும்
திரைகொண் டலமரு மிவ்வகல்
ஞாலஞ் செறிகடலே.
தெளிவுரை : தலைவி கூற்று: மலையைப்போல் உயர்ந்து விளங்கும் மதில்களையுடைய
சீகாழியின் தலைவனை வாழ்த்தாதவர்போல, வரிசையாக நின்று திருப்பாற் கடலைக்
கடைந்தபோது ஆலகால விஷம் வெளிப்பட்டது போன்றும், நுரைதள்ளி உடம்பு வியர்த்து
உள்ளம் சுழல வருந்தி ஓர் இரவு முழுவதும் அலைகளை வீசும் கடல் போலவும் இவள்
வருந்துகின்றாள் என்பதாம்.
-
கடலன்ன பொய்மைகள் செய்யினும்
வெய்ய கடுநரகத்
திடநம னேவுதற் கெவ்விடத்
தானிருஞ் செந்தமிழால்
திடமன்னு மாமதில் சண்பைத்
தலைவன்செந் தாமரையின்
வடமன்னு நீள்முடி யானடிப்
போதவை வாழ்த்தினமே.
தெளிவுரை : கடல் அளவு பொய்யான காரியங்களைச் செய்தாலும், வெய்ய கடு நரகத்தில் நமன்
ஏவுதற்கு எவ்விடத்தான் இருஞ் செந்தமிழால் திடமான நிலைபெற்ற மதிலை உடைய சீகாழித்
தலைவனாகிய ஞான சம்பந்தன் செந்தாமரையின் வட மன்னு நீள் முடியான் திருவடிகளைத்
தினமும் வாழ்த்தினோம்.
-
வாழ்த்துவ தெம்பர மேயாகும்,
அந்தத்து வையமுந்நீர்
ஆழ்த்திய காலத்து மாழா
தது,வரன் சேவடியே
ஏத்திய ஞானசம் பந்தற்
கிடமிசைத் தும்பிகொம்பர்க்
காத்திகழ் கேதகம், போதக
மீனுங் கழுமலமே.
தெளிவுரை : வாழ்த்துவது எம் பாரமாகும். ஊழிக் காலத்தில் கடல் ஆழ்த்தியபோது
மயங்காமல் இருந்தது சிவபெருமானது பாதங்களே. சதமென்று நம்பித் துதித்த
ஞானசம்பந்தருக்கு இடம் இசைத்து தும்பிக் கொம்பர் சோலைகளில் தாழைப் போது அகம்
ஈனும் சீகாழியே.
ஊழிக் காலத்தில் சீகாழி எஞ்சி நின்றது என்பதாம்.
-
மலர்பயில் வாட்கண்ணி, கேள்;கண்ணி
நீண்முடி வண்கமலப்
பலர்மயில் கீர்த்திக் கவுணியர்
தீபன் பகைவரென்னத்
தலைபயில் பூம்புனங் கொய்திடு
மே?கணி யார்புலம்ப
அலர்பயி லாமுன் பறித்தன
மாகில் அரும்பினையே.
தெளிவுரை : தோழி தலைவிக்கு உரைத்தல்: மலரைப் போலவும் வாளைப் போலவும் விளங்குகின்ற
கண்களை உடையவளே ! நான் சொல்வதைக் கேள். கண்ணி நீண்முடி வண்கமலம்; பலர் பயில்
கீர்த்தியை உடைய கவுணியர் குல விளக்காகிய ஞான சம்பந்தரின் பகைவர் என்னும்படி நாம்
காவல் செய்யும் தினைபுனங் கொய்திடுவோம். வேங்கை மரம் ஊரார் பழிச்சொல்
பூப்பதற்குமுன் அரும்பினைப் பறித்துவிட்டது என்றவாறு.
-
அரும்பின அன்பில்லை; யர்ச்சனை
யில்லை; யரன்நெறியே
விரும்பின மாந்தர்க்கு மெய்ப்பணி
செய்கிலன்; பொய்க்கமைந்த
இரும்பன வுள்ளத்தி னேற்கெங்ங
னேவந்து நேர்பட்டதால்,
கரும்பன நீள்வயல் சூழ்காழி
நாதன் கழலடியே.
தெளிவுரை : அரும்பின அன்பு இல்லை. துதி செய்வதும் இல்லை. சிவனடியார்களுக்குத்
தொண்டு செய்வதும் இல்லை. பொய்யோடு கூடிய இரும்பைப் போன்ற உள்ளத்தை உடையவனாகிய
எனக்கு எப்படி வந்து வாய்த்தது, கரும்பு விளையும் நீண்ட வயல்கள் சூழ்ந்த சீகாழி
நாதனாகிய ஞானசம்பந்தரது திருவடி?
அவரது திருவடி எப்படி எனக்கு நேர்பட்டது என வியக்கின்றார்.
-
அடியால் அலர்மிதித் தாலரத்
தம்பில் கமிர்தமின்(று)இக்
கொடியா னொடும்பின் நடந்ததெவ்
வா(று)அலர் கோகனதக்
கடியார் நறுங்கண்ணி ஞானசம்
பந்தன் கருதலர்போல்
வெடியா விடுவெம் பரல்சுறு
நாறு வியன்கரத்தே.
தெளிவுரை : செவிலி இரங்குதல்: அடியால் அலர் மிதித்தால் குருதி வெளிப்படுகின்ற
அமிர்தத்தை ஒத்த தலைவி இன்று இக் கொடியானொடும் பின் நடந்தது எவ்வாறு? மலர்ந்த
தாமரை மலர் மணம் வீசுகின்ற தலைமாலையை உடைய ஞானசம்பந்தப் பெருமானது பகைவர்கள்
சேர்கின்ற கொடிய பரற்கற்கள் நிரம்பிய தீய்ந்த நாற்றம் வீசுகின்ற இந்த பாலை வழியே
எப்படிச் சென்றாளோ என்று செவிலி வருந்துகிறாள்.
-
சுரபுரத் தார்தம் துயருக்
கிரங்கிச் சுரர்கள்தங்கள்
பரபுரத் தார்தந் துயர்கண்
டருளும் பரமன்மன்னும்
அரபுரத் தானடி எய்துவ
னென்ப, அவனடிசேர்
சிரபுரத் தானடி யாரடி
யேனென்றும் திண்ணனவே.
தெளிவுரை : தேவர்களுடைய துயரத்துக்கு இரங்கி, தேவர்களுக்குப் பகைவர்களாகிய
திரிபுராதிகள் செய்யும் துன்பங்களைப் போக்கி அருளும் சிவபெருமானது திருவடிகளை
அடைவேன் என்பது, அவனடி சேர்ந்த திருஞானசம்பந்தரது அடியார்க்கு அடியேன் என்னும்
உறுதி உடையேன் ஆவேன்.
-
திண்ணென வார்சென்ற நாட்டிடை
யில்லைகொல்! தீந்தமிழோர்
கண்ணென வோங்கும் கவுணியர்
தீபன்கை போல்பொழிந்து
விண்ணின வாய்முல்லை மெல்லரும்
பீன,மற் றியாம்மெலிய
எண்ணின நாள்வழு வா(து)இரைத்(து)
ஓடி எழுமுகிலே.
தெளிவுரை : இது தலைவி கூற்று: மனவுறுதியுடைய நம் தலைவர் சென்ற நாட்டில்
தீந்தமிழோர் கண்ணென ஓங்கும் கவுணியர் குல விளக்காகிய திருஞான சம்பந்தர் கைபோல்
பொழிந்து, முல்லை மெல்லரும்பு தோன்றவும், யாம் மெலியவும் எண்ணின நாள் தப்பாமல்
ஒன்று சேர்ந்து முகிலே ஆகாயத்தில் எழுவாயாக என்று கூட்டுக. கார் காலம் வந்தால்
தலைவர் திரும்பி வருவார் என்பதாம்.
-
எழுவாள் மதியால் வெதுப்புண்(டு)
அலமந் தெழுந்துவிம்மித்
தொழுவாள், தனக்கின் றருளுங்
கொலாந்,தொழு நீரவைகைக்
குழுவா யெதிர்ந்த உறிகைப்
பறிதலைக் குண்டர்தங்கள்
கழுவா வுடலம் கழுவின
வாக்கிய கற்பகமே.
தெளிவுரை : தோழி இரங்குதல்: விண்ணகத் திங்களால் வேதனையடைந்து வருந்தி எழுந்து
தேம்பியழுது வணங்குவாள். இன்று எனக்கு உன் அருள் கிடைக்குமோ! வைகைக் கரையில்
ஒன்றுகூடி எதிர்த்த, கையில் உறியையும், பறித்த தலையையும் உடைய சமணர்களுடைய கழுவாத
உடம்புகள் கழுவில் ஏறும்படி செய்த கற்பகம் போன்ற சம்பந்தரே என்று தலைவி
ஏங்குகிறாள், என்க.
-
கற்பா நறவம் மணிகொழித்
துந்தும் அலைச்சிலம்பா!
நற்பா மொழியெழில் ஞானசம்
பந்தன் புறவமன்ன
விற்பா நுதலிதன் மென்முலை
யின்னிளம் செவ்விகண்டிட்(டு)
இற்பா விடும்வண்ண மெண்ணுகின்
றாளம்ம! வெம்மனையே.
தெளிவுரை : தலைவியை இற்செறிப்பர் என்று தோழி தலைவனுக்குக் கூறுதல். கற்பா நறவ மணி
கொழித்து உந்து மலை நாட்டுத் தலைவனே ! தேவாரப் பாடல்களை அருளிய எழில்
ஞானசம்பந்தருடைய புறவம் என்னும் பெயருடைய சீகாழியைப் போன்ற வில் போன்ற நெற்றியை
உடைய தலைவியின் இளம் முலைகளைப் பார்த்து, நற்றாய் இற்செறிக்குமாறு எண்ணுகின்றாள்.
-
எம்மனை யா,எந்தை யாயென்னை
யாண்டென் துயர்தவிர்த்த
செம்மலர் நீள்முடி ஞானசம்
பந்தன் புறவமன்னீர்!
வெம்முனை வேலென்ன வென்னமிளிர்ந்து
வெளுத்(து) அரியேன்(று)
உம்மன வோவல்ல வோவந்தெ
னுள்ளத் தொளிர்வனவே.
தெளிவுரை : தலைவன் கூற்று: தலைவியின் கண்ணைப் புகழ்ந்தவாறு. எம் தாய் போன்றவனே !
எம் தந்தை போன்றவனே ! என் துயர் தவிர்த்த செம்மலர் நீள்முடியாய் என்று
போற்றப்படும் ஞானசம்பந்தரது புறவம் என்னும் சீகாழியைப் போன்றவர்களே ! போரில் வேல்
போன்று மிளிர்ந்து, வெளுத்து, செவ்வரி படர்ந்து உம் மனவோ அல்லவோ வந்து என்
உள்ளத்து ஒளிர்கின்றன எனத் தலைவியின் கண்களைத் தலைவன் புகழ்கின்றான்.
-
ஒளிறு மணிப்பணி நாட்டும்,
உலகத்தும் உம்பருள்ளும்
வெளிறு படச்சில நிற்பதுண்
டே?மிண்டி மீனுகளும்
அளறு பயற்சண்பை நாத
னமுதப் பதிகமென்னுங்
களிறு விடப்புகு மேல்தொண்டர்
பாடும் கவிதைகளே.
தெளிவுரை : ஒளி விடுகின்ற மணிகளையுடைய நாகர் உலகிலும் பூவுலகிலும்,
தேவலோகத்திலும் நாணத்தால் வெளுக்க சில நிற்பதுண்டே, நெருங்கி மீன் உகளும் சேறு
நிரம்பிய சண்பை என்னும் சீகாழி நாதனாகிய ஞானசம்பந்தர் அமுதம் போன்ற பதிகக்
களிறுவிட தொண்டர் பாடும் கவிதைகள்மேல் புகும்.
-
கவிக்குத் தகுவன, கண்ணுக்
கினியன, கேட்கில்இன்பம்
செவிக்குத் தருவன, சிந்தைக்
குரியன பைந்தரளம்
நவிக்கண் சிறுமியர் முற்றில்
முகந்துதம் சிற்றில்தொறும்
குவிக்கத் திரைபரக் குங்கொச்சை
நாதன் குரைகழலே.
தெளிவுரை : (கொச்சை நாதன் குரை கழல்கள்) கவிக்குத் தகுவன; கண்ணுக்கு இனியன;
கேட்கில் இன்பம் செவிக்குத் தகுவன; சிந்தைக்கு உரியன; பசுமையான முத்துக்களை
மான்போன்ற கண்களை உடைய சிறுமியர் முற்றில் முகந்து தம் சிற்றில் தொறும் குவிக்க,
அலை வீசுகின்ற சீகாழி நாதன் குரைகழல்கள் உதவும் என்க.
-
கழல்கின்ற ஐங்கணை, யந்தியும்,
அன்றிலுங் கால்பரப்பிட்(டு)
அழல்கின்ற தென்றலும் வந்திங்
கடர்ப்ப,வன் றாயிழைக்காச்
சுழல்கின்ற நஞ்சந் தணித்தவன்
தன்னைத் தொடர்ந்துபின்போய்
உழல்கின்ற நெஞ்சமிங் கென்னோ,
இனிஇன் றுறுகின்றதே.
தெளிவுரை : இது தலைவி கூற்று: காமன் தன் ஐங்கணைகளையும் செலுத்துதற்குரிய மாலை
நேரமும், அன்றில் பறவையும், கால் பரப்பி அழல்கின்ற தென்றல் காற்றும், இங்கு வந்து
துன்புறுத்த, அன்று மணக்க விரும்பியவனைப் பாம்பு தீண்ட, அருகில் நின்று அழுது
கொண்டிருந்த பெண்ணின் துயரை நீக்க விஷத்தை இறங்கச் செய்த ஞானசம்பந்தனைத்
தொடர்ந்து போய் உழல்கின்ற நெஞ்சம், இங்கு எதற்காக என்னை வருத்துகின்றது?
-
உறுகின்ற வன்பினோ(டு) ஒத்திய
தாளமு முள்ளுருகிப்
பெறுகின்ற வின்பும், பிறைநுதல்
முண்டமுங் கண்டவரைத்
தெறுகின்ற வாறென்ன செய்தவ
மோ!வந்தென் சிந்தையுள்ளே
துறுகின்ற பாதன் கழுமலம்
போலுந் துடியிடைக்கே.
தெளிவுரை : இது தலைவன் கூற்று: பொருந்திய அன்போடு ஒத்திய தாளமும் உள்ளுருகிப்
பெறுகின்ற இன்பமும் பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றியும் கண்டவரை வருத்துகின்றவாறு
என்னே! நான் செய்த தவத்தின் பயனோ வந்து என் சிந்தையுள்ளே பொருந்தி இருக்கின்ற
பாதனுடைய (சம்பந்தர்) கழுமலம் (சீகாழி) போன்றும், உடுக்கை போன்றும் உள்ள இடையினை
உடைய தலைவிக்கு.
-
இடையு மெழுதா தொழியலும்
ஆம்;இன வண்டுகளின்
புடையு மெழுதினும் பூங்குழ
லொக்குமப் பொன்னனையாள்
நடையும் நகையுந் தமிழா
கரன்தன் புகலிநற்றேன்
அடையும் மொழியு மெழுதிடின்,
சால அதிசயமே.
தெளிவுரை : தோழி எழுதரிதென்ன ஏந்தலை விலக்குதல். நடை, நகை, மொழி என்பவற்றை எழுத
இயலாது என்றபடி. இடையும் எழுதாது ஒழியலுமாம். இன வண்டுகளின் புடையும் எழுதிலும்
பூங்குழல் ஒக்கும். அப் பொன் அனையாள் நடையும் நகையும் தமிழாகரன் ஆகிய
ஞானசம்பந்தரின் சீகாழியின் நற்றேன் அடையும் மொழியும் எழுதினால் மிகவும்
அதிசயமாகும்.
-
மேனாட் டமரர் தொழவிருப்
பாரும், வினைப்பயன்கள்
தாநாட் டருநர கிற்றளர்
வாருந் தமிழர்தங்கள்
கோனாட்(டு) அருகர் குழாம்வென்ற
கொச்சையர் கோன்கமலப்
பூநாட்டு அடிபணிந் தாருமல்
லாத புலையருமே.
தெளிவுரை : பணிந்தார் அமரர் தொழ இருப்பார். புலையர் தளர்வர் என்றபடி. தமிழர்
தங்கள் கோனாகிய பாண்டியனை நாடி இருந்த அருகர் குழாத்தை வென்ற கொச்சையர் (சீகாழி)
கோனாகிய ஞானசம்பந்தரின் பாதங்களைப் பணிந்தவர், அமரர் தொழ இருப்பர். அவ்வாறு
பணியாதவர் புலையர். அவர்கள் அரு நரகில் வீழ்ந்து தளர்வர்.
-
புலையடித் தொண்டனைப் பூசுர
னாக்கிப் பொருகயற்கண்
மலைமடப் பாவைக்கு மாநட
மாடும் மணியையென்தன்
தலையிடைப் பாதனைக் கற்றாங்
குரைத்தசம் பந்தனென்னா,
முலையிடைப் பொன்கொண்டு, சங்கிழந்
தாளென்தன் மொய்குழலே.
தெளிவுரை : இது செவிலி கூற்று: திருநாளைப் போவார் நாயனார் சரிதம் கூறப்படுகிறது.
நந்தனாரை அந்தணனாக்கி, உமாதேவியாருக்காக திருநடனம் செய்கின்ற இறைவனைப் பாடிய
ஞானசம்பந்தனை நினைந்து முலையிடை பசலை பூத்து, கைவளைகளை இழந்தாள் என் மொய்குழலாள்.
-
குழலியல் இன்கவி ஞானசம்
பந்தன் குரைகழல்போல்
கழலியல் பாதம் பணிந்தே
னுனையுங் கதிரவனே!
தழலியல் வெம்மை தணித்தருள்
நீ;தணி யாதவெம்மை
அழலியல் கான்நடந் தாள்வினை
யேன்பெற்ற வாரணங்கே.
தெளிவுரை : இது நற்றாய் சுரம் தணிவித்தல் என்னும் துறை. குழலைப் போன்ற இனிமையை
உடைய கவிகளைப் பாடிய ஞானசம்பந்தரது கழலைப் போல், கதிரவனே ! உன் பாதங்களையும்
பணிகின்றேன். தீப் போன்ற உன் வெம்மையைத் தணித்தருள்வாயாக. என் மகள் இந்த வெப்பம்
நிறைந்த பாலை வழியே நடந்து சென்றாள்.
-
அணங்கமர் யாழ்முரித்(து) ஆண்பனை
பெண்பனை யாக்கி,அமண்
கணங்கழு வேற்றிக் கடுவிடந்
தீர்த்துக் கதவடைத்துப்
பிணங்கலை நீரெதி ரோடஞ்
செலுத்தின, வெண்பிறையோ(டு)
இணங்கிய மாடச் சிரபுரத்
தான்தன் இருந்தமிழே.
தெளிவுரை : திருஞானசம்பந்தரது தேவாரப் பாடல்கள் மாதங்கி என்னும் தெய்வம் அமர்
யாழ் முரித்து, ஆண் பனையைப் பெண் பனையாக்கி சமணர்களைக் கழுவேற்றி, கொடிய
விஷத்தைத் தீர்த்து, திருமறைக் காட்டில் கதவை மூடி, பிணங்கு அலைநீர் எதிர் ஓடம்
செலுத்தின பிறையோடு இணங்கிய மாடங்களை உடைய சீகாழி, ஞானசம்பந்தரது பாடல்கள் இந்த
அற்புதங்களைச் செய்தன.
-
இருந்தண் புகலி,கோ லக்கா,
வெழிலா வடுதுறை,சீர்
பொருந்தும் அரத்துறை போனகம்,
தாளம்,நன் பொன், சிவிகை
அருந்திட ஒற்ற,முத் தீச்செய
வேற வரனளித்த
பெருந்தகை சீரினை யெம்பர
மோ!நின்று பேசுவதே.
தெளிவுரை : ஞானசம்பந்தருக்குப் புகலியில் போனகத்தை அருந்திடவும், திருவோலக்காவில்
தாளத்தை ஒத்தவும், திருவாவடுதுறையில் பொன்னை வேள்வி செய்யவும், திருநெல்வாயில்
அரத்துறையில் சிவிகையை ஏறவும் சிவபெருமான் அளித்தார்.
மூன்று அடுக்கு நிரல் நிறைப் பொருள்களை இவ்வாறு பொருத்த வேண்டும். இத்தகைய பெருஞ்
சிறப்பை என்னால் புகழ்ந்துரைக்க முடியுமோ என்கிறார்.
-
பேசுந் தகையதன் றேயின்று
மன்றும் தமிழ்விரகன்
தேசம் முழுதும் மழைமறந்(து)
ஊண்கெடச் செந்தழற்கை
ஈசன் திருவரு ளாலெழில்
வீழி மிழலையின்வாய்க்
காசின் மழைபொழிந் தானென்றிஞ்
ஞாலம் கவின்பெறவே.
தெளிவுரை : இப் பாடலில் திருஞானசம்பந்தர் திருவீழி மிழலையில் பொன் காசு பெற்றமை
குறிப்பிடப்பட்டது. சொல்ல முடியாத அளவு திருஞானசம்பந்தர் தேசம் முழுவதும் மழை
பெய்யாமல் பஞ்சம் ஏற்பட்டு உண்ண உணவில்லாமல் வாடியபோது, தீயைக் கையிலேந்திய
சிவபெருமான் திருவருளால் திருவீழி மிழலையில் காசு மழை பொழிந்து இஞ்ஞாலம் கவின்
பெறச் செய்தார்.
-
பெறுவது நிச்சயம் அஞ்சல்;நெஞ்
சேபிர மாபுரத்து
மறுவறு பொற்கழல் ஞானசம்
பந்தனை வாழ்த்துதலால்,
வெறியுறு கொன்றை மறியுறு
செங்கை விடையெடுத்த
பொறியுறு பொற்கொடி யெம்பெரு
மானவர் பொன்னுலகே.
தெளிவுரை : ஞானசம்பந்தனை வாழ்த்துவதால் பொன்னுலகு பெறுவது நிச்சயம் என்று
கூட்டுக.
நெஞ்சமே ! அஞ்சாதே ! பிரமாபுரத்து (சீகாழி) மறுவது பொற்கழல் ஞானசம்பந்தரை
வாழ்த்துவதால், மணம் பொருந்திய கொன்றை மாலையையும், கையில் மான் கன்றையும், விடைக்
கொடியையும் உடைய சிவ பெருமானது பொன்னுலகைப் பெறுவது நிச்சயம் என்க.
-
பொன்னார் மதில்சூழ் புகலிக்
கரசை, யருகர்தங்கள்
தென்னாட் டரணட்ட சிங்கத்
தினை,யெஞ் சிவனிவனென்(று)
அந்நாள் குதலைத் திருவாய்
மொழிக ளருளிச்செய்த
என்னானை யைப்பணி வார்க்கில்லை,
காண்க யமாலயமே.
தெளிவுரை : அழகிய மதில் சூழ்ந்த புகலிக்கு (சீகாழி) அரசை, சமணர்களது தென்னாட்டு
மதிலை அழித்த சிங்கத்தினை, சிவன் இவன் என்று அந்நாள் குதலைத் திருவாய் மொழிகள்
அருளிச் செய்த என்னானைப் பணிவார்க்கு, இயமன் திருக்கோயில் இல்லை. மரணமிலாப்
பெருவாழ்வு பெறுவர் என்பதாம்.
-
மாலையொப் பாகும் பிறைமுன்பு
நின்று, மணிகுறுக்கி
வேலையைப் பாடணைத்(து) ஆங்கெழில்
மன்மதன் வில்குனித்த
கோலையெப் போதும் பிடிப்பன்
வடுப்படு கொக்கினஞ்சூழ்
சோலையைக் காழித் தலைவன்
மலரின்று சூடிடினே.
தெளிவுரை : வடுவுண்டாகும் மாமரக் கூட்டம் சூழ்ந்த சோலைகளை உடைய சீகாழித்
தலைவனாகிய ஞானசம்பந்தரது மலரை இன்று சூடிடின், மாலைக் காலத்தில் தோன்றும் பிறைச்
சந்திரன் முன்பு நின்று மணி குறுக்கி, கடல் ஒலியைக் கேட்டு ஆங்கு எழில் மன்மதன்
வளைத்த வில்லில் அம்பை எப்போதும் பிடிப்பன். காதல் வயப்பட்டு வருந்துவாள்
என்பதாம்.
-
சூடுநற் றார்த்தமி ழாகரன்
தன்பொற் சுடர்வரைத்தோள்
கூடுதற்(கு) ஏசற்ற கொம்பினை
நீயுங் கொடும்பகைநின்(று)
ஆடுதற் கேயத்த னைக்குனை
யே,நின்னை யாடரவம்
வாடிடக் காரும் மறுவும்
படுகின்ற வாண்மதியே.
தெளிவுரை : சூடுநல் தார்த்தமிழாகரனாகிய ஞானசம்பந்தர், தன்னுடைய அழகிய மலை போன்ற
தோளைக் கூடுதற்கு ஏங்கிப்போன பெண்ணை நீயும் கொடுமைப் படுத்தி நின்று ஆடுகின்றாய்.
உன்னை ஆடு அரவம் வாடிட மேகமும் மறுவும் படுகின்ற வாண்மதியே ! இது உனக்குத் தகுமோ?
இதைச் சந்திரோபாலம்பனம் என்பர்.
-
மதிக்க தகுநுதல் மாதொடும்
எங்கள் மலையில்வைகித்
துதிக்கத் தகுசண்பை நாதன்
சுருதி கடந்துழவோர்
மிதிக்கக் கமலம் முகிழ்த்தண்
தேனுண்டு, மிண்டிவரால்
குதிக்கக் குருகிரி யுங்கொச்சை
நாடு குறுகுமினே.
தெளிவுரை : தலைவனைத் தோழி விருந்துண்டு செல்க எனக் கூறுதல். போற்றக்கூடிய
நெற்றியை உடைய தலைவியோடும் எங்கள் மலையில் தங்கி துதிக்கத்தகும் ஞானசம்பந்தரது
சுருதி கடந்து உழவோர் மிதிக்கக் கமலம் முகிழ்த்த தண் தேன் உண்டு, நெருங்கி வரால்
குதிக்க, பறவைக் கூட்டங்கள் அஞ்சியோடும் சீகாழி நாட்டை அடையுங்கள்.
-
குறுமனம் உள்கல வாத்தமி
ழாகரன் கொச்சையன்ன
நறுமலர் மென்குழ லாயஞ்ச
லெம்மூர் நகுமதிசென்(று)
உறுமனை யொண்சுவ ரோவியக்
கிள்ளைக்கு நும்பதியிற்
சிறுமிகள் சென்றிருந்(து) அங்கையை
நீட்டுவர்; சேயிழையே.
தெளிவுரை : தலைவன் தன் இடம் அணித்து என்றல்.
சேயிழையே ! குறுமன முள் கலவாத் தமிழாகரனாகிய ஞானசம்பந்தரது சீகாழியைப் போன்ற
நறுமலர் மென்குழலாய் ! அஞ்சாதே. எம்மூர் அருகில்தான் உள்ளது. எங்கள் வீட்டின் ஒண்
சுவர் ஓவியத்தில் எழுதப்பட்ட கிளிக்கு, உங்கள் ஊர்ச் சிறுமிகள் சென்றிருந்து
அங்கையை நீட்டுவர்.
-
இழைவள ராகத்து ஞான
சம்பந்த னிருஞ்சுருதிக்
கழைவளர் குன்று கடத்தலுங்
காண்பீர் கடைசியர்,நீள்
முழைவளர் நண்டு படத்தடஞ்
சாலிமுத் துக்கிளைக்கும்
மழைவளர் நீள்குடு மிப்பொழில்
சூழ்ந்த வளவளலே.
தெளிவுரை : இது கண்டோர் கூற்று: பூணூல் தங்கிய மார்பை உடைய ஞானசம்பந்தரது பெரிய
தமிழ் வேதம் போல் மூங்கில் உயர்ந்து வளர்ந்துள்ள குன்றைக் கடந்ததும் வயலில் வேலை
செய்யும் பெண்களைக் கண்டு நீண்ட வளைகளில் வாழும் நண்டுகள் ஓடியதால் ஆடிய
நெல்பயிர் முத்துக்களை உதிர்க்கும் மேகம் படிகின்ற சோலைகள் சூழ்ந்த வள வயலைக்
காண்பீர்கள்.
-
வயலார் மருகல் பதிதன்னில்,
வாளர வாற்கடியுண்(டு)
அயலா விழுந்த அவனுக்
கிரங்கி யறிவழிந்த
கயலார் கருங்கண்ணி தன்துயர்
தீர்த்த கருணைவெள்ளப்
புயலார் தருகையி னைனென்னத்
தோன்றிடும் புண்ணியமே.
தெளிவுரை : வயல் சூழ்ந்த திருமருகல் என்னும் ஊரில், பாம்பினால் கடியுண்டு
பக்கத்தில் விழுந்தவனுக்கு இரங்கி மூர்ச்சையுற்ற மீனைப் போன்ற கரிய கண்களை
உடையவளது துன்பத்தைத் தீர்த்த கருணை வெள்ள புயலார் தரு கையினான் ஆகிய
ஞானசம்பந்தர் என்று சொல்லத் தோன்றிடும் புண்ணியமே.
-
புண்ணிய நாடு புகுவதற்
காகக் புலனடக்கி,
எண்ணிய செய்தொழில் நிற்ப(து)எல்
லாருமின் றியானெனக்கு
நண்ணிய செய்தொழில் ஞானசம்
பந்தனை நந்தமர்நீர்க்
கண்ணியன் மாடக் கழுமலத்
தானைக் கருதுவதே.
தெளிவுரை : புண்ணிய நாடாகிய முத்தியில் புக எல்லாரும் புலன் அடக்குதல் ஆகியன
செய்வர். யானோ ஞான சம்பந்தனைக் கருதுவதே செய்வன் என்பது கருத்து. தேவருலகு (வீடு
பேற்றிற்குரிய இடம்) புகுவதற்காக ஐம்புலன்களையும் அடக்கி, எண்ணிய செய்தொழில்
நிற்பது எல்லாரும் இன்றி யான் எனக்கு நண்ணிய செய்தொழில் ஞானசம்பந்தனைக் கண்ணில்
நீர் பெருகுமாறு வழிபடும் உயர்ந்த மாடங்களை உடைய சீகாழிப் பெருமானைக்
கருதுவதுதான் என்க.
-
கருதத் தவவருள் ஈந்தருள்
ஞானசம் பந்தன்சண்பை
இரதக் கிளிமொழி மாதே!
கலங்கல் இவருடலம்
பொருதக் கழுநிரை யாக்குவன்;
நுந்தமர் போர்ப்படையேல்
மருதச் சினையில் பொதும்பரு
ளேறி மறைகுவனே.
தெளிவுரை : இடைச் சுரத்துப் படை கண்டு தலைவன் கூறுதல்.
கருதத் தவ அருள் ஈந்தருள் ஞானசம்பந்தரது சீகாழியில், சுவையுள்ள கிளிப்பேச்சு மாதே
! கலங்காதே. இவர்களுடைய உடம்பை அழிப்பேன். உன்னுடைய அண்ணன்மார் படையாக இருந்தால்,
மருத மரக்கிளைகள் நெருங்கிய சோலையில் ஏறி மறைந்து கொள்வேன். உன் சுற்றத்தார்
துன்பப்படக் கூடாதல்லவா?
-
மறைமுழங் குங்குழ லார்கலி
காட்ட, வயற்கடைஞர்
பறைமுழங் கும்புக லித்தமி
ழாகரன் பற்றலர்போல
துறைமுழங் குங்கரி சீறி,
மடங்கள் சுடர்ப்பளிங்கின்
அறைமுழங் கும்வழி நீவரிற்
சால வரும்பழியே.
தெளிவுரை : தோழி தலைவனை இரவு வரல் விலக்கல்.
தமிழ் வேதம் முழங்கும் குழல் போன்ற கலி காட்ட வயலில் வேலை செய்யும் கடைஞர் பறை
முழங்குகின்ற சீகாழித் தமிழாகரனாகிய திருஞான சம்பந்தரின் பகைவர் போல, நீ வரும்
வழியில் முழங்குகின்ற ஆண் யானை சீறி சிங்கமானது பளிங்குப் பாறையினுள் முழங்கும்
தன்மையது. நீ வருவது மிகவும் பெரும் பழிக்கு உரியது. ஆகவே, நீ இரவில் வரவேண்டா
என்பதாம்.
-
பழிக்கே தகுகின்றது இன்றுஇப்
பிறைபல் கதிர்விழுந்த
வழிக்கே திகழ்தரு செக்கரைக்
கொச்சை வயவரென்னும்
மொழிக்கே விரும்பி முளரிக்
கலமரு மோவியர்தம்
கிழிக்கே தருமுரு வத்திவள்
வாடிடக் கீள்கின்றதே.
தெளிவுரை : பிறை கண்டு கலங்கிய தலைவியின் நிலையைத் தோழி கூறுதல்.
பழிக்கே தகுகின்ற தின்றிப் பிறையானது பல்கதிர் விழுந்த வழிக்கே திகழ்தரு
செவ்வானத்தை சீகாழி வீரராகிய ஞானசம்பந்தர் என்னும் மொழிக்கே விரும்பி, அவருடைய
தாமரை மலர் மாலையைப் பெறுதற்கு இவள் மனம் சுழலும். சித்திரக்காரர் துணிப்
படத்துக்குத் தரும் உருவத்திவள் வாடிட (பிறை) அறைத் துண்டமாகியது.
-
கீளரிக் குன்றத் தரவ
முமிழ்ந்த கிளர்மணியின்
வாளரிக் கும்வைகை மாண்டன
ரென்பர் வயற்புகலித்
தாளரிக் கும்அரி யானருள்
பெற்ற பரசமய
கோளரிக் குந்நிக ராத்தமிழ்
நாட்டுள்ள குண்டர்களே.
தெளிவுரை : கீள் அரிக்குன்றத்து அரவம் உமிழ்ந்த விளங்குகின்ற ஒளியை உடைய மணியின்
ஒளியையும் அரித்துச் செல்லும் வைகைக் கரையில் சமணரகள் மாண்டனர் என்று சொல்லும்
வயல்களை உடைய சீகாழியின் அரிய தாளுடைய சிவபெருமானது அருள் பெற்ற பரசமயக்
கோளரியாகிய ஞானசம்பந்தருக்குச் சமணர்கள் நிகராவரோ? ஆகார் என்றபடி.
-
குண்டகழ் சூழ்தரு கொச்சைத்
தலைவன்றன் குன்றகஞ்சேர்
வண்டக மென்மலர் வல்லியன்
னீர்!வரி விற்புருவக்
கண்டக வாளி படப்புடை
வீழ்செங் கலங்கலொடும்
புண்தகக் கேழல் புகுந்ததுண்
டோ?நுங்கள் பூம்புனத்தே.
தெளிவுரை : இது பன்றி வினாதல் என்னும் துறை.
ஆழமுள்ள அகழி சூழ்ந்துள்ள சீகாழித் தலைவனாகிய ஞானசம்பந்தரது குன்றகம் சேர்
வண்டுகள் மொய்க்கின்ற மென்மலர் வல்லியாகிய மன்மதன் வில்லைப் போன்ற மாதர்களே !
வில் போன்ற புருவத்தை உடைய முள்வாளிப் படப்புடை வீழ்கின்ற இரத்தத்தோடும் புண்ணை
உடைய பன்றி இங்கு வந்ததுண்டோ ? உங்கள் பூம்புனத்தே வந்ததுண்டோ என்று தலைவன்
வினவினான்.
-
புனத்தெழு கைம்மதக் குன்றம
தாயங்கொர் புன்கலையாய்,
வனத்தெழு சந்தனப் பைந்தழை
யாய்,வந்து வந்தடியேன்
மனத்தெழு பொற்கழல் ஞானசம்
பந்தன்வண் கொஞ்சையன்னாள்
கனத்தெழு கொங்கைக ளாயல்கு
லாய்த்திவர் கட்டுரையே.
தெளிவுரை : பாங்கி தலைவனை நகுதல்: புனத்தெழு யானைக் கூட்டத்துள் ஒரு சிறுமான்,
வனத்தெழு சந்தனப் பைந்தழையாய் வந்து அடியேன் மனத்தெழு பொற்கழல் ஞானசம்பந்தன் வண்
கொச்சை (சீகாழி) யன்னாள் கனத்தெழு. கொங்கைகளாய் அல்குலாயிற்று இவர் கட்டுரை.
-
கட்டது வேகொண்டு கள்ளுண்டு,
நுங்கைக ளாற்துணங்கை
இட்டது வேயன்றி, யெட்டனைத்
தானிவ ளுள்ளுறுநோய்
விட்டது வே?யன்றி வெங்குரு
நாதன்றன் பங்கயத்தின்
மட்டவிழ் தார்கொண்டு சூட்டுமின்,
பேதை மகிழ்வுறவே.
தெளிவுரை : தோழி அறத்தொடு நிற்றல்: (உள்ளத்தைச் சொல்லிவிடுதல்)
கட்டதுவே கண்டு கள்ளுண்டு நுங்கைகளாற் பசலை பூத்துவிட்டது. அதன்றியும் எள்ளளவும்
இவள் கொண்டுள்ள காதல் நோய் விட்டதுவேயன்றி சீகாழி நாதனாகிய ஞானசம்பந்தரது
தாமரையின் தேன் பொருந்திய மலர்மாலையை இவள் மகிழ்வதற்காகச் சூட்டுங்கள்.
அப்போதுதான் இவள் தெளிவாள் என்றபடி.
-
உறவும், பொருளுமொண் போகமுங்
கல்வியுங் கல்வியுற்ற
துறவும், துறவிப் பயனு
மெனக்குச் சுழிந்தபுனல்
புறவும், பொழிலும் பொழில்சூழ்
பொதும்புந் ததும்பும்வண்டின்
நறவும், பொழிலெழிற் காழியர்
கோன்திரு நாமங்களே.
தெளிவுரை : உறவும் பொருளும் ஒண்போகமும் கல்வியும் கல்வியுற்ற துறவும்
துறவிப்பயனும் எனக்குச் சுழிந்த புனல் முல்லை நிலமும் சோலையும் சூழ்ந்த
பொதும்பும் ததும்பும் வண்டும் தேன் பொருந்திய பொழில் சூழ்ந்த சீகாழிக் கோனாகிய
ஞானசம்பந்தரின் திருநாமங்களே.
-
நாமுகந் தேத்திய ஞானசம்
பந்தனை நண்ணலர்போல்
ஏமுக வெஞ்சரஞ் சிந்திவல்
இஞ்சி யிடிபடுக்கத்
தீமுகந் தோன்றிகள் தோன்றத்
தளவம் முகையரும்பக்
காமுகம் பூமுகங் காட்டிநின்
ரார்த்தன காரினமே.
தெளிவுரை : இது கார்ப்பருவங்கண்டு தலைவி இரங்கல் என்னும் துறை.
நாம் மனமுவந்து போற்றிய ஞானசம்பந்தரின் பகைவரைப்போலக் கொடிய கணைகளைச் செலுத்தி
வலிய மதில்கள் இடிபடுமாறு காக்கும் நெருப்பைப் போலச் செங்காந்தள் மலர்கள் தோன்ற
முல்லை அரும்புகள் மலர, சோலைகளில் மலர்களின் முகத்தைக் காட்டி நின்று மேகக்
கூட்டங்கள் ஆரவாரம் செய்தன. கார்ப்பருவத்தில் வருவதாகச் சொன்ன தலைவர் இன்னும்
வரவில்லையே என்று தலைவி ஏங்குகின்றாள்.
-
கார்அங்கு அணைபொழிற்
காழிக் கவுணியர் தீபன்,நல்லூர்ச்
சீர்அங்கு அணைநற் பெருமணந்
தன்னில் சிவபுரத்து,
வார்அங்கு அணைகொங்கை
மாதொடும் புக்குறும் போது,வந்தார்
ஆர்அங்(கு) ஒழிந்தனர், பெற்றதல்
லால்,அவ் அரும்பதமே.
தெளிவுரை : ஞானசம்பந்தர் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் முத்தியடைந்த செய்தி
சொல்லப்படுகிறது.
மேகங்கள் மழைபொழியும் வளமிக்க சீகாழிக் கவுணியர் தீபனாகிய ஞானசம்பந்தர்
சிறப்புடன் செய்து கொண்ட பெருமணத்தில் சிவபுரத்துள் மனையாளுடன் புகுந்தபோது வீடு
பேற்றை அடையாமல் எவர் எஞ்சியிருந்தார்? ஒருவருமில்லை. வந்தவர் அனைவரும்
வீடுபேற்றை அடைந்தனர் என்க.
-
அரும்பத மாக்கு மடயரொ(டு)
அஞ்சலித் தார்க்கரிய
பெரும்பத மெய்தலுற் றீர்!வந்
திறைஞ்சுமின், பேரரவம்
வரும்ப நான்மறைக் காழித்
தலைவன் மலர்க்கமலத்
தரும்பத ஞானசம் பந்தனென்
னானைதன் தாளிணையே.
தெளிவுரை : அரிய சொற்களைப் பேசும் அடியார்களோடு வணங்கியவர்களுக்குரிய பெரும்பதம்
அடையப் போகிறவர்களே ! வந்து துதி செய்யுங்கள். பேரொலி யோடுவரும் நான் மறைக்காழித்
தலைவன் மலர்க் கமலத்து அரும்பத ஞானசம்பந்தர் என்பவரின் பாதங்களைப் பணியுங்கள்.
-
தாளின் சரணந் தருஞ்சண்பை
நாதன் தரியலர்போல்
கீளின் மலங்க விலங்கே
புகுந்திடும், கெண்டைகளும்,
வாளுந் தொலைய மதர்த்திரு
காதி னளவும்வந்து
மீளுங் கருங்கண்ணி மின்புரி
யாவைத்த மென்னகையே.
தெளிவுரை : இது முறுவற் குறிப்புணர்தல் என்னும் துறை.
தாளின் சரணம் தரும் சீகாழி நாதராகிய ஞான சம்பந்தரின் பகைவரைப் போலக்
கிழிபட்டதனால் வருந்த, குறுக்கே புகுந்திடும் கெண்டை மீன்களும் வாளும் தோற்குமாறு
மதர்த்து இரு காதுகள் வரைக்கும் நீண்டு மீளும் கரிய கண்களையுடைய தலைவியின்
மின்னலைப்போல் தோன்றி மறையும் மென்னகை.
-
நகுகின்ற முல்லைநண் ணாரெரி
கண்டத்(து) அவர்கவர்ந்த
மிகுகின்ற நன்னிதி காட்டின
கொன்றை; விரவலரூர்
புகுகின்ற தீயெனப் பூத்தன
தோன்றி; புறவமன்கைத்
தகுகின்ற கோடல்கள்; அன்பரின்
றெய்துவர் கார்மயிலே.
தெளிவுரை : பருவங்கண்டு, தலைவர் வருவாரென்று தோழி கூறியது.
கார்மயில் போன்ற தலைவியே ! அன்பர் இன்று எய்துவர் எனமுடிக்க. முல்லை நகுகின்றன.
(மலர்ந்திருக்கின்றன.) கொன்றை மலர்கள் பொன்னைப் போல் விளங்கின. நீலகண்டர்
திரிபுரங்களை எரித்தபோது உண்டான தீயைப் போல் செங்காந்தள்கள் பூத்தன. சீகாழி
ஞானசம்பந்தரின் கை போன்று காந்தள்கள் மலர்ந்தன. இவை யாவும் கார்காலத்தின்
அறிகுறிகள் என்பதாம்.
-
மயிலேந் தியவள்ளல் தன்னை
யளிப்ப மதிபுணர்ந்த
எயிலேந் தியசண்பை நாத
னுலகத்(து) எதிர்பவர்யார்?
குயிலேந் தியபொழிற் கொங்கேந்
தியகொம்பி னம்புதழீஇ
அயிலேந் தியமலர் கண்டுள
னாய்வந்த அண்ணலுக்கே.
தெளிவுரை : பாங்கன் தலைவனை வியத்தல். மயிலேந்திய வள்ளல் தன்னை அளிப்ப,
மதிபுணர்ந்த மதில்களை உடைய சீகாழி நாதனாகிய ஞானசம்பந்தருக்கு முன்னிற்பவர்
யாருளர்? குயில்கள் பொருந்திய சோலையில் தலைவியின் வேலைப் போலும் கூரிய கண்களைக்
கண்டு எப்படித் திரும்பினாய்? அவளைக் கண்டு மீண்டு வந்த வலிமையை உடைய தலைவனை
ஒப்பவர் யார்?
-
அண்ணல் மணிவளைத் தோளரு
காசனி சண்பையன்ன
பெண்ணி னமிர்தநல் லாள்குழல்
நாற்றம் பெடையொடுபூஞ்
சுண்ணந் துதைந்தவண் டே!கண்ட
துண்டுகொல்? தூங்கொலிநீர்த்
தண்ணம் பொழிலெழிற் காசினி
பூத்தமென் தாதுகளே.
தெளிவுரை : தலைவன் தலைவியைப் புகழ்தல்.
பெருமை பொருந்திய மணிவளைத் தோள்களை உடையவரும் சமணர்களை வென்றவருமான ஞான
சம்பந்தரது சீகாழி என்று சொல்லுமாறு பெண்களில் அமிர்தம் போன்ற தலைவியின்
கூந்தலில் உள்ள மணத்தை வேறு மலர்த் தாதுகளில் வண்டே நீ கண்டதுண்டோ? வண்டே ! நீ
குளிர்ந்த பொழில்களை எல்லாம் சுற்றிப் பார்த்தாயே, இது போன்ற மணத்தைக் கண்டாயா
என்று வியந்தவாறு.
-
தாதுகல் தோய்த்தநஞ் சந்தாந்
யார்சட லம்படுத்துத்
தூதையிற் சிக்கங் கரஞ்சேர்த்து
வாளா துலுக்குகின்றீர்;
பேதியிற் புத்தர்கள்! வம்மின்;
புகலியர் கோனன்னநாட்
காதியிட் டேற்றும் கழுத்திறம்
பாடிக் களித்திடவே.
தெளிவுரை : காவிக் கல் தோய்த்த ஆடை யணிந்து சந்நியாசி வேடம் பூண்டு கமண்டலத்தை
உறியில் வைத்து வீணாய் ஆடுகின்றீர். போதி மரத்தடியில் உள்ள புத்தர்களே ! சீகாழி
சம்பந்தப் பெருமான் நாட்டியுள்ள கழுத்திறம் பாடிக் களித்திட வாருங்கள்.
-
களியுறு தேன்தார்க் கவுணியர்
தீபன் கருதலர்போல்
வெளியுறு ஞாலம் பகலிழுந்
தால்,விரை யார்கமலத்(து)
அளியுறு மென்மலர்த் தாதளைந்(து)
ஆழி யழைப்பவரும்
துளியுறு வாடையி தாம்மட
மானைத் துவளவிப்பதே.
தெளிவுரை : தோழி தலைவியின் நிலைகண்டு இரங்குதல்.
தேன் பொருந்திய மாலையணிந்த கவுணியர் குல தீபனாகிய ஞானசம்பந்தரது பகைவர்களைப் போல்
வெளியுறு ஞாலம் பகல் இழந்தால் விரையார் கமலத்து அளியுறு மென்மலர் தாது அளைந்து
ஆழி அமைப்பவரும் மழைத்துளியுடன் வரும் வாடைக் காற்று மடமான் போன்ற தலைவியை வாடச்
செய்கிறது.
தேறும் புனல்தில்லைச் சிற்றம்
பலத்துச் சிறந்துவந்துள்
ஊறு மமிர்தைப் பருகிட்
டெழுவதொ ருட்களிப்புக்
கூறும் வழிமொழி தந்தெனை
வாழ்வித் தவன்கொழுந்தேன்
நாறும் அலங்கல் தமிழா
கரனென்னும் நன்னிதியே.
தெளிவுரை : தெளிந்த நீரால் சூழப்பட்ட திருத்தில்லைச் சிற்றம்பலத்துள் ஊறும்
அமிர்தைப் பருகிட்டு எழுவதோர் உட்களிப்புக் கூறும் வழி மொழிந்து என்னை
வாழ்வித்தவன் கொழுந்தேன் நாறும் மலர்மாலை அணிந்த தமிழாகரன் என்னும் ஞானசம்பந்த
நன்னிதியே.
நிதியுறு வாரற னின்பம்வீ
டெய்துவ ரென்னவேதம்
துதியுறு நீள்வயல் காழியர்
கோனைத் தொழாரினைய
நதியுறு நீர்தெளித்(து) அஞ்ச
லெனவண்ண லன்றோவெனா
மதியுறு வாணுதல் பாதம்
பணிந்தனள் மன்னனையே.
தெளிவுரை : தோழி அறத்தொடு நிற்றல்:
பொருள் பெற்றவர்கள் அறம், இன்பம், வீடு இவைகளைப் பெறுவர் என்று வேதம் துதியறு
நீள் வயல் சீகாழிப் பெருமானைத் தொழாதவர்களைப் போல வருந்திக் கிடக்க, நதியுறு நீர்
தெளித்து அஞ்சாதே என்று சொன்னவர் தலைவர் அல்லவா என்று சந்திரன்போன்று ஒளியுள்ள
நெற்றியை உடையவளாகிய தலைவி மன்னன் பாதத்தைப் பணிந்தனள்.
மன்னங் கனை!செந் தமிழா
கரன்வெற்பில் வந்தொருவர்
அன்னங்கள் அஞ்சன்மி னென்றடர்
வேழத் திடைவிலங்கிப்
பொன்னங் கலைசா வகையெடுத்
தாற்கிவள் பூணழுந்தி
இன்னந் தழும்புள வாம்பெரும்
பாலுமவ் வேந்தலுக்கே.
தெளிவுரை : களிறு தரு புணர்ச்சி கூறி அறத்தொடு நிற்றல்.
மன்னங்களை செந்தமிழ் ஆகரன் மலையில் ஒருவர் (தலைவர்) வந்து, அன்னம் போன்றவர்களே !
பயப்படாதீர்கள் என்று கூறித் தாக்கவந்த யானையைத் தடுத்து நிறுத்தி, பொன்னைப்போன்ற
தலைவி கலங்காதபடி எடுத்தவருக்கு இவள் (தலைவி) மார்பகப் பூண் அழுந்தி இப்போதும்
அந்த ஏந்தலுக்குப் பெரும் தழும்புள்ளது.
ஏந்தும் உலகுறு வீரெழில்
நீலநக் கற்குமின்பப்
பூந்தண் புகலூர் முருகற்கும்
தோழனைப் போகமார்ப்பைக்
காந்துங் கனலிற் குளிர்படுத்
துக்கடற் கூடலின்வாய்
வேந்தின் துயர்தவிர்த் தானையெப்
போதும் விரும்புமினே.
தெளிவுரை : போகமார்ந்த என்ற திருப்பதிகத்தை எழுதிய ஏட்டைச் சம்பந்தப் பெருமான்
எரியிலிட, ஏடு வேகாதிருந்தது.
ஏந்தும் உலகுறுவீர் ! எழில் நீல நக்கற்கும், இன்பப் பூந்தண் புகலூர் முருகற்கும்
தோழனை, போக மார்ந்த என்று எழுதப்பட்ட ஏட்டைத் தீயில் போட்டபோது அதை எரியாமல்
செய்தவனை, மதுரையில் கூன் பாண்டியனது வெப்பு நோயைத் தீர்த்தவனை, எப்போதும்
விரும்புங்கள். இவ்விருவரும் ஞானசம்பந்தருடன் சோதியில் கலந்தவர்கள்.
விரும்பும் புதல்வனை மெய்யரிந்
தாக்கிய வின்னமிர்தம்
அரும்பும் புனற்சடை யாய்உண்
டருளென் றடிபணிந்த
இரும்பின் சுடர்களிற் றான்சிறுத்
தொண்டனை யேத்துதிரேல்
சுரும்பின் மலர்த்தமி ழாகரன்
பாதம் தொடர்வெளிதே.
தெளிவுரை : சிறுத்தொண்ட நாயனார் சிவபெருமான் கோரியபடி தன் மகனாகிய சீராள தேவனை
அரிந்து கறி சமைத்து அரும்பும் புனற் சடையாய் உண்டருள் வீராக என்று அடிபணிந்தார்.
அத்தகைய இரும்பின் சுடர்க்களிற்றானாகிய சிறுத்தொண்டனைப் போற்று வீராயின் வண்டு
மொய்க்கும் மலர் மாலையணிந்த தமிழாகரனாகிய ஞானசம்பந்தரது திருவடியை அடைதல்
எளிதாகும்.
எளிவந்த வா!வெழில் பூவரை
ஞாண்,மணித் தார்தழங்கத்
துளிவந்த கண்பிசைந் தேங்கலு
மெங்க ளரன்துணையாங்
கிளிவந்த சொல்லி,பொற் கிண்ணத்தின்
ஞான வமிர்தளித்த
அளிவந்த பூங்குஞ்சி யின்சொற்
சிறுக்கன்ற னாரருளே.
தெளிவுரை : அருள் எளிவந்தவாறு வியப்பு.
எழிற் பூ அரைஞாண், மணித்தார் தழங்கத் துளிவந்த கண் பிசைந்து அழுதலும் எங்கள் சிவ
பெருமானது துணைவியாகிய உமாதேவியார் பொற் கிண்ணத்தில் ஞான அமிர்து அளித்த,
வண்டுகள் மொய்க்கும் தலைமயிரும் இன்சொல்லும் உடைய சிறு குழந்தைதன் ஆர் அருளே.
ஞானசம்பந்தர் ஞானப்பாலுண்ட செய்தி கூறப்படுகிறது.
அருளுந் தமிழா கர!நின்
னலங்கல்தந் தென்பெயரச்
சுருளுங் குழலியற் கீந்திலை
யேமுன்பு தூங்குகரத்(து)
உருளும் களிற்றினொ(டு) ஒட்டரு
வானை யருளியன்றே
மருளின் மொழிமட வாள்பெய
ரென்கண் வருவிப்பதே.
தெளிவுரை : அருளும் தமிழாகரனே ! நின் மாலையைத் தந்து என்பு அயர, சுருண்ட
கூந்தலையுடைய இவளுக்குக் கொடுக்கவில்லையே ! முன்பு தொங்குகிற கையையுடைய உருளும்
களிற்றினோடு ஓடியவனை அருளி அன்றே மருளின் மொழி மடவாள் பெயர் என்கண் வருவிப்பதே.
முன்பு அருளியதுபோல் இப்போதும் அருள் செய்வாயாக.
வருவார் உருவின் வழிவழி
வைத்த வனமருந்தும்
திருவார் இருந்த செழுநகரச்
செவ்வித் திருவடிக்காள்
தருவான் தமிழா கரகரம்
போற்சலம் வீசக்கண்டு
வெருவா வணங்கொண்டல் கள்மிண்டி வானத்து மின்னியவே.
தெளிவுரை : கார்காலத்தில் வருவதாகச் சொன்ன தலைவர் வரஇயலாதவாறு மேகம் மின்னலோடு
வருவதைக் கண்டு தலைவி வருந்துகின்ற காட்சி இது. உருவின் வருவார். வழிவழி வைத்த
வனம் அருந்தும் திருவார் இருந்த செழுநகர்ச் செவ்வித் திருவடிகட்கு ஆளாகச்
செய்வான் தமிழாகரன் (ஞான சம்பந்தர்) கைகளைப் போல் சலம் வீசக்கண்டு அஞ்சாதவாறு
மேகங்கள் நெருங்கி வானத்து மின்னின.
மின்னார் குடுமி நெடுவெற்
பகங்கொங்கில் வீழ்பனிநோய்
தன்னார் வழிகெட் டழிந்தமை
சொல்லுவர் காணிறையே
மன்னார் பரிசனத் தார்மேல்
புகலு மெவர்க்குமிக்க
நன்னா வலர்பெரு மானரு
காசனி நல்கிடவே.
தெளிவுரை : மின்னலைப் பொருந்திய சிகரங்களை உடைய திருச்செங்கோடு என்னும் மலையினை
உடைய கொங்கு நாட்டில் வீழ்பனிநோய் தன்னார் வழிகெட்டு அழிந்தமை பற்றிச்
சொல்லுவார்கள், இறைவனே ! மன்னார் பரிவாரத்தார் மேற்புகலும் எவர்க்கும் மிக்க
நன்னாவலர் பெருமானாகிய ஞானசம்பந்தர் அருகாசனி நல்கியதால் என்பர்.
நல்கென் றடியி னிணைபணி
யார்;சண்பை நம்பெருமான்
பல்கும் பெரும்புகழ் பாடகில்
லார்சிலர் பாழ்க்கிறைத்திட்(டு)
ஒல்கு முடம்பின ராய்,வழி
தேடிட் டிடறிமுட்டிப்
பில்கு மிடமறி யார்கெடு
வாருறு பேய்த்தனமே.
தெளிவுரை : சீகாழிப் பெருமானாகிய ஞானசம்பந்தப் பெருமானைத் தருவாயாக என்று அவரது
இணையடிகளைப் பணியார். அவருடைய மிகுதிப்படும் பெரும் புகழைப் பாடமுடியாதவர் சிலர்
பாழ்க்கு இறைத்திட்டுத் தளரும் உடம்பினராய் வழிதேடிக் கொண்டு இடறி, முட்டி
வெளிப்படும் இடம் அறியாதவர்கள் உறு பேய்த்தனமே கெடுவர்.
தனமே தருபுகழ்ச் சைவ
சிகாமணி தன்னருள்போல்
மனமே புகுந்த மடக்கொடி
யே!மலர் மேலிருந்த
அனமே! யமிர்தக் குமுதச்செவ்
வாயுங்க ளாயமென்னும்
இனமே பொலியவண் டாடெழிற்
சோலையு ளெய்துகவே.
தெளிவுரை : தலைவன் தலைமகளை ஆயத்து உய்த்தல்.
தனமே தரும் புகழ்ச் சைவ சிகாமணியாகிய ஞானசம்பந்தருடைய அருள் போல் மனமே புகுந்த
மடக்கொடியே ! (தலைவியே) மலர்மேல் இருந்த அன்னமே ! அமிர்தக் குமுதச் செவ்வாய்
உங்கள் ஆயம் என்னம் இனமே பொலிய வண்டுகள் மொய்க்கின்ற சோலையுள் சென்று சேர்வாயாக.
உகட்டித்து மோட்டு வராலினம்
மேதி முலையுரிஞ்ச
அகட்டிற் சொரிபால் தடம்நிறை
கொச்சை வயத்தரசைத்
தகட்டில் திகழ்மணிப் பூண்தமி
ழாகரன் தன்னையல்லால்,
பகட்டில் பொலியினும் வேண்டேன்,
ஒருவரைப் பாடுதலே.
தெளிவுரை : துள்ளி, பெருத்தவரால் மீனின் கூட்டங்கள் எருமையின் முலையை உரிஞ்ச
வயிற்றில் சொரிகின்ற பால் குளத்தை நிறைக்கின்ற கொச்சை (சீகாழி) வயத்து அரசாகிய
ஞானசம்பந்தரை, பொன்தகடு திகழ்கின்ற மணிப்பூண் தமிழாகரன் தன்னை, அல்லால் யானையின்
மேல் விளங்குகின்ற தன்மையைப் பெற்றாலும் வேறு ஒருவரைப் பாடுவதை விரும்ப மாட்டேன்.
இவர்தான் என் தெய்வம் என்கிறார்.
பாடிய செந்தமி ழாற்பழங்
காசு பரிசில் பெற்ற
நீடிய சீர்த்திரு ஞானசம்
பந்தன் நிறைபுகழான்
நாடிய பூந்திரு நாவுக் கரசோ
டெழில்மிழலைக்
கூடிய கூட்டத்தி னாலுள
தாய்த்திக் குவலயமே.
தெளிவுரை : பாடிய செந்தமிழால் பழங்காசு பரிசில் பெற்ற நீடிய சீர்த்திரு
ஞானசம்பந்தன் நிறைந்த புகழால் நேடிய பூந்திரு நாவுக்கரசோடு எழில் திருவீழிமிழலை
என்னும் தலத்தில் கூடிய கூட்டத்தினால் இக்குவலயம் உய்தி பெற்றது. இல்லையேல்
பஞ்சத்தால் துன்புற்றிருக்கும் என்க.
வலையத் திணிதோள் மிசைமழ
வேற்றி, மனைப்புறத்து
நிலையெத் தனைபொழு தோகண்ட(து)
ஊரனை நீதிகெட்டார்
குலையக் கழுவின் குழுக்கண்ட
வன்திகழ் கொச்சையன்ன
சிலையொத்த வாள்நுதல்! முன்போல்
மலர்க திருக்கண்களே.
தெளிவுரை : தோழி வாயிலாகப் புகுந்து கூறுதல்.
தோள் வளைகளையுடைய வலிய தோள் மிசை குழந்தையைத் தூக்கிக்கொண்டு மனை புறத்து நிலை
எத்தனை பொழுதோ கண்டது. அறநெறி மார்க்கங்கெட்டுத் திரிந்த சமணர்கள் குலையக்
கழுவேற்றிய ஞானசம்பந்தர் திகழும் சீகாழி போன்ற தலைவி முன் போல் திருக்கண்கள் மலர
வழிசெய்வாயாக என்று தோழி தலைவனிடம் தூது சென்று உரைத்தாள்.
கண்ணார் திருநுத லோன்கோலக்
காவில் கரநொடியால்
பண்ணார் தரப்பாடு சண்பையர்
கோன்பாணி நொந்திடுமென்(று)
எண்ணா வெழுத்தஞ்சு மிட்டபொன்
தாளங்க ளீயக்கண்டும்
மண்ணார் சிலர்சண்பை நாதனை
யேத்தார் வருந்துவதே.
தெளிவுரை : நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோலக்கா
என்னும் பதியில் கைத்தாளத்தால் பண்ணோடு பாடிய ஞானசம்பந்தர் கை வருந்துமென்று
பஞ்சாட்சரம் பொறிக்கப்பட்ட பொன் தாளங்கள் கொடுக்கக் கண்டும், இவ்வுலகத்தவருள்
சிலர் சண்பை நாதனை ஏத்தாவிடில் வருந்துவார்கள்.
வருந்துங் கொலாங்கழல், மண்மிசை
யேகிடில் என்றுமென்றார்த்
திருந்தும் புகழ்ச்சண்பை ஞானசம்
பந்தற்குச் சீர்மணிகள்
பொருந்துஞ் சிவிகை கொடுத்தனன்
காண்;புண ரித்திகழ்நஞ்(சு)
அருந்தும் பிரான்நம் மரத்துறை
மேய வரும்பொருளே.
தெளிவுரை : மண்ணில் நடந்து சென்றால், கழல் அணிந்த பாதங்கள் வருந்தும் என்று
மென்தார்த் திருந்தும் புகழ்ச் சண்பை ஞானசம்பந்தர்க்குச் சீர்மணிகள் பொருந்தும்
சிவிகை (பல்லக்கு)யை, புணரித் திகழ் நஞ்சருந்தும் பிரானும் (நீலகண்டன்) நம் திரு
அரத்துறை என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கும் அரும்பொருளுமாகிய இறைவன்
கொடுத்தனன்.
பொருளென வென்னைத்தன் பொற்கழல்
காட்டிப் புகுந்தெனக்கிங்(கு)
அருளிய சீர்த்திரு ஞானசம்
பந்த னருளிலர்போல்
வெருளின மானின்மென் நோக்கியை
விட்டு விழுநிதியின்
திரளினை யாதரித் தால்நன்று
சாலவென் சிந்தனைக்கே.
தெளிவுரை : பொருள் வயின் பிரிய எண்ணிய நெஞ்சிற்குத் தலைவன் கூறியது.
என்னை, ஒரு பொருளாக மதித்து, தன் பொற்கழலைக் காட்டி, புகுந்தெனக்கு இங்கு அருளிய
சீர்த்திரு ஞானசம்பந்தப் பெருமான் பகைவர்போல அஞ்சிய மானின் மென்நோக்கியை
(தலைவியை) விட்டுச் சிறந்த நிதியின் திரளினை ஆதரித்துச் செல்ல நினைத்தது சரியல்ல
என்று தலைவன் நெஞ்சிற்குக் கூறுகின்றான்.
சிந்தையைத் தேனைத் திருவா
வடுதுறை யுள்திகழும்
எந்தையைப் பாட லிசைத்துத்
தொலையா நிதியமெய்தித்
தந்தையைத் தீத்தொழில் மூட்டிய
கோன்சரண் சார்விலரேல்
நிந்தையைப் பெற்(று)ஒழி யாதிரந்
தேகரம் நீட்டுவரே.
தெளிவுரை : சிந்தையைத் தேனைத் திருவாவடுதுறையுள் திகழும் எந்தையைப் பாடல்களால்
துதித்து, குறையாத செல்வத்தைப் பெற்று, தந்தையை வேள்வி செய்யுமாறு ஏவிய
ஞானசம்பந்தரது பாதங்களில் அன்பு கொள்ளாதவர் நிந்தையைப் பெற்று, எப்போதும் பிச்சை
யெடுக்க கையை நீட்டுவர் !
நீட்டுவ ரோதத்தொ டேறிய
சங்கம் நெகுமுளரித்
தோடுவெண் முத்தம் சொரிசண்பை
நாதன் தொழாதவரின்
வேட்டுவர் வேட்டதண் ணீரினுக்(கு)
உண்ணீ ருணக்குழித்த
காட்டுவ ரூறல் பருகும்
கொலாமெம் கனங்குழையே.
தெளிவுரை : செவிலி வருந்துதல்: சங்குகள் நெகு முளரித் தோட்டு வெண்முத்தம்
சொரியும் சீகாழி நாதனைத் தொழாதவர்போல வேட்டுவர், விரும்பும் தண்ணீருக்கு உப்பாகிய
கடல் நீரோடு பாலைவனத்தில் உவர்ப்புச் சுவையோடு ஊறிய நீரை உண்ணக் கொடுப்பர். எம்
கணங் குழை இந்த நீரையா குடிக்க வேண்டும் என்று செவிலி வருந்துகிறாள்.
குழைக்கின்ற கொன்றைபொன் போல
மலரநுங் கூட்டமெல்லாம்
அழைக்கின்ற கொண்ட லியம்புஒன்
றிலையகன் றார்வரவு
பிழைக்கின் றதுகொலென் றஞ்சியொண்
சண்பைப் பிரான்புறவத்(து)
இழைக்கின்ற கூடல் முடயஎண்
ணாத இளங்கொடிக்கே.
தெளிவுரை : தளிர்களை உடைய கொன்றை மரம் பொன் போல மலர, உங்கள் கூட்ட மெல்லாம்
அழைக்கின்ற மேகம், உங்களை விட்டுப் பிரிந்துள்ள தலைவர் வருவது தடைபடுகிறது என்று
கூறுகிறது என்று அஞ்சி ஒண் சண்பைப் பிரான் சீகாழியில் இழைக்கின்ற கூடல்
இளங்கொடிக்கு (தலைவிக்கு) முடியவில்லை போலும். கூடல் இழைத்தல் பண்டைய வழக்கு.
வட்டம் கூடினால் காரியம் கைகூடும் என்பதாம்.
-
கொடித்தே ரவுணர் குழாமன
லூட்டிய குன்றவில்லி
அடித்தேர் கருத்தி னருகா
சனியை யணியிழையார்
முடித்தேர் கமலர் கவர்வான்,
முரிபுரு வச்சிலையால்
வடித்தேர் நயனக் கணையிணை
கோத்து வளைத்தனரே.
தெளிவுரை : திரிபுராதிகளைத் தீயிட்டுக் கொளுத்திய குன்ற வில்லியாகிய சிவபெருமானது
அடியைத் தேருகின்ற கருத்தினை உடைய அருகாசனியாகிய ஞானசம் பந்தரை அணியிழையார்
(மாதர்கள்) முடித்தேர் கமலம் கவரும் பொருட்டு, வளைந்த புருவ வில்லை வடித்தேர்
கண்களாகிய அம்புகளைக் கோத்து வளைத்தனர்.
வளைபடு தண்கடற் கொச்சை
வயவன் மலர்க்கழற்கே
வளைபடு நீண்முடி வார்புன
லூரன்தன் நீரில்அம்கு
வளைபடு கண்ணியர் தம்பொதுத்
தம்பலம் நாறுமிந்த
வளைபடு கிங்கிணிக் கால்மைந்தன்
வாயின் மணிமுத்தமே.
தெளிவுரை : தலைவி காமக் கிழத்தியைப் பழித்தல். தன் மகனைக் காமக்கிழத்தி
முத்தமிட்டாள் என்று கூறுகிறாள். சங்குகள் உண்டாகின்ற குளிர்ந்த கடல் சூழ்ந்த
சீகாழிப் பெருமான் மலர்க்கழற்கு வணங்குகின்ற உயர்ந்த தலை வார்புனல் ஊரன் (தலைவன்)
தன் நீரில் அங்கு வளைபடு கண்ணியர் (பரத்தையர்) தம் பொதுத் தம்பலம் நாறும்
வாயினால் இந்தக் கால் சிலம்பு ஒலிக்கின்ற என் மகனை முத்தமிட்டாள்.
முத்தன வெண்ணகை யார்மயல்
மாற்றி, முறைவழுவா(து)
எத்தனை காலம்நின்று ஏத்து
மவரினு மென்பணிந்த
பித்தனை, யெங்கள் பிரானை,
யணைவ தெளிதுகண்டீர்;
அத்தனை, ஞானசம் பந்தனைப்
பாதம் அடைந்தவர்க்கே.
தெளிவுரை : திருஞானசம்பந்தர் திருவடியை அடைந்தவர்கள் சிவ பெருமான் திருவடியைச்
சேர்தல் எளிது என்க.
முத்தன்ன வெண்ணகையார் மயல் மாற்றி, முறை வழுவாது எத்தனை காலம் நின்று
ஏத்துபவர்களைக் காட்டிலும், எலும்பு அணிந்த பித்தனாகிய எங்கள் சிவபெருமானை அணைவது
எளிது. எங்ஙனமெனில் அத்தனாகிய ஞான சம்பந்தனது திருவடிகளை அடைந்தவர்களுக்கு இது
எளிது எனக்கூட்டுக. ஞானசம்பந்தரை வழிபட்டால் சிவபெருமானை அடையலாம் என்கிறார்.
அடைத்து மாமறைக் காடர்தம்
கோயிற்கதவினை அன்(று)
உடைத்தது பாணன்தன் யாழி
னொலியை; யுரகவிடம்
துடைத்து; தோணி புரத்துக்
கிறைவன் சுடரொளிவாய்
படைத்தது தண்மையை நள்ளாற்
றரசு பணித்திடவே.
தெளிவுரை : ஞானசம்பந்தர் திருமறைக் காட்டில் (வேதாரண்யத்தில்) திறந்து கிடந்த
கோயிற் கதவைப் பதிகம் பாடி மூடினார். திருநீலகண்ட யாழ்ப்பாணரது யாழின் ஒலியை
யாழ்முரி என்னும் பாடலால் உடைத்தார். வணிகனைத் தீண்டிய பாம்பின் விடத்தை
இறக்கினார். சீகாழிக்கு இறைவன் சுடர் ஒளியை அளித்தார். திருநள்ளாற்று
இறைவனுக்குத் தண்மையைப் படைத்தார்.
பணிபடு நுண்ணிடை பாதம்
பொறாபல காதமென்று
தணிபடு மின்சொற்க ளால்தவிர்த்
தேற்குத் தழலுமிழ்கான்
மணிபடு பொற்கழல் ஞானடம்
பந்தன் மருவலர்போல்
துணிபடு வேலன்ன கண்ணியென்
னோவந்து தோன்றியதே.
தெளிவுரை : தலைவன் கூற்று: பணிவுள்ள நுண்ணிடை யாளாகிய தலைவியின் பாதம் பொறா
பலகாதம் என்று குளிர்ந்த சொற்களைக் கூறித் தவிர்த்த எனக்கு, நெருப்பைக்
கக்குகின்ற காட்டில் மணிகள் உண்டாகின்ற பொற்கழல்களை உடைய ஞானசம்பந்தரது
பகைவர்களைப்போலத் துணிக்கும் தன்மை உள்ள வேல்போன்ற கண்களையுடைய தலைவி இங்கு
எங்ஙனம் வந்து தோன்றினாள்?
தோன்றல்தன் னோடுட னேகிய
சுந்தரப் பூண்முலையை
ஈன்றவ ரேயிந்த வேந்திழை
யார் இவ்வளவில்
வான்றவர் சூழுந் தமிழா
கரன்தன் வடவரையே
போன்றபொன் மாடக் கழுமல
நாடு பொருந்துவரே.
தெளிவுரை : செவிலிக்குக் கண்டோர் கூறுதல்.
தலைவனோடு உடன்சென்ற அழகிய தலைவியைப் பெற்றவரே ! இந்தத் தம்பதிகள் இந்நேரம் மேலான
தவத்தை உடையவர் சூழும் தமிழாகரனாகிய ஞானசம்பந்தரின் வடவரையே போன்ற பொன் மாடங்களை
உடைய சீகாழி நாடு சேர்ந்திருப்பர்.
-
பொருந்திய ஞானத் தமிழா
கரன்பதி, பொற்புரிசை
திருந்திய தோணி புரத்துக்
கிறைவன் திருவருளால்
கருந்தடம் நீரெழு காலையிற்
காகூ கழுமலமென்(று)
இருந்திட வாமென்று வானவ
ராகி யியங்கியதே.
தெளிவுரை : பொருந்திடு திருஞானசம்பந்தர் பதி பொற் புரிசை திருந்திய சீகாழிக்கு
இறைவன் திருவருளால் கருந்தடம் நீர் எழுகாலையில் காகூ கழுமலம் என்று இருந்திடவாம்
என்று வானவராகி இயங்கியது.
பெரு ஊழிக்காலத்தில் சீகாழி மட்டும் நிலைத்திருந்தது என்கிறார்.
இயலா தனபல சிந்தைய ராயிய
லுங்கொலென்று
முயலா தனவே முயன்றுவன்
மோகச் சுழியழுந்திச்
செயலார் வரைமதிற் காழியர்
கோன்திரு நாமங்களுக்(கு)
அயலா ரெனப்பல காலங்கள்
போக்குவ ராதர்களே.
தெளிவுரை : இயலாதன பல சிந்தையராய், இயலுங்கொல் என்று முயலாதனவே முயன்று வன்மோகச்
சுழியழுந்தி, செயலார் வரை மதில்களை யுடைய சீகாழித் தலைவராகிய ஞானசம்பந்தர்
என்னும் பெயரைப் போற்றாதவர்களாகிய அறிவற்றவர்கள் பலகாலம் வீணில் போக்குவர்.
-
ஆதர வும்,பயப் பும்மிவ
ளெய்தின ளென்றபலார்
மாத ரவஞ்சொல்லி யென்னை
நகுவது! மாமறையின்
ஓதர வம்பொலி காழித்
தமிழா கரனொடன்றே
தீதர வம்பட வன்னையென்
னோபல செப்புவதே.
தெளிவுரை : தலைவி கூற்று: அன்பும் பசலையும் இவள் எய்தினள் என்று அயல்மாதர்கள்
வீண் பழி மொழிகளைக் கூறி என்னைப் பார்த்து வேதங்களை ஒதுகின்ற முழக்கம் மிகுகின்ற
சீகாழித் தமிழாகரனாகிய ஞானசம்பந்தரோடு சேர்த்துச் சிரிப்பதாகும். தீது ஆரவாரம் பட
அன்னை பல சொல்வது ஏன்?
செப்பிய வென்ன தவம்முயன்
ரேன்நல்ல செந்தமிழால்
ஒப்புடை மாலைத் தமிழா
கரனை, யுணர்வுடையோர்
கற்புடை வாய்மொழி யேத்தும்
படிதக றிட்டிவர
மற்படு தொல்லைக் கடல்புடை
சூழ்தரு மண்மிடையே.
தெளிவுரை : சிறப்பித்துச் சொல்லும்படியாக, தவம் செய்ய முயலவில்லை. செந்தமிழால்
ஒப்புடை மாலைத் தமிழாகரனாகிய ஞானசம்பந்தரை உணர்வுடையோர் கல்வியறிவு உடையவர்களுடைய
மொழிகளைக் கொண்டு துதிக்கும்படி கதறிட்டு வரமற்படு தொல்லைக் கடல் சூழ்ந்த இந்த
உலகத்தில் வாழ்வது எங்ஙனம்?
மண்ணில் திகழ்சண்பை நாதனை
வாதினில் வல்லமணைப்
பண்ணைக் கழுவின் நுதிவைத்தெம்
பந்த வினையறுக்கும்
கண்ணைக் கதியைத் தமிழா
கரனை,யெங் கற்பகத்தைத்
திண்ணற் றொடையற் கவுணியர்
தீபனைச் சேர்ந்தனமே.
தெளிவுரை : இந்த நிலஉலகத்தில் சிறந்து விளங்குகின்ற சீகாழி நாதனாகிய ஞானசம்பந்தர்
வாதில் வல்ல சமணர்களை வென்று கழுவில் ஏறச் செய்தார். எம் பாசபந்த தொடக்கு
அறும்படி செய்தார். எனக்கு அவரே புகலிடம். தமிழாகரனாகிய அந்தக் கற்பகத்தை,
மாலையணிந்த கவுணியர் தீபனைச் சேர்ந்தனம்.
சேரும் புகழ்த்திரு ஞானசம்
பந்தனை யானுரைத்த
பேருந் தமிழ்ப்பா வினவவல்
லவர்பெற்ற வின்புலகங்
காருந் திருமுடற் ராயரு
ளாயென்று கைதொழுவர்
நீரும் மலரும் கொளாநெடு
மாலும் பிரமனுமே.
தெளிவுரை : சேரும் புகழ்த்திரு ஞானசம்பந்தரை யான் உரைத்த பேரும் தமிழ்ப்பா இவை
வல்லவர் பெற்ற இன்புலகம் நஞ்சினால் கருமை யடைந்த கண்டத்தை உடையவனே ! அருள்
செய்வாயாக என்று நீரும் மலரும் கொண்டு திருமாலும் பிரமனும் கைதொழுவர்.
பிரமா புரம்வெங் குரு,சண்பை,
தோணி, புகலி,கொச்சை
சிரமார் புரம்,நற் புறவந்,
தராய்,காழி, வேணுபுரம்
வரமார் பொழில்திரு ஞானசம்
பந்தன் பதிக்குமிக்க
பரமார் கழுமலர் பன்னிரு
நாமமிப் பாரகத்தே.
தெளிவுரை : இப்பாடலின்கண் சீகாழிப் பதியின் பன்னிரு திருப்பெயர்களும்
உரைக்கப்பெற்றன. பிரமாபுரம், 2. வெங்குரு, 3. சண்பை, 4. தோணிபுரம், 5. புகலி,
6. கொச்சைவயம், 7. சிரபுரம், 8. புறவம், 9. பூந்தராய், 10. சீகாழி, 11.
வேணுபுரம், 12. கழுமலம் ஆகிய இவை திருஞானசம்பந்தரின் பதிக்கு இவ்வுலகத்தில்
பன்னிரண்டு பெயர்கள் உள்ளன.
வெண்பா
-
பராகலத் துன்பங் கடந்தமர ரால்பணியும்
ஏரகலம் பெற்றாலு மின்னாதால் - காரகிலின்
தூமங் கமழ்மாடத் தோணி புரத்தலைவன்
நாமஞ் செவிக்கிசையா நாள்.
தெளிவுரை : மிகுதியான துன்பங்களைக் கடந்து அமரரால் பணியும் சிறப்பு பெற்றாலும்,
கார் அகிலின் தூமம் கமழ் மாடங்களையுடைய தோணி புரத் தலைவனாகிய ஞானசம்பந்தரது நாமம்
செவிக்கு இசையாநாள் இன்னாது என்று கூட்டுக. ஞானசம்பந்தரது நாமங்களை ஓதினால்
நற்கதி பெறலாம் என்பதாம்.
திருச்சிற்றம்பலம்
ஆளுடையபிள்ளையார் திருச்சண்பைவிருத்தம் ( நம்பியாண்டார் நம்பிகள் அருளிச்செய்தது )
சண்பை என்பது சீகாழிக்குரிய பன்னிரண்டு பெயர்களுள் ஒன்று. ஆளுடையபிள்ளையார்
தோன்றியருளிய சண்பை என்னும் சிவப்பதியினைக் கட்டளைக் கலித்துறையாகிய
திருவிருத்தத்தால் போற்றுவது இந் நூலாதலின் ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை
விருத்தம் என்று பெயர் பெறுவதாயிற்று.
திருஞானசம்பந்தர் இளம் பருவத்திலேயே உமாதேவியார் அளித்த ஞானப்பாலை உண்டு சிவஞானம்
பெற்றதும், தன் கணவன் பாம்பு தீண்டி இறந்தமை கண்டு துன்புற்றழுத தோகை ஒருத்தியின்
துன்பம் நீங்க நஞ்சு தீர்த்த திருப்பதிகத்தைப் பாடியருளியதும், பாலை நிலமாக
உருத்திரிந்த திருநனிப்பள்ளியை நெய்தல் நிலமாக வளம் பொருந்தப் பாடியதும்,
உயிர்த் தொகைகள் பிறவித் துன்பம் நீங்கி, இன்புறுமாறு வினையினைப் போக்கும் இறைவன்
அடிக்கே தமிழ்மாலைகளைப் புனைந்து போற்றியதும், திருமறைக்காட்டில் திருக்கதவு
அடைக்கப் பாடியதும், வைகை ஆற்றில் ஏடு எதிரேறிச் செல்லுமாறு திருப்பதிகம் பாடி
சமணர்களை வென்றதும், திருநல்லூர் பெருமணத்தில் வாழ்க்கைத் துணைவியொடு ஒளியில்
கலந்து மறைந்ததுமாகிய செய்திகள் இந்நூலில் இயம்பப் பெற்றுள்ளன.
திருச்சிற்றம்பலம்
கட்டளைக் கலித் துறை
பாலித் தெழில்தங்கு பாரகம்
உய்யப் பறிதலையோர்
மாலுற் றழுந்த அவதரித்
தோன்மணி நீர்க்கமலத்
தாலித் தலர்மிசை யன்னம்
நடப்ப, வணங்கிதென்னாச்
சாலித் தலைபணி சண்பையர்
காவலன் சம்பந்தனே.
தெளிவுரை : அருள் பெற்று அழகு தங்கியுள்ள இந்த நிலவுலகம் உய்யவும் சமணர்கள்
திகைத்து அழுந்தவும் அவதரித்தவன் யார் எனின், தெளிந்த நீர் நிறைந்த கமல மலர்
களித்து அதன்மீது அன்னம் நடப்ப தெய்வ மகள் என்று சொல்லுமாறு நெற்பயிர் தலை
சாய்ந்து பணிகின்ற சீகாழிக் காவலனாகிய சம்பந்தனே.
-
கொங்குதங் குங்குஞ்சி கூடாப்
பருவத்துக் குன்றவில்லி
பங்குதங் கும்மங்கை தன்னருள்
பெற்றவன், பைம்புணரிப்
பொங்குவங் கப்புனல் சேர்த
புதுமணப் புன்னையின்கீழ்ச்
சங்குதங் கும்வயற் சண்பையர்
காவலன் சம்பந்தனே.
தெளிவுரை : பூந்தாது தங்கிய தலை மயிர் நீண்டு வளர்வதற்கு முன்பே சிவபெருமானது
இடப்பாகத்திலுள்ள உமா தேவியாரது அருள் பெற்றவன், பசுமையான அலைகள் வீசுகின்ற
வங்கக்கடல் சேர்த்த புதுமணப் புன்னையின்கீழ் சங்கு தங்கும் வயல்களையுடைய சீகாழிக்
காவலன் சம்பந்தனே.
குவளைக் கருங்கண் கொடியிடை
துன்பந் தவிரவன்று
துவளத் தொடுவிடந் தீர்த்த
தமிழின் தொகைசெய்தவன்
திவளக் கொடிக்குன்ற மாளிகைச்
சென்னியின் வாய்த்
தவளப் பிறைதங்கு சண்பையர்
காவலன் சம்பந்தனே.
தெளிவுரை : குவளைக் கருங்கண்களையும் கொடி இடையையும் உடையவளது துன்பம் நீங்க,
அன்று துவளத் தொடுவிடத்தை இறக்கியவனும் தேவாரப் பாடல்களைப் பாடியவனும்
ஒளிவிடுகின்ற அந்தக் கொடிகளையுடைய மலைபோன்ற மாளிகைகளின் உச்சிப் பகுதியில்
வெண்மையான பிறைத் திங்கள் தங்குகின்ற சீகாழிக் காவலன் சம்பந்தனே.
கள்ளம் பொழில்நனி பள்ளித்
தடங்கட மாக்கியஃதே
வெள்ளம் பணிநெய்த லாக்கிய
வித்தகன், வெண்குருகு
புள்ளொண் தவளப் புரிசங்கொ
டலாக் கயலுகளத்
தள்ளந் தடம்புனல் சண்பையர்
காவலன் சம்பந்தனே.
தெளிவுரை : கள்ளையும் அழகையும் உடைய சோலைகளை உடைய நனிப்பள்ளியை பெரிய பாலை நிலம்
ஆக்கி, அதையே உளம் பெருகும் நெய்தல் நிலம் ஆக்கிய வித்தகன், வெண் குருகுப் புள்
ஒண்தவளப் புரிசங்கொடு ஆரவாரிக்க கயல்மீன்கள் புரள, தள்ளம் தடம் புனல் சீகாழிக்
காவலன் சம்பந்தனே.
இந்த 11 பாடல்களிலும் சீகாழியின் நில வளம், நீர் வளம், செல்வவளம் ஆகியவற்றைப்
புகழ்ந்து பாடுகின்றார்.
ஆறதே றுஞ்சடை யானருள் மேவ வவனியர்க்கு
வீறதே றுந்தமி ழால்வழி கண்டவன், மென்கிளிமாந்
தேறல்கோ தித்துறு சண்பகந்தாவிச் செழுங்கமுகின்
தாறதே றும்பொழிற் சண்பையர் காவலன் சம்பந்தனே.
தெளிவுரை : கங்கையைச் சடையில் உடையவனாகிய சிவபெருமான் அருள் பெற்ற உலகத்தவர்க்கு
வெற்றியுள்ள தேவாரப் பாடல்களால் வழிகண்டவன், மென்கிளி மாம்பூவில் உள்ள தேனைக்
கோதித் தூறு சண்பகம் தாவி செழுங் கமுகின் குலையின்மீது தாவும் பொழில்களையுடைய
சீகாழியின் காவலன் சம்பந்தனே.
அந்தமுந் தும்பிற வித்துயர்
தீர வரனடிக்கே
பந்தமுந் துந்தமிழ் செய்த
பராபரன் பைந்தடத்தேன்
வந்துமுந் தும்நந்தம் முத்தங்
கொடுப்ப வயற்கயலே
சந்தமுந் தும்பொழிற் சண்பையர்
காவலன் சம்பந்தனே.
தெளிவுரை : பிறவித் துன்பங்கள் நீங்க, சிவபெருமானது திருவடிகளுக்கே தளை முந்தும்
தமிழ் வேதம் செய்த பராபரனும் பைந்தடந்தேன் வந்து முந்தும் சங்குகள் முத்துக்களைக்
கொழிக்கும் வயல்களுக்கு அருகே சந்தன மரங்களை உடைய சோலைகள் சூழ்ந்த சீகாழியின்
காவலனுமாக உள்ளவன் சம்பந்தன்.
புண்டலைக் குஞ்சரப் போர்வையர்
கோயிற் புதவடைக்கும்
ஒண்டலைத் தண்டமிழ்க் குண்டா
சனியும்பர் பம்பிமின்னுங்
கொண்டலைக் கண்டுவண்
டாடப் பெடையொடுங்
தண்டலைக் குண்டகழ்ச் சண்பையர்
காவலன் சம்பந்தனே.
தெளிவுரை : புண்தலை யானையுரியாகிய போர்வையை உடைய இறைவன் கோயில் கொண்டிருக்கும்
திருமறைக்காட்டுக் கோயில் கதவு மூடுமாறு தேவாரம் பாடியவரும், சமணர்களுக்குப்
பேரிடியாய் உள்ளவரும், வானத்தில் மேகங்கள் ஒன்று கூடி மின்னியதைக் கண்டு வண்டாட,
பெடையொடு கொக்கு உறங்கும் சோலைகளையும் ஆழமான அகழியையும் உடைய சீகாழியின்
காவலருமாக இருப்பவர் திருஞானசம்பந்தரே.
எண்டலைக் குந்தலை வன்கழல்
சூடியெ னுள்ளம்வெள்ளங்
கண்டலைப் பத்தன் கழல்தந்த
வன்கதிர் முத்தநத்தம்
விண்டலைப் பத்தியி லோடும்
விரவி மிளிர்பவளம்
தண்டலைக் குங்கடற் சண்பையர்
காவலன் சம்பந்தனே.
தெளிவுரை : எட்டுத் திக்குகளுக்கும் தலைவராய் இருப்பவரும், அவரது பாதங்களைச் சூடி
என் உள்ளம் வெள்ளம் கண்டு அலைப்பத் தன் பாதங்களைத் தந்தவரும் ஒளியுடைய சங்குகள்
விண்டு அலைகளின் வரிசையில் ஓடும். விரவி மிளிர் பவளம் கொடிகளின் தாள்களை
அலைக்கும் கடல்சூழ்ந்த சீகாழிப் பதிக்குக் காவலருமாய் இருப்பவர்
திருஞானசம்பந்தரே.
-
ஆறுமண் டப்பண்டு செஞ்சொல்
நடாத்தி யமண்முழுதும்
பாறுமண் டக்கண்டு சைவ
சிகாமணி பைந்தடத்த
சேறுமண் டச்சங்கு செங்கயல்
தேமாங் கனிசிதறிச்
சாறுமண் டும்வயல் சண்பையர்
காவலன் சம்பந்தனே.
தெளிவுரை : வைகை ஆற்றில் இவர் விட்ட ஏடுகள் எதிரேறிச் செல்லுமாறு செய்து,
சமணர்கள் உடல்களைப் பருந்துகள் உண்ணுமாறு செய்த சைவ சிகாமணியாயும், (பசுமையான
வயல்களில் சேறு நிறைந்திருந்தன. அவைகளில் சங்குகளும் செங்கயல்களும் இருந்தன.
தேமாங்கனிகள் சிதறி அவைகளில் சாறு மண்டியிருந்தன.) அத்தகைய வயல்கள் சூழ்ந்த
சீகாழிக்குக் காவலருமாய் இருப்பவர் திருஞான சம்பந்தரே.
-
விடந்திளைக் கும்அர வல்குல்மென்
கூந்தல் பெருமணத்தின்
வடந்திளைத் குங்கொங்கை புல்கிய
மன்மதன் வண்கதலிக்
கடந்திளைத் துக்கழு நீர்புல்கி
யொல்கிக் கரும்புரிஞ்சித்
தடந்திளைக் கும்புனல் சண்பையர்
காவலன் சம்பந்தனே.
தெளிவுரை : நச்சுப் பொருந்திய பாம்பின் படத்தைப்போல விளங்கும் அல்குலையும்
மென்கூந்தலையும் பெருமணத்தின் வடந்திளைக்கும் கொங்கைகளைத் தழுவிய மன்மதன்போன்று
உள்ளவரும் வளமுள்ள வாழைக் காடு திளைத்து கழுநீர் புல்கி ஒல்கிக் கரும்பு உரிஞ்சி
தடம் திளைக்கும் நீர்வளமுள்ள சீர்காழிக்குக் காவலராகவும் இருப்பவர் ஞானசம்பந்தரே.
-
பாலித்த கொங்கு குவளைகள்
ளம்பொழில் கீழ்ப்பரந்து
ஆலிப்ப ஆறதே றுங்கழ
னிச்சண்பை அந்தமுந்து
மேலிட்ட புண்டலைக் குஞ்சரத்
தெண்டலைக் குந்தலைவன்
கோலிட்ட வாறு விடந்திளைக்
கும்அர வல்குலையே.
தெளிவுரை : நில வளம் நீர் வளமிக்க சோலைகள் சூழ்ந்த சண்பை என்னும் சீகாழியானது,
ஊழிக்காலத்தில் யானையை அழித்த சிவபெருமான் பணித்தவாறு விடம் பொருந்திய அரவு
போன்று அல்குலையுடைய உமாதேவியாரோடு காட்சியளித்த இடமாகும். அப் பதியின் காவலன்
ஞானசம்பந்தரே என்பதாம்.
திருச்சிற்றம்பலம்
ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை ( நம்பியாண்டார்நம்பிகள் அருளிச்செய்தது )
திருஞானசம்பந்தர் என்னும் ஆளுடைய பிள்ளையாரின் பெருமையை எடுத்து ஓதுவதாகிய
இந்நூல், அகவல், வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் மூவகைப் பாக்களால்
அமைந்ததாகலின், மூவகை மணிகளால் ஆகிய அழகிய மணிமாலை போன்று மும்மணிக்கோவை என்னும்
பெயருடையதாயிற்று.
இதன்கண் முப்பது பாடல்கள் அமைந்துள்ளன. திருஞானசம்பந்தருடைய வரலாற்று
நிகழ்ச்சிகளைக் குறித்துப் போற்றும் பாடல்களும் அவர் திருவாய் மலர்ந்து அருளிய
தேவாரப் பதிகங்களின் சிறப்பினை விரித்துரைக்கும் பாடல்களும், பிள்ளையாரைக்
காதலித்த தலைமகளுடைய துன்பத்தை எடுத்துரைக்கும் அகத்துறைப் பாடல்களும் இம்
மும்மணிக்கோவையில் இனிது அமைந்துள்ளன.
திருச்சிற்றம்பலம்
ஆசிரியப்பா
-
திங்கட் கொழுந்தொடு பொங்கரவு திளைக்குங்
கங்கைப் பேரியாற்றுக் கடுவரற் கலுழியின்
இதழியின் மெம்பொ னிருகரை சிதறிப்
புதலெருக்கு மலர்த்தும் புரிபுன் சடையோன்
திருவருள் பெற்ற இருபிறப் பாளன்
தெளிவுரை : பிறைச் சந்திரனோடு, சினம் மிக்க பாம்பு தங்கியுள்ள கங்கையாகிய பெரிய
நதியின் விரைவாக வரும் வெள்ளத்தில், கொன்றையின் செந்நிற மலர்கள் இருகரைகளிலும்
சிதறி, புதராக உள்ள எருக்கு மலர்ந்தும், முறுக்கிய சடையை உடைய சிவபெருமான்
திருவருள் பெற்ற இருபிறப்பாளனாகிய ஞானசம்பந்தர்
முத்தீ வேள்வு நான்மறை வளர
ஐவேள் வுயர்த்த அறுதொழி லாளன்
ஏழிசை யாழை யெண்டிசை யறியத்
துண்டப் படுத்த தண்டமிழ் விரகன்
காழி நாடன் கவுணியர் தலைவன்
தெளிவுரை : முத்தீ வேள்வியும் நான்கு மறைகளும் வளர ஐவகையான வேள்வியை உயர்த்த
அறுதொழிலாளன், ஏழிசை யாழை, எண்டிசை அறிய துண்டாகச் செய்யுமாறு யாழ்முரி என்னும்
பதிகத்தைப் பாடிய தண்டமிழ்விரகன், சீகாழிநாடன், கவுணியர் குல தலைவன்.
மாழை நோக்கி மலைமகள் புதல்வன்
திருந்திய பாடல் விரும்பினர்க் கல்லது
கடுந்துய ருட்புகக் கைவிளிக் கும்இந்
நெடும்பிற விக்கடல் நீந்துவ தரிதே.
தெளிவுரை : மாவடுப்போன்ற கண்களை உடைய உமாதேவியாரின் புதல்வனாகிய ஞானசம்பந்தர்
தேவாரப் பாடல்களை விரும்பியவர்களுக்கு அல்லாமல் மற்றவர்கள் கடுந்துயர் உட்புகக்
கைவிளிக்கும் இந்நெடும் பிறவிக்கடல் நீந்துவது அரிது. ஞானசம்பந்தரை வழிபடுவோர்
பிறவிப் பெருங்கடலை நீந்துவர் என்கிறார்.
வெண்பா
-
அரியோடு நான்முகத்தோ னாதிசுரர்க் கெல்லாந்
தெரியாமைச் செந்தழலாய் நின்ற வொருவன்சீர்
தன்தலையின் மேல்தரித்த சம்பந்தன் தாளிணைகள்
என்தலையின் மேலிருக்க வென்று.
தெளிவுரை : திருமால், பிரமன் முதலிய எல்லாத் தேவர்களும் உணர முடியாதபடி
செந்தீயாய் நின்ற சிவபெருமானது சிறப்புக்களைத் தன் தலையின்மேல் தரித்த ஞான
சம்பந்தரின் திருவடிகள் என் தலையின்மேல் இருக்க வேண்டுகிறேன்.
கட்டளைக் கலித் துறை
-
என்று மடியவ ருள்ளத்
திருப்பன விவ்வுலகோர்
நன்று மலர்கொடு தூவித்
துதிப்பன நல்லசங்கத்
தொன்றும் புலவர்கள் யாப்புக்
குரியன வொண்கலியைப்
பொன்றுங் கவுணியன் சைவ
சிகாமணி பொன்னடியே.
தெளிவுரை : ஒண் கலியைப் பொன்றச் செய்யும் கவுணியர் குல திலகரும் சைவ
சிகாமணியுமாகிய ஞான சம்பந்தரது பொன்னடிகள் என்றும் அடியவர் உள்ளத்து இருப்பன.
இவ்வுலகோர் நன்று மலர்கொடு தூவித்துதிப்பன. நல்ல சங்கத்து ஒன்றும் புலவர்கள்
பாடலுக்கு உரியன என்பதாம்.
ஆசிரியப்பா
-
அடுசினக் கடகரி யதுபட உரித்த
படர்சடைக் கடவுள்தன் திருவரு ளதனால் பிறந்தது
கழுமலம் என்னும் கடிநக ரதுவே வளர்ந்தது
தேங்கமழ் வாவிச் சிலம்பரை யன்பெறு
பூங்குழல் மாதிடு போனகம் உண்டே பெற்றது
தெளிவுரை: கோபம் மிக்க மதம் பொருந்திய யானையைக் கொன்று அதன் தோலை உரித்த படர்ந்த
சடையை உடைய சிவபெருமானது திருவருளினால் பிறந்தது, சீகாழி நகரில் வளர்ந்தது,
குளக்கரையில் உமா தேவியார் அளித்த ஞானப்பாலை உணவாகப் பெற்றது.
குழகனைப் பாடிக் கோலக்காப்புக்
கழகுடைச் செம்பொன் தாளம் அவையேதீர்த்தது
தாதமர் மருகற் சடையனைப் பாடிப்
பேதுறு பெண்ணின் கணவனை விடமே
தெளிவுரை : அந்த ஞானசம்பந்தர் சிவ பெருமானைப் பாடி திருக்கோலக்காவிலே புகுந்து
அழகுடைச் செம்பொன் தாளம் அவையே தீர்த்தது, தாதமர் திருமருகல் பெருமானைப் பாடி
மிகுந்த கலக்கத்தை அடைந்த பெண்ணின் கணவனை விடமே அடைத்தது,
அடைத்த தரசோ டிசையா அணிமறைக் காட்டுக்
குரைசேர் குடுமிக் கொழுமணிக் கதவே
ஏறிற் றத்தியும் மாவும் தவிர அரத்துறை
முத்தின் சிவிகை முன்னாட் பெற்றே
பாடிற் றருமறை ஒத்தூர் ஆண்பனை யதனைப்
பெருநிறம் எய்தும் பெண்பனை யாகவே
தெளிவுரை : திருநாவுக்கரசரோடு இசைந்து திருமறைக்காட்டுக் கோயில் கதவை மூடும்படி
செய்தது, யானையும் குதிரையும் தவிர திருஅரத் துறையில் முத்தின் சிவிகை பெற்றுப்
பாடியது, திருவோத்தூரில் ஆண்பனையைப் பெண்பனை ஆக்கியது,
கொண்டது பூவிடு மதுவில் பொறிவண் டுழலும்
ஆவடு துறையிற் பொன்ஆ யிரமே கண்டது
உறியோடுவீலி யொருகையிற் கொள்ளும்
பறிதலைச் சமணைப் பலகழு மிசையே
நீத்த தவிழ்ச்சுவை யேஅறிந் தரனடி பரவும்
தெளிவுரை : பூவிடு மதுவில் பொறிவண்டு சுற்றும் திருவாவடுதுறையில் ஆயிரம் பொன்
கண்டது, உறியோடு மயிற் பீலியை ஒரு கையிற் கொள்ளும் பறித்த தலையை உடைய சமணர்களைக்
கழுவேற்றி சோற்றுச் சுவையை மட்டும் அறிந்து அரன் அடி பரவும்,
தமிழ்ச்சுவை யறியாத் தம்பங் களையே நினைந்த
தள்ளற் பழனக் கொள்ளம் பூதூர்
இக்கரை ஓடம் அக்கரைச் செலவே மிக்கவர்
ஊனசம் பந்தம் அறுத்துயக் கொளவல
ஞானசம் பந்தன்இந் நானிலத் திடையே.
தெளிவுரை : தமிழ்ச் சுவை அறியாத தூண்களையே நினைந்தது, சேறு நிறைந்த கழனிகளை உடைய
கொள்ளம்பூதூர் இக்கரை ஓடம் அக்கரை செலவே மிக்கவர் உடல் சம்பந்தத்தை அறுத்து
உயக்கொள வல்ல திருஞானசம்பந்தர் இஞ்ஞாலத்திடையே இவ்வாறு செய்தார் என்பதாம்.
வெண்பா
-
நிலத்துக்கு மேலாறு நீடுலகத் துச்சித்
தலத்துக் மேலேதா னென்பர் சொலத்தக்க
சுத்தர்கள் சேர்காழிச் சுரன்ஞான சம்பந்தன்
பத்தர்கள்போய் வாழும் பதி.
தெளிவுரை : சிறப்பித்துச் சொல்லத்தக்க சுத்தர்கள் போய்ச் சேர்கின்ற சீர்காழித்
தேவனாகிய திருஞான சம்பந்தனது பக்தர்கள் போய் வாழும் பதியானது நிலத்துக்கு மேல்
ஆறு நீடு உலகத்து உச்சித் தலத்துக்கு மேலேதான் என்று சொல்வார்கள்.
கட்டளைக் கலித் துறை
-
பதிகம் பலபாடி நீடிய
பிள்ளை பரசுதரற்கு
அதிக மணுக்க னமணர்க்குக்
காலன் அவதரித்த
மதியந் தவழ்மாட மாளிகைக்
காழியென் றால்வணங்கார்
ஒதியம் பணைபோல் விழுவரந்
தோசில வூமர்களே.
தெளிவுரை : பல பதிகங்களைப் பாடி நீடிய பிள்ளை, மழுப்படையைக் கையிலேந்திய
சிவபெருமானுக்கு நெருக்கமானவன். சமணர்களுக்கு இயமன் போன்றவன். அவன் அவதரித்த
சந்திரன் தவழ் உயர்ந்த மாட மாளிகைகளை உடைய சீகாழி என்றால், சில ஊமர்கள்
வணங்கமாட்டார்கள். ஓதிய மரக் கிளைபோல் விழுவர். அந்தோ! அவர்கள் நிலை
வருந்தத்தக்கது. (ஓதிய மரம் பருத்திருக்குமே தவிர எளிதில் ஒடிந்து போகக்
கூடியது.)
ஆசிரியப்பா
தோழி அறத்தொடு நிற்றல் : அதாவது தலைவியின் காதலை நற்றாய்க்குத் தெரிவித்தல்.
-
தவள மாளிகைத் திவளும் யானையின்
கவுள்தலைக் கும்பத்
தும்பர் பதணத் தம்புதந் திளைக்கும்
பெருவளம் தழீஇத் திருவளர் புகலி
விளங்கப் பிறந்த வளங்கொள் சம்பந்தன்
தெளிவுரை : கவள மாளிகைத் திவளும் யானையின் கவுள்தலைக் கும்பத்து உம்பர் மேடைகளில்
மேகம் தவழ்கின்ற பெருவளம் திகழும் திருவளர் சீகாழி விளங்கப் பிறந்த வளங்கொள்
திருஞானசம்பந்தர்.
கருதியஞ் செவ்விச் சுருதியஞ் சிலம்பில்
தேமரு தினைவளர் காமரு புனத்து
மும்மதஞ் சொரியும் வெம்முகக் கைம்மா
மூரி மருப்பின் சீரிய முத்துக்
கொடுஞ்சிலை வளைத்தே கொடுஞ்சரந் துரந்து
தெளிவுரை : கருதிஅஞ் செவ்விச் சுருதி அம் சிலம்பில் (மலையில்) தேமரு தினைவளர்
அழகிய தினைப்புனத்தில் மும்மதம் சொரியும் கொடிய முகத்தையுடைய ஆண் யானையின் மூரி
மருப்பின் சீரிய முத்துக் கொடுஞ்சிலை வளைத்து கொடும் சரம் துரந்து (செலுத்தி),
முற்பட வந்து முயன்றங் குதவிசெய்
வெற்பனுக் கல்லது
சுணங்கணி மென்முலைச் சுரிகுழல் மாதினை
மணஞ்செய மதிப்பது நமக்குவன் பழியே.
தெளிவுரை : முன்னால் வந்து முயன்று அங்கு உதவி செய்த வெற்பனுக்கு அல்லாமல் வேறு
ஒருவருக்குத் தேமல் படர்ந்த தலைவியை மணஞ்செய நினைப்பது நமக்கு வன் பழியாகும். இது
களிறு தரு புணர்ச்சியால் அறத்தொடு நின்றது.
வெண்பா
-
பழியொன்றும் ஓராதே பாயிடுக்கி வாளா
கழியுஞ் சமண்கையர் தம்மை யழியத்
துரந்தரங்கச் செற்றான் சுரும்பரற்றும் பாதம்
நிரதந்தரம்போய் நெஞ்சே நினை.
தெளிவுரை : வர இருக்கும் பழியைக் கவனியாமல், பாயை இடுக்கி வைத்துக் கொண்டு
வீணாகக் காலங்கழிக்கும் சமணர்களை வருந்தி அழியுமாறு செய்த ஞானசம்பந்தரது வண்டுகள்
மொய்க்கின்ற பாதங்களை நெஞ்சே ! எப்போதும் போய் நினைப்பாயாக. அதுதான் உய்யும் வழி
என்று உணர்த்துகின்றார்.
கட்டளைக் கலித் துறை
-
நினையா தரவெய்தி மேகலை
நெக்கு வளைசரிவாள்
தனையாவ வென்றின் றருளுதி
யேதடஞ் சாலிவயல்
கனையா வருமேதி கன்றுக்
கிரங்கித்தன் காழ்வழிபால்
நனையா வருங்காழி மேவிய
சீர்ஞான சம்பந்தனே.
தெளிவுரை : இது தோழி கூற்று: பெரிய நெல் வயல்களில் கனைத்து வருகின்ற பெண் எருமை
தன் கன்றுக்கு இரங்கி தன் கால் வழியே பால் நனைந்து வரும் சீகாழி மேவிய சீர்
திருஞானசம்பந்தரே ! உன்னை நினைந்து, மிக வருந்தி, மேகலை நெகிழ, வளைகள் கழலுமாறு
உள்ள இந்தத் தலைவியை அந்தோ ! ஏற்று அருள் செய்வீராக.
ஆசிரியப்பா
-
தனமலி கமலத் திருவெனுஞ் செல்வி
விருப்பொடு திளைக்கும் வீயா வின்பத்
தாடக மாடம் நீடுதென் புகலிக்
காமரு கவினார் கவுணியர் தலைவ
பொற்பமர் தோள நற்றமிழ் விரக
தெளிவுரை : தனம் மலிந்த தாமரையில் வாசம் செய்கின்ற திருவெனும் செல்வி விருப்பொடு
திளைக்கும் கெடாத இன்பத்தோடு கூடிய பொன் மாடங்கள் நிறைந்த சீகாழி விரும்பத்தக்க
அழகு பொருந்திய கவுணியர் குலத் தலைவரே ! அழகிய தோள்களை உடையவரே ! நற்றமிழ் விரகரே
!
மலைமகள் புதல்வ கலைபயில் நாவநினாது
பொங்கொளி மார்பில் தங்கிய திருநீ
றாதரித் திறைஞ்சிய பேதையர் கையில்
வெள்வளை வாங்கிச் செம்பொன் கொடுத்தலின்
பிள்ளை யாவது தெரிந்தது பிறர்க்கே.
தெளிவுரை : உமாதேவியின் புதல்வரே ! கலைபயில் நாவினை உடையவரே ! உமது அழகிய
மார்பில் தங்கிய திருநீற்றை விரும்பி வழிபடும் பேதையர் கையில் வெள்வளைகளைப்
பெற்றுக் கொண்டு பசலையைக் கொடுத்தலின், பிள்ளையாவது தெரிந்தது பிறர்க்கே.
வெண்பா
-
பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்
துறிவியெனுந் தொஃறோணி கண்டீர் நிறையுலகில்
பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன்
தன்மாலை ஞானத் தமிழ்.
தெளிவுரை : பிறவி எனும் பொல்லாத பெருங்கடலை நீந்தத் துறவி என்று சொல்லத்
தக்கவரும், நிறை உலகில் பொன்மாலை மார்பன் நீர் வளமிக்க சீகாழிச் சம்பந்தரது
தேவராப் பாடல்களாகிய தோலால் ஆகிய படகைக் காண்பீராக. பிறவிக் கடலைக் கடக்க
தேவாரமாகிய தோணி உள்ளது என்கிறார்.
கட்டளைக் கலித்துறை
-
ஞானந் திரளையி லேயுண்
டனையென்று நாடறியச்
சோனந் தருகுழ லார்சொல்
லிடாமுன் சுரும்புகட்குப்
பானந் தருபங்க யத்தார்
கொடுபடைச் சால்வழியே
கூனந் துருள்வயல் சூழ்காழி
மேவிய கொற்றவனே.
தெளிவுரை : ஞானப் பாலை உண்டனை என்று, நாடறிய முகிலைப்போல் விளங்குகின்ற
கூந்தலையுடையவர்கள் சொல்வதற்கு முன், வண்டுக் கூட்டங்களுக்கு நீருணவைத் தருபவர்
தாமரைபோன்ற பாதங்களை உடைய ஞானசம்பந்தர் என்பதாம். படைச்சால் வழியே வளைவையுடைய
சங்குகள் நிறைந்த வயல் சூழ்ந்த சீகாழி மேவிய ஞானசம்பந்தரே தருபவர் எனக் கூட்டுக.
ஆசிரியப்பா
-
அவனிதலம் நெரிய வெதிரெதிர் மலைஇச்
சொரிமதக் கறிற்று மத்தகம் போழ்ந்து
செஞ்சே றாடிச் செல்வன அரியே எஞ்சாப்
படவர வுச்சிப் பருமணி பிதுங்கப்
பிடரிடைப் பாய்வன பேழ்வாய்ப் புலியே
தெளிவுரை : நிலவுலகம் நெரியும்படி மூங்கில்கள் ஒன்றுக்கொன்று உராய்ந்து, மதம்
பொழிகின்ற ஆண் யானையின் மத்தகத்தைப் பிளந்து, இரத்தம் பெருகுமாறு சிங்கங்கள்
செல்லும் படத்தையுடைய பாம்புகளின் பெயர் மாணிக்கங்கள் பிதுங்க, பிளந்த வாயையுடைய
புலிகள் பிடரிடை பாயும் இடையில்,
இடையிடைச் செறியிரு ளுருவச் சேண்விசும் பதனில்
பொறியென விழுவன பொங்கொளி மின்னே
உறுசின வரையா லுந்திய கலுழிக்
கரையா றுழல்வன கரடியின் கணனே
தெளிவுரை : நிறைந்த இருள் விலகுமாறு ஆகாயத்தில் மின்னல்கள் மிக்க ஒளியோடு பாயும்
மலையிலிருந்து பெருகி வரும் காட்டாற்று வெள்ளம் கரை புரள அங்குக் கரடியின்
கூட்டங்கள் அலையும்.
நிரையார் பொருகட லுதைந்த சுரிமுகச் சங்கு
செங்கயல் கிழித்த பங்கய மலரின்
செம்மடல் நிறைய வெண்முத் துதிர்க்கும்
தெளிவுரை : வரிசையாக, பொருகடல் உதைந்த சுரிமுகச் சங்குகள் செங்கயல் கிழித்த பங்கய
மலரின் செம்மடல் நிறைய வெண்முத்து உதிர்க்கும்.
பழனக் கழனிக் கழுமல நாடன்
வைகையி லமணரை வாதுசெய் தறுத்த
சைவ சிகாமணி சம்பந்தன் வெற்பிற்
சிறுகிடை யவள்தன் பெருமுலை புணர்வான்
நெறியினில் வரலொழி நீமலை யோனே.
தெளிவுரை : அத்தகைய வயல்களையுடைய கழுமலர் என்னும் சீகாழி நாடன் வைகை ஆற்றில் ஏடு
எதிரேற விட்டு, சமணர்களை வாதில் வென்று அறுத்த சைவ சிகாமணி சம்பந்தரது மலையில்,
சிறிய இடையை உடைய தலைவியினது பெரிய முலைகளைப் புணர்வதற்காக இந்த ஆபத்தான வழியில்
மலைநாட்டுத் தலைவனே நீ வரவேண்டா.
ஈற்றயலடியில் முரண் தொடை பயின்று வந்துள்ளது.
வெண்பா
-
மலைத்தலங்கள் மீதேறி மாதவங்கள் செய்தும்
முலைத்தடங்கள் நீத்தாலும் மூப்பர் கலைத்தலைவன்
சம்பந்தற் காளாய்த் தடங்காழி கைகூப்பித்
தம்பந்தந் தீராதார் தாம்.
தெளிவுரை : கலைத் தலைவராகிய சம்பந்தருக்குத் தொண்டராய்ப் பெரிய சீகாழியைக்
கைகூப்பி வணங்கி, தம்முடைய பாச பந்தம் தீராதார் மலைத்தலங்கள் மீதேறி, மாதவங்கள்
செய்து, முலைத்தடங்கள் மூத்தாலும் வயதில் மூப்படைவர் என்பதாம். ஞான சம்பந்தரை
வழிபட்டால் பிறவித் துன்பங்கள் போம் என்கிறார்.
கட்டளைக் கலித் துறை
-
தாமரை மாதவி சேறிய
நான்முகன் தன்பதிபோல்
காமரு சீர்வளர் காழிநன்
னாடன் கவித்திறத்து
நாமரு வாதவர் போல்அழ
கீந்துநல் வில்லிபின்னே
நீர்மரு வாத சுரத் தெங்ங
னேகுமென் நேரிழையே.
தெளிவுரை : இது செவிலி இரங்கல் துறை.
தாமரையாகிய சிறந்த இருக்கையில் ஏறிய பிரம தேவனது பிரமலோகம்போல், அழகிய சிறப்புடைய
காழி நன்னாடன் ஆகிய ஞானசம்பந்தரது தேவாரப் பாடல்களைப் பாடாதவர்போல் அழகீந்து நல்
வில்லியின் பின்னே நீரற்ற பாலைவனத்தில் என் நேரிழை எப்படிச் செல்வாள்.
ஆசிரியப்பா
-
இழைகெழு மென்முலை யிதழிமென் மலர்கொயத்
தழைவர வொசித்த தடம்பொழி லிதுவே காமர்
கனைகுடைந் தேறித் துகிலது புனையநின்
றெனையுங் கண்டு வெள்கிட மிதுவே தினைதொறும்
தெளிவுரை : அணிகலன்கள் பொருந்திய தலைவி கொன்றையின் மென்மலர் பறிக்க, கிளையைத்
தாழ்த்திய பெரிய சோலை இதுவே. அழகிய சுனையில் நீராடி, கரையேறி ஆடையை உடுத்திய
என்னையும் கண்டு வெட்கப்பட்ட இடமும் இதுவே.
பாய்கிளி யிரியப் பையவந் தேறி
ஆயவென் றிருக்கும் அணிப்பரண் இதுவே ஈதே
இன்புறு சிறுசொ லவைபல வியற்றி
அன்பு செய் தென்னை யாட்கொளு மிடமே பொன்புரை
தெளிவுரை : நினைக்கும்தோறும் பாய்கிளி அஞ்சியோட தலைவி ஏறி வந்த அழகிய பரண் இதுவே.
இன்புறு சிறுசொல் பலபேசி அன்பு செய்து என்னை ஆட்கொண்ட இடமும் இதுவே.
தடமலர்க் கமலக் குடுமியி லிருந்து
நற்றொழில் புரியும் நான்முகன் நாட்டைப்
புற்கடை கழீஇப் பொங்கு சராவத்து
நெய்த்துடுப் பெடுத்த மூத்தீப் புகையால்
நாள்தொறும் மறைக்குஞ் சேடுறு காழி
தெளிவுரை : பொன்புரை தடமலர்க் கமலக் குடுமியிலிருந்து நற்றொழில் புரியும் பிரமனது
நாட்டைத் தருப்பைக் கொண்டு கழுவிப் பொங்கு அகப்பையில் நெய்யை முகந்து வளர்த்த
முத்தீப் புகையால் நாள்தொறும் மறைக்கும் பெருமை பொருந்திய சீகாழி.
எண்டிசை நிறைந்த தண்டமிழ் விரகன்
நலங்கலந் தோங்கும் விலங்கலின் மாட்டுப்
பூம்புன மதனிற் காம்பன தோளி
பஞ்சில் திருந்தடி நோவப் போய்எனை
வஞ்சித் திருந்த மணியறை யிதுவே.
தெளிவுரை : எண்டிசை நிறைத்த தண்தமிழ் விரகன் நலங்கலந்து ஓங்கும் மலையின்மீது
தினைப்புனம். அதனில் மூங்கில்போன்ற தோல்களை உடைய தலைவி, பஞ்சு தோய்த்த திருந்திய
பாதம் நோவப் போய் என்னை வஞ்சித்திருந்த மணியறை இதுவே.
வெண்பா
-
வேழங்க ளெய்பவர்க்கு வில்லாவ திக்காலம்
ஆழங் கடல்முத்தம் வந்தலைக்கும் நீள்வயல்சூழ்
வாயந்ததிவண் மாட மதிற்காழிக் கோன்சிலம்பிற்
சாய்ந்தது வண்தழையோ தான்.
தெளிவுரை : தோழி தலைவனை நகுதல்: யானைகளை எய்பவருக்கு வில்லாவது இக்காலம். ஆழமான
கடலில் முத்துக்கள் வந்தலைக்கும் நீண்ட வயல்கள் சூழ்ந்த மாடங்களும் மதில்களும்
பொருந்திய சீகாழிக் கோனாகிய ஞானசம்பந்தரது மலையில் சாய்ந்தது வண்தழையோ?
கட்டளைக் கலித் துறை
-
தழைக்கின்ற சீர்மிகு ஞானசம்
பந்தன் தடமலைவாய்
அழைக்கின்ற மஞ்சைக் கலர்ந்தன
கோடலம் பெய்திடுவான்
இழைக்கின்ற தந்தரத் திந்திர
சாபம்நின் னெண்ணமொன்றும்
பிழைக்கின்ற தில்லைநற் றேர்வந்து
தோன்றிற்றுப் பெய்வளையே.
தெளிவுரை : தோழி தலைவன் வரவுரைத்தல்: தழைக்கின்ற சிறப்பினை உடைய ஞானசம்பந்தனது
பெரிய மலையின்கண் அழைக்கின்ற மயிலுக்குக் காந்தள்கள் மலர்ந்தன. மழை நீர் பெய்யும்
பொருட்டு இழைக்கின்ற வானவில் உனது எண்ணம் ஒன்றும் பிழைப்பதில்லை என்று
குறிப்பாய்த் தெரிவிக்கின்றது. தலைவியே ! தலைவனின் தேர் வந்து நிற்கிறது. கார்ப்
பருவத்தில் வருவதாகச் சொன்ன தலைவர் அதன்படி வந்து விட்டார் என்கிறார். மேகத்தைக்
கண்டு மயில்கள் கூவி ஆரவாரம் செய்யும்.
ஆசிரியப்பா
-
வளைகால் மந்தி மாமரப் பொந்தில்
விளைதே னுண்டு வேணுவின் துணியால்
பாறை யில்துயில் பனைக்கை வேழத்தை
உந்தி யெழுப்பு மந்தண் சிலம்ப அஃதிங்கு
தெளிவுரை : வளைந்த காலையுடைய பெண் குரங்கு மாமரப் பொந்தில் விளைந்த தேனையுண்டு,
மூங்கில் கொம்பினால், பாறையில் துயில்கின்ற பனைமரம் போன்ற கையையுடைய யானையை உந்தி
எழுப்பும் குளிர்ந்த மலை நாட்டுத் தலைவனே !
என்னைய ரிங்கு வருவர் பலரே
அன்னை காணி லலர்தூற் றும்மே பொன்னார்
சிறுபரற் கரந்த விளிகுரற் கிங்கிணி
சேவடி புல்லிச் சில்குர லியற்றி
அமுதுண் செவ்வா யருவி தூங்கத்
தாளம் பிரியாத் தடக்கை யசைத்துச்
தெளிவுரை : இங்கு என் தமையன்மார் வருவர். என் அன்னை பார்த்தால் அலர் தூற்றுவாள்.
பொன்னால் செய்யப்பட்ட பரற் கற்களை உள்ளீடாக வைத்துள்ள ஒலி செய்கின்ற கிங்கிணி
அணிந்துள்ள பாதங்களையும், சிறுகுரல் இயற்றி அமுதுண்ணும் செவ்வாய் அருவி அசைய,
தாளம் பிறழாத தடக்கையை அசைத்து,
சிறுகூத் தியற்றிச் சிவனருள் பெற்ற
நற்றமிழ் விரகன் பற்றலர் போல
இடுங்கிய மனத்தொடு மொடுங்கிய சென்று
பருதியுங் குடகடல் பாய்ந்தனன்
கருதிநிற் பதுபிழை கங்குலிப் புனத்தே.
தெளிவுரை : சிறுகூத்தியற்றிச் சிவனருள் பெற்ற நற்றமிழ் விரகனுடைய பகைவர்களைப்போல,
இடுங்கிய மனத்தோடு ஒடுங்கிச் சென்று சூரியனும் மேற்குக் கடலில் மறைந்தனன்.
இப்புனத்தில் இன்றிரவு நீ தங்கியிருக்க நினைப்பது தவறாகும். எனவே செல்வாயாக
என்பது குறிப்பு.
வெண்பா
-
தேம்புனமே யுன்னைத் திரிந்து தொழுகின்றேன்
வாம்புகழ்சேர் சம்பந்தன் மாற்றலர்போல் தேம்பி
அழுதகன்றா ளென்னா தணிமலையர் வந்தால்
தொழுதகன்றா ளென்றுநீ சொல்.
தெளிவுரை : இது தலைவி கூற்று: இனிய தினைப்புனமே ! உன்னை மீளவும் தொழுகின்றேன்.
மிக்க புகழுடைய ஞானசம்பந்தரது பகைவர்களைப்போலத் தேம்பி அழுதகன்றாள் என்று
கருதாமல், மலர்மாலை அணிந்த தலைவர் வந்தால் தலைவி தொழுதகன்றாள் என்று நீ சொல்வாயாக
!
கட்டளைக் கலித் துறை
-
சொற்செறி நீள்கவி செய்தன்று
வைகையில் தொல்லமணர்
பற்செறி யாவண்ணங் காத்தசம்
பந்தன் பயில்சிலம்பில்
கற்செறி வார்சுனை நீர்குடைந்
தாடுங் கனங்குழையை
இற்செறி யாவண்ணம் காத்திலை
வாழி யிரும்புனமே.
தெளிவுரை : இது தலைவன் வறும்புனம் கண்டு இரங்குதல்.
தெய்வீகச் சொற்கள் செறிந்த தேவாரப் பாடலைச் செய்து அன்று வைகையில் தொல் அமணர்
பற்செறியா வண்ணம் காத்த சம்பந்தர் பயில் மலையில் கற்செறிவார் சுனை நீர் குடைந்து
ஆடும் கனத்த குண்டலத்தை அணிந்த தலைவியை வீட்டில் அடைக்காதவாறு, இரும்புனமே ! நீ
காத்திலை, வாழ்வாயாக.
ஆசிரியப்பா
-
புனலற வறந்த புன்முளி சுரத்துச்
சினமலி வேடர் செஞ்சர முரீஇப்
படுகலைக் குளம்பின் முடுகு நாற்றத்
தாடு மரவி னகடு தீயப்
பாடு தகையின் பஞ்சுரங் கேட்டுக்
தெளிவுரை : செவிலி புறவொடு கூறுதல்.
நீர் காய்ந்த இந்தப் பாலை நிலத்தில் கோபமிக்க வேடர்கள் அம்பு தொடுத்து மான்
குளம்பின் முடுகு நாற்றத்து ஆடும் பாம்பின் வயிறு காயுமாறு பாடுதகையின் பஞ்சுரங்
கேட்டு,
கள்ளியங் கவட்டிடைப் பள்ளி கொள்ளும்
பொறிவரிப் புறவே யுறவலை காண்நீ நறைகமழ்
தேம்புனல் வாவித் திருக்கழு மலத்துப்
பையர வசைத்ததெய்வ நாயகன்
தன்னருள் பெற்ற பொன்னணிக் குன்றம்
தெளிவுரை : கள்ளியங் கவட்டிடைப் பள்ளி கொள்ளும் பொறிவரிப்புறவே சுற்றமன்று. இதை
நீ அறிவாயாக. மணம் கமழும் தேம்புனல் வாவியை உடைய சீகாழியில் படத்தையுடைய பாம்பைக்
கட்டிய சிவபெருமான் தன்னருள் பெற்ற பொன்னணிக் குன்றம்.
மானசம் பந்தம் மண்மிசைத் துறந்த
ஞானசம் பந்தனை நயவார் கிளைபோல்
வினையே னிருக்கும் மனைபிரி யாத
வஞ்சி மருங்கு லஞ்சொற் கிள்ளை
ஏதிலன் பின்செல விலக்கா தொழிந்தனை
ஆதலின் புறவே யுறவறலை நீயே
தெளிவுரை : மனிதத் தொடர்பை உலகில் துறந்த ஞானசம்பந்தரை விரும்பாதவர்களின்
சுற்றத்தைப்போல் வினையேனாகிய நான் இருக்கும் வீட்டைப் பிரியாத வஞ்சி மருங்குல்
அஞ்சொற் கிள்ளை அயலான் பின்செல விலக்காமல் இருந்துவிட்டாய். ஆதலின், புறவே நீ
எனக்குச் சுற்றமன்று. தலைவி, தலைவனுடன் சென்றபோது நீ ஏன் விலக்கவில்லை என்று
புறவைக் கேட்டு வருந்துகிறாள் செவிலி.
வெண்பா
-
அலைகடலின் மீதோடி யந்நுளையர் வீசும்
வலைகடலில் வந்தேறு சங்கம் அலர்கடலை
வெண்முத் தவிழ்வயல்சூழ் வீங்குபுனற் காழியே
ஒண்முத் தமிழ்பயந்தா னூர்.
தெளிவுரை : அலைகளை உடைய கடலின்மீது சென்று வலையர் வீசும் வலையில் சிக்கும்
சங்குகள் மலர்களினிடத்து வெண்முத்துக்களை உடைய வயல்கள் சூழ்ந்த நீர் வளமிக்க
சீகாழி, ஒளி பொருந்திய முத்தமிழ்ப் பாடல்களாகிய தேவாரங்களைப் பாடிய
திருஞானசம்பந்தரின் ஊராகும்.
கட்டளைக் கலித்துறை
-
ஊரும் பசும்புர வித்தே
ரொளித்த தொளிவிசும்பில்
கூரு மிருளொடு கோழிகண்
தூஞ்சா கொடுவினையேற்
காரு முணர்ந்திலர் ஞானசம்
பந்தனந் தாமரையின்
தாருந் தருகில னெங்ஙனம்
யான்சங்கு தாங்குவதே.
தெளிவுரை : இரவில் தலைவி இரங்குதல்: கதிரவன் ஏறிச் செல்லும் பசும் குதிரை பூட்டிய
தேர் மேற்குக் கடலில் மறைந்தது. பிரகாசமான வானத்தில் செறிந்த இருளோடு கோழி, கண்
உறங்காமல் இருக்கும் வினையுடைய எனக்கு யாரும் ஆறுதல் சொல்வாரில்லை.
திருஞானசம்பந்தர் தனது அழகிய தாமரை மலர் மாலையும் தரவில்லை. யான் கையில்
வளையல்களைத் தாங்கிக் கொண்டிருப்பது எங்ஙனம்?
ஆசிரியப்பா
-
தேமலி கமலப் பூமலி படப்பைத்
தலைமுக டேறி யிளவெயிற் காயும்
கவடிச் சிறுகாற் கர்க்ட கத்தைச்
சுவடிச் சியங்கும் சூல்நரி முதுகைத்
துன்னி யெழுந்து செந்நெல் மோதுங்
தெளிவுரை : தேன்மிகுந்த பூக்கள் மலிந்த வயலின் வரப்பின்மேல் ஏறி, இளவெயில் காயும்
பிளவுபட்ட சிறிய கால்களையுடைய நண்டைத் தின்பதற்காக இயங்கும் கருப்பமுற்றிருக்கிற
நரியின் முதுகைத் துள்ளியெழுந்து செந்நெல் மோதுகின்ற,
காழி நாட்டுக் கவுணியர் குலத்தை
வாழத் தோன்றிய வண்டமிழ் விரகன்
தெண்டிரைக் கடல்வாய்க்
காண்தகு செவ்விக் களிறுக ளுகுத்த
முட்டைமுன் கவரும் பெட்டையங் குருகே
தெளிவுரை : சீகாழி நாட்டுக் கவுணியர் குலத்தை வாழச் செய்யத் தோன்றிய வண்தமிழ்
விரகன் தெண் திரைக்கடல்வாய் காண்தரு செவ்விக் களிறுகள் உகுத்த முட்டை முன் கவரும்
பெட்டையங்குருகே ! (நாரையே!)
வாடை யடிப்ப வைகறைப் போதில்
தனிநீ போந்து பனிநீர் ஒழுகக்
கூசிக் குளிர்ந்து பேசா திருந்து
மேனி வெளுத்த காரண முரையாய்
இங்குத் தணந்தெய்தி நுமரும்
இன்னம்வந் திலரோ சொல்லிளங் குருகே.
தெளிவுரை : வாடைக் காற்று வீச விடியற்காலையில் தனியாக நீ வந்து பனி நீர் ஒழுகக்
கூசிக் குளிர்ந்து பேசாமல் இருந்து உடல் முழுதும் வெளுத்த காரணத்தைச் சொல்வாயாக.
இங்கு நீ தனித்து வந்து காத்திருப்பது ஏன்? உன்னை விட்டுப் பிரிந்த காதலன் (ஆண்
நாரை) இன்னும் வரவில்லையோ ! சொல்வாயாக.
வெண்பா
-
குருகும் பணிலமுங் கூன்நந்துஞ் சேலும்
பெருகும் வயற்காழிப் பிள்ளை யருகந்தர்
முன்கலங்க நட்ட முடைகெழுமுமால் இன்னம்
புன்கலங்கள் வைகைப் புனல்.
தெளிவுரை : நாரையும் முத்தும் வளைந்த சங்கும் மீனும் பெருகும் வயல்சூழ்ந்த
சீகாழியின் பிள்ளை சமணர்கள் முன்பு கலங்க நட்டமுடை கெழுமுமால் இன்னம் புன்
கலங்கல் வைகைப் புனல். சமணர்கள் கழுவேறிய போது கெழுமிய துர்நாற்றத்தைக்
கூறுகின்றார்.
கட்டளைக் கலித் துறை
-
புனமா மயில் சாயல் கண்டுமுன்
போகா கிளிபிரியா
இனமான் விழியொக்கும் மென்றுவிட்
டேகா விருநிலத்துக்
கனமா மதிற்காழி ஞானசம்
பந்தன் கடல்மலைவாய்த்
தினைமா திவள்காக்க வெங்கே
விளையுஞ் செழுங்கதிரே.
தெளிவுரை : தலைவியின் சாயலுக்கு மயிலும், மொழிக்குக் கிளியும், பார்வைக்கு மானும்
தமவாகக் கொண்டு பிரியாதிருத்தலின் தினை எவ்வாறு விளையும் என்கிறார்.
கனமான மதில்களை உடைய சீகாழி ஞானசம்பந்தன் கடமலைவாய்த் தினைப் புனத்தைத் தலைவி
காத்தாலும், செழுங்கதிர் எங்கே விளையும் எனக் கூட்டுக. கதிர்களை இம்மூன்றும்
தின்றுவிடும் என்பது கருத்து.
ஆசிரியப்பா
-
கதிர்மதி நுழையும் படர்சடை மகுடத்
தொருத்தியைக் கரந்த விருத்தனைப் பாடி
முத்தின் சிவிகை முன்னாட் பெற்ற
அத்தன் காழி நாட்டுறை யணங்கோ மொய்த்தெழு
தாமரை யல்லித் தவிசிடை வளர்ந்த
தெளிவுரை : ஒளியுடைய சந்திரன் நுழையும் படர்சடை மகுடத்தில் கங்கையை ஒளித்து
வைத்துள்ள சிவபெருமானைப் பாடி, முத்துச் சிவிகையை முன்பு பெற்ற ஞானசம்பந்தரது
சீகாழி நாட்டில் வாழ்கின்ற அணங்கோ மொய்த்தெழு தாமரை அகஇதழ் தவிசு இடைவளர்ந்த
காமரு செல்வக் கனங்குழை யவளோ மீமருத்
தருவளர் விசும்பில் தவநெறி கலக்கும்
உருவளர் கொங்கை யுருப்பசி தானோ
வாருணக் கொம்போ மதனன் கொடியோ
ஆரணி யத்து ளருந்தெய்வ மதுவோ
தெளிவுரை : காமரு செல்வ கனங்குழையாளாகிய திருமகளோ மணந்தங்கிய கற்பகமரமோ
ஆகாயத்தில் தவநெறி கலக்கும் உருவளர் கொங்கைகளையுடைய உருப்பசிதானோ, வாருணக்
கொம்போ, மன்மதன் கொடியோ வனதேவதையோ,
வண்டமர் குழலும் கெண்டையங் கண்ணும்
வஞ்சி மருங்குங் கிஞ்சுக வாயும்
ஏந்திள முலையுங் காந்தளங் கையும்
ஒவியர் தங்க லொண்மதி காட்டும்
வட்டிகைப் பலகை வான்துகி லிகையால்
இயக்குதற் கரியதோர் உருவுகண் டென்னை
மயக்கவந் துதித்ததோர் வடிவிது தானே.
தெளிவுரை : வண்டமர் குழலும் கெண்டையங் கண்ணும் வஞ்சி மருங்கும் முள் முருங்கை
போன்ற வாயும், ஏந்தின முலைகளும் காந்தள் போன்ற கைகளும் சித்திரம் எழுதுவோர்
தங்கள் ஒண்மதி காட்டும் ஓவியம் எழுதும் பலகையோ சிறந்த எழுதுகோலால் எழுதுவதற்கு
அரியதோர் உருவு கண்டு என்னை மயக்க வந்து உதித்ததோர் வடிவு இதுதானோ?
இது ஐயம் என்னும் துறை. தலைவன் தலைவியின் அழகைச் சித்திரிப்பது. எழுத முடியாத
சந்தேக நிலையென்று தலைவியின் அழகை வருணிக்கின்றான்.
வெண்பா
-
வடிக்கண்ணி யாளையிவ் வான்சுரத்தி னூடே
கடிக்கண்ணி யானோடும் கண்டோம் வடிக்கண்ணி
மாம்பொழில்சேர் வைகை யமண்மலைந்தான் வண்காழிப்
பூம்பொழிலே சேர்ந்திருப்பார் புக்கு.
தெளிவுரை : இடைசுரத்துக் கண்டோர் கூறுதல்: கூர்மையான கண்களை உடைய தலைவியை இந்தப்
பாலை நிலத்தின் வழியாக மணந்தங்கிய மாலையை உடைய தலைவனுடன் கண்டோம். அவர்கள்
இந்நேரம் மாலைபோல வடுக்களை உடைய மாமரச் சோலையைச் சேர்ந்த வைகையில் சமணர்களை
வென்றான் ஆகிய ஞானசம்பந்தரது சீர்காழிப் பூஞ் சோலையைப் போய்ச் சேர்ந்திருப்பர்.
கட்டளைக் கலித் துறை
-
குருந்தும் தரளமும் போல்வண்ண
வெண்ணகைக் கொய்மலராள்
பொருந்தும் திரள்புயத் தண்ணல்சம்
பந்தன்பொற் றாமரைக்கா
வருந்தும் திரள்கொங்கை மங்கையை
வாட்டினை வானகத்தே
திருந்துந் திரள்முகில் முந்திவந்
தேறுதிங் கட்கொழுந்தே.
தெளிவுரை : சந்திரோபாலம்பனம். திங்கட் கொழுந்தே ! குருத்தும் முத்தும்போல்
நிறமுடைய வெண்ணகை கொய் மலராள் பொருந்தும் திரள்புயத்து அண்ணல் ஆகிய ஞானசம்பந்தரது
பொற்றாமரையாகிய திருவடிகளுக்காக வருந்தும் திரண்ட கொங்கைகளை உடைய மங்கையைக்
காட்டில் வருத்தினை. திருந்தும் திரள் மேகத்திற்கு முந்தி வந்து உயர்கின்றனை. இது
சந்திரனைப் பழிக்கும் துறை. தனித்திருக்கும் தலைவி சந்திரனைக் கண்டால்
வருந்துவாள்.
திருச்சிற்றம்பலம்
ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை ( நம்பியாண்டார்நம்பிகள் அருளிச்செய்தது )
இந்நூல் திருஞானசம்பந்தப் பிள்ளையார் சீகாழியில் திருவுலா போந்தருளிய இயல்பினை
விரித்துரைத்துப் போற்றுவதாகலின் ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலையென்று
பெயருடையதாயிற்று.
உலா நூல் இயற்றப்பட வேண்டிய மரபுப்படி இவ்வுலாவும் கலிவெண்பாவினால் இயற்றப்
பெற்றிருக் கின்றது. ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை என்னும் இந்நூலிற்
பாட்டுடைத் தலைவராகிய திருஞானசம்பந்தப் பிள்ளையாருடைய இயல்பே பெரிதும்
விரித்துரைக்கப் பெற்றுள்ளது.
பிள்ளையாரைக் காதலித்த எழுவகைப் பருவத்துப் பெண்களுடைய செய்திகளும் பொதுவகையாற்
கூறப்பட்டுள்ளதே அன்றி, தனித்தனியே வகுத்துக் கூறப்படவில்லை. இந்நூல் 143
கண்ணிகளை உடையதாகும்.
திருச்சிற்றம்பலம்
-
திருந்திய சீர்ச்செந்தா மரைத் தடத்துச் சென் றோர்
இருந் தண் இளமேதி பாயப் பொருந்திய
புள் இரியப் பொங்கு கயல்வெருவப் பூங்குவளைக்
கள் இரியச் செங்கழுநீர் கால்சிதையத் துள்ளிக்
குருகிரியக் கூன்இறவம் பாயக் கெளிறு
முருகுவிரி பொய்மையின்கண் மூழ்க வெருவுற்றக்
கோட்டகத்துப் பாய்வாளை கண்டலவன் கூசிப் போய்த்
தோட்டகத்த செந்நெல் துறைஅடையச் சேட்டகத்த
காவி முகம்மலரக் கார்நீலம் கண்படுப்ப
ஆவிக்கண் நெய்தல் அலமர மேவிய
தெளிவுரை : திருந்தியசீர்ச் செந்தாமரை குளத்திற்குச் சென்று ஓர் இருந்தண் இளஎரிமை
பாய, அங்கிருந்த பறவை பறந்தோட, கயல் மீன்கள் அஞ்ச, பூங்குவளை மலர்களில் இருந்த
தேன் ஒழுக, செங்கழுநீர் தண்டு ஒடிய, துள்ளிப் பறவையினம் அங்கிருந்து பறந்துசெல்ல,
இறால் மீன்பாய, களிறு என்னும் ஒருவகைப் பெருமீன் மணம் வீசும் குளத்தில் மூழ்க,
பயந்த வாளை மீனைக் கண்டு நண்டு நாணிச் சென்று தோட்டத்தில் உள்ள செந்நெல் வயலை
அடைய, தூரத்திலிருந்த நீலோற்பல மலர்கள் மலர கார்நீலம் உறங்க குளத்தில் நெய்தல்
வருந்த (நீர் வளத்தையும் நில வளத்தையும் வருணிக்கிறார்.)
அன்னம் துயில்இழப்ப அம்சிறைசேர் வண்டினங்கள்
துன்னும் துணைஇழப்பச் சூழ் கிடங்கின் மன்னிய
வள்ளை நகைகாட்ட வண்குமுதல் வாய்காட்ட
தெள்ளுபுனற் பங்கயங்கள் தேன்காட்ட மெள்ள
நிலவு மலணையினின்றிழிந்த சங்கம்
இலகுகதிர் நித்திலங்கள் ஈன உலவிய
மல்லைப் பழனத்து வார்பிரசம் மீதழிய
ஒல்லை வரம்பிடறி ஓடிப்போய்ப் புல்லிய
பாசடைய செந்நெற் படர் ஒளியால் பல்கதிரோன்
தேசடைய ஓங்கும் செறுவுகளும் மாசில்நீர்
தெளிவுரை : அன்னம் துயில் எழுப்ப அழகிய சிறகுகளையுடைய வண்டுக் கூட்டங்கள் தமது
துணையை இழக்க, அந்த ஆழமான நீர்நிலையில் உள்ள வள்ளைக் கொடி சிரிக்க, வளப்பம்
பொருந்திய குமுதம் சிரிக்க, அந்த நீர் நிலையிலுள்ள தாமரை மலர்கள் தேன் சொரிய,
மெள்ள மலர்ப்படுக்கையில் இருந்து சங்குகள் முத்துக்களை அளிக்க, வயல்களில் தேன்
வழிய வரம்பைக் கடந்து சென்று நெல் படர் ஒளியால் சூரியனும் ஒளி குறையுமாறு
செய்யும் வயல்களும், (இதுவும் வருணனைத் தொடர்ச்சி)
நித்திலத்திற் சாயும் நிகழ்மரக தத் தோலும்
தொத்தொளி செம்பொன் தொழிற்பரிய மொய்த்த
பவளத்தின் செவ்வியும் பாங்கணைய ஓங்கித்
திவளக் கொடிமருங்கிற் சேர்த்தித் துவளாமைப்
பட்டாடை கொண்டுடுத்துப் பைந்தோ டிலங்குகுழை
இட்டமைந்த கண்ணார் இளங்கமுகும் விட்டொளிசேர்
கண்கள் அழல் சிதறிக் காய்சினத்த வாய்மதத்துத்
தண்டலையின் நீழல் தறிஅணைந்து கொண்ட
கொலைபுரியா நீர்மையவாய்க் கொம்புவளைத் தேந்தி
மலையும் மரவடிவும் கொண்டாங் கிலை நெருங்கு
தெளிவுரை : முத்தினுடைய ஒளியும் மரகதம் (பச்சைமணி) வீசும் ஒளியும் செம்பொன் நிறம்
பெற பவளத்தின் செவ்வியும் கொடியின் மத்தியில் பட்டாடை உடுத்தி, தோடு இலங்கும்,
இளங் கமுகும் (பாக்கு மரமும்) கலந்த ஒலியுள்ள சோலையின் நீழலில் கொல்லும்
எண்ணமுடைய கொம்பு வளைத்து ஏந்தி மலையும் மர வடிவம் கொண்டது போல, (வருணனை
தொடர்கிறது)
சூதத் திரளும் கொகுகனிக ளான்நிவந்த
மேதகுசீர்த் தெங்கின் வியன்பொழிலும் போதுற்
றினம் ஒருங்கு செவ்வியவாய் இன்தேன் ததும்பும்
கனி நெருங்கு திண்கதலிக் காடும் நனிவிளங்கு
நாற்றத்தால் எண்டிசையும் வந்து நலம் சிறப்ப
ஊற்று மடுத்த உயர்பலவும் மாற்றமரு
மஞ்சள் எழில்வனமும் மாதுளையின் வார்பொழிலும்
இஞ்சி இளங்காவின் ஈட்டமும் எஞ்சாத
கூந்தற் கமுகும் குளிர்பாட லத் தெழிலும்
வாய்ந்தசீர்ச் சண்பகத்தின் வண்காடும் ஏந்தெழில்ஆர்
தெளிவுரை : இலை நெருங்கிய மாமரக் கூட்டம், நெருங்கிய கனிகளால் உயர்ந்த தென்னந்
தோப்புக்களும், பழங்களோடு கூடிய வாழை மரக்காடும், மிகுதியான மணத்தால் சிறந்த உயர்
பலா மரங்களும் மஞ்சள் எழில் வளமும் மாதுளையின் வார் பொழிலும் இஞ்சி விளையும்
இளங்காவின் ஈட்டமும் கூந்தற் கமுகும் பாதிரி மரம் சண்பக மரங்களின் காடும்,
(வருணனை தொடர்கிறது)
மாதவியும் புன்னையும் மன்நும் மலர்க்குரவும்
கேதையும் எங்கும் கெழீஇப் போதின்
இளந்தென்றல் வந்தசைப்ப எண்டிசையும் வாசம்
வளந்துன்று வார்பொழிலின் மாடே கிளர்ந்தெங்கும்
ஆலை ஒலியும் அரிவார் குரல்ஒலியும்
சோலைக் கிளிமிழற்றும் சொல்லொலியும் ஆலும்
அறுபதங்கள் ஆர்ப்பொலியும் ஆன்றபொலி வெய்தி
உறுதிரைநீர் வேலை ஒலிப்ப வெறிகமழும்
நந்தா வனத்தியல்பும் நற்றவத் தோர் சார்விடமும்
அந்தமில் சீரார் அழகினால் முந்திப்
தெளிவுரை : மாதவி, புன்னை, குருக்கத்தி, தாழை இவை எங்கும் நிறைந்து, போதின்
இளந்தென்றல் வந்தசைப்ப எண்டிசையும் மணம் வீசும் நீண்ட சோலையில் கிளர்ந்தெங்கும்
கரும்பாலைகளும், கரும்பை அரிபவர்கள் செய்யும் ஒலியும் சோலைக் கிளிகள் மிழற்றும்
சொல் ஒலியும், வண்டுகள் செய்யும் ஒலியும் கடல் அலைகளின் ஓசையும், மணங்கமழும்
நந்தவனத்தொலியும் தவசிகள் ஆசிரமங்களின் அழகும் (வருணனை தொடர்கிறது)
புகழ்வாரும் தன்மையதாய்ப் பூதலத்துள் ஓங்கி
நிகழ்கிடங்கும் சூழ்கிடப்ப நேரே திகழ
முளைநிரைத்து மூரிச் சிறைவகுத்து மொய்த்த
புளகத்தின் பாம்புரிசூழ் போகி வளர
இரும்பதணம் சேர இருத்தி எழில் நாஞ்சில்
மருங்கணைய அட்டாலை யிட்டுப் பொருந்தியசீர்த்
தோமரமும் தொல்லைப் பொறிவீசி யந்திரமும்
காமரமும் ஏப்புழையும் கைகலந்து மீ மருவும்
வெங்கதிரோன் தேர்விலங்க மிக் குயர்ந்த மேருப் போன்று
அங்கனகத் திஞ்சி அணிபெற்றுப் பொங்கிகொளிசேர்
தெளிவுரை : புகழ்ந்து சொல்லும் தன்மையதாய் உலகில் சிறப்புற்றுத் திகழ்கின்ற
அகழியும் சூழ்ந்திருக்கப் பெரிய மேடை, மதிலின் உறுப்பாகிய நாஞ்சியில் உள்ள மேற்
பரணில் தோமரம் என்னும் ஆயுதமும், வீசி எறியும் இயந்திரமும் காமரமும் அம்பு
விடுவதற்குரிய துளையும் பொருந்திச் சூரிய மண்டலம் வரை உயர்ந்துள்ள மேருமலை போன்ற
உயர்ந்த மதிலையுடைய (சீகாழியின் மதிலையும் அகழியையும் புகழ்கிறார்)
மாளிகையும் மன்னியசீர் மண்டபமும் ஒண்தலத்த
சூளிகையும் துற்றெழுந்த தெற்றிகளும் வாளொளிய
நாடக சாலையும் நன்பொற் கபோதகம் சேர்
பீடமைத்த மாடத்தின் பெற்றியும் கேடில்
உருவு பெறவகுத்த அம்பலமும்ஓங்கு
தெருவும் வகுத்தசெய் குன்றும் மருவினிய
சித்திரக் காவும் செழும் பொழிலும் வாவிகளும்
நித்திலஞ்சேர் நீடு நிலைக்களமும் எத்திசையும்
துன்னி எழில்சிறப்பச் சோதி மலர்மடந்தை
மன்னி மகிழ்ந்துறையும் வாய்மைத்தாய்ப் பொன்னும்
தெளிவுரை : மாளிகையும், மண்டபமும், நிலா முற்றமும், திண்ணைகளும், நாடக சாலையும்,
விட்டங்கள் பொருத்தப்பட்ட மாடங்களும், அம்பலமும், (ஆடு அரங்கம்) நீண்டுயர்ந்த
தெருக்களும், செய்குன்றும், உபவனமும், சோலையும், குளங்களும் முத்துக்களால்
அலங்கரிக்கப்பட்ட நிலைக்கணமும், திருமகள் பொருந்தி உறையும் சிறப்புடையதாய்,
(நகரமைப்பு வருணனை)
மரகதமும் நித்திலமும் மாமணியும் பேணி
இரவலருக் கெப்போதும் ஈந்து கரவாது
கற்பகமும் காருமெனக் கற்றவர்க்கும் நற்றவர்க்கும்
தப்பாக் கொடைவளர்க்கும் சாயாத செப்பத்தால்
பொய்மை கடிந்து புகழ்புரிந்து பூதலத்து
மெய்ம்மை தலைசிறந்து மேதக்கும் உண்மை
மறைபயில்வார் மன்னும் வியாகரணக் கேள்வித்
துறைபயில்வார் தொன்னூல் பயில்வார் முறைமையால்
ஆகமங்கள் கேட்பார் அருங்கலைநூல் ஆதரித்துப்
போகம் ஒடுங்காப் பொருள்துய்ப்பார் சோகமின்றி
தெளிவுரை : மரகதமும் முத்தும் மாமணியும் விரும்பி யாசிப்பவர்களுக்கு எப்போதும்
கொடுத்தும், ஒளிக்காமல் கற்பகமரமும் மேகமும் போன்று கற்றவர்க்கும் நற்றவர்க்கும்
தப்பாமல் கொடை வளர்க்கும் கோணாத நன்மையினால், பொய்ம்மை கடிந்து, புகழ் புரிந்து
இவ்வுலகில் மெய்ம்மை தலை தூக்கி, உண்மை வேதம் ஓதுபவர் பொருந்தியுள்ளதும் இலக்கண
நூல் வேள்வித் துறை பயில்வார், தொன்னூல் பயில்வார், முறையாக ஆகமங்கள் (தரும
நூல்கள்) கேட்பார், அருங்கலை நூல் ஆதரித்துப் போகம் ஒடுங்காப் பொருள் துய்ப்பார்,
(நகர மாந்தர் வருணனை)
நீதி நிலையுணர்வார் நீள் நிலத்துள் ஐம்புலனும்
காதல் விடுதவங்கள் காமுறு வார் ஆதி
அருங்கலைநூல் ஓதுவார் ஆதரித்து வென்றிக்
கருங்கலிநீங் கக்கனல்வ குப்பார் ஒருங்கிருந்து
காமநூல் கேட்பார் கலைஞானங் காதலிப்பார்
ஒமநூல் ஒதுவார்க் குத்தரிப்பார் பூமன்னும்
நான்முகனே அன்னசீர் நானூற் றுவர்மறையோர்
தாம்மன்னி வாவும் தகைமைத்தாய் நாமன்னும்
ஆரணங்கும் மற்றை அருந்ததியும் போல்மடவார்
ஏரணங்கு மாடத் தினிதிருந்து சீரணங்கு
தெளிவுரை : நீதி நிலையுணர்வார், இவ்வுலகில் ஐம்புலனும் காதல் விடு தவங்கள்
காமுறுவார், ஆதி அருங்கலை நூல் ஓதுவார், தீவினைகள் நீங்க வேள்விக் காரியங்கள்
செய்வார், ஒருங்கிருந்து காம நூல் கேட்பார், கலை ஞானம் காதலிப்பார், ஓமநூல்
ஓதுவார், உத்தரிப்பார், பிரமனே என்று சொல்லுமாறு நானூற்றுவர் மறையோர் பொருந்தி
மாதர்கள் சிறந்த மாடத்தில் இனிதிருந்து, (நகரமாந்தர் இயல்பு)
வீணை பயிற்றுவார் யாழ்பயில்வார் மேவியசீர்ப்
பாணம் பயில்வார் பயன்உறுவார் பேணியசீர்ப்
பூவைக்குப் பாட்டுரைப்பார் பொற்கிளிக்குச் சொற் பயில்வார்
பாவைக்குப் பொன்புனைந்து பண்புறுவா ராய் எங்கும்
மங்கையர்கள் கூட்டமும் மன்னு சிறார்குழுவும்
பொங்குலகம் எல்லாம் பொலிவடையத் தங்கிய
வேத ஒலியும் விழாவொலியும் மெல்லியலார்
கீத ஒலியும் கிளர்ந்தோங்கும் மாதரார்
பாவை ஒலியும் பறைஒலியும் பல்சனங்கள்
மேவும் ஒலியும் வியன்நகரங் காவலர்கள்
தெளிவுரை : (வீணை வேறு, யாழ் வேறு) வீணை பயில்பவரும், யாழ் பயில்பவரும், நாடகம்
பயில்வாரும், பயனுறுவாரும், மைனாவுக்குப் பாட்டு உரைப்பாரும், பொற் கிளிக்குச்
சொற் பயில்வாரும், பாவைக்குப் பொன் புனைந்து பண்புறுவாருமாய் எல்லா இடங்களிலும்
மங்கையர்கள் கூட்டமும், மன்னு சிறுவர்கள் குழுவும், உலகம் உய்யுமாறு செய்யப்படும்
வேத ஒலியும் விழா ஒலியும், மெய்யிலார் கீத ஒலியும் கிளர்ந்தோங்கும், (நகரில்
உள்ளார் சிறப்பு).
பம்பைத் துடிஒலியும் பவ்வப் படைஒலியும்
கம்பக் களிற்றொலியும் கைகலந்து நம்பிய
கார்முழுக்கம் மற்றைக் கடல்முழுக்கம் போற்கலந்த
சீர் முழக்கம் எங்கும் செவிடுபடப் பார்விளங்கு
செல்வம் நிறைந்த ஊர் சீரில் திகழ்ந்தஊர்
மல்கு மலர்மடந்தை மன்னும் ஊர் சொல்லினிய
ஞாலத்து மிக்கஊர் நானூற் றுவர்களூர்
வேலொத்த கண்ணார் விளங்கும் ஊர் ஆலித்து
மன்னிருகால் வேளை வளர்வெள்ளத் தும்பரொடும்
பன்னிருகால் நீரில் மிதந்தஊர் மன்னும்
தெளிவுரை : பம்பை ஒலியும் உடுக்கை ஒலியும், கடல் போன்ற படை ஒலியும், அசைகின்ற
யானைகளின் ஒலியும் ஒன்றுகூடி மேகத்தின் முழக்கமும் கடல் முழக்கமும் கலந்த
சீர்முழக்கம் எங்கும் செவிடுபட உலகில் சிறந்து விளங்குகின்ற செல்வம் நிறைந்த ஊர்,
சீரில் சிறந்த ஓர் திருமகள் வாசம் செய்யும் ஊர், உலகில் உயர்ந்த ஊர், நானூற்றுவர்
வாழும் ஊர், அழகிய மாதர்கள் வாழும் ஊர், இரண்டு முறை கடல் வெள்ளத்துத் தேவர்களோடு
பன்னிரண்டு முறை நீரில் மிதந்த ஊர், (நகரின் மாண்பு)
பிரமன்ஊர் வேணுபுரம் பேரொலிநீர் சண்பை
அரன்மன்னு தண்காழி அம்பொற் சிரபுரம்
பூந்தராய் கொச்சைவயம் வெங்குருப் பொங்குபுனல்
வாய்ந்தநல் தோணிபுரம் மறையோர் ஏய்ந்த
புகலி கழுமலம் பூம்புறவம் என்றிப்
பகர்கின்ற பண்புற்ற தாகித் திகழ்கின்ற
மல்லைச் செழுநகரம் மன்னவும் வல்லமணர்
ஒல்லைக் கழுவில் உலக்கவும் எல்லையிலா
மாதவத்தோர் வாழவும் வையகத்தோர் உய்யவும்
மேதக்க வானோர் வியப்பவும் ஆதியாம்
தெளிவுரை : (சீகாழிக்குரிய பன்னிரண்டு பெயர்களையும் கூறுகிறார்). நிலைபெற்ற.
பிரமனூர், 2. வேணுபுரம், 3. சண்பை, 4. காழி, 5. சிரபுரம், 6. பூந்தராய், 7.
கொச்சைவயம், 8. வெங்குரு, 9. தோணிபுரம், 10. புகலி, 11. கழுமலம், 12. பூம்புறவம்.
இவ்வாறு சிறந்த பண்புடையதாய்த் திகழ்கின்ற மல்லைச் செழுநகரம் நிலை பெறவும்
சமணர்களை விரைவில் கழுவேற்றவும், எல்லையில்லா மாதவத்தோர் வாழவும், உலகோர்
உய்யவும் மேதக்க வானோர் வியக்கவும்,
வென்றிக் கலிகெடவும் வேதத் தொலிமிகவும்
ஒன்றிச் சிவனடியார் ஒங்கவும் துன்றிய
பன்னு தமிழ்ப்பதினா றாயிர நற்பனுவல்
மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும் முன்னிய
சிந்தனையால் சீரார் கவுணியர்க்கோர் சேய்என்ன
வந்தங் கவதரித்த வள்ளலை அந்தமில் சீர்
ஞானச் சுடர்விளக்கை நற்றவத்தோர் கற்பகத்தை
மான மறைஅவற்றின் வான்பொருளை - ஆனசீர்த்
தத்துவனை நித்தனைச் சைவத் தவர்அரசை
வித்தகத்தால் ஓங்கு விடலையை முத்தமிழின்
தெளிவுரை : வென்றிக் கலிகெடவும் வேதத்து ஒலி மிகவும், ஒன்றிச் சிவனடியார்
ஓங்கவும், தேவாரப் பாடல்கள் பதினாறாயிரம் உலகோர்க்கு வாய்க்கவும் கவுணியர்
குலத்திற்கு ஒப்பற்ற சேய் என்று சொல்லுமாறு, ஞானச் சுடர் விளக்கை, நற்றவத்தோர்
கற்பகத்தை, வேதங்களின் வான் பொருளை விரித்துரைத்த தத்துவனை, நித்தனை, சைவர்களின்
அரசை, வியக்கத்தக்க மெய்யறிவினால் ஓங்கு விடலையை,
செஞ்சொற் பொருள்பயந்த சிங்கத்தைத் தெவ்வருயிர்
அஞ்சத் திகழ்ந்த அடலுருமை எஞ்சாமை
ஆதிச் சிவனருளால் அம்பொன்செய் வட்டிலில்
கோதில் அமிர்தநுகர் குஞ்சரத்தைத் தீதறுசீர்க்
காலத் தொகுதியும் நான்மறையின் காரணமும்
மூலப் பொருளும் முழுதுணர்ந்த சீலத்
திருஞான சம்பந்தன் என்றுலகம் சேர்ந்த
ஒரு நாமத் தால்உயர்ந்த கோவை வருபெரு நீர்ப்
பொன்னிவள நாடனைப் பூம்புகலி நாயகனை
மன்னர் தொழுதிறைஞ்சும் மாமணியை முன்னே
தெளிவுரை : முத்தமிழன் செஞ்சொற் பொருள் பயந்த சிங்கத்தை, தெவ்வர் உயிர் அஞ்சத்
திகழ்ந்த அடல் உருமை (இடியை), ஆதிச் சிவனருளால் அம்பொன்செய் வட்டிலில் கோதில்
அமிர்தம் நுகர் குஞ்சரத்தை, காலத்தொகுதியும், நான்மறையின் காரணமும் மூலப்
பொருளும் முழுதுணர்ந்த சீலத் திருஞானசம்பந்தன் என்று உலகம் சேர்ந்த ஒரு பெயரால்
உயர்ந்த கோவை, பொன்னி வளவாடனை, பூம்புகலி நாயகனை, மன்னர் தொழுது இறைஞ்சும்
மாமணியை, (ஞானசம்பந்தர் புகழைப் பாடுகிறார்.)
நிலவு முருகற்கும் நீலநக் கற்கும்
தொலைவில் புகழ்ச்சிறுத்தொண் டற்கும் குலவிய
தோழமையாய்த் தொல்லைப் பிறப்பறுத்த சுந்தரனை
மாழைஒண்கண் மாதர் மதனனைச் சூழொளிய
கோதைவேல் தென்னன்றன் கூடற் குலநகரில்
வாதில் அமணர் வலிதொலையக் காதலால்
புண்கெழுவு செம்புனல்ஆ றோடப் பொரு தவரை
வண்கழுவில் வைத்த மறையோனை ஒண்கெழுவு
ஞாலத் தினர்அறிய மன்னுநனி பள்ளியது
பாலை தனைநெய்த லாக்கியும் காலத்து
தெளிவுரை : முருக நாயனார்க்கும் திருநீல நக்கருக்கும் புகழமைந்த சிறுத்தொண்ட
நாயனார்க்கும் குலவிய தோழனாய் அவர்களுடைய பழைய வினையைப் போக்கிய அழகனை, பெண்கள்
விரும்பும் மன்மதனை, பாண்டியனுடைய மதுரை நகரில் வாதத்தில் சமணர்களை வென்று
கழுவேற்றி இரத்தம் ஆறாக ஓட வைத்த மறையோனை, உலகோர் அறிய நனிப்பள்ளியில் பாலை
நிலத்தை நெய்தல் நிலம் ஆக்கியும், (ஞானசம்பந்தரது அற்புதச் செயல்கள்
விவரிக்கப்படுகின்றன.)
நீரெதிர்ந்து சென்று நெருப்பிற் குளிர்படைத்தும்
பாரெதிர்ந்த பலவிடங்கள் தீர்த்தும் முன் நேரெழுந்த
யாழை முரித்தும் இருங்கதவம் தான் அடைத்தும்
சூழ்புனலில் ஓடத் தொழில்புரிந்தும் தாழ்பொழில்சூழ்
கொங்கிற் பனிநோய் பரிசனத்தைத் தீர்ப்பித்தும்
துங்கப் புரிசை தொகுமிழலை அங்கதனில்
நித்தன் செழுங்காசு கொண்டுநிகழ் நெல்வாயில்
முத்தின் சிவிகை முதல் கொண்டு அத்தகுசீர்
மாயிரு ஞாலத்து மன்ஆ வடுதுறைபுக்
காயிரஞ் செம்பொ னதுகொண்டும் ஆய்வரிய
தெளிவுரை : தேவாரப் பதிகம் பாடி, ஏட்டை வைகையில், விட்டபோது அது நீரில் எதிர்த்து
சென்றது. தீயில் இட்டபோது எரியாமல் குளிர்ந்திருந்தது. பல விஷயங்களைத் தீர்த்து
வைத்தது. திருநீலகண்ட யாழ்ப்பாணரது யாழை முரிந்து போகச் செய்தது.
(வேதாரண்யத்தில் திருமறைக்காட்டில் மூடாமல் இருந்த கதவை மூட வைத்தது. நீரில் ஓடத்
தொழில் புரிந்தது. பனி நோய் தீர்ந்தது; திருவீழி மிழலையில் பொற்காசு பெற்றுப்
பஞ்சத்தைப் போக்கியது. நெல்வாயிலில் முத்துச் சிவிகைப் பெற வைத்தது. இவ்வளவு
அற்புதங்களையும் செய்தது. திருவாவடுதுறையில் ஆயிரம் செம்பொன் கிடைக்கச் செய்தது,
(தந்தையார் வேள்விக்குப் பொன் பெற்றது)
மாண்புதிகழ் எம்பெருமான் மன்னுதிரு ஓத்தூரில்
ஆண்பனைகள் பெண்பனைக ளாக்கியும் பாண்பரிசில்
கைப்பாணி ஒத்திக்கா ழிக்கோலக் காவிற்பொற்
சப்பாணி கொண்டும் தராதலத்துள் எப்பொழுதும்
நீக்கரிய இன்பத் திராகமிருக் குக்குறள்
நோக்கரிய பாசுரம் பல் பத்தோடு மாக்கரிய
யாழ்மூரி சக்கரமாற் றீரடி முக்காலும்
பாழிமையால் பாரகத்தோர் தாம்உய்ய ஊழி
உரைப்பமரும் பல்புகழால் ஓங்கஉமை கோனைத்
திருப்பதிகம் பாடவல்ல சேயை விருப்போடு
தெளிவுரை : திருவோத்தூரில் ஆண் பனைகளைப் பெண் பனைகளாக்கியது. திருவோலக்காவில்
கைத்தாளம் போட்டு வந்ததற்குப் பதிலாகப் பொன்னாலாகிய தாளத்தைப் பெறவைத்தது. நீர்
பாடிய தேவாரப் பாடல்கள் இவ்வுளவும் செய்தன. தேவாரப் பதிகங்கள் பலவற்றுள்ளும்
யாழ்முரி, சக்கரம் மற்றும் ஈரடி, முக்காலும் பாழிமையால் பாரகத்தோர் தாம் உய்ய ஊழி
உரைப்பமரும் பல் புகழால் ஓங்க சிவ பெருமானைத் தேவாரப் பாடல்களால் பாடவல்ல சேயை,
நண்ணு புகழ்மறையோர் நாற்பத்தெண் ணாயிரவர்
எண்ணின் முனிவரர் ஈட்டத்துப் பண்அமரும்
ஒலக்கத் துள்இருப்ப ஒண்கோயில் வாயிலின்கண்
கோலக் கடைகுறுகிக் கும்பிட் டாங் காலும்
புகலி வளநகருட் பூசுரர் புக் காங்
கிகல்இல் புகழ்பரவி ஏத்திப் புகலிசேர்
வீதி எழுந்தருள வேண்டும் என விண்ணப்பம்
ஆதரத்தால் செய்ய அவர்க்கருளி நீதியால்
கேதகையும் சண்பகமும் நேர்கிடத்திக் கீழ்த்தாழ்ந்த
மாதவியின் போதை மருங்கணைத்துக் கோதில்
தெளிவுரை : வேதியர் நாற்பத் தெண்ணாயிரவர், எண்ணற்ற முனிவர் கூட்டம், சபா
மண்டபத்தில் இருக்க, கோயில் வாயிலின்கண் கோலக்கடை குறுகிக் கும்பிட்டதுபோல சீகாழி
நகரினுள் அந்தணர்கள் புகுந்தது போன்று புகழ் பரவியேந்திச் சீகாழி வீதியில்
எழுந்தருள வேண்டுமென விண்ணப்பிக்க அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, நீதியால்
தாழையும் சண்பகமும் நேர்கிடத்தி, கீழ்த்தாழ்ந்த மாதவி (குருக்கத்தி)யின் அரும்பை
மருங்கணைத்து,
இருவேலி தன்னை இடையிருத்தி ஈண்டு
மருவோடு மல்லிகையை வைத் தாங் கருகே
கருமுகையைக் கைகலக்க வைத்துக் கழுநீர்ப்
பெருகு பிளவிடையே பெய்து முருகியலும்
புன்னாகந் தன்னைப் புணர இருவாச்சி
தன் அயலே முல்லை தலை எடுப்ப மன்னிய
வண் செருந்தி வாய்நெகிழ்ப்ப மௌவல் அலர் படைப்பத்
தண் குருந்தம் மாடே தலை இறக்க ஒண்கமலத்
தாதடுத்த கண்ணியால் தண்நறுங் குஞ்சிமேற்
போதடுத்த கோலம் புனைவித்துக் காதில்
தெளிவுரை : இருவேலி தன்னை இடையிருத்தி ஈண்டு மருவோடு மல்லிகையை வைத்தாங்கு, அருகே
கருமுகையைக் கைகலக்க வைத்துக் கழுநீர்ப்பூவை இடையே பெய்து புன்னாகப் பூவைப் புணர,
இருவாச்சி, முல்லை, வண் செருந்தி, மல்லிகை, குருந்தம் இவைகளைக் கலந்து தாமரை
தலைமாலையாகத் தலைமயிரை அலங்கரித்து,
கனவயிர குண்டலங்கள் சேர்த்திக் கழுத்தில்
இனமணியின் ஆரம் இலகப் புனை கனகத்
தொத்தடுத்த பூஞ்சுரிகைச் சோதிசேர் தாளிம்பம்
வைத்து மணிக்கண் டிகைபூண்டு முத்தடுத்த
கேயூரம் தோள்மேல் கிடத்திக் கிளர்பொன்னின்
வாய்மை பெறுநூல் வலம்திகழ ஏயும்
தமனியத்தின் தாழ்வடமும் தண்தரளக் கோப்பும்
சிமய வரை மார்பிற் சேர்த்தி அமைவுற்ற
வெண்ணீற்றின் ஒண்களபம் மட்டித்து மேவுதொழில்
ஒண்ணூற் கலிங்கம் உடல்புனைந்து திண் நோக்கில்
தெளிவுரை : கனவயிர குண்டலங்கள் சேர்த்து, கழுத்தில் இன மணியின் ஆரம் இலங்க, பொன்
சரிகை கலந்த நகை யணிந்து, மணிக்கண்டிகை பூண்டு முத்துத் தோள் வளையணிந்து பொன்
பெறு நூல் வலந்திகழ பொன் தாழ்வடமும் தண் தரளக் கோப்பும் மலைபோன்ற மார்பில்
சேர்த்து, திருநீறாகிய ஒண்களபம் மட்டித்து ஒள்ளிய நூலாற் செய்யப்பட்ட ஆடையை
உடுத்தி,
காற்றுருமோ குன்றோ கடலோ அடல்உருமோ
கூற்றுருவோ என்னக் கொதித்தெழுந்து சீற்றத்
தழல்விழித்து நின்றெதிர்ந்து தாலவட்டம் வீசிப்
புழைத் தடக்கை கொண்டெறிந்து பொங்கி மழை மதத்தால்
பூத்த கடதடத்துப் போகம் மிகபொலிந்த
காத்திரத்த தாகிக் கலித்தெங்கும் கோத்த
கொடு நிகளம் போக்கி நிமிர் கொண்டெழுந்து கோபித்
திடுவண்டை இட்டுக் கலித்து முடுகி
நெடுநிலத்தைத் தான்உழக்கி நின்று நிகற் நீத்
திடிபெயரத் தாளத் திலுப்பி அடுசினத்தால்
தெளிவுரை : காற்றோ, இடியோ, குன்றோ, கடலோ, அடலுருமோ கூற்றுருமோ என்னும்படி
கொதித்தெழுந்து கோபமாகப் பார்த்து நின்றெதிர்ந்து ஆலவட்டம் வீசி, துதிக்கை
கொண்டெறிந்து பொங்கி மதங்கொண்ட யானை சங்கிலியை அறுத்துக் கோபித்து ஆரவாரித்து
நிலத்தை உழக்கி நின்று ஒப்பில்லாதபடி செல்ல,
கன்ற முகம் பருகிக் கையெடுத் தாராய்ந்து
வென்றி மருப்புருவ வெய்துயிர்த் தொன்றிய
கூடம் அரண்அழித்துக் கோபுரங்க ளைக்குத்தி
நீடு பொழிலை நிகர் அழித் தோடிப்
பணப்பா கரைப் பரிந்து குத்திப் பறித்த
நிணப்பாகை நீள்விசும்பில் வீசி அணைப்பரிய
ஓடைக் கருங்களிற்றை ஒண்பரிக் காரர்கள்தாம்
மாடணையக் கொண்டு வருதலுமே கூடி
நயந்து குரல்கொடுத்து நட்பளித்துச் சென்று
வியந்தணுகி வேட்டம் தணித் தாங் குயர்ந்த
தெளிவுரை : கோபங்கொண்ட முகத்தோடு துதிக்கையை உயர்த்தித் தந்தங்கள் உருவ
பெருமூச்சு விட்டு, கூடத்தின் அரணை அழித்து, கோபுரங்களைக் குத்திப் பெரிய சோலையை
அழித்து, பாகரைப் பரிந்து குத்தி பறித்த நிணமாகிய பாகை ஆகாயத்தில் வீசி, அளப்பரிய
முக படாத்தை உடைய கருங்களிற்றை (ஆண் யானையை) ஒண்பரிக்காரர்கள் பக்கத்தில் வர,
கூடி நயந்து குரல் கொடுத்து, நட்பு உண்டாக்கி, அருகில் சென்று தணித்ததைப்போல,
உடல்தூய வாசிதனைப் பற்றிமேல் கொண்டாங்
கடற்கூடற் சந்தி அணுகி அடுத்த
பயிர்பலவும் பேசிப் படுபுரசை நீக்கி
அயர்வு கெடஅணைத்த தட்டி உயர்வுதரு
தண்டுபே ரோசையின்கண் தாள்கோத்துச் சீர்சிறுத்
தொண்டர் பிறகணையத் தோன்றுதலும் எண்டிசையும்
பல்சனமும் மாவும் படையும் புடைகிளர
ஒல்லொலியால் ஓங்கு கடல் கிளர மல்லற்
பரித்தூரம் கொட்டப் படுபணிலம் ஆர்ப்பக்
கருத்தோ டிசைகவிஞர் பாட விரித்த
தெளிவுரை : உயர்ந்த தூய குதிரையைப் பிடித்து அதன்மேல் ஏறியதைப்போல அடற்கூடற்
சந்தியணுகி அடுத்த பயிற்றும் சொற்களைப் பேசி கட்டப்பட்ட கயிற்றை அவிழ்த்து அயர்வு
கெடத் தட்டிக் கொடுத்து, தண்டு பேரோசையின்கண் பாதங்களைக் கோத்து சீர்ச்
சிறுத்தொண்டர் பின்னால் வரவும், எட்டுத் திசையும் பலமக்களும் குதிரைகளும் படையும்
பக்கங்களில் வரப் பேரோசை கடல்போல் ஒலிக்க, ஆரவாரம் பரித்தூரங்கொட்ட, சங்குகள் ஒலி
செய்ய, கருத்தோடு இசைக் கவிஞர் பாடவும்,
குடைபலவும் சாமரையும் தொங்கல்களும் கூடிப்
புடைபரந்து பொக்கம் படைப்பக் கடைபடு
வீதி அணுகுதலும் மெல்வளையார் உள்மகிழ்ந்து
காதல் பெருகிக் கலந்தெங்கும் சோதிசேர்
ஆடரங்கின் மேலும் அணிமா ளிகைகளிலும்
சேடரங்கு நீள்மறுகும் தெற்றியிலும் பீடுடைய
பேரிளம்பெண் ஈறாகப் பேதை முதலாக
வாரிளங் கொங்கை மடநல்லார் சீர்விளங்கப்
பேணும் சிலம்பும் பிறங்கொளிசேர் ஆரமும்
பூணும் புலம்பப் புறப்பட்டுச் சேண் மறுகில்
தெளிவுரை : விரித்த குடைகள் பலவும், சாமரையும், மாலைகளும் பக்கங்களில் நிறைந்து,
சிறப்புச்செய்ய கடைபடு வீதி அணுகுதலும், வெள்ளிய வளையல் அணிந்த மகளிர் உள்
மகிழ்ந்து, காதல் பெருகி, கலந்து எங்கும், சோதிசேர் ஆடு அரங்கின் மேலும், மணி
மாளிகைகளிலும், சேடரங்கும் நீள் மறுகும், தெற்றியிலும் (திண்ணையிலும்)
பெருமையுள்ள பேதை முதலாகப் பேரிளம் பெண் ஈறாக வார் அணிந்த கொங்கைகளை உடைய பெண்கள்
சீர் விளங்க விரும்பும் சிலம்பும், பிறங்கொளிசேர் ஆரமும், ஆபரணங்களும் ஒலி
செய்யப் புறப்பட்டு,
காண்டகைய வென்றிக் கருவரைமேல் வெண்மதிபோல்
ஈண்டு குடையின் எழில்நிழற் கீழ்க் காண்டலுமே
கைதொழுவார் நின்று கலைசரிவார் மால் கொண்டு
மெய்தளர்வார் வெள்வளைகள் போய் வீழ்வார் -வெய்துயிர்த்துப்
பூம்பயலை கொள்வார் புணர்முலைகள் பொன்பயப்பார்
காம்பனைய மென்தோள் கவின்கழிவார் தாம் பயந்து
வென்றிவேற் சேய் என்ன வேனில் வேள் கோ என்ன
அன் றென்ன ஆம் என்ன ஐயுற்றுச் சென்றணுகிக்
காழிக் குலமதலை என்றுதம் கைசோர்ந்து
வாழி வளைசரிய நின்றயர்வார் பாழிமையால்
தெளிவுரை : தூரத்தில் உள்ள தெருவில் பார்த்தற்குரிய வெற்றி பொருந்திய கரிய
யானையின் மீது, வெண்மையான சந்திரனைப்போல இங்கு குடை நிழலில் பார்த்ததும் கை
தொழுவார்கள். நின்று ஆடை சோர, காதல் கொண்டு உடல் தளர்வார்கள். வெள்ளிய வளைகள்
கழன்று விழும், பெருமூச்சு விட்டு மார்பில் பசலை உண்டாகும். மூங்கில் போன்ற
மென்தோள் கவின் அழியும். தாம் பயந்து, முருகனோ மன்மதனோ என்றும் அல்லவென்றும்
சந்தேகப்பட்டு, அருகில் சென்று சீகாழிச் செம்மலாகிய ஞான சம்பந்தரென்று, தம் கை
சோர்ந்து, வளைகள் சரிய நின்று தளர்வார்கள்.
உள்ளம் நிலைதளர்ந்த ஒண்ணுதலார் வெல்களிற்றை
மெள்ள நட என்று வேண்டுவார் கள்ளலங்கல்
தாராமை யன்றியும் தையல்நல் லார்முகத்தைப்
பாராமை சாலப் பயன் என்பார் நேராக
என்னையே நோக்கினான் ஏந்திழையீர் இப்பொழுது
நன்மை நமக்குண் டெனநயப்பார் கைம்மையால்
ஒண்கலையும் நாணும் உடைத்துகிலும் தோற்றவர்கள்
வண்கமலத் தார்வலிந்து கோடும் எனப் பண்பின்
வடிக்கண் மலர்வாளி வார்புருவ வில்மேல்
தொடுத் ததரத் தொண்டை துடிப்பப் பொடித்தமுலைக்
தெளிவுரை : உள்ளம் நிலை தளர்ந்த ஒண்ணுதலார், யானையை மெதுவாக நடக்குமாறு
வேண்டுவார்கள். தேன் பொருந்திய மாலையை தாராமையும் பெண் மக்களின் முகத்தைப்
பாராமையும் மிகவும் நல்லதுதான் என்பார்கள். நேராக என்னையே நோக்கினான்.
ஏந்திழையீர் ! இப்போது நன்மை நமக்குண்டு என நயப்பர் (விரும்புவார்கள்).
பேரன்பினால் ஆடையும் நாணும் துகிலும் தோற்றவர்கள் தாமரை அம்பைப் புருவ வில்மேல்
தொடுத்து அதரமும் தொண்டையும் துடிப்ப,
காசைக் கருங்குழலார் காதற் கவுணியன்பால்
பூசற் கமைந்து புறப்படுவார் வாசச்
செழுமலர்த்தார் இன்றெனக்கு நல்காதே சீரார்
கழுமலத்தார் கோவே கழல்கள் தொழுவார்கள்
அங்கோல வளையிழக்கப் போவது நின்னுடைய
செங்கோன்மையோ என்று செப்புவார் நங்கையீர்
இன்றிவன் நலகுமே எண்பெருங் குன்றத்தின்
அன்றமணர் கூட்டத்தை ஆசழித்துப் பொன்ற
உரைகெழுவு செந்தமிழ்ப்பா ஒன்றினால் வென்றி
நிரை கழுமேல் உய்த்தானை நேர்ந்து விரைமலர்த்தார்
தெளிவுரை : பொடித்த முலைக்காசைக் கருங்குழலார் காதற் கவுணியனாகிய ஞானசம்பந்தர்
பால் கோபங்கொள்ள நினைந்து புறப்படுவார்கள். வாசச் செழு மலர்த்தார் இன்று எனக்குத்
தராமல், சிறப்பமைந்த சீகாழிக் கோவாகிய ஞானசம்பந்தரே ! என்று அவருடைய பாதங்களைத்
தொழுவார்கள். வளைகளை இழக்கப் போவது உன்னுடைய செங்கோன்மையோ என்று சொல்வார்கள்.
நங்கைமீர் ! இன்று இவன் நல்குமேல் எண் பெருங் குன்றத்தில் அன்று சமணர்களின்
பற்றுக் கோட்டைக் கெடுத்து, பொன்ற உரை கெழுவு செந்தமிழ்ப்பா ஒன்றினால் வென்றி
நிரைகழுமேல் உய்த்தானை நேர்ந்து,
பெற்றிடலாம் என்றிருந்த நம்மினும் பேதையர்கள்
மற்றுளரோ என்று வகுத்துரைப்பார் மற்றிவனே
பெண் இரக்கம் அன்றே பிறைநுதலீர் மாசுணத்தின்
நண்ணு கடுவித்தால் நாட்சென்று விண்ணுற்ற
ஆரூயிரை மீட் டன்று றவளை அணிமருகல்
ஊரறிய வைத்த தென உரைப்பார் பேரிடரால்
ஏசுவார் தாம் உற்ற ஏசறவைத் தோழியர் முன்
பேசுவார் நின்று தம் பீடழிவார் ஆசையால்
நைவார் நலன்அழிவார் நாணோடு பூண் இழப்பார்
மெய்வாடு வார் வெகுள்வார் வெய்துயிர்ப்பார் தையலார்
தெளிவுரை : விரை மலர்த்தார் பெற்றிடலாம் என்றிருந்த நம்மிலும் பேதையர்கள்
மற்றுளரோ என்று வகுத்துரைப்பார்கள். மற்று இவளே பெண் இரக்கம் அன்றே, பிறை நுதலீர்
! பெரும் பாம்பின் நண்ணுகடுவிடத்தால் நாட் சென்று விண்ணுற்ற ஆருயிரை மீட்டு அன்று
அவளை அணி மருகல் ஊரறிய வைத்ததென உரைப்பார். பேரிடரால் ஏசுவார். தாமுற்ற நாணத்தைத்
தோழியர்முன் பேசுவார். நின்றுதம் பெருமை கெடுவார்கள். ஆசையால் வருந்துவார்கள்.
நலன் அழிவார்கள். நாணத்தையும் ஆபரணத்தையும் இழப்பார்கள். மெய் வாடுவார்கள்.
கோபிப்பார்கள். பெருமூச்சு விடுவார்கள்,
பூந்துகிலைப் பூமாலை என்றணிவார் பூவினைமுன்
சாந்தம் என மெய்யில் தைவருவார் வாய்ந்த
கிளி என்று பாவைக்குச் சொற்பயில்வார் பந்தை
ஒளிமே கலை என் றுடுப்பார் அளிமேவு
பூங்குழலார் மையலாய்க் கைதொழமுன் போதந்தான்
ஒங்கொலிசேர் வீதி உலா.
தெளிவுரை : தையலார் பூந்துகிலைப் பூமாலை என்று அணிவார். பூவினை முன் சாந்தமென
மெய்யில் தடவுவார். வாய்ந்த கிளியென்று பாவைக்கு (பொம்மைக்கு)ச் சொற் பயில்வார்.
பந்தை ஒளி மேகலை என்று உடுப்பார். வண்டுகள் மொய்க்கின்ற பூங்குழலார் மையலாய்க்
கைதொழச் சென்றான் ஓங்கொலி சேர் வீதி உலா. திருஞானசம்பந்தர் வீதி உலா சென்றார்.
திருச்சிற்றம்பலம்
ஆளுடைய பிள்ளையார்திருக்கலம்பகம் ( நம்பியாண்டார் நம்பிகள்அருளிச்செய்தது )
திருஞானசம்பந்தப் பிள்ளையாரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இயற்றப் பெற்றமையின்
இஃது ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் என்னும் பெயருடையதாயிற்று. இந்நூலின்கண்
ஒன்றுமுதல் நாற்பத்தொன்பது வரையுள்ள பாடல்களே இப்போது கிடைத்துள்ளன.
இக்கலம்பகத்தில் பிள்ளையாருடைய பெருமை நன்கு விளக்கப்பட்டுள்ளது. இந்நூலில் உள்ள
ஆசிரிய விருத்தங்கள் பல திருவெண்காட்டடிகள் பாடியருளிய கோயில் நான்மணி
மாலையிலுள்ள சந்தப் பாடல்களை அடியொற்றியனவாக விளங்குகின்றன.
திருச்சிற்றம்பலம்
ஒரு போகு கொச்சகக் கலிப்பா
1341. நான்கடித் தாழிசை
அலையார்ந்த கடலுலகத் தருந்திசைதோ றங்கங்கே
நிலையார்ந்த பலபதிகம் நெறிமனிதர்க் கினிதியற்றி
ஈங்கருளி யெம்போல்வார்க் கிடர்கெடுத்தல் காரணமாய்
ஓங்குபுகழ்ச் சண்பையெனு மொண்பதியு ளுதித்தனையே
தெளிவுரை : (முன்னிலைப் பராவல்) அலைகளையுடைய கடலால் சூழப்பட்ட உலகத்தின் எல்லாத்
திசைகளிலும் நிலைபெற்ற தேவாரப் பதிகங்களை நெறி மனிதர்க்கு இனிது இயற்றி இங்கு
அருளி எம் போன்றவர்களுக்கு இருந்த இடரைத் தீர்த்த காரணமாய் ஓங்கு புகழ்ச் சண்பை
யெனும் சீகாழிப்பதியில் உதித்தனை.
செஞ்சடைவெண் மதியணிந்த சிவனெந்தை திருவருளால்
வஞ்சியன நுண்ணிடையாள் மலையரையன் மடப்பாவை
நற்கண்ணி யளவிறந்த ஞானத்தை யமிர்தாக்கிப்
பொற்கிண்ணத் தருள்புரிந்த போனகமுன் நுகர்ந்தனையே
தெளிவுரை : செஞ்சடையில் வெண்மதியணிந்த சிவ பெருமானது திருவருளால் உமாதேவியார்
அளவற்ற ஞானத்தை அமிர்தாக்கிப் பொற்கிண்ணத்தில் அருள் புரிந்த ஞானப்பாலாகிய உணவை
முன்பு உண்டனை.
தோடணிகா தினனென்றுந் தொல்லமரர்க் கெஞ்ஞான்றும்
தேடரிய பராபரனைச் செழுமறையின் அரும்பொருள
அந்திச்செம் மேனியனை யடையாளம் பலசொல்லி
உந்தைக்குக் காணஅரனுவனாமென் றுரைத்தனையே
தெளிவுரை : தோடுடைய செவியன் என்றும் பழைமையான தேவர்களுக்கு எப்போதும் தேடுதற்கு
அருமையான பராபரனை வேதங்களின் உட்பொருளை, செவ்வானம் போன்ற நிறமுடையவனை அடையாளம்
காட்டி, உன் தந்தைக்கு ஆகாயத்தில் பார்த்தேன் என்று உரைத்தனை.
அராகம்
வளம்மலி தமிழிசை வடகலை மறைவல
முளரிநன் மலரணி தருதிரு முடியினை.
தெளிவுரை : வளம் மலிந்த தமிழிசையிலும் வடகலையிலுள்ள மறைகளிலும் வல்லவனே ! தாமரை
மலரை அணிகின்ற திருமுடியினை உடையை.
கடல்படு விடமடை கறைமணி மிடறுடை
மடல்கரி யுரியனை யறிவுடை யளவினை.
தெளிவுரை : திருப்பாற்கடலிலிருந்து எழுந்த ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டத்தைப்
பெற்றவன் என்றும் வலிமை பொருந்திய யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்தவன்
என்றும் சிவ பெருமானைத் துதிக்கின்றார்.
இரண்டடிதாழிசை
கரும்பினுமிக் கினியபுகழ்க் கண்ணுதல்விண் ணவன்அடிமேல்
பரம்பவிரும் புவியவர்க்குப் பத்திமையை விளைத்தனையே.
தெளிவுரை : கரும்பினும் மிக்கு இனிய புகழ் சிவபெருமான் திருவடிகள் மீது
இவ்வுலகத்தவர்க்குப் பத்தியை விளைவித்தனை.
பன்மறையோர் செய்தொழிலும் பரமசிவா கமவிதியும்
நன்மறையின் விதிமுழுதும் ஒழிவின்றி நவின்றனையே.
தெளிவுரை : வேதங்களைப் பயின்றோர் செய்தொழிலும் பரமசிவாகம விதியும் வேதங்களின்
விதி முழுவதையும் ஓய்வில்லாமல் நவின்றனை.
நாற் சீர் ஓரடி அம்போ தரங்கம்
அணிதவத் தவர்களுக் கதிகவித் தகனும்நீ
தணிமனத் தருளுடைத் தவநெறிக் கமிர்தம்நீ
அமணரைக் கழுநுதிக் கணைவுறுத் தவனுநீ (3)
தமிழ்நலத் தொகையினில் தகுசுவைப் பவனும்நீ
தெளிவுரை : அணித்தவர்களுக்கு அதிக வித்தகனும் நீ. தணி மனத்தருளுடைத் தவநெறிக்கு
அமிர்தமும் நீ. சமணர்களைக் கழுவில் ஏற்றியவனும் நீ. தமிழ் நலத்தொகையினில் தகு
சுவைப்பவனும் நீ.
மூச்சீர் ஓரடி அம்போதரங்கம்
மறையவர்க் கொருவன் நீ மருவலர்க் குருமு நீ
நிறைகுணத் தொருவன் நீ நிகரில்உத் தமனும் நீ
தெளிவுரை : வேதியர்களில் ஒப்பற்றவன் நீ. பகைவர்கட்கு இடி போன்றவன் நீ.
நிறைகுணத்து ஒருவன் நீ. நிகரில்லாத உத்தமனும் நீ.
இருசீர் ஓரடி அம்போதரங்கம்
அரியை நீ எளியை நீ அறவன் நீ துறவன் நீ
பெரியை நீ உரியை நீ பிள்ளை நீ வள்ளல் நீ
தெளிவுரை : அருமையாவன் நீ. எளிமையானவன் நீ. அறநெறியாளன் நீ. துறவற நெறியாளன் நீ.
பெரியவன் நீ. உரிமையுடையவன் நீ. பிள்ளைப் பருவத்தினன் நீ. பாடல்களை வாரி வழங்கும்
வள்ளல் நீ.
என வாங்கு (இது தனிச் சொல்)
சுரிதகம்
கருந்தமிழ் விரக நிற் பரசுதும் திருந்திய
நிரைச்செழு மாளிகை நிலைதொறும் நிலைதொறும்
உரைச்சதுர் மறையில் ஓங்கிய ஒலிசேர்
சீர்கெழு துழனித் திருமுகம் பொலிவுடைத்
தார்கெழு தண்டலை தண்பணை தழீஇ
தெளிவுரை : அருந்தமிழ் விரகனே ! உன்னைப் புகழ்கின்றோம். திருந்திய, வரிசையாக,
வளமிக்க, மாளிகை தோறும் நிலைதொறும், உரைக்கப்படுகின்ற நான்கு வேதங்களின் ஓங்கிய
ஒலி சேர்ந்ததும்,
சீர்கெழு ஒலிமிகுந்த திருமுகம் பொலிவுடைத் தார்கெழு சோலைகளும் குளிர்ந்த
வயல்களும் சூழ்ந்ததும்,
கற்றொகு புரிசைக் காழியர் நாத
நற்றொகு சீர்த்தி ஞானசம் பந்த
நின்பெருங் கருணையை நீதியின்
அன்புடை அடியவர்க் கருளுவோய் எனவே.
தெளிவுரை : கல்லால் இயன்ற மதில்களை உடையதுமான சீகாழி நாத ! நற்றொகு கீர்த்தி
ஞானசம்பந்த ! உன்னுடைய பெரிய கருணையை, நீதியின் அன்புடை அடியவர்களுக்கு அருளுவாய்
என்று புகழ்கின்றோம்.
வெண்பா
-
எனவே இடர் அகலும் இன்பமே எய்தும்
நனவே அரன் அருளை நாடும் புனல்மேய
செங்கமலத் தண்தார்த் திருஞான சம்பந்தன்
கொங்கமலத் தண்காழிக் கோ.
தெளிவுரை : கோ எனவே இடர் அகலும். இன்பமே எய்தும். நனவே அரன் அருளை நாடும். நீர்
வளமிக்க செங்கமலத்தண்தார்த் திருஞானசம்பந்தன் தன்னைப் போற்றுவோர் ஆணவ மலத்தைப்
போக்கியருள் செய்வார்.
கட்டளைக் கலித் துறை
-
கோலப் புலமணிச் சுந்தர
மாளிகைக் குந்தள வார்
ஏலப் பொழிலணி சண்பையர்
கோனை இருங்கடல் சூழ்
ஞாலத் தணிபுகழ் ஞானசம்
பந்தன நற்றமிழே
போலப் பலபுன் கவிகொண்டு
சேவடி போற்றுவனே.
தெளிவுரை : அழகிய ஒளியுள்ள மணி. சுந்தர மாளிகைக்கு முல்லை மலர் மணம் வீசும்
சோலைகள் சூழ்ந்த சீகாழிக்கு அரசாகிய திருஞானசம்பந்தரை, பெரிய கடலால் சூழப்பட்ட
உலகப் புகழ் பெற்றவரை, நல்ல தமிழேபோலப் பல புன்கவி கொண்டு அவரது பாதங்களைப்
போற்றுவன்.
ஆசிரியர் நம்பியாண்டார் நம்பிகள் தம்முடைய கவிகளைப் புன்கவி எனக் குறிப்பிட்டுத்
தம்முடைய அடக்கமுடைமையைப் புலப்படுத்திக் கொள்ளுகிறார்.
எண் சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
-
போற்று வார்இடர் பாற்றிய புனிதன்
பொழில்சு லாவிய புகலியர் பெருமான்
ஏற்ற வார் புகழ் ஞானசம் பந்தன்
எம்பி ரான் இருஞ் சுருதியங் கிரிவாய்ச்
சேற்று வார்புனம் காவல் பிரிந்தென்
சிந்தை கொள்வ தும் செயச்தொழி லானால்
மாற்றம் நீர்எமக் கின் றுரை செய்தால்
வாசி யோ குற மாதுநல் லீரே.
தெளிவுரை : இது தலைவன் கூற்று.
குறமாது நலீரே ! இது தகுதியோ எனத் தலைவன் கேட்டான் என்க. போற்றுகின்றவர்களுடைய
துன்பங்களை நீக்கிய புனிதன். சோலைகள் சூழ்ந்த சீகாழிப் பெருமான், ஏற்றவார் புகழ்
ஞானசம்பந்தன். சிவபெருமானது கயிலாயமலையில் சேற்றுவார் புனம். காவல் புரிந்து என்
சிந்தை கொள்வதும் செய்தொழில். ஆனால், நீர் எமக்கு இவ்வாறு பதில் அளித்தல் தகுதியோ
என்று தலைவன் கூறினான்.
எழு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
-
நலமலி தரும்புவனி நிறைசெய்புகழ் இன்பநனி
பனிமதி அணைந்த பொழில்சூழ்
பொலமதில் இரும்புகலி அதிபதி விதம்பெருகு
புனிதகுணன் எந்தம் இறைவன்
பலமலி தரும்தமிழின் வடகலை விடங்கன் மிகு
பரசமய வென்றி அரிதன்
சலமலி தரும்கமல சரண் நினைவன் என்றனது
தகுவினைகள் பொன்றும் வகையே.
தெளிவுரை : நலங்கள் மலிந்த உலகம் நிறைந்த வயல்களை உடைய புகழ் இன்பம் மிகுந்து
குளிர்ந்த சந்திரன் அணைந்த சோலைகள் சூழ்ந்த அழகிய மதில்களை உடைய பெரிய சீகாழியின்
அதிபதி. விதம் பெருகு புனித குணன்; எந்தம் இறைவன்; பலமலிருதம் தமிழன் வடகலை
விடங்கன்; மிகு பரசமயக் கோளரி. தன் சலமலிதரும் தாமரை மலர் போன்ற திருவடி நினைவன்
என்று சொல்வது வினைகள் அழியும் வகையாகும்.
பன்னிரு சீர்க் கழி நெடிலடி ஆசிரியவிருத்தம்
-
வகைதகு முத்தமிழ் ஆகரன்
மறைபயில் திப்பிய வாசகன்
வலகலை வித்தகன் வானவில் மதிஅணை பொற்குவை மாளிகை
திகைதிகை மட்டலர் வார்பொழில் திகழ் புக லிக்கர சாகிய
திருவளர் விப்ர சிகாமணி செழுமல யத்தமிழ்க் கேசரி
மிகமத வெற்றிகொள் வாரணம் மிடைவரு டைக்குலம் யாளிகள்
விரவிரு ளில்தனி நீள்நெறி வினைதுயர் மொய்த்துள வே மணி
நகைஎழி லிற்குற மா துன தருமை நினைக்கிலள் நீ இவள்
நசையின் முழுப்பழி ஆதல்முன் நணுகல் இனிக்கிரி வாணனே.
தெளிவுரை : தோழி தலைவனை இரவு வரல் விலக்கல்.
வகைதகு முத்தமிழ் ஆகரன். வேதங்களைப் பயில்கின்ற மேலான மொழிகளை உடையவன். வன்மை
மிகுந்த கலைகளிற் சிறந்தவன். வானவில்லும் சந்திரனும் அணைகின்ற பொற்குவை மாளிகை
திக்குகள்தோறும் தேன் நிறைந்த சோலைகள் சூழ்ந்த சீகாழிக்கு அரசாகிய திருவளர் விப்ர
சிகாமணி, செழுமலயத் தமிழ்ச் சங்கம், மிக மத வெற்றி கொள் வாரணம், இடையில் எண்கால்
மலையாடு, யாளிகள் விரவி இருளில் தனியாக நீண்ட வழியில் துன்பங்கள் நிறைந்துள்ளன.
மணிநகை எழிலிற் குறமாது உனது அருமை நினைக்கிலள். நீ இவள்மீது கொண்ட விருப்பினால்
முழுப் பழியாதல்முன் நணுகல். (வராதே) மலைத்தலைவனே இனி நீ இந்த இருளில் வராதே
என்றபடி.
-
வாணில வும் புனலும் பயில் செஞ்சடை வண்கரு ணாகரனை
மலைமா துமையொடு மிவனா வானென முன்னாளுரை செய்தோன்
சேணில வும்புகழ் மாளிகை நீடிய தென்புக லிக்கரசைத்
திருவா ளனையெழி லருகா சனிதனை
மருவா தவர்கிளைபோல்
நாணில வும்பழி யோகரு தாதய லானொரு காளையுடன்
நசைதீர் நிலைகொலை புரிவே டுவர்பயில் தருகா னதர்வெயிலிற்
கேணில வுங்கிளி பாவையொ டாயமும் யாயெனை யும்மொழியக்
கிறியா லெனதொரு மகள்போ யுறுதுயர் கெடுவேனறிகிலேனே.
தெளிவுரை : மகட் போக்கிய செவிலி இரங்குதல்.
பிறைத் திங்களும் கங்கையும் பயிலுகின்ற செஞ்சடையை உடைய சிவபெருமானை உமையாளொடும்
இவன்தான் என்று வானில் சுட்டிக் காட்டினான். வெகு தூரம் வரை புகழப்படும்
மாளிகைகளை உடைய தென் சீகாழிக்கு அரசை, திருவாளனை, அருகர்க்கு இடியாகிய திருஞான
சம்பந்தரை வணங்காதவர் கிளைபோல் நாள் நிலவும் பழியைக் கருதாமல் அயலானாகிய ஒரு
காளையுடன் (தலைவனுடன்) நீரில்லாததும் கொலை வேடுவர் பயின்கின்றதுமான பாலைநில
வழியில் வெயிலில், கேள் நிலவும் கிளியையும் பாவையொடு ஆயத்தையும் தாயையும்
என்னையும் நீங்கி பொய்யால் எனதொரு மகள் போய் உறுதுயர் கெடுவேன் ஆகிய நான்
அறிகிலேனே.
எண் சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
-
அறிவாகி யின்பஞ்செய் தமிழ்வாதில் வென்றந்த
அமணான வன்குண்டர் கழுவேற முன்கண்ட
செறிமாட வண்சண்பை நகராளி யென்தந்தை
திருஞான சம்பந்த னணிநீடு திண்குன்றில்
நெறியால மண்துன்றி முனைநாள்சி னங்கொண்டு
நிறைவார் புனந்தின்று மகள்மேல் வருந்துங்க
வெறியார் மதந்தங்கு கதவா ரணங்கொன்ற
வெகுளாத நஞ்சிந்தை விறலா னுளன்பண்டே.
தெளிவுரை : தோழி களிறுதரு புணர்ச்சியால் அறத்தொடு நின்றது.
அறிவாகி, இன்பம் செய் தமிழ் வாதில் வென்று, அந்தச் சமணர்கள் கழுவேற முன்
நின்றவன், செறிந்த மாடங்களையுடைய வளப்பம் பொருந்திய சீகாழி நகராளி; என் தந்தை;
திருஞானசம்பந்தன் அணி நீடு திண்குன்றில் நெறியால் அமண்துன்றி முனைநாள்
சினங்கொண்டு நிறைவார் புனந்தின்று மகள்மேல் வரும் துங்க வெறியார் மதம் தங்கு
சினமுடைய யானையைக் கொன்ற நம்மாட்டு அன்புள்ள தலைவன் முன்பே இவளுக்கு உண்டு.
யானையைக் கொன்ற தலைவனே இவளுடைய காதலன் என்பதைத் தோழி கூறுகிறாள்.
பதின்சீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம்
-
பண்டமுது செய்ததுமை நங்கையருள் மேவுசிவ ஞானம்
பைந்தரள நன்சிவிகை செம்பொனணி நீடுகிற தாளம்
கொண்டதர னும்பர்பர னெங்கள்பெரு மானருள் படைத்துக்
கொடுத்ததமி ழைத்தவகு லத்தவர்க ளுக்குலகி லின்பம்
கண்டதரு கந்தர்குல மொன்றிமுழு துங்ககழுவிலேறக்
கறுத்தது வினைப்பயன் மனத்திலிறை காதலது அன்றி
விண்டதுவும் வஞ்சகரை மஞ்சணவு கின்றமணி மாட
வேணுபுர நாதன்மிகு வேதியர்சி காமணி பிரானே.
தெளிவுரை : திருஞானசம்பந்தரது அருஞ்செயல்களைப் பாராட்டுகின்றார்.
இவர் முன்பு உமாதேவியார் அளித்த ஞானப் பாலால் சிவஞானம் பெற்றார். முத்துச்
சிவிகையையும் பொன்தாளத்தையும் சிவபெருமானிடமிருந்து பெற்றார். தமிழை
உலகத்தவருக்கு அளித்தார். சமணர்களைக் கழுவேற்றினார். உயர்ந்த மதில்களை உடைய
சீகாழிப் பதியிலுள்ள வேதியர் சிகாமணியாகிய திருஞானசம்பந்தர் இவைகளைச் செய்தார்
என்கிறார்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
-
பிரானை மெய்த்திரு ஞானசம்
பந்தனை மறையவர் பெருமானைக்
குராம லர்ப்பொழிற் கொச்சையர்
நாதனைக் குரைகழ லிணைவாழ்த்தித்
தராத லத்தினி லவனருள்
நினைவொடு தளர்வுறு தமியேனுக்
கிராவி னைக்கொடு வந்ததிவ்
அந்திமற் றினி விடி வறியேனே.
தெளிவுரை : தலைவி பொழுது கண்டு இரங்குதல்.
பிரானை, மெய்த்திரு ஞானசம்பந்தனை, மறையவர் பெருமானை, குராமலர் சோலைகள் சூழ்ந்த
சீகாழி நாதனை, ஒலி செய்கின்ற கழல் அணிந்த திருவடிகளை வாழ்த்தி, நிலவுலகில் அவன்
அருள் நினைவோடு தளர்வுறும் தமியேனுக்கு இரவைக் கொண்டு வருகிற இந்த மாலைக் காலம்
தருகின்ற துன்பத்திற்கு எப்போது விடிவு காலம் வருமோ அறியேனே.
பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
-
ஏனமு கத்தவ புத்தரை யிந்திர சித்து மணம்புணர் வுற்றான்
ஈழவ னார்சொரி தொட்டி யினங்களை
வெட்டி யிசித்தனர் பட்டர்
தான மிரக்கிற சீதை மடுப்பது சாதி குடத்தொடு கண்டீர்
சக்கர வர்த்திகள் சிக்கர மட்டுவர் தத்துவம் இப்பரி சுண்டே
ஆன புகழ்ப்பயில் விப்ர சிகாமணி அத்தகு மைப்புரை யுங்கார்
ஆர்பொழில் நீடிய சண்பையர் காவலன்
வண்களி யேனெளி யேனோ
சோனக னுக்குமெ னக்குமெனத்தரை யம்மனை சூலது கொண்டாள்
தும்புரு வாலியை வென்று நிலத்திடை
நின்று துலக்குகிறாரே.
தெளிவுரை : கள்ளை உண்டவன் பொருள் தொடர்பில்லாதவற்றை கூறும் கூற்றாக அமைந்தது இது.
பன்றி முகத்தையுடைய புத்தரை, இந்திரசித்து மணந்து கொண்டான். ஈழ நாட்டவர்
சொரிகின்ற தொட்டி இனங்களைப் பட்டர் வெட்டி இசித்தனர். தானம் இரக்கிற சீதை
மடுப்பது சாதி குடத்தொடு காண்பீர்களாக. சக்கரவர்திகள் சிக்கிரம் அட்டுவர். தத்துவ
முப்பரிசு உண்டு, ஆன புகழ்ப்பயில் அந்தணர்களிற் சிறந்தவன் அத்தகு கரிய மேகம் ஆர்
பொழில் நீடிய சீகாழிக் காவலன் வண்களியேன் எளியேனோ? கோனகனுக்கும் எனக்கும் எனத்
தரை யம்மனது சூலத்தைக் கொண்டவள் தும்புரு வாலியை வென்று, நிலத்திடை நின்று,
ஆடுகிறார்களே.
ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத செய்திகள் இவை.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
-
ஆர்மலி புகலி நாத
னருளென இரவில் வந்தென்
வார்முலை பயலை தீர
மணந்தவர் தணந்து போன
தேரத ரழிய லும்மைச்
செய்பிழை யெம்ம தில்லை
கார்திரை கஞலி மோதிக்
கரைபொருங் கடலி னீரே.
தெளிவுரை : தலைவி கடலோடு கூறுதல்.
சீகாழி நாதனான திருஞானசம்பந்தரது அருள் என்னுமாறு விரைவில் வந்து என் கச்சிட்டு
இறுக்கப்பட்ட முலைகளின்மேல் படர்ந்துள்ள பசலை (தேமல்) தீர மணந்தவராகிய தலைவர்
நீங்கிச் சென்ற தேரின் அடிச்சுவட்டை அழிக்காதே. உம்மைச் செய்பிழை எம்மது இல்லை.
அலைகள் மோதிக் கரையோடு சண்டையிடும் கடல் நீரே.
கலி விருத்தம்
-
கடல்மேவு புவியேறு கவிநீரர் பெருமான்றன்
தடமாடு மிகுகாழி தகுபேதை யருளாமல்
திடமாகி லணிநீறு செழுமேனி முழுதாடி
மடலேறி யெழில்வீதி வருகாத லொழியானே.
தெளிவுரை : தலைவன் மடல் ஏறுவேன் என்றல்.
கடலால் சூழப்பட்ட இந்நிலவுலகில் சிங்க ஏறு போன்ற கவி வல்லவர் ஞானசம்பந்தர். இவரது
சீகாழியில் வாழும் இந்தத் தலைவி அருள் செய்யாமல் திடமாக இருப்பாளாகில் உடல்
முழுதும் திருநீறு பூசி, பனை மடற் குதிரையிலேறி எழில் வீதி வழியே வரும்
எண்ணமுடையேன் என்றான் தலைவன்.
மடல் ஏறுதல் : தன் குறை தீரப் பெறாத தலைமகன் பனங்கருக்கால் குதிரையும்,
பனையிலுள்ள மற்றவற்றால் வண்டி முதலியனவும் செய்து, தன் உடம்பு முழுவதும் நீறு
பூசிக்கொண்டு பூளைப் பூ, எலும்பு, எருக்கம் பூ ஆகிய இவற்றை மாலையாகக் கட்டித்
தரித்துக்கொண்டு தலைவியின் படத்தைக் கையில் பிடித்துக் கொண்டு அக் குதிரையிலேறி,
அதனைச் சிலர் ஈர்த்துச் செல்ல வீதியிற் செல்லுதல். இது பெருந்திணையின்பாற்படும்.
எண் சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
-
ஒழியா தின்புறு பொழில்சூழ் சண்பைமன்
உயர்பார் துன்றிய தகுஞா னன்புகழ்
எழிலா ருங்கவு ணியர் தீ பன்திகழ்
இணையார் செங்கரன் நிகழ்வான் விண்குயின்
பொழியா நின்றன துளிதார் கொன்றைகள்
புலமே துன்றின கலைமா னொன்றின
பழிமேல் கொண்டது நுமர்தே ரன்பொடும்
அருகே வந்தது அதுகாண் மங்கையே.
தெளிவுரை : தலைவன் வரவைத் தோழி தலைவிக்கு உரைத்தல்.
எப்போதும் இன்பம் செய்கின்ற சோலைகள் சூழ்ந்த சீகாழித் தலைவனாகிய ஞானசம்பந்தர்
உலகம் புகழும் ஞானமுடையவன். கவுணியர் குல தீபன். அவனது இரண்டாகப் பொருந்திய
செங்கரங்களைப் போன்று வானத்திலுள்ள மேகங்கள் மழை பொழிகின்றன. கொன்றை மரங்கள்
பூத்துள்ளன. கலைமான்கள் ஒன்று சேர்ந்தன. கார்காலத்தில் வருவதாகச் சொன்ன தலைவர்
சொன்ன சொல் தவறாமல் நேரில் வந்துள்ளார். தலைவியே ! அதோ பார் என்று தோழி தேர்
வருவதைக் காட்டுகிறாள்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
-
மங்கை யிடத்தர னைக்கவி
நீரெதி ரோட மதித்தருள்செய்
தங்கு புகழ்ச்சதுர் மாமறை
நாவளர் சைவசி காமணிதன்
துங்க மதிற்பிர மாபுரம் மேவிய
சூல்பொழில் நின்றொளிர்மென்
கொங்கை யுடைக்கொடி யேரிடை
யாள்குடி கொண்டன ளெம்மனமே.
தெளிவுரை : தலைவன் பாங்கனுக்கு உரைத்தல்.
திருஞானசம்பந்தர், உமாதேவியை இடப்பாகத்தில் கொண்ட சிவபெருமானைப் பற்றி ஏட்டில்
எழுதி வைகை ஆற்றில் விட அது எதிர்ஏறிச் சென்றது. அத்தகைய நான்கு வேதங்களையும்
உணர்ந்த நாவளர் சைவ சிகாமணி தன் உயர்ந்த மதில்களையுடைய சீகாழியில் பொருந்திய
மென்றொளிர் மென் கொங்கைகளையும் கொடி போன்ற இடையினையும் உடைய தலைவியின்மீது என்
மனம் குடிகொண்டது என்று தலைவன் பாங்கனிடம் கூறினான்.
எண் சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
-
மனங்கொண்டு நிறைகொண்டு கலையுங் கொண்டு
மணிநிறமு மிவள் செங்கை வளையுங் கொண்ட
தனங்கொண்ட பெருஞ்செல்வம் திகழுங் கீர்த்திச்
சண்பையர்கோன் திருஞான சம்பந் தற்கு
நனங்கொண்டு மெய்கொண்டு பயலை கொண்டே
நன்னுதலா ளயர்கின்றாள் நடுவே நின்றும்
இனங்கொண்டு நகைகொண்டு மடவீர் வாளா
என்செயநீ ரலர்தூற்றி எழுகின் றீரே.
தெளிவுரை : தோழி கூற்று: இவளுடைய மனத்தையும், கற்பையும், ஆடையையும் கவர்ந்து
கொண்டு மணி நிறத்தையும் இவள் கையிலிருந்த வளைகளையும் செல்வமாகக் கொண்ட
பெருஞ்செல்வம் திகழும் கீர்த்தியை உடைய சண்பையர் கோனாகிய திருஞான சம்பந்தருக்கு
நினைவு கொண்டு உடம்பில் படர்ந்துள்ள பசலையாகிய தேமலைக் கொண்டே நன்னுதலாள்
வருந்துகிறாள். அயலார் நடுவே நின்றும் கூட்டமாகக் கொண்டு, சிரித்து பழிச்சொல்
கூறுகின்றார்கள். நீர் வாளா செல்வது நியாயமா? அவளுக்கு என்ன ஆறுதல் சொல்லப்
போகிறீர் என்று தோழி கேட்கிறாள்.
சம்பிரதம்
-
எழுகுல வெற்பிவை மிடறி லடக்குவன்
எறிகட லிற்புனல் குளறிவ யிற்றினில்
முழுது மொளித்திர வியையிந்நிலத்திடை
முடுகுவ னிப்பொழு திவையல விச்சைகள்
கழுமல நற்பதி யதிப தமிழ்க்கடல்
கவுணிய நற்குல திலக னிணைக்கழல்
தொழுது வழுத்திய பிறரொரு வர்க்குறு
துயர்வரு விப்பனி தரியதொர் விச்சையே.
தெளிவுரை : ஏழு குல மலைகளாகிய இவற்றை மிடற்றில் (கழுத்தில்) அடக்குவன். ஏழு
கடல்களின் நீரைக் கலக்கி வயிற்றினில் முழுவதும் ஒளித்து, சூரியனை இந் நிலத்திடை
முடுகுவன். இப்பொழுது இவையல வித்தைகள். சீகாழி நற்பதி அதிப ! தமிழ்க்கடல் கவுணிய
! நற்குல திலக ! நின் இணைக்கழல் தொழுது வழுத்தியவர்களுக்கு வரும் துன்பங்களை என்
வித்தை தீர்த்துவிடும் என்பதாம்.
எழு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
-
சயமி குத்தரு கரைமு ருக்கிய
தமிழ்பயிற்றிய நாவன்
வியலி யற்றிரு மருக லிற்கொடு விடம ழித்தருள் போதன்
கயலுடைப்புனல் வயல் வளத்தகு
கழுமலப்பதி நாதன்
இயலு டைக்கழல் தொழநி னைப்பவ
ரிருவி னைத்துயர் போமே.
தெளிவுரை : வெற்றி மிகுத்து அருகரை வென்ற தமிழ் பயிற்றிய நாவன். பரந்த வளமுள்ள
திருமருகலில் கொடிய விஷத்தைப் போக்கிய போதன். கயல் மீன்களை உடைய நீர் வளமிக்க
சீகாழிப்பதி நாதன் நல் இலக்கணம் பொருந்திய திருவடிகளைத் தொழ நினைப்பவர் வினைத்
துயர்கள் போம் என்றவாறு.
எண் சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
-
மேதகுந் திகழ்பூக நாகசண் பகசூத
வேரிவண் டறைசோலை யாலைதுன் றியகாழி
நாதனந் தணர்கோனெ னானைவண் புகழாளி
ஞானசுந் தரன்மேவு தார்நினைந் தயர்வேனை
நீதியன்றன பேசும் யாயுமிந் துவும்வாசம்
நீடுதென் றலும்வீணை யோசையுங் கரைசேர
மோதுதெண் திரைசேவல் சேருமன் றிலும்வேயும்
மூடுதண் பனிவாடை கூடிவன் பகையாமே.
தெளிவுரை : தலைவி இரங்கல்: சிறந்த பாக்கு, சுரபுன்னை, சண்பகம், மா முதலிய
மரங்களில் வண்டுகள் ஒலிக்கின்ற சோலைகளும் கரும்பு ஆலைகளும் நிறைந்த சீகாழி நாதன்;
அந்தணர் கோன்; வண்புகழ் ஆளி; ஞானசுந்தரன் மேவும் மலர் மாலையை நினைந்து
தளர்வேனாகிய என்னைப் பேசத் தகாத மொழிகள் பேசும் அன்னையும், திங்களும், மணமிக்க
தென்றற் காற்றும், வீணை ஓசையும், கரை சேர மோதுகின்ற கடல் அலைகளும், சேவலை
நினைந்து கூவும் அன்றிலும், புல்லாங்குழல் ஓசையும், வாடைக் காற்றும் கூடி
எனக்குப் பகையாக உள்ளன.
-
வன்பகை யாமக் குண்டரை வென்றோய்
மாமலர் வாளிப் பொருமத வேளைத்
தன்பகை யாகச் சிந்தையுள் நையும்
தையலை யுய்யக் கொண்டருள் செய்யாய்
நின்புகழ் பாடிக் கண்பனி சோரா
நின்றெழில் ஞானா என்றகம் நெக்கிட்
டன்பக லாமெய்ச் சிந்தைய ரின்பாம்
அம்பொழில் மாடச் சண்பையர் கோவே.
தெளிவுரை : தோழி கூற்று: வன்பகையாம் அந்தச் சமணரை வென்றோய் ! மலர் அம்புகளைக்
கொண்டு போர் செய்யும் காமனைத் தன்னுடைய பகையாகச் சிந்தையுள் வருந்தும் தலைவியை
நிலை கொள்ளுமாறு செய்வாயாக. உன்னுடைய புகழையே பாடி, கண்களில் நீர் சோர, நின்று
எழில் ஞானா என்று அகம் நெக்குறுகி, அன்பு அகலா மெய்ச் சிந்தையரைப் போல, பொழில்
சூழ்ந்த மாட சீகாழிக் கோவே என்று அழும் தலைவிக்கு அருள் செய்வாயாக.
மறம்
-
கோவின்திரு முக மீதொடு வருதூதுவ ஈரக்
குளிர்பைம்பொழில் வள நாடெழில் நிதியம்பரி சம்மீ
மாவீரிய ரிவர் தங்கையென் மகுடன்திறம் அமண
மறவெங்குல மறிகின்றிலன் பழியச்சத வரசன்
பாவேறிய மதுரத்தமிழ் விரகன்புக லியர்மன்
பயில்வண்புக ழருகாசனி பணியன்றெனின் நமர்காள்
தூவேரியை மடுமின் துடி யடிமின்படை யெழுமின்
தொகுசேனையு மவனும்பட மலையும்பரி சினியே.
தெளிவுரை : அரசனுடைய ஓலையோடு வந்த தூதுவனே !
குளிர்ந்த சோலைகளை உடைய வளநாட்டு எழில் நிதியம் கொடுத்து வாங்கிய குதிரை வீரர்
தங்கை என் மகுடன் திறம் அமண மறவெங்குலம் அறிகின்றிலன். பழி அச்சுத அரசன் பாவேறிய
மதுரத் தமிழ் விரகன். சீகாழி மன்னன் பயில்வண் புகழ் அருகாசனி (அருகர்களுக்கு இடி
போன்றவன்) எனின் நமர்காள் கள்ளைக் குடியுங்கள். உடுக்கையை அடியுங்கள். படை
எழுமின். தொகு சேனையும் அவனும்பட பரிசினை மலையுங்கள் (போர் செய்யுங்கள்). மறம்
என்பது வீரம். வீரர்களுடைய வீட்டுப் பெண்ணை மணந்து கொள்ள ஓலை கொண்டு வந்த
தூதுவனைப் பார்த்து, நாங்கள் வீரம் மிக்கவர்கள். உங்கள் தலைவன் எங்களைவிட
வீரத்தில் தாழ்ந்தவன் என்று கூறுவதுபோல் அமைந்த பாடல் இது. பாட்டின் ஓசையும்
மிடுக்காய் இருப்பதைக் காண்க.
எழு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
-
இனியின் றொழிமினிவ் வெறியும் மறியடு
தொழிலும் மிடுகுர வையுமெல்லாம்
நனிசிந் தையினிவள் மிகவன் புறுவதொர்
நசையுண் டதுநரை முதுபெண்டீர்
புனிதன் புகலியர் அதிபன் புனைதமிழ்
விரகன் புயமுறு மரவிந்தம்
பனிமென் குழலியை யணிமின் துயரொடு
மயலுங் கெடுவது சரதம்மே.
தெளிவுரை : தோழி அறத்தொடு நிற்றல்: வெறியாடுதலையும் ஆட்டைப் பலி கொடுக்கும்
வேலையையும் குரவை ஆடுதலையும் இன்றோடு விட்டொழியுங்கள். நனி சிந்தையின் இவள் மிக
அன்புறுவது ஒரு விருப்பம் உள்ளது. நரை முது பெண்டிரே ! புனிதன், புகலியர் அதிபன்,
புனை தமிழ் விரகன், தோள்கலை தலைவி விரும்புகின்றாள். இத் தலைவியை
அழகுபடுத்துங்கள். துயரமும் மயக்கமும் கெடுவது உண்டு.
எண் சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
-
சரத மணமலி பரிசம் வருவன
தளர்வில் புகலிய ரதிபன் நதிதரு
வரத ணணி தமிழ் விரகன் மிகுபுகழ்
மருவு சுருதிநன் மலையி னமர்தரு
விரத முடையைநின் னிடையி னவள்மனம்
விரைசெய் குழலியை யணைவ தரிதென
இரதம் அழிதர வருதல் முனமினி
யெளிய தொருவகை கருது மலையனே.
தெளிவுரை : நொது மலர் வரை உணர்த்தித் தோழி வரைவு கடாதல். அயலார் பரிசத்தோடு
வருவதற்குமுன் தலைவியை மணந்து கொள்வாயாக என்றபடி. மணத்தை முன்னிட்டு அயலார்
பரிசத்தோடு வருவது உண்மை. தளர்வில்லாத புகலியர் அதிபன், நதி தரு வரதன், அணிதிகழ்
விரகன், மிகுபுகழ் மருவும் சுருதி நன் மலையின் அமர்தரு விரதம் உடையை, உன்னை
அடைந்தால் அவள் மனம், விரைசெய்குழலியை அணைவது அரிதென அவர்கள் வருவதற்குமுன், மலை
நாட்டுத் தலைவனே ! விரைந்து ஆவன செய்வாயாக !
-
அயன்நெடிய மாலுமவ ரறிவரிய தாணுவரன்
அருளினொடு நீடவனி யிடர்முழுது போயகல
வயலணிதென் வீழிமிழ லையின்நிலவு காசின்மலி
மழைபொழியு மானகுண மதுரன்மதி தோய்கனக
செயநிலவு மாடம்மதில் புடை தழுவு வாசமலி
செறிபொழில்சு லாவிவளர் சிரபுரசு ரேசன்முதிர்
பயன்நிலவு ஞானதமிழ் விரகன்மறை ஞானமுணர்
பரமகுரு நாதன்மிகு பரசமய கோளரியே.
தெளிவுரை : பிரமன், திருமால் ஆகிய இருவராலும் அறிய முடியாத தாணுவாகிய சிவன்
அருளோடு உலகத் துன்பம் முழுவதும் போயகல அயல் அணிதென் திருவீழிமிழலையில் காசு
பெற்று, மழை பொழியவும் செய்த குணமதுரன். சந்திரன் தங்குகிற உயர் மாடங்களை
உடையதும் சோலைகள் சூழ்ந்ததுமான சீகாழி தேவர்களுக்குத் தலைவன்; ஞானத் தமிழ்
விரகன்; மறை ஞானமுணர் பரம குருநாதன் பரசமய கோளரியே ! பஞ்சத்தைப் போக்கியவன்
ஞானசம்பந்தன் என்றபடி.
-
அரியாருங் கிரிநெறியெங் ஙனம் நீர் வந்தீர்
அழகிதினிப் பயமில்லை யந்திக் கப்பால்
தெரியாபுன் சிறுநெறிக ளெந்தம் வாழ்விச்
சிறுகுடியின் றிரவிங்கே சிரமம் தீர்ந்திச்
சுரியார்மென் குழலியொடும் விடியச் சென்று
தொகுபுகழ்சேர் திருன சம்பந் தன்றன்
வரியாரும் பொழிலுமெழில் மதிலுந் தோற்றும்
வயற்புகலிப் பதியினிது மருவ லாமே.
தெளிவுரை : இடைச் சுரத்துக் கண்டோர் விலக்கல்.
சிங்கங்கள் நடமாடுகின்ற மலை வழியில் நீங்கள் எப்படி வந்தீர்கள்? உங்கள் செயல்
நன்றாயிருக்கிறது. இனிப் பயமில்லை. மாலை நேரத்திற்குப் பிறகு நீங்கள் செல்லும்
வழி துன்பமுடையது. நாங்கள் வாழும் இந்தச் சிறுகுடியில் இன்று இரவு தங்கி சிரமம்
தீர்ந்து சுருண்ட கூந்தலையுடைய மென்குழலாளோடும் காலையில் சென்று புகழ்மிக்க
திருஞானசம்பந்தரின் சோலைகள் சூழ்ந்ததும் பெரிய மதில்களை உடையதுமான சீகாழியை இனிது
சென்று சேரலாம்.
ஈற்றடி மிக்குவந்த நான்கடிக் கலித்தாழிசை
-
ஆமாண்பொன் கூட்டகத்த
வஞ்சொ லிளம் பைங்கிளியே
பாமாலை யாழ் முரியப்
பாணழியப் பண்டருள்செய்
மாமான கந்தரன்வண்
சம்பந்த மாமுனியெம்
கோமான்தன் புகழொருகா
லின்புறநீ கூறாயே
கொச்சையர்கோன் தன்புகழ்யா
னின்புறநீ கூறாயே.
தெளிவுரை : பொற் கூண்டிலுள்ள அழகிய சொல்லையுடைய இளம் பைங்கிளியே ! யாழ்முரி
என்னும் பாடலைப் பாடி, திருநீலகண்ட யாழ்ப்பாணரது யாழை முரித்த திருஞானசம்பந்த
மாமுனி எம் கோமான்தன் புகழ் ஒரு சமயம் இன்புற நீ கூறமாட்டாயா? சீகாழித் தலைவன்
தன் புகழைக் கேட்டு நான் இன்புற நீ கூறமாட்டாயா?
எழு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
-
கூற தாகமெய் யடிமை தானெனை
யுடைய கொச்சையார் அதிபதி
வீற தார்தமிழ் விரகன் மேதகு
புழி னானிவன் மிகுவனச்
சேற தார்தரு திரள்க ளைக்கன
செழுமு லைக்குரி யவர்சினத்
தேறு தானிது தழுவி னாரென
இடிகொள் மாமுர சதிருமே.
தெளிவுரை : ஏறு தழுவுதல்: ஏறு தழுவினார் இவளுக்குரியவர் என்று முரசு அதிரும்.
என்னை அடிமையாகக் கொண்ட சீகாழி அதிபதி பெருமை பொருந்திய தமிழ் விரகன், மேதகு
புகழினான் இவன் மிகுவன சேறதார் தரு திரள்களைக் கனசெழு முலைகளுக்கு உரியவர்.
கோபங்கொண்ட காளையைத் தழுவினார் என இடி போன்ற மாமுரசு அதிரும்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
-
சதுரன் புகலிய ரதிபன்கூர்
தவசுந் தரகவு ணியர்தஞ்சீர்
முதல்வன் புகலிய ரதிபன்தாள்
முறைவந் தடையலர் நகரம்போல்
எதிர்வந் தனர்விறல் கெடவெம்போர்
எரிவெங் கணைசொரி புரிமின்கார்
அதிர்கின் றனஇது பருவஞ்சே ரலர்தம்
பதிமதி லிடிமின்னே.
தெளிவுரை : பருவங்கண்டு தோழி கூறுதல் : மேம்பாட்டை உடையவன்; சீகாழி அதிபன்;
கூர்தவ சுந்தர கவுணியர் தம் சீர் முதல்வன்; திருஞானசம்பந்தரது திருவடிகளை முறையாக
வந்து அடையாதவர் நகரம்போல, எதிர் வந்தனர் வெற்றியழிய வெம்போர் எரி கொடிய அம்புகள்
சொரிகின்ற மின்னலொடு பகைவர்களுடைய நகரில் முகில்கள் முழங்குகின்றன. கார்காலம்
வந்துவிட்டது. தலைவரும் வருவார் என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறினாள்.
எண் சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
-
மின்னு மாகத் தெழிலி யுஞ்சேர்
மிகுபொன் மாடப் புகலி நாதன்
துன்னும் ஞானத் தெம்பி ரான்மெய்த்
தொகைசெய் பாடற் பதிக மன்னாள்
பொன்னும் மாநல் தரள முந்தன்
பொருக யற்கண் தனம்நி றைத்தாள்
இன்னு மேகிப் பொருள் படைப்பான்
எங்ங னேநா னெண்ணு மாறே.
தெளிவுரை : பொருள் வயின் பிரிய எண்ணிய நெஞ்சத்துக்குத் தலைவன் கூறியது.
மின்னும் விண்ணில் உள்ள மேகமும் சேர்மிகு பொன்மாட சீகாழி நாதன், துன்னு ஞானத்து
எம்பிரான் மெய்த்தொகைசெய் தேவாரப் பதிகம் போன்றவள் மார்பில் பூத்துள்ள பொன்னிறம்
போன்ற பசலையும் கண்களிலிருந்து வழியும் முத்துப் போன்ற கண்ணீரும் உடையவள்.
இவளிடம் பொன்னும் முத்தும் இருக்க இனி நான் எதற்காகப் பொருள் தேடப் போக வேண்டும்?
என்று தலைவன் நெஞ்சத்துக்குக் கூறுகின்றான்.
பன்னிரு சீர்க் கழி நெடிலடி ஆசிரியவிருத்தம்
-
மாறி லாத பொடிநீ
றேறு கோல வடிவும்
வம்புபம்பு குழலுந்
துங்க கொங்கை யிணையும்
ஊறி யேறு பதிகத்
தோசை நேச நுகர்வும்
ஒத்து கித்து நடையுஞ்
சித்த பத்தி மிகையும்
வீற தேறும் வயல்சூழ்
காழி ஞான பெருமான்
வென்றி துன்று கழலி
னொன்றி நின்ற பணியும்
தேறல் போலும் மொழியும்
சேல்கள் போலும் விழியும்
சிந்தை கொண்ட பரிசும்
நன்றி மங்கை தவமே.
தெளிவுரை : மாறிலாத திருநீறு அணிந்த மேனியும், நறுமணம் பரவிய கூந்தலும், இரண்டு
முலைகளும், தேவாரப் பாடல்களின் ஓசையும், நேச நுகர்வும் ஒத்து கித்து நடையும்,
சித்த பத்தி மிகையும், வெற்றியமைந்த வயல்கள் சூழ்ந்த சீகாழி ஞானப் பெருமான்
வெற்றியுடைய திருவடிகளைப் பணியும் தேன் போன்ற மொழியும் சேல்மீன்கள் போன்ற
கண்களும் சிந்தை கொண்ட பரிசும் நன்றி மங்கை தவமே.
மங்கை செய்த தவத்தால் இவ்வளவு நலன்களையும் பெற்றாள் என்கிறார்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
-
கைதவத்தா லென்னிடைக்கு
நீவந்த தரியேனோ கலதிப் பாணா
மெய்தவத்தா ருயிரனைய
மிகுசைவ சிகாமணியைக் வேணுக் கோனைச்
செய்தவத்தால் விதிவாய்ந்த
செழுமலையா ரவனுடைய செம்பொன் திண்டோள்
எய்தவத்தால் விளிவெனக்கென்
யாதுக்கு நீபலபொய் இசைக்கின் றாயே.
தெளிவுரை : தலைவி பாணனை இகழ்தல்.
இழிந்த பாணனே ! கபட நாடகம் ஆடும் நீ இங்கு வந்த காரியத்தை நான் அறியேனோ?
மெய்தவத்தார் உயிரனைய மிகுசைவ சிகாமணியை, சீகாழி நாதனை செய்தவத்தால் விதி வாய்ந்த
செழுமுலையார் (பரத்தையர்) தலைவனுடைய செம்பொன் திண்தோள் எய்தவத்தால் விளிவு எனக்கு
யாதுக்கு நீ பல பொய் இசைக்கின்றாயே.
நீ பொய் பேசுபவன். என்னை ஏமாற்ற முடியாது என்கிறாள்.
மதங்கியார்
எண் சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
-
இசையை முகந்தெழு மிடறுமி திங்கிவன்
இடுகர ணங்களி னியல்பும் வளம்பொலி
திசைதிசை துன்றிய பொழில்சுல வுந்திகழ்
சிரபுர மன்றகு தமிழ்விர கன்பல
நசைமிகு வண்புகழ் பயிலும் மதங்கிதன்
நளிர்முலை செங்கயல் விழிநகை கண்டபின்
வசை,தகு மென்குல மவைமுழு துங்கொள
மதிவளர் சிந்தனை மயல்வரு கின்றதே.
தெளிவுரை : இசையை முகந்து எழு கண்டமும், இது இங்கு இவன் இடு கை முதலியவற்றால்
செய்யும் அவி நயங்களின் இயல்பும், வளம் பொலிகின்ற திசை திசை துன்றிய சோலைகள்
சூழ்ந்த சீகாழி மன், தகுதமிழ் விரகன், பல நசை மிகு வண் புகழ் பயிலும்
மதங்கியினுடைய நளிர் முலைகளும் செங்கயல் விழி நகையும் கண்டபின், வசைதரு மென்குலம்
அவை முழுதும் கொள மதிவளர் சிந்தனை மயல் வருகின்றதே.
இவளுடைய ஆடல் பாடல்களைக் கண்டு எவர்தாம் மயங்கார் ? என்கிறார்.
-
வருகின் றனனென் றனதுள் ளமும்நின்
வசமே நிறுவிக் குறைகொண் டுதணித்
தருகும் புனல்வெஞ் சுரம்யா னமரும்
மதுநீ யிறையுன் னினையா தெனின்முன்
கருகும் புயல்சேர் மதில்வண் புகலிக்
கவிஞன் பயில்செந் தமிழா கரன்மெய்ப்
பெருகுந் திருவா ரருள்பே ணலர்போற்
பிழைசெய் தனைவந் ததர்பெண் கொடியே.
தெளிவுரை : தலைவன் கூற்று : வருகின்றனன் எனது உள்ளமும் நின் வசமே நிறுவி
குறைகொண்டு தணித்து, தண்ணீர் வற்றிய பாலை நிலத்தில் நான் அமரும் அது நீ சிறிது
நேரமும் நினையாது எனின் முன் கருகும் மேகம் வந்து தங்கும் உயர்ந்த மதில்களை உடைய
சீகாழிக் கவிஞன், பயில் செந்தமிழ் ஆகரன் மெய் பெருகும் திருவார் அருள் பேணலர்போல்
(பகைவர் போல்) பிழை செய்தனை. இந்தக் கொடிய வழியில் வந்த பெண் கொடியே ! என்று
தலைவன் வருந்துகின்றான்.
-
கொடிநீடு விடையுடைய பெருமானை யடிபரவு
குணமேதை கவுணியர்கள் குலதீப சுபசரிதன்
அடியேன திடர்முழுதும் அறவீசு தமிழ்விரகன்
அணியான புகலிநகர் அணையானகனை கடலின்
முடிநீடு பெருவலைகொ டலையூடு புகுவனுமர்
முறையேவு பணிபுரிவ னணிதோணி புனைவனவை
படியாரும் நிகரரிய வரியாரும் மதர்நயனி
பணைவார்மென் முலைநுளையர் மடமாதுன் அருள்பெறினே.
தெளிவுரை : தலைவன் கூற்று: விடைக் கொடியை உடைய சிவபெருமானைப் பணியும் குண மேதை,
கவுணியர்களின் குலதீப, நல்ல வரலாற்றை உடையவன், அடியேனது இடர் முழுதும் அற வீசும்
தமிழ் விரகன், அழகான சீகாழி அணையான கனை கடலின் முடிநீடு பெருவலைகளைக் கொண்டு
அலையூடு புகுவன், உறவினர் முறை யேவு பணி புரிபவன், அணி தோணி புனைவன், அவை
படியாரும் நிகர் அரிய அழகிய மதர்த்த கண்களையுடையவள் பெருத்த முலையினை உடைய வலையர்
மடமாது அருள் பெறினே.
-
பெறுபயன் மிகப்புவியு ளருளுவன பிற்றைமுறை
பெருநெறி யளிப்பனபல பிறவியை யொழிச்சுவன
உறுதுய ரழிப்பனமு னுமைதிரு வருட்பெருக
உடையன நதிப்புனலி னெதிர்பஃறி யுய்த்தனபுன்
நறுமுறு குறைச்சமணை நிரைகழு நிறுத்தியன
நனிகத வடைத்தனது னருவிட மகற்றியன
துறுபொழில் மதிற்புறவ முதுபதிம னொப்பரிய
தொழில்பல மிகுத்ததமிழ் விரகன கவித்தொகையே.
தெளிவுரை : பெறுபயன் மிகப் புவியுள் அருளுவன் மறுமையில், பெரு நெறியளிப்பன; பல்
பிறவியை ஒழிப்பன; உறுதுயர் அழிப்பன; முன் உமாதேவியார் திருவருள் பெருக உடையன;
நதிப்புனலின் எதிர் படகு உய்த்தன; புன்நறுமுறு (குறைகூறிய) சமணர்களைக்
கழுவேற்றின; திருமறைக்காட்டில் கோயில் கதவுகளை மூட வைத்தன; கொடிய விஷம் நீங்கச்
செய்தன; சோலைகள் சூழ்ந்த மதில்களையுடைய, சீகாழி பதிமன் ஒப்பரிய தொழில்பல மிகுந்த
தமிழ் விரகன் செய்த தேவாரப் பாடல்களே.
பன்னிரு சீர்க் கழி நெடிலடி ஆசிரியவிருத்தம்
-
தொகுவார் பொழில்சுற் றியவான்
மதிதோ யுமதிற் கனமார்
தொலையா ததிருப் பொழில்மா
ளிகைமா டநெருக்கியசீர்
மிகுகா ழியன்முத் தமிழா
கரன்மே தகுபொற் புனைதார்
விரையார் கமலக் கழலே
துணையா கநினைப் பவர்தாம்
மகரா கரநித் திலநீர்
நிலையார் புவியுத் தமராய்
வரலா றுபிழைப் பி(லர்,ஊழிதொ)
றூழி இலக்கிதமாய்த்
தகுவாழ்வு நிலைத் தொழில்சே
ரறமா னபயிற் றுவர்மா
சதுரால் வினைசெற் றதன்மே
லணுகார் பிறவிக்கடலே.
தெளிவுரை : சோலைகள் சூழ்ந்த உயர்ந்த மதில்களையுடைய, மாட மாளிகைகள் நெருங்கிய
சீகாழியின் முத்தமிழாகரன், மேதகு பொற்புனைதார், விரையார் கமலக் கழலே துணையாக
நினைப்பவர்தாம் முத்துக்கள் நிறைந்த கடலால் சூழப்பட்ட உலகமும் சுற்றமாய் ஊழிக்
காலத்திலும் நிலைபெற்று நின்ற வாழ்வு நிலைத்து எழில் சேர் அறமான பயிற்றுவர்
மாசதுரால் வினை செற்று அதன் மேல் பிறவிக்கடலை அணுகார்.
திருஞானசம்பந்தரது திருவடிகளை வணங்குபவர்களுக்குப் பிறவித் துன்பங்கள் இல்லை
என்கிறார்.
பாணாற்றுப் படை
நேரிசை ஆசிரியப்பா
-
கருமங் கேண்மதி கருமங் கேண்மதி
துருமதிப் பாண கருமங் கேண்மதி
நிரம்பிய பாடல் நின்கண் ணோடும்
அரும்பசி நலிய அலக்கணுற் றிளைத்துக்
காந்திய வுதரக் கனல்தழைத் தெழுதலின்
தெளிவுரை : பாணனே ! நான் ஒரு செய்தி சொல்லுகிறேன் கேள். பலவாகிய பாடல்களை, பசித்
துன்பத்தோடு பல கஷ்டங்களை அடைந்து வயிற்றுப் பசியாகிய நெருப்பு எழுவதனால்,
தேய்ந்துடல் வற்றிச் சில்நரம் பெழுந்தே
இறுகுபு சுள்ளி இயற்றிய குரம்பை
உறுசெறுத் தனைய வுருவுகொண் டுள்வளைஇ
இன்னிசை நல்லி யாழ்சுமந் தன்னம்
மன்னிய வளநகர் மனைக்கடை தோறும்
தெளிவுரை : உடல் தேய்ந்து வற்றி, சின்னரம்பு எழுந்து இறுகவும், சிறுசிறு கழிகளைக்
கொண்டு கட்டிய சிறுவீடுபோல உருவுகொண்டு உள் வளைந்து, இனிய இசையைக் கொண்ட நல்ல
யாழைச் சுமந்து, அன்னங்கள் பொருந்திய வள நகராகிய சீகாழியில் வீடுகள் தோறும்.
சென்றுழிச் சென்றுழிச் சில்பலி பெறாது
நின்றுழி நிலாவு வன்துயர் போயொழிந்
தின்புற் றிருநிதி எய்தும் அதுநுன
துள்ளத் துள்ள தாயின் மதுமலர்
வண்டறை சோலை வளவயல் அகவ
தெளிவுரை : சென்று சென்று, பிச்சை கிடைக்காமல் நிற்கின்ற வன்துயர் ஒழிந்து
இன்புற்றுப் பெருஞ்செல்வம் பெறும் எண்ணம் உனக்கு இருக்குமாயின், தேன் பொருந்திய
மலர்ச் சோலைகளும் வயல்களும் ஒலி செய்ய (அகவ - பாண ! எனினுமாம்)
ஒண்திறற் கோள்மீன் உலாவு குண்டகம்
உயர்தரு வரையின் இயல்தரு பதணத்துக்
கடுநுதிக் கழுக்கடை மிடைதரு வேலிக்
கனகப் பருமுரண் கணையக் கபாட
விளையக் கோபுர விளங்கெழில் வாயில்
தெளிவுரை : ஒண்திறல் கோண்மீன் உலாவும் ஆழ்ந்த நீர் நிலையும் உயர்ந்த மதிலும்,
சூலம் நிரம்பிய வேலியும் கனகப் பருமுரண் கணையக் கபாடமும் (குறுக்கு மரமாகிய
தாழ்ப்பாளோடு கூடிய) கதவும் கோபுரங்களை உடைய வாயில்,
நெகிழ்ச்சியின் வகுத்துத் திகழ்ச்சியின் ஓங்கும்
மஞ்சணை இஞ்சி வண்கொடி மிடைத்த
செஞ்சுடர்க் கனகத் திகழ்சிலம் பனைய
மாளிகை ஒளிச் சூளிகை வளாகத்து
அணியுடைப் பலபட மணிதுடைத் தழுத்திய
தெளிவுரை : நெகிழ்ச்சியில் வகுத்து திகழ்ச்சியில் ஓங்கும் மஞ்சனை இஞ்சி (மேகம்
தவழ்கின்ற உயர்ந்த மதில்) வளப்பம் பொருந்திய கொடிகள் கட்டிய ஒளியுள்ள பொன்மலை
என்ன மாளிகைகளை உடைய நிலா முற்றத்தோடு கூடிய மணிகள் பதிக்கப் பெற்ற,
நல்லொளி பரந்து நயந்திகழ் இந்திர
வில்லொளி பலபல விசும்பிடைக் காட்ட
மன்னிய செல்வத்துத் துன்னிய பெருமைச்
செம்மலர் மாது சேர்ந்திறை பிரியாக்
கழுமல நாதன் கவுணியர் குலபதி
தெளிவுரை : நல்லொளி பரந்து நயநிதி கழிந்து இரவு இலகொளி பலபல விசும்பிடை காட்ட
மன்னிய செல்வத்துத் துன்னிய பெருமை திருமகள் நிலைத்திருக்கின்ற சீகாழியின் நாதன்,
கவுணியர் குலபதி,
தண்டமிழ் விரகன் சைவ சிகாமணி
பண்டிதர் இன்பன் பாசமய கோளரி
என்புனை தமிழ்கொண் டிரங்கிஎன் உள்ளத்
அன்பினை அருளிய ஆண்டகை தன்புகழ்
குறைவறுத் துள்கி நிறைகடை குறுகி
தெளிவுரை : தண்டமிழ் விரகன், சைவ சிகாமணி, பண்டிதர் இன்பன், பரசமய கோளரி, என்புனை
தமிழ் கொண்டிரங்கி, என் உள்ளத்து அன்பினை அருளிய ஆண்டகையாகிய ஞான சம்பந்தரை
அடைந்து, தன் புகழ் குறைவறுத்து உள்கி நிறைகடை குறுகி,
நாப்பொலி நல்லிசை பாட
மாப்பெருஞ் செல்வம் மன்னுதி நீயே.
தெளிவுரை : நாப்பொலி நல்லிசை பாட மாப்பெருஞ் செல்வம் மன்னுதி நீயே.
பாணனே ! நீ நேராகத் திருஞானசம்பந்தரிடம் சென்று அவரை வணங்கி, அவரைத் துதி
செய்தால் நீ நிறைந்த செல்வத்தைப் பெறுவாய் என்பதாம்.
வஞ்சித் துறை
-
நீதியின் நிறைபுகழ்
மேதகு புகலிமன்
மாதமிழ் விரகனை
ஓதுவ துறுதியே.
தெளிவுரை : நீதியின் நிறைபுகழ்; மேன்மை தங்கிய சீகாழி மன்னன்; மாதமிழ் விரகனை
ஓதுவது உறுதியே. நான் நிச்சயமாகத் திருஞானசம்பந்தரை வணங்கித் துதிப்பேன்.
எண் சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
-
உறுதிமுலை தாழ எனையிகழும் நீதி
உனதுமனம் ஆர முழுவதும்அ தாக
அறுதிபெறும் மாதர் பெயர்தருதல் தானும்
அழகிதுஇனி யான்உன் அருள்புனைவ தாகப்
பெறுதிஇவை நீஎன் அடிபணிதல் மேவு
பெருமைகெட நீடு படி றொழி பொன் மாடம்
நறைகமழும் வாச வளர்பொழில் சுலாவும்
நனிபுகலி நாத தமிழ்விரக நீயே.
தெளிவுரை : நனி புகலி நாத ! தமிழ் விரக ! நீயே, உறுதி முலைதாழ, எனை இகழும் நீதி
உனது மனமார, முழுவதுமதாக, அறுதி பெறு மாதர், பெயல் தருதல் தானும் அழகிது. இனி
யான் உன் அருள் புனைவதாகப் பெறுதி; இவை நீ என் அடிபணிதல் மேவு பெருமை கெட நீடு
பொய் ஒழி; பொன் மாட மணம் வீச சோலைகள் சூழ்ந்த சீகாழிப்பதி நாத எனக் கூட்டுக. மனம்
புண்பட்ட தலைவி கூறுவதுபோல் அமைந்துள்ளது.
ஆசிரியத் துறை
-
நீமதித் துன்னிநினை யேல்மட நெஞ்சமே
காமதிக் கார்பொழிற் காழி
நாமதிக் கும்புகழ் ஞானசம் பந்தனொடு
பூமதிக் கும்கழல் போற்றே.
தெளிவுரை : மடநெஞ்சே ! நீ மதித்துச் சிந்தித்து நினைக்கவில்லை. சந்திரன் தவழும்
உயர்ந்த சோலைகள் சூழ்ந்த சீகாழிப்புகழ் ஞான சம்பந்தனோடு, உலகிலுள்ளார் போற்றும்
அவரது திருவடிகளைப் போற்றுவாயாக.
கட்டளைக் கலிப்பா
-
போற்றி செய்தரன் பொற்கழல் பூண்டதே
புந்தி யான்உந்தம் பொற்கழல் பூண்டதே
மாற்றி யிட்டது வல்விட வாதையே
மன்னு குண்டரை வென்றது வாதையே
ஆற்றெ திர்ப்புனல் உற்றதம் தோணியே
ஆன தன்பதி யாவதம் தோணியே
நாற்றி சைக்கவி ஞானசம் பந்தனே
நல்ல நாமமும் ஞானசம் பந்தனே.
தெளிவுரை : போற்றி செய்து, அரனது பொற்கழல்களைப் பூண்டதே அறிவு. யானும் உன்
பொற்கழல் பூண்டதே மாற்றியிட்டது. நஞ்சால் உண்டாகிய துன்பத்தையும், சமணர்களது
வாதத்தை வென்றது. ஆற்று வெள்ளத்தில் எதிர்த்துச் சென்றது. அந்தப் படகே
தன்பதியானது. எல்லாமும் படகே. தோணிபுரமாகிய சீகாழியே. நாற்றிசைக் கவி ஞான
சம்பந்தனே ! நல்ல நாமமும் ஞானசம்பந்தனே. ஞானசம்பந்தரே கதியாவார் என்க.
கைக்கிளை மருட்பா
-
அம்புந்து கண்இமைக்கும் ஆன நுதல்வியர்க்கும்
வம்புந்து கோதை மலர்வாடும் சம்பந்தன்
காமரு கழுமலம் அனையா
ளாம்இவள் அணங்கலள் அடிநிலத் தனவே.
தெளிவுரை : கைக்கிளை - ஒருதலைக் காமம். தலைவன் தலைவி என்னும் இருபாலரில் ஒருவர்
மட்டும் மற்றொருவரைக் காதலிப்பது (கை - சிறுமையாகிய, கிளை- உறவு). அம்பு போன்ற
கண் இமைக்கும். நெற்றி வியர்க்கும். மணம் வீசும் மலர்மாலை வாடும்.
திருஞானசம்பந்தரது, அழகிய சீகாழி போன்றவள் இவளேதான். தெய்வ மகள் அல்லள். அவளது
பாதம் பூமியில் பதிந்துள்ளது.
இது தலை மகன் கூற்று. தேவர்களின் கண் இமைக்காது. அவர்கள் உடம்பு வியர்க்காது.
அவர்கள் அணிந்துள்ள மலர்மாலை வாடாது. அவர்கள் பாதங்கள் பூமியில் படியா.
பன்னிரு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
-
தனமும் துகிலும் சாலிக்
குலையும் கோலக் கனமாடச்
சண்பைத் திகழ்மா மறையோர்
அதிபன் தவமெய்க் குலதீபன்
தெளிவுரை : செல்வமும் துகிற் கொடியும் நெற் குவியலும் அழகு கொலுவீற்றிருக்க
சீகாழித் திகழ் மாமறையோன்; அதிபன் தவமெய்க் குலதீபன்.
கனவண் கொடைநீ டருகா
சனிதன் கமலக் கழல்பாடிக்
கண்டார் நிறையக் கொள்ளப்
பசியைக் கருதா தெம்பாண
தெளிவுரை : கனவன், கொடை நீடு அருகாசனி, தன் கமலக் கழல்பாடி, கண்டார் நிறையக்
கொள்ள பசியைக் கருதாது எம் பாணனே !
புனைதண் தமிழின் இசைஆர்
புகலிக் கரசைப் புகழ்பாடிப்
புலையச் சேரிக் காளை
புகுந்தால் என்சொல் புதிதாக்கிச்
தெளிவுரை : புனைதண் தமிழின் இசையார் புகலியாகிய சீகாழிக் கரசைப் புகழ்பாடி,
புலையச் சேரிக் காளை (தலைவன்) புகுந்தால் என் சொற் புதிதாக்கி,
சினவெங் கதமாக் கலிறொன்
றிந்தச் சேரிக் கொடுவந்தார்
சேரிக் குடிலும் இழந்தார்
இதனைச் செய்குவ தறியாரே.
தெளிவுரை : பாணனை நோக்கித் தலைவி கூறியது.
சினவெங் கதமாக் களிறு (பெரிய யானை) ஒன்று இந்தச் சேரி கொடுவந்தார் இதனை என்ன
செய்வது என்று அறியார்.
திருஞானசம்பந்தரது புகழைப் பாடி வந்தால் நற்கதி பெறுவாய். பரத்தையரிடம்
காலங்கழிக்கும் தலைவனைப் பற்றிய பொய்யான புகழ் உரைகளை இங்குச் சொல்லாதே
என்கிறாள்.
இன்னிசைவெண்பா
-
யாரேஎன் போல அருளுடையார் இன்கமலத்
தாரேயும் சென்னித் தமிழ்விரகன் சீரேயும்
கொச்சை வயன்றன் குரைகழற்கே மெச்சி
அடிமைசெயப் பெற்றேன் அறிந்து.
தெளிவுரை : எம்போல் யார் அருளுடையார். தாமரை மலர்மாலை அணியும் சென்னித் தமிழ்
விரகன். சிறப்புப் பொருந்திய சீகாழி நாதன்தன் குரைகுழற்கே (திருவடிகளுக்கே)
மெச்சி அடிமை செய்ய அறிந்து பெற்றேன். ஆகையால் நானே அருளுடையவன்.
பதின்சீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம்
-
அறிதரு நுண்பொருள் சேர்பதி கம் அரன் கழல்மேல்
அணிதரு சுந்தர மார்தமிழ் விரகன் பிறைதோய்
செறிதரு பைம்பொழில் மாளிகை சுலவும் திகழ்சீர்த்
திருவளர் சண்பையின் மாடலை கடல்ஒண் கழிசேர்
எறிதிரை வந்தெழு மீன்இரை நுகர்கின் றிலைபோய்
இனமும் அடைந்திலை கூர்இடரோடிருந் தனையால்
உறுதியர் சிந்தையி னூடுத வினர்எம் தமர்போல்
உமரும் அகன்றன ரோஇது உரைவண் குருகே.
தெளிவுரை : காமமிக்க கழிபடர் கிளவி : வண் குருகே ! அறிதரு நுண் பொருள் சேர்
தேவாரப் பதிகங்களைப் பாடிச் சிவபெருமான் திருவடிகளுக்கு அணியாகத் தந்துள்ள
சுந்தரமார் தமிழ் விரகன். சந்திரன் படிகின்ற உயர்ந்த சோலைகள் சூழ்ந்த மாளிகைகள்
நிறைந்த திகழ்சீர் திருவளர் சீகாழியில், அலைகளை உடைய கடற்கரையில் அலைகள் கொண்டு
வரும் மீன்களை உண்ணுவதில்லை. உன் இனத்தாரிடமும் போய்ச் சேரவில்லை. நீயும்
என்னைப்போல் காம நோயால் வருந்துகிறாயா? உன்னை விட்டு உன் காதலன் பிரிந்து
சென்றுள்ளானோ? இதைச் சொல்வாயாக !
கலி விருத்தம்
-
குருகணி மணிமுன் கைக்கொடி யும்நல் விறலவனும்
அருகணை குவர்அப் பால்அரி தினிவழி மீள்மின்
தருகெழு முகில்வண் கைத்தகு தமிழ்விர கன்றன்
கருகெழு பொழில்மா டக்கழு மலவள நாடே.
தெளிவுரை : இடைச் சுரத்துக் கண்டோர் கூறுதல்:
உடன் போக்கில் சென்ற தலைவனையும் தலைவியையும் தேடி வந்த செவிலித்தாய்க்கு இடைச்
சுரத்தில் கண்டோர் கூறும் துறையாகும் இது.
வளையல்களை முன்கையில் அணிந்த கொடி போன்ற தலைவியும் வெற்றி வீரனாகிய தலைவனும்
கொஞ்ச தூரம்தான் போயிருப்பார்கள். அதன் பிறகு நீ செல்வது அரிது. வந்த வழியே
திரும்பிச் செல்வாயாக. மேகம் போல் கொடையளிக்கும் கைகளை உடைய தமிழ் விரகன்தன் சோலை
சூழ்ந்த மாடங்களையுடைய சீகாழி வளநாட்டுக்குச் செல்வார்கள். நீ வருந்தாதே
என்பதாம்.
-
நாடே றும்புகழ் ஞானசம் பந்தன்வண்
சேடே றும்கொச்சை நேர்வளம் செய்துனை
மாடே றும்தையல் வாட மலர்ந்தனை
கேடே றும்கொடி யாய்கொல்லை முல்லையே.
தெளிவுரை : தோழி கூற்று: நாட்டில் மிகுதிப்படும் புகழ் ஞான சம்பந்தனது பெருமையே.
சீகாழியின் நேர்வளம் செய்துணை மாடேறும் தையல் வாட மலர்ந்தனை. கொழு கொம்பு ஏறும்
கொடியாய் ! கொல்லை முல்லையே ! தலைவி வாடியிருக்கும் போது, முல்லையே, நீ
மலர்ந்திருப்பது நல்லதோ என்கிறார். கார் காலம் வந்துவிட்டது. தலைவரும் வருவார்
என்பது குறிப்பு.
எண் சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
-
முல்லை நகைஉமைதன் மன்னு திருவருளை
முந்தி உறுபெரிய செந்தண் முனிவன் மிகு
நல்ல பொழில்சுலவு தொல்லை அணிபுகலி
நாதன் மறைமுதல்வன் வேத மலையதனில்
வில்லை யிலர் கணையும் இல்லை பகழிஉறு
வேழம் இரலைகலை கேழல் வினவுறுவர்
சொல்லை இலர்விரக ரல்லர் தழை கொணர்வர்
தோழி இவர்ஒருவர் ஆவ அழிதர்வரே.
தெளிவுரை : தோழி கூற்று: முல்லை மலர் போன்ற பற்களை உடைய உமாதேவியாரின் திருவருளை
முன்பு பெற்ற பெரிய செந்தண் முனிவன். மிகுநல்ல சோலைகள் சூழ்ந்த பழைமையான அழகுடைய
சீகாழிநாதன். மறை முதல்வன் வேத மலையில் (கைலாய மலையில்) வில்லை
வைத்திருக்கவில்லை. அம்பும் இல்லை. பகழியொடு யானை, மான், பன்றி இவைகளைப்
பார்த்தீர்களா என்று பொருள் பொதிந்த மொழிகளைப் பேசுகின்றார் இல்லை. காம நோக்கம்
உடையவர் அல்லர். தழையைக் கையுறையாகக் கொண்டு வருவார். இவர்தான் தலைவராவார்.
வஞ்சித் துறை
-
வழிதரு பிறவியின்உறு
தொழில் அமர்துயர் கெடும்மிகு
பொழிலணி தருபுகலிமன்
எழிலிணையடி இறைமினே.
தெளிவுரை : வழிதரு பிறவியின் உறு தொழில் அமர் துயர் கெடுமிகு. அதாவது தொடர்ந்து
வருகின்ற பிறவித் துன்பத்தைப் போக்குகின்ற சோலைகள் சூழ்ந்த சீகாழி மன்னனது அழகிய
இரண்டு திருவடிகளைத் துதிப்போமாக. ஞானசம்பந்தரது திருவடிகளைப் புகழ்ந்து
போற்றுங்கள் என்று கூறி முடிக்கின்றார்.
திருச்சிற்றம்பலம்
ஆளுடைய பிள்ளையார்திருத்தொகை ( நம்பியாண்டார் நம்பிகள் அருளிச்செய்தது )
இந்நூல் திருஞானசம்பந்தப் பிள்ளையாருடைய வரலாற்று நிகழ்ச்சிகளைத் தொகுத்துக்
கூறுவதாகலின், ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை என்னும் பெயருடையதாயிற்று.
திருஞானசம்பந்தப் பிள்ளையார் சிவபிரானுடைய திருவருளால் உமா தேவியார் அளித்தருளிய
திருமுலைப் பாலைப் பருகித் தேவாரப் பாக்களைப் பாடத் தொடங்கியது முதல்,
திருநல்லூர்ப் பெருமணத்தில் திருவருட் பேரொளியில் கலந்தது வரை நிகழ்ந்த செய்திகளை
எல்லாம் இச் சிறுநூல் தொகுத்து உரைக்கின்றது.
திருச்சிற்றம்பலம்
-
தி பூவார் திருநுதல்மேல் பொற்சுட்டி இட்டொளிரக்
கோவாக் குதலை சிலம்பரற்ற ஒவா
தழுவான் பசித்தான் என் றாங் கிறைவன் காட்டத்
தொழுவான் துயர்தீர்க்கும் தோகை வழுவாமே
முப்பதத் திரண்டறமும் செய்தாள் முதிராத
தெளிவுரை : அழகிய நெற்றியில் பொற்சுட்டி பிரகாசிக்க, குதலை மொழியையுடைய
குழந்தையின் கால்களில் சிலம்பு ஒலி செய்ய, இடைவிடாது அழுவதனால் பசித்திருக்கிறான்
என்று இறைவன் காட்டவும், வழிபடுவோரின் துயரங்களை நீக்கும். மயில் போலும் சாயலை
உடையவளும் குறை வில்லாமல் முப்பத்து இரண்டு அறங்களையும் செய்தவளுமாகிய உமா
தேவியார்,
செப்பொத்த கொங்கைத் திருநுதலி அப்பன்
அருளாலே ஊட்டுதலும் அப்பொழுதே ஞானத்
திரளாகி முன்னின்ற செம்மல் இருள் தீர்ந்த
காழி முதல்வன் கவுணியர்தம் போர்ஏறு
ஊழி முதல்வன் உவன் என்று காட்ட வலான்
தெளிவுரை : முதிராத, செப்புப் போன்ற கொங்கைகளையும் திருநுதலையும் உடைய உமா
தேவியார் இறைவனது கருணையினால் தன் முலைப் பாலைப் பொற்கிண்ணத்தில் ஊட்டவும்
அப்பொழுதே ஞானத்திரளாகி முன்னின்ற திருஞான சம்பந்தர், மயக்கம் நீங்கிய சீகாழித்
தலத்தின் முதல்வனும், ஊழி முதல்வனுமாகிய இறைவன் ஆகாயத்தில் உள்ளான் என்று
காட்டவல்லான்,
வீழி மிழலைப் படிக்காசு கொண்டபிரான்
பாழி அமணைக் கழுவேற்றினான் பாணர்
யாழை முறித்தான் எரிவாய் இடும் பதிகம்
ஆழி உலகத் தழியாமற் காட்டினான்.
ஏழிசை வித்தகன் (வந்து) ஏனோரும் வானோரும்
தெளிவுரை : திருவீழிமிலையில் படிக்காசுப் பெற்ற பிரான்; பெருத்த அமணர்
கூட்டத்தைக் கழுவேற்றினான். திருநீலகண்ட யாழ்ப்பாணரின் யாழை, யாழ்முரி என்னும்
பாடலைப் பாடி முரித்தான். எரிவாயிடும் பதிக மூலம் கடலால் சூழப்பட்ட இந்த உலகத்தை
அழியாமல் காப்பாற்றினான்; ஏழிசைகளிலும் வித்தகன்; மற்றவர்களும் தேவர்களும் வந்து
வணங்கும்.
தாழும் சரணச் சதங்கைப் பருவத்தே
பாலையும் நெய்தலும் பாடவலான் சோலைத்
திருவா வடுது றையில் செம்பொற் கிழிஒன்
றருளாலே பெற்றருளும் ஐயன் தெருளாத
தென்னவன் நாடெல்லாம் திருநீறு பாலித்த
தெளிவுரை : காலில் சதங்கை அணியும் சிறு பருவத்திலேயே பாலை நிலத்தைப் பற்றியும்
நெய்தல் நிலத்தைப் பற்றியும் பாடும் திறம் பெற்றிருந்தார். சோலைகள் சூழ்ந்த
திருவாவடுதுறையில் செம்பொற் கிழியொன்று பெறும் அளவுக்கு அருள் பெற்றிருந்த ஐயன்;
தெளியாத பாண்டிய நாட்டில் திருநீறு அளித்த மன்னன்.
மன்னன் மருகல் விடம் தீர்த்த பிரான்பின்னைத்தென்
கோலக்கா வில்தாளம் பெற்றுஇக் குவலயத்தில்
மாலக்கா லத்தே மாற்றினான் ஞாலத்து
முத்தின் சிவிகை அரன் கொடுப்ப முன்னின்று
தித்தித்த பாடல் செவிக்களித்தான் நித்திலங்கள்
தெளிவுரை : திருமருகலில் பாம்பு கடித்து இறந்த கணவனை உயிர் பெற்றெழச் செய்தவன்;
திருவோலக்காவில் பொற்றாளம் பெற்று இக் குவலயத்தின் மயக்கத்தை மாற்றியவன்; சிவ
பெருமான் முத்துச்சிவிகையைக் கொடுப்ப முன்னின்று தித்தித்த தேவாரப் பாடல்களைச்
செவிக்கு விருந்தாக அளித்தவன்.
மாடத் தொளிரும் மறைக்காட் டிறை கதவைப்
பாடி அடைப்பித்த பண்புடையான் நீடும்
திருவோத்தூர் ஆண்பனையைப் பெண்பனைஆ கென்னும்
பெருவார்த்தை தான் உடைய பிள்ளை மருவினிய
கொள்ளம்பூ தூர்க்குழகன் நாவா யது கொடுப்ப
தெளிவுரை : முத்துக்கள் மாடங்களில் பிரகாசிக்கும் திருமறைக்காட்டில்
(வேதாரண்யத்தில்) முடியாமல் இருந்த கோயில் கதவை, திருப்பதிகம் பாடி மூடும்படி
செய்தான். நீண்ட புகழை உடைய திருவோத்தூரில் (இப்போது செய்யாறு என
வழங்கப்படுகிறது) ஆண் பனையைப் பெண் பனை ஆகுமாறு செய்த அருளாளன்; மணமிகுந்த
கொள்ளம்பூதூர் இறைவன் ஓடம் தர,
உள்ளமே கோலாக ஊன்றினான் வள்ளல்
மழவன் சிறு மதலை வான்பெருநோய் தீர்த்த
குழகன் குலமறையோர் கோமான் நிலவிய
வைகை ஆற் றே டிட்டு வான்நீர் எதிர்ஒட்டும்
செய்கையான் மிக்க செயலுடையான் வெய்யவிடம்
தெளிவுரை : உள்ளத்தையே துடுப்பாகக் கொண்டு படகைச் செலுத்தினான்; வள்ளல் மழவனுடைய
குழந்தையினது பெருநோயினைத் தீர்த்த அழகன். கவுணியர் குலக் கோமான்; வைகை ஆற்றின்
வெள்ளத்தில் ஏட்டை எதிர் ஓட்டும் செய்கையால் மிக்க செயலுடையான்,
மேவி இறந்த அயில் வேற்கண் மடமகளை
வாவென் றழைப்பித் திம் மண்ணுலகில் வாழ்வித்த
சீர்நின்ற செம்மைச் செயலுடையான் நேர்வந்த
புத்தன் தலையைப் புவிமேல் புரள்வித்த
வித்தகப் பாடல் விளம்பினான் மொய்த்தொளிசேர்
தெளிவுரை : மயிலாப்பூரில் கொடிய விஷத்தால் இறந்த வேல் போன்ற கண்களை உடைய
பூங்கோதையை, வா என்று அழைத்து இம் மண்ணுலகில் வாழ்வித்த சீர்நின்ற செம்மைச்
செயலுடையான்; எதிரிட்டு வந்த புத்த மதத்தைச் சேர்ந்தவனது தலையைப் புவிமேல்
புரள்வித்த வித்தகப் பாடலைப் பாடியவன்,
கொச்சைச் சதுரன் தன் கோமானைத் தான் செய்த
பச்சைப் பதிகத் துடன்பதினா றாயிரம்பா
வித்துப் பொருளை விளைக்க வலபெருமான்
முத்திப் பகவ முதல்வன் திருவடியை
அத்திக்கும் பத்தர்எதிர்ஆணைநம தென்னவலான்
தெளிவுரை : ஒளி மிகுந்த கொச்சை எனப்படும் சீகாழிச் சதுரனாகிய இறைவன் மீது பாடிய
பதிகத்துடன் பதினாறாயிரம் தேவாரப் பாடல்களைப் பாடவல்ல, முத்தி தரும் இறைவன்
திருவடியை அடைய பக்தி மார்க்கத்தை நமதென்று சொல்ல வல்லவன்,
கத்தித் திரிபிறவிச் சாகரத்துள் ஆழாமே
பத்தித் தனித்தெப்பம் பார்வாழத் தந்தபிரான்
பத்திச் சிவம் என்று பாண்டிமா தேவியொடும்
கொற்றக் கதர்வேற் குலச்சிறையும் கொண்டாடும்
அற்றைப் பொழுதத் தமணர்இடும் வெந்தீயைப்
தெளிவுரை : ஓலமிட்டுத் திரிகிற பிறவியாகிய கடலில் ஆழ்ந்து போகாமல், பக்தியாகிய
ஒப்பற்ற தெப்பத்தை உலகம் வாழத் தந்த பிரான்; பத்திச் சிவமென்று பாண்டிமா
தேவியொடும் கொற்றக் கதிர் வேலையுடைய அமைச்சராகிய குலச்சிறையாரும் கொண்டாடும்
அன்று சமணர்கள் இட்ட வெந்தீயை,
பற்றிச் சுடுகபோய்ப் பாண்டியனை என்னவல்லான்
வர்த்தமா னீசர் கழல்வணங்கி வாழ் முருகன்
பத்தியை ஈசன் பதிகத்தே காட்டினான்
அத்தன் திருநீல நக்கற்கும் அன்புடையான்
துத்த மொழிக்குதலைத் தூயவாய் நன்னுதலி
தெளிவுரை : பற்றிச் சுடுக போய்ப் பாண்டியனை என்ன வல்லான்; திருப்புகலூரில்
வர்த்தமானீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளிய சிவபெருமான் பாதங்களைப் பணிந்து,
வாழ் முருகன் பத்தியை ஈசன் பதிகத்தே காட்டினான். அத்தன் திருநீல நக்கற்கும்
அன்புடையான். துத்தம் என்னும் இசை நரம்பை ஒழிக்கும் குழந்தை தூயவாய்,
நித்தில்லப்பூண் முலைக்கும் நீண்டதடங் கண்ணினுக்கும்
கொத்தார் கருங்குழற்கும் கோலச்செங் கைம்மலர்க்கும்
அத்தா மரை அடிக்கும் அம்மென் குறங்கினுக்கும்
சித்திரப்பொற் காஞ்சி சிறந்தபே ரல்குலுக்கும்
முத்தமிழ்நூல் எல்லாம் முழுதுணர்ந்த பிள்ளையார்க்கு
தெளிவுரை : (மனைவியின் சிறப்பைக் கூறுகின்றார்) நல்ல நெற்றியையுடைய முத்து அணிந்த
முலைகளுக்கும், நீண்ட பெரிய கண்களுக்கும், கொத்தார் கரிய கூந்தலுக்கும், கோலச்
செங்கைம் மலர்க்கும், அந்தாமரையடிக்கும் அழகிய மென்மையான தொடைகளுக்கும் சித்திரப்
பொற் காஞ்சி செறிந்த பேர் அல்குலை உடையாளுக்கும் முத்தமிழ் நூல் எல்லாம் உணர்ந்த
நம் திருஞான சம்பந்தர்க்கும்,
ஒத்த மணம் இது என் றோதித் தமர்களெல்லாம்
சித்தம் களிப்பத் திருமணம் செய் காவணத்தே
அற்றைப் பொழுதத்துக் கண் டுட னேநிற்க
பெற்றவர்க ளோடும் பெருமணம் போய்ப் புக்குத்தன்
அத்தன் அடியே அடைந்தான் அழகிதே.
தெளிவுரை : ஒத்த மணம் இது என்று ஓதி, சுற்றத்தார் எல்லாம் மனம் களிக்க திருமணம்
செய்த பந்தலில், அன்றைய தினமே எல்லாரும் கண்டு மகிழ, பெற்றவர்களோடும்
திருநல்லூர்ப் பெருமணம் என்னும் திருக்கோயிலுக்குச் சென்று, கோயிலினுள் புகுந்து
தன் அத்தன் அடியே மகிழ்ந்து அடைந்தான். அப்போது எழுந்த பெருஞ்சோதியில்
திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் மூழ்கி முத்தி பெற்றனர்.
திருச்சிற்றம்பலம்
திருநாவுக்கரசு தேவர்திருஏகாதசமாலை
( நம்பியாண்டார் நம்பிகள்அருளிச்செய்தது )
திருநாவுக்கரசருடைய பெருமையினை விரித்துரைப்பதாகிய இந்நூல், பதினொரு பாடல்களைக்
கொண்டது. ஏகாதச என்பது பதினொன்றைக் குறிக்குமாதலின் இப்பெயர் எண்ணால் பெற்ற
பெயராகும். இதன்கண் அமைந்த பாடல்கள் பதினொன்றே ஆயினும், திருநாவுக்கரசருடைய
வரலாற்றில் அமைந்த சிறந்த உண்மைகளும் அப் பெரியாரை வழிபடுவதனால் உளவாம் பெரு
நலங்களும், அவர் திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகங்களின் சிறப்பும் இப்
பாடல்களில் தெளிவாக அமைக்கப் பெற்றுள்ளன.
திருச்சிற்றம்பலம்
-
புலனோ டாடித் திரிமனத்தவர்
பொறிசெய் காமத் துரிசடக்கிய
புனித நேசத் தொடுதமக்கையர்
புணர்வி னால்உற் றுரைசெயக்குடர்
தெளிவுரை : ஐம்புல நுகர்ச்சியினால் திரிகின்ற மனத்தை உடையவர், பொறிகள் செய்கின்ற
காமமாகிய குற்றத்தை அடக்கிய தூய்மையான அன்போடு தமக்கையாகிய புனிதவதியாரிடம் வந்து
சேர்ந்து அவர் சொன்ன நல்லுரைகளைக் கேட்டு வயிற்றுவலி (சூலை நோய்),
சுலவு சூலை பிணிகெ டுத் தொளிர்
சுடுவெ ணீறிட் டமண கற்றிய
துணிவி னான்முப் புரமெ ரித்தவர்
சுழலி லேபட் டிடுத வத்தினர்
தெளிவுரை : சூலை நோய் நீங்கப்பெற்று, பிரகாசமான திருவெண்ணீறிட்டு, சமணர்களை
அகற்றிய துணிவை உடையவர். முப்புரங்களை எரித்த சிவபெருமானது ஆளுகைக்கு உட்பட்டு,
(சைவராகி) தவத்தை உடையவர்.
உலகின் மாயப் பிறவி யைத்தரும்
உணர்வி லாவப் பெரும யக்கினை
ஒழிய வாய்மைக் கவிதை யிற்பல
உபரி யாகப் பொருள்ப ரப்பிய
தெளிவுரை : உலகில் மாயப் பிறவியைத் தரும் உணர்வில் ஈடுபடும் மயக்கினை ஒழிக்க, பல
தேவாரப் பாடல்களையும் பாடி, சைவ நெறியைப் பரப்பிய,
அலகில் ஞானக் கடலி டைப்படும்
அமிர்த யோகச் சிவவொ ளிப்புக
அடி ரேமுக் கருளி னைச்செயும்
அரைய தேவத் திருவ டிக்களே.
தெளிவுரை : உலகில் ஞானக் கடல் இடைப்படும் அமிர்த யோகச் சைவ நெறியில் புக
அடியார்களாகிய எங்களுக்கு அருளினைச் செய்யும் அரையத்தேவ சுவாமிகளே ! வணக்கம்.
-
திருநாவுக் கரசடி யவர்நாடற் கதிநிதி
தெளிதேனொத் தினியசொல் மடவார்ஊர்ப் பசிமுதல்
வருவானத் தரிவையர் நடமாடிச் சிலசில
வசியாகச் சொலுமவை துகளாகக் கருதிமெய்
உருஞானத் திரள்மனம் உருகாநெக் கழுதுகண்
உழவாரப் படைகையில் உடையான்வைத் தனதமிழ்
குருவாகக் கொடுசிவ னடிசூடித் திரிபவர்
குறுகார்புக் கிடர்படு குடர்யோனிக் குழியிலே.
தெளிவுரை : திருநாவுக்கரசர், அடியவர்கள் நெருங்கிப் பழகுவதற்குப் பெருநிதி
போன்றவர் (புகலிடம் எனினுமாம்). தெளிந்த தேனைப் போன்று இனிய சொல்லையுடையவர்
(நாவுக்கு அரசர் எனினுமாம்). மாதர்களில் உருப்பசி முதலாக தெய்வப் பெண்கள் ஈறாக
உள்ளவர் பலரும் வசியமாகச் சொல்லும் அவையனைத்தையும் தூசியாகக் கருதி, மெய் உரு
ஞானத்திரள் மனமுருகி, நெகிழ்ந்து, அழுது, கண்ணீர் மல்கி, உழவாரப் படையைக் கையில்
உடையான். அவர் பாடிய தேவாரப் பாடல்களைக் குருவாகக் கொண்டு, சிவனடி சூடத்
திரிபவர், துன்பம் தருகின்ற பிறவிக் குழியைக் குறுகார் என்றவாறு.
திருநாவுக்கரசர் உழவாரப் படையைக் கொண்டு சிவத்தலங்களின் பிரகாரத்தைச் சுத்தம்
செய்யும் பணியை மேற்கொண்டிருந்தார்.
-
குழிந்து சுழிபெறுநா பியின்கண் மயிர்நிரையார்
குரும்பை முலையிடையே செலுந்த கைநன்மடவார்
அழிந்தபொசியதிலே கிடந்தி ரவுபகல்நீ
அலைந்த யருமதுநீ அறிந்தி லைகொல்மனமே
கழிந்த கழிகிடுநா ளிணங்கி தயநெகவே
கசிந்தி தயமெழுநூ றரும்ப திகநிதியே
பொழிந்த ருளுதிருநா வினெங்க ளரசினையே
புரிந்து நினையிதுவே மருந்து பிறிதிலையே.
தெளிவுரை : மனமே ! நீ குழிந்து சுழிபெறு நாபியின்கண் மயிர் நிரையார், குரும்பை
முலையிடை செல்லும் நன்மடவார் அழிந்த பொசியதிலே கிடந்து இரவு பகல் நீ அளைந்து
அயரும் தன்மையை நீ அறியவில்லை. போனது போகட்டும். நாள் இணங்கி, இதயம் நெகிழுமாறு
கசிந்து இதயம் கனியுமாறு தேவாரப் பாடல்களைப் பாடுகின்ற செல்வமே ! திரு நாவினை
உடைய எங்கள் அரசின் அருமையைப் புரிந்து நினைப்பாயாக. இது தவிர வேறு வழியில்லை.
இதுவே நன்மருந்து என அறிக. பெண் இன்பத்தில் காலம் கழிக்காதே என மனத்திற்கு
அறிவுரை கூறுகின்றார்.
-
இலைமா டென்றிடர் பரியா ரிந்திர
னேயொத் துறுகுறை வற்றாலும்
நிலையா திச்செல்வம் எனவே கருதுவர்
நீள்சன் மக்கட லிடையிற்புக்
கலையார் சென்றரன் நெறியா குங்கரை
யண்ணப் பெறுவர்கள் வண்ணத்திண்
சிலைமா டந்திகழ் புகழா மூருறை
திருநா வுக்கர சென்போரே.
தெளிவுரை : செல்வம் இல்லையென்று துன்பம் அடையமாட்டார்கள். இந்திரனுக்குச் சமமாகச்
செல்வம் படைத்திருந்தாலும் இச் செல்வம் நிலைத்திருக்காது. என்றே கருதுவர். நீண்ட
பிறவிக் கடலில் மூழ்கி அலைய மாட்டார்கள். சென்று சிவபெருமானது சைவ நெறியாகிய
கரையை அடையப் பெறுவார்கள். அவர்கள் யார் என்னில், அழகிய திண்ணிய கல் மாடங்கள்
திகழ்கின்ற புகழ் பெற்ற திருவாய்மூரில் அவதரித்த திருநாவுக்கரசின் நாமத்தைப்
போற்றுபவர்கள் என்பதாம். அவர் பாதங்களைப் பணிபவர்களுக்கு ஒரு குறையும் இல்லை
என்கிறார்.
-
என்பட்டிக் கட்டிய இந்தப்பைக் குரம்பையை
இங்கிட்டுச் சுட்டபின் எங்குத்தைக் குச்செலும்
முன்பிட்டுச் சுட்டிவ ருந்திக்(கு)எத் திக்கென
மொய்ம்புற்றுக் கற்றறி வின்றிக்கெட் டுச்சில
வன்பட்டிப் பிட்டர்கள் துன்புற்றுப் புத்தியை
வஞ்சிக் கத்திவி ழுந்(து)எச்சுத் தட்டுவர்
அன்பர்க்குப் பற்றிலர் சென்(று)அர்ச்சிக் கிற்றிலர்
அந்தக்குக் கிக்கிரை சிந்தித்த பித்தரே.
தெளிவுரை : எலும்பால் செய்யப்பட்ட இந்தச் சிறுகுடில் போன்ற உடலை இங்கு எரித்த
பிறகு எவ்விடத்திற்குச் செல்லும். முன்பிட்டுச் சுட்டி வருந்தி எங்குச்
செல்வதென்று அறியாமல் வலிமையுற்று, படிப்பில்லாமல் கெட்டு, மதத்திற்குப்
புறம்பானவர்கள் சிலர் துன்புற்று, புத்தியை வஞ்சித்துத் துன்புறுவர்.
அன்பர்க்குப் பற்றிலர். சென்று அர்ச்சிக்க மாட்டார்கள். வயிற்றுக்கு உணவு தேடும்
பித்தர்கள் என்றவாறு. சிவநெறியைக் கடைப்பிடியுங்கள் என்று அறிவுரை கூறுகின்றார்.
-
பித்தரசு பதையாத கொத்தைநிலை உளதேவு
பெட்டியுரை செய்துசோறு கட்டியுழல் சமண்வாயர்
கைத்தரசு பதையாத சித்தமொடு சிவபூசை
கற்றமதி யினனோசை யிட்டரசு புகழ்ஞாலம்
முத்திபெறு திருவாள னெற்றுணையின் மிதவாமல்
கற்றுணையில் வரும்ஆதி
பத்தரசு வசைதீர வைத்தகன தமிழ்மாலை
பற்பலவு மவையோத நற்பதிக நிதிதானே.
தெளிவுரை : பித்தரசு பதையாத கொத்தை நிலை (அறிவில்லாத நிலை) உளதேவு பெட்டியுரை
செய்து (வேறு தெய்வங்களைப் புகழ்ந்து பேசி) உணவே முக்கியமென்று கருதி உழலுகின்ற
சமணர்கள் கையிலிருந்து விடுபட்டு, சிவபூசை செய்து ஞாலத்தார் புகழ்கின்ற முத்தி
பெறு திருவாளனாகிய திருநாவுக்கரசர், வேறு எந்தத் துணையும் இல்லாமல் கல்லையே
தெப்பமாகக் கொண்டு எல்லாராலும் போற்றப்படுகின்ற தேவாரப் பாடல்களே பெரும்
செல்வமாகும். திருநாவுக்கரசை வணங்குவோம். அவர் பாடிய தேவாரப் பாடல்களைப் பாடி
நற்கதி பெறுவோம் என்கிறார்.
-
பதிகம் ஏழேழுநூறு பகருமா கவியோகி
பரசுநா வரசான பரமகா ரணவீசன்
அதிகைமா நகர்மேவி யருளினா லமண்மூடர்
அவர்செய்வா தைகள் தீருமனகன் வார்குழல்சூடின்
நிதியரா குவர்சீர்மை யுடையரா குவர்வாய்மை
நெறியரா குவர்பாவம் வெறியரா குவர்சால
மதியரா குவரீச னடியரா குவர்வானம்
உடையரா குவர்பாரில் மனிதரா னவர்தாமே.
தெளிவுரை : 10 அல்லது 11 பாடல்களைக் கொண்டது ஒரு பதிகம் என்று பெயர். இவர்
பாடியதாகக் கூறுவது ஏழ் எழுநூறு. அதாவது 4900 பதிகங்கள் என்று ஆகின்றன. (இவ்வளவு
பாடல்களும் இப்போது கிடைக்கவில்லை). இவ்வளவும் சிவபெருமானைப் பற்றிய தேவாரப்
பாடல்கள். திருவதிகை வீரட்டானத்திலிருந்து பாடினார். சமணர்கள் செய்த துன்பங்களைப்
போக்கும் அவர் தீவினையற்றவர். அவர் பாதங்களைப் போற்றினால் தீவினை இல்லாதவர்கள்
ஆவர். நீதி, சீர்மை, வாய்மை இவைகள் வந்து சேரும். பாவங்கள் விலகும்.
பேரறிவாளர்கள் ஆவர். ஈசனுக்கு அடியார் ஆவர். முத்தி கிடைக்கும். இவ்வுலகில்
இருக்கும் வரை போற்றப்படுவார்கள்.
-
தாமரைநகு மகவிதழ் தகுவன
சாய்பெறுசிறு தளிரினை யனையன
சார்தருமடி யவரிடர் தடிவன
தாயினும் நலம் கருணையை யுடையன
தெளிவுரை : தாமரை சிரிக்கும் உள்ளிதழ் ஒப்பாவன. சாய்கின்ற சிறு தளிரினை ஒத்தன.
சார்தரும் அடியவர் துன்பத்தை அழிப்பன. தாயைக் காட்டிலும் நல்ல கருணையை உடையன.
தூமதியினை யொருபது கொடுசெய்த
சோதியின்மிகு கதிரினை யுடையன
தூயனதவ முனிவர்கள் தொழுவன
தோமறுகுண நிலையின தலையின
தெளிவுரை : பரிசுத்தமான பத்துச் சந்திரன்களைக் கொண்டு செய்த பிரகாசத்தை உடையன.
பரிசுத்தமானவை என்று தவ முனிவர்கள் தொழுவன. குற்றமற்ற குணங்கள் பொருந்தியன.
தலைமைப் பதவியை வகிப்பன.
ஓமரசினை மறைகளின் முடிவுகள்
ஒலிடுபரி சொடுதொடர் வரியன
ஓவறுமுணர் வொடுசிவ வொளியன
ஊறியகசி வொடுகவி செய்த புகழ்
தெளிவுரை : ஓம் வடிவாகவுள்ள சிவ பெருமானைத் துதிக்கும் வேதங்களின் முடிவுகள்
ஓலமிடும் தன்மையோடு அறிதற்கு அரியன. அன்போடு தோய்ந்து பாடிய தேவாரப் பாடல்களின்
புகழ்,
ஆமரசுய ரகம்நெகு மவருளன்
ஆரரசதி கையினர னருளவன்
ஆமரசுகொ ளரசெனை வழிமுழு
தாளரசுத னடியிணை மலர்களே.
தெளிவுரை : திருவதிகை வீரட்டான ஈஸ்வரரின் அருள் பெற்றவர். அத்தகைய சிறப்புடைய
திருநாவுக்கரசின் அடியிணை மலர்களை வழிபட்டு நற்கதி பெறுவோமாக என்கிறார்.
-
அடிநாயைச் சிவிகைத் தவிசேறித் திரிவித்
தறியாவப் பசுதைச் சிறியோரிற் செறியுங்
கொடியேனுக் கருளைத் திருநாவுக் கரசைக் >
குணமேருத் தனைவிட் டெனையாமொட் டகல்விற்
பிடியாரப் பெறுதற் கரிதாகச் சொலுமப்
பிணநூலைப் பெருகப் பொருளாகக் கருதும்
செடிகாயத் துறிகைச் சமண்மூடர்க் கிழவுற்
றதுதேவர்க் கரிதச் சிவலோகக் கதியே.
தெளிவுரை : அடிநாயைப் பல்லக்கிலேற்றி, வீதி வலம் வந்து, அறிவற்ற விலங்குத்
தன்மையுடைய சிறியோரில் பொருந்தும் கொடியவனாகிய எனக்கு அருள் செய்யும்
திருநாவுக்கரசை, குணமேரு போன்றவரை விட்டு, மற்றவர்கள் சொல்லும் அப் பிண நூலைப்
பெரிய பொருளாகக் கருதும் துர்நாற்றம் வீசுகின்ற உடலை உடைய, உறியைக் கையிலேந்திய
சமணர்க்காக, தேவர்க்கு அரிதாகிய சிவலோகக் கதியை மறந்தது பெரும் தவறாகும்
என்கிறார்.
-
சிவசம் பத்திடைத் தவஞ்செய்து
திரியும் பத்தியிற் சிறந்தவர்
திலகன் கற்றசிட் டன்வெந்தொளிர்
திகழும் பைம்பொடித் தவண்டணி
தெளிவுரை : சிவசம்பத்தின் (சைவ நெறி) மத்தியில் தவம் செய்து திரியும் பத்தியில்
சிறந்தவர், திலகன், கல்வியிற் சிறந்தவன். திருநீற்றைக் கவசமாக அணிந்தவர்.
கவசம் புக்குவைத் தரன்கழல்
கருதுஞ் சித்தனிற் கவன்றியல்
கரணங் கட்டுதற் கடுத்துள
களகம் புக்கநற் கவந்தியன்
தெளிவுரை : சிவபெருமானது திருவடிகளைக் கருதும் சித்தணிற் கவன்றிய கரணங்
கட்டுதற்கு அடுத்துள களகம் புக்க நற்கவந்தியன். திருநீறு ஆகிய போர்வையை உடையவன்.
அவசம் புத்தியிற் கசிந்து கொ
டழுகண் டசத்துவைத் தளித்தனன்
அனகன் குற்றமற் றபண்டிதன்
அரசெங் கட்கொர்பற் றுவந்தறு
தெளிவுரை : பரவச புத்தியில் கசிந்து கொடு அழுகண்டத்து வைத்து அளித்தவன்.
பாவமற்றவன். குற்றமற்ற பண்டிதன். திருநாவுக்கரசு; எங்கட்கு ஒரு பற்றக்கோடு.
பவசங் கைப்பதைப் பரஞ்சுடர்
படிறின் றித்தனைத் தொடர்ந்தவர்
பசுபந் தத்தினைப் பரிந்தடு
பரிசொன் றப்பணிக்கும் நன்றுமே.
தெளிவுரை : பிறவிப் பிணியைத் தீர்த்து வைக்கும் பரஞ்சுடர். குற்றமின்றி இத்தனைத்
தொடர்ந்தவர். உயிர் பந்தத்தைப் பரிந்தடு பரிசு ஒன்று அப்பணிக்கு நன்றாகியது.
இவ்வளவையும் செய்யக்கூடியது திருநாவுக்கரசர் போற்றும் சைவ நெறி என்பதாம்.
-
நன்றும் ஆதரம் நாவினுக் கரைசடி
நளினம்வைத் துயினல்லால்
ஒன்றும் ஆவது கண்டிலம் உபாயம்மற்
ருள்ளன வேண்டோமால்
என்றும் ஆதியும் அந்தமும் இல்லதோர்
இகபரத் திடைப்பட்டுப்
பொன்று வார்புகும் சூழலில் புகேம்புகில்
பொறியில்ஐம் புலனோடே.
தெளிவுரை : திருநாவுக்கரசரின் திருவடித் தாமரையை வைத்து உய்ந்தால் அல்லாமல்
ஒன்றும் ஆவது கண்டிலம். வேறு உபாயங்கள் எதுவும் எமக்கு வேண்டா. ஆதியும் அந்தமும்
இல்லதோர் இகபரத்து இடைப்பட்டு அழிவார் புகும் சூழலில் புகமாட்டோம். அப்படிப்
புகின், பொறியில் ஐம்புலனோடே திருநாவுக்கரசரின் பாதம் பணிவோம். ஆதரவு தருவன
திருவடிகளே.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக